Logo

அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5986
aval mugathil oru sivappu nila

சுராவின் முன்னுரை

புகழ் பெற்ற ஜப்பான் எழுத்தாளரான ஹிரோஷி நோமா (Hiroshi Noma) எழுதிய ‘A red moon in her face’ என்ற அருமையான புதினத்தை ‘அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா’ (Aval mugathil oru sivappu nila) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன். 1915-ஆம் ஆண்டு ஜப்பானில் உள்ள கோபே என்ற இடத்தில் ஒரு புத்த மதத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த நோமா, க்யோட்டோ பல்கலைக்கழகத்தில் படித்தவர்.

அங்கு அவர் ஃப்ரெஞ்ச் இலக்கியத்தைப் பாடமாக எடுத்துப் படித்தார். மார்க்ஸிய மாணவர் இயக்கங்களில் மிகவும் துடிப்புடன் செயல்புரிந்தவர் நோமா.

அவரின் முதல் புதினமான ‘ஷிங்கு சிட்டாய்’ 1952-ல் பிரசுரமானது. இரண்டாவது உலகப் போருக்குப் பின்னால் பிரசுரமான போர் சம்பந்தப்பட்ட புதினங்களில் மிகச் சிறந்தது என்ற பெயரை அந்நூல் பெற்றது. 1971-ஆம் ஆண்டில் நோமாவிற்கு ஜப்பானின் புகழ்பெற்ற ‘தனிஸாக்கி விருது’ அவர் எழுதிய ‘ஸெய்னென் நோ வா’ என்ற நூலுக்காகக் கிடைத்தது. 1972-ஆம் ஆண்டில் இலக்கியத்திற்கான தாமரை விருது (Lotus Prize) அவருக்கு வழங்கப்பட்டது. 1991-ஆம் ஆண்டு அவர் மரணத்தைத் தழுவினார்.

‘அவள் முகத்தில் ஒரு சிவப்பு நிலா’ 1947-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. ஆரம்பத்திலிருந்து இறுதிவரை வாசகர்களை புதினத்துடன் ஆழமாக கட்டிப்போட்டு வைக்கக் கூடிய அபார திறமை ஹிரோஷி நோமாவிற்கு இருப்பதை யாராக இருந்தாலும் ஒப்புக் கொள்வார்கள். அது எவ்வளவு பெரிய விஷயம்! இக்கதையில் இடம்பெறும் டோஷியோவையும் குராக்கோவையும் நம்மால் மறக்கத்தான் முடியுமா?

சிறந்த ஒரு ஜப்பானிய நாவலை மொழிபெயர்த்த திருப்தி எனக்கு உண்டானதைப் போல, இதைப் படிக்கும் உங்களுக்கும் உண்டாகும்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


ரு விதவையான குராக்கோ ஹோரிக்கவா தன் முகத்தில் வேதனை நிறைந்த உணர்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். மிகவும் அமைதியாக இருந்த வண்ணம் மென்மையான உணர்வுகளை மறைத்து வைத்திருக்கக் கூடிய சில ஜப்பானியப் பெண்களிடம் சாதாரணமாகப் பார்க்கக்கூடிய சுண்டி இழுக்கும் அழகு அவளுடைய முகத்தில் இல்லை. முகத்திற்கு நேர்மாறாக கண்களோ நாசியோ வாயோ செயல்படும்போது உண்டாகக் கூடிய வெளிப்பாடும் சொல்லிக் கொள்கிற மாதிரி இருக்காது. அந்த முகத்தைப் பார்க்கும் யாரும் அதில் ஒரு விரும்பத்தக்க உயர்வான தன்மை இருப்பதாகக் கூறுவார்கள். எது எப்படியோ, அவளுடைய முகம் மற்றவர்களிடமிருந்து சற்று வித்தியாசப்பட்டிருக்கிறது என்ற உணர்வை உண்டாக்கியதென்னவோ உண்மை. வாழ்க்கையின் போக்கில் இருக்கக்கூடிய ஏதோ ஒரு முழுமைத் தன்மை அந்த முகத்திலிருந்து திருடப்பட்டு விட்டிருக்கிறது என்பது மட்டும் அந்த முகத்தைப் பார்க்கும்போது தெரிந்தது. அந்த வித்தியாசத் தன்மை, நினைத்துப் பார்க்கமுடியாத சக்தியைக் கொண்டிருக்கும் ஒரு அழகை அந்த முகத்தில் நிறையச் செய்திருக்கிறது. அவள் முகத்திலிருந்த அந்த இனம் புரியாத கவலை, அவளுடைய உதடுகளின் மூலம் வெளிப்படுவதற்கு பதிலாக அவளுடைய கூந்தலிலும், அழகான நெற்றியிலும், அவளைச் சுற்றி நிலவிக் கொண்டிருந்த சூழலிலும் வெளிப்பட்டது. அவளுடைய உதடுகளோ வெளியே உண்டாகும் மாறுதல்களுக்கு ஏற்றவண்ணம் உணர்ச்சிகளுடன் மாறிக் கொண்டே இருந்தன.

தான் அவளை அதிகமாகப் பார்க்கப் பார்க்க, அந்த முகத்திலிருந்த உணர்ச்சிகள் படிப்படியாகத் தன்னுடைய இதயத்தின் அடித்தளத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கின்றன என்ற உண்மையை டோஷியோ கிட்டயாமா ஒப்புக்கொண்டே ஆகவேண்டும். ஒரு வருடத்திற்கு முன்னால், அவன் சவுத் ஸீஸ் என்ற பகுதியிலிருந்து அங்கு வந்து சேர்ந்திருந்தான். அவனுக்கு நன்கு தெரிந்த ஒரு மனிதர் டோக்கியோ ஸ்டேஷனுக்கு அருகிலிருந்த கட்டடத்தின் ஐந்தாவது மாடியில் ஒரு நிறுவனத்தை நடத்திக் கொண்டிருந்தார். இப்போது அவன் அந்த நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவளை பெரும்பாலும் ‘எலிவேட்ட'ரில் வரும்போதோ ஓய்வு அறையைச் சுற்றி இருக்கும்போதோ பார்ப்பான். ஒவ்வொரு முறையும் அந்த இனம்புரியாத, வேதனையை வெளிப்படுத்தும் உணர்ச்சிகளின் வெளிப்பாட்டை அவளுடைய முகத்தில் பார்ப்பான். தன்னுடைய இதயத்தில் இருக்கும் ஏதோ வேதனை அவளுடைய முகத்தில் போய்ச் சேர்ந்திருக்கிறது என்பதை உணரும் அதே நேரத்தில், அதற்கு பதிலாக இனிமையான உணர்வும் ஒரு வலியும் தன் மனதில் உண்டாகி இருக்கின்றது என்பதையும் அவன் உணர்ந்தான்.

 அவளுடைய வயது என்ன என்பதைப் பற்றி அவனால் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. ஆரம்பத்திலிருந்தே அவள் அழகு அவளுடைய வயதை அவனிடமிருந்து மறைத்துக் கொண்டே வந்திருக்கிறது என்பதால், அவள் வயதைப் பற்றிய எந்தக் கேள்வியும் அவன் மனதில் உண்டாகவே இல்லை. நீண்ட காலமாகவே அவன் ஜப்பானியப் பெண்களைப் பார்க்கவே இல்லை என்பதுகூட அதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கலாம். இன்னும் குறிப்பாகக் கூறுவதாக இருந்தால், கடந்த காலத்தில் உண்டான சந்தோஷமளிக்காத ஒரு அனுபவத்தைத் தொடர்ந்து, பெண்களிடமிருந்து விலகி இருக்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு அவன் வாழ்ந்தான். அவள் ஏற்கெனவே திருமணமானவள் என்ற விஷயம் குறித்து அவன் சிறிதுகூட நினைத்துப் பார்த்ததில்லை. அவள் வயதில் மிகவும் இளையவள்  என்றே அவன் கணக்குப் போட்டான். அதனால் அவனால் அப்படி நினைக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்  போனால், இப்படிப்பட்ட விஷயங்கள் ஜப்பானியப் பெண்கள் மத்தியில் மிகவும் அரிதாகவே இருந்தன. அவளுடைய முகத்தில் எப்படிப்பட்ட உணர்ச்சிகள் வெளிப்பட்டுக் கொண்டிருந்தனவோ, அவ்வகை உணர்ச்சிகள்தான் ஒரு இளம்பெண்ணின் முகத்தில் பொதுவாகவே தெரியும்.

அவனுடைய அலுவலகத்தைப் பார்த்தவாறு இருந்த ஹாலில் செயல்படும் ‘நியூயாச்சியோ இண்டஸ்ட்ரியல் கம்பெனி' என்ற நிறுவனத்தில் அவள் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அதேபோன்ற நிறுவனங்கள் அடுத்தடுத்து செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த ஹால் இருட்டாகவே இருக்கும். அவளுடைய முகத்தை சரியாகப் பார்த்ததுகூட இல்லை. இன்னும் சொல்லப்போனால், அவளை அவன் கடந்துசெல்ல நேர்ந்த அல்லது அவள் அவனைக் கடந்துசென்ற மணித்துளிகள் மிகவும் சிறியனவாக இருந்தன. ஹாலின் இருளடைந்த காற்றில் மிதந்து வருவதைப்போல அவளுடைய முகம் அவனை நெருங்கி வந்து கொண்டிருப்பதைப் பார்க்கும்போதும், அல்லது தான் திரும்பி ‘எலி வேட்ட'ரில் மனிதர்களின் முதுகுகளுக்கு மத்தியில் அவளுடைய முகத்தைப் பார்க்கும்போதும், அழகு நிறைந்த ஒரு சக்தி அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். மலைகளின் உச்சியிலோ அல்லது வானத்தின் விளிம்பிலோ கற்பனை செய்து பார்க்க முடியாத இறுதி ஒளிக் கீற்றுகளுடன் பிரகாசமாகத் தோன்றி, காற்றின் எல்லையற்ற தன்மைக்குள் சூரியன் மறையும்போது, மறைந்து போகும் தெளிவான கீற்றுகளைப்போல அது இருந்தது.

ஆரம்பத்தில் அவளுடைய முகம்தான் அவனை ஈர்த்தது. ஆனால், அதே அளவில் அவளுடைய முழு சரீரத்திலிருந்தும் வெளிப்பட்ட வேதனை, அமைதி நிறைந்த ஆடையை அணிந்து, இருட்டான போர்வையைப் போர்த்திக்கொண்டு, அவளுடைய முகத்திற்கு முற்றிலும் எதிரான ஒரு தோற்றத்தை அளித்துக் கொண்டிருந்தது. வேதனையில் நனைந்து விட்டிருக்கும் அவளுடைய சரீரம் தன்னுடைய கடந்தகால கசப்பான நினைவுகளை வெளியே கொண்டுவந்து மீண்டும் அசைபோட வைப்பதாக அவன் உணர்ந்தான். தன்னுடைய மனதிற்குள் இருக்கும் துயரங்களுக்கு ஏற்ற வண்ணம் அவளுடைய முகத்தில் ஒரு வகையான அழகு வெளிப்படுவதைப் போல அவனுக்குத் தோன்றியது. அதே நேரத்தில் அது ஏன் தன்னுடைய இதயத்திற்குள் வந்து கூடு கட்டவேண்டும்  என்பதை அவன் நினைத்துப் பார்க்கவில்லை. எது எப்படி இருந்தாலும்- அவளுடைய முகம் அவன் இதயத்திலிருந்த ஒரு காயத்தைத் தொட்டு விட்டது என்பதென்னவோ உண்மை. சில நேரங்களில் தன்னுடைய இதயத்தை ஏதோவொன்று அழுத்துவதைப்போல அவன் உணர்ந்தான். முதலில் அப்படிச் செய்வது எது என்பதை அவனால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஆனால், பிறகுதான் அவனே கண்டுபிடித்தான்- தன்னுடைய இதயத்தின் அடி ஆழங்களுக்குள் மூழ்கிக் கிடக்கும் வேதனையின் வெளிப்பாடுகளைப் பற்றிய நினைவுகள்தான் அதைச் செய்திருக்கிறது என்பதையே. தன் இதயத்தை ஈரமாக்கிய ஏதோவொன்றின் மையப்பொருளாக அவளுடைய முகம் இருப்பதை அவன் உணர்ந்தான். தன் மனதிற்குள் அவன் அவளுடைய முகத்தையே வெறித்துப் பார்த்தான். அதைத் தொடர்ந்து தன் இதயத்தில் வலி உண்டாவதைப்போல அவனுக்குத் தோன்றியது. தன்னுடைய சொந்தக் கால்களின் பாதங்களே தன்னுடைய கட்டளைகளைப் பின்பற்ற மறுக்கின்றன என்று, எப்படியோ உணர்ந்து கொண்ட உண்மை ஏற்படுத்திய மெல்லிய புரிதல் அவனுக்கு உண்டானது. இருண்ட, வார்த்தைகளால் விவரிக்க முடியாத உணர்ச்சியின் ஒரு மின்வெட்டு திடீரென்று அவனுடைய சரீரம் முழுவதும் தோன்றியது.


அது மிகவும் வேகமாக அவனுடைய அடி மனதிற்குள் கிடந்த நினைவுகளுக்குள்ளிருந்து எழுந்து மேலே வந்து, தன்னால் எவ்வளவு முயற்சி செய்தாலும் அடக்க முடியாத அளவிற்கு ஒரு ஆக்கிரமிப்பை அவன்மீது உண்டாக்கியது. அது அவனைப் பிடித்துக் கீழே தள்ளிவிட்டது. ‘ஓ...... இல்லை...' அவன் ஒரு நிமிடம் தடுமாறினான். ‘ஓ.... என்னால் இதைத் தாங்கிக் கொள்ள முடியாது!' அவன் தன் தலையை ஆட்டினான். குழப்பத்தில் சிக்கி என்ன செய்வதென்று தெரியாமல், அவன் நடுங்கிக்கொண்டே நின்று கொண்டிருந்தான். வாழ்க்கையைப் பற்றியும் மனிதத்தன்மையைப் பற்றியும் எதிர்மறையான வார்த்தைகள் தன் மனதிற்குள்ளிலிருந்து எழுந்து வந்து கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான். அத்தகைய வார்த்தைகளைப் பற்றி அவனுக்கே தெரியாது. அது தாங்கிக்கொள்ள முடியாத தருணமாக இருந்தது. தன் சரீரத்தின் வழியாக பாய்ந்து செல்லும் இருண்ட மின்வெட்டலின் மூலம், தன் உடல் விரல்களின் நுனிப் பகுதிவரை பிரகாசமாக்கப்படுவதைப்போல அவன் உண்மையாகவே உணர்ந்தான்.

‘ஓ... நீ தவறாக நினைக்கிறாய். நீ அந்த மாதிரி நினைக்கக்கூடாது. உன்னால் மனிதத் தன்மையை எந்தச் சமயத்திலும் மறுக்க முடியாது. நீ அதிக அளவில் நம்பிக்கையுடன் இருக்கும் மனிதன். நீ ஒரு எளிமையான மனிதன். மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் நம்பிக்கையைவிட உன்னிடம் அதிகமாகவே இருக்கிறது.' அவன் தனக்குத்தானே உற்சாகம் உண்டாக்கிக் கொள்ள முயற்சித்தான். இன்னும் சொல்லப் போனால் போர்க்களத்தில் கிடைத்த அனுபவ அறிவு அவனுக்குள் மீண்டும் வந்ததைப்போல இருந்தது. போர்க்களத்தில் இருக்கும் மனிதர்கள் சராசரி வாழ்க்கையில் இருக்கும் மனிதர்களைவிட எவ்வளவோ தூரம் மாறுபட்டவர்கள் என்ற அறிவே அது. மனிதனுக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் மிருகம் தன்மீது பாய்வதைப்போலவும், பற்களைப் பதிப்பதைப்போலவும் அவன் உணர்ந்தான். தன்னுடைய சக போர் வீரர்கள், போரின்போது தன்னுடைய உடலின் தசைகளில் உண்டாக்கிய கொடூரமான பல் அடையாளங்கள் இன்னும் மறையவில்லை என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். அதைப் பற்றி நினைத்துப் பார்க்கும் அதே நேரத்தில், அதே மாதிரியான பற்களின் அடையாளங்களை தானும் தன்னுடைய நண்பர்களின் உடல்களில் பதித்துவிட்டிருப்பதை அவன் நினைத்துப் பார்த்தான். போர்க்களத்தில் தங்களுடைய வாழ்க்கை பயமுறுத்தப்படும்போது, அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்ளும் காட்சிகளை நினைத்துப் பார்த்தபோது, உடலெங்கும் குளிர்ச்சி பரவியதைப்போல அவன் உணர்ந்தான்.

கடந்த காலத்தில் பார்த்த போர்க்களங்களைப் பற்றியும், மனிதத்தன்மையைப் பற்றியும் எதிர்மறையாக நினைப்பதற்கு அவளுடைய உருவம் தூண்டியது என்பதற்கான காரணம்- போரைப் பற்றிய அவனுடைய ஞாபகத்தில், வேதனையில் மூழ்கித் துன்பக் கடலில் துவண்டு கொண்டிருக்கும் ஒரு பெண்ணைப் பற்றிய நினைவும் இருந்ததே. குராக்கோ ஹோரிக்கவாவின் உருவத்தைப் பார்க்கும்போது, அந்தப் பெண்ணின் உருவம் ஞாபகத்தில் வந்தது. ஒரு பெண்ணின் உருவத்தை மனதில் இறுக அணைத்துக் கொண்டே போரில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கிட்டயாமாவின்  மனதில், எல்லா நேரங்களிலும் குராக்கோ, அந்த போர் நடந்த காலத்தின் துயரம் நிறைந்த நாட்களை ஆழமாக விதைத்துக் கொண்டே இருந்தாள்.

