Logo

முதல் காதல்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5966
muthal kathal-maxim gorky

சுராவின் முன்னுரை

டந்த முப்பது வருடங்களாக என் இதயத்தில் மாக்ஸிம் கார்க்கி (Maxim Gorky) என்ற இலக்கிய மாமேதைக்கு ஒரு தனி இடத்தைக் கொடுத்து வைத்திருக்கிறேன். அவரின் My Childhood, In the world, My universities ஆகிய நூல்களை 70-களின் பிற்பகுதியிலேயே படித்து அவற்றில் என்னை மறந்தவன் நான். அவர் எழுதிய ‘Mother’ புதினத்தை 27 வருடங்களுக்கு முன்பு மூன்று நாட்கள் இரவும், பகலுமாக ஊண், உறக்கம் மறந்து படித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

கார்க்கி எழுதிய ‘First Love’ என்ற புதினத்தை ‘முதல் காதல்’ (Mudhal Kadhal) என்ற பெயரில் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறேன். ‘முதல் காதல்’ 1923-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. இது கதை அல்ல; கார்க்கி தன் முதல் காதல் அனுபவத்தைக் கூறியிருக்கிறார். மிகவும் ஆழமான ஒரு விஷயத்தை, தனக்கேயுரிய அபாரமான எழுத்துத் திறமையால் ஒரு  காவியமாகவே கார்க்கி படைத்திருக்கிறார் என்பதுதான் உண்மை. அவர் காதலித்த அந்தப் பெண்ணை எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் கூட மறக்க முடியாது.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


டிப்பை முழுமையாக முடிக்க வேண்டும் என்ற ஒரே லட்சியத்தை நோக்கி படுவேகமாகப் போய்க் கொண்டிருந்ததற்கு இடையில்தான் முதல் காதல் என்ற விஷயமும் என் வாழ்க்கையில் நடந்தது. சந்தோஷம், துக்கம் இரண்டும் சம அளவில் கலந்திருந்த ஒரு அனுபவம் என்று தான் அதைச் சொல்ல வேண்டும்.

என்னுடைய சில நண்பர்கள் ஓகா நதியின் வழியாகப் படகில் பயணம் செய்யும் ஒரு திட்டத்தை வகுத்திருந்தார்கள்.

சமீபத்தில் ஃப்ரான்சிலிருந்து திரும்பியிருந்த பெயர் தெரியாத அந்த மனிதனையும் அவனுடைய மனைவியையும் அந்தப் பயணத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளும் பொறுப்பை நண்பர்கள் என்னிடம் ஒப்படைத்திருந்தார்கள். அதுவரை அவர்களை நான் பார்த்ததேயில்லை. அன்று மாலையில் நான் அவர்களைப் பார்த்தேன்.

ஒரு பழைய வீட்டின் மாடிப் பகுதியில் சிறிய ஒரு வீட்டை அமைத்து அதில்தான் அவர்கள் வசித்துக் கொண்டிருந்தார்கள். அந்த வீட்டிற்குச் செல்லும் பாதையின் ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை வரை குறுக்கே எப்போதும் ஒரு குட்டை தேங்கியே கிடக்கும். வசந்த காலத்திலும், கோடை காலத்தில் பெரும்பாலான நேரத்திலும் கூட அந்த இடத்தில் தண்ணீர் தேங்கியே இருக்கும். காகங்களும் நாய்களும் அதை ஒரு கண்ணாடியாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தபோது, பன்றிகள் அதைக் குளிப்பதற்கான இடமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்தன.

தீவிரமான சிந்தனையில் மூழ்கிக்கொண்டே நடந்து சென்ற நான் அந்தக் குட்டையில் வழுக்கி கட்டுப்பாட்டை இழந்து அந்த வீட்டின் வாசல் கதவில் போய் இடித்து நின்றேன். அதன் விளைவு மிகவும் அசாதாரண ஒன்றாக இருந்தது. சராசரி உயரத்தைக் கொண்ட தடித்த ஒரு மனிதன் மிகவும் குளிர்ச்சியாக என்னை வரவேற்கவில்லை. தனக்கு மிகவும் அருகில் இருந்த அறையில் வாசல் கதவோரத்தில் மறைந்து நின்றிருந்த அந்த மனிதன் தவிட்டு நிறத்திலிருந்த தாடியுடனும் கனிவு நிறைந்த நீலக்கண்களையும் கொண்டிருந்தான். அவன் சீராக உடைகளை அணிந்திருந்தான். மிகவும் கோபம் தொனிக்கும் குரலில் அவன் என்னைப் பார்த்து "உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டான். அதோடு கொஞ்சம் திட்டுகிற மாதிரி அவன், "ஒரு வீட்டுக்குள்ள நுழையிறதுக்கு முன்னாடி மரியாதையான மனிதர்கள் வாசல் கதவைத் தட்டுறதுதான் முறை" என்றான்.

அவனுக்குப் பின்னால் அறைக்குள் இருந்த நிழலில் ஏதோவொரு வெள்ளைப் பறவை மெதுவாகப் பறந்து கொண்டிருப்பதைப் போல் எனக்குத் தோன்றியது. மிகவும் இனிமையான ஒரு குரல்- அப்போது உள்ளிருந்து கேட்டது.

"குறிப்பா திருமணமான ஆணும் பெண்ணும் இருக்குற ஒரு வீட்டுக்கு வர்றப்போ..."

நான் தேடி வந்திருக்கிற ஆட்கள் அவர்கள்தானா என்று சிறிது சந்தேகத்துடன் கேட்டேன். பணக்காரனான ஒரு வியாபாரியைப் போலிருந்த அந்த மனிதன் அதை உறுதி செய்த போது நான் வந்திருக்கும் நோக்கத்தை அவர்களிடம் கூறினேன்.

"க்ளார்க்தான் உங்களை இங்கே அனுப்பி வச்சார்னு நீங்க சொல்றீங்க. அப்படித்தானே?"- மிகவும் அமைதியாகத் தன்னுடைய தாடியைத் தடவியவாறு அவன் திரும்பக் கூறினான். திடீரென்று அவன் "ஏய் ஓல்கா" என்று உரத்த குரலில் கூறியவாறு இப்படியும் அப்படியுமாக அசைந்தான். பிறகு மரியாதையான மனிதர்களிடம் உரத்த குரலில் சொல்ல முடியாத உடம்பின் ஒரு பகுதியை அவன் இறுகப் பிடித்துக் கொண்டான். அவனை யாரோ கிள்ளியதைப் போல் இருந்தது.

வாசலில் அவனுடைய இடத்தை இப்போது ஒரு மெலிந்து போய்க் காணப்பட்ட இளம்பெண் பிடித்துக் கொண்டாள். தன்னுடைய பிரகாசமான நீல நிறக் கண்களால் அவள் என்னைப் பார்த்தாள்.

"நீங்க யாரு? போலீஸ்காரரா?"

"இல்ல... என் ட்ரவுசரைப் பார்க்கறப்போ அப்படித் தோணியிருக்கலாம்..." - மிகவும் மரியாதையான குரலில் நான் சொன்னேன்.

அவள் சிரித்தாள். பல நாட்களாகவே நான் தேடிக்கொண்டிருந்த பிரகாசம் அவளுடைய கண்களில் இருப்பதைப் பார்க்க முடிந்ததால் அவளின் செயல்கள் எனக்குப் பிரச்சினையாக இருக்கவில்லை. உண்மையாகச் சொல்லப்போனால் என்னுடைய ஆடைகள்தான் அவளைச் சிரிக்கச் செய்தன. போலீஸ்காரர்கள் அணியக்கூடிய பெரிய ட்ரவுசரையும் சமையல் செய்பவன் அணியக்கூடிய வெள்ளைச் சட்டையையும் நான் அணிந்திருந்தேன். சமையல்காரனின் ஆடை மிகவும் சவுகரியம் அளிக்கக்கூடிய ஒன்று. ஒரு கோட்டைப் போல கழுத்துவரை பொத்தான்களை இட்டு அணியக்கூடிய சவுகரியமான ஆடை. இத்தாலி நாட்டைச் சேர்ந்த கொள்ளைக்காரர்கள் அணியக்கூடிய அகலமான ஓரங்களைக் கொண்ட தொப்பியையும் வேட்டைக்குச் செல்லும்போது அணியக்கூடிய காலணிகளையும் நான் இரவல் வாங்கி அணிந்திருந்தேன்.

அவள் என் சட்டையைப் பிடித்து அறைக்குள் அழைத்துச் சென்று மேஜைக்கு நேராகத் தள்ளினாள்.

"நீங்க இப்படிப்பட்ட வினோதமான ஆடைகள் அணிந்திருப்பது எதுக்காக?"- அவள் கேட்டாள்.

"நீ ஏன் இதை வினோதமா இருக்குன்னு நினைக்கிற?"

"கோபிக்காம உள்ளே வா!" - என்னைச் சாமாதானப்படுத்தும் வகையில் அவள் சொன்னாள்.

அவள் எப்படிப்பட்ட அசாதாரணமான ஒரு பெண்ணாக இருக்கிறாள்! அவள் மீது கோபப்பட யாருக்கு முடியும்?

விரல்களுக்கு மத்தியில் ஒரு சிகரெட்டை வைத்துக்கொண்டு அந்தத் தாடிக்காரன் கட்டிலில் உட்கார்ந்திருந்தான். அந்த ஆளைப் பார்த்துக் கொண்டே நான் அவளிடம் கேட்டேன்:

"இது உன்னோட அப்பாவா? இல்லாட்டி அண்ணனா?"

"அவளோட புருஷன்." - அவன் என்னைப் பார்த்து கட்டைக் குரலில் சொன்னான்.

"என்ன?"- சிரித்துக்கொண்டே அவள் கேட்டாள்.

"மன்னிக்கணும்!"- ஒரு நிமிடம் அவளுடைய முகத்தைப் பார்த்துக்கொண்டே நான் சொன்னேன்.  

எந்தவித தொடர்பும் இல்லாத விஷயங்களை நாங்கள் சுமார் ஐந்து நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தோம். ஆனால் எனக்கு அப்படிப் பேசிக்கொண்டிருந்ததில் சிறிது கூட சோர்வு உண்டாகவில்லை. அந்த அறையில் ஐந்து மணி நேரங்கள் இருப்பதாக இருந்தாலும் அதற்கு நான் தயாராகவே இருந்தேன். அவளுடைய வட்டமான முகத்தையும் அழகான கண்களையும் பார்த்துக்கொண்டு வருடக்கணக்காக அங்கு இருக்கக்கூட நான் தயார்தான். மேலுதடைவிட அவளுடைய கீழுதடு சிவப்பாக இருந்தது. அதில் சிறிது வீக்கம் இருக்கிறதோ என்பது மாதிரி இருந்தது- அந்தச் சிவப்பைப் பார்க்கும்போது, தவிட்டு நிறத்தில் நீளமாக வளர்ந்திருந்த தலைமுடியை அவள் 'க்ளிப்'பால் கட்டி வைத்திருந்தது ஒரு தொப்பியைப் பார்ப்பதுபோல் இருந்தது. ஒன்றிரண்டு தலைமுடிகள் அவள் பின்கழுத்திலும் அழகான  சிவந்த கன்னங்களிலும்  விழுந்து கிடந்தன. அவளுடைய கைகளும் உள்ளங்கைகளும் மிகவும் அழகாக இருந்தன. வாசல் கதவைப் பிடித்து நின்றுகொண்டிருந்த அவளுடைய முழங்கை வரை இருந்த பாகம் ஒரு தனி அழகைத் தந்தது. அவள் உடை அணிந்திருந்த முறை மிகவும் எளிமையாக இருந்தது.


முழுக்கையைக் கொண்ட வெள்ளை நிற சட்டையுடன் சிறிய பின்னல் வேலைகளைக் கொண்ட சற்று இறுக்கமாக இருந்த வெள்ளைப் பாவாடையை அவள் அணிந்திருந்தாள். ஆனால், குறிப்பாகச் சொல்லக்கூடிய அளவிற்கு இருந்த அவளின் தனித்துவம் என்னவென்றால் அவளுடைய அழகான கண்கள்தான். எப்படிப்பட்ட சந்தோஷத்தையும், கனிவையும், நட்பை வெளிப்படுத்தக்கூடிய உணர்வையும் அந்தக் கண்கள் வெளிப்படுத்திக் கொண்டிருந்தன! இதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது? ஒரு இருபது வயது உள்ள ஒரு இளைஞன். சொல்லப்போனால் வாழ்க்கையின் கடுமையான பல விஷயங்களைப் பார்த்து பாதிக்கப்பட்ட மனதைக் கொண்ட இளைஞன் விரும்பக்கூடிய விதத்தில் இருக்கும் ஒரு புன்சிரிப்பின் (அதைப் பற்றி எந்தவித சந்தேகமும் இல்லை) பிரகாசம் அந்தக் கண்களில் எப்போதுமிருந்தது.

"உடனே மழை பெய்றதுக்கு வாய்ப்பு இருக்கு". -தன் தாடிக்குள் சிறிது சிகரெட் புகையை ஊதியவாறு அவளுடைய கணவன் சொன்னான்.

நான் ஜன்னல் வழியாக வெளியே பார்த்தேன். வானம் மிகவும் தெளிவாகவும் நட்சத்திரங்களுடனும் இருந்தது. நான் அந்த மனிதனின் உள் எண்ணத்தைப் புரிந்து கொண்டு வெளியேறினேன். ஆனால், பல நாட்களாக தேடிக்கொண்டிருந்த ஒரு பொருளைக் கண்டுபிடித்து விட்ட ஒரு ஆணின் சந்தோஷம் முழுமையாக என்னுடைய மனதில் இருந்தது.

அந்த நீல நிறக் கண்களைப் பற்றி மனதில் நினைத்துக்கொண்டே அவற்றைப் பற்றி சிந்தித்தவாறே அன்று இரவு முழுவதும் நான் அந்த வயல் வெளிகளில் அலைந்து திரிந்தேன். தாடியும், நல்ல தீனி கிடைத்த ஒரு பூனையின் திருப்தியும் கொண்ட- சிறிதும் தைரியமில்லாத அந்த ஜந்து அவளுக்குச் சிறிதும் பொருத்தமான கணவன் இல்லை என்று எனக்குத் தோன்றியது. உண்மையாகவே  அவள் மீது எனக்குப் பரிதாபம் உண்டானது. பாவம்! தாடி ரோமங்களுக்கு மத்தியில் ரொட்டித்துண்டுகளைத் திணிக்கும் ஒரு பூச்சியுடன் வாழ்க்கை நடத்துவது என்பது சிந்தித்துப் பார்க்க வேண்டிய ஒன்றுதான்.

அடுத்த நாள் ஆழமான ஓல்கா நதியின் பலவிதப்பட்ட நிறங்களைக் கொண்ட களிமண்ணின் ஓரத்திலிருந்து நாங்கள் அந்தப் படகுப் பயணத்தை ஆரம்பித்தோம். உலகம் தோன்றிய நாளிலிருந்து கணக்கெடுத்துப் பார்த்தால் மிகவும் இனிமையான நாள் எது என்றால் அன்றைய நாளைத்தான் நான் கூறுவேன். திருவிழாக் கோலம் பூண்டிருந்த அந்த வானத்தில் சூரியன் பிரகாசித்துக் கொண்டிருந்தது. பழுத்த நாவல் பழத்தின் வாசனை அந்த நதிக்கு மேலே காற்றில் பரவியிருந்தது. மனிதர்கள் நல்ல விஷயங்களைப் பற்றி மட்டும் நினைத்தார்கள். அவை என் மனதில் மகிழ்ச்சியையும் அவர்கள் மீது அன்பையும் உண்டாக்கின. நான் விரும்பும் பெண்ணின் கணவன் கூட நல்ல ஒரு மனிதனாக எனக்குத் தெரிந்தான். நான் செலுத்திக் கொண்டிருந்த படகில் அவனுடைய மனைவி ஏறிய பின்னாலும், அவன் ஏறவில்லை. அந்த நாள் முழுவதும் அவன் மரியாதையுடன் நடந்து கொண்டான். முதலில் அவன் எங்களிடம் க்ளாட்ஸ்டனைப் பற்றிய கதைகளைக் கூறினான். பிறகு ஒரு பெரிய பாத்திரம் நிறைய இருந்த பாலைக் குடித்துவிட்டு, ஒரு மர நிழலில் காலை நீட்டிப் படுத்தவாறு அன்று மாலை வரை ஒரு குழந்தையைப் போல அவன் உறங்கினான்.

திட்டமிட்டிருந்தபடி எங்களின் படகு அந்த சுற்றுலா இடத்தைப் போய் அடைந்தது. நான் அவளைக் கரைக்கு அழைத்துச் சென்றேன். "நீங்க எந்த அளவுக்கு ரொம்பவும் அக்கறையா இருக்கீங்க?"- அவள் என்னைப் பார்த்துச் சொன்னாள்.

மிகவும் நெடுங்குத்தாக இருக்கும் உயரமான இடத்திற்குக் கூட அவளைத் தோளில் ஏற்றிக்கொண்டு ஏறமுடியும் என்று எனக்குத் தோன்றியது. நகரம் வரை அவளைச் சுமந்து கொண்டு போக எந்தவொரு கஷ்டமும் இல்லை என்று (இங்கிருந்து நகரம் ஏழு மைல் தூரத்தில் இருக்கிறது) நான் அவளிடம் சொன்னேன். உண்மையாகச் சொல்லப்போனால் என்னால் அப்படி நடக்க முடியுமா என்று உறுதியான குரலில் என்னால் கூற முடியவில்லை. அவள் மிகவும் செல்லமாக என்னைப் பார்த்துச் சிரித்தாள். தன்னுடைய பார்வையால் என்னை அவள் சந்தோஷம் கொள்ளச் செய்தாள். அன்று முழுவதும் அந்தக் கண்களின் பிரகாசம் என் மனம் முழுக்க நிறைந்திருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் எனக்காக மட்டுமே அந்தக் கண்கள் அப்படி ஒளிர்ந்தன என்று உறுதியாக என்னால் கூறமுடியும்.

அந்த இளம்பெண் இப்படிப்பட்ட ஒரு பிறவியை இதற்கு முன்பு பார்த்ததில்லை என்பதையும்; அந்த உயிர் அவளை நினைத்து ஏங்கிக் கொண்டிருக்கிறது என்ற உண்மையையும் உணரும்போது நினைத்துப் பார்க்க முடியாத வேகத்தில் ஒவ்வொரு விஷயங்களும் நடந்து கொண்டிருந்தன.

பார்ப்பதற்கு அவள் ஒரு இளம்பெண்ணைப்போல தோன்றினாலும் என்னை விட அவளுக்குப் பத்து வயது அதிகம் என்பதை வெகு சீக்கிரமே நான் தெரிந்து கொண்டேன். பெலோஸ்டாக்கில் இருந்த ஒரு பெண்கள் பள்ளிக்கூடத்தில்தான் அவள் பட்டம் பெற்றிருக்கிறாள். பீட்டர்ஸ்பர்க்கில் இருக்கும் குளிர்கால அரண்மனையில் பணியாற்றும் ராணுவ வீரர் ஒருவருக்கு அவளை நிச்சயம் செய்திருக்கிறார்கள். அவள் பாரீஸில் வசித்திருக்கிறாள். ஓவியக் கலையையும், நோயாளிகளைப் பராமரிக்கும் வேலையையும் அங்கு கற்றிருக்கிறாள். அவளுடைய தாய் ஒரு நர்ஸாக இருந்தவளென்றும்; என்னை இந்த உலகத்திற்குக் கொண்டு வந்தது அவள்தான் என்பதும் எனக்கே பின்னால்தான் தெரியவந்தது. நான் இந்த விஷயத்தை ஒரு நல்ல அடையாளமாக எடுத்துக்கொண்டு அதை மனதில் நினைத்து சந்தோஷப்படவும் செய்தேன்.

