Logo

ராச்சியம்மா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 9439
raachiyamma

தினொரு வருடங்களுக்குப் பிறகு ராச்சியம்மாவைப் பார்த்தபோது, அவளிடம் தெரிந்த மாற்றங்களைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டதற்குக் காரணம் - அவளிடம் மாற்றங்கள் உண்டாகி இருக்கும் என்று அதுவரை நான் நினைக்காமல் இருந்ததே.

நீலகிரியை விட்டுப்போன பிறகு பல்வேறு சமயங்களில் நான் ராச்சியம்மாவைப் பற்றி நினைத்துப் பார்த்திருக்கிறேன். கருங்கல் சிலையைப் போல இருக்கும் அந்த உடம்பும் அந்த தைரியமும் மனதை விட்டு எப்போதும் நீங்குமென்று நான் நினைத்ததில்லை. ஆனால், காலம் என்ற அந்த பெரிய வினோதத்திற்கு மத்தியில் எல்லாம் மறைந்து, மறைந்து போகின்றன. இருந்தாலும் எப்போதாவது ஒருமுறை  ராச்சியம்மாவை நான் நினைக்காமலில்லை.

இருட்டில் கையை வீசிக் கொண்டு குதித்தவாறு நடந்து வரும் ராச்சியம்மாவைப் பார்த்துப் புரிந்து கொள்ள முடியாது. கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். கைகளில் அணிந்திருக்கும் வெள்ளி வளையல்கள் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்கும்.

இளம் நீல வண்ண ஆகாயத்திற்குக் கீழே அகம்பாவத்துடன் கிடக்கும் பச்சை மலைகளின் இருட்டும் கம்பீரமும் ராச்சியம்மாவை எப்போதும் எனக்கு ஞாபகப்படுத்தின.

அந்த ராச்சியம்மாவா எனக்கு முன்னால் நின்று கொண்டுஇருப்பது?

நான் இன்னொரு முறை உற்றுப் பார்த்தேன். கருத்து நீண்ட விரல் நுனியிலிருக்கும் நிலவுத் துண்டுகளுக்கு இப்போதும் பிரகாசமும் சுத்தமும் இருக்கவே செய்கின்றன. மூக்கும் கண்களும் இப்போதும் அப்படியேதான் இருக்கின்றன. டார்ச் விளக்கு அடிப்பதைப் போன்ற சிரிப்பிலும் மாற்றமில்லை. டார்ச்சில் இருக்கும் பேட்டரிக்கு சிறிது சக்தி குறைவு உண்டாகியிருப்பது மட்டும் தெரிந்தது. ராச்சியம்மாவின் தலையில் ஒன்றிரண்டு வெள்ளிக் கோடுகள் தெரிந்தன. அவை மனதை என்னவோ செய்தன. தேவையில்லாத இடத்தில் அவை வந்து ஏறியிருக்கின்றன.

பதினோரு வருடங்கள் எவ்வளவு வேகமாகப் பாய்ந்தோடி இருக்கின்றன! இருந்தாலும் ராச்சியம்மாவிடம் இவ்வளவுதான் மாற்றங்களா என்பதுதான் சிந்திக்கக் கூடிய ஒரு விஷயமாக இருந்தது. இதற்கு மேலும் ஏதாவது மாற்றங்கள் இருக்குமா என்பதைப் பற்றி சிந்திக்க முடியவில்லை.

மிஸஸ் நாயர் ஞாபகப்படுத்தினாள்: "ராச்சியம்மாவை ஞாபகத்தல இருக்கா?''

நான் பதில் சொல்லவில்லை. வெறுமென புன்னகை செய்தேன். மிஸஸ் நாயர் வீட்டுச் சொந்தக்காரி என்ற முறையில் செய்ய வேண்டிய மரியாதையைச் செய்தாள். ராச்சியம்மாவை எனக்கு யாரும் அறிமுகம் செய்து வைக்கவில்லை. நீலகிரி வயநாட்டிற்கு உத்தியோகம் பார்ப்பதற்காக வந்து நான்கு நாட்கள் கழிந்திருக்கின்றன. அப்போது அங்கு ஹோட்டல்கள் இல்லை. கடையில்லை என்று சொல்ல முடியாது. தேயிலைத் தோட்டங்களில் வேலை பார்க்கும் தொழிலாளர்களிடமிருந்து பணம் பறிப்பதற்கும் கள்ளக் கடத்தல் செய்ய உதவுவதற்கும் ஒரு கடை இருக்கவே செய்தது. அங்கு வாங்கிய சோப்பை உடம்பில் தேய்த்துக் குளித்தால் அரிப்பு உண்டாகும். கடுகைப் போட்டுத் தாளித்தால் கூட்டு எலியைப்போல மணக்கும்.

நான் எங்கு தங்குவது? எங்கு உணவு உண்பது?

நண்பர்கள் ஒரு வீட்டையும் ஒரு சமையல்காரனையும் ஏற்பாடு செய்து தந்தார்கள். அந்தக் கட்டடத்தை வீடென்றும் அந்தச் சிறுவனை சமையல்காரனென்றும் அழைக்கவே நான் விருப்பப்பட்டேன்.

நான் மிகவும் மகிழ்ச்சியுள்ள மனிதனாக இருக்கவே ஆசைப்பட்டேன். உயிர்ப்பு என்ற அற்புதமும் நினைத்துப் பார்க்க முடியாத சக்தியும் கொண்ட மகாபிரவாகம், எப்படிப்பட்ட மலைச் சரிவுகள் வழியாகவும் கற்பாறைகள் வழியாகவும் அருவிகள் வழியாகவும் பாய்ந்து ஓடிக் கொண்டிருக்கிறது என்பதையும், வானத்தின் நிற மாற்றங்கள் அதற்கு எப்படியெல்லாம் வடிவப் பரிணாமங்கள் உண்டாக்கித் தருகின்றன என்பதையும் யாரால் கூற முடியும்?

மூன்றாவது நாள் நான் என் தாய்க்கு கடிதம் எழுதினேன். "நான் இங்கு நலமாக இருக்கிறேன். நல்ல இடம். நல்ல மனிதர்கள்." எழுதி வைத்த கடிதத்தின் வெளிப்பகுதியில் வெண் கரையான்கள் நடமாடிக் கொண்டிருந்தன.

அப்போதுதான் ராச்சியம்மா வந்தாள். எல்லையில் வேலியைப் போல வளர்ந்து நின்றிருக்கும் காட்டுச் செடிகளைக் கையால் ஒதுக்கியவாறு வாசலில் வந்து நின்ற அவள் அழைத்தாள்:

"டேய் பையா!''

விறகு பிளந்து கொண்டிருந்த என்னுடைய சமையல்காரனுக்கு அவள் அப்படி அழைத்தது சிறிதும் பிடிக்கவில்லை என்று நினைக்கிறேன். இருந்தாலும் பதில் சொல்வதற்கு தைரியம் வந்ததைப்போல விழித்துக் கொண்டு நின்றான்.

"உன் முதலாளி இங்கே இல்லியா?''

"என்ன வேணும்?''

"உன்கிட்ட இல்ல. உன் முதலாளிக்கிட்டத்தான் நான் சொல்லுவேன். இங்கே ஆள் இருக்கா?''

"இருக்காரு.''

"கூப்பிடு...''

ஒரு காட்டுக் கொம்பைப் பிடித்து இழுப்பதற்கிடையில் அவள் சொன்னாள்.

நான் எல்லாவற்றையும் ஜன்னல் வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன். அவளை ஏதோ கரும்பாறை பெற்றெடுத்து வெளியே எறிந்திருப்பதாக நான் நினைத்தேன்.

பையன் வந்து சொன்னபோது, எதுவுமே தெரியாததைப்போல நான் வாசல் பக்கம் வந்தேன். என்னைக் கண்டவுடன் அவள் சிறிது நேரம் உற்றுப் பார்த்துவிட்டுக் கேட்டாள்.

"உங்களுக்கு பால் வேணுமா?''

"வேணும்.''

"அப்படின்னா அதைச் சொல்லாம எனக்கு எப்படித் தெரியும்? எத்தனை புட்டி வேணும்?''

