Logo

வாழ மறந்த பெண்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6787
vazha marandha penn

முதல் நாள்

ன்று நான் கல்லூரியிலிருந்து வந்தபோது, அவர் என்னை எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தார். நானும் அதை ஏற்கனவே எதிர் பார்த்திருந்தேன். நேற்று நடந்த கலை நிகழ்ச்சிகளைப் பற்றி நாங்கள் எவ்வளவோ பேச வேண்டியதிருக்கிறதே! ஆடைகளை மாற்றி அணிந்து கொண்டு, நான் திரும்பி வந்தபோது என் தாய் எங்கள் இருவருக்கும் தேநீர் கொண்டு வந்து வைத்தாள்.

"எடுத்துக் கொடு. நான் சமையலறைக்குள் போறேன். இல்லாவிட்டால் அங்கே எதுவும் நடக்காது. பிறகு... கொஞ்சம் சூடு அதிகமாக இருக்கும். ஆற்றிக் கொடு."

நான் தேநீரை ஆற்றி அவரிடம் கொடுத்தேன். அதை ருசித்து அருந்தி விட்டு சந்திரன் சொன்னார்:

"அப்படின்னா, கலை நிகழ்ச்சிகளைப் பற்றி கல்லூரியில் கருத்து எப்படி இருக்கிறது? பாமா, நான் உங்களை எதிர்பார்த்துக் காத்திருந்தேன்."

"ஓ...! பெண்களின் கருத்துக்கு என்ன மதிப்பு இருக்கு? ஆண்களின் கருத்தை நான் தெரிந்து கொள்ளணும்."

"அங்கே எங்களுக்கு வேற வழியே இல்லை. உங்களின் பாடலும் நடிப்பும்தான் மனிதர்களை அவ்வளவு நேரம் அங்கே இருக்கும்படி கட்டிப் போட்டதுன்னு பொதுவா எல்லாரும் பேசிக்கிறாங்க. பிறகு... பெண்கள் எங்களைப் பற்றி ஏதாவது நல்ல வார்த்தைகள் கூறுவார்களா என்ற சந்தேகத்தையும் நீங்கதான் தீர்த்து வைக்க வேண்டுமென்று நினைக்கிறேன்."

சந்திரன் உற்றுப் பார்த்துக் கொண்டு சொன்னார். நான் என்னுடைய கோப்பையில் தேநீர் ஊற்றியவாறு- அதே கூர்மையான பார்வையை நானும் பார்த்தவாறு சொன்னேன்:

"இந்தக் கருத்து ஒரு கடன் தீர்ப்பதாக இருக்கணும். அந்தக் கண்காட்சியில் இருந்த ஓவியங்களைப் பற்றி நான் சொன்னதற்கு பதிலாகக் கூறுகிறீர்கள். அப்படித்தானே?

தேநீர் பாத்திரத்தைக் கீழே வைத்துவிட்டு நான் அவருடைய கண்களையே உற்றுப் பார்த்தேன். அப்போதும் அதே கூர்மையான பார்வைதான்.

"எது எப்படியோ இந்தப் பாராட்டை அப்படியே நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்."

"எதனால்? நான் உண்மையாகத்தான் சொன்னேன். கல்லூரியில் இருந்த கருத்தும் அதுதானே...?"

"கொஞ்சம் வித்தியாசம் இருந்தது..."

"என்ன?"

"உங்களுடன் நான் வந்த காட்சிகள் அனைத்தும் நன்றாக இருந்தன என்றார்கள். நான் பாடியது, நடனமாடியது எல்லாம் சந்திரனின் பிரகாசத்தில் ஒளிர்ந்தன என்றார்கள்."

"சரிதான்! கேட்குறதுக்கு ரொம்பவும் நல்லா இருக்கு. ஆனா, இதை நான் அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லையே!"

"உங்கள் விருப்பம். ஆனால், அந்தக் குறும்புத்தனம் கொண்ட பெண்கள் இன்று முழுவதும் அதைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருப்பார்கள்."

"பிறகு நீங்க என்ன சொன்னீங்க பாமா?"

அவர் தேநீர் பாத்திரத்தை மேஜைமீது வைத்துவிட்டு நிமிர்ந்து கொண்டு கேட்டார். அப்போதும் அதே கூர்மையான பார்வைதான்.

"நான் என்ன சொல்றது? அந்த உண்மையை மறுக்கக்கூடிய சக்தி எனக்கு இல்லையே!"

அந்தச் சமயம் என் தாய் அங்கு வந்தாள். தொடர்ந்து இயல்பான அவசரத்துடன் சொன்னாள்:

"இங்கே பாரு பாமா. சந்திரன் இன்னைக்கு வீட்டுக்குப் போக போறாராம். இரண்டு வருடங்களாகவே எப்போதும் இப்படி பதிமூன்றாம் மணி ஆகிறபோதுதான் அந்த விஷயத்தைச் சொல்றது! அப்படி இருக்குறப்போதான் நானே நினைக்கிறேன்- இந்தக் கலைஞர்கள் எல்லாரும் இப்படித்தானா? எல்லாரும் அரைக் கிறுக்கர்கள் என்று ரவி சொல்றது சரிதான். இல்லாவிட்டால் இரவு வண்டியில் பயணம் செய்து, கொஞ்சம்கூட தூங்காம விழித்திருந்து வீணாக ஏன் சிரமப்பட வேண்டும்? எது எப்படி இருந்தாலும் சந்திரன் இன்னைக்கு நம்முடன் இருந்து சாப்பிடட்டும். நான் எல்லாம் தயார் பண்ணி வச்சிட்டேன்."

என் தாய் அதே அவசரத்துடன் காலியான தேநீர்ப் பாத்திரங்களை எடுத்துக் கொண்டு, நாங்கள் எதையும் கூறுவதற்கு முன்னால் அங்கிருந்து கிளம்பினாள்.

நாங்கள் அதற்குப் பிறகும் நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். நான் அப்போது என் அன்பிற்குரிய தாயைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். நாங்கள் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற விஷயத்தில் வேறு யாரையும்விட, என் தாய்க்குத்தான் அதிக மகிழ்ச்சி. சாதாரணமாகப் பார்த்தால் அதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை. எனினும், தன்னுடைய மகளைக் காதலிக்கக்கூடிய ஒரு இளைஞன் என்பதற்கு மேல் சந்திரனைப் பற்றி அதிகமாக எதுவும் அவளுக்குத் தெரியாது. அல்லது புகழ்பெற்ற ஒரு ஓவியரும் பாடகருமான அவர் ஒரு நல்ல மனிதர் என்பதையும் அவள் மனதில் நினைத்திருக்க வேண்டும். கடந்த இரண்டு வருடங்களாக அவர் இந்த நகரத்தில் மதிப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்பதையும் அவள் நினைத்திருக்க வேண்டும். ஒரு மருமகனைப் பற்றி அந்த அளவுக்குத் தெரிந்திருந்தால் போதுமா? பெண்கள் தாங்களே தேடிக்கொள்ளும் கணவர்களைப் பற்றி தாய் தந்தையர்க்கு பொதுவாக எதிர்ப்புதான் இருக்கும். அது அவர்களின் உரிமைமீது கையை வைக்கும் செயல் என்று அவர்கள் நினைப்பதே காரணம். இல்லாவிட்டால் அதுவரை இருந்த எல்லா உறவுகளையும் இணைத்திருக்கும் சங்கிலிகள் ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில் திருமணத்துடன் இல்லாமல் போய்விடுகின்றன என்ற உண்மையை அவர்கள் புரிந்து கொண்டிருப்பதுகூட அதற்குக் காரணமாக இருக்கலாம். அந்த நிமிடத்தில் அவர்கள் தங்களுடைய திருமணத்தைப் பற்றி நினைத்துப் பார்க்க ஆரம்பித்து விடுவார்கள். தாங்கள் செய்ததையே தங்களிடம் செய்யப் போகிறார்கள் என்ற நினைப்பு அவர்களுக்கு வந்துவிடும். எனினும், என் தாய்க்கு அப்படிப்பட்ட எண்ணம் எதுவும் இல்லாமல் இருந்தது. அவள் சந்திரனை ஒரு துணை என்று தான் நினைத்தாள். ரவி அண்ணனும் அப்படித்தான். கிரிக்கெட் விளையாட்டில் மிகவும் ஆர்வமாக இருந்த அவர் பொறுப்புணர்வு கொண்ட ஒரு மனிதரைத் தன் குடும்பத்துடன் உறவு கொள்ளச் செய்வது குறித்து மிகுந்த மகிழ்ச்சியைக் கொண்டிருந்தார். அவர் சந்திரனின் இல்லத்தைச் சேர்ந்தவர்களுடன் கலந்து பேசி எங்களுடைய திருமணத்திற்கு அவர்களின் மழுமையான சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் வாங்கினார். சூழ்நிலைகளை இந்த அளவிற்கு உதவியாக இருக்கும் வணணம் ஆக்கியதற்காக நான் மனப்பூர்வமாக கடவுளுக்குத் திரும்பத் திரும்ப நன்றி கூறினேன்.

இனியும் அந்த நல்ல நிகழ்ச்சி நடப்பதற்கு நான்கு வாரங்கள் கூட இல்லை. எதிர்பார்ப்புகள் நிறைந்திருந்த அந்த நாட்களில் ஒரு வாரத்திற்குக்கூட சந்திரனைப் பிரிந்திருப்பது என்பது எனக்கு மிகவும் கவலை தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. வீட்டில் அவர் பல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியதிருக்கும். எனினும், அவ்வளவு நாட்களையும் கழிப்பது என்பது மிகவும் சிரமமான ஒரு விஷயமாகவே இருந்தது.

இரவு எட்டு மணி ஆனபோது, ரவி அண்ணன் வந்தார். நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக அமர்ந்து உணவு அருந்தினோம். என் தாய் ஒவ்வொன்றையும் சாப்பிடும்படி சந்திரனைக் கட்டாயப்படுத்தியவாறு அருகில் நின்றிருந்தாள்.


இரவு முழுவதும் புகை வண்டியில் பயணம் செய்ய வேண்டுமே! சரியாகத் தூங்காததால், பசிக்காமல் இருக்காது. சந்திரன் முடிந்தவரையில் என் தாய் கூறியதைப் பின்பற்றியதாகவே நான் உணர்ந்தேன்.

சாப்பிட்டு முடிந்து எழுந்தவுடன், ரவி அண்ணன் தன் அறைக்குள் சென்றார். என் தாய் சமையலறையில் இருந்தாள். நாங்கள் வரவேற்பறையில் தனியாக இருந்தபோது, அந்தப் பிரிவை நினைத்துக் கவலைப்பட ஆரம்பித்தேன். துடிக்கும் இதயத்துடன் நாங்கள் சிறிது நேரம் எதை எதையோ பேசிக் கொண்டிருந்தோம். ஒரு வாரத்திற்குள் அவர் திரும்பவும் வருவார். அதற்குப் பிறகு மூன்று வாரங்கள் கடந்து விட்டால், நாங்கள் நிரந்தரமாக இணைந்து விடுவோம். நிலைமை அப்படி இருக்கும்போது, இந்த அளவிற்கு நான் ஏன் கவலைப்பட வேண்டும்? அறிவு கூறிய அந்த சமாதானங்களால் இதயத்தின் பொறுமையற்ற நிலையைத் திருப்திபடுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை. அது முற்றிலும் என் மனதில் இருந்த அமைதியற்ற தன்மை மட்டுமே என்று எனக்குத் தோன்றவில்லை. சந்திரனின் முகமும் மிகவும் உயிரற்று இருப்பதைப் போலவே தோன்றியது. அவருடைய வாய்ப் பேச்சும் குறைந்து விட்டிருந்தது. நாங்கள் பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம், அவருடைய இதயம் பேச்சைவிட்டு விலகி வேறு ஏதோ கனவுலகிற்கு அவ்வப்போது பறந்து போய்க் கொண்டிருப்பதாக நான் உணர்ந்தேன்.

ஒரு வாரத்திற்குப் பிரிந்திருப்பது! கடவுளே, அதைக்கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அந்த இதயத்தின் பலவீனமான தன்மையை நான் எத்தனை தடவை மிகவும் நெருக்கமாக உணர்ந்திருக்கிறேன்! அன்பு செலுத்த மட்டுமே அவரால் முடியும். அவரே அன்பின் வடிவம்தான். அழகான அந்த உடலில் இதயத்திற்கு மட்டுமே முக்கிய இடம் இருக்கிறது. ஒரு பெண் அதன் சொந்தக் காரியாக ஆவதைவிட வேறென்ன பெரிதாகக் கிடைத்துவிடப் போகிறது! நான் என்னுடைய மனக் கவலைகளை ஒரு பக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு, அவரைச் சமாதானப்படுத்த வேண்டும் என்று விரும்பினேன். வேதனை நிறைந்திருந்த அந்தக் கண்களில் முத்தமிட்டு மகிழ்ச்சியுடன் போய் வாருங்கள் என்று கூற என்னுடைய மனம் துடித்தது. எனினும், நான் அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

"பாமா, நான் புறப்பட வேண்டிய நேரம் வந்து விட்டது. ஒரு வாரத்திற்கு மேலே அங்கே இருக்க மாட்டேன். பலரையும் நேரில் பார்த்து அழைக்க வேண்டியதிருக்கு. வீட்டில் பல ஏற்பாடுகளையும் செய்ய வேண்டியதிருக்கு. நான் போயிட்டு வந்திடுறேன்."

அதைக் கூறும்போதுகூட அவர் அதே இடத்தில்தான் உட்கார்ந்திருந்தார். கண்களில் எப்போதும் தெரியக்கூடிய அந்தக் கூர்மை, அவருடைய கண்களிடம் நிரந்தரமாக விடைபெற்றுக் கொண்டு விட்டதோ என்றுகூட நான் சந்தேகப்படாமல் இல்லை.

"சந்திரன், உங்க முகம் மிகவும் வாடியிருக்கிறதே, ஏன்?"

நான் என்னையே அறியாமல் கேட்டுவிட்டேன். அந்த நிமிடங்களில் அவர்மீது அன்பு வைத்திருக்கும் யாராக இருந்தாலும் அந்தக் கேள்வியைத்தான் கேட்டிருப்பார்கள்.

"ஒண்ணுமில்லை... திருமணம் என்பது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை என்னால் உணர முடிகிறது. அதனால்தான் எப்போதும் அதற்காக நான் பயந்து கொண்டும் இருந்தேன்."

அவர் தன்னுடைய சிந்தனை வயப்பட்ட கண்களை சுவரில் இருந்த ஓவியங்களில் ஒன்றில் பதித்துக் கொண்டே சொன்னார். ஒரு நிமிடத்தில் என் இதயத்தில் ஒரு நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்தது. அது என்னை பலமாக சுட்டதைப்போல நான் உணர்ந்தேன். அப்படியென்றால் அவரை வேதனைப்படச் செய்து கொண்டிருப்பது எங்களுடைய திருமண விஷயம்தான்!

"சந்திரன், நம்முடைய திருமண விஷயத்தை நினைத்து வேதனைப்படுறீங்களா?"

அந்தக் கேள்வி சற்று கடுமையாக ஆகிவிட்டது என்பதாக உடனே நான் உணர்ந்தேன்- என்னுடைய மன வேதனைகள் மிகவும் அதிகமாக அதில் கலந்திருந்ததையும்தான். எனினும், அதை அவர் புரிந்து கொண்டார். அந்தக் கண்களில் இருந்த கூர்மையும் மலர்ச்சியும் எங்கிருந்தோ அந்த முகத்திற்கு வந்து சேர்ந்தது. அவர் என்னுடைய கையைப் பிடித்து வைத்துக் கொண்டு, அதை பலமாக அழுத்தியவாறு அதிகார தொனியில் கேட்டார்!

"பாமா, என்ன சொல்றீங்க? நான் அப்படியொண்ணும் நினைக்கல. கணவனின் அன்பைப் பற்றி மனைவி சந்தேகப்படுவது உண்டு. ஆனால் ஒரு காதலனையே...? இன்னொரு வகையில் சொல்றதா இருந்தால் என்னைக் கொஞ்சம் வேதனைப்பட வைத்தால்தான் உங்களுக்கு சந்தோஷமே. அதை நினைச்சு மகிழ்ச்சியடைய நான் இப்போது நல்லாவே தெரிஞ்சுக்கிட்டேன்."

அவர் கூறியது முழுவதும் எனக்குப் புரிந்துவிட்டது என்று கூறுவதற்கில்லை. நான் சிறிது நேரம் அமைதியாக இருந்தேன்.

"என் பாமா, எவ்வளவு நாட்களுக்குப் பிறகு நாம் ஒரு வாரம் ஒருவரையொருவர் பிரிந்திருக்கப் போகிறோம்? எவ்வளவு வேலைகள் இருந்தாலும், ஐந்து மணி ஆகிவிட்டால், உங்களைத் தவிர வேறு எதைப் பற்றியும் என்னால் சிந்தித்துப் பார்க்கவே முடியாது. ப்ரஷ், சாயம் எல்லாவற்றையும் கீழே வைத்துவிட்டு, நான் சாலைக்கு வந்திடுவேன். எனக்குள் பாடகன் உண்டாவது அந்தச் சமயத்தில்தான். இரண்டு வருடங்களில் அந்த வழக்கத்தை மீற வேண்டிய சூழ்நிலை ஒரு சில நாட்களில் மட்டுமே உண்டாகியிருக்கிறது."

என் இதயம் படிப்படியாகக் குளிர்ந்தது. நான் என்னவெல்லாம் நினைத்துவிட்டேன்! அவர் எங்களுடைய முதல் அறிமுகத்தையும், அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களையும் மனதில் நினைத்துப் பார்த்து ஆனந்தம் அடைந்து கொண்டிருக்கிறார் என்பதை என்னால்உணர முடிந்தது-. ச்சே...! நான் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கவே கூடாது என்று என் மனம் அவ்வப்போது என்னிடம் கூறிக் கொண்டிருந்தது.

"ஓ... சந்திரன், நீங்கள் எவ்வளவு சீக்கிரமா தப்பா நினைச்சிட்டீங்க! இனி அது நடக்காது. தினமும் ஒன்றோ இரண்டோ மணி நேரங்கள் மட்டுமே பார்க்கும்போது அதற்கெல்லாம் நேரம் இருந்தது. இப்போது..."

நான் அப்போது என் கண்களின் மூலம்தான் அதிகம் பேசுவதைப் போல் எனக்குத் தோன்றியது. விளக்கின் வெளிச்சம் கதிர்களால் மறையும் அளவிற்கு என் கண்கள் ஈரமாயின.

"நான் ஒரு மனைவியின் நிலையில் இருந்து கொண்டு அதற்கு சம்மதித்தேன். போதுமா? சரி... இப்போது தூங்கணும். அம்மா எங்கே!"

அவர் எழுந்தார். ரவி அண்ணன் பத்திரிகையை மடித்து, கை இடுக்கில் வைத்துக் கொண்டு, எரிந்து கொண்டிருந்த சிகரெட்டுடன் அங்கு வந்தார். பயணத்தை எப்படி மகிழச்சியுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறித்த தன் சொந்தக் கருத்துக்களை அவர் கூற ஆரம்பிக்க, அம்மாவும் வந்துவிட்டாள். எனக்கு வேறு என்னவோ சந்திரனிடம் கூற வேண்டும் போல் இருந்தது. ஒரு நிமிடம் அவர் மட்டும் தனியாக எனக்குக் கிடைத்திருந்தால்...? நான் சந்தோஷமாக அவரை வழியனுப்ப வேண்டும். அப்படி இல்லையென்றால் மனதில் அமைதியே இருக்காது.


நான் ஒருவிதக் குழப்பத்துடன் இங்குமங்குமாக நடந்து கொண்டிருந்தேன். இறுதியில் மெதுவாக வாசலுக்குச் சென்று கேட்டிற்கு அருகில் போய் நின்றேன். அங்கு சுவர்மீது படர்ந்திருந்த முல்லைக் கொடியிலிருந்து மெதுவாக நான் பூக்களைப் பறித்தேன்.

அவர் விடைபெற்றுக் கொண்டு வெளியே இறங்கியபோது, நான் அவரைப் பார்த்தேன். என் தாயும் அண்ணனும் வராந்தாவிலேயே நின்றுவிட்டார்கள். ஓட்டிற்கு மேலே படர்ந்திருந்த கொடிகளின் மறைவில், அவர்கள் என்னைப் பார்க்க முடியாது.

நான் அந்த மலர்களை அவருடைய கையில் கொடுத்தேன். தொடர்ந்து உணர்ச்சிவசப்பட்டு பாதி மயக்க நிலையில் சொன்னேன்:

"இதை வச்சுக்கோங்க. ஒரு வாரம் நாம பார்க்க முடியாது. அது மட்டும் உண்மை."

அவர் அதை வாங்கி, சிறிது முகர்ந்து பார்த்துவிட்டு என் கைகளை இறுகப் பற்றினார். அப்போது என் உடலெங்கும் முல்லை மொட்டுகள் மலர்வதைப் போல் நான் உணர்ந்தேன். அந்தக் கைகள் என்னை அவருடன் நெருங்கச் செய்தன. அந்த உதடுகள் பலமாக என் உதடுகளில் பதிந்தன. தொடர்ந்து அவர் சொன்னார்:

"இது மறையாது. நான் திரும்பி வரும் வரையில் இது இருக்கும் என்பது மட்டும் உண்மை."

அவர் கேட்டைக் கடந்து போனார். அந்த இன்பத்தில் மூழ்கிப் போய் நான் எவ்வளவு நேரம் அங்கேயே நின்றிருந்தேன் என்பது எனக்கே தெரியாது.

 ஆறு நாட்கள் கழித்து...

வர் இன்று திரும்பி வரவேண்டும். நிமிடங்களுக்கும் மணிகளுக்கும் முக்கியத்துவம் அதிகம் உண்டாகியிருப்பதைப் போல் தோன்றியது. நான் இந்த வாரம் முழுமையான மனக் குழப்பங்களில் மூழ்கிவிட்டேன். அவரிடம் எந்த மாதிரியான சந்தேகங்களையெல்லாம் கேட்க வேண்டிய இருக்கிறது! என்னுடைய அறிவு மண்டலம் மிகவும் சுருங்கிப் போய் விட்டதைப் போல் நான் உணர்ந்தேன். எது எப்படி இருந்தாலும் இந்தக் கடலை நான் இன்று நீந்திக் கடக்கத்தானே போகிறேன்! அவர் வந்த பிறகு, நான் என்னென்ன புகார்களையெல்லாம் கூற வேண்டியதிருக்கிறது! முதலில் என்ன செய்ய வேண்டும்? சிறிது நேரம் பேசாமல் இருக்க வேண்டும். அப்போது அவர் வந்து என்னுடைய முகத்தைப் பிடித்து உயர்த்தி அன்புடன் காரணம் என்ன என்று கேட்பார். ஆனால், என்னால் அது முடியும் என்று தெரியவில்லை. சந்திரன் கேட்டைத் திறந்து வரும் போதே நான் அவரைத் தேடி ஓடிவிடுவேன் என்பது தான் உண்மை. எது எப்படியோ இனியொருமுறை இந்த வேதனையை நான் தாங்கிக் கொண்டிருக்க வேண்டிய அவசியமில்லையே! அதிக பட்சம் போனால், இன்று மட்டும்தான்.

இந்த நாட்கள் ஒரு வகையில் பார்க்கப் போனால் எனக்கு மிகவும் பயனுள்ளவையாகவே இருந்தன. எங்களைப் பற்றி மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்வதற்கு முயன்றது இப்போது மட்டுமே. நான் உண்மையாகவே ஆச்சரியப்படுகிறேன். காதல் விஷயத்தில் பொதுவாகவே மனிதர்களுக்குப் பொறாமைதான் இருக்கும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். இரண்டு வருடங்களுக்கு முன்னால் நானும் சந்திரனும் ஒன்றாகப் பூங்காவில் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம், என் மனதில் இந்தக் கருத்து உறுதியாகிக் கொண்டே வந்தது. ஆனால், அப்படி நான் நினைத்தது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை இப்போது உணர்கிறேன். மனிதர்கள் எவ்வளவோ நல்லவர்களாக இருக்கிறார்கள்! எங்களுடைய திருமண விஷயம் இப்போது எல்லோருக்கும் தெரிந்த ஒன்றாகிவிட்டது. அதைப் பற்றித் தெரிந்து கொண்டவர்கள் எல்லோரும் மிகவும் சந்தோஷப்பட்டார்கள். அந்தக் கலை நிகழ்ச்சி அதற்கு மிகவும் உதவியிருக்கிறது. இந்த உறவு சமூகத்திற்குத் தேவையான ஒரு விஷயம் என்றுகூட நண்பர்கள் கூறத் தொடங்கியிருந்தார்கள். புதிய நாடக உலகத்திற்கு நாங்கள் அவசியம் தேவையானவர்கள் என்று அவர்கள் நினைத்தார்கள். அந்த விஷயத்தை நானும் ஒத்துக் கொள்கிறேன். கடந்த இரண்டு மூன்று நிகழ்ச்சிகள் அந்த அளவிற்கு ஆச்சரியப்படும் வகையில் வெற்றிகரமானவையாக இருந்தன. அவருடைய பங்கு பெறலுக்கு வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு ஒரு மகத்துவம் இருந்தது. அதேபோல அந்தக் காதல் பற்றிய ஏக்கத்திற்கும்... ஹா! என்ன அற்புதமான நீண்ட நிமிடங்கள் அவை!

