Logo

பாத்தும்மாவின் ஆடு

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5970
paathummaavin aadu

சுராவின் முன்னுரை

வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) மலையாளத்தில் எழுதிய புகழ் பெற்ற நாவலான ‘பாத்தும்மயுடெ ஆடு’வை ‘பாத்தும்மாவின் ஆடு’ (Pathummavin Aadu) என்ற பெயரில் மொழி பெயர்த்திருக்கிறேன்.

பஷீரின் சகோதரி பாத்தும்மா செல்லமாக ஒரு ஆட்டை வளர்க்கிறார். அந்த ஆடு வீடு முழுவதும் துள்ளித் திரிகிறது. அதற்கும் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கும் இடையே உள்ள ஆழமான அன்பை மையமாக வைத்து எழுதப்பட்டதே இக்கதை.

இந்த புதினத்தை இணையதளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (www.lekhabooks.com)  நிறுவனத்திற்கு நன்றி.

அன்புடன்,

சுரா(Sura)


பாத்தும்மாவின் ஆடு, அதாவது- பெண்களின் அறிவு என்ற நகைச்சுவையான கதையைத்தான் நான் இப்போது கூறப் போகிறேன்.

பல நாட்கள் அலைந்து திரிந்த தனிமையான வாழ்க்கைக்குப் பிறகு மூக்கு நுனியில் கோபத்தை வைத்துக் கொண்டு நான் வைக்கம் நகரத்திற்கு அருகில் தலயோலப்பறம்பில் இருக்கும் என்னுடைய வீட்டைத் தேடி வந்தேன். ஸ்டைலான வரவேற்பு! எனக்கு என்னவென்று கூற முடியாத கோபம் வந்தது. நான் உட்கார்ந்து எனக்குள் முணுமுணுத்தேன். என் வீடு... நான் யாரைக் குற்றம் சொல்வது?

பத்து பதினைந்து வருடங்களாகவே என்னுடைய வீட்டில் நான் வசிக்கவில்லை. எப்போதாவது சில இரவுகள் அந்த வீட்டில் இருந்த ஞாபகம் மட்டுமே இருக்கிறது. நான் தங்குவதற்கென்று மட்டுமே வீட்டிற்கு எதிராகப் பொதுச் சாலையின் ஓரத்தில் ஓடு வேய்ந்த ஒரு சிறிய கட்டிடம் இருந்தது. அது கட்டப்படும் பொழுது நான் கல்லும் மண்ணும் சுமந்திருக்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு உழைத்திருக்கிறேன். மனத்திருப்திக்காவும், அழகுக்காவும் பலவற்றையும் செய்திருக்கிறேன். உயரமாக கற்சுவர் கட்டப்பட்ட வெள்ளை மணல் விரிக்கப்பட்டிருக்கும் முற்றத்தைச் சுற்றிலும் அழகான செடிகள் இருந்தன. முல்லையும் பிச்சியும் அடர்த்தியாகப் படர்ந்திருக்கும். முற்றத்தின் மூலைகளில் கொய்யாச் செடி வளர்ந்திருந்தது. அங்கு இரண்டு குளங்கள் இருந்தன. ஒன்று குடிப்பதற்கு; இன்னொன்று விளையாடுவதற்கு. எனக்கு மட்டுமே இருக்கும் விசேஷமான கழிப்பறை. நிலம் முழுவதும் தென்னை மரங்களும் வாழை மரங்களும். அதோடு பலவிதப்பட்ட மரங்களையும் நான் வளர்த்தேன். அந்தத் தோப்பில் நல்ல மாமரங்களும் இருந்தன. சாலையின் ஓரத்திலும் எல்லையிலும் அழகான செடிகள். நிலத்தைச் சுற்றி ஆறடி உயரத்தில் ஓலையும் முள்ளும் கொண்ட வேலி. முன்னால் தாழ்ப்பாள் போட்டு எப்போதும் பூட்டிக் கிடக்கும் கேட். பாதையில் போவோர் அழகான செடிகளையும் மலர்களையும் அந்தக் கேட்டின் வழியே பார்க்க முடியும்.

நான் அந்தச் சிறு வீட்டில்தான் தனி மனிதனாக வாழ்ந்து கொண்டிருந்தேன். தேநீரையும் பலகாரத்தையும் சாப்பாட்டையும் என் உம்மா- அதாவது என் தாய் கேட்டின் மேற்பகுதி வழியாக உள்ளே தருவாள். நான் யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. வசதியாக உட்கார்ந்து எழுதுவேன். இல்லாவிட்டால் எதையாவது படித்துக் கொண்டிருப்பேன். இல்லாவிட்டால் செடிகளையும், மரங்களையும் தடவியவாறு அங்கு நடந்து கொண்டிருப்பேன். அப்படி இருக்கும் பொழுதுதான் நான் ஊர் சுற்றக் கிளம்பினேன். வர்க்கலயில் சிவகிரி, சென்னை, எர்ணாகுளம், கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் மூன்று வருடங்கள் வசித்தேன். பிறகு உடல் நலமில்லாமல் அமைதி தேடி திரும்பி வந்தால், நான் இருந்த சிறு கட்டிடத்தை எனக்கு அடுத்த இளையவனான அப்துல்காதர் வாடகைக்கு விட்டிருக்கிறான். எக்ஸைஸ் இன்ஸ்பெக்டர் பெருமதிப்பிற்குரிய ராமன்குட்டி சமையல்காரனுடன் அங்கு மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். அவருக்கு வீடு மிகவும் பிடித்துவிட்டது. எனினும், வீட்டைக் காலி பண்ணி கொடுக்கத் தயாராக இருந்தார். ஆனால், அந்தப் பெரிய கிராமத்தில் வேறு வீடு கிடைப்பதற்கு வழியே இல்லை. என்ன செய்வது?

ம்ஹும்... எது எப்படியோ நான் அந்த வீட்டில் வசிக்க ஆரம்பித்தேன். நிசப்தம், மன அமைதி, பிறகு முழுமையான ஓய்வு- இவைதான் எனக்கு வேண்டும். உடல் ஆரோக்கியத்தை மீண்டும் பெற வேண்டும். மனதில் கவலை ஏற்படுத்தக்கூடிய தொந்தரவுகளோ சத்தங்களோ எதுவும் உண்டாக்கக் கூடாது. ஆனால் நான் தொந்தரவுகள், சத்தங்கள், ஆரவாரங்கள் ஆகியவற்றுக்கு நடுவில் மாட்டிக் கொண்டேன். அதுவும் சரியான மத்தியத்தில்!

ஓலை வேய்ந்த ஒரு சிறிய, இரண்டு அறைகளையும் ஒரு சமையலறையையும் இரண்டு வராந்தாக்களையும் கொண்ட கட்டிடம்தான் என் வீடு. அதில் யாரெல்லாம் வசித்தார்கள் தெரியுமா?

என் உம்மா, எனக்கு இளையவனான அப்துல்காதர், அவனுடைய மனைவி குஞ்ஞானும்மா, அவர்களின் செல்லக் குழந்தைகளான பாத்துக்குட்டி, ஆரீஃபா, ஸுபைதா, அப்துல்காதருக்கு இளையவனான முஹம்மது ஹனீஃபா, அவனுடைய மனைவி அய்ஸோம்மா அவர்களின் செல்லக்குழந்தைகளான ஹபீப் முஹம்மது, லைலா, முஹம்மது ரஷீத், ஹனீஃபாவிற்கு இளையவளான ஆனும்மா, அவளுடைய கணவன் சுலைமான், அவர்களின் செல்லக் குழந்தையான ஸையது முஹம்மது, பிறகு எல்லாருக்கும் இளைய தம்பியான அபுபக்கர் என்னும் அபு.

இத்தனை பேரும் அந்த வீட்டில் இருந்தார்கள். இவர்கள் இல்லாமல் வேறு சிலரும்... எங்கிருந்தோ வந்து குடியேறி உம்மாவின் அன்பைப் பெற்று வசித்துக் கொண்டிருந்த சில பூனைகள், அவர்களுக்குப் பயந்து பரண்களில் எந்நேரமும் ஓடிக் கொண்டிருக்கும் எலிகள், வீட்டிற்கு வெளியே உட்கார்ந்து கரைந்துகொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணும் காகங்கள்... இவை எல்லாவற்றுக்கும் மேலாக என் உம்மாவிற்குச் சொந்தமானவையும், வீட்டை ஆட்சி செய்து கொண்டிருப்பவையுமான சுமார் நூறு கோழிகள், எண்ணிக்கையில் அடங்காத அவற்றின் குஞ்சுகள், அவற்றைப் பிடித்துக் கொண்டு போய் தின்று வாழும் பருந்துகள் மரங்களில்...

வீட்டில் எப்போதும் ஆரவாரம் இருந்துகொண்டே இருக்கும். பெரிய அளவில் சத்தங்கள் கேட்டுக்கொண்டே இருக்கும். ரஷீதும் ஸுபைதாவும் இன்னும் நடக்க ஆரம்பிக்கவில்லை. பால் குடிக்காத நேரங்களில் அவர்கள் சிறிதும் நிறுத்தாமல் அழுவார்கள். நடக்க ஆரம்பித்திருக்கும் ஆரீஃபாவும் ஒரு அழுகைப் பிரியைதான். அவளை விட சற்று வயது கூடிய லைலாவும் ஸையது முஹம்மதுவும் கூட அருமையாக அழக்கூடியவர்கள்தான். அபியும் பாத்துக்குட்டியும் (ம்ஹா... ஹபீப் முஹம்மது என்ற பெயர் பள்ளிக்கூடத்தில் மட்டும் தான். வீட்டில் அழைப்பது... அபி. தன்னைத் தானே அவன் கூறிக் கொள்ளும் பெயர் ‘பி’. அவனும் பாத்துக்குட்டியும் முதல் வகுப்பில் படிக்கிறார்கள்) இரண்டு பேரும் மிகவும் அருமையாக அழுவார்கள். பிடிவாதக்காரர்களும் கூட. குழந்தைகள், பூனைகள், கோழிகள், பெண்கள், பருந்துகள், எலிகள்,காகங்கள்- எல்லாரும் சேர்ந்து அருமையான ஒரு கச்சேரியே படைப்பார்கள்.

இப்போது கூறிய ஆர்ப்பாட்டத்தை நான் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது வந்து நிற்கிறது ஒரு ஆடு!

பெண் ஆடுதான். தவிட்டு நிறம். நல்ல சுறுசுறுப்புடன் இருக்கும். அதிகாலையில் என்னுடைய வீட்டிற்கு வந்து சமையலறைக்குள் நுழைந்து காலை உணவாக எதையாவது சாப்பிடும். பிறகு வீட்டிற்குள் நடந்து தூங்கிக் கொண்டிருக்கும் குழந்தைகளின் உடம்புகளை மிதித்து அவர்களைத் தூக்கத்திலிருந்து எழுப்பிவிடும். முற்றத்திற்கு நடந்து இரவில் விழுந்து கிடக்கும் பலா இலைகளை வேக வேகமாகத் தின்ன ஆரம்பிக்கும்.

முற்றத்திற்கருகில் இருக்கும் அந்த பலா மரம் மிகவும் வயதான மரம். எனினும், அதில் பழங்கள் உண்டாகின்றன. எவ்வளவு ஆடுகளுக்கு வேண்டுமென்றாலும் அதில் இலைகள் இருக்கின்றன. ஆடு பலா இலைகளை வேகவேகமாகத் தின்றுவிட்டு முற்றத்தின் அருகில் இருக்கும் சாம்ப மரத்தடியைத் தேடிச் செல்லும்.


அங்கு விழுந்து கிடக்கும் சாம்பங்காய்களைத் தின்ன ஆரம்பிக்கும். பிறகு அது மேல் நோக்கிப் பார்க்கும். இளம் சிவப்பு நிறத்தில் பெரிய பனித்துளிகளைப் போல பச்சை இலைகளுக்கு மத்தியில் சாம்பங்காய்கள் தொங்கிக் கொண்டிருக்கும். என்ன செய்வது? ஆடு தன்னுடைய இரண்டு பின்னங்கால்களாலும் எழுந்து நின்று கொண்டு தாழ்வான கிளையில் இருக்கும் சாம்பங்காய்களைத் தின்ன முயற்சிக்கும். ஆனால், அது எட்டினால்தானே! இந்தச் சாம்ப மரத்தின் தாழ்வான கிளைகளை உயரத் தூக்கிக் கட்டிவிட்டது யார்?

இதை நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது பழுத்த ஒரு பலா இலை கீழே விழும். ஆடு அடுத்த நிமிடம் முற்றத்தை நோக்கி ஓடிச்சென்று அதை சுவைத்துத் தின்னும். அப்போது உம்மாவோ, குஞ்ஞானும்மாவோ, அய்ஸோம்மாவோ, ஆனும்மாவோ வாசலைப் பெருக்குவதற்காக கையில் விளக்குமாறுடன் வருவார்கள். ஆடு வீட்டிற்குள் நுழைந்து அங்கு உலாத்த ஆரம்பிக்கும்.

அது யாருடைய ஆடு? எந்த அளவிற்கு படு சுதந்திரமாக அது உலாவிக் கொண்டிருக்கிறது! எங்கெல்லாம் அது போகிறது. என்னவெல்லாம் செய்கிறது! எனினும், யாரும் எதுவும் சொல்வதில்லை. கேட்போரும் கேள்வியுமில்லாத ஒரு வீடு!

சாய்வு நாற்காலியில் நான் முன்னாலிருக்கும் வராந்தாவில் உட்கார்ந்திருக்கும் பொழுது அறையில் யாரோ தாளைக் கிழிக்கும் சத்தம் என் காதில் விழுந்தது. நான் சிறிய கதவு வழியாக உள்ளே பார்த்தேன். என்ன ஆச்சரியம்! அந்த அடு என்னுடைய படுக்கை மீது ஏறி நின்று கொண்டு, புத்தகத்தைத் தின்று கொண்டிருக்கிறது.

பெட்டிக்கு வெளியே இளம் பருவத்துத் தோழி, சப்தங்கள் ஆகிய இரண்டு புத்தகங்களின் புதிய பதிப்பு தலா ஒரு பிரதி இருந்தது. அதில் ‘இளம் பருவத்துத் தோழி’யைத் தான் ஆடு சாப்பிட்டுக் கொண்டிருந்தது. முன்னங்கால்களால் மிதித்து இரண்டு மூன்று பக்கங்களை நாவால் நக்கி வாய்க்குள் விட்டு ஸ்டைலாக அது சுவைத்துத் தின்று கொண்டிருந்தது. தின்னட்டும்! நல்ல ஆடுதான். ‘சப்தங்கள்’ இருக்கிறதே! பயங்கரமான விமர்சன பீரங்கி குண்டுகளை ஏற்ற சிறு புத்தகம் அது. இருந்தாலும் விஷயம் பயங்கரமானதாயிற்றே! அந்தப் புத்தகத்தைத் தின்பதற்கான தைரியம் அந்த ஆட்டிற்கு இருக்குமா?

எந்தவித தயக்கமும் இல்லை. ‘இளம் பருவத்துத் தோழி’ முழுமையாக உள்ளே போய் முடிந்தது. அது முடிந்தவுடன் ‘சப்தங்கள்’ புத்தகத்தைத் தின்ன ஆரம்பித்தது. இரண்டே நிமிடங்களில் முழு புத்தகத்தையும் தின்று முடித்தது. தொடர்ந்து ஆடு என்னுடைய போர்வையைத் தின்ன ஆரம்பித்தது. அவ்வளவுதான். நான் சாய்வு நாற்காலியை விட்டு எழுந்து உள்ளே ஓடினேன்.

“ஏய் அழகியே! தயவு செய்து அந்தப் போர்வையைத் தின்னாதே’ அதோட விலை நூறு ரூபாய். அதே மாதிரி இன்னொரு போர்வை என்கிட்ட இல்ல. புத்தகங்கள் என்கிட்ட வேறயும் இருக்கு. அந்தப் புத்தகங்களை வர வச்சு உனக்கு இலவசமா தர்றேன்.”

பிறகு ஆட்டை வெளியே விரட்டிவிட்டேன். அது பலா மரத்தடியைத் தேடி ஓடியது. அங்கே இரண்டு மூன்று இலைகள் விழுந்து கிடந்தன. அந்தப் பெண் ஆடு அந்த இலைகளைத் தின்ன ஆரம்பித்தது.

நான் உம்மாவை அழைத்து கேட்டேன்: “இந்த ஆடு யாரோடது உம்மா?”

உம்மா சொன்னாள்:

“நம்ம பாத்தும்மாவோட ஆடு.”

“அதனாலதான் இவ்வளவு சுதந்திரமா அது திரியுதா?”

பாத்தும்மாவின் ஆடு... விஷயம் தெளிவாகப் புரிந்தது. பொழுது விடிவதற்கு முன்பே, பாத்தும்மா அதை அவிழ்த்துவிட்டு விடுவாள்.

“அவங்க வாசலைப் பெருக்கி பலா இலைகள் முழுவதையும் எடுக்குறதுக்கு முன்னாடி போய் வயிறு நிறைய அதைச் சாப்பிடு என் தங்கமான ஆடே!” என்று நான் கூறுவேன். ஆடு நேராக பொது சாலையைக் கடந்து வீட்டை நோக்கி வரும் நல்ல தமாஷ்தான்!

அந்த ஆட்டின் சொந்தக்காரி பாத்தும்மா என்னுடைய சகோதரிதான். அப்துல்காதருக்கு இளையவள். அவள் இருப்பது ஒன்றரை ஃபர்லாங்கிற்கு அப்பால்- சந்தைக்குப் பின்னால் தன்னுடைய கணவன் கொச்சுண்ணிக்கு அதிகாலையிலேயே தேநீரும் பலகாரமும் தயார் பண்ணிக் கொடுத்து அவனை வியாபாரத்திற்கு அனுப்பி வைப்பாள். அவன் என்னென்னவோ வியாபாரங்களையெல்லாம் செய்து பார்த்தாகிவிட்டது. இப்போது கயிறு வியாபாரத்தில் ஈடுபட்டிருக்கிறான். சாயங்காலம்தான் வீட்டிற்குத் திரும்பி வருவான்.

கொச்சுண்ணி போன பிறகு, எல்லா பாத்திரங்களையும் கழுவி கவிழ்த்து வைத்துவிட்டு, தன்னுடைய சின்னஞ்சிறு மகள் கதீஜாவுடன் பாத்தும்மா நேராக வீட்டிற்கு வருவாள். வருவதே ஒரு ஸ்டைல்தான். அவளுக்குப் பின்னால் வாலைப் போல கதீஜா கனவில் நடப்பதைப் போலத்தான் பாத்தும்மா நடப்பாள். வீட்டிற்கு வந்தவுடன், அவள் நடவடிக்கையே வேறு மாதிரி இருக்கும். பாத்தும்மாவின் குரல் பெரிதாக ஒலிக்க ஆரம்பிக்கும். அது தேவைதான். அவள்தான் உம்மாவின் மூத்த மகள். அதனால் வீட்டில் அதிகாரமும் சற்று அதிகமாக இருக்க வேண்டும் அல்லவா?

பாத்தும்மா வீட்டிற்குள் வந்தவுடன், நான் அனைத்து விஷயங்களையும் பார்த்தேன். பாத்தும்மாவின் ஆடு இருக்கிறது. உம்மா இருக்கிறாள். தங்கை இருக்கிறாள். இரண்டு நாத்தனார்களும் இருக்கிறார்கள். என்ன நடக்கும்?

பாத்தும்மா வீட்டிற்குள் சென்று தங்கையிடமும் உம்மாவிடமும் நாத்தனார்களிடமும் சற்று அதிகாரம் தொனிக்கக் கேட்டாள்: “என் ஆட்டுக்கு யாராவது கஞ்சி கொடுத்தீங்களா?”

உம்மா சொன்னாள்: “நூறு வேலைகள் இருக்கு. உன் ஆடுதான் பெருசா?”

பாத்தும்மா தன் நாத்தனார்களைப் பார்த்து என்னவோ கேட்டாள். தங்கையைச் சிறிது திட்டினாள். “உன்னை எனக்கு நல்லா தெரியும்டி!”

அதற்கு என்ன பதில் சொல்வது என்று ஆனும்மாவிற்குத் தெரியாது. பாத்தும்மா உம்மாவிடம் தன்னுடைய வாழ்க்கை கஷ்டங்களைச் சொன்னாள். எவ்வளவோ கவலைகள். இருப்பினும், அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நீங்க யாரும் எதுவும் செய்ய வேண்டாம். என் ஆடு பிரசவம் ஆகட்டும். அப்போ பார்க்கலாம்.”

பாத்தும்மாவின் ஆடு பிரசவம் ஆகும்போது அவள் மற்றவர்களிடம் எப்படி நடந்துகொள்வாள்?

சாம்பமரம் காய்களால் புன்னகைத்துக் கொண்டிருந்தது. நான் அதைப் பார்த்தவாறு சாய்வு நாற்காலியில் மேற்குப் பக்கம் திரும்பி சாய்ந்திருந்த போது ‘ம்யாவ்... மியாவ்’ என்றொரு சகிக்க முடியாத சத்தத்துடன் அபயம் தேடி இங்கு வந்திருந்த பூனைகள் எனக்கு அருகில் வந்தன. அதில் ஒரு பூனை வேகமாகக் குதித்து என் மடியில் வந்து உட்கார்ந்து கொண்டது. அந்தப் பூனை சுத்தமான ஒன்றாகவும் தெரியவில்லை.


அது எதற்கு என்னுடைய மடிமீது ஏறி உட்கார வேண்டும்? எங்களுக்குள் முன்பின் அறிமுகமும் கிடையாது. எனினும், பார்த்தவுடன் என்மீது அதற்கு விருப்பம் உண்டாகி இருக்க வேண்டும். சரி, இருக்கட்டும்... அப்படியே சாலையைப் பார்த்தால் சில இளம்பெண்கள் அங்கு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவர்கள் உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்கள். எல்லாரும் என்னைப் பார்க்கிறார்கள். அழகிகள்! கூர்மையான பார்வை!

என்ன காரணம்?

பாத்தும்மாவின் ஆட்டின்மீது ஒரு காகம் வந்து உட்காருகிறது. காகத்தையும் சுமந்துகொண்டு ஆடு எனக்குப் பக்கத்தில் வருகிறது. “பார்த்த ஞாபகம் இல்லையே!” என்பது மாதிரி காகம் என்னைத் தலையைச் சாய்த்து பார்த்தது.

எனக்கு அருகில் சிமெண்ட் திண்ணையில் கோழிகள் எதையெதையோ கொத்திக் கொண்டிருந்தன. அந்தக் கூட்டத்தின் எல்லையில் காகம் பறந்து வந்து உட்கார்ந்தது.

‘இங்கே என்ன இதுக்கு அதிகாரம்?’ என்பது மாதிரி கோழிகள் பார்த்தன. காகம் எந்தவித கூச்சத்தையும் வெளிப்படுத்தவில்லை. ‘நான்தான் இந்த இடத்துக்கு உரிமையாளன்’ என்பதைப் போல் காகம் தரையைக் கொத்தியது.

அந்தக் கூட்டத்திற்கு ஒரு வெள்ளைப் பூனை வந்தது. கூட்டத்தில் இருந்த கறுப்புக் கோழிக்கு அதை அவ்வளவாகப் பிடிக்கவில்லை. அது பூனையின் தலையைப் பார்த்து ஒரு கொத்து கொத்தியது. பூனை சீறியது. தொடர்ந்து வாலைத் தூக்கிக் கொண்டு முடியைச் சிலிர்க்க வைத்துக்கொண்டு ‘எங்களுக்கு இந்த வீட்டுல உரிமை இருக்கா இல்லையான்னு இப்போ காட்டுறோம். தைரியமிருந்தா நீ இன்னொரு தடவை கொத்து, பார்ப்போம்’ என்பது மாதிரி பூனை நின்றது.

“உம்மா, இதைப் பார்த்தீங்களா?” என்று உரத்த குரலில் கேட்டவாறு அந்தக் கூட்டத்திற்கு என்னுடைய கடைசி தம்பி அபுபக்கர், துவைத்து தேய்த்த ஆடைகள், நன்கு வாரிவிடப்பட்ட தலைமுடி, ஓசை உண்டாக்கும் செருப்புகள் ஆகியவற்றுடன் வந்தான். அவன் வெறும் ‘அபு’வாக நடந்து திரிகிறான். அவன் இடது சாரி கொள்கைகளைப் பின்பற்றக் கூடியவன் என்றொரு பேச்சு இருக்கவே செய்கிறது. நாளொன்றுக்கு இரண்டு முறை அவன் ஆடைகளை மாற்றுவான். அவனிடம் அறுபது ஜோடி செருப்புகள் இருக்கின்றன என்று உம்மாவே கூறியிருக்கிறாள். அவன் பார்ப்பதற்கு நூலைப் போல இருப்பான். இருப்பினும், அவன் நடக்கும் விதத்தைப் பார்க்க வேண்டுமே! எப்போதும் மிடுக்காகவே அவன் காட்சியளிப்பான். நான் வந்தவுடன் அவனை வெளியே போக வைத்துவிட்டேன். வீட்டிலிருந்த எனக்குச் சொந்தமான அறையில் ஒரு அரசனைப் போல் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். அந்த அறை நானும் அப்துல்காதரும் இருந்து படிப்பதற்காக வாப்பா முன்பு வீட்டோடு சேர்த்து உண்டாக்கியது. அந்தச் சமயத்திலேயே அப்துல்காதரை அந்த அறையை விட்டு நான் வெளியேற்றிவிட்டேன். அதற்குப் பிறகு அவன் உம்மாவுடன் படுத்துக் கொள்வான்.

அப்துல் காதரின் தலை இப்போது நரைத்துவிட்டது. பார்ப்பதற்கு அவன் என்னுடைய அண்ணனைப் போல இருப்பான். அவன் என்னுடைய பழைய அறையைப் போலவே வேறொரு அறையை வீட்டின் இன்னொரு பகுதியில் அமைத்துக் கொண்டான். அதில்தான் ஹனீஃபாவும் அவனுடைய மனைவியும் பிள்ளைகளும் இரவில் படுப்பார்கள். அபுவை நான் அறையை விட்டு வெளியே போகச் சொன்னபோது தன்னுடைய பெட்டிகள், புத்தகங்கள், விளக்கு, படுக்கை எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு அவன் ஹனீஃபாவின் அறைக்குப் போய் விட்டான்.

அபுவின் சத்தத்தைக் கேட்டதும் பூனைகள் ஓடத் தொடங்கின. காகங்கள் பறந்தன. கோழிகள் வேகமாக அந்த இடத்தை விட்டு ஓடின. பாத்தும்மாவின் ஆடு அப்பாலிருந்த பெண்களைத் தேடி ஓடியது. குழந்தைகள் அழுவதை நிறுத்தினார்கள். பருந்துகள் எந்தவித ஓசையும் உண்டாக்காமல் எங்கோ ஒளிந்துகொண்டன. பெண்கள் பேசிக்கொண்டிருந்ததை நிறுத்தினார்கள். வீடு அமைதியாக இருந்தது.

அபுவின் குரல் உரத்துக் கேட்டது.

“பெரிய அண்ணன் இது எல்லாத்தையும் அனுமதிக்கிறாரே! பூனை, குழந்தைங்க, கோழி, காக்கா, ஆடு! ஆட்டுக்குத் தீனி போட்டு வளர்க்க ஒரு இடம்! எல்லாத்தையும் நான் சமையல் பண்ணுறேன். உம்மா, அந்தக் கம்பையும் கத்தியையும் எடுத்துட்டு வாங்க...”

பாத்தும்மா அடுத்த நிமிடம் கவலை தோய்ந்த குரலில் சொன்னாள்:

“கதீஜா, நம்ம ஆட்டைக் கூப்பிடு. நமக்கு இந்த வீட்டுல உரிமை எதுவும் இல்லைன்றது தெளிவா தெரிஞ்சு போச்சு... வா, போகலாம்... என் தங்க உம்மாவே, நாங்க போறோம்.”

அபு உரத்த குரலில் சொன்னான்: “எனக்கு இந்த வீட்ல ஏதாவது உரிமை இருக்கான்னு நானும் பார்க்றேன். இன்னைக்கு நான் ஹனீஃபா அண்ணனையும் அவரோட பொண்டாட்டியையும் பிள்ளைகளையும் வீட்டை விட்டு வெளியேற்றப் போறேன்.”

நானும் உரத்த குரலில் கத்தினேன். பெரிய கத்தல்தான். “டேய், இந்த வீட்ல உன் சத்தம் கேட்கக் கூடாது. உன் எலும்பை உடைச்சிடுவேன். நூலு மாதிரி இருந்துக்கிட்டு என்னவெல்லாம் பேசற! உன்னோட பெரிய தொந்தரவா போச்சு... டேய் அபு, அப்படின்னா ஹனீஃபாவும் மத்தவங்களும் எங்கே போய் இருப்பாங்க?”

அபு மெதுவான குரலில் சொன்னான்: “வேணும்னா ஹனீஃபா அண்ணன் எஸ்டேட்ல ஒரு வீடு கட்டி அங்கே இருக்கட்டும்.”

அது சரிதான். அப்படி ஒரு செய்தியும் உலவிக் கொண்டிருந்தது. வீடு கட்டும் விஷயத்தைப் பற்றி ஹனீஃபா என்னிடம் ஏற்கனவே சொல்லியிருந்தான். இரண்டு மைல் தூரத்தில் மலைச் சரிவில் சாலைக்கு அருகில் நல்ல நிலமாகப் பார்த்து எண்பது சென்ட் விலைக்கு வாங்கியிருந்தான். அதில் இப்போது நேந்திர வாழையும், மரவள்ளிக்கிழங்கும், மாமரங்களும் வைத்திருந்தான். அந்த இடத்தில் ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்பது அவனுடைய திட்டம். அதற்கு வேண்டிய உதவிகளை அவன் என்னிடமிருந்து எதிர்பார்த்துக் கொண்டிருந்தான். தன்னிடம் பணம் எதுவும் இல்லை என்ற விஷயத்தையும் அவன் என்னிடம் கூறியிருந்தான். அவன் அதிகாலை நான்கு மணிக்கு படுக்கையை விட்டு எழுந்து சென்று வாழைக்கும் மற்ற மரங்களுக்கும் நீர் பாய்ச்சி முடித்துவிட்டு ஒரு மணிக்கு வீட்டிற்கு வருவான். பிறகு அபியையும் லைலாவையும் அழைத்துக் கொண்டு ஆற்றிற்கு குளிக்கச் செல்வான். வாப்பாவும் பிள்ளைகளும் எப்போதும் மிக நெருக்கமாக இருப்பார்கள். அவர்களின் இடத்தில் வீடு கட்டும்போது என்னை அங்கு அழைத்துப் போவதாக லைலாவும் அபியும் சொல்லியிருக்கிறார்கள். அதே மாதிரிதான் ஸையது முஹம்மதும் சொல்லியிருக்கிறான். அவனும் அவனுடைய உம்மா ஆனும்மாவும் வாப்பா சுலைமானும் வசிப்பதற்காக வீட்டிற்கு மிகவும் அருகிலேயே இருக்கும் நிலத்தில் ஒரு வீட்டைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். அதற்கான மர வேலைகளெல்லாம் முடிந்துவிட்டன. கற்களை இறக்கி வைத்திருக்கிறார்கள். இந்த வேலைகள் எதையும் ஹனீஃபா செய்யவில்லை.


நான் சொன்னேன்: “டேய் அபு, ஹனீஃபாவோட கையில பணம் எதுவும் இல்லைன்னு நினைக்கிறேன்.” அபு மெதுவான குரலில் சொன்னான்:

“ஹனீஃபா அண்ணன் பயங்கர கஞ்சன். கையில நிறைய பணம் இருக்கு.”

“போடா...”

அவன் ரப்பர் வில்லை எடுத்துக்கொண்டு சில உருண்டையான கற்களுடன் பறவைகளை வீழ்த்துவதற்காகச் சென்றான்.

