Logo

பாக்கன்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 6651
paakkan

“சீரப்பன் என்றொரு பெரிய யானை

அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை

அண்ணன் உண்டு தம்பியும் உண்டு

மொத்தம் நான்கு ஆண் யானைகள்!”

அந்தச் சேரிக்குழந்தைகள் வட்டமாக அமர்ந்து குதூகலத்துடன் பாடிக் கொண்டிருந்தன. பாட்டிற்கேற்ப அவர்களுடைய கைகள் தாளம் போட்டுக் கொண்டிருந்தன.

தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த சங்கரனின் வீட்டின் முன்தான் அவர்கள் அவ்வாறு பாடிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது மட்டுமல்ல- எப்போதுமே குழந்தைகள் விளையாடக்கூடிய இடம் சங்கரனின் வீட்டு முற்றம்தான். அந்தப் பகுதியில் உள்ள குழந்தைகள் எல்லோரும் அங்கு வந்து கூடி விடுவார்கள். சிறுமிகள் பாட்டுப்பாடி கையைத் தட்டி விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுடைய ஆட்டம் முடிந்ததும் ஆண் பிள்ளைகள் கையைத் தட்டி விளையாட ஆரம்பிப்பார்கள்.

தன்னுடைய குடிசையின் திண்ணையில் அமர்ந்தவாறே குழந்தைகள் விளையாடுவதை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருப்பான் சங்கரன். தனூர் மாதம் பிறந்து திருவாதிரை வந்துவிட்டால் இந்தக் குழந்தைகளுக்குத்தான் எத்துணை மகிழ்ச்சி! குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டே, அவர்களைக் கேலியும் செய்வான் சங்கரன். ஆண்களில் சிலர் முற்றத்தின் ஒரு மூலையில் காய்ந்து போன சருகுகளை ஒன்றாகக் கூட்டி, அதற்கு நெருப்பூட்டி, குளிர்காய்ந்து கொண்டிருப்பார்கள். அந்த நடுங்க வைக்கும் குளிரில் நெருப்பின் முன் நிற்பதில்தான் எத்தனை சுகம்!

“சீரப்பன் என்றொரு பெரிய யானை

அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை”

சாமிக்குட்டிதான் பாட்டு பாடினான். அவனைத் தொடர்ந்து பாடின மற்ற குழந்தைகள். அந்தப் பாட்டு முடிந்தது.

“இனி குஞ்ஞிப்பாக்கன் பாடு” என்றான் சாமிக்குட்டி.

குஞ்ஞிப்பாக்கன் சங்கரனுக்குப் பிறந்த ஒரேயொரு ஆண்பிள்ளை. அவனுடைய மனைவி முண்டிச்சி தொடர்ந்து ஏழு பெண்களைப் பெற்ற பிறகு, எட்டாவதாகப் பிறந்தவன்தான் இந்த குஞ்ஞிப்பாக்கன்.

“இவனுக்கு நாம என்ன பெயர் வைக்கலாம். முண்டிச்சீ?”- சங்கரன தன்னுடைய மனைவியிடம் கேட்டான்.

“பாக்கரன் என்னுடைய மகனுக்கு பாக்கரன் பேரு எத்தனை பொருத்தமா இருக்குது பார்த்தியா?”

“பாக்கரன்! இந்த பேரை தம்புராக்கன்மார்கள்தானே அவங்க குழந்தைகளுக்கு வைப்பாங்க. அந்தப் பெயரையெல்லாம் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்த நாம வைக்கக் கூடாதுடீ, முண்டிச்சீ... பெரிய தம்புரானுக்கு மட்டும் இது தெரிஞ்சாப்போதும்... கதை முடிஞ்சது” - சங்கரன் உண்மையிலேயே அஞ்சினான்.

ஒவ்வொன்றிற்கும் ஒரு நாட்டு நடப்பு உண்டு. தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களில் யாருக்காவது குழந்தை பிறந்துவிட்டால், அதை உடனே தம்புரானிடம் போய் சொல்ல வேண்டும். அப்போது ஒரு கட்டு வெற்றிலையும், பன்னிரண்டு பாக்குகளும், எட்டணாவும் காணிக்கையாகச் செலுத்த வேண்டும். வாசலில் நின்றவாறே குழந்தையின் தந்தை உரக்க கூறவேண்டும்-

“பெரிய தம்புரானே, அடியேனுக்கு ஒரு குழந்தை பிறந்திருக்கு.”

“என்ன குழந்தைடா?”

ஆண் குழந்தையென்றால் கிடாத்தன் என்றும், பெண் குழந்தையென்றால் கிடாத்தி என்றும் கூற வேண்டும்.

ஏழு வருடங்களுக்கு முன்பு சங்கரனும் கூறத்தான் செய்தான்.

“கிடாத்தன் தம்புரானே!”

கிடாத்தனுக்குப் பெயரிடவும், தம்புரானின் சம்மதம் வேண்டும்.

“அடியேனின் கிடாத்தனுக்கு ஒரு பெயர் வைக்கணும் தம்புரானே!”

ஒரு நிமிடம் ஆலோசனையில் ஆழ்ந்த தம்புரான் கூறினார்.

“நாவுட்டின்னு கூப்பிடுடா.”

அடியேனின் மனதில் ஒரு பெயர் உதித்திருக்கிறது. தம்புரானே!” என்றான் சங்கரன்.

“என்ன பேருடா?”

“பாக்கரன்!”

இதைக் கேட்டதும் தம்புரானின் நெற்றி சற்று சுருங்கியது.

“அது வேண்டாம். உங்களுக்கு இந்தப் பெயரெல்லாம் கூடாது.”

“தம்புரானே!” சங்கரன் கெஞ்சுவதைப் போல் பார்த்தான். சங்கரன் நல்ல உழைப்பாளி. எந்த வேலையைச் செய்தாலும் சுறுசுறுப்பாகச் செய்யக் கூடிய இயல்பு உடையவன். அவனிடம் பொய் கிடையாது. நாணயம் இன்மை கிடையாது. நல்ல ஒழுக்கமானவன். அவன் தம்புரானிடம் கேட்டு வந்திருப்பது இதுதான் முதல் முறை.

சங்கரனைப் பார்த்து தம்புரானுக்கும் கொஞ்சம் கருணை தோன்றியிருக்க வேண்டும்.

“உன்னுடைய மகனைப் பாக்கன் என்று கூப்பிடுடா, நல்ல பெயர்! குஞ்ஞிப்பாக்கன்!”

பாக்கன்! அந்தப் பெயரின் அர்த்தம் என்னவென்று புரியாமல் விழித்தான் சங்கரன்.

“பாக்கன், பாஸ்கரன் எல்லாம் ஒண்ணுதான்டா, போ, கிடாத்தனைப் பாக்கன்னு கூப்பிடணும் தெரிகிறதா?”

பாக்கனும் பாஸ்கரனும் ஒரே பெயர்தான். இதைக் கேட்டு முண்டிச்சி சந்தோஷம் கொண்டாள். தம்புரான் வைத்த பெயர் அல்லவா?

குஞ்ஞிப்பாக்கன்!

அவன் வளர்ந்தான்- கரும்பனையின் நிறம்- பெரிய தலை- வெளியே தள்ளிக் கொண்டிருக்கிற நெற்றி- சப்பை மூக்கு- பெரிய கண்கள்- மொத்தத்தில் அழகுக்கும், அவனுக்கும் வெகுதூரம்.

அவனுக்கு ஆறு வயது நடந்து கொண்டிருந்தது. தங்கள் சாதிக் குழந்தைகளுடன் அவனும் சேர்ந்து விளையாடினான்; அவர்களோடு சேர்ந்து பாடினான்; அவர்களுடன் சேர்ந்து மாடு மேய்க்கப் போனான்.

முண்டிச்சி நன்றாகப் பாடுவாள்- பரம்பரை பரம்பரையாய் தாழ்த்தப்பட்ட மக்களால் பாடப்பட்ட பாட்டுக்கள் - கைகொட்டிக்களி என்றால் அவளுக்கு உயிர். குஞ்ஞிப்பாக்கனுக்கு பாட்டின் மேல் விருப்பம் அதிகம். ஓய்வு நேரங்களில் குஞ்ஞிப்பாக்கனைத் தன்னுடைய மடியில் இருத்தி, அவனுக்குப் பாட்டுப் பாடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பாள் முண்டிச்சி. பாட்டின் வரிகளை மிகவும் கவனமாகக் கேட்டு மனதில் பதி வைத்துக் கொள்வான் குஞ்ஞிப்பாக்கன். அவனுக்கு நல்ல ஞாபக சக்தி இருந்தது. மகனுடைய கூரிய அறிவைக் காணும்போது, மகிழ்ந்து போவாள் முண்டிச்சி. வெளியே தள்ளிக் கொண்டிருக்கிற அவனுடைய நெற்றியில் முத்தம் கொடுத்தவாறே பிராத்திப்பாள்.

“என் மகன் குஞ்ஞிப்பாக்கன் பெரிய ஆளாக வரவேண்டும் பரக்குட்டியே!”

அவர்களுடைய குலதெய்வத்தின் பெயர் பரக்குட்டி. தாழ்த்தப்பட்டவர்கள் வசிக்கும் அந்தச் சேரியில் ஒரு அலரி மரமிருக்கிறது. அதன் அடியில் ஒரு கல்லிருக்கும் அதுதான் பரக்குட்டி. வருடத்திற்கொரு முறை பரக்குட்டிக்குப் பூஜை வழிபாடு செய்வது வழக்கம். நான்கு கோழிகளின் கழுத்தை அறுத்துப் பரக்குட்டிக்குப் படையல் செய்வார்கள். கருங்கல்லைச் சுற்றிலும் குருதி ஆறாய் ஓடிக் கொண்டிருக்கும். கோழிக்கறியை வேக வைத்து பரக்குட்டிக்குப் படைப்பார்கள். கிடாத்தன்மார் முரசு கொட்டுவார்கள். அவர்களில் வயது முதிர்ந்த ஆள் தான் பூசாரியாய் இருப்பான். பரக்குட்டிக்குப் படையல் செய்த அவல், பூ, கோழிக்கறி எல்லாவற்றையும் பூசாரி எடுத்துக் கொள்வான். ஆனால் முழுவதையும் அல்ல- கால் பகுதியை விட்டு வைத்து விட்டு, முக்கால் பகுதியை மட்டுமே அவன் எடுத்துக் கொள்வான். பல வருடங்களாகத் தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகின்ற ஒரு வழக்கமிது.

“அம்மே, யார் இந்த பரக்குட்டி?” -தன் அன்னையிடம் ஒரு நாள் கேட்டான் குஞ்ஞிப்பாக்கன்.,

முண்டிச்சி கூறினாள்.


“பாரப்புரத்தில் எழுந்து நம் மக்களைக் காக்கும் பரக்குட்டி

சேரிகளனைத்திலும் இருந்து செருமக்களைக் காக்கும் பரக்குட்டி

பனங்குலை போன்ற தன் முட்டிதட்டி இரத்தம் வடிகின்ற கையும் நீட்டி

கண்களிரண்டிலும் தீப்பந்தம் ஜொலிக்க மாரிலோ அலரி மாலைகள் விளங்க

பாரப்புரத்தில் எழுந்து நம்மக்களைக் காக்கும் பரக்குட்டி.”

தாய் கூறுவதை மிகவும் கவனமாகக் கேட்டான் குஞ்ஞிப்பாக்கன். எனினும் அவனுக்கு ஒரு சந்தேகம்.

“பரக்குட்டி, நம்முடைய தெய்வம்தானே, அம்மா!”

“ஆமாடா...”

“சாமிக்கு ஏம்மா இரத்தம்? சாமி இரத்தத்தைக் குடிக்குமா?”

“இரத்தம் குடிச்சால்தான் பரக்குட்டிக்கு தாகம் ஏற்படாம இருக்கும்.”

“தாகத்தைத் தணிக்க தண்ணீ குடிச்சா போதாதாம்மா? இல்லைன்னா இளநீர் குடிக்கலாமில்லையா?”

முண்டிச்சி இதற்கு என்ன பதில் கூறுவாள்? மகனுடைய இந்தக் கேள்வி, பாவப்பட்ட அந்த அன்னையின் மனதுக்குள் ஒரு வகையான அச்சத்தை உண்டாக்கியது. பரக்குட்டி ஒரு வேளை கோபித்து விடுமோ? தன் மனதுக்குள் பரக்குட்டியை நினைத்து பிரார்த்தனை செய்துகொண்டாள் முண்டிச்சி.

“என்றெ பரக்குட்டியே! குஞ்ஞிப்பாக்கன் தெரியாமல் சொல்லிவிட்டான். பாவம்! அவனை மன்னித்து விடு.”

குஞ்ஞிப்பாக்கன் என்னவெல்லாமோ பற்றி அறிய ஆசைப்பட்டான். எதற்கெடுத்தாலும் அவனுக்கு சந்தேகம்தான்.

ஒரு நாள் பாட்டு பாடிக்கொண்டிருந்தாள் முண்டிச்சி.

“சக்யம்மாயின் முற்றத்திலிருந்தோர்

பூவனிளம் குலை வாழைக்குலை

அதை வெட்டித் தம்புரானிடம் கொடுக்கும்போது

நாமெல்லாம் கூடுவோம் சக்யம்மாயி”.

குஞ்ஞிப்பாக்கன் கேட்பான்.

“பூவன் வாழையை மண்ணுல விதைச்சது யார்?”

“சக்யம்மாயி.”

“வாழைக்குலையைத் திருடு போகாம காப்பாத்தினது யார்?”

“சக்யம்மாயி.”

“பிறகு ஏன் வாழைக்குலையைத் தம்புரானிடம் கொண்டு போய் கொடுக்கணும்?”