டோஷியோ கிட்டயாமாவிற்கு ஒரு காலத்தில் காதலி ஒருத்தி இருந்தாள். தன்னுடைய முழு மனதைக் கொண்டும் அவளை அவனால் காதலிக்க முடியவில்லை. இன்னும் சொல்லப்போனால்- அவள் அவனுடைய இழந்த காதலுக்கு மாற்றாக இருந்தாள். அவன் காதலித்த அந்தப் பெண் அவனை விட்டு எப்போதோ விலகிச் சென்று விட்டாள். அவன் காதலித்த அந்தப் பெண்ணிடம் அப்படியொன்றும் சொல்லிக் கொள்கிற அளவிற்கு மிகப் பெரிய தகுதிகள் எதுவுமில்லை. அவனுடைய கெட்ட நேரம் என்றுதான் சொல்ல வேண்டும்... அவளை அவன் தன்னுடைய இளமை நிறைந்த நாட்களில், முழுமையான மோகம் குடிகொண்டிருக்க சந்தித்தான். அப்படிப்பட்ட நிலையில் எந்த இளைஞர்களும் செய்வதைப்போலவே, அவனும் அவளையே மனதில் வைத்து ஆராதனை செய்து கொண்டிருந்தான். அவளிடம் இல்லாத நல்ல குணங்கள் இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அவன் பிரமிப்பில் மூழ்கிக் கொண்டிருந்தான். கண் மூடித்தனமாக அவன் அவளை வழிபட்டான். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களின் எதிர்ப்பைத் தான் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது என்பதாலும்; வாழ்க்கைக்குத் தேவையான பணத்தைச் சம்பாதிப்பதற்கான திறமை அவனிடம் இல்லையென்பதை உணர்ந்து, வாழ்க்கைக்கு பாதுகாப்பு இல்லை என்பதைப் புரிந்து கொண்டதாலும்; அவனுடன் கொண்டிருக்கும் உறவிலிருந்து தான் விடுபட்டுச் செல்ல விரும்புவதாக அவள் கூறியபோது, அந்தப் பெண்ணை அவன் இயற்கையாகவே வெறுத்தான். எது எப்படி இருந்தாலும், அவளுடைய உருவத்தை உயிரோட்டத்துடன் தன் இதயத்திற்குள் அவன் நீண்டகாலம் வைத்திருந்தான்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில்தான் அடுத்த பெண்  அவனுக்கு முன்னால் தோன்றினாள். அவன் வேலை பார்க்கும்  அதே போர்க்கருவிகள் இருக்கும் நிறுவனத்தில் அவள் ஒரு க்ளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தாள். அவள் அவனைக் காதலித்தாள். முன்பிருந்த காதலியைப்போல அல்லாமல், அவள் உடனடியாக எல்லாவற்றையும் அவனிடம் ஒப்படைத்தாள். அவள் மெலிந்துபோன பெண்ணாக இருந்தாள். ஆனால், அறிவாளியாகவும் சிறிய முகத்தையும், ஒடுகலான கழுத்தையும், சிறிய இடையையும் கொண்டவளாகவும் இருந்தாள். அவன் மனதில் எப்படி கற்பனை செய்து வைத்திருந்தானோ அதற்கு ஏற்றபடியும், அவன் நினைத்திருந்த பழக்க வழக்கங்களுடனும் இருக்கும் அளவிற்கு அவளிடம் ஏதோவொன்று இருந்தது. அந்த முகத்தைப் பார்க்கும்போது முந்தைய உறவில் தனக்கு உண்டான வேதனை நிறைந்த தோல்வியை அவன் உயிரோட்டமே இல்லாமல் நினைத்துப் பார்த்தான். அதே நேரத்தில், எப்போதும் தனிமையிலேயே இருக்க வேண்டுமென்ற வகையைச் சேர்ந்த மனிதனல்ல அவன். இன்னும் சொல்லப் போனால்- தன்னைக் காதலிக்கக்கூடிய ஒரு பெண் தன்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருக்க, அதனால் உண்டான கர்வத்தையும் சந்தோஷத்தையும் விட்டெறியக் கூடிய மன பலத்துடன் அவன் இல்லை. அவளுடைய காதலை மறுக்கக்கூடிய தீர்மானத்தை எடுக்கும் அளவிற்கு அவன் பலமற்றவனாக இருந்தான். அவள் அவனிடம் முழுமையான நம்பிக்கையை வைத்திருந்தாள். அவளுடைய காதல் அவனுக்கு அனைத்தையும் அளித்தது. அவ்வளவு எளிதாக அளிக்கப்பட்ட அந்தக் காதலின் மதிப்புத் தெரியாத மனிதனாக அவன் இருந்தான். தன் வாழ்க்கையில் இரண்டு முறை காதல் வலையில் விழக்கூடாது என்று நினைப்பதைப்போல அவனுடைய செயல் இருந்தது. அவன் அவளை ஒரு மாற்றாகவே எண்ணினான். அதற்கேற்றபடி அவன் அவளைக் காதலித்தான். அவளைப் பார்க்கும் அவனுடைய கண்கள் மிகவும் மென்மையாகவும் ஆராய்ந்து பார்க்கக் கூடியனவாகவும் இருந்தன. அவளுடைய உறுதியான மார்பகங்களைத் தொடும்போது தன் இதயம் மிகவும் குளிர்ந்து விடுவதைப் போல அவன் உணர்ந்தான்.


அவனுடைய கண்கள் தன் முந்தைய காதலியின் சதைப்பிடிப்பான மார்பகங்களுடன் அவளுடைய மார்பகங்களை ஒப்பிட்டுப் பார்க்கும். ஏதோ ஒரு வகையில் அவன் திருப்தியில்லாதவனாக ஆனான். தன் இதயம் சுருங்கிப் போய்விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது. அவளுடைய வெளிறிப் போன முகத்தையும், அதில் சற்று துருத்திக் கொண்டிருந்து கன்ன எலும்புகளையும் பார்க்கும்போது அவனுக்கு வெறுப்பு உண்டானது. அந்த முகத்தில் எந்தவொரு உணர்ச்சியும் இல்லாமலிருந்ததால், காமவெறி உண்டாகும் அளவிற்கு அவனை அது ஈர்க்கவில்லை. இன்னும் சொல்லப் போனால் அவளுடைய முகத்தில் நவ நாகரிக அம்சங்கள் பலவும் இருந்தன. அவளுடைய முகத்தை தனக்கருகில் கொண்டு வரும்போது, அவளுடைய தாறுமாறான ஒப்பனையில் ஒரு வகையான அவமதிப்பு இருப்பதைப் போல அவன் உணர்ந்தான். அதற்காக எல்லா நேரங்களிலும் அதைப் பற்றியே நினைத்துக்கொண்டு அவன் கவலையில் மூழ்கியிருக்கவில்லை. அதுவே திரும்பத் திரும்ப நடக்க, அவளுடைய அர்ப்பணிப்பு என்ற கனமான சுமையின்கீழ் கிடந்து தான் நசுங்கிக் கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.

ஜப்பானின் ராணுவ முகாமில் இருந்தபோது, அவள் மரணத்தைத் தழுவி விட்டாள் என்ற தகவல் அவனுக்கு வந்து சேர்ந்தது. அவள் அவன்மீது வைத்திருந்த காதல் விஷயத்தில் தான் போலித்தனமாக நடந்து கொண்டோம் என்ற மிகப்பெரிய குற்றத்தை முதல் முறையாக அவளது மரணத்தின் போது அவன் மனதிற்குள் ஒப்புக்கொண்டான். புதிதாக பயிற்சிக்கு எடுக்கப்பட்ட ஒரு மனிதனின் தொல்லைகள் நிறைந்த அன்றாட வாழ்க்கைக்கு மத்தியில், காதலின் மதிப்பு என்ன என்பதை அவன் இறுதியாக உணர ஆரம்பித்தான். சக ராணுவ வீரர்கள் அவனிடம் கூறுவதுண்டு. ‘நீ ராணுவத்திற்குள் நுழையும் வரை, எந்தச் சமயத்திலும் நீ உன் தாயைப் பாராட்டமாட்டாய்.'

ராணுவ முகாமில் படுக்கையில் படுத்திருந்தபோது, அவன் தன் தாயையும் காதலியையும் நினைத்துப் பார்த்தான். ஒருவர் இன்னொருவர்மீது அன்பு செலுத்தும் மிக உயர்வான செயலை அவன் சிந்தித்துப் பார்த்தான். அப்படி நினைத்துப் பார்ப்பது ஒரு வகையில் சர்க்கரையைப்போல இனிப்பானதாகவும், வேடிக்கையான விஷயமாகவும் இருந்தது. முப்பது வயதைக் கடந்த ஒரு மனிதன் கண்ணீரில் நனைந்து கொண்டு, கடினமான விஷயங்களை மென்று கொண்டு ஒரு போர்வைக்குக் கீழே படுத்துக் கொண்டிருந்தான். இதற்குமேல் வாழ்க்கையில் எதுவுமே தேவையில்லை என்ற முடிவுக்கு அவன் வந்தான். அன்பு என்ற ஒன்று மட்டுமே மதிப்புமிக்க விஷயமாக அவனுக்குத் தோன்றியது. கடுமையான பயிற்சிகளும் தண்டனைகளும் நிறைந்த தன்னுடைய அன்றாட ராணுவ வாழ்க்கையிலிருந்து அவன் அதைத் தெரிந்து கொண்டான். ஒரு உறுதியான காலணியால் தாக்கப்பட்டு சிவந்துபோன தன்னுடைய வீங்கிய கன்னங்களை தன் குளிர்ச்சியான கையால் தொட்டுப் பார்த்தபோது, அவன் தன் அன்னையின் மென்மையான கைகளையும், தன் காதலியின் இளம் உள்ளங்கைகளையும் நினைத்துப் பார்த்தான். அவன் போர்ப் பயிற்சிக்காகப் புறப்பட்டு வெளியே செல்லும் நேரங்களில், இதுபோன்ற உணர்ச்சிமயமான விஷயங்கள் அவனுக்குள் அதிகமான மிருக பலத்துடன் வளர்ந்து காணப்பட்டன.

புதிதாக ராணுவத்திற்குள் நுழைந்து, ஜப்பானில் அதே போன்ற துயரங்களை அனுபவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு மத்தியில், ஒருவர் மீது இன்னொருவர் அன்பு செலுத்துவதும், பரிதாபம் கொள்வதும், ஒருவரையொருவர் புரிந்து கொள்வதும் இருந்து கொண்டிருந்தன. அவர்கள் உணர்ச்சிகள் நிறைந்த சிறிய சிறிய வாக்கியங்களை தங்களுக்கிடையே பரிமாறிக் கொள்வார்கள். அங்கிருந்த இருண்ட கழிப்பறைக்குப் பின்னால் தங்களின் தலைவிதியை நினைத்து அழுவார்கள். அதே நேரத்தில் இப்படிப்பட்ட இதயங்களைப் பரிமாறிக் கொள்ளும் போக்கு முதலாம் ஆண்டு ராணுவ வீரர்களுக்கு மத்தியில்கூட இல்லாமல் போய்விட்டது. போர்க்களத்தில் இருக்கும்போது, எல்லா நேரங்களிலும் அவர்களை பகைவர்களின் துப்பாக்கி குண்டுகள் வந்து சந்திப்பதும், உணவுப் பொருட்களுக்காக ஏங்கிக் கொண்டிருப்பதும் தான் நடந்து கொண்டிருந்தன. ஒரு மனிதன் கடுமையான போரில் ஈடுபட்டிருக்கும்போது, அவன் தன் சொந்தக் கைகளால் தன் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும்- தன்னுடைய துயரங்களுக்குத் தானே மருந்து போட்டு குணமாக்கிக் கொள்ள வேண்டும்- தன் சொந்த மரணத்தைத் தானே பார்த்துக் கொள்ள வேண்டும் என்னும் விஷயங்களை அவன் கற்றுக்கொண்டான். ஒவ்வொரு மனிதனும் தன்னுடைய வாழ்க்கையை ஒரு தோலாலான பைக்குள், அவனேகூட, ஃப்ளாஸ்க்கிற்குள் நீரைப் பாதுகாத்து வைத்திருப்பதைப்போல பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும். ஒரு மனிதன் பிறருக்கு நீரைத் தரக் கூடாது. அதேபோல அவன் தன்னுடைய வாழ்வை பிறருக்காகத் தந்துவிடக் கூடாது. தன்னுடைய சக மனிதர்களைவிட, அவனுடைய உடல் சிறிது பலவீனமானதாக இருந்தால், அவன் உடனடியாக மற்றவர்களிடமிருந்து விலக்கப்பட்டு விடுவான். மரணம் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருக்கும். முழு ராணுவக் குழுவே பசியால் துடித்துக்கொண்டிருக்கும் போது, ஒருவன் தன்னுடைய உணவை இன்னொருவனுக்குத் தருகிறான் என்றால், அவன் மரணத்தைத் தேடிக் கொள்கிறான் என்று அர்த்தம். ஒரு உணவுத் துண்டுக்கு முன்னால் தோழர்கள் ஒருவரையொருவர்  உயிரோட்டமே இல்லாமல் பார்த்துக் கொள்வார்கள்.

அவன் நினைத்துப் பார்க்க முடியாத நரம்புகளின் முறுக்கேற்றலுடன் போர்க்களத்தில் இருக்கும்போது, திடீரென்று அவன் தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்து விடுவான். தன்மீது உண்மையான அன்பு வைத்திருந்தவர்களில் யாருமே தான் பழகியவர்களிலோ, நெருங்கிய நண்பர்களிலோ, தன்னுடைய சக போர் வீரர்களிலோ இல்லை என்பதையும்; தன்னுடைய தாயும் அந்தப் பெண்ணும் மட்டுமே அப்படிப்பட்டவர்களாக இருந்தார்கள் என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். எதிரிகளின் படை திடீரென்று ஆச்சரியம் உண்டாகும் வகையில் குண்டு போடுவதை நிறுத்தியபோது, மூச்சுவிட முடியாத அளவிற்கு ஒரு வகையான அமைதி போர்க்களமெங்கும் நிலவிக் கொண்டிருந்தது. அவன் மலை மீதிருந்து பயன்படுத்தப்படும் தன் 4.1 துப்பாக்கியின் தூரநோக்கி வழியாகப் பார்த்தபோது, அவனுக்கு முன்னால் விரிந்து கிடந்த சமவெளியில் ஏதேவொரு மரம் இருந்தது. அந்த மரம்தான் துப்பாக்கியால் சுடுவதற்குரிய குறியாகப் பயன்பட்டுக் கொண்டிருந்தது. பிறகு தன்மீது உண்மையான அன்பு வைத்திருந்த அந்த இரண்டு உருவங்களும் அடித்துப் புரண்டு தன்னை நோக்கி ஓடிவந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். தொலைநோக்கி மூலம் பார்த்தபோது தெரிந்த காட்சியில், அவனுடைய இறந்துபோன காதலி தனக்கே உரிய அழகான நடையுடன் நடந்து வந்து, தன்னுடைய நீளமான இடது காலை வெளியே நீட்டிக் கொண்டிருந்தாள். எவ்வளவு கடுமையாக முயற்சி செய்தும், அவளால் அந்த நடையை எந்தச் சமயத்திலும் குணப்படுத்தவே முடியவில்லை. அவளுடைய அந்த நடையை தன் மனதில் மீண்டும் கொண்டு வந்து பார்த்தபோது, அவள் நேராக வேதனை நிறைந்த தன் மனதிற்குள் நடந்து வந்து இறங்குவதைப்போல அவன் உணர்ந் தான்.


ஏற்கெனவே வெப்பத்தாலும் களைப்பாலும் சோர்வடைந்து போயிருந்த அவனுடைய இதயத்தை அவளுடைய தாறுமாறான நடை உலுக்கி எடுத்தது. அவள் உயிருடன் இருந்தபோது, அவன் அவளுடன் சேர்ந்து நடந்திருக்கிறான்- அவளுடைய இடது காலை தன் மனதிற்குள் அவன் திட்டியிருக்கிறான்- சபித்திருக்கிறான். அவளை மிகவும் கசப்புடன் அவன் நடத்தியிருக்கிறான். ‘என்னை மன்னித்து விடு.... மன்னித்து விடு...' எதிரிகளின் எல்லையைப் பார்த்த நிமிடத்தில், அவன் தன் மனதிற்குள் கூறிக்   கொண்டான். தன்னிடமிருந்து எதுவுமே பெறாத தன் காதலியின் உருவத்தை மனதில் கட்டிப் பிடித்துக் கொண்டு, அவன் போரின் துயரங்களை மறந்து கொண்டிருந்தான்.

அவன் ‘சவுத் ஸீஸ்' என்ற பகுதியில் இருந்த படைக்கு மாற்றப்பட்டான். புதிதாக படைக்குள் நுழைக்கப்பட்ட மனிதன் என்ற வகையில், அவனைப் பொறுத்தவரையில் அது எதிரிகளுக்கு எதிரான போராக இருக்கவில்லை. ஜப்பானிய போர் வீரர்களுக்கு எதிரான போராக அது இருந்தது. வெப்பம், குதிரைகளின் முதுகுகளில் பித்த வெடிப்புகளை உண்டாக்கியது. அவற்றின் முதுகுப் பகுதிகளிலிருந்து தோல் உரிந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. அதனால் சேணமாகக் கட்டப்பட்டிருந்த போர்வைகள் பயனற்றவையாக ஆயின. அதனால் குதிரைகளுக்கு பதிலாக புதிதாக ராணுவப் படைக்குள் சேர்க்கப்பட்ட மனிதர்கள் துப்பாக்கி வண்டிகளைப் பிடித்து இழுத்துக் கொண்டு சென்றார்கள். வெப்பம் மிகவும் கடுமையாக இருந்தது. அதனால் பகல் வேளைகளில் படைகள் நடந்து செல்வதென்பது நினைத்துப் பார்க்க முடியாத ஒரு விஷயமாக இருந்தது. அந்தக் காரணத்தால் படைகள் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் அணிவகுத்துச் சென்று கொண்டிருந்தன.

