Logo

தீனாம்மா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 8487
dheenaamma

 

வள் கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். சப்பையான மூக்கு, கறுத்து தடித்து மலர்ந்து காணப்படும் உதடுகள், பாதி முடிய கண்கள், மெலிந்த கழுத்து, கரிக்கட்டையைவிட கருத்த நிறம்- இதுதான் அவளுடைய உருவம். அந்த அவலட்சணத்திற்கு மத்தியில் அழகின் அம்சம் ஏதாவது மறைந்திருக்கிறதா என்பதை ஆராய்ச்சி செய்வதைப்போல அவள் நீண்ட நேரம் அப்படியே கண்ணாடியைப் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

“தீனாம்மா அக்கா... அந்த கண்ணாடியை ஏன் அசிங்கமாக்குறீங்க?” வாசலில் எட்டிப் பார்த்துக் கொண்டே சாராம்மா கேட்டாள்.

“உனக்கு பாதிப்பு எதுவும் இல்லையே?” ஒரு வெளிப்படையான சிரிப்புடன் தீனாம்மா பதில் சொன்னாள்.

“பாதிப்பு இல்லைன்னாலும், பார்த்ததைச் சொல்ல வேண்டாமா?”

அதற்கு தீனாம்மா எந்த பதிலும் கூறவில்லை. சாராம்மா குலுங்கிக் குலுங்கி சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடினாள். அவளுடைய குரல் வடக்கு திசையில் இப்படிக் கேட்டது: “அம்மா, இங்கே பாருங்க... தீனாம்மா அக்கா கண்ணாடியைக் கீழே போட்டு உடைக்குறாங்க.”

தீனாம்மா கண்ணாடியை மேஜை மீது எறிந்தாள். அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அவள் கட்டிலில் போய் உட்கார்ந்து, தேம்பித் தேம்பி அழுதாள். ஒவ்வொரு நாளும் அவள் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு நின்றிருப்பாள். அவலட் சணத்திலிருந்து அழகை வேறுபடுத்தித் தெரிந்துகொள்ளக் கூடிய திறமை அவளுக்கு இருந்தது. அந்த காரணத்தாலேயே அவள் தன்னுடைய முகத்தை மிகவும் அதிகமாக வெறுத்தாள். ஒரு பெண் அவலட்சணமான தோற்றத்தைக் கொண்டவளாக இருப்பது- அவளுடைய அழகற்ற தோற்றத்தைப் பற்றி அவளே நன்கு புரிந்து கொண்டிருப்பது- அதைவிட தோல்வியானதும் சோகம் நிறைந்ததுமான ஒரு வாழ்க்கை வேறு இல்லை.

தீனாம்மா கண்ணாடியை எடுத்துக்கொண்டு வெளியே சென்றாள். அவள் அதை கிணற்றில் வீசி எறிந்தாள். எப்போதும் அவளுடைய அவலட்சணமான தோற்றத்தை ஞாபகப்படுத்திக் கொண்டிருக்கும் கண்ணாடி- இதற்குமேல் அதை பார்ப்பது இல்லை என்ற முடிவை அவள் எடுத்தாள்.

ஆனால், உயிருள்ள ஒரு கண்ணாடி அந்த வீட்டிலேயே இருந்தது- சாராம்மா. அவள் எப்போதும் தீனாம்மாவின் அவலட்சணத்தை ஞாபகப்படுத்திக் கொண்டே இருந்தாள்.

“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய

மூக்கு பாதி மூடிய கண்கள்,

யானையின் உதடுகளைப் போன்ற அதரங்கள்

மான்மணி இவள் அல்லவா தீனாம்மா?”

இப்படி சாராம்மா எப்போதும் பாடிக்கொண்டிருப்பதைக் கேட்கலாம். தீனாம்மா மாணவியாக இருந்தபோது, குறும்புத்தனம் கொண்ட ஒரு மாணவன் அவளைப் பற்றி எழுதிய ஒரு தமாஷான கவிதை அது. தீனாம்மா எங்கேயாவது அமர்ந்திருப்பதைப் பார்த்துவிட்டால் போதும்- சாராம்மா அந்த பாடலைச் சத்தம் போட்டுப் பாட ஆரம்பித்து விடுவாள். சில நேரங்களில் இசை நாடகத்தில் பாடுவதைப்போல அவள் தீனாம்மாவின் முன்னால் போய் நின்று கொண்டு, “மான்மணி இவள் அல்லவா தீனாம்மா!” என்று பாடுவாள்.

ஆரம்பத்தில் தீனாம்மா சாராம்மாவைப் பார்த்து கோபப்பட்டாள். பிறகு தன்னுடைய அவலட்சணமான தோற்றத்தைப் பற்றி அவளுக்கே புரிதல் உண்டானபோது, பிறர் அவளைப் பார்த்து கிண்டல் பண்ணுவது அவளுடைய அவலட்சணமான தோற்றத்திற்கு எதிராக மட்டுமே என்பதை அவள் புரிந்து கொண்டாள். அதற்குப் பிறகு அவள் ஒரு மேலோட்டமான சிரிப்பை வெளிப்படுத்தியவாறு வெறுமனே உட்கார்ந்திருப்பாள்.

தீனாம்மாவின் அவலட்சணமான தோற்றத்தை நினைத்து, அவளைவிட அதிகமாக அவளுடைய தந்தையும் தாயும் கவலைப்பட்டார்கள். சாராம்மா தீனாம்மாவைக் கிண்டல் பண்ணும்போது, அவளுடைய தாய் அவளைத் திட்டுவாள். “என்னடி, இப்படி நடந்துக்குறே? அவளுக்கு என்ன குறை?”

“அய்யோ! அந்த மூக்கின் அழகு இருக்கே!” சாராம்மா ஒவ்வொரு குறைகளையும் கூற ஆரம்பிப்பாள்.

“அவளுடைய மூக்குக்கு அப்படி என்ற குறை இருக்கு? சப்பி இருக்குறதுதான் அழகு...!”

“அந்த உதட்டின் அழகு! யானையின் உதட்டைப்போல இருக்கு...”

“அவளுடைய உதடு கொஞ்சம் பெரியதாக இருந்தாலும், அது அவளுக்கு அழகுதான்!”

“அழகு? காக்கா குறத்தியின் அழகு...”

“உன் அழகு எதையும் அவளுக்குத் தரவேண்டாம். இனிமேல் அவளைக் கேலி பண்ணுவதைக் கேட்டால், உனக்கு உதைதான் கிடைக்கும்.”

சாராம்மா வேகமாக அங்கிருந்து ஓடிவிடுவாள்.

“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய மூக்கு, பாதி மூடிய கண்கள்,

யானையின் உதடுகளைப் போன்ற அதரங்கள்

மான்மணி இவள் அல்லவா தீனாம்மா!”

அவளுடைய தாய் பிரம்பை எடுத்துக் கொண்டு அவளுக்குப் பின்னால் ஓடுவாள். தீனாம்மா கவலை நிறைந்த ஒரு புன்னகையுடன் கூறுவாள்: “அம்மா, அவள் பாடிவிட்டுப் போகட்டும். அவள் கிண்டல் பண்ணட்டும். அவளுடைய தப்பு இல்லல.... என்மீது விரோதம் இல்ல... என் முகத்தைப் பார்த்தால் யாராக இருந்தாலும் கிண்டல் பண்ணத்தான் செய்வாங்க.”

சாராம்மா அவலட்சணமானவள் அல்ல என்றாலும், அழகி என்று கூற முடியாது. ஆனால், தீனாம்மாவிற்கு முன்னால் அவள் ஒரு தேவதைதான். அக்காவின் அவலட்சணம் தங்கையின் அழகை அதிகப்படுத்திக் காட்டியது.

அதேபோல தங்கையின் அழகு அக்காவின் அவலட்சணமான தோற்றத்தை அதிகப்படுத்தியது.

