Logo

குளிர்காலத்திற்கு ஏங்கிய குதிரை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5989
kulir kalathuku engiya kuthirai

மொழிபெயர்ப்பாளர் முன்னுரை

நாவலாசிரியர், திரைப்படக் கதை - வசனகர்த்தா, திரைப்பட இயக்குநர் என்று பல முகங்களைக் கொண்டவர் ப. பத்மராஜன். ‘நட்சத்திரங்களே காவல்’ என்ற நூலுக்காக கேரள சாகித்ய அகாடமி பரிசு பெற்றவர். ‘பிரயாணம்’ என்ற (தமிழில் - சாவித்திரி) திரைப்படத்தின் மூலம் படவுலகத்திற்குள் கதாசிரியராக நுழைந்தார். சொந்தமாக இயக்கிய திரைப்படங்களையும் சேர்த்து 30 திரைக்கதைகளை எழுதியிருக்கிறார். 1991-ஆம் ஆண்டில் இம்மண்ணை விட்டு நீங்கினார்.

பத்மராஜன் படைப்புகளை கடந்த 25 வருடங்களாக நான் வாசித்து வருகிறேன். புதிய புதிய தளங்களில் முற்றிலும் மாறுபட்ட கதைக் கருக்களை வைத்து கதைகளை எழுதும் பத்மராஜனின் எழுத்தாற்றலைப் பார்த்துப் பல தடவை வியந்திருக்கிறேன்.

இதற்கு முன்பு நான் அவர் எழுதிய ‘வண்டியைத் தேடி’, ‘கள்ளன் பவித்ரன்’, ‘இதோ இங்கு வரை’ ஆகிய புதினங்களை மொழி பெயர்த்திருக்கிறேன். 1990-ஆம் ஆண்டில் பி. பத்மராஜன் எழுதிய ‘குளிர் காலத்திற்கு ஏங்கிய குதிரை’ கதையைப் படித்து முடிக்கிறபோது கதை நடக்கும் மலைப்பகுதியும், அங்குள்ள மாளிகையும், ஷாநவாஸ்கான், பிரசாந்த், சுகன்யா, ஊர்மிளா, சாரா, துர்கா ஆகியோரும் நம் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து வாழ்வார்கள் என்பது நிச்சயம் என்பதை உணர்ந்தேன்.

நல்ல ஒரு நூலை மொழி பெயர்த்த திருப்தி இருக்கிறது எனக்கு. இதைப் படிக்கும் உங்களுக்கும் அது உண்டாகும் என்ற திடமான நம்பிக்கையும் இருக்கிறது.

அன்புடன்,

சுரா


பாலை பூக்கும் வாசனை.

பேருந்து வளைவில் திரும்பியதிலிருந்து அதன் வாசனை வந்துகொண்டிருக்க, அதை பிரசாந்த் முகர்ந்து கொண்டிருந்தான். அது வெறும் தோணலாக இருக்கும் என்றுகூட இடையில் அவன் சந்தேகப்பட்டான். பெங்களூரிலிருந்து மைசூருக்குச் செல்லும் சாலையில் இந்த நடு உச்சி நேரத்தில் அந்த மணம் எப்படி வர முடியும்?

எனினும் வீசிக் கொண்டிருந்த குளிர்ந்த காற்றில், தொடர்ந்து நறுமணம் வந்து கொண்டிருந்ததை அறிந்தபோது, அவனுக்கு சந்தோஷமாக இருந்தது. மிகவும் களைப்படைந்து போயிருந்த பேருந்துப் பயணத்தில் நினைப்பதற்கு ஒரு விஷயத்தைத் தந்து கொண்டு அங்கு வந்த அந்த காற்றுக்கு நன்றி கூறியவாறு, பிரசாந்த் தன் கண்களை மூடினான்.

கண்களை மூடியவாறு தான் சிறு பிள்ளையாக இருந்தபோது இருந்த மாலை நேரங்களை வரவழைத்தான். பழைய வயல்வெளிகளுக்கு மத்தியில் மாலை நேரத்தில் மலர்ந்த ஒற்றைப் பாலையையும், பாலை பரவவிட்ட அருமையான வாசனையையும் அவன் மீண்டும் தன் ஞாபகத்திற்குக் கொண்டுவர முயற்சி செய்தான். அப்போது, பேருந்து வளைவில் ஏறுகிறபோது உண்டாகிற சத்தம் நின்று, தலைகீழான இறக்கத்தில் சிறகை விரித்து ஓடிக்கொண்டிருந்த பேருந்திலிருந்து தூரத்தில் அடிவாரத்திலிருந்து பாலை பூக்கும் வாசனை மேலே வந்து கொண்டிருந்தது. அத்துடன் குளிரும்.

விமான நிலையத்திலிருந்து வாடகைக் காரை எடுத்திருக்கலாம். இந்த அளவிற்கு குளிர் இருக்கும் என்று அவன் நினைத்திருக்கவில்லை. வாடகைக் காரின் பின் இருக்கையில் தனியாக உட்கார்ந்திருப்பது போர் அடிக்கக் கூடிய ஒரு விஷயம் என்று நினைத்துத்தான் உண்மையிலேயே அவன் பேருந்திலேயே ஏறி உட்கார்ந்தான். ஆனால், இப்போது உடலை ஊசியெனக் குத்தக்கூடிய குளிராக இருந்தது. மூக்கின் நுனியில் வந்து உட்கார்ந்த ஒரு ஈயை அடித்து விரட்டலாம் என்று விரலால் தொட்டால், பனிக்கட்டியும் பனிக்கட்டியும் உரசியதைப்போல இருந்தது.

வண்டியின் ஷட்டர்கள் பெரும்பாலும் கிழிந்துவிட்டிருந்தன. அதன் வழியாகக் குளிர்காற்று முனகியவாறு உள்ளே வந்து கொண்டிருந்தது. பயணிகளில் பெரும்பாலானவர்கள் கம்பளியாலான ஆடைகளை அணிந்திருந்தார்கள். சிலர் கடுமையான குளிரிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்காக மஃப்ளரால் தலையை இறுகக் கட்டிக் கொண்டு, ஓவர் கோட்டுகள் அணிந்து நடுங்கியவாறு உட்கார்ந்திருந்தனர்.

மாலை நேரத்தில் மைசூரில் கடுமையான குளிர் இருக்கும். பிரசாந்த் நினைத்தான். பம்பாயின் வெப்பத்தில் இருக்கும்போது, இந்த அளவிற்கு குளிர் இருக்கும் என்பதை அவன் நினைக்கவேயில்லை. ஒழுங்காக சில கம்பளி ஆடைகளை எடுத்துச் செல்லும்படி நேற்றுகூட சுகன்யா கூறத்தான் செய்தாள்.

“அந்த அளவிற்கு குளிர் இருப்பது மாதிரி இருந்தால், உன்னை நான் அங்கே வரவழைச்சிடுவேன் - அதிகாரப்பூர்வமாகவே” - பிரசாந்திற்கு அப்போது அப்படித்தான் கூறத் தோன்றியது.

அதைக் கேட்டு சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள். தொடர்ந்து கண்களை மூடிக் கொண்டு உரத்த குரலில் வேண்டிக் கொண்டாள்:

“கடவுளே, அங்கே கடுமையான குளிர் இருக்கணும்!”

அவளுடைய வேண்டுதலுக்குப் பலன் கிடைத்துவிடும் போலத்தான் இருந்தது. சில நாட்கள் சென்ற பிறகு, போகும் இடம் போராடிக்க ஆரம்பித்துவிடும். பிறக்கப்போவது டிசம்பர் மாதம். குளிரின் ஆக்ரமிப்பு அதிகமாக இருக்கும். இரவில் விஸ்கியை மட்டும் அருந்திக்கொண்டு பதில் கூற முடியாது. அப்போது மேலதிகாரிக்கு எழுதும் கடிதத்தில் ஒரு வார்த்தை அதிகமாக சேர்ந்திருக்கும். ‘வெளிப்பகுதிக்கு இறுதி வடிவம் கொடுக்க விற்பன்னர் வந்து சேர வேண்டிய நேரமாகிவிட்டது. ஒரு ஆளை உடனடியாக இங்கு அனுப்பி வைக்கவும் - கூடுமானவரை செல்வி சுகன்யா டேனியல்.’

அதை வாசிக்கும்போது கிழவனின் கன்னங்களில் பரவியிருக்கும் திருட்டுச் சிரிப்பை பிரசாந்தால் இப்போதே பார்க்க முடிந்தது. அவர் அதை எதிர்பார்த்துக் கொண்டுதான் இருப்பார். இரண்டு நாட்களுக்கு முன்னால் மது கொஞ்சம் அதிகமானபோது அவர் அதைக் கூறவும் செய்தார்.

சுகன்யா என்பதால், அதைப்பற்றி யாருக்கும் பொறாமையோ குற்றச்சாட்டோ சிறிதும் கிடையாது. டிசைனிங் நிபுணியான சந்தியாராயாக இருந்தால், அலுவலகத்தில் ஒரு கத்திக் குத்தே நடந்திருக்கும். சுகன்யா என்னும்போது, அதைப்பற்றிக் கூற வேண்டிய அவசியமே இல்லை. அது அவளுடைய விருப்பம். தனக்கு என்ன தோன்றுகிறதோ, அதை அவள் செய்வாள். தோன்றுகிற ஆள், தோன்றுகிற நேரம்...

சாலையில் வலது பக்கத்தில், கீழே புகையிலைத் தோட்டங்களின் மேற்பகுதியில் ஒரு கிளிக்கூட்டம் எதிர்திசையை நோக்கிப் பறந்து போய்க் கொண்டிருந்தது. அவை பார்வையிலிருந்து மறைந்ததும், அதோடு சேர்ந்து பாலையின் மணமும் போய்விட்டது.

‘தங்கப் போகிற இடம் இருக்கும் இடத்தில் எங்காவது ஒரு பாலை பூத்திருந்தால் நன்றாக இருக்கும்’ என்று அவன் நினைத்தான். ‘எது தேவையாக இருந்தாலும் டாக்டர் ஷாநவாஸ்கான் என்ற மனிதரிடம் விஷயத்தைச் சொல்லி விட்டால் போதும்’ என்று அவனுடைய அலுவலகத்தில் கூறியிருந்தார்கள். தான் தங்கியிருக்கும் அறைக்கு வெளியே மலர்கின்ற பருவத்தில் ஒரு பாலையைக் கொண்டு வைக்க அவரிடம் கூறவேண்டும் என்று அவன் நினைத்துக் கொண்டான்.

பலரும் கூறியதை வைத்துப் பார்க்கும்போது, அதற்கும் அதற்கு அப்பாலும்கூட பல காரியங்களையும் செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் அந்த மனிதருக்கு இருக்கிறது என்பதை அவன் தெரிந்துகொண்டான்.

பிரசாந்த் வெறுமனே டாக்டர் கானைப்பற்றி மனதில் கற்பனை பண்ணிப் பார்த்தான். ஒன்றிரண்டு தடவை அவன் தொலைபேசி மூலம் பேசியபோது, அவன் கவனித்தது அவருடைய குரலைத்தான். முரட்டுத்தனமாகவம் ஆழமாகவும் அந்தக் குரல் இருந்தது. அந்தக் குரலை வைத்து அவருடைய வயதைக் கணக்கிட முடியவில்லை. தனக்குத் தேவையான விஷயங்களைப் பற்றித் தெளிவான கொள்கைகளைக் கொண்டிருக்கும் மனிதர் அவர் என்பது மட்டும் புரிந்தது.

நல்ல வயதைக் கொண்ட மனிதராக அவர் இருக்க வேண்டும். பத்து, பதினைந்து லட்சம் ரூபாய்களைச் செலவழித்து பரம்பரை பாணியில் கட்டப்பட்ட ஒரு அரண்மனையைப் போன்ற வீட்டை புதுப்பிக்கலாம் என்று கோடீஸ்வரரர்களாக வயதான மனிதர்களுக்கு மட்டுமே தோன்றும் என்ற உண்மையை தன்னுடைய அனுபவங்கள் மூலம் பிரசாந்த் தெரிந்து கொண்டான். இளைஞனாக இருந்தால், இன்றைய காலகட்டத்தில் அந்தப் பணத்தை வைத்துக்கொண்டு ஒரு மரியாதை கிடைக்கிற மாதிரியான ஒரு புதிய வீட்டையோ அல்லது ஒன்றோ இரண்டோ ஃப்ளாட்டுகளையோதான் அவன் வாங்குவான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால். அவன் பணி செய்யும் நிறுவனத்தை அணுகக்கூடியவர்களில் பெரும்பாலானவர்கள் வயதான பண்காரர்களாகவோ, கிறுக்குத்தனமான மார்வாடிகளாகவோதான் இருந்தார்கள். அவர்களால்தான் இப்படிப்பட்ட காரியங்களில் ஈடுபட முடியும்.

வெளியே வாகனங்கள் மற்றும் மனிதர்கள் உண்டாக்கிய சத்தங்ளைக் கேட்டு, பிரசாந்த் ஷட்டரை உயர்த்திப் பார்த்தான்.


நகரத்தை அடைந்தாகிவிட்டது. வெளியே சிறிதான அளவில் ஒரு சாரல் மழை பெய்துகொண்டிருந்தது. கம்பளி ஆடைகளுக்குள் அடக்கமான மனிதர்கள். ஈரமான குடைகளின் மேற்பகுதி பிரகாசித்தது. இடையில் அவ்வப்போது மனிதர்களின் சத்தத்துடன் பாய்ந்தோடிக் கொண்டிருந்த குதிரை வண்டிகள்... நடைபாதையில் விலை கூறும் வியாபாரிகளுக்கு முன்னால் பலவித நிறங்களில் பழக்குவியல்கள்... சாலையோரத்தில் இருக்கும் மரங்களில் ஏராளமான மலர்கள்.

2

கேட்டிற்கு வெளியே கருங்கல்லில் எழுதப்பட்டிருக்கும் பழைய எழுத்துக்கள்... ‘வாலீஸ்’.

மலை அடுக்குகளை மரக்கிளைகளும் கொடிகளும் கிட்டத்தட்ட மறைத்துவிட்டிருந்தன. அவற்றின் நுனிகளிலிருந்து மழைத் துளிகள் எழுத்துக்களின் தொப்புள்கள் மீது விழுந்து சிதறிக் கொண்டிருந்தன.

மழை அதிகரித்திருந்தது. பேருந்து நிலையத்தில் வந்து இறங்கியபோதே, அதற்கான அடையாளங்கள் நன்கு தெரிந்தன.

“இதுதான்...”- பிரசாந்த் ஓட்டுனரிடம் சொன்னான்: “உள்ளே போ...”

கேட்டிற்கு எதுவும் செய்யவேண்டியதில்லை- வேண்டுமென்றால் இருக்கும் வண்ணத்தை மாற்றலாம்.

கம்பீரமான கேட் வளைவில் திரும்புவது வரை அதிலிருந்த கண்களை எடுக்க முடியவில்லை.

பாதையின் இரு பக்கங்களிலும், எப்போதோ பூத்து வாடிக் காணப்பட்ட ஒரு பூந்தோட்டம் உயிர்ப்பில்லாமல் கிடந்தது. சரியான கவனிப்பு இல்லாததால், வழிதவறி வளர்ந்த சில மரங்களில் நிறங்களின் விளையாட்டு தெரிந்தது. அங்கிருந்து பார்க்கும்போது வீடு தெரியவில்லை. அதற்குள் வண்டி போர்ட்டிக்கோவை அடைந்து மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு நின்றது.

படிகளில் ஏறிச் செல்லும் இடத்தில் நீளமான வராந்தா இருந்தது. வண்ணத்தை இழந்த தூண்கள். ஒரே பார்வையிலேயே அவை நாற்பதுக்குமேல் இருக்கும் என பட்டது. எல்லாக் கதவுகளும் அடைக்கப்பட்டிருந்தன. வராந்தாவில் ஆங்காங்கே மழைத்துளிகள் விழுந்து சிறிய குளங்கள் உண்டாகிக் கொண்டிருந்ன.

தன் கையிலிருந்த ப்ரீஃப் கேஸை தரையில் வைத்துவிட்டு, வாடகைக் காரோட்டியை அவன் அனுப்பி வைத்தான். வண்டி புறப்படும் சத்தத்தைக் கேட்டு யாராவது வருவார்கள் என்று அவன் நினைத்தது நடக்காமல் போய் விட்டது.

அழைப்பு மணியை அவன் பார்த்தான்.

அதைத் தொடாமல் வராந்தாவின் வழியாக நடந்தான். யாருக்கும் தெரியாமல் அந்த இடத்தைப்பற்றித் தெரிந்து கொள்வதில் ஒரு சுகம் இருக்கத்தான் செய்கிறது. தூங்கிக் கொண்டிருக்கும் இரையைத் தட்டி எழுப்பும் சுகம்.

வீட்டுடன் சேர்ந்து தாறுமாறாக கொஞ்சம் செடிகளும் பூச்சட்டிகளும் இருந்தன. அவை தரையில் இங்குமங்குமாக இருந்தன. கீழே கிடந்த ஒரு ஓட்டை எடுத்து சாதாரணமாக சோதித்துப் பார்த்தபோது மிகவும் பழமையான, கேள்விப்பட்ட, சென்ற நூற்றாண்டின் ஒரு ‘ப்ராண்ட்நேம்’ வெளியே தெரிந்தது.

வராந்தாவின் ஒரு இடத்தில் காற்றில் ஆடிக்கொண்டிருந்த ஒரு ஊஞ்சல் தொங்கிக் கொண்டிருந்தது. நனைந்த இலைகள் இங்குமங்கமாகப் பறந்து கொண்டிருந்தன.

உள்ளேயிருந்து எந்தவிதமான சத்தமும் வரவில்லை. நிராகரிக்கப்பட்ட ஒரு வீட்டைப்போல அது இருந்தது.

கட்டிடத்தின் முன்பகுதியின் வலது மூலையின் கீழ்ப்பகுதியில் ஒரு தகவல் கல் இருந்தது. அதில் இருந்த எழுத்துக்களை வாசித்தபோது-

‘இந்த கட்டிடம் 1892-ஆம் ஆண்டில் ராவ் பகதூர் அஸ்லாம்கானால் கட்டப்பட்டது.’

வேலை செய்த மொத்த தொழிலாளர்கள்: 47,063.

வேலை முடிவடைய எடுத்துக்கொண்ட காலம்: மூன்று மாதங்கள், இருபத்து ஏழு நாட்கள்.

இஞ்சினியர்: கெ.ஆர். ராகவாச்சார்யா.

கன்ஸ்ட்ரக்ஷன் இஞ்சினியர்கள்: ஆர். புல்லையா, கரீம் ராஜா மொத்தச் செலவு: 37,049 ரூபாய்.’

பிரசாந்த் அந்த தகவல் கல்லை இரண்டு தடவை வாசித்தான்.

1892.

தொண்ணூற்று ஏழு வயதைக் கொண்ட தாத்தாதான் தனக்கு கிடைத்திருக்கும் மனிதர். அவரைத்தான் இப்போது அவன் போய் பார்க்கப் போகிறான்.

மழை நீரின் வழியாக யாரோ நடந்து வரும் சத்தம் கேட்டது. குடையால் முகம் மறைக்கப்பட்டிருந்தது. அளவெடுத்த உடல். நனையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக மேலே இழுத்துக் கட்டப்பட்ட புடவைக்குக் கீழே, அழகான கால்களின் கீழ்ப்பகுதி தெரிந்தது.

அவள் எங்கிருந்து வந்தாள் என்பதை அவனால் உடனடியாக நினைக்க முடியவில்லை. ஒரு பெரிய மழைத்துளியுடன் சேர்ந்து விழுந்ததைப்போல அவள் இருந்தாள்!

குடையை மடக்கி, அவனை நேருக்கு நேராக சந்திக்கும்போது அவளுடைய கண்ளில் கேள்வியைவிட ஒரு அதிகாரத்தின் அடையாளம்தான் தெரிந்தது.

பிரசாந்த் தன்னை அவளுக்கு அறிமுகப்படுத்திக் கொண்டான்:

“பிரசாந்த் மேனன். பம்பாயில் இருந்து வர்றேன்-கொலம்பஸ் க்ளோபல் கன்ஸ்ட்ரக்ஷனில் இருந்து. டாக்டர் ஷாநவாஸ்கானுக்கும் எங்களுக்கும் இடையே இந்த வீட்டைப் புதுப்பிப்பது சம்பந்தமாக ஒரு ஒப்பந்தம் உண்டாயிருக்கு...”

“நீங்க அந்த நிறுவனத்தின்...?” - முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடும் இல்லாமலே அந்த இளம்பெண் கேட்டாள்.

“இங்கே நடக்கப் போகிற வேலைகளுக்கு நான்தான் பொறுப்பேற்று இருக்கேன்.”

ஒரு நிமிடம் அவனை அளந்து பார்த்த அவள் தூரத்தில் இருந்த நாற்காலிகளைக் காட்டினாள்: “உட்காருங்க.. நான் போய் சொல்லிவிட்டு வர்றேன்”

“நன்றி.”

அவள் மீண்டும் தன் குடையை விரித்துக்கொண்டு, வீட்டின் வலது பக்கமாக சுற்றி பின்பக்கம் சென்றாள்.

வயதைக் கணக்கிடும்போது கிழவனின் மகளாகத்தான் அவள் இருக்க வேண்டும். இருபத்தைந்தை நெருங்கியிருக்கலாம்.

நிலத்தின் எல்லையில் மழைத்துளிகளுக்கும் முள்ளாலான வேலிக்கும் அப்பால், ஓடு வேய்ந்த ஒரு நீளமான கட்டிடம் தெரிந்தது. அது கட்டப்பட்டிருந்த விதத்தையும் காலத்தையும் வைத்துக் கண்கிட்டுப் பார்க்கும்போது, அதுவும் இந்தக் கட்டிடத்தைச் சேர்ந்ததாகத்தான் இருக்க வேண்டும். அப்படி இருப்பதாக இருந்தால், அது பழமையான ‘பணி செய்பவர்களின் இல்ல’மாக இருக்க வேண்டும்.

முன் பக்கத்தில் இருந்த கதவைத் திறந்து கொண்டு அந்த இளம்பெண் வந்தாள்: “உள்ளே வரச் சொன்னார்.”

பேக்கை ஒரு மூலையில் வைத்துவிட்டு, அவன் அவளுடை சேர்ந்து நடந்தான்.

பெரிய அறைகள். பழைய இருக்கைகளின் ஆக்கிரமிப்பு. நிறம் மங்கிப்போன நிலைக்கண்ணாடிகள்... ஓவியங்கள்... நீளமான இடைவெளிகள். இடையில் பின்பகுதியில் இருந்த வேறொரு கட்டிடத்திற்குச் செல்லும் வழியைக் காட்டினாள். அங்கு மேலும் சில மனிதர்கள் இருக்கிறார்கள் என்பது தெரிந்தது.

வோறொரு வராந்தா. வேறு சில செடிகள் இருக்கும் சட்டிகள்.

ஒரு வாசலுக்கு வெளியே அவர்களுடைய பயணம் நின்றது. அந்த இளம்பெண் மெதுவாக கதவைத் தட்டினாள். உள்ளேயிருந்து வருமாறு அனுமதிக்கும் சத்தம் கேட்டது.

அவளுக்குப் பின்னால் பிரசாந்தும் அறைக்குள் நுழைந்தான்.

விசாலமாக இருந்த அறையின் மத்தியில் போடப்பட்டிருந்த பெரிய கட்டிலின் ஒரு பக்கத்தில் இருந்த தலையணைகளில் சாய்ந்து படுத்திருந்த மனிதன் சற்று முன்னோக்கி உடலை நகர்த்தி, கையை நீட்டித் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.

“கான்...”

கட்டிலுக்கு அருகில் போடப்பட்டிருந்த நாற்காலியில் பிரசாந்த் உட்கார்ந்தான்.


சற்று மன்னிப்பு கேட்கிற குரலில் கான் சொன்னார்: “காலில் ஒரு முறிவு உண்டாயிடுச்சு. அதனால் முழுமையான பெட்ரெஸ்ட்ல நான் இருக்கேன்.”

வலது காலில் கணுக்காலுக்கு அருகில் ஒரு கட்டு போடப்பட்டிருந்தது. படுக்கையையொட்டி ஒரு உலோகத்தாலான ஊன்றுகோல் இருந்தது.

“எப்படி வந்தது இது?”-பிரசாந்த் வெறுமனே விசாரித்தான்.

“படிகளில் இறங்குறப்போ வழுக்கி விட்டிருச்சு. இரண்டு மாதங்களா இப்படியொரு கொடுமையான நிலைமை. இந்தப் பழைய வீடு உண்டாக்கின பாதிப்பு... இனி ஒருவாரம் இப்படியே ஓய்வுல இருக்கணும்னு டாக்டர் சொல்லியிருக்காரு”-திடீரென்று ஞாபகத்தில் வந்ததைப்போல அவர் கேட்டார்: “தேநீரா, காபியா?”

“காபி”

அறையின் மூலையில் நின்றிருந்த அந்த இளம்பெண்ணிடம் கான் சொன்னார்: “சாரா, ரெண்டு காபி கொண்டு வா.”

திரும்பத் தொடங்கிய அவள் ஒரு நிமிடம் தயங்கி நின்றாள். அதைப் பார்த்து கான் சிரித்தார்.

“புரியுது. இன்னைக்கு இதற்குமேல் இல்ல.”

“இன்னைக்கு இது ஆறாவது காபி”-அவள் குறை கூறுவதைப்போல நினைவூட்டினாள்.

“பரவாயில்ல... அதுதான் சொல்லிட்டேனே இதற்குமேல் வேண்டாம்னு...”

அவள் போனபிறகு, மெல்லிய ஒரு புன்சிரிப்புடன் கான் சிகரெட் பாக்கெட்டை எடுத்தார்.

படுக்கையில் புத்தகங்களும் எழுதும் பேடுகளும் சிதறிக் கிடந்தன. ஆஷ்ட்ரேயிலிருந்து சிதறிய சாம்பல் படுக்கை விரிப்புல் இங்குமங்குமாக விழுந்திருந்தது. படுக்கைக்கு அருகில் கை எட்டும் தூரத்தில் ஒரு தபலா இருந்தது. சாளரத்திற்கு அருகில் ஒரு சித்தாரும் ரெக்கார்ட் ப்ளேயரும் இருந்தன. சுவரில் ஒன்றிரண்டு ஓவியங்கள் தொங்கிக்கொண்டிருந்தன.

கானின் முன்னோர்களாக இருக்க வேண்டும்.

புகைப்படம் என்று ஒன்றே ஒன்றுதான் இருந்தது-ஒரு குதிரையின் முகம்.

3

முதல் சந்திப்பலேயே அந்த மனிதர் உண்டாக்கிய ஆச்சரியம் நேரம் செல்லச் செல்ல அதிகமாகிக் கொண்டேயிருந்தது.

முதலாவது விஷயம் - ஏற்கெனவே மனதில் நினைத்திருந்ததைப்போல ஷாநவாஸ்கான் மிகவும் வயதான ஒரு மனிதராக இல்லை. அவருக்கு அதிகபட்சம் போனால் நாற்பத்தாறு அல்லது நாற்பத்தேழு வயதுதான் இருக்கும். நல்ல நிறமும், ஆழமான பார்வையும், எப்போதாவது அபூர்வமாக வெளிப்பட்டு மறையும் திருட்டுத்தனமான சிரிப்பும் - இவை அனைத்தும் சேர்ந்து அவருக்கு ஒரு அழகைப் பரிசாக அளித்திருந்தன. அவர் எழுந்து நின்றிருப்பதைப் பார்க்காததால் அவரின் உயரம் என்ன என்பதைக் கூற முடியவில்லை. எனினும் நீளமான கைகளையும் கால்களையும் பார்க்கும்போது, அவர் ஆறடியை நெருங்கியிருக்க வேண்டும் என்று தோன்றியது. உதட்டுக்குக் கீழே சிறிது சிறிதாக கீழ்நோக்கிக் கோடு போட்டதைப்போல் பிரிந்து பிரிந்து போய்க் கொண்டிருந்த நரை அவருடைய முகத்திற்கு ஒரு தனி மரியாதையைக் கொடுப்பதாக பிரசாந்த் உணர்ந்தான். கண்களையும், கண்களுக்குக் கீழே குழி விழுந்து காணப்பட்ட மடிப்பையும் பார்க்கும்போது ஒரு குடிகாரரின் அடையாளம் தெரிந்தது.

