
கறுத்த தூசு மேல்நோக்கி உயர்ந்ததன் காரணமாக ஆகாயத்தின் தெற்குப் பக்கம் முழுமையாக இருண்டு போனது. அடர்த்தியான மூடு பனிக்குள்ளிருந்து பார்ப்பதைப் போல எரிந்து கொண்டிருந்த சூரியன் பச்சை நிறத்திலிருந்த கடலையே உற்றுப் பார்த்தது. சாதாரண படகுகளின் துடுப்புகளும், நீராவிக் கப்பல்களின் காற்றாடிகளும், துர்க்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்கா என்றழைக்கப்பட்ட கப்பல்களின் கூர்மையான அடிப்பகுதியும், துறைமுகத்தின் சுறுசுறுப்பாக இருக்கும் நீர்ப்பரப்பை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தன.
கனமான எடையைக் கொண்ட கப்பல்கள் நீர்ப்பரப்பில் பயணம் செய்வதால், கருங்கல் சுவர்களின் எல்லைகளுக்கிடையில் அலைக்கழிக்கப்படும் நீரலைகள் கரையிலும் கப்பல்கள் மீதும் வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தன. நுரை தள்ளியவாறு பேரிரைச்சலுடன் வந்து மோதிக் கொண்டிருந்த அலைகளின் கைகளில் ஏராளமான குப்பை, கூளங்கள் இருந்தன.
நங்கூரச் சங்கிலிகளின் சத்தம், சரக்கு வண்டிகளின் ஓரங்கள் ஒன்றோடொன்று இடித்து உண்டாக்கும் சத்தம், கருங்கல் மீது விழும் இரும்புத் தூண்களின் ஓலம், மரத்தடிகள் ஒன்றோடொன்று சந்திக்கும்போது எழும் மெல்லிய ஓசை, குதிரை வண்டிகளின் கடகடா சத்தம், ஒரு தேம்பலிலிருந்து கூப்பாட்டிற்கு உயரும் நீராவிக் கப்பலின் சங்கொலி, சுமை தூக்குபவர்களின், மாலுமிகளின், காவல்காரர்களின் உரையாடல்கள்- இவை அனைத்தும் ஒன்றுசேர்ந்து சுறுசுறுப்பான ஒரு வேலை நாளில் காதை அடைக்கக்கூடிய சத்த கோலாகலத்தைப் படைத்தன. துறைமுகத்திற்கு மேலே இருந்த ஆகாயத்தை நோக்கிக் கட்டுப்பாடே சிறிதும் இல்லாதது மாதிரி அந்தச் சத்தம் உயர்ந்தது. அதனை நேரில் சந்திப்பதைப் போல பூமியிலிருந்து, புதிய சில சத்தங்கள் வானத்தை நோக்கி உயர்ந்து சென்றன. பூமியைப் பிடித்து உலுக்கக்கூடிய ஒரு அலறல் அல்லது பரபரப்புடன் இருக்கும் சூழ்நிலையைப் பிளக்கக்கூடிய ஒரு வெடிச் சத்தம்...
கருங்கல், மரம், இரும்பு, நடக்கும் பாதையில் போடப்பட்டிருக்கும் தட்டையான கற்கள்... மனிதர்கள் வணிக தேவதைக்கு முன்னால் உச்சரித்த உயர்ந்த மந்திர வார்த்தைகளில் அவை ஒவ்வொன்றும் ஆழ்ந்து கிடந்தன... அந்தச் சத்த பூகம்பத்திலிருந்து மனித சத்தத்தைப் பிரித்தெடுப்பது என்பது கஷ்டமான ஒன்றாக இருந்தது. தளர்ந்து போனதும் கேலிக்குரியதாகவும் இருந்தது மனிதனின் சத்தம். அந்தச் சத்தங்களுக்கெல்லாம் மூல காரணமாக இருந்த மனிதர்களைப் பற்றி நினைத்துப் பார்த்தால், அது மிகவும் பரிதாபப்படக்கூடிய விதத்தில் இருந்தது. கனமான சுமைகளைச் சுமந்து கொண்டு, முதுகு வளைய வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாமல் இங்குமங்குமாய் ஓடிக் கொண்டிருந்த அந்த மனிதர்களின் உடலெங்கும் அழுக்குப் படிந்திருந்தது. நைந்து போன ஆடைகளை அவர்கள் அணிந்திருந்தார்கள். இரும்பால் ஆன பிரம்மாண்டமான இயந்திரங்களுடனும் சரக்குகளின் வாகனங்களின் இரைச்சல்களுடனும், தாங்களே உண்டாக்கிய பல பொருட்களுடனும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மனிதர்கள் ஒன்றுமேயில்லை. மனிதன் படைத்த இயந்திரங்களே மலை போன்ற குவியல்களுடனும், அவனை அடிமையாக்கின. அவை மனிதனின் சுயத்தை அபகரித்துக் கொண்டிருந்தன.
ஆவி வந்து கொண்டிருந்த பெரிய கப்பல்கள் விசில் ஊதுவதும், இரைவதும், அவ்வப்போது நீண்ட பெருமூச்சுகள் விடுவதுமாக இருந்தன. தங்களின் சொந்த உழைப்பால் உண்டாக்கிய பொருட்களை அடுக்குவதற்காக, கப்பல்களை நோக்கி வேகமாக ஓடி ஏறும் செம்மண் படிந்த மனிதப் புழுக்களை கேலியும் கிண்டலும் செய்வதாக இருந்தன அந்தச் சத்தங்கள். தன்னுடைய வயிற்றுப் பிழைப்பிற்காகக் கப்பலின் அடித்தளத்தில் ஆயிரக்கணக்கான தானிய மூட்டைகளை அடுக்கிக் கொண்டிருக்கும் உழைப்பில் ஏற்பட்டிருக்கும் மனிதப் பிறவிகளின் நீளமான வரிசையைப் பார்க்கும் எந்த ஒரு ஆளுக்கும் சிரித்துச் சிரித்து கண்ணில் கட்டாயம் நீர் வரும்.
நைந்துபோன ஆடைகள் அணிந்து வியர்வை வழிய நடந்து கொண்டிருக்கும், துறைமுகத்தில் சத்தமும் உஷ்ணமும் கடின உழைப்பும் காரணமாகத் தளர்ந்து போன மனிதர்களின், அவர்களே உண்டாக்கிய பிரம்மாண்டமான சூரியக் கதிர்களைச் சிதற விடுகிற இயந்திரங்களின் ஆவியால் அல்ல அந்த இயந்திரங்கள் இயங்குவது- மாறாக, மனிதர்களின் குருதியும் சதையும்தான் அவற்றை இயங்க வைத்துக் கொண்டிருக்கின்றன. இந்த முரண்பாடுகள் ஒரு 'முரண்பாட்டுக் கவிதை'யையே படைக்கக்கூடிய ஆற்றல் உள்ளவை.
சத்தங்கள் உரத்து ஒலித்துக் கொண்டிருந்தன. மூக்கின்மீது மோதிய தூசி கண்ணில் பட்டது. உஷ்ணம் உடலைக் கடுப்பாக்கித் தளரச் செய்தது. சகிப்புத் தன்மையின் எல்லையையும் தாண்டி, ஏதோ ஒரு விபத்து நடக்கப் போவதைப்போல, முழுமையான அழிவுக் காலம் மிகவும் நெருங்கி விட்டதைப் போல எல்லா விஷயங்களும் ஒருவித இறுக்கத்தில் நடந்து கொண்டிருந்தன. அந்தப் பெரிய விபத்து நடந்து முடிந்தவுடன், சூழ்நிலை முற்றிலும் மாறிவிடும். அமைதியான உலகத்தை நோக்கி எல்லாமும் திரும்ப ஆரம்பிக்கும். மனிதர்களை பைத்தியச் சூழ்நிலைக்குள் ஆழ்த்தும், காதுகளைக் கிழிக்கும் ஆரவாரமும் தூசியும் இல்லாமற் போகும். நகரத்தில், கடலில், ஆகாயத்தில் காற்று சுத்தமானதாகவும் சுகமானதாகவும் மாறும்.
சரியாகப் பன்னிரண்டு முறை மணியடித்தன. வெண்கல மணியின் கடைசி நடுக்கம் நின்றவுடன் கடின உழைப்பின் கொடூர இசையின் கடுமை குறைந்தது. ஒரு நிமிடம் கழிந்ததும் அது திருப்தியற்ற தன்மையின் முணுமுணுப்பாக மாறியது. மனிதர்களின், கடலலைகளின் சத்தம் இப்போது மிகவும் தெளிவாகக் கேட்டது. அது உணவு உட்கொள்ளும் நேரம்.
சுமை தூக்கும் தொழிலாளர்கள் தங்களின் வேலையை நிறுத்தினார்கள். சத்த ஆரவாரங்களின் சிறுபகுதியாகப் பிரிந்த அவர்கள் உணவை வாங்கிய பிறகு, நிழல் இருக்கும் இடங்களைத் தேடிப்போய் உணவு உட்கொள்ள ஆரம்பித்தபோது, க்ரீஷ்கா செல்க்காஷ் அங்கு தோன்றினான். துறைமுகத்திலிருக்கும் எல்லா உயிர்களுக்கும் அவனைத் தெரியும். எல்லாராலும் அங்கீகரிக்கப்பட்ட மது அருந்தும் மனிதன்; தைரியசாலியும் புத்திசாலியுமான திருடன். அவனிடம் காலணிகள் இல்லை. தலையை மறைக்க தொப்பியுமில்லை. ஆங்காங்கே கிழிந்திருக்கும் முரட்டுத்தனமான ட்ரவுசர், தவிட்டு நிறத்தில் இருக்கும் தோலும், எலும்பு துருத்திக் கொண்டிருக்கும் நெஞ்சும் வெளியே காண்பது மாதிரி முன்பக்கம் திறந்த தோலால் ஆன சட்டை- இவைதான் அவனுடைய தோற்றம். ஜடை பிடித்து கரும் சாம்பல் நிறத்தில் இருக்கும் முடியும், கழுகைப் போன்ற கூர்மையான முகமும், சோர்வான பார்வையும் அவன் இப்போதுதான் தூக்கம் கலைந்து எழுந்திருக்கிறான் என்பதைத் தெளிவாகக் காட்டின. ஒரு வைக்கோல் புல் அவனுடைய இடதுபக்கக் கன்னத்திலிருந்த சிறு ரோமங்களுக்கு நடுவில் ஒட்டிக் கொண்டிருந்தது. காதுக்கு நடுவில் அவன் ஒரு ஈர்க்குச்சியைச் செருகி வைத்திருந்தான். இப்படியும் அப்படியுமாக ஆடி அசைந்தவாறு, சிறிது முன்னோக்கி வளைந்து கற்கள் பதித்த பாதை வழியாக மெதுவாக நடப்பதற்கு மத்தியில் யாரையோ தேடுவதைப்போல அவன் துறைமுகம் முழுவதும் கண்களால் அலசினான். அவனுடைய கறுத்து நீண்ட மீசை ரோமங்கள் ஒரு பூனையன் முடிகளைப் போல எழுந்து நின்றிருந்தன.
கைகளைப் பின்னால் வைத்துக் கொண்டு தேய்த்துக் கொண்டிருந்த அவன் தன்னுடைய வளைந்த கை விரல்களை ஒன்றோடொன்று கோத்து இழுத்துக் கொண்டிருந்தான். அங்கு நிறைய முரட்டுத்தனமான ஆட்கள் இருந்தாலும் மெலிந்துபோன உடம்பையும், கழுகின் முகத்தையும், ஏதோ இலக்கு வைத்துள்ள நடையையும் கொண்டிருந்த அவனை எல்லாரும் உற்றுப் பார்த்தார்கள்.
நிலக்கரிக் கூடைகள் அடுக்கப்பட்டிருந்த இடத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளிகளை நெருங்கியபோது, பருக்கள் நிறைந்த சொரசொரப்பான முகத்தையும், சமீபத்தில் நடந்த சண்டையின் சுவடுகள் பதிந்திருந்த கழுத்தையும், பருமனான தேகத்தையும் கொண்டிருந்த ஒரு சுமை தூக்கும் தொழிலாளி செல்க்காஷைப் பார்த்து எழுந்து வந்தான். அவனுடன் நடந்து கொண்டே சுமை தூக்கும் தொழிலாளி மெதுவான குரலில் சொன்னான்: "ரெண்டு கட்டு துணி காணாமல் போயிட்டதா கப்பல் துறையில இருக்குற காவலாளிகள் கண்டுபிடிச்சிருக்காங்க. அவங்க தேடிக்கிட்டு இருக்காங்க."
"அதுனால என்ன?" அமைதியாக அவனை உற்றுப் பார்த்தவாறு செல்க்காஷ் கேட்டான்.
"அதுனால என்னன்னா கேக்குற? நீ என்ன நினைச்சே? அவங்க உன்னைத் தேடிக்கிட்டு இருக்காங்க. அதைத்தான் நான் உன்கிட்ட சொன்னேன்."
"அவங்ககூட நானும் தேடுறதுக்காக போவேன்னு நீ நினைச்சியா?"
செல்க்காஷ் புன்னகைத்தவாறு பண்டக சாலையைப் பார்த்தான்.
"நீ போய்த் தொலைடா."
அந்தச் சுமை தூக்கும் தொழிலாளி திரும்பி நடந்தான். "டேய், கொஞ்சம் நில்லு. உனக்கு யார்டா இந்த அழகான அடையாளங்களைத் தந்தது? உன் தலைக்குக் கீழே இப்படியொரு விஷயம் நடந்ததை நினைச்சா மனசுக்குக் கஷ்டமாத்தான் இருக்கு. சரி... அது இருக்கட்டும். நீ மிஷ்காவைப் பார்த்தியா?"
"அவனை நான் பார்த்து நிறைய நாட்கள் ஆயிடுச்சு..." - சுமை தூக்கும் தொழிலாளர்கள் இருக்கும் இடத்தை நோக்கி நடந்து கொண்டே அந்த ஆள் சொன்னான்.
செல்க்காஷைப் பார்த்தவர்கள் ஒவ்வொருவரும் அவனிடம் குசலம் விசாரித்தார்கள். ஆனால், எப்போதும் மிகவும் உற்சாகமாக இருக்கும் அவன் இன்று சிறிது கவலையில் இருப்பதைப் போல் தோன்றியது. அவனுடைய பதில்கள் மிகவும் சாதாரணமாக இருந்தன.
மலையெனக் குவிக்கப்பட்டிருந்த பொருட்களுக்குப் பின்னால் ஒரு கஸ்டம்ஸ் காவலாளி தெரிந்தான். அடர்த்தியான பச்சை நிறத்தில் சீருடை அணிந்திருந்த அந்தக் காவலாளி தைரியமாக செல்க்காஷுக்கு முன்னால் வந்து நின்றான். அவனுடைய இடது கை கத்தியின் கைப்பிடியைப் பிடித்துக் கொண்டிருக்க வலது கை செல்க்காஷின் கழுத்தை நோக்கி நீண்டது.
"நில்லுடா... நீ எங்கே போற?"
செல்க்காஷ் ஒரு அடி பின்னால் வைத்தான். காவலாளியின் சிவந்து துடித்துக் கொண்டிருக்கும் முகத்தைப் பார்த்து மிகவும் அமைதியாக அவன் புன்னகைத்தான்.
முகத்தில் அமைதி தெரிந்தாலும் சிறிது பயம் இருப்பதைப் போல் காட்டிக் கொள்ள நினைத்தான் செல்க்காஷ். அவனுடைய கன்னங்கள் வீங்கின. சிவந்தன. புருவங்கள் சுருங்கின. கண்கள் விரிந்தன. மொத்தத்தில் அவன் ஒரு முழு கோமாளியாக மாறினான்.
"இந்தத் துறைமுகம் பக்கமே உன் முகம் தெரியக் கூடாதுன்னு நான் பல தடவைகள் சொல்லிட்டேன். அதைக் கேட்காம திரிஞ்சா, நான் உன் இடுப்பெலும்பை ஒடிக்கிறதைத் தவிர வேறவழி இல்ல. இந்த விஷயம் நல்லா தெரிஞ்சும் நீ திரும்பவும் இந்தப் பக்கம் வந்திருக்கே... அப்படித்தானேடா?"- காவலாளி உரத்த குரலில் கத்தினான்.
"நல்லா இருக்கீங்களா ஸெமியோனிச்? உங்களைப் பார்த்து எவ்வளவு நாட்களாச்சு?"- தன் வலது கையை முன்னால் நீட்டியவாறு செல்க்காஷ் அலட்சியமான குரலில் சொன்னான்.
"இனி ஒரு ஐம்பது வருடங்களுக்கு உன்னை நான் பார்க்கலைன்னாகூட, அதுக்காக நான் அழ மாட்டேன். போ... சீக்கிரமா இந்த இடத்தை விட்டுப் போ!"
ஆனால், அவன் நீட்டிய கையைக் காவலாளி பிடித்துக் குலுக்கினான்.
"நான் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன்" உருக்கைப் போன்ற விரல்களால் நட்பை வெளிப்படுத்தும் விதத்தில் காவலாளியின் கையைப் பிடித்துக் குலுக்கியவாறு செல்க்காஷ் கேட்டான்.
"மிஷ்காவை எங்கேயாவது பார்த்தீங்களா?"
"எந்த மிஷ்கா? எந்த ஒரு மிஷ்காவையும் எனக்குத் தெரியாது. இடத்தைப் பாழ் பண்ணாதே, மனிதா. நீ தேவையில்லாம எதையாவது பேசிக்கிட்டு நிக்காதே. கப்பல் துறை காவலாளிகள் உன்னைப் பிடிச்சு உள்ளே போட்டுடுவாங்க."
"காஸ்ட்ரோமோவில் என்கூட வேலை செய்த அந்தச் சிவப்பு தலைமுடியைக் கொண்ட மிஷ்கா..." செல்க்காஷ் அப்போதும் விடுவதாக இல்லை.
"உன்கூட சேர்ந்து திருடின ஆளைப் பற்றித்தானே நீ விசாரிக்கிறே? அவன் மருத்துவமனையில இருக்கான். இரும்புக் கம்பியால அடி வாங்கிக் காலொடிஞ்சு படுத்த படுக்கையா கிடக்குறான். நீ இப்போபோறியா இல்லியா? நான் கழுத்தைப் பிடிச்சு தள்ளுறதுக்கு முன்னாடி இங்கேயிருந்து போறது உனக்கு நல்லது."
"இதென்ன கூத்து? மிஷ்காவைத் தெரியவேதெரியாதுன்னுல்ல முதல்ல நீங்க சொன்னீங்க. ஸெமியோனிச், உங்களுக்கு என்ன ஆச்சு?"
"உன்கிட்டத்தான் நான் சொன்னேன். அதிகமா பேசிக்கிட்டு இருக்காதே. சீக்கிரமா இடத்தை காலி பண்ணு."
காவலாளிக்குக் கோபம் வந்தது. அவன் சுற்றிலும் பார்த்தான். தன்னுடைய கைகளை விடுவிக்க அந்த ஆள் முயற்சி செய்தாலும், அடர்த்தியான புருவங்களுக்கு இடையிலிருந்த கண்களால் சாந்தமாக அவனைப் பார்த்துக் கொண்டிருந்த செல்க்காஷ் அந்தக் கைகளை இறுகப் பிடித்திருந்தான். "என்ன இவ்வளவு அவசரம்? நாம கொஞ்சம் பேசினபிறகு, போனால் போதாதா? என்ன விசேஷங்கள்? மனைவியும் பிள்ளைகளும் என்ன சொல்றாங்க? சுகமா இருக்காங்களா?"
செல்க்காஷின் கண்கள் பிரகாசித்தன. கேலிச் சிரிப்பின் பகுதியாக அவனுடைய பற்கள் பளிச்சென்று இருந்தன. அவன் தொடர்ந்து சொன்னான்: "கொஞ்ச நாட்களாகவே உங்களை நான் பார்க்கணும்னு விருப்பப்பட்டேன். ஆனா, அதற்கு நேரம்தான் கிடைக்கல. இந்தத் துறைமுகத்துல..."
"பேசக் கூடாதுன்னு உன்கிட்டதானே நான் சொன்னேன்? டேய், எலும்பு... மந்த புத்திப் பயலே... உன் தமாஷ் வேலைகளெல்லாம் என்கிட்ட வேண்டாம். நான் சொன்னது புரிஞ்சதுல்ல? வேற யாராவது ஆளோட வீட்டை உடைக்கிறதுக்கோ பிக் பாக்கெட் அடிக்கிறதுக்கோ திட்டம் போட்டு வச்சிருக்கியா?"
"ச்சே... நான் எதுக்கு அதையெல்லாம் செய்யணும்? நம்ம ரெண்டு பேரையும் ஒரு பிறவி முழுவதும் ஓய்வு ஒழிச்சல் இல்லாத ஆளுங்களா வச்சிருக்கிறதுக்கு இதை விட்டா வேற எத்தனையோ விஷயங்கள் இங்கே இருக்கு. உண்மையாகவே சொல்றேன், ஸெமியோனிச். ஆனா, நான் கேள்விப்பட்டது நீங்க ரெண்டு கட்டு துணியைக் களவாடிட்டீங்கன்னு... கவனமா இருந்துக்கங்க. இல்லாட்டி, தேவையில்லாத பிரச்சினைகள்ல நீங்க மாட்டிக்குவீங்க."
