Logo

நூற்றியொரு நாக்குகள்

Category: சிறுகதைகள்
Published Date
Written by சுரா
Hits: 7517
nootriyoru nakkugal

நூற்றியொரு நாக்குகள் என்று சொன்னால் பெண் என்று அர்த்தம். ஆதிகாலம் தொட்டே பெண்களை இப்படித்தான் அழைத்து வந்திருக்கி றார்கள். இது என்னுடைய கண்டுபிடிப்பு என்று நான் கூறவில்லை. இது எல்லா கணவர்களுக்கும் நன்கு தெரிந்த ஒரு சமாச்சாரமே என்ற முன்னுரையுடன் நாம் மெதுவாக கதைக்குள் நுழைவோம்.

"முதல்ல பார்த்தது நான்தான்” என்று வேண்டு மானால் இந்தக் கதைக்குப் பெயரிடலாம். ஆனால் பெயரில் என்ன இருக்கிறது? கதை நன்றாக இருந்தால் போதுமல்லவா? அதற்காக இது ஒரு நல்ல கதை என்று நானே கூறுகிறேன் என்று நீங்கள் நினைத்துக் கொள்ளக்கூடாது. கதை ஒரு பெண்ணிடமிருந்துதான் ஆரம்பிக்கிறது. பெண் என்றால் நூற்றியொரு நாக்கி- அதாவது என்னுடைய மனைவி!

ஒரு நாள் என்னுடைய அக்னி சாட்சியும், குழந்தைப் பருவத்தில் இருந்த என் மகளும், நானும் ஒரு விருந்து நிமித்தமாக ஒரு ஊருக்குப் போய்க்கொண்டிருந்தோம். கம்பீரமாக நான் முன்னால் நடந்து செல்ல, நடுவில் மகள், பிறகு என் மனைவி... நாங்கள் நடந்து சென்ற வழி மிக மிக அமைதியாகவும், அழகாகவும் இருந்தது. வெயில் கொஞ்சம் கொஞ்சமாக அப்போதுதான் தணிந்து கொண்டிருந்தது. மனைவியும் மகளும் "சல சல”வென பேசிக் கொண்டே வந்தனர். என் காதுகளுக்குள் அவர்களின் பேச்சு எதுவுமே நுழையவில்லை. அது என்னுடைய தவறு என்று யாரும் நினைத்துவிடக் கூடாது. திருமணம் முடிந்த ஒரு மாதம் ஆனபிறகு ஒரு விசேஷம் நடந்தது. அதாவது- என்னுடைய வலது பக்க செவி வழியே பார்த்தால் இடது செவியின் வழியாக மறுபக்கம் இருக்கிற உலகத்தையே முழுமையாகப் பார்க்கலாம். தலையணை மந்திரம் போன்ற ஓயாத சத்தத்தின் விளைவாக இப்படியொரு காரியம் நடந்துவிட்டது. அதோடு நின்றால் பரவாயில்லை. காலப்போக்கில் நான் ஒரு ஹென்பெக்ட் கணவனாகவே மாறிவிட்டேன். ஹென்பெக்ட் கணவனாக இல்லாத ஒரு மனிதன்கூட இந்த உலகத்தில் இதுவரை பிறந்ததே இல்லை. கடவுள் ஒரு ஆணைப் படைப்பதே அவனை ஒரு ஹென்பெக்ட் கணவனாக ஆக்குவதற்குத்தான். விருந்து, திருமணம், மரணம், பிரசங்கம் போன்ற விஷயங்களுக்கு நான் பொதுவாகப் போவதில்லை. அப்படியென்றால் இந்த விருந்துக்குப் போவதை நான் பெரிதாக நினைக்கவில்லை என்று அர்த்தம். மதராஸ், பெங்களூர் போன்ற பெரிய நகரங்களில் இருந்து நான் சில நல்ல புடவைகளும், ப்ளவுஸும் மகளுக்கு சில உடுப்புகளும் கொண்டு வந்திருந்தேன். இவற்றையெல்லாம் உலகத்திற்குக் காட்ட வேண்டுமே! அதற்காக இப்படி ஒரு பயணம்!

சாதாரணமாக ஒரு கணவன் தன் மனைவியுடன் வெளியே செல்லும்போது, கணவன் எதைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருப்பான்? எல்லாருக்குமே இது தெரிந்த விஷயம்தான். உலகத்திலேயே தோன்றிய முதல் பெண்ணைப் பற்றியோ இல்லாவிட்டால் அண்டவெளியைப் பற்றியோ இருக்கும். சரி... நான் முதல் பெண்ணைப் பற்றியும் அண்டவெளியைப் பற்றியும் சிந்தித்தேன்.

படைப்பின் ஆரம்பம்.

ஆதியில் தெய்வம் மட்டுமே இருந்தது. அதற்குப் பிறகு எந்தவித பிரச்சினையும் இல்லாமல் எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போய்விட்டன. அப்படி இருக்கிறபோது தெய்வத்திற்கு திடீரென்று ஒரு ஐடியா தோன்றியது. உடனே சூரியனையும், சந்திரனையும், நட்சத்திரங்களையும், ஆகாயத்தையும், பூமியையும், கிரகங்களையும், அண்டவெளியையும், இன்ன பிற விஷயங்களையும் தெய்வம் படைக்கத் தொடங்கியது. நீரிலும், நிலத்திலும், ஆகாயத்திலும் வாழ்கிற- நகர்கிற உயிரினங்களை அது படைத்தது. அதற்குப் பிறகுகூட  எந்தவித பிரச்சினையும் இல்லாமலேயே எத்தனையோ ஆயிரம் கோடி யுகங்கள் கடந்து போயின. சம்பவங் கள் இவ்வாறு நடந்து கொண்டிருக்க, தெய்வம் எதிர்காலத்தைப் பற்றி நினைத்துப் பார்த்து சிரித்தது. சிரிப்பு கொஞ்சம் சத்தமாகவே வந்தது. இந்தச் சிரிப்பு உலகமெங்கும் எதிரொலித்தது. பூமியிலும் மற்ற இடங்களிலும் இருந்த உயிரினங்கள் பயந்து நடுங்கின. சம்பவம் என்னவென்றால் தெய்வம் பெண்ணைப் படைக்கப் போகிறது!

தெய்வம் முதலில் படைத்தது பெண்ணைத்தான்; ஆணை அல்ல.

சரி... நான் சொன்னது மாதிரி தெய்வம் அழகியான ஏவாளைப் படைக்கிறது. அவள்தான் உலகத்தின் முதல் பெண். அவளுக்கு நூற்றியொரு நாக்குகள். ஒரு நாக்கு வாயில். மற்ற நூறு நாக்குகளும் கழுத்தைச் சுற்றிலும் இருந்தன. இந்த ஏவாளை தெய்வம் ஏதன் தோட்டத்தில் வசிக்கச் செய்தது. இவள் எந்தவித காரணமும் இல்லாமல் சிரிப்பாள். அழுவாள். மனதிற்குத் தோன்றியபடியெல் லாம் பேசுவாள். விளைவு- மற்ற உயிரினங்களுக்கும், தெய்வத்திற்கும் இது ஒரு பெரிய தலைவலி ஆகிவிட்டது. இப்போது என்ன செய்வது? இவளை யாரிடம் பிடித்துக்கொடுப்பது?

அப்படித்தான் தெய்வம் ஆதாம் என்ற பெயரைக் கொண்ட ஒரு பாவப்பட்ட ஆணைப் படைக்கிறது. அவன்தான் உலகத்தின் முதல் ஆண். இவனுடைய வாயில் ஒரு சிறிய நாக்கு. கழுத்தைச் சுற்றிலும் ப்ளாங்க். ஒன்றுமே இல்லை. இந்த ஆதாமிடம் ஏவாள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளைக் கொண்டும் பேசினாள். அவ்வளவுதான்- ஆதாம் மயக்கம் போட்டு கீழே விழுந்துவிட்டான். அவன் மயங்கிக் கிடந்த வேளையில் தெய்வம் சில மாய்மால வேலைகளால் ஏவாளின் கழுத்தைச் சுற்றிலும் இருந்த நாக்குகளை இல்லாமல் செய்யவில்லை. மாறாக, யாருக்குமே தெரியாதது மாதிரி செய்துவிட்டது. ஆதாம் கண்களைத் திறந்து பார்த்தபோது, ஏவாளின் கழுத்தில் இருந்த நூறு நாக்குகளையும் காணவில்லை. இருந்தாலும், ஆதாமால் அதை மறக்க முடியுமா?

இந்த ஏவாளுக்கும், பாவப்பட்ட ஆதாமுக்கும் பிறந்த மக்களின், மக்களின், மக்களின் மக்கள்தாம் நாம் என்று சிந்தித்தவாறு, நான் மெதுவாகச் சிரித்தேன். அப்போது ஏவாளின் மகளின், மகளின் மகளான என்னுடைய மனைவி என்னைப் பார்த்துக் கேட்டாள்:

“என்ன, நீங்க மட்டும் தனியா சிரிச்சிக்கிட்டு இருக்கீங்க?''

நான் கேட்டேன்:

“ஒரு கணவன் இலேசா சிரிக்கக்கூடாதா? அதுக்குக் கூடவா சுதந்திரம் இல்ல? ஒரு சங்கம் கட்டாயம் இங்கு வேணும்னு நினைக்கிறேன். கணவன்களைப்போல இப்படி ஆட்டி வைக்கப்படுகிற ஒரு மக்கள் பிரிவு இந்த பூமியிலேயே இருக்குறதுக்கு வாய்ப்பு இல்ல. எங்களுக்கு சிரிக்கக்கூட சுதந்திரம் இல்லைன்னா எப்படி?''

மனைவி சொன்னாள்:

“விருப்பம்போல சிரிச்சுக்கோங்க. ஏதாவது தமாஷான விஷயம்னா எங்களுக்கும் சொன்னா நாங்களும் சிரிக்கலாம்ல! அப்படி என்ன தமாஷான சமாச்சாரம்?''

நான் சொன்னேன்:

“நகைகள்! பெண்கள் கழுத்து நிறைய நகைகள் அணியிறதுக்கான ரகசியம் என்ன தெரியுமா? அதை நினைச்சேன். சிரிச்சேன்.''

நம்முடைய அக்னி சாட்சி கேட்டாள்:

“நகைகள் அணியிறதுல என்ன ரகசியம் இருக்கு?''

நான் சொன்னேன்:


“பெண்களோட கழுத்தைச் சுற்றிலும் நூறு நாக்குகள் இருக்கு. பார்த்தா அது தெரியாது. இருந்தாக்கூட அதை மறைக்கிறதுக்காக...''

மகள் இடையில் புகுந்து சொன்னாள்.

"டாட்டா! எனக்கொரு தங்க மாலை வேணும்.''

எனக்கு சிரிப்பு வந்தது. நான் சொன்னேன்.

“மகளே, இன்னும் கொஞ்சம் பெருசா நீ வளர்ந்தப்புறம் நான் வாங்கித் தர்றேன்!''

“டாட்டா... நீங்க ஏன் சிரிச்சீங்க?''

மகள் என்னை "டாட்டா' என்றுதான் எப்போதும் அழைப்பாள். தாய், மகள்- இரண்டு பேர்களின் நாக்குகளின் பலனாக என்னுடைய வலது செவியிலிருந்து இடது செவிக்கு ஒரு சுரங்கப் பாதை உண்டாகிவிட்டது. மகளின் நாக்குக்குத்தான் எத்தனை சக்தி! அவளின் வயது ஐந்தரை. பெயர் ஷாஹினா. பேச்சு வர ஆரம்பித்த போது, “டாட்டா, குங்குறு, குறுகுறு” என்று என்னவெல்லாமோ அன்பு மகள் பேச ஆரம்பித்தாள். அவள் இப்படித்தான் "டாட்டா” என்று என்னை அழைக்க ஆரம்பித்தது. உம்மா என்றழைக்கப்படும் என்னுடைய அம்மா, என் மனைவி எல்லோருமே "பாப்பா, பாயிச்சி, ப்ப்பா' என்றெல்லாம் என்னை அழைக்கும்படி செல்வ மகளுக்குச் சொல்லித் தந்தார்கள். ஆனால், மகள் அவர்கள் சொன்னபடி யெல்லாம் கேட்காமல், என்னை "டாட்டா' என்று மட்டுமே அழைக்கத் தொடங்கினாள். இதில் ஏதாவது ரகசியம் தெரிகிறதா?

