Logo

புனிதப் பயணம்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5969
punidha payanam

ரண்டு வயதான கிழவர்கள் ஜெருசலேமில் இருக்கும் கடவுளை வழிபடுவதற்காக புனிதப்பயணம் செல்ல தீர்மானித்தார்கள். அவர்களில் ஒருவர் வசதி படைத்த விவசாயி. பெயர் எஃபிம். இன்னொருவரின் பெயர் எலிஷா. அவர் அந்த அளவிற்கு வசதியானவர் அல்ல.

எஃபிம் மிகவும் திடகாத்திரமான மனிதர். அவர் எந்த விஷயமாக இருந்தாலும் அதில் மிகவும் தீவிரமானவராகவும், உறுதி படைத்தவராகவும் இருப்பார்.

மது அருந்தும் பழக்கமோ, புகை பிடிக்கும் பழக்கமோ, பொடி போடும் பழக்கமோ அவருக்கு என்றும் இருந்ததில்லை. அவர் தன் வாழ்க்கையில் ஒரு முறைகூட கெட்ட வார்த்தையைப் பயன்படுத்தியதில்லை. அந்த கிராமத்தின் தலைவராக இரண்டு முறை இருந்திருக்கிறார். அவர் பதவியைவிட்டுச் செல்லும்போது, செலவு கணக்குகள் அனைத்தும் முறைப்படி வைக்கப்பட்டிருந்தன. அவரின் குடும்பம் மிகவும் பெரியது. இரண்டு மகன்களையும் திருமணமான ஒரு பேரனையும் கொண்ட குடும்பமது. எல்லோரும் அவருடன் இணைந்தே வாழ்ந்தார்கள். அவர் பழுப்பு நிறம் கொண்டவராகவும் நீளமாக தாடியை வளர்த்திருப்பவராகவும், நிற்கும்போது கம்பீரமாக நிமிர்ந்து நிற்கக்கூடியவராகவும் இருந்தார். அறுபது வயதைத் தாண்டும்போது தான் அவருடைய தாடியில் சற்று நரையே தோன்ற ஆரம்பித்தது.

எலிஷா பெரிய பணக்காரரும் இல்லை. அதே நேரத்தில் ஏழையும் இல்லை. முன்பு அவர் மர வேலைகள் செய்வதற்காகப் போய்க் கொண்டிருந்தார். இப்போது வயதாகிவிட்டதால் வெறுமனே வீட்டில் உட்கார்ந்து தேனீக்களை வளர்த்துக் கொண்டிருந்தார். அவரின் ஒரு மகன் வேலைதேடி வெளியே சென்றிருக்கிறான். இன்னொரு மகன் வீட்டில் அவருடனே இருக்கிறான். எலிஷா மிகவும் இரக்க குணம் படைத்தவர். எப்போதும் மகிழ்ச்சியான முகத்துடன் காணப்படும் மனிதர் அவர். சில நேரங்களில் அவர் மது அருந்துவதென்னவோ உண்மைதான். பொடி போடும் பழக்கம் கூட அவருக்கு உண்டு. பாட்டு பாடுவது என்றால் அவருக்கு விருப்பம் அதிகம். ஆனால், அவர் எப்போதும் வாழ்க்கையில் மன அமைதியை விரும்பக்கூடிய மனிதர். தன்னுடைய குடும்பத்தில் உள்ளவர்களுடனும், பக்கத்து வீட்டுக் காரர்களுடனும் இணக்கமான ஒரு நல்லுறவுடன் அவர் பழகிக் கொண்டிருந்தார். அவர் மிகவும் குள்ளமானவராகவும் கரிய நிறம் கொண்டவராகவும் இருப்பார். தாடியில் சுருள் முடிகள் இருக்கும். வழுக்கைத் தலையைக் கொண்ட மனிதர் அவர்.

பல வருடங்களுக்கு முன்பே இந்த வயதான இரண்டு மனிதர்களும் சேர்ந்து ஜெருசலேமுக்கு புனிதப் பயணம் செல்வது என்று முடிவெடுத்திருந்தார்கள். ஆனால், எஃபிம்மால் பயணம் போவதற்கான நேரத்தை ஒதுக்கவே முடியவில்லை. எப்போது பார்த்தாலும் கையில் ஏகப்பட்ட வேலைகளை வைத்துக் கொண்டிருந்தார். ஒரு வேலை முடிந்துவிட்டால், உடனே அடுத்த வேலை அவருக்காகக் காத்திருக்கும். வேறு வழியில்லாமல் அதைச் செய்வதற்கு அவர் தீவிரமாக இறங்கிவிடுவார். முதலில் அவர் தன் பேரனின் திருமணத்தை நடத்தியாக வேண்டும். தன்னுடைய கடைசி மகன் ராணுவத்திலிருந்து திரும்பி வருவதை எதிர்பார்த்து அவர் காத்திருக்க வேண்டும். அதற்குப்பிறகு அவர் ஒரு புதிய வீட்டைக் கட்டும் பணியில் தீவிரமாக இறங்கிவிட்டார்.

ஒரு விடுமுறை நாளில் இரண்டு வயதான கிழவர்களும் வீட்டின் முன்னால் சந்தித்தார்கள். இருவரும் அங்கிருந்த மரப்பலகையில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தார்கள்.

"சரி..." எலிஷா கேட்டார். "நாம எடுத்த முடிவை எப்போ செயல்படுத்துறது?"

எஃபிம் முகத்தை தீவிரமாக வைத்துக்கொண்டு சொன்னார்.

"நாம கொஞ்ச நாட்கள் அதற்காகக் காத்திருக்கணும். இந்த வருடம் எனக்கு மிகவும் கஷ்டமான வருடமா அமைஞ்சிடுச்சு. இந்த வீட்டைக் கட்ட ஆரம்பிச்சப்போ, நூறு ரூபிள்கள்ல இது முடிஞ்சிடும்னு நினைச்சுத்தான் நான் வேலையையே ஆரம்பிச்சேன். இப்போ, இதுவரை இதுக்கு முந்நூறு ரூபிள்கள் செலவாயிடுச்சு. இன்னும் முழுசா வேலை முடியல. கோடைக் காலம்வரை நாம பொறுமையா இருக்கிறதைத் தவிர வேறவழியில்ல. கோடை வந்திடுச்சுன்னா கடவுள் சம்மதத்தோட நாம கட்டாயம் பயணத்தை ஆரம்பிப்போம்."

"நாம இப்படியே நம்ம பயணத்தைத் தள்ளிப்போட்டுக்கிட்டு வர்றது நல்லது இல்லைன்னு நான் நினைக்கிறேன். நாம உடனடியா போறதுதான் நல்லது"- எலிஷா சொன்னார். "வசந்த காலம் தான் நம்ப பயணத்துக்கு சரியான காலம்."

"காலம் சரியா இருக்கலாம். என் கட்டிட வேலை என்னாகுறது? அதை விட்டுட்டு நான் எப்படி வர முடியும்?"

"உங்களுக்கு பதிலா வேற யாருமே இங்கே இல்லையா என்ன? உங்க மகனே அந்த வேலையை எல்லாம் பார்த்துக்குவானே?"

"எதை வச்சு நீங்க சொல்றீங்க? என் மூத்த மகனை அந்த அளவுக்கு நம்பிவிட முடியாது. அவன் சில நேரங்கள்ல அளவுக்கதிகமா குடிச்சிட்டு ஒரு வழி பண்ணிடுவான்."

"நண்பரே, நாம செத்துப்போன பிறகு நாம இல்லாமலே அவங்கதான் எல்லா வேலைகளையும் பார்க்கப்போறது. இப்பவே உங்க மகனுக்கு அதற்கான அனுபவப் பாடம் கிடைக்கட்டுமே!"

"நீங்க சொல்றது சரிதான். ஆனா, விஷயம் என்னன்னா... நான் ஆரம்பிச்ச ஒரு வேலையை நானே முடியிறதுவரை பார்க்கணும்னு நினைக்கிறேன். அவ்வளவுதான்."

"நண்பரே, எல்லா வேலைகளையும் நாமே செய்யிறதுன்னா, அது நடக்காத விஷயம்... எங்க வீட்டுல பொம்பளைங்க எல்லோரும் ஒண்ணு சேர்ந்து ஈஸ்டர் பண்டிகை வர்றதுனால பாத்திரங்களையெல்லாம் கழுவி சுத்தப்படுத்தி வச்சாங்க. வீட்டை முழுவதும் தண்ணிவிட்டு கழுவி சுத்தம் செய்தாங்க. என் மூத்த மருமகள் ரொம்பவும் புத்திசாலி. அவ சொன்னா 'விடுமுறை நாட்கள் நமக்காகக் காத்திருக்காம, அதாகவே வர்றது ஒரு விதத்துல எவ்வளவு நல்லதா இருக்கு! இல்லாட்டி என்னதான் கடுமையா நாம உழைச்சாலும், இந்த விடுமுறை நாட்களுக்காக நாம தயார் நிலையிலேயே இருக்க மாட்டோம்'னு’ அதைக் கேட்டு எஃபிம் தீவிர சிந்தனையில் ஆழ்ந்துவிட்டார்.

"நான் இந்தக் கட்டிடத்தைக் கட்டுறதுக்காக எவ்வளவோ பணத்தை இதுவரை செலவழிச்சிட்டேன்"- அவர் சொன்னார். "பயணம் புறப்படுறதுன்னா காலி பாக்கெட்டோட ஒரு ஆளு கிளம்ப முடியாது. குறைந்தபட்சம் நூறு ரூபிள்களாவது நம்ம கையில இருக்கணும். ஆனா, அது சாதாரண தொகை இல்ல..."

அவர் சொன்னதைக் கேட்டு எலிஷா சிரித்தார்.

"இங்க பாருங்க, என் வயதான நண்பரே!"- அவர் சொன்னார். "என்கிட்ட இருக்குறதைவிட உங்கக்கிட்ட பத்து மடங்கு செல்வம் இருக்கு.ஆனா, இப்போகூட நீங்க பணத்தைப் பற்றி பேசிக்கிட்டு இருக்கீங்க. நாம புறப்படலாம்னு நீங்க சொல்லுங்க. இப்போ என் கையில பணம்னு எதுவுமே இல்லைன்னாக்கூட, அந்தச் சமயத்துல தேவையான பணம் நிச்சயம் கையில இருக்கும்."

அதைக் கேட்டு எஃபிம் சிரித்தார்.


"அன்பு நண்பரே, நீங்க அவ்வளவு பெரிய பணக்காரர்ன்ற விஷயம் எனக்கு இதுவரை தெரியாமலே போச்சே!"- அவர் சொன்னார். "சரி... உங்களுக்கு எங்கேயிருந்து பணம் வரும்?"

"நான் வீட்டுல இருந்து கொஞ்சம் பணம் எடுப்பேன். அந்தப் பணம் பத்தலைன்னா, தேனீக் கூட்டுல கொஞ்சத்தை என் நண்பர் ஒருவருக்கு விற்பேன். ரொம்ப நாளா என்கிட்ட இருந்து, அதை வாங்குறதுக்காக அவர் காத்துக்கிட்டு இருக்கார்."

"இந்த வருடம் நிறைய தேனீக்கள் உற்பத்தி ஆச்சுன்னு வச்சுக்கோங்க, அதை விக்கிறப்போ நீங்க ரொம்பவும் வருத்தப்படுவீங்க..."

"வருத்தப்படுவதா? நிச்சயமா நான் வருத்தப்பட மாட்டேன், நண்பரே! வாழ்க்கையில என் பாவங்களுக்காகத் தவிர, வேற எதுக்காகவும் நான் வருத்தப்பட்டது இல்ல. ஆன்மாவைவிட விலை மதிப்புள்ளது உலகத்துல என்ன இருக்கு சொல்லுங்க..."

"நீங்க சொல்றது சரியா இருக்கலாம். இருந்தாலும் வீட்டு  விஷயங்களைச் சாதாரணமா நினைச்சு ஒதுக்குறது அவ்வளவு நல்ல விஷயமா எனக்குப் படல."

"நம்ம ஆன்மாக்கள் நிராகரிக்கப்படுதுன்னு வச்சுக்கோங்க. அப்போ என்ன ஆகும்? அது ரொம்பவும் மோசமான விஷயமாச்சே! நாம பயணம் போறதுன்னு முடிவு செஞ்சோம். நாம புறப்படுறதுதான் சரி. நண்பரே, நாம உடனே புறப்படுறதுக்கான வழியைப் பார்ப்போம்."

2

ன்னுடைய நண்பரிடம் புனிதப் பயணம் போவதைப் பற்றி தொடர்ந்து வற்புறுத்திக் கொண்டிருந்ததில் எலிஷா வெற்றி பெற்று விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். ஆழமான சிந்தனையில் ஆழ்ந்ததற்கு அடுத்த நாள் காலையில் எஃபிம் எலிஷாவைத் தேடி வந்தார்.

"நீங்க சொல்றது சரிதான்"- அவர் சொன்னார். "நாம புறப்படுவோம். வாழ்க்கை, மரணம்-ரெண்டுமே கடவுளின் கையில தான் இருக்கு. நாம உயிரோட இருக்குறப்பவே, உடம்புல தெம்பு இருக்குறப்பவே நாம கிளம்பிப் போய்ட்டு வந்துறதுதான் சரி."

ஒரு வாரம் கழித்து இரண்டு கிழவர்களும் புனிதப் பணத்தைத் தொடங்குவதற்கான ஆயத்தங்களில் இறங்கிவிட்டார்கள். எஃபிம் கையில் தேவையான அளவிற்குப் பணம் இருந்தது. அவர் கையில் நூறு ரூபிள்கள் எடுததுக் கொண்டு இருநூறு ரூபிள்களைத் தன்னுடைய மனைவியிடம் வைத்திருக்கும்படி சொன்னார். எலிஷாவும் புறப்படுவதற்குத் தயாரானார்.அவர் பத்து தேனீக்கூடுகளைத் தன் நண்பர் ஒருவருக்கு விற்பனை செய்தார். கோடைக்கு முன்பே அந்தத் தேனீக் கூட்டிலிருந்து புதிய தேனீக்கள் வந்துவிடும். தேனீக் கூடுகளை விற்றதில் அவருக்கு எழுபது ரூபிள்கள் கிடைத்தன. நூறு ரூபிள்களில் மீதித்தொகையை தன் வீட்டிலுள்ள ஒவ்வொருவரிடமும் சிறிதுசிறிதாக வசூலித்தார். அவர்கள் தங்கள் கையிலிருந்த பணம் முழுவதையும் அவர் கையில் தந்தார்கள்.அவருடைய மனைவி தன்னுடைய அந்திமச் சடங்கிற்காகச் சேர்த்து வைத்திருந்த முழுப் பணத்தையும் அவரிடம் கொடுத்தாள். அவரின் மருமகள் தன் கையில் இருந்த பணம் முழுவதையும் தன் மாமனாரிடம் கொடுத்தாள்.

எஃபிம் தன் மூத்த மகனை அழைத்து தான் வீட்டில் இல்லாத போது என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை விளக்கினார். புற்களை எங்கெங்கு வளர்க்க வேண்டும், எப்படி வளர்க்க வேண்டும் எங்கிருந்து உரத்தை ஏற்றிக்கொண்டு வரவேண்டும், வீட்டை எப்படி முடித்து மேற்கூரையைப் போட வேண்டும் போன்ற பல விஷயங்களை அவர் விளக்கிச் சொன்னார். ஒவ்வொரு விஷயத்தையும்அவர் நன்கு யோசித்து, அதற்கேற்றபடி கட்டளை பிறப்பித்துக் கொண்டிருந்தார். அதற்கு மாறாக எலிஷா தன் மனைவியிடம் தான் விற்ற தேனீக் கூட்டிலிருந்து மற்ற தேனீக்களை எப்படி தனியாகப் பிரித்து வைக்க வேண்டுமென்றும், தான் விற்ற தேனீக்கூட்டைச் சேர்ந்த தேனீக்கள் எந்தவித தந்திரமும் இல்லாமல் தன்னுடைய நண்பருக்கு முழுமையாகப் போய்ச் சேர வேண்டுமென்றும் சொல்லிக் கொண்டிருந்தார். வீட்டு விஷயங்களைப் பற்றி, ஒரு வார்த்தைகூட அவர்களிடம் வாய் திறந்து சொல்லவில்லை.

"உங்களுக்கே தெரியும்; என்னென்ன செய்யணும், தேவைப்படுற நேரத்துல எப்படி அதைச் செய்யணும்னு” என்று சொன்ன அவர் மேலும் சொன்னார். "உங்க எல்லாருக்கும் எல்லா விஷயங்களையும் நல்லா செய்யத் தெரியும். இதுக்குமேல நான் சொல்றதுக்கு என்ன இருக்கு?"

