Logo

பைத்தியக்காரன்

Category: தத்துவம்
Published Date
Written by சுரா
Hits: 8067
paithiyakkaraan

சுராவின் முன்னுரை

லீல் ஜிப்ரான் (Khalil Gibran) 1918 ஆம் ஆண்டில் எழுதிய ‘The Mad man’ என்ற அருமையான நூலை ‘பைத்தியக்காரன்’ என்ற பெயரில் தமிழில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

கலீல் ஜிப்ரானின் எழுத்துக்கள் மீது எனக்கு எப்போதும் தனிப்பட்ட ஒரு பிரியம் உண்டு.

குறைந்த வரிகளில் மிகப் பெரிய விஷயங்களைக் கூறும் அவருடைய அபார ஆற்றலைப் பார்த்து பலமுறை வியந்திருக்கிறேன். வாழ்க்கையின் பல சிக்கலான விஷயங்களுக்கு சர்வ சாதாரணமாக - போகிற போக்கில் இரண்டு அல்லது மூன்று வரிகளில் விளக்கம் கூறும் இவரின் சிந்தனைத்திறனை நான் மதிக்கிறேன். உலகம் என்பது புதிர் நிறைந்தது. மனித வாழ்க்கையில் இப்போது கோடிக்கணக்கான புதிர்கள்! அதை இங்குள்ள எத்தனைப் பேர் உணர்ந்திருப்பார்கள்! தாங்கள் கண்ணால் காண்பதுதான் வாழ்க்கை, உலகம் என்று இவர்கள் நினைத்துக் கொள்கிறார்கள். ஆனால், அவர்கள் பார்ப்பது எதுவும் உண்மையல்ல- உண்மையானதும் கண்டுபிடிக்க எவ்வளவோ தூரம் நாம் பயணம் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்தவர்கள் விரல் விட்டு எண்ணக் கூடிய ஒரு சிலர்தான். அவர்களில் ஒருவர் கலீல் ஜிப்ரான். ‘பைத்தியக்காரன்’ என்ற இந்நூலை தமிழில் நான் மொழி பெயர்த்ததற்கு காரணமே அவர் மீது நான் கொண்டிருக்கும் இந்த அளவற்ற மதிப்புதான்.

மனிதர்கள் பிறப்பதும், இறப்பதும், நித்தமும் நடந்து கொண்டிருக்கின்றது. கலீல் ஜிப்ரானைப் போன்றவர்கள் தங்களின் படைப்புகள் மூலம் காலத்தைக் கடந்து வாழ்வார்கள். அதற்கு இந்த நூலும் ஒரு சாட்சி. அந்த எண்ணத்துடன் இந்த நல்ல நூலை தமிழ் மக்கள் முன் வைக்கிறேன்.

இந்த சிறந்த நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயம் கனிந்த நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


கலீல் ஜிப்ரான்

கலீல் ஜிப்ரான் லெபனானில் இருக்கும் பெஷாராவில் 1883-ஆம் ஆண்டு பிறந்தார். முழுமையான பெயர் ஜிப்ரான் கலீல் ஜிப்ரான். தந்தையின் பெயர் கலீல் ஜிப்ரான். அன்னையின் பெயர் கமீலா. பிறந்த நகரத்தில் ஆரம்பக்கல்வி. பன்னிரெண்டு வயதாகும்போது குடும்பத்துடன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டன் நகருக்கு குடி பெயர வேண்டிய சூழ்நிலை. இரண்டரை வருடங்கள் அங்கிருந்த பொது பள்ளிக் கூடத்திலும் ஒரு வருடம் இரவு பாடசாலையிலும் படித்த பிறகு, மீண்டும் லெபனானுக்குத் திரும்பினார். மத்ரஸத்-அல்-ஹிக்மத் என்ற கல்லூரியில் அங்கு படிப்பைத் தொடர்ந்தார். இலக்கியம், தத்துவம், மத வரலாறு ஆகியவை அவர் படித்த விஷயங்களாக இருந்தன.1902-ஆம் ஆண்டு அமெரிக்காவிற்குத் திரும்பிச் சென்றார். 1908-ஆம் ஆண்டு பாரிஸில் உலகப் புகழ் பெற்ற சிற்பி ஆகஸ்ட் ரோடிடம் அவர் பயிற்சி பெற்றார். பாரிஸிலிருந்து நியூயார்க்கிற்குத் திரும்பினார். அவர் முதலில் எழுதியது அரேபிய மொழியில்தான். அரேபிய மொழியிலும், ஆங்கிலத்திலும் முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். 1923-ல் ‘தீர்க்கதரிசி’ வெளியே வந்தது. 1931-ஆம் ஆண்டு ஏப்ரல் 10-ஆம் நாள் நியூயார்க்கில் ஜிப்ரான் மரணத்தைத் தழுவினார். அவருடைய குறிப்பிடத்தக்க நூல்கள்: தீர்க்கதரிசி, முறிந்த சிறகுகள், பைத்தியக்காரன், அலைந்து திரிபவன், மணலும் நுரையும், கண்ணீரும் புன்னகையும்.


பைத்தியக்காரன்

நான் எப்படி பைத்தியம் ஆனேன் என்று நீங்கள் கேட்கிறீர்கள். தேவர்கள் கூட பிறந்திராத காலத்தில், ஒருநாள் நான் ஆழமான தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு எழுந்தேன். பார்த்த போது கண்ணில் பட்டது இதுதான். ஏழு பிறவிகளாக நான் அணிவதற்காக சம்பாதித்து வைத்திருந்த என்னுடைய எல்லா ஆடைகளும் திருடு போயிருந்தன. மக்கள் கூட்டம் நிறைந்த தெரு வழியாக ஆடை எதுவும் இல்லாமல் நிர்வாணமாக ஓடிக் கொண்டே நான் உரத்த குரலில் சொன்னேன்: ‘திருடன்! திருடன்! திருடன்!’  என்னைப் பார்த்த ஆண்களும், பெண்களும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். வேறு சிலரோ உள்ளே ஓடி மறைந்தார்கள்.

நான் கடைத்தெருவிற்குச் சென்றேன். அங்கு இருந்த மாளிகையின் வாசலில் ஒரு இளைஞன் நின்றிருந்தான்.

அவன் என்னைப் பார்த்து சொன்னான்: பைத்தியம்! பைத்தியம்! அவனைப் பார்ப்பதற்காக தலையை உயர்த்திய போது என்னுடைய நிர்வாணமான முகத்தில் சூரிய கதிர்களின் முதல் முத்தம் விழுந்தது. என்னுடைய ஆன்மா சூரியனின் கதிர்கள் பட்டு பிரகாசித்தது. அதற்குப் பிறகு எனக்கு ஆடைகள் தேவை என்று தோன்றவில்லை.

‘என்னுடைய ஆடைகளைத் திருடியவன் நன்றாக இருக்கட்டும்’ -நான் உரத்த குரலில் சொன்னேன்.

நான் பைத்தியம் ஆனது இப்படித்தான். பைத்திய நிலையில் என்னால் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும், இருக்க முடிந்தது. தனிமை தந்த சுதந்திரம்! புதிரான பாதுகாப்பு!

எனக்கு என்னுடைய பாதுகாப்பைப் பற்றி அந்த அளவிற்கு பெரிய மதிப்பொன்றும் இல்லை. சிறையில் அடைக்கப்பட்ட ஒரு திருடன் இன்னொரு கொள்ளைக்காரனால் பாதுகாக்கப்படுகிறான்.

கடவுள்

த்தனையோ வருடங்களுக்கு முன்பு என்னுடைய உதடுகள் மலர்ந்தபோது நான் புனித மலையின் உச்சியில் ஏறி நின்றேன். கடவுளிடம் சொன்னேன்: ‘கடவுளே உங்களின் அடிமை நான். உங்களுடைய ஆழமான விருப்பங்கள், எனக்கு மேல் உள்ள சட்டங்கள். எப்போதும் உங்களின் கட்டளைகளின் படி நான் நடப்பேன்.’

அதற்கு கடவுள் பதிலெதுவும் கூறவில்லை. ஒரு புயலின் வேகத்துடன் அவர் மறைந்து போனார்.

ஆயிரக்கணக்கான வருடங்களுக்குப் பிறகு நான் அந்த புனித மலை மீது மீண்டும் ஏறிச் சென்று கடவுளிடம் பிரார்த்தித்தேன்: ‘உலகைக் காப்பவரே’ உங்களின் படைப்பு நான். நீங்கள் என்னை மண்ணும், களிமண்ணும் சேர்த்து படைத்தீர்கள். என்னிடமிருப்பவை அனைத்தும் நீங்கள் மனம் கனிந்து எனக்கு அளித்தவை.

அவர் எதுவும் சொல்லாமல் பறவைகளின் வேகத்துடன் பறந்து போனார்.

அதற்குப் பின்னால் ஆயிரம் வருடங்கள் ஓடிய பிறகு நான் புனித மலையின் உச்சியில் ஏறி நின்று கடவுளை புகழ்ந்து கொண்டு சொன்னேன்:

‘கடவுளே, உங்களின் குழந்தை நான். மிகுந்த பாசத்துடன் என்னை நீங்கள் படைத்தீர்கள். கருணையுடன் காப்பாற்றுகிறீர்கள். உங்களின் அன்பு, ஆதரவுடன் நான் உங்கள் சாம்ராஜ்யத்தின் அரசனாக ஆவேன்.’

கடவுள் பதில் எதுவும் சொல்லாமல் மலையிலிருந்து தூரத்தில் பரந்து கிடந்த மூடுபனியைப் போல காணாமற் போனார்.

அதற்குப் பின்னால் ஆயிரம் வருடங்கள் கடந்த பிறகு நான் அந்த புனித மலையின் சிகரத்தில் ஏறி நின்று கடவுளை அழைத்து மீண்டும் சொன்னேன்:

‘தந்தையே! நீங்கள்தான் என்னுடைய இலட்சியம். நீங்கள்தான் என்னுடைய நிறைவு. நான் உங்களின் இறந்த காலம். நீங்கள் என்னுடைய எதிர்காலம். நான் பூமியில் உங்களின் உயிர் அணு. நீங்கள் என்னுடைய உயிர் ஓட்டம். நம்முடைய வளர்ச்சி சூரிய வெளிச்சத்தில் ஒரே மாதிரியானது.

இவ்வளவு காலமும் பார்க்காமல் இருந்த கடவுள் என்னை நோக்கித் திரும்பினார். அவர் என்னுடைய காதில் இனிமையான குரலில் மெல்ல சொல்லிக் கொண்டிருந்தார். பாய்ந்து கொண்டிருக்கும் அருவியைத் தன்னுடைய மார்பில் ஏற்றிக்கொள்ளும் கடலைப் போல அவர் என்னைத் தன் மார்போடு சேர்த்து இணைத்துக் கொண்டார்.

நான் மலை உச்சியிலிருந்து இறங்கி அடிவாரத்திற்கும், வெட்டவெளியை நோக்கியும் நடந்தேன். அவர் அங்கேயும் இருந்தார்.

நண்பன்

ன் நண்பரே, உண்மையானது நான் இப்போது இருப்பது அல்ல. என்னுடைய வடிவம் நான் மூடியிருக்கும் இந்தப் போர்வை மட்டும்தான். இந்தப் போர்வை மிகவும் அறிவுப்பூர்வமாக நெய்யப்பட்டிருக்கிறது. உங்களின் கேள்விகளில் இருந்து என்னையும், என்னுடைய நிராகரிப்பில் இருந்து உங்களையும் அது காப்பாற்றுகிறது. மவுனத்தின் மறைவில் அது ஓளிந்திருக்கிறது. எப்போதும் அது ஒளிந்துதான் இருக்கும். யாரும் அதை அறிந்திருப்பதில்லை. அங்கு போவதும் இல்லை.