 மீண்டும் நான்கு நாட்கள் கழித்து...

வலைப்படக் கூடிய அந்த தந்திச் செய்தி இன்று கிடைத்தது. சந்திரனுக்குக் காய்ச்சலாம்.  அது அந்த அளவிற்குத் தீவிரமாக இருக்குமா? பொதுவாக நோய் எதுவும் இல்லாதவர்களுக்கு ஏதாவது வந்தால், அப்படித்தான் வரும். கடவுளே! என் மனதில் சிறிது கூட அமைதி உண்டாகவில்லை. கடவுளிடம் வேண்டிக் கொள்வதைத் தவிர, என்னால் வேறு என்ன செய்ய முடியும்? ரவி அண்ணன் அங்கு போய்ச் சேர்ந்து, ஒரு நல்ல செய்தியை எனக்குக் கூற வேண்டும். இன்று இரவு எந்த நேரமாக இருந்தாலும், அவர் அங்கு போய்ச் சேராமல் இருக்கமாட்டார். நாளை பத்து மணிக்கு முன்னால் என்னுடைய மனதிற்கு நிம்மதி கிடைக்கலாம். ஒரு இடத்தில் உட்கார்ந்திருக்கவோ ஒரு விஷயத்தைப் பற்றித் தொடர்ந்து சிந்திப்பதற்கோ என்னால் முடியவில்லை. நான் மனதிற்குள் வெந்து கொண்டிருக்கிறேன்.

எனினும், இந்த வேதனைகளுக்கு மத்தியிலும் எனக்கு ஒரு நிம்மதி இருக்கத்தான் செய்கிறது. அந்த தந்திச் செய்தி என்னை அதிர்ச்சியடைய வைத்த அதே நேரத்தில் ஒருவித நிம்மதியையும் தந்ததென்னவோ உண்மைதானே! அது ஒரு இரக்கமற்ற சிந்தனை என்று கூறலாமா? எனினும், உண்மையாகவே அது நடந்துவிட்டது. நான் இந்த நான்கு நாட்களும் அவரை சந்தேகப்பட்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த சிந்தனைக்குக் காரணமே இல்லாமலிருந்தது. அவருக்குக் காய்ச்சல் வந்திருந்தாலும், அவர் நம்பிக்கைக்கு உரியர் தானே என்ற நினைப்பு என்னைச் சிறிதளவாவது நிம்மதி கொள்ளச் செய்யாமல் இல்லை. அவர் வராமல் போனதற்கு வேறு ஏதாவது காரணம் இருந்தால்...? ஹா! நான் ஒரு கடுமையான இதயத்தைக் கொண்ட பெண்ணாக ஆகிவிட்டேன். அவர் என்ன காரணமாக இருந்தாலும், வராமலே இருக்கட்டும். அந்த நோய் மட்டும் குணமானால் போதும்!

 மேலும் ஆறு நாட்கள் கழித்து...

ற்று முன்பு ரவி அண்ணனின் கடிதம் கிடைத்தது. காய்ச்சல் வெளியே கூறும் அளவிற்குக் குறையவில்லையாம். சிறிது முன்னேற்றம் உண்டாகிற வரையில் அண்ணன் அங்கேயே தங்கியிருக்க எண்ணியிருக்கிறாராம். அப்படியென்றால், நிம்மதியை உண்டாக்குகிற நிமிடங்கள் மிகவும் அருகிலேயே இருக்கின்றன. அவர் அதை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறார். அப்படி இல்லை என்றால்கூட ஏமாற்றத்திற்கு வழியில்லை. நான் அந்தக் கடிதத்தை எத்தனை தடவை திரும்பத் திரும்ப படித்தேன்! வேறு மாதிரியான எந்தக் குறிப்பும் அதில் இல்லை. எனினும், என் இதயம் காரணமே இல்லாமல் பயம் கொள்கிறது. எழுவதற்கான சக்தியே எனக்கு இல்லை. இனியும் இப்படியே எவ்வளவு நாட்கள் இருப்பது?


இந்த நோய் உண்மையாகவே ஒரு வஞ்சகம் நிறைந்ததுதான். இங்கு இருக்கும்போது அவரை வந்து தாக்குவதற்கான தைரியம் அதற்கு ஏன் இல்லாமல் போய்விட்டது? அப்படி வந்திருந்தால், நான் அவரை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொண்டு அவருக்கு அருகிலேயே இருந்திருப்பேனே! அதற்குப் பிறகு எது வேண்டுமானாலும் நடக்கட்டும். அது என்னை நிச்சயம் நிம்மதி கொள்ளச் செய்யும். அது மட்டுமல்ல; என்னால் அவரைக் காப்பாற்ற முடியும் என்று கூட எனக்குத் தோன்றுகிறது.

அந்தக் காய்ச்சலின் ஆரம்பத்தைப பற்றி அண்ணன் என்ன எழுதியிருக்கிறார்? அவர் இங்கிருந்து போனவுடன், யாரோ ஒரு நண்பரைப் பார்ப்பதற்காக தூரத்தில் எங்கோ போயிருக்கிறார். திரும்பி வந்தபோது இரவில் நல்ல மழை பெய்திருக்கிறது. குடையை எடுத்துக் கொண்டு வெளியே போகும் பழக்கம் இல்லாத சந்திரன் ஸ்டேஷனில் இருந்து நனைந்து கொண்டே வீட்டிற்குச் சென்றிருக்கிறார். அன்று தொடங்கிய ஜலதோஷம், காய்ச்சலாக மாறியிருக்கிறது. கஷ்டம்தான்! அது அப்படிப்பட்ட பெரிய விஷயமாகிவிட்டதே! தொடர்ந்து இரண்டு நெடிய பயணங்கள்! நண்பருக்கு ஒரு கடிதம் எழுதினால் போதாதா? இதற்கு மேலும் அதைப் பற்றி நினைத்து என்ன பிரயோஜனம்? தன்னுடைய சொந்த உடல் நலத்தைப்பற்றி அவர் கொஞ்சமாவது கவனம் செலுத்துவது என்பது, நான் வற்புறுத்திக் கூறும்போது மட்டுமே. இந்தப் பயணத்தைப் பற்றி அவர் என்னிடம் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. நான் அதற்கு சம்மதிக்க மாட்டேன் என்று நினைத்ததுதான் காரணமாக இருக்க வேண்டும். ஒரு ஜலதோஷத்தால் இவற்றையெல்லாம் செய்ய முடியுமா? அது ஆரம்பமாகி இன்றோடு பன்னிரண்டு நாட்கள் ஆகிவிட்டன. இப்போதாவது கொஞ்சம் முன்னேற்றம் உண்டாகி இருக்கக் கூடாதா? அடுத்த கடிதத்திற்கு மேலும் பதினான்கு மணி நேரங்கள் காத்திருக்க வேண்டும். இந்த நேரத்தை நான் எப்படி நகர்த்துவேன் என்பதை நினைக்கும் போது எனக்குள் பயம் உண்டாகிறது.

இரண்டு நாட்களுக்குப் பிறகு...

ல்லாம் முடிந்துவிட்டது!

நேற்று காலை ஒன்பது மணிக்கு அது நடந்தது. நேரத்தை நான் ஞாபகப்படுத்திப் பார்த்துக் கொள்கிறேன்... அண்ணனின் தந்தி கிடைத்தபோது ஒரு மணி இருக்கும். அதைத் தொடர்ந்து எனக்கு சுய உணர்வு வந்தது நான்கு மணி நேரத்திற்கு முன்புதான். இப்போது நான் அழவில்லை. எனக்குக் கவலையும் இல்லாமல் போய்விட்டது என்று நினைக்கிறேன். இரண்டு வார வேதனைகளுக்குப் பிறகு, இந்த நீண்ட ஓய்வு எனக்கு ஆறுதலாகவே இருக்கிறது. இதயத்தில்தான் என்ன அமைதி! நான் இந்த அளவிற்கு உணர்ச்சியே இல்லாமல் எப்போதும் இருந்ததில்லை. எங்கும் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு ஜுவாலைகள்! என் இதயத்திலும் இந்த அறையிலும் சுற்றியிருக்கும் அனைத்து உலகத்திலும் வெளிச்சமயம்தான்...! இந்த உலகம் எவ்வளவு அழகாக இருக்கிறது! நான்...

இரண்டு வாரங்கள் கழித்து...

னக்கு இப்போதும் நடப்பதற்கு சக்தியில்லை. டாக்டர் மிகவும் அக்கறையுடன் கவனித்துக் கொள்கிறார். டாக்டர்கள் பாவம்! ஆட்கள் கட்டாயப்படுத்தினால், அவர்கள் ஒரு இறந்த பிணத்திற்குக் கூட சிகிச்சை செய்வார்கள்- தேவைப்பட்டால் நல்ல உடல்நலத்தைக் கொண்ட ஒரு பந்து விளையாடும் வீரனைக்கூட. இல்லாவிட்டால் எதற்காக அவர் எனக்கு மருந்து தர வேண்டும்? நான் ஒரு நோயாளி அல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வெறும் சாதாரண அறிவு போதாதா? நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவரை குணப்படுத்த அவர்களால் முடியவில்லை- அவர்களுடைய மருந்துகளுக்கு முடியவில்லை. மருந்துகளைக் கொடுத்து வெறுமனே அவர்கள் என்னைக் குடிக்கச் செய்கிறார்கள். அவர்கள் என்னிடம் நடந்து கொள்வதைப் பார்த்தால் எனக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்று அவர்கள் நினைத்து விட்டார்கள் என்பதைப் போல இருந்தது. பாவங்கள்! இவர்கள் நோய்களைப் புரிந்து கொள்வதெல்லாம் இப்படித்தான் போலிருக்கிறது. இந்த மருத்துவமனைகளிலிருந்து ஒருவனாவது உயிருடன் வெளியே செல்கிறான் என்றால் அதைப் பற்றி ஆச்சரியம்தான் பட வேண்டும். என்அறிவு எப்போதையும்விட இப்போது மிகவும் தெளிவாக இருக்கிறது. நான் என்னுடைய வலது கையால் எழுதுகிறேன். இடது உள்ளங்கையை மடித்து கன்னத்தில் வைத்துக் கொண்டிருக்கிறேன். இதோ... இதை உயர்த்த வேண்டுமென்று தோன்றினால் உயர்த்துவதற்கும் தாழ்த்த வேண்டுமென்று தோன்றினால் தாழ்த்துவதற்கும் என்னால்முடியும். என் கடிகாரத்தில் நேரத்தைச் சரியாக என்னால் கூற முடியும். பத்து இருபத்தேழு. இது இரவு நேரம். ஹோ! நானே என்னுடைய இயல்பான அறிவை சந்தேகப்பட்டு விட்டேன் அல்லவா! நன்கு களைத்துப் போய்விட்டிருந்தாலும் எனக்கு வேறு எந்தப் பிரச்சினையும் இல்லை. ஆமாம்... எனக்கு நடப்பதற்கு சக்தி இல்லை. அவ்வளவுதான்.

மீண்டும் இரண்டு வாரங்கள் கழித்து...

வருடைய மரணத்திற்குப் பிறகு இப்போது ஒரு மாதம் ஓடிவிட்டது. இரங்கல் செய்திகள் இப்போதும் முடியவில்லை. அவை அனைத்தும் எனக்கு ஆறுதல் கூறுவதற்காகத்தான். கலை சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் மட்டும் எங்களை அறிந்திருக்கும் அறிமுகமில்லாதவர்கள்கூட அந்தக் கூட்டத்தில் இருந்தார்கள். நண்பர்களுடன் பங்கிடும்போது கவலை குறைய வேண்டும். என்ன காரணத்தாலோ எனக்கு அது சிறிதும் நடக்கவில்லை. எந்தவித சலனமும் இல்லாமலிருந்த என்னுடைய மனதைச் செயல்படச் செய்ததும், அதன்மூலம் என்னைக் கண்ணீர்விட வைத்ததும் அந்தக் கடிதங்கள்தான். அவை என்னை அவரைப் பற்றி மேலும் நினைக்கச் செய்து, அவருடன் மேலும் மேலும் தொடர்பு கொள்ளச் செய்தன. என் கனவுகளை என்னால் உண்மைகளிலிருந்து பிரித்துப் பார்க்க முடியவில்லை. நான் விழித்திருக்கும்போதே கனவுகள் காண்கிறேன். சந்திரன் என்னுடன்தான் இருக்கிறார் என்ற எண்ணம் என்ன நடந்தும் என்னை விட்டுப் பிரியவில்லை. நான் அவருடன் சேர்ந்து கலை நிகழ்ச்சிகளில் பங்கு பெறுகிறேன். பூங்காவில் நடக்கிறேன். சிறிதும் நிறுத்தாமல் பேசிக் கொண்டிருக்கிறேன். அப்போது நான்அழுகிறேன். அவர் அடுத்த நிமிடம் என்னை விட்டுப் பிரிந்து போய்விடுவார் என்று என்னுடைய இதயம் மெதுவான குரலில் கூறுகிறது. நான் அதை சந்திரனிடம் ஒருமுறை கூட கூறுவில்லை. என்னைவிட்டுப் போகக் கூடாது என்று கெஞ்சிக் கேட்டுக் கொள்ளவும் இல்லை. கண் விழிக்கும்போது நான் அடக்க முடியாமல் அழுகிறேன். அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பும்படி நான் என்னுடைய உணர்வுகளுடன் மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். அந்தக் கடிதங்களில் ஒன்றுக்குக் கூட அதைச் செய்ய முடியவில்லை. எல்லாம் அவருடைய மரணத்தை விட வாழ்க்கையைத்தான் ஞாபகப்படுத்துகின்றன. கடவுளே! இது என்ன ஒரு மனஅமைதி இல்லாத வாழ்க்கையாக இருக்கிறது! நாட்கள் கடக்க கடக்க, நான் சுய உணர்வுடன் அழுகிறேன்.


இரண்டு மாதங்களுக்குப் பிறகு...

ன்னுடைய உடல்நிலை தேறி வருவதாகத் தோன்றுகிறது. எழுந்து நடப்பதற்கும் படிகளில் ஏறுவதற்கும் எனக்கு சிரமமாக இல்லை. கல்லூரிக்குப் போகும்படி அண்ணன் கூறினாலும், நான் என்னுடைய படிப்பை நிரந்தரமாக நிறுத்திக் கொண்டு விட்டேன் என்பதுதான் உண்மை. மூன்று நான்கு மாதங்கள் கடுமையாக முயற்சி செய்தால், ஒரு பட்டம் கிடைக்கும். ஆனால், அது என் வாழ்க்கைக்கு எதுவும் தரப்போவது இல்லை. என் தாய்க்கு அது முழுமையாக புரிந்திருக்கிறது என்பது உண்மையிலேயே நிம்மதி தரக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அவள் என்னைக் கட்டாயப்படுத்துவாள் என்று நான் சந்தேகப்பட்டேன். ஹா! நான் என் தாய்க்கு எந்த அளவிற்கு கடமைப்பட்டிருக்கிறேன்!

சந்திரனுக்குப் பிறகு ஆறு மாதங்கள் கழித்து...

நேற்று தேர்வு முடிந்து, கல்லூரியை மூடினார்கள். தொடர்ந்து என் வீடு ஆடல்களும் பாடல்களும் நிறைந்த ஒரு இடமாக ஆனது. அவர்கள் படிப்பைப் பற்றியும் விடைத்தாளில் எழுதிய முட்டாள் தனமான விஷயங்களைப் பற்றியும் சிறிதுகூட நிறுத்தாமல் பேசிய போது, என் இயதத்தில் ஒரு புதிய உணர்வு உண்டாக ஆரம்பித்தது. கல்லூரியை விட்டதற்காக எனக்குள் ஒரு வருத்தம் இருக்கிறதோ? நான்அதைப்பற்றி ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. சிறிது நேரம் கடந்தபிறகு, என் கண்கள் கண்ணீரால்நிறைய, நான் தேம்பித் தேம்பி அழுதேன். ச்சே! எனக்கே வெட்கமாக இருந்தது. இளமை, வாழ்க்கையின் லட்சியம் ஆகியவை ஒளிர்ந்து கொண்டிருந்தபோது, நான் மட்டும் அழுது கொண்டிருந்தால்...! அடுத்த நிமிடம் நான் கண்களைத் துடைத்துவிட்டு, தோழிகளை நோக்கி புன்னகைத்தேன். தொடர்ந்து நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தாலும் அவர்களுடைய இதயத்தின் அடிப்பகுதி வரையில் அந்த அழுகை ஆழமாகச் சென்றிருக்கிறது என்பதை என்னால் உணர முடிந்தது.

சந்திரனுக்குப் பிறகு ஒரு வருடம் கழித்து...

ன்னை நாடகத்திற்கும் பாட்டுக் கச்சேரிக்கும் இழுப்பதற்கான முயற்சியிலிருந்து ஆட்கள் விலகிச் சென்றிருந்தார்கள். குறிப்பிட்டுக் கூறும்படி எதுவும் நடக்காமல் காலம் நீங்கிக் கொண்டிருந்தது. நாட்கள் அனைத்தும் ஒரே மாதிரி கடந்து போய்க் கொண்டிருந்தன. என்னுடைய இதயத்தைப்போல வெப்பம் நிறைந்த கோடை காலமும், கண்களைப்போல ஈரமாக இருந்த மழைக் காலமும், சிந்தனைகளைப் போல மூடியிருந்த பனிக் காலமும் கடந்து போயின. நான் என் தாய், சகோதரன், தோழிகள் ஆகியோர் இருக்கும்போது கூட தனியாக இருப்பதைப் போலவே உணர்ந்தேன். கடந்து போன சம்பவங்களை நினைத்துப் பார்ப்பதையும்அவற்றை நினைத்துக் கவலைப்படுவதையும் நான் ஒரு கலையாகக் கற்றுக் கொண்டிருக்கிறேனோ? இந்த கடந்த ஒரு வருடம் எனக்கு எதைக் கற்றுத் தந்திருக்கிறது? எனக்கு எதுவும் புரியவில்லை. ஆனால், ஒரு விஷயம் மட்டும் உண்மை. என்னைப் பொறுத்தவரையில், அவர் ஒரு மிகப்பெரிய மனிதராக வளர்ந்து கொண்டிருந்தார். மக்களும் அதைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள். அவருடைய திறமைகளைப் பற்றி எழுதாத ஒரு பத்திரிகை கூட இல்லை. எங்களுடைய காதல் உறவைஅவர்கள் மிகவும் உயர்வுபடுத்தி வாழ்த்துகிறார்கள். சந்திரன் மூலமாக நான் இன்று மனிதர்களின் கவனத்தில் படுகிறேன். கடவுளே! அவரும் மக்களும் வைத்திருக்கும் நம்பிக்கையைக் காப்பாற்றுவதற்கான சக்தியை எனக்கு நீதான் தரவேண்டும்!

இரண்டு வருடங்கள் கழித்து...

ன்று சந்திரனின் இரண்டாவது வருட நினைவுநாள். இரண்டு பிரபல வார  இதழ்களில் அவரைப் பற்றிய கட்டுரைகள் பிரசுரமாகி இருப்பதை நான் பார்த்தேன். ஒன்றில் சந்திரன் எண்ணெய் சாயத்தில் வரைந்த நான்கு அருமையான ஓவியங்கள் இடம் பெற்றிருந்தன. இன்னொரு வார இதழில் எங்கள் இருவரின் புகைப்படங்களும் இருந்தன. என் படத்திற்குக் கீழே 'ஓவியரின் திருமணமாகாத விதவை' என்று எழுதப்பட்டிருந்தது. அந்தக் கட்டுரையில் என்னை மிகவும் அதிகமாகப் புகழ்ந்திருந்தார்கள். அவை அனைத்தும் என்னுடைய கடமையை மேலும் அதிகமாக ஞாபகப்படுத்தின. அவருடைய ஆத்ம சாந்திக்காகப் பிரார்த்தனை செய்வதற்கு மட்டுமாவது நான் வாழ்ந்துதான் ஆக வேண்டும்!

மூன்று வருடங்கள் கழித்து...

நேற்று அண்ணனின் திருமணம் நடந்தது. கல்லூரியில் எனக்கு மிகவும் பிடித்த தோழியான மாலினிதான் மணப்பெண். எனினும், அந்த விஷயத்தில் எனக்கு கூறிக் கொள்கிற மாதிரி ஆர்வம் எதுவும் தோன்றவில்லை. நாளை அவர்கள் அண்ணன் வேலை செய்யும் இடத்திற்கும் போகிறார்கள். மாலினியை மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கவாவது எனக்கு முடிந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! கடவுளே! இப்படியே எத்தனை நாட்கள் இருப்பது! மறதி என்பது பலருக்கும் ஒரு கொடுத்து வைத்த விஷயம் என்று கூறுவார்கள். அவளுக்காகவாவது என்மீது கருணை காட்டக்கூடாதா? நாட்கள் நகர நகர நான் சந்திரனுடன் மேலும் நெருக்கமாகிறேன். வாழ்ந்து கொண்டிருந்தபோது அவரிடம் நான் குறைகளைக் கண்டுபிடித்தேன். சில நிமிடங்களுக்கு பதைபதைப்பு அடைந்திருக்கிறேன். மரணத்தைத் தழுவிய அவரோ எப்போதும் என்னுடன் அன்புடனே இருந்து கொண்டிருக்கிறார். அவர் மனம் நோகும் வகையில் ஒரு வார்த்தை கூட கூறமாட்டார். நான் அவரைக் கோபப்படச் செய்ய முயற்சிக்கிறேன். சண்டை போடுகிறேன். எனினும்... எனினும்... ஹா! என்ன சிந்தனைகள் இவை! அன்பு கலந்த நினைவுகள் மரணமென்ற நெருப்பு ஜுவாலைகளைவிட சுட்டெரிக்கக் கூடியவை என்பதை என்னால் உணர முடிகிறது.

ஆறு வருடங்கள் கழித்து...

னக்கு இப்போது இருபத்தாறு வயது நடக்கிறது. வசந்தம் இல்லாத வருடங்கள்! ஈரமான கண்களுடனும், வறண்டுபோன இதயத்துடனும் நான் காத்திருக்கிறேன். யாரை எதிர்பார்த்து? மறைந்துபோன கனவுகளுக்காகவா? சந்தோஷம் நிறைந்த சூழல்கள் என் சிந்தனைகளை அலைபாயச் செய்கின்றனவோ? நான் வாழ்கிறேனா? இல்லை... நான் வாழ மறந்து விடுகிறேன்.

ஏழு வருடங்கள் கழித்து...

னிதனின் விருப்பங்களையும் முடிவுகளையும் எதிர்த்து தோற்கச் செய்யும் ஒரு முயற்சி அவனைச் சுற்றிலும் நடக்கிறது என்பதை நான் உணர்கிறேன். ஒரு பெண்ணின் வாழ்க்கையிலாவது நிச்சயமாக அது இருக்கும். இல்லாவிட்டால் எதற்காக மனிதர்கள் என்னை இப்படி துன்பத்திற்குள்ளாக்க வேண்டும்? பாடும் திறமையைக் கொண்ட எவ்வளவோ பேர் நம் நாட்டில் இருக்கிறார்கள்! எனினும், அவர்களுக்கு என் பாட்டைத்தான் கேட்க வேண்டும். எது எப்படியோ, ஒரு இக்கட்டான நிமிடத்தில் நான் அதற்கு சம்மதித்துவிட்டேன். ஒரு வகையில் பார்க்கப்போனால், நான் அதற்காக சந்தோஷப்படுகிறேன். அவருக்கு எவ்வளவோ பிடித்திருந்த அந்தப் பாடலை இன்று பதிவு செய்வதற்காக நான் பாடினேன். ஹா! நான் அந்தப் பாடலைப் பாடும்போதெல்லாம் அவர் உணர்ச்சி வசப்பட்டதை நான் நினைத்துப் பார்க்கிறேன். அந்தப் பாடலை எனக்கு சொல்லித் தந்ததே சந்திரன்தான். அந்தப் பாடலைஅவர் கேட்பதற்காக அல்லாமல் பாட வேண்டிய சூழ்நிலை வரும் என்று ஒரு நாளும் நான் நினைத்தது இல்லை. எனினும், என்ன  காரணத்தாலோ இன்று நான் அதற்கு சம்மதித்துவிட்டேன். அந்தக் குரல் இனிமேல் ஏராளமான இசைக் கருவிகளிலிருந்து புறப்பட்டு காற்றில் கலந்து ஒலிக்கும். அங்கு இருக்கும் அவருடைய ஆத்மாவில் என்னைப் பற்றிய நினைவுகளை எழுப்பிக் கொண்டு அது முடிவே இல்லாமல் பயணம் செய்யும். அந்தப் பாடலின் பிறப்பிடம் மறைந்து போன பிறகும் அளவற்ற அந்த அன்பிற்கு முன்னால் என்னுடைய எளிய காணிக்கையாக அந்தப்பாடல் உயர்ந்து ஒலிக்கட்டும்.


பத்து வருடங்களுக்குப் பிறகு...