முண்டிச்சியால் தன்னுடைய மகனின் கேள்விக்குப் பதில் கூறவே முடியவில்லை. அவள் இரு கைகளையும் குவித்து பிரார்த்தித்தாள்.

“என்னுடைய மகனை நீதான் காக்க வேண்டும், பரக்குட்டி.”

2

தாழ்த்தப்பட்ட இனத்தவர்கள் கல்வி கற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. வயலில் ஏர் பூட்டி உழுவதற்கும், பயிர்களுக்குக் களை எடுக்கவும் மட்டுமே பிறந்தவர்கள் அவர்கள். அவர்கள் எல்லோருமே உயர்ந்த ஜாதிக்காரர்களுக்கு அடிமைகள் மாதிரி. அந்த உயர்ந்த ஜாதிக்காரர்களைப் பொறுத்தவரை அவர்கள் மனிதப் பிறவிகளே அல்லர். மிருகங்களைப் போன்றுதான் அவர்களை எல்லோரும் நடத்தினர். அவர்களுடைய மேனி தங்கள் மேல் சிறிது பட்டுவிட்டாலும், போதும், பதறிப்போய் விடுவார்கள். தப்பித்தவறி ஒரு புலையனின் கை அவர்களுடைய உடலில் எங்காவது பட்டுவிடட்டும் அவ்வளவுதான். நீரினுள் இறங்கி ஒரு தடவையாவது முங்கிவிட்டுத்தான் மறுவேலை பார்ப்பார்கள். அப்படியானால்தான் தங்களுடைய உடலில் ஒட்டிய அசுத்தம் போகுமாம்.

தம்புரான் வீட்டை விட்டு வெளியே இறங்கிச் செல்லும்போது, அவருடன், வேலைக்காரன் ஒருவனும் போவான்- அவருக்குப் பின்னே நாய்மாதிரி.

“ஏ... ஊஹ்; ஏ-ஊஹ்...”

தாழ்ந்த ஜாதியைச் சார்ந்தவர்களுக்கு அறிவிக்கப்படும் முன்னறிவிப்பு இது! ‘தம்புரான் வயல்வரப்பின் வழியே நடந்து வருகிறார். யாராவது இருந்தால் வழிமாறிக் கொள்ளுங்கள். அசுத்தமாக்கி விடக்கூடாது’ என்பதுதான் இந்த சப்தத்தின் யதார்த்தமான அர்த்தம்.

தன்னுடைய அடிமைகளை என்ன வேண்டுமானாலும் செய்வதற்கு தம்புரானுக்கு உரிமை இருக்கிறது. அவர்களை அடிக்கலாம்... கொடுமைப்படுத்தலாம்... கொல்லலாம். அவர் எது செய்தாலும், யாரும் எதிர்த்துக் கேட்கப் போவதில்லை. கிராமத்தின் நிலை இவ்வாறிருக்க, மற்றொரு பக்கம் ஒரு புத்துணர்ச்சி பரவிக் கொண்டிருந்தது. அதுதான் அமதன் என்ற தாழ்த்தப்பட்ட இளைஞர் அந்த கிராமத்து மக்களுக்கு அறிவியலின் ஆற்றலை விளக்க முற்பட்டது. முதலாளிகளுக்கெதிராக, பிரபுக்களுக்கெதிராக, ஜாதி வேற்றுமைகளுக்கெதிராக அந்த இளைஞன் உரக்கக் குரல் எழுப்பிக் கொண்டிருந்தான். எத்தனையோ இன்னல்களைத் தாங்கிக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டும் அதையெல்லாம் ஒரு பொருட்டாகவே எண்ணாமல், சேரி மக்களுக்காக ஒரு பள்ளிக்கூடம் ஆரம்பித்தான்.

குஞ்ஞிப்பாக்கனுக்கு வயது பத்து நடந்து கொண்டிருந்தது. தம்புரானின் கறவை மாடுகளில் இரண்டை மேய்ப்பதுதான் அவன் தொழில்.

அவன் மாடு மேய்க்கச் சென்ற மூன்றாம் நாள் எதிர்பாராத அளவில் ஒரு சம்பவம் நடந்துவிட்டது.

அவன் மேய்க்கச்ச சென்ற கறவை மாடுகளில் ஒரு கால் தவறி கிணற்றிற்குள் விழுந்து, காலொடிந்துவிட்டது. தம்புரானிடம் போய் பயந்து கொண்டே விவரத்தைக் கூறினான் குஞ்ஞிப்பாக்கன். அதற்குள் சங்கரனும், முண்டிச்சியும் பதறியடித்துக் கொண்டு ஓடி வந்தனர்.

தம்புரானின் நெற்றி சுருங்கியது. கைகளில் நரம்புகள் முறுக்கேறி நின்றன. கண்கள் கோபத்தால் சிவந்தன. தன்னுடைய வேலைக்காரனை நோக்கி கத்தினார் தம்புரான்.

“என்னடா ஒன்றுமே பேசாமல் நின்று கொண்டிருக்கிறாய்? இந்த நாடோடிக் கழுதைக்கு ரெண்டு குடுக்க வேணாமா?”

தன்னுடைய எஜமானின் உள் அர்த்தத்தைப் புரிந்து கொண்ட அவன் பாய்ந்து, தன் முன் நின்ற குஞ்ஞிப்பாக்கனுக்கு செமையாய் இரண்டு உதை கொடுத்தான். அவனுடைய கழுத்தைப் பிடித்து கீழே தள்ளினான். அடி தாங்காமல் தரையில் தலைகுப்புற விழுந்தான் குஞ்ஞிப்பாக்கன். அவனுடைய நெற்றியிலிருந்து குருதி வடிந்தது.

தன்னுடைய மகனின் கதியை நினைத்து மார்பில் அறைந்து கொண்டு ஓலமிட்டாள் முண்டிச்சி. என்ன செய்வதென்று தெரியாமல் சிலையாகிப் போய் நின்றான் சங்கரன்.

குஞ்ஞிப்பாக்கன் சிறிதும் அழவில்லை.

“ம்... போதும்... நீ போய் குளித்து விட்டு வாடா!”

வேலைக்காரன் குளத்தை நோக்கி நடந்தான்.

“வா மகனே!” - தன்னுடைய மகனை அழைத்தாள் முண்டிச்சி. தன்னுடைய வேட்டித் தலைப்பால் அவன் நெற்றியிலிருந்து வடிந்து கொண்டிருந்த குருதியைத் துடைத்தாள்.

குஞ்ஞிப்பாக்கன் ஒன்றும் பேசவில்லை.

“சரி... சரி... போடா!”

- தம்புரானை எதிர்த்து ஏதாவது பையன் பேசிவிடப் போகிறானா என்று சங்கரனும், முண்டிச்சியும் அஞ்சவே செய்தார்கள். அவன் நின்று கொண்டிருந்த பாணி அவர்களுடைய எண்ணத்தை மேலும் ஊர்ஜிதம் செய்தது. தன்னுடைய மகன் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான் சங்கரன்.

அடுத்த நாள் காலையில் தந்தையிடமும், தாயிடமும் குஞ்ஞிப்பாக்கன் கூறினான்.

“இனி நான் மாடு மேய்க்கப் போக மாட்டேன்.”

இதைக் கேட்டதும் வியந்து போனார்கள் சங்கரனும், முண்டிச்சியும்.

“பாக்கா...”

“நான் பள்ளிக்கூடத்திற்குப் போய் படிக்கப் போறேன். அமதனின் பள்ளிக்கூடத்திற்கு நான் போகப் போறேன்.” - குஞ்ஞிப்பாக்கன் கூறினான்.

“தெய்வமே... பரக்குட்டி!” மூக்கில் விரல் வைத்து வியந்தாள் முண்டிச்சி.

சங்கரனின் உள்ளத்தில் ஒரு சிறு போராட்டமே நடந்து கொண்டிருந்தது. அவன் இன மக்களில் இன்னும் யாருக்கும் இரண்டு எழுத்து எழுதப்படிக்கத் தெரியாது. மேலும் தம்புரானுக்கு எல்லா விஷயங்களிலும் எதிராகச் செயல்படக்கூடியவன் இந்த அமதன். நிலைமை இவ்வாறு இருக்கும்போது, குஞ்ஞிப்பாக்கனை அவன் எவ்வாறு பள்ளிக்கு அனுப்பி வைக்க முடியும்?

“வேணாம்டா குஞ்ஞிப்பாக்கா, நமக்கு இந்த விபரீத ஆசை!” - சங்கரன் கெஞ்சினான்.


“ஊஹூம்... நான் படிக்கணும். படிச்சுத்தான் தீருவேன்.”

மகனின் பிடிவாதமான தீர்மானத்தின் முன் என்ன சொல்வதென்று தெரியாமல் செயலற்றுப் போய் நின்றார்கள் பெற்றோர்.

அன்றே குஞ்ஞிப்பாக்கன் போய் அமதனைப் பார்த்தான். அவனைத் தன்னுடைய பள்ளியில் சேர்த்துக் கொள்வதை மிகவும் ஆனந்தத்துடன் ஏற்றுக் கொண்டான் அமதன். அன்றே அவனுடைய படிப்புக்குப் பிள்ளையார் சுழியும் போட்டாகி விட்டது.

குஞ்ஞிப்பாக்கன் அமதனின் மாணவனாகி விட்டான்.

“தம்புரானிடம் ஒரு வார்த்தை சொல்லிடலாமா?” சங்கரன் மனைவியிடம் வினவினான்.

“ஆமாம்... போய் ஒரு வார்த்தை சொல்லிட்டு வர்றதுதான் நல்லதுன்னு எனக்குப் படுது.”

“ஒரு வேளை தம்புரான் உதைக்க வந்தா?”

“யாரை? என் மகனையா? என் மகன் அப்படி என்ன தப்பு செஞ்சிவிட்டான்?”

“கல்வி கற்பது தவறான ஒரு காரியமா, முண்டிச்சி...?” சங்கரன் குரலில் ஒரு வகையான ஏக்கம் இழைந்தோடியது.

கல்வி கற்பது தவறான ஒன்றா? தவறல்ல என்றுதான் முண்டிச்சிக்குப் பட்டது. உயர்ந்த ஜாதிக்காரர்களின் குழந்தைகளெல்லாம் படிக்க வேண்டும்- எங்கள் குழந்தைகளுக்கு மட்டும் அது கூடாது. அவர்கள் இரண்டு வார்த்தைகூட எழுதவோ படிக்கவோ தெரிந்து கொள்ளக் கூடாது. இது நியாயமில்லாத ஒன்று என்றே அவளுக்குத் தோன்றியது.

“நடக்கறது நடக்கட்டும். நம் பாக்கன் அவனுடைய இஷ்டப்படி படிக்கட்டும்.” முண்டிச்சி கூறினாள்.

அடுத்த நாள் காலை சங்கரனை அழைத்தார் தம்புரான். மனம் பதைபதைக்க தம்புரானின் வீட்டு முற்றத்தின் ஒரு மூலையில் நின்றான் சங்கரன்.

“பாக்கனை அமதனிடம் அனுப்பினாயா?” -அவர் குரலில் அதிகாரம் கலந்து ஒலித்தது.

“பாக்கன் ரெண்டு எழுத்துக்களைத் தெரிஞ்சிக்கட்டுமேன்னுதான்!” - சங்கரன் மேலே கூறத் தயங்கி நின்றான்.

“நீ படிச்சிருக்கியா?”

“இல்ல...”

“உன் அப்பன் படிச்சவனா?”

“இல்லை...”

“உன் அப்பனின் அப்பன் படிச்சவனா?”

“இல்ல, தம்புரானே!”

“பிறகு உன் மகன் மட்டும் ஏன் படிக்கணும்?”

இதற்கு என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் நின்றான் சங்கரன். அவனுடைய உள்ளத்தில் என்னவோ கூறவேண்டும் என்று ஒரு உந்துதல்... ஆனால் வார்த்தைதான் தொண்டைக்குள்ளேயே நின்று கொண்டு, உதட்டுக்கு வெளியே வர மறுத்துவிட்டது.

“அமதன் சுவாமி துரோகியாக்கும். அதாவது, தேச துரோகி...”  தம்புரான் சத்தம் போட்டுக் கூறினார்.

“நான் வேணும்னா பாக்கனிடம் சொல்லிக் பாக்கறேன் தம்புரானே!”

“அவங்கிட்ட நான் சொல்றேன். அவனை உடனே இங்கு வரச்சொல்லு.” சங்கரன் தன்னுடைய குடிசையை அடைந்தபோது, வீட்டின் முன் இருந்த திண்ணையில் அமர்ந்து பாடம் படித்துக் கொண்டிருந்தான் பாக்கன்.

“குஞ்ஞிப்பாக்கா, தம்புரான் வீடு வரை கொஞ்சம் போய்ட்டு வாடா.”

“சரி; அச்சா...”

“யாருப்பா...?”

“பெரிய தம்புரான்...”

“அங்கயெல்லாம் நான் போக மாட்டேன்... போ...”

“அப்படி சொல்லாதடா என் ராஜா. நமக்குக் கஞ்சி ஊத்துறது பெரிய தம்புரான்தானே?”

“பாக்கா, போய்ட்டுவா. அப்பா சொல்றதைக் கேளுடா...” இது முண்டிச்சி.

தந்தையும் தாயும் கூறினார்கள் என்ற ஒரே காரணத்திற்காக பெரிய தம்புரானின் வீட்டிற்குப் போனான் குஞ்ஞிப்பாக்கன்.

“யாரது? பாக்கனா...?”

“ஆமா...”

“நீ படிக்கப் போற. இல்லையா?”

“ஆமா...”

“யார் உன்னைப் பள்ளிக்கூடம் போகச் சொன்னது...?”