கடைசியில் இரண்டு கிழவர்களும் புறப்படத் தயாரானார்கள். அவர்கள் வீட்டில் உள்ளவர்கள் கேக் தயாரித்து, அவற்றைப் பைகளில் போட்டு வைத்தார்கள். துணிகள் தைத்தனர். அவர்கள் கால்களில் புதிய தோலாலான காலணிகளை அணிந்தார்கள். அதுதவிர, தனியாக வேறு காலணியையும் இருக்கட்டுமென்று எடுத்து வைத்துக் கொண்டார்கள். அவர்கள் இருவரின் குடும்பமும் அவர்களுடன் கிராமத்தின் எல்லை வரை சென்றது. கிராமத்தின் முடிவு வந்தவுடன் அவர்களிடமிருந்து, அவர்கள் விடைபெறறுக் கொண்டார்கள். அந்த இரண்டு கிழவர்களும் தங்களின் புனிதப் பயணத்தைத் தொடங்கினார்கள்.

எலிஷா வீட்டை விட்டு புறப்படும்போது மிகவும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டார். கிராமத்தை தாண்டியவுடன், அவர் தன்னுடைய வீட்டிலுள்ள விஷயங்களைப் பற்றி முழுக்க முழுக்க மறந்து போனார். அவரிடமிருந்த ஒரே கவலை என்னவென்றால் தன் நண்பரை எப்படி சோர்வடையாமல் மகிழ்ச்சியுடன் வைப்பது என்பதும், போகும் வழியில் யாரிடமும் ஒரு வார்த்தைகூட கடுமையாகப் பயன்படுத்தி விடாமல் இருக்கவேண்டும் என்பதும், எந்தவிதப் பிரச்சினையும் இல்லாமல் பத்திரமாகவும் மன அமைதியுடனும் வீட்டிற்குத் திரும்பி வந்துசேர வேண்டும் என்பதும்தான். சாலையில் நடந்து செல்லும்போது, எலிஷா மெதுவான குரலில் ஏதாவது பிரார்த்தனை வரிகளை முணுமுணுத்துக்கொண்டே செல்வார். இல்லாவிட்டால், தனக்குத் தெரிந்த ஞானிகளின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நினைத்தவாறு போய்க் கொண்டிருப்பார். சாலையில் யாரையாவது பார்க்க நேர்ந்தாலோ அல்லது இரவு நேரத்தில் எங்காவது தங்க நேர்ந்தாலோ அவர் முடிந்தவரை மிகவும் கண்ணியமான மனிதராக நடந்து கொண்டார். உயர்ந்த வார்த்தைகள் தன்னிடமிருந்து வரும்படி பார்த்துக் கொண்டார். அதனால் அவருக்குப் பயணம் மிகவும் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருந்தது. ஒரே ஒரு விஷயத்தைத்தான் எவ்வளவுதான் முயற்சி பண்ணினாலும் அவரால் விட முடியவில்லை. அது-பொடிபோடும் பழக்கம். தன்னுடைய பொடி டப்பாவை அவர் வீட்டில் வைத்துவிட்டு வந்திருந்தாலும், அவரின் மனம் என்னவோ பொடியை நினைத்துக் கொண்டுதானிருந்தது. வழியில் அவர் சந்தித்த ஒரு மனிதர் அவருக்குக் கொஞ்சம் பொடி தந்து உதவினார். தன்னுடைய நண்பருக்குத் தேவையில்லாமல் மன எரிச்சலைத் தரக்கூடாது என்பதற்காக அவ்வப்போது பொடி போடுவதற்காகச் சற்று பின்தங்கி விடுவார். பொடியைப் போட்டவுடன் மீண்டும் அவர் தன் பயணத்தைத் தொடர்வார்.

எஃபிம்கூட நன்றாகவே நடந்தார். வேகமாக அவரின் பயணம் சென்று கொண்டிருந்தது. யாரிடமும் தேவையில்லாமல் எந்தவித முறையற்ற வார்த்தைகளையும் அவர் பயன்படுத்தவில்லை. ஆனால், அவரின் இதயம்தான் மென்மையாக இல்லாமல் எப்போதும் கனத்துப் போய் இருந்தது.


மனம் முழுவதும் வீட்டைப் பற்றிய கவலையிலேயே சதா நேரமும் மூழ்கிப் போயிருந்தது. வீட்டில் எல்லா விஷயங்களும் ஒழுங்காக நடக்குமா என்பதைப் பற்றிய கவலையிலேயே அவர் இருந்தார். தன் மகனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படி எப்படி செய்ய வேண்டும் என்று தான் விளக்கமாகச் சொல்லிவிட்டு வந்ததையே அவர் மறந்து போனார். தன் மகன் தான் இல்லாத வேளையில் எல்லா காரியங்களையும் ஒழுங்காகச் செய்வானா என்று அவர் கவலைப்பட ஆரம்பித்து விட்டார். உருளைக்கிழங்குகள் ஒழுங்காக விதைக்கப்பட்டிருப்பதையும், அவற்றிற்கு முறையாக உரம் போடப்பட்டிருப்பதையும் பார்த்தால், உண்மையிலேயே அவர் ஆச்சரியம்தான் படுவார். தான் இல்லாத வேளையில், தான் சொன்னபடியே தன் மகன் நடந்திருக்கிறானா என்று நினைத்து அவர் வியப்படையவே செய்வார். சொல்லப்போனால் பயணத்தை கைவிட்டு, வீட்டிற்கு வந்து தன் மகனிடம் ஒவ்வொரு விஷயத்தையும் எப்படியெப்படி செய்தால் நன்றாக இருக்கும் என்று விளக்கிக் கூற வேண்டும் என்றே அவர் மனம் விழைந்தது. இன்னும் ஒருபடி மேலே சொல்லப் போனால் எல்லா விஷயங்களையும் தானே நேரடியாகச் செய்யவே அவர் விரும்பினார்.

3

ந்த இரு வயதான கிழவர்களும் ஐந்து வாரங்கள் தொடர்ந்து நடந்தார்கள். அவர்கள் தாங்களாகவே வீட்டில் செய்த காலணிகள் மிகவும் பழுதடைந்து போய், பயன்படுத்த முடியாத அளவிற்கு ஆகிவிட்டன. சின்ன ரஷ்யாவை (சின்ன ரஷ்யா என்பது ரஷ்யாவின் தென் மேற்குப் பகுதியில் இருக்கிறது. கீவ், போல்டாவா, செர்னிகோவ், கார்கோவ், கெர்சன் ஆகியவற்றின் சில பகுதிகளை உள்ளடக்கியது தான் சின்ன ரஷ்யா. இப்போது அது உக்ரெய்ன் என்று அழைக்கப்படுகிறது) அவர்கள் அடைந்தவுடன், அங்கிருந்தவர்கள் புதிய காலணிகளை அவர்களுக்கு வழங்கினார்கள். வீட்டைவிட்டு புறப்பட்டதிலிருந்து அவர்கள் தங்களின் உணவிற்காகவும், தங்குமிடத்திற்காகவும் கையிலிருந்து பணத்தைச் செலவழிக்க வேண்டியதிருந்தது! ஆனால், அவர்கள் சின்ன ரஷ்யாவை அடைந்த போது, அங்குள்ள மக்கள் போட்டி போட்டுக் கொண்டு அவர்கள் இருவரையும் தங்களின் வீடுகளுக்கு அழைத்தார்கள்.அவர்கள் அந்த இரு கிழவர்களையும் தங்கள் வீட்டிற்கு அழைத்துச் சென்று அவர்களுக்குத் தேவையான உணவைத் தந்தார்கள். அதற்கு எந்தவொரு கட்டணத்தையும் அவர்கள் பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் அவர்கள் ரொட்டியையும், கேக்குகளையும் அவர்களின் பைகளில் போட்டு தங்களின் பயணத்தின்போது அவற்றைச் சாப்பிட்டுக் கொள்வதற்கு உதவி செய்தார்கள்.

எந்தவிதமான செலவும் இல்லாமல் அந்த இரு வயதான மனிதர்களும் ஐந்நூறு மைல்கள் பயணம் செய்தார்கள்.அதற்குப் பிறகு அவர்கள் ஒரு இடத்தைக் கடக்க வேண்டி வந்தது. அந்த மாநிலத்தில் அறுவடை மிகவும் மோசமாக இருந்த சமயமது. இருப்பினும் அங்குள்ள விவசாயப் பெருமக்கள் இரவு நேரத்தில் எந்தவித பணச் செலவும் இல்லாமல் தங்குவதற்கான வசதியை உண்டாக்கித் தந்தார்கள். ஆனால், பணம் வாங்காமல் உணவு கொடுக்க அவர்கள் தயாராக இல்லை. சொல்லப்போனால், சில நேரங்களில் அந்த வயதான இரு கிழவர்களுக்கும் சாப்பிடுவதற்கு ரொட்டி கூட கிடைக்கவில்லை. அவர்கள் ரொட்டிக்கு பணம் தரத் தயாராக இருந்தார்கள். ஆனால், ரொட்டியைத் தருவதற்குத்தான் யாரும் அங்குத் தயாராக இல்லை. அறுவடை முழுக்க முழுக்க தோல்வியில் முடிந்துவிட்டதாக அங்குள்ள மக்கள் சொன்னார்கள்.பணக்காரர்களாக இருந்தவர்கள் கூட விளைச்சல் மிகவும் மோசமாக இருந்ததால், முழுமையான வீழ்ச்சியை சந்திக்க வேண்டியிருந்தது. அவர்கள் தங்கள் உடைமைகளை விற்க ஆரம்பித்தார்கள். நடுத்தர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு அனாதைகளாகக் கிளம்பினார்கள். மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்தவர்கள் அந்த மாநிலத்தை விட்டு வேறெங்குமே போக முடியாமல் ஊர் ஊராய் அலைந்து பிச்சை எடுத்துக்கொண்டும், இல்லாவிட்டால் வீட்டில் வறுமையில் வாடிக்கொண்டும் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். குளிர்காலம் வந்தபோது அவர்கள் தவிட்டைச் சாப்பிட்டு உயிர் வளர்த்தார்கள். ஒருநாள் இரவில் அந்த வயதான இரு கிழவர்களும் ஒரு சிறு கிராமத்தில் தங்கினார்கள்.அவர்கள் பதினைந்து பவுண்டுகளுக்கு ரொட்டி வாங்கினார்கள். அந்த ஊரிலேயே தங்கினார்கள். சூரிய உதயம் வருவதற்கு முன்பு அவர்கள் தங்கள் பயணத்தைத் தொடங்கினார்கள். அப்போது கிளம்பினால்தான் அவர்களால் மதிய நேரத்திற்குள் ஒரு குறிப்பிட்ட தூரம் பயணம் செய்திருக்க முடியும். எட்டு மைல் தூரத்தைத் தாண்டியதும்,அவர்கள் ஒரு ஓடையைப் பார்த்தார்கள். அவர்கள் அங்கு அமர்ந்து கையிலிருந்த பாத்திரத்தில் நீர் பிடித்துக் கொண்டார்கள். கொஞ்சம் ரொட்டியை எடுத்து அந்த நீரில் தொட்டு சாப்பிட ஆரம்பித்தார்கள். கால்களில் சுற்றியிருந்த கட்டுகளை அவிழ்த்து மாற்றினார்கள். சிறிது நேரம் அங்கு படுத்து ஓய்வெடுத்தார்கள். எலிஷா தன்னுடைய பொடி டப்பாவை எடுத்தார். எஃபிம் அதைப் பார்த்து ஒரு மாதிரி தன் தலையை இப்படியும் அப்படியுமாய் ஆட்டினார்.

"இந்தக் கெட்டப் பழக்கத்தை உங்களால விடவே முடியலியா?" அவர் கேட்டார்.

எலிஷா தன் கைகளை ஆட்டியவாறு சொன்னார். "இந்தப் பழக்கம் என்னைவிட பலம் மிக்கதா இருக்கே!"

அவர்கள் இருவரும் எழுந்து தங்கள் பயணத்தைத் தொடர்ந்தார்கள். அடுத்த எட்டு மைல் தூரத்தைத் தாண்டியதும், அவர்கள் ஒரு பெரிய கிராமத்தை அடைந்து அதற்குள் நுழைந்தார்கள். அப்போது மிகவும் புழுக்கமாக இருந்தது. எலிஷா மிகவும் களைத்துப் போய் இருந்தார். சற்று ஓய்வெடுத்து ஏதாவது குடித்தால்தான் நன்றாக இருக்கும் என்று எலிஷா நினைத்தார். ஆனால் எஃபிம் நிற்கவேயில்லை. அவர்கள் இருவரில் எஃபிம் தான் வேகமாக நடக்கக் கூடியவர். அவருடன் நடப்பதற்கு உண்மையாகவே எலிஷா மிகவும் சிரமப்பட்டார். 

"நான் கொஞ்சம் ஏதாவது குடிச்சா நல்லா இருக்கும்"- அவர் சொன்னார். "சரி... தாராளமா குடிங்க..."- எஃபிம் சொன்னார்."ஆனா, எனக்கு எதுவும் வேண்டாம்."

எலிஷா அந்த ஊரில் நின்றார்.

"நீங்க போய்க்கிட்டு இருங்க"- அவர் சொன்னார். "நான் அதோ அங்கே இருக்குற சின்ன குடிசைக்குள்ளே போறேன். கொஞ்ச நேரத்துல உங்களை நான் பிடிச்சுடுவேன்."

"சரி... அப்படியே செய்யுங்க"- எஃபிம் சொன்னார். தொடர்ந்து அவர் தனியே சாலையில் தன் பயணத்தைத் தொடர்ந்தார். எலிஷா சற்று தூரத்தில் தெரிந்த குடிசையை நோக்கி நடந்தார்.

அது ஒரு சிறு குடிசை. களிமண்ணால் கட்டப்பட்டிருந்தது. கீழ்ப்பகுதி கறுப்பு வண்ணத்தில் இருந்தது. மேற்பகுதி சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்தது. ஆனால் களிமண் ஆங்காங்கே பிளவுபட்டிருந்தது. அந்தக் குடிசை கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகிவிட்டன என்பதை அதைப் பார்த்த கணத்திலேயே புரிந்து கொள்ள முடிந்தது. மேற்கூரையின் ஒரு பக்கத்தில் கொம்பு ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது.


அந்தக் குடிசையின் வாசலுக்குள் நுழைய வேண்டுமென்றால் ஒரு நீளமான இடைவெளியைக் கடந்துதான் செல்ல வேண்டும். எலிஷா அந்த இடைவெளியில் நடந்தார். அப்போது வீட்டிற்குப் பக்கத்திலிருந்து ஒரு மண்மேட்டில் ஒரு தாடி இல்லாத மனிதர் படுத்துக் கிடப்பதை அவர் பார்த்தார். படுத்திருக்கும் அந்த மனிதர் சின்ன ரஷ்யாக்காரர்கள் செய்வதைப் போல மேற்சட்டையை காற் சட்டைக்குள் நுழைத்துவிட்டிருந்தார். நிழலுக்காக அந்த மனிதர் அங்கு படுத்திருக்கலாம். ஆனால், சூரியன் மேலே வந்து 'சுள்'ளென்று அவர் மீது காய்ந்து கொண்டிருந்தது. தூக்கத்தில் இல்லையென்றாலும், அந்த மனிதர் அதே நிலையில்தான் படுத்திருந்தார். எலிஷா அவரை அழைத்து குடிப்பதற்கு ஏதாவது கிடைக்குமா என்று கேட்டார். ஆனால், அந்த மனிதர் வாயையே திறக்கவில்லை.

'இந்த மனிதர் ஒண்ணு உடம்புக்குச் சரியில்லாம இருக்கணும், இல்லாட்டி யாரைப் பார்த்தாலும் பிடிக்காதவரா இருக்கணும்' என்று மனதிற்குள் நினைத்த எலிஷா நடந்து குடிசைக்கு அருகில் சென்றார். உள்ளே ஒரு குழந்தையின் அழுகைக்குரல் கேட்டது. அவர் கதவில் வட்டமாக இருந்த கைப்பிடியைப் பிடித்து, அதன் மூலம் கதவைத் தட்டினார்.

"எஜமானர்களே..."- அவர் அழைத்தார். உள்ளேயிருந்து எந்த பதிலும் வரவில்லை. அவர் மீண்டும் கதவைத் தட்டினார்.

"கிறிஸ்தவர்களே..." மீண்டும் எந்த பதிலும் வரவில்லை.

"கடவுளின் வேலைக்காரர்களே..." அதற்குப் பிறகும் எந்த பதிலும் வரவில்லை.

எலிஷா அங்கிருந்து ஓடிவிடலாமா என்று பார்த்தார்.அப்போது உள்ளேயிருந்து ஒரு முனகல் சத்தம் மெதுவாகக் கேட்டது.