“வா ஆடே, அவன் ஒண்ணும் பண்ண மாட்டான்” என்று கூறியவாறு ஆட்டுடன் பாத்தும்மா இந்தப் பக்கம் வந்தாள். அருகிலிருந்த நிலத்தில் அபு நிற்பதைப் பார்த்து பாத்தும்மா சொன்னாள்: “டேய் அபு, என்ன வாயை மூடிக்கிட்டு இருக்குற... பெரிய அண்ணன் வந்திருக்குறது தெரியும்ல?”

“என்னை ‘டேய் அபு’ன்னு பெரிய அக்கா அழைச்சதைக் கேட்டீங்கள்ல அண்ணே! நீங்க வந்திருக்குற தைரியம்தான் எல்லாத்துக்கும் காரணம்.... ம்ஹும்...”

அபுவிற்கு மூத்ததற்கு மூத்ததற்கு மூத்தவள்தான் பாத்தும்மா. அவள் அவனை ‘டேய் அபு’ என்று அழைத்தது அவனுக்கு மிகவும் குறைச்சலாகப் பட்டுவிட்டது.

நான் சொன்னேன்: “அப்படின்னா உன்னை ‘அபு சார்’ன்னு கூப்பிடலாமாடா? போடா!”

பாத்தும்மா எனக்கருகில் வந்தாள். சுற்றிலும் பார்த்தாள். யாருமில்லை! ரகசியமான குரலில் சொன்னாள்: “பெரியண்ணே, யாருக்கும் தெரிய வேண்டாம். ஆனும்மாவுக்குத் தெரிஞ்சா சண்டைக்கு வருவா. எனக்கு நீங்க பணமா எதுவும் தர வேண்டாம். கதீஜாவுக்கு ரெண்டு கம்மல் செய்து கொடுத்தா போதும். ஹனீஃபாவுக்கும் இது தெரியக்கூடாது. சின்ன அண்ணனுக்கும் தெரியக்கூடாது. அபுவிற்கும் தெரியக்கூடாது. உம்மாவுக்கும் தெரியக்கூடாது.”

நான் மெதுவான குரலில், “கம்மல் வெள்ளியில இருக்கணுமா? தங்கத்துலயா?” என்று கேட்டேன்.

பாத்தும்மா சுற்றிலும் பார்த்துவிட்டு தாழ்வான குரலில்,

“தங்கத்துலதான் வேணும். பெரியண்ணே நீங்க இந்த விஷயத்தை வேற யார்கிட்டயாவது சொல்லுவீங்களா?” என்றாள்.

“சேச்சே...”- நான் சொன்னேன்: “பரம ரகசியமா வச்சிருப்பேன்.”

அதன்படி பாத்தும்மாவுடன் எனக்கு ஒரு ரகசிய உடன்பாடு உண்டானது.

“கம்மல் சீக்கிரம் வேணும்” என்றாள் பாத்தும்மா பார்க்கலாம்.

இந்தக் கம்மல் ஒரு அவசர விஷயமாக ஆனதற்குக் காரணம் இருக்கிறது. நான் வந்தவுடன் எர்ணாகுளத்திலிருந்து மூன்று சிறிய குடைகளை வரவழைத்து அப்துல்காதரின் மகள் பாத்துக்குட்டி, ஹனீஃபாவின் மகன் அபி, ஆனும்மாவின் மகன் ஸையதுமுஹம்மது ஆகியோருக்குக் கொடுத்தேன்.

பாத்தும்மாவின் மகள் கதீஜாவிற்குக் குடை தரவில்லை. பாத்துக்குட்டியும், அபியும், ஸையது முஹம்மதும், கதீஜாவும் கிட்டத்தட்ட ஒரே வயதைச் சேர்ந்தவர்கள். உயரம், பேச்சு எல்லாமே ஒரே மாதிரிதான் இருக்கும். அழுவதுகூட ஒரே மாதிரிதான். எனினும் கதீஜாவிற்குக் குடை கொடுக்கவில்லை. என்ன காரணம்? உண்மையாகச் சொல்லப் போனால் நான் அந்த விஷயத்தையே மறந்துவிட்டேன். பரவாயில்லை. தங்கத்தால் ஆன இரண்டு கம்மல்கள் அவளுக்கு ரெடி!

பாத்தும்மா அந்தப் பக்கம் போய், வீட்டு வேலைகளில் ஈடுபட்ட நேரம் பார்த்து ஆனும்மா மெதுவாக என்னைத் தேடி வந்தாள். அவள் கர்ப்பமாக இருந்தாள்.

பாத்தும்மா பள்ளிக்கூடம் போனதில்லை. ஆனும்மா பள்ளிக்கூடம் போயிருக்கிறாள். அதனால் பேசுவது பாத்தும்மாவைப் போல அல்ல. ஆனும்மா மெதுவான குரலில் சொன்னாள்:

“பெரியண்ணே, நீங்க எனக்குப் பணம் எதுவும் தரவேண்டாம். பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தா போதும். அதுவும் இப்போ வேண்டாம். நாங்க வேற வீட்டுல போயி இருக்குறப்போ வாங்கித் தந்தா போதும். இந்த விஷயத்தை அக்காக்கிட்ட சொல்லிடாதீங்க...”

அதாவது- பாத்தும்மாவிற்கு இந்த விஷயம் தெரியக்கூடாது என்பதுதான் இதன் சாரம். அவளுக்குத் தெரிந்தால் அவள் கூறுவாள்:

“போதும்டி... போதும்டி உன் திருட்டுத்தனம். நீ படிச்சவ! நான் இல்லாத நேரத்துல நீ பெரிய அண்ணன்கிட்ட சொல்லி எல்லாத்தையும் வாங்கிட்டேல்ல!”

அதனால்தான் இந்தப் பாத்திரங்கள் சமாச்சாரம் காதும் காதும் வைத்தது மாதிரி இருக்க வேண்டிய ஒன்றாகிவிட்டது. ஆனும்மாவிற்கு வீட்டு பாத்திரங்கள் வாங்கித் தருகிறேன் என்றும், அதை ரகசியமாக வைத்திருப்பேன் என்றும் ஒப்பந்தத்தில் நான் கையெழுத்திட்டேன். எல்லாம் முடிந்து அமைதியாக உட்கார்ந்திருந்தபோது ஒரு ஆரவாரம் கேட்கிறது.

“உள்ளாடத்திப்பாரு... உள்ளாடத்திப் பாரு... நான் அழைச்சிட்டுப் போக மாட்டேன்.”

லைலாவின் குரல் அது. அவள் யாரை உள்ளாடத்திப்பாரு என்று அழைக்கிறாள்? அதிக நேரம் அதற்காகக் காத்திருக்க வேண்டிய சூழ்நிலை உண்டாகவில்லை. அவமானத்தை அதற்கு மேலும் தாங்க முடியாமல், கலங்கிப் போன கண்களுடன் முழு ஆண்பிள்ளையான ஸையதுமுஹம்மது என் முன்னால் வந்து நின்றான்.

அவன் முழு நிர்வாண கோலத்தில் இருந்தான்.

அவன் புகார் சொல்லும் குரலில் சொன்னான்: “பெரிய மாமா, லைலாம்மா என்னை உள்ளாடத்திப்பாருன்னு சொல்றது...”

ஒரு ஆண் பிள்ளையை உள்ளாடத்திப்பாரு என்று அழைப்பதா? அதுவும் ஒரு சிறு பெண்!

“கொம்பை எடுத்துட்டு வாடா.”

ஸையதுமுஹம்மது வேகமாக கொம்பை எடுத்து வருவதற்காகச் சென்றான்.

நான் அழைத்தேன்: “அடியே லைலா! இங்கே வா.”

அவள் வந்தாள். அவளும் முழு நிர்வாணக் கோலம்தான். ஸையதுமுஹம்மது கொண்டுவந்த கொம்பை பார்த்து அவள் சொன்னாள்: “பெரியப்பா, உங்களைக் கூட்டிட்டுப் போக மாட்டேன்.”

‘வேண்டாம்டி’ என்று சொன்னவாறு ஸையது முஹம்மதுவிடமிருந்த கொம்பை வாங்கினேன். லைலா ‘அய்யோ’ என்று உரத்த குரலில் அழ ஆரம்பித்தாள்.

“அம்மா... அம்மா...”

லைலா தன்னுடைய உம்மாவை ‘அம்மா’ என்றுதான் அழைப்பாள். நான் சொன்னேன்: “நீ உன் அம்மாவைக் கூப்பிடு! உன் வாப்பாவைக் கூப்பிடு! உன் தாத்தாவைக் கூப்பிடு! எல்லாரையும் நான் அடிச்சு உதைக்கப் போறேன்.”

தாத்தா என்றால் லைலா உம்மாவின் தந்தையைச் சொல்கிறேன். மேற்படி ஆள் இருப்பது ஹனீஃபாவின் விவசாய நிலத்திற்கு அருகில். அந்தப் பகுதியில் எங்கோ ஒரு ரெயில்வே ஸ்டேஷன் வரப்போகிறது. அந்தச் சமயத்தில் நிலத்திற்கு கேட்கும் விலை கிடைக்கும். அது மட்டுமல்ல- அந்தப் பகுதி வளர்ச்சியடையவும் செய்யும். இந்த விஷயங்களையெல்லாம் மனதில் வைத்துத்தான் லைலாவின் தாத்தா ஹனீஃபாவிடம் சொல்லி அந்த இடத்தை வாங்க வைத்திருந்தார்.

லைலா சொன்னாள்: “அம்மாவை அடிக்க வேண்டாம். வாப்பாவை அடிக்க வேண்டாம். தாத்தாவையும் அடிக்க வேண்டாம்.”

“அப்படின்னா இனிமேல் நீ ஆண்பிள்ளையை உள்ளாடத்திப்பாருன்னு கூப்பிடக்கூடாது.”

“கூப்பிட மாட்டேன்.”

“உன் வாப்பா வீடு கட்டுறப்போ அங்கே ஸையதுமுஹம்மதுவை அழைச்சிட்டுப் போவியா? பெரியப்பாவை அழைச்சிட்டுப் போவியா?”

அவள் கண்ணீர் மல்க சொன்னாள்: “எல்லாரையும் அழைச்சிட்டுப் போவேன்.”

அப்பாடா! எப்படியோ அந்த விஷயம் முடிவுக்கு வந்தது. நஷ்ட ஈடாக ஸையது முஹம்மதுக்கு இரண்டு மிட்டாயும் ஒரு பூவன் பழமும் கொடுத்தேன். என்னிடம் நேந்திர வாழைப்பழம், முட்டைக்கோஸ், கண்ணன் பழம், பலாப்பழம், பூவன் பழம், மிட்டாய் ஆகியவை எப்போதும் இருக்கும்.


மிட்டாய் மட்டும்தான் நான் காசு கொடுத்து வாங்குவது. குழந்தைகளின் அழுகையை நிறுத்துவதற்கென்றே அவற்றை நான் வாங்கி வைத்திருப்பேன். மீதி அனைத்தும் என்னுடைய தம்பிமார்களும் கொச்சுண்ணியும் சுலைமானும் வாங்கித் தந்தவை. நான் நிறைய பழங்களைச் சாப்பிட்டாக வேண்டும். அவற்றை நான் மேஜைமீது வைத்திருந்தேன். பெட்டிமீது ஏறி நின்று ஸையது முஹம்மது பழங்களைத் திருடிச் சாப்பிடுவதை நானே பார்த்திருக்கிறேன். நான் பார்த்தேன் என்றால் அவனும் பார்த்தான் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். என் முன்னால்தான் ஒரு திருடனாக நின்று கொண்டிருந்ததை நினைத்து உண்மையிலேயே அவனுக்கு மிகவும் வருத்தம். அவன் அழுதான். மேலும் அவன் அழக்கூடாது என்பதற்காக பழங்களை நான் பத்திரமாக பெட்டிக்குள் எடுத்து வைத்துவிட்டேன். ஸையது முஹம்மது மிட்டாயையும் பழத்தையும் சாப்பிடுவதைப் பார்த்து லைலாவிற்குப் பெரிய அளவில் அழுகை வந்தது. அவளுக்கும் இரண்டு மிட்டாய்களையும் ஒரு பழத்தையும் தந்தேன். மணம் வருவதைத் தெரிந்துகொண்டு அங்கு வந்த ஆரிஃபாவுக்கும் அதே மாதிரி தந்தேன். தலா இரண்டு மிட்டாய்களை ஸுபைதாவிற்கும் ரஷீதிற்கும் கொடுத்து அனுப்பினேன். பிறகு ஒருவகை நிம்மதியுடன் ஆனும்மாவை தேநீர் கொண்டு வரச்சொல்லி பருகிவிட்டு, பீடியைப் புகையவிட்டவாறு ஒரு புத்தகத்தைக் கையில் வைத்துக்கொண்டு சாய்வு நாற்காலியில் சாய்ந்தேன். எல்லாம் அமைதியாக முடிந்தன.

அப்படிப் படுத்திருந்தபோது என்னை ஸ்டைலாகப் பெற்ற என்னுடைய உம்மா என்னருகில் வந்தாள். அவளுக்கு அறுபத்து ஏழோ, எழுபத்து ஏழோ, எண்பத்து ஏழோ வயது இருக்கும். பற்கள் இன்னும் விழவில்லை. அதிகாலை நான்கு மணிக்கே படுக்கையைவிட்டு எழுந்துவிடுவாள். பிறகு வாய்க்காலில் நனையப் போட்டிருக்கும் தென்னை ஓலைகளை எடுத்துக்கொண்டு வந்து பின்ன ஆரம்பிப்பாள். அதைப் பின்னி முடித்து நிலத்தில் பரப்பி விடுவாள். சூரியன் உதிக்கும் நேரத்திலிருந்து அது நன்கு காயட்டுமே என்ற எண்ணம்தான். அது முடிந்ததும் வீட்டுக்குத் தேவையான தண்ணீரை எடுத்து நிறைக்க ஆரம்பிப்பாள். இரண்டு கைகளிலும் ஒவ்வொரு பெரிய குடத்தையும் தூக்கிக் கொண்டு வருவாள். பாத்தும்மா, ஆனும்மா, அய்ஸோம்மா, குஞ்ஞானும்மா- எல்லாரையும் அவள் திட்டுவாள். கண்டபடி பேசுவாள். கடுமையான வீட்டு வேலைதான். இரவு பத்து மணிவரை இது தொடரும். பாத்தும்மா எல்லா இரவுகளிலும் வீட்டில் இருப்பதில்லை. இருப்பினும், வீட்டில் எப்போதும் மூன்று பெண்கள் இருக்கிறார்கள். உம்மா எதற்காக வேலை செய்ய வேண்டும்? வெறுமனே உட்கார்ந்திருக்க வேண்டியதுதானே! இந்தக் கேள்விகளுக்கு உம்மாவிடம் அருமையான பதில் இருக்கவே செய்கிறது. “அவள்களுக்கு எதுவுமே தெரியாது. வீட்டை எப்படி பார்த்துக்கணும்னு அவள்களுக்கு தெரியாது” என்பாள். சரி... கொஞ்சம் அவர்களிடம் ஆட்சி பொறுப்பை விட்டுக்கொடுக்க வேண்டியதுதானே! அதற்கும் அவளிடம் பதில் தயாராக இருக்கும். “உனக்கு வீட்டைப் பற்றி என்ன தெரியும்? ஒற்றைத் தடி. ஒரு சாண் வயிறு...”

அதற்குப் பிறகும் நான் தோற்காமல் இருந்தால் அவள் கூறுவாள்: “அவங்களுக்குப் பிள்ளைங்க இருக்காங்கள்ல! அவங்களை யார் பார்க்கறது?”

நான் கூறுவேன்:

“ஒருத்தி பிள்ளைங்களைப் பார்க்கணும். மீதி இருக்குறவங்க வேலை செய்யணும்.”

“நீ அப்படித்தான் சொல்வே. தனிக்கட்டை... ஒரே வயிறு. நீ எனக்குக் கொஞ்சம் பணம் தா.”

எங்கள் பேச்சு எப்போதும் வந்து நிற்பது இந்த ரூபாய் விஷயத்தில்தான். அது என்னுடைய உடல் நிலைக்கு அந்த அளவுக்கு உகந்ததல்ல. அதனால் உம்மா எதைச் சுமந்தாலும் எதை இழுத்துக்கொண்டு போவதைக் கண்டாலும் நான் எதுவுமே பேசாம சும்மா இருப்பேன். எதற்காக உம்மாவிடம் சொல்லி, அவள் பணம் கேட்க வேண்டும்?

உம்மா வந்தவுடன் மெதுவான குரலில் சொன்னாள்: “டேய், எனக்கு ஒரு பத்து ரூபாய் தா.”

நான் என் உம்மாவையே உற்றுப் பார்த்தேன்.

உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “அப்துல்காதருக்குத் தெரியக்கூடாது. ஹனீஃபாவுக்குத் தெரியக்கூடாது. ஆனும்மாவுக்கும் பாத்தும்மாவுக்கு தெரியக்கூடாது.”

நான் மிகவும் ரகசியமான குரலில் கேட்டேன்:

“குஞ்ஞானும்மாவுக்கும் அய்ஸோம்மாவுக்கும் தெரியறதைப் பற்றி ஒண்ணுமில்லையே?”

அதற்கு உம்மா சொன்னாள்: “பேசினது போதும் தரவேண்டியதைத் தா யாருக்கும் தெரிய வேண்டாம்.”

நான் உம்மாவைப் பார்த்து கேட்டேன்: “நான் வந்த பிறகு இந்த வீட்டுல எவ்வளவு ரூபாய் தந்திருக்கேன்? வெளியே எல்லாருக்கும் தெரிஞ்சும் தெரியாமலும் என்கிட்ட இருந்து எவ்வளவு ரூபாய் நீங்க வாங்கியிருக்கீங்க?”

உம்மா ரகசியமான குரலில் சொன்னாள்: “நீ எதுவுமே தரலைன்னு நான் சொல்லல. எனக்கு இப்போ பத்து ரூபாய் தேவைப்படுது.”

“நான் தந்த பணமெல்லாம எங்கே போச்சு? நான் தந்து அப்படியொண்ணும் அதிக நாட்கள் ஆகலையே! அந்தப் பணமெல்லாம் எங்கே போச்சு?”

உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “மெதுவா பேசு எல்லாத்தையும் அப்துல்காதர் வாங்கிக்கிட்டான்.”

“அவனுக்கு நான் தனியா பணம் தந்திருக்கேனே! சரியான ஆளுதான்... அவன் இங்கே வரட்டும்...!”

சிறு வயதில் அவனுடைய காலில் ஒரு வகை பாதிப்பு உண்டாகிவிட்டது. வாப்பா எத்தனையோ ஆயிரம் பணத்தைச் சிகிச்சைக்காகச் செலவழித்தார். கடைசியில் வலது காலில் ஒரு ஊனம் உண்டாகிவிட்டது. அதை நீக்கிப் பார்த்தால் அவன் பயில்வான்தான். இரும்பால் ஆன ஊன்றுகோலுடன்தான் அவன் எப்போதும் நடப்பான்.

உம்மா தாழ்ந்த குரலில் சொன்னாள்: “அவன்கிட்ட எதுவும் பேச வேண்டாம். இங்க இருக்கற எல்லா விஷயங்களையும் பார்க்கறது அவன்தானே? அவன் மட்டும் இல்லைன்னா நிலைமை எப்படி இருக்கும்ன்றதை நீயே யோசிச்சுப் பாரு. நீ ஒரு தனிக்கட்டை ஒரு வயிற்றைக் காப்பாற்ற கண்ட கண்ட இடத்தில் தங்கி நீ எவ்வளவு ரூபாய் செலவழிச்சிருப்பே?”

“அதற்கான அபதாரத்தை நான் எப்பவோ அடைச்சிட்டேன். நான் இங்கே எவ்வளவு ரூபாய்களைச் செலவழிச்சிருக்கேன்?”

“மெதுவா பேசு. இல்லைன்னு யாரும் சொல்லலையே! யாருக்கும் தெரியாம இப்போ எனக்கு நீ பத்து ரூபா தா."

"இதுக்கு முன்னாடி யாருக்கும் தெரியாம நான் உங்களுக்குக் கொடுத்த பணம் எல்லாத்தையும் அப்துல் காதர் எப்படி வாங்கினான்? அவன் இந்த விஷயத்தை எப்படித் தெரிஞ்சிக்கிட்டான்?”

“மெதுவா பேசு. அபியும் பாத்துக்குட்டியும் போய் சொல்லியிருக்காங்க.”

நான் மிகவும் தாழ்வான குரலில் சொன்னேன்: “உம்மா, உங்ககிட்ட நான் ஒரு ரகசியத்தைச் சொல்றேன். வேற யார்கிட்டயும் இதைச் சொல்லாதீங்க. என்கிட்ட மொத்தம் இருக்கறதே ஒரே ஒரு அஞ்சு ரூபா நோட்டுத்தான். அதை விட்டா ஒரு தம்பிடி காசுகூட இல்லை...”

உடனே உம்மா சொன்னாள்: “சரி... அதை எடு.”


நான் இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்துவிட்டு அறைக்குள் சென்று ரூபாய் நோட்டையும், நேந்திர வாழைப்பழத்தையும் எடுத்துக்கொண்டு வந்தேன். நேந்திர வாழைப் பழத்தின் வாசனையை அறிந்து பாத்தும்மாவின் ஆடு எனக்கு முன்னால் வந்து நின்றது. தோலை நீக்கி நான் பழத்தைத் தின்றேன். என்னவோ தின்பதைப் பார்த்து உம்மாவிற்கு மிகவும் பிரியமான பூனைகள் வந்தன. உம்மாவின் மேற்பார்வையில் கொட்டமடித்துக் கொண்டிருக்கும் கோழிகளும் வந்தன.

நான் பழத்தோலை பாத்தும்மாவின் ஆட்டிற்குக் கொடுத்தேன். இன்னும் தோல் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ஆடு அங்கேயே நின்றிருந்தது. நான் சுற்றிலும் பார்த்தேன். யாரும் இல்லை. மானும் மனிதர்களும் இல்லை. கோழிகளும் பாத்தும்மாவின் ஆடும் பூனைகளும் மட்டுமே அங்கு இருந்தன.

நான் மிகவும் ரகசியமாக ஐந்து ரூபாய் நோட்டை எடுத்து உம்மாவின் மடியில் வைத்தேன். உம்மா இந்தப் பக்கமும் அந்தப் பக்கமும் பார்த்தாள். மானும் மனிதர்களும் இல்லை. உம்மா அந்த நோட்டை மடித்து துணி நுனியில் கட்டி சட்டைக்குள் வைத்துக் கொண்டாள். பிறகு எதுவுமே நடக்காதது மாதிரி அவள் உட்கார்ந்திருந்தாள்.

நான் கேட்டேன்: “பிறகு என்ன விசேஷங்கள்?”

உம்மா சொன்னாள்: “டேய், எனக்கு இவ்வளவு வயசாயிடுச்சு. எப்போ நான் சாகப் போறேன்னு தெரியாது. என் மனசுல ஒரு ஆசை இருக்கு. நீ ஒரு பெண்ணைக் கல்யாணம் பண்ணி, உங்ககூட நான் இருக்கணும்.”

அவ்வளவுதான்- நான் சத்தம் போட ஆரம்பித்துவிட்டேன்.

“எங்கேயாவது அமைதியா இருக்கலாம்னு நினைச்சா விட்டால்தானே! பாத்தும்மா! ஆனும்மா! ஓடிவாங்க... என் பெட்டியையும் படுக்கையையும் எடுத்துட்டு வாங்க. ஒரு சாமான் தூக்குற ஆளைக் கூப்பிடுங்க...”

அவர்கள் இரண்டு பேரும் ஓடி வந்தார்கள்.

“என்ன உம்மா இது?” என்று ஆனும்மா கேட்டாள்.

பாத்தும்மா சொன்னாள்: “பெரியண்ணன்கிட்ட உம்மா காசு கேட்டுருக்கும்!”

நான் உடனே சொன்னேன்:

“அப்படி எதுவும் இல்ல.”

உம்மா எழுந்து அந்தப் பக்கம் போனாள். “என்ன உம்மா?” என்று கேட்டவாறு பாத்தும்மாவும் ஆனும்மாவும் உம்மாவின் பின்னால் போனார்கள்.

நான் அதே இடத்தில் ஒரு வகை நிம்மதியுடன் அமர்ந்திருந்தேன். மீண்டும் ஆனும்மாவிடம் சொல்லி தேநீர் வரவழைத்துப் பருகினேன். பிறகு ஒரு பீடியைப் பற்ற வைத்து இழுத்தேன்.

அப்போது பாத்தும்மாவின் ஆடு வாசலில் நின்றவாறு வராந்தாவில் எனக்குப் பக்கத்திலிருந்த தீப்பெட்டியை நாக்கை நீட்டி சாப்பிடும் முயற்சியில் இருப்பதை பார்த்தேன். நான் அதை எடுத்து குச்சிகளை எடுத்து விட்டு வெற்றுத் தீப்பெட்டியை ஆட்டிடம் நீட்டினேன்.

பாத்தும்மாவின் ருசியுடன் அந்த வெற்றுத் தீப்பெட்டியை தின்றது. அது போகாமல் நிற்பதைப் பார்த்து நான் சொன்னேன், “அழகியே! தீக்குச்சிகள் எனக்கு வேணும். வேற வெற்று தீப்பெட்டிகள் வேணும்னா இருக்கு... தர்றேன்”

அந்த நேரத்தில் பாத்தும்மா ஒரு பாத்திரத்தில் நீர்கொண்டு வந்து ஆட்டின் முன்னால் வைத்தாள். நான் பாத்தும்மாவிடம் சொன்னேன்:

“பாத்தும்மா, உன் ஆடு என்னோட ரெண்டு புத்தகங்களை தின்னுடுச்சு.”

நான் ஏதோ சொல்லக் கூடாததைச் சொல்லிவிட்ட மாதிரி பாத்தும்மா சொன்னாள்:

“அப்படிச் சொல்லாதீங்க பெரியண்ணே. என் ஆடு அப்படியெல்லாம் செய்யாது” என்று கூறிவிட்டு மிகவும் தாழ்ந்த குரலில் கேட்டாள்: “கம்மல் விஷயம்?”

நானும் மெதுவான குரலில் சொன்னேன்: ஞாபகத்துல இருக்கு...”

இன்னும் மெதுவான குரலில் “யாருக்கும் தெரிய வேண்டாம்” என்று சொல்லிவிட்டு பாத்திரத்துடன் பாத்தும்மா அப்பால் சென்றாள்.

ரஷீதும் ஸுபைதாவும் அழுது கொண்டிருந்தார்கள். ஒரு தொடர் அழுகையைப் போல ஆரிஃபாவும் ஸையது முஹம்மதுவும் லைலாவும்

அழுகையை ஆரம்பித்தார்கள். இடையில் அவ்வப்போது லைலா “அம்மாவை அழைச்சிட்டுப் போக மாட்டேன்” என்று கூறிக் கொண்டிருந்தாள். எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருக்கும் பொழுது அபு ஒரு கடிதத்துடன் வந்தான். கடிதத்தைத் தந்துவிட்டு ஒரு கொம்புடன் “என்ன இது?” என்று உரத்த குரலில் கத்தியவாறு அந்தப் பக்கம் அவன் சென்றான். உடனே எல்லாரும் அழுகையை நிறுத்தினார்கள். வீடு படு நிசப்தமாக இருந்தது.

நான் கடிதத்தைப் பிரித்துப் படித்தேன். தூரத்திலிருந்த சென்னை நகரத்திலிருந்து அந்தக் கடிதம் வந்திருந்தது. திரு.எம்.கோவிந்தனின் மனைவி டாக்டர் பத்மாவதி அம்மா ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்திருக்கிறார். தாயும் குழந்தையும் நலமாக இருக்கிறார்கள்.

தாயும் மகனும் நலமுடன் இருக்க வேண்டும் என்று மனதில் நினைத்தவாறு நான் உடனே பதில் கடிதம் எழுதினேன். பாலாவிற்கு ஒரு தம்பி கிடைத்ததற்காக அவளை வாழ்த்தினேன். அவளிடமிருந்த சொத்தான இரண்டரை ரூபாயை வங்கியில் போடச் சொல்லும்படி நான் அவளுடைய தந்தைக்கு எழுதினேன். திரு.எம்.கோவிந்தன் மகத்தான முறையில் இரண்டாவது தடவையாக தந்தை ஆனதற்காக அவரை வாழ்த்தினேன். அத்துடன் எ.நாராயணன் நம்பியார், எம்.எ.கெ.ஸி.எஸ்.பணிக்கர், டேவிட் ஜார்ஜ், ஜானம்மா பாருக்குட்டி அம்மா, கெ.எ.கொடுங்ஙநல்லூர், கெ.பி.ஜி. பணிக்கர் (கோபகுமார்), சரத்குமார், ராம்ஜி, ஆர்.எம்.மாணிக்ககத்து ஆகிய சென்னை வாழ் நண்பர்களைப் பார்த்தால் நான், என்னைப் பெற்று வளர்த்த என்னுடைய உம்மாவுடன் இப்போது வசித்துக் கொண்டிருக்கிறேன் என்ற செய்தியைச் சொல்ல வேண்டுமென்றும், எல்லாருடைய நலத்தையும் நான் விசாரித்ததாகச் சொல்லும்படியும் கேட்டுக் கொண்டேன். தந்தைக்கும், பிள்ளைகளுக்கும் தாய்க்கும் மீண்டுமொரு முறை வாழ்த்துச் சொல்லி கடிதத்தை முடித்து உறைக்குள் அடைத்து அதை நன்றாக ஒட்டி முகவரி எழுதி அபுவை அழைத்து அவனிடம் தந்து “சீக்கிரமாக இதை தபால்ல போடுடா” என்று கட்டளையிட்ட போது ஒரு விஷயம் ஞாபகத்தில் வந்தது.

“நில்லுடா” - என்றேன். “உன்னைப் பற்றி பெரிய புகார்கள் வருது. நீ அப்துல் காதரோட கடையில இருக்குற பணத்தை எல்லாம் கண்டவங்களுக்கெல்லாம் கடன் தர்றியாமே? கண்ட பத்திரிகைகளுக்கெல்லாம் நீ ஏஜென்ஸி எடுத்திருக்கே. நீ யார் சொல்றதையும் கேக்கறது இல்ல. சரியா?”

எல்லா கேள்விகளுக்கும் பதிலாக அவன் சொன்னான்: “என்னை யாருக்கும் பிடிக்கல.”

“பெரியண்ணே, நீங்க வந்தவுடன் பார்த்தீங்களா? அக்காமார்களும், சின்ன அண்ணியும், பெரிய அண்ணியும் உம்மாவும் சேர்ந்து இந்த வாசல், இடம் எல்லாத்தையும் பெருக்கி குப்பையை நெருப்பு வச்சு எரிச்சு சுத்தமா வச்சிருந்ததைப் பார்த்தீங்களா? முன்னாடியே நான் சொன்னேன். யாரும் அதைக் கேட்கல. எல்லாரும் என்னை பெருக்கி சுத்தம் செய்யச் சொன்னாங்க. இப்போ நடந்தது என்ன? பெரியண்ணே உங்ககிட்டயிருந்து பணம் வாங்குறதுக்கான திட்டம் இது. பணக்காரர் வந்துட்டா, சந்தோஷப்படுத்தணும்னு அவங்க இந்த வேலைகளைச் செய்திருக்காங்க.


நான் பணக்காரனா? என் கையில் பணம் இருக்கா? பெரியண்ணே, நாம இந்த வாசலுக்கு சுவர் அமைக்கணும். வீட்டோட கூரையை மாற்றி ஓடு வேயணும்...”

நான் கேட்டேன்: “நாமன்னு சொன்னா?”

“பெரியண்ணே, நீங்க பணம் தரணும். நான் எங்கே பணத்துக்குப் போவேன்?”

