Logo

பிச்சைக்காரர்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5970
Pichaikkarargal

சுராவின் முன்னுரை

‘பிச்சைக்காரர்கள்’ (Pichaikkarargal) என்ற புதினம் 1950-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. வாழ்க்கையில் போராடிக் கொண்டிருக்கும் ஏழை மக்கள் மீது தகழி சிவசங்கரப்பிள்ளை (Thakazhi Sivasankara Pillai) கொண்டிருக்கும் அன்பும் அக்கறையும் இந்தப் புதினத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தெரியும். பிச்சைக்காரர்கள் ஏன் உருவாகின்றனர் ? அவர்களை உருவாக்குபவர்கள் யார் ? பிச்சைக்காரர்கள் உருவாகாமல் இருக்க வழி என்ன ? இந்த விஷயங்களை தகழி மிகவும் அருமையாக இந்த நாவலில் அலசியிருக்கிறார்.

மிகப் பெரிய ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு, அதை ஆழமாக ஊடுருவிப் பார்க்கும் தகழியின் செயலைப் பார்த்து நமக்கு ஆச்சரியம்தான் உண்டாகிறது. எத்தனையோ வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட இந்நூல் காலத்தைக் கடந்து நிற்கிறது என்றால், அதற்குக் காரணம் - தகழியின் எழுத்துத் திறனே.

இந்த நல்ல நூலை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா (Sura)


டுமையாக உழைத்து உழைத்து வீணாகிப் போன ஒரு உடம்பு அது. வயதைத் தீர்மானிக்க முடியாது. சதை முழுவதும் சுருங்கிப்போய் விட்டாலும், கூர்மையான பார்வைக்கு எந்தக் குறைவும் உண்டாகவில்லை. துருத்திக் கொண்டிருக்கும் எலும்புகளுக்கு மத்தியில் கொஞ்சமாக இருக்கும் சதையைப் பார்க்கும் யாரும் அந்த உடல் 'கொழு கொழு' என்றிருந்த காலத்தைப் பற்றிக் கட்டாயம் நினைத்துப் பார்ப்பார்கள். ஆள் நல்ல உயரம். அளவெடுத்த உடம்பு. அது மட்டும் உண்மை. அவன் ஒரு விவசாயியாக இருந்தான்.

நகரத்தில் இரண்டு சாலைகள் ஒன்று சேரும் ஒரு சந்திப்பில் ஒரு பெரிய புளிய மரம் நின்றிருக்கிறது. அதற்குக் கீழேதான் அந்தக் குடும்பம் வசிக்கிறது. சாயங்கால நேரத்தில் ஒரு அடுப்பு எரிந்து கொண்டிருப்பதைப் பார்க்கலாம். குழந்தைகளின் அழுகைச் சத்தமும், தாயின் வசைபாடலும் கிழவனின் சராசரியைவிட உரத்த குரலில் பாடும் கீர்த்தனையும் - இப்படி அந்த நேரத்தில் ஒரே சப்த கோலாகலமாக இருக்கும்.

சிறிது நேரம் கடந்தால், அந்த அடுப்பிலிருக்கும் நெருப்பு அணைந்து அந்த இடம் மிகவும் அமைதியானதாக மாறிவிடும்.

அந்தக் குடும்பத்தில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்பதைச் சரியாக யாராலும் கூற முடியாது. ஒரு குடும்பம் அங்கு வசிக்கிறது. அவர்கள் எப்படி அங்கு வந்தார்கள்? யாருக்குத் தெரியும்? பல பரம்பரைகளாக நடந்து கொண்டிருக்கும் ஒன்று அது. அவர்களும் வளர்கிறார்கள். அந்தப் பரம்பரை எந்த இலக்கை நோக்கி வளர்கிறதோ, யாருக்குத் தெரியும்... அந்தக் குழந்தைகள் யாராக, எப்படியெல்லாம் வரப்போகிறார்கள்? மனித வம்சத்திற்கு அந்த வாழ்க்கை மூலம் பரிசாக என்ன தந்துவிட முடியும்? அவர்கள் எதற்காகப் பிறந்தார்கள்? வளர்கிறார்கள்? யாருக்குத் தெரியும்...

அந்தக் கிழவன் உட்பட்ட அந்தக் குடும்பத்தைப் பார்க்கும்போது யாரும் கொஞ்சம் கூர்ந்து கவனிக்கத்தான் செய்வார்கள். கடந்த தலைமுறையில் அவர்கள் பிச்சைக்காரர்களாக இருந்தவர்கள் அல்ல. அவர்களின் வரலாறு என்ன? அந்தக் கிழவனிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் போல இருக்கும். ஆனால் ஆயிரம் வேலைகளை மனதில் வைத்துக்கொண்டு அந்த வழியாக நடந்து போகிறவர்களுக்கு சிறிது நிற்க நேரம் எங்கே இருக்கிறது? ஒரு நிமிட நேரம் ஒருவகை ஆர்வத்துடன் மனதில் தோன்றும் அந்த சமூகப் பிரச்சினை, வந்த வேகத்திலேயே அடங்கிப் போய்விடும். அதுமட்டுமல்ல- எப்படிப்பட்ட சந்திப்பிலும், மூலையிலும், தெரு முனையிலும், சுவருக்கு அருகிலும் நாம் இப்படிப்பட்ட பிச்சைக்காரக் குடும்பங்களைப் பார்க்கலாம்! ஹோட்டலுக்குப் பின்னாலிருக்கும் எச்சில் தொட்டிக்கு அருகிலும், பேருந்து நிலையங்களிலும் நாம் பார்ப்பவர்கள் இங்கிருந்து போனவர்களாகத்தான் இருக்கும்.

எனினும், எந்த இயந்திரம் இந்தப் பிச்சைக்காரர்களை உண்டாக்குகிறது?

அந்தக் கிழவன்...

ஒரு நீண்ட பெருமூச்சு விடுவதைப் போல இருந்தது. இல்லை. அவனுடைய இதயம் எழுந்து கொண்டிருந்தது. அடுப்புக்கு அருகில் இருந்த ஒரு உருவத்திடம் அவன் கேட்டான்:

"பிள்ளைகள் இவ்வளவு நேரம் ஆகியும் ஏண்டி வரல?"

அந்த உருவம் சொன்னது:

"அவங்க வருவாங்க அப்பா."

"சாயங்காலத்துக்கு முன்னாடியே கிடைச்சதை வச்சிக்கிட்டு வரவேண்டியதுதானே! அது போதும்னு நினைக்கணும்."

அதற்கு அந்தப் பெண் பதில் எதுவும் சொல்லவில்லை.

கிழவன் தொடர்ந்து கேட்டான்:

"ஒரு கூரை வீடு கூட இல்லாம, இந்தப் புளிய மரத்துக்குக் கீழேதானே வந்து கிடக்கிறோம்! பட்டினி கிடந்தாலும் நேரம், காலம் பார்த்து கொஞ்சம் முன்னாடியே வந்து சேருவோம்னு இருக்க வேண்டாமா?"

அதற்கும் அந்தப் பெண் எந்த பதிலும் கூறவில்லை. பானையில் அரிசியைப் போட்டுவிட்டு, அவள் நெருப்பை ஊதி எரிய வைத்தாள். கிழவன் தொடர்ந்து பல விஷயங்களையும் சொல்லிக் கொண்டிருந்தான். காலையில் அங்கிருந்து கிளம்பிச் சென்ற தன் பிள்ளைகளைப் பற்றி அவன் மிகவும் கவலைப்பட்டான். ஆனால், அந்தப் பெண்ணுக்கு அந்த அளவிற்கு பதைபதைப்பு இருப்பதாகத் தெரியவில்லை. கிழவன் அன்றும் ஆயிரமாவது முறை தன்னுடைய சரித்திரத்தைத் திரும்பவும் கூறினான்:

"நான் வேலை செய்தவன். நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவன். வீட்டுல குடும்பத்தோடு வாழ்ந்தவன். என்னால இதையெல்லாம் பார்க்கவே முடியல. நான் இதையெல்லாம் பார்க்கணும்னு அந்த பெரிய துரோகி எனக்கு நீண்ட ஆயுளைக் கொடுத்திருக்கான்."

அந்தப் பெண் அப்போது சொன்னாள்:

"அப்பா, நீங்க எப்பவும் இதையேதான் சொல்லிக்கிட்டு இருக்கீங்க. எதுக்கு இதைச் சொல்லணும்? அனுபவிக்க வேண்டியதை அனுபவிச்சுத்தான் ஆகணும்."

"நீ சொல்றது உண்மைதான் மகளே. பிச்சை எடுத்துக் கொண்டு வந்ததைத் தின்னு சாகணும்ன்றது விதி. அனுபவிச்சுத்தான் ஆகணும். நான் வேற எந்த இடத்திலும் கையை நனைச்சவன் இல்ல. இன்னொருத்தன்கிட்ட சாதாரணமா ஒரு பாக்குகூட கேட்டவன் இல்ல. வேலை செய்து வாழ்ந்தவன் நான்."

கிழவன் தன்னுடைய பத்து வயதிலிருந்து உள்ள வரலாற்றை விளக்கமாகக் கூறினான். கிராமப் பகுதியைச் சேர்ந்த ஒரு சிறு விவசாயியின் போராட்ட வாழ்க்கை. அவன் கஷ்டப்பட்டு உழைத்தது நகரத்திலிருக்கும் புளியமரத்திற்குக் கீழே பிள்ளைகள் பிச்சை எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பதைக் கொண்டு தன் இறுதிக்காலத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக அல்ல. அவனுக்கு ஒரு திட்டம் இருந்தது. தோல்வியடைந்த ஒரு திட்டம்! எல்லாமே தகர்ந்து போய்விட்டன. அந்த வரலாற்றை அவன் இப்படிக் கூறி முடித்தான்.

"நான் கஷ்டப்பட்டதெல்லாம் எங்கு போனது? யார் கொண்டு போனார்கள்? ஒவ்வொரு நாளும் இரண்டு ஆளுங்க செய்ய வேண்டிய வேலையை நான் ஒருவனே செய்தேன். எனக்கு மிச்சம்னு எதுவுமே நிக்கல. அப்படின்னா மனிதனோட வேலைக்கு ஒரு பயனும் இல்லைன்னு அர்த்தமா?"

கரண்டியில் பானையில் கொதித்துக் கொண்டிருந்த பருக்கைகளில் கொஞ்சத்தை எடுத்து வெந்துவிட்டதா என்று பார்த்தவாறு அந்தப் பெண் சொன்னாள்:

"அப்படியெல்லாம் ஒண்ணும் இல்ல. அந்த நிலத்தைப் பாருங்க. அங்கே தங்கமே விளைஞ்சிக்கிட்டு இருக்கு. மனிதனின் உழைப்புக்கு மதிப்பு இல்லைன்னு யார் சொன்னது?"

"ஆமாம்... ஆமாம்... ஆனால், எனக்கு ஒரு பிரயோஜனமும் இல்லாமப் போச்சு."

"ம்... அதை அந்த ஆளு ஏமாற்றிப் பிடுங்கிக்கிட்டாரு."

"ஆமாம் மகளே! நான் வேலை செய்ததெல்லாம் உங்களுக்காகத்தான் ஒரு கூரைக்குக் கீழே கிடந்து சாகணும்ன்றதுக்காகத்தான். ஆனால்... ஆனால்... என் பிள்ளைகளுக்கு என்மீது கோபம் உண்டாகுதா?"

"அப்பா, என்ன கேள்வி கேக்குறீங்க?"

"என் பிள்ளைகளுக்கு என் மேல கோபம் வருதா? நான் இப்படியெல்லாம் ஆகும்னு நினைக்கல."

கிழவனின் இதயம் சுக்கு நூறாக நொறுங்கியது. அவன் கெஞ்சுகிற குரலில் மன்னிப்புக் கேட்டான். என்ன தவறு செய்துவிட்டோம் என்று நினைத்து அதைக் கூறினானோ? திரும்பவும் அவன் சொன்னான்-


தன்னுடைய பிள்ளைகளுக்காகத் தான் மிகவும் அதிகமாக கஷ்டப்பட்டு விட்டதாக. அவர்கள் தான் கூறுவதை நம்ப வேண்டும் என்றும்; இப்படியொரு நிலைமைக்கு அவர்கள் வந்து சேர்ந்ததற்கு தான் காரணம் இல்லை என்று அவர்கள் நினைக்க வேண்டும் என்றும் அவன் எதிர்பார்த்தான். அவன் நகர்ந்து நகர்ந்து தன் மகளுக்கு அருகில் வந்தான்.

"என் மகளே, நீ எப்பவாவது என்னை மனசில திட்டியிருக்கியா?"

"ஏன் அப்படி கேக்குறீங்க அப்பா?"

"இல்ல மகளே... நீ கட்டாயம் திட்டியிருப்பே. என் மகளே, நான் உன்னை ரொம்பவும் செல்லம் கொடுத்து வளர்த்தேன். உனக்கு இடுப்புக் கொடியும் கம்மலும்கூட இருந்தது. உன் கல்யாணத்துக்கு நான் ஜரிகை போட்ட புடவை வாங்கிக் கொடுத்தேன். என் மகளே, அந்தப் படுபாவி..."

கிழவன் அடக்க முடியாமல் தேம்பி அழுத போது, அந்த முற்றிப் போன எலும்புகள் நொறுங்கி ஒடிவதைப் போல் இருந்தது. அந்த மகளும் அழுதாள்.

"அப்பா, அழாதீங்க."

இவ்வளவுதான் அந்தப் பெண்ணால் கூற முடிந்தது. அந்தத் தந்தையின் பாசத்தைப் பற்றி அவளுக்கும் ஞாபகத்தில் இருந்தது. தன் தந்தை கஷ்டப்பட்டது யாருக்காக என்பதையும் அவள் நன்கு தெரிந்து வைத்திருந்தாள். ஒரு நல்ல வீட்டை உண்டாக்கி, அதில் தன் மகளை குடி வைக்க வேண்டும் என்ற அந்த ஏழைத் தந்தையின் விருப்பம் சிறிதுகூட நடக்கவில்லை. அதைப்பற்றி அவளுக்கு மனதில் வருத்தமில்லை. எதற்காகக் கவலைப்பட வேண்டும்? அந்த மனிதன் அதற்காகக் கஷ்டப்படாமல் இல்லை. கஷ்டப்பட்டதற்கான பலன் அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விட்டது என்பதுதான் உண்மை. அந்தக் கிழவனின் கவலையை அவளால் பார்த்துக் கொண்டு இருக்க முடியவில்லை. எப்படி அவனுக்கு ஆறுதல் கூறுவது என்றே தெரியாமல் அவள் தடுமாறினாள். ஒரு விஷயம் மட்டும் உண்மை. பாசமான தந்தையாக இருந்ததால், பிள்ளைகள் பிச்சை எடுப்பதைப் பார்க்க சக்தியில்லாமல் அந்த மனிதன் பதுங்கி, ஒதுங்கிக் கொண்டிருந்தான். கிழவனின் வாரிசுகளுக்கு இனியும் எப்படிப்பட்ட அனுபவங்களெல்லாம் கிடைக்கப் போகின்றனவோ?

கிழவன் அவற்றையெல்லாம் கண்ணால் பார்க்க வேண்டுமா? இவையெல்லாம் யார் செய்த பாவங்களின் பலனாக நடக்கின்றனவோ? இந்த நீண்ட ஆயுள் ஒரு மிகப்பெரிய பாவத்தின் சம்பளமாக இருக்கலாம்.

பிள்ளைகள் வந்து சேராமல் இருக்கிறார்களே என்பதைப் பற்றிய எண்ணம் மீண்டும் அந்தக் கிழவனின் சிந்தனையோட்டத்தில் வந்து நுழைந்தது. இவ்வளவு நேரமாகியும் அவர்கள் வந்து சேரவில்லை. ஏன் அவர்கள் வந்து சேரவில்லை என்பதற்கான காரணத்தை மகள் கூறவேண்டும். அவளுக்கு அந்தக் காரணம் தெரியவில்லை.

கிழவன் கேட்டான்: "உனக்கு அதைப்பற்றி கொஞ்சம் கூட நினைப்பு இல்லையா?"

"நான் ஏன் அதைப்பற்றி நினைக்கணும் அப்பா?"

"இல்ல. நீ ஒரு பிச்சைக்காரியா இருந்தாலும் குடும்பத்திற்கான நெறிமுறைகளுடன் வளர்ந்தவளாச்சே!"

"ஏதாவது கிடைக்கும்னு அவங்க நடந்துக்கிட்டு இருக்கலாம் அப்பா."

"சாயங்காலம் ஆயிடுச்சுன்னா, கிடைச்சது போதும்னு நினைக்கணும்."

அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. பிச்சைக்காரர்களாக இருந்தாலும், நெறிமுறைகளுடன் வாழ்வது எப்படி என்று கிழவன் சொன்னான். இருக்கும் மதிப்பை விட்டுவிடக் கூடாது. பிச்சை எடுப்பதிலும் ஒரு மதிப்புடன் இருக்க வேண்டும். தங்களுக்கென்று ஒரு வீடு இல்லையென்றாலும், குடும்பத்துடன் வாழமுடியும். அப்படி வாழந்தால், அடுத்த தலைமுறையாவது ஒழுங்காகத் தலைநிமிர்ந்து இருக்கும். மரியாதையை இழக்காமல், நெறிமுறைகளை விற்றுத் தின்னாமல், இருக்கும் மதிப்பை இழக்காமல் பிச்சைக்காரர்கள் வாழ முடியாதா? வாழ முடியும் என்பதுதான் கிழவனின் கருத்து.

மகள் கேட்டாள்:

"அது எப்படி அப்பா?"

"ஒரு குடும்பத்தில் இருக்கிறோம் என்பதை நினைச்சா போதும்."

ஒரு பாட்டின் ஒரு வரி உரத்த குரலில் பாடப்படுவது கேட்டது.

"கேசு வர்றான்லடி... அவன்தானேடி பாடுறது?"

"அவன்தான்னு நினைக்கிறேன்."

பத்து, பன்னிரண்டு வயது இருக்கக்கூடிய ஒரு சிறுவன் அங்கு வந்தான். கிழவன் கேட்டான்:

"அக்கா வந்துட்டாளாடா?"

"என்ன?"

அவனுக்கு அது தெரியாது.

அந்தப் பெண் கேட்டாள்:

"உன் கையில எவ்வளவு இருக்கு?"

"நான்கைந்து சக்கரங்கள் (பழைய கேரள நாணயம்) இருக்கு."

கிழவன் கேட்டான்:

"நீ இன்னைக்கு அவளைப் பார்க்கலையா?"

அவன் அதைக் காதிலேயே வாங்கிக் கொள்ளவில்லை.

"உன் வயிறு ஏன் இப்படி வீங்கியிருக்கு?"

"அங்கே இருக்குற ஒரு வீட்ல ஒரு விருந்து இருந்தது."

"அப்படின்னா இரவு சாப்பாடு வேண்டாமா?"

"பிறகு? என் பங்கு எனக்கு வேணும்."

மீண்டும் கிழவனின் கேள்வி ஆரம்பமானது. அவள் எங்கு போனாள் என்று அவன் கேட்டான். சிறுவன் முணுமுணுத்தான். கிழவனின் சரமாரியான கேள்விகளைக் கேட்க பொறுமை இல்லாமல் ஆனபோது, அவன் சொன்னான்:

"எனக்கு எப்படித் தெரியும்?"

கிழவன் எழுந்தான். அவன் தன் மகள் இருந்த பக்கம் திரும்பினான்.

அவள் எங்கு போனாள் என்பதை அந்தப் பெண் கூற வேண்டும். அவள் எப்படிக் கூறுவாள்?

தாயும் மகனும் சேர்ந்து தங்களுக்கு அன்று நடந்ததைப் பற்றிப் பேசிக் கொண்டார்கள். அவளுக்கு இன்று கொஞ்சம் அரிசியும் சிறிது உப்பும் மிளகாயும் கிடைத்தன. அவன் அந்த விருந்து நடந்த இடத்திற்குச் சென்ற காரணத்தால் வேறு எங்கும் செல்லவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்:

"தாத்தாவுக்கு மத்தியானம் எப்படி இருந்தது?"

அவள் முணுமுணுத்தாள்:

"அதைக் கேக்குறியா? கொஞ்சம் கஞ்சித் தண்ணியை எங்கே இருந்தாவது கொண்டு வந்து கொடுத்தால் குடிக்கிறது இல்ல. மத்தியானம் நான் வந்து பண்ணிக் கொடுத்தேன்."

"இது நல்ல கூத்தா இருக்கு."

"என்ன செய்றது?"

"அம்மா, மத்தியானம் நீங்க வரவேண்டாம். சும்மா படுத்திருக்கட்டும்."

கிழவன் தட்டுத் தடுமாறி சாலை வழியாக சிறிது நேரம் நடந்தான். பேத்தியைத்தேடி அவன் நடந்து செல்கிறான். அவனால் சாதாரணமாக உட்கார்ந்திருக்க முடியவில்லை.

கேசு தன் தாயிடம் சொன்னான்:

"தாத்தா வெளியே போறதா இருந்தா, நல்லா காசு கிடைக்கும் அம்மா. வயதான ஆளா இருந்தா எல்லாரும் கொடுப்பாங்க."

"போக மாட்டார் மகனே... போகமாட்டார்."

"அப்படின்னா கொடுக்காதீங்க. அதுதான் நீங்க செய்ய வேண்டியது."

அப்போது உரத்த குரலில் ஒரு கூப்பாடு கேட்டது. தாயும் மகனும் மிகவும் கவனமாக அதைக் கேட்டார்கள். மீண்டும் பெயரைச் சொல்லி அழைக்கும் ஒரு அழைப்பு அது. கிழவன் தன்னுடைய பேத்தியைக் கூப்பாடு போட்டு அழைக்கிறான். அந்த விவசாயியான மனிதனின் அந்த மாதிரியான கூப்பாடு விரிந்து கிடக்கும் வயலின் ஒரு எல்லையிலிருந்து இன்னொரு எல்லைக்குப் போய் சேரும்.


யாரை மனதில் வைத்துக் கொண்டு அவன் அப்படி உரத்த குரலில் அழைத்தானோ, சம்பந்தப்பட்ட அந்த ஆள் அந்தக் குரலைக் காதில் வாங்கி பதிலுக்கு உரத்த குரலில் சத்தம் உண்டாக்குவான். இரண்டு மூன்று மைல்கள்வரை அந்தக் குரல் போய்ச் சேரவும் செய்திருக்கிறது. ஆனால், அது அமைதி தவழும் கிராமப் புறத்தில் நடந்தது. நகரத்தில் இருந்து கொண்டு அவன் அப்படி உரத்த குரலில் கத்தினான். கிட்டத்தட்ட அறுபது வருடங்கள் இருந்த பழக்கம் அது. அவனுடைய பேத்தி அந்த அழைப்பைக் கேட்பாளா?

மகள் எழுந்து போனாள். கேசுவும் அவளைப் பின் தொடர்ந்தான்.

"என்ன அம்மா, தாத்தா இப்படிப் பண்ணுறாரு?"- அவன் கேட்டான்.

அந்தப் பெண் இளம் வயதிலிருந்தே அந்த கூக்குரலைக் கேட்டிருக்கிறாள். ஒரு நிமிட நேரம் கடந்துபோன காலத்திற்குள் அவள் மூழ்கிவிட்டாள். அவளுக்கு அந்தக் கூப்பாட்டின் அர்த்தம் புரிந்தது. பேத்தியைக் காணவில்லையே என்ற பதற்றத்தில் இடத்தையும் காலத்தையும் மறந்து கிழவன் பழக்க தோஷத்தால் அப்படிக் கூவி விட்டான்.

"என்ன அப்பா இப்படி?"

கிழவன் சுய உணர்விற்கு வந்தான்.

"பெண்ணைக் காணோமே மகளே?"

"அவள் வருவாள்."

"ராத்திரி அதிக நேரம் ஆயிடுச்சே?"

"அவள் வருவாள்."

அந்தப் பெண் கிழவனைப் பிடித்துக்கொண்டு நடந்தாள். சுய உணர்வு இல்லாத மனிதனைப் போல அவன் நடந்தான்.

ஆனால், அவன் சுய உணர்வு இல்லாத மனிதனாகத்தான் இருந்தானா? திரும்பி வந்தபோது ஒரு நாய், பானையில் வெந்து கொண்டிருந்த மரவள்ளிக் கிழங்குத் துண்டுகளைக் கடித்துத் தின்று கொண்டிருந்தது. கேசு ஒரு குதி குதித்து நாயை ஓங்கி ஒரு அடி அடித்தான்.

"மரவள்ளிக் கிழங்கை நாய் தின்னுடுச்சே!"

அவனுடைய கோபம் கிழவனின் பக்கம் திரும்பியது. அவனால்தானே மரவள்ளிக்கிழங்கை நாய் தின்றது? ஒரு துண்டைக் கூட அந்தக் கிழவனுக்குத் தரக்கூடாது. அவனுடைய பங்கினை நாய் தின்றுவிட்டது.

அந்தப் பெண் கிழவனைப் பிடித்துக் கொண்டு வந்து உட்கார வைத்தாள். வெறுமனே உட்கார்ந்துகொண்டு தின்று கொண்டிருப்பதாக அவன் கூறினான். ஆனால் அந்தக் குற்றச்சாட்டுகள் எதையும் கிழவன் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. அவனுக்கு சுய உணர்வு இல்லாமல் போய்விட்டதா? இல்லை. அவன் கேட்டான்:

"மகளே கல்யாணி! உன்னை நான் இப்படி வளர்க்கலையேடி...!"

கல்யாணியால் அதற்கு எந்த பதிலும் கூற முடியவில்லை. என்ன பதில் கூறுவது? நெறிமுறைகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் அந்த விவசாயி தன் மகளை எப்படி வளர்த்தான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும்.

கிழவன் அழ ஆரம்பித்தான். ஒருவேளை, கிழவனின் குழி விழுந்து உள்ளே போயிருக்கும் கண்கள், அப்போது நிறைந்த கண்ணீர் வழியாக அந்த வம்சத்தின் எதிர்காலத்தைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இல்லாவிட்டால் தான் எப்போதும் கூறக்கூடிய நெறிமுறைகள் தகர்வதை அவன் கண்டு கொண்டிருக்கலாம். அப்போதும் அந்த இதயம் வெடித்து அவன் இறக்கப் போவதில்லை. எலும்புகள் அந்த அழுகையில் நொறுங்கிக் கீழே விழப் போவதில்லை. முதிர்ச்சியடைந்து முறுக்கேறிய நரம்புகள் அறுந்துவிடப் போவதில்லை.கேசு கிழவனை வாய்க்கு வந்தபடியெல்லாம் மோசமான வார்த்தைகளில் திட்டினான். அமைதியாக உட்கார்ந்திருந்த கல்யாணியின் கண்களிலிருந்து ஒரு சொட்டுக் கண்ணீர் வழிந்து கீழே விழுந்தது.

அந்தப் புளிய மரத்தின் கிளைகளுக்குக் கீழே அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த எல்லோரும் சற்றுத் தாமதம் உண்டானாலும், ஒன்று சேர்ந்து விடுவார்கள். அந்தப் புளிய மரத்தடிக்கு எல்லோரையம் ஒன்று சேர்க்கக்கூடிய ஒரு சக்தி இருக்கவே செய்தது. இன்னொரு வார்த்தையில் கூறுவதாக இருந்தால், அங்கு சாயங்கால நேரத்தில் வந்து சேர்ந்து விட வேண்டும் என்ற ஒரு மெல்லிய ஆசை எல்லோருக்கும் இருந்தது. அந்த வகையில் கல்யாணிக்கும் ஒரு திட்டம் இருக்கத்தான் செய்தது.

அவளுக்கு ஒரு மகனும் மகளும் இருக்கிறார்கள். அவனுக்கு சுமை தூக்கக்கூடிய வயது நடக்கிறது. பெண்ணை யாராவது வந்து திருமணம் செய்யக் கேட்பார்கள். நான்கு ஓலைக் கீற்றுகள் வேய்ந்த ஒரு வீட்டிற்கு மாற வேண்டும். இப்படி அவளுடைய வாழ்க்கைக்கான திட்டம் போய்க் கொண்டிருந்தது.

ஒருநாள் கேசு வரவில்லை. கிழவனுக்கு இரவில் உறக்கமே வரவில்லை. அவனுக்காக மூடி வைத்திருந்த மரவள்ளிக் கிழங்கையும் கஞ்சியையும் நாய் சாப்பிட்டு விடாமல் பத்திரமாகப் பாதுகாத்துக் கொண்டு கல்யாணி உட்கார்ந்திருந்தாள்.