அன்பு நண்பரே, நான் கூறுவதை இயல்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சத்தியம் பண்ணி கூற நான் விரும்பவில்லை. நான் கூறுவதெல்லாம் என்னுடைய வார்த்தைகள். உங்களுடைய எண்ணங்களின் எதிரொலியே அவை. என்னுடைய செயல்கள் உங்களின் விருப்பங்கள். இந்த நெய்யப்பட்ட ஆடையின் வெளிப்பாடே அதுதான். காற்றின் போக்கு மேற்கு நோக்கி என்று நீங்கள் கூறும்போது, நான் உடனடியாக அதைத் திரும்பச் சொல்கிறேன். இதயத்தில் காற்று இருப்பதற்குப் பதிலாக பெருங்கடலில் அலையடிக்கிறது என்று கூற இப்போது நான் விரும்பவில்லை. நான் விரும்புவது நீங்கள் அங்கு போகாமல் இருக்க வேண்டும் என்பதைத்தான். இந்தக் கடலில் தனியாக இருப்பதுதான் எனக்குப் பிடிக்கிறது.

அன்பு நண்பரே, உங்களுக்கு காலை ஆகும்போது எனக்கு மாலை ஆகிறது. எனினும், நான் மீண்டும் மலை உச்சியில் சுட்டுக் கொண்டிருக்கும் நடுப்பகல் நேரத்தில் ததிக்கும் வெயிலைப் பற்றி பேசுகிறேன். செடிகள் வளர்ந்த புதர்களில் விழுந்திருக்கும் மரங்களின் நிழல்களைப் பற்றிப் பேசுகிறேன். உங்களால் என்னுடைய இருளின் இசையைக் கேட்கவோ நான் நடத்தும் வான நடனத்தைப் பார்க்கவோ முடியாது.  நீங்கள் என்னுடைய பாடல்களைக் கேட்பதையோ நடனத்தைப் பார்ப்பதையோ நான் விரும்பவில்லை.

அன்பு நண்பரே, நீங்கள் சொர்க்கத்திற்குப் பறந்து செல்லும்போது நான் நரகத்திற்கு இறங்குகிறேன். கடக்க முடியாத கடலின் கரையில் நின்று கொண்டு நீங்கள் அப்போது என்னை அழைக்கிறீர்கள்:

‘அன்பு நண்பரே, சினேகிதரே!’ அப்போது நானும், உங்களை ‘அன்பு நண்பரே, சினேகிதரே!’ என்று அழைக்கிறேன். நான் என்னுடைய நரகத்தை உங்களுக்குக் காட்ட விரும்பவில்லை. அதன் நெருப்புப் பொறி உங்களின் கண்களில் தெரித்து விழும். உங்களை அதன் புகை மூச்சை அடைக்கச் செய்யும். எனக்கு என்னுடைய நரகத்தைத்தான் மிகவும் பிடித்திருக்கிறது. என் நரகத்தில் நான் மட்டும் தனியே இருப்பதை நான் மிகவும் விரும்புகிறேன்.

அன்பு நண்பரே, நீங்கள் சத்தியம், தர்மம், அழகு விஷயங்களில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவற்றுடன் நீங்கள் கொண்டிருக்கும் ஈடுபாடு பாராட்டப்படக்கூடியது, பொருத்தமானது. நான் உங்களுடைய ஈடுபாட்டை நினைத்து சில வேளைகளில் புன்னகை செய்கிறேன். அதே நேரத்தில் என்னுடைய சிரிப்பை நீங்கள் பார்ப்பதை நான் விரும்பவில்லை. காரணம் - நான் தனிமையில் சிரிக்க விரும்புகிறேன்.

நண்பரே, நீங்கள் தீர்க்கதரிசி. அனுபவங்கள் கொண்டவர். நீங்கள் எல்லா விஷயங்களிலும் முதல் மனிதர் என்பது எனக்குத் தெரியும். அதனால் நான் உங்களிடம் மிகவும் கவனத்துடன் பேசுகிறேன். அது மட்டுமல்ல; நான் ஒரு பைத்தியக்காரன்! என்னுடைய பைத்தியத் தன்மையை நான் மறைத்து வைக்கிறேன். பைத்தியத்தன்மை வெடிப்பது நான் சிறிதும் விரும்பாத ஒரு விஷயம்.

உண்மையாக சொல்லப்போனால் நீங்கள் என்னுடைய நண்பர் அல்ல. என் பாதை உங்களின் பாதையிலிருந்து மாறுபட்டது என்பதை நான் உங்களுக்கு எப்படி புரிய வைப்பேன்! எனினும், நாம் கைகளைக் கோர்த்துக் கொண்டு நடக்கிறோம்.


சோலைக் கொள்ளை பொம்மை

நான் சோலைக் கொள்ளை பொம்மையைப் பார்த்து ஒரு நாள் கேட்டேன்: ‘இந்த பாழாய்ப் போன வயலில் நின்று நின்று உங்களுக்கே ஒரு மாதிரி வெறுப்பு உண்டாகி இருக்குமே!’

அதற்கு அது சொன்னது: ‘மிருகங்களை பயமுறுத்தி விரட்டுவது என்பது மிகவும் சுவாரசியமான ஒரு விஷயம். பிறகு எதற்கு வெறுப்பு தோன்றப் போகிறது?’

நான் ஒரு நிமிடம் சிந்தித்தேன்: ‘நீங்கள் கூறுவது உண்மைதான். நானும் இத்தகைய ஆனந்தத்தை அனுபவித்திருக்கிறேன்.’

‘புல்லும் வைக்கோலும் நிறைக்கப்பட்ட உடலைக் கொண்டவர்க்கே அதன் உண்மை தெரியும்.’

அதைக் கேட்டவாறு நான் அதே இடத்தில் நின்று விட்டேன். என்னை அந்த சோலைக்கொள்ளை பொம்மை புகழ்ந்ததா இல்லாவிட்டால் கேவலமாகப் பார்த்ததா என்று எனக்குத் தெரியாது.

ஒரு வருடம் கடந்தது. இதற்கிடையில் சோலைக் கொள்ளை பொம்மை தத்துவஞானியாக மாறி விட்டிருந்தது. நான் மீண்டும் அதைக் கடந்து சென்றபோது, இரண்டு காகங்கள் அதன் தலையில் கூடு கட்டிக் கொண்டிருப்பதைப் பார்த்தேன்.

கனவில் நடப்பவர்கள்

நான் பிறந்த கிராமத்தில் ஒரு தாயும் மகளும் இருந்தார்கள். அவர்களுக்கு கனவில் நடக்கும் பழக்கம் இருந்தது.

உலகமே மிகவும் அமைதியாக இருந்த ஒரு இரவு வேளையில் தாயும் மகளும் நடந்து திரிந்து மூடுபனி போர்த்திக் கொண்டிருந்த ஒரு மைதானத்தை அடைந்தார்கள். அங்கு அவர்கள் ஒருவரையொருவர் சந்தித்துக் கொண்டார்கள்.

தாய் சொன்னாள்: ஆமாம் ஆமாம்... விஷயம் புரிந்து விட்டது. அப்படியென்றால் நீதான் என் விரோதி. நீதான் என்னுடைய இளமையை அழித்தவள். நீ என் வாழ்க்கையின் அழிவில் உன்னுடைய வாழ்க்கையின் வனப்பை உண்டாக்கிக் கொண்டாய். உன்னை நான் கழுத்தை நெரித்து கொன்றிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்!

அதற்கு மகள் சொன்னாள்: ‘அடியே... சுயநலம் பிடித்த தாயே ! நீ என்னுடைய அமைதியான வாழ்க்கைக்கு இடைஞ்சலாக இருப்பவள். என்னுடைய இளமை உன்னுடைய வாடி வதங்கிப்போன வாழ்க்கைக்கு எதிரானது என்று யார் கூறினார்கள்? கடவுள் உன்னைக் கொன்றால் எவ்வளவு நன்றாக இருக்கும்!’

கோழி கூவியது. இருவரும் திடுக்கிட்டு எழுந்தார்கள். தாய் அன்புடன் சொன்னாள்: ‘என் அருமை மகளே...’

மகள் மிகுந்த பாசத்துடன் பதில் சொன்னாள்: ‘என்னுடைய அன்பான அன்னையே...’

புத்திசாலியான நாய்

ரு பூனைக் கூட்டத்திற்கு மத்தியில் புத்திசாலியான ஒரு நாய் போய் நின்றது. அவன் பார்த்தபோது பூனைகள் தங்களை மறந்திருந்தன. அவன் இருந்த பக்கம் திரும்பிப் பார்க்காமல் இருந்தபோது, அவன் அந்த பூனைகள் பேசிக் கொண்டிருப்பதை கவனித்து கேட்டான். ஒரு தடித்து கொழுத்த பூனை எழுந்து சென்று மற்ற பூனைகளைப் பார்த்து சொன்னது: ‘சகோதரிமார்களே! நீங்கள் பக்தி உணர்வுடன் கடவுளைத் தொழ வேண்டும். தொடர்ந்து கடவுளைத் தொழுதால், வானத்திலிருக்கும் மேகங்களிலிருந்து எலிகள் மழையாகப் பெய்யும்.’

நாய் அதைக்கேட்டு சிரித்தவாறு தன்னுடைய முகத்தைத் திருப்பிக் கொண்டு நடந்தது. ‘கண் இல்லாத முட்டாள்களே! பிரார்த்தனை பண்ணுவதால் மகிழ்ச்சியடையும் கடவுள் எலிகளை அல்ல, எறும்புகளைத்தான் மழையாகப் பெய்ய வைப்பார் என்று உங்களின் முன்னோர்கள் கூறியதாக நீங்கள் கேள்விப்படவோ, புராணங்களில் படிக்கவோ இல்லையா?’

இரண்டு துறவிகள்

ரண்டு துறவிகள் ஒரு மலையில் வாழ்ந்தார்கள். கடவுளைத் தொழுவதையும் ஒருவரோடொருவர் அன்பு செலுத்துவதையும் தவிர அவர்களுக்கு வேறு எந்த வேலையும் இல்லை. அவர்களிடம் ஒரு மண் சட்டி இருந்தது. அவர்களிடமிருந்த ஒரே சொத்து அதுதான். ஒரு நாள் மூத்த துறவியின் மனதில் பொறாமைத் தீ உண்டானது. அவர் இளைய துறவியின் அருகில் சென்று சொன்னார்: ‘ நீண்ட காலமாக நாம் ஒன்றாக வாழ்ந்து வருகிறோம். இப்போது நாம் பிரிய வேண்டிய நேரம் வந்திருக்கிறது. வாருங்கள்... நம்முடைய சொத்தை நாம் பிரித்துக் கொள்வோம்.’

‘உங்களைப் பிரிந்திருப்பது என்பது எனக்கு மிகவும் சிரமமான ஒரு விஷயமாக இருக்கிறது. அதே நேரத்தில் நீங்கள் இங்கிருந்து பிரிந்து போவது என்று முடிவெடுத்து விட்டால், அதைப் பற்றி நான் என்ன கூற இருக்கிறது?’ என்று கூறியவாறு இளைய துறவி மூத்த துறவிக்கு முன்னால் மண் சட்டியைக் கொண்டு வந்து வைத்தார்.

‘இது மட்டுமே நமக்கு என்று இருக்கின்ற ஒரே சொத்து. இதை இரண்டாகப் பிரிப்பது என்பது முடியாத காரியம்; அதனால் இதை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள்.’

