Logo

கனவுக்கு ஏன் அழுதாய்?

Category: புதினம்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 6649
kanavukku en azhudhai

“உங்களுக்கு எந்தக் குறையும் இல்லை, என்கிட்டேயும் எந்தப் பிரச்சனையும் இல்லை. அதனால குழந்தைபேறுக்கு எந்தத் தடையும் இல்லைன்னு நாம பார்த்த எல்லா டாக்டர்களும் சொல்றாங்க. ஆனா, இன்னும் நமக்கு அந்த பாக்கியம் கிடைக்கலியேங்க...” கவலையுடன் பேசிய சுசிலாவின் கண்களில் கண்ணீர் குளம் கட்டியிருந்தது.

“டாக்டர்களுக்கெல்லாம் மேல ஆண்டவன்னு ஒரு பெரிய டாக்டர் இருக்கானே. அவன் கண் திறக்கணுமே சுசிலா...”

“நான் போகாத கோயிலா, வேண்டாதா தெய்வமா? நான் இருக்காத விரதமா? பயன் ஏதும் இல்லாம சலிப்பா இருக்குங்க...”

“நம்பிக்கையை தளர விடாத சுசிலா. எதுக்குமே நேரமும், காலமும் கூடி வரணும்.” அதற்கு மேல் எதுவும் பேச முடியாதவராய், உள் அறைக்குச் சென்றார் சிவலிங்கம். தனது அறையில் அவருக்கென்று இருந்த அந்தரங்க அலமாரியைத் திறந்தார். அங்கே ஒரு அழகிய வெள்ளிப் பெட்டி இருந்தது. அதைத் திறந்தார். உள்ளே ஒரு இளம்பெண், புகைப்படத்தில் அழகாகச் சிரித்துக் கொண்டிருந்தாள். அந்தப் புகைப்படத்தின் அருகே இரண்டு கருகமணிகள் இருந்தன.

சிவலிங்கத்தின் கண்கள் கலங்கின. ‘புஷ்பா, புஷ்பம் போன்ற உன்னைப் புழுதியில் வீசி எறிந்தேனே.. அதற்குரிய தண்டனையை அனுபவிச்சுக்கிட்டிருக்கேன்மா. கைதட்டி கூப்பிட்டா கைகட்டி வந்து நிற்கறதுக்கு ஆள், சமைக்கறதுக்கு ஆள், அதைப் பரிமாறுவதற்கு ஆள், வெயில் படாம வெளியே போறதுக்கு சொகுசு கார், இந்த மதுரையில் பங்களா, கோடை காலத்துல குளுகுளுன்னு தங்கறதுக்கு ஊட்டி, கொடைக்கானல்ல பங்களா, லட்சக்கணக்குல பேங்க் பேலன்ஸ் எல்லாமே நிறைஞ்சிருந்தும், எதுவுமே இல்லாதது போல என் வீடு சூன்யமா இருக்கே புஷ்பா. எங்க அப்பாவோட கண்டிப்புக்கு பயந்து, நம்ம காதலை அவர்கிட்ட சொல்லாம விட்டுட்டேன். அவர் பார்த்த பொண்ணு சுசிலா கழுத்துல தாலி கட்டி உன்னை ஏமாத்திட்டேன். அதுக்கான தண்டனையை கடவுள் குடுத்துட்டார் புஷ்பா. நீ எங்கே இருக்கியோ... எப்படி கஷ்டப்படறியோ... நிச்சயமா என் மேல உனக்குக் கோபம் இருக்கும். ஏழையான உன்கிட்ட ஆசை வார்த்தை சொல்லி, நான் கோழையாயிட்டேன் புஷ்பா...’

காலடியோசை கேட்டதும் அவசர அவசரமாக அலமாரியின் கதவைப் பூட்டினார். சுசிலா உள்ளே வந்தாள். கண்கள் சிவந்த நிலையில் சோகம் அப்பிய முகத்துடன் காணப்பட்ட சிவலிங்கத்தைப் பார்த்தாள். பதறினாள்.

“என்னங்க இது, என்னோட மன ஆறுதலுக்காக நான் உங்ககிட்ட பேசினா, நீங்க இவ்வளவு வேதனைப்படறீங்க...? நீங்க இந்த அளவுக்கு வருத்தப்படறீங்கன்னா, நான் இனிமேல் அதைப்பத்தி பேசவே மாட்டேங்க.”

“அதெல்லாம் ஒண்ணுமில்லை சுசிலா...”சமாளித்தார் சிவலிங்கம்.

“ரெண்டு நாள்ல உங்க அப்பாவோட நினைவு நாள் வருது. அதுக்குரிய வேலைகள் எல்லாம் தலைக்கு மேல் கிடக்கு. வாங்க, உட்கார்ந்து லிஸ்ட் போடுவோம். முதல்ல என்னென்ன வேலைகள் இருக்குன்னு எழுதுவோம். பிறகு அதுல இருந்து வாங்க வேண்டிய சாமான் லிஸ்ட் பிரிச்சு எழுதலாம்...”

சிவலிங்கத்தின் மனதை மாற்றுவதற்காக, முயற்சி எடுத்தாள் சுசிலா. பேப்பரும், பேனாவும் எடுத்துக் கொண்டு சோபாவில் உட்கார்ந்தாள். சிவலிங்கமும் அவளைப் பின் தொடர்ந்தார். அவரது அப்பாவின் பெரிய சைஸ் படம் ஹால் சுவரில் மாட்டப்பட்டிருந்தது.

“உங்க அப்பா தெய்வமா இருந்து சீக்கிரமாவே நமக்கு ஒரு வாரிசு வரும்படி அருள்புரிவார்ங்க. அன்னதானம், ஆடை தானம் எல்லாத்துக்கும் ஏற்பாடு செய்யணும்ங்க.”

“உன் இஷ்டப்படி என்னென்ன செய்யணுமோ, எல்லாம் செஞ்சுடலாம் சுசிலா.” வாயில் இருந்து பேச்சு வெளிப்பட்டாலும் உள் மனது புஷ்பாவையே சுற்றி வந்தது.

‘ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிக்கறேன்னு சொல்லி ஏமாத்தியாச்சு. இன்னொரு பெண்ணைக் கல்யாணம் பண்ணிட்டு, அவகூட சந்தோஷமா வாழற மாதிரி ஏமாத்திட்டிருக்கேன். நான் வாழற இந்தப் பொய்யான வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? நெஞ்சுல ஒருத்தியோட நினைவை சுமந்துக்கிட்டு நேர்ல இன்னொருத்திகூட கடமைக்காக வாழ்ந்துக்கிட்டிருக்கேன்.’ விரக்தியின் பிரதிபலிப்பு அவரது பெருமூச்சில் வெளிப்பட்டது.

2

புகைப்படத்தில் கம்பீரமாக புன்னகைத்துக் கொண்டிருந்தார் சிங்காரவேலர். சிவலிங்கத்தின் தந்தை. இளைய மகன் சிவலிங்கத்தின் ஆசைகளையெல்லாம் நிறைவேற்றும் பொருட்டு, சிறு வயதிலிருந்தே அவன் விரல் நீட்டி சுட்டிக்காட்டும் எல்லாவற்றையும் வாங்கிக் கொடுத்தார். பணபலம் நிரம்பப் பெற்ற அவரால், மகன் கேட்ட அனைத்தையும் அடைய வைக்க முடிந்தது. ஆனால், ‘ஏழைகளைக் கண்ணால் பார்ப்பது கூட பாவம்’ என்ற அகம்பாவமும், ஆணவமும் அடங்கிய அவரது மனம், மகனின் உள்ளுணர்வுகளைப் புரிந்து கொள்ளவில்லை. தந்தையின் இந்த மனோபாவத்தால், ஒரு ஏழைப் பெண்ணைக் காதலித்த உண்மையை சிவலிங்கம் மறைத்துவிட நேர்ந்தது. அதன் விளைவு? அப்பாவின் ஆசைப்படி அவரது அந்தஸ்திற்கு சமமான குடும்பத்தைச் சேர்ந்த சுசிலாவைக் கைப்பிடிக்க நேர்ந்தது. ஏழைப் பெண்ணான புஷ்பாவைக் கைவிட நேரிட்டது.

பயம்... பயம். அந்தஸ்து வெறியரான அப்பாவிடம் புஷ்பா மீதான காதலை வெளியிடத் தடுத்தது பயம். அவரை மீறி புஷ்பாவைக் கல்யாணம் செய்து கொள்ளத் தடுத்தது அவர் மீது கொண்ட பாசம்... காதலுக்கும், பெற்ற பாசத்திற்கும் நடுவே எழுந்த போராட்டத்தில் பாசம் வெற்றி பெற்றது. பயம் அதற்குத் துணை புரிந்தது.

சிவலிங்கத்தின் குழந்தைகளைக் கண்டு மகிழ வேண்டும் என்ற சிங்காரவேலரின் ஆசை நிராசையானது. காலம் செய்த கோலம் அவரது உயிரை எடுத்துக் கொண்டது. அவர் உயிரோடு இருக்கும்வரை சிவலிங்கத்திற்கு குழந்தை பிறக்கவில்லை. அந்த ஏக்கம் சிங்காரவேலருக்கு அவரது மரணகாலம் வரை இருந்தது. அந்த ஏக்கத்திலேயே அவரது இதயமும் நின்றுபோனது.

மூத்த மகன் ராமகிருஷ்ணனைவிட, இளைய மகன் மீது அதிக ஒட்டுதலும், பாசமும் வைத்திருந்தார் சிங்காரவேலர். அந்த அளவற்ற பாசத்தை மீறி தன் காதலைப் பற்றிச் சொல்ல இயலாத மனநிலையில் தடுமாறினார் சிவலிங்கம். நினைவுகள் அளித்த துன்பத்தைத் தாங்கிக் கொள்ள இயலாமல் தவித்தார் சிவலிங்கம்.

புஷ்பாவின் முகம் கண்ணுக்குள் தோன்றும்போதெல்லாம் இதயத்திற்குள் தோன்றும் ஒரு வலி. அந்த வலிக்கு வழி தேடியதே தனது கோழைத்தனம்தானே என்ற இயலாமை உணர்வில் உள்ளம் தவிர்த்தார்.

“என்னங்க, நான் கேட்டுக்கிட்டே இருக்கேன்... நீங்க எதுவுமே பதில் சொல்லாம இருக்கீங்க?” சுசிலாவின் குரல் கேட்டுத் தன் உணர்விற்கு மீண்டார் சிவலிங்கம்.

“என்ன சுசிலா? என்ன கேட்ட?”

“அடிக்கடி இப்படி மூட் அவுட் ஆயிடறீங்க. எனக்கு எவ்வளவு கஷ்டமா இருக்கு தெரியுமா...?” சுசிலா பேசி முடிக்கும் முன், டெலிபோன் ஒலித்தது.

சுசிலா எழுந்து ரிசீவரை எடுத்தாள். குரல் கொடுத்தாள்.

“ஹலோ...”

“......”


“என்ன? ஆக்ஸிடெண்ட்டா... ஐயோ...”

“என்ன ஆச்சு சுசிலா, யார் போன்ல?” சுசிலாவின் பதற்றம் சிவலிங்கத்தையும் பற்றிக் கொண்டது.

“உங்க... உங்க அண்ணன், அண்ணி, குழந்தை கல்யாணி இவங்க எல்லாரும் இன்னிக்கு இங்கே வர்றதுக்காகப் புறப்பட்டிருக்காங்க. வர்ற வழியில கார் மேல லாரி மோதிடுச்சாம். அந்த இடத்துலயே உங்க அண்ணனும், அண்ணியும் இறந்துட்டாங்களாம். திருச்சிகிட்டயே ஆக்ஸிடெண்ட்டாம். குழந்தை கல்யாணி போலீஸ் பாதுகாப்புல இருக்காளாம்.”

அழுகை மாறாத குரலில் சுசிலா தகவல் சொன்னதும், சிவலிங்கத்திற்கு தலை சுற்றியது. இடிந்து போனவராய் சோபா மீது சரிந்தார். தன்னைச் சமாளித்துக் கொண்ட சுசிலா, அவர் அருகே வந்தாள்.

“எழுந்திருங்க நாம போய் ஆக வேண்டியதைப் பார்க்கலாம்” அவருக்கு தைரியம் சொன்னாள் சுசிலா.

கார் திருச்சியை நோக்கி சென்று கொண்டிருந்தது. கனத்துப் போன இதயத்துடன் பயணித்துக் கொண்டிருந்தனர் சிவலிங்கமும் சுசிலாவும்...

“உங்க அப்பாவோட நினைவு நாளுக்காக ரெண்டு நாளைக்கு முன்னாடியே வந்து நம்பகூட சந்தோஷமா இருந்துட்டுப் போற உங்க அண்ணனும் அண்ணியும் நம்மை இப்படி தவிக்க விட்டுட்டாங்களேங்க... அம்மா, அப்பாவை பறிகொடுத்துட்ட சின்னப் பொண்ணு கல்யாணி எப்படித் தவிக்குதோ?”

“திருச்சியில இருக்கற பிஸினஸை எல்லாம் நிறுத்திட்டு இங்கே வரச்சொல்லி அண்ணன்கிட்ட எவ்வளவோ கேட்டுப் பார்த்தேன். மறுத்திட்டாரு. ஊரை விட்டுத்தான் தள்ளி இருக்கார்னு பார்த்தா, இப்ப இந்த உலகத்தை விட்டே போயிட்டாரே... சுசிலா... அண்ணன், என்னைவிட ரெண்டு வருஷம்தான் மூத்தவர். நாங்க வளரும்போது நல்ல நண்பர்கள் போலத்தான் பழகினோம்...

“எங்க அப்பா திருச்சியில் பிஸினஸ் ஆரம்பிச்சுக் குடுத்ததும், அங்கே போய் ஸெட்டில் ஆயிட்டார். அவருக்கென்னமோ அந்த ஊர் பிடிச்சுப் போச்சு. அப்பாவோட நினைவு நாளுக்கு வர்றப்ப நாங்க எவ்வளவு சந்தோஷமா இருப்போம்? இப்ப... இப்ப... அண்ணனும், அண்ணியும் ஒரே சமயத்துல போயிட்டாங்க. கல்யாணி தாய் – தகப்பன் இல்லாத குழந்தையாயிடுச்சே சுசிலா...” மேலும் பேச இயலாம அழ ஆரம்பித்தார் சிவலிங்கம். அவர் அழுவதைப் பார்த்து சுசிலாவும அழ, கார் திருச்சியை நோக்கி விரைந்தது.

3

ழு வயது நிரம்பிய கல்யாணி, சிங்காரவேலரின் குடும்பத்தின் வாரிசு. சிவலிங்கத்தின் அண்ணன் ராமகிருஷ்ணனுக்குத் திருமணமாகி பல ஆண்டுகளுக்குப் பின்பே கல்யாணி பிறந்தாள். தாய், தந்தையை ஒரே சமயத்தில் பறி கொடுத்துவிட்ட துக்கத்தில் இருந்து கல்யாணியின் பிஞ்சு உள்ளத்தை சுசிலாவின் தாய்ப்பாசம் ஆறுதல்படுத்தியது. மாம்பழம் போன்ற கன்னக் கதுப்புகள், கருந்திராட்சை போன்ற பளபளக்கும் கண்களென, எலுமிச்சை நிறத்தில் பொம்மை போல அழகாக இருந்த கல்யாணியைத் தன் அருகிலேயே பொத்தி வைத்துக் கொண்டாள் சுசிலா.

திருச்சியில் இருந்த வியாபார நிறுவனங்கள் மூடப்பட்டன. மதுரையிலேயே நல்ல கான்வென்ட்டில் கல்யாணியை சேர்த்தனர். சுசிலாவும் படித்த பெண், ஆகையினால், கல்யாணியின் கல்வி, ஒழுக்கம், பேசும் பழக்க வழக்கங்கள் எல்லாவற்றிலும் தனி கவனம் செலுத்தி, தான் பெற்ற குழந்தையை வளர்ப்பது போலவே வளர்த்தாள். கல்யாணியை வளர்ப்பதிலேயே தனக்கென்று குழந்தை இல்லாத குறையையும் மறந்தாள்.

‘அம்மா... அம்மா’ என்று தன் காலைச் சுற்றி சுற்றி வந்து வளர்ந்த கல்யாணி பருவம் அடைந்து, படிப்பையும் முடித்துப் பெரியவளாகி நின்றபோது, பிரமித்துப் போனாள் சுசிலா. ‘காலத்தின் சக்கரத்திற்கு இத்தனை வேகமா? பெற்றவர்களை இழந்த சோகம் மாறாத கண்களுடன் ஏக்கமாகத் தன்னைத் தஞ்சம் அடைந்த பிஞ்சுக்குழந்தை கல்யாணி, இன்று உலகம் அறிந்த பெண்ணாக வளர்ந்து நிற்கிறாள். இவளது கல்வி, அழகு, ஒழுக்கம், உயர்வான பண்பு இவற்றிற்கேற்ற மணமகன் ஒருவனைத் தேடிக் கண்டுபிடித்து இவளது எதிர்காலத்தை ஒளிமயமாக்கும் பெரிய கடமை காத்திருக்கிறதே!’ சுசிலா பயந்தாள்.

‘என்ன சுசிலா, உட்கார்ந்துக்கிட்டே தூங்கறியா?’ சிவலிங்கத்தின் குரல் அவளது சிந்தனைகளைக் கலைத்தது. “தூங்கறேனா? நல்லா சொன்னீங்க... நம்ம கல்யாணி வளர்ந்து ஆளாகி நிக்கறா. அவளுக்குக் கல்யாணம் பண்ண வேண்டிய பெரிய பொறுப்பைப் பத்தி யோசிச்சுக்கிட்டிருக்கேன்.”

“கல்யாணி மூணாவது வருஷ படிப்புல கால் வச்சதுமே, அவளுக்குக் கல்யாணப் பந்தல் கால் நடணும்ங்கற கவனமும், திட்டமும் எனக்கு வந்தாச்சு. அவளுக்காக என்னோட சில நல்ல நண்பர்கள்கிட்ட மாப்பிள்ளைக்கு சொல்லி வச்சிருந்தேன். அவங்களும் நல்ல குடும்பத்துப் பையன்களைப் பத்தி என்கிட்ட சொல்லி இருக்காங்க.”

“அட, பரவாயில்லையே, என்கிட்ட கூட சொல்லாம மகளுக்கு மாப்பிள்ளை தேட ஆரம்பிச்சிருக்கீங்க. பொறுப்பான அப்பாதான்...”

“கல்யாணியை நல்லவிதமா வளர்க்கற பொறுப்பை நீ எடுத்துக்கிட்ட. அவளோட வளமான எதிர்காலத்தை உருவாக்கற பொறுப்பை நான் எடுத்துக்கிட்டேன். நமக்குக் குழந்தை இல்லாத குறை தீர்க்க வந்த தெய்வக் குழந்தை கல்யாணி. அவ இங்க வந்தப்புறம் தானே உன் முகத்துல சந்தோஷத்தைப் பார்க்க முடிஞ்சது. நீ கவலைப்படாதே. என்னோட நண்பர்கள் கொண்டு வந்த வரன்கள்ல எனக்குப் பிடிச்சமான ஒரு வரன் இருக்கு. இந்தப் பையனைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டேன். பேர் தியாகு. கம்ப்யூட்டர் படிப்புல வித்தகன். சொந்தமா கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்ணிக் குடுக்கற கம்பெனி நடத்தறான்.”

”பையனோட அம்மா, அப்பா? பையன் கூடப் பிறந்தவங்க எத்தனை பேர்?”

“பையனுக்கு ஒரே ஒரு தங்கச்சி. இவனுக்கும் அந்தப் பெண்ணுக்கும் பன்னிரண்டு வருஷ இடைவெளி. அந்தக் குழந்தை பிறந்த கொஞ்ச நாள்லயே பெத்தவங்க இறந்துட்டாங்களாம். தங்கச்சியை இவன்தான் வளர்த்துக்கிட்டிருக்கானாம். பூர்வீக சொத்துன்னு பெரிய அளவுல எதுவும் கிடையாதாம். அவங்கப்பா நடத்தின பெயிண்ட் ஏஜென்ஸியை மூட வேண்டிய நிலை. ஏன்னா, அவர் இறந்தப்ப இந்தப் பையனுக்கு நிர்வாகத்தை கவனிக்கிற அளவுக்கு வயது பத்தாது. ஆனா, இந்தப் பையன் நல்லாபடிச்சு தன்னோட சொந்தக்கால்ல நின்னு உழைச்சு முன்னுக்கு வந்திருக்கான். எந்தக் கெட்ட பழக்கமும் கிடையாதாம்...”

வியந்து போனாள் சுசிலா. “அட இவ்வளவு விஷயம் சேகரிச்சு வச்சிருக்கீங்க! பையனைப் பத்தின விவரம் கேட்டா, அவனோட வரலாற்றையே சொல்றீங்களே...!”

“அதுக்கு முக்கியமான காரணம் எனக்கு அந்தப் பையனைப் பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. அதனால பல வழிகள்ல தகவல்கள் சேகரிச்சேன்.”

“உங்களுக்குப் பிடிச்சிருக்கு. நம்ம கல்யாணிக்கும் பிடிக்கணும். அது சரி... நீங்க மாப்பிள்ளை பையனை எங்கே பார்த்தீங்க? அதைச் சொல்லுங்க...”

“சொல்றதுக்குள்ள அவசரப்படறியே? போன வாரம் திருச்சியில நம்ப க்ளையண்ட்டைப் பார்க்கப் போனேன்ல, அப்பத்தான் பார்த்தேன்.”

“என்ன?! திருச்சியிலயா பையன் இருக்கான்? இவ்வளவு நேரம் நீங்க அதைச் சொல்லவே இல்லையே?”


“வெளியூர் மாப்பிள்ளைன்னா உடனே நீ எடுத்த எடுப்பிலேயே வேண்டாம்னு சொல்லிடுவியோன்னுதான் முதல்ல மாப்பிள்ளைப் பையனைப் பத்தின ப்ளஸ் பாயிண்ட்ஸ் எல்லாம் சொன்னேன்.”

“ஆமாங்க. கல்யாணியைப் பிரிஞ்சு என்னால இருக்க முடியாதுங்க. அதனாலதானே அவளோட படிப்புக்குக் கூட நான் எந்த வெளியூருக்கும் அவளை அனுப்பலை. உங்களுக்கே தெரியும். என்னால அவளைப் பார்க்காம இருக்க முடியாதுன்னு...”

“சுசிலா, இவ்வளவு நாள் அவளோட ஸ்கூல், காலேஜ் எல்லா விஷயத்துக்கும் உள்ளூர் உள்ளூர்னு பார்த்தோம். ஆனா, இனிமேல் நாம உள்ளூர் மாப்பிள்ளை வேணும்னு பிடிவாதமா இருக்க முடியாதும்மா.”

“ஏன்னா, அவளோட எதிர்காலம் படிப்பைவிட முக்கியமானது. அவ போற இடத்துல கண் கலங்காம சந்தோஷமா வாழணும். அதுக்கு அடிப்படையான விஷயம். அவளுக்குத் தாலி கட்டறவன் நல்ல குணம் உள்ளவனா இருக்கணும். அவன் நம்ம பொண்ணு கழுத்துல கட்டற தாலி, மங்கலகரமான மஞ்சள் கயிறா இருக்கணுமே தவிர, அவளோட கழுத்தை நெறிக்கற சுருக்குக் கயிறா ஆயிடக்கூடாது. அதனாலதான் வெளியூரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தியாகுவைப் பத்தி விசாரிச்சுட்டு வச்சிருக்கேன். நீ பையனைப் பாரு. உனக்கும் அவனைப் பத்தின நல்ல அபிப்ராயம் தோணுச்சுன்னா, அதுக்கப்புறம் பேச்சுவார்த்தை நடத்தலாம்.”

“நீங்க சொல்றதை எல்லாம் வச்சுப் பார்த்தா, உள்ளூர் பையன்தான் வேணும்னு கட்டாயம் இல்லாம நல்ல பையன் வெளியூரா இருந்தாலும் பரவாயில்லைன்னு தோணுது. ஆலோசனையை நீங்க சொல்லிட்டீங்க. ஆக வேண்டியதை அந்த ஆண்டவன் அருளை நம்பி விட்டுடுவோம். மாப்பிள்ளைப் பையனை நம்ம கல்யாணி பார்க்கட்டும். அவளோட விருப்பம் எதுவோ அப்படியே நடக்கட்டும்.”

“நமக்குன்னு குழந்தை இல்லாம வெறுமையாகிப் போன வாழ்க்கையில விடிவெள்ளியா கல்யாணி வந்தா. அவளோட இல்லற வாழ்க்கை இனிமையானதா அமையணும்... அதை அமைச்சுக் குடுக்க வேண்டிய கடமை நமக்கு இருக்கு.”

“அடுத்த வாரம் திருச்சிக்குப் போய் நாம ரெண்டு பேரும் மாப்பிள்ளைப் பையன் தியாகுவை பார்க்கலாம். அவனோட தூரத்து உறவான அத்தையம்மா தான் வீட்டைப் பார்த்துக்கறாங்களாம். அந்த அம்மாகிட்டயும் பேசலாம். ஆனா, முடிவு எடுக்கறதெல்லாம் தியாகுதானாம். அடுத்த வெள்ளிக்கிழமை நல்ல நேரம் பார்த்து வை. கிளம்பிடலாம். அதுக்கப்புறம் மாப்பிள்ளை இங்கே வந்து பொண்ணு பார்க்கட்டும். சரிதானே?”

“சரிங்க. நீங்க சொன்னபடி வர்ற வெள்ளிக்கிழமை நல்ல நேரம் பார்த்து வைக்கிறேன். திருச்சிக்குப் புறப்படலாம்.”

4

“அம்மா...” உற்சாகமாக கத்திக்கொண்டே வந்தாள் கல்யாணி. கறுப்புநிற பட்டுத்துணியில், நீல வண்ணத்தில் அழகிய கைவேலைப்பாடு செய்யப்பட்டிருந்த சுடிதாரும், நீல வண்ணத்தில் துப்பட்டாவும் அணிந்திருந்தாள். பருவம், அவளது மேனியில் வள்ளலாக, அழகையும் செழுமையான வனப்பையும் வாரி வழங்கியிருந்தது.

எடுப்பான மூக்கும், கரிய நீண்ட கண்களும், பவளம் போல் சிவந்த உதடுகளும் காண்போரை மயங்க வைக்கும் பேரழகாக இருந்தது. தினம் தினம் பார்த்தாலும், கல்யாணியை ரசிப்பது மட்டும் சுசிலாவிற்கு அலுக்கவே அலுக்காது.

“என்னம்மா கல்யாணி, கையில என்ன?”

“அப்ளிகேஷன் ஃபார்ம் வாங்கிட்டு வந்திருக்கேன்மா.”

“எதுக்கு?”

“எதுக்கா? எம்.எஸ்ஸி படிக்கறதுக்குத்தான்மா...”

“படிப்பை எல்லாம் மூட்டைகட்டி வச்சுட்டு, சமர்த்தா இன்னையில் இருந்து பார்வதியம்மாகிட்ட சமையல் கத்துக்கோ...”

“பார்வதியம்மாதான் சமையலுக்குன்னு இருக்காங்கள்ல? நான் எதுக்காக சமைக்கக் கத்துக்கணும்?” செல்லமான சிணுங்கலுடன் கேட்ட கல்யாணியைப் பார்த்து சிரித்தாள் சுசிலா.

“இங்கே இருக்கறவரைக்கும் நீ இந்த வீட்டின் இளவரசி. உனக்குக் கல்யாணம் ஆகி போற இடத்துலயும் இப்படியே எதிர்பார்க்க முடியுமா? பொண்ணா பிறந்தவ, பிறந்தவீட்டு சுகங்களை புகுந்த வீட்டில் எதிர்பார்க்க முடியாது...”

“என்னம்மா, நீங்க பிறந்த வீடு, புகுந்தவீடுன்னு பேசி என்னைக் குழப்பறீங்க?”

சிவலிங்கம், கல்யாணியின் தலையை அன்பு மிகுதியில் ஆறுதலாகத் தடவினார்.

“உங்க அம்மா ஒரு அவசர குடுக்கை. நிதானமா உன்கிட்ட பேச வேண்டிய விஷயத்தை பட்டாசு மாதிரி போட்டு வெடிக்கறா... நீ ஆசைப்பட்ட மாதிரி பட்டப்படிப்பை முடிச்சுட்ட. நீ இன்னும் மேல படிக்கணும்ங்கற அவசியம் கிடையாதும்மா. நம்ப குடும்பத்துக்கு ஒரே வாரிசு நீதான். ஏழு தலைமுறைக்கு ஏகப்பட்ட சொத்து இருக்கு. இருந்தாலும், அடிப்படைக் கல்வி அவசியம்ணுதான் உன்னைப் படிக்க வச்சோம். கல்லூரிக் கல்வியை முடிச்சுட்ட. நீ, இனி கல்யாணமாகி வாழ்க்கைக் கல்வியை ஆரம்பிக்கணும். அதுக்காக உனக்கு வரன் பார்த்திருக்கோம். இப்படி விளக்கமா சொல்லாம, சமையல் கத்துக்க அது கத்துக்கன்னு உங்க அம்மா சுத்தி வளைச்சுப் பேசறா...”