அதிகாலை ஒரு மணிக்கு கண் விழிப்பது; ஒன்று முப்பதுக்கு புறப்படுதல்; காலை பதினொரு மணிக்கு தூங்கச் செல்வது. ஆனால் புதிதாகப் படையில் சேர்ந்த வீரர்கள் குதிரைகளை கவனித்துக் கொள்ள வேண்டும்; போர்க் கருவிகளைச் சோதித்துப் பார்க்க வேண்டும்; துப்பாக்கிகளை சரி பார்க்க வேண்டும்; உணவுப் பொருட்களைத் தயார் செய்ய வேண்டும். அந்த வகையில் பார்த்தால், அவர்கள் நாளொன்றுக்கு இரண்டு மணி நேரம்தான் தூங்க முடியும். களைத்துப் போன போர் வீரர்களால் இழுக்கப்பட்டுச் செல்லும் துப்பாக்கி வண்டிகள் அந்த அளவிற்கு வேகமாகச் செல்லாது. நான்கு அல்லது ஐந்து வருடங்கள் ராணுவத்தில் இருந்தவர்களான உயர் தனி அதிகாரிகள், குதிரைகளாக வண்டியை இழுத்துச் செல்லும் வீரர்களை மிகவும் கொடூரமான வகையில் திட்டுவார்கள். உயர்நிலையில் இருக்கும் போர்வீரர்களின் தாக்குதல்களிலிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்வதற்கு அவர்கள் படாதபாடு படுவார்கள். புதிதாக படைக்குள் நுழைந்திருப்பவர்களுக்கு உண்மையான எதிரிகள் யார் என்றால்- அவர்களுக்கு முன்னால் நின்று கொண்டிருக்கும் வெளிநாட்டுப் படை வீரர்களல்ல. அந்த எதிரிகள்- நான்காவது அல்லது ஐந்தாவது வருட வீரர்கள், பயிற்சியாளர்கள், பிறகு.... அதிகாரிகள்.

உயர்நிலையில் இருக்கும் போர்வீரர்களால் திட்டப்பட்ட- அடிக்கப்பட்ட டோஷியோ, தோள்களில் வேதனை உண்டாக அடர்ந்த காடுகளின் வழியாக துப்பாக்கி வண்டியை இழுத்துச் செல்லும்போது, தன்னுடைய காதலியின் உருவத்தை தன் இதயத்திற்குள் நினைத்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.

‘நீங்கள் என்ன சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் அதைப் பற்றி மீண்டும் நினைக்கிறீர்கள்.... அப்படித்தானே?' காதல் என்ற ஒன்று உண்டான பிறகு ஒரு வார்த்தைகூட பேசாமல் படுத்திருந்த அந்தப் பெண் டோஷியோவைப் பார்த்து மென்மையான குரலில் கேட்டாள். தன்மீது அவனுக்கு அந்த அளவிற்கு திருப்தியில்லை என்ற விஷயம் அவளுக்கு நன்றாகத் தெரியும். அவன் அந்த இன்னொரு பெண்ணை நினைத்துக் கொண்டிருக்க வேண்டுமென்று அவள் நினைத்தாள். "இல்லை... எதுவுமில்லை...'' அவன் உடனடியாக மறுத்துக் கூறுவான். ஆனால், அந்தக் குரல் எதையும் மறுப்பதைப்போல இருக்காது. அதற்கு பதிலாக அவள் கூறியதை ஒப்புக் கொள்வதைப் போலவே அது இருக்கும்.

 ‘உங்களைக் காதலிப்பதைத் தவிர, வாழ்வதற்கு எனக்கு வேறு வழி தெரியவில்லை. நீங்கள் என்னைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்பதைப் பற்றியெல்லாம் நான் அக்கறை செலுத்திக் கொண்டிருக்க முடியாது!' அவள் அவனுக்கு எழுதுவாள்: ‘என்றாவது ஒருநாள் நீங்கள் என் மனதைப் புரிந்து கொள்வீர்கள் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு இருக்கிறது. ஆனால், அந்தச் சமயத்தில் நான் இறந்து போயிருப்பேன்.' அவளைப் பற்றி அவன் நினைக்கும்போதெல்லாம் அந்த வார்த்தைகளுக்குப் பின்னாலிருக்கும் அவளுடைய இதயம் அவனுடைய நெஞ்சுக்குள் நுழைவதைப்போல இருக்கும். எப்படிப்பட்ட வேதனைகளை அனுபவிப்பதற்கும் தான் தகுதியானவனே என்று அவன் அப்போது நினைப்பான். அவன் தனக்குள் கூறிக் கொள்வான்: ‘இன்னும் துயரங்களை அனுபவிக்க வேண்டும்!' அதைக் கூறி விட்டு ஐந்தாவது வருட போர்வீரர்களின் சாட்டை அடிகளை வாங்கிக் கொண்டு துப்பாக்கி வண்டியை இழுத்துச் செல்வான். கீழே மிகவும் தூரத்தில் ஃபிலிப் பைன்ஸ் நாட்டுப் போர்வீரர்களால் எரிக்கப்பட்ட சீனிக் கிழங்கு தோட்டம் கரிந்துபோய் காணப்படும். வானத்தின் விளிம்பிற்கு மேலே ஒரு பெரிய சிவப்பு நிலா வந்து கொண்டிருக்கும். போர்வீரர்கள் எழுப்பிய தூசிகளால் அது மறைக்கப்பட்டிருக்கும். மஞ்சள் நிற கன்னங்களைக் கொண்ட காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களும், அவர்களுடைய வியர்வையில் நனைந்த சீருடைகளும் நிலவின் ஒளியைப் பிரதிபலித்துக் கொண்டிருக்கும். அப்போது அவர்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் சாயம் ஏற்றப்பட்டவர்களைப்போல தோன்றுவார்கள். ஒடுகலாகவும், நீளமாகவும் இருக்கும் அந்த ராணுவ வீரர்களின் படை அணிவகுப்பு பெரிய அளவில் கட்டளை எதுவும் இல்லாமலே, ஒரு மலைப் பாதையைக் கடந்து அணி வகுத்துச் சென்று கொண்டிருக்கும். அது படிப்படியாக மிகவும் ஒடுங்கிப் போன வரிசையாக மாறிவிடும்.

‘இரண்டாம் எண்ணும் மூன்றாம் எண்ணும் வெளியே வாங்க!' ஒரு குழுவின் தலைவரின் மிகவும் மென்மையான குரல் பின்னாலிருந்து ஒலித்தது. அப்படி அழைக்கப்பட்டவர்கள் வரிசையின் நடுப்பகுதியிலிருந்து க்யாஸ் நிறைக்கப்பட்ட கவசத்துடன் வெளியே வந்து, ஒரு வார்த்தைகூட வாய் திறந்து கூறாமல் நன்கு மூச்சை விட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களுடைய ஆடைகள் வேர்வையும் தூசியும் கலந்து கருப்பு நிறத்தில் காட்சியளித்தன. டோஷியோ தன்னுடைய இரண்டாவது கயிறை வேறொரு மனிதனிடம் கொடுத்துவிட்டு, மூன்றாவது கயிறை வைத்திருந்த தனி அதிகாரி நாக்காகவாவுடன் வரிசையை விட்டு வெளியே வந்தான். நாக்காகவா மீனவனாக இருந்தவன். தான் எப்போது வரிசையை விட்டு வெளியே வந்தோம் என்ற விஷயமே  டோஷியோவிற்குத் தெரியாது. அவனுடைய கழுத்து மிகவும் வெப்பமாக இருந்தது. அவனுடைய கண்கள் அவன் தலைக்குள் நீச்சலடித்துக் கொண்டிருந்தன. அவனுடைய இதயம் துள்ளிக் குதித்து மார்பின் சுவர்கள்மீது வந்து வேகமாக மோதிக் கொண்டிருந்தது.


அவன் நாக்காகவாவுடன் சேர்ந்து சிறிது நேரம் தரையில் விழுந்து கிடந்தான். ஆனால், இறுதியாக வரிசையின் கடைசிப் பகுதியைப் பின்தொடர்ந்து நடந்தார்கள். அவர்கள், துருத்திக் கொண்டிருந்த எலும்புகளைக் கொண்ட ஒரு குதிரையின் கடிவாளத்தைக் கையில் எடுத்துக் கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். ஆனால், குதிரையின் காலடிகளுடன் போட்டி போட்டு நடப்பதற்கான பலத்தை அவர்கள் இழந்துவிட்டிருந்தார்கள். அவர்களுடைய கால்களிலிருந்த உணர்ச்சிகள் காணாமலே போய்விட்டன.

அந்தக் கால்களுடன் அவர்களால் இரண்டு நாட்களுக்கு நடக்கவே முடியாது. சற்று மேடாக இருந்த இடத்தில் வைக்கப்படும் ஒவ்வொரு அடியும் தங்களுடைய உடல்களிலிருந்து குருதியைக் குடிப்பதைப்போல உணர்ந்தார்கள். தற்காலிகமாக பதவியில் அமர்த்தப்பட்டிருக்கும் ஒரு படைத்தலைவரும் உயர் அதிகாரியுமான ஒருவர் கீழே இறங்கி வந்து சொன்னார்: ‘நீங்கள் என்ன நாசம் பிடித்த காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள்?' அதைக் கூறிவிட்டு, கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்த அவர்களின் கைகளில் சாட்டையைக் கொண்டு அடித்தார். ‘குதிரையை இப்படியா பிடித்துக் கொண்டு திரிவது? அந்தக் குதிரை என்ன செய்து கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் பார்க்கவில்லையா? மனிதர்களே, உங்களுக்கு மாற்றாக ஏராளமான ஆட்கள் இருக்கிறார்கள். ஆனால், குதிரைகளுக்கு இல்லை... இந்த அளவிற்கு கடுமையாக வெப்பம் இருக்கும்போது, தேவையில்லாமல் எனக்கு தொந்தரவு தராதீர்கள்.' அவர்கள் அந்த வெளியிலிருந்து வந்திருக்கும் உயர் அதிகாரியையே எந்தவொரு வார்த்தையும் பேசாமல் பார்த்தவாறு, தாங்கள் பிடித்திருந்த கடிவாளத்தைக் கைவிட்டார்கள்.

அவர்கள் குதிரையிலிருந்து விலகிச் சென்றார்கள்.

அவர்கள் எந்த அளவிற்கு ஆழமாக சுவாசித்தார்களோ தெரியவில்லை, அவர்களுடைய நுரையீரல்களில் அசுத்தக் காற்று நிறைந்திருந்தது. இன்னும் சொல்லப் போனால் அவர்களால் மூச்சு விடவே முடியவில்லை. இறுதியாக, அவர்களின் வலது பக்க தோள்களை அழுத்திக் கொண்டிருந்த க்யாஸ் நிறைக்கப்பட்ட கவசங்கள் இறுதி அடியைக் கொடுக்கும்போலத் தோன்றியது. பகல் வேளையில் ஆதவனின் வெப்பத்தில் குளித்த மலைவெளி, இரவு நேரத்தில் மூச்சை விட்டுக் கொண்டிருந்தது. அது வியர்வையும் தூசியும் நுழைந்திருக்கும் மிகச்சிறிய துவாரங்களைக் கொண்ட ராணுவ வீரர்களின் உடல்களை போர்வையென மூடிக்கொண்டிருந்தது. அவர்கள் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். இன்னும் சரியாகக் கூறுவதாக இருந்தால்- அணிவகுத்துச் சென்று கொண்டிருந்த அவர்களுடைய குழு, அவர்களுடைய உடல்களை முன்னோக்கி இழுத்துச் சென்று கொண்டிருந்தது.

குதிரைக்கு அப்பாலிருந்து நாக்காகவாவின் குரல் வந்ததை டோஷியோ கேட்டான். ‘என்னால் இதற்கு மேல் நடக்க முடியாது.' நாக்காகவா அதே வார்த்தையை அதற்கு முன்பும் பல முறை திரும்பத் திரும்ப கூறி விட்டிருந்தான். ஒவ்வொரு முறை கூறும்போதும், அந்த வார்த்தை டோஷியோவின் பலவீனமான இதயத்தைக் குத்திக் கிழித்துக் கொண்டிருந்தது. முழுமையாககளைத்துப் போய், நாக்காகவா தன்னுடைய எலும்புகள் நிறைந்த நீளமான உடலில் எந்தவித சக்தியும் இல்லாமல் இருந்தான். ‘இந்த முறை நான் உண்மையாகவே கூறுகிறேன். என்னால், முடியவில்லை. இதற்கு மேல் என்னால் நடக்க முடியாது' நாக்காகவா சொன்னான். எனினும், சுமார் அரைமணி நேரம் குதிரை தன்னை இழுத்துச் செல்லுவதை அவன் எப்படியோ சமாளித்துக் கொண்டான்.

அந்தக் குழு மவுண்ட் சாமத்திற்கு அருகில் வந்து சேர்ந்தது. அங்கு உடனடியாக ஒரு அணிவகுப்பு கட்டாயம் தேவைப்பட்டது. இல்லாவிட்டால், வலது பக்கத்திலிருந்து சிறந்த ஏற்பாடுகளுடனும் கட்டுப்பாடுகளுடனும் வந்து கொண்டிருந்த எதிரிகளின் படையினரிடமிருந்து பலமான அடியை அந்தக் குழு கட்டாயம் வாங்கும். அதனால் அங்கு சிறிதுகூட நிற்காமல், அந்தப் படை தன்னுடைய நடையைத் தொடர்ந்தது. ‘நான்.... நான் என் கையை விடப் போகிறேன்.... நான் விடுவதைத் தவிர வேறு வழி இல்லை.' நாக்காகவாவின் குரல்.... அவனுடைய நண்பன் முழுமையாக களைப்படைந்து போய் விட்டான் என்பதை டோஷியோவுக்கு உணர்த்தியது. வார்த்தையின் இறுதிப் பகுதி இறந்துபோய்விட்டது. முதலில், அந்த குரல் டோஷியோவின் பெயரைக் கூறி அழைப்பதைப்போல இருந்தது. ஆனால், அது முடிவடைவதற்குள் அந்த அழைப்பு மறைந்து போய்விட்டது. அதற்குப் பிறகு வந்த குரல் ஏதோ அவன் தனக்குத் தானே கேட்டுக் கொண்டதைப் போன்று அவனுக்கு தோற்றம் தந்தது. இன்னும் சொல்லப்போனால்- தன்னுடைய மன ஓட்டம் தன் கடந்தகால வாழ்க்கையின் வழியாக முற்றிலும் ஓடிக் கொண்டிருப்பதைப்போல அவனுக்குத் தோன்றியது. அந்த மனதைத் தொடும் வார்த்தைகள் டோஷியோவின் இதயத்தின் அடித்தளத்தில் போய்ச் சேர்ந்தன. ஆனால், தன்னுடைய தோழனுக்கு உதவக்கூடிய அளவிற்கு அவனுக்கு சக்தி இல்லாமலிருந்தது. அவனுடைய தோளைத் தட்டிக் கொடுக்கவோ, அவனை உற்சாகப்படுத்தவோகூட அவனால் முடியவில்லை. அப்படியே டோஷியோ ஏதாவது செய்ய ஆரம்பித்தால், தன்னைத் தானே நிலைநிறுத்திக் கொள்வதற்கான பக்க பலத்தைக்கூட அவன் இழந்து மரணத்தைத் தழுவ வேண்டியதிருக்கும். அவன் அமைதியாக இருந்தவாறு தன்னுடைய நடையைத் தொடர்ந்தான். அவன் தன் மனதைக் கல்லாக்கிக் கொண்டான். அப்போதும் நாக்காகவாவின் குரல் அவனைக் கிட்டத்தட்ட பிடித்து இழுத்தது. ‘நான் போகப் போகிறேன்.' திணறிக் கொண்டே நாக்காகவா கூறினான். அவனுடைய கைகள் அந்த அணியிடமிருந்து விடுபட்டிருந்தது. அவன் கீழே விழுந்து, அசைவே இல்லாதவனாக ஆனான். அடர்த்தியான தூசி படிந்து விட்டிருந்த அந்த சாலையைத்தான் தன்னைப் புதைக்கும் இடமாக அவன் தேர்ந்தெடுத்திருந்தான். அவன் தன் தலையை லேசாக ஆட்டினான் அதன் மூலம் இதுவரை அடிமைத்தனம் என்ற கயிறால் இழுக்கப்பட்டுக் கொண்டிருந்த தன் உடலை, மரணம் விடுதலை செய்திருக்கிறது என்று கூறுவதைப்போல அந்தச் செயல் இருந்தது. தொடர்ந்து அவன் தரையில் சரிந்து கிடந்தான். செயல்களை மிகவும் மெதுவாகச் செய்யக் கூடியவனாகவும், ஞாபக சக்தியில் மிகவும் மோசமானவனாகவும், அடிக்கொருதரம் உயர் அதிகாரிகளால் அடிக்கப்படக் கூடியவனாகவும் இருந்த நாக்காகவாவின் வாழ்க்கை மவுண்ட் சாமத்திற்கு அருகில் முடிவடைந்தது. அந்த வகையில் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக தன் கண்களுக்கு முன்னால்- டோஷியோ ஒரு தோழனை மரணத்தைத் தழுவ விட்டான். தன்னுடைய வீட்டுக்குத் திரும்பி வந்தபோது, தன் அன்னையும் மரணத்தைத் தழுவி விட்டாள் என்ற விஷயத்தை அவன் தெரிந்து கொண்டான்.

