Logo

மழை நாளில் குடையானாய்!

Category: புதினம்
Published Date
Written by சித்ரலேகா
Hits: 7157
mazhai-naalil-kudaiyaanai

முதல் இரவு. அர்ச்சனாவிற்கும், தியாகுவிற்கும் முதல் இரவு. பளபளவென்று பளிச்சிடும் நிறத்தில் முகம். 'தளதள’ என்று மின்னும் மினுமினுப்பான தேகம். கவிதை பேசும் கண்கள். தேனூறும் இதழ்கள். வெனிலா ஐஸ்க்ரீமைக் குழைத்துச் செய்தது போன்ற கன்னக்கதுப்புகள். நெற்றியில் விழுந்த சுருட்டையான முடிக்கற்றைகள், அவளது அழகிற்கு மேலும் அழகு சேர்த்தது. சங்குக் கழுத்தும், எடுப்பான மார்புகளும், சின்னஞ்சிறிய இடுப்பும் கொண்ட அர்ச்சனா, தகதகக்கும் பட்டுப் புடவையிலும், பொன் ஒளிவீசும் நகைகளிலும் கந்தர்வக் கன்னியாய் கவர்ந்திழுத்தாள்.

பால் நிறைந்த வெள்ளி டம்ளர் கையிலிருக்க, மெல்ல அடி எடுத்து வைத்தாள் அர்ச்சனா. கட்டிலில் சாய்ந்து உட்கார்ந்து, பிரமித்துப்போன மனதுடன் அவளது அழகை ரசித்துக் கொண்டிருந்தான் தியாகு.

தியாகு, மிக அழகிய ஆண்மகன் இல்லை எனினும் ஆஜானுபாகுவான உடல்வாகு, அவனுக்கு ஒரு சிறப்புத் தோற்றத்தை அளித்திருந்தது.

அர்ச்சனா, கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றவள். நடனம், பாடல், படிப்பு அத்தனையிலும் தேர்ந்தவள். ஆண், பெண் இருவரும் இணைந்து படிக்கும் கல்லூரியில் படித்தாலும், ஆண் மாணவர்களுடன் சகஜமாகப் பழகி வந்தாலும், நட்பு எனும் எல்லைக்கோட்டைத் தாண்டாதவள். அவளது நல்ல குணநலன்கள், பழக்க வழக்கங்கள் ஆகியவை அவள் மீது மரியாதையை உருவாக்கி இருந்தது. பேரழகியாக இருந்தபோதிலும் ஆணவமோ, அகம்பாவமோ இல்லாமல் பணிவு, அன்பு, அடக்கம் ஆகிய நற்பண்புகள் கொண்ட புதுமைப் பெண்ணாக மிளிர்ந்தாள் அர்ச்சனா.

அர்ச்சனாவின் அப்பா கனகசபை, நடத்தி வந்த நடுத்தரமான ஜவுளிக்கடைக்குச் சென்று அவருக்கு உதவியாக கணக்கு வேலைகள், ஸ்டாக் பற்றிய வேலைகள் ஆகியவற்றை திறம்படச் செய்து வந்தாள்.

கல்யாணம் பேசும் பொழுது, தியாகுவின் அம்மா கமலா, 'பெண், வேலைக்குப் போகக் கூடாது என்று நிபந்தனை விதித்தாள். அர்ச்சனா யோசித்தாள். கனகசபையும் யோசித்தார்.

தியாகு ஒரே பையன். தியாகுவின் அப்பா முருகேசனுக்கு பூர்வீகமான, சொந்தமான வசதியான வீடு இருந்தது. இருபது வருடங்களுக்கு முன், முருகேசன் துவங்கிய சைவ சிற்றுண்டி உணவகம் சிறந்த உணவகம் என்ற பெயருடன் ஏராளமான லாபத்தையும் பெற்றுத் தந்தது.

அப்பாவின் உணவகத்தை தற்சமயம், திறம்பட நிர்வகித்து வந்தான் தியாகு. இவற்றையெல்லாம் யோசித்து, கூட்டிக்கழித்துப் பார்த்த கனகசபை, தியாகுவின் அம்மா விதித்த நிபந்தனைக்கு சம்மதித்தார். அர்ச்சனாவையும் சமாதானம் செய்து சம்மதிக்க வைத்தார்.

ஒரே முறை, முருகேசனையும், அவரது மனைவி கமலா மற்றும் தியாகுவை பார்த்துப் பேசியதில், கமலா விதித்த நிபந்தனை தவிர வேறு குறைகள் ஏதும் இல்லை எனப் புரிந்துக் கொண்டார் கனகசபை. எனவே முதல் முறை நடத்திய பேச்சு வார்த்தையிலேயே அர்ச்சனா, தியாகு இருவரது திருமணம் உறுதி செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து நிச்சயதார்த்தமும், திருமணமும் மூன்று வார காலத்திற்குள் நடந்தேறி, இதோ மணமக்கள் முதல் இரவு அறையில்.

வைத்த கண்ணை எடுக்காமல் அர்ச்சனாவையே பார்த்துக் கொண்டிருந்தான் தியாகு.    

கையிலிருந்த பால் டம்ளரை தியாகுவிடம் நீட்டினாள் அர்ச்சனா.

"எதுக்கு இந்த ஃபார்மாலிட்டிஸெல்லாம்? பால் டம்ளரை அப்பிடி வை" என்று கட்டிலுடன் இணைக்கப்பட்ட சிறிய மேஜையைக் காண்பித்தான் தியாகு. அவன் சொன்னபடி பால் டம்ளரை மேஜை மேல் வைத்தாள் அர்ச்சனா.

"இங்கே வந்து உட்கார்."

அர்ச்சனா, அவன் சாய்ந்து உட்கார்ந்திருந்த கட்டிலின் விளிம்பில் தயக்கத்துடன் உட்கார்ந்தாள். உட்கார்ந்த அவளைத் தன் மார்பின் மீது சாய்த்துக் கொண்டான் தியாகு. அர்ச்சனாவின் உள்ளம் படபடத்தது. வெட்க உணர்வில் அவன் மீதிருந்து எழ முயற்சித்த அவளை மீண்டும் இழுத்துத் தன் மீது சாய்த்துக் கொண்டான். அவள் அணிந்திருந்த நகைகள் சரிந்தன. புடவை கசங்கியது.

"நகையெல்லாம் கழற்றி வச்சுடறேனே. புடவை கூட கசங்குது..."

"புடவை கசங்கறதுக்குதான் முதல் இரவு..." அவளை இறுக கட்டிப் பிடித்தான்.

இறுகப்பிடித்த அவனது பிடியைத் தளர்த்திக் கொள்ள முயற்சித்த அர்ச்சனா, தோல்வி அடைந்தாள். தயக்கமாய் பேச ஆரம்பித்தவள், கொஞ்சம் தைரியமாகப் பேசினாள்.

"கொஞ்ச நேரம் பேசிக்கிட்டிருக்கலாமே..."

"கொஞ்சறதுக்கு எதுக்கு பேசணும்?" அவளைப் பேச விடாமல் அவளது இதழ்களில் முத்தமிட்டான்.

அவனது ஸ்பரிஸத்தாலோ, இதழ் முத்தத்தாலோ எந்தவித ஈர்ப்பும் அடையாத அர்ச்சனாவின் மனம் துவண்டது.

'தன் பிறந்த வீட்டுப் பெருமை, பள்ளிக்கூடத்தில் ஏற்பட்ட அனுபவங்கள், கல்லூரி கலாட்டாக்கள், தன் அப்பாவின் ஜவுளிக்கடை நிர்வாகத்தில் ஈடுபட்ட அனுபவம், சினிமா, டி.வி., பிடித்த நடிகர், நடிகையர், தியாகுவிற்குப் பிடித்த உணவு, தன் பாடலுக்கும், ஆடலுக்கும் கிடைத்த பாராட்டுகள், பரிசுகள், இப்படி எத்தனையோ கதைகள் பேச வேண்டும்’ என்று அளவில்லாத ஆசையுடன் காத்திருந்தவள், தியாகு இப்படி எதுவுமே பேசாமல் மோகத்துடன் தன் தேகத்தில் விளையாடுவதை உணர்ந்து ஏமாற்றத்தில் உள்ளம் சிதைந்தாள்.

முதல் முதலாக ஓர் ஆடவனின் ஸ்பரிசம் ஏற்படுத்தும் எவ்விதக் கிளர்ச்சியும் இன்றி உணர்ச்சியற்ற உடலை மட்டுமே அவனுக்குக் கொடுத்தாள். 'தாலி கட்டிய கணவன் என்றாலும் மனைவியின் மனம் என்னும் வேலியை மீறி இப்படி அவளது உடம்பை ஆக்கிரமிப்பது பண்பாடான செயல் அல்லவே...‘ அர்ச்சனாவின் இதயத்திற்குள் எழுந்த பற்பல சிந்தனைகள் பற்றி ஏதும் அறியாத, அறிந்துக் கொள்ளவும் விரும்பாத தியாகு, அவளது உடைகளை அகற்றுவதிலும், தன் இன்ப உணர்வைத் தீர்த்துக் கொள்வதிலுமே குறியாக இருந்தான்.

மனவேதனையோடு, உடல் வலியும் சேர்ந்துக் கொள்ள, வாழ்வின் பொன் நாளான முதல் இரவில் சோர்ந்து போனாள். பெண்ணுக்கு சுதந்திரம் கொடுத்து வளர்க்க வேண்டும் என்று அவளை, கனகசபை புதுமைப் பெண்ணாக வளர்த்தார். கட்டுப்பெட்டியாக இருக்கும்படி கட்டுப்படுத்தவில்லை. 'பெண்’ என்பவள் உள்ளத்தில் நேர்மையையும், கற்பை உயிராகவும் மதித்து வாழ வேண்டும் என்று அவளது அப்பாவிடம் கற்றுக் கொண்ட பாடம், அவள் ரத்தத்தில் கலந்திருந்தது.

சிநேகிதிகள், சிநேகிதர்கள் என்று கல்லூரியில் உடன் படித்த மாணவ, மாணவியருடன் சினிமா, பிக்னிக், பார்ட்டிகள் என்று அனைத்து இடங்களுக்கும் போய் வருவாள். ஆனால் ஆண், பெண் உட்பட பலபேர் கூடும் அந்த சூழ்நிலையிலும் ஒரு வரைமுறையோடு இருந்துக் கொள்வாள்.

'நீ ரொம்ப அழகா இருக்க அர்ச்சனா...’ என்று தத்துபித்தென்று உளறும் நபர்களிடம் ஒரு 'தாங்க்யூ’ சொல்லி, அதற்கு மேல் அவர்களை ஏதும் பேச விடாமல் நாசூக்காய் அவர்களிடமிருந்து ஒதுங்கிக் கொள்வாள்.


நண்பர்கள் மற்றும் சிநேகிதிகளுடன் மனம்விட்டுப் பேசுவாள். அரட்டை அடிப்பாள். அவளது பேச்சும், சிரிப்பொலியும் உடன் பழகுபவர்களுக்கு ஊக்கமும், ஊட்டமும் தரும் 'டானிக்’ ஆக இருக்கும். இங்கே அவளது பேச்சுக்கே வாய்ப்பளிக்காமல், வாளிப்பான அவளது உடலின் செழுமையைக் கையாண்டு இன்பம் அடைந்துக் கொண்டிருந்தான் தியாகு.

'பெண்’ என்பவள் ஒரு போகப்பொருள் என்ற கருத்து இன்றைய நவீன யுகத்திலுமா? அடக்கி ஆள்பவன் ஆண். அடங்கி வாழ்பவள் பெண் எனும் சித்தாந்தம், படித்த தியாகுவிற்குமா? இன்று மட்டும்தான் இப்படியா…? இனி என்றும் இப்படியேதானா? ஐய்யோ... அப்படியானால் என் மண வாழ்க்கை? மணமே இல்லாத கனகாம்பரம் பூ போல வெளி அழகு மட்டும்தானா? தன் இச்சை நிறைவேறியதும் மறுபுறம் திரும்பிப் படுத்துத் தூங்கிக் கொண்டிருந்த தியாகுவின் முதுகுப்பக்கம் வெறித்துப் பார்த்தபடி யோசித்துக் கொண்டிருந்த அர்ச்சனா, பின் இரவில் தூங்கி, விடியற்காலை விழிப்பு ஏற்பட்டு எழுந்தாள்.

இரவு படுத்திருந்த அதே கோலத்தில் தூங்கிக் கொண்டிருந்தான் தியாகு. படுக்கை அறையில் இருந்த குளியலறைக்குச் சென்றாள் அர்ச்சனா. உடம்பு வலி தீர சுடு தண்ணீரில் குளித்தாள். அவள் தலைக்கு ஊற்றிக் குளித்த தண்ணீருடன் சேர்ந்து அவளது கண்ணீரும் வழிந்தது. மனதைத் தேற்றிக் கொண்டு, குளியலை முடித்த அர்ச்சனா, அழகிய கத்தரிப்பூ நிறத்தில் க்ரேப் சில்க் சேலையும், அதற்கு ஏற்ற வண்ணத்தில் ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு அறையை விட்டு வெளியே வந்தாள். கீழே இறங்கினாள்.

"ஏம்மா இத்தனை சீக்கிரமா எழுந்து குளிச்சிருக்க? இன்னும் கொஞ்ச நேரம் தூங்கியிருக்கலாமே?" புன்னகையுடன் கேட்ட மாமியார் கமலாவிற்குத் தன் புன்னகையையே பதிலாகக் கொடுத்த அர்ச்சனா, கேட்டாள்.

"முதல்ல என்ன செய்யணும் அத்தை? காபி போடவா?"

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ பூஜை ரூம்ல போய் விளக்கு ஏத்தி சாமி கும்பிட்டுட்டு வாம்மா" பூஜை அறையைக் காட்டினாள் கமலா.

"சரி அத்தை."

பூஜை அறைக்குச் சென்ற அர்ச்சனா, அங்கே இருந்த வெள்ளி விளக்கைத் துடைத்தாள். முன்தினம் சாமி படங்களுக்குப் போடப்பட்டிருந்த வாடிய பூக்களை எடுத்தாள். புதிய பூக்களைப் போட்டாள். விளக்கின் அருகே இருந்த 'இதயம் கவரில் ஜோதிகாவின் அழகிய சிரித்த முகம்! கவரைக் கத்தரித்து அதிலிருந்த நல்லெண்ணெய்யை விளக்கில் ஊற்றினாள். பழைய திரியை எடுத்துவிட்டு, புதிய திரியைப் போட்டாள்.       

'இந்தத் திரி போல என் வாழ்வும் கருகி விட்டதா? அல்லது புதிய திரியை ஏற்றும்பொழுது கிடைக்கும் புத்தொளி போல் ஒளி விடுமா? பொறுத்திருந்து பார்ப்போம்’ நொறுங்கிப் போயிருந்த உள்ளத்திற்கு, பூஜையின் மூலம் ஆறுதல் தேடினாள். இறையருளை வேண்டினாள்.

பூஜை அறையை விட்டு வெளியே வந்தாள். சமையலறைக்குச் சென்றாள். கமலா இறக்கி வைத்திருந்த டிகாஷனில் காபி கலந்தாள்.

"அத்தை காபி கப்பெல்லாம் எங்கே இருக்கு?"

"இதோ இந்த ஷெல்ப்பில் இருக்கும்மா."

கமலா சுட்டிக்காட்டிய ஷெல்ஃபில் இருந்து அழகான பீங்கான் காபி கப்களை எடுத்து காபியை ஊற்றினாள். ஒன்றை எடுத்து கமலாவிடம் கொடுத்தாள்.

"மாமா எங்கே இருக்கார் அத்தை?"

"அவர் தோட்டத்துல இருக்கார்மா."

தோட்டத்திற்கு சென்று முருகேசனுக்குக் காபியைக் கொடுத்தாள். கமலாவைப் போல அவரும் அர்ச்சனாவைப் பார்த்து அன்பாக புன்னகைத்தார். 'தாங்க்ஸ்’ சொல்லியபடி காபி கப்பை வாங்கிக் கொண்டார். அங்கிருந்து நகர்ந்து வீட்டின் வரவேற்பறைக்கு வந்தாள் அர்ச்சனா.

"இதை தியாகுவுக்கு குடும்மா.  'பெட் காபி’ குடிச்சுட்டுதான் படுக்கையை விட்டே எழுந்திருப்பான்." காபியையும், அன்றைய பேப்பரையும் கொடுத்தாள் கமலா.

"அப்போ... பல் விளக்கறது?"

"அதெல்லாம் காஃபி குடிச்சுக்கிட்டே பேப்பர் படிச்சு முடிச்சு, நிதானமாத்தான்..."

'ஐய்ய... பல் விளக்காம காஃபி குடிக்கறதா?’ குமட்டிக் கொண்டு வந்தது அர்ச்சனாவிற்கு.

"சரி அத்தை. குடுங்க." காபி கப்பை வாங்கிக் கொண்டாள்.

'இந்தக் குடும்பத்துல சகிச்சுக்க வேண்டிய விஷயங்கள்ல இது ரெண்டாவது போலிருக்கு’ நினைத்தபடியே படுக்கை அறைக்குச் சென்றாள்.

தன் அழகினால் ஏற்பட்ட ஆசையின் விளைவால் முதல் இரவில் அப்படி நடந்து கொண்ட தியாகு, 'இன்று தன்னுடன் நிறைய பேசுவான், அன்பு மொழிகள் கூறுவான்’ என்று எதிர்பார்த்தது அவள் மனம்.

தூக்கக் கலக்கம் மாறாத முகத்துடன், கண்களைக் கசக்கியபடி அப்போதுதான் எழுந்திருந்தான் தியாகு.

"குட் மார்னிங்..."

"ம்.. ம்.." என்றான் தியாகு.

"இந்தாங்க காபி."

காபியை பெற்றுக் கொண்ட தியாகு, அவளது கையிலிருந்த பேப்பரை வாங்கினான். காபி குடித்தபடியே பேப்பரில் மூழ்கினான்.

'இவர்தான் பேச மாட்டேங்கிறார். நான் பேசலாமா? என்ன ஈகோ வேண்டியிருக்கு’ நினைத்த அர்ச்சனா, அவனருகே உட்கார்ந்தாள்.

"தியாகு..."

"என்ன நீ? புருஷன்ங்கற மரியாதை இல்லாம பேரைச் சொல்லி கூப்பிடற?" திடுக்கிட்டாள் அர்ச்சனா. இந்த மாடர்ன் யுகத்தில் கணவனின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுவதை அவன் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்பது அவள் எதிர்பாராதது.

"ஸ... ஸாரிங்க. உங்களுக்குப் பிடிக்கலைன்னா பேர் சொல்லிக் கூப்பிடாம இருந்துக்கறேன். காலையில பல் விளக்காம காபி குடிக்கறது உடம்புக்கு ரொம்ப கெடுதல்ங்க..."

"இது என்னோட பதினெட்டு வருஷப் பழக்கம். ஒரே நாள்ல உனக்காக இதை மாத்திக்க முடியாது..."

'ஹும்... எனக்காகவா சொல்றேன்?’ மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"மாற வேண்டாம். என் கூட கொஞ்சம் பேசுங்களேன்...."

"ஆமா. நான் கூட உன்கிட்ட பேசணும்னு நினைச்சிருந்தேன்..."

அர்ச்சனா சந்தோஷப்பட்டாள். 'ஒரே நாளில் தியாகுவைப் பற்றி தவறாக நினைச்சுட்டேனா.’ என்று நினைத்தவள், "என்ன பேசணுமோ பேசுங்க. அதுக்காகத்தான் காத்துக்கிட்டிருக்கேன்."

"நீ கோ-எட் காலேஜ்லதானே படிச்ச? அப்போ நீ யாரையாவது லவ் பண்ணி இருக்கியா?"

'இதுதான் புது மனைவி கிட்ட பேச நினைக்கற விஷயமா?’ மறுபடியும் மனதின் குரல்.

"ம்... நான் யாரையும் லவ் பண்ணலை. என்னை 'லவ்’ பண்றதா சில பையன்க பெனாத்தி இருக்காங்க. ஒரே ஒரு பையன். பேர் ப்ரவீன். அவன் எனக்கு லவ் லெட்டர் குடுத்தான்..."

தியாகுவின் முகத்தில் ஏற்பட்ட கோபத்தினால் அவனது நரம்புகள் புடைத்தன. முகபாவத்தை மறைத்து மேலும் கேள்விகள் கேட்டான்.

"யார் அவன்?"

"என் அண்ணனோட ஃப்ரெண்டு."

"லெட்டர் முழுசும் நீ படிச்சியா?"

"ஆமா. படிச்சேன்."

"அப்புறம்?"

கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தபொழுது ப்ரவீன் தனக்கு கடிதம் கொடுத்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தாள்.


2

'சப்வே ரெஸ்டாரண்ட்! வெளிநாட்டு நிறுவனத்தின் ஒருங்கிணைப்புடன் அமைந்திருந்த அந்த 'சப்-வே ரெஸ்டாரண்ட், மிக மிக அழகாகவும், நேர்த்தியாகவும் நிர்மாணிக்கப்பட்டிருந்தது. அதன் உள் அலங்காரம் உள்ளத்தைக் கொள்ளை கொண்டது. சுத்தத்திற்கு முதலிடம் கொடுத்து பராமரிக்கப்பட்டு வந்த அந்த உணவகத்திற்கு உற்சாகமாய் வந்த வண்ணமிருந்தனர் இளைஞர் கூட்டம்.  உணவுக்கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கென்று பிரத்தியேகமாய் தயாரிக்கப்படும் அதிக கலோரி இல்லாத உணவுகளை நாடுபவர்களுக்கு வரப்பிரசாதம் அந்த 'சப்-வே’. வெளிநாட்டினர்களும் மிகவும் விரும்பி வருவதுண்டு. அவர்கள் கண்டிப்பாக பின்பற்றும் சுத்தம், சுகாதாரம் இவற்றை மனதில் கொண்டு பரிமாறும் நபர்களுக்கு 'கையுறை அணிந்துதான் பரிமாற வேண்டும்’ என்று கட்டளை இடப்பட்டிருந்தது. அவர்களும் அதை நேர்மையாக கடைப்பிடித்து வந்தனர். இதன் காரணமாகவும், அங்கே வழங்கப்படும் உணவு வகைகளின் தரம் காரணமாகவும், அங்கு வந்து உணவு அருந்தும் கூட்டம் பெருகியது. இளைய தலைமுறையினரின் மிக விருப்பத்திற்குரிய 'சப்-வே’ முதியோருக்கும், ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு உள்ளவர்களுக்கும் ஏற்ற உணவு வகைகளை அதன் சுவை குறையாமல் வழங்கி வருவதை அதன் சிறப்பம்சமாகக் கொண்டிருந்தது.

அர்ச்சனா, தன் சிநேகிதிகளுடன் 'சப்-வே’ ரெஸ்டாரண்ட்டில் உட்கார்ந்து அரட்டை அடித்துக் கொண்டிருந்தாள். அந்த அரட்டை கூட பயனுள்ள விஷயம் பற்றியதாக இருந்தது.

"அர்ச்சனா, இந்த மாசம் நம்ம க்ரூப்ல நாலு பேருக்கு பர்த்டே வருது. நாலு பேரோட பிறந்தநாள் செலவுக்குரிய தொகையில சிவானந்தா ஆசிரமம் அல்லது 'விஸ்ராந்தி போய் அங்கே இருக்கறவங்களுக்கு என்ன உதவி வேணும்னு கேட்டு செஞ்சுடலாமா?" ரமா கேட்டாள்.

"ஓ.கே. என்னிக்குப் போறதுன்னு முடிவு பண்ணுங்க. நான் அப்பாகிட்ட சொல்லி கார் எடுத்திட்டு வந்துடறேன். பணமெல்லாம் ஷேர் பண்ணிக்கலாம்" சொல்லி முடித்த அர்ச்சனா, எழுந்தாள். டாய்லெட் போகும் வழிக்குச் சென்றாள். அங்கே அவளை வழி மறித்தான் ப்ரவீன்.

"ஹாய் ப்ரவீன். இங்கேயா இருக்க? உன்னைப் பார்க்கவே இல்லயே?"

"நீங்க எல்லாரும் இந்த ரெஸ்டாரண்டுக்கு உள்ளே நுழையறதை பார்த்தேன். உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்... அதான் வந்தேன்...."

"என்ன இவ்வளவு தயக்கம்? சொல்லு ப்ரவீன்..."

"அது... வந்து..." திடீரென தன் பாண்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு ஒரு கவரை எடுத்தான். அர்ச்சனாவிடம் கொடுத்தான்.

"என்ன இது?"

"லெட்டர். உனக்குத்தான் அர்ச்சனா..."

ஆச்சர்யப்பட்ட அர்ச்சனா, கடிதத்தை வாங்கினாள். உடனே படித்தாள்.

அது ப்ரவீன், அர்ச்சனாவிற்கு எழுதிய காதல் கடிதம்.

படித்து முடித்த அர்ச்சனா முதலில் கோபப்பட்டாள். சில விநாடிகளில் தன்னை சுதாரித்துக் கொண்டாள். ப்ரவீனை தீர்க்கமான ஒரு பார்வை பார்த்தாள்.

"ப்ரவீன்... இந்த வயசுல ஏற்படற பருவக் கோளாறுகள்ல ஒண்ணுதான் உன்னோட இந்த லெட்டர். நீ என் அண்ணனோட ஃப்ரெண்டு. நானும் ஃப்ரெண்ட்லியாத்தான் பழகறேன். உங்க வீட்ல உன்னை நம்பித்தான் மூணு பேர் காத்துக்கிட்டிருக்காங்க. ஐ மீன்... உன் படிப்பையும், அதனால கிடைக்கப்போற வேலையையும், அதன்மூலம் நீ சம்பாதிக்கப் போற வருமானத்தையும் எதிர்பார்த்து உன் அம்மா, அப்பா, தங்கச்சி மூணு பேரும் காத்திருக்காங்க. நீ நிறைய படிக்கணும். முன்னேறணும். உயர்ந்த உத்யோகத்துல சேரணும். இப்போதைக்கு உன் குடும்பத்தை பத்தி மட்டுமே உன் ஞாபகத்துல இருக்கணும். வேற நினைவுகள் எது தோணினாலும் உடனே அழிச்சுடணும். உன் படிப்பு செலவுக்காக உன் அம்மா, அப்பா செய்ற தியாகங்கள் பத்தி நான் சொல்லித்தான் நீ தெரிஞ்சுக்கணுமா? ஐ அம் ஸாரி. நான் இப்பிடி பேசறேன்னு மனசு சங்கடப்படாதே. நான் சொல்றதெல்லாம் வாழ்க்கையோட யதார்த்தங்கள். நிஜங்கள். நிஜங்களோட நம்மை இணைச்சுக்கிட்டாதான் எதிர்காலம் ஒளிமயமா இருக்கும். நிழலா தெரியற பிம்பங்கள் மாயையை உண்டாக்கும். நீ உன் சொந்தக்கால்ல நின்னு உன் தங்கச்சிக்கு பந்தக்கால் போட்டு கல்யாணம் பண்ணனும். இந்த வயசுலயும் உழைச்சு ஓடா தேயற உன் அம்மா, அப்பாவோட கஷ்டத்தை மறந்துடாத. உன்னைப் பெத்தவங்களை உட்கார வச்சு சுகமா பார்த்துக்க, நீ இன்னும் நிறைய உழைக்கணும். சரியா?..."

பிரமித்துப் போய் நின்றான் ப்ரவீன். 'தன்னை விட சிறிய பெண், எத்தனை அர்த்தத்தோடு பேசறா? வசதியான வீட்டுப் பொண்ணா இருந்தாலும் வாழ்க்கையின் கஷ்டங்களைப் புரிஞ்சு வச்சுக்கிட்டு, தெளிவான சிந்தனையில் இருக்கா. இவ சொல்ற மாதிரி நான், இனி படிப்பு, உழைப்பு, அதன் மூலம் உயர்வுன்னு ஒரே மூச்சா இருக்கப் போறேன்...’

"என்ன ப்ரவீன்? நான் கேக்கறேன். என்ன யோசிக்கற?"

"அர்ச்சனா... எனக்கு புத்தி வந்துருச்சு. உன்னோட வார்த்தைகள் வெறும் வார்த்தைகள் இல்ல. வேதங்கள். ஐ ஆம் ஸாரி. இனிமே நீ சொன்ன மாதிரி என்னோட குடும்பத்தின் நலம்தான் என் லட்சியம். இது சத்தியம்" அர்ச்சனாவிடமிருந்த கடிதத்தை வாங்கிக் கிழித்தான்.

"தாங்க்ஸ் ப்ரவீன். நீ நல்லா வரணும். நான் உனக்கு எப்பவுமே ஃப்ரெண்டுதான்."

"தாங்க்ஸ் அர்ச்சனா. நான் கிளம்பறேன்" ப்ரவீன் வெளியேறினான்.

அர்ச்சனாவைத் தேடி ரமா வந்தாள்.

"டாய்லெட்டுக்குப் போறேன்னு சொல்லிட்டு என்னடி இவ்வளவு நேரம்? வா போலாம்."

சிநேகிதிகள் புடை சூழ அர்ச்சனா கிளம்பினாள்.

அன்று நடந்ததை இன்று, தன் கணவன் தியாகுவிடம் விளக்கமாக எடுத்துக் கூறினாள் அர்ச்சனா.

"நம்ப முடியவில்லையே. உருக உருக காதல் கடிதம் குடுத்தானாம். அதைப் படிச்சுட்டு அவனுக்குப் பாடம் நடத்தினியாம். அவனும் அதைக் கேட்டுத் திருந்தினானாம். நீ என்ன பெரிய சீர்திருத்தவாதியா? ஒரு பத்து நிமிஷ போதனை கேட்டு அவன் மனசு மாறிட்டான்னு சொல்றது நம்பற மாதிரி இல்லையே..."

'பேசுங்கன்னு ஆசையா கேட்டா... ரொம்ப நல்லாவே பேசறீங்க. தாலி கட்டின மனைவியை நம்பலைன்னா... இவரெல்லாம் என்ன மனுஷன்’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"நீங்க நம்பினாலும், நம்பாட்டாலும் நடந்தது அத்தனையும் உண்மை..."

"அவன்... அந்த ப்ரவீன் நம்ம கல்யாணத்துக்கு வந்திருந்தானா?"

"இல்லை. அவன் வரலை."

"சரி... சரி... நான் குளிக்கறதுக்கு டிரஸ் எல்லாம் எடுத்து வை. குளிச்சுட்டு வர்றேன்" என்றவன், அருகிலிருந்த அவளைத் தன் பக்கம் இழுத்து அணைத்தான். தன் தாபத்தீயையும் அணைத்துக் கொண்டான். உடனே எழுந்து குளியலறைக்குச் சென்றான்.


'விலங்குகள் போல சூழ்நிலை, நேரம், காலம் அறியாமல் உறவிற்கு இழுக்கும் இவனுடன் எப்படி வாழப் போறேன்? நெஞ்சம் துடிக்கும் துன்ப உணர்வுகளுடன் எழுந்தாள். அவளது உடம்பு கூசியது. 'பிக்கல், பிடுங்கல் இல்லை... அளவான குடும்பம்.. என்று என்னை இந்தக் குடும்பத்தில் மருமகளாக்கினார் அப்பா. பிக்கலும், பிடுங்கலும் தவிர வேறு எதுவுமே இல்லையே’ நினைத்தபடியே மறுபடியும் சமையலறைக்குச் சென்றாள்.

காலை உணவு தயாரிப்பதற்காக, கமலாவிற்கு உதவி செய்தாள். இயல்பாக இருப்பது போல காட்டிக் கொள்ள பெரிதும் முயற்சித்தாள். கமலாவிடம் எதுவும் பேசாமல் வேலைகளை செய்தாள். சாப்பிடும் மேஜை மீது இட்லி, சட்னியை எடுத்து வைத்தாள். தியாகு வந்ததும் ப்ளேட் எடுத்து வைத்துப் பரிமாறினாள்.

"டேய்... தியாகு, கொத்தமல்லி சட்னி வித்தியாசமா செஞ்சுருக்கா அர்ச்சனா. நல்லா இருக்கா? அவளோட கைப்பக்குவம் உனக்குப் பிடிச்சிருக்கா?" மகனிடம் கேட்டாள் கமலா.

"அவளோட எல்லாமே... எனக்குப் பிடிக்கும்" இருபொருள்பட மெதுவாக அடிக்குரலில் அர்ச்சனாவிற்கு மட்டும் கேட்கும் விதமாகப் பேசினான் தியாகு.

"நல்லாயிருக்கும்மா சட்னி." என்று குரல் ஓங்கி ஒலிக்க கமலாவிற்கு பதில் கொடுத்தான்.

"தியாகு இன்னிக்குக் கொஞ்சம் சீக்கிரமா வந்துடுப்பா. ஹோட்டலை அப்பா பார்த்துக்கட்டும். நீ வந்து, அர்ச்சனாவைக் கூப்பிட்டுக்கிட்டு கோயிலுக்குப் போயிட்டு வா."

"என்னது? கோயிலுக்கா?"

"ஆமாம்ப்பா. இத்தனை நாள் கோயில் குளம்ன்னு வராம இருந்துக்கிட்ட. இப்ப கல்யாணம் ஆயிடுச்சுல்ல. இனிமேல் கோயிலுக்குப் போக வர இருக்கணும்."

"கல்யாணமாயிட்டா...? கோயிலுக்குப் போணும்னு சட்டம் இருக்கா? நான் நானாத்தான் இருப்பேன். எதுக்காகவும் என்னை மாத்திக்க மாட்டேன்..."

"சரி... கோயிலுக்குப் போகலைன்னா விடு. பீச், சினிமா, டிராமா, ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்ன்னு எங்கயாச்சும் கூட்டிட்டுப் போயேன்."

"ம்...ம்.. ரொம்ப முக்கியம். டாய்லெட்டுக்குப் போற வழியில எவனாவது மடக்கி லவ் லெட்டர் குடுப்பான்... " மறுபடியும் அடிக்குரலில் அர்ச்சனாவிற்கு மட்டும் கேட்பது போல பேசினான்.

"என்னப்பா சொல்ற?"

"ஹோட்டல்ல கணக்கு முடிக்கற வேலையெல்லாம் நான்தாம்மா பார்க்கணும்."

"கொஞ்ச நாளைக்கு அப்பாகிட்ட அந்த வேலையை விட்டுட்டு அர்ச்சனாவை வெளியில கூட்டிட்டுப் போ. அவளுக்கு சந்தோஷமா இருக்கும்."

'எனக்கு சந்தோஷமா இருக்கும் அத்தை. ஆனா உங்க மகனுக்கு சந்தேகமா இருக்குமே’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"நான் கிளம்பறேன்மா" கமலாவிடம் மட்டும் சொல்லிவிட்டுப் புறப்பட்டான் தியாகு.

3

னகசபை, அர்ச்சனாவிற்கென்று அழகிய மொபைல் போன் வாங்கிக் கொடுத்திருந்தார். அது இனிமையாக ஒலித்தது. அர்ச்சனா எடுத்துப் பேசினாள்.

"அர்ச்சனா... அப்பா பேசறேன்மா. நல்லா இருக்கியாம்மா?"

"நா... நான்... நல்லா...யிருக்கேன்ப்பா..."

"என்னம்மா குரல் ஒரு மாதிரியா இருக்கு?" கனகசபையின் குரலில் பதற்றம் இருந்தது.

"ஒண்ணுமில்லப்பா. லேஸா ஜலதோஷம்... அதான்..."

"யப்பா... நான் என்னவோ ஏதோன்னு பயந்துட்டேன்மா..."

"ஏம்ப்பா இப்பிடி பதற்றப்படறீங்க?... உங்களுக்கு ஹார்ட் ப்ராப்ளம் இருக்கே.. இப்பிடி பதற்றப்பட்டா..."

"நீ சந்தோஷமா இருந்தா எனக்கு எந்த ப்ராப்ளமும் வராதும்மா. சரி, உங்க மாமியார், மாமனாரெல்லாம் நல்லபடியா பழகறாங்களா? மாப்பிள்ளை உன் மேல பிரியமா இருக்காரா?"

"ஓ... ரொம்ப பிரியமா இருக்கார்ப்பா. எல்லாரும் நல்லவிதமா பழகறாங்க. அம்மா இறந்து போனதில இருந்து என்னை உங்க கண்மணி போல வளர்த்தீங்க. அதனால... அதனால உங்களைப் பிரிஞ்சு இருக்கறது மட்டும்தாம்ப்பா கஷ்டமா இருக்கு. அண்ணா வேற மேல் படிப்புக்காக பிடிவாதமா அமெரிக்காவுக்குப் போயிட்டானே... நம்ப ஜவுளிக்கடை நிர்வாக வேலைகளுக்கெல்லாம் நான் இல்லாம உங்களுக்கு கஷ்டமா இருக்குமேப்பா..."

"நீ என் கூட இருந்து செஞ்ச வேலையெல்லாம் பார்த்துக்கறதுக்கு பொறுப்பான ஒரு ஆள் போட்டுட்டேன்மா. அவ பேர் கல்பனா. உன்னோட வயசுதான் இருக்கும். உன்னை மாதிரியே சுறுசுறுப்பா பார்த்துக்கறா. அதனால உன்னோட அண்ணன் இருந்துதான் இதெல்லாம் செய்யணும்ங்கறது இல்ல. அவனும் பாவம். வெளிநாடு போய் படிக்கணும்னு ஆசைப்பட்டான். படிச்சுட்டு வரட்டும்மா. என்னோட எண்ணமெல்லாம் உன்னைப் பத்திதான். உங்கம்மா போனப்புறம் உன்னைக் கண் கலங்காம வளர்த்து ஆளாக்கிட்டேன். உன் பிறந்த வீட்ல எப்பிடி சந்தோஷமா, கவலையே இல்லாத வானம்பாடியா இருந்தியோ அதுபோல உன்னோட புகுந்த வீட்லயும் நீ நிறைவான வாழ்க்கை வாழணும்மா. உனக்கு ஏதாவது ஒண்ணுன்னா என் உயிர் அப்பிடியே நின்னு போயிடும்..."

"ஐய்யோ அப்பா... இப்பிடியெல்லாம் பேசாதீங்க. என்னைப் பத்தி கவலையே படாதீங்க. நிம்மதியா இருங்க. இப்பிடி எதையாவது யோசிச்சுக்கிட்டிருந்தீங்கன்னா மறுபடியும் நெஞ்சு வலி வந்துடும். எனக்கு உங்களைப் பத்தின கவலை இல்லாம நீங்கதான்ப்பா கவனமா இருந்துக்கணும். நேரத்துக்கு சாப்பிடுங்க. எண்ணெய் பலகாரமெல்லாம் சாப்பிடாதீங்க. ஜெயம்மா சமையல் சூப்பரா இருக்குன்னு வெளுத்துக் கட்டாம, அளவா சாப்பிடுங்கப்பா."

"உனக்காகவாவது நான் என் நாக்கைக் கட்டுப்படுத்தி, உடம்பை பத்திரமா பார்த்துக்குவேம்மா. நீ பெத்துப் போடற என் பேரனையோ, பேத்தியையோ கொஞ்சறதுக்கு எனக்கு ஆயுசு வேணும்மா."

"கட்டுப்பாடா சாப்பிட்டுக்கிட்டு, தினமும் தவறாம வாக்கிங் போய், டாக்டர் சொன்னபடி மாத்திரையெல்லாம் ஒழுங்கா சாப்பிட்டிங்கன்னா நீங்க தீர்க்காயுசா இருப்பீங்கப்பா."

"சரிம்மா. மாப்பிள்ளையை நான் ரொம்ப விசாரிச்சதா சொல்லு..."

'அவர்தான் என்னை ரொம்ப நல்லா விசாரணை பண்ணிக்கிட்டிருக்காரே’ அவளது மனக்குரல் ஒலித்தது. நெஞ்சம் வலித்தது.

"சொல்றேன்ப்பா."

"சரிம்மா."

கனகசபை பேசி முடித்ததும் அர்ச்சனாவின் கண்களில் இருந்து கண்ணீர் முத்துக்கள் கன்னத்தில் உருண்டன.

'பாவம் அப்பா. என்னையே நினைச்சுட்டிருக்கார். தியாகுவின் சுயரூபம் என்ன? எனக்கே புரியலியே... தெரிஞ்சாலும் அப்பா கிட்ட சொல்ல முடியாது. சொல்லக் கூடாது. அவர் துடிச்சுப் போயிடுவார்.’

"அர்ச்சனா..." கமலாவின் குரல் கேட்டதும் கண்களைத் துடைத்துக் கொண்டு, பதில் குரல் கொடுத்தாள்.

"இதோ வரேன் அத்தை."

வரவேற்பறையில் சோபாவில் உட்கார்ந்திருந்தாள் கமலா.

"கூப்பிட்டீங்களா அத்தை?"

"ஆமாம்மா. உட்கார். தியாகுவுக்கும், மாமாவுக்கும் மதிய சாப்பாடு ஒரு மணிக்குத்தான் குடுத்தனுப்பணும். கொஞ்ச நேரம் ஓய்வா இரு. டி.வி. பார்க்கறதானா பாரு. சரியா பதினொரு மணிக்கு சமைக்க ஆரம்பிக்கலாம்..."

"சரி அத்தை. நான் போய் என்னோட ரூமைக் கொஞ்சம் சுத்தம் பண்ணிட்டு வந்துடட்டுமா?"

"சரிம்மா."

மாடியறைக்குச் சென்றாள் அர்ச்சனா. கட்டிலின் மீது கலைந்து கிடந்த போர்வையை எடுத்து மடித்து வைத்தாள். படுக்கையில் சிதறிக் கிடந்த பூக்களை எடுத்துப் போட்டாள்.


'இந்தப் பூவைப் போலவே நானும் வாடிப் போயிட்டேனா? என் வாழ்க்கையும் வாடிப் போச்சா? ஒண்ணுமே புரியலையே? உண்மையான விஷயங்களை மறைக்காம அவர்கிட்ட சொன்னது தப்போ? ஏன் மறைக்கணும்? என் மனசில எந்தத் தப்பும் இல்லாதப்ப நான் ஏன் மறைக்கணும்?’ யோசித்துக் கொண்டிருந்தவளின் கவனத்தை மொபைல் போன் சப்தித்துக் கலைத்தது.

"ஹலோ..."

"ஹாய் அர்ச்சனா... சுகந்தி பேசறேன்டி. என்ன... உனக்கு என்னோட ஃபோன் நம்பர் கூட மறந்துப் போச்சா? ஹலோங்கற?"

"ஹாய் சுகந்தி... ஸாரிடி. ஏதோ யோசனையில இருந்தேன்."

"இன்னும் கனவுலகத்துலதான் இருக்கியா? அது சரி, அவர் எப்படி இருக்கார்? உன் கல்யாண வாழ்க்கை எப்பிடி இருக்கு?"

"வாழ்க்கைங்கறது யாரோட வாழணும்ங்கறதைவிட எப்பிடி வாழறோம்ங்கறதுலதான் இருக்கு..."

"என்ன அர்ச்சனா, என்னவோ மாதிரி பேசற?"

"அவர்... அவர்... நான் நினைச்ச மாதிரி இல்லை சுகந்தி... என் கிட்ட பிரியமா பேசமாட்டேங்கிறார்."

"கல்யாணமாகி கொஞ்ச நாள்தானே ஆகுது? போகப் போகத்தான் புரியும். அவசரப்படாத..."

"ஒரு பானை சோறு வெந்துருக்கான்னு பார்க்கறதுக்கு ஒரு பருக்கையைத்தானே எடுத்து பார்க்கறோம். அது போலத்தான் இதுவும்..."

"கிடையாது. நீ சொல்றது தப்பு. என்னோட ஹஸ்பண்ட் கூட எங்களுக்கு கல்யாணம் ஆன புதுசுல ரொம்ப ரிஸர்வ்டா இருந்தார். உனக்குத்தான் தெரியுமே என்னைப் பத்தி... 'வாயாடி ' ‘வாயாடி’ன்னுதானே நீ கூட கூப்பிடுவ? அப்படிப்பட்ட எனக்கு இப்பிடி ஒரு அமைதியான, அதிகம் பேசாதவர், புருஷனா அமைஞ்சுட்டாரேன்னு ரொம்ப அப்ஸெட் ஆயிட்டேன். கொஞ்ச நாளானதும், நான் பேசறதைப் பார்த்து, அவரும் நிறைய பேச ஆரம்பிச்சுட்டாரு. அதனாலதான் சொல்றேன். நீயும் அவசரப்பட்டு எந்த எண்ணத்தையும் மனசில வச்சுக்காத. உன்னோட அழகுக்கும், உன்னோட சகலகலா திறமைக்கும் அப்பிடியே மயங்கிட மாட்டாரு?..."

"மயங்கறதென்னவோ நிஜம்தான்... அதாவது என்னோட அழகுல... அதுவும் கூட அழகான இந்த உடம்பு மேல மட்டும்..."

"ஹய்யோ அர்ச்சனா... ப்ளீஸ்… அவரைப் பார்த்தா நல்லவராத்தான் தெரியுது..."

"அவரோட வெளிப்படையான உருவத்தைப் பார்த்துட்டுப் பேசற. அவர் உள்ளுக்குள்ள இருக்கற நச்சுத் தன்மையை முதல் இரவுலயே புரிஞ்சுக்கிட்டேன். அனுபவிச்சுட்டேன்."

"முதல் இரவைத் தொடர்ந்து வர்ற ஆயிரமாயிரம் இரவுகள்ல்ல... புரிஞ்சுக்க வேண்டியதை, பொறுத்திருந்து புரிஞ்சுக்குவ..."

"பொறுமை! அதை எனக்குக் கடவுள் அளவுக்கு மீறி குடுத்திருக்காரு. அன்பு பொங்கி வழியற எங்க அப்பாவோட மனசுல துக்கம் பொங்கிடக்கூடாதுன்னு தான் நான் பொறுமையா இருக்கேன்..."

"உங்க அப்பா பார்த்து தேர்ந்தெடுத்த மாப்பிள்ளைதான் உன் கணவர். அவருக்குத் தெரியாததா?"

"ஆமா. அவருக்குத் தெரியாமலே அவரை அறியாமலே எனக்கு இவரை மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்துட்டார். மகளோட எதிர்காலம்ங்கற பரீட்சையில அப்பா பெயிலாயிட்டார்."

"வருஷம் முழுசும் படிச்சு முடிச்சு அதுக்கப்புறமா வர்ற பரீட்சையிலதான் பாஸ், ஃபெயில் ரிசல்ட் சொல்வாங்க. க்ளாஸ்ல சேர்ந்த கொஞ்ச நாள்ல வைக்கற மன்த்லி டெஸ்ட்ல அதெல்லாம் கிடையாது. அதனால வாழ்க்கையை வாழ்ந்து பார்க்காமலே முடிவு எடுக்காதே. என் ஹஸ்பண்ட்டுக்கு ஆபீஸ் போற டைம் ஆச்சு. எனக்குக் கொஞ்சம் வேலை இருக்கு. நான் அப்புறமா பேசட்டுமா?..."

"சரி சுகந்தி. நான் இப்ப பேசினது எதையும் அப்பாகிட்ட சொல்லிடாதே..."

"இதெல்லாம் நீ சொல்லணுமா? டேக் கேர்."

இருவரது கைபேசிகளும், பேசுவதை நிறுத்திக் கொண்டன.

4

கிராமமும் இல்லாமல் நகரமும் இல்லாமல் சற்று முன்னேறி இருந்த ஊர் அது. சென்னையிலிருந்து மூன்று மணி நேரம் பிரயாணித்தால் சேர்ந்துவிடக் கூடிய தூரத்திலிருந்தது. அர்ச்சனா பிறந்து வளர்ந்த ஊர் அது, ஓரளவு படிப்படியாக முன்னேற, கனகசபை நடத்தி வந்த ஜவுளிக்கடையும் முன்னேறியது. சென்னைக்கு வந்து விடுதியில் தங்கிப் படித்து வந்த அர்ச்சனா, விடுமுறைக்கு வரும்பொழுதெல்லாம் கனகசபையின் கடைக்கு வந்து அவருக்கு உதவி செய்வது வழக்கம்.

படிப்பை முடித்த அர்ச்சனா, திருமணமாகி சென்னையிலுள்ள புகுந்த வீட்டுக்குச் சென்றதும், மூத்த மகன் சரவணன் வெளிநாட்டிற்கு மேல் படிப்பிற்காக சென்றதும், கனகசபைக்கு நடப்பது ஏதோ கனவு போல் இருந்தது. எல்லாமே வெகு விரைவாய் நடந்தேறியதால் திடீரென தனிமைப்படுத்தப்பட்டார்.

'பிள்ளைங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும்’ என்ற எண்ணத்தில், தனிமை உணர்வை மாற்றிக் கொள்வதற்காக ஊர்க்காரியங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். எனவே ஊருக்குள் ஏதாவது பிரச்னை ஏற்பட்டால் அவரைத் தேடி வந்தார்கள். நாலைந்து ஊர்ப் பெரியவர்களுடன், கனகசபையையும் கலந்தாலோசித்து, தங்கள் பிரச்னைக்குத் தீர்வு கண்டனர். கடையில் வியாபாரத்தைக் கவனித்துக் கொண்டிருந்த நேரம், ஒரு நடுத்தர வயது வாலிபன் வந்தான். அவன், ஊர் பொதுமக்களுள் ஒருவன். கனகசபைக்குப் பரிச்சயமானவன்.

"வணக்கம்ங்க ஐயா." கனகசபையைப் பார்த்துக் கும்பிட்டான்.

"வணக்கம் வேலா. என்ன விஷயம்?"

வேலன் தலையை சொறிந்தான். மூக்கை நிமிண்டிக் கொண்டான். தலையை குனிந்து கொண்டான். அவனது குரலும் கமறி இருந்தது.

"என்ன வேலா... எதுவும் பேசாம இருந்தா என்ன அர்த்தம்? வியாபாரம் சூடு பிடிச்சு விற்பனையாகற நேரம். சீக்கிரமா சொல்லுப்பா வந்த விஷயத்தை..."

"அது... வந்துங்கய்யா... குடும்பத்துல குழப்பம். ஐயா வந்து பேசினீங்கன்னா நல்லா இருக்கும்..."

"என்ன குழப்பம்? நல்லாத்தானே இருந்த?"

"நான் நல்லாத்தானுங்கய்யா இருக்கேன். எம் பொண்டாட்டிதான்..."

"ஏன்? அவளுக்கென்ன?"

"அவ... அவ... சரியில்லீங்கய்யா..."

"சரி.. இங்க வச்சு எதுவும் பேச வேணாம். நீ கோயில் கிட்ட போய் நில்லு. நான் வந்துடறேன்." அவர் கூறியதும், வேலன் நகர்ந்தான்.

"கல்பனா... இங்கே வாம்மா" அர்ச்சனாவின் வயதையொட்டிய பெண் ஒருத்தி வந்தாள்.

"அவசரமா வெளில போக வேண்டியிருக்கு. கடையைப் பார்த்துக்க. கவனம். நான் சீக்கிரமா வந்துடறேன்."

"சரிங்கய்யா."

கனகசபை, கடையை விட்டு இறங்கினார். வெளியே வந்தார்.

5

ந்த ஊரில் பிரதானமாக அமைந்திருந்த அம்மன் கோயிலுக்கு வந்தார் கனகசபை. கோயிலருகே காத்திருந்த வேலனைப் பார்த்தார். அவனுடன் ஊர்ப்பெரியவர்கள் மூணு பேர் கூடி இருந்தனர். சற்றுத் தள்ளி வேலனின் மனைவி நாகா நின்றிருந்தாள். குடும்பப் பிரச்னையை வேலனால் சமாளிக்க இயலாமல், ஊர்ப் பெரியவர்கள் மூலமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்று அவர்களைக் கூட்டி இருந்தான். கனகசபையையும் அழைத்திருந்தான்.

கனகசபையைப் பார்த்த மற்றவர்கள் அவருக்கு வணக்கம் தெரிவித்தனர். பதில் வணக்கம் தெரிவித்தார் கனகசபை.

"என்ன விஷயம்ங்க? என்ன ஆச்சு வேலனுக்கு?"

"அவனையே கேளுங்க...." கந்தசாமி என்ற பெரியவர் கூறினார்.

"என்னப்பா வேலா சொல்லு....."


"ஐய்யா.... இவ.... இவ.... இவளுக்கு நான் எந்தக் குறையும் வைக்கலீங்க. ஆனா... ஆனா... இவ எனக்கு துரோகம் செய்யறாள்ங்க. கல்யாணத்துக்கு முன்னால அவளோட மாமன் மகன் குமரேசன் மேல ஆசைப்பட்டிருக்கா. விதிவசத்துல என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட வேண்டியதாயிடுச்சாம். இவளுக்கும் கல்யாணமானப்புறம், துபாய்க்கு ஓடிப்போனான் குமரேசன். மறுபடி இங்கே வந்தவன் கூட இவ தொடர்பு வச்சிருக்காள்ங்க. 'தப்பு நடந்தது நடந்துப் போச்சு. அவனை அடியோட மறந்துடு. நாம பழையபடி சந்தோஷமா வாழ்வோம்’ன்னு சொன்னா கேக்க மாட்டேங்கறாய்யா... அவனைப் பார்க்கறதும், அவனை சந்திச்சுப் பேசறதுமா இருக்கா. வீட்ல சரியா தங்கறதில்ல... அக்கம் பக்கம் சிரிப்பா சிரிக்கறாங்கய்யா....." ஊர் சிரிப்பதை உள்ளத்திலிருந்து எழுந்த துக்கம் குமுற, அழுதபடி கூறினான் வேலன்.

அவன் கூறியதைக் கேட்டு அதிக சினம் கொண்டார் கனகசபை.

"ஏ பிள்ள... இவன் சொல்றது நிஜந்தானா...?" நாகாவை அதட்டிக் கேட்டார்.நாகா பதிலேதும் கூறாமல் மௌனமாக இருந்தாள்.

"இப்பிடி பேசாம இருந்தீன்னா என்ன அர்த்தம்?"

"நான்... நான்... எனக்கு இவரு கூட வாழ விருப்பம் இல்லீங்கய்யா...." இதைக் கேட்டதும் மேலும் அதிகக் கோபத்திற்கு ஆளானார் கனகசபை.

"என்ன பிள்ள நீ பேசற? உன் மேல உசிரையே வச்சிருக்கற இவன் கூட வாழாம என்ன செய்யப் போற? இவன் சொல்ற மாதிரி உன் மாமன் மகன் விஷயமெல்லாம் நிஜந்தானா?..."

".......அ......ஆ......ஆமாங்கய்யா....." நீண்ட நேரம் மௌனமாக இருந்த நாகா இறுதியில் தட்டுத்தடுமாறி பதில் கூறினாள்.