'உள்ளேயிருப்பவர்களுக்கு ஏதாவது நடக்கக் கூடாதது நடந்திருக்குமோ? என்னதான் உண்மைன்றதைப் பார்த்துறது நல்லது...' அவர் நினைத்தார்.

4

லிஷா கதவிலிருந்த கைப்பிடியைப் பிடித்து திருகினார். கதவு மூடப்பட்டிருக்கவில்லை. அவர் கதவைத் திறந்து உள்ளேயிருந்த குறுகிய இடைவெளியில் நடந்தார். அதைத் தாண்டி இருந்த கதவு திறந்தே இருந்தது. இடது பக்கத்தில் ஒரு செங்கல்லால் ஆன அடுப்பு இருந்தது. முன்னால் சுவரையொட்டி ஒரு அலமாரி இருந்தது. அதற்கு முன்னால் ஒரு மேஜை போடப்பட்டிருந்தது. மேஜைக்கருகில் இருந்த பெஞ்சின் மீது ஒரு வயதான கிழவி உட்கார்ந்திருந்தாள். அவளின் தலையில் துணி எதுவும் இல்லை. ஒரே ஒரு ஆடையால் தன் உடல் முழுவதையும் அவள் மூடியிருந்தாள். தன் தலையை மேஜை மீது சாய்த்தவாறு அவள் அமர்ந்திருந்தாள். அவளுக்கருகில் மெலிந்து காணப்பட்ட மெழுகு வண்ணத்திலிருந்த சிறு பையன் ஒருவன் உந்தப்பட்ட வயிற்றுடன் உட்கார்ந்திருந்தான். கிழவியின் ஆடையைப் பிடித்து இழுத்து அந்தப் பையன் என்னவோ கேட்டு அழுது கொண்டிருந்தான். எலிஷா அங்கு வந்தார். வீட்டிற்குள் வயிற்றைக் குமட்டும் அளவிற்குத் தாங்க முடியாத நாற்றம் வீசியது. அவர் சுற்றிலும் கண்களை ஓட்டினார். அடுப்பிற்கருகில் தரையில் ஒரு பெண் படுத்திருந்தாள். மல்லாக்கப் படுத்திருந்த அவளின் கண்கள் மூடியிருந்தன. அவளுடைய தொண்டைக்குழி இலேசாக உயர்வதும் தாழ்வதுமாக இருந்தது. அவள் ஒரு காலை நீட்டி இப்படியும் அப்படியுமாக ஆட்டிக் கொண்டிருந்தாள். அந்த மோசமான நாற்றம் அவளிடமிருந்துதான் வந்து கொண்டிருந்தது. அவளைப் பற்றி அக்கறை எடுக்க யாரும் அங்கு தயாராக இல்லை என்பது தெரிந்தது. கிழவி தன் தலையை உயர்த்தி தனக்கு முன்னால் நின்று கொண்டிருந்த மனிதரைப் பார்த்தாள்.

"உங்களுக்கு என்ன வேணும்?"- அவள் கேட்டாள். "மனிதரே, உங்களுக்கு என்ன வேணும்? எங்கக்கிட்ட உங்களுக்குத் தர எதுவுமே இல்ல..."

அந்தக் கிழவி சின்ன ரஷ்யாவின் மொழியில் பேசினாலும், அதை எலிஷாவால் புரிந்து கொள்ள முடிந்தது.

"நான் இங்கே கொஞ்சம் தண்ணி குடிக்கலாம்னு வந்தேன், கடவுளின் வேலைக்காரியே!"

"இங்கே யாருமே இல்ல... யாருமே இல்ல... கொண்டு வர்றதுக்கு தண்ணிகூட இல்ல... நீங்க உங்க வழியைப் பார்த்து போங்க..."

அப்போது எலிஷா கேட்டார்.

"உங்கள்ல யாருமே அந்தப் பெண்ணைப் பார்த்துக்குறதுக்கு இல்லையா?"

"இல்ல... இங்கே யாருமே இல்ல... என் மகன் வெளியே செத்துக்கிட்டு இருக்கான். நாங்க இங்கே செத்துக்கிட்டு இருக்கோம்."

அந்தச் சிறு பையன் வீட்டிற்குள் புதிதாக வந்து நிற்கும் மனிதரைப் பார்த்ததும் அழுகையை நிறுத்தினான். ஆனால், கிழவி பேச ஆரம்பித்தவுடன் அவன் மீண்டும் அழத் தொடங்கிவிட்டான். கிழவியின் ஆடையைக் கைகளால் பற்றியவாறு அவன் அழுதான்.

"ரொட்டி... பாட்டி... ரொட்டி..."

எலிஷா கிழவியைப் பார்த்து என்னவோ கேட்பதற்காக வாயைத் திறந்தார். அந்த நிமிடத்தில் வெளியே தரையில் கிடந்த அந்த மனிதர் தரையோடு தரையாக ஊர்ந்து மிகவும் சிரமப்பட்டு வீட்டிற்குள் வந்து கொண்டிருந்தார். அவர் அந்த இடைவெளி வழியாக சுவரையொட்டி மெதுவாக ஊர்ந்து வந்து கொண்டிருந்தார். ஆனால், ஆட்கள் வசிக்கக்கூடிய இடத்தின் வாசலுக்கு வந்தவுடன், அவர் ஒரு மூலையில் படுத்துவிட்டார். அதற்குப் பிறகு எழுந்து பெஞ்சுக்கு வரவேண்டும் என்ற எண்ணமே இல்லாமல், அவர் பேச ஆரம்பித்தார். பேசுவதற்கே மிகவும் சிரமப்படுவது நன்றாகவே தெரிந்தது. திக்கித் திணறி வார்த்தைகள் வெளியே வந்தன.

"எங்க எல்லாருக்கும் உடல் நலமில்ல...’ 'ஒரே பஞ்சம்... அவன் பசியால செத்துக்கிட்டு இருக்கான்..."

அவர் பையனை நோக்கி மெதுவாக நகர்ந்தவாறு தேம்பித் தேம்பி அழுதார்.

எலிஷா தன் தோளுக்குப் பின்னாலிருந்த சுமையைச் சற்று நகர்த்தி தன் கைகளிலிருந்து அதை விடுவித்து, பெஞ்சின்மேல் வைத்து அதைக் கட்டியிருந்த கயிறுகளை அவிழ்க்க ஆரம்பித்தார். அந்தப் பையை அவிழ்த்து அதற்குள்ளிலிருந்த ஒரு ரொட்டியை வெளியே எடுத்து, தன்னுடைய கத்தியால் அதிலிருந்து ஒரு துண்டை வெட்டியெடுத்து, அந்த மனிதரின் கையில் தந்தார். அந்த மனிதர் அதை வாங்கவில்லை. அவர் அந்தச் சிறு பையனையும், அடுப்பிற்குப் பின்னால் ஊர்ந்து கொண்டிருந்த ஒரு சிறு பெண்ணையும் காட்டி அவர்களுக்கு அந்த ரொட்டியைக் கொடுக்கும்படி சொன்னார்.

எலிஷா ரொட்டியைப் பையனிடம் தந்தார். ரொட்டியின் மணத்தை உணர்ந்ததும், பையன் தன் இரு கைகளையும் நீட்டி அந்த ரொட்டித் துண்டை ஆர்வத்துடன் வாங்கி அதைக் கடித்துத் தின்ன ஆரம்பித்தான். அவனுடைய மூக்கு முழுமையாக ரொட்டிக்குப் பின்னால் மறைந்து போயிருந்தது. அந்தச் சிறுபெண் அடுப்பிற்குப் பின்னாலிருந்து வந்து அந்த ரொட்டியையே வைத்த கண் எடுக்காது பார்த்தாள். எலிஷா அவள் கையிலும் ஒரு துண்டு ரொட்டியைத் தந்தார். ரொட்டியிலிருந்து இன்னொரு துண்டை அறுத்து அதை அந்த வயதான கிழவியிடம் கொடுத்தார். கிழவி அதை மென்று தின்ன ஆரம்பித்தாள்.


“கொஞ்சம் தண்ணி இருந்தா...”- அந்தக் கிழவி சொன்னாள். “அவங்க வாய் தண்ணி இல்லாம உலர்ந்து போய் இருக்கு. நேற்று நான் கொஞ்சம் தண்ணி கொண்டு வர்றதுக்கு முயற்சி பண்ணினேன். இல்லாட்டி இன்னைக்குன்னு நினைக்கிறேன். என்னைக்குன்னு சரியா ஞாபகத்துல இல்ல. ஆனா, தண்ணி கொண்டுவரப்போன வழியில நான் கீழே விழுந்துட்டேன். அதற்கு மேலே என்னால போகமுடியல. நான் கையில வச்சிருந்த வாளி அங்கேயே கிடக்கு. அதை யாராவது எடுத்தாங்களான்னுகூட தெரியல...”

எலிஷா “கிணறு எங்கே இருக்கிறது?” என்று கேட்டார். கிணறு இருக்கும் இடத்தை கிழவி சொன்னாள். எலிஷா வெளியே சென்று தண்ணீர் எடுக்கும் வாளியைக் கண்டெடுத்து நீர் எடுத்துக்கொண்டு வந்து, அங்கிருந்தவர்களுக்குக் கொடுத்தார். குழந்தைகளும் கிழவியும் தண்ணீரின் உதவியுடன் மேலும் கொஞ்சம் ரொட்டியைத் தின்றார்கள். ஆனால், அந்த மனிதர் சிறிதுகூட சாப்பிடவில்லை.

“என்னால சாப்பிட முடியாது”- அவர் சொன்னார்.

இவ்வளவு நேரமும் அந்த இளம்பெண் எந்தவித உணர்ச்சியையும் காட்டிக்கொள்ளவில்லை. ஆனால், இப்படியும் அப்படியுமாய் புரண்டு கொண்டேயிருந்தாள். எலிஷா வெளியே சென்று கிராமத்திலிருந்த கடையில் தானியம், உப்பு, மாவு, எண்ணெய் ஆகியவற்றை வாங்கினார். ஒரு கோடரி கிடப்பதைப் பார்த்து அவர் அதை எடுத்து அருகில் கிடந்த சில மரக்கட்டைகளை வெட்டி, அதைக்கொண்டு தீ மூட்டினார். அந்தச் சிறுபெண் அவருக்கு உதவியாக இருந்தாள். அவர் சூப் தயாரித்து, பசியால் வாடிக் கொண்டிருந்த அவர்களுக்கு ஒரு நல்ல சாப்பாடு போட்டார்.

5

ந்த மனிதர் கொஞ்சம் சாப்பிட்டார். கிழவி சிறிது உண்டாள். அந்தச் சிறு பையனும் சிறுமியும் பாத்திரத்தை ஒன்றுமேயில்லாத அளவிற்கு நாக்கால் நக்கினார்கள். சாப்பிட்டு முடித்ததும் ஒருவரையொருவர் கை கோர்த்தவாறு ஒரு ஓரத்தில் சுருண்டு படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள்.

அந்த மனிதரும் வயதான கிழவியும் தாங்கள் இந்த நிலைக்கு எப்படி வந்தோம் என்பதை எலிஷாவிடம் கூறத் தொடங்கினார்கள்.

“நாங்க ரொம்பவும் ஏழைங்க...”- அவர்கள் சொன்னார்கள். “பயிர்களோட விளைச்சல் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமப் போனவுடன், நாங்க ஏற்கெனவே எங்களுக்குன்னு சேமிச்சு வச்சிருந்தது எல்லாமே முழுசா தீர்ந்து போச்சு. குளிர்காலம் வந்தப்போ, பக்கத்து வீட்டுக்காரங்ககிட்டயும், யார் யார் கண்ணுல படுறாங்களோ எல்லார்கிட்டயும், கை நீட்டி பிச்சை எடுக்க ஆரம்பிச்சிட்டோம். முதல்ல அவங்க கொடுத்துக்கிட்டு இருந்தாங்க. பிறகு நாங்க கேட்டா யாரும் எதுவும் தர்றது இல்ல. சிலபேர் எங்களுக்கு உண்மையாகவே உதவணும்னு நினைப்பாங்க. ஆனா, அவங்க கையில கொடுக்குறதுக்கு எதுவும் இருக்காது. எங்களுக்கு ஏதாவது வேணும்னு மத்தவங்கக்கிட்ட கைநீட்டி நிக்கிறதுக்கு எங்களுக்கு என்னவோ போல இருக்கும். எங்களுக்கு நிறைய கடன் உண்டாயிருச்சு. பணம், மாவு, ரொட்டி - இப்படி என்னென்னமோ கடனா வாங்கினோம்.

நான் வெளியே போய் ஏதாவது வேலை கிடைக்குமான்னு பார்த்தேன்.”- அந்த மனிதர் தொடர்ந்து சொன்னார்: “ஆனா, வேலை எதுவும் கிடைச்சாத்தானே! அப்படியே வேலை கிடைச்சாலும் அது ஏதோ உயிர் வாழ்ற அளவுக்குத்தான் இருக்கும். உதாரணத்துக்கு ஒரு சின்ன வேலை கிடைக்குதுன்னு வச்சுக்கோங்க. அதுக்குப் பின்னாடி ரெண்டு நாட்கள் வேற ஏதாவது வேலை கிடைக்காதான்னு அலைய வேண்டியதிருக்கும். அந்த நேரத்துல கிழவியும் பெண்ணும் தூர இடங்களுக்குப் போய் ஏதாவது தரும்படி பிச்சை எடுப்பாங்க. ஆனா, அவங்க கையில ஏதோ கொஞ்சம்தான் கிடைக்கும். ரொட்டி கிடைக்குறதுன்றது ரொம்ப ரொம்ப கஷ்டமான விஷயம். எப்படியோ நாங்களும் சாப்பிட்டு உயிர் வாழ்ந்தோம். அடுத்த அறுவடை வர்றதுவரை போராடிப் போராடி வாழ்க்கையை ஓட்டிட்டோம். வசந்த காலம் வர்ற நேரத்துல மத்தவங்க எங்களுக்கு எதுவும் தரமுடியாதுன்னுட்டாங்க. அதுக்குப் பிறகு எங்க உடல்நலம் ரொம்பவும் பாதிக்க ஆரம்பிச்சது. நிலைமை ரொம்பவும் மோசமாகிக்கிட்டு இருந்தது. ஒரு நாள் சாப்பிடுறதுக்கு எங்களுக்கு ஏதாவது இருக்கும். அதற்குப் பின்னாடி ரெண்டு நாட்களுக்கு சாப்பிடுறதுக்கு எதுவுமே இருக்காது. அப்போ நாங்க புற்களைச் சாப்பிட ஆரம்பிச்சோம். என் மனைவியை இந்த அளவுக்கு உடல்நலம் கெடும்படி செய்தது இந்தப் புற்களா, இல்லாட்டி வேற எதுவுமான்னு எனக்குத் தெரியாது. தன் கால்களால அவளால நிற்க முடியல... அவ உடம்புல கொஞ்சம்கூட சக்தி கிடையாது. நாங்க உடல்நலம் தேறி வர்றதுக்கு உதவி செய்ய யாருமே இல்லைன்ற நிலைக்கு ஆளாயிட்டோம்...”

“நான் தனியா எவ்வளவோ கஷ்டப்பட்டேன்.” -அந்த வயதான கிழவி சொன்னாள்! “சாப்பாடு இல்லாம என்னால எதுவுமே செய்ய முடியல. என் உடம்புல கொஞ்சம் கூட சக்தி இல்லாம, நான் ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டேன். இந்தப் பெண்ணும் ரொம்பவும் மெலிஞ்சு போயிட்டா. அவளால எதுவுமே செய்ய முடியல. பக்கத்து வீட்டுல போய் ஏதாவது கேட்டு வாங்கச் சொல்லி நான் இவகிட்ட சொன்னேன். ஆனா, இவளால குடிசையைவிட்டு வெளிய போக முடிஞ்சாத்தானே! கொஞ்சம் கொஞ்சமா ஊர்ந்து போய் மூலையில உட்கார்ந்திடுவா. முந்தாநாளு பக்கத்து வீட்டு பொம்பளை ஒருத்தி வீட்டுக்குள்ள வந்தா! நாங்க உடம்புக்கு முடியாம பசி, பட்டினியா இருக்குறதைப் பார்த்துட்டு போனவதான் அதுக்குப் பிறகு திரும்பியே வரல. அவ புருஷன் அவளை விட்டுட்டுப் போயிட்டான். அவ குழந்தைகளுக்குக் கொடுக்கவே அவகிட்ட எதுவும் இல்ல... நாங்க மரணத்தை எதிர்பார்த்து காத்துக் கிடந்தோம்…”

அவர்களின் கதையைக் கேட்ட எலிஷா தன் நண்பரை எப்படியாவது பிடித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஒதுக்கி வைத்து விட்டு அன்று இரவு அவர்களுடன் தங்கிவிடுவது என்ற முடிவுக்கு வந்தார். காலையில் படுக்கையைவிட்டு எழுந்த அவர், ஏதோ தன்னுடைய சொந்த வீட்டில் செய்வதைப்போல வீட்டு வேலைகளைச் செய்ய ஆரம்பித்தார். கிழவியின் உதவியுடன் அவர் நெருப்பைப் பற்ற வைத்தார். அதில் ரொட்டியை வாட்டினார். பிறகு சிறுமியைத் தன்னுடன் அழைத்துக்கொண்டு பக்கத்து வீடுகளைத் தேடிப்போய், மிகவும் அவசியமாகத் தேவைப்படக்கூடிய பொருட்களைத் தரும்படி கேட்டார். குடிசையில் பொருள் என்று எதுவுமே இல்லை. ரொட்டிக்காக அவர்கள் எல்லா பொருட்களையும் விற்றிருந்தார்கள். சமையல் செய்யும் பாத்திரங்கள், துணிகள் என்று எல்லாமே விற்கப்பட்டிருந்தன. எலிஷா சிலவற்றை அவரே உருவாக்கினார். வேறு சில முக்கியமான பொருட்களை விலை கொடுத்து வாங்கினார். அவர் அங்கே ஒருநாள் தங்கினார். அதற்கடுத்த நாளும் அங்கேயே இருக்க ஆரம்பித்தார்.