‘வேண்டாம்’ மூத்த துறவி சொன்னார்: ‘எனக்கு இன்னொருத்தரின் இரக்கம் தேவையில்லை. எனக்கு என்னுடைய சொத்து கிடைத்தால் போதும். வேறொருவரின் சொத்து வேண்டாம். அதனால், இந்தச் சட்டியைப் பாகம் பிரித்தே ஆக வேண்டும்!’

‘இது உடைந்து போய் விட்டால் நமக்கு அதனால் என்ன பயன்? உங்களுக்கு சம்மதம் என்றால் இலைபோட்டு தீர்மானிப்போம்!’

அதற்கு மூத்த துறவி ஒத்துக்கொள்ளவில்லை.

‘நியாயமாக எனக்கு கிடைக்க வேண்டியது கிடைக்க வேண்டும். கூடுதலாகவும் வேண்டாம். குறைவாகவும் வேண்டாம். நியாயத்தை அதிர்ஷ்டத்திற்கு விட்டுத் தர நான் தயாராக இல்லை. கட்டாயம் நாம் இதை பங்கு வைக்க வேண்டும்.’

இளைய துறவிக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை அவர் சொன்னார்:

‘உங்களுக்கு அதுதான் விருப்பமென்றால், இதைத் தட்டி உடைப்போம்.’

அதைக் கேட்டதும் மூத்த துறவியின் முகம் சிவந்து விட்டது. ஆச்சரியத்துடன் சொன்னார்:

‘அடே கோழை மனிதனே! நீ இந்த சட்டிக்காக என்னுடன் போர் புரிய தயாராக இல்லையா?’

கொடுக்கல் – வாங்கல்

கொஞ்சம் ஊசிகளை வைத்திருந்த ஒருவன் இருந்தான். அவனிடம் சென்று ஒரு பெண் கேட்டாள்: ‘என் மகனுடைய துணி கிழிந்துவிட்டது. பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பு அதைத் தைத்துத் தர வேண்டும். ஒரு ஊசி தர முடியமா?’

அவன் ஊசியைத் தரவில்லை. கொடுக்கல் - வாங்கலைப் பற்றி ஒரு நீண்ட சொற்பொழிவு ஆற்றினான். பிறகு பெண்ணிடம் சொன்னான்:

‘பள்ளிக்கூடத்திற்குச் செல்வதற்கு முன்பு மகனுக்கு இந்தச் சொற்பொழிவை ஆற்று.’


ஏழு ஆத்மாக்கள்

டு இரவின் அமைதியில் நான் ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கியிருக்கும் போது என்னுடைய ஏழு ஆத்மாக்களும் தீவிரமான உரையாடலில் ஈடுபட்டன.

முதல் ஆத்மா: இந்த பைத்தியக்கார நிலையில்தான் இவ்வளவு காலமும் நான் வாழ்ந்திருக்கிறேன். பகலில் அவனுடைய வேதனையைப் புதுப்பித்தேன். இரவில் அவனுடைய துக்கத்தை வேறு மாதிரி ஆக்கினேன். இந்த குழப்பங்கள் உள்ள வேலையில் தொடர்ந்து கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கவில்லை. அதனால் நான் புரட்சிக்குத் தயாராக இருக்கிறேன்.

இரண்டாவது ஆத்மா: சகோதரா! உன் தலையெழுத்து என் தலையெழுத்தைவிட நன்றாக இருக்கிறதே! என்னை இந்த மனிதனின் ஆனந்த ஆத்மாதான் படைத்திருக்கிறது. நான் இவனுடைய சிரிப்பைச் சிரிக்கிறேன். பாடலைப் பாடுகிறேன். நடனத்தை ஆடுகிறேன். நான் துன்பங்கள் நிறைந்த இந்த வாழ்க்கைக்கு எதிராக புரட்சி செய்ய தயார்.

மூன்றாவது ஆத்மா: பிரேத ஆத்மாவான என் கதையைக் கேட்க வேண்டுமே! பலவிதப்பட்ட ரசனைகளின், பலவகைப்பட்ட செயல்களின் படைப்பு நான். இவனுக்கு எதிராக போர் புரிவதுதான் என் நோக்கம்.

நான்காவது ஆத்மா: தாங்க முடியாத வெறுப்பு, அழிவைத் தரும் செயல்கள்- இவற்றைத் தவிர வேறு எதுவும் கிடைத்திராத என் கதை உங்களுடைய கதைகளை விட எவ்வளவு பரிதாபமானது! நரகத்தின் இருட்டறையில் பிறந்த புயலைப் போன்ற ஒரு ஆத்மா மட்டுமான நான், இந்த அடிமைத்தனத்திற்கு எதிராக போர் புரியப் போகிறேன்.

ஐந்தாவது ஆத்மா: நிரந்தர சிந்தனையாளனும் செயல் வீரனும் ஆன என்னுடைய தலையில் அறிவுக்கு வேலையற்ற கற்பனையான பொருட்களைக் குறித்து கஷ்டப்பட்டு விசாரிக்க வேண்டும் என்ற கட்டளை வைக்கப்பட்டிருக்கிறது. நீங்களல்ல - நான்தான் புரட்சிக்கு இறங்க வேண்டியவன்.

ஆறாவது ஆத்மா: தளர்ந்து போன கைகளையும் தாகமெடுத்த கண்களையும் கொண்டு வேலை செய்யும் சோர்வடைந்து போன தொழிலாளி நான். நாட்டுக்கு மிகப் பெரிய வடிவத்தையும், நிமிடங்களுக்கு மிகப் பெரிய முக்கியத்துவத்தையும் தருகிறோம். நான் இந்த பைத்தியக்காரனுக்கு எதிராக புரட்சி செய்வேன்.

ஏழாவது ஆத்மா: நீங்கள்தான் உங்களில் ஒவ்வொருவரின் தலையிலும் உள்ள எழுத்தை எழுதி முடிக்க வேண்டியவர்கள். கஷ்டம்! நான் உங்களைப் போல ஒரு தலையில் எழுத்து உள்ளவனாக இருந்தால்...! ஆனால், என் விதி அதுவல்ல. நான் ஒரு தேவைப்படாத ஆத்மா. நீங்கள் வாழ்க்கைச் சக்கரத்தை இயக்குவதில் தீவிரமாக ஈடுபட்டிருக்கும்போது, நான் செய்யக் கூடாததும் இலக்கு அற்றதுமான ஒரு இடத்தில் அடங்கி ஒதுங்கி உட்காந்திருப்பேன்.

என் நண்பர்களே, நீங்கள் ஒன்று கூறுங்கள். போருக்குத் தயாராக வேண்டியது நீங்களா, நானா?

ஏழாவது ஆத்மா இதைச் சொன்னதும், மற்ற ஆறு ஆத்மாக்களும் அதை இரக்கத்துடன் எதுவும் பேசாமல் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள். இரவு முடிவற்று நீண்டு கொண்டிருந்தபோது, புதுமையான ஆனந்தத்தின் அடிமைத் தனத்தில் அவை திருப்தியடைந்து தூங்க ஆரம்பித்தன.

ஆனால், ஏழாவது ஆத்மா அன்னியர்கள் பார்க்க முடியாத பொருட்களுக்கு இடையிலுள்ள கூர்மையான விஷயங்களை மிகவும் கவனமாக பார்த்துக் கொண்டிருந்தது.

சட்டம் செயலாக்கல்

ன்று இரவு அரண்மனையில் ஒரு விருந்து நடைபெற்றது. அரசனுக்கு நேராக ஒரு மனிதன் போய் நின்றான். விருந்தினர் அந்த மனிதனை வெறித்துப் பார்த்தார்கள். அந்த மனிதனின் ஒரு கண் வெளியே தள்ளிக் கொண்டிருந்தது. காயத்திலிருந்து இரத்தம் வழிந்து கொண்டிருந்தது. ‘உங்களுக்கு எப்படி இது நடந்தது?’ மன்னன் கேட்டான்.

அவன் சொன்னான்: ‘நான் ஒரு திருடன். ஒரு பணக்காரனின் வீட்டிற்கு நிலவு தோன்றுவதற்கு முன்பு திருடுவதற்காகச் சென்றேன். ஆனால், வழி தவறி நெசவு நெய்பவன் வீட்டிற்குள் நுழைந்து விட்டேன். நான் சாளரத்தின் வழியாக உள்ளே குதித்தபோது, என்னுடைய தலை தறியில் மோதி கண் பாதிக்கப்பட்டுவிட்டது. அந்த நெசவு நெய்பவனை வரவழைத்து, விசாரிக்க வேண்டும் என்பதற்காகத்தான் நான் உங்களைத் தேடி வந்திருக்கிறேன்.

மன்னன் நெசவு நெய்பவனை வரவழைத்து, அவனுடைய ஒரு கண்ணைத் தோண்டி எடுக்க வேண்டுமென்று உத்தரவு போட்டான்.

அதற்கு நெசவு நெய்பவன் சொன்னான்: ‘மன்னரே! தங்களின் தீர்ப்பு நியாயமற்றதாகவும், பொருத்தமில்லாததாகவும் இருக்கிறது. எனக்கு இரண்டு கண்கள் இருந்தால் தான் ஆடைகள் நெய்யும்போது இரண்டு பக்கங்களையும் பார்க்க முடியும். என் தெருவில் ஒரு செருப்பு தைப்பவன் இருக்கிறான். உண்மையாக சொல்லப் போனால் அவனுக்கு இரண்டு கண்கள் தேவையே இல்லை!’

அதைக் கேட்டு மன்னன் செருப்பு தைப்பவனை வரவழைத்து, அவனுடைய இரண்டு கண்களில் ஒன்றைத் தோண்டி எடுக்கும்படி உத்தரவு போட்டான்.

அந்த வகையில் சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

நரி

காலையில் தன்னுடைய நிழல் நீண்டு இருப்பதைப் பார்த்து நரி சொன்னது: ‘எனக்கு இன்று காலை உணவுக்கு ஒரு யானை கிடைக்க வேண்டும்.’

யானையைத்தேடி மதியம் வரை அது அலைந்து திரிந்தது. ஆனால், மதியம் தன் நிழலைப் பார்த்த நரி சொன்னது: ‘எனக்கு ஒரு எலி கிடைத்தால் கூட போதும்!’

அறிவாளி அரசன்

ல வருடங்களுக்கு முன்னால் நடந்த சம்பவம் இது. ஒரு நகரத்தில் ஒரு அரசன் இருந்தான். எல்லோரும் அவனுடைய வீரச் செயல்களைப் பார்த்து பயப்பட்டார்கள். புத்திசாலித்தனத்திலும், காரியங்களை நிறைவேற்றுவதிலும் அவன் மக்கள் விரும்பக்கூடிய வகையில் இருந்தான்.

அவனுடைய நகரத்தின் நடுவில் ஒரு கிணறு இருந்தது. குளிர்ந்த பனிக்கட்டியைப் போல அதிலிருந்த நீர் இருந்தது. முத்துமணியைப் போல அது தெளிவானதாகவும் இருந்தது. நகரத்தின் மக்களும், அரசரும், அவனுடைய படைகளும் அந்தக் கிணற்றில்தான் நீர் பருகினார்கள். அங்கு வேறு கிணறு எதுவும் இல்லை.

ஒரு நாள் நள்ளிரவு நேரத்தில் எல்லாரும் தூங்கிக் கொண்டிருந்தபோது, அந்தக் கிணற்றிற்குள் ஏழு துளிகள் மருந்தை ஊற்றியவாறு கெட்ட தேவதை சொன்னது: ‘இனி இந்தக் கிணற்றில் நீர் குடிப்பவர்கள் அனைவரும் பைத்தியக்காரர்கள் ஆகிவிடுவார்கள்.