"அடச்சீ.... நீயெல்லாம் ஒரு பொம்பளையா? பொண்ணாப் பொறந்தவளுக்கு உசிரை விட மானம்தான் பெரிசு. நீ என்னடான்னா புருஷனை பக்கத்துல வச்சுக்கிட்டே வேற எவன் கூடயோ வாழப் போறதா சொல்றியே வெட்கமா இல்ல? ஒருத்தன் கையில தாலி கட்டிக்கிட்டு இப்பிடி வேலி தாண்டிப் போறதா பகிரங்கமா சொல்றியே... ச்ச... இப்பிடி ஒரு வாழ்க்கை வாழறதுக்குப் பதிலா உயிரை விட்டுடலாம்..." என்று அவளிடம் சீறியவர், வேலனிடம் திரும்பினார்.

"ஏ வேலா... இவளுக்கு உன் கூட வாழ விருப்பம் இல்ல. பேசாம அவளை அவ போக்குல விட்டுடு. கூட இருந்தே உன் கழுத்தை அறுக்கற இவ... நீ கட்டின தாலியையும் அறுத்துட்டுப் போட்டும்னு விட்டுட்டு தலை முழுகுடா..." கோபம் மாறாமல் கூறியவர், மற்ற பெரியவர்களிடம் பேசினார்.

"நீங்க எல்லாரும் என்ன சொல்றீங்க?"

"மனசுக்குப் பிடிக்காம சேர்ந்து வாழறதுல அர்த்தமே இல்லை. வேலனுக்கு மன்னிக்கற மனசு இருந்தும் கூட, தப்பு பண்ணின இவ, திருந்தற மாதிரி தெரியலை. நீங்க சொன்ன மாதிரி பிரிஞ்சு போயிடட்டும்…" அவர்களும் கனகசபையின் முடிவை ஆமோதித்தனர். நாகா அங்கிருந்து கிளம்பினாள்.

"ஒரு பொம்பளை இவ்வளவு தைரியமா போறா. நீ ஏண்டா தலை குனிஞ்சுக்கிட்டிருக்க? உன் மேல எந்தத் தப்பும் இல்லை. உன் கூட வாழறதுக்கு அவளுக்குக் குடுப்பினை இல்லை. உன் தலைவிதி அவ்வளவுதான். கிளம்பு" கனகசபை கூறியதும் வேலன் தலைகுனிந்தபடி கிளம்பினான்.

கனகசபை, கடைக்குக் கிளம்ப, அனைவரும் அவரிடம் விடைபெற்று புறப்பட்டனர். ஊர் மக்களின் பிரச்சனைக்குத் தீர்வு கூறும் கனகசபை, தன் மகளின் வாழ்க்கைப் பிரச்சனைக்கு தீர்வு காணும் ஓர் நாள் வரும் என்பதை அன்று எதிர்பார்க்கவில்லை.

6

மலா சொன்னபடி ஹோட்டலில் இருந்து சற்று சீக்கிரமாகவே வந்திருந்தான் தியாகு. ஆனால் அவள் சொன்னபடி, அவன் அர்ச்சனாவை வெளியில் கூட்டிக் கொண்டு போவதற்காக வரவில்லை. தலை வலித்தபடியால் வழக்கத்தை விட விரைவாகக் கிளம்பி வந்திருந்தான்.

வீட்டின் வரவேற்பறையிலிருந்த சோபாவில் சாய்ந்து உட்கார்ந்தான். அவன் வந்ததைப் பார்த்த அர்ச்சனா, அவனருகே சென்றாள். அவளைத் தொடர்ந்து கமலாவும் வந்தாள்.

"காபி" என்று மட்டும் ஒற்றை வரியில் கூறினான் தியாகு.

"'காபின்னு மொட்டையா சொன்னா என்ன அர்த்தம்? உங்க ரெஸ்டாரண்ட்லதான் காபி தயாரிச்சு விக்கறீங்க. இங்க வீட்லயுமா விக்கறீங்க?" அர்ச்சனா இவ்வாறு கேட்டதும், தலைவலியைக் கூட மறந்து 'விலுக்’ என்று தலையை நிமிர்த்தினான் தியாகு.

"என்ன... வாய்... நீளுது..."

தியாகுவும், அர்ச்சனாவும் கோபமாகப் பேசுவதைப் பார்த்த கமலா, தியாகுவின் அருகே சென்றாள்.

"என்னப்பா.. என்ன ஆச்சு? தலை ரொம்ப வலிச்சா கொஞ்ச நேரம் உன் ரூமுக்குப் போய் படுத்துக்கோயேன்..."

"அத்தை... அவர் காபி கேட்ட விதத்தைப் பார்த்தீங்கள்ல... அதைப்பத்திக் கேக்காம ரூமுக்குப் போய் படுத்துக்கச் சொல்றீங்க?..."

"பாவம்மா தியாகு. ஏதோ டென்ஷன்ல தலைவலியால அவதிப்படறான்..."

"காபின்னு கேட்கத் தெரிஞ்ச அவருக்கு 'காபி குடு அர்ச்சனான்னு’ கேட்கத் தெரியாதா?..."

"அவனோட முகத்தை வச்சே நான் கண்டுபிடிச்சுட்டேன் அவனுக்குத் தலைவலிக்குதுன்னு. தலைவலியினாலதான் அப்பிடி கேட்டிருப்பான். அது மட்டுமில்லம்மா... அவனோட சுபாவமே அப்பிடித்தான். என்னைத் தவிர வேற யாரையும் குறிப்பிட்டு பேச மாட்டான். சில சமயம் என் கிட்டயும் மொட்டையாத்தான் பேசுவான்...."

'கூர்மையான கத்தி போல குத்திப் பேசற இவர் உங்க கிட்ட மொட்டையா பேசுவாரா? அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

கமலா தொடர்ந்தாள்.

"பாவம்மா. சூடா காபி போட்டுக் குடு. குடிச்சுட்டு கொஞ்ச நேரம் படுத்துக்கட்டும்."

"இவ்வளவு கோபமா பேசின இவ போடற காபி ஒண்ணும் எனக்கு வேணாம்." விருட்டென்று எழுந்து, தன் அறைக்கு சென்று விட்டான் தியாகு.

கமலா, மனத்தாங்கலுடன் அர்ச்சனாவிடம் பேச ஆரம்பித்தாள்.

"என்னம்மா நீ.... கல்யாணம் ஆகி கொஞ்ச நாள்தான் ஆகுது. அதுக்குள்ள புருஷனை இப்பிடி எதிர்த்துப் பேசறியேம்மா. கட்டின புருஷனைப் புரிஞ்சுக்கிட்டாதாம்மா கோபதாபமில்லாம சந்தோஷமா இருக்க முடியும். பாவம்... தலைவலியோட அவதிப்பட்டு வந்த பையனுக்கு ஒரு காபி கூட கொடுக்காம கோபப்படறியேம்மா...."

"ஐய்யோ அத்தை... அவர்மேல கோபப்பட்டா நான் பேசினேன்? அவர் காபி வேணும்னு கேட்ட விதம் சரியில்லைன்னுதானே சொன்னேன்? இதில என்ன அத்தை தப்பு இருக்கு? அவர்தான் கோபப்பட்டாரே தவிர நான் கோபப்படலியே. என் மனசுல பட்டதைச் சொன்னேன். சின்ன விஷயத்தைப் பெரிசு பண்றீங்க அத்தை... நீங்களும் உங்க மகனும்."

"என் மகன் இப்ப உனக்குப் புருஷன். இத்தனை நாள் நான் அவனை நல்லா கவனிச்சுக்கிட்ட மாதிரி இனிமேல் நீ அவனை கவனிச்சுக்கணும். அவன் கொஞ்சம் அமைதியான சுபாவம் உள்ளவன். நீதான் புரிஞ்சுக்கணும். அவசரப்படக் கூடாது. போகப் போகத்தான் புரியும்...."


'போகப் போகப் புரியும்னு எல்லாரும் இதையே சொல்றாங்க. என்னை ஒரு போகப் பொருளா மட்டுமே நினைச்சு செயல்படறதைப் பத்தி யாருக்குத் தெரியும்? வெளில சொல்லக் கூடிய விஷயமா அது’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

'மாமியார் என்பதற்கேற்ப கோபமாகவோ, சிடுசிடுப்பாகவோ பேசாமல் சற்று சாந்தமாகவே பேசிய கமலாவிடம் எதிர் வார்த்தையாடாமல் அடக்கமாக இருந்துக் கொண்டாள் அர்ச்சனா.

"ஸாரி அத்தை. நான் தப்பா பேசி இருந்தா மன்னிச்சுக்கோங்க..."

"சரிம்மா... காபி போட்டுக் கொண்டு போய் குடு. அவனை சமாதானம் பண்ணு."

"சரி அத்தை" கூறியவள், மணக்கும் ஃபில்டர் காபியைத் தயாரித்து சூடாக எடுத்துக் கொண்டு அவர்களது அறைக்குச் சென்றாள்.

விட்டத்தை வெறித்தபடி படுத்திருந்தான் தியாகு. கட்டிலருகே சென்றாள். எதுவும் பேசாமல் காபியைக் கொடுத்தாள். தியாகுவிற்கு அந்த நேரத்தில் சுடச்சுட காபி தேவைப்பட்டது. எனவே வீம்பு பண்ணாமல் 'கப்’பை எடுத்துக் கொண்டான். ரசித்துக் குடித்தான்.

'காபி சூப்பர்... தலைவலிக்கு இதமா இருந்துச்சு’ இப்படிக் கூறுவான், பாராட்டுவான் என்று எதிர்பார்த்திருந்தாள் அர்ச்சனா.

ஆனால் அவனோ? காலி 'கப்’பை கட்டிலின் அருகே இருந்த மேஜை மீது வைத்தான். திரும்பிப் படுத்துக் கொண்டான்.

நொந்து போன உள்ளத்துடன் கப்பை எடுத்துக் கொண்டு கீழே இறங்கி வந்தாள்.

'நானென்ன இந்த வீட்டு மருமகளா... வேலைக்காரியா?’ அவளது மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

7

ர்ச்சனாவின் இயந்திரகதியான வாழ்வில் நாட்கள் கடந்தது என்னவோ யுகங்கள் செல்வது போல ஆமையாக ஊர்ந்தது.  அவளுடன் இணைந்த இரவுகள், தியாகுவுக்கு இன்பத்தை அளித்தன. அர்ச்சனாவிற்கு இன்னலை அளித்தது.  உள்ளங்கள் இரண்டும் உறவாடாமல், உதடுகள் உரையாடாமல், உடல்கள் மட்டுமே உறவு கொள்வதால் அவளது ஒவ்வொரு இரவும் கேள்விக் குறியாய் ஆகிப் போனது.

'பெண் என்பவள் ஆணுக்கு சுகம் கொடுக்கும் சதைப்பிண்டம் மட்டும்தானா? மனைவி என்பவள் கணவனின் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள மட்டும்தானா? இவரது இயல்பே இப்படித்தானா? யாருடனும் பேச மாட்டாரா? மிக அருகில், நெருக்கத்தில் படுத்திருக்கும் தன் மனைவியுடன் அன்பாக ரெண்டு வார்த்தை கூடவா பேசத் தோன்றாது?’ கேள்விகள் நீண்டுக் கொண்டே போயின. கேள்விகள் உருவாக்கிய அவளது மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

 

8

"எப்பம்மா வந்தே என் உயிரே.... நீ இல்லாம ஒரே போர்..."

'இவ்வளவு அன்பா, அன்யோன்யமா பேசறார்... 'உயிரே’ன்னு வேற டைலாக். இப்பிடியெல்லாம் கூட இவரால பேச முடியுமா? அப்படி யார்கிட்ட பேசறார்...’ அர்ச்சனாவின் உள்ளத்தில் எழுந்த கேள்விகளுக்கு, தியாகு அடுத்துப் பேசிய சம்பாஷணையில் விடை கிடைத்தது.

"டே அண்ணா... என் கல்யாணத்தன்னிக்கு ராத்திரி ஊருக்குக் கிளம்பிப் போன நீ... இன்னிக்குதான் வந்திருக்கியா... நீ இல்லாம எனக்கு வாழ்க்கையே வெறுத்துப் போச்சுடா...."

'ஓ... கல்யாணத்தன்னிக்கு 'நெருங்கிய நண்பன்’ன்னு ஒருத்தரை அறிமுகப்படுத்தி அவரோட பேர் கூட 'அண்ணாதுரை’-ன்னு சொன்னாரே... அவராத்தான் இருக்கும். கல்யாணத்தப்ப, 'டே அண்ணா’ 'டே அண்ணா’ன்னு கூப்பிட்டுப் பேசிக்கிட்டிருந்தாரே....

நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தான் தியாகு. மடை திறந்த வெள்ளமாய் அவன் கதை பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்த அர்ச்சனா அதிர்ந்தாள். ஆச்சர்யப்பட்டாள். அவன் பேசி முடித்ததும், கமலா அவனருகே சென்றாள்.

"என்னப்பா தியாகு! அண்ணாதுரை வந்துட்டானா?" முகமெல்லாம் சந்தோஷம் பொங்கக் கேட்டாள் கமலா.

"வந்துட்டான்மா. பிஸினஸ் டூர்னு ஊர் ஊராப் போய்ட்டு ஷீரடிக்கும் போயிட்டு வந்திருக்கான். உங்களுக்காக சாயிபாபா சிலை, மந்த்ரா பாக்ஸ், பிரசாதமெல்லாம் வாங்கிட்டு வந்திருக்கானாம். கொண்டு வந்து தர்றானாம்...."

இதைக் கேட்டதும், மேலும் மகிழ்ச்சி அடைந்தாள் கமலா.

"அண்ணாதுரைக்கு நம்ப மேல ரொம்ப அன்பு, பாசமெல்லாம் இருக்கு. நல்ல பையன். யாராவது கஷ்டம்ன்னு அவன்கிட்ட போய் நின்னா போதும். எதுவும் யோசிக்காம உதவி செய்வான். நல்லவங்க யாரு, ஏமாத்தறவங்க யாருங்கற பாகுபாடே அவனுக்குத் தெரியாது....."

'ஒரு ஃப்ரெண்டு கிட்ட அதுவும் ஒரு ஆண்கிட்ட இவ்வளவு அன்பா, மனசையே தொடற அளவுக்கு 'உயிரே’ன்னு கூப்பிடத் தெரியுது. கட்டின மனைவி மேல துளிகூட அன்பு செலுத்த முடியலையே இவருக்கு யோசித்தாள் அர்ச்சனா.

'சுபாவமே அப்படித்தான்’னு அத்தை சொன்னாங்களே, அப்பிடி இல்லையே இவரோட போக்கு! இந்தக் குடும்பத்தில் என்னுடைய பங்கு என்ன? சமைத்துப் போடுவதும், சாப்பிடுவதும், வீட்டை சுத்தமாக வைப்பதும், படுக்கையறையில் சுகம் கொடுக்கும் போகப்பொருளாய் இயங்குவதும்.... இதுதான் திருமண வாழ்க்கையா?’ மேலும் ஏகமாய் யோசித்துக் குழம்பினாள்.

9

'ஏன்தான் இந்த ராத்திரி பொழுது வருதோ நெஞ்சில் கலக்கத்துடன் தூங்க முயற்சி செய்த அர்ச்சனாவைத் தன் வலிமை மிக்க கைகளால் அணைத்துப் புரட்டினான் தியாகு.

'இன்றாவது தன்னிடம் மனம்விட்டு, வாய்விட்டு பேசமாட்டானா’ என்று ஏங்கினாள் அர்ச்சனா. ஒவ்வொரு நாளும் இதே எதிர்பார்ப்புடன் இருப்பதும், அந்த எதிர்பார்ப்பு, ஏமாற்றத்தில் முடிவதுமாக கடந்தபோதும், நாள்தோறும் 'இன்றாவது அவன் மனது திறக்காதா’ என்ற ஏக்கத்தில் இருந்தாள். ஆனால் நாள் தவறாமல் ஏமாந்தாள்.

அன்றும், வழக்கம்போல தன் தாபத்தீயால் அது அணையும்வரை அவளது உடலைச் சுட்டெரித்தான். உடலை மட்டுமா சுட்டெரித்தான்? அவளது மனதையுமல்லவா சுட்டெரித்தான்?

தலையணை நனைய அழுதுக் கொண்டு திரும்பிப் படுத்துக் கொண்டிருந்த அவளை மீண்டும் தன் பக்கம் திருப்பினான்.

"எவனோ உனக்கு லெட்டர் குடுத்தான்னு சொன்னியே... அவனோட பேர் என்ன?"

"ப்ரவீன்"     

"ஓ... மறக்க முடியாத ஆள்... இல்ல...?"

"இல்லைங்க.... அவன் மேல காதல் இல்லைன்னு நான் மறுத்த ஆள்..."

"அது சரி... அவன் நம்ப கல்யாணத்துக்கு வந்தானா இல்லையா?"

"வரலை..."

"ஏன்?"

"அதான் அன்னிக்கே சொன்னேனே? அவங்க அம்மாவுக்கு ஏதோ சீரியஸ்னு வரலை."

"ம்கூம்... தான் காதலிச்ச பொண்ணை இன்னொருத்தன் கூட மணக்கோலத்துல பார்க்க சகிக்காமத்தான் அவன் வரலை. இதுதான் உண்மையான காரணம்..."

'ஜிவ்’வென்று ஏறிய கோபத்தைத் தணித்துக் கொண்டாள் அர்ச்சனா.

'சுகந்தி சொன்னது போல கொஞ்ச நாள் பொறுமையா இருந்துதான் பார்ப்போமே!’ நினைத்தவள் பேச ஆரம்பித்தாள்.

"நான் அன்னிக்கு உங்ககிட்ட சொன்னதுதான் நடந்தது. அவன் எனக்கு நண்பன். இந்த எண்ணம் தவிர வேற எந்த எண்ணமும் எனக்குக் கிடையாது. நீங்க எத்தனை தடவை கேட்டாலும் இதுதான் உண்மை..."

"இவ்வளவு அழகான உன்னை மிஸ் பண்ணிட்டோமேன்னு அவன் மனசு உறுத்திக்கிட்டே இருக்குமே..."


'இவ்வளவு அழகு; அவ்வளவு அழகுன்னு தெரியுதில்ல... அதை என் கிட்ட வாய்விட்டு ஒருநாள் கூட சொன்னதில்ல. இப்ப எதுக்கோ முடிச்சுப் போட்டு பேசறப்ப மட்டும் என்னோட அழகைப் பத்தி பேச முடியுதாக்கும்.’

தியாகுவின் போக்கையும், பேச்சையும் பற்றி நினைத்தவள் சற்று எள்ளி நகையாடும் பொருட்டு லேசாக சிரித்து வைத்தாள்.

"என்ன... ஏதோ... இளக்காரமா சிரிக்கறாப்ல இருக்கு?..."

"அப்பிடியெல்லாம் ஒண்ணும் இல்லையே...?"

"அப்போ அவனைப் பத்தி பேசினதும் உன் முகத்துல புன்னகை பூக்குதோ?..."

'புன்னகை என் முகத்துல மட்டும்தான். புண்ணாகிப் போன என் மனசு? அதைப் பத்தி எதுவும் தெரியாம வாய் வலிக்காம பேசறீங்களே...’ அவளது மனக்குரல் ஒலித்தது. நெஞ்சம் வலித்தது.  மனக்குரலை அடக்கிவிட்டு எழுந்தாள்.

"நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம எழுந்து போற?"

"பதில் சொல்லக்கூடிய கேள்வியா இருந்தா பதில் சொல்லலாம். நீங்களாவே எதையாவது கற்பனை பண்ணிக்கிட்டு வம்புக்காக கேக்கற கேள்விக்கு மௌனம்தான் பதிலா இருக்க முடியும். இருக்கணும்..."

"எவனோ உன்னைக் காதலிச்சது என்னோட கற்பனையா? நீயே உன் வாயால சொன்ன உண்மை...."

'அந்த உண்மைக்குத்தான் பொய்மைன்னு ஒருமையைத் தடவி என் பெண்மையை அவமதிக்கறீங்களே’ அவளது மனக்குரல் ஒலித்தது. நெஞ்சம் வலித்தது.

"என்ன... எதுவுமே பேசாம இருக்க?" மேலும் வம்புக்கிழுத்தான் தியாகு.

அதே சமயம் கீழே இருந்து கமலாவின் குரல் கேட்டது.

"தியாகு.... தியாகு...."

'இந்த நேரத்துல அம்மா கூப்பிடறதுன்னா ஏதாவது பிரச்னையா இருக்குமோ யோசனையுடன் உடைகளை சரிப்படுத்திக் கொண்டு கீழே இறங்கினான்.

படிக்கட்டருகே பரபரப்பாக நின்றிருந்தாள் கமலா.

"என்னம்மா... என்ன ஆச்சு?"

"நம்ப ஹோட்டல்ல காஸ் சிலிண்டர்ல இருந்து காஸ் கசியற வாசனை வருதுன்னு ஃபோன் வந்துச்சுப்பா... அப்பா அசந்து தூங்கறாரு. மாத்திரை போடறாரில்ல... அதனால அவரை எழுப்ப வேணாம்னு பார்க்கறேன்...."

"இதோ நான் போய் பார்த்துட்டு வரேன்மா. நீங்களும் படுத்துக்கோங்க. வீட்டு சாவியை நான் எடுத்துட்டுப் போறேன். நீங்க தூங்குங்க. ஒண்ணும் பிரச்சனை இருக்காது."

"சரிப்பா. இரு. வீட்டு சாவி எடுத்துத் தரேன்." வீட்டு சாவியைக் கொண்டு வந்து கொடுத்தாள் கமலா.

தன் பாக்கெட்டில் இருந்த கைபேசியை எடுத்துப் பார்த்தான். பேட்டரி சார்ஜ் இல்லாமல் உயிரை இழந்திருந்தது.

"என் மொபைல் ஃபோன்ல சார்ஜ் இல்லை. அதனாலதான் வீட்டு போன்ல கூப்பிட்டிருக்காங்க. என்னோட கவனக் குறைவால பாவம் உங்க தூக்கம் கெட்டுப் போச்சு."

"அதனால என்னப்பா... நீ பத்திரமா போயிட்டு வா." தியாகு கிளம்பினான்.

கீழே இறங்கிப் போன தியாகு நீண்டநேரம் வராததைக் கண்ட அர்ச்சனா, 'கார் கிளம்பிப் போற சத்தம் கேட்டதே. இந்நேரத்துல அத்தை எதுக்காகக் கூப்பிட்டாங்க... இவர் எங்கே போனார்?... சரி... என்னமோ நடக்கட்டும். அவர் பாட்டுக்கு அவர் போனார். நான் பாட்டுக்கு தூங்கறேன்’ கண்களை மூடி தூங்க முற்பட்டாள்.

நெஞ்சு வலியால் பாதிக்கப்படும் அப்பாவின் நினைவு வந்தது.

'என் வாழ்க்கையைப் பத்தி என்னாலயே கணிக்க முடியலப்பா. மனசைத் திறந்து பேசாத அவர்கிட்ட என் வாய்க்குப் பூட்டு போட்டுக்கிட்டு வாழ்ந்துக்கிட்டிருக்கேன்ப்பா. 

அம்மா இல்லாமல் வளர்ந்த அவள், வேதனைப்படும் பொழுதெல்லாம் அம்மாவிற்குப் பதிலாக அப்பாவை நினைப்பாள். நிகழ்வுகள் தந்த நினைவுகள் இதயத்தை வாட்ட, தியாகு கையாண்ட முரட்டுத்தனம் உடம்பை வலிக்கச் செய்ய... விரைவிலேயே தூக்கம் அவளைத் தழுவிக் கொண்டது.

10

மையலறையில் வெங்காயம் நறுக்கிக் கொண்டிருந்தாள் கமலா. அர்ச்சனா தேங்காய் துறுவிக் கொண்டிருந்தாள். ஸ்டவ்வின் மீது குக்கர் 'உஸ்’ 'உஸ்’ என்று சப்தம் கொடுத்துக் கொண்டிருந்தது.

"முட்டைக் குழம்பு நீங்க எப்படி அத்தை செய்வீங்க?"

"முட்டைக் குழம்பு வச்சா ஒரே போராட்டம்தான். உங்க மாமாவுக்கு வேக வச்ச முட்டையில குழம்பு செய்யணும். தியாகுவுக்கு முட்டையை உடைச்சு குழம்பில ஊத்தணும். நான் என்ன தெரியுமா செய்வேன்? முட்டைக்குழம்பு செஞ்சுட்டு அதில இருந்து கொஞ்சம் எடுத்து அதில முட்டையை உடைச்சு ஊத்திட்டு, கொஞ்ச நேரம் 'சிம்’-ல வச்சு முட்டை வெந்ததும் இறக்கி வச்சிடுவேன்" சிரித்தாள் கமலா.

அவளுடன் சேர்ந்து அர்ச்சனாவும் சிரித்தாள்.

"நீ இந்த வீட்டுக்கு மருமகளா வர்றதுக்கு முன்னால நாங்க மூணு பேர்தானே? ஆனா பாரும்மா. எங்க மூணு பேருக்கும் மூணு விதமான சமையல் பண்ணனும். உங்க மாமாவுக்கு உப்பு சப்பில்லாம சமைக்கணும். தியாகுவுக்கு எல்லா சமையலும் காரசாரமா இருக்கணும். எனக்கு தினமும் புளிக்குழம்பு வேணும். அதென்னமோ அப்படி பழகிட்டேன், சின்ன வயசுல இருந்தே. இவங்க ரெண்டு பேருக்கும் புளிக்குழம்பே பிடிக்காது. சில நேரம் இப்பிடி ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு சமையல் பண்றது சலிப்பா இருக்கும். இருந்தாலும் என்னம்மா பண்றது? மத்யானம் வீட்ல இருந்து சாப்பாடு அனுப்பினாலும், ஆறிப்போனப்புறம் சாப்பிடறாங்க. காலையிலயும், நைட்டும் மட்டுமாவது அவங்களுக்குப் பிடிச்சதை சமைச்சு சுடச்சுடப் பரிமாறனும்னு ஒரு வைராக்யத்துல செஞ்சுருவேன்."

"எங்க வீட்ல இந்த பிரச்னையே கிடையாது அத்தை. காலையில அப்பா உள்பட நான், வேலைக்காரப் பொண்ணு, மூணு பேரும் பழைய சோறுதான் சாப்பிடுவோம். பழைய சோற்றுக்கு, வெங்காய வடகம் பொரிச்சு வச்சுட்டா போதும். அப்பா எதுவும் சொல்லாம சாப்பிட்டுட்டுப் போயிட்டே இருப்பாரு. நான் ஹாஸ்டல்ல சேர்ந்தப்புறம் இட்லி, தோசைன்னு சாப்பிடப் பழகிட்டேன். மத்யானம் அப்பாவுக்கு ஒரு நாள் கம்பு கூழ், மறுநாள் கேழ்வரகு கூழ், அதுக்கு மறுநாள் கோதுமைக் குருணை கூழ்.. இப்பிடி மாறி மாறி கூழ் காய்ச்சிக் குடுக்கணும்..."

"கூழுக்குத் தொட்டுக்க?"

"வெங்காயம், பச்சை மிளகா நறுக்கி, அதை 'இதயம்’ நல்லெண்ணெய்ல வதக்கி உப்பு, காரம் மிதம்மா போட்டு வைக்கணும்பார். நைட்ல நாலு தோட்ட வாழைப்பழம் சாப்பிடுவாரு. அவ்வளவுதான்."

"ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பழக்கம். இங்கே வாரத்துக்கு ஒரு நாள் ஞாயித்துக்கிழமை கோழிக்கறி அல்லது ஆட்டுக்கறி வச்சே ஆகணும்."

"இனிமேல் நீங்க சமையலறைக்கே வரவேணாம் அத்தை. வேலைக்காரி பொன்னி இருக்காள்ல்ல? அவளைக் கூடமாட ஒத்தாசைக்கு வச்சுக்கிட்டு நானே சமைச்சுடுவேன் அத்தை..."

"அப்பிடி ஒரு சூழ்நிலை உனக்கு சீக்கிரமே வரப்போகுதும்மா. ரொம்ப வருஷமா கோயில் கோயிலா போய் தெய்வதரிசனம் பண்ணனும்னு எனக்கு ரொம்ப ஆசை. தியாகு சாப்பாட்டுக்கு கஷ்டப்படுவானேன்னு இத்தனை வருஷம் எங்கேயும் போகாம காத்திருந்தேன். இப்போ தியாகுவுக்குக் கல்யாணமாகி இந்த வீட்டுக்கு நீ மருமகளா வந்துட்ட.


இனி... தியாகுவை உன் பொறுப்பில விட்டுட்டு நாங்க கிளம்பிடலாம்னு இருக்கோம். நீ என்னம்மா சொல்ற? எப்பிடியும் நாங்க திரும்பி வர குறைஞ்சது ஆறு மாசமாவது ஆகும்..."

"நான் என்ன அத்தை சொல்லப்போறேன்? நீங்க பல வருஷமா ஆசைப்பட்ட விஷயம்னு சொல்றீங்க. போயிட்டு வாங்க. வீட்டை நான் பார்த்துக்கறேன். ஆனா நீங்க இல்லாம எனக்குக் கொஞ்சம் போர் அடிக்கும்."

"ஆமாம்மா. தியாகு வர்றதுக்கும் லேட்டாயிடும். மாமா என் கூட வந்துடுவார். அதனால தியாகுவால சீக்கிரமா வீட்டுக்கு வர முடியாது...."

"அதைப்பத்தி என்ன அத்தை... நீங்க எந்த யோசனையும் இல்லாம நிம்மதியா, சந்தோஷமா போயிட்டு வாங்க."

"சரிம்மா. ட்ராவல்ஸ் மூலமா போறதுக்கு ஏற்பாடு பண்ணனும்னு, மாமா சொல்லிக்கிட்டிருந்தாரு. கிளம்பறதுக்கு வேண்டிய எல்லாத்தையும் தயார் பண்ணனும்."

இருவரும் பேசிக் கொண்டே சமையலை முடித்து, லஞ்ச் கூடையில் எடுத்து வைப்பதற்கும் சாப்பாடு எடுத்துப் போகும் ஆள் வருவதற்கும் சரியாக இருந்தது.

 

11

ஹோட்டலில் இருந்து களைப்புடன் வந்த தியாகு, அர்ச்சனா கைபேசியில் பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். முகம் கழுவக் கூட தன் அறைக்குப் போகாமல் அங்கேயே நின்று அங்கிருந்த பத்திரிகையைப் படிப்பது போல பாவனை செய்தபடி அவள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான். அவள் பேசி முடித்தபிறகு தன் அறைக்குச் சென்றான்.

அவனுக்கு டிபன், காபி தயாரிப்பதற்காக சமையலறைக்குச் சென்றாள் அர்ச்சனா. அவசர அவசரமாக முகம் கழுவிவிட்டு, இரவு உடை அணிந்து கொண்டு கீழே வந்தான்.

சோபா மீது அர்ச்சனா வைத்துவிட்டுப் போயிருந்த கைபேசியை எடுத்தான். எந்தெந்த எண்களிலிருந்து அவளுக்கு அழைப்பு வந்திருந்தது என்பதைப் பார்த்தான். எந்தெந்த எண்களை அர்ச்சனா அழைத்துப் பேசினாள் என்பதையும் பார்த்தான்.

காபியுடன் வந்தாள் அர்ச்சனா.

செல்போனில் ஒரு குறிப்பிட்ட எண்ணை அவளிடம் காண்பித்து, "இது யார் நம்பர்?" என்று கேட்டான்.

போனைக் கையில் வாங்கிப் பார்க்க முயற்சித்த அர்ச்சனாவிடம், அதைக் கொடுக்காமல் அவனே கையில் வைத்துக் கொண்டான். அர்ச்சனா, காபியை மேஜை மீது வைத்துவிட்டு குனிந்து அந்த எண்களைப் பார்த்தாள்.

"இது எங்க அப்பாவோட நம்பர்."

"இந்த நம்பர்?" வேறு எண்களைக் காட்டிக் கேட்டான்.

"இது என்னோட ஃப்ரெண்டு சுகந்தியோட நம்பர்."

"இந்த நம்பர்?"

"இது யாரோட நம்பர்னே தெரியலை. யாரோ பேசினாங்க. ஏதோ ஒரு பெயரைச் சொல்லிக் கேட்டாங்க. அப்பிடி யாரும் இல்லைன்னு சொல்லி கட் பண்ணிட்டேன்..."

"ஓகோ...."

"அர்ச்சனா.... அர்ச்சனா....."

"இதோ வரேன் அத்தை" என்று கூறிய அர்ச்சனா சமையலறைக்குச் சென்றாள். திரும்பி வந்தாள். அர்ச்சனா, 'யாரோ வேறு பெயரைச் சொல்லிக் கேட்டார்கள் என்று சொன்ன அழைப்பு வந்த எண்களை, தியாகு ஒரு சிறிய பேப்பரில் எழுதிக் கொண்டிருப்பதை பார்த்து விட்டாள்.

12

பெரிய பெட்டியில் தன் துணிமணிகளையும், முருகேசனின் துணிமணிகளையும் வைத்து அடுக்கிக் கொண்டிருந்தாள் கமலா. பெட்டியைச் சுற்றிலும் புடவைகள், குங்குமம், பவுடர், சீப்பு, ஹேர்பின் அடங்கிய சிறு ப்ளாஸ்டிக் பெட்டி. உடம்பு துடைக்கும் துண்டுகள் இவற்றை பரப்பி வைத்தபடி சிரமப்பட்டுக் கொண்டிருந்தாள்.

இதைப் பார்த்த அர்ச்சனா, கமலாவின் அருகே போனாள்.

"தள்ளுங்க அத்தை. நான் அடுக்கித் தரேன்."

"உனக்கெதுக்கும்மா வீண் சிரமம்?..."

"எந்த சிரமமும் இல்ல அத்தை. நீங்கதான் சிரமப்படறீங்க. நகருங்க. நான் அடுக்கறேன். ஒரு விஷயம் அத்தை. ஒரே பெட்டியில இத்தனையையும் வைக்காம ரெண்டு பெட்டியில அடுக்கினா வசதியா இருக்கும். சரியா?"

"சரிம்மா. பொன்னியைக் கூப்பிட்டு ஸ்டோர் ரூம்ல இருக்கற சின்னப் பெட்டியை எடுத்துட்டு வரச் சொல்லு."

"பொன்னி.... ஏ... பொன்னி" அர்ச்சனா குரல் கொடுத்ததும் ஓடி வந்தாள் பொன்னி.

"என்னங்கக்கா?"

"ஸ்டோர் ரூம்ல ரெண்டு மூணு பெட்டிங்க இருக்கும். அதெல்லாத்தையும் எடுத்துக்கிட்டு வா."

"சரிங்கக்கா."

பொன்னி ஓடினாள்.

மூன்று பெட்டிகளை எடுத்து வந்தாள்.

அதில் ஒரு பெட்டியை தேர்வு செய்தாள் அர்ச்சனா. இரண்டு பெட்டிகளில், பொருட்களை எளிதாக எடுப்பது போல் அழகாகவும், வசதியாகவும் அடுக்கினாள்.

"நேர்த்தியா அடுக்கி இருக்க அர்ச்சனா, எனக்கு இந்த வேலையெல்லாம் அவ்வளவு சுலபத்துல வராது. ஊருக்கெல்லாம் போய் பல வருஷமாச்சு. சொந்தக்காரங்க வீட்டுக் கல்யாணம்னு வெளியூர் போனா ஒரே நாள்ல திரும்பிடணும்னு உங்க மாமா சொல்லிடுவார். அதனால காலையில போவோம். அதே நாள் ராத்திரி கிளம்பி வந்துடுவோம்."

"எங்க ஊர்ல கல்யாணம்னா சொந்தக்காரங்க எல்லாரும் மூணு நாள் ஒண்ணா கூடிடுவோம். ஆளுக்கொரு வேலை செய்வோம். கல்யாணத்தன்னிக்கு மட்டும்தான் சமையலுக்கு ஆள் போட்டு செய்வோம். மத்த ரெண்டு நாளும் நாங்களே ஒண்ணா சேர்ந்து சமைப்போம். ஜாலியா இருக்கும். அத்தை, பாட்டி, மாமா, சித்தப்பான்னு ஏக கூட்டமா இருக்கும். சிரிச்சுப் பேசி சந்தோஷமா போகும் அந்த மூணு நாளும்."

"எங்க மாமனார் காலத்துல இருந்தே சென்னையில இருந்துட்டதால வெளியூர் உறவுக் கூட்டம் ரொம்ப வரமாட்டாங்க. உங்க அப்பாவோட ஊர் ஒரு கிராமம் மாதிரிதானே. அந்த வழக்கமெல்லாம் எங்க மாமனார் குடும்பத்துல கிடையாது. கல்யாணம்ன்னா முகூர்த்தத்துக்கு வருவாங்க. சாப்பாடு சாப்பிட்டுட்டுப் போய்க்கிட்டே இருப்பாங்க."

"ஊர்த்திருவிழான்னா உறவுக்காரங்களும், என் கூடப் படிக்கற ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் கூடிடுவோம். ஒவ்வொருத்தர் வீட்ல ஒவ்வொரு வேளை சாப்பாடு ரெடி பண்ணுவோம். பலகாரம் போடுவோம். பலகாரம் போடும்போது ஆளாளுக்கு யோசனை சொல்லி, அதைக் கேலி பண்ணி அலுப்புத் தெரியாம வேலை செய்வோம்."

"அப்பிடி என்னென்ன பலகாரம் செய்வீங்க?"

"பணியாரம், சீனிப்பால் வடை, உளுந்து வடை, முறுக்கு, எள்ளுருண்டை, அதிரசம், கருப்பட்டி வடை இப்பிடி நிறைய பண்ணுவோம். பலகார வாசனை கமகமக்கும். சின்னக் குழந்தைங்க நிறைய எடுத்து எடுத்து சாப்பிடுவாங்க..."

"நீ சொன்ன பலகாரங்கள் எல்லாமே நம்ப பாரம்பர்யமான பலகாரங்கள். எப்பயோ சின்ன வயசுல சாப்பிட்டது. கல்யாணமாகி சென்னைக்கு வந்தப்புறம் ஒண்ணும் கிடையாது. நம்ம ஹோட்டல்ல பண்ற சில ஸ்வீட்ஸ், காரம். அது போக ஏதாவது வேணும்ன்னா வெளில வாங்கிக்குவோம். அதனால அந்த பாரம்பர்யமான பலகாரங்களெல்லாம் செய்யறதும் இல்ல. சாப்பிடறதும் இல்ல...."

"எனக்கு அந்த பலகார வகைகளெல்லாம் நல்லா பண்ணத் தெரியும் அத்தை. நான் செஞ்சுத் தரேன். 'மந்த்ரா’ன்னு ஒரு கடலை எண்ணெய் வந்திருக்கு. பலகாரம் பண்றதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு.


அதிலதான் நான் பலகாரம் செய்வேன். நம்ப வீட்ல 'இதயம்’ வாங்கறீங்க. அதை பொரியல், சட்னி, தோசை, சாம்பார், குழம்புக்குப் பயன்படுத்திட்டு, பூரி, மத்த பலகாரமெல்லாம் 'மந்த்ரா’வுல பண்ணலாம் அத்தை...."

"அடுத்த மாசம் லிஸ்ட் போடும்போது 'இதயம்’ கூட சேர்த்து 'மந்த்ரா’ வையும் எழுதிடு..."

"சரி அத்தை. துணிமணி அடுக்கற வேலை முடிஞ்சுடுச்சு. நீங்க தினமும் சாப்பிடற மாத்திரைகள் எல்லாம் ஞாபகமா எடுத்து வச்சுக்கோங்க அத்தை."

"நல்ல வேளை. ஞாபகப்படுத்தின. மறந்துட்டு போய், போன இடத்துல முழிச்சுக்கிட்டு நிப்பேன். உங்க மாமாகிட்ட வேற திட்டு வாங்கணும்." சொல்லியபடியே மருந்து அலமாரியிலிருந்து மாத்திரைகளை எடுத்து வைத்தாள் கமலா.

"தலைவலி தைலம், கண்ணுக்குப் போடற சொட்டு மருந்து கூட மறக்காம எடுத்து வச்சுக்கோங்க அத்தை. தேவைப்படற மாத்திரைகள் லிஸ்ட் போட்டு வாங்கிக்கலாம்."

"சரிம்மா. மருந்து சீட்டைப் பார்த்து எடுத்துத் தரேன். நீயே எழுதிடு."

"சரிங்க அத்தை."

இதற்குள் அர்ச்சனாவின் மொபைல் போன் பாட்டு பாடி அழைத்தது. அர்ச்சனா எடுத்தாள். நம்பரைப் பார்த்தாள்.

"அப்பா..."

"என்னம்மா? எப்படி இருக்க? சந்தோஷமா இருக்கியா?"

"இருக்கேன்ப்பா..."

"என்னம்மா... சந்தோஷமா இருக்கியான்னு கேட்டா... இருக்கேன்ப்பான்னு சொல்ற... சந்தோஷமா இருக்கேன்னு சொல்லலியே..."

"அது... அது... ஒண்ணுமில்லப்பா… கொஞ்சம் வேலையா இருந்தேன். அதான் அவசர அவசரமா பேசினேன். நீங்க எப்படிப்பா இருக்கீங்க? அண்ணா ஃபோன் பண்ணினானா? எப்பிடி இருக்கானாம்? எனக்கு அவன் ஃபோன் போட்டு பத்து நாளாச்சுப்பா."

"ஒவ்வொரு கேள்வியா கேக்காம ஒட்டு மொத்தமா கேக்கறியேம்மா. நான் நல்லா இருக்கேன்மா. நீ நல்லதொரு குடும்பத்துல நல்லபடியா வாழற நிம்மதிதான் என்னை வாழ வைக்குது. உன்னோட வாழ்க்கைதான் என் ஜீவநாடி. உன் மேல ஒரு துரும்பு பட்டாக் கூட என் ஜீவன் போயிடும்மா."

"இப்படியெல்லாம் பேசாதீங்கப்பா. நான் நல்லா இருக்கேன். சந்தோஷமா இருக்கேன். என்னைப் பத்தி கவலையே படாதீங்கப்பா. அண்ணா நல்லா இருக்கானாமா?"

"அவன் நல்லா இருக்கானாம். நீ இல்லாம நம்ம வீடு வெறிச்சோடிக் கிடக்கு. ஹாஸ்டல்ல உன் படிப்பை முடிச்சுட்டு ஆறு மாசம் என் கூட இருந்தியே... அதனால இப்ப உன்னோட பிரிவு ரொம்ப கஷ்டமா இருக்கு..." கனகசபையின் குரல் கம்மியிருந்தது.

"அழறீங்களாப்பா? நான் வேணா அவர்கிட்ட கேட்டுட்டு அங்க வந்து உங்க கூட கொஞ்சநாள் இருக்கட்டுமாப்பா?"

"சச்ச... புதுசா கல்யாணம் ஆன பொண்ணு நீ... புருஷனை விட்டுட்டு இங்க வர்றதெல்லாம் சரியில்ல. நம்ம வீட்ல விசேஷம்னா ரெண்டு பேரும் சேர்ந்து வாங்க. எனக்கு ஒரு கஷ்டமும் இல்லம்மா.

கடையில அந்தப் பொண்ணு கல்பனா உதவியா இருக்கா. வீட்ல ஜெயம்மா நேரத்துக்கு சமைச்சுக் குடுத்துடறா. ஊர்க்காரியம்னு கோயில், விழான்னு கூப்பிடறாங்க. போனா பொழுது ஓடிடுது..."

"சரிப்பா. நானே உங்ககிட்ட ஒரு விஷயம் சொல்லணும்னு இருந்தேன்ப்பா. அத்தையும், மாமாவும் கோவில் யாத்திரை போறாங்க. அவங்க வர்றதுக்கு ஆறு மாசம் ஆகுமாம். அத்தை இல்லாம எனக்குத்தான் பொழுது போகாது..."

"அதான் மாப்பிள்ளை இருக்கார்லம்மா?"

"அ... அ... ஆமாம்ப்பா. அவர் இருக்கார்....."

'அவர் இருக்கறது மட்டுமில்லப்பா. என் மனசை அறுக்கறாரே’ அவளது மனக்குரல் ஒலித்தது. நெஞ்சம் வலித்தது.

கனகசபையிடம் சமாளித்துப் பேசிவிட்டு மொபைல் போனை அடக்கி வைத்தாள் அர்ச்சனா.

13

யில் நிலையம். பெட்டி, படுக்கை என்று ஏராளமான சாமான்கள் இருந்தபடியால் ட்ராலியில் ஏற்றிக் கொண்டு வந்தான் தியாகு. முருகேசனும், கமலாவும் யாத்திரைக்குப் புறப்படுவதால் அவர்களை வழியனுப்ப வந்திருந்தனர் தியாகுவும், அர்ச்சனாவும்.

அர்ச்சனாவை ஸ்டேஷனுக்கு அழைத்து வருவதில் சிறிதும் உடன்பாடில்லாதிருந்தான் தியாகு.

கமலா வற்புறுத்தவே, வேறு வழியின்றி அவளையும் உடன் அழைத்து வந்தான்.

ஸ்டேஷனில் சரியான கூட்டம். பிரயாணிகளைத் தவிர்த்து, திண்பண்டம், தண்ணீர், குளிர்பானங்கள், பத்திரிகை போன்றவற்றை விற்பனை செய்யும் விற்பனையாளர்கள் நெடுக நடந்துக் கொண்டிருக்க, கையில் சுமைகளுடன் தங்கள் இருக்கை உள்ள ரயில் பெட்டியைத் தேடி, பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தனர் சில பயணிகள். சிறு குழந்தைகளை ஜாக்கிரதையாகப் பிடித்துக் கொண்டு மூச்சு வாங்க, வேக நடை போட்டுக் கொண்டிருந்த தாய்மார்கள் ஒரு பக்கம்.

அத்தனை பேருக்கும் எத்தனையோ காரணங்கள் வெளியூர் போவதற்கு. யாரோ முன்னே பின்னே முகம் தெரியாத மனிதர்களைப் பார்க்கக்கூடிய பொது இடங்களில் ஒன்று ரயில் நிலையம்.

பெரும்பாலானோர் வேலை நிமித்தமாகவும், உறவினர் ஊர்களுக்கு செல்வதுமாகவும், நோய் காரணமாக மருத்துவ வசதி பெறுவதற்காகவும் போன்ற பல்வேறு காரணங்களுக்குப் பயணத்தை மேற்கொள்ள, வேலை வெட்டி இல்லாத கல்லூரிக் காளைகள், கலர் கலரான கன்னிப் பெண்களைக் கண்டுகளிக்கும் கண்ணோட்டத்தோடு வந்து வேடிக்கை பார்த்தபடி நின்றனர்.

அவர்களில் சிலர், மிக அழகாய் 'பளிச் என்று காணப்பட்ட அர்ச்சனாவை ரசித்துக் கொண்டிருந்தனர். கண்களால் அவளது அழகை கைது செய்து மானசீகமாகத் தங்கள் கைகளால் அவளுக்கு விலங்கு பூட்டியபடி கனவில் மிதந்தனர்.

இதைக் கவனித்த தியாகு, வெகுண்டான். சினம் கொண்டான். பற்களைக் கடித்தான்.

அர்ச்சனாவின் அருகே வந்தான். மற்றவர்களுக்குக் கேட்டு விடாமல் மெதுவாகப் பேசினான்.

"எல்லாப் பயலுகளும் உன்னைத்தான் 'ஸைட்’ அடிக்கறானுங்க." தியாகு கோபமாகப் பேசினாலும் அதைக் கேட்டு சிரிப்புதான் வந்தது அர்ச்சனாவிற்கு. அடக்கிக் கொண்டாள்.

'வாலிப வயசுல, பொண்ணுக பையன்களைப் பார்க்கறதும், பையனுக பொண்ணுகளைப் பார்க்கறதும் இயல்பான விஷயம்தானே... இதுவும் அதைப் போன்ற ஒரு சாதாரண சமாச்சாரம். என்னை கல்லூரி மாணவியா நினைச்சு 'ஸைட்’ அடிக்கறானுங்க. இதுக்குப் போய் இவர் ஏன் இத்தனை கோபப்படறாரு? இவரும் அந்த காலேஜ் பருவத்தையெல்லாம் தாண்டி வந்தவர்தானே’ எண்ணங்கள் மேலும் உண்டாக்கிய சிரிப்பை அடக்க பெருமுயற்சி எடுக்க வேண்டி இருந்தது.

அர்ச்சனா உள்ளுக்குள் உதிர்த்த புன்னகையை, அவளது முகம் லேசான சிரிப்பை வெளிப்படுத்தி, அவளைக் காட்டிக் கொடுத்து விட்டது. இதைப் பார்த்து விட்ட தியாகு முறைத்தான்.

"அவனுங்க உன்னை ரசிக்கறது உனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கோ?..."

"சந்தோஷமாவும் இல்ல.... சங்கோஜமாவும் இல்ல.... எங்கயும், எப்பவும் நடக்கறதுதானே இது...."

"எங்கயோ எப்பவோ நடந்ததெல்லாம் கிடக்கட்டும். இனி இங்கயோ எங்கேயுமோ இதெல்லாம் நடக்கக் கூடாது."

"அதுக்கு நான் என்ன பண்ண முடியும்?"


"என்ன பண்ணனும்னு நான்.. யோசிக்கறேன்.... சரி சரி அம்மா அப்பா ஊருக்குக் கிளம்பற நேரம் சர்ச்சை பண்ணிக்கிட்டிருக்காதே. கடுமையான குரலில் அவளிடம் பேசிவிட்டு, கமலாவிடம் திரும்பினான்.

"ட்ரெயின் கிளம்பப் போகுதும்மா. ஏறிக்கோங்க. அப்பா, நீங்களும் ஏறுங்க. பணம் இருக்கற பையை ஜாக்கிரதையா வச்சுக்கோங்க. பத்திரமா போயிட்டு வாங்கப்பா. அம்மா... மாத்திரையெல்லாம் தவறாம சாப்பிடுங்கம்மா..."

"சரிப்பா. அர்ச்சனா தனியா இருப்பா. நீ கொஞ்சம் நைட்ல சீக்கிரமா வீட்டுக்கு வந்துடுப்பா."

"சரிம்மா."

"அர்ச்சனா... கிளம்பறேன்மா. நேரத்துக்கு சாப்பிடு. பொன்னியை துணைக்கு வச்சுக்க. நாங்க ஊர்ல இருந்து வர்றது வரைக்கும் பொன்னியை நம்ம வீட்டோட தங்கிக்கச் சொல்லு.  வரட்டுமா?"

"சரி அத்தை. நல்லபடியா போயிட்டு வாங்க." ரயில் கிளம்பியது. புஸ் புஸ் என்று மெதுவாக நகர ஆரம்பித்தது.

ரயில் நகர்ந்த அடுத்த நிமிடம் அர்ச்சனாவின் கையைப் பிடித்து இழுத்துக் கொண்டு வெகு வேகமாக நடந்தான். பொதுவாக கணவன், மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கும்பொழுது, அது சுக அனுபவமாக இருக்கணும். அர்ச்சனாவின் கணவனான தியாகு, அவளது மனைவியான அர்ச்சனாவின் கையைப் பிடித்துக் கொண்டு நடந்தான். ஆனால் அதன் சுகானுபவம்தான் இல்லை.

அவனுக்கு ஈடு கொடுத்து வேகமாக நடக்க மிகுந்த சிரமப்பட்டாள் அர்ச்சனா. காரில் ஏறும்வரை கஷ்டப்பட்டு நடந்து சென்றாள். கார் கிளம்பியது. கோபமாக காரைக் கிளப்பிய வேகத்தில் புழுதி எழும்பியது.

14

வீடு வந்து சேரும் வரை 'உர்’ என்று இருந்தான் தியாகு. முதல் முறையாக அவனுடன் வெளியில் வந்த அனுபவம் எந்த மகிழ்ச்சியையும் அளிக்கவில்லை. அவனது நடவடிக்கைகள் அவ்விதம் இருந்தன. அழகான தன் மனைவியை அடுத்தவர்கள் பார்த்து விடக்கூடாது, ரசித்து விடக்கூடாது என்பது சில ஆண்களின் இயல்பு. ஆனால் அதில் ஒரு ஆழ்ந்த அன்பு இருக்கும். ஆனால் அது போன்ற அன்பு இல்லாமல் ஒரு கள்ளத்தனமான உணர்வும், கடுமையான உணர்வும் கொண்டு மனைவியை இழிவாக நடத்தும் கணவனாக நடந்துக் கொண்டான் தியாகு.

வீட்டிற்கு வந்ததும் இரவு உணவிற்கான தயாரிப்பில் இறங்கினாள் அர்ச்சனா. இட்லி தட்டுகளில் மாவை ஊற்றி, மிக மிருதுவான இட்லிகளை செய்தாள். தக்காளி சட்னி செய்து, அதைத் தாளித்து வைத்தாள்.

சாப்பிட உட்கார்ந்தான் தியாகு. மேஜை மீது தட்டு எடுத்து வைத்தாள். இட்லிகளைப் பரிமாறினாள். இட்லிகள் மீது நல்லெண்ணெய்யை ஊற்றி, தட்டின் ஒரு ஓரத்தில் தக்காளிச் சட்னியை வைத்தாள்.

சாப்பிட ஆரம்பித்த தியாகு, தக்காளிச் சட்னியின் சுவையுடன் கூட்டணி அமைத்துக் கொண்ட மென்மையான இட்லிகளை ரசித்து, சாப்பிட்டான். அர்ச்சனாவிற்கு இருக்கிறதா இல்லையா என்று கூட பார்க்காமல் அங்கிருந்த பன்னிரண்டு இட்லிகளையும் உள்ளே தள்ளினான்.

சுவைத்து சாப்பிட்ட அவனது பாராட்டுகளை பெரிதாக எதிர்பார்க்காவிடினும் இதயத்தின் ஓரத்தில் ஒரு சின்ன எதிர்பார்ப்பு இருக்கத்தான் செய்தது. அதனால் அவளையறியாமல் அவனது முகத்தைப் பார்த்தாள். ம்கூம். உணர்வுகளின் எந்த வெளிப்பாடும் இல்லாமல் அவன் பாட்டுக்கு எழுந்து, கை கழுவச் சென்றான்.

பெருமூச்சோடு மேஜை மீதிருந்தவற்றை ஒழுங்கு செய்துவிட்டு சமையலறைக்கு போனாள். அங்கிருந்த சில சின்ன வேலைகளை முடித்துவிட்டு மாடியறைக்கு சென்றாள்.

அங்கே அவளுக்கு முன் வந்து கட்டிலில் படுத்திருந்தான் தியாகு. பத்திரிகை ஒன்றை படித்துக் கொண்டிருந்தான்.

"இனிமேல் நீ சுடிதார் போடாதே..." அவன் கூறியதும் அவனைக் கூர்மையாகப் பார்த்தாள் அர்ச்சனா.

"என்ன பார்க்கற? இனிமே புடவை மட்டும் கட்டு. சுடிதார் போடாதே..."

"ஏன்?"

"ஏன், எதுக்குன்னெல்லாம் கேள்வி கேட்கக் கூடாது. போடதன்னா 'சரி’ன்னு கேளேன்..."