ஹா! நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன்.இரண்டு வருடங்களுக்குப் பிறகு நான் பிழைத்துக் கொண்டேன். நான் அதைப்பற்றி எதுவும் இந்தக் குறிப்புகளில் எழுதாமலிருந்தது என்னை நானே ஏமாற்றிக் கொள்ளும் ஒரு செயலோ? இருக்கலாம். எனினும், இந்த முன்னேற்றம் அதை எழுதுவதற்கான தைரியத்தை எனக்குத் தருகிறது. ஆமாம்... என் மனதை... அதன் சரியான இடத்திற்குள் நுழைந்து கைக்குள்ளாக்கிய நாள்- அது இரண்டு வருடங்களுக்கு முன்பு... அண்ணனும் மாலினியும் அவர்களுடைய இரண்டு குழந்தைகளும் எங்களுடன் வந்து தங்குவதற்காக வந்தார்கள். என் தாய் இந்த அளவிற்கு மிகுந்த சந்தோஷத்துடன் இருந்த ஒரு காலத்தை நான் எப்போதும் நினைத்துப் பார்த்ததில்லை. அந்த நாட்களில் எங்களுடைய இல்லம் மீண்டும் உயிர்த்துடிப்புடன் நிறைந்திருந்தது. குழந்தைகள் அவர்களுடைய அன்னையைவிட அதிகமாக என்மீது அன்பு செலுத்தினார்கள். என் தாயை எடுத்துக் கொண்டால், இளைய குழந்தையை இடுப்பில் வைத்துக் கொண்டு, வீட்டிற்குள் சுற்றிச் சுற்றி வலம் வந்து கொண்டிருப்பதே அவளுடைய வேலையாக இருந்தது. அந்தச் சமயத்தில் அவள் என்னைப் பார்த்து பெருமூச்சு விடுவது மட்டும் ஒருவித அமைதியற்ற நிலையை உண்டாக்காமல் இல்லை. எனினும், இரண்டு தாய்களையும் ஒரு பாட்டியையும் அந்தக் குழந்தைகள் ஒரே மாதிரி சந்தோஷம் கொள்ளச் செய்தார்கள். சிறு குழந்தைகள்தான் என்ன அருமையான படைப்புகள்! விரக்தியடைந்து போயிருக்கும் மனதில்கூட புத்துணர்ச்சியையும் வெளிச்சத்தையும் அவர்களால் உண்டாக்க முடிகிறது. கவலைகள் நிறைந்த இந்த உலகத்தில் சந்தோஷம், குழந்தைகள் வடிவத்தில் பிறவி எடுக்கிறது. சிறிது நாட்களுக்காகவாவது காலையில் கண் விழிப்பதிலும் பகல் நேரத்தை நகர்த்துவதிலும் ஒரு அர்த்தம் இருப்பதைப்போல் நான் உணர்ந்தேன். ஹோ! நான் எழுத நினைத்தது அதை இல்லையே!   

நடு கோடைக்காலம் முடிவடையும் நிலையில் இருந்தது. முதலில் விழுந்த மழைத்துளிகள் பட்டு முல்லைக் காடுகள் மலர்களை அணியும் காலம். எட்டு வருடங்களுக்கு முன்னால் சந்திரன் என்னிடம் விடைபெற்றுப் புறப்பட்ட நாளைப்போல அந்தச் சுவர் முல்லை மொட்டுக்களால் நிறைந்து வெள்ளை நிறத்தில் காட்சியளித்தது. நான் எல்லா மாலை நேரங்களிலும் அந்தச் சுவருக்கு அடியில் சென்று நின்றிருப்பேன். அவர் அன்று சொன்னது எவ்வளவு உண்மையானது! உணர்ச்சிவசப்பட்டு பாதி மயக்க நிலையில் நின்றிருந்த நிமிடம்! எனினும் அந்த உதடுகளின் உரசலை இப்போது கூட நான் உணர்கிறேன். எல்லா ஆசைகளும் இல்லாமல் போன பிறகும், நான் வாழ்வதற்கு உதவியாக இருப்பது அதன் வெப்பம்தான். கடவுளே! அவருடன் நான் நம்பிக்கையுடன் இருப்பதற்கு நீதான் உதவியாக இருந்தாய்.

ஆமாம்... நான் அதைப்பற்றி எழுதத்தான் போகிறேன். அன்று சாயங்காலம் மாலினியின் அண்ணன் வந்தார். கடந்த பத்து வருடங்களில் வீட்டிற்கு அப்படி யாரெல்லாம் வந்திருக்கிறார்கள்? யாரையும் நான் கவனிக்கவில்லை. யாரிடமும் பேசியதுமில்லை. எனினும், என்ன காரணத்தாலோ நான் ராஜன் அங்கு வந்ததை வெறுக்கவில்லை. இரவில் என் தாயும் அண்ணனும் மாலினியும் ஒன்று சேர்ந்து இருந்தபோது, நானும் அவர்களுடன் இருந்தேன். நான் எதுவும் பேசவில்லை. ராஜன் எவ்வளவு அழகாகப் பேசினார்! அண்ணன் அந்தக் கூட்டத்தில் முற்றிலும் ஒளியே இல்லாமல் போனதை நான் கவனித்தேன். ராஜனோ மாலினியையும் அவரையும் தான் விரும்பியபடியெல்லாம் கிண்டல் பண்ணிக்கொண்டிருந்தார். இப்படியே இரண்டு மூன்று மணி நேரங்கள் சந்தோஷமாக போனதே தெரியவில்லை என்று கூறினால் போதுமல்லவா? பன்னிரண்டு மணிக்கு நான் என்அறைக்குத் திரும்பி வந்தபோது, என் இதயம் என்ன காரணத்தாலோ குற்ற உணர்வுடன் துடித்துக் கொண்டிருந்தது. நான் சந்திரனின் படத்திற்கு முன்னால் விழுந்து வணங்கி, எனக்கு சக்தி தரும்படி வேண்டிக் கொண்டேன்.

காலையில் கண் விழித்தபோது, நான் மீண்டும் என்னுடைய வேதனைக்கு மத்தியில் இருந்தேன். அந்தச் சிறு குழந்தைகளும் ராஜனும் ஒரு மங்கலான நிழலைப் போல என் நினைவுகளில் தங்கி நின்றார்கள். எனக்கு மிகவும் நிம்மதியாக இருப்பதைப் போல் தோன்றியது. அந்தக் கவலை நிறைந்த சூழல் என் மனதின் தப்பித்தலுக்கு எந்த அளவிற்கு அவசியமாக இருக்கிறது என்பதையே இப்போதுதான் நான் புரிந்து கொண்டிருக்கிறேன்.

குளித்து முடித்து வந்த நான் சந்திரனின் படத்திற்கு மலர் மாலையை அணிவித்தேன். அந்த நேரத்தில் சோகமயமான ஒரு மணிச் சத்தத்தைப் போல என் இதயத்தின் துடிப்புகள் மிகவும் பலமாக உலகமெங்கும் கேட்கிற மாதிரி ஒலிப்பதைபோல் நான் உணர்ந்தேன். நான் அந்த படத்தையே மீண்டும் ஒருமுறை கூர்ந்து பார்த்தேன். எனக்கு ஆறுதல் கூறுவதற்காக ஒரு வார்த்தையாவது கூற அந்த உதடுகள் மலர்கின்றனவோ? எட்டு நெடிய வருடங்கள் வெந்து வெந்து எரிந்து கொண்டிருக்கும்- ஒரு நம்பிக்கை கொண்டிருந்த பெண்ணிடம் கனிவுடன் ஒரு வார்த்தையாவது கூற என் சந்திரன் முயற்சிக்க மாட்டாரா? தியானத்திற்கு நிகரான இந்த வாழ்க்கையின் புனிதத் தன்மையை அவர் அறிந்திருப்பாரா?

என் கைகள் வணங்க, கன்னங்கள் வழியாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. பின்னால் ஒரு காலடிச் சத்தம் கேட்டு நான் சுய உணர்விற்கு வந்தேன். அது ராஜன்தான் என்பதைக் கண்டுபிடிக்க எனக்கொன்றும் சிரமமாக இல்லை. நான் எழுந்து அங்கேயே நின்றிருந்தேன்.

"பாமா, நீ எவ்வளவு காலம் இப்படியே இருக்க நினைக்கிறே? உனக்கு ஒரு தடவையாவது வாழணும்னு தோணலையா?"

எனக்கு கடுமையாக வெறுப்பு தோன்றியது. என் மனம் ரசித்துக் கொண்டிருந்த அந்த இனிமையான சோகப் பாடலை அவர் எதற்காகத் தடை செய்ய வேண்டும்?

"இந்த பிரார்த்தனைகளுக்கு நான் ஒரு தடையாக இருக்கிறேன் என்பதை நினைத்து நான் வருத்தப்படுகிறேன். இருந்தாலும், இது தேவையே இல்லை. மனநோய் என்றுதான் நான் நினைக்கிறேன். என் எல்லா சக்திகளையும் பயன்படுத்தி நான் அதை மனம் திறந்த கூறுகிறேன். முடியுமென்றால் உன்னைக் காப்பாற்ற நான் விரும்புகிறேன்."

நான் அதே வெறுப்புடன் அவருடைய முகத்தைப் பார்த்தேன். என் கண்கள் சிறிது நேரம் எந்தவித அசைவும் இல்லாமல் அவரின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தன. அந்த முகம் அன்பும் இரக்கமும் நிறைந்ததாக இருந்தது. அவை அனைத்தும் எனக்கு கட்டாயம் தேவைப்படக்கூடியவை என்றும்; ஒரு நோயாளியிடம் மருந்து சகிதமாக வரும் நர்ஸைப்போல அவர் தேடி வருவது எனக்கு கட்டாயம் தேவைப்படுகிற ஒன்று என்றும் என் இதயம் என்னிடம் கூறியது. ஆனால் என்னால் எதுவும் பேச முடியவில்லை. நான் பார்வையை அங்கிருந்து நீக்கி, எதுவும் பேசாமல் நின்றிருந்தேன்.


"பாமா, நான் சொல்றதை நீ கேக்குறியா? நீ எந்த உலகத்திற்காக இந்த தவத்தைச் செய்யிறே? என்னிடம் கூற மாட்டாயா? உன்னை மிகவும் விரும்பக்கூடிய என்னிடம்...!"

நான் என்ன பதில் கூறுவது என்பதைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருந்தபோது, என் உதடுகள் இந்த வார்த்தைகளைக் கூறின;

"நன்றி... ஆனால், நீங்க எனக்காக கஷ்டப்பட வேண்டிய அவசியமே இல்லை. என்னை நிம்மதியாக இருக்க விடுங்க."

நான் அப்போதும் அந்த முகத்தைப் பார்த்தேன். அதிலிருந்து எனக்கு என்ன புரிந்தது என்பதைப் பற்றி என்னால் உறுதியாகக் கூற முடியவில்லை. ஆனால், என்னுடைய வார்த்தைகள் மிகவும் கொடூரமானவையாக இருந்தன என்பதை நான் உணர்ந்தேன். அவருக்கே தெரியாமல் அந்த வார்த்தைகளை நான் அழிக்க முடிந்திருந்தால், நான் நிச்சயமாக அதைச் செய்திருப்பேன்.

"இப்படியெல்லாம் இருக்கும் என்று நான் நினைக்கல. சிரமம் கொடுத்ததற்கு என்னை மன்னிப்பேல்ல? நான் இதைப்பற்றி இனியொரு தடவை பேச மாட்டேன். சரியா?"

அவர் என்னுடைய பதிலை எதிர்பார்த்திருக்க வேண்டும்- ஒரு நிமிடம் அங்கேயே நின்றிருந்தார். நான் எதுவும் கூறவில்லை. கூறக்கூடாது என்று நினைத்தேனா என்ன? அது எனக்குத் தெரியாது. 'மன்னிக்கிற அளவுக்குத் தவறு எதுவும் செய்யலையே!' என்று கூறியிருக்க வேண்டும் என்று நான் நினைத்தேன். எனினும் கூறவில்லை. அதற்குள் அவர் அறையை விட்டுப் போயிருந்தார்.

நான் என்னுடைய மனதைச் சமாதானப்படுத்துவதற்காக முயற்சித்தாலும், அந்த நடவடிக்கை மனப்பூர்வமானதாக இல்லை என்ற எண்ணம் என்னை துன்பத்திற்குள்ளாக்கியது. நான் இதே விஷயத்தை இன்னும் சற்று ஒழுங்காகக் கூறியிருக்கலாம். அவருடைய வார்த்தைகள் அந்த அளவிற்கு வெறுப்பைத் தரக்கூடியதா என்ன? ஒரு வகையில் பார்க்கப் போனால், என் சிந்தனைகளின் வெளிப்பாடாகத்தானே அவை இருந்தன? இல்லாவிட்டால் அவர் அதைக் கேட்டிருக்கக் கூடாதா? வேண்டாம்... வேண்டாம்... நான் அதை விரும்பவில்லை. ஆனால், நான் அதைக் கூறியிருக்கலாம். அதைக் கேட்டு அவர் சந்தோஷம் கூட அடைந்திருக்கலாம். ஒரு பெண் எதிர்பார்த்த மாதிரி நடப்பதைப் பார்த்து எந்த ஆண்தான் விரும்பாமல் இருப்பான்?

நான் மீண்டும் ராஜனைத் தேடினேன். ஆனால், அவர் வீட்டை விட்டுப் போய்விட்டிருந்தார்.

இரண்டு வாரங்கள் கழித்து எனக்கு ராஜனிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவர் மன்னிப்பு கேட்டிருந்தார். நான் அவருக்கு எழுத வேண்டிய வார்த்தைகள்... என் பதில் கடிதத்தில் நான் அதை அப்படியே எழுதினேன். அந்தக் கடிதம் எங்களை இணைக்கக்கூடிய ஒரு சங்கிலியாக ஆனது. தொடர்ந்து சில நாட்கள் நாங்கள் ஒருவருக்கொருவர் கடிதம் எழுதிக் கொண்டிருந்தோம். ஓ... நான் என்னுடைய தவறுகளைத் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். இந்த 'திருமணமாகாத விதவை'யின் சபலங்கள் அவள்மீது நம்பிக்கை வைத்திருக்கும் யாருக்கும் தெரியாமலே முடிவுக்கு வரட்டும். இரண்டு வருடங்கள் நீடித்த அந்த மென்மையான உறவை நான் இறுதியாக முடிவுக்குக் கொண்டு வந்தேன்.

'எனக்கு சக்தி இல்லை. என்னை மறந்துடுங்க. எப்போதும் உங்களுடைய தங்கையாக இருக்க வேண்டுமென்பதுதான் என்னுடைய விருப்பம். இறுதியாக நான் தீர்மானித்த முடிவு இதுதான்.'

ஹா! அந்த வார்த்தைகளை எழுதியபோது, என் இதயம் இரண்டாகப் பிளப்பதைப்போல் நான் உணர்ந்தேன். ஆனால், என்னால் வேறு எதுவும் செய்ய முடியவில்லை. நான் என்னைக் காப்பாற்றிக் கொண்டேன். கடவுளே! இந்த தைரியம் எப்போதும் எனக்கு இருக்க வேண்டும். அடுத்த நிமிடம் நான் புன்னகைத்தேன். என் உணர்ச்சிகள் அப்போது எப்படி இருந்தன? நான் புனிதமானவள்! என் சந்திரனுடன் சேர்ந்து நான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

எனினும், என் இதயத்தில் ஒரு மெல்லிய கவலை இருந்தது. அதுவும் இன்று இல்லாமல் போனது. தைரியசாலியான அந்த இளைஞர் இதோ திருமணம் செய்து கொண்டுவிட்டார். என்னுடைய அனுமதிக்காக அவர் காத்திருந்திருக்கிறார் அவ்வளவுதான்.

அடுத்த மாதம்

நான் என்னுடைய சிந்தனைகளை பலமான தவச் செயல்கள் மூலம் புனிதப்படுத்துகிறேன். ஹா! இவை எவ்வளவு அருமையான நாட்கள்! நான் என்னுடைய சந்திரனைத் திரும்பவும் அடைந்திருக்கிறேன். ராஜனிடமிருந்து அவரை வேறுபடுத்திப் பார்க்க என்னுடைய மனம் எவ்வளவோ பாடுபட்டிருக்கிறது! எல்லாம் கடந்து போன கனவுகள்... இன்று அங்கே சந்திரன் மட்டுமே இருக்கிறார். என்னை நம்புகிற- நான் நம்பும் சந்திரன் மட்டும். நாங்கள் இப்போதும் எப்போதும் சேர்ந்தே இருக்கிறோம். எங்களுடைய இதயங்கள் ஒன்று சேர்ந்து பாடுகின்றன. என்ன இனிமையான பாடல்! என் கண்கள் பல வண்ணங்களைக் கொண்ட அழகான காட்சிகளைக் காணுகின்றன! நாக்கு இனிப்பான பொருட்களை ருசிக்கின்றன. அந்தத் தொடலால் உண்டாகும் வார்த்தையால் விவரிக்க முடியாத புத்துணர்ச்சி சிறிதுகூட மறையாமல் அப்படியே இருக்கும். கடவுளே! இந்த இனிமையான அனுபவங்களுக்காக என்னை நிரந்தரமாக விட்டுவிடு!

பன்னிரண்டு வருடங்கள் கழித்து...

ன்னுடைய படகு கட்டுப்பாட்டை விட்டு விலகி கடலின் ஓட்டத்திற்கு எதிராக நீங்கிக் கொண்டிருக்கிறது. எனினும், என்ன கடுமையான வேலை! நீர் ஓட்டத்துடன் போராட வேண்டிய தேவை இல்லாமலிருந்தாலும், நான்மிகவும் சோர்வடைந்து விட்டேன். காற்று எனக்கு சாதகமாக இலலை. பலவற்றையும் என்னால் விளக்கிக் கூற சிரமமாக இருக்கிறது. சபலங்களைக் கடந்து கொண்டு அறிவு செயல்பட ஆரம்பித்துவிட்டதோ? நான் சிந்திக்கிறேன். எனக்கே விருப்பமில்லாமல் சிந்திக்கிறேன். எதன் தொடர்பான காரிய, காரண உறவையும் நான் தெரிந்துகொள்ள வேண்டும். வாழ்க்கை மீது நான் கொண்டிருக்கும் விருப்பம் என்னை இந்த அளவிற்கு எந்தச் சமயத்திலும் பாடாய்படுத்தியதில்லை. ஹா! அதை நான் கடந்து செல்கிறேன். என் அனைத்து பலங்களுடனும் நான் அதைச் செய்கிறேன். எனினும், எனக்கு அமைதி இல்லை.

சந்திரன் நிரந்தரமாக என்னைவிட்டுப் பிரிந்து போய்விட்டார். அது நடந்தது பன்னிரண்டு வருடங்களுக்கு முன்பு. அவர் இனி உயிருடன் வரப்போவது இல்லை. நான் கனவுகளின் உலகத்தில் இருக்கிறேன். தேவைப்பட்டால், நான் கண் விழிக்கலாம். என் தாயின் கண்ணிரைத் துடைப்பதற்கும், உயிரற்ற இந்த இல்லத்தை வாழ்வின் புத்துணர்ச்சியுடன் இருக்கும்படி செய்வதற்கும் என்னால் முடியும். எல்லாவற்றையும் வெகு வேகமாகச் செய்ய வேண்டும். என்ன கொடுமையான தனிமை! என்னை ஈர்க்கக்கூடிய விஷயங்கள் சுற்றிலும் முழங்கிக் கொண்டிருக்கின்றன! 


பதினைந்து வருடங்கள் கழித்து...

ந்திரனின் கலைப் படைப்புகளைக் கொண்டு நான் என்னுடைய எல்லா சுவர்களையும் அலங்கரித்திருக்கிறேன். அவருக்காகப் பாடிய அந்தப் பாடலை இசைத்தட்டு திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருக்கிறது. அந்தப் புகைப்படமும் என்னுடைய மேஜைமேல் இருக்கிறது. எனினும், ஹா! நான் கூறுகிறேன்- என் சந்திரன் என்னுடைய சிந்தனைகளில் நிற்கவில்லை. நான் பல வழிகளையும் பயன்படுத்தி அதற்காகப் பல வேளைகளிலும் முயன்று பார்க்கிறேன். நான் அவரை நினைத்து நினைத்து அழுது கிடந்த நாட்கள் எவ்வளவு இன்பமானவையாக இருந்தன! இன்று என்னால் அப்படி இருக்க முடியவில்லை. நான் எல்லாவற்றையும் மறந்து போகிறேன். எதனுடனும் எனக்கு எந்தவொரு பற்றும் இல்லை. மனப்பூர்வமாக குலுங்கிக் குலுங்கி அழுவதற்கு இனிமேல் என்னால் எந்தச் சமயத்திலும் முடியாத என்பதுதான் உண்மை. தேங்கி நிற்கும் ஒரு கவலை மட்டும் எப்போதும் எனக்குள் தங்கி நின்றிருக்கிறது. அது என்னுடைய வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே ஆகியிருக்க வேண்டும். அதிகாலை வேளையில் சூழல்களைச் சுறுசுறுப்பாக்கிக் கொண்டு சூரியனின் கதிர்கள் என்னுடைய சாளரத்தின் வழியாகக் கடந்து வரும் போதும், நிறைய காய்த்து தொங்கிக் கொண்டிருக்கும் மாமரத்தின் கிளைகளை வருடிக் கொண்டு உச்சிப் பொழுது வெயில் குறும்புத் தனங்களைக் காட்டுகிறபோதும், அந்த மரத்துப்போன உணர்ச்சியுடன் என் கண்களின் வழியாக வெளிப்படுவது உண்டு.

அந்தக் கதிர்கள் வாழ்க்கைக்குத் தேவையான வெப்பத்தைத் தருகின்றன. அந்தக் கனிகளில் அடுத்த தலைமுறை ஒளிந்திருக்கிறது. உலகம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. அது என்னை மறந்துவிட்டது. நான் நம்பிக்கையுடன் வழிபட்ட அதே உலகம்! என்னுடைய வாழ்வின் ஆதாரங்கள் மதிக்கப்பட்டபோது எனக்கு மனதில் சந்தோஷம் இருந்தது. இன்று நான் கைவிடப்பட்டவள். ஹா! நான் என்மீதே நம்பிக்கை கொண்டவளாக இருந்திருக்கிறேனா?

இருபத்து இரண்டு வருடங்கள் கழித்து...

ன் தாய் எங்கள் அனைவரையும் விட்டு நிரந்தரமாகப் பிரிந்து சென்று ஒரு மாதம் ஆகிவிட்டது. முன்பெல்லாம் அந்த நிமிடங்களை நேருக்கு நேர் சந்திப்பதைப் பற்றி நினைத்து நான் எந்த அளவிற்கு பயந்திருக்கிறேன்! துக்க அனுபவங்கள் உண்மையாகவே அவற்றைப் பற்றி எதிர்பார்த்துக் கொண்டிருந்ததைவிட, மிகவும் எளிதானவையாகவே இருக்கின்றன. இல்லாவிட்டால் அன்றே நொறுங்கிப் போயிருக்க வேண்டிய நான் எப்படி இப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்! நான் வாழ்கிறேன் என்பதல்ல... பழைய மாதிரியேதான்... ஆமாம்... அதுதான் உண்மை. எல்லாவற்றையும் வெறித்தனமாக அன்பு செலுத்திய அவருடைய- மங்கலாகத் தோன்றினாலும் பிரகாசமான முகம் அவ்வப்போது நினைவுகளில் வருவது உண்டு என்பதை நீக்கிவிட்டுப் பார்த்தால், அந்த ஆழமான உறவை வெளிப்படுத்தக்கூடிய விதத்தில் எஞ்சி இருப்பது என்ன? ச்சே...! நான் இந்த அளவிற்கு நன்றி இல்லாதவளாக ஆகிவிட்டேனா என்ன? என் அன்பிற்குரிய அன்னைக்காக இரண்டு துளி கண்ணீர் கூடவா என்னிடம் இல்லாமல் போய்விட்டது?

இல்லாவிட்டால் அந்த விஷயத்தில் ஒரு மாறுபட்ட பெண்ணாக ஏன் இருக்கிறேன்? நான் கவலையின் இனிமையான ஆனந்தத்தை சுவாசிக்கிறேன். அது எத்தனையோ வருடங்களாக இருந்து வரும் நிரந்தரமான தவத்தால் மட்டுமே தன்னகப்படுத்த வேண்டிய உன்னதமான உணர்வு என்பதுதான் உண்மை. ஹா! நான் அதைக் கற்றிருக்கவில்லையென்றால்...!

