Logo

ராசலீலை

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
raasaleelai

மூவாயிரம் கிலோமீட்டர் தூரம் பயணம் செய்தபிறகு வண்டி நகரத்தின் புகைவண்டி நிலையத்தில் அதன் நீண்ட பயணத்தை முடித்தது. தான் அமர்ந்திருந்த இரண்டாம் வகுப்புப் பெட்டியை விட்டு கடைசியாக ப்ளாட்ஃபாரத்தில் இறங்கியது கண் பார்வை தெரியாத கிருஷ்ணன்தான். பத்து வருடங்களுக்குப் பிறகு அவன் மீண்டும் அந்த நகரத்திற்கு வருகிறான். ஒரு கையில் தன்னுடைய பெட்டியைத் தூக்கிப் பிடித்துக்கொண்டு இன்னொரு கையில் பிரம்பைப் பிடித்துக்கொண்டு தடவியவாறு கூட்டத்திற்கு மத்தியில் அவன் முன்னோக்கி நடந்தான்.

பாலனைப் பார்க்காததால் அவனிடம் ஒருவித பதைபதைப்பு உண்டானது. பாலன் வரவில்லையென்றால் கண் பார்வை தெரியாத கிருஷ்ணனால் பாலன் இருக்குமிடத்தை எப்படி அடைய முடியும்? ஆட்கள் அவனை இப்படியும் அப்படியுமாய் உரசிக்கொண்டு நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். வெளியே போகும் வழி அவனுக்குத் தெரியவில்லை. இருட்டில் தடவியவாறு ஒரு சுவரைக் கண்டுபிடித்து அவன் அதன்மீது சாய்ந்து நின்றான். நேரம் மதிய நேரத்தைத் தாண்டிவிட்டிருக்க வேண்டும். தேநீரின் வாசனை வந்து கொண்டிருந்ததை வைத்து ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் தேநீர் கடையொன்றின் அருகில் தான் நின்றுகொண்டிருப்பதை அவனால் யூகிக்க முடிந்தது. அவனுக்குப் பயங்கரமாக வியர்த்துக் கொண்டிருந்தது. கையிலிருந்த பிரம்பைச் சுவர்மீது சாய்த்து வைத்துவிட்டு, சட்டைப் பையிலிருந்து கைக்குட்டையை எடுத்து தன்னுடைய முகத்தை அவன் துடைத்துக்கொண்டான். சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பிரம்பு கீழே விழுந்தது. குனிந்து ஒருவித பதைபதைப்புடன் அவன் அதைத் தேடி எடுத்தான். அப்போது சட்டைப் பையிலிருந்த தாள்களும் நாணயங்களும் கீழே விழுந்தன. அந்தத் தாள்களில் ஒன்றில்தான் பாலனுடைய முகவரி இருந்தது. அவன் குனிந்தமர்ந்து தாள்களைத் தேடினான். அப்போது யாரோ ஒரு ஆள் அவனுடைய கை மீது மிதித்தான். தாள் கிடைத்த மகிழ்ச்சியில் அவன் தன் கையில் உண்டான வலியை உணரவில்லை.

“நல்ல ஆள்” -பாலன் சொன்னான்.

“நான் உன்னை எங்கேயெல்லாம் தேடுகிறது!”

கிருஷ்ணனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருந்தது. பாலனுடைய உடலிலிருந்து வரும் வாசனையை அவன் உணர்ந்தான். நகரத்தை விட்டுப்போன பிறகு பலமுறை பாலன் ஊருக்குப் போய் கிருஷ்ணனைப் பார்த்திருக்கிறான்.

“என்ன... பயந்துட்டியா?”

பாலன் சிரிப்பதை அவன் கேட்டான். அவன் பெட்டியை எடுக்கும் ஓசையையும்தான்.,

“வா...”

பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு நடந்தான். பத்து வருடங்களுக்கு முன்பு இதே புகைவண்டி நிலையத்திலிருந்துதான் கிருஷ்ணன் ஊருக்கு வண்டி ஏறினான். அன்று அவனை வழியனுப்பி வைக்க வந்தவர்களின் கூட்டத்தில் பாலனும் இருந்தான். இருக்கை எண்ணைக் கண்டுபிடித்து அவனை இருக்கையில் கொண்டு வந்து உட்கார வைத்ததுகூட பாலன்தான்.

இருட்டு திடீரென்று சிவந்தது மாதிரி இருந்தது. அவர்கள் புகைவண்டி நிலையத்தை விட்டு வெளியே வந்திருந்தார்கள். குதிரை வண்டிக்காரர்கள், ஆட்டோ ரிக்க்ஷாக்காரர்கள் ஆகியோரின் ஆரவாரம் அங்கு பலமாக இருந்தது. வெயில் சுட்டெரிக்க அவர்கள் சாலை வழியே நடந்தார்கள். ஆப்பிள் பழங்களின் வாசனையை கிருஷ்ணன் உணர்ந்தான். இரைகளைப் பிடிப்பதற்காகக் காத்து நின்றிருந்த குதிரை வண்டிகளுக்கருகில் சாலையோரத்தில் பழவியாபாரம் செய்து கொண்டிருந்தவர்கள் வரிசையாக உட்கார்ந்திருந்தார்கள். மேடும் பள்ளமுமாய் இருந்த சாலையில் கால் வைப்பதற்கு இடமில்லை. குதிரை வண்டிகளும் ஆட்டோ ரிக்க்ஷாக்களும் பஸ்களும் கால்நடையாக நடந்து செல்பவர்களும் ஆக்கிரமித்ததில் சாலை திணறிக் கொண்டிருந்தது. சாலையின் இரு பக்கங்களிலும் இருந்த பழைய கட்டிடங்களின் கீழ் பகுதிகளிலும் மும்முரமாக வியாபாரம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. மேல் மாடிகளில் பலதரப்பட்ட தங்கும் விடுதிகளும் விலைமாதுக்கள் இருக்கும் இடங்களும் இருந்தன. கிருஷ்ணன் நினைத்துப் பார்த்தான். பத்து வருடங்களுக்கு முன்பு அவனுடைய கண்களுக்குப் பார்க்கும் சக்தி இருந்தது. ஒரு நாள் அவன் பார்க்க அந்த இருளடைந்த கட்டிடங்களின் மேல் மாடிக்கு ஏறிச்சென்ற காவல் துறையினர், அங்கிருந்த விலைமாதர்களைப் பிடித்துக்கொண்டுவந்து அவர்களின் தலைமுடியை அறுத்து, அடித்து உதைத்தார்கள். அப்போது அந்த விலைமாதுக்களின் உரிமையாளரான ஒரு கிழவி ஒடுங்கலான படிகள் வழியே வேகமாக வந்து காவல்துறையினரைப் பார்த்து வாய்க்கு வந்தபடி திட்டியதோடு நிற்காமல் தன்னுடைய ஆடையை மேலே தூக்கிக்காட்டவும் செய்தாள். அவன் அதையெல்லாம் நினைத்துப் பார்த்தான்...

“பாலன்...”

“என்ன?”

“இந்தச் சாலையின் ஓரத்தில் இடிந்துபோன அந்தக் கட்டிடங்கள் இப்பவும் இருக்கா?”

பாலன் வெறுமனே அந்தப் பக்கம் பார்வையை ஓட்டினான். அந்த இடிந்துபோன பழைய கட்டிடங்கள் அதேபோல்தான் இப்போதும் இருந்தன. மேலே புகைபிடித்து மேற்பூச்சு உதிர்ந்து போயிருக்கும் கைப்பிடிகளைப் பிடித்தபடி நின்றிருக்கும் விலைமாதுக்கள் கைகளை அசைத்து சாலையில் செல்வோரை அழைத்துக் கொண்டிருக்கிறார்கள். பத்து வருடங்கள் அல்ல; நூறு வருடங்கள் கடந்தாலும் இந்த விஷயத்தில் எந்தவொரு மாற்றமும் உண்டாகப் போவதில்லை என்பது மட்டும் பாலனுக்கு நன்றாகவே தெரியும்.

“நீ என்ன ஒண்ணுமே பேசாம இருக்கே?”

“கிருஷ்ணா, அந்தப் பழைய கட்டிடங்கள்ல ஒண்ணுகூட இப்போது இல்ல. அந்த இடத்துல இப்போ புதிய கான்க்ரீட் கட்டிடங்கள் இருக்கு...”

“அப்போ மேல மாடியில இருந்த விலைமாதர்கள்...?”

“அது உனக்கு தெரியாதா கிருஷ்ணா? சமூகத்துல ஒரு மோசமான தொழிலாக இருந்த விபச்சாரத்தை ஒழிப்பதற்காக நம்ம அரசாங்கம் ஒரு புதிய திட்டம் கொண்டுவந்துச்சு. அதன் விளைவா இப்போ நகரத்துல விலைமாதர்களே இல்ல. அவங்கள்லாம் இப்போ மரியாதையான தொழில் செய்து மனைவிகளாகவும் தாய்களாகவும் வாழ்க்கையை நடத்திக்கிட்டு இருக்காங்க.”

இவ்வளவையும் சொன்ன பாலன் வலது பக்கம் முகத்தைத் திருப்பி மேலே பார்த்தான். முகத்தில் சாயம் தேய்த்துக்கொண்டு அதிகபட்சம் பன்னிரண்டோ, பதின்மூன்றோ வயது இருக்கக்கூடிய ஒரு இளம்பெண் அவனைக் கைகாட்டி அழைத்தாள். கிருஷ்ணனுக்குப் பார்வை தெரியாமல் போனது எவ்வளவு நல்லதாகப் போயிற்று என்று நினைத்தான் பாலன். கிருஷ்ணன் இதையெல்லாம் பார்க்க வேண்டியதில்லையே!

அவர்கள் இருவரும் ஒரு குதிரை வண்டியில் ஏறினார்கள். கிருஷ்ணனின் பெட்டியை பாலன் தன்னுடைய கால்களுக்கு மத்தியில் சேர்த்து வைத்துக்கொண்டான். பிரம்பைத் தன்னுடைய மடியில் வைத்த கிருஷ்ணன் இருக்கையில் சாய்ந்து உட்கார்ந்தான். குதிரை வண்டி குலுங்கிக் குலுங்கி போய்க் கொண்டிருந்தது.

“பாலா, இப்போல்லாம் இங்கே குதிரை வண்டிகள் இருக்காதுன்னு நான் நினைச்சேன்...”

அதற்கு பாலன் சிரித்தான். “குதிரை வண்டின்றது ஒரு அடையாளம்ன்னு சொல்றதுதான் சரி. நம்ம நாட்டோட பழமைக்கும் மாற்றமில்லாமைக்கும்...”

கால் நூற்றாண்டுக்கு முன்னால் வேலை தேடி கிருஷ்ணன் முதல் தடவையாக இந்த நகரத்திற்கு வந்தபோது இதேபோல ஒரு குதிரை வண்டியில் ஏறித்தான் அவன் வந்தான். அது மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்த ஒரு வயதான குதிரை.