வசந்த காலத்தில் ஆரம்பத்தில் ஒருநாள், அதே நிறுவனத்தில் வேலை பார்த்த யோஷிக்கோ யுகாமியுடன் சேர்ந்து டோஷியோ அலுவலகத்தை விட்டு வெளியேறினான். அன்றைய பகல் வேளையில், அலுவலகப் பணியாட்கள் எலிவேட்டரின் வாசலுக்கு முன்னால் கூட்டமாக நின்றிருந்தார்கள். ஒரு வர்த்தக நிறுவனத்தின் புகை பிடிக்கும் பகுதியில் இருந்த- வியாபாரம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் பேசும் இடத்திற்கு அருகில் போடப்பட்டிருந்த மேஜையின்மீது சில்லரை குவியல்களாகக் குவிந்திருக்க அதற்கு முன்னால் மக்கள் கூட்டமாகக்  குழுமியிருந்தார்கள்.


வெளியேறும் வழிக்கு அருகிலிருந்த கூட்டத்தைக் கிழித்துக் கொண்டு அவர்கள் செல்ல முயற்சித்தபோது, யோஷிக்கோ அங்கிருந்த எல்லாரின் காதுகளிலும் கேட்கும் வண்ணம் சாதாரணமாக கத்தினாள்: "குராக்கோ!'' அந்தக் கட்டடத்திற்கு வெளியே இருந்த விளக்கு வெளிச்சத்தில் ஒளிர்ந்து கொண்டிருந்த அந்த முகம் அங்கிருந்த மக்களுக்கு மத்தியில் லேசாக புன்னகைத்தது. "நீ இப்போது வீட்டுக்குத்தானே செல்கிறாய்? நாம் வீட்டுக்குச் சேர்ந்து செல்வோம். சரியா?'' தன்னை நோக்கி வந்து கொண்டிருந்த குராக்கோவைப் பார்த்து யோஷிக்கோ சொன்னாள். தங்களின் இல்லங்களை நோக்கி மிகவும் வேகமாக நடந்து போய்க்கொண்டிருந்த மக்களுக்கு மத்தியில் அவர்கள் டோக்கியோ ஸ்டேஷனை நோக்கி நடந்து சென்றார்கள். அவர்கள் இருவருக்கும் நடுவில் சென்றுகொண்டிருந்த யோஷிக்கோ யுகாமிக்கு அவளுடைய கணவனின் மூலம் ஒரு குழந்தை இருந்தது. அவன் போரில் மரணமடைந்து விட்டான். ஆனால், அந்த மூவரில் அவள்தான் மிகவும் உற்சாகம் நிறைந்தவளாக இருந்தாள். இப்போது எவ்வாறு உறுதியாக நடக்கிறாளோ, அதேபோலத்தான் அவள் தன்னுடைய வாழ்க்கையிலும் திடமான முடிவுகளை எடுப்பாள் என்பது பார்க்கும்போதே தெரிந்தது. அணிந்திருந்த அடர்த்தியான நீல நிற அரைக் கோட்டிற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்த கூந்தல், அவளுடைய அகலமான தோள்களை மறைத்தன.

இடது பக்கத்தில் நடந்து வந்து கொண்டிருந்த டோஷியோ முப்பதுகளின் பாதியைத் தாண்டி விட்டிருந்தாலும், அவனுடைய வயதைவிட அதிக வயதைக் கொண்டவனைப் போலத் தோன்றினான். அவனுடைய செயல்களில் மாறுபட்ட பல தன்மைகளையும், ஒரு ஊர் சுற்றித் திரியும் மனிதனின் களைப்பையும் ஒருவரால் மிக எளிதில் கண்டுபிடிக்க முடியும். ராணுவத்தில் அதிக காலம் இருந்தவர்களிடம் பொதுவாகவே அத்தகைய விஷயங்கள் இயல்பாகவே இருக்கும். ஆனால், அதே நேரத்தில் போர் மற்றும் ராணுவ வாழ்க்கையின் துயரங்களைக் கடந்து வாழ்ந்திருக்கும் ஒரு மனிதனுக்குள் மறைந்திருக்கும் பலத்தையும் அவனிடம் காணமுடியும். ராணுவத்தில் இருந்தபோது செய்ததைப்போலவே, அவன் தன்னுடைய நீளமான கால்களை இழுத்துக் கொண்டே நடந்தான்.

வலது பக்கத்தில் நடந்து வந்துகொண்டிருந்த குராக்கோ, கோடுகள் போட்ட வானத்து நீல நிறத்தில் பளிச்சென்றிருக்கும் ஆடையை அணிந்திருந்தாள். ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த சதுரமான இடத்திற்குள் அந்த மேலாடையின் கோடுகள் உருகிக் கொண்டிருப்பதைப்போல தோன்றின. அந்த இரவு நேரத்து வெளிச்சத்தில் அது ஒளிர்ந்து கொண்டிருந்தது. அவள் மிகவும் குறைவாகவே பேசக்கூடிய குணத்தைக் கொண்டவளாக இருந்தாள். எதையும் மனம்திறந்து பேசக்கூடிய யோஷிக்கோவிடம்கூட அவள் அதிகம் பேசாதவளாக இருந்தாள். அவள் தரையைப் பார்த்துக் கொண்டே சிறுசிறு எட்டுகளை வைத்து நடந்து வந்து கொண்டிருந்தாள். பயணச் சீட்டுகள் வழங்கப்படும் சாளரத்திற்கு முன்னால் நின்றுகொண்டிருந்த மக்களின் வரிசைக்கு அருகில் வந்ததும், யோஷிக்கோ தன் வலது கையில் வைத்திருந்த ஒரு பெரிய பார்சலை அவர்களுடைய கண்களுக்கு முன்னால் நீட்டினாள். அங்கிருந்த குறிப்பிட்ட நபர் யாருக்கும் காட்ட வேண்டும் என்ற எண்ணத்தில் அவள் அதைக் காட்டவில்லை. "நான் இன்றைக்கு இதைப் பார்த்துக் கொள்ளப் போகிறேன்'' என்றாள் யோஷிக்கோ.

“அது என்ன? நான் கேட்கலாம் அல்லவா?'' குராக்கோ கேட்டாள். “நான் இதை விற்பனை செய்யப்போகிறேன். இது ஒரு  உரோமம்... கரடியின் தோல்...'' யோஷிக்கோ இதைக் கூறிக்கொண்டே, அந்த பார்சலின் ஒரு மூலையிலிருந்து கருப்பு நிற காலுறைகள் அணிந்த ஒரு பாதத்தை வெளியே இழுத்தாள். அவள் அதை குறும்புத்தனமாக இரண்டு முறை அசைத்துக் கொண்டே குலுங்கிக் குலுங்கி சிரித்தாள். அது குராக்கோவையும் புன்னகைக்கச் செய்தது. “ஓ... ஒரு தோல்... அப்படித்தானே?'' டோஷியோ கேட்டான். அந்த தமாஷான கரடியின் பாதம் அவளுக்கு உபயோகமாக இருக்கிறது என்பதை நினைத்து அவன் ஆச்சரியப்பட்டான்.

“ஆமாம்.... இதற்கு எனக்கு அவர்கள் நான்காயிரம் யென்கள் தருவதாகக் கூறினார்கள். இது இன்னும் கொஞ்சம் பெரியதாக இருந்திருந்தால், இன்னும் சற்று அதிகமாக பணம் கிடைத்திருக்கும். ஏனென்றால், இதை விற்பனை செய்யும்படி அவர்கள் என்னை மிகவும் வற்புறுத்தினார்கள். கடைசியில் நான் கொடுத்து விடுவது என்று தீர்மானித்துவிட்டேன். உண்மையாகவே இதற்குமேல் விற்பதற்கு என்னிடம் எதுவுமில்லை.'' யோஷிக்கோ சொன்னாள்.

“நான் அதே நிலைமையில்தான் இருக்கிறேன்... உனக்குத் தெரியுமா?'' குராக்கோ டோஷியோவின் பக்கம் திரும்பிக் கொண்டே புன்னகைத்தாள்.

யோஷிக்கோ சொன்னாள். “எல்லாரும் ஒரே நிலையில்தான் இருக்கிறோம். அது பெரிய விஷயமில்லையா?''

“ஆனால், நீங்கள் நல்ல நிலைமையில் இருக்கிறீர்கள். ஏனென்றால், விற்பனை செய்வதற்கு உங்களிடம் ஏதாவது இருக்கிறதே.'' டோஷியோ சொன்னான். அவனுடைய வார்த்தைகள் வித்தியாசமானவையாக ஒலித்தன. ஆனால், திடீரென்று இரண்டு பெண்களின் அந்தரங்க வாழ்க்கைக்குள் தான் அறிமுகப்படுத்தப்படவே, அதனால் உண்டான பரபரப்பில் என்ன கூறுவது என்று அவனுக்கே தெரியாமலிருந்தது.

“சரி... இதே விஷயம் எப்போதும் நடந்து கொண்டிருக்க முடியாது. இன்னும் ஒரு வருடத்திற்குக்கூட இருக்காது... உன் நிலைமை என்ன?'' யோஷிக்கோ அவள் என்ன கூறுகிறாள் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அவளை நோக்கித் திரும்பினாள்.

“இல்லை... '' குராக்கோ தன்னுடைய தலையை ஆட்டினாள். “என்னிடம் அப்படிப் பெரிதாக ஒன்றும் இல்லை.'' அவள் தலையை ஆட்டும்போது, ஒரு வகையான கவலையின் நிழல் அங்கு தெரிவதை டோஷியோ அவளுடைய முகத்தில் பார்த்தான்.

புகைவண்டி மிகவும் கூட்டமாக இருந்தது. அவர்கள் ஒருவரை விட்டு ஒருவர் தள்ளிவிடப்பட்டுக் கொண்டு இருந்தனர். பல மனித உடல்களாலும் அழுத்தப்பட்டுக் கொண்டிருந்தபோது- அந்தப் பெண்களின் வாழ்க்கைகளை எது மிரட்டிக் கொண்டிருக்கிறதோ, அது தன்னுடைய எதிர் காலத்தையும் இருளச் செய்யும் என்று அவன் நினைத்தான். டோஷியோ பணியாற்றிக் கொண்டிருந்த நிறுவனம் அவனுடைய நண்பருக்குச் சொந்தமானது. அதில் பல வகையான பொருட்களும் இருந்தன. அதில் இரும்பு சம்பந்தப்பட்ட பொருட்களிலிருந்து மேஜைகள், நாற்காலிகள், குழந்தைகளுக்கான சைக்கிள்கள் வரை இருந்தன. ஆனால், அந்தப் பொருட்களை மக்களுக்குக் கொடுக்க முடியாத நிலைமையில் இருந்தது. அந்த நிறுவனம் பொருளாதார பிரச்சினைகளில் சிக்கிக் கொண்டு தள்ளாடிக் கொண்டிருந்தது. அவன் ஒரு காலத்தில் ராணுவத்திற்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்யும் ஒரு நிறுவனத்தில் வேலை செய்திருந்தாலும், அவன் கடந்த காலத்தில் ஆறு வருடங்கள் ராணுவத்தில் பணியாற்றிய வாழ்க்கை ஒரு க்ளார்க்கிற்கு இருக்க வேண்டிய திறமையை அவனிடமிருந்து முழுமையாகப் பறித்து விட்டிருந்தது.

யோட்ஷுயா ஸ்டேஷனில் குராக்கோ இறங்கிக் கொண்டாள். புகைவண்டியில் இப்போது குறைவான கூட்டம் இருந்தது. டோஷியோவும் யோஷிக்கோவும் நடுவிலிருந்த கதவுக்கு அருகில் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு நின்றிருந்தார்கள்.

“அவள் அழகாக இருக்கிறாள். இல்லையா?'' யோஷிக்கோ கேட்டாள்.


“ம்...'' ஏதோ சிந்தனையில் மூழ்கிவிட்டிருக்கிறான் என்பதைப் போல டோஷியோவின் குரல் இருந்தது.

“நீங்கள் அப்படி நினைக்கவில்லையா?''

“ஆமாம்... அவள் அழகாக இருக்கிறாள்... மிகவும் அழகாக இருக்கிறாள்...'' அவன் அவசரமாகக் கூறினான். ஆனால், குராக்கோவிடமிருந்து தான் பெற்ற வேதனை நிறைந்த உணர்ச்சியை வெளிப்படுத்துவதற்கு தன்னிடம் வார்த்தைகள் இல்லாமல் இருந்தான். ‘அழகு' என்பதோ ‘வசீகரம்' என்பதோ அதற்குப் பொருத்தமான வார்த்தை இல்லை. அது அவனுடைய இதயத்தை மிகவும் ஈரமாக்கி விட்டது. இன்னும் சொல்லப் போனால்- அது அவனுடைய இதயத்தை பலமாகக் குலுங்கச் செய்தது.

“மிகவும் சிறிய வயதில் இருக்கும்போதிலிருந்தே அவளை நான் பார்த்திருக்கிறேன். என்னைப் பொறுத்தவரையில் இந்தக் காலத்தில் அழகான ஆண்கள் என்னைக் கவர்ந்ததே இல்லை. அதே நேரத்தில் அழகான பெண்களைப் பார்த்துக் கொண்டிருப்பதில் எந்தச் சமயத்திலும் நான் சோர்வு அடைந்ததே இல்லை.'' யோஷிக்கோ சொன்னாள்.

“அது சரிதானா?'' டோஷியோ கேட்டான்.

தொடர்ந்து யோஷிக்கோ அவனிடம் சொன்னாள்: “உங்களுக்குத் தெரியுமா? அவள் என்னை மாதிரியேதான்...''

“உங்களை மாதிரியா?''

“ஆமாம்... போரில் அவள் தன்னுடைய கணவனை இழந்து விட்டாள்.''

“அப்படியா?'' டோஷியோவின் குரல் வேறு மாதிரி ஒலித்தது. ஆனால், அதற்குப் பிறகு அவன் எதுவும் பேசவில்லை. குராக்கோவின் உருவம் தன் கண்களுக்கு முன்னால் தோன்றுவதைப்போல அவன் உணர்ந்தான். அவன் தன்னுடைய கண்களுக்கு முன்னால் அவளுடைய முகத்தைக் கொண்டு வந்தான். அந்த அழகு நினைத்துப் பார்க்க முடியாத சக்தி படைத்ததாகவும், அது அவளுடைய முகத்திலிருந்து நேராகத் தன்னுடைய இதயத்திற்குள் வேகமாகப் பாய்ந்தோடி வருவதாகவும் அவனுக்குத் தோன்றியது. முதல் முறையாக அவளுடைய முகத்திலிருந்த அந்த வேதனைக்குக் காரணம் என்ன என்பதை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டான்.

குராக்கோ காதல் வலையில் விழுந்திருக்கிறாள். திருமணம் செய்து கொண்டிருக்கிறாள். மூன்று வருடங்களுக்குப் பிறகு தன் கணவனை அவள் இழந்திருக்கிறாள் என்ற விஷயங்களை அவன் யோஷிக்கோ கூறி தெரிந்து கொண்டான். அவர்கள் ஒருவர்மீது ஒருவர் அன்பு வைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்களால் சந்தோஷமாக இருக்க முடியவில்லை. அவர்களுடைய சந்தோஷத்தை போர் வந்து அழித்துவிட்டது. சமீபத்தில், அவளுக்கு இன்னொரு திருமணம் செய்து வைக்கலாம் என்பதற்காக முயற்சித்திருக்கிறார்கள். ஆனால், அதற்கு அவள் ஒப்புக்கொள்ளவில்லை.

டோஷியோ ஷின்ஜுக்கு ஸ்டேஷனில் யோஷிக்கோவிடமிருந்து விடை பெற்றுக் கொண்டு, ஸ்டேஷனுக்குப் பின்னாலிருந்த ஒரு குறுகலான தெருவில் அவன் மட்டும் தனியே நடந்து சென்றான். தன் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்று அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டுக்கு அருகிலிருந்த ஒரு ட்ரான்ஸ்ஃபார்மர் எரிந்திருப்பதால், அந்த அப்பார்ட் மெண்டில் விளக்கு வெளிச்சம் இல்லாமல் ஒரே இருட்டாக இருக்கும். அதைப் பார்த்தால் தான் வெறுப்படைந்து விடுவோம் என்ற விஷயம் அவனுக்குத் தெரியும். அவன் ஒரு சிறிய காபி கடைக்குள் நுழைந்து, கொஞ்சம் பலகாரங்களுக்கும் ஒரு கப் காபிக்கும் ‘ஆர்டர்' பண்ணினான். தன்னுடைய அலுவலகத்தில் தயாரிக்கப்பட்ட அரிசி சாதத்தை ஒரு சூடான தட்டில் வைத்து அவன் சாப்பிட்டான். இன்னொரு முறை காபி கொண்டு வருமாறு கூறிவிட்டு, ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

அந்த இரண்டு விதவைகளைப் பற்றியும் அவன் சிந்தித்துப் பார்த்தான். போர் கொடுத்த அடிகளால் உண்டான வேதனை என்ன என்பதை மிகவும் அருகிலும், சிறப்பாகவும் அவனால் இப்போது உணரமுடிந்தது. அந்த கரடியின் கறுப்பு உறைகள் கொண்ட கால் பாதங்களை நினைத்துப் பார்த்த அவன் உயிரோட்டமே இல்லாமல் புன்னகைத்தான். தொடர்ந்து தன்னுடைய இதயத்தில் ஒரு வேதனையை அவன் உணர்ந்தான். அவனுடைய முகமெங்கும் பரவுவதற்கு முன்பே, அவனுடைய புன்னகை மறைந்து விட்டது. அவளுடைய கணவன் அவள்மீது ஆழமான அன்பை வைத்திருக்க வேண்டும் என்றும், அதேபோல் அவளும் அவன்மீது நிறைய அன்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் அவன் நினைத்தான். அவளுடைய கணவன் இறந்துபோன பிறகு, அவள் எப்படி வாழ்ந்து கொண்டிருப்பாள்? அன்பு செலுத்தப்பட்ட உயிர் மறைந்துபோன பிறகு, அவளுடைய அன்பு எதை நோக்கிப் பாய்ந்து கொண்டிருக்கும்? பகல் நேர சூரியனைவிட மறைந்து கொண்டிருக்கும் சூரியன் மிகவும் பயங்கரமாக எரிவதைப்போல, அது வானத்திலிருக்கும் காற்றை எரிப்பதற்கு முயற்சிக்குமோ? அந்த முழுமையடையாத அன்புதான் அவளுடைய முகத்தில் வேதனையை உண்டாக்கியிருக்க வேண்டும். அவளுடைய முகத்தில் வெளிப்படும் அந்த பாதிக்கப்பட்ட அழகு, தனிமையில் எரிந்து கொண்டிருக்கும் அந்த அன்பிலிருந்து உண்டாகியிருக்க வேண்டும்.