கானுடன் தொழில்ரீதியான விஷயங்களைப் பற்றிப் பேசுவது என்பது மிகவும் எளிதான ஒரு விஷயமாக இருந்தது. “செலவாகும் பணத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். நீங்க ஒரு புதிய வீட்டைக் கட்டுவதாக நினைச்சு, வேலையை ஆரம்பிங்க. எப்படிப்பட்ட மாறுதல்களையும் நீங்க தாராளமா செய்யலாம். பெரிய மாற்றங்களைச் செய்வதாக இருந்தால், அதைப்பற்றி என்னிடம் கலந்து ஆலோசிக்கணும். முடிந்தவரையில் பழைய பொருட்களை வீணாக்காமல் பயன்படுத்தப்பாருங்க. அத்துடன் புதிதாக என்ன வேணும் என்றாலும் வாங்கிக்கலாம்” என்றார் அவர்.

பிரசாந்த் தனக்குக் கிடைத்ததற்காக நிறுவனத்திற்கு கான் நன்றி சொன்னார், “உங்களைத்தான் அனுப்பி வைக்கணும் என்ற விஷயத்தில் நான் மிகவும் பிடிவாதமாக இருந்தேன் என்ற கான் தொடர்ந்து சொன்னார், உங்க முதலாளி எப்படி யெல்லாமோ இதைத் தவிர்க்கப் பார்ட்தார் முதல் ஒரு வாரமஙதிற்கு அனுப்பிவைக்கிறேன், அதற்குப் பிறகு அவ்வப்போது வந்து பார்த்துக் கொள்ளச் சொல்றேன் என்றார். வேலை ஆரம்பிச்சு முடிவது வரையில் நீங்க இங்கே இருந்தால் மட்டுமே நான் இந்த வேலையை ஆரம்பிப்பேன்னு அவரிடம் கறாரா சொன்னப் போதான். அவர் கடைசியா சம்மதிச்சாரு.”

“எனக்கு அந்த விஷயம் தெரியும்” என்றான் பிரசாந்த் அலுவலகத்தில் தன்னுடைய பெயரை மேலும் ஒருபடி உயர்த்திய அந்த கடிதத் தொடர்புகளைப் பற்றி பிரசாந்திற்கு நன்றாகவே தெரியும்.

உங்களுடைய சில வேலைகளை தான் பார்த்திருக்கேன். பல வேலைகளைப் பார்த்து நான் ஈர்க்கப்பட்டிருக்கேன். பழைய டில்லியில் கெ.கெ.யூ மேனனின் வீட்டைக் கட்டியதும், செக்கந்திராபத்தில் காதர் பாஷாவின் மாளிகையைப் புதுப்பித்ததும் என்னை மிகவும் கவர்ந்த விஷயங்கள்.

எப்போதாவது ஒருமுறை மட்டுமே திரையை நீக்கிக் கொண்டு வெளிப்படும் அந்தத் திருட்டுத்தனமான புன்சிரிப்புடன் கான் சொன்னார்: “பிறகு… யார் இதை டிசைன் பண்ணியது என்று கேக்குறப்போ, சொல்றதுக்கு தேசிய அளவில் ஒரு பெயர் இருப்பதுகூட கவுரவமான ஒரு விஷயம்தானே.

பிரசாந்த் தங்குவதற்காக கட்டிடத்தின் முன் பகுதியில் காலியாகக் கிடந்த ஒரு மூலையில் ஒரு அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு போவதற்கான வழியை இளம்பெண்தான் காட்டினாள்.

அவளுக்கும் கானுக்குமிடையே இருக்கும் உறவு என்ன என்பதைப் பற்றி பிரசாந்தால் ஒரு முடிவுக்கு வர  முடியவில்லை அவள் அவரை ‘ஸாப்’ என்று அழைத்தாள். கான் அவளை ‘சாரா’ என்று அழைத்தார்.

ஒரு மகளோ அல்லது தங்கையோ எடுத்துக் கொள்ளக்கூடிய சுதந்திரத்தை அவள் கானிடம் எடுத்துக் கொள்கிறாள் என்பதை பிரசாந்த் கவனித்தான். இதற்கிடையில் வினோதமான அந்த மரியாதை நிமித்தமான வார்த்தைகள் சிறிதும் பொருத்தமில்லாமல் இருப்பதைப்போல் அவனுக்குத் தோன்றியது.

“குளியலறையில் வெந்நீர் இருக்கு”- சாரா ஸ்விட்ச்சைக் காட்டினாள், “ஏதாவது தேவைன்னா, அதோ, அங்கே பெல் இருக்கு.” 

கானின் அறை அளவிற்கு இல்லையேன்றாலும், அந்த அறையும் விசாலமாகத்தான் இருந்தது. அவனுக்காக தூசிகளைப் பெருக்கி, புதிய படுக்கை விரிப்புகளை விரித்து தயார் பண்ணிவைத்ததைப்போல அறை இருந்தது. சுவரில் ஒன்றிரண்டு பழைய ஓவியங்கள் இருந்தன. அறையின் மூலையில் ஒரு சிறிய ஃப்ரிட்ஜ் இருந்தது மின் பாத்திரத்தில் வெந்நீர் இருந்தது.

பிரசாந்த் ஃப்ரித்ஜைத் திறந்து பார்த்தான். குளிர்ந்த நீர் இருந்த புட்டிகளுக்கு மத்தியில் முன்று பீர் புட்டிகள் இருந்தன.

அவற்றிலிருந்து கண்களை எடுத்து சாராவைப் பார்த்தபோது உதட்டில் வேண்டுமென்றே ஒரு புன்னகையை அவன் வரவழைத்துக் கொண்டான். அவள் அதைப் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

“ஏதாவது தேவைப்பட்டால் பெல் அடிச்சால் போதும் ஆள் வருவாங்க.”

“வர்றது யாராக இருக்கும்.?” 

“பகல்ல பெரும்பாலும் நான்தான் வருவேன் இரவு நேரத்தில் ஒரு வயதான கிழவர் வருவார்.”  தனக்கு இனிமேல் அங்கு நிற்க வேண்டிய தேவையில்லை என்பது மாதிரி அவள் வேகமாக நடந்து சென்றாள்.

அறைக்கு ஏற்றபடி குளியலறை மிகவும் விசாலமாக இருந்தது பழமையைப் பறைசாற்றும் குழாய்களும், மேற்கூரையும், சுவர் கண்ணாடியும், துணிகள் தொங்கக்கூடிய மர ஸ்டாண்டும் உள்ளே இறங்கிக் குளிப்பதற்கு பெரிய அளவைக் கொண்ட பீங்கான் குளியல் தொட்டியும்...


ஒரு பீரை எடுத்துத் திறந்தபடி பிரசாந்த் குளியல் தொட்டியில் இருந்த வெந்நீருக்குள் இறங்கினான்.

குளிரடித்துக் கொண்டிருந்த அந்தப் பொழுதில் வெந்நீரில் குளித்தது அன்று வரை தன்னிடமிருந்த மொத்த அழுக்கையும் முழுமையாகக் கழுவி முடித்ததைப்போல பிரசாந்த் உணர்ந்தான்.

 குளித்து முடிந்து ஆடைகள் அணிந்து இரண்டாவதாக ஒரு பீரையும் எடுப்பதற்காக முயன்றபோது வாசல் தட்டப்படும் சத்தம் கேட்டது.  சாராதான்.

“கம்பளி ஆடைகள்.. சில நேரங்களில் இங்கு இவை தேவைப்படும்னு ஸாப் சொன்னாரு.” தொடுவதற்கு சுகமாக இருந்த பஞ்சைப் போன்ற கம்பளி ஆடைகள் மஃப்ளர்கள், குரங்கு தொப்பிகள்.

“இது கட்டாயம் தேவைதான்” - பிரசாந்த் சிரித்தான் “ஸாபுக்கு நன்றி சொல்லுங்க.”

“சொல்றேன்.”

தன்னுடைய வேலை முடிந்துவிட்டது என்பது மாதிரி அவள் அந்த நிமிடமே அந்த இடத்தை விட்டுப் போக ஆரம்பித்தாள்.

“சாரா...!” - எதற்கு என்ற தீர்மானம் இல்லாமலே அவன் வெறுமனே அவளை அழைத்தான். அவன் நின்றாள்.

அவளிடம் என்ன சொல்ல வேண்டும் என்றே தெரியாமல் ஒரு நிமிடம் அவள் குழம்பிப் போய் நின்றான். ஏதாவது தமாஷாக கூறலாம் என்றால், அவளுடைய முகத்தில் தெரிந்த கடுமையைப் பார்த்து அதற்கான தைரியம் அவனுக்கு வரவில்லை.

“என்ன கூப்பட்டீங்க?” என்ற ஒரு கேள்வி சாராவின் முகத்தில் பொறுமையைக் கடந்து நின்று கொண்டிருந்தது.

“இல்ல.... நான் கேட்க நினைச்சது” அவன் வார்த்தைகளுக்காகத் தடுமாறினான். தொடர்ந்து அங்கு வந்து சேர்ந்த நிமிடத்திலிருந்து தொண்டைக்குள் நின்றுகொண்டிருந்த கேள்வி வெளியே வந்தது.

“கான் ஸாப்பின் குடும்பம் இங்கே இல்லையா? ஸாபின் மனைவி..”

சாராவின் கண்களில் அதிர்ச்சியின் அடையாளம் தெரிந்தது. தொடர்ந்து அவள் படுவேகமாகக் கூறினாள்.

“இருக்காங்க.... வருவாங்க.... இதையெல்லாம் நேரில் கேட்பதுதான் நல்லது. தான் வரட்டுமா.”

அதற்குப் பிறகு அவள் அங்கு நிற்கவில்லை.

மழை கிட்டத்தட்ட நின்று விட்டிருந்தது. வாசலில் நனைந்திருந்த புற்களின்மீது இரண்டு பெரிய பஞ்சுக்குவியல்களைப் போன்ற மேகக்கூட்டம் உருண்டு விளையாடிக் கொண்டிருப்பதை பிரசாந்த் பார்த்தான்.

4

‘பள்ளத்தாக்குகள்’ என்று அந்த வீட்டிற்குப் பெயர் வைத்தது யாராக இருந்தாலும், பெயர் வைத்த அந்த ஆளுக்கு நல்ல ஞானம் இருக்கிறது என்பதை ஒப்புக்கொள்ளதான் வேண்டும்.

மாலை நேரத்திற்கு சற்று முன்பு, வீட்டிற்கு முன்னால் சாலைக்கு அப்பால், வெயில் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது அத்துடன் எண்ணற்ற பள்ளத்தாக்குகளில் நிழலும் வெயிலும் ஒன்று சேர்ந்து விழுந்து கொண்டிருந்தன. சற்று தூரத்தில் இருக்கும் வேறொரு மலையின் உச்சியில் இன்னொரு மாளிகையின் சாளரங்களிலும் வாசலிலும் விளக்குகள் எரியத் தொடங்கியிருப்பதை பிரசாந்த் பார்த்தான். இந்த நேரத்தில் விளக்கு எரிய வேண்டிய அவசியமே இல்லை என்று அவனுக்குத் தோன்றியது.

சாலையில் ஒரு ஒற்றைக் குதிரை வண்டியின் சத்தம் கடந்து சென்றது. அது மறைந்ததும் ஒரு ஆட்டோ ரிக்க்ஷாவின் முனகல் கேட்டது.

அந்த வழியில் பொதுவாகவே வாகனங்கள் செல்வது குறைவுதான், நேராகச் சென்று ஏறும் நான்கு சாலைகள் சந்திக்கக்கூடிய சந்திப்பிலிருந்து வண்டிகள் அந்தப் பக்கமாக திரும்பிப் போகின்றன. காதுகளைத் தீட்டிக் கொண்டு உட்கார்ந்திருந்தால், அங்கு போய்க் கொண்டிருக்கும் லாரிகள் மற்றும் பேருந்துகளின் மெதுவான முனகல்களைக் கேட்கலாம்.

ஆட்டோ ரிக்க்ஷா கேட்டைக் கடந்து உள்ளே வருவதைப் பார்த்தபோது, பிரசாந்தால் கவனிக்காமல் இருக்க முடியவில்லை.

ஆட்டோவிலிருந்து இரண்டு பேர் இறங்கினார்கள். அவர்களில் ஒருவர் வயதானவர். ஜிப்பாவும் பைஜாமாவும் தலையில் பெரிய தலைப்பாகையும் அணிந்து மெலிந்து காணப்பட்ட மனிதர் அவர். அவருடன் இருந்த மனிதன் இளைஞனாக இருந்தான். நல்ல நிறத்தையும், கறுப்பு மீசையையும், எடுப்பான நாசியையும், சற்று நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியையும் அவன் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு அழகான தோற்றத்தைக் கொண்டவனாக அவன் இருந்தான். பெரிய அளவிற்கு உயரமில்லை. முழங்கால்வரை தொங்கிக்கொண்டிருக்கும் நீளமான ஜிப்பாவும், முளை கட்டப்பட்ட பைஜாமாவும் சேர்ந்து அவன் ஒரு பட்டானியனாகவோ அல்லது பாக்கிஸ்தானியாகவோ இருக்க வேண்டும் என்று அடையாளம் காட்டின.

வயதான மனிதர் ஆட்டோவிற்கு பணம் கொடுத்தபோது இளைஞன் அதற்குள்ளிருந்து இரண்டு நீலநிறத்தைக் கொண்ட துணிக்கட்டுகளை இறக்கிக் கொண்டிருந்தான். அவற்றில் தபலா இருந்தன. அவற்றுடன் வேறொரு இசைக்கருவியின் கூடும் இறங்கியது. பெட்டியைப் பார்த்தபோது, சாரங்கியாக இருக்கவேண்டும் என்று பட்டது. அந்த இளைஞன் தபலாக்களை எடுத்தான். வயதான மனிதர் இன்னொரு பெட்டியை எடுத்தார். அவர்கள் முன்னால் சென்று பெல் அடிப்பதற்காக நிற்காமல் நேராக நடந்து வீட்டின் இடது பக்கமாக சுற்றி பின் பக்கத்திற்குச் சென்றார்கள். அங்கு வந்து பழக்கமானவர்கள் அவர்கள். அவர்களின் நடவடிக்கைகளைப் பார்க்கும்போது, அவர்கள் குருவும் சிஷ்யனுமாக இருக்க வேண்டும் என்று தோன்றியது.

அவர்கள் நடந்து சென்ற பாதை வழியாக, சிறிது நேரம் கழிந்து ஒரு வெள்ளை நிற மாருதி கார் உள்ளே போவதை பிரசாந்த் பார்த்தான். அந்தக் காருக்குள் ஓட்டும் மனிதர் மட்டும் இருந்தார். மூன்றாவது பீரையும் குடித்துவிட்டு, பிரசாந்த் எழுந்தான். வெறுமனே கொஞ்சம் நடந்து விட்டு வரலாம். அத்துடன் வீட்டின் எஞ்சிய பகுதிகளையும் பார்த்தது மாதிரியும் இருக்கும் என்று அவன் நினைத்தான்.

கேட்டிற்கு அப்பால் இருந்த நிலத்தை இரண்டு மூன்று பணியாட்கள் வெட்டிக் கொண்டும் தோண்டிக் கொண்டும் இருந்தார்கள். பிரசாந்தைப் பார்த்ததும், அவர்கள் தங்களின் பேச்சை நிறுத்திவிட்டு அவளை மரியாதையுடன் வணங்கினார்கள்.

எவ்வளவு  தூரத்திலிருந்தும் எந்த பள்ளத்தாக்கிலிருந்தும் பார்க்கக்கூடிய மாதிரி ‘பள்ளத்தாக்குகள்’ கம்பீரமாக நின்றிருந்தது. சற்று தூரத்தில் நின்று கொண்டு பார்க்கும் போதுதான் அந்தக் கட்டிடத்தின் கம்பீரமும் அழகும் சரியாகக் கண்களில் தெரிந்தன.

பனி பெய்ய ஆரம்பத்திருந்தது. காற்றுக்கு குளிர்ச்சியும் பலமும் அதிகரித்துக் கொண்டிருந்தன.

சாலையில் பயணிகள் மிகவும் குறைவாகவே இருந்தார்கள். எப்போதாவது ஒருமுறை ஒரு காரோ, குதிரை வண்டியோ, சைக்கிளோ....

தூரத்தில் மலையில் பார்த்த பிரம்மாண்டமான கட்டிடம் பழைய ஒரு மன்னர் கட்டியது என்ற விஷயத்தை ஒரு பயணியிடம் இருந்து பிரசாந்த் தெரிந்து கொண்டான். இறுதியாக ஆட்சி செய்த மன்னனின் தந்தையின் தந்தை கட்டியது. ஐ.டி.டி.சி. இப்போது அங்கு ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலை நடத்திக்கொண்டிருந்தது.

நட்சத்திர ஹோட்டலின் குளிர்ந்துபோன பார்கள் சுகன்யாவிற்கு மிகவும் பிடிக்கும் என்பதை திடீரென்று அவன் நினைத்தான்.

வழியில் சென்ற மனிதன் அந்த மாளிகையைப் பற்றி வேறொரு தகவலையும் சொன்னான். ‘மன்னர் அதை ஒரு தேவதாசிக்காக கட்டிக் கொடுத்தார். ஒரு நடனமாடும் பெண்ணுக்கு’ என்பதே அந்தத் தகவல்.

புத்திசாலிப் பெண்.


பயணி மிகவும் பிரபலமான ஒரு இந்தி நடிகையின் பெயரைச் சொன்னான். அவளுடைய தாய்தான் அந்த தேவதாசி.

நடந்து சென்றது முடிந்து திரும்பி வந்தபோதும், வாசலில் இங்குமங்குமாக விளக்குகள் எரிந்து கொண்டிருந்தன. எங்கேயோ இடி இடிக்கும் சத்தம் கேட்டது. வீட்டின் பின்பகுதியில் இருக்கும் கான் சாஹிப்பின் அறையிலிருந்து வருவதாக இருக்க வேண்டும். தபலா, சித்தார் ஆகியவற்றின் மெல்லிய சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.

பிரசாந்த் திரும்பி வருவதை, எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப்போல ஒரு வயதான மனிதன் வெளியில் நின்றிருந்தான். அவனுடைய ‘சலாம்’ போடுவதிலும், மரியாதைச் செயல்களிலும் பழைய ஆங்கிலேய பணியாட்களின் ஒழங்கு தெரிந்தது.

“அறையைத் திறந்தால் இன்னும் கொஞ்சம் பீர்களை ஃபிரிட்ஜுக்குள் வைக்கலாம்.”

பிரசாந்த் மகிழ்ச்சியுடன் அறையைத் திறந்தான்.

“உங்க பெயர் என்ன ?”

“தாமு”

“சொந்த ஊர்”

“தலைசேரிக்குப் பக்கத்தில்...”

“இங்கே எவ்வளவு காலமாக வேலை செய்றீங்க?”

“எவ்வளவோ வருடங்களாக”

சிறிது தயங்கினாலும், இறுதியில் பிரசாந்த் கேட்டான்: “முன்னால் இங்கு தான் பார்த்த அந்த இளம்பெண்.... சாரா?”

“அவங்க போயிட்டாங்க. இனிமேல் காலையில்தான் வருவாங்க.”

போவதற்கு முன்னால் தாமு கேட்டான் : “இரவில் சாப்பவதற்கு என்ன வேணும்.”

“என்ன இருக்கு”

“நீங்க சொல்லுங்க”

“சப்பாத்தி வெஜிட்டபள் கூட்டு...”

“சார்... சிக்கன்?”

“இருந்தா இருக்கட்டும்.”

“சார்”

பணிவை மேலும் சற்று அதிகமாகக் காட்டிக் கொண்டு தாமு கேட்டான்: “ஹாட்டா என்ன வேணும்னு கேட்கும்படி சாஹிப் கட்டளை இட்டிருக்காரு.”

“விஸ்கியா இருக்கட்டும்” - விருந்தோம்பலின் வெப்பம் படர்வதை உணர்ந்த பிரசாந்த் சொன்னான்.

அந்த விஸ்கி வந்து சேர்ந்ததும், அதைப் பருகும்படியான குழ்நிலை உண்டாகவில்லை. அதற்கு முன்னால், உள்ளே கானின் அறைக்கு அவன் அழைக்கப்பட்டான்.

விளக்குகளின் வெளிச்சத்தில் பார்த்தபோது, கானின் அறை பகலில் பார்த்தபோது இருந்த அறையைவிட மிகவும் அழகாக இருப்பதைப்போல் பிரசாந்திற்குத் தோன்றியது. தலையணை உறைகள், படுக்கை விரிப்புகள் எல்லாம் முற்றிலும் மாறியிருந்தன. பெர்ஃப்யூம், ஸ்காட்ச், சிகரேட் - எல்லாம் சேர்ந்து உண்டாக்கிய மணம் அறைக்குள் நிறைந்திருந்தது.

ஷாநவாஸ்கான் குளித்து வேறு ஆடைகளை அணிந்திருந்தார். காப்பித்தூள் நிறத்தில் இருந்த சில்க் ஜிப்பாவையும் பைஜாமாவையும் அவர் அணிந்திருந்தார்.

அறையில் இருந்தவர்களை அவர் அறிமுகம் செய்து வைத்தார்: “இவர் டாக்டர் பிள்ளை. என்னை இந்தக் கட்டுக்குள் இருக்கும்படி செய்திருப்பது இந்த வித்துவான்தான்.”

சிறிது நேரத்திற்கு முன்னால் மாருதி காரை ஓட்டிக் கொண்டு வந்தவர் பிள்ளைதான் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான். அவருக்கு வயது ஐம்பதுக்கு மேல் இருக்கும். கம்பீரமான பருமனான உடலைக் கொண்ட மனிதர்.

பட்டாளி என்றோ பாக்கிஸ்தானி என்றோ நினைத்த இளைஞனின் பெயர் நியாஸ். அவன் பாட்டு பாடுபவன்.

தலையில் தலைப்பாகை அணிந்திருந்த வயதான மனிதர் தபலா இசைப்பவர். அவரை அறிமுகப்படுத்தும்போது கான் றிறையவே பேசினார். “ ‘ஹைதராபாத் டைகர்’ என்றுதான் கமாலை இசை உலகத்தில் எல்லாரும் கூறுவாங்க. தபலா வாசிப்பதில் அற்புதத்தை உண்டாக்குபவர். அல்லாரக்காவின் நிலையை அடைந்திருக்க வேண்டியவர். என்ன செய்வது. இவருக்கு அது எதுவும் வேண்டாம், மது இருந்தால் பொதும். அப்படித்தானே டைகர்.”

டைகர் சிரித்தார். தொடர்ந்து தனக்கு முன்னால் இருந்த விஸ்கி க்ளாஸை எடுத்து உயர்த்திக் கொண்டு இரண்டு வரிகள் கஸல் சொன்னார்.

“உன் அதரங்களில் இருக்கும் முந்திரிச் சாறும் என் கையில் இருக்கும் மதுவும் ஒரே நேரத்தில் தீர ஆரம்பிக்கும் இந்த புலர்காலைப் பொழுதில்- நான் நினைக்கிறேன் -  இவை இரண்டும் மட்டும் இல்லாமல் போயிருந்தால் என் இரவு எந்த அளவிற்கு ஒன்றுமே இல்லாமல் வீணாகிப் போயிருக்கும் என்று.”

“வாஹ்... வாஹ்... டாக்டர் பிள்ளை உரத்த குரலில் சத்தம் போட்டுச் சிரித்தார்.”

பிரசாந்தை அறிமுகப்படுத்தும்போதும் கரணின் வார்த்தைகளில் தாராளம் நிறைந்திருந்தது.

“நாங்க முன்னாடியே ஆரம்பிச்சிட்டோம்.” - டாக்டர் பிள்ளை மன்னிப்பு கேட்கிற மாதிரி சொன்னார்.

“அந்த நேரத்தில் நாங்கள் உங்களைத் தேடினோம்.” கான் இடையில் புகுந்து சொன்னார்: “அந்தச் சமயத்துல நீங்க நடக்கப் போயிருக்கீங்கன்னு தெரிஞ்சது.”

கானைத் தவிர, எஞ்சியிருந்த மூன்று மனிதர்களுக்கு முன்னாலும் க்ளாஸ்கள் இருந்தன.

கான் மது அருந்துவதில்லை. மது அருந்துவதை நிறுத்தி இரண்டு மாதங்களுக்குமேல் ஆகிவிட்டன. கீழே விழுந்ததிலிருந்து அதை அவர் நிறுத்திவிட்டார்.

இவர் என்னை ரொம்பவும் பயமுறுத்தி வச்சிருக்காரு. டாக்டர் பிள்ளையைச் சுட்டிக் காட்டியவாறு கான் சொன்னார். இவர் பச்சைக் கொடியை காட்டாமல் குடிக்க ஆரம்பித்தான். நான் செத்துப் போயிடுவேனாம்.

“ஒரு மனிதனின் ஆயுள் காலத்தில் இருக்க வேண்டிய கோட்டா முழுவதையும் குடிச்சுத் தீர்த்துட்டாரு. இப்போ குடிக்கலைன்றதுனால. எந்தப் பிரச்சினையும் உண்டாகப் போறது இல்ல...”

பிரசாந்த் க்ளாஸை எடுத்தான்.

அந்த இரவு இசைமயமான இரவாக ஆனது. நியாஸ் எதிர்பார்த்திருந்ததைவிட மிகவும் சிறப்பாகப் பாடினான். டைகரின் விரல்கள் தபலாவுடன் இரண்டறக் கலந்து விட்டன. எனினும், அவர்கள் இருவரையும்விட ஆச்சரியப்படக்கூடிய ஒரு மனிதராக மாறியவர் கான்தான். சித்தார் அவருக்காகவே படைக்கப்பட்ட கருவியோ என்றுகூட சில நேரங்களில் தோன்றியது. இடையில் ஒருமுறை எல்லாரும் சேர்ந்து கட்டாயப்படுத்தியபோது கானும் ஒரு கஸலைப் பாடினார்.

“நிலவு சிவப்பு நிறத்திலிருக்கும் ஒரு கிண்ணத்தைப்போல உருகிமறையப் போகிறது. கடலில் இருந்து வீசும் இரவுக் காற்றில் உன்தலைமுடிகள் அலைகளாக மாறுகின்றன. இனிமேல் கண்ணே உன் முகம் இன்னொரு நிலவாக உதயமாகட்டும். இனிமேல் கண்ணே, உன் மேனி இன்னொரு கடலாக மாறட்டும்.”

அவருடைய கம்பீரமான குரலில் அந்த வரிகளுக்கு ஒரு இனிமை வந்து சேர்ந்தது.

கைத்தட்டல்கள் முடிந்தபோது டாக்டர் பிள்ளை தனிப்பட்ட முறையில் கூறுவது மாதிரி சொன்னார்: “இனிமேல் நீங்க எழுதக்கூட செய்யலாம். கஸல்கள்... பிறகு ஆங்கிலத்தில் கவிதைகள்.”

வெளியே ஒரு ஜீப் வந்து ப்ரேக் போட்டு நிறுத்தப்படுவதன் சத்தத்தைக் கேட்டபோதுதான் இசை மட்டுமே ஆட்சி செய்து கொண்டிருந்த அந்த உலகத்தில் சிறிது மாற்றம் உண்டானது. ஜீப் நின்றவுடன், ஏதோ விழுந்து உடையும் சத்தமும் கேட்டது. செடிகள் இருந்த சட்டிகளாக இருக்க வேண்டும்.

“ஜப்போய் வந்தாச்சு.” கான் மகிழ்ச்சியுடன் சொன்னார்.

பிரசாந்த் கடிகாரத்தை பார்த்தான்.  மணி பதினொன்றரை ஆகியருந்தது. இந்த நேரத்தில் ஒரு விருந்தாளி!