"இருந்தாலும் அவன் ஏன் மகளே வரலை?"

இப்படிக் கிழவன் கேட்டுக் கொண்டிருந்தான். கல்யாணி என்ன பதிலைக் கூறுவாள்? அவ்வப்போது அவன் தன் பேத்தியை எழுப்பி அன்று அவனை விட்டு அவள் எங்கு பிரிந்து சென்றாள் என்று கேட்டான். அவளுக்கு அது ஒரு பெரிய தொந்தரவான விஷயமாக இருந்தது. குலுக்கி எழுப்பினாலும், அவள் கண்களைத் திறக்க மறுத்தாள். பையனுக்கு ஏதாவது ஆபத்து உண்டாகியிருக்குமோ? நூற்றுக்கணக்கான ஆபத்துகளை அவன் மனதில் நினைத்துப் பார்த்தான். அவன்மீது கார் ஏறியிருக்குமோ? இல்லாவிட்டால் உடல்நலம் பாதிக்கப்பட்டு ஏதாவதொரு இடத்தில் படுத்துக் கிடப்பானோ? கல்யாணியும் அந்த மாதிரியெல்லாம் நினைக்க ஆரம்பித்தாள். அவளுடைய மனதும் குழப்பம் கொண்டதாக ஆனது. கிழவன் சொன்னான்:

"ஒரு ஆண் வாரிசுதான் இருக்கு. அவன் தான் நமக்கு இருக்குற ஒரே நம்பிக்கை. அவனும் போயிட்டா... நான் இனியும் எதையெல்லாம் பார்க்க வேண்டியிருக்கோ?"

"அப்பா, வாய்க்கு வந்தபடி பேசாதீங்க. நாக்குல எப்போ சனியன் வந்து நிற்பான்னு சொல்ல முடியாது."

"நான் உன்னைத்தான் சொல்றேன் மகளே. ஆபத்துகள்தான் எனக்கு ஞாபகத்துல வருது. நாக்குலயும் அதுதான் வரும். நான் எவ்வளவோ கஷ்டங்களை அனுபவிச்சவனாச்சே மகளே! என் கடவுளே! என் பிள்ளையை நீதான் காப்பாத்தணும்!"

அது இதயத்திற்குள்ளிருந்து வந்த பிராத்தனையாக இருந்தது. அந்த தாயும் கடவுளிடம் வேண்டினாள். அவளுடைய மனம் பலவிதப்பட்ட சிந்தனைகளால் முழுமையான குழப்பத்தில் இருந்தது. ஏதாவது ஒரு வகையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, எங்காவது அவன் படுத்திருக்கலாம். இல்லாவிட்டால் உணவு தேடிப்போன அந்தப் பயணத்தில், வேகமாக பாய்ந்து வந்த ஏதாவது வண்டி அவனைக் கீழே தள்ளி நசுக்கி முடித்துவிட்டுப் போயிருக்கலாம். யாருக்குத் தெரியும்?

எப்படியோ பொழுது விடிந்தது. அவள் புறப்பட்டாள். எங்கு என்று அவளுக்கே தெரியாது. அவனை அவள் எங்கு கண்டுபிடிப்பாள்? யாரிடம் கேட்பது?  சற்று தூரத்தில் ஒரு சிறுவன் நடந்து செல்வதை அவள் பார்த்தாள். அவன் அளவிற்குத்தான் அந்தச் சிறுவனின் உயரமும் இருந்தது. அவனுடைய அதே நிறம்தான். வேகமாக ஓடி அந்தச் சிறுவனை அவள் நெருங்கினாள்.


அது அவன் இல்லை! பேருந்து நிறுத்தத்தில் அவள் நீண்ட நேரம் அவனை எதிர்பார்த்துக் காத்திருந்தாள். எங்கெல்லாம் சிறுவர்களைப் பார்த்தாளோ, அங்கெல்லாம் அவள் ஓடிப்போய்ப் பார்த்தாள். ஹோட்டல்களுக்குப் பின்னால் இருந்த எச்சில் பீப்பாய்கள் வைக்கப்பட்டிருந்த இடங்களிலும் அவள் அவனைத் தேடினாள்.

நேரம் அதிகமானது. அவளுடைய கால்கள் வலித்தன. அன்று சிறிது கூட அவள் நீர் அருந்தவில்லை. அவள் சாலையோரத்திலிருந்த ஒரு கடைத் திண்ணையில் போய் உட்கார்ந்தாள். அப்போது அவளுக்கு அழுகை அழுகையாக வந்தது. எப்படிப்பட்ட கனவுகளையெல்லாம் அவள் தன்னிடம் வைத்திருந்தாள்! மீண்டும் ஒரு வீடு உண்டாகும் என்று அவள் மனதில் ஆசை வைத்திருந்தாள். பிச்சை எடுப்பதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று அவள் மனதில் தீர்மானித்திருந்தாள். மானத்தைத் திரும்பவும் பெறவேண்டும் என்று அவள் ஆசை கொண்டிருந்தாள்.

அந்தத் திண்ணையிலேயே சற்று தள்ளி ஒரு பிச்சைக்காரக் குடும்பம் வசித்துக் கொண்டிருந்தது. அங்கு இருந்த அன்னை, கேசு வயதைக் கொண்ட தன்னுடைய மகனுக்கு சூடான சாதத்தைப் பரிமாறிக் கொண்டிருந்தாள். அவன் உருட்டி உருட்டி அதைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

கல்யாணி அந்தப் பெண்ணின் கண்களில் பட்டாள். அவள் கல்யாணியை நோக்கி நடந்தாள். அவள் கேட்டாள்:

"ஏன் அழுற?"

"என் பையனைக் காணோம்."

"அதற்கு நீ ஏன் அழணும்? அவன் வருவான்."

சாப்பிட்டுக் கொண்டிருந்த சிறுவனுக்குக் கொஞ்சம் தண்ணீர் தேவைப்பட்டது. அவனுடைய தாய் நடந்து சென்று ஒரு சிரட்டையில் நீர் மொண்டு கொடுத்தாள். பிறகு அவள் திரும்பி வந்தாள். கல்யாணி அந்தச் சிறுவனிடம் கேட்டாள்:

"கேசுன்ற ஒரு பையனை உனக்குத் தெரியுமா மகனே? உன் வயசு இருக்கும் அவனுக்கு..."

அவன் சொன்னான்: "எனக்குத் தெரியாது."

கல்யாணி தேம்பித் தேம்பி அழுது கொண்டே சொன்னாள்:

"எனக்கு இருந்த ஒரே ஆண் வாரிசு அவன்தான். அவன் நேற்று போனவன், திரும்பியே வரல."

அந்தச் சிறுவனின் அன்னைக்கு அந்த விஷயம் அவ்வளவு முக்கியமானதாக இருக்கவில்லை. அதில் அழுவதற்கு என்ன இருக்கிறது! ஒரு பிச்சைக்காரச் சிறுவன் வெளியே போனான் என்றால், தினமும் மாலையில் திரும்பி வரவேண்டும் என்று இருக்கிறதா என்ன? பிச்சை எடுப்பதற்காகப் போனவதன்தானே அவன்? பிச்சை எடுத்து பிச்சையெடுத்து அவன் எங்கேயாவது போயிருப்பான். சில வேளைகளில் அவன் திரும்பி வராமலே கூட இருந்துவிடலாம். அந்த வகையில், அந்தப் பெண்ணின் இரண்டு ஆண் பிள்ளைகள் காணாமல் போயிருக்கிறார்கள். ஒரு நாள் காலையில் ஒருவன் போனான். அதற்குப் பிறகு அவன் திரும்பி வரவேயில்லை. இன்னொருவன் ஏதோ ஒரு நகரத்தில் இருப்பதாகச் சொன்னார்கள்.

அவள் இப்படிக் கூறி முடித்தாள்.

"நாம இந்த விஷயத்தை அந்த அளவுக்குத்தான் நினைக்கணும். நடக்க ஆரம்பிக்கிறதுவரை நாம வளர்க்கணும். அதற்குப் பிறகு அவங்க இஷ்டப்படி போகட்டும்."

கல்யாணிக்கு அந்தப் பெண் சொன்னது எதுவும் சிறிதுகூட புரியவில்லை. அதே நேரத்தில் அவள் இறுதியாகச் சொன்ன வார்த்தைகள் அவளுடைய இதயத்திற்குள் ஆழமாக நுழைந்தன. 'அதற்குப் பிறகு அவங்க இஷ்டப்படி போகட்டும்' என்று கூறியது! இரண்டு மகன்களை அந்த வகையில் அவர்கள் விருப்பப்படி வெறுமனே விட்ட ஒருத்தி சொன்ன வார்த்தைகள் அவை! கல்யாணி சொன்னாள்:

"பெற்ற பிள்ளையை அப்படி நினைக்க முடியுமா?"

அடுத்த நொடியே அதற்கான பதில் கல்யாணிக்குக் கிடைத்தது.

"அப்படி இல்லாம வேற எப்படி நினைக்கிறது?"

கல்யாணிக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அந்தச் சிறுவன் சாப்பிட்டு முடித்துவிட்டு எழுந்தான். அவனுடைய அன்னை கேட்டாள்:

"வயிறு நிறைஞ்சிருச்சாடா?"

"ம்..."

"வேணும்னா இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடு."

"வேண்டாம்."

அவனால் மூச்சுவிடக் கூட முடியவில்லை. எனினும் அவனிடம் அன்னை கூறுகிறாள்- இன்னும் கொஞ்சம் சாதம் சாப்பிடும்படி!

கல்யாணி இனிமேல் இப்படித் தன் மகனுக்கு சாதம் பரிமாற வேண்டிய அவசியமில்லை! கல்யாணியின் கண்கள் நீரால் நிறைந்தன. அந்தப் பெண் சொன்னாள்:

"அம்மா! நான் ஒரு விஷயம் சொல்றேன். நாம சும்மா பிள்ளை பெறுவதற்குன்னே பிள்ளைகளைப் பெத்தெடுக்கிறோம்."

அதைக் கல்யாணியால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அவள் வெறுமனே பிள்ளை பெற்றவள் இல்லை. அவள் தன்னுடைய கணவன்மீது அன்பு வைத்திருந்தாள். ஒரு ஆண் வாரிசுக்காக அவள் காத்திருந்தாள். அவன் அவளுடைய லட்சியங்களின் மையப்புள்ளியாக இருந்தான். அவனுடைய பிறப்பிற்கு ஒரு நோக்கம் இருந்தது. அந்த சிந்தனைகள் அவளிடமிருந்து இப்படி வெளிப்பட்டன:

"அவன் அவனுடைய தந்தையின் இன்னொரு வடிவம்."

"எல்லா பிள்ளைகளும் அப்படித்தான்."

தொடர்ந்து அவள் கல்யாணியிடம் அவளைப் பற்றிய கதைகளைக் கேட்டாள். கல்யாணி அதை விளக்கமாகச் சொன்னாள். எல்லாவற்றையும் கேட்ட பிறகு, வாழ்க்கையைப் பார்த்த ஒருத்தியைப் போல அவள் சொன்னாள்:

"அம்மா, ஆங்காங்கே நாம பார்க்குற பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரும் மனிதர்கள்தான். தாய்கள் பெற்றவர்கள்தான். தந்தைகள் இருப்பவர்கள்தான். அண்ணன்- தம்பிகள் இருப்பவர்கள்தான. பெண்கள் பிள்ளைகள் பெறுவதும், ஆண்கள் பிள்ளைகளை உண்டாக்குவதும் சாதாரணமா நடக்கக்கூடியதுதான். இருந்தாலும் அவர்கள் ஏன் இப்படி யாருமே இல்லாமல் தெருக்கள்ல நடந்து திரியிறாங்க? கொஞ்சம் நினைச்சுப் பாரு... என்ன காரணம்?"

கல்யாணி அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. அந்தப் பெண் விளக்கமாகச் சொன்னாள்: "பெண்கள் பிள்ளைகளைப் பெறுகிறார்கள். அவர்களில் சில குழந்தைகள் செத்துப் போகின்றன. கொஞ்சம் குழந்தைகள் உயிரோடு இருக்குறாங்க. உயிரோடு இருக்கும் பிள்ளைகள் தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போகிறார்கள். அந்த வாழ்க்கையில் தாய்க்கு மகனோ மகனுக்குத் தாயோ இல்ல. சகோதரர்களுக்குச் சகோதரிகளும் சகோதரிகளுக்குச் சகோதரர்களும் இல்லாமல் போகிறார்கள். அவர்கள் பிரிந்துவிட்டால், பிறகு எந்தச் சமயத்திலும் பார்க்காமலே கூட போகலாம். அப்படியே பார்க்க நேர்ந்தாலும், அடையாளம் கண்டு பிடிக்க முடியாத நிலைமையில் கூட இருக்கலாம். ஒத்தைக்கு ஒத்தைன்னு போய்க் கொண்டிருக்குற அந்த வாழ்க்கையில் பிறப்பும் மரணமும் ஒரு சிறப்புச் சம்பவம் இல்லை. யாருக்கும் யாரைப் பற்றியும் எதிர்பார்ப்புகளும் ஆர்வமும் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. எங்கே கிடந்து இறக்கணும் என்று ஆசைப்பட பிச்சைக்காரனுக்கு உரிமை இருக்கா என்ன?"

ஒரு தத்துவஞானியின் கம்பீரத்துடன் அந்தப் பெண் சொன்னாள்:

"அம்மா, நாம அன்பு செலுத்தணும்னு ஆசைப்பட வேண்டாம். யாராவது நம்மேல பாசம் வைக்கணும்னு நினைக்கவும் வேண்டாம்."

சிறுவனைச் சுட்டிக் காட்டியவாறு அவள் தொடர்ந்து சொன்னாள்:

"இப்போ நான் இவனுக்கு சாப்பாடு போட்டேன். நாளை இவன் இங்கேயிருந்து போயிட்டா, போனால் போகட்டும்னு விட்டுடுவேன். பிறகு என்ன செய்றது?"


நகரமெங்கும் காணப்படும் ஏராளமான பிச்சைக்காரர்கள் ஒரு நிமிட நேரம் கல்யாணியின் மனக்கண்களுக்கு முன்னால் வந்து தோன்றினார்கள். மிகவும் வயதானவர்கள்! அவர்கள் பிள்ளைகளைப் பெற்றவர்கள்தான். அவர்களுக்கு மகன்களும் மகள்களும் இருந்திருக்கிறார்கள். ஆனால், ஒரு மரக்கொம்புதான் அவர்களுக்கு இப்போது உதவியாக இருக்கிறது! சுவருக்கு அருகில் சுருண்டு படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார்கள் பிஞ்சுக் குழந்தைகள்! அவர்களைப் பெண்கள் பெற்றெடுத்தார்கள். அந்தப் பெண்கள் எங்கு போனார்கள்? அந்தப் பிள்ளைகளுக்கு முன்பும் பின்பும் உலகத்திற்கு வந்தவர்கள் இருக்கவே செய்வார்கள். அவர்கள் எல்லாம் எங்கே?

கவலை நிறைந்த ஒரு மிகப்பெரிய வரலாறு அவளுக்கு முன்னால் தோன்றியது. அதில் அவளும் அவளுடைய பிள்ளைகளும் கூட இருந்தார்கள். அவன் போய் விட்டான்! இனி அவளுடைய மகளும் போய்விடுவாள். அப்போது அவள் தனியாளாக ஆகிவிடுவாள். பிறகு? பிறகு... பிறகு... அவள் எங்கு கிடந்து இறப்பாள்? அவளுடைய பிள்ளைகள் அருகில் இருக்க மாட்டார்களா? இருக்க மாட்டார்கள்...

அவள் எதற்காகப் பிறந்தாள்? எதற்காக அவளுடைய பிள்ளைகள் பிறந்தார்கள்? ஒரு குடிசை உண்டாக்க வேண்டும் என்ற அவர்களின் ஆசை நிறைவேறப் போவதில்லை. அந்தக் கிழவனிடம் இந்தக் கதைகளை விளக்கமாகக் கூற வேண்டும். ஒரு வீடு உண்டாக்கப் போவதே இல்லை என்ற விஷயத்தை! இந்தத் துயரங்கள் அனைத்திற்கும் முதல் காரணமாக இருப்பவன் அந்தக் கிழவன்தானே?

கல்யாணி எதுவும் பேசாமல் எழுந்து நடந்தாள். அந்தப் புளிய மரத்தடியை நோக்கி அவள் ஏன் போக வேண்டும்? கிழவன் ஆர்வத்துடன் அவளை எதிர்பார்த்து அமர்ந்திருப்பான்! அதற்கு அவனுக்கு உரிமை இருக்கிறதா? அந்தக் கேள்வியை நினைத்த போது அந்தப் பெண்ணின் காதுக்குள் ஒரு மெல்லிய சத்தம் கேட்டது.

'நான் இதற்காகவா மகளே வேலை செய்தேன்?'

அது சரிதான். அவன் வேலை செய்தது அதற்காக அல்ல. அவளுடைய தந்தையின் வியர்வைத் துளிகள் விழுந்த- பழங்கள் நிறைந்த அந்தத் தோப்பை அவள் பார்த்தாள். துயரங்கள் நிறைந்த பெண்ணாக அவள் இருந்தாலும், கல்யாணி பற்களைக் கடித்து எல்லாவற்றையும் அடக்கிக் கொண்டாள்.

சாலையில் விளக்குகள் அணைந்தன. கல்யாணி சற்று நடுங்கினாள்.

பிறப்பும் இறப்பும் அந்த இருட்டில் மரத்தின் இரண்டு பக்கங்களிலும் நடந்து கொண்டிருந்தது. பிறப்பு உண்டாக்கும் வேதனையின் முனகல் சத்தம்! மரணம் உண்டாக்கும் வேதனையின் கடுமை! அவற்றுக்கு நடுவில் வாழ்க்கையின் தாங்க முடியாத வேதனையைத் தாங்கிக் கொண்டு அந்தப் பெண் அமர்ந்திருந்தாள். கல்யாணி! அது எந்த அளவிற்கு சுமையான பொறுப்பு! இறுதி மூச்சுகளை விடுவது அவளுடைய தந்தை. இந்தப் பக்கம் அடுத்த தலைமுறை தோன்றுகிறது. இரண்டும் ஒரே நேரத்தில்.

கல்யாணி எங்கே போவாள்? யாரை கவனிப்பாள்?

"என் அம்மா!"

அப்போது அவள் கிழவனுக்கு அருகில் இருந்தாள். மகளின் அழைப்பைக் கேட்டு அவள் இந்தப் பக்கம் வந்தாள். அப்போது அவளுக்குத் தோன்றியது- ஒரு வகையான மன வேதனையுடன் கிழவன் தன்னை அழைக்கிறான் என்று!

எதற்காக அந்தக் குழந்தை பிறக்கிறது? அது பிறக்காமல் இருக்கக் கூடாதா? இறக்கப் போகிற கிழவன்- தன் மகள் தனக்கு அருகில் இருக்க வேண்டும் என்று ஆசைப்பட உரிமை இருக்கிறது.

மீண்டும் கர்ப்பிணிப் பெண் தன் தாயை அழைத்தாள்: "என் அம்மா, நான் சாகப் போறேன்."

"ம்... சாகு."

அவளைப் பெற்றெடுத்தத் தாயிடமிருந்து அந்த வார்த்தைகள் தான் வந்தன. கர்ப்பிணிப் பெண் தனக்குத் தோன்றிய விதத்தில் உட்கார்வதும், படுப்பதுமாக இருந்தாள். கல்யாணி தலையில் கையை வைத்துக் கொண்டு சற்றுத் தள்ளி உட்கார்ந்திருந்தாள்.

"எனக்கு இது தெரியாது அம்மா."

பரிதாபமான குரலில் கர்ப்பிணிப் பெண் சொன்னாள். அவள் மீண்டும் சொன்னாள்: "எனக்கு இது தெரியாது."

தான் கூறுவதை அவளுக்கு எப்படிப் புரிய வைப்பது என்பதை நினைத்து அவள் கவலைப்பட்டாள்.

தனக்கு அது தெரியாது என்கிறாள்! எது தெரியாது! பிள்ளை பெற இவ்வளவு கஷ்டப்பட வேண்டும் என்ற உண்மை அவளுக்குத் தெரியாதா? இல்லாவிட்டால், கர்ப்பம் உண்டாகும் என்றே அவளுக்குத் தெரியாமல் இருந்ததா? கர்ப்பம் தரிக்கக் கூடிய வயதை அடைந்த ஒரு பெண்ணுக்குக் கர்ப்பத்தால் உண்டாகக்கூடிய விளைவுகளைப் பற்றி தெரியாமலே போய் விட்டதா என்ன?

ஒரு பிச்சைக்காரப் பெண்! அவள் நகரமெங்கும் சுற்றித் திரிந்தாள். உடல் வளர்ச்சியடைந்து, உறுப்புகள் முழுமையை அடைந்தன. ஆனால், அவளுடைய அறிவும் சிந்தனையும் வளராமல் போயிருக்கலாம். பிரச்சினைகளைப் பற்றியும் வரக்கூடிய விளைவுகளைப் பற்றியும் அவளுக்குத் தெரியாமல் போயிருக்கலாம். இரண்டு சக்கரங்கள்- அந்த ஆண் என்னவோ ஆசைப்பட்டான். இரண்டு சக்கரங்கள் கொடுப்பதாகக் கூறினான். இரண்டு முழுமையான சக்கரங்கள்... அவளுக்கு இரண்டு சக்கரங்கள் கிடைத்தன. அந்த பரிதாபமான கதை அந்தச் சிறிய சக்கரத்தில் மறைந்திருந்தது. அது உண்மை... அவளுக்கு அது எதுவுமே தெரியாது. அவள் கேட்டாள்:

"என் அம்மா, இதை சொல்லலியே அம்மா."

சரியான ஒரு குற்றச்சாட்டுதான். வரக்கூடிய விளைவுகளைப் பற்றி தாய் முன்கூட்டியே கூறியிருக்க வேண்டாமா?

அந்தப் பக்கம் பெருமூச்சு விடும் சத்தம் கொஞ்சம் குறைந்தது. இல்லை... கொஞ்சம் கொஞ்சமாக கீழே இறங்கிக் கொண்டிருந்தது. முடிந்தவரை தெளிவான குரலில் கிழவன் அழைத்தான்.

"பிள்ளைகளே!"

அவன் தன்னுடைய மகளையும் பேத்தியையும் அழைக்கிறான். ஒருவேளை, இன்னும் திரும்பி வந்திராத பேரனையும் கூட இருக்கலாம்.

"நான் செத்துக்கிட்டு இருக்கேன் தாத்தா."

அதை கிழவன் கேட்கவில்லை.

மூன்று முறை வீறிடும் சத்தம் கேட்டது. ஒரு அமைதி! ஒரு பச்சிளம் குழந்தையின் உரத்த அழுகைச் சத்தம்!

மரணத்தால் உண்டான இடைவெளி சரி செய்யப்பட்டுவிட்டது. கல்யாணிக்கு ஒரு சுமை குறைந்தபோது, இன்னொரு சுமை வந்தது சேர்ந்தது. அவள் தரையில் படுத்தாள். அந்தக் குழந்தை சிறிது நேரம் அழுதது. இருட்டில் கவுரி தடவிப் பார்த்தாள்- அந்தக் குழந்தை ஆணா, பெண்ணா என்பதைத் தெரிந்து கொள்வதற்காக. அது ஒரு ஆண் குழந்தை!

கல்யாணி கிழவனுக்கு அருகிலிருந்து குழந்தைக்கு அருகில் வந்தாள். அவளுடைய கஷ்டங்கள் முடிவதாகத் தெரியவில்லை. கடந்த தலைமுறையை தண்டித்தாகி விட்டது. அந்தப் பொறுப்பு முடிந்தவுடன், புதிய தலைமுறை எழுகிறது. ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொண்டு அவள் குழாயை நோக்கி நடந்தாள்.

அந்தக் குழந்தையைப் பார்க்காமலேயா அந்தக் கிழவன் போய் விட்டான்? தன்னுடைய இறுதி மூச்சுகளை விடும்போது, அந்தக் குழந்தையின் அழுகைச் சத்தத்தை அவன் கேட்டிருப்பானோ? கேட்டிருப்பான். ஏனென்றால், அவன் அதிர்ஷ்டம் இல்லாதவன். அதையும் சேர்த்து இறுதியாக அனுபவித்துவிட்டு அவன் இறப்பதே நியாயமானது.


மறுநாள் காலையில் பாதி திறந்த வாயுடன், அந்தப் புளிய மரத்திற்குக் கீழே அந்தக் கிழவனின் இறந்த உடல் கிடந்தது. அதற்கு எதிர் பக்கத்தில் குளிர்ந்த நீரும் இரத்தமும் கலந்து கிடந்தன. மாலை நேரம் ஆனபோது, நகராட்சிக்குச் சொந்தமான குப்பை வண்டி அங்கு வந்தது. நான்குபேர் அந்த இறந்த உடலை வாரி எடுத்து வண்டிக்குள் எறிந்தார்கள்.

அத்துடன் அந்த வாழ்க்கை முடிந்தது.

2

ரு பழைய கிழிந்து போன காக்கி நிற அரைக்கால் ட்ரவுசரையும் அதே போல இருந்த ஒரு கருப்பு நிற பனியனையும் அணிந்திருந்த ஒரு சிறுவன் அந்தப் புளிய மரத்திற்குக் கீழே வந்து நின்றிருந்தான். அது கேசுதான்.

பழைய அடுப்புக் கற்கள் சாய்ந்து கிடந்தன. அங்கு நீண்ட நாட்களாக நெருப்பு எரிந்ததற்கான அடையாளமே இல்லை. இரண்டு மூன்று நெருப்புக் கட்டைகள் கிடந்தன. அவன் கஞ்சி குடித்துக் கொண்டிருந்த சட்டியின் ஒரு துண்டு அவன் பார்வையில் பட்டது.

அந்தப் புளிய மரம் இலைகளால் நிறைந்து காணப்பட்டது.

கேசு தன்னுடைய தாயையும் தாத்தாவையும் அக்காவையும் பார்ப்பதற்காகத் திரும்பி வந்திருக்கிறான். அவன் வெறும் கையை வீசிக் கொண்டு வரவில்லை. அவனிடம் மூன்று ரூபாய்கள் இருந்தன. அந்தப் பணத்தைத் தன் தாயின் கையில் தர வேண்டும் என்று அவன் நினைத்தான். தன் தாயிடம் கூறுவதற்கு அவனிடம் எவ்வளவோ விஷயங்கள் இருந்தன. ஆனால், அவனுடைய தாய் எங்கு போனாள்? அவன் யாரிடம் கேட்டு விஷயத்தைத் தெரிந்து கொள்வான்?

அந்த மரத்தின் உயரமான வேரில் தலையை வைத்து அவன் படுத்தான். அப்படியே படுத்தவாறு அவன் தூங்கிவிட்டான்.

யாரோ தன்னை அழைத்ததைப்போல் உணர்ந்து கேசு அதிர்ச்சியடைந்து கண் விழித்தான். அவன் இந்த உலகத்தில் தனியாக இருந்தான். அருகில் யாருமில்லை. அங்கிருந்து கிளம்பி அலைந்து திரிந்த நாட்களில் அவனுக்குள் ஒரு உணர்வு இருந்து கொண்டேயிருந்தது. தூரத்திலிருக்கும் ஒரு நகரத்தைச் சேர்ந்த ஒரு புளிய மரத்திற்குக் கீழே தன்னுடைய தாயும் அக்காவும் தாத்தாவும் இருக்கிறார்கள் என்ற நினைப்புதான் அது. வாழ்க்கையில் அவன் தனியனாக இல்லை. உரத்த குரலில் தன் தாயை அழைக்க வேண்டும் போல் அவனுக்கு இருந்தது. அந்த அழைப்பு தொண்டைக்குழி வரை வந்தது. ஆனால் வெளியே வரவில்லை. அழைத்தால், அந்த அழைப்பைக் கேட்பார்களா? அவர்கள் எங்கு இருக்கிறார்கள்?

யாரும் இல்லாதவனைப் போல, எந்தவொரு லட்சியமும் இல்லாமல் கேசு நடந்தான். அந்தப் பிச்சைக்காரச் சிறுவனின் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க ஒரு நாளாக இருந்தது அது. அவனுக்கென்று யாரும் இல்லை! பரந்து கிடக்கும் இந்த உலகத்தில் போய் இருப்பதற்கு ஒரு இடமில்லை. எனினும், அந்தப் புளிய மரத்தடியை அவனால் மறக்க முடியவில்லை. அவன் மீது பாசம் வைத்திருப்பவர்கள், அவன் அன்பு வைத்திருப்பவர்கள் எங்கு இருக்கிறார்கள்?

