முன்பு எப்போதோ நடந்தது. என்னுடைய தம்பி அப்துல் காதர் என்னைவிட ஒரு வயது இளையவன். அப்துல் காதருக்கு வலது காலில் ஒரு ஊனம் உண்டு. அதன் மூலம் பரிதாபம் முழுவதும் அவன் மீதுதான்.
அவனையும் என்னையும் ஒன்றாக ஒரே நேரத்தில் பள்ளிக்கூடத்தில் சேர்த்தார்கள். அப்போது அது முஹம்மதியர்களின் பள்ளிக்கூடமாக இருந்தது. உம்பி அண்ணன் என்ற புகழ் பெற்ற ஒரு பக்தர் அந்தப் பள்ளிக்கூடத்தைக் கட்டியிருந்தார்.
புதுசேரி நாராயணபிள்ளை சார் அப்போது முதல் வகுப்பிற்கு ஆசிரியராக இருந்தார். அவர்தான் எனக்கும் அப்துல் காதருக்கும் "அ” "ஆ” எழுதித் தந்தார்.
அப்துல் காதர் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் போக்கிரியாக இருந்தான். நான் பள்ளிக்கூடத்தில் மரியாதைக்காரனாக இருந்தேன். நாராயணபிள்ளை சார் அவனை நிறைய அடித்திருக்கிறார்.
அப்துல் காதர் இடது காலில் நின்று கொண்டு ஊன முற்ற வலது காலைச் சுற்றி வீசி மிதித்து, மாணவர்களை அடித்துக் கொண்டிருந்தான். அப்படி என்னையும் அடித்திருக்கிறான்.
பிறகு அவன் வலது காலின் வெள்ளையாக இருக்கும் பகுதியை மூக்கிற்கு நேராகக் கொண்டு வந்து கேட்பான்:
"இப்படிக் காட்ட முடியுமா?''சாத்தியமில்லை! எப்படி சாத்தியமாகும்? மற்றவர்களின் கால் "குழகுழ” என்று இருக்கின்றதா? வேறு யாருக்கும் இந்த விளையாட்டு சாத்தியமில்லை.
"அப்படியென்றால், முகர்ந்து பார்!” -அவனுடைய ஊனமான காலின் வெள்ளைப் பகுதியை மற்றவர்கள் முகர்ந்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் குத்துவான். மாணவர்கள் தூரத்தில் விலகி நின்றால் அவன் தன்னைத்தானே நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுவான். அவனுடைய ஊனமுற்ற காலின் காரணமாக பொதுமக்கள் மத்தியில் அவனுக்கு ஒரு இரக்கம் இருந்தது. அவன் அதை முடிந்தவரையில் தவறாகப் பயன்படுத்துவான். அவன் என்ன செய்தாலும், மற்றவர்கள் மீதுதான் குற்றச்சாட்டு விழும். மாணவர்கள் அவனுடைய உதைகளை வாங்குவதற்காக நிற்பார்கள். நானும் நின்றிருக்கிறேன். நான் வாங்கிய உதைகளுக்குக் கணக்கே இல்லை. அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமக்க வேண்டும். நான் மூத்தவன் ஆயிற்றே! நியாயமாகப் பார்க்கப்போனால், தம்பிமார்கள்தான் அண்ணன்மார்களின் சிலேட்டையும் புத்தகங்களையும் சுமக்க வேண்டும். ஆனால், நான் அவனுடைய பொருட்களைச் சுமக்க வேண்டும். இல்லாவிட்டால் உதை!
நான் நிறைய உதைகள் வாங்கினேன். நான் நிறைய சுமந்தேன். எதிர்ப்பை வெளிப்படுத்தும் சூறாவளி உள்ளுக்குள் இருந்தது. ஆனால், என்ன செய்வது? அவன் சிலேட்டையும் புத்தகங்களையும் சாலையில் வைத்துவிட்டு, கையைச் சுருட்டி விட்டுக்கொண்டு எனக்கு அருகில் நின்று கொண்டு மெதுவாகக் கேட்பான்:
"என் சிலேட்டையும் புத்தகங்களையும் எடுத்துக்கொண்டாயா?''