“நான் போயி அழைச்சிட்டு வர்றேன்.” - டாக்டர் பிள்ளை வேகமாக வராந்தாவை நோக்கி ஓடினார் : “இல்லாட்டி சண்டை போடுறதுக்கு இந்த ஒரு விஷயம் போதும்.”


“என் நண்பர்” - வரப்போகிற விருந்தாளியைப் பற்றி கான் முன்கூட்டியே சொன்னார். “ப்ளேன்டர். கேரளத்தில் இங்குமங்குமாக நிறைய எஸ்டேட்டுகள் இருக்கு. இங்கேயும் கொஞ்சம் இருக்கு.”

ஆர்ப்பாட்டத்துடனும் சத்தங்களுடனும் ஜப்போய் அங்கு வந்து சேர்ந்தார். முப்பது முப்பத்தைந்து வயது தோன்றக்கூடிய சற்று தடிமனான ஒரு மனிதர்.

“இன்றைக்கு எத்தனை சட்டிகளை உடைச்சீங்க?” கான் கேட்டார். 

அதற்கு பதிலாக கான் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார். தொடர்ந்து ஒரு க்ளாஸை எடுத்து நிரப்பினார்.

“என்னை என் மனைவி விவாகரத்து செய்யப் போறாளாம்.”- - அவர் எல்லோரிடமும் சொன்னார்.

“உன்னை இவ்வளவு காலமா சகிச்சிக்கிட்டு இருந்ததுக்கே அவங்களுக்கு விருது தரணும்” - பிள்ளை சொன்னார்.

“அது உண்மைதான்.” - ஜப்போய் ஒப்புக் கொண்டார். “நான் மது அருந்துவதைப் பற்றி அவளுக்குப் பிரச்சினையே இல்லை. மது அருந்திவிட்டு வண்டியை எடுக்குறதுலதான் பிரச்சினையே.”

“அது உண்மைதானே.”

“என்ன உண்மை? அப்போ என்னதான் செய்யிரது.”

வந்ததைப் போலவே சிறிது நேரம் கடந்த பிறகு ஆரவாரம் செய்தவாறு ஜப்போய் போகவும் செய்தார். போவதற்கு முன்னால் பிரசாந்த்தின் தோளில் அடித்தவாறு அவர் சொன்னார். “கான் சாஹிபின் மாளிகையை கம்பீரமாக இருக்குறது மாதிரி செய்யணும். நாம இங்கே ஒரு கலக்கு கலக்க வேண்டியதிருக்கு.”

‘கலக்கு’ என்றால் என்ன அர்ட்தம் என்று தெரியாவிட்டாலும் கம்பீரமாக இருக்குறது மாதிரி செய்யிறேன் என்று பிரசாந்த் வாக்குறுதி கொடுத்தான்.

இரண்டு மணி தாண்டி எல்லோரும் பிரிந்தபோது, பிள்ளை தன்னுடைய வீட்டிற்குச் சென்றார். டைகரும் நியாஸும் அன்று அங்கேயே தங்கினார்கள். அதிகாலையில் இருக்கும் பேருந்தில் பெங்களூருக்கு அவர்கள் செல்வார்கள்.

பிரியும் நேரத்தில் சற்று வெட்கம் தோன்ற கான் பிரசாந்திடம் ஒரு விருப்பத்தைச் சொன்னார்.

“வீடு சரி பண்ணுவதை இரண்டு நாட்கள் கழித்து ஆரம்பித்தால்கூட அதுனால பிரச்சினையில்லை. தெற்குப் பக்கம் இருக்கும் நிலத்தில் வளர்ந்திருக்கும் முள் காடுகளுக்கு மத்தியில் கொஞ்சம் கருங்கல்லாலான தூண்களும் பலகைகளும் கிடக்கின்றன. முன்பு ஒரு குதிரை லாயம் இருந்த இடம் அது. முதலில் அந்த இடத்தைச் சரிபண்ணி, ஒரு ஒற்றைக் குதிரையை அங்கே நிறுத்துகிற அளவிற்கு லாயம் உண்டாக்கித் தரணும் அது சரியானவுடன் கொண்டு வருவதற்காக ஒரு பெண் குதிரையை விலைக்கு வாங்கி ஊட்டிலில் நிறுத்தியிருக்கேன். முதலில் அவன் வரணும். அப்போத்தான் இந்த வீடு உயிர்ப்புடன் இருக்கும்.”

5

ழைய குதிரை லாயம் இருந்த இடத்தைக் காட்டுவதற்காக அவனுடன் வந்தவள் சாராதான். ஒன்றோ இரண்டோ கருங்கல் தூண்களைத் தவிர, வேறு எதுவும் வெளியில் இருப்பது மாதிரி தெரியவில்லை. காட்டுக் கொடிகள் அவற்றை முழுமையாக மூடி விட்டிருந்தன. இடையில் பயமுறுத்தும் பார்வையுடன் வளைந்து அப்படியும் இப்படியுமாகப் பிரிந்து சென்ற பல இனங்களையும் சேர்ந்த செடிகள் வளர்ந்திருந்தன.

“பாம்புகள் இருக்கும்” - சாரா சொன்னாள்: “யாரும் இந்த வழியா நடக்குறதே இல்ல.”

“இது விசாலமான இடமா இருக்கே!” - பிரசாந்திற்கு அது ஒரு ஆச்சரியமான விஷயமாக இருந்தது, “இந்த இடம் முழுவதும் குதிரை லாயமாகவா இருந்தது.”

சாரா தலையை ஆட்டினாள். தொடர்ந்து அவன் முன்பு எப்போதோ அங்கு இருந்த குதிரை லாயத்தைப் பற்றிச் சொன்னாள். பத்து பன்னிரண்டு குதிரைகள் நிற்கும் அளவிற்குப் பெரிய ஒரு இடமாக அது இருந்தது. அவளுக்கு நினைவு தெரிந்த அளவில் அங்கு மூன்று நான்கு குதிரைகள் இருந்தன.

ஷாநவாஸ்கானுக்கு அவருடைய தந்தையிடமிருந்து கிடைத்ததுதான் இந்த குதிரைகள்மீது கொண்ட மோகம். அவருடைய தந்தை உலகமெங்கும் புகழ்பெற்ற பந்தயத்குதிரைகளைச் சொந்தத்தில் வைத்திருந்தார்.

பேச ஆரம்பித்த பிறகு அவளைப் பேச வைப்பது என்பது மிகவும் எளிதான விஷயமாகவே இருந்தது. முதலில் இருந்த அறிமுகமின்மை சற்று விலகி விட்டிருந்தது. ஸாப் அவனிடம் காட்டக்கூடிய அன்பும் நெருக்கமும் சிறிதளவில் அவளுக்கே  தெரியாமல் அவளிடமும் பரவியிருந்தது.

கான் ஸாஹிப் குதிரைப் பந்தயத்தில் ஓடிக் கொண்டிருந்த தன்னுடைய வெள்ளை நிறக் குதிரையைக் கொண்டு வந்து அதோ அந்த வட்டத்தில் ஓட வைத்துப் பயிற்சி பெறும் காட்சி அவளுடைய சிறு பருவத்து நினைவுகளில் ஒன்றாக இப்போதும் தங்கியிருந்தது. ஸாப் விடுமுறையில் வரும்போது மட்டுமே பார்க்க முடிகிற ஒரு காட்சி அது.

“அப்போது ஸாப் பார்க்குறதுக்கு எவ்வளவு அழகா இருப்பார் தெரியுமா? வெள்ளைக் குதிரைமீது ஸாப் உட்கார்ந்திருக்கும் ஒரு பழைய புகைப்படம் இப்பவும் இருக்கு. பார்க்குறதுக்கு ஒரு பளிங்கு பொம்மையில் புகைப்படம் மாதிரியே இருக்கும். குதிரைக்கும் குதிரைமீது அமர்ந்திருக்கும் மனிதருக்கும் ஒரே மாதிரியான சதைகள்... ஒரே சிற்பியின் கையால் செய்யப்பட்டது அது என்பதைப் பார்த்த உடனேயே தெரிந்து கொள்ளலாம். “அடடா என்ன நிறம்!”

அவளை மனதைத் திறந்து பேசவிட்ட காரணத்தால் கானைப் பற்றிய வேறு சில தகவல்களும் வெளியே வந்தன.

கானின் பள்ளிக்கூடம் டேராடூனிலும் கல்லூரிகள் லண்டனிலும் அமெரிக்காவிலும் என்று பரந்து கிடந்தன. அவர் பொருளாதாரத்தில் டாக்டர் பட்டம் பெற்றவர். அது முடிந்ததும் நீண்ட காலம் அவர் வெளிநாட்டில்தான் இருந்தார். திரும்பவும் சொந்த ஊருக்கு வந்து வசிக்க ஆரம்பித்து ஐந்தாறு வருடங்கள்தான் ஆகின்றன. சிறு வயது முதல் எப்போதாவது சிறிய விடுமுறைகளில் வரும்போது தான் பார்த்த கான் சாஹிப்பின் உருவம் அவளுடைய மனதில் கடவுளுக்கு இணையாக இருந்து கொண்டு இருக்கிறது என்பதை பிரசாந்தால் புரிந்துகொள்ள முடிந்தது.

சாரா தன்னைப்பற்றியும் கூறினாள். அவள்தான் தற்போது இந்த வீட்டின் கேர் டேக்கர். முள்வேலிக்கு வெளியே தெரியும் நீளமான கட்டிடம் பிரசாந்த் மனதில் நினைத்ததைப் போலவே அந்த மாளிகையில் பணிபுரியும் பணியாட்கள் தங்குமிடம்தான். அங்குதான் அவள் பிறந்ததும் வளர்ந்ததும். அவளுடைய தந்தையும் தாயும் அங்கு வேலை பார்ப்பவர்களாக இருந்தார்கள். இப்போது அங்கு இருப்பவர்கள் சாராவும் அவளுடைய அண்ணனும், அண்ணனின் மனைவியும் மட்டும்தான். அவளுடைய தந்தை இறந்து விட்டார். அண்ணனின் மனைவியுடன் அனுசரித்து வாழ முடியாததால் அவளுடைய தாய் தன் சொந்த ஊருக்கே போய்விட்டாள். இப்போது அவள் ஊட்டியில் இருக்கிறாள். அங்கு இருக்கும் ஒரு அக்காவின் வீட்டில் வாதநோய் பிடித்துப் படுத்துக்கிடக்கிறாள்.

அவளுடைய அண்ணன் ராபர்ட் கார்ப்பரேஷனில் ஓட்டுநராக பணிபுரிகிறான். அக்கா போளி வெறுமனே வீட்டில் இருக்கிறாள். குழந்தைகள் இல்லை. அதனால் மற்றவர்களின் குறைகளைவும் குற்றங்களையும் பேசிக்கொண்டு தன் நேரத்தைச் செலவிட்டுக் கொண்டிருக்கிறாள் போளம்மா.


சாரா பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்கிறாள்.

“படிப்பு அவ்வளவுதானா? பேசும் ஆங்கிலம் அந்த அளவிற்கு அசலா இருக்கே!” அவளை மேலும் கிளறுவதற்காக அவன் இந்த வார்த்தைகளைச் சொன்னான்: “நான் நினைச்சது....”

அவள் அவன் என்ன சொல்ல வருகிறான் என்பதைப் புரிந்து கொண்டாள். அவள் சொன்னாள்: “சின்ன பிள்ளையா இருப்பதில் இருந்து இந்த மாளிகையில்தானே எனக்கு வேலை. இங்கே நிரந்தரமா வேலை செய்றதா இருந்தா, கொஞ்சமாவது ஆங்கிலம் பேசத் தெரிஞ்சிருக்கனும்.”

அந்த இடத்தில் தன் உரையாடலை முடித்துவிட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

புதர்களை வெட்டி பழைய குதிரைகளின் சாணங்களை அள்ளிச் சுத்தம் செய்வதற்கே நான்கு நாட்கள் ஆயின. ஒவ்வொரு நாளும் இருபது பணியாட்கள் வேலை செய்தார்கள். உயிரைக் கொடுத்து வேலை செய்யக்கூடிய பணியாட்கள் சாஹிப்பின் வீட்டைப் புதுப்பிப்பது குறித்து அவர்கள் எல்லோருக்கும் கூலி என்பதையும் தாண்டி வேறு ஏதோ ஒரு ரகசிய சந்தோஷம் இருக்கிறது என்பதாக பிரசாந்த் உணர்ந்தான்.

நீளமான தூண்களுக்கும் மண்ணுக்குள் புதைத்து கிடந்த கருங்கல் பலகைகளுக்கும் மத்தியில் மூன்று பெரிய பாம்புகளும் இரண்டு பாம்புக் குட்டிகளும் கிடைத்தன. அவை வல்லாவற்றையும் பணியாட்கள் கொன்று நெருப்பில் எரித்தார்கள்.

ரெஃப்ரன்ஸுக்காக கான் தந்த தடிமனான புத்தகங்களில்  மிகவும் நவநாகரீகமான குதிரை லாயத்தை எப்படி அமைப்பது என்பதைப்பற்றிய விளக்கங்கள் கூட இருந்தன. அதற்குள் நுழைந்து போனபோதுதான் வினோதமான அந்த உலகத்தைப் பற்றிய விஷயங்களைத் தெரிந்துகொள்ள முடிந்தது.

கான் அதற்கு உதவினார்.

இந்த விஷயங்கள் தெரியாமல் தான் ஒரு கேலிப் பொருளாக ஆகியிருப்பது நிச்சயம் என்பதை அவன் தெரிந்து கொண்டான். குதிரை லாயத்தில் ஒரு ஆட்டைக் கொண்டு வந்து நிறுத்தி  தன்னை  கேலி பண்ண கான் தயங்கியிருக்கவே மாட்டார்.

லாயத்தை உண்டாக்குவதற்கு மட்டுமே ஆகும் செலவைக் கணக்கிட்டுப் பார்த்தபோது பிரசாந்த்  அதிர்ந்து போய்விட்டான். அந்தப் பணத்தைக் கொண்ட கிராமத்தில் ஒரு சிறு குடும்பம் விசாலமாக வாழ்வதற்கேற்ற கான்க்ரீட் கட்டிடமொன்றைக் கட்டலாம்.

அந்த நாட்களில் பிரசாந்த் முழுக்க முழுக்க தன்னுடைய வேலைகளின் உலகத்தில் மட்டுமே மூழ்கிவிட்டான். டைகரையும் நியாஸையும் அதற்குப் பிறகு அவன் பார்க்கவேயில்லை. டாக்டரின் வெள்ளைநிற மாருதியை ஒன்றிரண்டு மாலை  வேளைகளில் பார்த்தான். சில நடு இரவு வேளைகளில் வாசலில் இருந்த செடிச் சட்டிகள் கீழே விழுந்து உடைவதையும் கேட்டான்.

அதற்குப் பிறகு அவன் கானின் அறைக்குச் செல்லவில்லை. ஒரு இரவு நேரத்தில் அவனுக்கு அழைப்பு வந்தது, வேலையில் ஈடுபட்டிருப்பதாகக் கூறி அவன் மறுத்துவிட்டான். சில நேரங்களில் நன்கு தூங்கிக் கொண்டிருப்பதற்கு மத்தியில் கித்தாரின் அழுகைச் சத்தம் காதில் விழும். அவ்வப்போது இருக்கும் சாரல் மழையும் மூடுபனியும் சேர்ந்து நாட்களை குளிர்ச்சியில் உறையச் செய்து கொண்டிருந்தன.

குதிரை லாயத்தைத் தொடர்ந்து வீடு சம்பந்தப்பட்ட வேலைகளை ஆரம்பிப்பதில் கானுக்கு எதிர்ப்பு எதுவும் இல்லை. முதலாவதாக செய்ய வேண்டியது விருந்தினர்கள் தங்கியிருக்கும் இடம் என்பதில் மட்டும் பிடிவாதமாக இருந்தார்.

ராம் விவேச்சாவை உடனடியாக அனுப்பி வைக்கும்படி தன் அலுவலகத்திற்கு அவன் ஃபோன் செய்தான். ராம்தான் அவனுடைய ரசனைக்கு ஒத்துப் போகக்கூடிய மனிதன். ராம் வந்து சேர்ந்துவிட்டால், பாதி தலைவலி தீர்ந்த மாதிரிதான். மிகுந்த ஈடுபாட்டுடன் வேலைகளில் ஈடுபட்டுவிடுவான். அவனிடம் ஒரு சீனியர் என்பதைவிட ஒரு மூத்த சகோதரன் என்ற எண்ணம்தான் அதிகமாக இருந்தது.

பிரசாந்தின் அறையில் இருந்த  ஸ்டாண்டுகளிலும் மேஜைமீதும் பெரிய தாள்கள் சுருண்டும் விரிந்தும் கிடந்தன. வரைபடங்களும் திட்டங்களும் டிசைன்களும் வண்ணத்திட்டங்களில் சோதனைகளும் அடங்கிய தாள்கள் அவனுடைய அறையெங்கும் நிறைந்திருந்தன.

சில நாட்கள் கடந்த பிறகு வேலை நடந்து கொண்டிருந்த இடத்திற்கு ஊன்றுகோலின் துணையுடன் கான் வந்தார். இப்போது அவருக்குக் கொஞ்சம் நடக்கக்கூடிய அளவிற்கு பலம் கிடைத்திருந்தது. எனினும், வலது காலை ஊன்ற முடியவில்லை. படிகளில் இறங்குவதற்கு வேறு யாருடைய உதவியாவது அவருக்குத் தேவைப்பட்டது.

இப்படிப்பட்ட விஷயங்களில்  ஸாபிற்கு உதவியாக இருப்பது சாராதான். மருந்துகளை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பது, சலவை செய்த ஆடைகளை தயார் பண்ணி வைப்பது எல்லாமே அவள்தான். அவற்றை அவன் செய்வது முழுமையான ஈடுபாட்டுடனும், நிறைவான மனதுடனும் என்பதை பிரசாந்த் நன்கு அறிந்திருந்தான். அவர் இருக்கும்போது மட்டும் அவளுடைய முகத்தில் தெரியும் வார்த்தையால் விவரிக்க முடியாத பிரகாசம், ஒரு தாயின் தன்னிச்சையான செயல்கள், விளையாட்டுப் பேச்சுகள்…

வெளியே பார்ப்பதையும் தாண்டி அவர்களுக்கிடையில் ஏதாவது உறவு இருக்குமோ என்று சந்தேகப்படாமல் அவனால் இருக்க முடியவில்லை. யார் பார்த்தாலும் அப்படித்தான் நினைப்பார்கள்.

ஒரு இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு நல்ல போதையில் இருந்த தாமுவைக் கிளறியபோது அவன் சொன்னான்: “அவள் தப்பானவள் சார்... சாஹிப்பை ஒரு வழி பண்றதுக்குத்தான் அவளை அந்த ராபர்ட் இங்கே கொண்டு வந்து விட்டிருக்கான். அவள் எப்படியெல்லாம் ஆட்சி பண்றான்றதை நீங்கதான் பார்த்திருப்பீங்களே சார்? சாஹிப்போட பொண்டாட்டி மாதிரியில்ல அவளோட ஒவ்வொரு நடவடிக்கையும் இருக்கு!”

“ அவளுக்கும்  ஸாபுக்கும் இடையில்...?”

“இருக்கும்...” கிழவன் படி கொடுக்காமல் சொன்னான்.

”பார்க்காமலே எப்படி?”

எப்படியெல்லாம் வளைத்தும் திருப்பியும் கேட்டும் கானுக்கும் சாராவுக்குமிடையே ஏதாவது ரகசிய உறவு இருக்கிறது என்பதை உறுதியான குரலில் கூறுவதற்கு தாமு அண்ணன் தயாராக இல்லை. அப்போது பிரசாந்த், கானின் மனைவியைப் பற்றி விசாரித்தான். அவள் எங்கு இருக்கிறாள்? உயிருடன் இருக்கிறாளா? இல்லாவிட்டால் இறந்துவிட்டானா?

கானின் மனைவியைப் பற்றி தாமுவிற்கு மிகவும் கொஞ்சம்தான் தெரிந்திருந்தது. எப்போதும் ‘பேகம்  ஸாஹிப்’ என்று மட்டுமே கூறிக் கொண்டிருந்ததால் அவளுடைய பெயர்கூட அவனுக்குத் தெரியவில்லை. “அவங்க இருக்காங்க. எங்கோ கிராமத்துல” என்று மட்டுமே தாமுவிற்குத் தெரிந்திருந்தது. அந்த வீட்டில் சாஹிப்புடன் ஆறேழு தடவை வந்து தங்கிச் சென்றிருக்கிறாள் என்பது மட்டும்தான் அந்தப் பெண்ணைப் பற்றி அவனுக்குத் தெரிந்திருந்த விஷயமாக இருந்தது. மனைவிக்கும் கணவனுக்குமிடையில் இப்போது ஏதோ ஒரு பெரிய பிரச்சினை இருக்கிறது. அதைப்பற்றி அதற்குமேல் அவனுக்குத் தெரியவில்லை. யாருக்குமே தெரியவில்லை. அவர்கள் இருவரையும் தவிர.

“குழந்தைகள்?” பிரசாந்த் விசாரித்தான்.

“ஒரு மகள் இருக்கு ஒரே ஒரு மகள்”

அந்த ஒரு மகளும் எங்கே இருக்கிறாள் என்ற விஷயம் தாமுவிற்குத் தெரியவில்லை.


ஒருவேளை, தன் தாயிடம் அவள் இருக்கலாம். இப்போது பதினெட்டு அல்லது பத்தொன்பது வயது அவளுக்கு இருக்க வேண்டும்.

காலையில் போதை தெளிந்ததும், கிழவன் ஓடிவந்து கால்களைப் பிடித்தான். முந்தின நாள் இரவு நேரத்தில் தான் கூறியவை அனைத்தும் போதையால் வந்தவை என்றும், தான் அப்படி உளறிய விஷயத்தை எந்தக் காரணத்தைக் கொண்டும்  ஸாப் தெரிந்து கொள்ளக்கூடாது என்றும் அவன் கண்ணீருடன் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

“சொல்ல மாட்டேன்”, என்று கிழவனை நம்பச் செய்வதற்காக தன் தாய், குருவாயூரப்பன் எவ்லோர் மீதும் சத்தியம் பண்ணிக் கூறும்படியான சூழ்நிலை பிரசாந்திற்கு உண்டானது.

6

வெளியே கல்லும் சிமெண்டும் இறக்கிக் கொண்டிருக்கும் லாரிகள் சத்தம் கேட்க ஆரம்பித்திருந்த நாட்களொன்றில், வீட்டைப் பற்றிய ஒட்டுமொத்தமான வரைபடத்திலிருந்து ஒரு அறையை மட்டும் தனியாகக் சுட்டிக்காட்டியவாறு ஷாநவாஸ்கான் சொன்னார்:

“இந்த அறையை மிகவும் அவசரமாக சுத்தம் பண்ணி வைக்கணும். ஒருவேளை ஒரு விருந்தினர் வர வாய்ப்பு இருக்கு.”

பிரசாந்த் அந்த அறையை மனதில் நினைத்துக் கண்டுபிடித்தான். முன்பக்கம் இருந்த கட்டிடத்தின் வலது பக்க வராந்தாவின் மூலையில் தனியாக இருந்த அறை. அது மற்ற அறைகளிலிருந்து அந்த அறைக்கு நேரடியாகப் போக முடியாது. முன் பகுதியில் அழகான சிறிய சிட்டவுட்டும், பாரப்பெட்டும் இருப்பதை அவன் ஏற்கெனவே பார்த்திருக்கிறான்.

எந்த அளவுக்கு அழகுபடுத்த முடியுமோ, அந்த அளவுக்கு அதை அழகுபடுத்துங்க. மிகவும் உயர்வான அழகுணர்வைக் கொண்ட ஒரு நபர் அங்கு விருந்தாளியாக வரப்போகும் விஷயத்தை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொண்டால் போதும்.

“வரும் நபருக்கு மிகவும் விருப்பமான நிறங்கள் என்னென்ன என்பதைத் தெரிந்து கொண்டால் மேலும் நன்றாக இருக்கும்.

கான் சிறிது நேரம் சிந்தித்தார். அவருடைய கண்களுக்குக் கீழே தெரிந்த திருட்டுத்தனமான சிரிப்பைக் காட்டும் மின்னல் கடந்து போனதை அவன் உணர்ந்தான்.

“காஃபி ப்ரவுன்... க்ரீம்.... மெஜன்டா...” ஒரு சிறு இடைவெளிக்குப் பிறகு அவர் தொடர்ந்து சொன்னார்: “எல்லா நிறங்களையும் வரப்போகிற நபருக்கு பிடிக்கும்ன்றதுதான் என்னோட எண்ணம்.”

“வரப்போறது ஆணா பெண்ணா?” 

மிகுந்த தயக்கத்துடன்தான் அந்தக் கேள்வி வெளியிலேயே வந்தது.

கானின் பார்வை ஒரு நிமிடம் பிரசாந்தின் கண்களை நோக்கியே இருந்தது.

“பெண்...” - அவர் ஒரு சிறிய புன்சிரிப்பை வெளிப்படுத்தியவாறு சொன்னார்: “வர்றதா இருந்தா வரப்போவது என் மனைவியாக இருக்கும்.”

அதற்குமேல் எதையும் கேட்பதற்கான தைரியம் பிரசாந்த்திற்கு இல்லை.

குளிரும் குளிர்ச்சியும் நிறைந்திருந்த ஒரு இரவு வேளையில் பம்பாயிலிருந்து சுகன்யாவின் அழைப்பு வந்தது,

“என்ன சார், மறந்துட்டீடங்களா?” சுகன்யா விளையாடினாள். “இல்லாவிட்டால் அங்கே ஆள் யாராச்சும் கிடைச்சிட்டாங்களா?”

இரண்டு பெக் உள்ளே போயும் பிரசாந்த் சிறிய அளவில் சலித்துக் கொண்டான்.

“ஆள் யாரும் கிடைக்கல.”

“பத்து பன்னிரண்டு நாட்களாயிடுச்சே!”

“கேட்டையும் தோட்டத்தையும் உனக்காக தொடாமலே வச்சிருக்கேன்” - பிரசாந்த் சொன்னான்.

“வாழ்க்கை எப்படி போய்க்கிட்டு இருக்கு?”

“அப்படி யொண்ணும் மோசம் இல்ல”

“அழைத்திருக்கும் மனிதர்...?”

“மிகவும் ஸ்டைலான மனிதர்”

“ராம்...?”

“வந்து சேர்ந்தாச்சு!”

“பக்கத்துல ஆள் இருக்கா?”

“இல்ல அவனுடைய அறையில் இருக்கிறான் கூப்படவா?”

“வேண்டாம் பக்கத்துல இருந்தா ரொமான்டிக்கா ரெண்டு வார்த்தைகள் பேசி பையனை ஒரு வழி பண்ணலாம்னு பார்த்தேன். வேறு அறையில் இருப்பதாக இருந்தால் கூப்பிடவே வேண்டாம். சரி... அங்கு கால நிலைமை எப்படி இருக்கு?”

“நீ பிரார்த்திப்பதைப்போல..”

“அப்படின்னா, நான் வரவேண்டாமா?”

அவன் தன்னுடைய குரலில் முடிந்த வரைக்கும் மென்மையும் கம்பீரத்தையும் வரவழைத்துக்கொண்டு சொன்னான்: “கட்டாயம் வேணும். இங்கே பாரு, நான் இப்பவே பாஸுக்கு எழுதப்போறேன்.”

அதைக் கேட்டு கிண்டல் செய்வதைப் போல சுகன்யா விழுந்து விழுந்து சிரித்தாள்.

எப்போதும்போல முகத்தில் அடிப்பது மாதிரி ஒரு வார்த்தையைக் கூறி விட்டுத்தான் சுகன்யா தொலைபேசியைக் கீழே வைத்தாள்.

“கேட்டையும் தோட்டத்தையும் மட்டும் யாரும் தொடாமல் பத்திரமா பார்த்துக்கணும். நான் வந்து அந்த இடம் முழுவதும் மலர்களை மலரச் செய்கிறேன்.”