மறுநாள் அரசனையும் அமைச்சர்களையும் தவிர, மற்ற எல்லாரும் கிணற்றிலிருந்த நீரைக் குடித்தார்கள். கெட்ட தேவதை சொன்னதைப் போல அவர்கள் பைத்தியக்காரர்களாக ஆனார்கள்.

அன்று நகரத்தின் ஒவ்வொரு தெருவிலும், ஒவ்வொரு மூலையிலும் நின்று கொண்டு மனிதர்கள் தங்களுக்குள் முணுமுணுத்துக் கொண்டார்கள்: ‘நம்முடைய அரசனுக்கும் அமைச்சர்களுக்கும் பைத்தியம் பிடித்திருக்கிறது. நம்மால் இனிமேல் இவர்களுடைய ஆட்சியை ஏற்றுக் கொள்ள முடியாது. அவர்களை பதவியிலிருந்து இறக்க வேண்டும்.’

மாலை நேரம் ஆனதும் அரசன் ஒரு பொற்குடத்தில் அந்தக் கிணற்றிலிருந்து நீர் கொண்டு வரும்படி செய்தான். அவன் அதைக் குடித்ததோடு நிற்காமல் அமைச்சர்களையும் குடிக்கும்படி செய்தான். அதற்குப் பின் நடந்த கதை என்ன! நகரம் முழுக்க பாட்டும், மேளச் சத்தமும், கொண்டாட்டமும் தான். அரசன், அமைச்சர்கள் ஆகியோரின் பைத்தியம் குணமாகிவிட்டது என்பதை மக்கள் புரிந்து கொண்டார்கள்.


ஆர்வம்

மூன்று பேர் அறையில் வட்டமாக உட்கார்ந்திருந்தார்கள். ஒரு நெசவு நெய்பவன், ஒரு ஆசாரி, ஒரு கூலிக்காரன்.

நெசவு நெய்பவன் சொன்னான்: ‘பிணத்துக்கு நான் இரண்டு டாலருக்கு புதிய துணி விற்றேன். வாருங்கள் நாம் கொண்டாடுவோம்.’

ஆசாரி: ‘நல்ல விலைக்கு நான் இன்று ஒரு சவப்பெட்டியை விற்றேன். போய் மாமிசம் சாப்பிடுவோம்.’

கூலிக்காரன்: ‘நான் இன்று ஒரு சவக்குழி வெட்டினேன். எனக்கு இரண்டு மடங்கு கூலி கிடைத்தது. அதை வைத்து கொஞ்சம் மீன்களை வாங்குவோம்.’

அன்று இரவு அந்த அறையில் ஒரே கொண்டாட்டம்தான். மது, மாமிசம், மீன் என்று அவர்கள் சந்தோஷத்தில் திளைத்தார்கள்.

அந்த இடத்தின் காவலாளி தன் மனைவியைப் பார்த்து புன்னகை செய்தான்.

‘நம்முடைய இன்றைய விருந்தாளிகள் நன்றாக செலவு செய்கிறார்கள்.’

அவர்கள் அங்கிருந்து கிளம்பியபோது நிலவு தோன்றியிருந்தது. போகும் வழியில் விளையாடி, சிரித்து, ஆடி, பாடி சாய்ந்து ஒருவரையொருவர் அடித்து போய்க் கொண்டிருந்த அவர்களைப் பார்த்து கடைக்காரனின் மனைவி சொன்னாள்: ‘இவர்கள் எவ்வளவு இரக்க குணமும் தாராள மனமும் கொண்டவர்களாக இருக்கிறார்கள்! இந்த குடிகாரர்கள் எல்லா நாட்களிலும் இங்கு குடிப்பதற்கு வந்திருந்தால், நம் மகன் மது வியாபாரம் செய்ய வேண்டிய தேவையே இல்லை. அவன் நல்ல படிப்பு படிக்க போயிருக்கலாம். ஒரு பாதிரியாராக உயர்ந்திருக்கலாம்.’

புதுமையான ஆனந்தம்

நான் நேற்று தெளிவானதும் மிகவும் புதுமையானதுமான ஒரு ஆனந்தத்தை அனுபவித்தேன். முதலில் அதை அனுபவித்தபோது ஒரு கடவுளும் ஒரு அரக்கனும் என் அறையை நோக்கி ஓடி வந்தார்கள். இருவரும் என் அறையின் வாசலில் சந்தித்துக் கொண்டார்கள். என்னுடைய புதிய கண்டுபிடிப்பைப் பற்றி அவர்கள் வாதம் செய்தார்கள்.

முதலாவது ஆள்: இது பாவம்!

இரண்டாவது ஆள்: இது புண்ணியம்!

வேற்று மொழி

பிறந்து மூன்றாவது நாள் நான் பட்டு மெத்தையில் படுத்துக்கொண்டு சுற்றிலும் ஆச்சரியத்துடன் பார்த்தபோது, என் தாய் வேலைக்காரியிடம் கேட்பது காதில் விழுந்தது: ‘என் குழந்தை எப்படி இருக்கிறது.’

வேலைக்காரி பதில் சொன்னாள்: ‘நல்ல குழந்தை. இந்த அளவிற்கு மகிழ்ச்சி நிறைந்த குழந்தையை நான் இதுவரையில் பார்த்ததே இல்லை.’

நான் கவலையுடன் சொன்னேன்: ‘இது உண்மை இல்லை அம்மா. என் படுக்கை மிகவும் தடிமனாக இருக்கிறது. பால் குடித்து என் வாயெல்லாம் கசக்கிறது. உங்களின் மார்பின் துர்நாற்றம்... அய்யோ... எனக்கு தலை சுற்றுகிறது. நான் மிகவும் கவலையில் இருக்கிறேன்.

நான் சொன்னது என் தாய்க்கு புரியவில்லை. நான் பேசிய மொழி இந்த உலகத்தில் இருப்பதல்ல.

இருபத்தொன்றாவது நாள் பாதிரியார் வந்தார். அவர் என் தாயிடம் சொன்னார். ‘நீ மிகவும் கொடுத்து வைத்தவள். உன் மகன் பெரிய தர்ம பிரபுவாக ஆவான். அது குறித்து நீ சந்தோஷப்படலாம்.’

அவருடைய மொழிகளைக் கேட்டபோது ஆச்சரியமாக இருந்தது. நான் அவரிடம் சொன்னேன்: ‘உங்களின் இறந்து போன தாய் அப்போது மிகவும் கவலைப்பட்டிருக்க வேண்டும். நீங்கள் அந்த அளவிற்கு தர்ம சிந்தனை கொண்டவரில்லையே!’

என் மொழி அவருக்குப் புரியவில்லை.

ஏழு மாதங்கள் கழிந்ததும், ஒரு சோதிடர் வந்து என் தாயிடம் சொன்னார்: ‘உங்களுடைய மகன் ஒரு பெரிய ராஜ தந்திரியாக ஆவான். மற்ற மனிதர்களுக்கு அவன் ஒரு உதாரணமாக இருப்பான்.’

அதைக் கேட்டு எனக்கு கோபம் வந்தது. நான் சொன்னேன்: ‘அவருடைய தீர்க்கதரிசனம் முழுவதும் முட்டாள்தனமாக இருக்கிறது. நான் ஒரு பாடகனாக ஆவேனே தவிர, அதைத் தாண்டி எதுவும் ஆட வாய்ப்பே இல்லை!’

அன்றும் என்னுடைய மொழி யாருக்கும் புரியவில்லை.

இப்போது எனக்கு முப்பது வயது. என் தாய், வேலைக்காரி, பாதிரியார் எல்லாரும் மறைந்து விட்டார்கள். அந்த சோதிடர் மட்டும் உயிருடன் இருக்கிறார். அவரை நேற்று நான் கோவில் வாசலில் பார்த்தேன். பேச்சுக்கு மத்தியில் அவர் சொன்னார்: ‘நீங்கள் ஒரு பாடகனாக வருவீர்கள் என்று அப்போதே நான் கூறினேன்.’

நான் அவர் சொன்னதை கண்களை மூடிக்கொண்டு நம்பினேன். ஏனென்றால் என்னுடைய பழைய மொழி எனக்கு இப்போது அன்னியமாகி விட்டது.

மாதுளம்பழம்

நான் ஒருநாள் மாதுளம்பழத்திற்குள் இருந்தபோது, ஒரு வித்து சொல்வது கேட்டது: ‘ஒரு காலத்தில் நான் ஒரு மரமாக ஆவேன். என் கிளைகளில் வண்டு வீணை மீட்டும். சூரிய கிரணங்கள் இலைகளில் நடனமாடும். நான் கால மாறுதல்களுக்கு ஏற்ப இலைகளில் நடனமாடும். நான் கால மாறுதல்களுக்கு ஏற்ப மகிழ்ச்சியில் திளைத்திருப்பேன்.’

அப்போது மற்றொரு வித்து சொன்னது: ‘நான் உன்னைப்போல இரத்தத் துடிப்பு உள்ள இளைஞனாக இருந்தபோது, இப்படிப்பட்ட சிந்தனைகள் என் மூளையிலும் இருந்தன. எல்லாவற்றையும் குறித்த கொஞ்சம் அறிவு வந்த இன்று, எனக்கு முழுமையாக தெரிகிறது- அவை அனைத்து வீண் என்று.’

மூன்றாவது வித்து: ‘நம்முடைய எதிர்காலத்தில் மிகப்பெரியதாக தோன்றக்கூடிய ஒன்றுகூட உலகத்தில் இல்லை.’

நான்காவது வித்து: ‘அதே நேரத்தில், இலட்சிய நோக்கு கொண்ட ஒரு எதிர்காலத்தைத் தவிர, மற்றவை அனைத்தும் நம்முடைய கற்பனைகள்.’

ஐந்தாவது வித்து: ‘நான் இன்று எதுவோ, அதுதான் என்றும்.’

ஆறாவது வித்து: ‘நாம் என்ன என்பதை அறியாமல் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பதைப் பற்றிப் பேசுவது முட்டாள்தனமானது.’

ஏழாவது வித்து: ‘எனக்கு எதிர்காலத்தில் நடக்கப்போகிற சம்பவங்களைப் பற்றி முழுமையாக அறிய முடிகிறது. ஆனால், அதை வார்த்தைகளால் கூறுவதென்பது முடியாத விஷயம்.’

எட்டாவது வித்து: ‘ஒன்பதாவது வித்தும், பத்தாவது வித்தும் இதோ வந்து விட்டார்கள். ஒரே ஆரவாரம் ஆயிரம் வார்த்தைகளில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை. அதனால் நான் அன்று ஒரு மொட்டுக்குள் மறைந்து கொண்டேன். அதிலிருந்த விதைகள் வாதங்கள் புரியாமல் அமைதியாக இருந்ததால், நான் மிகவும் அடங்கி ஒடுங்கி இருந்தேன்.’

இரண்டு கூண்டுகள்

ன் தந்தையின் தோட்டத்தில் இரண்டு கூண்டுகள் இருக்கின்றன. அதிலொன்றில் தந்தை காட்டிலிருந்து பிடித்துக் கொண்டு வந்த சிங்கத்தை அடைத்து வைத்திருக்கிறார். மற்றொரு கூண்டில் அமைதியான ஒரு குயில் இருக்கிறது. ஒவ்வொரு நாள் காலையிலும் குயில் சிங்கத்திடம் கூறும்:

‘நண்பனே, உங்களுக்கு இன்றைய நாள் சந்தோஷமானதாக இருக்கட்டும்.’