“என்னைப் பெத்த அம்மா, அப்பா போனதுக்கப்புறம் நீங்க ரெண்டு பேரும் என்னைப் பெத்த மகளா வளர்த்திருக்கீங்க. என்னோட சொந்த அம்மா, அப்பாவை இழந்துட்ட சோகத்தை ஒரு துளிக்கூட நான் இதுவரைக்கும் உணர்ந்ததே இல்லை. குயிலுக்கு முட்டைகளை அடைகாக்கத் தெரியாம, காக்கா கூட்டுக்குள்ள தன்னோட முட்டைகளைப் போட்டு வச்சிடுமாம். காகங்களும் தன் கூட்டில் இருக்கற முட்டைகள் குயிலோடதுன்னு தெரியாம அடைகாத்து குஞ்சும் பொரிச்சுடுமாம். குஞ்சுகள் கொஞ்சம் பெரிசானப்புறம் தன்னோட குஞ்சுகள் இல்லைன்னு அடையாளம் தெரிஞ்சுக்கிட்டு, கொத்தி கொத்தி விரட்டிடுமாம். ஆனா நீங்க? உங்களுக்குப் பிறக்காத என்னை அடையாளம் தெரிஞ்சும், அளவில்லாத பாசத்தைப் பொழிஞ்சு வளர்க்கறீங்க. நீங்க என்ன சொன்னாலும், நான் அதன்படி நடப்பேன்.”

“ரொம்ப சந்தோஷம்மா. உனக்கு வந்த வரன்கள், நல்ல குணம் கொண்ட ஒரு பையனைத் தேர்ந்தெடுத்திருக்கோம்... உனக்குப் பிடிச்சு, நீ சம்மதிச்சா முடிச்சு வைப்போம். பையன் திருச்சியில கம்ப்யூட்டர் அசெம்பிள் பண்ணி சேல்ஸ் பண்ற நிறுவனம் வச்சிருக்கான். ஒரே ஒரு தங்கச்சி மட்டும்தான். வர்ற வெள்ளிக்கிழமை நாங்க போய் பையனை நேர்ல பார்த்துட்டு வர்றோம்... அதுக்கப்புறம், பெண் பார்க்கும் படலம். அதே சமயத்துல நீயும் அவனைப் பார்த்துக்கலாம்... ”

“சரிப்பா.”

“கல்யாணி, உன் அப்பா சுருக்கமா சொல்லாம ஒரு பெரிய லெக்சரே குடுத்துட்டாரு. இந்த அழகுல என்னை சுத்தி வளைச்சுப் பேசறதா சொல்றாரு. இதென்னம்மா நியாயம்?”

“அம்மா, அப்பாவைப் பத்தித்தான் உங்களுக்குத் தெரியுமே? பேசினா நிறைய பேசுவார். இல்லைன்னா மூட் அவுட் ஆனாப்ல எதையோ யோசனை பண்ணிக்கிட்டு இருப்பாரு. அவர் அப்படி மெளனமா இருக்கறதைவிட, நிறைய பேசறது மனசுக்கு நிறைவா இருக்கும்மா.”

“நீ சொல்றது ரொம்ப சரி. நான் கல்யாணம் ஆகி இங்கே வந்த இத்தனை வருஷ காலத்துல, அவர் பேசினது ரொம்பக் குறைவு. இது எனக்கு ஒரு குறைதான். என்ன பண்றது...? நமக்குன்னு கிடைக்கறதுதானே கிடைக்கும்? அவரோட சுபாவம் அதுன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். பழகிட்டேன்.”


சுசிலா சொல்வதைக் கேட்டுக் கொண்டிருந்த சிவலிங்கத்தின் மனதில் உறுத்தல் ஏற்பட்டது. ‘அடிக்கடி எனக்குள்ளே தோன்றும் புஷ்பாவின் நினைவுகளும், அதன் பிரதிபலிப்பான என்னோட மெளனமும், இந்த அளவுக்கு சுசிலாவை பாதிச்சிருக்கு! ஏற்கெனவே புஷ்பாவுக்கு நான் செஞ்ச துரோகம் ஒரு பாவம். இப்ப சுசிலாவோட மனக்குறைக்கு காரணமாகி அது வேறு பாவம்! சிந்தனைகளுக்குள் சிக்கினார். ‘புஷ்பா... என் அன்பே... காதலிக்கும்போது அப்பாவின் கண்டிப்பு, ஏழைகள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பு, இதையெல்லாம் மீறி, உன்னைக் காதலிச்ச நான், அவர் என் கல்யாணப் பேச்சை எடுத்தப்ப புத்தி பேதலிச்சுப் போய் அவர்கிட்ட நம்ம காதலை மறைச்சுட்டேனே... நீ என்னைப் பிரிஞ்சு எவ்வளவு வேதனைப்படறியோ?’

“பார்த்தியா, எதையோ யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு. இது எனக்குப் பல வருஷமா பழகிப் போச்சும்மா.”

“சுசிலாவின் சலிப்பான குரலால், தன் சிந்தனை வெள்ளத்திலிருந்து மீண்டார் சிவலிங்கம்.”

5

கையில் ஒரு பார்பி பொம்மையை வைத்துக் கொண்டிருந்தாள் மாலு. மாலதி, மாலுவாக அழைக்கப்படுபவள். பன்னிரண்டு வயது மாலு, பார்பி பொம்மையின் தலைமுடியைப் பிரித்து, தன்னுடைய இஷ்டப்படி அதற்கு ஹேர் ஸ்டைல் செய்து கொண்டிருந்தாள். பொம்மையுடன் கூடவே கொடுக்கப்பட்ட சிறிய, அழகிய ப்ளாஸ்டிக் சீப்பினால் ஹேர் ஸ்டைல் செய்து அழகு பார்த்துக் கொண்டிருந்தாள்.

“ஏ மாலு, கூப்பிடறது காதுல விழலியா? சின்னக் குழந்தை மாதிரி எப்பப் பார்த்தாலும் அந்த பொம்மையை வச்சுக்கிட்டு அதுக்கு சீவி சிங்காரிச்சுக்கிட்டு... பிறந்து கொஞ்ச நாள்ல பெத்தவங்களை முழுங்கிட்ட துக்கிரி... இன்னும் யாரை முழுங்க காத்துக்கிட்டிருக்கியோ தெரியலை. துஷ்டை... இன்னும் டிபன் சாப்பிடாம கெடக்க... வா. வந்து கொட்டிக்க.”

மாலுவின் பாட்டி சீதம்மா கத்தினாள். சீதம்மா மாலுவின் சொந்தப்பாட்டி அல்ல. சொந்தம் என்று சொல்லிக் கொண்டு வந்த தூரத்து உறவு. இளம் வயதிலேயே வாழ்க்கையை இழந்துவிட்ட சீதம்மாவை மாலுவின் அம்மா கெளரிதான் அனுதாபத்துடன் அழைத்து வந்து ஆதரித்தாள். ஆகவே, கெளரி மீது சீதம்மா அளவற்ற பாசம் வைத்திருந்தாள். உற்றார் உறவினர்கள் கைவிட்டுவிட, பெற்ற தாயைப் போல கவனித்துக் கொண்ட கெளரி மீது, கொள்ளைப் பிரியம் வைத்திருந்தாள்.

கெளரிக்குத் தலைப்பிரசவம் நிகழ்ந்து, தியாகு பிறந்த போது சீதம்மாதான் வீட்டுப் பொறுப்பு முழுவதையும் ஏற்றுக் கொண்டு, கெளரியையும் கண்ணின் கருமணி போல கவனித்துக் கொண்டாள்.

தியாகுவை தன் மடிமீதும், தோள்மீதும் போட்டு அவனைத் தரையில் விடாமல் தாங்கித் தாங்கி வளர்ந்தாள். கெளரியின் கணவன் மூர்த்தி, திருச்சியில் பெயிண்ட் ஏஜென்ஸி எடுத்து பெரிய அளவில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தான். ஆரம்பத்தில் குறைந்த அளவில் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தான். ஆரம்பத்தில் குறைந்த அளவில் நடைபெற்ற அவனது பெயிண்ட் விற்பனை, நாளடைவில் அமோகமாக உயர்ந்தது. வீட்டில் செல்வம் கொழித்தது. தியாகு பிறந்து வளர வளர வீட்டில் செல்வ வளமும் வளர்ந்தது.

இதற்கெல்லாம் காரணம் தியாகு பிறந்த ராசிதான் என்று சீதம்மா நம்பினாள். இந்த எண்ணத்தை கெளரியின் மனதிலும் விதைத்தாள். நல்ல விஷயங்களைச் சொல்லும்பொழுது, அதை அப்படியே ஏற்றுக் கொண்டு சந்தோஷப்படுவது மனித இயல்பு! எனவே, கெளரியும், சீதம்மாவின் நம்பிக்கையை தனக்குள்ளும் வளர்த்துக் கொண்டாள்.

மூர்த்தி, அவனுடைய நிறுவனத்தில் அவ்வப்போது கிடைக்கும் பெரிய ஆர்டர்கள், விற்பனை இவற்றால் கிடைக்கும் லாபங்களைப் பற்றி சொல்லும்போது ‘பேரன் பிறந்த நேரம் நல்ல நேரம், அவனுடைய ராசிதான் அவற்றிற்கெல்லாம் காரணம்’ என்று சொல்வதே சீதம்மாவிற்கு வழக்கமாகி விட்டது.

மூர்த்தி பல முறை சொல்லிப் பார்த்தான்.

“அத்தை, தியாகுவோட ராசிதான் என்னோட முன்னேற்றத்துக்குக் காரணம்னு நீங்க சொல்றது சரி இல்லை. அது மூட நம்பிக்கை. என்னோட உழைப்பினாலதான் இந்த உயர்வு. உழைப்பு மட்டுமில்ல, கடவுள் அருளும் கூட. நீங்க பெரியவங்க. உங்களுக்குத் தெரியாதா?”

“சாமியோட அருளோ, உங்க உழைப்போ அதெல்லாம் வர்றதுக்குக் காரணம் தியாகுவோட ராசிதான் தம்பி. அவன் பிறந்த பொன்னான நேரம்தான் தம்பி.” மருமகன் உறவு என்றாலும், மூர்த்தியை ‘தம்பி’ என்றுதான் அழைப்பாள் சீதம்மா. ஆணித்தரமாய் பேசிய சீதம்மாவின் வெகுளித்தனமான பேச்சைக் கேட்கும் மூர்த்திக்கு சிரிப்பு வந்தது. ‘பழங்காலத்துப் பெண்மணி, இவரிடம் எப்படி எடுத்துச் சொன்னாலும் கேட்கப் போவதில்லை’ என்று எண்ணியபடி அதோடு அந்தப் பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் மூர்த்தி.

தியாகு செல்லமாக வளர்க்கப்பட்டாலும், நல்ல பழக்க வழக்கங்கள் மேற்கொள்ளும்படி அவனை வளர்த்தாள் கெளரி. இந்த விஷயத்தில், மூர்த்தி கண்டிப்பானவன். எனவே, அவனுக்குப் பயந்து தியாகுவை நன்றாக வளர்த்தாள். சீதம்மாவின் அளவற்ற பாசம், தன் மகனின் குண நலன்களைப் பாதித்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருந்தான் மூர்த்தி. மூர்த்தியின் மனப்போக்கை அறிந்து கொண்டாள் கெளரி. ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட மனம் ஒத்த தம்பதிகளாய் வாழ்ந்தனர், கெளரியும், மூர்த்தியும்.

தியாகு பிறந்த பன்னிரண்டு வருடங்கள் ஆன பிறகு, கெளரி மறுபடியும் குழந்தை உண்டானாள். சீவி முடித்து சிங்காரித்து அழகு பார்க்க ஒரு பெண் குழந்தை வேண்டும் என்று ஆசைப்பட்டாள் கெளரி.

அவளது ஆசைப்படியே, அழகான பெண் குழந்தை பிறந்தது. கெளரிக்கு கொள்ளை மகிழ்ச்சி. அவளைவிட அதிகமாக ஆனந்தப்பட்டவன் தியாகு. பட்டு ரோஜா போன்ற தன் தங்கையைப் பார்த்து ரசித்தான். கொஞ்சி மகிழ்ந்தான்.

தென்றல் உலா வந்த அந்தக் குடும்பச் சோலையில், சூறாவளிப் புயல் ஒன்று அந்த பூஞ்சோலையை புழுதிக்காடாக மாற்றப் போவது விதிக்கு மட்டும்தானே தெரியும்?

6

மாலு பிறந்த மூன்று மாதங்கள் மகிழ்ச்சிப் பூக்களால் மனம் நிறைந்து வாழ்ந்தனர், அனைவரும். ஒரு நாள் நள்ளிரவு, அழுத குழந்தைக்கு பால் காய்ச்சுவதற்காக ஸ்டவ்வில் பாத்திரத்தை வைத்து பாலை ஊற்றினாள் கெளரி. படுக்கையில் அறையில் மூர்த்தி, குழந்தையை சமாதானப்படுத்திக் கொண்டிருந்தான். நாள் முழுதும் எதற்கெடுத்தாலும் நான் நான் என்று ஓடி ஆடி வலிய வந்த வேலைகளை இழுத்துப் போட்டுச் செய்யும் சீதம்மா, இரவில் கும்பகர்ணனின் தங்கையாய்த் தூங்குவாள். எனவே கெளரி பாலைக் காய்ச்சுவதற்காக சமையலறைக்கு வந்தாள்.

இரவில் நைட்டி அணியும் வழக்கம் உள்ள கெளரி, அன்று சுடிதாருடனே படுத்து விட்டாள். அறையை விட்டு வெளியே வரும்பொழுது துப்பட்டா போட்டு மூடாமல் எப்போதும் வரமாட்டாள். அதே பழக்கத்தில் அந்த இரவிலும் துப்பட்டாவைப் போட்டுக் கொண்டு வந்தாள்.


ஸ்டவ் எரியும் பொழுது துப்பட்டா சரிந்து, ஸ்டவ்வின் தீ நாக்குகளின் மீது விழுந்தது. கெளரி சமாளிப்பதற்குள் அவளது முழு அடையும் தீப்பற்றிக் கொண்டது. “ஐயோ... அம்மா... அம்மா...” என்று அவளது அலறல்,  மாடியில் படுக்கையறையில் இருந்த மூர்த்தியை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

இதற்குள் கெளரியின் கூக்குரல் கேட்ட சீதம்மா எழுந்துவிட, மாலுவை அவளிடம் கொடுத்துவிட்டு சமையலறைக்குள் பதறியபடி ஓடினான் மூர்த்தி. கெளரியின் முழு உருவமும் பற்றி எரிந்து கொண்டிருந்தது கண்டு அவளைக் காப்பாற்றும் எண்ணத்தில் அவளைப் போய்ப் பிடித்தான். எரிந்து கொண்டிருந்த தீ, மூர்த்தியையும் பற்றிக் கொண்டது. இருவரும் கட்டிப் பிடித்தபடி, ஒரே சமயத்தில் எரிந்து கொண்டிருந்ததைக் கண்டு சீதம்மாவால் குரல் ஓங்க அலறத்தான் முடிந்ததே தவிர, வேறு எதுவும் செய்வதறியாது திகைத்துப் போனாள். குழந்தையின் பசி தீர்க்க வந்த கெளரி, தீயின் பசியைத் தீர்க்கும் இரையாகிப் போனது மட்டுமல்ல, அத்தீயின் கோரப் பசிக்கு மூர்த்தியும் பலியானான். அவர்கள் இருவரும் எழுப்பிய கூக்குரல் கேட்டுக் கண் விழித்த தியாகு கலங்கினான்.

7

ன் கண் முன்னால் நிகழ்ந்த கொடுமையான விபத்தைப் பார்த்த சீதம்மா, அந்த நிமிஷத்தில் இருந்து மாலுவை வெறுக்க ஆரம்பித்தாள். ‘பெத்தவங்களை விழுங்கப் பிறந்தவ’ என்று சதா சர்வமும் மாலுவைக் கரித்துக் கொட்டினாள். தியாகுவை ராசியானவன், அவன் பிறந்த நேரம் பொன்னான நேரம் என்று மூச்சுக்கு முந்நூறு முறை கூறி வந்தாள், மாலுவை துக்கிரி, துஷ்டை, பீடை என்ற வார்த்தைகளால் சதா சர்வ காலமும் அர்ச்சித்தாள்.

தியாகு, தங்கை மாலு மீது அதிக பாசம் கொண்டிருந்தபடியால், அவன் முன்னிலையில் மட்டும் மாலுவைத் திட்டமாட்டாள். அடக்கி வாசிப்பாள். தியாகு வீட்டில் இல்லை என்றால், தனி ஆவர்த்தனம் அமர்க்களமாய் நடக்கும். அபூர்வமாய் வீட்டிற்கு உறவினர் வந்தால், அவர்களிடமும் மாலுவின் பிறந்த நேரத்தைப் பற்றித்தான் பெரிதாகப் பேசுவாள். “எங்க தியாகு பிறந்து கெளரிக்கு வளமான வாழ்க்கை கிடைச்சது. இந்த மாலு பிறந்து ரெண்டு உயிரை முழுங்கிட்டா. துக்கிரி, பீடை” இப்படிப் பேசிப் பேசி தன் ஆத்திரத்தை ஆற்றிக் கொள்வாள்.

‘பிஞ்சு மனம் நொந்து போகுமே’ என்று கொஞ்சம்கூட நினைத்துப் பார்க்க மாட்டாள். சீதம்மாவின் வார்த்தைச் சவுக்கு, மாலுவின் மனதை எல்லையில்லாமல் வருத்தியது. மூன்று மாதக் குழந்தையாக சீதம்மாவின் கைகளுக்குள் விதி ஒப்படைத்த மாலு, இன்றைய பன்னிரண்டு வயது வரை நாள்தோறும் மனவலியை உணர்ந்தபடியே வளர்ந்தாள். அண்ணனின் அன்பிலும், அவன் வெளிப்படுத்தும் பாச உணர்விலும் சீதம்மாவின் சுடு சொற்கள் ஏற்படுத்திய புண்களை ஆற்றிக் கொள்வாள். தன்னைத் தானே தேற்றிக் கொள்வாள். அண்ணனிடம் சீதம்மா இப்படிப் பேசுவதை சொன்னால், மேலும் வேறு விதமாய் பூகம்பத்தைக் கிளப்புவாள் சீதம்மா. எனவே, தியாகுவிடம் இது பற்றி எதுவும் பேச மாட்டாள். மாலுவிற்கு பார்பி பொம்மைகள் பிடிக்கும் என்பதால், விதவிதமான பார்பி பொம்மைகளை வாங்கிக் குவித்து விடுவான் தியாகு.

படிக்கும் நேரம் தவிர, மற்ற நேரங்களில் பார்பி பொம்மைகளுடன் தன்னை ஐக்கியமாக்கிக் கொண்டு, தனி உலகில் வாழ்வது போல வளர்ந்தாள் மாலு. விபத்தினால் காலனின் கொடுமைக்குத் தன் பெற்றோர் பலியானார்கள் என்ற உண்மை தூங்கிப்போய், தாய்ப்பாசத்திற்கு ஏங்கும் ஊமையாய் ஆகிப் போனாள் மாலு.

தியாகு படித்து முடித்து கம்ப்யூட்டர் துறையில் திறமை பெற்றவனாய் உருவானான். சொந்தமாகத் தொழில் துவங்கினான். தன் தொழில், அதன் முன்னேற்றம் இவற்றை மட்டுமே மனதில் கருதி, அயராது உழைத்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டுமே மாலுவுடன் பேசுவதற்கும், அவளது படிப்பை கவனிப்பதற்கும் நேரம் இருக்கும்.

“என்னம்மா மாலு, நல்லா படிக்கறியா?”

“படிக்கறேன் அண்ணா.”

“பாட்டி உன்னை நல்லா கவனிச்சுக்கறாங்களா?”

“ஓ... நல்லா கவனிச்சுக்கறாங்கண்ணா.” அந்தச் சின்ன வயதிலும், அண்ணனிடம் சொல்லக் கூடாத விஷயம் எது. சொல்லக் கூடியது எது என்று புரிந்து வைத்திருந்தாள் மாலு.

பன்னிரண்டு வயது பாலகனாய் இருந்தபொழுது ஏற்பட்ட இழப்பு, தியாகுவின் மனதில் ஒரு பக்குவத்தை உண்டாக்கியது.

நேரம் கிடைக்கும்பொழுதெல்லாம், தங்கையிடம் தன் பாசத்தைக் கொட்டுவதற்குத் தவறுவதில்லை. தியாகு, திருமண வயதை அடைந்தான்.

சீதம்மாவின் ஓயாத தொல்லை தாங்காமல், திருமணம் செய்து கொள்வதற்கு சம்மதித்தான். சீதம்மா, உறவினர்களிடம் தியாகுவின் புகைப்படங்களைக் கொடுத்து, பெண் பார்த்து ஏற்பாடு செய்யச் சொன்னாள்.

8

மையல் அறையில் கலாட்டாவாக இருந்தது. பார்வதியம்மாவிடம் சமையல் கற்றுக் கொண்டிருந்த கல்யாணிக்கு அது, மிகவும் ஆவலான அனுபவமாக இருந்தது.

கொதிக்கும் தண்ணீரில், கழுவிய அரிசியைப் போட்ட கல்யாணி அதை ஒரு விந்தையாகப் பார்த்தாள்.

“அட! இப்படி போடற அரிசிதான் சோறு ஆகுதா?”

“நல்ல பொண்ணும்மா நீ... அரிசி வேகறதை இப்படி ஆச்சரியமா பார்க்கறே?”

பூஜை முடிந்து சமையல் அறைக்குள் நுழைந்த சுசிலா, மகள் சமைக்கக் கற்றுக் கொள்வதை மகிழ்ச்சியுடன் பார்த்தாள். கல்யாணி, தன் வார்த்தைக்கு மதிப்பு கொடுத்து, அதன்படி நடப்பதைப் பெருமையாக உணர்ந்தாள்.

“என் பொண்ணு சமைக்கற அழகைப் பார்த்து ரசிக்கிறேன்.”

பார்வதியம்மா ஒவ்வொன்றாகச் சொல்லிக் கொடுக்க, ரசம், குழம்பு, பொரியல் வகைகளை சமைப்பதற்கு ஆர்வத்துடன் கற்றுக் கொண்டாள் கல்யாணி. அவள் சமைத்து முடிக்கும் வரை கூடவே இருந்தாள் சுசிலா.

“அம்மா, அப்பா வந்தாச்சு.”

போர்டிகோவில் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது.

கல்யாணி, ஒரு சிறுமியைப் போல துள்ளி ஓடினாள். காரை விட்டு இறங்கிய சிவலிங்கத்தின் கையைப் பிடித்துக் கொண்டாள்.

“அப்பா, இன்னிக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்துக்கிட்டிருக்கு.”

“அப்படி என்னம்மா சர்ப்ரைஸ்?”

“வாங்களேன். இன்னிக்கு என்னோட சமையல்தான் அப்பா” அவரது கையைப் பிடித்துக் கொண்டு டைனிங் டேபிளுக்கு அழைத்துச் சென்றாள் கல்யாணி.

“ஏம்மா, பயப்படாம சாப்பிடலாமா?”

“போங்கப்பா. நீங்க என்னைக் கிண்டல் பண்றீங்க.”

“சும்மா விளையாட்டுக்குத்தான்மா. உன் கையால் சமைச்சதை சாப்பிட குடுத்து வச்சிருக்கணும். நீ எது குடுத்தாலும் எனக்கு அது தேவாமிர்தமா இருக்கும்.”

வெள்ளித் தட்டை வைத்த கல்யாணி, அதில் தான் சமைத்த உணவு வகைகளை எடுத்து வைத்தாள். சாதத்தின் மீது குழம்பை ஊற்றிவிட்டு, சிவலிங்கத்தின் அருகே உட்கார்ந்தாள்.

“சாப்பிடுங்கப்பா. என்ன யோசனை?”


“சின்னக் குழந்தையா எங்ககிட்ட வந்தது. நேத்துதான் நடந்த மாதிரி இருக்கு... இப்ப என்னடான்னா பெரிய பெண்ணா வளர்ந்து எனக்கு சமைச்சுப் போடற. காலம் ஓடற வேகத்தைப் பத்தித்தான்மா யோசிச்சேன்.”

“சரிப்பா. சாப்பிடுங்க....”

சிவலிங்கம் சாப்பிட ஆரம்பித்தார்.

“ஆஹா... குழம்பு ரொம்ப நல்லா இருக்கும்மா...”

“நிஜமாவாப்பா?” சந்தோஷம் பொங்கக் கேட்டாள்.

“நிஜம்மா... எங்க அண்ணி, அதாம்மா உன்னைப் பெத்தாங்களே அந்தப் புண்ணியவதி, அவங்களோட கை மணம் உன் கையிலயும் இருக்கும்மா. எங்க அண்ணிக்கு சமைக்கறதுக்கு ஆள் இருந்தாலும், அவங்களேதான் பார்த்துப் பார்த்து சமைப்பாங்க. எல்லா ஐட்டமும் பிரமாதமா இருக்கும்” அண்ணியின் சமையல் திறன் பற்றி பேசியபடியே சாப்பிட்டு முடித்தார் சிவலிங்கம்.

சிவலிங்கம் மதிய உணவிற்குப் பிறகு குறைந்தது ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் ஓய்வு எடுப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அவருக்கு அந்த இரண்டு மணி நேரம் தனிமை தேவை. அந்தத் தனிமைத் தீவில் தீயாக தன்னை வருத்திக் கொண்டு அக்னி வளர்க்காமல் யாகம் நடத்துவார். அந்த யாகம் புஷ்ப யாகமாக இருக்கும்.

தன் நினைவில் புஷ்பாவின் உருவத்தைக் கொண்டு வந்து அவளிடம் மானசீகமாக மன்னிப்புக் கேட்கும் வேள்வியைத் தொடர்ந்து வருவது வழக்கமாகி விட்டது. “கேள்விக்குறியாகிப் போன வாழ்க்கையுடன் எப்படியெல்லாம் போராடுகிறாளோ புஷ்பா” என்ற வேதனைச் சிறைக்குள் தன்னை அடைத்துத் துன்புற்று தனக்குத்தானே தண்டனை அனுபவித்துக் கொள்ளும் நேரமாக அந்த நேரத்தை உருவாக்கிக் கொண்டார். கண்ணீர் வடித்து தன் சோகச் சுமையை சுகமாக ஏற்றுக் கொள்வார்.

அவர் தன்னுடைய அறையில் இருக்கும் அந்த நேரத்தில், சுசிலா கூட அவரைத் தொந்தரவு செய்ய மாட்டாள். குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வு எடுப்பது உடல் நலத்திற்கு நல்லது என்ற மருத்துவ ஆலோசனையைக் கணவர் பின்பற்றுவதாக அவள் எண்ணியிருந்தாள்.

அன்றும், கல்யாணியின் சமையலை சாப்பிட்ட பின், தன் அறைக்குள் சென்று அலமாரியைத் திறந்தார். போட்டோவில் இருந்த புஷ்பாவைப் பார்த்தார்.

‘புஷ்பா, என் கண்ணே, காலம் சிறகுகள் இல்லாமலேயே பறக்குதும்மா. சிறகொடிஞ்ச பறவையா நீ எங்க திக்குத் தெரியாம தவிக்கிறியோ தெரியலையே. உன்னைப் பத்தின தகவல்கள் எதுவுமே தெரியாம நான் துடிக்கிறேன் புஷ்பா. காலம் மாறினாலும் வயசு கூடினாலும், என்னோட காதல் மாறவே இல்லை புஷ்பா. நான் இந்த மண்ணுக்குள்ள மறைஞ்சுட்டாலும் கூட, என் நெஞ்சுக்குள்ள இருக்கற என்னோட அன்பு மட்டும் மறையவே மறையாது. இந்த அளவுக்கு ஆழமா உன்னைக் காதலிச்ச நான், உன்னை அழ விட்டுட்டேனே. அப்பாவோட கண்டிப்பா, உன் மீது கொண்ட காதலாங்கற போராட்டத்துல, உன்னோட கண்களைக் கண்ணீரில் நீராட விட்டுட்டேன். என் மனசுல முழுமையான நிம்மதி இல்லை. என் வாழ்க்கையில முழுமையான சந்தோஷம் இல்லை. நீ இல்லாத நானும் முழுமையான மனுஷனா இல்லை. என் இதயம் நின்று போறதுக்குள்ள, என் இதயத்துல இருக்குற உன்னை நான் பார்க்கணும். புஷ்பா... புஷ்பா...’ புஷ்பாவின் நினைவால் வாடிய சிவலிங்கம், நிம்மதியைத் தேடினார். தேடியதெல்லாம் கிடைத்துவிட்டால், தெய்வம் என்பது ஏது?

துன்பத்தால் துவளும் அவர், வயது காரணமாய் தளர்ச்சி அடைந்து, சோர்வுற்று சிறிது நேரம் அவரை அறியாமலே கண் அயர்ந்து விடுவது வழக்கம். அன்று, துக்கம் அதிகமாக தூக்கம் வர மறுத்தது. எழுந்தார். புஷ்பாவின் புகைப்படம் இருந்த பெட்டியை எடுத்தார். அதனுள் இருந்த இரண்டு கருகமணிகளையும் கையில் எடுத்து, தன் நெஞ்சில் பதித்துக் கொண்டார்.