அதற்குத் தன்னுடைய சொந்தக் கால்களால் நிற்பதற்கான பலம்கூட இல்லாமலிருந்தது.

இந்த நகரத்திலுள்ள குதிரைகளில் பெரும்பாலானவை நோய் வந்தவையாகவோ, வயதானதாகவோ இருந்தன. இருப்பினும்...

பாலன் சொன்னான். “வயதான ஒரு குதிரைகூட இப்போ இந்த நகரத்துல இல்ல. அப்படிப்பட்ட குதிரைகள் இருக்குறதை அதிகாரிகள் அனுமதிக்கிறது இல்ல. இப்போ நகரத்தில் இருக்குற எல்லா குதிரை வண்டிகளையும் படுவேகமா இழுத்து ஓடிக்கிட்டு இருக்கிறது பந்தயக் குதிரைகளைப் போல நல்ல உடல் ஆரோக்கியத்தையும் வேகத்தையும் கொண்ட குதிரைகள்தான்...”

தான் அமர்ந்திருக்கும் குதிரை வண்டிக்கு முன்னால் மின்னல் வேகத்தில் பாய்ந்துபோய்க்கொண்டிருக்கும் ஒரு பந்தயக் குதிரையை கிருஷ்ணன் கற்பனை பண்ணிப்பார்த்தான்.

“நீ இப்பவும் அந்த வார்னிஷ் ஃபாக்டரிக்குப் பக்கத்துல இருக்குற அறையிலதான் தங்குறியா?”

கிருஷ்ணன் கேட்டான்.

“இல்ல... இல்ல... எனக்கு இப்போ சொந்தத்துல ஒரு அருமையான ஃப்ளாட் இருக்கு. முன்னாடி ஒரு சின்ன பூந்தோட்டம் இருக்கு. அதுல ஒரு ஊஞ்சல் இருக்கு. சாயங்காலம் வந்தா என் மனைவியும் பிள்ளைகளும் அந்த ஊஞ்சல்ல உட்கார்ந்து காற்று வாங்குவாங்க...” -பாலன் சொன்னான்.

முன்பு பாலன் தங்கியிருந்த சிறிய, வெளிச்சமே இல்லாத அந்த அறை இப்போதுகூட கிருஷ்ணனின் மனதில் அப்படியே ஞாபகத்தில் இருக்கிறது. வார்னிஷ் ஃபாக்டரிக்குப் பக்கத்தில் இருக்கும் திருப்பத்தில் இருந்தது அந்த அறை. அதற்கு முன்னாலிருக்கும் சாக்கடையருகில் குழந்தைகள் மட்டுமல்ல, வயதானவர்களும் சிறுநீர் கழிப்பதிலோ, மலம் கழிப்பதிலோ ஈடுபட்டிருப்பார்கள். அசுத்தம் என்பது இந்திய மனதின் ஒரு பாகம் என்றுகூட கூறலாம். கிருஷ்ணன் இதைப் பற்றி பலமுறை வாதம் செய்திருக்கிறான். பிணங்கள் மிதந்து கொண்டிருக்கும் கங்கை நீர்தான் நமக்குத் தீர்த்தம். இப்படியெல்லாம் அவன் அந்தக் காலத்தில் பேசுவான்.

‘இப்போ நான் அதையெல்லாம் பார்க்கவேண்டியது இல்லியே! குருடனா இருக்குறதைப் பற்றி ஒரு இந்தியன் மனசுல கவலைப்பட வேண்டிய அவசியமே இல்லை. சொல்லப்போனா அப்படி அவங்க இருக்குறதுகூட ஒரு வகையில கொடுப்பினைன்னுதான் சொல்லணும்...’ -கிருஷ்ணன் நினைத்தான்.

ஒரு காலத்தில் கிருஷ்ணனுக்கு நல்ல பார்வை சக்தி இருந்தது. கடுகு எண்ணெய் வியாபாரம் செய்யக்கூடிய ஒரு சிறிய நிறுவனத்தில்தான் அவனுக்கு வேலை. சரஸ்வதியின் வண்ணப் படத்தைக்கொண்ட கடுகு எண்ணெய் டின்களுக்கு மத்தியில்தான் தன்னுடைய பகல்பொழுது முழுவதையும் அவன் செலவழித்தான். அஸ்பெஸ்டாஸ் ஷீட்டுகள் போட்ட பெரிய ஸ்டோரின் ஒரு மூலையில்தான் அவன் எப்போதும் அமர்ந்திருப்பான். அங்கே எப்போதும் கடுகு எண்ணெயின் மணம் இருந்துகொண்டேயிருக்கும். சேட் அவனுக்கு ஒழுங்காக சம்பளம் தருவதில்லை. ஆனால், அவனுக்குத் தேவை என்று வரும்போது எதைக் கேட்டாலும் சேட் உடனடியாகத் தருவார். கிருஷ்ணனுக்கு மூளையில் நோய் வந்தபோது சிகிச்சைக்கான முழு செலவையும் சேட்தான் பார்த்துக்கொண்டார். இரத்த அழுத்தமும் நீரிழிவு நோயும் வந்து அவர் ஒரு நிரந்தர நோயாளியாக அப்போது இருந்தார்.

கிருஷ்ணனும் பாலனும் பயணம் செய்துகொண்டிருந்த குதிரை வண்டி ஜன சந்தடி நிறைந்த தூசு கிளம்பிக்கொண்டிருந்த ஒரு சாலை வழியே மெதுவாகப் போய்க்கொண்டிருந்தது. அந்த வயதான குதிரை மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்கிக் கொண்டிருந்தது. இரு பக்கங்களிலும் இருக்கும் காட்சிகளைப் பார்ப்பதற்கு கிருஷ்ணன் மிகவும் ஆசைப்பட்டான். பதினைந்து வருடங்கள் அவன் வாழ்ந்த நகரமாயிற்றே அது! ஆனால், அவனால் நான்கு திசைகளிலும் இருட்டை மட்டுமே பார்க்கமுடிந்தது. தலையைப் பின்னோக்கி சாய்த்து வைத்து அமர்ந்திருக்கும் நேரங்களில் இருட்டில் ஒரு மங்கலான தீப்பிழம்பு அவன் கண்களில் தெரியும். அது... சூரியன்தான்.

கிருஷ்ணனின் தலையை ஞாபகங்களின் குவியல் முழுமையாக ஆக்கிரமித்துவிட்டிருந்தது. முதல் தடவையாக நகரத்திற்குள் காலடி எடுத்து வைத்தது, சேட்டிடம் வேலை பார்த்தது, பாலன் அறிமுகமானது, பழைய தாள்களும் காலி புட்டிகளும் வாங்கி விற்கும் கடைக்கு மேலே இருக்கும் தன்னுடைய அறை, தான் லீலாவைக் காதலிக்க ஆரம்பித்தது. தனக்கு வந்த நோய்...

“பாலா...”

“என்ன?”

“நீ லீலாவை பார்க்குறது உண்டா...?”

“ம்... அவ சந்தோஷமா இருக்கா.”

“குழந்தைங்க?”

“ரெண்டு குழந்தைங்க இருக்கு. ஒரு ஆண், ஒரு பெண்...”

பாலன் அவனைப் பார்த்து சிரித்தான்.

“என்ன... நீ லீலாவைப் பார்க்கணுமா?”

“கட்டாயம்...”

அதைச் சொன்னபோது கிருஷ்ணன் தனக்குள் நினைத்தான். ஒரு குருடனான தான் எப்படி லீலாவைப் பார்க்க முடியும்? கண்கள் வாடகைக்குக் கிடைப்பதாக இருந்தால் அவளைப் பார்க்க வேண்டும் என்பதற்காகவே எவ்வளவு பணத்தை வேண்டுமானாலும் அவன் செலவழிக்கத் தயாராக இருந்தான். கிருஷ்ணன் லீலாமீது அந்த அளவிற்குக் காதல் வைத்திருந்தான்.

“நாம சீக்கிரம் லீலாவைப் போய்ப் பார்ப்போம்.”

பாலன் தன்னுடைய நண்பனிடம் சொன்னான். படிப்படியாக குதிரை வண்டி அதிகமாகக் குலுங்க ஆரம்பித்தது. குண்டு குழிகள் நிறைந்த சாலையின் வழியாக அவர்கள் இப்போது பயணம் செய்து கொண்டிருந்தார்கள். திடீரென்று கிருஷ்ணன் வார்னிஷ் வாசனை வருவதை உணர்ந்தான்.

“நாம வந்துட்டோம்... ரெண்டு திருப்பங்களைத் தாண்டிட்டா என் ஃப்ளாட் வந்திடும்...” -பாலன் சொன்னான்.

“வார்னிஷ் வாசனை...”

“அது சும்மா உனக்குத் தோணுறது...” பாலன் சிரித்துக்கொண்டே கிருஷ்ணனின் கையை அழுத்தினான். “உன்னோட பழைய ஞாபகம்...”

வார்னிஷ் ஃபாக்டரியிலிருந்து வரும் அந்த வாசனை பலமாக வந்தது. முன்பு பாலன் தங்கியிருந்த அறைக்குப் போகும்போதெல்லாம் அந்த வாசனையை கிருஷ்ணன் உணர்ந்திருக்கிறான். காற்று வீசும் நேரங்களில் பாலனின் அறைவரை அந்த வாசனை வந்து கொண்டிருக்கும்.

“உன் அறையில கல்யாண வீட்டோட மணம் இருக்கு...”

கிருஷ்ணன் விளையாட்டாகக் கூறுவதுணடு.

லீலாவின் வீட்டிற்குப் போகக்கூடிய பாதையும் இதுதான். பாலனின் அறையைக் கடந்து சுமார் ஒரு மைல் தூரம் உள்ளே போகவேண்டும். அப்போது அவள் தன்னுடைய வயதான தந்தையுடன் இருந்தாள். ரெடிமேட் ஆடைகள் உற்பத்தி செய்கின்ற ஒரு நிறுவனத்தில் அவளுக்கு ஒரு சிறிய வேலை கிடைத்திருந்தது. படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு வெறுமனே ஊர் சுற்றிக் கொண்டிருந்த ஒரு தம்பியும் அவளுடன் இருந்தான். செலவுக்குப் பிரச்சினையாக இருக்கும் மாதங்களில் பாலனும், கிருஷ்ணனும் அவளுக்கு உதவிசெய்ய முன்வருவார்கள். ஆனால், பெரிய மரியாதைக்காரியாக இருந்தாள் அவள். ஒருமுறைகூட அவள் அவர்களிடமிருந்து ஒரு பைசாகூட வாங்கியதில்லை.

“தேவைப்படுறப்போ நானே கேக்குறேன். நீங்க ரெண்டு பேரும் எனக்கு என்ன வேற ஆள்களா?” - அவள் கூறுவாள்.