“யார் என்னைப் போகச் சொல்லணும்?”

“சரி... இன்னியோட பள்ளிக்குப் போறதை நிறுத்திடு. உங்களுக்குப் படிப்பதற்கெல்லாம் உரிமை இல்லை. படிப்பை நிறுத்திடறே. இல்லையா?”

“ஊஹூம்... மாட்டேன்...” தீர்மானமான குரல்.

இதைக் கேட்டதும் உண்மையிலேயே அதிர்ந்து போனார் தம்புரான். பத்து வயதே ஆன ஒரு பொடிப்பயல் அதுவும் ஒரு கீழ்ஜாதிப் பயல் முன், தான் மிகச் சிறிய உருவமாகப் போய்விட்டதை நினைத்து அவருக்குக் கோபம் கிளர்ந்தது. பற்களை ‘நறநற’வென்று கடித்தவாறு உறுமினார்.

“நான் நாலு எழுத்து படிச்சா என்ன வந்துடப் போறது, தம்புரானே!”

“உங்க ஜாதியை யாருடா பள்ளிக் கூடத்துக்குப் போய் படிக்கச் சொன்னது?” அவர் குரலில் கோபத்தின் அறிகுறி தெரிந்தது.

“நாங்க படிக்கக்கூடாதுன்னு யாரு எங்க சொல்லியிருக்காங்க?”

இதைக் கேட்டதும் தம்புரானின் கண்களிரெண்டும் சிவந்துவிட்டன. நெற்றி சுருங்கியது.

“ஹா... என்னடா சொன்ன?”

குஞ்ஞிப்பாக்கன் ஒன்றும் பேசாமல் திரும்பி நடந்தான். அவன் நடந்து போவதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தார் தம்புரான்.

3

மதனின் பள்ளிக்கூடத்திற்கு நாள் தவறாமல் போய்க்கொண்டிருந்தான் குஞ்ஞிப்பாக்கன். அமதன் நிறைய விஷயங்களைக் கற்றுத் தேர்வனாயிருந்தான். தாழ்த்தப்பட்டவர்களுக்காக தன்னுடைய வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணம் செய்தவன் அவன்.

குஞ்ஞிப்பாக்கன் மிகவும் ஆர்வத்துடன் கற்றான். அறிவு பெற அவனுக்கிருந்த ஆர்வம் கண்டு அதிசயித்தான் அமதன்.

மற்ற குழந்தைகளிடம் காண முடியாத ஒரு சிறப்பு அம்சம் பாக்கனுக்கிருந்ததைக் கண்டான். அதுதான்- குஞ்ஞிப்பாக்கனின் சாரீரம். அவனுடைய சாரீரத்திற்கு ஒரு வகையான சக்தி இருப்பதை முழுமையாக உணர்ந்தான் அமதன். அவன் தன்னுடைய வாயால் ஸ்லோகங்களைச் சொல்லும்போது அவனுடைய சப்த லாவண்யத்தில் தன்னை மறந்து ஒன்றியிருந்தான் அமதன்.

ஒரு நாள் குஞ்ஞிப்பாக்கனை அருகில் அழைத்துக் கூறினான் அமதன்.

“நீ நிச்சயம் எதிர்காலத்தில் ஒரு பெரிய பாடகனா வருவாய். இது உறுதி.”

தான் ஒரு சிறந்த பாடகனாக வர வேண்டும் என்பதுதான் குஞ்ஞிப்பாக்கனின் லட்சியமாகவும் இருந்தது.

“எனக்கு யார் பாட்டுச் சொல்லித் தருவது...?”

“பாக்கா... நிச்சயம் உன் ஆசை நிறைவேறும். வேண்டுமானால் பார்த்துக்கொள். ஆனால் அதற்கு இரண்டு வருடங்களாவது நீ பொறுத்திருக்க வேண்டும். இப்போது உன்னுடைய கவனம் முழுவதும் படிப்பின் மீது மட்டும்தான் இருக்க வேண்டும்.”

மூன்று வருடங்கள் எப்படியோ ஓடி மறைந்துவிட்டன. அந்தக் கிராமத்தில் எழுதப் படிக்கத் தெரிந்த குழந்தைகள் சில உருவாகும் சூழ்நிலை உண்டானது. எத்தனையோ எதிர்ப்புகளையெல்லாம் சமாளித்து, நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக வளர்ந்து கொண்டிருந்தது அமதனால் ஆரம்பிக்கப்பட்ட பள்ளிக்கூடம்.

இந்தச் சமயத்தில் கிராமத்திலுள்ள பகவதி கோவிலில் திருவிழா தொடங்கியது. மூன்று நாட்கள் நடக்கும் திருவிழா இது. மூன்றாம் நாள் கிருஷ்ண ஸ்வாமியின் சங்கீதக் கச்சேரிக்கு ஏற்பாடு பண்ணியிருந்தார்கள். அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற பாடகம் கிருஷ்ணஸ்வாமி பாகவதர்தான். அவருக்கு ஒரு பெரிய சிஷ்யர் பரம்பரையே உண்டு என்று கூறப்படுவது உண்டு.

கிருஷ்ண ஸ்வாமியின் சாரீர லயத்தைக் கேட்டு இன்புற கிராமமே ஆர்வத்துடன் காத்துக் கிடந்தது.

குஞ்ஞிப்பாக்கன் அமதனிடம் கூறினான்.

“நானும் கச்சேரி கேட்கப் போகலாமா?”

“போ... தைரியமாகப் போ...”

“ஆனால் தூரத்தில் நின்னுதான் பார்க்க வேண்டும் என்பார்களே...!”


“கோயிலுக்கு உள்ளே வைத்தல்லவா கச்சேரி நடைபெறுகிறது? ஒன்று செய்வோம். ஒரு பக்கம் தனியாக ஒதுங்கி நின்னு நீ கச்சேரியைக் கேள். அதற்கும் அவர்கள் சம்மதிக்காவிட்டால், பிறகு என்ன செய்வதென்று தீர்மானித்துக் கொள்வோம்!”

இறுதியில் குறிப்பிட்ட அந்த நாளும் வந்துவிட்டது. மாலையில் தான் கிருஷ்ண ஸ்வாமியின் கச்சேரி. மைதானம் ஜனப் பிரவாகத்தால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அங்கிருந்த ஒவ்வொருவருமே உயர்ந்த ஜாதிக்காரர்கள்தாம். முன்வரிசையில் பிராமணர்கள் அமர்வதற்கென்றே இடத்தை ஒதுக்கிப் போட்டிருந்தார்கள். இரண்டாவது வரிசையில் அம்பலவாசிகள். மூன்றாவதாக நாயன்மார். அதோடு வரிசை முடிந்தது.

எல்லோருக்கும் பின்னால் போய் அமர்ந்தான் குஞ்ஞிப்பாக்கன்.

“உனக்கு இங்கு என்னடா வேலை?” - வாரியர் சினத்துடன் கேட்டார்.

“நான் கச்சேரி கேட்க வந்திருக்கிறேன்.”

“உங்க ஜாதிக்காரங்களுக்கு இங்கு பிரவேசனம் இல்லைன்னு உனக்குத் தெரியாதா? மரியாதையா வெளியே ஓடுடா...”

“நான் கச்சேரி கேட்கத்தான் இங்கு வந்தேன். அது முடிந்த பிறகுதான் இங்கிருந்து போவேன்.”

அதற்குள் வாரியர் ஓடிச்சென்று பத்திருபது ஆட்களுடன் திரும்பி வந்தார்.

“மரியாதையாய் இங்கிருந்து ஓடிடு. இல்லாவிட்டால் கையையோ காலையோ ஒடித்துப் போட்டுடுவோம்.” - அவர்களில் ஒருவன் கூறினான்.

“நான் பாட்டு கேட்க இங்கு வந்திருக்கிறேன். நான் இங்கு நின்றால் உங்களுக்கென்ன?” - குஞ்ஞிப்பாக்கன் கேட்டான்.

“நான்! நான்! ஆச்சாரத்தையே மறந்துட்டான் இந்த கீழ்ஜாதி நாய்! டேய்... மரியாதையாக ‘அடியேன்’னு  சொல்லுடா...?”

குஞ்ஞிப்பாக்கன் ஒன்றும் பேசாமல் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கவே, அவனுடைய கழுத்தைப் பிடித்து பலத்துடன் தள்ளினான் ஒருவன். அவனுடைய கையைத் தன்னுடைய பலம் கொண்ட மட்டும் முயற்சித்து விலக்கினான் பாக்கன். திடீரென்று எங்கிருந்தோ ஒரு சத்தம் வந்தது.

“தொடாதீங்க. அவனை யாரும் தொடாதீங்க...!”

அமதனின் குரல்தான் அது.

ஒரு கொடும் காற்றை சிருஷ்டிக்கக்கூடிய திறமையுடையவன் அமதன். நாட்டு நடப்புகளை நன்கு அறிந்தவனும், நல்லவொரு காரியத்திற்காகத் தன்னையே அர்ப்பணித்துக் கொண்டவனும், தாழ்த்தப்பட்டவர்கள் வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக ஆக்கப்பூர்வமாக உழைத்துக் கொண்டிருப்பவனும் இந்த அமதன்.

அமதன் தனியே வரவில்லை. அவனுக்குப் பின்னே நூற்றுக்கணக்கானோர் நின்று கொண்டிருந்தார்கள்.

அமதனின் சப்தத்தைக் கேட்டவுடன், குஞ்ஞிப்பாக்கனின் கழுத்திலிருந்த கையை பட்டென்று எடுத்துக்கொண்டார் வாரியர்.

கோவில் தர்மகர்த்தா விருபாக்ஷன் நம்பூதிரி வந்தார்.

“அமதா, நீ ஏன் இங்கு வந்து கலாட்டா பண்ணிக் கொண்டிருக்கிறாய்?”

“நாங்கள் கலாட்டா பண்ண வரவில்லை. கச்சேரி கேட்கத்தான் வந்தோம்.”

“தாழ்ந்த ஜாதிக்காரங்க இங்க வரக்கூடாதுன்னு உனக்குத் தெரியாதா?” - நம்பூதிரியின் குரலில் கர்வமும் கலந்தொலித்தது.

“அப்படியொரு சட்டத்தை உருவாக்கியது யார்னு சொன்னா மிகவும் வசதியாய் இருக்கும்.”

“நீ படிச்சவன். இதுதான் நீ காட்டும் விவேகமா?”

“தாழ்த்தப்பட்ட மக்களும் மனிதப்பிறவிகள்தான். நாங்க எல்லோரும் கச்சேரி கேட்க வந்திருக்கிறோம். எங்களை அடிச்சு விரட்டுவதுதான் விவேகமோ? நாங்க போற போக்கைப் பார்த்தா கோவிலின் சந்நிதானத்துக்குள்ளே கூட வந்து விட முயற்சிப்போம் என்பீர்கள். நீங்க கூறுவது முற்றிலும் உண்மைதான். இன்னைக்கு இல்லாட்டாலும் என்னைக்காவது ஒரு நாள் நிச்சயம் அது நடக்கத்தான் போகிறது. அது மட்டும் உறுதி” -ஆவேசத்துடன் பேசினான் அமதன்.

“வெளியே போங்கடா நாய்களே!” - நம்பூதிரி இரைந்தார்.

“உங்களுடைய விவேகம் என்னவென்று இப்போ எங்களுக்கு நன்றாக புரிந்துவிட்டது” கேலியுடன் கூறினான் அமதன்.

முகத்தில் கோபம் கொப்பளிக்க நம்பூதிரியைப் பார்த்தனர் அமதனின் பின்னால் நின்றவர்கள்.

“இந்த நாய்களை கழுத்தைப் பிடிச்சு வெளியே தள்ளுங்க” - நம்பூதிரி கட்டளையிட்டார்.

வாரியரும், அவரோடு சுமார் இருபது ஆட்களும் முன்னால் வந்தனர்.

“எங்க மேல் மட்டும் கை படட்டும். பின்னால் நடப்பதே வேறு”- அமதனின் விழிகள் தீப்பந்தமாய் ஜ்வலித்தன.

என்ன செய்வதென்று தெரியாமல், அமதனின் முகத்தைப் பார்த்தார் வாரியர். அந்த இளைஞனின் முகத்தில் நிலவிய கம்பீரம் அவருடைய உள் மனதில் ஒருவகையான பயத்தை ஏற்படுத்தியது.

“என்ன வாரியரே, பேசாமல் நிற்கிறீர்?” என்றார் நம்பூதிரி.

“எங்களை வெளியே தள்ள தைரியமுள்ள ஆள் முன்னே வரட்டும், பார்க்கலாம்” - அமதனின் பின்னால் நின்றவர்களில் ஒருவன் கூறினான்.

கச்சேரி ஆரம்பிப்பதற்கான நேரம் ஆகிவிட்டது. நான்கைந்து ஆட்கள் புடைசூழ மைதானத்தில் நடந்து வந்து கொண்டிருந்தார் கிருஷ்ணஸ்வாமி பாகவதர். “என்னப்பா அங்கே சப்தம்?” பாகவதர் கேட்டார்.

“இருங்கள் என்னவென்று பார்ப்போம்” - பாகவதரும் அந்த ஆட்களும் கலாட்டா நடைபெறும் இடத்திற்கு வந்தனர்.

பாகவதரைக் கண்டதும், இரண்டு கைகளையும் இணைத்துக் கைகூப்பித் தொழுதான் அமதன். தொடர்ந்து அவரைக் கும்பிட்டான் குஞ்ஞிப்பாக்கன். அவர்களைக் கண்டது மாதிரியே காண்பித்துக் கொள்ளவில்லை பாகவதர்.

“என்ன நம்பூதிரி, இங்கு என்ன கலாட்டா?” பாகவதர் விசாரித்தார்.