தீனாம்மாவிற்கு எங்கும் எப்போதும்  தனியாகச் செல்வதற்கு அனுமதி இருந்தது. அவளுடைய அழகற்ற தன்மை இளைஞர்களின் படையெடுப்பிலிருந்து அவளைக் காப்பாற்றி விடும் என்ற உறுதியான தீர்மானம் அவளுடைய தாய், தந்தைக்கு இருந்தது. ஆனால், படிப்பை நிறுத்திவிட்ட பிறகு அவள் வெளியே எங்கும் செல்வதில்லை. ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேவாலயத் திற்கு மட்டும் செல்வாள். அவள் எங்கு சென்றாலும், கேலி செய்யப் படுவாள். அவள் எல்லாராலும் வெறுக்கப்படுவாள். அதனால் பிறரிடமிருந்து விலகி தனிமையில் இருக்க வேண்டும் என்று அவள் எப்போதும் விரும்பினாள்.

அவலட்சணமான தோற்றத்தைக் கொண்ட தீனாம்மா, அழகை ஆராதிக்கக் கூடியவளாக இருந்தாள். அழகற்ற தோற்றம், இனிமையற்ற குணம், கவிதை இல்லாத உரையாடல்- இவை அனைத்தும் அவளால் தாங்கிக் கொள்ள முடியாதவையாக இருந்தன. ஆனால், அவளுடைய  முகத்தின் அழகற்ற தன்மையைப் பற்றி அவளுக்கே தெளிவான புரிதல் இருந்ததால், மற்றவர்களை ஆராய்ந்து பார்ப்பதற்கான தைரியம் அவளுக்கு இல்லாமல் போய்விட்டிருந்தது. அவளுடைய சித்தப்பாவின் மகளான அன்னக்குட்டியையும், பக்கத்து வீட்டிலிருக்கும் தங்கம்மாவையும் மட்டும் அவர்களுக்கு வெறுப்பு உண்டாகாத வகையில்- அவள் விமர்சனம் செய்வாள். அன்னக்குட்டியிடம் அவள் கூறுவாள்: “அன்னக்குட்டி, நீ உன் கூந்தலை இப்படி கட்டக்கூடாது. இங்கே வா... நான் கட்டிவிடுறேன்.” அவள் அன்னக்குட்டியின் கூந்தலை அழகாக சீவி, கட்டிவிடுவாள். அதில் மலர்களை அணிவிப்பாள். பிறகு, கூறுவாள்: “இப்படி கூந்தலைக் கட்டி இருப்பதுதான், உனக்கு அழகு! தலை முடியைக் கட்டி, மலர்களைச் சூடணும். அழகாக நடக்கணும்.”


தங்கம்மா வெள்ளை நிறத்தில் சட்டையை அணிந்து வரும்போது, தீனாம்மா கூறுவாள்:

“தங்கம்மா, இளம் பச்சை நிறத்திலிருக்கும் சட்டையைப் போட்டுக்கணும். அதுதான் உனக்குப் பொருத்தமானது.”

தங்கம்மா கேட்பாள்: “நிறத்தைக் கொண்ட சட்டையை அணியலாமா, தீனாம்மா?”

“அணிந்தால் என்ன? உனக்கு அதுதான் பொருத்தமாக இருக்கும். அது உன்னுடைய அழகை அதிகப்படுத்தும்.”

“ஓ! அழகு!” தங்கம்மா அலட்சியமான குரலில் கூறுவாள்: “அழகு என்பது கடவுள் தருவதுதானே தீனாம்மா?”

தீனாம்மாவின் முகத்தில் ஒரு கவலையின் சாயல் நிழலாடும். உண்மைதான்... அழகு என்பது கடவுள் தருவதுதான். அது எல்லாருக்கும் கிடைப்பதில்லை. கடவுள் அளிக்கும் அழகை நாம் பத்திரமாகக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். அதுதான் நம்முடைய கடமை.

அழகை வெறுக்கக் கூடிய மூடத்தனமான நம்பிக்கைகளையும் சடங்குகளையும் சட்டங்களையும் அவள் மதிப்பதே இல்லை. மனிதர்களின் தோற்றத்திலும் செயலிலும் அழகு மிளிர வேண்டும் என்று அவள் விரும்பினாள். அழகு முழுமையாக நிறைந்திருக்கும்- கலைத்தன்மை கொண்ட ஒரு உலகத்தை அவள் கற்பனை செய்து பார்த்தாள். அவளுடைய அறை அழகான ஓவியங்களைக் கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஒரு நல்ல ஓவியமோ, அழகான ஒரு மலரோ தீனாம்மாவின் இதயத்தைக் கவர்ந்துவிடும். அவளுடைய கட்டிலில் மல்லாக்கப் படுத்தவாறு சுவரில் இருக்கும் ஓவியங்களில் மறைந்திருக்கும் அமைதியான கவிதையில் மூழ்கிப் போய் விடுவது என்பது அவளுடைய வாடிக்கையான செயலாக இருந்தது.

வீட்டிற்கு வெளியே ஒதுக்குப்புறமான ஒரு இடத்தில் அவள் ஒரு பூந்தோட்டம் அமைத்திருந்தாள். மிகவும் சிறப்புத் தன்மை கொண்ட செடிகளையும் கொடிகளையும் அவள் அந்தத் தோட்டத்தில் நட்டு வளரச் செய்திருந்தாள். அதன் நடுப்பகுதியில் மிகவும் அழகான கொடிகளாலான ஒரு குடிலையும் அமைத்திருந்தாள். அவள் பாடல்களைக் கற்கவில்லையென்றாலும், அந்த கொடிகளாலான குடிலில் உட்கார்ந்து மெதுவான குரலில் பாடிக் கொண்டிருப்பாள்.

எல்லா அதிகாலைப் பொழுதிலும், தீனாம்மா குளித்துவிடுவாள். அது எதுவும் சாராம்மாவிற்குப் பிடிக்கவே பிடிக்காது. ஒருநாள் தீனாம்மா குளித்து முடித்து வரும்போது, சாராம்மா கிண்டலான குரலில் கேட்டாள்: “தீனா அக்கா, காக்கா குளித்தால் கொக்காகி விடுமா?”

தீனாம்மா அவளுடைய எப்போதும் இருக்கக்கூடிய சோகம் நிறைந்த புன்னகையுடன் பதில் சொன்னாள்: “காக்கா குளித்தால் கொக்காகாது. ஆனால் காக்காவும் குளிக்கும். குளிக்காத கொக்கை விட, குளிக்கக்கூடிய காக்கா நல்லது அல்லவா?”

ஒருநாள் தீனாம்மா தன்னுடைய அறையில் ஓவியங்களைப் பார்த்துக்கொண்டு மனதில் சந்தோஷப்பட்டவாறு படுத்திருந்தாள். சாராம்மா மெதுவாக அந்த அறைக்குள் வந்தாள்.

ஒரு ஓவியத்தைப் பார்த்தவாறு அவள் சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்தாள். ரவிவர்மாவின் “ஹம்ச தமயந்தி” என்ற ஓவியமே அது. சாராம்மா அந்த ஓவியத்தின் அழகைப் பார்க்க வேண்டும் என்பதற்காக அதைச் சுவற்றிலிருந்து கையில் எடுத்தாள்.