பகல் முழுவதும் நகரமெங்கும் அவன் சுற்றித் திரிந்தான். முன்பு நன்கு அறிமுகமான பிச்சைக்காரச் சிறுவர்கள் எல்லோரிடமும் கேட்டான். யாரிடமிருந்தும் எந்தவொரு தகவலும் அவனுக்குக் கிடைக்கவில்லை.

மாலை நேரம் ஆனதும் பிச்சைக்காரர்களின் குடும்பங்கள் தங்கள் இருப்பிடத்திற்கு வந்து சேர்ந்தன. அவனுடைய தாயும் அக்காவும் தாத்தாவும் இதே மாதிரி புதிய ஒரு இருப்பிடத்தைத் தேடிக் கண்டு பிடித்திருப்பார்கள். அவன் இரவு நேரத்திலும் நடந்தான். மீண்டும் பொழுது புலர்ந்தபோது, அந்தப் புளிய மரத்தடியைத் தேடி வந்தான். அங்கேயே படுத்து அவன் தூங்கிவிட்டான்.

அந்த நகரத்திலிருந்து வேறு ஏதோ நகரத்திற்குச் செல்லும் சிறு பாதை வழியாக மிகவும் அமைதியாக, எந்தவித சிந்தனையும் இல்லாமல் அவன் நடந்து போய்க்கொண்டிருந்தான். அந்தத் தேடலை அவன் நிறுத்தி விட்டானா? தன்னுடைய தாயை இதற்குமேல் பார்ப்பதற்கான வழி இல்லை என்று அவன் முடிவு செய்துவிட்டானா? அவனுடைய எதிர்கால திட்டம்தான் என்ன? பிச்சைக்காரச் சிறுவனுக்கு எதிர்காலத்தைப் பற்றி திட்டம் வேறு இருக்கிறதா?

மீண்டும் ஒன்றிரண்டு மாதங்கள் கடந்த பிறகு ஒருநாள் அந்தப் புளிய மரத்தடியில் அவன் இருந்தான். அன்றும் அவன் அங்கேதான் படுத்து உறங்கினான். சில நாட்கள் கழித்து மீண்டும் ஒரு இரவு நேரத்தில் ஒரு சிறுவன் அங்கு படுத்து உறங்குவதைப் பலரும் பார்த்தார்கள். அது கேசுதான். அடுத்த தடவை அவன் அங்கு வந்தபோது, அந்தப் புளிய மரத்தடி வேறொரு குடும்பத்தின் இருப்பிடமாக மாறியிருந்தது. அடுப்பில் நெருப்பு எரிந்து கொண்டிருக்க, பிள்ளைகள் அழுது கொண்டிருந்தார்கள்.

கேசு மெதுவாக அவர்களை நோக்கி நடந்து சென்றான். அடுப்பின் வெளிச்சத்திலிருந்து விலகி இருட்டில் உட்கார்ந்திருந்த ஒரு குழந்தை பயந்துபோய் கத்தியது. நெருப்பை எரியவிட்டுக் கொண்டிருந்த பெண்ணும் பயந்து விட்டாள். அவள் கேட்டாள்:

"யார் அது?"

"நான்... நான்..."

கேசு நின்றான்.

"யார் அது? பேசாமல் வந்துக்கிட்டு இருந்தா?"

அவன் சொன்னான்:

"நான் இங்கே இருந்தவன்தான்."

"எப்போ?"

"ரொம்ப நாட்களுக்கு முன்னால்..."

"அதுக்கு இப்போ ஏன் இங்கே வந்தே?"

கேசுவிடம் அதற்கு எந்த பதிலும் இல்லாமலிருந்தது. பெண் தொடர்ந்து கேட்டாள்:

"உன் பேர்ல பதிவு செஞ்சிருக்கா?"

அதற்கும் எந்த பதிலும் இல்லை.

பெண் மீண்டும் சொன்னாள்:

"இங்கே நீ இருந்திருக்கலாம். உனக்கு முன்னால் வேற யாராவது இருந்திருப்பாங்க. அதற்கு முன்னாலும் இருந்திருப்பாங்க. அதற்காக திருடனைப் போல இங்கே வர்றதா?"

கேசு ஏதாவது பதில் சொல்லியே ஆக வேண்டும்!

"என் அம்மாவும் அக்காவும் தாத்தாவும் சேர்ந்து இங்கே இருந்தாங்க."

"நல்லது... அதற்காக?"

அவன் ஐந்து, ஆறு அடிகள் பின்னால் நடந்து உட்கார்ந்தான்.

பெண் அழுது கொண்டிருந்த சிறுமியை அருகில் இழுத்துப் பிடித்து உட்கார்ந்தாள். குழந்தையை பயப்படச் செய்ததற்காக அவள் கேசுவைத் திட்டினாள். "என்னடா நீ இன்னும் போகாம இருக்கே?" என்று அவள் கேட்டாள். அப்போது அந்தக் குழந்தை அடிக்கொருதரம் திரும்பிப் பார்த்து அழுது கொண்டேயிருந்தது.

அங்கு அவனும் அவனுடைய தாயும் மற்றவர்களும் ஒன்று சேர்ந்து வாழ்வதற்கு முன்னால் அதே போல பல குடும்பங்களும் வாழ்ந்திருந்தன. இப்போது இவர்கள் இருக்கிறார்கள். இனிமேல் இவர்கள் இங்கிருந்து போய்விடுவார்கள். வேறு ஆட்கள் வருவார்கள். இந்தக் கதையைத்தான் அவன் நினைத்துக் கொண்டிருந்தான். ஏதோ ஒரு அடையாளம் தெரியாத இடத்தில் அவனுடைய தாய் இப்போது இதே போல அடுப்பிற்கு அருகில் உட்கார்ந்திருப்பாள். ஒருநாள் வீட்டைவிட்டு வெளியே போய்விட்டு அதற்குப் பிறகு திரும்பியே வராத தன் மகனை நினைத்து அவள் அழுது கொண்டிருக்கலாம்.


அந்த மகனைத் தேடி அவள் நடந்து திரியலாம். அந்தக் கதையை அவன் யாரிடமாவது சிறிதுநேரம் கூறுவதற்கு வாய்ப்பு கிடைத்திருக்கக் கூடாதா?

அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த கருவாட்டு மணம் சுற்றிலும் பரவி விட்டிருந்தது. சூடான சாதத்தின் மணமும் தான்! அவனுடைய தாய் சமைக்கும் குழம்பின் வாசனையும் இதே போலத்தான் இருக்கும். அவன் அந்த வாசனையை எவ்வளவு நாட்கள் அனுபவித்திருக்கிறான்! அந்த சாப்பாட்டின் ருசி இப்போது கூட அவனுடைய நாக்கு நுனியில் இருந்துகொண்டுதான் இருக்றிது.

கேசு தயங்கித் தயங்கி அவர்களை நெருங்கினான்.

"நீ ஏன்டா இங்கே உட்கார்ந்திருக்கே?"

"நான் என் அம்மாவைத் தேடித் திரியிறேன்."

அந்தப் பெண்ணுக்குப் புரியவில்லை. அவன் கூறுவதைக் கேட்க வேண்டும் என்ற எண்ணம் அவளுக்கு இருப்பதைப் போல் தோன்றியது.

அவன் சொன்னான்:

"நாங்க இங்கேதான் வசித்தோம். நான் இங்கேயிருந்து போய் பல நாட்கள் கழித்துத் திரும்பி வந்து பார்த்தப்போ அம்மா, அக்கா, தாத்தா யாரும் இல்ல..."

அந்தக் கதை அந்த அளவிற்கு சிறியதாக இருந்தது. அந்தப் பெண் சொன்னாள்:

"அப்படியா? அவங்க தங்களோட வயிற்றைக் காப்பாற்ற எங்கேயாவது போயிருப்பாங்க."

"நான் தேடி அலையிறேன்."

"ஒரு வேளை நீ எங்கேயாவது அவங்களைப் பார்க்கலாம். இல்லாட்டி அவங்க செத்துப் போயிருக்கலாம்."

அதைக் கேட்டு அவன் அதிர்ந்து போய்விட்டான். செத்திருப்பார்கள்! அவனுடைய தாயும் தாத்தாவும் அக்காவும் இறந்திருப்பார்கள்! அப்படியென்றால், அவர்களை இனி பார்க்க வேண்டாம். இல்லா விட்டால் அவன் வரும் வரையில் அவர்கள் அந்தப் புளிய மரத்தடியில் இல்லாமல் போயிருப்பார்களா? 

அந்தப் பெண் சாதத்தையும் குழம்பையும் இறக்கி வைத்தாள். அவள் கேட்டாள்:

"நீ ஏதாவது சாப்பிட்டியா?"

"இல்ல."

ஒரு சிறு சட்டியில் கொஞ்சம் சாதத்தையும் அதன் மீது கொஞ்சம் மீன் குழம்பையும் ஊற்றி அவனுக்கு முன்னால் அதை நகர்த்தி வைத்து விட்டு, இன்னொரு சட்டியில் அவள் தன்னுடைய சாப்பாட்டைப் பரிமாறினாள்.

இப்படி ஒரு உணவைச் சாப்பிட்டு எத்தனையோ நாட்கள் ஆகிவிட்டன. அவனுடைய சட்டித் துண்டு இப்போது அங்குதான் கிடக்கிறது. ஆனால், சாதம் உள்ளே இறங்கவில்லை. தன்னுடைய தாய் இறந்திருப்பாளா? அதை எப்படித் தெரிந்து கொள்வது? அந்தக் கேள்வியை அவன் அந்தப் பெண்ணிடம் கேட்டான்.

"செத்திருப்பாங்கடா."

"செத்திருந்தா தெரிஞ்சிருக்குமே!"

"அது எப்படி? சாலையோரங்களிலும் மூலை முடுக்குகளிலும் எவ்வளவு பேர் செத்துக் கிடக்குறாங்க! அதையெல்லாம் யார் பார்த்துக்கிட்டு இருக்காங்க?"

மற்றொரு காட்சி அவனுடைய மனக் கண்களுக்கு முன்னால் தோன்றியது. சிறு வயதிலிருந்து அவன் பார்த்திருக்கும் காட்சி தான். நகரத்தின் பல பகுதிகளிலும் பலரும் இறந்து கிடப்பார்கள். அவர்களை வண்டியில் எடுத்துப் போட்டு எங்கோ கொண்டு செல்வார்கள். சிறு வயதிலிருந்து அப்படிக் கொண்டு போவதாக தான் பார்த்த எல்லா பிணங்களும் நினைவில் தோன்றுவது மாதிரி அவனுக்கு இருந்தது. எப்படிப்பட்ட பிச்சைக்காரர்களெல்லாம் இறந்து முடித்திருக்கிறார்கள்! யாரும் யாரையும் அறிவதில்லை. அந்த இறந்தவர்கள் எல்லோருக்கும் பிள்ளைகளோ, சகோதரர்களோ இருப்பார்களேயானால்... இருப்பார்கள். அவர்களுக்குப் பிள்ளைகளும் சகோதரர்களும் இருப்பார்கள். ஆனால், அந்தப் பிள்ளைகளோ சகோதரர்களோ அவர்கள் யாரும் இறந்த விஷயத்தை அறிந்திருக்க மாட்டார்கள். அந்தப் பிள்ளைகளும் சகோதரர்களும் ஒருவேளை அவர்களைத் தேடி அலைந்து கொண்டிருக்கலாம். இந்தப் பிச்சைக்காரர்கள் ஒவ்வொருவரும் இப்படித் தங்களுடைய சொந்தக்காரர்களைத் தேடித் திரிபவர்களாகக் கூட இருக்கலாம். இந்தத் தேடலுக்கு மத்தியில் அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்தவர்கள் யாராவது இருக்கிறார்களா? தாயும் பிள்ளைகளும் சகோதரனும் சகோதரியும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்துவிட்டால், பிறகு ஒன்று சேரும் பொதுவான இடம் எங்கு இருக்கிறது?

படிப்படியாக அவனுடைய மனக்கண்களுக்கு முன்னால் பிச்சைக்காரர்களின் ஒரு மிகப்பெரிய கூட்டம் தோன்றியது. எவ்வளவு பிச்சைக்காரர்கள்! நகரம் முழுக்க அவர்கள் நடந்து திரிகிறார்கள்! பலர் இறந்த பிறகும், அந்தக் கூட்டம் குறைவதாகத் தெரியவில்லை. ஒவ்வொரு வீட்டில் ஏறுகிறபோதும், அவர்கள் கூறுவதென்னவோ உண்மைதான். பிச்சைக்காரர்களின் எண்ணிக்கை மிகவும் அதிகமாகிவிட்டது.

அவன் கேட்டான்:

"அம்மா, உங்களுக்குச் சொந்தமானவங்க யாராவது அப்படி இறந்திருக்காங்களா?"

"இறந்திருக்கலாம்."

"அம்மா, அதற்குப் பிறகு அவங்களைத் தேடினீங்களா?"

"எதற்குத் தேடணும்? இருந்தாலும் இப்பவும் நான் போற இடங்களில் எல்லாம் அவங்களைத் தேடிக்கிட்டுத்தான் இருக்கேன்."

"அவங்க யாரு?"

"இந்தக் குழந்தைக்கு மூத்த பசங்க. ஒரு ஆணும் ஒரு பெண்ணும்."

அந்த இரவு நேரத்தில் வாழ்க்கை என்றால் என்ன என்பதைப் படித்த அந்தப் பெண் அவனிடம் ஏராளமான விஷயங்களைக் கூறினாள். அது மட்டுமல்ல; அன்றைய இரவில் அவன் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டான். நகரத்தில் இங்குமங்குமாக மாலை வேலைகளில் ஒன்று சேர்ந்து கஞ்சி வைத்து வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு குடும்பமும் முழுமையானதல்ல. தந்தை அந்தக் குடும்பங்களில் இருப்பது என்பதே அபூர்வமானது. பிறந்த பிள்ளைகள் எல்லாரும் தாயிடம் இருக்க மாட்டார்கள். பிறந்த கணத்திலேயே அவள் அவர்களை எங்காவது தூக்கிப் போட்டிருக்கலாம். அப்படியே வளர்த்தாலும், அதற்குப் பிறகு அவன் எங்காவது போயிருக்கலாம். சகோதரர்கள் சகோதரிகளையும், சகோதரிகள் சகோதரர்களையும் அடையாளம் கண்டு பிடிக்காமலே கடைசிவரை ஆகியிருக்கலாம். இப்படி அந்த பரிதாபக் கதை நீளமாக நீண்டு கொண்டிருந்தது. இந்தப் பிச்சைக்காரர்கள் இனத்தில் பிறக்கும் குழந்தைகளுக்குக் கணக்கும் இல்லை.

இந்த விஷயங்கள் ஒவ்வொன்றும் எந்த அளவிற்கு உண்மையானது என்பதை வாழ்க்கையில் அவன் முதல் தடவையாக உணர்ந்தான். பேருந்து நிலையங்களிலும் படகுத் துறையிலும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் இந்த மாதிரி குடும்பங்களை விட்டு ஓடியவர்களாக இருக்க வேண்டும். குப்பையில் வீசி எறியப்பட்டவர்களாக இருக்க வேண்டும்.

அவனுக்கு சிந்திப்பதற்கான விஷயமாக இது ஆனது. மேலும் அதைப்பற்றித் தெரிந்து கொள்ளும் ஆவல் அவனுக்கு உண்டானது. அவன் கேட்டான்:

"அம்மா, அப்படின்னா... இந்தப் பிச்சைக்காரர்கள் பெற்று பிச்சைக்காரர்கள் உண்டானாங்க. அவர்கள் பெற்றதும் பிச்சைக்காரர்களைத்தான். இப்படி கதை போகுது... அப்படித்தானேம்மா?"

உடனடியாக பதில் கூற முடியாத ஒரு கேள்வி என்பதை போல அவள் சிறிது நேரம் எதுவும் பேசாமல் இருந்தாள்.

அவள் சொன்னாள்:

"அது அப்படியில்ல, குழந்தை! நான் சொல்றேன். நானும் அதைப்பற்றி சிந்திச்சிருக்கேன். நேர்ல பார்க்கவும் செய்திருக்கேன். இப்போ... இந்த சின்னப் பையனையே எடுத்துக்கோ. இது எப்படியோ வளர்ந்திடுதுன்னு வச்சுக்கோ. வளர்ந்த பிறகு இவனுக்கும் பிள்ளைகள் பிறக்கும். பிறக்கும் அந்த எல்லா பிள்ளைகளும் உயிரோடு இருக்காது.


சில நேரங்கள்ல ஒண்ணுகூட உயிரோடு இல்லாமலும் போகலாம். அப்போ வம்சம் அதோடு முடிஞ்சு போகுதுல்ல? அப்படித்தான் இந்தப் பிச்சைக்காரர்கள் இனம் அழிஞ்சிக்கிட்டு இருக்கு. பிள்ளைகளோட பிள்ளைகள் அதற்குப் பிறகு எங்கும் போக மாட்டாங்க. போக முடியாது."

அந்தப் பெண் தனக்கு நன்கு தெரிந்த மூன்று நான்கு குடும்பங்களின் கதைகளைக் கூறினாள். அவளுக்கு நன்றாகத் தெரிந்த ஒரு பெண்ணுக்கு பத்து பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களில் ஒன்றுகூட கடைசியில் எஞ்சியிருக்கவில்லை. இன்னொரு பெண்ணுக்கு தன்னுடைய ஒரு பிள்ளையையாவது வளர்த்துப் பெரியதாக ஆக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. மூன்றாவதாக இருந்த பெண், தன்னுடைய ஒரு பிள்ளைகூட உயிரோடு இருக்க வேண்டும் என்று ஆசைப்படவில்லை. எதற்காக அவர்கள் வாழ வேண்டும்?

ஒரு நீண்ட கதையை அவள் இப்படிக் கூறி முடித்தாள்.

"நாம யாரும் யார் மேலயும் பாசம் வைக்க முடியாது குழந்தை. நாம யாரும் அன்பு இல்லாதவங்க இல்ல. அன்பு உள்ளவங்கதான். ஆணுக்கு பெண் மீதும் பெண்ணுக்கு ஆண் மீதும் விருப்பம் இல்லாமப் போயிடுமா? உடன் பிறந்தவர்களுக்கு இடையில் பாசம் இல்லாமப் போயிடுமா? அதேமாதிரி பெற்ற தாய்க்கு பிள்ளைகள் மீதும், ஒருத்தியின் பாலைக் குடிச்சு வளரும் ஒரு பிள்ளைக்குத் தன் தாய் மீதும் பாசம் இல்லாமப் போயிடுமா? ஆனால், பாசம் வைக்க முடியாது குழந்தை... முடியாது. இப்படி பலவகைப்பட்ட அனுபவங்கள் கிடைச்ச பிறகு, எல்லாவற்றையும் சகிச்சு வாழக்கூடிய மனப்பக்குவம் கிடைக்கும். சாகுற வரை வாழணுமேன்ற நினைப்பு வரும். இப்படித்தான் வாழ்க்கை போய்க்கிட்டு இருக்கு. இப்போ உன் அம்மாவையே எடுத்துக்கோ. அவங்க சாகாம இருந்தா, இங்கேயிருந்து போனது மன விருப்பத்தோடு இல்ல. அவங்க இப்போ இருந்தா, உன்னை எதிர்பார்த்துக் காத்திருப்பாங்க. என் விஷயமும் அதுதான் குழந்தை!"

கேசு அமைதியாக உட்கார்ந்து பல விஷயங்களையும் சிந்தித்துக் கொண்டிருந்தான். எத்தனைப் பிள்ளைகள் இப்படித் தங்களின் தாய்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்! எத்தனைத் தாய்மார்கள் இப்படித் தங்களின் பிள்ளைகளை எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்! சகோதரர்கள் சகோதரிகளையும்,சகோதரிகள் சகோதரர்களைம் பார்த்தால் ஒருவருக்கொருவர் அடையாளம் தெரியாமலே கூட இருக்கலாம். அவனுடைய சகோதரியின் முகம் அவனுக்குச் சரியாக ஞாபகத்தில் இல்லை. தாயையே பார்த்தாலும், அவனால் இனிமேல் அடையாளம் கண்டுபிடிக்க முடியுமா என்ன?

அவன் எழுந்து உட்கார்ந்தான். அந்தப் புளியமரத்திற்குக் கீழே வாழ்ந்த ஒவ்வொரு நாளும் அவனுடைய ஞாபகத்தில் வந்தன. அவனுடைய தாய் அவன் மீது பாசம் வைத்திருந்தாள். சகோதரி தன்னுடைய ஒரே தம்பிக்கு சாதத்தைதக் கொடுத்துவிட்டு, வெறும் நீரை மட்டும் குடித்திருக்கிறாள். அவர்களுக்கு ஒரு வீடு உண்டாக்கித் தர வேண்டும் என்பதற்காக, ஐம்பது வருடங்கள் முயற்சித்த ஒருவன் தான் அவனுடைய தாத்தா.

ஒரு மெல்லிய திரை விலகி மீண்டும் அவனுடைய தாயின் முகமும் அக்காவின் முகமும் அவன் மனதில் தெளிவாகத் தெரிந்தன. இனியும் அந்த முகங்கள் மறையாமல் அங்கு இருக்க வேண்டும்!

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவனாகவே அவன் ஆகிவிட்டான். அந்தப் பெண்ணின் மூத்த மகன் கையில் கிடைக்கும் எல்லாவற்றையும் அவன் கொண்டு வந்து அந்தப் பெண்ணிடம் கொடுப்பான். அவள் சமையல் செய்து அவனுக்குப் பரிமாறுவாள். அவளுடைய சிறிய பெண் குழந்தை அவனை 'அண்ணா' என்று கூப்பிட கற்றுக் கொண்டாள். அவன் அப்படி அழைக்க அவளுக்குக் கற்றுத் தந்தான். முதல் தடவையாக அந்தப் பெண் குழந்தை அவனை அப்படி அழைத்த இரவு நேரத்தில் அவன் தன் மனதில் ஒரு திட்டத்திற்கு வடிவம் கொடுத்தான்.

பிச்சைக்காரர்கள் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவன் வாழ்க்கையின் இறுதிவரை 'அண்ணா' என்று அழைக்க ஒரு ஆள் இருக்குமா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றொரு எண்ணம் அவனுக்கு உண்டானது.

தினமும் சாயங்காலம் திரும்பி வரும்போது அவனுடைய புதிய தாயிடம் கூறுவதற்கு ஒவ்வொரு புதிய விஷயங்கள் அவனிடம் இருக்கும். கேட்பதற்குப் பல சந்தேகங்கள் இருக்கும். தெரிந்து கொள்வதற்கும் நிறைய இருக்கும். பிச்சைக்காரர்கள் எங்கு உருவாகின்றனர் என்பதை அவன் படித்தான். ஒவ்வொரு நாளும் பிச்சைக்காரர்கள் அழிவதும் உண்டாவதுமாக இருக்கிறார்கள் என்று அந்தத் தாய் அவனுக்குச் சொல்லித் தந்தாள். அவளுக்குப் பல குடும்பங்களின் வரலாறுகளையும் கூறத் தெரிந்திருந்தது. புதிய புதிய பிச்சைக்காரர்கள் பலரையும் அவன் சந்தித்தான். அவனுடைய தாத்தாவும் தாயும் சகோதரியும் பிச்சைக்காரர்களாக வீட்டை விட்டு வெளியேறிய அந்த நாளை அவன் பல நேரங்களில் மனதில் நினைத்துப் பார்ப்பான். தெளிவற்ற சில ஞாபகங்கள் அவனிடம் அதைப்பற்றி இருந்தன. இப்போதும் குழந்தையையும் பிள்ளைகளையும் தூக்கிக் கொண்டு வாழ்க்கையில் மிச்சமென்று எதுவுமே இல்லாதவர்கள் தெருக்களில் நடந்து போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். இடுப்பில் தூக்கி வைத்துக் கொண்டும் கையில் பிடித்துக் கொண்டும் இருக்கும் அந்தக் குழந்தைகள் பின்னால் அனாதையாக விடப்படப் போகிறவர்களே.

தினமும் காலையில் போகும்போது அந்தப் புளிய மரத்திற்குக் கீழேயே மாலையிலும் பார்ப்போமா என்று அவன் கேள்வி கேட்பதுண்டு. நகரம் முழுக்க அலைந்து திரிந்த போது ஒரு பதைபதைப்பு அவனைப் போட்டு ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தது. அவர்கள் அங்கேயே இருப்பார்கள் என்பதை எப்படி உறுதியாகக் கூற முடியும்? அவனுக்காகக் காத்திருக்க வேண்டும் என்று அவர்களுக்கு ஏதாவது கட்டாயம் இருக்கிறதா என்ன? அவனை நினைத்துப் பார்க்க வேண்டும் என்ற நியதி எதுவும் உண்டா என்ன? ஒருவேளை அவனுடைய தாய்க்கும் சகோதரிக்கும் இதே மாதிரி ஒரு மகன் இப்போது கிடைத்தாலும் கிடைத்திருக்கலாம். அது இவர்களுடைய பிரிந்து போன மகனாக இருக்கக்கூடாதா என்ன?

அன்றொரு நாள் மாலையில் அவன் ஒரு முக்கிய செய்தியுடன் வந்தான். அவனுக்கு ஒரு வேலை கிடைத்திருந்தது- ஒரு தொழிற்சாலையில்.

அந்தப் பெண் கேட்டாள்:

"சம்பளம் எவ்வளவு?"

"அது எதுவும் தெரியாது. வேலை கிடைத்தது. இன்னைக்கு முழுவதும் வேலை செய்தேன். எட்டணா கூலியா கிடைச்சது."

அவன் அந்தக் காசை அந்தப் பெண்ணின் கையில் கொடுத்தான். நாளைக்கும் அவன் வேலைக்குப் போகப் போகிறான். தன்னுடைய சில நண்பர்களையும் கூட அவன் தன்னுடைய வேலைக்கு அழைத்துச் செல்ல தீர்மானித்திருக்கிறான். அங்கு நிறைய ஆட்களை வேலையிலிருந்து போகச் சொல்லி விட்டார்கள். அதற்கு பதிலாக ஆட்களை எடுக்கிறார்கள்.

அந்தப் பெண் சொன்னாள்:


"இப்படித்தான் பிச்சைக்காரர்களை உண்டாக்குகிறார்கள். கூலி கொடுக்காமலே வேலை செய்ய ஆளுங்க கிடைப்பாங்க. வேலையிலிருந்து விலக்கப்பட்டவர்கள் அதிகமா சம்பளம் கேட்டிருப்பாங்க."

அது அவனுக்குத் தெரியாது.

அவள் ஒரு தொழிலாளியின் மனைவியாக இருந்தாள். நல்ல உடல்நலம் கொண்ட ஒரு கணவனின் மனைவி. அவன் எந்தச் சமயத்திலும் ஒரு பிச்சைக்காரனாக இருந்ததில்லை. இன்னொருவனிடம் ஒரு பாக்குத் துண்டுகூட இரவலாகக் கேட்டதில்லை. இரவு- பகல் பாராமல் பணி செய்தான். ஆனால், கையில் மிச்சம் என்று எதுவுமே இல்லாமல் ஆன போது, மேலும் மேலும் அவன் வேலை செய்தான். இப்படி ஓய்வே இல்லாமல் வேலை செய்த அவன் உரிய காலத்திற்கு முன்பே மரணத்தைத் தழுவிவிட்டான்.

அவள் சொன்னாள்:

"அந்த மனிதர் வேலை செய்த நிலைக்கு, நாங்க யாரும் பிச்சை எடுக்க வேண்டிய அவசியமே இல்லை."

அதே வார்த்தைகளைத்தான் அவனுடைய தாத்தா கூறியும் அவன் கேட்டிருக்கிறான். அவனும் பிச்சை எடுக்க வேண்டியதே இல்லை. அந்த வரலாறை நினைக்கும்போது அவனுக்கு மேலும் ஆர்வம் உண்டானது. அவனுடைய தாத்தா வேலை செய்ததற்கான பலனை யாரோ அபகரித்துக் கொண்டார்கள். இந்தத் தொழிலாளிகளின் கடுமையான உழைப்பிற்கான பலன்...?

அவள் பதில் சொன்னாள்:

"நாம் பார்க்கும் மாளிகையும் கோபுரமும் பிறகு என்னன்னு நினைச்சே? ஏழைங்களோட உழைப்புதான்."

அப்படியென்றால் அவனும் வேறு யாரோ பணம் சம்பாதிப்பதற்குத்தான் இன்று தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்திருக்கிறானா? "ஆமாம்" என்று அந்தப் பெண் உறுதியான குரலில் சொன்னாள்.