"பாவாடை, தாவணி, புடவை உடுத்தற கலாச்சாரம் மாறி இப்ப சுடிதார்ங்கற ஒரு பொதுவான உடைன்னு ஆகிட்ட இந்தக் காலக் கட்டத்துல நீங்க சொல்றது புரியாத புதிரா இருக்கு. அதனாலதான் கேக்கறேன். சுடிதார் ஏன் போடக்கூடாதுன்னு?"

"ரயில்வே ஸ்டேஷன்ல பசங்க உன்னை ஸைட் அடிச்சது எதனால? இந்த சுடிதார்ல நீ கல்யாணமாகாத பொண்ணுன்னு நினைச்சதுனாலதான்..."

"இதே நான், புடவை கட்டிட்டு வந்திருந்தா? அவனுங்க என்னைப் பார்த்திருக்க மாட்டாங்களா?"

"பார்த்திருப்பானுங்கதான். ஆனால் அவனுக உன் முகத்தை மட்டும்தான் பார்த்திருப்பானுங்க. இந்த ஏறி இறங்கற வளைவு, நெளிவுகளையும் சேர்த்துல்ல பார்க்கறானுங்க... பார்க்கறானுங்களா.... கண்ணாலயே கற்பழிக்கறானுங்க...."

"ச்சீ... ஏன் இப்படி பேசறீங்க?"

"பேசும்போது வலிக்குதுல்ல? உன்னை அவனுக பார்க்கும்போது எனக்கும் இப்பிடித்தான் வலிக்குது. இந்த சுடிதார் செட்டையெல்லாம் மூட்டைக் கட்டிப் போட்டுட்டு புடவையை மட்டுமே கட்டப்பாரு."

"என்னைக் கட்டிக்கிட்ட நீங்க சொல்றதுக்கெல்லாம் நான் கட்டுப்பட்டுதான் நடந்துக்கறேன். ஆனா என்கிட்ட எந்த உரிமை எடுத்துக்கிட்டு எனக்கு கட்டுப்பாடு விதிக்கறீங்க?"

"அதான் சொன்னியே... உன்னைக் கட்டிக்கிட்டேன்னு..."

"கட்டின பொண்டாட்டின்னா கட்டுப்பெட்டியா இருக்கணும்னு ஏன் நினைக்கறீங்க?"

"இங்க பாரு... உன் கூட வாக்குவாதம் பண்றதுக்கெல்லாம் நான் தயாரா இல்லை. நான் சொன்னா சொன்னதுதான்."

பதில் ஏதும் கூறாமல் குளியலறைக்குச் சென்று இரவு உடையில் தன் உடம்பைத் திணித்துக் கொண்டு வந்தாள். கட்டிலில் படுத்தாள். பசி, வயிற்றை சுருட்டியது. தனக்கு மிச்சமேதும் வைக்காமல் அவனே சாப்பிட்டு முடித்ததை நினைத்துப் பார்த்தாள். வெறுப்படைந்தாள்.

'கணவன்-மனைவி என்றால் நீ பாதி, நான் பாதி என்பார்களே அதெல்லாம் சும்மாதானா? 'நீ சாப்பிட்டியா’ன்னு கூட ஒரு வார்த்தை கேட்கும் மனநிலை இல்லாத இவரெல்லாம் ஒரு புருஷன்...’ அவளது மனக்குரல் ஒலித்தது. நெஞ்சம் வலித்தது.

எழுந்தாள். 'கீழே ஃப்ரிட்ஜில் ஏதாவது பழங்கள் இருந்தால் சாப்பிடலாம்’ என்ற எண்ணத்தில் எழுந்தவளைப் பிடித்து இழுத்தான் தியாகு.

அவனது கையைத் தட்டிவிட முயற்சித்த போதும் விடாப்பிடியாகப் பிடித்து, படுக்கையில் தள்ளினான். பசியும், அதனால் ஏற்பட்ட களைப்பும் சேர்ந்து அவளைக் கஷ்டப்படுத்தியது. அவன் இஷ்டப்படி அவளைத் தன் ஆசை தீர அனுபவித்தான் தியாகு.  பழத்தைத் தின்று பறவை துப்பிய கொட்டை போல அயர்ச்சியுடன் கண்களை மூடிய அர்ச்சனா அப்படியே தூங்கிப் போனாள்.

தூக்கத்தில் வரும் கனவில் கூட அவள் நினைக்கவில்லை இந்த உடல் வலியும், மன வலியும் சேர்ந்து தன்னை எப்படியெல்லாம் வதைக்கப் போகிறது என்று.


15

மையல்காரப் பெண்மணி ஜெயம்மாவிற்கு ஒத்தாசையாக இருக்கட்டும் என்று வள்ளி எனும் சின்னப் பெண்ணை வேலைக்கு அமர்த்தியிருந்தார் கனகசபை. வீடு பெருக்க, துடைக்க அவரது துணிமணிகள் துவைக்க, சமையல்காரப் பெண்மணிக்கு உதவி செய்வதற்கு என்று அவளை ஏற்பாடு செய்து இருந்தார். ஜெயம்மாவுக்கு வெங்காயம் வெட்டிக் கொடுப்பாள். பூண்டு உரித்துக் கொடுப்பாள். மஸாலா அரைத்துக் கொடுப்பாள்.

மிஞ்சிய நேரத்தில், வீட்டைச் சுற்றியுள்ள சிறிய தோட்டத்தில் வளர்க்கப்படும் செடி கொடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிப் பராமரிப்பாள். அர்ச்சனா விதைத்து, முளைவிட்டு, தளிர்விட்டு, ஆசையாக வளர்த்து வந்த பூஞ்செடிகளை மிகவும் அக்கறையுடன் பராமரிப்பாள்.

கனகசபை, தன் மகள் அர்ச்சனா, ஆசைப்பட்டு வளர்த்த அந்தச் செடிகள் சிறிதும் வாடி விடக்கூடாது என்பதில் அதிக கவனம் கொண்டு, வள்ளியிடம் தினமும் ‘அந்த செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றினியா? உரம் போட்டியா?’ என்று கேட்டுக் கொள்வார். அவரும் அவ்வப்போது அவற்றைப் பார்த்துக் கொள்வார். மகள் வளர்த்த செடிகள் வாடி விடக் கூடாது என்பதில் அதிக அக்கறை கொண்ட கனகசபை, தன் மகள், புகுந்த வீட்டில் புருஷனின் கைகளில் வாடிய பூங்கொடியாய் கிடக்கிறாள் என்பதை அறிந்தால்....?

கனகசபையின் வீட்டிற்கு பக்கத்து இடம் நீண்ட காலமாக காலி இடமாக இருந்தது. அதில் புதிய வீடு கட்டி முடித்து மின்சார சம்பந்தமான வேலைகள் நடந்து கொண்டிருந்தன.

கனகசபையின் தோட்டத்தில் இருந்து பார்த்தால் அந்த கட்டிடத்தில் நடப்பவை எல்லாம் தெரியும். அந்தக் கட்டிடத்திலிருந்து பார்த்தால் கனகசபையின் தோட்டத்தில் நடப்பவை தெரியும்.

மின்சாரப் பணிக்கென்று அமர்த்தப்பட்ட பல தொழிலாளர்களுள் ஒருவன் கந்தன். தோட்டத்தில் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தாள் வள்ளி. அவன் பணிபுரியும் துறை சம்பந்தப்பட்ட மின்சாரம் கூட அவனை இந்த அளவிற்குத் தாக்கியதில்லை. அவளது கண்ணோடு, கந்தனின் கண்கள் கலக்கும்பொழுது அவனுக்கு 'ஷாக்’ அடித்தது. ஒரு நாள் அவள் தோட்டத்துப்பக்கம் வருவதற்கு தாமதமானால் 'லோ வோல்டேஜ் கரண்ட்’ போல அவன் உள்ளம் தளர்ந்து போனான்.

நாள் முழுக்க வள்ளி தோட்டத்துப்பக்கம் வந்து அவனை பார்க்கவில்லையெனில் 'பவர் கட்’ ஆனது போல் கந்தனின் மனம் இருண்டு போனது.

அவனைப் பார்த்து வள்ளி, ஒரு புன்னகையை உதிர்த்தால் போதும். 'நூறு வாட்ஸ் பல்ப்’ பிரகாசமாக எரிவது போல அவனது முகம் ஜொலிக்கும்.

பட்டிக்காட்டுப் பெண்ணாக இருந்தாலும், கறுப்பு நிறம் கொண்டவளாய் இருந்த போதும் பளபளவென மின்னும் கன்னங்களுடன், கண்களில் ஒரு வசீகரமும், யௌவனமான மேனியும் வள்ளிக்கு அதிகப்படியான அழகு சேர்த்திருந்தது.

தோட்டத்துப்பக்கம் வரும் வள்ளியிடம் குடிப்பதற்கு தண்ணீர் கேட்கும் சாக்கில் வர ஆரம்பித்தான் கந்தன். நாளடைவில் இருவருடைய நெஞ்சங்களும் கலந்து கொண்டன. அதன் விளைவால் அடிக்கடி இருவரும் சந்தித்துக் கொள்ள ஆரம்பித்தனர். செடி, கொடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது போல அவளது நெஞ்சில் காதல் நீரூற்றைப் பொங்க விட்டாள் வள்ளி.

உள்ளம் தொட்டு பேசிக் கொண்டிருந்த அவர்கள், மெள்ள.... கை தொட்டு பேச ஆரம்பித்தார்கள். ஒரு ஞாயிறு அன்று வழக்கம் போல இருவரும் தங்களை மறந்து, ஒருவர் கைகளை ஒருவர் பிடித்தபடி பேசிக் கொண்டிருந்தனர்.

திடீரென கனகசபையின் குரல் இடிஇடித்தது போல் ஒலித்தது.

"ஏ வள்ளி..." குரல் கேட்டதும் கந்தன், வள்ளியின் கையை உதறிவிட்டு ஓடினான்.உடல் முழுவதும் நடுங்கியபடி நின்றாள் வள்ளி.

"என்ன பிள்ள.... இப்பிடி அசிங்கம் பண்ணிக்கிட்டு நிக்கற? கல்யாணம் கட்டிக்காம ஒருத்தன் ஒடம்பைத் தொட்டு பேசிக்கிட்டிருக்கியே? வெக்கமா இல்ல? மானம் கெட்ட கழுதை...."

"அய்யா என்னை மன்னிச்சுடுங்க அய்யா..." கனகசபையின் காலில் விழுந்து அழுதாள் வள்ளி.

"ஒழுக்கம் இல்லாத உனக்கு என் வீட்ல இடம் இல்லை. நீ கிளம்பு. இனி நீ வேலைக்கு வர வேண்டாம்."

"அய்யா..." மேலும் அழுதாள் வள்ளி.

கனகசபையின் கோபமான முகத்தைப் பார்த்து பயந்து விட்டாள்.

"ஜெயம்மா.... இவளோட துணிமணிகளை எடுத்துட்டு போகச் சொல்லு. அவ கணக்கைப் பார்த்து பணத்தை குடுக்கறேன். வாங்கிட்டு உடனே கிளம்பச் சொல்லு." கூறிவிட்டு துண்டை உதறி தோளில் போட்டபடி வெளியேறினார் கனகசபை.

வாசல் வரை வந்த அவரை வழிமறித்தாள் ஜெயம்மா. "ஐயா... ஏதோ சின்னஞ்சிறுசு. வயசுக் கோளாறுல இசகு பிசகா நடந்துக்கிட்டா. மன்னிச்சுடுங்கய்யா. அம்மா, அப்பா இல்லாத பொண்ணு. வளர்த்த மாமன்காரன் கொடுமையில துன்பப்பட்டவ நம்ம வீட்டுக்கு வந்தப்புறம்தான் கொஞ்சம் நல்லா இருக்கா..."

"போதும் ஜெயம்மா... நிறுத்திக்கோ. பொண்ணா பொறந்தவ, பாடையில போற வரைக்கும் ஒழுக்கமா இருக்கணும். கன்னிப் பொண்ணு கண்டவன் கூட கைதொட்டுப் பேசற கண்றாவியெல்லாம் என்னால சகிச்சுக்க முடியாது. ஒரு பொண்ணு தன் உயிரை விட மானத்தைத்தான் முக்கியமா நினைக்கணும். மதிக்கணும். நீ என்ன சொன்னாலும் சரி, இனிமே அவளுக்கு இந்த வீட்ல இடம் கிடையாது. அம்மா, அப்பா இல்லைன்னுதான் வீட்ல தங்க வச்சு வேலை போட்டுக் குடுத்து ஆதரவு குடுத்தேன். என் மூஞ்சியில கரி பூசிட்டா. இனிமே அவளுக்காக வக்காலத்து வாங்காத. நான் சொன்னா சொன்னதுதான்."

உறுதியான குரலில் தன் இறுதியான முடிவைக் கூறி விட்டு வெளியேறினார் கனகசபை.

16

ஞாயிறு காலை ஆறு மணி. குளித்து முடித்து எம்ப்ராய்டரி வேலை செய்த கறுப்பு ஷிஃபான் புடவையும், கறுப்பு ஜாக்கெட்டும் அணிந்திருந்தாள் அர்ச்சனா. தலைக்கு மருதாணி போட்டு அரைமணி நேரம் ஊற விட்டு, அதன்பின் ஷாம்பூ போட்டு குளித்த கூந்தல் இடுப்பிற்குக் கீழ் பக்கம் வரை நீளமாக தொங்கிக் கொண்டிருந்தது. இரண்டு காதோரங்களிலும் சிறிதளவு முடிக்கற்றையை எடுத்து க்ளிப் போட்டிருந்தாள். சேலையில் பூ தைத்திருந்த வண்ணத்தில் கண்ணாடி வளையல்களை அணிந்திருந்தாள். கண்ணாடி வளையல்களுக்கு இரண்டு ஓரங்களிலும் தங்க வளையல்களை அணிந்திருந்தாள். ஸ்டிக்கர் பொட்டும், கண்ணிற்கு 'ஐ லைனர்’ கொண்டு வரைந்திருந்த கலைநயமும் அவளது அழகிற்கு மேலும் மெருகூட்டியது.

கண்ணாடி முன் நின்று, தன் அழகை தானே ரசித்தாள். 'என் அழகை ஆராதிப்பவன் கணவனாக வருவான் என்று கனவு கண்டேன். என் அழகை ஆள்பவன் என் கணவராக அமைந்து விட்டார். கணவன் அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம். ஆனால் எனக்கு? இறைவன் கெடுத்த வரமாகிவிட்டதே? சில நொடிகள் அழகை ரசிப்பதற்குள் அவளது மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.       

மாடிப்படிகளில் இறங்கினாள். சமையலறைக்கு பக்கத்திலிருந்த சிறிய அறையில், பொன்னி அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். தினமும் தியாகு வருவதற்கு தாமதமாவதால் கமலா வரும்வரை பொன்னியை வீட்டோடு தங்கி இருக்கும்படி கூறி இருந்தாள். அர்ச்சனா வந்து எழுப்பும்வரை தூங்கிக் கொண்டிருப்பாள். அர்ச்சனா வந்து எழுப்பியதும் குளித்து விட்டு வருவாள்.


சமையலறைக்குள் வருவதற்கு முன் குளித்து, தலை வாரி விட்டுத்தான் வரவேண்டும் என்று கண்டிப்பாக கூறி இருந்தாள் அர்ச்சனா.

காலை டிபனுக்கு சப்பாத்தி பண்ணலாம் என்று கோதுமை மாவை எடுத்தாள். உப்பு, தண்ணீர் போட்டுப் மாவை பிசைந்தாள். மூடி வைத்தாள். உருளைக்கிழங்கை குக்கரில் வேக வைத்தாள். இதற்குள் பொன்னி வந்து நின்றாள்.

"இரண்டு பெரிய வெங்காயத்தை பொடியா நறுக்கு" பொன்னியிடம் கூறிவிட்டு குருமாவிற்குத் தேவையான மசாலாவை எடுத்தாள். மிக்ஸியில் போட்டாள்.

மிக்ஸி சுழன்றது. கூடவே அவளது நினைவுகளும் சுழன்றன.

'உருளைக்கிழங்கு குருமா செய்தால் அப்பா விரும்பி சாப்பிடுவார். நெஞ்சு வலி பிரச்னை வந்தபிறகு தேங்காய் சேர்க்கும் உணவு வகைகளை அடியோடு நிறுத்தி இருந்தாள் அர்ச்சனா. பூரியும், அர்ச்சனா தயாரிக்கும் உருளைக்கிழங்கு குருமாவும் என்றால் கனகசபைக்கு இரண்டு வயிறுகள் ஆகிவிடும். இப்போது வெறும் தக்காளி சட்னிதான். பூரி கிடையாது. சப்பாத்தி மட்டுமே என்றாகிப் போனது. ஜெயம்மா பக்குவமா வச்சுக் குடுக்கறாளோ இல்ல, தேங்காயை அரைச்சுப் போட்டுக் குடுத்துடறாளோ...’ நினைவுகளில் நீந்தியவள், பொன்னியின் குரல் கேட்டு மிக்ஸியை நிறுத்தினாள்.

"அக்கா... வெங்காயம் நறுக்கிட்டேன். வேற என்னக்கா செய்யணும்" பொன்னி கேட்டாள்.

"நாலு பச்சை மிளகாயைக் கிள்ளு. ரெண்டு தக்காளியை பெரிய துண்டா நறுக்கிடு. பத்து பல்லு பூண்டை உரிச்சு வச்சுடு."

கடகடவென்று அனைத்தையும் செய்து முடித்தாள் பொன்னி. அர்ச்சனா, ஸ்டவ்வில் குருமா செய்வதற்கு அடி கனமான பாத்திரத்தை வைத்தாள். சூடேற்றினாள். எண்ணெய் காய்ந்ததும் பட்டை, கிராம்பு போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு போட்டு வதக்கினாள். கூடவே அரைத்த மசாலாவையும் சேர்த்து வதக்கினாள். மசாலாவின் வாசனை சமையலறையை மீறி வீடு முழுவதும் பரவியது. மசாலா வதங்கியதும் சுடு தண்ணீர் ஊற்றி, வேக வைத்த உருளைக்கிழங்கை துண்டுகளாக்கிப் போட்டாள். உப்பு, காரப்பொடி, மஞ்சள் தூள் போட்டாள். கொதித்ததும் தீயை மிதமாக்கினாள். மிதமான தீயில் கொதிக்கும் குருமா பார்ப்பதற்கும் அழகாக இருந்தது. ஸ்டவ்வின் இன்னொரு பக்கத்தில் சப்பாத்தி இடுவதற்கு தோசைக்கல்லை காய வைத்தாள்.

"பொன்னி, சப்பாத்திக்கு மாவை தேய்ச்சுக் குடு."

"இதோ தேய்க்க ஆரம்பிச்சுட்டேன்கா."

பொன்னி தேய்த்துக் கொடுத்த மாவு வட்டங்களை ஒவ்வொன்றாகப் போட்டு மிருதுவான சப்பாத்திகளைத் தயாரித்தாள். 'ஹாட் கேஸில்’ போட்டு மூடி வைத்தாள். இதற்குள் சரியான பக்குவத்திற்கு வந்துவிட்ட குருமாவை, ஒரு சிட்டிகை கரம் மசாலா தூள், கொத்தமல்லித்தழை போட்டு இறக்கி வைத்தாள். தயாரித்தவற்றை மேஜை மீது எடுத்து வைப்பதற்கும், தியாகு சாப்பிட வருவதற்கும் சரியாக இருந்தது.

அதே சமயம் கையில் பெரிய பார்சல்களுடன் உள்ளே நுழைந்தான் அண்ணாதுரை.

"டே அண்ணா... வாடா வா...."

"அதான் வந்துட்டேன்ல. அப்புறமென்ன வா... வா...ன்னு அழைப்பு?"

"அட... அண்ணி! உங்களை கல்யாணத்தன்னிக்குப் பார்த்தது. முக்கியமான பிஸினஸ் டூர் போக வேண்டியதாயிடுச்சு. டூர் முடிச்சுட்டு அப்படியே ஷீரடி போய் சாயிபாபாவை தரிசனம் பண்ணிட்டு வந்தேன். உங்க ஒவ்வொருத்தருக்காகவும் சேர்த்து சாமி கும்பிட்டுட்டு வேண்டிக்கிட்டு வந்தேன். ஆன்ட்டி, அங்கிள் ரெண்டு பேரும் யாத்திரை போயிட்டாங்களாம். இதோ இவன்தான் நேத்து போன் பேசும்போது சொன்னான். புதுமண தம்பதி தனியா எஞ்சாய் பண்ணட்டுமேன்னு பெரிசுக யாத்திரை கிளம்பிட்டாங்க. இப்ப நான், சிவபூஜையில கரடி மாதிரி குறுக்க வந்துருக்கேன். ஸாரி, என் உயிர் நண்பன் இவனைப் பிரிஞ்சு இருக்க என்னால முடியல. இவனை ரொம்பவே மிஸ் பண்ணிட்டேன். இவன் எப்படி? உங்களை நல்லா கவனிச்சுக்கறானா? சும்மா உதார் விடுவான். பயந்துடாதீங்க. அட, சப்பாத்தி, குருமா வாசனை ஆளைத் தூக்குது? உங்க சமையலா? ஒரு புடி புடிச்சுட வேண்டியதுதான் இன்னிக்கு. என்னடா இது இவன் பாட்டுக்கு பேசிக்கிட்டே இருக்கானேன்னு யோசிக்கறீங்களா? நான் இப்பிடித்தான். வாய் ஓயாம பேசிக்கிட்டே இருப்பேன். நான், எங்கம்மா அப்பாவுக்கு கடைசி பையன். அதனால ரொம்ப செல்லம். சொகுசா வளர்ந்துட்டேன். நண்பன்னு இவன் மட்டும்தான். மத்தபடி வேற யார்கிட்டயும் இந்த அளவுக்கு நெருங்கிப் பழகறதில்ல. இதுதான் என்னோட அறிமுகம். நீங்க எனக்கு புதுமுகம். இப்ப உங்களைப் பத்தி சொல்லுங்களேன்...."

நீளமாய் பேசி முடித்த அண்ணாதுரை வாயை மூடினான்.

மடை திறந்த வெள்ளம் போல பேசிய அண்ணாதுரையை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

"நான் பிறந்து வளர்ந்த ஊர் வேலூர். அப்பா ஜவுளிக்கடை நடத்தறார். நான் சின்னப்பிள்ளையா இருந்தப்பவே எங்கம்மா இறந்து போயிட்டாங்க. எனக்கு எல்லாமே எங்க அப்பாதான். ஒரு அண்ணன். பேர் சரவணன். டெக்ஸ்டைல் டெக்னாலஜி படிக்க லண்டன் போயிருக்கான். நான் டிகிரி முடிச்சுட்டு அப்பாவுக்கு உதவியா இருந்தேன். கல்யாணமாகி இங்கே வந்திருக்கேன்."

"நல்லா சமைப்பீங்க போலிருக்கே."

"நீங்க சாப்பிட்டுப் பார்த்துட்டு சொல்லுங்களேன்."

"அதுக்கு முன்னால ஷீரடியில இருந்து நான் வாங்கிட்டு வந்ததையெல்லாம் குடுத்துடறேன். அதுக்கப்புறம் சாப்பிடறேன்" என்றவன் ஒரு பார்சலில் இருந்து மார்பிளால் செய்யப்பட்ட பெரிய சாயிபாபா சிலையை எடுத்தான். அர்ச்சனாவிடம் கொடுத்தான். பிரசாதம், மந்திர பாக்ஸ், காலண்டர் அணைத்தையும் அன்போடு அவளிடம் கொடுத்தான்.

"தாங்க்ஸ்" பெற்றுக் கொண்ட அர்ச்சனா, அவற்றை பூஜையறையில் வைத்து விட்டு வந்தாள்.     

அதன்பின்னர் அவர்கள் இருவருக்கும் பரிமாறினாள்.

"ஆஹா.... இந்த மாதிரி உருளைக்கிழங்கு குருமாவும், சாஃப்ட்டான சப்பாத்தியும் இதுவரைக்கும் நான் சாப்பிட்டதே இல்ல. அண்ணி..... சூப்பர். சமையல் செஞ்ச உங்க கைக்கு தங்க வளையல் பண்ணி போடணும்."

"தாங்க்ஸ்ங்க அண்ணாதுரை."

"இந்த 'ங்க’ 'போங்க’ன்னெல்லாம் பேச வேண்டாமே ப்ளீஸ்....  உங்க அண்ணன் தம்பியா இருந்தா பேரைச் சொல்லி கூப்பிட மாட்டிங்களா?  அது மாதிரி அண்ணாதுரை, 'நீ’... 'வா’.... 'போ’ன்னே கூப்பிடுங்க."

"முயற்சி பண்றேன்... ஷீரடியில நடக்கற ஆரத்தியில கலந்துக்கிட்டிங்களா?"

"பின்னே, மூணு மணிநேரம் காத்திருந்தில்ல ஆரத்தியில கலந்துக்கிட்டேன். எப்பிடியும் மூணு மாசத்துக்கொரு தடவை ஷீரடி போயிட்டு வந்தாத்தான் மனசுக்கு நிம்மதியா இருக்கும்."

"இந்த சின்ன வயசுலயே இவ்வளவு பக்தியா இருக்கீங்களே..."

"பக்தியா இருக்கறதுக்கு வயசு முக்கியம் இல்ல அண்ணி. மனசுதான் முக்கியம்..."

"சரி சரி... இன்னும் ரெண்டு சப்பாத்தி போட்டுக்கோங்க...."

"யப்பாடா வயிறு ஃபுல். இப்பிடியெல்லாம் சமைச்சுக் குடுத்தா ஒரே மாசத்துல அஞ்சு கிலோ வெயிட் எறிடும்..."


அண்ணாதுரை தன் சமையலைப் பாராட்டிப் பேசியதைக் கேட்டு முகம் மலர, வாய்விட்டு சிரித்தாள் அர்ச்சனா. சட்டென்று அவளுக்கு நினைவில் ஒரு பொறி தட்டியது.

'நானா....? நானா இப்படி... வாய் விட்டு... மனம் விட்டு சிரிப்பது.... எத்தனை நாளாயிற்று இப்படி நான் சிரிச்சு... ‘ யோசனைக்குப் போய் விட்டாள் அர்ச்சனா.

"அண்ணி.... அண்ணி....."

அண்ணாதுரை அழைத்ததும் நினைவிற்கு வந்தாள் அர்ச்சனா.

"இதோ போய் காபி போட்டுக் கொண்டு வரேன்."

அர்ச்சனா சமையலறைக்கு ஓடினாள்.

"என்னடா தியாகு... பேசவே மாட்டேங்கற?"

"அதான் நீயும், அவளும் வாய் ஓயாம பேசிக்கிட்டிருக்கீங்களே...."

இதற்குள் மணக்கும் காபியை அழகிய கப் அண்ட் சாஸர் செட்டில் ஊற்றி ட்ரேயில் வைத்து எடுத்து வந்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

காபியை இருவருக்கும் எடுத்துக் கொடுத்தாள்.

"அண்ணி... சிம்ரன் மாதிரி அழகா இருக்கீங்க...."

'சுர்’ரென்று சூடேறினான் தியாகு. உணர்வுகளை வெளிக்காட்டிக் கொள்ளாமல் அவனது முகம் இறுகியதை அர்ச்சனா மட்டும் கவனித்தாள்.

"அண்ணா... ஏற்கெனவே ஹோட்டலுக்குப் போறதுக்கு லேட்டாயிடுச்சு. வா. கிளம்பலாம்..."

"நீ வேணும்ன்னா போடா... நான் இன்னிக்கு இங்கதான் 'டேரா’. காலை டிபன் சாப்பிட்டாச்சு. இனி மத்யான சாப்பாடு அண்ணி கையால் சாப்பிட்டுட்டுதான் வேற வேலை...."

இந்த பதிலை எதிர்பார்க்காத தியாகு, தடுமாறினான். அவனது முகம் மாறியதைக் கவனித்த அர்ச்சனா மனதிற்குள் சிரித்துக் கொண்டாள்.

"சரி... சரி... நானும் இருக்கேன். வா... நாம மாடிக்குப் போகலாம்..."

"நான் எங்கயும் வரலை. நீயும் இங்கேயே இரு. நாம மூணு பேரும் சேர்ந்து இருக்கலாம். ஜாலியா அரட்டை அடிக்கலாம்."

"சரி" சுரத்தில்லாமல் பதில் கூறினான் தியாகு.

மொபைல் போனில் எண்களை அழுத்தினான். அது உயிர் பெற்றதும் உரையாடினான்.

"ஹலோ.... பத்மநாபா... நான் இன்னிக்கு ஹோட்டலுக்கு வர மாட்டேன். நீயே பார்த்துக்க."

மறுமுனையில் பதில் வந்ததும் தன் மொபைல் போனை அடக்கி வைத்தான். உயிர் நண்பன் அண்ணாதுரை. அவன் அர்ச்சனாவிடம் பேசுவதில் மனம் துணுக்குற்றான் தியாகு.

'அம்மா, ஊருக்கு போயிட்டதுனால இந்த பிரச்னை... அவனது மனம் உளைந்தது. அர்ச்சனாவின் மனம் மகிழ்ந்தது.

பேச்சு பேச்சு என்று தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தான் அண்ணாதுரை.

கல்மிஷம் சிறிதும் இல்லாமல் வெள்ளையான மனதுடன் சிரித்துச் சிரித்துப் பேசினான். அர்ச்சனா சமையலறைக்குள் நுழைந்தாலும் அவள் பின்னாடியே அவனும் போனான். சமையல் மேடைப் பக்கம் ஏறி உட்கார்ந்துக் கொண்டான். அர்ச்சனா சமைத்து முடிக்கும் வரை கலகலப்பாக அவளுடன் பேசிக் கொண்டே இருந்தான்.

அர்ச்சனாவிற்கு மனசெல்லாம் இறக்கைகள் முளைத்து, சிறகடித்துப் பறப்பது போல் ஆனந்தமாக இருந்தது. தினமும் ஒரே மாதிரியாக போய்க் கொண்டிருந்த வாழ்க்கையில், அவளது உள் மன உணர்வையும், அந்த உணர்வு அளித்த சந்தோஷத்தையும் சற்று நேரத்திற்கேனும் வெளிக் கொண்டு வந்த அண்ணாதுரையின் அன்பும், பாசமும், பழகும் விதமும், அவளது மனச்சோர்வை அடியோடு நீக்கியது. உள்ளம் துள்ளியது.

இவர்கள் இருவரது உரையாடலிலும் ஏனோ தானோவென்று அவ்வப்போது கலந்து கொண்டாலும் தியாகுவின் மனதிற்குள் ஒரு மிருகம் உயிர் பெற்று எழுந்தது.

'அண்ணி’ 'அண்ணி’ என்று பேசும் அண்ணாதுரையிடம் சிரித்துப் பேசும் அர்ச்சனாவைக் கண்டு அவனது உள்ளம் எரிந்தது.

இதுபோல் வேறு எவருடனாவது அர்ச்சனா பேசி இருந்தாலோ பழகி இருந்தாலோ எரியும் உள்ளத்தில் மேலும் கோபத்தீயை மூட்டிக் கொண்டு அவளையும் எரித்திருப்பான்.

ஆனால் பழகுவது... தன் உயிர் நண்பன்! ஏதும் செய்ய வழியின்றி தவித்தான். அவனது தவிப்பைப் புரிந்து கொண்ட அர்ச்சனா அவனுக்காகப் பரிதாபப்பட்டாள்.

மாலை நேர டிபன், காபி வரை கூடவே இருந்து சுவைத்துச் சாப்பிட்டான் அண்ணாதுரை. அர்ச்சனாவின் மனதை பாராட்டு மழையால் நனைத்தான். கிளம்பவே மனமின்றிப் புறப்பட்டுச் சென்றான்.

“எந்த விதத்திலும் ரத்தத் தொடர்பே இல்லாத ஒரு மனிதன்! முதல் பழக்கத்திலேயே தன் மனதில் உள்ள ஒட்டு மொத்த அன்பை எல்லாம் அள்ளித் தெளித்துப் பழகும் குணநலன் கொண்ட இவன்! தியாகுவும் இவனைப் போல கள்ளம் இல்லாத உள்ளம் கொண்டவன் என்றால் என் வாழ்க்கை சொர்க்கமாக இருக்குமே... அண்ணாதுரை என் கூட பேசும்பொழுதெல்லாம் இவர் என்னை அவ்வப்போது முறைத்துப் பார்ப்பதும், உர்ரென்று இருப்பதும் எத்தனை கஷ்டமாக இருந்தது.... இன்னும் எத்தனையோ விஷயங்கள் மனம்விட்டுப் பேச இருப்பினும், தியாகுவின் முகப் போக்கு தன் வாய்க்குப் பூட்டு போட்டதே...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

17

நாட்கள் உருண்டன. காலம் எப்படி இரவு, பகல் என்று எந்த வித மாற்றமும் இன்றி தன் கடமையை செய்து வந்ததோ அது போல அர்ச்சனாவின் மணவாழ்க்கையிலும் எந்த மாறுதலும் இன்றி போய்க் கொண்டிருந்தது. மதிய சமையல் வேலை முடித்து, தியாகுவிற்கு கேரியரில் அனுப்பி விட்டு உட்கார்ந்தாள் அர்ச்சனா.

மொபைல் போன், 'எங்கேயும் எப்போதும் சங்கீதம்... சந்தோஷம்...’ என்ற பாடலை இசைத்தபடி அவளை அழைத்தது.

'என் வாழ்க்கைக்கு சிறிதும் சம்பந்தம் இல்லாத பாடல்... அட்லீஸ்ட் இந்த போனிலாவது இருக்கட்டும்’ நினைத்தபடியே போனை எடுத்துப் பேசினாள்.

"ஹலோ...."

"என்னம்மா அர்ச்சனா... நான் சந்திரன் பேசறேன்... எப்படி இருக்க? கல்யாணமெல்லாம் தடபுடலா நடந்துச்சாமே?... என்னாலதான் வர முடியாமப் போச்சு. முக்கியமான கான்ஃப்ரன்ஸ் அட்டெண்ட் பண்ண வேண்டியதாயிடுச்சு. சரிம்மா.... நான் இப்ப சென்னை வந்திருக்கேன். உன் வீட்டுக்கு வரணும். நீ வீட்லதானே இருப்ப? இதோ வந்துடறேன்...."

"சந்திரண்ணா... மடமடன்னு பேசிக்கிட்டே இருக்கீங்களே... வாங்க அண்ணா. நான் வீட்லதான் இருக்கேன்."

"சரிம்மா. இன்னும் அரைமணி நேரத்துல நான் அங்க வந்துடுவேன்."

"சரி சந்திரண்ணா. வாங்க."

மொபைல் போன் தொடர்பை துண்டித்து விட்டு சோபாவில் சாய்ந்தாள் அர்ச்சனா.

'சந்திரன்ணா வர்றதுக்குள்ள கொஞ்சம் பாதாம் கீர் போட்டு வைக்கலாம்’ என்று நினைத்தவள் இருபது நிமிடங்களில் பாதாம் கீர் தயாரித்து, ஃப்ரிட்ஜுக்குள் வைத்தாள்.

தியாகுவின் கார் வரும் ஓசை கேட்டு வியப்படைந்தாள். இதற்குள் காரை நிறுத்திவிட்டு வந்தான் தியாகு.

"என்னங்க இந்த நேரத்துல திடீர்னு வந்திருக்கீங்க?"

"எதிர்பார்க்காத நேரத்துல வந்துட்டேன்னு யோசிக்கிறியா?" அவன் பேசிக் கொண்டிருக்கும்பொழுதே சந்திரன் உள்ளே வந்தான்.

'யார் இவன்’ என்பது போல அவனைப் பார்த்தான் தியாகு.

"வாங்க சந்திரண்ணா. உட்காருங்க" என்றவள் தியாகுவை அழைத்தாள்.


"இவர் என்னோட பெரியப்பா மகன். பேர் சந்திரன். மதுரையில டாக்டரா இருக்கார். நம்ப கல்யாணத்துக்கு வரலை. அதான் இப்ப பார்க்க வந்திருக்கார். நல்ல வேளை நீங்களும் இருக்கீங்க." அவள் அறிமுகப்படுத்தியதும் சந்திரன், தியாகுவிற்கு 'வணக்கம்’ சொன்னான்.

"என்ன மாப்பிள்ளை நல்லா இருக்கீங்களா?"

"நல்லா இருக்கேன்." ஒற்றை வார்த்தையில் அசட்டையாக பதில் கூறினான் தியாகு.

"உங்க ரெஸ்டாரண்ட் நல்லபடியா நடந்துக்கிட்டிருக்கா?"

"ஓ.... பிரமாதமா நடக்குதே...."

"உங்க அம்மா... அப்பா..."

"அவங்க ரெண்டு பேரும் யாத்திரை போயிருக்காங்க..."

"எங்க அர்ச்சனா நல்ல பொண்ணு. எம் மேல அவளுக்கு ரொம்ப பாசம்! அர்ச்சனா மாதிரி ஒரு பொண்ணு உங்க குடும்பத்துல மருமகளா வர்றதுக்கு நீங்க ரொம்ப குடுத்து வச்சிருக்கணும் மாப்பிள்ளை..."

"எதை குடுத்து வச்சிருக்கணும்?"

"மாப்பிள்ளை ரொம்ப தமாஷா பேசறாரும்மா..." சிரித்தான் சந்திரன்.

அவனுடன் சேர்ந்து தியாகுவும் சிரித்தான். அந்த சிரிப்பில் யதார்த்தம் இல்லை. ஒரு நடிப்பு இருந்தது.

"சரிங்க நான் கிளம்பறேன். முக்கியமான ஃபைல் எடுக்கறதுக்காக வந்தேன்."

"சரி மாப்பிள்ளை."

தியாகு வெளியில் வந்து காரை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.

பாதாம் கீர் எடுத்து வருவதற்காகப் போன அர்ச்சனா வந்தாள். கார் கிளம்பிப் போவதை அறிந்து தியாகு கிளம்பி விட்டான் என்பதைப் புரிந்துக் கொண்டாள்.

"இந்தாங்கண்ணா பாதாம்கீர் குடிங்க." சந்திரன் வாங்கிக் குடித்தான்.

"வீட்டை சுற்றிப்பார்க்கலாமாம்மா?"

"ஓ... வாங்க சந்திரண்ணா...."

ஹாலில் இருந்த பூஜை அறைக்கு முதலில் சந்திரனை அழைத்துச் சென்றாள். பூஜையறைக் கதவிலிருந்த மணிகள் ஒலிக்க, கதவைத் திறந்தாள். நடு நாயகமாக வீற்றிருந்த விநாயகர் சிலை அழகாக இருந்தது. சுற்றிலும் அம்மன், சிவலிங்கம் சிலைகள் இருந்தன. பளபளவென விளக்கிய விளக்கில் தீபம் எரிந்து கொண்டிருந்தது. வலது பக்கம் புதிதாக, அண்ணாதுரை கொடுத்த மார்பிள் சாயிபாபா சிலை வைக்கப்பட்டிருந்தது.

"எல்லாமே அழகா இருக்கும்மா."

ஹாலின் வலது பக்கம் இருந்த இன்னொரு அறைக்கு அழைத்துச் சென்றாள். கமலாவும், முருகேசனும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் அறை அது. அந்த அறை விசாலமாக இருந்தது. இரண்டு ஒற்றைக் கட்டில்கள் போடப்பட்டு அதன்மீது மெத்தை போடப்பட்டிருந்தது. சுத்தமான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தது. பழைய காலத்து பெரிய மர பீரோக்கள் இருந்தன. சுவரை மறைப்பது போல பிரம்மாண்டமான பெல்ஜியம் கண்ணாடி மிக அழகாக இருந்தது.

"அடேயப்பா... இதென்னம்மா அர்ச்சனா, இவ்வளவு பெரிய கண்ணாடி!...."

"எங்க மாமனாரோட தாத்தா காலத்து கண்ணாடியாம். அத்தை சொன்னாங்க…"

"இவ்வளவு காலமா பத்திரப்படுத்தி வச்சிருக்காங்கன்னா ரொம்ப ஆச்சர்யம்மா..."

"ஆமா... சந்திரண்ணா... வாங்க... அடுத்த ரூமுக்குப் போகலாம்."

ஹாலின் இடது பக்கமிருந்த இன்னொரு அறை பூட்டியே இருந்தது. சாவியை எடுத்து வந்து திறந்தாள். அந்த அறை கமலாவின் அறையைப் போலன்றி சற்று சிறியதாக இருந்தது. பழைய ஒற்றைக் கட்டில், பழைய மர பீரோ இருந்தது.

மரத்தினால் செய்யப்பட்ட தட்டி ஒன்று இருந்தது. அதில் ஒரு கைத்தடி தொங்கிக் கொண்டிருந்தது. ஒரு மூலையில் பழைய சாமான்கள் சில போடப்பட்டிருந்தன.

"இந்த அறையை நாங்க உபயோகப்படுத்தறதில்ல அண்ணா. இது எங்க மாமனாரோட அக்கா இருந்தப்ப அவங்க உபயோகப்படுத்தின அறையாம். மாமாவுக்கு அந்த அக்கான்னா ரொம்ப பாசமாம். கல்யாணமான ஆறு மாசத்துக்குள்ள விதவையாயிட்டாங்களாம். அதுக்கப்புறம் பிறந்த வீட்லயே... இந்த வீட்லயே இருந்திருக்காங்க. அவங்க உயிரோட இருக்கற வரைக்கும் இந்த அறையைத்தான் உபயோகப்படுத்தினாங்களாம். வயசான காலத்துல இந்த கைத்தடியைத் தாங்கலா பிடிச்சு நடப்பாங்களாம். அவங்களோட ஞாபகார்த்தமா அதை வச்சிருக்காங்க."

"உனக்கு கல்யாணம் பேசும் பொழுது சித்தப்பா சொன்னாரு.... மாப்பிள்ளைக்கு பூர்வீகமான வீடு இருக்குடான்னு. நல்ல பெரிய வீடாத்தான்மா இருக்கு."

"ஆமா சந்திரண்ணா. அப்பாவுக்கு இந்த வீடு ரொம்ப பிடிக்கும். இன்னும் பாருங்க. சமையலறை, சாப்பாட்டு அறை இந்த ரெண்டு அறையையும் ஒட்டி பெரிய 'கம்பி வெளி’ இருக்கும் பாருங்க. அந்தக் காலத்துப் பாரம்பரியமான பகுதி அது. வாங்க."

சமையலறையை ஒட்டி இருந்த கம்பி வெளிக்கு வந்தார்கள்.

"வாவ்... இவ்வளவு பெரிய இடம்... மேல கம்பி கம்பியா போட்டு வெளிச்சமா... ஜோரா இருக்கே..."

"மழை பெஞ்சா தண்ணி உள்ள வரும். அப்ப ரொம்ப ஜோரா இருக்கும்ண்ணா."

அதன்பின் சமையலறைக்குச் சென்றனர். அங்கே பொன்னி உட்கார்ந்து சின்ன வெங்காயத்தை உரித்துக் கொண்டிருந்தாள்.

"இவ பொன்னி. எனக்குத் துணையா இருக்கா. கூடமாட எல்லா வேலையும் செஞ்சுக்குடுப்பா. அத்தையும், மாமாவும் ஊருக்குப் போயிருக்கறதுனால எனக்குத் துணையா இங்கேயே தங்கி இருக்கா."

'வேலைக்காரியைக் கூட, 'வேலைக்காரி’ என்று அறிமுகப்படுத்தாமல் எத்தனை பண்பாடுடன் அறிமுகப்படுத்தறா இந்த அர்ச்சனா நினைத்து பெருமிதப்பட்டான் சந்திரன்.

"உன்னோட ரூம் எங்கம்மா?"

"மாடியில இருக்கு சந்திரண்ணா. வாங்க போகலாம்." இருவரும் மாடிக்குச் சென்றனர்.

அர்ச்சனாவும், தியாகுவும் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் அறைக்குள் நுழைந்தனர்.

படுக்கை அறைக்குப் பக்கத்தில் ஒரு சிறிய ஒப்பனை மற்றும் உடை மாற்றும் அறை காணப்பட்டது. தேக்கு மரத்தாலான அழகிய டிரஸ்ஸிங் டேபிள் இருந்தது. அந்த அறையையொட்டி குளியலறை இருந்தது.

அவற்றைப் பார்த்துவிட்டு மறுபடியும் படுக்கையறைப் பக்கம் வந்தனர். கட்டிலில் மிக நேர்த்தியான விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன.

கட்டிலின் அருகே உள்ள சிறிய மேஜையில் கடிகாரம் போன்ற பொருட்கள் துடைத்து அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. ஜன்னலில் திரைச்சீலைகள் கலருக்கு ஏற்ற வண்ணத்தில் போடப்பட்டிருந்தன.

"சும்மா சொல்லக்கூடாதும்மா, வீட்டோட ஒவ்வொரு இடத்தையும் 'பளிச்’ன்னு வச்சிருக்க. கலைநயத்தோட அலங்கரிச்சிருக்க...."

"தாங்க்ஸ் சந்திரண்ணா" என்றவள் கட்டிலின் கிழக்குப் பகுதியில் போடப்பட்டிருந்த பெரிய மர பீரோவின் கண்ணாடியில்  தியாகு ஒளிந்து நின்று தங்களைக் கண்காணிப்பதைப் பார்த்து விட்ட அர்ச்சனா திடுக்கிட்டாள். பயத்தில் வாய்விட்டு அலறினாள்.

சந்திரன் பதறினான்.

"என்னம்மா... என்ன ஆச்சு?" என்றபடியே வந்தவன், அங்கே தியாகு இருப்பதைப் பார்த்து அவனும் திடுக்கிட்டான்.

'ச்சே’ என்றவன் தியாகுவின் கையைப் பிடித்தான். அவனுடைய கையை உதறிவிட்டு விருவிருவென்று மாடிப்படிகளில் இறங்கினான் தியாகு. அர்ச்சனா அவனைப் பின்தொடர்ந்து அவனைவிட வேகமாக சென்று அவனது சட்டையின் பின்பக்கம் பிடித்து இழுத்தாள்.

"ஹோட்டலுக்குப் போறதா சொல்லிட்டுப் போன நீங்க, திருட்டுத்தனமா உள்ளே வந்து வேவு பார்க்கறீங்களா? சந்திரண்ணா என் பெரியப்பா மகன். என் அண்ணன். அவரையும், என்னையும்..... ச்சே...."


"சரிதான் விடுடி" என்றவன் அவளது பிடியிலிருந்து விடுபட்டு வேகமாக வெளியேறினான். கோபத்தில் மூச்சிரைத்தது அர்ச்சனாவிற்கு. தொடர்ந்து கோபத்திலிருந்து துக்கத்திற்கு மாறினாள். அப்படியே கால்கள் மடங்க, படிக்கட்டுகளில் சரிந்து அமர்ந்து அழ ஆரம்பித்தாள்.

"அழாதம்மா அர்ச்சனா.... உன் புருஷன் சரியான சந்தேகப் பேர்வழியா இருப்பான் போலிருக்கே... அதுவும் அண்ணன், தங்கச்சி உறவைப் பத்திக் கூட சந்தேகப்படற இவன் என்னம்மா மனுஷன்? அக்கா, தங்கைன்னு யாருமே உடன்பிறப்புங்க இல்லாததுனால அந்தப் பாசம் கூட அத்துப் போச்சா அவனுக்கு? பைங்கிளியை வளர்த்து ஒரு பூனை கையில குடுத்துட்டாரேம்மா உங்கப்பா..."

"ஐய்யோ.... சந்திரண்ணா..... அப்பா.... அப்பாவுக்கு இவரைப்பத்தி எதுவுமே தெரியாது. அப்பாவுக்குத் தெரிஞ்சா அவரு நெஞ்சு வெடிச்சுடும் சந்திரண்ணா. அவர்கிட்ட சொல்லிடாதீங்க சந்திரண்ணா ப்ளீஸ்...."

அழுது கொண்டே பேசிய அர்ச்சனா, தன் உள்ளங்கையை நீட்டி அவனிடம் சத்தியம் வாங்கிக் கொண்டாள்.

"அழாதம்மா. உங்கப்பாவோட ஹார்ட் ப்ராப்ளம் பத்தி எனக்குத் தெரியாதாம்மா? உன் மேல எவ்வளவு பாசம் வச்சிருக்காருன்னு தெரியாதா? என் மூலமா இந்த விஷயம் அவரோட கவனத்துக்குப் போகாது. ஆனா எத்தனை நாளைக்கு இந்த நாடகம்? இந்தப் பிரச்னைக்கு என்ன தீர்வு? அதை நீ யோசிக்கணும். உன் புருஷன் சரியில்லம்மா. அவன்கிட்ட தப்பு இருக்கு. மருத்துவ ரீதியா அவனுக்கு ட்ரீட்மென்ட் தேவை. ஒரு நல்ல சைக்யாட்ரிஸ்ட் ரெக்கமண்ட் பண்றேன். கூட்டிட்டு போ. கௌன்ஸல்லிங் குடுக்கணும். இதை ஆரம்பத்திலேயே பார்த்துத் தகுந்த ட்ரீட்மெண்ட் குடுக்கணும்மா. இல்லைன்னா ஆபத்து...."

"அதெல்லாம் ஒண்ணுமில்ல சந்திரண்ணா. இவரோட புத்தியே அப்படித்தான். கேவலமான புத்தி...."

"அப்படியெல்லாம் நீயா நினைச்சுக்காதம்மா. உஷாரா இருக்கப் பாரும்மா."

"சரிண்ணா."

கீழே வந்தனர். ஸோஃபாவில் உட்கார்ந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதன் பின் சந்திரன் விடைபெற்றான்.

மறுபடியும் அவனிடம் கெஞ்சினாள் அர்ச்சனா.

"அப்பாவை பார்க்கும்போது தப்பித் தவறி எதையும் சொல்லிடாதீங்கண்ணா. இந்தப் பிரச்சனையை நான் சமாளிக்கறேன்.

"சரிம்மா. நான் இன்னும் கொஞ்ச நாள்ல ஆஸ்திரேலியா போயிடுவேன். நான் போறதுக்குள்ள உன்னோட பிரச்னை ஒரு தீர்வுக்கு வரணும்."

"சரி சந்திரண்ணா."

சந்திரன் கிளம்பினான். கண்களில் கண்ணீர் மல்க அவனுக்கு விடை கொடுத்தாள் அர்ச்சனா.

 

 

18

ரவு பதினொரு மணி. தியாகுவின் கார் வந்து நிற்கும் ஓசை கேட்டது. சோகத்துடனும், சோர்வுடனும் படுக்கையில் குப்புறப் படுத்தபடி இருந்த அர்ச்சனா கார் வந்து நிற்கும் ஒலி கேட்டும் சலனமற்று இருந்தாள்.

வழக்கமாய் காலை ஆறு மணிக்கு வாசல் கதவைத் திறந்தால் இரவு எட்டு மணி வரை வெறுமனே சாத்தி வைப்பதே வழக்கமாக இருந்தது. தனி வீடாகவும், மிக்க பாதுகாப்பான பகுதியாகவும் இருந்தபடியால் அப்படியே வழக்கமாக வைத்திருந்தாள் கமலா. அதன்படி வாசல் கதவை எட்டு மணிக்கு பூட்டிவிட்டு மாடியறைக்கு சென்று விட்டாள் அர்ச்சனா.

'பொன்னி கதவைத் திறக்கட்டும்’ என்ற நினைப்பில் படுத்தே இருந்தாள். தடதடவென்று வேகமாக படிகளில் ஏறி வந்தான் தியாகு. அவனுக்கு பசி வயிற்றைக் கிள்ளியது.

"வந்து சாப்பாடு எடுத்து வை" என்றான். எதுவும் பதில் கூறாமல் எழுந்தாள் அர்ச்சனா.

படிகளில் இறங்கினாள். சமையலறைக்குச் சென்றாள்.

ஏற்கெனவே தயாரித்து வைத்திருந்த ரவா கிச்சடியை எடுத்து, கண்ணாடி பாத்திரத்தில் போட்டாள். மைக்ரோ அவனில் வைத்து சுவிட்சை அழுத்தினாள். சட்னியை மேஜை மீது கொண்டு போய் வைத்தாள். சாப்பிடும் ப்ளேட், தண்ணீர் எல்லாம் எடுத்து வைத்து, சூடேறிய ரவா கிச்சடியை எடுத்து வந்து பரிமாறினாள்.

சாப்பிட்டு முடித்த தியாகு மாடிக்குச் சென்றான். மேஜை மற்றும் சமையலறையை பொன்னியின் உதவியுடன் ஒழுங்கு செய்தாள். கைகள்தான் வேலை செய்தன. மனம் சிந்தனையில் மூழ்கி இருந்தது.

'இன்னிக்கு அவர்கிட்ட மனம் விட்டுப் பேசணும். சந்திரண்ணா சொன்னது போல மனரீதியா பிரச்சனை இருக்குதான்னு பேசிப் பார்க்கணும். அவர் என்னோட கணவர். நான் அவரோட மனைவி. அவர்ட்ட என் மனசுவிட்டு வெளிப்படையா பேசினா ஒரு தெளிவு கிடைக்கும். அவரும் பேசாம நானும் பேசாம இப்பிடியே மௌனப் போராட்டம் நடத்திக்கிட்டிருந்தா இதுக்குத் தீர்வே கிடைக்காது. கண்டிப்பா இன்னிக்கு பேசியே ஆகணும். கல்யாணமான புதுசுன்னுதான் பேர். புருஷன்கிட்ட பேசறதுக்கு எத்தனை ஆர்வமான விஷயங்கள் இருக்கணும். நல்லவிதமா பேசறதுக்கு எத்தனையோ சந்தோஷமான விஷயங்கள் இருக்கணும்? ஆனா... எனக்கு? ஏன் இப்பிடி ஒரு நிலைமை? அவரைப் பார்த்து, பேசித்தானே அப்பா இவரை எனக்கு மாப்பிள்ளையா தேர்ந்தெடுத்தாரு? மேலோட்டமா நல்லவரா தெரியற இவரோட உள்ளுக்குள்ள இப்பிடியெல்லாம் தப்பான எண்ணங்கள், சந்தேகங்கள் இருக்குன்னு யாரால கண்டுபிடிக்க முடியும்? கழுத்துல தாலி விழுந்தாச்சு. அது எனக்கு சுருக்குக் கயிறா மாறிடறதுக்குள்ள அவர்ட்ட நான் பேசணும். பேசி என்னோட வாழ்க்கையை சீர் பண்ணனும் முடிவு செய்த அர்ச்சனா படுக்கை அறைக்கு வந்தாள்.

"என்னங்க.... உங்ககிட்ட நான் கொஞ்சம் பேசணும். இன்னிக்கு நம்ம வீட்டுக்கு வந்த சந்திரண்ணா என்னோட பெரியப்பா மகன்னு தெரிஞ்சும் ஒளிஞ்சு நின்னு வேவு பாக்கறது உங்களுக்கே அசிங்கமா தோணலியா?....." அவள் பேசி முடிப்பதற்குள் அவன் குறுக்கிட்டான்.

"அவன் உன்னோட அண்ணன்னு நீ சொல்ற. எனக்கு எப்படித் தெரியும் அவன் உன்னோட அண்ணன்தான்னு?...."