அவள் மெதுவாக மேஜையின் அருகில் போய் உட்கார்ந்தாள். தீனாம்மாவிற்குத் தெரியாமல் மேஜைக்குள்ளிருந்து பவுண்டன் பேனாவை எடுத்து அந்த ஓவியத்தில் வரைய ஆரம்பித்தாள். மிகவும் அழகாக இருந்த அந்த ஓவியத்தின் பல பகுதிகளிலும் அவள் மையைத் தேய்த்தாள். தமயந்தியின் கண்களில் இரண்டு துளி மை... மூக்கில் தடிமனான ஒரு கோடு... உதடுகளில் தேய்ப்பு... சாராம்மா ஓவியத்தை எடுத்து தூக்கிப் பிடித்தாள். அவளுக்கு முழுமையான சந்தோஷம் உண்டானது. தன்னுடைய ஓவியம் வரையும் திறமையைப் பற்றி அவள் பெருமைப்பட்டுக் கொண்டாள். அந்த ஓவியத்தை தீனாம்மாவிற்கு முன்னால் உயர்த்திப் பிடித்துக் கொண்டே அவள் சொன்னாள்: “இங்கே பாருங்க... இப்போ இது உங்களைப்போலவே இருக்கிறது அல்லவா?”

கொலைகாரி! தீனாம்மா அதிர்ச்சியடைந்து விட்டாள்.

“அய்யோ!” அவள் வேகமாக எழுந்தாள். “சாராம்மா... நீ என்ன துரோகச் செயலைச் செய்திருக்கே?”

அவளுடைய தொண்டை இடறியது. “நீ அழகைக் குத்திக் கொன்று விட்டிருக்கிறாய். நீ அவலட்சணமானவள்.”

சாராம்மா விழுந்து விழுந்து சிரித்தாள்.

“கொக்கைப் போன்ற கழுத்து, ஒட்டிய-

இதுவல்லவா தீனாம்மா?”

இப்படி பாடிக்கொண்டே அவள் ஓடினாள். தூரத்தில் அவளுடைய குரல் இப்படிக் கேட்டது: “அம்மா, இங்கே பாருங்க. தீனாம்மா அக்காவின் முகம் இப்படித்தானே இருக்கும்?”

2

க்கத்து வீட்டைச் சேர்ந்த தங்கம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டது. அவளும் தீனாம்மாவும் சமவயதைக் கொண்டவர்கள்.  திருமண நாளன்று தங்கம்மாவிற்கு ஆடைகளை யும் நகைகளையும் அணிவித்தது தீனாம்மாதான். தீனாம்மா தங்கம்மாவின் கூந்தலை அழகாக சீவி, கட்டிவிட்டாள். தலைமுடியை வாரிக் கட்டுவதில் தீனாம்மாவிற்கு சிறப்புத் திறமை இருந்தது. ஒவ்வொரு முகத்திற்கும்  ஏற்ற வகையில் அவள் கூந்தலை வாரிக் கட்டுவாள். பிறகு தங்கம்மாவிற்கு ஆடைகளை அணிவித்தாள். அந்த விஷயத்திலும் அவளுக்கு ஒரு தனிப்பட்ட ரசனை இருந்தது. எல்லாரும் அணிவதைப் போலத்தான். ஆனால், தீனாம்மாவின் கைகளால் அணிவிக்கப்படும்போது, அதற்கு ஒரு தனியான அழகு உண்டாகும் மிகவும் குறைவான நகைகளை அணிவதற்கு மட்டுமே அவள் அனுமதிப்பாள். இவ்வாறு அலங்காரங்கள் அனைத்தும் முடிவடைந்தவுடன், தங்கம்மா கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். “தீனாம்மா, எனக்கு இந்த அழகெல்லாம் எங்கேயிருந்து வந்தது?”

“இந்த அழகு உனக்கென்று இருப்பதுதான். அழகு என்பது எல்லாருக்கும் இருக்கிறது. அதை எல்லாராலும் கண்டுபிடித்து தெரிந்துகொள்ள முடியவில்லை. அவ்வளவுதான்...”

“தீனாம்மா, உனக்கும் அழகு இருக்கிறதா?”- அவள் அலட்சியமான குரலில் கேட்டாள்.

“இருக்கு. என்னுடைய முகம் அழகற்றதாக இருந்தாலும், நான் அழகிதான்.” அவள் அழுத்தமான குரலில் இவ்வாறு கூறினாள். அவள் சிறிது நேரம் அமைதியாக நின்றிருந்தாள். அவளுடைய முகத்தில் சோகம் கலந்த புன்னகை நிழலாடியது! “ஆனால், என்னுடைய அழகை யாரும் பார்க்காமல் இருக்கலாம். யாரும் புரிந்து கொள்ளவில்லை என்று கூறலாம். அது எனக்குள்ளேயே இருந்து அழிந்து போகலாம்.”

அவள் என்ன கூறுகிறாள் என்பதை தங்கம்மாவால் புரிந்துகொள்ள முடியவில்லை.

திருமணம் முடிந்து மணமகனையும் மணமகளையும் வாழ்த்திவிட்டு அவள் திரும்பிச் சென்றாள். அவள் தன்னுடைய கட்டிலில் போய் படுத்தாள். மிகவும் இனிமையான ஒரு பகல் கனவில் அவள் மூழ்கிவிட்டாள். அவளுடைய திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது. மணமகன் மிகவும் அழகான தோற்றத்தைக் கொண்டவனாகவும் நல்ல குணங்களைக் கொண்டவனாகவும் நிறைய படித்தவனுமான ஒரு இளைஞனாகவும் இருந்தான். அவளுடைய இல்லம் மிகவும் அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. வாத்தியங்களின் இசைப்புகள் ஆரம்பமாயின. அவள் வேகமாக அலங்கரித்துக் கொண்டிருந்தாள். அலங்கரிப்பு முடித்து, அவள் கண்ணாடிக்கு முன்னால் போய் நின்றாள். அவள் மிகவும் அழகான தோற்றம் கொண்டவளாக ஆகிவிட்டிருந்தாள்.


“அழகியா?” அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். அவள் பகல் கனவிலிருந்து கண்விழித்தாள்: “நான் அழகான பெண்ணாக ஆகிவிட்டேனா?” அவள் சாராம்மாவின் அறைக்குள் ஓடி கண்ணாடியை எடுத்துப் பார்த்தாள். அந்த சப்பையான மூக்கும், வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் பல்லும், கறுத்து தடித்த உதடுகளும்! “இல்லை... அதற்கான அதிர்ஷ்டம் எனக்கு இல்லை...” அவள் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டாள்.

அதற்குப் பிறகும் ஒரு வருடம் கடந்தோடியது. தீனாம்மாவிற்கு இருபத்து இரண்டு வயதுகள் ஆயின. சித்தப்பாவின் மகள் அன்னக்குட்டி- அவளுடைய திருமணமும் நடந்து முடிந்தது. அந்தத் திருமணத்திற்கும் தீனாம்மா சென்றிருந்தாள். “என் வாழ்க்கையிலும் இப்படியொரு நாள் வருமா?” அவள் தனக்குத்தானே கேட்டுக் கொண்டாள். ஒரு மனைவியாக ஆவதற்கு- ஒரு கணவனுடன் சேர்ந்து வாழ்வதற்கு- அவளுக்கும்  உயர்ந்த ஆசை இருந்தது. அதற்கும் மேலாக, ஒரு குழந்தையின் தாயாக ஆவதற்குத்தான் அவள் விரும்பினாள். கணவனின் மார்பின்மீது சாய்ந்து ஓய்வு எடுப்பதற்கு அவளுடைய இதயம் குதித்து பாய்ந்து கொண்டிருந்தது. தன்னுடைய குழந்தையின் கன்னத்தில் சற்று முத்தமிடுவதற்கு அவளுடைய கறுத்து தடிமனாக இருந்த உதடுகள் ஏங்கிக் கொண்டிருந்தன. அவள் எதிர்காலத்தின் தூரத்தைப் பார்த்தாள். வெறுமை! வெறுமை!

தன்னுடைய வாழ்க்கையில் காதல் கலந்த ஒரு பார்வையை அவள் அனுபவித்ததே இல்லை. அவள் உலகத்தைக் காதலித்தாள். உலகம் அவளை வெறுத்தது.