அவள் கள்ளங்கபடமில்லாமல் சிரிப்பாள்.

விலை குறைந்த நைலான் புடவைகளைத்தான் அவள் எப்போதும் அணிவாள்.


அவள் காதுகளில் அணிந்திருந்த வளையங்கள் ‘கில்ட்’ நகைகள் என்ற உண்மை நீண்ட காலத்திற்குப் பிறகுதான் அவனுக்கே தெரியவந்தது. விடுமுறை நாட்களில் புடவைத் தலைப்பை இடுப்பில் சுற்றிக்கொண்டு கையில் ஒரு துடைப்பத்தை வைத்துக்கொண்டு அறையையும் சுற்றுப்புறத்தையும் அவள் சுத்தம் செய்வாள். அறையின் மூலையில் சுவரில் மாட்டப்பட்டிருந்த சிறு ஸ்டாண்டில் ஒரு கடவுள் படமும் ஒரு சிறு குத்துவிளக்கும் இருக்கும். அந்த ஸ்டாண்டை அங்கு மாட்டியது பாலன்தான். மாலை மயங்கிய நேரத்தில் கிருஷ்ணன் அங்கு வரும்போது அந்தக் குத்துவிளக்கிலிருக்கும் ஒற்றைத் திரியில் எரிந்து கொண்டிருக்கும் வெளிச்சம் அறையின் மூலைவரை பரவியிருக்கும். அப்போது லீலா சமையலறையில் இருப்பாள். வயதாகி படுத்த படுக்கையில் கிடக்கும் சமயத்திலும் அவளின் தந்தைக்கு நன்றாகச் சாப்பிட வேண்டும். வயிறு நிறைய உணவு கிடைக்கவில்லையென்றால், அந்த ஆள் மிகப்பெரிய ஆர்ப்பாட்டமே பண்ணிவிடுவார். வயிறு நிறைந்துவிட்டால் அறையிலிருக்கும் சிறு கட்டிலில் ஒரு சிறு குழந்தையைப் போல அமைதியாக அவர் உறங்க ஆரம்பித்துவிடுவார்.

“என்ன இது?”

“ம்... ஒண்ணுமில்ல. கொஞ்சம் கடுகு எண்ணெய்.”

அவன் கடுகு எண்ணெய் டின்னை அவளுக்கு முன்னால் வைப்பான். ஆரம்பத்தில் அவள் அதை வாங்குவதற்கு மறுத்து விட்டாள். தன்னுடைய நிறுவனத்திலிருந்து தனக்கு அது குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்று அவன் சொன்ன பிறகுதான் அவள் அதை வாங்கிக் கொள்ள சம்மதித்தாள். பிறகு எல்லா மாதமும் அவளுக்கு உணவு சமைக்கவும் குளிர்காலத்தில் உடம்பில் தேய்த்துக் குளிப்பதற்கும் தேவைப்படும் கடுகு எண்ணெயை அவன்தான் கொண்டு வந்து தருவான்.

கடுகு எண்ணெய் தவிர வேறு எதையும் தான் லீலாவிற்குத் தரவில்லையே என்பதை நினைத்து பல நேரங்களில் கிருஷ்ணன் கவலைப்பட்டிருக்கிறான். அது அவனுடைய குற்றம் மட்டுமல்ல. அவளுடைய குற்றமும்தான். ஒருநாள் பக்கத்து நகரத்திற்கு எண்ணெயின் ஏஜன்ஸி விஷயத்தை முறைப்படுத்துவதற்காகப் போயிருந்தபோது அங்குள்ள கடை வீதியில் ஒரு மஞ்சள்நிறப் புடவையை அவளுக்காக அவன் வாங்கிக்கொண்டு வந்தான். அவளுக்கு மிகவும் பிடித்தநிறம் அது என்பதைக் கிருஷ்ணன் நன்கு அறிவான்.

“இந்தப் புடவையை நீங்களே பத்திரமா வச்சிருங்க. கல்யாணம் நிச்சயமான பிறகு நான் எடுத்துக் கட்டிக்கிறேன். போதுமா?” அவள் கள்ளங்கபடமற்ற ஒரு சிரிப்பு சிரித்தாள்.

“கிருஷ்ணா, என்ன நீ சிந்திக்கிறே?”

“லீலாவைப் பற்றி...”

“அவளுக்கு இப்போ கணவனும் குழந்தைகளும் இருக்காங்க.”

“எனக்குத் தெரியும் எனக்குத் தெரியும்...”

கிருஷ்ணன் தலையை ஆட்டினான். தேவையில்லாத ஒன்றை தான் சிந்திக்கவில்லையே என்று அவன் நினைத்தான். பழைய நினைவுகளை மீண்டும் நினைத்துப் பார்க்க அவனுக்கு உரிமை இருக்கிறதே! அதுவும் இப்போது கண் பார்வை தெரியாத ஒரு மனிதனாக மாறிவிட்ட அவன் வெறும் நினைவுகளில் மட்டும் வாழ்ந்து கொண்டிருக்கும்போது...

“கிருஷ்ணா, நான் சும்மா சொன்னேன். நீ அதைப் பற்றி தப்பா எதுவும் நினைக்காதே...”

பாலன் தன்னுடைய நண்பனின் கையைப் பிடித்து அழுத்தினான். கிருஷ்ணனின் எண்ணங்களும் உணர்வுகளும் பாலனுக்குத் தெரியாதது அல்ல. பத்து வருடங்களுக்குப் பிறகு நகரத்திற்கு மீண்டும் வந்திருக்கும் இந்தச் சூழ்நிலையில், கிருஷ்ணன் மனதின் அடி ஆழத்தில் இருக்கும் நினைவுகள்கூட எழுந்து மேலேவரும் என்பதை அவன் நன்கு அறிவான். குறிப்பாக லீலாவைப் பற்றிய நினைவுகள்... கிருஷ்ணனுக்கு பார்வை மட்டும் போகாமலிருந்தால் இப்போது அவன் லீலாவுடனும் குழந்தைகளுடனும் மகிழ்ச்சிகரமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருப்பான். ஆனால், கடவுள் அவனை அந்த வாழ்க்கைக்கு அனுமதிக்கவில்லை. அவன் பார்வை தெரியாத ஒருவனாகிவிட்டான். அவனுக்கு வேலை இல்லாமற் போய்விட்டது. லீலாவையும் அவன் இழந்துவிட்டான்.

குதிரை வண்டி ஒரு வளைவில் திரும்புவதை கிருஷ்ணனால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரத்தில் சாக்கடையிலிருந்து கிளம்பி வந்த கெட்ட நாற்றமும் அவனுடைய மூக்கிற்குள் நுழைந்தது. முன்பு பாலன் தங்கியிருந்த அறைக்குப் போகும் பாதையில் இருந்த அதே நாற்றம்... பத்து வருடங்கள் கடந்தோடிய பிறகும் அந்த நாற்றத்தை அவனால் மறக்க முடியவில்லை.

“இந்த வழி எனக்கு நல்லா அறிமுகமானது மாதிரி தெரியுதே! உன் வீட்டுக்கு இன்னும் தூரமா போகணுமா என்ன?”

“இதோ, வந்துட்டோம். ஒரே ஒரு வளைவு திரும்பணும்...”

பாலன் முன்பு வசித்த இடத்திற்குப் போகும் வழியும் இதே போலத்தான் இருந்தது. வார்னிஷ் ஃபாக்டரியைத் தாண்டி சிறிது தூரம் சென்றால் ஒரு வளைவு வரும் ஒரு கிலோமீட்டர் தூரமுள்ள சாக்கடையைத் தாண்டினால் மீண்டும் ஒரு வளைவு வரும்.

“பாலா, நான் உன்னைப் பற்றி எதுவுமே கேட்கல. பழைய ஏற்றுமதி நிறுவனத்துலதான் இப்பவும் நீ வேலை பார்க்குறியா?”

“இல்ல... இல்ல... அந்த நாசமாப் போன வேலையை நான் எப்பவோ விட்டுட்டேன். நீ போன பிறகு முயற்சிசெய்து சி.ஏ. பாஸ் ஆனேன். இப்போ எனக்கு சொந்தமா ஒரு கம்பெனி இருக்கு.” பாலன் உரத்த குரலில் சொன்னான்.

அவன் சட்டைப் பையிலிருந்து விசிட்டிங் கார்டை எடுத்து கிருஷ்ணன் கையில் வைத்தான். கிருஷ்ணன் அதை வாங்கி கையால் மெதுவாகத் தடவினான். அந்தக் கார்டில் என்ன எழுதியிருக்கிறது என்பதை அவனால் பார்க்க முடியவில்லையே. ‘சில நேரங்கள் கண்கள் இமைக்காமலிருப்பதே நல்லது’ -பாலன் தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

“சரி... நீ யாரைக் கல்யாணம் பண்ணினே! ஒரு கடிதம்கூட எனக்குப் போடலியே!”

“நல்ல கதைதான். நான் அனுப்பின கல்யாண அழைப்பிதழ் உனக்குக் கிடைக்கலியா?”

“இல்ல...”

"மன்னிக்கனும் கிருஷ்ணா! சொந்தமா கம்பெனி ஆரம்பிச்சதுல இருந்து எனக்கு என்னோட நண்பர்களை நினைக்கக்கூட நேரம் இல்லாமப் போச்சு...

“பரவாயில்ல...”

கிருஷ்ணன் தன்னுடைய நண்பனின் கையைப் பிடித்து அழுத்தினான். குதிரை வண்டி இப்போதும் ஓடிக்கொண்டுதானிருந்தது. இரு பக்கங்களிலும் இருண்டுபோய்க் காணப்பட்டது. இரண்டு பக்கங்களிலும் உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள் உள்ள அகலம் குறைவான பாதையின் வழியாக தாங்கள் போய்க் கொண்டிருப்பதை மட்டும் கிருஷ்ணனால் உணர முடிந்தது. அவ்வப்போது இருட்டில் லேசான வெளிச்சத்தின் சாயல் உண்டானது. அது கட்டிடங்களுக்கு இடையில் கடந்துவந்த சூரிய வெளிச்சத்தால் ஏற்பட்டது.

பத்து நிமிடங்களுக்குள் அவர்கள் பாலன் வசிக்குமிடத்தை அடைந்தார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு அவன் வசித்த அசுத்தம் நிறைந்த அதே அறைதான் அது. பார்வையற்ற கிருஷ்ணனுக்கு அது தெரியாது. அவனுக்குச் சிறிதுகூட சந்தேகம் தோன்றவுமில்லை.


சொந்தத்தில் ஒரு கம்பெனி ஆரம்பித்து ஒரு பஸ் சொந்தக்காரரின் மகளைத் திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் பாலனின் வசதியான வாழ்க்கையை நினைத்து உண்மையிலேயே ஆனந்த வெள்ளத்தில் திளைத்தான் கிருஷ்ணன்.

