Logo

சப்தங்கள்

Category: புதினம்
Published Date
Written by சுரா
Hits: 5965
sapthangal

சுராவின் முன்னுரை

‘சப்தங்கள்’ (Sabdhangal) 1947-ஆம் ஆண்டில் எழுதப்பட்டது. அதில் வைக்கம் முஹம்மது பஷீர் (Vaikom Muhammad Basheer) கையாண்டிருக்கும் கதைக் கருவிற்கு கேரளத்தில் பரவலான எதிர்ப்பு அந்த காலகட்டத்தில் உண்டானது. அதிக அளவில் பரபரப்பு உண்டாகக்கூடிய வகையில் அதில் பல சம்பவங்களை பஷீர் எழுதியிருந்தார். ‘பஷீரா இப்படிப்பட்ட ஒரு நாவலை எழுதியிருக்கிறார்?’ என்று எல்லாரும் ஆச்சரியப்பட்டனர்.

பஷீரின் இந்த புதினத்திற்கு எதிராக பலர், பத்திரிகைகளில் எழுதவும் செய்தனர். எத்தனையோ வருடங்களுக்கு முன்னர் பஷீர் எந்த அளவிற்கு துணிச்சலாக- மாறுபட்ட பல விஷயங்களையும் கதையில் கையாண்டிருக்கிறார் என்பதை நினைக்கும்போது நமக்கு இப்போதுகூட ஆச்சரியம் உண்டாகத்தான் செய்கிறது.

நான் மொழி பெயர்த்த இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


"பல வருடங்களுக்கு முன்னாடி எல்லாருக்கும் தெரிஞ்சு அம்மாவும் அப்பாவும் இல்லாத ஒரு இளைஞன் இருந்தான். அவன் நிறைய கொலைகள் செய்தான். தன்னோட இருபத்து நாலாவது வயசுல அவன்...''

"இடையில நான் ஒண்ணு கேட்கட்டுமா? கதையை ஆரம்பிச்சிட்டீங்களா?''

"ஆமா...''

"நீங்க யாரைப்பத்தி சொல்றீங்க?''

"என்னைப் பற்றித்தான்!''

"அப்படியா?''

"எங்கே வச்சு வேணும்னாலும் கதையை ஆரம்பிக்கலாம்னு நீங்கதானே சொன்னீங்க?''

"ஆமா... ஆமா... அதைப் பற்றி நான் ஒண்ணும் சொல்லல. நான் நினைச்சேன்... நீங்க ஒரு...''

"பைத்தியக்காரனா இருப்பேன்னு... அப்படித்தானே?''

"உங்களுக்கு என்ன பிரச்சினை?''

"பைத்தியம்!''

"அதனால என்ன? சொல்லப்போனா பைத்தியத்தோட அம்சம் உலகத்துல இருக்குற எல்லார்கிட்டயும் இருக்கு. கொஞ்சம் அளவுல ஏறக்குறைய இருக்கும். அவ்வளவுதான். ஆமா... நீங்க பல் தேய்க்க வேண்டாமா? குளிக்க வேண்டாமா? உங்களோட பார்வையும் தாடியும் முடியும் நாத்தம் பிடித்த ஆடைகளும்... எது எப்படி இருந்தாலும் குளிச்சு சுத்தமா இருக்க வேண்டாமா?''

"தண்ணி பூமியோட ரத்தம்னு நான் நினைக்கிறேன்.''

"பிறகு? வேற என்ன விசேஷங்கள்?''

"மாற்றி அணியிறதுக்கு வேற ஆடைகள் கிடையாது. உடுத்தி குளிக்கிறதுக்கு துண்டு இல்ல...''

"இந்த ராத்திரி நேரத்துல உங்களை யார் என்கிட்ட அனுப்பி வைச்சது?''

"யாரும் சொல்லி நான் இங்கே வரல. பகல்ல உங்களை நான் பார்த்தேன். உங்களோட பேரை நான் கேள்விப்பட்டிருக்கேன். அது நீங்கதான்னு ஆளுங்க விரலை நீட்டி பேசுறதைக் கேட்டேன். அதுனால உங்க பின்னாடியே நான் வந்துட்டேன். உங்ககூட வேற சில ஆளுங்களும் வழியில வந்து சேர்ந்தாங்க. நீங்க எல்லாரும் இந்த அறைக்குள்ள உட்கார்ந்து இவ்வளவு நேரமும் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக்கிட்டு இருந்தீங்க. வாதங்களும் பிரதிவாதங்களும் ஆர்ப்பாட்டங்களும் சிரிப்பும்... எல்லாம் முடிஞ்சு அவங்க வெளியே போறதைப் பார்த்து நான் உள்ளே வந்தேன்!''

"இதுவரை நீங்க வழியில இருந்த இருட்டுக்குள்ள நின்னுக்கிட்டு இருந்தீங்களா?''

"ஆமா!''

"என்னை உங்களுக்கு எப்படித் தெரியும்?''

"நான் உங்களோட புத்தகங்களைப் படிச்சிருக்கேன்!''

"அது எங்கே இருந்து உங்களுக்குக் கிடைத்தது?''

"நான் காசு கொடுத்து வாங்கினேன்!''

"அதுக்கு பணம்?''

"நான் பட்டாளத்துல இருந்தேன்!''

"அப்படித்தான் நீங்க கொலையாளி ஆனதா?''

"ஆமா... நான் எதிரிகளை மட்டுமில்ல கொன்னது! எதிரிகள்! நண்பர்கள்! இதுக்கு அர்த்தம் ஏதாவது இருக்கா என்ன?''

"நீங்க என்னோட ரசிகர்தானே?''

"ஆமா!''

"நீங்க எனக்காக என்ன கொண்டு வந்திருக்கீங்க?''

"என்கிட்ட கொண்டுவர ஒண்ணுமே கிடையாது!''

"பிறகு?''

"கொலை செய்யிறதைப் பற்றி உங்களோட கருத்து என்ன?''

"நல்லதா கெட்டதான்னு கேக்குறீங்களா?''

"ஆமா!''

"நான் என்ன சொல்லணும்?''

"ஒண்ணுமே சொல்றதுக்கு இல்லியா?''

"வருத்தப்படக்கூடாது. நான் எது வேணும்னாலும் சொல்லுவேன். என்னை யாரும் கொல்றது எனக்குப் பிடிக்காது. சாதாரணமா நான் செய்றது என்னன்னா... என்னைக் கொல்ல வர்ற ஆளுங்களுக்கு என்னைவிட பலம் அதிகம் இருக்கான்னு பார்ப்பேன். அவங்க என்னைவிட பலம் கம்மியானவங்களா இருந்தா, நான் அவுங்ககிட்ட போராடுவேன். என்னைவிட அவுங்க பலசாலியா தெரிஞ்சா, எவ்வளவு வேகமா ஓடணுமோ, அவ்வளவு வேகமா நான் ஓடிருவேன்!''

"நீங்க என்கிட்ட விளையாடுறீங்களா?''

"ஆமா... உங்களுக்கு என்ன வேணும்?''

"என்னைப் பொறுத்தவரை- என்னோட வாழ்க்கைக்கு ஒரு அர்த்தமும் இல்ல. என் வாழ்க்கையில, உங்கக்கிட்ட சில கதைகளை நான் சொல்லணும்!''

"நாளைக்குச் சொன்னா போதாதா? இங்க இவ்வளவு நேரம் இருந்த ஆளுங்க பேசினதைக் கேட்டுக் கேட்டு நான் ரொம்பவும் களைச்சுப் போயிருக்கேன். நான் இப்ப ஏதாவது சாப்பிட்டுட்டு தூங்கப் போறேன். நீங்க நாளைக்கு வாங்க. அதுக்காக காலையிலேயே வந்துற வேண்டாம். பதினொண்ணு... பன்னிரண்டு மணிக்கு வந்தா போதும். அப்பத்தான் நான் தூக்கத்தை விட்டே எந்திரிப்பேன்!''

"நான் அதுவரை எங்கே போறது?''

"போறதுக்கு வேற இடமே இல்லியா?''

"இல்ல!''

"இங்க உங்களுக்குப் பழக்கமானவங்க யாரும் இல்லியா?''

"இருக்காங்களா? இந்த உலகத்துல எனக்குப் பழக்கமானவங்க யார் இருக்காங்க?''

"ஆமா... ஏதாவது சாப்பிட்டீங்களா?''

"இல்ல!''

"கையில பணம் இருக்கா.''

"இல்ல!''

"நல்ல விஷயம்தான்!''

"நீங்க என்னைப் பற்றி என்ன நினைக்கிறீங்க?''

"என்ன நினைக்கிறேனா?''

"ஆமா...''

"ஒண்ணு... நீங்க நான் சொல்றேன்னு வருத்தப்படக்கூடாது. ரெண்டு- நீங்க இவ்வளவு பயங்கரமா என்னையே உத்துப் பார்க்கக்கூடாது. மூணு- நீங்க பல் தேய்ச்சு குளிக்கணும். நாலு- நான் தர்ற நல்லா துவைச்ச ஆடைகளை அணியணும். அஞ்சு- உங்களோட தாடியையும் முடியையும் வாரணும்னா என்கிட்ட சீப்பு எதுவும் கிடையாது. ஆறு- என்கிட்ட ஒரு ஆள் சாப்பிடும் அளவுக்குத்தான் சாப்பாடே இருக்கு. ஏழு- அதை நாம ரெண்டு பேரும் பங்கு போட்டு சாப்பிடுவோம். சம்மதம்தானா?''

"சரி...''

"அப்படின்னா... அங்கே போயி என்னோட படுக்கையைத் தொடாம அடுத்த அறைக்குள்ள போயி, அங்கே இருக்குற துண்டையும் மூலையில பேப்பர்ல மடிச்சு வச்சிருக்கிற பல்பொடியையும் எடுத்துக்கிட்டு வந்து, அந்த டார்ச் விளக்கையும் கையில வச்சுக்கிட்டு அங்கே இருக்குற குளியல் அறைக்குள் போயி நல்லா குளிச்சிட்டு வாங்க. கொஞ்சம் நில்லுங்க. துவைச்ச ஒரு ஆடை தர்றேன். நீங்க இப்போ போட்டிருக்கிற ஆடையைத் திரும்பவும் இங்கே கொண்டுவர வேண்டாம். அடுத்த அறையில இருக்குற படுக்கைதான் உங்களுக்கு உள்ளது. தூங்குற சமயத்துல நான் இந்தக் கதவை அடைச்சிடுவேன். அடுத்த அறையை உங்க விருப்பப்படி பயன்படுத்திக்கலாம். உங்களுக்கு எப்போ வெளியே போகணும்னு தோணுதோ, அப்போ போகலாம். முழு சுதந்திரம் உங்களுக்கு. இப்போ போயி குளிச்சிட்டு வாங்க. பிறகு நாம உட்கார்ந்து இருக்குற சாப்பாட்டைச் சாப்பிடுவோம். அதற்குப் பிறகு தூங்குவோம். பேச வேண்டிய விஷயங்களை நாளைக்குப் பேசிக்குவோம். என்ன, சரியா?''

"சரி...''

"இடையில ஒண்ணு கேட்கட்டுமா? உங்களைப் பட்டாளத்துல இருந்து விலக்கிட்டாங்களா?''

"ஆமா!''

"என்ன காரணம்?''

"தெரியாதா? போர்ல வெற்றி பெற்றாச்சு?''

"எத்தனைப் பேரை பட்டாளத்துல இருந்து போகச் சொன்னாங்க?''

"நாலோ, அஞ்சோ லட்சம் வரும்!''

"நீங்க அவுங்களோட பிரதிநிதியா?''

"நான் யாருடைய பிரதிநிதியும் இல்ல. நான் எனக்கு மட்டும்தான் பிரதிநிதி. நான் சில விஷயங்களை மனம் திறந்து சொல்லலாம்ல...?''

"தாராளமா!''

"எனக்கு தனிப்பட்ட முறையில- ஒரு மண்ணாங்கட்டியோடயும் வெறுப்பு கிடையாது. நான் இந்த உலகத்தை ரொம்பவும் நேசிக்கிறேன். பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும். நான் என்ன இருந்தாலும் பிறந்தது இந்த பூமியிலதானே! இங்கே இருக்குற எல்லாருமே என்னோட தொடர்பு உள்ளவங்கதான்.


எல்லா வகைப்பட்ட கருத்துகளை உடையவர்களையும், எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களையும்- எல்லாரையும் நான் நேசிக்கிறேன். நான்தான் சொன்னேனே நான் பட்டாளத்துலே இருந்தவன்னு. பட்டாளக்காரனோட கடமை என்ன? முடிஞ்ச அளவுக்கு மக்களைக் கொல்லணும்! நான் கொன்னேன்- கொஞ்சம்கூட இரக்கமே இல்லாத சில ஈனப்பிறவிகள் நாட்டை அடக்கி ஆள்றதுக்காக... நான் சொல்றது உலகத்துல நடக்குற போர்களுக்குக் காரணமாக இருக்கும் தலைவர்களை. போர் நடக்குற இடத்துல அவுங்க யாரும் இருக்க மாட்டாங்களே! அவர்களின் மனைவியும் குழந்தைகளும் கூட இருக்க மாட்டாங்க. மக்களின் போர்! உயிரைக் கொல்லும் ஆயுதங்களைக் கையில வச்சிக்கிட்டு மக்கள் ரெண்டு பாகமா பிரிஞ்சு நின்னு வெடி வெடிச்சும் குண்டுகள் எறிஞ்சும் பயனட்டை பயன்படுத்தி நெஞ்சுல தாக்கியும் ஒருத்தரையொருத்தர் கொல்வாங்க. மக்களின் போர்! எந்த மக்களின்?''

"வருத்தப்படக் கூடாதுன்னு நான் சொன்னேல்ல? பிறகு... நான் உங்களை ஒண்ணு ஞாபகப்படுத்துறேன். நீங்க ஏன் என்னைப் பார்த்து இப்படி கோபமா பேசுறீங்க? நானா உங்களை பட்டாளத்துல சேர்த்துவிட்டேன்?''

"யாரையாவது பார்த்து நான் கோபமா பேசணும். மனதில் அவ்வளவு வேதனை மண்டிக் கிடக்கு!''

"சரிதான்...''

"என்ன சொன்னீங்க?''

"அமைதியா போய் குளிச்சிட்டு வாங்க. சாப்பிட்டுட்டு தூங்கப் பார்ப்போம்!''

2

"நான் அமைதியா உறங்கி எவ்வளவோ நாட்களாயிருச்சு! எனக்குன்னு ஒரு இடமிருக்கா? சாப்பிட உணவு இருக்கா? வேலைதான் ஏதாவது இருக்கா?''

"சரி... உங்களுக்கு எல்லாருக்கும் தெரியிற மாதிரி அப்பா, அம்மா இருக்காங்களா?''

"இல்ல...''

"பிறகு?''

"எப்படி நான் பிறந்தேன்னு நினைக்கிறீங்களா? நீங்களெல்லாம் பூமியில எப்படி பிறந்தீங்களோ அப்படித்தான்!''

"ஆனா, எனக்கு எல்லாருக்கும் தெரியிற மாதிரி அம்மா, அப்பா இருக்காங்களே! சகோதரர்களும் சகோதரிகளும்கூட இருக்காங்க!''

"எனக்கு அப்படி யாரும் இல்ல!''

"அப்ப உங்களோட பிறப்பு எங்கே?''

"நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல!''

"அப்படின்னா?''

"என்னோட வளர்ப்பு அப்பா சாகுறதுக்கு முன்னாடி என்கிட்ட சொன்னது மட்டும்தான் எனக்குத் தெரியும். ஒரு அதிகாலை நேரத்துல ஒரு துணியால மூடப்பட்டு ரத்தம் சிந்த நான் கிடக்குறேன். தனியா... இருட்டுல, ரோட்ல, அனாதையா!''