மூன்று எறும்புகள்

ரு மனிதன் வெயிலில் படுத்து தூங்கிக் கொண்டிருந்தபோது, மூன்று எறும்புகள் அவனுடைய மூக்கின்மீது உட்கார்ந்து கொண்டு மரியாதை நிமித்தமாக ஒன்றையொன்று நலம் விசாரித்துக் கொண்டிருந்தன - பேசிக் கொண்டிருந்தன.

முதல் எறும்பு: ‘இந்த மலைப்பகுதிகளிலும், புதர்களிலும், வயலிலும், வரப்பிலும்... எல்லா இடங்களிலும் அலைந்து திரிந்தும் எதுவுமே எனக்கு கிடைக்கவில்லை.’

இரண்டாவது எறும்பு: ‘நானும் அலைந்து திரிந்தேன். ஆனால், எதுவும் கிடைக்கவில்லை. சுற்றிலும் சந்தோஷமும் மாற்றங்களும் நிகழ்ந்து கொண்டிருக்கும் இந்த பூமியில்தான் எதுவுமே நடக்கவில்லை என்று நம்முடைய ஆட்கள் கூறிக்கொண்டிருக்கிறார்கள்.’

அதைக்கேட்டு மூன்றாவது எறும்பு தன் தலையை உயர்த்தியது.

அது சொன்னது:

‘நண்பர்களே! நாம் இப்போது ஒரு மிகப்பெரிய மனிதனின் மூக்கின் மீது இருக்கிறோம். நாம் பார்த்தால் கூட பார்வைக்கு எட்டாத அளவிற்குப் பெரிய உடலை இவன் கொண்டிருக்கிறான். எப்படிப்பட்டவன் என்பது நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பயங்கரமானது. இவனுடைய குரல் நம்முடைய காதுகளால் கேட்க முடியாத அளவிற்கு கம்பீரமானது. மொத்தத்தில் பயம் தரக் கூடியவன் இவன்.

மூன்றாவது எறும்பின் பேச்சைக் கேட்டு, மற்ற இரு எறும்புகளும் விழுந்து விழுந்து சிரித்தன. அந்த மனிதன் அதிர்ச்சியடைந்து தூக்க கலக்கத்துடன் மூக்கைக் கையால் தடவினான். அடுத்த நிமிடம் மூன்று எறும்புகளும் நசுங்கி இறந்துவிட்டன.’

குழி வெட்டுபவன்

ரு நாள் ஒரு இறந்த உடலைப் புதைக்கும்போது குழி தோண்டும் மனிதன் என்னிடம் சொன்னான்:

‘இங்கு ஏராளமான பேர் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தாலும், எனக்கு உங்களைத்தான் மிகவும் பிடித்திருக்கிறது.’

நான் சொன்னேன்: ‘மிகவும் மகிழ்ச்சி! நீங்கள் என்னை விரும்புவதற்கான காரணம் என்ன?’

அவன் காரணம் சொன்னான்: ‘மற்றவர்கள் இங்கு அழுது கொண்டே வருகிறார்கள். அழுதுகொண்டே போகிறார்கள். ஆனால், நீங்கள் சிரித்துக் கொண்டே வருகிறீர்கள். இப்போது சிரித்துக் கொண்டே போகிறீர்கள்.’

மண்டபத்தில்

ரு பெண், நேற்று சாயங்காலம் தேவாலயத்தின் பளிங்குக் கல்லால் ஆன மண்டபத்தில் அமர்ந்திருப்பதைப் பார்த்தேன்.

அவளின் இரு பக்கங்களிலும் இரு ஆண்கள் அமர்ந்திருந்தார்கள்.

அவளுடைய ஒரு கன்னம் வெளிறிப் போயிருந்தது. இன்னொரு கன்னம் சிவந்து போய் காணப்பட்டது.

புனித நகரம்

ன் இளமைக் காலத்தில் நான் ஒரு புனித நகரத்தைப் பற்றிக் கேள்விப்பட்டிக்கிறேன். வேதங்களில் கூறப்பட்டிருப்பதைப் பின்பற்றி அங்குள்ள மக்கள் ஒழுக்கமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.

நான் அந்த நகரத்தைப் பார்க்க வேண்டும். அந்த புண்ணிய பூமிக்குச் செல்ல வேண்டும் என்று விரும்பினேன்.

நகரம் மிகவும் தூரத்திலிருந்ததால், நான் நீண்ட தூர பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்தேன்.

நாற்பதாவது நாள் நகரத்தை நெருங்கினேன். மறுநாள் நகரத்திற்குள் நுழைந்தேன்.

அந்த நகரத்து மக்கள் எல்லாரும் ஒற்றைக் கண் உள்ளவர்களாகவும், ஒரே ஒரு கையை உள்ளவர்களாகவும் இருப்பதைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன்.

என்னைப் பார்த்ததும் அவர்களுக்கு ஆச்சரியமாக இருந்தது. என்னுடைய இரு கண்களும், இரு கைகளும் தான் அதற்குக் காரணம்.  பேசிக்கொண்டிருப்பதற்கு மத்தியில் நான் கேட்டேன்: ‘இதுதான் வேதத்தில் கூறப்பட்டிருப்பதன்படி நடந்து கொண்டிருப்பவர்களின் புனித நகரமா?’

‘ஆமாம்.... அது இதுதான்.’

நான் கேட்டேன்: ‘உங்களுக்கு இது எப்படி நடந்தது? உங்களின் வலது கைக்கும் வலது கண்ணுக்கும் நடந்தது என்ன?’

வாருங்கள்.... காட்டுகிறோம்.’ அந்த மனிதர்கள் சொன்னார்கள். அவர்கள் என்னை தேவாலயத்திற்கு அழைத்துச் சென்றார்கள். அது நகரத்தின் நடுவில் இருந்தது. வாசலில் கோடிக்கணக்கான கண்களும் கைகளும் மலையென குவிந்திருந்தன. அவை கீழே கிடந்து துடித்துக் கொண்டிருந்தன.

நான் சொன்னேன்: ‘இந்தப் பயங்கரச் செயலைச் செய்தது யார்?’

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்து தங்களுக்குள் என்னவோ பேசிக் கொண்டார்கள். வயதான மனிதர் சொன்னார்: ‘இது எங்களின் வேலைதான. வேறு யாரும் இதைச் செய்யவில்லை. தெய்வம் எங்களின் பாவச் செயல்களுக்காக கொடுத்த தண்டனை இது.’

அவர் என்னை ஒரு உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்றார். எங்களை மற்றவர்கள் பின் தொடர்ந்தார்கள். அங்கு இப்படி எழுதப்பட்டிருந்தது:

‘உங்களுடய வலது கண் உங்களை வழி தவறி நடக்கச் செய்கிறது என்றால், அதைத் தோண்டி எடுத்து விடுங்கள். உடல் முழுவதும் நகரத்தில் கிடந்து துடிப்பதை விட ஒரு உறுப்பு இல்லாமற்போவது எவ்வளவோ மேல். உங்களுடைய வலது கை கெட்ட செயலைச் செய்யும்படி தூண்டினால், அதை வெட்டி எடுத்து விடுங்கள். உங்களுக்கு ஒரு உறுப்பு இல்லாமற்போகும். மீதி உடலை நரகத்திலிருந்து காப்பாற்றலாம்.’

அதைப் படித்தபோது எனக்கு விஷயம் புரிந்து விட்டது. நான் திரும்பி நின்று எல்லோரையும் பார்த்து கூறினேன்: ‘உங்கள் மத்தியில் இப்போது இரண்டு கண்களையும், இரண்டு கைகளையும் கொண்ட ஒரு மனிதன் கூட இல்லை. அப்படித்தானே?’

‘யாரும் இல்லை’ எல்லாரும் ஒரே குரலில் கூறினார்க்ள. ‘இந்த வாசகங்களைப் படித்து கொள்ளக் கூடிய வயதை இன்னும் அடைந்திராத குழந்தைகளைத் தவிர, வயதான யாரும் இல்லை.’

நான் அந்த தேவாலயத்திலிருந்து வெளியே வந்தேன். நான் ஒரு குழந்தை அல்ல. அந்த வாசகங்களை எத்தனை முறை வேண்டுமானாலும் படிக்க எனக்குத் தெரியும்.

பிசாசும் தேவதையும்

லையின் உச்சியில் பிசாசும் தேவதையும் சந்தித்துக் கொண்டார்கள். தேவதை சொன்னது: ‘இந்தக் காலை வேளையில் உங்களுக்கு நல்லது நடக்கட்டும்.’

அதற்கு பிசாசு பதில் எதுவும் கூறவில்லை.

தேவதை மீண்டும் சொன்னது: ‘என்ன, உங்களுக்கு உடல் நலம் இல்லையா என்ன?’

அதற்கு பிசாசு சொன்னது; ‘என்னை மனிதர்கள் தவறாக எடை போட்டு எவ்வளவோ காலமாகிவிட்டது. என்னை உங்களின் பெயரைச் சொல்லித்தான் இப்போது அழைக்கிறார்கள். உங்களை வணங்குவதைப் போல என்னையும் வணங்குகிறார்கள். அதை நினைத்து எனக்கு வெறுப்பாக இருக்கிறது.’

அதைக் கேட்டு தேவதை சொன்னது: ‘என்னையும் மனிதர்கள் தவறாக எடை போட்டு விட்டார்கள். உங்களின் பெயரைச் சொல்லி என்னை அழைக்கிறார்கள்.’

மனிதர்களின் அறிவற்ற செயலை நினைத்து கவலைப்பட்டவாறு பிசாசு அங்கிருந்து கிளம்பியது.


தோல்வி

தோல்வியே, என் தோல்வியே, என் தனிமையே, நீ எனக்கு ஓராயிரம் வெற்றிகளை விட பிரியமானவன்.

என் இதயத்திற்கு இந்த உலக விஷயங்களைவிட இனிமை உண்டு.

தோல்வியே, என் தோல்வியே, என் உள்ளுணர்வே! நீதான் எனக்கு எதிர்சக்திகளுடன் போரிடக்கூடிய சக்தியாக இருக்கிறாய். நீதான் இளமையையும் முன்னோக்கி போவதற்கு கால்களுக்கு சக்தியையும் தருகிறாய். நொடி நேரத்தில் மறைந்து போகும் வெற்றி என்ற மோக வலையில் சிக்காதவனும் நீயே.

சந்தோஷத்தையும், தனிமையையும் நான் உன்னிடமிருந்துதான் தெரிந்திருக்கிறேன்.

மற்றவர்கள் என்னை வெறுப்பதையும், என்னை விட்டுப் போவதையும் ஒரு சந்தோஷமாக நான் கணக்கிடுகிறேன்.

தோல்வியே, என் ஒளிரும் வைரமே, என் உடலைக் காப்பாற்றுகிற கவசமே...

நான் உன் கண்களைப் பார்த்து படித்திருக்கிறேன் – அரச சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பது அடிமைத்தனத்தை இறுக தழுவுவதற்காக என்று.

அன்னியர்களுடன் அறிமுகமாவது நெருப்புக்குள் நுழைவதற்கு நிகரானது. அன்னியர்களின் பிடியில் சிக்குவது விரிந்து பரந்த நிலப் பரப்பில் உதிர்ந்து விழும் பழுத்த பழங்களின் செயலுக்கு நிகரானது அது.

தோல்வியே, என் வீர நண்பனே, நீதான் என் இசை. நீதான் என் மூச்சு. நீ என் மவுன கர்ஜனையும் கூட. பறவைகளின் ஒலிகளை உன்னைத் தவிர வேறு யாரும் ஞாபகப்படுத்துவதில்லை. கடலின் பேரோசையைக் கேட்கச் செய்வதில்லை. பிரகாசித்துக் கொண்டிருக்கும் மலைத் தொடர்களைக் காட்டுவதில்லை. என் கல்லும் முள்ளும் நிறைந்த உள்ளத்தில் நீ மட்டுமே சவாரி செய்கிறாய்.