“நீ போறதுக்கு முன்னாடி ரமாவும் குழந்தைகளும் வராம இருக்கமாட்டாங்க! அப்படி அவங்க வரலைன்னா நாம ரமாவோட அப்பா வீட்டுக்குப் போய் அவங்களைப் பார்ப்போம்.” - பாலன் சொன்னான்.

“பாலா, உன் குழந்தைகளோட புகைப்படத்தை எனக்குக் கொஞ்சம் காட்டேன்.”

பாலன் சுற்றிலும் பார்த்தான். சுவரில் நிறம் மங்கிப்போய் ஒரு திரைப்பட நட்சத்திரத்தின் படமுள்ள காலண்டர் தொங்கிக் கொண்டிருந்தது.

“தாராளமா... இதோ புகைப்படத்தைக் கொண்டு வர்றேன்...” -பாலன் சொன்னான்.

அவன் அடுத்த அறையில் வசிப்பவர்களைத் தேடிச் சென்று ஏதோவொரு கண்ணாடி போட்ட புகைப்படத்தை எடுத்துக் கொண்டு வந்தான். அந்தப் புகைப்படம் அந்த வீட்டுக்காரன் வேலையிலிருந்து ஓய்வுபெற்று வந்தபோது அச்சகத்தில் மற்ற தொழிலாளிகளுடன் சேர்ந்து எடுத்துக்கொண்டது. ஒட்டிப்போன கன்னங்களுடைய ஒரு வயதான கிழவன், பத்து, பன்னிரண்டு தொழிலாளிகளுக்கு மத்தியில் கழுத்தில் பூமாலை அணிந்து ஒரு புது மணமகனைப் போல புகைப் படத்தில் நின்றிருந்தான்.

“இதோ... இதுதான் என் குடும்பப் புகைப்படம்!” - பாலன் புகைப்படத்தை கிருஷ்ணனின் மடியில் வைத்தான். “இதோ இதுதான் நான்...”

அவன் கிருஷ்ணனின் விரலைப் பிடித்து மாலையணிந்து நின்றிருக்கும் கிழவனைத் தொட்டுக் காட்டினான்.

“பாலா, நீ சூட்டா அணிஞ்சிருக்கே?”

“ஆமா... கோடுகள் போட்ட ஒரு டைகூட நான் கட்டியிருக்கேன். இதோ... இதுதான் என் மனைவி.”

அந்த க்ரூப் புகைப்படத்தில் பற்கள் வெளியே நீட்டிய கோலத்துடன் நின்று கொண்டிருந்த வயதான ஒரு பெண் இருந்தாள். அவள் அச்சகத்தில் பெருக்கி சுத்தம் செய்யும் வேலை செய்பவள். பாலன் கிருஷ்ணனின் விரலைப் பிடித்து அந்தப் பெண்ணின் முகத்தில் வைத்தான்.

“இளம் சிவப்பு நிறத்துல ஒரு பனாரஸ் புடவையை ரமா கட்டியிருக்கா. பிறகு... கிருஷ்ணா, நீ சொன்னா நம்பமாட்டே அவ கழுத்துலயும் கைகள்லயும் சேர்த்து மொத்தம் அறுபது பவுன் நகை போட்டிருக்கா, நகைகள் அணியிறது பொதுவாகவே எனக்குப் பிடிக்காது. ஆனா அவளோட அப்பா கொடுத்ததாச்சே! போட்டுக் கொள்ளட்டும்னு விட்டுட்டேன்...”

பாலன் உரத்த குரலில் சிரித்தான்.

“இனி நான் உனக்கு என் பிள்ளைகளைக் காட்டப் போறேன்... இது என் மகள்.”

கிருஷ்ணனின் விரல் அச்சகத்தின் அச்சு கோர்க்கும் மனிதனின் வழுக்கைத் தலையைத் தொட்டது.

“இது என்னோட மகன்.”

பாலன் கிருஷ்ணனின் கையிலிருந்து மெதுவாக அந்தப் புகைப்படத்தை வாங்கி பக்கத்து வீட்டுக்காரர்களிடம் திரும்ப கொண்டு போய் கொடுத்தான். பாலனின் மகிழ்ச்சி நிறைந்த குடும்பத்தைப் பார்த்த சந்தோஷத்துடன் கிருஷ்ணன் நாற்லிகாலியில் சாய்ந்து உட்கார்ந்தான். தான்தான் இப்படி ஆகிவிட்டோம். பாலனாவது நல்ல நிலையில் இருக்கட்டும் என்று மனப்பூர்வமாக நினைத்தான் கிருஷ்ணன். பாலனின் குழந்தைகளைத் தன்னால் பார்க்க முடியவில்லையே என்ற ஒரே கவலைதான் அவனுக்கு.

இரண்டு நாட்கள் மட்டுமே அவன் இந்த நகரத்தில் இருக்கிறான். திரும்பிப் போவதற்கான டிக்கெட்டை ஏற்கனவே பாலன் முன்பதிவு செய்து வைத்திருந்தான். இந்த இரண்டு நாட்களில் பல இடங்களுக்கும் அவன் போக வேண்டியிருக்கிறது. பத்து வருடங்களுக்கு முன்பு அவன் தங்கியிருந்த இடத்திற்குப் போக வேண்டுமென்று அவன் நினைத்திருந்தான். லீலாவைப் பார்க்க வேண்டும் என்றும் தீர்மானித்திருந்தான். பிறகு... தன்னுடைய நினைவுகளில் இரண்டறக் கலந்திருக்கும் சில பாதைகள், கட்டிடங்கள், பூங்காக்கள்... எல்லாம் முடிந்த பிறகு தான் வேலை பார்த்த கடுகு எண்ணெய் வியாபாரம் செய்யும் கம்பெனிக்கு ஒருமுறை போய் வர வேண்டுமென்று அவன் திட்டமிட்டிருந்தான்.

“நாம சாயங்காலம் ஒரு பூங்காவுல போய் உட்காருவோம்ல! காந்தி சிலைகூட அங்கே இருக்குமே...!”

“நீ எதையும் மறக்கல...”

“முதல்ல நாம அங்கே போவோம்.”

“கட்டாயம். அந்தப் பூங்கா இங்கேயிருந்து ரொம்பவும் தூரத்துல இல்ல. நடந்துபோகும் தூரம்தான்.”

பாலனும் கிருஷ்ணனும் காய்ந்துபோன சப்பாத்தியும் உருளைக்கிழங்கு சப்ஜியும் சாப்பிட்டார்கள்.

“ரமா இங்கே இல்லாமப் போயிட்டா. அவ ரொம்பவும் நல்ல சைனீஸ் உணவு வகைகளை சமையல் பண்ணுவா. என் ரெண்டு பிள்ளைகளுக்கும் சிக்கன் சௌமீன்னா உயிர்...”

“எனக்கு இது போதும். கடந்த நாலு வருடங்களாக நான் மாமிசமோ, மீனோ சாப்பிடுறது இல்ல.” - கிருஷ்ணன் சொன்னான்.

சைவ உணவு சாப்பிடக்கூடிய மனிதனாக மாறிய பிறகு அவனுக்கு உணவு விஷயத்தில் பெரிய அளவில் விருப்பமில்லாமல் ஆகிவிட்டது. உயிருடன் இருக்கவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக இப்போது அவன் சாப்பிடுகிறான்.

“அப்படி இருக்கக்கூடாது... ரமாவோட கார்லிக் சிக்கன் சாப்பிடாம உன்னை நான் விடமாட்டேன்.” -பாலன் சொன்னான்.

“அதைச் சாப்பிடச் சொல்லி என்னைக் கட்டாயப்படுத்தாதே பாலா.”

“ரெண்டு நாட்கள் நீ பழைய கிருஷ்ணனா இருக்கணும். உனக்கு ஞாபகம் இருக்கா? லீலா உன்னைப் பார்த்து முதல்தடவையா சிரிச்சப்போ கோழிக்கறியோட நாம ரம் குடிச்சதைச் சொல்றேன்...”

“நான் இப்போ மது அருந்துறது இல்ல...”

நம்பிக்கை வராமல் பாலன் தன்னுடைய நண்பனின் முகத்தைப் பார்த்தான். பாலனுடைய அறையின் மூலையில் காலியான சாராயப் புட்டிகள் கூட்டமாகக் கிடந்தன.

மீன் சாப்பிடுவதில்லை. மாமிசம் சாப்பிடுவதில்லை. மது அருந்துவதில்லை.

கிருஷ்ணன் இப்போது பார்ப்பது கண்களைக் கொண்டல்ல. மனதைக் கொண்டு...

சாப்பிட்டு முடித்ததும் பாலனுக்குச் சிறிது நேரமாவது தூங்க வேண்டும். ஆனால், அதற்கு கிருஷ்ணன் சம்மதிக்கவில்லை. முடிவில் அவர்கள் காந்தி சிலையிருக்கும் பூங்காவை நோக்கி நடந்தார்கள்.

முன்பு விடுமுறை நாட்களில் கிருஷ்ணனும் பாலனும் அந்த காந்தி சிலைக்குக் கீழே போய் அமர்ந்திருப்பார்கள். பணம் சம்பாதிப்பதில் இருக்கும் கஷ்டங்களைப் பற்றியும் திருமணம் செய்யப் போகும் இளம்பெண்களைப் பற்றியும் புதிதாகத் திரைக்கு வந்திருக்கும் இந்தி திரைப்படங்களைப் பற்றியும் அவர்கள் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருப்பார்கள். அந்தச் சிலை உயிருள்ளதைப் போலவே இருக்கும். ஊன்றுகோலின் மேற்பகுதியிலிருந்து மூக்கிற்கு மேலே இறங்கிக் காட்சியளிக்கும் கண்ணாடி வழியாகக் கீழ்நோக்கிப் பார்க்கும் அந்த காந்தியை கிருஷ்ணன் மனதிற்குள் ஆராதித்தான். அப்போது அவன் வசித்துக் கொண்டிருந்த தோபி காட்டிற்கருகில் உள்ள தன்னுடைய அறையில் காந்தியின் படத்தை அவன் கண்ணாடி போட்டு வைத்திருந்தான். ஒரு காலண்டரிலிருந்து வெட்டியெடுக்கப்பட்ட படமது.

வெயில் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்துவிட்டிருந்ததால் கிருஷ்ணனுக்குச் சுற்றிலும் ஒரே இருட்டாக இருந்தது.


தட்டுத்தடுமாறி அவன் முன்னோக்கி நடந்தான். அருகில் யாராவது கடந்து சென்றால் கிருஷ்ணன் கேட்பான்.

“யார் அது?”

“ஒரு குழந்தை.”

“குழந்தை போட்டிருக்கிற ஆடையோட நிறம் என்ன பாலா?”

“நீலம்.”