"இன்னைக்கு உனக்கு முழுசா பதினாலு சக்கரங்கள் கிடைச்சது. இதை வச்சு நீ ஒரு நாள் வாழ முடியுமா? இல்லை. நீ வேலை செய்றது மூலம் கிடைக்கிற பணம் நீ வாழ்ற அளவுக்காவது வேண்டாமா? அப்படின்னா உனக்கு தேவையான பணம் கிடைக்கணும். அதைத் தர மாட்டாங்க. அப்போத்தான் பிச்சைக்காரர்கள் உண்டாகுறாங்க. பிச்சைக்காரர்கள் உண்டாகுறப்போ, சம்பளம் குறைவா கொடுத்தால் போதும். பிச்சைக்காரர்கள் அப்படித்தான் உண்டாகுறாங்க."

தன்னுடைய சொந்தக் கதை மட்டுமல்ல-வேறு பலரின் பரிதாபமான வரலாறுகளும் அவளுக்குத் தெரியும். அந்த இதயத்தை நெகிழச் செய்யும் கதைகளை அவன் மிகவும் கவனமாகக் கேட்டான்.

மறுநாள் காலை அவனைப் பொறுத்தவரையில் ஒரு குறிப்பிடத்தக்க காலையாக இருந்தது. நான்கு பக்கங்களிலும் தெரிகிற மிகப் பெரிய மாளிகைகளை அவன் கூர்ந்து கவனித்தான். அவை அப்படி கம்பீரமாக நின்று கொண்டிருப்பதில் ஒரு புதிய அர்த்தமும் விளக்கமும் இருந்தன. அவை அனைத்தும் இல்லாதவர்களின் உழைப்பால் உண்டானவை.

அன்று அவன் வேலைக்குப் போக வேண்டுமா என்று அந்தப் பெண்ணிடம் கேட்டான். அவள் அறிவுரை சொன்னாள்:

"போகணும் மகனே. வேலை செய்யணும். இல்லைன்னா, சாப்பிடுறது சிரமமான விஷயமா ஆயிடும்."

அப்படியென்றால் மற்றவர்கள் லாபம் சம்பாதிப்பதற்காக வேலை செய்ய வேண்டுமா என்று அவன் கேட்டான். அதற்கான பதிலும் அந்தப் பெண்ணிடம் இருந்தது.

"நாம மனசுல நினைக்க வேண்டியது அவர்களுக்கு லாபம் உண்டாக்குறதைப் பற்றி இல்ல குழந்தை. வேலை செய்யணும். நம்மால எந்த அளவுக்கு முடியுமோ அந்த அளவுக்கு வேலை செய்யணும்."

அந்த அறிவுரையை அவன் பின்பற்றினான். காலையில் நடந்து செல்லும்போது இரு பக்கங்களிலும் பார்த்துக் கொண்டே அவன் நடப்பான். அந்த செழிப்பான சூழ்நிலைக்கான அர்த்தம் என்னவென்று அவனுக்கு நன்றாகவே புரிந்தது. கடந்து செல்லும் பணக்காரர்களைப் பற்றி அவன் சிந்திக்க ஆரம்பித்தான். அவனுக்குத் தெரிந்த ஏராளமான பேருக்கு எதுவுமே இல்லாமல் இருப்பதற்குக் காரணம் என்ன?

வாழ்க்கையை அவன் ஒரு புதிய கோணத்தின் வழியாகப் பார்த்தான். வீங்கிய மடியைப் பார்க்கும் போது அவன் அதில் எவ்வளவு இருக்கிறது என்று நினைத்து ஆச்சரியப்படுவதில்லை. அது எப்படி உண்டானது என்று சிந்திக்க ஆரம்பித்தான். தெரு முழுக்க நடந்து பிச்சை எடுத்தும் ஒரு பிடி சோறு கிடைக்காமல், தோல்வியைச் சந்தித்த பிச்சைக்காரனைப் பார்க்கும்போது அவனுடைய பங்காக இருக்கும் உணவு எங்கு போனது, யார் அதை அபகரித்தார்கள் என்று அவன் சிந்தித்துப் பார்த்தான். இந்த நகரத்தில் இருப்பவர்கள் வசிப்பதற்கான வீடுகள் இதே நகரத்தில் இருக்கத்தான் செய்கின்றன. காலியாக கிடக்கும் வீடுகள் நிறைய இருக்கின்றன. ஆனால், பாதையோரங்களிலும் புளிய மரத்தடியிலும் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் அப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற சூழ்நிலை வந்ததற்கான காரணம் என்ன?

ஒன்றுக்குப் பின்னால் இன்னொன்றாக கேள்விகள் எழுந்து கொண்டேயிருந்தன. அனுபவங்களில் இருந்து உண்டான அர்த்தம் நிறைந்த கேள்விகள்! ஆனால், பதில்கள்தான் கிடைக்கவில்லை. பதில்கள் கிடைத்தாலும் அவனுடைய சிந்தனை அறைகளில் குழப்பம் உண்டானதுதான் மிச்சம். மிகப்பெரிய மாளிகைகளின் சொந்தக்காரன் அதன் உரிமையாளராக எப்படி ஆனான்? வீங்கிய மடிகள் மேலும் வீங்க முடிந்தது எப்படி? இப்படி ஒன்றின் மீது ஒன்றாக சாய்ந்து விழுந்து பிரச்சினைகள் சிந்தனைத் தளத்தில் அதிகமாகிக் கொண்டிருந்தன.

தன்னுடன் இருக்கும் பிச்சைக்காரர்களிடம் அவன் சொன்னான்- இந்த வசதி படைத்த மனிதர்கள் அவர்களுக்குக் கிடைக்க வேண்டியதை அபகரித்துக் கொண்டார்கள் என்று. அதைக் கேட்டு அவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அடித்துப் பிடுங்குவதற்குப் பிச்சைக்காரர்களிடம் என்ன இருக்கிறது? எந்தப் பிச்சைக்காரனிடமிருந்து எந்தப் பணக்காரன் சொத்தைப் பிடுங்கினான்? தொழிற்சாலையில் தன்னுடன் வேலை பார்க்கும் மற்ற பணியாட்களிடம் அவன் சொன்னான்- இப்போது வாங்கிக் கொண்டிருப்பதை விட அதிகமான சம்பளம் வாங்க அவர்களுக்கு உரிமை இருக்கிறது என்று. அது யாருக்கும் புரியவில்லை. பிச்சை எடுத்துக் கொண்டு தெருவில் நடந்து திரிந்தவர்களுக்கு கூப்பிட்டு வேலை தருவது என்பதே எவ்வளவு பெரிய விஷயம்! இந்த அளவிற்காவது கிடைத்ததே! முதலாளிக்கு அதிகமாக லாபம் கிடைக்கிறது என்றால், அது அவர்கள் பணத்தை முதலீடு செய்ததன் காரணமாகத்தானே?

அப்போது அவன் தனக்குள் கேட்டுக் கொண்டான்.

'முதலாளிக்கு பணம் எங்கே இருந்து வந்தது?'

அந்தச் சிறுவன் இன்று ஒரு சாதாரண சிறுவனல்ல. எதுவுமே இல்லாத பிச்சைக்காரன் அல்ல. கிடைப்பதைக் கொண்டு எப்படியோ வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு தொழிலாளியும் அல்ல. அவன் சிந்திக்கக் கற்றுக் கொண்டான். அவனுக்கு சிந்தனை செய்வதற்கு ஏராளமான விஷயங்கள் இருந்தன. அவனுடைய கண்கள் பலவிதப்பட்ட பிரச்சினைகளையும் வெளிப்படுத்துகின்றன. அங்கு ஒரு பிரகாசம் தெரியவே செய்கிறது. பிரகாசம் தெரிகிறதா என்று நீங்கள் கேட்கலாம். ஆமாம்... பிரகாசம்தான். அவனுக்குள் ஒரு நெருப்பு எரிந்து கொண்டிருக்கிறது. புனிதமான ஒரு நெருப்பின் சக்தி அங்கு திரண்டிருக்கிறது.


அவன் என்னவெல்லாமோ சிந்தித்துப் பார்த்து விட்டான். இனியும் அவன் செய்ய வேண்டிய விஷயங்கள் சில இருக்கின்றன. அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு அர்த்தம் வந்து சேர்ந்திருக்கிறது. ஆனால், ஒரு தெளிவான நோக்கம் இல்லை என்பதென்னவோ உண்மை.

அந்தப் புளியமரத்தடியில்தான் இப்போதும் அவர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இரவு உணவு சாப்பிட்டு முடித்து, ஒரு பீடியை உதட்டில் வைத்துப் புகைத்துக் கொண்டிருந்த போது, அவன் அந்தப் பெண்ணிடம் ஏராளமான கேள்விகளைக் கேட்க ஆரம்பிப்பான். கதையில்லாத கேள்விகள் இல்லை. சிந்தனையில் இருந்து உருவான வாழ்க்கை அனுபவங்கள் பிரதிபலிக்கக்கூடிய கேள்விகள். யாரோ லாப வெறி கொண்ட ஒரு முதலாளியின் பணப்பை வீங்குவதற்காக வாழ்க்கையை விற்ற ஒரு தொழிலாளியின் மனைவியால்தான் அதற்கு பதில் தர முடியும். அவள் பிச்சைக்காரியும்கூட.

ஒரு நாள் அவன் கேட்டான்:

"இந்த முதலாளியின் சொத்து... கொஞ்சம் நமக்கு அதுல உரிமை இருக்குல்ல? அப்படி இருக்கணுமே! நமக்குச் சேர வேண்டியதை அந்த ஆளு அபகரித்துக் கொண்டதால்தானே, அவன் பணக்காரன் ஆனான்?"

அவள் அதற்கு பதில் சொன்னாள்:

"நீ சொல்றது உண்மைதான்."

அவனுடைய சிந்தனை மேலும் உறுதி படைத்ததாக ஆனது. அவன் கேட்டான்:

"இந்தப் பிச்சைக்காரர்களும் பிச்சைக்காரர்களாக ஆகப் போகிற தொழிலாளிகளும் ஒன்று சேர்ந்தால், இந்த முதலாளி என்ன செய்ய முடியும்?"

"அப்படி ஒன்று சேர முடியாது மகனே. ஒன்று சேரக் கூடாதுன்றதுக்காகத்தானே அவர்கள் பிச்சைக்காரர்களை உண்டாக்குறாங்க."

அவனுடைய தலைக்குள் அதற்குப் பிறகு என்ன வழி என்ற சிந்தனை அலையடித்துக் கொண்டிருந்தது. அந்த முதலாளி சேர்த்து வைத்திருக்கும் சொத்தைக் கைப்பற்றினால்தான் சரியாக இருக்கும்.

 

நகரத்தையே நடுங்க வைக்கும் அந்தத் திருட்டு நடந்து முடிந்தது. மிகப்பெரிய தொகை ஒரு பெரிய முதலாளியின் வீட்டிலிருந்து திருடு போனது. எங்கும் அதைப்பற்றிய பேச்சாகவே இருந்தது. திருடியவன் புத்திசாலி என்றுதான் சொல்ல வேண்டும். அதைச் செய்வதற்கு நீண்ட காலமாக திட்டம் போட்டிருக்க வேண்டும். அதைச் செய்ததற்கு எந்தவொரு நோக்கமும் இருந்ததாகத் தெரியவில்லை. அந்தத் திருடன் யாராக இருக்கும்?

போலீஸ் தீவிரமாக விசாரணை நடத்தியது. அதை நகரத்தில் இருந்த எல்லோரும் உணர்ந்தார்கள். ஏழையாக இருக்கும் ஒருவன் கூட நிம்மதியாக இருக்க முடியவில்லை.

எல்லாவற்றையும் கேசு பார்த்துக் கொண்டிருந்தான். தெரிந்து கொண்டிருந்தான். அந்தப் புளிய மரத்தடியில் படுத்திருக்கும் போது, அந்தத் திருட்டைப் பற்றி அன்று ஆட்கள் பேசுவதைக் கேட்டதையும், போலீஸ்காரர்கள் நடத்திய விசாரணைகளைப் பற்றி அறிந்ததையும் நினைத்துப் பார்த்தபோது ஒரு மெல்லிய புன்சிரிப்பு அவனுடைய உதடுகளில் மலரும். ஆனால், அதை யாரும் பார்க்கவில்லை. அந்த முதலாளி இன்னும் எழுந்திருக்கவில்லை. அந்த ஆள் படுத்திருப்பதைப் பார்க்க வேண்டும் போல் இருக்கும் கேசுவிற்கு.

இந்த போலீஸ்காரர்கள் எதற்காக இந்த அளவிற்கு அக்கறை எடுத்துக் கொள்கிறார்கள்? அவனுடைய இப்போதைய தாய் அதற்கு ஒரே வார்த்தையில் பதில் சொன்னாள்: "இதை விட்டால் போலீஸ்காரர்களுக்கு வேறு என்ன வேலை இருக்கு? வசதி படைத்தவர்களின் சொத்தை பாதுகாப்பதுதான் அவர்களின் வேலையே!"

எவ்வளவு அப்பிராணியான நிரபராதிகள் துன்பங்களை அனுபவிக்கிறார்கள்! அது அவனுடைய இதயத்தை மிகவும் வேதனை கொள்ளச் செய்தது. இதற்கிடையில் நிறையபேர் அந்தக் குற்றச் செயலை ஒப்புக் கொண்டிருந்தார்கள். ஆனால், பணம்தான் யாரிடமும் கிடைக்கவில்லை.

அந்த உண்மையை அந்தப் பெண்ணிடம் கூற பல தடவைகள் அவன் ஆசைப்பட்டான். அந்தத் திருட்டைச் செய்தது தான் தான் என்ற உண்மையை. அந்தப் பணம் முழுவதும் அவனிடம் இருந்தது. ஆனால், அவன் சொல்லவில்லை. தான் செய்தது சரியா, தவறா என்று அவனாலேயே நிச்சயமாகக் கூற முடியவில்லை.

அந்த மிகப்பெரிய தொகையை வைத்து என்ன செய்வது?  அதைப் பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் பிரித்துக் கொடுத்தால்... அதனால் என்ன நிம்மதி கிடைக்கப் போகிறது?  எதுவுமே இல்லை. அதற்குப் பிறகும் அந்தப் பிரச்சினை தீர்க்கப்படாமல் அப்படியே இருக்கும். அவனால் எத்தனை எத்தனை ஏழைகள் அடியும் உதையும் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்!

தான் செய்தது தவறா, சரியா? இதை யாரிடம் அவன் போய் கேட்பான்? அதற்குப் பதில் கிடைத்தால் அவன் சந்தோஷப்படுவான். அன்று எடுத்த பணத்தை அதற்குப் பிறகு அவன் பார்க்கவேயில்லை. அதை எடுத்துப் பார்க்க வேண்டும் என்ற தைரியமும் அவனுக்கு இல்லை. அந்தப் பணத்தை எடுத்ததால், அந்த முதலாளிக்கு என்ன உண்டாகப் போகிறது? அவனும் பிச்சைக்காரனாக ஆகலாம். அப்படியென்றால், மேலும் ஒரு பிச்சைக்காரன் உண்டாகியிருக்கிறான் என்பதுதான் உண்மை. இல்லாவிட்டால் இந்த நிமிடம் கூட தனக்கு உண்டான இழப்பைச் சரிகட்ட அவன் யாரையாவது ஏமாற்றிக் கொண்டிருப்பான்.

ச்சே! அந்தத் திருட்டைச் செய்யாமல் இருந்திருக்கலாம். ஆனால், செய்தாகிவிட்டதே! இனி என்ன செய்வது?

அந்தக் குற்றத்தை அவன் அந்தப் பெண்ணிடம் ஒப்புக் கொண்டான். அவள் அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்து விட்டாள்.

"நீ அதை ஏன் செய்தே மகனே?"

"நான் செஞ்சிட்டேன் அம்மா."

"அதைச் செய்யாமல் இருந்திருக்கலாம்."

"உண்மைதான். நான் போலீஸ்காரர்கள்கிட்ட போய் செய்த குற்றத்தை ஒத்துக்கப் போறேன். அந்தப் பணம் முழுவதும் என் கையில இருக்கு."

அதன் ஒரு சிறு பகுதியையாவது அவள் கேட்பாள் என்று அவன் எதிர்பார்த்தான். ஆனால், அவள் கேட்கவில்லை. அந்த ஆசையின் ஒரு சிறு சாயல்கூட அவளிடம் இல்லை.

உண்மையான வருத்தத்துடன் அவள் சொன்னாள்:

"என் மகனே, உன் காலத்தை நீ வீணாக்கிட்டே. உன்னை சிறையில போட்டுடுவாங்க. அங்கு நீ நிறைய நாட்கள் கிடக்க வேண்டியதிருக்கும்."

அது ஒரு மிகப் பெரிய இழப்புதான். சிறைக்குள் எந்தவிதமான காரணமும் இல்லாமல் வாழ்க்கையின் ஒரு பகுதியைச் செலவிடுவது என்றால்...?

அவள் கேட்டாள்:

"இந்தப் பணத்தை வச்சிக்கிட்டு நீ ஊரைவிட்டு போய் விட்டால்...?"

"போய் விட்டால்...?"

"நீ மானத்தோட வாழலாம். பணக்காரனாக!"

அவன் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை. அந்த அளவிற்கு மிகப்பெரிய தொகைக்குச் சொந்தக்காரனாக ஆக அவன் விரும்பவில்லை. தான் பணக்காரனாக ஆக வேண்டும் என்ற ஆசை அவனுக்கு இல்லை.

கேசுவைத் தண்டித்தார்கள். அந்தப் பணத்தில் ஒரு காசுகூட குறையாமல் முதலாளிக்குக் கிடைத்தது. கேசு சிறைக்குச் சென்றபோது, அந்தத் தாயும் மகளும் நீதிமன்றக் கட்டிடத்திற்கு வெளியில் நின்றிருந்தார்கள். அந்தச் சிறுமி 'அண்ணனை' இரண்டு முறை அழைத்தாள். இனி எப்போது அண்ணன் திரும்பி வருவான் என்று அவள் தன் தாயிடம் கேட்டாள். கண்களில் கண்ணீர் நிறைய நின்றிருந்த தாய் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.


3

வுரி உலகத்தில் அனாதையாகிவிட்டாள். அவளுடன் அவளுடைய தாய் இல்லை. ஏதோ ஒரு கடைத்திண்ணையில் படுத்து அவள் தன்னுடைய இறுதி மூச்சை விட்டாள். கவுரி மரண நிமிடத்தில் அருகில்தான் இருந்தாள். அந்த இறந்த உடலில் தன் தலையை வைத்து அழுதுகொண்டே அவள் கேட்டாள்:

"எனக்கு இனிமேல் யார் இருக்காங்க அம்மா?"

அவளுக்கு அதற்கு பதில் கிடைத்தால்தான் நிம்மதியாக இருக்கும். அவளுக்கு யார் இருக்கிறார்கள்? மீண்டும் மீண்டும் அவள் கேட்டாள். பதில் கிடைக்காமல் அவள் அங்கிருந்து எப்படி கிளம்புவாள்?

பொழுது புலரும் போது அந்த இடத்தை விட்டுப் புறப்படுவதைத் தவிர அவளுக்கு வேறு வழியில்லை என்றாகிவிட்டது. அந்தக் கேள்விக்கு பதிலே கிடைக்காமல் குழந்தையையும் எடுத்துக் கொண்டு அவள் நடந்தாள்.

எதற்காக அவளை அவளுடைய தாய் பெற்றாள்? இடுப்பில் இருக்கும் அந்தக் குழந்தையும் இதே கேள்வியைக் கேட்காதா? தனக்கு யார் இருக்கிறார்கள் என்றும், எதற்காக உலகத்திற்குக் கொண்டு வந்தாய் என்றும் அது கேட்காதா?

அந்தக் குழந்தையும் வளரும்போது ஒருவேளை இப்படி சாலை அருகில் கிடந்து அவளும் இறப்பாள். பொழுது புலர்வதற்கு முன்னால் அதுவும் இந்த இடத்தை விட்டுப் போகும். தாத்தா இறந்தபோது அவளுடைய தாய் அப்படித்தான் செய்தாள். இன்று அதே விஷயத்தை அவள் திரும்பச் செய்தாள். இந்தக் குழந்தை அதை திரும்பச் செய்யும். இந்த வழக்கம் ஒரு பரம்பரை விஷயமாக ஆகும்.

அவளுடைய தாய்க்கு ஒதுக்கப்பட்டிருக்கும் ஆறடி நிலம் எங்கு இருக்கும்? மண்ணுக்கு இந்த அளவிற்கு விலை இருக்கும் பூமியில் அவளுக்கும் ஆறடி உரிமை இருக்கிறது என்பது மட்டும் உண்மை. அது எங்கு இருக்கிறது என்பது மட்டும் தெரிந்தால் நன்றாக இருக்கும். ஏன்? அவளுடைய தாயின் ஆவி அந்தப் பகுதியில்தான் அலைந்து திரிந்து கொண்டிருக்கும்.

அந்தக் குழந்தைதான் என்ன கனமாக இருக்கிறது! அவளுடைய கை பலமாக வலித்தது. இனியும் அவள்தான் அதனைச் சுமக்க வேண்டும். கைகளை மாற்ற வேறு யாரும் இல்லை. அந்தக் குழந்தையை அவள் தான் வளர்க்க வேண்டும். எதற்காக? அப்படி நடந்து செல்லும் போது அந்தக் குழந்தை அவளுடைய வயிற்றில் பிறந்த அந்த நிமிடத்தை அவள் நினைத்துப் பார்த்தாள். அன்றைய அரிசிக்குக் காசு கிடைத்திருக்கலாம். ஆனால், அதற்குப் பிறகு எவ்வளவு பெரிய சுமையைச் சுமக்க வேண்டியதிருக்கிறது! அதன் கடுமையை அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. அவளுடைய தாய் அவளிடம் ஒரு நாள் பத்து தடவையாவது சொன்ன ஒரு வார்த்தை அவளுடைய காதுக்குள் கேட்டது.

"இதைக் கேசு பார்த்திடக் கூடாது. நீ கேசுக்கு முன்னால் இதைக் கொண்டு போயிடாதே."

இனிமேலும் அவள் கவனமாக இருக்க வேண்டும். முன்பு அவள் தன்னுடைய தாய்க்குப் பின்னால் மறைந்து நின்று கொள்ளலாம். தன் தாய்க்குப் பின்னால் இந்தக் குழந்தையை ஒளித்து வைத்துக் கொள்ளலாம். இந்தக் குழந்தை எப்படி வந்தது என்று கேசு கேட்கும்போது, அவளுடைய தாய் அதற்கு பதில் கூறிக் கொள்வாள். இப்போது? இந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்து செல்லும் போது, யதேச்சையாக ஏதாவதொரு இடத்தில் கேசுவைப் பார்க்க நேர்ந்தால்... அவள் என்ன பதில் கூறுவாள்?

அவளுக்கு வாழ்க்கையில் யாராவது ஒரு மனிதனைப் பற்றி நினைத்துப் பார்க்க வேண்டும் என்றால், அது கேசு ஒருவன் மட்டுமே. ஒரே ஒரு உறவு அவன் மட்டும்தான். அவனையும் பார்க்காமல் ஒளிந்து திரிய வேண்டும்! வாழும் நாட்களில் அவனை இனி கண்ணிலேயே பார்க்கக்கூடாது. பார்க்காமல் இருக்கும்படி கவனமாக இருக்க வேண்டும்!

அவள் அவனுக்கு அவமானம் உண்டாகும்படி நடந்து கொண்டாள் என்று அவளுடைய தாய் கூறினாள். குடும்பத்தில் ஆண்களின் மதிப்பைக் காப்பாற்ற வேண்டியது பெண்கள் அல்லவா? அவர்களின் மீசை கீழே நோக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்!

தன் சகோதரன் எங்கு இருப்பான்? இந்த அவமானத்தை அவன் அறிந்திருப்பானா? நேரில் சந்திக்க நேர்ந்தால் அவள் என்ன பதில் கூறுவாள்? பசியின் கதையைக் கூறலாம். ஆனால், அதைக் கேட்டு அவன் சமாதானமாகிவிடுவானா?

வேண்டாம். அவனைப் பார்க்க வேண்டாம். இனி வாழ்க்கையில் ஒருமுறை கூட அவனைப் பார்க்க வேண்டாம். அவன் இநத் விஷயத்தைத் தெரிந்து கொள்ளாமலே இருக்கட்டும். நடந்து போகும் வழிகளில் மிகவும் கவனமாகப் பார்த்துப் போக வேண்டும்.

அந்தக் குழந்தை கையிலிருந்து நெளிந்து 'அம்மா' என்று மெதுவான குரலில் முனகியது. அவள் அதற்குத் தன் மார்பிலிருந்து வந்த பாலைக் கொடுத்தாள்.

நீண்ட தூரம் அவள் நடந்தாள். அப்போது வெளிச்சம் தெரிந்தது. நகரத்தின் இன்னொரு பகுதியை அவள் அடைந்திருந்தாள். ஒரு வீட்டின் திண்ணையில் போய் அவள் உட்கார்ந்தாள். அவளுடைய தனிமையான வாழ்க்கை அந்த அதிகாலையிலிருந்து ஆரம்பிக்கிறது. அது எப்போதுவரை தொடரப் போகிறது? ஈக்கள் மொய்த்த அவளுடைய தாய் இப்போது அங்கு விறகுக் கட்டையைப் போல கிடக்கிறாள்.

அந்த வாழ்க்கையில் தோல்வி, வெற்றி இரண்டுமே இருக்கின்றன. அங்கும் கடுமையான போட்டிதானே நடந்து கொண்டிருக்கிறது! வெற்றிபெற வேண்டுமென்றால், கற்பதற்கு நிறைய இருக்கிறது. விதிமீது நம்பிக்கையும் சந்தோஷமும் அந்த வாழ்க்கையிலும் இருக்கத்தான் செய்கின்றன.

'நான் இதே மாதிரி சந்தோஷமாக இருப்பேன்' என்று தொழிலில் வெற்றி பெற்ற அதிர்ஷ்டசாலியான பிச்சைக்காரன் கூறுவான். 'நான் இனிமேல் எங்கு போவேன்?' என்று தோல்வியைச் சந்தித்த பிச்சைக்காரன் கூறுவான். பிச்சைக்காரன் முகத்தில் தெளிவும் அமைதியும் இருக்கும்.

கவுரி தனியாக வாழ்க்கையில் தனக்கு வாய்த்திருப்பது என்ன என்பதைக் கண்டறிவதற்காக இறங்கிவிட்டாள். அந்த வீட்டில் உட்கார்ந்து கொண்டு அவள் சிந்தித்தாள். அன்று அவளுக்கு என்ன கிடைக்கப் போகிறது? எங்கிருந்து அவளுக்கு கிடைக்கும்? அதுவரையில் அப்படிப்பட்ட ஒரு சிந்தனை அவளிடம் உண்டானதே இல்லை. அவள் பிச்சை எடுத்திருக்கிறாள். கிடைக்கவும் செய்திருக்கிறது. என்ன கிடைக்க வேண்டும் என்றோ; கிடைத்தது போதுமா என்றோ அவள் ஒருநாள் கூட நினைத்துப் பார்த்ததில்லை. கிடைத்தால் கிடைக்கட்டும். கிடைக்காவிட்டால் போகட்டும். இருப்பதைக் கொண்டு சாப்பிட்டு அவளால் உறங்க முடிந்தது. முழுமையாக கிடைக்கவில்லையென்றாலும், எதுவுமே கிடைக்கவில்லை என்றாலும் அன்று அவளுக்கு அவளுடைய தாய் இருந்தாள். நம்பிக்கையும் தைரியமும் அவளுக்கு இருந்தன.

பிச்சை எடுத்துக் கொண்டு நடந்து திரிந்தாலும், அவள் பிச்சை எடுக்கக் கற்றிருக்கவில்லை.

ஒரு வேலைக்காரன் வந்து வீட்டைத் திறந்தான்.

"யாருடி உட்கார்ந்திருக்கிறது?"


அவள் பரிதாபமாக அவனைப் பார்த்தாள். யார் அவள்? ஒரு வரலாற்றையே அல்லவா அவள் கூற வேண்டும்?

"பொழுது விடியிற நேரத்துல எதுக்காக இங்கே வந்து உட்கார்ந்திருக்கே?"

"நடந்து நடந்து கால் ஒரேயடியா வலிக்குது. அதுதான் வந்து உட்கார்ந்தேன்."

"போ... எழுந்து போ..."

அவள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு எழுந்து நடந்தாள்.

அவளுடைய முதல் அனுபவம் அதுதான்! இனியும் எந்த மாதிரியான அனுபவங்களெல்லாம் அவளுக்குக் கிடைக்கப் போகின்றனவோ?