அவன் காபிக் கடையைவிட்டு வெளியேறி, ஸ்டேஷனுக்கு முன்னால் இருந்த கடைகளில் நிலவிக் கொண்டிருந்த ஆரவாரங்களுக்குள் மீண்டும் போய் கலந்து கொண்டான். தரம் தாழ்ந்த எண்ணெய் கொதிக்கும்போது உண்டாகும் தாங்க முடியாத ஒரு நாற்றம் அந்தப் பகுதி முழுவதும் பரவி விட்டிருந்தது. மின்சார விளக்குகள், உணவுப் பொருட்களைமென்று கொண்டிருக்கும் மனிதர்களின் முகங்களில் ஒரு மங்கலான வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருந்தன. சூப் விற்பனை செய்யப்படும் ஓரத்திலிருந்த ஒரு கடையில், தன்னுடைய வாய்க்கு மிகவும் அருகில் உணவுப் பொருளை வைத்துக் கொண்டிருந்த ஒரு மனிதனை அவன் பார்த்தான். மிகவும் ஒடுங்கிப்போய் இருந்த அந்த மனிதனின் முகத்தையே அவன் பார்த்தான். அந்த மனிதன் ஒரு பருத்தியாலான ராணுவச் சீருடையை அணிந்திருந்தான். அது இடுப்புப் பகுதியில் மிகவும் இறுக்கமாக இருந்தது.

அந்த இளைஞன் மிகவும் பசியில் இருந்திருக்க வேண்டும். அவன் ஒரு பகல் நேரத் தொழிலாளியாக இருக்கவேண்டும் என்று டோஷியோ நினைத்தான். மின் விளக்குத் தூண்களில் வைக்கப்பட்டிருந்த வேலைக்கு ஆள் எடுக்கும் அலுவலகத்தின் அறிவிப்புப் பலகைகளை அவன் நினைத்துப் பார்த்தான். அவற்றில் ‘... யென் நாளொன்றுக்கு. அறை, உணவு தனி...' என்று இருக்கும். இந்த உலகத்தில் தன்னைத் தானே அவன் எப்படி காப்பாற்றிக் கொள்கிறான்? விற்பதற்கு அவனிடம் எதுவுமே இல்லை. இன்னும் சொல்லப்போனால்- இந்த நிலையில் இருக்கும் ஒரு இளைஞனுக்கு நிச்சயம் நல்ல சம்பளம் கிடைக்காது. அதே நேரத்தில்- அவனுக்கு நாம் என்ன உதவி செய்ய முடியும்? அவன் நினைத்தான். இயந்திரத்தனமாக எதையோ மென்று கொண்டிருந்த அந்த மனிதனின் வாயையே டோஷியோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அந்த வாய்க்கு வெளியே இருந்த உதடுகள் மிகவும் தடிமனாக இருந்தன. அவை ஈரமாக இருந்தன. அந்த உண்ணும் பொருளுக்கு மேலே அவை ஒளிர்ந்து கொண்டிருந்தன. திடீரென்று அந்த வாய், போர்க்களத்தில் டோஷியோ அடித்துக் கொன்ற பன்றியின் வாயாக மாறியது.


 தாங்கிக்கொள்ள முடியாத ஒரு உணர்வை அவன் அப்போது அனுபவித்தான். அதைத் தொடர்ந்து தன்னுடைய சரீரத்தின் ஒரு மூலையிலிருந்து வெப்பம் கிளம்பி வெளியேறுவதைப்போல அவன் உணர்ந்தான்.

‘ஓ.... இல்லை... இதை என்னால் தாங்கிக்கொள்ளவே முடியாது....' தான் நடந்து கொண்டிருந்தபோதே அவன் மறுத்துக் கூறினான்.

‘பன்றி! பன்றி!' அவன் உரத்த குரலில் கூறினான். தன்னுடைய சரீரத்தின் அடி ஆழங்களுக்குள் இருந்து வெப்பமாக ஏதோவொன்று கொதித்துக் கொண்டு வெளியே வருவதைப்போல அவனுக்குத் தோன்றியது. டோஷியோவின் தலைக்குள் பன்றியின் உதடுகள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தன. ‘அந்த பாழாய்ப் போனவனின் மகன் மாட்சு சாக்கா என்னுடைய ஃப்ளாஸ்கில் இருந்த நீரை லிங்காயென் வளைகுடாவில் இருந்தபோது திருடி விட்டான். நான் உணவை வாயில் வைத்துக் கொண்டு படாதபாடு பட்டேன். பயங்கரமான அனுபவம்...' அவன் தனக்குத் தானே கூறிக் கொண்டான். பன்றியின் ஈரமான உதடுகள் அவனுடைய தலைக்குள் தொடர்ந்து தோன்றிக் கொண்டே இருந்தன. 'மாட்சு சாக்காவின் வாய் பன்றியின் வாயைப் போலவே இருக்கிறது. என்னுடைய வாயும்தான்.' அவன் கூறிக் கொண்டான்.

அவை மிகவும் பயங்கரமானவையாகவும் திரும்பத் திரும்ப மனதில் தோன்றிக் கொண்டும் இருந்தன. ‘ஓ கடவுளே!' அவன் சிறிது நேரத்திற்கு பயத்தால் பீடிக்கப்பட்டவனைப்போல இருந்தான்.

அவன் தன்னுடைய கண்களை இறுக மூடிக் கொண்டு, தன் தலையை ஆட்டினான். பன்றியின் வாய் மறைந்ததும், மிகவும் அடர்த்தியான கருப்பு நிறத்தில் காட்சியளித்த எல்லையில் அவன் ஒரு கருப்பு ஜுவாலையைப் பார்த்தான். அவன் தன் கண்களைத் திறந்தான். அவனுடைய சரீரத்திற்குள்ளிருந்து கிளம்பி மேலே வந்த உணர்வுகள் அலையைப்போல மறைந்தன.

உணர்வுகள் எழுந்து மேலே வந்து கொண்டிருந்த தன் மனதைக் கூர்ந்து பார்த்தவாறே அவன் நடையைத் தொடர்ந்து கொண்டிருந்தான். இதயத்தின் உணர்வுகளின் சில பகுதிகள் ஒரு கருப்பு நிற ஜுவாலையைப்போல தங்கி விட்டிருந்தன. அந்த உணர்வு எவ்வளவு பலம் கொண்டதாக இருந்தாலும், மனிதத்தன்மைக்கு எதிரானதாக இருந்தாலும் அது சில மணித் துளிகள் மட்டுமே நீடித்து நிற்கும். "மற்ற நேரங்களில் நான் மனிதத் தன்மையுடன் நடந்து கொண்டு, என்னுடைய உணவைச் சாப்பிட்டுக் கொண்டு, நடந்து, மூச்சு விட்டுக் கொண்டு இருப்பேன். "அவன் தனக்குள் கூறிக் கொண்டான். அதே நேரத்தில்- அங்கே சாப்பிட்டுக் கொண்டும் நடந்து கொண்டும் இருந்த மனிதர்களுக்கு அன்பு என்றால் என்னவென்று எப்போதும் தெரியவே தெரியாது என்ற விஷயத்தை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டிருந்தான். ‘அந்த போர்க்களத்தில் இருக்கும் போது, நான் எப்படி என்னைப் பாதுகாத்துக் கொள்வதில் கவனமாக இருந்தேனோ, அதேபோல தங்களைத் தாங்களே காப்பாற்றிக் கொள்வதற்கு முயற்சி செய்ததைத் தவிர, அவர்கள் வேறு எதுவுமே செய்தது இல்லை. ஒரு சிறிய உணவுத் துண்டுக்கு முன்னால் அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். தங்களுடைய சொந்தக் கண்களுக்கு முன்னால், அவர்கள் ஒரு தோழனைச் சாக விடுவார்கள்.' வானத்தில் பறந்த வண்ணம் போரில் ஈடுபட்டிருந்தபோது, தன்னுடைய தாய் இறந்து விட்டாள் என்ற செய்தி வந்து சேர்ந்ததை நினைத்த அவன், தன் அன்னையைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். ஒரு தாயின் அன்பு கண்மூடித் தனமானது என்று அவர்கள் சொன்னார்கள். ஒரு அன்னையைத் தவிர, மனிதப் பிறவி வேறு யார்மீது அன்பு செலுத்த முடியும்? யாராவது தன்னுடைய சொந்த உணவைப் பிறருடன் பங்கு போடுகிறாரென்றால், அது ஒரு அன்னையாக மட்டுமே இருக்க முடியும். ‘இருக்கட்டும்.... ஒரு தாயைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியவில்லை.' அவனுடைய மனதில் தோன்றிக் கொண்டிருந்த உருவம் படிப்படியாக அவனைக் காதலித்த பெண்ணின் உருவமாக மாறியது. இறந்து போய்விட்ட அவளை அவன் நினைத்துப் பார்த்தான். அவனுக்காக அவள் உயிருடன் இருக்கவில்லை என்பதையும் அவன் நினைத்துப் பார்த்தான். அவளுடைய காதல் மட்டுமே அவனுக்குத் தேவையாக இருந்தது. லட்சக்கணக்கான உயிர்களை பலிவாங்கிய போர், அவளுடைய காதலின் மதிப்பை அவனை உணரச் செய்ததா? அவன் மனிதர்களின் கூட்டத்தைக் கடந்து வந்து, தான் செல்ல வேண்டிய பாதையில் திரும்ப நடந்தான். அவனுடைய உடல் மிகவும் குளிர்ச்சியாக ஆகும் நேரத்தில், அவன் தன்னுடைய இருண்ட அபார்ட்மெண்டுக்கு வந்து சேர்ந்தான்.

வீட்டுக்குச் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தி, சில நேரங்களில் டோஷியோ, யோஷிக்கோவுடனும் குராக்கோவுடனும் சேர்ந்து தேநீர் பருகுவான். பிறகு அவன் தன்னுடைய நேரத்தை குராக்கோவுடன் மட்டும் செலவழிக்கும் அளவிற்கு சூழ்நிலைகள் அமைந்தன. அவள்மீது தான் கொண்டிருக்கும் உணர்வு- காதல்தான் என்பதாக அவன் எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. எது எப்படியோ, அவளுடைய அழகின்மீது தான் ஈர்க்கப் பட்டிருக்கிறோம் என்ற உண்மையை அவன் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். இன்னும் சொல்லப் போனால்- அதற்கு ‘ஈர்ப்பு' என்ற வார்த்தைகூட பொருத்தமானதாக இருக்காது. அதற்கு மாறாக, அவளுடைய இருப்பு அவனுடைய கடந்த காலத்தை நினைவில் கொண்டுவந்து கொண்டிருந்தது. அதன்மூலம் தன்னுடைய துயரங்கள் நிறைந்த கடந்தகால வாழ்க்கையை அது பார்க்கச் செய்தது. அவளைப் பார்க்கும்போது, அவன் மனதில் துயரத்தை உணர்ந்தான். அதே நேரத்தில்- தனக்கு அந்த வேதனை தேவைதான் என்று அவன் நினைத்தான். அவள்மீது அவன் கொண்டிருக்கும் உணர்வில் காதல் என்ற ஒன்று கலந்திருக்கிறது என்று யாராவது குறிப்பிட்டுக் கூறினால், டோஷியோ அதை ஒப்புக் கொண்டாலும் ஒப்புக் கொள்வான். ஆனால், அவளை அந்த அர்த்தத்தில் வைத்துப் பார்க்க அவன் விரும்பவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் இப்போதும் தன்னுடைய இறந்துபோன கணவன்மீது அன்பு வைத்திருக்கிறாள் என்ற விஷயம் அவனுக்கு நன்கு தெரியும்.

“நீங்கள் மிகவும் சந்தோஷமாக இருந்தீர்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.'' அவன் ஒருநாள் கூறினான்.

“ஆமாம்.... உண்மையாகவே நான் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்தேன்'' என்றாள் அவள். தொடர்ந்து அவள் தெளிவான குரலில் சொன்னாள். “நான் அவரை மிகவும் சந்தோஷமாக வைத்திருந்தேன் என்பது எனக்குத் தெரியும். அந்த வகையில் மட்டும் பார்த்தால்- அவர் இறந்தபிறகு, நான் கவலைப்படுவதற்கு எதுவுமே இல்லை. ஏனென்றால், அவருக்கு என்னவெல்லாம் செய்யவேண்டுமோ, எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். இன்னும் சொல்லப் போனால் அவர் என்னுடன் இருந்தபோதுகூட இந்த அளவிற்கு சந்தோஷமாக நான் இருந்தில்லை.''

“உங்களைப் போன்ற ஒரு நபர் இப்போதும் எப்படி இருக்கிறீர்கள் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை'' என்றான் அவன்.


“தன்னுடைய குடும்பத்தில் உள்ள பலவிதப்பட்ட பிரச்சினைகளால் என் கணவர் பல துன்பங்களையும் அனுபவிக்கவேண்டிய துர்பாக்கியமான நிலையில் இருந்தார். ஆனால், நாங்கள் இருவரும் சேர்ந்து வாழ்ந்த மூன்று வருடங்களும் அவர் மிகவும் சந்தோஷமாக இருந்தார் என்று நான் நம்புகிறேன்.''

“அதற்குப் பிறகு அவர் ராணுவத்திற்குச் சென்றுவிட்டார். அப்படித்தானே?''

“ஆமாம்...''

“அவர் ஒரு அதிகாரியாக இருந்தார். இல்லையா?''

“இல்லை... அவர் ஒரு தனி அலுவலராக இருந்தார்.''

“அவர் சவுத் ஸீஸுக்குச் சென்றிருக்கிறாரா?''

“ஆமாம்... அங்கு ஏற்பட்ட ஒரு நோயால் பாதிக்கப்பட்டு அவர் இறந்து விட்டார்.''

“உங்களை தனியே விட்டுவிட்டுச் சென்றுவிட்டார் என்பது கவலைப்படக் கூடிய விஷயமே....''

குராக்கோ சற்று பதைபதைப்பு அடைந்ததைப் போலத் தோன்றியது. எனினும், தைரியமாக பதில் கூறினாள்.

“ஆமாம்... அரசாங்கத்தின் செலவில் அது ஒரு பயணமென்று அவர் கூறினார். ஆனால், அவர் என்ன உணர்ந்தார் என்பது எனக்குத் தெரியும்.''

“நானும் அப்படித்தான் நினைக்கிறேன்.''

“என் கணவர் மரணத்தைத் தழுவிய பிறகு, மனிதர்கள் தாங்கள் என்மீது கொண்டிருக்கும் பரிதாப உணர்ச்சியைப் பல நேரங்களிலும் வெளிப்படுத்துவார்கள். ஆனால், அதைவிட அதிகமான இரக்க உணர்ச்சி அவர் மீது இருக்கவேண்டுமென்று நான் நினைக்கிறேன். இறந்துபோய்விட்ட யாரையும் யாரும் நினைத்துப் பார்ப்பதில்லை என்ற விஷயம் உங்களுக்குத் தெரியுமா? என்னால் அதை வேறுமாதிரி நினைத்துப் பார்க்க முடியவில்லை...''

“......''

“இன்னும் சொல்லப்போனால், ஒருவர் மரண மடைந்து விட்டால் எல்லாமே முடிந்து விடுகிறது.... அனைத்தும் முடிவுக்கு வந்து விடுகிறது.''

“ம்...''

“அவர் இறக்க வேண்டுமென்று தீர்மானித்திருந்தால், அவர் அதற்காக சந்தோஷப்பட்டிருப்பார்.''

“நம்மைச் சுற்றியிருக்கும் பலரும் உங்களைப் போன்ற சூழ்நிலையில் இருக்கிறார்கள். இல்லையா?''

“நீங்கள் யோஷிக்கோவை மனதில் வைத்துக் கூறுகிறீர்களா?''

“ஆமாம்....''

“அவள் தன்னுடைய வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கும் முறையைப் பார்த்து நான் உண்மையிலேயே சந்தோஷப்படுகிறேன்.''

அவன் தன்னுடைய கடந்தகால காதலைப் பற்றி அவளிடம் கூறினான். அப்போது அவள் தன்னுடைய மனதைத் திறந்து அவனிடம் பேசினாள். தன்னுடைய கடந்த காலத்தைப் பற்றி அவளும் கூறினாள்.

“நீங்கள் கவலை அளிக்கக்கூடிய ஒரு வாழ்க்கையை வாழ்ந்திருப்பீர்கள் என்று நான் நினைத்தேன்.''

அவள் சொன்னாள். அவர்கள் காபிக் கடையைவிட்டு வெளியே வந்தார்கள். தான் சில பொருட்களை வாங்க வேண்டியதிருக்கிறது என்று சொன்ன அவள் ஸ்டேஷனை நோக்கி நடந்தாள்.

அவன் அதே இடத்தில் சிறிது நேரம் நின்று அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தான். அவள் மறைந்து, திரும்பவும் ஸ்டேஷனுக்கு முன்னால் ஆரவாரித்துக் கொண்டிருந்த- மக்கள் திரண்டு காட்சியளித்த இடத்தில் தோன்றினாள்.