மூன்றாவது நாளும் அங்கேயே இருந்தார். அந்த வீட்டு மனிதரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. இழந்த சக்தியை அவர் மீண்டும் பெற்றார். எலிஷா எப்போது கீழே உட்கார்ந்தாலும், பையன் மெதுவாக நகர்ந்து வந்து அவருக்கு அருகில் உட்காரத் தொடங்கினான். சிறுமியின் முகத்திலும் பிரகாசம் உண்டாகத் தொடங்கியது. அவள் எல்லா வேலைகளிலும் உதவி செய்தாள். எலிஷாவுக்குப் பின்னால் ஓடி ஓடி வந்துகொண்டிருந்தாள். எப்போது பார்த்தாலும் அவள் “அப்பா... அப்பா...” என்று எலிஷாவை அழைத்தவண்ணம் இருந்தாள்.

கிழவியின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் உண்டாகத் தொடங்கியது. வீட்டைவிட்டு வெளியேபோய் பக்கத்து வீட்டைச் சேர்ந்த ஒரு பெண்ணைப் பார்க்கப்போகும் அளவிற்கு அவள் உடம்பில் தெம்பு உண்டானது. அந்த மனிதரின் உடல்நிலையிலும் நல்ல முன்னேற்றம் தெரிந்தது. அவர் சுவரைப் பிடித்தவாறு எழுந்து நடக்கத் தொடங்கினார். அவரின் மனைவியால்தான் படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்து நிற்க முடியவில்லை. இருப்பினும் அவள் தன் சுயஉணர்வு நிலைக்கு வந்தாள். மூன்றாவது நாள் அவள் தனக்குச் சாப்பிட ஏதாவது வேண்டும் என்று கேட்டாள்.

‘சரி...’-எலிஷா தன் மனதிற்குள் சொல்லிக்கொண்டார்: ‘வழியில் இப்படி நாட்கள் தேவையில்லாம செலவாகும்னு கொஞ்சம்கூட நான் எதிர்பார்க்கல. இப்போ நான் புறப்பட்டாத்தான் சரியா இருக்கும்...’

6

நான்காவது நாள்தான் கோடை விரதத்திற்குப் பிறகு வரும் விருந்திற்கான நாள். எலிஷா மனதிற்குள் நினைத்தார்.

‘நான் இங்கேயே தங்கி விரதத்தை இவங்களோட இருந்து முடிக்கணும். நான் வெளியே போய் இவங்களுக்காக ஏதாவது வாங்கிட்டுவந்து இவங்ககூட இருந்து விருந்து சாப்பிடணும். எல்லாம் முடிஞ்சதும், நாளைக்குச் சாயங்காலம் புறப்பட வேண்டியதுதான்.’

எலிஷா கிராமத்திற்குச் சென்றார். பால், கோதுமைமாவு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு மீண்டும் குடிசைக்குள் வந்தார். அதை வேகவைக்க கிழவிக்கு அவர் உதவியாக இருந்தார். நாளைக்குத் தேவையான கேக் தயாராகிக் கொண்டிருந்தது. விருந்து நாளன்று எலிஷா தேவாலயத்திற்குச் சென்று, பிறகு விரதத்தை தன் நண்பர்களுடன் குடிசையில் முடித்து வைத்தார். அந்த நாளில் அந்தப்பெண் எழுந்து மெதுவாக நடக்க ஆரம்பித்தாள். அவள் கணவன் தன் முகத்தை நன்றாகச் சவரம் செய்து, கிழவி அவருக்காகச் சலவை செய்து வைத்திருந்த சட்டையை எடுத்து அணிந்தார். அடுத்த நிமிடம் தன்னுடைய வயலையும், புற்கள் வளர்ந்திருக்கும் நிலத்தையும் அடகு வைக்கப்பட்டிருக்கும் கிராமத்திலேயே பெரிய பணக்காரராக இருக்கும் மனிதரைப் பார்த்து ஏதாவது பணம் வாங்கவேண்டும் என்பதற்காகப் புறப்பட்டார். புற்கள் வளர்ந்திருக்கும் வயலையும் நிலத்தையும் தன்னிடம் அறுவடை வரை தரும்படி கேட்பதற்காகத்தான் அவர் சென்றதே. ஆனால், மாலையில் அவர் மிகவும் கவலையுடன் திரும்பிவந்து தேம்பித் தேம்பி அழ ஆரம்பித்தார். அந்தப் பணக்கார மனிதர் அவரிடம் சிறிதுகூட கருணை காட்டவில்லை. அவர் ‘எனக்கு பணத்தைக் கொண்டுவந்து கொடு. நிலத்தைத் தர்றேன்’ என்று கூறிவிட்டார்.

எலிஷா தீவிரமாகச் சிந்திக்கத் தொடங்கினார். ‘இவங்க இப்போ எப்படி வாழ்வாங்க?’ - அவர் மனதிற்குள் நினைத்தார். ‘மத்தவங்க வயல்கள்ல வேலை செய்ய போயிடுவாங்க. ஆனா, இவங்க கிட்டத்தான் எதுவுமே இல்லியே! இவங்களோட நிலம்தான் அடமானத்துல இருக்குதே! விளைச்சல் எடுக்கப்போற நேரம் வந்திடுச்சு. மத்தவங்க விளைச்சலை எடுப்பாங்க. இந்த வருடம் பூமி அன்னை எவ்வளவு அருமையான விளைச்சலைத் தந்திருக்கிறாள்! ஆனா, இவங்க அறுவடை பண்றதுக்கு என்ன இருக்கு? இவங்களோட மூணு ஏக்கர் நிலமும் பெரிய பணக்கார விவசாயிகிட்ட அடமானத்துல இருக்கு. நான் இந்த இடத்தைவிட்டு போயிட்டா, நான் எப்படி இவங்களை பார்த்தேனோ, அதே நிலைக்கு மறுபடியும் போயிருவாங்கன்றதுதான் நிச்சயம் நடக்கப்போறது...’

எலிஷா இரண்டுவித எண்ணங்களுக்குள் சிக்கி அல்லாடிக் கொண்டிருந்தார். ஆனால், இறுதியாக அன்று மாலையில் புறப்படும் எண்ணத்தை அவர் கைவிட்டார். மறுநாள் காலைவரை பொறுத்திருக்க முடிவு செய்தார். வெளியே இருந்த இடைவெளியில் படுப்பதற்காகச் சென்றார். கடவுளை நோக்கிப் பிரார்த்தனை செய்துவிட்டுக் கீழே படுத்தார். ஆனால், அவருக்கு உறக்கம் வந்தால்தானே! தான் இங்கிருந்து சீக்கிரம் புறப்பட்டே ஆகவேண்டும் என்பதை எலிஷா உணர்ந்தார். அவர் எந்த அளவிற்குப் பணத்தையும் நேரத்தையும் செலவிடவேண்டுமோ, அதைவிட அதிகமாகவே செலவழித்துவிட்டார் என்பது ஒருபக்கம் இருந்தாலும், இன்னொரு பக்கம் அந்த வீட்டில் இருந்தவர்களுக்காக மிகவும் கவலைப்பட்டார் அவர்.

‘இதுக்கு ஒரு எல்லையே இல்லாமப் போச்சு...’ -அவர் நினைத்தார்: ‘நான் முதல்ல இவங்களுக்காக கொஞ்சம் தண்ணி கொண்டுவந்து கொடுத்து, ஒவ்வொருத்தருக்கும் ஒரு துண்டு ரொட்டியைக் கொடுக்கணும்னு மட்டும்தான் நினைச்சேன். ஆனா, இப்போ அது என்னை எங்கோ கொண்டுவந்து விட்டுடுச்சு! இப்போ நான் அவங்க அடமானம் வச்ச வயலையும் நிலத்தையும் மீட்டுத்தரணும். அது முடிஞ்சாச்சுன்னா, இவங்களுக்காக ஒரு பசுவை வாங்கித் தரணும். பிறகு ஒரு குதிரையை வாங்கிக் கொடுத்து வீட்டுல இருக்கிற மனிதரை வண்டி ஓட்ட வைக்கணும். சரியான வளையத்துல மாட்டிக்கிட்ட சகோதரர் எலிஷா! நீ உன் கைப்பிடியைத் தவறவிட்டுட்டே! உன் கட்டுப்பாட்டை விட்டு விலகிட்டே!”

எலிஷா எழுந்தார். தலையணையாகப் பயன்படுத்திய தன்னுடைய கோட்டை எடுத்து, அதற்குள்ளிருந்து சிறிது பொடியை எடுத்துப் போட்டார். அப்போதாவது தன்னுடைய சிந்தனை சீராக இருக்காதா என்ற நினைப்பு அவருக்கு.

ஆனால், அதனால் ஒரு பிரயோஜனமும் உண்டாகவில்லை என்பதே உண்மை. அவர் சிந்தித்தார்... சிந்தித்தார்... சிந்தித்துக் கொண்டே இருந்தார். கடைசிவரை அவரால் ஒரு முடிவுக்கும் வரவே முடியவில்லை. அவர் கட்டாயம் புறப்பட்டே ஆகவேண்டும். ஆனால், அதே நேரத்தில் அந்தக் குடும்பத்தின்மீது அவர் கொண்ட பரிதாபம் அவரைப் போகவிடாமல் இழுத்தது. அவருக்கு என்ன செய்யவேண்டும் என்றே தெரியவில்லை. அவர் தன் கோட்டை மடித்து மீண்டும் தன் தலைக்குக் கீழே வைத்தார். நீண்டநேரம் அப்படியே படுத்துக் கிடந்தார். சேவல் ஒருமுறை கூவி முடிக்கும் வரை அவர் சிறிதுகூட அசையவில்லை. அதற்குப்பிறகுதான் அவர் சிறிது கண் அயர்ந்தார். அப்போது தன்னை யாரோ தட்டி எழுப்பியதைப்போல் அவர் உணர்ந்தார். இப்போது அவர் தன்னுடைய ஆடைகளை அணிந்துகொண்டு பயணம் செய்வதற்குத் தயாராக நின்று கொண்டிருக்கிறார். அவரின் பை அவருக்குப் பின்னால் கட்டப்பட்டிருக்கிறது. கதவு வெளியே திறந்திருக்கிறது, அவர் போக வேண்டியது ஒன்றுதான் பாக்கி. அவர் வெளியே செல்ல முயல்கிறார். அப்போது அவருடைய பை பக்கத்திலிருந்த ஒரு வேலியில் மாட்டிக் கொள்கிறது. அவர் அதை வேலியிலிருந்து நீக்க முயல்கிறார்.


அதற்குள் அவருடைய காலில் கட்டப்பட்டிருக்கும் துணி வேலியின் இன்னொரு பக்கத்தில் மாட்டிக் கொள்கிறது. அவர் தன் பையை இழுக்கிறார். அப்போது தான் அவருக்கே தெரியவருகிறது தன்னுடைய பை வேலியில் மாட்டவில்லை- அந்தச் சிறுமிதான் அதைப்பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார் என்ற உண்மையே.

“ரொட்டி, அப்பா... ரொட்டி!”

அவர் தன் கால்களைப் பார்க்கிறார். அவருடைய காலில் கட்டப்பட்டிருக்கும் துணியை அந்தச் சிறுவன் இறுக்கமாகப் பிடித்துக் கொண்டிருக்கிறான். அதே நேரத்தில் அந்த வீட்டில் உள்ள மனிதரும் அந்த வயதான கிழவியும் ஜன்னல் வழியாக அவரையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

எலிஷா படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்து தனக்குள் கூறிக்கொள்கிறார்:

‘நாளைக்கு நான் இவங்களோட அடமானம் வைக்கபட்ட வயலை மீட்டுத் தருவேன். இவங்களுக்கு ஒரு குதிரை வாங்கித் தருவேன். அறுவடை வர்றது வரைக்கும் தேவையான மாவு வாங்கித் தருவேன். சின்னப் பசங்களுக்கு ஒரு பசுவை வாங்கித் தரப்போறேன். இது எதுவுமே செய்யாம நான் கடலைத்தாண்டி இருக்கிற கடவுளைப் பார்க்கப் போனா, எனக்குள்ள இருக்கற கடவுளை நான் இழந்தவனாவேன்.’

அதற்குப் பிறகு எலிஷா தூக்கத்தில் ஆழ்ந்தார். பொழுது விடியும் வரை நன்றாகத் தூங்கினார். காலையில் சீக்கிரமே படுக்கையை விட்டு எழுந்த அவர் அந்த ஊரின் பணக்கார விவசாயியைத் தேடிச் சென்றார். வயல், புல் வளர்ந்திருக்கும் நிலம் இரண்டையும் அவரிடமிருந்து மீட்டார். மண்வெட்டி ஒன்றை விலைக்கு வாங்கினார். (ஏற்கனவே இருந்த மண்வெட்டி விற்கப்பட்டிருந்தது.) அதை வீட்டிற்கு எடுத்துக் கொண்டு வந்தார். வீட்டில் இருந்த அந்த மனிதரை நிலத்திற்குப் போகும்படி கூறிவிட்டு, அவர் கிராமத்திற்குள் சென்றார். ஓரு வீட்டில் குதிரையும் வண்டியும் விலைக்கு இருப்பதாகக் கேள்விப்பட்டு அங்கு அவர் சென்றார். அங்கிருந்த உரிமையாளரிடம் பேரம் பேசி அவற்றையும் விலைக்கு வாங்கினார். பிறகு அவர் ஒரு மூட்டை மாவு வாங்கி அதை வண்டியில் வைத்தார். பிறகு ஒரு பசுவைப் பார்ப்பதற்காகச் சென்றார். போகும் வழியில் பேசிக்கொண்டு செல்லும் இரண்டு பெண்களை அவர் கடந்து சென்றார். அவர்கள் சின்ன ரஷ்யாவில் பேசப்படும் மொழியில் பேசினாலும், அவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

“முதல்ல அவர்களுக்கு அவர் யாருன்னே தெரியாது. அவர் யாரோ ஒரு சாதாரண ஆள்னுதான் அவங்க ஆரம்பத்துல நினைச்சாங்க. அவர் வீட்டுக்குள்ளே வந்ததே குடிக்கிறதுக்கு கொஞ்சம் தண்ணி வேணும்னு கேட்கத்தான். ஆனா, அவர் வீட்டுலயே இருந்துட்டார். அந்த வீட்டில் இருக்கிறவங்களுக்காக அவர் செய்திருக்கிற விஷயங்களைப் பார்த்தியா? அவங்களுக்காக ஒரு குதிரையையும் வண்டியையும் இன்னைக்குக் காலையிலதான் வாங்கினாரு. உலகத்துல இந்த மாதிரியான ஒரு மனிதரைப் பார்க்குறது ரொம்ப ரொம்ப அரிது. போற பாதையில அவரைப் பார்க்க நமக்கு கொடுத்து வச்சிருக்கணும்.”