ஸெமியோனிச் கோபம் கொண்டு விரைத்து நின்றான். பேச முயற்சித்தபோது, அவனுடைய வாய்க்குள்ளிருந்து எச்சில் தெறித்தது. செல்க்காஷ் அவனுடைய கையை விட்டு அமைதியாக துறைமுகத்தின் நுழைவாயிலை நோக்கி நடந்தான். அவனைத் திட்டிக் கொண்டே காவலாளி முன்னோக்கி நடந்தான்.
செல்க்காஷ் இப்போது உற்சாகமாக இருந்தான். அவன் சீட்டியடித்தான். தன் கைகளை ட்ரவுசர் பாக்கெட்டிற்குள் விட்டுக் கொண்டு தன் நடையின் வேகத்தை அவன் குறைத்தான். இடது பக்கமும் வலது பக்கமும் பார்த்தவாறு தமாஷ்கள் கூறிக் கொண்டிருந்தான். காவலாளிக்கு அதே போக்கிலேயே பதிலும் கூறிவிட்டான்.
"க்ரிஷ்கா... அவங்களுக்கு உன்மேல எந்த அளவுக்கு விருப்பம்னு பார்த்தியா?" உணவு உட்கொண்ட பிறகு நிழலில் காலை நீட்டிப் படுத்து ஓய்வெடுத்துக் கொண்டிருந்த சுமை தூக்கும் தொழிலாளிகளில் ஒருவன் அழைத்துக் கேட்டான்.
"செருப்பு அணியாத கால்களால் நான் ஏதாவது ஆணியில் மிதிக்கிறேனான்னு ஸெமியோனிச் என்கிட்ட விசாரிச்சாரு..."- செல்க்காஷ் சொன்னான்.
அவன் கப்பல் துறையின் கேட்டை அடைந்தான். இரண்டு பேர் செல்க்காஷின் ஆடைகளைக் கைகளால் தடவிப் பார்த்துவிட்டு அவனை வெளியே தள்ளினார்கள். சாலையைக் குறுக்காகக் கடந்து மதுச்சாலையின் எதிர்ப்பக்கம் சாலையோரத்தில் இருந்த ஒரு கல்மீது போய் அவன் உட்கார்ந்தான். சரக்கு ஏற்றப்பட்ட நிறைய வண்டிகள் ஆரவாரம் உண்டாக்கியவாறு கேட்டைக் கடந்து சாலைக்கு வந்தன. அதே நேரத்தில் சில வெற்று வண்டிகள் கேட் வழியாக உள்ளே நுழைந்தன. வண்டியை ஓட்டுபவர்கள் தங்கள் இருக்கையில் உட்கார்ந்து கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார்கள். கப்பல் துறையிலிருந்து பெரிய ஒரு முழக்கம் கேட்டது. அதற்குப் பின்னால் கறுத்த புகை அந்தப் பகுதி முழுவதும் பரவிக் கொண்டிருந்தது.
பைத்தியம் பிடிக்கச் செய்யும் இந்த ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் அவனுடைய மனநிலை தவறாமல் இருந்தது. அன்று இரவு அவன் நல்ல ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். சிறிது உழைப்பும் அசாதாரணமான திறமையும் தேவைப்படுகிற ஒரு வாய்ப்பு அது. தன்னுடைய திறமையைப் பற்றி அவனுக்கு எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மறுநாள் காலையில் அந்த நோட்டுகளைச் செலவழிக்கும் காட்சி மனதில் தோன்றியவுடன் அவனுடைய கண்கள் ஒரு மாதிரி சுருங்கின. மிஷ்கா என்ற நண்பனைப் பற்றி நினைத்துப் பார்த்தான். இவனுக்கு மிகவும் தேவைப்படும் கட்டத்தில் அவன் காலை ஒடித்துக் கொண்டு படுத்திருக்கிறான். அன்றைய வேலையைத் தான் மட்டுமே செய்ய முடியுமா என்று அவன் சந்தேகப்பட்டான். அவன் மிஷ்காவை மனதிற்குள் திட்டிக் கொண்டிருந்தான். இனி இரவு நேரத்தில் தட்பவெப்ப நிலை எப்படி இருக்கும்? ஆகாயத்தைப் பார்த்துவிட்டு அவன் தெருவில் கண்களை ஓட்டினான்.
சுமார் ஐந்து அல்லது ஆறு கஜம் தூரத்தில் கைத்தறித் துணியால் ஆன ட்ரவுசரும் சட்டையும் அணிந்த ஒரு இளைஞன் உட்கார்ந்திருந்தான். மரத்தோலால் செய்யப்பட்ட செருப்பையும் தவிட்டு நிறத்திலிருந்த கிழிந்த தொப்பியையும் அவன் அணிந்திருந்தான். சிறிய ஒரு சுமையும் வைக்கோலால் சுற்றப்பட்டு சணலால் பத்திரமாகக் கட்டப்பட்ட கைப்பிடி இல்லாத ஒரு வளைந்த கத்தியும் அவனுக்கு அருகில் இருந்தன. அகலமான தோள்களையும் அழகான தலைமுடியையும் கொண்டிருந்த அவன் நல்ல உடற்கட்டுடன் இருந்தான். காற்றும் வெயிலும் பட்டு அவனுடைய முகம் கறுத்துப் போயிருந்தது. அவனுடைய நீலநிறக் கண்கள் நட்புணர்வுடன் செல்க்காஷை உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தன.
செல்க்காஷ தன் பற்களை வெளியில் காட்டியவாறு, நாக்கை வெளியே நீட்டி பயமுறுத்துகிற முகத்துடனும் வெறித்த கண்களுடனும் அவனைப் பார்த்தான்.
முதலில் பதைபதைத்துப் போன அந்த இளைஞன் பின்னர் குலுங்கிக் குலுங்கிச் சிரிக்க ஆரம்பித்தான். "ஒரு போக்கிரியின் நாடகத்தைப் பார்க்கணுமே." மேலும் கீழும் மூச்சு விட்டவாறு அவன் சொன்னான். அங்கிருந்து எழாமலே அவன் செல்க்காஷ் உட்கார்ந்திருந்த இடத்திற்கு நகர்ந்து நகர்ந்து வந்தான். அந்தத் தூசிக்கு மத்தியில் நகர்ந்து வரும்போது அவன் தன்னுடைய சுமையையும் வாளையும் தன்னுடன் மறக்காமல் எடுத்துக் கொண்டு வந்தான். வாளின் முனை கல்லில் உரசி கணகண என்று சத்தம் உண்டாக்கியது.
"நல்ல..." -செல்க்காஷின் ட்ரவுசரை மெல்ல இழுத்தபடி அவன் கேட்டான்.
"சரிதான்டா பையா... நீ சொன்னது சரிதான்" ஒரு புன்சிரிப்புடன் செல்க்காஷ் சொன்னான். குழந்தைத்தனமான கண்களைக் கொண்ட அமைதியான குணத்தைக் கொண்டவன் என்ற எண்ணத்தை உண்டாக்குகிற அந்த இளைஞன் மீது அவனுக்குத் திடீரென்று ஒரு நெருக்கம் தோன்றியது. "நீ என்ன விவசாயமா செய்யிற?" அவன் கேட்டான்.
"ஆமா... விவசாயம்தான். ஆனா, ஒரு சல்லிக்காசுகூட சம்பாதிக்க முடியல. காலம் ரொம்பவும் மோசமா இருக்கு. இந்த அளவுக்கு ஒரே நேரத்துல ஆட்கள் ஒன்று கூடி இருக்கிறதை இதுக்கு முன்னாடி நீங்க இங்கே பார்த்திருக்கவே முடியாது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்ட இடங்கள்ல இருந்து வந்து இங்கே குடியேறினவங்க இவங்க. இவ்வளவு குறைவான கூலிக்கு வேலை செய்து ஒரு பிரயோஜனமும் இல்ல. குபானில் அறுபது கொபெக் கூலியாக தர்றாங்க. நல்லா சிந்திச்சுப் பாருங்க. மூணோ அல்லது நாலோ ரூபிள்கள்தான் அங்கே வழக்கமா கூலியா இருந்திச்சுன்னு ஆட்களே சொல்றாங்க."
"என்ன வழக்கம்? ஒரு ரஷ்யாக்காரனைப் பார்க்குறதுக்கு மட்டுமே மூணு ரூபிள் கூலியாக கொடுக்கணும். பத்து வருடங்களுக்கு முன்னாடி நான் அப்படித்தான் வாழ்ந்தேன். ஒரு கோஸாக் கிராமத்தை அடைஞ்சப்போ நான் சொன்னேன், 'நண்பர்களே, நான் இதோ வந்துட்டேன். உண்மையான, கடவுள் நம்பிக்கை கொண்ட ஒரு ரஷ்யாக்காரன்'னு. அவங்க என்னைச் சுற்றி நடந்தாங்க. என்னைத் தொட்டுப் பார்த்தாங்க. கிள்ளிப் பார்த்தாங்க. குத்திப் பார்த்தாங்க. சுற்றி நடந்து 'ஹா ஹோ'ன்னு என்னென்னவோ சொல்லிட்டு அவங்க எனக்கு மூணு ரூபிள் தந்தாங்க. அது இல்லாம அவங்க எனக்குச் சாப்பிடவும் குடிக்கவும் தந்தாங்க. எவ்வளவு காலத்திற்கு வேணும்னாலும் நான் அங்கே இருக்கலாம்னும் சொன்னாங்க."
முதல்லி அந்தப் பையன் ஆச்சரியத்தாலும் பக்தியாலும் வாயைப் பிளந்தான். செல்க்காஷ் தன் கற்பனையைக் கலந்து கூறிய விஷயமது என்பது தெரிந்தவுடன் அவன் வாயை மூடிக் கொண்டான். பிறகு அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். மீசைக்குப் பின்னால், தன்னுடைய சிரிப்பை மறைத்துக் கொண்ட செல்க்காஷ் எதுவுமே தெரியாத மனிதனைப் போல உட்கார்ந்திருந்தான்.
"நீங்க உண்மையிலேயே ஒரு ஆச்சரியமான பிறவிதான். சொல்றது எல்லாம் உண்மைதான்றது மாதிரி நீங்க சொல்றீங்க. நான் வேணும்னா அதை ஏத்துக்குறேன். ஆனா, கடவுள் மேல சத்தியம் பண்ணி சொல்லுங்க- நீங்க சொல்றது உண்மையா?"
"நான் சொன்னது அதை இல்ல. அங்கே விஷயங்கள் அப்படி நடந்துச்சு..."
"உண்மையைச் சொல்லுங்க..."- கையை உயர்த்தியவாறு அந்த இளைஞன் கேட்டான்: "நீங்க யாரு? ஒரு செருப்பு தைப்பவர்? தையல்காரர்?"
"நானா?" சொல்லப் போகிற பதிலின் சுவாரசியத்தை ரசித்துக் கொண்டே அவன் சொன்னான்: "நான் ஒரு மீன் பிடிப்பவன்."
"மீன் பிடிப்பவரா? சரிதான்… நீங்க மீன் பிடிக்கிறது உண்டா?"
"எதற்கு மீனை மட்டும் பிடிக்கணும். இங்கேயிருக்கிற மீன் பிடிக்கிறவங்க மீனை மட்டும் பிடிக்கிறது இல்ல. செத்துப் போன பிணங்கள், பழைய நங்கூரங்கள், மூழ்கிப் போன படகுகள்... பெரும்பாலும் இந்தப் பொருட்கள்தான் அவங்களுக்குக் கிடைக்கும். அப்படிப்பட்ட பொருட்களுக்காக பிரத்யேகமா தயார் பண்ணின கொக்கிகள் இருக்கு..."
"என்ன, நீங்க திரும்பவும் பொய் சொல்றீங்களா? நீங்க பாட்டு பாடுற மீன் பிடிக்கற ஆளோன்னு எனக்குச் சந்தேகமாக இருக்கு. இதோ இந்த மாதிரியான பாட்டு...
திறந்த கதவுகள் உள்ள வீடுகளிலும்
கடைவீதியின் கடைகளிலும்
கடற்கரையிலும்
நாங்கள் வலை வீசுகிறோம்."
"அப்படிப்பட்ட ஒரு மீன் பிடிக்கிற ஆளை நீ இதுக்கு முன்னாடி பார்த்திருக்கியா?"- அந்த இளைஞனைப் பார்த்துச் சிரித்துக் கொண்டே செல்க்காஷ் கேட்டான்.
"இல்ல... ஆனா, நான் அவங்களைப் பற்றி கேள்விப்பட்டிருக்கேன்."
"சரி... அந்த வேலை பிடிச்சிருக்கா?"
"அவங்க வேலையா? பிறகு என்ன? குறைந்தபட்சம் அவங்களுக்கு எப்போதும் சுதந்திரம் இருக்கே! எல்லா விஷயங்களையும் அவங்க தங்களோட விருப்பப்படி செய்யலாமே!"
"சுதந்திரம்னு நீ எதைச் சொல்ற? உனக்கு அந்த விஷயத்துல ஆர்வம் இருக்கா?"
"நிச்சயம் ஆர்வம் இருக்கு. தனக்குத் தானே எஜமானனா இருப்பதை விட வேறென்ன உலகத்துல பெரிய விஷயம் இருக்கு? விருப்பப்படுற இடத்துக்குப் போகலாம். விருப்பப்படுறதைச் செய்யலாம். மிகவும் கவனமா இருக்கணும். கழுத்துல கயிறு விழாம பார்த்துக்கணும். அதைவிட்டா, கடவுளையும் மனசாட்சியையும் மட்டும் நினைச்சா போதும் அதற்கப்புறம் விருப்பப்படி நடக்கலாம்."
கூச்சத்துடன் காரித்துப்பியவாறு செல்க்காஷ் முகத்தைத் திருப்பிக் கொண்டான்.
"என் விஷயம் இதுதான்..."- அந்த இளைஞன் தொடர்ந்து சொன்னான்: "பெருசா எதையும் சம்பாதிச்ச வைக்காமலே என் அப்பா இறந்துட்டாரு. அம்மாவுக்கு வயசாயிடுச்சு. விவசாய நிலம் வறண்டு போச்சு. அதை வச்சு என்ன செய்ய முடியும்? நான் வாழணும். ஆனா எப்படி? அது கடவுளுக்கு மட்டும்தான் தெரியும். நல்ல ஒரு குடும்பத்துல இருந்து ஒரு திருமண ஆலோசனை வந்திருக்கு. பெண் வீட்டுக்காரர்கள் பெண்ணுக்கு அவளோட பங்கை தர்றதுல எனக்கு எந்த எதிர்ப்பும் இல்ல. ஆனா, அவங்க அதுக்குத் தயாரா இல்ல. அவளோட அப்பா ஒரு அங்குல நிலத்தைக்கூட அவளுக்காக விட்டுக் கொடுக்கத் தயாரா இல்ல. அதுனால கொஞ்ச நாட்களுக்கு நான் அவள் கூட சேர்ந்து வேலை செய்யணும். வருடக் கணக்குல. அங்கேதான் பிரச்சினையே வருது. என் கையில ஒரு நூற்றைம்பது ரூபிள்களாவது இருந்தா, அந்த ஆளுக்கு முன்னாடி நெஞ்சை நிமிர்த்தி நின்னு நான் கேள்வி கேட்கலாம். நீங்க மார்ஃபாவை எனக்குக் கல்யாணம் பண்ணித் தருவீங்களா? நீங்க அவளுக்குக் கொடுக்க வேண்டிய பங்கை அவளுக்கு உடனடியா தருவீங்களா? அப்படி இல்லைன்னா கடவுள் அருளாவது இந்தக் கிராமத்துல இவள் மட்டுமே பெண்ணா இல்ல. நான் சுதந்திரமானவன். என் விருப்பப்படி நான் நடக்க முடியும்." நீண்ட பெருமூச்சு விட்டவாறு இளைஞன் தொடர்ந்து சொன்னான். "அந்த ஆளோட மருமகனா மாறி அடிமைப் பணி செய்யிறதைத் தவிர, வேற எந்த வழியும் எனக்குத் தெரியல. குபானில் குறைந்தபட்சம் இருநூறு ரூபிள்களாவது சம்பாதிக்கலாம்னு நான் நினைச்சேன். அதை நான் பெருசா நம்பியிருந்தேன். நான் நினைச்சபடி நடித்திருந்தா, நான் ஒரு குறிப்பிடத்தகுந்த ஆளா ஆகியிருப்பேன். ஆனா, என்னால சம்பாதிக்க முடியல. சும்மா வேலை செய்ததுதான் மிச்சம். என் பூமியில என்னால ஒண்ணுமே செய்ய முடியல. அதுதான் பிரச்சினையே..."
இளைஞன் உணர்ச்சி வசப்பட்டான். செல்க்காஷுக்குக் கீழே வேலை செய்ய வேண்டுமென்ற விருப்பத்துடன் அவன் தலைகுனிந்து நின்றிருந்தான்.
"நீ எங்கேடா போற?"- செல்க்காஷ் கேட்டான்.
"என் வீட்டுக்கு... இல்லாட்டி வேற எங்கே போறது?"
"எனக்கு அது எப்படி தெரியும்? ஒருவேளை, நீ துர்க்கிக்குப் போறேன்னு நான் நினைச்சிருக்கலாமில்லையா?"
"துர்க்கிக்கா?" சிறிது பதைபதைப்பு உண்டாக அவன் கேட்டான். "எந்த உண்மையான கிறிஸ்துவனால் துர்க்கிக்குப் போக முடியும்? நீங்க என்ன பேசுறீங்க?"
"நீ ஒரு சரியான மடையன்..." என்று முணுமுணுத்தவாறு செல்க்காஷ் தன் முகத்தைத் திருப்பிக் கொண்டான். எனினும், அந்த இளைஞன் அவனுடைய மனதில் இனம்புரியாத ஒரு சலனத்தை உண்டாக்கி விட்டிருந்தான். கவலைப்படுகிற மாதிரி ஏதோவொன்று அவனுடைய மனதைப் போட்டு அலைக்கழித்துக் கொண்டிருந்தது. இரவில் தான் செய்ய நினைத்திருந்த செயலில் கவனம் செலுத்தியதிலிருந்து அவனை அந்த மன அலைக்கழிப்பு தடுமாற்றம் கொள்ளச் செய்தது.
செல்க்காஷின் வார்த்தைகளைக் கேட்டு மனம் புண்பட்ட அந்த இளைஞன் என்னவோ முணுமுணுத்தவாறு அவனை ஓரக்கண்ணால் பார்த்தான். யாரைப் பார்த்தோ பாவனை செய்வது மாதிரி அவன் தன் கன்னங்களை ஊதிப் பெரிதாக்கினான். உதடுகளைக் குவித்தான். சுருங்கிக் காணப்பட்ட கண்களை வேகமாகத் திறந்து மூடினான். கிருதா வைத்திருந்த கல் மனம் கொண்ட மனிதனுடன் நடத்திய உரையாடல் இவ்வளவு சீக்கிரமாகத் திருப்தியற்ற நிலையில் போய் முடியும் என்று அவன் சிறிதும் எதிர்பார்க்கவில்லை என்பது தெளிவு.
ஆனால், அந்த மனக்குறை அவனைச் சிறிதும் பாதிக்கவில்லை. அந்தக் கல்மீது உட்கார்ந்து கொண்டு ஏதோ ஒரு மன உலகத்தில் பயணம் செய்தவாறு அவன் சீட்டியடித்தான். அழுக்காக இருந்த பெருவிரலால் தரையில் வரைந்தவாறு நேரத்தைப் போக்கினான்.
அந்த மனிதனுடன் நெருங்க அந்த இளைஞன் உண்மையாகவே விரும்பினான்.
"என்ன, மீன் பிடிக்கும் மனிதரே. நீங்க அடிக்கடி கடலைத் தேடி போவீங்களா?"- இளைஞன் கேட்டான்.
மீன் பிடிக்கும் மனிதன் அவன் இருக்கும் பக்கம் திரும்பி வேகமான குரலில் கேட்டான். "டேய், பையா... இன்னைக்கு ராத்திரி நீ எனக்கு உதவுவியா? முடிவை சீக்கிரமா சொல்லணும்..."
"என்ன வேலை?"- இளைஞன் சந்தேகத்துடன் கேட்டான்.
"என்ன வேலைன்னா கேக்குற? நான் என்ன வேலை செய்யச் சொல்றேனோ, அந்த வேலை, நாம மீன் பிடிக்கப் போறோம். நீ துடுப்பு போடுற அவ்வளவுதான்."
"ஓ... அதைச் செய்யிறதுக்கு எனக்கு எந்தவொரு வருத்தமும் இல்ல. வேலை செய்றதுக்கு நான் கவலையே படல. ஆனா, நீங்க என்னை தேவையில்லாத பிரச்சினைகள்ல கொண்டு போய் விட்டுடக் கூடாது. அதுதான் நான் சொல்ல நினைக்கிறது. நீங்க உண்மையிலேயே பெரிய ஆளுதான். உங்க மனசைத் தெரிஞ்சிக்கிட்டவங்க யாரும் இல்ல..."
தன்னுடைய மனம் வெப்பத்தால் தகிப்பதைப் போல் செல்க்காஷ் உணர்ந்தான்.