"பிறகு?''

"அவர் என்னை எடுத்துக்கொண்டு போனாரு. போலீஸ்கிட்ட விஷயத்தைச் சொன்னாரு. அரசாங்கத்துக்கும் செய்தியைத் தெரிவிச்சாரு!''

"பிறகு?''

"அவங்க என்ன செய்ய முடியும்? என்னை யாருக்கு வேணும்? அதுனால என்னை அவர் குளிப்பாட்டினாரு. நான் அப்போ பயங்கரமா அழுதேன்னு அவர் சொன்னாரு. என்னை நல்லா வெளுத்த ஒரு துணியில படுக்க வச்சாரு. ஒரு பெட்டிக்குள்ள வச்சு என்னைக் கொண்டு போனாரு. எனக்கு ஒரு பேரு வச்சாரு. கோடிக்கணக்கான பேர்கள்ல ஒண்ணு... அப்படியே நான் அவரோட மதத்துல வளர்ந்தேன். ஓரளவுக்கு நல்ல படிப்பையும் அவர் எனக்குத் தந்தாரு!''

"அப்படியே நீங்க அவரோட ஜாதியில வளர்ந்திருக்கீங்க?''

"ஆனா, நான் எந்த மதத்தையும் நம்பல. சொல்லப்போனா, எல்லா மதங்களும் ஒண்ணுதான். எல்லா மதங்களுமே மனிதர்களை நல்லவங்களா ஆக்கத்தான் முயற்சிக்குது!''

"நீங்க பிறக்கும்போது எந்த மதம்?''

"அது எப்படி எனக்குத் தெரியும்? எந்த மதத்துல இருந்து வேணும்னாலும் இருக்கலாம். கிறிஸ்துவன், முஸ்லிம், இந்து, யூதன், பார்ஸி, ஜைனன், புத்த மதம், சீக்கியன்... இல்லாட்டி ரெண்டு மதங்களோட கலவையாகூட இருக்கலாம். எது எப்படியோ, நான் ஒரு தாயோட பாலைக் குடிக்கல. பெண்களோட மார்பகங்களைப் பாக்குறப்போ, எனக்கு தாகம் தோணுது. மார்பகங்கள்! மார்பகங்கள்! கோடிக்கணக்கான மார்பகங்கள்!''

"உங்களோட வளர்ப்புத் தந்தை இறந்த பிறகு, நீங்க என்ன செஞ்சீங்க?''

"படிப்பு திடீர்னு நின்னு போயிடுச்சு. வேலை தேடி அலைஞ்சேன். பட்டாளத்துல சேர்ந்துட்டேன். எனக்குன்னு சில கட்டுப்பாடுகளுடன் வாழ்க்கையை அமைச்சுக்கிட்டேன். என்னோட வாழ்க்கையைப் பற்றி முழுமையான கதை எனக்குத் தெரியாது. அப்படியும் இப்படியுமா சில விஷயங்களை என்னால் சொல்ல முடியும். அவ்வளவுதான்!''

"உங்களோட வளர்ப்புத் தந்தை யாரு?''

"ஒரு பாதிரியார். அதாவது- ஒரு தேவாலயத்துல இருக்குற சாமியார். வயசானவர். அவருக்குச் சொந்தம்னு யாருமில்ல. ரொம்ப ரொம்ப இரக்க குணம் உள்ளவர். எப்ப பார்த்தாலும் கடவுளைப் பற்றியே நினைச்சிக்கிட்டு இருப்பாரு. நானொரு கேள்வி கேட்கட்டுமா? இந்த உலகத்துல கடவுள்னு ஒருத்தர் இருக்காரா?''

"இருக்காருன்னு நினைச்சா இருக்காருதான்!''

"என்ன, இருக்காருன்னு நினைச்சாவா? அப்படிச் சொல்றதுக்குக் காரணம்?''

"எனக்கு இப்போ முப்பத்தி நாலு வயசு நடக்குது. இந்த வயசுல இப்படித்தான் சொல்லத் தோணுது. பிரபஞ்சங்களான எல்லா பிரபஞ்சங்களையும் உங்களையும் என்னையும் படைத்த கருணையே வடிவமானவனாச்சே கடவுள்! நீங்களும் நானும் நம்புறதை வச்சா பிரபஞ்சங்களும் மற்றவையும் செயல்பட்டுக்கிட்டு இருக்கு? நாம நம்பலாம்... நம்பாமலும் இருக்கலாம். மனசுக்கு எது சரின்னு படுதோ, அப்படி இருக்கலாம். ஆமா... உங்களுக்கு இப்போ வயசு என்ன?''

"இருபத்தியொன்பது!''

"உங்களோட உண்மையான அப்பா, அம்மா யாருன்னு கண்டுபிடிக்கணும்னு தோணலியா?''

"தோணியிருக்கு?''

"பிறகு?''

"தேடிப் பார்த்தேன். எவ்வளவோ நாட்கள் தேடி அலைஞ்சேன். நானும் என்னோட வளர்ப்பு அப்பாவும் சேர்ந்து இங்கே வந்து தேடினோம்!''

"இங்கேயா?''

"ஆமா... இங்கே இருக்குற நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல தான் நான் ரத்தம் வழிய பச்சைக் குழந்தையா இருட்டுல கிடந்தது!''

"அப்படியா? உங்களுக்கு மட்டும்தான் இப்படியொரு சம்பவம் நடந்திருக்குன்னு நினைக்காதீங்க. பிரசவமான உடனே, உங்களைக் கொன்னு இருக்கலாம். இல்லாட்டி ஏதாவது நாய்க்கு சாப்பிட போட்டிருக்கலாம். அப்படி எதுவும் செய்யலியே! யார்னு தெரியாத ஒரு பெண்ணோட கருணை மனம்... அந்தக் கருணையால்தான் இப்போ நீங்க உயிரோட இருக்கீங்க...''

"ஆமா... என்ன வரையிறீங்க?''

"வரையல. எழுதுறேன். நான் ஒரு டேப்ரெக்கார்டர் இல்லியே! நீங்க சொல்றதை நான் மறந்திடுவேன். என்னோட சொந்த அனுபவம் ஒண்ணும் இது இல்லியே! நீங்க சொல்ல நான் எழுதலாம். உடனே உங்களுக்குப் படிச்சு காண்பிக்கலாம். நீங்க சொல்லாதது எதுவும் இங்கே இருக்காது. அது போதாதா?''

"போதும்!''

3

"பூமியோட ரத்தம்தான் தண்ணீர்னு உங்களுக்குத் தோணுறதுக்குக் காரணம்?''

                 "அந்த சம்பவத்தை நினைச்சுப் பார்க்குறப்போ எனக்கே என்னவோ போல இருக்கு. நான்தான் சொன்னேனே- நான் ஏகப்பட்ட மனிதர்களைக் கொன்னுருக்கேன். ஒவ்வொரு பட்டாளக்காரனும் எத்தனையோ ஆயிரம் மனிதர்களைக் கொன்னுருக்கான். கொன்னுக்கிட்டு இருக்கான். இப்பவும் பூமியில ஏதாவது ஒரு இடத்துல போர் நடந்துக்கிட்டுத்தான் இருக்கு. இதற்கெல்லாம் காரணம் யார்?''

"யார்னு நீங்க நினைக்கிறீங்க?''

"சக்கரவர்த்திகள், ராஜாக்கள், ஜனாதிபதிகள், சர்வாதிகாரிகள்- இவங்கள்லாம் கொலைகாரர்கள்தானே?''


"அப்படியா?''

"நிச்சயமா. அவர்களின் சிம்மாசனங்கள் எல்லாம் மனிதர்களோட ரத்தத்துல முக்கி எடுத்ததுதான். அவங்க குடிக்கிறது மக்களோட ரத்தம்தான். அவங்க...''

"கொஞ்சம் நிறுத்துங்க. இடையில நான் ஒண்ணு கேக்குறேன். போர்ல எப்பவும் ஒரு பக்கம் இருக்கறவங்க தப்பானவங்கதானே!''

"இருக்கலாம். அவங்களையே எதிர் பக்கத்துல இருந்து பாக்குறப்ப...''

"அப்படிப் பார்த்தால் நாம வாழ முடியுமா? மிருகங்களோட, பறவைகளோட, தானியங்களோட, மரங்களோட, மீன்களோட, மற்ற நீர்வாழ் பிராணிகளோட பக்கம் நின்னு பார்த்தால், மனிதர்கள் எல்லாருமே பயங்கர கொலைகாரர்கள்தாம். இதைப் பற்றி நீங்க என்ன சொல்றீங்க?''

"இப்படி ஒரு பதிலை நீங்க வச்சிருக்கிங்களா? எது எப்படியோ, நான் என்னோட காதல் கதையை இப்போ சொல்லப்போறேன்!''

"பூமியோட ரத்தம்!''

"அதை நான் சொல்லப் போறதில்ல!''

"என்ன காரணம்?''

"நான் கொன்ன ஒரு ஆளைப் பற்றி இப்போ சொல்லப் போறேன்!''

"அதற்கு முன்னாடி பூமியோட ரத்தத்தைப் பற்றி சொல்லுங்க. உங்களுக்கு எப்படி அந்த மாதிரி தோணிச்சு?''

"விவரமா என்னால அதைச் சொல்ல முடியாது. எனக்கு அதை நினைச்சுப் பார்க்கவே என்னவோபோல் இருக்கு. ஒரு ராத்திரி நாங்க... சுமார் ஐநூறு பட்டாளக்காரர்கள் தண்ணீர் குடிச்சோம். பொழுது விடிஞ்சு பார்த்தப்போ, பாத்திரங்கள்ல ரத்தம் இருக்கு. அது ஒரு சிறிய போர் நடந்து முடிஞ்ச இடம். எத்தனையோ பேர் கீழே செத்து பிணமா கிடக்குறாங்க. முழுசா இல்ல. நான் அதையும் சொல்றேன். அது என் மனசுல பசுமையா அப்படியே நின்னுக்கிட்டு இருக்கு. என் நண்பன் ஒருத்தனோட மரணம்- அவனைக் கொன்னது நான்தான். ட...ட..டேன்னு ரெண்டு மூணு வெடிகள் வச்சேன். நல்ல பகல் நேரம். பயங்கர வெயில். போர் நடக்குற இடத்துல இருக்குற உஷ்ணத்தைப் பற்றி ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல. ஆரவாரம்... முழக்கம்... வெடிச்சத்தம்.. ஒரு தும்மலுடன், ஒரு அதிர்ச்சியுடன் காதே செவிடாகிப்போகிற மாதிரியான சத்தத்துடன் வெடிக்கிற குண்டுகளின் ஓசைகள்... அவை உண்டாக்கும் பிரகாசம்... வெப்பம்... வியர்வை. "குர்ர்றம்... குர்ர்றம்" என்ற பாமர் விமானங்களோட இடைவிடாத கர்ஜனை! இடி முழுக்கம்! மின்னல் வெட்டுகள்! செவிப்பறையைக் கிழிக்கிற மாதிரி பயங்கர  ஓசையுடன் வெடிக்கும் குண்டுகள்... தொடர்ந்து கேட்கும் ஓடும் ஓசைகள்... அலறல் சத்தம்... அழிவு... மொத்த அழிவு... மொத்தத்தில் உடலையும் உயிரையும் நடுங்க வைக்கும் சூழ்நிலை. பாதுகாப்பற்ற ஒரு நிலைமை. இரவும் பகலும் இப்படியே போய்க்கிட்டு இருக்கு. இதற்கிடையில் உணவு சாப்பிடுவேன். உறங்குவேன். எல்லாம் ஒழுங்கா நடந்துக்கிட்டு இருக்கும். எல்லாம் ஒரு கனவுல நடக்குற மாதிரி நடக்கும். ஒருநாள் நான் சாப்பிட்டுக்கிட்டு இருந்த உணவுல ஒரு மனிதக் கண் கிடக்கு. என்னைச் சுற்றிலும் துண்டு துண்டா மனிதர்கள். நாற்றமெடுக்கும் பிணங்கள். மரணம் பக்கத்துலயே நின்னுக்கிட்டு இருக்கு. குண்டுகள் வெடிக்கிற சத்தம் பக்கத்துலயே கேட்குது. நான் ஏன் சாகலைன்னு எனக்கே தெரியல. இது என்னுடைய  அனுபவம் மட்டுமில்ல. பட்டாளத்துல இருக்குற ஒவ்வொரு ஆளுக்கும் இந்த மாதிரி அனுபவம் இருக்கும். நானும் என் நண்பனும் பக்கத்துலயே இருக்கோம். நாற்பது அடி தூரத்துல விழுந்த நெருப்பு குண்டு அந்த ஆளைக் கொல்லல. அது உண்டாக்கின குழியில இருந்து கிளம்பிய மண் என்னை மூடிடுச்சு. நல்ல பகல் நேரம். கண், மூக்கு, வாய்- எல்லாத்துலயும் மண். நான் எப்படியோ திமிறி வெளியில் வந்தேன். எங்கெங்கோ நெருப்பு பிடிச்சு எரிஞ்சிக்கிட்டு இருக்கு. நெருப்பு கொழுந்துவிட்டு எரியிற சத்தம் என் காதுல கேட்குது. அந்த நேரத்துல என் நண்பனோட அலறல்! கடுமையான வேதனையுடன், ஒருவித பயத்துடன் அந்த ஆளு என் பக்கத்துல நிக்கிறாரு.

"தயவு செஞ்சு கடவுளை மனசுல நினைச்சுக்கிட்டு என்னைக் கொன்னுரு. என்னால இதற்குமேல சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது!''

ஒரு சத்தம் கேட்டது. அந்த ஆளை நான் பார்த்தேன். என் மரணம் வரை நான் மறக்க முடியாத ஒரு சம்பவம் அது. நான் உண்மையிலேயே பயந்து நடுங்கிப்போய் வியர்வை அரும்ப நின்னுக்கிட்டு இருந்தேன். உங்களோட உள்ளங்கால் முதல் தலை வரை இருக்குற தோல் முழுவதும் பச்சையா நீங்கிப் போயிருந்தா எப்படி இருக்கும்னு நினைச்சுப் பாருங்க. உடம்புல இருந்து ரத்தம் கொட்டிக்கிட்டு இருக்கு. தீயினால் வந்த விளைவுன்னு நான் நினைக்கிறேன். நிர்வாணமான சிவந்து போன மனிதன். ரத்தத்தில் தோய்க்கப்பட்ட மனிதன்! அந்தக் கண்கள்! கை விரல்களில் இருந்தும் ஆண் குறியில் இருந்தும் ரத்தம் ஒழுகிக்கிட்டு இருக்கு!

செத்துக் கிடக்குற ஒரு பட்டாளக்காரனோட ஆடைமேல் அந்த ரத்தம் விழுந்துக்கிட்டு இருக்கு. நிற்காம விழுந்துக்கிட்டு இருக்கு!''

4

"காதல் கதையைக் கேட்கட்டுமா?''

"எல்லா பட்டாளக்காரர்களுக்கும் காதல் அனுபவம் இருக்கும். பலருக்கும் சேர்த்து ஒரு காதலி. ஒரே ஆளுக்கு பல காதலிகளும் உண்டு. சொல்லப்போனால் இது ஒரு குழப்பமான பிரச்சினை. சாதாரண பட்டாளக்காரர்களுக்குக் கிடைக்கக்கூடியவங்க தரம் தாழ்ந்த விபச்சாரிகளாகத்தான் இருக்கும். அவர்களோட கிரேடு கூடக் கூட கிடைக்கக்கூடிய பெண்களோட சமுதாய நிலையும் உயர்ந்ததாக இருக்கும். விபச்சாரத்தைப் பற்றி உங்களோட கருத்து என்ன?''

"அது நல்லதா கெட்டதான்னு சொல்லச் சொல்றீங்களா?''

"ஆமா!''