சமூக சேவகர்களுடனும், அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களுடனும் அவளுக்கு உள்ள தொடர்பும், சாதாரண மக்களுடன் அவளுக்கு இருந்த நினைத்துப் பார்க்க முடியாத நெருக்கமும், பாரீஸிலும், வியன்னாவிலும், பீட்டர்ஸ்பர்க்கிலும் உள்ள தெருக்களிலும் வீடுகளிலும் அரை வயிற்று உணவுடன் வாழ்ந்த அவளுடைய பழைய நாட்களும் ஆச்சரியப்படும் வகையில் ஒரு தனித்துவம் மிக்க பெண்ணாக அவளை உருவாக்கின. ஒரு பூனைக்குட்டியைப் போல குறும்புத்தனங்கள் நிறைந்த அவள் ஒரு திறமையான பள்ளிக்கூட சிறுமியைப் போல் வாழ்க்கையைக் கையாண்டாள். ஃப்ரெஞ்ச் பாடல்களை உணர்ச்சி பொங்க பாடி மிடுக்காக சிகரெட் புகைத்து திறமை வெளிப்படும் வகையில் ஓவியம் வரைந்து... ஒரு நடிகையின் பலவித ஆற்றல்களையும் அவள் வெளிப்படுத்தினாள். தொப்பிகளும், ஆடைகளும் உண்டாக்குவதில் அவள் திறமைசாலியாக இருந்தாள். நர்ஸிங் மட்டும்தான் அவள் பார்க்காத வேலையாக இருந்தது.

"என் வாழ்க்கையில் நான் நான்கு நோயாளிகளைக் கவனித்தேன். அவங்கள்ல மூணு பேர் செத்துப்போயிட்டாங்க." - அவள் சொன்னாள்.

மக்கள் பெருக்கத்திற்கு உதவக்கூடிய அந்தத் தொழிலில் அவளுக்கு ஆர்வம் இல்லாமற் போனதற்கு இந்த ஒரு விஷயம் போதுமே!


அழகான- நான்கு வயதுள்ள குழந்தை அந்தத் துறைகளில் அவளுடைய சுயநலமில்லாத சேவைக்குக் கிடைத்த பரிசு என்று கூறலாம். மிகவும் நெருக்கமாக உணரக்கூடிய விதத்தில், அதே நேரத்தில் மிகவும் சோர்வு தட்டக்கூடிய வகையில் அவள் தன்னைப் பற்றி சொல்லிக் கொண்டிருந்தாள். சில வேளைகளில் அவள் தன்னை நினைத்து ஆச்சரியப்படுவாள். அப்போது அவள் தன் கண்களை அழகாகச் சுழற்றுவாள். ஆச்சரியப்பட்டதற்கு அடையாளமாக ஒரு சிறு மலர்ச்சி அவளுடைய கண்களின் ஆழத்தில் தெரியும். வெட்கப்படும் இளம்பெண்கள் சிரிப்பதென்னவோ அப்படித்தான்.

அவளுடைய மனம் எந்த அளவிற்குக் கூர்மையானது என்பது எனக்கு நன்றாகவே தெரியும். கல்வி விஷயத்தை எடுத்துக் கொண்டால் அவள் என்னை விட மிகவும் உயர்ந்து இருந்தாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. தன்னுடன் இருப்பவர்களுடன் அவள் கள்ளங்கபடமில்லாமல் பழகியது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. நான் இதுவரை பார்த்திருந்த பெண்களுடனும், இளம் பெண்களுடனும் ஒப்பிட்டுப் பார்த்தபோது அவள் ஆர்வத்தைத் தூண்டக்கூடியவளாக இருந்தாள். சர்வ சாதாரணமாக கதைகள் சொல்லக்கூடிய அவளின் குணம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. பல விஷயங்களிலும் மிகவும் ஆழமான அறிவை அவள் கொண்டிருந்தாள் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

அவள் வசித்துக் கொண்டிருந்த அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்தன. முன்னாலிருந்த ஹாலும் சமையலறையும் சேர்ந்து ஒரே அறையாக இருந்தது. பின்னாலிருந்த அறை பெரியதாக இருந்தது. தெருவைப் பார்த்திருந்த இரண்டு ஜன்னல்களும் அந்த அறையில் இருந்தன. ஒரு காலணி செய்யக் கூடிய மனிதனுக்கு ஏற்ற இடம் அது என்பதில் எந்தவிதத்திலும் சந்தேகமில்லை. ஆனால், மகத்தான புரட்சி நடந்த நகரமான மோலியர், ஹ்யூகோ, ப்யூமார்ஷெ போன்ற மிகப்பெரிய மனிதர்கள் வாழ்ந்த பாரீஸில் வசித்த அந்தப் படித்த நவநாகரீகப் பெண்ணுக்கு ஏற்ற இடமல்ல அது. ஓவியத்திற்கும் அதைக் கொண்டிருந்த சட்டத்திற்கும் இடையே மிகவும் கருத்து வேறுபாடு இருந்தது. இந்த விஷயம் என்னை மிகவும் கவலைக்குள்ளாக்கியதுடன், அந்தப் பெண் மீது எனக்குள் ஒரு பரிதாப உணர்வு தோன்றுவதற்கும் அது காரணமாக அமைந்தது. மிகவும் ஆழத்தில் காயத்தை உண்டாக்குகிற விஷயங்களைக்கூட அவள் ஒரு பொருட்டாக நினைக்காமல், அதை மறந்து போகிறாள் என்பதாக எனக்குத் தோன்றியது.

காலை முதல் இரவு வரை அவள் பல விஷயங்களிலும் தீவிரமாக ஈடுபட்ட வண்ணம் இருந்தாள். காலையில் அவள் ஒரு சமையல் காரியாகவும், வேலைக்காரியாகவும் இருந்தாள். அதற்குப் பிறகு அந்தப் பெரிய மேஜைக்கு மேலே பார்த்தவாறு உட்கார்ந்து கொண்டு அந்த நகரத்தின் பெரிய பணக்காரர்களை ஓவியமாக வரைந்து கொண்டிருந்தாள். நாட்டின் வரைபடங்களை வரைந்தாள். அவற்றுக்கு நிறம் கொடுத்தாள். கிராமங்களைப் பற்றிய தகவல்கள் அடங்கிய நூல்களைச் சேகரித்து வைக்கும் விஷயத்தில் தன் கணவனுக்கு உதவினாள். தெருவிலிருந்து தூசுகள் ஜன்னல் வழியாக அவளுடைய தலைமுடிமீதும் மேஜைமீதும் பறந்து வந்து விழுந்தது. அதன் வழியாகக் கடந்து போய்க் கொண்டிருந்த மனிதர்களின் கால்கள் அவள் வேலை செய்து கொண்டிருந்த பேப்பர்கள் மீது நிழல்கள் விழும்படி செய்தன. வேலை செய்யும்போது அவள் பாட்டுப் பாடினாள். உட்கார்ந்து உட்கார்ந்து மனதில் சோர்வு உண்டாகும்போது, அவள் எழுந்து தன்னுடைய குழந்தையுடன் விளையாடினாள். எவ்வளவு அழுக்கு நிறைந்த வேலைகளைச் செய்தாலும், ஒரு வெண்மையான பூனைக் குட்டியைப் போல சுத்தமும் சுறுசுறுப்பும் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள்.

அவளுடைய கணவன் பொறுப்பற்ற ஒருவனாக இருந்தான். அதே நேரத்தில் மிகவும் அமைதியான குணத்தைக் கொண்டவனாகவும் இருந்தான். படுக்கையில் படுத்துக்கொண்டே ப்ரெஞ்ச் நாவல்களை, குறிப்பாக டூமாஸ் பெரேராவின் நாவல்களைப் படித்துக் கொண்டிருப்பான். அதுதான் அவனுடைய பொழுது போக்காக இருக்கும். "அது உங்களின் மூளைக்குள் இருக்கிற கசடுகளைச் சுத்தம் செய்து விடும்" என்று அவன் கூறுவான். முழுமையான- விஞ்ஞான பூர்வமான அணுகுமுறையுடன் அவன் வாழ்க்கையைப் பார்த்தான். அவன் உணவை 'உடம்பில் கலக்கும் சத்துக்கள்' என்று கூறுவான். சாப்பிட்டு முடித்தவுடன் அவன், "உணவை வயிற்றுல இருந்து மற்ற உறுப்புகளுக்குப் போக வைக்கிறதுக்கு உயிரணுக்களுக்கு முழுமையான ஓய்வு தேவை" என்பான்.

சொன்னதோடு நிற்காமல் தன்னுடைய தாடியில் ஒட்டிக்கொண்டிருக்கும் உணவுப்பொருட்களின் எச்சத்தைக்கூட கையால்  துடைக்காமல் அவன் கட்டிலில் ஏறிப் படுத்துக்கொண்டு டூமாஸையோ, தெமோண்டோவையோ படிக்க ஆரம்பித்துவிடுவான். பிறகு தன்னுடைய மீசையே நடுங்குகிற அளவிற்குக் குறட்டை விட்டவாறு அடுத்த இரண்டு மணி நேரங்கள் முழுமையான தூக்கத்தில் அவன் மூழ்கிவிடுவான். தூக்கம் கலைந்தவுடன் சிறிது நேரம் மேற்கூரையிலிருக்கும் சிறு சிறு வெடிப்புகளைப் பார்த்தவாறு படுத்துக் கிடந்துவிட்டு வெளியே எழுந்து வந்து, "நேற்று ராத்திரி பார்ணலின் தத்துவங்களைப் பற்றி குஸ்மா சொன்னது தவறான விளக்கம்" என்பான்.

அப்போதே குஸ்மாவைத் திருத்துவதற்காக அவன் வெளியிலேயே கிளம்புவான். வெளியே புறப்படும்போது அவன் தன் மனைவியைப் பார்த்து, “மைதான் வொளாஸ்ட்டிலிருந்து வந்த விவரங்களைச் சரி பண்ணி வைக்கணும். நான் சீக்கிரம் திரும்பி வருவேன்” என்பான்.

நள்ளிரவு நேரத்திலோ அல்லது அதற்குப்பிறகோ அவன் வீட்டிற்கு வீராவேசத்துடன் திரும்பி வருவான்.

“இங்க பாரு. நான் எல்லா விஷயங்களையும் குஸ்மாவுக்கு விளக்கமா சொன்னேன். அந்த ஆளுக்கு எல்லா விஷயங்களைப் பற்றியும் நல்லா ஞாபகம் இருக்கு. அதே மாதிரி எனக்கும்தான் ஞாபகத்துல இருக்கு. ஆனால் க்ளாட்ஸ்டனோட பாரம்பரிய விஷயங்களைப் பற்றிய முக்கியமான தகவல்களை அந்த ஆளு புரிஞ்சிக்க மாட்டேங்குறாரு.”

பீனேயைப் பற்றியும் ரிஷேயைப் பற்றியும் மன ஆரோக்கியத்தைப் பற்றியும் அவன் எப்போதும் பேசிக் கொண்டிருந்தான். மழை காரணமாக வீட்டிற்குள் இருக்க வேண்டிய சூழ்நிலை உண்டானால், தன் மனைவியின் குழந்தையைப் படிக்க வைக்கும் வேலையை அவன் ஏற்றுக்கொள்வான். இரண்டு காதல் உறவுகளுக்கு இடையில் இருந்த பாதையில் எங்கோ அவளுக்கு கிடைத்ததுதான் அந்தக் குழந்தை.

"வோலியா, நீ நல்லா உணவைமென்று சாப்பிடணும். உணவை ஏராளமான ரசாயனப் பொருட்களாக மாற்றி சீக்கிரமா ஜீரணமாக அது உதவும்."

உணவு உண்டபிறகு தன்னுடைய உடலை முழுமையான ஓய்வு எடுக்கும்படி செய்யும் அதே நேரத்தில், அந்தக் குழந்தையையும் தன்னுடன் படுக்க வைத்துக்கொண்டு அவன் ஒரு கதையைக் கூற ஆரம்பித்து விடுவான்.

"அப்போதான் கெட்டவனும் இரத்த தாகம் எடுத்தவனுமான நெப்போலியன் அதிகாரத்தைத் தன் கையிலெடுத்தான்..."

அவனுடைய பேச்சுக்கள் அவனுடைய மனைவியிடம் சிரிப்புப் பட்டாசுகள் வெடிக்க நெருப்பைப் பற்ற வைத்தன.


ஆனால், அவன் அதைப்பற்றியெல்லாம்  சிறிதும் கவலைப்படவில்லை. ஏதாவது அதற்கு எதிராகச் செயலாற்ற வேண்டும் என்று நினைப்பதற்கு முன்பே அவன் கண்களை மூடித் தூங்கியிருப்பான். சிறிது நேரம் அவனுடைய பட்டை போன்ற தாடி ரோமங்களைப் பிடித்து வளையாடிக் கொண்டிருக்கும் அந்தக் குழந்தையும் தூங்க ஆரம்பித்து விடும். நான் அந்தக் குழந்தைக்கு ஒரு நல்ல நண்பனாக இருந்தேன். பொலெஸ்லாவின் 'இரத்த தாகமெடுத்த நெப்போலியனும் அதிர்ஷ்டமில்லாத ஜோஸஃபைனும்' போன்ற கதைகளை விட அவள் என் கதைகளை மிகவும் விரும்பினாள். என்னுடைய வெற்றி பொலெஸ்ஸாவை ஒரு பொறாமை கொண்ட மனிதனாக மாற்றியது.

"பெஷ்கோவ், உங்களை நான் பலமா எதிர்க்கிறேன். ஒரு குழந்தை வாழ்க்கையுடன் தொடர்பு கொள்வதற்கு முன்னாடி, வாழ்க்கையின் அடிப்படையான தத்துவங்களைப் பற்றி அதுக்கு நாம சொல்லித் தரணும். உங்களுக்கு ஆங்கிலம் தெரியாததுனால 'மென்டல் ஹைஜீன் ஃபார் சிலட்ரன்' (குழந்தைகளின் மனநலம்) என்ற புத்தகத்தை உங்களால அதுக்குப் படிச்சு சொல்லித் தர முடியல..."

ஆங்கிலத்தில் ஒரே ஒரு வார்த்தை மட்டும்தான் அந்த ஆளுக்குத் தெரியும் என்பதுதான் என் எண்ணம். அது 'குட் பை' என்ற வார்த்தைதான்.

அவனுக்கு என்னைவிட இரண்டு மடங்கு வயது. ஆனால், ஒரு சிறிய நாய்க்குட்டியைப் போல வினோதமான குணங்களைக் கொண்ட மனிதனாக அவன் இருந்தான். மற்றவர்களை வாய்க்கு வந்தபடி தூக்கியெறிந்து பேசுவதிலும் வெளிநாடுகள் மற்றும் ரஷ்யா ஆகியவற்றின் புரட்சி இயக்கங்களுடன் தொடர்பு கொண்ட வட்டங்களின் அனைத்து ரகசியங்களும் தனக்குத் தெரியும் என்பதைப் போன்ற கருத்தை உண்டாக்குவதிலும் அவனுக்கு ஆர்வம் அதிகம் இருந்தது. ஒருவேளை அவன் அதைப்போன்ற விஷயங்களைத் தெரிந்துகூட வைத்திருக்கலாம். யாரென்றே தெரியாத பலரும் அவனைப் பார்ப்பதற்காக வருவார்கள். அவனுடைய வீட்டில் வைத்துத்தான் சபுனயேவ் என்ற புரட்சிக்காரனை நான் சந்தித்தேன். போலீஸ்காரர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு ஓடி மறைந்து கொண்டிருந்த அந்த மனிதன், ஒரு சிவப்பு நிறத் தொப்பியையும் உடம்போடு மிகவும் இறுக்கமாக இருந்த ஒருவகை கோமாளித் தனமான ஆடையையும் அப்போது அணிந்திருந்தான்.

ஒரு நாள் நான் அங்கு சென்றபோது சிறிய தலையைக் கொண்ட, பார்த்தால் முடிவெட்டும் மனிதனைப்போல இருந்த, தனக்குத்தானே நடித்துக்கொண்டிருக்கும் ஒரு மனிதனைப் பார்த்தேன். கோடுகள் போட்ட ட்ரவுசரும் சாம்பல் நிறத்தில் சட்டையும், ஓசை உண்டாக்குகிற காலணிகளும் அவன் அணிந்திருந்தான். என்னை சமையல் அறைக்குள் போகச்சொன்ன பொலெஸ்லாவ் மெதுவான குரலில் சொன்னான்:

"மிகவும் முக்கியமான ஒரு செய்தியுடன் பாரீஸ்ல இருந்து இவர் வந்திருக்காரு. இவர் கொரோலென்கோவைப் பார்க்கணும். தயவு செய்து அற்கான ஏற்பாடுகளைச் செய்யுங்க."

நான் முயற்சி செய்து பார்த்தேன். ஆனால், கொரோலென்கோ அந்த மனிதனை வழியில் பார்த்திருக்கிறார். திறந்த மனதுடன் அவர் சொன்னார்.

"வேண்டாம், நன்றி எனக்கும் அந்த முட்டாளுக்கும் எந்த உறவும் இல்லை..."

அந்தப் பாரீஸிலிருந்து வந்திருந்த மனிதனுக்கும், அமைப்பிற்கும் உண்டான ஒரு அவமானம் அதுவென்று பொலேஸ்லாவ் மனதில் எண்ணினான். அடுத்த இரண்டு நாட்களும் தன்னுடைய கோபத்தையும் கொந்தளிப்பையும் வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் மிகவும் கடுமையான வார்த்தைகளைக் கொண்ட ஒரு கடிதத்தை கொரோலென்கோவிற்கு எழுதும் முயற்சியில் அவன் இருந்தான். கடைசியில் தன்னுடைய கடுமையான முயற்சியை அவனே அடுப்பில் போட்டு எரித்து விட்டான். அந்தச் சம்பவத்திற்குப் பிறகு மாஸ்கோவில் ஏராளமான பேர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டார்கள். நிஷ்னி நொவோகோரோத், மாஸ்கோவ்லாத்மீர் ஆகிய இடங்களில் பலரும் கைது செய்யப்பட்டார்கள். பொலோஸ்லாவின் வீட்டில் நான் பார்த்த அந்த கோடுகள் போட்ட ட்ரவுசர் அணிந்த மனிதன் லான்டேஸன் கார்ட்டிங் என்ற ரகசியப் போலீஸின் ஏஜென்ட் என்பது தெரிந்தது. ஆனால், என்னுடைய காதலியின் கணவன் உண்மையாகச் சொல்லப்போனால் நல்ல ஒரு மனிதனாக இருந்தான். 'விஞ்ஞான பூர்வமான சுமை'யின் எடையால் அவன் உணர்ச்சிவசப்பட்டு சில காரியங்களை அவ்வப்போது செய்து கொண்டிருந்தான். அவன் கூறுவான்:

"ஒரு திறமைசாலி வாழ்றதுக்கான முக்கியமான நோக்கமே விஞ்ஞானபூர்வமான அறிவைச் சம்பாதிக்குறதுதான். தனிப்பட்ட முறையில் எந்தவொரு லாபத்தையும் குறிக்கோளாக வைக்காமல் தான் பெறும் அறிவு எல்லாத்தையும் மக்களுக்கு வினியோகம் செய்றதுக்காகத்தான் அவன் வாழ்றதே."