அவன் சாப்பிட்டு முடித்து கடிதத்துடன் நடந்தான். அவன் சென்ற பிறகு, அப்துல் காதர் வந்தான். அவன் போன பிறகு ஹனீஃபா வந்தான்.

ஹனீஃபா பட்டாளக்காரனாக இருந்தவன். அதற்குப் பிறகு தையல் கடை ஆரம்பித்தான். அதற்குப் பிறகு சைக்கிள் கடை. சாதாரணமாக ஹனீஃபா எப்போதும் மிடுக்கான தோற்றத்திலேயே இருப்பான். இரட்டை மடிப்பு வேஷ்டியும் ஜிப்பாவும் அணிந்து தலை முடியை ஒழுங்காக வாரி அழகாக சவரம் செய்து… இப்படித்தான் அவன் எப்போதும் காட்சியளிப்பான். இப்போது ஒரு வேஷ்டியை மட்டுமே அவன் அணிந்திருக்கிறான். இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது. நான் எதுவும் கேட்கவில்லை. ஏதாவது கேட்டு அதனால்...?

அவன் சொன்னான்: “பெரியண்ணே... நான் என்னோட நிலத்தை விற்கலாம்னு இருக்கேன். உங்களுக்குன்னா விலையைக் குறைச்சு தர்றேன்.”

“அதை ஏன்டா இப்போ விற்கணும்?”

“கையில பணம் இல்ல. இருந்தா ஒரு சட்டைத் துணியைப் போட மாட்டேனா?”

“இடத்துக்கு என்ன விலை வேணும்?”

“உங்களுக்குன்னா விலையைக் குறைச்சு தர்றேன். பத்தாயிரம் ரூபா தாங்க.”

பத்தாயிரம் ரூபாய்... ஹனீஃபா அதை என்ன விலை கொடுத்து வாங்கினான் என்பது எனக்குத் தெரியும். நான் விஷயத்தை மாற்றினேன். “நீ இப்போ இந்த வீட்டிற்கு என்ன கொடுக்கற?”

இரண்டு மூன்று வருடங்களுக்கு முன்பு, ஹனீஃபா ஒவ்வொரு நாளும் வீட்டிற்கு இரண்டணாக்கள் (இரண்டு அணா என்றால் 12 பைசாக்கள்) கொடுத்துக் கொண்டிருந்தான். அவனுக்கும் அவனுடைய மனைவிக்கும் இரண்டு பிள்ளைகளுக்கும்- சாப்பிடுவதற்காகவும், பருகுவதற்காகவும் அவன் படுக்கை எதுவும் வாங்கிப் போடவில்லை. எண்ணெயும் சோப்பும் அவன் வாங்கவில்லை. இவை எல்லாமே இரண்டு அணாக்களுக்குள் அடங்கிவிடும். அப்துல்காதர் அவனை வாய்க்கு வந்தபடி திட்டுவான். அது குறித்து அவன் சிறிதும் வெட்கப்படுவதில்லை. அதற்குமேல் ஏதாவது கடுமையாகச் சொன்னால் அவன் கூறுவான்: “நான் பட்டாளத்துக்குப் போறேன். அரசாங்கத்துக்கு நான் தேவையா இருக்கேன்.”

கடைசியில் என்னுடைய மேற்பார்வையில் சில முடிவுகள் எடுக்கப்பட்டன. அதன்படி இரண்டணாவை நான்கணாவாக ஆக்கினேன். படிப்படியாக அது பன்னிரண்டு அணாவில் (இப்போது அது 75 பைசா) போய் நின்றது. நான் போனவுடன் ஹனீஃபா அதைத் தானாகவே குறைத்துக் கொண்டான். கடைசியில் அதை பழையபடி இரண்டணாவாக ஆக்கிவிட்டான் என்ற செய்தியைக் கேட்டதைப் போல ஞாபகம். ஹனீஃபாவிற்கு மேலும் ஒரு குழந்தை அதிகமாகப் பிறந்திருக்கிறது. அதனால் சற்று அதிகமாக அவன் பணம் தர வேண்டியது நியாயமான ஒரு விஷயமும் கூட. ஆனால், என்னுடைய கேள்விக்கு அவன் சரியான பதிலைச் சொல்லவில்லை. அவன் சொன்னான்: “சின்ன அண்ணனோட நடத்தையைச் சகிச்சிக்கிட்டு என்னால வாழ முடியாது.”

“அப்துல் காதர்கிட்ட என்ன தகராறு?”

“ஒரு கட்டு ரூபாய் நோட்டோட அவர் என் கடைக்கு வந்தாரு. அங்கே கூட்டமா பெரிய ஆளுங்க உட்கார்ந்திருக்காங்க. இவர் வந்து ‘இங்க பாருடா’ன்னு சொல்லிட்டு அந்த நோட்டுக் கட்டை என் முகத்துல அடிச்சாரு. அடிச்சிட்டு சொல்றாரு. ‘பணத்தை விட்டெறிஞ்சா, பணத்தை வச்சே அடிப்பே’ன்னு சொல்லிட்டு அவர் திரும்பி நடந்து போறாரு. எனக்கு என்னவோ மாதிரி ஆயிடுச்சு பெரியண்ணே, நான் ஒவ்வொரு நாளும் உங்களுக்குப் பீடி வாங்கித் தர்றேன்ல? ஒவ்வொரு நாளும் தீப்பெட்டி வாங்கித் தர்றேன்ல? என் பணத்தை எறிஞ்ச பிறகும், நீங்க என்னைப் பணத்தால அடிக்கலியே!”

நியாயமான வாதம்தான்.

அதற்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. “இப்போ ரஷீதும் இருக்கான்லடா! ரேஷன் வாங்குறதுக்கு நீ என்ன தர்ற?”

அவன் உடனே சொன்னான்: “நான் பட்டாளத்துக்குப் போறேன். அரசாங்கத்துக்கு நான் தேவைப்படுறேன்.”

அவன் வேகமாக வீட்டிற்குள் சென்று சாப்பிட்டுவிட்டு தையல் கடையை நோக்கிச் சென்றான்.

நான் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்பொழுது பாத்தும்மாவின் ஆடு வராந்தாவில் ஏறி உள்ளே வந்து என்னுடன் சேர்ந்து சாப்பிட முயன்றது. நான் உரத்த குரலில் கத்தினேன்.

“பாத்தும்மா, ஓடி வா.”

பாத்தும்மா ஓடி வந்து அதை வாசல் பக்கம் அழைத்துக் கொண்டு போனாள்.

நான் சொன்னேன்.

“அதைக் கயிறு வச்சு கட்டிப்போடு.”

பாத்தும்மா சொன்னாள்: “கயிறு வச்சு கட்டுறது இதுக்குப் பிடிக்காது, பெரியண்ணே.”

சாயங்காலம் கொச்சுண்ணி வந்தான். சில நேரங்களில் அவன் வீட்டில் படுத்திருப்பான். எனக்குப் பக்கத்தில்தான். எனக்கு இந்தப் பக்கம் உம்மா. கொச்சுண்ணியைத் தாண்டி அபு. ஹனீஃபா அவனுடைய குடும்பத்துடன் இன்னொரு அறையில். அப்துல் காதர் தன்னுடைய குடும்பத்துடன் வீட்டிற்குள். வராந்தாவில் சாக்குகளை விரித்து அதன்மீது சுலைமானும் குடும்பமும். கொச்சுண்ணி வீட்டில் படுக்காத போது குடும்பத்துடன் செல்வான். பந்தத்தை எரியவிட்டவாறு கொச்சுண்ணி முன்னால் நடந்து போவான். அந்த வெளிச்சத்தில் அவனுக்குப் பின்னால் பாத்தும்மா நடந்து போவாள்.பாத்தும்மாவிற்குப் பின்னால் பத்து வயதான கதீஜா. கதீஜாவிற்குப் பின்னால் ஆடு.

2

பாத்தும்மாவின் ஆட்டின் ஆர்ப்பாட்டம் காலையிலேயே தொடங்கிவிட்டது. அப்போது கிட்டத்தட்ட எட்டு மணி இருக்கும். தலையிலும் உடம்பிலும் எண்ணெயைத் தேய்த்துவிட்டு கோவணம் கட்டிக்கொண்டு நான் உலவிக் கொண்டிருந்தேன். அப்போது வாசலில் பிள்ளைகளின் ஆரவாரம் கேட்டது.

“உள்ளாடத்திப் பாரு உள்ளாடத்திப் பாரு!”

“வாலைப் பிடி... வாலைப் பிடி!”

“கிள்ளுறது தெரியல... கிள்ளுறது தெரியல...”

“கொம்பைப் பிடி! கொம்பைப் பிடி!”

என்ன விஷயம்? நான் ஜன்னல் வழியாகப் பார்த்தேன். பெரிய விசேஷமொன்றுமில்லை. பாத்தும்மாவின் ஆடு அபியின் அரைக்கால் ட்ரவுசரின் முன்பக்கம் முழுவதையும் தின்று தீர்த்துவிட்டது. மீதிப் பகுதியை ஆடு தன் வாயில் கவ்வியிருந்தது. அபி ஆட்டின் கழுத்தை இறுகப் பிடித்துக் கொண்டிருந்தான். பாத்துக்குட்டி வாலைப் பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். ஸையது முஹம்மது கொம்பைப் பிடித்திருந்தான். ஆரிஃபா என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்துப் போய் நின்றிருந்தான். ரஷீதும் ஸுபைதாவும் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தாமல் கட்டை விரல்களை வாய்க்குள் வைத்து சப்பியவாறு வாசலில் உட்கார்ந்திருந்தார்கள். லைலா ஆட்டின் தாடையைப் பிடித்துக்கொண்டு திட்டிக் கொண்டிருந்தாள்.

“உள்ளாடத்திப் பாரு! உள்ளாடத்திப் பாரு!”

நான் வேஷ்டி அணிந்து அறையை விட்டு வராந்தாவிற்கு வந்து அங்கிருந்து வாசலுக்குச் சென்றேன். ஆட்டின் செவியைப் பிடித்தவாறு அபியை அதனிடமிருந்து பிரித்தேன். அபியின் ட்ரவுசரின் முன் பகுதியை மட்டுமல்ல, ஒரு பாக்கெட்டையும் ஆடு தின்று முடித்திருந்தது.


விஷயம் தெரிந்ததும் பாத்தும்மாவின் ஆட்டைக் குற்றவாளி என்று எண்ண முடியவில்லை. அபியின் அரைக்கால் ட்ரவுசர் பாக்கெட்டில் வெள்ளை அப்பம் இருந்திருக்கிறது. அந்த அப்பத்தில் கொஞ்சத்தை அவன் ஆட்டிற்குக் கொடுத்தான். மீதி இருந்ததை ட்ரவுசரின் முன் பக்கத்தில் மறைத்து வைத்துக்கொண்டு ஆட்டின் முன்னால் போய் நின்றுகொண்டு தின்னும்படி கூறியிருக்கிறான். ஆடு அப்பத்தையும் அரைக்கால் ட்ரவுசரின் முன் பகுதியையும் தின்றுவிட்டது. பாக்கெட்டில் இருந்ததை பாக்கெட்டுடன் தின்று முடித்தது. அபி சொன்னான்: “வாப்பா அடிச்சு உதைப்பாரு”

“அதை முன்னாடியே நினைச்சுப் பார்க்க வேண்டாமா? நல்லா அடிச்சு உதைக்கட்டும்” - சிறிது நேரம் சென்றதும் நான் சொன்னேன்: “பயப்படாதடா. யாரும் சொல்லமாட்டாங்க.”

பாத்துக்குட்டி, லைலா, ஸையதுமுஹம்மது ஆகியோரிடம் ரகசியத்தைக் காப்பாற்றும்படி சொன்னேன். லைலாவிடம் இனிமேல் யாரையும் ‘உள்ளாடத்திப்பாரு’ என்று அழைக்கக்கூடாது என்றும் சொன்னேன்.

நான் இப்போது குளிப்பதற்காக நதியைத் தேடிப் புறப்பட்டேன். ஸையது முஹம்மதையும் பாத்துக்குட்டியையும் அழைத்தேன். அப்போதும் அபியும் லைலாவும் கூட சேர்ந்துகொண்டார்கள். அவர்கள் வாப்பாவுடன் குளிக்கப் போகவில்லை. என்னுடன் குளிப்பதற்காகக் காத்து நின்றிருந்தார்கள். இதற்குச் சிறப்பு காரணம் எதுவும் இல்லை. அபியின் சிலேட் குச்சியை லைலா எடுத்து ஒடித்து துண்டுகளாக ஆக்கிவிட்டாள். இந்த குற்றச் செயலுக்காக அபியையும் லைலாவையும் வாப்பா குளிப்பதற்கு அழைத்துச் செல்லவில்லை. பாத்துக்குட்டிக்கும் அபிக்கும் சிலேட் குச்சி வாங்க ஹனீஃபா அரையணா (8 பைசா) கொடுத்தான்.

நான் எல்லாரையும் மூவாற்றுப் புழை ஆற்றிற்கு அழைத்துக்கொண்டு சென்றேன். குளிக்க வைத்து எல்லாரையும் கரையில் நிற்க வைத்தேன். பிறகு நீருக்குள் மூழ்கி மூழ்கி நான் குளித்துக் கொண்டிருந்தேன்.

“பெரியப்பா!”

நான் திரும்பிப் பார்த்தேன். யாரும் நீரில் இழுத்துச் செல்லப்படவில்லை. நான் நீந்தி போய் கேட்டேன்: “என்னடா?”

அபி சொன்னான்:

“எனக்கு ட்ரவுசர் இல்ல.”

அவன் உண்மையைச் சொன்னான். வெட்கத்தை மறைக்க அவனிடம் எதுவும் இல்லை. முழு நிர்வாண கோலத்தில் அவன் தெரு வழியே எப்படிப் போவான்?

நான் கேட்டேன்: “நீ இப்படித்தானே வந்தே?”

அதெல்லாம் சரிதான். அது அப்போது இப்போது அபி தன்னுடைய பள்ளியில் படிக்கும் ஒருவனை படகில் இருக்கப் பார்த்துவிட்டான். அவன் இடுப்பில் வேஷ்டியைச் சுற்றியிருக்கிறான்.

அதனால் அபியின் வெட்கத்தை மறைக்க நான் ஒரு துண்டைத் தந்தேன். அப்போது பாத்துக்குட்டிக்கும் வெட்கம் சம்பந்தமான தேவை வந்தது. அவளுக்கும் மறைப்பதற்கு துணி வேண்டும்!

நான் குளித்து முடித்து வேஷ்டியை எடுத்து அணிந்து, இடுப்பில் கட்டியிருந்த துண்டை நனைத்துப் பிழிந்து, தலையைத் துடைத்துவிட்டு, துண்டை நீரில் முக்கிப் பிழிந்து பாத்துக்குட்டிக்கு அணியக் கொடுத்தேன்.

லைலாவிற்கும் ஸையது முஹம்மதுவிற்கும் வெட்கம் என்ற ஒன்று இன்னும் உண்டாகவில்லை. அவர்களுக்கும் தோன்றியிருந்தால் என்ன செய்திருப்பேன்? என்னிடம் இரண்டே துண்டுகள்தான் இருந்தன. வெள்ளை மணல் பரவியிருந்த சாலை வழியாக நாங்கள் நடந்தோம்.

நாங்கள் போகும்போது வீட்டில் அப்துல்காதரும் ஹனீஃபாவும் சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். சண்டைக்குக் காரணம் குறிப்பிட்டுக் கூறும்படியாக ஒன்றுமில்லை. நேற்று வீட்டில் ரேஷன் வாங்குவதற்கு ஹனீஃபா எதுவும் தரவில்லை என்பதை அப்துல்காதர் தெரிந்து கொண்டான். அதை ஹனீஃபா விரும்பவில்லை. அதனால் அவனும் குடும்பமும் வீட்டைவிட்டு போவதாக இருக்கிறார்கள்.

“புறப்படு அய்ஸோம்மா!” ஹனீஃபா சொன்னான்: “பிள்ளைங்களையும் கூப்பிடு.”

அவனும் அவனுடைய குடும்பமும் அவர்களின் வாழைத் தோட்டத்தில் போய் வசிக்கப் போகிறார்கள். நான் பார்த்தபோது அவன் என்னுடைய வேஷ்டியைக் கட்டியிருந்தான். யாருக்கும் தெரியாமல் எடுத்துக் கொண்டதுதான். நான் அருகில் சென்று கேட்ட போது, “பேசுறதுக்க நேரமில்லை எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு” என்று சொல்லிவிட்டு அவன் நடந்தான். படியின் அருகில் சென்றபோது அவன் சொன்னான்: “எனக்கு இந்த வீட்டுல எந்த உரிமையும் இல்லாமப் போச்சு.”

ஹனீஃபா தன்னுடைய தையல் கடையை நோக்கிப் போனான்.

நான் அப்துல் காதரைப் பார்த்துக் கேட்டேன்: “டேய், என்னை இந்த ஆர்ப்பாட்டங்கள்ல இருந்து கொஞ்சம் காப்பாற்றக் கூடாதா? அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட சொல்லி அறையை எனக்கு ஒதுக்கித் தரும்படி இன்னொரு தடவை சொல்லக் கூடாதா?”

அப்துல் காதர் சொன்னான்: “அண்ணே, உங்களுக்கு இங்கே என்ன குறை? எண்ணெய், நெய், பால், தேநீர், தீப்பெட்டி, நேந்திர வாழைப்பழம், தக்காளி, அன்னாசிப்பழம், பூவன் பழம், கண்ணன்பழம், பலாப்பழம், சாப்பாடு கூட படுக்குறதுக்கு உம்மா, நான்,அபு, கொச்சுண்ணி- இதுக்கு மேல என்ன வேணும்?”

அப்துல் காதர் ஒரு பள்ளிக்கூட ஆசிரியராக இருந்தவன். எதையும் பெரிய அளவில் விளக்கிப் பேசுவான். முன்பொரு முறை அவன் உம்மாவிடம் சொன்னான்: “மாதாவே, எனக்குக் கொஞ்சம் தூய நீர் வேண்டும்.” அன்று உம்மா சாதம் பரிமாறும் பெரிய கரண்டியால் அவனை அடித்து விட்டாள். வாப்பா அவனைத் தேற்றினார்.

“நீ அப்படிச் சொன்னதுனால ஒண்ணுமில்லடா. என்னை எப்படிடா கூப்பிடுவே!”

“பிதான்னு.”

அதைக் கேட்டதும் கரண்டியால் உம்மா மீண்டும் அவனை அடித்தாள். அதற்குப் பிறகு அவன் உம்மா என்றும் வாப்பா என்றும் அழைக்க ஆரம்பித்தான்.

சரியான வாய்ச் சவடால்காரன்!

அவனையும் என்னையும் ஒரே நாளில் பள்ளிக் கூடத்தில் சேர்த்தார்கள். அப்போது அது ‘முகமதியர் பள்ளிக்கூட’மாக இருந்தது. உம்பியண்ணன் என்ற பெயரைக் கொண்ட ஒரு பக்தர் அந்தப் பள்ளிக்கூடத்தை உண்டாக்கினார்.

புதுஸ்ஸேரி நாராயண பிள்ளை சார் (இந்த நாராயண பிள்ளை ஸார் மரணமடையும் வரையில் என்னைத் தேடி வருவார். நான் எழுதியவற்றைப் படித்து என்னைப் பாராட்டுவார். அவர் இந்த உலகை விட்டு நீங்கிவிட்டார். அவருக்குச் சாந்தி கிடைக்க வேண்டுகிறேன்- பஷீர்)தான் அப்போது முதல் வகுப்பிற்கு ஆசிரியர் அவர்தான் எனக்கும் அப்துல்காதருக்கும் ‘அ... ஆ...’ எழுதித் தந்தவர்.

அப்துல்காதர் பள்ளிக்கூடத்திலும் வெளியிலும் நிறைய சேட்டைகள் செய்வான். வீட்டில் அவன் செல்லப்பிள்ளை. நான் பள்ளிக்கூடத்தில் மரியாதையுடன் நடந்து கொள்வேன். நாராயண பிள்ளை சார் அவனைப் பலமுறை அடித்திருக்கிறார்.

அப்துல்காதர் இடது காலில் நின்றுகொண்டு வலது காலை சுற்றிலும் வீசி படிக்கும் பிள்ளைகளை உதைப்பான். அப்படி என்னையும் உதைத்திருக்கிறான். பிறகு தன்னுடைய வலதுகால் பாதத்தை மூக்கிற்கு நேராக காட்டியவாறு கேட்பான்: “இப்படிக் காட்ட முடியுமா?”

நிச்சயமாக முடியாது! எப்படி முடியும்? மற்றவர்களின் கால் இப்படியா தொங்கிக் கொண்டிருக்கும்? மற்ற யாராலும் இப்படிக் காட்ட முடியாது.

“அப்படின்னா மோந்து பாருங்க” - அவன் கூறுவான்.


அவனுடைய வலது காலின் பாதத்தை மற்றவர்கள் முகர்ந்து பார்க்க வேண்டும். இல்லாவிட்டால் அவன் அடிப்பான். பிள்ளைகள் தூரத்தில் விலகி நின்றிருந்தால் அவன் தன்னைத்தானே நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுவான். அவனுடைய அந்த ஊனமான கால் காரணமாக பொது மக்களுக்கு அவன்மீது ஒரு அனுதாபம் இருந்தது. அதை வைத்துக்கொண்டு அவன் தாறுமாறாக நடப்பான். அவன் எது செய்தாலும், குற்றம் மற்றவர்கள் மீதுதான் போய் விழும். பிள்ளைகள் அவனிடம் அடி வாங்குவதற்குத் தயாராக இருப்பார்கள். நானும் அவனிடம் நிறைய அடிகள் வாங்கியிருக்கிறேன். நான் வாங்கிய அடிகளுக்குக் கணக்கே இல்லை. அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமக்க வேண்டும். நான் மூத்தவனாயிற்றே! நியாயமாகப் பார்த்தால் தம்பிமார்கள்தான் அண்ணன்மார்களின் சிலேட்டையும் புத்தகங்களையும் சுமக்க வேண்டும். மாறாக, நான் அவனுடைய பொருட்களைச் சுமந்தேன். இல்லாவிட்டால் அடி, உதை!

ஏராளமாக அடிகள் வாங்கினேன். நான் சிலேட்டையும் புத்தகங்களையும் நிறைய சுமந்திருக்கிறேன். எதிர்க்க வேண்டும் என்று வெறி உள்ளுக்குள் இருந்தது. ஆனால், என்ன செய்வது? அவன் சிலேட்டையும் புத்தகங்களையும் சாலையில் வைத்துவிட்டு கையைச் சுருட்டி விட்டுக்கொண்டு எனக்கருகில் நின்றுகொண்டு கூறுவான்.

“என் சிலேட்டையும் புத்தகங்களையும் எடுக்கணும்.”

“எடுக்க முடியாது” என்றுதான் ஒவ்வொரு நாளும் கூறுவேன். அதற்கு நியாயமான காரணங்களை அவனிடம் நான் கூறுவேன்.

“டேய், நான் உன்னோட அண்ணன்டா!”

“அதை எடுக்க முடியுமா? முடியாதா?”

“முடியாது.”

அப்போது ஒற்றைக்காலில் நின்றுகொண்டு இன்னொரு காலில் என் நெஞ்சில் ஓங்கி மிதிப்பான். அவ்வளவுதான். நான் தலைச் சுற்றி கீழே விழுந்து அப்படியே கிடப்பேன். அவன் சற்று தள்ளி நின்று கொண்டு உரத்த குரலில் கட்டளையிடுவான்.

“ம்... எந்திரிச்சு சிலேட்டையும், புத்தகங்களையும் எடு. தாமதமா போனா சார் அடிப்பாரு.”

நான் தரையில் கிடந்தவாறு மனவருத்தத்துடன் சிந்திப்பேன். இது எங்கிருக்கும் நியாயம்? தம்பி அடிப்பான். அண்ணன் ஏற்றுக்கொள்ள வேண்டும். பிறகு புத்தகங்களையும் சிலேட்டையும் சுமக்க வேண்டும். நான் அப்படியே கிடப்பேன். அவன் என்னுடைய நெஞ்சின்மீது உட்காருவான். பிறகு கேட்பான்: “அடி வேணுமா?”

நான் உண்மையைச் சொல்லுவேன்: “வேண்டாம். நான் சுமக்கறேன்.”

அந்த நிமிடமே எழுந்து அவனுடைய சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமந்துகொண்டு நடப்பேன். எவ்வளவு நாட்கள் எத்தனை அடிகள்!

இப்படி நடந்து கொண்டிருக்கும்பொழுது எனக்கு ஒருநாள் ஒரு எண்ணம் தோன்றியது. அறிவின் உதயம்! அடிப்பதற்காக அவன் கையை வீசுவதற்கு முன்பு நான் என் காலால் ஒரு உதை கொடுத்தேன்; அவனுடைய நன்றாக இருக்கும் காலில்!

அடுத்த நிமிடம் அப்துல்காதர் ‘சுளுக்கோ பிளுக்கோ’ என்று தரையில் விழுந்து கிடந்தான் மல்லாக்க!

நான் உடனே அவனுடைய நெஞ்சின்மீது போய் உட்கார்ந்தேன். நான் ஏதோ தவறாக நடந்துவிட்டதைப் போல் கவலை தோய்ந்த குரலில் அவன் கேட்டான்.

“இது என்ன? நான் சின்னப் பையன்தானே? என் நெஞ்சுல ஏறி உட்காரலாமா?”

அவனை அடிப்பதற்காக நான் கையைச் சுருட்டினேன். அவன் அழ ஆரம்பித்துவிட்டான். கண்ணீர்!

“என்னை அடிக்க வேண்டாம். நான் யாரு? தம்பி இல்லியா?”

தம்பி! அடடா...!

“உனக்கு இந்த உண்மை இதுக்கு முன்னாடி தெரியாதா?”

“நான் இனிமேல் இதை ஞாபகத்துல வச்சிருப்பேன்.”

“டேய்...” -நான் கேட்டேன்: “நாயைப் பார்த்ததும் முன்னாடி கல்லை விட்டு எறியிறது யாரு?”

“அண்ணன் நீங்கதான்”

"ஆற்றுல குளிக்கிறப்போ தண்ணியில மூழ்கிக்கிட்டே முன்னாடி அந்தக் கரைக்குப் போறது யாரு?"

“அண்ணன் நீங்கதான்.”

“வீட்டுல எதையாவது திருடினா முன்னாடியே உனக்குத் தர்றது யாரு?”

“அண்ணன் நீங்கதான்.”

“நாராயணப் பிள்ளை சாராட மேஜையில இருந்து சாக்பீஸை எடுத்து உனக்குத் தர்றது யாரு?”

“அண்ணன் நீங்கதான்.”

“பிறகு என்ன?”

அவன் சொன்னான்:

“அண்ணே... உங்க சிலேட்டையும் புத்தகங்களையும் நான் சுமக்குறேன்.”

“நான் சொன்னேன்: உன் சிலேட்டையும், புத்தகங்களையும் நீ சும.”

“அப்படின்னா முன்னாடி நடக்கறது யாரு?”

“நான்!”

அன்று முதல் அப்துல்காதர் தம்பியானான். அவன்தான் இவன்.

போக்கிரி!

“டேய்” -நான் சொன்னேன்: “அந்த இன்ஸ்பெக்டர்கிட்ட இடத்தை ஒதுக்கித் தரும்படி நீ சொல்லக்கூடாதா? நான் இந்த வீட்டுல நடக்குற ஆர்ப்பாட்டத்துல சிக்கிக்கிட்டு அவதிப்படுறேன். உனக்கு அது புரியாது.”

“அண்ணே அந்த ஆளு வேற இடம் பார்த்துக்கிட்டு இருக்காரு. எக்ஸைஸ்காரர்களும் இடம் பார்த்துக்கிட்டு இருக்காங்க. கொஞ்ச நாட்கள் பொறுமையா இங்கேயே இருங்க!”

அவன் இரும்பு ஊன்றுகோலை இறுகப் பற்றியவாறு தன்னுடைய கடையை நோக்கி விந்தி விந்தி நடந்தான்.

நான் ஒரு அன்னாசிப் பழத்தின் பாதியை அறுத்து மேற்தோலைச் செதுக்கிக் கொண்டிருக்கும்பொழுது பாத்தும்மாவின் ஆடு ஜன்னலுக்குப் பக்கத்திலும், குழந்தைகள் கதவுக்குப் பக்கத்திலும் வந்து நின்றார்கள். நேந்திர வாழைப் பழத்தையும், கண்ணன் பழத்தையும் நெய்யையும் புட்டில் சேர்த்துக் குழைத்து பிள்ளைகளுக்கு நான் ஒவ்வொரு உருண்டையாக தருவேன். அன்னாசிப் பழத்தின் ஒவ்வொரு துண்டையும்தான். அது கிடைத்துவிட்டால் பிள்ளைகளுக்கு உண்டாகும் மகிழ்ச்சியைப் பார்க்க வேண்டுமே!

சில நேரங்களில் அபி, பாத்துக்குட்டி, லைலா, ஆரீஃபா, கதீஜா ஆகியோர் இல்லாமல் ஆனும்மாவின் மகன் ஸையதுமுஹம்மது எனக்கு முன்னால் வந்தும் வராதது மாதிரி மெதுவாகச் சிணுங்கிக்கொண்டே தூணைப் பிடித்துக் கொண்டு நின்றவாறு தன்னுடைய முகத்தைக் காட்டுவான். அவனுக்கு ஒரு ஸ்பெஷல் உருண்டையை நான் தருவேன். பலகாரத்தைச் சாப்பிட்டு முடித்து பழத்தோலை பாத்தும்மாவின் ஆட்டிற்குத் தருவேன். பிறகு கையைக் கழுவிவிட்டு தேநீருடன் வராந்தாவில் போடப் பட்டிருக்கும் நாற்காலியில் வந்து அமர்வேன். அப்போது பள்ளிக் குழந்தைகள் போய்க் கொண்டிருப்பார்கள். வழக்கம்போல பெண் பிள்ளைகள் தங்களின் பிரகாசமான கண்களால் என்னைப் பார்ப்பார்கள்.

பெண் பிள்ளைகளின் அந்த அழகான பார்வையில் மறைந்திருக்கும் அந்தப் புனித ரகசியத்தைப் பிறகுதான் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. அதைப் பிறகு கூறுகிறேன்.

அன்று அபியும் பாத்துக்குட்டியும் எப்போதும் போல பள்ளிக் கூடத்திற்குப் புறப்பட்டார்கள். சிறிது நேரம் சென்றதும் அபி, பாத்து இருவரும் சாலையில் ஒளிந்துகொண்டு கையைக் காட்டி என்னை அழைத்தார்கள்.

என்ன நடந்தது?

நான் வெளியே சென்றேன். பாத்துக்குட்டி ஒரு தென்னை மரத்திற்குக் கீழே ஒளிந்திருந்தாள். நான் சென்றவுடன் அபி சொன்னான்:

“பெரியப்பா... வாப்பா சிலேட் குச்சி வாங்கத் தந்த அரை அணா...”

“அரை அணா?”

“ட்ரவுசர் பாக்கெட்ல இருந்துச்சு...”

“நீ என்னடா சொல்ற?”

“ஆடு தின்ன பாக்கெட்ல இருந்துச்சு...”


அடடா! பாத்தும்மாவின் ஆடு அரை அணாவையும் தின்றுவிட்டது. ஆனால், ஆடு நாணயத்தைத் தின்னுமா?

நான் சொன்னேன்: “நீங்க இந்த விஷயத்தை வேற யார்கிட்டயும் சொல்ல வேண்டாம். பரம ரகசியமா இதை வச்சிடுங்க... அரை அணா கிடைக்க என்ன வழின்னு நான் பார்க்குறேன்”

அபி ஞாபகப்படுத்தினான்.

“பாட்டிக்குத் தெரிஞ்சா அடிப்பாங்க.”

“ஒளிஞ்சு நின்னுக்கங்க.”