“புலையனும் செருக்கன்மார்களும் கச்சேரி பார்க்க வந்திருப்பதாகக் கூறிப் போக மறுத்துக் கொண்டிருக்கிறார்கள், எவ்வளவு சொல்லியும்.”

“இவனுங்களுக்கு கச்சேரி செய்தால் ஏதாவது புரியுமா?” பாகவதரின் கேள்வியில் கேலியும் கலந்தொலித்தது.

“எல்லாம் தெரியும். முதலில் எங்களைக் கச்சேரியைக் கண்டுகளிக்க அனுமதியுங்கள்” - குஞ்ஞிப்பாக்கன் கூறினான்.

“அது முடியாது. நான் பாடுவது கீழ்ஜாதிக் காரனுக்கல்ல. அல்ல...” என்றார் பாகவதர்.

“ஸ்வாமி... உங்களுடைய கச்சேரியைக் கேட்க வேண்டும் என்ற ஆவலுடன் வந்தவன் நான், தயவு செய்து கருணை காட்டுங்கள்...” கெஞ்சுகிற தோரணையில் கேட்டான் குஞ்ஞிப்பாக்கன்.

“அதுதான் சொல்லிவிட்டேனே சாத்தியமில்லையென்று. சங்கீதம் சங்கீதம் என்று சொல்கிறோம்! சங்கீதம் என்றால் என்ன? சாட்சாத் சரஸ்வதி தேவியைத்தான் நாம் சங்கீதம் என்கிறோம். உங்களுக்கு முன்னால் சரஸ்வதி காட்சி தரமாட்டாள்.”

“நாங்கள் வேண்டுமானால் போய் விடுகிறோம். ஆனால் குஞ்ஞிப்பாக்கனை மட்டுமாவது கச்சேரி கேட்க அனுமதியுங்கள்.” -அமதன் கெஞ்சினான்.

“மரியாதையாக இங்கிருந்து போய்விடுங்கள். தகராறு பண்ணிக் கொண்டிருப்பதற்கு இது நேரமில்லை. ஏற்கெனவே நேரம் அதிகமாகிவிட்டது. இனிமேலும் தகராறு பண்ணிக் கொண்டிருந்தால், கச்சேரியை நிறுத்தி விடுவதைத் தவிர வேறு வழியில்லை.”

கச்சேரி நடக்காவிட்டால், கச்சேரியைக் காண வந்த ஜனங்கள் கொதித்து எழுவார்கள். உண்மையான காரியத்தை அறிந்து கொள்ளாமலேயே ஏதாவது பேசுவார்கள். மேலும் இங்கு கூடியவர்கள் எல்லோருமே உயர்ந்த ஜாதிக்காரர்கள். எல்லோரும் ஒரே மாதிரியாகச் சிந்திக்கக் கூடியவர்கள். தாழ்த்தப்பட்டவர்களும் மனிதப் பிறவிகள் தான் என்பதைக் கூட அவர்கள் ஒப்புக் கொள்வார்களோ என்னவோ!

மேலும், இது ஒரு தற்காலிக தோல்விதான்.

ஒரு நிமிடம் ஆலோசனையில் ஆழ்ந்த அமதன் குஞ்ஞிப்பாக்கனின் கையைப் பிடித்துக் கூறினான்.


“பாக்கா... வா நாம் போகலாம். கச்சேரி நடக்கட்டும்.”

பாகவதரைப் பார்த்து அமதன் கூறினான்.

“ஸ்வாமி, சரஸ்வதி தேவிக்கு பிராமணனாயிருந்தாலும், புலையனாயிருந்தாலும் எல்லாரும் ஒன்றுதான். இதை நீங்களும் ஒரு நாள் உணரத்தான் போகிறீர்கள். நாங்கள் வருகிறோம்.”

தன்னுடைய தந்திரம் பலித்துவிட்டது என்கிற பெருமிதத்துடன் நம்பூதிரியைப் பார்த்தார் பாகவதர்.

ஆனந்தம் மேலிட்டு நிற்கக் கூறினார் நம்பூதிரி.

“வாங்கோ... இனி கச்சேரி நடத்துவோம்...”

4

ன்று பௌர்ணமி நாள். பூர்ண சந்திரன் வானின் மையத்தில் நின்று புன்னகை செய்து கொண்டிருந்தான். குளிர்ந்த காற்று இதமாக வீசிக் கொண்டிருந்தது. கோவிலைச் சுற்றிலும் இருந்த மரங்களில் கூடு கட்டி வாழும் பறவைகள் குளிரைத் தாங்கமாட்டாமல் முனகிக் கொண்டிருந்தன.

அமதனும், குஞ்ஞிப்பாக்கனும் அமதனின் மற்ற மாணவர்களும் வெளியே அமர்ந்து ஏதோ முக்கியமான விஷயமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

கோவிலுள் இருந்து புறப்பட்டு வந்த ஒரு தேவகானம் அவர்களுடைய செவிகளில் விழுந்தது. தங்களுடைய செவியைத் தீட்டிக் கொண்டு அந்த கானத்தை மிகவும் உன்னிப்பாகக் கேட்கத் தொடங்கினர் எல்லோரும்.

ஸ்வரம் என்னவென்றும் தெரியாவிட்டாலும், அவர்களுடைய உள்மனத்தை அந்த கானம் தொட்டுக்கொண்டிருந்தது என்பது உண்மை.

“எல்லோரும் வாங்க. கோபுரத்தின் அருகே நின்னு பாட்டைக் கேட்போம்” அமதன் கூறினான். எல்லோரும் நடந்து சென்று கோபுரத்தின் அருகே நின்று உள்ளே பார்த்தனர்.

சந்நிதானம் பூட்டப்பட்டுவிட்டிருந்தது. பூசாரி போய் நிறைய நேரம் ஆகிவிட்டது போல் தோன்றியது. கோயிலில் கூடுகட்டி வாழும் குருவிகள் கீச் கீச்சென்று குரல் எழுப்பிக் கொண்டிருந்தன. நிலவு வெளிச்சம் கோவில் சுவரில் விழுந்து கொண்டிருந்தது. இனிமையான அந்தக் காட்சியைக் கண்டு மெய் மறந்து நின்றிருந்தனர் அமதனும், அவன் நண்பர்களும்.

உள்ளே யார் இருக்கிறது என்று அறியும் ஆவலுடன் அவர்களுடைய கண்கள் நாலா பக்கமும் அலைந்து கொண்டிருந்தன. ஒருவரும் இருப்பதாக அவர்களுக்குத் தோன்றவில்லை. ஆனால், கானமழை மட்டும் கோவிலின் ஒரு பக்கத்திலிருந்து காற்றில் கலந்து வந்து அவர்களுடைய காதுகளுள் நுழைந்து கொண்டேயிருந்தது. அப்போது கானத்தின் ஸ்வரம் உயர்ந்தொலித்தது.

பகவதி ஸ்தோத்திரம் அது. பாட்டில் பக்திப்பிரவாகம் நிறைந்து ஒழுகிக் கொண்டிருந்தது. பாட்டைக் கேட்டு, அதன் இன்ப இசையில் மயங்கியோ என்னவோ கீச் கீச் சென மீண்டும் குரல் எழுப்பின பறவைகள்.

தாழ்ந்த குரலில் கேட்டான் குஞ்ஞிப்பாக்கன்.

“நான் வேண்டுமானால் உள்ளே போய் பார்க்கட்டுமா?”

“ஏன்? நாம் எல்லோரும் போவோம். ஆனால் யாரும் தப்பித் தவறி சப்தம் போட்டு விடக்கூடாது” -என்றான் அமதன்.

அவர்கள் கோவிலுள் காலடி எடுத்து வைத்து நுழைந்தார்கள்.

உள்ளே சந்நிதானத்தின் முன் சற்று மெலிந்த குட்டையான உருவமொன்று சப்பணமிட்டு அமர்ந்திருக்கிறது. கண்கள் மூடியிருக்கின்றன. எண்ணெய் காணாத நீண்டு தொங்கும் தலைமுடி- ஈரமுடன் காட்சியளிக்கும், கிழிந்துபோன ஆடை. சுருக்கமாகக் கூறினால், எளிமையின் இருப்பிடம், சற்று வித்தியாசமான தோற்றம்.

சிறிது நேரத்தில் கானம் நின்றது. அந்த மனிதர் கண்களை மூடிய நிலையிலேயே சிறிது நேரம் அமர்ந்திருந்தார். மூச்சுகூட நின்றுவிட்டதுபோல் தோன்றியது. அவரிடம் எந்தவிதமான அசைவும் காணப்படவில்லை.

கண்கள் லேசாகத் திறந்தன. ஒரு கீர்த்தனம் வாயிலிருந்து வெளிவந்தது- அது முடிந்ததும் மற்றொரு கீர்த்தனம். நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. இந்த நள்ளிரவு நேரத்தில், தன்னந்தனியாக, இந்தக் கோவிலுக்கு வந்து கீர்த்தனம் பாடிக் கொண்டிருக்கும் இந்த மனிதர் யாராக இருக்க முடியும்? அமதனும், குஞ்ஞிப்பாக்கனும், மற்ற மாணவர்களும், மனதைப் போட்டுக் குழம்பிக் கொண்டார்கள்.

சங்கீதத்தின் ஒரு இனிய பிரபஞ்சத்தையே அங்கே சிருஷ்டித்துக் கொண்டிருந்தார் அந்த மனிதர். அந்த நாத மெய்நிலையில் லயித்துப்போய் மயங்கி நின்றன கோவிலும், கோவிலைச் சார்ந்த சூழலும். நட்சத்திரங்கள் கானத்தின் இசை வடிவில் ஐக்கியமாகி வெறித்து நோக்கிக் கொண்டிருந்தன. நிலவு இசையின் இனிமையில் தோய்ந்து வானின் மையத்தில் எவ்வித சலனமுமின்றி அசையாமல் நின்று கொண்டிருந்தது.

கானம் முடிந்தது. எழுந்து நின்ற மனிதர் சந்நிதானத்தை நோக்கி இரண்டு கைகளையும் குவித்து வைத்துக்கொண்டு நின்றார். அப்போது அவருடைய பார்வையில் அமதனும், அவனுடைய மாணவர்களும் தெரிந்தார்கள்.

“நீங்க ஏன் இந்த நேரத்தில் இங்கு வந்தீர்கள்” - அவருடைய குரலில் கோபமும் கலந்தொலித்தது.

“ஸ்வாமி, எங்களை மன்னித்து விடுங்கள்” -மிகவும் பணிவுடன் கூறினான் அமதன்.

அவர் வெளியே நடந்து செல்ல, அவருடைய அடியைப் பின்பற்றி நடந்து சென்றனர் அவர்கள்.

“நீங்க ஏன் என் பின்னாலேயே வரவேண்டும்”- அவர் குரல் சற்று உயர்ந்து ஒலித்தது.

யாரும் ஒன்றும் பேசவில்லை.

வெளியே இருந்த திண்ணையில் அமர்ந்தார் அந்த மனிதர்.

“நள்ளிரவு நேரத்தில் கூட என்னைத் தனியே இந்த உலக மக்கள் விடுவதா இல்லை. ஆமாம்... நீங்கல்லாம் யார்? உங்களுக்கென்ன வேணும்?”

“என்னுடைய பெயர் அமதன். இவங்க எல்லாம் என் மாணவர்கள்.”

இதைக் கேட்டதும் அந்த மனிதரின் முகத்தில் ஒரு வகையான ஒளி பரவியது. ஏதோ வினோதமான பொருளொன்றைப் பார்ப்பதுபோல் அமதனின் முகத்தையே மேலும் கீழுமாகப் பார்த்தார்.

“ஆமாம்... நீதான் அமதனா!”

“ஆமாம்... நீங்கள் யார் ஸ்வாமி?”

இதைக் கேட்டதும் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார் அந்த மனிதர்.

“அமதா, நானொரு பைத்தியரக்காரன். எல்லோரும் என்னைப் பைத்தியக்கார பாகவதர் என்றுதான் அழைப்பார்கள்.”

அந்த மனிதர் இப்படிக் கூறியதும், அமதனுடைய முகத்தில் ஆச்சரியத்திற்கான அறிகுறிகள் தோன்றின. அவனுடைய மாணவர்களுடைய முகங்களிலும்தான். பைத்தியக்கார பாகவதரைப் பற்றி அவர்கள் நிறையவே கேள்விப்பட்டிருக்கிறார்கள். கோவிலுக்குத் தென்புறமுள்ள பெரிய தம்புரானின் இரண்டாவது மருமகன்தான் அவர். இளமைக் காலத்திலேயே வீட்டை விட்டு ஓடிய இவர், பத்து வருடங்களுக்குப் பின்னர்தான் ஊர் திரும்பினார். ஊர் ஊராகச் சுற்றித் திரிந்து, சங்கீதம் கற்று, சொந்த ஊர் திரும்பிய அவர் இரண்டு சங்கீதக் கச்சேரிகள் நடத்தினார். அவருடைய பெயர் நாடு முழுமையும் பரவியது. கச்சேரி நடத்த விரும்பியவர்கள் ஈ போல மொய்க்கத் தொடங்கிவிட்டனர். ஆனால் அவர் ஒப்புக் கொண்டால்தானே? எவ்வளவு வற்புறுத்திக் கூறியும், தீர்மானமாக மறுத்தது மட்டுமல்லாமல், தன்னைத் தேடி வந்தவர்களைத் திரும்பிப் பார்க்க முடியாத அளவில் விரட்டியும் விட்டு விட்டார். மருமகன் தம்புரான் என்றுதான் அப்போது இவரை எல்லோரும் அழைப்பார்கள்.