அவளுடன் நான் கொண்டிருந்த உறவு மேலும் ஆழமானது. அது எனக்குப் பல நேரங்களில் மன உளைச்சலைத் தந்தது. எனக்குப் பிரியமான அவள் அந்த மேஜைக்கு அருகில் குனிந்து உட்கார்ந்து கொண்டு வேலை செய்வதைப் பார்க்கும்போது தூசு படிந்த பக்கத்து வீட்டுச் சாமான்கள் நிறைந்த இரட்டைக் கட்டிலும் குழந்தை படுத்துறங்கும் அந்தப் பழைய மெத்தையும், தூசு படிந்த புத்தகங்கள் மலையென குவிந்து கிடக்கும் மேஜையும்... அந்தப் பாழாய்ப்போன அறையை விட்டு அவளை என் கைகளில் தூக்கிக்கொண்டு போய் விடலாமா என்று நான் ஆசைப்பட்டேன். அவளை அந்த வாழ்க்கையிலிருந்து பிரித்துக்கொண்டால் என்ன என்று கூட நான் சிந்தித்தேன். அவளுடைய துயரங்கள் நிறைந்த சூழ்நிலையை நினைத்து என் மனம் கவலைப்பட்டது.

"உன்னைப்பற்றி கொஞ்சமாவது என்கிட்ட சொல்லு."- அவள் ஒருமுறை என்னைப் பார்த்துச் சொன்னாள்.

நான் அவளிடம் சொல்லத் தொடங்கினேன். ஆனால், சிறிது நேரம் சென்ற பிறகு அவள் என்னைத் தடுத்து நிறுத்தினாள்.

"இப்போ நீ பேசுறது உன்னைப் பற்றி இல்ல..."

என்னைப் பற்றி நான் பேசவில்லை என்பது எனக்கும் புரிந்தது. அப்படியென்றால் வேறு யாரைப் பற்றியோ நான் பேசிக்கொண்டிருந்தேன்.

என்னுடைய செயல்கள், எண்ணங்கள், ஒழுங்கு போன்றவற்றில் என்னுடைய தனித்துவத்தை இனிமேல்தான் நான் கண்டடைய வேண்டும். இதுவரை என்னால் அதைச் செய்ய முடியவில்லை. நான் யாராக இருந்தேன்? அதாவது, என்னவாக இருந்தேன்? இந்தக் கேள்வி என்னைக் குழப்பத்திற்குள்ளாக்கியது. வாழ்க்கையைப் பார்த்து எனக்குப் பயம் தோன்றியது. தற்கொலை முயற்சி என்ற அவமானமான நிலையை நோக்கி அது என்னைத் தள்ளிக்கொண்டே போனது. மனிதர்களை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. வாழ்க்கை என்பது அர்த்தமே இல்லாத, தரம் தாழ்ந்த, முட்டாள்தனமான ஒன்றாக எனக்குத் தோன்றியது. வாழ்க்கையின் ஆழத்தை நோக்கியும் நிலையற்ற தன்மையின் இருண்ட மூலைகளை நோக்கியும் கூர்ந்து பார்க்கும் முறையான ஆர்வம் என்னைச் சதா நேரமும் தூண்டிக்கொண்டேயிருந்தது. அந்த நிலையில் உள்ளுணர்வால் உந்தப்பட்டு மற்றும் ஒரு குற்றச் செயலைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் என் மனதில் தோன்றியது.


என் திறமையையும் அனுபவத்தையும் காட்ட வேண்டும் என்பதற்காக மட்டுமே ஒரு கொலைச் செயலை செய்யக் கூடிய தகுதி எனக்கு உண்டாகிவிட்டிருந்தது.

என்னுடைய தனி குணம் என்னவென்பதைத் தெரிந்து கொண்டுவிட்டால், எனக்குள் இருக்கும் கொடூரமான ஜந்துவைப் பார்த்துவிட்டால் எங்கே அவள் பயந்துவிடப் போகிறாளோ என்று நான் பயந்தேன். இந்த விஷயத்தில் ஏதாவது செய்தே தீர வேண்டும் என்றொரு எண்ணம் என் மனதில் உண்டானது. அவளால் எனக்கு உதவி செய்ய முடியுமென்றும்; என்னைச் சுற்றிலும் ஒரு மாய வளையத்தை உருவாக்கிக் கொண்டு அதன் வழியாக வாழ்க்கையைப் பற்றிய இருண்ட பார்வையிலிருந்து அவளால் என்னைக் காப்பாற்ற முடியுமென்றும்; அதன்மூலம் என் ஆன்மா பலமும் சந்தோஷமும் பெறும் என்றும் நான் உறுதியாக நம்பினேன்.

அவளுடைய இயல்பான பேச்சும், மற்றவர்களிடம் அவள் கள்ளங் கபடமில்லாமல் நடந்து கொள்ளும் விதமும், அவளுக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அசாதரணமான ஒரு அறிவு இருக்கிறது என்றும்; வாழ்க்கை ஆழங்களின் இருட்டறைகளுக்கு அழைத்துச் செல்லும் ஒரு சாவி அவளிடம் இருக்கிறது என்றும் என்னைக் கட்டாயமாக நினைக்கச் செய்தன. அதனால்தான் அவள் இந்த அளவிற்குச் சந்தோஷம் நிறைந்தவளாகவும் வாழ்க்கையைப் பற்றிய உறுதியான பார்வையைக் கொண்டிருப்பவளாகவும் இருக்க முடிகிறது. அவளைப் பற்றிய மிகவும் குறைவான- எனக்குப் புரியக்கூடிய விஷயங்களை மட்டும் மனதில் நினைத்துக்கொண்டு நான் அவளைக் காதலித்தேன். இளமையின் எல்லா தகுதிகளையும் பயன்படுத்தி நான் அவளைக் காதலித்தேன். உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அடக்கி

ஒடுக்குவது என்பது மிகவும் பயங்கரமான வேதனை தரக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அதன் மிகவும் எளிமையான, மனப்பூர்வமான வரவேற்பு என் கஷ்டங்களைக் குறைக்கலாம். ஆனால், ஆண்-பெண் உறவு என்பது உடல் ரீதியான ஒன்று என்பதைவிட வேறு ஏதோ ஒன்று என்று நான் நினைக்கிறேன். அந்த உடல் ரீதியான உறவின் மிருகத் தோற்றத்தை எனக்கு நன்கு தெரியும். உடல் பலமும் காதல் வேகமும் கொண்ட ஒரு இளைஞனாக இருந்தாலும், அப்படிப்பட்ட காதல் வடிவத்தை மனதில் நினைக்கும் போது எனக்கு வெறுப்பு உண்டாகத்தான் செய்கிறது.

ஆனால், இந்தக் காதல் என்பது என்னைப் பொறுத்தவரையில் வார்த்தைகளுக்கு அப்பாற்பட்டது என்பதே உண்மை. இந்த எண்ணங்கள் எதுவும் நான் படித்த புத்தகங்களிலிருந்து நான் பெற்றவை இல்லை. நானே படைத்த எண்ணங்களே அவை. என்னுடைய பழைய கவிதைகளில் கூறியிருப்பதைப் போல, 'நான் இந்த உலகத்திற்கு வந்தது கலப்பதற்காகவே' என்பதுதான் உண்மை.

அதையும் தாண்டி அசாதாரணமானதும் எப்போதும் எனனைப் பின்தொடர்ந்து கொண்டிருப்பதுமான ஒரு ஞாபகம் எனக்குள் எப்போதும் உறைந்திருக்கிறது. உண்மையின் எல்லைகளுக்கப்பால், என்னுடைய அந்தப் பழைய நிலையற்ற தன்மைக்குள், மகத்தான ஆன்ம எழுச்சி, இனிமையான ஒரு செயல்பாடு, சந்தோஷத்தைப் பற்றிய ஒரு ஆச்சரியமான அறிவு, உதயசூரியனின் பிரகாசத்தைவிட ஒளிமயமான ஆனந்தம்- இவை எல்லாவற்றையும் நான் உணர்ந்தேன். ஒரு வேளை, தாயின் கர்ப்பப்பைக்குள் இருந்தபோது அனுபவித்த வார்த்தையால் விவரிக்க முடியாத ஆனந்தம் ஒரு மின்னலைப்போல எனக்குள், என் உயிர் வடிவமெடுக்கும் நேரத்தில் ஆத்மாவிற்குள் பரவியிருக்கலாம்.

அறியமுடியாத விஷயங்களைப் பற்றி மனிதன் நினைத்துப் பார்க்கிறான். மொத்தத்தில் பார்க்கப்போனால் வாழ்க்கையில் மனிதன் அனுபவித்த அறிவுபூர்வமான ஒரே விஷயம் பெண்ணைக் காதலித்ததும், அவளுடைய அழகை வழிபட்டதும்தான். இந்த உலகத்திலுள்ள அனைத்து அழகான பொருட்களும் படைக்கப்ட்டது. ஆணுக்குப் பெண்மீது பிறந்த காதலால்தான்.

ஒருநாள் குளிக்கும்போது நான் ஆற்றில் குப்புற குதித்தேன். என் மார்பு படகுகளுக்கு நங்கூரமிடும் சங்கிலியில் மோதியது. கால் சங்கிலியில் மாட்டிக் கொண்டது. ஏதோ ஒரு படகோட்டி என்னைத் தூக்கும் வரை நான் தலைகீழாகத் தண்ணீரில் விழுந்து கிடந்தேன். அந்த மனிதன் எனக்குள் நுழைந்த நீரை வெளியே வரும்படி செய்தான். என் மேற்தோலில் காயம் உண்டானது என்னால் எதுவும் செய்ய முடியவில்லை. ரத்தவாந்தி எடுத்தேன். படுத்த படுக்கையாய் ஆனேன். என்னுடைய காதலி என்னைப் பார்ப்பதற்காக வந்தாள். என் கட்டிலுக்கு அருகில் அமர்ந்து ‘எப்படி இதெல்லாம் நடந்தது?’ என்று கேட்டவாறு தன் கையால் என் மார்பை வருடினாள். கலங்கிப் போயிருந்த கறுத்த கண்களால் அவள் என்னையே பார்த்தாள்.

நான் காதலிக்கும் விஷயம் அவளுக்குத் தெரியுமா என்று அவளைப் பார்த்துக் கேட்டேன்.

"தெரியும்..."- சோகமான புன்சிரிப்புடன் அவள் சொன்னாள்: "நான் உன்னைக் காதலிக்கிறேன்றது உண்மைன்னாலும், அது இப்போ மோசமான நிலையிலயில்ல இருக்கு..."

அவளுடைய அந்த வார்த்தைகளைக் கேட்டபோது பூமியின் சுழற்சியே ஒரு நிமிடம் நின்றுவிட்டதைப் போல் நான் உணர்ந்தேன். தோட்டத்திலிந்த மரங்கள் சந்தோஷத்தில் குதியாட்டம் போட்டன. ஆச்சரியமும் சந்தோஷமும் உண்டாக நான் என்ன பேசுவதென்று தெரியாமல் மவுனமாகி விட்டேன். என் தலையை நான் அவளின் மடிமீது வைத்து இறுகப் பிடித்துக்கொள்ளவில்லையென்றால் நான் ஜன்னல் வழியாக வெளியே போயிருப்பேன்.

"அசையாம படுத்திரு. அது உனக்கு நல்லது இல்ல."- கண்டிப்பான குரலில் சொன்ன அவள் என் தலையை எடுத்து தலையணை மீது வைத்தாள். "இனிமேலும் உன்னை நீயே கட்டுப்படுத்திக்கலைன்னா நான் வீட்டுக்குப் போயிடுவேன். நீ என்ன பைத்தியக்காரத்தனமெல்லாம் காட்டுற! உன்னைப்போல ஒரு ஆளை நான் இதுவரையில் பார்த்ததே இல்ல. நம்மளைப் பற்றி நம்மோட உணர்வுகளைப் பற்றி - உனக்கு எல்லாம் சரியான பிறகு நாம அதைப்பற்றிப் பேசுவோம்."

முழுமையான முதிர்ச்சியுடன் அவள் பேசினாள்.

அவளுடைய கண்களில் இருந்த மலர்ச்சி வார்த்தையால் விவரிக்க முடியாத அளவிற்கு அன்பு நிறைந்ததாக இருந்தது. அவள் தான் எனக்கு நெருக்கமாக இருப்பதால் புதிய சிந்தனைகளும் உணர்வுகளும் கொண்ட உலகத்திற்குள் என்னால் நுழைய முடியும் என்ற புதிய நம்பிக்கையை என் மனதில் விதைத்து விட்டு அவள் அங்கிருந்து கிளம்பினாள்.

ஒருமுறை நகரத்திற்கு வெளியே ஒரு வயலில் நாங்கள் உட்கார்ந்திருந்தோம். தாவரங்கள் மீது காற்றுப்பட்டு ஒரு ஓசையை உண்டாக்கிக் கொண்டிருந்தது. சாம்பல் நிறத்திலிருந்த ஆகாயம் மழை வரப்போவதைச் சொல்லி பயமுறுத்திக் கொண்டிருந்தது. வண்ணங்கள் பூசப்பட்ட அருமையான வார்த்தைகளால் எங்களுக்கிடையே இருக்கும் வயது வித்தியாசத்தைப் பற்றியும், நான் கல்வியை முழுமையாக முடிக்க வேண்டிய கட்டாயத்தைப் பற்றியும் ஒரு மனைவியையும் குழந்தையையும் பொறுப்பேற்று வளர்க்கக்கூடிய வயது எனக்கு இன்னும் வரவில்லை என்றும் அவள் என்னிடம் சொன்னாள்.


ஒரு தாய் தன் குழந்தையிடம் கூறுகிற மாதிரி சொன்ன இந்த விருப்பப்படாத உண்மைகள் எனக்கு அவள் மீது இருந்த ஈடுபாட்டையும் காதலையும் மேலும் அதிகமாக்க மட்டுமே உதவின. அவளுடைய குரலையம் இனிமையான வார்த்தைகளையும் கவனித்துக் கேட்பது என்பது என்னைப் பொறுத்தவரை ஒரு புதிய அனுபவமாக இருந்தது. அதே நேரத்தில் அது ஒரு இனிய அனுபவமாகவும் இருந்தது. இந்த வகையில் இதற்கு முன்பு ஒருமுறைகூட யாரும் என்னிடம் இப்படிப் பேசியதில்லை என்பதே உண்மை.

வயல்களில் பாய்ந்து கொண்டிருந்த நீரைப் பார்த்தவாறு நான் உட்கார்ந்திருந்தேன். காற்றில் ஆடிக்கொண்டிருந்த தாவரங்கள் பச்சை நிறமுள்ள ஒரு நதியைப்போல இப்படியும் அப்படியுமாக நெளிந்தன. என் இதயத்தின் அடித்தளத்தில் அவள் எனக்குத் தந்த அன்பை என் மனதிற்குள் பத்திரமாகப் பூட்டி வைத்துக் கொண்டு திரும்பக் கொடுக்க வேண்டும் என்று உறுதி எடுத்துக்கொண்டேன்.

"ஏதாவதொரு தீர்மானம் எடுக்குறதுக்கு முன்னாடி நாம நல்லா உட்கார்ந்து யோசிக்கணும்."- அவள் மெதுவான குரலில் சொன்னாள். பச்சை நிறமுள்ள முந்திரித் தோட்டங்களால் சூழப்பட்டிருந்த அந்த நகரத்தையே பார்த்துக் கொண்டிருந்த அவள் ஒரு சிறிய குச்சியை எடுத்துத் தன் முழங்காலை மெதுவாகத் தட்டிக் கொண்டிருந்தாள். "சொல்லப்போனா இந்த விஷயங்களையெல்லாம் நான் பொலெஸ்லாவ்கிட்ட பேசணும். அவருக்கு ஏதோ சந்தேகம் இருக்கு. அவர் மனசு கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கிறதை என்னால உணர முடியுது. எனக்கு நாடகத்தனமான காட்சிகள் உருவாக்குறதுல விருப்பம் இல்ல..."

அந்த உரையாடல் மிகவும் சோகம் நிறைந்ததாக இருந்தது. அதே நேரத்தில் அவள் பேசுவது, கேட்கக் கூடியதாகவும் இருந்தது. அந்தப் பேச்சில் விளையாட்டுத்தனம், ஆபாசம் எல்லாம் கலந்திருந்தது.

என் ட்ரவுசரின் இடுப்புப் பகுதி மிகவும் அகலமாக இருந்ததால் அந்த இடத்தில் அது நிறைய சுருக்கங்களைக் கொண்டிருந்தது. மூன்று அங்குலம் நீளத்தைக் கொண்ட ஒரு செம்பு ஊசியால் நான் அதைக் குத்தியிருந்தேன். (ஏழைப்பெண்களின் அதிர்ஷ்டம் என்றுதான் சொல்ல வேண்டும். அப்படிப்பட்ட ஊசிகளை இப்போது யாரும் தயாரிப்பதில்லை.) அந்த ஊசி பல சமயங்களில் என் உடம்பைக் குத்திக் கொண்டே இருந்தது. ஒருமுறை நான் என்னை மறந்து சற்று நகர்ந்தபோது அந்த ஊசியின் முனை என் உடம்புக்குள் நுழைந்து விட்டது. நான் அதை வெளியே பிடுங்கிவிட்டேன் என்றாலும் என்னை பயமுறுத்தும் வண்ணம் அந்தக் காயத்திலிருந்து ஏராளமான இரத்தம் வெளியே வந்த வண்ணம் இருந்தது. அது என்னுடைய ட்ரவுசரரை நனைத்தது. நான் உள்ளாடை எதுவும் அணியவில்லை. சமையல்காரனின் சட்டை இடுப்பிற்கு மேலே வரை மட்டுமே இருந்தது. என் காற்பகுதியில் இரத்தம்பட்டு நனைந்திருந்த ட்ரவுசருடன் நான் எப்படி எழுந்து நடக்க முடியும்?

அந்தச் சம்பவத்தின் கோமாளித்தனமான விஷயத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. முழுமையான நகைச்சுவைக்கு இடமிருக்கக்கூடிய அந்தச் சம்பவத்தை நினைத்து எனக்குக் கோபம் தான் வந்தது. வந்த கோபத்தில் பேசிக்கொண்டிருக்கும் பொழுது இடையில் பேசவேண்டிய வரிகளை மறந்து போன ஒரு நடிகனின் நிலையைப் போல உணர்ச்சிவசப்பட்டு நான் பேசத் தொடங்கினேன்.

முதலில் மிகவும் கவனமாக, பிறகு சிறிது பதைபதைப்புடன் நான் சொன்ன ஒவ்வொன்றையும் அவள் கேட்டாள்.

"எவ்வளவு சத்தமா, ஜோடனை வார்த்தைகளெல்லாம் போட்டு நீ பேசுற?"- அவள் சொன்னாள்: "இந்த வார்த்தைகள் உன்னோடது இல்லைன்னு நான் நினைக்கிறேன்."

என் கஷ்டமான சூழ்நிலையின் மீது அவள் அடித்த இறுதியான அடியாக இருந்தது அது. ஒரு அப்பாவிப் பூனையைப் போல வாயை மூடிக்கொண்டு உட்கார்ந்திருந்தேன்.

"வீட்டுக்குப்போக நேரமாயிடுச்சு. மழை பெய்றதுக்கு வாய்ப்பு இருக்கு."

"நான் இங்கேதான் இருக்கப்போறேன்."

"என்ன?"

"வேற நான் என்ன சொல்றது?"

"நீ என் மேல கோபப்படுறியா?"- என் கண்களை உற்றுப் பார்த்துக்கொண்டே அவள் கேட்டாள்.

"அப்படியெல்லாம் இல்ல. எனக்கு என் மேலதான் கோபம் கோபமா வருது."

"உன் மேல கோபப்படுறதுக்கு என்ன இருக்கு?"- எழுந்தவாறு அவள் சொன்னாள்.