"ஒண்ணரைப் புட்டி.''

"காலையில எத்தனை?''

"அரை.''

"சரி... டேய் பையா, நாளையில இருந்து வந்து வாங்கிட்டுப் போ.''

"இங்கே கொண்டு வந்து தரக் கூடாதா?''

"சுட வச்சி, சுண்ட வச்சி, சர்க்கரை போட்டுக் கொண்டு வரட்டுமா?''

பையனுக்கு என்னவோ சொல்ல வேண்டும்போல் இருந்தது. அவன் என் முகத்தைப் பார்த்துவிட்டு, விறகுக் கட்டைகளை எடுத்து சமையலறைப் பக்கம் போனான்.

அவள் பிறகும் வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பதைப் பார்த்துவிட்டு நான் கேட்டேன்:

"நாளையில இருந்து பால்...''

"தர்றேன். ஆனா, உங்க பையனை வந்து வாங்கிட்டு வரச் சொல்லணும்''.

"அவனுக்கு இடம் தெரியாம இருக்கும்.''

"வாயில நாக்கு இருக்குல்ல? கேட்கட்டும். பால்காரி ராச்சியம்மான்னு சொன்னா எல்லாருக்கும் தெரியும். புரியுதா?''

"ஓ...''

அவள் மீண்டும் உற்றுப் பார்த்துவிட்டு, பின்பக்கம் திரும்பி காட்டுச் செடிகளைக் கையால் நீக்கியவாறு நடந்து போனாள்.

திடீரென்று புதர்களின் மறைவில் இருந்தவாறு அவளின் குரல் கேட்டது: "வடக்குப் பக்கம் இருக்குற மலைச் சரிவில்தான் நம்ம வீடு. பையன்கிட்ட சொல்லுங்க...''

பன்றி நுழைந்த நெல் வயலைப்போல காட்டின் மேற்பகுதியில் உண்டான அலை இப்படியும் அப்படியுமாய் வளைந்து சிறிது நேரத்தில் தூரத்தில் மறைந்துபோனது.

சிறு வயதில்- படிக்கும் காலத்தில் படித்த வரியை நான் நினைத்துப் பார்த்தேன். "இவளுக்கு பயந்து யாரும் நேர்வழியில் நடப்பதில்லை..."

மறுநாள் பால் வாங்கச் சென்ற பையன் ராச்சியம்மாவின் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை என்று சொல்லிக் கொண்டு திரும்பி வந்தான்.

ஐந்து நிமிடம் ஆகவில்லை. காட்டுச் செடிகளுக்கு மத்தியில் இருந்து ராச்சியம்மா ஒரு அலுமினியப் பாத்திரத்துடன் வந்து கொண்டிருந்தாள்.


"டேய் பையா, நீ மலைச் சரிவில வந்து முழிச்சி நின்னுட்டு திரும்பி வந்துட்டேல்ல? இந்தா பால்...''  அவள் எனக்கு நேராகப் பார்த்துவிட்டுத் தொடர்ந்தாள்: "நாளைக்கு நான் கொண்டு வர மாட்டேன். அது மட்டும் உண்மை. இந்தப் பையனுக்கு அறிவே கிடையாதா?''

பையன் முகத்தை ஒரு மாதிரி கோணலாக வைத்துக் கொண்டான். பால் பாத்திரத்தை வாங்கிக் கொண்டு உள்ளே போகும்போது ராச்சியம்மா எனக்கருகில் வந்து சொன்னாள்: "நீங்க மலையாளின்னு பிறகுதான் எனக்கே தெரிஞ்சது...''

"அப்படியா? ராச்சியம்மா, உன்னோட ஊர் எது?''

"மைசூர்...''

ஒரு கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்தவள் இவ்வளவு நன்றாக மலையாளம் பேசுவதைக் கேட்டபோது உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்தது.

"ராச்சியம்மா, நீ இங்கே வந்து எவ்வளவு காலமாச்சு?''

"நான் இங்க வந்தவ இல்ல...''

"பிறகு?''

"என்னோட அம்மாவோட அம்மாவை இங்கே கொண்டு வந்தாங்க.''

"யாரு?''

ராச்சியம்மாவிற்கு வெட்கம் வந்துவிட்டது. அவளிடமிருந்து நான் அதை எதிர்பார்த்தேன். அவள் சொன்னாள்: "உங்க கேரளத்தைச் சேர்ந்த ஊர்க்காரர் ஒருத்தர் அவங்களைக் கொண்டு வந்துட்டாரு.''

"மலையாளியா?''

"ஆமா...''

"உன் அப்பா?''

"முனியப்பன்...''

மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த ராச்சியம்மாவைப் பார்ப்பதற்கே சுவாரசியமாக இருந்தது. அப்போது பையன் பாத்திரத்தைத் திருப்பிக் கொண்டு வந்தான். பாத்திரத்தை வாங்கிக் கொண்டு காட்டை நோக்கி காலை எடுத்து வைக்கும்போது ராச்சியம்மா சொன்னாள்:

"பையா, நாளைக்கு நீ வரலைன்னா முதலாளி பால் குடிக்க முடியாது...''

மறுநாள் பையன் இடத்தைக் கண்டுபிடித்துப் பால் வாங்கி கொண்டு வந்தான்.

ஒரு வாரத்திற்கு ராச்சியம்மாவைப் பார்க்க முடியவில்லை.

அன்று மாலையில் அலுவலகத்தை விட்டு வரும்போது, பாதையில் ஒரு ஆரவாரம் கேட்டது. அங்கு பார்த்தால், ராச்சியம்மா யாரையோ திட்டிக் கொண்டிருந்தாள்: "டேய் தெருப் பொறுக்கி நாயே, துடைப்பக் கட்டையை எடுத்து உன் முகத்துல அடிச்சா எப்படி இருக்கும் தெரியுமா? பட்டினி கிடந்து பல்லை இளிக்கிறப்போ காசு கடன் தந்தது என் தப்பு. காசு கையில வந்ததும் எனக்குத் திருப்பித் தராம ஏமாத்தப் பாக்குறியா? நான் யாருன்னு உனக்கு இன்னும் சரியா தெரியாது போல இருக்கு.''

ராச்சியம்மாவின் முன்னால் நின்று கொண்டிருந்த இளைஞன் "ஷல்கவ்ய"த்தில் இருந்தான். அவன் தயங்கியவாறு சொன்னான்: "நான் நாளைக்கு..."

"இப்பவே நான் கொடுத்த காசு என் கைக்கு வரணும்.''

ராச்சியம்மா அந்த இளைஞனிடமிருந்து பணத்தை எண்ணி வாங்கினாள். அந்த இளைஞன் முகத்தை "உர்" ரென்று வைத்துக் கொண்டு திரும்பிப் போக முயன்றபோது ராச்சியம்மா சொன்னாள் "நில்லு...''

"எதுக்கு?''

"இந்தா, இதை வச்சுக்கோ. வட்டி எதுவும் வேண்டாம். முதலை திருப்பித் தந்துட்டேல்ல. அந்த சந்தோஷம் எனக்கு போதும் மகாராஜா.''

இளைஞன் பணத்தைத் திரும்ப வாங்க விரும்பவில்லை. அவனுடைய கவுரவம் பாதிக்கப்பட்டு விட்டதைப்போல் அவன் உணர்ந்தான். ராச்சியம்மா உரத்த குரலில் கத்தினாள்:

"வாங்கிக்கோ...''

அவன் கையை நீட்டினான். அவள் காசை அவன் கையில் தந்தாள். ராச்சியம்மா கோபத்துடன் அவன் முகத்தையே பார்த்தாள்.

எதையும் பார்க்காததைப்போலவும் எதையும் புரிந்து கொள்ளாததைப்போலவும் பாலத்தின்மீது நின்றிருந்த எனக்கு முன்னால் வந்தபோது ராச்சியம்மா தயங்கிக் கொண்டே சொன்னாள்.

"அந்தப் பையன் பயங்கர போக்கிரி. பணம் வாங்கினா திருப்பிக் கொடுக்குறது இல்ல. இப்போ அதை நான் வாங்கலைன்னா கையில இருக்குற பணம் முழுவதையும் பீர் கடையில கொண்டுபோய் செலவழிச்சிட்டுத்தான் வேற வேலை பார்ப்பான்.''