நளினி இப்போது என்னுடன்தான் இருக்கிறாள். அண்ணனின் ஐந்து குழந்தைகளில் இரண்டாவது குழந்தையான அவள்மீதுதான் என் தாய்க்கு மிகுந்த பாசம் இருந்தது. பாவம்! அவளுடைய கண்கள் இப்போதுகூட காயாமல் ஈரமாகவே இருக்கின்றன. எல்லா விஷயங்களும் இனிப்பாக இருக்க வேண்டிய இந்த பதினைந்தாவது வயதில் அவள் தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறாள். தன்னுடைய அண்ணனைப்போல எதிலும் அக்கறையே இல்லாமல் இருக்க அவளால் முடியவில்லை. அப்பிராணிச் சிறுமி! அவள் மன ஆறுதலுக்காக எப்போதும் தன்னுடைய சித்தியைத் தேடி வருகிறாள். கவலையைப் பற்றிய ரகசியம் அவளுக்குத் தெரியாது. என் தலையில் இருக்கும் வெள்ளை முடிகளை அவள் பிடுங்கி எறிய முயற்சிக்கிறாள். சித்தியான நான் கிழவியாக ஆகிக் கொண்டிருக்கிறேனாம்... நாற்பத்து இரண்டாவது வயதில் ஒருத்தி எப்படிக் கிழவியாக ஆக முடியும்? சிறு பெண்! அந்த வெள்ளை முடியைப் பற்றிய ரகசியம் அவளுக்குத் தெரியாது. கவலைக்கு மத்தியிலும் அது சிரித்துக் கொண்டிருக்கிறது! வெண்மை பளிச்சிடும் புன்னகை! நளினிக்கு நல்ல கருப்பு நிறத்தில் தலைமுடி இருக்கிறது. எல்லா கருப்பு நிற முடியையும்போல, அது கவலையின் அடையாளம்தான். பல வருடங்களுக்கு முன்னால் அவளுக்கு இருப்பதைப்போல என்னுடைய தலைமுடிகள் கருப்பு நிறத்தில் இருந்தபோது, நான் எவ்வளவோ கவலையில் மூழ்கிக் கிடந்தேன்! அவை புன்னகைப்பதற்குப் பயிற்சி பெற நான் எவ்வளவு காலம் காத்திருக்க வேண்டியதிருந்தது!

இருபத்து மூன்று வருடங்கள் கழித்து...

நான் ஒரு எழுத்தாளராக இருந்தால், கவலையைப் பற்றி எவ்வளவோ அருமையான நூலை என்னால் எழுதியிருக்க முடியும்! இல்லாவிட்டால் அதற்கு என்னைவிடத் தகுதி கொண்ட நபர் என்று யார் இருக்கிறார்கள்? நான் அதில் என்னவெல்லாம் எழுதுவேன்? சோகத்தைப் பற்றிய என் கருத்து என்ன? எதுவும் தெளிவாக இல்லை. இந்த ஏடுகளில் என் உணர்வுகளையும் சந்தோஷங்களையும் நான் எந்த அளவிற்கு எழுத முயற்சித்தேன்! எல்லாம் எவ்வளவோ முழுமையற்றவையாக இருக்கின்றன! இல்லாவிட்டால் உண்மையற்றவை. என் மனதைப் பிரதிபலிக்கிற மாதிரி ஒரு வரியையாவது எழுத எனக்கு முடிந்திருந்தால்...? ஒருவேளை அது யாருக்கும் முடியாத ஒன்றாக இருக்கலாம். மனதின் நிறைந்தனவாகவும் இருக்கின்றன. பளிங்குத் தரையில் விழுந்த பாதரச  உருண்டையைப் போல அது நெருங்கும் இடங்களில் இருந்தெல்லாம் வழுக்கி வழுக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. அதற்குக் குறிப்பிட்டுக் கூறும்படியான லட்சியமோ சீரான தன்மையோ கிடையாது. நிலைமை அப்படி இருக்கும்போது பலமற்ற என் பிடியில் அவை எப்படி அடங்கும்? எல்லவாற்றுக்கும் மேலாக, மாலை நேர ஆகாயத்தில் வெள்ளை நிற மேகங்களுக்க மத்தியில், கருப்புநிறப் புள்ளிகளைப்போல மங்கலாகவும் தெளிவாகவும் பறந்து போய்க் கொண்டிருக்கும். வானம்பாடிகளுடன் அவை தெளிவில்லாமல் இருக்கின்றன. கனவில் இருந்து அவற்றை வேறுபடுத்திப் பார்ப்பது என்பது சிரமமான ஒன்று. அதாவது அவற்றைத் தேடிப்பிடிததுக் குறிப்பிட்டால், அது எந்த அளவிற்கு பயங்கரமான ஒன்றாக இருக்கும்! பண்பாட்டில் என்றல்ல- மனித இனத்தின் மீது நம்பிக்கை கொண்டிருக்கும் யாரையும் அதிர்ச்சியடையச் செய்யும் என்னென்ன எண்ணங்கள்- அபூர்வமாக என்றாலும் கூட- நம்முடைய மன வெளியில் பதிந்து மறையாமல் இருக்கின்றன! ஒரு பெண் சிந்திப்பதற்கும் செயல்படுவதற்கும் பராம்பரியம் அனுமதித்திருக்கும் வழிமுறைகளிலிருந்து சிறிதளவு கூட இடது பக்கமோ வலது பக்கமோ விலகுவதற்கு எனக்கு தைரியம் இல்லை.


மனம் உண்மையாகவே அதன் வரம்புகளைத் தாண்டியிருக்கும். அதை வெளிப்படுத்துவதற்கு என் மனம் எவ்வளவோ முறை துடித்தாலும், ஏற்கனவே இருக்கும் முடிவுகள் ஒரு ஆமையைப் போல அவற்றின் ஓட்டுக்குள் தலையை இழுத்துக் கொள்கின்றன. ஒரு சம்பவம் என்னிடம் உண்டாக்கும் உணர்வுகளை என்னால் இப்போது வேறுபடுத்திப் பார்க்க முடியவில்லை. ஒவ்வொன்றையும் மேலும் அதிகமாக ஆராய்ந்து அறிய முயலும் ஒரு இலக்கியவாதியாக என்னால் ஆக முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! ஹா! ஒரு பெண்ணின் வரையறைகளுக்குள் இருந்துகொண்ட நான் என்னவெல்லாம் எழுதியிருப்பேன்!

இருபத்து நான்கு வருடங்கள் கழித்து...

ளினியின் கண்களில் புதிதாக ஒளிர்ந்து கொண்டிருக்கும் உணர்ச்சிகள் சரித்திரம் திரும்புகிறது என்பதற்கான அடையாளங்களாக இருக்குமோ? நேற்றிலிருந்து என் சிந்தனை அதைப் பற்றியே உள்ளது. அப்பிராணிப் பெண்! கடவுள் அவளுக்கு அருள் செய்யட்டும்! அந்த இளமை தவழும் வயதில் எந்த அளவிற்கு ஆர்வம் நிறைந்திருக்கும்! இருபத்தாறு வருடங்களுக்கு அப்பால் என்னுடைய நினைவு எவ்வளவு வேகமாகப் பயணிக்கிறது! அது மட்டுமல்ல- இப்போது இருக்கும் காலத்தைவிட அந்தப் பழைய நினைவுகள் எவ்வளவு தெளிவாகவும் சந்தோஷம் அளிப்பவையாகவும் இருக்கின்றன? அன்பு செலுத்தவும், எதிர்பார்ப்பில் இருக்கவும், புன்னகைப்பதற்கும் என்றே இருக்கக்கூடிய வயது அது. ஆமாம்... அன்று நான் நளினியைப் போலவேதான் இருந்தேன்- தோற்றத்திலும்... என் தாய் அதை எப்போதும் என்னிடம் கூறிக் கொண்டிருப்பாள். அப்போதைய சிந்தனைகளும் ஆசைகளும்! வேகமாக எழுந்து, முதல் தடவையாக தன் தாயின் அடி வயிற்றைத் தேடும் கன்றுக் குட்டியைப்போல அது மிகவும் சாதாரணமானதாகவும் கள்ளங் கபடமற்றதாகவும் இருக்கும்! நளினி அழகான அந்த வசந்தத்தின் அடிவாரத்தில் இப்போது இருக்கிறாள். அவளுடைய பாதத்திற்குக் கீழே ஸ்ப்ரிங் குஷன் இருக்கிறது. ஒரு இடத்திலும் அவளால் நிலையாக நின்று கொண்டிருக்க முடியாது. அவள் எதையெதையோ தெரிந்து கொள்ள நினைக்கிறாள்! என் மேஜை மீது இருக்கும் சந்திரனின் படத்தைப் பற்றி அவள் இதற்குள் ஓராயிரம் தடவையாவது விசாரித்திருப்பாள். நாங்கள் அறிமுகமான விதம், காலம், அவருடைய சிறப்பம்சங்கள், பேசக்கூடிய விஷயங்கள்... இப்படி எவ்வளவோ. இறுதியில் மனதில் வைத்துக் கொண்டிருக்காமல், அவள் கல்லூரியில் இருக்கும் தன் நண்பனைப் பற்றிச் சொன்னாள். அழகான இளைஞன். நேற்று அவளுடைய விருந்தாளியாக இங்கு வந்திருந்தான். நான் அந்தச் சமயத்தில் சந்திரன் முதல் தடவையாக இங்கு வந்த நாளைப் பற்றி நினைத்துப் பார்த்தேன். பையன் கொஞ்சம் கருப்பு நிறத்தில் இருந்தான். எதுவும் முழுமையடைந்திராத உடல் உறுப்புகள் எனினும் ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்! அதே அடக்கம், அதே புன்னகை, அதே பேச்சு! அண்ணனும் மாலினியும் இப்படித்தான் இருந்திருப்பார்களா? ராஜனும் அவருடைய சினேகிதியும்? எனக்கு எதுவும் புரியவில்லை. நான் என் செல்லம் நளினிக்கு நல்லது நடக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.

அதே வருடம் ஆறு மாதங்கள் கழித்து...

ளினியின் காதல் உறவு இப்போது மிகவும் வளர்ச்சியடைந்து விட்டிருந்தது. முழுமையான ஒரு இளைஞனாக அவள் பாலனைப் பார்த்தாள். அவனைப் பற்றிய நினைவுகளில் அவள் சந்தோஷம் கண்டாள். அவளுடைய கண்கள் இப்போது மேலும் பல மடங்கு அழகாக இருந்தன. அந்த நடவடிக்கைகளிலும் ஆச்சரியப்படம் வகையில் மாறுதல்கள் உண்டாயின. இதுநாள் வரையில் எதுவுமே தெரியாமலிருந்த ஒரு அப்பாவிப் பெண்ணாக இருந்த அவள், இப்போது ஒரு துணிச்சல் குணம் கொண்ட பெண்ணாக மாறிவிட்டிருந்தாள். அவள் சிந்திக்கவும் வாழவும் கற்றுக் கொண்டிருந்தாள். அவளுடைய ஒவ்வொரு வார்த்தைக்கும் செயலுக்கும் இப்போது நோக்கம் இருந்தது. இவையெல்லாம் எப்படி நடக்கிறது? ஒரு இளைஞனின் நட்பும், அவனைப் பற்றிய நினைவுகளும் ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கைக்கு இந்த அளவிற்கு அவசியமாகத் தேவைப்படும் உயிர்ப் பொருள்களா? நான் நினைத்துப் பார்க்கிறேன். ஹா! அவை ஒவ்வொன்றும் எனக்கு எவ்வளவு தெளிவாகப் புரிகிறது! அதைத் தாண்டி அந்த மிகப்பெரிய சக்தியின் ஓட்டத்தில் வாடிக் கருகிப் போகும் வாழ்க்கையைப் பற்றியும்!

இருபத்தைந்து வருடங்கள் கழித்து...

ளினிதான் மிகவும் பாசம் வைத்திருந்த அத்தையின் மரணச் செய்தியுடன் இன்று என்னிடம் வந்தாள். அந்தச் சம்பவத்தை என்னால் நீண்ட நேரத்திற்கு நம்பவே முடியவில்லை. பாவம் ராஜன்! தாய் இல்லாத மூன்று குழந்தைகளையும் வைத்துக் கொண்டு அவர் என்ன செய்வார்? வீட்டுக் காரியங்களையெல்லாம் தன் மனைவியிடம் ஒப்படைத்து விட்டு, எந்தவிதக் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியுடன் வாழ்ந்து கொண்டிருந்த அவர் இனி எப்படி வாழ்க்கையை நடத்துவார்? அந்தக் குடும்பத்தின் அடித்தளமே ஆட்டம் கண்டிருக்கிறது. அந்த இல்லத்தரசி இல்லாதஅந்த வீட்டைப் பற்றி சிந்தித்துப் பார்ப்பதற்கே முடியவில்லை. நளினி தான் மிகவும் அன்பு வைத்திருந்தஅந்த அத்தையை நினைத்துத் தேம்பித் தேம்பி அழுதாள். அவளுக்கு இனி மாமாவைப் பார்ப்பதற்கான மனத் தெம்பே இல்லை. எனினும், என்னிடம் பலமான வேதனையை உண்டாக்கியது அந்த எண்ணங்களா? இருக்கலாம். இல்லாவிட்டால் அப்படியே இருக்க வேண்டும் என்று நான் கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன். இந்தச் சம்பவங்கள் அனைத்துடனும் தொடர்பு கொண்டு, ஏதாவது முன்பே முடிவெடுக்கப்பட்ட விஷயங்கள் இருக்குமோ? இருக்கும் என்று நம்ப என்னால் முடியவில்லை. அப்படி இருந்தால், அதற்குக் காரணம் யாராக இருக்கும்? அந்த மனைவியின் இடத்தில் வேறொரு பெண் இருந்திருந்தால்கூட, இந்தச் சம்பவம் நடந்திருக்குமா? அப்படியென்றால்... நான்... ஆமாம்... அப்படி நடந்திருந்தால், நான் சிறிதும் கவலைப்பட்டிருக்கவே மாட்டேன். ஹோ! நான் என்னவெல்லாம் சிந்திக்கிறேன்! இந்த எண்ணங்கள் எதுவும் என்னுடையவை அல்ல. நான் சாதாரணமாக நினைத்துப் பார்த்தேன். அவ்வளவுதான்! ராஜனும் இந்த நேரத்தில் அப்படி எதையாவது நினைத்திருப்பாரா? ச்சே...! அவர் இப்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் வேதனைகளை உண்மையாகவே என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் சிறிதும் இரக்கமே இல்லாமல் சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். எனினும், வாழ்ந்துவிட்டுக் கவலைப்படுவது வாழாமலே இருப்பதைவிட உயர்ந்ததாயிற்றே!

இருபத்தாறு வருடங்கள் கழித்து...

ளினியின் திருமணம் நடப்பதற்கு இன்னும் நான்கு நாட்கள்தான் இருக்கின்றன. ரவி அண்ணனும் குடும்பமும் வந்து சேர்ந்து ஒரு வாரம் ஆகிவிட்டது. மாலினி எவ்வளவு அருமையான ஒரு தாயாக இருக்கிறாள்! குழந்தைகளைக் குளிக்கச் செய்வதிலும், அவர்களுடைய தேவைகளை நிறைவேற்றுவதிலும் அவள் நன்கு பழக்கப்பட்டிருந்தாள். அவர்களுடன் சரி நிகராக உரையாடவும் விவாதிக்கவும், அவளுக்கு ஒரு சிறு குழந்தையைவிட மிகவும் எளிதான மன ஓட்டங்களே இருக்கின்றன என்பதைப் போலத் தோன்றும்.


புடவையில் ஒரு சிறிய சுருக்கம் விழுவதைக் கூட விரும்பாமல், ரோஜா மலரின் இதழ்களைப் போல் இருக்கும் தன் பாதங்களை வெல்வெட் செருப்புகளிலிருந்து எடுக்காமல் எப்போதும் அணிந்திருந்த தனக்குள் இருந்த ஒரு கல்லூரி மாணவியை இப்போது மாலினியால் அடையாளம் கண்டுபிடிக்கத்தான் முடியுமா, எவ்வளவோ வாழ்ந்துவிட்ட அவள் அவை எல்லாவற்றையும் மறந்துவிட்டாள். இன்னும் பத்தோ, இருபதோ வருடங்கள் கடந்துவிட்டால், நளினியும் இந்தக் கனவுகள் நிறைந்த காலங்களை முற்றிலும் மறக்கத்தான் போகிறாள். வாழக்கையின் கரையில் இருந்து கொண்டு, இவை எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டிருப்பது என்பதுதான் எவ்வளவு சுவாரசியமான ஒரு விஷயமாக இருக்கிறது! இருபத்தாறு வருடங்களுக்கு முன்பு உண்டான அனுபவங்களுக்கு என்னால் எவ்வளவு சீக்கிரமாகத் திரும்பிச் செல்ல முடிகிறது! இன்று நளினியும் பாலனும் ஒன்றாக அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டுப் பிரிந்து சென்ற காட்சியைப் பார்த்தபோது நான் என்னவெல்லாம் சிந்தித்தேன்! நிறைய மலர் மொட்டுகள் இருந்த அந்த முல்லைச் செடிகளோடு சேர்ந்து நின்று கொண்டு, மாலை நேரத்தின் மங்கலான நிலவு வெளிச்சத்தில் அவர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். பிறகு... ஹா! அதே காட்சிதான். இன்னும்இருபதோ இருபத்தியிரண்டோ வருடங்கள் கழித்து அடுத்த தலைமுறை இதே செயலைத் திரும்பச் செய்வதை என்னால் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஹா! எவ்வளவு வேகமாக வருடங்கள் கடந்தோடுகின்றன! பாவம் நளினி! ஒரு தாயாக ஆவதைப் பற்றியும் பிறகு மகளுடைய திருமணத்தைப் பற்றியும் இப்போது அவளால் நினைத்துப் பார்க்க முடியுமா? எதையும் நினைப்பதற்கு முன்பே, அவை அனைத்தும் அவளுடைய தலைமீது வந்து விழுந்துவிடும். திருமணத்திலிருந்து அதற்கான தூரம் எவ்வளவோ குறைவுதான்.

அடுத்த நாள்

திருமணத்திற்கான ஏற்பாடுகள் 'மளமள'வென்று நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. என்னைச் சுற்றிலும் வாழ்க்கை இரைச்சலிட்டு ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த அலையடிகளில் இருந்து முற்றிலும் ஒதுங்கி இருக்க என்னால் முடியவில்லை. இதயத்தின் அடித்தட்டில் இனம்புரியாத இனிய ஆனந்தம் தாண்டவமாடியது. என்னைச் சுற்றி துடித்துக் கொண்டிருந்த பிரகாச வெளிப்பாடுகள் முழுமையாக என்னை ஆக்கிரமித்து விட்டிருப்பதை என்னால் உணர முடிந்தது. இன்று வானொலியில் பாடியபோது (உங்களுக்கு ஆச்சரியம் உண்டாகலாம்) எனக்கு அது முற்றிலும் புரிந்துவிட்டது. நான் என்னுடைய குரலைத்தான் கேட்கிறேனா என்று நானே ஆச்சரியப்பட ஆரம்பித்து விட்டேன். பத்தொன்பது வருடங்களுக்குப் பிறகு என் குரலை ஆயிரக்கணக்கான மக்கள் இன்று முதன்முறையாகக் கேட்டார்கள். என்னுடைய தலை முடியிலும் முகத்திலும் வெளியே தெரியுமாறு வந்து சேர்ந்திருக்கும் மாற்றங்கள் உண்மையாகவே என்னுடைய குரலை பாதிக்கவேயில்லை. நான் எதற்காக அவற்றைப் பிடித்து அழுத்தி வைத்து நாசம் பண்ணினேன்? இல்லாவிட்டால் இன்று அந்த இசைத் திருவிழாவின் ஆரம்ப நாளிலேயே நான் பாடி ஆக வேண்டும் என்று அவர்கள் ஏன் என்னைக் கட்டாயப்படுத்த வேண்டும்? ஆகாசவாணியில் இருப்பதிலேயே மிகவும் அதிகமாக திரும்பத் திரும்ப ஒலித்திருக்கும் அந்த இசைத்தட்டு என்னை அவர்களுடைய இசை ரசிகர்களுடன் அந்த அளவிற்கு நெருங்கச் செய்திருக்க வேண்டும். ஒரு பலவீனமான நிமிடத்தில் நான் அதற்கு சம்மதிக்கவும் செய்தேன். அதன் விளைவு என்னவாக இருக்கும்? என்னுடைய ஆழமான தவத்தையும், வாழ்க்கையின் புனிதத்தையும் அது கேள்வி கேட்டுவிடுமோ என்று நான் பயப்படாமல் இல்லை. எனினும், ஒரு வயதான பெண்ணுக்கு இருக்க வேண்டிய மன தைரியத்தை வயதுக்கு வந்திருக்கும் நளினி எனக்குத் தருகிறாள். நேரடியாக இசை ரசிகர்களைச் சந்திக்க வேண்டிய அவசியம் இல்லாத ஒரு உறவாயிற்றே இது!

அடுத்த நாள்

ன்று காலையில் ராஜனும் குழந்தைகளும் வந்தார்கள். அவர் எந்த அளவிற்கு மாறியிருக்கிறார்! முதுமையின் எல்லா அடையாளங்களும் அந்த முகத்தில் தெளிவாகப் பதிந்திருக்கின்றன. பழைய விஷயங்களைப் பற்றி நான் ஞாபகப்படுத்தினாலும், ராஜனின் நடவடிக்கைகளில் அவற்றையெல்லாம் அவர் மறந்துவிட்டதைப் போலத் தோன்றியது. அதை மீண்டும் நினைவிற்குக் கொண்டு வர வேண்டிய அவசியம் எதுவும் இருப்பதாகத் தோன்றாததால், நானும் அதே மாதிரி இருப்பதைப் போல் காட்டிக் கொண்டேன்.

ராஜனின் மூத்த மகள் மல்லிகாவிற்குப் பன்னிரண்டு வயது நடக்கிறது. இளைய மகள் லதாவிற்கு மூன்று வயது. சுமா வயதில் அவர்களுக்கு நடுவில் இருக்க வேண்டும். மல்லிகா எப்போதும் நளினியின் அறையிலேயே இருந்தாள். லதா தன் தந்தையை விட்டுப் பிரிவதே இல்லை. ஏதாவது நடக்க முடியாத விஷயத்திற்காக அவள் ராஜனைப் பாடாய்ப்படுத்திக் கொண்டிருப்பாள். இல்லாவிட்டால் அழுது கொண்டிருப்பாள். ஆண் பிள்ளை என்று ராஜன் அழைக்கும் சுமா மிகுந்த சுறுசுறுப்புடன் எல்லா இடங்களிலும் ஓடித்திரிந்து கொண்டிருப்பாள். அந்த வகையில் இந்த சுற்றுப் புறங்கள் நிலவிக் கொண்டிருந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு படு அமர்க்களமாக இருந்தன. புதிய ஆட்கள்! புதிய ஆடை, அணிகலன்கள்! புதிய ஆசைகள்! நான் முடிந்த வரையில் என்னுடைய அறையிலேயே ஒதுங்கியிருந்தேன்.

நேற்று முதல் இங்கிருக்கும் ஒலிபரப்பு மையத்தில் ஆரம்பிக்கப்பட்டிருக்கும் 'பாடல் திருவிழா' வானொலியின் அருகில் உட்கார்ந்து கேட்டுக் கொண்டிருக்க எனக்கு உதவியது. இன்னும் பதின்மூன்று நாட்களுக்கு அந்த விழா நடக்கும். இந்தியாவில் இருக்கும் புகழ் பெற்ற பாடகர்களில் பலரும் இந்தப் பாடல் திருவிழாவில் பங்கு பெறுகிறார்கள் என்று கேள்விப்பட்டேன். ஒவ்வொரு நாளும் புதிய குரலுக்காக இசை ரசிகர்கள் காத்திருப்பார்கள். முதல்நாள் பாடிய எனக்கு இந்த விஷயத்தில் தனிப்பட்ட விருப்பம் இருப்பதற்குக் காரணம் இருக்கிறது. மற்றவர்கள் எப்படிப் பாடுகிறார்கள் என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டுமே. நாளை கனகம் பாடப் போகிறாள். திரையுலகத்தில் மிகவும் புகழ்பெற்ற அந்தப் பின்னணிப் பாடகியின் பாடல்கள் மீது எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. ஆனால், அவளுக்கு என்னைப் பற்றி ஏதாவது தெரிந்திருக்கும் என்று நான் சிறிதும் நினைத்திருக்கவில்லை. அதனால் இன்று மதியம் அவளுடைய தந்தி கிடைத்தபோது நான் ஆச்சரியப்பட்டு விட்டேன். என்னுடைய பாடலை எத்தனையோ ஆயிரம் இசை ரசிகர்களைப் போல அவளையும் ஆனந்த வயப்படச் செய்திருக்கிறது. அறிமுகம் ஆகிக் கொள்வதற்கு விரும்புகிறாள் போலத் தெரிந்தது. நான் இதற்கெல்லாம் தகுதியானவள்தானா? எனக்கே அதை நம்புவதற்குக் கஷ்டமாக இருந்தது. எனினும், இந்தப் புதிய அறிமுகத்திற்காக என் இதயம் ஏங்கியது. ஹா! நான் மிகவும் அதிகமாகவே கட்டுப்பாட்டை விட்டு விலகிச் செல்கிறேன்.


அடுத்த நாள்

நான் ஒலிபரப்பு நிலையத்திலிருந்து திரும்பி வந்து இப்போது ஒரு மணி நேரம் கூட ஆகவில்லை. கனகம் எவ்வளவு இனிமையாகப் பாடினாள்! இது ஒரு புறம் இருக்க, அதைவிட எவ்வளவு அருமையாக இருந்தன. அவளுடைய உரையாடலும் நடத்தையும்! ஐம்பதை நெருங்கிய வயதைக் கொண்டிருக்கும் அவளுடைய குரல் இப்போது கூட ஒரு சிறுமியின் குரலைப்போல இனிமையாக இருக்கிறது. எவ்வளவோ அனுபவங்களை வாழ்க்கையில் பார்த்தாகிவிட்டது என்பதை வெளிப்படையாகக் கூறும் அந்த முகம் அழகானது என்று கூறுவதை விட கம்பீரமானது என்பதே சரியானது.