"விபச்சாரம்ன்றது உலகத்திலேயே ஒரு புராதன தொழில்னு கேள்விப்பட்டிருக்கேன். இன்னைக்கும் அதைப் பலரும் செஞ்சிக்கிட்டுத்தான் இருக்காங்க. பிச்சைக்காரி முதல் ராணி வரை. இருந்தாலும் என்னோட தாயும், சகோதரிகளும், மனைவியும் அதைச் செஞ்சா எனக்குப் பிடிக்காது.''

"உங்களுக்கு மனைவி இருக்காங்களா?''

"வெளியே தெரியிற மாதிரி இல்ல...''

"ரகசியமாக...?''

"ரகசியமாகவும் இல்லைன்ன வச்சுக்கோங்க. அப்படி இருந்தா, அவள் ஒரு விபச்சாரியா இருக்குறது எனக்குப் பிடிக்காது. சரி... உங்க கதையைச் சொல்லுங்க...''

"விபச்சாரத்துக்குப் பின்னாடி எப்பவும் ஒரு பொருளாதாரப் பிரச்சினை மறைஞ்சு இருக்கிறது உங்களுக்குத் தெரியுதா?''

"ஏதாவது ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்யும்!''

"ஆமா... பெண்கள் ஏன் விபச்சாரிகளா ஆகுறாங்க?''

"ஆண்கள் இருக்குறதால!''

"அது சரியான காரணமா என்ன?''

"ஆண்கள் எதற்கு அவர்களைத் தேடிப் போறாங்க? நாம அதையும் இதையும் பேசி தேவையில்லாம நேரத்தை வீண் செய்ய வேண்டாம். ஆண்களோட பக்கம் இருந்து பார்த்தால், தப்பு பெண்கள் பக்கம்தான் தெரியும். பெண்கள் பக்கம் இருந்து பார்த்தால், தவறு எப்பவும் ஆண்கள் கிட்டத்தான்னு தோணும். சொல்லப்போனால் ரெண்டு பக்கமும் தப்பு இருக்கு. இல்லாட்டி ரெண்டு பக்கமும் தப்பு இல்ல. நீங்க இது தப்பு இது சரின்னு எதை வச்சு சொல்றீங்க?''


"ஒழுக்கத்தை வச்சு...''

"இந்த பூமியில எங்கே வசிக்கிற மக்களோட ஒழுக்கத்தை வச்சு?''

"அதைப்பற்றி எனக்குத் தெரியாது. சாதாரணமா நாம ஒழுக்கம்னு சொல்லுவோம் இல்லியா? வேற பெண்களைப் பார்க்கக்கூடாது. பதிவிரதை அது இதுன்னு...''

"பல மதங்களிலும் பல மாதிரி ஒழுக்கங்களைப் பற்றி சொல்லப்பட்டிருக்கு. ஏகபத்தினி விரதம் என்பதையே எடுத்துக்கோங்க. சில மதங்களில் இதுவே பல பத்தினி விரதமா இருக்கு. அம்மா, சகோதரி- இவங்களை மனைவிகளா ஆக்கிக் கொள்கிற மக்களும் மன்னர்களும்கூட இருந்திருக்காங்க. அதுதான் அவங்களோட ஒழுக்கம். ஆண் குறியை வழிபடுறது. பெண் குறியைக் கும்பிடுறது- இதைப் பற்றியெல்லாம் நீங்க கேள்விப்பட்டிருக்கிங்களா? அங்கே ஒழுக்கம்னா எது? மிருகங்கள், புழு- பூச்சிகள், பறவைகள்- இவற்றுக்கு மத்தியில் சொந்தச் சகோதரியே பெரும்பாலும் மனைவி. இதே மாதிரி மனிதர்கள் மத்தியிலும் இருக்கு. சகோதரிக்கு சகோதரன் மூலம் கர்ப்பம் உண்டாகுற சம்பவங்களும் இருக்கு. தாய்க்கு மகன் மூலம் கர்ப்பம் உண்டாகுறதும் நடக்கவே செய்யுது. மகளுக்கு தந்தை மூலம் உண்டாகுறதும்...''

"கேட்கவே பயங்கரமா இருக்கே!''

"உங்களுக்கு அப்படி தோணுறதுக்குக் காரணம்?''

"எனக்கே தெரியல!''

"நான் சொல்றேன். உங்களுக்கு வாழ்க்கையில கொள்கைன்னு ஒண்ணு இருக்கு. இல்லைன்னு சொன்னா அது தப்பு. சின்ன வயசுல இருந்தே அது உங்க மனசுல இருக்கு. தேவாலயத்தில் ஒரு பாதிரியாரா இருந்தவர்தானே உங்களோட வளர்ப்புத் தந்தை? அவர் உங்களுக்கு அதைச் சொல்லித் தந்திருக்காரு. இது நல்லது இது தப்புன்னு அவர்  சொல்லிக் கொடுத்திருப்பாரு. அதுதான் உங்களோட கொள்கை, தத்துவ சாஸ்திரம்!''

"நீங்க சொல்றது சரியாக இருக்கலாம். நான் ஒண்ணு கேட்கட்டுமா? ஆண்- பெண் உறவுல ஒருவருக்கொருவர் உண்மையா இருக்க முடியுமா?''

"உடல் சம்பந்தப்பட்ட விஷயத்திலயா?''

"ஆமா...''

"இதுக்கு என்னால எப்படி பதில் சொல்ல முடியும்? என்னைத் தவிர, இப்போ உலகத்துல இருக்கிற எல்லா ஆண்களையும் பெண்களையும் பற்றியில்ல சொல்ல வேண்டியிருக்கு? உண்மையாக நடந்தால் நல்லதுன்னு நான் நினைக்கிறேன். பொதுவாகப் பார்த்தால் யாருக்காவது எதனிடமாவது நிரந்தரமாக உண்மையாக இருக்க முடியுதா? நாம மற்றவங்க முன்னாடி நல்லவங்க மாதிரி இருக்க முயற்சிக்கிறோம்ன்றதுதான் உண்மையே தவிர, நமக்கு முன்னாடி நாம நல்லவங்களா என்ன? நம்மோட பகல்கள்... நம்மோட இரவுகள்...''

"மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

"மோசமா சொல்றதுக்கில்ல. அப்படி நீங்க கேட்கக் காரணம்?''

"இன்னைக்கு உலகத்துல இருக்குற மக்களில் பத்துல ஏழு பேருக்கு கொனோரியாவும் ஸிஃபிலிஸும் இருக்கு!''

"அப்படி யார் சொன்னாங்க?''

"ஒரு பெரிய மிலிட்டரி டாக்டர்!''

"பட்டாளக்காரர்களை பயமுறுத்துறதுக்காக அவர் அப்படிச் சொல்லியிருப்பாரு!''

"பட்டாளக்காரர்களுக்கு பத்துல ஒன்பது பேருக்கு உடல்நலக்கேடு இருக்கு. இது உண்மை. மரணத்துக்குப் பக்கத்துலயே இருக்குறவங்க அவங்க. மற்றவர்கள்? தொழிலாளிகள், விவசாயிகள், உத்தியோகம் பார்ப்பவர்கள், வக்கீல்கள், மன்னர்கள், அரசியல்வாதிகள், நடிகர்- நடிகைகள், வைதீகர்கள், பிரம்மச்சாரிகள், பத்திரிகைகளில் வேலை பார்ப்பவர்கள், கதை எழுதுபவர்கள், கவிஞர்கள், விபச்சாரிகள், விமர்சகர்கள், பிச்சைக்காரர்கள், ஜனாதிபதிகள்- உலகத்தில் இப்படிப்பட்ட பொதுமக்கள்ல பத்துல ஏழு பேருக்கு ஸிஃபிலிஸும் கொனோரியாவும் இருக்கு!''

"இருக்கா இல்லையான்னு எனக்குத் தெரியாது. இருந்தாலும் மருந்துகள் இருக்கே! கொனோரியா, ஸிஃபிலிஸ், சயம், குஷ்டம்- எல்லாத்துக்கும் உரிய மருந்துகள் இருக்கே!''

"நல்ல வசதி படைத்தவர்கள் மட்டுமே மருந்துகளை வாங்கி பயன்படுத்த முடியும். இருந்தாலும் முழுமையா நோய் குணமாகுறது இல்ல. சாம்பல்ல தீக்கட்டைபோல... கொனோரியா, ரத்தம் மூலமா... விந்து வழியா... மூணு தலைமுறை வரை தொடர்ந்து வர்றதா டாக்டர்கள் சொல்றாங்க. குஷ்டரோகத்தைவிட பயங்கரமானதோ என்னவோ... விபச்சாரிகள் பக்கத்துல போறதுக்கே எனக்கு பயம். நான் போனதே இல்ல. பட்டாளத்துல இருந்து வெளியே வந்து நான் நகரத்துல வசிக்க ஆரம்பிச்ச பிறகு, நான் ஒரு காதலனாக மாறினேன். அதுவரை- அதாவது நான் பட்டாளத்துல இருக்குற வரை என்னோட காதலியா இருந்தது ஒரு சினிமா நடிகையின் படம்தான்! வாழ்க்கை முழுவதும் திருமணமே ஆகாம வாழ்ந்துக்கிட்டு இருக்குற எங்கள்ல பலருக்கும் காதலியா இருந்தது அந்தப் படம்தான்!''

"அப்படின்னா?''

"அந்தப் படத்துல உதடுகள் இருந்துச்சு. கண்கள் இருந்துச்சு. மார்பகங்களும் தொப்புளும் தொடைகளும் இருந்துச்சு. எங்களுக்கும் உணர்ச்சிகள் இருந்துச்சு. முத்தம் கொடுப்போம். கட்டிப்பிடிப்போம். உடலுறவு....''

"சரிதான்!''

"எங்களுடைய வாழ்க்கையை நினைச்சுப் பாருங்க. பூமியில் உள்ளவர்களின்... எங்களின் படுக்கையறைகள்!''

"பூமியில எத்தனையோ கோடி பெண்களும் ஆண்களும் இருக்காங்க! என்னையும் சேர்த்துத்தான்... உங்களையும்தான்... படுக்கையறைகளைப் பற்றி நினைக்க என்ன இருக்கு? ரத்தமும் எலும்பும் தாகமும் மோகமும் கொண்ட உயிர்கள்! நீங்க காதலனா ஆன கதையைச் சொல்லுங்க. நான் கேட்கிறேன்.''

5

"நான் காதலனா இருந்தது நகரத்தின் முக்கிய புள்ளியின் வீட்டில் தங்கி இருக்குற காலத்தில்தான். பட்டாளத்தைவிட்டு வெளியே வந்தவுடனே, அந்தச் சம்பவம் நடந்தது. பட்டாளத்துல இருந்தவங்க எல்லாரும் வேலை வெட்டி இல்லாம சாலைகள்ல அலைஞ்சிக்கிட்டு இருக்காங்க. எங்கே பார்த்தாலும் பஞ்சமும் நோய்களும் தலைவிரிச்சு ஆடுது. எந்தக் காலத்திலும் அது ஒரு பெரிய விஷயமே இல்லையே! உலகத்துல எந்த விஷயம் நடந்தாலும் ஆண் பெண்ணொருத்தியைக் காதலிக்காமல், உடலுறவு கொள்ளாமல் வாழ்றதுன்னா..''

"கொஞ்சம் நிறுத்துங்க. நகரத்துல முக்கிய புள்ளியோட வீட்டுக்கு எப்படி நீங்க போய்ச் சேர்ந்தீங்க?''

"ஜாதிச் சண்டையோ, அரசியல் சண்டையோ... ஏதோ காரணத்தால மக்கள் மத்தியில ஒரு குழப்பம்... சண்டை! மக்களின் சண்டை! மக்களின் போராட்டம்! நான் ஒரு ஹோட்டலின் மாடியில் நின்னுக்கிட்டு இருந்தேன். கண்ணுக்கு அழகா சூரிய அஸ்தமனம். ஆனால், சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகல. நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா? உலகத்துல இப்படிப்பட்ட சண்டைகளும் போராட்டங்களும் என்னைக்காவது முடியிறதுக்கு வழி இருக்கா?''

"ஒன்றுக்கு மேற்பட்ட மனிதர்களோ ஒன்றுக்கு மேற்பட்ட கருத்துகளோ உலகத்துல இருக்கும் காலம் வரையில்...''

"யார் சொல்றது சரி?''

"நீங்களே யோசிச்சு ஒரு முடிவுக்கு வாங்க. தலைன்னு ஒண்ணு இருக்குதுல்ல? அதுக்குள்ளே மூளை இருக்கு. சிந்திச்சுப் பாருங்க. அதை வச்சு யோசிக்க முடியலைன்னா, எது சரின்னு படுதோ அதை ஏத்துக்கங்க!''

"இந்த மாதிரியான கருத்துகளோட நோக்கம் என்ன?''

"உங்க கேள்வியோட அர்த்தத்தை என்னால புரிஞ்சுக்க முடியல!''

"இப்போ... மதங்கள் இருக்குல்லியா? அதே நேரத்துல அரசியல் கட்சிகளும்? எல்லாரும் சேர்ந்து குழப்பங்களை உண்டாக்குறாங்க. ஆளுகளைக் கொல்றாங்க. ஆமா... இவங்களுக்கு உண்மையிலேயே என்ன வேணும்?''


"அவங்களுக்குத் தேவை கடைசியில்- அதிகாரம். அதாவது- பலம்!''

"எதற்கு?''

"இந்த பூமியில வாழ்ற மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும் அடக்கி ஆளுறதுக்கு. மதங்கள் தெய்வத்தின் பெயரில்... தெய்வங்கள் மீது நம்பிக்கை இல்லாதவர்கள் அவர்களின் சொந்தப் பெயரில்...''

"அதாவது...?''

"ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில ஒவ்வொரு கொள்கை- தத்துவ சாஸ்திரம் இருக்கு. அதையொட்டி எல்லா விஷயங்களும் நடக்கணும்னு ஒவ்வொருத்தரும் நினைக்கிறாங்க!''

"என்னைப் பொறுத்தவரை- எனக்குன்னு வாழ்க்கையில் ஒரு கொள்கையும் இல்ல. யாரோட தொடர்பும் எனக்கு இல்லாம இருக்குறதுனால இது இருக்குமா?''

"உங்களுக்கு வாழ்க்கையில ஒரு கொள்கை- கோட்பாடு இருக்கு. அதைப்பற்றி நான் ஏற்கெனவே உங்கக்கிட்ட சொல்லி இருக்கேன்! இனி... தொடர்புகளையும் பற்றி சொல்றதுன்னா... உங்களுக்கும் எல்லார்கூடவும் தொடர்பு இருக்கத்தான் செய்யுது!''

"என்ன தொடர்பு?''

"உங்களுக்கு தொப்புள் இருக்கா?''

"தொப்புளா? இதை வச்சு என்ன தொடர்பு?''

"உங்களுக்கே தெரியாத தாயுடன் நீங்க அதன் மூலமாகத்தான் தொடர்பு கொண்டிருந்தீங்க...''

"அதுனால என்ன.''

"உங்களுக்கே தெரியாத உங்களுடைய தந்தை அவரோட தாயுடன் இதே மாதிரிதான் தொடர்பு கொண்டிருந்தார். சுருக்கமா சொல்லப்போனால் உலகத்துல இருக்குற எல்லாருக்குமிடையே ஒரு தொடர்பு இருக்கு!''

"எனக்கு ஒண்ணும் அப்படித் தோணல!''

"அப்படி எதுவும் தோணலைன்னா இல்லைன்னு வச்சுக்கோங்க. நீங்க தேவையில்லாம அது இதுன்னு பேசி நேரத்தை வீண் செய்றீங்க. சரி... நீங்க காதலனா ஆன கதையைச் சொல்லுங்க. நீங்க நகரத்துல இருந்த ஒரு ஹோட்டலோட மாடியில நின்னுக்கிட்டு இருக்கீங்க. அழகான சூரிய அஸ்தமனம்...''