கண்பார்வை தெரியாதவனாக ஆகிவிட்டாலும் மனதைக் கொண்டு எல்லா வண்ணங்களையும் அவனால் காண முடிந்தது. இப்போதும் கற்பனையில் அவற்றை அவனால் காண முடிகிறது. இருந்தாலும் சமீபத்தில் ஒரு நாள் எவ்வளவுதான் முயற்சித்தாலும் அவனுடைய மனதில் வயலட் நிறம் தெரியவேயில்லை. அந்த வண்ணத்தை அவன் நிரந்தரமாக இழந்துவிட்டிருந்தான். படிப்படியாகத் தான் வண்ணங்களை ஒவ்வொன்றாக மறந்து போய்விடுவோமோ என்று அவன் பயப்படத் தொடங்கினான்.

“இதோ நாம வந்துட்டோம்...”

பாலன் சொன்னான். பாதையில் அழுக்கு நீர் தேங்கிக் கிடந்தது. நீரில் கால்கள் பட்டுவிடக்கூடாது என்பதற்காக கிருஷ்ணனுக்கு பாலன் உதவினான். கிருஷ்ணனின் கையை இறுகப் பற்றிக்கொண்டு பாலன் பூங்காவை நோக்கி நடந்தான். பூங்காவில் பசுக்கள் மேய்ந்து கொண்டிருந்தன. புற்களோ, பூச்செடிகளோ மருந்துக்குக்கூட அங்கு இல்லை. எல்லாவற்றையும் பசியில் சிக்கிய பசுக்கள் தின்று முடித்திருந்தன.

“இது டிசம்பர் மாசமாச்சே! பூங்கா முழுவதும் கிறிஸ்துமஸ் பூக்கள் இருக்குமே பாலா?”

“ஆமா கிருஷ்ணா! பூங்காவோட நாலு பக்கங்களிலும் கிறிஸ்துமஸ் பூக்கள் மலர்ந்து கிடக்குது.” -பாலன் சொன்னான்.

“என்ன நிறங்கள்ல பாலா?”

“வெள்ளை, சிவப்பு, வயலட்...”

கிருஷ்ணனின் மன இருட்டில் சிவப்பு, வெள்ளை நிறங்களில் கிறிஸ்துமஸ் மலர்கள் விரிந்தன. வயலட் நிறத்தில் மலர் விரியவில்லை. எவ்வளவு முயற்சித்தும் அந்த நிறத்தை அவனால் நினைவுபடுத்த முடியவில்லை. தன்னுடைய நண்பனின் முகம் வாடிப்போனதை பாலன் கவனித்தான்.

“என்ன ஆச்சு கிருஷ்ணா?”

“ஒண்ணுமில்ல...”

“பொய் சொல்ற.”

“பாலா, வயலட் நிறத்தை என்னால நினைவுபடுத்திப் பார்க்க முடியல. அது எப்படி இருக்கும்?”

“சிறு வயசுல பள்ளிக்கூடத்துக்கு எழுதக் கொண்டுபோன வயலட் நிற மையை நினைச்சுப் பாரு...”

“இல்ல... என்னால முடியல.”

“ஓணப்பண்டிகை சமயத்துல வயலில் மலர்ந்து நிக்கிற காக்கா பூக்கள்...”

“இல்ல... எனக்கு ஞாபகத்துல வரல...”

“சங்கு புஷ்பங்கள்...”

“இல்ல...”

கிருஷ்ணனின் கண்களைவிட்டு எப்போதோ எல்லா வண்ணங்களும் மறைந்துபோயிருந்தன. இப்போது மனதைவிட்டும் அவை மறைய ஆரம்பிக்கின்றன.

அவர்கள் வறண்டு காய்ந்துகிடக்கும் பூங்காவில் மெதுவாக நடந்தார்கள். பாலன் கையைப் பிடித்திருந்ததால் கிருஷ்ணனுக்குத் தன்னுடைய பிரம்பை உபயோகிக்க வேண்டிய அவசியம் உண்டாகவில்லை.

“என்னை சிலைக்குப் பக்கத்துல கூட்டிட்டு போ.”

கிருஷ்ணன் இருட்டில் துழாவினான். பாலன் அவன் கையைப் பிடித்து காந்தியின் முன்னால் கொண்டுபோய் நிறுத்தினான். கிருஷ்ணனின் கையில் இருந்ததைப் போல காந்தியின் கையிலும் ஒரு தடி இருந்தது. சிலைக்குக் கீழே ஒரு சொறிபிடித்த நாய் சுருண்டு படுத்திருந்தது. காந்தியின் தலையில் காகங்கள் எச்சமிட்டிருந்தன. அது எதையும் பார்க்க முடியாத கிருஷ்ணன் காந்தியின் முன்னால் கைகூப்பி நின்றான். அவனுடைய கால் சொறிநாயின் உடம்பில் பட்ட பிறகும், அந்த நாய் சிறிதும் அசையவில்லை. காலைப் பின்னால் இழுத்தவாறு கிருஷ்ணன் கேட்டான்.

“இது என்ன பாலா?”

“யாரோ பூவைக் கொண்டு வந்து வச்சிருக்காங்க. ஒரு கட்டு லில்லிப்பூக்கள்...”

அதைக்கேட்டு கிருஷ்ணனின் மனம் குளிர்ந்தது. அதே நேரத்தில் அவனுக்குக் கொஞ்சம் குற்றவுணர்வும் உண்டானது. தானும் ஒரு சிறு கட்டு மலர்களுடன் வந்திருக்க வேண்டாமா என்று அவன் நினைத்தான்.

“வா.. நாம போகலாம்.”

பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பூங்காவைவிட்டு வெளியே வந்தான். வெயில் முழுமையாகப் போய் விட்டிருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் இரவு வந்துவிடும். கிருஷ்ணனைச் சுற்றியுள்ள இருட்டு கனமாகிக் கொண்டிருந்தது. பாலன் பிறகு அவனை அழைத்துக் கொண்டுபோனது முன்பு கிருஷ்ணன் வசித்த இடத்திற்கு.

சலவைத் தொழிலாளர்களின் காலனிக்குப் பக்கத்தில் இருந்தது அந்த இடம். கண்ணுக்கெட்டாத தூரம்வரை நேராகவும் தலைகீழாகவும் ஆடைகள் காய்வதற்காகத் தொங்கவிடப்பட்டிருந்தன. நனைந்த துணிகளின் வாசனை அந்தப் பகுதியெங்கும் பரவியிருந்தது. பச்சை நிற நீர் நிறைந்திருந்த தடாகப் பகுதியில் சலவைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் குளித்துக்கொண்டும், மல ஜலம் கழித்துக் கொண்டும் இருந்தார்கள். நகர மக்கள் உடுத்தும் ஆடைகளைச் சலவை செய்யும் அதே நீரில் சலவைத் தொழிலாளர்களின் பிள்ளைகள் தங்களின் பின்பக்கத்தைக் கழுவிக் கொண்டிருந்தார்கள்.

“பாலா, என் கையை விடு...”

பாலனிடமிருந்து தன் கையை உருவிய கிருஷ்ணன் கையிலிருந்த பிரம்பை ஊன்றியபடி நடந்தான். தன்னுடைய பழைய இருப்பிடத்திற்குப் போகும் குறுகலான பாதையில் நடந்து செல்லும்போது நடப்பதற்குச் சிறிதுகூட பாலனின் துணை கிருஷ்ணனுக்குத் தேவையில்லை என்றாகிவிட்டது. பத்து வருடங்கள் கடந்துபோன பிறகும் சிறிதுகூட மாற்றமில்லாமலிருக்கும் அந்த குறுகலான பாதையின் ஒவ்வொரு வளைவையும் திருப்பத்தையும் அவனுக்கு நன்றாக ஞாபகத்தில் இருந்தது. தன்னுடைய கால்களுக்கு திடீரென்று கண்கள் முளைத்துவிட்டிருப்பதைப் போல் சர்வ சாதாரணமாக அவன் முன்னோக்கி நடந்து சென்றான். அவனுக்கு நிகராக வேகமாக நடந்துபோவதற்குப் பதிலாக பாலன் ஓடினான். வழிகாட்டுவதற்குப் பயன்படக்கூடிய பிரம்பு கையில் இருந்தாலும் கிருஷ்ணன் அதை உபயோகிக்கவே இல்லை. நடந்துபோவது கண்பார்வை தெரியாத ஒரு மனிதன் என்று சொன்னால் பார்ப்பவர்கள் யாரும் நம்பவே மாட்டார்கள்.

இரண்டாவது மாடியில் இருந்தது கிருஷ்ணன் முன்பு வசித்த வீடு. கோழிக்கூட்டைப் போன்ற ஒரு அறை. அதைவிட நல்ல ஒரு அறையை வாடகைக்கு எடுக்க அவனால் முடியும். லீலாவைத் திருமணம் செய்த பிறகு அப்படியொரு நல்ல இடமாக வாடகைக்கு எடுத்து போகலாம் என்று அவன் தீர்மானம் செய்து வைத்திருந்தான். மாடிக்குச் செல்லும் படிகளின் முன்னால் போய் நின்ற கிருஷ்ணன் லேசாகத் தயங்கி நின்றான். கையிலிருந்த பிரம்பால் அவன் நான்கு பக்கங்களிலும் தடவிப் பார்த்தான். படிமீது பிரம்பால் தட்டிப்பார்த்தான். ஒரு மழைக்காலத்தின்போது இடிந்துவிட்ட அந்தப் படியைப் புதிதாகப் புதுப்பித்திருந்தார்கள். அதில் ஏறுவதற்கு கிருஷ்ணனுக்கு பாலனின் உதவி தேவைப்பட்டது.

மேலே படிகள் முழுவதும் ஏறியபிறகு கடைசியாக இருந்த படியில் கிருஷ்ணன் ஒரு நிமிடம் நின்றான். அங்கேயிருந்து பார்த்தால் சலவைத் தொழிலாளர்களின் சாம்ராஜ்யத்தை முழுமையாகப் பார்க்கலாம். கிருஷ்ணனின் கண் முன்னால் இருட்டில் அந்த சாம்ராஜ்யம் மெதுவாகத் தெரிந்து உடனே மறையவும் செய்தது. உலர்வதற்காகப் போட்டிருந்த பல வண்ணங்களைக் கொண்ட துணிகள். அந்த ஈரத்துணிகளின் பலவிதப்பட்ட வண்ணங்களை கற்பனை பண்ணிப் பார்க்க மீண்டும் அவை இருட்டோடு சங்கமமாகின. சலவைத் தொழிலாளர்களுடைய உலகம் ஒரு இருட்டான கடலாக மாறியது.


பாலன் கதவைத் தட்டினான்.

“யாரு?”

“கொஞ்சம் கதவைத் திறக்க முடியுமா?”

