Logo

சோசலிசமும் மனிதனும்

Category: அரசியல்
Published Date
Written by சுரா
Hits: 8233
socialisamum manidhanum

சுராவின் முன்னுரை

ல்லூரியில் படித்துக் கொண்டிருந்த காலத்திலேயே என் மனதில் ஒரு தனியான இடத்தைப் பிடித்தவர் ஃபிடல் கேஸ்ட்ரோ (Fidal Castro). க்யூபா என்ற நாட்டின் வளர்ச்சிக்காக தன்னையே முழுமையாக அர்ப்பணித்துக் கொண்ட மாவீரர் அவர். கேஸ்ட்ரோ மீது அளவற்ற மரியாதையும், ஈடுபாடும் கொண்டவர் சேகுவேரா (Che Guevara).

தன்னுடைய அனல் பறக்கும் பேச்சாலும், எழுத்தாலும் கேஸ்ட்ரோவின் போர்ப்படை ஆயுதமாகவும், தளபதியாகவும் விளங்கிய சே குவேராவிற்கு சிந்தனையாளர்கள் மத்தியிலும்,அறிவாளிகள் மத்தியிலும் எந்த அளவிற்கு உயர்ந்த பீடம் அமைத்து இடம் கொடுக்கப்பட்டிருக்கிறது என்பதிலிருந்தே சே குவேராவின் பெருமையையும் மதிப்பையும் நாம் புரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு சிறு சிறு விஷயத்தையும் கூட சே குவேரா எந்த அளவிற்கு நுணுக்கமாக ஆராய்ந்து பார்க்கிறார் என்பது அவரிடமிருந்து நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்நாட்டின் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்கு நாம் எதை எதையெல்லாம் செய்ய வேண்டும் என்பதை மிகவும் ஆழமாக சிந்தித்து முடிவு பண்ணி வைத்திருக்கும் மனிதர் அவர். இன்றைய உலகிற்கு சே குவேரா போன்ற துடிப்பு கொண்ட, ஆவேசம் மிக்க, சிந்திக்கக் கூடிய போராளிகள்தான் தேவை. அவரைப் போன்ற மனிதர்களால் மட்டுமே வறுமையில் உழன்று கொண்டிருக்கும் சூழ்நிலையை மாற்றி, ஒளிமயமான உலகத்தை உண்டாக்க முடியும்.

‘சோசலிசமும் மனிதனும்’ (Socialisamum Manidhanum) என்ற சே குவேராவின் சிந்தனைகள் கொண்ட இந்நூலை நான் மிகுந்த ஆர்வத்துடனும், ஈடுபாட்டுடனும் மொழி பெயர்த்திருக்கிறேன். சே குவேராவின் எண்ண அலைகள் எல்லா இடங்களிலும் பரவி, இதைப் படிப்போர் மனதில் ஒரு மாற்றத்தை அவை உண்டாக்க வேண்டும் என்பதுதான் இந்நூலை நான் மொழி பெயர்த்ததற்கான அடிப்படை நோக்கம்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி

அன்புடன், 

சுரா (Sura)


க்யூபாவின் சோசலிசத்தையும் மனிதனையும் பற்றிய குறிப்புகள

காலம் கடந்த விஷயம் என்றாலும். என்னுடைய ஆஃப்ரிக்கா பயணத்திற்கு மத்தியில் இந்தக் குறிப்புகளை நான் முழுமை செய்கிறேன்.நான் என் வார்த்தையைக் காப்பாற்றுகிறேன். மேலே கூறிய விஷயத்தைப் பற்றித்தான் நான் எழுதுகிறேன், உருக்வேயில் இருக்கும் வாசகர்களுக்கு இந்த விஷயத்தில் மிகுந்த ஆர்வம் இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

சோசலிசத்துக்கு எதிரான கொள்கைப் போராட்டத்தின்போது முதலாளித்துவ சக்திகள் சாதாரணமாக கூறும் ஒரு கருத்து இருக்கத்தான் செய்கிறது. சோசலிசத்தின்- அதாவது- நாம் இப்போது அடைந்திருக்கும் சோசலிஸ்ட் நிர்மான காலகட்டத்தின் முக்கிய நோக்கம் தனி மனிதனை அரசிற்கு விசுவாசமாக இருக்கும்படி செய்ய வேண்டும் என்பதுதான் அது. சித்தாந்த ரீதியான சூழ்நிலையில் இந்தக் கருத்து தவறானது என்பதை வலியுறுத்துவதற்காக அல்ல- மாறாக, க்யூபாவில் இப்போது நிலவக் கூடிய உண்மைகளை எல்லோருக்கும் தெரியும்படி வெளிப்படுத்தவும், அத்துடன் பொதுவாக நடைமுறையில் இருப்பவற்றிற்கு விளக்கங்கள் கூறி அவற்றைச் சேர்க்கவும் நான் விரும்புகிறேன். ஆட்சியைக் கைப்பற்றும் விஷயத்தில் முன்பும் அதற்குப் பின்பும் இருக்கும் எங்களின் புரட்சிப் போராட்டத்தின் வரலாற்றைக் கூறி நான் ஆரம்பிக்கிறேன்.

நீங்கள் எல்லோரும் தெரிந்திருப்பதைப் போல புரட்சிப் போராட்டம் சரியாக ஆரம்பமானது 1953ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் தேதிதான் அதன் முடிவு 1959ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி. ஜூலை 26ஆம் தேதி காலையில் ஃபிடெல் காஸ்ட்ரோவின் தலைமையின் கீழிருந்த ஒரு பகுதி ஆட்கள் ஓரியந்தே மாநிலத்தைச் சேர்ந்த மொன்காதா படை இருப்பிடங்களைச் சுற்றி வளைத்தார்கள். சுற்றி வளைப்பு இறுதியில் தோல்வியில் முடிந்தது, தோல்வி ஒரு மோசமான நிலைக்குக் கொண்டு போய் விட்டது. மரணத்தைத் தழுவாமல் மீதமிருந்தவர்கள் சிறைக்குள் தள்ளப்பட்டார்கள். பொது மன்னிப்பு தந்து அவர்கள் எல்லோரையும் வெளியே விட்ட பிறகு, மீண்டும் புரட்சிப் போராட்டம் தொடங்கியது.

சோசலிசத்தின் விதைப்பு மட்டுமே நடந்த அந்த காலகட்டத்தில், அடிப்படையான விஷயமாக இருந்தவன் மனிதன்தான். நாங்கள் அவனைத்தான், தனக்கென்று சொந்தப் பெயரையும் குடும்பப் பெயரையும் கொண்ட தனித்தனி மனிதர்களைத்தான் முழுமையாக நம்பியிருந்தோம். அவனிடம் ஒப்படைக்கும் பணியில் அவன் வெற்றி பெறுவதோ, தோல்வியைத் தழுவுவதோ அவனுடைய செயல்பாட்டுத் திறமையைப் பொறுத்து இருக்கிறது.

பிறகு கொரில்லா போராட்டமாக மாறியது. இரண்டு மாறுபட்ட நிலைகளில் இது வளர்ந்தது. முதலாவது- அப்போதும் தூங்கிக் கொண்டிருந்த, தட்டி எழுப்பி ஒழுங்கு படுத்த வேண்டிய பொது மக்களின் போராட்டங்களில். இரண்டாவது- அமைப்பின் முன்னணி போராளிகள் மற்றும் வழிநடத்தும் சக்திகளின் புரட்சி உணர்விற்கும் போராட்ட ஆவேசத்திற்கும் உற்பத்தி இடமாக இருந்த கொரில்லாக்களில். இந்த முன்னணிப் போராளிகள்தான், இந்த எழுச்சி கொண்ட மனிதர்கள்தான் வெற்றியை நோக்கிய தன்னலமற்ற சூழ்நிலைகளை உண்டாக்கியவர்கள்.

இங்கேயும்- எங்களின் நடத்தைகளிலும் மனங்களிலும் நடைபெற்ற போராட்டச் செயல்பாடுகளிலும் சிந்தனை சார்ந்த தொழிலாளிவர்க்கத்தை உருவாக்கும் செயல்களிலும் தனிமனிதன்தான் அடிப்படையாக இருந்தான். போராட்டப் படையின் உயர்ந்த பதவியை அடைந்த செய்ராமெய்ஸ்த்ராயின் ஒவ்வொரு போராளிக்கும் தனக்கென்று கூறத்தக்க சாதனைகளின் பட்டியல் இருக்கத்தான் செய்கிறது. அதன் அடிப்படையில்தான் அவர்கள் அந்தப் பதவியை அடைகிறார்கள். அது முதல் புரட்சி கால கட்டம். அதில் மிகப் பெரிய பொறுப்புகளுக்காக, மிகப் பெரிய ஆபத்துகளைச் சந்திப்பதற்காக அவர்கள் போட்டி போட்டார்கள். கடமையை நிறைவேற்றுவது என்ற ஒன்றைத் தவிர வேறு எந்த திருப்தியும் அவர்களுக்குக் கிடைக்கவில்லை.

எங்களின் புரட்சிக் கல்விச் செயல்பாடுகளுக்கு மத்தியில் இந்த முக்கிய விஷயத்திற்கு நாம் அவ்வப் போது திரும்பி வருவதுண்டு.அப்போதைய எங்களின் போராட்ட வீரர்களின் செயல்களில், எதிர்கால மனிதர்களின் மின்னல் ஒளிகளைக் காண முடியும்.  

எங்களுடைய வரலாற்றின் மற்ற கட்டங்களிலும், புரட்சிக்கான முழுமையான சுய அர்ப்பணிப்பு பல தடவைகள் நடந்திருக்கிறது. அக்டோபர் புரட்சி காலத்திலும், ஃப்ளோரா என்ற சூறாவளிக் காற்றின் கொடுமைகள் உண்டான காலத்திலும் எங்களின் ஒட்டுமொத்த பொது மக்களும் நினைத்துப் பார்க்க முடியாத தைரியத்தையும் தியாகத்தையும் வெளிப்படுத்தியதை நாங்களே பார்த்தோம். கொள்கை என்ற ரீதியில் இருந்து பார்த்தோமேயானால், அன்றாட வாழ்க்கையில் இந்த தைரியமான செயல்பாட்டைத் தொடர்ந்து நிலை நிறுத்துவதற்கான வழியைக் கண்டுபிடிப்பதுதான் எங்களின் முக்கிய கடமைகளில் ஒன்றாக இருந்தது.        

வஞ்சகர்களான பூர்ஷ்வாக்களின் பல்வேறு உறுப்பினர்களைக் கொண்டு 1959 ஜனவரி 1 ஆம் தேதி புரட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டது. அரசாங்கத்தின் அடித்தளம் என்ற நிலையில், புரட்சிப் படையின் தொடர்பு இருப்புத்தான் அதிகாரத்திற்கான ஆதாரமாக இருந்தது.

தொடர்ந்து சிறு சிறு வேறுபாடுகள் தலைகாட்டின. பிரதம அமைச்சர் என்ற பதவியை ஏற்ற ஃபிடல் கேஸ்ட்ரோ அரசாங்கத்தின் தலைமை இடத்திற்கு வந்தபோது, 1959 பிப்ரவரியில், அவை சரி செய்யப்பட்டன.


பொது மக்களின் போராட்டம் காரணமாக குடியரசுத் தலைவரான உரூஷ்யா அதே வருடம் ஜூலை மாதத்தில் தன் பதவியை ராஜினாமா செய்ததுடன் அந்தக் கட்டம் முடிவுக்கு வந்தது.

