Logo

'இதா இவிடெ வரெ' விளம்பர வண்டி புறப்படுகிறது

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 6476
'itha ividae varae' vilambara vandi purappadugirathu

தை இதோ தொடங்குகிறது. ஒரேயொரு பிரச்சினை. அதை இப்போதே கூறிவிடுகிறேன். இது உண்மையில் நடந்த ஒரு சம்பவம். இதற்கு இலக்கியரீதியாக வர்ணனைகளைக் கொண்டு வரமுடியுமா என்பது பற்றிச் சிந்திக்க வேண்டி இருக்கிறது. உண்மைச் சம்பவங்களை விவரிக்கிறபோது நாடகத்தனமான அம்சங்களும், நடையும் சற்று குறைந்த அளவிலேயே இருக்கும். இருந்தாலும், இவை இரண்டுமே இல்லாமல் எப்படி ஒரு விஷயம் இலக்கியம் ஆகமுடியும்?

அதனால்தான் இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும், அந்தந்த காலகட்டத்தில் இருக்கிற பல விஷயங்களையும் ஏற்றுக்கொண்டு- பலவித மாற்றங்களையும் பெற்று தனக்கென்று ஒரு உலகத்தைப் படைத்துக்கொண்டு அதில் நாடகத்தன்மை, இதயத்தை வசீகரிக்கக்கூடிய சக்தி, காலத்திற்கேற்ற வளர்ச்சி, துடிப்பு, தெளிவு எல்லாம்  கொண்டு  விளங்குகிறது என்று ஒருமுறை ஒரு மனிதர் தனியாக இருக்கும் நிமிடத்தில் ரகசியம் கூறுவது மாதிரி கூறினார். அவர் கூறியது சரியாகவே இருக்க வேண்டும். மனிதர்களுக்கு பொதுவாக வாழ்க்கையில் பார்க்கக்கூடிய கதைகளைவிட கற்பனைக் கதைகளை அதிகம் பிடிப்பதற்கு இதுகூடக் காரணமாக இருக்கலாம். உண்மையிலேயே இது ஆச்சரியமான விஷயம்தான். இருந்தாலும் இங்கு இப்போது நான் உண்மையிலேயே நடந்த ஒரு சம்பவத்தைத்தான் கூறப்போகிறேன். என்ன காரணத்தாலோ இந்த உண்மைச் சம்பவம் என் மனதில் தனியான ஒரு இடத்தைப் பிடித்துவிட்டது. கண்ட சம்பவத்திற்கும் எழுத்தாளனுக்கும் இடையே உண்டாகும் ஈர்ப்பின் ரகசியம்தான் என்ன?

இனி நாம் இந்த உண்மைச் சம்பவத்திற்குள் நுழைய வேண்டியதுதான். நான் இதை விவரித்துச் சொல்லும்போது, சில இடங்களில் தோல்வியைச் சந்திக்க நேரிடுகிறது. அதை என் கதாபாத்திரங்கள் அறிந்திருக்கவில்லை. அதுதான் உண்மை. காரணம்- காலம் அவர்களை விழுங்கிவிட்டது. ப்ரொஃபஸர் கிருஷ்ணன் நாயரோ, இலக்கியத்தைக் கூர்மையாகப் பார்த்து விமர்சனம் செய்யும் ஏதாவதொரு வாசகரோ என்னுடைய இந்தத் தோல்வியை உணரவே செய்வார்கள். அவர்களிடம் நான் மன்னிப்பு கேட்கத் தயாராக இருக்கிறேன். ஆனால், என் மூலம் தோல்வி யடைகிற என் கதாபாத்திரங்கள், ஒருமுறை அவர்கள் அச்சடிக்கப்பட்டு விட்டால், பிறகு எப்படி அதிலிருந்து விடுதலை பெறுவார்கள்? அவர்களோடு சேர்ந்து நானும் அல்லவா மாட்டிக் கொள்ள நேர்கிறது? முன்பு ஒரு நண்பர் கூறியது எவ்வளவு சரியாக இருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். அச்சடிப்பதுதான் ஒரு

எழுத்தாளனின் இறுதிச் சாசனம். அச்சும், மையும்தான் அவனின் இறுதி விதியைப் பறைசாற்றும் சான்றுகள்.

இப்போது கதை ஆரம்பமாகப் போகிறது. இந்த  உண்மைச் சம்பவத்தின் தொடக்கத்தில் நம் கண்களில் எடுத்தவுடன் படுவது எது தெரியுமா? நகர்கிற ஒன்று. அதாவது- ஒரு காளை வண்டி. பழமையான, மிகப்பழமையான, தூசியும் ஒட்டடையும் பிடித்த ஒரு காளை வண்டி... அதன் இரு பக்கங்களிலும், பின்பக்கத்திலும் மூங்கிலாலான தட்டிகள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த தட்டிகளில் "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படத்தின் விளம்பரச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. திரைக்கதை: பி. பத்மராஜன். இயக்கம்: ஐ.வி. சசி. சோமன் என்ற நடிகர் அன்று ஒரு இளைஞனாக இருந்தார். நான் மிகவும் விருப்பத்துடன் ரசிக்கக்கூடிய ஜெயபாரதியும் இந்தப் படத்தில் நடித்திருந்தார். அவர்கள் இருவரும் இந்த விளம்பரச் சுவரொட்டிகளில் இருந்தவாறு வெளியே இருக்கிற உலகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தை நடிகர்- நடிகைகளைப் போல வேறு யாரும் இந்த அளவுக்கு உற்றுப்பார்க்க மாட்டார்கள். அவர்கள் உற்றுப் பார்ப்பதற்குக் காரணம்? ஒருவேளை இதுவும் அவர்களின் அபிலாஷையாக இருக்குமோ? அந்த அபிலாஷைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நோக்கம்தான் என்ன? அப்படி மக்களையும் உலகத்தையும் உற்று நோக்குவதில் அவர்களுக்கு ஒரு திருப்தி இருக்கத்தான் செய்கிறது. அவர்கள் வெள்ளித் திரையிலும், சுவர்களிலும், விளம்பரப் பலகைகளிலும் காட்சியளித்து தங்களின் அபிலாஷைகளைத் தீர்த்துக் கொள்கிறார்கள். இதன்மூலம் சாபல்யம் அடைந்ததாக நினைப்பு அவர்களுக்கு.