தனியே இருக்கும் சமயங்களில் எல்லாம் எதைப் பற்றியாவது நினைத்துக் கொண்டு குலுங்கிக் குலுங்கிச் சிரித்துக் கொண்டிருப்பார். சில நேரங்களில் தனக்குள்ளேயே ஏதாவது முனகிக் கொள்வார்.


சில நேரங்களில் ஆகாயத்தோடும், நட்சத்திரங்களோடும் மிகவும் சுவாரஸ்யமாகப் பேசிக் கொண்டிருப்பார். இரவு வேளைகளில்- இந்த உலகமே ஆழ்ந்த நித்திரையில் மூழ்கிக் கிடக்கும் தருணத்தில்- கோவிலுக்குள் சென்று பக்திப் பரவசம் சொட்ட கீர்த்தனைகள் பாடிக் கொண்டிருப்பார்.

இப்படித்தான் மருமகன் தம்புரான் பைத்தியக்கார பாகவதர் ஆனார்.

பத்து வருடங்களுக்குப் பிறகு தன்னுடைய கிராமம் தேடி வந்த தம்புரான் நான்கு மாதங்களுக்குப் பிறகு மீண்டும் புனிதயாத்திரை கிளம்பி விட்டார். அதன் பிறகு அவர் கிராமத்து மண்ணில கால் வைத்தது சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்புதான். இப்போதெல்லாம் வருடத்திற்கொருமுறை கிராமத்திற்கு வருவதுண்டு. வந்தவுடன் தன்னுடைய தந்தையையும், தாயையும், மாமாவையும் காணச் சென்றுவிடுவார். இரண்டு மூன்று நாட்கள் அவருடைய ஜீவிதம் கோயிலுக்கு உள்ளேயே நடந்து கொண்டிருக்கும். நாளடைவில் இது ஒரு சாதாரண நிகழ்ச்சியாகப் போய்விட்டதால் இவர் வருவதையோ, போவதையோ தங்குவதையோ யாருமே ஒரு பொருட்டாக எண்ணியதாகத் தெரியவில்லை.

இச்செய்திகளெல்லாம் முன்பே அமதனும், குஞ்ஞிப்பாக்கனும் அறிந்தவைதாம்.

தம்புரான் பேசினார்.

“அமதனைப் பற்றி நான் நிறையவே பல இடங்களில் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது உன்னைக் காண்பதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததில் எனக்கு உண்மையிலேயே ரொம்ப மகிழ்ச்சி. உட்காருங்க. எல்லோரும் என் அருகே வந்து உட்காருங்க.”

எல்லோரும் அவரைச் சுற்றிலும், திண்ணையில் அமர்ந்தார்கள். அமதன் கூறினான்.

“இவன் என் மாணவன். பெயர் குஞ்ஞிப்பாக்கன். சங்கீதம் கற்றுக் கொள்ள வேண்டும் என்று மிகவும் ஆவலுடன் இருக்கிறான். தயவு செய்து இவனை உங்களது சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளணும் ஸ்வாமி...”

இதைக் கேட்டதும் கைகொட்டிச் சிரித்தார் தம்புரான்.

“அமதா, என்னைப் பற்றி உனக்குத் தெரியாதா? நான் ஒரு இடத்தில் நிற்காமல் தினமும் ஒவ்வொரு இடமாய் அலைந்து உலகைச் சுற்றிக் கொண்டிருப்பவன். என்னுடைய நிலை இவ்வாறு இருக்க என்னால் இவனை எப்படி சிஷ்யனாக ஏற்றுக் கொள்ள முடியும்?”

“நீங்கள் போகும் இடமெல்லாம் நானும் வருவேன்” - குஞ்ஞிப்பாக்கன் கூறினான். குஞ்ஞிப்பாக்கனின் விழிகளையே உற்று நோக்கினார் தம்புரான்.

“சரி, ஒரு பாட்டுப்பாடு பார்ப்போம்.”

“எனக்குப் பாட்டொண்ணும் தெரியாது, ஸ்வாமி.”

“ஒரு பாட்டு கூட தெரியாதா? ஒரு நாட்டுப் பாட்டுகூட...?”

“நான் சிறுவயதாயிருக்கும்போது என் அம்மா பாடிக் காட்டிய பாட்டு மட்டும்தான் தெரியும்.”

“அது போதும், எங்கே பாடு, பார்ப்போம்”

“சீரப்பன் என்றொரு பெரிய யானை

அதனைச் சுற்றித்தான் எத்தனை யானை

அண்ணன் உண்டு தம்பியும் உண்டு

மொத்தம் நான்கு ஆண் யானைகள்!”

சிறிது நேரம் கண்களை மூடிக் கொண்டிருந்த தம்புரான் விழிகளை அகல விரித்து குஞ்ஞிப்பாக்கனையே நோக்கிக் கொண்டிருந்தார்.

“சரி... ஒரு ஸ்லோகம் சொல். பார்க்கலாம்.”

“மின்னும் பொன்னும் கிரீடம்...”

எவ்வித சலனமுமின்றி அமர்ந்திருந்தார் தம்புரான். ஒரே நிசப்தம் நிலவிக் கொண்டிருந்தது அங்கே. ஸ்லோகம் முடிந்ததும் கூறினார்.

“குஞ்ஞிப்பாக்கனுக்கு உண்மையாகவே சங்கீத ஞானம் இருக்கிறது. எனக்கு உன்னை சிஷ்யனாக ஏற்றுக்கொள்வதில் ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால், உனக்குத்தான் அதிகமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டி வரும் என்று பார்த்தேன். நான் ஒரு இடத்தில் நிலையாக நிற்காமல் அலைந்து திரியக் கூடியவன். நினைத்த இடத்தில் தூங்கி விடுவேன். பெரும்பாலும் ஏதாவது கோயில்களில்தான் தூங்குவேன். கோவிலில் ஏதாவது கொடுத்தால் சாப்பிடுவேன்; இல்லாவிட்டால், பட்டினியும் கிடப்பேன். நானாக வலியச் சென்று யாரிடமும் ஒன்றும் கேட்பதில்லை. எதையும் பிரதிபலனாக எதிர்பார்க்கவும் மாட்டேன். என்னிடம் பொன்னில்லை; பொருள் இல்லை; ஒன்றும் இல்லை. இதுதான் என்னுடைய நிலை. பிறகு செய்ய வேண்டியதை நீயே தீர்மானித்துக் கொள்.”

“நான் உங்களுடன் கட்டாயம் வருவேன். என்னை நீங்கள் சிஷ்யனாக ஏற்றுக் கொள்ளுங்கள் ஸ்வாமி.”

தம்புரானின் பதிலிற்காகக் காத்து நிற்காமல், நெடுஞ்சாண் கிடையாக அவருடைய பாதங்களில் விழுந்து நமஸ்கரித்தான் குஞ்ஞிப்பாக்கன்.

5

ரின் தெற்குப் பகுதியிலிருந்த பெரிய வீட்டில் மிகவும் அறிவு வாய்ந்தவனாக வாழ்ந்தான் பெரிய தம்புரானின் மருமகன். பதின்மூன்று வயதிலேயே சமஸ்கிருதத்தின் காவியங்கள் பலவற்றையும் படித்துச் சுவைத்தவனாக அவன் இருந்தான். தன்னுடைய மருமகனுக்கு இயல்பாகவே இசையின்பால் இயற்கையான பிடிப்பு உண்டாகியிருக்கின்ற உண்மையை அறிய நேரிட்ட பெரிய தம்புரான் காலப்போக்கில் சாஸ்திரீய சங்கீதம் கற்றுத் தேர்ந்த ஒரு பண்டிதனை தினமும் அரண்மனைக்கு வந்து அவனுக்கு இசை கற்றுத் தர நியமனம் செய்தார். அந்தப் பண்டிதனின் சிஷ்யனாய் இருந்து மிகவும் ஆர்வத்துடன் இசையின் மூலை முடுக்கையெல்லாம் உற்று நோக்கி ஆராய்ந்து கற்றான் பெரிய தம்புரானின் மருமகன்.

சிறு பருவத்திலேயே தனிமையை மிகவும் விரும்பி நாடக்கூடியவனாக இருந்தான் மருமகன் தம்புரான். சில சமயங்களில் யாருமில்லாத அனாதையாய்க் கிடக்கும் ஒரு இடத்தில் போய் தனியே அமர்ந்து ஏதாவதொரு ராகத்தை தன்னை மறந்து பாடிக் கொண்டிருப்பான். வேறு சில சமயங்களில், ஒன்றுமே பேசாமல் கண்களை அகலத் திறந்து வைத்துக் கொண்டு எதையாவது குறித்து சிந்தனையில் ஆழ்ந்திருப்பான். சில நேரங்களில் வீசி வரும் தென்றலோடும், மேகங்களுடனும் சுவாரஸ்யம் ததும்பப் பேசிக் கொண்டிருப்பான்.

தன்னுடைய மருமகனின் செயல்களைக் காண நேரிடும் ஒவ்வொரு நிமிடமும் வேதனையால் நொந்து கொண்டிருந்தார் பெரிய தம்புரான். மருமகன் தம்புரானின் தந்தை ஒரு சமஸ்கிருதப் பண்டிதராயிருந்தார். மகனுடைய காரியங்கள் ஒவ்வொன்றையும் கண்டு மனத்துள் வருத்தம் கொண்டு அவர் ஒரு நாள் மருமகன் தம்புரானை அருகே அழைத்துக் கூறினார்.

“மகனே, ஏன்டா எங்களை இப்படி கஷ்டப்படுத்திக்கிட்டிருக்க?”

“என்னப்பா சொல்றீங்க? நான் உங்களை வேதனைப்படச் செய்றேனா?”

“பிறகென்ன? இப்படி பைத்தியமா அலைந்து திரிவதற்கான உன்னை நான் படிக்க வைத்தேன்? இதற்குத்தானா நீ சங்கீதம் கற்றது?”

அதற்குள் அவனுடைய அம்மா சொன்னாள்.

“மகனே, உன்னி, சாதாரண மனிதர்களைப்போல நடந்து கொள்ளுடா ராஜா.”

“நான் அப்படி என்னம்மா பெரிய தப்பு செய்து விட்டேன்? நீங்கள் என்னவோ பெரியதாக...”

“உன்னி, நீ ஒழுங்காகத் தலையை வாருவதில்லை; கழுத்தில் வைர மாலை அணிவதில்லை. காதுகளில் கடுக்கன் போடுவதில்லை. அம்மாவிடமும், அப்பாவிடமும் கூட ஆசையுடன் ஒரு வார்த்தை பேசுவதில்லை. உன்னைப் பத்து மாதங்கள் வயிற்றில் எத்தனையோ சிரமங்களுக்கு மத்தியில் சுமந்து பெற்றவளடா நான். என்னிடம் கூடவா நீ ஒரு வார்த்தை பேசக் கூடாது.”

மகன் கூறினான்.

“ஆபரணங்கள் அணிவதில் எனக்குக் கொஞ்சங்கூட விருப்பமில்லை அம்மா. விஷயம் எதுவுமே இல்லாமல் வெறுமனே வளவளவென்று பேசிக் கொண்டிருப்பதிலும் எனக்கு நாட்டம் இல்லை. ஏதாவது சங்கதி இருக்க வேண்டும்; பேச வேண்டும். அதுதான் என் கொள்கை.”


“நீ ராஜ பரம்பரையில் பிறந்தவன்டா. அதை மறந்துடாதே!” அன்னை ஞாபகப்படுத்தினாள்.

ஆனால் தாய் கூறிய ஒரு வார்த்தையாவது மருமகன் தம்புரானின் செவிக்குள் நுழைய வேண்டுமே!

தனிமையை மிக மிக அதிகமாகவே விரும்பத் தொடங்கினான் அவன். தனிமையில் அமர்ந்து தன்னையே மறந்து பாடினான்... உயர்ந்த ராகங்களில் பாடினான்.

மருமகனுடைய புத்தியில் ஏதோ தகராறு நேர்ந்து விட்டது என்ற முடிவுக்கு வந்துவிட்டார் பெரிய தம்புரான்.

வைத்தியர்கள் மருமகன் தம்புரானைப் பரீட்சிக்க வந்து விட்டார்கள். அவனுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டது என்ற செய்தி ஊரின் மூலை முடுக்கெல்லாம் பரவியது. இப்படி நிலைமை இருக்கும்போது ஒரு நாள் ஊரை விட்டே யாருக்கும் தெரியாமல் ஓடிவிட்ட மருமகன் தம்புரானைப் பிரிந்து, அனைவரும் துக்கத்தில் ஆழ்ந்தனர். அவனைத் தேடி எல்லா திசைகளுக்கும் ஆட்களை அனுப்பியும் பிரயோஜனமொன்றும் விளைந்ததாகத் தெரியவில்லை.

பத்து வருடங்களுக்குப் பின் தன்னுடைய ஊருக்குள் நுழைந்த மருமகன் தம்புரானை யாருக்குமே அடையாளம் தெரியவில்லை- அப்படியொரு மாற்றம் உருவத்தில். ஆனால் குரல் மட்டும் பழைய மாதிரியேதானிருந்தது.

“உன்னி, நீ இப்போது இருக்கிற நிலைமை உனக்கே நல்லா இருக்குதா?” பெரிய தம்புரான் கேட்டார்.

“நான் நல்லா சந்தோஷமாகவே இருக்கிறேன். எனக்கு முழு ஆத்ம திருப்தி இருக்கிறது. இதற்குப் பிறகு இந்த ஜீவிதத்தில் என்ன வேணும்?”