நான் அன்பு மகளை "சிம்பிளு” என்று அழைப்பேன். மகள் என்னை "டாட்டா” என்று அழைப்பதன் ரகசியம் சில நாட்களுக்கு முன்புதான் எனக்கே தெரிய வந்தது. மகளுக்கு தாடையில் ஒரு குழியிருக்கும். பொதுவாக இந்த மாதிரியான குழிகள் எல்லாப் பெண்களுக்குமே இருக்கும். (கண்ணுக்குத் தெரியாத நூறு நாக்குகளைப் போல). சில பெண்மணிகளுக்கு இந்தக் குழிகள் ஆண்களுக்கே சவால் விடுகிற மாதிரி கன்னத்தில் அழகாக "ஃபிட்” செய்யப்பட்டிருக்கும். என் மனைவிக்கு கன்னத்திலும் மகளுக்கு தாடையிலும் இந்தக் குழிகள் இருக்கின்றன.

"சிம்பிளு” வின் தாடையில் இருக்கும் குழியைப் பற்றிய ரகசியத்தை ஒரு பிராமணப் பெண்தான் எனக்கு சொன்னாள். திருச்சூர் கெ. பரமேஸ்வரன் நாயர் என்ற பெயரில் ஒரு ஃபோட்டோகிராபர் இருந்தார். அவருக்குச் சொந்தத்தில் ஷோபனா ஸ்டுடியோ என்ற பெயரில் ஒரு படமெடுக்கிற இடம் இருந்தது. இப்போது நான் சொல்லும் அந்தப் பரமேஸ்வரன் நாயர் ஒரு சினிமாக்காரர் என்று எனக்குத் தகவல் வந்திருக்கிறது. நானும், அன்பு மகளும், மனைவியும் மேலே சொன்ன பரமேஸ்வரன் நாயர் வீட்டிற்கு விருந்தினர்களாகப் போயிருக்கிறோம். அருகில் சில பிராமணர் வீடுகள் இருந்தன. அவற்றில் ஒரு வீட்டிற்கு, நானும் மகளும் மனைவியும் பரமேஸ்வரன் நாயரின் மனைவி சௌபாக்கியவதி சரஸ்வதியுடன் சேர்ந்து விருந்துக்குப் போயிருந்தோம். அன்பு மகளின் தாடையில் இருக்கும் குழியைப் பற்றி அங்கு பேச்சு வந்தது. அந்த வீட்டு அம்மா சொன்னாள்:

“இது சாதாரண குழி இல்ல... பணக் குழியாக்கும்- பணக்குழி!''

அந்த அம்மா சொன்னது ஒரு விதத்தில் சரிதான். இல்லா விட்டால் என்னை எதற்கு மகள் "டாட்டா” என்று அழைக்க வேண்டும்? இந்தியாவின் பெரிய பணக்காரர்கள் யார் யார்? டாட்டா, பிர்லா, டால்மியா...

“டாட்டா...'' மகள் சொன்னாள்: “எனக்கு தங்க மாலை வேணும்...''

நான் சொன்னேன்:

“மகளே... டாட்டா கையில இப்ப காசு இல்லியே!''

மனைவி சொன்னாள்:

“பொம்பளைங்களுக்கு நூற்றியொரு நாக்குகள் இருக்கு, அது இதுன்னு பேசித் திரிஞ்சா மட்டும் போதுமா? ஒரு கதை எழுதி, பிள்ளைக்கு ஒரு மாலை வாங்கித் தர்றதுக்கு வழியைப் பாருங்க. பிறகு... நான் ஒரு விஷயம் சொல்லணும்னு நினைச்சேன். எங்களுக்கு பதினாலு கேரட் வேண்டாம். இருபத்திரண்டு கேரட்தான் வேணும்!''

அப்போது அன்பு மகள் என் ஜிப்பாவின் நுனியை ஐந்தாறு தடவை பிடித்து இழுத்து என் கவனத்தைத் தன் பக்கம் திரும்ப வைக்க முயற்சித்தாள். பிறகு கோபத்துடன் என்னைப் பார்த்து சொன்னாள்:

“டாட்டா... பாருங்க. அம்மாவோட நிக்கார துணியைப் போட்டுக்கிட்டு ஒரு ஆளு டாட்டா... உங்களைப் பார்த்து சிரிக்கிறாரு...''

அதாவது-என் மனைவியின் நிஸ்கார ஆடையை அணிந்து ஒரு ஆள் என்னைப் பார்த்து சிரிக்கிறார். இதுதான் மகள் சொன்னதன் அர்த்தம். பெரும்பாலான பெண்களைப் போல, என்னுடைய மனைவியும் ஒரு தெய்வ பக்தைதான். ஐந்து நேரமும் கடவுளைத் தொழுவாள். பல காரணங்களால் பெண்கள் கட்டாயம் கடவுளைத் தொழ வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அல்லவா? அப்படி பிரார்த்தனை செய்கிறபோது, என் மனைவி நீளமான ஒரு நிஸ்கார ஆடையை அணிவாள். அந்த அவளின் ஆடையை அணிந்து கொண்டு என்னைப் பார்த்துச் சிரிக்கிறவன் யாரடா? அதோடு என் மகள் நின்றால் பரவாயில்லை. அவள் சொன்னாள்: “அந்த ஆளு அம்மாவையும் பாக்குறாரு!''

சாதாரணமாக எல்லா கணவர்களையும் போல நானும் எந்த பெண்ணைக் கண்டாலும் ஆர்வத்துடன் பார்ப்பேன். அதே நேரத்தில் என் மனைவியை யாராவதொரு ஆண் பார்த்தால், "என் பொண்டாட்டியை ஏன்டா அப்படிப் பாக்குறே? உனக்கு கொஞ்சம் கூட பண்பாடுன்னு ஒண்ணு கிடையாதா?” என்று பயங்கரமாக கத்திக்கொண்டு அவன்மீது பாய்ந்து, அவன் கழுத்தை நெரித்துக் கொன்றால் என்ன என்று மனதில் தோன்றும். இங்கே அவளை அவன் பார்க்க மட்டும் செய்யவில்லை. நிஸ்கார ஆடையை வேறு எடுத்திருக்கிறான்.

நெருப்பு கக்கும் கண்களால் நான் பார்த்தேன். அடுத்த நிமிடம் எனக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. மவுனமாகி விட்டேன். கண்களில் இருந்த தீப்பொறி இருந்த இடம் தெரியாமல் போய் மறைந்துவிட்டது. நான் காற்று போன பலூன்போல கொஞ்ச நேரத்தில் மாறிப்போனேன். மாறாக, பக்கத்தில் போய் தொழுது நின்றேன்.

அங்கே நின்றிருந்தது ஒரு கத்தோலிக்க பாதிரியார். அவருக்கு அப்படி ஒன்றும் அதிகம் வயதில்லை. பாதையில் இருந்த ஒரு மரத்துக்குக் கீழே அவர் நின்றிருந்தார்.

“என்னை ஞாபகத்துல இருக்கா?'' அவர் சிரித்தவாறு என்னைப் பார்த்துக் கேட்டார். நான் சொன்னேன்: “ஞாபகத்துல இருக்கு. என்ன இங்கே...?''

பாதிரியார் சொன்னார்: “நான் இப்போ இந்த ஊர்லதான் இருக்கேன். பஷீர்... நீங்க என்ன இங்கே?''

நான் சொன்னேன்: “நானும் இந்த ஊர்லதான் இருக்கேன்!''

பிறகு நான் இந்த ஊருக்கு எப்படி வந்தேன். அதற்கான காரணங்கள் என்ன போன்ற விஷயங்களை அவரிடம் சொன்னேன். மனைவியையும், மகளையும் அவருக்கு அறிமுகப்படுத்தி வைத்தேன். வீட்டுக்கு வரும்படி அவரை அழைத்தேன்.


ஒரு நாள் கட்டாயம் வருவதாகச் சொன்னார். இப்போது தான் பஸ்ஸுக்காகக் காத்திருப்பதாகக் கூறினார்.

நான் சொன்னேன்: “ஏகப்பட்ட நேரம் இங்கேயே நின்னுக்கிட்டு இருக்கணும். பஸ் இங்கே எப்பவாவதுதான் வரும்...''

அவர் சொன்னார்:

“எனக்கு ஒண்ணும் அவசரமில்ல...''

பிறகு என்னைப் பார்த்த அவர், எந்தவித காரணமும் இல்லாமல் விழுந்து விழுந்து சிரித்தார்.

நான் முன்னால் நடந்து கொண்டிருந்தேன்.

என் நடையில் எந்தவித கம்பீரமும் இல்லை. ஒரு அப்பிராணி மனிதனைப்போல நடந்தேன். சிறிது தூரம் சென்றதும் என் மனைவி என்னைப் பார்த்து, இனிமையான குரலில் கேட்டாள்:

“அந்த ஆளு ஏன் அப்படி சிரிச்சாரு?''

நான் சொன்னேன்:

“அவர் தாராளமா அப்படி சிரிக்கலாம். காரணம்- அவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல. இனிமேலும் கல்யாணம் செஞ்சுக்கப் போறதில்ல...''

மகள் கேட்டாள்: “அம்மாவோட நிக்கார துணியை வாங்க        லியா?''

நான் சொன்னேன்: "மகளே, அது நம்ம அம்மாவோட துணி இல்ல. அவரோட துணி...''

என்னுடைய அக்னி சாட்சி விஷத்தில் நனைத்த நாக்கில் கொஞ்சம் சர்க்கரையைத் தூவி விட்டவாறு கேட்டாள்:

“நான் கேட்டதுக்கு என்ன பதிலையே காணோம்...''

மகள் கேட்டாள்:

“அவரு நிக்கரிப்பாரா டாட்டா?''

“மகளே, அவர் பிரார்த்திப்பார்...'' நான் சொன்னேன்: “எந்த நாளிலும் முடிவடையாத ஒரு பிரார்த்தனைதான் வாழ்க்கை என்பது...''

என் மனைவி அத்தரில் நாக்கை நனைத்தவாறு கேட்டாள்:

“அவரு அப்படி குலுங்கிக் குலுங்கி சிரிச்சதுக்கான ரகசியம் என்ன?''

“ரகசியமும் கிடையாது... ஒண்ணும் கிடையாது. ஏதாவது மனசுல நினைச்சிருப்பாரு. சிரிச்சிருப்பாரு. வேணும்னா நீயே கேட்டுக்கோ!''

“வேணும்னான்னு இல்ல...'' மனைவி சொன்னாள்: “நிச்சயமா நான் கேட்கத்தான் போறேன்.''

“தாராளமா கேட்டுக்கோ.'' நான் ஒரு மாதிரி ஆங்கிலத்தில் கூறினேன்: “ராமு கார்யாட் (அந்தப் பெயர் என்றும் நிலைத்து நிற்கட்டும்) -அந்தத் தடியன்தான் எல்லாத்துக்கும் முக்கிய காரணம். நம் பரமு இருக்கிறானே! அதாவது- கெ. பரமேஸ்வரன் நாயர்... (இந்தப் பெயரும் என்றும் நிலைபெற்று நிற்கட்டும்). ஆனால், நினைச்சுப் பார்க்கிறப்போ நாயர் சமுதாயத்தை (ஸாரி... ஆண் நாயர்களை மட்டும்) ஒரே மூச்சில் ஒழிச்சுக் கட்டினா என்னன்னு இப்போகூட மனசுல வெறி உண்டாகுது...''

மனைவி சொன்னாள்:

“பரமு ஒரு அப்பிராணி- பாவம்...''

நான் சொன்னேன்:

“அவர் நாயர் சமுதாயத்தைச் சேர்ந்த ஆளு. பாவமே கிடையாது...''

மனைவி கேட்டாள்:

“அப்படியென்ன நாயர்கள் உங்களுக்குப் பெரிசா துரோகம் பண்ணிட்டாங்க?''

 

நான் அவளுக்கு விஷயத்தைச் சொன்னேன். அந்தச் சம்பவத்தை இப்போது உங்களுக்கு நான் கூறப்போகிறேன்.

பெரும் மதிப்பிற்குரிய தடியன் ராமு கார்யாட் திருமணம் செய்து கொள்ளப் போகிறான். இதில் யாருக்காவது எதிர்ப்பு இருக்குமா என்ன? நூற்றியொரு நாக்குகளை வைத்துக்கொண்டு எங்கேயோ சதி என்ற பெயரில் இருக்கும் ஒரு சௌபாக்கியவதி சந்தன வண்ண முகத்தை வைத்துக்கொண்டு ராமுவிற்காகக் காத்திருக்கிறாள். ராமு என்னிடம் சொன்னான்:

“பஷீர், நீங்க கல்யாணத்துக்கு கட்டாயம் வரணும். ஏதாவது சாக்குப்போக்கு சொல்லக்கூடாது. பஷீர்... நீங்க மட்டும் வரலைன்னா, என் தந்தை மேல சத்தியமா சொல்றேன். இந்தக் கல்யாணம் நடக்காது. இது மட்டும் உண்மை!''