அவள் உலகத்தின் அழகை வழிபட்டாள். உலகம் அவளிடம் அவலட்சணம் இருப்பதாகப் பார்த்தது. அவள் யார்மீதும் வருத்தப்படவில்லை. யாரிடமும் முறையிடவுமில்லை. தன்னுடைய அழகற்ற முகம் உலகத்தை தன்னிடமிருந்து தூரத்தில் நிற்கச் செய்கிறது என்ற விஷயத்தை அவள் தெரிந்து வைத்திருந்தாள்.

மேலும் ஒரு வருடம் கடந்து சென்றது. சாராம்மாவிற்கு திருமண ஆலோசனைகள் பலவும் வந்தன. “மூத்தவள் இருக்குறப்போ இளையவளை எப்படி அனுப்ப முடியும்?” இப்படிக் கூறி அவளுடைய தந்தை திருமணத்தை நடத்தாமல் இருந்தார். தீனாம்மாவிற்கு திருமணம் செய்து வைப்பதற்கு பல முயற்சிகளும் நடைபெற்றன. அனைத்தும் வீணாயின. தீனாம்மாவிற்காக சாராம்மா திருமணம் ஆகாதவளாக இருக்க வேண்டியதிருந்தது.

அவளுடைய தாய் ஒருநாள் அவளின் தந்தையிடம் கூறினாள்: “இப்படி வர்றதையெல்லாம் வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருப்பது சரியான விஷயமா? தீனாவிற்கு யாராவது வர்றப்போ அனுப்புவோம். அவளுக்காக இளையவள் ஏன் கஷ்டப்பட வேண்டும்?.”

சாராம்மாவிற்கு தீனாம்மாவின்மீது இருக்கும் வெறுப்பு அதிகமாகிக் கொண்டு வந்தது. அவள் தீனாம்மாவிடம் பேசக்கூட செய்வதில்லை.

அவளுடைய சந்தோஷத்திற்கு எதிராக நின்று கொண்டிருக்கும் ஒரு எதிரி என்பதைப்போல அவள் தீனாம்மாவை நினைத்தாள்.

ஒருநாள் தீனாம்மா சமீபத்தில் தனக்குக் கிடைத்த ஒரு ஓவியத்தைப் பார்த்துக் கொண்டே தன்னுடைய அறைக்குள் உட்கார்ந்திருந்தாள். ஒரு ரோஜா மலரைப் பறித்தெடுப்பதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் மிகவும் அழகு படைத்த ஒரு இளம்பெண்... அவள் அந்த ரோஜா மலரின் அழகில் தன்னை முழுமையாக மறந்து நின்று கொண்டிருந்தாள். மலரைப் பறித்தால் அதற்கு வேதனை உண்டாகுமோ என்ற கவலையில் அவளுடைய கை மலரைத் தொடுவதற்குத் தயங்குகிறது. அதுதான் அந்த ஓவியத்தின் சாராம்சம். ஓவியத்திற்கு அடியில் “ஓவியர் ஸி.எம். தாமஸ்” என்று எழுதப்பட்டிருந்தது. அப்படிப்பட்ட ஒரு ஓவியனை அவள் அதற்கு முன்னால் கேள்விப்பட்டதில்லை. ஓவியத்தின் அழகும் அதன் கவித்துவத் தன்மையும் அவளை மிகவும் ஈர்த்தன.

பக்கத்து அறையில் தந்தையும் தாயும் திருமண விஷயத்தைப் பற்றி என்னவோ உரையாடிக் கொண்டிருந்தார்கள். திடீரென்று அவள் இருந்த அறைக்குள் அவளுடைய தந்தை நுழைந்து வந்தார். ஓவியத்திலிருந்து கண்களை எடுக்காமலே அவள் எழுந்து நின்றாள். அவர் நாற்காலியில் உட்கார்ந்தார். “தீனா...” பாசமும் அதைவிட இரக்கமும் கலந்த குரலில் அவர் இப்படி அழைத்தார். தீனாம்மா முகத்தை  உயர்த்தி தன் தந்தையைப் பார்த்தாள். அவர் என்னவோ கூறுவதற்கு முயன்றார். அதை அடக்கிக் கொண்டு இப்படி கேட்டார்: “தீனா, நீ தினமும் பிரார்த்தனை செய்கிறாயா?”

“ஆமாம்....” ஒரு சிறிய வட்டமான மேஜையின்மீது வைக்கப் பட்டிருந்த இயேசு கிறிஸ்துவின் படத்தைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்: “அந்த படத்திற்கு முன்னால் நான் தினமும் பிரார்த்தனை செய்வேன்.”

“கர்த்தர் வாழ்த்தப்படட்டும்...” ஆழமான பார்வைகளுடன் அவர் தொடர்ந்து சொன்னார்: “மகளே, கர்த்தரின் சட்டம் நடக்கும். கர்த்தரின் கருணை நம்மை காப்பாற்றும். கர்த்தரின் ராஜ்ஜியம் வரும்.”

தீனாம்மா எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். அவர் தொடர்ந்து சொன்னார்: “ஏற்கெனவே நடைபெற்றவை எதுவும் பெரிதல்ல, மகளே. கர்த்தரின் திருச்சந்நிதியில் நாம் எல்லாரும் கணக்கு கூற வேண்டும். அதற்குத் தயாராகிக் கொள். தந்தையோ தாயோ குழந்தைகளோ மனைவியோ கணவனோ அன்று உதவி செய்வதற்கு வரமாட்டார்கள். நம்முடைய பாவங்கள் அனைத்திற்கும் நாம்தான் பதில் கூற வேண்டும்.”

அவர் இடது கையால் தலையைத் தாங்கிக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தார். தன் மகளைக் கூர்ந்து பார்த்துக்கொண்டே அவர் மீண்டும் சொன்னார்: “தீனா,  நீ பாவம் செய்வதற்காகப் பிறந்தவள் இல்லை. புனித மரியத்தைப்போல என் மகளான நீ என்றும் புனிதமானவளாக இருக்க வேண்டும். கன்னிகளின் மடம்தான் என் குழந்தையான உனக்கு ஏற்ற இடம்.” அவருக்கே தெரியாமல் அவரிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளியே வந்தது.

தீனாம்மாவின் கவலை நிறைந்த அந்த புன்னகை அவளுடைய முகத்தில் தோன்றியது. “அப்பா, எனக்கு அதற்கான தகுதி இல்லை. எனக்கு அதற்கான புனிதத் தன்மை இல்லை.” அவள் அமைதியானாள். அந்த புன்னகை மறைந்து போனது. கவலை மட்டும் எஞ்சி நின்றது. “நான் எப்போதும் ஒரு கன்னியாக இருந்து கொள்வேன். கன்னிகளின் மடத்தில் அல்ல. அதற்கு வெளியே இருக்கும் விசாலமான, அழகான உலகத்தில்- நான் எப்போதும் கன்னியாக இருப்பேன்.” அவள் சிறிது நேரம் மவுனமாக நின்று கொண்டிருந்தாள். அந்த முகத்திலிருந்து கவலையும் மறைந்து விட்டது. அவள் உற்சாகமடைந்தவளைப்போல காணப்பட்டாள். பாதியாக மூடியிருந்த அந்தக் கண்கள் விரிந்தன. நாசியின் நுனிப்பகுதி உயர்ந்தது. அவளிடமிருந்து வார்த்தைகள் வெளியே வர ஆரம்பித்தன. “இங்கு பார்ப்பவை அனைத்தும் பெரிதானவை யாக இல்லாமலிருக்கலாம். ஆனால், அவை அனைத்திலும் அழகு என்ற ஒன்று இருக்கிறது. அவை எல்லாவற்றிலும் வாழ்க்கை இருக்கிறது. நான் அழகை ஆராதனை செய்பவள். வாழ்க்கையைக் காதலிப்பவள். கர்த்தரின் படைப்பான பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் நான் அழகை ஆராதிக்கக் கூடியவளாக, வாழ்க்கையை நேசிப்பவளாக, நித்யகன்னியாக வாழ்வேன்.”