தோல்வியே, நானும் நீயும் சேர்ந்து ஒரு புயலென வீசுவோம். அதில் இறப்பவர்களுக்கு சவக்குழி தோண்டுவோம். காயும் வெயிலில் நாம் அசையாமல் நின்றிருப்போம். நாம் உலகத்திற்கு ஒரு ஆபத்தாக மாறுவோம்.

இரவு

‘கறுத்து இருண்ட நிர்வாண இரவே, நான் உன்னைப் போலத்தான். நான் நீண்ட கனவுகளை விட உயரத்தில் தகிக்கும் பாதை வழியே நடக்கிறேன். என் காலடிகளைப் பிளந்து மண்ணுக்குள்ளிருந்து பெரும் மரங்கள் முளைத்து மேலே வருகின்றன.’

‘நீ என்னைப்போல இல்லையடா, பைத்தியக்காரா! நீ மணலில் பதித்த உன் காலடிச் சுவடுகளின் அளவை பின்னால் திரும்பிப் பார்க்கிறாய்.’

‘இரவே, நான் உன்னைப் போலத்தான். அமைதியானவனும், கம்பீரம் கெண்டவனுமாக இருக்கிறேன். என் தனிமையான இதயத்தின் அடித்தளத்தில் ஒரு இளம் பெண் சிறிய ஒரு கட்டிலில் படுத்திருக்கிறாள். அவளுடைய கர்ப்பத்தில் உண்டான குழந்தை சொர்க்கத்தை நரகத்துடன் இணைக்கிறது.’

‘நீ என்னைப் போல இல்லையடா, முழு பைத்தியக்காரா!

துக்கத்தில் மூழ்கும்போது நீ அதிர்ந்து நடுங்குகிறாய். நரகத்தின் இசையைக் கேட்கும்போது பயந்து சாகிறாய்.’

‘இரவே, நான் உன்னைப் போலத்தான். ஆழமானவனாகவும், ஆபத்தானவனாகவும் இருக்கிறேன் தோற்கடிக்கப் பட்டவர்களின் அழுகைகளாலும் அழிக்கப்பட்ட நாடுகளின் மூச்சுக்களாலும் என் காதுகள் செவிடாகி விட்டன!’

‘நீ என்னைப் போல இல்லையடா, பைத்தியக்காரா! உன் பைத்திமான இதயம்தான் உன் நண்பன். மதிப்பு மிக்க நட்பு கொண்டவர்களுடன் உன்னால் நட்புடன் இருக்க முடியவில்லை.’

‘இரவே, நான் உன்னைப் போலத்தான். கொலை செய்பவனும் கொடூரமானவனுமாக இருக்கிறேன். கடலில் தெரியும் கப்பலின் வெளிச்சத்தால் என் இதயம் பிரகாசமானது. கொல்லப்பட்ட வீரர்களின் இரத்தத்தால் நனைந்தன என் உதடுகள்.’

‘நீ என்னைப் போல இல்லையடா, பைத்தியக்காரா! உன் இதயத்தின் உள்ளேயிருக்கும் ஆழமான ஆசையால் உன்னை நீயே கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை.’

‘இரவே, நான் உன்னைப் போல தெளிவாகவும், ஆனந்தமாகவும், இருக்கிறேன். என் நிழலில் வாழ்பவன் எங்கோ காணும் இன்பத்தை நினைத்துக் கொண்டிருக்கிறான். என் தோழி சிறிதும் இரக்கமில்லாமல் அவனை ஆட்சி செய்கிறாள்.’

‘பைத்தியக்காரா! நீ என்னைப் போல இல்லையடா. என் ஆத்மா ஒரு திரைச்சீலைகளால் மூடப்பட்டிருக்கிறது. என் மனம் உன் பிடியில் இல்லை.’

‘இரவே, நான் உன்னைப் போலத்தான். சந்தோஷமும், திருப்தியும் கொண்டவன் நான். என் இதயத்தில் ஆயிரமாயிரம் காதலர்கள் முத்தங்கள் பெற்று வாடி, சரிந்து மரணத்தின் போர்வையை அணிந்து மண்ணை விட்டு மறைந்து போய் கிடக்கிறார்கள்.’

‘என்ன? பைத்தியக்காரா... நீ என்னைப் போல இருப்பதாய் கூறுகிறாய்? உண்மையாகவே நீ என்னைப் போலவா இருக்கிறாய்? நீ சவாரி செய்யும் குதிரை புயலா? மின்னல் கீற்று உன் வாளா?’

‘இரவே, நான் உனக்கு நிகரானவன். உன்னை மாதிரியே பலம் கொண்டவன்.... முக்கியமானவன்.... அனாதை தேவதைமார்களின் முதுகுகளின் மீது என் சிம்மாசனம். ஆடைகளின் ஓரத்தைப் பிடித்து முத்தம் தர வரும் பிரகாசமான அதிகாலைகள். என் முகம் பார்க்கக் கூடியது அல்ல!’

‘என்ன? நீ என்னைப் போல இருக்கிறாயா? இருண்ட இதயத்தின் குழந்தையே, உன்னால் என்னுடைய எண்ணங்களைப் புரிந்து கொள்ள முடிகிறதா? நீ என்னுடைய புரியாத மொழியைப் பேசுகிறாயா?’

ஆமாம்... இரவே... நாம் சகோதரர்கள்தான். உண்மையாகவே சகோதரர்கள்தான். நீ உலகத்தைப் படைக்கும்போது நான் ஆத்மாவைப் படைப்பதற்கா உள்ளுணர்வைத் திறந்து வைக்கிறேன்.

பலவகைப்பட்ட முகங்கள்

நான் ஒவ்வொரு முகத்திலும் ஆயிரக்கணக்கான வேறுபாடுகளைப் பார்த்திருக்கிறேன். ஒரேயொரு வேறுபாடு கொண்ட ஒரு முகத்தையும் பார்த்திருக்கிறேன். கல்லில் கொத்தி உண்டாக்கியதைப் போல உள்ள ஒரு முகத்தையும் நான் பார்த்திருக்கிறேன். அதன் பிரகாசத்தின் மூலம் என்னால் அதனுள் இருந்த வேறுபாடுகளைப் பார்க்க முடிந்தது.

நான் மற்றொரு முகத்தைப் பார்த்தேன். அதன் அழகைக் காண பிரகாசமாக இருந்த முகமூடியை நீக்க வேண்டிவந்தது.

நான் ஒரு வயதான முகத்தைப் பார்த்தேன். அது உணர்ச்சிகளை இழந்து, இருண்ட கோடுகளைக் கொண்டிருந்தது.

நான் ஒரு ஒளிரும் முகத்தைப் பார்த்தேன். அதில் அனைத்தின் வெளிப்பாடும் இருந்தது.

நான் எல்லா முகங்களுடனும் பழகினேன். என் கண்களெனும் நெசவுத் தொழிற்சாலையில் நெய்த போர்வை மூலம் பார்த்தபோது என்னால் அவற்றின் முழுமையான வடிவத்தைக் காண முடிந்தது.


கடற்கரையில்

நானும் என் ஆத்மாவும் சேர்ந்து பரந்து கிடக்கும் கடலில் குளிப்பதற்காகப் புறப்பட்டோம். கடற்கரையை அடைந்த நாங்கள் யாரும் இல்லாமல், மிகவும் அமைதியாக இருந்த ஒரு இடத்தைத் தேடிச் சென்றோம். ஒரு மனிதன் பாறையில் அமர்ந்து கொண்டு உப்பை எடுத்து நீருக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இந்த மனிதன் மிகவும் கவலையில் இருப்பவன்.’ என் ஆத்மா சொன்னது: ‘நாம் இங்கு குளிக்க வேண்டாம். வாருங்கள். இங்கிருந்து கிளம்பலாம்.’

நாங்கள் இன்னொரு இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒரு மனிதன் கருங்கல் பாறையில் ஏறி நின்றிருந்தான். அவன் தன் கையிலிருந்த பாத்திரத்திலிருந்து சர்க்கரையை எடுத்து கடலுக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இவன் ஒரு கற்பனைவாதி’ - என் ஆத்மா சொன்னது: ‘நம்முடைய நிர்வாண உடம்புகளை இவனிடம் காட்ட வேண்டாம்.’

மீண்டும் நாங்கள் நடந்தோம். கடற்கரையில், அங்கு ஒரு மனிதன் நின்றிருந்தான். அவன் இறந்துபோன மீன்களை இரக்கத்துடன் பொறுக்கி கடலுக்குள் எறிந்து கொண்டிருந்தான்.

‘இவனுக்கு முன்பும் குளிக்க முடியாது’ - என் ஆத்மா சொன்னது: ‘இவன் உலக பிணைப்பும் இரக்க குணமும் கொண்டவன்.’

நாங்கள் முன்னோக்கி மீண்டும் நடந்தோம். அங்கு மணலில் ஒரு மனிதன் படம் வரைந்து கொண்டிருந்தான். கடலின் அலைகள் அதை அழித்துக் கொண்டிருந்தன. எனினும், அவன் தன் வேலையில் மூழ்கிப் போயிருந்தான்.

‘இவன் ஒரு ரகசிய மனிதன்’ - என் ஆத்மா சொன்னது: ‘இவன் என் நிர்வாண உடலை எந்தச் சமயத்திலும் பார்க்கக் கூடாது.’

நாங்கள் அதற்குப் பின்பும் முன்னோக்கிச் சென்றோம். திடீரென்று யாரோ கூறும் சத்தம் கேட்டது: ‘இது ஆழமான கடல். பரந்து கிடக்கும் கடல்.’

நாங்கள் குரல் கேட்ட இடத்திற்குச் சென்றபோது, ஒரு மனிதன் கடலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றவாறு ஒரு முத்துச்சிப்பியை எடுத்து தன் காதோடு சேர்த்து வைத்துக் கொண்டு அதன் ஓசையைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

‘முன்னால் நட’ என் ஆத்மா சொன்னது.... ‘இந்த மனிதன் ஒரு யதார்த்தபவாதி. இவன் எந்தவொரு விஷயத்தைப் பற்றியும் முழுமையாக தெரிந்து கொள்ளாமல், அதற்கு முதுகைக் காட்டிக் கொண்டு அதன் ஏதாவதொரு பகுதியை மட்டும் கவனத்தில் எடுத்துக் கொண்டிருப்பவன்.

நாங்கள் பயணத்தைத் தொடர்ந்தோம். அப்போது சிறிது தூரத்தில் ஒரு மனிதன் பாறைகளுக்கு மத்தியில் இருந்த மணலில் தலையை வைத்துக் கொண்டிருந்தான்.’

‘சந்தேகப்பட வேண்டாம்’- நான் ஆத்மாவிடம் சொன்னேன்:

‘நாம் இங்கு குளிக்கலாம். இந்த மனிதன் நம்மைப் பார்க்க மாட்டான்.’

‘இல்லை...’ ஆத்மா சொன்னது: ‘இவன் மற்ற எல்லாரையும்விட ஆபத்தானவன்; தியாகியும் கூட.’