"ஆமா... ஆனா, சூரியன் இன்னும் அஸ்தமனம் ஆகல. நகரம் ஒரு பெரிய காடுன்னு நினைச்சுக்கோங்க. அதுல எல்லா வகைப்பட்ட மோசமான மிருகங்களும் இருக்கு. ஆனா, அதற்குப் பெயர் நகரம்! கர்ஜனை செய்றதும், உறுமுறதும், ஊளையிடுறதும், முனகுறதும்... எல்லாமே நகரத்துல இருக்கு. வாகனங்கள், இயந்திரங்கள்- எல்லாவற்றிலும் சத்தங்கள்! சாரிசாரியா வேக வேகமா ஒரு வகை பதற்றத்தோட போய்க்கொண்டிருக்கும் மனிதக்கூட்டம்! சீறிக்கொண்டு பாய்ந்தோடுற வாகனங்கள்! பல்வேறு வகைப்பட்ட கட்டடங்கள்! அவை ஆகாயத்தையே எட்டிப் பிடிச்சிக்கிட்டிருக்கு. மில்கள், ஹோட்டல்கள், வாசக சாலைகள், மதுக் கடைகள், மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள்... எல்லா இடங்கள்லயும் கட்டாயம் இருக்கு- பல நிறங்கள்லயும் இருக்குற சாயங்களில் தோய்க்கப்பட்ட துணிகள்!''

"என்ன சொல்றீங்க?''

"கொடிகள்.''

"ஓ... அதை சொல்றீங்களா...?''

"அந்தச் சாயத்தில் முக்கிய ஒவ்வொரு துணித் துண்டும் மக்களின் ஒவ்வொரு அடையாளமாயிற்றே!''

"ஆமா...''

"கொடியைச் சேர்ந்தவங்க ஒவ்வொருத்தருக்கும் அவுங்களுக்குன்னு சில வேலைகள், திட்டங்கள் இருக்கு!''

"இருக்கத்தானே செய்யும்!''

"ஒவ்வொருத்தரும் மக்களைப் பற்றித்தானே பேசுறாங்க?''

"எல்லாரும் அப்படித்தான் பேசுவாங்க!''

"ஒரு வெடி மருந்து சாலையில நெருப்பு பிடிச்சிருச்சு. மக்களின் ஒரு ஊர்வலம்... அதே நேரத்துல மக்களின் இன்னொரு ஊர்வலம்... ஒரே கோஷங்கள் மயம்! ரெண்டுக்கும் மோதல்! பிறகென்ன? குண்டுகள், டயனமைட்டுகள், சோடா பாட்டில்கள்- எல்லாமே அடுத்தடுத்து வெடிக்குது! கருங்கற்கள் வானத்துல பறக்குது! வெட்டுக் கத்திகள் நெஞ்சுல பாயுது!

கோஷங்கள்! எதிர் கோஷங்கள்! ஒருத்தருக்கொருத்தர் கெட்ட வார்த்தைகளில் வசை பாடல்! சவால்! ரத்தத்தோட ஒரு விளையாட்டு! மரணத்தோட விளையாட்டு! அடி! இடி! அழுகை! ஓட்டம்! ஆர்ப்பாட்டம்! மரணத்தின் ஊழித் தாண்டவம்...

போலீஸ்காரர்கள் வருகிறார்கள். பட்டாளம் வருகிறது. இயந்திரத் துப்பாக்கிகள் கர்ஜிக்கின்றன.

ட, ட, ட, ட, ட, ட, ட, ட, டே!

"முடிவே இல்லாத கர்ஜனை. எங்கு பார்த்தாலும் கூக்குரல்கள்! ஓலங்கள்! மேலே வட்டம் சுற்றிக்கொண்டிருக்கிற விமானம்.

பர்ர்றம்! பர்ர்றம்!

கீழே மண்டை பிளந்தும் நெஞ்சு கீறியும் விழுந்து கிடக்குற மனிதர்கள். நெருப்பு பிடிச்சு எரியிற கட்டடங்கள். வீசி அடிக்கிற வெப்பக் காற்று. ரத்தமும் வெடி மருந்தும் கலந்த நாற்றம். வழக்கம் போல அன்னைக்கும் நகரத்தின் தெரு விளக்குகள் அழகாக எரிய ஆரம்பிச்சது. திரைப்படக் கொட்டகைகளில் இருந்து இனிமையாக பாடல்கள் கிளம்பி வந்தன. இருண்டு போய் காணப்பட்ட ஆகாயத்தில் ரத்தச் சிவப்பு வண்ணத்தில் தோன்றி மறையிற விளம்பரங்கள்! அடடா... என்ன அதிசயமான, பயங்கரமான, அழகான நகரம்!

ஆறு மாடி கட்டடம் ஆகாயம் வரை உயர்ந்து நின்னு தகதகன்னு நெருப்புல எரிஞ்சிக்கிட்டு இருக்கு. எத்தனையோ ஆயிரம் கண்கள்ல அந்த ஜுவாலைகள் பிரதிபலிக்குது! மக்கள் ஆயிரக்கணக்குல வெந்து சாம்பலாகுறாங்க. தொடர்ந்து இடைவிடாமல் மணிகள் அடித்தவாறு வாகனங்கள் பாய்ஞ்சு வருது. தீயை அணைக்கக்கூடிய இயந்திரங்கள். ஆகாயத்தில் நீரைப் பீய்ச்சி அடிக்கிறார்கள்.

நான் நின்னுக்கிட்டு இருந்த ஹோட்டல் முழுக்க முழுக்க புகையால மூடிக்கிருச்சு. நெருப்பு பிடிச்சு எரியுது. இருமிக்கிட்டே, கண்களைத் திறக்க முடியாம, ஒவ்வொருத்தரும் தடவித் தடவி கீழே இறங்கி ஓட முயற்சிக்கிறாங்க. நானும் இறங்கி ஓடினேன். எங்கே ஓடுறதுன்னு ஒரு குறிக்கோளும் இல்லாம ஓடினேன். எப்படியாவது தப்பிக்கணுமே! நெருப்புல குதிச்சேன். உடம்புல நெருப்பு பற்றிக்கிடுச்சு! நெருப்பு பற்றின ஆடைகளோட நான் ஓடுறேன்.

நகரத்துல முக்கியமான அந்த மனிதர் சொன்னார்- நான் நெருப்புல இருந்த பலரையும் காப்பாற்றினேன் என்று. எது எப்படியோ... எனக்கு சுயநினைவு வந்தப்போ நான் அவரோட வீட்ல இருந்தேன். அவரோட மனைவிக்கும், பிள்ளைகளுக்கும் என்னை ரொம்பவும் பிடிச்சுப் போச்சு. நான் ஒரு வீர இளைஞன்னு அவங்க நினைச்சாங்க! நாட்டோட நம்பிக்கை நட்சத்திரம்! என்னைப்போல் இன்னும் நூற்றுக்கணக்கான ஆயிரம் இளைஞர்கள் உருவாக வேண்டும்.

என்னோட படத்தை அவர் ஏதோ ஒரு பத்திரிகையில பிரசுரம் செய்தார்னு நினைக்கிறேன். அதோட அவர் தன்னுடைய அறிக்கையையும் வெளியிட்டிருந்தார். அதற்குப் பிறகு கொஞ்ச நாட்களுக்கு.... ஒரே அறிக்கைகள் மயம்தான்! எல்லா தலைவர்களும் மாறி மாறி அறிக்கைகள் விட்டாங்க! எதிர் அறிக்கைகளும்தான்! ஒவ்வொரு கொடியைச் சேர்ந்தவங்களும் ஏராளமான பேர் இறந்து போயிருந்தாங்க. அதற்கு மற்ற கொடிக்காரர்கள் ஆறுதல் சொல்லணும்! பிறகு... செத்துப் போனவங்களோட எண்ணிக்கை! எல்லாமே சுத்தப் பொய்கள்! சாயத்தில் முக்கிய துண்டுத் துணிகளுக்குச் சொந்தக்காரர்கள் எல்லாருமே பொய் சொன்னாங்க. மேடையில பேசினாங்க. பத்திரிகைகளில் எழுதினாங்க. கோஷங்கள் மாறின. வேற விசேஷமா ஒண்ணும் நடக்கல. வெடி மருந்தும் குண்டுகளும் சாயத்தில் தோய்ந்த துண்டுத் துணிகளும்...''

"நீங்க காதலனா ஆனது?''

"சொல்றேன். நான் அந்தப் பெரிய மனிதரோட வீட்லதான் தங்கினேன். அதாவது... மோட்டார் ஷெட்டின் இரண்டு பக்கங்கள்லயும் ரெண்டு நல்ல அறைகள் இருந்துச்சு. அதுல ஒரு அறையில நான். இன்னொரு அறையில டிரைவர்.


என்னோட சாப்பாடுகூட அங்கேதான். எனக்கு அந்த வீட்ல பரிபூர்ண சுதந்திரம். நான் அந்த வீட்ல ஒரு ஆளு மாதிரி. நான். அறையில் உட்கார்ந்து இருக்குறப்போ, ஒரு மாலை நேரத்துல நகரத்தில் உள்ள விளக்குகளெல்லாம் பிரகாசமா எரியத் தொடங்கின கணத்தில், ஒரு காதலனா நான் ஆனேன்...!''

6

னவு காண்கின்ற கண்கள், வசீகரமான புன்னகை, குருத்தென அப்போதுதான் முளைத்து நிற்கும் மார்பகங்கள். அந்த நடை.... அந்தப் பார்வை...

ஒவ்வொரு நாள் மாலையிலும் என்னோட அறைக்கு முன்னாடி அவள் நடந்துபோவாள். என்னைப் பார்ப்பாள். என்னைப் பார்த்து புன்னகைப்பாள். நானும் புன்னகைக்க முயற்சிப்பேன். ஆனா, எனக்கு தைரியம் வராது. நான் யார்னு தெரியாமத்தான் இதெல்லாம். அந்தப் பெரிய வீட்ல ஒரு ஆள்னு என்னை அவள் நினைச்சிருக்கணும். நான் யார், எங்கே இருந்து வந்த ஆள்னு தெரிஞ்சிருச்சின்னா அதுக்குப் பிறகு அவளோட நடத்தையே வேற மாதிரி இருக்கும். இருந்தாலும் அவள் யார்? எதற்காக அவள் என்னை அப்படிப் பார்க்கிறாள்? இது பற்றியெல்லாம் எனக்கு ஒன்றும் தெரியாது. அவள் மாணவியா? இல்லாட்டி வேலை ஏதாவது பார்க்கிறாளா? அவள் யாராக இருந்தாலும் மனசுல சந்தோஷம் தர்ற அளவுக்கு ஒரு பேரழகின்றது என்னவோ உண்மை. அவளோட பேரு என்னன்னு எனக்குத் தெரியாது. அவள் என் மனசை எப்படியோ கவர்ந்துட்டா. வாழ்க்கையில வீசின ஒரு பெருங்காற்றாக அவ இருந்தா.

ஒரு முத்தத்துக்காக, உயிரோட்டமுள்ள ஒரு அன்பான அணைப்பிற்காக நான் எவ்வளவு நாளா ஏங்கிக்கிட்டிருந்தேன் தெரியுமா? ஒரு பெண் உடம்புல துணியே இல்லாம இருந்தா எப்படி இருப்பா? எனக்குத் தெரியாது. அதை நான் பார்க்கணும்னு நினைச்சேன். அப்படி ஒரு பெண் இருக்குறப்போ அவளைத் தொட்டுப் பார்க்கணும். அவளுக்கு முத்தம் தரணும். அவளை அப்படியே ஆசையா இறுகக் கட்டிப்பிடிச்சு அணைக்கணும். பெண்ணோட மணத்தை மனசுல கற்பனை பண்ணிக்கிட்டு கருங்கல்லைக்கூட தவிடு பொடியாக்கக்கூடிய அளவுக்கு முறுக்கேறிப்போய் நான் வாழ்ந்துக்கிட்டு இருக்கேன். எதிர் பார்ப்போட மக்கள் ஏராளமா நடந்துபோற தெருவைப் பார்த்தவாறு நான் ஜன்னல் பக்கத்துல நின்னுக்கிட்டு இருப்பேன். சாயங்கால நேரம் வந்துட்டா, மாலை நேர வெளிச்சத்தோட சேர்ந்து அவ வருவா.  ஒவ்வொரு நாளும் வேற வேற வண்ணத்துல ஆடை அணிஞ்சிருப்பா. அதற்குப் பொருத்தமான செருப்பும், அதற்கேற்ற ஹேண்ட் பேக்கும்!

அப்படி ஒரு மாலை வேளை. விளக்குகள் எரிய ஆரம்பிச்சது. நகரம் ஒரே இரைச்சல் மயமா இருக்கு. என்னோட இதயம் "டக்டக்"னு ரொம்பவும் வேகமாக அடிச்சிக்கிட்டு இருக்கு. அப்போ அவ வந்துக்கிட்டு இருக்கா! என்னோட காதல் தேவதை! அவ பாட்டுக்கு நடந்துபோறா. நான் அறையை அடைச்சிட்டு சாலையில இறங்கி நடந்தேன். நான் நடந்து வர்றதை அவ பார்த்தா. மெதுவா நடக்க ஆரம்பிச்சா. பார்த்தா. புன்சிரிப்புடன் என் முகத்தையே அவ உற்றுப் பார்த்தா. பிறகு ஒரு கேள்வி. தொண்டை அடைச்சிருந்த மாதிரி இருந்தது. இருந்தாலும் குரல்ல ஒரு இனிமை இருக்கவே செய்தது. "எங்கே போறீங்க?"

அதற்குப் பதில் சொல்ற மாதிரி நான் புன்சிரிக்க முயற்சித்தேன். வாழ்க்கையில எங்கே போறது? நான் வேர்த்துப்போய் நின்னேன். என் வாயில நீரே வற்றிப் போச்சு. "குமுகுமா"ன்னு அருமையான வாசனை! முல்லைப் பூ போன்ற வெளுத்த முகம். ரோஜாப் பூவைப்போல் சிவந்த உதடுகள். இரவுநேரம் போல கருமையான கூந்தல். அவளோட உடம்பின் எல்லா இடங்கள்லயும் எனக்கு முத்தம் கொடுக்கணும்போல இருந்துச்சு. ஆடைக்குள், ப்ளவுஸுக்குள், பாடீஸுக்குள் மறைஞ்சிருக்கிற அழகான மார்பகங்கள்... இடது கையில ஒரு சின்ன குடையும் ஹேண்ட் பேக்கும். வலது கையில் ஒரு சின்ன கை லேஸ்.

அவளையே தாகத்துடன் பார்த்து உருகிக்கிட்டே நான் நடந்தேன். அவளோடு அதிக நேரம் பேச முடியல. அந்த நேரத்துல எங்களுக்கு எதிரே ஒரு மோட்டார் கார் படுவேகமா வந்துக்கிட்டு இருக்கு. அதுல நான் தங்கியிருக்கிற வீட்டு உரிமையாளரோட மனைவி இருக்காங்க. என்னை அவங்க எங்கே பார்த்துடப்போறங்களோன்னு நான் நிழல்ல போய் மறைஞ்சிக்கிட்டேன். கார் கடந்து போயிடுச்சு. நான் மட்டும் தனியா நின்னுக்கிட்டு இருக்கேன். என்னோட பாதங்களுக்குப் பக்கத்துல அந்தக் கை லேஸ்!

நான் அதை குனிஞ்சு எடுத்தேன். அவளோட முகத்தைத் தொட்டதை, அவளோட உதடுகளைத் தொட்டதை, அவளோட வியர்வையைத் தொட்டதை நான் முத்தம் கொடுத்தேன். ஆயிரம் முறை அதற்கு முத்தம் தந்தேன். தொடர்ந்து அதை என்னோட ஆடைக்குள்- பனியனுக்கு உள்ளே- என் இதயத்தை ஒட்டி வச்சிக்கிட்டேன்.''