என்னிடமிருந்து ஒரு பதிலை ராச்சியம்மா எதிர்பார்ப்பது மாதிரி தெரியவில்லை. பிறகு எதற்கு என்னிடம் அந்த விஷயத்தை மன்னிப்புக் கேட்கிற தொனியில் விவரித்துச் சொல்ல வேண்டும்? ராச்சியம்மா கடந்து போனபோது அந்தப் பழைய வரி ஞாபகத்தில் வந்தது- "அவளுக்கு பயந்து யாரும்..."

ராச்சியம்மா இந்த விஷயத்தையெல்லாம் நினைத்துப் பார்ப்பாளா? டார்ச் அடிப்பதைப்போன்ற அந்தச் சிரிப்பு இப்போதும் உதட்டில் மலரத்தான் செய்கிறது. எனினும், அந்தப் புன்சிரிப்பை கவலை ஆக்கிரமித்து விட்டிருக்கிறதோ என்றோரு தோணல்.

கன்னங்களில் பழைய சதைப் பிடிப்பு இப்போதும் இருக்கும் அதே நேரத்தில், சிறிய முல்லைப் பூக்களை தலையில் சூடியிருந்த ராச்சியம்மாவின் செயலை உண்மையிலேயே கற்பனை பண்ணி பார்க்க முடியவில்லை.

"என்னைத் தெரியுதா?''

"தெரியுது, ராச்சியம்மா.''  நான் மன்னிப்பு கேட்கிற தொனியில் சொன்னேன். அது உண்மையிலேயே பொய்யானது. நன்றி கெட்டவனே என்று என்னை நானே அழைக்க வேண்டும்போல் எனக்குத் தோன்றியது.

நான் மலைமீது ஏறும்போதுகூட ராச்சியம்மாவைப் பற்றி நினைக்கவில்லை. ஒன்றின் தோள்மீது இன்னொன்றாக தலையைச் சாய்த்துக் கொண்டு பரந்து கிடக்கும் பச்சை மலைகளையும் காட்டுக்குள்ளிருந்து திடீரென்று தோன்றி குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருக்கும் அருவிகளையும் பார்த்தபோது நான் எதனால் ராச்சியம்மாவை நினைக்கவில்லை?

காலம் என்பது உண்மையிலேயே  ஒரு குரூரமான வினோதம்தான். பச்சை மலைகளுக்கு வெள்ளை நிறத்தில் கரை இடுகின்ற நடைபாதைகள் பல சம்பவங்களையும் மனிதர்களையும் ஞாபகத்தில் கொண்டு வந்தன. கண்ணீரும் குருதியும் பிணங்களும் விழுந்த நடைபாதைகள். அவை தேயிலைச் செடிகளுக்கு உரமாக இருக்கும். ஆரஞ்சு பீக்கோ! காஸ்பியன் கடற்கரையிலோ கிறிஸ்துமஸ் தீவிலோ ஃப்ரெஞ்ச் கேபரேக்களிலோ தேன்நிலவு கொண்டாடும் இளைஞர்களும் இளைஞிகளும் பாராட்டிக் கொண்டிருப்பார்கள்! மணமுள்ள இந்தியன் ஆரஞ்சு பீக்கோ!

கண்ணீரில் உப்பும் குருதியும் இனிப்பும் சேர்ந்து மணமாக மாறிய கதையைப் பற்றி நினைத்தபோதுகூட ராச்சியம்மா ஞாபகத்தில் வரவில்லை.

எத்தனையெத்தனை மாற்றங்கள்! பாறையோரத்தில் இருக்கும் கட்டடங்கள் மனிதர்கள் வசிக்கக் கூடிய இடங்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. மருத்துவமனை பெரியதாக மாறியிருக்கிறது. நிறைய கார்களும் லாரிகளும் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருந்தன. ஆனால் மனிதர்களின் தலையிலிருக்கும் கம்பளிகளும் கன்னங்களிலிருக்கும் வெளிறிப்போன தன்மையும் இன்னும் மாறாமல் அப்படியே இருந்தன. நவநாகரீகம் என்பது அடைக்கப்பட்டிருக்கும் வீடுகளின் வெளிச் சுவர்மீது அடிக்கும் வெயிலைப்போல இங்கு வந்திருக்கிறதோ?

நான் பயணம் செய்யும் அரசாங்கத்திற்குச் சொந்தமான பெரிய பஸ்ஸைப் பார்க்கும்போது குழந்தைகளாவது உற்று நோக்குவார்கள் என்று எதிர்ப்பார்த்தேன். ஆனால் அவர்கள் அதைப் பார்க்கவேயில்லை. கடைக்கு முன்னால் பஸ் நின்றபோது காதையே துளைக்கக் கூடிய அளவிற்கு ஒரு பையள் உரத்த குரலில் சொன்னது கேட்டது:

"யானை வந்திருச்சு!''

"உன் அப்பா வந்துட்டான்.'' பஸ்ஸிற்குள் இருந்த யாரோ திருப்பி அடித்தார்கள்.

"எங்கப்பா இவ்வளவு பெரிய ஆளா என்ன?'' என்று பையன் ஆச்சரியப்பட்டு நின்றபோது, பஸ்ஸிற்குள் ஒரு பரபரப்பு, முணுமுணுப்பு, ஏசல். அப்போது ஒரு கறுத்த உடம்பையும் சிவந்த பற்களையும் கொண்ட ஒரு பெண் எங்கிருந்தோ பஸ்ஸிற்குள் வந்து, அந்த பையனின் காதைப் பிடித்து அவனை இழுத்துக் கொண்டு போவதைப் பார்த்தேன்.

அந்தப் பெண்ணின் அசைவுகள் ஞாபகத்தின் ஏதோ ஒரு மூலையைத் தட்டி விட்டதைப்போல் உணர்ந்தேன்.

ஞாபகத்தின் எந்த மூலை?

ராச்சியம்மாவைப் பற்றி என் மனம் நினைத்துப் பார்த்தது. அவளைப் பற்றிய நினைவுகளில் அது தீவிரமாக ஆழ்ந்து போனது.

இந்தப் பகுதியிலுள்ள என்னுடைய வாழ்க்கை ராச்சியம்மாவுடன் அந்த அளவிற்குத் தொடர்பு கொண்டது. இருப்பினும், மனதில் தெளிவாக அவளுடைய உருவம் தோன்றவில்லை.

ஆனால், பஸ் இரண்டு வளைவுகள் திரும்பியபோது நினைவுகள் திடீரென்று என்னை அதிரச் செய்தன. பல வருடங்களுக்கு முன்பு ஒரு மாலை நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது. மனது ஏதோ ஒன்றிற்காக தவியாய்த் தவித்துக் கொண்டிருந்த காலமது. எப்போது பார்த்தாலும் மனதில் அமைதி என்ற ஒன்று இல்லாமலே இருந்தது. அதனால் எதற்கு என்றே இல்லாமல் வெறுமேன இங்குமங்குமாய் வெளியே அலைந்து கொண்டிருந்தேன். கடைசியில், கால்களும் தும்பிக்கையும் கொண்டு நின்றிருந்த அந்த கறுத்த இருட்டின் முன்னால்போய் நான் நிற்பேனா? ஒரு அடி அதிகமாக எடுத்து வைத்திருந்தால்கூட போதும், என் கதி அவ்வளவுதான். ஆனால் அதே நேரத்தில் பின்னால் திரும்பிவர உடம்பில் சக்தியே இல்லாமல் போய்விட்டது. வெறுமேன என்ன செய்வதென்று தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

அப்போது திடீரென்று ஒரு கை என் கையைப் பிடித்தது. நான் எதற்காக அப்போது உரத்த குரலில் கத்தாமல் இருந்தேன் என்பது எனக்கே தெரியவில்லை. பயந்துபோய் தொண்டை அடைத்துக் கொண்டது காரணமாக இருக்கலாம்.