இங்குதான், க்யூபா புரட்சியின் வரலாற்றில் தெளிவான குண விசேஷங்களைக் கொண்ட ஒரு சக்தி வெளியே தெரிந்தது- பொது மக்கள். அவர்கள் இனிமேலும் திரும்பத் திரும்ப தோன்றிக் கொண்டே இருப்பார்கள்.

பெருகிவரும் இந்த மக்கள் சக்தி பலரும் கூறுவதைப் போல, ஒன்று சேர்ந்திருக்கும் ஆடுகளின் கூட்டத்தைப் போல நடக்கக் கூடிய ஒன்றல்ல. மேலேயிருந்து சுமத்தப்பட்ட சூழ்நிலைகளால் அவர்கள் அப்படி ஆகிப் போயிருந்தார்கள் என்பதுதான் உண்மை. எந்தவொரு தயக்கமும் இல்லாமல் அவர்கள் ஃபிடல் கேஸ்ட்ரோவைத் தங்களின் தலைவராக ஏற்றுக்கொண்டு, அவரைப் பின் தொடர்கிறார்கள் என்பது உண்மையாக நடந்து கொண்டிருக்கின்ற ஒன்று. மக்களுடைய விருப்பங்களையும் உணர்வுகளையும் மிகச் சரியாக உணர்ந்து கொள்ளவும்,புரிந்து கொள்ளவும், ஃபிடல் கேஸ்ட்ரோவால் முடிகிறது. தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற எந்த அளவிற்கு மனப்பூர்வமான முயற்சிகளை அவர் செய்திருக்கிறார் என்பதை வைத்துத்தான் அவர் மக்களிடமிருந்து பெற்ற மிகப் பெரிய நம்பிக்கையின் ஆழத்தை நாம் கணக்கிட வேண்டும்.

விவசாய வளர்ச்சிகளிலும் அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் சட்டபூர்வமான செயல்பாடுகளிலும் மக்கள் பங்கு பெற்றார்கள். ப்ளாயா கீரோங்கின் மகத்தான அனுபவங்கள் வழியாக அவர்கள் கடந்து சென்றார்கள். சி.ஐ.ஏ. ஆயுதம் அணிந்த பல்வேறு கொள்ளைக் கூட்டங்களுடன் நடந்த போரில், அவர்கள் மேலும் பலமும் தெளிவும் பெற்றார்கள். அக்டோபர் புரட்சி காலத்தில், நவீன காலத்தின் மிகவும் முக்கியமான தீர்மானங்களில் ஒன்றின் வழியாக அவர்கள் கடந்து சென்றார்கள். இன்று அவர்கள் சோசலிசத்தை உண்டாக்குவதற்கான செயல்பாட்டைத் தொடர்கிறார்கள்.

மேலோட்டமாக மட்டும் பார்த்தால், தனி மனிதனை அரசுக்கு விசுவாசமாக இருக்கும்படி செய்கிறார்கள் என்ற வாதம் சரி என்பதாகத் தோன்றலாம். பொருளாதாரம், கலாச்சாரம், விளையாட்டு, பொழுதுபோக்கு என்று எந்த வகைப்பட்ட கடமைகளையும் அரசாங்கம் தங்களுக்கு முன்னால் வைக்கும்போது, மக்கள் ஆச்சரியப்படத்தக்க அடக்கத்துடனும் எழுச்சியுடனும் அர்ப்பணிப்பு உணர்வுடனும் அதைச் செய்து முடிப்பார்கள்.

ஃபிடல் கேஸ்ட்ரோதான் எல்லாவற்றையும் ஆரம்பித்து வைக்கிறார். இல்லாவிட்டால் புரட்சி தலைமை பீடம் பொது மக்களுக்கு பிறகு அதை விளக்கிக் கூறுகிறது. அத்துடன் அதை தங்களின் சொந்த திட்டமாக அவர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். சில நேரங்களில் கட்சியும் அரசாங்கமும் மக்களுக்கு பொதுவாகவே நன்மை பயக்கக் கூடிய அனுபவத்தை அதே நிலையில் பயன்படுத்துகிறது. அவர்கள் அதே நடவடிக்கை முறைகளைப் பின்பற்றுகிறார்கள்.

எனினும், சில வேளைகளில் அரசாங்கத்திற்கு தவறு நேர்வதுண்டு. அப்படிப்பட்ட நேரங்களில் ஒவ்வொரு தனி மனிதனும் அளிக்கக் கூடிய பங்களிப்பின் அளவு குறைவதும், அவர்கள் மத்தியில் பொதுவாக உண்டாகக் கூடிய ஆர்வக் குறைவு வெளிப்படையாக தெரிவதும் உண்டானது. அப்போது தவறைச் சரி செய்யக் கூடிய நேரம் வந்து விட்டது என்ற அர்த்தம். 1962 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் பால் எஸ்கலாந்தேயின் பிரிவினைக் கொள்கைகளைக் கொண்ட கட்சி படை மீது ஆக்கிரமிப்பு உண்டாக்கியதன் விளைவாக சம்பவித்தது அதுதான்.

தொடர்ந்து சரியான நடவடிக்கைகள் உறுதியாக நடப்பதற்கு இந்தச் சடங்குகள் முழுமையாக போதாது. பொது மக்களுடன் மேலும் ஆழமான உறவு கொண்டிருத்தல் அவசியத் தேவையாக இருக்கிறது. இனி வரும் ஆண்டுகளில் இதை மேலும் அதிகரிக்க வேண்டியதிருக்கிறது. அரசாங்கத்தின் உன்னத தளங்களிலிருந்து வடிவம் கொள்ளும் விஷயங்களில், ஒரு வகையான சகிப்பு உணர்வை, தாங்கள் சந்திக்கும் பெரிய பிரச்சனைகளுக்கு முன்னால் மக்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதை அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறையை நாங்கள் இப்போது கையாள்கிறோம்.

இந்த விஷயத்தில் ஃபிடெல் மிகச் சிறந்த திறமைசாலி என்றுதான் சொல்ல வேண்டும். மக்களுடன் நெருங்கிப் பழகும் விஷயத்தில் அவர் கையாளும் தனிப்பட்ட வழிகளைத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால், அவர் எப்ப்டி செயல்படுகிறார் என்பதைக் கட்டாயம் பார்க்க வேண்டும். பெரிய பொதுக் கூட்டங்களில் அவருடைய குரல் இசையைப் போல இனிமையாக இருக்கும். அது பார்வையாளர்களிடம் ஒரு நல்ல விளைவை உண்டாக்குகிறது. போராட்டமும் வெற்றியும் என்ற கோஷத்தில்தான் அது இறுதியில் போய் முடியும்.

புரட்சிக்கான செயல்முறைகளைத் தெரிந்திராத ஒருவருக்கு பொது மக்களுக்கும் தனி மனிதனுக்குமிடையே, இருக்கும் ஆழமான, இரண்டறக் கலந்து இருக்கும் இந்த பிணைப்பைப் புரிந்து கொள்வது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கும். இங்கு தனி மனிதனின் பங்களிப்பு என்ற வகையில் பொது மக்கள்,தலைவர்களுடன் அந்த அளவிற்கு நெருக்கமாக இருக்கிறார்கள்.

மக்களின் கருத்தைப் புரிந்து கொண்டு அதை நிறைவேற்றும் ஆற்றல் கொண்ட அரசியல்வாதி தோன்றும்போது, இத்தகைய நிலை முதலாளித்துவ அமைப்பிலும் சில வேளைகளில் காணப்படுவதுண்டு. ஆனால், அது சரியான சமூக அமைப்பு அல்ல (அப்படியென்றால் அதை முதலாளித்துவம் என்று அழைப்பது முழுமையாக சரியாகவும் இருக்காது). அதற்கு எழுச்சியைத் தரும் தனி மனிதன் இருக்கும் காலம் வரையோ இல்லாவிட்டால் அந்த மக்களின் விருப்பத்தை முதலாளித்துவ சமூகம் நசுக்கித் தேய்க்கும் வரையோ மட்டும் அது நிலைபெற்று நின்றிருக்கும்.

முதலாளித்துவ அமைப்பில், மனிதன் அவனை விட்டு மிகவும் தூரத்திலும் இரக்கமற்றும் இருக்கும் சட்டங்களால் கட்டுப்படுத்தப்படுகிறான். தந்திரங்கள் நிறைந்த சட்டம் என்ற கண்ணுக்குத் தெரியாத தொப்பிள் கொடி மூலம் அன்னியன் ஆக்கப்படும் தனி மனிதன், சமூகத்துடன் கட்டப்பட்டு இருக்கிறான். அவனுடைய பாதையும் சட்டமும் ஏற்கெனவே உருவாக்கப்பட்டு, வாழ்க்கையின் எல்லா தளங்களிலும் அதன் செயல்பாடு இருந்து கொண்டிருக்கிறது.

முதலாளித்துவத்தின் சட்டங்கள் பெரும்பாலான மக்களுக்கு கண்ணுக்குத் தெரியாதவையாகவும், என்னவென்று புரிந்து கொள்ள முடியாதவையுமாக இருக்கின்றன.அது தனி மனிதன் மீது அவனுக்கே தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. தனக்கு முன்னால் முடிவற்ற வானத்து விளிம்பின் எல்லையை மட்டுமே அவன் பார்க்கிறான். வெற்றிக்கான சாத்தியங்களைப் பற்றி ராக் ஃபெல்லரின் உதாரணத்திலிருந்து பாடம் படிக்க (அது சரியோ, தவறோ எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்) ஆர்வம் கொள்கிற முதலாளித்துவ கொள்கை பரப்பாளர்கள் அப்படித்தான் அதைப் படம் பிடிக்கிறார்கள்.

ஒரு ராக் ஃபெல்லருக்கு பிறவி தருவதற்குத் தேவையான வறுமை மற்றும் துன்பங்களின் அளவு, அந்த அளவிற்கு மிகப் பெரிய அதிர்ஷ்டம் வந்து சேர்வதற்குத் தேவையான வீழ்ச்சியின் அளவு எவ்வளவு என்று தெளிவாக்கப்படவில்லை. பொதுவாக மக்களுக்கு அவற்றைத் தெரியும்படி காட்டுவதற்கும் பல நேரங்களில் சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.


சார்ந்திருக்கும் நாடுகளின் மீதுள்ள எதிர்ப்பு காரணமாக மிகப் பெரிய நாடுகளைச் சேர்ந்த தொழிலாளிக்கு, தொழிலாளிவர்க்க சர்வ தேசத்துவம் எப்படி இல்லாமற் போகிறது என்பதைப் பற்றியும் மிகப் பெரிய நாடுகளைச் சேர்ந்த பொதுமக்களின் போராட்ட ஆர்வம் இதனால் எப்படி நசுக்கப்படுகிறது என்பதைப் பற்றியும் விவாதம் செய்ய வேண்டியது இங்கு சூழ்நிலைக்கேற்றது என்பது எனக்குத் தெரியும். ஆனால் இந்தக் குறிப்புகளின் இலக்கிலிருந்து தூரத்திலிருக்கும் ஒரு விஷயம் இது.

எது எப்படி இருந்தாலும், வெற்றிக்கான பாதை அபாயங்கள் நிறைந்தது என்பது மட்டும் உண்மை.எனினும், சரியான தகுதிகளைக் கொண்ட ஒருவன் இலட்சியத்தை அடைய வேண்டுமென்றால், அவற்றையெல்லாம் தாண்டிச் செல்வது என்பது சாத்தியமான ஒன்றுதான். தூரத்தில் அதோ, அதற்கான பரிசு காத்திருக்கிறது. அந்த இடத்திற்குச் செல்லும் பாதை யாரும் இல்லாமல் காலியாகத்தான் இருக்கிறது. அது மட்டுமல்ல- அங்கு ஓநாய்கள் ஏராளமாக இருக்கின்றன. மற்றவர்களுடைய தோல்வியில் மட்டுமே ஒருவன் வெற்றியைப் பெற முடியும்.