7

"பிறகு?''

"நான் சொல்றேன். அங்கே பாருங்க. அந்த மரத்துக்கு மேலே!''

"நிலவுதானே?''

"எவ்வளவு அழகா காய்ஞ்சிக்கிட்டு இருக்கு! எப்படி வெள்ளி மாதிரி ஜொலிச்சிக்கிட்டு இருக்கு! இந்த வெளிச்சத்துல பகல் மாதிரியே இருக்கு! நிலவுக்கு எப்படி இப்படியொரு... அங்கே பாருங்க... பச்சை இலைகள் ஒவ்வொண்ணும் நிலவொளி பட்டு பிரகாசிப்பதை! பிரகாசம்... ஓ... இப்போ மலைகளிலும், பாலைவனங்களிலும், கடல்களிலும்...''

"நிலவு இருக்கட்டும். நீங்க சொல்லிட்டு வந்த மணமுள்ள கை லேஸைப் பற்றிச் சொல்லுங்க!''

"உங்களுக்கு காதல் பரிசுகள் கிடைச்சிருக்கா?''

"நிறைய கிடச்சிருக்கு.''

"நீங்க அதை எந்த அளவுக்கு பெரிசா நினைக்கிறீங்க?''

"அப்படி நீங்க கேக்குறதுக்குக் காரணம்?''

"நான் சும்மா கேட்டேன்!''

"அதாவது- காதல்ன்றது ஒரு புதிய கண்டுபிடிப்பு ஒண்ணுமில்ல. நீங்களும் அந்தச் சந்திரனைப் பாருங்க. கோடிக்கணக்கான யுகங்களுக்கு முன்பு- அதற்கும் முன்னாடி கோடிக்கணக்கான யுகங்களுக்குமுன் - மனிதர்கள் இந்த பூமியில் தோன்ற ஆரம்பிச்ச காலம் முதல் ஒரு ஆணுக்குப் பெண்ணோடு தோணுற அந்த ஏதோ ஒண்ணை- நிலவு உதிச்சுக்கிட்டு இருக்குற இந்த நேரத்துல நான் சொல்றேன்- காதல்னு. எத்தனையோ வருடங்களா பூமியில இது நடந்துக்கிட்டு இருக்கு. அந்தக் காலத்துல இருந்து இப்ப வரை ஆண் பெண்ணைக் காதலிக்கிறான். பெண் ஆணைக் காதலிக்கிறாள். புரியுதா? உயிரினங்களில் ஆணுக்கும் பெண்ணுக்குமிடையே ஒரு வகை ஈர்ப்பு. இணை சேர்தல். உற்பத்திப் பெருக்கம். அதற்கான வழிதான் காதல். சுகந்தம் கமழும் அற்புதமான உறவு....''

"எல்லாமே அற்புதமாகத்தான் இருக்கு!''

"உயிரினங்களும் பூமியும் சந்திரனும் நட்சத்திரங்களும்... எல்லாம்...!''

"நான் அந்த மணமுள்ள கை லேஸைப் பற்றி நினைச்சுப் பார்த்தேன். அன்னைக்கு ராத்திரி நான் அதற்கு எத்தனை முறை முத்தம் கொடுத்தேன்னு நினைக்கிறீங்க? என்னவெல்லாம் நான் கனவு கண்டேன் தெரியுமா? என் காதல் அந்த வீட்டைத் தாண்டி, நகரத்தையும் தாண்டி...''


"அந்த வீட்ல உங்களுக்கு என்ன வேலை?''

"பெரிசா சொல்ற மாதிரி ஒண்ணுமில்ல. நாலஞ்சு சின்னப் பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லித்தரணும். அவங்களை கவனமா பார்த்துக்கணும்!''

"அந்த வீட்ல இருக்குறவங்களுக்கு உங்களைப் பற்றிய எல்லா விஷயங்களும் தெரியுமா?''

"சில விஷயங்கள் தெரியும். பொதுவா அவங்க எல்லாருமே என் மேல நிறைய அன்பு வச்சிருந்தாங்க. உண்மையிலேயே மனிதர்கள் எவ்வளவு அற்புதமானவர்கள்!''

"அதிலென்ன சந்தேகம்? நீங்கள்கூட ஒரு அற்புத மனிதர்தான்!''

"என் மனசுல ஒரு கவலை இருக்கு. மணம் வீசுற கவித்துவமான ஒரு கவலைன்னுகூட இதைச் சொல்லலாம். சந்திரன் உதிச்சிக்கிட்டு இருக்குற இரவு நேரங்கள்ல எனக்கு இப்படி ஒரு கவலை மனசுல தோணும். உங்களுக்கு அப்படித் தோணியிருக்கா?''

"சில நேரங்கள்ல எல்லாருக்குமே இப்படித் தோணும்!''

"சரி... நிலவுல உயிர்கள் இருக்கா என்ன?''

"அங்கே ஒண்ணுமே இல்லைன்னுதான் விஞ்ஞானிகள் சொல்றாங்க. அது ஒரு செத்துப்போன உலகம்தான். அவங்க சொல்லியிருக்காங்க!''

"நட்சத்திரங்கள்ல?''

"சிலவற்றில் உயிரினங்கள் இருக்குன்னு சொல்றாங்க. இனி கொஞ்சம் காலம் போனா... அதாவது- எதிர்காலத்துல என்னவெல்லாம் நடக்கும்? கோடி கோடி வருடங்களுக்கு முன்னாடி, அந்தக் காலத்துல உலகத்துல ஒண்ணுமே இல்ல...''

"எதுவுமேவா?''

"ஆமா... அதாவது- பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும்- அற்புதமான, அதிசயிக்கத்தக்க, பயங்கரமான, அறிவுக்கெட்டாத இந்தப் பெரிய பிரபஞ்சமும்...''

"பிறகு எல்லாம் எப்படி உண்டானது?''

"கடவுள் சூனியத்தில் இருந்து படைச்சதுதான் எல்லாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவங்க சொல்றாங்க- பூமியும், நாமும், பிரபஞ்சமும் தானே உண்டாச்சுன்னு!''

"எது சரியானது?''

"என்ன சொல்றது? சில மத நூல்கள்ல பூமிதான் பெரிசுன்னு சொல்லப்பட்டிருக்கு. வேறு சில நூல்கள்ல பூமியும், சூரியனும், சந்திரனும், சில நட்சத்திரங்களும் சேர்ந்ததுதான் பிரபஞ்சம்னு சொல்லப்பட்டிருக்கு. சில நூல்கள்ல பூமியை தேவின்னு வழிபட்டிருக்காங்க. சூரியனும், சந்திரனும் கடவுள்கள்னு சொல்லப்பட்டிருக்கு. சில நூல்கள்ல பூகோளம் வெறும் மண்ணாங்கட்டின்னு கூறப்பட்டிருக்கு. சில மத நூல்களும் விஞ்ஞானிகளும் பூமி உருண்டையானதுன்னு சொல்லி இருக்காங்க. இதுல எது சரியானது? நீங்க மதங்களை நம்பாத ஒரு ஆளாச்சே! உங்களுக்கு எது சரின்னுபடுதோ, அதை ஏத்துக்கோங்க...''

"சில மத நூல்கள்ல நட்சத்திரங்களும், சூரியனும், சந்திரனும் - கடவுள் எரிய வைத்த விளக்குகள்னு சொல்லப்பட்டிருக்கு. உங்க அபிப்ராயத்தில மனிதர்கள் எப்படி உண்டானாங்கன்னு நினைக்கிறீங்க?''

"மனிதர்கள் மட்டுமில்ல... இங்க எவ்வளவு உயிரினங்கள் இருக்கு! இவை எல்லாமே எப்படி உண்டாயின? அது பற்றி நீங்க சொந்தமா யோசிச்சு ஒரு முடிவுக்கு வரவேண்டியதுதான். அதாவது- இதைப் பற்றி எனக்கு எதுவுமே தெரியாதுன்னும், நான் ஒண்ணும் புதுசா எதையும் கண்டுபிடிக்கலைன்னும் இதற்கு அர்த்தம். விஞ்ஞானிகள் சொல்றதைக் கேட்டிருக்கேன். அவங்க வேற வேற மாதிரி சொல்லியிருக்காங்க. சுருக்கமா நான் சொல்றேன். ஆனா, கேட்க அவ்வளவு நல்லா இருக்காது. உலகத்தோட ஆரம்பத்திற்குப் போவோம். கோடி வருடங்கள்... பாருங்க... பத்து வருடம், நூறு வருடம், ஆயிரம் வருடம்... நீங்களும் நானும் வர்றதுக்கு முன்னாடி... மனிதப் பிறவிகள் உண்டாவதற்கு முன்னாடி... உயிரினங்கள் உண்டாவதற்கு முன்னாடி... நீரும் மண்ணும் உண்டாவதற்கு முன்னாடி... கோடிக்கணக்கான யுகங்களுக்கு முன்னால்... பூமி உருகி எரிஞ்சு சுத்திக்கிட்டு இருக்குற ஒரு பிரம்மாண்டமான சிவந்த நிறம் கலந்த ஒரு வெளுத்த தீக்கட்டைன்னு  மனசுல நினைச்சுக்கோங்க. அதற்கு முன்னாடி இந்த பூமியான சிவந்த நிறம் கலந்த வெளுத்த தீக்கட்டை- பயங்கர வெப்பத்துடன் எரிந்து கொண்டிருக்கிற சூரிய குடும்பத்துல சாதாரண ஒரு துகள்...''

"பிறகு?''

"அதுல இருந்து சிதறிப்போய் அப்படி அது சுத்திக்கிட்டு இருக்கு. நூறு நூறாயிரம் யுகங்களா... இரவும் பகலுமா... இல்ல... அப்போ பகலும் ராத்திரியும் இல்லியே! அப்படி... எரிஞ்சிக்கிட்டு இருக்கு.''

"பிறகு?''

"கொஞ்சம் கொஞ்சமா அது குளிர்ச்சியாகுது. யுகங்கள் கடந்துபோகுது. நீரும் மண்ணும் உண்டாகுது. பிறகும் யுகங்கள் கடக்கின்றன. கடல்களும், நதிகளும், ஏரிகளும், நீர்வாழ் உயிர்களும், பாசிகளும், செடிகளும், மரங்களும் உண்டாகின்றன. நூறாயிரம் யுகங்களா... பறவைகளும், புழு- புச்சிகளும், மிருகங்களும் உண்டாகின்றன. காலம் நீங்குகிறது. நூற்றுக்கணக்கான யுகங்கள் பாய்ந்தோடுகின்றன. மனிதர்கள் தோன்றுகிறார்கள். நிர்வாணமான ஆண்கள்- பெண்கள்! அதற்குப் பின்னாடி நூறு நூறாயிரம் யுக பரம்பரைகளின் இரவிலும் பகலிலுமாக மனித வாழ்க்கை தொடருது. நான் இப்போ சொன்னதுல இங்கேயும் அங்கேயுமா சில தவறுகள் இருக்கலாம். இருந்தாலும் சுருக்கம் இதுதான். உயிரினங்கள்ல மனிதர்கள் மட்டும் வளர்ந்திருக்காங்க. வேட்டையாடுபவர்களாக, குகைவாசிகளாக, விவசாயிகளாக, கிராமங்கள், மதங்கள், தேவாலயங்கள், பட்டணங்கள், இயந்திரங்கள், வாகனங்கள்- இப்படி வந்து கொண்டிருக்கு மனிதர்களின் கதை. இது ஒரு முடிவே இல்லாம போய்க்கிட்டிருக்கு.''

"இனி நம்ம எதிர்காலம் எப்படி இருக்கும்?''

"மனித சமுதாயத்தின் எதிர்காலத்தைக் கேக்குறீங்களா?''

"ஆமா...''

"வீரமும் காதலும் கட்டாயம் நமக்குத் தேவை ஆயிற்றே! பயங்கர நோய்கள் ஒரு பக்கம் இருந்தாலும், அதைப் போக்க நம்ம கைவசம் ஆயுதங்கள் இருக்கும். மருந்துகளைச் சொல்றேன். வாகனங்கள் இருக்கு. மின்சாரம் இருக்கு. பூமிக்கு மேலே... ஆகாயத்தில், நீரிலும் அதற்கு அடியிலும்... ஏன் பூமிக்கு அடியிலும்கூட ஓடுகிற வாகனங்கள்... மிகப்பெரிய சக்தி கொண்ட வாகனங்கள்... தூர... அதிதூர கிரகங்கள்...''

"இந்த பூமிக்கு உள்ளே என்ன இருக்கு?''

"நெருப்பு மலைகள் வெடித்து ஒழுகுகின்றன... உலோகங்களும் மற்ற பல பொருட்களும் உருகி... இரும்பும் மற்ற சில பொருட்களும் பூமிக்கு உள்ளே பயங்கர வெப்பத்துடன் உருகி எரிஞ்சு... இப்படி எத்தனையோ இருக்கின்றன பூமிக்கு அடியில்!''

"பூமி ஒருகாலத்தில் அழிஞ்சு போகுமா என்ன?''

"நானும் நீங்களும் ஒருகாலத்தில் இந்த உலகத்தில் இருக்கப் போறதில்ல என்பது உண்மைதானே! பூமியைப் பற்றி, பிரபஞ்சத்தின் எதிர்காலத்தைப்பற்றி இப்போ எதற்கு நினைச்சுப் பார்க்கணும்?''

"சந்திரன் ஒரு இறந்துபோன உலகம்னு தெரிஞ்சு போயிருக்கே?''

"அதற்கு முன்னாடி அந்தக் காலத்துல ஏதாவது இருந்ததான்னு நமக்குத் தெரியாது. நமக்கு கொஞ்சம்கூட பிடிபடாத விஷயங்களைப் பற்றி நாம் ஏன் வீணா மண்டையைப்போட்டு குழப்பிக்கணும்? எல்லாமே கடவுள் படைச்சவைதான்னு நினைச்சுக்கோங்க. சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்- இவை எல்லாமே கடவுள் நமக்காக எரிய வச்ச விளக்குகள்னு நினைச்சுக்கோங்க!''

"அப்படின்னா மதங்கள், சொர்க்கம், நரகம்- இவற்றையும் நம்பணும்ல?''

"நீங்க நம்புறீங்களா?''

"நம்புங்க. யார் வேண்டாம்னு சொன்னது?''

"நான் நம்புறேனா இல்லையான்னு நீங்க தெரிஞ்சு என்ன செய்யப்போறீங்க?''

"தெரிஞ்சுக்கலாம்னுதான்!''


"அது வேண்டாம். நீங்க இந்த பூமியில இருக்குற ஒரு மனிதர். சிந்திச்சு நீங்களே ஒரு முடிவுக்கு வாங்க. நாம எதையெதையோ பேசி வெறுமனே நேரத்தைப் போக்கிக்கிட்டு இருக்கோம். நீங்க என்ன சொல்லணும்னு நினைக்கிறீங்களோ, தாராளமா சொல்லுங்க. எனக்கு எழுதுறதுக்கு நிறைய விஷயங்கள் இருக்கு!''

"நான் எந்த இடத்துல நிறுத்தினேன்?''

"மணமுள்ள கை லேஸ். அப்போத்தான் நீங்க பிரகாசமா வானத்துல இருக்குற சந்திரனைப் பார்த்தீங்க. ஆமா... நீங்க அந்தக் கைலேஸுக்கு முத்தம் கொடுத்தீங்க. ராத்திரியில படுத்துக்கிட்டு கை லேஸைக் கையில வச்சுக்கிட்டு கனவுகள் கண்டீங்க!''