அவளுடைய மார்பகங்கள் வலித்தன. எவ்வளவு நேரமாக அந்தக் குழந்தை மார்பை இழுத்துப் பால் குடித்துக் கொண்டிருக்கிறது! அவள் மெதுவாக மார்பகத்தைக் குழந்தையின் வாயிலிருந்து இழுத்தாள். குழந்தை அழ ஆரம்பித்தது.

அவள் குழந்தையிடம் சொன்னாள்:

"இப்படிக் குடிச்சால், அதிகம் குடிக்க முடியாது."

அந்த உண்மை அந்தக் குழந்தைக்குப் புரியுமா என்ன? அது குடிப்பது அவளுடைய உயிரின் குருதி ஆயிற்றே!

குழந்தையின் அழுகை அதிகமாக ஆனபோது, பற்களைக் கடித்துக் கொண்டு அவள் தன் மார்பகம் முழுவதையும் அதன் வாய்க்குள் நுழைத்தாள்.

"தின்னு... தின்னு... தின்னு கொன்னுடு..."

அவளுடைய கோபத்தை அந்தக் குழந்தையால் புரிந்து கொள்ள முடியுமா என்ன? அந்த எதுவுமே இல்லாத மார்பகத்தைக் குழந்தை சப்பியது.

அந்தக் குழந்தையின் முகத்தை அவள் பார்த்தாள். அதுவும் தன் தாயைப் பார்த்தது. ஒரு மெல்லிய புன்சிரிப்பு அதன் உதடுகளில் விளையாடியது.

அவள் பெற்ற தாயாயிற்றே! இதயம் இளகியது.

"தங்க மகனே!"

அவள் அழுது விட்டாள்.

அந்த ஏழைக் குழந்தை என்ன தவறு செய்தது? அதற்குப் பசிக்கிறது. பால் குடிக்க வேண்டும். அது அதனுடைய உரிமை. அவள் அதைப் பெற்றெடுத்தாள். அதனால் அதற்குப் பால் கொடுக்க அவள் கடமைப்பட்டிருக்கிறாள். பால் கொடுத்தே ஆக வேண்டும்.

அந்தத் தாய் நினைத்துப் பார்த்தாள். அந்தக் குழந்தைக்குப் போதுமென்று தோன்றும் வரையில் அவள் எப்படிப் பால் கொடுப்பாள்? அதற்கு மட்டுமாவது அவளுக்கு சாப்பிட ஏதாவது கிடைக்க வேண்டும். ஆனால், அது நடக்கக்கூடிய விஷயமல்ல.

மீண்டும் அந்தக் குழந்தை தன் தாயின் முகத்தைப் பார்த்தது. மார்பகத்தை வாயில் வைத்துக் கொண்டு அது சிரித்தது. அந்த புன்சிரிப்பு மிகவும் பலவீனமாக இருந்தது. அதன் முகமும் அப்படியொன்றும் அழகாக இல்லை. எனினும் அது குழந்தையின் புன்சிரிப்பாக இருந்தது. கள்ளங்கபடமற்ற புன்சிரிப்பு! ச்சே! அந்தத் தாய்க்கு சந்தோஷம் உண்டாகவில்லை. அவளுடைய கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.

அந்தக் குழந்தை எதற்காக சிரிக்கிறது? அதற்கு சிரிப்பதற்கான உரிமை இருக்கிறதா?

சுமக்க முடியாத அளவிற்கு அந்தக் குழந்தை மிகவும் சுமை உள்ளதாக அவளுக்குத் தோன்றியது. ஒரு வேளை அது அவளுடைய தளர்ச்சி காரணமாக இருக்கலாம். அந்த அளவிற்கு அதிக சுமையாக அந்தக் குழந்தை இருந்தாலும் அதைச் சுமக்காமல் இருக்க முடியுமா? அவள் மிகவும் சோர்வடைந்து காணப்பட்டாள். சிறிதுகூட அவளால் நடக்க முடியவில்லை. சிறிது கஞ்சிநீர்- நீர் மட்டும்கூட அவளுக்குக் கிடைத்தால் போதும்! குழம்புக்காக கடுகை வறுக்கும்போது உண்டாகும் மணம் சுற்றிலும் பரவியிருந்தது.

ஒரு பெரிய வீட்டில் அவள் ஏறிச் சென்றாள். அந்தக் குழந்தைக்கு கொஞ்சம் நீர் கிடைக்குமா என்று அவள் அங்கு உட்கார்ந்தாள். அது தர்மம் கொடுப்பதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் நாள் அல்ல. அவள் அங்கிருந்து கிளம்பினாள். வேறொரு இடத்திற்குச் சென்றாள். அங்கு அப்போது அதற்கான சூழ்நிலை இல்லாமல் இருந்தது. மூன்றாவதாக ஒரு இடத்திற்குச் சென்றபோது அவள் அந்தக் குழந்தையை எதற்காகப் பெற்றெடுத்தாள் என்ற கேள்வி கேட்கப்பட்டது. இப்படிப் பல இடங்களிலும் அவள் ஏறி இறங்கினாள். ஒரு இடத்திலும் சிறிது நீர் கூட கிடைக்கவில்லை.

நேரம் மதியம் ஆனது. ஒரு கடைத் திண்ணையில் போய் அவள் உட்கார்ந்தாள். தன்னுடைய உறங்கிக் கொண்டிருந்த குழந்தையைத் தனக்கு அருகிலேயே படுக்க வைத்தாள். அதை மொய்த்துக் கொண்டிருந்த ஈயைக் கையால் விரட்டிய அவள் குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவளுடைய தாய் இறந்த மறுநாள் அது. அன்றைய அனுபவம் அதுதான் என்றால்... அதனால் என்ன? இதுதான் வாழ்க்கையின் இறுதிவரை நடக்கும் என்று நினைத்துக் கொண்டால் என்ன?

அந்த வாழ்க்கையின் கொடுமை இந்த அளவிற்கு இருக்கும் என்று அவள் புரிந்திருக்கவில்லை. எதுவுமே கிடைக்காத நாள் இதற்கு முன்பு இருந்திருக்கிறதா? கவுரி நினைத்துப் பார்த்தாள். ஞாபகத்தில் வரவில்லை. ஒருநாள் முழுவதும் அலைந்து திரிந்தும் எதுவுமே கிடைக்காத ஏதாவது பிச்சைக்காரர்கள் இருக்கிறார்களா? இருக்கலாம்.

"அம்மா... அம்மா... என் அம்மா!"- என்று அவள் கண்ணீருக்கு மத்தியில் அழைத்தாள். அவள் எப்படி வாழ வேண்டும்? அதற்கான பதில் தர ஒரே ஒரு ஆளால்தான் முடியும். அது- அவளுடைய தாய்!

வயிறு முதுகுடன் ஒட்டிப்போய் அந்தக் குழந்தை படுத்து உறங்கிக் கொண்டிருந்தது. அது வாழுமா? எதற்காக, யாருக்காக வாழ வேண்டும்? அதற்கு பசி எதற்காக எடுக்கிறது? அது ஏன் பால் குடிக்க விரும்புகிறது? அது சாகட்டும்...! ஆனால், அது இறப்பதைப் பார்ப்பதற்கு அவள் இருக்க வேண்டுமா? அவள் இறந்து, அந்தக் குழந்தை உயிரோடு இருக்க வேண்டும்... அதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. ஒரே சமயத்தில் அவளும் அந்தக் குழந்தையும் சேர்ந்து இறந்தால்...

குழந்தை கண் விழித்தது. பலவீனமான குரலில் அது, 'அம்மா' என்று அழைத்தது. அதைத் தூக்கிக் கொண்டு அவள் நடந்தாள். கொஞ்சம் கஞ்சி நீர் அதற்குக் கொடுக்கக் கிடைக்காதா? ஒரு இறுதி முயற்சிக்கான தயாரெடுப்பாக அது இருந்தது. அதற்குப் பிறகு, எதைப்பற்றியும் முடிவெடுக்கலாம் என்று தன் மனம் கூறுவதைப் போல் அவள் உணர்ந்தாள்.

சிறிது நீரும் ஒரு பிடி சாதமும் எங்கிருந்தோ கிடைத்தபோது அவளுக்கு மீண்டும் வாழ வேண்டும் என்ற ஆசை உண்டானது.

மிகவும் கேவலமாக தோல்வியைச் சந்தித்த ஒரு பிச்சைக்காரி அவள். "என்ன சத்தம் இது? பயந்தே போயிட்டோம். பிணமே, போ... இங்கிருந்து கிளம்பு. இங்கே ஒண்ணுமே இல்ல..." என்று சிலர் கூறுவார்கள். அப்போது அவளுடைய குரல் வெளியே வராது. அது ஒரு பிச்சைக்காரியின் குரல் அல்ல. ஒரு பிச்சைச்காரியின் குரல் எப்படி இருக்க வேண்டும்? அதெல்லாம் அவளுக்குத் தெரியாது. தனியாக இருக்கும்போது அவள் அதற்காக முயற்சித்துப் பார்ப்பாள்.

இன்னொரு குறை அவளுடைய இளமை.


"எந்த வேலையும் செய்யாமல் இப்படி அலையுறே, பிணமே... இங்கிருந்து போ"- தொடர்ந்து அவர்கள் மெதுவான குரலில் மேலும் பலவற்றையும் கூறுவார்கள். அப்படி அலைந்து திரிவதில் அவளுக்கு ஒரு நோக்கம் இருப்பதாக அவர்கள் கூறினார்கள். பயங்கரமான ஒரு நோயைத் தன்னிடம் வைத்துக் கொண்டு அதைப் பரப்புவதற்காக அவள் நடந்து திரிகிறாள் என்றார்கள் அவர்கள். அங்கிருந்து அவள் கிளம்பியே ஆக வேண்டும் என்பது அவர்களின் கட்டளை.

இந்த இளமைக்காலம் எப்போது முடிவுக்கு வரும்? இளமை என்ற குற்றச்சாட்டிலிருந்து தப்பினால் பிறகு வாழ முடியுமா?

வேலை செய்ய வேண்டும். என்ன வேலையைச் செய்ய வேண்டும்? யார் வேலை தருவது? சில இடங்களில் அவள் அதைக் கேட்டாள். எந்த வேலையைச் செய்யவும் அவள் தயார்தான். அவள் வாழ்ந்தால் போதும். ஆனால், அப்போது கிடைக்கும் பதில் வேறொன்றாக இருக்கும்.

"வேண்டாம்... வேண்டாம்... இங்கே வேலை எதுவும் இல்லை."

வேறு சில இடங்களில் காதில் விழுவது வேறொன்றாக இருக்கும்.

"போ... இங்கேயிருந்து கிளம்பு... ம்... இதுங்களும் பெருத்துப் போயாச்சா?"

பிச்சைக்காரர்கள் கூட்டத்தில் அவள் தேவையில்லாமல் வந்து சேர்ந்தவளா என்ன?

எல்லா இடங்களிலும் தன்னுடைய குழந்தை ஒரு கறுப்புக் கறையாக இருப்பதை அவளால் உணர முடிந்தது. அந்தக் குழந்தையை முழுமையான வெறுப்புடன் எல்லோரும் பார்த்தார்கள். பார்ப்பவர்களெல்லாம் பலப்பல கேள்விகளையும் அவளைப் பார்த்துக் கேட்க நினைத்தார்கள் என்பதாக அவள் உணர்ந்தாள். சிலர் சிலவற்றைக் கேட்கவும் செய்தார்கள். பிச்சைக்காரியான அவள் எதற்காகப் பிள்ளையைப் பெற்றாள்? அந்தக் குழந்தையின் தந்தை இப்போது எங்கு இருக்கிறான்? இனியும் குழந்தை பெறுவதற்காக அவள் நடந்து திரிகிறாளா என்ன? இப்படி இருந்தன அந்தக் கேள்விகள். எந்த பதிலையும் அவளால் தர முடியாத கேள்விகள்!

தான் எதற்காகக் குழந்தையைப் பெற்றோம் என்ற கேள்வியை அவள் தன்னைத்தானே கேட்டுக் கொண்டாள். அந்தக் குழந்தையின் தந்தை எங்கு இருக்கிறான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். அடுத்த கேள்வி இல்லை. அவள் இனிமேல் குழந்தை பெறமாட்டாள். அது மட்டும் உண்மை. ஒரு குழந்தையைச் சுமப்பதற்கு சக்தியில்லாத அவள் இரண்டு குழந்தைகளை எப்படிச் சுமப்பாள்? இரண்டு குழந்தைகள் மீது அன்பு செலுத்த அவளால் முடியாது. இவற்றையெல்லாம் விட இன்னொரு விஷயம்- தன்னுடைய சகோதரனின் முகத்தில் இன்னொரு முறை கரியைத் தேய்க்க அவள் விரும்பவில்லை.

எனினும், அவளுக்குத் தோன்றுவதுண்டு- அந்தக் குழந்தை மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் அவள் மேலும் வெற்றி பெற்ற ஒரு பிச்சைக்காரியாக ஆகியிருக்கலாம் என்று. அந்தக் குழந்தையைக் காட்டி அவள் எந்த இடத்திலும் எதுவும் கேட்பதில்லை. மற்ற எல்லா மனிதர்களின் குழந்தைகளைப் போலத்தான் அவளுடைய குழந்தையும் இருக்கிறது. எனினும், அந்தக் குழந்தையை அந்த அளவிற்குப் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரமாக எதற்காக ஆக்க வேண்டும்?

அந்தக் குழந்தை பிறந்த நாளை அவள் நினைத்துப் பார்த்தாள். அந்த மனிதன் எங்கு இருக்கிறான்? அந்தப் பெரிய கட்டித்திற்கு முன்னால் வீங்கிய வயிறுடன் பல நாட்கள் போய் அவள் நின்றிருக்கிறாள். ஆனால் அந்த ஆணை மட்டும் அவள் பார்த்ததேயில்லை. அதைப்போல வேறு பலரும் அங்கு வந்து நின்று போவதுண்டு. அது ஒரு ஹோட்டல். அந்த மனிதனை எங்கு போனால் பார்க்க முடியும்! நடந்து திரிந்த எந்த ஊர்களிலும் அந்த மனிதனை அவள் பார்க்கவில்லை. அவன் ஒரு பெரிய மனிதன். அவன் அவளுக்கு முத்தம் தந்தான்... பொழுது விடிகிற நேரத்தில் அங்கிருந்து போகும்போது அவளை அங்கு அழைத்துச் சென்றவன், அந்தப் புடவையையும் ரவிக்கையையும் கழற்றி வைக்கச் சொன்னான். அவள் கிழிந்த ஆடைகளை அணிந்து, அவன் கொடுத்த நான்கு அணாக்களை வாங்கிக் கொண்டு நடந்தாள். அந்த நான்கு அணாக்கள்தான் அவளுடைய குழந்தை உண்டானதற்கு மூலமாக இருக்க வேண்டும்.

அவளுடைய தாத்தா, அவளுடைய தாய் மீது அன்பு வைத்திருந்தான். அவள் மீதும் அவளுடைய தம்பி மீதும் நிறைய பாசம் வைத்திருந்தான். அவளுடைய குழந்தையின் தந்தையான அந்த ஆண் தன் குழந்தை மீது அன்பு வைக்கவில்லையா? அவனைப் பார்க்க முடிந்திருந்தால், உணர்ச்சிமயமான அந்த இரவு நேரத்தில் உண்டான குழந்தையை அவனிடமே கொடுத்துவிடலாம். அந்த மனிதன் அந்த இரவை மறந்துவிட்டிருப்பானோ? இல்லை. அவனால் அதை மறக்க முடியாது. அவளுக்கு அது நன்றாகத் தெரியும். அவன் என்னவெல்லாம் சொன்னான்! அவளுடைய குழந்தை அப்படி வளர்ந்தால் போதும்! வெறும் கையுடன் அவள் பிச்சை எடுத்துப் பிழைத்துக் கொள்வாள்.

ஆனால், அவள் அந்த ஆணை எங்கு கண்டுபிடிப்பாள்? 'த்த' என்று அந்தக் குழந்தை முதல் தடவையாகப் பேசியதிலிருந்து, அந்தச் சிந்தனை அவளை அலட்டத் தொடங்கியது.

ஒரு ஆணைக் கண்டுபிடிக்க வேண்டும். ஒரு ஆணைக் காணாமல் மறைந்திருக்க வேண்டும்- இதுதான் அவளுடைய கண்களின் முக்கிய வேலையாக இருந்தது. அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் தன்னுடைய சகோதரனின் முன்னால் எப்படி நிற்பாள்? அவன் எங்கு இருப்பான் என்பது அவளுக்கு எப்படித் தெரியும்? எந்த நிமிடத்திலும் அவனுக்கு முன்னால் அவள் நிற்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் வரலாம்.

வாழ்க்கையில் தெளிவான நோக்கம் கொண்ட அவள் எல்லா விஷயங்களிலும் தோல்வியைச் சந்தித்துக் கொண்டிருந்தாள். விடிந்தது முதல் இரவு வரை தெருவில் நடந்தால், அவளுக்கு சில வேளைகளில் ஏதாவது கிடைக்கலாம். கேட்கவும் வாங்கவும் அவளுக்குத் தெரியாது. கிழிந்துபோன பழைய ஆடைகளை அணிந்து கொண்டு நடந்து திரியும் அவளுக்கு யாருடைய பரிதாபத்தையும் வாங்கக்கூடிய அளவிற்கு வடிவம் வந்து சேர்ந்தது. அந்தக் குழந்தை ஒரு அப்பிராணியின் ஒரு பழைய தவறாக யாரும் நினைப்பார்கள். இனிமேல் அவள் பிள்ளை பெறமாட்டாள். ஆனால், அவள் ஒரு தோல்வியடைந்த பிச்சைக்காரி என்பது மட்டும் உண்மை.

ஒரு வீட்டுப் படியிலும் ஏறாமல் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு அவள் நடந்தாள். முக்கிய தெருக்கள் குறுக்காக ஓடிக் கொண்டிருப்பது அவளுக்கு நன்றாகத் தெரியும். ஒருவேளை எங்கே தன் சகோதரனைப் பார்த்துவிடுவோமோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்- மூலை முடுக்குகளிலும் சந்துகளிலும் தான் அவள் காணப்பட்டாள்.

அவள் கஞ்சித் தண்ணீர் குடித்து இரண்டு நாட்களாகிவிட்டன. யாரிடமும் எதுவும் கேட்காமலே அவள் அப்படியே நடந்து கொண்டிருந்தால் ஏதாவது கிடைக்குமா? கூப்பிட்டுக் கொடுக்கக்கூடிய அளவிற்கு தர்ம சிந்தனை யாருக்கும் இருக்கிறதா என்ன? ஒரு பிச்சைக்காரி முன்னால் வந்து நின்று பிச்சை கேட்கும்போது, தொல்லையைத் தவிர்ப்பதற்குத்தானே ஒரு சல்லிக்காசை வீசி எறிவதே!


ஒரு அடிகூட எடுத்து வைக்க முடியாத அளவிற்கு அவள் தளர்ந்து போய்விட்டாள். அவளுடைய குழந்தையால் அழக்கூட முடியவில்லை. அது முணகுவதுகூட இல்லை. இடுப்பில் இருந்து எடுத்தால், அது வளைந்து குறுகிப் போகும். அந்தக் குழந்தையை அவள் வாரி எடுத்தாள். அதன் முகத்தைப் பார்த்தபோது, அவளுடைய இதயம் நொறுங்கிவிட்டது.

ஒரு பெரிய சுவருக்கு அருகில் ஒரு தாயும் இரண்டு பிள்ளைகளும் சமையல் செய்து கொண்டிருந்தார்கள். அரிசி கொதித்துக் கொண்டிருந்தது. சற்று தூரத்தில் கவுரி போய் உட்கார்ந்தாள்.

அரிசி வெந்து முடிந்ததும், அந்தத் தாய் அவளுக்கும் அந்தக் குழந்தைக்கும் கொஞ்சம் கஞ்சி தந்தாள். அது முழுவதையும் குழந்தையே குடித்தது. அன்றைய தினமே வேறொரு பிச்சைக்காரக் குடும்பம் தந்த சிறிது கஞ்சியை அவளும் குடித்தாள்.

அதைத் தொடர்ந்து அவள் பிச்சைக்காரர்களிடம் பிச்சை எடுக்க ஆரம்பித்தாள்.

அந்த யாசிப்பு நடத்த அவளால் முடிந்தது. எந்தப் பிச்சைக்காரர்களிடமும் யாசிக்கலாம். அந்த விஷயத்தில் அவளுக்கு எந்தவொரு வருத்தமும் இல்லை. அவர்கள் அவளுடைய குழந்தையின் பிறப்பைப் பற்றி எந்தக் கேள்வியும் கேட்க மாட்டார்கள். அவளையும் அவளுடைய குழந்தையையும் வெறுப்புடன் பார்க்க மாட்டார்கள். ஏதாவது வேலை செய்யக்கூடாதா என்று திட்டமாட்டார்கள். சாபம் போட மாட்டார்கள். எதுவுமே கிடைக்கவில்லையென்றாலும் அவளுக்கு அதைப் பற்றிக் கவலை இல்லை.

எனினும் சாயங்கால நேரத்தில் நான்கோ ஐந்தோ பிச்சைக்காரர்களின் குடும்பத்தைத்தேடி அவள் போவாள். இப்படியே அவளுடைய நாட்கள் ஓடிக்கொண்டிருந்தன.

அந்த நகரத்திலுள்ள பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் அவளைத் தெரியும் என்ற நிலை உண்டானது. அவர்களின் பொறுமை எல்லை கடந்தது. மூன்று நான்கு தடவை ஒவ்வொரு பிச்சைக்காரக் குடும்பமும் அவளுக்குக் கொடுத்துவிட்டார்கள். எதையாவது பிச்சை எடுத்துக் கொண்டு வந்து சாப்பிட ஆரம்பிக்கும்போது, அவளும் அவளுடைய குழந்தையும் அங்கு இருப்பார்கள். இருப்பவர்களைத் தேடி அவர்கள் போகக் கூடாதா? அந்தக் குழந்தைக்கும் ஏதாவது தருவதற்கு அவர்கள் தயங்க ஆரம்பித்தார்கள்.

அவளுக்கு எதுவுமே கிடைக்காத சூழ்நிலை உண்டானது. அது மட்டுமல்ல- பிச்சைக்காரச் சிறுவர்கள் அவள் மீது கற்களை வீசி எறிய ஆரம்பித்தார்கள். அவர்களுக்குரிய பங்கினைத்தானே அவளும் குழந்தையும் அபகரிக்கிறார்கள்!

மூன்று நான்கு நாட்கள் வெறும் பட்டினியுடன் அவள் நகர வீதிகளில் நடந்து கொண்டிருந்தாள். அவள் அருகில் வரும் போது, சிறுவர்களும் பெண்களும் அவளை வாய்க்கு வந்தபடி திட்டி விரட்ட ஆரம்பித்தார்கள். யாரிடமும் சிறிது நின்று கேட்க அவளால் முடியவில்லை. அவள் மீது எறியப்பட்ட கற்களில் ஒன்று அவளுடைய குழந்தையின் தலையிலும் விழுந்தது.

மீண்டும் அவள் மனக்கவலைக்கு ஆளானாள். அவளுடைய குழந்தைக்கு ஒரு மடக்கு நீர் கிடைக்காதா? நீர் குடிக்காமல் தொண்டை வறண்டு போய் அவளுடைய குழந்தை இறந்து விடும்! அதை அவள் பார்க்க வேண்டும்! யாரும் இல்லாத இடத்தில் அமர்ந்து அவள் கண்ணீர் நிறைந்த கண்களுடன் தன் குழந்தையை முத்தமிடுவாள். பலவீனமான ஒரு முனகல்தான் பதில்... மறுநாள் அந்த முனகல் சத்தம்கூட இல்லாமற் போய்விடும்!

எதற்காக அந்தக் குழந்தையைத் தான் இப்படி தூக்கிக் கொண்டு திரிகிறோம் என்று அவள் நினைத்துப் பார்த்தாள்.  கொல்வதற்கா? ஆமாம்... அவளுடைய கையில் இருந்தால், அந்தக் குழந்தை இறப்பதைத் தவிர வேறு வழியே இல்லை. அந்தக் குழந்தை வளர்ந்தால்...! ஏதாவதொரு பெரிய வீட்டின் வாசற்படியில் அந்தக் குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டால்...! அது வாழும் என்பதற்கு என்ன நிச்சயம் இருக்கிறது? ஆட்களைத் தின்னும் நாய்கள் குழந்தையைப் பார்க்க நேர்ந்தால்...!

யாருக்கும் தேவைப்படாத குழந்தை! அது எதற்காக வாழ்கிறது? வாழ்வதற்கு விதி இருந்தால் அதற்கு உணவு கிடைத்திருக்கும். பல நாட்களாக அதைத் தூக்கி வைத்துக் கொண்டு நடந்து திரியக்கூடிய பொறுப்பு மட்டுமே அவளுக்கு இருந்திருக்கும்.

அன்று இரவு அவள் ஒரு முடிவுக்கு வந்தாள். மறுநாளும் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடக்கலாம் என்பதே அது. அன்றும் எதுவும் கிடைக்கவில்லையென்றால், கிடைக்காத பட்சம்... அவள் முடிவே செய்துவிட்டாள். அந்தக் குழந்தை உலகத்திற்குத் தேவையற்றதாக இருக்கலாம். அப்படியென்றால் அவள் அதை எதற்காகத் தூக்கிக் கொண்டு திரிய வேண்டும்? அந்தச் சுமையை நீக்கி விட்டு அவள் போய்க் கொண்டிருப்பாள்.

மறுநாள் காலையில் அந்தக் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சிறிதுநேரம் அவள் நின்றாள். எங்கு போவது? அது அவளுடைய இறுதி முயற்சி. அன்று அவள் தோல்வியைச் சந்தித்தால்... அவள் மனதிற்குள் முடிவு செய்தாள். அந்த முடிவின் பிரதிபலிப்பு அவளுடைய முகத்தில் தெரிந்தது.

அவள் தன் வலது காலை முன்னால் வைத்தாள். கால பெருவிரலில் ஏதோ மென்மையாகப் பட்டு உருண்டோடியது. அவளுடைய கண்கள் அந்த உருண்டோடிய பொருளைப் பின் தொடர்ந்தன. அது என்ன? தூசியோடு சேர்ந்து ஓடிக்கொண்டிருப்பது...

ஒரு பழத்துண்டு! அவள் ஓடிச்சென்று அதை எடுத்தாள். அந்த முகத்தில் ஒரு பிரகாசம்! அது மட்டுமல்ல- அந்த அளவிற்கு அந்தத் தாயின் முகத்தில் இப்படியொரு பிரகாசம் இருந்ததே இல்லை.

அவள் தன்னுடைய குழந்தையை விட்டுப் பிரிய வேண்டிய சூழ்நிலை வராது. அதனைக் கொல்ல வேண்டியதும் இருக்காது. அவளுடைய குழந்தை வாழும். உலகத்திற்கு அது தேவைப்படுகிறது!

மண்ணையும் தூசியையும் ஊதி நீக்கிவிட்டு அவள் அந்தப் பழத்தைக் கிள்ளிக் கிள்ளி குழந்தைக்குக் கொடுத்தாள். குழந்தை சுவைத்து சுவைத்துத் தின்றது. அவளுடைய முகத்தில என்னவொரு ஒளி! என்ன ஈடுபாடும் சந்தோஷமும்!

அந்தப் பழம் தீர்ந்ததும், குழந்தை முனகத் தொடங்கியது. அது அதற்குப் போதவில்லை. அவள் குழந்தையை முத்தமிட்டாள்.

"இன்னும் கிடைக்கும் மகனே!"

சாலையைக் கூர்ந்து கவனித்துக் கொண்டே அவள் நடந்தாள். இன்னும் பழம் கிடைக்கும்! சிறிது தூரம் நடந்துவிட்டு, அவள் குனிந்து எதையோ எடுத்தாள். அது ஒரு பிஸ்கட் துண்டு! அதையும் அவள் குழந்தைக்குக் கிள்ளி கிள்ளிக் கொடுத்தாள்.

இல்லை... அவளுடைய குழந்தை இறக்காது.

வாய்க்காலில் ஓடிக் கொண்டிருந்த நீரோடு சேர்ந்து என்னவோ போய்க் கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவள் அதைக் குனிந்து எடுத்தாள். ஒரு பெரிய இட்லி துண்டு!

அவளுடைய குழந்தையின் வயிறு நிறைந்தது.