கனகத்தைப் பார்த்தவுடன் எனக்கு என்ன தோன்றியது? அது கூறுவதற்கு சிரமமானதே... அவளுக்கு அந்த அளவிற்கு வயது இருக்காது என்று தோன்றியிருக்கலாம். ஆனால், அந்த தோணல் ஒரு நிமிட நேரத்திற்குக் கூட நீடிக்கவில்லை. அதற்குள் எல்லாவற்றையும் மறக்கிற மாதிரி அவள் என்னை முழுமையாக ஈர்த்துவிட்டாள். கனகம் ஸ்டுடியோவை விட்டு வெளியே வந்தபோது, நான் வரவேற்பறையில் அவளுக்காகக் காத்திருக்கிறேன் என்ற விஷயம் தெரிந்து, அவள் நான் இருக்கும் இடத்திற்கு வந்து என்னுடன் பேசத் தொடங்கினாள்.

"பாமா, உங்களைப் பற்றி எனக்கு எவ்வளவோ முன்பிருந்தே தெரியும். உங்களுடைய ஒரேயொரு பாடல் என் மனதுடன் உங்களை அந்த அளவிற்கு நெருக்கமாக்கி விட்டிருந்தது."

அதைக் கூறும்போது அவள் என்னையே கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல எனக்குத் தோன்றியது. தொடர்ந்து என்னுடைய கைகளைப் பற்றி தன் மடியில் வைத்துக் கொண்டு சொன்னாள்:

"நாம அறிமுகமாகிக் கொள்ள என்றில்லாமல் இருந்திருந்தால், நான் நிச்சயமாக இன்னைக்கு வந்திருக்க மாட்டேன். என்னுடைய மகன் இரண்டு வருடங்களுக்குப் பிறகு கல்கத்தாவில் இருந்து நாளைக்குத் திரும்பி வர்றான். ஒரு தாய்க்கு - அதுவும் ஒரே ஒரு மகன் மட்டுமே இருக்கும் அன்னைக்கு- அப்படிப்பட்ட ஒரு நாளன்று வீட்டில் இல்லாமல் இருப்பது என்பது எவ்வளவு கஷ்டமான ஒரு விஷயம் என்பதை நினைத்துப் பாருங்களேன்! எனினும், நான் இங்கே வந்துட்டேன். சென்னையை விட்டு நான் ஒரு வாரம் வெளியே இருக்கணும்னு நினைக்கிறேன். அதனால் தந்தி அடிச்ச உடனே இங்கே புறப்பட்டு வந்துட்டேன்."

ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த பூந்தோட்டத்தில் அமர்ந்து, நாங்கள் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தோம். கனகம் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வதைவிட என்னுடன் அறிமுகமாகிக் கொள்வதில்தான் மிகவும் ஆர்வமாக இருந்தாள். தன்னுடைய கணவர் ஏற்கெனவே மரணத்தைத் தழுவி விட்டார் என்பதும்; மகன் இரண்டு வருடங்களாக கல்கத்தாவில் பயிற்சி எடுத்துக் கொண்டிருக்கும் ஒரு டாக்டர் என்பதும் மட்டுமே அவளைப் பற்றி நான் தெரிந்து கொண்ட விஷயங்களாக இருந்தன. அதற்கு மேல் கேட்டபோதெல்லாம் சமாதானமாக அவள் இப்படிக் கூறினாள்:

"நான் ஒரு வாரத்திற்கும் மேலாக இங்கேதானே இருக்கப் போறேன்! நாம மேலும் அதிகமாக ஒருவரைப் பற்றி ஒருவர் தெரிந்து கொள்ளலாம்."

தனிப்பட்ட விஷயங்களைப் பற்றி ஒருவரோடொருவர் உரையாடிக் கொள்வதைவிட, பொதுவான விஷயங்களைப் பற்றித் தெரிந்து கொள்வதில்தான் கனகத்திற்கு ஆர்வம் அதிகமாக இருந்தது. முதலில் அதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே, அப்படிப்பட்ட விஷயங்களையே அவள் பேசினாள். அவை எல்லாமே ஆர்வத்தைத் தூண்டக்கூடியவையாக இருந்தன.

எனினும், என்னுடைய தனிமை நிறைந்த வாழ்க்கையைப் பார்த்து அவளுக்கு அச்சரியம் உண்டானது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஒரு மனிதருடன் உண்டான காதலுக்காக ஒரு வாழும் காலம் முழுவதையும் அவரையே மனதில் நினைத்துக் கொண்டு வாழ்வது என்பது...! அது ஒரு புதிய விஷயமாக கனத்திற்குத் தோன்றியிருக்க வேண்டும். அவள் ஒரு டாக்டரின் கூர்மையுடன் அந்த விஷயத்தைப் பற்றி என்னிடம் பேசினாள். எங்களுடைய உறவு காதல் என்பதைத் தாண்டிச் செல்லவில்லை என்பதைத் தெரிந்து கொண்டபோது, கனகம் சிறிது நேரம் ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கிவிட்டாள். நான் அவளுடைய முகத்தில் தெரிந்த உணர்ச்சி வேறுபாடுகளை கவனித்தேன். என்னுடைய மனம் அப்போது பதைபதைப்பும் பெருமையும் அடைந்தது. எந்த ஒரு பெண்ணுக்கும் பொறாமை உண்டாகச் செய்யும் அந்தக் காதல் தவத்தைப் பற்றி அவள் என்ன நினைப்பாள்? ஆனால், அவள் நான் சந்தோஷமடையும்படி எதுவும் சொல்லவில்லை. படிப்படியாக அந்தக் கண்களில் கவலையும் கேலியும் கலந்திருப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

"சகோதரி, இதே நிலையில் பத்து அல்லது இருபது வருடங்களுக்குப் பிறகு வாழ்க்கை முடிந்து விடுகிறதுன்னு வச்சுக்கோங்க. உங்களுக்கு அதில் திருப்திதானா?"

அவள் கேட்டாள். அதற்கு ஒரே வார்த்தையில் என்ன பதில் கூற முடியும்? நான் எந்த பதிலையும் கூறவில்லை.

"சாதாரணமாக நடப்பதைப் போல வாழ்க்கை வேறொரு வழியை நோக்கித் திரும்பிப்போய், அதன் எல்லா சுகங்களையும் கவலைகளையும் அனுபவிப்பதைவிட அதிகமான திருப்தி இந்த வாழ்க்கையில் இருக்கிறதா என்றுதான் நான் கேட்கிறேன். லாபங்களையும் இழப்புகளையும் இறுதியில் கணக்கு கூட்டிப் பார்ப்பதுதானே நல்லது என்று நினைத்து நான் முன்னால் நடந்து வந்துட்டேன். அவ்வளவுதான்."

கேள்வி எனக்கு மிகவும் தெளிவாகப் புரிந்தது. அது மட்டுமல்ல- என்னைச் சுற்றிலும் சம்பவங்களை நடக்க ஆரம்பித்த இந்தச் சிலநாட்களுக்கு முன்னால் நான் சிறிதும் நினைத்துப் பார்த்திராத ஒரு விஷயம் இது என்றும் கூறுவதற்கில்லை. எனினும், என்னால் எந்த பதிலையும் கூற முடியவில்லை. இந்த எண்ணங்களில் இருப்பதைப் போல என்னுடன் உண்மையாக இருக்க அப்போது முடியவில்லை. பிறகு... சரியான ஒரு முடிவும் என்னிடம் இல்லாமல் இருந்தது. ஆழமான உணர்ச்சிகளுடன் சந்திரன் என் மனதில் நிற்காமல் போய் எவ்வளவோ காலம் கடந்துவிட்டது! வெறும் நினைவுகள் மட்டும்... அவை அனைத்து என்னை கேலி செய்து, குற்றம் சுமத்துகின்றன. எல்லாம் அப்படித்தான் நடந்தன என்பதற்கும் மேலாக என்ன கூறுவது? எனினும், அது ஒரு சரியான சமாதானமாக இருக்க முடியாது. எத்தனையோ பகல்களும் இரவுகளும் வேறு எந்த விஷயமும் என் இதயத்திற்குள் நுழைய இடமில்லாத அளவிற்குக் கடந்து போயிருக்கின்றன! நாட்கள் அல்ல.... மாதங்கள் அல்ல... வருடங்கள். ஒரே விஷயத்திற்கு மாறுபட்ட பக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன! அந்தக் கேள்வியே ஒரு வகையில் பார்க்கப் போனால் இதயமே இல்லாத ஒன்றாக எனக்குத் தோன்றியது. என் மவுனத்தில் இருந்தே அதைத் தெரிந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நேரத்தில் என்னைக் கட்டிப் பிடித்துக் கொண்டு கனகம் இப்படிக் கூறியிருக்க வேண்டிய தேவையே இல்லையே!


"என் தங்கையே! நானும் உங்களைப் போலத்தான் கவலையில் மூழ்கிக் கிடக்கிறேன். வேறொரு வகையில் என்பது தான் வித்தியாசம். நாம் நிறைய விஷயங்களை மனம் திறந்து பேச வேண்டியதிருக்கு. என்னைப் பற்றி நான் சொல்கிறேன். அதுவரையில் என்னைத் தப்பாக நினைத்துவிடக் கூடாது."

அதைக் கூறும்போது அவளுடைய கண்கள் ஈரமாவதை நான் பார்த்தேன். என் மனதில் உண்டான சிறிது வெறுப்பு கூட அத்துடன் இல்லாமல் போய்விட்டது. நான் சொன்னேன்:

"சகோதரி! அவர் அந்த அளவிற்கு அன்பு கொண்டவராக இருந்தார். எனக்குள்ளிருந்து மிகவும் சாதாரணமாக அவரை அவ்வளவு எளிதாக விட்டு எறிந்துவிட என்னால் முடியாது."

கனகத்தின் முகம் முன்பு இருந்ததைவிட இரக்கப்படும்படி ஆவரை நான் பார்த்தேன். அவள் சிறிது நேர மவுனத்திற்குப் பிறகு என்னைவிட்டு விட்டு, தனக்குத்தானே கூறிக் கொள்வதைப் போல் கூறினாள்:

"சம்பவங்களுக்குப் பெரிய முக்கியத்துவம் இல்லை. எல்லாம் அவற்றைச் சந்திப்பவர்களின் குணத்தைப் பொறுத்தவை. எனக்கு சிந்திப்பதற்கு மேலும் கொஞ்சம் நேரம் வேண்டும். நாம் நாளை சந்திப்போம்."

கனகத்தை நாளைக்கு சாயங்காலம் நளினியின் திருமணத்திற்கு வரும்படி அழைத்துவிட்டு நான் விடைபெற்றுக் கொண்டு அவளிடமிருந்து பிரிந்தேன். சில நாட்களாக என்னை ஆக்கிரமித்து விட்டிருந்த உற்சாக குணங்கள் என்னைவிட்டுப் போயிருந்தன. நான் இதோ, பழைய கவலைகள் நிறைந்த வாழ்க்கையை நோக்கித் திரும்பவும் எறியப் பட்டிருக்கிறேன். நாளைய கொண்டாட்டங்கள் எப்படியாவது முடிந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

அடுத்த நாள்

ப்போது இரவு பன்னிரண்டு மணி கடந்துவிட்டது. திருமணமும் விருந்து உபசரிப்புகளும் முடிந்துவிட்டாலும், நிறைய ஆட்கள் இன்னும் இங்கிருந்து கிளம்பாமலே இருக்கிறார்கள். இந்த விஷயங்களிலெல்லாம் எதற்காக இந்த அளவிற்கு ஆர்வம் காட்ட வேண்டும்? எல்லோருடைய வாழ்க்கையிலும் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் கடந்து போக வேண்டிய சம்பவங்கள்தான்... அமைதியாகவும் ஆர்பாட்டமில்லாமலும் அதை நடத்தக் கூடாதா? அதற்கு இங்கு எந்த அளவிற்கு அதிக ஆரவாரங்களைக் கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள்!

வந்தவர்களுக்கு மனிதர்களின் மன அமைதியைக் கெடுக்க வேண்டும் என்பதைத் தவிர, வேறு எந்தவொரு எண்ணமும் இருப்பதைப் போலத் தெரியவில்லை. கனகமும் இல்லாமல் போயிருந்தால் இந்த நாளை நான் எப்படித்தான் கழிப்பது? எது எப்படி இருந்தாலும் அது ஒரு நல்ல விஷயமாகவே ஆகிவிட்டது. நாங்கள் இந்த அறையை விட்டு முகூர்த்த நேரத்தைத் தவிர, வெளியே போகவேயில்லை. இல்லாவிட்டால் சிறிதளவு சிந்தனைகூட இல்லாமல் வேகவேகமாக நடந்து கொண்டிருக்கும் இந்த மனிதர்களுக்கு மத்தியில் எப்படி இருக்க முடியும்? பலரும் தாங்கள் இல்லையென்றால் இந்தத் திருமண நிகழ்ச்சியே நடக்காது என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். எல்லாம் இன்று ஒருநாள் மட்டும்தானே! அதிகபட்சம் போனால், நாளைக்கும் இருக்கும். அது வம்பு பேசுவதற்கும் சோர்வைக் குறைப்பதற்கும் என்றே இருக்கக்கூடிய ஒரு சந்தர்ப்பம். அது முடிந்துவிட்டால் நிம்மதிதான்.

என்னுடைய பழைய சினேகிதிகள் யாராவது வந்திருப்பார்களோ என்னவோ? அப்படியென்றால் அவர்களைப் போய் பார்க்காமல் இருந்தது ஒரு வகையில் பார்க்கப் போனால் மரியாதைக் குறைவான செயலாக ஆகிவிடும். சொல்லப் போனால் சமீப காலமாக நான் குசலம் விசாரிப்பதற்காக யாரையும் போய்ப் பார்த்ததேயில்லை. யாரும் என்னையும் தேடி வந்ததில்லை. தனிமையில் இருந்து கொள்வதற்கு எல்லோரும் என்னை அனுமதித்து எத்தனையோ வருடங்கள் ஆகிவிட்டன. அப்படியென்றால் அதில் அந்த அளவிற்குத் தவறு எதுவும் இருப்பதாக நினைக்க வேண்டியதில்லை.

கனகம் இங்கிருந்து போய் ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகவில்லை. தன்னுடைய இருப்பிடத்திற்கு அவள் என்னை அழைத்திருக்கிறாள். தன்னுடைய மகன் மணியையும் அவள் எதிர்பார்க்கிறாள். நான் போவது என்று தீர்மானித்து விட்டேன்- அது ஒரு மரியாதை என்பதால் மட்டுமே.

அடுத்த நாள்

நான் இன்று மிகவும் சீக்கிரமே கண் விழித்து விட்டேன். ஒரு சினேகிதி இருப்பது- அவளுடன் மனதைத் திறந்து பேசுவது- இவையெல்லாம் புதிய அனுபவங்களைப் போல தோன்றியது. சிறு முளைத்த பிறகு முதல்முறையாக பரந்து கிடக்கும் நீல வானத்தைப் பார்த்துப் பறந்து மேலே செல்லும் வண்ணத்துப் பூச்சியைப் போல என்னுடைய இதயம் புத்துணர்ச்சி நிறைந்த சந்தோஷத்தை அனுபவித்துக் கொண்டிருந்தது. நான் ஜட்கா வண்டி ஓட்டுபவனை எப்போதோ தயார் பண்ணி வைத்துவிட்டேன்! நான்கு மணிக்கு என்று சொன்னால் சரியாக நான்கு மணிக்கு! நேரம் எறும்பு இழுத்துச் செல்லும் இறந்துபோன பூச்சியைப்போல நீங்கிக் கொண்டிருந்தது. நான் நிலை கொள்ளாத மனதுடன் அப்படி உட்கார்ந்திருந்தபோது கனகத்தின் கடிதத்துடன் அவளுடைய வேலைக்காரன் வந்தான். ஒரு நிமிட நேரம் நான் பலவாறாக நினைத்து சந்தேகப்பட ஆரம்பித்துவிட்டேன். அவள் நான் அங்கு செல்லப் போவதைத் தள்ளி வைத்துவிட்டாளோ? இல்லாவிட்டால் மணி அங்கு வந்து சேர்ந்த சந்தோஷத்தால் மதியமே அங்கு வந்துவிட வேண்டும் என்று கூறினாலும் சரிதான். எது எப்படி இருந்தாலும், அது ஒரு சந்தோஷப்படக் கூடிய சம்பவம் அல்ல. நான்கு மணிக்கு முன்னால் எதற்காக இப்படி அவசரமாக செய்தி கொடுத்து அனுப்ப வேண்டும்? சாயங்காலம் வெளியே போவதற்கான தேவை இல்லை என்ற சூழ்நிலை வந்தால்... ஹா! இந்த நாளை நான் எப்படித்தான் கழிப்பது? ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்துவிட்ட பிறகு, அது தற்கொலையாகவே இருந்தாலும் சரி- அதைத் தடுப்பவர்கள் எதிரிகள்தான்.

நான் உறையைக் கையில் வாங்கினேன். நல்ல கனமுள்ள ஒன்றாக இருந்தது அது. அடுத்த நொடி நான் அதை பிரிப்பதற்காக உறையின் மூலையைக் கிழித்தேன். அப்போது என்னுடைய சந்தேகங்கள் முழுமையாக நீங்கியது காரணமாக இருக்கலாம்- அந்த ஆர்வத்தைச் சிறிது நேரம் ஒரு ஓரத்தில் ஒதுக்கி வைத்து விட்டு, அதை அறிவதற்கான ஒரு ஆர்வம் எனக்குள் உண்டானது. பிரச்சினைக்குரிய ஏதாவது அதற்குள் இருக்கும்பட்சம், இரண்டோ நான்கோ வரிகள் கொண்ட ஒரு குறிப்புதான் அங்கு இருக்கும். பிறகு என்ன அது? ஆமாம்... அதுதான் தெரியவில்லை. ஆனால், நான் ஒன்று நினைத்தால், அடுத்த நிமிடம் தெரிந்து கொள்ளலாம். பார்ப்போமே!

"பதில் வாங்கிக் கொண்டு வரணும்னு சொல்லியிருக்காங்களா?"

நான் வேலைக்காரனிடம் கேட்டேன்.

"இல்ல... இதை இங்க கொடுக்கணும்னு மட்டும்தான் சொன்னாங்க."

நான் அவனைப் போகும்படிக் கூறிவிட்டு, கடிதத்துடன் என்னுடைய அறையை நோக்கி நடந்தேன்.


எச்சில் இலைகளும், சாப்பிட்ட காய்கறிகளின் மிச்சங்களும் விழுந்து சுத்தமில்லாமல் இருப்பதை சுத்தம் செய்யச் சொல்லியும் பாத்திரங்களையும் மற்ற பொருட்களையும் திரும்பக் கொடுக்கும்படிக் கூறவும் செய்த மாலினி வெளியே எல்லா இடங்களிலும் சுறுசுறுப்பாக நடந்து திரிந்தாள். அண்ணனுக்கும் அதிகமான வேலைகள் இருந்தன. ஆமாம்... அவர் தான் அவை எல்லாவற்றையும் செய்ய வேண்டும். நான் படுக்கையின் விரிப்பைச் சரி பண்ணி விரித்துவிட்டு, கட்டிலில் உட்கார்ந்தேன். எட்டு மணி இன்னும் ஆகவில்லை. சாளரத்தின் வழியாக இளம் வெயில் உள்ளே நுழைந்து படுக்கைமீது விழுந்து கொண்டிருந்தது. நான் எழுந்து சாளரத்தின் திரைச்சீலையைச் சரி செய்துவிட்டு, திரும்பவும் வந்து உட்கார்ந்தேன். தொடர்ந்து கால்களை எடுத்துப் படுக்கையில் வைத்துக் கொண்டு, சாதாரணமாக படுத்தவாறு உறையைப் பிரித்துக் கடிதத்தைக் கையில் எடுத்தேன்.

சற்று நீளமாக இருந்த அந்தக் கடிதத்தை நான் இங்கு அப்படியே கூறிவிடுவது என்று முடிவு செய்தேன். கனகத்தின் சொந்தக் கதையை மிகவும் சுருக்கமாக எழுத என்னால் முடியும். ஆனால், அப்படிச் செய்யும்போது, நான் அந்தச் சகோதரிக்கு மிகப் பெரிய தவறு இழைத்ததாக ஆகிவிடும். காரணம்- என்னால் கொஞ்சம் கூட ஒத்துக் கொள்ள முடியாத பல விஷயங்கள் அதில் இருக்கின்றன. அதை அவளுடைய வார்த்தைகளில் இல்லாமல் எழுதும்போது, அவளுக்கு நீதி செய்யவில்லை என்பதைப் போன்ற ஒரு சூழ்நிலை வரலாம். அதை அப்படியே விட்டுவிடலாம் என்றால், இந்தக் குறிப்பு முழுமையற்றதாகிவிடும் என்று நான் பயப்படுகிறேன். உண்மையாகவே அது நல்லதாக இருக்காது. என் இதயத்தில் இருப்பதைப் போலவே வாழ்க்கைக் கதையிலும் அது மறையாமல் இருந்துவிட்டுப் போகட்டும்.

கனகத்தின் கடிதம்

ன்புள்ள சகோதரி,

இப்போது இரவு பன்னிரண்டு மணி தாண்டிவிட்டது. ஒரு மணி நேரத்திற்கு முன்னால் நாம் ஒருவரை விட்டு ஒருவர் பிரியும்போது, இப்படி ஒரு கடிதம் எழுதுவதைப் பற்றி நான் சிறிது கூட நினைத்திருக்கவில்லை. எனினும் இரவு நீண்ட நேரம் வளர்ந்திருக்கும் இந்த நேரத்தில் நான் ஒரு நீளமான கடிதத்தை எழுதுவதற்கு இறங்கியிருக்கிறேன். நாளை நாம் ஒருவரையொருவர் சந்திப்பதற்கு முன்னால் நீங்கள் என்னைச் சிறிதாவது தெரிந்திருக்க வேண்டுமல்லவா?

சகோதரி, இந்த விஷயங்களையெல்லாம் உங்களிடம் நேரில் கூற வேண்டும் என்றுதான் நான் நினைத்திருந்தேன். அந்த விஷயத்தில் எனக்கு எந்தவிதத் தயக்கமும் இல்லை. ஆனால், உங்களிடம் மிகவும் உண்மையானவளாக இருக்க வேண்டும் என்று விருப்பப்படும் அதே நேரத்தில் நான் கூறுகிறேன்... நான் பலவற்றையும் மறைக்க வேண்டியதிருக்கிறது. அவற்றை ஒரு கடிதத்தில் எழுதும்போது, மிகவும் வசதியாக அதைச் செய்ய முடியும் என்பதால்தான் முக்கியமாக நான் இந்தக் கடிதத்தையே எழுதுகிறேன்.

திருமணமாகாமலே ஒரு தாயாக ஆகியிருக்கும் நான் திருமணமாகாமலே ஒரு நம்பிக்கைகுரிய பத்தினிப் பெண்ணின் கடமைகளை முழுமையாகச் செய்து கொண்டிருக்கும் சகோதரிக்கு முன்னால் உண்மையாகவே ஒரு விலைமாதுதான். (இந்த வரிகள் உங்களை ஆச்சரிப்படச் செய்கின்றனவா?) ஆனால், இந்தக் கடிதத்தை எழுதும்போது அப்படியொரு குற்ற உணர்வு என்னை ஆக்கிரமித்து சிறிதும் விரக்தியடையச் செய்யவில்லை. வாழ்க்கையில் ஒவ்வொன்றுக்கும் நாம் தரும் முக்கியத்துவங்கள் எப்படிப்பட்டதாக இருந்தாலும், கடந்து போன அனுபவங்கள் உண்மைகளாகவே இருக்கும். அவற்றை நல்லது என்றோ கெட்டது என்றோ நாம் குறிப்பிடலாம் அவ்வளவுதான். கண்ணுக்குத் தெரியாத- மிகவும் ஒரே சாயலில் இருக்கும் ஒரே கண்ணியிலிருந்து கிளம்பி நாம் இருவரும் இரண்டு வழிகளில் பிரிந்து சென்றிருக்கிறோம். இந்த வெவ்வேறு வழிகளை ஒற்றுமைப்படுத்தி எடைபோட நான் முயற்சிக்கவில்லை. ஒன்றே ஒன்றை மட்டுமே இந்த விஷயத்தில் என்னால் கூற முடிகிறது. விளக்கங்களுக்குச் செல்லாமல் என் வாழ்க்கையை ஒட்டுமொத்தமாக ஆராய்ந்து பார்த்தபோது எனக்கு தோன்றுவது இதுதான். நான் கவலைப்படவோ கோபப்படவோ இல்லை.