ஓசையுடன் கதவு திறந்தது. உள்பாவாடையும், ரவிக்கையும் அணிந்த ஒரு பெண் நின்றிருந்தாள். கதவை முழுமையாகத் திறக்காமல் ‘என்ன வேண்டும்?’ என்று கேட்பது மாதிரி அவள் பாலனின் முகத்தைப் பார்த்தாள்.

“இவர் இந்த அறையைக் கொஞ்சம் பார்க்க விரும்புறாரு...”

“இதை வாடகைக்குக் கொடுக்குறதா இல்ல.”

“அது எங்களுக்கும் தெரியும்” -பாலன் சிரித்தான். “இவர் இந்த அறையில பதினைஞ்சு வருஷமா இருந்தவரு. தன்னோட பழைய அறையை மீண்டும் ஒருமுறை பார்க்குறதுக்காக மட்டுமே இவரு இங்கே வந்திருக்காரு.”

“இவருக்கு கண் பார்வை தெரியாதா?”

அவள் சற்று விலகி நின்றாள். பாலன் கிருஷ்ணனின் கையைப் பிடிக்க முயற்சித்தபோது, கிருஷ்ணன் அன்புடன் தன் நண்பனின் கையை¬ நீக்கிவிட்டு உள்ளே நடந்தான். அங்கு அந்தப் பெண்ணின் ஆடைகள், பாத்திரங்கள், தகரப் பெட்டிகள் எதையும் கிருஷ்ணன் பார்க்கவில்லை. ஜன்னலுக்கு அருகில் சுவரோடு சேர்த்து போடப்பட்டிருந்த தன்னுடைய சிறிய கட்டிலை அவன் பார்த்தான். அந்தக் கட்டிலில் படுத்துத்தான் பதினைந்து வருடகாலம் அவன் வாசித்ததும், கனவுகள் கண்டதும், காதல் நினைவுகளில் மூழ்கியதும், உறங்கியதும்...

பிரம்பின் உதவியில்லாமல் சர்வ சாதாரணமாக அவன் அந்த இருளடைந்த அறைக்குள் சுற்றிச் சுற்றி வந்துகொண்டிருந்தான்.

“நீங்க சொன்னது மாதிரி இல்லையே! இவருக்குக் கண்கள் தெரியும் போல இருக்கே!”

அந்தப் பெண் சொன்னாள். கிருஷ்ணன் வாசல் கதவுகளையும், ஜன்னல்களையும், சுவரையும் மெதுவாகத் தடவிக்கொண்டிருந்தான். பிறகு அவன் தன்னுடைய தலையைச் சுவரோடு சேர்த்து வைத்து என்னவோ சிந்தனையில் ஆழ்ந்தான். அவனுடைய முகத்தில் கனமான கவலை நிழலிட்டது.

“நீங்க சீக்கிரமாக இங்கேயிருந்து போயிடுங்க.”

அந்தப் பெண் சொன்னாள். “என் புருஷன் இப்போது வந்திடுவாரு. முன்கோபம் கொண்ட அந்த மனிதனுக்கு என்மேல எப்பவும் சந்தேகம்.”

“எனக்கு ஒரு தம்ளர் தண்ணி தரமுடியுமா?”

அறையின் மூலையில் வைத்திருந்த குடத்திலிருந்து அவள் ஒரு கண்ணாடி தம்ளரில் நீர் எடுத்து கிருஷ்ணனிடம் கொடுத்தாள். நீரைக் குடித்துவிட்டு கையால் உதடுகளைத் துடைத்துக்கொண்ட கிருஷ்ணன் பிரம்பைக் கையிலெடுத்துக் கொண்டு வெளியே நடந்தான். படிகளில் இறங்குவதற்கு அவனுக்குப் பாலனின் உதவி தேவைப்பட்டது. அவனுடைய கண்ணுக்கு முன்னால் இருட்டு பயங்கரமாகப் பரவியிருந்தது.

“பாலா, என் அறையில இப்போ யார் இருக்காங்க?”

“ஒரு பல்கலைக்கழக பேராசிரியையும் அவளோட கணவரும்.”

“அவ்வளவு சிறிய அறையிலயா?”

“கிருஷ்ணா, நீ போனபிறகு இந்தக் கட்டிடத்தை முழுமையா புதுப்பிச்சு கட்டினாங்க. நீ ஒரு அறையைத்தான் பார்த்தே. அதோடு சேர்ந்து இன்னொரு அறையும் இருக்கு. அங்கேதான் அந்தப் பெண்ணும் அவளோட கணவரும் படுப்பாங்க.”

“அவ அணிஞ்சிருக்குற ஆடையோட நிறம் என்ன?”

“இளம் சிவப்பு வண்ணத்துல ட்ரெஸ்ஸிங் கவுன்தான் அவ அணிஞ்சிருந்தது...”

“என்னோட பழைய அறை இப்போ எப்படி இருக்குன்றதை நீ கொஞ்சம் விளக்கமா சொல்ல முடியுமா?”

“கட்டாயம்...” -பாலன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டான். “பழைய ஜன்னலை எடுத்துட்டு அதுக்குப் பதிலா காற்றும் வெளிச்சமும் வர்ற மாதிரி ஒரு பெரிய ஜன்னலை வச்சிருக்காங்க. ஜன்னல் திரையோட நிறம் இளம்பச்சை. ஜன்னலுக்குக்கீழே ஒரு ரேக்குல புத்தகங்களும் வார இதழ்களும் அடுக்கி வைக்கப்பட்டிருக்கு. அதே ரேக்கின் மேல் ஸ்டீரியோ டெக் வச்சிருக்காங்க. ஜன்னலுக்கு எதிர்ல சுவரோட ஒரு மூலையில ரெஃப்ரிஜிரேட்டர் இருக்கு. அதுல இருந்து எடுத்த தண்ணியைத்தான் அந்தப் பெண் உனக்குக் குடிக்கத் தந்தா...”

அதைக் கேட்டு கிருஷ்ணனிடமிருந்து ஒரு நீண்ட பெருமூச்சு வெளிப்பட்டது.

தோபிகாட்டுகளில் வெளிச்சம் பளிச்சிட்டது. பச்சை நிறம் கொண்ட தடாகத்தில் இருட்டின் மறைவில் சலவைத் தொழிலாளர்களின் பெண்கள் குளித்துக் கொண்டிருந்தார்கள். பாலனின் உடல்மீது சாய்ந்தவாறு பிரம்பைத் தரையில் தட்டிக்கொண்டே கிருஷ்ணன் மெதுவாக நடந்தான். அவனுக்கு சோர்வு உண்டான மாதிரி இருந்தது. எங்கேயாவது போய் கொஞ்சநேரம் தலையைச் சாய்த்து...

2

காலையில் லீலாவைப் பார்க்க வேண்டுமென்று அவர்கள் தீர்மானித்திருந்தார்கள். எனினும் கிருஷ்ணன் படுக்கையைவிட்டு எழுவதற்கு முன்பு எங்கோ போய் திரும்பிவந்த பாலன் சொன்னான்.

“காலையில நாம உன்னோட சேட்டைப் பார்க்கப் போகலாம். மதியத்திற்குப் பின்னாடி லீலாவைப் பார்க்கப் போகலாம்.”

லீலாவைப் பார்க்க வேண்டும் என்பதில் மிகவும் ஆர்வமாக இருந்தான் கிருஷ்ணன். ஆனால், அதை அவன் வெளியே காட்டிக் கொள்ளவில்லை. லீலா இன்று யாருக்குச் சொந்தமானவள்? கணவன், குழந்தைகள் என்று மகிழ்ச்சியுடன் அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். அவர்களுக்கு எந்தவித காரணத்தைக் கொண்டும் தான் தொந்தரவாக அமைந்துவிடக்கூடாது என்பதில் மிகவும் தெளிவாக இருந்தான் கிருஷ்ணன். அங்குபோய் பார்க்க வேண்டும், குசலம் விசாரிக்க வேண்டும், லீலாவின் குரலைக் கேட்க வேண்டும்... அது போதும். அது முடிந்தால் தான் திரும்பிப் போகவேண்டியதுதான் என்ற முடிவில் இருந்தான் கிருஷ்ணன்.

காலைச் சிற்றுண்டி சாப்பிட்டு முடித்து அவர்கள் சேட்டைப் பார்ப்பதற்காகக் கிளம்பினார்கள். பாலனுடன் சேர்ந்து நடக்கும்போது கிருஷ்ணனுக்கு மிகவும் உற்சாகமாக இருந்தது. மெயின் ரோட்டை அடைந்தவுடன் அவர்கள் ஒரு குதிரை வண்டியை வாடகைக்குப் பிடித்தார்கள். வார்னிஷின் தாங்க முடியாத வாசனை எங்கிருந்து வருகிறது என்பதைக் கிருஷ்ணனால் புரிந்துகொள்ளவே முடியவில்லை. வார்னிஷ் ஃபாக்டரிக்கு அருகிலிருக்கும் அறையில் தான் இப்போது தங்கியிருக்கவில்லை என்று பாலன் ஏற்கனவே கூறிவிட்டானே! ஒருவேளை தன்னுடைய மனம் இப்படியெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கலாம் என்று தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டான் கிருஷ்ணன்.

நாற்பது நிமிடங்கள் குதிரை வண்டியில் பயணம் செய்தபிறகு அவர்கள் கிருஷ்ணன் முன்பு வேலை செய்த இடத்தை அடைந்தார்கள். காற்றில் கலந்து வந்து கொண்டிருந்த கடுகு எண்ணெயின் வாசனை கிருஷ்ணனின் மனதில் பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டன. சரஸ்வதி தேவியின் படங்கள் ஒட்டப்பட்ட எண்ணெய் டின்கள் ஆங்காங்கே இருந்தன. அந்த இடத்தில் யாரையுமே காணவில்லை. கிருஷ்ணன் இதயம் ‘டக்டக்’கென்று அடித்துக் கொண்டிருந்தது. அந்த இடத்தில்தான் அவன் பதினைந்து வருடங்கள் வேலை செய்தான். சாயங்காலம் வேலை முடிந்து திரும்பிச் செல்லும்போது கைகளிலும் ஆடைகளிலும் கடுகு எண்ணெய் பட்டிருக்கும். “நீ நல்லா வேலை செய்கிறவன்” சேட் கூறுவார். “கொஞ்சகாலம் ஆனபிறகு நீயே சொந்தத்துல எண்ணெய் வியாபாரம் செய்யணும். உனக்கு நல்ல எதிர்காலம் இருக்கு.”

படு வெப்பமாக இருந்த ஆஸ்பெஸ்டாஸுக்குக் கீழே கிருஷ்ணனும் பாலனும் நின்றிருந்தார்கள்.


சிறிதுநேரம் சென்றதும் இரண்டு காலியான எண்ணெய் டின்களைக் கையில் எடுத்துக் கொண்டு ஒரு கிழவன் அந்தப் பக்கம் வந்தான். அறிமுகமில்லாத அந்த இருவரையும் பார்த்து ‘என்ன வேணும்?’ என்று கேட்கிற பாவனையில் அவன் அவர்களைப் பார்த்தான்.