காப்பிக் கடைகளுக்கு முன்னால் கிடக்கும் பழத்தோல்களைப் பொறுக்கி எடுத்து அவள் அவற்றை உணவாக ஆக்கினாள். எச்சில் இலைகளை நக்கலாம்... யாரிடமும் எதுவும் கேட்காமலே அவளும் அவளுடைய குழந்தையும் வாழ்வார்கள்!


ஒரு கடைத் திண்ணையில் கால்கள் வீங்கிப்போய் அவள் மூச்சுவிட சிரமப்பட்டவாறு படுத்திருக்கிறாள். சற்று தூரத்தில் அந்தக் குழந்தை உட்கார்ந்திருக்கிறது. அவள் இறந்து கொண்டிருக்கிறாள்.

அந்தக் குழந்தை இனி வாழுமா? யாருக்குத் தெரியும்? அந்தக் குழந்தை தன்னுடைய தந்தையை எதிர்காலத்தில் கண்டு பிடிக்குமா? அதையும் உறுதியான குரலில் நம்மால் கூற முடியாது. கேசு தன்னுடைய மருமகனை அடையாளம் கண்டுபிடிக்க வாய்ப்பு இருக்கிறதா? யாருக்குத் தெரியும்?

அந்தக் காட்சி ஆயிரமாயிரம் கேள்விகளை உண்டாக்கியது. அந்தக் குழந்தை எதற்காகப் பிறந்தது? உண்மையாகச் சொல்லப்போனால் அந்த யாரென்று தெரியாத ஆணும் அவளும் விருப்பப்பட்டு பெற்றதல்ல அது. மனித சமுதாயத்திற்கு ஒரு வேளை அது தேவைப்படாமல் இருக்கலாம். ஒரு மனிதக் குழந்தை அது. எல்லையற்ற சக்தியின் மையமும் கூட. ஆனால், அவமானமான இழப்பு அது! ஒரு சக்தி மையத்தை நிராகரிப்பது என்பது சாதாரண விஷயமா? அந்தக் குழந்தை தப்பிப் பிழைத்துவிடுமா?

அவள் தன் கண்களைத் திறந்தாள். தன்னுடைய குழந்தையைப் பார்ப்பதற்காக இருக்கலாம்? கை முன்னோக்கி நீண்டது. அதைத் தொடுவதற்காக இருக்கலாம்.

சில நொடிகளில் சுவாசம் நின்றது. அவள் மரணத்தைத் தழுவினாள்.

4

நான்கைந்து சாலைகள் அங்கிருந்து செல்கின்றன. அந்தப் பாதைகள் எங்கு நோக்கிச் செல்கின்றன? எங்கு போய்ச் சேர்கின்றன? எந்த வழியில் போகலாம் என்று கேசு யோசித்தான். எந்த வழியிலும் அவன் போகலாம்.

விடுதலையான கைதி சிறையின் வாசலுக்கு அருகில் சிறிது நேரம் நின்றான். அந்தப் பெரிய கதவு மூடப்பட்டது. அவன் திரும்பிப் பார்த்தான். அதற்குள் அவனால் மறக்க முடியாத சில மனிதர்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரையும் பற்றி கேசு நினைத்துப் பார்த்தான். அவன் எப்படிப்பட்ட வரலாறுகளையெல்லாம் தெரிந்திருக்கிறான்! ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலைகளில் ஒவ்வொரு தத்துவங்களையும் அவனிடம் கூறியிருக்கிறார்கள்.

அவர்களுடைய வாழ்க்கையின் தத்துவ ஞானங்கள்!

சிறைக்கு வெளியே, அந்தப் பிரகாசத்தில், அந்த சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டு நின்றிருந்தபோது, அந்த தத்துவங்களுக்கெல்லாம் ஒரு புதுமை இருப்பதைபோல் அவன் உணர்ந்தான். அவற்றுக்கெல்லாம் அர்த்தம் இருக்கத்தான் செய்கின்றது. நாற்பதாவது தடவையாக சிறைக்குள் வந்திருக்கும் ஒருவன் இருக்கிறான். இனிமேலும் கூட அவன் அங்கு போகலாம். தன் தாயைக் கொன்ற ஒருவன்- அவன் சிறைக்கு வெளியே போவது மாதிரியே தெரியவில்லை. தான் எதற்காகப் பிறந்தோம் என்று அவன் தன்னைத்தானே கேட்டுக் கொள்வதுண்டு. அந்தப் பெண் அவளுடைய எமனை உருவாக்கிவிட்டாள் என்று அவன் கூறுகிறான். சிலர் அங்கு திருடர்களைப் பற்றிக் குறைசொல்லிப் பேசுவார்கள். அப்போது திருடர்கள் மற்ற குற்றவாளிகளைக் குறை கூறுவார்கள். இரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களின் வாதங்களிலும் அறிவுப்பூர்வமான விஷயங்கள் இருக்கத்தான் செய்கின்றன. இரு கூட்டத்தைச் சேர்ந்தவர்களும் கூறுவது சரிதான். இதயப்பூர்வமான உறவுகளிலிருந்து வலிய பிடித்துக் கொண்டு வரப்பட்டவர்கள் உண்டு. இப்போதும் அவர்கள் அழுது கொண்டிருப்பார்கள். அதில் கண்ணீர் வற்றிப் போனவர்களும் உண்டு. கடந்து போன வாழ்க்கையை மறந்தவர்கள்! அந்த உயர்ந்த சுவருக்குள் அதுவரை அனுபவித்திராத சகோதர உணர்வை அவன் அனுபவித்தான். அவர்கள் எல்லோரும் அவன் மீது பாசம் வைத்திருந்தார்கள். அவன் அவர்கள் மீது அன்பு வைத்திருந்தான். அங்குள்ளவர்கள் ஒருவர் மீது ஒருவர் பாசம் செலுத்தினார்கள். அப்படியென்றால்- அவனுக்குத் தெரிந்தவர்களும் அவன் மீது பாசம் வைத்திருப்பவர்களும் கொலை செய்தவர்களும் திருடர்களுமாக இருந்தார்கள். 

திரும்பச் செல்வாயா என்று கேட்டார்கள். அவன் பல இடங்களுக்கும் போக வேண்டியிருந்தது; சிலரைப் பார்க்க வேண்டியிருந்தது. ஒருவனுக்கு தன்னுடைய வயதான தாய் உயிருடன் இருக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இன்னொருவனுக்கு தன்னுடைய மகனுக்குக் கூறி அனுப்புவதற்கு செய்தி இருந்தது. வேறொருவனுக்குத் தான் சிறைக்குப் போகும் போது இளம்பெண்ணாக இருந்த தன்னுடைய மனைவி இப்போதும் தனக்குச் சொந்தமானவளாக இருக்கிறாளா என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். வெளி உலகுடன் எந்தவிதத் தொடர்பும் இல்லாதவர்களும் அங்கு இருந்தார்கள்.

கேசு ஒரு சாலையின் வழியாக சிறிது தூரம் நடந்தான். அப்போது அவனுக்கு வேறொரு சாலையின் வழியாக நடந்தால் என்ன என்று தோன்றியது. அவன் திரும்பி நடந்தான். அப்போது வேறொரு சாலையில் நடக்கலாமே என்று தோன்றியது. நான்காவது பாதையும் அவனை அழைத்தது. அவன் மீண்டும் சிறையின் வெளிக்கதவிற்கு முன்னால் திரும்பி வந்தான். எங்கும் போகக் கூடாதா? அங்கேயே இருந்துவிடலாமா?

அங்கிருந்துகொண்டே அவன் ஒவ்வொரு பாதையையும் பார்த்தான். அந்தப் பாதை ஒவ்வொன்றும் அங்கங்கே போகின்றன. அவற்றில் எந்தப் பாதையில் போக வேண்டும் என்று எப்படித் தீர்மானிப்பது? இந்த பரந்த உலகத்தில் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருப்பவர்கள் இருக்கிறார்கள். அவனைப் பெற்றெடுத்த தாய்! அவனுடைய சகோதரி! அவனுடைய வளர்ப்புத் தாய்! அந்தப் பாதைகளில் எந்தப் பாதையில் போனால் அவர்களில் யாராவது ஒருவரைப் பார்க்க முடியும்?

இனிமேலும் அவர்களைப் பார்க்க முடியுமா? பார்க்க முடியாது என்ற முடிவுக்கு அவன் வந்துவிட்டான். அவர்களைப் பற்றி தெரிந்து கொண்டாலே போதும் என்றிருந்தது அவனுக்கு. அந்த உறவுகளெல்லாம் அவனுக்கு எதனால் உண்டாயின? அதற்கு அவன் குற்றவாளியா என்ன?

அவனுக்கு நேற்று வரை உணவு இருந்தது. இன்று முதல் உணவு இல்லை. அவன் தன்னுடைய உணவைத் தேட வேண்டும். எப்படி? அந்தச் சுவருக்கள் திரும்பச் செல்ல வேண்டும். அதைப்பற்றித்தான் அவன் சிந்தித்துக் கொண்டிருந்தான். எந்த வகையில் அவன் அங்கு போக முடியும்? பழைய மாதிரி திருடனாகவா? இல்லாவிட்டால் கொலைகாரனாகவா? திருடனாக என்றால் அதில் தவறே இல்லை என்று அவன் நினைத்தான். ஆனால் அந்தப் பணம் மீண்டும் பணவெறி பிடித்த முதலாளிக்குத்தான் போய்ச் சேரும். கொலைகாரனாக என்றால்... யாரைக் கொலை செய்வது? அதற்கு ஒரு மனிதனை அவன் பார்க்கவில்லை.

அவனுக்குப் பசி எடுக்க ஆரம்பித்தது. எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க வேண்டிய நேரம் வந்திருக்கிறது. திரும்பப் போக வேண்டுமா? இல்லாவிட்டால் பிச்சைக்காரனாக வாழ்க்கையை ஓட்டுவதா? அங்கு இருந்து கொண்டு அவனால் முடிவெடுக்க முடியவில்லை. போக வேண்டும். மனிதர்களுக்கு இடையில் நடக்க வேண்டும். அப்போதுதான் அதைப்பற்றி முடிவெடுக்க முடியும்.

கேசு எழுந்தான். தன் கண்களை மூடிக்கொண்டு அவன் நடந்தான். ஏதாவதொரு வழியில் நுழையலாம். அதில் நடக்க வேண்டியதுதான்.

அவன் நடந்தான். இலக்கு எதுவுமே இல்லாமல் அவன் நடந்தான். அந்தப் பெரிய சாலை அவனை எங்கு கொண்டுபோய் சேர்க்கிறதோ, தெரியவில்லை. எங்கு கொண்டு போய் சேர்த்தாலும் அதைப் பற்றி அவனுக்குக் கவலையில்லை.


தான் சிறைக்குப் போன காலத்தைவிட மிகவும் அதிகமாக இன்று தன்னுடைய இனத்தவர்கள் இருப்பதை அவனால் உணர முடிந்தது. எங்கு பார்த்தாலும் அவர்கள்தான் தெரிந்தார்கள். எந்த அளவிற்கு அவர்கள் பெருகியிருக்கிறார்கள்!

இல்லாவிட்டால், அன்று அது அந்த அளவிற்கு அதிகமாக இருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கலாம். அந்த இனத்தின் பெருக்கத்தைப் புரிந்து கொள்ளக்கூடிய அளவிற்கு அவனுடைய மனம் விசாலமாக இன்று ஆகியிருக்கலாம்.

சிறையை விட்டு வெளியே வந்த கேசு அன்று மதியமே தன்னுடைய உணவிற்காகப் பிச்சை எடுக்க ஆரம்பித்தான். மாலையிலும் பிச்சை எடுத்தான். மறுநாளும் பிச்சை எடுத்தான். ஆனால், அதிக நாட்கள் ஆவதற்கு முன்பே அவனுக்குத் தோன்றியது- தான் தோற்றுப் போன ஒரு பிச்சைக்காரன் என்று. அவனுடைய வயிறு ஒருமுறை கூட நிறையவில்லை. வாழ்க்கையை நடத்த அவன் கஷ்டப்பட்டாலும், அவனுக்குத் தேவையானது கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை. எந்த இடத்திலும் யாருக்கும் அவனைப் பார்த்தாலே பிடிக்கவில்லை. அவன் திருடன் அல்லவா? அவனுடைய பார்வையே அவன் யாரென்று மற்றவர்களுக்கு அடையாளம் காட்டியது!

ஒரு பிச்சைக்காரனாக இப்படி வாழ்வதைவிட சிறைக்குள் ஒரு திருடனாக இருப்பது எவ்வளவோ மேல் என்று அவன் நினைத்தான். சிறையிலிருக்கும் அவனுடைய நண்பர்கள் இந்த விஷயத்தைப் பல நேரங்களில் ஒருவரோடொருவர் விவாதித்திருக்கிறார்கள். அங்கேயே போய் இருந்துவிடலாம்! அடுத்த வேளையைப் பற்றிய கவலை இல்லை. அது ஒரு பயங்கரமான மையம்தான்!

ஆனால், கேசுவைப் பொறுத்தவரை ஏதோ ஒரு விஷயத்தை அவன் மிகவும் தெளிவாக யோசித்து வைத்திருந்தான். திருடுவதற்கு அவனுக்கு நன்கு தெரியும். எங்கு பணம் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் அவன் கற்றுக் கொண்டான். எந்த வீட்டிற்குச் சென்றாலும் அங்குதான் அவனுடைய பார்வையே போகும். உண்ணுவதற்கு சோறும் படுப்பதற்கு ஒரு வீடும் வேண்டும் என்பதற்காக மட்டும் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் அந்தப் பணத்தைக் கொள்ளையடிப்பது என்ற விஷயத்திற்கு அவன் எதிரானவன். அந்தப் பணம் கொள்ளையடிக்கப்பட வேண்டியதுதான். அது சட்டத்திற்கு விரோதமாக சம்பாதித்து வைக்கப்பட்டிருக்கிறதே. அது பிச்சைக்காரர்களுக்குச் சொந்தமானது. ஆனால், சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக அந்தப் பணத்தைக் கொள்ளையடிப்பது என்பது... அதுதானே திருடுவதில் இருக்கும் குறையே! அந்தப் பணத்தைத் திருப்பித் தருவது என்ற விஷயத்தை சிந்திக்கக் கூடிய ஒரு திருடனால் ஏற்றுக் கொள்ள முடியுமா?

அந்தப் பணத்தைத் திருப்பித் தராமல் என்ன செய்ய வேண்டும்? அதுதான் பிரச்சினையே. அதற்கு பதில் இல்லை. இந்தப் பிச்சைக்காரர்கள் எல்லோருக்கும் அதை வினியோகம் செய்ய வேண்டுமா என்ன? ஒரு நேரத்திற்கான செலவுக்குக்கூட அது போதாது. அடுத்த நேரத்திற்கு அவர்கள் மீண்டும் பிச்சை எடுக்க வேண்டும். அந்தப் பணத்தை அழித்துவிடலாமா? அழிப்பதால் யாருக்கு என்ன பயன் உண்டாகப் போகிறது? இல்லை... சிறைக்குச் செல்ல வேண்டும் என்ற ஒரு காரணத்திற்காக அவன் திருடுவதாக இல்லை. அவனுடைய மனதை ஆக்ரமித்துக் கொண்டிருந்த அந்தக் கேள்விக்குப் பதில் கிடைக்கிற காலத்தில், அந்தப் பணத்தை பயனுள்ள வகையில் இப்படியெல்லாம் விநியோகம் செய்யலாம் என்பதைப் புரிந்து கொள்ளும் காலத்தில், ஏற்கெனவே பார்த்து வைத்திருக்கும் வீடுகளின் ரகசிய அறைகளில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் பணம் அங்கிருந்து நகர ஆரம்பிக்கும். அதன் மூலம் பயனுள்ள செயல்களைச் செய்துவிட்டு சிறைக்குத் திரும்பிச் செல்ல வேண்டும். அங்கு இருப்போருக்கு இந்த விஷயத்தைச் சொல்லிப் புரிய வைக்க வேண்டும். திருடனுக்கு கொள்ளையடிப்பதற்கு அடிப்படையாக ஒரு தெளிவான நோக்கம் இருக்கவேண்டும். அதை அவர்களுக்குக் கற்றுத் தர வேண்டும். அதற்கு வேண்டியாவது சீக்கிரம் இன்னொருமுறை அங்கு போனால்தான் என்ன? ஆனால், அங்கு சென்று என்ன கூறுவான்? திருடிய பணத்தை இப்படி இப்படி விநியோகம் செய்ய வேண்டும் என்பதைக் கூற வேண்டாமா?

சிந்திக்க தெரிந்து கொண்ட அந்தப் பிச்சைக்காரன் மிகப்பெரிய சமூக பிரச்சினையின் ஏதேதோ மூலைகளையெல்லாம் போய் தட்டினான். மிக உயர்ந்த, ஆபத்துகள் நிறைந்த சிந்தனைகள்! பிச்சைக்காரர்கள் எப்படி உண்டாகின்றனர் என்பதை அவன் தெரிந்து கொண்டான். பிச்சைக்காரர்களை எதற்காக உண்டாக்குகிறார்கள் என்பதும் அவனுக்குத் தெரியும். ஆனால் பிச்சைக்காரர்களை உண்டாக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

நகரத்தில் மிகப்பெரிய வர்த்தக நிலையங்களும் தொழிற்சாலைகளும் இருக்கின்றன. கிராமப் பகுதிகளில் பரந்து கிடக்கும் விவசாய நிலங்கள் உண்டு. தொழிற்சாலைகளில் மனிதர்களுக்குத் தேவைப்படும் பொருட்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. வயல்களில் தானியங்கள் உண்டாக்கப்படுகின்றன. அவற்றுக்கு உரிமையாளர்களாக இருக்கும் ஒரு பிரிவினர் இருக்கிறார்கள். அந்த மனிதர்களை ஒரு தனிப்பட்ட இனமாகப் பார்க்க அவனால் முடிந்தது. ஒவ்வொரு வீட்டிற்குள் நுழையும்போதும் அவன் சிந்திப்பான்- எவ்வளவு பணத்தை அங்கு சேர்த்து வைத்திருப்பார்கள் என்று. ஒவ்வொரு பணக்காரனையும் பார்க்கும் போது அவன் சிந்திப்பான்- அவன் எத்தனை பிச்சைக்காரர்களை உண்டாக்கியிருப்பான் என்று அவனுடைய தாயையும் அக்காவையும் அவனையும் அந்தப் புளிய மரத்தடிக்கு ஓட வைத்த மனிதன் யாராக இருக்கும்? அங்கிருந்த அவர்களை ஒருவேளை இனிமேல் எந்தக் காலத்திலும் பார்க்க முடியாத அளவிற்கு ஆக்கிய கொடூரமான சக்தியின் ஆரம்ப இடம் எது? ஊர் முழுக்க இருக்கும் அந்த ஒவ்வொரு பிச்சைக்காரனுக்கும் தன்னை பிச்சைக்காரனாக ஆக்கியவன் யார் என்பதைத் தெரிய வைத்தால்...? எப்படி அதைக் கண்டுபிடிப்பது?

ஒவ்வொரு நாளும் ஒரு வெறித்தனம் அந்தப் பிச்சைக்காரனிடம் அதிகரித்துக் கொண்டேயிருந்தது. ஒரு உறுதியும். திருடினால் மட்டும் போதும் என்று அவன் நினைக்கவில்லை. சிலரைக் கொலை செய்யவும் வேண்டும். சிறையை விட்டு வெளியே வந்தபோது அவனுக்கு பகைமை என்ற வெறியை உண்டாக்கிய மனிதர்கள் யாரும் இல்லை. இப்போது? ஏராளமான முகங்கள் அவனுக்கு முன்னால் தோன்றின. அப்போது அவன் பற்களைக் கடித்துக் கொண்டு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்வான். அவர்களில் ஒருவரை அல்ல- எல்லோரையும் கொல்ல வேண்டும். அதற்கு என்ன வழி? அதற்குப் பிறகுதான் அவன் மீண்டும் சிறைக்குச் செல்வான்.

கொலை எண்ணத்தையும் திருட்டையும் மனதில் வைத்துக் கொண்டு அந்த இளைஞன் நகரம் முழுக்க, கிராமப் பகுதி முழுவதும் அலைந்து கொண்டிருந்தான். அவன் மனதில் எந்த மாதிரியான திட்டங்களெல்லாம் உருவாகிக் கொண்டிருந்தன! வேறு எந்த விஷயத்தைப் பற்றியும் அவன் சிந்திப்பதாக இல்லை; அவன் சிந்திப்பதும் இல்லை. அவன் நடந்து திரிவதெல்லாம் அதற்காகத்தான். கொலை செய்ய வேண்டும்... கொள்ளை அடிக்க வேண்டும்...


அடர்த்தியான இருட்டில் ஒரு இரவு வேளையில் நகரத்தின் ஒரு கடைத் திண்ணையில் அவன் சுருண்டு படுத்திருந்தான்; தூங்கவில்லை. எதிர்பக்கத்தில் நகரத்தின் மிகப்பெரிய பணக்காரனின் மாளிகை இருந்தது. கீழேயிருந்து பார்க்கும்போது, அங்கு…  உயரத்தில்- ஒளிமயமான ஒரு உலகத்தின் இருப்பு தெரிகிற மாதிரி சாளரங்கள் வழியாக பிரகாசம் பரவியிருப்பது தெரிந்தது. இருள் மேலும் அதிகமானது. விளக்குகள் அணையவில்லை. சிரிப்பு, பேச்சு ஆகியவற்றின் சத்தம் முடிவதாகத் தெரியவில்லை. அவற்றுக்குத் தூக்கம் என்ற ஒன்று இல்லவே இல்லையா என்ன?

கேசு சிறிது நேரம் எழுந்து உட்கார்ந்தான். மீண்டும் படுத்தான். பிறகு எழுந்து சாலை வழியாக நடந்தான். அவன் அந்த மாளிகையை ஏற்கெனவே ஒரு பார்வை பார்த்துவிட்டுத் திரும்பி வந்திருந்தான்.

என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிக்க அவனால் முடியவில்லை. அந்த மிகப்பெரிய மாளிகைக்குள் இருக்கும் ஏராளமான பணத்தைக் கொள்ளை அடிப்பதா, இல்லாவிட்டால் அந்த அளவிற்கு பணத்தை சம்பாதித்த அந்த துரோகியை கொலை செய்வதா? அதை தீர்மானிக்க அவனால் முடியவில்லை. என்ன செய்தால் சரியாக இருக்கும்? எது சரியாக இருக்காது? இவற்றில் அறிவுப்பூர்வமாக செய்ய வேண்டிய விஷயம் எது?

ஒவ்வொரு இரவிலும் இப்படி ஒவ்வொரு மாளிகைக்கு முன்னாலும் அவன் இருப்பான். எந்தவொரு தீர்மானத்திலும் அவனால் போய்ச் சேர முடியாது. சூரியன் உதயமாகும். மீண்டும் அவன் பிச்சைக்காரனாக நடப்பான். இன்று முடிவு செய்தே ஆக வேண்டும் என்று நினைப்பான். மறுநாள் ஏதாவது தர வேண்டும் என்று கேட்டு நடக்க அவனால் முடியாது. இந்த மாதிரியான நிச்சயமற்ற ஒரு நிலையை அவனால் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. எவ்வளவு நாட்களாக அவன் இந்த சுமையைச் சுமந்து கொண்டிருக்கிறான்! இனிமேலும் அவனால் அதைத் தாங்கிக் கொண்டிருக்க முடியாது. ஏதாவது ஒன்றைச் செய்தே ஆக வேண்டும். அதற்குப் பிறகு மனதின் சுமையைக் குறைக்க வேண்டும். கொஞ்சம் அவன் தூங்க வேண்டும்.

அவன் பழைய துணியால் ஆன பொட்டலத்தைப் பிரித்தான். ஏதோ விலைமதிப்புள்ள ஒரு பொருளை அதற்குள் அவன் பத்திரப்படுத்தி வைத்திருப்பதைப்போல் தோன்றும். பலப்பல பழைய துணிகள் அழிந்தன. நான்கு பக்கங்களிலும் பார்த்துவிட்டு அதற்குள்ளிருந்து அவன் ஒரு பொருளை வெளியே எடுத்தான். ஒரு கத்தி! அந்த மாளிகையின் சாளரத்தின் வழியாக வந்த பிரகாசத்தில் அது ஒளிர்ந்தது. அந்த நீண்டு, கூர்மையான, இரு பக்கங்களிலும் சாணை பிடிக்கப்பட்டுத் தயாராக இருந்த கத்தி இரத்த தாகம் எடுத்து மேல்மூச்சு கீழ்மூச்சு விடுவதைப்போல் இருந்தது. ஒரு பழைய துணியை எடுத்து கேசு அந்த கத்தியைத் துடைத்தான்.

எவ்வளவு நாட்களாக அந்த வலிமை கொண்ட ஆயுதம், மனிதனின் சூடான குருதியை இப்போது குடிக்கலாம், இப்போது குடிக்கலாம் என்று ஏங்கிக் கொண்டிருக்கிறது! ஒவ்வொரு நாளும் இப்படியே ஓடிக் கொண்டிருந்தது. அதன் சொந்தக்காரன் ஒவ்வொரு நாளும் மேலும் மேலும் உறுதியான குரலில் சத்தியம் பண்ணிக் கொண்டிருந்தான். அந்த உறுதிமொழியில் அதற்கு நம்பிக்கை இல்லாமல் போய்விட்டது.

அந்த ஆயுதத்தைச் சற்று தள்ளி வைத்துக் கொண்டு அவன் பார்த்தான். அதன் முனை அவனை நோக்கித் திரும்பி இருந்தது. கத்தியின் பிரகாசத்திற்கு ஏதோ அச்சம் உண்டாக்கக்கூடிய ஒரு ஒளி இருப்பதைப்போல் தோன்றியது. அவனுடைய கையில் இருந்து கொண்டு அது துடித்தது. அவன் அதை ஏமாற்றினான். அதைக் கிண்டல் செய்தான். ஆமாம்... அவன் அப்படித்தான் நடந்தான். அதற்கு ஒரு துளி ரத்தத்தைக் கூட அவன் தரவில்லை. கோபம் உண்டாகி அது கேட்பதைப் போல இருந்தது: 'ரத்தத்தைத் தா...'

எப்படி, எங்கேயிருந்து அவன் ரத்தத்தைக் கொடுப்பான்?

ஒரு தீர்மானத்தையும் எடுக்க முடியாத கோழை. இந்தப் பிச்சைக்காரன் அந்த ஆயுதத்தின் தாகத்தைத் தீர்ப்பதற்குத் தன்னுடைய குருதியை அல்லவா தந்திருக்க வேண்டும்? 'நாளைக்கு' என்று அவன் ஆயுதத்திடம் கூறிவிட்டான். இல்லை... அந்த அளவிற்குப் பொறுமையாக அந்த ஆயுதத்தால் இருக்க முடியாது. பொறுமையாக இருந்து இருந்து பொறுமையே இல்லாமற் போனது.

தெளிவற்ற ஒரு பேச்சைக் கேட்டதைப்போல இருந்தது. ஒரு நொடியில் அவன் அந்தப் பழைய துணிக்குள் ஆயுதத்தை ஒளித்து வைத்தான். மீண்டும் குரல் ஒலித்தது.

"என்னை அடிக்காதே."

ஒரு அழுகைச்சத்தம்! அது ஒரு குழந்தைக்குச் சொந்தமானது. வேதனையுடன் ஒரு குழந்தை அழுதது. மீண்டும் கெஞ்சுகிறது! ஆனால், யாரும் திட்டுவதோ உதை கொடுப்பதோ கேட்கவில்லை.

அது எங்கிருந்து வருகிறது? அந்த பலவீனமாக வேண்டுகோளை எழுப்புவது ஒரு சிறு குழந்தை. ஒழுங்காக அதன் நாக்குகூட செயல்பட ஆரம்பிக்கவில்லை. எந்த அளவிற்கு பரிதாபமான அழுகை அது! அப்படி அடித்து உதைக்கிற துரோகி யாராக இருக்கும்?

கேசுவிற்கு வாழ்க்கையில் இப்படிப்பட்ட ஒரு அனுபவம் இருந்ததில்லை. அவனுடைய நெஞ்சுக்குள் எங்கேயோ ஒரு அழுகைச் சத்தம் போய் மோதி வலியை உண்டாக்கியது. தனக்கென்று யாரும் இல்லாத அந்தப் பிச்சைக்காரனின் இதய வீணையில் கண்ணுக்குத் தெரியாத சில கம்பிகள் மீட்டப்பட்டன. அன்றுவரை பரிதாபமான ஒரு அழுகைச் சத்தத்தை அவன் கேட்கவில்லையா? ஒரு குழந்தையின் ஆதரவற்ற நிலையை அவன் தெரிந்திருக்கவில்லையா? "அய்யோ... என்னை அடிக்காதீங்க" என்ற மூன்று சொற்களுக்கு இந்த அளவிற்கு சக்தி இருக்கிறதா? அவனுடைய கவனம் இப்படிப்பட்ட ஒரு விஷயத்தின் மீது பதிவது இது முதல் தடவையாகக்கூட இருக்கலாம்.