என் ஆத்மாவின் முகத்தில் வெறுப்பின் நிழல் படர்ந்தது. அது சாந்தமான குரலில் சொன்னது: ‘நாம் இங்கிருந்து கிளம்பலாம். நிம்மதியாக குளிப்பதற்கு ஏற்ற ஆள் அரவமற்ற ஒரு இடம் இங்கு இல்லை. நான் என்னுடைய பொன் நிற தலைமுடிகளை காற்றில் பறக்க விடவில்லை. நான் என்னுடைய மார்பை காற்றுக்குத் திறந்து விடவில்லை. என் நிர்வாணத்தை ஒளிரச் செய்ய வெளிச்சத்தை அனுமதிக்க வில்லை.’

நாங்கள் அந்தப் பெரிய கடலை விட்டு வேறொரு பரந்த கடலைத் தேடி நடந்தோம்.

தூக்கு மரம்

‘என்னைத் தூக்கில் போடுங்கள்’ - நான் மக்களைப் பார்த்துச் சொன்னேன்.

அவர்கள் கேட்டார்கள்: ‘நாங்கள் எதற்கு உன்னுடைய கொலைக் குற்றத்தைத் தலையில் போட்டுக் கொள்ள வேண்டும்?’

நான் அதற்குப் பதில் சொன்னேன்: ‘பைத்தியக்காரர்களைத் தூக்கில் போடாமல் உலகத்திற்கு எப்படி வளர்ச்சி உண்டாகும்?’

அவர்கள் நான் கூறியபடி என்னை தூக்கு மரத்தில் ஏற்றினார்கள். எனக்கு அதன் மூலம் மரணம் கிடைத்தது.

பூமிக்கும் வானத்திற்கும் நடுவில் தொங்கிக் கொண்டிருந்த என்னைப் பார்ப்பதற்காக அவர்கள் தலையை உயர்த்தினார்கள். அவர்கள் அப்படி தலையை உயர்த்தி பெரியவர்கள் ஆனார்கள். இதற்கு முன்பு அவர்கள் தலையை உயர்த்தியதை நான் அறிந்ததில்லை.

அவர்கள் என்னை வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தபோது ஒருவன் கேட்டான்: ‘எந்த பாவத்திற்காக நீங்கள் பிராயச்சித்தம் செய்கிறீர்கள்?’

மற்றொருவன் கேட்டான்: ‘இப்படி தூக்கில் தொங்கியதன் நோக்கம் என்ன?’

மற்றொருவன் கேட்டான்: ‘நீங்கள் இறந்ததன் மூலம் உலகத்தில் புகழ் பெற்ற மனிதனாக ஆகலாம் என்று நினைத்தீர்களா?’

நான்காவது மனிதன் சொன்னான்: ‘பாருங்கள்... என்ன புன்சிரிப்பு! இவ்வளவு பெரிய தண்டனைக்கு யாராவது மன்னிப்பு கொடுப்பார்களா?’

நான் எல்லோருக்குமாக பதில் சொன்னேன்: ‘நான் புன்னனை புரிவதாக நீங்கள் புரிந்து கொண்டால் போதும். குற்றத்திற்காகவோ, விடுதலைக்காகவோ நான் எந்தவொரு பிராயச்சித்தமும் செய்யவில்லை. என்னிடமிருந்து மன்னிப்பு கேட்கக் கூடிய அளவிற்கு எந்தவொரு குற்றத்தையும் நீங்கள் செய்யவில்லை. நான் மிகுந்த தாகம் கொண்ட மனிதனாக ஆகிவிட்டதால், என் இரத்தத்தைக் குடிக்க வாய்ப்பளிக்க வேண்டுமென்று உங்களிடம் நான் கேட்டுக் கொண்டேன். தன்னுடைய சொந்த குருதியைத் தவிர, வேறு எதைக் கொண்டு ஒரு பைத்தியக்காரனின் தாகத்தைத் தீர்க்க முடியும்? நான் ஒரு ஊமை. அதனால் என் வாயைக் கிழிக்க ஆசைப்பட்டேன். மரண உலகத்தின் இரவு பகல்களில் நான் கைதியாக இருந்தேன். அதனால் அதை விட பெரிய இரவு பகல்களின் வாசல்களைத் தேடிக்கொண்டு பிடித்தேன்.

இதற்கு முன்பு தூக்கு மரத்தில் ஏற்றப்பட்டவர்களுக்குப் பின்னால், நான் இதோ போகிறேன். தூக்கு மரத்தில் ஏறுவதை நாங்கள் வெறுக்கிறோம் என்று நினைக்காதீர்கள்.

நாங்கள் பெரிய இடங்களில், வீட்டில், வடிவங்களில் மக்கள் கடலிலிருந்து நிரந்தரமாக தூக்கில் ஏறிக் கொண்டுதான் இருக்கிறோம்.’ 

வானவியல் ஆராய்ச்சியாளன்

நானும் நண்பனும் சேர்ந்து போகும்போது நிழலில் ஒரு குருடன் அமர்ந்திருப்பதைப் பார்த்தோம்.

என் நண்பன் சொன்னான்: ‘இவன் நம் நாட்டிலேயே மிகப் பெரிய அறிவாளி.’

நண்பனிடமிருந்து விலகி நான் அந்த மனிதனின் அருகில் சென்று வணங்கினேன். பேச்சுக்கு மத்தியில் நான் கேட்டேன்: ‘‘மன்னிக்க வேண்டும். நீங்கள் எப்போதிலிருந்து குருடனாக ஆனீர்கள்?’’

அவன் சொன்னான்: ‘‘நான் பிறப்பிலேயே அப்படித்தான் இருந்தேன்.’’

‘‘நீங்கள் என்ன படித்திருக்கிறீர்கள்?’’

‘‘நான் ஒரு வானவியல் ஆராய்ச்சியாளன்-’’ அவன் தன் நெஞ்சில் கை வைத்துக்கொண்டு சொன்னான்: ‘‘நான் வானத்தில் இருக்கும் நவகிரகங்கள் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.’’


ஆசை

ன் சகோதரனான மலைக்கும், சகோதரியான கடலுக்கும் மத்தியில் நான் இருக்கிறேன். நாங்கள் மூவரும் தனியாக இருக்கும்போது ஒரே மாதிரியானவர்கள். எங்களைப் பிணைத்திருக்கும் அன்பு ஒன்றோடொன்று நெருக்கமானதும், ஆழமானதும், ஆச்சரியமானதும், நினைத்துப் பார்க்க முடியாததும், கண்ணால் பார்க்க முடியாததும் ஆகும். அதன் ஆழம் என் சகோதரியிடம் இருப்பதை விட அதிகம். அதன் சக்தியோ என் சகோதரனிடம் இருப்பதை விட அதிகம். அது என் பைத்திய நிலையை விட வினோதமானது.

பல யுகங்கள் கடந்து விட்டன. நாங்கள் முதல் புலர் காலைப் பொழுதின்போது ஒருவருக்கொருவர் நன்கு தெரிந்தவர்கள் என்றாலும், நாங்கள் குழந்தைப் பருவ - இளமைப் பருவ மரணங்களைப் பார்த்தவர்கள் என்றாலும், அதற்குப் பிறகும் இளமை எண்ணங்கள் கொண்டவர்களாக, ஆவேசம் உள்ளவர்களாக, இனிமையாக வாழ்கிறோம். எங்களின் இதயத்தில் ஆசைகளும், பேராசைகளும் இருக்கின்றன என்றாலும் நாங்கள் எல்லா நேரத்திலும் தனிமையானர்களே. யாரும் அருகில் வராமல், கால ஓட்டத்தில் நாங்கள் ஒருவரையொருவர் தழுவிக் கொள்கிறோம். எனினும், நாங்கள் சந்தோஷத்துடன் இல்லை. அழுத்தப்பட்டிருக்கும் ஆசைகள், பேராசைகள் ஆகியவற்றுக்கு எங்கு அமைதி கிடைக்கும்?

என் சகோதரியின் படுக்கைக்கு வெப்பம் தரும் நெருப்புக் கடவுள் எங்கு இருக்கிறான்? சகோதரனின் இதயத்தைக் குளிரச் செய்யும் சக்திகள் எங்கே? என் மனதை அடக்கி ஆளும் அந்த அழகி எங்கே?

என் சகோதரி இரவின் அமைதியில் வெப்பம் தரும் நெருப்புக் கடவுளை எதிர்பார்த்துக் கொண்டு காத்திருக்கிறாள். சகோதரன் குளிர் தேவதையை அழைத்து அழுது கொண்டு இருக்கிறான். ஆனால், யாரை அழைப்பது? தெரியவில்லை.

நான் இங்கு சகோதரனான மலைக்கும, சகோதரியான கடலுக்கும் மத்தியில் இருக்கிறேன். எங்களை ஒருவரோடொருவர் பிணைத்திருக்கும் அந்த அன்பு மிகவும் ஆழமானது. அசாதாரணமானது. கண்ணால் பார்க்க முடியாதது. பலமானது.

புல் கூறியது

லையுதிர் காலத்தில் கீழே விழுந்த இலைகளைப் பார்த்து புல் சொன்னது: ‘நீங்கள் விழும்போது எதற்காக ஓசை உண்டாக்க வேண்டும்? இந்த ஓசை, என்னுடைய ஆழமான அமைதியைக் கெடுக்கிறது.

அதைக்கேட்டு இலைகளுக்கு கோபம் வந்தது. அவை கூறின: ‘முட்டாளே பாடலைப் பற்றித் தெரியாத புல்லே, காற்றில் பறக்க முடியாத உனக்கு ராகத்தின் இனிமையைப் பற்றி என்ன தெரியும்?’

இலைகள் நிலத்தில் விழுந்து உறக்கத்தில் ஆழ்ந்தன. அவற்றின் கண்கள் வசந்த காலத்தில் திறந்தன. அப்போது அவை புற்களாக மாறி விட்டிருந்தன.

இலையுதிர் காலம் மீண்டும் வந்தது. குளிரில் புல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தது. சுற்றிலும் கூடியிருந்த இலைகளைப் பார்த்து புல் கோபப்பட்டது. ‘இந்த இலையுதிர் காலத்தில் இலைகள் ஒன்றோடொன்று சண்டை போட்டு என் சுகமான உறக்கத்தைக் கெடுக்கின்றன.’

பார்வை

ரு நாள் கண் சொன்னது: ‘இந்த அடிவாரத்தைத் தாண்டி இருக்கும் பனி படர்ந்த மலைகள் எவ்வளவு அழகானவை.’

காது அதைக் கேட்டு சிறிது சிந்தித்தவாறு சொன்னது: ‘மலை எங்கே இருக்கிறது? என்னால் அதைக் கேட்க முடியவில்லையே!’

கை சொன்னது: ‘தொடவோ, என்னால் உணரவோ முடியவில்லை. எனக்கு ஒரு மலையும் கிடைக்கவில்லை.’

மூக்கு சொன்னது: ‘இங்கு ஒரு மலையும் இல்லை. எனக்கு அதன் ஒரு வாசனையும் தெரியவில்லை.’

கண் திரும்பிப் பார்த்தது. அதைப்பற்றி மூவரும் ஆச்சரியத்துடன் விவாதித்துக் கொண்டிருந்தார்கள்.

அவர்கள் கூறினார்கள்: ‘கண்ணுக்கு ஏதோ பிரச்னை! அது மட்டும் உண்மை.’

இரண்டு முக்கிய மனிதர்கள்

ரு பழமையான நகரத்தில் இரண்டு முக்கிய மனிதர்கள் இருந்தார்கள். முற்றிலும் மாறுபட்ட கொள்கைகளைக் கொண்டவர்கள் அவர்கள். எந்த நேரத்திலும் ஒருவரையொருவர் கிண்டல் பண்ணிக் கொண்டு அவர்கள் இருப்பார்கள். அவர்களில் ஒருவர் கடவுள் நம்பிக்கை கொண்டவர். இன்னொருவர் கடவுள் மறுப்பாளர்.