அவளுடைய வார்த்தைகளின் பெருவெள்ளத்தில் தன்னைத்தானே ஒன்றி விட்டதைப் போல அவள் சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்துவிட்டு தொடர்ந்து சொன்னாள்: “அப்பா, என்னை நினைத்து கவலைப்பட வேண்டாம். திருமணத்தை நான் வெறுக்கவில்லை என்பது மட்டுமல்ல. அதை நான் விரும்பவும் செய்கிறேன். ஆனால் ஒரு நித்யகன்னியாக வாழ்வதற்கு, கன்னியாக இருந்து கொண்டே அழகை ஆராதனை செய்வதற்கு என்னால் முடியும். சாராம்மாவோ கன்னியாக இருப்பதற்காக உள்ளவள் அல்ல. அவளுக்கு வாழ்வதற்கும் சந்தோஷமாக இருப்பதற்கும் இன்னொரு ஆளின் உதவி வேண்டும். எனக்காக அவளை கவலை கொள்ளச் செய்ய வேண்டாம்.”

அவர் அவளுடைய முகத்தையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தார். அவளுடைய விரிந்த கண்கள் மீண்டும் பாதியாக அடைந்தன. நாசி கீழே இறங்கியது. அவள் தன் கையிலிருந்த ஓவியத்தையே அலட்சியமாகப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவர் எழுந்து வாசலை நோக்கி நடந்தார். வாசலின் அருகில் திரும்பி நின்று கொண்டு அவர் சொன்னார்: “சாராம்மாவின் திருமணம் முடிவு செய்யப்பட்டுவிட்டது.” அவர் வேகமாக அங்கிருந்து புறப்பட்டார்.

மீண்டும் அந்த சோகமான புன்னகை! அவள் வட்ட வடிவ மேஜையின் அருகில் சென்று நின்றாள். இயேசு கிறிஸ்துவின் படத்தில் பார்வையைப் பதித்து அவள் முழங்காலிட்டாள்.

சாராம்மாவிற்கு திருமணம் முடிந்தது. ஓரளவு பண வசதியைக் கொண்டவனும் விளையாட்டு வீரனுமான ஒரு இளைஞன் அவளுக்கு கணவனாகக் கிடைத்திருந்தான். திருமணம் முடிந்து அவள் தன் கணவனின் வீட்டிற்குப் புறப்பட்டாள். தீனாம்மா வழியனுப்புவதற்காக வாசற்படி வரை சென்றாள். புதுமணத் தம்பதிகள் எல்லாரிடமும் விடை பெற்று விட்டு, காரில் ஏறிப் புறப்பட்டார்கள். அவர்கள் மறைவது வரை தீனாம்மா அங்கேயே பார்த்துக்கொண்டு நின்றிருந்தாள். அவளுடைய தந்தையும் தாயும் அவளைப் பார்த்து என்னவோ கூறினார்கள். அவளுடைய தந்தை நீளமான பெருமூச்சை விட்டார். தாய் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தீனாம்மா தன்னுடைய பூந்தோட்டத்திற்குச் சென்றாள். அவள் மிகவும் வேகமாக மலர்களின் நறுமணத்திலும் கொடிகளின் அழகிலும் பறவைகளின் சலசலப்பிலும் மூழ்கிவிட்டாள்.

மேலும் சில வருடங்கள் கடந்தோடின. தீனாம்மாவிற்கு இருபத்தெட்டு வயதுகள் ஆயின. அவள் பகல் முழுவதும் தன்னுடைய  பூந்தோட்டத்தில் இருப்பாள். அங்கே இருந்தவாறு அவள் இனிமையான கனவில் மூழ்கி சந்தோஷப்பட்டுக் கொண்டிருப்பாள். சாயங்கால நேரத்தில் அவளுடைய தந்தையும் அங்கு வந்து அமர்ந்திருப்பதுண்டு. அவர்கள் ஓருவரோடொருவர் எதுவும் பேசிக் கொள்வதில்லை. தந்தையின் உலகத்திலிருந்து எந்த அளவிற்கு வேறுபட்ட ஒரு உலகத்தில் மகள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள்- இயற்கையின் அம்சங்களால் முழுமையான அழகும் கலைத் தன்மையும் கொண்ட ஒரு உலகம்! அபூர்வமாக சில நேரங்களில் மட்டுமே அந்த உலகத்தை விட்டு அவள் கீழே இறங்கி வருவாள். அப்போது சந்தோஷமற்ற, நிலைகுலைந்து போயிருக்கும் அவளுடைய பெண்மைத் தனம் அவளைத் தொல்லைப் படுத்தும். ஆணின்- கணவனின்- காதல்வயப்பட்ட ஒரு பார்வை... ஒரு வார்த்தை... ஒரு தொடல்... அதற்காக அவளுடைய இதயம் குதிக்கும்... தான் வேதனையுடன் பிரசவித்த பச்சிளங் குழந்தையின் அழகான புன்சிரிப்பிற்காக அவள் ஏங்குவாள். ஒரு நொடி நேரத்திற்கு மட்டும்- அவை அனைத்தையும் அசாதாரணமான பக்குவத்துடன் அவள் கட்டுப்படுத்திக் கொள்வாள். ஆனால், அவளுடைய இதயத்தின் அடித்தட்டில் அந்த சந்தோஷமற்ற தன்மையும் அமைதியற்ற நிலையும் தங்கி நின்று கொண்டிருந்தன.

ஒரு சாயங்கால நேரத்தில் அவள் செடிகளுக்கு மத்தியில் மறைந்து கொண்டிருந்த சூரியனைப் பார்த்து ஆனந்தம் அனுபவித்துக் கொண்டிருந்தாள். மேகங்களின் பல வகைப்பட்ட வண்ணங்களையும் அந்த வண்ணங்கள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக் கொண்டிருப்பதையும் பார்த்துப் பார்த்து அவள் தன்னையே மறந்து விட்டிருந்தாள்.

“தீனா!” அந்த அழைப்பு அவளை சுய உணர்விற்குக் கொண்டு வந்தது. எப்போதும் இல்லாத ஒரு மலர்ச்சியுடன் நின்று கொண்டிருக்கும் தன் தந்தையை அவள் பார்த்தாள். அவள் எழுந்து நின்றாள்.

“உட்காரு... நானும் உட்காருகிறேன்.” அவளும் அவரும் அமர்ந்தார்கள்: “தீனா, நீ எப்போதும் இப்படி கன்னியாகவே இருக்க வேண்டும் என்றா விரும்புகிறாய்?”

அவள் பதில் கூறவில்லை. மேற்கு திசையின் விளிம்பைப் பார்த்தவாறு அவள் அமைதியாக நின்றிருந்தாள்.

“உனக்குத் திருமணம் செய்து பார்க்க வேண்டும் என்ற விருப்பம் எனக்கு இருக்கிறது.”

அவளுடைய உடன்பிறப்பான அந்த சோகம் கலந்த புன்னகையுடன் அவள் சொன்னாள்: “அப்பா, நம் ஒவ்வொருவரின் இதயத்திலும் ஏராளமான ஆசைகளின் கரியும் சாம்பலும் குவியல் குவியலாக கிடக்கின்றன.”

“தெய்வத்திற்கு கருணை இருக்கிறது, மகளே”.

“இருக்கலாம்...” அவள் ஓவியத்தில் மூழ்கிவிட்டதைப்போல தோன்றினாள்.

அவர் என்னவோ கூற முயற்சித்தார். தயக்கத்துடன் அவர் அதைக் கட்டுப்படுத்திக் கொண்டார். சிந்தனையிலிருந்து விடுபடாமலே, தனக்குத்தானே கூறிக்கொள்வதைப்போல அவள் சொன்னாள்: “எப்போதும் கன்னியாகவே இருப்பது- அதிலும் ஒரு ஆனந்தம் இருக்கத்தான் செய்கிறது. இந்த மலர்களும் கொடிகளும் சூரியோதயமும் அஸ்தமனமும்- அதற்கும் மேலாக ஆனந்தத்தை யாரால் தர முடியும்?” அவள் மீண்டும் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.