நான் சொன்னேன்: “எல்லாம் நல்ல முறையில நடக்கட்டும். ராமு,  மங்களம். ராமுவிற்கும், சௌபாக்கியவதி சதிக்கும், பிள்ளைகளுக்கும் மங்களம் உண்டாகட்டும்!''

ராமு சொன்னான்: “அவ இப்ப ஒரு கன்னி.''

நான் சொன்னேன்: “ஸாரி... கல்யாணம் ஆன பிறகு, பிள்ளைங்க பிறக்கும். அப்ப வாழ்த்துறதுக்கு, மங்களம் சொல்றதுக்கு ஒருவேளை நான் உயிரோட இல்லாம இருந்தா...? அதனால இனிமேல் பிறக்கப் போற பிள்ளைங்களுக்கும் தாய்க்கும் இப்பவே வாழ்த்து சொல்            லிர்றேன்.'' (ராமு கார்யாட் மரணமடைந்துவிட்டான். ராமுவின் ஆத்மாவிற்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தரட்டும்.)

ராமு சொன்னான்: “பஷீர்... நீங்களும் ஒரு கல்யாணம் பண்ணிக்கணும்!''

நான் சொன்னேன்: “நமக்கு பெண்ணெல்லாம் வேண்டாம், ராமு. பெண்ணும் பெட்டைக் கோழியும் இல்லாத இந்த வாழ்க்கை, அழகானதாகவும் மகிழ்ச்சி நிரம்பியதாகவும் இருக்கு. இன்னொரு தடவை உன்னை நான் வாழ்த்துறேன். பெண்ணைத் திருமணம் செஞ்சு ஒரு பெரிய டைரக்டரா நீ வரணும். சரி போ. குட்பை.''

ராமு கார்யாட் புறப்பட்டான். அதற்குப் பிறகு அவனைப் பற்றி எந்தவிதமான தகவல்களையும் காணோம். கல்யாணம் முடிந்து குழந்தை குட்டிகளைப் பெற்று பெரிய ஒரு சினிமா டைரக்டராகி வசதியாக, சந்தோஷமாக வாழ்ந்துகொண்டு இருக்க வேண்டும். நான் உலக விஷயங்களில் மூழ்கிப்போய் அமைதியாக வாழ்ந்துகொண்டு இருக்கிறபோது ஒரு வில்லன் வாழ்க்கையில்...

மனைவி கேட்டாள்: “யார் அது?''

நான் சொன்னேன்: “நாயர்!''

சிறிது நேர அமைதிக்குப் பிறகு நான் என் மனைவியைப் பார்த்து கேட்டேன்: “அடியே... உனக்கு நீச்சல் தெரியுமா?''

அக்னிசாட்சி சொன்னாள்: “எனக்குத் தெரியாது!''

“அப்படின்னா... நீ முதல்ல அதைக் கத்துக்கணும்!'' நான் சொன்னேன்:

“அது ஒரு பெரிய கலை ஆச்சே!''

மனைவி கேட்டாள்: “நீச்சலைத் தெரிஞ்சு என்ன ஆகப் போகுது?''

“நாயர்கள் நீச்சல் தெரியாம தண்ணில முங்கி சாகுறப்போ நீ நீச்சலடிச்சுப் போய் அவங்களைக் காப்பாத்தாம திரும்பி வரணும்...''

மனைவி கேட்டாள்:

“அது பாவம் இல்லியா?''

“இல்லடி...'' நான் சொன்னேன்: “அந்த வில்லன் நாயர் யாருன்னு நினைக்கிறே? நம்ம பரமுதான்.'' தொடர்ந்து அவளிடம் எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னேன். ஒரு நாள் பரமு என்னைப் பார்த்துக் கேட்டான்:

“குரு... நாம போகலாமா?''

எங்கே என்று கேட்காமலே நான் சொன்னேன்: “நீ போய்க்கோ. நான் வரல...''

பரமு அமைதியான குரலில் சொன்னான்:

“இங்கே இருந்து போன பிறகு அவன் குளிக்கல. பல் தேய்க்கல. ஏன் சவரம்கூட செய்யல...''

“யாரைச் சொல்றே?''

பரமு சொன்னான்:

“ராமு கார்யாட்!''

நான் சொன்னேன்: “குளிக்கலைன்னா ராமுவுக்கு ஒண்ணும் ஆகப் போறதில்ல. சவரம் செய்யலைன்னா அவனுக்கு லாபம்தானே!''

பரமு சொன்னான்: “குரு, நீங்க போகலைன்னா அவனோட கல்யாணம் நடக்காது. அவன் இந்த விஷயத்தை சத்தியம் பண்ணி சொல்லிட்டான். பஷீர் கலயாணத்துக்கு வந்தாத்தான் பல் தேய்ப்பேன்னு ஒரேயடியா சொல்லிட்டான். நீங்க அங்க போனாத் தான் குளிப்பானாம். நீங்க போனாத்தான் சவரமே செய்வானாம். நீங்க போனாத்தான் மணப்பெண் கழுத்துல தாலியே கட்டுவானாம்!''

இப்படி ஒருத்தன் சபதம் செய்தால் ஊர்க்காரர்கள் என்ன நினைப்பார்கள்? நான் சொன்னேன்:


“பரமு, உனக்குத் தெரியாதா எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு...?''

பைத்தியம் என்று நான் சொல்ல வருவது என்னவென்றால்- இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்களுக்கும் பெண்களுக்கும் பைத்தியம் என்ற ஒன்று இருக்கவே செய்கிறது. (ஸாரி.. பெண்களுக்கு இல்லை. இல்லவே இல்லை). ஒரே ஒரு நாக்கை வைத்திருக்கும் ஆண்களுக்கு நிச்சயம் பைத்தியம் இருக்கிறது. 5, 10, 25, 75- என்ற சதவிகிதத்தில்தான் அது வித்தியாசப்பட்டிருக்கிறது. என்னைப் பொறுத்தவரை எனக்கு 99 சதவிகிதம் பைத்தியம் பிடித்திருந்தது. என்னை காரில் ஏற்றி சிகிச்சைக்கு அழைத்துக்கொண்டு போனவர்கள் எர்ணாகுளத்தில் உள்ள கிருஷ்ணன் நாயர் வாட்ச் கம்பெனியின் உரிமையாளர் குட்டப்பன் நாயர், நர்மதா ராகவன் நாயர், எம்.பி. கிருஷ்ணபிள்ளை, பெருன்ன தாமஸ் ஆகியோர். (குட்டப்பனும், நர்மதா ராகவன் நாயரும், பெருன்ன தாமஸும் இந்த உலகத்தை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களின் ஆத்மாக் களுக்கு கடவுள் நிரந்தர அமைதியைத் தரட்டும்). வைத்தியர் வல்லப்புழ எனக்கு சிகிச்சை செய்தார். எனக்கு- சொல்லப் போனால்- பிரமாதமாக சிகிச்சை செய்தார்கள். எண்ணெய், களிம்பு, கஷாயம், நெய், மாத்திரைகள், குளியல்- இப்படிப் போய்க் கொண்டிருக்கிறது சிகிச்சை. நானே கிட்டத்தட்ட ஒரு வைத்தியன் மாதிரி ஆகிவிட்டேன் என்பதே உண்மை. அந்த வகையில் நானே ஒரு பைத்தியக்கார வைத்தியனாகவும் நோயாளியாகவும் ஒரே நேரத்தில் இருந்துகொண்டு மகிழ்ச்சியாக நாட்களை ஓட்டிக்கொண்டிருந்த நேரத்தில்தான் இந்த திருமண விஷயம் என் முன்னால் வந்து நின்று கொண்டிருக்கிறது. "குரு, நீங்க கட்டாயம் கல்யாணத்துக்கு வரணும்.” இந்த வார்த்தைகள் எந்த நேரமும் என் காதுகளில் முழங்கிக் கொண்டே இருந்தன. என்னைச் சிலர் இப்படித்தான் குரு என்று அழைப்பதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்கள். இதையே மதராஸ் போன்ற தமிழ் பேசும் இடங்களில் "உஸ்தாத்” என்று அழைப்பார்கள். என்னை ஏன் இப்படி அழைக்கிறார்கள் என்பது எனக்கே தெரியாது. எனக்கு சிஷ்யர் களோ, சிஷ்யைகளோ கிடையாது. உண்டு என்று சொன்னால், அது எனக்கே தெரியாத ஒரு விஷயம். ஆனால், அதே நேரத்தில் சிலர் என்னை "குரு' என்று அழைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். நான் என்ன செய்வது?''

“குரு...!'' பரமு சொன்னான்: “எனக்குத் தெரியும். இருந்தாலும் கட்டாயம் போகணும். ராமுவோட ஒரு விருப்பம் இது. நாம போகலைன்னா, ராமு கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். அவனுக்கு நடக்கப் போறதே ஒரே ஒரு கல்யாணம்தான். நாம கட்டாயம் போகணும். குரு...''

“மருந்துகள், எண்ணெய், கஷாயம்...''

“எல்லாத்தையும் ஒரு பெட்டியில எடுத்துட்டுப் போயிடுவோம்.''

“இதை யாரு சுமந்துக்கிட்டு போறது? நீயா?''

“ஸ்டுடியோவுல இருந்து ஒரு பையனை வேணும்னா கூட அழைச்சிட்டுப் போவோம்!''

ரைட். இதை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால், அடுத்த காட்சி ஒரு பஸ் நிலையத்தில் நடக்கிறது. பையனும் பரமுவும் நானும் பஸ்ஸில் அமர்ந்திருக்கிறோம். நான் டிரைவருக்குப் பின்னால் வலது பக்கத்தில் உட்கார்ந்திருக்கிறேன். எனக்குப் பக்கத்தில் பரமுவும். பஸ் "ஹார்ன்” அடித்தவாறு மெதுவாக நகர ஆரம்பிக்கிறது. நான் போக வேண்டிய இடத்தை நோக்கி அது தன் பயணத்தைத் தொடங்குகிறது. (நாங்கள் எவ்வளவோ உடல் வருத்தங்களையும் சகித்துக்கொண்டு ராமுவின் வீட்டிற்குப் போகிறோம். ராமுவிற்கு தூரத்தில் நின்றவாறு, என்னுடைய தலைமையில் அவனை முதலில் குளிப்பாட்டுகிறார்கள். தேங்காய்கள் எதுவும் இல்லாத ஒரு தென்னை மரத்திற்குக் கீழேதான் ராமுவை உட்கார வைத்திருந்தார்கள். இவ்வளவு நாட்களாக குளிக்காமல் ராமு தன் உடலில் சேர்த்து வைத்திருந்த எல்லாமும் தென்னை மரத்திற்கு உரமாகப் போய்ச் சேரட்டும் என்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. குளியல் முடிந்து, ராமுவின் பல் தேய்க்கும் நிகழ்ச்சி. தொடர்ந்து முடிவெட்டு, சவரம். அதற்குப் பிறகு இன்னொரு குளியல். அதைத் தொடர்ந்து யுடிக்லோன் எடுத்து விருப்பப்படி ராமுவின் உடலில் பூசப்படுகிறது. பவுடர் போடுகிறார்கள். வெளியே சென்ட் தேய்ப்பு. திருமண ஆடைகள் அணிவித்து, பன்னீர் தெளித்து, மேள தாளங்கள் முழங்க அவனைக் கொண்டு சென்று முன்னால் சொன்ன சந்தன நிறம் கொண்ட இளம் பெண்ணுக்கு அருகில் நிறுத்த, ராமு கார்யாட் அந்த ஊர்க்காரர்களும், வெளியூர்களிலிருந்து வந்திருந்தவர்களும், ஏகப்பட்ட ஆண்களும் பெண்களும் சாட்சியாக இருக்க, அவளின் கழுத்தில் தாலியைக் கட்டுகிறான். பிறகு... ராமுவிற்கு ஐந்தாறு பிள்ளைகள் பிறக்கிறார்கள். சுபம்.) அப்படியானால்... முக்கிய கதை இது இல்லை என்பது புரிகிறது அல்லவா? திருமணத்திற்குப் போகிறபோதுதான் அந்த நாயர் துரோகம் என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. நான்தான் சொன்னேனே, பரமுவும்  நானும் பஸ்ஸில் அருகருகில் அமர்ந்திருக்கிறோம் என்று! நாங்கள் வெளியே நகர்கிற காட்சிகளைப் பார்த்தவாறு உட்கார்ந்திருக் கிறோம் (இப்போதைக்கு நாம் குழந்தைப் பருவத்திற்கு கொஞ்சம் போய் வருவோம். நான் இப்போது அமர்ந்திருப்பது மரத்தடிக்குக் கீழே. மாமரத்தின் ஒரு கிளையில் ஒரு மஞ்சள் நிற மாம்பழம். "அத முதல்ல பார்த்தது நான்தான்' என்று நான் மார் தட்டி சொல்லிக் கொள்கிற மாதிரி அந்த மாம்பழம் தொங்கிக் கொண்டிருக்கிறது. மற்ற ஆட்கள் யாருமே அந்த மாம்பழத்திற்குச் சொந்தம் கொண்டாட முடியாது. எந்த கோர்ட்டுக்குப் போனாலும் நான் சொல்வதைத்தான் யாருமே சொல்வார்கள். காற்று வீசுகிறது. மாம்பழம் கீழே விழுகிறது. மாம்பழத்தைத் தேடி யாரும் ஓடி வரவில்லை. நான் மெதுவாகச் சென்று மாம்பழத்தை எடுத்து இலேசாக முகர்ந்து பார்த்து அதையே ஸ்டைலாக வைத்த கண் எடுக்காது நோக்கிக் கொண்டிருக்கிறேன்.) இப்போது நான் பஸ்ஸில் உட்கார்ந்திருக்கிறேன்.