என்னால் அசைய முடியவில்லை. அந்தச் சேறு நிறைந்த மண்ணில் இருந்தால் என் உடம்பிலிருந்து இரத்தம் வழிவதன் சத்தத்தை அவள் கேட்டு விடுவாள் என்றும்; உடனே அவள் அதைப் பற்றி விசாரிப்பாள் என்றும் நான் நினைத்தேன்.

"என்ன அது?"

"இங்கேயிருந்து நீ போறியா?"- மனப்பூர்வமாக நான் அவளைப் பார்த்துக் கெஞ்சினேன்.

அன்புடன் சில ஆறுதல் வார்த்தைகளைக் கூறிவிட்டு அந்த அருவியின் ஓரமாகத் தன்னுடைய அழகான உடலை அசைத்தவாறு அவள் நடந்து போனாள். பார்வையிலிருந்து மறையும் வரை அவளுடைய அந்த ஒல்லியான உருவத்தைப் பார்த்தவாறு நான் அதே இடத்தில் நின்றிருந்தேன். என்னுடைய முதல் காதல் சோகத்தில் முடிந்துவிடுமோ என்ற ஏமாற்றத்துடன் மனம் நொந்து போய் நான் தரையில் விழுந்தேன்.

நடந்தது இதுதான். அவளுடைய கணவன் கண்ணீர் சிந்தினான். பலவித உணர்ச்சிகரமான காட்சிகளை நடத்தினான். என்னை நோக்கி அந்த இனிமையான காதல்நதி வழியாக நீந்திக் கடக்கும் விஷயத்தில் ஒரு முடிவு எடுக்க அவளால் முடியவில்லை.

"அந்த ஆள் ரொம்பவும் கோழை. ஆனா, நீ ரொம்பவும் தைரியசாலியா இருக்கே!"- அதைச் சொன்னபோது அவளுடைய கண்களில் நீர் நிறைந்துவிட்டது. "நான் வீட்டுக்குப் போயிட்டா, சூரிய ஒளி கிடைக்காத ஒரு பூவைப்போல வாடிப்போவேன்னு அந்த ஆள்..."

அந்தப் பூவின் குள்ளமான கால்களையும், பெண்களிடமிருப்பது போன்ற பின் பாகத்தையும், பீசணிக்காய் வயிறையும் நினைத்து நான் விழுந்து விழுந்து சிரித்தேன். அவனுடைய தாடியில் எப்போதும் ஈக்கள் உட்கார்ந்திருக்கும். அந்த உயிரினங்களுக்கு அங்கு ஏதாவது தின்பதற்கு இருக்கும்.

அவள் சிரித்தாள்.

"அப்படியெல்லாம் சொல்றது கிண்டலான ஒண்ணுதான்!"-அவள் சொன்னாள்: "ஆனா, அந்த ஆளைப் பொறுத்தவரை நான் அப்படிப்பட்ட ஒரு தீர்மானம் எடுத்தா அது அவரை ரொம்பவும் பாதிக்கக் கூடியதா இருக்கும்."

"எனக்கும் கூட அப்படித்தான்."

"என்ன இருந்தாலும், நீ ஒரு இளைஞன்."

ஒரு பலவீனமான மனிதனின் எதிரியாக நான் இருக்கிறேன் என்ற உண்மையை வாழ்க்கையில் முதல்முறையாக அப்போதுதான் உணர்ந்தேன். பிறகு மிகவும் முக்கியமான பல இடங்களிலும் பலவீனமானவர்களுக்கு முன்னால் பலமுள்ளவர்கள் தோல்வியடைவதை நானே நேரடியாகப் பார்த்தேன். அழிந்து போவதற்காக மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும் சாதாரண உயிர்களுக்காக எவ்வளவோ விலை மதிப்புள்ள சக்தி செலவழிக்கப்படுவதை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.


அதற்குப் பிறகு பைத்தியம் பிடித்திருக்கும் நிலைக்கு நிகரான மனரீதியான பாதிப்புடன் ஒரு அரை நோயாளியாக நான் அந்த நகரத்தை விட்டு புறப்பட்டேன். சுமார் இரண்டு வருடங்கள் நான் ரஷ்யாவின் கிராமப் பகுதிகள் வழியாக அலைந்து திரிந்தேன். ஓல்கா நதி, டான் நதி ஆகியவற்றின் வழியாக நான் எந்தவித இலக்கும் இல்லாமல் நடந்து திரிந்தேன். உக்ரைனிலும், க்ரீமியாவிலும் காக்கஸஸ்ஸிலும் நான் அலைந்து திரிந்தேன். பலவிதப்பட்ட அனுபவங்களுடன் பலவகைப்பட்ட செயல்களில் ஈடுபட்டேன். மேலும் பக்குவப்பட்ட மனிதனாகவும் கோபமற்றவனாகவும் மாறினேன். அவளை விட அழகிகளையும், அறிவு கொண்ட பெண்களையும் நான் பார்த்தேனென்றாலும், என் இதயத்தின் ஆழங்களில் அந்தப் பெண்ணின் உருவத்தை மட்டும் நான் பத்திரமாகப் பாதுகாத்து வைத்தேன்.

இரண்டு வருடங்களுக்குப் பிறகு அவள் பாரீஸிலிருந்து திரும்பவும் வந்திருப்பதாக டிஃப்ளீஸில் எனக்குச் செய்தி கிடைத்தது. மழைக் காலத்தின் ஒரு நாள் அது. அவள் வசித்துக் கொண்டிருந்த அந்த நகரத்தில்தான் நானும் வசிக்கிறேன் என்ற செய்தி என்னை மகிழ்ச்சி கொள்ளச் செய்தது. இருபத்து மூன்று வயது கொண்ட அந்தப் பக்குவப்பட்ட இளைஞனான நான் வாழ்க்கையில் முதல் தடவையாக ஆசை என்னும் வலையில் விழுந்து தவித்தேன்.

யாரோ ஒரு நண்பன் மூலம் அவள் என்னை அழைக்காதிருந்தால் ஒருவேளை அவளை அங்கு போய்ப் பார்ப்பதற்கான தைரியம் சிறிது கூட எனக்கு இல்லாமல் போயிருக்கும்.

அவள் முன்பு இருந்ததைவிட மிகவும் அழகாக இருப்பதாக எனக்குத் தோன்றியது. அவளிடம் அந்தப் பழைய இளமையின் வனப்பும், நல்ல வெண்மையான நிறமும், நீல நிறக் கண்களில் இருந்த மென்மையான பிரகாசமும் அப்போதும் அப்படியே இருந்தன. அவளுடைய கணவன் ஃப்ரான்ஸிலேயே இருந்துவிட்டான். மகளை மட்டும் அழைத்துக் கொண்டு அவள் மட்டும் தனியே இங்கு வந்திருக்கிறாள். ஒரு மான்குட்டியின் சுறுசுறுப்பும் கள்ளங்கபடமற்ற தன்மையும் அந்தக் குழந்தையிடம் தெரிந்தன.

அவளைப் பார்ப்பதற்காக நான் சென்றிருந்தபோது ஒரு கடுமையான காற்று வீசுவதற்குத் தயாராக இருந்தது. மழைத்துளிகள் விழுந்து கொண்டிருக்கும் சத்தம் அந்த இடமெங்கும் கேட்டது. மழை பெருக்கெடுத்து வெள்ளமென புனித டேவிட் மலைச்சரிவு வழியாகக் கீழ்நோக்கி வேகமாகப் பாய்ந்து கொண்டிருந்தது. காற்றின் இரைச்சலும் மழை பெய்யும்போது உண்டாகும் ஆக்ரோஷமான சத்தமும் அந்த வீட்டைப் பிடித்து குலுக்கிக் கொண்டிருந்தன. நகரம் மழை, இடி, காற்று ஆகியவற்றால் படாதபாடு பட்டுக் கொண்டிருப்பதை உணர முடிந்தது. காற்றில் ஜன்னல்கள் அடித்து ஓசை உண்டாக்கின. மின்னல் வெளிச்சம் அறைக்குள் விழுந்தது. புதிர் நிறைந்த, முடிவற்ற, ஆழமான ஏதோ ஒரு இருண்ட குகைக்குள் மாட்டிக்கொண்ட நிலையில் நான் இருந்தேன்.

பயந்து நடுங்கிப் போன குழந்தை போர்வைக்குள் தலையை மூடிக் கொண்டது. மின்னலின் கண்களைக் கூசச் செய்யும் ஒளி நுழைந்து கொண்டிருந்த ஜன்னலுக்கு அருகில் நின்றுகொண்டு, மெதுவான குரலில் நாங்கள் பேசினோம்.

"முன்பு ஒருமுறை கூட இப்படிப்பட்ட கடுமையான காற்றை நான் பார்த்ததே இல்ல."- என் காதலி சொன்னாள்.

"சரி, அது இருக்கட்டும். என் மீது தோணின அந்தக் காதலை உன்னால வேண்டாம்னு ஒதுக்க முடிஞ்சதா?" அவள் திடீரென்று கேட்டாள்.

"இல்ல..."

ஆச்சரியத்துடன், அதே தாழ்வான குரலில் அவள் சொன்னாள்:

"கடவுளே, உன்கிட்ட எப்படியெல்லாம் மாற்றங்கள் இருக்கு தெரியுமா? நீ முழுமையாகவே இன்னொரு மனிதனா மாறிப்போயிருக்கே."

ஜன்னலுக்கு அருகில் போடப்பட்டிருந்த சாய்வு நாற்காலியில் அவள் மெதுவாகச் சாய்ந்தாள். புதிதாக அடித்த மின்னல் ஒளியில் ஆர்வமும் கேலியும் தெரிந்த அவளுடைய முகத்தை என்னால் பார்க்க முடிந்தது. "உன்னைப் பற்றி ஆளுங்க எவ்வளவோ பேசுறாங்க. நீ எதுக்காக இங்கே வந்தே? உன்னைப் பற்றி நீ சொல்லு..."-அவள் சொன்னாள். கடவுளே! அவள் எந்த அளவுக்கு இளமையாகவும் அழகானவளாகவும் இருக்கிறாள்!

நள்ளிரவு வரை அவளுடன் நான் பேசிக்கொண்டிருந்தேன். இயற்கை, அதன் மோசமான நிலையிலும், என்னை உற்சாகப்படுத்தி சந்தோஷம் கொள்ளச் செய்தது. நான் நன்றாகப் பேசியதாக எனக்குப்பட்டது. கண்களை அகல விரித்து வைத்துக்கொண்டு அவள் என்னையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது எனக்கு அப்படித்தான் நினைக்கத் தோன்றியது. இடையில் அவ்வப்போது நான் பெருமூச்சு விடவும் செய்தேன்.

"ச்சே! என்ன கஷ்டம்!"

விடை பெறும்போது முன்பெல்லாம் செய்வதைப் போல வயதில் மூத்த ஒரு பெண் வயது குறைவானவனிடம் பாதுகாப்பு கருதி வெளிப்படுத்தக் கூடிய அந்தச் சிரிப்பை அவள் உதிர்க்கவில்லை. ஆகாயத்தில் நிறைந்திருந்த மேகங்களுக்கு மத்தியில், இடையில் அவ்வப் போது தென்பட்ட கூர்மையான அரிவாளைப் போன்ற நிலவைப் பார்த்தவாறு அந்த நனைந்து குளிர்ந்து போயிருந்த சாலை வழியாக மகிழ்ச்சி பொங்க நான் முன்னோக்கி நடந்தேன்.

அடுத்த நாள் நான் அவளுக்கு ஒரு கவிதை அனுப்பினேன். (அதற்குப்பிறகு அவ்வப்போது அந்தக் கவிதையை அவள் பாடுவாள். அதனால் அது என் நினைவில் ஆழமாகப் பதிந்து விட்டது.)

'என் பிரியமானவளே!

அந்த மென்மையான வார்த்தைகள், மென்மையான

தொடல் ஒன்றுமில்லாததை சிறிய சிறிய சந்தோஷங்களாக்கி

மாற்றும் இந்த மந்திரவாதியை

அமைதியான அடிமையாக்கி விட்டன.

இந்த அடிமையை பெண்ணவள் ஏற்றுக்கொண்டால், ஒருவேளை

சிறிய சிறிய சந்தோஷங்களை

மிகப்பெரிய ஆனந்த வேளைகளாக

அவள் மாற்றி அமைக்கலாம்.

இந்த மகத்தான உலகம் படைக்கப்பட்டது

சிறிய ஒரு பெண்ணிலிருந்துதானே!

நான் கூறுவது சந்தோஷத்தின்

உலகத்தைப் பற்றித்தான்.

ஆனந்தத்தின் சந்தோஷத்தின் உலகம்.

எனினும்

அதற்கு அதற்கே உரிய கோமாளித்தனமும் உண்டு.

உனது எளிய அந்த அடிமையும்

அந்த சந்தோஷத்தின் பாகமே.

உன்னைவிட அழகாயிருப்பது யார்?

மன்னிக்க வேண்டும்.

வார்த்தைகளின் கூரிய நகங்களுக்கு

இந்த உலக அழகை விட அழகான

உன்னைப் பற்றி என்ன பாடத் தெரியும்?'

உண்மையாக சொல்லப்போனால் இதைக் கவிதை என்று கூற முடியாது. ஆனால், மென்மையான உணர்வுகளை உண்மையில் தோய்த்து எழுதப்பட்ட ஒன்று அது.

இங்கு நான் இதோ மீண்டும் இந்த உலகத்தின் மிக முக்கியமான ஒரு நபருக்கு முன்னால் உட்கார்ந்திருக்கிறேன். அவள் அணிந்திருக்கும் நீல நிற கவுன் அவளுடைய உடல் வாளிப்பை அதிகம் மறைத்து வைக்கவில்லை. இடையில் கட்டித் தொங்கிக் கொண்டிருந்த பட்டைத் துணியைக் கையால் திருகிக்கொண்டே எனக்குச் சிறிதும் பழக்கமேயில்லாத வார்த்தைகளில் அவள் பேசினாள்.


அவளுடைய இளம் சிவப்பு நிறத்திலிருந்த நகங்களைக் கொண்ட விரல்களைப் பார்த்தபோது, நான் ஒரு வயலின் என்றும், அந்த வயலின் தந்திகளை மீட்டுகிறவள் அவள் என்றும் நான் மனதில் நினைத்துப் பார்த்தேன்.

இந்தப் பெண்ணை என்னுடைய இதயத்தில் வைத்துக்கொண்டு இறக்க, அப்படியாவது அவளை வாழ்நாள் முழுவதும் என்னுடனேயே வைத்துக்கொள்ள நான் விரும்பினேன். என் உடல் வேதனையால் பயங்கரமாக வலித்தது. என்னுடைய இதயம் வெடித்து விடும்போல் எனக்குத் தோன்றியது.

நான் என்னுடைய முதல் கதையை அவளுக்குப் படிக்கத் தந்தேன். (அந்தச் சமயத்தில்தான் அது பிரசுரமாகியிருந்தது). ஆனால், அவள் அதைப் பற்றி என்ன சொன்னாள் என்பது என் ஞாபகத்தில் இல்லை. ஆச்சரியப்படும் விதத்தில் அவள் நடந்து கொண்டதை இப்போதும் நான்  நினைத்துப் பார்க்கிறேன்.

"ஓ... நீ கதையும் எழுத ஆரம்பிச்சிட்டியா?"- பிறகு ஒரு கனவிலிருந்து பேசுவதைப் போல அவள் சொன்னாள்:

"கடந்த இரண்டு வருடங்களா உன்னைப்பற்றி நான் நிறைய சிந்திச்சிருக்கேன். உண்மையா எனக்காகத்தான் நீ இந்தக் கஷ்டங்களையெல்லாம் சகிச்சிக்கிட்டியா?"

அவள் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த உலகத்தில் எனக்குத் துன்பங்கள் என்று எதுவும் இல்லை என்று நான் மெதுவான குரலில் முணு முணுத்தேன்.

"ஓ... நீ எவ்வளவு நல்ல மனிதன்!"

அவளை இறுகக் கட்டிப்பிடித்து அணைக்க வேண்டும் என்று நான் மனதில் மிகவும் ஆசைப்பட்டேன். ஆனால், என் கைகள் மிகவும் நீளமானவையாகவும், சதைப்பிடிப்பு கொண்டவையாகவும் இருந்ததால் அவளை ஏன் வீணாக வேதனைப்படுத்த வேண்டும் என்று எண்ணி அவளைத் தொடுவதற்கே நான் பயந்தேன். எனினும், என் மனதில் உள்ள எண்ணத்தை அவளிடம் நான் சொன்னேன்:

"வா... என்கூட வந்து இரு... என் கூட வந்து இருன்னு உன்னை நான் கேட்டுக்குறேன்."

அதைக் கேட்டு அவள் சிறிது பதைபதைப்பு அடைந்தாலும் என்னைப் பார்த்து அவள் புன்னகைத்தாள். கண்களே கூசிவிடும் அளவிற்கு மிகவும் பிரகாசமாக இருந்தன அவளுடைய கண்கள். அறையின் மூலையில் தள்ளி நின்றவாறு அவள் சொன்னாள்:

"நாம இப்போ இப்படி நடப்போம். நீ நிஷ்னிலொவோ கோதிக்கு திரும்பிப்போ. நான் இப்போதைக்கு இங்கேயே இருந்திடறேன். இந்த விஷயத்தைப் பற்றி சிந்திக்கிறேன். அதுக்குப் பிறகு உனக்குக் கடிதம் எழுதுறேன்."

"சரி" என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்துகொண்டு, முன்பு நான் படித்த புதினங்களின் கதாநாயகர்களைப் போல் வெளியே இறங்கி நடந்தேன்- காற்றைக் கிழத்துக் கொண்டு.

அந்த மழைக்காலத்தில் அவளும் குழந்தையும் நிஷ்னிலொவோ கோதில் என்னுடன் வந்து தங்க ஆரம்பித்தார்கள்.

'ஒரு ஏழையின் திருமண நேரத்தில் இரவுகள் கூட சபிக்கப்பட்டவைதான்' என்பது கவலைப்படத்தக்க ஒரு ரஷ்யப் பழமொழி. என்னுடைய சொந்த அனுபவங்களே அந்த உண்மையை எனக்குப் பறைசாற்றின.

இரண்டு ரூபிள் மாத வாடகைக்கு நாங்கள் ஒரு பெரிய வீட்டை வாடகைக்கு எடுத்தோம். ஒரு பாதிரியாரின் வீட்டுக்குப் பின்னாலிருந்த குளியலறை அது. அதன் முன்பக்கத்திலிருந்த அறையை நான் எடுத்துக் கொண்டேன். பின்னாலிருந்த அறையை அவள் எடுத்துக் கொண்டாள். குடும்பத்துடன் இருப்பதற்கு ஏற்றதாக அந்த வீடு இல்லை. வீட்டின் பக்கவாட்டிலும் மூலைகளிலும் பனிக்கட்டிகள் உறைந்து

கிடந்தன. இரவு நேரங்களில் என் கையிலிருந்த அனைத்து ஆடைகளைக் கொண்டும், அதற்கும் மேலே ஒரு கம்பளியைப் போட்டும் என்னைப் போர்த்திக்கொண்டு படுப்பேன். எல்லாம் செய்தும் அந்தக் காலத்தில் நான் பெரிதாக நினைத்திருந்த என்னுடைய நோய்களை எதிர்த்துப் போராடும் சக்தியைமீறி எனக்குக் காய்ச்சல் வந்தது. 

குளியலறையின் அடுப்பில் நெருப்பை எரிய வைக்க முயன்றால், அந்த அறையிலிருந்து சோப்பின் வாசனையும் இற்றுப்போன மரத்துண்டுகளின் மணமும், அழுகிப்போன இலைகளின் சகிக்க முடியாத வாசனையும் வெளியே வந்தன. அந்த வாசனை அந்தக் குழந்தையை (அழகான கண்களைக் கொண்ட களிமண் பொம்மை) பைத்தியம் பிடித்ததைப் போல் ஆக்கி, அதற்குத் தலைவலி வரும்படி செய்தது.