"இதுதான் உன்னோட அப்பான்னு நம்ப அம்மா சொல்லித்தான் ஒருத்தரை அப்பான்னு ஏத்துக்கறோம். கூப்பிடறோம். அது மாதிரிதான் உறவு முறைகள் எல்லாமே. சந்திரண்ணா என்னோட பெரியப்பா மகன்னு நான் சொல்றதை நம்பாம... வேற எப்பிடி நிரூபிக்கச் சொல்றீங்க?"

"எனக்கு எந்த நிரூபணமும் வேண்டாம்" முகத்தில் அடித்தாற் போல் தியாகு பேசியும், மிகுந்த சிரமப்பட்டுப் பொறுமை காத்தாள் அர்ச்சனா.

"சரி... அது போகட்டும். நீங்க நல்லவரா இருக்கீங்க. உங்க அம்மா மேல உயிரையே வச்சிருக்கீங்க. அண்ணாதுரை உங்க நண்பன். ரத்த சம்பந்தமே இல்லாத அவர் மேல எவ்வளவோ பாசம் வச்சிருக்கீங்க. கல்யாணத்துக்கு முன்னால உங்களைப் பத்தி எங்கப்பா விசாரிச்சப்ப எல்லாருமே 'நல்ல பையன்’னுதான் சொன்னாங்களாம். ஆனா உங்க மனைவியான என்னை ஏன் சந்தேகப்பட்டு சிறுகச் சிறுக சாகடிக்கிறீங்க. என்னோட பெரியப்பா மகன், உங்க நண்பன் இப்பிடி எந்தப் பாகுபாடும் இல்லாம அவங்களையெல்லாம் சேர்த்து சந்தேகப்படறீங்க? பொதுவா நல்லவரான நீங்க இப்பிடி நடந்துக்கறதுக்கு என்ன காரணம்? உங்க மனசுல..... உங்களுக்கு.... வெளில சொல்ல முடியாத பிரச்சனை ஏதாவது இருக்கா? அப்பிடி இருந்தா என் கிட்ட சொல்லுங்க ப்ளீஸ்.... மனரீதியா நீங்க... உங்களுக்கு.... எ.... ஏதாவது.... பிரச்னை இருந்தா.... ஒரு..... சைக்யாட்ரிஸ்ட் கிட்ட போய் கன்சல்ட் பண்ணி....."


"என்ன.... என்னை பைத்தியக்காரன்ங்கறியா?"

"ஐய்யோ நான் அப்பிடிச் சொல்லலைங்க. உடம்புக்கு வர்ற வியாதி மாதிரி மனசுக்கு வர்ற பிரச்னைகளுக்கும் ட்ரீட்மெண்ட் எடுத்துக்கறது நமக்குத்தானே நல்லது? நீங்க என் கணவர். உங்க கூட சந்தோஷமா வாழணும்னு ஆசைப்படறேன். உங்க மனசுக்குள்ள இருக்கற அந்த சின்னப் பிரச்சனை சரியாயிடுச்சுன்னா நாம ரொம்ப சந்தோஷமா வாழலாம்...."

"பைத்தியக்கார டாக்டர்ட்ட போறதுக்கு நான் பைத்தியக்காரன் இல்ல. எனக்கு எந்த வைத்தியமும் தேவை இல்ல. நீதான் உளறிக்கிட்டிருக்க. உனக்கு இங்க என்ன குறைச்சல்? பெரிய வீடு, கார், தேவையான செலவுக்கு பணம், வேலைக்கு ஆள். வேற என்ன வேணும்?..."

"கார், பங்களா, பணம், வேலையாட்களோட சொகுசான வசதி... இது மட்டுமே ஒரு பொண்ணுக்கு நிறைவான வாழ்க்கையைத் தந்துடுமாங்க? என் கிட்ட எதுவுமே பேச மாட்டேங்கறீங்க. நீங்க பாட்டுக்கு வர்றீங்க. சாப்பிடறீங்க.... படுத்துக்கறீங்க...."

"நான் இப்பிடித்தான். என்னை மாத்தணும்னு உபதேசம் பண்ணிக்கிட்டிருக்காத. நான் மாற மாட்டேன்...."

"அப்பிடின்னா... எதுக்காக கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க?"

"கல்யாணம் எதுக்காக பண்ணுவாங்க? ஜாலியா இருக்கறதுக்கும், ருசியா சமைச்சதை சாப்பிடறதுக்கும், பிள்ளையைப் பெத்து நான் ஆம்பளைன்னு நிரூபிக்கறதுக்கும்தான்....."

"பிள்ளை பெத்து காமிச்சா மட்டும்தான் ஆம்பளையா? தாலி கட்டி, வந்தவளோட அன்பா, பண்பா பழகி அவ மனசை புரிஞ்சுக்கிட்டு, அதுக்கப்புறமா தாம்பத்யத்துல ஈடுபட்டு குடும்பம் நடத்தறவன் தான் உண்மையான ஆம்பளை. ப்ளீஸ்.... புரிஞ்சுக்கோங்க. வாழ்க்கைங்கறது அன்பு நிறைஞ்சது. அந்த அன்பை ஒருத்தருக்கொருத்தர் பரிமாறிக்கறதுதான் குடும்பம். உங்க கூட அன்பான வாழ்க்கை வாழணும்னு ஆசைப்பட்டு கேக்கறேன். உங்க மனசுல இருக்கற அழுக்கையெல்லாம் துடைச்சுட்டு ஒரு புது வாழ்க்கையைத் துவங்கலாம்...."

"உன்னோட போதனைகள் எனக்குத் தேவை இல்லை. நான் சொல்றதைக் கேட்டு, எனக்கு சர்வீஸ் பண்றதுதான் உன்னோட கடமை."

"கணவனோட பணம், வசதி, இதுக்கெல்லாம் அடிமையா வாழ முடியாதுங்க.. கணவனோட அன்புக்கு மட்டும்தான் ஒரு பொண்ணு அடிமை. கணவனுக்கு ஆளுமையான அன்பு இருந்தா... மனைவி, அடங்கிப் போற அடிமையா வாழத் தயாராயிடுவா. அதிகாரத்துனால அவளை அடக்கி ஆள நினைச்சா... அவளுக்குன்னு என்ன இருக்கு?..."

"இங்கப் பாரு. புராணம் பாடறதை நிறுத்திக்க. எனக்குத் தூக்கம் வருது." போர்வையை எடுத்து, இழுத்து மூடிக்கொண்டு படுத்துக் கொண்டான் தியாகு.

'திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்... வருந்தாத சில பேர்கள் பிறந்தென்ன லாபம்...’ எம்.ஜி.ஆர். அவர்களின் பழைய பாடல்தான் அர்ச்சனாவிற்கு நினைவு வந்தது.

நல்ல வரைமுறைகளைப் பின்பற்றி 'நான் இப்பிடித்தான் வாழ்வேன்’னு சொன்னா... அது நியாயமானது. 'நீங்க செய்றது தப்பு... மாத்திக்கோங்க... திருத்திக்கோங்க..ன்னு சொல்லும்போது 'நான் இப்பிடித்தான் வாழ்வேன்’னு சொல்றது...? 'ஆண்’ங்கற திமிர்ல வெளிவர்ற வார்த்தைகள்! என்னவோ பெரிய வீரம் பேசறதா நினைப்பு.... கடவுளே... என்னை ஏன் அழகா படைச்சே? அழகா இருக்கறது என்னோட குற்றமா? அழகை ஆராதிக்க வேண்டிய புருஷன் இப்பிடி அந்த அழகை என் உணர்வுகளோட அனுமதி இல்லாம ஆளுமையோட அனுபவிக்கறது மட்டுமில்லாம... சந்தேகப்பட்டு என்னை சித்ரவதை செய்யறாரே. மனம் விட்டு பேசலாம்னு முயற்சி பண்ணா அதுக்கும் ஒத்து வராம அகங்காரமா பேசறாரு...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

'தன் உயிர் நண்பன்... என் உடன் பிறவா சகோதரன்.... இப்பிடி தன்னைத் தவிர வேற எந்த ஆண்மகனும் என் கூடப் பேசினாலோ பழகினாலோ சந்தேகம்! சொந்த வீட்டுக்குள்ளயே திருடன் போல நுழைஞ்சு.... ச்சே...’ நினைக்க நினைக்க நெஞ்சம் எரிந்தது அவளுக்கு. எந்தக் கவலையும் இல்லாமல் குறட்டை விட்டுத் தூங்கிக் கொண்டிருந்த தியாகுவைப் பார்த்தவளுக்கு எரிச்சல் வந்தது. எழுந்து சென்று இரண்டு டம்ளர் தண்ணீரை 'மளக்’ 'மளக்’ என்று குடித்தாள். உடை மாற்றும் அறைக்குச் சென்றாள். ஷெல்பைத் திறந்தாள். இரவு உடையை எடுத்தாள். புடவையை அவிழ்த்து விட்டு இரவு உடையை அணிந்தாள். வந்து படுத்தாள். அவளது கண் இமைகள் தூக்கம் என்பதையே மறந்திருந்தன. மடை திறந்த வெள்ளமாய் பொங்கிய கண்ணீர் அவளது துக்கத்தை வெளிப்படுத்தியது.

‘அன்பு, அழகு, அறிவு, அந்தஸ்து, படிப்பு, பண்பாடு, பழக்க வழக்கங்கள் அனைத்திலும் எந்தக் குறையும் இல்லாத எனக்கு ஏன் இப்படி ஒருவர் கணவன் அமைந்தார்? யாரிடமும் என் கஷ்டங்களைப் பகிர்ந்துக் கொள்ள முடியாமல் எனக்கேன் இந்த நிலை’ யோசித்தாள்.... யோசித்தாள்.... விடியும்வரை யோசித்துக் கொண்டே இருந்தாள். விடை தெரியாத கேள்விக்கு எத்தனை நேரம் யோசித்தாலும் பலன் இல்லை.

விடியும் வரை தூங்காத அவள், விடிந்த பின் அவளையும் அறியாமல் கண் அயர்ந்தாள்.

19

வேலைகளையெல்லாம் முடித்துவிட்டு, வீட்டின் பக்கத்தில் உள்ள கோயிலுக்குச் சென்றாள் அர்ச்சனா. போகும் வழியிலேயே சுகந்தியின் மொபைல் அவளை அழைத்தது. ஒரு ஓரமாக நின்று பேசினாள்.

"ஹாய் சுகந்தி... எப்பிடி இருக்க?"

"நல்லா இருக்கேன். ஆனா ரொம்ப வேலைகள். முதுகை நிமிர்த்திடுச்சு...."

"அப்பிடி என்ன வேலை?"

"மாமனார்க்கு அறுபதாவது பிறந்தநாள் வருது. விசேஷமா செய்யணும்னு எல்லா ஏற்பாடும் நடக்குது. திருக்கடையூர்ல சாஸ்திரப்படி செய்யணுமாம். மூணு நாத்தனாருங்க, ஒரு கொழுந்தன், நாத்தனார் பிள்ளைங்க ஆறு பேர்... இப்பிடி எல்லாருக்கும் துணிமணி எடுக்கற வேலை முடிஞ்சுது. அத்தை, மாமாவுக்கு துணி எடுக்கற வேலை இருக்கு. கிட்டத்தட்ட இருநூறு பேருக்கு அழைப்பு குடுக்கணும். இருநூறு பேரை திருக்கடையூருக்குக் கூட்டிட்டுப் போறதுக்கு வேன் பேசற வேலை, இன்னும் நிறைய ஏற்பாடு.... இப்பிடி எக்கச்சக்கமான வேலைகள் நடந்துச்சு. இன்னும் சில வேலைகள் பாக்கி இருக்கு. நீயும், உன் வீட்டுக்காரரும் கண்டிப்பா ஃபங்ஷனுக்கு வரணும்...."

"ஆமாமா... நானும், அவரும்தான் அப்பிடியே வந்து கிழிச்சுடப் போறோம்..."

"ஏன்டி....? ஏன் அப்பிடிச் சொல்ற?"

"நான் இப்ப கோயிலுக்குப் போற வழியில தெருவுல நின்னு பேசிக்கிட்டிருக்கேன். நீ வாயேன் எங்க வீட்டுக்கு. உன் கிட்ட நிறையப் பேசணும்."

"இன்னும் ரெண்டு நாள்ல இன்விடேஷன் ரெடியாயிடும். ரெடியானதும் உன் வீட்டுக்கு வரேன். வர்றதுக்கு முன்னால உனக்கு போன் பண்ணிட்டு வரேன்."

"சரி சுகந்தி" மொபைல் போன் தொடர்பைத் துண்டித்துவிட்டு கோயிலுக்கு நடந்தாள். குங்குமக் கலர் பட்டுப் புடவையில் மாம்பழக் கலர் ஜரிகை போட்ட சேலையும், மாம்பழக்கலர் ஜாக்கெட்டும் அணிந்து மிக எடுப்பாகத் தெரிந்த அவளது அழகைத் தெருவில் போவோர் வருவோர் அனைவரும் ஒரு முறை திரும்பிப் பார்த்தனர்.


தினம் கோயிலுக்குப் போய் தெய்வ சந்நிதியில் தன் சோகங்களைக் கூறி தனக்கு நல்ல வழி பிறக்கவும், தியாகு மனம் திருந்தி தன்னிடம் அன்பு செலுத்தவும் வேண்டிக் கொண்டாள்.

கோயிலில் பத்து நிமிடங்கள் இருந்துவிட்டு வீட்டிற்கு கிளம்பினாள். வீட்டிற்கு வரும் வழியில் திடீரென அவளை 'மேடம்’ 'மேடம்’ என்றழைக்கும் குரல் கேட்டது.

திரும்பினாள்.

"மேடம்... நான் உங்க ஹோட்டல் மேனேஜரோட மகன். உங்க கல்யாணத்துக்கு நான் வந்திருந்தேன்...."

"ஓ.... அப்படியா? உன் பேர் என்ன?"

"விக்ரம். என்ஜினியரிங் காலேஜ்ல ஃபைனல் இயர் படிக்கிறேன்."

"சரிப்பா. நான் கிளம்பறேன்."

"சரி மேடம்."

விர்ரென்று சைக்கிளில் பறந்தான் அந்தப் பையன்.

20

வீடு வந்து சேர்ந்த அர்ச்சனாவை ஹாலில் உட்கார்ந்திருந்த கனகசபை வரவேற்றார்.

அர்ச்சனா இன்ப அதிர்ச்சி அடைந்தாள்.

"அப்பா...." ஓடிச் சென்று அவரது கையைப் பிடித்துக் கொண்டாள். கையைப் பிடித்துக் கொண்டு நின்ற அந்த நிமிடம் அவளது நெஞ்சம் கலங்கி, முட்டிக் கொண்டு வந்த அழுகையை அடக்க மிகுந்த பாடுபட்டாள்.

"நல்லா இருக்கியாம்மான்னு உன்னைக் கேக்கவே வேண்டியதில்லைம்மா. உன்னைப் பார்த்தாலே தெரியுது நீ நல்லா இருக்கன்னு...."

'பட்டுப்புடவை கட்டிக்கிட்டிருக்கறதுனாலயும், கோயிலுக்குப் போய்ட்டு வந்ததுனால கிடைச்ச நிம்மதி என் முகத்துல பிரதிபலிச்சதுனாலயும் அப்பாவுக்கு நான் நல்லா இருக்கேன்னு எண்ணம் தோணியிருக்கு. இப்பிடியே இருக்கட்டும். என்னோட இந்தத் தற்கால பொய் முகம் எங்க அப்பாவுக்கு நிஜமாவே நிம்மதியைக் குடுக்குது. அது போதும்.’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"காபி சாப்பிடறீங்களாப்பா?"

"குடும்மா. உன் கையால காபி சாப்பிட்டு ரொம்ப நாளாச்சு."

"இதோ வரேம்ப்பா."

அர்ச்சனா சமையலறைக்குப் போனதும், வீட்டை ஒரு பார்வை பார்த்தார் கனகசபை. வீட்டின் ஒவ்வொரு இடமும் மிகவும் சுத்தமாக இருந்தது.

"இந்தாங்கப்பா..." காபியைக் கொடுத்தாள். நுரை பொங்க இருந்த காபியை ரசித்துக் குடித்தார் கனகசபை.

"வேற என்னம்மா விசேஷம். மாப்பிள்ளையோட ஹோட்டல் நல்லபடியா நடக்குதா?"

"நல்லா நடக்குதுப்பா."

"வீட்டுக் கதவு ஏம்மா திறந்தே இருக்கு? வேலை செய்யற பொண்ணு உட்கார்ந்திருந்தா. இருந்தாலும் இப்பிடி கதவைத் திறந்தே வச்சிருக்கறது சரி இல்லம்மா."

"அது அப்பிடித்தான்பா. அத்தையால சும்மா சும்மா போய் திறக்க முடியாதுங்கறதுனாலயா என்னன்னு தெரியல. அப்படியே பழகிட்டாங்க."

"சரிம்மா... உங்க மாமாவும், அத்தையும் போற இடங்கள்ல இருந்து போன் போட்டுப் பேசறாங்களா?"

"அப்பப்ப கூப்பிடுவாங்கப்பா. நல்லபடியா போய்க்கிட்டிருக்காங்களாம்."

"உங்கம்மா இருந்தா நாங்களும் இப்பிடி யாத்திரைக்குப் போயிருப்போம்...." பெருமூச்சு விட்டார் கனகசபை.

"அம்மா இல்லாம நீங்க கஷ்டப்படற மாதிரி எனக்கும் கஷ்டமா இருக்குப்பா..."

"ஏம்மா.... முன்னல்லாம் அம்மாவைப் பத்தி ரொம்ப நினைக்கவே மாட்டியே... இப்ப என்ன அம்மாவைப் பத்தி பேசற?.... ம்...? புருஷன் வீட்டுக்கு வந்தாச்சு.... மாமியார், மாமனார்ன்னு உனக்காக ஒரு குடும்பமே இருக்கு.... சந்தோஷமா இருக்க வேண்டியதுதானே?...."

"அதில்லப்பா.... அது... வந்து...."

"ஓ.... எனக்குப் புரிஞ்சிருச்சும்மா.... உன் சந்தோஷத்தையெல்லாம் பகிர்ந்துக்க ‘அம்மா இருந்தா நல்லாயிருக்குமே’ன்னு நினைக்கற. வாஸ்தவம்தான்மா. அப்பா எவ்வளவுதான் பாசத்தோட இருந்தாலும்... பெண் பிள்ளைங்களுக்கு அம்மாதான் நல்ல துணை. என்ன பண்றதும்மா...? நீ குடுத்து வச்சது அவ்ளவுதான்...."

"அதிருக்கட்டும்பா... இன்னிக்கு உங்களைப் பார்ப்பேன்னு நினைச்சுக் கூடப் பார்க்கலப்பா. ஒரு நாலு நாள் இங்க தங்கிட்டுப் போங்கப்பா...."

"என்னது நாலு நாளா? இன்னும் ஒரு மணி நேரத்துல நான் கிளம்பணும்மா..."

"என்னப்பா நீங்க... வந்ததும் வராததுமா உடனே போணும்ங்கறீங்க...."

"இங்க பாரும்மா அர்ச்சனா.... 'கொண்டான்..’ 'குடுத்தான்.. ‘ங்கற உறவு முறையில சில பாரம்பரிய பழக்க வழக்கங்கள் இருக்கு. பொண்ணைக் குடுத்த வீட்டுக்கு வந்தமா போனோமான்னு போய்க்கிட்டே இருக்கணும். அதுதான் பொண்ணக் குடுத்த எனக்கு மரியாதை. நான் இந்த மாதிரி விஷயங்கள்ல ரொம்ப கண்டிப்புமா. ஏதோ மனசு கேக்காம உன்னைப் பார்க்கணும்னு ஓடி வந்தேன். அவ்வளவுதான்."

"இப்பல்லாம் காலம் எவ்வளவோ மாறிடுச்சேப்பா. இன்னுமா அந்தப் பழைய பாரம்பர்யம், பழக்க வழக்கம்னு... பார்க்கணும்? நீங்க என்னோட அப்பா. நான் உங்களோட பொண்ணு. உங்க பொண்ணோட வீட்ல நீங்க இருக்கறதுக்கு என்னப்பா சாஸ்திரம் சம்பிரதாயம் வேண்டியிருக்கு?"

"நம்ம முன்னோர்கள் ஏற்படுத்தின சாஸ்திரம் சம்பிரதாயத்துலயெல்லாம் ஒரு சத்தியம் இருக்கும்மா. ஒரு ஒழுங்கு முறை இருக்கு. காலம் மாறினாலும், நான் என்னிக்கும் ஒரே மாதிரிதான் இருப்பேன். அதுதாம்மா நல்லது. என்னடா இது, இவ்வளவு சொல்லியும் அப்பா இருந்துட்டுப் போக மாட்டேங்கறாரே’ன்னு நீ நினைப்ப. மனசு கஷ்டப்படுவ. எனக்குப் புரியுது. ஆனா எல்லாமே நல்லதுக்குத்தாம்மா சொல்றேன். பெரிய அழகான வீடு, ஹோட்டல் பிஸினஸ், நல்ல மாப்பிள்ளை, பிரச்சனை பண்ணாத மாமியார், மாமனார்... இதைவிட ஒரு பொண்ணுக்கு வேற என்னம்மா வேணும்? நீ நிறைஞ்ச வாழ்க்கை வாழறதைப் பார்க்கற சந்தோஷமே போதும்மா எனக்கு.... உன் வாழ்க்கை நல்லபடியா அமைஞ்சுட்டதைக் கண் குளிரப் பார்த்த திருப்தியில என்னோட வயசுல அஞ்சு வருஷம் குறைஞ்ச மாதிரி உணர்றேன்மா. அதனால அப்பப்ப வர்ற இந்த நெஞ்சு வலியையும் மீறி அஞ்சு வருஷம் ஆயுசும் கூடுதலா கிடைக்கும் போலிருக்கும்மா..." உற்சாக மிகுதியிலும், சந்தோஷத்திலும் பேசினார் கனகசபை.

'எல்லாம் சரிதான்ப்பா. 'நல்ல மாப்பிள்ளைன்னு சொல்றீங்களே... உள்ளம் முழுசும் கள்ளத்தனம் நிறைஞ்ச மாப்பிள்ளைப்பா உங்க மருமகன். மகள் நிறைவான வாழ்க்கை வாழறாங்கற அந்த சந்தோஷம் பொய்யானதுப்பா... பொய்யானது’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"என்னம்மா.... ஒண்ணும் பேச மாட்டேங்கறே? கோபமா?"

"அதெல்லாம் ஒண்ணுமில்லப்பா. உங்களுக்குப் பிடிச்ச உருளைக்கிழங்கு குருமா பண்றேன். ரெண்டு தோசை சாப்பிட்டுப் போங்கப்பா. அதுக்கும் மாட்டேன்னு சொல்லிடாதீங்கப்பா."

"சரிம்மா."

பொன்னியின் உதவியுடன் மளமளவென்று உருளைக் கிழங்கு குருமாவைத் தேங்காய் இல்லாமல் தயாரித்தாள். மிருதுவான தோசைகளை வார்த்தாள். பிரியமாகப் பரிமாறினாள். ருசித்து சாப்பிட்ட கனகசபை கிளம்பினார்.

"இந்தாம்மா. வெறுங்கையோட வரக்கூடாதுன்னு ஸ்வீட்டு, காரம், பழமெல்லாம் வாங்கிட்டு வந்தேன். எடுத்து வச்சுக்க. சாப்பிடு. மாப்பிள்ளைக்கும் குடு. இதில ஒரு பட்டுப்புடவை, பாண்ட், ஷர்ட் இருக்கு. பட்டுப்புடவை உனக்கு. பாண்ட், ஷர்ட்... மாப்பிள்ளைக்கு. மாப்பிள்ளை வர்ற வரைக்கும் காத்திருக்கலாம்னா நான் ஊர் போய் சேர நடுராத்திரி ஆயிடும். உங்க அத்தை, மாமா வந்தப்புறம் இன்னொரு நாள் வந்து எல்லாரையும் பார்த்துட்டுப் போறேன். கிளம்பட்டுமாம்மா?"


"சரிப்பா."

கனகசபை, மகளின் தலையை வாஞ்சையுடன் வருடிக் கொடுத்து விட்டுக் கிளம்பினார்.

'அப்பா.... அப்பா அர்ச்சனாவின் உள்ளம் விம்மியது. பொங்கி வரும் கண்ணீரை அடக்கிக் கொள்ள பெரிதாக பாடுபட்டாள் அர்ச்சனா. அவளது உதடுகள் சிரித்தபடி அவருக்கு விடை கொடுக்க, உள்ளம் மட்டும் அழுதபடியே துடித்தது.

21

ரவு நீண்ட நேரம் கழித்து வந்தான் தியாகு. வழக்கமாய் உடை மாற்றுவதற்காக மாடியறைக்கு செல்பவன், அன்று நேராக அர்ச்சனாவின் அருகே வந்தான்.

"கோயிலுக்குப் போனியா?"

"ஆமா."

"ஏன் போன?"

"சாமி கும்பிட..."

"என்ன நக்கலா...?"

".............."

"என்கிட்ட சொல்லாம... என்னோட அனுமதி இல்லாம எதுக்காகப் போன?"

"இதோ... பக்கத்துல... அஞ்சு நிமிஷ நடையில இருக்கற கோயிலுக்குப் போறதுக்கு உங்க கிட்ட அனுமதி வாங்கணுமா?"

"ஆமா. இந்த வீட்டு வாசப்படியை விட்டு இறங்கணும்ன்னாலும் என் கிட்ட கேட்டுட்டுத்தான் போணும்."

"இந்த சட்ட திட்டங்களையெல்லாம் கல்யாணத்துக்கு முன்னால சொல்லவே இல்லையே?"

"அப்ப சொல்லலை. இப்ப சொல்றேன்.... உன்னை எவனோ கோயிலுக்குப் போற வழியில பார்த்தானாமே?..."

"எவனோ இல்ல... உங்க மேனேஜரோட பையன்...."

"மேனேஜரோட பையன்னா... அவன் எவனோதான்."

"நான் கோயிலுக்குப் போறதுக்கும், தற்செயலா அந்தப் பையன் என்னைப் பார்த்ததுக்கும் என்ன சம்பந்தம்? அதனால என்ன பிரச்சனை?"

"அவன், உடனே அவங்கப்பாவுக்கு போன் போட்டு சொல்லியிருக்கான். 'மேடம் கோயிலுக்கு வந்தாங்களாம் ஸார். என் பையன் சொன்னான். கோயில்ல இருக்கற அம்பிகை மாதிரி அழகா இருந்தாங்க’ன்னு சொன்னானாம். இது எனக்குப் பிடிக்கலை. கண்டவனும் உன்னை வர்ணிக்கறது எனக்குப் பிடிக்கலை. நீ எங்கயும் போகக் கூடாது. அதான் வீட்ல பெரிய பூஜையறை இருக்குல்ல... சாமி கும்பிடறதுன்னா அங்க கும்பிடு..." கத்திவிட்டு அர்ச்சனாவின் பதிலைக் கூட எதிர்பார்க்காமல் மாடிக்கு ஏறிக் கொண்டிருந்தான்.

'அப்பா.... அப்பா... என்னோட வாழ்க்கையைப் பார்த்து இன்னும் கூடுதலா அஞ்சு வருஷம் ஆயுசு கூடும்னு சொன்னீங்களே... என்னோட இந்த நிலைமையைப் பார்த்தா.... அஞ்சு நிமிஷம் கூட உங்க உயிர் தங்காதேப்பா...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது.

உடை மாற்றிக் கொண்டு கீழே இறங்கி வந்தான் தியாகு.

"சாப்பிட எடுத்து வை."

எடுத்து வைத்ததை சாப்பிட்டான். மறுபடியும் மாடிக்கு சென்றான்.

சமையலறை வேலைகளை முடித்துவிட்டு மாடிக்கு வந்த அர்ச்சனா, உடை மாற்றும் அறைக்குள் வந்து இரவு உடை அணிவதற்காக சேலையை அவிழ்க்கும் பொழுது, பின்பக்கமாய் வந்து, அவளை அணைத்தான் தியாகு.

அவனுடைய அணைப்பிலிருந்து விடுபட முயற்சித்த அர்ச்சனாவை இறுக அணைத்துப் பிடித்தபடி கட்டிலுக்கு கொண்டு வந்து படுக்கையில் படுக்க வைத்தான்.

'ச்சீ... மனதிற்குள் ஒலித்த வெறுப்பான வார்த்தை வாய்க்குள்ளிருந்து வர மறுத்தது.

கணவனின் அணைப்பிலும் உடல் ஸ்பரிஸத்திலும் இன்பம் அனுபவித்துக் கண்களை மூட வேண்டியவள், அவனது அணைப்பு அளித்த வெறுப்பில் அவனைப் பார்க்கப் பிடிக்காமல் கண்களை மூடிக் கொண்டாள்.

22

திடீரென்று வீட்டிற்குள் நுழைந்த அண்ணாதுரையைப் பார்த்து ஆச்சர்யமானாள் அர்ச்சனா.

"அடடே நீங்களா?! வாங்க.. வாங்க.. என்ன இது? எப்பவும் இப்பிடித்தான் சஸ்பென்ஸாவும், சர்ப்ரைஸாவும்தான் வருவீங்க போலிருக்கு?!.."

"இந்த வீட்டுக்கு என் உயிர் நண்பன் தியாகுவின் வீட்டுக்கு மட்டும் நான் எப்ப வேண்ணாலும் வருவேன்.. போவேன் காலையில வந்துட்டு மூணு வேளையும் மூக்கு முட்ட சாப்பிட்டுட்டு ராத்திரி வரைக்கும் இருந்துட்டுப் போவேன். இங்க மட்டும்தான் இந்த அளவுக்கு சலுகையும், உரிமையும் எடுத்துக்கிட்டு நான் வர்றது, சாப்பிடறது எல்லாமே.. எத்தனையோ சொந்தக்காரங்க இருக்காங்க. பிஸினஸ் சம்பந்தப்பட்ட ஃப்ரெண்ட்ஸ் இருக்காங்க. ஆனா அவங்கள்லாம் வருந்தி வருந்தி கூப்பிட்டப்பக் கூட அவங்க வீட்டுக்குப் போறது கிடையாது. தியாகு கூட மட்டும்தான் இவ்வளவு நெருக்கம்!...."

'இந்த நெருக்கம் என் கணவருக்கு ஏன் என் கூட மட்டும் இல்லாமப் போச்சு? நண்பனை 'உயிரே’ங்கறார். 'டே அண்ணா’ன்னு உரிமையா கூப்பிடறார். ஆனா, தன்னில் பாதியாக வாழ்வில் பங்கேற்க வந்த என்னிடம் ஏன் எந்த ஒட்டுதலும் இல்லாம விலகியே இருக்கார்? படுக்கையறை உறவு கணவன்-மனைவி இரண்டு பேருக்கும் ஒரு பந்தத்தையும், அந்நியோன்யத்தையும் உருவாக்கும், வளர்க்கும்னு சொல்லுவாங்க. ஆனா என் கணவர் எனக்கு அந்நியமாய் இருக்கிறார், என்னை அலட்சியமாய் நினைக்கறார்’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது.

அர்ச்சனாவின் முகத்திற்கு நேரே கைகளை ஆட்டிய வண்ணம் அவளிடம் "என்ன அண்ணி, என்ன யோசனைக்கு போய்ட்டீங்க?" அண்ணாதுரை கேட்டான்.

சட்டென்று நினைவிற்கு மீண்ட அர்ச்சனா சிரித்துச் சமாளித்தாள். "ஒரு விஷயம் உங்ககிட்ட கேக்கணும். அண்ணாதுரைங்கற பேரை உங்களுக்கு எப்படி வச்சாங்க?"

"எங்கப்பாவுக்கு தலைவர் அண்ணாதுரைன்னா ரொம்பப் பிடிக்கும். அதனால எனக்கு அந்தப் பேரை வச்சாரு."

"ஓ. அப்பிடியா?  சரி...  சொல்லுங்க. உங்களுக்கு லஞ்ச்சுக்கு என்ன சமைக்க? உங்களுக்கு ரொம்ப பிடிச்சதா சொல்லுங்க."

"ம்... எனக்கு எல்லா ஐட்டமும் பிடிக்கும். இப்ப நீங்க கேக்கறதுனால நான் எதையாவது குறிப்பிட்டு சொல்லணுமில்லயா? தக்காளி பிரியாணி பண்ணி, சிக்கன் வறுவல், தயிர் பச்சடி பண்ணிடுங்க. ஓ.கே. வா?"

"ஓ.கே. ஓ.கே. டபுள் ஓ.கே. ரொம்ப சிம்ப்பிளா சொல்லிட்டீங்க. வேற எதுவும் வேண்டாமா?..."

"போதும் அண்ணி. இதுவே ஹெவிதான்."

"சரி.. நான் கிச்சனுக்குப் போய், பொன்னிக்குக் கொஞ்சம் மேல் வேலை குடுத்துட்டு வரேன்..."

"நான் மட்டும் இங்க உட்கார்ந்து என்ன பண்ணப் போறேன்? நானும் அங்க வரேன்..." அம்மாவின் சேலை முந்தானையைப் பிடித்துக் கொண்டு பின்னாடியே சுற்றும் குழந்தை போல அர்ச்சனாவின் பின் தொடர்ந்து சென்றான் அந்த வயதான குழந்தை அண்ணாதுரை.

"பொன்னி... தக்காளியை நல்லா கழுவு" பிரியாணி செய்வதற்கு கணக்காக தக்காளிகளை எடுத்து பொன்னியிடம் கொடுத்தாள் அர்ச்சனா.

"பொன்னி... தக்காளியை நல்லா கழுவு..." அர்ச்சனா சொன்னது போலவே அண்ணாதுரையும் சொன்னான். பொன்னி உட்பட மூவரும் சிரித்தனர்.

"பொன்னி, எட்டு பெரிய வெங்காயத்தை மெல்லிசா நீளநீளமா நறுக்கி வை. பத்து பச்சை மிளகாயை நடுவில கீறி வை. கொத்தமல்லி, புதினாவை சுத்தம் பண்ணி இலை இலையா கிள்ளி வை. ஒரு தேங்காயைத் துறுவி ரெண்டு டம்ளர் பால் எடுத்து வை. ஃப்ரிட்ஜ்ல சிக்கன் இருக்கும். அதை எடுத்து வெளியே வை. சிக்கனுக்கு தனியா, சீரகம், மிளகு, தேங்காய் துறுவல் அரைச்சு வச்சுடு. எல்லாம் ரெடி பண்ணிட்டு வந்து சொல்லு. மத்ததை நான் பார்த்துக்கறேன். நான் ஹால்ல உட்கார்ந்திருக்கேன்."


"சரிங்கக்கா" கூறிய பொன்னி, மடமடவென வேலைகளைச் செய்ய ஆரம்பித்தாள்.

"அண்ணாதுரை, டீ குடிக்கறீங்களா. போடட்டுமா?"

"ஓ... போடுங்களேன்."

அர்ச்சனா, டீ தயாரிக்கும்பொழுது அவள் கூடவே நின்று வேடிக்கை பார்த்தான் அண்ணாதுரை. சளசளவென்று அரட்டை அடித்துக் கொண்டே டீயைக் குடித்தான்.

அவன் பேசுவதைக் கேட்டு, ஊமையாகிக் கிடந்த அர்ச்சனாவின் உள்ளம் ஊஞ்சலாடியது. தன் பங்கிற்கு தன் கல்லூரி கதைகளைப் பற்றி, சிநேகிதிகள், நண்பர்கள் பற்றியும் உரையாடி மகிழ்ந்தாள்.

டீயைக் குடித்த பின் இருவரும் ஹாலுக்கு வந்தனர்.

"அண்ணி, உங்களுக்கு மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வியோட பாடல்கள் பிடிக்கும்னு சொன்னீங்க? அவரோட பாடல்கள்ல எந்தப் பாட்டு உங்களுக்கு ரொம்ப பிடிக்கும்?"

"சர்க்கரையில எந்த சர்க்கரை இனிப்பா இருக்கும்னு கேக்கறீங்க. இருந்தாலும் சொல்றேன். அவரோட துள்ளிசைப் பாடல்கள் ரொம்பப் பிடிக்கும்."

"துள்ளிசையா? அப்பிடின்னா?"

"எம்.ஜி.ஆர். ஸார் படங்கள்ல்ல வர்ற சுறுசுறுப்பான பாடல்களுக்கு துள்ளிசைன்னு பேர் வச்சிருக்கேன். சிவாஜி ஸார் படங்களுக்கு அவர் போடற மெட்டுகள் மெல்லிசையா இருக்கும். இது போக, அவரோட தத்துவப் பாடல்கள், தாலாட்டுப் பாடல்கள், சோகப்பாடல்கள் அத்தனையும் கேட்க கேட்கத் திகட்டாத தேனமுதமாச்சே... அவரோட 'எங்கே நிம்மதி...’ பாடலுக்குரிய பின்னணி இசை பிரம்மாண்டமா இருக்கும்..."

"எனக்கு இசைஞானி இளையராஜா சாரோட பாடல்கள்னா உயிர். ஒரு புதுமையான பாணியை இசை உலகில் உருவாக்கினவர் அவர். 'அந்த நிலாவைத்தான் நான் கையில புடிச்சேன் பாட்டு, ஆளை மயங்க வைக்கற பாட்டு. இன்னிக்கு நிறைய புது ம்யூசிக் டைரக்டர்ஸ் வந்து ரொம்ப நல்லாத்தான் ட்யூன் போடறாங்க. ஆனா அதையெல்லாம் நாலஞ்சு தடவை மட்டுமே கேக்கறதுக்கு நல்லா இருக்கு. அதுக்கு மேல கேக்க முடியலை. ஆனா பழைய பாடல்களையெல்லாம் இன்னிக்கும் திரும்பத் திரும்ப கேட்க முடியுது. அலுக்கறதே இல்லை. என்னோட கார்ல இளையராஜா சாரோட சி.டி.தான் எக்கச்சக்கமா வச்சிருக்கேன். கார்ல போகும்போது அந்தப் பாடல்களையெல்லாம் கேட்டுக்கிட்டே போனா ஜாலியா இருக்கும். எவ்வளவு தூரம் ட்ராவல் பண்ணோம்னே தெரியாது. அவ்வளவு சுகமா இருக்கும்."

"அது சரி... படிச்சு முடிச்சுட்டு பிஸினசுக்கு வந்துட்டீங்க. உங்க பிஸினஸ் சம்பந்தப்பட்ட விஷயங்கள் போக வேற எதில உங்களுக்கு அதிக ஈடுபாடு?"

"பிஸினஸ் வேலை தவிர வேற என்ன பண்றேன்னா... நிறைய கோவில்களுக்குப் போவேன். பாண்டிச்சேரியில ஒரு சாயிபாபா கோயில் இருக்கு. அங்கே போவேன். பஞ்சவடியில ஆஞ்சநேயர் கோயில் இருக்கு. அங்கே போவேன். யாராவது புதுசா, எனக்குத் தெரியாத கோயில் பத்தி சொன்னாங்கன்னா உடனே அங்கே போயிடுவேன். அந்தந்த கோயில் தல வரலாறு பத்தி விலாவாரியா தெரிஞ்சுக்கறதுல எனக்கு ஆர்வம் அதிகம்."

"உங்க வயசுக்கு இந்த ஆர்வம் அதிகம்தான். ஆச்சர்யமும் கூட. ஆனா கண்ட கண்ட விஷயங்கள்ல மனசை ஈடுபடுத்தறதை விட இந்த மாதரி நல்ல விஷயங்களை தெரிஞ்சு வச்சுக்கறது பாராட்டுக்குரியது..."

"உங்க பாராட்டுக்களுக்கு நன்றி அண்ணி. உங்களுக்கு எதில இன்ட்ரஸ்ட் அதிகம்?"

"நான் நிறைய படிப்பேன். புத்தகங்கள் வாசிக்கறது எனக்குசுவாசிக்கற மாதிரி. அவ்வளவு இஷ்டம். டி.வி. பார்க்கறதெல்லாம் ரொம்ப கம்மி. அது எனக்குப் பிடிக்காது."

"எந்த மாதிரி புக்ஸ் படிப்பீங்க? இங்கிலீஷ் நாவல்களா?"

"ம்கூம். தமிழ்தான். கதைகள்ன்னா எனக்கு ரொம்ப பிடிக்கும். ராஜேஷ்குமாரோட க்ரைம் நாவல்கள் படிக்கறதுன்னா சாப்பாடு, தண்ணி தேவை இல்லை. அந்த அளவுக்கு இஷ்டம். நாவலோட முதல் பக்கத்தை ஆரம்பிச்சா முடிவு வரைக்கும் படிச்சுட்டுதான் நாவலை கீழே வைப்பேன். அனுராதா ரமணனோட கதைகள்ல, யதார்த்த நடைமுறை வாழ்க்கை அப்பிடியே நம்ம கண்ணுக்கு தெரியும். இது போக சுஜாதாவோட கதைகள், மதன் ஜோக்ஸ் இப்படி வெரைட்டியா படிப்பேன். கவிஞர் வைரமுத்துவோட எல்லா புத்தகமும் படிச்சுடுவேன். அவருக்கு கடவுள் குடுத்திருக்கற ஞானம்! அதைப்பத்தி எடுத்து சொல்றதுக்கு வார்த்தைகளே இல்லை."

"புக்ஸ் படிக்கற அளவுக்கெல்லாம் எனக்குப் பொறுமை இல்லை அண்ணி. நல்ல படங்கள் வெளிவந்தா பேசாம மாயாஜால் போயிடுவேன். சேர்ந்தாப்ல ரெண்டு சினிமா பார்த்துட்டு வந்துடுவேன். மத்தபடி எனக்கு இந்த டி.வி. பார்க்கற பழக்கமெல்லாம் கிடையாது."

"தியேட்டர் போய் சினிமா பார்ப்பீங்களா? ஹய்யோ... எவ்வளவு நல்லா இருக்கும்? படம் பார்த்தா தியேட்டர்ல பார்க்கணும் இல்லைன்னா சும்மா இருக்கணும். அதை விட்டுட்டு, இந்த வி.சி.டி., டி.வி.டி.யெல்லாம் போட்டுப் பார்க்கறதே எனக்குப் பிடிக்காது. இந்த விஷயத்துல நான் ரொம்ப கண்டிப்பு."

"கண்டிச்சு சொன்னாலும் யார் அண்ணி டி.வி.டி. பார்க்காம இருக்கா?"

"வாழ்க்கை முறை அப்பிடி மாறிடுச்சு அண்ணாதுரை. வீட்ல உட்கார்ந்த இடத்துல இருந்தபடி பார்க்கக் கூடிய வசதியை மக்கள் லேசுக்குள்ள விடுவாங்களா என்ன? வெளியில தியேட்டருக்கு போறதுக்காக கிளம்பணும். போறதுக்குரிய வாகன வசதி வேணும். இப்பிடி எதுவுமே மெனக்கெடாம சுலபமா வீட்லயே சினிமா பார்க்கற வசதியை யார் விட்டுக் குடுப்பாங்க? நம்பளை மாதிரி சில பேர்தான் தியேட்டர்ல மட்டும் சினிமா பார்க்கணும்னு விடாப்பிடியா இருப்பாங்க. நவீன வசதிகளை நல்ல விதமா பயன்படுத்திக்கணும்... "

"பயனுள்ள பல விஷயங்களைத் தள்ளிட்டு, வீண் பொழுது போக்கறவங்களை திருத்தவே முடியாது..."

"திருத்த முடியாத நபர்கள் நம்ம நாட்டில நிறைய பேர் இருக்காங்க... எனக்கு மட்டும் சக்தி இருந்தா... அப்படிப்பட்ட நபர்களை நானே என் கையால சுட்டுத் தள்ளிடுவேன்..." தன் கணவன் தியாகுவின் அடாவடியான செயல்களை மனதில் கொண்டு பேசியதால் அவளையறியாமலே அவளது குரலின் தொனியில் சற்று கடுமை ஏறி இருந்தது. அவளது வாயிலிருந்து வெளிவந்த வார்த்தைகளில் வன்மை கூடி இருந்தது. இதை உணர்ந்த அண்ணாதுரை எதுவும் புரியாமல் திகைத்தான்.

"என்ன அண்ணி... சாதாரணமான சின்ன விஷயத்துக்கு இவ்வளவு டென்ஷன் ஆகிட்டீங்க?!... "

"அ... அ... அது ஒண்ணுமில்ல... சு... சும்மாத்தான். சரி, சரி பொன்னி முன் வேலைகளை முடிச்சிருப்பா. நான் போய் கடகடன்னு பிரியாணி தாளிச்சுட்டு, சிக்கனை வறுத்துட்டு வந்துடறேன்."

"நானும் கூடவே வர்றேன்." என்றபடியே சமையலறைக்கு நடந்த அர்ச்சனாவைப் பின் தொடர்ந்தான் அண்ணாதுரை.

அர்ச்சனா சமையல் வேலைகளை கவனித்துக் கொண்டிருக்கும்பொழுது அவளிடம் பல பொது விஷயங்களை விவாதித்தான் அண்ணாதுரை. அவன் கூறிய சுவாரஸ்யமான தகவல்களை ரசித்தபடியே மிக விரைவாக சமையலை முடித்தாள் அர்ச்சனா. தக்காளி பிரியாணியின் மணம் மூக்கைத் துளைக்க, சிக்கன் வறுவலின் வாசனை நாவில் நீரூற வைத்தது.


வேறு ஏதோ வேலை காரணமாக  வெளியே செல்வதால் 'தனக்கு மதிய உணவு கொடுத்தனுப்ப வேண்டாம்’ என்று சொல்லிவிட்டுப் போயிருந்தான் தியாகு. எனவே லஞ்ச் எடுத்து வைக்கும் வேலை இல்லை. சாப்பிடும் மேஜை மீது பொன்னியின் உதவியோடு சமைத்து வைத்துள்ள உணவு வகைகள் மற்றும் பீங்கான் பிளேட்டுகள், தண்ணீர் டம்ளர்கள், கரண்டிகள் போன்றவற்றை அழகாக எடுத்து வைத்தாள் அர்ச்சனா.

"ஆஹா... பார்த்தாலே பரவசமா... சாப்பிட்டாலே நவரசமா இருக்கும் போலிருக்கே..." தமாஷாக பேசியபடியே சாப்பிட உட்கார்ந்தான் அண்ணாதுரை.

அர்ச்சனா பரிமாற ஆரம்பித்தாள். அவளைத் தடுத்தான் அண்ணாதுரை.

"ம்கூம்... நீங்களும் கூடவே உட்கார்றீங்க. சேர்ந்து சாப்பிடறீங்க. நம்ப வீட்ல என்ன ஃபார்மாலிட்டி? நானே எனக்குத் தேவையானைதை எடுத்துப் போட்டு சாப்பிட்டுக்குவேன். நான் வேண்ணா உங்களுக்கு பரிமாறட்டுமா?"

அண்ணாதுரை இவ்வாறு கேட்டதும் உணர்ச்சிவசப்பட்ட அர்ச்சனாவின் கண்களிலிருந்து மளமளவென்று கண்ணீர் திரண்டு, அவளது கன்னங்களில் உருண்டு வந்தது.

பதறிப் போனான் அண்ணாதுரை.

"என்ன அண்ணி? நான் ஏதாவது அதிகப்பிரசங்கித் தனமா பேசிட்டனா? "அவன் பேசி முடிப்பதற்குள் குறுக்கிட்டாள் அர்ச்சனா.

"சச்ச... அதெல்லாம் ஒண்ணுமில்ல. 'பரிமாறட்டுமா’ன்னு அன்போடயும், பாசத்தோடயும் நீங்க கேட்டதும் எனக்கு எங்க அப்பாவோட ஞாபகம் வந்துடுச்சு. அவர் இப்பிடித்தான்... நான் ஹாஸ்டல்ல இருந்து லீவுக்கு வீட்டுக்குப் போகும்போது என்னை உட்கார வச்சு அவரே பரிமாறி, சாப்பிட வைப்பார்..."

"அப்போ... அப்பா சாப்பிட வச்சார்ல... இப்போ இந்த அண்ணாதுரை சாப்பிட வைக்கிறேன்..." என்றபடியே அர்ச்சனாவின் முன் ஒரு ப்ளேட்டை எடுத்து வைத்து, அதில் தக்காளி பிரியாணி, சிக்கன் வறுவல், தயிர் பச்சடி ஆகியவற்றைப் பரிமாறினான். தன்னுடைய ப்ளேட்டிலும் உணவு வகைகளை எடுத்துப் போட்டுக் கொண்டான்.

"சாப்பிடுங்க அண்ணி" அவனது பாசமான நடவடிக்கைகள் அவள் இதயத்தைக் கட்டிப் போட்டது. நீண்ட நாட்களுக்குப் பிறகு மிகவும் ரசித்து, ருசித்துச் சாப்பிட்டாள் அர்ச்சனா.

"ஆஹா... இது வரைக்கும் இந்த மாதிரி சுவையான தக்காளி பிரியாணியை நான் சாப்பிட்டதே இல்லை அண்ணி..." பாராட்டு மழை பொழிந்தபடியே அண்ணாதுரையும் நன்றாக சாப்பிட்டான்.

சாப்பிட்டு முடித்ததும் பொன்னியை அழைத்தாள் அர்ச்சனா.

"பொன்னி, டேபிளை க்ளீன் பண்ணிடு. நீ சாப்பிடு. நாலு மணிக்கு டீ போடணும். மைசூர் போண்டா பண்ணலாம்னு இருக்கேன். அதுக்கு மாவு அரைச்சுடு. உருளைக்கிழங்கு வேக வச்சுடு. நான் வந்து பண்ணிடறேன்."

"சரிக்கா."

தொடர்ந்து பெய்யும் மழை போல் பேச்சு மழை பொழிந்துக் கொண்டிருந்தான் அண்ணாதுரை. அவனுடன் பேசிக் கொண்டிருப்பதும், அவன் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருப்பதும் அர்ச்சனாவின் மனதை பஞ்சு போல் லேசாக்கிக் கொண்டிருந்தது. அளவற்ற ஆனந்தத்தில் மிதந்து கொண்டிருந்தாள். நான்கு மணியானதும் டீ போட்டுக் கொண்டு வந்தாள் பொன்னி. டீ கப்களை இருவரிடமும் கொடுத்து விட்டுப் போனாள்.

டீ குடித்த அண்ணாதுரை, "அண்ணி, சர்க்கரைப் பத்தலை. கொஞ்சம் சர்க்கரை வேணுமே."

இதோ நான் போய் எடுத்துட்டு வரேன்" எழுந்து சென்ற அர்ச்சனா, தரையில் லேஸாக சிந்தியிருந்த டீயின் மீது கால் வைக்க, கால் இடறிக் கீழே விழப் பார்த்தாள். இதைக் கண்ட அண்ணாதுரை பதறிப் போய் அர்ச்சனா கீழே விழுந்து விடாதபடி தாங்கிப் பிடித்தான்.

திடீரென்று வீட்டிற்கு வந்த தியாகு, அர்ச்சனாவை, அண்ணாதுரை பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து வெறி கொண்டவனைப் போல் கத்தினான்.

"டேய் அண்ணாதுரை..."

'டே அண்ணா’ என்று செல்லமாக அழைக்கும் தியாகுவா இப்படி 'டேய் அண்ணாதுரை’ என கோபமாகக் கத்துவது என்று நினைத்தபடியே திரும்பிப் பார்த்தான் அண்ணாதுரை.

"நான் வீட்ல இல்லாத நேரமா பார்த்து என் வீட்டுக்கு வந்து என் பொண்டாட்டி கூட இப்பிடி அசிங்கம் பண்ணிக்கிட்டிருக்கியா?" அநாகரீகமான வார்த்தைகளால் ஆத்திரத்துடன் கத்தினான் தியாகு.

அதைக் கேட்ட அண்ணாதுரையின் இதயம் சுக்கு நூறாக சிதறியது. பெண் பிள்ளை போல கதறி அழுதான். அர்ச்சனா, அதிர்ச்சியில் உறைந்து நின்றாள்.

"வெளிய போடா..." அண்ணாதுரையைப் பார்த்துக் கத்தினான் தியாகு.

அவமானத்தில் கூனிக் குறுகிப் போன அண்ணாதுரை தளர்ந்த நடையுடன் தியாகுவின் அருகே சென்றான்.

"உன் உயிரான என்னையா தியாகு இப்பிடி பேசற? அண்ணி கால் தடுக்கி கீழே விழப் பார்த்தாங்க. அவங்க விழுந்திடாதபடி தடுக்கறதுக்காகத் தாங்கிப் பிடிச்சேன். இதுதான் நடந்தது..."

"கேட்டனா... உன் கிட்ட விளக்கம் கேட்டனா? இனி நீ என் நண்பன் இல்லை. நீ ஒரு துரோகி..."

"தியாகு...... என்னையா துரோகிங்கற?"

"ஆமாண்டா... நான் இல்லாத நேரம், என் கிட்ட கூட சொல்லாம நீ எதுக்காக இங்கே வரணும்?..."

"டேய்... என்னைக்குடா உன் கிட்ட சொல்லிட்டு உன் வீட்டுக்கு வந்திருக்கேன். நீ இருக்கியா இல்லையான்னு பார்க்காமத்தானடா வருவேன்? அம்மா இருப்பாங்க. அவங்க கிட்ட பேசிட்டு, அவங்க போடற சாப்பாடை சாப்பிட்டுட்டு..... இந்த வீட்ல சகல உரிமையும் எனக்கு குடுத்ததே நீதானேடா?.."

"அதே நான்தான் இப்ப சொல்றேன். நீ இனிமேல இங்கே வராதே. என் முகத்துல கூட முழிக்காதே."

"தியாகு....."

"கெட் அவுட்......"

தலை குனிந்தபடி வெளியேறினான் அண்ணாதுரை.

பலி ஆடு போல நடுங்கியபடி நின்றிருந்த அர்ச்சனாவின் அருகே சென்றான் தியாகு.

"என்னடி நாடகம் இது? உன் மேல ஒருத்தன் கையை வைக்கற வரைக்கும் சும்மா இருக்கியே? வெட்கமா இல்லை?....."

"தரையில சிந்தின டீயை பொன்னி துடைக்காம விட்டுட்டா. அதுல கால் வச்சதுனால வழுக்கி விழப் பார்த்தேன்...."

"வாழ்க்கையில வழுக்கி விழுந்துடாத....."

"ஹய்யோ....." காதுகளைப் பொத்திக் கொண்டாள் அர்ச்சனா.

அன்பே உருவான அண்ணாதுரை அவமானப்பட்டு, கண்ணீருடன் வெளியேறிய சோகம் போதாதென்று, தியாகுவின் கேவலமான வார்த்தைகளும் சேர்ந்து அவளை வதைத்தது.

தியாகுவின் மொபைல் ஒலித்தது. எடுத்துப் பேசினான்.

"ஹலோ... அனுஷ் ஸார்...?" தியாகுவின் ஆடிட்டர் அனுஷ் பேசினார்.