“குரு...'' பரமு சொன்னான்: “முதல்ல பார்த்தது நான்தான்...''

நான் வெளியே பார்த்தேன். பஸ்ஸுக்கு நேர் எதிராக ஒய்யாரமாக ஒரு இளம் பெண் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். அவளை முதலில் பார்த்தது பரமுவாக இருந்ததால், நான் பதிலுக்கு ஒன்றுமே கூறவில்லை. அவள் பரமுவிற்குச் சொந்தமானவள்தான்! அவள் தன் போக்கில் சாலையில் நடந்து வந்து கொண்டிருக்கிறாள். பஸ் அது பாட்டுக்கு சாலையில் ஓடிக் கொண்டிருக்கிறது. அதற்குப் பிறகு எங்களின் முக்கிய வேலையே "முதல்ல பார்த்தது நான்தான்” என்று சொல்வதாக ஆகிவிட்டது. தூரத்தில் வருகின்றபோதே பெண்களைப் பார்த்து "முதல்ல பார்த்தது நான்தான்' என்று பரமுவால் சொல்ல முடிந்தது. நானும் அப்படி முதலில் பார்க்க முயற்சித்துப் பார்த்தேன். (இனி என்னுடைய தூரப் பார்வையைப் பற்றி கொஞ்சம் சொல்லியே ஆக வேண்டும். முன்பு எனக்கு பல புத்தகக் கடைகளும் சொந்தத்தில் இருந்தன.


காலை ஒன்பது மணிக்கு கடையைத் திறப்பேன். இரவு ஒன்பது மணிக்கு அதை மூடுவேன். பகல் முழுவதும், இரவின் ஆரம்பத்திலும் நான் கட்டா யம் புத்தகக் கடையில் இருக்க வேண்டிய நிலை. தங்கியிருந்தது மேல் மாடியில் இருந்த குளியலறை இணைக்கப்பட்ட ஒரு அறை. அறையில் நான்கைந்து சாளரங்கள் உண்டு. நான்கு சாளரங்களுக்கு அப்பால் ஆறேழு அழகிய இளம் பெண்கள் இருந்தார்கள். அவர்களை நான் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை. சைட்டடிக்கும் பழக்கமே இல்லாமல் நல்ல பண்பாடுள்ள மனிதனாக நான் இருந்தேன் என்பதைச் சுருக்கமாக எல்லாரும் புரிந்துகொள்ள வேண்டும். அதற்கு முதல் காரணம்- அவர்களைப் பார்க்கிற அளவிற்கு எனக்கு நேரமில்லை. இரண்டாவது- அந்தப் பெண்களின் தந்தையையும் தாயையும் எனக்கு நன்றாகவே தெரியும். என்னையும் அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் மிகவும் ஒழுக்கமான மனிதனாக நான் என் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருந்தேன். ஆனால், ஐந்தாவது சாளரம் இருக்கிறதே! அதுதான் என்னுடைய காதல் சாளரமாக இருந்தது. அதன் வழியாகப் பார்த்தால் தூரத்தில்... ரொம்பவும் தூரத்தில்... ஒரு வீட்டு வாசலில் நின்று கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பார்க்கலாம். நான்  காலையில் புத்தகக் கடைக்குப் புறப்படுகிற அவசரத்தில் ஜிப்பா அணிந்து முகம் ஸ்டைலாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக காதல் சாளரத்தின் அருகில் இருக்கும் பெரிய கண்ணாடியை நோக்குவேன். அவளுக்கு ஒரு சல்யூட் அடித்துவிட்டு, வாசல் கதவைப் பூட்டிவிட்டு வெளியே புறப்படுவது என்பது அன்றாட வழக்கமாக இருக்கும். இப்படிப்பட்ட நிலையில் என்னை "குரு' என்றழைக்கும் ஒருவன் என்னுடைய அறைக்கு விருந்தாளியாக ஒரு நாள் வந்தான். நான் புத்தகக் கடைக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்ததால், அவனைப் பார்த்துச் சொன்னேன்:

“இங்க பாரு... முன் பக்கம் இருக்குற நாலு ஜன்னல்கள் வழியாகவும் பார்க்கலாம். எந்தவித தடையும் இல்லாம இளம் பெண்களை சைட் அடிக்கலாம். ஆனா, அஞ்சாவது இருக்கிற ஜன்னல் வழியா மட்டும் பார்க்கக்கூடாது. அது என்னோட சொந்த காதல் ஜன்னல். அது வழியா பாக்குறப்போ தெரியிற அழகியை முதல்ல பார்த்தது நான்தான்!''

நான் போய்விட்டு, திரும்பவும் இரவு ஒன்பதரை மணிக்கு அறைக்கு வந்தேன். குளியல், சாப்பாடு எல்லாம் முடிந்ததும் வந்திருந்த ஆள் கேட்டான்: “குரு... நீங்க எவ்வளவு நாளா அந்தப் பெண்ணைக் காதலிக்கிறீங்க?'' நான் சொன்னேன்: “ரெண்டு மூணு மாசமா இருக்கும். என்ன, பார்த்தியா? பெண் எப்படி இருக்கா?'' விருந்தாளி இளைஞன் சொன்னான்: “மான் கண்ணைக் கொண்டவ... அவளை இதுவரை ஒழுங்கா நீங்க பார்த்தது இல்லியா?'' நான் சொன்னேன்: “அதுக்கு எங்கே நேரம் இருக்கு? ஒரு காதல் கடிதம் எழுதி இருக்கலாம். அவளோட பேரு, முகவரி எதுவுமே எனக்குத் தெரியாது!'' விருந்தாளி சொன்னான்: “அப்படின்னா... ஒரு பூதக் கண்ணாடி வாங்கிக்கலாம்ல?'' நான் கேட்டேன்: “என்ன விஷயம் சொல்லு?'' அவன் சொன்னான்: “நான் அவளைச் சரியா பார்த்தேன். அவள் ஒண்ணும் கன்னிப்பெண் இல்ல. ஒண்ணோ ரெண்டோ பெத்தவ மாதிரிதான் தெரியுது.'' நான் சொன்னேன்: “சே.. அப்படியா? அவ ஏற்கெனவே கல்யாணம் ஆனவன்னு நான் நினைக்கவே இல்ல. கல்யாணம் ஆனவங்களை தாய் மாதிரி நினைக்கணும்னு சொல்லுவாங்க. இருந்தாலும்... இப்போ என்ன செய்றது? நான் அவளைக் காதலிக்கிறேனே!'' விருந்தாளி இளைஞன் சொன்னான்: “நீங்க காதலிக்கிறது சரி... ஆனா, அவளுக்கு ரெண்டு கொம்புகள் இருக்கு. அதாவது- நீங்க பார்த்தது ஒரு வெள்ளை நிற பகன்றதை முதல்ல புரிஞ்சுக்கணும்.'' இதைக் கேட்டதும் உண்மையிலேயே நான் ஆடிப் போனேன். இப்படித்தான் காதல் விஷயங்களில் திடீர் திடீர் என்று எனக்கு அதிர்ச்சியளிக்கக் கூடிய நிகழ்ச்சிகள் நடக்கும். இதற்கு முன்பும் இத்தகைய சம்பவங்கள் என் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. அது இப்போதும் நடந்திருக்கிறது. இந்தக் காதலைப் பற்றி ஒரு காவியம் இயற்றிவிட்டு, மரத்தில் தூக்குப் போட்டு இறக்க வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. ஒரு விதத்தில் என் மனதை நான் சமாதானப்படுத்திக் கொண்டேன். என்ன இருந்தாலும், நான் பார்த்தது பசுதானே! நல்ல வேளை... பெண்ணைப் பார்த்திருக்கிறேன். இதுவே ஒரு காளையாக இருந்து, தினமும் அதைப்  பார்த்து நான் சல்யூட் அடித்து காதலித் திருந்தேன் என்றால், நிலைமை எவ்வளவு மோசமாகப் போயிருக்கும்?).

இப்படி நானும் பரமுவும் எத்தனையோ பெண்களை முதல் முறையாகப் பார்த்திருக்கிறோம். என் தொடையை எத்தனையோ முறை பரமு கிள்ளியிருக்கிறான். பரமுவின் தொடையை எத்தனையோ முறை நான் கிள்ளியிருக்கிறேன். அவன் தொடையைக் கிள்ளியவாறு நான் சொல்வேன்.

“முதல்ல பார்த்தது நான்தான்... பாரு...''

இந்த வகையில் நான் பல மைல் கற்கள், சில ஆடுகள், பசுக்கள், ஒன்றிரண்டு காளைகள், சில கிழவிகள், சில இளம் பெண்கள் ஆகியோரைக் காதலித்து விடுவதையும் பரமுவின் தொடையில் ஸ்டைலாகக் கிள்ளுவதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்தேன்.

பஸ் பல இடங்களிலும் நின்றது. எத்தனையோ பேர் ஏறினார்கள்; எத்தனையோ பேர் இறங்கினார்கள். இவற்றில் எல்லாம் நான் சிறிது கூட அக்கறையே எடுத்துக் கொள்ளவில்லை. பஸ் ஓடிக்கொண்டே இருக்கிறது. பல பெண்களைப் பார்க்கிறேன். அவர்களைப் பார்த்ததும் “முதல்ல பார்த்தது நான்தான்'' என்றேன் உரத்த குரலில். தொடையைக் கிள்ளுகிறேன். தொடை வலியால் நெளிகிறது. மீண்டும் கிள்ளுகிறேன். அப்போது, “ஆமா... ஆமா... நானும் பார்த்தேன்'' என்றொரு புதிய குரலும் தலையாட்டலும்! பரமுவின் குரல் இப்படி இருக்காதே! நான் பார்க்கிறேன். அவ்வளவுதான்- அடுத்த நிமிடம் என் முகமெல்லாம் வெளிறிப் போய்விட்டது. நான் அப்படியே சிலை என உட்கார்ந்துவிட்டேன். கடவுளே! ஓடுகிற பஸ்ஸில் இருந்து தப்பிப்பதற்கு ஏதாவது வழி இருக்கிறதா? ஒரு வழியும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. நடந்த சம்பவம் என்ன என்கிறீர்கள்? நான் கிள்ளிக் கொண்டிருந்தது பரமுவின் அழுக்கடைந்த தொடையை அல்ல- ஒரு சுத்தமான தொடையை. “முதல்ல பார்த்தது நான்தான்'' என்று டாம்பீகமாக நான் பெருமையடித்துக் கொண்டிருந்தது- எந்தக் காலத்திலும் திருமணமே செய்துகொள்ள மாட்டேன் என்று சபதம் போட்டிருக்கும் ஒரு ரோமன் கத்தோலிக்க பாதிரியாரிடம். அவர் தான் இப்போது பரமு உட்கார்ந்திருந்த இடத்தில் அமர்ந்திருந்தார். "ஆமா... ஆமா... நானும் பார்த்தேன்' என்று நெளிந்து கொண்டு சொன்னது அவர்தான். அதைப் பார்த்து நான் பேயறைந்தது போல் வெளிறிப் போய் உட்கார்ந்திருந்தேன். வாயே வறண்டு போய்விட்டது.