தன்னை அந்தப் பெண்கள் புகழ்ந்து பேசிக் கொண்டு போகிறார்கள் என்பதை எலிஷா புரிந்துகொண்டார். அதற்குப் பிறகு அவர் மாடு வாங்கப் போகவில்லை. மீண்டும் திரும்பிவந்த அவர் குதிரையை வண்டியில் பூட்டி குடிசையை நோக்கிச் செலுத்தினார். குதிரையைப் பார்த்ததும் குடிசையில் இருந்தவர்கள் ஆச்சர்யப்பட்டு நின்று விட்டார்கள். அவர்கள் அந்தக் குதிரையும் வண்டியும் தங்களுக்குத் தான் என்பதை உணர்ந்தாலும், அதைக் கேட்பதற்கான தைரியம் அவர்களுக்கு வரவில்லை. குடிசையில் இருந்த மனிதர் கேட்டைத் திறப்பதற்காக வந்தார்.

“இந்தக் குதிரை எங்கேயிருந்து உங்களுக்குக் கிடைச்சது தாத்தா?” - அவர் கேட்டார்.

“நான் இதை விலைக்கு வாங்கியிருக்கிறேன்” எலிஷா சொன்னார். “இதை ரொம்பவும் குறைஞ்ச விலைக்கு நான் வாங்கினேன். வெளியே போய் கொஞ்சம் புல் அறுத்துக் கொண்டு வாங்க. இன்னைக்கு இந்தக் குதிரைக்குச் சாப்பிடுறதுக்கு அந்தப் புல்லைப் போடுங்க. வண்டியில இருக்கிற மூட்டையை உள்ளே கொண்டுபோய் வைங்க...”

அந்த மனிதர் வண்டியிலிருந்து குதிரையை விடுவித்தார். வண்டியிலிருந்த மூட்டையை உள்ளே எடுத்துக் கொண்டு போனார். புல் அறுத்துக் கொண்டு வந்து குதிரைக்குப் போட்டார். எல்லாரும் கீழே படுத்துத் தூங்க ஆரம்பித்தார்கள். எலிஷா வெளியே சென்று சாலையோரத்தில் படுத்தார். அவருடைய பையை எடுத்து தன் கையில் வைத்திருந்தார். எல்லோரும் உறங்க ஆரம்பித்ததும், அவர் படுத்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார். தன் பையை உடம்போடு சேர்த்துக் கட்டினார். கால்களில் துணியைச் சுற்றினார். காலணிகளையும் கோட்டையும் எடுத்து அணிந்தார். எஃபிம் போன வழியில் நடக்க ஆரம்பித்தார்.

7

லிஷா மூன்று மைல்களுக்கும் அதிகமாக நடந்திருப்பார். அப்போதுதான் சிறிது வெளிச்சம் தோன்றியது. அவர் ஒரு மரத்திற்குக் கீழே உட்கார்ந்து, தன் பையைத் திறந்தார். அதிலிருந்த பணத்தை எண்ணினார். பதினேழு ரூபிள்களும் இருபது கோபெக்குகளும் மட்டும்தான் அதில் இருந்தன.

‘ம்...’ - அவர் தன் மனதிற்குள் நினைத்தார்: ‘இந்தப் பணத்தைக் கையில வைச்சிக்கிட்டு கடலைத் தாண்டிப் போக முடியாது. போற வழியில யார்கிட்டயாவது பணம் கேட்டா, அங்கே போகாம இருக்கிறதைவிட அது ரொம்பவும் மோசமானது. நண்பர் எஃபிம் நான் இல்லாமலே ஜெருசலேமிற்குள் நுழைந்திருப்பார். என் பேர்ல அவரே ஒரு மெழுகுவர்த்தியைக் கடவுள் முன்னாடி வச்சிருப்பார். இந்த வாழ்க்கையில நான் எடுத்த உறுதிமொழியை எங்கே என்னால காப்பாற்ற முடியாமலே போயிடுமோன்றதை நினைக்கிறப்பத்தான் கவலையா இருக்கு. இரக்கமுள்ள, பாவம் செய்கிறவர்களை மன்னிக்கக் கூடிய கடவுளுக்கு நான் எப்போதும் நன்றி உள்ளவனா இருக்கணும்...”

எலிஷா உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு எழுந்தார். மீண்டும் பையைத் தோளில் தொங்கவிட்டார். பிறகு திரும்பி நடக்க ஆரம்பித்தார். யாரும் தன்னைப் பார்த்துவிடக்கூடாது என்பதை மனதில் வைத்துக் கொண்டு கிராமத்திற்குள் நுழையாமலே வேறுவழியில் சுற்றி வேகமாக அவர் நடந்தார். தன் வீட்டைவிட்டுப் புறப்பட்டு வரும்போது நடப்பதே அவருக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. எஃபிமுடன் சேர்ந்து நடப்பதற்கு அவர் மிகவும் சிரமப்பட்டார். ஆனால், திரும்பி வரும்போது, கடவுள் அவருக்கு மிகவும் உதவியாக இருந்தார். களைப்பே சிறிதும் தோன்றாத அளவுக்கு அவருக்கு நடப்பதில் எந்தவித சிரமமும் இல்லாமல் இருந்தது. நடப்பது என்பது ஒரு குழந்தையின் விளையாட்டைப்போல அவருக்கு இருந்தது. தன்னுடைய பொருட்களைச் சுமந்து கொண்டு அவர் ஒவ்வொரு நாளும் நாற்பதிலிருந்து ஐம்பது மைல்கள் வரை நடந்தார்.

எலிஷா தன்னுடைய வீட்டை அடையும்போது அறுவடை முடிந்துவிட்டது. அவருடைய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் அவரை மீண்டும் பார்த்ததில் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். நடைபெற்ற சம்பவங்களைத் தெரிந்து கொள்வதில் எல்லாரும் மிகவும் ஆர்வத்துடன் இருந்தார்கள்.


எந்தக் காரணத்தால் அவர் பின்தங்கிவிட்டார்; ஏன் ஜெருசலேமிற்குள் செல்லாமல் அவர் திரும்பி வந்தார் போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவர்கள் மிகவும் விருப்பத்துடன் இருந்தார்கள். ஆனால், எலிஷா அவர்களிடம் எதுவும் கூறவில்லை.

"நான் ஜெருசலேமிற்குப் போறதுல கடவுளுக்கு விருப்பமில்லைன்னு நினைக்கிறேன்"- அவர் சொன்னார்:"நான் என் கையில இருந்த பணத்தை வழியில இழந்துட்டேன். என் நண்பர்கூட என்னால போக முடியாமப் போச்சு. என்னை மன்னிச்சிடுங்க... எல்லாம் கடவுளோட விருப்பம்!"

எலிஷா மீதி இருந்த பணத்தை தன் மனைவியின் கைகளில் தந்தார். பிறகு வீட்டு விஷயங்களைப் பற்றி அவர் விசாரித்தார். எல்லா விஷயங்களும் ஒழுங்காக நடந்திருப்பதைத் தெரிந்து கொண்டார். எல்லா வேலைகளும் முறைப்படி முடிந்திருப்பதையும், ஒன்றுகூட முடியாமல் இருக்கவில்லை என்பதையும், எல்லோரும் மிகவும் மன அமைதியுடனும் ஒற்றுமையாகவும் இருப்பதையும் அவரால் தெரிந்து கொள்ள முடிந்தது.

எலிஷா வீடு திரும்பியிருக்கும் விஷயத்தை அன்றே எஃபிமின் வீட்டைச் சேர்ந்தவர்கள் அறிந்தார்கள். அவர்கள் எஃபிமைப் பற்றிய செய்தியைத் தெரிந்து கொள்வதற்காக வந்தார்கள். அவர்களுக்கும் அதே பதில்களைச் சொன்னார் எலிஷா.

"எஃபிம் கிமவும் வேகமாக நடக்கக்கூடிய மனிதர். செயின்ட் பீட்டரோட நாளுக்கு மூணு நாட்கள் முன்னாடியே நாங்க பிரிஞ்சிட்டோம். அவரைத் திரும்பவும் எப்படியாவது பிரிஞ்சிடணும்னு நினைச்சேன்.அதுக்குள்ள எவ்வளவோ விஷயங்கள் நடந்திருச்சு. நான் என் கையில இருந்த பணத்தை இழந்துட்டேன். அதுக்குமேல பயணம் செய்றதுல அர்த்தமே இல்ல... அதனால நான் திரும்பி வந்துட்டேன்..."

அறிவாளியான ஒரு மனிதன் இந்த அளவிற்கு முட்டாள்தனமாக நடந்திருப்பாரா என்பதை நினைத்துப் பார்த்த கிராமத்து மக்கள் மிகவும் ஆச்சர்யப்பட்டார்கள். வீட்டிலிருந்து கிளம்பிய மனிதர் சேர வேண்டிய இடத்திற்குப் போய் ஒழுங்காகச் சேராமல் போகும் வழியில் கையிலிருந்த பணத்தை இழந்துவிட்டு திரும்பி வந்திருப்பதைப் பார்த்து அவர்கள் உண்மையிலேயே ஆச்சர்யத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்கள். அவரைப் பார்த்து சிறிதுநேரம் அவர்கள் ஆச்சரியப்பட்டு நின்றார்களே தவிர, அதற்குப் பிறகு அந்த விஷயத்தையே மறந்து விட்டார்கள் என்றுதான் சொல்லவேண்டும். சொல்லப்போனால் எலிஷாகூட அந்த விஷயத்தை முற்றிலும் மறந்தே போனார். அவர் மீண்டும் தன் வீட்டில் உட்கார்ந்து தான் செய்யவேண்டிய வேலைகளில் தீவிரமாக ஈடுபட ஆரம்பித்தார். தன் மகனின் உதவியுடன் அவர் குளிர் காலத்தில் அடுப்பு எரிப்பதற்கான விறகுகளை வெட்டி சேகரித்தார். அவரும் மற்ற பெண்களும் சேர்ந்து கதிர்களை அடித்து அதிலிருந்து தானியத்தைப் பிரித்தெடுத்தார்கள். அவர் வேலிகளை ஒழுங்குபடுத்திக் கட்டினார். தேனீக்களைச் சரியாக மூடிவைத்து, தான் விற்ற தேனீக் கூடுகளை முறைப்படி தேனீக்களுடன் அவர் பக்கத்து வீட்டுக்காரரிடம் ஒப்படைத்தார். ஒவ்வொரு தேனீக்கூட்டிலும் எவ்வளவு தேனீக்கள் இருக்கின்றன என்பதை அவருடைய மனைவி அவரிடம் கூறவில்லை.மாறாக,எந்தக் கூட்டில் தேனீக்கள் அதிகமாக இருக்கின்றன, எந்தக் கூட்டில் குறைவாக இருக்கின்றன என்பதை எலிஷாவே தெரிந்து கொண்டார். சொல்லப்போனால் பத்து தேனீக்கூடுகளுக்குப் பதிலாக, அவர் பதினேழு தேனீக்கூடுகளை பக்கத்து வீட்டுக்காரரிடம் தந்தார். குளிர்காலத்திற்குத் தேவையான எல்லா ஏற்பாடுகளும் முடிந்தவுடன் எலிஷா தன் மகனை வேலை ஏதாவது தேடும்படி அனுப்பி வைத்தார். அவர் காலணிகள் செய்வதிலும் தேனீக்கூடுகளுக்குத் தேவையான மரக்கட்டைகளைக் கொண்டு வருவதிலும் தீவிரமாக ஈடுபட்டார்.

8

லிஷா தன்னைவிட்டுப் பிரிந்து போய் நோய்வாய்ப்பட்ட மனிதர்களுடன் குடிசையில் இருந்த அந்த முழுநாளும் எஃபிம் அவருக்காகக் காத்திருந்தார். சிறிதுதூரம் மட்டுமே நடந்து சென்ற அவர் ஓரிடத்தில் உட்கார்ந்து எலிஷாவிற்காகக் காத்திருந்தார். காத்துக் கொண்டே இருந்தார். அதற்குப் பிறகு ஒரு சிறு தூக்கத்தில் மூழ்கினார். பிறகு தூக்கம் கலைந்து எழுந்தார். அதற்குப் பிறகும் எலிஷா வருவார் என்று காத்திருந்தார். ஆனால், அவருடைய நண்பர் வரவேயில்லை. தன் கண்கள் வலிக்கும்வரை அவர் எலிஷா வருகிறாரா என்று பார்த்துக் கொண்டேயிருந்தார். சூரியன் மரங்களுக்குப் பின்னால் முழுமையாக மறைந்து விட்டிருந்தது. அப்போதும் எலிஷா வருவதாகத் தெரியவில்லை.

'ஒருவேளை அவர் என்னைக் கடந்து போயிருப்பாரோ?'-எஃபிம் நினைத்தார்: 'இல்லாட்டி வேறு யாராவது தங்களோட வாகனத்துல அவருக்கு இடம் தந்திருந்தா, அதுல உட்கார்ந்து பயணம் செய்து என்னைத் தாண்டிப் போனாலும் போயிருக்கலாம். நான் சிறு தூக்கத்துல இருந்தப்போ அது நடந்திருக்கலாம். அவர் என்னை பார்க்காமல் போயிருக்கலாம். அவர் என்னை எப்படி பார்க்காம இருந்தார்? தூரத்துல இருந்து பார்த்தாலே நான் இங்கே படுத்திருந்தது நல்லா தெரியுமே! நான் வந்த வழியே திரும்பிப் போனா என்ன? அப்படி நான் ஒருவேளை செஞ்சு அவர் என்னை விட முன்னோக்கி ரொம்ப தூரம் கடந்து போயிருந்தார்னா, நான் அவரைச் சந்திக்க முடியாமலே போயிடுமே! அப்போ நிலைமை ரொம்பவும் மோசமாயிடுமே! நான் முன்னோக்கி நடக்குறதுதான் சரியானது. ராத்திரி தங்குறதா இருக்குற இடத்துல நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுத்தான் ஆகணும்.'

அவர் ஒரு கிராமத்தை அடைந்தார். அங்கிருந்த காவலாளியிடம் எலிஷாவின் அடையாளத்தை விவரித்து, அப்படியொரு மனிதர் அங்கு வந்தால், அவரை நான் ஓய்வெடுக்கும் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வரும்படி சொன்னார்.ஆனால், இரவுவரை எலிஷா அங்கு வரவில்லை. எஃபிம் நடையைத் தொடர்ந்தார். வழியில் பார்க்கும் ஒவ்வொருவரிடமும் வயதான வழுக்கை விழுந்த, குள்ளமான அந்த மனிதரை அவர்கள் பார்த்தார்களா என்று விசாரித்தார். அப்படியொரு வழிப்போக்கரை யாரும் பார்க்கவே இல்லை என்று சொன்னார்கள். எஃபிமிற்கு மிகவும் ஆச்சர்யமாக இருந்தது.அவர் தன் பயணத்தைத் தொடர்ந்தார். அவர் தனக்குள் நினைத்தார்.

'நிச்சயமா நாங்க ரெண்டு பேரும் ஒடிஸாவுல சந்திச்சுத்தான் ஆகணும். இல்லாட்டி கப்பல்ல ஏர்றப்பவாவது சந்திச்சுத்தான் ஆகணும்'அதற்குப் பிறகு அவர் இந்த விஷயத்தைப் பற்றி பெரிதாகப் போட்டுக் குழப்பிக் கொள்ளவில்லை.

போகும் வழியில் அவர் ஒரு பக்தரைப் பார்த்தார். அவர் ஒரு நீளமான அங்கியை அணிந்திருந்தார். முடியை நீளமாக விட்டிருந்தார். பாதிரியார்கள் அணிவதைப் போன்ற ஒரு தொப்பியைத் தலையில் அணிந்திருந்தார். அந்த பக்தர் ஏற்கனவே அதாஸ் மலைக்குப் போய்விட்டு வந்தவர். இப்போது ஜெருசலேமிற்கு இரண்டாவது முறையாக போய்க் கொண்டிருக்கிறார். அவர்கள் இருவரும் ஒரு இரவில் ஒரே இடத்தில் தங்கினார்கள். அப்போது தான் இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமானார்கள். அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்தே பணத்தைத் தொடர்ந்தார்கள்.

அவர்கள் இருவரும் மிகவும் பத்திரமாக ஒடிஸா போய்ச் சேர்ந்தார்கள். அங்கு கப்பலுக்காக மூன்று நாட்கள் அவர்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. பல்வேறு இடங்களிலுமிருந்து வந்திருந்த பக்தர்கள் அனைவரும் இப்படித்தான் காத்துக்கிடக்க வேண்டி வந்தது.


எஃபிம் அங்கிருந்த பலரிடமும் எலிஷாவைப் பற்றி விசாரித்துப் பார்த்தார். ஆனால், யாரும் அவரைப் பார்த்ததாகச் சொல்லவில்லை.

அவருடன் இருந்த பயணி பயணக் கட்டணத்தைக் கட்டாமலே எப்படி கப்பலில் ஏறலாம் என்பதை எஃபிமிடம் கூறிக் கொண்டிருந்தார். ஆனால், அந்த மனிதர் சொன்னதை எஃபிம் காதிலேயே வாங்கவில்லை. "இல்ல... நான் பணம் கட்டி பயணச்சீட்டு வாங்குறதுக்கு தயாரா இருக்கேன்."- என்று சொன்னார்.