“இங்கே யாரும் இல்லையா?”

“என்ன விஷயம்?”

“சேட்டைப் பார்க்கணும்.”

“எண்ணெய் விஷயமா இருந்தா சேட்டைப் பார்த்து பிரயோஜனமில்லை. இங்கே எண்ணெய் இப்போ ஸ்டாக் இல்ல.”

“எண்ணெய் வாங்க நாங்க வரல...”

“அப்படின்னா உள்ளே போங்க.”

கிழவன் சுட்டிக் காட்டிய வழியில் அவர்கள் உள்ளே சென்றார்கள். ஒரு ஸ்டூலின் மீது தன்னுடைய வீங்கிப்போன வயிற்றின் மீது கைகளைப் பிணைத்தவாறு சேட் உட்கார்ந்திருந்தார். அவருக்கு முன்னால் எண்ணெய் சம்பந்தப்பட்ட கணக்குப் புத்தகங்கள் இருந்தன. பாலன் கிருஷ்ணனைப் பிடித்து சேட்டின் முன்னால் நிறுத்தினான்.

“உங்களுக்கு என்னைத் தெரியலையா? பத்து வருடங்களுக்கு முன்னாடி இங்கேயிருந்துபோன கிருஷ்ணன்...”

“ஆமா... கிருஷ்ணன்...”

“என்னை நீங்க மறக்கலியே!”

கிருஷ்ணனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

“உங்க வியாபாரம் எப்படி இருக்கு?”

சற்று அதிகார தொனியில் கேட்டான் கிருஷ்ணன். அந்த வியாபாரத்தை வளர்த்ததில் அவனுக்கு ஒரு பங்கு இருக்கிறதே! அவன் இரவு பகல் பாராமல் வேலைசெய்து வளர்த்த வியாபாரமாயிற்றே அது!

“உனக்குக் கண் தெரியாதா?”

சேட் கேட்டார்.

“நீங்க அதையெல்லாம் மறந்துட்டீங்களா? எனக்கு மூளை சம்பந்தமான உடல் நலக்கேடு...”

“நீ எதுக்காக இப்போ வந்தே?”

அந்தக் கேள்வி கிருஷ்ணனைச் சோர்வு கொள்ளச் செய்தது.

“சும்மாதான்...”

“டேய், நான் இந்த வியாபாரத்தை நிறுத்தப் போறேன். நீ எவ்வளவு காலம் இந்த நிறுவனத்துல வேலை செய்தே? பதினைஞ்சு வருடங்கள். அப்படித்தானே! அப்படின்னா நான் சொல்றதைக் கேளு. பதினைஞ்சு வருடங்கள் எண்ணெய் விற்று கிடைக்கிற லாபத்தை பதினைஞ்சு நாட்கள்ல நான் இப்போ சம்பாதிக்கிறேன்...”

சேட் குலுங்கிக் குலுங்கிச் சிரித்தார்.

“உங்களுக்கு வேற ஏதாவது பிஸினஸ் இருக்கா என்ன?”

“இருக்கு. கள்ளக் கடத்தல்...”

சேட்டின் சிரிப்புச் சத்தம் ஊசி முனைகளைப் போல கிருஷ்ணனின் காதுக்குள் நுழைந்து வேதனை உண்டாக்கியது. சேட் சொன்னதை அவனுக்கு நம்புவதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. நகரத்திலேயே கலப்படம் எதுவும் செய்யாமல் எண்ணெய் விற்கும் ஒருசில நிறுவனங்களில் ஒன்றாக இருந்தது அது. பல நேரங்களில் அது பயங்கர நஷ்டத்தின் எல்லையில் போய் நின்றிருக்கிறது.

இருப்பினும் திருட்டுத்தனமோ தவறான செயல்களோ செய்ய சேட் எப்போதும் தயாராக இருந்ததில்லை. “தப்பான வழிகள்ல பணம் சம்பாதிச்சா நம்ம பிள்ளைகளுக்கு அந்தப் பணத்தால நல்லது நடக்காது” -சேட் கூறுவார்.

“இந்தா... இதை வச்சுக்கோ. பதினஞ்சு வருடங்கள்...”

சேட் தன்னுடைய சில்க் ஜிப்பா பைக்குள் கையை நுழைத்து இரண்டு மூன்று நோட்டுகளை வெளியே எடுத்து அவனிடம் நீட்டினார். அந்தப் பணத்தை வாங்க கிருஷ்ணனின் மனம் சம்மதிக்கவில்லை.

“வாங்கிக்கோ...” பாலன் கிருஷ்ணனின் காதில் சொன்னான்.

சேட் இப்போதும் நோட்டுகளை நீட்டிக் கொண்டிருந்தார். தனக்கு அன்னம் தந்த கைகள்... கிருஷ்ணன் அந்தப் பணத்தை வாங்கினான். தன்னுடைய உள்ளங்கை எண்ணெய் பட்டு ஈரமாவதை அவனால் உணர முடிந்தது.

உண்மையாகச் சொல்லப்போனால் அது பழைய சேட் இல்லை. அவருடைய அதே உடலமைப்பையும் குரலையும் கொண்ட அவரின் மகனே அது. பழைய சேட் இரத்த அழுத்தத்தாலும் நீரிழிவு நோயாலும் பாதிக்கப்பட்டு மரணத்தைத் தழுவியிருந்தார்.

தட்டுத் தடுமாறி கிருஷ்ணன் வெளியே வந்தான். அவர்கள் வேறொரு குதிரை வண்டியில் ஏறினார்கள். அழுகிப்போன உருளைக்கிழங்கு வாசனை வரும் பாதைவழியாகக் குதிரைவண்டி போய்க் கொண்டிருந்தது.

3

கால் வைக்கும்போது அசைகின்ற படிகள் வழியாக பழைய கட்டிடத்தின் முதல் மாடிக்கு கிருஷ்ணனும் பாலனும் ஏறிச் சென்றார்கள். ஒரு பழைய கட்டிடமாக அது இருந்தாலும் லீலாவின் வீட்டில் நல்ல வெளிச்சமிருந்தது. புதிதாக உண்டாக்கிய அகலமான ஜன்னல் வழியாக சூரிய வெளிச்சம் உள்ளே வந்து கொண்டிருந்தது. இருட்டில் ஒரு கீற்றைப் போல கிருஷ்ணன் அந்த வெளிச்சத்தை உணர்ந்தான். தரையில் பிரம்பை வைத்தபோது கீழே தரை விரிப்பு இருப்பதை அவன் புரிந்துகொண்டான். மெத்தென்றிருந்த ஸோஃபாவில் பிரம்பை மடியில் வைத்தவாறு கிருஷ்ணன் அமர்ந்தான். அந்த அறையிலிருக்கும் மரச்சாமான்களையும் அலங்காரப் பொருட்களையும் காண அவனுடைய கண்கள் ஏங்கின. அந்த அறைக்குள் நுழைந்தவுடன் அவனுடைய இதயத்துடிப்பு அதிகரிக்கத் தொடங்கியது.

ஒரு வயதான பெண் உள்ளேயிருந்தவாறு முகத்தைக் காட்டினாள். புடவைத் தலைப்பால் முகத்தை மறைத்துக் கொண்ட அந்தப் பெண் அந்த ஊர்க்காரிதான். காலடிச் சத்தத்தைக் கேட்டு கிருஷ்ணனின் நெஞ்சு படுவேகமாக அடித்துக் கொண்டிருந்தது. பாலனைக் கண்ட அந்தப்பெண் உள்ளே பார்த்தாள். உள்ளே ஒரு ஆணின் குரல் கேட்டது.

“நாங்க நாலு மணிக்கு வர்றதா சொல்லியிருந்தோம்.”

அந்தப் பெண் சுவரிலிருந்த கடிகாரத்தைப் பார்த்தாள். நான்கு ஆக இனியும் பத்து நிமிடங்கள் இருந்தன. அவள் உள்ளே போனாள். பாலன் கிருஷ்ணனின் அருகில் அமர்ந்தான். தன்னுடைய நண்பனின் இதயம் வேகமாக அடிப்பதை அவனால் உணர முடிந்தது.

“லீலா இங்கே இல்லையா பாலா?”

“இருக்கா. அவள் சின்னப் பிள்ளைக்குப் பால் கொடுத்துக்கிட்டு இருக்கா” பாலன் தன் தொடையில் தாளம் போட்டவாறு சொன்னான்.

உள்ளேயிருந்து மீண்டும் ஒரு ஆணின் குரல் மெதுவாகக் கேட்டது. கிருஷ்ணன் பாலனுக்கு நேராக முகத்தைத் திருப்பினான்.

“அது லீலா கணவரோட அப்பா.” -பாலன் விளக்கினான். “அவர் அப்படித்தான் பேசுவாரு.”

“இங்கே யாரெல்லாம் இருக்காங்க?”

“லீலாவும் அவ கணவரும் ரெண்டு குழந்தைகளும். பிறகு அவ கணவரோட அப்பா...”

“லீலாவோட கணவர் பேர் என்ன?”

“பேரு... ம்... ஸ்ரீதரன். ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் சீனியர் அக்கவுண்டன்டா இருக்காரு.”

கடிகாரத்தின் முட்கள் மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தன. வினாடி முள் ஒவ்வொரு தடவை நகர்கிறபோதும் ஒரு மெல்லிய ஓசை கேட்டது. கிருஷ்ணன் கடிகாரமிருந்த இடத்தைப் பார்த்தான். அங்கு இருண்ட ஒரு பெரிய துவாரம் இருப்பதை அவன் பார்த்தான். வெளிச்சம் வந்துகொண்டிருந்த ஜன்னலுக்குப் பக்கத்தில் இருட்டு சிவப்பு நிறத்தில் இருந்தது.

உள்ளே ஒரு கதவு திறக்கும் சத்தத்தைக் கேட்டு கிருஷ்ணன் முகத்தைத் திருப்பிப் பார்த்தான். ஒரு ஆஜானுபாகுவான மனிதன் சட்டை பொத்தான்களைப் போட்டவாறு நடந்து வந்து கொண்டிருந்தான். கிருஷ்ணன் அவனை அசைகின்ற ஒரு இருண்ட கட்டையாகப் பார்த்தான்.


“யார் அது பாலா?”

அவன் குரலைத் தாழ்த்திக்கொண்டு கேட்டான்.

“ஸ்ரீதரனோட அப்பா...”

அவர்கள் பேசுவதை அந்த அறிமுகமில்லாத மனிதன் கேட்டான்.

“என்னை அறிமுகப்படுத்து...”

கிருஷ்ணன் கெஞ்சுகிற குரலில் சொன்னான். பாலன் எழுந்து அந்த அறிமுகமில்லாத மனிதனின் முன்னால் நின்றுகொண்டு சொன்னான்.