"நாக்கை வச்சு நீ அதிகமா வெடி வைக்காதடா" கோபத்துடன் அவன் சொன்னான். "உன் தலையில ஒண்ணு கொடுத்தா, உன்னால எல்லா விஷயங்களையும் பார்க்க முடியும்". அவன் வேகமாக உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். அவனுடைய கண்கள் பிரகாசித்தன. இடது கையால் மீசையைத் தடவிக் கொண்டே வலது உள்ளங்கையை இறுக்கினான்.
அதைப் பார்த்து அந்த இளைஞனுக்கு பயம் வந்துவிட்டது. அவன் வேகமாக அமர்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்தான். பதைபதைப்பால் அவனுடைய முகம் மிகவும் வெளிறிப் போய் காணப்பட்டது. கண்களால் அவர்கள் இருவரும் ஒருவரையொருவர் அளந்து கொண்டார்கள்.
"என்னடா?"- செல்க்காஷ் அதிகாரக் குரலில் அவனிடம் கேட்டான். அந்தச் சிறு பையனின் கிண்டலான செயலைப் பார்த்து அவனுடைய மனம் மிகவும் கஷ்டப்பட்டது. ஆனால், அவன் அந்த இளைஞனை வெறுப்பதற்கான காரணம் வேறொன்று. அந்த இளைஞன் நீல நிறத்தில் கண்களைக் கொண்டிருந்தான். அவனுக்கு ஊர், வீடு எல்லாம் இருக்கின்றன. நல்ல ஒரு விவசாயியின் மருமகனாக வருவதற்கான வாயப்பு அவனுக்குக் கிடைத்திருக்கிறது. அதனால் அவனை செல்க்காஷ் வெறுத்தான். செல்க்காஷைப் பொறுத்தவரையில் அந்த இளைஞன் ஒரு சிறுவன். எனினும், செல்காஷ் விருப்பப்படாத அவனுக்குத் தேவைப்படாத அந்த சுதந்திரத்தை அந்த இளைஞன் விரும்புகிறான். அந்த இளைஞன் மீது அவனுக்கு மிகவும் வெறுப்பு தோன்றியதே அப்போதுதான். அவனுக்குக் கீழ் நிலையில் இருக்கும் ஒரு பையன் அவன் விருப்பப்படும், வெறுக்கும் விஷயங்களை வெறுக்கவும் விரும்பவும் செய்கிறான் என்பது தெரிந்ததும் அந்தப் பையனை செல்க்காஷ் வெறுக்க ஆரம்பித்து விட்டான். அந்தப் பையன் தனக்கு நிகரானவனா என்ற எண்ணம் மனதில் உண்டானதே காரணம்.
செல்க்காஷைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த இளைஞன் அவனிடம் ஒரு எஜமானனைக் கண்டான்.
"எனக்கு எந்த பிரச்னையுமில்ல..."- அவன் சொன்னான். "நான் ஒரு வேலையைத் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். உங்களுக்குக் கீழே வேலை செய்யிறதுக்கும் இன்னொரு ஆளுக்குக் கீழே வேலை செய்றதுக்குமிடையே எனக்கு என்ன வேறுபாடு இருக்கு? நான் இப்படி சொல்றதுக்கு வேற எந்த காரணமும் இல்ல. உங்களைப் பார்த்தா வேலை செய்த அனுபவங்கள் கொண்ட மனிதர் மாதிரி தெரியல. கிழிஞ்சு போன ஆடைகள் அணிஞ்சிருக்குறதைப் பற்றி சொல்லவே வேண்டாம். ஆனால், இவையெல்லாம் யாருக்கும் நடக்கக் கூடியவைதான்னு எனக்கு நல்லா தெரியும். கடவுளே, நான் எவ்வளவோ குடிகாரர்களைப் பார்த்திருக்கேன். அவர்களில் பலரும் உங்களை விட மோசமானவங்க..."
"சரி... சரி... அப்போ நீ வேலை செய்யத் தயாரா இருக்கேல்ல...?"
சிறிது மனதை சாந்தப்படுத்திக் கொண்டு செல்க்காஷ் கேட்டான்.
"ஆமா... சந்தோஷமா... சரி... கூலி எவ்வளவுன்னு சொல்லுங்க" இளைஞன் சொன்னான்.
"உன் வேலைக்கு ஏற்றபடி கூலி தர்றேன். நாம எவ்வளவு மீன் பிடிக்கிறோமோ, அதை அனுசரிச்சு உனக்கு கூலி. ஒருவேளை, உனக்கு ஐந்து ரூபிள்கள் கிடைக்கலாம்."
இப்போது பேச்சு பணத்தைப் பற்றி ஆகிவிட்டது. அந்த ஊர் சுற்றிப் பையன் எல்லா விஷயங்களிலும் முறைப்படி நடக்க வேண்டும் என்பதில் பிடிவாதமாக இருந்தான். அவனை வேலைக்கு எடுக்கும் ஆள் அதே மாதிரி எல்லா விஷயங்களிலும் சரியாக நடக்க வேண்டும் என்றும் அவன் விரும்பினான். அவனுக்கு இப்போதுகூட சில விஷயங்களில் சந்தேகங்கள் இருந்தன.
"அதனால எனக்கு ஒண்ணுமில்ல, சகோதரரே"- அந்த இளைஞன் தன்னுடைய எண்ணத்தைத் தெளிவுபடுத்தினான்.
"நாம அந்த விஷயத்தை இங்கே பேச வேண்டாம். அந்த மது அருந்துற இடத்துக்கு நாம போவோம்."
சாலை வழியே அவர்கள் சேர்ந்து நடந்தார்கள். ஒரு எஜமானின் அடையாளத்துடன் செல்க்காஷ் தன்னுடைய மீசையைக் கையால் நீவிவிட்டுக் கொண்டிருந்தான். நம்பிக்கையின்மையும் அச்சமும் இருந்தாலும் அந்த இளைஞன் அவனுடன் சேர்ந்து நடந்தான்.
"உன் பேர் என்ன?"- செல்க்காஷ் கேட்டான்.
"கவ்ரில்லா."
சிகரெட் புகை பரவி நின்றிருந்த சிறிய மது அருந்தும் இடத்தை அடைந்ததும் செல்க்காஷ் பணம் வாங்கும் இடத்தை நோக்கி நடந்தான். வாடிக்கையாளரைப் போல ஒரு புட்டி வோட்கா, முட்டைக்கோஸ் சூப், பொரித்த மாட்டு மாமிசம், தேநீர் ஆகியவற்றை அவன் ஆர்டர் செய்தான். அவன் அந்தப் பட்டியலை மீண்டுமொருமுறை கூறியவாறு அலட்சியமாக, "கணக்குல எழுதிக்கோ" என்று முணுமுணுத்தான். அதற்கு கவுண்டரில் நின்றிருந்த ஆள் அமைதியாக தலையை ஆட்டினான். அதைப் பார்த்ததும் கவ்ரில்லாவிற்கு தன்னுடைய தொழில் தாதாமீது மிகப்பெரிய மரியாதை உண்டானது. நைந்து போன ஆடைகளை அணிந்திருந்தாலும் அவனை ஆட்கள் பெரிதாக மதிக்கிறார்கள் என்று அவன் எடுத்துக் கொண்டான்.
"இங்கே உட்கார்ந்து எதையாவது சாப்பிட்டுக் கொண்டே பேசுவோம். நான் வர்றது வரை இங்கேயே இரு. நான் சீக்கிரம் வந்திடுவேன்."
செல்க்காஷ் வெளியே நடந்தான். கவ்ரில்லா அவனுக்காக காத்திருந்தான்.
ஒரு சுரங்க அறை போல இருந்தது அந்த மது அருந்தும் இடம். அதன் உட்பகுதி மிகவும் இருண்டு போனதாகவும் குளிர்ந்து போயும் இருந்தது. நீண்ட நாட்களாக இருந்து புளித்துப்போன வோட்காவின் நாற்றமும் சிகரெட் புகையும் வேறு ஏதோ தாங்க முடியாத நாற்றமும் அந்த இடத்தில் பரவி இருந்தது. உடலெங்கும் தாரும் நிலக்கரித் தூளும் படிந்திருந்த, மது அருந்தி சுய நினைவு இல்லாத, சிவப்பு நிற தாடியைக் கொண்ட ஒரு மாலுமி கவ்ரில்லாவிற்கு எதிர்பக்கமிருந்த மேஜைமீது மல்லாக்க விழுந்து கிடந்தான். ஏப்பம் விடுவதற்கு மத்தியில் பல வார்த்தைகளையும் வைத்து ஒரு பாட்டு பாட அந்த ஆள் முயற்சித்துக் கொண்டிருந்தான். ஒரு சீட்டியடித்தலுக்குப் பின்னால் அந்தப் பாட்டு தொண்டைக்குழியில் ஒரு முணுமுணுப்பாக மாறியது. உண்மையாக சொல்லப் போனால் அவன் ஒரு ரஷ்யாக்காரன் இல்லை. அவனுக்குப் பின்னால் இரண்டு மால்டோவியன் பெண்கள் உட்கார்ந்திருந்தார்கள். கறுப்பு தோலும், கறுப்பு முடியும், நைந்துபோன ஆடைகளும் உள்ளவர்களாக அவர்கள் இருந்தார்கள். அவர்களும் மது அருந்திய மனிதனின் பாட்டைப் பாட முயன்று கொண்டிருந்தார்கள்.
நிழல்களிலிருந்து மற்ற உருவங்களும் வெளியே வந்தன. சத்த ஆர்ப்பாட்டங்களுடன், பரபரப்பான மனநிலையுடன், நிலை குலைந்து, நிதானம் இழந்து...
கவ்ரில்லா பயந்து போய் விட்டான். தன்னுடைய எஜமானன் சீக்கிரமாக அங்கு வந்தால் நன்றாக இருக்கும் என்று அவன் நினைத்தான்- அந்த இருண்ட அறைக்குள்ளிருந்து தப்பிப்பதற்காக. உரத்த குரலில் முழங்கும் ஏராளமான நாக்குகளைக் கொண்ட ஒரு வினோத பிறவியின் சத்தத்தைப் போல, மதுச்சாலையின் சத்தங்களெல்லாம் ஒன்று சேர்ந்து ஒரே சத்தமாக மாறியது.
ஏதோ ஒருவித மயக்க நிலை தன்னை வந்து ஆக்கிரமிப்பதைப் போல் கவ்ரில்லா உணர்ந்தான். அவனுடைய தலை மெல்ல ஆட ஆரம்பித்தது. கண்கள் இருட்டிக் கொண்டு வந்தன. அச்சம் கலந்த ஒருவித ஆர்வத்துடன் அவன் மதுச் சாலைக்குள் நடந்தான்.
கடைசியில் செல்க்காஷ் திரும்பி வந்தான். அவர்கள் இருவரும் தின்னவும் குடிக்கவும் பேசவும் ஆரம்பித்தார்கள். மூன்றாவது டம்ளர் வோட்கா உள்ளே போனவுடன் கவ்ரில்லா மதம் பிடித்த நிலையில் இருந்தான். அவனுக்கு மிகவும் உற்சாகம் உண்டானது. தனக்கு அருமையான விருந்தை அளித்த அந்த மனிதனிடம் ஏதாவது கூற வேண்டும் போல் ஒரு ஆர்வம் அவனுக்கு உண்டானது. ஆனால், என்ன காரணத்தாலோ அவனுடைய தொண்டைக்குள்ளிருந்து வார்த்தைகள் நாவுக்கு வந்து சேரவில்லை. நாக்கு திடீரென்று கனமாகி விட்டது. அது தன் செயல்பாட்டை இழந்து விட்டது.
சிரித்துக் கொண்டே ஒருவித கனிவுடன் செல்க்காஷ் அவனைப் பார்த்தான்.
"உனக்கு தடுமாற்றம் வந்திருச்சாடா? டேய், பழைய துணி... அஞ்சு டம்ளர் வோட்கா அடிச்சதும் நீ இப்படி ஆயிட்டியா? இன்னைக்கு ராத்திரி நீ எப்படி வேலை செய்வே?"
"ஓ... என் நண்பரே"- கவ்ரில்லா கொஞ்சிக் குலாவினான். "பயப்பட வேண்டாம். எப்படி வேலை செய்யிறதுன்னு நான் காண்பிக்கிறேன். வாங்க... வந்து எனக்கு ஒரு முத்தம் தாங்க..."
"அதெல்லாம் சரிதான். இந்தா... இதையும் வாங்கிக்கோ."
சுற்றியிருந்த ஒவ்வொன்றும் ஒத்திசைவு கொண்ட அலைகளைப் போல தலைகீழாகி ஆடுவதைப் போல் தோன்றும் வரை கவ்ரில்லா மது அருந்துவதைத் தொடர்ந்தான். அது அவனிடம் ஒரு தள்ளாட்டத்தை உண்டாக்கியது. அவனுடைய முகத்தில் முட்டாள்தனம் கலந்த மிடுக்கு வந்து சேர்ந்திருந்தது. ஏதாவது கூற முயற்சிக்கும் போதெல்லாம் அவனுடைய உதடுகள் மற்றவர்களிடம் சிரிப்பு உண்டாக்கும் விதத்தில் மூடிக் கொண்டன. வினோதமான சத்தங்கள் அந்த உதடுகளின் வழியாக வெளியே வந்தன.
செல்க்காஷ் தன்னுடைய மீசையை நீவி விட்டுக் கொண்டே தீவிர சிந்தனையில் மூழ்கியிருந்தான். எதையோ நினைத்து சிரித்தான். அப்போது அவன் வேறு எதைப் பற்றியோ சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்பது தெரிந்தது.
மற்ற எல்லா விஷயங்களையும் போல மதுச்சாலை ஒரு மது அருந்தும் மனிதன் செயல்படுவதைப் போல உரத்த குரலில் சத்தம் போட்டு அழைத்துக் கொண்டிருந்தது. சிவந்த தாடிக்காரன் மேஜை மீது தன் கைகளை மடக்கி வைத்துக் கொண்டு அதன்மீது தலையைச் சாய்த்து வைத்து உறங்க ஆரம்பித்தான்.
"போறதுக்கான நேரமாயிடுச்சு"- செல்க்காஷ் எழுந்து நின்று கொண்டு சொன்னான்.
கவ்ரில்லா அவனைப் பின்பற்றி நடக்க முயன்றாலும் அவனால் நடக்க முடியவில்லை. சாதாரண குடிகாரர்கள் செய்வதைப் போல எதையோ நினைத்துக் கொண்டு ஒரு முட்டாளைப் போல அவன் சிரித்தான்.
"இப்படியொரு கேடு கெட்ட நிலைமையா?"- தரையில் உட்கார்ந்து கொண்டு செல்க்காஷ் முணுமுணுத்தான்.
கவ்ரில்லா தன்னுடைய எஜமானனைப் பார்த்து சிரித்தான். சொருகிப் போய் காணப்பட்ட கண்களால் அவன் செல்க்காஷைப் பார்த்தான். செல்க்காஷ் அவனை வெறித்துப் பார்த்தான். தனக்கு முன்னால் உட்கார்ந்திருக்கும் மனிதனின் விதி மிருகத்திற்கு இணையான தன்னுடைய கைகளில் இருக்கிறது என்பதை அவன் உணர்ந்தான். தன்னுடைய விருப்பம் போல அவனை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்று செல்க்காஷ் நினைத்தான். ஒரு சீட்டைக் கசக்குவதைப் போல அவனை தன்னுடைய உள்ளங்கையால் நசுக்கலாம். இல்லாவிட்டால் அவனை அவனுடைய பழைய தொழிலான விவசாய வேலைகளுக்கே திரும்பிப் போகும்படி செய்யலாம். செல்க்காஷ் அந்தப் பையனைப் பற்றி நினைத்து பொறாமைப்படவும், பரிதாபப்படவும் செய்தான். அவன் அந்தப் பையனை வெறுத்தான். ஒருவேளை வேறு யாருடைய கைகளிலாவது, தன்னைவிட மோசமாக இருக்கும் மனிதர்களின் கைகளில் போய் சிக்கியிருந்தால் அவனுடைய நிலைமை என்னவாகி இருக்கும் என்பதை நினைத்து அவன் கவலைப்பட்டான்.
கடைசியில் செல்க்காஷின் உணர்வுகளெல்லாம் பிள்ளைமீது ஒரு தந்தை கொண்டிருக்கும் பாசமாக சீர் செய்யப்பட்டு ஒரே நேர்கோட்டில் சஞ்சரிக்கும் ஒரே உணர்வாக மாறியது. அவனுக்கு அந்த இளைஞன்மீது ஒருவித கனிவு உண்டானது. செல்க்காஷூக்கு அவன் தேவையாக இருந்தான். அவன் அந்தப் பையனைத் தன்னுடைய கைகளால் தாங்கியவாறு, முழங்காலால் அவனைத் தள்ளியவாறு, மதுச்சாலையை விட்டு வெளியே அவனை நடக்க வைத்துக் கொண்டு சென்றான். அங்கு அடுக்கப்பட்டிருந்த மரத்துண்டுகளுக்கு அருகில் அவனைப் படுக்க வைத்துவிட்டு, அவனுக்கு அருகில் உட்கார்ந்து செல்க்காஷ் புகைபிடிக்க ஆரம்பித்தான்.
ஒன்றிரண்டு முறை தலையைத் தூக்க முயற்சித்த கவ்ரில்லா என்னவோ முணுமுணுத்துக் கொண்டே உறங்க ஆரம்பித்தான்.
"தயாரா?"- துடுப்புகளை நீரில் அடித்து ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்த கவ்ரில்லாவிடம் செல்க்காஷ் கேட்டான்.
"ஒரு நிமிடம்... துடுப்பு கொஞ்சம் சரியா இல்லாதது மாதிரி இருக்கு. இந்தத் துடுப்பால அடிச்சு அதை சரி பண்ணட்டுமா?"
"வேண்டாம்... ஒரு சத்தம்கூட இங்கே கேட்கக் கூடாது. நீ அதைக் கையால தள்ளி விட்டு சரி பண்ணு. அது சரியா ஓட்டையில போய் விழுந்துக்கும்..."
சந்தனத் தடிகளும் சைப்ரஸ் தடிகளும் ஏற்றப்பட்ட துருக்கியிலிருந்து வந்திருந்த ஃபெலுக்காவுடனும், தேக்கு மரங்கள் ஏற்றப்பட்ட இன்னொரு சரக்கு கப்பலின் முனையிலும் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த படகை அவிழ்க்கும் அமைதியான வேலையில் அவர்கள் ஈடுபட்டிருந்தார்கள்.
பொழுது 'கும்'மென்று இருட்டி விட்டிருந்தது. பிரிந்து பிரிந்து மேகங்கள் ஆகாயத்தில் சஞ்சரித்துக் கொண்டிருந்தன. கடல் மிகவும் அமைதியாகவும் கறுத்த எண்ணெய் போல அடர்த்தியாகவும் இருந்தது. ஈரமான, உப்புச்சுவை கொண்ட வாசனை கடலிலிருந்து கிளம்பி வந்தது. கடற்கரையிலும் கப்பலின் ஓரங்களிலும் அலைகள் மோதி ஓசை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அலைகளொடு சேர்ந்து செல்க்காஷன் படகும் ஆடியது. கரையிலிருந்து சற்று தூரத்தில் கப்பல்களின் இருண்ட நிழல் உருவங்களும், வண்ண விளக்குகள் எரிந்து கொண்டிருந்த பாய்மரக் கப்பல்களும் ஆகாயம் பின்புலமாக இருக்க, தெரிந்தன. கடல் நீரில் அந்த வண்ண விளக்குகள் தெரிந்தன. கறுப்பு வெல்வெட் துணியில் கண் சிமிட்டும் மஞ்சள் பொட்டுகளை போல அவை சிதறிக் கிடந்தன. சாயங்காலம் வரை கடினமாக வேலை செய்துவிட்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியைப் போல கடல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்தது.
"நாம போகலாம்"- துடுப்பை நீருக்குள் செலுத்தியவாறு கவ்ரில்லா சொன்னான்.
"போகலாம்"- சுக்கானைப் பிடித்துக் கொண்டு படகை ஃபெலுக்காக்களுக்கு நடுவில் நீரில் தள்ளிவிட்டவாறு செல்க்காஷ் சொன்னான். படகு நீர்ப்பரப்பில் படு வேகமாக ஓடிக்கொண்டிருந்தது.
துடுப்புகள் நீரில் விழுந்தபோது நீரின் மேற்பரப்பில் பிரகாசித்துக் கொண்டிருந்த நீல ஒளி சிதறியது. படகு நீரில் உண்டாக்கிய தடம் ஒளி சிதறிய நாடாவைப் போல காட்சி தந்தது.
"உன் தலை இப்போ எப்படி இருக்கு? வலி இருக்கா?"- செல்க்காஷ் அக்கறையுடன் கேட்டான்.
"வலி கடுமையாக இருக்கு. தலை ரொம்பவும் கனமா இருக்குற மாதிரி இருக்கு. முகத்தைக் கழுவணும்."
"அது எதுக்கு? உள்ளே நனை. அது உனக்கு உற்சாகத்தைத் தரும்"- ஒரு புட்டியை எடுத்து நீட்டியவாறு செல்க்காஷ் சொன்னான்.
"அடடா... கடவுளுக்கு நன்றி சொல்லணும்."
தொண்டைக்குழிக்குள் ஏதோ கீழ் நோக்கி இறங்கும் சத்தம்...