அவளை இவ்வளவு நட்களாக ஒருநாள் கூட அழைக்காமல் இருந்ததற்காக அவன் வருத்தப்பட்டான். அவளும் வந்து சேர்ந்தால், அந்த வீடும், அதைச் சுற்றியிருக்கும் இடங்களும் புத்துணர்ச்சியுடன் இருக்கும் என்பது மட்டும் உண்மை. எக்ஸ்டீரியர் - லேண்ட்ஸ்கேப் டிசைனிங்கில் அவளை வெல்வதற்கு இப்போது இந்தியாவில் அப்படியொன்றும் அதிகமான ஆட்கள் இல்லை. ‘கொலம்ப’ஸில் அவள் இவ்வளவு காலம் நீடித்து நிற்பதே, பலரும் ஆச்சரியப்படக்கூடிய ஒரு விஷயமாகத்தான் இருக்கிறது. உலகத்தின் மிகப்பெரிய நகரங்கள் பலவற்றிலும் பணி செய்திருக்கும் அவள் ஒரு இடத்தில்கூட ஆறு மாதகாலம் நிரந்தரமாக இருந்ததில்லை என்பதுதான் அவன் கேள்விப்பட்ட விஷயம். அவளை இங்கே நிரந்தரமாக இருக்கும் படி செய்திருப்பதே பிரசாந்த்தான் என்கிறார் அவர்களின் பாஸ்.

அது உண்மைதானா என்பதை பற்றி பிரசாந்த் இதுவரையில் நினைத்துப் பார்த்ததில்லை. அவளும் அப்படி சிந்தித்துப் பார்த்திருக்க மாட்டாள். ஆழமான காதல் எதுவும் தங்களுக்கிடையே இல்லை இருவருக்குமே தெரியும். இடையில் சில நேரங்களில் அதை ஒருவரோடோருவர் கூறி உறுதிப்படுத்திக் கொள்வதும் உண்டு. கடை வீதியில் இருக்கும் சுர்ஜித் என்ற  முரட்டுத்தனம் கொண்ட இளைஞனுடன் தான் ஒரு நாளை ‘சன் அண்ட் வேவ்’ஸில் செலவழித்த விஷயத்தை அவள்தான் பிரசாந்திடம் சொன்னாள். இப்படிப்பட்ட விஷயங்களைக் கூறும்போது, ‘நான் அப்படிப்பட்டவள்தான். முடியும்னா என்னை சகித்துக் கொண்டு போங்க’ என்றொரு போக்கு அவளுடைய வார்த்தைகளில் மறைந்து இருப்பதை அவன் நினைத்துப் பார்த்தான்.

போவதற்கு முன்னால் சுகன்யாவை கட்டாயம் வரும்படி செய்ய வேண்டும் என்று அவன் முடிவெடுத்தான். பழைய மகாராஜா, தேவதாசிக்குப் பரிசாகத்  தந்த அரண்மனையில் இருக்கும் பாரில் அழைத்துக்கொண்டு போய் உட்கார வைத்து அவளை போதையில் மிதக்கச் செய்ய வேண்டும் என்று அவன் நினைத்தான்.

 

திருமதி கானின் அறைக்கு அப்படியொன்றும் தனிப்பட்ட முறையில் எதுவும் செய்ய வேண்டிய அவசியம் உண்டாகவில்லை. அழுக்கையும் சிலந்தி வலைகளையும் அடித்து சுத்தமாக்கி, இரண்டு முறை தூசியைப் பெருக்கி, ஒருமுறை வெப்பக் காற்றை உள்ளே செலுத்தியவுடன் அறை சுத்தமாகிவிட்டது. சுவருக்கும் குளியலறையின் தரைக்கும் சிட் அவுட்டிற்கும் கொஞ்சம் சிமெண்ட் பூச வேன்டிய அவசியம் இருந்தது. புதிய பெயிண்டும் சாளரத் திரைச்சீலைகளும் தரை விரிப்பும் வந்து சேர்ந்தவுடன்  அந்த அறை வேறு ஏதோ ஒரு வீட்டில் இருக்கும் அறையைப்போலத் தோன்றியது.


அது பிரசாந்திற்கு ஒரு சிறிய  ஏமாற்றத்தைத் தந்தது. அந்த வீட்டில் சூழ்நிலையில் இருந்து அப்படியொன்றும் அதிகமாக விலாகமல் அதைப் புதுப்பிக்க வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. பரவாயில்லை... சுகன்யா வரும்போது வீட்டின் மொத்த முகமும் பிரகாசித்துக் கொண்டிருக்கும். அப்போது அவள் அந்த அறையை முக்கிய கவனம் எடுத்துப் பார்த்துக் கொள்வாள்.

குதிரை லாயம் சம்பந்தப்பட்ட வேலைகள் கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். அதற்குத் தேவைப்பட்ட வினோதமான சேனிட்டரி பொருட்களை கான் இத்தாலியிலிருந்து வரவழைத்திருந்தார். வெப்பமும் குளிர்ச்சியும் காற்றை நிரப்ப வைக்கக்கூடிய வசதியும் அங்கு இருந்தன. கடுமையான குளிரும், உடம்பை சுடக்கூடிய வெப்பவும் பந்தயக் குதிரைக்கு ஒத்து வராதவை.

சுற்றிலும் இருந்த முற்றத்தைப் பெருக்கிச் சுத்தம் செய்து முடிந்தது, உருண்ட குழாய்களால் எல்லைகளை உண்டாக்கினான். அந்தப் பெண் விருப்பப்படும் பட்சம், அவள் தன் விருப்பப்படி வெளியில் போய் நிற்கலாம்.

குதிரை லாயத்தின் முன் வாசலுக்கு வெளியே செப்பலான தகட்டில் எழுதப்பட்ட அழகான பெயர்ப் பலகை. ‘ஜூலியா ஹவுஸ்’.

ஜூலியாவின் வீடு.

வரப்போகும் பெண் குதிரையின் பெயர் தான் ஜூலியா. ‘குதிரை லாயம்’, ‘குதிரைத் தொழுவம்’ என்ற வார்த்தைகளை உரையாடலின்போது பிரசாந்த் பயன்படுத்தியதை கான் விரும்பவில்லை என்ற விஷயத்தை ஆரம்பம் முதலே அவன் உணர்ந்துதான் இருந்தான். அப்படிக் குறிப்படுவதை அவன் உடனடியாக நிறுத்த வேண்டும் என்பதற்குத்தான் ஆரம்பத்திலேயே அவர் இப்படியொரு பெயர்ப் பலகையைக் கட்டாயம் வைக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக  இருந்தாரோ என்று அவன் சந்தேகப்பட்டான். எது எப்படி இருந்தாலும், கானும் பிரசாந்தும்  குதிரை லாயத்தைப்பற்றி உரையாடுகிற நேரங்களிலெல்லாம் ஜூலியா ஹவுஸ் என்ற வார்த்தைதான் உச்சரிக்கப்பட்டது. அதனால் தான் பெயர்ப்பலகை வைத்திருந்ததை பார்த்தபோது, பிரசாந்த்துக்கு அதைப்பறி அசாதாரணமாக எதுவும் தோன்றவில்லை.

ஆனால், சாராவால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை.

“மாநகராட்சி அலுவலகத்தில் போய் சொன்னா, அவங்க ஒரு எண்ணைக்கூட எழுதிட்டுப் போயிடுவாங்க” - அவள் சிரிதளவு கிண்டல் கலக்க சொன்னாள்.

“சொல்லணும். எண் எழுத வைக்கணும்” - பிரசாந்த் அழுத்தத்தை விடாமல் கூறியதைப் பார்த்து அவளுக்கு ஆச்சரியம்தான் தோன்றியது.

ஜூலியா ஹவுஸ் சம்பந்தப்பட்ட வேலைகள் முடிவடைந்ததைப் பார்ப்பதற்காக சாராவுடன் அவள் அக்கா போளம்மா என்று அழைக்கப்படும் போளியும் வந்திருந்தாள். போளம்மாவிற்கு  உயரம்  மிகவும் குறைவாக இருந்தது. வாத்தை நினைவூட்டுகிற மாதிரியான நடையை அவள் கொண்டிருந்தாள். குரல்கூட அப்படித்தான் இருந்தது.

“வீடு எப்படி இருக்கு?”

சாராவிடமிருந்து ஒரு பாராட்டைப் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் பிரசாந்த் கேட்டான்.

“நல்லா இருக்கு.என் வீட்டைவிட நல்லா இருக்கு” - சாராவின் குரலில் பாராட்டும் உண்மையும் நிறைந்திருந்தன.

“நல்லா இருக்குன்றது மட்டுமில்லை...” - சிரித்தபோது போளம்மாவின் நாக்கு நுனி கன்னத்தில் ஒரு மேட்டை உண்டாக்கியது. “ரொம்பவும் அருமையா இருக்கு...”

அந்தப் பாராட்டில் அவனுடைய உள்ளம் குளிர்ந்ததை உணர்ந்த தைரியத்தில் போளம்மா தொடர்ந்து சொன்னாள்: “நீங்க இங்கே தட்டுறதையும் இடிக்கிறதையும் கேட்டப்போ உண்மையாகச் சொல்லப்போனால், எல்லாவற்றையும் இடிச்சு ஒரு வழி பண்ணப் போறீங்கன்னுதான் நான் நினைச்சேன். இப்போதுதான் மனசுக்கு சந்தோஷமா இருக்கு.”

வேலை முற்றிலும் முடிவடைந்த ஜூலியா ஹவுஸ், கான் சாஹிப்பை சாதாரணமாக சந்தோஷப்படுத்திவிடவில்லை. ஓய்விலிருந்து நடப்பதற்கு ப்ரமோஷன் கிடைத்த அவர், குதிரை வீட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கையும் நேரில் பார்த்து மகிழ்ச்சியடைந்தார்.

தன் மனைவி வந்து சேர்வதற்கு முன்னால் ஜூலியா வந்து விடவேண்டும் என்பது கானின் ஒரு விருப்பம் என்பதை பிரசாந்த் தெரிந்துகொண்டான். அந்த இரண்டு விருந்தாளிகளின் வருகைக்கு இடையில் ஏதோ ஒரு தொடர்பு மறைந்திருப்பதாக அவன் உணர்ந்தான்.

பெயர்ப் பலகையைப் பார்த்து கான் பலமாகச் சிரித்தார்.

“இன்னொரு அறைக்கும் ஒரு பெயர்ப் பலகை வேண்டாமா? இப்போ சரி பண்ணி வைத்திருக்கும் அந்த அறைக்கு?” - பிரசாந்த் இடையில் புகுந்து கேட்டான்.

தேவையில்லை... கான் சொன்னார்: “இது ஒரு தனி கட்டிடமாக இருப்பதால் பெயர்ப் பலகை இருக்க வேண்டியதுதான். வீட்டிலேயே ஒரு அறை இருக்குறப்போ, அதற்கான அவசியமே இல்லையே!”

“உங்க மனைவியின் பெயர் என்ன?” - தன் குரலை முடிந்த வரையில் சாதாரணமாக  ஆக்கிக் கொண்டு பிரசாந்த் கேட்டான்.

கான் அந்த கேள்வியைச் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பதைப் பார்க்கும்போதே தெரிந்தது. தன்னையே அறியாமல் அவர் பிரசாந்தின் முகத்தைக் குழப்பத்துடன் பார்த்தார். பிரசாந்த் ஏதாவது நினைத்து விடக் கூடாதே என்று தோன்றியிருக்க வேண்டும். அவர் தன்னைச் சரிப்படுத்திக் கொண்டு சொன்னார்:

“ஊர்மிளா.. .ஊர்மிளா கான்... ஆனால், நீங்களும், உங்களுடன் வேலை செய்பவர்களும் மிஸஸ் கான் என்று  சொன்னால் போதும். கீழே இருக்குறவங்க யாரும் முழுப் பெயரையும் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியமே இல்லை...”

“புரியுது...” பிரசாந்த் தன்னுடைய கம்பீரத்தைச் சிறிதும் விடாமல் தலையை ஆட்டினான்.

ஊர்மிளா கான்... எங்கேயோ... எங்கேயோ... கேட்டிருப்பதைப்போல...

7

பிறகு ஒரு நாளில்,கேட்டில் இருந்த கல் எழுத்துக்களில் வெயில் பரகாசித்துக் கொண்டிருந்த ஒரு உச்சிப் பொழுதில், ஜூலியா வந்து சேர்ந்தது.

லாயத்தின் வேலை முடிந்த மூன்றாவது நாள்.

பார்த்தவுடன் முழுவதுமாக மூடப்பட்டிருந்த ட்ரெயிலரைப்போல தோன்றிய மோட்டார் ஹோல்ஸ் பாக்ஸில் தான் அவள் வந்தாள். அவளுடைய உடல் நலம் பற்றிய விஷயங்களை மிகவும் கவனமாகப் பாத்துக் கொள்வதற்காக நாகராஜ் என்ற குதிரைக்காரனும் உடன் வந்திருந்தான்.

அவள் வருவதை முதலில் பார்த்தவள் சாராதான். அவள் வருவதை எல்லோரிடமும் கூறும்படி, ராமிடமும் சில வேலைக்காரர்களிடமும் கூறிய அவள், ஸாபிடம் விஷயத்தைக் கூறுவதற்காக ஓடினாள். அவள் மிகுந்த உற்சாகத்தையும் மகிழ்ச்சியையும் வெளிப்படுத்திய நிமிடங்கள் அவை.

பணியாட்கள் அன்று முப்பதுக்கும் மேலாக இருந்தார்கள். ஒரே மாதத்தில் எல்லா வேலைகளையும் முடித்துவிட வேண்டுமென்ற ஒப்பந்தம் இருந்ததால் கிடைக்ககூடிய பணியாட்களைக் கொண்டு, வேலையை முடிக்கவேண்டும் என்ற முடிவுடன் பிரசாந்த் செயல்பட்டுக் கொண்டிருந்தான். தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பணிகளுக்கு மத்தியில் கிடைத்த அந்த தருணத்தை பணியாட்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றார்கள். தங்களின் சொந்த வியர்வையைச் சிந்தி  உண்டாக்கிய வீட்டிற்கு வரும் விருந்தாளியைப் பார்ப்பதற்காக, அவர்கள் எல்லோரும் ஆவலுடன் இருப்பதைப்போல் தோன்றியது.

கான் ஸாஹிப் வந்த பிறகுதான் குதிரையைக் கூண்டைவிட்டு வெளியே வரும்படி செய்வார்கள்.


அதுவரையில் ஜூலியா தன்னுடைய பெட்டிக்குள் தலையை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு நிற்க முடியாமல் நின்று கொண்டிருந்தது. புதிய வீடும், சூழ்நிலையும், அறிமுகமில்லாத மனிதர்களும் சேர்ந்து அவளைக் குழப்பத்தில் மூழ்க வைத்திருப்பதைப்போல் இருந்தது. காற்றில் முகர்ந்து, இடையில்  அவ்வப்போது  கனைத்துக்கொண்டு, கோபத்தில் வேகமாக மிதித்து, தன் பெட்டிக்குள் அவள் நின்று கொண்டு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தாள்.

ஜூலியா மிகவும் அழகாக இருந்தாள். அழகு, நிறம், ஆரோக்கியம்- இவை அனைத்தும் எந்த அளவில் இருக்க வேண்டுமோ அந்த அளவிற்கு அவளிடம் இருந்தன.

ஷானவாஸ்கான், உள்ளே அறைகளிலிருந்து ஊன்றுகோல் என்ற ஒன்று இருப்பதையே மறந்துவிட்டதைப்போல ஓடிவந்தார். படிகளில் அவர்  இறங்க சாரா உதவினாள். அவருடைய  முகம் சந்தோஷத்தில் சிவந்திருந்தது. பார்க்காமல் இருந்த மனைவியையோ மகளையோ பார்த்துவிட்டதைப் போல, அவருடைய கண்களில் ஒரு பிரகாசம் தெரிந்தது.

நாகராஜ் சாய்த்து வைத்த பலகையில் மிகவும் கவனமாக மிதித்தது, ஜூலியா தன்னுடைய பல்லக்கில் இருந்து இறங்கினாள். கால்களை எடுத்து வைப்பதைப் பார்க்கும்போது, அவளுக்கு மனிதர்களைவிட அறிவு அதிகமாக இருப்பது தெரியும்.

நாகராஜ், கான் சாஹிப்பன் அருகில் சென்று மிகவும் பணிவுடன் பயணத்தைப் பற்றிய விஷயங்களை விளக்கிக் கூறினான். ஊட்டியை விட்டுப் புறப்பட்டபோது மாலை நேரம் ஆகிவிட்டிருந்தது. நல்ல நிலவு உதித்துக்கொண்டிருந்த இரவு நேரமாக இருந்ததால் எந்தவித சிரமமும் இல்லாமல் இங்கு வந்துசேர முடிந்தது. சிறிய அளவு மழை பெய்தப்போது, வண்டியை நிறுத்தி அவர்கள் ஒய்வெடுத்தார்கள். மீண்டும் பொழுது விடியும் நேரத்தில் அவன் வண்டியை கிளப்பினான். ஜூலியா கொஞ்சம் களைத்துப்போயிருந்தது மாதிரி தோன்றியதால், வரும் வழியில் மீணடும் ஒரு இடத்தில் அவன் வண்டியை நிறுத்தினான்.

கான் மிகவும் பாசத்துடன் தட்டியப்போது, ஜூலியா அவருக்கு மிகவும் நெருக்கமாக நின்றாள். அதுவரை திகைப்புடனும் பதைபதைப்புடனும் ஒதுங்கி நின்றிருந்த அவள் ஏதோ மந்திரத்தனமான தொடல் தன்மீது பட்டதைப்போல் அடக்கத்துடன் நின்றிருந்தாள்.

குதிரையைப் பற்றிய  மர்மங்களை நன்கு தெரிந்து கொண்டிருக்கும் மனிதர் கான் என்பதைக் கண்டுபிடிப்பதற்கு அதிக நேரம் தேவையில்லை.

“உள்ளே நுழைஞ்சு பார்க்கணுமா ஸாப்?” - நாகராஜ் மிகவும் ஆர்வத்துடன் கேட்டான்.

“இன்றைக்கு வேண்டாம். அவள் இவ்வளவு தூரம் பயணம் செய்து வந்திருக்காளே!”- கான் சொன்னார்.

அப்போது அவர் தன்னுடைய சொந்தக் காலில் இருந்த தொந்தரவைக்கூட முற்றிலுமாக மறந்துவிட்டதைப்போல இருந்தது.

ஜூலியா வந்து சேர்ந்ததை அனுசரித்து, அன்று பணியாட்களுடன் சேர்த்து எல்லோருக்கும் இனிப்பான பலகாரங்கள் கிடைத்தன.

அந்தப் பெண் குதிரையின் வருகை அடிவாரங்களில் மிகவும் சோகமாகக் கடந்து கொண்டிருந்த நாட்களுக்குப் புதிய  ஒரு நிறம் கொடுத்தது.

வீட்டில் ஒரு புதிய வாரிசு பிறந்திருப்பதைப்போல, சாராவிடமும் தாமுவிடமும் பிறரிடமும் உற்சாகம் வந்து சேர்ந்தது. தூர இடங்களில் இருந்துகூட குதிரைப் பைத்தியம் பிடித்த சில நண்பர்கள் கானின் ஐந்து லட்ச ரூபாய் விலை கொண்ட  அந்தக்  குதிரையைப் பார்ப்பதற்காக வந்தார்கள். போளம்மா ஓய்வு நேரம் பார்த்து, குதிரை இருக்கும் இடத்தில் சுற்றித் திரிந்தாள். நாகராஜ்மீது அவளுக்கு மெல்லிய ஒரு வீரத்தனமான வழிபாடு தோன்றிவிட்டிருப்பதை பிரசாந்த் புரிந்துகொண்டான். ஒரு நடு இரவு நேரத்தில் ஜப்போய் அவள்மீது ஏறவேண்டும்  என்று ஒரேயடியாக பிடிவாதம் பிடித்தான். அவனுடைய எல்லாவித செயல்களுக்கும் மிகவும் அமைதியாக எதிர்வினை காட்டும் கான் அன்றைய ஆசை நடக்கவே நடக்காது என்று கடினமான குரலில் கூறியதை பிரசாந்த் கேட்டான்.

சாயங்கால கூட்டத்தில் இசையுடன் குதிரைகளைப் பற்றிய வீரத்தனமான கதைகளும் பேசப்பட்டன.

“அந்த காலத்தில் ஒரு குதிரை, சிங்கம் இரண்டுக்குமிடையில் யாருக்கு அதிகமான பார்வைசக்தி என்பதைபற்றி ஒரு போட்டி நடந்தது” - கான் தன்னுடைய கதைகளின் சேகரிப்பலிருந்து ஒரு புதிய கதையை எடுத்து வெளியே விட்டார்: “வெண்மையான பாத்திரத்தில் நிறைத்து வைக்கப்பட்டிருந்த பாலில் முழ்கிக் கிடந்த வெள்ளை நிற முத்தைக்  கண்டுபிடித்து எடுத்த சிங்கம் தன்னோட கண்களில் அபூர்வ சக்தியை எல்லோருக்கும் தெரியும்படி சொன்னது. குதிரையைச்  சோதித்துப் பார்ப்பதற்காக கறுப்பு நிறத்தில் இருந்த ஒரு முத்தை பயன்படுத்தியிருந்தாங்க. கருப்பு நிறப் பாத்திரத்தில் நிறைக்கப்பட்டிருந்த கருப்பு நிற முத்தை ஒரே நிமிடத்தில் குதிரை கண்டுபடிச்சிடுச்சு. அடுத்த நிமிடம் சிங்கம் குதிரைக்கு முன்னால் அடிபணிந்துவிட்டது.”

ஒவ்வொரு இரவிலும் கூறுவதற்கு கானிடம் புதிய புதிய குதிரைகளைப் பற்றிய  கதைகள் இருந்தன. எல்லா கதைகளிலும் வெற்றி பெறுவது என்னவோ குதிரைதான்.

ஜூலியாவிற்கு லாயம் மிகவும் பிடித்திருக்கிறது என்று நாகராஜ் சொன்னான். லாயத்தின் முன் வாசல் இரண்டு பலைககளால் செய்யப்பட்டிருந்தது. மேலே இருந்த பலகை பெரும்பாலும் திறந்தே இருந்தது. திறந்திருக்கும் பலகை வழியாக முகத்தை மட்டும் வெளியே நீட்டிக்கொண்டு, விரிந்து கிடந்த அடிவாரங்களைப் பார்த்துக்கொண்டே ஜூலியா ஓய்வெடுத்தாள்.

தன்னுடைய சொந்தத் தொழிலின் அளவற்ற ஈடுபாட்டை கொண்டிருந்தான் நாகராஜ். அதிகாலையில் எழுந்து, ஒரு தாய் தன் குழந்தையை மிகவும் சுத்தமாக வைத்திருப்பதைப்போல, அவன் ஜூலியாவை மிகவும் ஆர்வத்துடன் குளிப்பாட்டினான்.

அதற்காக ஜூலியா தான் இரவில் அணிந்திருந்த ஆடைகளை நீக்கி, நிர்வாணமாக  நின்றிருப்பாள். அவளுடைய உடம்பில் இருக்கும் தூசியையும் அழுக்கையும் படுக்கையில் இருக்கும்போது ஒட்டியிருக்கும் வைக்கோல் துண்டுகளையும், அவன் ப்ரஷ் செய்து நீக்கினான். வாலிலும் சிறு சிறு ரோமங்களிலும் ஒட்டிக் கொண்டிருக்கும் வைக்கோல் துண்டுகளையும் புற்களையும் மிகவும் கவனம் செலுத்தி இல்லாமல் செய்தான். மூக்கையும் கண்களையும் பிற துவாரங்களையும் பஞ்சு கொண்டு சுத்தம் செய்தான்.உடம்பு முழுமையாக சுத்தம் செய்யப்பட்டு விட்டது என்பதைத் தெரிந்து கொண்டவுடன் அவள் ஒரு ராணியுடைய கம்பீரத்துடன் ஒவ்வொரு காலையும் எடுத்து நாகராஜின் மடிமீது வைத்தாள். மசாஜ் பார்லரில் அழகுக்காலை நிபுணரின் சிரத்தையுடன் குதிரைக் காலின் அடிப்பகுதியிலும் குளம்புகளிலும் அவன் குளம்பு எண்ணெய்யைத் தடவினான்.

அதற்கு பிறகுதான் நடத்திக் கொண்டு செல்வதற்கும் உடற்பயிற்சிகும் அவளை அவன் வெளியே அழைத்துச் சென்றான். அப்போது புதிய பகல் நேர ஆடைகளை அணிந்து ஜூலியா அழகானவளாக மாறிவிடுவாள். நாகராஜ் அவள்மீது உட்கரார்ந்திருப்பான்.

கேட்டைக் கடந்து பரந்து கிடக்கும் அடிவாரங்களை நோக்கி நடையாகவும் இல்லாமல், ஓட்டமாகவும் இல்லாமல் ஒரு வேகத்தில் அவன் அதை அழைத்துக்கொண்டு சென்றான். திரும்ப வந்தவுடன் அவளை அவன் திரும்பவும் லாயததின் அருகில் கொண்டுபோய் நிறுத்தி, குளம்பிற்கு அடியில் ஒட்டியிருக்கும் புற்களையும் காய்ந்த சருகுகளையும் ஒரு ‘ஹூஃப்பிக்’ மூலம் குத்தி எடுப்பதில் அவன் எப்போதும் கவனமாக இருப்பான்.


மீண்டும் சுத்தமாகக் கால்களைக் கழுவித் துடைத்துவிட்ட பிறகுதான் அவளைத் திரும்பவும் அவன் அவளுடைய அறைக்குள் கொண்டுபோய் நிறுத்துவான்.

“காலில்தான் சார் குதிரையின் உயிரே இருக்கு” - ஜூலியாவின் குளம்பின் அடியிலிருந்து புற்களையும் தூசியையும் குத்தி எடுத்து சுத்தப்படுத்துவதற்கு மத்தியில் நாகராஜ் சொன்னான்: “ஒரு பழமொழியைக் கேட்டிருக்கீங்களா! கால் இல்லைன்னா, குதிரையே இல்லை.”

பழைய ஜாக்கியாக (பந்தய குதிரைக்காரன்) இருந்தவன் நாகராஜ். இப்போது அவனுக்கு ஐம்பது வயது கடந்துவிட்டது. பருமனாகிவிட்டதால், எடை அதிகமாகிவிட்டது. முதுக்கெலும்பில் உண்டான ஒரு முறிவு அவனைத் தரையில் உட்கார வைத்துவிட்டது. தான் பங்கு பெறாத குதிரைப் பந்தயங்கள் உலகத்தில் இல்லை என்று அவன் தற்பெருமையுடன் கூறிக் கொள்வான். அவன் பெயர்மீது, லட்சங்களையும் கோடிகளையும் பந்தயம் வைத்த சம்பவங்களும் நடந்திருக்கின்றன. நாகராஜ் அந்தத் தொழிலை விட்டு வெளியேறியப்போது, ஆரவாரம் செய்த பல்லாயிரக்கணக் குரல்களை நினைத்துப் பார்த்தபோது, அவனுடைய கண்களில் நீர் நிறைந்து விட்டது.

ஒரு இரவு வேளையில் பிரசாந்த் நாகராஜை தன்னுடைய அறைக்கு வரச் செய்து உபசரித்தான். நாகராஜ் ரம் மட்டுமே குடிப்பான்.

கடந்துபோன சாதனைகளைப் பற்றிய கதைகளை அவன் சுவையும் சுவாரசியமும் சேர்த்துக் கூறுவதை பிரசாந்த் மிகுந்த ஆர்வத்துடன் கேட்டான். ஒருமுறை ஷார்ஜாவில் நடைபெற்ற ஒரு போட்டிக்குப் போய்விட்டு, லெபனானைச் சேர்ந்த  ஒரு ராஜகுமாரியின் படுக்கை அறையில் தூங்கக் கிடைத்த வாய்ப்பை அவன் மிகவும் அழகாக விவரித்தபோது, மது அருந்தாத ஆளாக இருந்தாலும் தாமு உரத்த குரலில் சந்தோஷத்தை வெளிப்படுத்தினான். தொடர்ந்து வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு கட்டம் எல்லா ஜாக்கிகளின் விஷயத்திலும் தவிர்க்க முடியாத ஒன்று என்று கூறி, அவன் சமாதானப்படுத்தி கொண்டான்.