"சரிதான். அதுல செண்ட் தடவப்பட்டிருந்துச்சு. ரொம்பவும் விலை உயர்ந்த செண்ட். நான் தங்கியிருந்த வீட்டு உரிமையாளரோட மனைவி உபயோகிக்கிற செண்ட் அது. எனக்கு இந்த விஷயம் வேலைக்காரி சொல்லித்தான் தெரியும். என் பாக்கெட்ல அந்த மகத்துவமான கை லேஸை வச்சிருந்தேன். "மாஸ்டர், உங்களுக்கு சின்ன அம்மாவோட மணம்" என்று அவள் சொன்னாள். நான் கேட்டேன்: "எந்த சின்னம்மாவைச் சொன்னே?" அவள் சொன்னா: "நம்மோட" அவள் இப்படிச் சொன்னது எனக்கு அவள் காப்பியும் பலகாரமும் கொண்டு வந்து தந்த சமயத்துல. நான் அவள் பேசினதுல கவனமே வைக்கல. நான் அப்போ என்னோட காதலியைப் பற்றி நினைச்சக்கிட்டு இருந்தேன்!''

"பிறகு?''

"அங்கே ஒரு கல்யாணம் நடந்தது. நான் தங்கியிருந்த வீட்ல இருந்த ஒரு இளம் பெண்ணுக்கு. அன்னைக்கு ஒரே வெடிச்சத்தமும், ஆர்ப்பாட்டமுமா இருந்தது. விருந்து வேற. முக்கிய ஆண்களும் பெண்களும் ஏராளமா கல்யாணத்துக்கு வந்திருந்தாங்க. ஒவ்வொருத்தருக்கும் எது எது தேவையோ எல்லாமே அங்கே இருந்துச்சு. மது தேவைப்பட்டவங்களுக்கு மதுவும் போதை மருந்துகள் தேவைப்பட்டவங்களுக்கு அதுவும். சாயங்காலத்துக்கு முன்னாடியே நான் நிதானத்துல இல்லாம இருந்தேன்."

"வழக்கம்போல அன்னைக்கும் என்னோட காதலி வந்தா. நான் அவ கூட போனேன். என்னை ஒரு வண்டியில ஏற்றிக்கொண்டு போனா.''

"பிறகு?''

"கனவு காண்ற கண்களோட என்னைப் பார்த்து சிரிச்சா. என்னை வண்டியில இருந்து இறக்கிவிட்டா. தெருவுல இருந்த அறையில தள்ளி கதவை அடைச்சா. என்னை இறுக்கமா கட்டிப் பிடிச்சா. படுக்கையில உட்காரச் சொன்னா. அவளே பிடிச்சு உட்கார வச்சா. அறை இருட்டுல மூழ்கிக் கிடந்தது. சொர்க்கம்னு தான் சொல்லணும். நான் அவளோட முகத்துலயும் கண்கள்லயும் முத்தம் தந்தேன். அழகான மார்பகங்களில் திருப்பித் திருப்பி நூறு முறை முத்தம் தந்தேன். உலகத்தையே மறந்து நாங்க ஒருவரையொருவர் இறுகத் தழுவி இன்பத்தில் ஆழ்ந்துபோய்க் கிடந்தோம்.

நான்... நான் ஏதோ மலைமேல இருந்து புறப்பட்டு பாய்ஞ்சு வர்ற நதி மாதிரி ஆனேன். பல யுகங்களாக நதியின் ஓட்டமே இல்லாமல் இருந்த மலை என்னோட பலத்தால் தகர்ந்து... நொறுங்கியது. பயங்கரமான வேகத்துடன் நான் பாய்ந்து ஓடினேன். ஓடுகிற ஓட்டத்தில் என்னையே நான் இழந்தேன். கடைசியில் ஆனந்த வெள்ளத்தில் சிக்கி, நான் திக்குமுக்காடிப்போய் நின்னேன். கண்களைத் திறந்து பார்த்தேன். விளக்கு மீண்டும் எரிஞ்சது. என் தலையில வெளிச்சம் வந்து விழுந்துச்சு. என் மனசுல பயங்கர சந்தோஷம்.  பல யுகங்களாக நான் காணாத ஒரு திருப்தியை அப்போது உணர்ந்தேன். ஆனால், என்னைச் சுற்றிலும் பார்த்தேன். ரசிக்கிற மாதிரி இல்ல. மேல் பூச்சு ஆங்காங்கே உதிர்ந்து சிதிலமடைந்து போயிருக்கும் சுவர். கொடியில் தொங்கிக் கொண்டிருந்த நாற்றம் பிடித்த துணிமணிகள். மண்ணாலான திண்ணையில் ஒரு இரும்புப் பெட்டி. சுவரில் திரைப்பட நடிகைகளின்- நடிகர்களின் புகைப்படங்கள். அறையெங்கும் ஒரு கெட்ட நாற்றம்! அதற்கு மத்தியில் ஒரு இனிய நறுமணமும்!

"ஏதாவது குடிக்கிறீங்களா?" அவள்தான் கேட்டாள். அதைக்கேட்டு நான் நடுங்கிப்போனேன். என்ன குரல் அது! ஒரு கிழட்டு காகத்தின் குரலைப்போல் இருந்துச்சு. பெண்மையின் அடையாளமே இல்ல! கறுப்பு முடிகள் பாடீஸுக்குள் இருந்து எட்டிப் பார்த்துச்சு. எனக்கு ஒருவிதத்துல வியப்பாகவும் பயமாகவும் வெறுப்பாகவும் இருந்துச்சு.

நான் எழுந்து மார்பகங்களைப் பிடிச்சேன். பஞ்சாலான ரெண்டு பொட்டலங்கள்! அவ்வளவுதான்- நான் அப்படியே உட்கார்ந்துட்டேன். நேரம் மணிக்கணக்கா ஓடிக்கொண்டே இருந்துச்சு. அந்த மார்பகங்களை பாடீஸோடு சேர்த்து நான் கழற்றினேன். முடிகள் உள்ள ஒரு ஆணின் நெஞ்சு!

அந்த பஞ்சாலான மார்பகங்களைக் கொண்ட பாடீஸை நான் படுக்கையில் வச்சேன். அழகான மார்பகங்கள்! எனக்கு கோபமா, வியப்பா, கவலையா, வெறுப்பா, பயமா என்ன வந்ததுன்னே எனக்கே தெரியல. நான் ஒரு சிகரெட்டை உதட்டுல பொருத்தி புகையை விட ஆரம்பிச்சேன். புகை...! புகை நிரம்பிய வாழ்க்கை! நகரத்தின் ஆர்ப்பாட்டங்களுக்கு மத்தியில் வெடிச்சத்தம் காதில் வந்து விழுந்துச்சு.

நான் கேட்டேன் :

"நீ ஆணாகப் பிறந்து...?"

8

"அவள்- அது- அவன் என் பக்கத்துல வந்து நின்னான். பஞ்சால் ஆன மார்பகங்கள் கொண்ட பாடீஸை எடுத்து அணிஞ்சான். அதற்கு மேலே ப்ளவுஸைப் போட்டான். பிறகு அழகா புடவையைக் கட்டியவாறு என்னைப் பார்த்துக் கேட்டான்:

"என்னைப்போல இருக்குறவங்களை நீ பார்த்ததே இல்லியா?"

"உன்னைப்போல உள்ளவங்களையா?"

"எல்லா இடங்கள்லயும் இருக்குறாங்களே!"

"எல்லா இடங்கள்லயும்...!" (எல்லா காலங்கள்லயும்) பின்னாடி தான் எனக்கே தெரிஞ்சது- அந்தக் காலத்துல மன்னர்களோட அரண்மனைகள்ல, சக்கரவர்த்திகளின்... ஜனாதிபதிகளின்... சர்வாதிகாரிகளின் மாளிகைகள்ல இவங்க இருந்திருக்காங்க. ஆண் விபச்சாரிகள்! பெண்களின் உடைகளை அணிந்துகொண்டு நடக்குறவங்கள்லாம் இப்படித்தானா? நான் அப்படியே பார்த்துக்கிட்டே உட்கார்ந்திருந்தேன். எனக்கு பெண்களை அறிமுகமே கிடையாது. ஆடை இல்லாம நிர்வாணமா, அவுங்களை நான் பார்த்ததும் இல்லை. இருட்டுல காமத்தின், மதுவின், காதலின் போதையில் நான் என்னென்னவோ செஞ்சிட்டேன். என் உடம்பு முழுக்க வியர்வை. நான் உட்கார்ந்து என்னை நானே கடுமையா திட்டினேன். நான் என்ன காரியம் செஞ்சிட்டேன்? சொல்லப் போனா ஒருவித பரிதாபமும்... கோபமும் அப்போ வந்துச்சு. அதோட இரக்கமும். மனசின் ஒரு மூலையில் அருவருப்பும் வெறுப்பும்கூட தோணிச்சு. என்னைப்போல ஒரு ஆண்!

நான் கேட்டேன்:

"உன்னைப்போல இருக்குறவங்க இங்கே எவ்வளவு பேர் இருக்காங்க?"

"இங்கே நிறைய பேர் இருக்காங்க!"

"இது எப்படி...?"

அவன்... அது... முகத்தைத் திருப்பிக்கொண்டான். நான் அவனை மேலும் வற்புறுத்தவே அவன் சொன்னான்:

பிறகு... லிப்ஸ்டிக்கை எடுத்து உதட்டில் தடவிக்கிட்டே அவன் சொன்னான்: "எங்களுக்குன்னு சங்கம் இருக்கு. ஒண்ணு இல்ல... நிறைய சங்கங்கள் இருக்கு.


இதுல ஏதாவதொரு சங்கத்துல நாங்க சேர்றதுக்கு முன்னாடி எங்களை குத்துவிளக்குபோல கூர்மையான ஒண்ணு பக்கத்து உட்கார வைப்பாங்க. வேதனையான சிகிச்சை தான். ரத்தம் நிறைய கொட்டும்... பிறகு எல்லாச் சடங்குகளும் நடக்கும். அன்னைக்கு சங்கத்தைச் சேர்ந்த எல்லாரும் வருவாங்க. ஒரே பாட்டும் அமர்க்களமுமா இருக்கும். பிறகு சவரக் கத்தியால முகத்துல இருக்குற ரோமங்களை நீக்குவாங்க. பெண்ணோட பேரை வைப்பாங்க. புடவையும் பாவாடையும் அணிவிப்பாங்க. பஞ்சு மார்பகங்களை அணிவிப்பாங்க. முடியை நீளமா தொங்க விடுவாங்க."

"உங்களைத் தேடி யாரெல்லாம் வருவாங்க?"

"பெண்களும் ஆண்களும்..."

"உனக்கு ஆண்களைப்போல...?"

"முடியாத விஷயம்!"

"பிறகு ஏன் பெண்கள் உன்னைத் தேடி வர்றாங்க?"

"தெரியலியா? அவங்களையும் நாங்கள் மகிழ்ச்சிப்படுத்துவோம்!"

"சரி... உன்னோட கதையை என்கிட்ட சொல்லு!"

"எனக்குக் கதை எதுவும் கிடையாது!"

"உன்னோடு சிறு பிராயக் காலத்தைப்பற்றி... உனக்கு அப்பா, அம்மா எல்லாம் இருக்காங்களா?"

"ம்... ஆனா... ரொம்ப தூரத்துல. நான் இப்போ இப்படி இருக்கேன்னு அவங்களுக்குத் தெரியாது. நான் நீங்க இப்போ தங்கி இருக்கீங்களே... அந்த வீட்ல தங்கி இருந்திருக்கேன். அங்கே இன்னைக்கு அவரோட மகளின் திருமணமாச்சே!"

"ஆமா..."

"அந்தப் பொண்ணோட அம்மாவுக்கு என்னை ரொம்பவும் பிடிக்கும்!"

நான் சொன்னேன்: "எனக்கு அம்மா இல்ல. நாலு ரோடுகள் சந்திக்கிற இடத்துல ஒரு பழைய துணியில சுற்றி, இருட்டுல கிடந்த குழந்தை நான்..." நான் சொன்னதை அவன், அது நம்பினதாகத் தெரியவில்லை.

அவன் ஒரு ஆண் விபச்சாரியாக ஆனது எப்படின்னு சொன்னான். அப்போ அவன் பள்ளிக்கூடத்துல படிச்சிக்கிட்டு இருந்துருக்கான். குருநாதர், நண்பர்கள் எல்லாமே அவன் வாழ்க்கையில் வர்றாங்க. நகரத்துல இருந்து ஐம்பது மைல் தூரத்துல இருந்த ஒரு கிராமத்துலதான் அவன் பிறந்தது. பதினாலு வயசு அவனுக்கு நடக்குறப்போ அவனோட குருநாதர் அவனை ஓரினச் சேர்க்கைக்கு பயன்படுத்திக்கிட்டாரு. குருநாதர்! சரிதான்... ஒழுக்கத்தைச் சொல்லித்தர வேண்டிய குருநாதர் இப்படி! சுய புணர்ச்சியில் ஒரு இன்பம் இருக்குன்னு அந்த ஆளுதான் சொல்லித் தந்தாரு. கொஞ்ச நாள் போன பிறகுதான் அவனுக்கே தெரிய வந்தது- நாடு முழுக்க இப்படிப்பட்ட காரியங்கள் பெரிய அளவுல நடந்துக்கிட்டு இருக்குன்னு. பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், மதப் பாடசாலைகள், கன்னியாஸ்திரீ மடங்கள், வைதீக ஆசிரமங்கள்... இந்த இடங்கள்ல இருக்குற உடலுறவு சம்பந்தப்பட்ட எல்லா விஷயங்களையும் அவன் நாளடைவில் கற்றுக்கொண்டான். பதினாறு வயசு அவனுக்கு நடக்குறப்போ, அவன் நகரத்துல ஒரு ஹோட்டல்ல வேலை பார்க்கப் போனான். அங்கே இருந்த இன்னொருத்தன்கிட்ட இருந்து அவனுக்கு கொனொரியா நோய் கிடைச்சது. எல்லா ஹோட்டல்ல வேலைபார்க்குற வேலைக்காரர்களுக்கும் கொனோரியாவோ, ஸிஃபிலிஸ்ஸோ கட்டாயம் இருக்கும்! அவன் எங்கெங்கோ அலைஞ்சு திரிஞ்சு நகரத்தின் இந்தப் பகுதிக்கு வந்தான். நான் தங்கிக்கிட்டு இருந்த வீட்டு உரிமையாளரோட ட்ரைவர்கூட கொஞ்ச நாள் தங்கினான். அவன் மூலமா வீட்டுக்குள்ளே வர்றதுக்கு அவனுக்கு வாய்ப்பு கிடைச்சது. முதல்ல அவன் "பாய்" ஆகத்தான் இருந்தான். பிறகு... அந்தவீட்டு  உரிமையாளரான பெரிய மனிதரின் கால் தொடைகள் வழியே மேல் நோக்கி அவனுக்குத் தடவுற வேலை. வீட்டு உரிமையாளரோட மனைவிக்கு காலை அமுக்கிவிட்டால் மட்டும் போதாது... அந்தக் காலத்துல அவனுக்கு ஆண்மைத்தனம் சொல்லிக்கிற மாதிரி இல்ல. இறுதியில்... அவன் வெளியே தெரியிற மாதிரி ஒரு ஆண் விபச்சாரியா ஆயிட்டான். அந்தத் தெரு முழுக்க ஆண் விபச்சாரிகள்தாம். கூட்டமா அவங்க வசதியானவங்க வீடுகள்ல போய் ஆடுவாங்க, பாடுவாங்க- வாத்தியங்கள், மேளங்கள் சகிதமா. இப்படி எத்தனையோ பேர்! பெண் விபச்சாரிகள் எவ்வளவு பேர் இருக்குறாங்களோ, அவ்வளவு ஆண் விபச்சாரிகளும் இருக்குறாங்க! அவன்கிட்ட இருந்துதான் எனக்கு ஸிஃபிலிஸும் கொனோரியாவும் கிடைச்சது...''