அந்தக் கருகமணிகள் கூறும் காவிய மொழிகள் கனவிலும் கலையாத நினைவுகள்!

“இந்தாங்க, மாப்பிள்ளைதான் பொண்ணுக்குத் தாலி வாங்கிட்டு வர்றது வழக்கம். ஆனா, எனக்கு நீங்க கட்டப் போற தாலியில கோர்க்கற கருகமணியை நான் வாங்கியிருக்கேன். தாலி தங்கத்துல இல்லாட்டாலும், உங்க வாழ்க்கையில ஒரு அங்கமா நான் வரணும். உங்க அப்பாவோட சம்மதத்தை வாங்கறதுக்கு இந்தக் கருகமணிகள் என்னோட கண்களா உங்ககூட இருக்கும். நிச்சயமா உங்க அப்பா நம்ம கல்யாணத்துக்கு சம்மதிப்பாரு. அப்ப நீங்க கட்டப்போற தாலியில இந்தக் கருகமணிகளைக் கோர்க்கணும். சாதாரண கருகமணிகள்தான். ஆனா, இதில என்னோட உயிர்த்துளிகள் இருக்கு. நீங்க பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவர்னு தெரிஞ்சப்புறம் எனக்கு ரொம்ப பயமா இருக்கு. அதே சமயம், உங்க மேல நம்பிக்கையும் இருக்கு. பயத்துக்கும், நம்பிக்கைக்கும் நடுவுல ஊசலாடுற என் இதயத்தை, நீங்க புரிஞ்சுக்கோங்க. தெய்வத்தை நம்பி கைகூப்பி வணங்கினா, அந்த தெய்வம் நம்பளைக் கைவிடாது. அதுபோல நீங்களும் என்னைக் கைவிடாம, கைப்பிடிக்கணும். உங்களுக்காகக் காத்துக்கிட்டிருப்பேன்...” தவிப்புடன் பேசிய புஷ்பாவின் கைகளை எடுத்து, தன் நெஞ்சில் புதைத்துக் கொண்டான் அன்றைய சிவலிங்கம்.

‘என்னை நம்பி வழியனுப்பி வைத்த புஷ்பா, நான் திரும்பி வரும் வழி பார்த்து, என்னைக் காணாமல் துடிச்சிருப்பா. பணக்கார வர்க்கத்தின் குணம் விகாரம்தான்னு முடிவு செஞ்சிருப்பா. நான் அவளுக்காக அணிந்த ஏழைங்கற முகமூடியை எடுத்து, நான் பணக்காரன்தான்னு உண்மையைச் சொன்னப்ப, அவ துடிச்ச துடிப்பு? அப்பாவோட பாசத்துக்கும், அந்தஸ்து வித்தியாசம் பார்க்கற குணத்துக்கும் முன்னால, புஷ்பாவோட காதலை வெளியிட முடியாத நிலைமை ஆயிடுச்சு. புஷ்பா... உன்னை என்னால மறக்கவே முடியலை. உன்கிட்ட என்னோட நிலைமையை சொல்லலாம்னு ஓடி வந்தப்ப, நீ எங்கேன்னே தெரியாம போயிருச்சு புஷ்பா.’

‘உன்னோட நினைவுகள் என்கூடவே நிழலா இருக்கறதுனால, ஒரு இயல்பான வாழ்க்கையே என்னால வாழ முடியலை புஷ்பா. குடும்ப கெளரவத்துக்காக, சுசிலாகூட நான் வாழற இந்த வாழ்க்கை, பொய்யான வாழ்க்கை. உன்கூட மட்டுமே என்னால ஆத்மார்த்தமான வாழ்க்கை வாழ முடியும். இதையெல்லாம் புரிஞ்சுக்காம என்னை துரோகின்னு முத்திரை குத்தி இருப்ப. என் முகத்திரை கிழஞ்சுட்டதா நினைச்சிருப்ப. இத்தனை வருஷத்துக்கு அப்புறமும், இத்தனை வயசு ஆன பிறகும் உன் நினைவுகள்ல நீந்திக்கிட்டிருக்கேன்.

‘நீ எங்கே இருந்தாலும், உன்னைத் தேடி வந்து உன் காலடியில் விழுந்து மன்னிப்புக் கேட்கணும்னு தவம் இருக்கேன். நீ இருக்கும் இடம் தெரியாம நான் நெருப்பு மேல நிக்கற மாதிரி நிக்கறேன் புஷ்பா. எரியும் நெருப்பை உன் கண்ணீரூற்றி அணைக்க வருவாயா புஷ்பா...’

“டொக் டொக் டொக்” அறையின் கதவைத் தட்டும் சப்தம் கேட்டது.

எண்ண அலைகளில் இருந்து மீண்ட சிவலிங்கம், திடுக்கிட்டார். அறைக் கதவைத் திறந்தார். கேள்விக்குறி தோன்றிய முகத்துடன் சுசிலா நின்றிருந்தாள்.


“என்னங்க இது? இவ்வளவு நேரம் ஆச்சு? வழக்கமா நாலு மணிக்கெல்லாம் எழுந்து வெளியே வந்துருவீங்க? இன்னைக்கு மணி அஞ்சு ஆகியும் வரலை? ஏன் முகம் ஒரு மாதிரியா இருக்கு?” கேட்டபடியே சிவலிங்கத்தின் நெற்றியைத் தொட்டுப் பார்த்தாள்.

“உடம்புக்கு ஒண்ணும் இல்லை. களைப்பா இருக்கு. அதான் கொஞ்ச நேரம் படுத்துட்டேன்.”

தற்செயலாக அலமாரியைப் பார்த்தவள் ஆச்சரியப்பட்டாள்.

“என்னங்க இது? அந்த அலமாரியில சாவியை வைக்கவே மாட்டீங்க?! இப்ப கதவுலயே சாவி இருக்கு?!” சுசிலா அலமாரியை நோக்கி நடந்தாள்.

கதவைத் தட்டும் சப்தம் கேட்டதும், பதற்றத்தில் சாவியை எடுக்க மறந்திருந்தார். அந்த அலமாரியின் சாவியை பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் வைத்திருப்பது குறித்து பலமுறை கேட்டுப் பார்த்தாள் சுசிலா. முதலில் சமாளிப்பதற்காக எதையோ காரணமாகக் கூறி வந்தவர், மீண்டும் மீண்டும் சுசிலா கேட்டதும் கோபம் தலைதூக்க, “அதைப் பத்தி இன்னொரு முறை கேட்காதே. எனக்குக் கோபம் வரும். இந்த விஷயத்துல நீ தலையிடாதே” என்று கடுமையாகப் பேசிவிட்டார்.

‘கணவன், மனைவிக்குள் அந்தரங்கமான ரகசியம் இருக்குமா? நான் அவர்கிட்ட மனம் திறந்த புத்தகமா இருக்கேன். ஆனா, அவர் என்கிட்ட மூடு மந்திரமாவே இருக்கார்... ம்...’ புஷ்பா வேதனைப்பட்டாள்.

9

“ஏ, மாலு, உங்க அண்ணனைப் பார்க்க பொண்ணோட வீட்டில இருந்து வரப் போறாங்க. அவங்க வர்ற சமயம் நீ முன்னால வந்து நிக்காதே. அந்தப் பெண்ணை போட்டோ படத்துல பார்த்ததுமே எனக்குப் பிடிச்சிருச்சு. அவங்க வீட்டிலயும், எல்லோருக்கும் உங்க அண்ணனைப் பிடிச்சு, இந்த சம்பந்தம் கைகூடணும்னு நான் நினைச்சுகிட்டிருக்கேன். துக்கிரியா நீ வந்து முன்னால நின்னு, காரியத்தைக் கெடுத்துடாதே.”

பாட்டியின் சுடு சொற்கள் அவளைத் தேளாகக் கொட்டினாலும், அண்ணனுக்குக் கல்யாணம் என்ற செய்தி அவளுக்குத் தேனாக இனித்தது.

“சரி பாட்டி நான் மாடி ரூமுக்குப் போயிடறேன். அவங்க வரும்போது” இதைச் சொல்லும்போது மாலு தவித்த தவிப்பு! வேர் விட்ட மரமான சீதம்மா அந்தப் பிஞ்சு மனம் எத்தனை பாடுபடும் என்பதைப் புரிந்து கொள்ள இயலாமல், கண்களை உருட்டி, மேலும் அவளை மிரட்டி வைத்தாள்.

ஆபீஸில் இருந்து திரும்பி வந்த தியாகு, தன் அறைக்குச் சென்று உடைகளை மாற்றினான். முகம் கழுவி விட்டு வெளியே வந்தான்.

“மாலு, மாலுக்குட்டி...” தங்கையை அழைத்தான்.

“என்ன அண்ணா?”

கையில் ஒரு பார்பி பொம்மையுடன் குடுகுடுவென ஓடி வந்தாள் மாலு.

“சாப்பிட்டியாம்மா?”

“ஓ... சாப்பிட்டுட்டேன். அண்ணா, உன்கிட்ட ஒரு விஷயம் கேட்கணும்.”

“அட என்னம்மா நீ, பெரிய மனுஷி மாதிரி பேசற? என்ன கேக்கப் போற? கேளேன்.”

“அண்ணா, உங்களுக்கு கல்யாணம்னு பாட்டி சொல்றாங்களே? பொண்ணு வீட்டுக்காரங்க உங்களைப் பார்க்க வர்றாங்களாமே?”

“ஆமாம்மா.”

“அண்ணி வந்துட்டா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்குண்ணா.”

“அவசரப் படாதம்மா. அண்ணியா வர்றவ, உனக்கு அம்மாவாகவும், அன்பு செலுத்தறவளா இருக்கணும். என்னோட கல்யாணத்துல நான் முக்கியத்துவம் குடுக்கறது அதுக்குத்தான்.”

“நல்ல அண்ணியா வரணும்னு தினமும் சாமி கும்பிடறேண்ணா. நிச்சயமா நல்ல அண்ணிதான் வருவாங்க.”

“மாலுக்குட்டி, நீ சந்தோஷமா இருக்கணும். நீ நல்லாப் படிச்சு, ஸ்கூல்ல நல்ல பேர் எடுக்கணும்.”

“சரிண்ணா.”

“நல்ல பொண்ணு. நீ போய் படிம்மா. நான் சில வெளிநாட்டு கம்பெனிகளுக்கு லெட்டர் எழுதணும்.”

“சரிண்ணா.” மாலு போவதைப் பார்த்துக் கொண்டிருந்த தியாகு உணர்ச்சி வசப்பட்டான். ‘விபரம் தெரியாத வயசுல நான், முகம் பார்க்கத் தெரியாத குழந்தையா இருந்த இந்த மாலு, எங்க ரெண்டு பேரையும் தவிக்க விட்டுட்டு எங்க அம்மா, அப்பா தீ விபத்துக்கு பலியாயிட்டாங்க. ஆசையா அம்மான்னு கூப்பிடவும், அன்பா அப்பான்னு கூப்பிட்டுப் பேசவும் எங்களைப் பெத்தவங்க இல்லாம போயிட்டாங்களே... மாலுவுக்கு எதிர்காலம் அமைச்சுக் குடுக்கற பெரிய பொறுப்பு என்னை எதிர்நோக்கி இருக்கு. என்ன செய்யப்போறேன்? அவ வாழ்க்கை எப்பிடி அமையப் போகுது?...’ கலங்கிப் போன நெஞ்சில் உருவாகிய எண்ணங்கள், கண்களில் கண்ணீரை வரவழைத்தது.

10

திருச்சி சென்று தியாகுவைப் பார்த்த சிவலிங்கத்திற்கும், சுசிலாவிற்கும் திருப்தியாக இருந்தது.

தங்கை மாலுவின் மீது அவன் கொண்டிருந்த பாசத்தையும் புரிந்து கொண்டனர். கல்யாணியை அவனுக்குக் கொடுப்பதில் இருவர் மனதிலும் முழுமையான சம்மதம் தோன்றியது.

சீதம்மா தூரத்து உறவு என்றாலும், குடும்பத்தின் அப்போதைய தலைவி ஸ்தானத்தில் இருப்பவள் என்ற மரியாதையைக் கொடுத்து, அவளிடமும் பேசினார்கள்.

“பெரியம்மா, தியாகுவை எங்களுக்குப் பிடிச்சிருக்கு. இனி மேல் பையனுக்கு பொண்ணைப் பிடிக்கணும். பொண்ணுக்குப் பையனைப் பிடிக்கணும். அதுதான் முக்கியம். அதனால நீங்களே ஒரு நல்ல நாள் பார்த்து தியாகுவை கூப்பிட்டுக்கிட்டு மதுரைக்கு, எங்க வீட்டுக்கு வாங்க. ஒரே சமயத்துல பொண்ணும், மாப்பிள்ளையும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துப் பாங்க. அதுக்கப்புறம் மத்த விஷயங்களைப் பேசலாம்.”

“எனக்கும் உங்க பொண்ணை போட்டோவுல பார்த்ததுமே பிடிச்சுப் போச்சு. என் மனசுக்குள்ள உங்க பொண்ணு சிம்மாசனம் போட்டு உட்கார்ந்துட்டா. இந்தக் கல்யாணம் நல்லபடியா நடக்கணும். நல்லது நடக்கணும்னா, என்னை மாதிரி அமங்கலி அங்கே வரக்கூடாது. தியாகுவோட பெரியம்மா பொண்ணு ஒருத்தி மதுரையிலதான் இருக்கா. அவகூட தியாகுவை உங்க வீட்டுக்கு வரச் சொல்றேன். பொண்ணுக்கும், மாப்பிள்ளைக்கும் பிடிச்சிடுச்சுன்னா, அதுக்கப்புறம் வேற என்ன பேச்சு வேண்டியிருக்கு? அடுத்த முகூர்த்தத்துல கல்யாணத்தை நடத்திட வேண்டியதுதான்.”

“அம்மா... பேச்சுன்னு நான் சொன்னது. பொண்ணுக்கு நகை, சீர் போடற விஷயம் பத்தி. எல்லாமே பேசிடணும்ல. அதைத்தான் சொன்னேன்.”

“மூச்... நகை நட்டு, சீர் செனத்தி இதைப் பத்தி எதுவும் வாயே திறக்கக் கூடாதுன்னு எங்க தியாகு கண்டிப்பா சொல்லி இருக்கான். அந்த நிபந்தனைக்கு நான் சம்மதிச்சாத்தான் கல்யாணம் பண்ணிப்பேன்னு ஏற்கெனவே சொல்லிட்டான். பொண்ணைப் பத்தி மட்டும் பேசுவோம். பொன் நகையைப் பத்தி எதுவும் பேசாதீங்கன்னு சொல்லி இருக்கான்.” சீதம்மாவின் குரலில் பெருமிதம் வழிந்தது.

“அம்மா, நீங்க இந்தக் குடும்பத்துக்குப் பெரியவங்க. நல்ல காரியங்கள் செய்றதுக்கு சுமங்கலிதான் வரணும்ங்கறது அவசியம் கிடையாது. நல்ல மனசு உள்ளவங்களோட ஆசிகள் இருந்தா போதும். நீங்களும் தியாகுகூட வந்தீங்கன்னா, எங்களுக்கு சந்தோஷமா இருக்கும்.”


“நீங்க பெருந்தன்மையா சொல்றீங்க. எனக்குப் புரியுது. ஆனா, நான் பழைய காலத்து மனுஷி. திடீர்னு என்னை மாத்திக்க முடியாது. சுப காரியங்கள் சுமங்கலிகள் தான் சேர்ந்து நடத்தணும்” சீதம்மாவின் பிடிவாதமான கொள்கை பற்றி இனி பேசிப் பலன் இல்லை என்ற முடிவு செய்த சிவலிங்கம் கிளம்பினார். சுசிலாவும் அவருடன் கிளம்பினாள். தியாகுவிடமும், சீதம்மாவிடமும் விடைபெற்றுக் கிளம்பினர். கார் புறப்பட்டது. ஜன்னல் வழியாக அவர்கள் புறப்பட்டு போவதைக் கன்னத்தில் வழியும் கண்ணீரோடு பார்த்துக் கொண்டிருந்தாள் மாலு.

தியாகுவைப் பார்ப்பதற்காக வந்த சிவலிங்கம், மாலுவைப் பற்றி கேட்ட பிறகே அவளை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தாள் சீதம்மா. அதன்பின் கண்களாலேயே சைகை செய்து உள்ளே அனுப்பி வைத்தாள். இதை நினைத்துப் பார்த்த மாலுவுக்கு, வேதனையாக இருந்தது.

‘என்னோட அம்மா, தீ விபத்துல எரிஞ்சு போனதும், அவங்களைக் காப்பாத்த முயற்சி, செஞ்ச என் அப்பாவும் எரிஞ்சுப் போனதுல, என்னோட குத்தம் என்ன? துரதிர்ஷ்டம் பிடித்தவள் என்று முத்திரை குத்தி, பாட்டி என்னைக் கஷ்டப்படுத்தறாங்களே. வீட்டுக்கு வரப்போற அண்ணியும், என்னைக் கெட்ட ராசி பிடிச்சவள்னு நினைச்சுடுவாங்களோ?’ மாலுவிற்கு கண்ணீர் பெருகியது.

11

டெலிபோன் ஒலித்தது. கல்யாணி ரிசீவரை எடுத்தாள்.

“ஹலோ...”

மறுமுனையில், கல்யாணியின் குரல் கேட்டதும், ஓரிரு விநாடிகள் தயக்கம்.

“நா... நான் தியாகு பேசறேன்...”

தியாகு என்று கேட்டதும், எதுவும் பேசாமல், “அப்பா... அப்பா...” என்று சிவலிங்கத்தை அழைத்தாள்.

“என்னம்மா யார் போன்ல? ஏன் இப்பிடி பதற்றமா பேசறே?...” கேட்டுக் கொண்டே எழுந்து வந்த சிவலிங்கம், ரிசீவரை வாங்கினார்.

“ஹலோ...”

“ஹலோ... நான் தியாகு பேசறேன் ஸார்...”

“தியாகுவா? இப்பதான் புரியுது. கல்யாணி ஏன் ஃபோன் போசாம என்னைக் கூப்பிட்டாள்னு. சொல்லுங்க தியாகு...”

“பதிமூணாம் தேதி... பொண்ணு பார்க்க உங்க வீட்டுக்கு வரச் சொல்லி பாட்டி நாள் பாத்திருக்காங்க. அதை உங்ககிட்ட சொல்லிடலாம்னு போன் பண்ணினேன்...” தியாகு வெட்கம் கலந்த குரலில் தடுமாறியபடி சொல்லி முடித்தான்.

“என்ன தியாகு ரொம்ப கூச்சப்படறீங்க? பதிமூணாம் தேதிதானே? வந்துருங்க.”

“சரி ஸார். வச்சுடறேன்.”

தியாகுவிடம் பேசி முடித்த சிவலிங்கம், சுசிலாவின் முதுகுக்குப் பின் முகத்தை மறைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்த கல்யாணியின் காதைப் பிடித்து இழுத்தார்.

“பதிமூணாம் தேதி பொண்ணு பார்க்க வர்றாங்களாம். அம்மா முதுகுக்குப் பின்னால ஒளிஞ்சிட்ட? பையன் உன்னைப் பார்க்க வர்றப்ப நீயும் அவனை நல்லாப் பார்த்துக்க. உன்னோட சம்மதத்துக்குத்தான் காத்திருக்கோம்...”

“போங்கப்பா...” நாணப் புன்னகையுடன் சுசிலாவிடம் முகம் புதைத்துக் கொண்டாள் கல்யாணி. அவளது தலையை அன்புடன் வருடிக் கொடுத்தாள் சுசிலா. “இந்தக் காலத்துல அவ நம்பளை விட்டு புகுந்த வீட்ல போய் எப்படிச் சமாளிக்கப் போறாளோ என்னமோன்னு நினைச்சாத்தான்...”

“பொண்ணுன்னா பொறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டுக்குப் போய்த்தானே ஆகணும்? கல்யாணியைப் பத்தி உன்னைவிட எனக்குத்தான் நல்லா தெரியும். எந்த சூழ்நிலைக்கும் தன்னைத் தயார் படுத்திக்கற மனப்பக்குவம் அவளுக்கு சின்ன வயசுலயே உண்டு. பெத்த அம்மா, அப்பா இறந்து போனப்புறம் நம்பளை அவ சொந்த தாய், தகப்பனா ஏத்துக்கிட்டு வளர்ந்தாளே அது ஒரு மனப்பக்குவம்தான். நம்ப சொல்லை மீறி நடந்திருக்காளா? கல்யாணி நீ வளர்த்த பொண்ணு. அவ புகுந்த வீட்டுக்குப் போய் அங்க உள்ள எல்லாரையும் அணுசரிச்சு, தானும் நல்ல பேர் எடுத்து, வளர்த்த நமக்கும் நல்ல பேர் எடுத்துக் குடுப்பா.”

“மாப்பிள்ளை தியாகுவும் நல்ல பையன். நிறைய பேர்கிட்ட விசாரிச்சுட்டேன். எல்லாருமே அவனைப் பத்தி நல்ல அபிப்ராயம்தான் சொல்றாங்க. குடும்ப நேயம் உள்ளவனா இருக்கான். தியாகுவுக்கும் கல்யாணியைப் பிடிச்சுருச்சு. போட்டோ பார்த்ததுமே சம்மதம் சொல்லிட்டானாம். சீதம்மாகிட்ட நம்ப கல்யாணி சரின்னு சொல்லணும். அவ்வளவுதான். அவளுக்கு என்னென்ன வேணும்னு கேட்டு அவளை கவனிச்சுக்க. பதிமூணாம் தேதி சாயங்கால டிபனுக்கு பார்வதியம்மாகிட்ட மெனு குடுத்துடு.”

“அதெல்லாம் நீங்க சொல்லணுமாங்க. நான் பிரமாதமா ஏற்பாடு பண்ணிடறேன்” சுசிலா எழுந்து, கல்யாணியின் அறையை நோக்கி நடந்தாள்.

12

தின்மூன்றாம் தேதிப் பொழுதும் வந்துவிட்டது. காலையில் எழுந்ததில் இருந்து மகிழ்ச்சி, நாணம், பயம் அனைத்தும் கலந்த உணர்வுகளுடன் கல்யாணி சுற்றிச் சுற்றி வந்தாள்.

கார் வரும் ஓசை கேட்டதும், சிவலிங்கம் பரபரப்புடன் வாசலுக்கு விரைந்தார்.

தியாகுவும், நடுத்தர வயது மதிக்கத்தக்க ஒரு பெண்மணியும் காரில் இருந்து இறங்கினார்கள். அந்தப் பெண்மணி, காருக்குள் இருந்து பழங்கள் நிறைந்த தட்டை எடுத்தாள். இருவரையும் வரவேற்று வீட்டிற்குள் அழைத்துச் சென்றார் சிவலிங்கம். சுசிலாவும் வந்து வரவேற்றாள்.

“இவங்க என்னோட ஒண்ணு விட்ட அக்கா மல்லிகா. இங்கேதான் சொக்கிக் குளத்துல இருக்காங்க. இவங்க கணவர் மெடிக்கல் ரெப்ரெசன்டேடிவ்வா இருக்கார். அநேகமா டூர்லதான் இருப்பார்.”

மல்லிகா புன்னகைத்தாள்.

“வணக்கம்ங்க. தியாகுவுக்குப் பொண்ணு பார்க்கப் போறோம்னு சீதம்மா பாட்டி சொன்னாங்க. நெருங்கிய சொந்தம்னு எங்க சித்தப்பாவும், சித்தி கெளரியும் இருந்தாங்க. அவங்க இறந்தப்புறம் சீதம்மா பாட்டியும், தியாகுவும் என்னை மறக்காம அடிக்கடி வந்து போறாங்க. நானும் உரிமையோட அங்கே போறதுண்டு. இன்னிக்கு மாப்பிள்ளைப் பையனுக்கு அக்காங்கற சொந்தத்துக்குக் கட்டுப்பட்டு சந்தோஷமா உங்க மகளைப் பொண்ணு பார்க்க வந்திருக்கேன்.”

“ரொம்ப சந்தோஷம்மா. உட்கார்மா.” சுசிலா தன் அருகே மல்லிகாவை உட்கார வைத்தாள்.

“என்ன தியாகு? பொண்ணை வரச் சொல்லட்டுமா? கண்ணைச் சுழற்றி சுழற்றி தேடறீங்க?” கேலியாக சிவலிங்கம் கேட்டதும் தியாகு தலையைக் குனிந்து கொண்டான்.

சுசிலா உள்ளே சென்று, கல்யாணியை அழைத்து வந்தாள்.

“கல்யாணி, இவர்தான் மாப்பிள்ளை தியாகு. நல்லா பார்த்துக்கம்மா. தியாகு நீங்களும் பார்த்துக்கோங்க.”

கல்யாணி, தியாகுவைப் பார்க்க, தியாகு கல்யாணியைப் பார்க்க இருவரது கண்களும் சில விநாடிகள் கலந்தன. கல்யாணி, மஞ்சள் வண்ணப் பட்டுப்புடவையில் தங்கம் போல ஜொலித்தாள். வைத்த கண் இமைக்காமல் பார்த்தான் தியாகு.

தியாகுவின் கவனத்தைக் கலைத்தது சிவலிங்கத்தின் குரல்.

“என்ன தியாகு? பொண்ணைப் பிடிச்சிருக்கா?”

“பிடிச்சிருக்கு ஸார்.”

“ரொம்ப சந்தோஷம்.” சொன்னவர், சுசிலாவிடம் திரும்பினார்.

“சுசிலா, நீ கல்யாணிகிட்ட கேட்டுடும்மா.” கல்யாணியை தனியாக அழைத்துச் சென்றாள் சுசிலா.


“என்னடா கல்யாணி, மாப்பிள்ளையை நல்லா பார்த்தியா? உனக்குப் பிடிச்சிருக்கா?” கல்யாணியின் முகத்தை தன் கையினால் நிமிர்த்தி அவள் கண்களை நேருக்கு நேராய் பார்த்துக் கேட்டாள் சுசிலா.

“பிடிச்சிருக்கும்மா” வெட்கம் தாங்காதவளாய் முகத்தை மூடிக் கொண்டாள் கல்யாணி.

இதற்குள் அங்கே வந்த சிவலிங்கமும் கல்யாணியின் சம்மதத்தை அவள் சொல்லாமலே புரிந்து கொண்டார். நெஞ்சம் முழுவதும் சந்தோஷம் பரவ, கல்யாணியை உச்சி முகர்ந்தார்.

மூவரும் மறுபடியும் வரவேற்பறைக்குச் சென்றனர்.

“எங்க கல்யாணிக்கும் சம்மதம்தான். பாட்டிகிட்ட செல்லிடுங்க. இப்பவே இங்கே இருந்து போன் பண்ணிடுங்களேன்.”

“வே... வேண்டாம் ஸார்... நான் திருச்சி போய் நேர்லயே சொல்லிக்கிறேன் ஸார்.”

“இனிமேல் இந்த ஸார் போட்டு பேசறதெல்லாம் கூடாது மாமான்னுதான் கூப்பிடணும்.”

“சரி ஸார்... ஸாரி... சரி மாமா. ஆனா, நீங்க என்னை எப்பவும் தியாகுன்னு தான் கூப்பிடணும். மாப்பிள்ளைன்னு கூப்பிட்டா ஒரு அந்நிய உணர்வு வந்துடும். ப்ளீஸ் எனக்காக.”

“சரி, முயற்சி பண்றேன்...”

“பேசிக்கிட்டே இருந்தா எப்படிங்க? வாங்க எல்லாரும் சாப்பிடலாம்.” சுசிலா அவர்களைச் சாப்பிடும் அறைக்கு அழைத்துச் சென்றாள்.

சற்று நேரத்தில் தியாகுவும் கூச்சம் தெளிந்து உற்சாகமாக சிவலிங்கத்துடன் பேச ஆரம்பித்தான். கம்ப்யூட்டர் குறித்த அவனது விசாலமான அறிவு அவரைப் பிரமிக்க வைத்தது. மல்லிகாவும் தன் குடும்பம் பற்றி பேசினாள்.

“பொண்ணு மாப்பிள்ளை இவங்கதான்னு உறுதியாயிடுச்சு. அதை ஒரு சம்பிரதாயமா செய்யணும்னு சீதம்மா பாட்டி சொல்லுவாங்க. நீங்களே பாட்டிகிட்ட பேசிடறீங்களா மாமா?”

மல்லிகா கேட்டதும் சிவலிங்கம் அதை ஆமோதித்தார்.

“ஆமாம்மா மல்லிகா. நாம சீதம்மா கேட்ட பேசி நல்ல நாள்ல தாம்பூலம் மாத்திக்கிட்டு முகூர்த்த தேதியையும் குறிச்சிடலாம்.”

“கல்யாணிக்கு உங்களை மாதிரி நல்லவங்க இருக்கற குடும்பத்துல மண வாழ்க்கை அமைஞ்சதுல நான் ரொம்ப சந்தோஷப்படறேன் மல்லிகா. அவளும் குடும்பத்துல எல்லாரையும் புரிஞ்சுக்கிட்டு நல்ல மருமகளா நடந்துக்குவா. நான்தான் அவளைப் பிரிஞ்சு எப்படி இருக்கப் போறேன்னு தெரியலை.”