"இதா இவிடெ வரெ” நான் பார்த்து ரசித்த ஒரு திரைப்படம். மது அந்தப் படத்தில் ஒரு கொடூரமான வாத்து வியாபாரியாக வருவார். என் ஞாபகம் சரியாக இருந்தால், பழிக்குப் பழி வாங்குவதுதான் அந்தப் படத்தின் முக்கிய விஷயம். பொதுவாக பழிக்குப்பழி வாங்குவது என்பது நான் விரும்பக்கூடிய ஒரு அம்சமே. அந்தப் படத்தின் முடிவுப் பகுதியை இன்னும் கொஞ்சம் நன்றாகப் படமாக்கி இருக்கலாம் என்று அப்போதே எனக்குத் தோன்றியது. ஆனால், கலையாக இருக்கட்டும், வாழ்க்கையாக இருக்கட்டும்- இறுதிப் பகுதியை சரியாக அமைப்பதுதான் மிகமிகக் கடினமான ஒரு விஷயமாக இருக்கிறது. நமக்கும், மற்றவர்களுக்கும் ஒரே நேரத்தில் பிடிக்கக்கூடிய இறுதிப் பகுதி அமைவது என்பது வாழ்க்கையிலும், கலையிலும் அவ்வளவு சாதாரண ஒரு விஷயமில்லை. இந்தக் காளை வண்டியின் பின்னால் கட்டப்பட்டிருக்கின்ற இன்னொரு விளம்பரப் பலகையில் "மாதாவில் இன்று முதல்”என்று எழுதப்பட்டிருக்கிறது. இவை எல்லாமே பொய் என்பதுதான் நான் இப்போது உங்களிடம் கூறிக்கொண்டிருக்கும் முக்கியமான விஷயம். இவையெல்லாமே பொய் என்பதுதான் இந்தச் சம்பவத்தில் மறைந்திருக்கும் உண்மை. மாதா தியேட்டரில் இப்போது காட்டப்பட்டுக் கொண்டிருக்கும் படம் "இதா இவிடெ வரெ” இல்லை. அந்தப் படம் மாதா தியேட்டருக்கு வந்து ஓடி முடிந்து எவ்வளவோ வருடங்கள் ஆகிவிட்டன.

இந்தக் காளை வண்டிக்கு முன்னால் வயதான ஒரு மனிதன், மார்பில் பெல்ட் மாதிரி கட்டியிருக்கும் துணியில் செண்டை மேளத்தைக் கட்டியவாறு நின்று கொண்டிருக்கிறான். அந்த மனிதனின் முகத்தில், தான் யாருக்குமே தேவையில்லாத ஒரு ஆள் என்ற நினைப்பு ஒளிந்திருப்பதைக் காண முடிந்தது. நாம் பார்த்துக் கொண்டிருக்கும் இந்தக் காளை வண்டியின் தனித்துவம் என்னவென்றால், இந்த வண்டியில் காளைகளே கிடையாது. ஏன், வண்டிக்காரன் கூட கிடையாது. அது மட்டுமல்ல... மாதா தியேட்டருக்கு முன்னால் இந்த வண்டி தற்போது நின்று கொண்டிருக்கவில்லை. மாறாக, ஒரு வீட்டுக்கு முன்னால்! இவை எல்லாமே மேலே சொன்ன பொய்யின் அம்சங்கள்தாம்.

கொஞ்சம் முன்னால் நடந்துசென்றால் நாம் காளைகளைப் பார்க்கலாம். அவை வீட்டின் முற்றத்தில் ஒரு மூலையில் படுத்துக் கிடக்கின்றன. அவற்றின் முகத்தில் தளர்ச்சி தெரிகிறது. எழுந்து செல்ல வேண்டும் என்ற ஆர்வமோ, வேகமோ அந்தக் காளையிடம் இல்லை. அவை படுத்துக் கிடக்கும் இடத்திலேயே சாணத்தை இட்டு, மூத்திரத்தைப் பெய்து கொண்டிருக்கின்றன. இலக்கிய நோக்கில் பார்க்காமல் சாதாரணமாகப் பார்த்தால்கூட, அவற்றின் முகத்தில் எந்தவித துடிப்பும் இல்லை என்பதே உண்மை.