“மகளே, உன்னை திருமணம் செய்து கொள்வதற்கு ஒரு ஆள் இருக்கிறார்.”

தமாஷான குரலில் அவள் கேட்டாள்: “என்னையா?”

“ஆமாம்... இந்த விஷயத்தைக் கூறுவதற்காகத்தான் நான் இங்கே வந்தேன்.”

“என்னையா?” அவளுக்கு நம்பிக்கை உண்டாகவில்லை.

“ஆமாம்... உன்னைத்தான்... அவர் இப்போதுதான் கிளம்பிப் போனார்.”

“யார்?”

“தாமஸ்...”

“எந்த தாமஸ்?”

“ஸி.எம். தாமஸ்.”

ரோஜா மலரைப் பறிப்பதற்காக கையை நீட்டிக் கொண்டிருக்கும் அழகியின் ஓவியம் அவளுடைய ஞாபகத்தில் வந்தது. அவள் ஆர்வத்துடன் கேட்டாள்: “ஓவியர் ஸி.எம். தாமஸ்... அப்படித்தானே?”

“ஆமாம்...”

அவள் சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு கேட்டாள்: “அவர் என்னைப் பார்த்திருக்கிறாரா?”

“பார்த்திருக்கிறார்.”

“என்னுடைய முகத்தை?”

“ம்...”

“அதற்குப் பிறகும்...?” அவள் பாதியில் நிறுத்திக் கொண்டாள்.

“ஆமாம், மகளே... அதற்குப் பிறகும் அவர் உன்னைத் திருமணம் செய்து கொள்வதாகக் கூறினார். பிறகு... ஒரு விஷயம்... மூவாயிரம் ரூபாய் தருவதாக ஒப்பந்தம்.”

“மூவாயிரமா? எதற்கு?” அவள் நெற்றியைச் சுளித்தாள்.

“மூவாயிரம் அல்ல... அய்யாயிரம் கேட்டாலும் நான் தருவேன். மகளே... என் மகளான உனக்கு திருமணம் செய்து வைத்து பார்த்து விட்டுத்தான் சாகணும் என்று எனக்கு ஒரு ஆசை இருக்கு.”

அடி வாங்கிய சர்ப்பத்தைப்போல அவள் சற்று அதிர்ச்சி யடைந்து விட்டாள். “வேண்டாம், அப்பா. அது வேண்டாம். என் அவலட்சணமான தோற்றம்... என் அதிர்ஷ்டமற்ற தன்மை... அது என்னுடனே இருந்து விட்டுப் போகட்டும். அதை ஒரு வியாபாரப் பொருளாக ஆக்க வேண்டுமென்று நான் நினைக்கவில்லை.”


“மகளே...!”

“வேண்டாம்...” அவள் தடுத்தாள்: “இந்த அவமானத்தை என்னால் தாங்கிக் கொள்ள முடியாது. அவருக்கு மூவாயிரம் ரூபாய் வேண்டுமென்றால், நீங்க கொடுங்க. ஆனால் என்னை அவரிடம் ஒப்படைத்து விடாதீர்கள்.”

“மகளே!”

“அப்பா...” அவள் பரிதாபமான குரலில் சொன்னாள்: “அவர் ஒரு ஓவியர். அழகான பெண்களையும் பிற அழகான பொருட்களையும் ஓவியமாக வரையக் கூடிய ஒரு கலைஞன். என்னுடைய அழகற்ற முகம் அவரை எப்போதும் தொந்தரவு செய்யும். அவர் என்னை வெறுப்பார். என்னை கிண்டல் பண்ணுவார். நான் கவலையில் மூழ்கிவிடுவேன். எங்களுடைய திருமண வாழ்க்கை நரகத்தைவிட கஷ்டம் நிறைந்ததாக இருக்கும். அப்பா, கவலையை விலை கொடுத்து வாங்க வேண்டுமா?”

“மகளே... நான் வாக்கு கொடுத்துவிட்டேன்.”

“அய்யோ! என் வாழ்க்கை நாசமாகி விட்டது. என் சந்தோஷம் இல்லாமல் போய் விட்டது.” அவள் அங்கிருந்து ஓடினாள்.

3

தேவாலயத்தில் திருமண நிகழ்ச்சி. தீனாம்மா மிகவும் அமைதியாக தாமஸுக்கு அருகில் நின்றுகொண்டிருந்தாள். பாதிரியார் வேத புத்தகத்திலிருந்து வசனங்களைக் கூறிக் கொண்டிருந்தார். தீனாம்மா தாமஸின் முகத்தை ஓரக் கண்களால் பார்த்தாள். அழகான அந்த முகத்தில் அலட்சியமான தன்மையையும் பொறுப்பற்ற போக்கையும் அவள் பார்த்தாள். திருமண நிகழ்ச்சியில் நின்று கொண்டிருக்கிறோம் என்ற உணர்ச்சியைக்கூட அவனுடைய முகத்தில் அவள் பார்க்கவில்லை. இலக்கே இல்லாமல் இங்குமங்குமாகப் பாய்ந்து கொண்டிருந்த அவனுடைய கண்கள் எதிர்பாராத வகையில் நொடி நேரம் அவளுடைய கண்களுடன் சந்தித்தன. அவனுடைய முகத்தில் ஒரு கிண்டலின் சாயல் நிழலாடியது. அவள் சற்று அதிர்ச்சியடைந்து விட்டாள்.

திருமணச் சடங்குகள் முடிவடைந்தன. உறவினர்கள் அவளை ஆசீர்வதித்தார்கள். சினேகிதிகள் அவளை வாழ்த்தினார்கள். அவள் யாருக்கும் தெரியாமல் கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள்.

தீனாம்மா மனைவியாக ஆனாள். அவள் தன் கணவனின் இல்லத்தில் இல்லத்தரசியாகவும் ஆனாள்.

கவனிப்பே இல்லாமல் தாறுமாறாகக்  கிடந்த ஒரு வீடாக  அது இருந்தது. தீனாம்மாவும் வயதான ஒரு வேலைக்காரக் கிழவியும் மட்டுமே அந்த வீட்டில் இருந்தார்கள். தீனாம்மா மிகவும் சிரமப்பட்டு அந்த வீடு முழுவதையும் சுத்தம் செய்து சீர் செய்தாள். எல்லா அறைகளையும் அழகுபடுத்தினாள். திருமணத்திற்கு முன்னால் அவள்  சேகரித்து வைத்திருந்த ஓவியங்கள் அனைத்தும் படுக்கையறையை அலங்கரித்துக் கொண்டிருந்தன. ரோஜா மலரைப் பறிப்பதற்கு முயலும் அழகான பெண்ணின் ஓவியத்திற்கு- அவள் மிகவும் அதிகமாக விரும்பக்கூடிய அந்த ஓவியத்திற்கு- அவள் மிகவும் அதிக முக்கியத்துவம் உள்ள ஒரு இடத்தைக் கொடுத்தாள். இப்போது அந்த ஓவியம் அவளுடைய வாழ்க்கையுடன் தொடர்பு கொண்டிருந்தது. வீட்டிலிருந்து சற்று தூரத்தில் இருந்த விசாலமான ஒரு குளத்தின் கரையில் அவள் ஒரு பூந்தோட்டத்தை உண்டாக்கினாள். குளத்தில் தாமரையை நட்டு வளரச் செய்தாள். அதை ஒரு தாமரைப் பொய்கையாக ஆக்கினாள்.  பொய்கைக்கு எதிரில் ஒரு கொடிகளாலான குடிலையும் உண்டாக்கினாள். அந்த வகையில் அவள் மீண்டும் ஓவியங்களிலும் பூந்தோட்டங்களிலும் தன்னுடைய கவனத்தை மையப்படுத்தினாள்.