"ஏய்... அது போதும்"- செல்க்காஷ் இடையில் புகுந்தான்.
பரவிக் கிடந்த நீரைப் பிளந்து பாதை உண்டாக்கியவாறு அமைதியாக அந்தப் படகு முன்னோக்கி நீந்தியது. வெகு வேகமாக படகு கடலில் போய்க் கொண்டிருந்தது. முடிவுகள் இல்லாத அந்த நீர் அடர்த்தியான நீல நிறத்தில் இருந்த வான விளிம்பு வரை நீண்டு பரந்து கிடந்தது. வானத்தின் விளிம்பில் மேகங்கள் திரண்டு நின்றிருந்தன.
"கடல் எவ்வளவு அழகா இருக்கு"- செல்க்காஷ் சொன்னான்.
"எனக்கும் அப்படித்தான் தோணுது. ஆனா, அது என்னை பயமுறுத்துது"- துடுப்புகளை நீருக்குள் நுழைத்து வேகமாக துளாவியவாறு கவ்ரில்லா சொன்னான். ஒவ்வொரு முறையும் துடுப்பு நீருக்குள் நுழையும் போதெல்லாம் நீரில் சிறு சிறு வளையங்கள் உண்டாயின. அவை நீல நிற பிரகாசத்தில் ஒளிர்ந்தன.
"பயப்பட வேண்டாம். நீ ஒரு சரியான பயந்தாங்கொள்ளி"- செல்க்காஷ் சொன்னான்.
செல்க்காஷ்- அந்தத் திருடன் கடலைத் காதலித்தான். யாருக்கும் அடங்காத பரபரப்பு நிறைந்த அவனுடைய குணம் கடலின் புதிய வெளிப்பாட்டிற்காக எல்லா நேரங்களிலும் ஏங்கிக் கொண்டிருந்தது. கடலின் இருண்ட முடிவற்ற திசையை எவ்வளவு நேரம் பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாலும் அவனுக்குப் போதும் என்றே தோன்றாது. அவன் மிகவும் நேசிக்கும் கடலைப் பற்றி அந்தப் பையன் சொன்ன பதில் அவனுக்குக் கோபத்தை உண்டாக்கியது. படகின் ஓரத்தில் உட்கார்ந்து கொண்டு துடுப்பால் நீரைப் பிளந்து முன்னோக்கி போய்க் கொண்டிருந்தபோது, அந்த மெதுமெதுவென்றிருக்கும் நீர்ப்பரப்பு வழியாக போதும் என்று தோன்றும் வரை முன்னோக்கி போய்க் கொண்டேயிருந்தால் எப்படி இருக்கும் என்ற பேராவல் அவனுடைய மனதை அப்போது ஆக்கிரமித்திருந்தது.
கடல் பரப்பை அடையும்போதெல்லாம் உற்சாகமும் விசாலமான ஒரு புத்துணர்வும் அவனை வந்து சூழ்ந்து கொள்கின்றன. அந்த நாளின் வாழ்க்கையின் பிரச்சினைகளை ஒரு மூலையில் தூக்கியெறிந்துவிட்டு கடல் என்ற உணர்வு அவனுடைய மனம் முழுக்க நிறைந்திருக்கும். அவனுக்கு கடல்மீது அப்படியொரு பிரியம். கடல் அலைகளுக்கு மத்தியிலும், கடலின் திறந்த வெளியிலும் அவன் மேலும் நல்ல மனிதனாக மாறினான். வாழ்க்கையைப் பற்றிய சிந்தனைகளுக்கு அங்கு குறிப்பிட்டுக் கூறும்படி இடமில்லை. அங்கு வாழ்க்கைக்கு அதன் விலை நஷ்டமாகிறது. இரவு நேரத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் கடலலைகளின் பெருமூச்சு அந்த நீர்ப்பரப்பின்மீது படுகிறது. அந்த சத்தம் மனித இதயங்களில் ஒரு வித அமைதி நிலையை உண்டாக்குகிறது. தேவையில்லாத விஷயங்களை விரட்டியடித்து அது மகத்தான கனவுகள் உண்டாக உதவுகிறது.
"மீன் பிடிக்கிற தூண்டில் எங்கே?"
படகைச் சுற்றித் தன் கண்களை ஓட்டிய கவ்ரில்லா திடீரென்று கேட்டான்.
அதைக் கேட்டு செல்க்காஷ் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.
"தூண்டில்... ம்... அது... படகின் ஓரத்துல இருக்கும்."
அந்த கள்ளங்கபடமில்லாத இளைஞனிடம் பொய் கூறுவதற்கு அவனுக்குச் சிறிதும் விருப்பமில்லை. மன அமைதி கெடும் வகையில் தன்னுடைய சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் தொந்தரவு உண்டாவது குறித்து அவன் கவலைப்பட்டான். அது அவனை கோபப்படச் செய்தது.
அதனால் அவனுடைய மனதில் ஒருவித எரிச்சல் உண்டானது. கடுமையான குரலில் செல்க்காஷ் கவ்ரில்லாவிடம் சொன்னான். "இங்க பாரு... அங்கே உட்கார்ந்து நீ உன்னோட வேலையை மட்டும் பார்த்தா போதும். படகைச் செலுத்துற வேலையைத்தான் உனக்கு நான் கொடுத்திருக்கேன். நீ துடுப்பு போட்டா மட்டும் போதும். இதற்கு மேலும் ஏதாவது பேசணும்னு நினைச்சா, உன் விஷயம் பிரச்சினைக்கு உரியதா ஆயிடும். புரியுதா?"
ஒரு சிறிய குலுக்கலுடன் படகு நின்றது. துடுப்பால் மெதுவாக துழாவியவாறு எதுவும் பேசாமல் கவ்ரில்லா உட்கார்ந்திருந்தான்.
"துடுப்பைப் போடுடா."
பயமுறுத்தக் கூடிய அந்தச் சத்தம் அந்த சூழ்நிலையையே நடுங்கச் செய்தது. பயந்து விட்டதைப் போல கவ்ரில்லா துடுப்புகளை வேகமாக போட்டு படகைச் செலுத்த முயற்சி செய்தான். துடுப்புகள் நீரில் 'ப்லா ப்லா' என்றொரு சத்தத்தை உண்டாக்கியது.
"ஸ்டெடி..."
துடுப்பு போடுவதை நிறுத்தாமல் உடம்பை நேராக வைத்துக் கொண்டு கவ்ரில்லாவின் வெளிறிப் போன முகத்தை தன்னுடைய கோபம் நிழலாடிக் கொண்டிருக்கும் கண்களால் பார்த்தவாறு முன்னோக்கி குனிந்து கொண்டு நின்றிருக்கும் செல்க்காஷைப் பார்க்கும்போது, கீழே குதிப்பதற்கு... தயாராக நின்றிருக்கும் ஒரு பூனை தான் ஞாபகத்தில் வரும். அவன் பற்களை 'நற நற'வென்று கடித்து சத்தம் உண்டாக்குவதற்கு மத்தியில் கவ்ரில்லாவின் பற்கள் ஒன்றோடொன்று அடித்துக் கொள்ளும் சத்தமும் கேட்டது.
"யார்டா சத்தம் உண்டாக்குறது?" - கடற்பரப்பிலிருந்து ஒரு முரட்டுத்தனமான குரல் உயர்ந்து ஒலித்தது.
"டேய் அப்பன் இல்லாதவனே... வேகமாக துடுப்பைப் போடு. நான் இன்னைக்கு உன்னை கொல்லப் போறேன். டேய்... நாசமாப் போன பிச்சைக்கார நாயே... வேகமா போடா. நான்தான் சொல்றேன்... நீ இனிமேல் சத்தம் கித்தம் ஏதாவது போட்டேன்னு வச்சுக்கோ, அதுக்குப் பிறகு உன்னைத் துண்டு துண்டா வெட்டிப் போட்டுட்டுத்தான் மறுவேலை..."- செல்க்காஷ் கோபத்துடன் கத்தினான்.
"கன்னி மாதாவே, மன்னிக்கணும்"- கவ்ரில்லா மெதுவான குரலில் சொன்னான். பயத்தாலும், மனக் குழப்பத்தாலும் அவன் நடுங்கினான்.
நீண்ட தூரம் கடலில் பயணம் செய்த பிறகு, கப்பல்களில் விளக்குகள் ஒளி சிந்திக் கொண்டிருக்கும் துறைமுகத்தை நோக்கி அந்தப் படகு நீந்தியது. கப்பல்களின் பாய்மரங்கள், தெரியும் அளவிற்கு உயரத்தில் இருந்தன.
"ஏய்... யார்டா சத்தம் உண்டாக்குறது?"- அந்தக் குரல் மீண்டும் ஒலித்தது.
ஆனால், இப்போது அந்தக் குரல் வந்தது சற்று தூரத்திலிருந்து செல்க்காஷ் ஒரு ஓரத்தில் போய் உட்கார்ந்திருந்தான்.
"நீதான்யா சத்தம் உண்டாக்குற?"- அந்தக் குரலுக்கு பதில் கூறுவதைப் போல உரத்த குரலில் சொன்னான் செல்க்காஷ். அவன் மெதுவான குரலில் பிரார்த்தனை வார்த்தைகளைக் கூறிக் கொண்டிருந்த கவ்ரில்லா பக்கம் திரும்பினான்.
"டேய், பையா... இந்த முறை அதிர்ஷ்டம் உன் பக்கம் இருந்திச்சு. அந்த சைத்தான்மார்கள் நம்மைப் பின் தொடர்ந்திருந்தா, எல்லாம் முடிஞ்சிருக்கும். அப்படி நடந்திருந்தா, நான் முதல்ல என்ன செஞ்சிருப்பேன் தெரியுமா? உன்னை சுறா மீன்களுக்கு இரையா போட்டிருப்பேன்."
செல்க்காஷ் சாந்தமான மனிதனாகவும் தமாஷாகப் பேசக் கூடியவனாகவும் மாறி விட்டான் என்பது தெரிந்ததும் பயந்து போய் நடுங்கிக் கொண்டிருந்த கவ்ரில்லா அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான். "நான் போகட்டுமா? இயேசுவை மனசுல நினைச்சுக்கிட்டு என்னை விட்டுடுங்க. நான் வேற எங்கயாவது போய்க்கிறேன். நான் சரியா வலையில மாட்டிக்கிட்டேன். கடவுளை நினைச்சு என்னை போக விடுங்க. என்கிட்ட இருந்து நீங்க என்ன எதிர்பார்க்குறீங்க? எனக்கு இந்த வேலையைச் செய்ய முடியாது. இப்படிப்பட்ட வியாபாரத்துக்கெல்லாம் எனக்கு பழக்கமில்ல. முதல் தடவையா இந்த வேலையை நான் செய்யிறேன். கடவுளே... நான் வீணாப் போயிட்டேன். நீங்க என்னை எப்படி கைக்குள்ள போட்டீங்க? இது பாவம்... நீங்க இதுக்காக அதிக விலை கொடுக்க வேண்டியது இருக்கும்... அடடா... என்ன வியாபாரம்."
"வியாபாரம்?"- செல்க்காஷ் அதிகார தொனியில் கேட்டான். "என்ன வியாபாரம்?"
அந்த இளைஞனின் பயத்தைப் பார்த்ததும் செல்க்காஷூக்கு உற்சாகம் வந்தது. அதைப் பார்ப்பதில் அவனுக்கு அப்படியொரு சுவாரசியம். தான் எந்த அளவிற்கு ஒரு கொடூர உயிரினமாக இருக்கிறோம் என்பதை நினைத்துப் பார்த்தபோதும் அவனுக்கு ஒரு சுவாரசியம் இருக்கவே செய்தது.
"இது ரொம்பவும் மோசமான வியாபாரம், சகோதரரே! கடவுள் மேல வச்சிருக்கிற அன்புக்காகவாவது என்னை தனியா விட்டுடுங்க. என்னை வச்சு நீங்க என்ன செய்யப் போறீங்க? சகோதரரே, நீங்க ஒரு நல்ல மனிதரே இல்ல..."
"நாவை அடக்குடா! எனக்கு நீ தேவையில்லாம இருந்திருந்தா, உன்னை நான் இங்கே கொண்டு வந்திருக்கவே மாட்டேன், புரியுதா? இனிமேல் பேசாம இரு..."
"என் கடவுளே!"- கவ்ரில்லா முணுமுணுத்தான்.
"ச்சீ... பேசாம இருடா"- செல்க்காஷ கட்டளையிட்டான்.
ஆனால், கவ்ரில்லாவால் கட்டுப்பாடாக இருக்க முடியவில்லை. அவன் மெதுவாக தேம்பி அழுதான். இறுமினான். மூக்கைச் சிந்தினான். நெளிந்தான். எனினும், ஒருவித விரக்தி ஆட்கொள்ள அவன் படகைச் செலுத்தினான். ஒரு அம்பைப் போல படகு முன்னோக்கி பாய்ந்து போய்க் கொண்டிருந்தது. கப்பல்களின் இருண்ட வடிவங்கள் மீண்டும் தங்களைச் சூழ்வதை அவர்கள் பார்த்தார்கள். கப்பல்களுக்கு நடுவிலிருந்த சிறிய இடைவெளியிலிருந்த நீர்ப்பரப்பு வழியாக மெதுவாக ஓடிய படகு அந்தக் கப்பல்களுக்கு மத்தியில் காணாமற் போனது.
"கேட்டியாடா? ஏதாவது கேட்ணும்னு தோணுறப்போ, வாயை மூடிக்கிட்டு இருக்கணும். உனக்கு உயிர் திரும்ப வேணும்னா... புரியுதாடா?"
"கடவுளே..."- கவ்ரில்லா உரத்தக் குரலில் அழுதான்: "நான் அவ்வளவுதான்."
"வாயை மூடுடா..." செல்க்காஷ் கத்தினான்.
செல்க்காஷின் கோபம் கவ்ரில்லாவிடம் எஞ்சியிருந்த மன அமைதியைக் கெடுத்தது. அச்சத்துக்கு முன்னோடியாக இருக்கும் குளிர் அவனை இறுகச் செய்தது. துடுப்புகளை நீருக்குள் செலுத்தி தியானத்தில் ஈடுபட்டிருப்பதைப் போல அவன் எந்தவிதமான சலனமும் இல்லாமலிருந்தான். அந்தத் துடுப்புகளை எடுக்க முயற்சித்தபோது அவன் பின்னோக்கி சாய்ந்தான். அவனுடைய பார்வை தன்னுடைய காலில் அணிந்திருந்த மரத்தோலால் ஆன செருப்புகள் மீது பதிந்தது.
அலைகளின் தூக்கக் கலக்கம் கொண்ட ஆனந்த நடனம் மகிழ்ச்சியுற்றதாகவும் பயமுறுத்தக்கூடியதாகவும் இருந்தது. அவர்கள் இப்போது கப்பல்களின் துறையை அடைத்துவிட்டிருந்தார்கள். கருங்கல் சுவருக்கு அப்பாலிருந்து ஆட்கள் பாட்டுப்பாடும், சீட்டியடிக்கும், நீரில் ஏதோ விழும் சத்தங்கள் கேட்டன.
"நிறுத்து..."- செல்க்காஷ் கட்டளையிட்டான். "துடுப்பைக் கீழே போட்டுட்டு சுவர்ல கையை ஊணிக்கிட்டு தள்ளு... ம்... நாசம் பிடித்த பையா..."
வழவழப்பாக இருந்த சுவர்மீது கையை ஊன்றிக்கொண்டு கவ்ரில்லா படகை நகர்த்திக் கொண்டிருந்தான். சிறிதும் சந்தேகம் இல்லாமல் படகு முன்னோக்கி நகர்ந்தது. சுவரில் சேறு படிந்திருந்ததால் படகு அதன்மீது உரசிய பிறகும், எந்தவொரு சத்தமும் உண்டாகவில்லை.
"நிறுத்து... அந்தத் துடுப்பை இங்கே தா. நான் போடுகிறேன். உன் பாஸ்போர்ட் எங்கே? அந்த மூட்டையில் இருக்கா? சீக்கிரமா அதை எடு. இங்கேயிருந்து நீ ஓடிப்போகாம இருக்குறதுக்கு அது ஒண்ணுதான் வழி. துடுப்பு இல்லைன்னாலும் உன்னால் தப்பிச்சு ஓடிட முடியும். ஆனா... பாஸ்போர்ட் இல்லேன்னா முடியுமா? இனி நீ இங்கேயே இரு. இனிமேல் ஏதாவது நீ சத்தம் கித்தம் உண்டாக்கினா, நான் உன்னை கடலுக்கு அடியில தள்ளி விட்டுடுவேன்."
இதைக்கூறிவிட்டு செல்க்காஷ் சுவர் மீது ஏறி மறைந்து போனான். கவ்ரில்லா மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு உட்கார்ந்திருந்தான். அந்த சிறு கிருதாவைக் கொண்ட திருடன், அவனுடைய இதயத்தில் உண்டாக்கிய வேதனை ஒரு ஆடையைப்போல மெதுவாக அவனிடமிருந்து கழன்று செல்ல ஆரம்பித்தது. இப்போது அவன் விருப்பப்பட்டால் ஓடிவிடலாம் சுதந்திரமாக சுவாசித்துக் கொண்டு. அவன் சுற்றிலும் பார்த்தான். இடதுபக்கத்தில் பாய்மரமில்லாத ஒரு கறுப்பு நிறக் கப்பல் நின்றிருந்தது. ஒரு மிகப்பெரிய சவப்பெட்டியைப் போல இருந்த அந்தக் கப்பல் யாருக்கும் தேவையில்லாததைப் போல கிடந்தது. கடலலைகள் ஒவ்வொரு முறையும் வந்து அதை மோதும் போதும் அழுகையைப் போன்ற ஒரு சத்தம் அங்கு உண்டாகிக் கொண்டிருந்தது. வழவழப்பான சுவர் இறுகிப் போய் கறுத்த பாம்பைப்போல கடலுக்கு மேலே நீண்டு கிடந்தது. அதற்குப் பின்னால் ஏராளமான கறுத்த உருவங்கள் பரவிக் கிடந்தன. முன்னால் சவப்பெட்டியை ஞாபகப்படுத்தும் கப்பலுக்கும் கற்சுவருக்கும் இடையில் இருந்த திறந்த வெளியில் மேகங்கள் சூழ்ந்திருக்கும் கடலை அவன் பார்த்தான். அடர்த்தியான அரக்கனைப் போன்று காட்சியளித்த மேகங்கள் இருட்டு வேளையில் ஒரு வித பயத்தை உண்டாக்கின. அளவுக்கு அதிகமான பாரத்தால், மனிதர்களை நசுக்கிக் கொன்றுவிடுவதைப் போல ஆகாயத்தின் வழியாக அவை மெதுவாக நகர்ந்து கொண்டிருக்க... அவை மிகவும் இருண்டுபோய் ஒருவித ஆபத்தான சூழ்நிலையை உண்டாக்கிக் கொண்டிருந்தன. அதைப்பார்த்து கவ்ரில்லாவிற்கு பயம் உண்டானது. செல்க்காஷ் அவன் மனதில் உண்டாக்கிய பயத்தைவிட கடுமையாக இருந்தது அது. பயம் கவ்ரில்லாவின் நெஞ்சை இறுக்கிப் பிடித்தது. எல்லாவித எதிர்ப்பு சக்திகளையும் இழந்து, ஆணியடிக்கப்பட்ட ஒரு மனிதனைப் போல் ஆகிவிட்டிருந்தான் அவன்.
சுற்றிலும் ஒரே அமைதி நிலவிக்கொண்டிருந்தது. கடலின் இரைச்சலைத் தவிர, வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை. மேகக் கூட்டம் கடலுக்கு மேலே, ஆகாயத்தில் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. ஆகாயம் இப்போது இன்னொரு கடலாகத் தெரிந்தது.
கடல் ஆகாயத்திற்கும் கீழே எதிர்ப்பைக் காட்டியவாறு தலைகீழாக இருண்டு புரண்டுகொண்டிருந்தது.
தன்னுடைய எஜமானன் வருவதை எதிர்பார்த்து பரபரப்புடன் இருந்த கவ்ரில்லா, கடலின் கொடூரமான அமைதியிலும், அதன் அழகிலும் தன்னை இழந்துபோய் உட்கார்ந்திருந்தான். ஷெல்க்காஷ் திரும்பி வரவில்லையென்றால் தன்னுடைய நிலைமை என்ன என்று அவன் சிந்தித்தான். நேரம் மெதுவாக நீங்கிக் கொண்டிருந்தது. ஆகாயத்தில் நகர்ந்து கொண்டிருந்த மேகங்களைவிட நேரம் மிகவும் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது. காத்திருத்தல் என்பது ஒரு அளவைத் தாண்டியதால், அமைதி அதிகமான அச்சத்தை உண்டாக்கக்கூடியதாக இருந்தது. கடைசியில் சுவரின் அந்தப் பக்கத்திலிருந்து நீருக்குள் என்னவோ விழும் சத்தம் கேட்டது. முணுமுணுப்பும் தாழ்வான குரலில் இருந்த பேச்சும் அவனுடைய காதுகளில் விழுந்தன. அடுத்த நிமிடம், தான் பயத்தால் எங்கே இறந்துவிடுவோமோ என்று கவ்ரில்லா நினைக்க ஆரம்பித்தான்.