பழைய அந்த சூப்பர் ஸ்டார் குதிரைப் பாய்ச்சல்களுக்கு மத்தியில் திருமணம் செய்வதை மறந்து விட்டிருந்தான்.

8

ர்மிளா வந்து சேர்ந்த நாளன்று, வெளியே சிறிய அளவில் சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. வேகமாக வீசிய மலைக் காற்றில் குளிரின் ஆக்கிரமிப்பு அதிகமாக இருந்தது. முற்றத்திலும் சாலையிலும் வெள்ளை மேகங்கள் திரண்டு நின்றிருந்தன.

வாடகைக் காரின் ஓட்டுநர் முகத்தைப் பார்த்தபோது, அன்று பெங்களூர் விமான நிலையத்தில் பார்த்ததைப்போல இருந்தது.

காரிலிருந்து பெரிய சூட்கேஸையும் சிறிய பேக்கையும் எடுத்துக்கொண்டு ஊர்மிளாவே இறங்கினாள். கார் டிரைவருக்குப் பணத்தைக்   கொடுத்துவிட்டு, நான்கு பக்கங்களிலும் பார்த்தப்போதுதான் பிரசாந்த் அவளுடைய அவளுடைய முகத்தையே சரியாகப் பார்த்தான். முதலில் கண்களில் பட்டது அவளுடைய எடுப்பான மூக்கு நுனியிலும், விரிந்த கண்களிலும் தெரிந்த அதிகார தொனிதான்.

ஊர்மிளா புடவைக்கு மேலே ஒரு சிவப்பு நிறக் கம்பளி சால்வையை அலட்சியமாக இழுத்துப் போர்த்தியிருந்தாள். அந்தச் சிவப்பின் பரதிபலிப்பு அவளுடைய முகத்தை மேலும் சிவப்பாக்கியது. அளவெடுத்ததைப்போல் அமைந்த உடலும், ஈர்க்ககூடிய விதத்தில்  இருந்த அசைவுகளும் சேர்ந்த வார்த்தைகளால் விவரித்துக் கூறமுடியாத ஒரு அசாதாரணத் தன்மையை அந்தப் பெண்ணிடம் உண்டாக்கியிருப்பதை பிரசாந்த் கண்டான்.

அவளுக்கு வயது நாற்பதுக்குக் கீழேதான் இருக்கும். அதுகூட பதினெட்டு வயதில் ஒரு மகள் இருக்கிறாள்  என்பதைத் தெரிந்திருந்தால் போட்ட மதிப்புதான். வயது முப்பது என்று கூறினால்கூட யாரும் நம்பத்தான் செய்வார்கள்.

கேட்டிற்கு வெளியே ஒரு இலை பறந்து வந்தால்கூட முதலில் அதைத் தெரிந்து கொள்பவள் சாராதான். அவள் ஓடி வந்தாள்.

“குட் ஆஃப்டர் நூன் மேடம்.”

“குட் ஆஃப்டர் நூன் ”- ஊர்மிளா திரும்பச் சொன்னாள்: “நீ எப்படி இருக்கே சாரா?”

அவளுடைய குரலிலும் ஒரு பக்கமாக சாய்ந்திருந்த பார்வையிலும் அதிகாரத்தின் சாயம் தெரிந்தது.

“நல்லா இருக்கேன் மேடம்.”

சாராவின் அசைவுகளில் பணிவு இருந்தது.

“மேடம் உங்க அறை அந்தப் பக்கம் இருக்கு. வாங்க! பெட்டியையும் பேக்கையும் நான் எடுத்துக்கொண்டு வர்றேன்.”

சாரா காட்டிய பாதையில் நடந்து போவதற்கு மத்தியில் ஊர்மிளாவின் கண்கள் ஒரு நிமிடம் பிரசாந்திற்கு நேராகப் பாய்ந்து விழுந்தன. கொஞ்சம் புன்னகைக்க வேண்டும் என்றும்; தன்னைத்தானே அறிமுகப்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் அவன் நினைத்தான். ஆனால், அதற்கெல்லாம் சிறிதும் இடம் கொடுக்காமல் ஊர்மிளா வராந்தாவிலிருந்த உயரமான தூண்களைத் தாண்டியவாறு நடந்து சென்று மறைந்தும் விட்டாள்.

நடையின் வேகத்தை கவனிக்காமல் அவனால் இருக்க முடியவில்லை. அவளுடன் சேர்ந்து செல்வதற்காக சாரா சிறிய அளவில் தாவித் தாவிப் போய்க் கொண்டிருந்தாள்.

அவள் அப்படிப் போய் மறைந்து, என்ன காரணத்தாலோ அந்த நேரத்தில் பிரசாந்த்திற்கு தேவையில்லாத ஒன்று என்பது மாதிரி பட்டது. வேறு ஏதோ வேலை இருக்கிறது என்பது மாதிரி காட்டிக் கொண்டு, மழைத் தூறல் விழுந்து கொண்டிருந்த வாசலுக்குச் சென்று, வீட்டைச் சுற்றி அவன் வெறுமனே நடந்தான்.

ஊர்மிளா அவளுடைய அறையின் முன்பகுதியில் சாராவிடம் என்னவோ பேசியவாறு நின்று கொண்டிருந்தாள். தூரத்திலிருந்து  அசைவுகளைப் பார்த்தப்போது அது வெறும் குசலம் விசாரிப்புதான் என்பதை  அவனால் தெளிவாக உணர முடிந்தது. எதையோ செய்யச் சொல்லியோ, கட்டளை பிறப்பித்தோ... இப்படி என்னவோ அங்கு நடந்து கொண்டிருந்தது. ஆணை பிறப்பிக்கும் சக்தி நிறைந்த அவளுடைய அசைவுகளுக்கு முன்னால் சாரா முற்றிலும் சிறிதாகி விட்டதைப்போல் தோன்றினாள்.

சாராவை ஏதோ வேலையைச் செய்யும்படிக் கூறி அனுப்பவிட்ட ஊர்மிளா மெதுவாகப் புல்வெளியை நோக்கி நடந்தாள். அவளுடைய கண்கள் தூரத்தில் தெரிந்த பள்ளத்தாக்குகளையே பார்த்தன. மிகவும் பழக்கமான ஒரு காட்சி நீண்ட காலத்திற்குப் பிறகு திரும்பவும் கண்ணில் தெரிந்ததை வெளிப்படுத்தும் ஒளி அவளுடைய முகத்தில் சிறிது சிறிதாக மலர்வதை பிரசாந்த் பார்த்தான். அறைச் சுவருடன் ஒட்டி நின்றுகொண்டு அவள்  சுற்றிலும் பார்த்துக்கொண்டிருந்தப்போது, பிரசாந்த் வேறு எங்கோ பார்வையை மாற்றிக்கொண்டு ஒரு மரத்திற்குப் பின்னால் தன்னை மறைத்துக் கொண்டான். சிறிது நேரத்திற்குப் பிறகு திரும்பப் பார்த்தபோது, அங்கு ஊர்மிளா இல்லை. சற்று முன்பு திறந்திருந்த அறையின் கதவு மூடப்பட்டிருந்தது.

பிரசாந்த்திற்கு குற்ற உணர்ச்சி உண்டானது. தன்னைப் பார்த்துவிட்ட காரணத்தால் ஒருவேளை அவள் கதவை அடைத்திருப்பாளோ என்று அவன் நினைத்தான். அப்படியென்றால் நிலைமை நல்லது இல்லைதான். அவளுடைய அசைவுகளை மோப்பம் பிடித்துக்கொண்டு நடந்து திரியும் தன்னுடைய போக்கிலிருந்து அவன் தன்னைதானே விலக்கிக் கொண்டான். இனி அவள்  இந்தப்பக்கம் பேசிக் கொண்டு வருவதுவரை அந்தப்பக்கமே பார்க்கக்கூடாது என்று அவன் முடிவெடுத்தான்.


ஆனால், அந்த முடிவுக்கு ஆயுள் மிகவும் குறைவாக இருந்தது. நிலமாக இருந்த அந்தப் பகுதிக்கு காரணமே இல்லையென்றாலும், காரணத்தை உண்டாக்கிக் கொண்டு அவன் அடிக்கடி போய்க் கொண்டிருந்தான். போகும்போது மூடப்பட்டிருக்கும் வாசல் கதவை அவன் தன்னையே அறியாமல் பார்ப்பான்.

அன்று பகல் முழுவதும் அந்த கதவு மூடப்பட்டே இருந்தது. சாரா மட்டும் ஒன்றிரண்டு முறை போவதையும் வருவதையும் அவன் பார்த்தான். அங்கு அவள் உணவைக் கொண்டுபோய் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

வந்த பிறகு அந்தப் பெண், ஷானவாஸ்கானைப் பார்க்கவே இல்லை என்ற உண்மை பிரசாந்த்தைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. அங்கு அவள் வந்திருப்பதைத் தெரிவிக்கும் மரியாதை நிமித்தமான விஷயம்கூட இல்லாமல்...

அவர்களுக்கிடையே இருக்கும் இடைவெளிக்கு தான் மனதில் நினைத்திருந்ததைவிட ஆழம் அதிகமாக இருப்பதை பிரசாந்த் உணர்ந்தான்.

நிலைமை அப்படி இருக்கும்போது எந்தக் காரணத்திற்காக அந்தப் பெண் அங்கு வந்தாள்? வெறுமனே ஒரு அறைக்குள் முடங்கிக் கிடப்பதற்காகவா?

கானின் அறையிலும் பகல் நேரம் முழுவதும் எந்த ஒரு சலனமும் இல்லை. இடையில் அவ்வப்போது காற்றில் கலந்தொலிக்கும் கித்தாரின் அழுகைச் சத்தம் அன்று கேட்கவேயில்லை.

சற்று நடக்கலாம் என்று தோன்றும்போது அவர் சிறிது நேரம் வெளியே வருவதுண்டு. வேலை நடந்து கொண்டிருக்கும் இடத்திலும் குதிரை லாயத்தைச் சுற்றியிருக்கும் இடத்திலும் சிறிது நேரம் செலவழிப்பது என்பது அவரின் அன்றாட நடவடிக்கைகளில் ஒன்றாக இருந்தது.

அன்று அது எதுவும் நடக்கவில்லை.

கொஞ்சம் இளம் வெயில் காய்ந்து கெண்டிருந்தபோது, நாகராஜ் குதிரையை அழைத்துக்கொண்டு சாலையைத் தாண்டியிருந்த புல்வெளிக்குப் போய்விட்டுத் திரும்ப வந்தான்.

பணியாட்கள் எல்லோரும் போனபிறகு, டாக்டர் பிள்ளையின் வெள்ளை நிற மாருதி கானின் அறையை நோக்கிச் சென்றது.

இரவில் தாமு சிறிதும் பிடி தராமல் ஒதுங்கிவிட்டான். எவ்வளவு வலியுறுத்தியும் ஒரு பெக் பருகக்கூட அவன் தயாராக இல்லை.

மறுநாள் பெழுது விடியும் நேரத்தில் ஊர்மிளா கேட்டைத் தாண்டி வெளியே போவதைப் பார்த்துதான் பிரசாந்த் படுக்கையை விட்டே எழுந்தான்.

அப்போது தான் சூரியன் உதயமாகிக் கொண்டிருந்தது.

ஊர்மிளா வெள்ளைநிற ட்ராக் சூட் அணிந்திருந்தாள். உறுதியான கால் வைப்புடன் மிகவும் வேகமாக அவள் நடந்து போவதைப் பார்த்தப்போது, என்ன காரணத்தாலோ ஜூலியாவைப் பற்றிய ஞாபகம் அவனுக்கு வந்தது.

அவளுடன் ஏதாவது பேச  வேண்டுமென்றால் அதற்கேற்ற சூழ்நிலை இதுதான் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான். அதற்குப் பிறகு அவன் தாமதிக்கவேயில்லை, காலில் வெள்ளைநிற க்யான்வாஸ் ஷீவை அணிந்து கொண்டு அவனும் வெளியேறினான். அரைக்கால் ட்ரவுசரும் பனியனும் அணிந்து கொண்டது ஒரு விதத்தில் நல்லதாகப் போய்விட்டது.

சாலை பள்ளத்தாக்குகள் வழியாக வளைந்து வளைந்து போய்க் கொண்டிருந்தது. ஒரே இனத்தைச் சேர்ந்த மரங்கள் சாலையில் இரண்டு பக்கங்களிலும் ஒரே உயரத்தில் வளர்ந்து நின்றிருந்தன. மரங்களுக்கு மேலேயும் புல்வெளியிலும் ஆங்காங்கே மூடுபனி உருகாமல் இருந்தது.

ஊர்மிளாவிற்கு எதிராக வருவது மாதிரி, அவன் ஒரு குறுக்குப் பாதையைக கண்டு பிடித்தான்.

சிறிதும் எதிர்ப்பார்க்காமல் சந்திப்பவர்களைப்போல அவர்கள் ஒரு வளைவில் சந்தித்தார்கள். அவள் அவனைக் கண்டு கொண்டது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

“குட் மார்னிங் மேடம்.”

தன்னுடைய நடையின் வேகத்தை சிறிதும் குறைக்காமல் அவளும் ‘குட் மார்னிங்’ சொன்னாள்.

அவளுடன் சேர்ந்து நடந்தவாறு பிரசாந்த் தன்னைத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டான். முந்தின நாள் அவள் வந்து இறங்கியப்போது, தான் அங்கு நின்றிருந்ததைக் கூறி அவன் ஞாபகத்தைப் புதுப்பித்துக்கொண்டான்.

ஊர்மிளாவிடம் குறிப்பிட்டுக் கூறும்படி அப்படியொன்றும் ஆர்வம் தெரியவில்லை.

“மேடம், உங்க அறையைத் தயார் பண்ணியது நான்தான். ஏதாவது சொல்லணும்னோ, கருத்து தெரிவிக்கணும்னோ இருந்தால், அதை செய்து தர நான் தயாரா இருக்கேன்.”

“எதுவும் வேண்டாம்...” ஊர்மிளா சொன்னாள்: “இப்போ இருக்கிறதே அதிகமா தெரியுது-ஹோட்டல் அறை மாதிரி.”

அதைக் கேட்டபோது, முகத்தில் அடித்ததைப்போல அவனுக்கு இருந்தது.

ஒருவரிடம் ஒருவர் விடைபெற்றுக் கொள்ளாமலே அவர்கள் பிரிந்தார்கள்.

அது வாய் நாக்குதானா? கான் சாஹிப் காரணம் இல்லாமலா அவளை வீட்டை விட்டு வெளியேற்றினார்? பிரசாந்த் வெறுப்புடன் நினைத்துப் பார்த்தான்.

அன்று மத்திய நேரத்திற்கு பிறகு வீடு பகல் தூக்கத்தில் விழுந்து கிடந்த நேரத்தில், ஊர்மிளாவின் அறையிலிருந்து தம்புராவின் மெல்லிய ஓசை கேட்டது. அதோடு சேர்ந்து ஊர்மிளா ஒரு ராகத்தைப் பாடிக் கொண்டிருந்தாள்.

அதற்கு முன்னால் சாரா ஒரு தம்புராவை அந்த அறைக்குக் கொண்டு செல்வதை பிரசாந்த் பார்த்தான்.

தன்னையே மறந்து பாடிக்கொண்டிருந்தாள் ஊர்மிளா. அவளுடைய குரலில் ராதாவின் விரகதாபம் நிறைந்திருந்தது. ஆரோகண அவரோகண வெள்ளப் பெருக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ஒரு படகைப்போல அவளுடைய இசை அந்த வீட்டைச் சுற்றிலும் கேட்டது.

‘கடம்பை மரங்கள் யமுனைக்குள் விழ வைத்த ஒவ்வொரு பூவிதழும் சிற்றலைகளைப் பார்த்துக் கேட்கின்றன: வரும் வழியில் எஙகேயாவது எங்களின் கண்ணனைப் பார்த்தீங்களா?

கடந்து செல்லும் காற்றைப் பிடித்து நிறுத்தி மாலை நேரங்கள் கேட்கின்றன: உங்களிடம் சமீபத்தில் எங்கேயாவது ஒரு வேணுகானம் மிதந்து வந்ததா?

யாருக்கும் பிடி தராமல் மறைந்து நின்றிருக்கும் மாயாவி.

உன்னை எதிர்பார்த்து எதிர்பார்த்து என் மார்பகங்களில் செம்பஞ்சு சாற்றின் நிறம் மறைய ஆரம்பிக்கிறது.’

பின்பகுயில் இருந்த கட்டிடத்தின் ஒரு அறை ஜன்னலுக்கு அருகில் ஷாநவாஸ்கான் அந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு நின்றிருந்தார்.

9

“லண்டனில்தான் எனக்கு ஊர்மிளா அறிமுகமானாள். எங்களின் ஈஸ்டர்ன் இந்தியா க்ளப்பின் வருடக்கொண்டாட்டத்திற்கு  குரு ஹரிகிருஷ்ணா... ஸ்ரீ ஜோக்குடன் சேர்ந்து பாடுவதற்காக அவள் வந்திருந்தாள். ... ஸ்ரீ ஜோக்கைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீங்களே! இந்துஸ்தானி இசையில் மிகப்பெரிய பெயரைப் பெற்றிருப்பவர்களில் ஒருவர் அவர். அந்தச் சமயத்தில் ஊர்மிளா அவரின் சிஷ்யையாக இருந்தாள்.”

ஊர்மிளா கான் என்ற பெயரும் இப்போது புகழ்பெற்ற ஒன்றுதான் என்பதை பிரசாந்த் நினைத்துப் பார்த்தான். வானொலியிலும் தொலைக்காட்சியிலும் பத்திரிகையிலும் பல நேரங்களில் கேட்டிருக்கும் அந்தப் பெயருக்குச் சொந்தக்காரி இந்தப் பெண்தான் என்ற விஷயம் தனக்கு இதற்கு முன்பு எப்படி ஞாபகத்தில் வராமல் போனது என்று அவன் ஆச்சரியப்பட்டான்.

“அப்போது எனக்கு வயது இருபத்தைந்தோ இருபத்தாறோ நடந்து கொண்டிருந்தது. இங்கிலாண்டிலும் ஜெர்மனியிலும் ஹாங்காங்கிலும் என் தொழில் பரவி வளர்ந்து கொண்டிருந்த காலகட்டம் அது. சுரங்கங்களில் வேலை செய்யும் தொழிலாளிகள் பயன்படுத்தும் இரும்புக் கருவிகளையும் வாகனங்களையும் தயாரித்து விநியோகம் செய்வதுதான் எங்களின் தொழில்.


சொல்லப் போனால் அப்போது இந்த விஷயத்துல எங்க நிறுவணம்தான் ஏகபோக குத்தகை எடுத்திருந்தது...”

டாக்டர் கான் மெல்லிய கோடுகளால் அந்தக் காலத்தின் படத்தை வரைந்தார்.

“எடுக்கும் எல்லா முடிவுகளும் சரியாகவே அமைந்து கொண்டிருந்த அதிர்ஷ்டமான நாட்கள் அவை. புதைக்கும் பணம் அத்தனையும் பண மரமாக மாறிக்கொண்டிருந்த சந்தோஷமான வருடங்கள் அவை. பல நாடுகளுக்கும் பயணங்கள், கருத்தரங்குகள், ஹோட்டல்கள், பார்ட்டிகள், குதிரைப் பந்தயங்கள், காசினோக்களில் சூதாட்டம், இசைப் பைத்தியம், அழகான பெண்கள், வெறி பிடித்த இளமை...”

அவர் எல்லாவற்றையும் மனம் திறந்து கூறுவதற்குத் தயாராகி விட்டார் என்பதை பிரசாந்த் உணர்ந்தான்.

வருவது வரட்டும் என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டு அவன் அவரைப் பார்த்து உடனடியாகக் கேட்டான். அதற்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்வதற்காக ஏழு ‘ப்ளாக்லேப’லைக் குடித்து முடித்தான்.

கேள்விக் கேட்டு முடித்தபோது, அவன் நினைத்ததைப் போல எந்தவித பிரச்சினையும் உண்டாகவில்லை. யாரிடமாவது இந்த விஷயங்கள் அனைத்தையும் மனம் திறந்து கூறுவதுற்கு அவரும் விரும்பயிருக்கிறார் என்பதை பிரசாந்த் புரிந்து கொண்டான்- அவன் கேட்ட கேள்விக்கு அவர் பதில் சொன்னதைப் பார்த்து.

ஊர்மிளா வந்து சேர்ந்த நான்காவது நாள்... இசைக் குழு பிரிந்து, வந்திருந்த விருந்தினர்கள் எல்லோரும் போய்விட்டார்கள். பிரசாந்தும் கான் சாஹிப்பும் மட்டுமே இருந்த இரவு நேரத்தில், என்ன காரணத்திற்காகத் தன் மனைவியை இந்தப் பக்கம் அவர் அழைக்காமல் இருக்கிறார் என்ற கேள்வியைக்  கேட்டு பிரசாந்த் விசாரணைக்குத் தொடக்கம் இட்டான்.

இருபது வருடங்களுக்கு முன்னால், லண்டனில் அப்போது நடைபெற்ற வசந்தகால இசை நிகழ்ச்சியில், குருவின்  ஒரு பக்கத்தில் சற்று பின்னால் உட்கார்ந்து கொண்டு பாடிய  அந்த இளம்பெண் ஆரம்பத்திலேயே கானின் கண்களில் பட்டுவிட்டாள். இடையில் தனியாக இருக்ககூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்போது, அவள் தன்னுடைய குரல் இனிமையையும் பாடும் திறனையும் நன்கு தெரியும்படி காட்டியப்போது, அவருடைய மனதில் அமைதி என்ற ஒன்று இல்லாமல் போனது. இசை, அழகு  ஆகியவற்றின் மீது எப்போதும் வெறித்தனமான ஈடுபாடு கொண்டிருந்த ஷானவாஸ்கானின் அந்த இரவு தூக்கமில்லாத இரவாக ஆனது.

மறுநாள் குருவிற்கும் இசை குழுவினருக்கும் டாக்டர் கானின் சார்பாக பார்ட்டி நடந்தது.

பார்ட்டியில் ஊர்மிளாவுடன் அவர் பேசினார்.

அவள் மலையாளி. பிறந்ததும் வளர்ந்ததும் வட இந்தியாவில். அவளுடைய தந்தை ராணுவத்தில் அதிகாரியாக இருந்தார்.

பார்ட்டி நடந்து கொண்டிருந்தபோது, நண்பர்களின் வற்புறுத்தலின் பேரில் கான் ஒரு ‘கஸல்’ பாடினார்.

அதைப் பார்த்து ஊர்மிளா மகிழ்ச்சியடைந்தாள்.

இரண்டு நாட்கள் கழிந்து இந்தியாவிற்குத் திரும்பிய அவளுக்கு, அவர் தந்த சிறிய பரிசுப் பொட்டலத்தில் இப்படி எழுதப்பட்டிருந்தது.

‘இந்த பரிசுப் பொட்டலம் என் ஊர்மிளாவிற்கு.’

அடுத்த வருடம் தொலைபேசி உரையாடல்களும் கடிதங்களும் நிறைந்த வருடமாக ஆனது.

அடுத்த வசந்த காலம் வந்தபோது, ஊர்மிளா மீண்டும் லண்டனுக்குச் சென்றாள்- குரு இல்லாமல் அவள் மட்டுமே இசை நிகழ்ச்சியை நடத்த.

ஐரோப்பாவில் பல இடங்களிலும் ஊர்மிளாவிற்கு வேறு ஏழு இசை நிகழ்ச்சிகள் இருந்தன.

அவளுடைய ஸ்பான்ஸராக இருந்தவர் ஷானவாஸ்கான். அவருடைய ஆளுமையும் திறமையும் இனிய குரலும் ஆச்சரியப்பட வைக்கும் ஒரு ஆரம்பமாக இருந்தது. ஒரு பாடகி என்ற நிலையில் அவரைப் பற்றி அப்படியொரு எண்ணம்தான் அவளுக்கு உண்டானது.

அந்தப் பயணங்களுக்கு நடுவில் ஏதோ ஒரு இடத்தில் வைத்து அவர்கள் தம்பதிகளானார்கள்.

அதற்கு பின்னால் வந்த பதின்மூன்று வருடங்கள் அவள் அவருடைய மனைவியாக வாழ்ந்தாள்.

அந்தக் காலகட்டத்தில் ஊர்மிளா கானின் புகழ் இசை உலகில் பெரிய அளவில் இருந்தது. மனைவியின் திறமை சிறிதும் குறைந்து விடாமல் மிகவும் பத்திரமாக இருக்கும்படி பார்த்துகொள்வதில் கணவர் மிகவும் கவனமாக இருந்தார்.

அவர்களுக்கு ஒரு மகள் பிறந்தாள். மகளுக்கு அவர்கள் துர்கா என்று பெயர் வைத்தார்கள். 

புகழ்பெற்ற பாடகியின் ஒளிவீசும் போர்வைக்குப் பின்னால்  ஊர்மிளா வினோதமான குணங்களைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். இசைதான் அவளுடைய வெறித்தனமான விஷயமாக இருந்தது. கணவரிடமோ மக்களிடமோ வாழ்ந்துகொண்டிருக்கும் வேறு நபர்களிடமோ இருப்பதைவிட அவளுக்கு மனரீதியான நெருக்கம் இருந்தது இசையுடன் தான் என்ற விஷயத்தை ஒருமுறை அவரே அவளிடம் மனதைத் திறந்து கூறவும் செய்தார். அது உண்மையும்கூட.

இசை அல்லாமல் வேறு இரண்டு  விஷயங்கள் மீதுகூட அவளுக்கு தீவிரமான ஈடுபாடு இருந்தது- சீட்டு விளையாட்டு, குதிரைப் பந்தயங்கள்.

பாடுவது  மூலம் கிடைத்த பெரிய தொகை முழுவதையும் அவள் அந்த இரண்டு விஷயங்களுக்கும் செலவழித்தாள்.

அவரைப் பொறுத்தவரையில் அவள் சம்பாதிக்கும் பணம் ஒரு தேவையே இல்லை. மனைவியின் சம்பாதிக்கும் பணம் எவ்வளவு என்பதை விசாரிப்பதுகூட ஷானவாஸ்கானின் கவுரவத்திற்குப் பொருத்தமற்றதாக இருந்தது.

ஆரம்பத்தில் தன் மனைவியின் பொழுதுபோக்கு விஷயங்களை வெறும் பொழுதுபோக்கு அம்சங்கள் என்று மட்டுமே நினைத்திருந்த அவர், இறுதியில் தன் குரலை வேறு மாதிரி மாற்றிப் பேச ஆரம்பித்தார்.

வருமானம் அதிக அளவில் வந்து கொண்டிருந்தாலும், தன்னுடைய சொந்தத் தேவைகளுக்கு ஊர்மிளா பல நேரங்கலில் கானை எதிர்பார்த்துத்தான் இருந்தாள். அப்படிக் கிடைக்ககூடிய சந்தர்ப்பங்களில் கையிலிருக்கும் பணத்தைத் தாறுமாறாகச் செலவழிப்பதைக் குறித்து அவர் அவளைக் கண்டபடி திட்டுவார். நிறைய குற்றச் சாட்டுகளைக் கூறுவார்.

ஆனால், அவளால் அந்தப் பழக்கங்களிலிருந்து விடுபட முடியவில்லை. இசை நிகழ்ச்சிகளுக்கும் பயிற்சிகளுக்கும் என்று பல நாடுகளையும் சுற்றித் திரிவதற்கு  மத்தியில், உலகத்தின் பல பகுதிகளிலும் நடக்ககூடிய குதிரைப்  பந்தயங்களில் அவள் தொலைபேசி மூலம் பெரிய தொகைகளுக்கு பெட் செய்துகொண்டிருந்தாள். புக்கீஸ், பந்தயங்களை நடத்துப்பவர்கள் ஆகியோரின் உலகத்தில் ஊர்மிளா கானுக்கு இசை உலகத்தில் இருப்பதைவிட மரியாதையும் மதிப்பும் இருந்தன என்ற விஷயத்தை வெளி உலகம் அறிந்திருக்க வில்லை.