தாமஸ் நாளில் ஒரு முறையோ, இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ வீட்டுக்கு வருவான். வந்தால் அதிக நேரம் அங்கு இருக்காமல் போய் விடுவான். எங்கு போகிறான் என்றோ, எதற்காக போகிறான் என்றோ அவள் கேட்டதில்லை. அது மட்டுமல்ல-அவள் எதையுமே கேட்பதில்லை. அவளுடைய முகத்தைப் பார்க்காமலே அவன் வீட்டுக் காரியங்களைப் பற்றி அலட்சியமாக சில கேள்விகளைக் கேட்பான். அவனுடைய முகத்தைப் பார்க்காமலே அவள் வீட்டுக் காரியங்களைப் பற்றி பதில்களையும்   கொடுப்பாள்.

வேலைக்காரி, தீனாம்மாவிடம் தாமஸைப் பற்றி பல விஷயங்களையும் கூறினாள். பல பெண்களையும் அவள் குற்றம் கூறினாள். தாமஸின் மோசமான நடவடிக்கைகளைப் பற்றி குறை சொன்னாள். “மகளே, இனி நீ நினைத்தால்தான் சரியாக இருக்கும்.” இப்படி அவள் கூறினாள்.

தீனாம்மா அவை எதையும் காதில் கேட்டதாகவே காட்டிக் கொள்ளவில்லை. தன் கணவனுடன் அறிமுகமாவதற்குக்கூட அவளால் முடியவில்லை. திருமண நாளன்று அவள் அவனுக்கு அருகில் நின்றிருக்கிறாள். அவளுடைய விரலில் மோதிரத்தை அணிவித்தபோதும் கழுத்தில் தாலியைக் கட்டியபோதும் அவன் அவளைத் தொட்டிருக்கிறான். அது மட்டும்தான். திருமணம் ஆகியும் அவள் கன்னியாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தாள். பழைய மாதிரியே அவள் ஓவியங்களிலும் மலர்களிலும் சந்தோஷத்தைக் கண்டு கொண்டிருந்தாள். ஆனால், முன்பு இருந்ததைவிட தாங்கிக் கொள்ள முடியாத- இதயத்தை வேதனைப் படுத்தக்கூடிய ஒரு அமைதியற்ற தன்மை அவளை பாதித்து விட்டிருந்தது.

அந்த வீட்டிலிருந்த ஒரு அறையை மட்டும் அவள் பார்க்கவில்லை. அது எப்போதும் பூட்டப்பட்டே இருந்தது. கதவுக்கு மேலே, “ஸ்டூடியோ” என்று எழுதப்பட்டிருந்தது. அந்த அறையின் சாவி தாமஸின் கையில் இருந்தது. அறையைச் சற்று திறந்து பார்க்க வேண்டும் என்று தீனாம்மாவிற்கு மிகுந்த விருப்பம் இருந்தது. ஆனால், தாமஸிடம் சாவியைக் கேட்பதற்கான துணிச்சல் அவளுக்கு இல்லாமலிருந்து.

அழகான ஒரு மாலை நேரத்தில் தீனாம்மா பூந்தோட்டத்திலிருந்த  கொடிகளால் ஆன குடிலில் பொய்கையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். ஒரு மெல்லிய காற்று பொய்கையின் தெளிந்த நீரில் அலைகளை உண்டாக்கிக் கொண்டிருந்தது. மலர்ந்து நின்று கொண்டிருந்த தாமரைப் பூக்கள் மெதுவாக... மெதுவாக அசைந்து  ஆடிக்கொண்டிருந்தன. வண்டுகள் பாடலை முணு முணுத்துக்கொண்டே ஒவ்வொரு பூக்களையும் தேடி பறந்து கொண்டிருந்தன. தீனாம்மா பொய்கையின் அழகில் தன்னையே மறந்து விட்டாள். அவள் தன்னுடைய மன அமைதியற்ற நிலையும் கவலையையும் அவளையுமேகூட  மறந்து விட்டாள். அவளுடைய பாதியாக மூடப்பட்டிருந்த கண்கள் விரிந்தன. சப்பிப் போய் விட்டிருந்த மூக்கு உயர்ந்து நிற்பதைப்போல தோன்றியது. மேற்கு திசை வானத்தின் விளிம்பில் தெரிந்த சிவப்பு நிறம் அவளுடைய உதடுகளில் ஒரு மெல்லிய சிவப்பு நிறத்தைப் பரவச் செய்தது. அவளுடைய முகத்தில் இனம் புரியாத ஒரு பிரகாசம் தோன்றியது. அவள்  அழகில் மூழ்கிப் போய்விட்டாள்... அவள் குதிக்க ஆரம்பித்தாள்.

பொய்கையின் மறுகரையில் யாரோ நின்று கொண்டிருந்தார்கள். தீனாம்மாவின் கண்கள் சிறிதும் எதிர்பாராமல் அந்த வழியில் பயணித்தன. அங்கிருந்து உற்சாகத்தை  உண்டாக்கும் ஒரு புன்னகை. அவள் எழுந்தாள். அமைதியாக அவள் மீண்டும் பொய்கையின் எதிர்கரையைப் பார்த்தாள்- அவளுடைய கணவன் அன்று முதல் முறையாக அவளைப் பார்த்து புன்னகைக்கிறான். சில நிமிடங்கள்... அதற்குப் பிறகும் தீனாம்மா எதிர்கரையை மறைந்து கொண்டு பார்த்தாள். தாமஸ் மிகவும் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தான்.


அவள் இரண்டு மூன்று அடிகள் முன்னோக்கி எடுத்து வைத்தாள். அவளுடைய உடல் நடுங்கியது... அந்தப் புன்னகை! அதன் போதையில் அவள் தன்னையே மறந்துவிட்டாள்.

தாமஸின் “ஸ்டூடியோ” உள்ளேயிருந்து தாழ்ப்பாள் போடப் பட்டிருந்தது. தீனாம்மா பல முறை கதவில் காதுகளை வைத்து கவனித்துப் பார்த்தாள். ஒரே அமைதி! ஒரு மெல்லிய சுவாச சத்தம் மட்டுமே அவளுக்கு கேட்டது.

“இதற்குள் அவர் என்ன செய்கிறார்?” அவள் தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். கதவுக்கு அருகில் நின்று அவள் சிறிது இருமினாள். உள்ளேயிருந்து பதிலெதுவும் வரவில்லை. கதவை சற்று தள்ளி பார்த்தால் என்ன என்று அவளுக்குத் தோன்றியது. ஆனால், அதற்கான தைரியம் அவளுக்கு வரவில்லை.

வேலைக்காரி, தாமஸுக்கு சில நேரங்களில் அப்படியொரு குணம் உண்டாகும் என்று சொன்னாள். “எங்கேயிருந்தாவது ஓடி வந்து அதற்குள் நுழைந்து கொள்வதைப் பார்க்கலாம். பிறகு... ஒன்றிரண்டு நாட்களுக்கு வெளியே வருவதே இல்லை. இப்போ சில நாட்களாக அப்படி எதுவும் நடக்காமலிருந்தது. மகளே, நீ வந்த பிறகு இதுதான் முதல் முறை.”

தீனாம்மாவின் பதைபதைப்பு அடங்கியது. அவளுக்கு நிம்மதி உண்டானது. அதற்குப் பிறகு அவள் அந்த கதவுக்கு அருகில் செல்லவில்லை. பொய்கையின் எதிர் கரையிலிருந்து தெரிந்த அந்த புன்னகை - அதன் நினைவில் அவள் நிமிடங்களைச் செலவிட்டாள். இரவு வேளையில் அவள் தூங்கவேயில்லை. அந்தப் புன்னகையின் இனிமையை அனுபவிப்பதற்கு அவள் கண் விழித்து உட்கார்ந்திருந்தாள்.