பரமு சற்று தூரத்தில் இன்னொரு இருக்கையில் அமர்ந்து அவனின் முப்பத்திரண்டு பற்களையும் காட்டியவாறு என்னைப் பார்த்து சிரித்தான். அதைப் பார்த்து எனக்கு வந்ததே கோபம்! நாயர்கள் எல்லாரையும் (ஸாரி... ஆண்களை மட்டும்) கழுத்தை நெரித்துக் கொல்ல வேண்டும்போல் இருந்தது எனக்கு.

நான் எதுவுமே பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தேன். கோபம், அவமானம்.. எல்லாம் என்னை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தது. கடவுளே... இந்த பாதிரியார் என்னைப் பற்றி என்ன நினைத்திருப்பார்? கடவுளே... பஸ் வேகமாக ஓடக் கூடாதா? பஸ் நின்றவுடன் இந்த நல்ல மனிதரின் முகத்தையே பார்க்காமல் ஓடி ஒளிந்து கொள்ளலாமே! இந்த பாதிரியாருக்கு நான் யார் என்பது தெரியாது. தெய்வமே! என்னைக் காப்பாற்று, என்னையும் என் நிலையையும் பார்த்த பாதிரியார் மெல்ல சிரித்தார். பிறகு சொன்னார்: “பரவாயில்ல... மிஸ்டர் பஷீர்... பரவாயில்லை. நான் உங்களோட ரசிகன். பொற்றெக்காட், பொன்குன்னம் வர்க்கி, கேசவ தேவ், தகழின்னு எல்லாருடைய புத்தகங்களையும் நான் படிப்பேன். நீங்க சொல்ற பல விஷயங்கள்லயும் எனக்கு சில நேரங்கள்ல உடன்பாடு இல்லாமப்போகும். இருந்தாலும் உங்களை எனக்கு ரொம்பவும் பிடிக்கும். உங்க அறிமுகம் கிடைச்சதுக்காக, நான் மிகவும் சந்தோஷப்படுறேன்....''

நான் சொன்னேன்: “மன்னிக்கணும் ஃபாதர்... வர்க்கி, தேவ், பொற்றேக்காட், தகழி- அவங்கள்லாம் என்னைப்போல இல்ல. அவங்கள்லாம் ரொம்பவும் நல்லவங்க!''

பாதிரியார் குலுங்கி குலுங்கி சிரித்தார்.

“எனக்குத் தெரியும்.'' அவர் சொன்னார்: “அவங்களைப் பற்றி நான் நிறைய விஷயங்கள் கேள்விப்பட்டிருக்கேன். இருந்தாலும் எனக்கு அவங்களையும்... பஷீர், உங்களையும் ரொம்பவும் பிடிக்கவே செய்யுது.'' அவர் தொடர்ந்து சிரித்தவாறு சிவந்த முகத்துடன் சொன்னார்:

“என் தொடையை- பஷீர்... உங்களைத் தவிர வேற யாரும் இதுவரை கிள்ளினது இல்ல...''

நான் சொன்னேன்:

“ஃபாதர், என்னை நீங்க மன்னிக்கணும்...''

“மன்னிக்க மாட்டேன்.'' பாதிரியார் சொன்னார்: “பஷீர், நான் இதை எப்பவும் நினைச்சுப் பார்த்து சிரிப்பேன்!''

பஸ் நின்றபோது நான் பாதிரியாரிடம் விடைபெற்றுக்கொண்டு நடந்தேன். எனக்குப் பின்னால் பரமு, பரமுவிற்குப் பின்னால் பெட்டியைச் சுமந்துகொண்டு வரும் பையன்.

“குரு...'' பரமு அழைத்தான். நான் வாயே திறக்கவில்லை. ஆனால், பரமு விடுவதாயில்லை. மீண்டும் மீண்டும் அழைக்கவே நான் சொன்னேன்:

“உன்னைப்போல நாகரீகம் தெரியாத ஒரு முட்டாளை நான் வாழ்க்கையில பார்த்ததே இல்ல. அந்த நல்ல மனுஷனான பாதிரியாரை என் பக்கத்துல உட்காரச் சொன்ன விஷயத்தை என்கிட்ட நீ சொல்ல வேண்டாமா? "இது நான் கிடையாது. ஜாக்கிரதை! இது ஒரு பரிசுத்தமான, கத்தோலிக்க பாதிரியார். ரோட்ல போற பெண்களைப் பார்த்துட்டு, "முதல்ல பார்த்தது நான்தான்'னு சொல்லி தொடையைக் கிள்ளிடாதீங்க. உஷார்... உஷார்'னு என்னைப் பார்த்து முன்கூட்டியே நீ சொல்ல வேண்டாமா?''

“குரு...'' பரமு சொன்னான்: “பஸ் ஒரு இடத்துல நின்னப்போ ஒரு பீடி பிடிக்கலாம்னு நான் கீழே இறங்கினேன். கொஞ்ச நேரம் கழிச்சு நான் பஸ்ல ஏறினா அந்த பாதிரியார் குரு. உங்க பக்கத்துல

உட்கார்ந்திருக்கார். நான் போய் வேறொரு இடத்துல உட்கார்ந்துக்கிட்டேன். அது என்னோட தப்பா? நான் பார்க்குறப்போ குரு, நீங்க பாதிரியாரோட தொடையைக் கிள்ளிக்கிட்டு இருக்கீங்க. பாதிரியார் நெளிஞ்சுக்கிட்டு இருக்காரு. "பார்த்தேன்... பார்த்தேன்... ஆமா... ஆமா...”ன்னு பாதிரியார் சொல்லிக் கிட்டு இருக்காரு. நான் என்ன செய்யிறது? அந்தக் காட்சியைக் கண்ணால பார்க்குறப்போ நல்லாத்தான் இருந்துச்சு. குரு... என்னை மன்னிச்சிடுங்க. நான் இந்த விஷயத்தை எல்லார்கிட்டயும் சொல்லுவேன். குரு, உங்களுக்கு உண்டான இந்த தர்மசங்கடமான நிலைமையை நினைச்சுப் பார்த்து எல்லா காலத்துலயும் நான் சிரிப்பேன்!''

இவ்வளவையும் சொல்லிவிட்டு நான் மனைவியிடம் சொன்னேன்:

“அடியே... அந்தப் பாதிரியார்தான் இந்தப் பாதிரியார். அந்தச் சம்பவத்தை நினைச்சுப் பார்த்துதான் அவர் என்னைப் பார்த்து குலுங்கி குலுங்கிக் சிரிச்சது. புரியுதா?''

நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். அவள் எதுவுமே பேசாமல் மவுனமாக இருந்தாள். அவளின் முகத்தில்கூட எந்தவிதமான உணர்ச்சிகளையும் பார்க்க முடியவில்லை. அதற்குள் நாங்கள் விருந்துக்குப் போகிற வீடு நெருங்கிவிட்டது. மனைவியின் முகத்தில் இலேசான ஒரு சிறு புன்னகையை மட்டும் பார்க்க முடிந்தது.

விருந்து முடிந்தது. புதிய புடவையையும், புதிய ப்ளவுஸ்ஸையும், நகைகளையும் அங்குள்ள பெண்கள் நன்றாகப் பார்த்து முடித்தார்கள். பாராட்டினார்கள். பொறாமைப்பட்டார்கள். என்னவெல்லாமோ உட்கார்ந்து பேசினார்கள். பேச்சினூடே பெண்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். நொறுக்குத் தினியும் தேநீரும் சாப்பிட்டு முடித்துக் கிளம்புகிறபோது, என் மனைவியும் விருந்து வீட்டைச் சேர்ந்த பெண்களும் சற்று தூரத்தில் போய் நின்று தங்களுக்குள் ஏதோ ரகசியம் பேசிக்கொண்டார்கள். தொடர்ந்து அவர்களின் சிரிப்பு சத்தம். பிறகு என் மனைவியும், வேறு சிலரின் மனைவிகளும் சேர்ந்து பூச்செடி கொம்புகளையும் சின்னச்சின்ன பேப்பர் பொட்டலங்களையும் எடுத்துக் கொண்டு வந்தார்கள். செடிகள் வீட்டில் ஏற்கெனவே நிறைய இருக்கின்றன. வேண்டாம் என்று சொல்ல நினைத்தேன். ஆனால், நம் அக்னி சாட்சியின் முகத்தையும் பார்வையையும் பார்த்தபோது, எதற்கு வீண் வம்பென்று நான் அந்தப் பூச்செடிக் கொம்புகளையும் பேப்பர்  பொட்டலங்களையும் கையில் எடுத்துக்கொண்டேன். என் செல்வ மகள் இரண்டு மூன்று பொட்டலங்களைக் கையில் எடுத்துக் கொண்டாள். படியை விட்டு இறங்கியபோது, என் மனைவி பின்னால் திரும்பிப் பார்த்து மற்ற பெண்களிடம் சொன்னாள்:

“இன்னைக்கே அனுப்பிருங்க...''

விருந்து வீட்டில் இருந்த நான்கு பெண்கள், தங்களின் நானூற்று நான்கு நாக்குகளாலும் சொன்னார்கள்.

“அதை இன்னைக்கு அனுப்பி வச்சிர்றோம். இன்னொன்னை நாளைக்கு...''

“மறந்திடக்கூடாது...''

வீட்டிலிருந்த பெண்கள் சொன்னார்கள்:

“எப்படி மறப்போம்?''

திரும்பி நாங்கள் வருகிறபோது, மர நிழலில் நின்று கொண்டிருக்கிறார் பாதிரியார்.

“பஸ் இன்னும் வரலியா?''

“வரும்...''

“நம்ம வீட்டுக்குப் போகலாமா, ஃபாதர்?''

பாதிரியார் சொன்னார்:

“நான் இன்னொரு நாளைக்கு வர்றேன்!''

நாங்கள் நடந்தோம். பாதிரியார் குலுங்கிக் குலுங்கி சிரித்தவாறு என் மனைவியையும் மகளையும் பார்த்துச் சொன்னார்.

“நான்தான் பார்த்தேன்...''

நான் சொன்னேன்:

“முதல்ல பார்த்தது நான்தான்...''

சுபம்.

பின்குறிப்பு: ஸாரி. ஒரு சுபமும் இல்லை. தாம்பத்ய வாழ்க்கை என்று சொல்லப்படுகிற இந்தப் போராட்ட மைதானத்தில் சுபத்திற்கு எங்கே இடம்? நான் கையில் சுமந்துகொண்டு வந்த செடிக் கொம்புகளை மண்ணில் குழி தோன்டி நட்டு, நீர் ஊற்றினேன்.


ஏற்கெனவே எங்கள் வீட்டில் இருந்த இனத்தைச் சேர்ந்தவைதாம் நான் நட்ட பெரும்பாலான செடியின் கொம்புகள். ஆரம்பத்தில் இங்கு செடிகள் வளர்க்க ஆரம்பிக்கும்போது, தினந்தோறும் காலையில் அவற்றுக்கு நீர் ஊற்றுவேன். நூறு குடம் தண்ணீர் தினமும் தேவைப்படும். தூரத்தில் இருந்த கிணற்றில் இருந்து தண்ணீர் எடுத்துக்கொண்டு வரவேண்டும். நானும் என் மனைவியும்தான் தினமும் நீர் எடுத்துக்கொண்டு வருவோம். ஒரு ஆள் நீர் எடுத்துக்கொண்டு வர இன்னொரு ஆள் அதைச் செடிகளுக்கு ஊற்ற வேண்டும். செடிகளுக்கு மட்டுமல்ல; கத்திரிக்காய், வெண்டை, பாகற்காய், பச்சை மிளகாய், கருவேப்பிலை, வாழை, மிளகு, மா, சப்போட்டா, கொய்யா, பப்பாளி, பாக்கு, தென்னை- எல்லாவற்றுக்கும்தான் தினமும் நீர் ஊற்ற வேண்டும். இதுபோக, சீமைக்கொன்றை மரம் வேறு. அதற்கும்தான் நீர் வேண்டும். எல்லாம் தெய்வத்தின் அருளால் நன்றாகவே வளர்கின்றன. நாட்கள் நல்ல நிலையில் இப்படி நீங்கிக் கொண்டிருக்க, நம்முடைய நூற்றியொரு நாக்குக்காரிக்கு திடீரென்று ஒரு எண்ணம் உதித்தது. சூரிய பகவான் "சுள்” என்று காய்ந்து கொண்டிருக்கிறான். அவனுடைய வெப்பத்தில் நாங்கள் ஊற்றுகிற தண்ணீர் சில நிமிடங்களிலேயே ஆவியாகிப் போய்விடுகிறது. சூரியனின் ட்யூட்டி டைம் பகல்தானே! இரவு நேரத்தில் அவன் இருக்கப் போவதில்லை. அதனால் செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் ஊற்றும் வேலையைப் பேசாமல் இரவில் வைத்துக்கொண்டால் என்ன? சரிதான். அவளின் எண்ணம் உண்மையிலேயே பாராட்டக் கூடியதுதான். பெண் என்றால் இவளல்லவா பெண்! அப்போது சாயங்காலம் நான்கு மணி இருக்கும். சூரிய பகவான் இப்போது விடை பெற்றுக் கிளம்பிக் கொண்டு இருக்கிறான். செடிகளுக்கும் மரங்களுக்கும் நீர் ஊற்ற வேண்டுமே! நான் என் மனைவியை அழைத்தேன். குடங்கள் எல்லாம் தயாராக இருந்தன. “அடியே... தண்ணி ஊத்தணும்ல?''