நான் வந்து பாத்தும்மாவிடம் இரண்டனா கடன் வாங்கி அதில் அரை அணாவைக் கொண்டுபோய் அபிக்கும் பாத்துக்குட்டிக்கும் கொடுத்து அவர்களைப் பள்ளிக்கூடத்திற்கு அனுப்பி வைத்தேன்.

பாத்தும்மாவின் ஆடு வாசலில் நின்றிருந்தது. எந்த நிமிடத்திலும் இரண்டு காலணாக்கள் கீழே விழலாம். நான் அதை எதிர்பார்த்து உட்கார்ந்திருந்தேன். ஆனால், சிறுசிறு உருண்டைகள் மட்டுமே விழுந்து கொண்டிருந்தன. வட்டமாக எதுவும் விழவில்லை. என்ன காரணம்?

விழாமல் இருக்குமா? என் கண்கள் ஆட்டின் பின் பகுதியையே பார்த்துக் கொண்டிருந்தன.

அப்படி நான் உட்கார்ந்திருந்தபொழுது தங்களின் அகலமான கண்களால் என்னைப் பார்த்தவாறு கூட்டம் கூட்டமாக மாணவிகள் சாலையில் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அழகு ரத்தினங்கள்! எனக்குச் சந்தோஷமாக இருந்தது. நான் யாரென்று அவர்களுக்குத் தெரியும். அதனால்தான் அவர்கள் அப்படிப் பார்த்துக்கொண்டு போகிறார்கள். அவர்களுக்குள் ஒரு உரையாடல் நடக்கும். (அதை நான் அழகாகக் கற்பனை பண்ணியிருக்கிறேன் என்பதை ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும்.)

சுருள் முடிக்காரி: “அந்த சாய்வு நாற்காலியில் சாய்ந்து படுத்திருக்கறது யாருன்னு தெரியுமா?”

மான் கண்ணி: “தெரியாதா என்ன? பிரபல இலக்கியவாதியான வைக்கம் முஹம்மது பஷீர்!”

கோகுல வாணி: “நான் என்னோட ஆட்டோக்ராஃப் புத்தகத்துல அவரோட கையெழுத்து வாங்கப் போறேன்.”

பூனைக் கண்ணி: “அது அவர் இல்ல. அந்தக் குடிசை மாதிரி வீட்டைப் பார்க்கறேல்ல!”

மதுவாணி: “போடி பூனைக் கண்ணி! அவர்தான் அது. இப்போ என் ஆட்டோக்ராஃப் புத்தகத்துல அவரோட கையெழுத்தை நான் வாங்கட்டுமா?”

பூனைக் கண்ணி: “சரிடி- அதையும் பார்த்திடுவோமே?”

அன்று மதியம் சாப்பிட்டு முடித்து பள்ளிக்கூடம் போகும் வழியில் அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள்.

அப்போது வேறொரு சம்பவம் ஞாபகத்தில் வருகிறது. நான் அந்த இன்னொரு கட்டிடத்தில் அப்போது இருந்தேன்.

நான் வந்திருக்கும் விஷயம் தெரிந்து உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வந்து சொன்னார்- பள்ளிக்கூட ஆண்டு விழா நடக்கப் போகிறதென்றும், அதில் நான் வந்து பேச வேண்டுமென்றும், பிள்ளைகளுக்கு அறிவுரை கூற வேண்டுமென்றும் சொன்னார்.

“என்னால் பேச முடியாது. ஏன்னா அந்த நேரத்துல நான் இங்க இருக்க மாட்டேன்.”

அவர் சொன்னார்: “நாங்க நோட்டீஸ்ல உங்க பேரையும் போட்டுடறோம். இங்கே இருந்தா வந்தா போதும்...”

நோட்டீஸ் அடித்தார்கள். பெயரும் இருந்தது. நான் என்ன செய்வது? மன அமைதியுடன் எதையாவது எழுத வந்த ஆள்! ம்ஹும்!

செடிகளுக்கு மத்தியில் நான் நின்றிருந்தபோது, கேட்டின் இடைவெளியில் இரண்டு கண்கள்! சுருண்ட முடியைக் கொண்ட ஒரு பெண் பிள்ளை. நான் நினைத்தேன்- ஏதாவது முல்லைப் பூவிற்கோ பிச்சிப் பூவிற்கோ இருக்கலாம் என்று.

நான் கேட்டேன்: “என்ன?”

அவள் சொன்னாள்:

“நோட்டீஸ்ல பேர் போட்டிருக்கு, எங்க பள்ளிக்கூடத்துல வந்து பேசணும். வராம இருக்கக்கூடாது. தெரியுதா?”

“அப்போ இருந்தா வர்றேன்.”

பிறகு ஒவ்வொரு நாளும் அவளும் மற்ற பெண் பிள்ளைகளும் கேட்டிற்குப் பக்கத்தில் நின்று அழைத்துக் கூறுவார்கள். “வராம இருக்கக் கூடாது தெரியுதா?”

கடைசியில் ஆண்டு விழாவிற்கு முந்தைய நாள் நான் அங்கிருந்து கிளம்பி விட்டேன். பெட்டி, படுக்கை- எதையும் எடுக்காமல்தான். வெறுங்கையுடன் உம்மாவிடம் மட்டும் சொன்னேன். பிறகு ஆண்டு விழா முடிந்த மறுநாள் நான் திரும்பி வந்தேன். அன்றே சுருள் முடிக்காரியும் மற்றவர்களும் வந்து கேட்டார்கள்.

“என்ன இப்படி நடந்துட்டீங்க!”

நான் சொன்னேன்:

“இருந்தா வர்றேன்னுதானே சொன்னேன்?”

“நல்ல ஆளுதான்.”

அந்த விஷயம் அத்துடன் முடிந்தது.

படியைத் தாண்டி வந்து கொண்டிருக்கும் பெண் பிள்ளைகளில் அந்தச் சுருள் முடிக்காரி இருக்கிறாளா என்று பார்த்தேன்; இல்லை. எல்லாரும் வளர்ந்திருக்க வேண்டும். எவ்வளவு வேகமாக இந்தப் பெண் பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி விடுகிறார்கள்!

நான் அவர்களின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தில் எழுதுவதற்காகப் பேனாவை எடுக்க எண்ணினேன். அப்போது நினைத்தேன்- வரட்டும். சிறிது நேரம் அவர்கள் நிற்கட்டும்.

அவர்கள் வந்தார்கள். என்னைப் பார்க்கவில்லை. அவர்கள் நேராக சாம்ப மரத்தடிக்குப் போய் உம்மாவிடம் என்னவோ கூறிவிட்டு எதையோ கொடுத்தார்கள். உம்மா துணி முனையிலிருந்து சாம்பங்காய்களை எடுத்து அவர்களிடம் கொடுத்தாள். அவர்கள் ஒவ்வொருவரும் சாம்பங்காய்களை அங்கு நின்றவாறு கடித்துத் தின்றுகொண்டு சாம்ப மரத்தை ஏக்கத்துடன் வாயில் நீர் ஊற பார்த்தார்கள். ஏங்கும் கழுதைகள்! உம்மாவின் அழுக்கடைந்த துணி முந்தானையில் கட்டியிருந்த சாம்பங்காய்களைத்தான் அவர்கள் ஆர்வத்துடன் அப்படித் தின்றார்கள. அப்படியென்றால் சுத்தமான மனிதனான என்னைப் பார்க்க மாட்டார்களா? கழுதைக் கூட்டங்களே!

ஒரு அதிர்ச்சியுடன் எனக்கு ரகசியங்களெல்லாம் புரிந்துவிட்டன. பெண் பிள்ளைகள் பார்த்தது என்னை அல்ல. சாம்பங்காய்களை. சரியான பெண்கள்தானே!

பெண் பிள்ளைகள் அனைவரும் சாம்பங்காய்களுடன் போன பிறகு நான் உம்மாவிடம் கேட்டேன்: “அவங்க என்ன உம்மா தந்தாங்க?”

உம்மா சொன்னாள்: “ஒரு அணா.”

“அந்தப் பெண் பிள்ளைகளுக்குச் சாம்பங்காய்களை விற்றீங்களா?”

“பிறகு?”

“ஒரு அணாவுக்கு எத்தனை கொடுத்தீங்க?”

“இருபது.”

சரிதான்! நான் எவ்வளவு இருபது காய்களை பாத்தும்மாவின் ஆட்டிற்குத் தின்னக் கொடுத்திருக்கிறேன்!

அந்தப் பெண் பிள்ளைகள் என்னைப் பார்க்காமல் போனதை வருத்தத்துடன் நினைத்துக்கொண்டே நான் சிந்தித்தேன். “அந்த சாம்ப மரத்தை நட்டு வளர்த்தது யார்?” உம்மாவிடம் கேட்டேன்.

உம்மா சொன்னாள்:

“இது நீ தனியாக்கல்ல இருந்து கொண்டுவந்து நட்டதாக்கும்.”

தெரிகிறதா? தனியாக்கல் என்ற ஒரு ஜாக்கபியட் கிறிஸ்தவ குடும்பம் பக்கத்தில் இருக்கிறது. அங்கு தொம்மன், மாத்தான்குஞ்ஞ, குஞ்ஞப்பன் ஆகிய எனக்கு மிகவும் பிடித்தமானவர்கள் இருக்கிறார்கள். அங்கிருந்து நான் கொண்டுவந்தேன். நான்... நான் நட்டு வளர்த்த மரம்தானே இது? கழுதைகள் என்னைப் பார்க்கவில்லை. நான் வேகமாக எழுந்து உம்மாவிடம் சொன்னேன். “அந்த ஒரு அணாவை இங்கே கொடுங்க.”

உம்மா அதை உடனே என் கையில் தந்தாள். நான் போய் பீடி வாங்கினேன். பிறகு ஆற்றங்கரையில் போய் உட்கார்ந்தேன். பழைய நதியைப் பார்த்தேன். என்னைப் பார்க்காமல் போன அந்தப் பெண் பிள்ளைகளை நினைத்தவாறு புகையை விட்டேன். ஃபூ!


பிறகு ஒவ்வொரு நாளும் பெண் பிள்ளைகள் என்னுடைய சாம்பமரத்தைப் பார்ப்பார்கள். அதில் நிறைய சாம்பங்காய்கள் இருந்தன. நான் எனக்குள் கூறினேன்:

‘கழுதைகளே! பாருங்க. என்னோட சாம்ப மரம் அது. இந்த நான் நட்டு வளர்த்த மரம். கழுதைகள்!’

அவர்களை எப்படிப் பழிக்குப் பழி வாங்குவது? நாற்காலியில் அப்படியே உட்கார்ந்திருப்பேன். அறையில் போய் படுக்க நினைப்பதில்லை. அப்படி இருந்தபோது அவர்கள் வந்தார்கள்! நான் எழுந்து போய் அலட்சியமான குரலில் அவர்களிடம் கேட்டேன்: “என்ன வேணும்?”

“அரை அணாவுக்கு சாம்பங்கா!”

“காசை எடு.”

காசை வாங்கி இடுப்பில் செருகினேன். பிறகு மிகவும் சிறிய சாம்பங்காய்களாகப் பார்த்து பத்தை எடுத்து அவர்களிடம் தந்தேன்.

“இது என்ன? எல்லாம் சின்னச் சின்னதா இருக்கு. அந்தப் பாட்டியா இருந்தா, பெரிய பெரிய காய்களா தருவாங்க.”

“அந்தப் பாட்டிக்கு இந்த மரத்துல உரிமை இல்ல. அதனாலதான் அவங்க அப்படித் தந்தாங்க.”

கழுதைகள்!

“அப்படின்னா இன்னொன்னு தாங்க.”

“இந்த மரத்தைக் கஷ்டப்பட்டு வளர்த்த ஆளுக்கு அப்படித்தர விருப்பமில்ல.”

ஒரு சாம்பங்காய்கூட அதிகமாக நான் தரவில்லை.

“என்ன மனிதர்!” என்று கூறியவாறு அந்தப் பெண் பிள்ளைகள் நடந்தார்கள. பெரிய வயிறைக் கொண்ட பெண்கள்! என்னைச் சிறிது கூட அவர்கள் பார்க்க மாட்டார்கள். வெட்கமில்லாமல் என்னுடைய சாம்ப மரத்தைப் பார்ப்பார்கள்!

இப்படி நான் சாம்பங்காய்களை விற்றுக் கொண்டிருந்தபோது உம்மா வந்து காசு கேட்பாள். நான் அவளிடம் கேட்பேன்: “எதுக்கு? உம்மா, இந்த சாம்ப மரத்துல உங்களுக்கு என்ன உரிமை இருக்கு? இது நான் கஷ்டப்பட்டு கொண்டுவந்து நட்டது. என்னோட இரத்தம்தான் இந்த சாம்பங்காயா காய்ச்சு தொங்குது. உம்மா, நீங்க இதை எத்தனை வருடங்களா விக்கிறீங்க? அந்தப் பணமெல்லாம் எங்கே?”

உம்மா தோற்றுப்போய் அங்கே நின்றிருந்தாள். நான் விடவில்லை.

“பிறகு... எதுக்கு எடுத்தாலும் காசு. அது வாங்கணும், இது வாங்கணும்னு எவ்வளவு பணம்! ம்ஹும்! யார் அந்தப் புளிய மரத்தை நட்டது?”

வாசலின் ஒரு பக்கம் பெரிய ஒரு புளியமரம் இருக்கிறது. பச்சை நிறத்தில் புளியங்காய்கள் சடைச் சடையாய் தொங்கிக் கொண்டிருந்தன. அதையும் உம்மா பறித்து விற்கிறாள். அந்தப் புளிய மரமும் நான் நட்டு வளர்த்ததுதானே?

உம்மா சொன்னாள்: “அது உன்னோட வாப்பா நட்டு வளர்த்தது. நான் அதுக்கு எவ்வளவு தண்ணி ஊத்தியிருக்கேன், தெரியுமா?”

அப்படியென்றால் அதில் நமக்கு உரிமையில்லை. சரி போகட்டும்!

உம்மா முணுமுணுத்துக் கொண்டே அந்தப் பக்கம் போனாள்.

நான் ஆனும்மாவை அழைத்து ஒரு தேநீர் கொண்டு வரும்படி சொன்னேன். ஆனும்மா பக்கத்து வீட்டிற்குச் சென்று ஒரு பையன் மூலம் தேநீர் கொடுத்து விட்டாள். நான் அதைக் குடித்தவாறு ஒரு பீடியைப் பற்ற வைத்து புகைத்துக் கொண்டே, இனிய அனுபவங்களில் மூழ்கி இருந்தபொழுது வருகிறாள் ஒரு கருப்பழகி. அவளுக்குப் பதினாறு வயது இருக்கும். சாம்பங்காய் வாங்கத்தான். காலணாக் காரியோ? அரையணாக்காரியோ? கழுதைக்கு சிறிய சாம்பங்காய்களைத் தான் தர வேண்டும். ஆனால், அவள் சாம்பமரம் நிற்கும் இடத்தைப் பார்க்கவேயில்லை. அவள் நேராக எனக்கு அருகில் வந்து வணங்கினாள். பிறகு சொன்னாள்: “சார், உங்களை எனக்குத் தெரியும். உங்களோட எல்லா புத்தகங்களையும் நான் படிச்சிருக்கேன். நீங்க இங்கே வந்திருக்கறதா என் அப்பா சொன்னாரு. அதனாலதான் வந்தேன். என் ஆட்டோக்ராஃப் புத்தகத்துல ஏதாவது எழுதி நீங்க கையெழுத்துப் போட்டுத் தரணும்.

ஹா! என்னுடைய மானத்தைக் காப்பாற்ற வந்த அழகான கருத்த பெண்ணே, நீ வாழ்க! அந்த நிலவைப் போல நீ சுகமாக வாழ வேண்டும்!

“உன் பேரு என்ன?” - நான் கேட்டேன்.

அவள் சொன்னாள்: “சுஹாசினி.”

“எந்த வகுப்புல படிக்கிற?”

“ஆறாம் வகுப்புல.”

“நீ யாரோட பொண்ணு?”

“நான் சுமை தூக்கும் மாதவனோட மகள்.”

தொழிலாளியின் மகள் அவள்!

தொழிலாளிகள் வெற்றி பெறட்டும்!

நான் அறைக்குள் சென்று பேனாவை எடுத்துக்கொண்டு வந்து சுஹாசினியின் ஆட்டோக்ராஃப் புத்தகத்தில் ‘சுஹாசினிக்கு எல்லா நலங்களும் கிடைக்க வேண்டுமென்று ஆசீர்வதிக்கிறேன்’ என்று எழுதி கையெழுத்துப் போட்டுக் கொடுத்தேன். பிறகு சுஹாசினியிடம் கேட்டேன்: “சாம்பங்காய் சாப்பிட்டிருக்கிறியா?”

“சாப்பிட்டிருக்கேன்.” -அவள் சொன்னாள்.

நான் ஒரு பெரிய பேப்பரைக் கொண்டுவந்து சாம்ப மரத்தின் மீது ஏறி ஐம்பது பெரிய சிவப்பு நிறத்தில் இருந்த பழங்களைப் பறித்து பேப்பரில் வைத்துக் கட்டி அவளிடம் கொடுத்துவிட்டுச் சொன்னேன்: “சுஹாசினி, இந்த சாம்பமரம் நான் நட்டு வளர்த்ததாக்கும்.”

“உண்மையா?”

“உண்மை...”

அவள் வணங்கிவிட்டுப் புறப்பட்டாள்.

அன்று இரவு ஒரு சிறப்பு செய்தியைக் கேட்டேன்.

‘பாத்தும்மாவின் ஆடு உடனே பிரசவமாகும்’ -இதுதான் அந்தச் செய்தி.

ஆடு கர்ப்பமாக இருக்கிறது என்பது அல்ல- உடனே அது பிரசவமாகப் போகிறது! இந்த விசேஷ செய்தி எனக்கு எப்படி தெரியாமல் போனது? அது கர்ப்பமாக இருப்பது மாதிரி இப்போது பார்க்கும்போது கூட எனக்குத் தோன்றவில்லை. சில நேரங்களில் வயிறு பெரிதாக இருக்கும். சில நேரங்களில் வயிறு ஒட்டிப்போய் காணப்படும். கர்ப்பமாக இருந்தால் அப்படி இருக்குமா? நான் உம்மாவிடம் கேட்டேன்.

உம்மா சொன்னாள்:

“அது குட்டி போடப் போகுது.”

எனக்கு சந்தேகம் உண்மையாகவா? அது ஏன் எனக்குத் தோன்றவில்லை?

பெண்கள் எல்லாரும் கூறுகிறார்களே! பெண்கள்தானே பிரசவங்களுக்கான முழு அதிகாரத்தைப் பெற்றவர்கள்?

சுக பிரசவமாக இருக்குமா?

3

ப்படியென்றால் பாத்தும்மாவின் ஆடு உண்மையாகவே பிரசவமாகப் போகிறது. நல்ல விஷயம்தான். பிரசவிக்கட்டும். எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது. பிரசவம் எப்போது?

ஆனும்மா என்னுடைய அறையைப் பெருக்கி, படுக்கையை எடுத்துக்கொண்டு போய் வெயிலில் போட்டுவிட்டு வந்தபோது நான் கேட்டேன்: “ஆட்டுக்கு ஏதாவது கொடுத்தியா, தங்கச்சி?”

அதற்குக் கஞ்சி கொடுத்ததாக ஆனும்மா சொன்னாள்.

“கஞ்சி நீர் போதாது. அதுக்குப் புல் தரணும். கொஞ்சம் புண்ணாக்கு வாங்கித் தண்ணியில கலந்து கொடுக்கிறது நல்லது!”

இந்த அறிவுரைகளுக்குப் பிறகு கொஞ்சம் அதிகமாகவே பழத் தோல்களையும் ஒரு சிறு பழத்தையும் ஆட்டிற்குக் கொடுக்கும்படி சொல்லி ஆனும்மாவிடம் கொடுத்தேன். ஆனும்மா அருமையாக என்னுடைய கண்களுக்கு முன்னாலேயே ஆட்டிற்கு அவற்றைக் கொடுத்தாள். ஆனால் பெண்களிடம் ஏதோ பெரிய அளவில் தவறு நேர்ந்திருக்கிறது என்பதை மட்டும் என்னால் புரிந்துகொள்ள முடிந்தது.


என்ன இருந்தாலும் அத்தாரிட்டிகள் பெண்களாயிற்றே! அந்த உண்மையை நான் ஒப்புக் கொள்ளவும் செய்கிறேன். இருந்தாலும்... கர்ப்ப விஷயத்தில் பெண்களுக்குப் பெரிய ஒரு தவறு நேர்ந்திருப்பதென்னவோ உண்மை! எப்போதுமில்லாத மகிழ்ச்சி எனக்கு உண்டானது. என்ன காரணமென்றால் எனக்கு முன்னால் நின்றிருந்த ஆட்டிற்கு கர்ப்பம் இல்லை. வயிறு இப்போது ஒட்டிப் போய்க் காணப்பட்டது. ஆடு சாம்ப மரத்திற்குக் கீழே விழுந்து கிடக்கும் சாம்பங்காய்களைத் தின்று கொண்டிருக்கிறது. அருகில் உம்மாவும் இருக்கிறாள். உம்மா சாம்பங்காய்களைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறாள்.

சிவப்பு நிறத்தில் பெரிய பனித்துளிகளைப் போல பச்சை இலைகளுக்கு மத்தியில் சாம்பங்காய்கள் காட்சியளிக்கின்றன. எனக்கு நேராக முன்னால், வாசலுக்கு மிகவும் அருகில், என்னுடைய இரத்தத் துளிகள்!

நான் அப்படி உட்கார்ந்திருக்கும் பொழுது வருகிறாள் பாத்தும்மா! ஆச்சரியம்தான். அவளுடன் ஒரு ஆடும் இருக்கிறது. கதீஜாவும்.விஷயம் என்னவென்றால் பாத்தும்மாவுடன் வரும் ஆட்டிற்குக் கர்ப்பம் இருக்கிறது!

நான் ஆனும்மாவிடம் கேட்டேன்: “இந்த ஆடு யாரோடது?”ஆனும்மா சொன்னாள்:

“இது என்னோட ஆடு. அக்கா கொடுத்தது!”

பாத்தும்மா ஆனும்மாவிற்குத் தந்த ஆடு அது!

உம்மா சொன்னாள்:

“பாத்தும்மா ஆட்டோட மூத்த மகள்.”

அப்படியென்றால் ஆனும்மாவுக்கும் ஒரு ஆடு இருக்கிறது! அது எனக்குப் பக்கத்திலேயே வசிக்கிறது. இருப்பினும் இந்த விஷயம் தெரியாமலே நான் இருந்திருக்கிறேன். இரண்டு ஆடுகளையும் வேறுபடுத்திப் பார்க்க என்னால் முடியவில்லை. இரண்டும் தவிட்டு நிறத்தில் ஒரே மாதிரி இருக்கின்றன. பிறகு நான் கூர்மையாகப் பார்த்தபோது பாத்தும்மாவின் ஆட்டின் கண்களைச் சுற்றிலும் ஒரு கறுப்பு அடையாளம் தெரிந்தது.

ஆடு வந்தவுடன் ஓடி வீட்டிற்குள் நுழைந்தது.

பாத்தும்மாவிடம் நான் கேட்டேன்: “என்ன பாத்தும்மா, ஆடும் நீயும் இன்னைக்கு ஏன் இவ்வளவு தாமதம்?”

பாத்தும்மா விஷயத்தை விளக்கினாள். கொச்சுண்ணி வாங்கித் தரும் புல் (இரவு நேரத்திற்கானது) போதவில்லை. ஆடு கர்ப்பமாக இருக்கிறது அல்லவா? அதனால் சில நிலங்களிலும், வயல்களிலும் இருக்கும் புல்லை மற்றவர்கள் அறுப்பதற்கு முன்பு அவள் போய் அறுத்து கொடுத்திருக்கிறாள்.

பாத்தும்மா அந்தப் பக்கம் போய் நாத்தனார்களிடமும் தங்கையிடமும் சண்டை போட்டாள். பாத்தும்மாவின் ஆட்டிற்கு வைத்திருந்த கஞ்சி நீர் போதாது!

“அதை அவள் எடுத்துக்கிட்ட. அவளோட ஆட்டுக்குக் கொடுத்துட்டா. இதை நீங்கள்லாம் பார்க்க வேண்டாமா?” நாத்தனார்களைப் பார்த்து பாத்தும்மா கேட்டாள்.

ஒரு நாத்தனார் சண்டை அங்கு நடக்க வேண்டும் என்று நான் ஆசைப்பட்டேன். நாத்தனார் சண்டையோ, மாமியார் சண்டையோ எதுவும் அங்கு நடக்கவில்லை. உம்மாவின் குரல் மட்டுமே அங்கு கேட்டது. எல்லாரையும் மனம் வந்தபடி அவள் திட்டிக் கொண்டிருந்தாள்.

அப்போது ஆனும்மாவின் குரல் கேட்டது.

“என் ஆட்டுக்குக் கஞ்சித்தண்ணி கொஞ்சம்தான் கொடுத்தேன். கொஞ்சம் நாங்க குடிச்சோம். மீதி அப்படியே இருந்துச்சு.”

நான் தந்த பழத்தோலை ஆனும்மாவின் ஆடுதான் தின்றது என்ற பரம ரகசியத்தை யாரிடமும் இதுவரை நான் சொல்லவில்லை.

“போதும்... போதும். நீ எதுவும் சொல்ல வேண்டாம்.” -பாத்தும்மா குறைபட்டாள்: “உம்மாவுக்கும் என்னைப் பிடிக்கல...”

“அடியே...” -உம்மா சொன்னாள்: “கப்பைக் கிழங்கு சாப்பிட்டுட்டு கொஞ்சம் கஞ்சித்தண்ணி குடிக்கணும். நாங்களும் கொஞ்சம்தான் குடிச்சோம். உன் ஆட்டுக்கு முழுசையும் வச்சாச்சு.”

கப்பைக் கிழங்கு தின்றுவிட்டு கஞ்சி நீர் குடிக்க வேண்டும் என்று உம்மா சொன்னாள் அல்லவா? கப்பைக்கிழங்கு எப்போது சாப்பிட்டாள்? விசாரித்துப் பார்த்தபோதுதான் அந்த ரகசியமும் கொஞ்சம் கொஞ்சமாகத் தெரிய வருகிறது. உம்மா, ஆனும்மா, அய்ஸோம்மா, குஞ்ஞானும்மா எல்லாரும் உண்மையாகச் சொல்லப்போனால் சோறு சாப்பிடுவதில்லை. அதாவது- அவர்களுக்கு அது கிடைக்கவில்லை என்று அர்த்தம். ஆண்களுக்கும் குழந்தைகளுக்கும் மட்டுமே சோறு. மீதியுள்ளவர்கள் கப்பைக் கிழங்கு சாப்பிட்டு வாழ்கிறார்கள். பகல் பதினோரு மணிக்கு காயவைத்த கப்பைக் கிழங்கை இடித்து தூள் தூளாக்கி தேங்காய்ப் பூவையும் உப்பையும் கலந்து வேக வைத்து புட்டு செய்து சாப்பிடுவார்கள். கொஞ்சம் தேயிலையை (அதை பெரும்பாலும் சுலைமான்தான் தருவான்) வெந்நீரில் போட்டு சர்க்கரையோ, பாலோ கலக்காமல் குடிப்பார்கள். அதற்குப் பிறகு தொடர்ந்து வேலைகளில் இறங்கிவிடுவார்கள். எல்லாரும் இப்படியொரு வாழ்க்கையை மனப்பூர்வமாக ஏற்றுக் கொள்கிறார்கள். ஆண்கள் சாப்பிடும் நேரத்திற்கு மட்டுமே வருவார்கள். பெண்கள்தான் துன்பங்களை அனுபவிப்பவர்கள். இது என்னுடைய வீட்டில் மட்டும் நடக்கும் கதை அல்ல. பெரும்பாலான எல்லா நடுத்தர மக்களின் வீடுகளிலும் இதுதான் நடந்து கொண்டிருக்கிறது. பெண்கள் மகத்தான சேவைகளைச் செய்து கொண்டிருக்கிறார்கள். இதை ஏன் ஆண்கள் தெரிந்து கொள்ளாமல் இருக்கிறார்கள்?

அப்துல்காதரின் மனைவி குஞ்ஞானும்மாவின் குரல் கேட்டது.

“பாத்தும்மா அண்ணா, ஆடு பிரசவம் ஆகிறப்போ எங்களை மறந்துடாதீங்க. ஸுபைதாவுக்குக் கொஞ்சம் பால் தரணும்.”

ஹனீஃபாவின் மனைவி அய்ஸோம்மா மிடுக்கான குரலில் கேட்டாள்: “என் ரஷீதுக்குப் பால் குடிச்சா இறங்காதா என்ன?”

சுலைமானின் மனைவி ஆனும்மா இலேசான கிண்டல் தொனிக்கச் சொன்னாள்: “ஸையது முஹம்மதும் பால் குடிச்சா பெரிய குறைவு ஒண்ணும் வந்திடாது.”

ஆனும்மா பள்ளிக்கூடத்திற்குப் போயிருக்கிறாள் என்பதைத்தான் முன்பே நான் கூறியிருக்கிறேனே! அவள் ஏதோ சுமாராகப் படித்திருக்கிறாள். பாத்தும்மா தன்னுடைய அக்காவாக இருந்தாலும் அவளுக்குப் படிப்பு குறைவு. அதனால் பாத்தும்மா இலேசான கோபத்துடன் சொன்னாள்: “போதும்... போதும்... உன்னோட பேச்சை நிறுத்து...”

சிறிது நேரம் கழித்து நான் மெதுவாக அறைக்குள் சென்றபோது பாத்தும்மாவின் ஆடு அங்கு நின்றிருந்தது. அது என்னுடைய பெட்டி மீது இருந்த இரண்டு நேந்திரப் பழங்களைத் தின்று தீர்த்திருந்தது. பாத்தும்மாவின் ஆடுதான்! ஆடு கிழக்குப் பக்கம் இருந்த வாசல் வழியாக உள்ளே நுழைந்திருக்கிறது. அதை அடைக்க ஆனும்மா மறந்துவிட்டிருக்கிறாள்.

நான் அழைத்துச் சொன்னேன்: “ஆனும்மா, பாத்தும்மா, ஓடி வாங்க! உங்களோட ஆடு நேந்திர வாழைப்பழத்தைச் சாப்பிடுது.”

ஆனும்மாவும் பாத்தும்மாவும் ஓடி வந்தார்கள். ஆனும்மாவிற்கு மிகவும் சந்தோஷம். அவள் சொன்னாள்: “இது அக்காவோட ஆடு.”

“சரி... போகட்டும் அண்ணே...” -பாத்தும்மா வருத்தம் கலந்த குரலில் எனக்கு ஆறுதல் கூறும் நோக்கத்தில் சொன்னாள்: “நான் ரெண்டு நேந்திர வாழைப்பழங்களை வாங்கித் தர்றேன். ஆடு ரொம்பவும் பசியா இருந்திருக்கும், அதனாலதான்..”

ஆனும்மா சொன்னாள்: “எதைத் தின்னாலும் அதோட பசி அடங்காது. என் ஆட்டோட புல்லை அது திருடித் தின்னும்..”

பாத்தும்மாவால் அதைச் சகித்துக்கொள்ள முடியுமா? அவள் சொன்னாள்: “போதும்... போதும்... உன் ஆடும் புல்லும்...”

நான் சொன்னேன்:

“பரவாயில்ல... விடுங்க. நீ எல்லா பிள்ளைகளுக்கும் ஆட்டுப்பால் கொடுக்கணும்.”


“எப்படி அண்ணே கொடுக்க முடியும்? எங்களுக்கு என்னவெல்லாம் தேவையிருக்கு தெரியுமா? பாலை விற்றுத்தான் நாங்க இப்போ இருக்கற வீட்டோட கதவைச் சரி பண்ணனும்.”