பசு, பறவைகள் போன்றவற்றிற்கு முக பாவங்களே இல்லை என்பதை முழுமையாக ஏற்றுக்கொண்டுதான், இப்படியொரு கருத்தை நான் கூறுகிறேன். இவை எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டுதான் நாம் கதைக்குள் நுழைய வேண்டி இருக்கிறது. காளைகளின் முகத்தில் நாம் சில பாவங்களைக் காணவே செய்கிறோம். அவற்றுக்கு முன்னால் செண்டைக்காரனைப்போல, வயதான வண்டிக்காரனும் இப்போது நின்று கொண்டிருக்கிறான். அவன் முகத்திலும் காளைகளின் முகத்தில் தெரியும் தளர்ச்சி தெரிகிறது. கவலையும் அங்கு நிறையவே தெரிகிறது. அவன் கிட்டத்தட்ட அழும் நிலையில் நின்று கொண்டிருக்கிறான் என்பதே உண்மை. அந்த ஆளுக்குப் பக்கத்தில் மத்திய வயதைத் தாண்டிய தளர்ந்துபோன ஒரு ஆளும், வேறு சில இளைஞர்களும் நின்றிருக்கிறார்கள். எல்லாரும் காளைகளைப் பார்த்தவாறு நின்றிருக்கின்றனர். காளைகள் யாரையும் பார்க்கவில்லை. "இதா இவிடெ வரெ” விளம்பர ஊர்வலம் இப்போது ஆரம்பிக்கப் போகிறது என்று நம் மனதில் படும் ஒரு விஷயத்தைத் தற்போதைக்கு நாம் கொஞ்சம் மறப்போம். இதில் பல சிக்கல்கள் இருக்கின்றன. நான் சொல்லப்போகும் இப்போதைய காட்சியிலும் இதே காளை வண்டியைப் பார்க்கலாம். ஆனால், நாம் இப்போது பார்க்கும் வண்டிக்காரன் சற்று வயது குறைந்த இளைஞன். வண்டி செம்மண் நிறத்தில் இருக்கிறது. சக்கரங்களில் செம்மண் படிந்திருக்கிறது. வண்டியில் புதிதாகத் தயாரான செங்கற்கள் அடுக்கி வைக்கப் பட்டிருக்கின்றன. வண்டி ஒரு செம்மண் பாதை வழியே போய்க் கொண்டிருக்கிறது. வண்டியை இழுத்துக்கொண்டு போவது நாம் ஏற்கெனவே பார்த்த காளைகள்தாம். அவற்றின் கொம்புகள் இப்போதுதான் வளைந்து வளர்ந்துகொண்டிருக்கின்றன. கண்களில் நல்ல பிரகாசம் தெரிகிறது. வால்கள் விசிறியைப்போல இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருக்கின்றன. கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் மணிகள் "க்ணிங் க்ணிங்” என்று ஓசை எழுப்பிக் கொண்டிருக்கின்றன. குளம்புகளில் அடிக்கப்பட்டிருக்கும் லாடங்கள் சரளைக் கற்களில் படும்போது, தீப்பொறி பறக்கிறது.காளைகளின் கழுத்தில் முடிச்சுகள் போட்ட பச்சை, நீல நிறக் கயிறு மாலைகள் காளைகளுக்கு அழகு சேர்க்கின்றன. நெற்றியில் வளைவாகக் கட்டப்பட்டிருக்கும் கயிறில், கடலலைகளால் கரைக்குக் கொண்டு வரப்பட்ட சின்னச் சின்ன சங்குகள் வரிசையாகக் கோர்க்கப் பட்டிருக்கின்றன. மறைந்து கொண்டிருக்கும் சூரியனின் வெளிச்சத்திற்கும் செங்கல்லின் சிவப்பு நிறம்தான். சக்கரங்கள் கற்கள் மேல் போகும்போது உண்டாகும் "சரக் சரக்” ஓசையும், மணிகள் குலுங்கும் சத்தமும், குளம்புச் சத்தமும் நாலா பக்கங்களிலும் கேட்கிற மாதிரி மாலை நேரத்தின் மங்கலான வெளிச்சத்தைக் கிழித்துக் கொண்டு புழுதியைப் பறக்க விட்டவாறு செல்லும் வண்டியும் காளைகளும் வண்டிக்காரனும் கொஞ்சம் கொஞ்சமாக நம் பார்வையிலிருந்து மறைந்து போகிறார்கள். நாம் பார்த்த இந்த சம்பவத்தில் மகிழ்ச்சி பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கிறது.

இனி நான் நடத்தப் போகும் காட்சி இயக்கத்தில் நீங்கள் பார்க்கப் போவது ஒரு கிராமத்தில் இருக்கும் திரைப்படக் கொட்டகை. பாசி படர்ந்து நிறம் மங்கிப்போய்க் காட்சியளிக்கும் அந்த தியேட்டரின் முகப்பில் பச்சை நிறத்தில் பெரிய கொட்டை எழுத்தில் ஆங்கிலத்தில் "மாதா” என்று பெயர் எழுதப்பட்டிருக்கிறது. கீறல் விழுந்த, சிமெண்ட் ஆங்காங்கே இடிந்திருக்கும் காம்பவுண்ட் சுவரில் மரப்பலகைகளால் ஆன ஒரு கேட். அது ஒருமுறைகூட அடைக்கப்பட்டு இதுவரை யாரும் பார்த்ததில்லை.

அந்த கேட்டுக்கு வெளியே நம்முடைய காளை வண்டி இதோ மீண்டும் நின்றுகொண்டிருக்கிறது.