"ஆமா தியாகு. புது ப்ராஜக்ட் சம்பந்தமான பேப்பர்கள்ல நீங்க கையெழுத்துப் போடணும். வர்றீங்களா? இன்னிக்கே, இப்பவே முடிச்சாகணும். லேட்டாயிடுச்சுன்னா.... மறுபடியும் இந்த ப்ரொஸிஜரை ஆரம்பத்துல இருந்து புதுசா துவங்கணும். எல்லா பேப்பர்ஸையும் மறுபடியும் ரெடி பண்ணணும். நான் நாளைக்கு மும்பை போறேன். திரும்பி வர பத்து நாளாயிடும். உடனே வந்துட்டீங்கன்னா நல்லா இருக்கும்." ஆடிட்டர் அனுஷ் பேசினார்.

"இதோ உடனே கிளம்பி வந்துடறேன் ஸார்."


மொபைலின் வாயை அடைத்துவிட்டு, அவன் வாயைத் திறந்தான்.

"இனிமேல் அந்த அண்ணாதுரை இங்கே வரக் கூடாது. அவனுக்கும் எனக்கும் இனி எதுவுமே இல்லை. எல்லாம் முடிஞ்சு போச்சு. துரோகி..." அர்ச்சனாவிடம் கத்தி விட்டு அவசரமாக வெளியேறிச் சென்றான் தியாகு.

'உயிருக்குயிராகப் பழகிய நண்பன். வெள்ளை மனம் கொண்டவன். அப்படிப்பட்ட அண்ணாதுரையை எவ்வளவு கேவலமா பேசிட்டாரு? அண்ணாதுரையோட மனசு என்ன பாடுபட்டிருக்கும்? இவரோட சந்தேகப்புத்தி ஒரு ஆத்மார்த்தமான நட்பையே சிதைச்சிடுச்சே..... அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

23

வாசல் பக்கம் இருந்து வேகமாக ஓடி வந்தாள் பொன்னி.

"அக்கா யாரோ வந்திருக்காங்கக்கா." வந்து பார்த்தாள் அர்ச்சனா.

"ஹாய் சுகந்தி வா... உள்ளே வா...."

சுகந்தி உள்ளே வந்தாள். பெண்களுக்குரிய சராசரி உயரத்தை விட மிக அதிகமான உயரம். எனவே கட்டியிருந்த மிகப்பெரிய பார்டர் போட்டிருந்த புடவை அவளுக்கு மிகவும் எடுப்பாக இருந்தது. மாநிறம் என்றாலும் முகத்திலும் ஒரு களை இருந்தது. சிரித்த முகமாய் இருந்தாள்.

"வா சுகந்தி. நீ எப்ப வருவேன்னு காத்துக்கிட்டிருக்கேன். வந்து உட்கார்."

இருவரும் உட்கார்ந்தனர்.

பையிலிருந்த பத்திரிகையை எடுத்து அர்ச்சனாவிடம் கொடுத்தாள் சுகந்தி.

"எங்க மாமனாரோட அறுபதாவது பிறந்தநாள் திருக்கடையூர்ல சம்பிரதாயப்படி செய்யறோம். இங்கே சென்னையில தடபுடலா கேக் கட் பண்ணி விருந்து வைக்கறோம். கண்டிப்பா நீயும், உன் ஹஸ்பண்டும் வரணும்."

பத்திரிகையை வாங்கிப் பார்த்தாள் அர்ச்சனா.

"சரி... சரி... காபி சாப்பிடறியா... இல்ல.... ஜுஸ் ஏதாவது குடிக்கறயா?"

"நீதான் காபி எக்ஸ்பர்ட்டாச்சே. காபி குடு."

"வா. என்னோட கிச்சனைப் பாரு."

அர்ச்சனாவுடன் கூடவே வந்தாள் சுகந்தி.

"ஹய்... அழகா இருக்கே? மாடர்ன் கிச்சன் சூப்பரா இருக்குடி. புருஷன் ஹோட்டல் மேனேஜ்மென்ட் படிச்சவர். பொண்டாட்டி நீ என்னடான்னா வீட்டு கிச்சனை அசத்தற..."

"ஆமா... நீதான் மெச்சிக்கோ. அசந்து போய் பாராட்ட வேண்டியவரே அசமந்தமா இருக்காரு."

"ஆரம்பிச்சுட்டியா... புகார் பண்றதுக்கு?"

"இன்னும் ஆரம்பிக்கவே இல்ல. முதல்ல காபியைக் குடி. என் புராணம் பெரிய புராணம். அதைக் கேட்டு முடிக்க நேரமே பத்தாது. இன்னிக்கு லஞ்ச் உனக்கு இங்கதான். அதனால போறதுக்கு அவசரப்படாதே."

"என் ஹஸ்பண்ட்ட சொல்லிட்டுதான் அர்ச்சு வந்தேன். வர்றதுக்கு சாயங்காலமாயிடும்னு. அதனால கவலையே படாதே."

மதிய விருந்து தயாரிப்பதற்காக சின்ன சின்ன முன் வேலைகளை செய்யும்படி பொன்னிக்குப் பணித்தாள்.

"வா... சுகந்தி... மாடிக்குப் போகலாம்."

இருவரும் மாடியறைக்குச் சென்றனர்.

படுக்கை அறையின் முன் பக்கம் இருந்த மாடிப்படி வளைவின் அருகே போடப்பட்டிருந்த சோஃபாவில் சுகந்தி உட்கார்ந்தாள். சுகந்தி உட்கார்ந்ததும், அர்ச்சனாவும் அவளருகே உட்கார்ந்து அவளது மடியில் முகம் புதைத்து அழ ஆரம்பித்தாள்.

திடுக்கிட்டாள் சுகந்தி.

"ஏ... அர்ச்சு... என்னடி இது? ஏன் இப்பிடி அழறே..."

மேலும் தொடர்ந்து அழுதாள் அர்ச்சனா.

'சற்று நேரம் அழுது தீர்க்கட்டும்’ என்று அவளை அழ விட்டாள் சுகந்தி.

அழுது ஓய்ந்த அர்ச்சனா எழுந்தாள். கண்கள் சிவந்திருந்தன. மூக்கு லேசாக வீங்கி இருந்தது. புடவையின் மாராப்புப் பகுதி கண்ணீரால் நனைந்து போயிருந்தது.

"சுகந்தி... என்னால தாங்க முடியலைடி. என் ஹஸ்பண்ட்டுக்கு என் மேல அன்பே இல்லை. என் உடம்பு மேலதான் ஆசை. ஒரு மிருகம் போல நடந்துக்கறாரு. மனம் விட்டுப் பேசறதே இல்லை. அவர் பேசினார்ன்னா, அப்ப வர்ற வார்த்தைகள் சவுக்கடிகளா இருக்கும். சந்தேகப்புத்தி பிடிச்சவரா இருக்கார் சுகந்தி...."

"பொஸஸிவ்நெஸ் நேச்சரை சந்தேகம்னு தப்பா புரிஞ்சுக்கிட்டியா அர்ச்சு?..."

"இல்லை... இல்லவே இல்ல. அன்பு செலுத்தறவங்களுக்குத்தான் ஆதிக்கம் செலுத்தவும் உரிமை இருக்கு. ஆனா, இவர் என் மேல துளி கூட அன்பு காட்டறதில்ல. கல்யாணம் பண்ணிக்கிட்டதே என்னவோ கட்டில் சுகத்துக்காகத்தான்ங்கற மாதிரி நடந்துக்கறார். இது போதாதுன்னு சந்தேகப்புத்தி வேற..... மனம் விட்டு பேசலாம்ன்னு முயற்சி பண்ணினேன். அந்த முதல் முயற்சியே தோல்வியாயிடுச்சு. தாம் தூம்ன்னு குதிச்சாரு. கத்தினாரு. பிரளயம் பண்ணாரு. ஒரு மனைவியை எவ்வளவு கீழ்த்தரமா பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமா பேசினாரு. 'கல்யாணம் பண்ணினதுக்கப்புறம் உன் மனைவியை காதலி’ன்னு ஆண்களுக்கு பெரியவங்க அறிவுரை சொல்லுவாங்க. கல்யாணம் பண்ணினதே காமத்துக்குத்தான்ங்கறது அவரோட வாதமா இருக்கே. அது மட்டுமில்ல... அவரை இந்த சமூகம் 'ஆம்பளைன்னு நம்பறதுக்கு, புள்ள பெத்துக் குடுக்கறதுக்குத்தான் மனைவியாம். இதெல்லாம் நேத்து ராத்திரி நடந்த பேச்சு." 

ப்ரவீன், தனக்கு காதல் கடிதம் கொடுத்ததை தியாகுவிடம் மறைக்காமல் கூறியதையும், அதற்கு அவன் எரிச்சலுற்று சந்தேகத்தோடு பேசியது முதற்கொண்டு முந்தின நாள் அண்ணாதுரை வந்தபோது நடந்த சம்பவம் வரை அனைத்தையும் கூறினாள். கேட்டுக் கொண்டிருந்த சுகந்தி திகைத்தாள். அதிர்ந்தாள். ஆதங்கப்பட்டாள்.

"படுக்கை அறைக்குள்ள ஒளிஞ்சு நின்னு மனைவியை வேவு பார்க்கற அளவுக்கு மோசமானவரா உன் கணவர் இருப்பார்ன்னு நான் நினைக்கவே இல்லை. ஏதோ கல்யாணமான புதுசு. நீதான் அவரைப் பத்தி சரியா புரிஞ்சுக்கலையோன்னு நினைச்சேன். இப்ப நீ சொன்னதையெல்லாம் கேக்கறபோது... ரொம்ப பயம்மா இருக்கு அர்ச்சு... உங்க அப்பா, நல்லா விசாரிச்சுத்தானே இந்த தியாகுவிற்கு உன்னை நிச்சயம் பண்ணினாரு?..."

"வீட்ல இருக்கற அவரோட அம்மா, அப்பாவுக்கே இவரைப் பத்தி தெரியலை.. ஊரார்கிட்ட விசாரிச்சு என்ன தெரிஞ்சுடப்போகுது?..."

"உங்க அப்பா கிட்ட சொல்லி... அவனோட முகத்திரையைக் கிழிக்க வேண்டியதுதானே?..."

"ஐய்யோ... சுகந்தி... எங்கப்பா ஒரு ஹார்ட் பேஷண்ட்னு உனக்குத் தெரியும்ல? அவர்ட்ட போய் இந்த விஷயத்தைச் சொன்னா.... அவர் நெஞ்சு வெடிச்சுடும். திடீர்னு என்னைப் பார்க்க வந்த அப்பா, நான் நல்லா வாழறதா நம்பி, ரொம்ப சந்தோஷமா திரும்பிப் போனாரு. அவரோட அந்தப் பொய்யான சந்தோஷந்தான் அவரோட நெஞ்சு வலிக்கு தற்காலிக மருந்து. அது போல அவரோட இந்த சந்தோஷமும் தற்காலிகமானதுதான்னு அவருக்குத் தெரிஞ்சுடக் கூடாது. அம்மா இல்லாத என்னை அம்மாவுக்கு அம்மாவா, அப்பாவுக்கு அப்பாவா உயிரைக் குடுத்து வளர்த்த எங்க அப்பாவுக்கு, என்னோட வாழ்க்கை இப்பிடி ஆயிடுச்சுன்னோ... என் கணவர் இப்படிப்பட்ட கீழ்த்தரமான புத்தியுள்ளவர்னோ தெரியவே கூடாது. இந்த ஒரே காரணத்துக்காகத்தான் இவர் பண்ற கொடுமையை எல்லாம் சகிச்சுக்கிட்டிருக்கேன். இல்லைன்னா இவரை உண்டு.... இல்லைன்னு ஒரு வழி பண்ணி இருப்பேன். இவர் என்னவோ, நான் இவரைப் பார்த்து பயந்துக்கறதாகவும், இவருக்கு அடங்கி நடக்கறதாவும் மனப்பால் குடிச்சிக்கிட்டிருக்காரு."


"உங்க அப்பாவோட உயிருக்கு ஆபத்து. அதனால அவர்ட்ட உன் கணவரைப் பத்தின விஷயங்களை மறைக்கற ஓ.கே. உன்னோட மாமியார், மாமனார்ட்ட சொல்ல வேண்டியதுதானே?"

"அவங்ககிட்ட சொன்னாலும் பிரச்னை பூதாகரமாகி அப்பா காதுக்கு எல்லா விஷயமும் போகும். அதனாலதான் எதுவும் செய்ற வழி தெரியாம தவியா தவிக்கிறேன் சுகந்தி... ப்ளீஸ் சுகந்தி... எனக்கு, நல்லது செய்றதா நினைச்சு அப்பாகிட்ட எதையும் சொல்லிடாதே சுகந்தி... என் மனசுல உள்ள பாரம் குறையணும்னுதான் உன்கிட்ட சொன்னேன்...."

“எவ்வளவு காலத்துக்கு உங்கப்பா கிட்ட மறைக்க முடியும்?”

“அவரோட காலம் வரைக்கும்...”

"இதுக்கு வேற என்னதான் வழி?"

"விதி விட்ட வழிதான். வேறென்ன?"

"உங்க அப்பாவுக்குத் தெரியாம தியாகுகிட்ட இதைப் பத்தி பேசி சரி பண்ண முடியாதா?"

"எப்பிடிங்கறதுதான் பெரிய கேள்வி."

"என்ன செய்யறதுன்னு யோசிக்கலாம். பத்திரிகைகள்ல நிறைய எழுதறாங்க. கணவன், மனைவிக்குள்ள பிரச்னைன்னா மனம் திறந்து பேசுங்க சரியாயிடும்னு. அதைப் படிச்சுட்டு மனம் திறந்து பேசினவங்க சில பேரோட வாழ்க்கையில நல்லபடியான ஒரு திருப்புமுனை ஏற்பட்டதைப் பத்தியும் அனுபவரீதியா எழுதியிருக்காங்க. ஆனா... உன்னோட முயற்சிக்கு பலன் இல்லாம போச்சுன்னு நீ சொல்ற..."

"லட்சத்துல ஒருத்தருக்கு அந்த வழிமுறை நல்ல பலன் குடுத்திருக்கும். அதை நம்பி எல்லாரையும் ஒட்டுமொத்தமா மாத்திடலாம்... திருத்திடலாம்னு நினைக்கறது தப்பா இருக்கு. அதுக்காகப் பேச்சு வார்த்தை நடத்தறதும் அதைவிடத் தப்பா இருக்கு... இது என்னோட அனுபவம்..."

"நீ சொல்றது சரிதான். அனுபவங்கள்தான் நிறைய நடைமுறை பாடங்களையும் கத்துக் குடுக்குது..."

"வாழ்க்கைப் பாடங்களைப் படிக்க, கல்யாணம்தான் வழிமுறைன்னா... தலைமுறை தலைமுறையா கல்யாணம் பண்ணி வாழற வழக்கமே இருக்காது சுகந்தி..."

"என்ன வழக்கமோ... பழக்கமோ... இன்னார்க்கு இன்னார்ன்னு இறைவன் எழுதி வச்சபடிதான் ஒவ்வொருத்தரோட வாழ்க்கையும் அமையுது. ஆனா... உன்னைப் போல ஒரு நல்ல பொண்ணுக்கு இப்பிடி ஒரு கீழ்த்தரமான புத்தி உள்ளவர் கணவரா அமைஞ்சுருக்கார்ன்னு நினைக்கும்போது மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அர்ச்சு... அவரைத் திருத்தறதுக்கு என்னதான் வழி?..."

"கெஞ்சிப் பார்த்தாச்சு. பிரயோஜனமே இல்ல... இனி மிஞ்சித்தான் பார்க்கணும் போலிருக்கு. பொறுமைங்கற சக்தியை பயன்படுத்தித்தான் இத்தனை நாள் தாக்குப் பிடிச்சிருக்கு. பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டுங்கறதை அவர் புரிஞ்சுக்கலை. என் உடலோட ஒட்டி உறவாடற அவர், என் மனசோட ஒட்டாம எட்டியே இருக்காரு. இந்த லட்சணத்துல ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுக்கறது எப்பிடி நடக்கும்? கண் கட்டி வித்தை மாதிரி என் வாழ்க்கை போயிட்டிருக்கு."

"நீ இப்படியெல்லாம் வேதனையோட பேசறதைக் கேட்க ரொம்ப கஷ்டமா இருக்கு அர்ச்சு...."

"படிச்சு முடிச்சப்புறம் ஒரு ரெண்டு வருஷமாவது வேலைக்குப் போகணும்னு ஆசைப்பட்டேன். கல்யாணம் பேசும்போது, எங்க மாமியார் 'பொண்ணு வேலைக்குப் போகக் கூடாது’ன்னு சொல்லிட்டாங்க. நல்ல இடத்து சம்பந்தம்னு அப்பா, அந்த நிபந்தனைக்கு சம்மதிச்சாரு. நல்ல நிம்மதிக்கும், சந்தோஷத்துக்கும் சம்பந்தமே இல்லாம இப்ப நான் இருக்கேன். பொருளாதார தேவைங்கறதுக்காக வேலைக்குப் போக வேண்டிய அவசியம் இல்லாத நான், வெளி உலக அனுபவம் கிடைக்கணும், ஏதாவது கலையம்சமான துறையில வேலை செய்யணும்னு ரொம்ப ஆசைப்பட்டேன். என் கண்களுக்கு முன்னால நான் கண்ட கனவுகள், மூடிய கதவுகளுக்குப் பின்னால படுக்கையறையில நொறுங்கிப் போச்சு சுகந்தி... நொறுங்கிப் போச்சு...."

அழுதாள் அர்ச்சனா.

கண்கள் சிவக்க, இமைகள் வீங்கியிருக்க... அவளைப் பார்த்த சுகந்தியின் மனம் மிகுந்த வேதனை அடைந்தது.

"வா, சுகந்தி.. மேல் வேலையெல்லாம் பொன்னி செஞ்சு வச்சிருப்பா. நாம போய் சமைக்கலாம்" அர்ச்சனா கூறியதும் சுகந்தியும் அவளைத் தொடர்ந்தாள்.

அர்ச்சனாவின் மனநிலையை மாற்றுவதற்காக கல்லூரி நாட்களின் கலகலப்பான நிகழ்ச்சிகளைப் பற்றி பேசினாள் சுகந்தி.

நினைத்தாலே இனிக்கும் அந்த நாட்களைப் பற்றி இப்போது பேசுவதும் இனிமையாக இருந்தது.

மலர்ந்து மணம் வீசும் நினைவுகளைப் பற்றி பேசியபடியே கை மணக்கும் உணவு வகைகளை சுவையாக சமைத்தார்கள். சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

"நிஜமாவே உன் சமையல் ரொம்ப சூப்பரா இருக்கு அர்ச்சு. உன் ஹஸ்பண்ட் குடுத்து வச்சவர். இவ்வளவு ருசியா சமைச்சுப் போடறியே..."

"அட... நீ... வேற... எதை சமைச்சு வச்சாலும் எவ்வளவு ருசியா சமைச்சு வச்சாலும் சுவையா சாப்பிட்ட அவர் வாய்ல இருந்து ஒரு வார்த்தை கூட வராது. அவர் பாட்டுக்கு சாப்பிடுவாரு. எழுந்து போய்கிட்டே இருப்பாரு."

"என்னமோ போ. அழகு, அறிவு, அந்தஸ்து, அடக்கமான குணம், நளபாகமா சமைக்கற திறமை, பாட்டு, டான்ஸ்ன்னு கலைத்திறமை... இதெல்லாம் நிறைஞ்சிருக்கற உனக்கு இப்பிடி ஒருத்தன் புருஷனா வந்து வாய்ச்சிருக்கார். உங்க அப்பா அவசரப்பட்டு இந்த தியாகுவுக்கு உன்னை நிச்சயம் பண்ணிட்டாரேன்னு கவலையா இருக்கு..."

"என்னோட பிரச்னைகள் உன்னோட மனநிலையை கவலையாக்கிடுச்சு... ஆனா... அப்பா மேல எந்தத் தப்பும் சொல்ல முடியாது சுகந்தி. அப்பா விசாரிச்ச வரைக்கும் என் ஹஸ்பண்டைப் பத்தி எல்லாருமே நல்லவிதமாத்தான் சொன்னாங்க. நான் இப்பிடியெல்லாம் கஷ்டப்படணும்னு எழுதி வச்சிருக்கு. யாரையும் குற்றம் சொல்லி என்ன ஆகப் போகுது? பணம், வசதியான வீடு, வேலை செய்ய ஆட்கள், கார், தினுசு தினுசான துணிமணிகள், நகைகள் எல்லாம் இருக்கே... உனக்கென்ன குறைச்சல்? ன்னு கேக்கற என் கணவருக்கு, பெண் என்கிறவ ஒரு பூ மாதிரி, அவ மனசுக்குள்ள அவளுக்குன்னு தனிப்பட்ட உணர்வுகள் இருக்கும். கல்யாணக் கனவுகள் இருக்கும். கணவனைப் பத்தின கற்பனைகள் இருக்கும்ங்கறது எப்படிப் புரியும்?"

"ஒரு மிஷினா வாழற மனுஷன் உனக்கு புருஷன்! அவருக்கு புரிய வைக்கறது எப்படின்னு எனக்கும் புரியலை அர்ச்சு. ஆனா ஒண்ணு மட்டும் புரியுது. உன்னோட திருமண வாழ்க்கை நறுமணமே இல்லாத வெறும் காகிதப்பூப்போல இருக்கு..."

வேறு பல நல்ல விஷயங்களைப் பற்றியும் இனிமையான விஷயங்களைப் பற்றியும் பேசினாலும், அந்த பேச்சு, சந்தோஷம், அன்பு, இன்பம் எதுவுமே இல்லாமல் போன அர்ச்சனாவின் வாழ்க்கை பற்றியே சுற்றிச் சுற்றி வந்தது.

ஒரு வழியாக இருவரும் சமையலை முடித்து சாப்பிட உட்கார்ந்தனர். இதற்கு நடுவே தியாகுவிற்கு மதிய உணவு எடுக்க வந்த ஆளிடம், அர்ச்சனா உணவு வகைகளை மிக நேர்த்தியாக எடுத்து வைத்து அனுப்பிய பாங்கைக் கண்டு ரசித்தாள் சுகந்தி.

"இந்த மாதிரி சுவையான சாப்பாட்டை தினமும் சாப்பிட்டா இன்னும் ரெண்டு ரௌண்டு பருத்துடுவேன் அர்ச்சு...."


"ஆமா சுகந்தி. கல்யாணமான பிறகு நீ ரொம்ப குண்டாயிட்ட. 'டபுள் சின்’ போட ஆரம்பிச்சுடுச்சு. கவனமா இரு. ஓவரா வெயிட் போட்டுட்ட... அப்புறம் உடம்பைக் குறைக்கறது ரொம்ப கஷ்டம்..."

"இஷ்டப்படி ஸ்வீட், ஐஸ்க்ரீம், மட்டன் பிரியாணி, சிக்கன் வறுவல்ன்னு சாப்பிடறேன். வாயைக் கட்டறது அவ்வளவு ஈஸியான விஷயமா இல்லையே.. இன்னிக்கு பாரு.. உன்னோட ருசியான சமையலை ஒரு புடி பிடிச்சுட்டேன். இப்பிடித்தான் ஒவ்வொரு நாளும் கண்ட்ரோல் இல்லாம சாப்பிடறதுக்கு ஏகப்பட்ட எக்ஸ்க்யூஸ்..."

"இப்பிடி எக்ஸ்க்யூஸ் எடுத்துக்கிட்டே போனா.. ஓவர் வெயிட் போறதுல இருந்து எஸ்கேப் பண்ண முடியாது. புரிஞ்சுக்க."

"புரியுது டீச்சர் புரியுது. 'நாளை முதல் குடிக்க மாட்டேன் சத்தியமடி தங்கம்’ மாதிரி நானும் நாளையில இருந்து கடுமையான உணவுக் கட்டுப்பாட்டைக் கடைபிடிக்கப் போறேன். சரிதானே?"

"சரிம்மா தாயே. உன் வைராக்யம் எது வரைக்கும்னு பார்க்கலாம்."

"பாரு... பாரு... பொறுத்திருந்து பாரு. ஹய்யோ... இதென்ன அர்ச்சு.. உன் கூட பேசிக்கிட்டிருந்ததுல நேரம் போனதே தெரியலை. நான் கிளம்பணுமே."

"கிளம்பலாம் இரு. நாலு மணி ஆனதும் 'டீ குடிச்சுட்டுப் போவியாம். சிக்கன் சமோசாவுக்கு மாவு, சிக்கனெல்லாம் ரெடி பண்ணி ஃப்ரிட்ஜில வச்சிருக்கேன். சமோசா ஷேப் பண்ணி சிக்கனை உள்ள வச்சு, தயாரா வச்சிருக்கேன். எண்ணெய்யைக் காய வச்சு, பொரிச்சு எடுத்தா போதும்..."

"பார்த்தியா...? 'கண்ட்ரோலா இரு’ன்னு நீயே சொல்லிட்டு இப்ப நீயே சிக்கன்ங்கற... சமோசாங்கற....?"

"நாளை முதல்தானே உனக்குக் கட்டுப்பாடு? இன்னிக்கு என்னோட வீட்ல நான் பண்ணித் தர்றதை நீ சாப்பிட்டே ஆகணும். முதல் முதல்ல வந்திருக்க.. இனி எப்ப வருவியோ... கரெக்ட்டா நாலரை மணிக்கு உன்னை விட்டுடுவேன். ப்ளீஸ்.. உன்கிட்ட என் கஷ்டங்களையெல்லாம் சொன்னதுல என் மனசுக்கு எவ்வளவு நல்லா இருக்கு தெரியுமா? ஒரு அம்மா கிட்ட சொல்லக்கூடிய விஷயங்களை உன்கிட்ட சொல்லியிருக்கேன். அதனால நெஞ்சுல இருந்த பாரம் கொஞ்சம் குறைஞ்சிருக்கு. அம்மாகிட்ட கூட சொல்ல முடியாத ரகசியங்களை உன்கிட்ட பகிர்ந்துக்கிட்டேன். அதனால... அதனால... நீ இன்னும் கொஞ்ச நேரம் இருந்துட்டு போ சுகந்தி. ப்ளீஸ்..."

அழுகை வெடித்து விடுமோ என்ற எண்ணத்தில் குரல் அமுங்கப் பேசிய அர்ச்சனாவைப் பார்த்து பரிதாபப்பட்டாள் சுகந்தி.

"சரி அர்ச்சு. நீ சொன்ன மாதிரி நாலரை மணி வரை உன் கூட இருக்கேன்." பேச்சு.. பேச்சு.. என்று இருவரும் பேசிக் கொண்டே இருந்ததில் மணித்துளிகள் நிமிஷங்களாய்... நிமிஷங்கள் விநாடிகளாய் பறந்தன.

நான்கு மணியானதும் ஃப்ரிட்ஜினுள் தயாராய் வைத்திருந்த பொரிக்கப்படாத சமோசாக்களை எடுத்தாள் அர்ச்சனா. வாணலியில் எண்ணெய்யைக் காய வைத்தாள். பொன் முறுகலாக சமோசாக்களைப் பொரித்தாள். அழகிய பீங்கான் தட்டில் வைத்து, சிறிய கிண்ணத்தில் 'தக்காளி சாஸ்’ ஸை ஊற்றி, சுகந்தியிடம் கொடுத்தாள். தானும் ஒரு தட்டில் எடுத்துக் கொண்டாள். இருவரும் சாப்பிட்டனர்.

"சிக்கன் சமோசா சூப்பர் அர்ச்சு" சுவைத்து சாப்பிட்டாள் சுகந்தி. ஏலக்காய் தட்டிப் போட்ட 'டீ’யைக் கொடுத்தாள். குடித்து முடிப்பதற்கும் மணி நாலரை ஆவதற்கும் சரியாக இருந்தது.

"அர்ச்சு, இதுக்கு மேல லேட்டா கிளம்பினா என்னோட வீடு போய் சேர ரொம்ப லேட் ஆயிடும். என் ஹஸ்பண்ட் எனக்குக் குடுத்திருக்கற சுதந்திரத்தை நான் மதிச்சு நடந்துக்கணும். இன்னிக்கு கரெக்ட் டைமுக்குப் போனாத்தான் இன்னொரு நாளைக்கு உன் வீட்டுக்கு வர்றதுக்கு அவர்கிட்ட கேக்கறதுக்கு எனக்கு ஈஸியா இருக்கும். என் ஹஸ்பண்ட் ரொம்ப நல்லவர். உறவுகள், நண்பர்கள்னு அவரைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி, என்னைச் சேர்ந்தவங்களா இருந்தாலும் சரி மரியாதை குடுத்து வரவேற்பார். உபசரிப்பார். நம்ம ஃப்ரெண்ட்ஸ் யாரா இருந்தாலும் சரி ஆண், பெண் பேதமெல்லாம் பார்க்க மாட்டார். என்னோட நட்புக்கு நல்ல மரியாதை குடுப்பார். என்னைப் பத்தி நல்லா புரிஞ்சுக்கிட்டவர் அவர். பெண்களை சந்தேகிக்கும் ஆண்களை வெறுத்து ஒதுக்குபவர். அக்கா, தங்கச்சி, அண்ணன், தம்பின்னு கூடப் பிறந்தவங்களோட வளர்ந்ததுனால குடும்ப நேயம் உள்ளவர். நான் எங்கே போறேன், எதுக்காகப் போறேன்னெல்லாம் கேக்கவே மாட்டார். நான்தான் அவர் குடுக்கற சுதந்திரத்தை மதிக்கணும்னு அவர்கிட்ட எங்கே போறேன், எப்ப வருவேன்னு சொல்லிட்டு போவேன். எங்க வீட்டுக்கு அவரைப் பார்க்க வர்ற, அவரோட கல்லூரி சிநேகிதர்கள் கிட்ட ரொம்ப ஃப்ரெண்ட்லியா பழகுவேன். அவரோட ஆபிஸ் நண்பர்களை வீட்டுக்கு அழைச்சுட்டு வந்து அறிமுகப்படுத்துவார். என்னைப் பத்தி பெருமையா பேசுவார். கல்யாணம்ங்கற ஒரு சம்பிரதாயம், ஆண், பெண் ரெண்டு பேரோட இயல்பான வாழ்க்கை முறையையோ இயற்கையான உணர்வுகளையோ பாதிச்சுடக் கூடாதுன்னு ரொம்ப கவனமா இருப்பார். அவரோட சிந்தனைகள் உயர்வானதா இருக்கும். 'தன்னைவிட தன் மனைவி புத்திசாலிங்கறதை எந்த ஆணுமே ஏத்துக்க மாட்டான். ஒத்துக்க மாட்டான். ஆனா இவர் 'எல்லாம் என் வொய்ஃப்னாலதான். அவ என்னை விட கில்லாடி’ன்னு புகழ்ந்து பேசுவார். பெண்களை அடிமைப்படுத்தறது கீழ்த்தரமான நடவடிக்கைன்னு சொல்லுவார். கல்யாணமான புதுசுல அதிகம் பேசாம அமைதியாத்தான் இருந்தார். ஆனா அந்த அமைதியான இயல்பே அலாதியான பிரியத்தோட அடையாளம்னு உணர்த்தினவர். நாளாக நாளாக, என் குணசித்திரத்துக்கு ஏத்தபடி அவரும் என்னைப் போலவே நிறைய பேச ஆரம்பிச்சவர். எங்களோட தாம்பத்தியம், தராசுல சரிசமமா நிக்கற தட்டுகள் மாதிரி. 'நீ பெரிசா’ நான் ‘பெரிசாங்’கற எண்ணம் இல்லை. 'நீ என்ன சொல்றது நான் என்ன கேக்கறது’ங்கற ஈகோ இல்லை. ரெண்டு உயிர், உடல்களான நாங்க, ஒரு மனசா ஒருமிச்சு வாழறோம். உன்னோட கணவன் தியாகுவும் திருந்தி, உன்னைப் புரிஞ்சுக்கிட்டு உன் மேல அன்பு செலுத்தி வாழணும். அந்த நாள் சீக்கிரம் வரும்..."

"குயவன், பானை செய்யும்போது, அவனோட மனசுல கற்பனை பண்ணி இருக்கற வடிவத்தை அடைய அந்த மண் கூட ஒத்துழைச்சு வளைஞ்சு குடுக்கும். ஆனா என் ஹஸ்பண்ட்? எதுக்குமே வளைஞ்சு குடுக்காத மூங்கில் மாதிரி. அதனால... வீண் கனவு காணாத..."

"நிச்சயமா உன் வாழ்க்கை வீணாகாது. எனக்கு நம்பிக்கை இருக்கு..."

"உன் நம்பிக்கையை நான் கெடுக்கலை. பார்க்கலாம்..."

"சரி... அர்ச்சு... நான் கிளம்பறேன்."

"சரி. கிளம்பு. அடிக்கடி மொபைல்ல கூப்பிட்டுப் பேசு. கொஞ்சம் இரு. இதோ வந்துடறேன்" என்ற அர்ச்சனா, தன்னிடமிருந்த புதுப்புடவைகளில் அழகிய வேலைப்பாடு செய்த 'ஜுட்’ சேலையை எடுத்தாள். ஒரு கவரில் போட்டாள். பொன்னியிடம் சொல்லி வாங்கி வைத்திருந்த பூவையும் எடுத்துக் கொண்டாள்.


புடவை இருந்த கவரை சுகந்தியின் கையில் கொடுத்தாள். பூவை அவளது தலையில் சூடி விட்டாள்.

"எதுக்கு அர்ச்சு இதெல்லாம்..." சிணுங்கியபடி வாங்கிக் கொண்ட சுகந்தியின் கன்னத்தில் செல்லமாகக் கிள்ளி, அவளை வாசல் வரை வந்து வழி அனுப்பினாள். கண்கள் கலங்க, கையை ஆட்டி விடை கொடுத்தாள் அர்ச்சனா.

24

ன்று ஞாயிற்றுக்கிழமை. அர்ச்சனாவிற்கு வெளியே எங்கேயாவது போக வேண்டும் போலிருந்தது. சிட்டுக்குருவி போல சிறகடித்துப் பறந்துக் கொண்டிருந்த அவளால் வீடு எனும் கூட்டுக்குள்ளேயே கட்டுப்பட்டு அடைந்து கிடக்க முடியவில்லை. ஹோட்டலுக்குக் கிளம்பிக் கொண்டிருந்த தியாகுவிடம் சென்றாள்.

"எனக்கு வெளியில போகணும். கூட்டிக்கிட்டுப் போறீங்களா?"

"எங்கே போகணும்?"

"எங்கேயாச்சும் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் போணும். சிட்டி சென்டர் அல்லது ஸ்பென்சர்ஸ்.. இப்பிடி எங்கயாவது போணும்ங்க."

"எதுக்கு?"

"ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்க்கு எதுக்குப் போவாங்க? வேண்டியதை வாங்கத்தான்..."

"உனக்கு என்ன வேணும்னு சொல்லு. நான் வாங்கிட்டு வந்து தரேன்..."

"வீட்டுக்குள்ளயே அடைஞ்சுக் கிடக்கறது போர் அடிக்குதுங்க. எனக்கு வெளியில போயே ஆகணும். ப்ளீஸ்..."

"நீ எங்கயும் போக வேணாம். லிஸ்ட் எழுதிக் குடு. நானே வாங்கிட்டு வரேன்..."

"என்னோட பெர்ஸனல் உபயோகத்திற்கான பொருளெல்லாம் நான் பார்த்து செலக்ட் பண்ணி வாங்கணும்ங்க..."

"அப்பிடியென்ன பெரிய பெர்சனல்...? நான் எதை வாங்கிட்டு வர்றேனோ, அதை யூஸ் பண்ணா போதும்."

முகத்தில் அடித்தாற் போல தியாகு பேசியதைக் கேட்டு கோபம் அடைந்தாள் அர்ச்சனா. கூடவே அழுகையும் வந்தது. அடக்கிக் கொண்டாள்.

"நீங்க எதுவும் வாங்க வேண்டாம்." கூறிவிட்டு மாடிப்படிகளில் ஏறினாள். தியாகு காரில் ஏறி கிளம்பினான்.

மாடிக்கு சென்ற அர்ச்சனா, படுக்கையறை கட்டில் மீது போடப்பட்டிருந்த மெத்தை மீது 'தொப்’பென்று விழுந்தாள். குலுங்கிக் குலுங்கி அழுதாள். தலையணையை தாய் மடியாகவும், தந்தையின் தோளாகவும் நினைத்துக் கொண்டு முகம் புதைத்து அழுதாள்.

'சுதந்திரப் பறவையாக வளர்ந்தேனே.... இப்பிடி எந்த உரிமையும் இல்லாம ஒவ்வொரு சின்ன விஷயத்துக்கும் அனுமதி கேட்டு... அது மறுக்கப்பட்டு... கொத்தடிமை மாதிரியான இந்த வாழ்க்கையும் ஒரு வாழ்க்கையா? பண வசதி இல்லாதவங்க கூட ஜோடி ஜோடியா உல்லாசமா, உற்சாகமா ஊர் சுத்தறாங்க. எல்லாம் இருந்தும் மனசு இல்லாதவரான என் புருஷன்?! புன்னகைக்க கூட முடியாத இயல்பு உள்ள ஒரு மனுஷன் என் புருஷன்?! அழகான மனைவி வேண்டும்; ஆனா அவளை அடுத்தவன் ரசித்து விடுவான் என்று கீழ்த்தரமான எண்ணத்தில் அடைத்து வைக்கும் மனுஷன் என் புருஷன்?! சமைச்சுப் போடவும், சந்தோஷப்படுத்தவும் மட்டுமே மனைவி என்று நினைக்கும் மனிதாபிமானம் இல்லாத மனுஷன் என் புருஷன்?! ஏமாந்துட்டோமே அப்பா...’ மேலும் கதறி அழுதாள்.

'கணவனோடு கை கோர்த்தபடி, கடல் அலையில் கால்கள் நனைய நடக்க வேண்டும்; பெரிய அலை வந்து மோதும் பொழுது, அவன் தன்னைப் பாதுகாப்பாய் இழுத்து அணைக்க வேண்டும்; கால்கள், மணலில் புதைய புதைய கணவனின் தோளோடு தோள் உரசியபடி நடக்க வேண்டும், ராஜேஷ்குமார் எழுதும் க்ரைம் நாவலைப் படித்து அதன் முடிவைப் படிக்காமல் விட்டு, அவர் எழுதி இருக்கும் முடிவு என்னவாக இருக்கும் என்று விளையாட்டாய் விவாதித்து, பின்னர் அவரது சஸ்பென்ஸ் என்னவென்று படித்துப் பார்த்து இருவர் சொன்னதுமே தப்பு என்று கண்டு, வாய்விட்டு சிரித்து மகிழ வேண்டும், அனுராதா ரமணனின் கதைகளில் வரும் கதாப்பாத்திரங்கள் போன்றவர்கள், நமக்குத் தெரிந்த குடும்பங்களில் வாழும் கதாபாத்திரங்கள் என்பது பற்றிப் பேச வேண்டும், மதனின் கார்ட்டூன் வரையும் அற்புதத் திறமை பற்றி பேச வேண்டும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் இசை அமைப்பில் உருவான தேன்மழை போன்ற பாடல்களை கணவனோடு சேர்ந்து கேட்டு ரசிக்க வேண்டும். இக்கால நவீன இளைய தலைமுறையினரின் ரசனைக்கேற்ப இசை அமைக்கும் இளம் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் திறமை பற்றி பேச வேண்டும். தரமான ஆங்கிலப்படங்களை கணவருடன் சேர்ந்து, பார்த்து ரசிக்க வேண்டும், அவரது உடையைத் தான் அணிந்து குறும்பு செய்ய வேண்டும்... அப்பாவைப் பற்றிய நினைவு வந்து வாட்டும் பொழுதெல்லாம் அந்தப் பிரிவின் பரிதவிப்பை அவரிடம் பகிர்ந்து கொண்டு, அவர் தரும் பரிவை அனுபவிக்க வேண்டும், அவருடைய உடைகளைத் தன் எண்ணத்திற்கேற்ற ஃபேஷனில் உடுத்தும்படி செல்லமாய் கெஞ்ச வேண்டும், ஷேவ் செய்யும் க்ரீமிற்கு பதிலாக பற்பசை ட்யூபை வைத்து ஏமாற்ற வேண்டும். இப்படி எத்தனை வண்ணக்கனவுகள் என் உள்ளத்தில்?’ அத்தனையும் நொறுங்கிப் போச்சே? கனவுகளுக்கு வழி திறக்கும் கதவுகளே இல்லாத வாழ்க்கையாகிப் போச்சே என் வாழ்க்கை? கடவுளே... சாப்பிடுவது, மிருகம் போல தன் இச்சையைத் தீர்த்துக் கொள்வது... தூங்குவது... மறுநாள் எழுந்து கிளம்பி ஹோட்டலுக்குப் போவது இப்படி ஒரு வறண்ட அட்டவணை கொண்டவருடன் எத்தனை காலம் சலிப்பின்றி வாழ முடியும்? ஒண்ணுமே புரியலையே... அப்பாவின் உடல்நிலை காரணமாக எதுவுமே பேச முடியாம கனவு கண்ட ஊமையாய் நான் வாயடைத்துக் கிடக்கிறேனே...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது.      

திருமணமானபின் தனக்கு நேர்ந்த ஒவ்வொரு அனுபவத்தையும் நினைத்து நினைத்து அழுதாள் அர்ச்சனா. அவளது கண்கள் சிவந்தன. முகம் வீங்கியது. துக்க நினைவுகளின் தேக்கத்தில் தன்னை அறியாமலே தூக்கத்திலாழ்ந்தாள். நெஞ்சம் வெடிக்க, விம்மி அழுததால், ஏற்பட்ட சோர்வினால் திடீர் தூக்கம்! வழக்கமாக அந்த நேரத்தில் அவள் படுப்பதும் இல்லை. தூங்குவதும் இல்லை. அழுகை தந்த களைப்பு அளித்த தூக்கம்.

திடீரென 'திக்’ என்று விழித்துக் கொண்ட அர்ச்சனா, சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். 'ஆ.. மணி பதிணொன்னா... ஒரு மணிக்கு சாப்பாடு எடுக்கும் ஆள் வந்துடுவானே’ பரபரப்பானாள். முகத்தைக் கழுவினாள். கழுவும் பொழுது கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். கண்ணில் போட்டிருந்த ஐ லைனர் அழிந்திருந்தது. சிவந்து வீங்கியிருந்த கண்கள், அவள் அழுததைக் காட்டிக் கொடுத்தன. முகத்தை நன்றாகத் துடைத்துவிட்டு லேசாக பவுடர் போட்டாள். ஐ லைனர் வரைந்து, நெற்றியில் ஸ்டிக்கர் பொட்டை ஒட்டிக் கொண்டு கீழே இறங்கினாள்.

சமையலறையில் பொன்னி தயாராக காய்கறி மற்றும் வெங்காயம், பூண்டு முதலியவற்றை உரித்து, நறுக்கி வைத்திருந்தாள். புடவை முந்தானையை அள்ளி இடுப்பில் செருகினாள். மடமடவென்று சமையலை முடித்தாள்.


முகம் கழுவி லேசான ஒப்பனை செய்து கொண்ட போதும் பொன்னிக்கு அவளது பழகிய முகம், புதிய முகமாகத் தோன்றியது அர்ச்சனாவின் அழுகை அளித்திருந்த அடையாளத்தைப் பார்த்த பொன்னி கேட்டாள்.

"என்னங்கக்கா... கண்ணெல்லாம் வீங்கி இருக்கு? உடம்பு சரியில்லையாக்கா?" பவ்யமாகவும், பாசத்துடனும் கேட்ட பொன்னியைப் பார்த்து சுயபரிதாப சிரிப்பு உதிர்த்தாள் அர்ச்சனா.

"ஒண்ணுமில்ல பொன்னி... லேசா தலைவலி..."

"மாத்திரை எடுத்தாந்து குடுக்கவாக்கா?"

"மாத்திரையெல்லாம் வேணாம். தைலம் தடவிக்கறேன். அது போதும்" கூறியபடியே உணவு வகைகளை கேரியரில் எடுத்து வைத்தாள். கேரியரை கூடையில் வைத்து, கொடுத்தனுப்புவதற்குத் தயாரானாள். பொன்னியை அழைத்தாள்.

"பொன்னி... சாப்பாடு எடுக்கறதுக்கு ஆள் வந்தா கொடுத்தனுப்பிடு. எனக்கு மாடி ரூம்ல கொஞ்சம் வேலை இருக்கு..."

"சரிங்கக்கா. தலை வலிக்குதுன்னிங்களேக்கா. கொஞ்ச நேரம் படுத்துத் தூங்குங்கக்கா…” பரிவுடன் கூறினாள் பொன்னி.

"சரி பொன்னி. நீ போய் சமையலறையைச் சுத்தம் பண்ணு."

"சரிக்கா."

அர்ச்சனா மாடிக்கு வந்து மறுபடியும் படுக்கையில் படுத்தாள். ஏதேதோ சிந்தனைகள் இதயச்சுவரில் அலை அலையாய் மோதியபடியிருக்க, கிணுகிணுத்த மொபைல் ஒலியால் சிந்தனை கலைய, எழுந்தாள். பேசினாள்.

"ஹலோ...."

"என்னம்மா அர்ச்சனா... அப்பா பேசறேன். நல்லா இருக்கியாம்மா? மாப்பிள்ளை எப்பிடி இருக்காரு?"

"நான் நல்லா இருக்கேன்பா. நீங்க எப்பிடி இருக்கீங்க? உடம்புக்கு நல்லா இருக்கா?"

"எனக்கென்னம்மா? மாத்திரையை தவறாம போட்டுக்கிட்டா பி.பி. நார்மலா இருக்கு. எந்தப் பிரச்னையும் இல்லை. அது மட்டுமில்லம்மா. 'என் பொண்ணு நல்ல இடத்துல வாழ்க்கைப்பட்டு நல்லபடியா வாழறாங்கற சந்தோஷத்துலயும், நிம்மதியிலயும் என் உடம்பு ஆரோக்யமா இருக்கு. அது சரி, உன் மாமியார், மாமனார் புண்ணிய ஸ்தலங்களுக்குப் போனாங்களே, அங்கிருந்து போன் போட்டுப் பேசினாங்களாம்மா?"

"ரெண்டு தடவை கூப்பிட்டுப் பேசினாங்கப்பா. அவங்க போயிருக்கற இடங்கள்ல இருந்து மொபைல் போன்ல பேச முடியலையாம்ப்பா..."

"சரிம்மா. மத்தபடி நீ சந்தோஷமா இருக்கில்ல... அது போதும்மா எனக்கு..."

"எனக்கென்னப்பா குறை? பெரிய வீடு, கார், வேலைக்கு ஆள், செலவுக்குப் பணம்... எந்தப் பிரச்னையும் இல்லாத வாழ்க்கை! ரொம்ப சந்தோஷமா இருக்கேன்."

வாய் வழிவந்த குரல் இப்படி பேசியதே தவிர அவளது மனம்? 'எல்லாமே இருந்தும் எது இருக்க வேண்டுமோ, அந்த அன்பு இல்லையே, யார் அதைத் தர வேண்டுமோ அவர் எனக்கு அந்த அன்பைத் தரும் நேயம் இல்லாதவராய் அமைஞ்சுட்டாரேப்பா...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

அர்ச்சனா, தன் மனதில் உள்ளதை மறைத்து, கனகசபையின் நிம்மதிக்காக பொய்யான வார்த்தைகளைப் பேசியதால் அவர் மகிழ்ச்சி பொங்க மேலும் உற்சாகமாகப் பேசினார்.

"உன்னோட சந்தோஷம்தான்மா எனக்கு முக்கியம். உன்னை இப்ப உடனே ஓடி வந்து பார்க்கணும் போல ஆசையா இருக்கும்மா. ஆனா இங்க திருவிழா சீசன். கடையில வியாபாரம் நல்லா நடக்கற நேரம். அதனால உடனே கிளம்பி வர முடியாம இருக்கேன்மா. ஏம்மா, நம்ம ஊர் திருவிழான்னா உனக்கு ரொம்பப் பிடிக்குமே? நீயும், மாப்பிள்ளையும் வந்து போங்களேன். நான் வேண்ணா மாப்பிள்ளையைக் கூப்பிட்டுப் பேசட்டுமாம்மா?"

"வேணாம்ப்பா. அவர் வரமாட்டார். மாமா ஊர்ல இல்லை. ஹோட்டல் பொறுப்பு முழுக்க அவர்தான் பார்த்துக்கணும். அதனால அவரால வர முடியாதுப்பா. ஆனா எனக்கு வரணும்னு ஆசையா இருக்குப்பா. உங்களையும் பார்த்த மாதிரி இருக்கும். திருவிழா கலகலப்பையும் ரசிச்சது மாதிரி இருக்கும். அவர்கிட்ட கேட்டுட்டு நான் மட்டும் வரட்டுமாப்பா?"

"இதென்னம்மா கேள்வி? நீ பொறந்து, வளர்ந்த வீடு. இங்க வர்றதுக்கு நீ, 'வரட்டுமா’ன்னு என்கிட்ட கேட்கணுமாம்மா? நம்ப சம்பிரதாயப்படி, முறையா மாப்பிள்ளையைக் கூப்பிட்டு அழைச்சுடறேன். அவரும் வந்தார்னா உனக்கும் நல்லா இருக்கும். நீ சொன்னது போல ஹோட்டல் வேலை காரணமா வரலைன்னா நீ மட்டும் வந்துட்டுப் போ."

"சரிப்பா. நீங்க அவர்கிட்ட பேசுங்க. மத்ததை நான் பார்த்துக்கறேன். சந்தர்ப்பம், சூழ்நிலை பார்த்து நான் வரேன்ப்பா."

"சரிம்மா. நான் இப்பவே மாப்பிள்ளையைக் கூப்பிட்டுப் பேசிடறேன்." சந்தோஷ மிகுதியில் கனகசபையின் குரல் ஓங்கி உரக்க ஒலித்தது.

பேசி முடித்த அர்ச்சனா, மொபைலை வைத்து விட்டு மீண்டும் சிந்தனை வயப்பட்டாள்.

'அப்பா சந்தோஷத்துல துள்ளிக் குதிக்கறாரு. என்னோட பொய்யான வாழ்க்கை பற்றிய உண்மையான விஷயங்கள் அப்பாவுக்குத் தெரிஞ்சுட்டா துக்கத்துல துவண்டு போயிடுவாரு. அந்தத் துக்கம் அவரோட உயிரையே குடிச்சுடும்... நினைச்சுப் பார்க்கவே பயம்மா இருக்கு...’ வேதனை நெஞ்சை அடைக்க, புரண்டு புரண்டு படுத்தாள் அர்ச்சனா. பகல் நேரத்தில் படுக்கும் வழக்கமோ, தூங்கும் வழக்கமோ இல்லாத அர்ச்சனா, சும்மாவே படுத்துக் கிடந்தாள்.

25

"உங்கப்பா போன் பண்ணினாரு. உங்க ஊர்ல ஏதோ திருவிழாவாம். அதுக்கு நாம ரெண்டு பேரும் வரணுமாம்..."

'கிளம்பத் தயாரா இரு’ன்னு சொல்வான் என எதிர்பார்த்த அர்ச்சனாவிற்கு அவனது தொடர்ந்த பேச்சு, ஏமாற்றத்தை அளித்தது.

"ஊருக்குப் போணும்னு கனவு காண ஆரம்பிச்சுடாதே. எனக்கு எங்கேயும் நகர முடியாத அளவுக்கு வேலை. நுங்கம்பாக்கத்துல இன்னொரு ஹோட்டல் ஆரம்பிக்கற வேலையில ரொம்ப பிஸியா இருக்கேன். அதனால போக முடியாது..."

"நீங்க, உங்க வேலையைப் பாருங்க. நான் மட்டும் போயிட்டு ரெண்டு நாள்ல வந்துடறேன்..."

"ம்கூம். இங்க அம்மா, அப்பா இல்லாத நேரம் வீட்டை பூட்டிட்டு போறது சரி இல்லை. அதனால நீயும் போக வேண்டாம்."

"எங்க ஊர் திருவிழான்னா எனக்கு ரொம்ப இஷ்டம்ங்க. போயிட்டு ரெண்டே நாள்ல வந்துடறேன். அப்பாவையும் பார்த்துட்டு அவர்கூட ரெண்டு நாள் இருந்த மாதிரியும் இருக்கும். ப்ளீஸ்..."

"நான் வேண்டான்னு சொன்னா சொன்னதுதான்."

'இந்த மாடர்ன் யுகத்துல, பிறந்த வீட்டுக்குப் போறதுக்கு புருஷனோட அனுமதி வேணுமா? அனுமதி கேக்கறது கூட தப்பு இல்லைன்னு வச்சுக்கிட்டாலும் 'போகக்கூடாது’ன்னு எப்படித் தடுக்கலாம்? இதென்ன இவர்கிட்ட இப்பிடி ஒரு ஆணாதிக்க உணர்வு? பெத்து, வளர்த்த அப்பாவை, நான் பார்க்கணும்னு நினைக்கும்போது பார்க்கப் போகக் கூடாதா? பிறந்த ஊர்ல ஒரு திருவிழா, பண்டிகைன்னு போகணும்னு எனக்கும் ஆசை இருக்காதா? இவர் எப்படி மறுக்கலாம்? ஏன் மறுக்கணும்? ரெண்டு நாள் ஆள் இல்லாம வீட்டைப் போட்டுட்டுப் போறதுல அப்படி என்ன ஆயிடும்? ம்கூம். அது ஒரு சாக்கு இவருக்கு. அப்பாவோட முகத்தைப் பார்த்துட்டு வந்தாலாவது கொஞ்சம் ஆறுதலா இருக்குமே... அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.


"ஏன் ஒரேயடியா மறுக்கறீங்க? நீங்களும் வாங்க. போயிட்டு வந்துடலாம்."

"நான்தான் சொன்னேனே.. எனக்கு ரொம்ப வேலை இருக்குன்னு.. ஒரு தடவை சொன்னா புரியாதா?"

"புரியாம பேசறது நீங்கதான். எனக்கு எங்கப்பாவைப் பார்க்கணும் போல இருக்கு. என்னை மட்டுமாவது அனுப்புங்களேன்..."

"திரும்ப திரும்ப ஒரே விஷயத்தை மாத்தி மாத்தி கேட்காத. நான் ஒரு விஷயத்துல முடிவு எடுத்தா எடுத்ததுதான்." ஆணித்தரமாக தியாகு கூறியதும் அழுகை வெடித்தது அர்ச்சனாவிற்கு. மிகுந்த சிரமப்பட்டு அழுகையை அடக்கிக் கொண்ட போதும் அவளது கண்களில் கண்ணீர்த் துளிகள் குளம் கட்டியது.

அவளது உணர்வுகளைப் புரிந்துக் கொள்ளாத தியாகு, மாடியறைக்கு சென்றான்.

அர்ச்சனா, தன் மொபைலில் கனகசபையை அழைத்தாள்.