வசந்தகாலம் வந்தபோது, எட்டுக்கால் பூச்சிகளுக்கும் மரத்தின் பட்டைகளில் வசிக்கும் ஜந்துக்களும் குளியலறையைத் தங்களின் வசிப்பிடமாக ஆக்கிக் கொண்டன. அதைப் பார்த்துத் தாயும் மகளும் ஒரு மாதிரி ஆகிவிட்டார்கள். செருப்பால் நான் அந்தப் பூச்சிகளை அடித்து விரட்டினேன். அந்த வீட்டின் சிறிய ஜன்னல்களில் ராஸ்ப்பெரி செடிகள் வளர்ந்து பந்தலிட்டதன் மூலம் வீட்டிற்குள் எப்போது பார்த்தாலும் மங்கலான வெளிச்சமே இருந்தது. ஆனால், மது அருந்தும் பழக்கத்தையும், நிலையான மனதைக் கொண்டிராதவருமான அந்தப் பாதிரியார் அந்தச் செடிகளை வேறு இடத்திற்கு மாற்றி நடவோ அல்லது அவற்றை ஒழுங்குபடுத்திக் கட்டிவைக்கவோ என்னை விடவில்லை.

எங்களுக்கு அதைவிட நல்ல வசதிகள் கொண்ட வீடொன்று கிடைத்தது. ஆனால், அந்தப் பாதிரியாருக்கு நான் கொஞ்சம் பணம் தரவேண்டியிருந்தது. என்னை அவருக்கு மிகவும் பிடித்திருந்ததால், அவர் அந்த இடத்தை விட்டுச் செல்ல என்னை விடவில்லை.

"எல்லா விஷயங்களும் காலப்போக்குல உனக்குப் பழக்கமாயிடும்"- அவர் கூறுவார்: "அப்படி இருக்க முடியலைன்னா, எனக்குத் தர வேண்டிய பணத்தைத் தந்துட்டு நீ எங்கே வேணும்னாலும் போகலாம். ஆனா, ஆங்கிலேயர்கள் கூட மட்டும் தங்காதே!"

அவர் ஆங்கிலேயர்களை வெறுத்தார்.

"அவர்கள் உல்லாசப் பேர்வழிகள். கல் வைத்த நகைகள் உண்டாக்குவதைத் தவிர, வேற எதையுமே அவர்கள் கண்டுபிடிக்கல. போர் செய்றது எப்படின்னு அவங்களுக்குத் தெரியாது" அவர் அலட்சியமான குரலில் கூறினார்.

சிவந்த வட்ட முகத்தையும், பெரிய சிவந்த தாடியையும் கொண்ட ஆஜானுபாகுவான ஒரு மனிதராக இருந்தார் அவர். தீவிரமாக மது அருந்தும் பழக்கம் இருந்ததால், தேவையான நேரத்தில் தேவாலயத்திற்குச் சென்று சடங்குகளைச் செய்ய அவரால் முடியவில்லை. கூர்மையான மூக்கையும், கறுத்த தலைமுடியையும் கொண்ட, பார்த்தால் ஒரு காகத்தைப் போல் இருக்கும் ஒரு தையல்காரியுடன் அவருக்குச் சிறிய அளவில் காதல் தொடர்பு இருந்தது.

அவள் தன்னை ஏமாற்றிக் கொண்டிருக்கும் விஷயத்தைக் கூறும்போது தன் தாடியில் விழுந்து ஒட்டிக்கொண்டிருக்கும் கண்ணீர்த் துளிகளை அவர் கையால் துடைப்பார்.

"அவள் மனரீதியாகப் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுன்னு எனக்குத் தெரியும். அவளைப் பார்க்குறப்போ எனக்கு ஃபிமியாமான்ற ஒரு ரத்தக் காட்டேரிதான் ஞாபகத்துல வருது."

'லைவ்ஸ் ஆஃப் ஸெயிண்ட்ஸ்' என்ற நூலை நான் தேடிப்பிடித்துப் படித்தேன். அந்தப் பெயரில் ஒரு ரத்தக் காட்டேரியை அந்த நூலில் என்னால் பார்க்கவே முடியவில்லை.


நான் ஒரு நம்பிக்கையற்ற மனிதன் என்பதைத் தெரிந்து கொண்டதால் உண்டான கோபத்தில் அவர் எனக்கு அறிவுரை கூறினார்.

"மகனே, நீ நடைமுறை அறிவுடன் வாழக்கையை நடத்தப்பாரு. பல லட்சக்கணக்கான நம்பிக்கையுள்ளவர்கள் நிறைந்திருக்குற இந்த உலகத்தில் ஒரு டஜன் அளவுக்கு வேணும்னா நம்பிக்கை இல்லாதவங்க இருக்கலாம். இப்படியொரு சூழ்நிலை ஏன் உண்டாகுது? தேவாலயமும் நம்பிக்கையும் இல்லாத ஆன்மா நீரில்லாத நிலத்தில் சிக்கிக் கொண்ட மீன் மாதிரின்னு சொல்றதுதான் சரி. புரியுதா? இந்த விஷயங்களை மனசுல நினைச்சுக்கிட்டு நாம கொஞ்சம் மது அருந்துவோம்!"

"நான் மது அருந்துவது இல்லை. அது என் காய்ச்சலை அதிகப்படுத்திடும்."

கையிலிருந்த முள்ளால் ஒரு மீன் துண்டைக் குத்தி எடுத்து தன் தலைக்கு மேலே சுழற்றிப் பயமுறுத்தும் வகையில் பாதிரியார் சொன்னார்:

"அதுக்குக் காரணம் வேறொண்ணும் இல்ல. உனக்குக் கடவுள் மேல நம்பிக்கை இல்லாததுதான்..."

நான் விரும்பும் பெண் அந்தப் பின்னாலிருக்கும் அறையில் இருக்க, மாமிசம் வாங்கவோ குழந்தைக்கு ஒரு பொம்மை வாங்கித்தரவோ முடியாமல் என்னுடைய நிலை இருந்ததை நினைத்தபோது பல நேரங்களில் எனக்கே அவமானமாக இருக்கும். எல்லாவற்றிற்கும் காரணம் பாழாய்ப்போன என் வறுமைதான் என்பதை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது. வறுமையைப் பார்த்து நான் பெரிய அளவில் பதற்றமொன்றும் அடையவில்லை. ஆனால், அழகும் படிப்பும் கொண்ட இந்தப் பெண்ணும் அவளுடைய குழந்தையும் இந்தக் கஷ்டங்கள் முழுவதையும் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களே என்பதை நினைத்தபோது தான் எனக்கே என்னவோ போல் இருந்தது. இரவு நேரங்களில் சட்டம் சம்பந்தமான ஆதாரங்களின் பிரதிகளை எடுக்கும்போதும் கதைகளை எழுதும்போதும் நான் என்னுடைய காதலையும் விதியையும் மனதில் எண்ணியவாறு மனிதர்களைப் பொதுவாகச் சபித்துக்கொண்டு பற்களைக் கடிப்பது ஒரு நிரந்தர செயலாக இருந்தது. 

நான் விரும்பிய அந்தப் பெண் மிகப்பெரிய மனதிற்குச் சொந்தக்காரியாக இருந்தாள். தன்னுடைய துயரங்களைத் தன் குழந்தை தெரிந்து கொள்ளக்கூடாது என்று எண்ணக்கூடிய தாயாக அவள் இருந்தாள். ஒரு புகாராவது அவளுடைய உதடுகளில் இருந்து வெளிக்கிளம்பி வரவேண்டுமே! எங்களின் சூழ்நிலை எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும், அவளுடைய சிரிப்பிற்கோ, குரலுக்கோ எந்தவொரு மாறுதலும உண்டாகவில்லை. பொழுது புலர்ந்தது முதல் மாலை வரும் வரை அவள் பாதிரியார்கள் மற்றும் அவர்களின் இறந்து போன மனைவிகளை ஓவியமாக வரைந்து கொண்டிருப்பாள். அந்த மாவட்டத்தின் பூகோளத்தைப் படமாக வரைவாள். ஒருமுறை ஒரு கண்காட்சியில் அந்தப் பூகோளப் படங்களுக்கு ஒரு தங்க மெடல் பரிசாகக் கிடைத்தது. ஓவியங்களுக்கு ஆர்டர்கள் கிடைக்காதபோது கம்பியும் பட்டுத்துணியும் வைக்கோலும் பயன்படுத்தி பாரீஸ் மாதிரியில் அவள் பெண்களுக்கான அழகான தொப்பிகளை உருவாக்க ஆரம்பித்தாள். ஆனால், அவளுடைய இந்த அழகான படைப்புகள் மிக மிக அழகாகத் தெரிந்தது - அவள் அந்தத் தொப்பியை அணிந்து கண்ணாடிக்கு முன்னால் நின்றுகொண்டு குலுங்கிக் குலுங்கிச்

சிரித்தபோதுதான். கர்வம் குடிகொள்ள வயிற்றைத் தள்ளிக்கொண்டு இந்தப் 'பறவைக்கூட்டை' தலையில் வைத்துக்கொண்டு தெருவில் நடந்து செல்லும் பெண்களைப் பார்ப்பது உண்மையிலேயே அசாதாரணமான ஒரு காட்சிதான்.

ஒரு வக்கீல் குமாஸ்தாவாகவும், அந்தப் பகுதியில் வந்து கொண்டிருந்த ஒரு பத்திரிகையில் சிறுகதைகள் எழுதியும் என் படைப்பு சம்பந்தமான செயல்களை நான் தொடர்ந்து கொண்டிருந்தேன். அப்படி எழுதுவதற்கு வரியொன்றுக்கு எனக்கு இரண்டு கோபெக்குகள் கிடைத்தன. மாலை நேரங்களில் தேநீர் பருக எங்களுக்கு விருந்தாளிகள் யாருமில்லையென்றால் என் மனைவி அவளுடைய பள்ளிக்கூட நாட்களில் நடந்த கதைகளைச் சொல்லி என்னை சந்தோஷப்படுத்துவாள்.

இரண்டாவது அலெக்ஸாண்டர் பெலோஸ்டாக்கில் உள்ள பள்ளிக்கூடத்திற்கு வழக்கமாகச் செல்வதுண்டு. அவர் அங்குள்ள பெண்களுக்கு இனிப்பு பலகாரங்களைத் தருவார் அதைச் சாப்பிடுபவர்கள்- ஆச்சரியம் என்றுதான் சொல்லவேண்டும்- கர்ப்பிணியாகி விடுவார்கள். பல நேரங்களில் அழகான ஒரு இளம்பெண் அவருடன் சேர்ந்து பெலோவஷ்காய் காட்டுப்பகுதிக்கு வேட்டைக்குப் போவதுண்டு. அதற்குப்பிறகு திருமணம் செய்து கொள்வதற்காக அவர்கள் பீட்டர்ஸ்பர்க்கிற்குச் சென்றார்கள். பாரீஸைப்பற்றி அவள் சுவாரசியமான பல கதைகளையும் கூறுவாள். படித்ததன் மூலம் பாரீஸைப் பற்றி நிறைய நான் தெரிந்து வைத்திருந்தேன். குறிப்பாக 'மாக்ஸியெ து காம்ப்' என்ற பெரிய நூலைப் படித்தது. மோண்ட் மார்த்ரெயில் இருக்கும் காஃபேயிலிருந்தும் லாட்டின் க்வார்ட்டரிலிருந்தும் மாறுபட்ட வாழ்க்கை அனுபவங்களிலிருந்தும் அவள் பாரீஸைப்பற்றி நிறைய தெரிந்து வைத்திருந்தாள். அவளுடைய கதைகளில் மதுவைவிட உணர்ச்சிகள்

அதிகமாக இருந்தன. உலகத்தின் ஒட்டுமொத்தமான அழகிற்கு ஆதாரமாக இருப்பது பெண்கள்தான் என்பதைப் புரிந்து கொண்டதன் அடிப்படையில் நான் பெண்களைப்பற்றி புகழ்ந்து பாடல்கள் எழுதினேன்.

நான் அதிகமாக ரசித்தது அவளுடைய சொந்த காதல் கதைகளைத்தான். மிகவும் ரசிக்கக்கூடிய விதத்தில் அவள் அந்தக் கதைகளை என்னிடம் கூறினாள். உணர்ச்சிவசப்படும் அளவிற்கு காரமும் புளிப்பும் சேர்க்க அவள் மறக்கவில்லை. சிரித்துக்கொண்டே பென்சிலால் மெல்லிய கோடுகள் போட்டு வரைவதைப் போல தன்னுடைய வார்த்தைகாளல் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்த அந்த ஜெனரலைப் பற்றி அவள் சொன்னாள். ஒரு நாள் வேட்டைக்குப் போயிருந்தபோது ஜார் மன்னனுக்குத் துப்பாக்கியால் வெடிக்க வாய்ப்புத் தராமல் அந்த ஜெனரல் ஒரு மிருகத்தைச் சுட்டு விட்டு தொடர்ந்து அந்த மிருகத்தைப் பார்த்தவாறு ஜார் மன்னனிடம் மன்னிப்புக் கேட்கிற தொனியில் அவர் உரத்த குரலில் கத்தினார்:

"மன்னரே, என்னை மன்னிக்கணும்."

அவள் ரஷ்யாவின் அரசியல் அனாதைகளைப் பற்றி பேசினாள். அவ்வாறு பேசும்போது அவளுடைய உதடுகளில் பெரியது சிறியது என்று பார்க்காத புன்சிரிப்பு தவழ்வதை நான் பார்த்திருக்கிறேன்.

சில நேரங்களில் அவளிடமிருக்கும் உண்மைத் தன்மை அவளை வாழ்க்கையின் வீணான விஷயங்களை நோக்கி அழைத்துக் கொண்டு செல்கிறதோ என்று கூட எனக்குத் தோன்றியிருக்கிறது. ஒரு பூனைக்குட்டியைப் போல அவள் தன்னுடைய நாக்கு நுனியால் உதட்டில் உரசுவாள். அந்தச் சமயத்தில் அவளுடைய கண்களில் தனித்துவமான ஒரு ஒளி பிரகாசிப்பது வெளிப்படையாகத் தெரியும். சில நேரங்களில் அவள் பொறுமை இல்லாததைப்போல இருப்பாள்.

ஆனால், பெரும்பாலான நேரங்களில் பொம்மையுடன் விளையாடும் ஒரு சிறுமியைப் போலத்தான் அவள் இருப்பாள்.

ஒரு நாள் அவள் சொன்னாள்:

"காதல்ல ஈடுபடுறப்போ ரஷ்யாக்காரன் நிறைய பேசுறதுல ஆர்வம் உள்ளவனா மாறுவான். பேசிப்பேசியே நம்மைச் சோர்வடைய வச்சிடுவான். சில நேரங்கள்ல எதிர்த்துச் சொல்ற அளவுக்குத் தாங்க முடியாம இருக்கும் அவனோட பேச்சு.


சரியா காதலிக்கத் தெரிஞ்சவங்க ஃப்ரெஞ்ச்காரங்க மட்டும்தான். காதல் அவங்களுக்கு மதச் சடங்கு மாதிரி..."

அதற்குப் பிறகு அவளுடன் கொண்டிருந்த உறவில் நான் சில கட்டுப்பாடுகளை உண்டாக்கினேன்.

அவள் ஃப்ரெஞ்ச் பெண்களைப் பற்றி இப்படிச் சொன்னாள்: "அவங்களோட இதயம் எப்பவும் உணர்ச்சிப் பெருக்கு நிறைந்ததாக இருக்கும். அப்படியிருந்தாலும் மிகவும் ஈடுபாட்டுடன் அவங்க தங்களின் காதல் உணர்ச்சிகளை ஆணிடம் வெளிப்படுத்துவாங்க. காதல் என்பது அவங்களுக்கு ஒரு கலை!"

அதைச் சொன்னபோது அவளுடைய குரலில் ஒரு பெருமிதமும் மனதில் எண்ணியதை வெளியிட்ட திருப்தியும் இருந்தன. அவள் சொன்ன அந்த விஷயம் எனக்கு மிகவும் முக்கியமான ஒன்று  என்பதால், நான் அதை ஆர்வத்துடன் கேட்டேன்.

"ஃப்ரெஞ்ச் பெண்களுக்கும் ரஷ்யப் பெண்களுக்குமிடையே உள்ள வேறுபாடு என்னன்னா இனிப்புக்கும் இனிப்பு சேர்த்த பலகாரத்துக்குமிடையே இருக்கிற வித்தியாசம்தான்!"- நிலவு காய்ந்து கொண்டிருந்த ஒரு இரவில் அவள் என்னிடம் சொன்னாள்.

அவள் ஒரு இனிப்பான பலகாரமாக இருந்தாள். ஆண்-பெண் உறவைப் பற்றிய என்னுடைய உணர்ச்சிமயமான பார்வையைக் குறித்து சொல்லி நான் அவளை ஒருவித பதைபதைப்புக்கு ஆளாக்கிவிட்டேன்.

"நீங்க அதை நல்லா சிந்திச்சுத்தான் சொல்றீங்களா? நீங்க அதை உண்மையாகவே ஆழமா சிந்திச்சீங்களா?" - நிலவின் நீல இரவில் மூழ்கியவாறு என் கைகளில் படுத்திருந்தபோது அவள் கேட்டாள். வெளுத்த நிறத்தைக் கொண்ட அவளுடைய உடல் அப்போது நிர்வாணமாக இருந்தது. மனதைப் பைத்தியம் பிடிக்கச் செய்கிற பாதாமின் வாசனையை அந்த உடல் சுற்றிலும் பரவவிட்டுக் கொண்டிருந்தது. ஒல்லியான தன் கைவிரல்களால் அவள் என் தலைமுடியை தன்னை மறந்து இறுகப் பிடித்திருந்தாள். விரிந்த தகித்துக்கொண்டிருந்த கண்களால் அவள் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தபோது அவளுடைய உதடுகளில் குறும்புத்தனமான புன்னகை அரும்பியது.

"என் கடவுள்களே!" என்று அழைத்தவாறு அவள் தரையில் கால்களை ஊன்றினாள். பிறகு அந்தத் தரை விரிப்பின் மீது முன்னும் பின்னுமாக நடக்க ஆரம்பித்தாள். அவளுடைய கால்களில் காலணிகள் இல்லாமலிருந்ததால் நடக்கும்போது பாதங்களின் ஓசை கேட்கவில்லை. அவள் என்னை நெருங்கி வந்தாள். என் கன்னத்தைப் பிடித்துக்கொண்டு தாயின் பாசம் வெளிப்படும் குரலில் அவள் சொன்னாள்:

"உன்னோட முதல் காதல் அனுபவம் உலகம்னா என்னன்னு தெரியாத ஒரு இளம்பெண்கிட்ட கிடைச்சிருக்கணும்... ஆமா... அது தான் நடந்திருக்கணும் என் மூலமா இல்ல..."

நான் அவளைக் கைகளில் வாரித் தூக்கியபோது அவள் அழத் தொடங்கினாள்:

"நான் உன்னை எந்த அளவுக்குக் காதலிக்கிறேன்னு உனக்குத் தெரியுமா?" - மிகவும் தாழ்ந்த குரலில் அவள் கேட்டாள்: "உன்கூட இருக்குறப்போ கிடைக்கிற சந்தோஷம் வேற யார்கூட இருக்கிறப்பவும் எனக்குக் கிடைச்சது இல்ல. உண்மை இதுதான். நீ என்னை நம்பணும். இந்த அளவுக்குத் திறந்த இதயத்தோட, இந்த அளவுக்குத் தெளிந்த மனதோட நான் யாரையும் காதலிச்சது இல்ல. உன்கூட இருக்குறப்போ எனக்கு எவ்வளவு மகிழ்ச்சியா இருக்குன்றதை உன்னால நினைச்சிக்கூட பார்க்க முடியாது. ஆனா, நாம ஒரு தப்பு செஞ்சிட்டோம்னு இப்போக்கூட என்னால சொல்லாம இருக்க முடியல. நான் உனக்கு ஏற்ற பெண் இல்ல... இல்ல... நான் ஒரு பெரிய தப்பைப் பண்ணிட்டேன்."