அதைப்பற்றிய விளக்கங்களை அவரிடம் அவள் கூறவில்லையென்றாலும், பணம் கிடைக்ககூடிய நாளும், போகும் நாளும் அவளுடைய முகத்தைப் பார்த்தே அவருக்குத் தெரிந்துவிடும்.

வருடத்தில் ஒரு மாதமோ ஒன்றரை மாதமோ இந்தாயவிற்குச் சென்று குருவிடம் இசைப் பயிற்சி பெறுவது என்பது அவளுடைய வழக்கமாக இருந்தது. குரு அவளைப் பொறுத்தவரையில் இசையின் ஜீவாத்மாவாகவும் பரமாத்மாவாகவும் இருந்தார். குருவை விட்டு விலகி இருக்கும்போது, தன்னிடம் இருக்கும் இசை வற்றிப்போய்விடுமோ என்று அவள் பயப்பட்டாள். குரு தனக்கு அருகில் இருப்பதும், அவரிடமிருந்து பயிற்சி பெறுவதும் தனக்குள் இருக்கும் பாடகிக்கு உயிர் காற்றைப்போல மிகவும் முக்கியமானவை என்பதை அவள் மனப்பூர்வமாக  நம்பினாள்.


ஒருமுறை இந்தியாவிற்கு இசை நிகழ்ச்சிகளுக்காகச் சென்றிருந்த அவள் உடனடியாக திரும்பி வரவில்லை. இரண்டு மாதங்ளுக்குப் பிறகு ஷானவாஸ்கான் ஊருக்குச் சென்று, கல்கத்தாவிலிருந்த குரு ஸ்ரீஜோக்கின் பாடசாலையிலிருந்து அவளை அழைத்து வரவேண்டிய தாகிவிட்டது.

அறுபது வயதைத் தாண்டியவாறாக இருந்தாலும், குரு  ஸ்ரீஜோக் நல்ல உடல் நிலையுடன் இருந்தார். இசையைத் தாண்டி வேறு எந்தவொரு வாழ்க்கையும் இல்லாத அவரைப் பொறுத்தவரையில், இசைக்கலையின் பொக்கிஷமாக இருந்தாள்  ஊர்மிளா கான்.

கானின் வியாபார உலகத்தில் பிரச்சினைகள் உண்டாக ஆரம்பித்தன. சரியான மனநிலை இல்லாமல் அவர் எடுத்த முடிவுகள் பலவும் கம்பெனிக்குப் பெரிய அளவில் இழப்புகளை உண்டாக்கின.

இதற்கிடையில் அவருடைய திருமண வாழ்க்கையில் முழுமையாக இனிமை குறைந்து விட்டிருந்தது.மனைவிக்கும் கணவருக்குமிடையே நடக்கும் உரையாடல்களில் உக்கிரம் அதிகமாக வெளிப்பட்டது. எவ்வளவு சிறிய காரணத்தைக் காட்டியும், ஒருவரையொருவர் விட்டு விலகுவதற்கு  இருவருமே தயாராக இருந்தார்கள்.

வீட்டிற்குள்ளிருக்கும் இறுக்கமான சூழ்நிலை சிறிதும் பாதிக்காமல் இருக்கவேண்டும் என்பதற்காக துர்காவை ஆரம்பத்திலேயே  பம்பாயில் தங்கிப் படிக்கும்படி செய்துவிட்டார் கான். இன்னொரு வகையில் கூறுவதாக இருந்தால் மகள்மீது அக்கறை செலுத்தும் அளவிற்கு அவர்கள் இருவருக்கும் நேரம் இல்லையே!

பொருளாதார சூழ்நிலை மோசமாகிக் கொண்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்த பிறகும், ஊர்மிளாவின் நடவடிக்கைகளில் எந்தவித மாறுதல்களும் உண்டாகவில்லை. அந்த விஷயம் அவரை மேலும் கோபம் கொள்ளச் செய்தது.

ஒரு குதிரைப் பந்தயத்தில் ஊர்மிளாவிற்குப் பெரிய ஒரு தொகை கிடைத்தது. வேறு யாரிடமும் அதைப்பற்றிக் கூறாமல் அந்தப் பணத்தைக் கொண்டு ஊர்மிளா வேறொரு சம்பாத்தியத்தை உண்டாக்கினாள்.

நான்கு லட்ச ரூபாய் விலை கொண்ட ஒரு பெண் குதிரை.

அதைத் தெரிந்துகொண்ட நாளன்று கானுக்கு வெறியே வந்துவிட்டது. கம்பெனிக்கு நேர்ந்திருக்கும் புதிய ஒரு இழப்பைக் கூறி கவலைப்பட்டுக் கொண்டிருந்த அவருக்கு முன்னால் அவள் அந்தக் குதிரையைக் கொண்டு வந்து நிறுத்தியப்போது, கட்டுப்பாடுகளையெல்லாம் மீறி அவர் சத்தம் போட்டார்.

மதுவும் வாய் வார்த்தைகளும் அதிகமான அந்த இரவு வேளையில் அவர் ஊர்மிளாவை கணக்கே இல்லாமல் தண்டித்தார். பதின்மூன்று வருட திருமண வாழ்க்கைக்கு மத்தியில் அன்றுதான் முதல் தடவையாக அவர் தன் மனைவியை அடித்தார்.

மறுநாள் ஊர்மிளா அவரிடம் விடைகூட பெறாமல் அந்த இடத்தை விட்டுக் கிளம்பினாள். இந்தியாவிற்கு- குரு இருக்கும் இடத்திற்கு...

மிகவும் வற்புறுத்தி எழுதிய பிறகுதான் ஊர்மிளா இப்போது பள்ளத்தாக்குகளுக்கு வருவதற்கு சம்மதித்ததாக கான் சொன்னார்.

துர்காவின் திருமண விஷயம்தான் இப்போது அவர்களைத் திரும்பவும் ஒன்று சேர்த்திருக்கிறது.

தந்தையும் தாயும் ஒன்றாகச் சேர்ந்து வசிக்கும் ஒரு சூழ்நிலை உண்டாகும்போது மட்டுமே தான் வீட்டிற்கு வருவதோ, திருமணத்திற்குச் சம்மதிப்பதோ நடக்கும் என்ற துர்காவின் பிடிவாதத்திற்கு முன்னால் அந்தப் பெண் கொஞ்சம் குனிய வேண்டிய நிலை உண்டாகிவிட்டது.

அந்தத் திருமணத்திற்குப் பெருமை சேர்க்க வேண்டும் என்பதற்காகதான் இப்போது மாளிகையை அழகுபடுத்தும் முடிவை கான் எடுத்தார். அவருக்கு இருப்பது ஒரே மகள். ஒருவேளை அவருடைய வாழ்க்கையில் இனி எஞ்சியிருக்கும் ஒரேயொரு கொண்டாட்டமே அவளுடைய திருமணமாகக்கூட இருக்கலாம்.

“திருமணம் முடிந்த பிறகும், மிஸஸ் கான் இங்கேயே இருப்பாங்களா?”

“தெரியாது...”- அதைக் கூறும்போது ஷாநவாஸ்கான் அமைதியற்ற நிலையில் இருந்தார்.

1.

ல்லா தயார் நிலைகளுடனும் சுகன்யா டேனியல் அங்கு வந்து சேர்ந்தாள்.

தொலைபேசி வழியாக பல நேரங்களில் கேட்டுத் தெரிந்து கொண்டிருந்த விஷயங்களை வைத்துக் கொண்டு அவள் அந்த மாளிகையைப்பற்றி  ஒரு உருவத்தைத் தன் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்தாள். வீட்டை நேரில் பார்த்தப்போது அவள் முதலில் சொன்னதே-தான் கற்பனை பண்ணி வைத்திருந்த ஓவியத்திற்கும் மாளிகையின் உண்மையான தோற்றத்திற்குமிடையே இருந்த ஆச்சரியமான ஒற்றுமையைத்தான்.

வெறுமனே நேரத்தை வீண் செய்யும் பழக்கம் சிறிதும் இல்லாத அவள், வந்து சேர்ந்த நாளன்றே தன்னுடைய வேலைகளைத் தொடங்கிவிட்டாள். நீளமான வராந்தாவிற்கு எதிரில் வீட்டிலிருந்து  மூன்றடிகள் விட்டு, வெயிலும் நீரும் கிடைப்பது மாதிரி, ஒரு நீளமான ஸ்லாப்பை உருவாக்க வேண்டும் என்று அவள் பிராசாந்திற்கு எழுத்துப் பூர்வமாகச் சொன்னாள். அந்த மாதிரியான விஷயங்கள் எதிலும் அவளிடம் சிறிதுகூட விளையாட்டுத்தனம் இருக்காது. சிறிதுகூட குறைபாடு இருக்ககூடாது என்பாள். தான் கேட்பதைச் செய்து கொடுக்கவில்லையென்றால், பிரச்சினையாகி விடும். சில நேரங்களில் வேலையை விட்டுவிட்டுக்கூட அவள் போய் விடுவாள். 

தேவதாசிக்குக் கிடைத்த கட்டிடத்தில் இருக்கும் பாரில் உட்கார்ந்து பிரசாந்த் அவளிடம் ஊர்மிளாவைப் பற்றிக் கூறினான். ஒரு ஆண் என்ற  நிலையில் அந்த பனிக் குதிரையிடம் பழக தனக்கு மிகவும் சிரமமாக இருக்கிறது என்றும்; அதனால் சுகன்யா அந்த வேலையை  ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் ஒரு சிறிய வருத்தத்துடன் அவன் அவளிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.பொதுவாகவே மற்றவர்களின் சொந்த விஷயங்களுக்குள் எட்டிப் பார்ப்பதில் தயக்கம் காட்டக்கூடிய அவள் அந்த வேலையை உற்சாகத்துடன்  ஏற்றுக் கொண்டபோது, அவனுக்கு நிம்மதி தோன்றியது.

“அவளைப் பற்றி அப்படி என்ன அக்கறை?” - சுகன்யா கேட்டாள்: “என்னை ஒண்ணும் பிம்ப் ஆக்கலையே”

“உன்னை எப்படி நான் பிம்ப் ஆக்க முடியும்?”- பனிக்கட்டித் துண்டுகளில் ஒட்டியிருந்த மதுத் துளிகளை நக்கிகொண்டே அவன் சொன்னான்: “ஆனால், அவளைப் பற்றி எனக்கு ஆர்வம் இல்லாமல் இல்லை. அவளுடைய காலை நேர சவாரிகளின்போது அசையும் ட்ராக் ஸூட் என்னைப் பைத்தியம் பிடிக்கச் செய்யாம விட்டிருந்தா, இவ்வளவு சீக்கிரமா உன்னை நான் வரவச்சிருக்கவே மாட்டேன்.”

“வளைக்கப் பாருங்க” -சுகன்யா சென்னாள்: “நீங்க அந்த அழகான பெண்ணை வளைக்கிற நேரத்துல நான் ஜூலியாவை வசீகரிக்கப் பார்ப்பேன். எனக்கு இப்போ காதல் அவள்மீதுதான்.”

யாருடனாவது, எதோடாவது எப்போதும் புதிதாகக் காதல் தோன்றிக் கொண்டிருக்கவில்லையென்றால், வாழ்க்கையே வீண் என்று ஆகிவிடும் என்ற தன்னுடைய சொந்த தத்துவத்தை, அன்று இரவு நேரத்தில் நீண்ட நேரம் கடந்த பிறகு அவள் மீண்டும் ஒருமுறை திரும்பச் சொன்னாள்.

ஜூலியா எதிர்பார்த்திருந்தைவிட வேகமாக சுகன்யாவிற்குக் கீழ்ப்படிந்து நடந்தாள். அவளைப் பற்றிய  விஷயங்களை நாகராஜைக் கைக்குள் போட்டு அவள் தெரிந்து கொண்டாள். அவளுடைய தலையிலிருந்த ரோமங்களில் இருந்த வைக்கோல் துண்டுகளைப் பிரித்து எடுப்பதற்கும், தீவனம் கொடுப்பதற்கும், சொறிந்து விட்டு சுகம் உண்டாக்குவதற்கும் சுகன்யாவிற்கு வேலைகளுக்கு மத்தியிலும் நேரம் கிடைத்தது. ஒருநாள் காலையில் அதிகாலை பயிற்சிக்காகச் சென்ற ஜூலியாவின்மீது சுகன்யா ஏறி உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, பிரசாந்த் வியப்பில் உறைந்து விட்டான். நாகராஜுக்கு போரடிக்காமல் இருப்பதற்கு சுகன்யா அங்கு வந்திருப்பது மிகவும் உதவியாக இருப்பதையும் அவன் உணர்ந்தான்.


ஊர்மிளா கானின்  சொந்த உலகத்தில் குற்றம் கண்டுபிடிக்கவும் சுகன்யா முயன்று கொண்டிருந்தாள். ஆனால், அது அந்த அளவிற்கு எளிதான ஒரு விஷயமாக இல்லை. சரிசமமாக எல்லோரிடமும் பழகுவது என்பது  அந்தப் பெண்ணுக்கு அன்னியமான ஒரு விஷயமாக இருந்தது. எல்லாவற்றிலும் இருந்தும், எல்லோரிடமிருந்தும் தன்னை விலக்கி மூடிக்கொண்ருக்கும் குணத்தைக் கொண்டிருக்கும் அந்தப் பெண், கோட்டையைப் போன்றவள் என்பதை சுகன்யா புரிந்து கொண்டாள். காலை நேரத்தில் வாக்கிங் போகும்போது உடன் சென்ற அவளிடம் முதல் நாளன்றே வெளிப்படையாகக் கூறிவிட்டாள்- தனக்குத் தனியாக நடந்து செல்வதில்தான் விருப்பம் இருக்கிறது என்று.

ஒருநாள் மதிய நேரத்தில் ஊர்மிளாவின் அறை இருந்த பக்கத்திலிருந்து உரத்த குரலில் வாக்குவாதம் கேட்டது.

பிரசாந்த் சென்று பார்த்தபோது, மிஸஸ் காணுக்கும் சுகன்யாவுக்குமிடையே அது நடந்து கொண்டிருந்தது.

மிஸஸ் கானின் அறையை மாற்றிப் புதுப்பித்தே ஆகவேண்டும் என்றாள் சுகன்யா. அதற்குத் தேவையே இல்லை என்றாள் இல்லத்தரசி. அது தன்னுடைய தொழில் என்றும்: அதில் தலையிடுவதற்கு உரிமையாளருக்கு அதிகாரமே இல்லை என்றும் சுகன்யா ஒரேயடியாகக் கூறிவிட்டாள்.

“இந்த விஷயத்தில் உங்களின் விருப்பத்தையும் விருப்பமின்மையையும் பார்க்க வேண்டிய அவசியமே எனக்கு இல்லை மிஸஸ் கான்!” - சுகன்யா ஒரு புல்லைப் போல நினைத்துச் சொன்னாள்: “எங்களுடைய நிறுவனத்திற்கும் இந்தக் கட்டிடத்தின் உரிமையாளருக்குமிடையே போடப்பட்டிருக்கும் ஒப்பந்தத்தின் அடிப்படையில்தான் நான் இங்கே வந்திருக்கேன். இந்த வீடும், இதைச் சுற்றியிருக்கும் இடங்களும் இப்போது முழுமையாக எங்களின் அதிகார எல்லைக்குள் இருக்கு. இந்தக் கட்டிடத்தின் முக்கியமான ஒரு அறையிலிருந்து தரைப் பகுதியிலிருக்கும் அறையில் மூலை வரை நான் சரி பண்ணவேண்டி இருக்கு. அதற்குத்தான் கம்பெனியிலிருந்து நான் சம்பளம் வாங்குறேன்.”

அவளுடைய அச்சமின்மைக்கு முன்னால், ஊர்மிளா கான் இறுதியில் தோல்வியே அடைந்தாள்- ஒன்றிரண்டு நிபந்தனைகளின் பேரில்.

ஒவ்வொரு நாளும் பூஜை நடக்கும் இரண்டு வேளைகளிலும், சாதகம் செய்யும் இரண்டு மணி நேரமும் அறைக்குள் எந்தவொரு வேலையும் நடக்கக் கூடாது. பிறகு... முடிந்தவரையில் மிகவும் அவசியமான ஒன்றோ இரண்டோ பணியாட்களை மட்டுமே அறைக்குள் அணுமதிக்க முடியும்.

அந்த இரண்டு  நிபந்தனைகளுக்கும் சுகன்யா சம்மதித்தாள்.

“அதிகமாக யாரும் நுழையாம நான் பார்த்துக்குறேன் மிஸஸ் கான்” - சுகன்யா தன்னுடைய வசீகரமான புன்னகையைத் தவழவிட்டாள். தொடர்ந்து அவள் சொன்னாள்: “முடிந்த வரையில் நான் மட்டுமே அறைக்குள் இருப்பேன். நீங்க ஒரு கை உதவ முடியாமல் இருக்கும்போது மட்டுமே நான் வேறு யாரையாவது அழைக்க வேண்டியிருக்கும் என்ன, போதுமா?”

சுகன்யா சொன்னதைப் போலவே செய்தாள்.

அதைத் தொடர்ந்து பெரும்பாலான நேரமும் மிஸ். சுகன்யா டேனியல், ஊர்மிளாவின் அறைக்குள்ளேயே இருந்தாள். தன்னுடைய பழக்கங்களையும் திறமைகளையும் அவள் ஒவ்வொன்றாக வெளிப் படுத்துவதை ஊர்மிளா மிகுந்த ஆர்வத்துடன் கவனித்தாள். அதிகமாக எதுவும் பேசாமல் தன்னுடைய பணியில் மட்டுமே மூழ்கியிருக்கும் அந்த இளம்பெண்ணின் சுறுசுறுப்பும் திறமையும் ஊர்மிளாவிற்கு மிகவும் பிடித்துவிட்டது. முன்கூட்டியே உறுதியாகக் கூறியதைப் போலவே அத்தியாவசிய தேவைக்கு கையாளாக இருப்பதற்கு அவள் தயங்கவில்லை. ஒருநாள் தம்புராவை எடுத்து சாதகம் செய்ய இருந்த அவள் சுகன்யாவை அறைக்குள் இருப்பதற்கு அனுமதித்ததைப் பார்த்தபோது, பிரசாந்த்திற்கு மகிழ்ச்சி உண்டானது.

“பாருங்க... நாளைக்கு அவங்க என்னோடு பேசுவாங்க”- மாலை நேரத்தில் பாரில் அமர்ந்து கொண்டு மூன்றாவது பெக் பிராந்தியைப் பருகும்போது சுகன்யா பெருமையுடன் சொன்னாள்.      

அது வெறும் பெருமைப் பேச்சல்ல என்பது அடுத்த நாளே தெரிந்து விட்டது. புதிய நிறங்ளும் விரிப்புகளும் இலைகளும் வண்ணத்துப் பூச்சிகளும் அறைக்குள் வருவதைப் பார்த்துக்கொண்டே தன்னுடைய படுக்கையில் சாய்ந்து படுத்திருந்த அந்தப் பெண்ணைக் கொஞ்சமாவது பேச வைக்க அன்று சுகன்யாவால் முடிந்தது.தொடர்ந்து வந்த நாட்களில் அவள் எல்லாவற்றையும் கூறிவிட்டாள்.

கான் கூறிய கதையைத்தான் ஊர்மிளாவும் சொன்னாள். கானின் அளவுக்கும் அதிகமான மது அருந்தும் பழக்கத்தையும், மது அருந்திய பிறகு அவரின் வெறித்தனமான நடவடிக்கைகளைப் பற்றிய அதிர்ச்சி தரும் கதைகளையும் அவள் கூறினாள். “இப்போதும் குடித்துவிட்டால் அந்த மனிதர்  வெறுப்பளிக்ககூடிய ஒருவரே” - ஊர்மிளா அப்படிதான் சொன்னாள். “நான் இங்கே எவ்வளவு நாட்கள் இருக்கிறேனோ, அவ்வளவு நாட்களும் மதுவைத் தொடமாட்டேன் என்று வாக்குறுதி தந்ததால் தான் நான் இப்போ இங்கே வந்தேன். இதுவரை குடிக்கலைன்னு நினைக்கிறேன். குடிச்சிருந்தால், அவர் எனக்குத் தொந்தரவுகள் தர வந்திருப்பார்.”

ஊர்மிளாவிடமிருந்து வேறொரு உண்மையையும் தெரிந்து கொள்ள முடிந்தது. குதிரைகளைப் பற்றியோ குதிரைப் பந்தயங்களைக் குறித்தோ திருமணம் ஆவது வரையில் அவளுக்கு எதுவுமே தெரியாது என்பதுதான் உண்மை. அந்த வெறியை உண்டாக்கியதே கான்தான்.

குரு ..... ஸ்ரீ ஜோக்குடன் தான் கொண்டிருந்த உறவு தன் கணவனிடம் உண்டான சந்தேகங்களைப் பற்றிக் கூறவும் ஊர்மிளா தயங்கவில்லை. அதைப் பற்றி சுகன்யா திரும்பத் திரும்பக் கேட்டதற்கு அவள் சுகன்யாவிடம் திருப்பிக் கேட்டாள்: “ஒரே தொழிலில் தங்களை தாங்களே அர்ப்பணித்துக் கொண்டிருக்கும் இரண்டு நபர்களுக்கு இடையில் எந்த அளவிற்கு நெருக்கம் உண்டாகும்! நீ எதற்காக கடந்துபோன ஒரு நாளில் அந்த பிரசாந்துடன், அதோ அங்கே தெரியிற ஹோட்டலில் ஒரு இரவு நேரத்தில் இருந்தே? உனக்கு அந்த  ஆண்மீது காதல் இருக்குன்னு அர்த்தமா?”

அதைக் கேட்டப்போதுதான் எப்போதும் தன்னுடைய அறையை மூடிக்கொண்டு உள்ளே இருக்கும் அந்தப் பெண் வீட்டில் நடந்து கொண்டிருக்கும் எல்லா அசைவுகளையும் அவ்வப்போது தெரிந்து கொண்டிருக்கிறாள் என்ற விஷயத்தையே பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

துர்காவின் திருமணம் முடிந்தவுடன், திரும்பப் போய்விட வேண்டும் என்பதுதான் ஊர்மிளாவின் தீர்மானம். தந்தையும் தாயும் அங்கு இருக்கிறார்கள் என்ற விஷயத்தை உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு மட்டுமே அவள் அங்கு வருவாள். பிறகு பெண்ணைப் பார்ப்பதற்கு யாராவது வரும்போது ஒரு குருவியைப்போல சிரித்து நடித்துக் கொண்டிருப்பதற்கு அவள் அங்கு அவசியம் இருந்தாக வேண்டும். அதற்கும் அவள் தயார்தான்.

துர்கா வருவது மிகவும் தாமதமாகிக் கொண்டிருக்கிறது என்பது தான் அவளுடைய குற்றச்சாட்டாக இருந்தது. கூறி விளையாடி விட்டு இனி ஒருவேளை அவள் வராமல் இருந்துவிட்டால்...? அப்படிச் செய்வதற்கு தயங்கக்கூடியவள் அல்ல அவள் என்று அவள் சொன்னாள்.

ஆனால்,தொடர்ந்து கடுமையான காற்று வீசியது. மரங்கள் வேரோடு விழுந்து கொண்டிருந்த இரவுக்குப் பிறகு வந்த புலர்காலைப் பொழுதில், காற்றை எதிர்த்துக்கொண்டு வேகமாக வந்த ஒரு குதிரைவண்டியை விட்டு துர்கா இறங்கி வந்தாள்.


பம்பாயிலிருந்து அவள் ட்ரெயினில் வந்தாள். வழி நெடுக மரங்கள் வேரோடு விழுந்து கிடந்ததால், ஸ்டேஷனிலிருந்து வாடகைக் கார்கள் எதுவும் வர முடியாது என்று கூறிவிட்டார்கள் என்ற விஷயத்தை அவள் சாராவிடம் கூறுவதை அவன் கேட்டான். வரச் சம்மதித்தவர்கள், வயதான அந்தக் குதிரையும், வயதான குதிரைக்காரனும்தான். அதனால் வழி நெடுக்க கதைகளைக்  கேட்டுக்கொண்டே வரமுடிந்தது என்று அவள் மகிழ்ச்சியுடன் சொன்னாள்.

பத்து ரூபாய் கொடுக்க வேண்டிய இடத்தில் நூறு ரூபாயை எடுத்துக் கொடுத்து சந்தோஷப்படுத்திய பிறகுதான், அவள் வயதான குதிரை வண்டிக்காரனை அங்கிருந்து அனுப்பியே வைத்தாள்.

11

ந்தை, தாய் இருவரின் இளமை முழுவதும் துர்காவிடம் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். தாயைவிட வடிவத்திற்கேற்ற உயரம், தந்தையின் கண்களும் அவளுக்கு இருந்தன. பெரிய அளவில் கவலையை எதுவும் அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை என்றாலும், அவளுடைய மனம் எப்போதும் சந்தோஷமாக இருக்கத் தயாராக இருக்கறது என்பதை பிரசாந்தால் உணர முடிந்தது.

துர்கா பம்பாயில் படிக்கிறாள். எம்.எஸ்ஸி, ஹோம் சயின்ஸ்தான் அவளுடைய பாடம்.

அவளுக்காக  ஒதுக்கப்பட்டிருந்த அறையில் பொருட்களை இறக்கி வைத்த துர்கா முதலில் போனது தன்னுடைய  அன்னையை நோக்கித்தான். தொடர்ந்து தன் தந்தையின் அறைக்குச் சென்றாள். இரண்டு இடங்களிலும் அரை மணி நேரத்திற்கு மேலாக அவள் செலவழிக்கவில்லை. குளித்து முடித்து வேறு ஆடைகள் அணிந்த பிறகுதான் அவள் ஜூலியாவைத் தேடிச் சென்றாள்.

ஜூலியா ஹவுஸுக்கு வெளியே அப்போது சுகன்யாவும் நாகராஜும் பிரசாந்தும் நின்றிருந்தார்கள். பெயர்களைக் கேட்டவுடனே, அவள் எல்லோரையும் அடயாளம் தெரிந்து  கொண்டாள்.

அதைப் பார்த்தபோது துர்கா நல்ல ஒரு புத்திசாலிப் பெண் என்பது தெரிந்தது.

சுகன்யாவிற்கு துர்காவின் ஒன்றிரண்டு தோழிகளை ஏர்கெணவே தெரிந்திருந்தது. பம்பாயில் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களுடன் பழகும்போது உண்டான அறிமுகம். அவர்களைப் பற்றிய கதைகளையும் விளையாட்டுகளையும் கூறி சுகன்யாவுடன் துர்கா சீக்கிரமே நெருக்கமாகிவிட்டாள்.

இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், தன்  தாயிடமிருந்து முற்றிலும் மாறுபட்டு எல்லோருடனும் வெகு சீக்கிரமே நெருக்கத்தை உண்டாக்கிக் கொள்ளக் கூடிய குணத்தைக் கொண்டவளாக துர்கா இருந்தாள். வேலை நடந்துகொண்டிருந்த எல்லா இடங்களையும் அவள் போய் பார்த்தாள். ராமுவிற்கும் அவளுக்குமிடையே  நல்ல ஒரு நட்புறவு வளர்ந்திருப்பதை பிரசாந்த் கவனித்தான். பொதுவாகவே பெண்களைப் பார்ப்பதையே விரும்பாத ராமு திடீரென்று தன்னுடைய ஆடைகளில் மிகுந்த அக்கறை செலுத்துவதைப் பார்த்து பிரசாந்தும் சுகன்யாவும் கண்களைப் பார்த்துச் சிரித்துக் கொண்டார்கள். பணியாட்களில் பெரும்பாலானவர்களின் பெயர்களை வந்து சேர்ந்த ஒன்றிரண்டு நாட்களிலேயே துர்கா மனப்பாடமாக ஆக்கியிருந்தாள். அவர்களுடன் பேசும்போது பெயரைச் சொல்லி அழைத்து உரையாடுவதில் அவள் எப்போதும் கவனமாக இருந்தாள்.