எஃபிம் தனக்காக ஒரு வெளிநாட்டு நுழைவு அட்டையை ஐந்து ரூபிள்கள் கொடுத்து வாங்கினார். நாற்பது ரூபிள்கள் கொடுத்து

ஜெருசலேம் செல்வதற்கான பயணச் சீட்டை வாங்கினார். பயணத்தின் போது சாப்பிடுவதற்காக கொஞ்சம் ரொட்டியும் வேறு சில உணவுப் பொருட்களும் வாங்கினார்.

கப்பல் புறப்படுவதற்குத் தயாராக நின்றது. பயணிகள் அவரவர் இடத்தில் போய் அமர்ந்தார்கள். எஃபிம்தன்னுடைய புதிய தோழருடன் போய் அமர்ந்தார். கப்பல் இப்போது கடல்மீது நீந்திச் செல்ல ஆரம்பித்தது.

பகல் முழுவதும் அவர்கள் எந்தவித பிரச்சினையுமில்லாமல் பயணம் செய்தார்கள். இரவு நெருங்கும்போது ஒரு பலமான காற்று வீசியது. தொடர்ந்து மழை பெய்ய ஆரம்பித்தது. கொஞ்ச நேரத்தில் கடல் நீர் கப்பலுக்குள் வர ஆரம்பித்தது. கப்பலிலிருந்த பயணிகள் பயப்பட ஆரம்பித்தார்கள். பெண்கள் வாய்விட்டு அழத் தொடங்கினார்கள். பலர் 'அய்யோ அம்மா' என்று அலறினார்கள். தைரியம் குறைவான சில மனிதர்கள் கப்பலுக்குள்ளேயே பாதுகாப்பான இடத்தைத் தேடி ஓடினார்கள்.எஃபிம் கூட பயந்துதான் போய் விட்டார். ஆனால் தனக்குள் உண்டான பயத்தை அவர் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. தான் ஆரம்பத்தில் எங்குவந்து அமர்ந்தாரோ, அதே இடத்தில் எவ்வித பதட்டமும் வெளியே தெரியாதவாறு அவர் அமர்ந்திருந்தார். அவருடன் டாம்பவ்வில் இருந்து வந்திருந்த சில பயணிகள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்கள் அதே இடத்தில் அன்று இரவு முழுவதும், மறுநாள் பகல் முழுவதும் தங்களின் உடைமைகளை இறுகப் பற்றியவாறு அமர்ந்திருந்தார்கள். மூன்றாம் நாள் கடல் மிகவும் அமைதியாகத் தொடங்கியது. ஐந்தாவது நாள் அவர்கள் சென்ற கப்பல் கான்ஸ்டான்டிநோபில் என்ற ஊரை அடைந்தது. பயணிகளில் சிலர் இப்போது துருக்கி நாட்டவரின் பிடியில் இருக்கும் புனித ஸோபியா தேவாலயத்தைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். எஃபிம் எங்கும் செல்லாமல் கப்பலிலேயே இருந்தவாறு கொஞ்சம் வெள்ளை ரொட்டி வாங்கினார். அங்கேயே இருபத்து நான்கு மணிநேரம் கப்பல் நின்றது. பிறகு மெதுவாக நகர ஆரம்பித்தது. அதற்குப்பிறகு ஸ்மிர்னாவில் கப்பல் நின்றது. பிறகு அலெக்ஸான்ட்ரெட்டாவில் நின்றது. கடைசியில் பத்திரமாக அவர்கள் ஜாஃபாவை அடைந்தார்கள். அங்குதான் எல்லா பயணிகளும் இறங்க வேண்டும். அதற்குப்பிறகு சாலை வழியாக நாற்பது மைல்களுக்கும் அதிகமாக பயணம் செய்து அவர்கள் ஜெருசலேமை அடைய வேண்டும். கப்பலைவிட்டு இறங்கும்போது பயணிகள் மேலும் அதிகமாக பயந்தார்கள். கப்பல் மிகவும் உயரமாக இருந்தது. அதிலிருந்து அவர்கள் ஒவ்வொருவரும் படகுகளில் இறக்கிவிடப்பட்டார்கள். அந்தப் படகுகள் இப்படியும் அப்படியுமாய் ஆடிக்கொண்டேயிருந்தன. அவற்றில் பயணிகள் இறக்கிவிடப்படும் பொழுது, அவர்கள் நீருக்குள் விழுந்துவிடும் அபாயம் அதிகமிருந்தது. இரண்டு மனிதர்கள் நீரில் விழுந்து விட்டார்கள். எனினும் அவர்களையும் சேர்த்து எல்லோரும் பத்திரமாகக் கரை சேர்க்கப்பட்டார்கள். 

அவர்கள் கால்நடையாகச் சென்றார்கள். மூன்றாவது நாள் மதிய நேரத்தில் அவர்கள் ஜெருசலேமை அடைந்தார்கள். நகரத்திற்கு வெளியே இருந்த ரஷ்யன் தங்குமிடத்தில் அவர்கள் நிறுத்தப்பட்டார்கள். அங்கு அவர்களின் அடையாள அட்டைகள் பரிசோதிக்கப்பட்டன. சாப்பிட்டு முடிந்ததும், எஃபிம் புனித இடங்களைத் தன்னுடன் பயணம் செய்த பக்தருடன் போய்ப் பார்த்தார். இயேசுவின் சமாதிக்கு அவர்களை அனுமதிப்பதற்கான நேரம் இன்னும் வரவில்லை என்பதால் அவர்கள் வேறொரு இடத்தை நோக்கிச் சென்றார்கள். அங்குதான் எல்லா புனிதப் பயணம் வந்தவர்களும் இருந்தார்கள். ஆண்கள் வேறு பெண்கள் வேறாகப் பிரிக்கப்பட்டிருந்தனர். வெறும் கால்களுடன் அவர்கள் வட்ட வடிவில் அமர வைக்கப்பட்டார்கள். அப்போது அங்கு ஒரு துறவி வந்தார். அவர் கையில் அவர்களின் பாதங்களைக் கழுவுவதற்கான கைக்குட்டை இருந்தது. அவர் அங்குள்ளவர்களின் பாதங்களைக் கழுவினார், துடைத்தார். பிறகு அவர் அந்தப் பாதங்களை முத்தமிட்டார். வட்டமாக அங்கு அமர்ந்திருந்த ஒவ்வொருவர் பாதங்களையும் அவர் இவ்வாறு செய்தார்.எஃபிமின் பாதங்களும் கழுவப்பட்டன, முத்தமிடப்பட்டன. அவர் அங்கு நின்று தொழுதார். சிலைகளுக்கு முன்னால் மெழுகுவர்த்திகள் ஏற்றினார். தேவாலயத்தில் நடக்கும் பிரார்த்தனையின்போது உச்சரிக்கப்பட வேண்டும் என்பதற்காகத் தன்னுடைய பெற்றோர்களின் பெயர்களைக் குறித்துக் கொடுத்தார். அங்கு உணவும் ஒயினும் அவர்களுக்கு வழங்கப்பட்டன. மறுநாள் காலையில் அவர்கள் எகிப்து நாட்டைச் சேர்ந்த மேரி, கடைசி காலத்தில் இருந்த இருட்டறையைப் பார்ப்பதற்காகச் சென்றார்கள். அங்கும் அவர்கள் மெழுகுவர்த்திகளை ஏற்றிவைத்து பிரார்த்தனைகளைப் படித்தார்கள். அங்கிருந்து அவர்கள் ஆப்ரஹாமின் நினைவிடத்திற்குச் சென்றார்கள். கடவுளுக்குத் தன்னுடைய மகனை ஆப்ரஹாம் பலிகொடுக்க முயன்ற இடத்தை அவர்கள் பார்த்தார்கள். அதற்குப் பிறகு மேரி மக்தலீனா முன் கிறிஸ்து தோன்றிய இடத்தையும், இறைவனின் சகோதரரான ஜேம்ஸின் தேவாலயத்தையும் அவர்கள் பார்த்தார்கள். அந்த நண்பராக வந்த பயணி எஃபிமிற்கு இந்த எல்லா இடங்களையும் சுற்றிக் காட்டினார். ஒவ்வொரு இடத்திலும் எவ்வளவு பணம் தரவேண்டும் என்பதை எஃபிமிற்கு அவர்தான் சொன்னார். எல்லாவற்றையும் பார்த்துவிட்டு அவர்கள் தங்குமிடத்திற்குத் திரும்பி வந்து உணவருந்தினார்கள்.சிறிது படுத்து ஓய்வெடுக்கலாம் என்று நினைக்கும்பொழுது, எஃபிமுடன் வந்த அந்தப் பயணி உரத்த குரலில் கூப்பாடு போட ஆரம்பித்தார். அவர் தன்னுடைய துணிகளில் எதையோ தேடிக் கொண்டிருந்தார்.

"என் பர்ஸை யாரோ திருடிட்டாங்க. அதுல இருபத்து மூணு ரூபிள்கள் இருந்துச்சு"- அந்த மனிதர் சொன்னார்: "ரெண்டு பத்து ரூபிள் நோட்டுகள். மற்றவை சில்லறைகளா இருந்துச்சு..."

அவர் உரத்த குரலில் வாய்விட்டு அழுதார். ஆனால் அவரின் கூப்பாட்டை யாரும் பொருட்படுத்தாமல், அவர்கள் தரையில் படுத்து தூங்க ஆரம்பித்தார்கள்.


9

ஃபிம் படுக்கும்பொழுது அவர் தனக்குள் கூறிக்கொண்டார்: 'இந்த மனிதர்கிட்டயிருந்து யாரும் எந்தப் பணத்தையும் திருடல. அவர் ஏதாவது பணம் வச்சிருந்தார்ன்றதை நான் நம்பத் தயாரா இல்ல. அவர் எந்த இடத்துலயும் பணம் தரல... என்னைத்தான் அவர் எல்லா இடங்கள்லேயும் பணம் கொடுக்க வச்சார். சொல்லப்போனா என்கிட்ட அவர் ஒரு ரூபிள் கடன் வாங்கினார்...'

இந்தச் சிந்தனை அவர் மனம் முழுக்கத் திரும்ப திரும்ப வலம் வந்து கொண்டேயிருந்தது. பிறகு 'ஒரு மனிதரைப் பற்றி முடிவு பண்றதுக்கு எனக்கு என்ன உரிமை இருக்கு? அப்படி நினைக்கிறதே ஒரு பாவச்செயல்தான். இதுக்குமேல அவரைப் பற்றி நான் நினைக்க மாட்டேன்' என்றெண்ணினார். ஆனால் அவர் அப்படி நினைத்தாரே தவிர, அவர் மனம் மீண்டும் அந்த மனிதரைச் சுற்றித்தான் வந்து கொண்டேயிருந்தது. அவர் பண விஷயத்தில் எவ்வளவு ஆர்வம் உள்ளவராக இருக்கிறார். அவர் தன்னுடைய பர்ஸை யாரோ திருடி விட்டார்கள் என்று சொன்னது எவ்வளவு பொருத்தமில்லாமல் அமைந்துவிட்டது என்பதையெல்லாம் அவர் மனம் திரும்பத்திரும்ப நினைத்துக் கொண்டே இருந்தது.

'அவர் கையில நிச்சயம் பணம் எதுவுமே இல்லவே இல்ல...'-எஃபிம் நினைத்தார்: 'எல்லாம் அவரோட கற்பனை.'

மாலைநேரம் வந்ததும் அவர்கள் எல்லோரும் எழுந்தார்கள். கடவுளின் சமாதி இருக்கும் புத்துயிர்ப்பு தேவாலயத்தில் நடைபெறும் நள்ளிரவு பிரார்த்தனைக் கூட்டத்திற்காக அவர்கள் எல்லோரும் புறப்பட்டார்கள்.அந்த பக்தராக வந்த பயணி எஃபிமை விடுவதாக இல்லை. அவருடனே சதா நேரமும் மிகவும் நெருக்கமாக ஒட்டிக் கொண்டு இருந்தார். எங்கு சென்றாலும் எஃபிமுடன் அவர் சேர்ந்து கொள்வார். அவர்கள் தேவாலயத்திற்கு வந்தார்கள். ஏராளமான புனிதப்பயணம் வந்தவர்கள் அங்குக் குழுமியிருந்தார்கள். அவர்கள் ரஷ்ய நாட்டைச் சேர்ந்தவர்களாக இருந்தார்கள். பலர் கிரேக்கர்களாகவும், ஆர்மேனியர்களாகவும், துருக்கியர்களாகவும், சிரியா நாட்டைச் சேர்ந்தவர்களாகவும் இருந்தார்கள். எஃபிம் கூட்டதுடன் சேர்ந்து புனித வாயில்களுக்குள் நுழைந்தார். துறவி ஒருவர் அவர்களை ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றார். அந்த இடம்தான் கிறிஸ்து சிலுவையிலிருந்து இறக்கப்பட்ட இடம். அந்த இடத்தில் பெரிய ஸ்டாண்டுகளின் மேல் ஒன்பது மெழுகுவர்த்திகள் எரிந்து கொண்டிருந்தன. அந்தத்துறவி அந்த இடத்தை அவர்களுக்குக் காட்டி, அதைப் பற்றி நீண்ட விளக்கம் தந்தார். எஃபிம் அங்கு ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தினார். பிறகு அந்தத்துறவி எஃபிமை வலது பக்கமாகச் சென்று படிகளில் ஏறி கொல்கொதாவிற்குப் போகும்படி செய்தார். அங்குதான் சிலுவை இருந்தது. எஃபிம் அங்கு பிரார்த்தனை செய்தார். தொடர்ந்து அங்கு இயேசு கிறிஸ்துவின் கைகளும் பாதங்களும் சிலுவையில் ஆணிகளால்அறையப்பட்ட இடம் எஃபிமிற்குக் காட்டப்பட்டது. அதற்குப் பிறகு எஃபிம் ஆதாமின் நினைவிடத்தைப் போய்ப் பார்த்தார். அங்கு இயேசுவின் ரத்தம் ஆதாமின் எலும்புகளின் மீது சொட்டுச் சொட்டாக விழுந்து கொண்டிருந்தது. தொடர்ந்து எஃபிமிற்குத் தன்னுடைய தலையில் முட்களால் ஆன முடி வைக்கப்பட்டபோது இயேசு அமர்ந்திருந்த இடம் காட்டப்பட்டது. அதற்குப்பிறகு இயேசுவைக் கட்டிவைத்த தூணை எஃபிம் சென்று பார்த்தார். ஒரு கல்லில் இயேசுவின் பாதங்களுக்கு அடையாளமாக இரண்டு குழிகள் இருப்பதை எஃபிம் பார்த்தார். வேறு பலவற்றையும் எஃபிமிற்கு காட்டுவதாக இருந்தது. அதற்குள் கூட்டத்தில் ஒரு சிறு சலசலப்பு உண்டானது. மக்கள் எல்லோரும் கடவுளின் சமாதி இருக்குமிடத்தை நோக்கி வேகமாக நகர்ந்தார்கள். லத்தீன் மொழியில் நடந்த பிரார்த்தனைக் கூட்டம் முடிந்து, ரஷ்ய மொழியில் பிரார்த்தனை ஆரம்பமானது. எஃபிம் கூட்டத்தினருடன் சேர்ந்து பாறையில் அமைக்கப்பட்ட சமாதிக்குச் சென்றார்.

தன்னுடன் வந்த அந்த மனிதரை விட்டு விலகிச்செல்ல வேண்டும் என்று நினைத்தார் எஃபிம். அந்த மனிதரைப் பற்றி எஃபிமின் மனம் கீழ்த்தரமாக நினைத்துக்கொண்டே இருந்தது. ஆனால், அந்த மனிதர் அவரைவிட்டு விலகினால்தானே! இயேசுவின் சமாதியில் நடைபெற்ற பிரார்த்தனை கூட்டத்திற்குக் கூட விடாமல் எஃபிமுடன் சென்றார் அந்த மனிதர். அவர்கள் முன்வரிசையில் போய் இருக்கமுடியுமா என்று பார்த்தார்கள். ஆனால், மிகவும் தாமதமாக வந்துவிட்டதால், அது முடியாமல் போய்விட்டது. கூட்டம் பெரிதாக இருந்ததால் அவர்களால் இருந்த இடத்தைவிட்டு முன்னாலோ, பின்னாலோ, சிறிது கூட அசைய முடியவில்லை. எஃபிம் நின்றவாறு முன்பக்கம் பார்த்துப் பிராத்தித்தார். அவரின் கவனம் முழுவதும் அவ்வப்போது அவருடைய பர்ஸின் மீதே இருந்தது. அவர் மனதில் இரண்டுவித எண்ணங்கள் ஆக்கிரமித்திருந்தன. தன்னுடன் இருக்கும் நண்பர் ஒருவேளை தன்னை ஏமாற்றுகிறாரோ என்று நினைத்தார் எஃபிம். அப்படி இல்லாமல் அந்த மனிதர் சொல்வது மாதிரியே உண்மையாகவே அவருடைய பர்ஸ் காணாமல் போயிருந்தால், அத்தகைய ஒரு நிலை தனக்கும் நேர்வதற்கு வாய்ப்பு இருக்கிறதே என்பதையும் அவர் எண்ணிப் பார்த்தார்.