அவள் மனதில் என்ன நினைத்துக்கொண்டு இதையெல்லாம் சொல்கிறாள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. அவளுடைய வார்த்தைகள் என்னை பயமுறுத்தின. சந்தோஷமான வார்த்தைகள் மூலம் அவள் தன்னுடைய சந்தோஷத்தைக் காப்பாற்ற முயற்சித்தாள். ஆனால், அவளுடைய அசாதாரணமான சில நாட்கள் கடந்தபிறகு பித்துப் பிடித்தது மாதிரி கண்ணீர் வழிய அவள் சொன்னாள்:

"ம்ஹூம்... நீ என் முதல் காதலனா இருந்திருக்கக் கூடாதா?"

அது ஒரு கடுமையான காற்று வீசிய இரவாக இருந்ததென்பதை நான் நினைத்துப் பார்க்கிறேன். நாவல் மரக் கிளைகள் ஜன்னலில் வீசியடித்துக் கொண்டிருந்தன. கண்ணாடி வழியாகக் காற்று பலத்த ஓசையை எழுப்பிக் கொண்டிருந்தது. அந்த அறைக்குள் கனமான இருட்டும் குளிர்ச்சியும் நிறைந்திருந்தன. கிழிந்த சுவர் தாளின் சத்தம் 'கிரு கிரு' என்று கேட்டுக் கொண்டிருந்தது.

எப்போதாவது சிறிது அதிகமாகப் பணம் கிடைக்கும்போது நாங்கள் நண்பர்களைச் சாப்பிடுவதற்கு அழைப்பதுண்டு. மாமிசம், வோட்கா, பியர், பேஸ்ட்ரீஸ் ஆகியவை அடங்கிய நல்ல ஒரு சாப்பாடு. பாரீஸைச் சேர்ந்த என்னுடைய நண்பர் ஒருவர் நல்ல ருசியுடன் சாப்பிட விரும்பக்கூடியவராக இருந்தார். ரஷ்யன் உணவு என்றால் அவருக்கு விருப்பம் அதிகம். ஸைஷக் (மாட்டு மாமிசத்துடன் கோழிக் கொழுப்பு, கோதுமை ஆகியவை கலந்த ஒரு உணவு), ஷீன், மீன் கறி, மாட்டு மாமிசமும் உருளைக்கிழங்கும் சேர்த்து உண்டாக்கிய சூப் ஆகியவற்றை அவர் மிகவும் விரும்பிச் சாப்பிடுவார்.

"அதிகமாகச் சாப்பிடுகிற ஆளுக்குப் பரிசு" என்றொரு விஷயத்தை அவள் சொன்னாள். நன்றாக உணவு சாப்பிடக்கூடிய, சமையல் விஷயங்களில் கை தேர்ந்த பத்துப் பன்னிரண்டு பேர்கள் அடங்கிய ஒரு கூட்டத்தை அவள் ஏற்பாடு செய்தாள். ஆனால் எனக்குச் சமையல் விஷயத்தைப் பற்றி அவ்வளவாகத் தெரியாது. சிறிதளவு உணவு மட்டுமே நான் சாப்பிட்டேன். உணவு ஒரு முக்கிய விஷயமாக எனக்கு என்றுமே இருந்ததில்லை.

"வெற்று சாக்குகள்" என்று அந்த உணவுப் பிரியர்களை நான் ஒருமுறை கூறியிருக்கிறேன்.

"ஒரு மனிதன்கிட்ட நட்பா கைகுலுக்கினா, அடுத்த நிமிடம் அவன் வெற்று மனிதனா ஆயிடுவான்."- அவள் சொன்னாள்: "ஆடைகளுக்குப் பின்னால் நாம எல்லாருமே நிர்வாணமா இருப்பவர்கள்தான்னு ஃபீன் ஒருமுறை சொன்னதா நான் கேள்விப்பட்டிருக்கேன்."

வாழ்க்கையைப் பற்றிய பல மேற்கோள்களும் அவளுக்கு நன்கு தெரியும். ஆனால், அவள் அவற்றைப் பொருத்தமான விதத்தில் பயன்படுத்துவதில்லை என்பதே என் எண்ணம்.

ஆண்களிடம் மட்டும் நல்ல முறையில் 'கைகுலுக்குவதில்' அவள் ஆர்வமாக இருந்தாள். அந்த விஷயத்தில் அவள் ஒரு திறமைசாலி என்றே சொல்ல வேண்டும். அவளுடைய அறிவும், நகைச்சுவை உணர்வும், சந்தோஷமும் செயல்களுக்கு உயிரூட்ட அவளுக்குப் பெரிதும் உதவியாக இருந்தன. சிறிதும் முக்கியமில்லாத விஷயங்களைக் கூட அவளால் பெரிதுபடுத்திக் காட்ட முடிந்தது. சிறிது நேரம் அவளுடன் தொடர்ந்து பேசிக்கொண்டிருக்கும் ஆணின் காது முதலில் சிவப்பாகவும் பின்னர் நீல நிறமாகவும் மாறிவிடும். கண்களுக்கு மஞ்சள் நிறம் வந்து சேர்ந்துவிடும். பிறகு முட்டைக்கோஸைப் பார்த்த ஆட்டைப் போல அந்த மனிதன் அவளையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருப்பான்.  


நெற்றியில் சுருக்கங்கள் விழுந்த, தேவாலயத்தின் கோபுரத்தைப் போன்ற உயரமும் பெரிய தொந்தி விழுந்த வயிறையும் கொண்ட அந்த வக்கீலின் உதவியாளர் சொன்னார்: "காந்தசக்தி படைத்த பெண்!"

யெரோஸ்லாவில் இருந்து ஒரு மாணவன் அவளுக்கு ஒரு கவிதையை எழுதி அனுப்பியிருந்தான். பத்து வரிகளைக் கொண்ட கவிதை அது. அந்தக் கவிதை அப்படியொன்றும் மகத்தானதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதைப் படித்துவிட்டு கண்களில் கண்ணீர் வரும்வரை அவள் சிரித்துக் கொண்டேயிருந்தாள்.

"நீ ஏன் இப்படி ஆண்களைச் சலனப்படுத்துற?" ஒருமுறை நான் அவளைப் பார்த்துக் கேட்டேன்.

"மீன் பிடிக்கிறதைப்போல சுவாரசியமான ஒரு பொழுதுபோக்கு அது"-அவள் சொன்னாள்: "அதைக் காதல் விளையாட்டுன்னும் அழைக்கலாம். அதை அனுபவிக்காத சுயமரியாதை கொண்ட ஒரு பெண்கூட இந்த உலகத்தில் இல்லை..."

சில நேரங்களில் என்னுடைய கண்களை உற்றுப் பார்த்தவாறு அவள் கேட்பாள்:

"பொறாமை தோணுதா?"

இல்லை. பொறாமை தோன்றவில்லை. ஆனால், மனரீதியாகப் பாதிக்கப்பட்டதைப்போல் நான் உணர்ந்தேன். ஆபாசத்தைச் சகித்துக்கொள்ள என்னால் முடியவில்லை. பொதுவாகவே சந்தோஷத்தை விரும்பக்கூடிய ஒரு ஆளாக இருந்ததால் சிரிக்க முடிவது என்ற விஷயம்தான் மனிதனுக்குக் கிடைத்தவற்றிலேயே மிகப்பெரிய பரிசு என்று நான் நினைத்திருந்தேன். சர்க்கஸ் கோமாளிகளையும் மேடைகளில் நகைச்சுவை நிகழ்ச்சி செய்பவர்களையும் தோற்கடிக்கும் வண்ணம் நகைச்சுவையை என்னால் வெளிப்படுத்த முடியுமென்று தோன்றியதால் நான் அவர்களைப் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பல நேரங்களில் எங்களின் விருந்தாளிகளை உடலே வலிக்கும் அளவிற்குச் சிரிக்க வைக்க என்னால் முடிந்திருக்கிறது.

"உன்னால நல்ல ஒரு காமெடியனா வரமுடியும்!" அவள் ஒருநாள் சொன்னாள்: "நீ மேடையில ஏறவேண்டிய ஆள். அதற்கான திறமை உன்கிட்ட நிச்சயம் இருக்கு."

நிகழ்ச்சிகள் நடக்கும் இடங்களில் மிகவும் சிறப்பாக நகைச்சுவை நிகழ்ச்சிகளை அவள் செய்திருக்கிறாள். தொழில் ரீதியான நாடகக் குழுவைச் சேர்ந்த பல தயாரிப்பாளர்கள் அவளை நடிக்க அழைக்கக் கூட செய்திருக்கிறார்கள்.

"எனக்கு மேடைன்னா விருப்பம்தான். ஆனா, மேடைக்குப் பின்னாலிருக்கிற விஷயங்களை நினைச்சா ரொம்பவும் பயமா இருக்கு."

தன்னுடைய எண்ணங்களிலும் வார்த்தைகளிலும் விருப்பங்களிலும் அவள் உண்மையை நிலைநாட்டினாள்.

"உன் தத்துவ சிந்தனை ஒரு எல்லையை மீறிப் போய்க்கிட்டு இருக்கு!"- அவள் என்னைப் பார்த்துக் கூறுவாள்: "வாழ்க்கையின் சாரத்தைத் தேடிப்போனா அது எளிமையும் பயங்கரமும் கலந்த ஒண்ணாத்தான் இருக்கு. மறைந்திருக்கிற அர்த்தங்களைத் தேடிப்போயிட்டு அதைப்பற்றி குறை சொல்றதுல அர்த்தமே இல்ல. நாம செய்யவேண்டியது ஒண்ணே ஒண்ணுதான். அதன் கடுமையை எந்த அளவுக்குக் குறைக்க முடியுமோ அந்த அளவுக்குக் குறைக்க நாம முயற்சிக்கணும். அதுக்கு மேல நம்மால ஒண்ணுமே செய்ய முடியாது."

அவளுடைய தத்துவ சிந்தனையில் பெண்ணியல் சம்பந்தப்பட்ட பல விஷயங்கள் இருப்பதாக நான் உணர்ந்தேன். 'ஏ கோர்ஸ் இன் ஆப்ஸ்டெரிக்ஸ்' என்ற நூல்தான் அவளுடைய வேதநூலாக இருந்தது. பள்ளிக்கூட படிப்பை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவள் படித்த முதல் விஞ்ஞானப் புத்தகம் அவளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியைத் தந்ததாக அவள் சொன்னாள்.

"நான் ரொம்பவும் சூது, வாது தெரியாத பெண்ணாக இருந்தேன். ஒரு மட்டையை வைத்து தலையில அடிச்சது மாதிரி இருந்தது அது மேகக்கூட்டங்களுக்கு மத்தியில் இருந்து நான் கீழே கிடந்த சேற்றில் வந்து விழுந்தேன். என்கிட்ட நம்பிக்கை இல்லாமப் போனதுக்கு நான் வாய்விட்டு அழுதேன். ஆனா, ரொம்பவும் சீக்கிரமே எனக்கு ஒரு விஷயம் புரிந்தது. என் காலுக்குக் கீழே இருந்த மண் உறுதியாகவும் முரட்டுத்தனமாகவும் இருந்தது. நான் வாய்விட்டு அழுதது கடவுளை நோக்கித்தான். கடவுளுக்கு ரொம்பவும் பக்கத்துல நிற்பது போல் எனக்கு இருந்தது. திடீர்னு கடவுள் காத்துல கலந்து போறது போல எனக்கு தோணுச்சு. அதாவது சிகரெட் புகை போறதைப்போல.அதோட சேர்ந்து என்னோட காதல் கனவுகளும் கலந்து போயிடுச்சு. பள்ளிக் கூடத்துல படிக்கிறப்போ காதலிக்கும் காலத்தைப்பற்றி நாங்க என்னென்னவோ நினைச்சிருந்தோம். பேசியிருந்தோம்.”

அவளுடைய நாத்திக வாதத்தைக் கேட்க நேர்ந்தபோது நான் உண்மையிலேயே அதிர்ச்சியடைந்து போனேன். ஒரு பள்ளிக்கூடச் சிறுமியின் கள்ளங்கபடமற்ற தன்மையும் பாரீஸின் ஒரு பெண்ணின் நடைமுறைச் சிந்தனையும் அதில் இரண்டறக் கலந்திருந்தன. இரவு நேரங்களில் பல சமயங்களில் நான் என்னுடைய எழுதும் மேஜைக்கு அருகிலிருந்து எழுந்து அவளைத் தேடிப்போவேன். அவள் அதிக இளமையும் வசீகரம் நிறைந்தவளாகவும் தெரிவாள். அவள் படுத்திருப்பதைப் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும்போது அவளுடைய மனத்தைச் சூழ்ந்திருக்கும் வாழ்க்கையின் பிரச்சினைகளை நினைத்து எனக்கு மிகவும் வருத்தமுண்டாகும். அவள் மீது எனக்கு உண்டான பரிதாப உணர்ச்சி அவளிடம் நான் கொண்ட காதலை மேலும் சக்தி மிக்கதாக ஆக்க உதவக்கூடியதாகவே இருந்தது.

எங்களின் இலக்கிய ரசனை மிகவும் மாறுபட்டதாக இருந்தது. நான் பால்ஸாக்கையும் ஃப்ளாபெர்ட்டையும் விரும்பிப் படிக்கக் கூடியவன் என்றால், அவள் பால் ஃபெவால், ஆக்டேவ் ஃப்யூல்லெ, பால் தே காக் ஆகியோரின் படைப்புகளைப் படிக்கக்கூடியவளாக இருந்தாள். ‘யங்கிரா, மை ஒய்ஃப்’ என்ற புதினம் அவளுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாக இருந்தது. தான் படித்ததிலேயே மிகச்சிறந்த புதினம் அதுதான் என்று அவள் மதிப்பீடு செய்திருந்தாள். குற்றவாளிகளின் சங்கேத மொழியைப் போல மிகவும் சோர்வு தரக்கூடிய ஒரு பொருளாக நான் அந்தப் புத்தகத்தை நினைத்திருந்தேன். நிலைமை இப்படியெல்லாம் இருந்தாலும், நாங்கள் நல்ல ஒற்றுமையுடன்தான் வாழ்க்கையைத் தொடர்ந்து கொண்டிருந்தோம். நாங்கள் ஒருவரோடொருவர் வெறுப்பு கொள்ளவில்லை. காதலை இடையிலேயே முறித்துக் கொள்ளவில்லை. ஆனால், ஒன்றாக நாங்கள் வாழ ஆரம்பித்த வாழ்க்கையின் மூன்றாவது வருடம் வந்தபோது ஏதோ ஒன்று என் மனதைப் போட்டு அலைக்கழிப்பதைப் போல் நான் உணர்ந்தேன். அதன் ஆக்கிரமிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருப்பதையும் என்னால் உணர முடிந்தது. அந்தச் சமயத்தில் நான் தீவிரமாகப் படிப்பதில் ஈடுபட்டிருந்தேன்.எழுதுவதை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்த நேரமது. எங்களின் விருந்தாளிகளில் பலர் என்னுடைய வேலையில் குறுக்கிடுவார்கள். அவர்களில் பெரும்பாலானவர்கள் ஆர்வமே இல்லாத ஆட்களாக இருந்தார்கள். ஆட்களுக்கு விருந்தளிக்கக்கூடிய பொருளாதார நிலை எங்களிடம் அதிகரிக்க அதிகரிக்க, அவர்களின் எண்ணிக்கையும் கூடிக்கொண்டே இருந்தது.

வாழ்க்கை என்பது அவளுக்கு ஒரு கண்காட்சியைப் போல இருந்தது. ஆண்கள் யாரும் ‘தயவு செய்து என்னைத் தொடக் கூடாது’ என்ற வார்த்தைகளை எழுதி அணியாமல் இருந்ததால், அவள் அவர்களுடன் மிகவும் நெருக்கமாகப் பழகினாள்.


ஆட்கள் அதைத் தங்களின் சவுகரியத்துக்கேற்றபடி புரிந்து கொண்டார்கள். பல தவறான புரிந்து கொள்ளல்களை அகற்றுவதற்காக நான் தலையிட வேண்டிய சூழ்நிலை உண்டானது. பல நேரங்களில் நான் பொறுமையை இழந்திருக்கிறேன். என்ன செய்வதென்று தெரியாமல் பல நேரங்களில் தவித்திருக்கிறேன். நான் காதைப் பிடித்துத் திருகிய ஒரு படித்த மனிதர் இப்படிச் சொன்னார்:

“நான் தப்பு பண்ணிட்டேன்றதை ஒத்துக்குறேன். ஆனா, என் காதைப் பிடிச்சுத் திருகுறதுக்கு அவனுக்கு என்ன உரிமை இருக்கு? நான் ஒரு பள்ளிக்கூடத்துல படிக்குற பையன் இல்ல. அவனை விட இரண்டு மடங்கு வயது எனக்கு. ஆனா, அவன் என் காதைப் பிடிச்சு திருகுறான்! இதைவிட என் தாடையில அவன் ஒரு அடி கொடுத்திருக்கலாம்!”

குற்றம் செய்பவர்களின் தகுதியைக் கணக்குப் போட்டு தண்டனை அளிக்கும் விஷயத்தில் எனக்குத் தேவையான அனுபவம் இல்லாமல் இருந்ததே எல்லாவற்றுக்கும் காரணம்.

அவள் என் கதைகளை அந்த அளவுக்குத் தீவிரமாக எடுத்துக் கொள்ளவில்லை. முதலில் நான் அதைக் கவனிக்கவில்லை. நான் ஒரு எழுத்தாளனாக வருவேன் என்று நானும் எதிர்பார்க்கவில்லை. அதுதான் உண்மை. நான் பல நேரங்களில் பல வகைப்பட்ட விஷயங்களிலும் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஆனால், என்னைப் பொறுத்தவரை பத்திரிகையில் எழுதுவது என்பது ஒரு வாழ்வதற்கான வழி என்ற அளவிலேயே இருந்தது. நான் எழுதிய 'ஓல்ட் இஸெர்கில்' என்ற நூலை ஒருநாள் காலையில் அவளுக்கு நான் படித்துக் காட்டினேன். இரவு நேரங்களில் கண் விழித்து கஷ்டப்பட்டு எழுதிய கதை அது. அவள் அப்போது தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருந்தாள். முதலில் அதற்காக நான் வருந்தவில்லை. நான் படிப்பதை நிறுத்திவிட்டு, அவளையே சிந்தித்தவாறு உற்றுப்பார்த்தேன். நான் மிகவும் நேசிக்கக்கூடிய அந்தத் தலை ஸோஃபாவின் மீது சாய்ந்து கிடந்தது. அவளுடைய உதடுகள் பிரிந்து கிடந்தன. ஒரு சிறு குழந்தையைப் போல மிகவும் மெதுவாக அவள் மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். காலை நேர இளம் வெயில் வயதான பெர்ரி மரக்கிளைகள் வழியாக ஜன்னலில் விழுந்து கொண்டிருந்தது. அவளுடைய மார்பகங்கள் மீதும் கால்கள் மீதும் அது தன்னுடைய பொன்நிற அடையாளங்களை மலர்களைப் போல் தூவிக்கொண்டிருந்தது.

நான் எழுந்து தோட்டத்திற்குள் சென்றேன். என்னுடைய இலக்கியத் திறமையைப் பற்றி எனக்கே சந்தேகம் வர ஆரம்பித்தது. நான் மிகவும் மன வேதனைக்கு ஆளானேன்.