மகளுக்கு நல்ல மணவாழ்க்கை கிடைச்ச சந்தோஷத்துல பேச ஆரம்பிச்ச சுசிலா மகளைப் பிரிய நேரிடுமே என்ற எண்ணத்தில் ஏக்கத்துடன் பேசி முடித்தாள்.

“அத்தை, சம்பந்தி வீட்டுக்கு ஏதாவது விஷயம், விசேஷம்ன்னா மட்டும்தான் வரணும்னு அப்படிங்கற பழைய பஞ்சாங்கத்தை எல்லாம் விட்டுடுங்க. உங்க பொண்ணு வாழற வீட்டுக்கு அவளோட அம்மா, அப்பா நீங்க வர்றதுக்கு எந்த சாஸ்திர சம்பிரதாயமும் தேவை இல்லை. உண்மையான அன்பு இருந்தா அதுவே போதும்” தியாகு பளிச் என்று மனதில் பட்டதைப் பேசினான்.

தியாகு அன்புடன் பேசியதைக் கேட்ட கல்யாணி அகமகிழ்ந்தாள். மனைவியாக வரப் போகும் பெண்ணின் பெற்றோருடன் இத்தனை அன்புடன் பழகும் உள்ளம் கொண்ட தியாகுவின் மீது அவளுக்கு மதிப்பு உயர்ந்தது.

அனைவரும் சாப்பிட்டு முடித்தனர். மல்லிகாவும், தியாகுவும் கிளம்பினர்.

“அப்ப... நாங்க கிளம்பறோம். மாமா, அத்தை வரேன்...” என்றவன், ஓரக் கண்ணால் அங்கிருந்த கல்யாணியைப் பார்த்தான்.

“வரேன்...” கல்யாணியிடம் தயக்கமாகக் கூறியவன் விடை பெற்றான்.

“ஆமா, ஏன் மாப்பிள்ளை உங்க தங்கை மாலுவை கூட்டிட்டு வரலை? அண்ணியா வரப் போறவங்களை பார்க்கணும்னு அவளுக்கும் ஆசையா இருக்கும்ல?”

“அவளுக்கு ரொம்ப ஆசைதான். ஆனால், பரீட்சை இருக்கறதுனால வர முடியலை. மாமா, என்னை தியாகுன்னு பேர் சொல்லியே கூப்பிடுங்கன்னு சொல்லி இருக்கேன்ல?”

“ஓ.கே. ஓ.கே. கொஞ்சம் கொஞ்சமா பழகிக்கிறேன்.”

“தாங்க்ஸ் மாமா.”

“மாமா, அத்தை நாங்க கிளம்பறோம்.” மல்லிகாவும் விடை பெற்றாள்.

கார் கிளம்பியது. காரில் இருந்து திரும்பிப் பார்த்த தியாகுவின் கண்கள் கல்யாணியைத் தேடின. கல்யாணி கை அசைத்துக் கொண்டிருப்பது பார்த்து அவன் உள்ளம் துள்ளியது.

13

தியாகு – கல்யாணியின் திருமணம் வெகு விமரிசையாக நிகழ்ந்தது. தியாகுவின் வீட்டில் தன் வாழ்வைத் துவங்குவதற்கு அடி எடுத்து வைத்தாள் கல்யாணி.

சீதம்மாவிற்கு கல்யாணியின் மீது அலாதிப் பிரியம் ஏற்பட்டது. கல்யாணியின் அன்பும், பண்பும் நிறைந்த நடத்தையை அறிந்து கொள்ள நேரிட்ட சீதம்மாவிற்கு கெளரியின் நினைவு தோன்றியது.

கெளரியின் மறு வார்ப்பாகவே கல்யாணி அந்த வீட்டின் மருமகளாக வந்திருப்பது கருதி நிம்மதி அடைந்தாள்.

மாலுவிற்கு அண்ணியாக மட்டும் அல்லாமல் அம்மாவாகவும், அவளிடம் அன்பு செலுத்தினாள் கல்யாணி. பெற்ற தாயை இழந்த மாலு, மற்றுமொரு தாயாக கல்யாணி அந்த வீட்டிற்கு வந்திருப்பதாக உணர்ந்து மகிழ்ந்தாள்.

“அண்ணி... அண்ணி...” என்று கல்யாணியைச் சுற்றி சுற்றி வந்தாள். மாலுவிற்குப் பின்னல் போட்டு விடுவது அவளுக்குப் பிடித்த உணவு வகைகளை சமைத்துக் கொடுப்பது என்று அவளையும் அறியாமல் மாலுவின் மீது அளவில்லாத பாசம் வைத்து நேசித்தாள். அதிர்ஷ்டம் கெட்டவள் என்று மாலுவை சீதம்மா திட்டும் பொழுதெல்லாம் கல்யாணி பரிந்து பேசுவாள்.

“பாவம் பாட்டி மாலு. அவ பிறந்த நேரம்தான் அத்தைக்கும், மாமாவுக்கும் தீ விபத்து நடந்துச்சுன்னு நீங்க சொல்றது நியாயமே இல்லை. உங்க காலத்துல இந்த மூட நம்பிக்கையெல்லாம் நிறைய இருந்திருக்கும். இப்ப எல்லாமே மாறியாச்சு பாட்டி. அவளைத் திட்டாம இருங்களேன். ப்ளீஸ்” என்று பணிவு கலந்த அன்புடன் பேசும் பொழுது சீதம்மாவிற்கு எதிர் வார்த்தை பேச இயலாது.

என்றாலும் மாலுவின் மீதுள்ள அந்த வெறுப்பு மாறாமல் தான் இருந்தது.

தியாகு, வீட்டிற்குள் நுழையும்பொழுதே கல்யாணி என்று அழைத்தபடியே வரும் அளவு அவன் உள்ளத்தை தன் அன்பால் கொள்ளை கொண்டாள் கல்யாணி.

பாட்டியிடமும், மாலுவிடமும் பாசத்துடன் பழகும் கல்யாணியின் அன்பான குணநலன்கள் கண்டு பூரித்துப் போனான் தியாகு.

“கல்யாணி, நீ பணக்கார வீட்டில பிறந்து வசதியா வளர்ந்தவ. எங்க வீட்டில அந்த அளவுக்கு வசதி இல்லை. ஆனா, இந்தச் சூழ்நிலையை அனுசரிச்சுப் போற உன்னோட, நல்ல குணம் எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கும்மா. குடும்பத் தலைவனும், தலைவியும் இல்லாத இந்த இல்லத்துக்கு இனியவளா நீ வந்திருக்க. நான் ரொம்ப குடுத்து வச்சவன். என்னைவிட மாலு இப்ப ரொம்ப சந்தோஷமா இருக்கா. அவள்தான் அண்ணி நல்ல அண்ணியா வரணும்னு சொல்லிக்கிட்டே இருந்தா. நீ வந்தப்புறம்தான் அவ கொஞ்சம் உடம்பு தேறி இருக்கா....”


“போதும் போதும், உங்க புகழ் மாலை. என்ன பெரிசா பண்ணிட்டேன்? என்னோட அம்மா, அப்பாவை ஒரே சமயத்துல நானும் பறிகொடுத்தவ. என்னோட சுசீலா அம்மாவும், சிவலிங்கம் அப்பாவும் என்னை அவங்க பெத்த பொண்ணு மாதிரி வளர்க்கலியா? அன்பு செய்யலியா? அவங்க வளர்த்த பொண்ணு நான். அவங்களை மாதிரியே அன்பே உருவானவளா இருக்கணும்னு உறுதியான தீர்மானத்துல இருந்தேன். இருக்கேன். இனியும் இருப்பேன். மாலு மேல எனக்கு கொள்ளைப் பிரியம்ங்க. அவளோட மனசு வெள்ளை. இந்த சின்ன வயசுலே எவ்வளவு மனப்பக்குவமா இருக்கா தெரியுமா? அவ வயசுக்கு வர்ற பருவத்துல இருக்கா, இனிமேல்தான் நமக்கு நிறைய பொறுப்பு இருக்கு.”

கல்யாணியின் பேச்சில் வெளிப்பட்ட அக்கறையைக் கண்டு பிரமித்துப் போன தியாகு, அன்பு மிகுதியில் அவளை இறுக அணைத்துக் கொண்டான். அவர்களது உடல்கள் மட்டுமல்ல, உள்ளங்களும் சங்கமித்துக் கொண்டன.

14

துரையில் இருந்து திருச்சிக்கு அடிக்கடி, சளைக்காமல் சென்று வந்தனர் சுசிலாவும், சிவலிங்கமும். கல்யாணியைப் பார்க்க வேண்டும் என்று தோன்றினால் உடனே காரில் கிளம்பி விடுவார்கள். கல்யாணியும், தியாகுவும் அன்பான தாம்பத்யம் நடத்துவதைப் பார்த்து அளவற்ற மகிழ்ச்சி கொண்டனர்.

சிவலிங்கம் அலுவலகத்தில் இருந்து வந்தார். வீட்டிற்குள் வந்தவர், அங்கே ஹால் முழுக்க பரப்பி வைக்கப்பட்டிருந்த சாமான்களைப் பார்த்தார்.

“சுசிலா... சுசிலா...” அவரது குரல் கேட்டதும் வேகமாக வந்தாள் சுசிலா.

“என்னம்மா இது? திடீர்னு இவ்வளவு சாமான்களை எடுத்து வச்சிருக்க? என்ன விசேஷம்?”

“என்ன விசேஷம்னு கேக்காதீங்க. என்னென்ன விசேஷம்னு கேளுங்க. அதுக்கு முன்னால் நான் ஒரு கேள்வி கேக்கறேன். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு வாந்தி எடுத்தா அதுக்கு என்ன காரணம்?”

“ம். புதுசா கல்யாணம் ஆன பொண்ணு வாந்தி... ஓ... புரிஞ்சுருச்சு. குழந்தை உண்டாகி இருக்கலாம். அதனால வாந்தி வரும்... அப்ப நம்ப கல்யாணி...”

“ஆமா... நம்ப கல்யாணி, குழந்தை உண்டாகி இருக்காளாம். போன் பண்ணினா, உடனே இதெல்லாம் ரெடி பண்ணிட்டேன். நாம இப்ப திருச்சிக்குக் கிளம்பணும்.”

“அது சரி, வேற ஏதோ இன்னொரு விசேஷம்னு சொன்னியே, அது என்ன?”

“ஓ... அதைச் சொல்லாம விட்டுட்டேனா? மாலு வயசுக்கு வந்துட்டாளாம். கல்யாணி தனக்குக் குழந்தை உண்டாகி இருக்கிற விஷயத்துக்கு முன்னால, மாலு வயசுக்கு வந்துட்ட விஷயத்தைத்தான் முதல்ல சொன்னா, அவ்வளவு சந்தோஷம் அவளுக்கு.”

“இருக்காதா என்ன? மாலுவை தன்னோட குழந்தையாவே நினைக்கிறாளே நம்ப கல்யாணி! பெற்ற தாய் இல்லாத கல்யாணிக்கு நீ தாயாக கிடைச்ச. இப்ப மாலுவுக்குத் தாயா நம்ப கல்யாணி, உன்கிட்ட இருந்துதானே கல்யாணிக்கு அந்த பாச உணர்ச்சியும், அன்பு செலுத்தற குணமும் வந்துச்சு? உன்னோட இந்த அன்பும், பண்பும் என் மனசுக்கு எவ்வளவு நிம்மதியைக் குடுக்குது தெரியுமா?”

“நீங்க நிம்மதியா இருக்கணும். மனநிறைவா இருக்கணும். சந்தோஷமான உங்க முகத்தைத்தான் என்னால பார்க்க முடியலை. சஞ்சலம் இல்லாத உங்க மனசையாவது நான் உணர முடியுதே. அது போதும்ங்க. அதுக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன்ங்க.”

இதைக் கேட்ட சிவலிங்கம் குற்ற உணர்வில் தவித்தார். தான் அவ்வப்போது பழைய நினைவுகளில் நீந்தி, புஷ்பாவைப் பற்றிய சிந்தனையில் சோகமாகி மூட் அவுட் ஆகி விடுவதைத் தவிர்க்க முடியாமல் சுசிலாவின் மனதைப் புண்படுத்தி வருவது குறித்துதான் அவள் மறைமுகமாய் பேசுகிறாள் என்று புரிந்து, வேதனைப்பட்டார்.

“என்னங்க. யோசனைக்குப் போயிட்டீங்களா? வந்து சாப்பிட்டுட்டு திருச்சிக்குக் கிளம்பற வேலையைப் பாருங்க. டிரைவரை சாப்பிட அனுப்பிட்டீங்களா?”

“அனுப்பிட்டேன். வந்துடுவான்.”

சிவலிங்கம், முகம் கழுவிவிட்டு, சாப்பிடும் அறைக்குச் சென்றார். இருவரும் சாப்பிட்டு முடித்துத் திருச்சிக்குக் கிளம்பினார்கள்.

கல்யாணி, இவர்களுக்காகக் காத்திருந்தாள். கார் வந்து நின்றதும் ஓடி வந்தாள். முகத்தில் வெட்கம் வர்ண ஜாலமிட்டது.

“டிரைவர், கூடை எல்லாம் இறக்கி வை.”

டிரைவர் எல்லாப் பொருட்களையும் இறக்கினான்.

“என்னம்மா கல்யாணி, வாந்தி எடுத்து கஷ்டப்படறியா?” சுசிலா, கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள்.”

“ஆமாம்மா. அடிக்கடி வாந்தி வருது.”

இவர்கள் பேசிக் கொண்டிருக்கும் பொழுதே சீதம்மா வந்தாள்.

“வாங்க, வாங்க.”

“என்ன சீதம்மா, மாலு பெரியவளாயிட்டாளாமே?” சுசிலா கேட்டதும் சீதம்மாவின் முகத்தில் இருந்த சிரிப்பு மறைந்தது.

“ஆமா. பிறந்த நேரம்தான் சரி இல்லை. வயசுக்கு வந்த நேரமாவது நல்லா இருந்தா சரிதான்.”

“ஏன் பாட்டி, பாவம் சின்ன பொண்ணு மாலு. அவளைப் போய் திட்டறீங்க..” கல்யாணி மாலுவிற்காகப் பரிந்து பேசினாள்.

“மாலு எங்கே இருக்கா கல்யாணி? அவளுக்கு பட்டுப் பாவாடை, பட்டுப் புடவை எல்லாம் வாங்கிட்டு வந்திருக்கோம்.”

“சரிம்மா. இதையெல்லாம் எடுத்து உள்ளே வை. உனக்காக புளி சாதம். புளிக்குழம்பு எல்லாம் கொண்டு வந்திருக்கேன். நீ ஆசையா சாப்பிடறதை நான் உன் பக்கத்துல உட்கார்ந்து பார்க்கணும். அதுக்கு முன்னால மாலுவைப் பார்த்துடலாம்.”

“வாங்கம்மா” சுசிலாவை மாலு இருக்கும் தனி அறைக்கு அழைத்துச் சென்றாள்.

“மாலுக்குட்டி நல்லா இருக்கியாம்மா?” சுசிலாவின் குரல் கேட்டதும் தூங்கிக் கொண்டு இருந்த மாலு எழுந்தாள்.

உறக்கம் கலையாத முகத்தில் சுசிலாவைக் கண்ட மலர்ச்சி.

“எப்ப வந்தீங்க அத்தை?”

“இப்பத்தாம்மா வந்தோம்.”

“அத்தை, அண்ணிக்கு பாப்பா பிறக்கப் போகுது தெரியுமா?”

“ஓ. தெரியுமே.”

“அத்தை, அண்ணிக்கு குழந்தை பிறக்கறப்ப எந்த கெட்டதும் நடக்கக் கூடாது...”

இதைக் கேட்டதும் சுசிலாவும், கல்யாணியும் துடித்து விட்டனர்.

“பார்த்தியாம்மா கல்யாணி. பிஞ்சு மனசுல நஞ்சு படர்ந்தாப்போல பாட்டி பேசின பேச்சு, இவ மனசை எப்படி பாதிச்சிருக்கு? சின்னப் பொண்ணு எவ்வளவு வேதனைப்பட்டிருந்தா இப்படி ஆழமா சிந்திச்சிருப்பா? பாவம் மாலுக்குட்டி...?”

“எனக்கு அதெல்லாம் பழகிப் போச்சு அத்தை.”

வேதனை ரேகைகள் முகமெங்கும் தென்பட, மாலு பேசியதைக் கேட்ட கல்யாணி, ஆறுதலாக அவளை அணைத்துக் கொண்டாள்.

15

திருச்சியில் கல்யாணியுடன் இரண்டு நாட்கள் போனதே தெரியாமல் பொழுது போயிற்று. தியாகு தன் நிறுவனம் பற்றிய வரவு, செலவு, கணக்குகள் அடுத்ததாக முன்னேறக் கூடிய வாய்ப்புகள் அனைத்தையும் பற்றி விபரமாகப் பேசினான் சிவலிங்கத்திடம்.

தியாகுவின் சுறுசுறுப்பான செயல்கள், திறமை எதையும் புரிந்து கொண்டு செயல்படும் ஆற்றல் இவற்றை நன்றாக புரிந்து கொண்டார் சிவலிங்கம். “தியாகு, இவ்வளவு திறமைசாலியா இருக்கீங்க.


வெளிநாடுகள்ல்ல அடிக்கடி ஃபேர் நடத்தறாங்க. அதைப் போய் பார்த்தீங்கன்னா கம்ப்யூட்டர் சம்பந்தப்பட்ட அறிவு இன்னும் விசாலமாகும். சில வெளிநாடுகள்ல ட்ரெயினிங் கூட நடக்கும். அதுக்கும் கூட போகலாம். உங்க கம்பெனியை இன்னும் டெவலப் பண்ணலாமே?”

“நீங்க சொல்றது ரொம்ப கரெக்ட் மாமா. ஆனா, வெளிநாடுகளுக்கு போக, வர அங்கே தங்கற செலவு இதெல்லாம் சேர்த்து ரெண்டு லட்ச ரூபாய்க்கு மேல செலவு ஆகுமே மாமா.”

“அதைப் பத்தி உங்களுக்கென்ன? நீங்க சரின்னு சொன்னா நான் எல்லா ஏற்பாடும் பண்ண மாட்டேனா? உரிமையோட என்கிட்ட கேக்கக் கூடாதா?”

“அது... அது... வந்து மாமா...”

“நீங்க கல்யாணியை கல்யாணம் பண்ணிக்கும்போதே, நகை, பணம் எதுவும் கேக்கலை. இப்ப உங்க வேலையா வெளிநாட்டுக்குப் போகும்போதா கேட்டுடப் போறீங்க? நீங்க கேக்காட்டா என்ன? நான் உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பப் போறேன். செலவைப் பத்தி நீங்க கவலைப்படக் கூடாது. எல்லாம் நான் பார்த்துக்கறேன்.”

“இப்ப வேண்டாம் மாமா. நான் போகணும்னு நினைச்சா, உங்ககிட்ட சொல்றேன். இப்போதைக்கு வெளிநாடு போற எண்ணமே எனக்கு இல்லை மாமா. இப்ப ஒரு மாசம் இங்கே நான் இல்லாமப் போனா சரிப்பட்டு வராது. இங்கே உள்ள க்ளையண்ட்ஸோட தொடர்பு விட்டுப் போயிடும். வேற இடத்துல கம்ப்யூட்டர் வாங்கப் போயிடுவாங்க.”

“நீங்க சொன்னா சரியாத்தான் இருக்கும். ஆனா, நீங்க எப்ப வெளிநாட்டுக்குப் போகணும்னு நினைச்சாலும் தயங்காம என்கிட்ட சொல்லுங்க. நான் ஏற்பாடு பண்றேன்.”

“சரி மாமா.”

“அப்பா...” கல்யாணியின் குரல் கேட்டது. சாப்பிட வாங்கப்பா. உங்க மருமகன் ராத்திரி ஒன்பது மணிக்கு மேலதான் சாப்பிடுவார். உங்களுக்கு ஏழு மணிக்கெல்லாம் சாப்பிட்டுப் பழக்கமாச்சே.

“சரிம்மா. இதோ வரேன்.”

16

காலச்சக்கரம் வேகமாகச் சுழன்றது. கல்யாணிக்கு ஆண் குழந்தை பிறந்து மூன்று ஆண்டுகள் கடந்தன. மாலுதான் அவனுக்கு கண்ணன் என்று பெயர் வைத்தாள். பள்ளிக்கூடம் போன நேரமும், படிக்கும் நேரமும் போக கண்ணனுடனேயே தன் பொழுதைக் கழித்தாள் மாலு.

மாலு, கல்லூரியில் அடி எடுத்து வைத்தாள். அவள் திருமணப் பருவம் அடைவதற்கும், பட்டப் படிப்பை முடிப்பதற்கும் சரியாக இருந்தது.

மாலுவையும், கண்ணனையும் கருத்துடன் வளர்த்தாள் கல்யாணி. அன்பே உருவான தியாகுவுடன், இல்லற வாழ்வை நல்லறமாக இனிது வாழ்ந்தாள்.

தன்னுடைய இந்த இனிய வாழ்விற்குக் காரணமான சுசிலாவையும். சிவலிங்கத்தையும் நன்றிப் பெருக்குடன் நினைத்துக் கொள்வார். சிவலிங்கம் தினமும் கல்யாணிக்கு போன் போட்டு பேசுவார். பேரன் கண்ணனுடன் ஒரு நாள் பேசாவிட்டாலும் அவருக்குத் தூக்கம் வராது. கண்ணனும் “தாத்தா தாத்தா” என்று அவர் மீது உயிராக இருந்தான்.

தியாகுவிற்கு சேர்ந்தாற்போல இரண்டு நாட்கள் ஓய்வு கிடைத்தால், மாலு உட்பட அனைவரும் மதுரைக்குச் சென்று வருவதும், சுசிலா, சிவலிங்கம் அவ்வப்போது திருச்சிக்கு வந்து இவர்களுடன் இருப்பதுமாக நாட்கள் மகிழ்ச்சியாகக் கழிந்தன.

சிறுமியாக இருந்த மாலு, பெண்ணாக மலர்ந்த பின் அவளது பருவமும் அழகும் கூடியது. அவளது வளர்ச்சியைக் கண்ட கல்யாணிக்கு மகிழ்ச்சியுடன் கூடவே பயமும் தோன்றியது.

“என்னங்க, மாலு படிப்பை முடிச்சிட்டா. அவளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைச்சுக் குடுக்கற பொறுப்பு நமக்கு இருக்குங்க.”

“படிப்புக்கு முடிவே கிடையாது கல்யாணி, முடிச்சுட்டான்னு சொல்லாதே. அவ இன்னும் ரெண்டு வருஷம் மேல படிக்கட்டும்.”

“வேண்டாங்க. அவ படிச்ச வரைக்கும்போதும். அவளுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்.”

“அவளுக்கு பத்தொன்பது வயசுதானே ஆகுது? ஏன் அவசரப்படறே?”

“நாம நிதானமா இருந்து, அவ அவசரப்பட்டுடக் கூடாது. அவளோட வயசு அப்படி. பெத்தவங்க இல்லாத பெண்ணை வளர்த்தது மத்தவங்கதானேன்னு ஆகிடக் கூடாது. பெண்களுக்கு உரிய வயசுல கல்யாணம் பண்ணி வச்சுடறதுதான் நல்லது. உங்களுக்குத் தெரிஞ்சவங்கக்கிட்ட சொல்லி வச்சு மாப்பிள்ளை பாருங்க. அப்பா கிட்டயும் சொல்லியிருக்கேன். ‘உனக்கு எப்பிடி கண்ணும் கருத்துமா தியாகுவைத் தேர்ந்தெடுத்தோமோ, அது போல மாலுவுக்கும் நல்ல பையனா பார்த்துரலாம்மா’ன்னு அப்பா சொன்னார்.”

“சரி, கல்யாணி, நீயும், மாமாவும் பார்த்து ஏற்பாடு பண்ணுங்க. நீங்க ரெண்டு பேரும் சரின்னு சொன்னா மேற்கொண்டு ஆக வேண்டியதைப் பார்க்கலாம்” தியாகு ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டு ஆபீஸுக்குக் கிளம்பினான்.

தியாகு ஆரம்பித்த கம்ப்யூட்டர் நிறுவனம் நன்றாக அபிவிருத்தியாகி, மாதா மாதம் பணம் கட்டும் முறையில் புது கார் வாங்க வேண்டும் என்ற தன் லட்சியத்தை எடுத்துக் கூறினான். சிவலிங்கத்தின் மனம் புண்படாத வண்ணம் அன்பாக விளக்கம் கொடுத்தான். அவன் எண்ணப்படியே கார் வாங்கும் அளவு முன்னேறினான். கூடவே மாலுவின் எதிர்காலத்திற்கென்று ஒரு தொகையையும் சேர்த்து வைத்திருந்தான்.

கணவனைப் பற்றி பெருமிதம் கொண்டாள் கல்யாணி.

17

துரையில் தனக்குத் தெரிந்தவர்களிடம் எல்லாம் மாலுவிற்காக மாப்பிள்ளை பற்றி விசாரித்துக் கொண்டிருந்தார் சிவலிங்கம்.

“இந்தப் பையனைப் பாருங்க சிவா. பேர் மாதவன், எம்.ஏ. படிச்சிட்டு சொந்தமா வியாபாரத்தைக் கவனிச்சிட்டிருக்கான். மீனாஷி ப்ளாஸ்டிக்ஸ்னு கம்பெனி நடத்தறான். ப்ளாஸ்டிக் ரா மெட்டீரியல்ஸ் சப்ளை பண்றான். அண்ணன் தம்பி மூணு பேர். இந்தப் பையன் ரெண்டாவது. மூத்த பையனும் இவனும் சேர்ந்துதான் கம்பெனி நடத்தறாங்க. நல்ல சம்பாத்தியம். ஏற்கெனவே பாரதி நகர்ல ஒரு பூர்வீக வீடு இருக்கு. இப்ப கோமதிபுரத்துல இடம் வாங்கி புதுசா ஒரு வீடு கட்டி இருக்காங்க. வீட்டுக்கு பேர் கூட கலை நயமான ஒரு பேர் ‘ஸில்வர் ட்ரீட்.’ இந்த மாதவனுக்குக் கல்யாணம் பண்ணி அந்த வீட்டில் குடித்தனம் வைக்கணும்னு மூத்த பையன் திட்டம் போட்டிருந்தாரு. இந்த வரனோட அம்மா, அப்பா கோயம்புத்தூர் கிட்ட அந்தியூர் கிராமத்துல இருக்காங்க. முதல்ல இங்கேதான் இருந்தாங்க. மூத்த பையனுக்குக் கல்யாணம் ஆனதும், அவங்க, கிராமத்துக்குப் போயிட்டாங்க. அந்தியூர்ல விவசாய நிலபுலன் இருக்கு” சிவலிங்கத்தின் நண்பன் தருமதுரை வரன் பற்றிய விவரங்களைக் கூறினார்.

“பையன் லட்சணமா இருக்கான். பையன் குணத்தைப் பத்தி நல்லா விசாரிச்சுட்டீங்களா?”

“பாக்கு போடற பழக்கம் கூட கிடையாதாம். ரொம்ப நல்ல பையன் அதிர்ந்து கூட பேச மாட்டான். நான் வேணும்னா கேட்டுப் பார்க்கட்டுமா?”

“கேளுங்க. அவங்களும் பொண்ணைப் பார்க்கட்டும். நாமளும் மாப்பிள்ளையைப் பார்ப்போம். எல்லாருக்கும் திருப்தின்னா முடிச்சுடலாம்.”

“நான் பேசிட்டு உங்களுக்கு போன் போட்டு விபரம் சொல்றேன்.”


18

ல்லா சம்பிரதாயங்களும் இனிது முடிந்து முகூர்த்த தேதியும் குறிக்கப்பட்டது.

சுபமுகூர்த்த நாள். மங்கல மேளம் ஒலிக்க, மாப்பிள்ளை மாதவன், மாலுவின் கழுத்தில் தாலியைக் கட்டினான்.

கல்யாணி, ஒரு தாயைப் போல மாலுவை மணக்கோலத்தில் கண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள். குழந்தை கண்ணன் துறுதுறுவென்று இங்குமங்குமாக மகிழ்ச்சியுடன் ஓடிக் கொண்டிருந்தான். சுசிலாவும், சிவலிங்கமும் கல்யாணியின் சந்தோஷத்தைப் பார்த்து தாங்களும் சந்தோஷப்பட்டனர்.

தாலி கட்டி முடிந்து ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. திடீரென்று மாதவன் மயங்கி விழுந்தான். திருமண மாளிகை முழுக்க ஏ.ஸி. செய்யப்பட்டிருந்தபோதும், மாதவனுக்கு வியர்வை ஆறாகப் பெருகிய, நெஞ்சைப் பிடித்தபடி வலியில் துடித்தான்.

கூடி இருந்தவர் அனைவரும் திடுக்கிட்டனர். மாலு, மான் போல மிரண்டு கல்யாணியைத் தஞ்சம் அடைந்தாள். தனியே மாட்டிக் கொண்ட புறாவைப் போல அவளது இதயம் படபடத்தது.