சோசலிசத்தை உண்டாக்குவது என்ற ஆச்சரியமும் உயிரோட்டமும் நிறைந்த நாடகத்தின் நடிகனான தனி மனிதனை, தனிமைப்படுத்தப்பட்டவனாகவும் சமூகத்தின் உறுப்பினராகவும் இரட்டை நிலைகளில் இருக்கும் தனி மனிதனை, நான் இனிமேல் விளக்க முயற்சிக்கிறேன்.

அவனுடைய முழுமையற்ற தன்மை, முற்றிலும் முடிவடையாத உற்பத்திப் பொருள் என்ற நிலை ஆகியவற்றைப் புரிந்து கொள்வது என்பது முயற்சியால் முடியக் கூடியதுதான். கடந்த காலத்தின் மத பிரசங்கங்கள் தனி மனிதனின் சுய உணர்வு மூலமாகத்தான் நிகழ்காலத்திற்கு மாற்றம் செய்யப்படுகின்றன. அவற்றை முழுமையாக அழிக்க வேண்டுமென்றால், அதற்கு நிரந்தரமான கடின உழைப்பு தேவைப்படுகிறது. இந்தச் செயலுக்கு இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று - வெளிப்படையாக தெரியும்படியும் யாருக்கும் தெரியாமல் மறைமுகமாகவும் கற்றுத் தரப்படும் கல்வி வழியாக சமூகம் செயல்படுகிறது. இரண்டாவது- தனிமனிதன் தன்னைத் தானே சுய உணர்வுடன் கல்வி கற்கச் செய்து கொள்வது.

உருவாகும் புதிய சமூகத்திற்கு கடந்த காலத்துடன் பலமாக போராட வேண்டியதிருக்கும். தனிமனிதனின் சுய உணர்வில் கடந்த காலம் இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறது. தனி மனிதனை தனியாகப் பிரித்து ஒதுக்கும் விதத்தில் ஒழுங்குபடுத்தப்பட்ட கல்வியின் பிரிவுகளுக்கு அதில் இப்போதும் செல்வாக்கு இருக்கவே செய்கிறது. கடந்த காலத்தின் சந்தை உறவுகள் இப்போதும் நிலை பெற்று நின்று, மாறிக் கொண்டிருக்கும் கட்டத்தின் குணத்திலும் அதன் பாதிப்பு வெளிப்படத்தான் செய்கிறது. முதலாளித்துவ சமூகத்தின் பொருளாதார மூலம்தான் சரக்கு.அது இருக்கும் வரையில் உற்பத்தியின் கூட்டுச் செயல்களிலும் அதைத் தொடர்ந்து உணர்விலும் அதன் அடையாளங்கள் கலந்திருப்பதை நாமே பார்க்கலாம்.

சொந்த முரண்பாடுகளால் அழிக்கப்பட்ட ஒரு நாட்டின், முதலாளித்துவ அமைப்பின் வெடிப்பிற்கு நிகரான மாற்றத்தின் விளைவாக உண்டான காலகட்டமாகத்தான் மார்க்ஸ் இடைப்பட்ட காலத்தைக் கருதுகிறார்.எது எப்படியிருந்தாலும் மிகப் பெரிய நாடுகளின் பிடியில் இருக்கும் பலமற்ற சிறு நாடுகள்தான் முதலில் தகர்கின்றன என்பது வரலாற்று ரீதியான ஒரு உண்மை. இதை லெனின் ஆரம்பத்திலேயே கண்டிருக்கிறார்.

இந்த நாடுகளில், முதலாளித்துவம் அதன் விளைவு ஒரு விதத்தில் இல்லாவிட்டால் வேறொரு விதத்தில் உண்டாகும் வண்ணம் வளர்ந்து விட்டிருக்கிறது. எனினும் சொந்த உள் முரண்பாடுகள் காரணம் அல்ல. அந்த நிலை இங்கு இல்லாமல் இருப்பதற்கு. அதற்கான சாத்தியங்கள் அனைத்தும் இல்லாமல் போயிருக்கின்றன. ஒரு வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு எதிராக உண்டாகும் விடுதலைக்கான போராட்டம், போரைப் போன்ற அசாதாரண சம்பவங்கள் கொண்டு உண்டாக்கப்பட்ட துயரம் (அதன் சுமையை பாதிக்கப்பட்டவர்களின் தலையில் வைத்துக் கட்டத்தான் சிறப்பு உரிமைகளை அனுபவித்துக் கொண்டிருக்கும் வர்க்கங்கள் முயற்சி செய்யும்) புதிதாக உண்டாக்கப்பட்ட காலனி ஆட்சி அமைப்புகளை ஒழித்து ஒன்றுமில்லாமல் ஆக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கும் விடுதலை அமைப்புகள்- இப்படிப்பட்ட எதிர்பாராத சம்பவங்களுக்கு சாதாரணமாக இருக்கக்கூடிய காரணங்கள் இவை தான். சுய உணர்வு கொண்ட செயல்பாடும் இருக்கும் பட்சம் எல்லாம் சரியாக இருப்பது மாதிரிதான்.

இந்த நாடுகளில் சமூக உழைப்பைப் பற்றிய முழுமையான கல்வி இனியும் உண்டாக்கப்படவில்லை.சொத்தின் உரிமைக்கான வழி என்று பார்த்தால் பொதுமக்களின் கையிலிருந்து இன்னும் எவ்வளவோ தூரத்தில் இருக்கிறது சொத்து. ஒரு பக்கம் சிறிது வளர்ச்சி நிலையும் இன்னொரு பக்கம் மூலதனத்தின் கட்டுப்பாடற்ற நடமாட்டமும் தியாகங்களால் உண்டாக வேண்டிய ஒரு மாற்றத்தை இல்லாமற் செய்கின்றன. பொருளாதார அடித்தளத்தைச் சரி பண்ணுவதற்கு இன்னும் எவ்வளவோ தூரம் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது. வேகமான வளர்ச்சிக்கான செயல்பாட்டின் அடித்தளம் மக்கள் நலன்தான் என்ற கொள்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

மரத்தைப் பார்த்துவிட்டு, காட்டைப் பார்க்கவில்லை என்ற ஆபத்து இருக்கிறது. நம்மை முதலாளித்துவத்துடன் தொடர்பு படுத்தும் பழைய கருவிகளைக் கொண்டு (சரக்குதான் பொருளாதாரத்திற்கு அடிப்படை அதை அசைப்பதற்கான சக்தி- லாபம்.அதாவது- தனி மனிதனின் சம்பாத்தியம்) சோசலிசத்தை அடையலாம் என்ற கற்பனையான வாதத்தை வைத்திருப்பது நம்மை இலட்சியத்தில் கொண்டு போய் சேர்க்காது.

அது மட்டுமல்ல- அங்கிருந்து நீங்கள் நீண்ட தூரம் பயணம் செய்கிறீர்கள். நிறைய திருப்பங்களையும் சந்திப்புகளையும் கடந்து செல்கிறீர்கள். அதன் மூலம் எந்த இடத்தில் உங்களுக்கு பாதை தவறியது என்பதைத் தெரிந்து கொள்வது உங்களுக்கே கஷ்டமான ஒரு விஷயமாக ஆகி விடுகிறது. செயல் வடிவத்திற்கு வந்த பொருளாதார அடித்தளம் அறிவு வளர்ச்சியைத் தலைகீழாக கவிழ்ப்பது என்ற வேலை எப்போதோ செய்து முடிக்கப்பட்டு விட்டது கம்யூனிசத்தை நிர்மானிக்க புதிய மனிதனை வார்த்தெடுக்க வேண்டும். புதிய பொருளாதார அடித்தளத்தை உண்டாக்க வேண்டும்.

அதனால் மக்களை தட்டியெழுப்பி அணிவகுக்கச் செய்வதற்கு சரியான பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது மிகவும் முக்கியமான அவசியத் தேவையாகிறது. அடிப்படையாகச் சொன்னால், இந்தப் பாதை தார்மீக குணம் கொண்டது. அதே நேரத்தில் அதன் வெளிப்படையான செயல்பாட்டை, குறிப்பாக-சமூகக் குணத்தை தேவையான அளவிற்கு பயன்படுத்திக் கொள்வதில் சிறிதும் அசட்டை காட்டக் கூடாது.

நான் முதலில் கூறியதைப் போல வீழ்ச்சியின் நாட்களில் பலமான, தார்மீகமான எதிர்ப்பைக் காட்டுவது என்பது எளிதானது.ஆனால் அவற்றின் விளைவை நிலை நிறுத்துவதில் அறிவின் வளர்ச்சி மிகவும் முக்கியமானது. இதில் மூலங்களுக்கு ஒரு புதிய முன்னுரிமை இருக்கவே செய்கிறது. மொத்தத்தில் சமூகத்தை ஒரு பெரிய பள்ளிக் கூடமாக மாற்ற வேண்டியிருக்கிறது.

முதல் கட்டத்தில் முதலாளித்துவ உணர்வு வடிவமெடுத்த அதே விதத்தில்தான் இந்த விஷயமும் என்று மொத்தத்தில் கூறலாம்.


முதலாளித்துவம் சக்தியை பயன்படுத்துகிறது என்றாலும் அது தன்னுடைய சூழ்நிலைக்கேற்றபடி மக்களைக் கற்கவும் வைக்கிறது. வர்க்க சமூகத்தின் தவிர்க்க முடியாத நிலைமையை விளக்கிக் கூற கடமைப்பட்டவர்கள் நிரந்தரமான உற்பத்தியைப் பற்றிய சில சித்தாந்தங்களின் மூலமோ,இயற்கைக்கு எதிரான இயந்திரத்தனமான சிந்தாந்தங்களின் மூலமோ நேரடியாகவே பிரச்சாரம் செய்கிறார்கள்.

தாங்கள் அழுத்தி நசுக்கப்பட்டவர்கள் என்றும் அதற்கு எதிராக போராட்டம் நடத்துவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் நினைக்கும் மக்களை இது சமாதானப்படுத்துகிறது. தொடர்ந்து உடனடியாக வளர்ச்சிக்கான கொள்கை பிறக்கிறது. வளர்ச்சிக்கான எந்தவொரு கொள்கையையும் அளிக்காத கவர்ச்சியான சூழ்நிலைக்கும் முதலாளித்துவ சூழ்நிலைக்கும் இடையே இருக்கக் கூடிய வேறுபாடு இதுதான்.

சிலரை எடுத்துக் கொண்டால், கவர்ச்சியான கொள்கை- சொல்லப் போனால்- இனியும் இருந்துகொண்டுதான் இருக்கும். அதை ஏற்றுக் கொள்கிறவன் மரணத்தைத் தாண்டியிருக்கும் கற்பனையான சொர்க்க உலகத்தை அடைகிறான். பழைய நம்பிக்கைகளின்படி இங்கு நல்லவர்கள் பரிசு பெறுகிறார்கள். மற்றவர்கள் அதை இப்படி நவீனப்படுத்துகிறார்கள்- சமூகத்தின் பிரித்தல் முன்பே நடந்து முடிந்து விட்டது. எனினும், சொந்த முயற்சியாலும், செயல்பாட்டாலும் தனி மனிதன் தான் இப்போது இருக்கும் வர்க்கத்தை விட்டு உயர்வது என்பது சாத்தியமான ஒன்றுதான்.