விருப்பமில்லை என்று தினமும் கூறுவேன். தொடர்ந்து நியாய வாதங்கள் செய்வேன்.
"டேய்... நான் உன்னுடைய இய்க்காக்கா (அண்ணன்) இல்லையா?''
"எடுக்க முடியுமா இல்லையா?''
"இல்லை.''
அப்போது ஒற்றைக் காலில் நின்று கொண்டு இழுத்து வீசி ஒரு அடி என்னுடைய நெஞ்சில் விழும். நான் சிறிய அளவில் மயக்கமடைந்து கீழே விழுந்து, அதே நிலையில் கிடப்பேன். அவன் தள்ளி நின்று கொண்டு உத்தரவிடுவான்:
"எழுந்து எடு! வா... போகலாம். தாமதமாகப் போனால் சார் அடிப்பார்!''
நான் படுத்துக்கொண்டே கவலையுடன் சிந்திப்பேன். இது எங்கிருக்கும் நியாயம்? தம்பி அடிப்பது... அண்ணன் வாங்குவது... பிறகு, புத்தகங்களையும் சிலேட்டையும் சுமப்பது... நான் அப்படியே படுத்திருப்பேன். அவன் என்னுடைய நெஞ்சின் மீது ஏறி உட்காருவான். பிறகு கேட்பான்:
"உதை வேணுமா?''
நான் உண்மையைக் கூறுவேன்:
"வேண்டாம். சுமக்கிறேன்.''
அப்படியே எழுந்து அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் சுமந்து கொண்டு செல்வேன். எத்தனை நாட்கள்! எத்தனை உதைகள்!
அப்படி நடந்து கொண்டிருக்கும்போது ஒரு நாள் எனக்கு ஒரு புத்தி தோன்றியது. அடிப்பதற்காக அவன் கையை வீசுவதற்கு முன்னால், நான் காலால் ஒரு அடி கொடுத்தேன். அவனுடைய நல்ல காலில்!
அதோ கிடக்கிறான் அப்துல் காதர் சளுக்கோ பிளுக்கோ என்று! மல்லாந்து! நான் உடனே அவனுடைய நெஞ்சின்மீது ஏறி உட்கார்ந்தேன். நான் ஏதோ பெரிய அநீதியைச் செய்துவிட்டதைப் போல அவன் கேட்டான்:
"இது என்ன? நான் சின்ன பையன் இல்லையா? என்னுடைய நெஞ்சில் ஏறி உட்காரலாமா?''
அவனை நான் குத்துவதற்காகக் கையைச் சுருட்டினேன். அவன் அழ ஆரம்பித்தான்:
"என்னை குத்தாதீங்க! இய்க்காக்கா, நான் உங்க தம்பி''
தம்பி! அடடா!
"உனக்கு முன்பு ஞாபகத்தில் இல்லையா?''
"இனிமேல் நான் எப்போதும் ஞாபகத்தில் வச்சிருப்பேன்.''
"டேய்...'' -நான் கேட்டேன்: "நாயைப் பார்க்குறப்போ முன் கூட்டியே எறியிறது யாரு?''
"இய்க்காக்கா.''
"ஆற்றில் குளிக்கிறப்போ தண்ணியில மூழ்கிக்கொண்டே முதல்ல அக்கரைக்குப் போறது யாரு?''
"இய்க்காக்கா.''
"வீட்டில் எதையாவது திருடுறப்போ, உனக்குத் தர்றது யாரு?''
"இய்க்காக்கா.''
"நாராயண பிள்ளை சாரின் மேஜையில இருந்து சாக்பீஸ் எடுக்குறப்போ, உனக்கு தர்றது யாரு?''
"இய்க்காக்கா.''
"பிறகு என்ன?''
அவன் சொன்னான்:
"இய்க்காக்கா, நான் உங்களோட சிலேட்டையும் புத்தகங்களையும் கூட சுமந்துட்டு வர்றேன்.''
நான் சொன்னேன்:
"உன் பொருட்களை நீ சும...''
"அப்படின்னா முன்னாடி நடக்குறது யாரு?''
"நான்...''
அப்படி அன்று முதல் அப்துல் காதர் தம்பியாக ஆனான்.