கொட்டகையில், "அவளுடெ ராவுகள்” என்ற படம் ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் விளம்பரப் போஸ்டர்கள் கேட்டுக்குப் பக்கத்தில் வைக்கப்பட்டிருக்கும் பலகையிலும், தியேட்டரின் அழுக்குப் பிடித்த சுவரிலும் ஒட்டப்பட்டிருக்கின்றன. எல்லா போஸ்டர்களிலும் சீமா என்ற இளம் நடிகைதான் இருக்கிறாள். இலேசாக முகத்தைக் குனிய வைத்தவாறு சீமா நின்று கொண்டிருக்கிறாள். அவள் ஒரு சட்டை மட்டும் அணிந்திருக்கிறாள். அது இடுப்புக்கு சற்றுக்கீழே- தொடைகளுக்கு மேலே வரைதான் இருக்கிறது. இந்தப் படத்தில் கொஞ்சம் கவர்ச்சியின் சாயல் இருக்கிறது. இருந்தாலும், அதில் ஒரு கள்ளம் கபடமற்ற தன்மையும் தெரியவே செய்கிறது. மாதா தியேட்டரில் திரையிடப்பட்டு பல வருடங்கள் கழிந்த பிறகுதான், நான் ஆர்வம் மேலோங்க இந்தப் படத்தைப் பார்த்தேன். என்னை அழ வைத்த ஏதோ ஒன்று இந்தப் படத்தில் இருந்தது. ஐஸன்ஸ்டைக், ட்ரூஃபோ ஆகியோரின் திரைப்படங்களைப் பார்த்துதான் பொதுவாக நான் அழுதிருக்கிறேன். இருந்தாலும் நடந்த சம்பவத்தைப் பற்றி நான் இங்கு கூறுவதால், உண்மையைச் சொல்கிறேன். நான் வெறுமனே  பொய் சொல்கிறேன் என்றுகூட என் நண்பர்கள் நினைக்கலாம். நான் சொல்வது உண்மைதான் என்று என் பகைவர்கள் எண்ணலாம். ஆனால் என்னுடைய கண்ணீர்த் துளிகளை நான் மதிப்பு மிக்கதாக எண்ணுகிறேன். சீமாவின் போஸ்டரின் தனித்துவம் என்னவென்றால், மற்ற நடிகர்- நடிகைகளைப் போல சீமா போஸ்டரில் இருந்தவாறு உலகத்தைப் பார்க்கவில்லை. சீமா தன்னுடைய சொந்த உடலைப் பார்க்கிறாள். அது எனக்கு மிகவும் பிடித்தது.

மதிய நேரம். காளை வண்டியின் இரு பக்கங்களிலும், பின்னாலும் வைக்கப்பட்டிருக்கும் தகரத்தில் விளம்பரப் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருக்கின்றன. நம்முடைய வண்டிக்காரன் ஒரு கட்டு நோட்டீஸ்களுடன் தியேட்டரின் அலுவலக  அறையை விட்டு வேகமாக நடந்து வருவதையும் நாம் பார்க்கலாம். காளைகள் வண்டியில் கட்டப்பட்டிருக்கின்றன. அவற்றின் கொம்புகள் நீண்டும் வளைந்தும் இருக்கின்றன. வண்டிக்காரனின் தலைமுடி இலேசாக நரைத்திருக்கிறது. அவன் ஓடிவந்து நோட்டீஸ் கட்டை தான் அமரும் இடத்திற்குப் பக்கத்தில் வைத்துவிட்டு, வண்டியில் குதித்து ஏறி காளைகளின் மூக்குக் கயிறை கையில் எடுத்து நாக்கைத் தொண்டைக்குள் வளைத்தவாறு, ஒரு மாதிரி சப்தமிடுகிறான். அப்போது வாலை ஆட்டிக்கொண்டும், தலையைக் குலுக்கிக் கொண்டும், கால்களை நின்ற இடத்தில் இருந்தவாறே மாற்றி மாற்றி வைத்துக்கொண்டும், காதுகளை அசைத்துக்கொண்டும்,

வண்டியின் நுகத்தடியைச் சுமந்து கொண்டும் நின்றிருந்த காளைகள் முன்னோக்கி ஒரு எட்டு வைக்கின்றன. ஆனால், அந்த இடத்தைவிட்டு நகர்வதாகக் காணோம். அப்போது வண்டிக்காரன் அவற்றின் முதுகில் சாட்டையை வைத்து அடித்து, ஒருவித சத்தத்தை உண்டாக்குகிறான். அப்போதும் அந்தக் காளைகள் அசையவில்லை. இந்தச் சத்தத்தைக் கேட்டு, நாம் முதல் காட்சியில் கண்ட செண்டைக்காரன் ஒரு பெட்டிக்கடை நிழலில் விரித்து தூங்கிக்கொண்டிருந்த துணியை விட்டு வேகமாக எழுந்து நிற்கிறான். முன்பு நாம் கண்டதைவிட அந்த ஆளுக்கு மிகவும் வயது குறைவாக இருக்கிறது. பெட்டிக்கடைக்குப் பக்கத்தில் இருந்த திண்டின்மேல் வைத்திருந்த செண்டையை எடுத்து, வேகமாகக் கழுத்தில் மாட்டிக்கொண்டு, சுவரின் மேற்பகுதி வழியாக தியேட்டர் அலுவலக அறையை ஒருமுறை பார்த்துவிட்டு, காளை வண்டிக்கு முன்னால் போய் நின்று, "டேம்.... டேம்...” என்று செண்டையை அவன் அடிக்கிறான்.


ஒரு உத்தரவு கிடைத்ததுபோல காளைகள் அந்த ஆளுக்குப் பின்னால் நடக்க ஆரம்பிக்கின்றன. வண்டிச் சக்கரத்தில் மாட்டப்பட்டிருக்கும் மணிகள் சிணுங்குகின்றன. சரளைக்கற்கள் பதிக்கப்பட்ட பாதையில் வண்டிச் சக்கரத்தின் தடம் விழுகிறது. "டேம்... டேம்... டேம்...” என்று செண்டை தொடர்ந்து அடிக்கப்படுகிறது. காளை வண்டி கிராமத்தின் சிறு பாதைகள் வழியாக வேகவேகமாகப் போகிறது.

வண்டிக்காரன் எந்தவித பரபரப்பும் இல்லாமல் உட்கார்ந்திருக்கிறான். காளைகள், முன்னால் முழங்கிக் கொண்டிருக்கும் செண்டையின் தாளத்தில் மயங்கிக் கிடப்பதுபோல படுவேகமாக நடக்கின்றன. வண்டிக்குப் பின்னால் சிறுவர்களும், சிறுமிகளும் ஓடிவந்து கொண்டிருக்கின்றனர். "டேம்... டேம்... டேம்...” செண்டை தொடர்ந்து ஒலிக்கிறது. வண்டிக்காரன் வீசி எறிகிற சிவப்பு வண்ண நோட்டீஸ்கள் காற்றில் பறந்து, அவற்றை வாங்க வரும் சிறுவர்- சிறுமிகள் கையில் அவை கிடைக்கின்றன. இந்தக் காட்சியும் மகிழ்ச்சிகரமான ஒன்றுதான். உறங்கிக் கொண்டிருந்த செண்டைக்காரனின் களைப்பு அந்த நேரத்தில் இருந்த இடம் தெரியாமல் போயிருந்தது. தியேட்டர் உரிமையாளரோ, வண்டிக்காரனோ அந்த ஆளைப் பொருட்படுத்தவே இல்லை.