நம்முடைய விஷயத்தில் நேரடியாக கற்றுக் கொள்வது அதிக முக்கியத்துவத்தைப் பெறுகிறது. விளக்கங்கள் நம்பக் கூடியவையாக இருக்கின்றன. காரணம்-அது உண்மையானதாக இருக்கிறது. தந்திர வேலைகள் எதுவும் அதற்குத் தேவையில்லை. கல்வி நிலையம், கட்சியின் தகவல் வினியோகப் பிரிவு போன்றவற்றின் மூலம், அரசாங்கத்தின் கல்விச் செயல்பாட்டின் மூலம் பொது தொழில்நுட்ப- கொள்கை- கலாச்சார செயல்பாடு என்ற நிலையில் அது செயல்படுத்தப்படுகிறது.

கல்வி பொதுமக்களை ஈர்ப்பதும், புதிய விருப்பங்கள் இயற்கையாகவே நடைமுறைக்கு வருவதும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. மக்கள் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்வதுடன், அவர்கள் கல்வி பெற்றிராதவர்களை பாதிக்கவும் செய்கிறார்கள். இதுதான் மக்களை முழுமையாக படிக்க வைப்பதற்கான வழி. இது மற்ற எதையும் விட நல்ல விளைவைத் தரக்கூடியது.

ஆனால், இது நன்கு சிந்தித்துச் செய்யக் கூடிய ஒரு செயல். புதிய சமூக சக்தியின் பாதிப்பு தனி மனிதனுக்கு எப்போதும் இருக்கத்தான் செய்யும். தான் அந்த அளவிற்கு உயரவில்லை என்று அவனுக்குத் தோன்றுகிறது. தனக்கு நியாயம் என்று படும் கொள்கையுடன் தன்னை இணைத்துக் கொள்ள ஆழமான கல்வியின் உதவியால் அவன் முயற்சிக்கிறான். அவனுடைய வளர்ச்சிக் குறைவுதான் அங்கு போய் சேர்வதிலிருந்து அவனைத் தடுத்து நிறுத்திக் கொண்டிருந்தது. அவன் தானே படித்துக் கொள்கிறான்.

சோசலிசத்தை நிர்மானம் செய்கிற இந்த காலகட்டத்தில் புதிய மனிதன் வடிவம் எடுப்பதை நாமே பார்க்கலாம். புதிய பொருளாதார வடிவங்களின் வளர்ச்சிக்கேற்ப இந்தச் செயல் தொடர்ந்து கொண்டே இருப்பதால், அவனுடைய புதிய வடிவம் இப்போதும் முழுமை அடையவில்லை. முழுமை அடையப் போவதுமில்லை.

கல்வி இல்லாத காரணத்தால் தங்களின் தனிப்பட்ட விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு தங்களுக்கென்று தனியான சில வழிகளைப் பின்பற்றிக் கொள்வோர் உண்டு. அவர்களின் விஷயம் அங்கேயே இருக்கட்டும். இந்தப் புதிய கூட்டு முன்னேற்றத்தின் அகலமான பாதையில் இருந்து கொண்டு, தன்னுடன் இருக்கும் பொது மக்களிடமிருந்து தனிமைப்பட்டு விலகி நிற்கும் விருப்பத்தை வெளிப்படுத்துபவர்களும் இருப்பார்கள். சமூகத்தில் தன்னுடைய பங்களிப்பு மூலம் தனக்கு இருக்கும் முக்கியத்துவத்தைப் பற்றியும் ஒவ்வொரு நாளும் மனிதன் மேலும் மேலும் அதிக புரிதலுடன் இருந்து வருகிறான் என்பதுதான் இங்கு முக்கியமானது.

யாரும் நடந்திராத கரடு முரடான பாதை வழியாக தூர இலட்சியத்தை நோக்கி அவர்கள் எந்தச் சமயத்திலும் முழுமையாக தனியாக பயணம் செய்வதில்லை.அவர்கள் கட்சியின் முன்னணி பிரிவான தொழிலாளர்களை, பொது மக்களுடன் இணக்கத்துடனும் ஆழமான புரிதலுடனும் செயல்படுகிற உள்ளுணர்வைப் பெற்ற தொழிலாளர்களை - முன்னணிப் போராளிகளை- பின்பற்றுகிறார்கள்.எதிர் காலத்திலும் அதன் விளைவுகளில்தான் முன்னணிப் பிரிவினரின் கண்கள் இருக்கும். ஆனால், இது தனிப்பட்ட ஒரு மனிதன் சம்பந்தப்பட்ட விஷயமாக இருக்காது. மனிதனுக்கு புதிய அனுகூலங்கள் கிடைத்திருக்கும் சமூகம், கம்யூனிஸ்ட் மனிதனின் சமூகம், அதற்கு பரிசாகக் கிடைக்கிறது.

அந்தப் பாதை மிகவும் நீண்டதாகவும் துயரங்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது.சில நேரங்களில் நாம் வழியை விட்டு விலகிப் போய் விடுகிறோம். பிறகு திரும்பி வரவேண்டிய சூழ்நிலை உண்டாகிறது. வேறு சில வேளைகளில் நம்முடைய பயணம் படு வேகமாக ஆகி விடுகிறது. அப்போது நாம் பொதுமக்களிடமிருந்து விலகிப் போய் விடுகிறோம். சில நேரங்களில் நாம் மிகவும் பின்தங்கி இருந்து விடுகிறபோது, நமக்கு அடுத்து பின்னால் இருப்பவர்களின் வெப்ப மூச்சு நம் மீது படுகிறது.புரட்சியாளர்களாக ஆக வேண்டும் என்ற ஆர்வத்தில் பாதையைச் சீர் செய்து கொண்டு நாம் வேகமாக முன்னோக்கிச் செல்கிறோம். நாம் நம்முடைய வாழ்க்கைக்கான வசதிகளைப் பெறுவது மக்களிடம் இருந்து என்பதால், நாம் அவர்களுக்கு வழியைக் காட்டி ஆர்வத்தை உண்டாக்கினால்தான் அவர்களால் மேலும் அதிக வேகத்தில் முன்னேறிச் செல்ல முடியும்.

இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை (சோசலிசத்தை உண்டாக்குவதில் ஒரு காரணம் இல்லாவிட்டால் இன்னொரு காரணத்தால் பங்கெடுக்காமல் இருக்கின்ற சிறுபான்மையினரை கணக்கில் எடுக்க வேண்டாம்) தார்மீக எண்ணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சொல்லிக் கொள்கிற அளவிற்கு சமூக உணர்வு இன்னும் வளரவில்லை என்பதைச் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

பொது மக்களை விட கொள்கை ரீதியாக அதிகமாக முன்னேறிச் சென்றவர்கள் முன்னணிப் பகுதியினர். பொதுமக்கள் புதிய விஷயங்களைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள் என்றாலும்,தேவைப்படும் அளவிற்கு இல்லை என்பதுதான் உண்மை.முன்னணி காப்பாளர்கள் என்ற முறையில் தங்களின் கடமைகளை நிறைவேற்றுவதற்கு எப்படிப்பட்ட தியாகத்தையும் செய்ய முன்னணி பகுதியினரைத் தயார் படுத்தும் குணரீதியான ஒரு மாற்றம் அவர்களிடம் வந்து சேர்ந்திருக்கிறது. அதே சூழ்நிலையில் பொதுமக்களை எடுத்துக் கொண்டால், இந்த விஷயத்தில் முழுமையான மன ஈடுபாட்டுடன் இல்லை. அவர்கள் குறிப்பிட்ட அளவிலான நசுக்கல்களுக்கும் சுரண்டல்களுக்கும் பலிகடா ஆகிறார்கள். தோல்வியடைந்த வர்க்கத்தின் மீது மட்டுமல்ல, வெற்றி பெற்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் மீதும் தொழிலாளி வர்க்க சர்வ ஆதிக்கம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இப்படிக் கூறுவதன் அர்த்தம் முழுமையான வெற்றிக்கு ஏராளமான புரட்சி அமைப்புகள், ஏற்பாடுகள் அவசியத் தேவை என்பதுதான். எதிர்காலத்தை நோக்கி நடைபோடும் ஒரு மக்கள் அமைப்பிற்குப் பொருந்துகிற மாதிரியான,வழிகள், ஆரம்ப நிலைகள், தடைகள், நல்லமுறையில் நடை போடுவதற்கான திறமையும் தகுதியும் கொண்டவர்களைத் தேர்ந்தெடுத்த அது இந்த முன்னேற்றத்தைச் சாதிக்கிறது.


எங்களின் கடமையை முழுமை செய்பவர்களுக்கு அது உதவி செய்கிறது. புதிய சமூகத்தின் வளர்ச்சிக்கு எதிராக நிற்பவர்களை அது தண்டிக்கவும் செய்கிறது.

புரட்சி இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. அரசாங்கமும் ஒட்டு மொத்த சமூகமும் முழுமையாக ஒன்றாக இருக்கக் கூடிய ஒரு சூழ்நிலைக்கான தேடலில்தான் நாங்கள் இருக்கிறோம். சோசலிசத்தை உண்டாக்குவதற்குத் தேவையான சூழ்நிலைகளில் ஒன்று அது. அதே நேரத்தில் சட்டங்களை உண்டாக்கும் குழு போன்ற பூர்ஷ்வா ஜனநாயகத்தின் பொது நிறுவனங்களை வடிவமெடுத்துக் கொண்டு வரும் புதிய சமூகத்தில் வெறுமனே பறித்து நடுவதைத் தவிர்ப்பதற்கு தீவிரமான முயற்சிகளைச் செய்ய வேண்டும்.

புரட்சி சம்பந்தமான வடிவத்தை படிப்படியாக வளர்த்துக் கொண்டு வருவதற்கான சில முயற்சிகள் தேவையற்ற வேகம் காட்டாமல் நடந்திருக்கின்றன. இதற்கு முன்னால் இருக்கும் மிகப் பெரிய தடையே எங்களின் பயம்தான். அதற்குக் காரணம்- மேலோட்டமாக ஒரு அடையாளம் தெரிந்தால் கூட போதும், நாங்கள் பொது மக்களிடமிருந்தும் தனிமைப்படுத்தப்பட்டு விடுவோம். மாய வலைகளில் இருந்து மனிதர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற நிரந்தரமும் முக்கியத்துவமும் வாய்ந்த புரட்சிக் கொள்கையிலிருந்து இது எங்களின் கவனத்தை திசை திருப்பி விடும்.

படிப்படியாக திருத்தப்பட வேண்டிய அளவிற்கு இடம் இல்லை என்றாலும், பொதுமக்கள் ஆழமான சிந்தனை கொண்ட மனிதர்களின் கூட்டத்தைப் போல, அதே இலட்சியத்திற்காக வரலாறு படைத்துக் கொண்டிருக்கிறார்கள். வெளிப்படையான சூழ்நிலையில் வளர்ச்சி தெரிந்தாலும் சோசலிசத்திற்குக் கீழே மனிதன் மேலும் முழுமையடைந்த நிலையில் காணப்படுகிறான். மிகச் சரியான செயல்பாடு இல்லாவிட்டாலும், சமூக அமைப்பில் தானே இணைந்து இருக்கவும், அதன் குரலாக மாறவும் உள்ள சூழ்நிலைகள் அவனுக்கு நிறைய கிடைக்கின்றன.