இயற்கை என்னை அப்படிச் செய்யாமல் தடுத்திருக்க வேண்டும். ஆனால் ஒரு விஷயம். அந்தக் கைகளுக்குள் நான் பத்திரமாகக் காப்பாற்றப்பட்டுவிட்டேன் என்பது மட்டும் உள் மனதில் எனக்குப்பட்டது.

எது எப்படியோ, நான் அசையாமல் அப்படியே நின்றுவிட்டேன். நான் காட்டுக்குள் இழுத்துக் கொண்டு போகப்பட்டேன். சிறிது நேரம் சென்ற பிறகுதான் என்னை இழுத்துக் கொண்டு போனது யார் என்பதே எனக்குத் தெரிந்தது.

ராச்சியம்மா!

"அந்த யானையைப் பார்த்து பயப்படலியே.''  பளிங்குக் கற்களை நீரில் எறிந்ததைப்போல் உண்டான அவளுடைய கேலிச் சிரிப்பைக் கேட்டபோது, அவளின் கன்னத்தில் அறைய வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. என் கை அப்போதும் ராச்சியம்மாவின் பிடியில்தான் இருந்தது.

"ராச்சியம்மா, நீ எங்கேயிருந்து வந்தே?''

"நான் இங்கேதானே இருக்கிறேன்!''

இதைச் சொல்லிவிட்டு ராச்சியம்மா விழுந்து விழுந்து சிரித்தாள். இடி, மின்னல்கள் சிதறுவதைப்போல் இருந்தது அந்தச் சிரிப்பு.

காட்டின் ஒற்றையடிப்பாதை வழியாக அவள் என்னை நடத்திக் கொண்டு போனாள். அப்போது என் மனம் ராச்சியம்மாவைப் பற்றி மட்டுமே சிந்தித்துக் கொண்டிருந்தது. இருட்டின் கருங்கல் சுவருக்கு நடுவில் நடந்து கொண்டிருக்கும் ஒரு நீல வெளிச்சம்.

கடந்த கால நினைவுகள் நனைந்த மண் சுவர்களைப்போல மனதிற்குள் இடிந்து விழுந்து கொண்டிருந்தன. நான் அவற்றின் கற்துண்டுகளையும் சேறு படிந்த மரக் கட்டைகளையும் பார்த்துக் கொண்டிருந்தேன். அப்போது ராச்சியம்மா கேட்டாள்:

"இப்போ எதற்கு வந்தீங்க? இங்கதான் இனிமேல் உங்களுக்கு வேலையா என்ன?''

"இல்ல... நான் மிஸஸ் நாயரைப் பார்க்கறதுக்காக வந்தேன்.''

"அப்படியா? நல்லதாகப் போச்சு... நாமளும் பார்த்த மாதிரி ஆச்சே!''

ராச்சியம்மா என்னைப் பார்க்காமலே தொடர்ந்தாள்: "ஆள் கொஞ்சம் தடித்தது மாதிரி இருக்கே!''

"வயசு கூடுறப்போ தடிமன் வரத்தானே செய்யும்?''

"நான் தடிக்கலையே!''

"ராச்சியம்மா, உனக்கு வயசு கூடல...''

அவள் அதைக் கேட்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். இடி மின்னல் துண்டுகள் சிதறி விழுந்தன. அந்த ஒவ்வொரு துண்டும் ஆழமான ஏதோ ஒரு இருள் குழிக்குள் கொஞ்சம் கொஞ்சமாகப் போய் விழுவதைப்போல் நான் உணர்ந்தேன்.

நான் எதுவும் பேசவில்லை. ராச்சியம்மாவும் எதுவும் பேசவில்லையே என்று தோன்றவுமில்லை. என் மனது அமைதியாக இருந்தது. ராச்சியம்மாவின் மனது எப்படி இருக்கும்?

"ராச்சியம்மா அப்பப்போ இங்கே வந்து உங்களைப் பற்றி விசாரிப்பா...'' மிஸஸ் நாயர் சொன்னார். தொடர்ந்து அவள் சொன்னாள்: "நாங்க எல்லா விஷயத்தையும் விவரமா அவள்கிட்ட சொல்லுவோம்.''

மிஸஸ் நாயர் விழுந்து விழுந்து சிரித்தபோது என்னுடைய இதயத்தில் ஒரு வேதனை உண்டானதைப்போல் நான் உணர்ந்தேன்.

அது அவளின் வரிசையான பற்களின் பிரகாசத்தைப் பார்த்து அல்ல. ராச்சியம்மா அப்போது எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தாள். எதையாவது நினைத்துப் பார்க்கிறாளோ?  எதைப்பற்றி நினைப்பாள். ராச்சியம்மாவிற்கும் நினைப்பதற்கென்று சில இருக்கத்தானே செய்கின்றன!

அந்த நாட்கள் என் மனதில் தொடர்ந்து வலம் வந்து கொண்டிருந்தன. இரண்டு மூன்று நாட்கள் எனக்கு நல்ல காய்ச்சல். அது அவ்வளவு பிரச்சினைக்குரியதாக எனக்கு இல்லை. லேசான தலைவேதனை இல்லாமலிருந்தால் அந்தக் காய்ச்சல்கூட ஒரு சுவாரசியமான அனுபவமாகவே இருந்திருக்கும்.

மூன்றாவது நாள் காலையில்தான் பார்த்தேன் என் உடம்பெங்கும் கொப்புளங்கள். இளம் வெயில் வந்து கொண்டிருந்த ஜன்னலினருகில் போய் நின்றேன். போர்வையை உடம்பிலிருந்து நீக்கிப் பார்த்தேன். உடம்பெங்கும் பவள மணிகள் காட்சியளித்தன. கண்ணாடியின் அருகில் போய் நின்றேன். முகத்திலும் அவை இருக்கின்றனவா என்று பார்த்தேன். கொஞ்சம் அங்கும் இருந்தன. இனியும் கொப்புளங்கள் தோன்றுமா என்பதைப் பற்றிக் கூற முடியவில்லை.

என்னவோ மனதில் சிந்தித்தவாறு கட்டிலில் வந்து உட்கார்ந்தபோது, சமையல்கார பையன் வந்து கேட்டான்:

"காப்பி கொண்டு வரட்டுமா?''

"வேண்டாம்.''

"தேநீர்?''

"நீ இப்போ போகணும்.''

"எங்கே?''

"உன் வீட்டுக்கு.''

"எதுக்கு சார்?''

"எதுவும் கேள்வி கேட்காதே. ஒரு மாசம் கழிச்சி நீ வந்தா போதும்.'' நான் கூறியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் சிறிது நேரம் அங்கேயே நின்று விட்டு புறப்பட்டான். சிறிது நேரம் கழித்து ராச்சியம்மாவின் குரல் கேட்டது.

"இங்கே ஆள் இல்லியா?''

"இல்ல...''  நான் படுத்துக் கொண்டே சொன்னேன்.

"அப்ப பதில் சொல்றது யார்? சைத்தானா?''

ஓங்கி கன்னத்தில் அறைய வேண்டும்போல் இருந்தது. வாக்குவாதம் செய்துகொண்டிருக்கிறாள். மீண்டும் ஒருமுறை அழைத்தாள். ஆனால் நான் பதில் சொல்லவில்லை.

கதவு திறக்கும் சத்தம் கேட்டது. அடுத்த நிமிடம் ராச்சியம்மா எனக்கு முன்னால் நின்றிருந்தாள்.


"என்ன? போர்வையை மூடிப் படுத்திருக்கீங்க?''

"உடம்புக்கு சுகமில்லை...''

"என்ன உடம்புக்கு?''

"அம்மை போட்டிருக்கு...''

ராச்சியம்மாவை நான் தடுப்பதற்கு முன்பே என்மீது போர்த்தியிருந்த போர்வையை நீக்கினாள். உடம்பில் இருந்த கொப்புளங்களைப் பார்த்துவிட்டுச் சொன்னாள்.

"இது என்ன? அம்மாவோட விளையாட்டுத்தானே?''

அதற்குமேல் அவள் ஒன்றும் பேசவில்லை. வீட்டைச் சுத்தம் செய்து, காப்பி தயாரித்தாள். ஆறிய காப்பியுடன் எனக்கருகில் வந்து சொன்னாள்:

"ஆற வச்ச காப்பிதான் குடிக்கணும்.''