அப்போது என் மனைவி உரத்த குரலில் சொன்னாள்:

“எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு. சோறு ஆக்கணும். குழம்பு வைக்கணும். பால் கறக்கணும். குழந்தையைக் குளிப் பாட்டணும். சாயா தயார் பண்ணனும். பிறகு...''

அவள் சொல்வதும் நியாயம்தான். அன்று முதல் நீர் கொண்டு வருவது, அதைச் செடிகளுக்கும் மரங்களுக்கும் ஊற்றுவது - எல்லாவற்றையும் நானே செய்ய வேண்டிய நிலை. அதோடு நின்றால் பரவாயில்லை. சமையலறைக்குத் தேவைப்படுகிற நீரையும் நானேதான் எடுத்துக் கொண்டு வரவேண்டும். அடடா... என்ன அருமையான ஐடியா! எல்லாவற்றையும் மனதில் அசை போட்டுக்கொண்டு உட்கார்ந்திருக்கும்போது, செல்ல மகள் வந்து என்னிடம் சொன்னாள்:

“டாட்டா... அம்மா என்னை சின்ன நாக்கின்னு சொல்லுது...''

சரிதான். சின்னநாக்கி, பெரிய நாக்கி, நாக்கம்மா, நாக்கும்மா, நாக்காக்ஷி- இப்படி நாக்கிகளில் எத்தனையோ வகைகள்! பெரிய வாயாடிப் பெண்ணை ஆயிரம் நாக்கி என்று அழைக்கலாம்.

அப்போது என் மகளுக்கு ஒரு சந்தேகம்-

“டாட்டா... நெறைய நாக்கு இருக்கா? அம்மா சொன்னாங்க...''

“அடியே... பெரிய நாக்கி...'' இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் சகல மரங்களும், செடிகளும், பசுக்களும், கோழிகளும், பூனைகளும் கேட்கிற மாதிரி உரத்த குரலில் நான் அழைத்தேன். அவள் எங்கோ இருந்து கர்ஜனை வருவது மாதிரியான குரலில் சொன்னாள்:

“என்ன...?''

நான் மகளிடம் சொன்னேன்: “மகளே, நீ போய் டாட்டாவுக்கு ஒரு டம்ளர் சாயா கொண்டு வரச் சொல்லு. மெதுவா போனா போதும். வேகமா ஓடி விழுந்திடக் கூடாது. தெரியுதா?''

மகள் போனபிறகு, நான் சில டயலாக்குகளை நினைத்துப் பார்த்தேன்:

1. "இன்னைக்கே அனுப்பிடணும்.”

2. "அதை இன்னைக்கு அனுப்பிடுறோம். இன்னொண்ணை நாளைக்கு'.

3. "மறந்திடக் கூடாது!''

4. "மறக்க முடியுமா?'

பெண்மணிகள் பேசிய டயலாக்குகள்தாம். இது எதைப் பற்றி வேண்டுமென்றாலும் இருக்கலாம். சிறிய குண்டூசி முதல் ஹைட்ரஜன் குண்டு வரை எது வேண்டுமானாலும் இருக்கலாம். "இன்னைக்கு அனுப்பிடணும்' என்றால் அது எதைப் பற்றி இருக்கும்? ஏதாவது ப்ளவுஸைப் பற்றி இருக்குமோ? நான் இப்படி நினைக்கக் காரணம் என்னவென்றால் நம்முடைய பெரிய நாக்கிக்கு ஒரு தையல் மெஷின் சொந்தத்தில் இருக்கிறது. தையல் கலையில் சொல்லப்போனால் பெரிய பாண்டித்யம் உள்ளவள் என்றுதான் இவளைச் சொல்ல வேண்டும். ப்ளவுஸை வெட்டித் தைப்பதில் பி.எச்.டி. பாஸ் ஆகியிருக்கிறாள். பேக் ஓப்பன், சைடு ஒப்பன், பேக்கும் சைடும் ஒப்பன், எந்தவித ஓப்பனும் இல்லாதது, முழுவதும் ஒப்பனாக இருப்பது என்று பலவிதப்பட்ட துணிகளையும் அவளுக்கு தைக்கத் தெரியும். தன்னுடைய சினேகிதிகளுக்கு ஒரு புதிய மாடல் ப்ளவுஸை வெட்டி தைத்துக் கொடுக்க அவள் திட்டமிட்டிருக்கலாம். ரைட்... இல்லாவிட்டால் பிரúஸியர்களாக இருக்குமோ? புதிய மாடல் இங்கிலீஷ் மார்புக் கச்சையாக இருக்கலாம். எது வேண்டுமானாலும் இருக்கட்டும். இதைப் பற்றி சிந்தித்துப் பார்த்து நமக்கென்ன ஆகப் போகிறது? ஆனால், தையல் மெஷினைப் பற்றி சிந்தித்துப் பார்த்தபோது எனக்கு இலேசாக சிரிப்பாக வந்தது. சுற்றிலும் யாராவது இருக்கிறார்களா என்று பார்த்துவிட்டு சிரிக்கவும் செய்தேன். தையல் மெஷின் வாங்கி நாட்கள் அதிகமாகிவிட்டதால், அதற்கு ஏகப்பட்ட நோய்கள். அவனுக்கு சில உறுப்புகள் இல்லவே இல்லை. சுருக்கமாகச் சொல்லப் போனால் அவன் ஒரு நோயாளி. இருந்தாலும் அவன் தம் பிடித்து நடந்து கொண்டிருக்கிறான். மொத்தத்தில் அவன் ஒரு தைரியசாலி என்றுதான் சொல்ல வேண்டும். ஒரு பழைய லாரி. அதில் இரும்பு சாமான்களும், மண் பானைகளும் ஏற்றப்பட்டி ருக்கின்றன. நான்கைந்து காலி மண்ணெண்ணெய் பீப்பாய்கள் கயிறு கொண்டு கட்டப்பட்டிருக்கின்றன. சாலையில் உடைந்த மண் பானைத் துண்டுகள் கிடக்கின்றன. அதன்மேல் லாரி ஏறிப் போகும்போது என்ன சத்தம் உண்டாகுமோ, அந்தச் சத்தம்தான் என் மனைவியின் தையல் மெஷின் ஓடும்போது உண்டாகும். இந்தத் தையல் மெஷின் என் மனைவியுடையது அல்ல. இவளின் தந்தைக்கு நன்கு தெரிந்த ஒரு பள்ளி ஆசிரியைக்குச் சொந்தமானது இது. இவளின் தந்தை மரணமடைந்துவிட்டார். அவர் ஒரு பள்ளி ஆசிரியராக இருந்தவர். உடன் பணியாற்றிய சக ஆசிரியரின் மகளல்லவா? நன்றாகத் தையல் கலையைக் கற்றுக்கொள்ளட்டும் என்று சௌபாக்கியவதி யசோதா டீச்சர் நல்ல ஒரு எண்ணத்துடன் கொடுத்தனுப்பிய தையல் மெஷின் இது. அதற்குப் பிறகு இவளைக் கையில் பிடிக்க முடியுமா? தையல் விஷயத்தில் மிகவும் தீவிரமாக மூழ்கிவிட்டாள் இவள். இங்கு ஏகப்பட்ட பெண் பிள்ளைகள் வருவார்கள். சிலர் புத்தகங்கள், மாத இதழ்கள் வாங்குவதற்காக வருவார்கள்.


இந்தப் புத்தகங்கள், மாத இதழ்கள் எல்லாமே இல்லத்தரசியின் இலாகாவாகிவிட்டது. பெண் பிள்ளைகளை நான் ஏறெடுத்துக்கூட பார்ப்பதில்லை. அவர்களுடன் மருந்துக்குக்கூட நான் பேசுவதில்லை. என்னுடைய காதுகள் சரியாகக் கேட்காது என்றும், கண்களுக்குப் பார்வை சக்தி சற்று குறைவு என்றும் என்னைப் பற்றிய ஒரு பரவலான கருத்து வெளியே நிலவிக் கொண்டிருந்தது. சொல்லப்போனால்- நம்முடைய உடல் ஆரோக்கியத்தைப் பொறுத்தவரையில் குறை சொல்கிற அளவிற்கு ஒன்றுமே இல்லை. சில நாட்களுக்கு முன்பு கொஞ்சம் தகராறு இருந்ததென்னவோ உண்மை. நேரம் கிட்டத்தட்ட பாதி இரவைத் தாண்டிவிட்டது. உலகத்திலுள்ள எல்லா உயிர்களும் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இந்த வீட்டைச் சுற்றியிருக்கும் தோட்டத்தில் உள்ள சில பாம்புகளும் தேள்களும், சில நரிகளும் மட்டும் உறங்காமல் விழித்திருக்கிறார்கள். அவர்களும் பெரிய சத்தங்கள் எதுவும் எழுப்புவதில்லை. ஆனால் நான் உறக்கத்தில் இருக்கிறேன். அருகில் என் மனைவி படுத்திருக்கிறாள். சுற்றிலும் ஒரே நிசப்தம். அப்போது-

"நான் காண்பிக்கிறேன்...” என்று கூறியவாறு நம்முடைய பாதி துள்ளி எழுந்து என்னை மிதிக்கவும் அடிக்கவும் கடிக்கவும் ஆரம்பிக்கிறாள். என்ன இருந்தாலும் நான் கணவனாயிற்றே! திடுக்கிட்டு எழுந்து என்ன விஷயம் என்று அவளிடம் விசாரிக்க முற்படுகிறேன். விஷயம் சுவாரசியமானதுதான். அது என்னவென்றால், நம்முடைய அக்னிசாட்சி ஒரு கனவு கண்டிருக்கிறாள். அதில் என் பக்கத்தில் படுத்திருந்தது அவளல்ல- இன்னொரு பெண். அதற்காகத்தான் என்னை அப்படி மிதித்து கடித்து அவள் அடித்திருக்கிறாள்.

“நான் வேற யாரோ ஒரு பொண்ணுன்னு கனவு கண்டேன்!''

“சரிதான்... சுத்த பைத்தியமா இருப்பே போல இருக்கே! அதற்காக என்னை எதுக்கு நீ அடிக்கணும்? நீ வேற ஒரு பெண் கிடையாது. நீயேதான். சரி... இப்போ தூங்கு... குட் நைட். ஸ்வீட் ட்ரீம்ஸ்...''

சம்பவம் எப்படி பார்த்தீர்களா? பெண்ணிடம் தேவையில்லாமல் வாக்குவாதம் செய்து என்ன பிரயோஜனம்? கடவுள் என்னவோ பெண்கள் பக்கம்தான் நின்று கொண்டிருக்கிறது. ரத்த சாட்சி என்று சொன்னால் ஆண் என்று அர்த்தம். அதனால் பஷீர் என்று சொல்லப்படுகிற இந்த ரத்த சாட்சி சற்று எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டியதிருக்கிறது. "பிரபஞ்சத்திலுள்ள ரத்த சாட்சிகளே!

உஷார்... உஷார்... ஜாக்தே ரஹோ!'

இப்படி எச்சரிக்கையுடன நான் நடந்துகொண்டிருக்க, ஒரு நாள் என்னில் பாதி சொல்கிறாள்:

“ஒரு தையல் டீச்சர் இருந்தாங்கன்னா, நிறைய அவுங்கக்கிட்ட இருந்து நான் கத்துக்க வசதியா இருக்கும்!''