உற்பத்தி, நிர்வாகம் ஆகியவற்றின் அனைத்து செயல் பிரிவுகளிலும் மனிதனின் தனியான பிறருடன் சேர்ந்த சுய உணர்வு கொண்ட பங்கேற்றலை பலப்டுத்துவது மிகவும் அவசியமான ஒன்று. அது மட்டுமல்ல- அதை கொள்கை ரீதியாகவும் நவீன வளர்ச்சிகளைக் கொண்ட கல்வியுடன் இணைக்க வேண்டும். அப்படிச் செய்தால்தான் அவனுக்கு இந்தச் செயல்கள் எந்த அளவிற்கு ஒன்றோடொன்று தொடர்பு கொண்டிருப்பவை என்பதும் அவற்றின் வளர்ச்சி எந்த அளவிற்கு சீராக இருக்கிறது எனபதும் தெரியும். அந்த வகையில் அவன் தன்னுடைய சமூக ரீதியான கடமையைப் பற்றி முழுமையான புரிதலுடன் இருக்க முடியும். ஒரு முறை அடிமைத்தனத்தின் சங்கிலி இணைப்புகளை உடைத்தெறிந்து விட்டால், தான் ஒரு மனிதப் பிறவிதான் என்பதை முழுமையாக புரிந்து கொள்வதற்கு அவனால் முடியும்.

இது அவனுக்கு அவனுடைய இயல்பு குணம் சுதந்திரமாக்கப்பட்ட கடின உழைப்பு மூலம் கிடைக்கும் கலாச்சாரம், கலை ஆகியவற்றின் மூலமாக அவனுடைய சரியான மன ஓட்டங்களை வெளிப்படும்.

இதில் முதலில் கூறியபடி அவனுக்கு முன்னேற்றம் உண்டாக வேண்டுமென்றால், தொழிலுக்கு ஒரு புதிய மரியாதை உண்டாக வேண்டும். சரக்கு உறவுகள் மூலம் மனிதனுக்கு உண்டாகியிருக்கும் இருப்பு முடிவுக்கு வர வேண்டும். அவன் செய்து முடிக்க வேண்டிய சமூக கடமைகள் எவ்வளவு இருக்கின்றன என்று விளக்கிக் காட்டக் கூடிய ஒரு சூழ்நிலை உண்டாக்கப்பட வேண்டும். கருவிகள் சமூகத்திற்குச் சொந்தமானவை. கடமையை நிறைவேற்றக் கூடிய ஒரு வழி மட்டுமே இயந்திரம்.

தன்னுடைய செயலில் மனிதன் தன் சாயலைப் பார்க்க தொடங்குகிறான். செய்து முடித்த செயல்கள் மூலம், தான் படைத்த பொருட்கள் மூலம் மனிதப் பிறவி என்ற நிலையில் தனக்கு இருக்கும் இடம் என்ன என்பதை தெளிவற்ற நிலையில் அவன் புரிந்து கொள்ள தொடங்குகிறான். தனக்குச் சொந்தமில்லாத விற்கப்படும் உழைப்பு சக்தியின் வடிவத்தில் தன் சொந்த அடையாளத்தின் ஒரு பகுதியை அர்ப்பணிக்க வேண்டிய மோசமான நிலையை, வேலை அவனுக்கு உண்டாக்கி வைக்கவில்லை. எனினும் சாதாரண மக்கள் வாழ்க்கைக்கு தான் தரும் கொடையின் எதிரொலியாக தன்னுடைய சமூக ரீதியான கடமையின் முழுமை என்ற அளவில், தானே வடிவம் மாறி வருவதாக அவன் உணர்கிறான்.

சமூக கடமை என்ற இந்தப் புதிய பதவியை கடின உழைப்பிற்குக் கொடுக்க நாங்கள் எங்களால் முடிந்த எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறோம். மேலும் அதிக பரப்பில் விடுதலைகளுக்கான சூழ்நிலையை உண்டாக்கும் தொழில் நுட்பங்களின் முன்னேற்றத்துடன் கடின உழைப்பைச் சேர்க்க ஒரு பக்கம் நாங்கள் முயல்கிறோம். இன்னொரு பக்கம் சொந்த உழைப்பை சரக்கு வடிவத்தில் விற்பதற்கான கட்டாயம் இல்லாத ஒரு சூழ்நிலையில் மனிதன் உற்பத்தி செய்யும்போதுதான் அவன் முழுமையான மன ரீதியான சூழ்நிலைகளை அடைகிறான் என்ற மார்க்ஸிய பார்வையின் அடித்தளத்திலிருக்கும் இயல்பான செயல்பாட்டுடன் அதை இணைக்க நாங்கள் முயற்சிக்கிறோம்.

உழைப்பு இயல்பாகவே செயலாக மாறும் போது, வேறு பல விஷயங்களுடன் தொடர்பு கொண்டிருக்கிறது என்பது உண்மைதான். தன்னைச் சுற்றியிருக்கும் அழுத்தக் கூடிய ஏற்பாடுகளை மனிதன் இப்போது கூட சமூக குணம் கொண்டவையாக மாற்றவில்லை. தன்னுடைய சமூகத்தின் ஆக்கிரமிப்பிற்கு அடி பணிந்து கொண்டுதான் அவன் இப்போதும் உற்பத்தி செய்வதில் ஈடுபட்டிருக்கிறான் (ஃபிடல் இதை தார்மீகமான நிர்பந்தம் என்று கூறுகிறார்).

புதிய இயல்புகள் மூலமாக சமூக சூழ்நிலைகளுடன் உறவு கொண்டிருந்தாலும், அதன் வெளிப்படையான ஆக்கிரமிப்பில் இருந்து விடுதலையான தன்னுடைய பணியை நோக்கிய செயலைப் பொறுத்த வரையில் மனிதன் முழுமையாகவும் தார்மீகமான ஒரு மாற்றத்திற்கு அடிபணிய வேண்டியவனாகவும் இருக்கிறான். அதுதான் கம்யூனிஸம்.

பொருளாதார சூழ்நிலையில் இயல்பாக (இயந்திரத் தனமாக) மாறுதல் வராததைப் போல, அறிவு ரீதியாகவும் இயல்பான (இயந்திரத் தனமான) மாறுதல் நடக்காது. மாறுதல்கள் மிகவும் மெதுவாகத்தான் நடக்கும். எப்போதும் அப்படித்தான் நடக்கும் என்று கூறுவதற்கில்லை. சில நேரங்களில் அவை படுவேகமாக நடக்கும். சில வேளைகளில் எந்தவித அசைவும் இல்லாமல் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்கும் வேறு சில நேரங்களில் பின்னோக்கி நகரும்.

அது மட்டுமல்ல. நான் முதலிலேயே சுட்டிக் காட்டியதைப் போல நாம் ஒரு விஷயத்தைக் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். ‘க்ரிட்டிக் ஆஃப் தி கோதா ப்ரோக்ரா’மில் மார்க்ஸ் கூறியிருப்பதைப் போன்ற வெறும் ஒரு மாறுதலுக்கான கால கட்டத்துடன் அல்ல நாம் பழகிக் கொண்டிருப்பது. அவர் கூறியிராத ஒரு புதிய இக்கட்டான கட்டம் இது. கம்யூனிஸத்திற்கான இடப் பெயர்ச்சியின் ஒரு முதல் கட்டம்-சிரமங்கள் நிறைந்த வர்க்கப் போராட்டங்களுக்கு மத்தியில் நடைபெறுகிறது.


அதில் இருக்கும் முதலாளித்துவ அம்சங்கள் அதன் சாரம் என்ன என்பதைப் புரிந்து கொள்வதற்கு தடையாக இருப்பதற்கு மத்தியில், அது நடந்து கொண்டிருக்கிறது.

மார்க்சிஸ்ட் தத்துவம் மற்றும் மாறுதலுக்கான கட்ட சித்தாந்தம் ஆகியவற்றின் படிப்படியான வளர்ச்சிக்கு தடையாக நின்றிருந்த பண்டிதத்தனத்தையும் சேர்த்து கணக்கில் எடுத்தால், இப்போதும் கொள்கைகளின் குழப்பத்தில் இருக்கிறோம் என்பதை நாம் ஒப்புக் கொண்டே ஆக வேண்டும். மேலும் பரவலான ஒரு பொருளாதார அரசியல் கொள்கையைப் பற்றி விளக்கிக் கூறுவதற்கு முன்னால், இந்தக் கால கட்டத்தின் முக்கிய குண விசேஷங்களைப் பற்றி இன்னும் அதிகமாக ஆராய்ச்சி செய்ய நாம் நம்மை அர்ப்பணித்துக் கொள்ள வேண்டியது அவசியத் தேவையாக இருக்கிறது.

அதன் விளைவாக உண்டாகக் கூடிய கொள்கை, சோசலிசத்தின் உருவாக்கத்திற்கான இரண்டு மிகப் பெரிய தூண்களில் மேலும் கவனம் செலுத்தும் என்பதில் சந்தேகமேயில்லை. அவைதான் புதிய மனிதனின் கல்வியும் தொழில் நுட்ப வளர்ச்சியும். இந்த இரண்டு விஷயங்களிலும் நாம் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது. அதே நேரத்தில் தொழில் நுட்ப விஷயத்திற்கான கால தாமதம் முழுமையாக இருக்காது. காரணம்- கண்களைக் கட்டியவாறு முன்னோக்கிச் செல்லும் பிரச்னை அல்ல அது. அதற்கு மாறாக, உலகத்தில் அதிகமாக வளர்ச்சி அடைந்த நாடுகள் திறந்து தந்த மிகவும் விசாலமான பாதைகள் வழியே செல்லும் பயணம் அது. அதன் முன்னணி பிரிவில் இருப்பவர்களுக்கு, தொழில் நுட்ப பயிற்சி அளிப்பதன் தேவையைப் பற்றி ஃபிடெல் வற்புறுத்தி கூறுகிறார்.

உற்பத்தி சம்பந்தப்பட்ட செயல்பாடுகளுடன் தொடர்பு இல்லாத கொள்கைகளைப் பொறுத்த வரையில்- மேலோட்டமான- தார்மீக ரீதியான வேறுபாடு சாதாரணம். நீண்ட காலமாக கலை - கலாச்சாரச் செயல்பாடுகள் மூலம் அடிமைத் தளத்தில் இருந்து தப்பிக்க மனிதன் முயற்சித்துக் கொண்டிருக்கிறான். எட்டோ அல்லது அதைவிட அதிகமான மணி நேரங்களோ தன்னுடைய உழைப்பை விற்கும்போது, அவன் ஒவ்வொரு நாளும் இறந்து கொண்டிருக்கிறான். அதற்குப் பின்னாலிருக்கும் தார்மீக (ஸ்ப்ரிச்சுவல்) செயல்கள் மூலமாக அவனுக்கு வாழ்க்கை மீண்டும் கிடைக்கிறது.

ஆனால், நோய்க்கான வித்துகள் இந்த மருந்தில்தான் இருக்கின்றன. தனிமையில் இருக்கும் மனிதன் என்ற நிலையில் அவன் சுற்றியிருக்கும் சூழ்நிலையுடன் ஒத்துப் போக முயற்சிக்கிறான். தன்னுடைய நோய் வாய்ப்பட்ட தனித்துவத்தை அவன் கலையின் ஊடகத்தின் வழியாக காப்பாற்றுகிறான். மதிப்புடன் வாழ விரும்பும் ஒரு மனிதன் என்ற நிலையில் அவன் அழகுணர்வு கொள்கைகளுடன் போராடுகிறான்.