காலத்தைப் பற்றி ஒரு வார்த்தை. இரண்டாவது கண்ட காட்சியை நாம் இனி பார்க்கப் போவதில்லை. செங்கல் தூசிகளுக்கு மத்தியில் செம்மண்மீது சூரியன் பட்டுத் தெரியும் வெளிச்சத்தில் காளைகளும் வண்டிக்காரனும் இனி எந்தக் காலத்திலும் தென்படப் போவதில்லை. காலத்தால் உண்டான மாற்றங்களினால், அவர்கள் தேவையில்லை என்று மாதா தியேட்டர் என்றோ அவர்களைக் கைவிட்டுவிட்டது. முதலில் கண்ட காட்சிக்கு நாம் மீண்டும் வர வேண்டியதிருக்கிறது. ஒரு மடிப்பு  விசிறியைப்போல அந்த கடந்துபோன சம்பவங்களை மீண்டும் திரும்பிப் பார்க்கவேண்டி வரும். இப்போது நாம் கண்ட மூன்றாவது காட்சி மீண்டும் மீண்டும் நடக்கக்கூடிய ஒன்றுதான். நாட்களும் வருடங்களும் மாற மாற மழையிலும் காற்றிலும் வெயிலிலும் காளைகளும் வண்டியும் வண்டிக்காரனும் தங்கள் வாழ்க்கையை ஓட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள். திரையிடப்படும் படங்களின் பெயர்கள்தான் மாறிக் கொண்டிருக்கின்றன. மண் பாதைகளும், மரங்களும், வீடுகளும் அதேதான். நோட்டீஸ்கள் வாங்க ஓடிவரும் சிறுவர் சிறுமிகளின் கைகளைப் பொறுத்தவரையில், ஒரு மாற்றம் இருக்கவே செய்கிறது. அந்தக் கைகள் கொடி பிடிக்கவும், துப்பாக்கி பிடிக்கவும், பேனாவைப் பிடிக்கவும், இயந்திரங்களின் கைப்பிடியைப் பிடித்துச் சுழற்றவும் போய்விட்டன. அதற்கு பதிலாக புதிய சிறு கைகள், புதிய நோட்டீஸ்கள் வாங்க உயர்கின்றன. காளைகளையும் வண்டிக்காரனையும்  செண்டை அடிப்பவனையும் காலம் மறக்கவில்லை. காலம் கருணை மனம் கொண்டு அவர்களை வளர்த்து முதியவர்களாக்குகின்றது.

இப்போது நாம் காணும் காட்சியில் தியேட்டர் நவநாகரீக அமைப்பு கொண்டதாக மாறியிருக்கிறது. மரப்பலகையால் ஆன கேட்டுக்குப் பதிலாக இப்போது இரும்பாலான பெரிய கேட் காட்சி தருகிறது. சுவரும் புதிதாகக் கட்டடப்பட்டிருக்கிறது. தியேட்டரின் முகப்பு இப்போது புதுப்பிக்கப் பட்டிருக்கிறது. அதில் சித்திர வேலைப்பாடுகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. டிக்கெட் கொடுக்கும் கவுன்டருக்கு மேலே எழுதப்பட்டிருக்கும் கட்டணங்கள் கூட்டப்பட்டிருக்கின்றன. தியேட்டருக்கு முன்னால் இப்போது மண்பாதை இல்லை. அதற்கு பதிலாக தார் போடப்பட்ட சாலை ஒன்று இப்போது காட்சியளிக்கிறது. அதன் வழியாக பஸ்களும், கார்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் அவ்வப்போது கடந்து போகின்றன. ஒரு ஆட்டோ ரிக்ஷா தியேட்டர் முன்னால் நின்று கொண்டிருக்கிறது. பூக்கள் போட்ட, பட்டன்கள் போடாமல் திறந்து விடப்பட்ட மேற்சட்டையும், பேண்ட்டும், கறுப்புக் கண்ணாடியும் அணிந்த இளைஞன் ஒருவன் தியேட்டர் அலுவலகத்திற்குள் இருந்த நோட்டீஸ்களுடன் நடந்து வந்து, ஆட்டோ ரிக்ஷாவிற்குள் அமர்ந்திருக்கும் இன்னொரு இளைஞன் கையில் தருகிறான். அந்த இளைஞன் தன் காலுக்குப் பக்கத்தில் வைத்திருக்கும் பேட்டரி பெட்டியுடன் இணைந்திருக்கும் ஆம்ப்ளிஃபயரில் இருந்து நீண்டு கொண்டிருக்கும் மைக்கை ஒரு கையால் பிடித்து, அதை கையால் மெல்ல தட்டுகிறான். ஆட்டோ ரிக்ஷாவின் இரண்டு பக்கங்களிலும் கட்டப்பட்டிருக்கும் லவுட் ஸ்பீக்கர் வழியாக அவன் மெதுவாகத் தட்டியது சற்று பலமாகக் கேட்கிறது. இளைஞன் தொண்டையைக் கனைத்துக்கொண்டு மைக் வழியாகக் கூறுகிறான்: "ஹலோ... ஹலோ... ஒன்... டூ... த்ரீ...'' ஆட்டோ ரிக்ஷாவின் பின்னால் கட்டப்பட்டிருக்கும் ஒரு விளம்பரப் பலகையில் "யவனிக” என்ற திரைப்படத்தின் போஸ்டர் ஒட்டப்பட்டிருக்கிறது. "யவனிக” இயக்குனர்: கெ.ஜி. ஜார்ஜ். கோபி, மம்மூட்டி ஆகியோர் நடித்திருக்கிறார்கள். "மாதா”வில் இன்று முதல் இரண்டு காட்சிகள்.