மறுநாள் காலையில் அவள் ஸ்டூடியோவின் கதவுக்கு அருகில் சென்று பார்த்தாள். திறந்திருக்கவில்லை. அவள் அன்றாடச் செயல்களைச் செய்வதற்காகச் சென்றாள். அன்று அவள் வேலைக்காரியிடம் எப்போதும் இல்லாதது மாதிரி அதிகம் பேசினாள்- அவளுடைய வீட்டுக் காரியங்களைப் பற்றியும் கல்யாணத்தைப் பற்றியும். கிடைக்காத ஏதோ ஒன்று கிடைத்ததைப் போல, அடைய முடியாத ஒன்றை அடைத்துவிட்டதைப்போல தீனாம்மாவிடம் ஒரு புதிய உற்சாகம் தவழ்ந்தோடிக் கொண்டிருந்தது. அவளுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் உண்டானது.

ஸ்டூடியோவுக்கு எதிரில் இருந்த அறையில் கவனத்தை ஒரு பக்கம் செலுத்தியவாறு தீனாம்மா உட்கார்ந்திருந்தாள். நேரம் நான்கு மணியைத் தாண்டி விட்டிருந்தது. அன்று அவள் பூந்தோட்டத்திற்குச் செல்லவில்லை. செடிகளுக்கு நீர் பாய்ச்ச வில்லை. எதிரிலிருந்த அறையின் கதவு திறக்கப்படுவதை எதிர்பார்த்து அவள் காத்திருந்தாள். அவள் பொறுமையை இழக்க ஆரம்பித்தாள்.

திடீரென்று கதவு திறக்கப்பட்டது. தீனாம்மாவின் இதயம் சற்று இழைந்தது. அவள் எழுந்தாள். தாமஸ் ஸ்டூடியோவை விட்டு வெளியே செல்வதை அவள் சாளரத்தின்  வழியாகப் பார்த்தாள்.

அவள் ஸ்டூடியோவுக்குள் நுழைந்தாள். கவனக் குறைவாக வைக்கப்பட்டிருந்த ஒரு ஓவியக் கூடம் அது. சாயங்களும் ப்ரஷ்களும் இங்குங்குமாக சிதறிக் கிடந்தன. முழுமையடையாத ஓவியங்கள் மேஜையின் மீதும் நாற்காலிகளிலும் தரையிலும் அலட்சியமாக போடப்பட்டிருந்தன. அனைத்தும் தூசி படிந்து அங்கே கிடந்தன. அறையின் மத்தியிலிருந்த ஸ்டாண்டில் ஒரு புதிய ஓவியம் வைக்கப்பட்டிருந்தது.

மெல்லிய ஒரு துணியால் அது மூடப்பட்டிருந்தது. அதை யொட்டி அருகில் ஒரு நாற்காலியும் ஒரு ஸ்டூலின்மீது சாயங்களும் ப்ரஷ்களும் இருந்தன. ஓவியத்தை மூடியிருந்த துணியை அவள் மிகுந்த கவனத்துடன் எடுத்தாள். அவள் சற்று அதைப் பார்த்தாள். ஓவியத்தில் அவள் மூழ்கிப் போனாள்.

மிகவும் அழகான ஒரு பொய்கை. பிரகாசமான மேற்கு திசை வானத்தின் விளிம்பு அந்த பொய்கையின் நீரில் தெரிந்தது. ஒரு வண்டு ஒரு தாமரையில் போய் அமர்வதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தது. பொய்கையின் கரையிலிருந்த கொடிகளாலான குடிலில் ஒரு பெண் பொய்கையைப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தாள். பாதி மூடியிருந்த கண்கள்... சப்பையான மூக்கு... வெளியே நீட்டிக்கொண்டிருக்கும் பற்கள்... மெல்லிய கழுத்து- அதுதான் அவளுடைய தோற்றம். கொடிகளாலான குடிலுக்குப் பின்னால் ஒரு பூந்தோட்டம் தெளிவற்று தெரிந்தது. அதுதான் ஓவியம்.

தீனாம்மா ஓவியத்திலேயே பார்வையைப் பதித்தவாறு அதே இடத்தில் நீண்ட நேரம் நின்றிருந்தாள்.  ஒரு  மெல்லிய சுவாசம் அவளுடைய கன்னத்தில் பட்டது. அவள் திரும்பிப் பார்த்தாள்... தாமஸ்! திடீரென்று அவள் ஒரு பக்கம் விலகி நின்றாள். அவள் எதுவும் பேசவில்லை. அவன் அவளை ஆர்வத்துடன் பார்த்தான். அவர்களுடைய கண்கள் சந்தித்தன.

அவளுக்கு சுவாசம் அடைப்பதுபோல தோன்றியது. அவள் பார்வையைப் பின்னோக்கி திருப்பி சில நிமிடங்கள்.... அவள் ஓவியத்தைப் பார்த்துக்கொண்டே சொன்னாள். “அந்த பெண்ணின் அவலட்சணமான முகத்திற்கும் கீழே  ஒரு இதயம் இருக்கிறது. அதை வரைவதற்கு அந்த தூரிகைக்கு பலமில்லை.” அவளுடைய தொண்டை இடறியது.

“அந்த ஓவியம் முழுமையடையாத ஒன்று.” அவள் தூரிகையைக் கையிலெடுத்துக் கொண்டு ஓவியத்தை நெருங்கினாள். அவள் மேலும் ஒருமுறை பார்த்தாள்... அவன் சிந்தனையில் மூழ்கி விட்டான்.

நிமிடங்கள் பல கடந்தன.  தீனாம்மா அவனுடைய முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். அந்த முகம் படிப்படியாக பிரகாசமும் கம்பீரமும் கொண்ட ஒன்றாக மாறியது. திடீரென்று அவன் தூரிகையைச் சாயத்தில் தோய்த்தான். ஓவியத்தின் சில பகுதிகளில் மெல்லிய சில தொடல்கள் மட்டும்.... அவன் தூரிகையை மாறி மாறி எடுத்தான். அவனுடைய கை வேகமாக இயங்கிக் கொண்டிருந்தது.

அவன் தூரிகைகளைக் கீழே வைத்து விட்டு, பின்னால் விலகி நின்றான். ஒரு புன்னகை! பொய்கையின் மறுகரையில் பார்த்த அதே புன்னகை! அவன் சொன்னான்! “பார்... அந்தப் பெண்ணின் அழகான  இதயத்தை நான் பார்க்கிறேன்!”

தீனாம்மா ஓவியத்தைப் பார்த்தாள். அந்தப் பெண்ணின் கண்கள் மலர்ந்திருந்தன. அதிலிருந்து அழகு வெளிப்படுவதைப்போல தோன்றியது. அந்த நாசியின் நுனிப்பகுதி சற்று உயர்ந்து தெரிந்தது. உதடுகளில் ஒரு மங்கலான பிரகாசம் தவழ்ந்து கொண்டிருந்தது. “எனக்கு திருப்தி.” - அவள் உணர்ச்சிவசப்பட்டு சொன்னாள்.

அவன் அவளின் அருகில் வந்தான். அவனுடைய கை அவளுடைய தோளைத் தொட்டது. “தீனா, இந்த அளவுக்கு அழகான ஒரு இதயம் உனக்குள் இருக்கிறது என்பது எனக்கு தெரியாமல் போய் விட்டது.”

அவனுடைய கைகள் அவளை வளைத்தன. அன்று முதல் முறையாக அவள் தன் கணவனின் மார்பின்மீது தலையைச் சாய்த்தாள்.

“இந்த  உலகத்தின் அழகான சொத்து முழுவதும் என்னுடைய கைகளுக்குள் இருக்கிறது.” அவனுக்கு மூச்சு அடைத்தது.

“நாதா!” அவள் மயக்கமடைந்தாள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.