எது எப்படி இருந்தாலும், அவன் செய்வதெல்லாம் தப்பித்துச் செல்வதற்கான முயற்சிகள் மட்டுமே. உற்பத்தி சம்பந்தப்பட்ட வெளிப்படையான ஒரு பின் விளைவு மட்டுமல்ல நோக்கம். சோதனை மயமான பாதைகளை மட்டும் பயன்படுத்தும் குத்தகை முதலாளிகள் கலையை அறிவு பூர்வமான ஒரு கருவியாக இருக்கும் வண்ணம் அதைச் சுற்றிலும் மிகவும் பலமான வலைகளை உண்டாக்கி வைக்கிறார்கள். எப்படிப்பட்ட கலையில் கலைஞன் பயிற்சி பெற வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது மேலிடம். அதை எதிர்ப்பவர்கள் அச்சுறுத்தலால் கீழடக்கப்படுவார்கள்:திறமைசாலிகளான அபூர்வமான சிலர் மட்டுமே தங்களின் சொந்த படைப்புத் திறனை வெளிப்படுத்துகிறார்கள். மற்றவர்களெல்லாம் சிறிதும் வெட்கமில்லாமல் கூலி எழுத்தாளர்களாகவே இருந்து மண்ணில் மடிகிறார்கள். அதாவது- மிதித்து நசுக்கப்படுகிறார்கள்.

கலைஞனின் ‘சுதந்திரம்’ என்ற ஒரு சிந்தனை அலை உண்டாக்கப்படுகிறது. நாம் அதை நேரடியாக சந்திக்கும்வரை அது புரிந்துகொள்ள முடியாததாக இருக்கிறது என்றாலும், அதன் உள் அம்சங்களுக்கும் எல்லை இருக்கவே செய்கிறது. அதாவது- மனிதன் மற்றும் அவனுடைய அடிமைத்தனம் பற்றிய உண்மையான பிரச்னை வெளியே தெரியும்வரை மட்டும். அதனால் அர்த்தமற்ற கவலையும் ஆபாசமான கேளிக்கையும் மனிதனுக்குள்ளிருந்து வெளியே குதிக்கக்கூடிய வழிகளாக மாறுகின்றன. கலையை ஒரு கருவியாக ஆக்கி பயன்படுத்துவது என்ற கொள்கை எதிர்க்கப்படுகிறது.

சட்டங்களுக்குக் கட்டுப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு மனிதனுக்கு எல்லா ஆதரவுகளும் கிடைக்கின்றன. சிறுவன் விளையாடும் குரங்கிற்கு கிடைக்கக்கூடிய எல்லா வசதிகளும். இனம் புரியாத அந்த கூட்டிற்குள்ளிருந்து தப்பிப்பதற்கு ஒரு ஆள் கூட முயற்சி செய்யக் கூடாது என்பது நம் மீது சுமத்தப்படும் கட்டுப்பாடு.

புரட்சி அதிகாரத்திற்கு வந்தபோது, இவர்கள் கூட்டமாக பின்னோக்கி ஓடியதுதான் நடந்தது. மற்றவர்கள் (அவர்கள் புரட்சியாளர்களாக இருந்தாலும், இல்லாவிட்டாலும்) தங்களுக்கு முன்னால் ஒரு புதிய பாதை திறந்து விட்டிருப்பதைப் பார்த்தார்கள். கலைத்தன்மை கொண்ட தேடலுக்கு ஒரு புதிய ஒளி கிடைத்தது. எப்படி இருந்தாலும் அதற்கான வழி ஏறக்குறைய முன்பே உண்டாக்கப்பட்டுவிட்டது. சுதந்திரம் என்ற வார்த்தையின் மறைவில் ஒளிந்திருந்தது புறம் காட்டி ஓடும் எண்ணம். புரட்சியாளர்கள் மத்தியில் பல நேரங்களில் இந்த நிலையைப் பார்க்க முடிந்தது. அவர்களின் உணர்வில் இப்போதும் பூர்ஷ்வா கொள்கைகள் கலந்திருக்கின்றன என்பதைத்தான் இது காட்டுகிறது.

இதே விதத்திலுள்ள செயல் மூலம் கடந்து சென்ற நாடுகளில், இப்படிப்பட்ட செயல்பாடுகளை அவர்கள் எதிர்ப்பது கடுமையான வழிமுறைகள் கொண்டுதான். பொதுவான கலாச்சாரம் வெளிப்படையாக மறுக்கப்பட்டதுதான் உண்மையில் நடந்தது.கலாச்சார வெளிப்பாட்டின் இலக்கு இயற்கையை கிட்டத்தட்ட அதே விதத்தில் காட்டக்கூடியதாக இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கொண்ட சமூக யதார்த்தத்தின் இயந்திரத்தனமான அடையாளமாக மாற்றப்பட்டது. அவர்கள் உண்டாக்க விரும்பிய போட்டிகளோ மோதல்களோ இல்லாத இலட்சிய சமூகம்.

சோசலிசத்திற்கு வயது குறைவு. பல தவறுகளும் நடந்திருக்கின்றன. அதுவரை தொடர்ந்து வந்த பாதைகளிலிருந்து வேறுபட்ட பாதைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஒரு புதிய மனிதனைப் படைக்க வேண்டும் என்ற கடமையை நிறைவேற்றுவதற்குத் தேவையான புத்திபூர்வமான தைரியமும் அறிவும் பல வேளைகளில் புரட்சியாளர்களிடம் இல்லாமலிருந்தது. பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த பாதைகள் மீது, அவற்றைப் படைத்த சமூகத்தின் பாதிப்பு இருக்கத்தான் செய்யும்.

உள்ளடக்கத்திற்கும் வடிவத்திற்குமிடையே இருக்கும் தொடர்பு பிரச்னையைத்தான் மீண்டும் நாம் குறிப்பிட வேண்டியிருக்கிறது.

உத்வேகம் இல்லாமலிருப்பது அதிகரித்திருக்கிறது. புற உண்டாக்கலுடன் சம்பந்தப்பட்ட பிரச்னைகள் முன்வரிசையில் வந்து நின்று கொண்டிருக்கின்றன. புரட்சி சம்பந்தமாக அதிகாரபூர்வமான முடிவை எடுக்க முடிகிற சூழ்நிலையில், கலை சம்பந்தமாக அதிகாரபூர்வமான முடிவு எடுக்கக்கூடிய கலைஞர்கள் இல்லை என்பதுதான் உண்மை. மக்களின் கல்வி என்ற முக்கியமான இலக்கை அடைவது என்ற கடமையைக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதற்குப் பிறகு அவர்கள் அக்கறை செலுத்தியது எளிமையான விஷயங்களில். எல்லோருக்கும் புரியக்கூடிய கலையை அவர்கள் தேடினார்கள். யதார்த்தமான கலைவடிவங்கள் நிராகரிக்கப்பட்டன.


பொது கலாச்சாரத்தின் பிரச்னை என்பது இன்றைய சோசலிஸத்திலிருந்து சிறிது எடுப்பது, எப்போதோ முடிந்துபோன இறந்த காலத்திலிருந்து சிறிது எடுப்பது என்ற அளவில் சுருங்கிப் போனது (இறந்த காலம் மட்டும் என்பதால் அது ஆபத்தானது என்று கூறுவதற்கில்லையே!). இந்த வகையில் கடந்த நூற்றாண்டின் கலையின் அடித்தளத்திலிருந்துதான் சோசலிஸ்ட் ரியலிஸம் உயிர் பெற்றது.

அதே நேரத்தில் பத்தொன்பதாம் நூற்றாண்டின் யதார்த்த கலையும் வர்க்கரீதியான கலைதான். மனிதனின் தனிமைப்பட்ட கவலை வெளிப்படும் இருபதாம் நூற்றாண்டின் வீழ்ச்சியுற்ற கலையை விட முழுமையான முதலாளித்துவக் கலை அது. கலாச்சார விஷயத்திற்கும் முதலாளித்துவத்தால் தர முடிகிற எல்லாவற்றையும் அது தந்திருக்கிறது. இன்றைய வீழ்ச்சியடைந்த கலையின் இறந்த பிணத்தின் கெட்ட நாற்றத்தைத் தவிர வேறு எதுவும் அதில் எஞ்சியிருக்கவில்லை.

கலையைப் பொறுத்தவரையில் எளிமையான ஒரே ஒரு நிலைமை சோசலிஸ்ட் ரியலிஸத்தின் பல்வேறு வடிவங்களாக இருக்க வேண்டுமென்று நாம் கூறுவது எதற்காக? சோசலிஸ்ட் ரியலிஸம் என்ற கொள்கைக்குப் பதிலாக நம்மால் சுதந்திரத்தைப் பார்க்க முடியாது. காரணம்- சுதந்திரம் இதுவரை நடைமுறையில் இருந்ததில்லை. புதிய சமூகம் முழுமையாக வளர்ந்து வருவது வரை அந்த கொள்கை நடைமுறையில் இருக்கப் போவதும் இல்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் முதல் பாதியிலிருந்து வடிவம் எடுத்த கலை வடிவங்களை எதையாவது செய்து ரியலிஸமாக்குவது என்ற கர்வத்துடன் ஒதுக்க முயற்சிப்பது நல்லதல்ல. கடந்த காலத்தின் தவறுகளை நோக்கித் திரும்பவும் செல்வதாக இருக்கும் அது. பிறப்பதும், தன்னை உண்டாக்கிக் கொள்வதில் ஈடுபடுவதுமாக இருக்கக் கூடிய மனிதனின் கலை வெளிப்பாடுகளை அது மூச்சடைக்கச் செய்துவிடும்.

சுதந்திரமான தேடலுக்கு இடம் கொடுத்து அரசாங்கத்தின் ஒத்துழைப்புடன் பலன் கிடைக்கக்கூடிய பூமியில் மிகவும் வேகமாக முளைத்து இரண்டு மடங்காக பெருகிக் கொண்டிருக்கும் விதைகளை முழுமையாக அழிக்கும் கொள்கை ரீதியான - கலாச்சார ரீதியான அமைப்பின் வளர்ச்சி இன்று கட்டாயத் தேவையாக இருக்கிறது.

எங்களுடைய நாட்டில் இயந்திரத்தனமான ரியலிஸம் என்ற தவறைப் பார்க்க முடியாது. ஆனால், அதற்கு மாறாக இருக்கும் விஷயம். பத்தொன்பதாம் நூற்றாண்டின் கொள்கைகளையோ, முடிந்து போனவையும் நோய் வாய்ப்பட்டவையுமான நம்முடைய இந்த நூற்றாண்டின் கொள்கைகளையோ பின்பற்றாத ஒரு புதிய மனிதனைப் படைக்க வேண்டிய தேவையைப் புரிந்து கொள்ளவில்லை என்பதுதான் அதற்குக் காரணம்.

உண்மையான ஒரு இலக்கை, சாத்தியமாகக் கூடிய ஒன்றல்ல என்றிருந்தாலும், நாம் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதனைத்தான் படைக்க வேண்டியிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய செய்ல்களின் முக்கிய நோக்கங்களில் ஒன்று அடுத்த நூற்றாண்டின் இந்த மனிதன்தான். கொள்கை ரீதியான தளத்தில் நாம் தெளிவான வெற்றியை அடைவதைப் பொறுத்து-இல்லாவிட்டால், அதற்கு மாறாக நம்முடைய தெளிவான தேடல்களின் அடிப்படையில் மிகவும் விசாலமான கொள்கைச் செயல்பாடுகளில் நாம் போய் அடைவதைப் பொறுத்து- மார்க்சிஸம்- லெனினிஸத்திற்கு- பரந்த உலகத்திற்கு நாம் ஒரு மிக முக்கியமான கொடையைத்  தருகிறோம்.

பத்தொன்பதாம் நூற்றாண்டின் மனிதனுக்கு எதிராக இருக்கும் நம்முடைய செயல் நம்மை இருபதாம் நூற்றாண்டின் முடிவுக்குத் திரும்பவும் கொண்டு போனது. அந்தத் தவறு நம்முடைய விதி அல்ல. நாம் அதை மீறியே ஆகவேண்டும். இல்லாவிட்டால் நாம் ரிவிஷனிஸத்திற்கு வழியைத் திறந்து விடுவதாக ஆகிவிடும்.