என்ன செய்வது? பாத்தும்மாவும் கொச்சுண்ணியும் கதீஜாவும் வசிக்கும் வீட்டின் வாசல் கதவைக் கயிற்றால் கட்டி வைத்திருக்கிறார்கள்! அது சரி செய்யப்பட வேண்டியதுதான். பிறகு...

வீட்டிலுள்ள எல்லா பெண்களுக்கும் நான் போவதற்கு முன்பு ஒரு நேரமாவது வயிறு நிறைய சோறு போட வேண்டும்!

அதற்குப் பணத்திற்கு எங்கு போவது? என்னிடம் ஒரு பைசா கூட இல்லை. கையில் இருந்ததை எல்லாருக்கும் பிரித்துத் தந்துவிட்டேன். பிரித்துக் கொண்டுத்துவிட்டேன் என்றால் ஒரு மரியாதைக்குக் கூறுகிறேன். உண்மையாகச் சொல்லப் போனால் எல்லாரும் என்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கிக் கொண்டார்கள். எல்லாம் முடிந்ததும் என்னை இப்படி உட்கார வைத்துவிட்டார்கள். நினைத்துப் பார்க்கும்பொழுது கோபம் வரும். நான் என்னவெல்லாம் கொடுத்தேன்? பணம் தந்தேன். பாத்திரங்கள் வாங்கிக் கொடுத்தேன். டம்ளர்கள் வாங்கிக் கொடுத்தேன். பெண்கள் தங்கள் தலைகளில் அணிய துணிகள் வாங்கித் தந்தேன். இவை எல்லாவற்றையும் வாங்கித் தந்தும் நான் எதுவுமே தரவில்லை என்பது மாதிரிதான் எல்லாரும் நடந்து கொள்கிறார்கள். கோபம் மூக்கு நுனியில் தங்கியிருக்கிறது. சிறிது மீறினால்கூட நான் எல்லை கடந்து விடுவேன். அபுவை வாய்க்கு வந்தபடி திட்டுவேன்.

ஹனீஃபாவைக் கண்டபடி பேசுவேன். அப்துல்காதரைத் திட்டுவேன். ஹனீஃபா, அப்துல்காதர், சுலைமான் ஆகியோரின் பிள்ளைகளை அடிப்பேன். பாத்தும்மாவின் மகள் கதீஜாவை அடிக்க மாட்டேன். அவளை வெளியில் பார்க்காததுதான் காரணம். மனதில் தோன்றுவதைப் பேசும் பட்டியலில் எல்லா பெண்களையும் சேர்ப்பேன். குறிப்பாக தம்பிமார்களின் மனைவிமார்களை என்னுடைய கோபம் பொங்கி வழிந்து முடிந்த பிறகு, வீடு படு அமைதியாகி விடும்! நான் இதே இடத்தில் அமர்ந்திருப்பேன். பாத்தும்மாவின் ஆடு வாசலில் நின்றிருந்தது. காய்ந்த பலா இலைகளை அது தின்று கொண்டிருந்தது. தின்று வயிறை நிறைக்கட்டும். பிரசவம் ஆனபிறகு ஏராளமாகப் பால் உண்டாகும். ஸுபைதா, ரஷீத், கதீஜா, அபி, ஸையது முஹம்மது, பாத்துக்குட்டி ஆகியோர் கொஞ்சம் பால் குடிப்பது நல்லதுதான். ஆனால் பால், நெய்- இவற்றில் எதையும் என் வீட்டில் யாரும் பயன்படுத்துவதில்லை. நான் நெய் தின்னுகிறேன். நான் பால் குடிக்கிறேன். நான் இங்கு ஒரு ஸ்பெஷல் கேஸ். நெய்யைப் பற்றியும், பாலைப் பற்றியும் சொல்லும் போதுதான் ஒரு விஷயம் ஞாபகத்தில் வருகிறது. இருபத்தைந்து, முப்பது வருடங்களுக்கு முன்னால் நடைபெற்ற சம்பவம் அது.

“பிள்ளைகளாக நானும், அப்துல்காதரும், ஹனீஃபாவும், பாத்தும்மாவும் மட்டும் அப்போது இருந்தோம். ஆனும்மாவை அப்போது உம்மா பெற்றாகிவிட்டதா என்பது சந்தேகமாக இருக்கிறது. நிச்சயமாக அப்போது இல்லை.

வீட்டில் கறவை மாடுகள் இருந்தன. பாலுக்கும் தயிருக்கும் குறைவே இல்லை.

வாப்பா அப்போது படகு வியாபாரம் செய்து கொண்டிருந்தார். மர வியாபாரத்திற்கு மத்தியில் அந்த வியாபாரமும் நடக்கும். மலைகளிலிருந்து மரங்களை வெட்டி அங்கேயே படகுகளைச் செய்து நதிகள் வழியாக கொச்சிக்குக் கொண்டுபோய் பெரிய விலைக்கு அவற்றை விற்பனை செய்வார்.

அப்போது வீட்டில் எப்போதும் நெய் இருக்கும். மஞ்சள் நிறத்தில் பெரிய மணல் தூள்களைப் போல இருக்கும் நெய். அது ஒரு பெரிய பீங்கான் பாத்திரம் நிறைய இருக்கும்.

கடயத்தூர் மலைகளில் வளர்ந்த பசுவின் நெய் அது. வாப்பா சொல்லித்தான் அது எனக்குத் தெரியும். நெய் பாத்திரத்திற்கு அருகிலேயே பீங்கான் பாத்திரத்தில் சர்க்கரையும் இருக்கும். இரண்டும் ஒரு பலகைமீது வைக்கப்பட்டிருந்தன.

சாதத்திலும், பலகாரத்திலும் நெய்யைச் சேர்த்து சாப்பிட்டது ஞாபகத்தில் வருகிறது.

அந்தக் காலத்தில் வாப்பாவிடம் நான் நிறைய அடி, உதைகள் வாங்கியிருக்கிறேன். அப்துல்காதர் அடியே வாங்கியது இல்லை. எனக்கு மட்டும் சர்வசாதாரணமாக அடிகள் கிடைக்கும். சில நேரங்களில் அந்த அடிகளுக்குச் சரியான காரணங்கள் இருக்கும். சிலவேளைகளில் காரணமே இருக்காது. தந்தைமார்கள் பிள்ளைகளை அடிப்பார்கள். தாய்மார்களும் அடிப்பார்கள். ஓ... என்னுடைய தாயும் என்னை அடித்திருக்கிறாள். கரண்டியால் என்னை அடித்து சமையலறையை விட்டுத் துரத்தியிருக்கிறாள். ஏதாவது சாப்பிடவை. சமையலறைக்குள் நுழைந்து எதையாவது எடுத்து நான் சாப்பிடுவேன். என்னை மாதிரியே அப்துல்காதரும் சாப்பிட்டிருக்கிறான். ஆனால், யாரும் நம்ப மாட்டார்கள். அவன் திருடிச் சாப்பிட்டதைக் கூட நான் சாப்பிட்டதாகத்தான் எல்லாரும் நினைப்பார்கள். அடி கிடைக்கிறதும் எனக்குத்தான்.

அப்போது ஒரு நாள் காலையில் தேநீருக்கும் பகல் சாப்பாட்டுக்கும் நடுவில் இருக்குற நேரம். இலேசா எனக்குப் பசி தோணினது மாதிரி இருந்துச்சு. எதையாவது தின்னா நல்லா இருக்கும்னு நினைச்சேன். சமையலறையைத் தேடி நான் போனேன். அங்கே உம்மா இருந்தா. வேலைக்காரியும் இருந்தா. வேலைக்காரியோட பேரு நங்ஙேலி. இந்த நங்ஙேலியும் என்னை அடிப்பா. அடிச்சு என்னை விரட்டியிருக்க.

நான் சின்ன முதலாளி. முதலாளியை சின்ன வேலைக்காரி அடிக்கக்கூடாது. இந்த நியாயம் அங்கு பின்பற்றப்படவில்லை. உம்மாவிடம் சொன்னால் ‘நல்ல நியாயம்தான்; நீ கையை உள்ளே நுழைச்சு திருடி சாப்பிட்டேல்ல?’ என்று கூறுவாள் அவள். போதாததற்கு இந்த நங்ஙேலியிடம் நான் பால் வேறு குடித்திருக்கிறேன். எத்தனையோ அழகான பெண் ரத்தினங்களிடம் நான் பால் குடித்திருக்கிறேன். உம்மா இந்த விஷயத்தை என்னிடம் கூறியிருக்கிறாள். கண்ட பெண்களிடமெல்லாம் பால் குடிப்பதா? இந்த நானா? ச்சே...). அதற்குப் பிறகு நான் சிந்தித்தேன். ஒரு பச்சை மாங்காயைக் கடித்துத் தின்போம். ஆனால் அது கிடைப்பதற்கு வழியில்லையே! நங்ஙேலி கூறுவாள்:

“கொஞ்ச நேரம் அப்படியே பசியோட இரு. சீக்கிரம் சாப்பிடலாம். இல்லாட்டி வேணுமா அடி...?”

ம்ஹும்! எதுவும் பேசாமல் அப்படியே நடந்து வீட்டிற்குள் நுழைந்து நான் புதிதாக ஒன்றைக் கண்டுபிடித்தேன். நெய்யும் சர்க்கரையும் அடுத்தடுத்து இருக்கின்றன. இரண்டையும் ஒன்றாகக் கலந்தால் புதுமையாக ஏதாவது பிறக்கும். ம்ஹும்! அதற்குமேல் நான் காத்திருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் நான் ஒரு கிண்ணத்தை எடுத்தேன். யாருக்கும் தெரியாமல் வாப்பா படுத்திருந்த அறைக்குள் நுழைந்தேன். நெய் பாத்திரத்தை மெதுவாக எடுத்து வாப்பாவின் கட்டிலில் வைத்தேன். மூடியை மெதுவாகக் கழற்றி என்னுடைய சுத்தமான கைகளை நுழைத்து நெய்யை எடுத்து கிண்ணத்தின் பாதிவரை நிரப்பினேன். பிறகு நெய் பாத்திரத்தை எடுத்து, அது ஏற்கனவே இருந்த பலகையில் கொண்டுபோய் வைத்தேன். சர்க்கரையையும் அதே மாதிரி கிண்ணத்தில் எடுத்து நிறைய போட்டேன். பாத்திரங்கள் இரண்டும் அவை இருந்த பலகைக்குப் போய்விட்டன.


யார் பார்த்தாலும் எந்த மாறுதலும் உண்டானதாகத் தெரியாது. வாப்பா எடுப்பதைப் போலவே நானும் எடுத்தேன். அவர் ஸ்பூனால் எடுத்துவிட்டு மெதுவாக பாத்திரங்களுக்குள் இருக்கும் பொருட்களைச் சரி செய்து வைத்துவிடுவார். அதே மாதிரி நான் கையால் சரி செய்துவிட்டு வாப்பாவின் கட்டிலில் அமர்ந்து நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்துகுழைத்து கொஞ்சம் வாய்க்குள் போட்டு ‘கருமுரா’ என்று ஓசை உண்டாகுமாறு சுவைத்துத் தின்றேன். சர்க்கரை சரியாக நெய்யில் கலக்கவில்லை. எனினும், ஸ்டைலாக தின்று கொண்டிருந்தேன்.

அப்போது மெதுவாக, மிகவும் மெதுவாக தாழ்ந்த குரலில் ஒரு கேள்வி! நான் அதிர்ந்து போனேன். கேள்வி கேட்டது அப்துல்காதர்தான். அவன் எனக்குப் பக்கத்தில் நின்றிருந்தான்.எப்படி? எப்போது அவன் அந்த அறைக்குள் வந்தான்? என்னால் முடிவுக்கு வரமுடியவில்லை. அவன் மெதுவான குரலில் கேட்டான்: “அண்ணே... என்ன தின்றீங்க?”

நான் தாழ்ந்த குரலில் சொன்னேன்: “ஒரு மருந்து.”

“நான் உங்க பின்னாடிதான் இருந்தேன். எல்லாத்தையும் நான் பார்த்தேன். எனக்கும் அதைத் தரணும். இல்லாட்டி நான் சொல்லிடுவேன்.”

பெரிய ரகசியத்தைப் போல் எண்ணி மெதுவாக நான் கேட்டேன். “டேய், நீ என் தம்பிதானே?”

“அப்படின்னா எனக்கும் அதைத் தரணும்.”

நான் அவனுக்கும் கொடுத்தேன். பாத்திரத்தை நக்கி சுத்தமாக்கியது அவன்தான்.

“இனிமேல் நான் எடுக்க மாட்டேன்.” -நான் சொன்னேன்: “நீயும் எடுக்கக் கூடாது.”

சரியென்று ஒப்புக்கொண்டு நாங்கள் வெளியே புறப்பட்டோம். பாத்திரங்களை அவை இருந்த இடத்தில் கொண்டுபோய் வைத்துவிட்டு உலகத்தில் எதுவும் நடக்கவில்லை என்பது மாதிரி நாங்கள் நடந்தோம். அந்தச் சம்பவத்தை அத்துடன் நாங்கள் மறந்து விட்டோம்.

அதற்குப் பிறகு நெய்யையும் சர்க்கரையையும் நான் எடுக்கவில்லை என்பது பரம உண்மை. நெய்யின் குணம் என்ன என்பது எனக்குத் தெரியாது. இருந்தாலும் எதுவுமே இல்லாமல் இருந்தபோது நெய்யையும் சர்க்கரையையும் கலந்து சாப்பிட்டேன். அவ்வளவுதான் தின்பதற்கு எத்தனையோ பொருட்கள் வீட்டில் இருக்கின்றன. பழுத்த பலாப்பழம் இருக்கிறது. மாம்பழம் இருக்கிறது. மாமிச வறுவல் ஒரு பாத்திரம் நிறைய அலமாரியில் இருக்கிறது. நான் இந்த விஷயங்களில் எல்லாம் கவனம் செலுத்தினேன். விஷயம் ஒவ்வொரு நாளும் நடந்து கொண்டிருந்தது. நாட்கள் நீங்கிக் கொண்டிருந்தன. நான் தினமும் அடி, உதை வாங்கிக் கொண்டிருந்தேன். அப்துல்காதருக்கு உடம்பில் வீக்கம்!

நான் அடி வாங்கியதற்குக் காரணம்- யாரோ நெய்யைத் திருடித் தின்கிறார்கள் என்பதுதான். பாத்திரங்களின் வெளிப்பகுதியிலும் கட்டிலிலும் ரேகைகள் இருந்தன. நான் அடிகள் வாங்கினேன். அப்துல்காதருக்கு வந்த வீக்கம் உண்மையிலேயே ஆச்சரியமான விஷயம்தான். அவன் நாளுக்கு நாள் பெருத்துக் கொண்டே இருந்தான். எப்போதும் தண்ணீர் குடித்துக்கொண்டே இருப்பான். எதையும் சாப்பிட முடியாது.

“பிள்ளைக்கு ஏதோ நோய் பிடிச்சிருக்கு!” -உம்மாவும் நங்ஙேலியும் சொன்னார்கள். வாப்பா ஜோதிடரை அழைக்கப் போனார். ஜோதிடர்தான் அப்போது பெரிய வைத்தியர். ஆயுர்வேதம்தான் சம்பவம். பார்க்க வேண்டும் அல்லவா?

அப்போது உம்மா அப்துல்காதரைத் தன்னுடைய மடியில் வைத்துக்கொண்டு கவலையுடன் தடவினாள்.

“கடவுளே! என் தங்கத்துக்கு என்ன ஆச்சு?”

நங்ஙேலி சொன்னாள்: “கடவுளே! என் தங்கக் குடத்துக்கு எதுவுமே வராம இருக்கணும்.”

அப்துல்காதர் எந்தவித கவலையும் இல்லாமல் வீங்கிப் போய், தடியனாக, முக்கிய நபராக மாறிவிட்டிருந்தான்.

நான் அவனுடைய முகத்தைப் பார்த்தேன். டேய், திருடா! நீ அந்த நெய்யைத் திருடித் தின்று உடல் பெருத்துப் போய் இருக்கிறாய் அல்லவா? அதுவும் தவறு எதுவுமே செய்யாதது மாதிரி நடித்துக் கொண்டு…

அவனுக்கு எந்தவித கூச்சமும் இல்லை. ஜோதிடர் வந்தார். அது முடிந்ததும் இன்னொரு வைத்தியனான வேலன் வந்தான். அதற்குப் பிறகு ஒரு முஸ்லீம் வந்தார்.

நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. நெய் குறைந்துகொண்டே வந்தது. வழக்கம்போல அடி, உதைகளை நான் வாங்கிக் கொண்டிருந்தேன்.அப்துல்காதர் தடியாகிக் கொண்டே வந்தான். அவன் மருந்து எதுவும் குடிப்பதில்லை. யாருக்கும் தெரியாமல் அவன் அதைக் கீழே ஊற்றி விடுவான். எப்போதாவது கொஞ்சம் சாதம் சாப்பிடுவான். அவன் வீங்கிப் போய் இருந்ததால் எல்லாரும் அவன் மீது மிகவும் பிரியமாக இருந்தார்கள். அவனுக்குச் சிறிதுகூட களைப்பு தோன்றாது. தன் விருப்பப்படி நடப்பான். சரியான ஆள்தான்!

தினமும் அவன் நெய்யையும், சர்க்கரையையும் தின்று கொண்டிருக்கிறான் என்ற விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், அதை யாரிடம் சொல்வது? அப்படியே சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.

ஒருநாள் நான் அவனுக்குக் கொஞ்சம் வறுத்த மாமிசத்தைக் கொடுத்தேன். யாருக்கும் தெரியாமல் அலமாரியிலிருந்து நான் திருடி எடுத்தது அது. அவன் அதை வாங்கித் தின்றான். நான் சொன்னேன்:

“டேய், நீ என் தம்பி! உண்மையைச் சொல்லு. நீ தடிமாடு மாதிரி இருக்கிறதுக்கு என்ன காரணம்? நெய்யையும் சர்க்கரையையும் திருடி தின்னுறதுனாலதானே?”

“அப்படியெல்லாம் பேசக்கூடாது, அண்ணே. எனக்கு உடம்புக்குச் சரியில்லைன்னு சொல்லலியா?”

அவன் பொய் சொல்கிறான் என்பதை எல்லாருக்கும் எப்படி தெரிய வைப்பது? அப்படியே சொன்னாலும் யார் அதை நம்புவார்கள்? எனினும், நான் உம்மாவிடம் சொன்னேன்- நங்ஙேலியிடமும் சொன்னேன்- நெய்யையும் சர்க்கரையையும் தின்று தீர்க்கும் பெரிய திருடன் அப்துல்காதர் என்ற விஷயத்தை.

நான் ஏற்கெனவே சொன்னதைப் போல் யாரும் அதை நம்பவில்லை. என்னுடைய இதயத்தின் சுத்தத்தால் ஒரு சம்பவம் நடைபெற்றது. ஒரு வெள்ளிக்கிழமை. வாப்பா தொழுகைக்காக பள்ளிவாசலுக்குப் போயிருந்தார். உம்மா சில பெண்களுடன் பக்கத்து வீட்டில் அமர்ந்து பேன் பார்ப்பதற்கு இடையில் ஊர் கதைகளைக் கூறிக் கொண்டிருந்தாள். பேச்சுக்கு மத்தியில் அப்துல்காதரின் நோயைப் பற்றியும் சொன்னாள். அதையெல்லாம் கேட்டவாறு நான் வீட்டிற்குள் வந்தேன். நங்ஙேலி தூங்கிக் கொண்டிருந்தாள். சமையலறைக்குள் நுழைந்த நான் அங்கிருக்கும் விஷயங்களை ஆராய்ந்தேன். சிலவற்றை கையை நுழைத்து எடுத்துத் தின்றேன். பிறகு வீட்டிற்குள்ளிருந்து வராந்தாவை நோக்கி மெதுவாக நடந்தேன். வாப்பா படுத்திருக்கும் அறையில் ஏதோ ஒரு சத்தம் கேட்டது. ஒரு ‘கருமுரா’ சத்தம்! நான் மெதுவாக பார்த்தேன். வாப்பாவின் கட்டிலுக்குக் கீழே இரண்டு கால்கள் தெரிந்தன. ஒரு ஊனமான கால்!

அப்துல்காதர் நெய்யையும் சர்க்கரையையும் தின்று கொண்டிருக்கிறான்!

நான் மெதுவாக, மிகவும் மெதுவாக வெளியே ஓடி உம்மாவின் அருகில் சென்றேன்.

“அப்துல்காதரோட உடல் வீக்கத்திற்கான காரணத்தைப் பார்க்கணுமா? ஓடி வாங்க...”


எல்லாரையும் நான் அழைத்துக்கொண்டு வந்து மெதுவாக கதவுக்குப் பக்கத்தில் நிறுத்தினேன். நான் உள்ளே நுழைந்து இரண்டு கதவுகளையும் கண் இமைக்கும் நேரத்தில் திறந்தேன்.

அப்துல்காதர் கிண்ணத்தில் நெய்யையும் சர்க்கரையையும் சேர்த்து தின்றுகொண்டு கட்டிலுக்குக் கீழே பதுங்கி உட்கார்ந்திருக்கிறான்.

அவனைக் கழுத்தைப் பிடித்து நான் வெளியே கொண்டு வந்தேன். உம்மா அவனை அடி அடியென்று அடித்தாள். அங்கு உண்டான ஆரவாரத்தைக் கேட்டு நங்ஙேலி தூக்கம் கலைந்து எழுந்தாள். விஷயத்தை அறிந்தாள். நங்ஙேலியும் அவனை அடித்தாள்.

அந்த அருமையான காட்சியைப் பார்த்தாவாறு நான் நின்றிருந்தேன்.

வாப்பா வந்த பிறகு அவரும் அவனை அடித்தார்.

எல்லாம் முடிந்த பிறகு அவன் தனியாக இருக்கும்பொழுது என்னைப் பார்த்து கேட்டான்: “நான் தம்பிதானே! எதுக்கு என்னை காட்டித் தரணும்?”

நான் சொன்னேன்: “பெரிய திருட்டுப் பயலே! உனக்காக நான் எவ்வளவு அடிகள் வாங்கியிருக்கேன்! அப்போது நீ நினைச்சுப் பார்த்தியா அண்ணன்னு... பெரிய திருடா!

நடந்த விஷயங்களை நினைத்து நான் எனக்குள் சிரித்துக் கொண்டிருந்தேன். அப்போது வயதான தாய் வந்தாள். அவள் கேட்டாள்: “என்ன, நீ தனியா உட்கார்ந்து சிரிச்சுக்கிட்டு இருக்கே?”

நான் சொன்னேன்: “பழைய ஒரு விஷயத்தை நினைச்சு சிரிச்சேன். அப்துல்காதர் முன்னாடி நெய்யையும் சர்க்கரையையும் திருடிச் சாப்பிட்டு உடம்பு பெருத்துப் போய் இருப்பானே.”

“நீ அதை மறக்கலினா?”

“இல்ல...”

“சரி... காசு இருந்தா ஒரு அஞ்சு ரூபா தா. பாத்தும்மாவோட ஆடு கஞ்சிப் பானையை உடைச்சிடுச்சு.”

“பெரிய அண்ணே... அது ஆனும்மாவோட ஆடா இருக்கும்.”

ஆனும்மா வந்து சொன்னாள்: “என் ஆடு இல்ல. அக்காவோட ஆடுதான்.”

பாத்தும்மா சொன்னாள்: “போதும்டி... போதும்டி... பெரிய அண்ணன் இருக்கிறது தெரியலியா? நீ அடக்க ஒடுக்கமா இருக்கணும்னு நினை.என் ஆடுன்னு உனக்கு எப்படித் தெரியும்? அதை இப்போ சொல்லு...”

ஆனும்மா சொன்னாள்:

“பெரிய அண்ணன் தெரிஞ்சிக்கணும்ன்றதுக்காக நான் சொல்றேன். அக்காவோட ஆடு வந்தா, நான் உடனே என் ஆட்டை உள்ளே கொண்டுபோய் கட்டிப்போட்டுடுவேன். அக்காவோட ஆடு என் ஆட்டோட புல்லைத் திருடித் தின்னும். எங்களோட கப்பைக் கிழங்குப்புட்டைத் திருடித் தின்னும் எங்களோட கடும் தேநீரைத் திருடிக் குடிக்கும். பிள்ளைகளுக்குத் தின்னுறதுக்கு ஒண்ணுமே இருக்காது. எல்லாத்தையும் அக்காவோட ஆடு தின்னுடும்!”

பாத்தும்மா அவமானப்பட்ட வேகத்துடன் சொன்னாள்: “போதும்டி... போதும்டி... உன் பொல்லாத ஆடு! உனக்கு ஆடு எங்கேயிருந்து வந்துச்சு?”

“ஆனும்மா சொன்னாள்: “அது நீங்க தந்ததுதான்.”

“அடியே...”- பாத்தும்மா சொன்னாள்: “இந்த உலகத்துல எத்தனை அக்காமாருங்க தங்களோட தங்கச்சிமார்களுக்கு ஆடு கொடுக்குறாங்க! முதல்ல அதுக்குப் பதில் சொல்லு...”

ஆனும்மா சொன்னாள்: “ஓ... எவ்வளவோ தங்கச்சிமார்களுக்கு அக்காமாருங்க யானை கொடுக்கிறாங்க? ஆடு என்ன பெரிய ஆடு!”

அதைக் கேட்டு கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டாள் பாத்தும்மா. அவள் சொன்னாள்:

“பெரிய அண்ணன் இங்கே இருக்கிறது உன்னோட அதிர்ஷ்டம்னு நினைச்சுக்கோ. இல்லாட்டி உன்னை நான் சும்மா விட்டு வைப்பேனா? அடியே, கடவுளுக்குப் பொறுக்காத எந்த விஷயத்தையும் பேசாத. என்கிட்ட ரெண்டு ஆடு இருந்துச்சு. அதுல நன்னை என் தங்க தங்கச்சியான உனக்கு நான் தந்ததை மறந்துடாதே.”

பாத்தும்மா எனக்கு அருகில் வந்து மெதுவான குரலில் கேட்டாள்: “கதீஜாவோட கம்மல் விஷயத்தை மறந்துட்டீங்களா?”

நானும் மெதுவான குரலில் சொன்னேன்.

“மறக்கல...”

பாத்தும்மா தாழ்ந்த குரலில் சொன்னாள்: “யாருக்கும் தெரிய வேண்டாம்.”

உடனே ஆனும்மா எனக்கு அருகில் வந்து கேட்டாள்:

“அக்கா ரகசியமா என்ன சொன்னாங்க, பெரிய அண்ணே?” பாத்தும்மா ஓடி வந்து சொன்னாள்:

“எதுவும் சொல்லலடி...”

“இல்ல...”-ஆனும்மா சொன்னாள்: “எனக்குப் புரிஞ்சு போச்சு. எங்க யாருக்கும் தெரியாம அக்கா என்னவோ கேட்டிருக்காங்க. பெரிய அண்ணே, நீங்க என்ன தர்றதா சொன்னீங்க?”

அப்போது வெளியே இரண்டு அசரீரிகள் ஒரே நேரத்தில் கேட்டன. அப்துல்காதரின் மனைவி குஞ்ஞானும்மா, ஹனீஃபாவின் மனைவி அய்ஸோம்மா ஆகியோரின் அசரீரிகள்தான் அவை...

“தங்க நகையா இருந்தா எங்க பிள்ளைகளுக்கும் வேணும்.”

இந்த எண்ணம் அவர்கள் மனதில் எப்படித் தோன்றியது என்பது எனக்குத் தெரியவில்லை. பெண்கள் விஷயத்தில் இப்படியெல்லாம் நடக்கும் போலிருக்கிறது!

ஆனால், அதைக்கேட்டு ஒரு மாதிரி ஆகிவிட்டாள் பாத்தும்மா. அவள் சொன்னாள்: “அடியே, கதீஜா, நம்ம ஆட்டைக் கூப்பிடு. நாம போகலாம். இங்கே என்ன நடக்குது பாரு. நாம இனிமேல் இந்த வீட்டுல காலெடுத்தே வைக்கக்கூடாது.”

ஆனும்மாவிற்குப் புரிந்துவிட்டது. அவளுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி. அவள் சொன்னாள்:

“கடவுளே! அதேதான்... தங்கம்தான்! பெரிய அண்ணே... நீங்க என்ன வாங்கித் தர்றதா சொன்னீங்க?”

நான் சொன்னேன். அதாவது அறிவித்தேன்.

“எல்லாரும் தெரிஞ்சுக்கோங்க. கதீஜாவுக்கு ரெண்டு கம்மல் நான் அதைச் செய்து தர்றேன்னு வாக்குக் கொடுத்திருக்கேன். கொடுக்கணும்னு மனசுல நினைக்கிறேன். என்ன இந்த விஷயத்துல உங்களுக்கு எதிர்ப்பு இருக்கா?”

ஆனும்மா சொன்னாள். “பெரிய அண்ணே... எனக்கும் ரெண்டு கம்மல்கள் வேணும்.”

“போதும்டி உன் குசும்பு, போதும் நீ உன்னோட புதுவீட்டுக்கு மாறிப் போகுறப்போ அங்கே தேவையான பாத்திரங்களையெல்லாம் பெரிய அண்ணன் வாங்கித் தரணும்னு நீ சொன்னேல்ல? அதை வாங்கித் தர்றேன்னு பெரிய அண்ணன் ஒத்துக்கிட்டார்ல? அந்த விஷயம் எனக்குத் தெரியும்டி. தெரியுதாடி, தங்கச்சி?”

அந்த ரகசியத்தை பாத்தும்மா எப்படித் தெரிந்து கெண்டாள்! பெண்களின் விஷயமாயிற்றே! பெண்களுக்குள் இருக்கும் திருட்டுத்தனங்களை முட்டாள்களான ஆண்களால் எப்படி புரிந்துகொள்ள முடியும்? டுங்கு! டுங்கு!

4

ரு ஆரவாரம் கேட்டு நான் சமையலறைப் பக்கம் போனால், என்னுடைய உம்மாவின் தலைமையில் எல்லா பெண்களும் வியப்புடன் நின்றிருக்கிறார்கள். நடுவில் பாத்தும்மாவின் ஆடு. அதற்குத் தலை இல்லை! அதாவது- அது ஆர்வத்துடன் ஒரு பானைக்குள் தன் தலையை விட்டிருக்கிறது. பிறகு அதை எடுக்க முடியாமல் பானையுடன் நின்று கொண்டிருக்கிறது. நிற்கிறது என்றால் எல்லா பெண்களும் சேர்ந்து அந்த ஆட்டைப் பிடித்திருக்கிறார்கள் என்று அர்த்தம். பானையை எப்படி எடுப்பது? அதுதான் முக்கியமாகச் சிந்திக்க வேண்டிய விஷயம்.

பாத்தும்மாவின் ஆடு காண்பித்த அந்தப் பொறுத்துக்கொள்ள முடியாத விஷயத்தை நான் பார்த்துவிட்டேன் அல்லவா! பாத்தும்மாவிற்கு சற்று மானம் போனது மாதிரி ஆகிவிட்டது. “இது இப்படியெல்லாம் நடக்கக் கூடியது இல்ல, அண்ணே” என்றாள் அவள். சேர்ந்த கூட்டத்தால் வந்த வினையாக இருக்கலாம்!


நான் சிறிய ஒரு கல்லை எடுத்து பானையை உடைத்து ஆட்டை விடுதலை செய்தேன்.

“இந்த விஷயம் எங்களுக்குத் தெரியும்... அடடா...” -உம்மா சொன்னாள்: “என்ன காரியம் செஞ்சே? நல்ல ஒரு பானையை நீ உடைச்சிட்டியே!”

நான் அவமானத்துடன் வராந்தாவில் வந்து உட்கார்ந்தேன். அப்போது அப்துல்காதரின் மூத்தமகள் பாத்துக்குட்டி ஓடிவந்து “பெரியப்பா” என்று என்னை அழைத்தாள். அவள் வாயில் மேற்பகுதியில் சில பற்கள் இல்லை. அவள் சொன்னாள்: “அபி என்னை அடிச்சிட்டான்.”