மாதவனின் பெற்றோர் கதறினார்கள். அண்ணன் பிரபாகர், டாக்டரை வரவழைத்தான். டாக்டர் வந்து கையில் நாடி பிடித்துப் பார்ப்பதற்குள் மாதவனின் நாடித் துடிப்பு நின்று போனது. இதயம் இயக்கத்தை இழந்தது.

“ஸாரி... மாஸிவ் ஹார்ட் அட்டாக்.” சுருக்கமாகச் சொல்லிவிட்டார் டாக்டர்.

“ஐயோ...” மாதவனின் குடும்பத்தினரும், மாலுவின் குடும்பத்தினரும் அலறினர். தியாகு திகைத்துப் போய் நெஞ்சில் திகிலுடன் நின்றான். அவனது கண்களில் இருந்து கண்ணீர் பெருகியது. அதிர்ச்சியில் உறைந்து நின்ற கல்யாணியின் கைகளைப் பிடித்துக் கொண்டாள் சுசிலா.

மாதவனின் பெற்றோர் கதறி அழுத வண்ணம் கலங்கி நின்றனர்.

“என்னங்க ஆச்சு? உங்க பையன் மாதவனுக்கு ஏற்கெனவே உடம்பு சரி இல்லாம இருந்துச்சா? இதயத்துல கோளாறா? மறைச்சுட்டீங்களா? சொல்லுங்க...” கோபாவேசத்தில் மாதவனின் அப்பாவைப் பார்த்துக் கத்தினார் சிவலிங்கம்.

“ஐயோ சம்பந்தி. அப்படியெல்லாம் மறைச்சு வச்சு ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுக்க நினைக்கிற பாவத்தை செய்யற மனுஷங்க நாங்க இல்லை சம்பந்தி. சில நேரங்கள்ல வாய்வுத் தொல்லைன்னு சொல்லுவான். சாதாரண வாயுத் தொல்லைதானோன்னு இஞ்சி, பூண்டு குடுக்கற வழக்கம். அது அவனோட உயிரையே பறிக்கிற நெஞ்சு வலின்னு கொஞ்சம் கூட எதிர்பார்க்கலியே?”

அதைக் கேட்டுக் கொண்டிருந்த டாக்டர் கோபப்பட்டார். “விஞ்ஞானமும், மருத்துவமும் முன்னேறி இருக்கற இந்த நவீன காலத்துல இருக்கறீங்க இவ்வளவு அலட்சியமா இருந்துட்டீங்களே. சாதாரண வாய்வுத் தொல்லைன்னு நீங்களாவே எப்பிடி யூகிக்கலாம்? முதல் தடவை சொன்னப்பவே டாக்டரைப் பார்த்து ட்ரீட்மெண்ட் எடுத்திருந்தா உங்க மகனை நீங்க இழந்திருக்க வேண்டியதில்லை.”

கூட்டம் கூடி பரிதாபப்பட்டது.

மணக்கோலத்தில் இருந்தவன். பிணக்கோலத்தில் விழுந்து கிடந்தான். அலங்காரமாய் இருந்த திருமண மண்டபம் அலங்கோலமாய் ஆகியது. சிரிப்பும் ஆரவாரமுமாய் இருந்த இடம் அழுகையும் அலறலுமாய் ஒலித்தது.

சிவலிங்கம், தன் குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வெளியேறி காரினுள் ஏறினார். மற்றவர்களும் ஏறிக் கொள்ள, கார் கிளம்பியது.

19

காரில் இருந்து இறங்கிய மாலு அழுதபடியே மாடியறைக்கு ஓடிச் சென்றாள்.

“பாட்டி, பாட்டி...” பேச இயலாத கல்யாணி, கண்ணீர் பெருக நின்றாள். யாராலும் எதுவும் பேச முடியவில்லை.

“என்ன நடந்தது? சொல்லுங்களேன்...” தவித்துப் போன சீதம்மாவிற்கு டிரைவர்தான் விளக்கம் கொடுத்தான்.

“ஐயோ, இந்த மாலுவோட கூடப் பிறந்த துரதிர்ஷ்டம் ஒழியலையா? கடவுளே, இந்தப் பொண்ணை ஏன் இப்பிடி ராசி கெட்டவளா படைச்சே...” பாட்டி பேசுவதைத் தடுக்கும் மனநிலை யாருக்கும் இல்லை. மெளனமாக அனைவரும் உள்ளே சென்றனர்.

தன் அறையில் தலையணையைக் கண்ணீர் நனைக்க, தலைவிதியை நெஞ்சு நினைக்க, வேதனை தாளாமல் அழுது கொண்டிருந்தாள் மாலு.

“மாலு, அழாதேம்மா, நடந்தது ஒரு கனவு. அதுக்கு ஏன் அழறே” கல்யாணி ஆறுதல் கூற ஆரம்பித்ததும் அவளது அழுகை அதிகரித்தது.

நீண்ட நேரம் அவளுக்கு ஆறுதல் கூறி அவள் அருகிலேயே இருந்து அவளைத் தூங்க வைத்தாள் கல்யாணி. சிறிது நேரம் கண் அயர்ந்த மாலு, திடீரென விழித்துக் கொண்டாள், தன் அருகில் உட்கார்ந்திருந்த கல்யாணியைப் பார்த்தாள்.

“ஏன் அண்ணி நீங்க தூங்காம இங்கேயே இருக்கீங்க? தற்கொலை செஞ்சுக்குவேன்னு பயமா? ம்கூம். எனக்கு அப்பிடியெல்லாம் தோணவே இல்லை அண்ணி. நீங்க அண்ணாவைப் போய் கவனிங்க அண்ணி. அண்ணன் பாவம், மனசு உடைஞ்சுப் போய் இருப்பார். நீங்கதான் அவருக்கு தைரியம் சொல்லணும். போங்க அண்ணி.”

“உங்க அண்ணன் உன்னை மேல படிக்க வைக்கணும்னு சொன்னார். பாவி நான்தாம்மா உனக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு சொன்னேன். என்னாலதான் உனக்கு இந்தக் கஷ்டம்” குலுங்கி அழுத கல்யாணியைத் தன் மடியில் படுக்க வைத்துத் தேற்றினாள் மாலு.

“உங்க கடமையை நீங்க செஞ்சீங்க. என் விதி அதோட கடமையை செஞ்சிடுச்சு. அதுக்கு உங்களைக் குத்தம் சொல்ல முடியுமா அண்ணி? பிறந்த கொஞ்ச நாள்ல்லயே அம்மா, அப்பாவை சாகடிச்சேன். வளர்ந்து ஆளான பிறகு மணமகனா வந்தவனை சாகடிச்சேன். இதுக்கு நடுவுல வீட்டில மாடு செத்துப் போனா அதுக்கும் என்னைத்தான் பாட்டி திட்டுவாங்க. அண்ணனுக்கு பெரிய ஆர்டர் கான்சல் ஆச்சுன்னா அதுக்கும் என்னைத்தான் திட்டுவாங்க. இதெல்லாம் பழகிப் போச்சு அண்ணி. உண்மையிலேயே நான் பிறந்த நேரம் சரி இல்லையா அண்ணி?”

“ஐயோ மாலு. நம்ப பிறந்த நேரத்துக்கும், நம்ப வாழ்க்கையில நடக்கற நிகழ்வுகளுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைம்மா. நீ அழாம அமைதியா இரு.”

“நீங்க அழாம அமைதியா இருந்தா நானும் அழாம இருப்பேன். நீங்களும் அண்ணனும் நிம்மதியா இருக்கணும். மாமாவும், அத்தையும் பாவம். அவங்களைத் தனியா விட்டுட்டு என் கூட வந்துட்டீங்களே... அவங்களைப் போய் பாருங்க அண்ணி. அண்ணாவுக்கும் ஆறுதல் சொல்லுங்க அண்ணி.”

ஆறுதல் அடைய வேண்டியவள் ஆறுதல் கூறினாள். கண்ணீர் வடிக்க வேண்டியவள் கண்ணீரைத் துடைத்தாள்.

20

த்து நாட்கள் கல்யாணியுடன், மாலுவுடனும் கூடவே இருந்துவிட்டு மதுரைக்குப் புறப்பட்டனர் சிவலிங்கமும், சுசிலாவும்.

தியாகு, தன் வேலைகளைக் கவனிப்பதில் மூழ்கி துக்கத்தை மறக்க முயற்சித்தான். மாலு வழக்கம் போல தன் பொழுதைக் கழித்தாள். பாட்டி மட்டும் மாலுவைக் கரித்துக் கொட்டி, நிகழ்ந்ததை நினைவு படுத்திக் கொண்டிருந்தாள். கல்யாணி வீட்டு வேலைகளில் ஈடுபட்டாலும், அவள் மனம் மட்டும் மாலுவுக்கு இப்படி ஆயிற்றே இப்படி ஆயிற்றே என்று அரற்றிக் கொண்டே இருந்தது.


கண்ணனைக் குளிக்க வைத்து, அவனது உடைகளை அயர்ன் செய்து, அவனைப் படிக்க வைத்து, அவனுடன் விளையாடி... சதா சர்வ காலமும் கண்ணனுடனேயே மாலுவின் பொழுது போனது.

அவன் பள்ளிக்கூடம் போன பிறகு, கல்யாணிக்கு உதவியாக இருப்பாள். உள்ளுக்குள் உருகிக் கொண்டிருக்கும் கல்யாணியின் துயரத்தை அறிந்த மாலு, அவளிடம் கலகலப்பாகப் பேசுவாள்.

“அண்ணி, நீங்க சிரிச்ச முகமா இருந்து பார்த்துதான் எனக்குப் பழக்கம். இப்படி சோகமா இருக்காதீங்க அண்ணி. நீங்க இந்த வீட்டில் காலடி எடுத்து வச்சதுக்கப்புறம்தான் நான் சந்தோஷமா இருக்க ஆரம்பிச்சேன். என்னோட பார்பி பொம்மைகளையெல்லாம் பீரோவுக்குள்ள பூட்டி வச்சுட்டேன். இப்ப கண்ணன்தான் எனக்கு பார்பி பொம்மை. நீங்கதான் எனக்கு எல்லாமே.”

மாலு பாசத்துடன் பேசியதைக் கேட்ட கல்யாணி, உணர்ச்சி வசப்பட்டாள்.

21

சிவலிங்கம், மாலுவின் நிலைமை குறித்து வேதனைப்பட்டார்.

‘என் வாழ்க்கையில ஏன் இப்படி ஏமாற்றங்கள்? நான் காதலிச்சப்ப புஷ்பாவை கல்யாணம் பண்ணிக்க முடியாத ஏமாற்றம். யாருக்காக நான் அவளை விட்டுட்டு சுசிலாவைக் கல்யாணம் செய்தேனோ அந்த என் அப்பாவும் சீக்கிரமா என்னை விட்டுட்டுப் போயிட்ட ஏமாற்றம். என் கூட பாசமா இருந்த அண்ணனும், அண்ணியும் வருவாங்கன்னு ஆசையா எதிர்பார்த்து காத்திருந்தப்ப, எதிர்பாராத அவங்களோட மரணச் செய்தி தந்த ஏமாற்றம். குழந்தை பிறக்கும்னு எதிர்பார்த்து, அதிலயும் ஏமாற்றம். இப்ப மாலுவுக்கு நல்லபடியா கல்யாணம் செஞ்சு அவ நல்லா இருப்பாள்னு எதிர்பார்த்த எனக்கு அதிலயும் ஏமாற்றம். இறைவன் சில சமயங்களில் தான் போடும் கோலங்களின் புள்ளிகளைத் தவறாகப் போட்டு விடுகின்றானா? அல்லது நான் செய்த தவறுக்கு தண்டனையா, அவன் சரியாத்தான் புள்ளிகளைப் போடுகின்றானா? ஒரே ஒரு நல்ல விஷயம். என் மகள் கல்யாணிக்கு நல்ல கணவன் கிடைச்சு, அவ சந்தோஷமா இருக்காள். இப்ப அதிலயும் ஏமாற்றம். மாலுவுக்கு நிகழ்ந்த அந்தக் கசப்பான சம்பவத்தினால கல்யாணியும் முன்ன மாதிரி சந்தோஷமா இல்லை...’ மீண்டும் மீண்டும் கரையைத் தொட்டு செல்லும் அலைகளைப் போல சிவலிங்கத்தின் எண்ண அலைகள்,  அவரது இதயத்தைத் தொட்டு தொட்டுச் சென்றன.

“ஏற்கெனவே எதையோ பறிகொடுத்த மாதிரி அப்பப்ப யோசனைக்குப் போய் மெளனமாயிடுவீங்க. இப்ப உண்மையிலேயே மணமாலையை பறிகொடுத்த மாலுவை நினைச்சு உங்க வேதனையும் அதிகமாயிடுச்சு. மெளனமான யோசனையும் அதிகமாயிடுச்சு. நமக்குக் கல்யாணம் ஆன நாள்ல்ல இருந்து உங்க முகத்துல ஒரு முழுமையான சந்தோஷம்ங்கறதையே நான் இதுவரைக்கும் பார்க்கலை. நான் சாகறதுக்குள்ள உங்களை முழுமையான சந்தோஷம் உள்ளவரா ஒரு நாளாவது பார்க்கணும்னு துடிக்கிறேன். உங்க உதடுகள் சிரிச்சாலும், உள்ளம் மகிழ்ச்சிப்பட்டாலும் உங்க கண்கள்ல இருக்கற ஒரு சோகம் எனக்கு மட்டும்தாங்க தெரியும். அந்த சோகம் மறைஞ்சு, சந்தோஷமான என் கணவரை நான் ஒரு நாளாவது பார்க்கணும்ங்க.”

சுசிலா கூறியதைக் கேட்ட சிவலிங்கம் திடுக்கிட்டுப் போனார். ‘புஷ்பாவின் நினைவில் நீந்தும் என் எண்ணங்களை என்னை அறியாமலே என் கண்கள் பிரதிபலிக்கிறதோ? எந்தப் பாவமும் அறியாத இவளுக்குத்தான் என்னால் எத்தனை கஷ்டம்?’ தரையில் விடப்பட்ட மீன் போல் வேதனையில் துடித்தார் சிவலிங்கம்.

22

சூரியன் எழுந்து, உலகத்தை விழிக்க வைப்பதும், நிலவு தோன்றி உலகை உறங்க வைப்பதுமாகப் பொழுதுகள் வேகமாகக் கழித்தன.

மாலுவின் வயதுப் பெண்கள் கையில் குழந்தையுடன் செல்வதைப் பார்க்கும்பொழுது கல்யாணியின் இதயம் மாலுவை நினைத்து வேதனைப்பட்டது.

தியாகுவின் ஆசைக்கு இணங்கி சந்தோஷமாக இருக்கும் பொழுது, வீட்டில் வாழ இயலாமல் வாடி நிற்கும் மாலுவை எண்ணி, குற்ற உணர்வில் துடிப்பாள்.

முதிர்ந்தும், முதிராத கன்னிப் பருவ நிலையில், முழு நிலா போன்ற அழகான மாலு தேய்ந்து கொண்டே போவதைப் பார்த்து நெஞ்சம் பரிதவித்தாள். ‘என்ன செய்வது என்ன செய்வது’ என்று நினைத்தாள். சிவலிங்கத்தையும், சுசிலாவையும் வரவழைத்தாள்.

“அம்மா, அப்பா, மாலுவுக்கு மறுமணம் செஞ்சு வைக்கலாம்னு நினைக்கிறேன். இதைப் பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க?”

“நல்ல யோசனைம்மா. உனக்குத் தோணினது எனக்குத் தோணலியே?” சிவலிங்கம் பளிச் என்று பேசினார்.

“பாட்டி இதுக்கு சம்மதிக்கவே மாட்டாங்கம்மா.” சுசிலா கவலையுடன் கூறினாள்.

“பாட்டியைப் பத்தி கவலைப்படாதீங்கம்மா. அவங்க, அவங்களோடப் பழைய பத்தாம்பசலித்தனத்தை ஒரு பாதுகாப்பு வளையமா நினைக்கிறாங்க. அவங்களை மாதிரிப் பெண்கள் உண்மையான தங்கள் மன உணர்வுகளை மூடி மறைச்சுட்டு, வெளியே அதுக்கு முற்றிலும் மாறானதைப் பேசுவாங்க. அந்தக் காலத்துல அவங்களுக்கு எடுத்துச் சொல்லி, மறுமணம் செஞ்சு வைக்கறதுக்கு யாரும் கிடையாது. அந்தக் காலகட்டத்தில்தான் வாழ்க்கை முறை அந்த மாதிரி. இன்னிக்குக் காலம் எவ்வளவோ மாறி இருக்குல்ல? நாமதான் எடுத்து செய்யணும்.”

“ஆமாம்மா. நாமதான் அவளோட வாழ்க்கை மறுமலர்ச்சி அடைய வழி காட்டணும். மாப்பிள்ளைகிட்ட பேசிட்டியா? என்ன சொல்றார்?”

“அவருக்கு முழு சம்மதம். பாட்டியைத் தான் சமாளிச்சுக்கறதா சொல்லி இருக்கார்.”

“சரிம்மா. ஆனா இப்போதைக்கு பாட்டிக்கு எதுவும் தெரியக்கூடாது. எல்லாம் பேசி முடிச்சப்புறம் சொல்லிக்கலாம்.”

“மாலுகிட்ட பேசினியாம்மா இதைப் பத்தி?”

“அவகிட்ட பேசினதுக்கப்புறம்தான் உங்களையே இங்கே வரவழைச்சேன்.”

“சரிம்மா. இனி ஆக வேண்டியதை நான் பார்த்துக்கறேன்.”

தியாகுவின் கார் வந்து நிற்கும் ஒலி கேட்டது. சிவலிங்கம், தியாகுவிடம் மாலுவின் மறுமணம் பற்றி பேசி தெளிவுபடுத்திக் கொண்டார்.

கண்ணன் பள்ளிக்கூடத்தில் இருந்து வந்த பிறகு அவனைக் கொஞ்சிவிட்டு சுசிலாவும், சிவலிங்கமும் புறப்பட்டனர்.

23

றுநாள் காலை. தியாகு அலுவலகம் போவதற்காகக் கிளம்பிக் கொண்டிருந்தான்.

“என்னங்க. முக்கியமான ஃபைலும், அஞ்சு லட்ச ரூபா பணமும் குடுத்து, காலையில ஆபீஸுக்கு கிளம்பும்போது மறக்காம எடுத்துக்குடுன்னு சொன்னீங்களே...”

“ஆமா கல்யாணி... அது ரொம்ப முக்கியமான ஃபைல். ஆபீஸ் சம்பந்தப்பட்ட டாக்குமென்ட்ஸ், என்னோட பாலிஸி, உன்னோட பாலிஸி எல்லாமே அதிலதான் இருக்கு. எடுத்துட்டு வா. எல்லாமே ஒரிஜினல் காப்பி. கம்ப்யூட்டர் ஆர்டர் குடுத்தவங்க குடுத்த அஞ்சு லட்ச ரூபா பணம், எல்லாத்தையும் ஒரு பெட்டியில வச்சுக் குடும்மா.”

“இந்தாங்க” கல்யாணி பெட்டியைக் கொடுத்ததும் தியாகு காரில் ஏறி உட்கார்ந்தான். காரை ஸ்டார்ட் செய்தான். பெட்ரோல் போடச் சொல்லி இன்டிகேட்டர் அறிவித்தது. நேராக பெட்ரோல் பங்க்கிற்குச் சென்றான்.

பெட்டிக்குள் பர்ஸ் இருந்தது. பெட்டியுடன் எடுத்துக் கொண்டு போய் க்ரெடிட் கார்டில் கையெழுத்துப் போட்டான்.


கையெழுத்து போட்டவன், பெட்டியை அங்கே இருந்த மேஜை மீது வைத்ததை மறந்து போய், பர்ஸை மட்டும் எடுத்துக் கொண்டு காருக்கு வந்தான். காரை ஸ்டார்ட் செய்து கிளம்பி ஆபீஸிற்கு வந்தான்.

அவனைப் பார்ப்பதற்காக வந்திருந்த முக்கியமான நபர்களுடன் பேசி முடித்து அவர்களை அனுப்பிய பிறகுதான் பெட்டியின் நினைவு வந்தது.

காரில்தான் இருக்கும் என்ற எண்ணத்தில் காருக்குச் சென்று கார் கதவைத் திறந்த உள்ளே பார்த்தவனுக்கு அதிர்ச்சி. பெட்டி அங்கே இல்லை. பரபரவென்று தேடினான். கிடைக்கவில்லை. “கடவுளே” நெஞ்சில் இடி விழுந்தது போல் ஆனான்.

காரை விட்டு இறங்கி ஆபீஸிற்குள் தன் அறையை நோக்கி நடந்தான். தலையை அழுத்திப் பிடித்துக் கொண்டு டென்ஷனாக இருந்தான்.

“ஸார்” குரல் கேட்டதும் நிமிர்ந்தான். ஒரு இளைஞன் நின்றிருந்தான். அடர்ந்த தலைமுடி... முகத்தில் பயம் கலந்த ஒரு குழந்தைத் தனம் தென்பட்டது. நிறம் சற்று கறுப்பு எனினும் களை பொருந்திய முகம்.

“நான் இப்ப யாரையும் பார்க்கற மனநிலையில் இல்லை. ஐ ஆம் வெரி ஸாரி...”

“என்ன ஸார், அதுக்குள்ள என்னை மறந்துட்டீங்களா?”  இந்தாங்க ஸார் உங்க பெட்டி. பெட்ரோல் பங்க்ல க்ரெடிட் கார்ட் சைன் பண்ணிட்டு பர்ஸை மட்டும் எடுத்துக்கிட்டு, பெட்டிய டேபிள் மேலயே வச்சுட்டு வந்துட்டீங்க. நான் கூப்பிடக் கூப்பிட நீங்க காரைக் கிளப்பிப் போயிட்டீங்க. நான் கூப்பிட்டது உங்க காதில விழலை. இதில உங்க பேர், அட்ரஸ் எல்லாம் இருக்கு. அதனால உங்ககிட்ட ஒப்படைச்சிடலாம்னு கொண்டு வந்தேன் ஸார்.”

பெட்டியைப் பார்த்ததும் போன உயிர் திரும்ப வந்தது போலிருந்தது தியாகுவிற்கு.

“உட்காருங்க தம்பி. ரொம்ப தாங்க்ஸ். இதைக் காணோம்னு தான் டென்ஷனா இருந்தேன். அது சரி, இது எப்படி உங்க கைக்கு?”

“நீங்க உங்க காருக்கு பெட்ரோல் போடற அந்த பங்க்ல தான் ஸார் நான் வேலை பார்க்கறேன். உங்களுக்கு பில் போட்டுக் குடுத்ததும் நான்தான். அப்போ நான் ட்யூட்டியில இருந்ததுனால யூனிஃபார்ம் போட்டிருந்தேன். அதனால உங்களுக்கு என்னை அடையாளம் தெரியலைன்னு நினைக்கிறேன்.”

“இருக்கலாம். தம்பி, நான் ஒண்ணு கேக்கறேன். தப்பா நினைச்சுக்காதே... உன்னைப் பார்த்தா பெட்ரோல் பங்க்ல வேலை செய்யக் கூடியவனா தெரியலை. பெரிய வீட்டுப் பிள்ளை மாதிரி இருக்கியே.”

“அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லை ஸார். அப்பா இல்லை. எங்க அம்மா என்னை ரொம்பக் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க ஸார். கம்ப்யூட்டர் கோர்ஸ் முடிச்சிருக்கேன். ஆனா, அதுக்கேத்த வேலை கிடைக்கலை. இந்த படிப்பை படிக்க வைக்க எங்கம்மா பட்ட பாடு கொஞ்சம் நஞ்சம் இல்லை ஸார். அவங்க உடம்பு தேய என்னை வளர்த்தது மட்டும் இல்லை. மரியாதையான கல்வியும் எனக்குக் கிடைக்க வச்சாங்க. வீட்டு வேலை செஞ்சாங்க, சமையல் வேலை செஞ்சாங்க. கூடை... பின்னி வித்தாங்க. ராத்திரி, பகல்னு பார்க்காம உழைச்சாங்க. இப்ப அவங்களை சுகமா வச்சிருக்கணும்னு நான் ஆசைப்படறேன். ஆனா, இந்த வேலைதான் கிடைச்சது.”

“ஸாரி, உன் பேரைக் கூட கேட்க மறந்துட்டேன்.”

“என் பேர் பாஸ்கர் ஸார்.”

“உங்க அம்மா எங்கே இருக்காங்க?”

“திண்டுக்கல்லதான் நாங்க இருந்தோம். அம்மா இப்ப அங்கதான் இருக்காங்க. நான் மட்டும் வேலை தேடி இங்கே வந்தேன். நல்ல வேலை கிடைச்சா அம்மாவையும் இங்கே கூட்டிட்டு வந்துடணும்னு நான் நினைக்கிறேன். ஆனா, ஏனோ தெரியலை. அம்மா எந்த ஊருக்கும் வரமாட்டேன்னு சொல்றாங்க. இப்போதைக்கு இருக்கட்டும். கொஞ்ச நாள் கழிச்சு அவங்களை சம்மதிக்க வைக்கலாம்னு இருக்கேன். நான் பெட்ரோல் பங்க்ல வேலை செய்றேன்னு அம்மாகிட்ட சொல்லிட்டேன். கொஞ்ச கொஞ்சமா வேலைக்கு முயற்சி செய்யினு அம்மா அறிவுரை சொன்னாங்க. அம்மா வாக்கு வேத வாக்கு ஸார் எனக்கு. அவங்கதான் நான் கும்பிடற தெய்வம்...”

“அடேயப்பா! அம்மா மேல இவ்வளவு பாசமும், பக்தியும் வச்சிருக்கிறே! நீ எனக்கு செஞ்ச இந்த உதவிக்கு உனக்கு ஏதாவது செய்யணும்னு நினைக்கிறேன். உன்னோட படிப்புக்கு ஏத்த வேலையை என் ஆபீஸ்லயே போட்டுத் தரேன்.”

“நிஜமாவா ஸார்?!... ரொம்ப தாங்க்ஸ் ஸார்... நான் எதிர்பார்க்கவே இல்லை ஸார். இந்த விஷயத்தை இப்பவே எங்கம்மாகிட்ட சொல்லணும்னு ஆசையா இருக்கு ஸார்...”

“ஹலோ அம்மா பையன,` கொஞ்சம் பொறு. லஞ்ச் டைம் ஆச்சு. எங்க வீட்டிலதான் உனக்கு இன்னிக்கு லஞ்ச். வந்து சாப்பிட்டுட்டு நிதானமா உங்க அம்மாவுக்கு லெட்டர் எழுதிப் போடலாம், சரியா...”

“உங்க வீட்டுக்கா? அதெல்லாம் வேணாம் ஸார். எனக்கு உங்க ஆபீஸ்ல வேலை போட்டுத் தர்றேன்னு சொன்னதே பெரிய விருந்து சாப்பிட்ட மாதிரி ஸார்.”

“ம்கூம். நீ கண்டிப்பா இன்னிக்கு என் கூடத்தான் சாப்பிடணும். வா போகலாம்.”

பாஸ்கரின் கையைப் பிடித்துக் கூட்டிக் கொண்டு காருக்குச் சென்றான் தியாகு. இருவரும் காரில் அமர்ந்தார்கள். தியாகுவின் வீட்டை நோக்கி கார் கிளம்பியது.

24

“கல்யாணி, கல்யாணி...” தியாகுவின் குரல் கேட்டதும் கல்யாணி டி.வி.யை நிறுத்திவிட்டு வந்தாள்.

அறிமுகம் இல்லாத ஒரு இளைஞன் தியாகுவுடன் இருப்பதைப் பார்த்தாள் கல்யாணி.

“கல்யாணி, இன்னிக்கு காலையில நீ என்கிட்ட ஞாபகமா குடுத்த பெட்டியை நான் மறந்த போய் பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு ஆபீஸ் போயிட்டேன். இந்தத் தம்பிதான் பார்த்து எடுத்துட்டு வந்து குடுத்தான்...”

“அடக்கடவுளே, அஞ்சு லட்ச ரூபா பணம், முக்கியமான ஃபைல்னு திரும்ப திரும்ப என்கிட்ட சொல்லிட்டு இப்படி பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு போயிருக்கீங்களே... உங்க பாஸ்போர்ட் கூட அதிலதாங்க இருந்துச்சு, நல்ல வேளை பத்திரமா கிடைச்சதே...”

“இந்த தம்பிக்குத்தான் தாங்க்ஸ் சொல்லணும்.”

“ரொம்ப தாங்க்ஸ் தம்பி, உங்க பேர்?”

“பாஸ்கர்ங்க, ஸார் சொல்ற மாதிரி பெரிசா எந்த உபகாரமும் நான் செய்யலீங்க. கண்ணில பட்டதை உரியவர்கிட்ட சேர்க்கறது சாதாரண மனுஷத் தன்மைதானேங்க?”