"உங்களுக்கா?''

"ஆமா...''

"இப்பவும் அது இருக்கா?''

"இருக்கு. உங்களுக்கு இது ஏற்கனவே தெரிஞ்சிருக்கும்னு நினைச்சேன்!''

"எதை வச்சு சொல்றீங்க?''

"துண்டும்...படுக்கையும்!''

"நான் சாதாரணமா என் படுக்கையில இன்னொருத்தரைப் படுக்க விடுறது இல்ல. நான் பயன்படுத்துற துண்டை இன்னொருத்தருக்குத் தர்றது இல்ல. அதற்கு வேற காரணங்கள் இருக்கு. இன்னொரு ஆள் குளிச்சு அவனோட உடம்பையும், மற்ற உறுப்புகளையும் துடைச்ச துண்டு... மற்றொரு ஆளின் வியர்வை பட்ட படுக்கை. மனிதர்கள் கிட்டத்தான் ஏகப்பட்ட நோய்கள் இருக்கே! அவற்றில் பல தொற்றிக் கொள்ளக்கூடியவை! ஆனால், என்னைத்தேடி நேரம், காலம் எதையும் பார்க்காம ஆளுங்க வருவாங்க. அதுனால ஒரு படுக்கையும் துண்டும் அடுத்த அறையில எப்பவும் இருக்கும்.''

"நான் வேற மாதிரி நினைச்சேன்!''

"இது பரவுமா?''

"வியர்வை மூலமாகவும், துண்டு பயன்படுத்தினாலும், படுக்கை மூலமாகவும், அணிகிற ஆடைகள் வழியாகவும்கூட இது பரவும்!''

"நீங்க அந்த அறையிலேயே இருந்தது ஒருவிதத்துல நல்லதாப் போச்சு!''

"நான் இப்போ ஒரு தாயின் கதையையும், அவளின் மகனின் கதையையும் கூறப் போறேன்!''

"நீங்க நகரத்துல தங்கி இருந்த அந்தப் பெரிய வீட்டைவிட்டு எப்போ வெளியேறினீங்க?''

"உடம்புக்கு ரொம்பவும் முடியாமப்போச்சு. அங்கே இருந்தவங்க முகத்தைப் பார்க்கவே எனக்கு என்னவோபோல் இருந்துச்சு. அவ்வளவுதான்- நான் வீட்டைவிட்டு வெளியேறிட்டேன். சாப்பிடுறதுக்கு ஒரு வழியும் இல்ல. நோய்க்கு சிகிச்சை பண்ண கையில் காசு இல்ல. தங்குறதுக்கு இடமில்ல. என்ன பண்றதுன்னு  தெரியாம இங்கேயும் அங்கேயுமா அலைஞ்சிக்கிட்டு இருந்தப்ப தான் அம்மாவையும் பையனையும் நான் பாக்குறேன். அந்த அம்மா என் நெஞ்சில் ஓங்கி மிதிச்சாங்க!

அதைப்பற்றி நான் பிறகு சொல்கிறேன். அந்த ஆண் விபச்சாரி என்ன சொன்னான் தெரியுமா?

என்னையே வச்ச கண் எடுக்காமப் பார்த்தான். பிறகு சொன்னான்:

"நல்ல பலமும் அழகும் உள்ள ஆண்களைப் பாக்குறப்போ, என் மனசில இனம் புரியாத ஒரு விருப்பம் உண்டாகுது..."

நான் நாளைக்கு வர்றேன்னு சொல்லிட்டு கிளம்பிட்டேன். என் பாக்கெட்ல இருந்த பணம் எல்லாத்தையும் அவன் ஏற்கெனவே எடுத்திருந்தான்...''

"அப்படித்தான் உங்களுக்கு உடல்நலக் கேடு உண்டாச்சா?''

"ஆமா!''

"ரொம்பவும் வலி இருக்கா என்ன?''

"மூத்திரம் இருக்க முடியல. ஒரு கடல் அளவுக்கு மூத்திரம் வரப்போற மாதிரி இருக்கும். ஆனா, உட்கார்ந்தா வராது. ஒரே கடுகடுப்பு. மிளகாயை அரைச்சு தேய்ச்சா எப்படி இருக்கும்? அப்படியொரு எரிச்சல்... பிறப்பு உறுப்புக்குள்ளே நிறைய முட்கள் குத்துறது மாதிரி இருக்கும். பல்லைக் கடிச்சிக்கிட்டு, மூச்சை அடக்கிப் பிடிச்சிக்கிட்டு, கண்களால வெறிச்சிப் பார்த்துக்கிட்டு நான் மூத்திரம் பெய்வேன்.


எலும்பு உருகி சலமா போகும். உள்ளே தோல் பழுத்துப் போய் நாற்றமடிக்கும். அதற்கு மத்தியில் பயங்கர வேதனையோட சூடான மூத்திரம்...''

"இது ஸிஃபிலிஸா கொனோரியாவா?''

"கொனோரியா. ஸிஃபிலிஸுக்கு புண்கள் உண்டாகும். ரத்தத்தைப்போல... நெருப்பைப்போல... சிவப்பு சிவப்பா அடையாளங்கள். அது கொஞ்சம் கொஞ்சமா நெருப்பு மாதிரி எரிஞ்சு பெருசாகும்.''

"அதற்குப் பிறகு நீங்க அந்த கிழட்டு விபச்சாரியைப் பார்த்தீங்களா?''

"பார்த்தேன். அவனை மட்டுமில்ல. இன்னும் எத்தனையோ பேரைப் பார்த்தேன். அதற்கு முன்னாடி நான் மணமுள்ள கை லேஸை நெருப்புல எரிச்சிட்டேன்." அவன் காகத்தின் குரல்ல என்னைப் பார்த்துக் கேட்டான்.

"அதற்குப் பின்னாடி என்ன நீ என்னைப் பார்க்கவே இல்ல? என்னை மறந்திட்டியா? எனக்குத் தெரியும்- வேற யாரையோ தேடி நீ போய்ட்டே, இல்ல?"

"சரி... உங்க நெஞ்சில மிதிச்ச தாயைப்பற்றி சொல்லுங்க...''

9

"மனம் முழுக்க கவலையையும் உடம்புல தளர்ச்சியையும் வச்சிக்கிட்டு நான் போய் ஒரு மரத்தடியில் அமர்ந்தேன். எனக்குப் பின்னாடி இடிஞ்சு போய் காணப்பட்ட ஒரு பழைய பெரிய தேவாலயம். இடது பக்கம் சற்று தூரத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். முன்பக்கம் பரந்து கிடக்கும் பாழ்நிலம். வலது பக்கம் கொஞ்சம் தள்ளி மிகமிகப் பழைய சுடுகாடு. நான்தான் சொன்னேனே எனக்கு பயங்கர களைப்பா இருந்துச்சுன்னு. நான் உணவுன்னு எதுவும் சாப்பிடல. பசியின் கொடுமை எப்படி இருக்கும்னு உங்களுக்குத் தெரியும்ல? கடுமையான பசி. என் கையில ஒரு பைசா கிடையாது. நான் அந்தப் புராதனமான தேவாலயத்தின் படின்னு நினைக்கிறேன்... ஒரு கருங்கல் மேல தளர்ந்துபோய் படுத்துக் கிடந்தேன். பசி, தாகம், களைப்பு, வேதனைகள்... வேதனைகளின் கொடுங்காற்று. சூரியன் மறையிறதுக்கு இன்னும் கொஞ்சம் நேரம் இருந்தது. நான் என்னை மறந்து மயங்கிக் கிடந்தேன். அந்தக் கருங்கல்லின் குளிர்ல அப்படியே ஒன்றிப் போனேன். கொஞ்ச நேரத்துல நல்லா தூங்கியும் போனேன். சூரியன் மறைந்தது. இரவு வந்தது. இது எதுவுமே எனக்குத் தெரியாது.

என்னை யாரோ கூப்பிடுறது மாதிரி இருந்துச்சு. நான் ஒரு பெரிய கலாட்டாவுக்கு மத்தியில சிக்கிக்கிடந்ததுபோல உணர்ந்தேன். கண் விழிச்சுப் பார்த்தேன். உடம்பு தெப்பமா நனைஞ்சிருந்தது. முழுக்க இருட்டுன்னு சொல்றதுக்கு இல்ல. உலகம் நிலவு வெளிச்சத்தில் மூழ்கிக் கிடந்துச்சு. இலைகள் வழியா சந்திரன் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான். ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான நட்சத்திரங்கள். விசாலமான, விசாலமான, விசாலமான வானம். எனக்குள் ஒரே தனிமை உணர்வு... பிரபஞ்சம்.... கண்விழித்த வேதனைகள்.... பலவித சத்தங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் தெளிவான குரல். அவளின் குரலில் ஒருவித கவலை, வேதனை தெரிந்தது.

"யார் இங்க வந்து படுத்துக் கிடக்கிறது? ஏதோ இந்த இடம் இந்த ஆளுக்குச் சொந்தம் மாதிரி..."

அவள் சொன்னது என்னைப் பற்றித்தான். நான் கொஞ்சம்கூட அசையல. வாய்திறந்து ஒரு வார்த்தை பேசல. பேய், பிசாசுகள்மீது எனக்கு நம்பிக்கை இல்லைன்னாலும் நான் பயந்து போயிருந்த தென்னவோ உண்மை. கொஞ்சம் தள்ளி இன்னொரு குரல். ஒரு கிழவனின் குரல் அது.

"எனக்கு ரெண்டு கண்ணுமே இல்லைன்னா என்ன?"

"க்ல... க்ல.... க்ல... க்லக்!" நாய் தண்ணீரை நக்கி குடிக்கிற சத்தம்! இடையில் ஒரு குழந்தையின் குரல்!

"பால் தரல."

"அடியே, மிருகமே!" ஒரு ஆணின் குரல்.

அதற்கு ஒரு பெண்ணின் பதில்:

"நான் கொஞ்சம் மூத்திரம் இருந்துட்டு வர்றேன்!"

மூத்திரம் பெய்யும் சத்தம் என் காதில் விழவில்லை. ஒரே ஆர்ப்பாட்டம். மக்கள் பேசிக்கொண்டிருந்தார்கள். ஆண்களும் பெண்களும் இடையில் குழந்தைகளும். நான் இப்போ எங்கே இருக்கேன்? நினைச்சுப் பார்த்தப்போ மனசுல இனம்புரியாத பயம் உண்டானது. என்னைச் சுற்றிலும் ஒரே நாற்றம். என்னவோ தீயில் எரிஞ்சு கருகுற மாதிரி இருந்துச்சு. இடையில் சில நல்ல வாசனைகளும் இல்லாம இல்ல.

"சரி... எந்திரிச்சு போ." மீண்டும் முதலில் கேட்ட பெண்ணின் குரல். அவள் எனக்கு ரொம்பவும் பக்கத்துலேயே இருந்தா. நான் கொஞ்சம் கூட அசையல. காற்றில் இலைகள் சலசலத்துக்கிட்டு இருந்துச்சு! என் உடம்புல மரத்தின் நிழல்கள் பட்டுச்சு. வெண்மையான மேகங்கள் வானத்துல சஞ்சரிச்சுக்கிட்டு இருந்துச்சு. சந்திரனுக்கும் பூமிக்கும் இடையில் வேகமா பாய்ந்து போய்க் கொண்டிருந்த மேகங்களைப் பார்க்கவே ரொம்பவும் ரம்மியமா இருந்துச்சு. வானமே, கோடிக்கணக்கான நட்சத்திரங்களே, நிலவு காய்ந்து கொண்டிருக்கிற இரவு நேரமே, அற்புதமான பிரபஞ்சமே!

"மழை பெய்யுமோ?" தூரத்தில் ஒரு ஆணின் குரல். அதற்கு யாரோ பதில் சொன்னாங்க. பதில் சொன்னது ஒரு பெண்:

"தெய்வம் இன்னைக்கு மழை பெய்ய வைக்கமாட்டான்!"

"ஆமா... வழியில கிடந்தது என்ன?" ஒரு ஆண் கேட்க, ஒரு பெண் பதில் சொன்னாள்:

"எனக்கு மயக்கம் வர்ற மாதிரி இருந்துச்சு!"

"ஏன்?"

"நான் நேற்றுத்தான் பிரசவமானேன்!"

"சரி... குழந்தையோட அப்பன் யாரு?"

"யாருக்குத் தெரியும்?"

"முட்டாள்!" யாரோ சொன்னாங்க. அதைத் தொடர்ந்து ஒரே சிரிப்பொலி. அந்தச் சிரிப்பொலியில் சில பெண்களின் சிரிப்பும் இல்லாமல் இல்லை. கொஞ்ச நேரத்தில் சப்தங்கள் அந்தப் பக்கம் கேட்கல. யாரோ ஒரு கிழவன் சொல்லிக்கிட்டு இருந்தான்.

"நூறு பேர்கள்கிட்ட கேட்கணும்!"

"சரிதான்... அழுவுற பிள்ளைக்குத்தான் பால் கிடைக்கும்!" ஒரு பெண் சொன்னாள்.

"க்ல, க்ல, க்ல, க்லக்!"

"போ நாயே!"

"சரிதான்..."

"இந்த உலகத்துல இருக்குறவங்கள்ல தெய்வத்துக்கு பயப்படுறவங்க யாரு? சிலர் ஐநூறு பேருக்கு... சிலர் நூறு பேர்களுக்கு... சிலர் பத்து பேர்களுக்கு... ஒவ்வொரு நாளும் சாப்பாட்டுக்காக...!"

"ஆனா... வாங்குறவங்க கொடுக்கிறவங்க ஜாதிப் பெயரைச் சொல்லணும்!"

"அப்போ உண்மையைச் சொல்லக்கூடாது!"

"உண்மையைச் சொன்னா மரணம்தான்!"

"இங்கே வந்து பதினொரு வருடமாச்சு!"

"இதுவரை என்னத்தைச் சம்பாதிச்சிருக்கு?" ஒரு பெண்ணின் கேள்வி.

"ஒண்ணுமே இல்ல..."

"அதுதான் உண்மை!"

"போடி நாயே! நீயும் உன் சம்பாத்தியமும்..."

"சரி... உன்னோட நாற்றம் பிடிச்சு அழுகிப்போன காலை எதுக்கு என் முகத்துக்குப் பக்கத்துல நீட்டுறே?"

"உன்னோட மற்றது கூடத்தான் பழுத்திருக்கு!"

"எந்திரிச்சுப் போறியா இல்லியா?" மீண்டும் என் பக்கத்துல நின்றிருந்த பெண்ணின் குரல்: "அதுலதானே தினமும் நீ படுக்குறே?"

அவள் என் உடம்பைத் தொட்டாள். நான் பனிக்கட்டியைப் போல குளிர்ந்து போனேன்.


"செத்துப் போயாச்சா?" அவள் கேட்டாள். நான் சிறிதுகூட அசையல. நான் செத்துப் போனேன்னு அவங்க நினைக்கட்டும். என்னைச் சுற்றிலும் ஒரு அருமையான நறுமணம்! சோப்பு வாசனையா என்ன? இல்லாட்டி பவுடர் மணமா? ஏதோ ஒரு விலை குறைந்த செண்ட் மணம்னு மனசுல பட்டுச்சு. நல்ல வாசனைதான். நான் வலதுபக்கம் தலையைத் திருப்பிப் பார்த்தேன். இப்போ எல்லாம் தெளிவா தெரிஞ்சது. ஒரு பெண், இடுப்புல ஒரு குழந்தை. தாயும் பிள்ளையும்.

அவள் கொஞ்சம் தள்ளி நின்னு குழந்தைக்குப் பால் கொடுக்க ஆரம்பிச்சா. அவளின் பெரிய மார்பகங்களை அந்தக் குழந்தை சப்பிச் சப்பி குடிச்சது!