வெளியே வந்தவுடன் நான் பார்த்து மகிழ்ந்த ஒரு படம் "யவனிக”. அந்தப் படத்தைப் பார்த்தபோது மழை மிகவும் பலமாகப் பெய்து கொண்டிருந்தது என்பது மட்டும்  எனக்கு நன்றாக ஞாபகத்தில் இருக்கிறது. அவ்வப்போது கொட்டகைக்குள் வெளியே இருந்து வந்த இடிச் சத்தம் கேட்டுக் கொண்டே இருந்தது.

ஆட்டோ ரிக்ஷா டிரைவர், வண்டியை "ஸ்டார்ட்” செய்தான். வண்டி மெதுவாக முன்னோக்கி நகர்ந்தது. ரிக்ஷாவில் கட்டப்பட்டிருந்த லவுட் ஸ்பீக்கர் முழங்கியது: "யவனிக, யவனிக... ஒரு அருமையான திரைப்படம் இன்று முதல்-மாதாவில்.''

மூன்றாவதாக நான் உங்களுக்குக் காட்டும் காட்சியில் தோன்றுவது ஏற்கெனவே நாம் பார்த்த பாதைகள்தாம். அதே வளைவுகளும், பாதை ஓரங்களும்தான். காளை வண்டிச் சக்கரங்கள் உருண்டோடிய இடங்களில் இன்று கறுப்பாகப் பிரகாசித்துக் கொண்டிருக்கும் சாலை வழியாக ஆட்டோ ரிக்ஷா கடந்து போகிறது."யவனிக... யவனிக...''

ஐந்தாவது காட்சி. நாம் இப்போது மீண்டும் காளை வண்டிக் காரனின் வீட்டு முற்றத்திற்கு வருகிறோம். காளை வண்டி அது எப்போதும் நிற்கிற கொட்டடியில், நிலத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் நுகத்தடியுடன் நின்று கொண்டிருக்கிறது. சக்கரங்களின் இரு பக்கங்களிலும் புற்கள் வளர்ந்திருக்கின்றன. வண்டி முழுக்க மண்ணும், தூசியும், ஒட்டடையும் இருக்கின்றன. வண்டிச் சக்கரங்களின் இரும்பு வட்டங்கள் துருப்பிடித்துப் போய் நிறம் மாறியிருக்கிறது. காளைகளை அங்கு காணவில்லை. ஆனால், காளை வண்டிக்காரன் சற்று தூரத்தில் இருக்கும்- தார் போட்ட சாலையின் ஓரத்தில் இருக்கும் ஒரு வெற்றிலை பாக்குக் கடையின் சொந்தக்காரனாக இப்போது இருக்கிறான். அவனுக்கு இப்போது வயதாகி விட்டது. கடையைச் சுற்றிப் பலரும் நின்றிருக்கிறார்கள். வெற்றிலை பாக்கும், பீடியும், சிகரெட்டும் படுஜரூராக விற்பனை ஆகிக்கொண்டிருக்கின்றன. கடையின் சொந்தக்காரன் ஒரு ஆளிடம் என்னவோ தீவிரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறான். அவன் அந்த ஆளிடம் சொல்கிறான்: "கொட்டகை வேலை போனபிறகும் நான் இந்தக் காளைகளை அஞ்சு வருஷமா வளர்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இனிமே என்னால அது முடியாது. இந்த வெற்றிலை பாக்குக் கடையில இருந்து கிடைக்கிற காசை வச்சு ரெண்டு காளை மாடுகளுக்கும் வைக்கோல்கூடப் போட முடியாது. காளைகளுக்கும் வயசாயிடுச்சு! எனக்கும்தான்.


நீ ஒரு விலையைக் கொடுத்துட்டு, அவன்களைக் கூட்டிட்டுப்போ. ஆனா, ஒரு விஷயம்... அவன்களைப் கொண்டுபோன பிறகு அடிக்கவோ, பட்டினி போடவோ, கஷ்டப்படுத்தவோ செய்யாம கொல்லணும். தப்பித் தவறிக்கூட அவன்களோட கறியை எடுத்துக்கிட்டு இந்தப் பக்கம் வந்துடாதே...''