“உங்களுக்கு அது சாதாரணமாத் தெரியலாம். அந்தப் பெட்டியைப் பொறுத்தவரைக்கும் காணாமப் போன அது திரும்ப கிடைச்சதும், அதை நீங்க பொறுப்பா கொண்டு வந்து அவர்கிட்ட ஒப்படைச்சதும் சாதாரண விஷயம் இல்லை. கஷ்டமான நிலைமையில இருக்கிற நீங்க, பணத்தைப் பார்த்தும் கூட மனசு மாறாம அப்படியே கொண்டு வந்து குடுத்திருக்கீங்க.”


“என்ன கல்யாணி, பேசிக்கிட்டே இருந்தா... சாப்பிடணும்ல... எடுத்து வைம்மா. மாலு எங்கே...?”

“அண்ணா...” கூப்பிட்டுக் கொண்டே வந்த மாலு, பாஸ்கரைப் பார்த்ததும் தயங்கினாள்.

“உங்க அண்ணனுக்குத் திடீர் ஃப்ரெண்டு கிடைச்சிருக்கார் மாலு. இவர் பேர் பாஸ்கர். நீ போய் டேபிள்ல்ல இவங்க சாப்பிடறதுக்கு எடுத்து வச்சு ரெடி பண்ணு. இதோ நானும் வரேன்.”

“தியாகுவும், பாஸ்கரும் சேர்ந்து சாப்பிட உட்கார்ந்தனர். மாலுவும், கல்யாணியும் பரிமாறினார்கள்.”

“பாஸ்கர் இவ என் தங்கை மாலு.”

மாலு, பாஸ்கரைப் பார்த்து புன்னகைத்து அந்த அறிமுகத்தை ஏற்றுக் கொண்டாள்.

“என்ன பாஸ்கர், சரியாவே சாப்பிட மாட்டேங்கறீங்க? வச்சது வச்சபடி அப்படியே இருக்கு?” கல்யாணி கேட்டதும் மேலும் சங்கோஜப்பட்டான்.

“சாப்பிடும் போதெல்லாம் எனக்கு எங்க அம்மாவோட ஞாபகம் வந்துரும். என்னை உட்கார வச்சு, என் பக்கத்துலயே இருந்து நான் போதும் போதும்னு சொல்லச் சொல்ல போட்டுக்கிட்டே இருப்பாங்க. அவங்களுக்கு இருக்கோ இல்லியோ எனக்கு எடுத்துப் போட்டுடுவாங்க?”

“கல்யாணி, பாஸ்கர் ஒரே அம்மா பைத்தியம் வார்த்தைக்கு வார்த்தை அம்மாதான். அவங்க திண்டுக்கல்ல இருக்கறதுனால அந்தப் பிரிவுல ரொம்ப தவிப்பு. அது சரி, பாஸ்கர், நீ எங்கே தங்கி இருக்கே?” தியாகு அது பற்றிக் கேட்டதும் மேலும் கூச்சப்பட்டான் பாஸ்கர்.

“அது... அது... வந்து... ஸார் என் கூட வேலை பார்க்கற பையன் கூடத்தான் இருக்கேன். அவனும் ஏழை, நீ வேற எதுக்கு தனியா வாடகை குடுக்கப் போற? உனக்கு ஒரு நல்ல வேலை கிடைக்கறவரைக்கும் என் கூடவே இருன்னு சொன்னான். நல்ல பையன், காலையில கிளம்பி வந்தா, ராத்திரி படுக்கறதுக்குத்தான் போவேன். ஊர்ல எங்க வீடு சின்ன வீடா இருந்தாலும் தனி வீடு. நல்ல காற்றோட்டமா இருக்கும். வெளியில திண்ணையில படுத்தா இயற்கை காத்துல சுகமான தூக்கம் கண்ணை சுழற்றும்.”

“அடேயப்பா... அந்த வீட்டோட இத்தனை ஐக்கியமா?”

“ஆமா ஸார். அதுக்குக் காரணமும் இருக்கு. அரசாங்கத்துல புறம்போக்கு நிலத்துல குடிசை போட்டுக்கலாம்னு அறிவிச்சு, நிலத்துக்கு சொந்தக்காரங்கன்னு பட்டாவும் போட்டுக் குடுத்தாங்கள்ல? அப்படிக் கிடைச்சது ஸார். அந்த வீடு. அதுக்கு பட்டா வாங்கறதுக்குள்ள எங்க அம்மா பட்ட பாடு!... தினக்கூலி வேலைக்குப் போய்க்கிட்டிருந்த அம்மா, பட்டா போட வர்றாங்கன்னு தெரிஞ்சதும் அங்கேயே போய் பழியாக் காத்துக் கிடப்பாங்க. ஆனா, குறிப்பிட்டு சொன்ன நாளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிங்க வரமாட்டாங்க. அன்னிக்கு தினக்கூலி வேலையும் போய் கூலியும் கிடைக்காது. மூணு வருஷத்துக்கப்புறம் தான் பட்டா கிடைச்சது. அதுக்குள்ள பல நாட்கள் பட்டினி கிடந்திருக்கோம். அவ்வளவு கஷ்டப்பட்டதுனால அந்த வீட்டை எங்க அம்மா ஒரு கோவிலா நினைக்கிறாங்க. தனியா நின்னு, சுய உழைப்புல வாழ்ந்து, பெத்த பிள்ளையையும் படிக்க வச்ச எங்க அம்மா ஒரு புதுமைப் பெண்.”

“நல்லது தம்பி. இனிமேல் நீ எங்க வீட்டிலேயே இருந்துக்கலாம். அவுட் ஹவுஸ் ஒண்ணு இருக்கு நீ அங்கே இருந்துக்கலாம். இங்கேயே சாப்பிட்டுக்கலாம். உன்னை எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. மறுத்துப் பேசவே கூடாது. உன் நண்பனோட வீட்டுக்குப் போய் உன் துணிகளை எல்லாம் எடுத்துட்டு வந்துடு.”

“ஸார்... அது...”

“நான் ஆரம்பத்துலயே சொல்லிட்டேன். மறுத்துப் பேசக் கூடாதுன்னு.”

“சரி ஸார்.”

“உன்னை பெட்ரோல் பங்க்ல விட்டுட்டு நான் ஆபீஸ் போறேன். நீ அங்கே உன் கணக்கை முடிச்சுட்டு, சொல்லிட்டு ஆபீஸுக்கு வந்துடு. என் கூடவே வீட்டுக்குத் திரும்பிடலாம். கல்யாணி, நாங்க கிளம்பறோம்மா.”

தியாகுவும், பாஸ்கரும் கிளம்பிச் சென்றார்கள்.

25

ன்று மாலை நேரமே வேலையாட்களை வைத்து அவுட் ஹவுஸை சுத்தம் செய்து வைத்திருந்தாள் கல்யாணி. பாஸ்கரும் தன் பொருட்களைக் கொண்டு வந்து வைத்துவிட்டான்.

தியாகுவிடம் தயக்கமாகப் பேச்சைத் துவக்கினாள் கல்யாணி.

“ஏங்க, ஒரு கன்னிப் பெண் இருக்கிற இடத்துல வயசுப் பையனை இங்கே தங்க வைக்கறது சரிதானா? நல்லா யோசிச்சீங்காளா? உங்க பேச்சைத் தட்டாம எல்லா ஏற்பாடும் பண்ணிட்டேன். ஆனா... என் மனசுக்குள்ள ஒரு நெருடல் இல்லாம இல்ல. பாட்டி கூட நீங்க இல்லாத சமயத்துல இதைப் பத்தி திட்டிக்கிட்டுத்தான் இருக்காங்க.”

“சரிம்மா, அவன்கிட்ட சொல்லியாச்சு. அவுட் ஹவுக்கு குடியும் வந்துட்டான். கொஞ்ச நாள் இருக்கட்டும், சரியான சந்தர்ப்பம் பார்த்து வேற ஏதாவது ஏற்பாடு செஞ்சுடலாம் என்ன?”

“தாங்க்ஸ்ங்க. மனைவி எது சொன்னாலும் நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறதுன்னு வீம்பு பிடிக்காம நான் சொல்றதை மதிச்சு அதைப் பரிசீலனை செய்யறதா சொல்றீங்க. உங்களைக் கணவரா அடைஞ்ச நான் ரொம்ப அதிர்ஷ்டசாலிங்க.”

“நீ எனக்கு மனைவி மட்டும் இல்லியே. என் அம்மா, என் ஃப்ரெண்ட், ஆலோசனை சொல்ற மந்திரியுமாச்சே. நானும்தான் அதிர்ஷ்டசாலி.”

“நாம சந்தோஷமா இருக்கிற மாதிரி நம்ப மாலுவும் நல்ல கணவன் கிடைச்சு சந்தோஷமா இருக்கணும். அந்த நாள் சீக்கிரமே வரணும்ங்க.”

“இது அவசரப்பட்டு முடிக்கற விஷயம் இல்லை கல்யாணி. ஏதோ நாம ஓரளவுக்கு நல்ல வசதியா இருக்கோம். இதை மனசுல வச்சுக்கிட்டு பணத்துக்காக மாலுவை கல்யாணம் செஞ்சுக்க பல பேர் முன் வரலாம். உண்மையாவே ஒரு பெண்ணுக்கு வாழ்வு குடுக்கணும்னு வர்றவனை அடையாளம் தெரிஞ்சு, மாலுவைக் கட்டிக் குடுக்கணும். உங்க அப்பாவும், தீவிரமா இதைப்பத்தி விசாரிச்சிக்கிட்டுத்தான் இருக்காராம். நானும் சொல்லி வச்சிருக்கேன். இன்னொரு விஷயம் கல்யாணி, அடுத்த மாசம் நான் வெளிநாட்டுக்கு போகலாம்னு முடிவு பண்ணி இருக்கேன். முக்கியமான ஃபேர் ஒண்ணு ஜெர்மனியில நடக்கப் போகுது. அதையும் விஸிட் பண்ணிட்டு, மூணு வார ட்ரெய்னிங் கோர்ஸையும் முடிச்சுட்டு வரலாம்னு இருக்கேன். நான் வர்றதுக்குள்ள உங்க அப்பா, மாலுவுக்கு வரன் பார்த்து வச்சார்னா நான் வந்தப்புறம் மத்த ஏற்பாடுகளை பண்ணலாம்.”

“சரிங்க, கண்ணன் பிறக்கறதுக்கு முன்னாலேயே உங்களை வெளிநாட்டுக்கு அனுப்பணும்னு அப்பா ஆசைப்பட்டார். நீங்க தான் மறுத்துட்டீங்க. இப்பவாவது கீளம்பினீங்களே, சந்தோஷமா இருக்குங்க.”

“அப்ப, நான் தொழில் தொடங்கின புதுசு கல்யாணி. இப்ப நல்லா வளர்ந்துடுச்சு. அது மட்டுமில்லை. பாஸ்கரும் ஆபீஸ் நிர்வாகத்தை நல்லா கவனிச்சுக்கக் கூடியவனா இருக்கான். அதனால அவன் பொறுப்புல விட்டுட்டுக் கிளம்பலாம்னு நினைச்சேன்.”

“சரிங்க. இப்பவே இந்த சந்தோஷமான சமாச்சாரத்தை அப்பாவுக்கும், அம்மாவுக்கும் சொல்லணும்.”


“அம்மா தாயே, நீ உங்க அம்மா, அப்பா கூட பேச ஆரம்பிச்சா அரை மணி நேரத்துக்குப் பேசிக்கிட்டிருப்ப, எனக்குத் தூக்கம் வருது.”

“உங்களுக்குத் தூக்கம் வந்தா தூங்குங்களேன்.”

“நீ இல்லாம எனக்கு எப்படித் தூக்கம் வரும்?” தியாகு குறும்பாகக் கண் அடித்தான். அன்புடன் அவன் மீது சாய்ந்து கொண்ட கல்யாணியை ஆசையுடன் அணைத்துக் கொண்டான் தியாகு. ஜன்னல் வழியே இவர்களை ரசித்துக் கொண்டு இருந்த நிலவு வெட்கப்பட்டு சற்று நகர்ந்து கொண்டது.

26

வீட்டிற்கு வந்த சிவலிங்கம் களைப்பாகக் காணப்பட்டதைப் பார்த்த சுசிலா கவலையுடன் அவரை நெருங்கினாள்.

“என்னங்க, முகம் ஏன் வாடிக்கிடக்கு? உடம்பு சரியில்லையா? என்ன பண்ணுது?”

“களைப்பு ஒண்ணும் இல்லை. மன உளைச்சல்தான் மாலுவுக்கு நடந்த கல்யாணத்தை மைனஸ் பாயிண்ட்டா ஆக்கி, வரதட்சணைக் கேட்டு கெடுபிடி பண்றாங்க சில வரன்களோடப் பெத்தவங்க, பரந்த மனப்பான்மை உள்ளவங்களே இந்த உலகத்தில இல்லையான்னு வெறுத்துப் போச்சு.”

“நீங்க வேண்ணா பாருங்க. மாலுவை துஷ்டை துக்கிரின்னு சொன்ன பாட்டியே அசந்து போற அளவுக்கு அவளுக்கு நல்ல மாப்பிள்ளை அமையப் போகுது. அவ அமோகமா வாழப் போறா. அதுக்கப்புறம் பாட்டியோட அந்த மூட நம்பிக்கை அடியோட ஒழிஞ்சுடும் பாருங்க.”

“என்னமோ நீ சொல்ற மாதிரி நடந்தா சந்தோஷம்தான்.”

“நிச்சயமா நடக்கும்ங்க. இரவும், பகலும் மாறி மாறி வர்ற மாதிரி, அந்தக் கல்யாணத்துல வாழ்க்கையை இழந்த மாலு, மறுமணத்துல இன்னும் நல்ல வாழ்க்கையை அடைவாள்ங்கற நம்பிக்கை எனக்கு இருக்குங்க.”

“எதையுமே சாதகமான கோணத்துல நினைச்சுப் பார்க்கற உன்னோட மனப்பான்மை பாராட்டுக்குரியது சுசிலா.”

“தாங்க்ஸ்ங்க. நீங்க உங்க ரூமுக்குப் போய் ரெஸ்ட் எடுங்க, மாதர் சங்கத்துல இருந்து லீலாவதி வர்றதா சொன்னாங்க வந்துருவாங்க.”

“சரிம்மா.”

வழக்கம் போல தன் அறைக்குச் சென்று கதவைத் தாழ் போட்டு விட்டு கட்டிலில் அயர்ச்சியுடன் சாய்ந்தார் சிவலிங்கம்.

புஷ்பா, தன்னிடம் கொடுத்த கருகமணிகள் போலவே அவளது கண்களும் அவருடைய நினைவில் மின்னியது. ‘இதென்ன! மனதிற்குள் ஒரு தனி ட்ராக்! தனிமையில் என்னை அமைதியாக இருக்க விடாமல் என் புஷ்பாவின் கண்களும், அவளின் நினைவுகளும், அவளைப் பார்த்து மன்னிப்புக் கேட்பதற்காக நான் எடுத்த முயற்சிகள் எல்லாம் தோல்வியாகி அவளை சந்திக்கும் வாய்ப்பே இல்லாமல் போய்விட்டதே? என் உயிர் போறதுக்குள்ள நான் உயிருக்குயிரா காதலிச்ச என் புஷ்பாவை பார்க்கற பாக்யம் எனக்குக் கிடைக்குமா?... ஆ... கடவுளே இதென்ன திடீர் நெஞ்சு வலிக்குதே...’ நெஞ்சைப் பிடித்தபடியே மெதுவாக எழுந்து தன் அந்தரங்க அலமாரியைத் திறந்தார். அங்கிருந்த சிறிய பாட்டிலில் இருந்த மாத்திரைகளில் ஒன்றை எடுத்து நாக்கின் அடியில் வைத்துக் கொண்டார். புகைப்படத்தில் இருந்த புஷ்பாவுடன் பேச ஆரம்பித்தார்.

“உன்னைப் பார்க்கணும்னு தான் காத்துக்கிட்டிருக்கேன் புஷ்பா. நெஞ்சு வலி வர்றதையும் அதுக்காக மாத்திரை சாப்பிடறதையும் சுசிலாகிட்ட நான் இன்னும் சொல்லலைம்மா. ஏற்கெனவே அவ என்னைப் பத்தி கவலையா இருக்கா. இதையும் சொன்னா ரொம்ப பயந்துடுவா. உன்கிட்ட இப்பிடி மானசீகமா பேசறதுல எனக்கு ஒரு ஆத்மதிருப்தி கிடைக்கறது என்னவோ நிஜம்தான். ஆனா, உன்னைப் பார்க்க முடியாத வேதனை என் இதயத்துல ஒரு முள் குத்தற மாதிரி இருக்கு. அது போதாதுன்னு நெஞ்சு வலி வேற. உனக்கு நான் செஞ்ச துரோகத்துக்குத் தினம் தினம் அணு அணுவா துடிச்சிக்கிட்டு இருக்கேன்மா.” பேசி முடித்த சிவலிங்கத்தின் கண்கள் அங்கு இருந்த கருகமணிகளைப் பார்த்து கண்ணீர் துளிகளை உதிர்த்தன.

மாத்திரை கரையக் கரைய நெஞ்சு வலி குறைந்ததும் மறுபடி படுக்கைக்குச் சென்று படுத்தவர் கண்ணயர்ந்தார்.

27

பாஸ்கரிடம் அலுவலக வேலைகளை ஒப்படைத்து விட்டு தியாகு வெளிநாட்டுக்குக் கிளம்பும் நாளும் வந்தது.

சிவலிங்கமும், சுசிலாவும் இரண்டு நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து விட்டனர். கண்ணனுக்கு தாத்தா, பாட்டியுடன் இருப்பதால் ஏகக் கொண்டாட்டம். தியாகுவிற்கு வேண்டிய துணிமணிகளை எடுத்து வைப்பதில் கவனமாக இருந்தாள் கல்யாணி. அனைவரும் சென்னைக்குச் சென்று அங்கிருந்து தியாகுவை வழி அனுப்புவதாக ஏற்பாடு. தியாகு கிளம்பும் முன்பே பாட்டி தன் காசி யாத்திரைத் திட்டத்தை கூறி இருந்தாள்.

“கடைசி காலத்துல எனக்கு இப்படி ஒரு ஆசை வந்துடுச்சுடா தியாகு. நீ வெளிநாட்டுக்குப் போறதுக்கு முன்னால என்னை ட்ரெயின் ஏத்தி விட்டுடுடா...”

“பாட்டி இதுவரைக்கும் நீங்க, உங்களுக்காக எதுவுமே கேட்டது இல்லை. முதல் தடவையா கேட்டிருக்கீங்க. எல்லா ஏற்பாடும் நான் பண்ணிடறேன் பாட்டி.” பாட்டி காசி யாத்திரை கிளம்புவதற்கு ஏற்பாடு செய்து. அவளை அனைவரும் ரயில் நிலையம் சென்று வழி அனுப்பி வைத்தனர். பாட்டி சந்தோஷமாகப் புறப்பட்டாள். ஆனால், போகும் பொழுது மாலுவை தனியாக அழைத்து, “நீ பாட்டுக்கு தியாகுவை அனுப்பறேன்னு கல்யாணி கூட ஒட்டிக்கிட்டு சென்னைக்குப் போய் விடாதே. உங்க அண்ணன் நல்லபடியா போய்ட்டுத் திரும்பணும். நீ ஏதாவது சாக்கு சொல்லி இங்கேயே இருந்துடு புரிஞ்சுதா?” பாட்டி மிரட்டினாள். தலையை மட்டும் ஆட்டி சம்மதித்தாள் மாலு. பாட்டி கிளம்பிப் போன நான்காவது நாள் தியாகு கிளம்பும் குறிப்பட்ட தேதியும் வந்துவிட்டது.

சென்னை விமான நிலையத்தில், அனைவரிடமும் விடை பெற்றான் தியாகு. சிவலிங்கத்தின் கால்களில் விழுந்து ஆசி பெற்றுக் கொண்ட பின், சுசிலாவை வணங்கினான். கண்ணனைத் தூக்கி முத்தமிட்டான். அறிவிப்பு கேட்டதும், தியாகு விமானம் நிற்கும் இடத்திற்குப் போனான். பின்னால் திரும்பிப் பார்த்து கையசைத்து விடை பெற்றான்.

28

‘இளைய நிலவே, இளைய நிலவே... இன்னும் என்ன மெளனமோ?’ இரவு நேரத்தில் மென்சோகமும், ஏக்கமும் கலந்த, இனிமையான பாடலைக் கேட்டபடியே படுத்திருந்தாள் மாலு. பாட்டி சொன்னபடி கல்யாணியை சமாளித்து சென்னைக்குப் போகாமலேயே இருந்துவிட்ட மாலு, ‘அண்ணன் இந்நேரம் கிளம்பி இருப்பாங்க. ஃப்ளைட் புறப்பட்டிருக்கும்’ என்று நினைத்தபடியே படுத்திருந்தாள்.

வழக்கமாய் எட்டு மணிக்கெல்லாம் சாப்பிட வரும் பாஸ்கர் அன்று பத்து மணி ஆகியும் வரவில்லை. மாலுவிற்குத் தூக்கம் கண்களைச் சுழற்றியது.

கல்யாணி சென்னைக்குப் போய் விட்டபடியால் பாஸ்கருக்கு உணவு எடுத்து வைப்பதற்காகக் காத்திருந்தாள். அழைப்பு மணி ஒலித்தது. எழுந்து சென்று கதவைத் திறந்தாள். பாஸ்கர் நின்றிருந்தான்.


“ஸாரி... ஆபீஸ்ல அக்கவுண்ட்ஸ் முடிக்கிற வேலை கொஞ்சம் லேட்டாயிடுச்சு. நீங்க வேணும்னா போய் தூங்குங்க. நானே எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்கறேன். வேலை மும்முரத்துல எனக்குக் கல்யாணி அக்கா ஊர்ல இல்லைங்கறதே மறந்துடுச்சு. ஞாபகம் இருந்திருந்தா ஹோட்டல்லயே சாப்பிட்டு வந்திருப்பேன்...”

“பரவாயில்லை. வாங்க நானே எடுத்து வைக்கிறேன்.”

சாதம், குழம்பு ஆகியவற்றை மைக்கேராவேவ் அவனில் சூடு செய்தாள். டைனிங் டேபிள் மீது எடுத்து வைத்தாள்.

தட்டில் சாதத்தை வைத்து குழம்பை ஊற்றினாள், பொரியல் எடுத்து வைத்து, அப்பளத்தை வைத்தாள்.

சாப்பிட ஆரம்பித்தான். தட்டில் சாதம் தீர்ந்ததும், மேலும் கொஞ்சம் சாதம் போட்டு ரசத்தை ஊற்றினாள். அது முடிந்ததும் மேலும் சிறிது சாதம் வைத்தாள்.

“போதும்... போதும்” என்றான் பாஸ்கர்.

“நல்ல பசியில இருக்கீங்க சாப்பிடுங்க” மேலும் சாதத்தை எடுத்துப் போட முயற்சித்தாள். அப்போது, பாஸ்கருக்கு அவனுடைய அம்மாவின் ஞாபகம் வந்தது. போதும் போதும்னு சொல்ல சொல்ல அள்ளி அள்ளிப் போடுவாள். அம்மாவின் நினைவில் லயித்தவன், மாலு மீண்டும் மீண்டும் சாதத்தை அள்ளி வைக்க முற்பட்டபோது அம்மாவின் கைகளைப் பிடித்துத் தடுப்பது போலவே மாலுவின் கைகளைப் பிடித்தபடி, “போதும்மா போதும்மா” என்றான். அவன் எண்ணம் முழுவதும் அவனது அம்மாவே நிறைந்திருந்தாள்.

திடீரென தன் கைகளை பாஸ்கர் பிடித்ததும் தன் நிலை மறந்தாள் மாலு. அந்த நிமிடம் வரை ஆணின் ஸ்பரிசத்தைப் பற்றி மனதால் கூட நினைத்துப் பார்க்காத மாலுவின் உள்ளே தூங்கிக் கிடந்த பெண்மை விழித்துக் கொண்டது. பாஸ்கரின் ஸ்பரிசம் தந்த சுகத்தில் கண்கள் மூடி அதை அனுமதித்தாள். அனுபவித்தாள். கரை கடந்த வெள்ளமாய் இருவருக்கும் உணர்வுகள் பொங்க, தங்களை மறந்தனர். தானாக அமைந்துவிட்ட சூழ்நிலை அதற்குத் துணை புரிந்தது. வானத்தில் இடி இடித்து, மின்னல் மின்னி, மழையும் கொட்ட ஆரம்பித்தது.

29

சென்னையில் தியாகுவை அனுப்பி வைத்த கல்யாணி, மறுநாள் காலை ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் சென்று மாலுவிற்காக க்ளிப்புகள், அவள் வழக்கமாய் வைக்கும் ஸ்டிக்கர் பொட்டுகள், சூடிதார்கள் என்று வாங்கிக் குவித்தாள். இரவில் தான் திருச்சிக்கு ட்ரெயின் என்பதால் கண்ணனையும் கடற்கரைக்கு அழைத்துச் சென்று அவனை மகிழ வைத்தாள். சிவலிங்கமும், சுசிலாவும் பேரன் விளையாடுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தனர். அதன் பின் ஹோட்டலில் இரவு உணவை முடித்து விட்டு ட்ரெயின் ஏறினார்கள்.

விடியற்காலையிலேயே திருச்சியை வந்தடைந்தனர். மாலு, டிரைவரை ஸ்டேஷனுக்கு அனுப்பி இருந்தாள். அனைவரும் வந்து இறங்கினர். கல்யாணியைப் பார்த்ததும் அவளைக் கட்டிப் பிடித்து கதறி அழுதாள் மாலு.

“ஏன் மாலு? என்ன ஆச்சு? ஏன் அழறே?” அதிர்ச்சியடைந்த குரலில் பதறியபடி கேட்டாள் கல்யாணி. சுசிலாவும், சிவலிங்கமும் கவலையுடன் குழப்பமும் அடைந்தனர்.

“சொல்லும்மா மாலு...”

“அண்ணி...” அழுகை மேலும் அதிகமாக, கல்யாணியின் காலில் விழுந்தாள் மாலு. அவளைத் தூக்கித் தன் தோளோடு அணைத்துக் கொண்டாள் கல்யாணி. தன்னை பாஸ்கரிடம் இழந்ததையும், அந்த சூழ்நிலையையும் அவளின் காதோடு சுருக்கமாய்ச் சொல்லி முடித்தாள். நெஞ்சில் எழுந்த பயமும், வேதனையும் உடல் முழுவதும் மின்சாரம் போலத் தாக்க லேசான மயக்க நிலைக்கு ஆளான மாலுவைத் தாங்கிப் பிடித்துக் கொண்ட கல்யாணியால் மாலு கூறிய அதிர்ச்சியான விஷயத்தைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை.

30

வீட்டில் இரண்டு நோயாளிகளைப் பார்க்க டாக்டர் வந்தார். அவர்களில் நெஞ்சு வலியால் அவதிப்பட்டவர் சிவலிங்கம். மனவலியால் அல்லல் பட்டவள் மாலு.

சிவலிங்கத்தின் நெஞ்சு வலி விஷயம் சுசிலாவுக்குத் தெரிய நேரிட, அவள் கவலை பன்மடங்காகப் பெருகியது.

கல்யாணியிடம் பாஸ்கரும் நிகழ்ந்ததைக் கூறி மன்னிப்பு கேட்டு மன்றாடினான்.

“மன்னிப்பு, அவள் இழந்ததை திரும்பக் குடுத்துடுமா பாஸ்கர்? உங்களை அவர் எத்தனை நம்பினார்? நம்பித்தானே குடும்பத்துல ஒருத்தனா நினைச்சு உங்களை எங்க வீட்டுக்குள் கூட்டிட்டு வந்தாரு?” கோபமாகப் பேசியறியாத கல்யாணி கத்தினாள். அவளது காலடியில் விழுந்தான் பாஸ்கர். “அக்கா மன்னிச்சுருங்க அக்கா, நம்பிக்கைத் துரோகின்னு மட்டும் என்னை நினைச்சுடாதீங்கக்கா. நானே மாலுவை கல்யாணம் பண்ணிக்கறேன்க்கா.”

இதைக் கேட்டுக் கொண்டிருந்த சுசிலா, கல்யாணியைத் தனியே அழைத்தாள்.

“கல்யாணி, பஞ்சும், நெருப்பும் பக்கத்துல இருந்து பத்திக்கிச்சு. இது பஞ்சோட குத்தமா, நெருப்போட குத்தமான்னு யோசிச்சா ரெண்டுலயும் தப்பு இருக்கு. சில நிமிடங்கள் தீப்பந்தமா எரிஞ்சு தன்னை இழந்துட்ட மாலுவை தீபமா ஆக்கணும். அதுதான் சரியான பதில். முடிஞ்சு போன விஷயத்துக்குத் தீர்வு அவன் சொல்ற மாதிரி முடிச்சுப் போடறது மட்டும்தான். நம்பளும் மாலுவுக்கு மறு கல்யாணம் பண்ணி வைக்கணும்னு முடிவு பண்ணி இருக்கோம்ல. அந்த முடிவோட ஆரம்பம் அபஸ்வரத்துல ஆரம்பிச்சாலும் அதை சுபஸ்வரமா ஆக்கறது அவங்களுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கறதுலதான் இருக்கு. ஏற்கெனவே பயந்த சுபாவம் உள்ளவன் அந்த பாஸ்கர். நீ கடுமையா திட்டினா அவன் பாட்டுக்குப் பயந்து போய் ஓடிடக் கூடாது. அப்படி அவன் போயிட்டான்னா? மாலு, இளம் விதவைங்கற அனுதாபமான பார்வைக்கு பதிலா, உடல் இச்சைக்கு ஆசைப்பட்டு கற்பழிஞ்சுப் போனவள்ங்கற அவலமான பார்வைக்கு ஆளாகிடுவா. அதனால அவனுக்கே மாலுவை கட்டி வச்சுடலாம். நல்ல பையன்தான். ஏழைங்கற குறை தவிர வேற எதுவும் இல்லை.”