அவளைப் பார்த்தபோது அவன் தன் மனதிற்குள் நினைத்தான்: ‘இவள்  எப்படி வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பதை நினைக்கும்போது, எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. இவளை அணைத்துக் கொள்வதற்கு இப்போது கைகள்கூட இல்லை. அழகாக இருக்க வேண்டிய இவளுடைய முகம் ஏன் அந்த அளவிற்கு கவலைகளில் மூழ்கிக் கிடக்கிறது?' தன்னுடைய கேள்வி எவ்வளவு பழமையான ஒன்று என்பதைப் புரிந்து கொள்ளாமலே, அவன் அவளைத் தொடர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான். அவளுடைய தோற்றத்தைப் பார்த்து அந்தக் கேள்வி எழுகிறதா அல்லது தன்னுடைய இதயத்திற்குள்ளிருந்து புறப்பட்டு வருகிறதா என்ற விஷயம் அவனுக்கே தெரியவில்லை, ஆனால், ஒரு தனிமை உணர்வு வெளியே கிளம்பி வந்து அந்தப் பகுதியையே ஆக்கிரமித்து விட்டிருந்தது. வானத்திலிருந்து கீழே இறங்கி வந்த மெல்லிய நிறத்தைக் கொண்ட இருளுடன் சேர்ந்து, அழிந்து கிடக்கும் உயரமான கட்டடங்களில் விரிந்து, அந்த பாழாய்ப்போன, போரை அனுபவித்த மனிதர்களின் மனங்களுக்குள் அந்த உணர்வு அமைதியாக நுழைந்து கொண்டிருந்தது.

சவுத் ஸீஸிலிருந்து டோஷியோவுடன் அனுப்பி வைக்கப்பட்ட அவனுடைய நண்பர்களில் ஒருவன் ஒருநாள் அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்தான்.

அவன் ஒரு கல்லூரி பட்டதாரி. முதலாண்டு போர் வீரனாக இருந்தான். ஜப்பானிலிருந்து அனுப்பப்பட்ட இறுதிப் படையில் அவன் இருந்தான். அங்கு வந்து சேர்ந்தபோது, அவன் மிகவும் தடிமனாக இருந்தான். அங்கு நிலவிய கடுமையான வெப்பம், அவனை ஒரே மாதத்தில் எலும்புகள் வெளியே தெரியும் அளவிற்கு மெலியச் செய்துவிட்டது. டோஷியோதான் அவனை கவனித்துக் கொண்டான். தண்டனைகள் கொடுக்கப் போகிறோம் என்று கூறி பயமுறுத்தப்படும்போது, மூத்த போர்வீரர்களின் ஆதரவைப் பணம் கொடுத்தோ வேறு வகைகளிலோ பெறுவதற்காகச் செயல்படும் ஒரு நம்பிக்கைத் துரோகியாக அவன் இல்லாமலிருந்தான் என்பதுதான் அதற்குக் காரணம். ஜப்பானுக்குத் திரும்பி வந்தபிறகு, ஒரு கல்லூரி நண்பன் மூலம் ஹாமாமாட்சு சோவிற்கு  அருகிலிருந்த ஒரு சிறிய நிறுவனத்தில் அவனுக்கு ஒரு வேலை கிடைத்தது. அவன் எப்போதாவது டோஷியோவைப் பார்ப்பதற்காக வருவான். அவனுடன் உரையாடுவதன் மூலம் தன் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தையும் அவன் வெளியேற்றுவான்.

“ஓ... பையா! இப்போது நான் உன்னைப் பார்த்து விட்டேன். கடந்த சில நாட்களாக நான் உன்னைப் பார்ப்பதற்கு எத்தனை முறை வந்திருக்கிறேன் என்று உனக்குத் தெரியுமா? அந்த மூலையில் இருக்கும் பழக்கடைக்கு அருகில் வந்து உன்னுடைய வெளிச்சம் இல்லாத அறையைப் பார்ப்பேன். ஒவ்வொரு முறையும் ஏமாற்றம்தான்! என்னுடைய கனமான கால் பாதங்களை இழுத்துக் கொண்டு திரும்பவும் நான் வீட்டுக்கு நடந்து செல்வதை கற்பனை செய்து பார்...'' சுவரின் மீது தன் முதுகைச் சாய்த்துக் கொண்டே தனக்கே உரிய வழக்கமான குரலில் சாபுரோ கட்டாலுக்கா கூறினான்.

“ம்... நீ என்னதான் கடுமையாக முயற்சி செய்தாலும், உன்னுடைய தடிமனான உடலைப் பார்க்கும்போது, மிகவும் அரிதாகவே இரக்க உணர்வு உண்டாகும், சாபுரோ...''

“உன்னுடைய பழைய நண்பர்களின் உணர்வுகளை நீ எந்தச் சமயத்திலும் புரிந்துகொண்டதே இல்லை... இல்லையா? நான் ஒவ்வொரு முறை வரும்போது, நீ இங்கு இருப்பதே இல்லை...''

“டாய்லெட்சு சுஸுக்கி கூறுவதைப்போல "பணம் கையில் இல்லை என்ற உணர்'வைக் கூறுகிறாயா?''

“ஆமாம்.... என்னிடம் சமீபகாலமாக பணமே இல்லை.... மூளைகூட வேலை செய்வதில்லை... ஆனால், மூளை நன்கு செயல்பட நீ உலாவிக் கொண்டிருக்கிறாய் என்பது பார்க்கும்போதே தெரிகிறது. நீ காதலில் ஈடுபட்டிருக்க வேண்டும். சமீபகாலமாக எல்லா இரவு வேளைகளிலும் நீ உன் வீட்டில் இருப்பதில்லை என்பதிலிருந்து அந்த விஷயத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது.''

“ம்... காதல்'' டோஷியோ சற்று தடுமாறினான். ஆனால், சொன்னான். “ஜப்பானில் என்னைக் காதலிக்கும் அளவிற்கு யாராவது பெண் இருக்கிறாளா என்ன?''


“அது ஒரு ஆச்சரியப்படக்கூடிய விஷயமில்லை. ஆண் பெண்ணைக் காதலிப்பது என்பது இயற்கையாகவே நடைபெறக்கூடிய ஒரு விஷயம்தான். நாம் போரில் தோல்வியடைந்து விட்டாலும், ஒரு ஆணுக்கு ஒரு பெண் தேவைப்படுகிறாள். அவளுக்கு அவன் தேவைப்படுகிறான்.''

“இந்த மாதிரியான கவர்ந்து இழுக்கக்கூடிய உடலை வைத்துக்கொண்டு நீ காதலில் இறங்கப் போகிறாயா?''

“ஏன்? கட்டாயம் ஈடுபடுவேன். நான் காதலில் ஈடுபட்டால், என்னுடைய எடையில் கொஞ்சம் இழப்பேன்!''

நன்கு சூடாக்கப்பட்ட சீனிக்கிழங்கை அவர்கள் சாப்பிட ஆரம்பித்தார்கள்.

“நான் எனக்கு உணவு தேடிக் கொள்வதற்கு மிகவும் சிரமப்படுகிறேன்.'' சாபுரோ சொன்னான்: “அதனால், வருகிற மாதத்திலிருந்து இன்னொரு சிறிய வேலையையும் பார்க்கலாமென்று தீர்மானித்திருக்கிறேன்.''

“அப்படியா?''

“உனக்கும் அப்படியொன்றைத் தேடிக் கொள்ளலாமென்று நினைக்கிறாயா?''

“மொழிபெயர்த்தல் அல்லது வேறு ஏதாவது?''

“என்ன? இல்லை... அது கறுப்புப் பண சந்தை...''

“அப்படியா?''

“நான் சொல்வது என்னவென்றால்... கிட்டத்தட்ட ஒரு விற்பனை பிரதிநிதியைப்போல... மருந்துகள் விற்பனை செய்வது... உன்னுடைய ஓய்வு நேரத்தில் நீயே பண்ணலாம். உதவியாக இருக்கும் என்றால் நீ அதைச் செய்வதற்கு தயாராக இருக்கமாட்டாயா?''

“சரிதான்.... நான் இப்போதுதான் சுமாரான நிலைக்கு வந்திருக்கிறேன். ஆனால், ஒரு விற்பனையாளன் வேலையை என்னால் செய்ய முடியாது.''

“சரி... நீ கூறுவது சரியாக இருக்கலாம்.''

சிறிது நேரத்திற்கு அமைதி நிலவியது. பிறகு சாபுரோ உரையாடலைத் தொடர்ந்தான். “ஒருநாள் நான் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது யமனாக் காவின் வீட்டுக்குச் சென்றேன். நம்முடைய குழுவில் இருந்த எல்லாருமே சிரமப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள்.'' அவர்களால் வெளியேற்றப்பட்ட ஒரு தோழன்தான் யமனாக்கா.

“அவன் என்ன செய்து கொண்டிருக்கிறான்?''

“ஓ... அவன் சாக்லெட்டுகள் விற்றுக் கொண்டிருக்கிறான். உனக்கு அந்த சாக்லெட் பார்களைத் தெரியு மல்லவா? அவன் அவற்றை வாங்கி அதை கிராமப் பகுதிகளில் சுற்றியலைந்து விற்பனை செய்வான்.''

“அப்படியா? யமனாக்கா அதைச் செய்கிறான் என்று நீ சொல்கிறாயா?''

“உண்மைதான். ஆனால், ஒரு சாக்லெட் பார் உன்னை ஏமாற்றவே ஏமாற்றாது. நம்மைவிட அவன் சாக்லெட்டுகளை வைத்துக்கொண்டு எவ்வளவோ சிறப்பாக வியாபாரம் செய்துகொண்டிருக்கிறான்! அவன் ஒரு பாருக்கு ஏழு யென்களையும் ஐம்பது ஸென்களையும் செலுத்துகிறான். அதை கிராமங்களிலிருக்கும் மளிகைப் பொருட்கள் விற்பனை செய்யப்படும் கடைகளுக்கு எட்டு யென்கள் ஐம்பது ஸென்களுக்கு விற்பனை செய்கிறான். தன்னிடம் மூவாயிரத்து ஐநூறு யென்கள் இருக்கின்றன என்று அவனே கூறுகிறான். ஓ... நான் இந்த விஷயத்தை உன்னிடம் கூறவேண்டுமென்று நினைத்தேன், டோஷியோ. தான் ஒரு சாக்லெட் வியாபாரியாக மாறிய முதல் நாளன்று அவன் எங்கு சென்றான் என்று நீ நினைக்கிறாய்? அட்டாமியில் புதிய யென்கள் ஏராளமாக இருக்கின்றன என்ற விஷயம் உனக்கே தெரியும். அங்கு போனால் எளிதில் சம்பாதித்து விடலாம் என்று நினைத்து அங்கு சென்றிருக்கிறான். ஆனால், தான் நினைத்ததைப்போல அங்கு அவனால் ஒரு பாரைக்கூட விற்பனை செய்ய முடியவில்லை. சாக்லெட் பார்கள் அடங்கிய சுமையைப் பின்னால் வைத்துக் கொண்டு, ஸ்டேஷனுக்கு முன்னாலிருக்கும் மலைமீது ஏறிச்செல்லும்போதுதான் யோஷினாக்கா கிஷோவின் மரணத்தைப் பற்றி மனதில் நினைத்ததாகக் கூறினான்.''

“யோஷினாக்கா?''

“இறுதியாக யோஷினாக்கா காயம்பட்டுக் கிடந்ததையும், தன்னுடைய மனிதர்களிடம் தன்னுடைய படைக் கருவிகள் மிகவும் கனமாக இருப்பதைப் போல தான் உணர்வதாகக் கூறியதையும், அதற்கு முன்பு அதைப் பற்றி அவன் நினைத்துப் பார்த்ததே இல்லை என்பதையும் ஞாபகத்திற்குக் கொண்டு வா. தன்னுடைய முதுகிலிருந்த ஒவ்வொரு சாக்லெட் பாரும் ஒரு இரும்பு பாரைப்போல தனக்குத் தோன்றியது என்றான் யமனாக்கா. உன் பற்கள் அதில் பட்டால், அவை உடைந்துவிடும் என்று நீ நினைக்கிறாய் அல்லவா? ஆச்சரியமே பட வேண்டாம்- அவனால் எதையும் விற்க முடியாது.''

“அப்படியா?''

“நீ சிரிக்கக்கூடாது. என்னுடைய நகைச்சுவை அந்த அளவிற்கு நல்லதல்ல. எது எப்படி இருந்தாலும்... நம் யாருக்கும் காரியங்கள் ஒழுங்காக இல்லை. உண்மைதானே? நீ திரும்பி வந்தபோது, உன்னுடைய சொந்த வீடு எரிந்து சாம்பலாகி விட்டிருந்தது. உனக்கு அணிவதற்குக் கூட எதுவுமே இல்லை என்ற நிலை... அதற்குப் பிறகு நடந்தது என்ன? உன்னுடைய வீட்டின் உரிமையாளர் உன்னை அங்கிருந்து போய் விடும்படிக் கூறினார். இதற்குமேல்... வேலைகளில் இடமில்லை. முழுமையாக அவை ஆக்கிரமிக்கப்பட்டு விட்டிருந்தன. நீ என்ன செய்ய முடியும்? உதாரணத்திற்கு- ஒருநாள் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் அவர்கள் கொசுவலைகளை வினியோகம் செய்து கொண்டிருந்தார்கள். அது நல்ல விஷயம்தான். ஆனால், அதை வாங்குவதற்குக்கூட உன்னிடம் பணம் இல்லாமலிருந்தது. நீ அவற்றில் ஒன்றை வாங்கினால், அது உடனடியாக கறுப்புச் சந்தை வியாபாரியிடம் போய்ச் சேர்ந்துவிடும். ஓ... அந்த நாசம்பிடித்த கறுப்புச் சந்தை வியாபாரிகள்! போரால் பாதிக்கப் பட்டவர்களுக்கென்று விசேஷமாகத் தரப்பட்ட ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு முயற்சித்துக் கொண்டிருந்த மனிதர்கள் அவர்கள்! நேற்று வினியோகிக்கப்பட்டதில் நான் என்ன வாங்கினேன் என்று நீ நினைக்கிறாய்? ஒரு ராணுவத் தலையணை உறையையும் குழந்தைக்களுக்கான ஷூக்களையும்....''

“...........''

“நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தேன் என்று நீ நினைக்கிறாய்? யாரையாவது காதலிக்க வேண்டுமென்று நினைத்தேன்''

“உன்னால் அந்த காரியத்தைச் செய்ய முடியுமென்று நான் நினைக்கவில்லை... மிகச்சிறந்த விஷயமேதான்.''

“நடக்காமல் போனாலும் போகலாம்... அப்படியென்றால், நான் என்றென்றைக்கும் தடிமனாகவே இருக்க வேண்டியதுதான்.''

“சரி... நீ என்ன சாப்பிடுகிறாய்?''

‘ஒரு கடையில் உருளைக் கிழங்குகளால் செய்யப்பட்ட பதார்த்தங்களை...'

“உருளைக் கிழங்குகளால் செய்யப்பட்டவையா? அவற்றை எனக்குப் பிடிக்கும். ஆனால், எனக்கு அதிக எடை உண்டாகவில்லையே!''

“என்ன காரணமென்று உனக்குத் தெரியுமா? ஏனென்றால், நீ காதலில் ஈடுபட்டிருக்கிறாய்!'' அவர்கள் சிரித்தார்கள்.

தான் காதலில் ஈடுபட்டிருப்பதாக- குறிப்பாக டோஷியோ நினைக்கவில்லை. ஆனால், அவனுக்கு அது தேவைப்பட்டது. அவளுடன் அவன் இருக்கும் வரை தன் அளவிற்கு வேறு யாரும் துன்பத்தை அனு பவித்திருப்பார்கள் என்று அவன் எந்தச் சமயத்திலும் நினைத்ததில்லை. அவளுடைய முகத்தைத் தான் பார்க்கும்போதெல்லாம், மிகவும் கவலையே இல்லாமல் தான் வாழ்ந்து கொண்டிருப்பதைப் போல அவனுக்குத் தோன்றும். போர்க்களத்தின் துயரங்களை கிட்டத்தட்ட அவன் மறந்து விட்டான். அவன் முதலில் ஜப்பானுக்கு வந்தபோது, தாறு மாறான நிலையில் கிடந்த தன்னுடைய வீடு அவனை உண்மையிலேயே நிலைகுலையச் செய்தது. ஆனால், அந்த பாதிப்பு கொஞ்சம்  கொஞ்சமாக மறைய ஆரம்பித்தது.


நெருப்பில் எரிந்து சாம்பலாகிப் போன கட்டடங்களைப் பற்றியோ, சாலைகளின் ஓரங்களில் வரிசையாக இருக்கும் கடைகளைப் பற்றியோ, அங்கு குழுமியிருக்கும் மக்களைப் பற்றியோ அவன் இப்போதெல்லாம் நினைத்துப் பார்ப்பதே இல்லை. ஆனால், அவளுடைய முகத்தில் வெளிப்பட்ட அந்த வேதனை நிறைந்த துயரம், பழைய நினைவுகளை மீண்டும் ஞாபகத்திற்குக் கொண்டுவந்தது.

வீட்டுக்குத் திரும்பி வரும்போது, அவர்கள் பல நேரங்களில் ஜின்ஸாவிற்குச் சேர்ந்து போவதுண்டு. அவள் தன்னுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து இருந்தாள். ஆனால், தன்னுடைய வாழ்க்கை அந்த அளவிற்கு சுதந்திரம் நிறைந்ததாக இல்லையென்று அவள் கூறினாள். அவளுடைய சொந்தக்காரர்கள் அவளுடைய குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்ந்து கொண்டிருந்ததே அதற்குக் காரணம். எட்டு மணிக்கு வீட்டுக்குக் கட்டாயம் திரும்பிச் சென்றுவிட வேண்டும் என்பதில் அவள் மிகவும் பிடிவாதமாக இருந்தாள். அந்த முடிவில் இருந்து அவளை மாறி இருக்கச் செய்யவேண்டும் என்று  அவன் முயற்சி செய்ததே இல்லை. தன்னுடைய வாழ்க்கையில் ஒரு புதிய காலடியை எடுத்துவைக்க வேண்டுமென்று அவன் விரும்பினான். ஆனால், அதை எப்படிச் செய்வது என்றுதான் அவனுக்குத் தெரியவில்லை.