அசுத்தம், விபச்சாரம், வறுமை, அடிமை வேலை இவற்றில் சிக்காத ஒரு பெண்ணைக்கூட வாழ்க்கையில் நான் பார்த்ததில்லை. ஆனால், என்னுடைய குழந்தைப்பருவம் எனக்கு அறிமுகம் செய்து வைத்தது ஒரே ஒரு பெண்தான். அவள் மார்கோத் மகாராணி. ஆனால், மாறுபட்ட கருத்துகள் அடங்கிய பல மலையடுக்குகள் என்னை அவளிடமிருந்து தூரத்தில் நிற்க வைத்தன. இஸெர்கிலின் வாழ்க்கைக் கதையைப் பெண்கள் படிப்பார்களென்றும்; அழகு, சுதந்திரம் ஆகியவற்றிற்கான ஒரு தாகத்தை அந்நூல் அவர்களிடம் ஏற்படுத்தும் என்றும் நான் திடமாக எதிர்பார்த்தேன். ஆனால், நான் மிகவும் விரும்பிக் காதலித்த பெண் இதோ இங்கே சிறிதும் கூச்சமே இல்லாமல் தூங்கிக் கொண்டிருக்கிறாள்! இது எப்படி நடந்தது? வாழ்க்கை என் கையில் தந்த கருவி பலம்கொண்ட ஒன்றாக இல்லையோ?

அந்தப் பெண்ணுக்கு என் இதயத்தில் ஒரு தாயின் இடத்தைக் கொடுத்திருந்தேன். என்னுடைய படைப்புச் சக்தியை அவள் தூண்டிவிட முடியும் என்று நான் திடமாக நம்பவும், விரும்பவும் செய்தேன். அவள் உடன் இருப்பதால் வாழ்க்கை என்னிடம் உருவாக்கிய கரடு முரடுகள் என்னிடமிருந்து முழுமையாக மறைந்து போய்விடும் என்று நான் எண்ணினேன்.

முப்பது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயம் அது. அந்த நினைவுகள் இப்போதும் என் உதடுகளில் புன்னகை தோன்ற வைக்கின்றன. ஆனால், தூங்கவேண்டும் என்று தோன்றும்போது தூங்கும் விவாதத்திற்கு இடமில்லாத அவளுடைய உரிமையைப் பார்த்து உண்மையிலேயே மனதில் நான் மிகவும் வேதனைப்பட்டேன். கவலையைப் பெரிதாக நினைக்காமல் பேசினால் மனதில் இருக்கும் கவலையை இருந்த இடம் தெரியாமல் விரட்டி விடலாம் என்று நான் நினைத்தேன். மனிதனின் கவலைகளில் சந்தோஷப்படும் ஏதோ ஒரு சக்தி மனிதனின் வாழ்க்கையில் ஊடுருவுகின்றதோ என்று நான் சந்தேகப்பட்டேன். குடும்பத்தில் நாடகங்களை இட்டுக்கட்டி உண்டாக்குவதன் மூலம் மனிதனின் அமைதியான வாழ்க்கையில் ஒரு அமைதியற்ற தன்மையை உண்டாக்கும் ஏதோ ஒரு பிசாசுத்தனமான சக்தியைப் பற்றிக் கூறுகிறேன். கண்ணுக்குத் தெரியாத அந்த அசுரசக்தியை நான் என்னுடைய விரோதியாக நினைத்தேன். அதன் கொடும்பிடியில் சிக்காமல் தப்பிக்க என்னால் முடியக்கூடிய எல்லா வழிகளையும் நான் கையாண்டேன்.

ஓல்டன்பர்க் எழுதிய 'புத்தா ஹிஸ் டீச்சிங்க்ஸ் அன்ட் ஃபாலோயர்ஸ்' என்ற நூலைப் படிக்கும்போது அதில் ஒரு இடத்தில் வரும் 'உயிர் வாழ்வதே மிகவும் துன்பங்கள் நிறைந்தது' என்ற வாக்கியத்தைக் கண்டு, அதைப்பற்றி நான் தீவிரமாகச் சிந்திக்க ஆரம்பித்து விட்டேன். நான் வாழ்க்கையில் அதிக சந்தோஷத்தைப் பார்த்ததில்லை. ஆனால், வாழ்க்கையில் துயரங்களோ நிறைய வருகின்றன. ஆனால், அது தவிர்க்க முடியாத ஒன்றல்ல. பாதிரியார் காரிஸாந்த் எழுதிய 'ரிலீஜியன் ஆஃப் தி ஓரியண்ட்' என்ற நூலைத் தீவிரமாக வாசித்த போது வாழ்க்கையின் அடிப்படை விஷயங்களுக்கு மேல் கவலைகளையும் பயத்தையும் உண்டாக்கும் எந்த அறிவும் வாழ்க்கைக்கு எதிரானதே என்பதை நான் புரிந்து கொண்டேன். ஆன்மிக எண்ணங்களில் மூழ்கிப் போய் சிறிது காலம் வாழந்தபோது அந்த உணர்ச்சிகளின் பயனற்ற தன்மையை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. துயரங்களைப் பார்த்தாலே எனக்குச் சொல்லப்போனால் வெறுப்பாக இருந்தது. வாழ்க்கையின் நாடகங்களை நான் பலமாக வெறுத்தேன். அந்த நாடகங்களை நகைச்சுவையாக, எப்படி புத்திசாலித்தனமாக மாற்றுவது என்பதை நான் கற்றுக் கொண்டேன்.

எங்களின் வீட்டிலும் இப்படிப்பட்ட குடும்ப நாடகம் அரங்கேறியது என்பதையும்; அப்படிப்பட்ட நாடகம் அரங்கேறாமல் தடுப்பதற்காக நாங்கள் இருவரும் எங்களால் முடிந்த அளவு முயற்சி செய்தோம் என்பதையும் சொல்வதற்காக இந்த விஷயங்களைக் கூற வேண்டிய அவசியம் இல்லை. என்னுடைய சுயத்தைத் தேடித் துயரங்கள் நிறைந்த பாதையில் பயணம் செய்தபோது நான் இந்த உண்மைகளைக் கண்டறிந்தேன்.

என்னுடைய மனைவியின் உள்ளே இருந்த அளவுக்கு மீறிய சந்தோஷம் அந்த நாடகத்தில் அவளை நடிக்க விடாமல் செய்து விட்டது. மனோதத்துவத்தில் ஆர்வம் கொண்ட ரஷ்ய ஆண்களும் பெண்களும் பொதுவாக தங்கள் வீடுகளில் அதை மிகவும் ரசித்து மகிழ்வார்கள்.


அழகான தலைமுடியைக் கொண்ட அந்த மாணவனின் சாதாரண கவிதைகள் மழைக்காலத்தில் பெய்யும் மழையைப் போல் அவளை மிகவும் பாதித்திருந்தன. குண்டு குண்டான கையெழுத்தில் எழுதப்பட்ட கவிதைகளைக் கொண்ட நோட்டு புத்தகத்தின் தாள்களை புத்தகங்களுக்கு நடுவிலும், தொப்பிக்கு உள்ளிலும், ஏன் சர்க்கரை போட்டு வைக்கும் பாத்திரத்தில்கூட அவன் திணித்து வைத்தான். அழகாக மடித்து வைக்கப்பட்டிருக்கும் அந்தத் தாள்களைப் பார்த்தால், நான் அவற்றை எடுத்து என் மனைவியின் கையில் தந்து விட்டுக் கூறுவேன்.

"உன் இதயத்தை உருக வைக்கிற இந்தக் கடைசி முயற்சியை இதோ, வாங்கிக்கோ..."

முதலில் அந்தச் சிறு காமதேவனின் அம்புகள் அவளிடம் எந்தவொரு பாதிப்பையும் உண்டாக்கவில்லை. அவள் எனக்கு அந்தக் கவிதைகளைப் படித்துக் காட்டுவாள். பிறகு நாங்கள் அதைப்பற்றிப் பேசிச் சிரிப்போம். அந்தக் கவிதையில் ஒரு பகுதி இப்படியிருந்தது:

'என்றென்றும் நான் உனக்காகவே வாழ்கிறேன்

மற்ற வசதிகளை நான் சந்தோஷமாக மறுக்கிறேன்.

உன்னிலிருந்து வரும் உஷ்ணத்தில் நான் குளிர் காய்கிறேன்.

உன் சலனங்களையும், உன் தலையின்

ஒவ்வொரு அசைவையும் நான் பார்க்கிறேன்.

உன் இனிய படுக்கைக்கு மேலே வட்டமிட்டுப் பறக்கும்

ஒரு கருடன்...'

ஆனால், இரண்டு நாட்கள் கழித்து அந்த மாணவனின் செயலைச் சிந்தித்துப் பார்த்துவிட்டு அவள் சொன்னாள்:

"அவனை நினைச்சு நான் ரொம்பவும் வருத்தப்டுறேன்"

அவள் சொன்னதற்குப் பதிலாக, "நான் பரிதாபப்படுவது அந்த மாணவனை நினைச்சு இல்ல..." என்றேன். அதற்குப் பிறகு அவனுடைய கவிதைகளை என்னிடம் படித்துக் காட்டுவதை அவள் நிறுத்திக் கொண்டாள்.

உயரம் குறைவாக- குள்ளமாக இருக்கும் அந்த இளம் கவிஞன் என்னைவிட நான்கு வயது மூத்தவன். யாரிடமும் பேசுவதற்கு ஆர்வமில்லாத அவன் மது அருந்துவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தான். ஞாயிற்றுக் கிழமைகளில் மதியத்திற்குப் பின்னால் இரண்டு மணிக்கு அவன் சாப்பிட வருவான். பிறகு அதிகாலை இரண்டு மணிவரை அசையாமல் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பான். அவனும் என்னைப்போல ஒரு வக்கீல் குமாஸ்தாதான். அவனுடைய ஆர்வமற்ற போக்கு அவனுடைய அந்த நல்ல வக்கீலை மிகவும் ஆச்சரியப்பட வைத்தது. அத்துடன் தன்னுடைய வேலையைப் பார்ப்பதில் அவன் அக்கறையே இல்லாதவனாக இருந்தான். அடிக்கடி அவன் கட்டைக் குரலில் கூறுவான்:

"எல்லாமே அறிவு கெட்ட செயல்கள்."

"அப்படின்னா அறிவுள்ள செயல் எது?"

"ம்... நான் எப்படி அதை விளக்குவேன்?" என்று கேட்டவாறு அவன் தன் பார்வையை மேற்கூரையை நோக்கிச் செலுத்துவான். தான் நினைப்பதை எப்படிச் சொல்லி விளக்கவேண்டும் என்று அவனுக்கு எப்போதுமே தெரியாது.

அவன் என்னை மிகவும் சோர்வடையச் செய்தான். அதுதான் என்னால் தாங்க முடியாத ஒன்றாக இருந்தது. அவன் நிறைய மது அருந்துவான். ஆனால், கொஞ்சம் கொஞ்சமாகத்தான் அருந்துவான். மது அருந்தும்போது அவ்வப்போது வெறுப்பேற்றும் வகையில் ஏதாவது முணுமுணுத்துக் கொண்டே இருப்பான். இந்த மாதிரியான விரும்பத்தகாத விஷயங்களைத் தவிர, அவனிடம் குறிப்பிட்டுக் கூறும்படி வேறு ஏதாவது சிறப்பு அம்சங்கள் இருந்து நான் பார்த்ததில்லை. தன் மனைவியை நோட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு மனிதனிடம் கெட்ட குணங்களைத் தவிர வேறு எதையும் பார்க்கக்கூடாது என்றொரு கூற்றே இருக்கிறதே!

உக்ரெயினிலிருந்த அவனுடைய பணக்காரரான ஒரு உறவினர் ஒவ்வொரு மாதமும் 50 ரூபிள்கள் அவனுக்கு அனுப்பிக் கொண்டிருந்தார். அந்தக் காலத்தில் அது ஒரு பெரிய தொகையே. ஞாயிற்றுக் கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் அவன் என் மனைவிக்கு நிறைய சாக்லேட்டுகளைக் கொண்டு வந்து கொடுப்பான். அவளுடைய பிறந்த நாளன்று அவன் அவளுக்கு ஒரு பரிசு கொடுத்தான். ஒரு மரக்கட்டையில் நின்று கொண்டு பாம்பொன்றைக் கொத்திக் கொல்லும் ஆந்தையின் உருவத்தைக் கொண்ட செம்பால் ஆன ஒரு மணியடிக்கும் கடிகாரம் அது. வெறுப்பு உண்டாக்கிய அந்தக்

கடிகாரம் என்னை எப்போதும் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருமணி ஏழு நிமிடங்களுக்கு முன்பே எழுப்பி விட்டுக் கொண்டிருந்தது.

அவனுடன் இப்படி சிரிக்கச் சிரிக்கப் பழகுவதை என் மனைவி திடீரென்று நிறுத்திக் கொண்டாள். அவனுடைய உணர்ச்சிகளின் சமநிலையை மாற்றியமைத்ததில் தனக்குப் பங்கு இருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டோ என்னவோ அவள் அவனுடன் ஒரு பெண் சாதாரணமாக நடந்து கொள்வதைப்போல் நடக்க ஆரம்பித்தாள். வருத்தப்படக்கூடிய அந்தத் தொடர்பை அவள் எப்படி முடிவுக்குக் கொண்டு வந்தாள் என்று அவளிடமே கேட்டேன்.

"எனக்குத் தெரியாது" என்றாள் அவள். தொடர்ந்து அவள் சொன்னாள்: "உண்மையிலேயே சொல்லப்போனா அந்த ஆளுகூட எனக்கு எந்தக் காதலும் இல்ல. ஆனா, அவனைக் கொஞ்சம் சலனப்படுத்திப் பார்த்தா என்னன்னு நினைச்சேன். அவனோட மனசுக்குள்ள என்னவோ இருக்குன்றதை மட்டும் என்னால புரிஞ்சுக்க முடிஞ்சது. அதைத் தட்டி எழுப்ப என்னால முடியும்னு நினைச்சேன்..."

அவள் கூறியது உண்மைதான். யாரையாவது தட்டி எழுப்பிக் கொண்டிருப்பது என்பது அவளுடைய எந்தக் காலத்திலும் இருக்கக்கூடிய ஒரு விருப்பமாக இருந்தது. பாராட்டக்கூடிய விதத்தில் அவள் அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றுக் கொண்டிருந்தாள். ஆனால், எப்போதும் அவள் தட்டி எழுப்பிவிட்டது ஆணுக்குள் மறைந்திருக்கும் மிருகத்தைத்தான். நான் அவளிடம் சிர்ஸேயின் கதையைச் சொன்னேன். ஆனால், அதனால் எந்தவித பயனும் உண்டாகவில்லை. சிறிது சிறிதாக நான் காளைகளுக்கும் மூட்டைப் பூச்சிகளுக்கும் பன்றிகளுக்கும் மத்தியில் சிக்கிக் கொண்டு தவித்தேன். எனக்கு நன்கு அறிமுகமானவர்களில் பலரும் அவளைப் பற்றி ரோமாஞ்சம் கொள்கிற மாதிரி பல கதைகளைச் சொன்னார்கள்.

ஆனால், அவர்கள் எல்லாரிடமும் நான் மிகவும் மரியாதையை விட்டு சொன்னேன்:

"இப்படியெல்லாம் பேசினா நான் அடிக்க வேண்டியதிருக்கும்."

சிலர் வெட்கப்பட்டு அவர்களே பின்வாங்கினார்கள். வேறுசிலர் என்னையே திருப்பி வார்த்தைகளால் அடித்தார்கள்.

"இப்படி முரட்டுத்தனமா நடக்குறதுனால நீ நினைச்சது நடக்கப்போறது இல்ல"- என் மனைவி என்னிடம் சொன்னாள்: "அவங்க மோசமான கதைகளை வெளியே பரவ விட்டுக்கிட்டுத்தான் இருப்பாங்க. உனக்கு இந்த விஷயத்துல பொறாமை இல்லைன்னு உறுதியா சொல்ல முடியுமா?"

'இல்லை. நான் மிகவும் வயதில் சிறியவன். என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. நான் பொறாமைப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஆனால், அதே நேரத்தில் சில சிந்தனைகள், உணர்வுகள், பிரச்சினைகள் வாழ்க்கையில் இருக்கின்றன. அவற்றை ஒரு மனிதன் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள முடியாது. தான் காதலிக்கும் பெண்ணிடம் மட்டும்தான் அதை அவன் சொல்ல முடியும்.


கடவுளிடம் கூறுகிற மாதிரி தன்னுடைய இதயம் நேசிக்கக்கூடிய பெண்ணிடம் தன்னுடைய மனதைச் சமர்ப்பணம் செய்யும் சில சந்தர்ப்பங்கள் வாழ்க்கையில் வரும் நெருக்கமாக இருக்கும் தருணத்தில் அவள் இந்த விஷயங்களை எனக்கு மட்டுமே சொந்தமான அந்த விஷயங்களை- வேறு யாரிடமாவது அவள் சொல்லி விடுவாளோ என்று நினைக்கிறபோது, நான் ஒரு மாதிரி ஆகிவிடுகிறேன். நான் ஏமாற்றப்படுவதைப்போல் ஒரு உணர்வு எனக்கு உண்டாகிறது. சொல்லப் போனால் எல்லாவகை பொறாமைகளுக்கும் அடிப்படை இந்த மாதிரியான புரிதல்களாகத் தான் இருக்கும்.

இப்போது வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை நான் தேர்ந்தெடுத்த பாதையிலிருந்து விலகிப்போய்விடும் என்பது மாதிரி எனக்குத் தோன்றியது. இனிமேல் இலக்கியத்தில் முழுமையாக மூழ்க வேண்டிய மனிதன் நான் என்று எனக்குத் தெரிந்து விட்டது. அதே நேரத்தில் இப்படிப்பட்ட சூழ்நிலையில் இருந்து கொண்டு என்னால் நிச்சயம் வேலை செய்ய முடியாது என்பதையும் உணர்கிறேன். மனிதர்கள் மீது கொண்டிருக்கும் மரியாதையும் ஆர்வமும் சிறிதும் குறையாமல் பலவீனங்களுடனும் கெட்ட விஷயங்களுடனும் இருக்கும் அவர்களை அப்படியே ஏற்றுக்கொள்ள வாழ்க்கை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது. இது என்னுடைய வீட்டிற்குள் பிரச்சினைகள் இல்லாமல் இருக்க எனக்கு உதவியாக இருக்கிறது. மெய்ப்பொருள் என்று அழைக்கப்படும் கடவுளுக்கு முன்னால் மனிதர்கள் எல்லாருமே ஒரு விதத்தில் இல்லையென்றாலும், இன்னொரு விதத்தில் குற்றம் செய்பவர்களாக நின்று கொண்டிருக்கிறார்கள் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. தான்தான் பெரியவன் என்று ஆணவம் பொங்க கூறுவதற்கு நிகராக மனிதனிடம் இருக்கும் வேறொரு கெட்ட பழக்கத்தைக் கூற முடியாது. தான் செய்வதுதான் சரி என்று மிருகத்தனமாக ஒரு மனிதன் கூறுகிறான் என்றால், அவனிடம் இருக்கும் கெட்ட, நல்ல பழக்கங்களின் கலவையால் உண்டான விளைவே அது. அந்த எண்ணம் வன்முறை, கற்பழிப்பு ஆகியவற்றால் ஒருவனிடம் உண்டாகாது. மாறாக, சட்டப்படி நடக்கும் திருமண உறவுகளாலும், பாதிரியாராக வேஷம் போட வேண்டிய நிர்ப்பந்தத்தாலும் உண்டாகும் விளைவே அது. இரண்டு மாறுபட்ட துருவங்களை ஒன்றாகக் கொண்டு வந்து இணைக்கும் ஒரு பழமையான தத்துவத்தின் வடிவம்தான் திருமணம் என்பது. அந்தக் காலத்தில் வினோதமான விஷயங்கள் மீது சிறு குழந்தைகள் ஐஸ் மீது விருப்பம் வைத்திருப்பதைப் போல எனக்கு ஆர்வம் உண்டு. வினோதமான விஷயங்களின் உண்மைத் தன்மை காலப்போக்கில்

எனக்குத் தெரிய வந்தது. வார்த்தைகள் உண்மையின் மீது மேற்பூச்சாக பூசப்பட்டிருப்பதை என்னால் உணர முடிகிறது.