அபி ஓடி வந்தான். அவன் சொன்னான்:

“பெரியப்பா... இவ என்னை அடிச்சிட்டா?”

இதற்கு மேல் சண்டை போடக்கூடாது என்று அறிவுரை சொல்லி அவர்களை அனுப்பி வைத்தேன். அப்போது ஸையது முஹம்மது ஒரு கேஸுடன் வருகிறான்.

“மாமா” - அவன் அழைத்தான். “லைலா என்னை உள்ளாடத்திப்பாருன்னு கூப்பிடுறா.”

பயங்கரம்! ஒரு ஆணை ஒரு பெண் உள்ளாடத்திப் பாரு என்று அழைப்பதா?

“லைலா!” - நான் அழைத்தேன். லைலா வந்தாள்; கண்களில் நீர் மல்கத்தான் வந்தவுடனே சொன்னாள்:

“பெரியப்பாவை நான் அழைச்சிட்டுப் போகமாட்டேன்!”

“வேண்டாம்! கொம்பை எடுத்துட்டு வாடா!”

ஸையது முஹம்மது இரண்டு புளியங்கொம்புகளை எடுத்துக்கொண்டு வந்தான். அதைக்காட்டி லைலாவைப் பயமுறுத்தி இதற்கு மேல் யாரையும் உள்ளாடத்திப் பாரு என்று அழைக்கக் கூடாது என்று அறிவுரை கூறி அனுப்பி வைத்தேன். சில கோழிகள் பயங்கரமாக கத்தியவாறு ஓடிப்பறந்து சாய்வு நாற்காலியில் சாய்ந்திருந்த என் மீது வந்து விழுந்தன. அவற்றை விரட்டிக்கொண்டு ஓடி வருகிறது பாத்தும்மாவின் ஆடு. வேறு விசேஷமெதுவும் இல்லை. பாத்தும்மாவின் ஆடு இன்னொரு கஞ்சிப் பானையையும் உடைத்து விட்டது! இரண்டு ஆனும்மாமார்களின் சத்தமும், ஒரு அய்ஸோம்மாவின் சத்தமும் கேட்டது. உம்மா வாய்க்கு வந்தபடி ஏதோ சத்தம் போட்டுக் கொண்டிருந்தாள். பிள்ளைகளின் சிரிப்பு சப்தம் கேட்டது. பாத்தும்மாவின் கவலை கலந்த வார்த்தைகளும்தான். எனக்கு எதுவுமே தெரியாது என்பது மாதிரி பலா மரத்திற்குக் கீழே நின்று கொண்டிருந்தது பாத்தும்மாவின் ஆடு.

நான்கு மணி ஆனபோது நடப்பதற்காக நான் புறப்பட்டேன். அப்படியே சந்தைப் பக்கம் போனேன்.

அப்போது ஒரு ஆச்சரியமான சம்பவத்தைப் பார்க்க நேர்ந்தது. ஒரு சிறு கூடை நிறைய சாம்பங்காய்களை வைத்துக்கொண்டு அபியும் பாத்துக்குட்டியும் ஆண்களுக்கு மத்தியில் உட்கார்ந்திருக்கிறார்கள்- எத்தனையோ ஆயிரம் யானைகளுக்கு மத்தியில் இரண்டு எலிக் குஞ்சுகளைப் போல இரண்டு பேரும் விற்பனை செய்கிறார்கள். விற்பனை செய்பவன் அபி.

“ஒரு கை காலணா. ரெண்டு கையும் ஒண்ணும் ரெண்டு காலணா.”

அதாவது- ஐந்து சாம்பங்காய்களின் விலை காலணா. அரை அணாவிற்கு பதினொன்று. அபியின் கையில் ஐந்து விரல்கள் இருக்கின்றன அல்லவா? இந்த வியாபாரம் செய்யும் முறையை நான் பார்த்தவாறு நின்றிருந்தேன். அவர்கள் ஆறு அணாவிற்கு விற்பனை செய்தார்கள். ஆறு அணாக்களையும் நான் கையில் வாங்கினேன்.

அன்று இரவு உம்மாவின் கையில் நான் எட்டணா கொடுத்தேன். உம்மாவிற்கு சந்தோஷமோ சந்தோஷம். சாப்பிட்டு முடித்து படுப்பதற்கு முன்பு நான் பிள்ளைகளை வளர்க்க வேண்டிய விதத்தைப் பற்றி அங்கிருந்த தந்தைமார்களிடம் பேசினேன். தாய்மார்களுக்குச் சரியான முறையில் சோறு போட வேண்டிய விஷயத்தைப் பற்றி பேசினேன். குழந்தைகளை மிகவும் கவனம் செலுத்தி வளர்க்கவேண்டிய முறைகளைப் பற்றிப் பேசினேன். வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டிய தேவையைப் பற்றிப் பேசினேன். எல்லாவற்றுக்கும் பதிலாக ஹனீஃபா சொன்னான்: “நான் பட்டாளத்துக்குப் போகப் போறேன்.”

அபு சொன்னான்:

“பெரிய அண்ணே, ஒரு விஷயத்தை நீங்க கவனிச்சா போதும். கொஞ்சம் காசு செலவழிக்கணும். வீட்டோட மேற்கூரையை மாற்றி ஓடு போடணும். பெரிய அண்ணே, நீங்க வந்ததுனால முற்றம் சரியாயிடுச்சு...”

பணத்தைச் சேமித்து அதை நல்ல நிலைக்கு கொண்டுவந்தது நான்தான்... கற்களைக் கொண்டுவந்து கட்டினேன்.

“அதை விடு...” - அப்துல்காதர் சொன்னான்: “எல்லாம் இங்கே சரியாயிடும். பாத்தும்மாவோட ஆடு பிரசவம் ஆகட்டும்...”

நாட்கள் சில கழிந்தன.

டும்! பாத்தும்மாவின் ஆடு பிரசவித்தது.

அனேகமாக அது மதிய நேரம் என்று நினைக்கிறேன். லேசாக மழை தூறிக் கொண்டிருந்தது. விஷயத்தைக் கேள்விப்பட்டவுடன் எனக்கு ஒரே பதைபதைப்பாகி விட்டது. ஆபத்து எதுவும் உண்டாக வாய்ப்பிருக்கிறது அல்லவா? பிரசவத்தின்போது இறந்த பல சம்பவங்களும் என்னுடைய ஞாபகத்தில் வந்தன. எனக்கு மிகவும் கவலையாக இருந்தது. உம்மாவை நூறு தடவைகள் அழைத்திருப்பேன்.

“ஆட்டுக்குப் பக்கத்திலேயே நீங்க இருக்கணும், உம்மா” -என்று நான் கெஞ்சிக் கேட்டுக்கொண்டேன். உம்மா எதுவும் சொல்லவில்லை. எனக்குப் பதைபதைப்பு அதிகமாகிவிட்டது. என்ன நடக்கப்போகிறது? அங்கு நாம் போய் பார்த்தால் என்ன? ஆனால், அதற்கான தைரியம் எனக்கு இல்லை. எனினும் நான் எட்டிப் பார்த்தேன். ஆட்டை மட்டும் காணவில்லை. ஒரு ஜனக்கூட்டமே அங்கு நின்றிருந்தது. உம்மா இரண்டு ஆனும்மாக்கள், அய்ஸோம்மா, பாத்துக்குட்டி, அபி, ஆரிஃபா, ஸையதுமுஹம்மது, ரஷீத், ஸுபைதா- இவர்கள் தவிர, பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்களும். பெரிய ஒரு கொண்டாட்டம் மாதிரியே அந்த இடம் இருந்தது. எல்லாரும் மிகவும் மகிழ்ச்சியுடன் காணப்பட்டார்கள்.

யாருக்கும் ஒரு உள்ளுணர்வு தோன்றாமல் போனதற்குக் காரணம் என்ன? நான் உம்மாவை அழைத்துக்கேட்டேன்:

“பாத்தும்மாவுக்கு ஆள் அனுப்பலியா?”

பாத்தும்மாதானே அங்கு இருக்கவேண்டிய முக்கியமான ஆள்! ஆனால், பாத்தும்மாவிற்கு ஆள் அனுப்பவில்லை. உம்மாவும் மற்ற பெண்களும் எந்தவித பரபரப்பும் இல்லாமல் சர்வ சாதாரணமாக இருந்தார்கள். அப்போதுதான் எனக்கே தோன்றியது- இந்த விஷயம் அங்கிருந்த யாருக்கும் பெரிய ஒரு விஷயமாகவே தோன்றவில்லை என்பது, அவர்கள் எல்லாரும் பலமுறை பிரசவமானவர்களே. உம்மா பிள்ளைகளைப் பெற்றாள். உம்மாவின் பிள்ளைகளான பாத்தும்மாவும் ஆனும்மாவும் பிள்ளைகளைப் பெற்றவர்களே. உம்மாவின் பிள்ளைகளின் மனைவிமார்களான குஞ்ஞானும்மாவும் அய்ஸோம்மாவும் பிள்ளைகளைப் பெற்றவர்களே! இந்தப் பிரசவம் என்ற விஷயம் அவர்களைப் பொறுத்தவரை ஒரு விஷயமே அல்ல. எங்கேயாவது பிரசவம் நடந்திருக்கிறது என்ற செய்தி காதில் விழுந்தால் ‘குழந்தை ஆணா, பெண்ணா?’ என்ற ஒரு சாதாரண கேள்வி மட்டுமே அவர்களிடமிருந்து கிளம்பும்!

ஆனால் இந்த விஷயத்தில் பழக்கமில்லாத நான் முழுமையான பதைபதைப்புடன் நின்றிருந்தேன்.

மேற்குப் பக்க மூலையில் நான் மட்டும் நாற்காலியில் அமர்ந்திருந்தேன்.எந்த விவரமும் எனக்குத் தெரியவில்லை. அந்தப் பக்கம் என்ன நடந்து கொண்டிருக்கிறது? நான் மேலும் சில பீடிகளைப் புகைத்துக் கீழே போட்டேன்.


கொஞ்ச நேரம் இங்குமங்குமாய் நடந்தேன். அப்படி நடக்கும்போது அபியும் பாத்துக்குட்டியும் நான் இருக்குமிடத்திற்கு வந்தார்கள்.

அபி வீராவேசமாகச் சொன்னான்: “நான்தான் முதல்ல பார்த்தேன்.”

பாத்துக்குட்டி சொன்னாள்: "நீ இல்ல... நான் தான் முதல்ல பார்த்தேன்." அப்போது லைலாவும் ஸைது முஹம்மதுவும் அங்கு வந்தார்கள். ஸைது முஹம்மது சொன்னான்: “நான்தான் முதல்ல பார்த்தேன்...”

லைலா சொன்னாள்: “பெரியப்பாவை அழைச்சிட்டுப் போகமாட்டேன். நான்தான் முதல்ல பார்த்தேன்.”

இந்த இளம் குருத்துகள் எதை முதலில் பார்த்தார்கள்?

நான் அபியிடம் கேட்டேன்:

“நீ எதைடா முதல்ல பார்த்தே?”

அபி மிடுக்குடன் சொன்னான்: “ஆடு குட்டி போட்டதை நான்தான் முதல்ல பார்த்தேன்.”

“ஆடு குட்டி போட்டிருச்சா?” - நான் கேட்டேன்.

பாத்துக்குட்டி சொன்னாள்: “குட்டி போட்டுருச்சு. குட்டி போட்டதை நான்தான் முதல்ல பார்த்தேன், பெரியப்பா.”

அப்பாடா! ஆடு பிரசவமாகிவிட்டது. எந்தவித பிரச்சினையும் உண்டாகவில்லை. எனக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. நான் போய்ப் பார்த்தேன். சிறிய திண்ணையில் தாயும் குட்டியும். வெள்ளை நிறத்தில் இருந்தது குட்டி. இந்த மிகப்பெரிய பிரபஞ்சத்தை எந்தவிதக் கூச்சமும் இல்லாமல் அந்தக்குட்டி பார்த்துக்கொண்டு படுத்திருந்தது.

தாயை வெந்நீரில் குளிப்பாட்ட வேண்டுமென்றோ, அதற்கு பால் தரவேண்டுமென்றோ கூற நினைத்தேன். ஆனால், பால் எங்கு இருக்கிறது? வெந்நீர் இருக்கிறது. நான் ஏதாவது சொன்னால் பெண்களுக்கு அது தமாஷாக ஆகிவிடுகிறது. இருந்தாலும் நான் உம்மாவிடம் கேட்டேன்: “அதுக்கு ஏதாவது கொடுக்கலாம்ல?”

எதுவும் கொடுக்கவில்லை! சிறிது நேரம் கழித்து, தின்பதற்கு ஏதாவது இலைகளைக் கொண்டுவந்து தருவார்கள். அதுதான் வழக்கம்!

நான் சொன்னேன்: “அந்தக் குட்டியை ஒரு பாய்ல படுக்க வைங்க. குளிர்ச்சியான வெறும் திண்ணையில அது படுத்திருக்கே!”

பாயில் அவர்கள் அதைப் படுக்க வைத்தார்களோ என்னவோ? நான் ஓடிச்சென்று ஒரு பெரிய நேந்திர வாழைப்பழத்தைக் கொண்டுவந்து தாய் ஆட்டுக்குக் கொடுத்தேன். அது நன்றியுடன் அதைத் தின்றது.

‘இது என்ன?’ என்பது மாதிரி எல்லா பெண்களும் பார்த்துக் கொண்டிருந்தார்கள். உம்மா மட்டும் அமர்ந்து புன்னகைத்தாள்.

சாயங்காலம் முடிந்ததும், பாத்தும்மாவும் கதீஜாவும் கொச்சுண்ணியும் வந்தார்கள். ஆடு குட்டி போட்டிருக்கும் விஷயத்தைத் தெரிந்து கொண்ட அவர்கள் எதுவும் சொல்லவில்லை.

படுக்கும் நேரத்தில் நான் கேட்டேன்: “ஆட்டுக்குட்டியை எங்கே வச்சிருக்கீங்க?”

“சமையலறையில...” -யாரோ சொன்னார்கள்.

நான் கேட்டேன்: “அடுப்புல நெருப்பு இருக்குமே?”

உம்மா சொன்னாள்: “கூடையை வச்சு மூடி இருக்கு.”

கூடையை வைத்து மூடி இருக்கிறார்களாம்!

“ஆனும்மா, அதுக்கு மூச்சுவிட கஷ்டமா இருக்காதா? உங்க யாரோட குழந்தைகளையாவது இப்படி கூடையை வச்சு மூடுவீங்களா?” என்று நான் கேட்டுவிட்டேன்.

“பிறகு அதை என்ன செய்யறது?” -இதுதான் வந்த பதில். யார் சொன்னார்கள் என்பது தெரியவில்லை. நான் எதுவும் பேசாமல் படுத்திருந்தேன். இந்தப் பெண்கள் மத்தியில் நான் ஏதாவது கூறுவது உண்மையிலேயே ஆபத்தான ஒன்றுதான். நான் இல்லாத நேரங்களில் அவர்கள் அதைக்கூறி எல்லாரும் சேர்ந்து சிரிப்பார்கள். முதற்காரணம்- நான் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. அப்படியென்றால் தெரியாத விஷயங்களைப் பற்றி பேசாமல் இருப்பதே நல்லது. நான் போர்வையை எடுத்துப் போர்த்திக் கொண்டு பேசாமல் கண்களை மூடிப் படுத்திருந்தேன்.

மறுநாள் காலையில் எழுந்து குளித்து முடித்து தேநீர் அருந்திக் கொண்டிருக்கும்போது ஆனும்மாவிடம் கேட்டேன்: “அதுக்கு ஏதாவது கொடுத்தீங்களா?”

‘அது’ என்றால் ஆனும்மாவிற்குத் தெரியும். பாத்தும்மாவின் ஆட்டைக் குறிப்பிடுகிறேன் என்பதை அவள் புரிந்துகொண்டாள.

‘புல் கொடுத்திருக்கு’ என்று ஆனும்மா சொன்னாள். ஆனும்மாவின் ஆட்டிற்கு உள்ள புல்தான்.

பாத்தும்மாவின் ஆடும் குட்டியும் வாசலில் பலாமரத்திற்குக் கீழே நின்றிருந்தார்கள். தங்களின் உணவு எங்கிருந்து வருகிறது என்பதைத் தன்னுடைய குட்டிக்கு தாய் கொண்டுவந்து காட்டுகிறது போலும்! குட்டி தடுமாறி தடுமாறி விழுந்து கொண்டிருந்தது. நடப்பதற்கு அது மிகவும் சிரமப்பட்டது. அதைக் கையிலெடுத்து முத்தம் கொடுக்க வேண்டும்போல் இருந்தது. அப்போது ஹனீஃபா எனக்கு முன்னால் வந்து நின்றான். அவனிடம் ஏதோ ஒரு பவ்யம் தெரிந்தது. இடுப்பில் வேஷ்டி மட்டும் கட்டியிருந்தான். அவன் சொன்னான்:

“ஒரு பத்து ரூபா வேணும், பெரிய அண்ணே. சின்ன அண்ணன் கிட்ட கேட்டா, என்னை கன்னா பின்னான்னு சத்தம் போடுவாரு. அபுவும் சேர்ந்து என்னைக் கிண்டல் பண்ணுவான். இங்கே பாருங்க... என் கையில காசு இருந்தா, நான் ஒரு சட்டை போட்டிருக்க மாட்டேனா?”

“நீ என்னோட ஒரு ரெட்டை மடிப்பு வேஷ்டியையும் ஒரு சட்டையையும் கொஞ்ச நாட்களுக்கு முன்னாடி எடுத்ததாக எனக்கு ஞாபகம்.”

“நானா? எனக்கு எதுவும் வேண்டாம். நான் பட்டாளத்துக்குப் போறேன். இங்கே யாருக்கும் நான் தேவையில்லாம இருக்கலாம். அரசாங்கத்துக்கு நான் தேவையா இருக்கேன். அதை ஞாபகத்துல வச்சுக்கோங்க. பெரிய அண்ணே, நீங்க தந்த ரெட்டை மடிப்பு வேஷ்டியும், சட்டையும்...”

நான் இடையில் புகுந்து சொன்னேன்: “கொஞ்சம் நிறுத்துடா. நான் அதை உனக்குத் தரல. சலவை செய்து கொண்டுவந்தப்போ என்கிட்ட கேட்காமலே நீ அதை எடுத்துக்கிட்ட. என்கிட்ட சட்டையும் வேஷ்டியும் குறைவா இருக்கிறதால என்கிட்ட எத்தனை இருக்குன்ற எண்ணிக்கை எனக்கு நல்லா தெரியும். அதிகமா இருந்தப்போ, உம்மா திருடியிருக்கா. அப்துல்காதர் திருடியிருக்கான். பாத்தும்மாவும் ஆனும்மாவும் திருடியிருக்காங்க. உன் பொண்டாட்டி அய்ஸோம்மாவும் அப்துல்காதரோட பொண்டாட்டி குஞ்ஞானும்மாவும் திருடல!”

ஹனீஃபா சொன்னான்: “என்கிட்ட இருந்த அந்த ரெட்டை மடிப்பு வேஷ்டியையும் சட்டையையும் அபு பிடுங்கிக்கிட்டான். பெரிய அண்ணே, என் கோலத்தைப் பார்த்தீங்களா?”

“நூலைப்போல ஒல்லியா இருக்கிற அபு தடியா இருக்கிற உன் கையில இருந்து பிடுங்கிக்கிட்டானா?”

“சந்தேகமிருந்தா அபிக்கிட்டேயே கேளுங்க, பெரிய அண்ணே... டேய் அபி...”

அபி வந்தான். அவன்தான் ஹனீஃபாவின் எல்லா விஷயங்களுக்கும் ஒரே சாட்சியாக இருப்பவன்.

அவன் வந்தவுடன் சொன்னான்: “வாப்பா சொன்னதை நான் பார்த்தேன்.”

விஷயம் இவ்வளவு ஆனபிறகு, லேசாக திறந்திருந்த கதவு வழியாக ரஷீதை இடுப்பில் வைத்துக்கொண்டு அய்ஸோம்மா வந்தாள். அவள் சொன்னாள்: “வாப்பாவும் மகனும் சொல்றது சுத்த பொய். மகன்கிட்ட இப்படி சொல்லணும்னு சொல்றப்ப நான் இருந்தேன். உங்களோட ரெட்டை மடிப்பு வேஷ்டியும் சட்டையும் அபியோட வாப்பா பெட்டியில இருக்கு”

“டேய் திருடா! பெரிய திருடா! நீ என்னையும் அப்துல்காதரையும் மடல்தூக்க வச்ச கதையை நீ ஞாபகத்துல வச்சிருக்கியா?”


ஹனீஃபா சொன்னான்: “அதெல்லாம் எனக்குத் தெரியாது. எனக்கு வேலை இருக்கு. நான் இரத்தத்தைத் தண்ணீராக்கி வேலை செய்ற ஒரு தொழிலாளி.”

“அப்ப உனக்கு நேந்திர வாழைத் தோட்டம் இருக்கே! அது...”

அவன் சொன்னான்:

“அதை வேணும்னா பெரிய அண்ணே, உங்களுக்கு தந்திடுறேன். பதினஞ்சாயிரம் ரூபா தந்தா போதும்.”

சிறிது விலை கூடிவிட்டது!

அவன் இந்த விலையில் பத்திலொன்றுக்குத்தான் வாங்கினான் என்பது என் எண்ணம். பெரிய திருடன்!

நான் உம்மாவை அழைத்தேன். உம்மா வந்ததும், நான் கேட்டேன்: “முன்பு ஹனீஃபா சின்னப் பையனா இருந்தப்போ இவன் அஞ்சு ரூபா திருடினான்ல? பிறகு இவன் முதலாளியா இருந்துக்கிட்டு இவனோட அண்ணன்மார்களான என்னையும் அப்துல்காதரையும் மலைபோல குவிஞ்சுகிடக்கும் தென்னை மடல்களைக் கொண்டுபோய் காயப்போடச் சொன்னான். ஆனா, இவன் எதுவுமே செய்யல. எங்களுக்கு நாளொண்ணுக்கு நாலுநாலு சக்கரம் சம்பளம் (சக்கரம்: பழைய திருவிதாங்கூர் மாநிலத்தின் நாணயம். இருபத்தெட்டரை சக்கரம்- ஒரு ரூபாய்) தருவான்.

எட்டு நாட்கள் ஆனபிறகுதான் வாப்பாவுக்கு இந்த விஷயமே தெரியும். நான்தான் திருடினேன்னு நினைச்சு வாப்பா என்னை அடிச்சாரு. உம்மா, உங்களுக்கு அது ஞாபகத்துல இருக்கா?”

உம்மா சொன்னாள்: “ஹனீஃபா திருடினது வாப்பாவோட பெட்டியில இருந்துல்ல? அந்தக் காலத்துல என் வெற்றிலைப் பையில இருக்கும். (ஒரு வெள்ளிப்பணத்திற்கு நான்கு சக்கரம்) இவன் எப்படி திருடுவான் தெரியுமா? வேண்டாம்; நான் சொல்லமாட்டேன். இவனோட பொண்டாட்டியும், பிள்ளைகளும் கேட்பாங்க.”

“சொல்லுங்கம்மா, கேட்கட்டும்.”

என்னவென்றால் உம்மாவின் வெற்றிலைப் பையிலிருந்து வெள்ளிப் பணத்தைத் திருடுவது என்பது என்னுடைய குடிசைத் தொழிலாக இருந்தது. நான் உம்மாவின் கூட்டத்தில் போய் படுப்பேன். உம்மா உறங்கிவிட்டாள் என்பது தெரிந்ததும் மடியிலிருந்து வெற்றிலைப் பையை எடுத்து நான்கு பணத்தை எடுத்துவிட்டு உம்மாவுக்குத் தெரியாமல் திரும்பவும் பையை மடியில் வைத்துவிட்டு எழுந்து போய் விடுவேன். மிகவும் பாதுகாப்பான திருட்டு!

உம்மா சொன்னாள்:

“ஹனீஃபா பெரியவான ஆனபிறகு பால் குடிக்கிறதுக்காக வருவான். பால் குடிச்சிக்கிட்டே இவன் வெற்றிலைப் பையில இருந்து பணத்தைத் திருடிடுவான். ஒருமுறை நான் அதைக் கண்டுபிடிச்சு அன்னைக்கே அவனை அடிச்சு விரட்டிட்டேன். அன்னைக்கே இவனுக்கு பால் கொடுக்குறதையும் நிறுத்திட்டேன்.”

“பெரிய திருடன்! அப்துல்காதர் திருடலையா?”

“அவனும் திருடியிருக்கான். நீ மட்டும்தான் திருடல.”

நல்லவனான நான்! ஹா... ஸ்டைலான வாழ்க்கையே!

“ஹனீஃபா, பார்த்தியாடா? அபி பார்த்தியாடா? லைலா பார்த்தியா? ரஷீத் பார்த்தியாடா?”

ஹனீஃபா சொன்னான்: “உம்மா... என் தங்க உம்மாவே, உங்களுக்கு ஞாபகத்துல இல்லாமப் போச்சு. இல்லாட்டி ஆனும்மாவும் சின்ன அண்ணன் சம்சாரமும் கேக்குறமாதிரி பொய் சொல்வீங்களா? பெரிய அண்ணனும் உங்க வெற்றிலைப் பையில இருந்து பணம் திருடியிருக்காரு, உம்மா. எனக்கு நல்லா ஞாபகத்துல இருக்கு உம்மா. என்னையும் சின்ன அண்ணனையும் அழைச்சிட்டுப் போயி பெரிய அண்ணன் தேநீர் வாங்கித் தந்திருக்காரு. எவ்வளவோ தடவை. அப்போ அவர்தான் கையில இருந்து பணம் தருவாரு. பெரிய அண்ணனுக்கு அப்போ எங்கேயிருந்து பணம் வந்துச்சு? உம்மா, சொல்லுங்க...”

திடீரென்று விஷயத்தை மாற்ற தீர்மானித்தேன்.

“நீ என்கிட்ட பல நேரங்கள்ல இரண்டு, மூணு, அஞ்சு, பத்துன்னு வாங்கினது இல்லாம நீ எனக்கு நூறு ரூபாய்வரை தர வேண்டியதிருக்கு. அதுக்குச் சாட்சிகளாக கிறிஸ்தவர்களும், நாயர்களும், ஈழவர்களும் அடங்கிய உன்னோட நண்பர்கள் இருக்காங்கள்ல! அவர்கள் எல்லாரையும் நான் உம்மா முன்னாடி கொண்டு வந்து நிறுத்துறேன்... எடுடா நூறு ரூபாயை!”

“என் தங்க உம்மா, பெரிய அண்ணன் என்ன இப்படிச் சொல்றாரு? நான் பணம் தர வேண்டியதிருக்கா? நான் பெரிய அண்ணனுக்கு நேந்திர வாழைப்பழம் வாங்கித் தந்திருக்கேன். அன்னாசிப்பழம் வாங்கித் தந்திருக்கேன். கணக்கே இல்லாம பீடி வாங்கிக் கொடுத்திருக்கேன். வெண்டைக்காய், பாவைக்காய், ஆட்டு ஈரல், வாத்து முட்டை, மீன், பலாப்பழம்- இதெல்லாம் கணக்குப் பார்த்தா பெரிய அண்ணன்கிட்ட இருந்து எனக்கு இப்போ நாற்பது ரூபா வரணும். அதுல இருந்து பத்து ரூபா தரச்சொல்லித்தான் இப்போ நான் கேட்டேன்.”

“நீ கொண்டுவந்து தந்திருக்கே. உன் தோட்டத்துல ஒடிஞ்சு விழுந்த வாழைக்குலையில இருந்து பிஞ்சுக் காயை நெருப்புல வாட்டி நிறத்தை வரவச்சு நீ கொண்டு வந்து தந்திருக்கே. மீதி எல்லாம் அப்துல்காதரும் கொச்சுண்ணியும் சுலைமானும் காசு கொடுத்து வாங்கி உன் கையில தந்தது. நீ இங்கே வர்றப்போ அதை இங்கே கொண்டுவருவே. நீ வாங்கினதுன்னு சொல்லி இங்கே வந்து கொடுப்பே. டேய் திருடா!”

அதைக் கேட்டவுடன் அவன் தன் மனைவியை அழைத்தான்: “வாடி அய்ஸோம்மா. பிள்ளைகளைத் தூக்கு. நாம இனிமேல் இங்கே இருக்க வேண்டாம். நம்ம இடத்துல ஏதாவது ஓலைக்கீற்றைப் போட்டு வசிக்கிறதுக்குப் பார்ப்போம். கிளம்புடி...”

நான் சொன்னேன்: “நில்லுடா. அந்த நூறு ரூபா விஷயம் என்னன்னு தெரிஞ்சிட்டு கிளம்பு. உம்மா, கேளுங்க. இவனுக்கு அப்போ நாலு சைக்கிள்கள் இருந்துச்சு. அதிக வருஷங்கள் ஒண்ணும் ஆயிடல. அப்போ நான் வர்றப்போ இவனோட சைக்கிளை சில நேரங்கள்ல எடுத்து ஓட்டுவேன். பத்து நிமிஷங்கள் கழிச்சி திரும்பி கொண்டுவந்து வண்டியை விட்டாலும் இவன் சொல்லுவான்- ரெண்டு மணி நேரம் ஆயிடுச்சுன்னு. சுருக்கமா சொல்லப்போனா இவனுக்கு அதுக்கு கூலி வேணும். அப்போ இவனுக்கு என்ன வேலை? இவனோட நணபர்களான நாயர்கள், கிறிஸ்தவர்கள், ஈழவர்கள்- இவங்ககூட இவன் என்னைத் தேடி எர்ணாகுளத்துக்கு வருவான். அபியை இவன் கள்ள சாட்சி சொல்றதுக்குத் தயார் பண்ணி வச்சிருக்குற மாதிரி அவங்களையும் இவன் தயார் பண்ணி வச்சிருந்தான். வந்தவுடனே ஹனீஃபாவோட கஷ்டம் நிறைஞ்ச வாழ்க்கையைப் பற்றி அவங்க பேச ஆரம்பிச்சிடுவாங்க. பாவம் ஹனீஃபா. ரொம்பவும் சிரமப்படுறான்- அது இதுன்னு பேசுவாங்க. அந்தப் பேச்சு முடிஞ்ச பிறகு இவன் கடன் கேட்க ஆரம்பிப்பான். கடைசியில அஞ்சு ரூபா கேட்பான். பிள்ளைகளுக்கு என் சார்பா ஏதாவது வாங்கிட்டுப் போகணும்ன்றதுக்காகக் கேட்பான். நான் மூணு ரூபா தருவேன். இவன் அதுல இருந்து ஒரு அணாவுக்கு ஆரஞ்சு மிட்டாய் வாங்கிட்டு முந்நூற்று இருபத்தஞ்சு ரூபா கொடுத்து ஒரு சைக்கிள் வாங்கினேன். அதை எப்படியோ இவன் தெரிஞ்சிக்கிட்டான். ஒருநாள் இவன் தன் நண்பர்களோட வந்தான். இவனோட சேர்த்து நாலு பேர் இருந்தாங்க.