தன்னை அழுத்திக் கொண்டிருந்த கடந்த காலத்தின் கனமான விஷயங்களை மனதிலிருந்து தூக்குவதுதான் அவனைப் பொறுத்த வரையில் அவனுடைய முதல் தீர்மானமாக இருந்தது. அதை எப்படிச் செய்வது என்பதுதான் அவனுக்குத் தெரியாமலிருந்தது. ஒரு நாள் அவன் ஒரு கேள்வியைக் கேட்க முயற்சித்தான்: “இதே வாழ்க்கையை நீங்கள் தொடர நினைக்கிறீர்களா?''

“ஆமாம்...'' அவள் சொன்னாள்.

“அதில் தீர்மானமாக இருக்கிறீர்களா?''

“ஆமாம்... நான் தெளிவாக இருக்கிறேன்.''

சிறிது நேர அமைதிக்குப் பிறகு, டோஷியோ தொடர்ந்து, சொன்னான்: “என்னைவிட நீங்கள் அதிகமான வெளிப்படைத் தன்மையுடன் வாழ்வது தான் இதற்குக் காரணமாக இருக்கவேண்டும்.''

“நீங்கள் அப்படி நினைக்கிறீர்களா?''

“ஒரு உயிர் இன்னொரு உயிரை சந்தோஷமாக வைத்திருக்கக்கூடிய ஒரு விஷயமது. அப்படிச் செய்யக்கூடிய ஒரு உயிரை இதுவரை எந்தச் சமயத்திலும் நான் வாழ்க்கையில் சந்தித்ததே இல்லை. இன்னும் சொல்லப்போனால்- என்னாலேயே அதைச் செய்ய முடியாது. அதே நேரத்தில்- உங்களால் அதைச் செய்ய முடியும். இன்னும் கூறுவதாக இருந்தால்- அதுதான் உங்களுக்கு ஆதரவாக இருந்து கொண்டிருக்கிறது.''

அது ஒரு சாயங்கால நேரம். ஒரு வகையான மஞ்சள் சாயம் படர்ந்த வசந்தகால வானம் நகரமெங்கும் தெரிந்து கொண்டிருந்தது. ஒரு காபி ஹவுஸின் மாடியிலிருந்த சாளரத்திற்கு அருகில் அவர்கள் உட்கார்ந்து ஆழமான உரையாடலில் ஈடுபட்டிருந்தார்கள். கல்லூரியில் படிக்கும்போது தான் தன்னுடைய தாயின் ஆசைகளைப் பொருட்படுத்தவே இல்லை என்றும், சட்டம் படிப்பதிலிருந்து கலை சம்பந்தப்பட்ட விஷயங்களுக்கு தான் மாறிவிட்டதாகவும் அவன் சொன்னான். தன்னுடைய தாயார் அதை மனப்பூர்வமாக ஏற்றுக்கொண்டு விட்டாள் என்று அவன் சொன்னான். கல்லூரியை விட்டு வெளியே வந்தபிறகு, ஒரு வேலை கிடைப்பதற்கு அவன் மிகவும் சிரமப்படுவான் என்ற உண்மையை அவள் உணர்ந்திருந்தாலும், அவள் அதை ஏற்றுக்கொண்டாள். தனக்காக தன்னுடைய அன்னை தன் முழு வாழ்க்கையையும் தியாகம் செய்தாள் என்றான் அவன்.

“அதனால், நான் அவளை மீண்டும் பார்க்க வேண்டுமென்று ஆசைப்பட்டேன்.'' அவன் சொன்னான். குராக்கோ எதுவுமே கூறவில்லை. தான் கூறிய விஷயம் அவளை அவளுடைய கணவனைப் பற்றி நினைக்கச் செய்திருக்க வேண்டுமென்று அவன் நினைத்தான்.

“இந்த பிரச்சினைகளில் இருந்து விடுபட்டு வெளியே வரவே முடியாது என்று நான் நினைக்கிறேன். ஏனென்றால், ராணுவத்திலிருந்த ஆறு வருடங்களும் என் வாழ்க்கையை முழுமையாக அழித்து விட்டன. நான் மிக விரைவிலேயே ஏதாவ தொன்றைக் கண்டுபிடிக்க வேண்டும். என்னுடைய சக்தியை நான் மீண்டும் பெறுவேன். நான் எதையும் செய்வதற்குத் தயாராக இருக்கிறேன். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். என்னால் எதையும் செய்யமுடியும் என்கிற அளவிற்கு ராணுவம் என்னுடைய உடலுக்கு சக்தியைக் கொடுத்திருக்கிறது.'' அவன் அவளிடம் சிறிது நேரம் போரைப் பற்றி பேசிக்கொண்டிருந்தான். ‘போர்க்களத்தில் துன்பங்களைத் தாங்கிக்கொண்டு தன்னை இருக்கச் செய்தது தன்னுடைய படிப்பு அல்ல: தன் மனதில் இருந்த கவலைகள்தான்' என்றான் அவன்.

“உங்களுடன் நான் இருக்கும்போது, உங்களுக்காக எதையாவது செய்ய வேண்டுமென்று நினைக்கிறேன். ஆனால், அது என்னுடைய சக்திக்கு மிகவும் அப்பாற்பட்டது என்பதையும் என்னால் தெளிவாக உணர முடிகிறது.'' தன்னுடைய மூச்சைக் கையில் பிடித்துக் கொண்டிருப்பதைப் போன்ற உடைந்த குரலில்  அவள் கூறினாள். அதற்கு என்ன கூறுவது என்று தெரியாமல் இருந்தான் டோஷியோ. அவர்கள் ஒருவரையொருவர் சிறிது நேரம் ஒரு வார்த்தைகூட பேசாமலேயே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

ஒருநாள் டோஷியோ படிகளில் ஏறி மூன்றாவது மாடிக்கு வந்து கொண்டிருந்தான். அப்போது படியின் நடுப்பகுதியில் குராக்கோ தலையை குனிந்தபடி நின்றுகொண்டிருப்பதை அவன் பார்த்தான். “என்ன நடந்தது?'' டோஷியோ கேட்டான்.

அவள் சுற்றிலும் பார்த்து அடையாளம் தெரிந்து கொண்டு சொன்னாள். “நான் இங்கு சிறிது தடுமாறிவிட்டேன்'' தொடர்ந்து அவள் சொன்னாள். “நான் ஏதோ சிந்தனையில் இருந்தேன்....'' அவளுடைய முகத்தில் ஏதோவொரு சோக உணர்வு நிறைந்திருந்ததை டோஷியோ பார்த்தான்.

அவர்கள் தங்களுடைய வீட்டுக்குத் திரும்பிச் செல்லும்போது சந்தித்தார்கள். அவர்கள் எந்தவொரு நோக்கமும் இல்லாமல் கோஃபுக்குபாஷி செல்லும் பாதையில் நடந்துகொண்டிருந்தார்கள். குராக்கோ என்றுமில்லாத அளவிற்கு மிகுந்த கவலையில் மூழ்கிக் காணப்பட்டாள். அவளுடன் சேர்ந்து நடந்து செல்லும்போது, அவனுடைய மனம் அவனிடம் இல்லை என்பதையும், அது எங்கோ அவளுக்குள் இறங்கிச் சென்றிருக்கிறது என்பதையும் அவன் உணர்ந்தான். அது காற்று வீசிக்கொண்டிருந்த ஒரு மாலை நேரமாக இருந்தது. வெள்ளை நிறத்தில் தூசி தெருவில் சுழன்று கொண்டிருந்தது. மரத்தாலான பாலத்திலிருந்த விளம்பரப் பலகைகள் ஆடிக் கொண்டிருந்தன. அவர்கள் ஆற்றின் வழியே நடந்தனர். “உங்களுடைய பாதங்கள் சரியாகி விட்டனவா?'' சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் கேட்டான்.

“ஓ.... பாதங்கள்'' அவள் திரும்பியபோது, கூந்தல் அவளுடைய முகத்தில் விழுந்தது.

“ஆமாம்... நீங்கள் படிகளில் தடுமாறி விட்டீர்கள். அதற்குப் பிறகு நொண்டிக் கொண்டிருந்தீர்களே?''

“ஓ, நான் இப்போது முற்றிலும் குணமாகி விட்டேன். சமீப காலமாக நான் மிகவும் அமைதியாகி விட்டேன். நான் எதைப் பற்றியெல்லாமோ சிந்தித்துக் கொண்டிருந்தேன். அதில் அந்த விஷயத்தையே மறந்துவிட்டேன்.''

“......''

“அந்த நாட்களை நான் திடீரென்று கனமானவையாக நினைக்க ஆரம்பித்துவிட்டேன். ஏன் என்பதற்கான காரணம் எனக்குத் தெரியவில்லை. இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு அனுபவம் எந்தச் சமயத்திலும் எனக்கு உண்டானதே இல்லை.''


“ஆமாம்... எனக்கு உண்டாகியிருக்கிறது. அது வினோதமான ஒரு விஷயமாக உங்களுக்குப்படுகிறதா?''

ஒரு பூங்காவில் கூட்டமாக மனிதர்கள் அவர்களைக் கடந்துசெல்ல, அவர்கள் வெளியே வந்து ‘ஜின்ஸா'விற்குச் சென்றார்கள்.

“எல்லா நேரங்களிலும் உங்களையே நான் பணம் செலுத்தும்படிச் செய்திருக்கிறேன். அதனால், இன்று இரவு தயவுசெய்து என்னை பணம் செலுத்த அனுமதியுங்கள்.''

“நீங்கள் சொல்கிறீர்கள் ‘எல்லா நேரங்களிலும்' என்று. ஆனால், நாம் பருகுவது காபி மட்டும்தானே!''

“இருக்கட்டும்... எது எப்படியோ... என்னை பணம் செலுத்த அனுமதிப்பீர்கள் அல்லவா? ஏனென்றால் இன்று இரவுக்கு என்னிடம் கொஞ்சம் பணம் இருக்கிறது.''

அவர்கள் ஒரு எளிமையான சிற்றுண்டி சாப்பிட்டு விட்டு, அருகிலிருந்த காபி ஹவுஸுக்குள் காபி பருகுவதற்காக நுழைந்தார்கள். தாங்கள் பேசவிரும்பும் ஏதோ சில விஷயங்கள் தங்களின் மனங்களில் இருக்கின்றன என்றும், அவற்றைப்பற்றி தாங்கள் பேசியே ஆகவேண்டும் என்றும் அவர்கள் நினைத்தார்கள். ஆனால், அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். இறுதியில், அவனுடைய ஆர்வம் நிறைந்த கண்களைப் பொருட்படுத்தாமல், எப்போதும்போல அந்த அமைதியை குராக்கோ உடைத்தாள்.

“டோஷியோ!'' அவள் சொன்னாள்: “நீங்கள் எதையோ தேடிக் கண்டுபிடிக்கப் போவதாக சொன்னீர்கள் என்பதை ஞாபகப்படுத்திப் பாருங்கள். நீங்கள் அதை கண்டுபிடித்து விட்டீர்கள் என்பதைப் போல தோன்றுகிறதே!''

“இல்லை.... அதை அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாது. எனினும், நான் மீண்டும் படிக்க ஆரம்பித்து விட்டேன். வேலையைச் செய்து கொண்டிருக்கும்போதே, படித்துக் கொண்டிருக்கிறோம் என்பதைப் போன்ற உணர்வு எனக்கு உண்டாக ஆரம்பித்திருக்கிறது. ஒருநாள் நான் நல்ல ஒரு மனிதனாக ஆவேன். அப்படி ஒரு நல்ல மனிதனாக ஆனபிறகுதான் மரணமடைய வேண்டுமென்று நான் நினைக்கிறேன்.''

“......''

“அந்தப் போருக்கு மத்தியில் எப்படியோ வாழ்வதற்கு கற்றுக் கொண்டேன். அந்த வகையில் வாழாமல் போயிருந்தால், நான் எப்போதோ இறந்திருப்பேன்.''

“நல்ல நாட்கள் வருமென்று நான் நிச்சயமாக நம்புகிறேன்.''

“யாருக்கு? ஜப்பானியர்களுக்கா?''

“சரிதான்....'' அவள் தடுமாறினாள்.

“.......''

“உண்மையாக நல்ல ஒரு நபரை உங்களுக்காகக் கண்டுபிடிக்க வேண்டுமென்று நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன்.''

“அப்படியா?'' டோஷியோ அந்த இடத்தில் நிறுத்தினான். அவளுடைய வார்த்தைகளில் இருந்த அர்த்தத்தைப் பற்றி சிந்தித்த அவன் குரலைச் சற்று மாற்றி வைத்துக்கொண்டு சொன்னான். “நன்றி.... ஆனால், நீங்கள் எப்படி?''

“ஓ... நானா?'' அவள் தன்னுடைய முகத்தைச் சற்று பின்னோக்கி இழுத்துக் கொண்டாள்.

“நான் சொல்ல நினைத்தது என்னவென்றால்... உங்கள்மீது யாரோ ஈடுபாட்டுடன் இருப்பதாக நான் கேள்விப்பட்டேன்'' அதே தொனியில் டோஷியோ கூறினான்.

“ஓ... நீங்கள் கேள்விப்பட்டீர்களா?'' அவனுடைய அமைதியான குரலால் நசுக்கப்பட்டவளைப்போல குராக்கோ கேட்டாள்.

“ஆமாம்.... நான் கேள்விப்பட்டேன்.''

“ஆனால்...'' அவள் தடுமாறினாள்: “அதைப் பற்றி நானே முயற்சித்தாலும், என்னால் சந்தோஷம் கொள்ள முடியாது. டோஷியோ, மீண்டும் திருமணம் செய்துகொள்வது என்பது நல்ல விஷயம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?''

“ஒரு வகையில் பார்த்தால்... நல்ல விஷயம்தான்.''

“அப்படியா?'' அவர்கள் தங்களுடைய இதயங்களை தூரத்தில் வைத்துக்கொண்டு ஒருவரோடொருவர் ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் யுராக்குச்சோ ஸ்டேஷனுக்கு வந்தபோது, நேரம் சற்று அதிகமாகி விட்டிருந்தது. எட்டு மணியைத் தாண்டி நீண்ட நேரமாகியிருந்தது. நடைபாதையில் அதிகமான ஒப்பனையுடன் கேபரே பெண்கள் கூட்டமாக நின்றிருந்தார்கள். மங்கலான விளக்கொளிகளுக்குக் கீழே அவர்கள் சந்தோஷமாக சிரித்துக் கொண்டிருந்தார்கள். நடைபாதையின் எல்லையில் நின்றிருந்த பெண்களிடமிருந்து விலகி, டோஷியோவும் குராக்கோவும் தங்களுடைய கண்களுக்கு முன்னால் கீழே பரந்து காட்சியளித்த இருண்ட நகரத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

வெளியே செல்லக்கூடிய ரயில்கள் ஒன்றுக்குப்பின் இன்னொன்று என்று வந்துகொண்டிருந்தன. ஆனால், அவர்கள் எந்த ரயிலுக்காக காத்துக் கொண்டிருக்கிறார்களோ, அந்த சுரங்கத்தைக் கடந்து செல்லக்கூடிய ரயில் வரவே இல்லை.

‘அவள் இப்படியே எவ்வளவு நாட்கள் வாழ்ந்து கொண்டிருக்க முடியும்? தன்னிடமிருக்கும் பொருட்களை விற்றுத்தான் வாழ்ந்து கொண்டிருப்பதாக அவள் கூறினாள். விற்பனை செய்யக்கூடிய பொருட்கள் அனைத்தையும் விற்பனை செய்து முடித்து விட்டால், அதற்குப் பிறகு அவள் என்ன செய்வாள்?' தனக்கு அருகில் நின்று கொண்டிருந்த குராக்கோவைப் பற்றி, இரவு நேரத்தின் மங்கலான தெரு விளக்குகளைப் பார்த்துக்கொண்டே அவன் நினைக்க ஆரம்பித்தான்.

‘இந்த பூமியில் நான் என்ன செய்ய வேண்டுமென்று முயற்சித்துக் கொண்டிருக்கிறேன்? எதை நான் எதிர் பார்த்துக் கொண்டிருக்கிறேன்?' அவன் தொடர்ந்து சிந்தனையில் மூழ்கினான்.

‘அவளிடமிருந்து நான் காதலை எதிர்பார்க்கிறேனா? போர்க்களத்தில் தன்னுடைய கணவனை இழந்த ஒரு பெண், போர்க்களத்தில் இருக்கும்போது தன்னுடைய இறந்துபோன காதலியைப் பெருமையுடன் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த ஒரு மனிதனுடன் வந்து இணைந்திருக்கிறாள்!' அது மொத்தத்தில்- ஒரு புதுமையான விஷயம்போல தோன்றியது. திடீரென்று தனக்கு அருகில் ஆடிக் கொண்டிருக்கும் சிறிய வாழ்க்கையை அவன் நினைத்துப் பார்த்தான். எங்கு பார்த்தாலும் துயரங்களைச் சுமந்து கொண்டிருக்கும், குராக்கோவின் உடலுக்குள் மிகவும் ஆழத்தில் மறைந்து கிடக்கும் ஒரு வாழ்க்கை.... வாழ்வின் ஆழத்திற்குள் ஏதோ மிருகத்தைப்போல அந்த துயரங்கள் மிகவும் அமைதியாக அங்கு நிறைந்திருந்தன. ‘இல்லை... நான் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேனோ, அது அவள் இல்லை.... அவள் எதை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாளோ, அது நானும் இல்லை. என்னுடைய துயரங்கள் விஷயத்தில் தன்னால் எதுவும் செய்ய முடியாது என்று அவள் சொன்னாள். அவளுடைய துயரங்களுக்கு முன்னால் நானும் எதுவும் செய்ய முடியாமல் நின்று கொண்டிருக்கிறேன். எனக்கு அருகில் நின்று கொண்டிருக்கும் அந்த ஒற்றை ஆன்மாவிற்கு என்னால் ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. நான் செயலற்ற நிலையில் இருக்கிறேன். அதே நேரத்தில்- என்னுடைய வாழ்க்கை என்னுடையது- அவளுடைய வாழ்க்கை அவளுடையது என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.' அவன் சிந்தித்துக்கொண்டிருந்தான். மீண்டும் வெளியே செல்லும் ஒரு ரயில் வந்தது. திடீரென்று அவள் ரயிலை நோக்கி நடந்துகொண்டே கூறினாள்.