ஆனால், ஒரு விஷயத்தில் மட்டும் மருமகன் தம்புரான் பணியவேண்டி நேர்ந்தது. திருவிழாவை முன்னிட்டு கோவிலில் ஒரு சங்கீதக் கச்சேரி மருமகன் தம்புரானை வைத்து நடத்த ஏற்பாடாகி விட்டது. மருமகன் தம்புரானின் வாயிலிருந்து வெளிவந்த இசைப்பிரவாகத்தில் தங்களையே மறந்து ஏதோவொரு மயக்க நிலையில் இருப்பதுபோல் அமர்ந்திருந்தனர் மக்கள். இதுவரை இந்த ஊர் மக்கள் இது போன்றொரு கச்சேரியைக் கேட்டதேயில்லை என்று கூறுகின்ற அளவிற்கு இரண்டு மூன்று ராகங்களை உயர்ந்த ஸ்தாயியில் பாடினார் மருமகன் தம்புரான்.

“மருமகன் தம்புரான் ஒரு பெரிய இசை ஞானி என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை” -கச்சேரியைக் கேட்க வந்த ஒவ்வொருவரும் கூறினர்.

தங்களுடைய வாழ்க்கையில் அவர்கள் என்றும் மறக்க முடியாத அளவிற்கு இருந்தது அந்தக் கச்சேரி.

வந்ததுபோலே, எவ்வித ஆர்ப்பாட்டமுமின்றி, ஊரை விட்டுப் புறப்பட்ட மருமகன் தம்புரான், புறப்படுவதற்கு முன் மாமாவையும், தந்தையையும், அம்மாவையும் போய்ப் பார்த்தார்.

“அம்மா, நான் போகிறேன்.”

அவனுடைய அன்னையின் கண்களிலிருந்து கண்ணீர் அருவியாய்க் கொட்டிக் கொண்டிருந்தது.

“கட்டாயம் போய்த்தான் ஆகணுமா, உன்னி?”

“ஆமாம், அம்மா!”

“அப்படியானா கொஞ்சம் பணம் தருகிறேன். கையில் வைத்துக்கொள், மகனே.”

“பணமெல்லாம் எனக்கு வேணாம் அம்மா.”

“இனி மீண்டும் எப்போ நீ வருவாய்?”

“அடுத்த வருடம் இதே சமயத்தில்.”

“கட்டாயம் வருவாய் இல்லையா?”

“வருவேன். கட்டாயம் வருவேன்.”

“உன்னி கையில் கொஞ்சம் பணம் வைத்துக் கொள்ளடா” - அவன் தந்தையும், மாமாவும் ஒரே குரலில் சொன்னார்கள்.

“பணம் எனக்கெதற்கு? அதெல்லாம் எனக்கொன்றும் வேண்டாம்.” - தீர்க்கமான முடிவாக இருந்தது அது.

மருமகன் தம்புரான் அடுத்த வருடம் ஊருக்கு வந்தார்; போனார். பிறகு வந்தார். போனார். பின் வந்தார்.

இந்த மருமகன் தம்புரான்தான் குஞ்ஞிப்பாக்கனுக்குக் குருவாய் கிடைத்திருக்கும் சந்நியாசி. இதை ஒரு பெரிய பாக்கியமென்றே கருதினான் குஞ்ஞிப்பாக்கன். குஞ்ஞிப்பாக்கனுக்கு கிடைத்திருக்கும் இந்த அரிய சந்தர்ப்பத்தை நினைத்து மகிழ்ந்தனர். அமதனும், அவனுடைய மற்ற மாணவர்களும்.

“நாளை மறுநாள் நான் இங்கிருந்து புறப்படுறேன். அப்போது என்னுடன் நீ வந்துவிடு” -குஞ்ஞிப்பாக்கனிடம் கூறினார் மருமகன் தம்புரான்.

குஞ்ஞிப்பாக்கன் என்ற தாழ்த்தப்பட்ட பையன் மருமகன் தம்புரான் என்ற உயர்ந்த ஜாதியைச் சார்ந்த சந்நியாசியின் சிஷ்யனாகச் சேர்ந்த செய்தி ஊர் முழுக்கப் பரவியது. ஊரிலுள்ள பெரிய மனிதர்கள் எல்லோரும் மருமகன் தம்புரானைத் தேடி வந்தனர். அவர்கள் மத்தியில் விருபாக்ஷன் நம்பூதிரியும் இருந்தார்.

“செருமச் செருக்கனுக்குப் பாட்டு சொல்லிக் கொடுக்கக்கூடாது. அவனை சிஷ்யனாக ஏற்றுக்கொள்ளக்கூடாது.” - அவர்கள் கூறினர்.

“என்ன சொன்னீங்க?”

“கீழ்ஜாதிப் பையனை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டிருப்பதாகக் காதில் விழுந்தது. அது உண்மைதானான்னு பார்த்துப் போக வந்தோம்” - என்றார் விருபாக்ஷன் நம்பூதிரி.

“நீங்கள் கேட்ட செய்தி உண்மையானதுதான். வேறு என்ன உங்களுக்கு வேணும்?”

“தாழ்த்தப்பட்டவன் பாகவதராய் வந்தால், அது நாட்டிற்கே பெரிய அவமானமாச்சே?”

“நிச்சயம் இல்லை. வேறு எதாவது கேட்கணுமா?”

“நீங்க எடுத்த இந்த முடிவை மாற்றிக் கொண்டால் மிகவும் நல்லதாயிருக்கும்.”

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன். அது என்னுடைய இஷ்டம்” - இதைக் கூறிய மருமகன் தம்புரான் உள்ளே போய் விட்டார்.

“நன்றாயிருக்கிறது விஷயம்!” - வாரியர் கூறினார்.

“அவன் இஷ்டப்படி செய்து கொள்ளும் சுபாவம் உடையவன் இவன். இதை எவ்வளவு முயற்சி செய்தாலும் நம்மால் தடுக்க இயலாது. ஒருமுறை தீர்மானித்துவிட்டால், எந்தவொரு காரணத்தைக் கொண்டும் பின்வாங்க மாட்டான் உன்னி” - பெரிய தம்புரான் நம்பூதிரியை நோக்கியவாறு கூறினார்.

தலையைத் தரையை நோக்கித் தொங்கப்போட்டுக் கொண்டே வெளியேறினர் விருபாக்ஷன் நம்பூதிரியும், மற்றவர்களும்.

6

ங்களுடைய புத்திரனின் பிரிவைத் தாங்கிக் கொள்ளும் சக்தியின்றி கண்ணீர் சிந்தினர் சங்கரனும், முண்டிச்சியும்.

அவர்களுடைய மகன் என்றாவதோர் நாளில் உயர்ந்த ஒரு சங்கீத வித்துவானாக ஊர் திரும்புவது குறித்து அவர்களுக்கென்னவோ அடக்க முடியாத ஆனந்தம்தான். என்றாலும், இதுவரை தங்களுடனேயே இருந்துவிட்டுப் பிரிந்து போகிற மகனைக் கண்டு அவர்கள் துயரம் கொண்டதில் வியப்பதற்கு என்ன இருக்கிறது?

தன்னுடைய தந்தையின் காலிலும், தாயின் காலிலும் விழுந்து நமஸ்காரம் செய்தான் குஞ்ஞிப்பாக்கன். மகனின் முகத்தைப் பார்க்கக்கூட திராணியின்றி கதறிக் கதறி அழுதாள் முண்டிச்சி. அவள் சிந்திய கண்ணீர் குஞ்ஞிப்பாக்கனின் தலையில் விழுந்து கொண்டிருந்தது.

“போய் வா மகனே” - சங்கரன் கூறினான்.

நேராக அமதனின் பள்ளிக் கூடம் நோக்கிச் சென்ற குஞ்ஞிப்பாக்கன் அவனுடைய பாதங்களில் சாஸ்டாங்கமாக விழுந்து நமஸ்கரித்தான். அவனைக் கையில் பிடித்துத் தூக்கிய அமதன் கூறினான்.

“போய் வா, பாக்கா, வரும்போது ஒரு பெரிய பாடகனாய்த்தான் நீ திரும்பி வரணும்.”

தன்னுடைய அன்பு மாணவனுக்கு ஆசீர்வாதம் தந்தான் அமதன். ஆசிரியரின் கால்களில் மற்றுமோர் முறை விழுந்து விடை பெற்றான் குஞ்ஞிப்பாக்கன்.

“என்ன புறப்பட்டதாகிவிட்டதா?” - மருமகன் தம்புரானின் குரல் வந்த திசையை நோக்கி எல்லோருடைய கவனமும் சென்றது.


தம்புரான் பள்ளிக்கூடத்தைத் தேடி வந்திருக்கிறார்! புலையன் நடத்துகின்ற பள்ளிக்கூடத்தைத் தேடி தெற்கே கோவிலகத்தைச் சேர்ந்த மருமகன் தம்புரான் வந்திருக்கிறார்! என்ன பாக்கியம்!

அமதனும் மாணவர்களும் மனதுள் உவகை பொங்க அவரை வரவேற்றார்கள். அமதன் விரித்த பாயில் அமர்ந்தவாறே மருமகன் தம்புரான் வினவினார்.

“குஞ்ஞிப்பாக்கன் புறப்படுவதற்கான ஆயத்தம் எல்லாம் செய்தாகிவிட்டது அல்லவா?”

“ம்” மெதுவான குரலில் விடையிறுத்தான் குஞ்ஞிப்பாக்கன்.

அமதனின் மாணவர்களில் ஒருவன் ஆசையுடன் ஓடி இளநீர் ஒன்றைக் கொண்டு வர, அதன் மூக்கைச் சீவி மற்றொரு மாணவன் தம்புரானின் முன் வைத்தான். மனதில் ஆர்வம் பொங்க அந்த இளநீரைக் குடித்தார் மருமகன் தம்புரான்.

“ஒரு சிறிய விண்ணப்பம்” - அமதன் தயங்கிய குரலில் கூறினான்.

“என்ன...?”

“ஒரு பாட்டுப் பாடினா மிகவும் சந்தோஷமா இருக்கும்.”

“அவ்வளவுதானே! பாடி விட்டால் போகிறது!”

தரையில் இரண்டு கால்களையும் மடித்துப் போட்டு ஏதோ தியானத்தில் அமர்வது போல் அமர்ந்தார் தம்புரான். அவரைச் சுற்றி முகத்தில் பணிவு தெரிய அமர்ந்திருந்தனர் அமதனும், அவனுடைய மாணவர்களும்.

மருமகன் தம்புரானின் தொண்டைக்குள்ளிருந்து தேவகானமொன்று உயர்ந்து எழும்பி வெளி வந்தது. இந்த அகிலத்தையே மறந்து விட்ட மாதிரி நிசப்தமாய் அமர்ந்திருந்தனர் எல்லோரும். எவ்வித சப்தமும் இன்றி விளங்கிய அந்த பிரதேசத்தின் எல்லா பகுதியிலும் பரவி வியப்பித்து ஒலித்துக் கொண்டிருந்தது அது. ஆத்மாவின் உள்ளிருந்து புறப்பட்டு வரும் சங்கீதம் அது. அங்கே ஒரு நாத பிரபஞ்சமே உருவாகி விட்டிருந்தது. கானம் முடிந்ததும், இருந்த இடத்தைவிட்டு எழுந்தார் தம்புரான்.

“இந்த பள்ளிக்கூடம் உங்களுடைய வருகையால் புனிதம் பெற்றது” என்று அமதன் கூறியதைக் கேட்ட மருமகன் தம்புரானின் அதரங்களில் மென்னகை அரும்பியது.

“அமதா, நாங்கள் வரட்டுமா?”

மருமகன் தம்புரான் முன்னே நடக்க, அவருடைய அடிச்சுவட்டைப் பின்பற்றி நடந்தான் குஞ்ஞிப்பாக்கன்.

எத்தனையோ கிராமங்களை - ஊர்களைக் கடந்து அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். மருமகன் தம்புரான் ஒன்றும் பேசாமல் வரவே, குஞ்ஞிப்பாக்கனும் வாயே திறக்காமல் அவரைப் பின்பற்றி சென்று கொண்டிருந்தான்.

கடைசியில் அவர்கள் ஸ்ரீபுரம் கிராமத்தை அடையும் போது மாலை நேரமாகி விட்டிருந்தது.

“இதுதான் ஸ்ரீபுரம். இன்று நாம் இங்கேயே தங்கி விடுவோம்” அருகிலிருந்த சிவன் ஆலயத்தை நோக்கிக் கையை நீட்டியவாறு கூறினார் தம்புரான்.

கோவிலைச் சார்ந்த குளத்தில் இறங்கி இரண்டு பேரும் கையையும் காலையும் அலம்பினர். கோவிலைச் சேர்ந்த சாந்திக்காரன் நம்பூதிரி, தம்புரானைக் கண்டதும், பக்தியுடன் இரண்டு கைகளையும் முகத்துக்கு நேரே வைத்துத் தொழுதார். பதிலுக்கு அவரைத் தொழுதார் தம்புரான். அடுத்து குஞ்ஞிப்பாக்கன் மேல் சென்றது நம்பூதிரியின் பார்வை.

“இந்தப் பையன் யார்?”

“இவன் என்னுடைய சிஷ்யன். சங்கீதம் கத்துக்கறதுக்காக என்னிடம் வந்திருக்கிறான்.”

“இவன் எந்த ஜாதி?”- குஞ்ஞிப்பாக்கனைப் பார்க்கும்போது அவன் உயர்ந்த ஜாதியைச் சார்ந்தவன் மாதிரி தோன்றாததால் நம்பூதிரிக்கு இப்படி ஒரு சந்தேகம்.

“நம்பூதிரிக்கு ஏன் வீணாக இப்படியொரு சந்தேகம்? என் சிஷ்யன் உயர்ந்த ஜாதியைச் சேர்ந்தவன்தான்.”

அதன் பிறகு நம்பூதிரி ஒன்றும் பேசவில்லை.