தான் செய்வது எதுவும் தவறானது என்பதை ஒத்துக் கொள்ளாமல் இருப்பது யாருக்கும் மிகவும் எளிதான ஒரு விஷயமே. தூக்குமரத்திற்கு அடியில் கூட கவலைப்படாதவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். நான் அந்த அளவிற்கு எழுதவில்லை. பலவற்றையும் செய்யாமல் இருந்திருக்க வேண்டும். பலவற்றையும் வேண்டாம் என்று ஒதுக்கியிருக்க வேண்டும். ஆனால், வாழவேண்டும் என்பது என்னுடைய சொந்த பொறுப்பாகவும் தேவையாகவும் ஆனபோது, நான் என்னுடைய வழிகளில் முன்னோக்கி நடந்தேன். சரியான பாதைகள் வழியாக இயற்கையாகவே நடந்து செல்ல முடிந்தவர்கள் என்னைப் பார்த்து கேலி பண்ணிய போதெல்லாம் என்னால் புன்னகைக்க மட்டுமே முடிந்தது. கடவுளின் சிலைக்கு முன்னால் தலை குப்புற விழுவதற்குக் காரணமாக இருந்தபடிக்கு அப்பால் நின்று கொண்டு பிரார்த்தனை செய்யும் ஒரு பக்தனைவிட, அதிகமாகப் பெருமைப்பட வேறெதுவும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. அவ்வளவுதான்.

ஓ! நான் இன்னும் என் கடிதத்தை ஆரம்பிக்கவே இல்லை. சகோதரி, நான் ஒரு ஆணை மனப்பூர்வமாகக் காதலித்து, அவருக்கு என்னை சமர்ப்பணம் செய்தபோது, என் இதயம் முழுமையான சந்தோஷத்தில் மூழ்கியது. அந்த நினைவு உணர்ச்சிமயமானதும் குளிர்ச்சி நிறைந்ததும் என்பதுதான் உண்மை. இளமைக்கே இருக்கக் கூடிய எல்லா வகையான இனிய அனுபவங்களும் எவ்வளவு தெளிவாகக் கண்களுக்கு முன்னால் தெரிகின்றன! அது இன்றிலிருந்து முப்பத்தோரு வருடங்களுக்கு முன்பு நடந்தது. அன்று நான் பதினெட்டே வயது கொண்ட ஒரு இளம்பெண்ணாக இருந்தேன். என்னுடைய அப்போதைய திறமைகளைப் பற்றி நான் பின்னால் பலமுறை நினைத்துப் பார்த்திருக்கிறேன். எதுவுமே தெரியாத ஒரு சிறு பெண்ணாக இருந்திருக்கிறேனோ நான்? நிச்சயமாக அப்படி இல்லை. காதலுக்கும் ஏமாறுதலுக்கும் இடையில் இருக்கும் இடைவெளி எவ்வளவு குறைவானது  என்பதைத் தெளிவாகவே நான் தெரிந்திருந்தேன். எனினும், நான் காதலித்தேன். ஏமாற்றப்படவும் செய்தேன். எனக்குப் பல நேரங்களில் தோன்றியிருக்கிறது. நம்முடைய மிகப்பெரிய ஆபத்துக்களை நாமே இழுத்துக் கொண்டு வந்து நம்மீது போட்டுக் கொள்கிறோமோ என்று. சகோதரி, நீங்கள்?

பழைய நினைவுகளைத் திரும்பவும் தட்டி எழுப்பிக் கொண்டு வருகிறபோது உணர்ச்சிகள் சிந்தனையின் ஒருமுகத் தன்மையை முழுமையாக பாதிக்கின்றன. நான் அனுசரித்துச் செல்ல முயற்சிக்கிறேன்.

ஆமாம்... என்னுடைய சொந்தக் கதையை முப்பது வருடங்களுக்கு முன்னாலிருந்து ஆரம்பிக்க வேண்டியதிருக்கிறது. பொருளாதாரப் பிரச்சினைகளால் கல்லூரிப் படிப்பின் முதல் வருடத்தைக் கூட முடிக்க முடியாமல் நான் தஞ்சாவூரில் இருக்கும் என் வீட்டில் இருந்தேன். வீட்டில் வயதான தாய் மட்டுமே இருந்தாள். எங்களைக் காப்பாற்றுவதற்கு என்று இருந்த ஒரே ஒரு உயிரான என்னுடைய அண்ணன் அப்போது தமிழ்நாட்டிலும் கேரளத்திலும் புகழ்பெற்ற ஒரு நாடக நடிகராக இருந்தார்.


அவர் ஏதாவது கம்பெனிகளுடன் சேர்ந்து வருடத்தின் பெரும்பாலான நாட்கள் ஊர் ஊராக அலைந்து கொண்டிருப்பார். வீட்டிலிருக்கும் என் தாயையும் என்னையும்விட நாடக கம்பெனியில் இருக்கும் நடிகைகள் பலர் மீதும்- இயல்பாகவே அவர் அதிக அன்பு வைத்திருந்தார். இப்படிக் கூறுவதை வைத்து அவர் எங்களை முழுமையாக மறந்துவிட்டார் என்று நான் கூறவில்லை. பண விஷயத்தில் முடிந்த வரைக்கும் உதவி செய்வதற்கும் அவர் தயங்கவில்லை. என்னைப் பொறுத்தவரையில் சிறு வயதில் இருந்தே (நான் சிறு பெண்ணாக இருக்கும்போதே என் தந்தை மரணத்தைத் தழுவிட்டார்) வாழ்க்கைக்கு வழிகாட்டியாக இருக்கும் ஒருவரின் பொறுப்பற்ற தன்மை என்றால் என்ன என்பதைத் தெரிந்து கொண்டிருந்தேன். என் அண்ணனின் இந்த அலட்சியப் போக்கு என்னை அந்த வகையில் பாதித்தது. எதை வேண்டுமானாலும் செய்யலாம் என்ற இந்த சுதந்திரம் எதையும் செய்ய என்னை அனுமதிக்கவில்லை. பக்கத்து வீடுகளில் இருக்கும் இளம்பெண்களுடன் பழகுவதற்கோ பேசுவதற்கோ கூட எனக்கு தைரியம் இல்லாமல் போனது. கல்வி கற்றிராத அவர்களுடைய பழக்க வழக்கங்கள் எனக்கு சிறிதும் பிடிக்கவில்லை. மதிய உணவு சாப்பிட்டுவிட்டு, ஆண்கள் வெளியே சென்றுவிட்டால், பெரும்பாலான நேரங்களில் பக்கத்து வீட்டிலிருக்கும் பெண்கள் என் வீட்டிற்கு வந்து கூடிவிடுவார்கள். ஒவ்வொரு நாளும் அவர்களுடைய முக்கிய உரையாடல், அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்டிராத ஏதாவது பெண்களைப் பற்றியதாக இருக்கும். அது முழுமையான விரோதத்துடனும் கோபத்துடனும் இருக்கும். மறுநாள்- அன்று வந்திராத யாரைப் பற்றியாவது பேச்சு இருக்கும். இப்படி அவர்கள் இரக்கமே இல்லாமல் கூறும் குற்றச்சாட்டுகளுக்கு இரையாகாதவர்கள் அந்தப் பெண்களில் யாரும் இல்லை. அந்தப் பெண்களுடன் எந்தவிதப் பழக்க வழக்கமும் வைத்துக் கொள்ளாமல் நான் என்னுடைய அறையில் இசைத்தட்டுக்களைப் பாட வைத்துக் கொண்டு தனியே இருப்பேன்.

கடுமையான ஏமாற்றமோ, பெரிய எதிர்பார்ப்புகளோ எனக்கு இல்லை. எப்படி வாழ்க்கையில் முன்னேறுவது என்பதைப் பற்றி நான் அப்படியொன்றும் அதிகமாக நினைத்ததில்லை. இசையில் ஓரளவுக்கு ஈடுபாடும் சிறிது பயிற்சியும் இருந்ததால், நான் எப்போதாவது ஒருமுறை பாட்டுக் கச்சேரிகளில் பங்கெடுப்பேன். என் அண்ணனின் புகழ்தான் எனக்கு இந்த விஷயத்தில் மிகவும் உதவியாக இருந்தது. எனினும் திருச்சிராப்பள்ளியிலும் புதுக்கோட்டையிலும் நடைபெற்ற இரண்டு இசை நிகழ்ச்சிகள், ஒரு பாடகி என்ற வகையில் எனக்கென்று ஒரு அடித்தளத்தை உண்டாக்கித் தந்தன என்பதென்னவோ உண்மை. மேலும் இசையில் பயிற்சி பெறுவதற்கும், அந்தப் பாதையில் முயற்சிகள் செய்வதற்கும் அது ஒரு தூண்டுகோலாக இருந்தது.

அந்தக் காலத்தில் இசை கற்பதற்காக வேறு ஊர்களிலிருந்து நிறைய இளைஞர்கள் எங்களுடைய ஊருக்கு வந்து கொண்டிருந்தார்கள். குடுமி வளர்த்து, பின்னால் கொண்டை போட்டு, பெரிய வெள்ளை நிறக் கம்மல் அணிந்து, நெற்றியில் செந்தூரப் பொட்டு வைத்து, ஊரில் இருக்கும் மற்றவர்களைப் போல தாங்களும் இருப்பதில்தான் முதலில் அவர்கள் அக்கறை காட்டுவார்கள். நான்கு அல்லது ஐந்து வருடங்களுக்குப் பிறகு, தோற்றத்திலும் மொழியிலும் மட்டுமல்ல- பொதுவான கலாச்சாரத்திலேயே- தமிழர்களாகவே மாறிவிட்ட பலரையும் நான் பார்த்திருக்கிறேன். அவர்களில் பெரும்பாலானவர்கள் இசையில் தீவிர ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். எனினும், அவற்றையெல்லாம்விட அவர்களுடைய பொருளாதாரம்தான் ஊர்க்காரர்களின் கவனத்தில் அதிகமாகப்பட்டது. அரசர்களைப் போல ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்குப் பஞ்சமே இல்லாமல் இருந்தது. தஞ்சாவூரிலும் அதைச் சுற்றியுள்ள ஊர்களிலும் இருந்த பெரும்பாலான தாசிகளின் வீடுகள் நல்ல நிலையில் இருப்பதற்குக் காரணமே அந்த இளைஞர்களின் அருளால்தான் என்று கூறினால் அதில் பெரிய ஆச்சரியம் எதுவும் உண்டாகாது.

எல்லோரைப் பற்றியும் இப்படிக் கருத்து கூறிவிட முடியாது. மிகவும் நல்லவர்களாக வாழ்ந்து கொண்டிருந்த பலரும்கூட இருந்தார்கள். அவர்களில் ஒரு இளைஞரைப் பற்றித்தான் நான் இப்போது கூற போகிறேன். என்னை அவருடன் நெருங்கச் செய்த முக்கிய விஷயமே அதுவாகத்தான் இருக்க வேண்டும்.

நான் பாடிய ஒரு திருவிழா நடைபெற்ற ஊரில்தான் நாங்கள் ஒருவரோடொருவர் முதல் முறையாகப் பேசினோம். அதற்கு முன்னால் எங்களுக்கு ஒருவரை ஒருவர் தெரியும். குடுமியும் செந்தூரப் பொட்டும் தங்க மாலையும் இல்லாத அந்தப் பாடகரை கவனிக்காமல் இருக்க யாராலும் முடியாது. இசை கற்றுக்கொள்வதற்காக வந்திருந்த ஒரு இளைஞர் என்பதைவிட, விடுமுறை காலத்தில் ஊர்களைச் சுற்றிப் பார்க்க புறப்பட்ட ஒரு கல்லூரி மாணவரைத்தான் நான் அவரிடம் கண்டேன். முற்றிலும் ஒரு மாணவரின் வாழ்க்கையைப் போலவே அலட்சியமும், முயற்சியற்ற தன்மையும் கொண்ட வாழ்க்கை. மற்ற நண்பர்களிடமிருந்து அவரை அது முற்றிலும் வேறுபட்டவராகப் பிரித்துக் காட்டியது. இசையை ஒரு வாழ்க்கைக்கான அடித்தளமாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று சிறிதும் நினைத்திராத அவர் அப்படித்தான் இருக்க முடியும். பாட்டுக் கச்சேரிகளுக்கும் திருவிழா கொண்டாட்டங்களுக்கும் நல்ல ஆடைகள் அணிந்து செல்லாமல் விலை மகளிர்கள் இருக்கும் இல்லங்களைத் தேடிச் செல்லாமல் தன்னுடைய மனிதர்களுக்கு மத்தியில் இருப்பதைப் போலவே மிகவும் அடக்கமாக இருந்த அவருடைய அந்த வாழ்க்கை என்னை முன்பே ஈர்த்துவிட்டிருந்தது. அதனால் அந்த அறிமுகம் வெகு வேகமாக எங்களை மேலும் நெருங்கச் செய்தது.

சகோதரி, எங்களுடைய காதல் கதையை நீளமாக எழுதி உங்களைச் சோர்வடையச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கவில்லை. இளம் வயதில் நடைபெற்ற அந்த சம்பவங்களை மறந்துவிட வேண்டும் என்பதுதான் என் விருப்பம். அசாதாரணம் என்று கூறுகிற அளவிற்கு அதில் எதுவும் இல்லை என்பதே உண்மை. பிறகு... கட்டாயம் கூற வேண்டும் என்று தோன்றுகிற ஒன்று- அவருடைய தனிப்பட்ட குணம் அவர் ஒரு நடைமுறை மனிதராக இருந்ததே இல்லை என்பதுதான் என்னுடைய எண்ணம். இல்லாவிட்டால் மூன்று வருடங்கள் பிரிந்திருந்துவிட்டு, மீண்டும் நாங்கள் சந்திப்பது வரையிலாவது...! ஒருவருக்கொருவர் ஒத்துவராத எத்தனையோ விஷயங்களை அவர் தன்னிடம் கொண்டிருந்தார். பெண்கள் மீது அவர் அதிக ஈடுபாடு இல்லாமல் இருந்ததை ஒரு தகுதியாகக் கருதியது தவறோ என்று பிற்காலத்தில் நான் சந்தேகப்பட்டிருக்கிறேன்.

ஆரம்ப நாட்கள் ஒருவரையொருவர் உணர்ச்சிவசப்பட்டு மதித்துக் கொள்வதிலும் பாராட்டிக் கொள்வதிலும் கழிந்தன. ஒருவரையொருவர் அறிந்துகொள்ளாமலே நாங்கள் அந்தச் சமயத்தில் மிகவும் அதிகமாக நெருங்கிவிட்டோம். தொடர்ந்து வந்த அடுத்த கட்டம் சிந்தனை, உணர்ச்சி ஆகியவற்றின் மாறுபட்ட செயல்பாடுகளால் தெளிவற்றதாகவும் நிச்சயமற்றதாகவும் இருந்தது. அப்போது நாங்கள் அழவும் சிரிக்கவும் செய்தோம்.


காலம் கடந்து செல்ல, அவர் வழக்கம்போது என்னை வந்து பார்க்கும் அந்த வேளையில் அப்படிவராமல் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டும் இருந்தார். படிப்படியாக எனக்கும் அந்த விஷயம் புரிந்து விட்டது. படிப்பையும் பல விஷயங்களைப் பற்றியும் சிந்திப்பதையும் நீக்கி விட்டுப் பார்த்தால், அந்த தாசிப் பெண்களில் ஒருத்தியிலிருந்து நான் அவரைப் பொறுத்த வரையில் வேறுபட்டு இருந்திருப்பேனோ என்று எனக்கே சந்தேகம் உண்டானது. அதற்குக் காரணம்- அவர்களை அவருக்குத் தெரியாதே!

இவ்வளவு விஷயங்களையும் எழுதும்போது, என்னுடைய வார்த்தைகள் சற்று அதிகமான கடுமையானவையாக இருக்கின்றனவோ என்று நான் சந்தேகப்படுகிறேன். அது மட்டுமல்ல; அவற்றால் எங்களுடைய உறவைச் சரியாக வெளிப்படுத்த முடியுமென்று நான் நினைக்கவில்லை.

பல சம்பவங்களும் நடந்து முடிந்து நீண்ட நாட்கள் ஆனபிறகு, உணர்ச்சிகள் ஆறி குளிர்ந்த பிறகு, மூளையின் அறிவுரையைப் பின்பற்றி இவற்றை நான் கூறுகிறேன். அன்றைய மனதின் செயல்பாடுகளைப் பொறுத்தவரையில், இவை பாதி உண்மை ஆவதற்குத்தான் வழி இருக்கிறது. உண்மையாகவே முழுமையான மனதுடன் நாங்கள் காதலித்திருக்கிறோம். என்னைப் பொறுத்த வரையில், என் அண்ணனின் அலட்சியமான நடத்தை காரணமாக இருக்கலாம்- ஒரு ஆணின் அன்பிற்கும் இரக்கத்திற்கும் கோபத்திற்கும் ஆளாக வேண்டும் என்று நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். அதைத் தருவதற்கு அவரும் தயங்கவில்லை. நாங்கள் எங்களை மறந்துவிட்டு நீண்ட தூரம் முன்னோக்கிச் சென்றோம்.

எதிர்காலத்தைப் பற்றி அப்போது நாங்கள் எதுவும் சிந்தித்துப் பார்க்கவில்லை என்று கூற நான் தயாராக இல்லை. ஆனால், அது அந்தச் சமயத்தில் மிகப்பெரிய ஒரு பிரச்சினையாக இல்லை என்பதுதான் உண்மை. காலப்போக்கில் இரவு நேரத்தின் தனிமையில் நான் அவரிடம் அதைப் பற்றிக் கேட்க ஆரம்பித்தேன். அந்த பதில்கள் எனக்கு சந்தோஷம் அளிப்பனவாக இல்லை. தான் ஒரு தவறைச் செய்து கொண்டிருப்பதாக அவர் நினைத்துக் கொண்டிருந்தார். சுருக்கமாகச் சொல்வதாக இருந்தால், ஒரு கணவருக்கான பொறுப்புணர்வு அவருக்கு இல்லை. என் இதயம் தாங்க முடியாமல் வெடிப்பதைப் போல் நான் உணர்ந்தேன். தவறைப் புரிந்து கொண்ட பிறகாவது, முடிந்த வரையில் வேகமாக அதைத் திருத்திக் கொள்ளும்படி நான் பல தடவை அவரிடம் கூறினேன். அப்போதெல்லாம் நான் அடக்க முடியாமல் தேம்பித் தேம்பி அழுதிருக்கிறேன். அது எத்தனையோ தடவை திரும்பத் திரும்ப நடந்த சம்பவம்! சிறிது நேரம் அவர் அமைதியாக எதுவும் பேசாமல் படுத்திருப்பார். சகோதரி, அந்த சிந்தனைகள் எப்படிப்பட்டவையாக இருந்தன என்பது எனக்கு எப்படித் தெரியும்? பிறகு, அந்த சம்பவங்கள் எல்லாவற்றையும் முழுமையாக மறந்துவிடும் அளவிற்கு அவர் என்னிடம் விளையாடி, காதல் உணர்வு பொங்க என் மனத் சந்தோஷப்படும்படி நடந்து கொள்வார். அது போதுமே! என் சந்தேகங்கள், வேதனைகள், எல்லாவற்றையும் நான் மறந்துவிடுவேன். வாழ்க்கையின் இறுதிவரையில் பாதிக்கக்கூடிய பிரச்சினைகளெல்லாம் பின்னால் தள்ளப்பட்டு, அது ஒரு சிறிய காதல் சண்டையாக உருமாற்றம் பெறும். இறுதியில் அந்த விட்டுக் கொடுத்துப் போகும் செயல்களில் கவலைகள் அவற்றின் மேல்மட்ட அளவிலாவது மறைந்து போய்விட, நான் அவருடன் ஒட்டிக் கொண்டு உறங்குவேன்.

இப்படியே ஒரு வருடத்தைத் தாண்டி ஓடிவிட்டது. ஒரு இரவு வேளையில் நினைத்துப் பார்க்க முடியாத குழப்பங்களுடன், நான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அவரிடம் கூறினேன். ஆச்சரியம் என்றுதான் சொல்ல வேண்டும்- அதற்காக அவர் சந்தோஷப்பட்டார். ஹா! அந்த மனிதர் என்னை அழிப்பதாக இருந்தால் கூட அந்த நிமிடம் எல்லாவற்றையும் மறந்துவிட்டு மன்னிக்க என்னால் முடிந்தது. அந்த கருணைக்கு நான் எக்காலத்திலும் நன்றியுள்ளவளாக இருப்பேன் என்று அவருடைய கால இறுகப் பிடித்துக் கொண்டு சத்தியம் பண்ண வேண்டும் போல எனக்கு இருந்தது. ஒரு பெண்ணைப் பொறுத்தவரையில், அவளுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய சோதனையான கட்டம் அதுதான் என்று நான் நினைக்கிறேன். தான் தாங்கிக் கொண்டிருக்கும் உயிர்சக்தியை அதன் தந்தையே மறுக்கிறார் என்றால்...! ஹா! அதற்கும் மேலாக அவளிடம் நடப்பதற்கு அதற்குப் பிறகு வேறு எதுவுமே இல்லை. திருமணம் என்ற பலவீனமான இழைக்கு இரும்புச் சங்கிலியை விட பலம் இருக்கிறது என்ற உண்மையை ஒரு பெண் உணர்வதே அப்போதுதான். அவர் புன்னகைத்துக் கொண்டே என் வயிற்றைத் தடவியபோது, நான் பெருமைக்குரிய கர்வத்தால் வானம் அளவிற்கு வளர்வதைப் போல் எனக்குத் தோன்றியது. ஒரு திருமணமாகாத பெண் என்ற சிந்தனை என்னை விட்டுப் போய் நான் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தேன். எங்களுடைய காதல் உறவு பழைய மாதிரியோ அல்லது அதையும்விட ஆழமாகவோ வளர்ந்து கொண்டிருந்தது.

நாங்கள் திருமணம் செய்து கொள்ளாதவர்கள் என்றாலும் தம்பதிகளைப் போலத்தான் அப்போது வாழ்ந்து கொண்டிருந்தோம். என் தாயைப் பொறுத்தவரையில், தன்னைவிட படிப்பும் உலக அனுபவங்களும் கொண்ட தன் மகளுடைய வாழ்க்கையில் தன்னுடைய பழைய பழக்க வழக்கங்களைக் கொண்டு வந்து திணிக்க வேண்டும் என்று நினைக்கவில்லை. ஊரிலுள்ளவர்களின் எதிர்ப்பு எப்படி இருந்தாலும், அவர் என்னுடன் இருந்த காரணத்தால் அவற்றையெல்லாம் பொருட்படுத்தாமல் இருக்கக்கூடிய மன தைரியம் இயல்பாகவே எனக்கு இருந்தது. அந்த வகையில் எனக்கு முன்னால் நின்ற பல எதிர்ப்புகளையும் ஒன்றுமில்லாமல் செய்து, நான் மன அமைதியுடன் வாழ்ந்து கொண்டிருந்தேன்.

எனக்குப் பிரசவம் முடிந்து அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே, அவர் தன் ஊருக்குத் திரும்பிச் சென்றார். இசைப் பாடம் என்பது அவரைப் பொறுத்தவரையில், ஒரு தோல்வியாக அமைந்துவிட்டது. அதற்குப் பிறகு நாங்கள் சந்தித்தது மூன்று வருடங்களுக்குப் பிறகுதான். முன்பு கர்ப்பிணியாக இருந்தபோதும், தொடர்ந்து தாயாக ஆனபிறகும் அவர் என்னிடம் காட்டிய அன்பையும் பெருந்தன்மையையும் அன்று நான் எப்படி நினைத்தேன் என்பதை இப்போது உறுதியான குரலில் கூற முடியவில்லை. பிறகு... அதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. சகோதரி, தன்னுடைய பொறுப்பை அவர் சுய உணர்வுடன் ஏற்றுக் கொண்டார். தன் குழந்தைக்கு அவனுடைய தந்தையை நம்பிக்கையுடன் சுட்டிக் காட்டுவதற்கு என்னை அனுமதிப்பது... அவர் காட்டிய மிகப்பெரிய பெருந்தன்மையான செயல் அது!

எல்லா விஷயங்களும் நடந்து முடிந்தபோது, அவை அனைத்தும் நான் எதிர்பார்த்ததுதான் என்று எனக்குத் தோன்றியது. அதனால் என்னுடைய நாட்கள் அந்த அளவிற்கு இருள் நிறைந்தனவாக இல்லை. வசந்த காலத்தின் பகல் பொழுதுகளைப் போல அவை மங்கலாகவும் உற்சாகம் நிறைந்தவையாகவும் இருந்தன. அவ்வளவுதான்.


அவர் கடிதங்கள் எழுதினார். இடையில் அவ்வப்போது பணமும் அனுப்பி வைப்பார். ஒரு குற்ற உணர்வு அவருடைய கடிதங்களில் நிழலாடிக் கொண்டிருக்கும். தன்னுடைய தவறை வேறு யாரையும்விட அதிகமாக அவர் புரிந்து கொண்டிருக்கிறார் என்பதாக நான் நினைத்தேன். அந்த மனதின் வேதனையை படிப்படியாக என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடைய காதல் உலகத்தை அப்படியே எனக்குத் தர அவரால் முடியவில்லை. என்னை விட்டு ஒரேயடியாக பிரிந்து போவதற்கும், என்னுடன் தொடர்ந்து உறவு கொள்ளவும் மனம் இல்லாமல் அவர் தவித்துக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணின் வாழ்க்கையில் இப்படிப்பட்ட சோதனைகளை நடத்திப் பார்க்கும் ஆண்களின் இயல்பை நான் நியாயப்படுத்த மாட்டேன்.  மாறாக, அதற்கு ஒரு கருவியாக இருக்க சம்மதித்த நான் எல்லா குற்றங்களையும் ஏற்றுக் கொள்கிறேன். அவரை அவருடைய வழியில் போகும்படி நான் அனுமதித்தேன். என்னுடைய மற்றும் என் குழந்தையின் நலத்தைத் தவிர, வேறு எதையும் நான் எழுதியதில்லை.