"அப்பா, நாங்க திருவிழாவுக்கு வரலப்பா. நுங்கம்பாக்கத்துல இன்னொரு ஹோட்டல் ஆரம்பிக்கறாராம். அதனால நிறைய வேலை இருக்காம். வீட்ல அத்தை இல்லாததுனால என்னாலயும் வர முடியலப்பா..." சமாளித்துப் பேசினாள்.

"சரிம்மா. அதனாலென்ன... புதுசா ஹோட்டல் ஆரம்பிக்கறது நல்ல விஷயம்தானே? அது பாட்டுக்கு அது நடக்கட்டும். திருவிழாவுல நடக்கப் போற விசேஷ பூஜையில அதுக்கும் சேர்த்து வேண்டிக்கறேன்..."

"சரிப்பா. ஆனா... எனக்கு அங்க வர முடியலையேன்னு கஷ்டமா இருக்குப்பா..."

"இதில என்னம்மா கஷ்டம்? மாப்பிள்ளைக்கு வேலை இருக்கும்போது எப்பிடிம்மா வர முடியும்? அவரோட வேலையெல்லாம் முடிஞ்சப்புறம் சாவகாசமா ரெண்டு பேரும் வந்துட்டுப் போங்க. உங்க அத்தையும் ஊர்ல இல்ல.  உன்னை நம்பித்தானே விட்டுட்டுப் போயிருக்காங்க... பொறுப்பா இருந்துக்கம்மா..."

'பொறுப்பா இருக்கறதை விட பொறுமையா இருக்கேன்ப்பா. அது கூட உங்களுக்காக. என் கணவரோட ஆணாதிக்க நடவடிக்கையில அடிமை போல நான் இங்க வாழறது உங்களுக்குத் தெரியாதேப்பா. தெரியவும் கூடாதுன்னுதானே நானே எல்லா வேதனையையும் எனக்குள்ளயே புதைச்சு வச்சுருக்கேன்’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

"என்னம்மா எதுவுமே பேச மாட்டேங்கற?"

"அ... அ.. அது... ஒண்ணுமில்லப்பா.... அத்தை வந்தப்புறம் நான் அங்க வரேன்ப்பா."

"சரிம்மா. இங்கே திருவிழா வேலையெல்லாம் ரொம்ப ஜரூரா போயிட்டிருக்கு. எனக்கும் வேலை சரியா இருக்கு."

"மாத்திரையெல்லாம் கரெக்டா சாப்பிடுங்கப்பா. உடம்பை பார்த்துக்கோங்க."

"சரிம்மா. வச்சுடட்டுமா."

"சரிப்பா."

மொபைல் மௌனித்ததும், அர்ச்சனாவின் மனக்குரல் பேசியது. தொடர்ந்து பேசியது. அது கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் கண்ணீர் உகுத்தாள்.

26

நாட்கள் நகர்ந்தன. பூவுக்குள் பூகம்பமாய் தனக்குள்ளேயே தன் துன்பங்களைப் புதைத்து வைத்துக் கொண்டு அர்ச்சனாவின் வாழ்க்கை சென்று கொண்டிருக்க, வெளியே புயல் உருவானது. அந்தப் புயல் ப்ரவீனின் உருவத்தில் வந்தது.

திடீரென சொல்லாமல் கொள்ளாமல் பரிசுப் பொருட்களுடன் உற்சாகமாய் சிரித்தபடி வீட்டிற்குள் வந்தான் ப்ரவீன். காலம், அவனது கோலத்தை மாற்றியிருந்தது.

சற்று கருமையான நிறம் கொண்ட அவன், லேசான வெளிர் நிறத்துக்கு மாறி இருந்தான். ஒல்லியாக இருந்த அவனது தேகம் எடை கூடியிருந்தது. ஹேர் ஸ்டைலையும் மாற்றி இருந்தான்.

"ஹாய் அர்ச்... உன் கல்யாணத்துக்கு என்னால வர முடியாமப் போச்சு. அட, இவர்தானே மாப்பிள்ளை? ஹலோ மாப்பிள்ளை ஸார்... கங்க்ராஜுலேஷன்ஸ்! எப்பிடி இருக்கீங்க? கல்யாணத்துக்கு முன்னால உங்க ஃபோட்டோவைப் பார்த்திருக்கேன். ஸ்போர்ட்ஸ் வீரர் மாதிரி கட்டுமஸ்தா சூப்பரா இருக்கீங்க. உங்க கல்யாணத்தப்ப எங்கம்மாவுக்கு உடம்பு சீரியஸாயிடுச்சு. அதனால வர முடியாமப் போச்சு. இந்தாங்க... இது உங்களுக்கு என்னோட ஸ்பெஷல் கிஃப்ட்." வைரக்கற்கள் பதித்த அழகிய தங்க மோதிரம் அடங்கிய சிறு பெட்டியை தியாகுவிடம் கொடுத்தான் பிரவீன்.

அர்ச்சனாவிடம் திரும்பினான். "அர்ச்.... இதெல்லாம் உனக்கு. ஏராளமான பரிசுப் பொருட்களை அவளிடம் கொடுத்து விட்டு சோபாவில் உட்கார்ந்தான்.

"என்ன அர்ச், திடீர்னு என்னைப் பார்த்ததுல உனக்கு பேச்சு கூட வரமாட்டேங்குதா? உன் ஹஸ்பண்ட் கிட்ட என்னை அறிமுகப்படுத்தி வை..."

"ஸாரி ப்ரவீன்... என்றவள், தியாகுவிடம் திரும்பினாள்.

"இவன் ப்ரவீன். எங்க அண்ணனோட ஃப்ரெண்டு."

"ஓ... அந்த ப்ரவீனா?" 'அந்த’ என்ற சொல்லுக்கு அதிகமான அழுத்தம் கொடுத்து உச்சரித்து நக்கலாகப் பேசினான் தியாகு. பின் தன்னை சுதாரித்துக் கொண்டு, "ஹலோ" என்றான் ப்ரவீனைப் பார்த்து.

"என்ன மாப்பிள்ளை ஸார்... உங்க ஹோட்டல் பிஸினஸெல்லாம் எப்பிடி இருக்கு? நம்ம அர்ச்சனாவுக்கு நல்ல நிர்வாகத் திறமை இருக்குமே. அவளும் சேர்ந்து ஹோட்டல் மேனேஜ்மென்ட்டைப் பார்த்துக்கறாளா?"

'நம்ம அர்ச்சனா’ என்ற வார்த்தை தியாகுவிற்குள் எழுப்பிய கோபக் கனலை மூடி மறைக்க சிரமப்பட்டான் தியாகு. அதற்கு அடுத்தபடியாக ப்ரவீன் கூறிய அர்ச்சனாவின் நிர்வாகத் திறமை பற்றிய விஷயம் அதை விட அதிகமாக கடுப்பேற்றியது.

முகத்தில் எந்தவித பிரதிபலிப்பையும் வெளிக்காட்டாமல் இருந்து கொள்வதற்கு பிரயத்தனப்பட்டபடி தவித்தான் தியாகு.

இதை முற்றிலும் அறிந்து கொள்ளாத ப்ரவீன், சகஜமாக அர்ச்சனாவிடம் பேச்சைத் தொடர்ந்தான்.

"என்ன அர்ச்... கல்யாணத்துக்கப்புறம் அட்லீஸ்ட், பூசி மெழுகினாப்லயாவது எடை கூடியிருப்பன்னு பார்த்தா ஏற்கெனவே இருந்ததை விட இளைச்சுப் போயிருக்கியே? உடம்புல வெயிட் ஏறிடக் கூடாதுன்னு ரொம்ப ஸ்ட்ரிக்டா இருக்கியாக்கும்?"

"அதெல்லாம் ஒண்ணுமில்ல ப்ரவீன். உட்கார். எதுக்கு இவ்வளவு கிஃப்ட் வாங்கிட்டு வந்திருக்க? ரொம்ப அதிகமா செலவு பண்ணியிருக்க? அது சரி, உங்க அம்மா நார்மலா ஆயிட்டாங்களா?"

"அம்மா நார்மலுக்கு வந்தாச்சு. பழைய மாதிரி சுறுசுறுப்பா இருக்காங்க. உன்னைப் பத்தி கேட்டுக்கிட்டே இருக்காங்க. எனக்கு பெங்களூர்ல வேலை கிடைச்சதும் நான் போயிட்டேன்னு அம்மாவுக்குக் கொஞ்சம் வருத்தம். அம்மா, அப்பா, தங்கச்சி மூணு பேரையும் எங்க ஊர்ல, எங்க பூர்வீக வீட்ல கொண்டு போய் குடி வச்சுட்டேன்.”

"பெங்களூர்ல நீ வேலை பார்க்கற கம்பெனி எப்படி?"

"அதை ஏன் கேக்கற? பெரிய மல்ட்டி நேஷனல் கம்பெனி. ஸ்டார்ட்டிங் சம்பளமே நாற்பதாயிரம். என்னோட திறமையைப் பார்த்து இன்னும் ஜாஸ்தி பண்ணி ப்ரமோஷன் பண்றதா சொல்லி இருக்காங்க. இது எல்லாமே உன்னாலதானே?"

அவன் வெகுளித்தனமாகப் பேசுவதைப் புரிந்து கொண்ட அர்ச்சனா, தவியாய்த் தவித்தாள். பேச்சை வேறு திசைக்கு மாற்றினாள்.

"ப்ரவீன்... அப்பா, ஃபோன் பண்ணும் போதெல்லாம் உன்னைப் பத்திப் பேசுவாரு. எங்க ஊர்ல திருவிழா. அதுக்காக அப்பா கூப்பிட்டாரு. இவருக்கு ரொம்ப வேலை இருக்கறதுனால நாங்க போகல..."


"ஓ... உங்க ஊர் திருவிழாவா? கலகலன்னு ஊரே கோலாகலமா இருக்குமே. நான், உன் அண்ணன் சரவணன், நீ, நம்ப ஃப்ரெண்ட்ஸ் சாதிக், எஸ்தர், சுகந்தி எல்லாரும் சேர்ந்து போட்ட ஆட்டமும், லூட்டியும் மறக்கவே முடியாதே... ரெண்டு நாள் உங்க அப்பா வீட்ல தங்கி இருந்து நாம அடிச்ச கொட்டம், ஆயுசுக்கு மறக்க முடியாத கொண்டாட்டமாச்சே...."

"ஸ்டாப் இட்..." தியாகு பயங்கரமாய் கத்தினான்.

அர்ச்சனா மிரண்டாள். ப்ரவீன் திகைத்துப் போனான்.

"என்ன மாப்பிள்ளை ஸார்... என்ன ஆச்சு...?" ப்ரவீன் கேட்டான்.

"எதுவும் ஏடாகூடமா ஆகறதுக்கு முன்னால நீ வெளியே போயிடு.. கெட் அவுட்..." மீண்டும் கத்தினான் தியாகு.

அர்ச்சனா பதறினாள்.

"என்னங்க..."

"நீ வாயை மூடு. எதுவும் பேசாத. இவனை முதல்ல வெளியே அனுப்பு..."

எதுவும் புரியாத ப்ரவீன், அவமானத்தில் முகம் சுண்டினான். எதுவும் பேச இயலாத அர்ச்சனா, அவனைக் கையெடுத்து கும்பிட்டு வெளியேறும்படி சைகை செய்தாள்.

ஆனந்தமாக உள்ளே நுழைந்த ப்ரவீன் அவமானத்தால் ஏற்பட்ட அவஸ்தையாலும், அளவற்ற துயரத்திலும், தளர்ந்த நடையுடன் வெளியே சென்றான்.

அவன் போனதும் அர்ச்சனா, தியாகுவிடம் தைர்யமாய் பேச ஆரம்பித்தாள்.

"வீட்டுக்கு வந்தவங்களை இப்படியா பேசறது? படிச்சவங்கதானே நீங்க?..."

"நான் படிச்சவன்தாண்டி. அவன் உனக்குப் பிடிச்சவனாச்சே. அதனாலதான் அப்படி பேசினேன். நீங்க உங்க மலரும் நினைவுகளைப் பத்தி கதை அளந்துக்கிட்டிருப்பீங்க. அதையெல்லாம் கேட்டுக்கிட்டிருக்கறதுக்கு நான் என்ன கேனையனா? "

"வீடு தேடி வந்தவங்களுக்கு மரியாதை குடுத்து கௌரவமா நடத்தறதுதான் பண்பாடு..."

"அவன், உன்னைத் தேடி வந்தவன். அதுக்குத் தகுந்த மரியாதையைத்தான் நான் குடுத்துருக்கேன்..."

"அவன் தேடி வந்தது நம்ப ரெண்டு பேரையும்தான். நம்பளை வாழ்த்தறதுக்கு வந்தவனை உங்க வார்த்தையால வீழ்த்தி அனுப்பிட்டீங்களே."

"இன்னிக்கு இப்பிடி அனுப்பினாத்தான் நாளைக்கு மறுபடி இங்க வர மாட்டான்."

"அப்பிடி என்ன தப்பு பண்ணிட்டான்?"

"உன்னைப் பார்த்தது தப்பு. உன் கூட பழகினது தப்பு. உனக்கு லவ் லெட்டர் குடுத்தது தப்பு. திருந்திட்டதா சொல்லி திரும்ப திரும்ப உன் கூட பழகறது தப்பு. கல்யாணமாகி இன்னொருத்தன் பொண்டாட்டியான உன்னைப் பார்க்க வர்றானே அது தப்பு."

"காதலிக்கறது தப்புன்னு எந்த அகராதியிலயும் இல்லை. நான் அவனைக் காதலிக்கலைன்னு தெரிஞ்சப்புறம் அவனுக்கு என் மேல எந்தத் தப்பான எண்ணமும் இல்லை. அதனாலதான் அவன் இங்கே வந்தான். மடியில கனம் இல்லைன்னா வழியில ஏன் பயப்படணும்?"

"அது சரி... அவனைத் திட்டினா உனக்கு ஏன் கோபமும் ரோஷமும் பொத்துக்கிட்டு வருது? இவ்வளவு ஆசையை அவன் மேல வச்சுக்கிட்டு என்னை ஏண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டே? என்னோட ஆஸ்திக்காகவா? அந்தஸ்துக்காகவா?"

"அவன் மேல ஆசை இல்லை. உன்மையான அன்பு. எனக்கு அவன் மேல காதலே வரலை. உங்க ஆஸ்தியும், அந்தஸ்தும் என் கால் தூசிக்கு சமம். பண்பாடான குடும்பத்தைச் சேர்ந்தவர்னு எங்கப்பா உங்களுக்கு என்னைக் கட்டி வச்சாரு..."

"எவனையோ காதலிச்சிக்கிட்டுத் திரிஞ்ச உன்னை என் தலையில கட்டி வச்சுட்டாருன்னு சொல்லு."

"மறுபடி மறுபடி சொல்றேன். நான் ப்ரவீனைக் காதலிக்கலை. நான் அவனை விரும்பியிருந்தா எங்களுக்கு எந்தத் தடையும் இல்லாத பட்சத்துல நான் ஏன் அவனை விட்டு விலகினேன்? கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க."

"யோசிக்கறதுக்கு ஒண்ணுமே இல்லை. ஒரு டம்ளர் பால்ல ஒரு துளி விஷம் கலந்தாலும் அந்தப் பால் சுத்தமான பால் கிடையாது. திரிஞ்சுப்போன பாலை திரட்டுப் பால் ஸ்வீட் பண்ற மாதிரி, மனசு கெட்டுப் போன உன்னை, எனக்கு கல்யாணம் பண்ணி வச்சுட்டாங்க என்னோட அம்மாவும், அப்பாவும்."

"ஹோட்டல் முதலாளி நீங்க, உங்க ஸ்டைல்லயே ஸ்வீட் அது இதுன்னு பேசறீங்க. ஜவுளிக்கடைக்காரரோட பொண்ணு நான். அழுக்கு பட்ட புடவையை சுத்தமா துவைச்சுப் போடற மாதிரி ப்ரவீன் மனசுல என் மேல இருந்த காதலை பரிசுத்தமான அன்பா மாத்தினவ நான். நிர்மலமான அவனோட மனசை ரணகளப்படுத்தி நிர்மூலமாக்கிட்டீங்க. உங்க சந்தேகத் தீயால அவனை சுட்டுப் பொசுக்கிட்டீங்க..."

"உன் தேகம், மோகத்தீ மூட்டும்படியா இருக்கே. அந்த தேகத்தின் சுகம் எனக்கு வேணும்... எனக்கு மட்டுமே வேணும்.. நீ எனக்கு மட்டும்தான் சொந்தம். எனக்கு மட்டுமே சொந்தம். உன்னை வேற எவனும் பார்க்கக் கூடாது. உன் கூட வேற எவனும் பழகக் கூடாது. நீ என்னை விட்டு விலகக் கூடாது. உன் உடம்புல இருக்கற ஒவ்வொரு நாடி நரம்பும் குடுக்கற சொர்க்க சுகபோகத்தை நான் மட்டுமே அனுபவிக்கணும்..." வெறியோடு கத்திக் கொண்டிருந்த தியாகுவைப் பார்க்கவே பயமாகவும், வெறுப்பாகவும் இருந்தது அர்ச்சனாவிற்கு.

தியாகு தொடர்ந்தான்.

"’அர்ச்’ 'அர்ச்’ன்னு செல்லமா உன்னை அர்ச்சிக்கிறானே? அதுக்குப் பேரு வெறும் அன்புன்னு நீ சொல்றதை நான் நம்பணும்? ம்..?"

"நம்பிக்கைதாங்க வாழ்க்கை. தாலிகட்டின மனைவியை இப்படி மட்டமா பேசறீங்களே... உங்களுக்கே நியாயமா இருக்கா?"

"நீதி நியாயத்தைப் பத்தி நீ பேசாத. நீ உண்மையானவள்னா இனிமே அவனைப் பார்க்காத. பேசாதே."

"அவனைப் பார்க்காம, அவன் கூட பேசாம இருந்தாத்தான் நான் நல்லவளா?"

"என்னைப் பொறுத்த வரைக்கும் அப்படித்தான்."

"என்னைப் பொறுத்த வரைக்கும், பொண்ணுங்கறவ தப்பு செய்யணும்னு நினைச்சா எத்தனை தடைகள் இருந்தாலும், எத்தனை பூட்டு போட்டு வச்சாலும் நிலை தடுமாறிடுவா. அதே பொண்ணு, ஒழுக்கமா இருக்கணும்னு நினைச்சாள்ன்னா எந்த சூழ்நிலையில இருந்தாலும் தன்னோட மானத்தைக் காப்பாத்தி கௌரவமா இருந்துப்பா... பெத்தவங்களோட காவலோ, புருஷனோட கண்டிப்போ அவ போற பாதையை மாத்தாது. அவளுக்கு, அவளோட மனசுதான் காவல், பூட்டு, எல்லாமே..."

"எல்லாம் தெரியும்டி எனக்கு. பெரிசா பாடம் சொல்ல வந்துட்டா. நீ என் பொண்டாட்டி, நான் உன்னோட புருஷன். நான் சொல்றதை நீ கேக்கணும். கேட்டுத்தான் ஆகணும்."

"நானும் உங்களைக் கேக்கறேன், நீங்க எந்த யுகத்துல வாழ்ந்துக்கிட்டிருக்கீங்க.. இப்படி பத்தாம்பசலித்தனமா பேசிக்கிட்டிருக்கீங்க? புருஷனோட அன்புக்குத்தான் மனைவி அடிமையா இருப்பா. புருஷனோட அராஜகத்துக்கு இல்ல. புரிஞ்சுக்கோங்க."

"புரிஞ்சுதுடி... ஒரு நாள் அந்த ப்ரவீன் பயலைப் பார்த்ததுனாலதான் இவ்வளவு தைர்யமா பேசறேன்னு நல்லாவே புரியுது. எனக்கு சமைச்சுப் போடவும், சேவை செய்யவும், என் கூட படுக்கவும்தான் நீ. சரிசமமா வாய் கிழியப் பேசறதுக்கு எந்த அதிகாரமும் உனக்குக் கிடையாது."


"உங்க அம்மா வரட்டும். உங்களோட வண்டவாளத்தைத் தண்டவாளத்துல ஏத்தறேன்..."

"நீ என்னை தண்டவாளத்துல ஏத்துனா, நான் ஹெலிகாப்டர்ல பறப்பேன்டி. நீயும், அந்த ப்ரவீன் பயலும் படுக்கையறையில படுத்துக் கிடந்ததை என் கண்ணால பார்த்தேம்மான்னு அம்மா கிட்ட ஒரு ரீல் விட்டு நீலிக்கண்ணீர் வடிப்பேன். உன்னை மருமகளேன்னு முத்தம் கொடுக்க மாட்டாங்க. உன் மூஞ்சியில காறித் துப்புவாங்க. நான் எதுக்கும் துணிஞ்சவன். நான் வீரமான ஆம்பளை. நீ சோரம் போன பொம்பளை..."

"நெஞ்சில ஈரமே இல்லாத நீங்கள்லாம் ஒரு மனுஷன். உங்க பேச்சே காட்டிக் குடுத்துருச்சு. வெட்ட வெளிச்சமாயிடுச்சு. நீங்க ஒரு சைக்கோன்னு. முதல்ல ஒரு சைக்யாட்ரிஸ்ட்டைப் போய் பாருங்க."

"ஓகோ.. என்னை பைத்தியக்காரன்னு முத்திரை குத்திட்டு உனக்குப் பிடிச்சமானவனோட கூடி குலாவப் போறியாக்கும்?"

"உங்க பைத்தியத்துக்கு வைத்தியம் பாருங்கன்னுதான் சொல்றேன்..."

"நீ என்ன சொல்றது? நான் என்ன கேக்கறது, 'நீ, எனக்கு பைத்தியக்காரப் பட்டம் குடுக்கற’ன்னு உங்கப்பாகிட்ட இப்பவே சொல்றேன்..."

அதிர்ச்சி அடைந்தாள் அர்ச்சனா. 'ஐய்யோ இவர் பாட்டுக்கு அப்பாகிட்ட ஏதாவது தப்பா பேசிட்டார்ன்னா அப்பா மனசு துடிச்சுப் போய் அந்த வேதனையிலயே அவரோட உயிரும் துடிக்க துடிக்கப் போயிடுமே’ சட்டென்று தன் கோபமான குரலை மாற்றிக் கொண்டாள்.

'கடவுளே, எங்க அப்பாவுக்காக இந்த ஈவு இரக்கமே இல்லாத பாவி கிட்ட தணிஞ்சு, பணிஞ்சு போக வேண்டி இருக்கே. எனக்கு ஏன் இப்படி சோதனை’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

குரலின் தொனியை மாற்றிக் கொண்ட அர்ச்சனா கனிவாய் பேசினாள். பேசுவது போல நடித்தாள்.

"என்னங்க... உங்களை பைத்தியம்னு சொல்லி எனக்கு என்ன ஆகப் போகுது? நான் உங்க மனைவி. காலம் முழுசும் உங்க கூடவே கூடி வாழப் போறவ. நீங்க நல்லா இருந்தாத்தான் நான் நல்லா இருப்பேன். உங்க மனசு... ம... மனநிலை சரியில்லையோன்னுதான் டாக்டரைப் பார்க்கலாம்னு அன்னிக்கும் சொன்னேன். இப்பவும் சொல்றேன். நீங்க சரியாத்தான் இருக்கீங்கன்னா ஓ.கே. என்னை நம்புங்க. என் மனசுல எந்தக் களங்கமும் இல்லை. நீங்க என்னைப் புரிஞ்சுக்கணும். நமக்கு இடையில வேற யாரும் குறுக்க வர வேண்டியதில்ல.  அது எங்கப்பாவே ஆனாலும் கூட. இன்னொரு விஷயம்... எங்க அப்பா ஹார்ட் பேஷண்ட்ன்னு உங்களுக்குத் தெரியும். அவருக்கு நம்பளோட சண்டை, சச்சரவு, தகராறெல்லாம் தெரிஞ்சதுன்னா மாரடைப்புல மேல போயிடுவாரு. நான் எங்கப்பா மேல உயிரையே வச்சிருக்கேன். அம்மா இல்லாத என்னை அந்தக் குறை தெரியாம வளர்க்கறதுக்கு பாடுபட்டார். இள வயசுலயே மனைவியை இழந்த அவர் மறு கல்யாணம் கூட பண்ணிக்காம எனக்காக தன் வாழ்வையே தியாகம் பண்ணி இருக்கார். இதெல்லாம் எதுக்காக? நான் நல்லபடியா சந்தோஷமா, நிறைவான வாழ்க்கை வாழணும்’ன்னுதான். நான் ரொம்ப சந்தோஷமா இருக்கறதா அவர் கிட்ட சொல்லி இருக்கேன். என்னோட வாழ்க்கை சந்தோஷமா இருக்கறதா அப்பா நினைச்சிக்கிட்டிருக்கார். அந்த பொய் வேஷத்தை தயவு செய்து கலைச்சுடாதீங்க. மறுபடியும் சொல்றேன். நான் சுத்தமானவ. கல்லூரி நாட்கள்ல சக மாணவர்கள் கூட சகஜமா பழகி இருக்கேன். ஆனா அதெல்லாம் ஒரு மரியாதையான நட்பு ரீதியான பழக்கம்தான். ப்ளீஸ் என்னை நம்புங்க. அப்பாகிட்ட நான் ஆடற நாடகம் உண்மையாவே என்னோட வாழ்க்கையா மாறினா அதைப் போல ஒரு சந்தோஷம் வேற எதுவும் இருக்காதுங்க.. அப்பாவுக்காக கூட இல்லாட்டாலும் எனக்காக நீங்க மாறுங்க. என் கிட்ட பத்து மடங்கு பிரியம் காட்டினீங்கன்னா, நான் பதிலுக்கு நூறு மடங்கு பிரியம் வச்சுடுவேன், உங்க மேல. எனக்கு புடவை வேணும் நகை வேணும்னு கேக்கலைங்க. அன்பு. புருஷன்கிட்ட ஒரு பொண்ணு எதிர்பார்க்கற உள்ளன்பைத்தான்ங்க நான் உங்க கிட்ட கேக்கறேன். அன்பை யாருமே யாசகம் கேட்டு பெற மாட்டாங்க. ஆனா ஊரறிய உலகறிய தாலி கட்டின என் புருஷன் உங்ககிட்ட அன்பை யாசகமாக் கேட்டாவது அடையறதுல எனக்கு எந்த கௌரவக் குறைச்சலும் இல்லை. இத்தனை வருஷம் அப்பாவுக்கு பொண்ணா வளர்ந்துட்டேன். இனிமேல உங்க மனைவியா, நீங்கதான் உலகம்னு வாழணும். அதுக்கு ஒரு பாலம் அமையணும். அந்தப் பாலம் உங்க அன்பினால அமையணும். நீங்கதான் எனக்கு எல்லாமே. உங்க வீட்டு மருமகளா அழைச்சுட்டு வந்து இடம் குடுத்திருக்கீங்க. உங்க குடும்பத்துல ஒருத்தியா இந்த வீட்ல இடம் குடுத்திருக்கீங்க. என் கழுத்தில தாலி கட்டி உங்க மனைவிங்கற இடத்தை குடுத்திருக்கீங்க. அதே மாதிரி உங்க மனசுலயும் எனக்குன்னு ஒரு இடம் குடுத்தீங்கன்னா என் வாழ்வு மனம் நிறைஞ்ச வாழ்வா இருக்கும். ப்ளீஸ்..... புரிஞ்சுக்கோங்க......" நடிப்பாக பேச ஆரம்பித்தவள், உண்மையாகவே உள்ளத்திலிருந்து உதிர்த்தாள் தன் எண்ணங்களை.

அவள் பேசுவதையெல்லாம் காது கொடுத்து கேட்பது போல் தோற்றமளித்த தியாகுவின் மனது? 'அப்பா கிட்ட சொன்னா அப்பாவோட உயிருக்கு ஆபத்தா? அதுக்காகத்தான் உச்சாணிக் கொம்புல ஏறி பேசியவ தடார்ன்னு தரை இறங்கி வந்து தணிஞ்சு பேசறாளா? தியாகு, துருப்புச் சீட்டு கிடைச்சுதுடா உனக்கு’ அர்ச்சனாவை மேலும் தன் வயப்படுத்தும், தன் ஆளுமைக்கு உட்படுத்தும் அம்பு ஒன்று, அர்ச்சனா, அவளது அப்பா மீது வைத்திருக்கும் அன்பு ரூபத்தில் கிடைத்ததை எண்ணி இறுமாப்பு கொண்டான்.

அவனது இறுமாப்புக்கு இறுதிச் சடங்கு நடக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதை அப்போது தியாகு அறியவில்லை.

27

பெங்களூரில் உள்ள தனது உயர் அதிகாரியை அவனது மொபைல் போனில் அழைத்தான் ப்ரவீன்.

"ஹலோ மனோ ஸார்... நான் ப்ரவீன். சென்னையில இருந்து பேசறேன். இன்னும் ஒரு வாரத்துக்கு லீவு வேணும் ஸார்..."

"என்ன ப்ரவீன் இது? உங்களோட ஸ்மார்ட்னெஸை பார்த்துத்தான் எடுத்த எடுப்பிலேயே அதிகமான ஸாலரிக்கு உங்களை அப்பாயிண்ட் பண்ணினேன். நீங்க இப்பிடி லீவு போடறீங்க?..."

"ஸாரி ஸார்... என்னோட க்ளோஸ் ஃப்ரெண்டுக்கு ஃபேமிலியில கொஞ்சம் பிரச்னை. கண்டிப்பா நான் இங்கே இருந்தே ஆகணும் ஸார். ப்ளீஸ் ஸார்..."

"ஓ.கே. ப்ரவீன்... முடிஞ்ச அளவுக்கு சீக்கிரமா வரப்பாருங்க. இதுக்கு மேல லீவை எக்ஸ்டென் பண்ணீங்கன்னா உங்க வேலைக்கு நான் உத்தரவாதம் கிடையாது... ஸோ.. சீக்கிரமா வரப்பாருங்க."

"ஓ.கே. ஸார். தாங்க்யூ."


பெங்களூர் லைனை துண்டித்துவிட்டு, சுகந்தியின் லைனைத் தொடர்பு கொண்டான் ப்ரவீன்.

"சுகந்தி..."

"என்ன ப்ரவீன்?"

"அர்ச்சனா விஷயமா உன் கிட்ட பேசணும். நீ உன்னோட வீட்லதான் இருக்கியா? இப்ப வரலாமா?"

"ஓ. வாயேன்."

"இதோ வந்துடறேன்." மொபைலை ஷர்ட் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு ஒரு ஆட்டோ பிடித்து சுகந்தியின் வீட்டிற்கு சென்றான் ப்ரவீன்.

நிறைய அபார்ட்மென்ட்ஸ் கொண்ட அடுக்கு மாடிக் கட்டிடமாகவும் இன்றி தனி வீடாகவும் இன்றி நான்கு போர்ஷன்கள் அடங்கிய ஒரு கட்டிடத்தில் சுகந்தியின் போர்ஷன் இருந்தது. கட்டிடத்தை சுற்றிலும் இருந்த திறந்த வெளியில் க்ரோட்டன்ஸ் செடிகள் அழகிய வண்ணங்களில் வளர்ந்து பார்ப்பதற்கு ரம்மியமாக இருந்தன. அவற்றையெல்லாம் ரசிக்கக் கூடிய மனநிலையில் இல்லாத ப்ரவீன், சுகந்தியின் போர்ஷனுக்கு சென்று, அழைப்பு மணியை அழுத்தினான்.

கதவு திறக்கப்பட்டது. சுகந்தி நின்றிருந்தாள்.

"வா ப்ரவீன்" சுகந்தி நகர்ந்தாள்.

ப்ரவீன், அவளைத் தொடர்ந்து சென்றான்.

ஹாலில் இருந்த சோஃபாவில் உட்கார்ந்திருந்தான் வாசு.

ப்ரவீனை வரவேற்றான்.

"வா ப்ரவீன். உட்கார், டீ, காஃபி அல்லது லைம் ஜுஸ்.. என்ன வேணும் குடிக்கறதுக்கு? உன் ஃப்ரெண்டு போடற காபியைக் குடிக்கறதும், வயித்தை க்ளீன் பண்றதுக்குக் குடிக்கற விளக்கெண்ணெய்யும் ஒண்ணுதான்..." வாசுவின் கிண்டலைக் கேட்ட சுகந்தியும், ப்ரவீனும் வாய் விட்டு சிரித்தனர்.

பொய்க் கோபம் காண்பித்து வாசுவின் முதுகில் அடித்தாள் சுகந்தி.

பகிர்ந்து கொள்ளுதலும், புரிந்து கொள்ளுதலும் சரிசமமாக பரிமாறிக் கொள்ளப்பட்ட சுகந்தி - வாசு தம்பதிகளைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தான் ப்ரவீன். அதே சமயம், மிகப் பிரமாதமான சுவையுள்ள உணவைச் சாப்பிடும் பொழுது திடீரென பல்லில் கல், கடிபடுவது போல அர்ச்சனாவின் மணவாழ்க்கை ஞாபகம் வந்து, அவனது மனதை வதைத்தது.

"என்ன ப்ரவீன் திடீர்னு சீரியஸா ஏதோ யோசிக்க ஆரம்பிச்சுட்ட?"

"வேறென்ன... நம்ம அர்ச்சனாவைப் பத்திதான்... அர்ச்சனா, உன்கிட்ட தன்னோட சோகத்தையும், தன் கணவனோட நடவடிக்கைகள் பத்தியும் மனம்விட்டு சொல்லி இருக்கா. அவ சொன்னதையெல்லாம் நீ என் கிட்ட சொன்னதுல இருந்து என் மனசு கனத்துப் போச்சு. அவளோட புருஷன் தியாகுவோட வித்தியாசமான நடவடிக்கைகள் இப்படியே தொடர்ந்துக்கிட்டே போனா.. அர்ச்சனாவோட வாழ்க்கை என்ன ஆகறது? மன நிம்மதி என்ன ஆகறது? அவளோட சந்தோஷம் என்ன ஆகறது? இதைப் பத்தியெல்லாம் யோசிச்சேன். ஒரு மனுஷன், கல்யாணம் பண்ணிக்கிட்ட பொண்ணு மேல அதிக ஆசை வைக்கறது நியாயம். தன்னைத் தவிர வேற யாரும் அவளை ரசிக்கக் கூடாதுன்னு நினைக்கறதும் நியாயம். ஆனா... கட்டிக்கிட்ட பொண்ணு மேல அன்பே செலுத்தாம வெறும் ஆதிக்கம் மட்டுமே செலுத்தறது அநியாயம்தானே? இந்த அநியாயத்தை பண்ணிக்கிட்டிருக்கற தியாகுவை இப்படியே விட்டுடறதா?"

"நானும் இதைத்தான் கேட்டேன் அர்ச்சனாட்ட. அவ ரொம்ப பயப்படறா. விஷயம் அவங்கப்பாவுக்கு தெரிஞ்சுட்டா அவரோட உயிருக்கு ஆபத்துன்னு."

"அது சரிதான். நான் என்ன சொல்றேன்னா... அந்த தியாகு சைக்கியா அல்லது வக்கிரபுத்திக்காரனான்னு தெரிஞ்சுக்கணும்."

"தெரிஞ்சு..?"

"தெரிஞ்சா... அர்ச்சனாவுக்கு ஒரு தெளிவை உண்டாக்கலாம். உண்மையிலேயே சைக்கியா இருந்தா அதாவது மனதளவில பாதிச்சதுனால இப்பிடி நடந்துக்கறான்னா சைக்யாட்ரிஸ்ட் கிட்ட கூட்டிட்டுப் போய் அவனுக்கு சிகிச்சை குடுத்து அவனை சரி பண்ணலாம்..."

"தியாகுதான், சைக்யாட்ரிஸ்ட்ட போறதைப் பத்தி பேசினாலே பாயறானாமே?"

"சரி.. அப்ப... ஒரு வேளை வக்ரபுத்திக்காரன்தானான்னு உறுதியா தெரிஞ்சுக்கலாமே? தெரிஞ்சுகிட்டா அர்ச்சனாகிட்ட அதைப் பத்தி சொல்லி அவளோட பிரச்னைகளுக்கு தீர்வு காண யோசனை சொல்லலாமே...?"

"நீ சொல்றது என்னமோ கேக்கறதுக்கு நல்லாத்தான் இருக்கு ப்ரவீன். ஆனா நடைமுறைக்கு சாத்தியப்படணும்... இன்னொரு விஷயம், அவன் புத்தியே கோணல் புத்திதான்னு எப்படிக் கண்டுப்பிடிக்கறது?"

"கண்டு பிடிப்பேன். நான் கண்டு பிடிப்பேன். அர்ச்சனாவோட கண்ணை மறைச்சிருக்கற அவனோட முக மூடியைக் கிழிச்செறிவேன். அவன் மனநலம் பாதிக்கப்பட்ட மதி கெட்டவனா அல்லது குணநலன் இல்லாத கயவனான்னு கூடிய சீக்கிரம் தெரிஞ்சுப்பேன்."

"நீ தெரிஞ்சிக்கிட்ட விஷயங்கள் தப்பித் தவறிக் கூட அர்ச்சனாவோட அப்பாவுக்கு தெரிஞ்சுடக் கூடாது. கவனம். அது சரி... உனக்கு எப்படி இந்த எண்ணம் தோணுச்சு?"

"எந்த பிரச்னையும் மேலோட்டமான கண்ணோட்டத்துல பார்த்துட்டு விட்டுடக் கூடாது. ஆழமா யோசிச்சுப் பார்க்கணும். நான் யோசிச்சேன். தீவிரமா யோசிச்சேன்..."

"என்ன யோசிச்சன்னு கொஞ்சம் விவரமாத்தான் சொல்லேன்..."

"நாம ஏதாவது தப்பு செஞ்சாத்தான் மத்தவங்களும் தப்பு செய்யறாங்களோன்னு நினைப்போம். உதாரணமா... உனக்கு திருட்டுப் புத்தி இருக்குன்னு வச்சுக்க..."

"ஏய்......" ப்ரவீனின் முதுகில் 'டொம் என்று அடித்தாள் சுகந்தி.

"ஐய்யோ.. வாசு ஸார்... அடிக்கறா... கண்டுக்காம இருக்கீங்க?..."

"அவளைக் கண்டிக்கணும்ன்னா நீ சொல்ல வந்ததை முழுசா சொல்லிமுடி..." வாசு கூறினான்.

"அதாவது ஒருத்தருக்கு திருட்டு புத்தி இருந்தா, மத்தவங்களையும் 'இவன் திருடி இருப்பானோ’ன்னு சந்தேகப்படுவாங்க. அதே மாதிரிதான் எல்லா விஷயத்துலயும். அர்ச்சனாவோட புருஷன் தியாகு, ஒழுக்கமில்லாதவனா இருக்கலாம். அதனால அவன் அர்ச்சனாவை சந்தேகப்படறானோன்னு எனக்குத் தோணுது. இப்ப நான் சொன்னது பொதுவான மனித இயல்பு. எல்லாருமே இப்பிடித்தான்னு சொல்ல முடியாது. பெரும்பாலானவங்க இப்படிப்பட்ட மனப்பான்மையிலதான் இருப்பாங்க. அந்த பெரும்பாலனவங்கள்ல, தியாகுவும் ஒருத்தனா இருந்து அது நிரூபணமாவும் ஆகிட்டா... அர்ச்சனாவோட பிரச்னைகள் ஒரு முடிவுக்கு வரும்னு நான் நம்பறேன்."

"நீ சொல்றது சரிதான். தியாகுவோட கொடுமையைப் பத்தியெல்லாம் சுகந்திகிட்ட அர்ச்சனா சொல்லியிருக்கா. அவனோட சந்தேக புத்திக்குக் காரணம் நீ சொன்னதாகத்தான் இருக்கணும்னு நானும் நினைக்கறேன்..." வாசு கூறியதும், தன்னுடைய யூகம் சரியாகத்தான் இருக்கும் என்ற எண்ணம் ப்ரவீனின் மனதில் வேரூன்றியது.

"தன் உயிருக்குயிரான நண்பன் அண்ணாதுரையையும், அர்ச்சனாவையும் இணைச்சு சந்தேகப்பட்டான் அந்த தியாகு. அண்ணாதுரையை 'வீட்டுக்குள்ள நுழையாதே, என் முகத்துலயும் முழிக்காதே’ன்னு ரொம்ப கேவலமா பேசி அவமானப்படுத்தி இருக்கான். நீ சொன்ன மாதிரி அந்தத் தியாகுவோட முகத்திரையைக் கிழிச்சு அவனோட மனத்திரைக்குள்ள என்னென்ன தில்லு முல்லு இருக்குன்னு தெரிஞ்சுக்கறதும் நல்லதுதான்." சுகந்தி கூறினாள்.

"ஆமா, சுகந்தி. நம்ம அர்ச்சனா எவ்வளவு நல்ல பொண்ணு! அவங்கப்பா அவளை எவ்வளவு செல்லமா வளர்த்தாரு... ஆனா புருஷன்னு வாய்ச்சவன் படுத்தற பாட்டையெல்லாம் சகிச்சுக்கிட்டு பொறுமையா இருக்கா. அர்ச்சனாவுக்கு நம்பளால ஆன எல்லா உதவியும் செய்யணும்.


தியாகு வேணும்னா 'நட்பு’ங்கற வலிமையான அன்பை துச்சமா நினைச்சுத் தூக்கி எறியலாம். ஆனா நாம? மனசுக்குள்ள ஆழமா வேர் விட்டு வளர்ந்துட்ட நட்பை யாருக்காகவும் எதுக்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது. அப்படிப்பட்ட நட்பையே தன் புருஷனுக்காக விட்டுக் கொடுக்கவும் தயாரா இருக்கற அர்ச்சனாவைப் போல மனைவி கிடைக்க அந்தத் தியாகு எந்த ஜென்மத்துல புண்ணியம் பண்ணினானோ? அவனைப் போல ஒரு கயவனை கணவனா அடையறதுக்கு அர்ச்சனா எந்த ஜென்மத்துல பாவம் பண்ணினாளோ...?"

"நீ என்ன பெரிய ஸ்வாமிஜி மாதிரி பாவ, புண்ணியத்தைப் பத்தி பேசிக்கிட்டிருக்க? தியாகு விஷயமா என்ன செய்யப் போறேன்னு சொல்லேன்..."

"சொல்லிட்டு செய்ய ஆரம்பிக்கறதை விட, செஞ்சு முடிச்சுட்டு வந்து சொல்றது நல்லதுன்னு நினைக்கறேன்."

"உனக்கே இது கொஞ்சம் ஓவரா இல்ல ப்ரவீன்?" வாசு, சிரித்துக் கொண்டே கேட்டான்.

"சரி, வாயை மூடிக்கறேன். சுகந்தி... நீ என்ன சொல்ற?"

"நான் நினைச்சேன். நீங்க சொல்லிட்டீங்க..." சுகந்தியும் சிரித்தாள்.

"நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்’னு நான் பாட வேண்டியதில்லையோ..." வாசு கூறினான்.

"அடடா... இப்ப இது உங்களுக்கு ரொம்பவே ஓவரா இல்ல வாசு ஸார்?"

மூவரும் சிரித்தனர்.

சூழ்நிலை அளித்த அந்த இறுக்கமான மன நிலையிலும், நட்பின் பரிமாணம், அந்த மன இறுக்கத்தை மாற்றியது. உதடுகளில் சிரிப்பை வரவழைத்தது. நட்பின் மகிமை இதுதான்.

"அப்பப்ப உங்களோட உதவியும் தேவைப்படும்..." ப்ரவீன் கெஞ்சினான்.

"அதெல்லாம் செய்வோம். நம்ம அர்ச்சனாவுக்கு செய்யாம வேற யாருக்கு செய்யப் போறோம். ஒரே ஒரு விஷயம் என்னன்னா... எங்க மாமனாரோட ஸஷ்டியப்த பூர்த்தி விழாவுக்குரிய வேலை நிறைய இருக்கு. அந்த வேலையா அங்க... இங்கன்னு திரிஞ்சுக்கிட்டிருப்போம்.."

"ஓ.கே. நான் பார்த்துக்கறேன். நீங்க உங்க வேலைகளை கவனிங்க. அவசியம்னு தேவைப்பட்டா மட்டும் உங்களைக் கூப்பிடறேன். இப்ப நான் கிளம்பறேன்."

28

ப்ரவீன் நேராக ஒரு சலூனுக்குச் சென்றான். பெங்களூரில் நவீன ஸ்டைலில் வெட்டியிருந்த தலைமுடியை வேறு விதமாக வெட்டச் சொன்னான். மிகக் குறைந்த அளவு முடியை மட்டும் வைத்து மீதியை வெட்டி எறியச் சொன்னான். மீசையை மழிக்கச் சொன்னான். கண்ணியமான உடைகளை பெட்டிக்குள் வைத்து பூட்டினான். சினிமா ஸ்டண்ட் ஆர்ட்டிஸ்ட்கள் அணிவது போன்ற வண்ணங்களில் டி-ஷர்ட்களை பாண்டி பஜாரில் வாங்கி அணிந்து கொண்டான். ஒற்றைக் காதில் வளையம் மாட்டிக் கொண்டு கழுத்தில் தடிமனான ஸ்டீல் செயின், கையில் மண்டை ஓடு டாலர் பொருத்திய கைவளையம் இவற்றை அணிந்து, அடையாளமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு உருமாறி இருந்தான். விலை குறைந்த செல்போன் ஒன்றை வாங்கினான். கழுத்தில் அணியும் போன் பெல்ட் ஒன்றையும் வாங்கி அதில் மொபைல் போனை பொருத்தி தொங்க விட்டுக் கொண்டான்.

ப்ரவீனின் அம்மாவே பார்த்தாலும் கூட அது ப்ரவீன் என்பதை நம்பி இருக்க மாட்டார்கள். அந்த அளவிற்குத் தன் உருவத்தை முற்றிலுமாக மாற்றி அமைத்துக் கொண்டான்.

29

ரவு எட்டு மணி. தியாகுவின் உணவகம். சற்று ஓரமாகப் போடப்பட்டிருந்த மேஜையை தேர்ந்தெடுத்து அந்த மேஜையின் முன் போடப்பட்டிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான் ப்ரவீன்.

"என்ன ஸார் சாப்பிடறீங்க?" பவ்யமாக வந்து கேட்டான் பரிமாறும் பணியாள்.

"ரவா கிச்சடி, காபி" பதில் கூறிய ப்ரவீன், உணவகத்தை சுற்றிலும் ஒரு நோட்டம் விட்டான்.

'ம்.. பெரிய ஹோட்டலாத்தான் இருக்கு. நினைத்தவன், கல்லாவில் உட்கார்ந்திருந்த தியாகுவைப் பார்த்தான்.

"பார்த்தா 'இந்தப் பூனையும் பால் குடிக்குமா’ங்கற மாதிரி ஒரு பாவனையில இருக்கான். ஆனா, பசிச்சா பாய்ஞ்சு அடிக்கற புலி மாதிரி அர்ச்சனாவை என்னமா படுத்தறான்?’ தியாகுவின் நடவடிக்கைகள் பற்றிய நினைவுகள் தோன்றியது. நினைவுகளுக்கு ஒரு 'ப்ரேக்’ கொடுத்துவிட்டு அங்கே நடப்பதைக் கவனிக்க ஆரம்பித்தான்.

தியாகுவின் முன் ஒருவர் வந்து நின்றார். வெள்ளை வேஷ்டியும், சந்தனக்கலர் ஷர்ட்டும் அணிந்திருந்தார். நெற்றியில் விபூதிக் கீற்று வைத்து அதன் நடுவே குங்குமப்பொட்டு வைத்திருந்தார். தலையில் நேர் வகிடு எடுத்து வாரி இருந்தார். மெல்லிய, தங்கநிற ஃப்ரேம் போட்ட மூக்குக் கண்ணாடி அணிந்திருந்தார். என்றாலும் அவரது தோற்றம் கண்ணியத்தை அளிக்கவில்லை. 

அவரிடம் ஏதோ ரகசியமாய் பேசினான் தியாகு.

அவர், சரி என்பதற்கு அடையாளமாக தலையை ஆட்டினார்.

உடனே தியாகு எழுந்து வெளியேறினான். இதைக் கண்ட ப்ரவீன் அவசர அவசரமாக தியாகுவை பின் தொடர்ந்தான்.

30

ஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள ஒரு ஆடம்பரமான உணவகத்தின் முன் தன்னுடைய காரை நிறுத்தினான் தியாகு. ஒரு ஆட்டோவில் அவனைப் பின் தொடர்ந்த ப்ரவீனும் ஆட்டோவை அங்கே நிறுத்தச் சொல்லி இறங்கிக் கொண்டான். தியாகு தன்னை பார்த்து விடாதபடி அவனைப் பின் தொடர்ந்தான்.

ஹோட்டலில் தியாகுவிடம் ரகசியமாக பேசிக் கொண்டிருந்த சந்தனக்கலர் சட்டைக்காரர் அங்கே தியாகுவிற்காக காத்திருந்தார். அவரிடம் கற்றையாக பணத்தைக் கொடுத்தான் தியாகு.

தியாகுவின் ஹோட்டலில் தியாகுவுடன் பேசிக் கொண்டிருந்த சந்தனக்கலர் சட்டைக்காரர், பெண்களை வாடகைக்கு அனுப்பும் நபர் என்பதை ப்ரவீன் புரிந்துக் கொண்டான்.

உணவகத்தின் உள்ளே சென்ற தியாகு, ஒரு இளம் பெண் உட்கார்ந்திருந்த மேஜையின் அருகே சென்றான். அங்கிருந்த நாற்காலியில் உட்கார்ந்தான். தியாகுவின் நடவடிக்கைகளைத் தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருந்த ப்ரவீன், அந்தப் பெண்ணை நன்றாக கவனித்தான். 'இவள்... இவள்... ராதிகாவாச்சே... காலேஜ்ல எனக்கு ஜுனியர். ஆடல், பாடல், மேடைப் பேச்சு இவற்றில் மிக்க திறமை கொண்டவள். கல்லூரி முழுவதும் இவள் பிரபலமாச்சே...’ யோசித்துக் கொண்டே கண்காணித்தான்.

தியாகுவைக் கண்டதும் அவளது முகம் மலர்ந்தது. தியாகு அவளுடன் சிரித்துச் சிரித்துப் பேசினான். பேசும்பொழுது ராதிகாவின் கன்னத்தில் செல்லமாகத் தட்டுவதும், கிள்ளுவதுமாக இருந்தான் தியாகு. வகை வகையான அசைவ உணவு வகைகளையும், ஐஸ்க்ரீமையும் சாப்பிட்டு முடித்தனர். பில் கொண்டு வந்த பணியாளிடம் அலட்சியமாக பணத்தை வீசி எறிந்தான் தியாகு. ராதிகா எழுந்தாள். தியாகுவும், ராதிகாவும் ஒருவர் கைகளை ஒருவர் கோர்த்தபடி வெளியே நடந்தனர். ப்ரவீனும் எழுந்து அவர்கள் பின்னாடியே சென்றான்.

வெளியே வந்த அவர்கள் இருவரும் அந்த உணவகத்திலிருந்து பத்து கட்டிடங்கள் தள்ளி இருந்த பெரிய பங்களாவிற்குச் சென்றனர்.


வெளியில் காவலுக்கு நின்றிருந்த செக்யூரிட்டி, தியாகுவிற்கு சல்யூட் அடித்து உள்ளே அனுப்பினான். அவனுக்கு பணத்தைக் கொடுத்தான் தியாகு. அவர்கள் இருவரும் பங்களாவிற்குள் நுழைந்ததும் பங்களாவின் பெரிய கதவை சாத்தினான் செக்யூரிட்டி. சற்று தள்ளி நின்று இதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்த ப்ரவீன், அந்த பங்களாவிற்குள் சென்றான். செக்யூரிட்டி, ப்ரவீனை நிறுத்தினான். உள்ளே அனுப்ப மறுத்தான்.

ஷர்ட் பாக்கெட்டிற்குள் கையை விட்டு நூறு ரூபாய் தாளை அந்த செக்யூரிட்டியின் முகத்தின் முன் நீட்டினான் ப்ரவீன். ரூபாய் நோட்டைக் கண்ட செக்யூரிட்டியின் கண்கள் விரிந்தன. வாயில் பற்கள் தெரிய சிரித்தான். ரூபாயை வாங்கிக் கொண்டு, ப்ரவீனை உள்ளே அனுப்பினான். உள்ளே நுழைய முற்பட்ட ப்ரவீன், செக்யூரிட்டியிடம் தன் விசாரணையை ஆரம்பித்தான்.

"இப்ப உள்ளே ஒரு பொண்ணு கூட போனாரே அவர் யார்?"

"அவர் யார்ன்னெல்லாம் எனக்கு தெரியாது ஸார். அடிக்கடி பொண்ணுங்களோட வருவார். கை நிறைய காசு குடுப்பார்..."

"இந்த பங்களா...?"

"ஸார் விஷயம் தெரியாமயா வந்துருக்கீங்க? சும்மா என் வாயைக் கிண்டறீங்க. அப்படித்தானே..." அவன் இழுத்த இழுவைக்கு அர்த்தம் புரிந்துக் கொண்ட ப்ரவீன், மேலும் இன்னொரு நூறு ரூபாய் தாளைக் கொடுத்தான். அடுத்து எதுவும் அநாவசியமான கேள்வி கேட்காமல் மடை திறந்த வெள்ளமாய் விபரங்களை அள்ளி வீச ஆரம்பித்தான் அந்த செக்யூரிட்டி.

"ஸார்... உங்களை மாதிரி ஆம்பளைங்க, கண்ணுக்கு அழகான பொண்ணுங்களை இங்கே கூட்டிக்கிட்டு வருவாங்க. உல்லாசமா இருந்துட்டு போவாங்க. பலான விஷயத்துக்குன்னே இந்த பங்களாவை வாடகைக்கு எடுத்திருக்கார் ஒருத்தர். இதோட ஓனருக்கு இங்கே நடக்கற எதுவும் தெரியாது. அவர் மலேஷியாவுல இருக்காரு. மாசா மாசம் ஒழுங்கா வாடகை பணம் போயிடுச்சுன்னா போதும். வேற எதுவும் கேட்க மாட்டார். லாட்ஜ்ல போலீஸ் கெடுபிடி அதிகமா இருக்குன்னு இந்த மாதிரி பங்களாவுக்கு வந்துடறாங்க... இவ்வளவுதான் ஸார் எனக்குத் தெரியும். எனக்கும் மாசம் பிறந்து ரெண்டாந்தேதி ஆச்சுன்னா கரெக்ட்டா சம்பளம் வந்துடும். மேல் வருமானம் உங்களை மாதிரி ஆளுங்களால. ஆமா... நீங்க ஏன் ஸார் தனியா வந்திருக்கீங்க...? ஜோடி வரலியா?"

"நான் வேற ஜோலியா வந்திருக்கேன்" கூறிய ப்ரவீன், பங்களாவின் காம்பௌண்டிற்குள் சென்று ஒரு மரத்தடியில் நின்று கொண்டான். பல ஜோடிகள் பங்களாவிற்குள்ளிருந்து வெளியேறிக் கொண்டிருந்தனர். மூன்று மணி நேரத்திற்குப் பிறகு தியாகும், ராதிகாவும் தோளோடு தோள் உரசியபடி வெளியே வந்து வந்த வழியே நடந்தனர். ப்ரவீனும் ஜாக்ரதையாகப் பின் தொடர்ந்தான். ஏற்கெனவே கார் நிறுத்தி இருந்த இடத்திற்கு வந்த அவர்கள் இருவரும் காரின் அருகே நின்று சில நிமிடங்கள் சிரித்துப் பேசினர்.