கோவிலிலிருந்து ஏதோ கொஞ்சம் படையலாக வந்த சோறு கிடைத்தது. இரண்டு பேரும் அதைத்தான் சாப்பிட்டார்கள்.

நேரம் நன்றாக இருட்டிவிட்டிருந்தது. வானத்தில் சந்திரன் சிரித்துக் கொண்டிருந்தான். சந்திரனைச் சுற்றிலும் கருப்பு வண்ண, வெண்மையான மேகங்கள் மெல்ல நகர்ந்து கொண்டிருந்தன.

இருவரும் கோபுர நடையில் வந்து அமர்ந்தார்கள்.

மேகம் சூழ்ந்திருந்த வானம் மீண்டும் நிர்மலமாகக் காட்சி தந்தது. மீண்டும் சந்திரன் தன்னுடைய முகத்தை அவனுக்குக் காட்டினான்.

“சரி... நாம தொடங்குவோம்...”

இப்படிக் கூறிய மருமகன் தம்புரான் ஒரு நிமிட நேரம் தியானத்தில் ஆழ்ந்திருப்பது போல் கண்களை இறுக மூடிக்கொண்டார். பின் சிறிது நேரத்தில் கண்களைத் திறந்தார். எழுந்து சென்று அவரை நமஸ்கரித்தான் குஞ்ஞிப்பாக்கன்.

“ஆ...” தம்புரானின் உள்ளிருந்து நாதம் எழும்பி உயர்ந்து கொண்டிருந்தது.

“ம்... நீயும் பாடு...”

குஞ்ஞிப்பாக்கன் தொடர்ந்தான்.

“ஆ...”

அந்த தேவகீதம் சந்திரனின் பிரகாசத்துடன் சேர்ந்து ஒலித்துக் கொண்டிருந்தது.

7

நாட்கள் வாரங்களாகவும், வாரங்கள் மாதங்களாகவும் உருண்டு ஓடிக் கொண்டிருந்தன. தன்னுடைய குருவின் பாடங்களை மிகவும் பணிவுடன் கற்று விட்டிருந்தான் குஞ்ஞிப்பாக்கன்.

அவன் தம்புரானின் சிஷ்யனாயிருந்தான்.

அவன் தம்புரானின் நண்பனாயிருந்தான்.

ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் குஞ்ஞிப்பாக்கனுக்கு தம்புரான் மேல் சந்தேகம் இருந்து கொண்டிருந்தது.

தம்புரான் ஏன் இப்படி ஊர் ஊராக அலைந்து திரிய வேண்டும்? ஏன் ஒரே இடத்தில் இருந்து ஓய்வெடுத்துக் கொண்டிருக்கக்கூடாது? ஏன் ஒரே இடத்தில் இருந்து செயலாற்றக்கூடாது?

தம்புரானின் உடல்நிலையும் நாளாக ஆக நலிந்து வருவது கண்ட                                குஞ்ஞிப்பாக்கன் உண்மையாகவே வேதனைப்படத் தொடங்கிவிட்டான்.

ஒரு நாள் அவன் இது குறித்து தம்புரானிடம் மனம் திறந்தே பேசிவிட்டான்.

“குருவே ஏன் நாம் ஒரே இடத்தில் தங்கி இருக்கக்கூடாது?”

இதைக் கேட்டதும் விழுந்து விழுந்து சிரித்தார் தம்புரான். பின் சிறிது நேரம் கழித்துக் கூறினார்.

“நான் ஏன் ஒரே இடத்தில் நின்று கொண்டிருக்காமல் ஊர் ஊராய் அலைந்து திரிகிறேன் என்ற உண்மையை உன்னிடம் மட்டும் கூறுகிறேன். உன்னிடம் மட்டும்தான்...”

அவர் என்ன கூறப் போகிறார் என்றறியும் ஆவலுடன் அவருடைய முகத்தையே பார்த்தான் குஞ்ஞிப்பாக்கன்.

“இத்தனை நாட்களும் சங்கீதத்தைப் பற்றி நான் மிகவும் விரிவாகப் படித்துக் கொண்டிருந்தேன். இது குறித்து ஒரு பெரிய ஆராய்ச்சி நூல் கூட நான் எழுதி முடித்துவிட்டேன். இதற்கான தேடுதலுக்காகவே நான் இத்தனை நாட்களாய் ஒரே இடத்தில் ஸ்திரமாய் நின்று கொண்டிருக்காமல் அலைந்து திரிந்து கொண்டிருந்தேன். என்னைவிட சங்கீதப் புலமை வாய்ந்த எத்தனையோ பண்டிதர்களும், அறிஞர்களும் இந்த பாரதத்தில் இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் நான் இத்தனை நாட்களும் தேடித் திரிந்தேன். கண்டவர்களிடம் உரையாடினேன். அறிவைப் பெருக்கிக் கொண்டேன். அவர்களுடன் கொண்ட நட்பின் மூலம் நாளைய உலகிற்கு ஒரு வேளை என்னுடைய இந்த ஆராய்ச்சி நூல் பயன்பட்டாலும் படலாம்!”

சிறிது நேரம் மௌனமாய் அமர்ந்திருந்த தம்புரான் மீண்டும் தொடர்ந்தார்.

“அறிவியலடிப்படையில் நான் என்னுடைய சொந்த அறிவு கொண்டு சில ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். அவற்றிற்கு என்னுடைய சொந்த வாக்குகளை உபயோகித்து எழுத்துருவம் கொடுத்திருக்கிறேன். பொறுத்திரு. நான் அவை எல்லாவற்றையும் உனக்குச் சொல்லித் தருகிறேன்.”


மனதில் ஆனந்தம் குடிகொள்ள வியப்புடன் தம்புரானின் முகத்தையே வைத்த கண் எடுக்காது நோக்கிக் கொண்டிருந்தான் குஞ்ஞிப்பாக்கன்.

குருவின் மனதுக்குள் குறிக்கோள் குடிகொண்டிருக்கிறது. உண்மையாகவே பெரியதோர் குறிக்கோள்தான் அது. இப்போது அந்த குறிக்கோள் நிறைவேறிவிட்ட மாதிரிதான். இனி கொஞ்சம் ஓய்வெடுக்கலாம். ஓய்வு மிகத் தேவையானதும் கூட. அது உடனடியாக வேண்டியதும் கூட.

ஒரு நாள் அவன் தம்புரானிடம் கூறினான்.

“குருதேவா, தேடவேண்டியதெல்லாம் தாங்கள் தேடியாகிவிட்டது. இனி ஒரு இடத்தில் இருந்து நாம் கொஞ்சம் ஓய்வெடுப்போம். இதுதான் என்னுடைய விண்ணப்பம்.”

“நான் ஜீவிதத்தில் நிறைவேற்ற வேண்டியது மற்றொன்று இருக்கிறது பாக்கா?”

“அது என்ன, குருவே?”

“என்னுடைய அறிவு முழுவதையும் உனக்கு நான் தரவேண்டும். அதுதான் அந்தக் காரியம்.”

குஞ்ஞிப்பாக்கனின் இதயத்தில் ஆயிரம் மலர்கள் ஒரே சமயத்தில் மலர்வதுபோல் ஓர் உணர்வு தம்புரானின் மெலிந்த உடம்பையும் ஒட்டி உலர்ந்து போய் காணப்பட்ட நெஞ்சுக் கூட்டையும் கண்டபோது, அவனுக்கு ஏற்பட்ட அந்த மகிழ்ச்சி அற்ப நிமிடங்களுக்குள்ளேயே இருந்த இடம் தெரியாமல் மறைந்துபோனது. உரக்க அழ வேண்டும் போல் தோன்றியது அவனுக்கு.

“மன்னிக்க வேண்டும் குருதேவா. ஒரே இடத்தில் ஸ்திரமாய் இருந்து எனக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தால் போதாதா? என்னுடைய வேண்டுகோளை தயவு செய்து கேளுங்கள். இல்லாவிட்டால்...” அதற்கு மேல் துக்கம் தொண்டையை அடைத்துவிட்டதால் குஞ்ஞிப்பாக்கனால் பேச முடியவில்லை.

அன்பிற்கு அதிகாரத்தைவிட சக்தி அதிகம். மருமகன் தம்புரான் இறுதியில் தன்னுடைய சிஷ்யனின் வேண்டுகோளை ஏற்றுக் கொண்டு விட்டார்.

“சரி... நாம எங்கே தங்கலாம் குருவே?”

“அது குறித்து நாம் ஆலோசனை செய்வோம்.”

“குருவே, நாம் ஊருக்கே திரும்பிப் போய் விட்டாலென்ன?”

“பார்ப்போம்.”

அடுத்த நாள் காலையில் தம்புரான் கேட்டார்.

“ஊருக்கு போய்விட வேண்டும் என்று உனக்கு நிர்ப்பந்தம் உண்டோ?”

“என்னுடைய குருதேவனின் தீர்மானம் எதுவோ, அதுவே என்னுடைய தீர்மானமும்.”

“உனக்கு உன்னுடைய பெற்றோரைப் பார்க்கணும்னு ஆசை இல்லையா?”

“ம்...” தன் மனதில் இருந்ததை மறைக்காமல் கூறினான் குஞ்ஞிப்பாக்கன்.

ஊரிலிருந்து வந்து மூன்று வருடங்களுக்கு மேலாகிவிட்டன.

தம்புரானுக்குக் கூடத்தான் ஊருக்குப் போக வேண்டும் என்ற ஒரு நிர்ப்பந்தம். அவர் என்னதான் தன் அன்னையிடம் வருடத்திற்கொரு முறையாவது ஊருக்கு வருவதாக வாக்கு கொடுத்துவிட்டு வந்திருந்தாலும், நடைமுறையில் அவரால் அந்த வாக்கைப் பின்பற்ற முடியவில்லைதான்.

“நானொரு மடையன்” - தம்புரான் தன்னைத்தானே திட்டிக் கொண்டார்.

உண்மையில் ஊர் திரும்ப தம்புரானுக்கு நேரம் கிடைக்கவில்லைதான். தினமும் பொழுது புலர்வதற்கு முன்பே கண் விழித்து விடுவார். தொடர்ந்து காலைக் கடன்களையெல்லாம் முடிப்பார். குஞ்ஞிப்பாக்கனுக்குப் பாடம் சொல்லித் தருவார். அதன்பின் பயணம்... நீண்ட பயணம்.

‘குஞ்ஞிப்பாக்கன்! அவன் வளர வேண்டும். பெரியதொரு பாகவதராய் வரவேண்டும்’ - தம்புரானின் மனது சதா மந்திரித்துக் கொண்டிருந்தது.

குருவின் விருப்பம்தான் சிஷ்யனின் விருப்பமும். அவருடைய தொண்டையில் இருந்து புறப்பட்டு வந்த நாதத்தை அவனும் முறைப்படி கற்றான்.

இருவரும் ஒன்றாகவே நடந்தார்கள்; அலைந்தார்கள்; தூங்கினார்கள்; உண்டார்கள்; சிந்தித்தார்கள்.

தம்புரானும் ஊர் திரும்புவதுதான் சரியென்று தீர்மானித்தார். அதன்படி இருவரும் ஊர் திரும்பினர்.

கோவிலின் முன் வந்ததும் தம்புரான் கூறினார்.

“குஞ்ஞிப்பாக்கன் நீ வீட்டுக்குப் போ. நான் சாயங்காலம் அமதனின் பள்ளிக்கூடத்திற்கு வருகிறேன்.”

வாயிற்படியைத் தாண்டி தன்னுடைய கோவிலின் உள் பிரவேசித்தார் மருமகன் தம்புரான்.

திண்ணையில் அவருடைய சகோதரர் அமர்ந்திருந்தான்.

“என்ன இந்தப் பக்கம்?” - அவனுடைய குரலில் ஆணவம் கலந்ததொலித்தது.

தன்னை இவ்வாறு கேட்பது வேறு யாருமல்ல- தன்னுடைய சகோதரன்-

“மாமாவைப் பார்க்க வேண்டும். அச்சனையும், அம்மாவையும் பார்க்க வேண்டும...”

“அவர்கள் எல்லாம் இந்த உலகத்தை விட்டுப் போய் எத்தனையோ மாதங்கள் ஆகிவிட்டன! இனிமேல் நீ இங்கே நிற்காதே. உன்னுடைய வீடு இதுவல்ல...”

மருமகன் தம்புரானுக்கு விஷயம் பிடிபட அப்படியொன்றும் அதிக நேரம் ஆகவில்லை.

ஒரே அன்னைக்குப் பிறந்த இரண்டு பேர்தான் அவர்கள் இருவரும். தான் தம்பி - அவன் அண்ணன்.

தன்னுடைய தந்தை இருந்த ஸ்தானத்தில் இப்போது தன்னுடைய அண்ணன் இருக்கிறான். தன்னுடைய பதவிக்காகத் தம்பியையே விரட்டி விடப் பார்க்கிறான் அண்ணன். இதுபற்றியெல்லாம் கொஞ்சமும் வருத்தமில்லை தம்புரானுக்கு. அண்ணனைப் பற்றி அவர் நன்றாகவே அறிந்து வைத்திருந்தார்.

சிறிது நேரம் வாயிலோரம் இருந்த திண்ணையில் அசையாமல் அமர்ந்திருந்த அவருடைய உள்ளத்தில் ஒரு நிமிடம் வலம் வந்தனர் மாமாவும், அன்னையும், அச்சனும்.

அவர்கள் இந்த உலகை விட்டுப் போய்விட்டார்கள். அவர்களை இனி எங்கே போய்ப் பார்ப்பது?

“இனியும் இங்கே நின்றுகொண்டிருக்காதே எங்கேயாவது போய்த் தொலை” - தம்பியின் முகத்தைப் பார்க்காமலேயே கூறினான் அந்த அண்ணன்.