மூணு சைக்கிள்கள்ல வந்திருந்தாங்க. வந்த உடனே உட்கார்ந்து சத்தியாக்கிரகம் பண்ண ஆரம்பிச்சிட்டான். இவனுக்கு என்னோட சைக்கிள் வேணுமாம். அது இருந்தாத்தான் இவனோட லொடுக்கூஸ் சைக்கிள்கள்லாம் வாடகைக்குப் போகுமாம். நான் சொன்னேன்- சைக்கிள் எனக்குக் கட்டாயம் தேவைன்னு. அப்போ இவனோட நண்பர்கள்ல ஒருத்தன் ‘ஹனீஃபா சைக்கிளுக்கான பணத்தைத் தந்திடுவான்’னு சொல்லி முடிக்கல, அதுக்குள்ளாற இவன் ஒரு நோட்டுக் கட்டை எடுத்து என் மடியில போட்டான். நான் எண்ணிப் பார்த்தப்போ இருநூற்று நாற்பது ரூபா இருந்துச்சு. மீதி? அதை வீட்டுக்குப் போனவுடனே அனுப்பி வைக்கிறதா இவன் சொன்னான். அப்போ இவனோட நண்பர்கள் தாங்கள் பணத்தை அனுப்பி வைக்கிறதா சொன்னாங்க. அவங்க ஜாமீன் கொடுத்தா போதாதா? அந்த நிமிடத்திலேயே இவன் என்கிட்ட பத்து ரூபா கடன் வாங்கினான். பிள்ளைகளுக்கு ஏதாவது வாங்கிட்டு போகணும்னு மூணு ரூபா வாங்கிக்கிட்டான். மாதங்கள் எத்தனையோ ஓடிடுச்சு. மீதி ரூபா வந்து சேரல. நான் இங்கே வந்தா, இவனோட நண்பர்கள் என்னைப் பார்த்து ஓடி ஒளியறாங்க. எடுடா அந்த ரூபாயை...”

“நான் பட்டாளத்துக்குப் போறேன்.” அபி சொன்னான்:

“நானும் பட்டாளத்துக்குப் போறேன்.”

லைலா சொன்னாள்: “நானும் பட்டாளத்துக்குப் போறேன்.”

அய்ஸோம்மா சொன்னாள்: “அப்படின்னா ரஷீதும் நானும் கூட பட்டாளத்துக்குப் போறோம். அரசாங்கத்துக்குக் கஞ்சியும் குழம்பும் வச்சுக் கொடுக்குறோம்.”

“போதும்டி... நீ சபையில நின்னுக்கிட்டு மனசுல தோணுறதை பேசுறியா? பெரிய அண்ணன் இருக்குறாரேன்னு பாக்கறேன். இல்லாட்டி நான்... போ அந்தப் பக்கம்” என்று சொன்ன அவன் சந்தையிலிருக்கும் தன்னுடைய மெஷின் கடைக்குப் புறப்பட்டான்.

சிறிது நேரம் சென்றது ரஷீதையும் சுபைதாவையும் தூக்கிக் கொண்டு உம்மா என்னிடம் வந்தாள்.

“நாங்க குளிக்கப் போறோம். இந்தப் பிள்ளைகளைக் கொஞ்சம் பார்த்துக்கடா.”

அவர்கள் எல்லாரும் குளிப்பதற்காகக் கிளம்பினார்கள். நான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இரண்டு அழ ஆரம்பித்தன. அழுகையை நிறுத்த நான் இரண்டு பேருக்கும் மத்தியில் ஆட்டுக் குட்டியைக் கொண்டுவந்து நிறுத்தினேன்.

இரண்டு குழந்தைகளும் சிறுநீர் கழித்தன. ஆட்டுக்குட்டி இரண்டையும் செய்தது. அப்போது மிகப்பெரிய சுத்தக்காரனான அபு அங்கு வந்தான். அவன் கேட்டான்: “இது என்ன?”

அபு குழந்தைகளின் அழுகையை நிறுத்தினான். விசேஷமாக அவன் எதுவும் செய்துவிடவில்லை. கண்களை உருட்டிக் காண்பித்தான். உதடுகளைக் கடித்தான். சத்தம் போட்டான். அவன் பாத்தும்மாவின் ஆட்டை அடித்து விரட்டினான். பூனைகளை அடித்தான். கோழிகளை விரட்டினான்.

அந்த இடைவெளியில் நான் ஆட்டுக்குட்டியின் மலத்தையும் சிறுநீரையும் அகற்றி அந்த இடத்தை சுத்தம் செய்தேன். ஆட்டுக் குட்டியைக் கொண்டுபோய் வாசலில் விட்டேன்.

“பார்த்தீங்களா! ஆடும் கோழியும் பூனையும் பிள்ளைகளும் எல்லாரும் சேர்ந்து வாசலையும் வராந்தாவையும் அசிங்கமாக்கிட்டாங்க. பெரிய அண்ணே, இதையெல்லாம் எப்படி நீங்க அனுமதிக்கிறீங்க?”

“நான் என்ன செய்யறது?”

“அடிச்சு விரட்டணும்.”

நூலைப்போல ஒல்லியாக இருக்கும் அபுவிற்கு அடிப்பது சத்தம் போடுவது எல்லாமே கைவந்த கலை. எல்லாரும் அவனைப் பார்த்து பயப்படுவார்கள். அவனிடம் குழந்தைகளை ஒப்படைத்துவிட்டுப் போக தாய்மார்களுக்கோ, உம்மாவிற்கோ சிறிதும் விருப்பம் இருக்காது.

“பெரிய அண்ணே, நான் உங்களோட ஒரு சட்டையையும் வேஷ்டியையும் திருடிட்டேன்னு சின்ன அக்கா சொல்லுச்சா?”

ஆனும்மா சொன்னாளா சொல்லவில்லையா என்பதை நான் சொல்லவில்லை. அவனுக்குக் கோபம் வந்துவிட்டது. அவன் சொன்னான்: “சொல்லப்போனா எல்லாருமே திருடியிருக்காங்க. நான் மட்டுமில்ல. உம்மாவும் சின்ன அக்காவும் தலா ஒவ்வொரு வேஷ்டியைத் திருடியிருக்காங்க. அதைச் சொல்லலியா?”

“நீ திருடினேன்னு ஆனும்மா சொல்லல.”

“நான் ஒரு வேஷ்டியையும் சட்டையையும் திருடினேன். இதை நான் யார்கிட்டே வேணும்னாலும் சொல்லுவேன். பெரிய அண்ணே, நீங்க எனக்கு என்ன தந்திருக்கீங்க?”

“நீ படுத்திருக்குற கட்டில்... அதோட விலை நாற்பது ரூபா. கட்டில்ல விரிச்சிருக்கிற ஜமக்காளம், படுக்கை, தலையணைகள், பெட்ஷீட் நீ போர்த்தியிருக்கிற காஷ்மீர் சால்வை... அதோட விலை மட்டும் ஐம்பது ரூபா. நீ பாக்கெட்ல வச்சிக்கிட்டு ஸ்டைலா நடந்துபோற பார்க்கர் பவுண்டன் பேனா... அதோட விலை நாற்பத்து ரெண்டு ரூபா. பிறகு... நீ வர்றப்பல்லாம் ரூபா... அதுக்குக் கணக்கே கிடையாது.”

“இது எல்லாம் பழைய பொருட்களாச்சே! புதுசா ஏதாவது தந்திருக்கீங்களா?”

“தந்தப்போ எல்லாமே புதுசுதான்.”

“பெரிய அண்ணே... எனக்கு இருபத்தஞ்சு ரூபா வேணும்.”

“எதுக்கு?”

“வேணும்.”

ஹனீஃபா கேட்டான். அபு கேட்டான். இன்று என்ன விசேஷம்? அபுவிற்கு பணத்திற்கான தேவையே இல்லை. இருபது சட்டைகளும், வேஷ்டிகளும், பனியன்களும் அவனிடம் இருக்கின்றன. ஒரு பெட்டி நிறைய செருப்புகளும். மொத்தம் அவனிடம் அறுபது செருப்புகள் இருப்பதாக உம்மா சொன்னாள்.

குளிப்பதற்குப் போன ணெண்கள் எல்லாரும் வந்தவுடன், ஆண்கள் சாப்பிடுவதற்காக வந்தார்கள். அப்துல்காதர் வந்தவுடன் கேட்டான்:

“அண்ணே, ஐம்பது ரூபா வேணும். ரொம்பவும் அவசரமா தேவைப்படுது.”

“உன் பாட்டுக்குப் போடா.”

ஹனீஃபா மீண்டும் ஒருமுறை ஞாபகப்படுத்தினான். “நான் பத்து ரூபா கேட்டேன்.”

நான் அதற்குப் பதிலெதுவும் சொல்லவில்லை. ஒரு மணி நேரம் சென்ற பிறகு ரகசியம் எனக்குத் தெரிந்துவிட்டது. தபால்காரர் குட்டன் பிள்ளை படிகளைக் கடந்து வந்து சொன்னார்: “சார், உங்களுக்கு ஒரு மணியார்டர் இருக்கு. நூறு ரூபாவுக்கான மணியார்டர்.”

குட்டன்பிள்ளையின் கன்னத்தில் ஒரு மாம்பழம் அளவிற்கு ஒரு பரு இருக்கும். அதைப் பார்த்தவாறு நான் கேட்டேன்: “இந்த மணியார்டர் விஷயத்தை நீங்க யார்கிட்டவாவது சொன்னீங்களா குட்டன் பிள்ளை?”

“சார்... நாங்க இந்த ஊர்ல வாழ்றவங்க. அப்துல்காதர், ஹனீஃபா ரெண்டு பேர்கிட்டயும் எனக்குப் பல விஷயங்கள் நடக்க வேண்டியதிருக்கு. உங்களுக்கு மணியார்டர் வர்றப்போ, முன் கூட்டியே அதைச் சொல்லிடணும்னு அவங்க ஏற்கனவே என்கிட்ட சொல்லியிருக்காங்க.”

“அப்படின்னா எனக்கு இந்த மணியார்டர் வேண்டாம் குட்டன்பிள்ளை, நீங்களே வச்சுக்கங்க.”

“அய்யோ! என்ன சார் சொல்றீங்க?”

“ஐம்பது, இருபத்தஞ்சு, பத்து, மூணு அஞ்சு- எல்லாத்தையும் சேர்த்தா எவ்வளவு வருது?”

“நூறு.”

“அதுதான் அந்தப் பணத்தோட கணக்கு.”

நான் விளக்கமாக குட்டன்பிள்ளையிடம் சொன்னேன். அவர் சொன்னார்: “அதெல்லாம் அப்படித்தான் சார் நடக்கும்.”

ம்ஹும்! அதெல்லாம் அப்படித்தானாம்! என்ன பயங்கரமான கூட்டு சதி! எப்படிப்பட்ட கொள்ளை!

குட்டன்பிள்ளை தன்னுடைய மகள் சரஸ்வதியை கல்லூரிக்கு அனுப்பியிருக்கும் விஷயத்தைக் கூறிக் கொண்டிருப்பதற்கிடையில் நான் கையெழுத்துப் போட்டு கொடுத்தேன். நூறு ரூபாய்க்கான நோட்டுகளை என் கையில் அவர் தந்தார். அப்போது உம்மாவும் ஆனும்மாவும் எதுவும் பேசாமல் அமைதியாக வராந்தாவில் வந்து உட்கார்ந்தார்கள்.


ஒரு பத்து ரூபாய் நோட்டை நான் பாத்தும்மாவின் ஆட்டிடம் நீட்டினேன்.

குட்டன்பிள்ளை கேட்டார்: “என்ன சார் பண்றீங்க?”

நான் சொன்னேன்: “அதுவும் தின்னட்டும். பாத்தும்மாவோட ஆடு குட்டி போட்டு ரெண்டு நாளாச்சு.”

குட்டன்பிள்ளை சிரித்துக்கொண்டே போனவுடனே, உம்மா கேட்டாள்: “எவ்வளவு ரூபாய்டா?”

“உங்களுக்குத் தெரியாதா என்ன?”

என்ன செய்வது? அன்றே அது காலியாகிவிட்டது. நூறு ரூபாய் சிறு தொகைகளாகப் பிரிந்துவிட்டது என்பதுதான் அதன் அர்த்தம். வீணாகி விடவில்லை!

வாழ்க்கையில் செலவுகள் இருக்கத்தானே செய்கின்றன?

5

ன்று மாலையில் ஹனீஃபா எனக்குத் தேநீர் வாங்கிக் கொடுத்தான். பொதுவாக அப்துல்காதர்தான் காசு கொடுப்பான். தேநீர் குடிப்பது ஹனீஃபாவின் கடையில். அன்று ஹனிஃபா காசு கொடுத்தான்.

ஹனீஃபா மிகப் பெரிய கஞ்சனாயிற்றே! அவனுடைய கடையில் விளக்கு இல்லை. எதற்குத் தேவையில்லாமல் ஒரு விளக்கு? அந்தக் கடைக்குப் பக்கத்திலேயே இருக்கிறது அப்துல்காதரின் தகரக்கடை அங்கு பத்தோ, பன்னிரண்டோ பெட்ரோமாக்ஸ் விளக்குகள் இருக்கின்றன. க்ராமஃபோன் இருக்கிறது. (எனக்குச் சொந்தமான க்ராமஃபோனை உம்மாவை அழ வைத்து, வாங்க வைத்து தன்னிடம் அவன் அதை வைத்திருக்கிறான்.) விளக்குகளையும் க்ராமஃபோனையும் அவன் வாடகைக்குக் கொடுப்பான். மாலையில் வேலை இருந்தால் ஹனீஃபா பாபுவை அழைத்து கூறுவான்: “அந்த விளக்கை கொஞ்சம் இந்தப் பக்கமா தள்ளிவை...”

அப்படி கிடைக்கும் வெளிச்சத்தில்தான் ஹனீஃபா துணிகளைத் தைப்பான். அது போதாதா? வெளிச்சம் கிடைக்கிறதே?

நான் அப்படி உட்கார்ந்திருந்த பொழுது அப்துல்காதரின் பழைய கதையை நினைத்துப் பார்த்தேன்.

அவன் எப்போதும் நெருப்பிற்கு அருகிலேயே இருப்பான். அந்தக் கடையில் கொல்லனின் அடுப்பு இருக்கும். எப்போதும் கடுமையான உழைப்புத்தான். அவனுடைய தலை நரைத்து விட்டிருக்கிறது என்று முன்பு சொன்னேன் அல்லவா? அவனைப் பார்த்து அவன் என்னுடைய அண்ணன் என்றே பலரும் தவறுதலாக நினைத்திருக்கிறார்கள்.

அவன் மிகவும் கஷ்டமுள்ள வேலைகளையெல்லாம் செய்தவன்.

நாங்கள் ஒன்றாகச் சேர்ந்து மலையாளம் நான்காம் வகுப்புவரை படித்தோம். பிறகு நான் நான்கைந்து மைல் தூரத்திலிருக்கும் ஆங்கில உயர்நிலைப்பள்ளியில் சேர்ந்தேன். அப்துல்காதர் மலையாளம் ஏழாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றபோது நான் கண்ணூர் சிறைச்சாலையில் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்தேன் என்று நினைக்கிறேன். அந்தக் கதை ‘நினைவுக் குறிப்பு’ என்ற நூலில் இருக்கிறது. எல்லாம் முடிந்து நான் ஊருக்கு வந்தபோது என் குடும்பச் சொத்து முழுவதும் கடனில் மூழ்கிக் கிடந்தன. வீட்டில் சரியான நேரத்தில் சாப்பிட எதுவும் இருக்காது. புதுஸேரி நாராயண பிள்ளை சார் எங்களுக்கு ‘அ... ஆ...’ சொல்லித்தந்த பள்ளிக் கூடத்தில் அப்துல்காதர் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தான்.

நான் ஒரு பத்திரிகையை நடத்துவதற்காக கொச்சிக்குப் போனேன். சில நாட்கள் கழித்து நான் ஊருக்குத் திரும்பி வரும்போது அப்துல்காதர் ஆசிரியர் வேலையை விட்டுவிட்டு பீடி சுற்றக்கூடிய ஆளாக ஒரு கடையில் உட்கார்ந்திருந்தான்.

வாசலில் இலையையும் கத்திரியையும் வைத்துக்கொண்டு அவன் பீடி சுற்றிக் கொண்டிருந்தான். இரண்டாயிரம் பீடிகள் வரை அவன் சுற்றுவான். ஒன்றரை ரூபாய் கூலியாகக் கிடைக்கும்.

பிறகு நான் வந்தபோது அவன் பீடி சுற்றும் வேலையை விட்டிருந்தான். சந்தையில் ஒரு சிறிய அறையில் கொல்லனின் அடுப்பை வைத்துக்கொண்டு தகர வேலை செய்பவனாக மாறியிருந்தான். தகரத்தை வைத்து அவன் எதை வேண்டுமானாலும் உருவாக்குவான்

.இந்த விஷயங்களை அவனுக்கு யாரும் கற்றுத் தரவில்லை. தன்னுடைய சொந்த அறிவை வைத்து, சுய முயற்சியால் அவன் அந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். அறிவை வைத்து சிந்தித்து கண்டுபிடித்த சுதந்திரமான வேலை. சுயமாக சிந்தித்தால் மற்றவர்களை நம்பியிருக்காமல் எதையாவது கண்டுபிடித்து கஷ்டப்பட்டு உழைத்து ஏதோ ஒரு விதத்தில் மகிழ்ச்சியுடன் சில நேரங்களில் வாழ முடியும்.

நான் அந்தக் காலத்தில் இலக்கியவாதியாக எர்ணாகுளத்தில் வசித்துக் கொண்டிருந்தேன்- 1936, 37-ல் நிறைய எழுதுவேன். அதற்கு சன்மானமாக எதுவும் கிடைக்காது. சன்மானம் கேட்கவோ, வாங்கவோ முடியாத நிலை. இலக்கிய சேவை! இலக்கிய ஆலயத்தில் தினந்தோறும் நடக்கும் பூஜை! ஆனால், சாப்பிடுவதற்கு எதுவும் இருக்காது. எனினும், எழுதுவேன்.

பத்திரிகைகளில் பிரசுரமாகும். பிறகு எல்லா பத்திரிகைகளிலிருந்தும் பிரித்து எடுத்து வைத்து அடுக்கி பாதுகாப்பாக வைப்பேன். அப்படி நான் முழுநேர இலக்கியவாதியாக பட்டினியுடனும் கஷ்டங்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது அப்துல்காதர் இரும்புக் கழியை ஊன்றியவாறு தடிமனான ஒரு பவுண்டன் பேனாவுடன் என்னைத் தேடி வந்தான். காரணமில்லாமல் அவன் வரவில்லை. காரணம் இருந்தது!

“அண்ணே... இந்தப் பத்திரிகைகளிலெல்லாம் என்ன எழுதியிருக்கீங்க! அதை எடுங்க. நான் அதை வாசிச்சுப்பாக்குறேன்.”

மதிப்பாக நான் என்னுடைய இலக்கிய படைப்புகள் எல்லாவற்றையும் எடுத்து அவனுடைய கையில் கொடுத்தேன். பிறகு அவனிடம் கெஞ்சி இரண்டனா வாங்கிக் கொண்டு தேநீர் குடிப்பதற்காகச் சென்றேன். நான் கொஞ்ச நேரம் அங்குமிங்குமாய் நடந்தேன். அவன் படித்து ரசிக்கட்டும். அவனிடம் இன்னும் நான்கணாவைக் கடனாக வாங்க வேண்டும் என்று தீர்மானித்தேன். அந்த உன்னதமான படைப்புகளின் படைப்பாளனான அவனுடைய அண்ணன் அல்லவா கேட்பது? அவன் நிச்சயமாகத் தருவான். இப்படியெல்லாம் நினைத்தவாறு நான் திரும்பவும் அறைக்கு வந்தேன். நான் பார்த்தபோது தான் வாசித்த எல்லா பேப்பர்களிலும் தன்னுடைய தடிமனான பேனாவால் கோடு போட்டிருந்தான். எதற்காக கோடு? நான் ஒரு பீடியைப் பற்ற வைத்து நாற்காலியில் அமர்ந்தபோது அவன் அழைத்தான். “அண்ணே, இங்கே வாங்க...”

ஏதோ முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும். நான் எழுந்து சென்று அவனுக்குப் பக்கத்தில் பாயில் உட்கார்ந்தேன். அவன் மிகவும் அலட்சியமாக என்னை ஒரு பார்வை பார்த்தான். பிறகு ஒரு வாக்கியத்தைப் படித்தான். ஸ்டைலன் வாக்கியம். ஆனால், அவன் கேட்டான்: “இது வாக்கிய அமைப்பு சரியாவே இல்லையே? எனக்கு எதுவும் புரியவில்லை. என்ன வாக்கிய அமைப்பு?”

அவன் ஒரு சிறு மாணவனிடம் பேசுவது போல் என்னிடம் சிறிது நேரம் பேசினான். அது சொற்கள், வாக்கிய அமைப்பு, குறியீடு, லொட்டு, லொடுக்கு ஆகிய இலக்கண சம்பந்தப்பட்ட சப்லாச்சி விஷயங்களைப் பற்றியது. லொட்டு லொடுக்கு என்று அவன் கூறவில்லை. அரை மணி நேரம் பேசியதில் அவன் என்னை ஒரு விஷயம் தெரியாத ஆள் என்பது மாதிரி ஆக்கிவிட்டான். பிறகு சொன்னான்: “அண்ணே, நீங்க இலக்கணம் கத்துக்கணும்.”

அதோடு நிறுத்தவில்லை. சில இலக்கணப் புத்தகங்களின் பெயர்களையும் அவன் சொன்னான். எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. நரம்பு முறுக்கேற நான் சொன்னேன்:


“எந்திருச்சு போடா. நீயும் உன் லொடுக்கூஸ் பேச்சும்! டேய், நீதானே நெய் திருடித் தின்னு உடம்புக்குச் சரியில்லைன்னு சொல்லிக்கிட்டு இருந்த பெரிய திருட்டுப் பய! டேய், நாம எப்படி பேசுவோமோ அதே மாதிரி நான் எழுதி வச்சிருக்கேன். இதுல உன்னோட இலக்கண சமாச்சாரங்கள் இல்லாமப் போனா என்ன? நீயும் உன் இலக்கணம்!”

அவன் சொன்னான்: “அண்ணே, என்னை எப்படி வேணும்னாலும் வாய்க்கு வந்தபடி திட்டுங்க. அதைப் பற்றி எனக்குக் கவலை இல்ல. ஒரு விஷயத்தை மட்டும் சொல்றேன். அண்ணே... நான் சொன்ன புத்தகங்களை ஒரு வருஷத்துக்கு படிச்சு ஒழுங்கா எல்லாத்தையும் கத்துக்கிட்டு அதுக்குப் பிறகு எழுத ஆரம்பிங்க. மலையாளத்துல எத்தனை எழுத்துக்கள் இருக்குன்னு உங்களுக்குத் தெரியுமாண்ணே? முதல்ல இதுக்குப் பதில் சொல்லுங்க.”

“நீ பேசாம போடா”- காலை மடக்கி அவனை உதைக்க நினைத்தேன். நாகரிகம் கருதி அதைச் செய்யவில்லை. நான் சொன்னேன்: “வீட்டுல எல்லாரையும் நான் கேட்டதாகச் சொல்லு. குறிப்பா வாப்பாவையும் உம்மாவையும் எனக்குப் பணம் எதுவும் வர ஆரம்பிக்கலைன்றதையும் சொல்லு. அதனாலதான் நான் எதுவும் அனுப்பி வைக்கல.”

அவனிடம் காலணா கூட கடன் கேட்கவில்லை. கேட்க வேண்டும் என்று தோன்றவில்லை. அவனுடைய இலக்கண விளக்கம்! மலையாளத்தின் எழுத்துக்கள்!

அந்தக் காலமெல்லாம் போய்விட்டது. இப்போது என்னுடைய புத்தகங்களை மிகவும் ஆர்வத்துடன் அவன் படிப்பான். எங்கள் உறவினர்களைப் பற்றி சில கதைகளை எழுதும்படி அவன் என்னிடம் கேட்டுக் கொள்வான். கதைகளை மற்றவர்களிடம் கூறுவான்.

“அண்ணே, நீங்க எழுதித் தந்தா போதும். நான் அச்சடிச்சு வித்துக்குறேன்.”

பணத்தை அவன் எடுத்துக் கொள்வான். பெரிய திருடன்தான்!

மறுநாள் என்னுடைய சாம்பமரத்தைப் பெண் பிள்ளைகள் வாயில் நீர் ஊற பார்த்தவாறு போய்க்கொண்டிருந்தபோது பாத்தும்மா ஆட்டையும், குட்டியையும் தன்னுடைய வீட்டிற்குக் கொண்டு போவதற்காக வந்தாள். காரணம்?

“இங்கே யாரும் இதைச் சரியா பார்க்க மாட்டாங்க பெரிய அண்ணே. அபு விரட்டுவான். நாளையில் இருந்து பால் கறந்து விற்கணும். ஒரு தேநீர் கடைக்குப் பால் தர்றதா சொல்லியிருக்கேன்.”

அதுதான் காரணம்!

பாத்தும்மா ஆட்டையும் குட்டியையும் கொண்டு போனாள். குட்டியை அழகாக பாத்தும்மா தூக்கியிருந்தாள்.

பிறகு ஆடும் குட்டியும் மகிழ்ச்சி பொங்க வந்தது. பத்து மணிக்குத்தான். குட்டி உற்சாகத்துடன் இங்குமங்குமாய் ஓடிக்கொண்டிருக்கும். என் படுக்கையில் ஏறும். பிள்ளைகளுடன் சேர்ந்து சாப்பிடும். தாய் ஆடும் எப்போதும் உற்சாகத்துடன் காணப்படும். அது பிள்ளைகளுடன் சேர்ந்து சோறு சாப்பிடும். சத்தமும், ஆரவாரமும், ஓட்டமும்...

இப்படியே சில நாட்கள் கடந்துபோன பிறகு, வீட்டில் சிரிப்பும், ஆரவாரமும், மொத்தத்தில் வீடு முழுக்க சந்தோஷம்... அபி, பாத்துக்குட்டி, ஸையதுமுஹம்மது, லைலா, ஆரிஃபா எல்லாரும் பால் கலந்த தேநீர் குடிக்கிறார்கள்! அதற்கு எதற்கு இந்த ஆரவாரமும் சிரிப்பும்? நான் அந்தப் பக்கம் போனேன். இரண்டு ஆனும்மாமார்களும், உம்மாவும், அய்ஸோம்மாவும் கப்பைப் புட்டுடன் சேர்ந்து பால் கலந்த தேநீர் குடித்துக்கொண்டிருக்கிறார்கள்! எல்லாரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

“என்ன உம்மா, ஒரே சிரிப்பு ஆரவாரமும்?”

“ஒண்ணுமில்லடா...” -உம்மா சிரித்துக்கொண்டே சொன்னாள்.

“பெரிய அண்ணே, சொல்லக்கூடாது. நாங்க ஆட்டுக்குட்டியை பிடிச்சுக் கட்டிட்டோம்.”

“பிறகு?”

“பெரிய அண்ணே, சொல்லுவீங்களா?”

“விஷயம் என்ன?”

அப்துல்காதரின் மனைவி இடையில் புகுந்து சொன்னாள்: “நாங்க பாத்தும்மாவோட ஆட்டைக் கறந்தோம். ஒரு உழக்கு நிறைய பால் கிடைச்சது.”

“என்ன உம்மா இது? நீங்க எதுக்கு பாத்தும்மாவோட ஆட்டைத் திருட்டுத்தனமா கறந்தீங்க?”

உம்மா சொன்னாள்: “இல்லாட்டி அவ அதை நினைக்க வேண்டாமா?”

ஆனும்மா சொன்னாள்: “பெரிய அண்ணே... சொல்லிடாதீங்க. எங்களுக்கு ரொம்பவும் அவமானமா ஆயிடும்.”

அவமானம் ஆகட்டும்! என்னுடைய கண்களுக்கு முன்னால் இந்த மிகப் பெரிய திருட்டுத்தனத்தைச் செய்ய நான் எப்படி அனுமதிப்பேன்?

பாத்தும்மா வந்தபோது நான் சொன்னேன்:

“பாத்தும்மா, நீ கவனமா இரு. உன் ஆட்டை இவங்க எல்லாரும் ஒண்ணு சேர்ந்து கறந்து பால் எடுத்து தேநீர் போட்டு குடிச்சாங்க. குட்டியை முன்னாடியே பிடிச்சு கட்டிப் போட்டுட்டாங்க.”

அவ்வளவுதான்- பாத்தும்மா கத்த ஆரம்பித்துவிட்டாள்: “அவங்க கண்கள்ல இரத்தம் இருக்கா? அவங்களோட பிள்ளைகளைப் பிடிச்சு அவங்க கட்டுவாங்களா? நான் கேக்கறேன்...”

பாத்தும்மா அந்தப் பக்கம் ஓடினாள். அப்போது அங்கு உம்மாவும், இரண்டு ஆனும்மாக்களும், அய்ஸோம்மாவும், பாத்துக்குட்டியும், அபியும், லைலாவும், ஆரிஃபாவும் தயாராக நின்றிருந்தார்கள். எல்லாரும் ஒரே குரலில் சொன்னார்கள்: “நல்லதாப் போச்சு! நல்லதாப் போச்சு! நாங்கதான் செஞ்சோம். இனிமேலும் செய்வோம். ஆடும் குட்டியும் இங்கேதான் வளருது. எங்களோட கப்பைப் புட்டையும் எங்களோட பலா இலையையும் எங்களோட கஞ்சித் தண்ணியையும் எங்க பிள்ளைங்களோட சாதத்தையும் தின்னு தடிச்சு கொழுத்துப் போய்த்தான் அது பால் தருது. தெரியுதா?”

பாத்தும்மா அவர்களைப் பிரிப்பதற்காகச் சொன்னாள்: “அடியே ஆனும்மா! நீ என்னோட சின்ன தங்கச்சிதானே? உனக்கு நான் ஒரு ஆடு தந்தேன்ல? உம்மா, என் அருமை உம்மால்ல இந்தக் கண்ணுல இரத்தம் இல்லாத நாத்தனார்மார்களை வச்சுக்கிட்டு இப்படிச் செய்யலாமா?”

உம்மா சொன்னாள்: “போதும்டி, போதும் உன்னோட நாத்தனார்மார்களும் நானும் உன் தங்கச்சியும்- எல்லாரும் சேர்ந்துதான் பால் கறந்ததே. நாங்க எல்லாரும் சேர்ந்துதான் தேநீர் குடிச்சோம். நல்ல ருசியா இருந்துச்சு...”

பாத்தும்மா சொன்னாள்: “இனி நான் இந்த வீட்டுல காலடி எடுத்து வைக்கமாட்டேன்.”

பாத்தும்மா ஆட்டுக்குட்டியை வாரி எடுத்து முத்தமிட்டாள்.

“தங்கமே. உனக்குக் கிடைக்க வேண்டிய பாலை இவங்க திருடி குடிச்சிருக்காங்க. பச்சைத் தண்ணி நான் தர்றேன்... வா!”

பாத்தும்மா ஆட்டுக்குட்டியுடன் என்னைத் தேடி வந்தாள். “நான் போறேன், பெரிய அண்ணே. இனி இவங்க என் ஆட்டைக் கறந்து பால் குடிக்கிறதைத்தான் பார்ப்போமே!”

பாத்தும்மா ஆட்டுக்குட்டியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்தாள். எனக்குச் சந்தோஷமாக இருந்தது. குட்டி இல்லாமல் இனி இவர்கள் ஆட்டைக் கறந்து எப்படிப் பால் குடிக்கிறார்கள் என்பதையும் பார்ப்போமே!

ஆனால், ஆடு பால் சுரக்க, குட்டி கட்டாயம் வேண்டுமா என்ன?

பெண் ரத்தினங்களுக்கு இந்த விஷயம் தெரியாதா? கவனமாக இருக்க வேண்டாமா?


6

ரியாகப் பத்து மணிக்கு பாத்தும்மாவின் ஆடு வரும். சிறிது நேரம் கழித்து பாத்தும்மாவும் கதீஜாவும் வருவார்கள். பாத்தும்மாவிற்கு மனதிற்குள் வருத்தம் இருக்குமோ என்னவோ? நாத்தனார்களிடமும் தங்கையிடமும் உம்மாவிடமும் எப்போதும்போல் பேசிக்கொண்டிருப்பாள். வீட்டு வேலைகளைச் செய்வாள். கப்பைப்புட்டு தின்பாள். பால் கலக்காத கடும் தேநீர் குடிப்பாள். ஆட்டிற்குக் கஞ்சி கொண்டுபோய் வைப்பாள்.

கொச்சுண்ணி வந்தபோது நான் பால் திருட்டைப் பற்றிச் சொன்னேன்.