சிறிது நேரம் சென்றதும் எங்கிருந்தோ சில வாழைப் பழங்களைக் கொண்டு வந்தாள்.

"எல்லா பழங்களையும் தின்னணும். இன்னும் காய்ச்சல் அடிக்கும். கொப்புளங்கள் இன்னும் வரவேண்டியதெல்லாம் வரட்டும்.''

ஆறிய கஞ்சி, ஆறிய சோறு, ஆறிய காபி.  ராச்சியம்மாவைத் தவிர எல்லாம் ஆறிப் போனவைதான். சாப்பிடுவதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. ஆனால், ராச்சியம்மா என்னை விடவில்லை.

"சாப்பிடுங்கன்னு சொல்றேன்ல...''

சாப்பிட்டேன். குடித்தேன்.

மறுநாள் முதல் மிகவும் குளிர்ச்சியாக இருக்கும் ஏதோ நீரைக் கொண்டு வந்து கொடுத்தாள் ராச்சியம்மா. நான் அதைக் குடிக்க சம்மதிக்கவோ மறுக்கவோ இல்லை. எல்லாம் நடக்கட்டும். காலையில் எனக்கு உணவு தந்து விட்டு ராச்சியம்மா போவாள். மாலையில் மீண்டும் திரும்பி வருவாள்.

நான் சொன்னேன்: "இது தொற்று நோய்...''

"தெரியும்.''

"ராச்சியம்மா, இப்படி நீ வர்றது சரியா?''

"சரிதான்...''

"வேண்டாம் ராச்சியம்மா.''

"பிறகு... நீங்க இங்கேயே கிடந்து சாகப் போறீங்களா? அந்த பையனை விரட்டிவிட்டது மாதிரி, என்னையும் விரட்டலாம்னு பார்க்காதீங்க... நடக்காது...''

அவளுடன் வாதம் செய்து ஒரு பயனுமில்லை என்பதைப் புரிந்து கொண்டேன்.

கொப்புளங்கள் அதற்குப் பிறகும் நிறைய வந்தன. உடம்பெங்கும் கொப்புளங்கள். மூக்கின் நுனியிலும், உள்ளேயும், நகத்திற்கு நடுவிலும் பழுத்து வீங்கிக் காணப்பட்டன. இடைவெளியே இல்லாமல் கொப்புளங்கள்.

அழுகை, வேதனை, அரிப்பு...

நான் இப்படியும் அப்படியுமாய் முனகியபடி நெளியும்போது ராச்சியம்மா பக்கத்திலிருந்து வேப்பிலையால் என் உடம்பில் மெதுவாகத் தடவி விட்டாள். அவள் சொன்னாள்: "நாளைக்கு எல்லாம் சரியாயிடும்.''

அவள் சொன்ன சில வார்த்தைகள், நான் தனிமையாய்க் கிடந்த அந்த அறிமுகமே இல்லாத பூமியை நனைத்தன. இருப்பினும், என்னால் அனத்தாமல் இருக்க முடிவில்லை.

ராச்சியம்மா எங்கோ போய் கொஞ்சம் மஞ்சள் பிரசாதம் கொண்டு வந்தாள். அதை என் தலையில் தடவினாள். உடம்பெங்கும் தூவி விட்டாள். பிறகு யாரிடம் என்றில்லாமல் அவள் சொன்னது காதில் விழுந்தது:

"அம்மா, நீ பார்த்தியா?''

பிரார்த்தனையைவிட அதிகம் பயப்படக் கூடியதாக இருந்தது அது. கடன் கொடுத்ததைத் திரும்ப வாங்குவதற்காகப் பயன்படுத்திய அதே குரல்.

அவள் சொன்னது பலித்துவிட்டது என்றுதான் நினைக்கிறேன். அம்மை இறங்கியது. உடலில் இருந்த வலி நின்றது. அரிப்பு குறைந்தது. நான் கொஞ்சம் கொஞ்சமாக உறங்கவும், நிறைய நேரங்களில் கண்ணை மூடிக் கிடக்கவும் செய்தேன். கண்ணை மூடிப் படுத்திருக்கும் எனக்கு முன்னால் அரிசியும் மஞ்சள் பொடியும் தெச்சிப் பூவும் சேர்த்து எறிந்து சைத்தான்மார்களையும் அம்மை போன்ற வியாதிகளையும் விரட்டியடிப்பதற்காக ஊரில் உள்ள "வெளிச்சப்பாடு" வந்தார். இரு பக்கங்களிலும் விரித்துப் போட்டிருக்கும் தலைமுடி, மஞ்சள் குறி, அலரிப் பூவின் மணம், வாளில் பிரகாசம், சிலம்பின் ஒசை... அவர் வாய் திறந்து என்னவோ சொன்னார். ஏராளமான பெயர்கள். ஆனடியான், அத்தரித் தாமரை, சேரவளையன், அகம் தடியன், புறம் தடியன்... இப்படி தொன்னூற்றாறு பெரிய வியாதிகளை ஒன்றுமில்லாமல் செய்ய மகாகாளியை அவர் அழைத்தார். காளி வந்தாள். வெள்ளைப் பட்டாடை அணிந்து, சிங்கத்தின்மீது அமர்ந்து. வாளின் கூர்மை கண்ணிலும் கண்ணின் பிரகாசம் வாளிலும் தெரிந்தன. அப்போது அடியார் சொல்கிறார்: "மழைபோல வந்தது பனியைப்போல போகணும்."

"வலி போயிருச்சா?''

கண் விழித்துப் பார்த்தபோது எனக்கு முன்னால் காளியைப் போல ராச்சியம்மா நின்றிருந்தாள். இடி மின்னலைப்போன்ற சிரிப்புடன் அவள் சொன்னாள்: "எல்லாம் சரியாயிடுச்சு. இனி அனத்தினா நான் அடிதான் கொடுப்பேன்.'' அதைக் கேட்டு எனக்கு சிரிப்பு வந்தாலும் நான் சிரிக்கவில்லை. கண்களை மூடிக்கொண்டு அசையாமல் படுத்திருந்தேன். மனதில் ராச்சியம்மாவின் உருவம் மட்டுமே நின்று கொண்டிருந்தது.

"தாரியனின் குருதி குடித்து அலறுகிறாயா அம்மா!  காற்சிலம்பு உரத்துக் குலுங்க ஆடுகிறாயா அம்மா!'' அந்தப் பாட்டு நினைவில் வந்தபோது, என்னால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

"சிரிப்பு வந்திருச்சுல்ல. அப்போ எல்லா வலியும் போயிருச்சுன்னு அர்த்தம்...''

கண் விழிக்கவில்லை. இருந்தாலும் அந்தக் கேள்வியில் வேதனை தரக்கூடிய ஏதோ ஒன்று மறைந்திருப்பதைப்போல் நான் உணர்ந்தேன். இப்போதுகூட ராச்சியம்மாவின் கேள்வியைக் கேட்க நேர்ந்தபோது, அதே வேதனைதான் உண்டானது.

"இப்போ பணம் சம்பாதிச்சு நல்ல சுகமா இருக்கீங்கல்ல?''                  என் விழிகள் தரையை நோக்கி கீழே இறங்குவதைப் பார்த்துவிட்டு ராச்சியம்மா சொன்னாள்:

"நீங்க சுகமா இருந்தீங்கன்னா, எனக்கு சந்தோஷம்தான்.''

எதற்கு அவள் சந்தோஷப்பட வேண்டும் என்று நான் கேட்கவில்லை.

மீண்டும் அமைதி. ஆனால் அது தெரியாத விதத்தில் மிஸஸ் நாயர் வாய் வலிக்கப் பேசிக் கொண்டே இருந்தாள். புதிதாக வாங்கியிருக்கும் ஷெவர்லே காரைப் பற்றி நிறைய சொல்லிக் கொண்டிருந்தாள். "ஊட்டிக்கோ பெங்களூருக்கோ ஆன்மிக பிரசங்கங்கள் கேட்கணும்னா, கோவில் தரிசனத்திற்குப் போகணும்னா ஒரு பெரிய கார் கட்டாயம் வேணும். காருக்குள்ளே உட்கார்ந்து கண்களை மூடி கடவுளின் பெயரைச் சொல்லத் தொடங்கிட்டா சேர வேண்டிய இடத்துல சேர்ந்த பிறகுதான் நான் கண்களைக் திறப்பேன். அதற்கிடையில் எது நடந்தாலும் எனக்குத் தெரியாது'' என்றாள் மிஸஸ் நாயர்.