“நாம் அதில் ஏறுவோம்.''

“ஏன்?'' அவளுடைய சிறிய பின்பகுதியால் பிடித்து இழுக்கப்பட்டதைப்போல, அவளைப் பின்தொடர்ந்து கொண்டே டோஷியோ கேட்டான்.

“நாம் பயணம் செய்வோம். எது எப்படியோ... நாம் இதில் செல்வோம்.'' அவள் அவனை வேகமாக ஒரு பார்வை பார்த்துவிட்டு, ரயிலுக்குள் நுழைந்து சென்றாள். அவனை அவள் பார்க்கவேயில்லை.

அவளுடைய உடலின்மீது விட்டெறியப் பட்டதைப்போல அவன் அவளைப் பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்தான். அவளுடைய முகத்தில் ஒரு இளமையான தூண்டுதல் நிழலாடிக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான்.


உள்ளே நுழைந்தபிறகு, பேசுவதற்குப் பெரிதாக விஷயமெதுவும் இல்லாமலிருந்தது.

“என்ன நடந்தது? நாம் எப்படி இந்த ரயிலுக்குள் வந்தோம்?''

“ஒன்றுமில்லை... அதே நேரத்தில் இதற்குமேல் என்னால் காத்திருக்க முடியவில்லை'' தொடர்ந்து உரையாடல் முடிந்துவிட்டது. அவர்களுக்கிடையே தாங்கிக்கொள்ள முடியாத அளவிற்கு ஒரு இறுக்கமான சூழ்நிலை நிலவியது. அவள் ஒரு பெல்ட்டைப் பற்றிக் கொண்டிருக்க, அவளிடமிருந்து ஒரு ஈர்க்கக் கூடிய காற்று வீசிக் கொண்டிருப்பதைப்போல அவன் உணர்ந்தான்.

“உங்களுடைய இடம் ஸ்டேஷனிலிருந்து மிகவும் தூரத்தில் இருக்கிறது. இல்லையா?'' சிறிது நேர இடைவெளிக்குப் பிறகு அவன் கேட்டான்.

“ஆமாம்...'' முன்னால் பார்த்துக்கொண்டே, அவள் கூறினாள்.

“அங்கிருந்து போய்ச் சேர்வதற்கு உங்களுக்கு எவ்வளவு நேரம் ஆகும்?''

“கிட்டத்தட்ட பதினைந்து நிமிடங்கள் ஆகும்.''

“அது ஆபத்தான விஷயம்... இல்லையா?''

“ஆமாம்...'' அவள் தலையை ஆட்டிக்கொண்டே சொன்னாள். “சில இரவுகளுக்கு முன்னால், ஒரு பெண் தாக்கப்பட்டாள்... கடைசியில், ஒரு குடை மட்டுமே எஞ்சியது....''

“நான் உங்களை வீடு வரை கொண்டுவந்து விடட்டுமா?'' அவன் கேட்டான். அவள் பதிலெதுவும் கூறவில்லை. ஆனால், அவள் தன்னுடைய தலையை அமைதியாக ஆட்டுவதையும் கையறு நிலையில் தான் இருப்பதை வெளிப்படுத்துவதையும் அவன் பார்த்தான். மீண்டும் அவர்கள் தங்களின் இதயங்களை தூரத்தில் வைத்துக்கொண்டு நின்றிருந்தார்கள். மெகுரோ, ஷிபுயா ஸ்டேஷன்களைத் தாண்டி ரயில் ஷின்ஜூக்கு ஸ்டேஷனை அடைந்தது. அவளை, தான் அவளுடைய வீட்டுக்குக் கொண்டு வந்து விடலாமா என்பதைப் பற்றியும் ‘சுவோ'விற்குச் செல்லும் நடைபாதையை நோக்கி நடக்கலாமா- என்பதைப் பற்றியும் டோஷியோ அப்போதும் விவாதித்துக் கொண்டிருந்தான். “நான் உங்களை வீட்டுக்கு கொண்டு வந்து விடவா?'' - அவன் திரும்பவும் கேட்டான். ஆனால், அவள் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தாள்.

ரயில் கிட்டத்தட்ட காலியாக இருந்தது. எனினும், அவர்கள் ஒரு கதவுக்கு அருகில் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு நின்றிருந்தார்கள். ஜன்னலின் வழியாக நுழைந்து வந்து வீசிக்கொண்டிருந்த காற்றை அவன் கவனித்தான். அது அவளுடைய கூந்தலில் மோதி, கீழே இறங்கி அவளுடைய கழுத்தைச் சுற்றி விழுந்து கொண்டிருந்தது. இடது பக்கமாக சிறிது சாய்ந்த நிலையில் நின்றிருந்த அவளுடைய சரீரத்தை அவன் பார்த்தான். அது தன்னுடைய கையறு நிலையைப் பறைசாற்றிக் கொண்டிருந்தது. தோற்கடிக்கப்பட்ட இந்த நாட்டில் அவளால் இனிமேல் வாழமுடியாது என்பதை அவனால் உணரமுடிந்தது. ‘வெகுசீக்கிரமே, அவள் இப்போதைய வாழ்க்கையைத் தொடர்ந்து நடத்த முடியாத சூழ்நிலை ஏற்படும். இந்த மாதம் சம்பளத்தில் சிறிது உயர்வு உண்டாக்கப்பட்டது. ஆனால், உணவுப் பொருட்களை வாங்குவதற்கு அது பெரிய அளவில் உதவியாக இருக்காது. அவளுடைய நிறுவனத்தின் சூழ்நிலையும் அதுவாகத்தான் இருக்குமென்று நான் நினைக்கிறேன்?' அவன்  மனதில் சிந்தித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய கண்களுக்கு முன்னால், அவளுடைய உடல் மிகவும் மெலிந்துபோய், வாழ்க்கையின் ஒளியை இழந்து, தூசியைப்போல மறைந்து போவதை அவன் கற்பனை செய்து பார்த்தான்.

அவளிடம் கூறுவதற்கு இனிமேல் அவனிடம் எதுவுமே இல்லை. தன்னுடைய வார்த்தைகள், அவை எப்படிப்பட்டவையாக இருந்தாலும் அவளுடைய இதயத்தைப்போய் அடையாது என்ற விஷயத்தை அவன் புரிந்துகொண்டிருந்தான். "அவளுக்குள் மிகப் பெரிய கவலைகள் இருக்கின்றன. அவை அவளை நசுக்கப் போகின்றன. ஆனால், அதை என்னால் தொட்டுப்பார்க்கக்கூட முடியாது. அவளைப் பற்றிய எந்தவொரு விஷயமும் எனக்குத் தெரியாது. என்னுடைய கவலைகள் மட்டுமே எனக்குத் தெரியும். நான் அதில் மட்டுமே கவனம் செலுத்த முடியும்... அவ்வளவுதான்...'' அவன் மனதில் நினைத்தான்.

அவள் திரும்பி, தன்னைப் பார்ப்பதை டோஷியோ பார்த்தான். அவனுக்கு முன்னால், அவளுடைய அழகான முகம் அந்த இருண்ட வெளியில் மிதந்து கொண்டிருந்தது. அந்த முகத்தையே அவன் வெறித்துப் பார்த்தான். போர்க்களத்தின் துயரங்கள் அங்கு இருப்பதை அவன் பார்த்தான். அதற்குள் அவன் நுழைந்துசெல்ல விரும்பினான். தன்னைப் போன்ற ஒரு மனிதனிடம் உண்மைத் தன்மையோ நேர்மை குணமோ எஞ்சியிருக்கும்பட்சம், அது அவளுடைய துயரத்தைச் சந்திக்க வேண்டும் என்று அவன் ஆசைப்பட்டான். இரண்டு இதயங்கள் தங்களுக்குள் இருக்கக்கூடிய கவலைகளைப் பரிமாறிக் கொண்டால்... அவர்கள் இருவரும் தாங்கள் வாழ்ந்து கொண்டிருப்பதற்கான ரகசியங்களை ஒருவர் கையில் ஒருவர் கொடுத்துக் கொண்டால்... ஒரு ஆணும் ஒரு பெண்ணும் ஒருவரோடொருவர் உண்மைத் தன்மையை வெளிப்படுத்திக் கொண்டால்... அவர்களுடைய வாழ்க்கைகளுக்கு ஒரு புதிய முக்கியத்துவம் வந்துசேரும். ஆனால், அது நடக்காது என்று அவன் நினைத்தான்.

ரயில் அவளுடைய நிறுத்தமான ‘யோட்சுயா'வை நெருங்கிக் கொண்டிருந்தது. அவனுடைய கண்கள் அவளுடைய முகத்திலேயே நிலைத்து விட்டிருந்தன. திடீரென்று அவளுடைய அழகான முகத்தின் ஒரு மூலையில் ஒரு சிறிய புள்ளி இருப்பதை அவன் பார்த்தான். அந்தப் புள்ளி ஆச்சரியப்படும் வகையில் அவனுடைய மனதை நிலைகுலையச் செய்தது. அந்த அளவிற்கு மிகவும் சிறியதாக அந்தப் புள்ளி இருந்ததால் அதை மக்கள் யாரும் கவனிக்கவில்லை. அந்தப் புள்ளி, தூசியின் காரணமாகவோ நிலக்கரியினாலோ புகையாலோ உண்டாகியிருக்க வேண்டும். இல்லாவிட்டால், முகத்தில் பூசியிருந்த பவுடருக்குப் பின்னால் லேசாகத் தெரிந்த ஒரு மச்சமாக அது இருக்கவேண்டும். எது எப்படி இருந்தாலும், அது ஒரு சிறிய அதிர்வை அவனுடைய இதயத்தில் உண்டாக்கியது என்பதென்னவோ உண்மை. அது என்ன என்று பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தால் உந்தப்பட்டு, அவளுடைய இடது கண்ணுக்கு மேலேயிருந்த அந்தப் புள்ளியையே அவன் கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அதையே ஆழமாகப் பார்த்தான். எது அவனை அலைக்கழித்துக் கொண்டிருந்தது என்றால், அது அந்தப் புள்ளி அல்ல. தன்னுடைய இதயத்தின் ஒரு மூலையில் எங்கோ ஒரு இடத்தில் ஒரு புள்ளி இருப்பதைப்போல அவன் உணர்ந்தான். அந்தப் புள்ளி எதைக் குறிப்பிடு கிறது என்ற விஷயம் அவனுக்கு ஏற்கெனவே தெரியும். அவன் தன்னுடைய இதயத்தில் இருந்த புள்ளியின்மீது தன் கண்களைப் பதித்தான். தற்போதைக்கு அந்தப் புள்ளி வீங்கி, படிப்படியாக பெரியதாக... பெரியதாக ஆகிக்கொண்டு வருவதை அவன் கவனித்தான். வளர்ந்தவுடன், அது அவனுடைய கண்களை நெருங்கிக் கொண்டிருந்தது. அது அவனுடைய கண்களுக்கு அருகில் வந்தது. அது மேலும் அவனுடைய கண்களுக்கு அருகில் வந்தது. ஓ! அவன் தன் இதயத்திற்குள் அழுதான். தொடர்ந்து அந்தப் புள்ளி மிகவும் வேகமாக குராக்கோவின் அழகான முகத்தில் பரவுவதை அவன் பார்த்தான். ஒரு பெரிய சிவந்த, வட்டமான, வெப்பம் நிறைந்த நிலவு அவளுடைய முகத்தில் எழுந்து மேலே உயர்ந்து கொண்டிருந்தது. மஞ்சள் நிறத்தில் இருக்கும் கன்னங்களைக் கொண்ட, ஜுரத்தால் பாதிக்கப்பட்ட ராணுவ வீரர்களின் முகங்கள் பார்வையில் பட்டன. தொடர்ந்து, சீராக இல்லாத ராணுவக் குழுவின் நீளமான நிழல் மிகவும் பின்னால் தெரிந்தது.


வாகனங்களின் ஒரு உறுமல் சத்தம் அவனுடைய உடலில் வந்து மோதியது. மீனவனான நாக்காகவாவின் வார்த்தைகள் அவனுடைய காதில் வந்து விழுந்தன. ‘இதற்குமேல் என்னால் நடக்க முடியாது!' ஒரு உறுமல் சத்தத்துடன் கலந்து அந்தக் குரல் மீண்டும் ஒலிக்க, அவன் கேட்டான்: ‘நான் இதை கையிலிருந்து நழுவ விடப்போகிறேன்... நான்... நான்...' வாகனங்களின் இரைச்சல் சத்தம் அவனுடைய உடலின் ஆழங்களுக்குள்ளிருந்து வெளியே வந்தது. ஏதோ வெப்பமான ஒன்று அவனுக்குள்ளிருந்து கிளம்பி வெளியே வந்தது. ‘நான் இதை கையிலிருந்து நழுவவிடப் போகிறேன்.... நான் நழுவவிடப் போகிறேன்.' நாக்காகவாவின் உடல் தன்னிடமிருந்து விலகி மரணத்தை நோக்கி நகர்ந்து செல்வதை அவன் உணர்ந்தான். நாக்காகவாவை மரணத்திற்குள் தான் தள்ளி விடுவதை அவனே பார்த்தான். புகைவண்டி தான் போய்க்கொண்டிருந்த ஒரு குகைப் பாதையை அதிரச் செய்தது. தன்னுடைய இருண்ட சிந்தனைகள் தன் உடம்பிற்குள் இருந்து புறப்பட்டு மேலே வருவதைத் தொடர்ந்து, அவன் வேதனையில் மூழ்கினான். ‘என்னால் உதவ முடியாது... என்னால் உதவ முடியாது... என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள... என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொள்ள... வேறு வழியே இல்லை. அப்போது நான் எப்படி இருந்தேனோ, அதேமாதிரிதான் நான் இப்போதும் இருக்கிறேன். இதே போன்ற சூழ்நிலையில் இருக்கும் பட்சம், யாராக இருந்தாலும், என் கண்களுக்கு முன்னால் ஒரு நண்பனை மரணத்தைத் தழுவவிட்ட  அதே செயலைத்தான் செய்வார்கள். நான் என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டேன். அவளுக்கும், அவளுடைய துயரங்களுக்கும் உதவுவதற்காக என்னால் எதுவும் செய்ய முடியாது.'

அவளுடைய சோர்வடைந்துபோன முகத்திலிருந்து வெளியேறி அவனை நோக்கி வந்த அவளுடைய இதயத்தின் அகலத்தை அவனால் உணரமுடிந்தது. ‘நான் அவளுடைய வாழ்க்கையில் இருக்க மாட்டேன். நான் என் சொந்த வாழ்க்கையில் தான் இருப்பேன்.' அவளுடைய இதயத்திற்குள் இருப்பதுடன் தான் தொடர்பு கொள்வதற்கில்லை என்று அவன் நினைத்தான். ‘என்னால் முடியாது.... பிற உயிர்களின் வாழ்க்கைகளில் என்னால் எதுவும் செய்ய முடியாது. நான் என்னுடைய சொந்த வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொண்டிருக்கும்போது, பிற உயிர்களின் வாழ்க்கைகளை நான் எப்படி காப்பாற்ற முடியும்?'

புகைவண்டி யோட்சுயா ஸ்டேஷனை அடைந்தது. புகைவண்டி நின்றது. கதவு திறந்தது. குராக்கோ தன்னைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவன் பார்த்தான். அவளுடைய சிறிய வலது பக்கத் தோள் அவனுடைய இதயத்தை அழைப்பதை அவன் பார்த்தான். ‘நான் அவளை வீட்டில் கொண்டுபோய் விடலாமா? நான் என்ன செய்வது?'  அவன் சிந்தித்தான். ‘இல்லை... நான் மாட்டேன்... நான் மாட்டேன்...'

“குட்பை...'' அவன் தன் தலையை குனிந்துகொண்டே சொன்னான்.

“ம்...'' இயந்திரத்தனமாக செய்வதைப்போல, தன்னுடைய முகத்தை பின்னோக்கி இழுத்துக் கொண்டே அவள் சொன்னாள். ஒரு உயிர்ப்பு இல்லாத புன்னகை அவளுடைய முகத்தில் தோன்றியது. அவள் புகைவண்டியை விட்டு இறங்கினாள். கதவு மூடியது. புகைவண்டி புறப்பட்டது. புகை வண்டியில் அமர்ந்திருந்த தன்னைத் தேடிக் கொண்டிருந்த அவளுடைய முகத்தை ஒரு கண்ணாடியின் வழியாக அவன் பார்த்தான். நடைபாதையில் இருந்த அவளுடைய முகம் கொஞ்சம் கொஞ்சமாக தூரத்தில் விலகிப் போய்க் கொண்டிருந்தது. கீறல் விழுந்த கதவின் கண்ணாடி அவளுடைய முகத்தைக் கீறுவதை அவன் பார்த்தான். தன் வாழ்க்கை அவளுடைய முகத்தைக் கீறுவதை அவன் பார்த்தான். தன் வாழ்க்கை அவளுடைய வாழ்க்கையைக் கீறுவதை அவன் பார்த்தான். ஒரு பளபளவென்றிருந்த கண்ணாடி தங்களுடைய வாழ்க்கைகளுக்கு இடையே முடிவற்ற வேகத்துடன் கடந்து சென்று கொண்டிருப்பதை அவன் உணர்ந்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.