"என்ன தூங்கிக்கிட்டு இருந்தியா? இந்தா.. பிடி, கவனமா பிடிக்கணும்"- செல்க்காஷ் தாழ்வான குரலில் சொன்னான்.
சதுரமாக இருந்த அதிக எடை கொண்ட ஏதோவொன்று கற்சுவருக்கு மேலேயிருந்து கீழே விழுந்தது. கவ்ரில்லா அதை எடுத்துப் படகில் வைத்தான். இன்னொரு கட்டு அதற்குப் பதில் வந்து விழுந்தது. கடைசியில் செல்க்காஷின் மெலிந்து போன உருவம் சுவர் வழியாக உரசியவாறு இறங்கியது. அவனுடன் சேர்ந்து துடுப்புகளும் தெரிந்தன. கவ்ரில்லாவின் மூட்டை அவனுடைய காலுக்குப் பக்கத்தில் விழுந்தது. செல்க்காஷ் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு படகின் ஒரு முனையில் வந்து உட்கார்ந்திருந்தான்.
கவ்ரில்லாவின் முகத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்தக்கூடிய வித்தியாசமான ஒரு சிரிப்பு மலர்ந்தது.
"களைச்சுப் போயிட்டீங்களா?"- அவன் செல்க்காஷைப் பார்த்துக் கேட்டான்.
"ஆமா... சரி... அது இருக்கட்டும். நீ துடுப்பைப் போடு. எல்லா சக்தியையும் பயன்படுத்தி படகைச் செலுத்து. எது எப்படின்னாலும் உனக்குக் கொஞ்சம் பணம் கிடைக்கும். பாதி வேலை முடிஞ்சிடுச்சு. இந்த தந்தையில்லாத கப்பல்கள் வழியா வேகமா வெளியே போகணும். பிறகு பணத்தை வாங்கிட்டு நீ உன் காதலியைத் தேடிப் போகலாம். உனக்கும் ஒரு காதலி இருப்பாள்ல... நான் சொல்றது சரிதானாடா?"
"இல்ல..." கவ்ரில்லா அவனுடைய சகல சக்தியையும் பயன்படுத்தி படகை செலுத்தினான். அவனுடைய சுவாசம் சாதாரண நிலையிலிருந்து தடுமாறி காணப்பட்டாலும் கைகள் இரும்பு ஸ்ப்ரிங்குகுகளைப் போல மிகவும் வேகமாக செயல்பட்டன. படகுக்குக் கீழே கடல்நீர் 'களகளா' என்று சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. படகுக்குக் கீழேயிருந்த நீல ஒளியின் நாடா முன்பு இருந்ததைவிட அகலமாக இப்போது இருந்தது. கவ்ரில்லா வியர்வையில் மூழ்கிப்போயிருந்தான். ஆனால், அவன் துடுப்புகளைக் கைவிடவில்லை. அந்த இரவு நேரத்தில் இரண்டு முறைகள் அவன் சண்டை போட்டான். மூன்றாவதாக ஒரு தடவையும் அவன் சண்டை போட விரும்பவில்லை. அந்த நாசம்பிடித்த வேலையை விட்டெறிந்துவிட்டு அந்த மனிதனிடமிருந்து தப்பித்து எப்படியாவது கரையை அடைந்தால் போதும் என்ற ஒரே விருப்பம்தான் அவனிடம் அப்போது இருந்தது. செல்க்காஷிடம் பேசவோ, எதிர்ப்பைக் காட்டவோ அவன் விரும்பவில்லை. அவன் கூறுவதையெல்லாம் செய்ய வேண்டும் ஆபத்து எதுவும் இல்லாமல் கரையைப் போய் அடைந்தால் அற்புத காரியங்களைச் செய்யும் புனிதரான நிக்கொலஸ் முன்னால் முழங்கால் போட்டு அமர்ந்து பிரார்த்தனை செய்ய வேண்டும். அமைதியான ஒரு பிரார்த்தனை அவனுடைய உதட்டில் அப்போது இருந்தது. வளைந்த புருவங்களுக்கு இடையில் செல்க்காஷைப் பார்த்தவாறு ஒரு புகைவண்டியைப்போல மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு அவன் தன்னுடைய பிரார்த்தனையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்.
பறப்பதற்குத் தயாராக இருக்கும் ஒரு பறவையைப் போல உடலைக் குனிய வைத்துக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்தான் செல்க்காஷ். முன்னால் இருந்த இருட்டை அவனுடைய கழுகு கண்கள் வெறித்துப் பார்த்தன. கூர்மையான வளைந்த மூக்கு காற்றில் கலந்திருந்த வாசனையை முகர்ந்தது. அவனுடைய ஒரு கை சுக்காவைப் பிடித்திருந்தது. இன்னொரு கையால் அவன் தன் மீசையைத் தடவினான். சிரிப்பதற்காக உதடுகளை விரித்தபோது மீசை எழுந்து நின்றது.
அந்த ஆதாயம் கிடைத்தது குறித்து செல்க்காஷ் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான். அவனுக்கு தன்மீதும் தான் பயமுறுத்தி அடிமையாக்கிய இளைஞன் மீதும் சந்தோஷம் உண்டானது. கவ்ரில்லாவின் கடின உழைப்பைப் பார்த்தபோது செல்க்காஷுக்கு அவன் மீது இரக்க உணர்ச்சி தோன்றியது. அவன் கவ்ரில்லாவை உற்சாகப்படுத்தினான்.
"ம்... நீ கொஞ்சம் பயந்துட்டேல்ல?" மெல்லிய ஒரு சிரிப்புடன் செல்க்காஷ் அவனிடம் கேட்டான்.
"நல்லா பயந்துட்டேன்"- கவ்ரில்லா மெதுவான குரலில் சொன்னான்.
"இனி பயப்பட வேண்டியது இல்ல. ஆபத்து கடந்துடுச்சு. இன்னொரு இடத்தை நாம தாண்டிப் போகணும். நீ கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கோ..."
"சரி" என்று கூறியவாறு கவ்ரில்லா துடுப்பு போடுவதை நிறுத்தினான். அவன் துடுப்புகளைப் படகில் போட்டான்.
"மெதுவா துடுப்பைப் போட்டா போதும். நீர்ல சத்தம் உண்டாக்கக் கூடாதுன்றது முக்கியம். ஒரு கஷ்டத்தை நாம இனியும் தாண்ட வேண்டியதிருக்கு. அங்கேயிருக்கிற ஆளுங்க சாதாரணமானவங்க இல்ல. துப்பாக்கியைக் கையில் வச்சிக்கிட்டு அவங்க எப்பவும் எச்சரிக்கையா நின்னுக்கிட்டு இருப்பாங்க. தலையில என்னவோ இடிச்சது மாதிரி இருந்துச்சேன்னு நினைக்கிறதுக்கு முன்னாடி உன் மூளையில் துளை விழுந்திருக்கும்."
எந்த சிறு சத்தமும் உண்டாக்காமல் படகு மெதுவாக நீங்கிக் கொண்டிருந்தது. துடுப்பைச் செலுத்தும்போது அசையும் நீரில் தெறித்து விழும் துளிகளின் சத்தமும், அவற்றின் நீல வண்ணமும்தான் படகு நீங்கிக் கொண்டிருந்தது என்பதைக் காட்டும் சான்றுகளாக இருந்தன. இரவின் இருட்டும் சலனமற்ற தன்மையும் வளர்ந்து கொண்டே இருந்தன. ஆகாயத்தைப் பார்த்து ஆர்ப்பரிக்கும் கடலின் வடிவம் அப்போது இல்லை. நீர்ப்பரப்பிற்கு மேலே கறுத்த, அசைவற்ற கரும் போர்வையைப் போல மேகக்கூட்டம் பரந்து கிடந்தது. கடலின் இயற்கையான உப்பு வாசனை முன்பு இருந்ததைவிட பலமாக இருந்தது. கடல் எப்போதும் இருப்பதை விடவும் எல்லையற்று தெரிந்தது.
"மழை பெய்தால் நல்லா இருக்கும்"- செல்க்காஷ் முணுமுணுத்தான். "ஒரு திரைச்சீலையைப் போல அது நம்மை மறைக்கும்."
படகின் இடது பக்கமும் வலது பக்கமும் பெரிய உருவங்கள் உயர்ந்து தெரிந்தன. பாய்மரக்கப்பல்கள் இருண்ட, சோகம் படர்ந்த அசைவற்ற பாய்மரக்கப்பல்கள். அவற்றில் ஒன்றின் மேற்பகுதியில் ஒரு வெளிச்சம் நகர்ந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது. ஒரு லாந்தர் விளக்கைக் கையில் வைத்துக் கொண்டு யாரோ அதன் மேற்பரப்பில் நடந்து கொண்டிருந்தார்கள். அலைகள் பாய்மரக் கப்பலின் அடிப்பகுதியில் மோதிக் கொண்டு சிறிய கெஞ்சல்களை உண்டாக்கிக் கொண்டிருந்தபோது, எந்தவிதமான பதிலையும் சொல்லாமலே அவை அமைதியாக இருந்தன.
"பட்டாளம்"- செல்க்காஷ் மெதுவான குரலில் சொன்னான்.
செல்க்காஷ் மெதுவாக துடுப்பைப் போட சொன்னபோது கவ்ரில்லாவிற்கு தயக்கமாக இருந்தது. இருட்டில் கஷ்டப்பட்டு துடுப்புப் போடும்போது, தன்னுடைய உடல் பெரிதாவதைப்போல அவன் உணர்ந்தான். அவனுடைய எலும்புகளும் நரம்புகளும் பெரிதாவதைப்போல வேதனை தந்தன. ஒரு சிந்தனை மட்டுமே அங்கு இருந்ததால் தலையும் பயங்கரமாக வலித்தது. தோலில் ஒரு சிலிர்ப்பு இருந்து கொண்டேயிருந்தது. கால்களில் ஊசி நுழைவதைப்போல் அவன் உணர்ந்தான். இருட்டுக்குள்ளே பார்த்துப் பார்த்து கண்கள் எங்கோ தூள் தூளாகச் சிதறிப்போய்விடுமோ என்று அவன் பயந்தான். இருட்டுக்குள்ளிருந்து 'நில்லுங்கள் திருட்டுப் பசங்களா' என்ற சத்தம் கிளம்பி வருவதை அவன் எந்த நிமிடமும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.
செல்க்காஷ் 'பட்டாளம்' என்று சொன்னபோது கவ்ரில்லா நடுங்கிவிட்டான். பயம் அவனுடைய மனதில் எழுந்து சோர்வடைந்து நரம்புகளில் படர்ந்து பயணிக்க ஆரம்பித்தது. உதவிக்காக உரத்த குரலில் கத்தினால்என்ன என்று கூட அவன் நினைத்தான். அதற்காக அவன் வாயைக்கூட திறந்துவிட்டான். திடீரென்று சாட்டையால் தன்னை யாரோ அடித்ததைப்போல, எதையோ பார்த்துப் பயந்த அவன், தான் உட்கார்ந்திருந்த இடத்திலேயே அமைதியாக அடங்கிவிட்டான்.
கறுத்த நீர்ப்பரப்பிலிருந்து நீல வெளிச்சத்தில் ஒரு வாள் உயர்ந்தது. இரவைக் கிழித்துக் கொண்டு தெரிந்த அந்த ஒளிவீச்சு வானத்திலிருந்த மேகங்களுக்குள் பிளந்துகொண்டு புகுந்தது. அந்த ஒளிவெள்ளம் ஒரு நாடாவின் வடிவத்தில் கடலின் மடிக்குள் ஓய்வெடுத்தது. அந்த வெளிச்சம் இருட்டில் மறைந்திருந்த கப்பல்களின் வடிவங்களை இருட்டின் சவக் கச்சைகளை அணிந்த மவுனத்தின் இருண்ட உருவங்களைக் கண்டுபிடித்தது. கடுமையான காற்றில் சிக்கிக் கடலில் மூழ்கிவிட்டிருந்த கப்பல்களின் பாய்மரங்களில் செய்யப்பட்டிருந்த அலங்கார வேலைப்பாடுகள் கீழேயிருந்து பார்க்கும்போது ஒட்டிக் கொண்டிருக்கும் கடற்பாசிகளைப்போல இருந்தன.
மீண்டும் வேறொரு திசையில் அந்த நீல வெளிச்சத்தின் கீற்று கம்பீரமாகத் தெரிந்தது. இருட்டை இன்னொருமுறை பிளந்து அது கடலின் அடிப்பகுதியை நோக்கிப் பாய்ந்தது. முன்பு பார்த்திராத கப்பல்களின் வடிவங்கள் அந்த ஒளிப்பாய்ச்சலில் தெரிந்தன.
இனி என்ன செய்வது என்று சிந்திப்பதைப்போல செல்க்காஷின் படகு கடற்பரப்பிற்கு மேலே இப்படியும் அப்படியுமாக ஆடிக்கொண்டிருந்தது. அதன் ஓட்டம் நின்றது. கவ்ரில்லா கைகளால் முகத்தை மூடிக்கொண்டு படகுக்குள் கவிழ்ந்து படுத்துக்கொண்டான். செல்க்காஷ் அவனைத் தன் கால்களால் மிதித்தவாறு திட்டினான். "டேய் முட்டாள்... அது கஸ்டம்ஸ்காரர்களின் 'க்ருயிஸர் படகு' அவங்களோட ஸ்பாட் லைட்தான் இப்போ எரிஞ்சு அணைஞ்சது எழுந்திரு. நிமிடங்களுக்குள் அவங்க நம்மைக் கண்டுபிடிச்சிடுவாங்க. உன்னோட முடிவும் என்னோட முடிவும் கடைசியில உன் கையிலன்றது மாதிரி ஆயிடப்போவுது. எழுந்திருடா பிச்சைக்கார நாயே..."
நல்ல ஒரு மிதி கிடைத்தவுடன் கவ்ரில்லா தான் முன்பு உட்கார்ந்திருந்த இடத்தில் போய் உட்கார்ந்தான். கண்களைத் திறப்பதற்கு இப்போதுகூட அவனுக்கு மிகவும் பயமாக இருந்தது. துடுப்புகளைத் தேடி எடுத்து அவன் படகைச் செலுத்த ஆரம்பித்தான்.
"மெதுவா... மெதுவா, பிசாசே. சரியான முட்டாளை நான் என்கூட அழைச்சிட்டு வந்திருக்கேன். டேய் மரமண்டை. நீ ஏன்டா பயப்படுற? ஒரு லாந்தர் விளக்கு தெரிஞ்சது, அவ்வளவுதான். பதைபதைப்பு அடையாம துடுப்பைப் போடு. அவங்க கள்ளக் கடத்தல்காரர்களைத் தேடுறாங்க. அவங்க நம்மைப் பிடிக்க மாட்டாங்க. அவங்க இப்ப ரொம்பவும் தூரத்துல இருக்காங்க"- செல்க்காஷ் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியுடன் சொன்னான். "நாம ஆபத்துல இருந்து தப்பிச்சிட்டோம். ஃபூ! ஒரு மரமண்டையா இருந்தாலும், நீ ஒரு அதிர்ஷ்டசாலிதான்டா."
எதுவும் பேசாமல் சத்தம்வர மூச்சுவிட்டவாறு கவ்ரில்லா படகைச் செலுத்தினான். அவ்வப்போது உயர்ந்து தாழ்ந்து கொண்டிருந்த ஒளிப்பாய்ச்சலை அவன் வெறித்துப் பார்த்தான். அது ஒரு லாந்தர் விளக்கின் வெளிச்சம் மட்டுமே என்று செல்க்காஷ் கூறினாலும், அதை நம்ப அவன் தயாராக இல்லை. இருட்டைக் கிழித்துக் கொண்டு பாய்ந்த, கடலுக்கு வெள்ளிக்கொலுசு அணிவிக்கிற அந்த நீல வெளிச்சத்திற்கு ஏதோ ஒரு முக்கியத்துவம் இருக்கிறது என்பது மட்டும் அவனுக்குப் புரிந்தது. கவ்ரில்லாவிற்கு மீண்டும் பயம் தோன்றியது. அவன் இயந்திரத்தனமாக படகைச் செலுத்தினான். மேலேயிருந்து ஒரு ஆபத்தை எதிர்பார்த்து அவனுடைய உடலின் தசைகள் நடுங்கின. அவனுக்கு இப்போது எதன்மீதும் விருப்பமில்லை. உயிரற்ற ஒரு சாதாரண பொருளாக அவன் மாறிவிட்டிருந்தான். அந்த இரவுப் பொழுதின் கடுமை மனிதர்களிடம் சாதாரணமாகக் காணப்படும் எல்லா அம்சங்களையும் அவனிடம் இல்லாமற் செய்திருந்தது.
ஆனால், செல்க்காஷ் மிகவும் சந்தோஷத்தில் இருந்தான். இறுகிய நிலையில் இருந்த அவனுடைய நரம்புகள் மிகவும் தளர்ந்து போயிருந்தன. உடம்பெங்கும் மகிழ்ச்சி பரவியதன் காரணமாக, அவனுடைய மீசை, விரைப்பாக நின்றது. கண்களில் இனம் புரியாத ஒளி தெரிந்தது. இந்த அளவிற்கு சிரித்த முகத்துடன் இதற்கு முன்பு செல்க்காஷை அவன் பார்த்ததேயில்லை. செல்க்காஷ் சீட்டி அடித்தான். குளிர்ச்சி நிறைந்த கடற்காற்று அவனுக்குள் வேகமாக நுழைந்தது. அவன் சுற்றிலும் பார்த்தான். கவ்ரில்லாவைப் பார்த்து அவன் புன்னகைத்தான்.
நீர்ப்பரப்பில் சிறிய அலைகளை உண்டாக்கிக் கொண்டு ஒரு காற்று வீசியது. மேகங்கள் அடர்த்தி நிறைந்து காணப்பட்டன. எனினும் வானம் மேகங்களால் மூடப்பட்டிருந்தது. காற்று கடலில் இங்கும் அங்குமாக ஓசை எழுப்பியவாறு வீசிக் கொண்டிருந்தது. எனினும் ஆழமான ஏதோ ஒரு சிந்தனையில் மூழ்கியிருப்பதைப்போல மேகங்கள் அசைவே இல்லாமல் நின்றிருந்தன.
"வா... இறங்கி வா தம்பி. உன்னைப் பார்த்தா உன்கிட்ட இருந்த தைரியமெல்லாம் முழுசா போயிட்டது மாதிரி தெரியுதே. சாதாரண ஒரு எலும்புக்கூடு மாதிரி ஆயிட்டியே நீ. இனி எதுக்கு பயப்படணும்? எல்லா பிரச்சினைகளும் முடிஞ்சிருச்சு..."
ஒரு மனிதக் குரல் கேட்டதில் கவ்ரில்லாவுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அந்தக் குரல் செல்க்காஷின் குரலாக இருந்தாலும்கூட.
"எனக்கு பிரச்சினை எதுவும் இல்லை..."- அவன் முணுமுணுத்தான்.
"ஆனா, உன்னைப் பார்க்கிறப்போ அப்படித் தோனலையே. உன் தைரியமெல்லாம் காணாமப் போச்சு. நீ ரொம்பவம் சோர்ந்து போயிட்டே. இனி நான் துடுப்பைப் போடுறேன்."
கவ்ரில்லா இயந்திரத்தனமாக எழுந்து செல்க்காஷ் அமர்ந்திருந்த இடத்திற்கு மாறினான். செல்க்காஷ் அவனுடைய வெளிறிப்போன முகத்தையே பார்த்தான். அவனுடைய முழங்கால்கள் நடுங்கிக் கொண்டிருப்பதை அவன் கவனித்தான். அதைப் பார்த்ததும் செல்க்காஷுக்கு மேலும் அதிகமாக கவலை உண்டானது.
"வா... சந்தோஷமா இரு. நீ நல்லா வேலை செஞ்சே. அதுக்கேற்ற மாதிரி கூலியை நான் உனக்குத் தருவேன். உனக்கு இருபத்தைந்து ரூபிள்கள் கிடைக்குதுன்னு வச்சுக்கோ. அதை நீ என்ன செய்வே?"
"எனக்கு எதுவுமே வேண்டாம். கரையில் விட்டால் போதும்."
செல்க்காஷ் அலைகள் மீது கையை வீசினான். துப்பினான். நீளமான கைகளால் துடுப்பை வீசி அவன் வேகமாக படகைச் செலுத்தினான்.
கடல் இப்போது தெளிவாக இருந்தது. சிறிய அலைகளுக்கு நுரைகளைக் கொண்டு முனைகள் உண்டாக்கி, அலைகளை ஒன்றோடொன்று மோதச் செய்து நீரைத் தெறிக்கச் செய்து கொண்டிருந்த கடலம்மா மிகவும் சந்தோஷத்துடன் காணப்பட்டாள். கோபம் கொண்டு வெகுண்டெழுந்தும், பெருமூச்சு விட்டும் உண்டாக்கப்பட்ட நுரைகளும், குமிழ்களும் நீரோடு சேர்ந்து கலந்து காணாமல் போயின. கடல்வெளி இசைமயமாக மாறிவிட்டிருந்தது. இருட்டு கண் விழித்ததைப்போல தோன்றியது.