"ஒரு சின்ன கார்கூட வாங்கணும்னு ஏற்பாடு பண்ணிக்கிட்டு இருக்கேன். பாரசீக வளைகுடாவுல இருந்து மகளும் அவளோட புருஷனும் நாளைக்கு இங்கே வர்றாங்க. அவங்க சுற்றிப் பார்க்குறதுக்கு ஒரு சின்ன கார் வேணும் - ஃபியட்'' மிஸஸ் நாயர் சொன்னாள்.

"எப்போ போறீங்க?'' ராச்சியம்மா இடையில் புகுந்து கேட்டாள்.

"நாளைக்குக் காலையில...'' நான் சொன்னேன்.

"நாம பார்ப்போம்... இப்போ நான் புறப்படட்டுமா? எருமைக்கு தண்ணி வைக்கணும்...''

மிஸஸ் நாயர் அப்போது தன்னுடைய கார்களைப் பற்றியும், ஃபிரிட்ஜ்களைப் பற்றியும், மகளின் குணத்தைப் பற்றியும், பத்ரிநாத் பயணத்தின்போது கிடைத்த ஆன்மிக அனுபவங்களைப் பற்றியும் சொல்லிக் கொண்டிருந்தாள்.

என் மனம் எருமைகளுக்கு நீர் தரப்போன ராச்சியம்மாவுடன் இருந்தது.


அம்மை முற்றிலும் குணமாகி குளித்த நாட்களில், ராச்சியம்மா எருமைகளையும் என்னையும் எப்படி மாறி மாறி கவனித்தாள் என்பதை அப்போது நான் நினைத்துப் பார்த்தேன். ராச்சியம்மாவிடம் ஒருநாள் சொன்னேன்:

"இனி நான் என் ஊருக்குப் போறேன். விடுமுறை முடிஞ்சதும் திரும்பி வர்றேன்.''

"இப்போ சுத்தறதுக்கு நான் உங்களை விடமாட்டேன்.''

விட மாட்டேன் என்றால் விட மாட்டேன் என்றுதான் அர்த்தம். ராச்சியம்மா காலையில் வருகிறாள். வீட்டைப் பெருக்கிச் சுத்தம் செய்கிறாள். காப்பியும் பலகாரமும் உண்டாக்கித் தருகிறாள். மதிய உணவை சமையல் செய்து மூடி வைத்துவிட்டு, வந்த வேகத்துடனேயே திரும்பிப் போகவும் செய்கிறாள்.

"எருமைக்கு உணவு தயாரிச்சு வச்சாச்சு, இல்லியா?'' அதைக் கேட்டு ராச்சியம்மா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தாள். புதர்களுக்கு மத்தியில் அவளின் தலை மறைந்த பிறகும், அவளின் சிரிப்பு சத்தம் மட்டும் கேட்டுக் கொண்டே இருந்தது.

உடல்நிலை நன்கு தேறி அலுவலகத்திற்கு நான் செல்ல ஆரம்பித்தபோது ஒருநாள் ராச்சியம்மா கேட்டாள்:

"இனிமே பையன் வர மாட்டானா?''

"வரமாட்டான்னு நினைக்கிறேன்.''

"நன்றி கெட்ட சவம்!'' ராச்சியம்மா சிறிது நேரம் என்னவோ சிந்தனையில் ஆழ்ந்து விட்டுக் கேட்டாள்:

"சகோதரிகள் இல்லையா?''

"இல்ல...''

"இல்லவே இல்லியா?''

"ஒண்ணு இருந்துச்சு... செத்துப் போயிடுச்சு.''

அதைக் கேட்டு ராச்சியம்மா என் முகத்தையே சிறிது நேரம் பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் கண்களில் ஒருவித உணர்ச்சி தோன்றியதை என்னால் பார்க்க முடிந்தது. காதுகளை ஆட்டாமல் நின்று கொண்டிருக்கும் யானையின் கண்களை அது நினைவுபடுத்தியது. சிறிது நேரம் சென்ற பிறகு ராச்சியம்மா சொன்னாள்:

"எனக்கும் ஒரு அண்ணன் இருந்தார். அவர் செத்துப் போயிட்டார்...''

அதற்குப் பிறகு ஒரே அமைதி.

திரும்பிப் போகும்போது ராச்சியம்மாவிடம் நான் கேட்டேன்: "ராச்சியம்மா, உனக்கு இப்போ யார் இருக்காங்க?''

"கடவுள் மட்டும்தான்.''

அவள் சென்ற பிறகு, முழுமையான வெறுமையை நான் உணர்ந்தேன்.

இப்போது ராச்சியம்மா போனபிறகு, அந்த வெறுமை திரும்பவும் உண்டானதைப்போல எனக்கிருந்தது.

இந்த விஷயம் எதுவும் மிஸஸ் நாயரின் பேச்சை பாதிக்கவில்லை. ஏற்றுமதி அனுமதி கிடைப்பதற்காக தன் கணவன் படும் கஷ்டங்களை அவள் விவரித்துச் சொல்லிக் கொண்டிருந்தாள். "மாசத்துல ஒண்ணு ரெண்டு தடவை கட்டாயம் டில்லிக்குப் போகணும். ஆனா, அவர் எல்லா வகையான விமானங்கள்லயும் பயணம் செய்யக் கூடாது. அழுத்தம் உள்ள மனிதராச்சே! இப்போல்லாம் பெரிய ஆளுங்க எல்லாருக்கும் ரத்த அழுத்தம் கட்டாயம் இருக்குது'' என்று கூறிக் கொண்டிருந்த மிஸஸ் நாயர் என்னிடம் கேட்டாள்:

"பிளட் பிரஷர் இருக்கா?''

"இல்ல...''

"சர்க்கரை இருக்கா?''

"இல்ல...''

நான் பதில் கூறிக் கொண்டிருந்தாலும், என் மனம் முழுக்க ராச்சியம்மாதான் நிறைந்து நின்றிருந்தாள். நான் அவளுக்கு தொந்தரவு தந்திருக்கிறேன். அந்தக் காட்சி மனதில் கொஞ்சம் கொஞ்சமாகத் தோன்றியது.

அலுவலகத்திலிருந்து மிகவும் களைத்துப்போய் திரும்பி வந்தேன். எதைச் செய்யவும் மனதில் உற்சாகமில்லை. மலைச்சரிவுப் பக்கம் கொஞ்சம் சுற்றிவிட்டு வரலாம் என்று புறப்பட்டேன். அங்கு உயரமாக நின்றிருந்த சாம்பிராணி மரத்திற்குக் கீழே நிலவு மேல் மூச்சு வாங்கிக் கொண்டிருக்கும் புள்ளி மானைப்போல நின்றிருந்தது.

நான் அங்கேயே உட்கார்ந்தேன். அமைதி குடி கொண்டிருக்கும் மலைச் சரிவுகள், நீளமாகப் பரந்து கிடக்கும் தேயிலைத் தோட்டங்கள், ஒரு மேகம்கூட இல்லாத வானம்... ஒரே அமைதி!

அப்போது திடீரென்று ராச்சியம்மா அங்கு வந்தாள். நெல் வயலுக்குள்ளிருந்து வரும் ஒரு கறவை மாட்டைப்போல இருந்தாள் அவள். அவள் அங்கு வருவாளென்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. சிறிதுகூட பதைபதைப்பே இல்லாமல் எனக்கருகில் வந்த ராச்சியம்மா கேட்டாள்:

"கவலையா?''

"எதுக்கு?''

"ஊர்ல இருக்கிறவங்களை நினைச்சு.''

"இல்ல...''