“நீங்க சொல்றபடியே செய்யறதுதான்மா சரி. ஆனா, அவர் வெளிநாட்டுல இருக்கறப்ப நாம எப்படிம்மா முடிவு எடுக்க முடியும்? இப்பத்தான் போய் தன்னோட வேலைகளை உற்சாகமா ஆரம்பிச்சிருப்பார். போன்ல இந்த விஷயத்தைச் சொல்லி அவரைக் கஷ்டப்படுத்தணுமா? வேணாம்மா. நாம யாருமே பக்கத்துல இல்லாம அவரால இந்த அதிர்ச்சியைத் தாங்கிக்கவே முடியாது.”

“சரிம்மா. நீ முதல்ல மாலு கிட்ட பேசி அவளை சமாதானப்படுத்து, எதுவுமே சாப்பிடாம பட்டினி கிடந்து கண்ணீர் வடிச்சுக்கிட்டிருக்கா. அவளுக்கு ஏதாவது ஆயிடுச்சுன்னா அதை உன்னால தாங்க முடியுமா? மாப்பிள்ளைக்குத்தான் நாம பதில் சொல்ல முடியுமா? போம்மா, மாலுகிட்ட போய் பேசு.”

“சரிம்மா.”

தலை குனிந்து நின்றிருந்தான் பாஸ்கர். தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான்.

“அக்கா, நான் போய் அம்மாகிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு வந்துடறேன்க்கா. இப்ப போயிட்டு ராத்திரியே வந்துடுவேன்.”

“வரும்போது உங்க அம்மாவைக் கூட்டுட்டு வாங்க பாஸ்கர். நாங்களும் அவங்க கிட்ட பேசினப்புறம்தான் எங்களுக்கு நிம்மதியா இருக்கும்.” பாஸ்கரின் அம்மாவிடம் பேசிய பிறகு தன் நிம்மதி அனைத்தும் பறி போகப் போவதை அப்போது கல்யாணி அறியவில்லை.


31

மாலுவின் அறை. தலையணையைக் கண்ணீர் நனைக்க, வேதனை நெஞ்சை நிறைக்க கண் மூடிப்படுத்துக் கிடந்தாள் மாலு.

“வசந்தமே போனபின் பாடுமோ பூங்குயில்

வாழ்வெலாம் போன பின் ஆடுமோ பொன் மயில்?

இளைய நிலவே இளைய நிலவே

உனது திசை எங்கே??

புதிய திசையில் உதிக்க நினைத்தால்

எந்தன் மனம் தாங்குமோ...?”

இசையமைப்புக்காக ரசித்த பாடலின் வரிகள் இப்போது மாலுவின் உள்ளத்தைத் தொட்டது. அவளின் கன்னத்தின் மீது கல்யாணியின் கைகள் பட்டது. கண் திறந்து பார்த்த மாலு. “அண்ணி” அழைத்தபடி அவளுடைய மடியில் தலை வைத்துக் கொண்டாள்.

“மாலு, பாஸ்கர் உன்னைக் கல்யாணம் எண்ணிக்கறதா சொல்லி இருக்கார். நமக்குத் தெரிஞ்சவரைக்கும் நல்லவராத்தான் இருக்கார். நமக்குத் தெரியாத அளவுல அவர் எப்படிப்பட்டவரோ இருந்தாலும் நீ அவரைத்தான் கல்யாணம் பண்ணிக்கணும்ங்கற சூழ்நிலை உருவாயிடுச்சு. அந்த நிர்ப்பந்தத்துனால, இதுதான் உன் வாழ்க்கைன்னு நிர்ணயமாயிடுச்சு. கடந்து போய் கடல்ல கலந்த நதியை திரும்பக் கொண்டு வர முடியாது. விதைக்குள்ள இருந்து முளை விட்ட இலைகள் திரும்ப விதைக்குள்ள போக முடியாது. அது மாதிரி நீ நிலை தடுமாறிப் போனதை இனிமேல் மாற்ற முடியாது. எழுந்திரு. உனக்கு பாஸ்கரை கல்யாணம் பண்ணி வைக்கற பொறுப்பு என்னோடது. பாஸ்கரோட இணைஞ்ச உன்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கும்ங்கறது என்னோட நம்பிக்கை. இந்த நிமிஷத்துல இருந்து அழறதை நிறுத்து. உற்சாகமா இரு. பாஸ்கர், ஊருக்குப் போய் அவங்க அம்மாவை கூப்பிட்டுக்கிட்டு வரேன்னு சொல்லி கிளம்பி போயிருக்கார். எழுந்திரும்மா.”

கல்யாணியின் ஆறுதலான பேச்சில் உள்ளம் நெகிழ்ந்த மாலு, சற்று மனத்தெளிவு அடைந்தாள். எழுந்தாள். கல்யாணியின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டுக் குளியலறைக்குச் சென்றாள்.

32

“சிவலிங்கத்தைப் பார்ப்பதற்காக டாக்டர் வந்திருந்தார். சிவலிங்கத்தைப் பரிசோதித்தார். கலையுடன் நின்றிருந்த சுசிலாவைப் பார்த்தார்.”

“இப்படி ரெஸ்ட்டாவே இருந்தார்னா நல்லதும்மா. ஏற்கெனவே நெஞ்சு வலி வந்ததை உங்ககிட்ட சொல்லாம விட்டுட்டாரு. அதனால நீங்க ரொம்ப பயந்துட்டீங்க. மதுரையில உங்க ஃபேமிலி டாக்டர் கிட்ட நான் ஃபோன்ல பேசிட்டேன். அவரும் நல்ல ரெஸ்ட்தான் ரொம்ப முக்கியமானதுன்னு கண்டிப்பா சொல்லி இருக்கார். இன்னொரு முக்கியமான விஷயம். இவரோட மனசு அதிர்ந்து போகும்படியா எதையும் பேசாதீங்க.”

“சரி டாக்டர்” சுசிலாவின் வாய் டாக்டருக்கு பதில் சொன்னாலும், அவள் மனதிற்குள் வேறு எண்ணங்கள் தோன்றின. ‘இதுக்கு மேல இன்னும் என்ன இருக்கு அதிர்ச்சி அடையறதுக்கு?’ டாக்டர் கிளம்பிப் போனார். சிவலிங்கம் எழுந்திருக்க முயற்சி செய்தார்.

“பேசாம படுத்திருங்க. நேத்து முழுசும் தூக்கத்திற்கு மாத்திரை குடுத்ததுனால எழுந்திருச்சீங்கன்னா தலை சுத்தும்.” சுசிலா சொன்னதும் தலையணையைத் தோளுக்கு அணை கொடுத்து சாய்ந்து கொண்டார்.

“சுசிலா, மாலு எப்பிடிம்மா இருக்கா?”

“அவளோடப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைச்சிருக்கு. பாஸ்கர், மாலுவைக் கல்யாணம் பண்ணிக்கறதா சொல்லி இருக்கான். மாலுவோட இந்தப் பிரச்னைக்கு சரியான, நியாயமான தீர்வு அதுதான். அவங்க அம்மாவைக் கூட்டிட்டு வர்றதா சொல்லி ஊருக்குப் போயிருக்கான். அவங்க வந்ததுக்கப்புறம் பேசிட்டு அதுக்கப்புறம் மாப்பிள்ளைகிட்ட போன்ல பேசலாம். ஆனா கல்யாண விஷயத்தை மட்டும்தான் அவர்கிட்ட சொல்லணும். நீங்க எதையும் நினைச்சு குழம்பாதீங்க. கவலைப்படாதீங்க. மாலுவோட மறுமணம் நல்லபடியா நடக்கும். அவ வாழ்வும் மறுமலர்ச்சி அடையும்.”

“நீயும், கல்யாணியும் இவ்வளவு தூரம் பேசி, நடவடிக்கைகளும் எடுத்திருக்கீங்க. எதுவுமே தெரியாம நான் நேத்து முழுசும் தூங்கி இருக்கேனா...?!”

“ஆமா, உங்களைப் படுக்கையிலே ரெஸ்ட்டா இருக்கச் சொல்லி டாக்டர் கண்டிப்பா சொல்லியிருக்கார். இப்போதைக்கு மதுரைக்கும் போகக் கூடாதுன்னு சொல்லி இருக்கார். அது மட்டுமில்லை. மாலு பத்தின கவலையில இருக்கற கல்யாணியையும், மனசு நொந்து போயிருக்கற மாலுவையும் இப்பிடியே விட்டுட்டு போகத்தான் நமக்கு மனசு வருமா? பிரச்னைகளையெல்லாம் நல்லபடியா முடிச்சு வச்சுட்டு நிதானமா நாம கிளம்பலாம். பாஸ்கர் இன்னிக்கு ராத்திரியே அவங்க அம்மாவோட வந்துடுவான். நீங்க சாப்பிடுங்க. தைரியமா இருங்க.”

“சரிம்மா.” அயர்ச்சியில் மறுபடியும் படுக்கையில் படுத்துக் கொண்டார்.

33

“அக்கா, இவங்கதான் எங்க அம்மா.” அம்மாவை, கல்யாணிக்கு அறிமுகம் செய்து வைத்தான்.

பாஸ்கரின் அம்மா! தெய்வீகமான முகத்துடன் காணப்பட்ட அந்தப் பெண்மணியைப் பார்த்ததும் மனதிற்குள் ஒரு மரியாதை தோன்றியது. முகத்தில் சாந்தம் குடி கொண்டிருந்தது.

“வாங்கம்மா. வணக்கம். உள்ளே வாங்க.” பாஸ்கரும், அவனது அம்மாவும் உள்ளே வந்தனர். சுசிலாவும் வந்து சேர்ந்து கொள்ள, அவளுக்கும் அறிமுகம் செய்து வைத்தான்.

அனைவரும் சிவலிங்கம் படுத்திருக்கும் அறைக்குச் சென்றனர்.

“அம்மா, இந்த ஐயாதான்மா கல்யாணி அக்காவோட அப்பா. மாலுவுக்கு மாமா.” பாஸ்கரின் அம்மா சிவலிங்கத்தைப் பார்ப்பதற்காக நிமிர்ந்து பார்த்தாள். பார்த்தவள் திடுக்கிட்டாள். “நீங்களா?” கத்தினாள். இதுவரை சாந்தமாக இருந்த அந்த முகத்தில் அப்படி ஒரு கோப உணர்வு எப்படி வந்ததென்பதே புரியவில்லை.

“புஷ்பா, நீயா?” எழுந்து நின்றார் சிவலிங்கம்.

“என் பெயரை சொல்லக் கூட உங்களுக்கு அருகதை கிடையாது. ஆசை வார்த்தை செல்லி மோசம் பண்ணின நயவஞ்சகர் நீங்க. பணக்காரர்ங்கற நிஜ முகத்தை மறைச்சுட்டு ஏழைங்கற முகமூடியை மாட்டிக்கிட்டு என்னை ஏமாத்தின பாவி. அப்பாகிட்ட போய் நம்ப கல்யாணத்துக்கு சம்மதம் வாங்கிட்டு வரேன்னு சத்தியம் பண்ணிட்டுப் போய், அப்பா பேச்சைக் கேட்டு பணக்கார வீட்டுப் பொண்ணைக் கல்யாணம் பண்ணிக்கிட்ட துரோகி. காதல் வலை வீசிப் பெண்களைத் தன் வசப்படுத்தி, தங்கள் ஆசை தணிஞ்சப்புறம். தவிக்க விடத் தயங்கா கயவர்கள் கூட்டத்தைச் சேர்ந்தவர் இந்தப் பெரிய மனுஷன். பாஸ்கர், இந்தக் கல்யாணம் நடக்காது. நடக்கக் கூடாது நடக்க விட மாட்டேன். இந்த வீட்டுல சம்பந்தம் உள்ள மனுஷங்களோட மூச்சுக் காத்து கூட நம்ப மேல படக் கூடாது. வா. இப்பவே இந்த இடத்தை விட்டு நாம போயாகணும்...” அனல் தெறிக்கும் வார்த்தைகளால் தன் கோபக் கனலை வெளியிட்டாள் புஷ்பா.

“அம்மா... இவங்க எல்லாரும் ரொம்ப நல்லவங்கம்மா. நீங்க ஏன் இப்படிச் சொல்றீங்கன்னு காரணம் சொல்லுங்கம்மா...”

“காரணமா கேக்கறே? நீ வாய் திறந்து பேச ஆரம்பிச்ச நாள்ல இருந்து அப்பா யாரு? அப்பா எங்கேன்னு கேட்டியே, என் வாயைத் திறந்து அதை சொல்ல முடியாம தவிச்ச நான், அப்பா இல்லை, அப்பா இல்லைன்னு மட்டுமே சொல்லி சமாளிச்சேனே? இப்ப சொல்றேன்.


இதோ இருக்காரே இவர்தான் உன்னோட அப்பா. சரியான சந்தர்ப்பம் வர்றப்ப சொல்றேன்னு சொன்னேன். அந்த சந்தர்ப்பத்தை இப்ப நீயே உருவாக்கிட்டே. கோயம்புத்தூர் கல்லூரியில படிக்க வந்த இவர், எனக்குக் காதல் பாடம் எடுத்தார். அதுக்கப்புறம் என்னைக் கைவிட்டு, வாழ்க்கைப் பாடமும் கத்துக் குடுத்துட்டார். வாடா, போகலாம்...”

“புஷ்பா... புஷ்பா... நான் பணக்காரக் குடும்பத்தைச் சேர்ந்தவன்ங்கற உண்மையை மறைச்சேனே தவிர, நான் ஏழைன்னு உன்கிட்ட பொய் வேஷம் போடலியே? நான் மறைச்சதுக்குக் காரணம் உன் மேல நான் கொண்ட காதல். பணக்காரன்னு தெரிஞ்சா ஆரம்பத்துலயே என்னை ஒதுக்கிடுவியோங்கற பயத்துலதான் நான் அப்படிச் செஞ்சேன். உன்னை நான் ஏமாத்தணும்னு சத்தியமா நினைக்கலை. நான் அப்பாவை சந்திக்கும்போது அவர் சுசிலாவைப் பொண்ணு பார்த்து பேச்சு வார்த்தையும் முடிச்சு வச்சிருந்தார். எ... எ... என்னால அதை மீறி எதுவும் பேச முடியலை புஷ்பா. உன்னைப் பார்க்கறதுக்காக நான் சிங்கநல்லூருக்கு உன் வீடு தேடி வந்தேன். நீ அங்கே இல்லை. உங்க வீடும் பூட்டிக்கிடந்துச்சு. அங்கே பக்கத்துல இருந்த யாருக்கும் உன்னைப் பத்தின தகவல் தெரியலை. உன்னைத் தேடித் தேடி தவிச்சேன் புஷ்பா...”

“கல்யாணத்துக்கு மட்டும் அப்பா பேச்சை கேப்பீங்க... காதலிக்கறதுக்கு? யாருடைய அனுமதியும் தேவையில்லை. நீங்க என்னை விட்டுட்டுப் போனப்புறம்தான் தெரிஞ்சது உங்க ஆசை விதை என் வயித்துல முளை விட்டிருக்குன்னு. கழுத்துல தாலியை சுமக்காம வயித்துல குழந்தையை சுமக்கற அவமானம் தாங்காமத்தான் அந்த ஊரை விட்டுத் தெரிஞ்சவங்க யாருமே இல்லாத திண்டுக்கல்லுக்குப் போனேன். இன்னொரு உயிரை சுமந்ததுனாலதான் என் உயிரை இந்த உடம்புல சுமந்துகிட்டு வாழ்ந்தேன். இப்பவும் அவனுக்காகத் தான் உயிர் வாழறேன். ஆனா உங்க நிழல் கூட எங்க மேல படக்கூடாது. பாஸ்கர்... இதுவரைக்கும் உன்னை ஒரு வார்த்தைகூட அதட்டிப் பேசினதில்லை. இப்ப பேசறேன். இப்பவே இந்த இடத்தை விட்டுக் கிளம்பு. வாடா...” கோபம் சிறிதும் மாறாத குரலில் புஷ்பா கத்திவிட்டு வெளியே நடந்தாள். அவள் பின்னாடியே பாஸ்கரும் போனான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த சுசிலாவிற்கு சிவலிங்கம் அவ்வப்போது யோசனைக்குள் மூழ்கித் தவிப்பதற்கும், சிவலிங்கத்தின் கண்களில் உள்ள மாறாத சோகத்திற்கும், அவர் அடிக்கடி யோசனையில் மூழ்கி, மனதிற்குள்ளே ஒரு மெளன வேள்வி நடத்தி, தன்னை வருத்திக் கொள்வதற்கும் காரணம் இந்த புஷ்பாவும், அவள் மீது கொண்ட காதலும் தான் என்பது புரிந்தது.

‘என் அன்புக் கணவரின் வாழ்க்கையிலும், மனதிலும் இன்னொரு பெண் இடம் பெற்றிருக்கிறாள். இதை அவர் என்னிடம் இத்தனை வருட காலமாக மறைத்து விட்டிருக்கிறார். வெளிப்பட்டுவிட்ட உண்மை, அவள் மனதை வலிக்கச் செய்தது என்றாலும் பக்குவப்பட்டுவிட்ட மனதால் அதைத் தாங்கிக் கொண்டாள்.

‘அப்பாவின் சொல்லைத் தட்ட முடியாமல் தன்னைத் திருமணம் செய்து கொண்டார். என் மீது அன்பாகத்தான் இருந்தார், இருக்கிறார். இந்த புஷ்பாவை விட்டு விட்டோமே என்று எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்! இப்போது அவள் வீசி விட்டுப் போன அக்கினி அடங்கிய சொற்களால் துடித்துவிட்டாரே...’ பண்பட்ட உள்ளம் கொண்ட சுசிலாவின் மனம் புண்பட்டது. அவளை அறியாமல் பெருகிய கண்ணீரைத் துடைத்தாள்.

‘பிரச்னைகள் விஸ்வரூபமாகிக் கொண்டே போகிறது. முள்மேல் விழுந்த துணியை எடுப்பது போல் மிக கவனமாகச் செயல்பட வேண்டும்.’ முடிவு செய்தாள்.

அவளைச் சமாதானப்படுத்துவதற்காகப் பேச ஆரம்பித்த சிவலிங்கத்தைத் தடுத்தாள்.

“எனக்கு எந்த வருத்தமும் இல்லைங்க. நீங்கதான் உண்மைகளை உங்க நெஞ்சுக்குள்ளேயே புதைச்சு இத்தனை வருஷ காலத்தையும் சோகத்திலேயே கடத்திட்டீங்க. புதைஞ்சுக்கிடந்த உண்மைகள் தானே வெளியே வந்தாச்சு. எனக்கும் எல்லா உண்மைகளையும் புரிய வச்சுடுச்சு. ஒரு பெண் கிட்ட காதல் நாடகம் நடத்தி பொய்யான வசனங்கள் பேசி, நாடகம் முடிஞ்சதும் திரை போட்டு மறைக்கற கயவர் இல்லை என் கணவர்ங்கற உண்மை புரியலைன்னா இத்தனை வருஷக் காலம் உங்களோட நான் குடும்பம் நடத்தினதுக்கு அர்த்தமே இல்லைன்னு ஆயிடும். உங்களுக்கு எந்த அதிர்ச்சியும் தரக்கூடாதுன்னு டாக்டர் சொல்லி இருக்கார். புஷ்பா உங்களைப் பழி சுமத்தி பேசிட்டு உங்களை உதாசீனப்படுத்திட்டுப் போனது பெரிய அதிர்ச்சி. இதை நீங்க தாங்கிக்கிட்டதே அந்த கடவுள் அருளாலதான். அதனால அமைதியா இருங்க.”

“மாலு... அவளோட...”

“எல்லாத்தையும் நான் பார்த்துக்கறேன். நீங்க நல்லா இருந்தாத்தான் என்னால நிம்மதியா செயல்பட முடியும். இதுக்காக நீங்க செய்யற உதவி, எதுவும் பேசாம, எதைப் பத்தியும் கவலைப்படாம ரெஸ்ட் எடுக்கறது மட்டும்தான்.”

“சரி சுசிலா. நீ சொல்றதை நான் கேக்கறேன். ஆனா இப்ப ஒண்ணே ஒண்ணு மட்டும் சொல்றேன். நீ... நீ... என்னை மன்னிச்சுடு....”

“மன்னிச்சாச்சு. மறந்தாச்சு. போதுமா?”

சுசிலாவின் கைகளை அன்புடன் பிடித்துக் கொண்டார் சிவலிங்கம்.

34

நாட்கள் நகர்ந்தன. ஆனால் யுகங்கள் கழிந்தது போல இருந்தது அனைவருக்கும்.

“ராசி இல்லாதவள், பிறந்த நேரம் சரி இல்லைன்னு பாட்டி சொன்னதை நானும் நிரூபிச்சுக்கிட்டே இருக்கேன் அண்ணி. என்னால எல்லாருக்கும் கஷ்டம்” என்று புலம்பிய மாலுவுக்குப் பதில் சொல்ல முடியாமல் திகைத்துப் போய் இருந்த கல்யாணியையும், மாலுவையும் தன் பரிவான ஆறுதல் வார்த்தைகளால் சமாதானம் கூறினாள் சுசிலா. மற்றவர்களுக்கு ஆறுதல் சொன்ன சுசிலாவிற்கு இந்தப் பிரச்னைக்கு என்ன வழி? என்று எழுந்த கேள்விக்குப் பதில் கிடைக்கவில்லை. தெய்வங்களை வேண்டினாள். பிரார்த்தனை செய்தாள். ஸ்லோகங்களைப் படித்தாள். பூஜா பலனுக்காகக் காத்திருந்தாள். ஆனால் விதி யாருக்காகவும் காத்திருக்கவில்லை. அது தன் சதியைத் தொடர்ந்து செயல் புரிந்து கொண்டே இருந்தது.

35

வெடிகுண்டைத் தூக்கிப் போட்டது போல மாலு, கல்யாணிக்கு ஒரு பயங்கரமான விஷயத்தைக் கூறினாள். கல்யாணியின் இதயத்தில் இடி இறங்கியது போலிருந்தது. அடி மேல் அடி. அடுக்கடுக்கான துன்பங்கள். கடவுளே! செய்வதறியாது தரையில் சரிந்து உட்கார்ந்தவள் ஒரு மணி நேரம் வரை அப்படியே சோகச் சிலையாக உட்கார்ந்தபடி இருந்தாள்.

துவண்டு போன கொடியாய், வாடிய மலராய், சிலை போல அமர்ந்திருந்த கல்யாணியைப் பார்த்தாள் சுசிலா.

“என்னம்மா கல்யாணி, ஏன் இப்படி உட்கார்ந்திருக்க? என்ன ஆச்சு?” பதறியபடி கேட்டாள்.

சுசிலா கேட்ட மறுவிநாடி, சுசிலாவின் தோளில் முகம் புதைத்து குலுங்கிக் குலுங்கி அழ ஆரம்பித்தாள்.


“என்னால முடியலம்மா. முடியலை. அடுக்கடுக்கா வர்ற சோதனைகளை என்னால தாங்க முடியலைம்மா. இப்ப... இப்ப.... மாலு....”

“மாலு, ஐயோ மாலுவுக்கு என்னம்மா ஆச்சு?”

“அவ... அவளுக்கு அன்னிக்கு இருட்டில நடந்தது வெளிச்சத்துக்கு வரப் போகுதும்மா... மாலு கர்ப்பமா இருக்காம்மா...”

“என்னது?!... மாலு கர்ப்பமா?”

“ஆமாம்மா. ஏம்மா கடவுள் நம்மளை இப்படி சோதிக்கறார்?”

“சோதிக்கற கடவுள்தான்மா சுகத்தையும் குடுப்பார்” நம்பிக்கையுடன் பேசிய சுசிலா ஒரு முடிவுக்கு வந்தாள்.

36

ன் முன்னால் திடீரென வந்து நின்ற சுசிலாவை சட்டென்று அடையாளம் புரியாமல் குழம்பினாள் புஷ்பா.

வாங்கம்மா. மென்மையான குரலில் பாஸ்கர் வரவேற்றான்.

“நீ... நீங்க...”

“உங்க கணவர் சிவலிங்கத்தின் இரண்டாவது மனைவி சுசிலா...”

“என்ன? இரண்டாவது மனைவியா?”

“ஆமாங்க. நீங்கதான் அவரோட முதல் மனைவி. இதோ உங்க ரெண்டு பேரோட அன்பின் அடையாளமா பாஸ்கர் இருக்கானே?”

“ஆனா அவரோட மனைவியா எனக்கு அந்த அடையாளமும் இல்லையே?...”

“அது விதியின் கொடுமை...”

“இல்லை. அது பணத்தின் வலிமை.”

“நீங்க அவரைத் தப்பா புரிஞ்சுக்கிட்டீங்க.”

“அவர் என்னை சரியாப் புரிஞ்சுக்கலை.”

“அவர் உங்க மேல தன் உயிரையே வச்சிருக்கார்.”

“என் உயிரை வச்சிருக்கவே எனக்குப் பிடிக்கலை.”

“உங்களைப் பார்க்கணும்னு அவர் துடிச்ச துடிப்பு எனக்கு மட்டும்தான் தெரியும்...”

“எல்லாம் நடிப்புன்னு எனக்கும் தெரியும்.”

“அவர் அவங்க அப்பாக்கிட்ட உங்க காதலைப் பற்றி எடுத்துச் சொல்லாதது தப்புதான். அந்த தப்புக்காக அவர் பல தண்டனைகளை அனுபவிச்சுட்டார்.”

“நான் எந்தத் தப்பும் செய்யாமலே ஆயுள் தண்டனை அனுபவிச்சிக்கிட்டிருக்கேனே...”

“உங்களைத் துன்பங்கள்ல இருந்து விடுதலை செய்யறதுக்குத்தான் நான் வந்திருக்கேன்.”

“என் துன்பங்கள் யாராலயும் தீராது.”

“நான் தீர்த்து வைப்பேன். ஒரு பத்து நிமிஷம், நான் சொல்ல வர்றதை காது குடுத்துக் கேட்டீங்கன்னா புண்ணியமா இருக்கும். அவர் உங்களை மறக்க முடியாம தவியா தவிச்சார். மனசில நினைச்சதை வாய்விட்டுச் சொல்ல முடியாத ஊமை போல வேதனைப் பட்டார். உங்களைப் பத்தின நினைவு வந்ததும் ஏறக்குறைய மெளன சாமியாராகவே ஆகிடுவாரு.”

“தண்ணிக்குள் மீன் அழுதா யாருக்குத் தெரியும்? அவர் எதனால, அந்த மாதிரி ஒரு மெளன நிலைக்குப் போறார்னு எனக்குத் தெரியாது. ஆனா, கல்யாணம் ஆன நாளிலிருந்து அவர் அப்படித்தான் இருந்தாரு. என் கூட இயல்பான வாழ்க்கையே அவர் வாழலை. ஒரு இயந்திரமாத்தான் வாழ்ந்தார். சின்ன வயசுலயே அம்மாவை இழந்த அவர், எங்க கல்யாணத்துக்கப்புறம் அப்பாவை இழந்தார்... கொஞ்ச நாள்ல அவங்க அண்ணன், அண்ணியை இழந்தார். அந்த சோகத்துலதான் அவர் அடிக்கடி மூழ்கி மெளனமாகிவிடுறார்னு நான் நினைச்சேன். ஆனா அவரோட மெளன நிலையில் ஒரு மோனலிஸாவா நீங்கதான் இருந்திருக்கீங்க.

உண்மையானவரா என்கூட அவரால வாழ முடியலை. அதுக்குக் காரணம் அவர் உங்க மேல வச்சிருந்த மாறாத அன்பும் காதலும். உங்க ரெண்டு பேரோட காதலுக்கு அடையாளமா உங்களுக்கு ஒரு தங்க மகன்! எங்க ரெண்டு பேரோடு கல்யாணத்துக்கு அடையாளமா ஒரு ஜீவன் கூட உருவாகலை. உங்களோடத் தாய்மை நிலை அவருக்கே நீங்க சொல்லித்தானே தெரியும்? தன்னோட வாரிசா இப்படி ஒரு மகன் இருக்கான்னு தெரியாமலே தனக்குப் பிள்ளை இல்லாதக் கொடுமையை அவர் அனுபவிச்சிருக்கார்.”