மக்கள் சீர்திருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறார்கள். புதிய கொள்கைகள் சமூகத்திற்குள் பலம் பெற்றுக் கொண்டேயிருக்கின்றன. சமூகத்தின் எல்லா உறுப்பினர்களுக்கும் முழுமையாக வளர்ச்சி உண்டாக்க உதவக்கூடிய சாத்தியமான அம்சங்கள், நம்முடைய கடமைகளை மேலும் ஆழம் கொண்டவையாக ஆக்குகின்றன. இது போராட்டத்திற்கான காலகட்டம். எதிர்காலம் நம்முடையதுதான்.

சுருக்கமாகச் சொன்னால் நம்முடைய கலைஞர்களின், அறிவுஜீவிகளின் தவறு இருப்பது அவர்களின் ஆரம்பத்தில்தான். அவர்கள் உண்மையான புரட்சியாளர்கள் அல்ல. வேறொரு செடியின் கொம்பில் ஒட்ட வைத்து நாம் ஒரு செடியை வளர்க்க முயற்சி செய்கிறோம். அதே நேரத்தில் அதன் செடியை நட்டு வளர்ப்பதுதான் நல்லது. பழைய நிலையிலிருந்து சுதந்திரமான புதிய தலைமுறை வடிவம் எடுக்கும். கலாச்சார தளமும், கொள்கை வெளிப்பாட்டு சாத்தியங்களும் பரவலாக்குவதை விட மிகவும் வேகமாக மகத்தான கலைஞர்கள் உண்டாகக்கூடிய சாத்தியம் இருக்கிறது.

முரண்பாடுகளால் சின்னாபின்னமான இன்றைய தலைமுறை குழப்பமடைந்து போவதையும், அவர்கள் புதிய தலைமுறையைக் குழப்பத்தில் மூழ்கச் செய்வதையும் தடுக்க வேண்டும் என்பது நம்முடைய கடமையாக இருக்கட்டும். நாம் மேலோட்டமான சிந்தனைக்குக் கீழே விலைக்கு வாங்காத தாசர்களாக ஆகிவிடக் கூடாது. அதாவது- அரசாங்கத்தின் செலவில், சுதந்திரத்தை அனுபவித்துக்கொண்டு வாழும் ஸ்காலர்ஷிப் மாணவர்களாக ஆகிவிடக்கூடாது. புதிய மனிதனின் பாடலை, மக்களின் பொருத்தமான குரலில் பாடக் கூடிய புரட்சியாளர்கள் அதிகமாக உண்டாகிக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட காலம் ஆகக் கூடிய ஒரு செயல் இது.

எங்களுடைய சமூகத்தில் இளைஞர்களும் கட்சியும் ஒரு முக்கிய பங்கினை வகிக்கிறார்கள்.

பழைய தவறுகள் எதுவும் இல்லாத புதிய மனிதனை உண்டாக்கக் கூடிய களிமண்தான் இளைஞர்கள் என்பதால் அவர்களுக்கு குறிப்பிட்டுக் கூறும் வகையில் முக்கியத்துவம் இருக்கிறது. எங்களின் ஆர்வங்களுக்கு ஏற்ப இளைஞர்களை வளர்த்துக் கொண்டு வருகிறோம். அவர்களுடைய கல்வி மேலும் முழுமையாகவும் தொடர்ந்தும் வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது. அவர்களும் தொழில் சக்தியுடன் உள்ள உறவுக்காக ஆரம்பத்திலிருந்தே அக்கறை கொண்டிருக்கிறார்கள். ஸ்காலர்ஷிப் மாணவர்கள் தங்களின் விடுமுறை காலத்திலோ இல்லாவிட்டால் படிப்புடன் சேர்ந்தோ சிறுசிறு வேலைகளிலும் ஈடுபடுகிறார்கள். சிலரைப் பொறுத்தவரையில் வேலை என்பது ஆசீர்வதிக்கப்பட்ட ஒன்று. மற்றவர்களுக்கு அது ஒரு கல்விக்கான பாதை. ஆனால்,  அது எந்தச் சமயத்திலும் ஒரு தண்டனையாக இருக்காது. ஒரு புதிய தலைமுறை வடிவம் எடுத்து வருகிறது.

கட்சிதான் முன்னணி அமைப்பு. மிகச் சிறந்த தொழிலாளர்களை அவர்களுடைய நண்பர்கள் கட்சியில் சேரும்படி கூறுகிறார்கள். கட்சி எண்ணிக்கைகளில் குறைந்தவர்களையே கொண்டிருந்தாலும், தொண்டர்களின் அர்ப்பணிப்பு உணர்வு காரணமாக அதற்கு மிகப்பெரிய அதிகாரம் கிடைக்கிறது. கட்சி பொதுமக்களுக்கான கட்சியாக வளர வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசை. ஆனால், பொதுமக்கள் முன்னணி படையினரோடு சேர்ந்து நிற்கும்போதுதான் அது சாத்தியமாகும்- அதாவது, கம்யூனிஸத்தை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கும்போது மட்டுமே.

எங்களுடைய செயல்களின் இலக்கு எல்லா நேரங்களிலும் இந்த கல்விதான். அதன் வளர்ச்சி பெற்ற உதாரணம்தான் கட்சி.அதிலிருக்கும் தொண்டர்கள் கடின உழைப்பு, தியாகம் ஆகியவற்றுக்கு உதாரணங்களாக இருக்க வேண்டும்.


படைப்பிற்கு மத்தியில் சூழ்ச்சிகள், வர்க்கப் பகைவர்கள், கடந்த காலத்தின் நோய்கள், சாம்ராஜ்யத்துவம் ஆகியவற்றுக்கு எதிரான நீண்டகால கடுமையான போராட்டம் என்ற புரட்சிக் கடமையை நிறைவேற்றுவதற்கு அவர்கள் தங்களின் செயல்பாடுகள் மூலமாக பொதுமக்களை வழிநடத்திச் செல்ல வேண்டும்.

வரலாறு படைத்த பொதுமக்களின் தலைவன் என்ற நிலையில் தனி மனிதன் வகித்த பங்கினைப் பற்றி நான் விளக்கிக் கூறுகிறேன். அது எங்களுடைய அனுபவமாக இருந்தது.

ஆரம்ப வருடங்களில் ஃபிடெல் புரட்சிக்கு உத்வேகத்தையும் தலைமைப் பொறுப்பையும் ஏற்றார். அவர் அதை எல்லா நேரங்களிலும் பலப்படுத்திக் கொண்டே இருந்தார். ஆனால், தங்களுடைய மதிப்பிற்குரிய தலைவனைப் போலவே வளரும் ஒரு குழு இருந்தது. தங்களுடைய அந்த தலைவர்மார்களை மக்கள் பின்பற்றினார்கள். அவர்களுக்கு தங்களுடைய தலைவர்கள் மீது நம்பிக்கை இருந்தது. காரணம்- அந்தத் தலைவர்களுக்கு அந்த மக்களுடைய மிகச் சரியாக புரிந்து கொள்ளக்கூடிய ஆற்றல் இருந்தது.

ஒரு ஆளுக்கு எத்தனை ராத்தல் மாமிசம் சாப்பிடக் கிடைக்கும், எத்தனை முறை கடற்கரைக்குப் போக முடியும், இப்போது கிடைக்கக் கூடிய சம்பளத்தின் மூலம் வெளிநாட்டிலிருந்து எத்தனை நகைகளை வாங்க முடியும் போன்ற விஷயங்கள் அல்ல இங்கு பிரச்சனை.தனி மனிதனுக்கு தான் முழுமையான மனிதனாக தோன்றுகிறான். உள்ளுணர்வில் அதிக வசதி படைத்தவனாக தோன்றுகிறான். அதிக பொறுப்புணர்வு தோன்றுகிறது.

எங்களுடைய நாட்டில் அந்தத் தனிமனிதனுக்குத் தெரியும்-புனிதமான அந்தக் காலகட்டம் தியாகம் நிறைந்த ஒன்று என்பது. தியாகங்களைப் பார்த்து அவனுக்கு உத்வேகம் பிறக்கும். சிராமெய்ஸ்த்ராவில்தான் அது முதலில் வெளியே தெரிந்தது. பிறகு அவர்கள் போர் புரிந்த எல்லா இடங்களிலும் அது அறிந்து கொள்ளப்பட்டது. தொடர்ந்து க்யூபா முழுவதும் அது தெரிந்தது. அமெரிக்கர்களின் முன்னணி பிரிவினர்தான் இந்த க்யூபா. முன்னணியில் இருக்கும் காவலர்களின் இடம் இதற்கு என்பதால், லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த மக்களின் முழுமையான விடுதலைக்கான பாதையைக் காட்டிக் கொடுக்கும் நோக்கத்தில் அது தியாகங்களை வரவேற்க வேண்டும்.

நாட்டிற்குள் தலைமைப் பதவிக்கு அதன் முன்னணிப் படை என்ற பங்கு நிறைவேற்றப்பட வேண்டியிருந்தது. புரட்சியாளர்களான முன்னணிப் படையினரின் கடமையைப் பொறுத்தவரையில் அவன் தன்னுடைய எல்லாவற்றையும் தியாகம் செய்வதுடன் தேவைகள் எதையும் எதிர்பார்க்காமலும் இருக்கக்கூடிய உண்மையான புரட்சி ஒரே சமயத்தில் மகத்தானது, கடுமையான துக்கமும் கூட.

எதிர்பார்ப்பிற்குரியதைப் போல் தோன்றினாலும், நானொன்று கூறட்டுமா? உண்மையான புரட்சியாளன் மகத்தான அன்பால் வழி நடத்தப்படுகிறான். ஒரு மிகச் சரியான புரட்சியாளனுக்கு இந்த குணமில்லாமல் இருக்க முடியாது. உணர்ச்சிவசப்படும் மனமும் மரத்துப்போன அறிவும் இணைய, உணர்ச்சியற்று நின்றுகொண்டு மிகவும் துக்கங்கள் நிறைந்த முடிவுகளை கையாள்வது என்பது ஒரு வேளை தலைவரைப் பொறுத்தவரையில் ஒரு பெரிய நாடகம் என்றுதான் கூறவேண்டும். மக்கள் மீது கொண்ட இந்த அன்பு கலந்த மிகவும் புனிதமான கடமையின் அடையாளமாக இருக்க வேண்டும் நம்முடைய முன்னணிப் போராளி. அது அவனுடைய மிக முக்கிய ஒரு குணமாக இருக்க வேண்டும். சாதாரண மக்கள் தங்களுடைய அன்பை வெளிப்படுத்துகிற தளத்திற்கு, சிறு சிறு அன்றாட பற்றுகளின் தளத்திற்கு அவர்களால் இறங்கி வர முடியாது.

புரட்சியில் ஈடுபடும் தலைவர்மார்களுக்குப் பேச ஆரம்பிக்க மட்டும் செய்திருக்கும் குழந்தைகள் இருப்பார்கள். அந்தக் குழந்தைகள் தங்களுடைய தந்தைமார்களைப் பெயர் கூறி அழைக்கும் நிலையில் இருக்கமாட்டார்கள். புரட்சியை முழுமை செய்வதற்காக நடத்தும் பொது தியாகத்தின் பகுதி என்ற நிலையில் புரட்சியாளர்களுக்குத் தங்களின் மனைவிமார்களிடமிருந்து பிரிந்து செல்ல  வேண்டியதிருக்கும். நண்பர்களான புரட்சியாளர்களுக்கிடையே அவர்களின் நட்பு வளையம் விலகி நின்றிருக்கும். அவர்களுக்குப் புரட்சிக்கு வெளியே வேறொரு வாழ்க்கை இல்லை. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில் தீவிரமான வெற்று தத்துவங்களிலும் உயிரற்ற பண்டிதத்தன்மையிலும் பொதுமக்களிடமிருந்து தனிமைப்பட்டு இருப்பதிலும் போய் சிக்கிக் கொள்ளாமல் இருக்க வேண்டுமென்றால் ஒரு மனிதனுக்கு விசாலமான மனிதநேயமும் பலமான நீதி உணர்வும் நேர்மையும் இருக்க வேண்டும். மனித இனத்தின் மீது கொண்டிருக்கும் இந்த உண்மையான அன்பு, உண்மையான செயல்பாட்டிற்கும் மிகப்பெரிய காரியங்கள் செய்வதற்கும் உதவியாக இருக்க நாம் ஒவ்வொரு நாளும் கடினமாக உழைக்க வேண்டும்.