பஹுத்தச்சா ஹெ! இப்படித்தான் சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி வீட்டுக்கு வந்தாள். எப்போது பார்த்தாலும் ஒரே பேச்சுத்தான். சிரிப்புதான். ஆர்ப்பாட்டம்தான். வெட்டு, தையல்... எல்லாமே பஹுத் குஸி ஹெ! மாதங்கள் வேகமாக நீங்குகின்றன. நம்முடைய குடும்ப நாயகி சௌபாக்கியவதி ஃபாபி தையலில் ஒரு எம்.ஏ.பி.எச்.டி. ஆகி டாக்டர் ஃபாபியாக மாறுகிறாள். அப்படி யென்றால் கிம் பஹுனா! ஒரு சிறு இடைச்செருகல். எனக்கு நான்கைந்து நாளிதழ்களும், சில வார இதழ்களும், சில மாத இதழ்களும் பதிவாக வருகின்றன. இவற்றைப் படித்து உத்தமன் ஆகப் போகிறோமா என்ன? மூன்று மாதம் கழித்து, இவற்றை விற்றால் கொஞ்சம் பணம் கிடைக்கும். ஓ... இந்த இரண்டு சௌபாக்கியவதிகளும் சேர்ந்து என் வயிற்றில் அடித்திருக்கிறார்கள். பத்திரிகைகள் அனைத்தையும் வெட்டி ப்ளவஸுகளாக்கி இருக்கிறார்கள். இங்கிலீஷ் மார்புக் கச்சைகளாக மாற்றி இருக்கிறார்கள். நான் இது பற்றிக் கேட்டதற்கு சௌபாக்கியவதிகள் இரண்டு பேரும் ஒருமித்த குரலில் சொன்னார்கள்:

“அது அப்படித்தான்!''

அது அப்படித்தான் என்றால் அது அப்படித்தான். இதற்கு அப்பீலோ வேறு ஏதாவதோ இருக்கிறதா என்ன?

“சார்... உங்கக்கிட்ட ஒரு விஷயம் சொல்லணும்.'' சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி சொன்னாள்: “கொஞ்ச நாட்களாகவே நான் சொல்லணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்!''

நான் நம்முடைய சௌபாக்கியவதியின் முகத்தைப் பார்த்தேன். "நான் நிரபராதி. எனக்கு எதைப் பற்றியும் எதுவும் தெரியாது' என்பது மாதிரி அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள்.

சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி சொன்னாள்: “சார் இந்த மெஷின் ஒரு ஓட்டை வண்டி மாதிரி ஆயிடுச்சு. இவங்க இனிமேலும்  இந்த மெஷினை மிதிச்சாங்கன்னா, கட்டில்ல படுத்துக் கிடக்க வேண்டியதுதான். சார்... அதனால புதுசா ஒரு மெஷினை வாங்கிக் கொடுங்க!''

நான் என் மனைவியின் முகத்தைப் பார்த்தேன். எதுவுமே தெரியாதது மாதிரி- ஒருவித உணர்ச்சியையும் முகத்தில் காட்டிக் கொள்ளாமல் அமைதியாக அவள் அமர்ந்திருந்தாள். ஒன்றுமே தெரியாத அப்பாவி! அடடா...!

நான் சொன்னேன்: “இப்போ அதுக்கு என்கிட்ட பணம் இல் லியே! புது மெஷின் வாங்குறதுன்னா நிறைய பணம் வேணுமே!''

அதற்குப் பிறகு தையல் மிஷின் சம்பந்தமான தலையணை மந்திரங்கள்... இப்போது என் வலது காதிலிருந்து இடது பக்க காதுக்கு  ஒரு லாரியே ஓட்டிப் போகலாம். அந்தச் சமயத்தில் என்னிடம் இருபது ஜிப்பாக்கள் இருந்தன. ஒவ்வொரு குற்றம் குறையாகச் சொல்லி அவற்றை ஒவ்வொன்றாக எடுத்து வெட்டி, என் மனைவிக்கு ப்ளவுஸ்,  மகளுக்கு உடுப்பு, மனைவியின் தங்கைகளுக்கும் சினேகிதிகளுக்கும் ப்ளவுஸ் என்று தைத்துவிட்டாள் என் உடலில் பாதியானவள். எவ்வளவு பெரிய தடிச்சியாக இருந்தாலும், இல்லாவிட்டால் ஒல்லிக்குச்சியாக இருந்தாலும் ஒரு ப்ளவுஸ் தைப்பதற்கு போஸ்ட் ஸ்டாம்ப் அளவு துணி இருந்தால் போதும்! அந்தச் சமயத்தில்- அதாவது பதினைந்து நாட்களுக்கு முன்பு வரை என்னிடம் அருமையான ஒரு பேன்ட் இருந்தது. நல்ல வெண்மை நிறம். வெள்ளைப் பட்டு போன்ற துணியால் ஆனது. சூப்பர் பேன்ட் அது. அவன் மதராஸ், கோயம்புத்தூர், மைசூர், எர்ணாகுளம், பெங்களுர் போன்ற பல இடங்களுக்கும் போய் விட்டு வந்திருக்கிறான். அவனின் ஆரோக்கியத்தைப் பற்றி ஒரு குறையும் சொல்வதற்கில்லை. நன்றாகத் தோய்த்து இஸ்திரி போட்டு மடித்து பெட்டியில் அது வைக்கப்பட்டிருந்தது. ஒரு நாள் நான் அதைப் பார்த்தால், ஆட்டை அறுத்து முண்டமாகத் தொங்கவிட்டிருப் பதைப்போல ஒரு காலும் இன்னும் கொஞ்சம் துணியும் தையல் மெஷின் இருக்கும் அறையில் ஒரு ஆணியில் தொங்கிக் கொண்டிருக்கிறது. பேன்ட்டின் இன்னொரு கால் இரண்டு மூன்று இங்கிலீஷ் மார்புக் கச்சைகளாக மாறி மேஜை மேல் கிடக்கிறது.

“அடியே... நான் ஆசையா வச்சிருந்த பேன்ட்தானே இது?''

“ஆமா... ஆனா இது ரொம்பவும் பழசாயிடுச்சு. இப்போ உங்களுக்கு எதுக்கு பேன்ட்? உங்களுக்குத்தான் வயசாயிப் போச்சில்ல...!''

“சரிதான்...''


“நான் சும்மா சொன்னேன். ப்ரேஸியருக்கு இந்தப் பேன்ட் துணி நல்லா இருக்குறது மாதிரி தெரிஞ்சது. அதனாலதான் அதை எடுத்து முழுசா வெட்டிட்டேன்.''

“ரொம்ப ரொம்ப சந்தோஷம்!''

அடுத்த நாள் பார்க்கும்போது மேஜை மேல் கிடக்கிறது பேன்ட்டின் இன்னொரு கால். அதுவும் அருமையான ஒரு இங்கிலீஷ் மார்புக் கச்சையாக மாறிவிட்டிருந்தது. அதன் இரண்டு பக்கங்களிலும் பெரிய  இரண்டு பலாப் பழங்களையே வைக்கலாம்.

நான் அதைப் பார்ப்பதைக் கண்ட சௌபாக்கியவதிகள் இருவரும் என்னைப் பார்த்துச் சிரித்தார்கள். நான் எதுவுமே பேசாமல் அந்த இடத்தை விட்டு நகர்ந்தேன். அப்போதும் அவர்களின் சிரிப்பொலி என் காதுகளில் தொடர்ந்து கேட்டுக் கொண்டுதான் இருந்தது. சௌபாக்கியவதி மிஸ். வாசந்தி போன பிறகு, நான் என் மனைவியிடம் கேட்டேன்.

“அடியே... நீ என் பேன்ட்டை வெட்டி இங்கிலீஷ் மார்புக் கச்சைகளா மாற்றி உன்னோட சிநேகிதிகள்ல யார் யாருக்குக் கொடுத்திருக்கே? இந்தக் கிழவனும் கொஞ்சம் அதைத் தெரிஞ்சுக் குறேன்... அடியே... அந்தப் பெரிய மார்புக் கச்சை யாருக்கு?''

“பேசாம சும்மா இருக்கீங்களா? இதெல்லாம் நீங்க தெரிஞ்சு என்ன செய்யப் போறீங்க? ஆம்பளைங்க அவங்க வேலைகளை மட்டும் பார்த்துக்கிட்டு இருக்கணும். இங்கிலீஷ் மார்புக் கச்சையாம் இங்கிலீஷ் மார்புக் கச்சை! அதோட பேரு ப்ரேஸியர்ஸ்.'' தொடர்ந்து ரகசியமான குரலில் அவள் சொன்னாள்: “நம்ம சுமா டீச்சர் இருக்காங்கள்ல... அவுங்களுக்குத்தான் அந்தப் பெரிய ப்ரேஸியர்ஸ். இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க!''

சே... இதைப் பற்றி ஒரு வார்த்தை சொல்வேனா நான்? என்னுடைய பேன்ட்டைக் கிழித்து தைத்து இங்கிலீஷ் மார்புக் கச்சையாக ஆக்கி கண்ட பெண்கள் எல்லாம் அணிந்து ஒய்யாரமாக நடந்து திரிவார்கள். ஆனால், நான் மட்டும் அதைப் பற்றி வாயே திறக்கக் கூடாது. அதைக் கண்டு கொண்டதாகவே காட்டிக் கொள்ளக் கூடாது. அப்படியானால்... பெரிய மார்புக் கச்சை நம்முடைய சௌபாக்கியவதி சுமா டீச்சருக்குத்தானா? அவளுக்கு வயது முப்பத்தி ஒன்பது. திருமணமாகி கிட்டத்தட்ட எட்டோ ஒன்பதோ வருடங்கள் ஆகியிருக்கும். குழந்தைகள் எதுவும் கிடையாது. மகள் சிம்பிளு மீது அவளுக்கு ஏகப்பட்ட பிரியம். மகளுக்கு அவ்வப்போது மிட்டாய் வாங்கிக் கொண்டு வந்து கொடுப்பாள். அவளின் வகுப்பில்தான் செல்வமகளை அடுத்த வருடம் சேர்க்க வேண்டும். அவள் மகளை நன்றாகப் பார்த்துக் கொள்வாள். இந்த விஷயத்திற்காக ஒரு லஞ்சம் மாதிரி என்னுடைய பேன்ட் இங்கிலீஷ் மார்புக் கச்சையாக மாறியிருக்கிறது. பேஷ்!

“அடியே... என்னோட பேன்ட் எந்த மாதிரி மாறி இருந்தாலும், எங்கே பார்த்தாலும் நான் பார்த்துட்டு சும்மா இருக்க மாட்டேன். பிடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்.''

“மெதுவா பேசுங்க. யாராவது கேட்டாங்கன்னா என்ன நினைப்பாங்க?''

நான் மெதுவான குரலில் சொன்னேன்:

“பிடிச்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பேன்!''

அடுத்த நாள் சௌபாக்கியவதி சுமா டீச்சர் வந்தாள். இரண்டு சௌபாக்கியவதிகள் சுமா டீச்சர் என்ற சௌபாக்கியவதிக்கு இங்கிலீஷ் மார்புக் கச்சையை அணிவித்து வெளியே அனுப்பினார்கள்.

"புஹோயி!' என்று உரத்த குரலில் கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு. ஆனால் பண்பாடு கருதி நான் அமைதியாக இருந்தவாறு தொழுதேன். அதோடு நிற்காமல், சௌபாக்கிவதி சுமா டீச்சருக்கும் என்னுடைய பேன்ட்டுக்கும் வாழ்த்துகள் சொன்னேன். இவை ஒவ்வொன்றையும் நினைத்துப் பார்த்து நான் சிரித்தேன்.

“டாட்டா... ஏன் சிரிக்கிறீங்க?'' செல்ல மகள் தேநீருடன் வந்தாள். நான் அதை வாங்கி இலேசாகக் குடித்துவிட்டு ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்தேன். பீடியை இழுத்தவாறே வராந்தாவில் இருந்த சாய்வு நாற்காலியில் வந்து அமர்ந்தேன். அப்போது நம்முடைய பட்டமகிஷி பேப்பர் பொட்டலங்களுடன் அங்கு வந்து நிற்கிறாள். அவள் வராந்தாவில் அமர்ந்து ஒவ்வொரு பொட்டலமாக அவிழ்த்தாள். ஒரு பொட்டலத்தில் கத்தரிக்காய் விதைகள் இருந்தன.

“இது இங்கே இல்லியா என்ன?'' நான் கேட்டேன். கனவு நாயகி- நூற்றியொரு நாக்குகளின் சொந்தக்காரி சொன்னாள்:

“இங்கே இருக்குற இனம் வேற. இது வேற. ஜயன்ட் ஆஃப் பனாரஸ். காய்கள் பெருசா இருக்கும். பெரிய பலாப்பழம் அளவுக்கு அது இருக்கும்.''

இன்னொரு பொட்டலத்தை அவிழ்த்தாள். அரிசி!

“இதென்னடி அரிசி?''

“இது சேம்பிள். இந்த அரிசியில பத்து படி அவங்க இப்போ கொடுத்து விடுறாங்க. யார்கிட்டயும் இதைச் சொல்லாதீங்க. அவுங்க நெல் விவசாயம் பண்றாங்க. பத்து பன்னிரண்டு பேருக்கு ரேஷன் வேற இருக்கு...''