கடை வீதியில் அவர்கள் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். தங்களைப் பின்பற்றும் மனிதர்கள் முன்னால் அவர்கள் இருவருக்குமிடையே பலத்த வாக்குவாதம் நடைபெற்றது. கடவுளுக்கு ஆதரவாகவும், அவருக்கு எதிராகவும் நீண்ட நேரம் சண்டை போட்டு விட்டு அவர்கள் பிரிந்து சென்றார்கள்.

அன்று மாலையில் தேவாலயத்திற்குச் சென்ற கடவுள் மறுப்பாளர் தன்னுடைய பாவச் செயல்களைச் சொல்லி மன்னிப்பு கேட்டார். அதே நேரம் கடவுள் நம்பிக்கையாளராக இருந்தவர், தனக்குள் இருந்த கடவுள் பற்றிய சிந்தனைகளை விட்டெறிந்து விட்டு தான் வைத்திருந்த வேத நூல்களை நெருப்புக்கு இரையாக்கினார். அதற்குப் பிறகு அவர் கடவுள் மறுப்பாளராக மாறிவிட்டார்!

கவலை பிறந்த போது

வலை பிறந்த போது நான் அதை கவனம் செலுத்தி அக்கறையுடன் வளர்த்தேன்.

மற்ற எல்லா விஷயங்களையும் போல என்னுடைய சுக துக்கங்களும் வளரத் தொடங்கின- பலமாக, அழகாக மகிழ்ச்சியுடன்.

நாங்கள் ஒருவர் மீது ஒருவர் பாசமாக இருந்தோம். எங்களைச் சுற்றி இருந்த உலகத்தை நேசித்தோம்.

சினேகத்தின் மென்மைதான் துக்கத்தின் இதயத்தில் இருக்கிறது. என் இதயம் கவலைகளால் நிறைந்த ஈரத்துடன் இருந்தது.

நானும் என்னுடைய கவலைகளும் மகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டிருந்தபோது பகல் விரிந்த சிறகுகளுடன் பறந்து செல்லும். கனவுகள் கொண்ட இரவு. பேச்சில் திறமைசாலி துக்கம். அதன் மூலம் நானும் பேசுவதில் திறமைசாலியாக மாறினேன்.

நானும் என் துக்கமும் ஒன்றாக அமர்ந்து பாடுவது உண்டு. எங்களின் பக்கத்து வீட்டுக்காரர்கள் சாளரத்தைத் திறந்து வைத்துக் கொண்டு அதைக் கேட்பார்கள். கடலைப் போல, ஆழமானது எங்களின் பாட்டு. ஆச்சரியத்தின் நினைவுகள் எங்களின் குரல்களில் ஒளிந்து கிடந்தன.

நானும் என் துக்கமும் ஒன்று சேர்ந்து பயணம் செய்யும்போது மக்கள் பாசத்துடன் எங்களைப் பார்த்து இனிய குரலில் பாடுவார்கள். ஆனால், சிலர் எங்களை வெறுக்கவும் செய்தார்கள். அதற்குக் காரணம் - என் துக்கம் மதிப்பு மிக்கதாக இருந்தது. எனக்கும் என் துக்கத்தின் மீது மரியாதை இருந்தது. சாதாரணமாக அழியும் பொருட்களைப் போல என் துக்கமும் அழிந்து போனது! அழுவதற்கு நான் மட்டும் எஞ்சி நின்றேன்.

நானொன்று கூறட்டுமா? இனிமேல் என் குரல் என் செவிகளுக்குள் நுழையும் திரிசூலமே. நான் பாடும்போது பக்கத்து வீட்டுக்காரர்கள் கேட்பதற்கு காத்து நிற்பதில்லை. நான் நடக்கும்போது அவர்கள் பார்ப்பதற்காக நிற்பதில்லை.

முழுமையான வேதனை நிறைந்த குரல்கள் இப்போது என் காதுகளில் கேட்கின்றன.

‘அதோ பாருங்கள், அவனிடம் இப்போது கவலைகள் இல்லை!’


மகிழ்ச்சி உண்டான போது

னக்கு மகிழ்ச்சி உண்டானபோது நான் அதை மடியில் எடுத்து வைத்துக் கொண்டு, மாளிகை மீது ஏறி பக்கத்து வீட்டுக்காரர்களை அழைத்துச் சொன்னேன்: ‘நண்பர்களே, இங்கே வாருங்கள். என் வீட்டில் மகிழ்ச்சி பிறந்திருக்கிறது. இங்கே கொஞ்சம் பாருங்கள். அது இதோ சூரியனின் ஒளியில் குலுங்கிக் குலுங்கி சிரிக்கிறது.’

ஆனால், என் மகிழ்ச்சியில் பங்கு கொள்ள பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதைப் பார்த்து எனக்கு ஆச்சரியம் உண்டானது.

இப்படியே ஏழு மாதங்கள் மாளிகை மீது ஏறி என்னுடைய மகிழ்ச்சி பிறந்த விஷயத்தை கைகளைத் தட்டி நான் அறிவித்தேன்.

ஒருவர் கூட திரும்பிப் பார்க்கவில்லை. நானும் என்னுடைய மகிழ்ச்சியும் தனித்து இருந்தோம். யாரும் அதைப் பற்றி விசாரிக்கவில்லை. பார்ப்பதற்கு வரவில்லை.

என்னைத் தவிர வேறு யாரும் அதை அனுபவிப்பதற்கு இல்லை என்று ஆனபோது, என் மகிழ்ச்சிக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது. அதன் உதடுகளில் ஒருவர் கூட முத்தம் தரவில்லை.

அந்த தனிமை வாழ்க்கையின் ஞாபகச் சின்னத்தைப் போல மகிழ்ச்சி, வாசலைக் கடந்தது.

என்னுடைய இழக்கப்பட்ட மகிழ்ச்சியைப் பற்றி நான் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மகிழ்ச்சி, நினைவுகளில் மட்டும். எவ்வளவு கஷ்டம்! நொடிப்பொழுது நேரம் காற்றில் அசைந்து முணுமுணுத்துவிட்டு, பிறகு என்றென்றைக்குமாக அமைதியில் மூழ்கிவிடும் இலையுதிர்கால இலைகளே அந்த நினைவுகள்.

முழு உலகம்

வேரற்ற ஆத்மாக்களின் தேவதையே, நீ தேவர்களுக்கு மத்தியில் உன்னை இழந்திருக்கிறாய். நான் கூறுவதைக் கொஞ்சம் கேள்.

பைத்தியக்காரர்களும், அனாதைகளுமான எங்களைக் காப்பாற்றும் நல்லவனான கடவுளே, நான் கூறுவதைக் கேள்.

முழுமையற்ற நான் முழுமையான சமூகத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

மனிதத்தன்மையின் எஞ்சிய இழக்கப்பட்ட தத்துவங்களின் தெளிவற்ற கூட்டு நான்தான். நான் முழுமையான உலகத்தின் வழியாக நடக்கிறேன். என் நண்பர்களின் சட்டங்கள் முழுமையற்றவை. நடைமுறைகளின் தெளிவும், எண்ணங்களின் எளிமையும் மகிழ்ச்சி நிறைந்த கனவுகளும், ஒளிரும் முழுமையான காட்சிகளும்...

கடவுளே, நீங்கள் நல்ல செயல்களை எடுத்துக் கொள்வதும் கெட்ட செயல்களை நிராகரிப்பதுமாக இருக்கிறீர்கள். அதற்கும் மேலாக, தூசிக்குள்ளிருந்து பாவ புண்ணியங்கள் சம்பந்தப்பட்டவற்றைப் பகுத்துப் பிரித்தெடுத்து அவற்றைப் பட்டியலிட்டு வைக்கிறீர்கள். இரவையும், பகலையும் செயல் புரிவதற்கான நேரமாக மாற்றுகிறீர்கள். சட்டங்கள் உருவாக்கி ஆட்சி செய்கிறீர்கள்.

தின்பது, குடிப்பது, படுப்பது, தூங்குவது, ஆடுவது, பாடுவது, விளையாடுவது, சிரிப்பது, வேலை செய்வது, ஓய்வு எடுப்பது, ஒரு தனிப்பட்ட முறையில் சிந்தித்து ஒரு எல்லை வரை அனுபவிப்பது –

வானத்தின் விளிம்பில் ஒரு சிறப்பு நட்சத்திரம் தோன்றும்போது இப்படிப்பட்ட சிந்தனைகளின் சிலிர்ப்பிலிருந்து விடுதலை ஆவது.

புன்னகை புரிந்தவாறு பக்கத்து வீட்டுக்காரனிடம் கொள்ளையடித்த பணம் முழுவதையும் கையிலிருந்து தானம் செய்வது-

சாமர்த்தியமாக ஒருவனைப் புகழ்வதும், வேறொருவனை நட்புடன் வெறுப்பதும்- வார்த்தைகளால் ஒருவனைக் கொல்வது, வேறொருவனை வாழ விடுவது-

சட்டப்படி அன்பு செலுத்த வேண்டியது பகல் வேலை முடிந்து கைகளைக் கழுவிய பிறகுதான். மனதில் தீர்மானம் எடுத்து ஆத்மாவை சந்தோஷப்படுத்த வேண்டும். கெட்ட ஆவிகளை வணங்கி சாத்தானை நண்பனாக்கிக் கொள்ள வேண்டும். ஞாபக சக்கதி இல்லாமற் போய் விட்டதைப் போல இறுதியில் எல்லாவற்றையும் மறந்து விட வேண்டும்.

எண்ணங்களைத் திருப்பி விடுவது ஒரு தனியான தேசத்திற்குப் பின்னால், சிந்தனையின் ஆழம் கொண்டு அதை விடுதலை செய்ய வேண்டும். இனிமையுடன் எப்போதும் இருக்க வேண்டும். நட்புடன் எல்லாவற்றையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். இறுதியில் பாத்திரத்தைக் கவிழ்த்து வைத்துவிட்டு, அடுத்த நாள் திரும்பவும் அதை நிரப்பலாம்.

கடவுளே, முதலிலேயே இவற்றையெல்லாம் நினைத்துப் பார்க்கிறேன். முழுமையான நோக்கத்துடன் தான் நீங்கள் படைத்திருக்கிறீர்கள். மிகவும் கவனமாக பார்த்துக் கொள்ளப்படுகிறது. சட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. விவாதங்கள் வழி காட்டுகின்றன. ஒரு கடுமையான சட்டம் கொன்று மண்ணுக்குள் மூடிவிடுகிறது. எனினும், அமைதியான கல்லறைகளில் மனித ஆத்மாக்கள் இருக்கின்றன என்று நினைத்து நினைவுக் கம்பங்கள் உண்டாக்கப்படுகின்றன.

முழுமையான உலகம் இதுதான். இது மிகமிக உன்னதமான ஒரு இடம். மகானான குருவின் உலகம்.. தெய்வத்தின் தோட்டத்திலிருந்து விழுந்த பழுத்த பழம்.. உலகத்தின் மிக அழகான வெளிப்பாடு.

ஆனால், நான் எதற்காக இங்கு வந்தேன்? தேவையற்ற ஆசைகளின் பக்குவமற்ற எச்சம். தெற்கு, வடக்கு எதுவும் தெரியாமல் அலைந்து திரிந்த கொடுங்காற்று. எரிந்து ஒளிரும் நட்சத்திர கண்டம். அதுதான் நான்.

வேரற்றுப் போன ஆத்மாக்கள் வணங்கும் தேவதையே, தேவர்கள் மத்தியில் இழக்கப்பட்ட நீ கூறு, நான் எதற்காக இங்கு வந்தேன்?

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.