"நீ இனிமேல் உன்னோட கிராமத்துக்கு திரும்பிப் போவே. கல்யாணம் பண்ணிக்குவே. விவசாயம் செய்ய ஆரம்பிப்பே. தானியங்களை விளையச் செய்வே. உன் பொண்டாட்டி குழந்தைகளைப் பெத்தெடுப்பா. அவளுக்கு உணவுக்குத் தேவையான தானியம் இல்லைன்னு வர்றப்போ நீ எலும்பு நொறுங்குற அளவுக்கு வேலை செய்வே. அதுல என்ன மகிழ்ச்சி இருக்குது?"
"எந்த மகிழ்ச்சியும் இல்ல" சிறிய நடுக்கத்துடன் தெளிவற்ற குரலில் கவ்ரில்லா சொன்னான்.
காற்று மேகக் கூட்டங்களுக்கு இடையில் இங்குமங்குமாக சிறிய இடைவெளிகளை உண்டாக்கியது. அதன் வழியாக ஒன்றோ இரண்டோ நட்சத்திரங்கள் இருந்த நீலவானத்தில் சிறிய பகுதிகள் தோன்றின. நட்சத்திரங்களின் பிரதிபிம்பங்கள் கடல் நீரில் நாட்டியம் ஆடின. அவை அவ்வப்போது தோன்றுவதும் மறைவதுமாக இருந்தன.
"இனிமேல் வலது பக்கம் போகணும்"- செல்க்காஷ் சொன்னான். "நாம கிட்டத்தட்ட அங்கே வந்துட்டோம். ம்... நம்ம வேலை முடிஞ்சிடுச்சு. பெரிய வேலை... கொஞ்சம் சிந்திச்சுப் பாரு. ஒரே நாள் ராத்திரியில் ஐந்நூறு ரூபிள்கள் சம்பாதிக்கிறதுன்னா..."
"ஐந்நூறு ரூபிள்களா?"- நம்ப முடியாததைப்போல கவ்ரில்லா சொன்னான். "இதுல என்ன இருக்கு?" படகில் கிடந்த கட்டுகளை மிதித்தவாறு அவன் கேட்டான்.
"நிறைய பணம் கிடைக்கக்கூடிய விஷயம். இதுக்கு ஒழுங்கா பணம் கிடைக்கிறதா இருந்தா, ஆயிரம் ரூபிள்கள் கிடைக்கும். ஆனா, நான் அதைப்பற்றியெல்லாம் கவலைப்பட வேண்டிய அவசியம் இல்ல. நான் சொல்றது புரியுதா?"
"என் கடவுளே..."- நம்பிக்கையின்மை நிழல் பரப்பியிருக்கும் குரலில் கவ்ரில்லா சொன்னான். "எனக்கு அவ்வளவு பணம் கிடைச்சிருந்தா..." ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு அவன் தன்னுடைய கிராமத்தைப் பற்றியும் வீணாகிப் போன விவசாய இடங்களைப் பற்றியும், தன் தாயைப் பற்றியும், வேலைதேடி வெளியே கிளம்பத் தன்னை தூண்டிய பக்கத்து வீட்டுக்காரர்களைப் பற்றியும், உறவினர்களைப் பற்றியும் நினைத்துப் பார்த்தான். அவர்களுக்காக இந்த இரவு நேரத்தில் தான் அனுபவித்த கஷ்டங்களையும் நினைத்துப் பார்த்தான். அவனுடைய மனம் நினைவுகளின் அலைகளால் ஆடி அல்லல்பட்டுக் கொண்டிருந்தது. ஆற்றின் கரையிலிருக்கும் வீடு, அதற்கப்பால் இருக்கும் குன்றுகள், பீர்ச்சு மரங்களும் வில்லோ மரங்களும் ரோவான் மரங்களும் பேர்ட் செர்ரியும் நிறைந்திருக்கும் காட்டுப் பிரதேசம்...
"எனக்கு அந்தப் பணம் கிடைச்சிருந்தா..."- கவலையுடன் அவன் நீண்ட பெருமூச்சு விட்டான்.
"அதைப்பற்றி எதுவும் சொல்லாம, அந்தப் பணம் கிடைச்சிருந்தா நீ ஏதாவது புகை வண்டியில் ஏறி வீடு போய்ச் சேர்ந்திருப்பே. பெண்கள் உன்னைப் பார்த்தவுடன் உன் பக்கத்துல வந்து நிப்பாங்க. அவர்கள்ல யாராவது ஒருத்தியை நீ ஏன் கல்யாணம் பண்ணிக்கக்கூடாது? பிறகு... உனக்கு ஒரு வீடு உண்டாக்கணும். வீடு கட்டுறதுக்கு இந்தப் பணம் போதாதுன்றது வேற விஷயம்."
"இல்ல... அந்தப் பணம் ஒரு வீடு உண்டாக்கப் போதாது. எங்க ஊர்ல மரத்தோட விலை அதிகம்."
"இல்லாட்டி இருக்கிற பணத்துல இப்போ இருக்கிற உன் வீட்டைப் புதுப்பிக்கலாம். பிறகு நீ ஏன் ஒரு குதிரையை வாங்கக்கூடாது. உன்கிட்ட குதிரை இருக்கா?"
"இருக்கு. ஆனா, ரொம்பவும் பழைய குதிரை."
"அப்படின்னா உனக்கு ஒரு புதிய குதிரையை வாங்கணும். அருமையான குதிரையா பார்த்து வாங்கணும். ஒரு பசு, பிறகு கொஞ்சம் செம்மறி ஆடுகள்... கொஞ்சம் கோழிகள்... நான் சொல்றது சரியா?"
"எனக்கென்ன? அதெல்லாம் என்னால வாங்க முடியாதா என்ன?"
"உன்னால முடியும் தம்பி. அதோடு வாழ்க்கை இனிமையான பாடலாக மாறிடும். அப்படிப்பட்ட ஒன்றிரண்டு விஷயங்களைப் பற்றி எனக்கு நல்லா தெரியும். எனக்கு ஒரு நெருங்கிய நண்பன் இருந்தான். கிராமத்திலேயே மிகவும் வசதி படைத்த ஒருத்தரா இருந்தாரு என் அப்பா."
செல்க்காஷ் மிகவும் சிரமப்பட்டு படகைச் செலுத்திக் கொண்டிருந்தான். கடலலைகள் படகை இப்படியும் அப்படியுமாக மோதி ஆட்டிக் கொண்டிருந்தன. அந்த இரண்டு மனிதர்களும் சிந்தனைகளில் மூழ்கிப்போய், கனவுகளில் ஆழ்ந்து படகில் உட்கார்ந்து கொண்டு ஆடிக் கொண்டிருந்தார்கள். கவ்ரில்லாவைச் சிறிது குளிர வைக்க வேண்டும் என்பதற்காகவும் ஆறுதல்படுத்த வேண்டும் என்பதற்காகவும் தான் செல்க்காஷ் தன்னுடைய கிராமத்தைப் பற்றிச் சொன்னான். கவ்ரில்லாவிடம் விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றி அவன் கேட்ட போது, அவன் தன்னுடைய நினைவுகளை நோக்கி இயற்கையாகவே உந்தப்பட்டான். கவ்ரில்லாவிடம் அவனுடைய கிராமத்தைக் குறித்து கேட்பதற்குப் பதிலாக செல்க்காஷ் கிராம வாழக்கையைப் பற்றியும் விவசாயிகளைப் பற்றியும் தானே கூற ஆரம்பித்தான்.
"ஒரு கிராமத்து மனிதனின் வாழ்க்கையிலேயே குறிப்பிட்டுக் கூறக்கூடிய ஒரு விஷயம் இருக்குதுன்னா அது அவனாட சுதந்திரம்தான். அங்கே அவன் தனக்குத்தானே ஒரு எஜமானன். வறுமையில் அவன் இருந்தாலும் அங்கு அவனுக்குன்னு சொந்தத்துல ஒரு வீடு இருக்கும். சிறியதாக இருந்தாலும் சொந்தமா ஒரு துண்டு நிலமாவது இருக்கும். கொஞ்சமா நிலம் வைத்திருப்பவன் மன்னன் மாதிரி. அவன் எல்லாராலும் நேசிக்கப்பட வேண்டியவன். யார்கிட்டயும் அவன் மரியாதையை எதிர்பார்க்கலாம். நான் சொல்றது சரிதானேடா?"
மிகவும் உணர்ச்சிவசப்பட்ட குரலில் அவன் இந்த விஷயங்களைச் சொன்னான்.
கவ்ரில்லா அவனை மிகவும் வினோதமாகப் பார்த்தான். அவனும் சுய உணர்விற்கு வந்துவிட்டிருந்தான். பேச்சுக்கு மத்தியில் அவன் யாரென்பதை அவன் மறந்துவிட்டிருந்தான். அவன் இன்னொரு விவசாயி. அவ்வளவுதான்... என்றுதான் அவன் நினைத்திருந்தான். முன்னோர்களின் வியர்வையில் பூமியுடன் ஒட்டிக்கிடக்கும், பிள்ளைப் பிராயத்தின் நினைவுகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு மனிதன். தன்னுடைய விருப்பப்படி பூமிக்கும் தொழிலுக்கும் இடையில் இருக்கும் உறவைப் பிரிந்ததாக தண்டிக்கப்பட்ட ஒரு மனிதன்.
"உண்மைதான் சகோதரரே! நீங்க சொன்னது சத்தியமான உண்மை. உங்க விஷயத்தையே எடுத்துக்குங்களேன். பூமியில்லாத நீங்க யாரு? யாருமே இல்ல... சகோதரரே... பூமி நம்மோட அம்மா. அதை மறந்துட்டோம்னா அதுக்குப் பிறகு ஒண்ணுமே செய்ய முடியாது."
செல்க்காஷ் கனவிலிருந்து பூமிக்கு இறங்கி வந்தான். மரியாதைக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொள்ளக்கூடிய ஒருவரின் மரியாதைக்கே ஒரு கேடு வருகிறது என்றால்...? அதுவும் யாருமே இல்லாத ஒருவன் அப்படிப்பட்ட ஒரு காயத்தை உண்டாக்குகிறான் என்பதை நினைக்கும்போது, அவனுடைய நெஞ்ச தகதகவென்று பற்றி எரிந்தது.
"திரும்பவும் வாய்க்கு வந்ததையெல்லாம் பேச ஆரம்பிச்சிட்டியா?" செல்க்காஷ் கோபத்துடன் கேட்டான். "என்னைப் பற்றி நீ என்ன நினைச்சே, அதிகப்பிரசங்கி?"
"நான் உங்களை நினைச்சு அதைச் சொல்லலை"- செல்க்காஷ் மீது தான் கொண்டிருக்கும் பயத்தை மனதில் வைத்துக் கொண்டு கவ்ரில்லா சொன்னான். "உங்களைப்போல எவ்வளவோ மனிதர்கள் இருக்காங்க. கடவுளே வறுமையின் பிடியில் சிக்கிய எவ்வளவோ ஆட்கள் அந்த பூமியில் இருக்காங்க. தங்களுக்கென்று இருக்க ஒரு வீடு இல்லாத பிச்சைக்காரர்கள்..."
ஏதோ கூறுவதற்காக தன்னுடைய தொண்டையில் திரண்டு வந்து நின்ற வார்த்தைகளை... விழுங்கிக் கொண்டு செல்க்காஷ் சொன்னான்: "ம்... இந்தா இந்தத் துடுப்பைப் பிடி..."
அவர்கள் மீண்டும் தங்களுடைய இடங்களை மாற்றிக் கொண்டார்கள். செல்க்காஷ் கட்டுகளுக்கு மேலே ஏறி உட்கார்ந்தான். ஒரே மிதியில கவ்ரில்லாவைக் கடலில் விட்டெறிய வேண்டும் என்ற அடக்க முடியாத ஆவேசம் அவனுடைய மனதில் இருந்தது.
அவர்கள் அதற்குப் பிறகு ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை. அமைதியாக உட்கார்ந்திருந்துகொண்டே கவ்ரில்லா ஒரு கிராமத்து வாசனையைப் பரப்பிக் கொண்டிருந்தான்.
பழைய சம்பவங்களை மனதில் நினைத்துப் பார்த்துக் கொண்டிருந்த செல்க்காஷ் துடுப்புபோட மறந்து, ஓடிக் கொண்டிருந்த படகை அதன் போக்கில் போக விட்டான். தலைவன் இல்லாத படகு என்று நினைத்து அலைகள் மகிழ்ச்சியுடன் அதன்மீது மோதி விளையாடின. கடலலைகள் அதைத் தலையில் வைத்துக் கொண்டு ஆடின.
மனமென்னும் கண்ணாடி வழியாக செல்க்காஷ் தன்னுடைய கடந்த காலத்தை தோன்றச் செய்து அதை வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். இப்போதிருக்கும் நிகழ்காலத்தில் இருப்பதைப் போல இல்லாமல் முற்றிலும் வேறு மாதிரி இருந்தது அந்த கடந்த காலம். அவன் அதில் தன்னுடைய இளம் பருவத்து வாழ்க்கையைப் பார்த்தான். சிவந்த கன்னங்களையும் பாசம் கலந்த கண்களையும் கொண்ட தன்னுடைய தாயையும், சிவப்பு நிற தாடியையும் முரட்டுத்தனமான உடம்பையும் கொண்ட தன்னுடைய தந்தையையும் அவன் பார்த்தான். திருமணக் கோலத்தில் நின்றிருந்த இளைஞனான தன்னை அவன் பார்த்தான். கருநீல கண்களைக் கொண்ட தன்னுடைய மணப்பெண் ஆன்ஃபிஸாவைப் பார்த்தான். அவளுடைய சந்தோஷம் தாண்டவமாடிக் கொண்டிருந்த முகத்தையும் வெளியே அடர்த்தியாகத் தொங்கிக் கொண்டிருந்த கூந்தலையும் பார்த்தான். அவன் மீண்டும் தன்னைப் பார்த்தான். அப்போது அவன் ஒரு பட்டாளத்துக்காரனாக இருந்தான். கடினமான உழைப்பின் காரணமாக அவனுடைய தந்தையின் முதுகு வளைந்திருக்கிறது. முடி நரைத்துக் காணப்படுகிறது. தாயின் முகத்தில் சுருக்கங்கள் விழுந்திருக்கின்றன. பட்டாளத்தில் சேவைகள் முடிந்து ஊருக்குத் திரும்பி வந்த அவனுக்கு கிராமத்து மனிதர்கள் தந்த வரவேற்யும் அழகும் மிடுக்கும் தைரியமும் கொண்ட தன்னுடைய மகனை ஊர்க்காரர்களுக்கு முன்னால் நிற்க வைத்திருப்பதற்காக அந்த தந்தை மனதில் பெருமைப்பட்டுக் கொண்டதும் அவனுக்கு இப்போதும் ஞாபகத்தில் இருக்கின்றன. நினைவுகள் அதிர்ஷ்டத்தை இழந்தவர்களுக்கு தாங்கிக் கொள்ள முடியாத ஒன்று. அது கடந்துபோன நிலைகளைத் திரும்பவும் வாழ்க்கையில் கொண்டு வந்து நிறுத்துகிறது. கசப்பு நிறைந்த பகுதிகளில் சிறிது தேனைத் தடவி விடுகிறது.
வீட்டைப் பற்றிய ஒரு சிறிய அருவி செல்க்காஷுக்கு மேலே பாய்ந்து கொண்டிருந்தது. தாயின் மெல்லிய பேச்சையும் தந்தையின் ஆத்மார்த்தமான குரலையும் மறந்து போய்விட்ட மற்ற குரல்களையும் அந்த அருவி அவனுடைய காதுகளில் கொண்டு வந்து சேர்த்தது. உழுது புரட்டிப்போட்ட பூமி கன்னியின் நறுமணத்தை ஞாபகங்கள் மீண்டுமொருமுறை அவனுடைய மூக்கிற்குள் கொண்டுபோனது. தன்னுடைய நரம்புகளில் இரத்தம் ஓடச்செய்த அந்த வாழ்க்கை முறையிலிருந்து வெளியே வேரோடு வீசியெறிப்பட்ட தான் தனிமைப்பட்டு விட்டதைப்போல் அவன் உணர்ந்தான்.
"ஏய்... நாம எங்கே போறோம்?"- கவ்ரில்லா உரத்த குரலில் கத்தினான்.
அதைக்கேட்டு செல்க்காஷ் அதிர்ச்சியடைந்துவிட்டான். இரையையே பார்த்துக் கொண்டிருக்கும் ஒரு பறவையின் எச்சரிக்கை உணர்வுடன் அவன் சுற்றிலும் பார்த்தான்.
"நீங்க பகல்கனவு காண்றீங்களா?"- கவ்ரில்லா கேட்டான்.
"களைச்சுப் போயிட்டேன்."
"இந்தப் பொருட்களை யாராவது பார்த்தால், பிரச்சினை எதுவும் வராதா?"
கட்டுகளில் ஒன்றை மிதித்தவாறு கவ்ரில்லா கேட்டான்.
"இல்ல... அதைப்பற்றி பயப்பட வேண்டாம். இதை நான் உடனடியா விற்று பணமாக்குவேன்."
"ஐந்நூறு ரூபிள்கள்?"
"ரொம்பவும் குறைவா கணக்குப் போட்டுப் பார்த்தால்கூட..."
"கடவுளே! என்ன அருமையான சம்பாத்தியம். எனக்கு முழுசா கிடைச்சிருந்தா அதை வச்சிக்கிட்டு நான் சந்தோஷமா பாட்டுப்பாடி நடந்துக்கிட்டு இருப்பேன்."
"ஒரு விவசாயப் பாட்டு."
"அப்படியில்லாம வேறென்ன? பிறகு நான்..."
கவ்ரில்லா கற்பனையின் சிறகில் ஏறி அமர்ந்து பறக்க ஆரம்பித்தான். செல்க்காஷ் எதுவும் பேசவில்லை. அவனுடைய மீசை கீழ்நோக்கி வளைந்திருந்தது. அவனின் வலது பக்கத்தை ஒரு அலை ஏறி வந்து ஈரமாக்கியது. அவனுடைய கண்கள் உள்ளே போயிருந்தன. அவற்றின் பிரகாசம் குறைந்துவிட்டிருந்தது. அவனிடமிருந்த முரட்டுத்தனம் குறைந்து போயிருந்தது.
கறுத்த நுரை வந்துகொண்டிருந்த பகுதியை நோக்கி அவன் படகைத் திருப்பினான்.
வானம் மீண்டுமொருமுறை மேகங்களால் சூழப்பட்டது. நல்ல சுகமான மழை பெய்ய ஆரம்பித்தது. மழைத்துளிகள் நீரில் விழுந்தபோது 'ப்லோப் ப்லோப்' என்று சத்தம் உண்டானது.
"நிறுத்து"- செல்க்காஷ் கட்டளையிட்டான்.
படகின் கூர்மையான முனை ஒரு பாய்மரக்கப்பலை ஒட்டி நின்றது.
"அந்த தந்தை இல்லாதவனுங்க தூங்குறானுங்களோ என்னவோ." படகின் கொக்கியை பாய்மரக் கப்பலில் தொங்கிக் கொண்டிருந்த ஒரு சணலில் மாட்டியவாறு அவன் மெதுவான குரலில் சொன்னான். "ஏய்... கோணியைக் கீழே போடு. மழை பெய்றதுக்கு இந்த நேரம்தான் கிடைச்சதா? டேய், முட்டாள்களே! கேக்குதா?"
"செல்க்காஷ்..."- பாய்மரக்கப்பலுக்கு மேலேயிருந்து யாரோ அழைத்தார்கள்.
"கோணி எங்கே?"
"இது காலியா இருக்கு, செல்க்காஷ்..."
"டேய், நாசம் பிடிச்சவனே... அந்த கோணியைத் தா."
"ஓ... இன்னைக்கு அவனுக்கு ஏகப்பட்ட கோபம்..."
"மேலே ஏறு கவ்ரில்லா..."- செல்க்காஷ் தன்னுடைய நண்பனிடம் சொன்னான். அடுத்த நிமிடம் அவர்கள் மேலே சென்றார்கள். தாடி வைத்த, கறுப்பு நிறத்தில் இருந்த மூன்று மனிதர்கள் அங்கே நின்றிருந்தார்கள். பாய்மரக் கப்பலின் ஓரத்தில் நகர்ந்து நின்று கொண்டு செல்க்காஷின் படகைப் பார்த்து அவர்கள் ஆவேசத்துடன் பேசினார்கள்.
பெரிய ஒரு மேலங்கியை அணிந்திருந்த நான்காவது ஆள் செல்க்காஷுக்கு அருகில் வந்தான். செல்க்காஷின் கையைப் பிடித்து குலுக்கியவாறு ஏதோ கேள்வி கேட்பது மாதிரி அவன் கவ்ரில்லாவையே பார்த்தான்.
"காலையில் பணம் சரி பண்ணி வைக்கணும்."
சுருக்கமாக வார்த்தைகளைப் பயன்படுத்திய செல்க்காஷ் அவனிடம் சொன்னான். "நான் தூங்கப் போறேன். கவ்ரில்லா நாம போகலாம். உனக்குப் பசிக்குதாடா?"
"எனக்கு தூக்கம் வருது"- கவ்ரில்லா சொன்னான். ஐந்து நிமிடங்கள் கழிந்தபோது, கவ்ரில்லா நன்கு தூங்கிவிட்டிருந்தான். அவன் உரத்த குரலில் குறட்டை விட்டுக் கொண்டிருந்தான்.