என் தாயைப் பற்றி, தந்தையைப் பற்றி, குடும்பத்தில் உள்ளவர்களைப்பற்றியெல்லாம் ராச்சியம்மா கேட்டாள். எனக்கும் யாரிடமாவது எதையாவது சொல்ல வேண்டும்போல் இருந்தது. கூம்பி நின்றிருந்த ஆம்பல் மொட்டுகளை நிலவு தொட்டெழுப்பிக் கொண்டிருந்தது.

ராச்சியம்மா என்னைவிட்டு தூரத்தில், எனக்குச் சிறிதும் தொடர்பில்லாமல் பிறந்து வளர்ந்தவள் என்ற உணர்வு எனக்கு உண்டாகவில்லை.

ஒரே அமைதி. இதயம் துடிப்பதைக் கேட்கலாம்.

தேயிலைச் செடிகளுக்கு மத்தியில் நின்றிருக்கும் சில்வர் ஓக் மரங்களைத் தாண்டி "உய்"யென்று ஓசை எழுப்பியவாறு போய் கொண்டிருக்கும் காற்று. அது தூரத்தில் உள்ள பனிக் கூட்டத்துடன் சேர்ந்து கொள்ளும். 

ராச்சியம்மாவின் கை என்னைத் தொட்டது. அவளின் வெள்ளி வளையல்கள் ஓசை உண்டாக்கின. வெட்கத்தையோ பதைபதைப்பையோ எதிர்பார்த்தேன். படைப்புக்கும் சுய தப்பித்தலுக்குமுள்ள மோகங்கள் ஒன்றையொன்று சேர்ந்து இணைந்தன.

ஆனால், இரண்டும் உண்டாகவில்லை.

ஒரு மாலை நேரத்தின் வெளிப்பாடு முழுமையாக அந்தக் கண்களுக்குள் குடி கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.

"ராச்சியம்மா!''

அவள் தேம்பித் தேம்பி அழுதாள்.

நான் அவளின் கையை விட்டு தூரத்தில் நின்றேன். அப்போது என் கையைப் பற்றிய ராச்சியம்மா கேட்டாள்:

"என்மேல கோபமா?''

நான் பதில் எதுவும் சொல்லவில்லை. அப்போதிருந்த என் மனதின் நிலையை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை.

"என்கிட்ட கோபப்படாதீங்க.''  ராச்சியம்மா அழுதாள்.

"என் அண்ணன் செத்துப்போன பிறகு, சந்தோஷம்னு ஒண்ணை நான் உணர்ந்தது உங்களைப் பார்த்த பிறகுதான்.''

என் பதிலை அவள் எதிர்பார்க்கவில்லை.

"எங்கம்மா சாகுறப்போ சொன்னாங்க...''

"என்ன சொன்னங்க?''

"நான் கோவில்ல போயி மஞ்சள் பிரசாதம் தொட்டு சத்தியம் பண்ணிக் கொடுத்தேன்- தப்பே செய்ய மாட்டேன்னு.''  ராச்சியம்மா தேம்பித் தேம்பி அழுதவாறு சொன்னாள்:

"இனி விருப்பம்போல...''

அவளின் உயர்ந்து நின்ற மார்பின்மீது கண்ணீர் துளிகள் அடுத்தடுத்து விழுந்து கொண்டிருப்பதை நான் பார்த்தேன். நிமிடங்கள் கடந்தோடிக் கொண்டிருந்தன.

அசையாமல் நின்றிருந்த என் முகத்தை தன்னுடைய ஈரமான விழிகளால் பார்த்த ராச்சியம்மா சொன்னாள்:

"நீங்க என்ன சொன்னாலும் நான் கேட்பேன். ஆனா, ஒரு விஷயம்...''

"என்ன?''

"அது முடிஞ்சிடுச்சின்னா, நான் உயிரோட இருக்க மாட்டேன். இனி விருப்பம்போல...''

மீண்டும் ராச்சியம்மா என் கையைப் பிடித்தாள். அந்தக் கையைத் தட்டி விடவோ, பிடித்து அணைக்கவோ என்னால் முடியவில்லை.

"பெண்ணே...'' என்று ஆத்மார்த்தமாக அழைக்கவும் என்னால் முடியவில்லை. ஒரு வேதனை மட்டும் மனதில் தங்கியிருந்தது. சில்வர் ஓக் மரங்களுக்கிடையே ஓசை எழுப்பியவாறு ஓடிக் கொண்டிருந்த காற்றில் அந்த வேதனை இரண்டறக் கலந்து விட்டதைப்போல் நான் உணர்ந்தேன்.


"என்ன ஒண்ணுமே பேசாம இருக்கீங்க?'' ராச்சியம்மா என் கையைப் பிடித்துக் குலுக்கினாள். நான் கீழே பார்த்தவாறு சொன்னேன்:

"மன்னிக்கணும் ராச்சியம்மா. உனக்கு தொந்தரவு கொடுத்ததுக்காக நான் வருத்தப்படுகிறேன்.''

நான் சொன்ன வார்த்தைகள் ராச்சியம்மாவை அதிகமாக அழ வைத்தன. நிலவின் இதழ்கள் கீழே விழ ஆரம்பித்தபோது நாங்கள் இருவரும் இரு வேறு பாதைகளில் பிரிந்தோம். நிழல்களும் பனிப்படலமும் இணைந்து காட்சியளித்த வெட்டவெளிக்குள் மறைந்து போய்க் கொண்டிருக்கும் அவளையே பார்த்தவாறு நின்றிருந்தபோது எனக்குள்ளிருந்து ஒரு கேள்வி எழுந்தது: "நீ யாரும்மா?"

இன்றுவரை அந்தக் கேள்விக்கு பதிலே இல்லை.

மிஸஸ் நாயரின் கதாகாலட்சேபத்திலிருந்து சிறிது தப்பிக்க வேண்டும் என்ற விருப்பத்தால்தான் மாலை நேரத்தில் நான் வெளியே இறங்கினேன். மலைச் சரிவில் வைத்து ராச்சியம்மாவை நான் பார்ப்பேனென்று நினைக்கவேயில்லை.

தடிமனான சாம்பிராணி மரத்திற்குப் பின்னாலிருந்து அவள் தோன்றினாள். குளித்துக் காய விட்டிருக்கும் தலை முடி. அவளிள் சந்தனப் பொட்டிற்கும் பற்களுக்கும் பிரகாசம் அதிகம் என்று கூறுவதற்கில்லை.

"ஏன் பொண்டாட்டியை அழைச்சிட்டு வரல?'' அவள் கேட்டாள்.

"பொண்டாட்டி இருக்குறதா யார் சொன்னது?''

"நீங்க சொல்லாட்டியும் எனக்குத் தெரியும். மகள் விஜயலட்சுமி பள்ளிக்கூடத்துக்குப் போக ஆரம்பிச்சாச்சா?''

"ம்...''

என்னைப் பற்றிய எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்கிறாள்.

"விஜயலட்சுமியை அழைச்சிட்டு வரலியே! வந்திருந்தா அப்படியே வாரி எடுத்து முத்தம் கொடுத்திருப்பேன்.''

நான் வெறுமேன சிரித்தேன்.

"பழைய மாதிரியே பணத்தைத் தண்ணியைப் போல செலவழிச்சிக்கிட்டு இருக்கீங்க, அப்படித்தானே?'' ராச்சியம்மா கேட்டாள்.

"அந்த அளவுக்கு எங்கிட்ட பணமில்ல, ராச்சியம்மா.''

"இருக்குற பணத்தைச் சொல்றேன். விஜயலட்சுமியை நல்ல பையனா பார்த்து கல்யாணம் பண்ணி வைக்கணும். பாத்திரங்கள் கொடுக்கணும்ல? நகை போடணும்ல? பணம் கொடுக்கணும்ல? என்ன சிரிக்கிறீங்க?''

"ராச்சியம்மா, நீ பணம் சேர்த்து வச்சிருக்கியா?''

"ஆமா..''

"கையில எவ்வளவு பணம் வச்சிருக்கே?''