“இது மிஸ்டர் கிருஷ்ணன். முன்னாடி இந்த நகரத்துலதான் இவர் இருந்தாரு. லீலா சொல்லியிருப்பா.”

கிருஷ்ணன் எழுந்து கைகளைக் கூப்பினான். அப்போது அவனுடைய மடியில் இருந்த பிரம்பு கீழே விழுந்தது. அறிமுகமில்லாத அந்த மனிதன் எதுவும் புரியாமல் பாலனையும் கிருஷ்ணனையும் மாறி மாறிப் பார்த்தான்.

“நாங்க லீலாவைப் பார்க்க வந்திருக்கோம்.”

“அப்படியா?”

அவன் ஒருவித வெறுப்புடன் அவர்களைப் பார்த்துச் சிரித்தான். சட்டையி+லிருந்த எல்லா பொத்தான்களையும் போட்ட பிறகு அவன் பையிலிருந்து ஒரு சீப்பை எடுத்து தலையை வாரத் தொடங்கினான். முன்பு கண்ட அந்தப் பெண் அங்கு ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று கொண்டிருந்தாள். அந்த மனிதன் ஒரு நோட்டை எடுத்து அந்தப் பெண்ணிடம் தந்தான். அவன் பணத்தை வாங்கி தொழுதவாறு உள்ளே போனாள். அவன் அந்த இடத்தைவிட்டுக் கிளம்பினான்.

ஸ்ரீதரனின் தந்தை எதுவுமே பேசாமல் நடந்துகொண்ட விதத்தைப் பார்த்து கிருஷ்ணன் ஒரு மாதிரி ஆகிவிட்டான்.

கதவருகில் ஒரு வளையல் சத்தம் கேட்டது. கிருஷ்ணனின் இதயம் நின்று விடுவதைப்போல் ஆனது. அவன் கதவுக்கு நேராகத் திரும்பி நின்றான். அவன் இடது கால் பெருவிரலில் உண்டான ஒரு நடுக்கம் மேல்நோக்கி நகர்ந்து உடம்பெங்கும் பரவியது. கிருஷ்ணனின் வாய் வறண்டுபோனது மாதிரி ஆனது.

“கிருஷ்ணா... லீலா...”

“உட்காருங்க.”

லீலா சொன்னாள். பாலன் கிருஷ்ணனை ஸோஃபாவில் பிடித்து உட்கார வைத்தான். முன்னாலிருந்த மற்றொரு ஸோஃபாவில் அவள் உட்கார்ந்தாள். அவளுடைய உதடுகளில் அடர்த்தியான சிவப்புச் சாயம் பூசப்பட்டிருந்தது. அந்த இடத்தில் மூச்சை அடைக்கக்கூடிய நறுமணம் பரவியிருந்தது. கிருஷ்ணன் என்ன பேசுவது என்று தெரியாமல் தயங்கியவாறு உட்கார்ந்திருந்தான்.

“இங்கே வண்டியைவிட்டு இறங்கியதுல இருந்து உன்னைப் பார்க்கணும்னு சொல்லிக்கிட்டே இருந்தான் கிருஷ்ணன்.”

அதைக்கேட்டு லீலா சிரித்தாள். முன்பு இருந்த கள்ளங்கபடமில்லாத சிரிப்பு அல்ல அது. செயற்கையான சிரிப்பு இப்போது அவளுக்கு அப்படி சிரிக்க மட்டுமே தெரியும்.

“உன் குழந்தைகள் எங்கே லீலா?”

கிருஷ்ணன் கேட்டான். அவர்களுக்கும் கொடுப்பதற்காக நூறு ரூபாய் நோட்டு ஒன்றை அவன் தன் கையில் வைத்திருந்தான்.

“குழந்தைகளா?”

“சின்னக் குழந்தை உறங்குது. மூத்தது பள்ளிக்கூடம் போயிருக்கு.”

-பாலன் இடையில் புகுந்து சொன்னான். “மூத்தவன் ஆங்கிலோ இந்தியன் கான்வென்ட்ல படிக்குறான். பேரு சதீஷ்...”

“சின்னக் குழந்தையோட பேரு என்ன லீலா?”

அந்தக் கேள்விக்கும் பாலனே பதில் சொன்னான்.

“சுமா. வர்ற மிதுனம் வந்தா ரெண்டு வயசு ஆகுது.”

அவர்களுக்கிடையே அமைதி நிலவியது. லீலா ஏன் தன்னிடம் எதுவுமே பேசாமல் இருக்கிறாள் என்று நினைத்தான் கிருஷ்ணன். அவனுக்கு வருத்தம் உண்டானது.

“லீலா...”

அவள் தூக்கக் கலக்கத்துடனிருந்த தன்னுடைய கண்களை அவனுக்கு நேராக உயர்த்தினாள்.

“நீ என்ன நிறத்துல இப்போ புடவை கட்டியிருக்கே?”

“இளம் மஞ்சள் நிறத்துல...”

உண்மையாகச் சொல்லப்போனால் அவள் மெல்லிய கவுனைத்தான் அப்போது அணிந்திருந்தாள். கிருஷ்ணன் மனதில்கூட காணமுடியாத வயலட் நிறத்தில் அது இருந்தது.

“உன் காதுகள்ல இப்பவும் பெரிய வளையங்கள் இருக்கா?”

“இருக்கு...”

அவளுடைய காதுகளில் கனமான தங்கக் கம்மல்கள் இருந்தன.

“ஸ்ரீதரன் எப்போ அலுவலகத்துல இருந்து வருவாரு? நான் அவரைப் பார்க்கணும்...”

அவள் பாலனின் முகத்தைப் பார்த்தாள். அவன் சொன்னான்.

“ஸ்ரீதரன்... உன்னோட கணவர்...”

“அவருக்கு இப்போ வேலை அதிகம். வர்றதுக்கு ராத்திரி ஆயிடும்...”

மீண்டும் அமைதி. லீலாவின் உடம்பிலிருந்து வந்த வாசனை திரவியத்தின் நறுமணம் அந்த இடம் முழுக்கப் பரவியிருந்தது.

“லீலா, நீயும் ஸ்ரீதரனும் இருக்குற திருமணப் புகைப்படத்தை எனக்குக் காட்ட முடியுமா?”

லீலா அதைக் கேட்டு ஒருவித பதைபதைப்பிற்கு உள்ளானாள். பாலன் ஒரே பார்வையில் அவளை அமைதியாக இருக்கும்படி செய்தான். அவன் சுவரிலிருந்த ஒரு புகைப்படத்தை எடுத்து லீலாவின் கையில் தந்தான். அது பல வருடங்களுக்கு முன்னால் மரணமடைந்த லீலாவின் தந்தை இருக்கும் படம். கிருஷ்ணன் அந்தப் புகைப்படத்தை வாங்கி மெதுவாக அதைத் தடவினான்.

“ஸ்ரீதரன் நல்ல உயரமா?”

“ஆமா...”

லீலா மெதுவான குரலில் சொன்னாள்.

“நிறம்...?”

“நல்ல வெள்ளை...”

கிருஷ்ணனின் கை விரல்கள் புகைப்படத்தின் கண்ணாடிமீது நகர்ந்து கொண்டிருந்தன. கண்ணாடிக்குக் கீழே கொம்பை நீட்டிக்கொண்டு ஒரு பூச்சி ஒளிந்திருந்தது. மேலே நகர்ந்து கொண்டிருந்த விரல்களைப் பார்த்து ஒரு முன்எச்சரிக்கை நடவடிக்கை என்பதைப் போல அது சட்டத்திற்குள்ளிருந்த துவாரத்திற்குள் போய் ஒளிந்துகொண்டது. இப்போது அதன் அசைந்து கொண்டிருந்த கொம்புகள் மட்டும் வெளியே தெரிந்தன. ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு கிருஷ்ணன் அந்தப் புகைப்படத்தைத் திரும்பத் தந்தான்.

முன்பு பார்த்த வயதான அந்தப் பெண் இரண்டு கப்புகளில் தேநீர் கொண்டுவந்தாள். லீலா ஒரு கப்பை எடுத்துக் கிருஷ்ணனின் கையில் தந்தாள். அப்போது அவளுடைய கைவிரல்கள் அவனைத் தொட்டன. அவ்வளவுதான் ஒரு காலைநேரக் காற்றைப்போல அவனுடைய உடல், மனம் எல்லாமே ‘ஜில்’லென்று குளிர ஆரம்பித்தன. அவன் பார்வை தெரியாத கண்களில் அவள்மீது கொண்ட ஈடுபாடு நிறைந்திருந்தது.

“நீ கணவன், குழந்தைகளுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழறதுக்காக நான் ரொம்பவும் சந்தோஷப்படுறேன். எனக்கு கண்பார்வை இல்லைன்னாலும் உன் கணவரை என்னால பார்க்கமுடியுது. நல்ல குணத்தைக் கொண்டவரும் நல்ல உடல் நலத்தைக் கொண்டவருமான மனிதரா அவர் இருப்பாருன்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. சொல்லப்போனா அவர் ஒரு உயர்ந்த நிலையில இருக்காரு. என்னை நீ திருமணம் செய்திருந்தா இந்த வசதியான வாழ்க்கை உனக்குக் கிடைச்சிருக்காது. ஒரு விதத்துல பார்க்கப்போனா நான் குருடனா ஆனதே நல்லதுகூட. அன்பின் அடிப்படையில் கேக்குறேன்- என்னை ஒரே ஒரு சின்ன தப்பு செய்ய நீ அனுமதிக்கணும். உன் காதுகள்ல இருக்குற வளையங்களையும், நீ அணிஞ்சிருக்குற இளம்மஞ்சள் நிறப் புடவையையும் உன்னோட சிரிப்பையும் என் மனசுல நினைவுகளா காலாகாலத்துக்கும் நான் வச்சிப் பாதுகாக்கணும்...”

தனக்குள் பேசிக்கொண்டான் கிருஷ்ணன்.

“சரி... நாங்க புறப்படுறோம்” -பாலன் எழுந்தான்.

“இனியும் நிறைய இடங்களை நாங்க பார்க்க வேண்டியதிருக்கு...”

அவன் கிருஷ்ணனின் கையைப் பிடித்துக்கொண்டு வெளியே நடந்தான். கிருஷ்ணனின் மனதில் கடவுளின் சந்நிதியில் இருப்பதைப் போன்ற அமைதியும் மகிழ்ச்சியும் நிறைந்திருந்தன.

நிரந்தரமான இருட்டில் தட்டுத் தடுமாறி நடந்தபோது நகரத்திற்கு வந்த தன்னுடைய பயணம் நல்லமுறையில் முடிந்ததாக அவன் உணர்ந்தான். இனிமேல் வேறு எதையும் பார்ப்பதற்கு அவனுக்கு விருப்பமில்லை. அவனுடைய பயணம் இத்துடன் முடிவடைந்தது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.