என்னுடைய எதிர்காலம் முற்றிலும் என் கையில்தான் இருக்கிறது என்ற புரிதல் எனக்கு உண்டானது. இன்னொருவரை நம்பியிராத ஒரு வாழ்க்கைக்காக முயற்சி செய்து, அந்த வழியில் என்னுடைய எல்லா சக்திகளையும் மையப்படுத்தினேன். அது ஒரு முழுமையான வெற்றியாக அமைந்தது. வெகு வேகமாக ஒரு பாடகி என்ற வகையில் நான் மிகவும் புகழ்பெற்றவளாக ஆனேன். வாழ்வதற்கு மட்டும் பணத்தையும் சம்பாதித்தேன். வானொலி ரசிகர்களுக்கு என்னுடைய குரல் நாளடைவில் மிகவும் பழகிப் போன ஒன்றாகவும் கொஞ்சம் பிடித்தமானதாகவும் ஆனது.

மூன்று வருடங்கள் கடந்தோடின. சிறிதும் எதிர்பாராத ஒரு சூழ்நிலையில் ஒருநாள் அவர் என் வீட்டிற்கு வந்தார். என்ன காரணத்தாலோ, எனக்கு சிறிதுகூட மகிழ்ச்சி உண்டாகவில்லை. நான் நீண்ட காலமாகவே அவரை மறப்பதற்கு முயற்சித்துக் கொண்டிருந்தேன். அந்தக் கடுமையான முயற்சியைத் தகர்க்கக்கூடிய ஒரு சம்பவமாகவே நாங்கள் மீண்டும் சந்தித்த அந்தச் சம்பவம் எனக்குத் தோன்றியது. நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துப் புன்னகைத்துக் கொண்டோம். ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டோம். அந்த நிமிடங்கள் மிகவும் வேகமாக முடிந்துவிடக் கூடாதா என்பது மட்டுமே என்னுடைய விருப்பமாக இருந்தது. அவரும் மகிழ்ச்சியுடன் இருந்ததாகத் தெரியவில்லை.

சகோதரி, அவர் எதற்காக வந்திருந்தார் தெரியுமா? மிகுந்த தயக்கத்துடன், மெதுவான குரலில் அவர் அதைச் சொன்னார். தன்னுடைய திருமணத்திற்கு என் அனுமதியை வாங்குவதற்காக வந்திருக்கிறாராம்!

ஏதாவது தடைகள் கூறு வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. என்னுடைய வழியை விட்டு அந்த மனிதர் நீங்கிப் போவது குறித்து எனக்கு சந்தோஷமே. நான் சிறிதும் தயங்காமல் சம்மதத்தையும் ஆசீர்வாதத்தையும் தந்தேன். அத்துடன் அந்த உறவு நிரந்தரமாக முடிவுக்கு வந்தது.

அந்த மறு சந்திப்பிற்கு என் மனம் மாறியதற்கு அதையும் தாண்டிய பங்கு இருக்கிறது. அவரை இரண்டாவதாக ஒருமுறையவாது நான் பார்க்காமல் இருந்திருந்தால், இன்னொரு ஆணுடன் என்னை ஏதாவதொரு வகையில் சம்பந்தப்படுத்த என்னால் முடிந்திருக்காது என்பதுதான் என்னுடைய உறுதியான கருத்து. அவர்மீதும் அதே வழியில் காதலிக்கும் ஆண் இனத்தின் மீதும் வைத்திருந்த மதிப்பு என்னைப் பொறுத்த வரையில், அந்த சாயங்கால வேளையில் முடிவுக்கு வந்துவிட்டது.

முடிந்தவரையில் சந்தோஷமாக வாழவேண்டும் என்றும்; மணியை ஏதாவதொரு நல்ல நிலையை அடையும்படிச் செய்ய வேண்டும் என்றும் நான் தீர்மானித்தேன். அன்றிலிருந்து இன்றுவரை உள்ள என்னுடைய வாழ்க்கைக்கு அதைத் தவிர வேறு லட்சியம் எதுவும் இல்லை. அவனுக்கு ஐந்து வயது நடக்கும்போது, நான் சென்னைக்கு இருப்பிடத்தை மாற்றினேன். திரைப்படங்களில் நடிப்பதற்கு எனக்கு நிறைய வாய்ப்புகள் வந்தன. என்ன காரணத்தாலோ ஒரு பின்னணிப் பாடகியாக வரவேண்டும் என்றுதான் எனக்கு விருப்பம் உண்டானது.

ஒரு திருமணத்தைப் பற்றி அதற்குப் பிறகு நான் அதிகமாக நினைத்ததேயில்லை. பழைய கதைகளை மறைத்து வைத்துக் கொண்டு, ஒருவனை வாழ்க்கை முழுவதும் ஏமாற்றவோ, அதைத் திறந்து கூறி ஒருவனுடைய இரக்கத்தையும் அன்பையும் பெறவோ எனக்கு விருப்பமில்லை. ஸ்டுடியோவிலுள்ள வாழ்க்கையில் உண்மையாகவே அதற்கான சந்தர்ப்பங்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட தடவை என்னைத் தேடி வந்தன. அதை வேண்டாம் என்று மறுப்பதிலும், அதன் மூலம் ஆணை ஏமாற்றத்திற்குள்ளாக்குவதிலும் எனக்கு மிகுந்த ஒரு ஆனந்தம் தோன்றியது. யாரிடமும் நம்பிக்கை கொண்டவளாக இருக்க வேண்டும் என்ற பொறுப்பு எதுவும் இல்லாமலிருந்ததால், மனதிற்குப் பிடித்த ஒரு இளைஞனுடன் சேர்ந்து என்னுடைய ஓய்வு நேரங்களில் இருந்த தனிமையை விரட்டியடிக்க நான் சிறிதும் தயங்கவில்லை. கிடைத்த பொருளாதார உதவிகளை வேண்டாம் என்று கூறவும் இல்லை. ஆனால், இவை அனைத்தும் சிறிது காலத்திற்கு முன்பு நடந்தவை.

இப்போது எனக்கு என்னுடைய மகனின் நலனில் மட்டுமே கவனம் இருக்கிறது. அவனையும் சிறிது அறிமுகப்படுத்திவிட்டால், இந்தக் கடிதத்தை முடிவுக்குக் கொண்டு வந்துவிடலாம் என்று நினைக்கிறேன். சிறு வயதாக இருக்கும்போதே டாக்டராக வர வேண்டும் என்பதுதான் அவனுடைய விருப்பமாக இருந்தது. என்னை எடுத்துக் கொண்டால், அவனை சிவில் சர்வீஸில் உயர்ந்த பதவியில் உட்கார வைக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய விருப்பமாக இருந்தது. ஆனால், அவனுடைய விருப்பங்களுக்கு நான் ஒரு தடையாக இருக்க நினைக்கவில்லை. நான் முன்பே கூறியது மாதிரி, இப்போது அவன் கல்கத்தாவில் ப்ராக்டீஸ் பண்ணிக் கொண்டிருக்கிறான். ஆரம்பமாக இருந்தாலும், நிறைய ப்ராக்டீஸ் உள்ள ஒரு டாக்டராக மணி இருக்கிறான்.

என் வாழ்க்கையை எடை போட்டுப் பார்ப்பதில் எனக்கு சிறிதும் விருப்பமில்லை சகோதரி. எனினும் உங்களுடைய கதை என்னை மிகவும் ஆச்சரியப்பட வைத்துவிட்டது. காதலித்த ஒருவனுக்காக இத்தனை நீண்ட காலம் காத்திருக்க முடியுமா? இது ஒரு தியாகம் என்னும் பட்சம், இதனால் யாருக்கு என்ன கிடைக்கிறது என்று நான் யோசிக்காமல் இல்லை. அது வேறு விஷயம். நாம் இப்போது மிகவும் முக்கியமாக அறிமுகமாகிவிட்டிருக்கிறோம். பெண்ணின் புனிதத் தன்மையை அதன் விளிம்பு எல்லைகள் வரை பின் தொடர்ந்திருக்கும் சகோதரியாகிய உங்களுக்கு இந்த கனகத்தைச் சந்திப்பதில் ஆட்சேபனை எதுவும் இருக்காது என்று நான் நம்பலாமா? சாயங்காலம் நாம் ஒருவரையொருவர் சந்திப்போம் என்ற எதிர்பார்ப்புடன்-

                                    சகோதரியின் நம்பிக்கைக்குரிய

                                                            கனகம்.


கடிதத்தைப் படித்துவிட்டு சிறிது நேரம் நான் எந்தவித அசைவும் இல்லாமல் படுத்திருந்தேன். கனகத்தைப் பற்றி எனக்கு என்ன தோன்றியது? எதையும் நிச்சயமாகக் கூற முடியவில்லை. தோற்றத்தில் இருப்பதைப் போலவே அவளுடைய கடிதத்திலும் ஏதோ ரகசியம் மறைந்திருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. அவள் எதற்காக இவ்வளவு விஷயங்களையும் வெளிப்படையாக எழுத வேண்டும்? என்னுடைய நம்பிக்கைகளைத் திருத்த வேண்டும் என்று முயற்சிக்கிறாளோ? அப்படியென்றால், உண்மையாகவே அவள் தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறாள் என்று அர்த்தம். வாழ்க்கை அதன் எல்லா கவர்ச்சிகளுடனும் எனக்கு முன்னால் வந்து அழைத்தால் கூட அவற்றை மிகவும் சர்வ சாதாரணமாக வேண்டாம் என்று மறுக்க முடிகிற எனக்கு, இந்த சம்பவங்கள் எதிலும் புதுமையும் இருப்பதாக தெரியவில்லை.

ஹா! நான் எதற்காக என்னிடமே இந்த சபதத்தைச் செய்துகொள்ள வேண்டும்? அந்தக் கடிதம் என்னிடம் பாதிப்பு உண்டாக்க வேண்டும். இல்லாவிட்டால் என் மீது நம்பிக்கை வைத்து யாருக்கு என்ன பிரயோஜனம்? அந்தக் கடிதத்தில் கனகம் எவ்வளவு தைரியத்தை வெளிப்படுத்திக் கொண்டாலும், அதில் அவளுடைய மனதில் அழுகைச் சத்தம் எவ்வளவு தெளிவாகக் கேட்கிறது! என்னைப் போல அவளும் கவலையில் மூழ்கிப்போயிருக்கிறாள். எங்கள் இருவரையும் ஒரே மாதிரி பாதிக்கக்கூடிய ஏதோவொரு பிரச்சினை இருக்கிறது. சுய உணர்வுடன் திருத்த முயற்சிக்காமல், இரண்டு பேரும் அவரவர்களின் போக்கில் பயணித்திருக்கிறோம்- மாறுபட்ட வழிகள் மூலமாக. பிறகு ஒவ்வொருவரும் எங்கேயோ போய் சேர்ந்திருக்கிறோம். முழுமையான மனக்கட்டுப்பாடு என்ற விஷயத்தைக் கொண்டு என்னால் பெருமைப்பட்டக் கொள்ள முடியும். தன்னுடைய வாழ்க்கையை அர்த்தம் நிறைந்ததாக ஆக்கிய தன் மகனை நினைத்து கனகம் பெருமைப்பட்டுக் கொள்ளலாம். எனினும், யாரும் மகிழ்ச்சியாக இல்லை. எங்களுடைய இதயங்கள் ஒன்று சேர்ந்து தேம்பித் தேம்பி அழுவதைப்போல இருக்கிறது. என் கனகம், நீங்கள் உண்மையிலேயே எனக்கு ஒரு ஆறுதல்தான். சகோதரி, உங்களுக்கு நானும் அப்படி இருக்கிறேனே!

அதே நாள் இரவு!

டந்த ஆறேழு மணி நேரங்களுக்குள் என்னவெல்லாம் நடந்து முடிந்துவிட்டது! நடு இரவு வேளையின் இந்தத் தனிமைச் சூழலில் அலையடித்துக் கொண்டிருக்கும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக் கொண்டு, நான் இந்த வரிகளை எழுதுவதற்கு என்னுடைய எல்லா சக்திகளையும் மையப்படுத்துகிறேன். சம்பவங்களை ஒழுங்கான வரிசையில் குறிப்பிடுவது என்பது இதைப்போன்ற கட்டத்தில் மிகவும் கஷ்டமான ஒரு விஷயமாக இருப்பதைப் போல் தோன்றுகிறது நான் முயற்சித்துப் பார்க்கிறேன்.

மதிய நேரம் தாண்டியவுடன் நளினி தன் கணவனின் வீட்டிற்குப் புறப்பட்டாள். அவள் பாலனுடன் என் அறைக்கு வந்து பயணத்திற்கான அனுமதி கேட்டாள். ஹா! அந்த முகத்தில் தெரிந்த அழகான உணர்ச்சிகள் இந்த உலகத்திற்குச் சொந்தமானவைதானா? சந்தோஷமும் காதல் ஒளியும் கலந்திருந்த அந்தக் கண்கள் இரண்டு நட்சத்திரங்களைப் போல எனக்கு முன்னால் இப்போதும் மின்னிக் கொண்டிருக்கின்றன. எதிர்பார்ப்புகள் அவளைச் சுற்றி மின் அலைகளை உண்டாக்கியிருப்பதைப் போல் தோன்றியது.

"நாங்க போயிட்டு வரட்டுமா?"

கைகளைக் கூப்பியவாறு நளினி கேட்டாள். அந்த நேரம் என்னுடைய சிந்தனைகள் பல யுகங்களையும் கடந்து பின்னோக்கிச் சென்றன. பழங்காலத்திலிருந்து நவீன குடும்ப உறவிற்கு வளர்ந்து வந்த மனிதனின் முன்னோக்கிச் செல்லும் நீண்ட பயணத்தையும் இல்லறத்தின் இனிமையையும் ஒரு திரைப்படத்தைப்போல நான் எனக்கு முன்னால் பார்த்தேன். நான் அவர்களை இதயப்பூர்வமாக வாழ்த்தினேன்.

அந்தப் பிரிவு நிரந்தரமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. நளினி இனி திரும்பி வரமாட்டாள். அவளுடைய இதயத்தில் எனக்கென்று வைத்திருப்பதற்கு இடமில்லை. இந்த வீடும் பிறந்து வளர்ந்த சுற்றுப்புறங்களும் மட்டுமல்ல- இன்றுவரை இருந்து வந்த எல்லா உறவுகளையும் விட்டுவிட்டு அவள் நிரந்தரமாகப் பிரிந்து போகிறாள். இந்தப் புதிய பிறவியில் அவளுக்குப் பழைய விஷயங்களைப் பற்றி கனவுக்கு நிகரான நினைவுகளைத் தாண்டி வேறெதுவும் இருக்கப் போவதில்லை. அவர்கள் இருவரும் தனித்து வாழ்க்கைக்குள் காலடி எடுத்து வைத்து நடந்து போகிறார்கள். அவர்கள் மற்றவர்களிடமிருந்து பெற வேண்டியதையெல்லாம் பெற்று சந்தோஷத்துடன் பிரிகிறார்கள். உறவினர்களுக்கு அவர்கள் இழப்புதான். அவர்களுக்கு ஒரு புதிய வாழ்க்கை பிறந்துவிட்டது. எதிர்பார்த்த ஒளிமயமான வாழ்க்கை. அவர்களுக்கு நன்மைகள் உண்டாகட்டும்!

நான்கு மணிக்கு ஜட்காக்காரன் வந்தான். வண்டியில் ஏறி உட்கார்ந்தவுடன் மற்ற எல்லா விஷயங்களும் படிப்படியாக மறந்து போய், என்னுடைய உலகத்தில் நானும் கனகமும் மட்டுமே எஞ்சி இருந்தோம். எங்களுடைய நட்பு, எவ்வளவோ வருடங்களாக இருந்து கொண்டிருப்பதைப் போலவும் ஆழமானதாகவும் தோன்றியது. நாங்கள் நீண்ட காலத்திற்குப் பிறகு ஒருவரையொருவர் சந்திப்பதைப் போல இருந்தது.

என் மனதில் கவலைகள் நிறைந்த ஆர்வம் நிறைந்திருந்தது.

அது ஹோட்டலுடன் இணைந்திருக்கும் ஒரு தற்காலிக இருப்பிடம். இடது பக்கமிருந்த கார் ஷெட்டிற்கு வெளியே இருந்த முற்றத்தில் பூச்செடிகள் வைத்து அழகுபடுத்தியிருந்தார்கள். கீழே அமர்ந்து ஓய்வு எடுப்பதற்காக நிழல் தரும் மரங்களுக்குக் கீழே இருக்கைகள் அமைத்திருந்தார்கள்.

நான் கேட்டைக் கடந்ததும், கனகம் அங்கு வந்து என்னை வரவேற்றாள். நாங்கள் ஒன்று சேர்ந்து வராந்தாவரை நடந்தோம். வெயில் முழுமையாக ஆக்கிரமித்திருந்தது. காற்று அசைவே இல்லாமல் இருந்தது. என்னவோ நடக்கப் போகிறது என்பதைப் போன்ற ஒரு தோற்றம். வாசலில் இருந்த மரங்களுக்குக் கீழே அமரலாம் என்று நாங்கள் முடிவெடுத்தோம். இரண்டு மூன்று குஷன்களை கனகம் எடுத்துக் கொண்டு வந்து அந்த சாய்வு பெஞ்சுகளில் வைத்தாள். வேலைக்காரன் ஒரு வட்டவடிவமான மேஜையை எங்களுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டான். அவன் அதன் விரிப்பை சரி பண்ணிவிட்டு, கீழே விழுந்து கிடக்கும் காய்ந்த இலைகளைப் பொறுக்கி சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்துவிட்டோம் என்ற நம்பிக்கையுடன் திரும்பிப் போனான்.

பிறகு நாங்கள் உரையாடலை ஆரம்பித்தோம். கனகம் அந்தக் கடிதத்தைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கேட்கவில்லை. நான் கூறவும் இல்லை. எனினும், நாங்கள் இருவரும் அதைப் பற்றித்தான் அப்போது நினைத்துப் கொண்டிருந்தோம் என்பதுதான் உண்மை.

"கடிதத்தைப் படிச்சீங்கள்ல... அதற்குப் பிறகு...?"

அந்தக் கேள்வியைக் கனகம் கேட்கவில்லை. ஆனால், அவளுடைய கண்கள் எப்போதும் அதைத்தான் கேட்டன. உள்ளுக்குள் முழங்கிக் கொண்டிருந்த அந்தக் கேள்வி காரணமாக இருக்கலாம். உரையாடல் இடையில் அவ்வப்போது நின்று கொண்டிருந்தது. எதுவும் கூறுவதற்கு இல்லாமலோ, எல்லாவற்றையும் மறந்துவிட்டது மாதிரியோ நாங்கள் வெறுமனே எதுவும் பேசாமல் அமைதியாக உட்கார்ந்திருந்தோம்.

வேலைக்காரன் தேநீரும் பலகாரங்களும் கொண்டு வந்தான்.


"பாருங்க... மணி இன்னும் வந்து சேரவில்லை. இன்னைக்கு நாம அவனுடன் இருந்து தேநீர் குடிப்போம் என்று நான் நினைத்தேன்.”

"ஆமாம்... நானும் அதை உண்மையாகவே நினைத்திருந்தேன்."

சாதாரணமாக ஒரு தவறை மறைப்பதற்கு முயற்சித்துக் கொண்டே நான் அதைச் சொன்னேன். அதுவரையில் நான் மணியைப் பற்றி எதுவுமே கேட்கவில்லையே! ஒரு மகன் மீது இருக்கும் பாசத்தைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாது என்றுகூட அவள் நினைத்திருக்கலாம். அதை மாற்றுவதற்காக நான் 'ஆர்வத்துடன்' மணியைப் பற்றி அதற்குப் பிறகு பலவற்றையும் கேட்டேன். இப்படியே சிறிது நேரம் சென்றது.

ஐந்து மணி ஆனபோது மரங்கள் மீது மஞ்சள் வெயில் படர்ந்து சுகமான இளம் காற்று வீச ஆரம்பித்தது. ஹோட்டலில் இருந்து வானொலிப் பாட்டு கேட்டது. மூச்சுவிட முடியாமல் செய்து கொண்டிருந்த அந்த சுற்றுப் புறங்கள் மெதுவாக மாறிக் கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. அந்த நேரத்தில் ஒரு அஞ்சல் ஊழியர் எங்களை நோக்கி நடந்து வருவதைப் பார்த்தேன். கனகம் ஆர்வத்துடன் எழுந்து அவரை நோக்கிச் சென்றாள். முகவரி சரிதானா என்று பார்த்துவிட்டு அவர் ஒரு தந்தித் தகவலை அவளிடம் தந்தார்.

"மணியின் தந்தியாகத்தான் இருக்க வேண்டும். நான் இதைத்தான் எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன்."

"சென்னையில் இருந்து வந்திருக்கு. மணியின் தந்திதான்"- அவள் படிப்பதற்கிடையில் சொன்னாள்.

"அவன் வரவில்லையாம். வேலை முடிந்துவிட்டால் சீக்கிரமா நான் அங்கே வந்துவிடுவேன் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறானாம்."

கனகம் தீவிர சிந்தனையில் மூழ்கினாள். அவள் அந்த தந்தியைச் சுருட்டி குழாய் போல ஆக்கி உதட்டில் வைத்து ஊதியவாறு எதையோ திட்டமிடுவதைப் போல நின்றிருந்தாள்.

"அப்படின்னா, நான் நாளைக்குப் போகணும். அவனைப் பார்க்குறதுக்கு எனக்கு அவ்வளவு ஆர்வமா இருக்கு"- அவள் மீண்டும் எனக்கருகில் வந்து உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: "நாம கொஞ்ச நாட்களாவது ஒன்று சேர்ந்து இருக்க முடியும்னு நான் நினைச்சேன். மணி எந்தச் சமயத்திலும் என் விருப்பத்திற்கு எதிராக நடந்தது இல்லை. அவனுக்கு பயணம் சோர்வைத் தரும் ஒரு விஷயமாக தோன்றியிருக்கலாம். எது எப்படியிருந்தாலும், நேற்று கடிதம் எழுதியது நல்லதாகப் போய்விட்டது. இந்த அவசரத்துக்கு மத்தியில் என்னால் எதையும் பேசவே முடியாது."

"ஆமாம்... நிச்சயமாக. அந்தக் கடிதத்தால் நாம எவ்வளவோ நெருங்க முடிஞ்சிருக்கே!"

நான் அப்படித்தான் சொன்னேன். நிச்சயமாக அது சுய உணர்வுடன் சொல்லப்பட்டது.

"அப்படியா? சகோதரி, ஒருவேளை என்னைவிட்டு எங்கே நீங்க கொஞ்சமாவது விலகிப் போயிடுவீங்களோன்னு நான் பயந்தேன். இருந்தாலும் அதை என்னால் கூறாமல் இருக்க முடியவில்லை."

"திறந்த மனதுடன் நெருங்கத்தான் முடியுமே தவிர, விலகுவதற்கு யாரால் முடியும்?"

கனகம் என்னுடைய கைகளை இறுகப் பற்றிக் கொண்டு என்னவோ கூற முயன்றாள். ஆனால், அவள் அமைதியாக என் முகத்தைப் பார்க்க மட்டுமே செய்து கொண்டிருந்தாள். வெள்ளி ரேகைகள் படரத் தொடங்கியிருந்த அந்தத் தலை முடியும், முதுமையை அறிவிக்கும்- சுருக்கங்கள் விழுந்திருக்கும் அந்த முகமும் ஏதோ புதிதாக வந்து சேர்ந்திருக்கும் இளமை ஒளியால் பிரகாசிப்பதைப் போல எனக்குத் தோன்றியது.

"ஹா! நாம் எவ்வளவோ முன்பு அறிமுகமாகியிருந்திருக்க வேண்டும்!"

என் கையில் இருந்த தன் பிடியை மேலும் இறுக்கிக் கொண்டே அவள் கனவில் பேசுவதைப் போல சொன்னாள். மீண்டும் கனகம் சிந்தனையில் மூழ்கிவிட்டாள்.

"வாங்க... நாம உள்ளே போகலாம். சகோதரி, நீங்கள் மணியின் புகைப்படத்தைப் பார்க்க வேண்டாமா? அவனை நேரில் பார்க்க முடியாமல் போய் விட்டாலும்..."

நாங்கள் எழுந்தோம். நேரம் மாலை ஆகிவிட்டிருந்தது. நகரம் மின் விளக்குகளால் பிரகாசித்துக் கொண்டிருந்தது. நான் கனகத்தைப் பின் தொடர்ந்து நடந்தேன். ஏதோ பூமியைப் பற்றிய படத்தைக் காட்டி, புவியியல் பற்றி பாடம் கற்றுத் தரப்போகிற ஒரு ஆசிரியையைப் பின் தொடர்ந்து செல்வதைப் போல் நான் உணர்ந்தேன்.