சில நாட்களில் அதிகாலை சவாரிகளின்போது ட்ராக் ஸூட் அணிந்த மகளையும் அவன் பார்த்தான். வராந்தாவிலிருந்த ஊஞ்சலில் சில மதிய நேரங்களில் தாயின் மடியில் படுத்து ஆடிக்கொண்டிருந்த மகளை பிரசாந்த் பார்த்தான்.

ஷாநவாஸ்கான் மகள்மீது உயிரையே வைத்திருந்தார். ஊன்றுகோலில் துணையே இல்லாமல் இப்போது அவரால் நடக்க முடிந்தது. மிகவும் கூர்ந்து கவனித்தால் மட்டுமே கொஞ்சம் அவர் விந்தி விந்தி நடப்பது தெரியும்.தந்தையும் மகளும் சேர்ந்து குதிரை லாயத்தின் வாசலிலும், சுகன்யா உண்டாக்கிய கேட் இருக்கும் பகுதியிலும் வெறுமனே சுற்றிநடந்து கொண்டிருப்பதைப் பெரும்பாலான நேரங்களில் பிரசாந்த் பார்த்திருக்கிறான்.

மற்றவர்களுடன் பேசும்போது தேவையானதற்கு மட்டுமே பேசக்கூடிய துர்கா தந்தையிடமும் தாயிடமும் உரையாடும்போது மட்டும் வாய் வலிக்கப்  பேசிக் கொண்டிருப்பதை பிரசாந்த் கவனித்தான். தூரத்திலிருந்து பார்க்கும்போது, அவள் எவ்வளவோ விஷயங்களை அவர்களிடம் கூற வேண்டியதிருக்கிறது என்பது மாதிரி தோன்றும்.சில நேரங்களில் அது சர்ச்சையாகவும் சண்டையாகவும் மாறுவதையும் அவன் பார்த்தான். ஒரு பகல் முழுவதும் அவள் வெளியிலேயே வரவில்லை. தன் தாயிடம் எதையோ கூறி கோபத்தில் கதவை அடைத்துக் கொண்டு உள்ளே இருக்கிறாள் என்பதை சுகன்யா மூலம் அவன்  அறிந்தான். மாலை நேரத்தில் கான் சாஹிப்பன் அறைக்கு சாரா அவளை அழைத்துக் கொண்டு செல்வதை பிரசாந்த் பார்த்தான். தந்தையும் மகளும்  நீண்ட நேரம் அறையை அடைத்துக் கொண்டு  உட்கார்ந்து பேசினார்கள். சண்டை முடிவுக்கு வந்தது காரணமாக இருக்கலாம்-மறுநாள் காலையில் தன் தாயுடன் மகளும் சேர்ந்து நடந்து செல்வதை பிரசாந்த் பார்த்தான்.

ராஜஸ்தானிலிருந்து புகழபெற்ற நாடோடிப் பாடகர் வந்திருந்த நாள். நீண்ட நாட்களுக்குப் பிறகு டைகர் கமாலை பிரசாந்த் பார்த்தான். அன்று எல்லோரும் கான் சாஹிப்பன் அறையில் ஒன்று சேர்ந்தார்கள்-ஊர்மிளாவைத் தவிர.

கான் குடிக்க ஆரம்பிக்கவில்லை. அவருடைய இதயமும் ஈரலும் இப்போதும் சரியான நிலையில் இல்லை என்று டாக்டர் கூறிவிட்டார். மூன்று நாட்களுக்கு முன்னால்கூட பார்த்தாகிவிட்டது.

கானை குடிப்பழக்கத்திலிருந்து தேவையில்லாமல் தடுத்து நிறுத்தியிருப்பதாகக் கூறி, ஜப்போய் டாக்டரை  வாய்க்கு வந்தபடி திட்டினார். ஜப்போயின் புலம்பல்கள் எல்லாவற்றுக்கும் சாந்தமான ஒரு புன்சிரிப்பு  மட்டுமே பிள்ளையின் பதிலாக  இருந்ததால், தேவையில்லாத பிரச்சினை எதுவும் உண்டாகவில்லை.

டாக்டர் பிள்ளை வேண்டாம் என்று விலக்கி இருக்கும் ஒரே காரணத்தால கான் மது அருந்தாமல் இருக்கிறார் என்ற விஷயத்தில் பிரசாந்திற்கு சந்தேகம் உண்டானது.

எது எப்படியோ, எல்லோரையும் அப்படி நம்பும்படி செய்ய வேண்டும் என்பதுதான் கானின் விருப்பம் என்பது தெளிவாகவே தெரிந்தது.

12

“அம்மா! உங்களுக்காகதான் அப்பா அதை வாங்கியிருக்காரு” -ஒரு மாலை நேரத்தில் மேற்குப் பக்கத்தில் இருந்த நிலத்தின் மூலையில் வளர்ந்திருந்த புதருக்குப் பின்னால் நின்று கொண்டிருந்த துர்காவின் குரல் கேட்டது. “அம்மா நீங்க அதை  வாங்கிக்கணும்.”

புதருக்கு அப்பால் மழை வருவதற்கான அடையாளம் சிரிதும் இல்லாததால், சிறிதளவில் நரைத்து சிவப்பு நிறத்தில் இருந்தது வானம்.

ஜூலியாவைப் பற்றித்தான் துர்கா பேசினாள். மகளுடைய திருமண நாளன்று ஊர்மிளாவிற்குப் பரிசாகத்  தருவதற்காக கான் வாங்கி அவளை நிறுத்தியிருக்கிறார்.

இந்த விஷயம் ஏற்கெனவே பிரசாந்த் யூகித்து வைத்திருந்ததுதான்.

தனக்கு யாருடைய பரிசுப் பொருளும் தேவையில்லை என்ற கொள்கையில் ஊர்மிளா மிகவும் உறுதியாக இருந்தாள். அவை அனைத்தும் அந்த மனிதரின் உத்திகள். தன்னை திரும்பவும் கொண்டு வந்து வைத்துக் கொள்வதற்காக செய்யப்படும் தந்திரச் செயல்கள். அது இனிமேல் நடக்காது.

“உனக்கு உன் அப்பாவைப் பற்றி என்ன தெரியும்?”- ஊர்மிளா தன் மகளிடம் சாதாரணமாகக் கேட்டாள்.

அன்றும் பேச்சு, சண்டையாக மாறியது. தன் நிலையிலிருந்து கீழே விழாமல் பார்த்துக் கொள்ளவதிலும் பிடிவாதம் பிடிப்பதிலும் தாயைவிட துர்கா சற்றும் பின்னால் இல்லை.


அவர்ளுக்கிடையே நடந்த உரையாடலை கவனித்தபோது ,தாயிடமிருந்து  துர்கா சிறிது சிறிதாகத் தன் தந்தையை நோக்கி சாய்ந்து கொண்டிருப்பதை பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

செடிகளின் இலைகள் இருட்டில் மறைவது வரையில் அந்த சண்டை நீண்டு கொண்டிருந்தது.

மெதுவாக ஆரம்பிக்கப்பட்ட அந்தச் சண்டை படிப்படியாக அதிகமானது.

தோட்டத்திலிருந்து மரங்களுக்குப் பின்னால் இருந்தபோதும்,அதிகாலை சவாரிக்கு மத்தியிலும், கானின் அறையிலும் அதற்கு கடுமைத்தன்மை கூடிக்கொண்டுருப்பது தெளிவாகத் தெரிந்தது. தெறித்து விழுந்த உரையாடல் வார்த்தைகள், சில நேரங்களில் ஒரு கண்ணீர் கலந்த பார்வை, அச்சுறுத்தும் நடவடிக்கைகள், முரண்பாடுகளின் வாசனை நிறைந்திருந்த அறைகள்... 

எதையும் கேட்கவில்லையென்றாலும் எல்லாவற்றையும் பார்த்துப் புரிந்து கொண்டிருக்கும் ஒரு தளத்தை நோக்கி அந்த சண்டை வளர்ந்து கொண்டிருப்பதை பிரசாந்த் உணர்ந்தான். அறிந்து கொள்ளாமல் அவனிடம் ஏதாவது மீதம் இருக்கிறது என்றால், அதை தெரியும்படி செய்வதற்கு எல்லா நேரங்களிலும் சுகன்யா வந்துவிடுவாள்.

ஊர்மிளா தன்னுடைய நிலையிலிருந்து அணு அளவுகூட விலகுவதற்குத் தயாராக இல்லை. அவளுடைய அந்தக் கடுமையான பிடிவாதத்தை மகளால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய திருமணத்தின் மூலம்அவர்களுக்கிடையே இருக்கும் விலகல் ஒரு முடிவுக்கு வந்தால் அது ஒரு நல்ல விஷயம்தானே என்று நினைத்துதான் துர்கா அந்த திருமணத்திற்குச் சம்மதிக்கவே செய்தாள். இல்லாவிட்டால் அவளுக்கு இப்போது அப்படியொன்றும் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்ற எண்ணமெல்லாம் சிறிதும் கிடையாது. தன்னை வலையில் மாட்ட வைத்துவிட்டு தன் தாய் தப்பித்தோடப் பார்க்கிறாளோ என்று அவள் சந்தேகப்பட்டாள். அப்படியென்றால், தேதிகூட நிச்சயிக்கப்பட்டுவிட்ட அந்தத் திருமணத்தைப் பற்றி இரண்டாவது தடவையாக  அவள் யோசனை செய்ய வேண்டியதிருக்கும்.

அவளுடைய நடவடிக்கைகளில் முழுமையாக நிலைகுலைந்து போனவர் கான்தான். அவருடைய உடல்நிலை திடீரென்று மோசமான விஷயத்தை டாக்டர் பிள்ளையும் வேறொரு இதய நிபுணரும் அடிக்கடி அங்கு வந்து கொண்டிருப்பதிலிருந்து அவன் தெரிந்து கொண்டான்.

எனினும் கான் அது எதையும் வெளியே காட்டிக்கொள்ளவில்லை. பிரசாந்த், சுகன்யா ஆகியோருக்கு முன்னால் தன்னுடைய தன்னம்பிக்கை நிறைந்த புன்னகையுடன் அவர் அமர்ந்திருந்தார். இடையில் அவ்வப்போது இருக்கக்கூடிய இசை கூடல்களுக்கோ  மாலைநேர  கொண்டாட்டங்களுக்கோ சிறிதும் மாற்றங்கள் உண்டாகவில்லை.

கான் அந்தக் குதிரையை வாங்கி நிறுத்தியிருப்பதே  தன்னுடைய அன்பை வெளிப்படுத்தும் வெள்ளைநிறக் கொடிதான் என்பது தெளிவாகத் தெரிந்தது. அது தட்டி எறியப்படப் போகிறது என்ற வேதனை மனிதனை பாதிக்காமல் இருக்காது என்பதைத் தெளிவாக பிரசாந்த் உணர்ந்திருந்தான். அவமானத்தை விழுங்கிக் கொண்டு அமைதியாக அவர் இருந்து கொண்டிருப்பதற்குப் பின்னால் மகளுடைய திருமணம் என்ற ஒரே ஒரு பிரார்த்தனை மட்டுமே இருக்கிறது என்பதும் வெளிப்படத் தெரிந்தது.

வேதனையான பல சம்பவங்களுக்கு மத்தியில் ஒரு மதிய நேரத்தில் துர்காவிற்கு வரப்போகும் கணவனின் உறவினர்கள் அடங்கிய ஒரு கூட்டம் அங்கு வந்து சேர்ந்தது.

மூன்று மெர்ஸிடஸ் பென்ஸ் கார்களில் அவர்கள் வந்திருந்தார்கள். மொத்தம் ஒரு எட்டு ஒன்பது பேர் இருந்தார்கள். மணமகனின் தந்தையும் தாயும் அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். மணமகளின் ஒரு மாமா, வெளிநாட்டில் இருக்கும் ஒரு மனிதர் துர்காவைப் பார்க்கவில்லை, அவர் சென்றப்போது, அவருடன் எல்லோரும் சேர்ந்து சென்றார்கள். திருமணத்திற்கு முன்னால் ஏதாவது இறுதி விஷயங்களைப் பேசுவதாக இருந்தால், அவற்றையும் பேசிக் கொள்ளலாமே!

துர்காவிற்கு வரப்போகும் கணவன் ஃபைஸலின் குடும்பம் ஜெய்ப்பூரில் ஒரு அரசு குடும்பத்துடன் தொடர்ப்பு கொண்டது என்பதை பிரசாந்த் கேள்விப்பட்டிருந்தான். ஃபைஸல் டில்லியில் இருக்கிறான். வெளிநாடுகளிலும்கூட புகழ் பெற்றிருக்கும் இந்தியாவின் மிகப் பெரிய துணி மில்களில் ஒரு மில்லின் சொந்தக்காரர்கள்தான் மணமகனின் குடும்பத்தினர். வார்னீஷ் பத்திரிகைகள் அனைத்திலும் அந்த நிறுவணத்தின் வண்ண விளம்பரங்கள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும்.

துர்கா கானின் ஒரு புகைப்படம் ஏதோ  ஒரு ஃபாஷன் பத்திரிகையில் வந்திருப்பதைப் பார்த்து, அவளைப் பெண் கேட்டு வந்திருந்தவன்தான் அந்தக் கோடீஸ்வரரின் மகன்.

விருந்தாளிகள் வந்திருந்த நாளன்று பரபரப்புடனும், பதைபதைப்புடனும் இருந்தவள் சாராதான். வீட்டிலும் சமையலறையிலும் ஓய்வே இல்லாமல் அவள் ஓடிக் கொண்டிருந்தாள். ஒருமுறை அவளுடன் சேர்ந்து ஊர்மிளா புதிதாக ஒப்பனை அணிந்து கான் சாஹிப்பன் அறைக்கு அருகிலிருந்த விசாலமான வரவேற்பறைக்குச் செல்வதை பிரசாந்த் பார்த்தான். அங்கிருந்து விருந்தினர்களின் சிரிப்பொலிகளுக்கும், தமாஷான பேச்சுகளுக்கும் மத்தியில் ஊர்மிளாவின் மெல்லிய சிரிப்பு சத்தமும் கேட்டது.

டிரைவர்களும், உடன் வந்திருந்த பணியாட்களும் சுற்றி நடந்து வீடு, குதிரை லாயம், ஆகியவற்றின் அழகைப் பார்த்து ரசித்தனர். தான் ஒரு காட்சிப் பொருளாக மாறிவிட்டிருப்பதைத் தெரிந்து கொண்ட ஜூலியா, அழகியின் ஆணவத்துடன் நின்று கொண்டிருந்தது.

மொத்ததில் துர்கா தவறு செய்து கொண்டிருக்கிறாள் என்று கூறியது போளம்மாதான். வீட்டிற்கு வெளியில் இருக்கும் விசேஷங்களைத்  தெரிந்து கொள்வதற்கும், சாராவிற்கு ஒரு கை உதவலாமே என்பதற்கும் அவள் மாளிகைக்கு வந்திருந்தாள்.

துர்கா விருந்தினர்களுக்கு முன்னால் போய் நிற்பதற்குத் தயாராக இல்லை என்றும், அது கான் சாஹிப்பிற்கும் அவருடைய மனைவிக்கும் பிரச்சினைகளை உண்டாக்கும் என்றும் போளம்மா சொன்னாள்.

“அந்தப் பொண்ணுக்கு அங்கு வேறு ஒரு காதல் இருக்கு சார்... அதுதான் அவள் ஒதுங்கி ஒதுங்கி நிற்கிறாள். கொஞ்சம் பணம் வருதுன்னு சொன்னால், இப்போ இருக்குற பொம்பளப் பசுங்க விழுந்திடுவாங்களா?” - போளம்மா கேட்டாள்.

கானே நேரடியாக துர்காவின் அறைக்குச் சென்று கூறிய பிறகுதான், இறுதியில் அவள் விருந்தினர்களுக்கு முன்னால்  போய் நின்றாள். அதற்கு முன்னால் அடைக்கப்பட்டிருந்த  அறைக்குள்ளிருந்து உரத்த குரலில் வந்த பேச்சும் அழுகைச் சத்தமும் கேட்டன.

தந்தை தன் மகளுடைய கால்களைப் பிடித்து கெஞ்சியிருக்க வேண்டும்.

முகத்தை ஏதோ சடங்குக்காக கழுவித் துடைத்து, ஆடைகளைக் கூட மாற்ற சம்மதிக்காமல், தன் தந்தையுடன் அறையைத் திறந்து வெளியே வந்த அந்த இளம்பெண், நினைத்திருந்ததைவிட ஆபத்தானவள் என்பதை  அன்று பிரசாந்த் புரிந்து கொண்டான்.

மாலை நேரம் வந்ததும், விருந்தினர்கள் அங்கிருந்து  கிளம்பனார்கள். மலர்கள் பூத்திருந்த தோட்டத்திற்கு மத்தியில் இருந்த மணல் நிறைந்திருந்த பாதை  வழியாக மூன்று கார்களும் ஓடி மறைந்த பிறகு, துர்கா தன் தாய்க்கும் கேட்கிற மாதிரி சாராவிடம் கூறுவது  பிரசாந்த்தின் காதுகளில் விழுந்தது.

“நான் தூக்க மாத்திரை சாப்பிட்டுத் தூங்கப்போறேன். யாரும் என்ன எழுப்பக் கூடாது.”

“உணவுக்கு?”

“எழுப்பக் கூடாதுன்னு சொன்னேன்ல?”- உரத்த குரலில் கோபத்துடன் கூறியவாறு அவள் கதவை அடைத்தாள்.


இரவு முழுவதும் பிரசாந்த் அமைதியற்ற மனநிலையுடன் இருந்தான்.

கான் அனுபவித்துக் கொண்டிருக்கும் மனவேதனைகளைவிட பிரசாந்த்தைக் கவலை கொள்ளச் செய்தது அந்த இளம்பெண்ணின் வாயிலிருந்து வந்த தூக்க மாத்திரை என்ற வார்த்தைதான். அவள் ஏதாவது செய்யக் கூடாததைச் செய்து விடுவாளோ என்று அவன் பயப்பட்டான்.

அந்த அச்சத்திற்கு முற்றுப்புள்ளி வைத்துக்கொண்டு, இரவு ஒரு மணிக்குப் பிறகு துர்காவின் அறையிலிருந்து அவளுடைய குரல் கேட்டது.

ஓடிச்சென்று கவனித்தப்போது, துர்கா யாருடனோ தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தாள். சிறிதும் நிறுத்தாமல், அழுகையும் கோபவும் குற்றச்சாட்டும் கலந்த பேச்சிலிருந்து எதையும் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.

ஒரு விஷயம் மட்டும் புரிந்தது. அவள் தன் குரலை உயர்த்திப் பேச வேண்டியதிருக்கிறது.

தூரத்தில், மிகவும் தூரத்தில் இருக்கும் யாரையோ அழைப்பதைப்போல.

13

யூகித்தது சரியாகிவிட்டது.

துர்கா அழைத்த ஆள் அவளுடைய அழைப்பைக் கேட்டுக் கொண்டான் என்பது தெரிந்துவிட்டது- இரண்டு  நாட்களுக்குப் பிறகு பின்டோ வந்து சேர்ந்தபோது.

அவன் வருவதற்கு முன்பே பிரசாந்த் அப்படியொரு விருந்தாளியை எதிர்பார்த்தான். தாமுவிடம் ஒரு புதிய அறையை ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று முன்கூட்டியே துர்கா கூறியிருந்தாள்.

துர்காவே அவனை எல்லோரிடமும் அழைத்துச் சென்று அறிமுகப்படுத்தினாள்: “பின்டோ என் நெருங்கிய  நண்பர். பம்பாயில் சொந்தமாக பின்டோஸ் என்ற பெயரில் ஒரு இசைக் குழு வைத்திருக்கிறார். மிகவும் புகழ் பெற்ற ட்ரம் இசைக் கலைஞர். பாடவும் செய்வார். இப்போ ஒரு இந்தி திரைப்படத்தில் பாடியிருக்கிறார்.”

பின்டோவைப் பற்றி தான் ஏற்கெனவே கேள்விப்படிருப்பதாக சுகன்யா சொன்னாள். பம்பாயிலிருக்கும் இளம் தலைமுறையைச் சேர்ந்தவர்களின் க்ளப்களில் அவன் ஒரு நட்ச்சத்திரம். அப்படியே இல்லையென்றாலும், அவளுக்கு இந்த வகையான ஆட்கள்மீது ஒரு தீவிர ஈடுபாடு உண்டு.

ஆறடிக்கும் அதிகமான உயரத்தையும் நீளமான கைகளையும் கால்களையும் கொண்டிருந்த பின்டோவின் முகம் ஒரு குழந்தையின் முகத்தைப்போல இருந்தது. க்ளீன் ஷேவ் செய்யப்பட்ட சிவந்த கன்னங்களும், சுருண்டு நீண்ட தலைமுடியும் மெல்லிய மயக்கத்தில் இருப்பதைப்போன்ற அவனுடைய கண்களும் அவனுக்கு சிறப்பு சேர்த்தன. அதிகபட்சம் அவனுக்கு வயது இருபத்திரண்டு இருக்கும்.

பின்டோவுக்கு மது அருந்தும் பழக்கமோ புகை படிக்கும் பழக்கமோ கிடையாது. மீனோ, மாமிசமோ, காப்பியோ, தேநீரோ- எந்தப் பழக்கமும் இல்லை. அதிகம் பேசாத வகையைச் சேர்ந்தவன்.

அறிமுகமாகும்போது கான் அவனிடம், “திருமணத்திற்கு வந்திருக்கிறீர்களா?” என்று கேட்பது காதில் விழுந்தது- ஒரு சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வதைப்போல. சிறிதளவு பெண்மைத்தனமான குரலில், “ஆமாம்” என்று பின்டோ பதில் சொன்னப்போது, அவருடைய முகத்தில் இனம் புரியாத ஒரு நிம்மதி படர்வதை பிரசாந்த் கவனித்தான்.

திருமண நாளன்றோ, அதற்கு முந்தைய நாளோ ஒரு ட்ரம் செட் வரவழைக்கலாம் என்று கான் சொன்னார். டைகரையும் வர வைக்கலாம். தபலாவும் ட்ரம்மும் சேர்ந்த ஒரு ஜூகல் பந்தி.

அதைக் கேட்டபோது கான்சாஹிப் பின்டோவை ஒரு எதிரியாகப் பார்க்கறாரோ என்று  காரணமே இல்லாமல் பிரசாந்திற்கு சந்தேகம் உண்டானது.

வீடு சம்பந்தப்பட்ட வேலைகள் கிட்டத்தட்ட முடிவடையும் நிலையில் இருந்தன. இரண்டு டைனிங் ஹால்கள் இருப்பதில், முன்னால் இருக்கும் கட்டிடத்தில் இருக்கும் ஹாலின் வேலை மட்டுமே இனி முக்கியமாக செய்ய  வேண்டியதிருந்தது. சந்தனப்பலகைகளாலான சுவர்களை வைக்கும்படி கான்  அவர்களிடம் கூறியிருந்தார். திட்டமிட்டிருப்பதைப்போல நல்ல இனத்தைச் சேர்ந்த மரக்கட்டைகள் கிடைப்பதற்குக் கால தாமதம் ஆனதால் அந்த அறை மட்டும் முடியாமலே  இருந்தது. இப்போது மரக்கட்டைகள் கிடைக்கும் என்றாகிவிட்டது.

ஒரு நாள் காலையில் கான் சாஹிப் பிரசாந்தின் அறைக்குச் சென்று துர்கா கானுக்கும் ஃபைஸலுக்குமிடையே நடக்கப் போகிற திருமணத்தைப் பற்றிக் குறிப்பாகக் கூறினார்.திருமணம் முடிந்த பிறகு கிளம்பினால் போதும் என்று அவர் ஒரு அண்ணாவின் அதிகாரத்துடன் கறாராகக் கூறினார்.

உண்மையாகச் சொல்லப்போனால் பிரசாந்த் போவதற்கான காலம் முடிந்துவிட்டிருந்தது. அவன் அங்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிவிட்டது. வரும்போது இவ்வளவு நாட்கள் அங்கு இருப்போம் என்று அவன் நினைக்கவே இல்லை.

வேண்டுமென்றால் இந்தச் சூழ்நிலையில் இறுதி அழகூட்டும் வேலைகளை ராமிடம் ஒப்படைத்துவிட்டு, திரும்பப் பேகலாம். அப்படிச் செய்தால் கானுக்கு உண்டாகக்கூடிய மனவருத்தத்தை விட பிரசாந்த்தை அங்கு இருக்கச் செய்தது அவனாலேயே புரிந்து கொள்ள முடியாத வேறு ஏதோ உணர்வுதான்.

சுகன்யாவின் வேலைகளும் கிட்டத்தட்ட முடிவடைந்திருந்தன. காடும் கொடியும் நிறைந்திருந்த அந்த இடத்தை அவள்  சொர்க்கத்திற்கு நிகராக  ஆக்கினாள். எல்லையில் திரும்ப, உயரத்தில் வளைத்து கட்டப்பட்ட முள்வேலிக்கு அப்பால் அவள் எங்கிருந்தோ அளவில் சற்றுப் பெரிதாக இருக்கும் ஏராளமான ஜாதிப் பூ மரங்களை வேரோடு பெயர்த்துக் கொண்டு வந்து வைத்தாள். ஒரு இலைகூட வாடாமலும் கீழே விழாமலும் சிரத்தை எடுத்து கவனிக்கப்பட்டதால், வந்து சேர்ந்த ஒரு வாரம் கடந்தவுடன் அவை எப்போதிருந்தோ அங்கு வளர்ந்து நிற்ககூடிய மரங்கள் மாதிரி ஆகிவிட்டன. இலைகளையும் மலர்களையும் எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல்  விரியச் செய்து அவை தங்களுக்கு இடம் மாற்றம் நடந்ததே தெரியாதது என்பது மாதிரி காட்டிக் கொண்டிருந்தன. எந்தக் காலத்திலிருந்தோ அங்கு தங்கியிருப்பவர்கள் என்பது மாதிரி பல இனத்தைச் சேர்ந்த கிளிகளும் அவற்றின் கிளைகளில் கூடுகள் கட்டிக் கொண்டு பாடிக்கொண்டிருந்தன.

முன் பக்கத்திலிருந்து தோட்டம் சுகன்யாவின் படைப்புத் திறமையையும் அவளுடைய அழகுணர்ச்சியையும் காட்டக்கூடிய புதிய சான்றாக  மாறியது. மாளிகையின் கம்பீரமான தோற்றத்திற்கு ஒரு சிறு குறைகூட உண்டாகாத அளவிற்கு அவள் அவை ஒவ்வொன்றையும் செய்திருந்தாள். விசாலமான புல்வெளிகள், டென்னீஸ் மைதானம், மாலை நேரங்களில் வந்து உட்காருகிற மாதிரி கொடிகளால் மூடப்பட்ட பார்கள், நான்குபேர் விளையாடக்கூடிய ஷட்டில் கோர்ட், தாமரை மலர்களுக்குக் கீழே பல வண்ணங்ளிலும் இருக்கும் மீன்கள் நீந்தி ஓடிக் கொண்டிருக்கும் விசாலமான மீன் குளம்- இப்படி ஒரு அங்குலத்தைக்கூட மீதம் வைக்காமல் அவள் செயல்படுத்தியிருந்தாள்.

தொடுவதற்கு பயந்ததைப்போல கேட்டை மட்டும் தொடவேயில்லை. நிறத்தைக்கூட மாற்றவில்லை. கருங்கல்லில் கொத்தப்பட்ட ‘வாலீஸ்’ என்ற எழுத்துகளில் படித்திருந்த பாசியைக்கூட அங்கிருந்து அவள் அகற்றவில்லை.

பம்பாய்க்குக் கிளம்புவதற்கு முந்தைய நாள் இரவு முழுவதும் அவள் பிரசாந்தின் அறையிலேயே இருந்தாள்.

“நீங்க இங்கே இப்படி இருக்குறப்போ, எனக்கு ரொம்பவும் பயம் ஒரே ஒரு பொண்ணைப் பார்த்துதான்”- பொழுது விடியும் நேரத்தில் எப்போதோ  அவள் சொன்னாள்: “அந்த போளம்மாவை...”