தியாகு தன் காரில் ஏறிக் கொள்ள, ராதிகா அங்கே நின்றிருந்த வாடகை காரில் ஏறிக் கொண்டாள். கார்கள் புறப்பட்டன. ராதிகா போகும் காரை ஆட்டோவில் பின் தொடர்ந்து சென்றான் ப்ரவீன். ராயப்பேட்டையில் ஒரு தெருவின் முனையில் இறங்கிக் கொண்டாள் ராதிகா. ப்ரவீனும் இறங்கினான்.

காரில் இருந்து இறங்கிய ராதிகா, இரண்டு தெருக்களைக் கடந்து, நடந்து சென்று ஒரு வீட்டிற்குள் சென்றாள். அந்த வீடு மிகவும் சிறியது. அந்த சிறிய வீட்டையும் பல போர்ஷன்களாகப் பிரித்து புறாக்கூடு போல அமைந்திருந்தது. மறைவாக நின்று கண்காணித்தான் ப்ரவீன்.

"என்னம்மா இது இவ்வளவு லேட்டாயிருச்சு?" ராதிகாவின் தாயாக இருக்க வேண்டும்.

"அதான் சொன்னேனேம்மா நைட் ட்யூட்டின்னு..."

"சரிம்மா. சாப்பிடவா." கனிவாகக் கூறினார் அம்மா.

"வேணாம்மா. நான் கேன்ட்டீன்ல சாப்பிட்டுட்டேன். எனக்கு தூக்கம் வருது." அதற்கு மேல் அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை. ப்ரவீன் கிளம்பினான். அப்போது நடுத்தர வயதில் உள்ள ஒருவர் ப்ரவீனிடம் வந்தார்.

"என்ன தம்பி... மறைவா நின்னு என்ன பார்க்கறீங்க? அந்தப் பொண்ணைத் தேடி வீட்டுக்கே வர ஆரம்பிச்சுட்டீங்களா... அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு இந்த விஷயமெல்லாம் தெரிஞ்சதுன்னா... அவ்வளவுதான். தூக்குல தொங்கிடும். ஏழையா இருந்தாலும் கௌரவமா வாழணும்னு நினைச்சு, கஷ்டப்பட்டிருக்கற குடும்பம். வாயைக் கட்டி வயித்தைக் கட்டி இந்தப் பொண்ணை படிக்க வச்சாங்க. ஆனா அதோட துரதிர்ஷ்டமோ என்னமோ வேலையே கிடைக்கலை. வேலை கிடைக்காட்டா கூட மானத்தோட வாழறவங்க எத்தனையோ பேர் இருக்காங்க. ஆனா, இந்தப் பொண்ணு ராதிகா தடம் புரண்ட ரயில் மாதிரி தடுமாறிடுச்சு. நல்லா உடுத்தணும், நல்லா சாப்பிடணும், வசதியா இருக்கணும்னு ஆசைப்பட்டு அந்த ஆசைக்கு பலியாயிடுச்சு. வேலைக்குப் போறதா அவங்கம்மா கிட்ட பொய் சொல்லிட்டு தவறான பாதையில போய்க்கிட்டிருக்கா. ஒரு நாள் ஹோட்டல்ல எவனோ ஒரு பணக்காரன் கூட உட்கார்ந்து சாப்பிட்டுக்கிட்டிருந்தா. என்னைப் பார்த்ததும் பயந்து போய் ஒளிஞ்சுக்கிட்டா. மறுநாள் அவளைத் தனியா சந்திச்சுக் கேட்டப்ப, 'உங்களுக்கென்ன வந்துச்சு? என் இஷ்டப்படிதான் நான் இருப்பே’ன்னு முகத்தில அடிச்சாப்ல சொல்லிட்டா. அதில இருந்து என் கூட பேசறது இல்லை. இப்ப எதுக்காக இதையெல்லாம் சொல்றேன்னா, அவளைத் தேடி இங்க, வீடு வரைக்கும் வராதீங்க. நாலு நல்ல குடும்பங்கள் குடித்தனம் நடத்தற இடத்துக்கு இப்பிடி அவளைத் தேடி வர்றது கௌரவமா இல்ல. ராதிகாவோட அப்பா செத்துப் போனதுக்கப்புறம் அவங்கம்மா உருக்குலைஞ்சு போயிட்டாங்க. இந்தப் பொண்ணு விஷயம் தெரிஞ்சு போச்சுன்னா பெரிய சிக்கலாயிடும். ப்ளீஸ் இனிமே இங்க வராதீங்க..." அவர் நீளமாக பேசி முடித்தார். ப்ரவீனின் பதிலை எதிர்பார்க்காமலே அவர் அங்கிருந்து நகர்ந்தார். மீண்டும் திரும்பி வந்து "அந்தப் பொண்ணை நான் கண்டிக்கப் போக, அதுல இருந்து அது என் கூடப் பேசறதில்லை. அவங்கம்மா கிட்ட என்ன சொல்லுச்சோ ஏது சொல்லுச்சோ அந்தம்மாவும் என்னைப் பார்த்தா முகத்தைத் திருப்பிக்கறாங்க... ம்... நல்லதுக்கு காலமில்ல..." பேசியபடியே அங்கிருந்து போனார்.

அவர் கூறியதையெல்லாம் கேட்ட ப்ரவீனுக்கு அந்த இரவிலும், குளிரிலும் கூட வியர்த்தது. 'நல்ல பொண்ணு ராதிகா.. இப்பிடி மாறிட்டாளே. பொருளாதாரத் தேவைக்காக எதிர்கால வாழ்க்கைக்கு ஆதாரமான மானத்தையே விற்பனை செய்ற அளவுக்கு மாறிட்டாளே’ கவலை குறையாத மனதுடன் ஆட்டோவில் ஏறிக் கொண்டான் ப்ரவீன்.


31

கிருஷ்ணன் பிறந்த ஊராகிய மதுரா எனும் இடத்தில் கிருஷ்ணன் கோவிலில் தரிசனம் முடித்து விட்டு தாங்கள் தங்கி இருந்த அறைக்குச் சென்றனர். முருகேசனும், கமலாவும்.

"என்னங்க, நான் ஆசைப்பட்டபடி வெகு தூரத்துல இருக்கற நிறைய கோவில்களையும் புண்ணிய ஸ்தலங்களையும் திருப்தியா தரிசனம் பண்ணிக்கிட்டிருக்கோம். ஊரைவிட்டு, வீட்டைவிட்டு வந்து ரொம்ப நாளாச்சு. அர்ச்சனா என்ன பண்றாளோ என்னமோன்னு யோசனையா இருக்குங்க. நம்ப மகன் தியாகு காலையில போனா ராத்திரியிலதான் வீட்டுக்கு வர்றான். புதுசா கல்யாணம் ஆகி வந்த புதுப் பொண்ணாச்சேன்னு கொஞ்சம் கூட அக்கறை இல்லாம லேட்டா வர்றான்..."

"இங்க பாரு கமலா. நீதான் அவனுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கணும்னு துடிச்ச. அவனைப் பத்தி அரசல் புரசலா என் காதுக்கு தகவல் வந்ததைப் பத்தி உன்கிட்ட சொன்னேன். அதைப் பத்தி அவன்கிட்ட பேசலாம்னு சொன்னேன். அதுக்கும் நீ ஒத்து வரலை..."

"நாம வெளிப்படையா பேசிட்டோம்ன்னா அவனுக்கு உள்ளுக்குள்ள இருக்கற பயம் போய் குளிர் விட்டுப் போயிடும். 'இவங்களுக்குத்தான் தெரிஞ்சுருச்சே, இனிமே என்ன அப்பிடின்னு தைர்யம் வந்துடும். அதனால அவன் கிட்ட பேச வேண்டாம்னு சொன்னேன்."

"அது மட்டுமா சொன்ன? அவனுக்கு ஒரு பொண்ணைப் பார்த்து கல்யாணம் பண்ணி வச்சுட்டா திருந்திடுவான். நேரத்துக்கு வீட்டுக்கு வந்துடுவான்” அப்படின்னு சொல்லி கல்யாண ஏற்பாடும் பண்ண வச்ச. அர்ச்சனாவோட அப்பாகிட்ட தியாகுவோட திருவிளையாடலைச் சொல்லிடுவோம்னு சொன்னேன். அதையும் நீ கேக்கலை. தியாகுவோட விஷயத்தை மூடி மறைச்சு ஊரறிய அந்தப் பொண்ணை கல்யாணம் பண்ணி வச்சாச்சு. அவன் திருந்தின மாதிரி தெரியல. இன்னும் லேட்டாதான் வர்றான். அந்தப் பொண்ணு அர்ச்சனாவை பார்க்கறதுக்கே எனக்கு சங்கடமா இருக்கு. அந்தப் பொண்ணு காபி கொண்டு வந்து குடுக்கும்போது கூட ஒரு வார்த்தை நான் பேசறது இல்ல. தர்ம சங்கடமா இருக்கு. ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலேன்னு சொல்லுவாங்க. உன் பேச்சைக் கேட்டு, அவனுக்கு கல்யாணம் பண்ணி வச்சு ஒரு பொண்ணோட பாவத்தை சுமக்க வேண்டியதா இருக்கு..."

"ஆவது பெண்ணாலேன்னு சரியாத்தான் சொல்லி இருக்காங்க. அதே சமயம் அழிவதும் பெண்ணாலேன்னும் சரியாத்தான் சொல்லி இருக்காங்க. அதாவது தீமைகளை அழிப்பதும் பெண்களால முடியும்ங்கறதுதான் அர்த்தம். இதை புரிஞ்சுக்காம... என்னவோ என்னை பழி சொல்றீங்க? ஒரு அழகான, அன்பான பொண்ணு தனக்காக காத்திருக்காள்ங்கற ஈர்ப்பு வீட்ல இருந்துட்டா தன்னால வீட்டை நோக்கி ஓடி வருவான்னு நான் நினைச்சேன். கொஞ்சம் கொஞ்சமா மாறிடுவான்ங்கற நம்பிக்கை இப்பவும் எனக்கு இருக்குங்க..."

"நம்பிக்கைகள் கை குடுத்தா நல்லதுதான். நல்லதையே நினைப்போம். நல்லதே நடக்கும். என்னோட மனசுல ஒரு நெருடல் இருந்துக்கிட்டே இருக்கு. நம்ப பையன் பெண்கள் விஷயத்துல பலவீனமானவன்ங்கற உண்மையை மறைச்சு அவனுக்குக் கல்யாணம் பண்ணி வச்சுட்டோமேன்னு உறுத்திக்கிட்டே இருக்கு.

“தைரியமா இருங்க. கவலைப்படாதீங்க. ஒரு நம்பிக்கையில தியாகுவுக்கு கல்யாணம் பண்ணி வச்சாச்சு. அவன் திருந்திடுவான். நான் வேண்டிக்கற தெய்வங்கள் என்னைக் கைவிடாது. அர்ச்சனா நல்ல பொண்ணு."

"இந்த தியாகு இப்படி இருக்கானேன்னு ரொம்ப கஷ்டமா இருக்கு.  அர்ச்சனா முகத்துல பளிச்ங்கற சிரிப்பே இல்லை. புதுப் பொண்ணுக்குரிய சோபையே இல்லாம சோகமா இருக்கா. அதனாலதான் கூடிய வரைக்கும் அவளை நான் நேருக்கு நேரா பார்க்கறதும் இல்ல. அதிகமா பேசறதும் இல்ல. எனக்குள்ள உறுத்தற குற்ற மனப்பான்மைதான் இதுக்குக் காரணம்..."

"நீங்க வருத்தப்படாதீங்க. நாம இந்த புண்ணிய ஸ்தல யாத்திரை முடிஞ்சு போறப்ப நம்ப குடும்ப ப் பிரச்னைகளும் முடிஞ்சு, தியாகுவும், அர்ச்சனாவும் சந்தோஷமா இருக்கறதைப் பார்த்து நாமளும் சந்தோஷமா இருக்கப் போறோம்..."

"நீ சொல்ற மாதிரி நடந்துச்சுன்னா, அதைப் போல வேற நிம்மதி வேற என்ன இருக்கும்?"

"நிச்சயமா நடக்கும்ங்க."

"ஒரே ஒரு விஷயம்தான் எனக்கு நெருடலா இருக்கு. வெளில கிளிலன்னு போனாலும் கூட ஆம்பளப்பசங்க, வீட்ல தன்னோட பொண்டாட்டி கிட்ட ஒட்டுதலா, பிரியமா இருப்பாங்க. பெரும்பாலானவங்க அப்பிடித்தான். ஆனா... தியாகு, புதுப்பொண்ணான அர்ச்சனாகிட்ட கலகலன்னு சிரிச்சுப் பேசறதையே பார்க்க முடியலை... அதனாலதான் ரொம்ப கலக்கமா இருக்கு..."

"நானும் கவனிச்சேன்ங்க. ஆனா... அவன்கிட்ட நான் எதையாவது கேட்கப் போக, அவன் ஏடாகூடமா பேசிட்டான்னா என்ன பண்றதுன்னு பொறுமையா இருக்கேன். அவன்கிட்ட பேசறதை விட அந்த ஆண்டவன் கிட்ட கேட்டா தியாகு திருந்திடுவான்னுதான் சதா சர்வமும் பிரார்த்தனை பண்ணிக்கிட்டே இருக்கேன்."

அவர்கள் தங்கி இருந்த அறையின் அழைப்பு மணி ஒலித்தது. கதலை லேசாக தட்டிவிட்டு ஒரு இளைஞன் உள்ளே வந்தான்.

"சாப்பாடு ரெடியாயிடுச்சு. உங்க டூர் க்ரூப்ல நீங்க ரெண்டு பேர் மட்டும்தான் பாக்கி. வாங்க" என்று ஹிந்தியில் அழைத்ததை ஓரளவு புரிந்துக் கொண்ட முருகேசனும், கமலாவும் உணவருந்தும் ஹாலை நோக்கி நடந்தனர்.

32

ன்னை அடையாளம் தெரியாதபடி முற்றிலுமாக மாற்றிக் கொண்டு, தினமும் தியாகுவைப் பின் தொடர்வதைத் தொடர்ந்தான் ப்ரவீன்.

சில நாட்களில் சில ஹோட்டல்கள், சில நாட்களில் முறைகேடான இரவு விடுதிகள், பங்களாக்கள் போன்ற இடங்களில் பல்வேறு பெண்களை சந்தித்து அவர்களுடன் உல்லாசமாக இருப்பதே தியாகுவின் வாடிக்கையான இரவு நடவடிக்கையாக இருந்து வந்தது. பதினோரு மணி வரை பொழுதை தன் இஷ்டப்படி போக்கிவிட்டு அதன்பின்பே வீட்டிற்கு செல்வது அவனது தினசரி வழக்கமாக இருந்தது.

அன்று புதன்கிழமை, ராதிகா என்கிற தன் கல்லூரியில் படித்த பெண்ணை, தியாகு சந்தித்த அதே உணவகத்திற்கு இன்றும் வந்திருந்தான் தியாகு. அவன் வருவதற்கு முன்பாகவே அவனுக்காக ஒரு பெண் காத்திருப்பதை ப்ரவீன் கவனித்தான். அந்தப் பெண்ணின் கழுத்தில் தாலி செயின் தோற்றத்தில் ஒரு செயின் இருந்தது. புடவைக்குள் செயின் இருந்தபடியால் அது தாலியா இல்லையா என்று தெரியவில்லை. அவளது முகத்தில் லேஸான பயம் தென்பட்டது. அந்த பயத்தை மீறி தியாகுவைப் பார்த்ததும் சிரித்தாள்.

"தியாகு.. என் புருஷன் ஊருக்குப் போயிருக்கார். அதனாலதான் உங்களை வரச் சொல்லி போன் பண்ணினேன். ரெண்டு நாளாகும் அவர் வர்றதுக்கு. ஆனாலும் இன்னிக்கு ஒரு நாள் மட்டும்தான் என்னால வர முடியும். திடீர்னு ஒரே நாள்ல போன வேலையை முடிச்சுட்டு வந்தாலும் வந்துடுவார்..."


"ஒரு நாள் போதுமா? உன்னோடு நான் இருக்க ஒரு நாள் போதுமா......" தியாகு கேலியாக பாடினான்.

"உங்களுக்கு கேலியா இருக்கு தியாகு. என் புருஷனோட குறைஞ்ச சம்பளத்துல வாழ்க்கையை ஓட்டறது ரொம்ப கஷ்டமா இருக்கு. முறையான படிப்பு இல்லாதததுனால இப்பிடி முறை கேடான வாழ்க்கை நடத்த வேண்டி இருக்கு. என் புருஷன் நல்லவர். அவரும் பெரிசா ஒண்ணும் படிச்சுடலை. அதனால ஏற்பட்ட பொருளாதார பிரச்னையை சமாளிக்க, படிக்காத எனக்கு வேற வழி தெரியலை......"

"உன் சொந்தக் கதையையும், சோகக் கதையையும் கேட்டுக் கேட்டு எனக்கு அலுத்துப் போச்சு. சாப்பிடறதுக்கு என்ன வேணும்? சீக்கிரமா ஆர்டர் பண்ணி சாப்பிட்டுட்டு நாம கிளம்பலாம்."

அவர்கள் இருவரும் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருந்தான் ப்ரவீன். 'திருமணமான பெண் என்று கூட பார்க்காமல் தியாகுதான் இப்படி அலைகிறான் என்றால், இந்தப் பொண்ணும் இப்பிடி புருஷனுக்கு துரோகம் செஞ்சு, வருமானத்துக்காக தன்மானத்தையே பறிகுடுக்க துணிஞ்சுட்டா. ப்ரவீனின் நெஞ்சம் கனத்துப் போனது. அதே சமயம் தியாகு ஏன் அர்ச்சனாவை சந்தேகப்படுகிறான், அவனுடைய நடவடிக்கைகள் ஏன் அர்ச்சனாவை அந்த அளவு பாதிக்கும்படியாக இருக்கிறது என்பதை பல நாட்கள் தியாகுவைப் பின்பற்றியதால் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டது ப்ரவீனுக்கு.

தான் போட்ட வேஷத்தினால் தியாகுவின் வேஷத்தைப் புரிந்துக் கொண்டான். புரிந்துக் கொண்ட ப்ரவீன் வேதனைப் பட்டான். இனி இதற்கு என்ன செய்வது என்பது பற்றி யோசித்தான். சுகந்தியிடம் இது பற்றி கலந்து பேச வேண்டும் என்று முடிவு செய்தான்.

33

றுநாள். சுகந்தியை சந்தித்தான். மாமியார், மாமனாரின் ஸஷ்டியப்த பூர்த்தி விழா வேலையில் மும்முரமாக ஈடுபட்டிருந்தாள் சுகந்தி. அவளிடம் தியாகுவைப் பற்றி தான் நேரில் கண்டறிந்த விஷயங்களைக் கூறினான்.

"மலர் விட்டு மலர் தாவும் வண்டாக வாழும் தியாகு ஏன் அர்ச்சனாவைப் போன்ற நல்லதொரு மலரை திருமணம் என்ற வேலிக்குள் சிக்க வைத்து அவளைக் கசக்கி முகர்ந்து நசுக்கி, அவளது உணர்வுகளை வேதனைப்படுத்த வேண்டும்? கல்யாணம் பண்ணிக்காமலே தன் மனம் போன வழியில தான் தோன்றியாய்த் திரிய வேண்டியதுதானே?" இதைக் கேட்டுக் கொண்டிருந்த வாசு குறுக்கிட்டான்.

"மலர் விட்டு மலர் தாவும் வண்டாக மட்டுமில்ல... மாற்றான் தோட்டத்து மல்லிகையையும் நாறடிச்சிருக்கானே..."

"அதுக்கு அவனை மட்டும் குற்றம் சொல்றது சரி இல்ல. அந்த மல்லிகை, மாற்றான் கை மணக்கும்படி மாறலாமா?" கேட்டான் ப்ரவீன்.

"மாறக்கூடாதுதான். சீதோஷ்ண நிலைக்காக தேசம் விட்டு தேசம் நெடுந்தூரம் பறந்து செல்லும் பறவை இனங்கள் கூட தன் ஜோடியோடத்தான் போகுது. வெறும் தேக சுகத்திற்காக பிற பெண்களைத் தேடிச் செல்லும் தியாகுவைப் போன்ற ஆம்பளைங்களால எத்தனை அப்பாவிப் பொண்ணுங்களோட வாழ்க்கை வீணாகுது? நீ சொன்ன மாதிரி தியாகு தப்பு பண்றதுனாலதான் அவன், அர்ச்சனாவையும் சந்தேகப்பட்டிருக்கான். தான் எப்படித் திரிஞ்சாலும், தன் அழகான மனைவி பத்தினியா இருக்கணும்ங்கற தீவிரம் அவன்கிட்ட தீ போல கனன்றுக்கிட்டே இருந்திருக்கு. அந்தத் தீயின் தீவிரம் அர்ச்சனாவின் துயரத்தை நாளுக்கு நாள் அதிகமாக்கி இருக்கு....." வாசு எடுத்துக் கூறிய யதார்த்தமான உண்மைகள் அளித்த உணர்வுகள், ப்ரவீனின் உள்ளத்திலும், சுகந்தியின் உள்ளத்திலும் கவலையை உண்டாக்கின.

"அர்ச்சனாவோட அபரிமிதமான அழகை மட்டுமே அனுபவிச்ச அவன், அவளை அந்நிய ஆண்களுடன் இணைத்து சந்தேகப்பட்டு அவளை சிறைக்கைதியாக்கி இருக்கான். பிறன் மனைவி தன்னிடம் பழகியது போல, தன் மனைவி பிற ஆண்களுடன் நெறி தவறி விடுவாளோங்கற எண்ணத்துல அர்ச்சனாவை சந்தேகப்பட்டிருக்கான். பாவம் அர்ச்சனா, அவங்க அப்பாவுக்காக, தியாகு செஞ்ச கொடுமையை எல்லாம் பொறுத்துக்கிட்டு இருக்கா......"

"தியாகுவைப் பத்தின மறுபக்கம் அர்ச்சனாவுக்கு தெரிஞ்சா மட்டும் அவ என்ன செஞ்சுடுவாள்ன்னு நீ நினைக்கற ப்ரவீன்? அப்பவும் அப்பா... அவரோட நெஞ்சுவலி, அப்பிடி இப்பிடின்னு தயங்குவாளே தவிர, பக்குவமா அப்பா கிட்ட எடுத்து சொல்லலாம்ங்கற தைரியமே அவளுக்கு வராது."

"வரும். நிச்சயமா வரும். தியாகுவோட பொய் முகமும், அவனைப் பத்தின உண்மைகளும் தெரிஞ்சா அவ நிறைய யோசிப்பா. துணிச்சலா சிந்திப்பா. அதிரடியா முடிவு எடுப்பா. அதே சமயம் அவங்க அப்பாவையும் காப்பாத்திக்குவா. தன் தோள்கள்ல விழுந்தது பூமாலை இல்ல பூநாகம்னு தெரிஞ்சப்புறம் இயல்பாவே அவளுக்கு ஒரு மனதிடம் வந்திடும். அர்ச்சனாவைப் பத்தின என்னோட கணிப்பு இது. நாம அவளைப் பார்த்து பேசிட்டா போதும். அதுக்கான சந்தர்ப்பம்தான் நமக்கு இப்ப முக்கியம்."

"நீ சொல்றது சரிதான். ஆனா அர்ச்சனாகிட்ட நீ பேச முடியாது. அவளைப் பார்க்க முடியாது. அர்ச்சனாகிட்ட அவசர அவரமா சொல்லி முடிக்கற விஷயமும் இல்லை இது. இந்த ஃபங்ஷன் வேலைகள்ல்ல என்னால அர்ச்சனாகிட்ட விலாவாரியா பேச முடியாது. அரைகுறையா நான் எதையாவது சொல்லப்போக விஷயம் சீரியஸாயிடக் கூடாது பாரு....."

"ஒரு ஐடியா. ஸஷ்டியப்தபூர்த்தி ஃபங்ஷனுக்கு அர்ச்சனாவையும் இன்வைட் பண்ணி இருக்கீல்ல? அவ அங்கே தனியா வந்தாள்னா அவகிட்ட....."

"ஐய்யோ ப்ரவீன்..... அர்ச்சனாவை அவன் அனுப்பவே மாட்டான். அதனால அவ வர மாட்டா. நான் இன்விடேஷன் குடுக்கறப்பவே அர்ச்சனா என்கிட்ட சொன்னா. 'அவர் அனுப்ப மாட்டார்ன்னு."

"ஓ... அப்படியா...?"

"அவசரப்படாத ப்ரவீன். இந்த ஃபங்ஷன் முடிஞ்சதும் நிச்சயமா நான் எப்பிடியாவது அர்ச்சனாவை பார்த்து எல்லா மேட்டரையும் சொல்லிடறேன். சொல்லித்தான் ஆகணும். ஏன்னா நானும், வாசுவும் அமெரிக்கா கிளம்பற ப்ரோக்ராம் இருக்கு. அடுத்து அந்த வேலைகள் இருக்கு. ஏறக்குறைய எல்லா வேலையும் முடிஞ்சுடுச்சு. இருந்தாலும் கொஞ்சம் பரபரப்பாத்தான் இருக்கும். அதனால நான் எப்படியாவது அர்ச்சனாவை மீட் பண்ணி பேசிடுவேன். ச்ச...... அர்ச்சனா விஷயமா நீ செஞ்சுருக்கற முயற்சிக்கு தாங்க்ஸ் கூட சொல்லாம விட்டுட்டேன் ப்ரவீன்....."

“இதுக்கு எதுக்கு தேங்க்ஸ் எல்லாம்?"

"அது சரி... ஃபங்ஷனுக்கு தவறாம வந்துடு."

"சரி." ப்ரவீன் கிளம்பினான். தியாகுவின் சுயரூபத்தைப் புரிந்துக் கொண்ட ப்ரவீன் தன் சுய உருவத்திற்குத் திரும்பினான். முடியை ஒட்ட வெட்டிக் கொண்டதைத் தவிர.


34

தான் சொன்னதையெல்லாம் கேட்டு, எதிர்த்து எதிர்வாதம் செய்யாமல் இருந்த தியாகுவின் வித்தியாசமான நடவடிக்கையைப் பார்த்து மிகவும் ஆச்சர்யப்பட்டாள் அர்ச்சனா. அளவில்லாத ஆனந்தமும் அடைந்தாள்.

சுகந்தி வீட்டிற்கு வந்ததையும், அவளது மாமனார்- மாமியாரின் ஸஷ்டியப்த பூர்த்தி விழாவிற்கு வந்ததைப் பற்றியும் கூறினாள்.

"நாமளும் அந்த விழாவுக்கு கண்டிப்பா போகணும்ங்க..."

"என்னிக்கு?"

"இருபத்தி எட்டாம் தேதிங்க."

"இருபத்தி எட்டாந்தேதியா? அன்னிக்கு எனக்கு அஸோஸியேஷன் மீட்டிங் இருக்கு..."

'ம்... இப்பிடித்தான். ஏதாவது ஒரு சாக்கு சொல்லி போக வேண்டாம்பார். எவ்வளவு ஆசையா சுகந்தி கூப்பிட்டிருந்தா...’ ஏமாற்றத்துடன் அர்ச்சனா யோசித்துக் கொண்டிருக்கும்பொழுதே, தியாகு அடுத்து கூறியதைக் கேட்டு மகிழ்ச்சி கொண்டாள்.

"என்னால வர முடியலைன்னா என்ன? நீ போயிட்டு வாயேன். ட்ராவல்ஸ்ல கார் சொல்லிடறேன். நீ போயிட்டு வா. வெள்ளியில நல்ல கிஃப்ட் வாங்கிட்டுப் போ....."

"சரிங்க. தாங்க்ஸ்" தன்னை மட்டும் போய் வரும்படி அனுப்புவான் என்று எதிர்பார்க்காததில் மேலும் வியப்பிற்கும் சந்தோஷத்திற்கும் உள்ளானாள் அர்ச்சனா.

“உன்னோட க்ரெடிட் கார்ட் அடிச்சு வாங்கிடு."

"சரிங்க."

'யப்பாடா..... நான் பேசியதுல கொஞ்சம் மனசு மாறி இருக்கார் போலிருக்கே?! இதே மாதிரி படிப்படியா இன்னும் முழுசா மாறிட்டார்ன்னா எவ்வளவு நல்லா இருக்கும்?! இவர் திருந்திட்டார்ன்னா நான் எதுக்குமே வருத்தப்பட வேண்டியதில்ல. கொஞ்சம் கொஞ்சமா அவரோட நெஞ்சத்துல இடம் பிடிச்சுடணும். நான் பொறுமையா இருக்கறதுக்குப் பலனில்லாமப் போகலை.” அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலிக்கவில்லை. வலுவான நம்பிக்கையை உருவாக்கியது,அன்றைய இரவு.

"நான் ஒரு முக்கியமான வேலையா வெளில போறேன். காலைலதான் வருவேன்..." தியாகு கூறியதும் அர்ச்சனாவின் இதயத்தில் கேள்விகள் எழுந்தன.

“அப்பிடி என்ன வேலை ராத்திரி முழுக்க? எங்கே போறீங்க?” இப்படி கேட்க நினைத்தவள், தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாள். 'இப்பத்தான் கொஞ்சம் மாறிக்கிட்டிருக்கார். இப்ப போய் அநாவசியமா கேள்விகள் கேட்டு எரிச்சலூட்ட வேண்டாம்” என்று தீர்மானித்தாள்.

தியாகு கிளம்பிப் போனதும், பொன்னி இரண்டு நாட்கள் அவளது அக்காவிற்கு திருமணம் என்று லீவு போட்டு விட்டுப் போனபடியால் சமையலறையில் வேலைகளை முடித்தாள். படுத்து தூங்கலாம் என்று மாடி அறைக்கு வந்தாள். உடை மாற்றிக் கொண்டபின் வந்து படுத்தான். முதல் முறையாக தியாகுவின் பேச்சு நல்லவிதமாக இருந்ததை நினைத்துப் பார்த்தாள். அந்த நினைவு அளித்த நிம்மதியில் விரைவில் தூங்கிவிட்டாள்.

"அர்ச்சனா... எழுந்திரு... என்ன அதுக்குள்ள தூங்கிட்ட?" தியாகுவின் குரல் கேட்டு திடுக்கிட்டு வழித்தாள். 'அர்ச்சனா’ன்னு கூப்பிட்டது இவரா?!!’ வியந்தாள்.

"வெளில போகப் போறேன், காலைலதான் வருவேன்னீங்க?!.....?"

"கிளம்பிப் போனேன். கொஞ்ச தூரம் போனதுமே வெளில போறதுக்கே மனசு இல்லாம வீட்டுக்கே வந்துட்டேன். என்கிட்டதான் இன்னொரு சாவி இருக்குல்ல. அம்மாவும், அப்பாவும் டூர் போகும்போது சாவியை எடுத்து காரோட சாவி கூட மாட்டி வச்சுட்டேன். அது சரி, மணி எட்டரைதான் ஆகுது. அதுக்குள்ள என்ன தூக்கம்? எழுந்திரு."

அர்ச்சனா எழுந்தாள்.

"வா.. நாம கீழே போகலாம். வெளியே சாப்பிட்டுக்கறேன்னு சொன்னேன்ல? இப்ப நாம ரெண்டு பேரும் சேர்ந்து 'ஸம்பாரா’ ஹோட்டல் போய் சிக்கன், மட்டன், பிரியாணி எல்லாம் சாப்பிடலாம். அஞ்சு நிமிஷத்துல வேற சேலை கட்டிக்கிட்டு கிளம்பு. நல்லா அழகா டிரஸ் பண்ணிக்கிட்டு வரணும்..."

"இதோ சீக்கிரமா ரெடியாயிடறேங்க."

துள்ளல் நடை போட்டு டிரஸ்ஸிங் ரூம் சென்று ஆலிவ் பச்சை நிற கிரேப் சேலையில் அழகிய வேலைப்பாடு செய்த புடவையும், அதற்கு பொருத்தமான ஜாக்கெட்டும் அணிந்து கொண்டு வந்தாள்.

"வாவ்... எவ்ளவு அழகா இருக்க தெரியுமா? சரி, வா நாம 'ஸம்பாரா’ ஹோட்டல் போய் சாப்பிட்டுட்டு கொஞ்ச நேரம் பீச்ல காத்து வாங்கிட்டு வரலாம்..."

மிகுந்த சந்தோஷத்துடன் கிளம்பினாள் அர்ச்சனா. 'ஸம்பாரா’வில் அர்ச்சனாவிற்குப் பிடித்த சிக்கன், மட்டன் வகைகளை வாங்கிக் கொடுத்து சாப்பிட வைத்தான். அதன் பிறகு 'பீச்’சிற்கு அழைத்துச் சென்றான். கடற்கரையோரம் இருவரும் நடந்தனர். நடக்கும் பொழுது அர்ச்சனாவின் கைவிரல்களை தன் விரல்களுடன் சேர்த்துக் கொண்டான். முதல் முதலாய் அவன் தொட்டது போல் தேகம் சிலிர்த்தது அர்ச்சனாவிற்கு. கடலில் மீன் பிடிக்கும் சின்ன சின்ன படகுகள் மிதந்ததைப் பார்த்து ரசித்த அர்ச்சனாவின் மனதும் மகிழ்ச்சியில் மிதந்தது.

“இவ்வளவு சீக்கிரம் இந்த அளவுக்கு மாறுவார்ன்னு எதிர்பார்க்கவே இல்லையே... அதைப் பத்தி இவர்கிட்ட பேசலாமா? ம்கூம்... நான் பாட்டுக்கு எதையாவது பேசப்போக ஏடாகூடமா ஏதாவது ஆகிடக் கூடாது... “ அர்ச்சனாவின் மனக்குரல் எச்சரித்தது.

"என்ன அர்ச்சனா... சின்னக் குழந்தைங்கதான் பீச்சுக்கு வந்தா இவ்வளவு சந்தோஷப்படுவாங்க... வந்ததுல இருந்து நானும் பார்க்கறேன்.... ஒரே குஷியா இருக்க?!..."

"கடற்கரையோரம் இப்பிடி நடக்கறது எனக்கு ரொம்ப பிடிக்கும்ங்க. காலேஜ்ல படிக்கும்போது என்னோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் சேர்ந்து இங்க வந்து, கடல்ல காலை நனைச்சு... ஒரே ஜாலிதான். இந்தக் கடல் அலையைப் பாருங்க. போயிட்டு போயிட்டுத் திரும்பத் திரும்ப வந்து கரையில அது மோதற அழகு! ஒரே டிரஸ்ஸைப் போட்டா 'போர்’ அடிக்குதுங்கறோம். ஒரே சாப்பாட்டை தினமும் சாப்பிட்டா 'போர்’ அடிக்குதுங்கறோம். ஒரே இடத்துக்கு தினமும் போனா 'போர்’ அடிக்குதுங்கறோம். ஒரே புத்தகத்தைப் படிச்சா 'போர்’ அடிக்குதுங்கறோம். ஆனா, இந்தக் கடல் அலையைப் பாருங்க. ஓயாம கரைக்கு வர்றதும் திரும்ப போறதுமா தன்னோட இயற்கையான செயலை ஒரு நிமிஷம் கூட விடாம செஞ்சுக்கிட்டிருக்கு. அதுக்கு 'போர்’ அடிக்கவே அடிக்கலை பார்த்தீங்களா?"

"அடேங்கப்பா... கடல் அலையைப் பத்தி இப்பிடி ஒரு கோணத்துல பார்க்கறதைப் பத்தி நான் யோசிச்சது கூட இல்லை."

"நான் யோசிப்பேன்ங்க. சீஸன் பார்த்து பூக்கற பூக்கள், காலம் பார்த்து இலைகளை உதிர்க்கற மரங்கள், சூரிய ஒளிக்காக அந்த ஒளியை நோக்கி, வளைஞ்சு வளர்ந்து, அதுக்கப்புறம் காயாகி, கனியற இயற்கையின் அற்புதம், காக்கைகளின் ஒற்றுமை, நாயின் நன்றி உணர்வு, பூனையின் சாகசமான திருட்டு... இதைப்பத்தியெல்லாம் நிறைய யோசிப்பேன். ரசிப்பேன்."

"கவிதை மாதிரி பேசற. எனக்கு இப்பிடியெல்லாம் பேசத் தெரியாது..."

"பேசத் தெரியாட்டி என்ன? ரசிக்கறீங்க... பாராட்டறீங்க.. ரசனை உணர்வும், பாராட்டும் மனப்பான்மையும் பெரிய விஷயம்தானே?.."

"என்ன பெரிய விஷயமோ போ..."

"சின்ன விஷயத்தைப் பத்தி கவிஞர் வைரமுத்து எவ்வளவு அழகா பாடல் எழுதி இருக்கார் தெரியுமா?"

"தெரியாதே..."

"சின்ன சின்ன ஆசை; சிறகடிக்கும் ஆசை பாட்டு நீங்க கண்டிப்பா கேட்டிருப்பீங்க. ஒரு இளம் பெண்ணோட மனசுக்குள்ள இருக்கக் கூடிய நூதனமான, சின்ன சின்ன ஆசைகளை எத்தனை அழகான வார்த்தைகள்ல பாடலா எழுதி இருக்கார் கவிஞர்?"


"ஓ... அந்தப் பாட்டா? கேட்டிருக்கேன். ஆனா நீ ரசிக்கற அளவுக்கு ஆழமா ரசிச்சதில்லை... அடடே... பேச்சு வாக்கில ரொம்ப தூரம் நடந்துட்டமே, கார் ரொம்ப தூரத்தில நிக்குது..."

"அதனாலென்ன... இப்பிடியே திரும்பி கார் இருக்கற இடத்துக்கு நடந்து போயிடலாம்." அர்ச்சனாவின் தோளோடு தோள் உரச, நடந்த தியாகுவின் ஸ்பரிசம் புதிதாய் இருந்தது அவளுக்கு. திருமணமான நாளிலிருந்து தொட்டவன், தன் மேல் பட்டவன், தன் உடலை ஆட்கொண்டவன் இன்றென்ன புதிதாய் இருக்கிறது அவன் தொடும்பொழுது? இயந்திரகதியாய் சென்று கொண்டிருந்த என் வாழ்க்கை, மந்திரஜாலமாய் மாறி சொர்க்கத்தைக் காட்டுவது என்றும் நிலை பெற வேண்டுமே” என்ற தவிப்பில், அலை பாய்ந்த தன் மனதை கடல் அலைகளை ரசிப்பதில் ஈடுபடுத்தினாள்.

கார் அருகே வந்ததும் அவளுக்கு காரின் கதவைத் திறந்து விட்டு அன்போடு அவளை அணைத்தபடி காருக்குள் உட்கார வைத்தான். வீடு வந்து சேர்ந்தனர். உடை மாற்றவதற்காக மாடியறைக்குச் சென்ற அர்ச்சனாவின் பின்னாலே சென்ற தியாகு, அவளைக் கட்டிப் பிடித்தான். மறு நிமிடம் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டு அவளை கண்களால் மட்டும் ரசித்தான்.

"இந்தப் புடவையில நீ ரொம்ப அழகா இருக்க. இன்னிக்கு நைட்டி போட வேண்டாம். விடிய விடிய உன்னை ரசிக்கப் போறேன்."

வெட்கப்பட்ட அர்ச்சனா, ரம்மியமான புன்னகையை உதிர்த்தாள்.

அவளது நாணம் கலந்த புன்னகை, தியாகுவின் மனதை மயக்கியது. அதுவரை கண்களால் மட்டுமே ரசித்துக் கொண்டிருந்தவன், அவள் மீது தன் கைகளை மிக மென்மையாகப் படர விட்டான். உணர்ச்சி மேலீட்டால் உந்தப்பட்ட அர்ச்சனா முதல் முறையாக அவனை விரும்பி, வலிய அணைத்துக் கொண்டாள்.

மெதுவாகக் கட்டிலுக்கு வந்த இருவரும் படுக்கையில் படுத்து கட்டிப்பிடித்தபடியே உருண்டு புரண்டனர். கட்டிலின் விளிம்பு வரை வருவதும், மீண்டும் திரும்புவதுமாகக் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்த அவர்களின் கவனக் குறைவால் கட்டிலிலிருந்து கீழே விழுந்தனர். கீழே விழுந்திருந்த தியாகுவின் மேல் படர்ந்து விழுந்துக் கிடந்தாள் அர்ச்சனா.

"ஐய்யோ... அப்பா... உடம்பெல்லாம் வலிக்குதே. கால் முட்டி பயங்கரமா வலிக்குதே" கட்டிலிலிருந்து கீழே தரை மீது கவிழ்ந்து விழுந்து கிடந்த அர்ச்சனா, தூக்கத்தில் கனவு கண்டிருந்ததை உணர்ந்தாள். தரையிலிருந்து எழுந்தாள். கட்டிலில் உட்கார்ந்தாள்.

“அடக்கடவுளே... இது வரைக்கும் நான் கண்டதெல்லாம் கனவுதானா?” ஏக்கத்திலும், ஏமாற்றத்திலும் வெறுத்துப் போனாள். அடிபட்ட இடங்களுக்கு மருந்து போட்டு நீவி விட்டாள்.

“ச்சே... இந்தக் கனவு நிஜமானால்? என் வாழ்வு சொர்க்கமாக இருக்குமே. நிச்சயம் அந்த நாள் சீக்கிரமாய் வரும்” நம்பிக்கையை உருவாக்கிக் கொண்டாள். அப்போது காலை மணி ஆறு. வீட்டின் அழைப்பு மணி ஒலித்தது. அர்ச்சனா கீழே இறங்கி கதவைத் திறந்தாள். தியாகு வந்திருந்தான். அவனது முகம் களைப்பாகக் காணப்பட்டது. அர்ச்சனாவை நேருக்கு நேர் பார்ப்பதைத் தவிர்த்தபடி மாடியறைக்குப் போவதற்காக படிக்கட்டுகளில் ஏறினான். 'இரவு நான் கனவில் கண்டவரா இவர்?... ம்... மெல்ல மெல்லதான் கதவு திறக்கும். பொறுத்திருக்க வேண்டும்’ எண்ணங்களை சுமந்தபடி அவனுக்கு காபி போடுவதற்காக சமையலறைக்குச் சென்றாள்.

35

பிரம்மாண்டமானதாகவும் இன்றி, மிகச் சிறியதாகவும் இன்றி நடுத்தரமான அளவு கொண்ட திருமண மண்டபம். அழகாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மேடை மீது வண்ணத்திரைகள் தொங்க விடப்பட்டிருந்தன.

சுமார் இருநூறு பேர் குழுமியிருந்தனர். குமரன் சில்க்ஸ் மற்றும் நகரத்தின் பிரபல ஜவுளிக்கடைகளின் பட்டுப் புடவைகள் சரசரக்க பெண்கள் நடமாடிக் கொண்டிருந்தனர். பட்டுப் பாவாடை சட்டை, பளபளவென மின்னும் சுடிதார் உடையில் சிறு வயது பெண்கள் சந்தோஷமாக சிரித்தபடி இங்கும் அங்கும் உலவிக் கொண்டிருந்தனர்.

திருமண விழாக்களுக்கே உரித்தான ரோஜாப்பூ, பன்னீர் வாசனை நாசியில் மணத்தது. சுகந்தியின் மாமனார்தான் விழாவின் நாயகன். சுகந்தியின் மாமியார் விழா நாயகி. ஐம்பத்து ஐந்து வயதிலும் நாணம் குறையாத புன்னகையுடன் காட்சி அளித்தார் லட்சுமி. பெயருக்கேற்றபடி அவரது முகம் லஷ்மிகரமாகவும், மங்களகரமாகவும் இருந்தது. மாமனார் ஜெகதீசன் சஃபாரி உடையில் கம்பீரமாக இருந்தார். தங்கள் மகனும், மகள்களும் சேர்ந்து தங்கள் சஷ்டியப்த பூர்த்தியைக் கொண்டாடுவது குறித்து அளவில்லா ஆனந்தத்தில் மிதந்துக் கொண்டிருந்தனர். சுகந்தியும், அவளது கணவன் வாசுவும் விழா நடவடிக்கைகளில் உற்சாகமாக ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.

கையில் பரிசுப் பார்சலுடன் மண்டபத்திற்குள் நுழைந்தாள் அர்ச்சனா. குங்குமக்கலர் பட்டில் வெளிர் நீல நூலும், வெள்ளி ஜரிகையும் கலந்த வேலைப்பாடு மிகுந்த புடவையை அணிந்திருந்தாள். அதற்கேற்ற வண்ணத்தில் மிகச் சரியாக தைத்த ஜாக்கெட்டின் கையிலும், கழுத்துப் பகுதியிலும் புடவையில் உள்ள பார்டர் போலவே தைக்கப்பட்டிருந்தது. இரண்டு வரிசைகளாகத் தொங்கும் முத்து ஜிமிக்கிகளும், கழுத்தில் மூன்று வரிசைகளாகத் தொங்கும் நல்முத்தும், தங்கமும் கலந்த மாலையையும் அணிந்திருந்தாள். கைகளில் முத்து வளையல்கள்! மருதாணியிட்டு குளித்த கூந்தல், அரோக்கியமாக மின்னியது. தளர்வாக விட்டு, பின்னி இருந்தாள். மல்லிகைப்பூ சீஸன் என்பதால் அடர்த்தியாகக் கட்டி இருந்த மல்லிகைச் சரத்தை மிக அழகாக சூடி, அவை அவளது தோளோடு உரசிக் கொண்டிருந்தன. கண்களுக்கு ஐ லைனர் போட்டு மேலும் அழகு கூட்டியிருந்தாள். புடவையின் வண்ணத்தில் அவள் வைத்திருந்த ஸ்டிக்கர் பொட்டு அவளது அழகை மேலும் பரிமளிக்கச் செய்தது.

அவள் உள்ளே நுழைவதைப் பார்த்த சுகந்தி ஓடிச் சென்று அவளைக் கட்டிப் பிடித்து வரவேற்றாள்.  அங்கு கூடியிருந்த ஆண்கள் கவனம் முழுவதும் அர்ச்சனா மீது தாவியது.  'யார் இந்தப் பெண்? இத்தனை அழகா’ என்கிற ரீதியில் பார்த்தனர். பெண்களும் அவளைப் பார்த்து பிரமித்தனர்.

சுகந்தியின் கணவன் வாசுவும், அர்ச்சனாவை வரவேற்றான்.

சுகந்தியின் மாமனார் ஜெகதீசனையும், மாமியார் லஷ்மியையும் நமஸ்காரம் செய்து ஆசிகள் பெற்றாள் அர்ச்சனா.

"எழுந்திரும்மா. தீர்க்க சுமங்கலியா, திவ்யமா, சுபிட்சமா வாழ்ந்து நல்ல வாரிசுகளைப் பெத்து, நீயும் உன் புருஷனும் நூறாண்டு காலம் நீடூழி வாழணும்மா" லஷ்மி, மனதார வாழ்த்தினார்.

"உன் புருஷன் வரலியாம்மா?" ஜெகதீசன் அன்புடன் கேட்டார்.

"அவர் ரொம்ப பிஸியா இருக்கார் அங்கிள். அதனால நான் மட்டும் வந்தேன். என்றவள் பரிசுப் பார்சலை லஷ்மியிடம் கொடுத்தாள்.

"எதுக்கும்மா இதெல்லாம்? நீ எங்க பொண்ணு மாதிரி. சும்மா வரக் கூடாதா?"

"பொண்ணு மாதிரின்னு நீங்களே சொல்லிட்டீங்கள்ல? பொண்ணுன்னா அம்மாவோட மணி விழாவுக்கு நிச்சயமா பரிசு குடுக்கணும்..."


"சரிம்மா. அவசரமா கிளம்பிடாதே. நிதானமா ஃபங்ஷன் முடியற வரைக்கும் சுகந்தி கூட இருக்கணும். விருந்து சாப்பிடணும்..."

"சரி ஆன்ட்டி." மேடையில் இருந்து இறங்கிய அர்ச்சனா, சுகந்தியின் அருகே வந்தாள்.

"நீ வந்தது எனக்கே அதிசயமா இருக்கே. எப்பிடி அர்ச்சு உன் ஹஸ்பண்ட் உன்னை இங்கே வர்ற்துக்கு அனுமதிச்சார்?" "அதான் எனக்கும் ஒரே ஆச்சர்யம். நேத்து அவர்கிட்ட கொஞ்சம் மனம் விட்டு பேசினேன். அதனாலயோ என்னவோ தெரியலை. கேட்டதுமே 'சரி போயிட்டு வாயேன்’னு சொன்னார். அதைவிட முக்கியமான விஷயமெல்லாம் உன்கிட்ட நான் பேச வேண்டி இருக்கு. நாளைக்கு நீ ஃப்ரீயானதும் எனக்கு போன் பண்ணு."

"சரி அர்ச்சு" என்ற சுகந்தி, வேறு விருந்தினர்களை வரவேற்கச் சென்றாள். ஏற்கெனவே குழுமியிருந்த இருநூறு பேருக்கு மேல் வருகையாளர்கள் வந்த வண்ணமிருந்தனர்.

தற்செயலாய் மண்டப வாசலைப் பார்த்த அர்ச்சனா சற்றே திகைத்தாள். ப்ரவீன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததுமே அர்ச்சனாவின் கண்களில் கண்ணீர் துளிர்த்தது. சமாளித்தாள்.

சுகந்தியின் மாமியார், மாமனாருக்கு பூங்கொத்து கொடுத்து விட்டு அர்ச்சனாவின் அருகே வந்தான் ப்ரவீன்.

"அர்ச்... உன்னை இங்கே சந்திப்பேன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை...."

"நா... நானும்தான். நீ பெங்களூர் போகப் போறதா சொல்லியிருந்த...?"

"சுகந்தி என்னை இந்த ஃபங்ஷனுக்கு கண்டிப்பா வரணும்னு சொல்லிட்டா. அதைத் தவிர வேற ஒரு முக்கியமான வேலை இருந்துச்சு. அதனால நான் என்னோட பெங்களூர் ட்ரிப்பைத் தள்ளிப் போட்டுட்டேன்."

"ஸ... ஸ... ஸாரி... ப்ரவீன். என் ஹஸ்பண்ட் உன்னை அவமானப்படுத்திட்டார். அவர் ஒரு சந்தேகப்பிராணின்னு தெரிஞ்சுக்காம, நீ எனக்கு லவ் லெட்டர் குடுத்ததைப் பத்தி விலாவாரியா அவர்கிட்ட உளறிக் கொட்டிட்டேன். அதனால் அவருக்கு என் மேலயும் சந்தேகம், உன் மேலயும் சந்தேகம். நான் அழகா இருக்கறதுனால சந்தேகம். நீ எனக்கு லவ் லெட்டர் குடுத்தது தப்பாம். நான் உன்னைக் காதலிக்கறேனாம். இப்பிடி கண்டபடி கற்பனை பண்ணி என்னைக் கொடுமை படுத்தறாரு...."

"எல்லாம் எனக்குத் தெரியும். சுகந்தி சொன்னா. அதைப்பத்தி நாம நிறைய பேச வேண்டி இருக்கு."

"இனிமேல் பேசி எதுவும் ஆகப் போறது இல்லை."

"அர்ச்சனா... நீ, நான், சுகந்தி மூணு பேரும் சந்திச்சு பேசியே ஆகணும். அதையெல்லாம் நினைச்சா எனக்கே எவ்ளவு அதிர்ச்சியா இருக்கு தெரியுமா?"

"அதிர்ச்சியாத்தாண்டா இருக்கும். ரகசியமா சந்திக்க வந்த இடத்துல நான் வந்துட்டேன்ல..." திடீரென அங்கே வந்த தியாகு பல்லைக் கடித்தபடி கேட்டான்.

அங்கே, அந்த விழா மண்டபத்தில் தியாகுவை முற்றிலும் எதிர்பார்க்காத அர்ச்சனாவிற்கு கண்கள் இருட்டிக் கொண்டு வந்தது.

"என்னடி கண்ணை உருட்டற? உன் ஃப்ரெண்டு சுகந்தி... இவனுக்கும் ஃப்ரெண்டுதானே? கண்டிப்பா இந்த ஃபங்ஷனுக்கு இவன் வருவான்னு எனக்குத் தோணுச்சு. 'ரெண்டும் ரெண்டும் நாலு’ன்னு கூட்டல் போட்டேன். என் கணக்கு தப்பலை. நீ இவனை இங்கே வரச் சொல்லி பேசுவன்னும் எனக்குத் தெரியும். காதலர்கள்ன்னா இப்பிடித்தான்... சந்தர்ப்பம் பார்த்து சந்திப்பை ஏற்படுத்திக்குவாங்கங்கற புள்ளி விவரம் கூட தெரியாத மடையனா நான்?"

நல்ல வேளையாக ப்ரவீனும், அர்ச்சனாவும் பேசிக் கொண்டிருந்த இடத்தில் ஆட்கள் அதிகம் இல்லை. தான் பேசினால் அன்று அர்ச்சனாவின் வீட்டில் நடந்தது போல அசிங்கமாகிவிடும் என்று கருதிய ப்ரவீன் எதுவும் பேசாமல் மண்டபத்தை விட்டு வேகமாக வெளியேறினான்.

இதற்குள் இவர்களைப் பார்த்துவிட்ட சுகந்தி, முகமலர்ச்சியுடனும், வியப்புடனும் தியாகுவை வரவேற்றாள். தியாகுவின் முகம் கோபத்தைப் பிரதிபலிப்பதைப் புரிந்துக் கொண்ட சுகந்தி செய்வதறியாது திகைத்து நின்றாள்.

நிலைமையை சமாளிக்கும் பொருட்டு, தியாகுவின் கையைப் பிடித்துக் கொண்டு நடிப்பாய் சிரித்தபடி, "நாங்க கிளம்பறோம் சுகந்தி.. இவருக்கு வீட்ல ஏதோ ஃபைல் எடுக்கணுமாம். வீட்டுக்கு ஒரு சாவிதான் இருக்கு. அது என்கிட்ட இருக்கு. அதனால என்னைக் கூப்பிட வந்திருக்கார். வாசு ஸார்... வரட்டுமா? உங்க அத்தை கிட்ட சொல்லிடு சுகந்தி" என்று கூறி அவசரம் அவசரமாக தியாகுவுடன் மண்டபத்தை விட்டு வெளியேறினாள் அர்ச்சனா.

36

காரில் வீடு வந்து சேரும் வரை வாயைத் திறக்காமல் வந்த தியாகு, வீட்டிற்குள் நுழைந்ததும் அர்ச்சனாவின் கன்னத்தில் 'பளார்’ என அறைந்தான். எதிர்பாராத சமயத்தில் அதிரடியாக கன்னத்தில் விழுந்த அறையினால் அர்ச்சனா நிலைகுலைந்து தரையில் விழுந்தாள்.