இனி மீண்டும் நாம் ஆரம்பத்தில் சொன்ன காட்சிக்குப் போவோம்.நாம் பக்கத்தை பின்னோக்கித் திருப்ப வேண்டி இருக்கிறது. இந்தக் காட்சியில் நாம் காண்பது- வண்டிக்காரனும் கசாப்புக் கடைக்காரனும் வண்டிக்காரனின் பிள்ளைகளும் சேர்ந்து, முற்றத்தில் படுத்துக்கிடக்கும் நமக்கு நன்கு அறிமுகமாகி இருக்கும் இரண்டு காளைகளையும் எழுந்து நடக்க வைக்க முயற்சி செய்து கொண்டிருப்பதைதான். ஆனால், அந்த இரண்டு காளைகளும் கொஞ்சம்கூட அசையாமல், யாரையும் ஏறிட்டுக்கூடப் பார்க்காமல், தங்களைக் கசாப்புக்கடைக்காரன் கொண்டுபோவதற்காக வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்ட மாதிரி, படுத்தபடியே கிடக்கின்றன. அதைப் பார்த்து என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறான் கசாப்புகடைக்காரன். அவனுக்கு ஒருவிதத்தில் தாங்க முடியாத கோபம் வருகிறது. வண்டிக்காரனின் மகன் அடுத்த நிமிடம் ஒரு பிரம்பை எடுத்துக் கொண்டு வருகிறான். வண்டிக்காரன் அந்தப் பிரம்பை வாங்கி தூரத்தில் வீசி எறிகிறான். அவன் முகத்தில் தாங்க முடியாத வேதனையும், வருத்தமும் உண்டாகிறது. அவன் தன் மகனிடம் என்னவோ சொல்கிறான். மகன் வேகமாக நடந்து பாதை வழியே போகிறான். வண்டிக்காரன் வீட்டுக்குள் போய் அங்கிருந்த பழைய சினிமா நோட்டீஸ்களை எடுத்துக்கொண்டு வருகிறான். "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படம் சம்பந்தப்பட்ட விளம்பர நோட்டீஸ்கள் அவை. அவற்றுடன் காளை வண்டியை நிறுத்தியிருக்கும் கொட்டடியை நோக்கி அவன் நடக்கிறான். சிறிது நேரத்தில் வண்டிக்காரனின் மகனும் வேறொரு ஆளும் அங்கு வருகிறார்கள். இந்தப் புதிய ஆள்- செண்டைக்காரன் தான். மூன்றாவது காட்சியில் தூக்கம் கலைந்து எழுந்த அதே செண்டைக்காரன்தான். செண்டை முதுகில் தொங்கிக் கொண்டிருக்கிறது. முகத்தில் வியர்வை ஆறாக வழிந்து கொண்டிருக்கிறது. செண்டைக்காரன் வண்டிக்காரனையும் காளைகளையும் பார்க்கிறான்.

நாம் எந்த இடத்தில் கதையை ஆரம்பித்தமோ அந்த இடத்திற்கு மீண்டும் இப்போது வந்திருக்கிறோம். கதையின் இறுதிப் பகுதி இது. இத்துடன் கதை முடிந்துவிடும். இனி வேக வேகமாக நாம் முடிவை நோக்கிப் போக வேண்டியதுதான். செண்டைக்காரன் சாவகாசமாக செண்டை கட்டப்பட்டிருக்கும் பெல்ட்டை மார்புப் பகுதியில் தொங்கவிட்டுக்கொண்டு, கவலை தோய்ந்த, தளர்ச்சி அடைந்த, வயதாகிப் போன முகத்துடன் காளைகளையும், வண்டிக்காரனையும், கசாப்புக்கடைக்காரனையும் பார்த்தவாறு செண்டையை அடிக்கிறான்: "டேம்...” எல்லாரும் காளைகளையே பார்க்கின்றனர். காளைகள் யாரையும் பார்க்கவில்லை. ஆனால், அவை எதையோ காதில் கேட்கின்றன என்பது மட்டும் புரிகிறது.

"டேம்... டேம்... டேம்...” செண்டை முழங்குகிறது. காளைகள் அடுத்த நிமிடம் எழுந்து நிற்கின்றன. "டேம்... டேம்...” அவை மூத்திரத்தில் நனைந்திருக்கும் வாலுடன், சாணம் அப்பியிருக்கும் கால்களுடன் முற்றத்தில் தயாராக நின்றிருக்கும் வண்டியை நோக்கி நடக்கின்றன. அவற்றின் தளர்ச்சியடைந்துபோன கண்களில் ஒரு பிரகாசம் உண்டாகிறது. அவற்றின் மெலிந்துபோன வால்கள் விசிறியைப் போல மூத்திரத்தை நாலா பக்கங்களிலும் சிதறவிட்டவாறு இப்படியும் அப்படியுமாய் ஆடுகின்றன. அவை "இதா இவிடெ வரெ” விளம்பர வண்டிக்கு நேராகக் கனவில் நடப்பதுமாதிரி நடக்கின்றன. ஜெயபாரதி என்ற அழகியும் சோமனும் மதுவும் வண்டியில் இருந்தவாறு காளைகளையே உற்றுப் பார்க்கின்றனர். செண்டை முழங்குகிறது- "டேம்... டேம்...” காளைகளுக்காக மட்டுமே அந்த செண்டை அடிக்கப்படுகிறது என்பதே உண்மை. அவற்றின் மரணத்திற்காக அடிக்கப்படும் செண்டை ஒலி அது என்பது விளம்பரப் போஸ்டரில் இருக்கும் ஜெயபாரதிக்குத் தெரியுமா என்ன? காளைகள் இதோ பாசி பிடித்து கரையான் அரித்துக் காட்சியளிக்கும் வண்டியின் நுகத்தடியை தம் தளர்ச்சியடைந்துபோன கழுத்தில் மனப்பூர்வமாகச் சுமந்து நின்றுகொண்டிருக்கின்றன. "டேம்... டேம்...” செண்டை மீண்டும் காளைகளுக்காக முழங்குகிறது. செண்டைக்காரனின் முகத்தில் வியர்வை வழிந்து கொண்டிருக்கிறது. அதோடு சேர்ந்து கண்ணீரும். "டேம்... டேம்...” செண்டை ஒலியைத் தொடர்ந்து ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக- பின்னர் வேக வேகமாக, வண்டிச்சங்கரங்களில் கட்டப்பட்டிருக்கும் பழைய மணிகள், "க்ணிங் க்ணிங்” என்று ஓசை எழுப்ப, தார்சாலையில் பழைய லாடங்களைப் பதித்துக்கொண்டும், துருப்பிடித்த சக்கரங்களை உருட்டிக் கொண்டும், சாலையில் பிரகாசித்துக் கொண்டிருக்கும் கறுப்புத் தாருக்கு மேலே "இதா இவிடெ வரெ” என்ற திரைப்படத்தின் பொய்யான ஒரு விளம்பர வண்டி புறப்பட்டுப் போய்க் கொண்டிருக்கிறது.