அவன் சொன்னான்:

“நான் ஏற்கெனவே கொஞ்சம் பாலை இங்கே கொண்டுவந்து கொடுக்கச் சொல்லி சொன்னேன். பாத்தும்மா என்ன செய்தா தெரியுமா? நாலு வீடுகளுக்குப் பால் தர்றதா சொல்லிட்டா. ஒரு தேநீர் கடைக்கு நான் தர்றதா சொல்லிட்டேன். எனக்கும் கதீஜாவுக்கும் கொஞ்சம்கூட இவ தேநீருக்குப் பால் தர்றது இல்ல.”

அப்படியா? அப்படியென்றால் கொச்சுண்ணியும் கதீஜாவும் கூட பால் கொடுக்கறது இல்லியாமே?”

பாத்தும்மா சொன்னாள்: “பால் விற்றுக் கிடைக்கிற காசை கதீஜாவோட வாப்பாதானே வாங்கிக்கிறாரு! இவ்வளவு நாளும் எல்லாரும் பால் இல்லாமல்தானே தேநீர் குடிச்சாங்க? இப்ப மட்டும் ஏன் அப்படியொரு ஆசை? நான் பால் குடிக்கிறேனா?”

“நீ பெரிய கஞ்சத்தனம் பண்றவளா ஆயிட்ட...”

“கதீஜாவோட வாப்பா அதைப் பண்ணனும், இதைப் பண்ணனும்ன்றாரு. அதுக்கெல்லாம காசு வேண்டாமா?”

அது சரிதான். இப்படிப் பல விஷயங்களையும் நினைத்துக் கொண்டிருக்கும்பொழுது சுலைமான் மூன்று அன்னாசிப் பழங்களை என்னிடம் கொண்டுவந்து தந்துவிட்டு சொன்னான்: “சீமை அன்னாசிப்பழம்.. நல்ல சுவையா இருக்கும்..”

நான் அதில் ஒன்றை அறுத்துப் பிள்ளைகளுக்குத் தலா ஒரு துண்டைக் கொடுத்து தின்று கொண்டிருக்கும்பொழுது அபு மிடுக்காக நான் இருக்குமிடத்திற்கு வந்தான்.

“ம்... பணக்காரங்கன்னா இப்படித்தான் இருப்பாங்க.” -அவன் சொன்னான்: “எனக்கு அன்னாசிப்பழம் தர்றதுக்கு யாருமில்ல. பெரிய அண்ணே, உங்களுக்கு இன்னைக்கு ஒரு விருந்து தர திட்டமிட்டிருக்காங்க.”

“என்ன விருந்து?”

“ரொட்டியும் தேநீரும்.”

“நீயும் என் கூட வா.”

“என்னை யாரும் கூப்பிடல. பெரிய அண்ணே, உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? கஞ்சத்தனமான பெரிய அக்கா, சின்ன அண்ணனுக்கும் ஹனீஃபாவுக்கும் நேற்று பால் கலந்த தேநீர் கொடுத்து அனுப்பினாங்க.”

“பால் கலந்த தேநீரா?”

“ஆமா...”

“உனக்குத் தரலையா?”

“நான் அவங்களுக்குப் பக்கத்துலதானே இருந்தேன்? அதனால எனக்கும் ஒரு சிங்கிள் கிடைச்சது.”

ஆச்சரியம்தான். பாத்தும்மா அப்துல்காதருக்கும் ஹனீஃபாவிற்கும் அபிக்கும் பால் கலந்த தேநீர் கொடுத்திருக்கிறாள். இதில் ஏதோ ரகசியம் இருக்கிறது!

பாத்தும்மா இந்தப் பால் கலந்த தேநீரைக் கொடுத்துவிட்டதற்குக் காரணம் என்னவா இருக்கும்?”

“ஹனீஃபா அண்ணன் ஸ்ட்ரைக் பண்ணிட்டாரு.”

“என்ன ஸ்ட்ரைக்?”

“பெரிய அக்காவோட ஆடை, கதீஜாவோட ப்ளவ்ஸ், பிறகு... கிழிந்த துணிகள்- இது எல்லாத்தையும் தைச்சு தர்றது ஹனீஃபா அண்ணன்தான். முந்தாநாள் எதையோ தைக்கணும்னு கதீஜா வந்தப்போ, தைச்சு தர விருப்பமில்லைன்னு சொல்லி அனுப்பியாச்சு. இனிமேலும் அப்படி சொல்லிடக் கூடாதுன்றதுக்காகக் கொடுத்த லஞ்சம்தான் அந்த ஒரு சிங்கிள் பால் கலந்த தேநீர்!”

“அப்துல்காதருக்குக் கொடுத்ததுக்குக் காரணம்?”

“பெரிய மச்சான் சின்ன அண்ணனுக்கு கொஞ்சம் பணம் தரணும். உடனே பணத்தைத் திருப்பித் தரலைன்னா வழக்கு போடுவேன்னு சின்ன அண்ணன் சொல்லிட்டாரு. முதல் குற்றவாளி பெரிய மச்சான்... ரெண்டாவது குற்றவாளி பெரிய அக்கா. மூன்றாவது குற்றவாளி கதீஜா. அது போதாதுன்னு ஆட்டை ஜப்தி பண்ணப் போறதா வேற சொல்லிட்டாரு. அப்படி எதுவும் நடக்காம இருக்கணும்ன்றதுக்குத்தான் ஒரு சிங்கிள் தேநீர்!”

இப்படி லஞ்சம் தருவதற்காகவும் பாத்தும்மாவின் ஆட்டின் பால் பயன்படுகிறது.

அபு சொன்னான்: “குட்டன் பிள்ளை வர்றாரு.”

உண்மைதான். தபால்காரர் குட்டன் பிள்ளை படியைக் கடந்து வந்து, ஒரு பார்சலைத் தந்தார். நான் கையெழுத்துப் போட்டேன். குட்டன் பிள்ளை போனபிறகும் நான் பார்சலை அவிழ்த்துப் பார்க்கவில்லை. உம்மா கேட்டாள்: “என்னடா இருக்கு அந்த பார்சல்ல?”

நான் சொன்னேன்: “என் புதிய புத்தகத்தோட பத்து காப்பிகள். பதிப்பகத்துல இருந்து எனக்கு அனுப்பியிருக்காங்க. போதுமா?”

அப்போது உம்மா கேட்டாள்:

“விற்றால் காசு கிடைக்குமா?”

“உங்க வேலையைப் பார்த்துக்கிட்டு போங்க உம்மா அந்தப் பக்கம். எப்போ பார்த்தாலும் காசு... காசு... காசு...”

என்னிடம் அப்போது காசு ஒரு தம்படி கூட இல்லை. என் மனதில் ஒரு அருமையான திட்டம் உதித்தது. உம்மா போனதும் நான் அபுவை ரகசியமாக அழைத்தேன்.

“இந்தப் புத்தகங்களை சந்தையில கொண்டு போய் உன்னால விற்க முடியுமா?”

அவன் அடுத்த கணம் கேட்டான். “எவ்வளவு கமிஷன் தருவீங்க?”

“நான் தர்றேன்டா” என்று கூறி பார்சலைப் பிரித்து ஒன்பது புத்தகங்களை ஒரு தாளில் சுற்றி அபுயிடம் கொடுத்து அனுப்பிவிட்டுக் காத்திருந்தேன்.

சொந்த ஊர். நான் எழுதிய புத்தகம். யாராவது காசு கொடுத்து அதை வாங்குவார்களா?

ஒன்றிரண்டு மணி நேரங்கள் கழிந்தன. அபு வந்தான். அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். எல்லா புத்தகங்களும் விற்பனையாகி விட்டன. ஒரு புத்தகத்தின் விலை முழுவதையும் அபுவிற்குக் கொடுத்தேன். மீதிப் பணத்தை எண்ணிக் கொண்டிருந்தபோது “என்ன கிடைச்சதுடா?” என்று கேட்டவாறு உம்மா வந்தாள். அந்தப் பணத்தை அவள் பார்த்துவிட்டதில் எனக்குப் பயங்கரமாகக் கோபம் வந்தது. எனக்குப் பக்கத்திலிருந்த ஒரு கண்ணாடி டம்ளரை எடுத்து என்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி சுவர் மீது வீசி எறிந்தேன். பத்தாயிரம் துண்டுகளாக டம்ளர் நொறுங்கி ‘க்ணீம்’ என்று கீழே விழுந்தது. உம்மா எதுவும் பேசாமல் அதைப் பொறுக்கி ஒரு தாளில் சுற்றிக் கொண்டுபோய் வெளியே போட்டாள். பிறகு வந்து எதுவும் பேசாமல் எனக்கு முன்னால் வெளியே பார்த்தவாறு உட்கார்ந்தாள். அவள் ஏன் எதுவுமே பேசவில்லை?

நான் மீதியிருந்த ‘பிரபலமான மூக்கு’ புத்தகத்தை எடுத்து பாத்தும்மாவின் ஆட்டிற்கு நேராக நீட்டினேன். அது ஆர்வத்துடன் அருகில் வந்தது.

“என்ன செய்றீங்க பெரிய அண்ணே?” - அபு கேட்டான். நான் சொன்னேன்:

“பாத்தும்மாவின் ஆடு, இளம் பருவத்துத் தோழி, சப்தங்கள்- இந்தப் புத்தகங்களை இது ரொம்பவும் விருப்பத்தோட தின்னுச்சு. அப்போ இனியும் புத்தகங்கள் இருக்கு- தர்றேன்னு நான் சொன்னேன். இந்தப் புத்தகத்தை இது தின்னு பார்க்கட்டுமே!”

“அதைத் தின்ன கொடுக்க வேண்டாம்” - அபு சொன்னான்.


நான் புத்தகத்தைக் கொண்டுபோய் பெட்டிக்குள் வைத்தேன். அபு போன பிறகு கிடைத்த பணத்தில் பாதியை உம்மாவின் மடியில் வைத்தேன். உம்மா கேட்டாள்: “டேய், அந்தப் புத்தகம் ஒவ்வொண்ணோட விலையும் எவ்வளவு?”

நான் உண்மையைச் சொன்னேன். சிறிது நேரம் கழித்து அப்துல்காதர் சாப்பிட வந்தபோது என்னிடமிருந்த அந்தப் புத்தகத்தை அவன் வாங்கிக் கொண்டான்.

“ஒரு பெரிய கட்டாக இருந்துச்சே!”

“பத்து காப்பிகள் இருந்துச்சு. ஒன்பது புத்தகங்களை அபு கொண்டு போய் விற்றுட்டு வந்தான்.”

“பணம் எங்கே?”

“ஒரு புத்தகத்தோட விலையை அபுவிற்குக் கொடுத்துட்டேன். மீதி இருந்ததுல பாதியை உம்மாவுக்குக் கொடுத்துட்டேன்.”

“எனக்கு எதுவும் இல்லியா?”

“நீ அந்தப் புத்தகத்தை விற்று காசை எடுத்துக்கோ.”

“உம்மா!” என்று அழைத்தவாறு அவன் உள்ளே சென்றான். அங்கு சில ‘குசுகுசுக்கள்’ கேட்டன.

“நான்தான் இங்கே எல்லா செலவுகளையும் பார்க்கறவன். நீங்க இல்ல...” -அப்துல்காதர் சொல்வது காதில் விழுந்தது. சிறிதுநேரம் கழித்து மகிழ்ச்சியுடன் அவன் போனான். உம்மாவின் முகத்தைப் பார்த்தபோது, அவளிடமிருந்த பணத்தை அப்துல்காதர் வாங்கிக்கொண்டு போய்விட்டான் என்பதைப் புரிந்துகொள்ள முடிந்தது.

நான்கு மணிக்கு கொச்சுண்ணியும் கதீஜாவும் வந்து என்னை அழைத்தார்கள். அபுவையும் அழைத்துக்கொண்டு நான் போனேன்.

கொச்சுண்ணியின் வீட்டில் அவனுடைய வாப்பாவும் உம்மாவும் சகோதரிகளும் இருந்தார்கள். பாத்தும்மாவும் கொச்சுண்ணியும் கதீஜாவும் பாத்தும்மாவின் ஆடும் ஆட்டுக் குட்டியும் கோழிகளும் மகிழ்ச்சியுடன் வாழ ஒரு சிறு வீடு இருக்கிறது என்று அபு சொன்னான்.

“அந்த விஷயம் பெரிய அண்ணே, உங்களுக்குத் தெரிய வேண்டாம்னு பெரிய அக்கா சொல்லிடுச்சு. நீங்க அந்த வீட்டைப் பார்க்கணும்.” என்று அபு ரகசியமாக என்னிடம் சொன்னான்.

சுட்ட பத்திரியை வயிறு நிறைய நாங்கள் சாப்பிட்டோம். பால் கலந்த தேநீரும் குடித்தோம். பாத்தும்மாவின் வீட்டை நாங்கள் பார்த்தோம்.

“பெரிய அண்ணே, நீங்க எதுக்காக இங்கே வந்தீங்க?” என்று கவலையுடன் பாத்தும்மா கேட்டாள். பாத்தும்மாவின் வீடு பரிதாபமான நிலையில் இருந்தது. மண்ணைக் குழைத்துச் செய்த, பனையோலை வேய்ந்த ஒரு சிறிய அறை. அதன் கதவு ஏதோ ஒரு பழைய வீட்டில் இருந்ததாக இருக்க வேண்டும். அதைக் கயிறு வைத்து கட்டியிருந்தார்கள். அதற்குப் பூட்டு எதுவும் இல்லை.

“ரொம்பவும் கஷ்டமா இருக்கு” - பாத்தும்மா சொன்னாள்: “இப்படி நான் வாழ்ந்து என்னத்தைக் கண்டேன்?”

நான் சொன்னேன்: “நீ பேசாம இரு. அந்தக் கதவைச் சரி பண்ண நான் பணம் தர்றேன்.”

“வேண்டாம் பெரிய அண்ணே. நான் என் ஆட்டோட பாலை விற்று சரி பண்ணிக்குறேன்.”

“வேண்டாம் நான் தர்றேன்.”

அன்று இரவு சாப்பிட்டு முடித்து நான் வீட்டில் நாற்காலியில் வாசலைப் பார்த்தவாறு திரும்பி உட்கார்ந்திருந்தேன். கொச்சுண்ணி, சுலைமான், பாத்தும்மா- எல்லாரும் இருந்தார்கள்.

அப்துல்காதர் ஹனீஃபாவிடம் சொன்னான்:

“டேய், நாம பொழுது விடிஞ்ச உடனே கிளம்பணும். கச்சேரி திறந்த உடனே நம்ம வழக்கைப் பதிவு பண்ணிட்டு நாம திரும்பி வரணும்.”

நான் கேட்டேன்: “என்ன வழக்கு?”

“ஒரு சிவில் வழக்கு. உடனே ஒண்ணை ஜப்தி பண்ணனும். ஒரு வழக்கை நான் நீட்டிக்கிட்டு இருந்தேன். ஆனால், சில சம்பவங்கள் பெரிசாயிடுச்சு. இனி அதைத் தாமதப்படுத்தினா சரியா வராது...”

“என்ன சம்பவங்கள்!”

“சுட்ட பத்திரியை தேங்காய் பால்ல முக்கி கிண்ணத்துல அடுக்கி வச்சு தந்தப்போ எங்களை நினைக்கல. எங்களுக்கு ஒவ்வொரு சிங்கிள் தேநீர்! மற்றவங்களுக்கு பத்திரி...”

ஆனும்மா சொன்னாள்: “நானும் உம்மாவும் நாத்தனார்மார்களும் வாய்ல நீர் ஊற இந்த வீட்டுலதான் இருந்தோம். எங்களையும் நினைக்கல...”

சுலைமான் சொன்னான்:

“அப்போ நான்?”

அப்துல்காதர் சொன்னான்: “சுலைமான், நீ முதல் சாட்சி.”

பாத்தும்மா சொன்னாள்: “நான் யாருக்கெல்லாம் பயப்படுறது? உம்மாவுக்குப் பயப்படணும். நாத்தனார்மார்களுக்கும் என்னுடைய தங்கச்சிக்கும் பயப்படணும். சின்ன அண்ணனுக்குப் பயப்படணும். ஹனீஃபாவுக்குப் பயப்படணும். அபுவிற்குப் பயப்படணும். என் புருஷனுக்குப் பயப்படணும். இப்போ சுலைமானுக்கும் பயப்படணும்.”

“என்னைப் பார்த்து யாரும் பயப்பட வேண்டாம்.” அபு சொன்னாள்.

நான் சொன்னேன்: “போதும்டா.”

பாத்தும்மா சொன்னாள்: “சின்ன அண்ணே... நான் எல்லாருக்கும் விருந்து வைக்கிறேன். கொஞ்ச நாட்கள் பொறுத்திருக்கணும்...”

“எவ்வளவு நாட்கள்?” அவன் கேட்டான்.

“அதை நான் சொல்றேன் சின்ன அண்ணே. டேய், ஹனீஃபா... என்ன இருந்தாலும் நீ அப்படி நடக்கலாமா? நீ அந்தத் துணியைத் தைக்காமலே கதீஜாகிட்ட கொடுத்து அனுப்பிட்டேல்ல?”

ஹனீஃபா சொன்னான்: “நான் இலவசமா தச்சிக்கிட்டு இருந்தா போதும்னு சொல்றீங்களா? அபுவிற்கு ஒவ்வொரு நாளும் சட்டை தைக்கணும். இந்த வீட்டுல இருக்குற எல்லாருக்கும் தைக்கணும் யாராவது அதுக்குக் காசு தர்றீங்களா?”

அப்துல்காதர் சொன்னான்: “உன் பொண்டாட்டியோட துணியைத் தைக்கிறதுக்கு நான் காசு தரணும். லைலாவோட பாவாடையையும் ப்ளவ்ஸையும் தைக்கிறதுக்கு நான் காசு தரணும். அபியோட கோட்டையும் ட்ரவுசரையும் தைக்கிறதுக்கு நான் காசு தரணும். சரிதான்டா!”

ஹனீஃபா கோபித்துக் கொண்டான். “யாரும் எனக்கு எதுவும் தர வேண்டாம். நான் பட்டாளத்துக்குப் போறேன். இன்னைக்கு ராத்திரியே புறப்படுறேன்.”

அப்போதுதான் எனக்கு ஒரு சம்பவம் ஞாபகத்தில் வந்தது. நான் சொன்னேன்: “டேய், ஒரு மணி நேரம் கழிச்சு நீ பட்டாளத்துக்குப் போகலாம். நீ பல நேரங்கள்ல பட்டாளத்துல இருந்து விடுமுறையில வந்திட்டு திரும்பிப் போறப்போ எர்ணாகுளத்துக்கு என்னைத் தேடி வருவேல்ல? அப்போ என்கிட்ட அஞ்சு, பத்துன்னு கடன் வாங்கிட்டுப் போயிருக்கே. இருந்ததையெல்லாம் உம்மா வாங்கிக்கிட்டாங்க. அப்துல்காதர் வாங்கிக்கிட்டான்னு நீ என்கிட்ட சொல்வே. அந்தப் பணத்தை நீ எனக்கு அனுப்பினதே இல்ல. அந்தப் பணம் முழுவதையும் கொடு.”

ஹனீஃபா உடனே அய்ஸோம்மாவை அழைத்தான்.

“புறப்படுடீ... குழந்தைகளையும் தூக்கிக்கோ. இந்த வீட்டுல இனி நாம இருக்கக்கூடாது. ஆளுங்க எப்படி நடக்குறாங்க பாரு. நாம அங்கே போய் ஏதாவது ஒரு ஓலைக் குடிசையைக் கட்டி இருக்குறதுக்கு வழியைப் பார்ப்போம். வா... எந்திரிடா அபி...”

நான் கேட்டேன்: “டேய், நீ எனக்குப் பணம் தரவேண்டியதிருக்கா?”

அவன் சொன்னான்: “அது அப்போ நடந்தது பெரிய அண்ணே. அதையெல்லாம் இப்போ யார் ஞாபகத்துல வச்சிருக்குறது?”

“எது எப்படியோ, பணம் தர வேண்டியதிருக்குன்னு ஒத்துக்கிட்டேல்ல. சந்தோஷம்!”

நான் போய் படுத்தேன். அதிகாலை நான்கு மணிக்கும் பாத்தும்மாவும் கொச்சுண்ணியும் கதீஜாவும் போகும் சத்தம் கேட்டு கண் விழித்தேன். நான் அப்படியே படுத்திருந்தேன்.


உம்மா கேட்டாள்: “நீ எந்திருச்சிட்டியா?”

நான் சொன்னேன்: “நான் படுத்திருக்கேன். என்ன விஷயம்?”

உம்மா சொன்னாள்: “உன்கிட்ட காசு இருந்தா எனக்கு ஒரு ரூபா தா. யாருக்கும் தெரியக் கூடாது.”

“நேற்றுத்தானே நான் தந்தேன்?”

“அது எல்லாத்தையும் அப்துல்காதர் வாங்கிக்கிட்டான். அவன் தானே வீட்டைப் பார்த்துக்கறான்? எவ்வளவு விஷயங்களுக்கு செலவுக்குத் தரவேண்டியதிருக்கு! ஒவ்வொரு நாளுக்கும் எவ்வளவு ரூபா வேணும்னு நீ கொஞ்சம் யோசிச்சுப் பாரு...”

“நீங்க உங்க வேலையைப் பாருங்க. இதுக்கு மேல பேசினா நான் இப்பவே இங்கேயிருந்து கிளம்பிடுவேன்.”

உம்மா அதற்குப் பிறகு எதுவும் பேசவில்லை. நான் அசையாமல் படுத்திருந்தேன். சில நாட்களுக்கு முன்னால் நான் வந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்தேன்.

அப்போது நான் இருந்தது, நான் எப்போதும் இருக்கக்கூடிய சிறிய வீட்டில்.

வந்தது ஒரு ஸ்பெஷல் காரில். கார் கட்டிடத்தின் முன்னால் வந்து நின்றதும், அங்கு ஆட்கள் கூடிவிட்டார்கள். நான் டாக்ஸி ஓட்டுநருக்கு நோட்டுகள் எண்ணிக் கொடுப்பதை எல்லாரும் பார்த்தார்கள்.

அன்று இரவு சாப்பாடு முடிந்து நான் படுத்திருக்கும்பொழுது அப்துல் காதரும் உம்மாவும் ஹனீஃபாவும் என்னிடம் வந்தார்கள். வந்த உடனே அப்துல் காதர் சொன்னான்: “அண்ணே… பணம் கையில இருந்தா இங்கே வைக்க வேண்டாம். அதை இங்கே தாங்க. திருடர்கள் யாராவது வருவாங்க. வந்து அடிச்சு கொன்னுடுவாங்க.”

நான் ஐந்நூறு ரூபாயை உம்மா பார்க்க, எண்ணி அவனுடைய கையில் தந்தேன். திருடர்கள் வந்து அடித்து கொல்லட்டும். பணம் போகாதே! எல்லாரும் திருப்தியுடன் அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார்கள். நான் நிம்மதியாகப் படுத்துக்கொண்டே ஒரு பீடியைப் பற்ற வைத்தேன். அப்போது யாரோ ஒரு ஆள் இருட்டில் வீட்டிற்குள் இருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். வெட்டரிவாளுடன் என்னைக் கொன்றுவிட்டு பணத்தை எடுத்துக்கொண்டு போவதற்காக வந்த திருடனாக இருக்குமோ? இலேசான பயத்துடன் நான் கேட்டேன்: “யார் அது?”

“நான்தான்டா” -உம்மா மெதுவான குரலில் சொன்னாள்: “யாருக்கும் தெரியாம நான் வந்தேன்.”

“என்ன விசேஷம்?”

“டேய், யாருக்கும் தெரியக்கூடாது” -உம்மா சொன்னாள்: “எனக்கு நீ இருபத்தஞ்சு ரூபா தா.”

உம்மாவாயிற்றே! பெற்று, பால் கொடுத்து, வளர்த்ததாகக் கூறும் தாய் ஆயிற்றே! நான் அந்த நிமிடமே இருபத்தைந்து ரூபாயை எடுத்துக் கொடுத்தேன். பிறகு நிம்மதியாக நான் உறங்கினேன். மறுநாள் முதல் கடன் வாங்குபவர்கள் வந்த வண்ணம் இருந்தார்கள். அதிகமாக வந்தவர்கள் பெண்கள்தான். எல்லாரும் முஸ்லீம் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல. இருந்தாலும், எல்லாரிடமும் நான் பால் குடித்திருக்கிறேன். “அதை நீ மறந்துட்டியா? ஒரு ரெண்டு ரூபா எனக்குத் தா” என்று வந்து நிற்பார்கள்.

நான் இப்படி இரண்டு, நான்கு, ஐந்து என்று கொடுக்கத் தொடங்கினேன். நூறு ரூபாயை நெருங்கிய போது “இல்ல... நான் யார்கிட்டயும் பால் குடிக்கல” என்று சத்தம் போட்டு கூறிக்கொண்டு நான் உட்கார்ந்திருப்பேன். இதற்கிடையில் ஒரு தமாஷான சம்பவம் நடந்தது. உம்மா அபியையும் பாத்துக்குட்டியையும் தூக்கிக் கொண்டு என்னிடம் வந்தாள்.

“இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது கொடுடா.”

அதோடு நிற்கவில்லை. “டேய் நீ, இப்போ இங்கே இருக்கலாம்னு வந்திருக்கே. உன்னைப் பார்க்குறதுக்கு உன்னோட நண்பர்கள் வருவாங்கள்ல? நாம அவங்களுக்கு எதுல சாதம் தர்றது?”

“இலையில...”

“அது நல்லா இருக்காதுடா... கொஞ்சம் தட்டும், கிண்ணமும் டம்ளர்களும் நாம வாங்கணும்.”

“என் கையில காசு இல்ல.”

“அப்படின்னா நான் அந்த யானைப் பறம்பில் கடையில் போயி நீ சொன்னேன்னு வாங்கிட்டு வந்திர்றேன்.

உம்மா கட்டாயம் அப்படி செய்யக் கூடியவள்தான்! யானைப் பறம்பில் வர்க்கிக்குஞ்சிற்குப் பெரிய ஸ்டேஷனரி கடை இருக்கிறது. மேற்படி ஆள் என்னுடைய நண்பன். அங்கு உம்மா போவதாக இருந்தால், அந்தக் கடையில் இருக்கும் பொருட்கள் முழுவதையும் எடுத்துக்கொண்டு வருவதற்குச் சிறிதும் தயங்க மாட்டாள். நான் சொன்னேன்: “உம்மா, நீங்க போக வேண்டாம் நான் போயி வாங்கிக் கொண்டு வர்றேன்.”

நான் போய் ஒரு சுமை பாத்திரங்களை வாங்கி ஒரு ஆள் மூலம் வீட்டிற்குக் கொண்டுவந்தேன். இப்படி நிம்மதியுடன் இருக்கும்பொழுது உம்மா சொன்னாள்: “டேய், இப்போ நீ எப்படியோ இங்கே இருக்குறதுன்னு வந்துட்டே உன்னோட நண்பர்கள் வந்தா அவங்க எங்கே தூங்குவாங்க? நீ கொஞ்சம் பாயும் தலையணைகளும் வாங்கு.”

“சும்மா போங்க உம்மா...”

எதற்கு? தொந்தரவு வேண்டாம் என்று நான் அவற்றையும் வாங்கிக் கொடுத்தேன். அப்போது உம்மா ஒரு செம்பு அண்டா வேண்டும் என்று சொன்னாள். நெல் கிடைத்தால் அதில் வேக வைக்கலாம். குளிப்பதற்கு நீர் ஊற்றி வைக்கலாம். நியாயமான ஒன்றுதானே!

நான் நினைத்தேன்: ‘செம்பு’ அண்டா வாங்கிய பிறகு மாட்டு வண்டி! அதையும் வாங்கிவிட்டால் மோட்டார் கார்! ம்ஹும்!

பெட்டியையும் படுக்கையையும் எடுத்துக் கொண்டு நான் கிளம்பிவிட்டேன். வர்க்கலயைத் தாண்டி சென்னை அது இதுவென்று சுற்றிவிட்டு வந்தேன். பிறகும் போனேன். பிறகு வந்தேன். அப்படி வந்ததுதான் இப்போது வந்திருப்பது. ஹனீஃபா பட்டாளத்திற்குப் போவதாகக் கூறுவது மாதிரி அல்ல; நான் போவதாகச் சொன்னால் கட்டாயம் போவேன். அதனால் உம்மா அசையாமல், பேசாமல் படுத்திருந்தாள். நான் எழுந்து சென்று பெட்டியைத் திறந்து மீதியிருந்த காசு முழுவதையும் எடுத்து உம்மாவிடம் தந்தேன்.

நான் சொன்னேன். “இனி பயப்பட வேண்டாம். நான் போறேன்னு சொன்னாகூட போக முடியாது. வழிச் செலவுக்கு என்கிட்ட பணம் எதுவும் இல்ல. இனி என்னை நீங்கதான் பார்த்துக்கணும்.”

நினைவுகள் இப்படிப் போய்க் கொண்டிருந்தன.

நாட்கள் சில கடந்தன.

அப்போது ஒரு விநோதமான சம்பவம் நடந்தது. பெண் ரத்தினங்களின் அழகான செயல்கள்! பாத்தும்மாவின் ஆட்டை இரண்டு ஆனும்மாமார்களும் அய்ஸோம்மாவும் உம்மாவும் சேர்ந்து மீண்டும் கறந்து பால் எடுத்து தேநீர் குடித்தார்கள்! குட்டி இல்லாமலேதான். ஒரு தடவை அல்ல. தினந்தோறும் பால் திருட்டு! குட்டி இல்லாமல் ஆடு பால் சுரக்காது என்ற உண்மையான நம்பிக்கையுடன் சுகமாக, நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருந்தாள் பாத்தும்மா!

சும்மா ஒரு தமாஷுக்காக அபியையும் பாத்துக்குட்டியையும் ஆட்டுக்குட்டியாக மாற்ற நினைத்தார்கள். முடியவில்லை. கடைசியில் ஸுபைதாவும் ரஷீதும் ஆட்டுக்குட்டிகளாக மாறி ஆட்டின் காம்புகளைச் சப்பி பால் குடித்தார்கள்.

சும்மா ஆட்டுக் குட்டிகள்! இந்த விநோதமான விஷயத்தைப் பாத்தும்மா அறிந்தாள். அவள் தன்னுடைய நெஞ்சில் அடித்துக் கொண்டு அழுதாள்.

“நீங்க மனிதர்களா? நீங்க இப்படி பண்ணிட்டீங்கள்ல! வேண்டாம். நான் உங்களுக்குப் பால் தர்றேன்.”

மறுநாள் முதல் பாத்தும்மாவிடமிருந்து அரை புட்டி பால் வீட்டிற்கு முடங்காமல் வர ஆரம்பித்தது.

ஸுபைதா, ரஷீத், அபி, ஆரிஃபா, லைலா, பாத்துக்குட்டி- எல்லாருக்கும் சந்தோஷமோ சந்தோஷம். ஆனும்மாமார்களுக்கும் அய்ஸோம்மாவிற்கும் உம்மாவிற்கும் பால் கலந்த தேநீர்!

இப்போது ஆட்டுடன் குட்டியும் வருகிறது. அவற்றுடன் அரை புட்டி தண்ணீர் சேர்க்காத சுத்த பாலுடன் கதீஜா! இப்படி இரண்டு வகைப்பட்ட பால் வீட்டிற்குக் கிடைக்கிறது. ஒன்று அழகாகத் திருடுவது! இன்னொன்று உண்மையான உணர்வுடன், கனிவான மனதுடன் பாத்தும்மா கொடுப்பது! பாவம், பாத்தும்மா! அவள் என்ன செய்வாள்?

ஒரு ரகசியத்தை மட்டும் இப்போதும் என்னால் தெரிந்து கொள்ள முடியவில்லை. இந்த அறிவு பெண்களில் யாருக்கு முதலில் தோன்றியிருக்கும்?

சுபம்!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.