"ஆ... அப்பா...." பொதுவாகத் துன்பம் நேரிடும்பொழுது 'அம்மா’ என்று அலறுவதும், அழுவதும் தான் வழக்கம். ஆனால் நினைவு தெரிந்த நாளில் இருந்து 'அப்பா’ என்றுதான் அர்ச்சனா அழுவாள். அந்த அழுகை கூட ஏதாவது வலியினால் இருக்குமே தவிர உள்ளம் குமுற அவள் அழுததே இல்லை தியாகுவைத் திருமணம் செய்யும்வரை.

"என்னடி அப்பனைக் கூப்பிடுற? உன் முன்னாள் காதலனை சுகந்தி வீட்டு ஃப்ங்ஷனுக்கு வரச் சொல்லிட்டு, எதுவும் தெரியாத மாதிரி என்கிட்ட பர்மிஷன் கேட்டிருக்க. உங்க நாடகம் புரிஞ்சுதான் வேணும்னே உன்னை அங்க போக அனுமதிச்சேன். நீயும் சீவி முடிச்சு சிங்காரம் பண்ணிக்கிட்டு அங்க போயிட்ட. அங்கே அவனோட சுவாரஸ்யமா பேசிக்கிட்டிருக்க... ம்... என்னவோ 'நான் சுத்தமானவ. நல்லவ. என்னை நம்புங்க’ன்னு பத்தினி வேஷம் போட்ட? ஊரை ஏமாத்தலாம். என்னை ஏமாத்த முடியாது. ஊருக்கெல்லாம் பஞ்சாயத்துப் பண்ற உங்கப்பா கிட்ட அவரோட பொண்ணுக்கு பஞ்சாயத்துக்குப் போகலாமா?" துருப்புச்சீட்டை வீசினான் தியாகு.

வலியினால் துடித்துக் கொண்டிருந்த அர்ச்சனா அவனது கடுமையான சொற்களால் மேலும் துடித்தாள். “அப்பாவுக்கு எதுவும் தெரிஞ்சுடக்கூடாது’ன்னு இவர்கிட்ட உளறினது தப்பாப் போச்சே. ப்ளாக் மெயில் பண்றாரே. எந்தத் தப்பும் செய்யாமலே எனக்கு ஏன் இந்த தண்டனை? நான் நல்லவள், என் மனசுல களங்கம் துளியும் இல்லைன்னு இவர்கிட்ட எப்பிடி நிரூபிக்க முடியும்? 'பனை மரத்துக்கு அடியில இருந்து பாலைக் குடிச்சா கூட கள் குடிச்சதாத்தான் சொல்வாங்க’ன்னு அப்பா ஒரு பழமொழி சொல்வார். அது போலத்தான் இன்னிக்கு நடந்ததும். ப்ரவீன் அங்க வர்றது எனக்குத் தெரியாது. நான் வர்றது அவனுக்குத் தெரியாது. தற்செயலா சந்திச்சு யதார்த்தமா பேசிக்கிட்டிருந்ததைப் பார்த்து அவனுக்காகத்தான் நான் அங்கே போனேன்னு அடிக்கறார். காக்கா உட்கார பனம்பழம் விழுந்த கதையா ஆகிப் போச்சே இன்னிக்கு நடந்தது. விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து இந்த நிமிஷம் வரை என்னை யாரும், கைநீட்டி அடிச்சதில்ல. சரவணன் அண்ணன் விளையாட்டா கூட என்னை அடிச்சதில்ல. இந்த மனித நேயமே இல்லாத மனுஷன், இப்பிடி என்னை கன்னத்தில அறைஞ்சுட்டாரே...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.


"என்னடி... பேசாம இருந்து தப்பிச்சுக்கலாம்னு பார்க்கறியா? அந்த ப்ரவீன் பயலைப் பார்க்கக் கூடாது, பேசக்கூடாதுன்னு சொன்னேனே, எதுக்காக அவன் கூடப் பேசின? சொல்லு. சொல்லலைன்னா இன்னொரு அறை விழும்."

“ஐயோ, ஏற்கெனவே வலியில துடிச்சுக்கிட்டிருக்கேன். இன்னொரு அடியா? தாங்கவே முடியாது. சுகந்தி வீட்டு ஃபங்ஷனுக்குப் போறதுனால பொன்னிக்கு லீவு குடுத்து அனுப்பிட்டேனே. அவளும் துணைக்கு இல்லாம தனியா இந்த மனித மிருகத்துக்கிட்ட மாட்டிக்கிட்டேனே” மனக்குரலை அடக்கி விட்டு மெதுவாக பேச ஆரம்பித்தாள்.

"சத்தியமா எனக்கு ப்ரவீன் அங்கே வருவான்னு தெரியாதுங்க. தற்செயலா நடந்ததுதான். நீங்கதான் ஏதேதோ கற்பனை பண்ணி..."

"கற்பனை பண்ணி... சொல்லு சொல்லு...."

"கற்பனை பண்ணி என்னை சித்ரவதை பண்றீங்க."

"நான் பண்றது சித்ரவதைன்னா நீ பண்றது? பார்க்கறவங்கள்லாம் உன்னோட அழகை ரசிக்கணும்னு வேணும்னே 'பளிச்’ன்னு அலங்காரம் பண்ணிக்கிட்டு கூட்டத்துல போய் நிக்கறியே, அது சித்ரவதை இல்லையா? அந்த ப்ரவீன் பய கூட இளிச்சு இளிச்சு பேசறியே அது சித்ரவதை இல்லியா?"

"பொண்ணா பொறந்துட்ட ஒவ்வொருத்தியும் தன்னை அழகா அலங்கரிச்சுக்கணும்னு ஆசைப்படறது பெண் பிறவிக்கே உரிய இயல்புங்க. எத்தனை வயசானாலும் நகை, புடவை, பூ, பொட்டுன்னு விதம் விதமா தன்னை அழகு படுத்திக்கறது பொண்ணுங்க கூடவே பிறந்த குணம். மத்தவங்க பார்த்து ரசிக்கணும்னு இல்லை. எங்களை நாங்களே கண்ணாடியில பார்க்கும்போது அழகா இருக்கணும்னு நினைக்கறோம். இதில என்ன தப்பு?"

"தப்புதான். நீ என் முன்னாடி மட்டும்தான் அழகா உடுத்திக்கணும். என்னோட கண்ணுக்கு மட்டும்தான் உன்னோட அழகு தெரியணும். வேற எவனோட கண்ணும் உன் மேல மேயக்கூடாது. எவனும் உன்னை ரசிக்கக் கூடாது."

"அப்பிடி என்ன நான் பெரிசா அலங்காரம் பண்ணிக்கிட்டேன்னு இவ்வளவு கோபப்படறீங்க? ஒரு பட்டுப்புடவை, தளர்வான பின்னல்ல பூ, முத்து ஸெட் நகை போடறது பெரிய அலங்காரமா?"

"உன்னோட அழகுக்கு அது கூடுதலான அலங்காரம்தான்" பேசியவன், அர்ச்சனாவின் முகத்தருகே சென்று "அந்த ப்ரவீனுக்காகத்தானே இத்தனை அலங்காரம்?....ம்?" கர்ஜித்தான்.

அவனைப் பார்க்கவே பயமாக இருந்தது. அர்ச்சனாவிற்கு. முகத்தை மூடிக் கொண்டு அழ ஆரம்பித்தாள்.

'ஐய்யோ எனக்கு இவரைப் பார்க்கவே பயம்மா இருக்கே’ யோசித்தவளின் நினைவு திடீரென மங்கிவிட, மயங்கி விழுந்தாள்.

மயங்கி விழுந்தவளைத் தூக்கிக் கொண்டு மாடியறைக்கு சென்றான் தியாகு. முகத்தில் தண்ணீர் தெளித்தான். தண்ணீர் அவளது முகத்தை மட்டுமல்லாது புடவையையும், ஜாக்கெட்டையும் நனைத்தது. மெதுவாக கண் விழித்தாள் அர்ச்சனா. புடவையும், ஜாக்கெட்டும் நனைந்தபடியால் அவளது பொன்நிற தேகம் மேலும் மின்னியது. இதைக் கண்ட தியாகுவின் உடலில் காமத்தீ பற்றி எரிந்தது.

எந்த சூழ்நிலையில், எப்படிப்பட்ட மனநிலையில் அவள் இருக்கிறாள் என்பது பற்றியெல்லாம் சிறிதும் அக்கறை கொள்ளாத அவன், அர்ச்சனாவை அணைத்து தன் ஆசையையும் அணைத்துக் கொண்டான்.

அடிபட்ட வலி, மயங்கியதால் ஏற்பட்ட தலைசுற்றல், இவற்றைவிட மனித நேயமற்ற அவனது பேச்சு. இவற்றால் மனம் துவண்டு கிடந்த நிலைமையில், அன்பே இல்லாமல் வெறும் உணர்ச்சிகளின் வடிகாலாக தன்னைப் பயன்படுத்திக் கொள்ள முற்பட்ட தியாகுவின் ஸ்பரிசம் தணலென சுட்டது. அவனை எதிர்க்கவும், தடுக்கவும் சக்தியின்றி, தைர்யமின்றி மரக்கட்டையாய் படுத்துக் கிடந்து கண்களை மூடிக் கொண்டாள்.

அவளைப் பற்றிய கவலையே இன்றி நிதானமாய் மல்லாந்து படுத்துக் கொண்டான் தியாகு.

அயர்ச்சியாலும், மனத்தளர்ச்சியாலும், அழுததன் விளைவாலும் அவ்வப்போது நீண்ட பெருமூச்சு விட்டபடி விடியும் வரை ஆழ்ந்து தூங்கி விட்டாள் அர்ச்சனா.

 

37

றுநாள் காலை. அர்ச்சனாவின் உடல் காய்ச்சலால் அனல் கொதித்தது. அவளுக்கு தலை வலித்தது. எழுந்திருக்க முயற்சி செய்தும் முடியவில்லை. அவள் சிரமப்படுவதைப் பார்த்துக் கொண்டே இருந்தான் தியாகு. கலைந்திருந்த தன் உடைகளை சரி செய்து கொள்ள பெரிதாக முயற்சி எடுக்க வேண்டியிருந்தது அர்ச்சனாவிற்கு. அத்தனை சிரமமாக இருந்தது அவளுக்கு. இன்னொரு பயமும் இருந்தது. உடை கலைந்திருந்த தன் உடலின் கோலத்தால் மீண்டும் மிருகமாகி தன் இச்சையைத் தீர்த்துக் கொள்ள வந்துவிடுவானோ என்ற அச்சத்தில் தவியாய் தவித்தாள்.

அவள் துன்புறுவதைப் பார்த்து பார்த்து ரசித்து இன்புற்றான் தியாகு. அவன், ஹோட்டலுக்குப் போக வேண்டிய நேரம் வந்ததும் அர்ச்சனாவை எதற்கும் எதிர்பார்க்காமல் அவனே ஃப்ரிட்ஜில் இருந்த ஆப்பிளை எடுத்து சாப்பிட்டுவிட்டு புறப்பட்டுச் சென்று விட்டான். கார் புறப்படும் ஒலி கேட்டபின் மெதுவாக, நைட்டியைப் போட்டுக் கொண்டு தள்ளாடியபடி கீழே இறங்கி வந்தாள் அர்ச்சனா.

பொதுவாக இரவு நேரத்தில் மட்டுமே நைட்டியை அணிந்துக் கொண்டிருந்தாள்.

அவளது மொபைல் ஒலித்தது. வேண்டுமென்றே 'பேசறாளா இல்லையான்னு பார்ப்போமே’ என்ற எண்ணத்தில் தியாகு அழைத்தான். நம்பரைப் பார்த்த அர்ச்சனா, போனை எடுக்காமலே தொடர்ந்து அதை கிணுகிணுக்க விட்டாள்.

'கட்டிய மனைவி, கட்டிலை விட்டுக் கூட எழுந்திருக்க முடியாமல் கஷ்டப்படுவதைப் பார்த்து ரசித்த அவன் எதற்காக போன் செய்ய வேண்டும்? நான் ஏன் எடுத்துப் பேச வேண்டும்’ வெறுப்பின் எல்லைக்கு சென்றாள் அர்ச்சனா.

தளர்வாய் கீழே வந்தவளை மறுபடியும் மொபைல் போன் ஒலி எரிச்சல் படுத்தியது. நம்பரைப் பார்த்தாள். பொன்னியின் அப்பாவின் நம்பர்! எடுத்துப் பேசினாள்.

"ஹலோ..."

"வணக்கம்மா. நான் பொன்னியோட அப்பா பேசறேன். சேர்ந்தாப்ல இன்னிக்கு ஒரு நாள் இருந்துட்டு நாளைக்குக் காலையில பொன்னி வேலைக்கு வரட்டும்மா."

"சரி." களைப்பின் மிகுதியால் 'ஏன்’ 'எதற்கு’ என்று கூட கேட்க இயலாமல் ஹாலில் இருந்த சோபாவில் படுத்துக் கொண்டாள்.

'அப்பா... அப்பா... என் நிலைமையை பார்த்தீங்களாப்பா? அநாதை போல ஆதரவில்லாம இப்படிக் கிடக்கறனே... உடம்பும் சரி இல்ல. மனசும் சரி இல்லை. தாலி கட்டின புருஷனோட கனிவான அன்பு இல்ல. பாசம் இல்லை. உடல்நிலை சரி இல்லாத இந்த நேரத்துல அவரோட கவனிப்பும் இல்ல. புருஷன் சுமத்தின களங்கத்தை சுமந்துக்கிட்டு, அதனால நெஞ்சு கலங்க இப்பிடி கிடக்கேனே அப்பா....’ அவளது மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது. கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தபடி இருந்தது.

மறுபடியும் போன் ஒலித்தது. நம்பரைப் பார்த்தாள்.

ப்ரவீனின் நம்பர்! எடுத்தாள்.

"ப்ளீஸ்.. ப்ரவீன். நீ எனக்கு போன் போடாத. என் கூடப் பேசாதே." லைனைத் துண்டித்தாள்.


'நான் உண்மையாவும், நேர்மையாவும் இருக்கும்போதே என்னைக் கண்டபடி பேசறாரே இவர்! அப்படின்னா நேர்மைக்கு பலன் இல்லையா? உண்மைக்குப் பலன் இல்லையா? மான்போல துள்ளிக் குதித்து வாழ்ந்துகிட்டிருந்த எனக்கு இப்பிடி பாய்ஞ்சு வந்து அடிச்சுக் கொல்ற ஒரு புலியா புருஷனா வரணும்? சந்தேகப்புத்தியினால வார்த்தை சவுக்கால இத்தனை நாள் அடிச்சிக்கிட்டிருந்தார். இப்ப கையை நீட்டி அடிக்க ஆரம்பிச்சுட்டார். இது எதுல போய் முடியுமோ? நல்ல நண்பன் ப்ரவீன். அவனைக் கூட பேசாதேன்னு சொல்லிட்டேனே? இப்படியெல்லாம் நேர்மையா நான் நடந்துக்கற அளவுக்கு இவர் என் மேல பாசத்தைப் பொழியறாரா? என் அழகுதான் இவரை சந்தேகப்பட வைக்குதுன்னா, எதுக்காக நான் அழகா இருக்கேன்னு தெரிஞ்சும் எதுக்காக என்னைக் கல்யாணம் பண்ணிக்கிட்டாரு? கறுப்பா, குண்டா, அவலட்சணமான பொண்ணா பார்த்து மணமுடிச்சிருந்தா... நிம்மதியா இருந்திருப்பார். கட்டிக்கிட்டவளுக்கும் எந்தத் துன்பமும் இருந்திருக்காது...’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது.

சிந்தித்து சிந்தித்து கண்ணீர் சிந்தினாள் அர்ச்சனா. பிற்பகல் வரை சோர்வாகப் படுத்திருந்தவள் திடீரென எழுந்தாள். முன்தினம் காலையில் இரண்டே இரண்டு இட்லிகள் சாப்பிட்டது. அதன்பிறகு எதுவுமே சாப்பிடாமல் இருந்துவிட்ட படியால் பசி வயிற்றைக் கிள்ளியது.

துன்ப உணர்வுகள் எத்தனை நேரத்திற்குத்தான் தூக்கம், பசி போன்ற இயற்கை உணர்வுகளை மந்திக்க வைத்திருக்கும்? இயற்கை தன் இயல்பை வெளிப்படுத்தியது.

அர்ச்சனா சமையலறைக்குச் சென்றாள். ஒரு நாளைக்கு முன் தயாரித்து வைத்திருந்த ரவா உப்புமா ஃப்ரீஸரில் இருந்தது. வெளியே எடுத்து, மைக்ரோ அவனில் வைத்து குளிர்ச்சியைக் குறைக்கும் பட்டனைத் தட்டி விட்டாள்.

அது தயாராவதற்குள் வயிறு எரிந்தது. எனவே ஃப்ரிட்ஜில் இருந்து பாலை எடுத்தாள். காய்ச்சினாள். லேசாக ஆற்றி கப்பில் ஊற்றி, மெதுவாக குடித்தாள்.

அமிலத்தினால் எரிந்து கொண்டிருந்த வயிறு, பாலைக் குடிக்க, குடிக்க எரிச்சல் அடங்கி குளிர்ச்சியானது. ஆனால் எரிந்துக் கொண்டிருந்த அவளது மனம்? பெருநெருப்பாக ஜ்வாலையோடு பற்றி எரிந்துக் கொண்டிருந்தது.

மைக்ரோ அவனில் வைத்த உணவின் குளிர்ச்சி குறைந்ததும் அது ஒலித்து அழைத்தது. எழுந்து சென்று அதைத் திறந்தாள். உப்புமா இருந்த டப்பாவை எடுத்தாள். மறுபடி உள்ளே வைத்து சூடாக்கும் பட்டனைத் தட்டினாள்.

சூடு ஏறியதும் திறந்து, உப்புமா டப்பாவை எடுத்துத் திறந்தாள். ஆவி பறக்க சூடேறிய உப்புமா புதிதாக, அப்போதுதான் தயாரித்தது போல மணத்தது. சிறிய கண்ணாடிக் கிண்ணத்தில் சிறிதளவு உப்புமாவை எடுத்துப் போட்டு, ஒரு ஸ்பூனையும் கையில் எடுத்துக் கொண்டு ஹாலுக்குச் சென்றாள். சோஃபாவில் சாய்ந்து உட்கார்ந்தாள். உப்புமாவை சாப்பிட்டாள். சாப்பிட்டதும் சற்று தெம்பு ஏறியது போல் உணர்ந்தாள். அழுததால் தலையில் நீர் கோர்த்துக் கொண்டு பாரமாக இருந்தது. வலியும் இருந்தது.

மனநிலையை மாற்றுவதற்காக தொலைக்காட்சியை இயக்கினாள். "அவன் கூட உனக்கென்ன பேச்சு? அவன் என்ன உன் கூடப் பிறந்தவனா? உன் கூடப் படிச்சவன்தானே? அவன்கிட்ட என்ன உனக்கு சிரிச்சு சிரிச்சுப் பேச வேண்டிக் கிடக்கு?" பல்லைக் கடித்துக் கொண்டு கொடூரமான முகபாவத்தோடு மனைவியை மடக்கிக் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தான் சீரியல் நாயகன். சிங்கத்திடம் மாட்டிக் கொண்ட முயல் போல பயத்தில் நடுங்கியபடி அவனது மனைவி அழுதுக் கொண்டிருந்தாள். சீரியலில் வரும் கதாப்பாத்திரங்கள், தங்கள் நடிப்புத் திறமையை வெளிப்படுத்திக் கொண்டிருந்தனர்.

'ச்சே... இதிலயும் சந்தேகப் புத்தி புருஷனா? பயந்து நடுங்கும் மனைவியா?’ பட்டென்று டி.வி.யின் ஸ்விட்சைத் தட்டி அதை அணைத்தாள்.

மாமியார் கமலாவின் மருந்துகள் அடங்கிய சிறிய ஷெல்ஃபைத் திறந்தாள். அதற்குள்ளிருந்த மாத்திரை டப்பாவில் இருந்து க்ரோஸின் மாத்திரையை எடுத்து வாயில் போட்டுத் தண்ணீர் குடித்தாள்.

'எழுந்திருக்கக் கூட இயலாம இருந்த என்னை கண்டுக்காம ஓடிட்ட அவருக்கு ராத்திரி டிபன் கூட பண்ணக்கூடாது. பண்ணவும் என்னால முடியாது’ நினைத்துக் கொண்டே மாடியறைக்குச் சென்றாள். குளியலறையில் ஹீட்டரைப் போட்டாள். மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களின் பாடல்கள் அடங்கிய சி.டி.யைப் ப்ளேயரில் போட்டாள். இதயத்திற்கு இதமான இனிய இசையமைப்பும், பாடல் வரிகளும் அவளது மனநிலையை சமனப்படுத்தின. வேறு உலகிற்கு அவளை அழைத்துச் சென்ற அந்தப் பாடல்களை கண்கள் மூடியபடி ரசித்தாள்.

அதன்பின்னர் எழுந்து நீண்ட நேரம், சூடான தண்ணீரில் குளித்தாள். அலுப்பு தீர்ந்த போதும் கன்னத்தில் தியாகு அறைந்ததனால் ஏற்பட்ட வலி தீரவில்லை. குளித்து முடித்து உடுத்திக் கொண்டு கண்ணாடி முன் நின்றாள். லேசான முக ஒப்பனை செய்து கொண்டாள்.

கன்னத்தில் கருஞ் சிவப்பாய் ரத்தம் கட்டிப் போயிருந்ததை கண்ணாடி காட்டியது.

பெருமூச்சு விட்டாள் அர்ச்சனா.

'அடையாளச் சின்னங்கள் கணவனின் அன்பு முத்தங்கள் அளித்தவையாக இருக்க வேண்டும். ஆனால் என் கன்னத்தில் அவரது வெறித்தனமான இச்சையின் இம்சைகள் தந்த காயங்களும், சந்தேக வெறியின் விளைவால் அவர் அறைந்ததன் அடையாளங்கள்தானே இருக்கின்றன?....’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சும் வலித்தது. மனது இயங்காமல் உடல் ஒத்துழைக்காமல் அவனுடன் கொண்ட உறவு தந்த உடல் உபாதை அவளை வாட்டியது. வதைத்தது.

'வாழ்க்கை என்றால் என்ன? இல்வாழ்க்கை என்பது என்ன? தாம்பத்யம் என்பது என்ன? எதுவுமே புரியலியே? மனம் விட்டுப் பேசாமல் இரு துருவங்களாய் வாழும் இந்த வாழ்க்கைக்குப் பெயர்தான் இல்லறமா?’ அர்ச்சனாவின் மனக்குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலித்தது. மனக்குரலின் ஒலியை தியாகுவின் கார் வந்து நிற்கும் ஒலி கலைத்தது.                       

உள்ளே வந்த தியாகு மாடி அறைக்கு வந்தான்.

தியாகு அவளிடம் எதுவும் பேசவில்லை. அர்ச்சனாவும் அவனிடம் எதுவும் பேசவில்லை. இருமனம் கலந்தால் ஒரு மொழியும் தேவையில்லை என்பார்கள். ஆனால் இரு மனங்களும் இறுகிப் போன நிலையில் அந்த சூழ்நிலையே இறுக்கமாக இருந்தது.

திடீரென அர்ச்சனாவின் மொபைல் போனை எடுத்தான் தியாகு. எந்தெந்த நம்பர்களை அவள் அழைத்திருக்கிறாள் என்று பார்த்தான். இரண்டு நாட்களுக்கு முன்னால் சமையல் கேஸ் ஏஜென்ஸி நம்பரை கூப்பிட்டிருந்தாள். வழக்கமாக மளிகை சாமான் வாங்கும் 'முத்து ஸ்டோர்ஸ்’ நம்பரைக் கூப்பிட்டிருந்தாள். அவளுக்கு வந்த நம்பர்களைத் தேடினான். பொன்னியின் அப்பா நம்பர் வந்தது. அதன்பின் ப்ரவீனின் நம்பர் வந்தது. அதைப் பார்த்ததும் ருத்ரதாண்டவம் ஆடத் தயாரானான் தியாகு.

"என்னவோ பத்தினி வேஷம் போட்ட? இதோ உன் கள்ள காதலன் கூப்பிட்டிருக்கானே?"


“என்ன இவ்வளவு அசிங்கமா பேசறீங்க?”

“இதோ ப்ரவீன் அப்படின்னு போன் புக்ல அவனோட பேரையும், நம்பரையும் குறிச்சு வச்சிருக்கியே... இது அசிங்கம் இல்லையா...? சொல்லு... அவன் கிட்ட இருந்து போன் வந்துச்சா?”

“ஆமா, வந்துச்சு.”

“எவ்வளவு திமிர் இருந்தா அவன் போன் பண்ணினதை தைரியமா என்கிட்டயே சொல்லுவ?”

“போன் வந்துச்சான்னு கேட்டீங்க. ‘ஆமா’ன்னு உண்மையைச் சொன்னேன். இதில என்ன தப்பு இருக்கு?”

"தப்பு இருக்குடி உன் கிட்ட..."

அர்ச்சனா குறுக்கிட்டாள்.

"இங்க பாருங்க. அவன் போன் பண்ணினான். அது வரைக்கும் சரி. அதுக்கு நான் என்ன பண்ணினேன்னு நீங்க கேக்கணும். அதுதான் முறை..."

"முறை கேடா நடந்துக்கற உன் கிட்ட முறைப்படி நடந்துக்கணுமா?..."

"ஐய்யோ... நான் சொல்றதைக் கொஞ்சம் காது குடுத்துக் கேளுங்களேன். ப்ரவீன்கிட்ட 'இனிமேல் நீ எனக்கு போன் போடாதே. என்கிட்ட பேசாதே, என்னைப் பார்க்காதே’ன்னு சொல்லிட்டு அவனோட லைனை கட் பண்ணிட்டேன்."

"ஆஹா... அப்பிடியே நீ சொல்றதை நான் நம்பிடணும்... உண்மை விளம்பி...?"

"உண்மையைத்தான் சொல்றேன். நம்பறதும் நம்பாததும் உங்க இஷ்டம்... எனக்கு பேசக் கூட சக்தி இல்லை. ப்ளீஸ்... எனக்கு உடம்பு சரியில்லை. உடம்பெல்லாம் அணு அணுவா வலிக்குது. வலி உயிர் போகுது..."

"இந்த நாடகத்தையெல்லாம் நம்பறவன் நான் இல்ல" என்றவன், அர்ச்சனாவின் கன்னத்தில் ஓங்கி அறைந்தான்.

"ஐய்யோ..." அலறினாள் அர்ச்சனா. மேலும் தொடர்ந்து கண் மூடித்தனமாக அடிக்க ஆரம்பித்தான்.

பொறுக்க முடியாத அர்ச்சனா தடுமாறியபடி துடிக்க, அவளது மொபைல் ஒலித்தது. கண்கள் செருகிய நிலையிலும் நம்பரைப் பார்த்தாள் அர்ச்சனா. மொபைலை எடுக்கப் பாய்ந்து வந்தான் தியாகு. அவன் எடுப்பதற்குள் அர்ச்சனா எடுத்துப் பேச முற்பட்டாள்.

தியாகு, அவளது கையிலிருந்த போனை பிடுங்க முயற்சி செய்தபோது, அது தவறி கீழே விழுந்தது. சுகந்தியின் லைன் தொடர்பிலேயே இருந்தது. இதை அறியாத தியாகு, மீண்டும் அர்ச்சனாவை அடிக்க ஆரம்பித்தான்.

வலி பொறுக்க முடியாத அர்ச்சனா அலறினாள்.

"ஐய்யோ... வலிக்குதே... வலியில என் உயிர் போகுதே...."

அவள் அலற, அவன் தொடர்ந்து அடிக்க, அர்ச்சனாவின் அலறலை மொபைல் லைனில் கேட்டாள் சுகந்தி. அவளது லைன் துண்டிக்கப்பட்டது.

சிறிது நேரத்தில் பூட்டிக் கிடந்த கதவை 'படபட’ என்று தட்டும் ஓசை கேட்டது. தியாகு சென்று கதவைத் திறந்தான். கதவை திறந்ததும் சுகந்தி, அவளது கணவன் வாசு, ப்ரவீன் மூவரும் உள்ளே நுழைந்தனர்.

அங்கே வேடனின் அம்பு பட்ட மானாய் துடித்துக் கொண்டிருந்தாள் அர்ச்சனா.

இதைப் பார்த்துக் கோபம் அடைந்த ப்ரவீன், தியாகுவைப் பார்த்துக் கத்தினான்.

“எத்தனை நாளைக்கு மிஸ்டர்... உன்னோட நாடகத்தை மூடி மறைக்க முடியும்?” என்றவன், அர்ச்சனாவிடம் திரும்பினான்.

“அர்ச்சு... இவனோட இரவு நேர நடவடிக்கைகளையெல்லாம் கண்டு பிடிச்சுட்டேன். இருட்டுல இவன் நடத்தின ரகசிய வாழ்க்கை வெளிச்சத்துக்கு வந்தாச்சு... இந்த ஆளு ஏன் உன்னை சந்தேகப்பட்டார்ங்கற காரணத்தைக் கண்டு பிடிச்சுட்டேன். தன்னோட தவறான நடத்தையினால தான் உன்னை சந்தேகப்பட்டு கொடுமை படுத்தி இருக்கார்...” என்று ஆரம்பித்தவன், தியாகுவைப் பற்றி தான் கண்டறிந்த உண்மைகளை அர்ச்சனாவிடம் அழுத்தமாகவும், சுருக்கமாகவும் கூறி முடித்தான்.

சிறிதும் எதிர்பார்க்காத அந்தத் தகவல்களை கேட்டுக் கொண்டிருந்த அர்ச்சனா அதிர்ச்சி அடைந்தாள். ஆத்திரம் கொண்டாள்.

தன்னைப் பற்றின உண்மைகள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக எடுத்துக் கூறிய ப்ரவீன் மீது பயங்கரமான கோபம் கொண்டான் தியாகு. ப்ரவீனை அடிப்பதற்காக கையை ஓங்கினான். ஓங்கிய கையை தன் வலிமையான கைகளால் தடுத்துப் பிடித்தான் ப்ரவீன்.

"உன்னோட சந்தேகப்புத்தியினால ஒரு நல்ல பொண்ணோட வாழ்க்கையை நாசமாக்கி, அவளை இப்பிடி அடிக்கிறியே? பொம்பளையை கை நீட்டி அடிக்கற நீயெல்லாம் ஒரு ஆம்பளையா?... இன்னும் கொஞ்ச நேரம் நாங்க வரலைன்னா இவளை அடிச்சே கொன்னுருப்ப...."

"ஆமாண்டா.... நீயும், இவளும் போன்ல கொஞ்சுவீங்க... குலாவுவீங்க... நான் இவளை அடிக்காம...."

"மிஸ்டர் தியாகராஜன்....."

தியாகு திடுக்கிட்டுப் போனான் அர்ச்சனாவின் அந்த அழைப்பைக் கேட்டு.

"உங்களைத்தான் மிஸ்டர். நம்பிக்கை இல்லாத புருஷன் கூட வாழற வாழ்க்கை நரகத்தை விட மோசமானது. அந்த நரக வாழ்க்கையைத்தான் இத்தனை நாளா நான் வாழ்ந்திருக்கேன். உங்களுக்கு என்னோட வெளி அழகும், இந்த சிவந்த தோலும்தான் தெரிஞ்சது. என்னோட வெள்ளை மனசு உங்களுக்குப் புரியலை. இவ்வளவு உரிமை எடுத்துக்கறீங்களே... எதுக்காக? எதனால? என் கழுத்தில இந்தத் தாலியைக் கட்டிட்டதுனாலதானே? இது புனிதமானதுதான். ஒத்துக்கறேன். ஆனா மனைவியை தன் மனசுல சுமக்கற புருஷன் கட்டியிருந்தா மட்டும்தான் இது புனிதமானது. என்னைப் பொறுத்த வரைக்கும் இது ஒரு புதிராத்தான் இருக்கு. மனசு ஒட்டாத தாம்பத்யத்துல தாலிக்குரிய மரியாதையே இல்லையே... சேர்ந்து வாழ்ந்தா மட்டும் போதாது. வாழற வாழ்க்கையில தாலி கட்டினவளை புரிஞ்சுருக்கணும். புரிஞ்சுக் கொள்றதே இல்லாத இந்த இல்லறத்துல இந்தத் தாலி ஜஸ்ட் ஒரு 'மெட்டல் பீஸ்’ அவ்வளவுதான். ஒரு நாளாவது 'நீ சாப்பிட்டியா’ன்னு என்னைக் கேட்டிருக்கீங்களா? என் அழகை என்னோட அனுமதி இல்லாமயே அனுபவிச்சீங்களே... ஒரு நாளாவது என் அழகை பேசி இருக்கீங்களா? படுக்கை அறையில ஒரு விலங்கு போல நடந்துக்கிட்ட நீங்க 'நீ எனக்கு மட்டும்தான் சொந்தம்’ன்னு எனக்கு விலங்கு போட்டீங்க. அதுக்குரிய தகுதி இருக்கா உங்களுக்கு?

“என்னோட மொபைல் போன்ல உள்ள 'இன்கமிங் கால்’ நம்பரையெல்லாம் திருட்டுத்தனமா குறிச்சு வச்சிருக்கீங்க. புத்திசாலியா இருந்தா ஒரு விஷயம் உங்களுக்குப் புரிஞ்சிருக்கும். உங்களுக்குத் தெரியாம நான் யார் கூடயும் பேசணும்ன்னா 'கால் லாக்’ல உள்ள நம்பர்களை பேசி முடிச்ச உடனே டெலிட் பண்ணி இருக்கலாமே. இந்த ஒரு சின்ன விஷயம் கூட உங்க மூளையில உதிக்கலை. தான், தன் சுகம், தன் விருப்பம், நான், எனது, எனக்கு, எனக்கு மட்டுமேங்கற சுயநலப்பிண்டமான உங்களோட போராடிப் போராடி கண்ணீர்ல நீராடற வாழ்க்கைதான் மிச்சம்... பொறுமை, சமுத்திரத்தை விடப் பெரிதுன்னு சொல்லுவாங்க. நானும் பொறுமையா காத்திருந்தேன். இன்னிக்கு மாறுவீங்க... நாளைக்கு மாறுவீங்கன்னு... நீங்க மாறவே இல்லை. இப்ப நான்...? மாறிட்டேன். நூறு வருஷம் சேர்ந்து வாழணும்னு பெரியவங்க வாழ்த்த, நம்ம கல்யாணம் நடந்துச்சு.


இனி ஒரு நிமிஷம் கூட உங்க கூட வாழ முடியாத நிலை உருவாகிடுச்சு...." இது நாள் வரை ஒலித்து வந்த அர்ச்சனாவின் மனக்குரல் அடங்கியது. அவளது வாய் வழி குரல் ஒலித்தது. அவளது நெஞ்சம் வலிக்கவில்லை. அந்த நெஞ்சத்திலிருந்த உரம், உரக்கக் குரல் கொடுத்தது.

"என் கூட வாழாம? வேற எவன் கூட வாழப் போற? இவன் கூடயா?" ப்ரவீனை சுட்டிக் காட்டிப் பேசிய தியாகு, மீண்டும் அர்ச்சனாவை அடிக்க  முற்பட்டான்.

அவனை லட்சியம் பண்ணாமல் வீட்டின் வாசல் பக்கம் நோக்கி நடந்தாள் அர்ச்சனா.

வாசு, ப்ரவீன், சுகந்தி மூவரும் அவளைப் பின் தொடர்ந்தனர்.

வாசலை விட்டு இறங்குவதற்கு முன் சுகந்தி, தியாகுவின் அருகே சென்றாள்.

“உன்னோட திருவிளையாடல்களையெல்லாம் அர்ச்சனாகிட்ட சொல்றதுக்குத்தான் ப்ரவீன் அவளுக்கு போன் பண்ணினான். நான் அர்ச்சனாவை நேர்ல பார்த்து உன்னோட ராத்திரி ரகசியங்களை சொல்லணும்னு நினைச்சேன். எங்க வீட்டு ஃபங்ஷன் வேலைகள்ல என்னால வர முடியல. அதனாலதான் நான் அவளுக்கு போன் பண்ணினேன். நல்ல வேளை, நான் போன் பண்ணினது. லைன்ல அவளோட அலறல் சத்தம் கேட்டுத்தான் நாங்க இங்க ஓடி வந்தோம். போலீஸ் கம்ப்ளெயிண்ட் குடுத்திருந்தா உன் கையில விலங்கு மாட்டி ஊர் அறிய இழுத்துக்கிட்டு போயிருப்பாங்க. எங்க அர்ச்சனா நல்ல பொண்ணு. அதனாலதான் உன்னை இந்த அளவுக்கு விட்டு வச்சிருக்கா. இதே ப்ரவீன் எங்க வீட்லதான் ஒரு வாரமா தங்கி இருக்கான். என் கணவர் வாசுதான் அவனைத் தங்க வச்சார். என் கணவர் எங்க நட்புக்கு மரியாதை குடுக்கறவர். என்னைப் புரிஞ்சுக்கிட்டவர். என் மேல நம்பிக்கை வச்சிருக்கறவர். களங்கம் இல்லாத மனசு அவருக்கு. களங்கமே உருவானவன் நீ... அர்ச்சனாவுக்கு புருஷனா இருக்கற தகுதி உனக்கு இல்ல... ச்சீ... நீயெல்லாம் ஒரு மனுஷனா....?" கேட்டுவிட்டு மடமடவென்று வாசலை நோக்கி நடந்து அர்ச்சனாவை அணைத்தபடி அழைத்துச் சென்றாள்.

38

றுநாள் விடியற்காலை. சுகந்தியும், வாசுவும் அமெரிக்கா செல்வதாக ஏற்பாடாகி இருந்தது. ஆறு மாதங்களுக்கு முன்பே போட்ட திட்டம்.

அர்ச்சனா இக்கட்டான நிலையில் இருந்தபடியால் அவளுக்கு உதவி செய்ய ஓடி வந்திருந்தனர் வாசுவும், சுகந்தியும். அவர்களின் வெளிநாட்டுத் திட்டம் அர்ச்சனா அறிந்த ஒன்று.

"சுகந்தி, நீ நாளைக்கு கிளம்பணும். இன்னிக்கு உனக்கு நிறைய வேலை இருக்கும்...."

"அதெல்லாம் நான் பார்த்துக்கறேன். நீ நல்லா ரெஸ்ட் எடு. போ... போய் படுத்துக்க. எனக்குக் கொஞ்சம் வெளில வேலை இருக்கு. ப்ரவீன் உனக்குத் துணையா இருப்பான். அது சரி, உங்க அப்பாகிட்ட எதுவும் பேசலியே? அவருக்கு இங்க நடந்ததைப் பத்தி சொல்ல வேண்டாமா?"

"இப்ப வேண்டாம் சுகந்தி. இன்னும் ரெண்டு நாளாகட்டும். அதிர்ச்சி அடைஞ்சுடாதபடி ஏதாவது பொய் சொல்லி நான் அங்க போய் கொஞ்ச நாள் தங்கணும். அதுக்கப்புறம் சந்தர்ப்பம் பார்த்து மெதுவா, பக்குவமா எடுத்துச் சொல்லணும். அவசரப்பட்டுடக் கூடாது..."

அவள் அவசரப்படவில்லை. ஆனால் அவளது புருஷன் தியாகு அவசரம் மட்டுமல்ல, ஆத்திரமும் பட்டு கனகசபையிடம் பேசிவிடக் கூடும் என்பதை அப்போது அவள் உணரவில்லை.

சுகந்தி வெளியே கிளம்பினாள். அவளது வேலைகளை முடித்தாள். ப்ரவீன், அர்ச்சனாவிற்கு துணையாக இருந்து அவளுக்கு பழச்சாறு, ஹார்லிக்ஸ் என்று அவ்வப்போது கொடுத்துக் கொண்டிருந்தான்.

மறுநாள் விடியற்காலை.

சுகந்தியும், அவளது கணவன் வாசுவும் விமான நிலையத்திற்கு புறப்பட்டனர். உறவினர்கள் ஓரிருவர் வழி அனுப்ப வந்திருந்தனர்.

அர்ச்சனாவின் அருகே வந்தாள் சுகந்தி.

"இப்படி ஒரு நிலைமையில உன்னை விட்டுட்டுப் போக வேண்டியிருக்கு அர்ச்சு. உங்கப்பா வீட்டுக்குப் போற வரைக்கும் நீ இங்கேயே இருந்துக்க. ப்ரவீன் உன்னை நல்லா கவனிச்சுப்பான். உனக்கு உன்னோட அப்பா வீட்டுக்குப் போணும்னு தோணும்போது ப்ரவீனையும் துணைக்கு அழைச்சுட்டுப் போ. டேக் கேர்." கண்கள் கலங்க விடை பெற்று புறப்பட்டாள் சுகந்தி.

39

சுகந்தி புறப்பட்டுச் சென்ற அன்று மாலை நேரம். அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது. நம்பரைப் பார்த்தாள். 'அப்பா!’ எடுத்துப் பேசினாள்.

"அர்ச்சனா.... நீ... நீ.... ப்ரவீன் கூடயாம்மா இருக்க?"

கனகசபை எடுத்த எடுப்பில் இவ்விதம் கேட்டதும் அர்ச்சனா, பதில் பேசுவதறியாது திகைத்தாள். யோசித்தாள். இதற்குள் மறுபடியும் கனகசபையின் குரல்!

"என்னம்மா அர்ச்சனா? நான் கேக்கறேன்ல... பிரவீன் கூடயாம்மா இருக்க?"

"அ.... அ... ஆ...ஆமாம்ப்பா...."

"ஐய்யோ கடவுளே... ஆ...." கனகசபை அலறுவது கேட்டது. அதன் பின் எந்த ஒலியும் இல்லை.

மறுபடியும் அர்ச்சனாவின் மொபைல் ஒலித்தது. வேகமாக எடுத்தாள் அர்ச்சனா. யாரோ உறவினர் பேசினார். அவர் சொன்னதைக் கேட்டு அதிர்ந்தாள் அர்ச்சனா.

"ஐய்யோ அப்பா....." அவளது அலறலைக் கேட்டு சமையலறையில் 'டீ’ போட்டுக் கொண்டிருந்த ப்ரவீன் ஓடி வந்தான்.

"ஐய்யோ... அப்பா...."

"என்ன அர்ச்... அப்பாவுக்கு என்ன?"

"ஐய்யோ ப்ரவீன்... என் அப்பா... என்னோட உயிருக்கு உயிரான அப்பா என்னை விட்டுட்டுப் போயிட்டாராம் ப்ரவீன்...." கதறி அழுதாள் அர்ச்சனா.

40

ர்ச்சனா பிறந்து வளர்ந்த ஊர். கனகசபையின் காரியங்கள் யாவும் முடிந்தது. முக்கியமான உறவினர்களும் ஊர் பெரியவர்கள் மட்டும் கூடி இருந்தனர். அர்ச்சனாவின் மற்ற நண்பர்கள் வந்து துக்கம் விசாரித்துவிட்டு, தகனக்கிரியை, சம்பிரதாயங்கள் முழுவதும் நிறைவேறும் வரை கூட இருந்துவிட்டு கிளம்பி இருந்தனர்.

ப்ரவீன் மட்டும் இருந்தான்.

சமையல்கார ஜெயம்மா, அர்ச்சனாவுடன் அவளருகே நின்றிருந்தாள்.

ஊர் பெரியவர் உலகநாதன் பேச ஆரம்பித்தார்.

"அம்மா அர்ச்சனா... நீ சந்தோஷமா வாழணும்னு உங்க அப்பா உனக்கு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் குடுத்தார். நாங்க அவரைப் பார்க்கும் போதெல்லாம், 'உங்க மக அர்ச்சனா நல்லா இருக்காளா’ன்னு கேக்கறதுண்டு. நாங்க கேக்கறப்பல்லாம் 'எங்க மக ரொம்ப சந்தோஷமா, சௌகர்யமா இருக்கா. மாப்பிள்ளை அவகிட்ட பிரியமா இருக்காராம்’ இப்பிடித்தான் சொல்வாரு. ஆனா... திடீர்னு உன் புருஷன், உங்க அப்பாவுக்கு போன் பண்ணி 'உங்க மக அர்ச்சனா, அவளோட சிநேகிதன் ப்ரவீன் கூட ஓடிப் போயிட்டாள்’ன்னு சொல்லி இருக்காரு.

ஜெயம்மா குறுக்கிட்டாள்.

"அப்பவும் அவர் அதை நம்பலைங்க. உடனே அர்ச்சனாவுக்கு போன் போட்டு 'நீ ப்ரவீன் கூடயாம்மா இருக்க’ன்னு ஒத்தை கேள்வி கேட்டாரு.


இந்தப் பொண்ணும் எதுவும் புரியாம, எதையும் விளக்காம 'ஆமா’ன்னு ஒத்தை வார்த்தையில சொல்லிடுச்சு போலிருக்கு. அதைக் கேட்ட அடுத்த நிமிஷம் மேல் கொண்டு எதுவும் பேச முடியாம நெஞ்சு வலி வந்து துடியா துடிச்சாரு. அஞ்சு நிமிஷம் கூட ஆகலை. அவரோட உயிரு ஒடுங்கிடுச்சு. மருமகப்பிள்ளை சொன்னப்ப கூட தன் மக அப்பிடியெல்லாம் போயிருக்க மாட்டாள்ன்னு உறுதியா நம்பினாரு. மொட்டை கட்டையா அவர் கேட்ட கேள்வியும், இந்தப் பொண்ணு சொன்ன பதிலும் அவரோட உயிரை காவு வாங்கிடுச்சு..." ஜெயம்மா அழுதாள்.

அர்ச்சனா திடமான குரலில் பேச ஆரம்பித்தாள். திருமணமான நாளிலிருந்து தன் வாழ்க்கை எப்படி இருந்தது..... தியாகுவின் சுயரூபம் என்ன.... அப்பாவின் அகால மரணத்திற்குத் தியாகு எப்படி காரணமானான்.... என்பதை ஒன்று விடாமல் எடுத்துக் கூறினாள். விளக்கினாள்.

"எந்தக் காரணத்துக்காக என்னோட ஃப்ரெண்ட்ஸைத் தவிர, அப்பா உட்பட எல்லார்கிட்டயும் என் கணவரைப் பத்தியும், என்னோட வாழ்க்கையைப் பத்தியும் மூடி வச்சேனோ அந்த என்னோட அப்பாவோட உயிரே போனப்புறம் மூடி மறைக்கறதுக்கு இனி எதுவுமே இல்ல. தாலி கட்டின கணவனோட அன்பும் இல்லாம, ஆதரவும் இல்லாம நான் அநாதரவா தவிச்சப்ப என்னோட நண்பர்கள்தான் எனக்கு ஆதரவா இருந்தாங்க. மழை நாள்ல்ல எனக்கு குடையா இருந்து பாதுகாத்தவங்க அவங்கதான். இதோ நிக்கறானே இந்த ப்ரவீன்... இவனை 'வீட்டை விட்டு வெளியே போ’ன்னு சொல்லி அவமானப்படுத்தினாரு என் புருஷன். அதுக்கப்புறமும் கூட, எனக்காக தன்னோட வேலையை எல்லாம் போட்டுட்டு சென்னையிலேயே இருந்து என் புருஷன் ஏன் இப்படியெல்லாம் நடந்துக்கறார்ங்கற காரணத்தை கண்டுபிடிச்சான். எதுக்காக?  அந்தக் காரணத்தைக் கண்டு பிடிச்சு அதன் மூலமா அவரைத் திருத்தி என்னோட வாழ்க்கைக்கு ஒரு திருப்புமுனை அமைஞ்சுடாதாங்கற ஆதங்கத்துலதான். அந்த ஆதங்கமும் அக்கறையும் எதுக்காக? நட்புக்காக. எனக்காக நிறைய லீவு போட்டதுனால அவனோட வேலையும் போச்சு. என் மேல பழி சுமத்தி 'இவன் கூட ஓடிப் போயிட்டா’ன்னு சொன்ன என் புருஷன் கூட இனிமேல் நான் வாழத் தயாரா இல்லை.

“மானம்தான் உயிரை விட பெரிசுன்னு வாழ்ந்தவர் எங்க அப்பா. தன் மகளான என்னையும் அப்பிடித்தான் வளர்த்தாரு. அவரோட உயிரைப் பிடுங்கி எறிஞ்சுட்டாரு என் புருஷன்.

“பிரவீன் கூட பேசக் கூடா’துன்னு கட்டளை போட்டப்ப நான் அவரை எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசலை. அவர் சொன்னபடிதான் நடந்துக்கிட்டேன்.

“எல்லாப் பொண்ணுங்களுமே தன்னோட புருஷன் தன்னை மட்டுமே விரும்பற, தன்னை மட்டுமே தொட்டு உறவாடறவனாத்தான் இருக்கணும்னு ஆசைப்படுவாங்க. ஆனா... ஆண்கள் யாருமே ராமனா வாழறதில்லை. அப்பிடி வாழ்ந்தா... அது ரொம்ப அபூர்வம். அவதார புருஷன் ராமனா வாழ முடியாட்டாலும் சாதாரண மனுஷனா, என்கிட்ட பிரியமா பழகி இருந்தார்னா கூட அவரை மன்னிச்சிருப்பேன். திருத்தற முயற்சியைத் தொடர்ந்திருப்பேன்... என் மேல உயிரையே வச்சிருந்த எங்கப்பாவோட உயிர் மூச்சு நின்னு போனதும் அவராலதான். அன்பே இல்லாத ஒரு மனிதர் கூட மனைவியா எப்படி வாழ முடியும்? நான் வாழ்ந்தேன். மனசு மாறுவார்ன்னு காத்திருந்தேன். இலவு காத்த கிளியோட கதையாயிடுச்சு என்னோட நிலை..."

"புருஷன் கூட வாழப் பிடிக்காத நீ... இனிமேல் என்னம்மா செய்யப் போற? உன்னோட எதிர்காலம்?" அவள் மீது உண்மையான அக்கறை கொண்ட உறவினர் கேட்டார்.

"ஜவுளி பிஸினஸ் பத்தி எனக்கு நல்லா தெரியும். என் வாழ்க்கை தோல்வியான அதே சென்னையில ஒரு டெக்ஸ்டைல் ஷோரூம் ஆரம்பிச்சு அதை வெற்றிகரமா நடத்தி வாழ்ந்து காட்டுவேன்."

"சரிம்மா. உன் மனசுக்கு என்ன தோணுதோ அதன்படி செய்மா."

"என்னோட இன்னொரு ஃப்ரெண்டு சுகந்தி,  எனக்காக என்னைக் காப்பாத்த ஓடோடி வந்தா. அவளோட கணவர் தங்கமானவர். தன் மனைவியின் சிநேகிதியான எனக்கு உதவி செஞ்சுருக்கார். தாய்மைக்கு அடுத்தபடியான சக்தியும், வலிமையும் உள்ளது நட்புதான். ஆண், பெண் பேதமெல்லாம் நட்புக்குக் கிடையாது. என்னால தன் வேலையை இழந்துட்ட இந்த ப்ரவீன் கூட சேர்ந்துதான் ஜவுளி பிஸினஸைப் பண்ணப் போறேன். எங்க அண்ணன் சரவணனால திடீர்னு கிளம்பி வர முடியலை...  போன்ல எல்லாமே பேசிட்டேன். என்னோட முடிவுக்கு அண்ணன் பச்சைக் கொடி காட்டிட்டாரு. நீங்கள்லாம் இந்த துக்க நேரத்துல என் கூட இருந்து ஆறுதல் சொன்னதுக்கு ரொம்ப நன்றி.  'கண்ணால் பார்த்ததும் பொய். காதால் கேட்டதும் பொய். தீர விசாரிப்பதுதான் நிஜம்’னு சொல்லுவாங்க. எங்கப்பாவும் விசாரிச்சாரு. ஆனா தீர விசாரிக்காம ஒரே ஒரு கேள்வியில விசாரிச்சு என்னோட ஒற்றை சொல் பதில்ல என்னைத் தப்பா புரிஞ்சுக்கிட்டு உயிரையே விட்டுட்டாரு.

“தன்னைத் தவிர வேற யார் கூடயும் பேசக் கூடாது. வேற யாரும் என்னைப் பார்த்துடக் கூடாது’ன்னு வக்கிரத்தனமா என்னை துன்புறுத்தின என் புருஷன் கண் முன்னாடி ஒரு நல்லவனை மறு கல்யாணம் பண்ணிக்குவேன். அந்த ஆள் கண் முன்னாடியே சந்தோஷமா வாழ்ந்து காட்டுவேன். என்னைப் புரிஞ்சுக்கிட்ட ஒரு நல்லவர் எனக்குக் கிடைப்பார். எனக்கு அந்த நம்பிக்கை இருக்கு." அனைவரையும் கைகூப்பி வணங்கினாள் அர்ச்சனா.

41

காலம் ஓடியது. 'அர்ச்சனா டெக்ஸ்டைல்ஸ்’ சென்னையின் பிரபல ஜவுளிக் கடைகளுள் ஒன்றாக மிக விரைவில் முன்னுக்கு வந்தது. அர்ச்சனாவிற்கு பக்க பலமாக அத்தனை உதவிகளையும் செய்து வந்தான் ப்ரவீன். அவனையும், ஒரு பார்ட்னராகப் போட்டு ரெடிமேட் கடை, டெய்லரிங் செக்ஷன் என்று பல கிளைகள் துவக்கி வெற்றிகரமாக நடத்தினாள் அர்ச்சனா.

வெற்றிகரமான பெண்மணிகள் வரிசையில் இடம் பெற்ற அர்ச்சனாவின் புகைப்படம், பேட்டியாவும் பிரபல வார இதழ்களிலும், தினசரி பத்திரிகைகளிலும் வெளிவந்தன. அவற்றையெல்லாம் பார்த்து தியாகு உள்ளம் எரிந்திருப்பான் என்பதை சொல்ல வேண்டியதில்லை. ஒன்றை இழந்தால்தான் வேறு ஒன்றை அடைய முடியும் என்ற கூற்று அர்ச்சனாவின் வாழ்க்கையில் உண்மையாகியது. ஆனால் அவள் இழந்தது ஒன்று அல்ல. இரண்டு. அப்பாவின் உயிர் மற்றும் அவளது திருமண வாழ்க்கை. சிநேகிதியைப் போல, நண்பனைப் போல, நட்பைப் போல, மழைநாளில் குடையாக ஒரு துணைவனும் கிடைப்பான் என்ற நம்பிக்கையில் அர்ச்சனா காத்திருக்கிறாள்.

தான் நினைப்பதை வாய்மொழியாக, தைர்யமாக வெளியிடும் சுதந்திரத்தை அடைந்துள்ளாள். ஆகவே அவளது மனக்குரல் ஒலிப்பதில்லை. அதனால் அவளது நெஞ்சம் வலிப்பதில்லை. சுபமான வாழ்விற்கு சுகமான காத்திருத்தலில் அர்ச்சனாவின் நெஞ்சம் நிம்மதியாக இருந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.