இது ஒரு நடந்த நிகழ்ச்சி. ஒரு உண்மைச் சம்பவத்தை இலக்கியமாகப் படைப்பதில் குறைபாடு ஏதும் நிகழ வாய்ப்பிருக்கிறது என்று நான் நினைக்கவில்லை. யதார்த்தமாக நாம் காணும் விஷயங்கள்தான் இலக்கியமா என்று யார்தான் இன்று கேட்காமல் இருக்கிறார்கள்? இவ்வளவு வளர்ச்சி பெற்றிருக்கும் மலையாள இலக்கிய  உலகில்கூட இன்றும் இப்படிப்பட்ட கேள்விகள் கேட்கப்பட்டுக் கொண்டுதானே இருக்கின்றன? உண்மைச் சம்பவத்தை எழுதுகிறபோது, அது கலை அல்ல என்று வாதாடுகிறவர்களும் இல்லாமல் இல்லை. அது மட்டுமல்ல... வாழ்க்கையில் நாம் காணும் யதார்த்தத்தை எழுத்து வடிவத்தில் கொண்டு வருகிறபோது, அதன் அதிக கனத்தால், கலை என்ற ஒன்று பாதிக்கப்பட்டு விடுகிறது என்பது அவர்கள் சொல்லும் கருத்து. கலை என்பது மலையாள இலக்கிய உலகைப்போல எப்போதும்- எல்லா காலத்திலும் ஒரு ரொமான்டிக் வட்டத்திற்குள்ளேயே சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருக்க முடியுமா என்ன?

எழுத அமரும்போது... தேவையில்லாமல் ஏதாவது பேசி அந்த முயற்சியைக் கெடுக்க வேண்டாம். அது நீ இருக்கும் இடம்... அவ்வளவுதான்...

கலை என்பது ஒருவித சர்க்கஸ் வித்தை மாதிரி என்று ஏதோ ரகசியம் சொல்வது மாதிரி ஒருநாள் ஒருவர் சொன்னார். யதார்த்தத்தை விட்டு விலகி இருக்கவும் வேண்டும். அதே நேரத்தில் இறுகப் பற்றிக்கொண்டும் இருக்கவேண்டும். ஆனால், ரொமான்டிக் ட்ரப்பீஸில் பறக்கும் சுகம் அதை உண்மையாக அனுபவித்தவர்களுக்குத்தான் தெரியும். எது எப்படியோ... நாம் சுகமாகப் பறக்கலாம். கீழே வரவேண்டிய அவசியம் இல்லை. கூடாரத்திற்கு மேலே ஒளிர்ந்து கொண்டிருக்கும் விளக்குகளுக்குக் கீழே ஒரு மினுமினுக்கும் தாளாலான நட்சத்திரத்தைப்போல நாம் ஜொலிக்கலாம். விளக்குகள் அணைக்கப்பட்டு, கீழே வலையைச் சுருட்டி நடத்துகிற ஒரு ட்ரப்பீஸ் வித்தை இருக்கிறது. ஒரு மங்கலான வெளிச்சத்தில் கூடுவிட்டுக் கூடு பாயும் ஒரு வினோத வித்தை...

முன்னால் குறிப்பிட்ட அதே ஆள் என்னிடம் ரகசியமாக இன்னொரு விஷயத்தையும் சொன்னார். கலையும் இலக்கியமும் இருட்டில் வைக்கப்பட்டிருக்கும் வெடி போன்றவை

ஆனால், சத்தியத்திற்கு வைக்கப்பட்டது உண்மை அல்லாத ஒன்றுக்கு ஒத்து வராது என்பதையும் நாம் எடுத்துக்கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு அந்த ஆள் இந்தப் பக்கம் வரவில்லை. இத்தகைய ரகசியச் செய்திகளைக்   கேட்பதில் எனக்குக்கூட ஆர்வம்தான். ஆனால், சொல்வதற்குத்தான் ஆளைக் காணோம். மேலே சொன்ன விஷயங்களை எல்லாம் சிந்தித்துப் பார்த்தபோது, நடந்த இந்தக் கதையை எழுதுவதற்குக்கூட கொஞ்சம் தயக்கமாகவே இருந்தது. கடைசியில் அந்தக்கதை போய் முடிவது ஒரு பெரிய பொய்யில் என்று ஆகிவிட்டால்...? அதுவும் ஒரு வீழ்ச்சிதானே? ஒன்றிரண்டு பிறவிகளுக்குத் தேவையான திருட்டுத்தனங்களை ஏற்கெனவே நான் வாழ்க்கையில் சேர்த்து வைத்திருக்கிறேன். எதற்காக? யாருக்காக? இலக்கியத்தையும் கலங்கப்படுத்துவதற்கா? எதற்காக இந்த வேண்டாத காரியங்கள்?

என்னதான் சொல்லட்டும், கடைசியில் வெற்றி பெறுவதென்னவோ கலைதான். எழுத்தாளன் பென்சில் முனையைக் கூர்மைப்படுத்தவோ, பேனாவில் மை ஊற்றவோ செய்கிறான். அது எதற்காக? இந்த ரகசியம் கூட அந்த ஆள் முன்பு சொன்னதுதான். பாவத்தைப்போல, செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று இருப்பதுதான் கலை என்ற ஒன்று. பாவம், கலை- இரண்டுமே ஒரே வகையான ஆசையிலிருந்து பிறப்பவைதாம். இரண்டின் நோக்கமும் கிட்டத்தட்ட ஒன்றுதான். அதைச் செய்கிறபோது, ஒன்றோ இரண்டோ பொய்கள், உண்மைக்காகவும் அழகிற்காகவும் சொல்லும் சூழ்நிலை உண்டாகும் பட்சம், அதை யாராவது மன்னிக்க மாட்டார்களா என்ன?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.