மருமகன் தம்புரான் திரும்பிப் பாராமல் நடந்தார்.

8

மதனின் பள்ளிக்கூடத்தை நோக்கி நடந்தார் தம்புரான். அவர் தூரத்தில் வந்து கொண்டிருப்பதைக் கண்ட அமதனும் அவனுடைய மாணவர்களும் ஓடி வந்து அரை மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

“அரண்மனைக்குள் நான் போகக் கூடாதாம். சொல்கிறார்கள்.”

“யார் அப்படிக் கூறியது?”

“என் சகோதரன்தான். எனக்கு தற்போது தங்குவதற்கு ஒரு இடம் வேண்டுமே அமதா.”

வாழ்க்கையில் இதுவரை யாரிடமும் தனக்கென்று எதுவும் வேண்டும் என்று கேட்டிராத மருமகன் தம்புரான்- அளவற்ற சொத்துக்களின் வாரிசு. ஆனால், பணமும் சொத்தும் அவரைப் பொறுத்தவரை ஒன்றும் பெரியவை அல்ல; மாறாக அவை இரண்டும் புல்லுக்குச் சமமே.

அப்படிப்பட்ட உயர்ந்த மனித ஜீவியின் கள்ளம் கபடமற்ற உயர்ந்த மனதை அமதனால் நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. அவனையும் மீறி அவனுடைய கண்களில் இருந்து கண்ணீர் அருவியாய் வழிந்தது.

அமதன் கூறினான்.

“இன்று சாயங்காலத்திற்குள் உங்களுக்கு இங்கு ஒரு வீடு அமையும்.”

அடுத்த நிமிடமே வீடு அமைக்கும் வேலை தொடங்கிவிட்டது. அமதனும், அவன் மாணவர்களும், குஞ்ஞிப்பாக்கனும் என்றுமில்லாத உற்சாகத்துடன் இங்கும் அங்கும் பம்பரமாய்ச் சுழன்று கொண்டிருந்தனர். மாலைக்கு முன்பே பள்ளிக்கூடத்திற்கு வெகு அண்மையிலேயே ஒரு குடிசை தயாராகிவிட்டது. பனையோலையால் வேயப்பட்ட - சிறிதே ஆனாலும், பார்ப்பதற்கு மிகவும் அழகாகக் காட்சியளித்துக் கொண்டிருந்தது அந்த வீடு. தரையைச் சாணத்தால் துப்புரவாக மெழுகினார்கள். வீட்டின் முற்றத்தில் துளசிச் செடிகளை அன்புடன் கொண்டு வந்து வைத்தார்கள். வீட்டின்முன் இதற்கு முன்பிலிருந்தே நின்று கொண்டிருந்த அசோக மரத்தைச் சுற்றிலும் கற்களைக் கொண்டு வந்து அழகாக ஒரே மாதிரி வட்ட வடிவில் அடுக்கி அழகு செய்தனர்.


கரும்பனையோலைகள் வீசி வரும் தென்றல் காற்றோடு கொஞ்சிக் குலாவிக் கொண்டிருந்தன. அசோக மரத்தின் இலைகள் காற்றில் நாட்டியம் ஆடிக்கொண்டிருந்தன.

கோவிலில் இருந்த வெளிவந்த குலவைச் சத்தம் அவர்கள் எல்லோருடைய செவிகளிலும் விழுந்தது.

தம்புரான் குடிலினுள் காலடி எடுத்து வைத்து நுழைந்தபோது அவர் மேல் மலர்களைச் சொரிந்தார்கள் அமதனும், அவனுடைய மாணவர்களும்.

எல்லாவற்றையும் நோக்கிக் கொண்டிருந்த தம்புரான் திருப்தி தொனிக்கும் குரலில் கூறினார்.

“அமதா, இது குடிலல்ல; அரண்மனையல்ல; மாறாக, இதுதான் என் ஆஸ்ரமம்.”

அன்று இரவு உலகமே உறக்கத்தில் ஆழ்ந்திருந்த நேரத்தில் தன்னை மறந்து பாடிக் கொண்டிருந்தார் தம்புரான். குஞ்ஞிப்பாக்கனும் அவருடன் சேர்ந்து பாடினான். தன்னுடைய மாணவனான குஞ்ஞிப்பாக்கனை உவகையுடன் கட்டியணைத்துக் கொண்ட அமதன் கூறினான்.

“குஞ்ஞிப்பாக்கன், உண்மையாகவே நீ குருவுக்கேற்ற சிஷ்யன்தான்.”

நான்கு வருடங்கள் உருண்டோடின.

இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் தம்புரானிடத்திலும், அவருடைய ஜீவிதத்திலும் எத்தனையோ மாற்றங்கள் ஏற்பட்டு முடிந்துவிட்டன. இப்போது அவர் முன்னைவிட மிகவும் உற்சாகத்துடன் காணப்பட்டார். அவருடைய குடில் ஒரு ஆஸ்ரமமாகவே மாறிவிட்டது. முற்றத்தில் ஏராளமான செடிகள் காற்றில் ஆடிக்கொண்டிருந்தன. வள்ளிக்கொடி படர்ந்து ஆஸ்ரமத்திற்கே அழகு செய்து கொண்டிருந்தது.

தம்புரான் கண்டுபிடித்த புதிய ராகங்களுக்கு இசை வடிவம் கொடுத்து பாடினான் குஞ்ஞிப்பாக்கன். சங்கீத ஞானம் உள்ளவர்களின் பார்வை குஞ்ஞிப்பாக்கனை நோக்கித் திரும்பின. சங்கீதத்திற்கு ஒரு புதிய ஜீவனை நல்கிய பெருமையுடன் தலையை நிமிர்த்தி கம்பீரமாக நின்று கொண்டிருந்தது அந்த ஆஸ்ரமம்.

எப்பொழுதும் நடைபெறும் திருவிழா அந்த வருடமும் நடக்க இருந்தது. உலகம் முழுவதும் புகழப்பெற்ற ஞானேஸ்வரன் மதுராபுரியில் இருந்து கச்சேரி நடத்த வருகிறாராம்.

கச்சேரி நடப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வந்துவிட்ட அவர் வந்தவுடன் விருபாக்ஷன் நம்பூதிரியை அழைத்து வினவினார்.

“எனக்குத் தம்புரானைக் கொஞ்சம் காண வேண்டும்.”

“அந்த மனிதர் இப்போது புலைப்பயல்களுடன் அல்லவா இருக்கிறார்?”

“அதனாலென்ன...?”

“அங்கு நீங்க போகக்கூடாது.”

“அதைத் தீர்மானிக்க வேண்டியது நீங்கள் அல்ல; நான்” - அவருடைய குரலில் கோபத்திற்கான அறிகுறிகள் தெரிந்தன.

கடைசியில் விருபாக்ஷன் நம்பூதிரி வழிகாட்ட தம்புரானின் ஆஸ்ரமத்தை நோக்கி நடந்தார் பாகவதர்.

இரண்டு இசை அறிஞர்களும் ஒன்றாக அமர்ந்து அந்த ஆஸ்ரமத்துக்குள் பேசிக் கொண்டிருக்கும் காட்சி மிகவும் ரம்யமான ஒன்றாக இருந்தது. சங்கீதம் குறித்து தம்புரான் பேசப் பேச தன்னையே மறந்த ஒரு மயக்க நிலைக்குப் போய்விட்டார் ஞானேஸ்வரன். தம்புரானின் மீது அவருக்கு ஒரு பெரிய மதிப்பே வந்துவிட்டது. இரண்டு கைகளையும் முகத்துக்கு நேரே உயர்த்தி தம்புரானை வணங்கினார் அவர்.

தம்புரான் கண்டுபிடித்த நான்கு ராகங்களையும் பாடினான் குஞ்ஞிப்பாக்கன். பாட்டைக் கேட்க கேட்க ஒரு வகையான ஞானப் பரவச நிலையையே அடைந்துவிட்டார் பாகவதர். அவருடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. அவருடைய உடலில் இருந்த மயிர்கள் உணர்ச்சிப் பெருக்கில் குத்திட்டு நின்றன. தானும் ஒரு பாகவதர்தான்; என்றாலும் சங்கீதத்தின் சக்தி இத்தனை தூரம் தன்னை ஆட்கொண்டு விடவில்லை என்பதை அவர் நன்கு அறிவார்.

“நாளை மறுநாள் நடக்கப்போகும் கச்சேரியில் குஞ்ஞிப்பாக்கனும் பாடவேண்டும்” - ஞானேஸ்வரன் கூறினார்.

“என்னை அங்கு நுழைய விட மாட்டார்களே!” - குஞ்ஞிப்பாக்கனின் குரலில் ஒரு வகையான ஏக்கம் கலந்தொலித்தது.

“அதை நான் பார்த்துக் கொள்கிறேன்.”

தம்புரானின் பாதங்களைத் தொட்டு வணங்கிய ஞானேஸ்வரன் எல்லோரிடமும் விடை பெற்றார்.

திருவிழா நடக்கப்போகும் நாளும் வந்துவிட்டது. கச்சேரிக்கான ஏற்பாடுகளெல்லாம் முடிந்துவிட்டன.

மாலை வந்தது. மண்டபத்தினுள் நுழைந்தார் ஞானேஸ்வரன். அவருக்குப் பின்னே, அவரையொட்டி வந்து கொண்டிருந்த குஞ்ஞிப்பாக்கனைக் கண்டபோது பிரமாணிக்குக் கோபம் வந்துவிட்டது.

“இவனை யார் இங்கு அழைத்து வந்தது! எதற்காக இவனை இங்கு அழைத்து வந்தீர்கள்?” - விருபாக்ஷன் நம்பூதிரி கேட்டார்.

“பாட்டுப் பாட...”

“இந்த செருமப் பயலா...?”

“நம்பூதிரியின் முட்டாள்தனத்தை இனியும் பார்த்துக் கொண்டிருக்க நான் விரும்பவில்லை. மாறி நில்லுங்கள்” - அதிகாரத்துடன் கூறினார் ஞானேஸ்வரன்.

நம்பூதிரியும் மற்ற உயர்ந்த ஜாதிக்காரர்களும் அதிர்ந்து போய் நின்றனர்.

எவ்விதத் தயக்கமுமின்றி மண்டபத்தின் மேடையில் ஏறினார் ஞானேஸ்வரன்.

“வா...” குஞ்ஞிப்பாக்கனையும் மேலே வரும்படி அழைத்தார் அவர்.

மேடையில் அவர் அமர, அருகில் அமர்ந்தான் குஞ்ஞிப்பாக்கன்.

“தம்புரான் ஏன் இங்கு வரவில்லை?”

“அவர் இங்கு வர மறுத்துவிட்டார். எத்தனை நிர்ப்பந்தித்தும்”

“உண்மைதான்... அவருடைய தனித்தன்மைக்கு இதுவும் ஒரு சான்று.”

கச்சேரி ஆரம்பித்தது.

திடீரென்று கூட்டத்தின் முன் பகுதியிலிருந்து ஒரு குரல்.

“அந்த செருமப் பயலை மண்டபத்தில் இருந்து வெளியேற்றுங்கள்.”

“நண்பர்களே, என்னுடைய அருகில் அமர்ந்திருப்பது அசாதாரண புலமையுடைய சங்கீத வித்துவான். மருமகன் தம்புரானின் சிஷ்யன் குஞ்ஞிப்பாக்கன். அவனுடைய பாட்டை நீங்கள் விரும்பாவிட்டால், தாராளமாக நீங்கள் அவனை மண்டபத்தில் இருந்து வெளியேற்றலாம்” - உயர்ந்த ஸ்தாயியில் பேசினார் ஞானேஸ்வரன்.

மீண்டும் ஒரே நிசப்தம்.

ஞானேஸ்வரன் ஒரு பாட்டுப் பாடினார். அதற்குள் கூட்டத்தில் இருந்து ஒரு குரல்-

“குஞ்ஞிப்பாக்கனைப் பாடச் சொல்லுங்கள்.”

ஒரு புதிய ராகம் அங்கு உருவெடுத்தது. இதற்கு முன் யாருமே கேட்டிராத ராகமது. அந்த ராகத்தின் இனிமையில் மயங்கிப்போனது கூட்டம். குஞ்ஞிப்பாக்கனின் குரல் இனிமை அங்கு கூடியிருந்த ஒவ்வொருவரையும் சுண்டி இழுத்தது. இதயத்தை நாதத்தால் குளிர வைப்பதுபோல் ஒரு தோணல். வியப்பு மேலிட அந்த தாழ்த்தப்பட்ட இனச் சிறுவனையே நோக்கிக் கொண்டிருந்தனர் எல்லாரும்.

மகிழ்ச்சி ஆரவாரம் விண்ணைப் பிளந்தது.

ஞானேஸ்வரன் பாடினார். அது முடிந்ததும் குஞ்ஞிப்பாக்கன் பாடினான். அங்கே ஒரு நாத பிரபஞ்சமே உருவாகிவிட்டிருந்தது.

அதோ வருகிறார் தம்புரான்! மண்டபத்திற்குள் நுழைந்த தம்புரான் குஞ்ஞிப்பாக்கனை நோக்கி வந்தார். குருவைக் கண்டதும், மரியாதையுடன் எழுந்து நின்றான் குஞ்ஞிப்பாக்கன். உடன் ஞானேஸ்வரனும்.

குஞ்ஞிப்பாக்கனைக் கட்டிப்பிடித்துக் கொண்டு மகிழ்ச்சியுடன் ஆசீர்வதித்தார் தம்புரான். அவருடைய கால்களில் விழுந்து நமஸ்கரித்தான் குஞ்ஞிப்பாக்கன். உடன் ஞானேஸ்வரனும்.

அந்தக் கூட்டம் திறந்த விழிகளை மூடாமல் இந்த அற்புதக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.