"நான் போறதுதான் நல்லதுன்னு நினைக்கிறேன்"- நான் அவளிடம் சொன்னேன்.

அதற்குப் பதில் சொல்வதற்கு அவள் சிறிதுநேரம் எடுத்துக் கொண்டாள். "சரிதான்..."- அவள் சொன்னாள்: "நீ சொன்னது சரிதான். இது உன்னோட வாழ்க்கை இல்ல. என்னால அதைப் புரிஞ்சுக்க முடியுது.

சிறிது நேரத்திற்கு நாங்கள் இருவரும் எங்களுக்கு உண்டான கவலையில் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் இறுகத் தழுவிக்கொண்டோம். அதற்குப்பிறகு நான் நகரத்தை விட்டுப் புறப்பட்டேன். எனக்குப் பிறகு அவளும் அங்கிருந்து கிளம்பினாள். அவள் ஒரு நாடக நடிகையாக ஆனாள்.

என் முதல் காதலின் முடிவு அதுதான். முடிவு சோகமாக இருந்தாலும் அது ஒரு மகிழ்ச்சியான கதைதான்.

சில நாட்கள் கடந்தபிறகு, அவள் மரணத்தைத் தழுவினாள்.

அவள் ஒரு நல்ல பெண் என்பதைக் கூறாமல் இருக்கமுடியாது. வாழ்க்கையை அதன் வழியே சென்று எப்படிச் சந்திக்க வேண்டும் என்பதை அவள் தெரிந்து வைத்திருந்தாள். எல்லா நாட்களும் அவளுக்கு ஒரு விடுமுறை நாளுக்கு முந்தைய நாளைப்போலவே இருக்கும். அடுத்த நாள் புதிய பூக்களைப் பரிசாகத் தரும் என்றும்; நல்ல மனிதன் தோன்றுவான் என்றும்; அசாதாரணமான சம்பவங்கள் நடைபெறும் என்றும் அவள் எப்போதும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் வாழ்க்கையின் துன்பங்களை கிண்டல் பண்ணவும், வெறுக்கவும் செய்தாள். கொசுக்களை விரட்டியடிப்பதைப் போல அவள் அவற்றை விரட்டினாள். ஏதாவது நல்ல விஷயங்களைப் பார்த்து விட்டால், அதற்காக அவள் சந்தோஷப்படவும் ஆச்சரியப்படவும் செய்தாள். ஒரு கள்ளங்கபடமற்ற பள்ளிக்கூட சிறுமியின் சந்தோஷமல்ல அது. வாழ்க்கையின் பலவிதப்பட்ட வண்ணங்கள் கொண்ட மாறுதல்களையும் விரும்பிய ஒரு மனிதப்பிறவியின் மகிழ்ச்சியே அது. வெயிலில் பிரகாசிக்கும் தூசுகளைப் போல ஒவ்வொரு நாளும் மனித உறவுகளில் நடந்து கொண்டிருந்த சந்தோஷத்தையும், துக்கத்தையும் அவள் ஆர்வத்துடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.

அவள் மனிதர்கள் மீது அன்பு செலுத்தினாள் என்று கூறுவதற்கில்லை. ஆனால், மனிதர்களைக் கூர்மையாகக் கவனிப்பதில் மிகவும் அக்கறையுடன் இருந்தாள். பல நேரங்களில் கணவன்- மனைவி இருவருக்குமிடையே இருக்கும் நாடகத்தைப் பெரிதுபடுத்தியோ இல்லாவிட்டால் காதலர்களுக்கிடையே இருக்கும் உறவில் இருக்கும் பொறாமையை ஊதிவிட்டோ ஒருவரால் இன்னொருவருக்குப் பிரச்சினை வரும் வண்ணம் அவள் ஏதாவது செய்து விடுவாள். இப்படிப்பட்ட ஆபத்தான விளையாட்டு அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.

"பசியும் காதலும்தான் இந்த உலகத்தை ஆட்சி செய்து கொண்டிருப்பவை; தத்துவங்கள் அவற்றை அழிக்கின்றன" என்று அவள் அடிக்கடி கூறுவாள். "மனிதன் வாழ்வதே காதலுக்காகத்தான். அதுதான் அவனுக்கு முக்கியமான விஷயம்."

எங்களுக்குப் பழக்கமான மனிதர்களில் ஒருவர் வங்கியொன்றில் கிளார்க்காகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். உயரமான, ஒல்லியான உடலைக்கொண்ட, ஒரு கொக்கைப்போல மெதுவாக நடந்து செல்லும் ஒரு மனிதர் அவர். ஆடைகள் அணியும் விஷயத்தில் சிறிதும் திருப்தியே வராத மனிதர் அவர். அவ்வப்போது கண்ணாடியில் பார்த்து தான் ஆடைகள் அணிந்திருப்பது சரியாக இருக்கின்றதா என்று பார்த்துக் கொள்வார். அவருக்கு மட்டுமே தெரியக்கூடிய தூசியை அவர் தன்னுடைய மெலிந்து போன விரல்களால் தட்டி  விடுவார். பெரிய கோட்பாடுகளுக்கும், வார்த்தைகளுக்கும், எழுத்துக்களுக்கும் அவர் முழுமையான எதிரி. அவருடைய நாக்குக்கு இந்த மாதிரி விஷயங்களெல்லாம் சிறிதும் தெரியாது. அவர் மெதுவாகப் பேசுவார். அந்தப் பேச்சு யாரையும் கவரக்கூடிய விதத்தில் இருக்கும். தனக்கு விருப்பமுள்ள சாதாரண விஷயங்களைப் பற்றி மிகவும் கவனமெடுத்து பேசிக்கொண்டிருக்கும்போது, தன்னுடைய விரல்களால் அந்தச் சிவந்த நிறமுள்ள மீசையை அவர் தடவி விட்டுக் கொள்வார்.

"காலம் செல்லச் செல்ல வேதியியல் மிகவும் முக்கியத்துவம் உள்ள ஒண்ணா இருக்கும். தொழிற்சாலைகள்ல பயன்படுத்துற கச்சாப் பொருட்களை உற்பத்தி செய்யிறதுல அதன் பங்கு பெருசா இருக்கும். பெண்கள் நிலையில்லாத புத்தியைக் கொண்டவர்கள் என்பது சரியான கூற்று. உடல் ரீதியா ஒரு மனைவிக்கும் வைப்பாட்டிக்கும் எந்த வித்தியாசமும் இல்ல. சட்ட ரீதியான வித்தியாசம் மட்டுமே இருக்கு..."


ஒருநாள் நான் என் மனைவியைப் பார்த்து தீவிரமான சிந்தனையுடன் கேட்டேன்:

"முக்கிய நபர்களாக இருப்பவர்களுக்குச் சிறகுகள் இருக்குன்னு இப்போதும் நம்புறியா?"

அவளுடைய பதில் உயிரற்று, குற்ற உணர்வு கலந்து இருந்தது. "அப்படியெல்லாம் இல்ல. ஆனா, யானைகளுக்கு அவிச்ச முட்டை கொடுக்குறது முட்டாள்தனம்னு நான் நினைக்கிறேன்."

நாங்கள் இப்படி பேசிக்கொண்டிருந்ததை ஒன்றிரண்டு நிமிடங்கள் கவனித்துக் கொண்டிருந்த எங்களின் நண்பர் எங்களைப் பார்த்துச் சொன்னார்:

"நீங்க ரெண்டு பேரும் உருப்படியா எதைப் பற்றியும் பேசலைன்னு நான் நினைக்கிறேன்."

மேஜையின் ஒரு காலில் தன் முழங்காலை ஒருநாள் இடித்துக்கொண்ட அவர் வேதனையைத் தாங்க முடியாத நிலையில் சொன்னார்:

"கேள்வி கேட்க முடியாத நிலையில் உலகத்தில் வழிநடத்திச் செல்லும் ஒரு பகுதி விதி என்பதை நான் ஒத்துக்குறேன்."

ஒரு நாள் கதவுக்குப் பக்கத்தில் அவரைப் பார்த்த என் மனைவி என் முழங்காலில் பாதி சாய்ந்தவாறு மகிழ்ச்சியான குரலில் சொன்னாள்:

"இந்த ஆளு எவ்வளவு பெரிய முட்டாளா இருக்கணும்! எல்லா விஷயங்களிலும் இவர் முட்டாள்தான் நடக்குறதுல... பார்க்குறதுல... சின்னச் சின்ன விஷயங்களிலும் கூட. ஒரு முழுமையான மனிதர் மாதிரி பார்க்குறதுக்கு தெரியிறாரு. வா... என் கன்னத்தை வருடு."

என்னுடைய விரல்களின் நுனியைக் கொண்டு தன் அழகான கண்களுக்குக் கீழே இருக்கும் கோடுகளை மெதுவாக நான் வருடுவது அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது. ஒரு குழந்தையைப் போல என் மீது சாய்ந்து கொண்டு அவள் சொன்னாள்:

"மனிதர்கள் எவ்வளவு ஆர்வத்தைத் தூண்டுறவங்களா இருக்காங்க! மத்தவங்க 'போர்'னு நினைக்கிற ஆளுங்க கூட எனக்கு ரொம்பவும் பிடிச்சிருக்காங்க. ஒரு விளையாட்டுப் பெட்டியைப் பார்க்குற மாதிரி அந்த மனிதனை நான் பார்க்க விரும்புறேன். இதுவரை யாரும் கண்டு பிடிக்காத பல விஷயங்களை என்னால அந்த மனிதன்கிட்ட இருந்து கண்டுபிடிக்க முடியும். சொல்லப்போனா, அதை முதல் தடவையா பார்க்குறதே நானாகத்தான் இருக்கும்."

எதையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்ற அவளுடைய தேடல் ஒரு சாதாரண நடிப்பு அல்ல. தனக்குச் சிறிதும் அறிமுகமே இல்லாத ஒரு அறைக்குள் நுழையும் ஒரு குழந்தையின் ஆர்வத்துடன் அவள் தன்னுடைய தேடலை நடத்தினாள். பல நேரங்களில் தன்னுடைய அலட்சியமான கண்களில் அவள் ஒரு பிரகாசத்தை வெளிப்படுத்துவாள். ஆனால், அவளைச் சொந்தமாக்க வேண்டும் என்ற எண்ணத்தைத்தான் அவள் பலரிடமும் உண்டாக்கினாள்.

தன் உடம்பை அவள் மிகவும் நேசித்தாள். கண்ணாடிக்கு முன்னால் நிர்வாணமாக நின்றிருக்கும்பொழுது அவள் ஆச்சரியத்துடன் கூறுவாள்: "ஒரு பெண் எவ்வளவு அழகா படைக்கப்பட்டிருக்கா! அவ உடம்புல இருக்குற வளைவுகள் என்ன அழகா இருக்கு!"

தொடர்ந்து அவள் சொன்னாள்:

"நான் நல்ல ஆடைகள் அணிஞ்சிருக்கிறப்போ, பலசாலியாகவும் ஆரோக்கியம் உள்ளவளாகவும் அதிக புத்திசாலியாக இருப்பதாகவும் உணர்றேன்."

அவள் சொன்னது உண்மைதான். ஒரு அழகான ஆடை அவளுடைய அறிவிலும், நடையிலும் மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வந்து விடுகிறது. அப்போது அவளுடைய கண்களில் இருக்கிற பிரகாசத்தைப் பார்க்கவேண்டுமே! பருத்தித் துணியால் அருமையான ஆடைகளைத் தயாரிப்பது அவளுடைய பழக்கம். அவள் அவற்றை அணிந்திருக்கிறபோது, அது பட்டோ வெல்வெட்டோ என்று நினைக்கிற மாதிரி இருக்கும். அந்தத் துணி ரொம்பவும் எளிமையானதுதான். ஆனால், பார்ப்பதற்குப் பகட்டாக இருக்கும். அந்த ஆடைகளைப் பார்த்து மற்ற பெண்கள் பாராட்டினார்கள். ஆனால், அந்தப் பாராட்டு நேர்மையாக இருக்காது. ஒரு வகை பொறாமை அதில் கலந்திருக்கும். அவளைப் பார்த்து அவர்கள் பொறாமைப்பட்டார்கள். அவர்களில் ஒருத்தி கோபத்துடன் சொன்னதை இப்போது கூட நான் நினைத்துப் பார்க்கிறேன்:

"நான் அணிஞ்சிருக்குற கவுன் உன்னோட கவுனைவிட மூணு மடங்கு விலை உள்ளது. ஆனா, உன் கவுன்ல பத்துல ஒரு மடங்கு கூட இது அழகா இல்ல. உன்னைப் பார்க்குறப்போ எனக்குப் பொறாமையா இருக்கு."

இயல்பாகவே பெண்கள் அவளை வெறுத்தார்கள். அவர்கள் அவளைப் பற்றி பலவிதப்பட்ட செய்திகளையும் வெளியே பரப்பினார்கள். தன்னிடமிருக்கும் அழகு அளவிற்கு முட்டாள்தனத்தையும் கொண்ட ஒரு பெண் டாக்டர் என்னிடம் ஒருமுறை சொன்னாள்:

"அந்தப்பெண் உன்கிட்ட இருக்கிற ரத்தம் முழுவதையும் உறிஞ்சிடுவா."

என்னுடைய முதல் காதல் மூலம் நான் ஏராளமான விஷயங்களைக் கற்றுக்கொண்டேன். எனினும், எங்களுக்கிடையில் தலைதூக்கி நின்ற- அனுசரித்துப் போகவே முடியாத கருத்து வேறுபாடுகளைப் பார்த்து நான் மிகவும் வேதனைப்பட்டேன்.

நான் வாழ்க்கையை மிகவும் ஆழமாகப் பார்த்தேன். நிறைய விஷயங்களைப் பார்த்தேன். நிறைய சிந்தித்தேன். தொடர்ந்து அமைதி இல்லாத மனதுடன் நான் வாழ்ந்து கொண்டிருந்தேன். என் மனதிற்குள் கர்ண கொடூரமான குரல்களில் தொடர்ந்து பலரும் பல கேள்விகள் எழுப்பிய வண்ணம் இருந்தனர். அவளால் எனக்குப் பிரயோஜனமில்லை என்று அந்தக் குரல்கள் கூறின.

ஒருநாள் சந்தையில் கடை வைத்திருந்த ஒரு வியாபாரியிடம் முள்ளங்கி திருடிவிட்டான் என்பதற்காக ஒரு ஒற்றைக் கண்ணைக் கொண்டு ஒரு அழகான யூதனை ஒரு போலீஸ்காரர் தன்னுடைய லத்தியால் அடித்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன். தூசு படிந்த ஆடைகளை அணிந்திருந்த அந்த வயதான மனிதன், சாலையில் மெதுவாக அதே சமயம் அமைதியாக ஓவியத்தில் இருக்கும் உருவத்தைப் போல நடந்து செல்வதைப் பார்த்தேன். அவனுடைய அந்த ஒற்றைக் கறுப்புக் கண் வெயில் நிறைந்த மேகமற்ற வானத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு மெல்லிய கோட்டைப் போல ரத்தம் அவனுடைய வாயின் ஓரத்திலிருந்து அவனுடைய நீளமான தாடியை நோக்கிக் கீழே வழிந்து கொண்டிருந்தது.

அந்தச் சம்பவம் நடந்து முப்பது வருடங்கள் ஓடி முடிந்த பிறகும் அந்த மனிதனின் வெண்மையான கண் புருவங்கள் நடுங்கியதையும் வானத்தை நோக்கி வெறித்த கண்களில் இருந்த எதிர்ப்புணர்வையும் என்னால் இப்போதும் பார்க்க முடிகிறது. மனிதன் மீது- மனிதர்கள் மீது ஏவிவிடப்படும் அவமானத்தை மறப்பது என்பது எளிதான ஒரு விஷயமல்ல- அவற்றை மறக்கத்தான் முடியுமா?

கோபமும் ஏமாற்றமும் கிழித்து ரணகளமாக்கிய இதயத்துடன் நான் வீட்டிற்குத் திரும்பி வந்தேன். இவ்வகைப்பட்ட அனுபவங்கள் இந்தச் சமூகத்தை வெறுக்கும்படி என்னைச் செய்தது. மனித மனங்களில் வெறுப்பை உண்டாக்குகிற, சேற்றிற்குள் புதைத்து அசிங்கம் செய்கிற சம்பவங்களைப் பார்த்தபோது நான் ஏதோ ஒரு ஒதுக்கப்பட்ட ஒரு உயிரைப்போல உணர்ந்தேன். அத்தகைய சம்பவங்களைக் காணும் சந்தர்ப்பங்களில்தான் எனக்கும் நான் காதலித்த அந்தப் பெண்ணுக்குமிடையே இருந்த மிகப்பெரிய இடைவெளியை நான் உணர்ந்தேன்.


என் மனதிலுள்ளதை அப்படியே அவளிடம் சொன்னபோது அவள் மிகவும் ஆச்சரியப்பட்டாள்.

"அப்படிப்பட்ட சம்பவங்கள் தான் இப்படிப்பட்ட நிலையில் உன்னைத் தள்ளி விட்டதா? எவ்வளவு மென்மையான உணர்ச்சியைக் கொண்ட மனிதனாக நீ இருக்குற? அந்த மனிதன் ரொம்பவும் அழகா இருந்தான்னு நீ சொல்ற. அவனுக்கு ஒரே ஒரு கண்தான் இருந்ததுன்னா, அவன் எப்படி அழகானவனா இருக்க முடியும்?"

துன்பங்கள் அவளுக்கு வெறுப்பைத் தந்தன. துரதிர்*டத்தைப் பற்றி யாராவது பேசினால் அவளுக்குப் பிடிக்காது. உணர்ச்சிமயமான பாடல்களை அவளுக்குப் பிடிக்காது. அவள் மனிதர்கள் மீது பரிதாபம் கொள்வது என்பது எப்போதாவது ஒருமுறைதான் நடக்கும். தன்னுடைய துயரங்களைப் பார்த்து தானே சிரிக்கும் ஹெய்ன், பெராங்கர் போன்ற கவிஞர்களைத்தான் அவளுக்குப் பிடிக்கும்.

குழந்தைகள் மந்திரவாதிகளை எப்படிப் பார்ப்பார்களோ, அப்படித்தான் அவள் வாழ்க்கையைப் பார்த்தாள். அவளுடைய ஒவ்வொரு செயலும் ரசிக்கும்படி இருக்கும். ஆனால், மிகவும் சுவாரசியமானது எப்போதுமே இனிமேல் வரப்போவதாகத்தான் இருக்கும். நாளையோ, நாளை மறுநாளோ மந்திரவாதி தன் புதுமையான வித்தையைக் காட்டாமல் இருந்தாலும், நிச்சயம் அவன் காட்டுவான் என்பது உண்மை. தன்னுடைய மரண சமயத்தில் அந்த ஆச்சரியமான, குறிப்பிடத்தக்க வித்தையைப் பார்க்க அவள்  மிகவும் ஆர்வமாக இருந்தாள் என்று நான் நினைக்கிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.