"கையில இல்ல. எல்லாம் பேங்க்லதான் இருக்கு. இங்கே இப்போ பேங்க் வந்திருக்கே! கையில பணம் இருந்தா, யாராவது கடன் கேட்பாங்க. கொடுத்தோம்னா திரும்பி வருமான்னு சொல்ல முடியாது. பேங்க்ல பணத்தைப் போட்டா, வட்டி கிடைக்கும். நம்ம ஊரு இப்போ பெரிய ஊராயிடுச்சு. பள்ளிக்கூடம் வந்திடுச்சு. கோர்ட்டு வந்திடுச்சு. போலீஸ் ஸ்டேஷன் வந்திடுச்சு. பிறகு... டூரிஸ்ட் ஆபீஸ் வந்திருச்சு. டூரிஸ்ட் ஆபீஸ்க்கு நான் பால் தர்றேன்.''  இதைச் சொன்ன ராச்சியம்மா குலுங்கிக் குலுங்கி சிரித்தாள்.

"ராச்சியம்மா, நீ கல்யாணமே பண்ணிக்கலியே?''

அதற்கு அவள் எந்த பதிலும் சொல்லவில்லை.

"இப்படியே எத்தனை நாட்கள் இருப்பே?''

"சாகுறவரை.''

"உதவிக்கு ஒரு ஆள் வேண்டாமா?''

"கடவுள் இருக்கார்ல!''

"பக்கத்துல உதவிக்கு ஒரு ஆளு இருக்குறது நல்லது இல்லியா?''

ராச்சியம்மா "தேவையில்லை" என்பது மாதிரி இப்படியும் அப்படியுமாகத் தலையை ஆட்டினாள்.

"பிறகு யாருக்காக பணத்தை சேர்த்து வைக்கிற?''

"என் வாரிசுக்கு...''

"அது யாரு?''  

"விஜயலட்சுமி... உங்க மகள். பேங்க்ல என்னோட வாரிசா அவ பேரைத்தான் நான் எழுதிக் கொடுத்திருக்கேன்.''

"என்ன சொல்ற?''

"நான் செத்துப் போனா, நான் போட்டு வச்சிருக்குற பணம் விஜயலட்சுமிக்குத்தான். சாகுறதுக்கு முன்னாடிகூட எடுக்கலாம். ஆனா, உங்களுக்கு கொடுத்து பிரயோஜனமில்ல. தண்ணியைப் போல எல்லாத்தையும் செலவழிச்சிடுவீங்க...''

நான் ராச்சியம்மாவின் கையைப் பிடித்தேன். என் பெண்ணே...

ராச்சியம்மாவிடம் எந்தவித உணர்ச்சி மாறுபாடும் உண்டாகவில்லை. அவள் கேட்டாள்:

"என் வீட்டுக்கு வர்றீங்களா?''

"கட்டாயம்...''

பழைய வீடல்ல. முன்னால் இருந்ததை விட சற்று அழகுபடுத்தி வைத்திருந்தாள். நான் தலையைக் குனிந்து வீட்டுக்குள் நுழைந்தேன். பளபளப்பு இல்லாத பலகையால் செய்யப்பட்ட பெஞ்சில் அமர்ந்தேன்.

ராச்சியம்மா தந்த இளம் சூடுள்ள எருமைப் பாலை ஊதி ஊதிக் குடித்தபோது, அவள் என்னைப் பார்த்துக்கொண்டே கடந்துபோன கதைகளைக் கூறிக் கொண்டிருந்தாள். "மூணு பேரு என்னைக் கல்யாணம் பண்ணணும்னு வந்தாங்க. மூணு பேரையுமே வேண்டாம்னு நான் சொல்லிட்டேன்.''

"காரணம்?''

"ரெண்டு பேரு என் பணத்துக்கு ஆசைப்பட்டு வந்தாங்க.''

"மூணாவது ஆளு?''

"வேண்டாம்னு சொல்லிட்டேன்.''

"காரணம்?''

"காரணம் எதுவும் இல்ல.'' அதற்குமேல் கேட்பதை விரும்பாததைப்போல அவள் விஷயத்தை மாற்றினாள். பிறகு செங்கல்லும் கரியும் கலந்த சுவரைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டாள்:

"அதைப் பார்த்தீங்களா?''

அருகில் சென்று பார்த்தேன். என்னுடைய ஒரு பழைய புகைப்படம் இருந்தது.

ராச்சியம்மா இடி மின்னலைப்போன்ற தன்னுடைய சிரிப்பைத் தொடர்ந்து பரவ விட்டாள். சுற்றிலும் நிலவி இருந்த கனமான இருட்டில் அந்தச் சிரிப்புச் சத்தம் தெளிவாகக் கேட்டது.

ராச்சியம்மா என் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவான குரலில் கேட்டாள்:

"என்னை மறந்துட்டீங்களா?''

"இல்ல...''

"பிறகு... இவ்வளவு காலமும் உங்களைப் பற்றி ஒரு விவரமும் எனக்குத் தெரியலியே! நான் எப்பவும் நினைப்பேன், நீங்க கட்டாயம் வருவீங்கன்னு.''

என் உடம்போடு சேர்ந்து நின்று கொண்டிருந்த ராச்சியம்மாவின் கண்களைப் பார்த்தேன். நிழலும் நிலவும் இனணந்திருக்கும் அந்த நீல விழிகளில் தெளிவற்ற ஒரு வெள்ளி மீன் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தது.

"ராச்சியம்மா!''

"என்னை மறந்துட்டீங்கல்ல?''

"நீ மஞ்சள் பிரசாதம் தொட்டு சத்தியம் பண்ணிக் கொடுத்திருக்கேல்ல?''

"ஆமா...''

"பிறகு?''

"நான் அந்த மஞ்சள் குறியை அழிச்சிட்டேன். இங்க பாருங்க, என் நெற்றியில சந்தனக் குறிதான் இருக்கு...''  மெதுவான குரலில் அவள் சொன்னாள்: "நானும் மனிதப் பிறவிதானே? மண்ணால செஞ்சதுதானே?''

இந்தத் தத்துவ ஞானத்தை எங்கிருந்து படித்தாள் என்று நான் அவளைக் கேட்கவில்லை. மண்ணின் மணமும் யூக்கலிப்டஸின் மணமும் கலந்த காற்று எங்களைக் கடந்துபோனது. அது வைக்கோல் போரிலும் கொடிகள்மீதும் பட்டுச் சென்றது.

என் கண்களை உற்றுப் பார்த்துக் கொண்டே ராச்சியம்மா சொன்னாள்:

"என் அம்மாவோட அம்மாவை இங்கே கொண்டு வந்தது ஒரு மலையாளிதான்.''

ராச்சியம்மாவின் தலையிலிருந்த ஒன்றிரண்டு வெள்ளிக் கோடுகள் என்னைப் பார்த்துப் புன்னகை செய்தன. எனக்கும் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

வீட்டை அடைந்தபோது மிஸஸ் நாயர் எனக்காகக் காத்திருந்தாள். அவள் கேட்டாள்: "நாளைக்குக் காலையில போறீங்களா?''

"ம்...''

"எங்க ஷெவர்லே கார்ல போகலாம்.''

"நன்றி...  எனக்கு பஸ் போதும்.''

அதற்குமேல் அவள் எதுவும் பேசவில்லை. நான் சீக்கிரமாகப் போய் படுத்து உறங்கத் தொடங்கினேன்.


மறுநாள் காலையில் பஸ் மலையை விட்டு இறங்கும்போது இனம் புரியாத வேதனை குடிகொண்டிருந்த இதயத்தில் அந்தப் பழைய வரி எழுந்து மேலே வந்தது... "அவளுக்கு பயந்து யாரும் நேர்வழியில்..."

ச்சே... திடீரென்று நிறுத்தினேன். மனம் இன்னொரு வரியை நினைத்துப் பார்த்தது  "காற்சிலம்பு உரத்துக் குலுங்க ஆடுகிறாயா அம்மா..."

அதை வாய்க்குள் முணுமுணுத்தவாறு மலையை விட்டு இறங்கும்போது சுற்றிலும் பார்த்தேன். அழகான மலைகள், பூமியை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் நீலவானம், இங்குமங்குமாய் நின்றிருக்கும் அழகான பனிப்படலம், இனிய ஒரு மணத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் யூக்கலிப்டஸ் மரங்கள், விஷம் குறைவான - அழகான ஊர்ந்து செல்லும் உயிரினங்கள்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.