10

ஃபிம் அங்கு நின்றவாறு தனக்கு முன்னால் இருந்த ஒரு சிறு கூடத்திற்குள் அமைக்கப்பட்டிருந்த கடவுள் இயேசுவின் சமாதியையும் அதற்கருகில் எரிந்து கொண்டிருந்த முப்பத்தாறு விளக்குகளையும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருந்தார். தனக்கு முன்னால் நின்றிருந்த மக்களின் தலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த அவருக்கு ஒரு விஷயம் மிகவும் ஆச்சரியத்தைத் தந்தது. விளக்குகளுக்குப் பின்னால் புனித நெருப்பு எரிந்து கொண்டிருந்த இடத்தில்- எல்லாருக்கும் முன்னால் சாம்பல் வண்ணத்தில் கோட் அணிந்த ஒரு வயதான கிழவர் நின்று கொண்டிருப்பதை எஃபிம் பார்த்தார். அவரின் வழுக்கைத் தலை எலிஷாவின் தலையை ஒத்திருந்தது.

'அந்த மனிதர் எலிஷாவைப் போலவே இருக்கிறாரே!' - மனதிற்குள் நினைத்தார் எஃபிம்: 'ஆனா, அவர் எலிஷாவா இருக்க முடியாது. எனக்கு முன்னாடி அவர் எப்படி வந்து நிற்க முடியும்? நாங்க வந்த கப்பலுக்கு முந்தைய கப்பல் ஒரு வாரத்துக்கு முன்னாடி புறப்பட்டு இருக்கு. அந்தக் கப்பல்ல எலிஷா வந்திருக்க முடியாது. நாங்க வந்த கப்பல்லயும் அவர் வரல. நான் தான் கப்பல்ல வந்த எல்லா பயணிகளையும் நல்லா பார்த்தேனே!'

எஃபிம் இந்தச் சிந்தனையில் ஆழ்ந்திருக்கும்போது, முன்னால் நின்று கொண்டிருந்த அந்தக் குள்ளமான மனிதர் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார். அவர் மூன்றுமுறை தன் தலையைக் குனிந்தார். ஒருமுறை கடவுளை நோக்கியும் இரண்டுமுறை தனக்கு முன்னால் இருபக்கங்களிலும் நின்றிருந்த மக்களைப் பார்த்தும் வலது பக்கம் அந்த மனிதர் தன் தலையைத் திருப்பியபோது, அவரை அடையாளம் தெரிந்து கொண்டார் எஃபிம் அது- எலிஷாதான். அதே கறுத்த சுருள் முடிகளைக் கொண்ட தலை. கன்னப்பகுதியில் சாம்பல் நிறத்தில் மாறி காணப்படும் தாடி, அதே புருவம், அதே கண்கள், மூக்கு… அதே முக பாவனைகள். நிச்சயம் அது அவர்தான்!

தன்னுடைய நண்பரை மீண்டும் காண நேர்ந்ததற்காக எஃபிம் உண்மையாகவே மிகவும் மகிழ்ச்சியடைந்தார். தனக்கு முன்னால் எலிஷா எப்படி அங்கு வந்த சேர்ந்தார் என்பதை நினைத்து அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார்.


'எலிஷா பரவாயில்லையே!'- எஃபிம் தன் மனதிற்குள் நினைத்தார்: 'எல்லாருக்கும் முன்னாடி எலிஷா நின்னுக்கிட்டு இருக்காரே! யாரோ வழியைக் காட்ட, அதற்கேற்ற மாதிரி நடந்து எனக்கு முன்னாடி நின்னுக்கிட்டு இருக்காரு எலிஷா. வெளியே போறப்போ நான் அவரை எப்படியும் பார்த்துப் பேசிடுவேன். இந்தத் தொப்பி போட்ட மனிதரை விட்டு விலகி எலிஷாகூட எப்படியாவது போய் சேர்ந்திடணும். எப்படி முன்னாடி போறதுன்ற விஷயத்தை அவர்கிட்ட இருந்துதான் நான் தெரிஞ்சுக்கணும்.'

எலிஷா வெளியே பார்த்தவண்ணம் இருந்தார். எலிஷா தன் பார்வையை விட்டு போய்விடக்கூடாது என்பதில் எஃபிம் மிகவும் கவனமாக இருந்தார். பிரார்த்தனைக் கூட்டம் முடிந்ததும், அங்கு கூடியிருந்த மக்கள் ஒருவரைஒருவர் நெருக்க ஆரம்பித்தார்கள். ஒருவரை ஒருவர் முன்னோக்கித் தள்ளி முன்னாலிருக்கும் மண்டபத்தை நோக்கி நகரப் பார்த்தார்கள். அந்தச் சூழ்நிலையில் எஃபிமும் இப்படியும் அப்படியுமாய் அலைக்கழிக்கப்பட்டார். தன் பர்ஸ் எங்கே காணாமல் போய்விடப் போகிறதோ என்ற பயத்தில் அவர் மீண்டும் சிக்கிக்கொண்டிருந்தார். அதைக் கையால் பிடித்தவாறு, கழுத்தை மேல்நோக்கி உயர்த்திக்கொண்டு அவர் கூட்டத்திற்குள் மெதுவாக நகர்ந்து வெளியே வர முயற்சித்துக் கொண்டிருந்தார். கூட்டத்தைவிட்டு வெளியே வந்தவுடன், நீண்டநேரம் அவர் தேவலாயத்திற்கு உள்ளேயும், வெளியேயும் எலிஷாவைத் தேடி இங்குமங்குமாய் அலைந்தார். முன்னாலிருந்த மண்டபத்திற்கு அருகில் பலவகைப்பட்ட மக்களும் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சிலர் ஒயின் பருகிக் கொண்டிருந்தார்கள். சிலர் படித்துக் கொண்டிருந்தார்கள். சிலர் தூங்கிக் கொண்டிருந்தார்கள். ஆனால், எலிஷாவை மட்டும் எங்கும் காணவில்லை. அதனால் தன்னுடைய நண்பரைப் பார்க்க முடியாமலே தான் தங்கியிருந்த இடத்திற்குத் திரும்பினார் எஃபிம். அன்று மாலை தொப்பி அணிந்த அந்த மனிதர் திரும்பி வரவேயில்லை. எஃபிமிடம் கடன் வாங்கியிருந்த ஒரு ரூபிளைத் திருப்பித் தராமலே அவர் போய் விட்டார். எஃபிம் மட்டும் தனியாக இருந்தார்.

மறுநாள் எஃபிம் கடவுளின் சமாதி இருக்குமிடத்திற்கு மீண்டும் சென்றார். அவருடன் எஃபிம் கப்பலில் சந்தித்த டேம்ப* என்ற வயதான கிழவரும் சென்றார். எஃபிம் முன்னால் போக முயன்றார். அனால், அவரை கூட்டம் பின்னோக்கி இழுத்துக் கொண்டேயிருந்தது. அதனால் அவர் ஒரு தூணோரத்தில் நின்றவாறு பிரார்த்தனை செய்ய ஆரம்பித்தார்.அவர் தனக்கு முன்னால் பார்த்தார். எல்லாருக்கும் முன்னால் விளக்குகளுக்குக் கீழே கடவுளின் சமாதிக்கு வெகு அருகில் எலிஷா தேவாலயத்தில் இருக்கும் பாதிரியாரைப் போல தன் கைகளை விரித்தவாறு நின்றிருந்தார். அவரின் தலை ஒளிர்ந்து கொண்டிருந்தது.

'சரி...' -எஃபிம் மனதிற்குள் நினைத்தார்: 'இந்த முறை நான் அவரைத் தவற விட்டுடக் கூடாது...'

அவர் எல்லாரையும் தள்ளிக்கொண்டு முன்னோக்கி நடந்தார். ஆனால், அவர் அங்கு சென்றபிறகு பார்த்தால், எலிஷாவை அங்கு காணோம்.

மூன்றாவது நாள் எஃபிம் கடவுளின் சமாதியைப் பார்த்தபோது, எல்லோருக்கும் முன்னால் எலிஷா நின்றிருந்தார். அவர் தன் கைகளை விரித்துக்கொண்டு, கண்களை மேல்நோக்கி உயர்த்திப் பார்த்தவாறு காணப்பட்டார். அவர் மேலே எதையோ பார்ப்பதைப் போல இருந்தது. அவருடைய வழுக்கைத் தலை பிரகாசமாகத் தெரிந்தது.

'சரி... இந்த முறை...' -எஃபிம் தன் மனதிற்குள் நினைத்தார்: 'அவர் எங்கிட்ட இருந்து தப்பமுடியாது. நான் போயி கதவு பக்கத்துல நின்னுக்கப் போறேன். அப்போ ஒருத்தரையொருத்தர் பார்க்காம எப்படித் தப்பிக்க முடியும்?'

எஃபிம் கூட்டத்தை விட்டு வெளியே சென்று கதவுக்கருகில் மதிய நேரம் ஆகும் வரை நின்று கொண்டேயிருந்தார். எல்லோரும் அவரைக் கடந்து போய்க் கொண்டிருந்தார்கள். எலிஷா மட்டும் அவர் முன் தோன்றவேயில்லை.

எஃபிம் ஜெருசலேமில் ஆறு வாரங்கள் தங்கியிருந்தார்.அவர் எல்லா இடங்களையும் போய்ப் பார்த்தார். பெத்லஹேம், பெத்தானி, ஜோர்டான் என்று பல இடங்களுக்கும் அவர் சென்றார். இறைவனின் சமாதி இருந்த இடத்தில் வைக்கப்பட்டிருந்த துணியொன்றை தான் இறந்தபிறகு போர்த்துவதற்காக அவர் பெற்றார். ஜோர்டான் நதியிலிருந்து ஒருபுட்டி நீரை எடுத்து வைத்துக் கொண்டார். புனித இடத்தில் எரிந்த மெழுகுவர்த்திகளில் சிலவற்றை பணம் கொடுத்து வாங்கினார். எட்டு இடங்களில் பிரார்த்தனை செய்யப்படவேண்டிய பெயர்களை அவர் எழுதினார். வீட்டிற்குச் செல்வதற்குத் தேவையான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு தன்னிடமிருந்த மீதி எல்லா பணத்தையும் அவர் செலவு செய்தார். அவர் இப்போது தன் வீடு நோக்கிப் பயணத்தை ஆரம்பித்தார். ஜாஃபாவிற்கு நடந்தார். அங்கிருந்து கடலில் ஒடிஸாவிற்குப் பயணம் செய்தார். அங்கிருந்து கால்நடையாகத் தன் இல்லம் நோக்கி நடக்க ஆரம்பித்தார்.

11

ந்த வழியில் போகும்போது சென்றாரோ, அதே வழியில் திரும்பி நடந்து வந்தார் எஃபிம். தன்னுடைய வீட்டை நெருங்க நெருங்க அவரிடம் முன்பு குடிகொண்டிருந்த ஆர்வம் மீண்டும் தலையெடுக்க ஆரம்பித்தது. அதாவது- தான் வீட்டில் இல்லாத நேரத்தில் வீட்டிலுள்ள விஷயங்கள் எப்படி நடந்திருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதில் அவர் மிகவும் ஆர்வமுள்ளவராக இருந்தார்.  'ஒரே வருடத்தில் ஏராளமான நீர் பெருக்கெடுத்து வந்தாலும் வரும்' என்று பொதுவாகக் கூறுவார்கள்.

ஒரு வீட்டை உருவாக்குவதற்கு ஒரு முழு வாழ்க்கையையும் அர்ப்பணிக்க வேண்டியிருக்கும். அதே நேரத்தில் அதை அழிப்பதற்கு அவ்வளவு நீண்ட நேரம் தேவையில்லை என்பதை எஃபிம் நினைத்துப் பார்த்தார்.தான் இல்லாத வேளையில் தன் மகன் எப்படிக் காரியங்களை நிறைவேற்றியிருப்பான் என்பதை அறிய அவர் ஆவலாக இருந்தார். வசந்தகாலம் வீட்டிலிருந்தவர்களுக்கு எப்படி இருந்திருக்கும் என்பதை அவர் நினைத்துப் பார்த்தார். தான் இல்லாதபோது கால்நடைகளை ஒழுங்காகக் குளிப்பாட்டியிருப்பார்களா, வீடு முழுமையாகக் கட்டி முடிக்கப்பட்டிருக்குமோ போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் அவர் மிகவும் ஆவலாக இருந்தார். எலிஷாவைவிட்டு தான் பிரிய நேர்ந்த மாநிலத்தை அடைந்தபோது, அங்குள்ள மனிதர்களைப் பார்த்த எஃபிம் போகும் போது தான் பார்த்தவர்கள் தானா அவர்கள் என்று ஆச்சர்யப்பட ஆரம்பித்தார்.முன்பு அவர்கள் வறுமையில் வாடியதென்னவோ உண்மை. ஆனால், இப்போது அவர்கள் வசதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அறுவடை மிகவும் நன்றாக இருந்தது.தங்களின் கஷ்டங்களிலிருந்து மக்கள் முழுமையாக விடுபட்டிருந்தார்கள். சொல்லப்போனால் இதற்கு முன்பு தாங்கள் அனுபவித்த கஷ்டமான நாட்களை அவர்கள் மறந்தே விட்டார்கள்.

ஒருநாள் மாலை நேரத்தில் எலிஷா தனக்குப் பின்னால் நின்று விட்ட கிராமத்தை அடைந்தார் எஃபிம். கிராமத்திற்குள் நுழைந்தவுடன், ஒரு வெள்ளை ஆடையணிந்த சிறுமி ஒரு குடிசையை விட்டு வெளியே ஓடி வந்தாள்.

"அப்பா... அப்பா... எங்க வீட்டுக்கு வாங்க" என்று எஃபிமை அழைத்தாள் அவள்.


எஃபிம் அவளைக் கடந்துபோக முயன்றார். சிறுமி அவரை விடவில்லை. அவள் அவருடைய கோட்டைப் பிடித்து இழுத்து சிரித்துக்கொண்டே அவரை குடிசையை நோக்கி அழைத்துச் சென்றாள். குடிசைக்குள்ளிருந்து ஒரு பெண் ஒரு சிறுபையனுடன் வெளியே வந்தாள்.

"வாங்க,தாத்தா"- அவள் சொன்னாள்:"சாப்பிடுங்க. இன்னைக்கு ராத்திரி எங்க வீட்டுல நீங்க தங்கிட்டுப் போகணும்..."

அந்தக் குடிசைக்குள் எஃபிம் நுழைந்தார்.

'நான் எலிஷாவைப் பற்றி இவங்ககிட்ட விசாரிக்கலாமே!'- அவர் மனதிற்குள் நினைத்தார்: 'நான் நினைக்கிறேன் எலிஷா தண்ணி குடிக்கிறதுக்காகத் தேடி வந்த குடிசை இதுவாகத்தான் இருக்கணும்!'

எஃபிம் தன்னிடமிருந்த பையைக் கழற்றி கீழே வைப்பதற்கு அந்தப் பெண் உதவினாள். அவர் முகத்தைக் கழுவுவதற்கு அவள் நீர் கொண்டு வந்து கொடுத்தாள். அவரை ஒரு மேஜைக்கருகில் உட்கார வைத்து பால், தயிர், கேக்குகள், கஞ்சி ஆகியவற்றைக் கொண்டு வந்து வைத்தாள். எஃபிம் அவளைப் பார்த்து நன்றி கூறினார். ஒரு வழிப் போக்கனிடம் அவள் காட்டும் அன்னை அவர் மிகவும் பாராட்டினார். அந்தப் பெண் வெறுமனே தலையை ஆட்டினாள்.