செல்க்காஷ் அவனுக்குப் பக்கத்தில் போய் உட்கார்ந்தான். வேறு யாருடைய பூட்ஸையோ அணிய முயற்சிப்பதற்கு மத்தியில் அவன் நாக்கை நீட்டித் துப்பவும், சீட்டியடிக்கவும் செய்தான். சிறிதுநேரம் சென்ற பிறகு ஒரு கையை மடக்கி தலையணையாக ஆக்கிக் கொண்டு கவ்ரில்லாவிற்கு அருகில் அவன் காலை நீட்டிப் படுத்தான். இன்னொரு கையால் அவன் தன் மீசையைத் தடவினான்.
அவர்களின் படகு கடலலைகளுக்கேற்ப துள்ளி விளையாடிக் கொண்டிருந்தது. பாய்மரக் கப்பலின் மேற்பகுதியில் இருந்த ஒரு பலகை மெதுவாக கிறீச்சிட்டது. மழை பலமாக பெய்துகொண்டிருந்தது. படகின் இரண்டு பக்கங்களிலும் கடலலைகள் வேகமாக வந்து மோதிக் கொண்டிருந்தன. முழுமையான கவலையில் மூழ்கிப் போய் தன்னுடைய குழந்தைக்கு சந்தோஷம் தர முடியாத ஒரு தாயின் தாலாட்டுப் பாடலை அது ஞாபகப்படுத்தியது.
பற்களை வெளியே காட்டி, தலையைத் தூக்கி சுற்றிலும் பார்த்து, என்னவோ முணுமுணுத்துவிட்டு ஒரு பெரிய கத்திரியின் இரண்டு பக்கங்களைப் போல இருந்த இரண்டு கால்களையும் அகற்றி வைத்துக் கொண்டு அவன் உடலை நீட்டிப்படுத்தான்.
செல்க்காஷ்தான் முதலில் எழுந்தான். பரபரப்புடன் அவன் சுற்றிலும் பார்த்தான். எதைப்பற்றியோ உறுதிப்படுத்திக் கொள்வதைப் போல அவன் கவ்ரில்லா படுத்திருந்த இடத்தைப் பார்த்தான். கவ்ரில்லா மகிழ்ச்சியுடன் குறட்டை விட்டுக் கொண்டு தூங்கிக் கொண்டிருந்தான். அவன் வெளுத்த உடலைக் கொண்டவனாக இருந்தாலும் வெயில் காரணமாக கருத்துப்போய் காணப்பட்ட அவனுடைய முகத்தில் ஒரு புன்னகை தவழ்ந்து கொண்டிருந்தது. ஒரு நீண்ட பெருமூச்சை விட்டவாறு செல்க்காஷ் அந்தச் சணலால் ஆன ஏணி வழியாக ஏறினான். சரக்கை இறக்கப் பயன்படுத்தும் ஒரு துவாரம் வழியாக வெள்ளை ஈயத்தின் நிறத்திலிருந்த வானத்தின் ஒரு கீற்று கீழே எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. நேரம் நன்கு வெளுத்துவிட்டிருந்தது. ஆனால், மழைக்காலத்தின் மற்ற எல்லா நாட்களைப் போல அந்த நாளும் துடிப்பு இல்லாமலிருந்தது.
இரண்டு மணி நேரத்திற்குள் செல்க்காஷ் திரும்பி வந்தான். அவனுடைய முகம் சிவந்து போயிருந்தது. கிருதாக்கள் மிகவும் அடர்த்தியாக மாறிவிட்டிருந்தன. நல்ல தரமான, வேட்டைக்குப் போகிறவர்கள் பயன்படுத்தக்கூடிய தோலால் ஆன மேலாடையையும் அவன் அணிந்திருந்தான். அவனுக்கு அவை மிகவும் பொருந்தியிருந்தன. ஒரு பட்டாளத்துக்காரனைப்போல அப்போது அவன் இருந்தான்.
"எழுந்திருடா பையா"- அவனைக் கால்களால் தடவியவாறு செல்க்காஷ் சொன்னான்.
பாதி தூக்கத்திலிருந்த கவ்ரில்லா வேகமாக எழுந்தான். பயம் ஆக்கிரமித்திருந்த கண்களால் அவன் செல்க்காஷைப் புரிந்து கொள்ள முடியாததைப் போல வெறித்துப் பார்த்தான். செல்க்காஷ் அதைப் பார்த்து விழுந்து விழுந்து சிரித்தான்.
"உங்களைப் பார்க்குறப்போ ரொம்பவும் கம்பீரமா இருக்கீங்க" விரிந்த சிரிப்புடன் கவ்ரில்லா சொன்னான். "இப்போ நீங்க உண்மையாகவே ஒரு ஜென்டில்மேன்தான்."
"ஆனா... இது அதிக நேரம் இருக்காது"- அவன் சொன்னான். "சரி... அது இருக்கட்டும். உனக்கு மனசுல தைரியமே கிடையாது. நேற்று ராத்திரி நீ எத்தனை தடவை சுயஉயர்வை இழந்தே?"
"என்னைக் குற்றம் சொல்லி பிரயோஜனம் இல்ல. முன்பு ஒரு தடவைகூட எனக்கு இந்த மாதிரியான ஒரு அனுபவம் கிடைச்சதே இல்ல. உயிரே போயிருச்சுன்னுதான் நான் நினைச்சேன்"- கவ்ரில்லா சொன்னான்.
"இனியொரு தடவை அப்படி முயற்சி பண்ணிப் பார்க்க விருப்பமிருக்கா?"
"இன்னொரு தடவையா? அதை இப்போது என்னால சொல்ல முடியாது. சரி... அப்படிச் செய்தால் எனக்கு என்ன கிடைக்கும்?"
"அப்படி நடந்தா, உனக்கு இருநூறு ரூபிள்கள் கிடைக்கும்."
"இருநூறு ரூபிள்களா? அப்படின்னா நான் அதைச் செய்யத் தயார்?"
"அந்த சமயத்துல உன் உயிர் போயிருச்சன்னா?"
"இல்ல... நான் அதை இழக்க விரும்பல"- கவ்ரில்லா சிரித்துக்கொண்டே சொன்னான். "அதை நான் இழக்கக்கூடாது. வாழ்வதற்குத் தேவையான பணத்தை நான் சம்பாதிப்பேன்."
செல்க்காஷ் மகிழ்ச்சியுடன் சிரித்தான்.
"சரி... விளையாட்டா பேசினது போதும் நாம கரைக்குப் போவோம்."
அவர்கள் மீண்டும் படகில் ஏறினார்கள். செல்க்காஷ் சுக்கானைப் பிடித்தான். கவ்ரில்லா துடுப்பைப் போட்டான். அவர்களுக்கு மேலே சாம்பல் நிறத்தைக் கொண்ட மேகங்கள் போர்வை போர்த்திருந்தன. கடலுக்கு அப்போது இளம் பச்சை நிறம் வந்து சேர்ந்திருந்தது. கடலலைகள் படகை சந்தோஷத்துடன் வந்து மோதி விளையாடின. படகின் ஓரங்களில் அலைகள் நுரைகளைக் கக்கின. தூரத்தில் மஞ்சள் நிறத்தைக் கொண்ட மணல் பரப்பின் ஒரு பகுதி தெரிந்தது. அவர்களுக்குப் பின்னால் கடல் விரிந்து கிடந்தது. கப்பல்கள் பறந்து காணப்பட்டன. கட்டுமரங்கள் ஏராளமாக அவர்களின் இடது பக்கத்தில் நின்றிருந்தன. அதற்குப் பின்னால் துறைமுகத்தின் கட்டிடங்கள் வரிசயாக இருந்தன. துறையிலிருந்து கிளம்பி வந்த ஒரு முழக்கம் அலைகளின் ஆர்ப்பரிப்புடன் ஒன்று சேர்ந்து கரகரப்பான இசையாக முழங்கியது. பனிப்படலம் எல்லாவற்றையும் தெளிவாகப் பார்க்க முடியாத அளவிற்கு மூடிவிட்டிருந்தது.
"ஏய், இன்னைக்கு ராத்திரி ஏதாவது நடக்க வாய்ப்பு இருக்கு"- கடலைப் பார்த்தவாறு தலையை ஆட்டிக் கொண்டு செல்க்காஷ் உரத்த குரலில் அவனை அழைத்துச் சொன்னான்.
"காற்று கடுமையாக இருக்குமோ?" துடுப்பால் கடலலைகளை வேகமாகக் குத்திக் கொண்டிருப்பதற்கு மத்தியில் கவ்ரில்லா கேட்டான். காற்று அடித்துக் கிளப்பிவிட்ட அலைகளின் நுரை பட்டு அவனுடைய ஆடைகள் நனைந்திருந்தன.
"இருக்கலாம்"- செல்க்காஷ் சொன்னான்.
எதையோ விசாரிக்கும் எண்ணத்துடன் கவ்ரில்லா அவனைப் பார்த்தான்.
செல்க்காஷ் அந்த விஷயத்தைப் பற்றி எதுவும் கூற விரும்பவில்லை என்பது தெரிந்ததும் அவன் கேட்டான். "சரி... அவங்க உங்களுக்க என்ன தந்தாங்க?"
"இங்க பாரு..."- செல்க்காஷ் தன் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு பொருளை எடுத்துக் காண்பித்தான்.
புதிய கசங்காத நோட்டுகளைப் பார்த்ததும் கவ்ரில்லாவின் கண்கள் பளபளப்பாயின.
"நீங்க பொய் சொல்றீங்கன்னு நான் நினைச்சேன். இதுல எவ்வளவு இருக்கு?"
"ஐந்நூற்றி நாற்பது."
"அடடா!"- கவ்ரில்லா வியப்படைந்து நீண்ட பெருமூச்சு விட்டான். திரும்பவும் பாக்கெட்டிற்குள் போகிற நோட்டுகளை அவன் ஆர்வம் பொங்கிய கண்களால் பார்த்தான். அவன் உரத்த குரலில் சொன்னான். "கடவுளே... அந்தப் பணம் எனக்குக் கிடைச்சிருந்தா..." அதைத்தொடர்ந்து அவன் கவலையுடன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.
"நண்பனே... நாம ரெண்டுபேரும் சேர்ந்து இதைக் கொண்டாடுவோம்." செல்க்காஷ் மகிழ்ச்சியுடன் உரத்த குரலில் அவனிடம் சொன்னான்: "நாம இந்த நகரத்தை ஒரு வழி பண்ணுவோம். பயப்படாதே. உனக்கு உன் பங்கு கிடைக்கும். நான் உனக்கு நாற்பது ரூபிள்கள் தர்றேன். அது போதாதா உனக்கு? இனி நீ ஏதாவது சொல்லணும்னு நினைச்சா, என்கிட்ட மனம் திறந்து சொல்லலாம்."
"சரி... உங்களுக்கு ஆட்சேபணை இல்லைன்னா, அந்தப் பணம் முழுவதையும் நான் எடுத்துக்குறேன்."
கவ்ரில்லா எதிர்பார்ப்புடன் பணிவாக நின்றிருந்தான்.
"ஏய்... டேய் பொம்மைப் பயலே, நீ என்னடா சொல்ற? முழுப் பணத்தையும் எடுத்துக்குறேன்னா...? டேய் நீ முழு பணத்தையும் எடுத்துக்கோ. எடுத்துட்டுப் போய்த் தொலைடா. இவ்வளவு பணத்தையும் வச்சிக்கிட்டு என்ன செய்யிறதுன்னு எனக்குத் தெரியாதுடா சரி, இதுல இருந்து கொஞ்சம் பணத்தை நீ கொண்டு போ."
செல்க்காஷ் அந்த நோட்டுகளை கவ்ரில்லாவுக்கு முன்னால் நீட்டினான். துடுப்புகளை நீரில் விட்ட அவன் நடுங்கிக்கொண்டிருக்கும் கைகளால் ஆவேசத்துடன் அதை வேகமாக வாங்கினான். அந்தப் பணத்தை சட்டைக்குள் திணித்தான். அப்படிச் செய்தபோது அவனுடைய ஆர்வம் நிறைந்த கண்கள் செல்க்காஷின் உடம்பையே வெறித்துப் பார்த்தன. தொண்டையில் காயம் இருப்பதைப்போல அவன் மிகவும் சிரமப்பட்டு சுவாசம்விட்டான்.
வெறுப்பு நிறைந்த சிரிப்புடன் செல்க்காஷ் அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தான். பயந்து நடுங்கிய ஒரு மனிதனைப்போல தலையைக் குனிந்துகொண்டு கவ்ரில்லா மிகவும் வேகமாகத் துடுப்புகளைப் போட ஆரம்பித்தான். அவனுடைய தோளும் காதுகளும் புடைத்துக் கொண்டு காணப்பட்டன.
"நீ ஒரு பேராசை பிடிச்ச பிச்சைக்காரப்பய... அது நல்லது இல்ல. ஆனா உன்கிட்ட இருந்து வேற என்ன எதிர்பார்க்க முடியும்? என்ன இருந்தாலும் நீ ஒரு கிராமத்து ஆளாச்சே."- செல்க்காஷ் அவனைப் பார்த்து கிண்டல் பண்ணினான்.
"பணம் கையில இருந்தா ஒரு மனிதன் எதை வேணும்னாலும் செய்வான்" திடீரென்று உண்டான ஆவேசத்தின் உந்துதலில் கவ்ரில்லா உரத்த குரலில் சத்தமாகச் சொன்னான். பிறகு ஒன்றுக்கொன்று தொடர்பே இல்லாத சில விஷயங்களை அவன் புலம்பிக் கொண்டிருந்தான். கிராமத்தில் பணம் இல்லாதவர்களின் வாழ்க்கைக்கும் பணக்காரர்களின் வாழ்க்கைக்குமிடையே இருக்கும் வித்தியாசத்தை அவன் சொன்னான். உயர்வு, சவுகரியங்கள், சந்தோஷம்...
செல்க்காஷ் அவன் கூறிய ஒவ்வொன்றையும் மிகவும் கவனமாகக் கேட்டான். அவனுடைய கவலையைப் பார்த்து செல்க்காஷின் சிந்தனைவயப்பட்ட கண்கள் சிறிதாயின. அவ்வப்போது அவன் புன்னகைத்தான்.
"நாம வந்து சேர்ந்துட்டோம்"- கவ்ரில்லாவின் தொடர்பேச்சுக்கு அவன் தடை போட்டான்.
ஒரு அலையில் பட்டு படகு கரைக்கு வந்தது.
"இதுதான் கரையின் எல்லை. அலைகளில் சிக்கி நழுவிப் போகாம இருக்குறதுக்கு நாம இந்தப் படகை இன்னும் கொஞ்சம் கரைப்பக்கம் ஏற்றி வைக்கணும். தேவைப்படுறவங்க யாராவது இங்கு வராம இருக்கமாட்டாங்க. இனி நாம பிரியலாம். நகரத்துல இருந்து எட்டு மைல் தூரத்துல இப்போ நாம் நின்னுக்கிட்டு இருக்கோம். நீ நகரத்துக்குத் திரும்பப் போறியா?"
செல்க்காஷின் முகத்தில் ஒரு குறும்புக்காரனின் சிரிப்பு தாண்டவமாடியது. தனக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய அதே நேரத்தில் கவ்ரில்லாவிற்கு ஏமாற்றம் தரக்கூடிய ஒரு விஷயத்தை செல்க்காஷ் எதிர்பார்த்தான். அவன் தன் கைகளைப் பாக்கெட்டிற்குள் நுழைத்து நோட்டுகளைக் கசக்கி சத்தம் உண்டாக்கினான்.
"இல்ல... நான் போறதா இல்ல..." மூச்சை அடைப்பதைப்போல தடுமாறிய குரலில் அவன் சொன்னான்.
செல்க்காஷ் அவனையே உற்றுப் பார்த்தான். "உனக்கு என்ன ஆச்சு?" அவன் கேட்டான்.
"ஒண்ணுமில்ல"- கவ்ரில்லாவின் முகம் ஆரம்பத்தில் சிவந்து பின்னர் வெளிறியது. செல்க்காஷிற்கு நேராகக் குதித்துப் பாய்வதைப்போல, அசாத்தியமான ஒரு செயலைச் செய்வதைப்போல அவன் மணலில் எட்டுகள் வைத்துக் கொண்டிருந்தான்.
பையனின் அந்த வினோதமான செயலைப் பார்த்து செல்க்காஷுக்கு ஒருவித பதைபதைப்பு உண்டானது. இனி என்ன நடக்கும் என்பதை எதிர்பார்த்து அவன் நின்றிருந்தான்.
கவ்ரில்லா குலுங்கிக் குலுங்கிச் சிரித்தான். அதைக்கேட்கும் போது அவன் தேம்பித் தேம்பி அழுகிறானோ என்பதைப்போல இருந்தது. அவன் தலையைக் குனிந்திருந்ததால் அவனுடைய முகம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்க்க செல்க்காஷால் முடியவில்லை. ஆனால், அவனுடைய காதுகளின் நிறம் தோளிலிருந்து வெளுப்பாக மாறுவதை அவன் கவனித்தான்.
"உனக்கு என்ன ஆச்சு?"- ஏமாற்றம் உண்டான உணர்வுடன் தன் கைகளை விரித்துக் கொண்டு செல்க்காஷ் கேட்டான்: "உனக்கு என் மீது அந்த அளவுக்கு அன்பு இருக்கா என்ன? நீ ஏன்டா ஒரு பெண்ணைப்போல, நெளிஞ்சிக்கிட்டு இருக்கே? என்னை விட்டுப் பிரிந்துபோக உனக்கு அவ்வளவு கஷ்டமாக இருக்கா என்ன? மனம்திறந்து சொல்லுடா முதுகெலும்பு இல்லாதவனே. இல்லாட்டி நான் கிளம்புறேன்."
"நீங்க போறீங்களா?" கவ்ரில்லா உரத்த குரலில் கத்தினான்.
ஆள் அரவமற்று அமைதியாக இருந்த கடற்கரை அந்தச் சத்தத்தைக் கேட்டு அதிர்ந்தது. அலைகள் அந்த மணல் பரப்பில் வந்து மோதி மேல்மூச்சு கீழ்முச்சு விட்டுக் கொண்டிருந்தன. செல்க்காஷ் கூட அவனுடைய கூப்பாட்டைக் கேட்டு அதிர்ந்துதான் போய்விட்டான். திடீரென்று கவ்ரில்லா செல்க்காஷின் கால்களில் விழுந்தான். அவன் செல்க்காஷின் கால்களைத் தன்னுடைய கைகளால் இறுக்கினான். செல்க்காஷ் மூச்சு வாங்கியவாறு அந்த மணலில் விழுந்து பற்களைக் கடித்தவாறு தன்னுடைய நீண்ட- பலம் கொண்ட கைகளால் அவனை அடிப்பதற்காக ஓங்கினான். ஆனால், கவ்ரில்லாவின் கெஞ்சல் அந்த அடியைத் தடுத்தது. "நீங்க நல்ல மனிதர்தானே? அந்தப் பணம் முழுவதையும் எனக்குத் தாங்க. கிறிஸ்துவின் அன்பை மனசுல வச்சிக்கிட்டாவது அதை எனக்குத் தாங்க. அந்தப் பணத்தை வச்சு நீங்க என்ன செய்யப்போறீங்க? பாருங்க... ஒரு ராத்திரியில... ஒரே ஒரு ராத்திரியில இவ்வளவு பணம் கிடைக்குதுன்னா... எனக்கு இவ்வளவு பணம் கிடைக்கணும்னா, நான் எத்தனையோ வருடங்கள் கஷ்டப்பட்டு உழைக்கணும். அந்தப் பணத்தை எனக்குத் தந்திடுங்க. நான் உங்களுக்காகக் கடவுள்கிட்ட வேண்டிக்கிறேன். உங்க ஆத்மாவுக்காக நான் பிரார்த்தனை செய்யிறேன். ஒருவேளை, நீங்க அந்தப் பணத்தை காத்துல பறக்க விட்டுடுவீங்க. ஆனா நான் அப்படியா செய்வேன்? நான் அதை ரொம்பவும் பாதுகாத்து வச்சிருப்பேன்.
அதை எனக்குத் தாங்க. அதுனால உங்களுக்கு என்ன பிரயோஜனம்? உங்களால அந்தப் பணத்தை ரொம்பவும் எளிதா சம்பாதிக்க முடியும். முதலாளியாகுறதுக்கு உங்களுக்கு ஒருநாள் ராத்திரி போதும். வாழ்க்கையிலே ஒரு தடவையாவது நீங்க ஒரு நல்ல காரியத்தைச் செய்யுங்க. நீங்க எல்லாத்தையும் இழந்த ஒரு மனிதர். உங்களுக்கு முன்னால எதுவுமே இல்ல... நான் அந்தப் பணத்தை வச்சு என்னவெல்லாம் செய்வேன்னு உங்களுக்குத் தெரியுமா? அந்தப் பணத்தை எனக்குத் தாங்க..."