"பாருங்க... போன வருடம் அவன் கல்கத்தாவில் இருந்து அனுப்பியது..."

அவள் சுவரிலிருந்த அந்தப் புகைப்படத்தை எடுத்து எனக்கு நேராக நீட்டியவாறு சொன்னாள். தொடர்ந்து என்னையும் படத்தையும் மாறி மாறிப் பார்த்தவாறு சிந்தனையுடன் நின்றிருந்தாள்.

புகைப்படத்தை நான் பார்த்தேன். அந்த நிமிடம் என்னுடைய இதயத்தில் அலையடித்த உணர்ச்சிகளை நான் எப்படி வெளியிடுவேன்? அது மணியின் புகைப்படம் தானா? நான் என் கண்களைச் சுருக்கிக் கொண்டு, ஒரு புதிய காட்சிக்கு என்னைத் தயார் பண்ணிக் கொண்டு மீண்டும்  கண்களைத் திறந்தேன். அந்தப் படம் அதே நிலையில் இருந்தது. எரிந்து கொண்டிருந்த ஒரு வேதனை வயிற்றிலிருந்து கிளம்பி மேல்நோக்கி நகர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. எனக்கு எதுவுமே புரியவில்லை. நான் சந்தேகத்துடன் கனகத்தின் முகத்தையே பார்த்தேன். அவள் அப்போதும் என் முகத்தையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

"என் மகனை முன்பே பார்த்திருப்பதைப் போல் தோணுது... அப்படித்தானே?"

அந்த ஆசிரியையின் முகத்தில் தெரிந்த உணர்ச்சிகள் எனக்கு மேலும் தெளிவாகத் தெரிந்தன.

"ஆமாம்... ஆமாம்... எனக்குத் தெரிந்திருப்பதைப் போல... தோணுது..."

"சரிதான்... இது அவனுடைய மிகச் சிறந்த புகைப்படம். அவனை நேரில் பார்ப்பதைப் போலவே இருக்கும்."

என்னால் எதையும் கூற முடியவில்லை. என் மனதில் உண்டான சந்தேகத்தை வெளியில் கூற முடியாமல் இருந்தேன். அதை நினைத்துப் பார்க்கவே என்னால் முடியவில்லை. அது என்னுடைய வயதிற்கும் புனிதத் தன்மைக்கும் எதிராக இருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது.

கனகம் அந்த நேரத்தில் என் கையை இறுகப் பற்றிக் கொண்டு, அந்த அறையில் சுவரோடு சேர்த்துப் போடப்பட்டிருந்த கட்டிலுக்கு அழைத்துச் சென்று உட்கார வைத்தாள்.

"சகோதரி, எனக்கு நீண்ட நேரம் இல்லை. நான் இன்னும் கொஞ்சம் நிதானமாக இதை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைத்தேன். மனதை முழுமையாகக் கட்டுப்படுத்த முயற்சி செய்யுங்க."

அவள் எழுந்து எதிரில் இருந்த சுவரில் மாட்டப்பட்டிருந்த இன்னொரு புகைப்படத்தை எடுத்துக் கொண்டு என்னை நோக்கி வந்தாள்.

"அவனுக்கு அவனுடைய தந்தையின் சாயல் எந்த அளவுக்கு அப்படியே இருக்குன்றதைப் பாருங்க"- அவள் நடப்பதற்கு மத்தியில் சொன்னாள்: "அவர் திருமணத்திற்கு அனுமதி வாங்குவதற்காக இரண்டாவது தடவையாக என்னைத் தேடி வந்த விஷயத்தைத்தான் நான் எழுதியிருந்தேனே! நான் அவ்வளவு சீக்கிரமா அதற்கு சம்மதிக்க மாட்டேன்னு அவர் நினைத்திருக்கலாம்.


எது எப்படி இருந்தாலும், அன்றைக்கு என்னையும் அவனையும் ஸ்டுடியோவுக்கு அழைத்துக் கொண்டு போய் அந்தப் படத்தை எடுக்கச் செய்தார். அவனுடைய அப்பாவை அவனுக்கு தைரியமாக சுட்டிக் காட்டுவதற்காக..."

நான் அந்தப் படத்தைக் கையில் வாங்கிப் பார்த்தேன். அப்போது எனக்கு எல்லா விஷயங்களும் புரிந்துவிட்டன. சந்தேகம் என்ற சுமையைக் கீழே இறக்கி வைத்துவிட்டு, நான் ஓய்வு எடுப்பதைப் போல் உணர்ந்தேன். இனி அதை நான் நம்பலாம். நான் பார்த்ததைக் கூறலாம். ஹா! என்ன ஒரு நிம்மதி!

கனகத்தின் தோளுடன் ஒட்டிக் கொண்டு அவர் நின்றிருக்கிறார்- காலை நீட்டிக் கொண்டு மேஜைமீது உட்கார்ந்திருக்கும் தன் மகனின் தோள்களைப் பற்றியவாறு! ஆமாம்... அது அவர்தான். இருபத்தாறு வருடங்கள் நான் யாரை மனதில் தியானம் செய்து கொண்டு வாழ்ந்தேனோ, அந்த என்னுடைய அன்பிற்குரிய சந்திரன்!

நான் மீண்டும் மணியின் புகைப்படத்தில் என் கண்களை ஓட்டினேன். அப்படியே சந்திரனின் உரித்து வைத்த முகம்! என்னை விட்டுப் பிரிந்த அதே வயது. நான் அந்த முகத்தை ஞாபகப்படுத்திப் பார்க்க முயற்சித்தேன். வருடங்களைக் கடந்து இறந்த காலத்தை நோக்கி... அங்கு ஒரே கூட்டம்! நளினி, பாலன், ரவி அண்ணன், மாலினி, என் தாய், சந்திரன்... எல்லாமே உடலற்ற தலைகள் மட்டும்! ஒன்றிற்குப் பிறகு இன்னொன்றாக அவை மூடுபனியில்... மங்கலான வெளிச்சத்தில் சுற்றிக் கொண்டிருந்தன. என்ன பயங்கரமான முகங்கள்! யாரும் என்னைப் பார்க்கவில்லை. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் என்னைப் பார்க்க முடியாத ஏதோ ஒரு உலகத்தில் அவர்கள் இருந்தார்கள். எல்லோரும் இறந்து போயிருக்கிறார்கள். அது நரகமாக இருக்க வேண்டும். யாருக்கும் மோட்சம் கிடைக்கவில்லையே! அவர்கள் என்ன வேதனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்! அந்த முகங்களில் குருதி காய்ந்து ஒட்டிக் கொண்டிருந்தது. கண்ணீர் வற்றி, இமைகள் வீங்கியிருக்கின்றன. அந்த விழிகள் அசையவில்லை. எல்லோரும் அந்த அளவிற்குக் கடுமையான பாவத்தைச் செய்தவர்களா என்ன? ஹா! அதோ... அது... என் தாய்தான். என் அன்பிற்குரிய தாய்... அம்மா... அம்மா...

நான் கட்டிலில் படுத்திருந்தேன். முகத்தில் அரும்பிய வியர்வைத் துளிகளை கனகம் தன்னுடைய மெல்லிய கைக்குட்டையால் துடைத்து நீக்கினாள். அவள் எனக்கு மெதுவாக வீசிக் கொண்டிருந்தாள். என்னுடைய உடலுக்கு எந்தவித பலமும் இல்லாமல் போயிருந்தது. பேசுவதற்கோ கையையோ காலையோ அசைப்பதற்கோ என்னால் முடியவில்லை. ஆனால், ஒரு விஷயத்தை நான் தெளிவாக நினைத்துப் பார்க்கிறேன். எனக்கு இப்போது எந்தவொரு கவலையும் இல்லை. மென்மையான இதயத்துடன் நான் ஓய்வு எடுக்கிறேன்.

எவ்வளவு நேரம் இப்படியே இருந்தேன் என்று எனக்கே தெரியவில்லை. கடந்து போன சம்பவங்கள் நினைவுக்கு வந்தபோது, நான் வேகமாக எழுந்து உட்கார்ந்தேன். அந்த பலவீனமான நிலையைப் பார்த்து எனக்கே வெட்கமாக இருந்தது. எல்லாவற்றையும் மறந்துவிட்டு தைரியமாக நடந்து கொள்ள வேண்டும் என்று நான் முடிவெடுத்திருந்தேன். பிறகு அவை எல்லாம் எப்படி நடந்தன?

படிப்படியாக எனக்கு எல்லாம் ஞாபகத்தில் வந்தன. என் மூளையும் உடலும் மிகவும் களைத்துப் போய் விட்டிருந்தன. என்னால் எதையும் சிந்தித்துப் பார்க்க முடியாததைப் போல இருந்தது. நான் தனியாளாவும் ஆதரவு இல்லாதவளாகவும் ஆகிவிட்டேனா? எனக்கு முன்னால் வாழ்க்கை வழியைத் தடுத்துக் கொண்டு நின்றிருக்கிறது- ஒரு லட்சியமோ ஒரு கொள்கையோ இல்லாமல்... எனினும், பழைய முட்டாள்தனமான சொர்க்கத்திலிருந்து நான் தப்பித்து விட்டேனே! மிகவும் தாமதித்தாவது... மிகவும்! மிகவும்!

அடுத்த நிமிடம் நான் கனகத்தின் முகத்தைப் பார்த்தேன். முழுமையான இரக்கத்துடன் அவள் என் கைகளை இழுத்துக் தன் மடியில் வைத்துக்கொண்டு ஏதோ சிந்தனையுடன் உட்கார்ந்திருந்தாள். நானும் கனகமும் மட்டுமே இருக்கும் உலகம். மற்றவர்களெல்லாம் என்னை விட்டுப் போய்விட்டார்கள். நான் கனகத்தை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டேன். ஹா! அவள் அழுகிறாளோ?

"தங்கச்சி... நான் இதைக்கூறி இருக்கக்கூடாது. அப்படியென்றால், வாழ்க்கை முழுவதும் நம்பிக்கையிலேயே கழத்திருக்கலாமே! நான் மிகவும் யோசித்தேன். அதைச் சொல்லாமல் விட்டால், அது ஒரு துரோகச் செயல்னு நான் நினைச்சேன். இப்போ நான் கவலைப்படுறேன். என் இரக்கமற்ற இதயத்திற்கு அதன் மகத்துவத்தைப் புரிந்து கொள்ள முடியவில்லை. என்னை மன்னித்து விடுங்கள்."

நான் ஏதோ ஞானோதயம் அடைந்ததைப் போல அவளையே உற்றுப் பார்த்தேன். அந்த வார்த்தைகளில் என்னுடைய தாயின் குரலும் கலந்து இருந்ததோ? கனகத்தின் முகத்தில் தெரிந்த முதுமையின் அடையாளங்கள் அப்போது பல மடங்குகள் அதிகமாகியிருப்பதைப் போல் தோன்றின.

அவள் என்ன சொன்னாள்? இறுதியில் சொன்ன வார்த்தைகள் மட்டுமே இப்போது என்னுடைய ஞாபகத்தில் இருக்கின்றன. மன்னிப்பு கொடுக்க வேண்டும் என்றா சொன்னாள்? எனக்கு ஒரு பெரிய நிம்மதியைத் தந்ததற்கா?

"என் சகோதரி, என்னுடைய நன்றியையும் கடமைப்பட்டிருப்பதையும் நான் எப்படி வெளிப்படுத்துவேன்?"

"எல்லாம் சரியாக இருக்கலாம். இருந்தாலும் திடீரென்று இப்படிப்பட்ட விஷயங்களைத் தாங்கிக் கொள்வதற்கு யாருக்கும் தைரியம் இருக்காது எனக்கு எத்தனையோ ஆண்களைத் தெரியும். அவர்களில் யாரையும் விட சந்திரன் நல்ல இதயத்திற்குச் சொந்தக்காரா என்பது எனக்கு நல்லா தெரியும். வெறும் சாதாரணமான ஒரு சம்பவம் என்று கூறுவதைவிட வேற்று மனிதர்களின் பார்வையில் இதில் எதுவுமே இல்லை. ஆனால், சொந்த உயிர்க் குருதி மூலம் தொடர்புள்ளவர்களின் விஷயம் அப்படி அல்ல. சகோதரி, நேற்று உங்களின் அறையில் சந்திரனின் புகைப்படத்தைப் பார்த்தப்போ, நான் என்னை எப்படிக் கட்டுப்படுத்திக் கொண்டேன் என்பது எனக்கு மட்டும்தான் தெரியும். உங்களுக்கு இந்த பாதிப்பு அதைவிட அதிகமானது."

"இல்லை. நான் அதிக முக்கியத்துவத்தை இந்த விஷயத்துக்குக் கொடுக்கப் போவது இல்லை. இரண்டு வருடங்கள் மூச்சை அடக்கிக் கொண்டு, அவர் இந்த விஷயங்களையெல்லாம் என்னிடமிருந்து மறைத்திருக்கிறார். ஹா! அதற்காக அவர் அனுபவித்த துயரங்களை நான் நல்லா நினைச்சுப் பார்க்கிறேன். ஒரு மனிதன் ஒரே நேரத்தில் வஞ்சகனாகவும் நல்லவனாகவும் இருப்பது என்றால்...?"

பழைய விஷயங்களைப் பற்றி கனகம் பலவற்றையும் சொன்னாள். சந்திரனுக்கு மிகவும் விருப்பமான அந்தப் பாடலை என் இசைத் தட்டில் இருந்து அவள் கேட்டிருக்கிறாள். ஓவியரான சந்திரனை தன்னுடைய கடிதத்தில் தெரிந்தே மறைத்து வைத்ததைப் பற்றியும் கனகம் பேசினாள்.

நான் அதிகம் தாமதிக்காமல் திரும்பிச் சென்றேன். கனகம் என் விஷயமாக அதிகமாக பயந்ததைப் போல் தோன்றியது.


அவள் மறுநாள் புறப்படுவதாக இருந்த பயணத்தை மாற்றி வைக்க நினைத்திருப்பதாகச் சொன்னாள். நான் அவளை சமாதானப்படுத்த மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது.

வீட்டிற்குத் திரும்பி வந்தபோது லதா எதற்கோ பிடிவாதம் பிடித்து அழுது கொண்டிருந்தாள். ராஜன் அவளைச் சமாதானப்படுத்த பலனே இல்லாமல் முயற்சித்துக் கொண்டிருந்தார். நளினி பிரிந்து போனதால் தனியாகிவிட்ட மல்லிகா சற்று சீக்கிரமே படுத்துத் தூங்கியிருக்க வேண்டும். சுமா தன் தந்தையின் அருகில் தங்கையின் அழுகையைத் தான் வாங்கிக் கொள்வதைப் போல நின்றிருந்தாள். உறக்கம் அவளுடைய தைரியம் முழுவதையும் இல்லாமல் செய்திருந்தது. நொறுங்கிய ஒரு கப்பலைப் போல குடும்பம் சின்னாபின்னமாகி இருப்பதைப் போல நான் உணர்ந்தேன். அந்த அறையில் வேறு யாரும் இல்லை. நான் ராஜனிடமிருந்து லதாவை வாங்கினேன். என் ஹேண்ட் பேக்கை அவளுடைய கையில் கொடுத்தவுடன், மேகங்களுக்கு மத்தியில் இருக்கும் சந்திரனைப் போல அவள் கண்ணீருக்கு நடுவில் புன்னகைக்க ஆரம்பித்தாள். நான் லதாவை என் அறைக்குக் கொண்டு  சென்றேன். சுமாவும் என்னுடன் வந்தாள்.

லதாவிற்கு ஒரு மோட்டார் கார் வேண்டும். பிறகு அதில் வைக்க முடியாத அளவிற்கு ஒரு வீடு நிறைய மிட்டாய் வேண்டும். தந்தை கூறுவதைப் போல எதையும் செய்வதில்லை. அவற்றையெல்லாம் நான் வாங்கிக் கொடுப்பதாகக் கூறியவுடன், அவள் அமைதியாக என் தோளில் சாய்ந்து விட்டாள். சுமாவோ அந்த நேரத்தில் என் படுக்கையில் படுத்துத் தூங்கி விட்டிருந்தாள்.

நான் லதாவை சுமாவிற்கு அருகில் படுக்க வைத்தேன். தூங்கிய பிறகும் அவளுடைய ஏங்கல் நிற்கவில்லை. அழகான அந்த முகங்களைப் பார்த்துக் கொண்டே எந்தவித அசைவும் இல்லாமல் நான் அமர்ந்திருந்தேன். வருடக் கணக்கில் தொடர்ந்து கொண்டிருக்கும் என் சிந்தனைகளைப் பற்றி எனக்கு எந்த நினைவும் இல்லை.

"குழந்தைகள் தூங்கிட்டாங்களா?"

நான் அதிர்ச்சியடைந்து கண் விழித்தேன். ராஜன் அறைக்குள் நுழைந்து மேஜை மீது சாய்ந்து நின்றிருந்தார். வலிய மலர வைத்த புன்னகை தவழ்ந்த அந்த முகம் வாடிய செந்தாமரைப் பூவைப் போல இருந்தது.

நான் அந்தக் கேள்வியைக் கேட்டு எழுந்து நின்றேன். அப்போது எனக்கு அதைப் பற்றி நினைக்க முடியவில்லை. என் சிந்தனைகள் பதினெட்டு வருடங்களுக்கு அப்பால் வேகமாகப் பறந்து சென்றன. அன்று என் அறைக்குள் வந்து பேசிய ராஜனை நான் எனக்கு முன்னால் பார்த்தேன். தலைமுடிகள் கொட்டி, பருமனான உடலுடன் இருக்கும் இப்போதைய தோற்றத்திலிருந்து பிரகாசமான அந்த இளைஞர் எவ்வளவோ வேறுபட்டிருந்தார்! என்னிடமும் அதே மாதிரி மாற்றங்கள் உண்டாகியிருக்க வேண்டும். பதினெட்டு வருடங்கள்! அன்று இரவு நான் எவ்வளவு கவலைப்பட்டேன்! எல்லாம் இப்படித்தான் முடியும் என்பது தெரிந்திருந்தால்...!

"லதா இவ்வளவு சீக்கிரம் உறங்கிட்டாளே! அரைமணி நேரத்துக்கும் அதிகமா நான் அவளுடைய அழுகையை நிறுத்த முயற்சித்தேன்."

ராஜன் தன்னுடைய புன்னகையை மேலும் அதிகமாக்க முயற்சித்தார். நான் பார்த்தபோது, அந்த வாடிய செந்தாமரை வதங்கிக் கீழே விழுந்துவிடுவதைப் போல இருந்தது.

அப்போது முன்னாலிருந்த ஹாலில் இருந்த கடிகாரம் 'க்ணிம், 'க்ணிம்' என்று பத்து முறைகள் ஒலித்தது. நான் நேரத்தைப் பற்றி நினைத்தது அப்போது மட்டும்தான்.

"மாலினியும் அண்ணனும் தூங்கிட்டாங்களா?"- நான் கேட்டேன்.

"ரொம்பவும் முன்னாடியே தூங்கிட்டாங்க. அவங்க நல்லா உறங்கி எவ்வளவு நாட்களாச்சு! நேற்று தூங்கவே இல்லைன்னு நினைக்கிறேன்."

"அப்படின்னா நான் சாப்பிட்டுட்டு வர்றேன். குழந்தைகள் தனியா இருப்பாங்கன்னு நினைச்சுத்தான் நான் இவ்வளவு தாமதமானாலும் வந்தேன்."

ராஜன் அதை ஒத்துக் கொண்டார்.

சாப்பிட்டு முடித்து நான் திரும்பி வந்தபோது, ராஜன் குழந்தைகளுக்கு அருகில் என் படுக்கையில் உட்கார்ந்திருந்தார். சாளரத்துடன் உயர்ந்து நின்றிருந்த சந்திரனைப் பார்த்து அவர் என்னவோ கனவுகள் கண்டு கொண்டிருந்தார். சுற்றிலும் அமைதி நிலவிக் கொண்டிருந்தது. வெளியிலிருந்து பனி அணிந்த குளிர்ந்த காற்று எதையோ நினைத்துக் கொண்டதைப் போல அவ்வப்போது அறைக்குள் நுழைந்து கொண்டிருந்தது.

"நீங்க தூங்கலையா?"

நான் கேட்டேன். அவர் தன் சிந்தனை படர்ந்த முகத்தை உயர்த்தி என்னை வெறுமனே பார்த்தார். தொடர்ந்து லதாவின் நெற்றியில் விழுந்திருந்த சுருள் முடிகளைப் பின்னோக்கி இழுத்து விட்ட அவர் தலை குனிந்து உட்கார்ந்திருந்தார்.

அப்போதும் அந்தப் பழைய துறுதுறுப்பான இளைஞரை நான் அவரிடம் தேடிக் கொண்டிருந்தேன். ராஜனின் பார்வைகள் என் முகத்தைவிட அதிகமாக என் இதயத்தை நோக்கிச் செல்வதைப் போல நான் உணர்ந்தேன்.

"லதா என்னுடன் படுத்திருக்கட்டும். சுமாவை மட்டும் நீங்க கொண்டு போனால் போதும்."

நான் சொன்னேன். ராஜன் அவளைத் தூக்குவதற்காக அடுத்த நிமிடம் படுக்கையை விட்டு எழுந்தார்.

"எனக்கு அவசரம் ஒண்ணுமில்ல... உங்களுக்கு தூக்கம் வர்றப்போ போனால் போதும்."

"எனக்கு தூக்கம் வரல... குழந்தைகள் தூங்கிவிட்ட பிறகு, இனி எதற்காகக் காத்திருக்கணும்? அவர்கள் இவ்வளவு சீக்கிரமா தூங்குறதுன்றது எப்பவும் நடக்கக்கூடிய ஒரு விஷயம் இல்லை. எத்தனை தடவை முயற்சித்தாலும், தாய் இல்லாத குறையை ஒரு தந்தையால் சரி பண்ணவே முடியாது"- அவர் லதாவை தள்ளிப் படுக்க வைத்து, அவளுடைய உடல்மீது போர்வையை இழுத்து விட்டுக் கொண்டே தொடர்ந்து சொன்னார்: "இன்னைக்கு நான் தப்பிச்சிட்டேன். நாளைக்கு வீட்டுக்குப் போயிட்டா என்ன செய்வது என்பதை நினைக்கிறப்போ பயம் வருது."

"அதற்கு ஒரு அம்மாவை இவர்களுக்குக் கொண்டு வரணும்."

நான் அதைச் சொன்னபோது, என் குரலில் நடுக்கம் கலந்திருந்தது. உள்ளுக்குள் தங்கி நின்றிருந்த திடமான முடிவின் கனமும்தான். நான் கூறியதன் அர்த்தத்தைப் புரிந்து கொள்ளாததைப் போல ராஜன் என் முகத்தையே பார்த்தார். நான் அந்த வார்த்தைகளை மேலும் உறுதியாகவும் அர்த்தம் நிறைந்ததாகவும் திரும்பச் சொன்னேன்.

அவர் எழுந்து ஆச்சரியத்துடன் என்னையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார். பல வருடங்களாக அடக்கி வைத்திருந்த ஆசைகள் அந்த இதயத்தைத் தகர்த்துக் கொண்டு வெளியே வருவதைப் போல நான் உணர்ந்தேன்.

காய்ந்த இலைகளில் ஓசை எழுப்பியவாறு மலைக்காற்று வெளியே எங்கோ ஆரவாரித்துக் கொண்டிருந்தது.

"உண்மையாகவா? பாமா, நீ இப்படிக் கூறுவதில் ஏதாவது உண்மை இருக்கிறதா? சொல்லு... உண்மையைச் சொல்லு..."

"நான் எல்லாவற்றையும் சொல்லியாச்சு. இனிமேல் நீங்கதான் முடிவு எடுக்கணும்."


அப்படிச் சொல்லி முடித்தபோது, நான் சந்தோஷமாக இல்லை. பெண்களுக்கென்றே இருக்கும் அந்த ஆழமான அர்த்தம் கொண்ட விஷயத்தைப் பற்றிப் பேச எனக்கு உரிமையில்லை. நான் அவரிடம் கால்களைப் பிடித்துக் கொண்டு கெஞ்சிக் கேட்க வேண்டும் என்று நினைத்தேன். நான் தொடர்ந்து சொன்னேன்: "இந்தக் குழந்தைகளை அக்கறை செலுத்தி கவனித்துக் கொள்ளக்கூடிய உரிமையை நான் எந்தச் சமயத்திலும் விட்டுவிட மாட்டேன். என் தவறை இந்தக் காலம் கடந்த வேளையிலாவது திருத்திக் கொள்ளணும்னு நான் விரும்புறேன்."

நாங்கள் அந்த வகையில் தெளிவான எண்ணங்களுடன் பிரிந்தோம்... நாற்பத்தாறு வயது கொண்ட ஒரு கன்னிப் பெண்ணின் திருமணச் செய்தியைக் கேட்டு உலகம் ஆச்சரியப்படலாம். அவளுடைய அடக்கமற்ற தன்மையைக் குறை கூறவும் செய்யலாம். வாழ்வதற்கு மறந்துவிட்ட ஒரு பெண்ணின் உள்மனதில் இருக்கும் வேதனைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய சுமை அதற்கு இல்லையே!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.