பின், "நாங்க ஒரு வழிப்போக்கரை வீட்டுக்கு வரவழைச்சதுக்கு ஒரு சரியான காரணம் இருக்கு"- அவள் சொன்னாள்: 'வாழ்க்கைன்னா என்னன்றதை ஒரு வழிப்போக்கர்தான் எங்களுக்குக் காட்டினாரு. நாங்க கடவுளை மறந்து வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். அதனால கடவுள் எங்களை சாகற நிலைமைக்கு தண்டிச்சிட்டாரு. கோடை காலத்தப்போ நாங்க எல்லாரும் நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையா ஆயிட்டோம். எங்களுக்குச் சாப்பிடுறதுக்குக்கூட ஒண்ணுமே இல்லாமப்போச்சு. நாங்க எல்லாரும் இறந்திருப்போம். அந்த நேரத்துல கடவுள் ஒரு வயதான மனிதரை எங்களுக்கு உதவுறதுக்காக அனுப்பி வச்சாரு. கிட்டத்தட்ட உங்க மாதிரியே ஒரு வயதான மனிதர்னு வச்சுக்கங்களேன். அவர் ஒரு நாள் குடிக்கிறதுக்கு தண்ணிகேட்டு இங்க வந்தாரு. அப்போ எங்க நிலைமை என்னன்றதை அவர் பார்த்தாரு. எங்கமேல பரிதாபப்பட்டு அவர் இங்கே எங்களோடவே இருந்துட்டாரு.

அவர் உணவு தந்தாரு. குடிக்கிறதுக்கு தண்ணி கொண்டு வந்து தந்தாரு.எங்க சொந்தக் கால்ல நிற்கும்படி செஞ்சாரு. எங்க நிலத்தைத் திரும்பவும் எங்களுக்கு மீட்டுத் தந்தாரு. ஒரு வண்டியையும், குதிரையையும் எங்களுக்கு வாங்கித் தந்தாரு."

அப்போது அந்த வயதான கிழவி குடிசைக்குள் நுழைந்தாள். இடையில் குறுக்கிட்டு அந்தக் கிழவி சொன்னாள்:

"எங்களுக்குச் சரியா சொல்லத் தெரியல... வந்தவர் மனிதரா இல்லாட்டி கடவுளால அனுப்பி வைக்கப்பட்ட தேவரான்னு. அவர் எங்க எல்லார் மேலயும் ரொம்பவும் பாசமா இருந்தாரு- எங்க எல்லாருக்காகவும் ரொம்பவும் பரிதாபப்பட்டாரு. தன்னோட பேர் என்னன்னு கூட சொல்லிக்காம ஒருநாள் அவர் எங்களைவிட்டுப் போயிட்டாரு. யார் பேரைச் சொல்லி கடவுள்கிட்ட பிரார்த்தனை செய்றதுன்றதுகூட எங்களுக்குத் தெரியாமப் போச்சு. நடந்த ஒவ்வொரு சம்பவமும் இப்பவும் என் கண்முன்னாடியே நின்னுக்கிட்டு இருக்கு. அங்கே நான் மரணத்தை எதிர்பார்த்து கிடக்குறேன்.

அப்போ தலையில் வழுக்கை விழுந்த ஒரு வயதான மனிதர் உள்ளே வர்றாரு. அவர் வேற எதுக்காகவும் வீட்டுக்குள்ள வரல. குடிக்கிறதுக்கு கொஞ்சம் தண்ணி வேணும்னு கேட்டார். நான் பாவம் செஞ்சிருக்கணும். என் மனசுக்குள்ளே நான் நினைச்சேன்: 'தண்ணி கேக்குறதுக்கு இந்த வீடு தான் கிடைச்சதா'ன்னு. ஆனா, அந்த மனிதர் என்ன பண்ணினார் தெரியுமா? எங்க எல்லாரையும் பார்த்ததுதான் தாமதம், தன்னோட பையை அவர் கீழே வச்சாரு. இதோ... இந்த இடத்தில்தான்..."

"இல்ல...பாட்டி..."-சிறுமி சொன்னாள்: "முதல்ல அவர் அந்தப் பையை இங்கே குடிசையோட நடுவுலதான் வச்சாரு...பிறகு அதை எடுத்து பெஞ்சிமேல வச்சாரு."

தொடர்ந்து அவர்கள் எலிஷா என்னென்ன பேசினார், என்னென்ன செய்தார், எங்கு உட்கார்ந்தார், எங்கு படுத்தார், ஒவ்வொருவரிடமும் அவர் என்னென்ன சொன்னார் என்று தீவிரமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள்.

இரவில் அந்த வீட்டுத் தலைவரான விவசாயி தன்னுடைய குதிரையில் வீடு திரும்பினார். அவரும் எலிஷாவைப் பற்றியும், அவருடன் தாங்கள் கழித்த நாட்களைப் பற்றியும் ஆர்வத்துடன் சொல்ல ஆரம்பித்துவிட்டார்.

"அவர் மட்டும் வராம இருந்திருந்தா, என்ன பாவம் செஞ்சோமோ, நாங்க எல்லாம் செத்துப் போயிருப்போம். வாழ்க்கையில விரக்தியடைஞ்சுபோய் நாங்க கொஞ்சம் கொஞ்சமா செத்துகிட்டு இருந்தோம். கடவுளையும், மனிதர்களையும் மனசுல திட்டிக்கிட்டே இருந்தோம். ஆனா, அவர்தான் எங்களை மறுபடியும் சொந்தக் கால்ல நிக்க வச்சாரு.

அவர் மூலமாத்தான் நாங்க கடவுளைப் பற்றி தெரிஞ்சிக்க ஆரம்பிச்சோம். மனிதர்கள்லயும் நல்லவங்க இருப்பாங்கன்றதையும் அவரை வச்சுத்தான் நாங்க தெரிஞ்சுக்கிட்டோம். கடவுள் அவரை ஆசீர்வதிக்கட்டும்! நாங்க மிருகங்களைப் போல வாழ்ந்துக்கிட்டு இருந்தோம். எங்களை மனிதர்களா மாற்றினது அவர்தான்!"

உணவும், குடிக்க நீரும் தந்தபிறகு எஃபிம் எங்கே படுக்க வேண்டும் என்று சொல்லிவிட்டு அவர்களும் படுக்க ஆரம்பித்தார்கள்.

எஃபிம் படுக்கையில் படுத்தாலும், அவருக்குச் சிறிது கூட தூக்கம் வரவில்லை. தன்னுடைய மனதைவிட்டு அவரால் எலிஷாவை வெளியேற்ற முடியவில்லை. ஜெருசலேமில் அவரை மூன்றுமுறை மிக முக்கியமான இடத்தில் தான் பார்த்ததை அவர் திரும்பித் திரும்ப நினைத்துப் பார்த்தார்.

'அதனாலதான் அவர் எனக்கு முன்னாடி அங்கே வந்துட்டாரோ?’- எஃபிம் நினைத்தார்: 'கடவுள் என்னோட பயணத்தை ஏற்றிருக்கலாம், ஏற்றுக் கொள்ளாமலும் போயிருக்கலாம். ஆனா, எலிஷாவோட பயணத்தை நிச்சயமா கடவுள் ஏத்துக்கிட்டார்... அது மட்டும் உண்மை.'

12

ஃபிம் ஊரை விட்டுக் கிளம்பிப்போய் கிட்டத்தட்ட ஒரு வருடமாகி விட்டது. மீண்டும் வசந்தகாலம் பிறந்தது. அப்போதுதான் ஒருநாள் மாலையில் அவர் வீடு திரும்பினார். அவர் வரும்போது அவருடைய மகன் வீட்டில் இல்லை. எங்கோ சுற்றிவிட்டு வீடு திரும்பி வந்த அவன் ஒழுங்காக இல்லை என்பது மட்டும் பார்க்கும்போதே தெரிந்தது. எஃபிம் அவனைப் பார்த்து பல கேள்விகளைக் கேட்டார். தந்தை இல்லாத நேரத்தில் அந்த இளைஞன் சரியாக நடக்கவில்லை என்பது அவனுடைய பதில்களிலிருந்தே தெரிந்தது. பணம் தவறான வழிகளில் செலவழிக்கப்பட்டிருந்தது.

வேலை எதுவும் ஒழுங்காக முடிக்கப்படவில்லை. தந்தை மகனிடம் தொடர்ந்து விசாரிக்க, மகன் தந்தையிடம் முரட்டுத்தனமாக பதில் சொன்னான்.

"நீங்களே ஏன் இங்கேயிருந்து எல்லா வேலைகளையும் பார்த்திருக்கக் கூடாது?" அவன் சொன்னான்: "நீங்க பாட்டுக்கு போயிட்டீங்க... பணத்தைக் கையில எடுத்துக்கிட்டு. இப்போ என்கிட்ட வந்து இல்லாத கேள்விகளையெல்லாம் கேக்குறீங்க!"

அதைக்கேட்டு எஃபிம் பயங்கர கோபத்திற்கு ஆளாகிவிட்டார். அந்த கோபத்தில் அவர் தன் மகனை அடித்தார்.


மறுநாள் காலையில் எஃபிம் கிராமத்துத் தலைவரிடம் சென்று தன்னுடைய மகனைப் பற்றி புகார் சொல்வதற்காகச் சென்றார். அவர் எலிஷாவின் வீட்டைத் தாண்டிச் சென்ற போது, எலிஷாவின் மனைவி வாசலில் நின்றிருந்தாள்.

"என்ன நண்பரே, எப்படி இருக்கீங்க?"- அவள் கேட்டாள்: "ஜெருசலேமிற்கு பத்திரமாய் போய்ச் சேர்ந்தீங்களா?"

அவளைப் பார்த்ததும் எஃபிம் நின்றார்.

"ஆமா, கடவுளுக்குத்தான் நான் நன்றி சொல்லணும்"- அவர் சொன்னார்: "நான் பத்திரமா போய்ச் சேர்ந்தேன். உங்க வீட்டுக்காரரை அங்கே என்னால பார்க்க முடியாமப் போச்சு. ஆனா, அவர் பத்திரமா வீடு வந்து சேர்ந்துட்டதா கேள்விப்பட்டேன்."

அந்த வயதான கிழவி ஆர்வத்துடன் சொன்னாள்:

"ஆமா, நண்பரே, அவர் வீட்டுக்கு வந்துட்டாரு... அவர் வந்து எவ்வளவோ நாட்களாயிடுச்சு. போன கொஞ்ச நாட்கள்லயே அவர் திரும்பி வந்துட்டாரு. கடவுள் அவரை நல்ல முறையில எங்ககிட்ட அனுப்பி வச்சதுக்காக உண்மையிலேயே நாங்க சந்தோஷப்படறோம். அவர் இல்லாம நாங்க ரொம்பவும் கவலையில இருந்தோம். அவர்கிட்ட இருந்து நாங்க எந்த வேலையையும் எதிர்பார்க்கல. அவர் வேலை செய்ய வேண்டிய நாட்களெல்லாம் போயிடுச்சு. இருந்தாலும் வீட்டுக்கு அவர்தான் தலைவர். அவர் வீட்டுல இருந்தார்னா, வீடே ரொம்பவும் சந்தோஷமா இருக்கும். அவர் வீட்டுல இருந்தா, எங்க பையன் எவ்வளவு மகிழ்ச்சியா இருப்பான் தெரியுமா?

அவன் சொல்வான், 'அப்பா வீட்டுல இல்லேன்னா, சூரியன் இல்லாத மாதிரி நமக்குத் தோணுது'ன்னு. உண்மைதான் நண்பரே, அவர் இல்லைன்னா எங்க வீடே என்னமோ மாதிரி ஆயிடுது. நாங்க அவர் மேல உயிரையே வச்சிருக்கோம். அவரை ரொம்பவும் கவனமா பார்த்துக்கிறோம்..."

"இப்போ அவர் வீட்டுல இருக்காரா?"

"இருக்காரு நண்பரே. அவர் தன்னோட தேனீக்கள் கூட இருக்காரு. அவர் தேனீக்களைப் பெருக்குறதுல இருக்காரு. இந்த வருடம் நிறைய தேனீக்கள் உற்பத்தி ஆயிருக்கிறதா சொன்னாரு. எல்லாம் கடவுளோட அருள்னுதான் சொல்லணும். ஆனா என் வீட்டுக்காரர் சொல்றாரு- 'நம்ம பாவங்களுக்கேற்றபடி கடவுள் நமக்குப் பரிசு தரமாட்டேன் என்கிறார்'னு. உள்ளே வாங்க நண்பரே... உங்களை மறுபடியும் பார்க்குறதுக்காக அவர் எவ்வளவு சந்தோஷப்படுவார் தெரியுமா?"

எஃபிம் நேரான இடைவெளி வழியாக எலிஷாவைப் பார்க்கும் ஆர்வத்துடன் நடந்து சென்றார். அங்கு எலிஷா சாம்பல் வண்ண கோட்டுடன் நின்றிருந்தார். அவர் முகத்தில் எந்த வலையும் அணிந்திருக்கவில்லை. கைகளில் உறைகள் கூட இல்லை. பிர்ச் மரங்களுக்குக் கீழே மேல்நோக்கிப் பார்த்தவாறு கைகளை விரித்துக் கொண்டு அவர் நின்றிருந்தார். ஜெருசலேமில் கடவுள் சமாதிக்கு அருகில் எஃபிம் எப்படிப் பார்த்தாரோ, அதே தோற்றத்தில் எலிஷா அங்கே நின்றிருந்தார். அவருடைய வழுக்கைத் தலை அங்கே பிரகாசமாகக் காணப்பட்டது. புனித இடத்தில் நெருப்பு நாக்குகள் எரிந்து கொண்டிருப்பதைப் போல, சூரிய வெளிச்சம் பிர்ச் மர கிளைகளுக்கு நடுவில் தெரிந்தது. பொன்நிறத் தேனீக்கள் அவருடைய தலையைச் சுற்றிப் பறந்து ஒரு ஒளி வட்டத்தை உண்டாக்கின. அவை அவரைக் கொட்டவில்லை.

எஃபிம் அதைப் பார்த்து அப்படியே அசையாமல் நின்றுவிட்டார்.கிழவி தன் கணவரை அழைத்தாள்.

"உங்க நண்பர் இங்கே வந்திருக்காரு..."- அவள் உரத்த குரலில் சொன்னாள்.

எலிஷா தன்னுடைய பிரகாசமான முகத்தால் பார்த்தவாறு எஃபிமை நோக்கி வந்தார். வரும்போதே சர்வசாதாரணமாக தன் தாடியிலிருந்து தேனீக்களை எடுத்தவாறு அவர் வந்தார்.

"வணக்கம், நண்பரே வணக்கம். சரி நண்பரே, அங்கே பத்திரமா போய்ச் சேர்ந்தீங்களா?"

"என் கால்கள் அங்கே நடந்தன. உங்களுக்காக ஜோர்டான் நதியிலிருந்து நீர் கொண்டு வந்திருக்கேன்.அதை வாங்குறதுக்கு நீங்க கட்டாயம் என் வீட்டுக்கு வரணும். ஆனா,கடவுள் என் முயற்சிகளை ஏத்துக்கிட்டாரான்றதுதான்..."

"அதுக்காக கடவுளுக்கு நன்றி சொல்லணும். கிறிஸ்து உங்களை ஆசீர்வதிக்கட்டும்!"- எலிஷா சொன்னார்.

சிறிது நேரம் எஃபிம் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். பிறகு அவர் சொன்னார்:

"என் கால்கள் அங்கே இருந்துச்சு, உண்மைதான். ஆனா என் மனமா இல்லாட்டி இன்னோருத்தரோட மனமா... எது அங்கே உண்மையா இருந்துச்சுன்னு..."

"அது கடவுளோட செயல் நண்பரே... கடவுளோட செயல்" -இடையில் புகுந்து சொன்னார் எலிஷா.

"நான் திரும்பி வர்றப்போ, நீங்க தங்கியிருந்த குடிசைக்கு நான் போனேன்..."

எலிஷா அதைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டார். அவர் வேகமாக சொன்னார்:

"எல்லாம் கடவுளோட செயல், நண்பரே... கடவுளோட செயல். வாங்க... உள்ளே வாங்க... நான் கொஞ்சம் தேன் தர்றேன்"- எலிஷா பேச்சை மாற்றினார். வீட்டு விஷயங்களைப் பற்றி அவர் பேச ஆரம்பித்தார்.

எஃபிம் தான் வழியில் குடிசையில் பார்த்த குடும்பத்தைப் பற்றியோ, ஜெருசலேமில் எலிஷாவைப் பார்த்ததைப் பற்றியோ ஒரு வார்த்தை கூட எலிஷாவிடம் கூறவில்லை. ஆனால் ஒரே ஒரு விஷயத்தை மட்டும் அவர் புரிந்து கொண்டார். அது- கடவுள்மீது உண்மையாகவே ஒருவனுக்குப் பாசம் இருந்து அவரின் விருப்பப்படி அவன் நடக்க விரும்பினால் அவன் முதலில் செய்யவேண்டியது- தான் வாழும் காலத்தில் அவன் பிறர் மீது அன்பு செலுத்துவதுடன், அவர்களுக்கு நன்மை பயக்கும் செயல்களைச் செய்யவேண்டும் என்பதுதான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.