செல்க்காஷ் பயந்துபோய்விட்டான். அவன் அதிர்ச்சியில் உறைந்துபோய் நின்றுவிட்டான். கோபத்துடன் தன்னுடைய பலம்மிக்க கைகளை ஊன்றியவாறு அவன் மணலில் உட்கார்ந்தான். அவன் ஒரு வார்த்தைகூட பேசவில்லை. கெஞ்சியவாறு தன் முழங்காலோடு சேர்ந்து இருந்த கவ்ரில்லாவின் முகத்தையே அவனுடைய கண்கள் வெறித்துப் பார்த்தன. அடுத்த நிமிடம் செல்க்காஷ் வேகமாக அந்த இடத்தை விட்டு எழுந்தான். பாக்கெட்டிற்குள் தன் கையை நுழைத்து அந்த நோட்டுகள் முழுவதையும் வெளியே எடுத்து அவன் கவ்ரில்லாவிற்கு முன்னால் எறிந்தான்.
"இந்தா பிடி..." அந்தப் பேராசை பிடித்த பிச்சைக்காரன் மீது உண்டான வெறுப்பினாலும் கோபத்தாலும் உணர்ச்சிவசப்பட்ட அவன் உரத்த குரலில் கத்தினான். அந்த நோட்டுகளை அவனுக்கு முன்னால் எறிந்தபோது தான் ஏதோ மிகப்பெரிய ஒரு செயலைச் செய்துவிட்டதைப் போல அவன் உணர்ந்தான்.
"உனக்கு அதிகமா தரணும்னு நான் நினைச்சிருந்தேன். நேற்று ராத்திரி என் கிராமத்தைப் பற்றி நினைச்சப்போ என் மனசு ஒரு மாதிரி ஆயிடுச்சு. இந்த ஏழைப் பையனுக்கு உதவணும்னு அப்போ நினைச்சேன். ஆனா நீ அதைக் கேட்பியான்னு நான் காத்திருந்தேன். டேய், கோழை பிச்சைக்காரா! நீ அதே மாதிரியே நடந்திருக்கே. பணத்துக்காக நீ இந்த அளவுக்குப் புலம்பணுமாடா? முட்டாள்... பேராசை பிடிச்ச பிசாசு... மரியாதையில்லாத பிச்சைக்காரப்பயலே... தேவைப்பட்டா, ஐந்து ரூபிள்களுக்காக உன்னையே நீ வித்தாலும் வித்திடுவே."
"கடவுள் உங்க செயல்களைப் பார்த்துக்கிட்டு இருப்பாரு. நான் யாருன்னு உங்களுக்குத் தெரியுமா? எப்படி நான் பணக்காரனா ஆனேன்னு உங்களுக்குத் தெரியுமா?" சந்தோஷப் பெருக்கால் நெளிந்தவாறு பணத்தை சட்டைக்குள் சொருகி வைத்த கவ்ரில்லா சொன்னான். "கடவுள் உங்களைக் காப்பாற்றுவார். நண்பரே, நான் உங்களை ஒருபோதும் மறக்கமாட்டேன். ஒருபோதும்... நான் என் மனைவியையும் குழந்தைகளையும் உங்களுக்காகப் பிரார்த்தனை செய்ய சொல்வேன்."
கவ்ரில்லாவின் சந்தோஷ வார்த்தைகளைக் கேட்டபோது அவனுடைய முகத்தில் ஒரு உண்மையான மனிதனின் வெளிப்பாட்டைப் பார்த்தபோது, திருடனும் குடிகாரனுமான தான் கூட இந்த அளவிற்குக் காலில் விழமாட்டோம் என்று அவன் நினைத்தான். ஒருமுறை கூட அவனுடைய வாழ்க்கையில் அவன் அப்படி நடக்கமாட்டான். அந்த எண்ணங்களும் கொள்கைகளும் அவனுடைய மனதில் சுதந்திர உணர்வை நிறையச் செய்தன. கவ்ரில்லாவுடன் அந்தக் கடற்கரையில் இருக்க அது அவனைத் தூண்டியது.
"நீங்க என்னை ஒரு மகிழ்ச்சியான மனிதானா மாத்திட்டீங்க..." செல்க்காஷின் கைகளைப் பிடித்து தன்னுடைய முகத்தோடு சேர்த்து வைத்துக் கொண்டு கவ்ரில்லா சொன்னான்.
எதுவும் பேசாமல் ஒரு ஓநாயைப்போல செல்க்காஷ் சிரித்தான்.
"கடல்ல இருக்குறப்போ நான் ஒரு விஷயம் செய்யணும்னு நினைச்சேன்"- கவ்ரில்லா தொடர்ந்தான். "படகைச் செலுத்துறப்போ நான் நினைச்சேன். இந்த ஆளை தள்ளிவிட்டுடலாம்னு. ஆமா... உங்களை துடுப்பை வச்சு... தலையில ஒரு போடு போட்டுடலாமான்னு நினைச்சேன். அதுக்குப் பிறகு பணம் என் கைக்கு வந்திடும். இந்த ஆளை... அதாவது உங்களைக் கடலுக்குள்ள தள்ளி விட்டுர்றது... யாரு தேடப்போடறது? அப்படியே பிணத்தைக் கண்டுபிடிக்கிறாங்கன்னுகூட வச்சிக்குவோம். யார் அதைச் செய்தது, எப்படிச் செய்தாங்கன்னு விசாரிக்கிறதுக்கு யாருக்கு நேரம் இருக்கு? அந்த அளவுக்கு யாருக்கும் தேவைப்பட்ட ஆள் இல்லை நீங்க. உங்களை யாருக்குமே அவசியமில்லை. ரெண்டாவது ஒரு தடவை யாரும் உங்களைப் பற்றி நினைக்கவே மாட்டாங்க."
"அந்தப் பணத்தை இங்கே தாடா"- கவ்ரில்லாவின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டு செல்க்காஷ் உரத்த குரலில் கத்தினான்.
கவ்ரில்லா ஒன்றிரண்டு தடவைகள் அந்தப் பிடியிலிருந்த தன்னை விடுவித்துக் கொள்ள முயன்றான். ஆனால், செல்க்காஷின் கைகள் ஒரு பாம்பைப்போல அவனைச் சுற்றின. சட்டை கிழிபடும் சத்தம். கண்களை விழித்தாறு காற்றில் கைகளை அலைய விட்டவாறு கவ்ரில்லா மணலில் மல்லாக்கப் போய் விழுந்தான். அவனுடைய கால்கள் சோர்ந்துபோய் மணலில் கிடந்து உழன்றன. ஒரு கழுகைப்போல செல்க்காஷ் அவனுக்கு மேலே குனிந்தவாறு நின்றிருந்தான். அவன் பற்களை 'நறநற'வென்று கடித்தான். கிருதா மயிர்க்கூச்செறிந்து நின்றது. அவன் ஒரு வறண்ட சிரிப்பு சிரித்தான். இந்த அளவிற்கு வேதனைப்படுகிற மாதிரி வாழ்க்கையில் ஒருமுறை கூட அவன் காயப்பட்டதில்லை. முன்பு எந்தச் சமயத்திலும் அவனுக்கு இந்த அளவிற்குக் கோபம் வந்ததும் இல்லை.
"இப்போ உனக்குச் சந்தோஷம்தானே?"- செல்க்காஷ் சிரித்தான். அவன் நகரத்தை இலக்கு வைத்து நடக்க ஆரம்பித்தான். அவன் ஐந்தோ ஆறோ கஜங்கள்தான் நடந்திருப்பான். அதற்குள் ஒரு பூனையைப்போல வேகமாக எழுந்த கவ்ரில்லா பெரிய ஒரு கல்லை எடுத்து அவன் மீது எறிந்தான். "இந்தாங்க... இதைப் பிடிங்க..."
கோபத்துடன் கைகளைத் தலைமீது வைத்துக் கொண்டு செல்க்காஷ் கவ்ரில்லாவைப் பார்த்தான். அடுத்த நிமிடம் ஓடியவாறு அவன் மணலில் தலைக் குப்புற விழுந்தான். கவ்ரில்லா பயத்தால் நடுங்கிப் போய்விட்டான். ஒரு காலைத் தரையில் ஊன்றிக் கொண்டு தலையைத் தூக்க செல்க்காஷ் முயற்சித்துப் பார்த்தான். ஒரு அறுந்த வீணைக் கம்பியைப் போல நடுங்கியவாறு அவன் மணலில் மீண்டும் விழுந்தான்.
கவ்ரில்லா அந்தக் கடற்கரை முழுவதும் ஓடினான். பனிப்படலம் மூடியிருந்த அந்த சமவெளிக்கு மேலே நின்று கொண்டிருந்த ஒரு கார்மேகக் கூட்டத்திற்குக் கீழே போய் அவன் நின்றான். கடலலைகள் மணற்பரப்பு மீது வேகமாக வந்து ஏறிக் கொண்டிருந்தன. அலைகள் பயங்கரமாக இரைந்தன. நீர்த்துளிகள் காற்றில் தெறித்து விழுந்தன.
மழை பெய்ய ஆரம்பித்தது. முதலில் தனித்தனி துளிகளாக பெய்ய ஆரம்பித்தது மழை. அடுத்த சில நிமிடங்களில் வானத்திலிருந்து கீழ்நோக்கிப் பாயும் சிறு அருவிகள் போல் பெரும்மழையாக அது மாறியது. மழையின் அருவிகள் அந்த மணல் பரப்பையும் கடலையும் மூடும் ஒரு வலையைப்போல ஆயின. கவ்ரில்லா அதற்குள் அகப்பட்டுக் கொண்டான். கடலின் ஓரமாக மணலில் கிடந்த ஒரு மனிதனையும் மழையையும் தவிர சிறிது நேரத்திற்கு வேறு எதுவும் அங்கு கண்ணில் படவில்லை. கவ்ரில்லா இருட்டுக்குள்ளிருந்து ஒரு பறவையைப்போல வேகமாக வந்தான்.
செல்க்காஷுக்கு அருகில் முழங்காலிட்டு அமர்ந்து அவனைத் தூக்குவதற்கு அவன் முயற்சி செய்தான். சிவந்த, சூடான, ஒட்டிப்பிடிக்கும் ஏதோ ஒரு பொருளை அவனுடைய கை தொட்டது. அடுத்த நிமிடம் அதிர்ச்சியடைந்து அவன் பின்னோக்கி நகர்ந்தான். அவனுடைய வெளிறிப்போன முகத்தில் இனம்புரியாத உணர்ச்சிகள் தோன்றின.
"எழுந்திருங்க சகோதரரே... எழுந்திருங்க" மழையின் ஆர்ப்பரிப்பிற்கு மத்தியில் செல்க்காஷின் காதில் அவன் மெதுவான குரலில் சொன்னான்.
செல்க்காஷ் கண்களைத் திறந்தான். அவன் கவ்ரில்லாவைக் கையால் தள்ளினான்.
"இங்கிருந்து போடா" அவன் கோபத்துடன் முணுமுணுத்தான்.
"சகோதரரே... என்னை மன்னிச்சிடுங்க. அவையெல்லாம் சாத்தானின் வார்த்தைகள்" செல்க்காஷின் உள்ளங்கையில் முத்தமிட்டவாறு நடுங்கிக் கொண்டே அவன் சொன்னான்.
"இங்கேயிருந்து போடா. என்னை விட்டு போன்னுதானே நான் உன்கிட்ட சொன்னேன்..."
"என் மனசுல இருக்கிற பாவத்தை இல்லாமல் செய்யுங்க சகோதரரே. என்னை மன்னியுங்க சகோதரரே!"
"போ... இங்கேயிருந்து போ. நரகத்துப் போய்த் தொலைடா" என்று கோபத்துடன் கூறியவாறு செல்க்காஷ் மணலில் எழுந்து நின்றான். அவனுடைய முகம் வெளிறிப்போய்க் காணப்பட்டது. முகத்தில் கோபம் குடிகொண்டிருந்தது. அவனுடைய கண்களில் சோர்வு தெரிந்தது. தூக்கத்தில் இருப்பதைப் போல அவன் தன் கண்களை மூடினான். "இனி உனக்கு என்ன வேணும்? நீ விருப்பப்பட்டதையெல்லாம் நீ செஞ்சே. இனி இங்கேயிருந்து போடா..." கவ்ரில்லாவை மிதிப்பதற்காக அவன் முயன்றான். அவனால் அதைச் செய்ய முடியவில்லை. கவ்ரில்லா கையால் தாங்கிக் கொள்ளாமல் போயிருந்தால் அந்த வீண் முயற்சியில் அவன் மணலில் நிலைகுலைந்து விழுந்திருப்பான். செல்க்காஷின் முகம் கவ்ரில்லாவின் முகத்திற்கு நேராக இருந்தது. அந்த முகங்கள் இரண்டும் வெளிறியும் அச்சம் உண்டாக்கக் கூடியதாகவும் இருந்த.ன
"இங்கேயிருந்து போ..." அவன் தன்னுடைய நண்பனின் விழித்திருந்த கண்கள் மீது காரித்துப்பினான்.
அதை லாவகமாக கவ்ரில்லா துடைத்துக் கொண்டான்.
"நீங்க என்னை என்ன வேணும்னாலும் செய்யலாம்"- அவன் செல்க்காஷைப் பார்த்து முணுமுணுத்தான். "நான் ஒரு வார்த்தைகூட சொல்லமாட்டேன். கிறிஸ்துவை மனசுல நினைச்சுக்கிட்டு என்னை நீங்க மன்னிக்கணும்."
"இங்கேயிருந்து போடா. ஒரு மனிதனும் உன்னை மாதிரி கேடுகெட்ட செயலைச் செய்யமாட்டான்டா..." செல்க்காஷ் கோபத்தில் கத்தினான். அவன் தன்னுடைய சட்டைக்குள் கையை விட்டு சட்டையிலிருந்து ஒரு துண்டுத் துணியைக் கிழித்து தலையில் காயம்பட்ட இடத்தில் சுற்றிக் கட்டினான். அப்போது அவன் வேதனையால் தன் பற்களைக் கடித்தான்.
"நீ அந்தப் பணத்தை எடுத்தியா?" பற்களைக் கடித்துக் கொண்டே அவன் கேட்டான்.
"இல்ல சகோதரா.-.. நான் அதை எடுக்க மாட்டேன். எனக்கு அது மேல விருப்பமும் இல்ல. அந்தப் பணத்தால தொல்லைகள்தான் உண்டாகுது."
செல்க்காஷ் சட்டைப் பாக்கெட்டிற்குள்ளிருந்து ஒரு கட்டு நோட்டுகளை வெளியே எடுத்தான். அதிலிருந்து ஒரு நூறு ரூபிள் நோட்டை மட்டும் எடுத்துக் கொண்டு, மீதியை அவன் கவ்ரில்லாவிடம் நீட்டினான்.
"இதையும் கொண்டு போடா."
"இல்ல சகோதரா... எனக்கு அது வேண்டாம். நான் செய்த தப்புக்கு என்னை நீங்க மன்னிக்கணும்."
"இதை எடுத்துட்டுப் போகச் சொல்லி நான் சொன்னேன்" செல்க்காஷ் கண்களை உருட்டியவாறு பயமுறுத்துகிற குரலில் கத்தினான்.
"என்னை மன்னிக்கணும். மன்னிக்கலைன்னா நான் அந்தப் பணத்தை வாங்கிக்க மாட்டேன்" பரிதாபமான குரலில் கவ்ரில்லா சொன்னான். சொல்லிவிட்டு செல்க்காஷின் கால்களுக்கருகில் மழையால் நனைந்திருந்த மணலில் அவன் தலைக்குப்புற விழுந்தான்.
"அது பொய்... டேய், நீ அதை எடுப்பே..." முழுமையான நம்பிக்கையுடன் செல்க்காஷ் சொன்னான். முடியைப் பிடித்து அவனுடைய முகத்தைத் தூக்கியவாறு செல்க்காஷ் அந்த நோட்டுகளை அவனுடைய மூக்கிற்குக் கீழே வைத்தான்.
"நீ இதை எடுக்கணும். எடுத்தே ஆகணும். இது நீ சம்பாதிச்சதுதான் பயப்படாம நீ இதை எடு. ஒரு மனிதனை நீ கிட்டத்தட்ட முடிவுக்கு கொண்டு வந்துட்டேன்றதைப் பற்றி நீ வெட்கப்படல்லாம் வேண்டாம். என்னைப்போல இருக்கிற ஒரு மனிதனைக் கொன்னா அதை யாரும் கண்டுபிடிக்கக்கூட போறது இல்ல. அப்படியே கண்டுபிடிச்சாலும் அவங்க உனக்கு நன்றி சொல்லுவாங்க. இந்தா... இந்தப் பணத்தை எடுத்துட்டுப்போ..."
செல்க்காஷ் தமாஷாகப் பேசுவதைப் பார்த்ததும் கவ்ரில்லாவின் மனபாரம் குறைந்தது. அவன் பணத்தில் தன் கையை வைத்தான்.
"சகோதரரே நீங்க என்னை மன்னிப்பீங்களா? தயவு செய்து மன்னிப்பு தாங்க" கண்ணீருடன் அவன் கெஞ்சினான்.
"என் நண்பனே..." மேல்மூச்சு விட்டவாறு எழுந்து நின்று கொண்டே செல்க்காஷ் தமாஷான குரலில் சொன்னான்: "மன்னிப்பு கொடுக்க இதுல என்ன இருக்கு? மன்னிப்பு தர எதுவுமே இல்ல. இன்னைக்கு நீ என்னை வேட்டையாடுற. நாளைக்கு நான் உன்னை வேட்டையாடுவேன்."
"ஓ... சகோதரரே... அப்படியில்ல... சகோதரரே..."
திருப்தி உண்டாகாததைப்போல தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டியவாறு கவ்ரில்லா நீண்ட பெருமூச்சு விட்டான். செயற்கையான ஒரு புன்சிரிப்புடன் செல்க்காஷ் அவனுக்கு முன்னால் வந்து நின்றான். அவனுடைய தலையில் கட்டியிருந்த துணியில் சிவப்பு நிறம் அதிகமாயிருந்தது. அது ஒரு துருக்கித் தொப்பியை ஞாபகப்படுத்தியது.
மழை மிகப்பெரிய மழையாகி விட்டிருந்தது. கடல் பயங்கரமாகச் சீறிக் கொண்டிருந்தது. அலைகள் கோபத்துடன் கரையை நோக்கி வந்து மோதிக் கொண்டிருந்தன.
அவர்கள் இருவரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருந்தார்கள்.
"சரி... குட் பை..." கிண்டலுடன் விடை கூறிவிட்டு செல்க்காஷ் போவதற்காகத் திரும்பினான்.
அவன் மேலும் கீழும் மூச்சுவிட்டவாறு நடந்தான். அவனுடைய கால்கள் ஒன்றோடொன்று பின்னின. தலை எங்கே இல்லாமற்போய்விடுமோ என்பது மாதிரி அவன் தன் தலையை இறுகப் பிடித்துக் கொண்டான்.
"சகோதரா... இனியாவது என்னை நீங்க மன்னிக்கணும்"- கவ்ரில்லா மீண்டும் ஒருமுறை கெஞ்சினான்.
"அது பரவாயில்லை" முன்னோக்கி நடப்பதற்கிடையில் மிகவும் மெதுவான குரலில் செல்க்காஷ் சொன்னான்.
நடப்பதற்கு மத்தியில் செல்க்காஷ் தடுமாறி விழ இருந்தான். தன் இடது கையால் தலையை இறுகப் பிடித்திருந்த அவன் வலதுகையால் தன் கறுத்த மீசையை தடவியவாறு நடந்தான்.
அருவியைப் போல விழுந்து கொண்டிருந்த அந்தப் பெரும் மழையில் அவன் மறைவதுவரை கவ்ரில்லா அவனையே பார்த்தவாறு நின்றிருந்தான்.
நனைந்த தொப்பியைக் கழற்றிய அவன் கையிலிருந்த நோட்டுகளை எண்ணிப் பார்த்தான். ஒரு நிம்மதிப் பெருமூச்சை விட்டவாறு அவன் அந்த நோட்டுகளை தன் சட்டைக்குள் மறைத்து வைத்துவிட்டு செல்க்காஷ் நடந்து சென்ற திசைக்கு நேர் எதிர் திசையை நோக்கி அழுத்தமாக நடந்து சென்றான்.
பலம்மிக்க அலைகளை கரையை நோக்கி எறிந்து கொண்டு நுரைகளையும் குமிழிகளையும் துப்பியவாறு கடல் புரண்டு கொண்டிருந்தது. நீரிலும் கரையிலும் மழை சீறிப்பெய்து கொண்டிருந்தது. காற்று பலமாக அடித்தது. காற்றில் ஒரு முணுமுணுப்பு, ஒரு ஓலம், ஒரு சிறு சத்தம் கேட்டது. மழை கடலையும் வானத்தையும் பார்வையிலிருந்து மறைத்தது.
தாமதமில்லாமல் அந்தப் பெரும் மழை செல்க்காஷ் படுத்திருந்த இடத்திலிருந்த சிவப்புக் கறையையும் அவனுடைய பாதச் சுவடுகளையும் அழுத்தமான எட்டுகளுடன் நடந்து சென்ற அந்த இளைஞனின் பாதச்சுவடுகளையும் கழுவி ஒன்றுமில்லாமற் செய்தது. அந்த இரண்டு மனிதர்களும் சேர்ந்து நடித்த சிறிய நாடகத்திற்குச் சான்று கூற எந்தவொரு அடையாளமும் அந்த அமைதியான கடற்கரையில் எஞ்சியிருக்கவில்லை.