புரட்சிக்குப் பின்னால் கொள்கைவழிப்பட்ட மிகப்பெரிய சக்தியாக இருப்பவர்கள் புரட்சியாளர்கள்தான். அவனுடைய தொடர்ச்சியான புரட்சிச் செயல் மரணம் வரை தொடர்ந்து கொண்டிருக்கும். உலகம் முழுக்க சோசலிஸத்தை உண்டாக்குவது வரை. ஒரு புரட்சியாளனின் உடனடியாக செய்யப்பட வேண்டிய கடமை பகுதி பகுதியாக நிறைவேற்றப்பட்டு முடிக்கும்போது, அவனுடைய புரட்சி வேகத்தின் கூர்மை குறைந்துவிடுகிறது என்ற தொழிலாளி வர்க்க சர்வதேசியத்தை அவன் மறந்து விடுகிறான் என்பதாக நினைத்து, அவன் நடத்திக் கொண்டிருக்கும் புரட்சி, ஆவேசத்தை உண்டாக்குகிற சக்தி என்ற நிலையில் அதற்குப் பிறகு செயல்படாது. அவன் வசதிகள் கொண்ட ஜடநிலைமையில் தன்னை இருத்திக் கொள்வான். நம்முடைய வீழ்ச்சியே இல்லாத எதிரியான சாம்ராஜ்யத்துவம் இதை சாமர்த்தியமாக பயன்படுத்திக் கொள்ளும். தொழிலாளி வர்க்க சர்வதேசியம் ஒரு கடமை. அது ஒரு புரட்சிகரமான தேவையும்கூட. அதனால் நாம் நம்முடைய ஆட்களுக்கு அதைக் கற்றுத் தரவேண்டும்.

இன்றைய சூழ்நிலையில் ஆபத்துகள் இருக்கின்றன என்பது உண்மைதான். வறட்டுத் தத்துவ வாதம் மட்டுமல்ல அது. மகத்தான கடமைகளுக்கு மத்தியில் பொதுமக்களுடன் கொண்டிருக்கும் உறவு தளர்ந்து போவது மட்டுமல்ல அது.பலவீனங்களின் ஆபத்தும் நமக்கு முன்னால் இருக்கிறது. ஒரு புரட்சியாளன் இப்படிச் சிந்திக்கிறான் என்பதாக எண்ணிப் பாருங்கள்: ‘நான் என்னுடைய வாழ்க்கை முழுவதையும் புரட்சிக்காக அர்ப்பணித்து வைத்திருக்கிறேன். அதனால், என்னுடைய மகனுக்குச் சில பொருட்கள் இல்லை. என் குழந்தைகளின் காலணிகள் கிழிந்து பழையதாகி விட்டிருக்கின்றன. என் குடும்பத்திற்குத் தேவைப்படுகிற பலவும் இல்லை. இப்படிப்பட்ட கஷ்டங்கள் எனக்கு இருக்க வேண்டியது இல்லை, அவனுடைய இந்த எண்ணம் அவன் மனதில் எதிர்காலத்தில் உண்டாகப் போகிற ஊழலுக்கு விதையை விதைக்கிறது என்பதுதான் உண்மை.

எங்களைப் பொறுத்தவரையில் எங்களின் குழந்தைகளுக்கு இது வேண்டும் இது வேண்டாம் என்றெல்லாம் இல்லை. இதைத்தான் அணிந்து நடக்க வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானித்து வைத்திருக்கிறோம். எங்களின் குடும்பங்கள் இந்த விஷயங்களையெல்லாம் புரிந்துகொண்டு அந்த நிலைமையைத் தொடர்ந்து காப்பாற்ற முயற்சிக்க வேண்டுமென்று நாங்கள் கட்டாயப்படுத்துகிறோம். மனிதன் மூலம்தான் புரட்சி உண்டாகிறது. ஆனால், மனிதன் தன்னுடைய புரட்சிக்கான உத்வேகத்தை ஒவ்வொரு நாளும் வடிவமைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.


இப்படித்தான் நாங்கள் முன்னோக்கி வெற்றிநடைபோடுகிறோம். அந்த நீண்ட வரிசையின் மிகவும் முன்னால் ஃபிடெல் நின்று கொண்டிருக்கிறார். அதைக் கூறுவதற்கு எங்களுக்கு தயக்கமோ பயமோ இல்லை. அவருக்குப் பின்னால் கட்சியின் மிகச் சிறந்த தளபதிகளும் அவர்களுக்குப் பின்னால் மக்களும் ஒன்று திரண்டு நிற்கிறார்கள்.அவர்கள் அந்த அளவிற்கு நெருக்கமாக இருப்பதால் அவர்களின் சக்தி எங்களுக்கு ஒரு உற்சாக அனுபவமாக இருக்கிறது.  ஒரு பொது இலட்சியத்திற்காக ஒன்றாகச் சேர்ந்து நடந்து கொண்டிருக்கும் மனிதர்களின் ஆவேசம் மிக்க கூட்டம் அது. என்ன செய்யவேண்டும் என்ற தெளிவான அறிவு கொண்டவர்கள் அவர்கள். தேவைகளின் சாம்ராஜ்யத்திலிருந்து சுதந்திரத்திற்குள் நுழைவதற்காக போராடிக் கொண்டிருக்கும் மனிதர்கள் அவர்கள்.

இந்த மகத்தான கூட்டம் ஒன்று சேர்ந்தாகி விட்டது. ஒன்று சேர வேண்டியதன் தேவையைப் பற்றி அவர்களுக்கு இருக்கும் புரிதல், செயல்பாடுகளில் அவர்களுக்கு இருக்கும் தெளிவைப் போலவே ஆழமானது.அது சிந்தித் சிதறிய சக்தி அல்ல. வெடிகுண்டில் இருந்து சிதறிய துண்டுகளைப் போல ஆயிரக்கணக்கான துண்டுகளாக சிதறிய சக்தி அல்ல அது. விரக்தியடைந்து தங்களுக்குள் கீறிக் கொண்டிருக்கும் நிச்சயமற்ற எதிர்காலத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொள்வதற்காக எந்த வழிகளையும் பின்பற்றுவதற்குத் தயாராக இருக்கும் கூட்டமல்ல அது.

நாம் இனியும் தியாகங்களைச் செய்யவேண்டுமென்பதையும் ஒரு முன்னணி நாடாக மாறவேண்டும் என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலுக்கு மிக உயர்ந்த விலையைத் தரவேண்டியிருக்கிறது என்பதையும் நாங்கள் உணர்ந்துதான் இருக்கிறோம். அமெரிக்க நாடுகளின் முன்னணியில் இருக்கும் மக்கள் எங்களுடையவர்கள். அதற்கு முன்னால் இருப்பவர்கள் நாங்கள் என்று கூறுவதற்கான உரிமையைப் பெறுவதற்கு நல்ல விலையைத் தர வேண்டியிருக்கிறது என்ற உண்மையும் எங்களுடைய தலைவர்களுக்குத் தெரியும். தன்னுடைய கடமை முழுமையாக முடிந்தால், அதற்கான பரிசு கிடைக்கும் என்ற உறுதியான புரிதலுடன்,வானத்தின் விளிம்பில் மங்கலாகத் தெரிகின்ற புதிய மனிதனின் உருவத்தை நோக்கி உறுதியான மனதுடன் முன்னேறிச் செல்வோம் என்ற திடமான தீர்மானத்துடன் ஒவ்வொருவரும் தன்னுடைய பங்கு என்றிருக்கும் தியாகங்களைச் செய்ய வேண்டும்.

நான் சுருக்கமாகக் கூறுகிறேன்:

சோசலிஸ்ட்காரர்களான நாங்கள் அதிக முழுமையை அடைந்தவர்களாக இருப்பதால், அதிக சுதந்திரம் கொண்டவர்களாக இருக்கிறோம்.நாங்கள் மேலும் சுதந்திரமானவர்களாக இருப்பதால், மேலும் முழுமையடைந்தவர்களாக இருக்கிறோம்.

எங்களுடைய முழுமையான சுதந்திரத்தின் முழுமையான அடையாளம் உண்டாக்கப்பட்டுவிட்டது. அதன் விளக்கங்கள் உண்டாக்கப்படவில்லை. நாங்கள் அதைத் தயார் செய்வோம்.

எங்களுக்குச் சுதந்திரம் கிடைத்ததும், அதை காப்பாற்றுவதும், இரத்தம் சிந்திய தியாகங்களைச் செய்ததால்தான்.

எங்களுடைய தியாகம் சுயஉணர்வுடன் செய்யப்பட்டது. நாங்கள் கட்டி உண்டாக்கும் சுதந்திரத்திற்காக செய்த தியாகம் அது.

எங்களுடைய பாதை நீளமானது. அதன் பல பகுதிகளும் எங்களுக்குத் தெரியாதவை.

எங்களுடைய எல்லைகள் எங்களுக்குத் தெரியும். நாங்கள் இருபத்தொன்றாம் நூற்றாண்டின் மனிதனை, நாங்களே படைப்போம்.

புதிய தொழில்நுட்பக் கல்வியுடன் உள்ள புதிய மனிதனைப் படைத்து தினசரி செயல்களில் நாங்கள் அதன் விளைவைக் கொண்டு வருவோம்.

மக்களின் மகத்தான நன்மைகளின், ஆசைகளின் மூலகாரணமாக இருக்கும் வரையில், பாதையிலிருந்து விலகிப் போகாமல் இருக்கும் வரையில், தனி மனிதர்களால் பொதுமக்களை ஒன்று சேர்ப்பதிலும், அவர்களை வழி நடத்திச் செல்வதிலும் நல்ல பங்கினை ஆற்ற முடியும்.

பாதையைத் தெளிவாகக் காட்டுவது முன்னணி பிரிவுதான். இருப்பதிலேயே மிகவும் நல்ல பிரிவு, அதுதான்- கட்சி. எங்களுடைய செயல்களின் அடித்தளம் - இளைஞர்கள். நாங்கள் அவர்களிடம்தான் கொள்கைகளை மையப்படுத்துகிறோம். எங்களுடைய கைகளிலிருந்து கொடியைப் பிடித்து வாங்க, அவர்களை நாங்கள் தகுதியுடையவர்களாக நிச்சயம் ஆக்குவோம்.

தெளிவற்ற இந்தக் கடிதம் எதையாவது தெளிவுபடுத்துகிறது என்றால், அதற்கு நோக்கமாக இருந்த இலட்சியத்தை அது அடைந்துவிட்டது என்று அர்த்தம். கை குலுக்கல் போலவோ, ‘ஆவே மரியா புரிஸ்ஸிமா’ போலவோ, ஒரு சடங்காக ஆகிவிட்ட ஆசீர்வாதத்துடன் நான் இதை நிறைவு செய்கிறேன்.

நம்முடைய நாடு இல்லாவிட்டால் மரணம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.