“விவசாயம் செய்றவங்களும் ரேஷன் வாங்குவாங்களா என்ன?''

மனைவி சுற்றிலும் பார்த்தாள். இரண்டு ஏக்கர் பரப்பளவுள்ள இந்த இடத்தில் மருந்துக்குக்கூட யாரும் இல்லை. அவள் ரகசிய குரலில் சொன்னாள்:

“இதை யார்கிட்டயும் சொல்லாதீங்க...''

நான் கேட்டேன்: “இதுக்கு காசு தரணும்ல?''

“தரணும்...''

“காசு எங்கே இருக்கு? என்கிட்ட காசே இல்ல...''

சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

நான் சொன்னேன்: “அடியே... அரசாங்கம் என்னைச் சும்மா விடுமா? மனிதர்கள் உயிரோட இருக்குறதுக்குத்தான் ரேஷனே தர்றாங்க. ரெண்டு மூணு நாட்கள் நான் நல்லா சாப்பிட்டு கம்பீரமா நடந்தால், அரசாங்கம் என்னைப் பார்த்து கேட்கும்: டேய் பஷீர்... நீ இப்போ கொஞ்சம் தடிச்சிப்போய் இருக்குறதுக்கான காரணம் என்ன? உனக்கு அரிசி எங்கே இருந்து கிடைச்சது?''

மீண்டும் சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

என் மனைவி சொன்னாள்:

“முட்டாள் அரசாங்கம்! மூக்குல போடுற பொடி போல அஞ்சாறு மணி அரிசி அரசாங்கம் கொடுக்குறதை வச்சுத்தான் மனிதர்கள் இங்கே வாழ்ந்துக்கிட்டு இருக்காங்களா? கள்ளச் சந்தையிலதான் அரிசி வாங்கினேன்னு துணிஞ்சு சொல்ல வேண்டியதுதானே!''

“சரிதான்... அப்போ நீ கம்யூனிஸ்ட் ஆயிட்டியா? தோழரே, என்னோட அரசாங்கத்தை முட்டாள் அரசாங்கம்னு எவ்வளவு தைரியமா சொல்ற!''

“நான் கம்யூனிஸ்ட்டும் கிடையாது ஒண்ணும் கிடையாது'' என் மனைவி சொன்னாள்: “நான் ஒண்ணாம் நம்பர் காங்கிரஸ்.'' (அந்தக் காலத்தில் ஒரே ஒரு காங்கிரஸும் ஒரே ஒரு கம்யூனிஸ்ட் பார்ட்டியும்தான் இருந்தன).

இன்னொரு பேப்பர் பொட்டலத்தை அவள் பிரித்தாள்.

“மிளகு...''

“சரிதான்!''

வேறொரு பேப்பர் பொட்டலத்தை அவிழ்த்தாள். அதில் தங்கம் இருந்தது. பழைய சில நகைகள்.

“இருபத்தி ரெண்டு காரட்.'' மனைவி சொன்னாள்: “அவங்கக் கிட்ட நிறைய நகைகள் இருக்கு. இந்த நகைகளுக்கு நாம பணம் கொடுத்தா போதும். புருஷன் ஒரு லேம்ப்ரட்டா வாங்கப் போறாரு. அதுக்குத்தான் பணம் வேணுமாம்!''


“இதோட விலை எவ்வளவு?''

“லாபம்தான். ஆயிரத்தி முன்னூத்தி ஐம்பத்தொரு ரூபா. நம்ம மகளுக்கு கழுத்திலயும் கையிலயும் வர்ற மாதிரி நகைகள் செய்யலாம். நமக்கு இருக்குறதே ஒரே ஒரு மகள்தானே!''

“இந்த ஆயிரத்து முன்னூத்தி ஐம்பத்தொரு ரூபா உன் கிட்ட இருக்கா?''

சரியான கேள்விதான் என்பது மாதிரி என்னை அவள் பார்த்தாள். அதோடு ஒரு சிரிப்பு வேறு.

“என் கையில பணத்துக்கு எங்கே போறது? வேண்டாம்னா திருப்பித் தந்திட வேண்டியதுதான்!''

“நீ சொல்றதும் சரிதான். "அதை இன்னைக்கு அனுப்பிர்றோம். இன்னொண்ணு நாளைக்கு'ன்னு ஒரு டயலாக்கை நான் கேட்டேன். நாளைக்கு அவங்க அனுப்பப் போறது என்ன?''

மனைவி ஒரு அப்பாவியைப் போல முகத்தை வைத்துக்கொண்டு, கலங்கிய கண்களுடன் மெதுவான குரலில் என்னிடம் சொன்னாள்:

“ஒரு புது தையல் மெஷின். இங்கே இருக்குற லொடுக்காஸ் சக்கடா வண்டியை இனியும் நான் மிதிச்சா செத்தே போயிடுவேன்!''

நான் அவளிடம் சொன்னேன்:

“தங்கக்குடமே, நீ சாக வேண்டாம். புது மெஷினையே நீ மிதிக்கலாம். ஆமா... மெஷினோட விலை எவ்வளவு?''

அவள் சொன்னாள்: “என்ன... முன்னூறு ரூபா வரும். பில் கொடுத்து அனுப்புவாங்க. அவளோட புருஷன் மெஷின் கம்பெனியில சேல்ஸ் மேனேஜரா வேலை பார்க்குறாரு...''

ரொம்ப சந்தோஷம். ஆயிரத்து முன்னூற்று ஐம்பத்தொன்று, முன்னூறு, பிறகு... அரிசிக்கு விலை...

“இது தவிர, இன்னைக்கு நீ வேற ஏதாவது வியாபாரம் பண்ணியிருக்கியா?''

“இல்ல...'' ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவள் சொன்னாள்: “அரிசியும் தங்கமும் மெஷினும் நமக்கு வேண்டாம்னா நாம திருப்பித் தந்திடலாம். அவங்க எடுத்துக்குவாங்க...''

இது உண்மையா? அரிசி வந்தது. அடுத்த நாள் தையல் மெஷின் வந்து சேர்ந்தது. பழைய லொடுக்காஸ் சக்கடா வண்டி ஸ்டோர் ரூமைத் தேடிப் போனது. புதிய ரோல்ஸ் ராய்ஸ்- அதாவது, சௌபாககியவதி உஷா என்ற தையல் மிஷின் அறைக்குள் நுழைந்தது. இரண்டுக்கும் நான் சம்மதித்தேன். சௌபாகியவதி மிஸ். வாசந்திக்கும் நம்முடைய அருமைப் பொண்டாட்டிக்கும் மெஷினை மிகவும் பிடித்திருந்தது. இரண்டு பேரும் துணி தைப்பதில் மூழ்கிவிட்டார்கள்.

நான் சரியாக சாப்பிடாமல், தண்ணீர்கூட உள்ளே போகாமல் கவலையுடன் நடந்து திரிந்தேன். பணம்.. தேங்காய் விளைச்சல் சரியில்லை. பணத்திற்கு என்ன செய்வது?

“சும்மா தேவையில்லாம தோட்டத்துல இங்கேயும் அங்கேயுமா நடந்துக்கிட்டு இருக்காம, ஒழுங்கா உட்கார்ந்து ஏதாவது கதை எழுதப் பாருங்க...'' நம்முடைய ஹுரி என்னைப் பார்த்து சொன்னாள்: “ஒரு  சின்ன நாவல் எழுதுங்க...''

நான் சொன்னேன்:

“அடியே படுக்கூஸே... மை விழி மங்கையே... நூற்றியொரு நாக்கியே... தேவையில்லாம கலையை அவமானப்படுத்தாதே! கலைன்னா என்ன? உனக்கு இதைப் பற்றி ஏதாவது தெரியுமா? கலையோட நோக்கம் என்னடி?''

என்ன இருந்தாலும் அவள் பெண்ணாயிற்றே! பேசாமல் நின்றிருந்தாள்.

நான் சொன்னேன்:

“அடியே, கலைன்றது மிகப் பெரிய விஷயம். அதோட நோக்கம் நம்ம மகளுக்கு நகை பண்ணி போடுறதுக்கு பழைய இருபத்திரண்டு காரட் தங்கத்தை வாங்குவது இல்ல... நல்லா கேட்டுக்கடி. கலையோட நோக்கம் பொண்டாட்டிக்கு புதுசா தையல் மெஷின் வாங்கித் தர்றதும் இல்ல... என்ன சொன்னே நீ? கலையை எந்த அளவுக்கு அவமானப்படுத்திட்டே தெரியமா?''

“கலையை யாரும் அவமானப்படுத்தல...'' -அவள் தன்னுடைய நூற்றியொரு நாக்குகளையும் பயன்படுத்தி உரத்த குரலில் சொன்னாள்: “நான் என்ன கேவலமா பேசிட்டேன்? கண்ட பெண்களையெல்லாம் பார்த்து "முதல்ல பார்த்தது நான்தான்'னு சொல்லி திரியிறதுதான் கேவலமான விஷயம். உங்களுக்கே வெட்கமா இல்லியா? என்னை இதுக்குமேல பேச வைக்காதீங்க. இந்த சின்ன பிள்ளையையாவது நீங்க அப்ப நினைச்சுப் பார்த்திருக்கணுமா இல்லியா?''

“அடியே...'' நான் சொன்னேன்: “அன்னைக்கு சிம்பிளு இல்ல... நீயும் இல்ல... நாங்க ரொம்பவும் சுதந்திரமா இருந்தோம். இது நடந்து எத்தனையோ நூற்றாண்டுகளாயிடுச்சு!''

“எத்தனையோ நூற்றாண்டுகளா? அந்த அளவுக்கு கிழவனா நீங்க? எல்லாம் எனக்குத் தெரியும். ராமுவிற்கும் பரமுவிற்கும் எவ்வளவு வயசு இருக்கும்னு எனக்குத் தெரியாதா?''

“அவங்க ரெண்டு பேரும் சின்னப் பசங்க. அதுக்காக எனக்கு வயசாகக் கூடாதா?''

“கேட்க நல்லாத்தான் இருக்கு... அந்த நல்ல பாதிரியார்கூட வயசு குறைஞ்ச ஆளுதான். பாவம், அவரோட தொடையைக் கிள்ளி சிவப்பாக்கி, "முதல்ல பார்த்தது நான்தான்”னு யார் சொன்னது? கேட்டா... இப்போ வயசாயிடுச்சுன்னு சொல்றீங்க?''

“அடியே... அந்த விஷயத்தைத்தான் நான் ஏற்கெனவே உன்கிட்ட ஒத்துக்கிட்டேனே! இப்போ என்னோட மனசு எவ்வளவு சுத்தமா இருக்கு தெரியுமா? அடியே... கதை எழுதுற நாங்க எவ்வளவு நல்லவங்க தெரியுமா?''

மனைவி சொன்னாள்:

“அதெல்லாம் எனக்குத் தெரியும். எதையாவது எழுதுங்க. நீங்க எழுதியே ரொம்ப நாளாயிடுச்சு. பார்க்குறவங்கல்லாம் என்னைப் பார்த்து திட்டுறாங்க. ஏதாவது எழுத நினைச்சிருக்கீங்களா?''

நான் சொன்னேன்:

“ஒரு முக்கிய விஷயமா ஒரு இடத்துக்குப் போகணும். மகளும் நீயும் இங்கேயே இருங்க...''

மனைவி மனதிற்குள் என்னவோ நினைத்தவாறு கேட்டாள்:

“எங்கே போறீங்க? நாங்க மட்டும் இங்கே எப்படி தனியா இருக்குறது?''

நான் பதிலே பேசவில்லை.

மனைவி கேட்டாள்:

“ரொம்பவும் முக்கிய வேலையா?''

“ஆமா...''

“எங்கே?''

“இமயமûலைக்குப் போயி தவம் செய்யப் போறேன். நூற்றியொரு நாக்கிகளே, உங்களுக்கு மங்களம்!''

“வா மகளே...'' அவள் எழுந்தாள்: “பசுக்களைக் கூப்பிடு. இமயமலை அடிவாரத்துல புல் நிறைய இருக்கும். டாட்டா தவம் செய்யிறதை நாமும் பார்ப்போம்...''

பார்த்தீர்களா? தவத்தைக் கலைக்க எந்த இடத்திலும் மேனகைகள் இருக்கத்தான் செய்கிறார்கள். இருந்தாலும், நூற்றியொரு நாக்கிகளுக்கு மீண்டும் ஒரு முறை வாழ்த்து... மங்களம்! தீர்க்க சுமங்கலிகளாக அவர்கள் வாழட்டும்!

ஒரு மாதிரி மங்களம்- சுபம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.