“கல்யாணியை வளர்த்து, அவளுக்காகவே எங்க வாழ்க்கையை அர்ப்பணிக்கறதுலதான் என் வாழ்க்கையில ஒரு அர்த்தம் இருக்கறதா உணர்ந்தோமே தவிர, ஒரு குதூகலமான ஜோடியா, சந்தோஷமா தம்பதிகளா நாங்க குடும்பம் நடத்தவே இல்லை. அவர் என்னை  வெறுக்கவும் இல்லை. என் அன்பை மறுக்கவும் இல்லை. அவர் ஜென்டில்மேன். சூழ்நிலை காரணமா ஒரு பெண்ணைத் தவிக்க விட்டுட்டு இன்னொரு பெண்ணான என் கூடப் பொய்யான வாழ்க்கை வாழறோம்ங்கற குற்ற உணர்வுல அவர் தாள முடியாத வேதனைப் பட்டிருக்கார்ங்கறதை தெரிஞ்சுகிட்டேன்.”

“உங்க அன்புங்கற கைவிலங்குதான் அவருக்குத் தண்டனையா இருந்திருக்கு. இப்பவும் அதே அன்பு விலங்குதான் அவரோடத் துன்பச் சிறையில இருந்து அவருக்கு விடுதலையைக் குடுக்கணும். உங்க மன்னிப்புதான், கோர்ட்ல நீதிபதி வாசிக்கற தீர்ப்பா இருக்கணும். இருபத்தஞ்சு வருஷ காலம் உங்க நினைப்பினால அவர்பட்ட கஷ்டம் போதும்...”

“இருபத்தஞ்சு வருஷ காலம் என்னோட நினைப்பினால அவர் பட்ட கஷ்டத்தை நீ சொல்லிட்ட. இருபத்தஞ்சு வருஷம் அவரோட பிரிவினால நான் பட்ட கஷ்டம் உனக்குத் தெரியாது. நான் வாழ்ந்த ஊர் எனக்கு வேசிப் பட்டம் குடுத்துச்சு. நான் வாழ வந்த இந்த ஊர்லயும் கணவன் இல்லாமல் கையில் குழந்தைங்கற கேள்விக் குறியோட மறைமுகமா பலரும் என்னை ஏசிக்கிட்டுதான் இருக்காங்க. நான் பட்ட அவமானம், ஒரு பொண்ண, ஊரறிய தாலி கட்டிக்காம, ஊர் உறங்கற பொழுதுல தன்னை ஒருவனுக்கு விட்டுக் கொடுத்த பலவீனத்தினால என்னென்ன துன்பம் அனுபவிக்கணுமோ அத்தனையும் அனுபவிச்சாச்சு. இனிமேல் நொந்து போறதுக்கு என்கிட்ட எதுவுமே இல்லைங்கற நிலைமையில, எல்லாமே முடிஞ்சுப் போச்சுங்கற நிலைமையில, அவரை நான் மன்னிச்சா என்ன? மன்னிக்காட்டா என்ன?...”

“முடிஞ்சு போனதுன்னு நீங்க முடிவு பண்ணினாலும் உங்க உறவு தொடர்ந்துக்கிட்டே இருக்கணும்னு இறைவன் முடிவு பண்ணி இருக்கான். இப்ப உங்க மகனோட உயிர், அதாவது அவனோட குழந்தைங்கற உறவு எங்க மாலு வயித்துல உருவாகி இருக்கு...”

“என்ன? மாலு கர்ப்பமா இருக்காளா? நான் ஆண் துணை இல்லாம கையில குழந்தையோட அவதிப்பட்டு அவமானப்பட்ட மாதிரி எந்தப் பொண்ணும் கஷ்டப்படக் கூடாது. அப்படி ஒரு நிலைமை ஒரு பெண்ணுக்குத் தர்ற வேதனைகளும், சோதனைகளும் அதை அனுபவிக்கறவங்களுக்கு மட்டும்தான் தெரியும். பாஸ்கர், கிளம்புப்பா, உனக்கும் மாலுவுக்கும் அடுத்த முகூர்த்தத்துலயே கல்யாணம் பண்ணி வைக்கணும்....”

“அம்மா...” சந்தோஷத்தில் திக்கு முக்காடிப் போனான் பாஸ்கர்.

“நீங்க அவரை மன்னிச்சுட்டீங்களா? அவருக்கு உடம்பு சரி இல்லை. நீங்க அவரை மன்னிச்சுட்டீங்கன்னு தெரிஞ்சா அவர் உடம்புக்கு எந்தப் பிரச்னையும் இல்லாம எழுந்திருச்சுருவாரு....”

“நீ தான் சொல்லிட்டியே. மன்னிப்புதான் நான் வழங்கற தீர்ப்பா இருக்கணும்னு. அது மட்டுமில்ல சுசிலா, பெண்கள் எத்தனை வயசானாலும் தன் கணவரைப் பங்கு போட்டுக்க இன்னொருத்தி வந்தா அவளை எதிரியாத்தான் நினைப்பாங்க. ஆனா நீ என்னை சகோதரியா நினைச்சு வந்திருக்க. இதுக்கு எவ்வளவு பெரிய மனசு வேணும் தெரியுமா? உன்னையும் புரிஞ்சுக்கிட்டேன், அவர் மேல எந்தத் தப்பும் இல்லைங்கறதையும் நீ சொல்லி புரிஞ்சுக்கிட்டேன், உன்னோட மனசு அன்பானது, அழகானது...”


“நம்ப சொந்தம் எப்பவும் தொடர்கதையா இருக்கணும்ன்னுதான் இப்ப மாலுவையும், பாஸ்கரையும் ஆண்டவன் சேர்த்து வச்சிருக்கார். நீங்க அவரை மன்னிச்சதையும், மாலுவை உங்க மருமகளா ஏத்துக்கிட்டதையும் கேட்டார்னா அவர் ரொம்ப சந்தோஷப்படுவார். நான் உங்ககிட்ட வந்து விளக்கம் சொன்னதை என்னோட பெருந்தன்மைன்னு நீங்க சொன்னீங்க. அதுல என்னோட சுயநலமும் அடங்கியிருக்கு. அவரோடக் கண்கள்ல இருக்கற சோகத்தை மாத்தி முழுமையான சந்தோஷம் உள்ளவரா பார்க்கணும்னு ஆசைப்பட்டேன். என்னோட அந்த ஆசை நிறைவேறப் போகுதே... அவர் எப்படி உங்க மேல தன் உயிரையே வச்சிருக்காரோ அதே மாதிரி நான் அவர் மேல என் உயிரை வச்சிருக்கேன்.”

“எனக்காக அவரை நிச்சயம் பண்ணின நாள்ல்ல இருந்து அவரை என் உயிருக்குயிரா நேசிக்க ஆரம்பிச்சேன். அவர் நல்லவர். யாருக்கும் எந்தத் தீங்கும் மனசால கூட நினைக்காதவர். தான தருமங்கள் செய்யறதுக்கு கொஞ்சம் கூடத் தயங்காதவர். யார் மனசையும் நோக வைக்கவே அவருக்குத் தெரியாது. அதனாலதான் உங்களைப் பிரிஞ்ச அவரால என் கூட சந்தோஷமா வாழ முடியலை. என்னை மட்டுமே நேசிக்கற நல்ல கணவரா நடந்துக்க முடியாத அவர், நல்ல மனிதர். உங்களை நினைச்சுக்கிட்டு, என்னைப் புறக்கணிக்கலை. குடும்ப நேயமும், மனித நேயமும் நிறைஞ்ச மகத்தான மனுஷன் அவர்.

“அவர் இதயத்துல எனக்கு இடம் தரலைன்னாலும், அவரோட மனைவிங்கற அந்தஸ்தையும், மரியாதையையும் குடுத்தார். அதனாலதான் எல்லாருக்கும் நல்லதே நடக்கணும்னு நினைச்சு வாழற அவருக்கு ஒரு நல்லது நடக்கணும்னு நான் உங்ககிட்ட பேச வந்தேன். ஒரு உத்தம புருஷனுக்கு உன்னதமான உதவியை நான் செய்யணும்ன்னா அது உங்களை அவரோட சேர்த்து வைக்கறதாத்தான் இருக்கும்.”

“அவருக்காக இல்லாட்டாலும் உனக்காக, உன்னோட அன்பான மனசுக்காக இனி நான் எதையும் செய்வேன் சுசிலா.”

சுசிலா, புஷ்பாவின் கரங்களோடு தன் கரங்களை இணைத்தபடி தன் மகிழ்ச்சியையும் நன்றியையும் வெளியிட்டாள்.

37

பாஸ்கருடனும், புஷ்பாவுடனும் வந்த சுசிலாவைப் பார்த்து ஆனந்த அதிர்ச்சி அடைந்தாள் கல்யாணி. அவர்களை வரவேற்பதற்குக் கூட வாய் எழவில்லை அவளுக்கு.

“என்னம்மா கல்யாணி, திகைச்சுப் போய் நின்னுட்ட? சந்தோஷமான சமாச்சாரத்தோடதான்மா வந்திருக்கேன்” பேசிய சுசிலா, புஷ்பாவின் கண்கள் அங்கும் இங்குமாக அலைவதைக் கவனித்தாள்.

“புரியுது. யாரைத் தேடறீங்கன்னு?....” சுசீலா கேலியாகச் சொன்னதும் புஷ்பா வெட்கப்பட்டாள். இதற்குள் அங்கே வந்த சிவலிங்கம். புஷ்பாவைப் பார்த்ததும் பலவித உணர்வுக் கலவைகளால் தடுமாறினார். அதைப் புரிந்து கொண்ட புஷ்பா அவரிடம் பாஸ்கரை கூட்டிச் சென்று “இதோ உங்க மகன்” என்று அவரது கைகளில் ஒப்படைத்தாள்.

பாஸ்கரைக் கட்டி அணைத்துக் கொண்ட சிவலிங்கம், புஷ்பாவைப் பார்த்தார். “என்னை மன்னிச்சுடு புஷ்பா...”

“நானும் உங்களைத் தப்பா புரிஞ்சுக்கிட்டேன். நடந்ததெல்லாம் போகட்டும். இனிமேல் நடக்கப் போறதைப் பார்ப்போம். உங்க மேல இப்ப எனக்கு எந்தக் கோபமும் இல்லை.”

சிவலிங்கம் மகிழ்வுடன் வாய்விட்டுச் சிரித்தார்.

“இந்த மாதிரி முழுமையான மகிழ்ச்சி நிரம்பிய உங்க முகத்தைப் பார்க்கணும்னு நான் எவ்வளவு ஆசைப்பட்டேன்?! என்னோட ஆசை நிறைவேறிடுச்சு.”

“நீ ஆசை மட்டும் படலை சுசிலா ஒரு தவமே பண்ணி இருக்க...” புஷ்பா கூறினாள்.

“தவப்பலனை நீங்கதானே குடுத்தீங்க? வாங்க, மாலுவைப் போய் பார்க்கலாம்.” மாலுவின் அறைக்கு புஷ்பாவை அழைத்துச் சென்றாள். கல்யாணியும் உடன் சென்றாள். வெறித்த பார்வையுடன், சோகம் கப்பிய முகத்துடன் கன்னத்தில் கை வைத்தபடி உட்கார்ந்திருந்தாள் மாலு.

“மாலு. நீதான் என் மருமகள்” என்று மாலுவையும், “நீதான் என் மகள்” என்று கல்யாணியையும் கட்டிப் பிடித்துக் கொண்டாள் புஷ்பா.

மாலுவைப் பார்க்கும் ஆவலில் அங்கே வந்த பாஸ்கரைச் செல்லமாக விரட்டினாள் புஷ்பா. “பாஸ்கர், மாலுவோட கழுத்துல நீ தாலி கட்டறவரைக்கும் அவளைப் பார்க்கவும் கூடாது. பேசவும் கூடாது. கல்யாணத்துக்கப்புறம்தான் எல்லாம். இங்கிருந்து போ முதல்லே.”

“சரிம்மா...” என்றபடியே போன பாஸ்கர் போகிற போக்கில் மாலுவிடம் கண்களாலேயே பேசி விடை பெற்றான். இருவரது கண்களும் கலந்த அந்தக் கணங்கள் அவர்களால் மறக்க முடியாத இனிய கணங்களாக இருக்கும்.

38

சிவலிங்கம் நன்றாக உடல்நலம் தேறி விட்டார். சுசிலாவையும், சிவலிங்கத்தையும் அம்மா, அப்பா என்று அழைத்து மணிக்கணக்கில் பேசிக் கொண்டிருந்தான் பாஸ்கர்.

“இப்ப இவ்வளவு வாய் பேசறியே, அன்னிக்கு உங்கம்மா ‘வாடா இங்கிருந்து’ன்னு கூப்பிட்டதும், பின்னாடியே ஓடின. நான் உங்க வீட்டுக்கு வந்து பேசினப்புறம் ‘இங்கே வா’ன்னு உங்கம்மா கூப்பிட்டப்ப, அவங்க பின்னாடியே இங்கே வந்துட்ட... சரியான அம்மா கோண்டுவா இருக்கியே...”

“ஆமா. சுசிலாம்மா. எங்கம்மா என்ன சொன்னாலும் கேட்பேன். எங்க அப்பா இல்லாம அவங்க என்னை வளர்த்து ஆளாக்க எவ்வளவு கஷ்டப்பட்டாங்க?! அதனாலதான்.”

“அதுக்காக? ஒரு பொண்ணுக்குச் சரியான நியாயம் கிடைக்க வழி சொல்லாம இப்படியா ஓடறது?” வேண்டுமென்றே தமாஷாக அவனைச் சீன்டினாள் சுசிலா.

“அதுதான் பிரச்னையை தீர்த்து வைக்க நீங்க வந்துட்டீங்களேம்மா...” வெகுளியாகப் பேசிய பாஸ்கர் மீது அளவற்ற பாசம் கொண்டாள் சுசிலா.

“எப்படிம்மா எங்க ஊரையும், வீட்டையும் தேடி வந்தீங்க?”

“இதென்ன பெரிய விஷயமா? மாப்பிள்ளையோட ஆபீஸ் போய் கம்ப்யூட்டர்ல உன் அட்ரஸ் பார்த்தேன். எழுதிகிட்டேன். வீட்டுக்கு வந்து கல்யாணியிடமும், உங்க அப்பாகிட்டயும் நான் எங்கே போறேன், எதுக்காகப் போறேன்னு கேக்கக் கூடாதுன்னுதான் கண்டிஷன் போட்டேன். கிளம்பி உங்க ஊருக்கு வந்து, உங்கம்மாவைப் பார்த்துப் பேசினேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. எல்லாம் உங்க அம்மாவோட நல்ல குணத்துனாலதான்.”

“என்னோட ரெண்டு அம்மாவும் சேர்ந்து என் மாலுவை என்கிட்ட சேர்த்துட்டாங்க. இல்லப்பா?” சிவலிங்கத்திடம் குழந்தை போலக் கேட்டான் பாஸ்கர்.

“ஆமாம்ப்பா. நான் இவ்வளவு சந்தோஷமா இன்னிக்கு இருக்கோம்னா அதுக்குக் காரணம் உங்கம்மாக்கள்தான்.”

“மூவரும் சிரித்து மகிழ்ந்தனர்.”

“புஷ்பா, தன் இருபத்தஞ்சு வருஷத்து சோகக் கதைகளை சிவலிங்கத்திடம் சொல்லி ஆறுதல் அடைந்தாள். புஷ்பாவை சந்தித்து அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று துடித்துப் போன தன் உணர்வுகளை அவளிடம் வெளியிட்டு தன் இதயத்தில் உறுதிக் கொண்டிருந்த வேதனை முள்ளைப் பிடுங்கித் தூர எறிந்தார் சிவலிங்கம்.


39

தியாகு வெளிநாட்டில் இருந்து திரும்பி வந்தான். மகிழ்ச்சியுடன் அனைவரும் வரவேற்றனர். போனில் அடிக்கடி தியாகு தொடர்பு கொண்டபோதும் அவனிடம் வீட்டில் நடந்த எந்தப் பிரச்சினைகளையும் கல்யாணி சொல்லவில்லை. சரியான சந்தர்ப்பத்தில் அவனிடம் நடந்த அனைத்தையும் கூறினாள் கல்யாணி.

“இத்தனை வேதனைகளையும் எப்படிம்மா நீயும், மாலுவும் தாங்கிக்கிட்டீங்க? நான் போன் பண்ணினப்பக்கூட எதுவும் சொல்லாம எப்படித்தான் சமாளிச்சீங்களோ...”

“இந்தப் பிரச்சனைகளை எல்லாம் சமாளிச்சு சரி பண்ணினது எங்கம்மாதான். பக்தி மயமா பிரார்த்தனை பண்ணி சக்தி ரூபமா செயல்பட்டு எங்கம்மாதான் சிக்கலைத் தீர்த்து வச்சு, நம்ப குடும்பத்துல சந்தோஷத்தை மீட்டுக் குடுத்திருக்காங்க. அப்பாவோட மனசுல உறுத்திக்கிட்டிருந்த உணர்வுகளையும் புரிஞ்சுக்கிட்டு புஷ்பா அம்மாவை இங்கே அழைச்சுட்டு வந்தாங்க. அப்பாவும் உடம்பு சரியாகி தெம்பா இருக்கார்.”

“அண்ணா...” அழைத்தபடியே ஓடி வந்தாள் மாலு. அவளது கண்களில் இருந்து கண்ணீர் பெருகிறது.

“ம்கூம். நீ அழுதது போதும்மா. இனி அழவே கூடாது. சந்தோஷமா இருக்கணும். பாஸ்கர் எங்கே காணோம்?”

தியாகு கேட்டுக் கொண்டிருந்தபோதே பாஸ்கர் வந்தான். புஷ்பாவையும் அறிமுகம் செய்து வைத்தான்.

“என்னை மன்னிச்சிடுங்க ஸார்...”

“இனிமேல் இந்த ஸார் மோர் எல்லாம் வேண்டாம். மச்சான்னு கூப்பிடுங்க பாஸ்கர்.”

வெட்கத்துடன் சிரித்துக் கொண்டே அங்கிருந்து நகர்ந்தான் பாஸ்கர்.

புஷ்பா, புன்சிரிப்புடன் தியாகுவின் அருகே வந்தாள்.

“மாப்பிள்ளை, உங்களை கணவனா அடைய என் மகள் கல்யாணி குடுத்து வச்சிருக்கணும். உங்களை மருமகனா அடைய நாங்களும் பாக்கியம் செஞ்சிருக்கோம். கல்யாணி உங்க குடும்ப விளக்கு...”

“ஆமா அத்தை. கல்யாணிதான் இந்தக் குடும்பத்தோட ஆணி வேர். அந்த வேர், துளிர்விட்டு பூத்துக் குலுங்கற மரமா வளர வச்சது சுசிலா அத்தையும், மாமாவும். அவங்க பெத்து எடுக்காத மகள் கல்யாணியோட நிம்மதியான வாழ்க்கைதான் தங்கள் லட்சியம் என்பது போல அவங்க கல்யாணிக்கு உறுதுணையா இருக்காங்க.”

“நான்தான் அவசரப்பட்டு குழப்பத்தை அதிகமாக்கிட்டேன் மாப்பிள்ளை...”

“போனது போகட்டும் அத்தை. நல்லதுதானே நடக்கப் போகுது...”

மாலுவின் கஷ்டங்களுக்கெல்லாம் என்ன காரணம், யார் காரணம் என்பதை விளக்கமாகச் சொல்ல ஆரம்பித்தாள் கல்யாணி.

“மாலு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் எல்லாத்துக்கும் காரணம் சீதம்மா பாட்டிதான். அதாவது அவங்களோட மூட நம்பிக்கைகள், பத்தாம் பசலித்தனமான கொள்கைகள். மாலுவை துக்கிரி, துஷ்டை, கெட்ட நேரத்துல பிறந்தவள்னு குத்தி காமிச்சு அவளைத் துன்புறுத்தினது மட்டும் இல்ல... அவ மனசுலயும் தன்னைப் பத்தி தாழ்வான அபிப்பிராயத்தையும் உண்டு பண்ணிடுச்சு. நீங்க வெளிநாட்டுக்கு போறப்ப பாட்டிதான் அவளை சென்னைக்கு வரவிடாம தடுத்திருக்காங்க. அதனாலதான் மாலு அன்னிக்குத் தனியா இருக்கும்படி நேர்ந்துடுச்சு.”

“மாலு குழந்தையா இருந்தப்ப பாட்டி அப்படித் திட்டினது எனக்கும் தெரியும். ஆனா அவ ஓரளவு வளர்ந்தப்புறம் அவளை அப்படிப் பேசக் கூடாதுன்னு கண்டிச்சு வச்சிருந்தேனே?...”

“அவங்க உங்க முன்னாடி திட்ட மாட்டாங்க. நீங்க இல்லாத சமயத்துல திட்டுவாங்க. இவளும் உங்ககிட்ட சொல்லாம விட்டதுனால உங்களுக்குத் தெரியலை. நான் இந்த வீட்டுக்கு மருமகளா வந்தப்புறம் நான் மாலுவுக்காகப் பரிஞ்சு பேசினதுனால கொஞ்சம் குறைச்சுக்கிட்டாங்க. அவ்வளவுதான்.”

“கல்யாணி,” வாசலில் குரல் கேட்டது. யாத்திரை சென்றிருந்த சீதம்மா வந்தாள்.

“பாட்டி” அன்புடன் அவளை அணைத்துக் கொண்ட கல்யாணி, அவளைத் தனியாக அழைத்துச் சென்றாள்.

“பாட்டி, மாலுவோட பிறந்த நேரம் சரி இல்லை, அவ ராசி கெட்டவள்னு சொல்லி அவளைப் புண்படுத்தினீங்க. நாம நல்லது நினைச்சா நல்லதுதான் நடக்கும். நம்ப நினைப்புகளை நல்லதாகவே நினைக்கப் பழகிக்கணும் பாட்டி. நல்லது நடக்கறதும், கெட்டது நடக்கறதுக்கும் சந்தர்ப்பமும், சூழ்நிலையும் ஒரு காரணம்ங்கறதைப் புரிஞ்சுக்கோங்க. நாங்க அவர் வெளிநாட்டுக்குப் போகும்போது வழியனுப்ப சென்னைக்குப் போனபோது நீங்கதான் மாலுவை எங்க கூட வராம தடுத்திருக்கீங்க. நீங்க அவளைத் தடுத்து நிறுத்தினதாலதான் அவ இங்க தனியா இருக்கும்படி ஆயிடுச்சு, அதனால எவ்வளவு பெரிய அசம்பாவிதம் நடந்துடுச்சு தெரியுமா?...” நடந்தவை அனைத்தையும் விளக்கமாக எடுத்துக் கூறினாள் கல்யாணி.

“இப்ப என்ன சொல்றீங்க பாட்டி? எங்க கூட மாலு வந்திருந்தா இப்படி நடந்திருக்குமா? இப்ப சொல்லுங்க. அவளோட கெட்ட ராசியா உங்களோட மூட நம்பிக்கையா? எது பாழாக்குச்சு அவளோட மானத்தை? அவ ராசி கெட்டவளா இருந்திருந்தா, அந்தப் பையன் பாஸ்கர் சொல்லாம கொள்ளாம ஓடிப் போயிருப்பான்.”

“முதல்ல நடந்த கல்யாணத்துல மாப்பிள்ளை ஏன் செத்துப் போனான்? ஆரோக்யத்தைப் பத்தின முன் எச்சரிக்கை உணர்வு இல்லாத அவங்களோட அலட்சியம் அவனோட உயிரைப் பலி வாங்கிடுச்சு. இதுக்கு மாலு எப்படிக் காரணமாவாள்? சொல்லப் போனா மாலு மூலமா எங்க குடும்பத்துல இருந்த குழப்பங்கள் தீர்ந்திருக்கு. எங்கப்பா அவரோட நெஞ்சுல சுமந்துக்கிட்டிருந்த பாரம் இறங்கி இருக்கு. அவரோட முகத்துல இதுவரைக்கும் நானும், எங்க அம்மாவும் பார்த்திராத சந்தோஷத்தைப் பார்க்கிறோம்.”

“பாஸ்கர் நல்லவன், அறிவாளி. மாலுவைக் கல்யாணம் பண்ணி அவளை சந்தோஷமா வாழ வைக்கப் போறான். மேல மேல முன்னேறி மாலுவுக்கு பெருமை சேர்க்கப் போறான். காலம் மாறிடுச்சு பாட்டி. இன்னும் ராசி, பிறந்த நேரம்ன்னெல்லாம் பேசறது சரி இல்லை. சுமங்கலிகள்தான் மங்கல காரயங்கள்ல கலந்துக்கணும்ங்கற தவறான கொள்கைகளை எல்லாம் விட்டுடுங்க. மனுஷிங்கதானே? அவங்க மட்டும் நல்லது நடக்காம கெட்டது நடக்கணும்னு நினக்கறவங்களா? நல்லதும், கெட்டதும் அவரவர் மனசுல இருக்கு. ப்ளீஸ் பாட்டி, புரிஞ்சுக்கோங்க” இதமாக எடுத்துச் சொன்னாள் கல்யாணி.

நடந்ததை எல்லாம் தெரிந்து கொண்டு சீதம்மா தெளிவு பெற்றாள். தன் மனதில் இருந்த மூட நம்பிக்கைகளுக்கு விடை கொடுத்தாள். மாலுவைத் தேடி ஓடினாள்.

“என் கண்ணே மாலு...” பாட்டி மாலுவைக் கொஞ்சினாள். அந்தப் பாசத்தை அநாவசியமான பத்தாம்பசலித்தனமான கொள்கைகள் அடக்கி வைத்திருந்தன. அவற்றிற்கு விடுதலை கொடுத்த சீதம்மாவின் மனம், அளவற்ற ஆனந்தம் அடைந்தது.

40

பாஸ்கர் மாலு திருமணம் இனிது நடந்தது. மறுமணத்தால் மாலுவின் வாழ்வில் மணம் வீசியது. வசந்தம் வந்தது.

அதே நாளில் புஷ்பாவின் கழுத்தில் சிவலிங்கம் தாலி கட்டுதற்குரிய ஏற்பாட்டை வீட்டில் செய்து வைத்திருந்தாள் சுசிலா. சிவலிங்கத்தின் அந்தரங்கங்கள், சுசிலாவிடம் அரங்கேறிய பின் புஷ்பாவின் கருகமணிகளைப் பற்றிச் சொல்லி இருந்தார். ஆகவே முன்கூட்டியே மதுரை சென்று அந்த கருகமணிகளை எடுத்து வந்து தங்கத் தாலியுடன் கோர்த்து வைத்திருந்தாள் சுசிலா. குடும்பத்தினர் கூடியிருந்த சுபவேளையில் அந்தத் தாலியை சுசிலா எடுத்துக் கொடுக்க, புஷ்பாவின் கழுத்தில் கட்டினார் சிவலிங்கம்.


“புஷ்பா எனக்கு ஒரே ஒரு சந்தேகம். எங்க அப்பா நம்ப கல்யாணத்துக்கு நிச்சயமா சம்மதிப்பார்னு நம்பிக்கையோட இந்த கருக மணிகளை என்கிட்டக் குடுத்தனுப்பிச்ச, ஆனா...”

“புரியுதுங்க. அவ்வளவு நம்பிக்கையோட நான் குடுத்தனுப்பிய கருகமணிகளுக்குச் சக்தி இல்லாம போய், நம்ப கல்யாணம் நடக்கலியேன்னு கேட்க வர்றீங்க... உங்க அப்பாகிட்ட நீங்க நம்ம காதலைப் பத்தி சொன்னீங்களா?”

“இல்லை...”

“சொல்லாம எப்படி அவருக்குத் தெரியும், சுசிலாவை நிச்சயம் பண்ணிட்டார்னு பயந்து போய் சொல்லாம விட்டுட்டுட்டீங்க. நீங்க சொல்லி இருந்தா அவர் சம்மதிச்சிருப்பார். என்னோட நம்பிக்கை மாறவே மாறாது.”

“அப்பப்பா... இந்த பெண்களின் மனத்தில் தான் எத்தனை தன்னம்பிக்கை, திடமான கொள்கைகள்!” பிரமித்துப் போனார் சிவலிங்கம்.

அன்றைய நாள் அந்தக் குடும்பத்தின் பொன் நாள். வாழ்க்கையில் ஒரே ஒரு முறையேனும் புஷ்பாவை சந்தித்து விட வேண்டும் என்று துடித்த சிவலிங்கம், புஷ்பாவை சந்தித்தது மட்டுமல்ல, அவரது சொந்தமாகவும் ஆகி விட்டாள்.

சிவலிங்கத்தின் சோகம் மாறி சந்தோஷம் தோன்ற வேண்டும் என்ற எதிர்பார்த்த சுசிலா அவரது மகிழ்ச்சி கண்டு மன அமைதி அடைந்தாள்.

குடும்பத்தின் குலவிளக்காகத் திகழ்ந்து, கணவனின் தங்கையைத் தான் பெற்ற மகள் போல, அன்பு செய்த கல்யாணியும், பண்பே உருவான தியாகுவும் பரவசப்பட்டனர்.

இளைய நிலவான மாலு, தன் களங்கம் மறைந்து பாஸ்கருடன் இணைந்து, அவனது மனைவி என்னும் உரிமையும், பெருமையும் அடைந்தாள். பிரிந்தவர்கள் கூடியதால் அங்கே இன்பமும், இனிமையும் நிறைந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.