சுகன்யா வடிவமைத்த அந்தத் தோட்டம் மிகவும் பயனுள்ளதாக  இருந்தது துர்காவிற்கும் பின்டோவிற்கும்தான். அது அவர்களுடைய தனிப்பட்ட உலகமாக  மாறியிருக்கிறது என்பதை  சிறிது பொறாமையுடன்  பிரசாந்த் புரிந்து கொண்டான். சிறிதும் நினைக்காமல் இலைகளுக்கு அப்பாலிருந்து கேட்கும் ஒரு சிரிப்புச் சத்தம்... மாலை நேரத்தின் சிவப்பிலிருந்து நடந்து வரும் இரண்டு நிழல்கள்... மீன் குளத்தின் படிகளில் பனி விழுவதைப் பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கும் இரண்டு பேரின் பின் பகுதிகள், கிட்டாரின் மெல்லிய இசைப் பின்புலத்தில் இளம்பெண்ணின் அறைக்கு வெளியே மிகந்து வந்த ஆண் குரலில் மறைந்து கிடந்த தாகம்...

துர்கா அவனிடம் முழுமையாக விழுந்து கிடக்கிறாள் என்பதை தெளிவாக தெரிந்தது.

அதைப் பார்த்தப்போது பிரசாந்திற்கு ஞாபகத்தில் வந்தது- குரு ஸ்ரீஜோக்குடன் ஊர்மிளா கொண்டிருந்த உறவுதான்.

கானின் நடவடிக்கைகளில் எந்தவித மாற்றவும் பிரசாந்திற்குத் தெரியவில்லை. தன் மகளுடைய திருமணத்தை முடிந்தவரையில் மிகவும் சிறப்பாக நடத்தி முடிக்க வேண்டும் என்பது ஒரு பிடிவாதமாகவே அவரிடம் மாறிவிட்டிருப்பதை அவனால் உணர முடிந்தது. இடையில் சில நேரங்களில் பறந்து வரும் கார்களில் வந்து இறங்கக்கூடிய மணமகனின் உறவினர்களை அவர் மலர்ந்த சிரிப்புடன் வரவேற்றார். திருமணத்திற்கான ஏற்பாடுகள் சம்பந்தமாக நிறையபேர் ஒவ்வொரு நாளும் அவரைப் பார்க்க வந்து கொண்டிருந்தார்கள்.திருமணத்திற்குப் பிறகு நடக்கப் போகிற வரவேற்பு  மாளிகையிலேயே நடப்பதால், அதோடு தொடர்புடைய சில புதிய பணியாட்களை இடைவெளிகளிலும், பிற இடங்களிலும் பிரசாந்த் பார்த்தான். கொஞ்சம் ஊனமாகி விட்டிருந்த வலது காலுடன் வீட்டிலும், வீட்டைச் சுற்றி இருந்த இடங்களிலும் கான் எப்போதும் ஓடி நடமாடிக்கொண்டிருந்தார். எங்காவது ஒரு பலப்ஃப்யூஸ்  ஆனால், அதை முதலில் கண்டுபிடிப்பவர் அவராகத்தான் இருக்கும்.

ஜூலியாவிற்கு ஸாப் தரும் முக்கியத்துவத்திற்கான காரணம் என்ன என்பதை நாகராஜ் புரிந்து கொண்டான். என்றுதான் நினைத்துக் கொள்ள வேண்டும். அவன் அவளை மேலும் அதிக கவனம் செலுத்திப் பார்த்துகொள்வதும், கொஞ்சுவதுமாக இருந்தான். நடக்கப் போகும் திருமணத்துடன் ஜூலியாவிற்கு முக்கியமான ஏதோ சம்பந்தம் இருக்கிறது என்பதை அவன் நினைத்து வைத்திருக்கிறான் என்ற விஷயம் ஒரு நாள் பேசிக்கொண்டிருந்தபோது பிரசாந்திற்குத் தெரிந்தது. கான் சாஹிப் தன் மருமகனுக்குக் கொடுக்கப்போகிற  திருமணப் பரிசே ஜூலியாதான்  என்று அவன்  மனதில் நினைத்துக் கொண்டுருந்தான். பல தடவை அவன் அந்த விஷயத்தைப்பற்றி சாராவிடம் விசாரித்தும், தனக்கு, அதைப்பற்றி எதுவும் தெரியாது என்று கூற, அவனிடமிருந்து விலகிப் பேய்க் கொண்டிருந்தாள். அவள். பிரசாந்த் அவன் மனதில் இருப்பதை மாற்ற முயலவில்லை.

பின்டோ வந்து  சேர்ந்த பிறகு, தந்தையையும் தாயையும் துர்கா சந்திக்கக்கூடிய சந்தர்ப்பங்கள் மிகவும் குறைந்தன. தாயும் மகளும் சந்திக்கும் நிமிடங்களில், அழுத்தப்பட்ட போராட்டத்தின் தொடர்ச்சி என்பதைப்போல உரசலின் நெருப்புகள் சிதறிக் கொண்டிருந்தன. கானின் அறையில் இயல், இசைக் கூட்டங்களில் துர்கா பங்கு பெற்றாள். அவளுடன் பின்டோவும். புகழ்பெற்ற பாடகன் என்பதைக் கேள்விப்பட்டிருந்தாலும், அந்த இளைஞனாலும், அந்த இளைஞனுடைய பாடலைக் கேட்க, கான் சாஹிப் உட்பட அங்கிருந்த யாருக்கும் விருப்பமில்லை.

அப்படிப்பட்ட ஒரு இரவு முடிந்து திரும்பும்போதுதான் ஜப்போய் விபத்தில் சிக்கிக் கொண்டார். ஜீப் இறங்கிப் போய்க் கொண்டிருக்கும் போது கட்டுப்பாட்டை விட்டு விலகி பள்ளத்தில் போய் விழுந்தது.

அந்தச் செய்தி தெரிந்த இரவு நேரத்திலேயே கான் சாஹிப்புடன் பிரசாந்ததும் சேர்ந்து மருத்துவமனைக்குச் சென்று ஜப்போயைப் பார்த்தார்கள். அவருடைய இளம் வயதைக் கொண்ட மனைவியும் சிறு குழந்தைகளும் வேறு சில உறவினர்களும் அடி விழுந்தவர்களைப்போல திகைத்துப்போய் நின்றிருந்தார்கள்.

ஜப்போய்க்கு நினைவு திரும்பவில்லை. தலையில் பட்ட காயம் சற்று பெரியது என்று டாக்டர்கள் மூலம் தெரிந்தது. உடனே எதுவும் நடந்துவிடும் என்று கூறிவிடுவதற்கில்லை. எனினும், பழைய நிலைமைக்குத திரும்ப மாதங்களோ, வருடங்களோ ஆகலாம். ஒருவேளை இதே படுத்த படுக்கையாகக் கிடக்கும் நிலை தொடர்ந்தாலும் தொடரலாம்.

அதைக் கேட்டவுடன் எல்லோருக்கும் கவலையாக இருந்தது.

திருமண நாளன்று இரவு நேரத்தில் ஒரு ‘கலக்கு கலக்க ஜப்போய் இருக்க மாட்டார். வாசலில் நடு இரவு நேரத்தில் நாய்கள் குரைக்கும் சத்தம் இனிமேல் கேட்காது.

அந்தச் சமயத்தில் வீசும் காற்றுடன் சேர்ந்து ஒளிக்கும் ஜப்போயின் ஆர்ப்பாட்டங்கள் அன்று கெட்ட கனவுகளுக்கு மத்தியிலும் பிரசாந்த்தை பாடாய்ப் படுத்திக் கொண்டிருந்தன.

பொழுது புலரும் நேரத்தில்தான் அவன் சற்று கண்ணயர்ந்தான். அதனால் வெயில் வந்த பிறகுதான் அவன் எழவே செய்தான்.

எழுந்தவுடன் முதலில் அவன் காதில் விழுந்த செய்தி துர்காவையும் பின்டோவையும் காணவில்லை என்பதுதான்.

14

துர்கா தன்னுடைய நண்பனுடன் ஓடிப்போன விஷயத்தை இடைவெளிகளில் ‘குசுகுசு’வென்று பேசிக் கொள்வதிலிருந்துதான் அவன் தெரிந்து கொண்டான். யாருக்கும் அந்த விஷயத்தை உரத்த குரலில் கூற தைரியம் இல்லை.

அவர்களின் இரண்டு அறைகளும் திறந்து கிடந்தன. அவர்கள் கொண்டு வந்திருந்த சிறு பொருட்களும் பேக்குகளும் அறையில் இல்லை.

செய்தியைக் கேள்விப்பட்டு போளம்மா அங்கு வந்தாள். வேறு யாருமே இல்லாமல் பிரசாந்த் மட்டும் தனியாக அங்கு இருப்பதைப் பார்த்தவுடன், அவள் ஒரு வெற்றி பெற்ற பெண்ணைப்போல கேட்டாள்: “நான் என்ன சொன்னேன்?”

மதிய நேரம் கடந்த பிறகுதான் சாராவிடமிருந்து அதைப்பற்றிய பேச்சு வந்தது.

கான் சாஹிப் மொத்தத்தில் நிலை குலைந்து போய்விட்டார் என்ற விஷயத்தை அவளிடமிருந்து பிரசாந்த் தெரிந்து கொண்டான். வெளியே எதுவுமே நடக்கவில்லை என்பது மாதிரி காட்டிக் கொண்டாலும், மதிய வேளையில் அவரால் எதையும் சாப்பிட முடியவில்லை என்று சாரா சொன்னாள். “அவங்க எங்கே போனாங்கன்னு தேடிப் பார்க்க வேண்டாமா? என்று டாக்டர் பிள்ளை கேட்டதற்கு, “எதற்கு? என்றொரு கேள்வியைக் கேட்டிருக்கிறார் கான்.

ஊர்மிளாவையும் வெளியே பார்க்க முடியவில்லை. அவள் ஒரு நீண்ட பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கிறாள் என்பதை மட்டும்தான் அவன் தெரிந்து கொண்டான்.

அன்று பகல் முழுவதும் விட்டு விட்டு மழை தூறிக் கொண்டிருந்தது. இடையில் கொஞ்ச நேரம் பெய்யாமல் இருக்கும். இலைகளில் பிரகாசத்தைப் பார்த்தவுடன் மீண்டும் பெய்ய ஆரம்பித்துவிடும். அப்படிப்பட்ட ஒரு ஜாதி மழை!

மழையை நம்ப முடியாத காரணத்தால் அன்று ஜூலியாவை வெளியே கொண்டு போகவில்லை. தினந்தோறும் நடக்கக்கூடிய செயல் நடக்காமல் போனதால் உண்டான கோபத்தில் பாதி திறந்திருந்த கதவுக்கு அப்பால், கள்ள மழையைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்த அவருடைய கண்களில் யார் மீதோ உள்ள கோபம் தெரிந்தது.


மகள் இப்படி ஓடிப்போனதால் உண்டான மனக் கவலையா? அதற்குக் காரணமான தாய்மீது கொண்ட கோபமா? இவற்றில் கான் சாஹிப்பை பாடாய் படுத்திக் கொண்டிருக்கும் விஷயம் எதுவாக இருக்கும்? சந்தன வாசனை நிறைந்திருந்த டைனிங் சம்பந்தப்பட்ட வேலைகள் வேகமாக நடந்து கொண்டிருப்பதைப் பார்த்தவாறு நின்றிருந்தபோது, பிரசாந்த்தின் சந்தேகம் அதுவாகத்தான் இருந்தது. ஒரு உல்லாசப் பயணம் முடிந்ததைப்போல இரண்டு நாட்களுக்குள் மகள் திரும்பி வருவாளென்று எந்தக் காரணத்தைக் கொண்டும் அவர் நம்ப மாட்டார் என்பது மட்டும் நிச்சயம். அப்படியென்றால் இப்படி அவர் வெறுமனே அமைதியாக இருப்பதற்கு அர்த்தம் என்ன?

மழை பெய்து கொண்டிருந்ததால் வெளியே வேலை செய்து கொண்டிருந்த பணியாட்கள் முன்கூட்டியே போய் விட்டார்கள். எந்த விஷயத்திலும் உற்சாகம் உண்டாகததால் டைனிங் ஹாலில் வேலை செய்து கொண்டிருந்த பணியாட்களையும் முன்கூட்டியே போகுமாறு கூறும்படி ராமுவிடம் கட்டளையிட்டான் பிரசாந்த்.

இனி, இப்போது எதற்காக அவரசப்பட வேண்டும்?

அந்த இளம் வயதைச் சேர்ந்த இருவரும் சேர்ந்து தோற்கடித்தது தன்னைத்தான் என்று பிரசாந்த் நினைத்தான். இருட்டில் முகத்தில் அடி விழுந்ததைப்போல அவன் உணர்ந்தான்.

மாலை நேரம் கடந்ததும் சாரா வந்து கான் சாஹிப் அழைப்பதாகக் கூறினாள்.

ஏதோ முக்கியமான விஷயத்தைப் பற்றி விவாதிப்பதற்காகத் தான் தன்னை அவர் அழைக்கிறார் என்று கருதி அவன் சென்றபோது, அங்கு ஒரு கூட்டமே இருந்தது. டைகர் இருந்தார். நல்ல நிலையில்தான். முன்பு பார்த்திராத வயதான ஒரு பாடகர் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். ஆர்மோனியத்தின்மீது விரல்களை ஓட்டியவாறு தன்னுடைய கரகரத்த குரலில் இளவேனிற்கால வெயிலையும் காட்டுச் சேலையையும் பற்றிப் பாடிக் கொண்டிருந்த அந்த மனிதர் பார்வை தெரியாத ஒருவராக இருந்தார். டாக்டர் பிள்ளையுடன், கானின் முன்பு பார்த்திராத ஒரு நண்பரையும் அவன் பார்த்தான் - நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பேராசிரியர்.

கான் எப்போதையும்விட தான் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வேண்டுமென்றே காட்டிக்கொள்கிறார் என்பதாகப் பிரசாந்த்திற்குத் தோன்றியது. பார்வையற்ற மனிதருக்கு மதுவை ஊற்றித் தரும்போது, அவரைக் கிண்டல் செய்த கானின் செயல்களில், குழந்தைத்தனம் வந்து நிறைந்திருப்பதைப்போல இருந்தது. டைகரைப் பாராட்டும்போது அவர் தேவையில்லாமல் தன் குரலை உயர்த்திப் பேசியதும் எப்போதும் இல்லாத ஒன்றாக இருந்தது.

பார்வை தெரியாத பாடகரின் பாடல் அதன் முழுமையை அடைந்த நேரத்தில், அதைக் கொண்டாட வேண்டும் என்பதற்காக எல்லோரும் கண்ணாடிக் குவளைகளை உயர்த்தியதைத் தடுத்துக்கொண்டு கான் சொன்னார் : “நில்லுங்க... நானும் கொஞ்சம்...”

வேறு யாரும் எதுவும் கூற ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர் ஒரு கண்ணாடிக் குவளையில் விஸ்கியை ஊற்றி, மற்றக் குவளைகளுடன் சேர்த்து வைத்து உயர்த்தினார். “உஸ்தாமின் குரலுக்கு...”

டாக்டர் பிள்ளையின் முகம் இருண்டு போனதைச் சிறிதும் கவனிக்காமல், ஒரே மடக்கில் கான் குவளையைக் காலி செய்தார்.

பிரசாந்திற்கு எங்கேயோ பயம் தோன்றியது.

குடிக்க ஆரம்பித்த பிறகு, பிள்ளையால் மட்டுமல்ல யாராலும் அவரைத் தடுக்க முடியவில்லை.

தொடர்ந்து மூன்று பெக்குகளை உற்றிக் குடித்து முடித்த பிறகு கான் சொன்னார் : “இனி மெதுவா இருந்தா போதும்.”

இரண்டு மூன்று மாதங்களாக முழுமையாகக் குடிப்பதை நிறுத்தியிருந்ததற்காகப் பழி வாங்கும் போக்கு அவருடைய வெறித்தனமான நடவடிக்கைகளில் தெரிந்தது.

கானின் மடியில் சித்தாரை வைத்துக்கொண்டு டைகர் சொன்னார் : “ஸாப்... இனிமேல் நீங்க பாடுங்க. உங்களை இப்படியொரு நல்ல மூடுல பார்த்து எவ்வளவு நாட்களாச்சு! உங்கக்கூட சேர்ந்து வாசிக்காததால், என் விரல்கள் என்மீது கோபத்தில் இருக்கு.”

பேராசிரியர் அதற்கும் “வாஃஹ் வாஃஹ்” கூறுவதை பிரசாந்த கேட்டான்.

ஐந்தாவது பெக் முடிந்தபோது, கான் பாட ஆரம்பித்தார்.

பாட ஆரம்பித்ததும் அவர் தன் கண்களை மூடிகொண்டு எதையும் பார்க்காமல், யாரையும் தெரியாமல், தனக்கு மட்டுமே சொந்தமான ஒரு உலகத்திற்குள் அவர் நுழைந்து போய் விட்டார் என்பதை பிரசாந்த்தால் புரிந்து கொள்ள முடிந்தது.

அந்த வீட்டிற்கு வந்து சேர்த்த பிறகு, கேட்ட எல்லா பாடல்களையும் ஒன்றுமே இல்லாமல் செய்தது கானின் அந்தப் பாடல். பொதுவாகவே மெதுவான குரலில் பாட விருப்பப்படும் அவர், அன்று தேர்ந்தெடுத்ததே உச்ச ஸ்தாயியில் பாடும் ஒரு பாட்டு என்ற விஷயம் பிரசாந்திற்கு ஆச்சரியத்தைத் தந்தது.

கோபத்தைக் கைவிட்ட டைகரின் விரல்கள், வெளியே பெய்து கொண்டிருந்த மழையின் தாளத்தைத் தோல்வியடையச் செய்து, இரவுக்குள் ஊடுருவிச் சென்று வெடித்துச் சிதறின. இடையில் அவ்வப்போது வெளிப்பட்ட பார்வையற்ற மனிதரின் பாராட்டும் நடவடிக்கைகளில் விருப்பமும், உண்மைத் தனமும் தெரிந்தன. பாடல் பாதியை அந்தபோது, கதவுக்கு அப்பால் ஒரு ‘ஜல் ஜல்’ சத்தம் கேட்டது.

அங்கு ஊர்மிளா பாதி திறந்திருந்த கதவில் இடப்பட்டிருந்த திரைச்சீலைக்கு அருகில் வந்து நின்று கொண்டு கான் சாஹிப்பின் பாடலில் மட்டுமே தன் கண்களைப் பதித்துக் கொண்டு நின்றிருந்தாள்.

அவள் காஃபி ப்ரவுன் நிறத்தில் ஒரு புதிய புடவையை அணிந்திருந்தாள். அந்தப் புடவையில் ஊர்மிளாவின் அழகு முன்பு இருந்ததைவிடக் கூடியிருப்பதைப்போல இருந்தது. அவளிடமிருந்து கண்களை எடுக்க, எவ்வளவு முயற்சித்தும் பிரசாந்த்தால் முடியவில்லை.

ஷாநவாஸ்கான் ஊர்மிளா வந்திருப்பதைத் தெரிந்திருக்கவில்லை. மற்றவர்களும் அவள் வந்ததில் அசாதாரணமாக எதுவும் இருப்பதாக நினைக்கவில்லை. டாக்டர் பிள்ளைக்கு மட்டும் சிறிய ஒரு பதைபதைப்புத் தோன்றியது.

பாடல் முடிந்து, கான் தன் கண்களைத் திறந்தார். பாராட்டுக்களின் ஒளிச் சிதறல்களில் முழுமையாக மூழ்கி முடித்த பிறகே, அவர் கதவுக்கு அப்பால் நின்று கொண்டிருந்த பெண்ணைப் பார்த்தார்.

கையில் எடுத்த கண்ணாடிக் குவளையை அவர் அடுத்த நிமிடம் மேஜைமீது வைத்தார். கண்டுபிடிக்கப்பட்ட திருட்டுக் குழந்தையின்  பதைபதைப்புடன் அவர் என்னவோ கூற முயன்றார்.

ஆனால், அதற்காகக் காத்திருக்காமல் ஊர்மிளா அறைக்குள் நுழைந்து வந்தாள்.

வந்தவுடன் அவள் கான் சாஹிப்பின் முன்னால் முழங்கலிட்டு அமர்ந்து, அவருடைய கால்களில் விழுந்து வணங்கினாள்.

அதிகமாகத் திகைத்துப்போனது கான் சாஹிப்தான். என்ன கூற வேண்டுமென்றோ, என்ன செய்ய வேண்டுமென்றோ தெரியாமல் திகிலடைந்து போய்விட்டார் அவர்.

நிமிர்ந்து எழுந்த ஊர்மிளா அங்கிருந்த யாரையும் பார்க்காமல் வந்த வழியே திரும்பிப் போனாள். கான் சாஹிப்பின் முகத்தைப் பார்க்காமல் இருக்க, அவள் மிகவும் சிரமப்படுவது தெரிந்தது.

எதுவுமே நடக்காததைப்போல, கான் தன்னுடைய கண்ணாடிக் குவளையை எடுத்தார். அவருடைய விரல்கள், சித்தாரின்மீது வெறுமனே வெறுமனே தட்டி ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. மெத்தை விரிப்பில் இருந்த நதியையும் படகுகளையும் பார்த்துக் கொண்டிருந்த அவருடைய கண்களில் ஈரம் படர ஆரம்பிப்பதை பிரசாந்த் பார்த்தான்.

பார்வை தெரியாத மனிதர் மட்டும் தாழ்வான குரலில் யாரிடமோ விசாரிப்பதைப் போல கேட்டார்: “யார்? என்ன?”


15

ரவு பதினொரு மணிக்கு மைசூரிலிந்து புறப்படும் ட்ரெயினில் ஊர்மிளா போய்விட்டாள். வந்தபோது கொண்டு வந்திருந்த சூட்கேஸையும் பேக்கையும் மட்டுமே அவள் போகும்போது எடுத்துச் சென்றாள்.

போகப் போகும் விஷயத்தை அவள் ஏற்கனவே சாராவிடம் கூறியிருக்க வேண்டும். காரணம் - வழக்கத்திற்கு மாறாக இரவு நேரத்திலும் அவளை வராந்தாவிலும் இடைவெளிகளும் அவன் பார்த்தான். சாராவிற்கு மட்டும் என்று ஆயிரம் ரூபாயையும், சமையலறையிலும் மற்ற இடங்களிலும் வேலை செய்யும் மீதி பணியாட்கள் எல்லோருக்கும் சேர்த்து வேறொரு ஆயிரம் ரூபாயையும் அதாவது இரண்டாயிரம் ரூபாயை சாராவிடம் கொடுத்து விட்டுத்தான் அவள் வீட்டை விட்டுக் கிளம்பினாள். போகும்போது ஊர்மிளா பிரசாந்த்திடம் விடைபெற்றுக் கொள்ளவில்லை. அவன் அதை எதிர்பார்க்கவும் இல்லை. பலமாக பெய்து கொண்டிருந்த மழையில், அவளுடைய கார் கேட்டைக் கடந்து போவதைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, அவனுக்கு யாரையோ கொலை செய்ய வேண்டும்போல இருந்தது. கனமாகப் பெய்து கொண்டிருந்த மழை, ஒரு நேரம் வந்தபோது மெதுவாகப் பெய்ய ஆரம்பித்தது. இலைகளில் மழைத்துளிகள் விழும் சத்தத்தைப் பிரித்துப் பார்த்தவாறு பிரசாந்த் தன்னுடைய அறையில் படுத்திருந்தான். தொடர்ந்து மழைத்துளிகள் குறைவதை அவன் அறிந்தான். மழைத்துளிகளுக்கு மத்தியில் மவுனம் நீண்டு கொண்டிருப்பதை அவன் கேட்டான்.

கானின் அறையில் விளக்கு அணையவில்லை. அவர் அங்கு தனியாக இருந்தார். விருந்தாளிகள் எல்லோரும் கிளம்பிப் போனபிறகு, இறுதியாக அறையை விட்டு வெளியே வந்தவன் பிரசாந்த்தான். டாக்டர் பிள்ளையிடம், “இனிமேல் இன்னைக்கு மதுவைத் தொட மாட்டேன்” என்றொரு சத்தியம் செய்யல் நடந்தாலும்,  பிள்ளை அந்த இடத்தை விட்டுப் புறப்பட்டதும் அவர் புதிய ஒரு புட்டியை எடுக்கவே செய்தார்.

ஊர்மிளா போன விஷயம் கானுக்கு தெரியும். இல்லாவிட்டாலும், அவள் தன் கால்களில் விழுந்து வணங்கியபோதே அவர் புரிந்து கொண்டிருப்பார். அது ஒரு இறுதி விடை பெறல் என்று.

மழை மெதுவாகப் பின்வாங்கியது. நிலவு உதித்தது. வெளிச்சம் இல்லாமல், காற்றிலும் இலைகளிலும் இருந்த ஈரத்தை மட்டும் தழுவிய ஒரு நிலவு.

அந்த நிலவு தன்னுடைய அறையின் ஜன்னல் கம்பிகளில் படர ஆரம்பித்தபோது, பிரசாந்த் கண்ணயர்ந்தான்.

பாதி தூக்கம், ஆழமான உறக்கத்தை நோக்கிப் போவதற்கு மத்தியில் ஏதோ ஒரு சத்தத்தைக் கேட்டு அவன் அதிர்ச்சியடைந்து எழுந்தான்.

முதலில் என்ன நடந்தது என்றே அவனுக்குத் தெரியவில்லை. எங்கோ யாரோ ஓடுவதாலும், விளக்குகள் ஒளிர்வதாலும் உண்டான சத்தங்கள் அவனுக்குக் கேட்டன. யாரோ என்னவோ கூறுகிறார்கள்.

பிரித்தெடுத்துப் பார்க்க முடியாத அளவிற்கு பலவிதங்களிலும் ஒலித்த சத்தங்களுக்கு மத்தியில் சாராவின் குரலை அவன் தனியாக அடையாளம் கண்டு பிடித்தான்.

அப்போது மீண்டும் ஒரு சத்தம் கேட்டது. ஒரு குண்டு வெடித்த சத்தம். மாளிகையின் சுவர்களையும் இரவையும் பள்ளத்தாக்குகளையும் நடுங்கச் செய்த அதன் முழக்கம் நின்றது.

தெற்குப் பக்க வாசலில் ஆரவாரம் கேட்டது.

ஜூலியா ஹவுஸின் வாசலில் மங்கலான வெளிச்சத்தில் யாரெல்லாமோ நின்றிருந்தார்கள்.

பணியாட்கள் தங்கியிருக்கும் பகுதியிலிருந்து ஓடி வரும் டார்ச்சும் வெளிச்சமும்.

மங்கலான நிலவு வெளிச்சத்தில், கான் சாஹிப்பை அடையாளம் கண்டுபிடிப்பது சிரமமில்லாத ஒரு விஷயமாக இருந்தது. அவரின் கையில் அப்போதும் புகை நின்றிராத ஒரு ரிவால்வர் இருப்பதை பிரசாந்த் பார்த்தான். முழுமையாகத் தரையில் நின்றிராத கால்களுடனும், கலங்கிய கண்களுடனும், தொண்டைக் குழியில் அடக்க முடியாத அழுகையுடனும் நின்றிருந்த அந்த மனிதருக்கு அருகில் செல்ல யாருக்கும் தைரியம் இல்லை. சிறிதளவிலாவது அவருக்கு அருகில் சென்றவள் சாரா மட்டும்தான்.

குதிரை லாயத்தின் மறைவில், இருட்டில், அதிர்ச்சியில் உறைந்து போயிருந்த நாகராஜ் தன் குரலை உயர்த்த முடியாமல் ஒளிந்து நின்றிருந்தான்.

லாயத்தின் வாசலில், குழாய் அமைத்து திருப்பிவிடப்பட்ட எல்லையுடன் சேர்த்து ஜூலியாவின் உடல் கிடந்தது. நெற்றியைத் துளைத்துச் சென்ற ஒரு குண்டில், அவளுடைய தலை சிதறிப் போயிருந்தது. கழுத்துப் பகுதியிலிருந்த துளையிலிருந்து கண்ணுக்குத் தெரியாத ஒரு பந்தயத்தில் நடப்பதைப்போல, அவளுடைய இரத்தம் வெளியே சீறிப்பாய்ந்து கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.