அவன் எழுந்தான். அந்த அழுகைச் சத்தத்தில் அவனுடைய மனம் ஒன்றியது. கொலைச் செயலிலும் திருட்டிலும் இருந்து அந்த மனம் எவ்வளவு நாட்களுக்குப் பிறகு விடுபடுகிறது! அவனுடைய மனம் வேறொரு விஷயத்தை நோக்கித் திரும்பிவிட்டதே!

அந்த அழுகைச் சத்தம் நின்றது. அந்தக் குழந்தை எங்கு இருக்கிறது? அதைச் சிறிது கூட இரக்கம் இல்லாமல் யார் அடிப்பது? அந்த உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அவன் இரண்டு மூன்று அடிகள் வைத்தான். மீண்டும் குழந்தை அழுதது. "என்னை அடிக்காதே!" எந்த துரோகி அதை இப்படி அடிக்கிறான்? அடி தாங்காமல் அந்தக் குழந்தை நெளிவதை அவனால் உணர முடிந்தது. அதைக் காப்பாற்ற ஆள் யாரும் இல்லையா? அதற்குத் தாய் இல்லையா? அந்தக் குழந்தை அழும்போது 'அம்மா' என்ற வார்த்தையை உச்சரிக்கவில்லை என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். அடி விழும் போது எந்தக் குழந்தையாக இருந்தாலும் தன் தாயை அழைக்கும் அல்லவா?


ஒரு மனிதனின் நெஞ்சில் கத்தியை இறக்கும்போது தெறிக்கும் ரத்தத்தில் முகம் கழுவுவதைக் கனவு கண்டு கொண்டிருந்த ஒருவன் அவன். அப்படிப்பட்ட அவன் ஒரு குழந்தையின் அழுகைச் சத்தத்தைக் கேட்டுக் கலங்கிப் போய்விட்டான். ஒருவன் உயிர் போகும் வேதனையுடன் துடிப்பதைப் பார்க்க அவனால் எப்படி முடியும்?

ஒரு குழந்தையின் அழுகைச் சத்தம் என்ற புதிய அனுபவத்தில் அவன் தன்னை இழந்துவிட்டான். மற்ற எல்லாவற்றையும் கேசு மறந்துபோனான்.

அவன் நடந்தான். தாய் என்ற வார்த்தையை உச்சரித்து அழாத அந்தக் குழந்தையைப் பார்க்க வேண்டும்.

அந்தத் திண்ணையின் இன்னொரு முனையில் ஏதோ அசைவதைப் போல் இருந்தது. மீண்டும் அந்தக் கெஞ்சல், அந்த அழுகைச் சத்தம்! அவன் அருகில் சென்றான். ஒரு தடிமனான நாய் உறுமியவாறு ஓடியது. அது ஒரு குழந்தை. அது கனவில் அழுது கொண்டிருந்தது. அந்த நாய் அதைக் கடித்துக் கொண்டு போக இருந்தது. பாதையின் ஒரு ஓரத்தில் இருந்த விளக்கு வெளிச்சத்தில் அந்தக் குழந்தையை அவன் உற்றுப் பார்த்தான். மூன்று வயதிற்கு அதிகம் இல்லாத ஒரு ஆண் குழந்தை! அது படுத்துத் தூங்கிக் கொண்டிருந்தது.

கேசு குழந்தையின் அருகில் போய் உட்கார்ந்தான். அவன் தன்னை மறந்து அதையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தான். நல்ல விளக்கொளியில் அதன் முகத்தைப் பார்க்க வேண்டும் என்று அவன் நினைத்தான்.

அந்த இரவு முழுவதும் ஒரு காவல் தெய்வத்தைப் போல அவன் அந்தக் குழந்தையின் அருகிலேயே உட்கார்ந்திருந்தான்.

கொலை செய்வதையும் கொள்ளையடிப்பதையும் மட்டுமே மனதில் வைத்துக் கொண்டு நடந்து திரிந்த கேசு இப்போது ஒரு குழந்தையைத் தோளில் வைத்துக் கொண்டு நடந்து கொண்டிருந்தான். அந்தக் குழந்தை அவனுடைய தலைமுடியை இறுகப் பற்றியவாறு தோளில் உட்கார்ந்து கொண்டு நான்கு பக்கங்களிலும் கண்களை ஓட்டி உலகத்தைப் பார்க்கும். அந்தக் குழந்தையை சந்தோஷப்படுத்தவும் சிரிக்க வைக்கவும் கேசு சில நேரங்களில் குதித்துக் குதித்து நடப்பான். சில வேளைகளில் தன் இடுப்பில் அதை வைத்துக்கொண்டு எதையெதையோ கூறிக் கொண்டிருப்பான்.

அந்த ஆண் குழந்தையின் வயிறு எந்தச் சமயத்திலும் நிறையாமல் இருக்காது. அவனுக்கு சாப்பிடக் கொடுப்பதற்கு எப்போதும் ஏதாவது கேசுவின் கையில் கட்டாயம் இருக்கும். அந்தக் குழந்தைக்கு இப்போது விருப்பங்கள் இருக்கின்றன. சொந்த எண்ணங்கள் இருக்கின்றன. அதை சாதிப்பதற்காகக் கோபம் காட்டவும் தெரியும். ஒரு கடைத் திண்ணையில் பாயை விரித்து துணியால் மூடி கேசு அவனைப் படுக்க வைப்பான். கேசுவும் அவனுக்கு அருகிலேயே படுத்துக் கொள்வான். அந்தக் குழந்தை இப்போது கெட்ட கனவு கண்டு அழுவதில்லை.

அந்தக் குழந்தைக்காக கேசு இப்போது பிச்சை எடுக்கிறான். ஆனால், அந்தக் குழந்தை அவனுக்கு யார் என்று சிலர் கேட்கும் போது, அவன் என்ன பதில் சொல்வது என்று தெரியாமல் நெளிவான். அந்தக் குழந்தை அவனுக்கு யார்? யாராக இருந்தாலும் என்ன என்று அவன் நினைத்தான்.

நடுப்பகல் வேளையில் குழந்தை சோர்வடையாமல் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏதாவது நிழலில் உட்கார்ந்து ஓய்வெடுக்கும்போது கேசு குழந்தையை உற்றுப் பார்ப்பான். அந்தக் குழந்தை விஷயத்தில் எவ்வளவு பெரிய ரகசியம் மறைந்திருக்கிறது! எந்தக் கோணத்திலும் எந்தக் காலத்திலும் வெளியாகாத ரகசியம்! அந்தக் குழந்தை யாருடைய வயிற்றில் பிறந்தது? அதன் தந்தை யார்? அந்தக் குழந்தையுடன் தொடர்பு உள்ள ஒரு மனிதன் கூட உலகத்தில் இல்லையா? பதில் கிடைக்காத கேள்விகள்! கேள்விகளுக்குப் பதில்தர அந்தக் குழந்தையால் மட்டுமே முடியும். அந்தக் குழந்தையிடமிருந்து எதைத் தெரிந்து கொள்வது?

பிச்சைக்காரர்கள் இனத்தில் நடக்கும் சாதாரண சம்பவங்களில் ஒன்று அது. ஒருவேளை அந்தக் கேள்விகளுக்குப் பதிலைக்கூட அது கூறிவிடும் என்று கேசு நினைத்தான். ஒரு பிச்சைக்காரப் பெண் கர்ப்பம் தரித்து, அந்தக் குழந்தையைப் பெற்றெடுத்தாள். குழந்தையைத் தூக்கிக் கொண்டு நடந்தாள். சாலையோரத்தில் படுத்து அவள் இறந்தாள். நகராட்சியைச் சேர்ந்தவர்கள் அந்த இறந்த உடலை எடுத்துக் கொண்டு போனார்கள். அந்தப் பிணத்திற்கு அருகில் இருந்த குழந்தை மெதுவாக நடந்தது. சில நேரங்களில் அது ஏதாவது வண்டி ஏறி இறக்கலாம். இல்லாவிட்டால் ஏதாவது பிணம் தின்னும் நாய் கடித்து அது இழுத்துக் கொண்டு போகப்படலாம். அதுவும் இல்லாவிட்டால் அது தப்பிப் பிழைத்து வாழவும் செய்யலாம்.

அந்தக் குழந்தையின் முகத்தை உற்றுப் பார்க்கும்போது, அதன் முகச் சாயல் தனக்கு ஏற்கெனவே பரிச்சயம் உள்ளதைப்போல அவனுக்குத் தோன்றியது. முன்பு எங்கோ பார்த்த ஏதோ முகத்தின் சாயல் அதில் இருந்தது. அவன் நினைத்துப் பார்ப்பான். ஒரு முடிவுக்கும் அவனால் வர முடியாது.

'அம்மா' என்று அழைக்கத் தெரியாத குழந்தை! கேசு மிகவும் சிரமப்பட்டு அவனை அந்தப் பெயரை உச்சரிக்கச் செய்ய எப்படியெல்லாமோ முயற்சி செய்து பார்த்தும், அந்த வார்த்தையைக் கூற அவனுடைய நாக்கால் முடியவில்லை.

தாய் இல்லை என்பதால், 'அம்மா' என்ற வார்த்தையை உச்சரிக்க ஒரு குழந்தையின் நாக்கால் முடியாமல் போயிருக்கலாம். அப்படியெல்லாம் இருக்குமா என்ன? தாய் இல்லாவிட்டாலும் ஒரு குழந்தை 'அம்மா' என்று அழைக்காமல் போய்விடுமா? ஒரு வேளை ஒரு தாய் பெற்றெடுக்காமலே உண்டான ஒரு குழந்தையாக அது இருக்கலாம்!

அந்தக் குழந்தை தன்னை எப்படி அழைக்க வேண்டும் என்று கேசு சிந்தித்தான். 'மாமா'... - அது ஒரு நல்ல உறவாயிற்றே! அவன் குழந்தையை 'மருமகன்' என்று அழைத்தான். அந்த ஆண்குழந்தைக்குத் தாயும் மாமாவும் தந்தையும் பாட்டியும் தாத்தாவும் இல்லாமல் இருப்பார்களா? அந்த வார்த்தைகளை உச்சரிக்க அவன் சொல்லிக் கொடுத்தான்.

கேசுவின் வாழ்க்கை முறை மாறியது. அவனுடைய வாழ்க்கைக்கு ஒரு நோக்கம் உண்டானது. அதைத் தொடர்ந்து அவனுடைய சிந்தனைகளிலும் சில மாறுதல்கள் உண்டாயின. இப்படியே அவன் பிச்சைக்காரனாக வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருந்தால் போதுமா? அவனுடைய மருமகனும் பிச்சைக்காரனாக ஆகிவிடுவான். அதை அவனால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவனுடைய மருமகன் பிச்சைக்காரனாக ஆகக் கூடாது. பிறகு? அவனிடம் அதற்கான பதில் இல்லை.

சில நேரங்களில் கேசு தன்னுடைய கடந்த காலத்தைத் திரும்பிப் பார்ப்பான். தன்னுடைய தாத்தாவையும் தாயையும் சகோதரியையும் நினைத்துப் பார்ப்பான். தன்னை தாயைப் போல பாசத்துடன் நடத்திய வேறொரு பெண்ணை நினைத்துப் பார்ப்பான்.


அவர்கள் எல்லோரும் எங்கு போனார்கள்? வாழ்க்கையில் இனிமேல் அவர்களை அவன் பார்ப்பதற்கான சூழ்நிலை உண்டாகுமா? வாழ்க்கையில் அவன் மீது அன்பு வைத்திருந்தவர்கள் சிறையில் இருக்கும் கொலைகாரர்களும் திருடர்களும்தான். ஒரு வேளை ஒவ்வொரு நாளும் அவர்கள் அவனை எதிர்பார்த்துக் கொண்டிருக்கலாம்.

வசதி படைத்த பணக்காரனின் சொத்துக்களைக் கொள்ளை அடிப்பதும் அவனைக் கொல்வதும்... அதுதான் தன் வாழ்க்கையின் நோக்கம் என்று அவன் நினைத்திருந்தான். எத்தனையெத்தனை பணக்காரர்களைத் தீர்த்துக்கட்ட அவன் திட்டமிட்டிருந்தான்! அது எதுவுமே நடக்கவில்லை. இனி நடக்கப் போவதும் இல்லை. அப்படி அவன் நடந்தால், அவனுடைய மருமகனுக்கு வேறு யார் இருக்கிறார்கள்? அந்தக் கத்தியை அவன் கடலுக்குள் வீசி எறிந்தான். அதைக் கையில் வைத்துக் கொண்டிருந்தால்...! அவன் பயப்பட்டான்- எங்கே தான் தற்கொலை செய்து கொள்வோமோ என்று!

அப்படியென்றால் வாழ்க்கையில் கேசு செய்ய வேறு எதுவும் இல்லையா? ஒரு பிச்சைக்காரனை வளர்ப்பது என்பது மட்டும்தானா? அவன் வேறு என்ன செய்ய வேண்டும்?

அதுவரை கேசு படித்த பாடங்களுக்குத் தெளிவான வடிவம் கிடைக்க ஆரம்பித்தது. பிச்சைக்காரர்களை உண்டாக்கும் சமூக அமைப்பைப் பற்றி அவனுக்கு நன்றாகத் தெரியும். அது எப்படிச் செயல்படும் என்பதையும் அவன் பார்த்திருக்கிறான். மனிதனைக் கொலை செய்வதை அவன் பார்த்தான். இங்கு தாய்- மகன் உறவிற்கு மதிப்பில்லை. குடும்பங்கள் சர்வ சாதாரணமாக தகர்ந்து கொண்டிருந்தன. குழந்தைகளை நாய்கள் உயிருடன் கடித்து இழுத்துக் கொண்டு போயின. இந்த அமைப்பிற்கு எதிராக ஒரு சுண்டுவிரலை உயர்த்த ஆள் இல்லையா?

கேசு சிந்திக்க ஆரம்பித்தான். இது மாறாதா? மாற்றுவதற்கான வழி இல்லையா? அப்படி மாறிய ஒரு சூழ்நிலையில் அவன்- இல்லை- அவனால் வாழ முடியாது. அவனுடைய மருமகனாவது வாழ முடியாதா?

நான்கு பக்கங்களிலும் அவன் அநீதிகளைத்தான் பார்த்துக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் முதல் தடவையாக அன்றுதான் அவன் பரிதாபமான ஒரு அழுகைச் சத்தத்தைக் கேட்டான். அதற்கு முன்பும் அவன் கேட்டிருக்கலாம். ஆனால், கூர்ந்து கவனித்ததும் மனதில் நினைத்துப் பார்த்ததும் அன்றுதான். அதற்குப் பிறகு அதைவிட இதயத்தை நெகிழச் செய்யும் அழுகைச் சத்தங்களை நான்கு பக்கங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான். என்ன செய்வது? அவன் எதையும் செய்ய தயார்தான். இதைத்தான் செய்ய வேண்டும் என்பதெல்லாம் அவனுக்குத் தெரியாது. கூறுவதற்கு ஆளும் இல்லை.

எனினும், இந்த பரிதாபமான அழுகைக்கு ஒரு முற்றுப்புள்ளி விழும் என்று அவனுக்குத் தோன்றியது.

மருமகனை மடியில் வைத்துக் கொண்டு அவன் கூறுவான்:

"என் குழந்தை... தேவைப்படும் காலம் வரும்."

5

கேசு இப்போது ஒரு தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி. ஒரு முனகலுடன் சுற்றிக் கொண்டிருக்கும் பெரிய சக்கரத்திற்கு அருகில்தான் அவனுடைய இடம் இருக்கிறது. அந்தத் தொழிற்சாலையையும் சேர்த்து நகரத்தில் உள்ள எல்லா தொழிற்சாலைகளிலும் பணியாற்றும் தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்திருக்கும் அமைப்பில் அவனும் உறுப்பினராக இருக்கிறான்.

அந்தப் புதிய ஒன்று சேரல் அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை அளித்தது. அந்த வாழ்க்கை மகிழ்ச்சி நிறைந்ததாக அவனுக்குத் தோன்றியது. சந்தோஷமான ஒரு புதிய உலகம் அவனுக்கு முன்னால் திறக்கப்பட்டது. பிரகாசமான உலகம்! செயல்கள் நிறைந்த உலகம்! ஒருமுறை கூட நிமிராத முதுகெலும்புடன், மற்றவர்களின் இரக்கத்தை எதிர்பார்த்து எச்சிலைத் தின்று பிச்சை எடுத்துத் திரிந்த காலத்தில், அடிக்கடி தோன்றிக் கொண்டிருந்த அந்தக் கேள்விக்கான பதில் கிடைத்து விட்டதைப் போல் அவன் உணர்ந்தான். அந்தப் புதிய உலகத்தில் தெளிவான ஒரு பாதை தெரிவதை அவன் பார்த்தான். தூரத்தில் விடுதலைக்கான பிரகாசம் பளிச்சென தெரிந்தது. புத்துணர்ச்சி நிறைந்த அந்தப் புலர் காலைப் பொழுது! மனித மதிப்பின் விலைக்கு அர்த்தம் கிடைத்த காலம்! அவனுக்கும் அவனைப் போன்ற பிச்சைக்காரர்களுக்கும் மன அமைதியின்- நிம்மதியின் சுத்தமான காற்றை சுவாசிக்க முடிந்த காலம்!

அந்தப் புதிய வாழ்க்கையில் அவனுக்குச் செய்வதற்கு விஷயங்கள் இருந்தன. சிந்திப்பதற்கு வாய்ப்புகள் இருந்தன. அவனுடைய சிந்தனைகள் அவனுக்குத் தெளிவைத் தந்தன. ஒரு தத்துவத்தின் முதிர்ச்சியான அறிவின் அனுபவம் அவனுக்கு உண்டானது. அவனுக்கு சிந்திக்கத் தெரிந்தது. தன்னம்பிக்கை இருந்தது. உரிமைகளைப் புரிந்து கொண்டிருந்த அதே வேளையில் கடமைகளைப் புரிந்து கொள்ளவும் அவனால் முடிந்தது. மனிதர்களின் மிகவும் உன்னதமான ஒரு போராட்டத்தில் அவன் ஒரு போராளியாக இருந்தான்.

அந்த மனிதன் என்ற சக்தி மையம் தனக்கு முன்னால் இருந்த செயல்களில் தீவிரமாக ஈடுபட்டது. அவன் ஒன்றாகச் சேர்ந்திருக்கும் தொழிலாளர்கள் இனத்தைச் சேர்ந்தவன்! தான் செய்ய வேண்டியது என்னென்ன? செய்யக் கூடாதவை என்னென்ன என்பதெல்லாம் நன்றாகத் தெரியும். அழிக்க வேண்டியது எதை என்பதை அவன் கற்றுக் கொண்டான். படைப்பிற்கான ஆர்வம் அவனுக்கு இருந்தது. கொலைச் செயலையும் திருட்டையும் மனதில் வைத்துக் கொண்டு, எதுவுமே செய்யாமல் நடுங்கிக் கொண்டிருக்கும் கைகளுடன் நடந்து திரிந்த காலத்தைப் பற்றி அவன் நினைத்துப் பார்ப்பதுண்டு. அந்த தைரியம் அவனை விட்டுப் போய்விடவில்லை. அது அவனுடைய அதிர்ஷ்டம்! இன்று ஒரு கத்தியைக் கையில் எடுக்க வேண்டியது வந்தால்- அவனுடைய கை நடுங்காது. குறி சிறிதும் பிசகாது.

அவனுடைய வாழ்க்கை ஒன்றுபட்ட தொழிலாளர்கள் இனத்தின் போராட்டத்துடன் இணைந்து ஒரு புரட்சி வரலாறாக ஆனது. இனிமேலும் அதிகமான வேகத்துடன், கொலை வெறியுடன், சுற்றிக் கொண்டிருக்கும் அந்தச் சக்கரத்தின் மூலம் பிச்சைக்காரர்களை உண்டாக்குவதை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான். இனிமேலும் உன்னதமான உறவுகள் இல்லாமற் போவதை அவன் ஒப்புக் கொள்ள மாட்டான். இனிமேலும் பிணம் தின்னி நாய்கள் அனாதைக் குழந்தைகளைத் தின்று வாழக் கூடாது. மனிதனாக வாழ முடியுமா என்பதைப் பார்க்க வேண்டும். எத்தனையோ நூறு வருடங்களாக நிலவிக் கொண்டிருக்கும் அநீதியைப் பற்றிய புரிதலால் அவன் வெறி கொண்டான். பூமியில் தான் அறிந்திராத- கேள்விப்பட்டிராத மூலை முடுக்குகளிளெல்லாம் செத்து மடிந்து கொண்டிருந்த மனிதர்களுக்காக அவனுடைய இதயம் துடித்தது. அந்தப் பிச்சைக்காரனின் நரம்புகளில் ஆவேசத்தின் கொதிப்படைந்த குருதி ஓடிக் கொண்டிருந்தது. சில நேரங்களில் பலவற்றையும் நினைத்து நினைத்து அவன் பற்களைக் கடித்துக் கொண்டிருப்பான்.

கூலி அதிகமாக வேண்டும் என்பதற்காகவும், வேலையிலிருந்து போகச் சொன்னவர்களைத் திரும்பவும் வேலையில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் போராட்டம் வேறொரு தெளிவான வடிவத்தைப் பெற்றது.


தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு முன்னால் ஒரு பெரிய சக்தி தடைக்கல்லாக நின்று கொண்டிருந்தது- அரசாங்கம்! அந்த அரசாங்கம் அவன் பக்கம் இருப்பது அல்ல. அந்த அரசாங்கத்தின் நீதியும் நியாயமும் மனிதத்துவத்தின் உன்னதங்களைக் காப்பாற்றுவதற்காக இருக்கவில்லை. அந்தத் தடைக்கல் இருக்கும் காலம் வரையில் தொழிலாளர்களின் திட்டம் வெற்றிபெறப் போவதில்லை.

அந்தப் புளிய மரத்தடியில் இருந்து கொண்டு அவனுடைய இரண்டாவது தாயாக இருந்த அந்தப் பெண் சொன்ன ஒவ்வொரு விஷயத்தையும் கேசு நினைத்துப் பார்ப்பதுண்டு. எந்த அளவிற்கு மகத்தான உண்மைகள் அவை!

அந்தத் தொழிலாளி அமைப்பு அரசியல் ரீதியான ஒரு காரியத்தைச் செய்தது.

எவ்வளவு தெளிவாக அவனுக்கும் அவனுடைய நண்பர்களுக்கும் அந்த விஷயங்கள் புரிந்தன! அந்த விஷயத்தை எல்லோரும் புரிந்து கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? அப்படியென்றால இந்தச் சூழ்நிலையை ஒரே நொடியில் மாற்றி விடலாம்.

அந்தப் போராட்டத்தின் முன்னோட்டமாக கொள்கை விளக்கக் கூட்டங்கள் ஊர் முழுக்க நடந்தன. அந்தப் போராட்டம் பன்முகத்தன்மை கொண்டதாக இருந்தது. அந்தச் செயல்கள் ஒவ்வொன்றையும் மிகவும் அமைதியாகச் செயல்படுத்த வேண்டும். அந்தப் போராட்டத்தில் தொழிலாளர்கள் உயிரைக்கூட கொடுக்க வேண்டிய சூழ்நிலை வரலாம். ஒவ்வொரு தொழிலாளியும் முழுமையான மனதுடன் அந்த உறுதிமொழியைக் கூறினார்கள்.

எந்த அளவிற்கு உணர்ச்சி நிறைந்த ஒரு காலமாக இருந்தது அது! ஆயிரக்கணக்கான ஆண்களும் பெண்களும் முன்னோக்கி வந்தார்கள். தொழிலாளர்கள் உலகத்திற்கு ஒரு புதிய உணர்வும் உத்வேகமும் கிடைத்தன. முதலாளியின்-அவனுடைய பக்கம் இருந்த அரசாங்கத்தின் பலவீனமான எதிர்ப்புகளால் அந்த ஆவேசத்தைக் குளிரச் செய்யவோ, உணர்ச்சிகளை அடங்கச் செய்யவோ முடியவில்லை என்பதுதான் உண்மை.

அந்தப் போராட்டச் செயல்களுக்கு நடுவில் கேசுவும் இருந்தான். ஆனால், அந்த சபதத்தைச் செய்தபோது இடையில் தன்னுடைய தொண்டை தடுமாறியதோ என்று அவன் சந்தேகப்பட்டான். தேவையான ஆவேசமும் அர்ப்பணிப்புணர்வும் தனக்கு இல்லையோ என்று தனியே இருக்கும் நேரங்களில் எண்ணி அவன் பயந்தான். அந்தப் போராட்டத்தில் மரணம் கூட நடக்கலாம். தலைமுடி இழையைப் போல மிகவும் பலவீனமாக இருக்கும். ஏதோ ஒரு சக்தியின் பின்னோக்கி உள்ள ஒரு இழுப்பை உணர்ச்சிவசப்பட்டு நிற்கும் நிமிடங்களில் அவன் உணர்ந்திருக்கிறான். சாயங்காலம் வீட்டிற்குச் செல்லும்போது, மருமகன் தன் சிறு கையைச் சுருட்டி பிடித்துக் கொண்டு கோஷம் போடுவான். கேசு அவனை வாரி எடுத்து அவனுக்கு முத்தம் தருவான். ஒரு விஷயம் கேசுவிற்குத் தெளிவாகப் புரிந்தது. மருமகனை இந்த அளவிற்கு அவன் கொஞ்சியதில்லை. அவனுக்குப் பல முறை முத்தம் தந்தாலும், கேசுவிற்குத் திருப்தி வராது. முத்தங்களால் அவன் அந்தக் குழந்தையை மூடினான். மாமாவின் கொஞ்சலில் சிக்கிக் கொண்டு அவன் நெளிந்தான். சில நேரங்களில் கேசுவின் கண்களிலிருந்து கண்ணீர் அரும்பும்.

அந்தக் காலத்திற்கு சில விசேஷங்களும் இருந்தன. தொழிற்சாலையில் அந்த சக்கரத்திற்கு அருகில் நின்று கொண்டிருக்கும் போதெல்லாம் தன் மருமகனைப் பற்றிய நினைவுகளால் கேசு நிலைகுலைந்து போய் விடுவான். பொதுக்கூட்டங்களில் உணர்ச்சிமயமான சொற்பொழிவுகளைக் கேட்டுக் கொண்டிருக்கும்போது, திடீரென்று அவன் தன் மருமகனைப் பற்றிய நினைவுகளில் மூழ்கிவிடுவான். நான்கு பக்கங்களிலும் ஆபத்துகள் நிறைந்திருந்தன. சிறு குழந்தை வீட்டில் தனியாக இருந்தது.

ஒருநாள் கேசு வீட்டிற்குச் சென்றபோது, அவனுடைய மருமகன் படுத்திருந்தான். உடலில் ஒரு சிறய வெப்பம் இருந்தது. கேசுவின் மன அமைதி அந்த நிமிடமே கெட்டுவிட்டது. அந்த சிறிய காய்ச்சல் எப்படிப்பட்ட உடல்நலக் கேடாகவும் மாறி வரலாம். இரவு முழுவதும் அவனுக்குத் தூக்கமே வரவில்லை. துணியால் போர்த்தப்பட்டு படுத்திருந்த தன் மருமகனையே பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான்.

அப்போது கேசு சிந்தித்தான். அவன் யாருடைய மகன்? அவனுக்குத் தாய் இருக்கிறாளா? தந்தை இருக்கிறானா? அந்த முகச்சாயல் அவனுக்கு நன்கு பரிச்சயமான ஒன்று. அது யாருடைய முகம்?

எந்தக் கவலையும் இல்லாமல் அந்தக் குழந்தை படுத்து தூங்கிக் கொண்டிருந்தது. அவனுக்குத் தன் மாமா இருக்கிறான் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதனால்தான் இந்த ஆழமான தூக்கம்! அந்தப் பிணம் தின்னும் நாய் கவ்விக் கொண்டு போகாமல் இருக்க ஒரு ஆள் காவலாக இருக்கிறான்.

"தூங்கு குழந்தை... சுகமாகத் தூங்கு! கெட்ட கனவுகள் காணாமல் தூங்கு"- கேசு அவனுக்கு முத்தம் தந்தவாறு அவனுடைய காதுக்குள் மெதுவான குரலில் சொன்னான். ஆனால், இந்தப் பாதுகாப்பு எவ்வளவு நாட்களுக்கு! அவனுடைய மாமா ஒரு பெரிய போராட்டத்தின் படைவீரன். அந்தப் போராட்டத்தில் ஈடுபடுபவனுக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாமே! சில நேரங்களில் வாழ்க்கை முழுவதும் சிறையின் இருண்ட அறைக்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகலாம். சில வேளைகளில் தூக்குமரம் ஏற வேண்டியது வரலாம். அதுவும் இல்லாவிட்டால் ஒரு வெடிகுண்டு அவனுடைய மார்பைத் துளைத்துக் கொண்டு உள்ளே நுழையலாம். கேசுவின் கண்களில் நீர் நிறைந்தது. அப்போது அவனுடைய மருமகனைப் பார்த்துக் கொள்ள யார் இருக்கிறார்கள்?

யார் இருக்கிறார்களா? அவன் படித்த தத்துவம் அவனிடம் கேட்டது: யார் இருக்கிறார்களா? அனாதைக் குழந்தைகள் உண்டாகக்கூடாது என்ற போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் ஒரு வீரன் கேட்கக்கூடிய கேள்வியா அது? மருமகன் மீது கொண்டிருக்கும் பாசத்தால் தன் கால்களைப் பின்னோக்கி வைக்கப் பார்க்கிறானா? இல்லை... இல்லை...

அவன் ஒரு கோழையாக ஆக மாட்டான். அவனுடைய மருமகன் அனாதையாக ஆகட்டும்! பரவாயில்லை. அந்தப் போராட்டத்தில் எத்தனையோ ஆயிரம் குழந்தைகள் அனாதைகளாக ஆவார்கள். எதிர்காலத்தில் ஆதரவு இல்லாத சூழ்நிலைகள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தானே அவை எல்லாமே?

வேலை நிறுத்தம் மிகவும் பலம் கொண்ட ஒன்றாக இருக்கும். குடும்பங்கள் அனாதை ஆக வாய்ப்பு இருக்கிறது. அரசாங்கமும் முதலாளிகள் இனமும் அந்தப் போராட்டத்தை சகல பலங்களையும் பயன்படுத்தி ஒடுக்க முயற்சிப்பார்கள் என்பது மட்டுமே உண்மை. தொழிலாளர்கள் இனம் ஏராளமான கஷ்டங்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும் என்பதும் உண்மை. அந்தப் போராட்டத்திற்குத் தலைமை தாங்குபவர்களுக்கு அதைப் பற்றி தெளிவான பார்வை இருக்கிறது. அந்தத் துயரங்களுக்கெல்லாம் சற்று விடிவு சில நாட்களுக்காவது கொடுக்க வேண்டுமென்றால், அதற்கு மிகப்பெரிய பணச்செலவு வேண்டியதிருக்கும். ஒன்றுமே இல்லாத, பட்டினி கிடக்கும் ஏழைத் தொழலாளர்களின் அமைப்பு எங்கிருந்து அந்தப் பணத்தை உண்டாக்கும்? எனினும், தொழிலாளர்கள் அந்த கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளத் தயாராக இருந்தார்கள்.

அந்த மிகப்பெரிய பிரச்சினையை சங்கத்தின் தலைமை சிந்தித்துப் பார்த்தது.


எவ்வளவு சிந்தித்தாலும் வழிகள் அவர்களுக்குத் தெரியவில்லை. எப்படிப்பட்ட ஆவேசத்தையும் வீரத்தையும் நிரந்தரமான பட்டினி அடக்கி ஆண்டு விடும் என்று அவர்களுக்கு நன்றாகத் தெரியும். அந்தப் போராட்டம் சட்டப்படி நடக்கக்கூடிய ஒரு போராட்டம் அல்ல. ஆனால், இறுதிப் போராட்டத்திற்கு தொழிலாளர்கள் இனத்தைப் பெரிய அளவில் கொண்டு போய் சேர்க்கும் போராட்டம் அது. அந்த வகையில் அநத்ப் பேராட்டத்திற்குப் பெரிய அளவில் ஒரு முக்கியத்துவம் இருக்கத்தான் செய்கிறது. பணக்கார இனத்தை எதிர்த்து எவ்வளவு அதிகமான நாட்கள் தாக்குப் பிடித்து நிற்க முடியுமோ, அந்த அளவிற்கு அவனுடைய வர்க்க உணர்வு வெளிப்படுகிறது. சக்தி படைத்ததாக ஆகிறது. எதிரியின் பலம் குறையவும் இறுதிப் போராட்டத்திற்கான பயிற்சி பலம் மிக்கதாகவும் ஆகிறது. இந்த முதலாளி அரசாங்கத்தின் முதல் அடிக்கே அவன் விழுந்து விட்டால், சில நேரங்களில் சில காலடிச் சுவடுகள் அவன் பின்னோக்கி போய்விட்டான் என்றும் ஆகலாம்.

ஆவேசமும வீரமும் மட்டுமே போதாது. சிறிது பணமும் வேண்டும். அதற்கான வழி?

தலைமையின் எண்ணங்கள் அனைத்தும் கேசுவிற்கு நன்றாகத் தெரியும். பணமில்லாத காரணத்தால் அந்தப் போராட்டத்திற்கு உண்டாகப் போகிற தோல்வியின் அளவையும் கேசுவால் புரிந்து கொள்ள முடிந்தது. அதை அவனால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. எப்படியும் பணத்தை உண்டாக்கியே ஆக வேண்டும். தொழிலாளிகள் தோல்வியடையக் கூடாது.

தலைமை குழப்பத்தில் இருப்பதை கேசு பார்த்தான். ஒரு தர்மசங்கடமான நிலையில் அவர்கள் அமைதியாக இருக்கும் போது, போய்ச்சேர வேண்டிய இடத்தில் போய்ச் சேரட்டும் என்று அவர்கள் முடிவு செய்திருந்தபோது, ஒரு சரியான வழி அவனுடைய தொண்டைவரை வந்து நிற்கும். ஆனால், அது வெளியே வராது. அதைக் கூற அவனுக்கு பயமாக இருக்கும். அது சரியான பாதைதானா?

இரவும் பகலும் அவன் அதைப்பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தான். அதன் பல பக்கங்களையும் தான் படித்த புதிய தத்துவத்தின் வெளிச்சத்தில் அவன் அலசினான். என்ன காரணத்தால் அது சரியல்ல? மகத்தான் ஒரு காரியத்தைச் சாதிப்பதற்குத்தானே அது செய்யப்படுகிறது? அது மட்டுமல்ல- தனியார் சொத்துடைமையை ஒரு தொழிலாளி ஏற்றுக் கொள்ள வேண்டுமா? அந்தச் சிந்தனையில் பலப்பல பெரிய சட்டங்களும் தகர்ந்து கீழே விழுந்தன. அதையெல்லாம் ஒரு தொழிலாளி சிந்தித்துப் பார்க்க வேண்டும். முதலாளியின் விருப்பங்களைக் காப்பாற்றுவதற்காக ஏற்படுத்தப்பட்டிருக்கும் சட்டங்கள் அவை. அவற்றை நிராகரிப்பதே சரியானது. அந்தப் பணத்தை ஏன் கைப்பற்றக் கூடாது? திருட்டுக்கு கேவலமான பெயர் உண்டாக்குவதே ஒரு வகை தந்திரம்தானே?

எனினும்... எனினும்... அந்த 'எனினும்' ஒரு அங்குசத்தைப் போல... அந்தக் குழிக்குள் இருந்து காப்பாற்றப்பட அவனால் முடியாது. அந்த 'எனினும்' என்பதை இறுகப் பற்றிக் கொள்ள அவன் முயற்சித்தான். அந்த 'எனினும்' என்பதன் விளக்கத்திற்காக அவன் இப்படியும் அப்படியுமாக உழன்றான். ஆனாலும் அந்த 'எனினும்' அவனை விட்டுப் போகவில்லை.

மனதிற்குள் திருடும் எண்ணத்தை வைத்துக் கொண்டு அவன் பல வருடங்கள் வாழ்ந்திருக்கிறான். கொள்ளை அடிப்பதற்கான திட்டங்களையும் ஒவ்வொரு நாளும் அவன் போட்டிருக்கிறான். திருடிய பணத்தை என்ன செய்ய வேண்டுமென்று தெரியாமல் நீண்ட நாட்கள் கையிலேயே வைத்துக் கொண்டு இருந்துவிட்டு, பின்னர் அதை அவன் திருப்பிக் கொடுத்து விட்டு, திருடன் என்ற பெயரையும் தண்டனையையும் வாங்கியிருக்கிறான். அவனுக்குத் திருடும் எண்ணம் இருந்தது. அது மட்டுமல்ல- இல்லாதவனுக்குச் சொந்தமானதைக் கைப்பற்றி வைத்திருக்கும் இடத்திலிருந்து அதை எடுக்க வேண்டியது அவசியமான ஒன்று என்று கூட அவன் நினைத்திருந்தான். அதே நேரத்தில், அந்தப் பணத்தை என்ன செய்ய வேண்டும் என்று தெரியாததால் தானே அவன் திருடாமலே இருந்தான்! ஆமாம்... ஆமாம்... அந்த திருட்டால் பிச்சைக்காரர்கள் இல்லாத சூழ்நிலையை உண்டாக்க முடியாது என்ற விஷயம் அவனுக்கு நன்றாகத் தெரியும். அதுவும் கூட ஒரு காரணம்தான். பிச்சைக்காரர்கள் இருக்கக்கூடாது என்பதற்காக நடக்கும் அந்தப் போராட்டத்திற்காக அந்தப் பணத்தை ஏன் விநியோகிக்கக் கூடாது? அந்தப் பணத்தை விநியோகிக்கக் கூடிய வழியை அவன் தெரிந்து கொண்டான். அநியாயமாக அந்த சேமிப்புக் கிடங்குகளில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் சொத்துக்களை இனிமேலும் கைப்பற்றாமல் இருக்கலாமா?

அதற்குப் பிறகும் அந்த 'எனினும்' நீடிக்கவே செய்தது. அன்றும் அந்தப் பெரிய மாளிகையைச் சுற்றி நடந்து திரிவதைத் தவிர, உள்ளே நுழைய முடியாமல் அவனைச் செய்தது அந்த 'எனினும்' தானே?

அந்த 'எனினும்' என்ன? பழமையின் பிணம்தானே அந்த 'எனினும்'? பல தலைமுறைகளாக மனிதர்களை இறுகக் கட்டிப் போட்டு வைத்திருக்கும் நிறுவப்பட்ட அமைப்பின் பழைய ஒரு அம்சம்தானே அந்த 'எனினும்'? இப்படி தொழிலாளி பழமையின் எத்தனையெத்தனை அம்சங்களைத் தன்னுடன் இறுகக் கட்டி வைத்திருக்கிறான்! பக்தி, மரியாதை, நன்றி, எளிமை, விதி... இப்படிப் போகிறது அந்த நீண்ட பட்டியல்.

கேசு ஆழமாகச் சிந்தித்தான். அந்த 'எனினும்' நொறுங்கியது.

அது ஒரு அடர்த்தியான இருட்டுள்ள இரவாக இருந்தது. கேசு வெளியேறினான். அவன் உறுதியாக முடிவு செய்துவிட்டான். சங்கத் தலைமையிடம் அவன் கருத்து கேட்கவில்லை. ஒரு பெரிய தொகையை அவர்களுக்கு முன்னால் கொண்டு போய் வைக்க வேண்டும். அதுதான் அவன் முடிவு செய்திருக்கும் விஷயம்.

அவனுடைய வீட்டில் அந்தச் சிறு குழந்தை தனியாக உறங்கிக் கொண்டிருந்தது. சில நேரங்களில் அவன் விழித்தெழுந்து தன் மாமாவை அழைப்பான். அப்படி அழைக்கிறான் என்றால்...? பயந்து அழுவான். மீண்டும் உரத்த குரலில் அழைப்பான். அழைத்து அழைத்து மீண்டும் உறங்குவான். அந்த வீடு இருக்கும் பகுதியில் பெரிய நாய்கள் திரிகின்றன. பிணத்தைத் தின்னும் நாய்கள்! தட்டியை உயர்த்தி அவை உள்ளே நுழைந்து அவனைக் கடித்துத் தூக்கிக் கொண்டு போய்விட்டால் என்ன செய்வது? கேசு திடீரென்று ஒரு நிமிடம் நின்று விட்டான். இல்லை. ஒரு நாயால் தனியாக இன்று அவனைக் கடித்து தூக்கிக் கொண்டு போக முடியாது.

அந்தக் குழந்தையைப் பற்றி இந்த மாதிரி அவன் ஏன் சிந்திக்கிறான்? ஒருவேளை முன்பு மாதிரி அவன் இனிமேலும் அனாதையாக ஆகிவிடக்கூடாது என்பதற்காகவா?  இப்படிப் போகிற போக்கில் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால், அதற்குப் பிறகு மருமகன் அவனைப் பார்க்க முடியுமா? அந்தக் குழந்தை அதற்குப் பிறகு அந்தக் குடிசையில் இருந்து அழுது கொண்டே இருக்க வேண்டியதுதான்.


மறுநாள் நகரத் தெருக்களில் தன் மாமாவை அழைத்துக் கொண்டு நடந்து திரியலாம். பிறகு அவன் அழைப்பதை நிறுத்தி விடுவான். ஏதாவதொரு கடைத் திண்ணையில் போய் அவன் சுருண்டு படுப்பான். அவன் தேவைப்படுகிற காலம் வருவது வரையில் அவன் அப்படியே இருக்கட்டும்! ஒரு பெரிய வீட்டிற்கு பின்னால் போய் கேசு நின்றான்.

கேசு ஒரு சுமையுடன் திரும்பி வந்தான். அவனுடைய மருமகன் அந்தப் பாயில்தான் படுத்திருந்தான். அவன் நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தான். அவன் ஒரு கெட்ட கனவைக் கூட காணவில்லை. சிறிது சரிந்து படுத்திருப்பதைப் போல் இருந்தது. மூடப்பட்டிருந்த வேட்டி சிறிது நகர்ந்திருந்தது. சாய்ந்து படுத்த போது தன் மாமாவை அவன் அழைத்திருக்க வேண்டும்.

பொழுது விடிந்தது. அந்தச் சுமையைச் சேர்க்க வேண்டிய இடத்தில் கொண்டு போய்ச் சேர்க்க நேரம் இருப்பதாகத் தெரியவில்லை. அதை அங்கேயே வைக்கலாம் என்று பார்த்தால்- ஒரு வகை பயம் கேசுவை ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. இதற்கு முன்பும் அவன் திருடியிருக்கிறான். ஆனால், இன்று அவன் பதைபதைப்புடன் இருக்கிறான்; நடுங்குகிறான்.

அன்று இருந்ததைப்போல குழப்பமான ஒரு நாள் கேசுவிற்கு இருந்ததில்லை. ஒவ்வொரு நிமிடமும் அவன் நடுங்கிக் கொண்டிருந்தான். அதைச் செய்திருக்க வேண்டியதே இல்லை என்றுதான் திரும்பத் திரும்ப அவன் எண்ணினான். செய்துவிட்டான். இனி என்ன செய்வது?

தன்னைக் கண்டுபிடிப்பதற்கான ஆதாரங்கள் அங்கு இருக்கின்றன என்பதாக கேசு நினைத்தான். அங்கு அறிவுப்பூர்வமாக அந்தக் காரியத்தைச் செய்யவில்லை. அவனுடைய கால்கள் எப்படியெல்லாம் நடுங்கின! தட்டியும் முட்டியும் அவன் என்ன சத்தத்தையெல்லாம் உண்டாக்கினான்! ஒருவேளை, போலீஸ்காரர்கள் அவனுடைய காலடிச் சுவடுகளைப் பார்த்து வந்தாலும் வரலாம்.

குழந்தையைப் பற்றிய கவலை வேறு எப்போதும் இந்த அளவிற்கு பலமாக அவனுடைய மனதை ஆக்கிரமித்ததில்லை. அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டால்- அது நடக்கத்தான் போகிறது- அந்தக் குழந்தை என்ன செய்யும்? 'என்னை என்ன செய்யப் போறீங்க?’ என்று அவனுடைய பார்வை கேட்பதைப் போல இருந்தது. அவன் பதில் சொல்லியே ஆக வேண்டும். பரிகாரம் தேடியே ஆக வேண்டும்.

அவனை யாரிடம் ஒப்படைப்பது? ஒரு உயிரைக் கூட கேசுவால் நினைக்க முடியவில்லை. அவன் தேவைப்படும் காலம்- அது எப்போது வரும்? அந்தப் புளிய மரத்தடியில் அவனுக்கு ஒரு வளர்ப்புத்தாய் கிடைத்தாள். அவள் இப்போது உயிருடன் இருப்பாளா?

தான் எதற்காக அந்தக் குழந்தையை எடுத்துக் கொண்டு வந்து வளர்த்தோம் என்று அவன் சிந்தித்தான். எவ்வளவு பெரிய சுமையை அவன் தலையில் ஏற்றி வைத்திருக்கிறான்! தன்னுடைய கால்களும் கைகளும் கட்டப்பட்டிருக்கின்றன என்று அவன் நினைத்தான்.

குழந்தை அவனுடைய மடியுடன் ஒட்டிக் கிடந்தது. அழகாக சிரித்தது. அடடா! அப்படி ஒரு சிரிப்பு அந்த உதடுகளில் மலராமல் இருந்திருந்தால்...! அதைப் பார்க்காமல் இருந்திருந்தால்... அது இப்படி எந்தச்ச மயத்திலும் சிரித்திருக்கவே செய்யாது. தன்னைப் பிடித்துக் கொண்டு போனால், அந்தச் சிரிப்பு நிரந்தரமாக அந்த இளம் உதடுகளிலிருந்து காணாமல் போய்விடும்.

அந்தச் சிரிப்பு எந்தச் சமயத்திலும் மறையாமல் இருந்தால் எப்படி இருக்கும்? சிரிப்பு காணாமல் போய் வெளிறிப் போன முகம் எப்படி இருக்கும்? கேசுவால் அதை நினைக்க முடியவில்லை.

அவன் குழந்தையின் முகத்தைத் தன் முகத்துடன் சேர்த்து வைத்துக் கொண்டு, அவனுடைய காதுக்குள் மெதுவான குரலில் சொன்னான்:

"மாமா போயிட்டா, மருமகனே, நீ என்ன செய்வே?"

குழந்தை கொஞ்சியது.

"மாமா, உங்களை நான் விடமாட்டேன். நான் பிடிச்சிக்குவேன்."

அவன் தன்னுடைய மாமாவின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டான்.

ஒரு ஆழமான அணைப்பில் சிக்கிக் கொண்ட சில நிமிடங்கள் கடந்தன. ஒரு உறுதிமொழி கேசுவின் நாக்கு நுனி வரை வந்தது. ஆனால், அது வெளியே வரவில்லை. என்ன காரணமோ?

குழந்தை கேட்டது:

"மாமா, நீங்க போயிடுவீங்களா மாமா?"

அந்தக் கேள்வி அர்த்தம் நிறைந்ததாக இருந்தது. தெரிந்து கொள்வதற்காகக் கேட்கப்பட்ட கேள்வி அது. அவன் தன் மாமாவின் முகத்தையே பார்த்துக் கொண்டு மீண்டும் கேட்டான்:

"போயிடுவீங்களா மாமா?"

ஒரு வேளை தன் மாமாவைப் பிடித்து நிறுத்தக் கூடிய அளவிற்கு பலம் தன்னுடைய பிஞ்சுக் கைகளால் ஆன பிடிக்கு இல்லை என்று அவனுக்குத் தோன்றியிருக்கலாம். அவனுடைய சிறிய முகம் வாடுகிறது! அவன் இனியும் கேட்பான். அந்தக் கேள்விக்கு ஒரு சிறப்பு கூட இருக்கும். "என்னைத் தனியாக விட்டுட்டு..." என்று கூட அவன் சேர்த்துக் கொள்ளலாம். அப்படிப்பட்ட ஒரு கேள்வியைத் தாங்கும் சக்தி கேசுவிற்கு இல்லை.

மன அமைதியை இழந்த கேசு சொன்னான்:

"இல்ல... என் மருமகனை விட்டுட்டு மாமா போக மாட்டேன்."

அந்த வாக்குறுதி அடுத்தநிமிடம் அவனைப் பார்த்துக் கிண்டல் பண்ணுவதைப் போல இருந்தது. போக மாட்டானா? அதைத் தீர்மானிப்பது அவனா? சமையலறையில் அந்த மூட்டை இருக்கிறது. இதே வாக்குறுதியை முந்தைய நாள் கூறியிருந்தால் ஒருவேளை, அது சரியாகக் கூட இருந்திருக்கலாம். அவன் எதற்காகத் திருடச் சென்றான்? இனியும் அந்த வாக்குறுதிக்கு என்ன அர்த்தம் இருக்கிறது?

அந்தத் திருட்டுக்கு சங்கத் தலைமை ஒப்புதல் அளிக்கவில்லை. அவன் அதைச் செய்திருக்கக்கூடாது என்றார்கள். அந்தப் போராட்டத்தை நடத்தும் அரசியல் கட்சி அப்படிப்பட்ட ஒரு திட்டத்திற்கு அனுமதி வழங்கியிருக்கவில்லை. இந்தச் சூழ்நிலையில் அந்தச் செயல் போராட்டத்தைக் கெடுத்துவிடும். கேசுவின் நேர்மையைக் கேள்வி கேட்கவில்லையென்றாலும், அந்தச் செயல் வர்க்க உணர்வின் அடிப்படையில் செய்யப்பட்டது அல்ல என்று அவர்கள் சொன்னார்கள்.

அது சிறிதும் எதிர்பாராத ஒரு மிகப் பெரிய அடியாக கேசுவிற்கு இருந்தது. ஒரு பெரிய தவறைச் செய்து விட்டோம் என்ற சுமையையும் சுமக்க வேண்டிய நிலைமை கேசுவிற்கு உண்டானது.

மனமும் உடலும் தளர்ந்து போய் கேசு வீட்டிற்கு வந்தான். குழந்தை அந்தப் பழைய கேள்வியை அவனிடம் கேட்டான்:

"மாமா, போயிடுவீங்களா மாமா?"

அவனை விட்டுவிட்டு எங்கே மாமா போய்விடப் போகிறானோ என்ற எண்ணம் எப்படியோ அந்தப் பிஞ்சு மனதில் உண்டாகிவிட்டது. உறுதியான குரலில் கேசு சொன்னான்:

"இல்ல மருமகனே... இல்ல..."

அதற்குப் பிறகும் அந்தக் குழந்தைக்கு நம்பிக்கை வரவில்லை.

அந்த இரவிலும் அவன் மிகவும் கஷ்டமான ஒரு வேலையைச் செய்ய வேண்டியதிருந்தது. திருடிக்கொண்டு வந்த பணத்தைத் திரும்பவும் கொண்டுபோய் வைப்பது... அதை அவன் செய்தான்.


கேசுவிற்கு முன்னால் ஒரு கேள்வி எழுந்து நின்றது. அந்தப் பணக்காரன் அநியாயமாக ஏமாற்றி சேர்த்து வைத்துப் பாதுகாத்துக் கொண்டிருக்கும் பணத்தை என்ன காரணத்திற்காக இந்த விடுதலைப் போராட்டத்திற்குத் தரக்கூடாது? அவன் திருடியது தன்னுடைய சொந்தத் தேவைக்காக அல்ல. வர்க்க உணர்வு இல்லையென்றால், அந்தச் செயலை அவனைச் செய்யும்படி தூண்டியது வேறு என்ன? கேசுவிற்குப் புரியவில்லை. தலைவர்கள் கூறுவது சரியாகத்தான் இருக்க வேண்டும்.

கெஞ்சுவதுதான் அவனுடைய குணமாக இருந்தது. அந்த வாழ்க்கைப் போராட்டத்திற்கு இடையில் அவன் தனியார் சொத்துடைமையை வெறுத்தான். அந்த வெறுப்பிலிருந்து உருவான திருட வேண்டும் என்ற எண்ணம் ஒருவேளை தவறானதாக இருக்கலாம். தன்னுடைய திருட்டு மீது கொண்டிருக்கும் ஆசை ஒரு குற்றமான விஷயமாக இருக்கலாம்.

இந்த விடுதலைப் போராட்டத்தில் தான் செய்ய வேண்டிய பங்கு என்ன? கேசுவிற்கு அது புரியவில்லை. அவனால் என்ன செய்ய முடியும்? இந்தப் பேராட்டத்திற்காக உயிரை விடுவதா? பிறகு அவனுடைய மருமகனுக்கு யார் இருக்கிறார்கள்? அது மட்டுமல்ல- எதற்காக இறக்க வேண்டும்?

சங்கத்தின் தலைமையில் நடந்த அந்த ஊர்வலம் போய்க் கொண்டிருப்பதன் ஆரவாரம் தூரத்தில் கேட்டது. வரலாறு படைக்கும் விடுதலைப் போராட்டத்தின் எழுச்சி அது! பிச்சைக்காரர்கள் உண்டாகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் முயற்சிக்கு முன்னோடியாக வைக்கப்படும் கால் வைப்பு அது!

அந்தச் சிறிய குடிசையில் வெளியேற்றப்பட்ட ஒரு போர் வீரனைப் போல கேசு உட்கார்ந்திருந்தான். அந்தக் குழந்தை அவனுடைய மடியில் படுததுக் கொண்டு ஒரு ஆயிரம் கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருந்தது. அந்தக் கேள்விகளுக்கு பதில் கூற கேசுவால் முடியவில்லை. கேள்விகள் தொடர்ந்து கொண்டிருந்தன. என்ன தொல்லை அது! தன்னைப் பிணித்திருந்த ஒரு சங்கிலியைப் போல அவன் அந்தக் குழந்தையை தன்னிடமிருந்து அகற்றினான். அது தூரத்தில் போய் விழுந்தது.

மிகவும் பரிதாபமாக அது சத்தம் போட்டு அழுதது. கேசு அதிர்ந்து போய் விட்டான். அன்றுதான் முதல் தடவையாக அவன் தன்னுடைய மருமகனை அழ வைக்கிறான். அந்த அழுகையில் முன்பு எங்கோ கேட்டிருக்கும் பல சத்தங்கள் கலந்திருப்பதாக அவன் உணர்ந்தான். பல வருடங்களுக்கு முன்னாலிருந்த வாழ்க்கை அனுபவங்களைப் பற்றிய நினைவுகளில் அவன் மூழ்கிவிட்டான். அந்தக் குழந்தையின் அழுகையில் தன்னுடைய தாத்தா, பாட்டி, சகோதரி ஆகியோரின் சத்தங்களையும் அவன் கேட்டான். அந்தக் குழந்தை அவனுடைய ரத்தமும் சதையுமா என்ன?

தூரத்தில் போய் விழுந்த குழந்தை மீண்டும் அவனை நெருங்கி வந்தது. பிறகு அது எங்கே போகும்?

தேம்பித் தேம்பி அழுதவாறு கேசு அந்தக் குழந்தையை தன் மார்போடு சேர்த்து வைத்து அணைத்துக் கொண்டான்.

அந்த ஊர்வலம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தது. அந்த ஊர்வலத்தில் சுவடு தவறாமல் அவனால் நடக்க முடியாது. அவன் வழிவிட்டு ஒதுங்கிவிடுவான். என்ன இருந்தாலும் அவன் பிச்சைக்காரன்தானே! யாசித்து வாழ்ந்தவன் தானே!

அந்தப் போராட்டத்தின் முன் வரிசையில் சிவப்பு நிறக் கொடியைப் பிடித்து அவனால் போக முடிவது எப்போது?

குழந்தை கண்ணீருக்கு மத்தியில் கேட்டது:

"மாமா, என்னை விட்டுட்டுப் போயிடுவீங்களா?"

கேசு அதற்குப் பதில் சொல்லவில்லை. தொடர்ந்து கேள்வி கேட்க அந்தக் குழந்தைக்கு தைரியமும் இல்லை; அது பயந்தது. 

"இந்தக் குழந்தையை வாங்க யாரும் இல்லையா?"

இதைத்தான் கேசு சிந்தித்தான். தன் சகோதரியின் உருவம் அவனுடைய மனக் கண்களுக்கு முன்னால் வந்து நின்றது.

"யாரும் இல்லையா?"

தன்னையே அறியாமல் அவன் உரத்த குரலில் கேட்டான்.

அந்த ஊர்வலம் அவனுடைய வீட்டுப் படியைத் தாண்டிச் சென்றது.

'இனியும் அந்த ஊர்வலம் வராதா?'

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.