"ஒரு விஷயம் தெரியுமா? நான் இதுவரை ஒரு தாயோட பாலைக் குடிச்சது இல்ல. அந்தக் குழந்தை ஒரு கையால் அந்தப் பெண்ணின் இன்னொரு மார்பகத்தைப் பிடிக்க முயற்சித்தது. எனக்கே தெரியாத நான் இதுவரை பார்க்காத... என்... என்னோட தாய்!"

"மகனே... அம்மாவோட தங்கக்குடமே... என் பிள்ளை நல்லா பால் குடிச்சு முடிச்சு உறங்கணும்... அம்மாவைத் தேடி ஒரு ஆள் வருவாரு. அவர் அம்மாவுக்கு நிறைய காசு தருவாரு... மகனே... நீ உறங்கு..."

அவள் குழந்தைக்கு முத்தம் கொடுத்துவிட்டு தரையில் பழந்துணியில் சுற்றி அவனைப் படுக்க வச்சா. இருட்டுல... தனிமையான பாதையில... பழைய துணியில் சுற்றப்பட்டு... அனாதையாக... விசால, விசாலமான வானம். கோடிக்கணக்கான நட்சத்திரங்கள். ஒளிர்ந்து கொண்டிருக்கும் சந்திரன். இளம் காற்று. என் மனசுல கடுமையான தனிமை உணர்வு. அவள் ஆடைகளைத் தேடி உடுத்தினா. மார்பகங்களை உள்ளே விட்டு பொத்தான்களைப் போட்டா. மார்பகங்கள்... பிறகு கூந்தலை அவிழ்த்தா. சரியாக அதை முடிச்சுப் போட்டு கட்டினா. பிறகு... இடிஞ்சு போய் இருக்கும் பழமையான... புராதனமான சுவரோடு சேர்ந்து சாய்ஞ்சா.

யார் வர்றது? என்னவொரு எதிர்பார்ப்பு! அவள் இப்போ யாரை எதிர்பார்த்து காத்துக்கிட்டு இருக்கா? என் இதயம் படுவேகமாக அடிக்க ஆரம்பிச்சது. உடம்பெங்கும் சூடு பரவ ஆரம்பிச்சது.

அவங்க எதைப்பற்றியும் பெருசா எடுத்துக்கிட்ட மாதிரி தெரியல. பல சத்தங்களுக்கு மத்தியில் ஒரு பெண்ணின் சப்தம்:

"என் தாய் என்னைப் பெற்று வாய்க்கால்ல போட்டுட்டா. எனக்கு ரெண்டு புருஷன்க... ஒன்பது பிள்ளைங்க..."

"என் தகப்பன் ஒரு பட்டாளக்காரன்னு அம்மா சொன்னாங்க!"

"இன்னைக்கு நான் மோட்டார்ல ஏறினேனே." ஒரு பெண்ணின் குரல். வேறொருத்தி கேட்டாள்: "யார்டி உன்னை மோட்டார்ல ஏத்திட்டுப்போனது?"

"ஆரி... ரா... ரா... ரோ..." ஒரு தாய் தன் குழந்தையைத் தாலாட்டு பாடி தூங்க வைக்க முயற்சித்தாள். இடையில் பலவித சப்தங்கள்!

"இங்கே அவன்களுக்கு என்ன வேலை? இடிஞ்சு கீழே விழுந்து கிடந்தாலும், இது நம்மோடது..."

"போடா நாயே! இது எங்க ஜாதிக்காரங்களுக்குச் சொந்தமானது!"

"உங்க ரெண்டு ஜாதிக்காரங்களுக்கும் இல்ல. இது எங்களுக்குச் சொந்தமானது. அதற்குத் தெளிவான ஆதாரங்கள் இருக்கு!"

"ஓ... இதுமேல இனி சண்டை போடணுமா? கொஞ்சம் கஞ்சா தர்றேன்... நல்லா சண்டை போடு..."

"எனக்கு ரெண்டு கண்களும் இல்ல. அதனால என்ன?"

"ஒண்ணையும் பார்க்க முடியலியே!"

"இந்த உலகத்துல பார்க்க என்ன இருக்கு? நான்தான் எல்லாத்தையும் காதால கேக்குறேனே!"

"பார்ப்பதற்கு நட்சத்திரங்களும் நிலவும் இருக்கு!"

"நான் ஒரு கதை சொல்லட்டுமா?"

"கண் பார்வை இல்லாத ஒருத்தன் கதை சொல்லப்போறானாம்!"

"கையில காசும், துணைக்கு ஆளும், உணவுக்கு ஒரு வழியும் இல்லாம- பாதையில இருக்குற ஒரு கோவில்ல உட்கார்ந்து- சரி... ஒரு கஞ்சா பீடி கொடு... ஒரு இழு இழுத்துட்டு தர்றேன்!"

"இதுதான் கதையா? இந்தா தர்றேன் ஒரு கஞ்சா பீடி- பிடிச்சுக்கோ!"

"அய்யோ!" ஒரு பெண்ணின் அலறல் சத்தம்: "நீ என் நெஞ்சுமேல விழுந்திட்டே. உன்தலையில இடி விழ!"

"விழும்டி... விழும்!"

ஒரு பெண்ணின் காதல் வயப்பட்ட குற்றச்சாட்டு:

"வந்துட்ட... முழுசா கள்ளை ஊத்திக்கிட்டு!"

"அடியே, தேனே!"

"என்ன?"

"முத்தம்!"

"ஒரே கள்ளு நாற்றம்!"

"கள்ளு இல்லடி... பிராந்தி!"

"கள்ளுதான்!"

"பிராந்தியைக் கள்ளுன்னு சொன்னா உன்னைக் கொன்னுடுவேன்." இன்னொருவனின் குரல்.

"பேசாம படுக்குறியா என்ன?"

"என் பொண்டாட்டியோட அம்மாதான் என்னைப் பெற்றவள்!"

"அப்படியா?"

"நான் உன்னோட அப்பன்!"

"ஒத்துக்குறேன். நான் மகன்!"

"வேண்டாம்!"

"மகள்?"

"வேண்டாம்!"

"பொண்டாட்டி!"

"வேண்டாம்!"

"அப்பன்?"

"அப்பாவும் வேண்டாம்; அம்மாவும் வேண்டாம். தெய்வமும் வேண்டாம்."

"பிறகு யார்தான் வேணும்?"

"ஸ்ரீமான் கஞ்சா!"

ஒரு துக்கச்செய்தி. கொஞ்ச தூரத்துல இன்னொரு மூலையில இருந்து-

"இன்னைக்கு ரெயில்வே தண்டவாளத்துல தலையை வச்சு ஒரு ஆள் செத்துப்போயிட்டான். தலை தனியா துண்டாயிடுச்சு. கண் திறந்து, வாய் பிளந்து வானத்தைப் பார்த்துக்கிட்டு தனியா கிடந்தான்..."

"பிச்சைக்காரங்களும் மாறாத நோய் உள்ளவங்களும் கண் குருடானவங்களும்..."

"உண்மைதான்!"

"காட்ல பெரிய மரமும் சின்ன மரமும்..."

"பாம்பும் புலியும் சிங்கமும் எருமையும் மானும் முயலும் எலியும் யானையும்..."

"நாட்டுல மன்னனும் சக்கரவர்த்தியும் மில்காரனும் மந்திரியும் ஜனாதிபதியும் ஜெனரலும்..."

"நம்ம ரத்தமும் அவங்க ரத்தமும் ஒண்ணா?"

"நாய்க்கும் பன்றிக்கும்கூட ரத்தம் சிவப்பாத்தான் இருக்கும்!"

"நாயும் பன்றியும் எதை வேணும்னாலும் சாப்பிடும்!"

"இன்னொரு புது செய்தியைக் கேக்குறியா?" இன்னொரு மூலையில் இருந்து ஒரு குரல்: "காசு இருக்கும்னு நினைச்சு, தெரு மூலையில வச்சு கழுத்தை நெரிச்சு கொன்னேன். செத்துப்போன பிறகு பார்த்தால்... செத்தவன் பாக்கெட்ல ஒரு செல்லாத காசு இருக்கு!"

"அதற்குப் பிறகு நீங்க என்ன செஞ்சீங்க?" ஒரு பெண் கேட்டாள்.

"மகனே, அதோ வந்தாச்சு!" என் அருகில் இருந்த பெண்.

"யார் வர்றது? யாரோ நடந்து பக்கத்துல நெருங்கி வர்றாங்க. அவளுக்கு ரொம்பவும் பக்கத்துல வந்தாச்சு. நிலவு காய்ஞ்சிக்கிட்டு இருக்குற... நட்சத்திரங்கள் நிறைஞ்ச... அமைதியான வானம்! கீழே ஒரே மக்கள் கூட்டம்! பழமையான கோவில்! அவங்க மெதுவான குரல்ல பேசிக்கிறாங்க." அவள் ஏதோ தடுக்கிறாள்:

"இருக்கட்டும். காசை முதல்ல தந்துட்டு மார்புல கையை வை."

"உனக்கு எப்போ பார்த்தாலும் காசைப் பற்றித்தான் நினைப்பு! உன்மேல் இருக்குற காதல்னாலதானே இவ்வளவு தூரம் நடந்து நான் வந்திருக்கேன்!"

வேதனை கலந்த ஒரு சிரிப்பு: "காதலையும் அன்பையும் வச்சு... என் மகனின் பசியும் என்னோட பசியும் அடங்குமா என்ன?"


"சரி... உனக்கு நான் என்ன தரணும்? அதைச் சொல்லு..."

"ஒரு ரூபா... அதை முதல்ல என் கையில தரணும்!"

"இந்தா... ஒரு ரூபா! அடியே... உனக்கு என்ன உடம்புக்கு ஆகலியா?"

"ஆமா..."

"சரி... இன்னைக்கு ஒண்ணும் சாப்பிடலியா?"

"தேவையில்லாம ஏதாவது பேசிக்கிட்டு இருக்காம, எதுக்கு வந்தியோ அதை முடிச்சிட்டு போ. துணியை அவிழ்த்துப் போட்டுட்டு நான் இங்கே சாய்ஞ்சு நின்னா போதுமா?"

நான் நடுங்கல. அசையக்கூட இல்ல. பாவப்பட்ட பலவீனரான நாம்.... மனிதர்கள்! உயிரினங்கள்! ஆதிபுராதன, புராதனமான கோவில்! அந்த ஆண் அப்போதுதான் என்னைப் பார்த்தான். பதறிப்போன குரல்ல அவன் கேட்டான்:

"இது யாரு? உன்னோட..."

"என்னோட யாரும் இல்ல... இந்த ஆளு இங்கே வந்து படுத்துக் கிடக்கிறான். செத்துப்போயிட்டான்னு நினைக்கிறேன்!"

"பிணமா?" ஒரு சிறிய கல் என்மீது வந்து விழுந்துச்சு. நான் அசையவே இல்ல... உண்மையான பிணத்தைப்போலவே கிடந்தேன்!

"ஆம்பளைதான்னு நினைக்கிறேன். சரி... சீக்கிரம் காரியத்தை முடிச்சிட்டுப்போ..."

"நாம அங்கே- உள்ளே போவோம்!"

"சரி... உனக்கு வீடு இல்லியா?"

"அய்யோ... நீ அங்கே வரமுடியாது. அப்பாவும் அம்மாவும் என் பொண்டாட்டியும்..."

"பொண்டாட்டி இருக்காங்களா?"

"இப்போ அவ கர்ப்பமா இருக்கா!"

"எத்தனையாவது மாசம்?"

"அஞ்சு இல்லாட்டி ஆறுன்னு நினைக்கிறேன். சரி... நீ இந்தக் குழந்தையை அங்கே படுக்கப் போட்டுட்டு வா!"

"என் குழந்தையைப் போட்டுட்டு நான் எங்கேயும் வரமாட்டேன். எனக்கு யார்னே தெரியாத என்னோட அம்மா என்னை தனியா போட்டுட்டு போயிட்டா..."

"அடியே தங்கக்குடமே! உனக்கு வேணும்னா அரை ரூபா அதிகமா தர்றேன்..."

"அய்யோ வலிக்குது! நீ ஏன் மார்பையே பார்த்தது இல்லையா?"

"வாடி..."

"என் குழந்தை?"

"அங்கே சும்மா போடுடி..."

"பிணத்துக்குப் பக்கத்துலயா?"

"பிணம் என்ன குழந்தையைச் சாப்பிடவா போகுது?"

"சரிதான்..."

அவள் குழந்தையை ஒரு பழைய துணியில சுத்தினா. ஆனா, அங்கே குழந்தையைக் கடிக்கிற எறும்புகள் இருந்ததை அவ கவனிக்கல.

"அம்மா இதோ வந்துடுறேன்டா கண்ணு!"

அவ போனா. அவங்க ரெண்டுபேரும் சேர்ந்து இடிஞ்சுப் பாழாய்ப் போய்க்கிடந்த புராதனமான கோவிலுக்குள்ளே போனாங்க...

குழந்தையும்... நானும்... பிரபஞ்சங்களும்...

10

"ஒரு குழந்தை மட்டும் தனியே" -நான் எழுந்துபோனேன். நானும் அந்தக் காலத்துல சின்னக் குழந்தையா இருந்தவன்தானே! பார்த்தேன்... முன்பக்கம் தூரத்துல மைதானத்தில் இருந்த அடுப்புகளில் நெருப்பு கொழுந்து விட்டு எரிஞ்சுக்கிட்டு இருந்தது. பத்தல்ல- நூறல்ல... எத்தனை அடுப்புகள்! குப்பைகளும், தாளும், சருகுகளும், பழைய துணிகளும்- இவைதாம் விறகு. புகையும், நாற்றமும், ஆரவாரமும்... ஆண்கள், பெண்கள், குழந்தைகள், இடையில் நாய்களும்... தீ ஜ்வாலையில் பிரகாசமாய் தெரிகிற முகங்கள். ஒன்றும் சரியாகத் தெரியவில்லை. சிவந்த கண்கள், வியர்வை அரும்பிய முகங்கள். தாடி- மீசை. தடித்தடியாய் எல்லாரும்... நிர்வாண மார்பகங்களுடன் பெண்கள். பல ஜாதி. பல வேஷம்.

எங்கு பார்த்தாலும் ஒரே ஆரவாரம். உணவு சாப்பிடுறாங்க. என்னென்னவோ தங்களுக்குள் பேசிக்கிறாங்க. புகை பிடிக்கிறாங்க. தெய்வத்தைக் கும்பிடுறாங்க. விளையாடுறாங்க. சிரிக்கிறாங்க. அழுவுறாங்க. கெட்ட வார்த்தைகளால திட்டிக்கிறாங்க. ஒருத்தரையொருத்தர் கட்டிப் பிடிக்கிறாங்க. உடலுறவு கொள்றாங்க.

"எல்லாரும் கேட்டுக்கோங்க." மூலையில் இருந்த ஒருவன் சொன்னான்: "இப்போ பட்டாசு வெடிக்கப்போகுது... சரவெடி..."

ஒரு மின்னல்போல அடுத்தடுத்து பட்டாசு வெடிக்குது. அதன் ஓசை காதைச் செவிடாக்குது.

ட, ட, ட, ட, ட, ட, ட, ட, டே!

பட்டாசு வெடிக்கும்போது உண்டான வெளிச்சத்துல முகங்கள் பிரகாசமாகத் தெரியுது. அவங்களோட உடம்பும்தான். அவங்களுக்குன்னு சிறப்பா சொல்ற அளவுக்கு ஒரு வேலையும் கிடையாது. சொந்த ஊர்னு எதுவும் இல்ல. சொந்த வீடுன்னு ஒண்ணும் கிடையாது. சொல்லப்போனா- எதுவுமே இல்ல. இருந்தாலும், மனிதர்களுக்குத் தேவைப்படுறதெல்லாம் அவங்கக்கிட்டயும் இருக்கவே செய்யுது. பூமியில் மனிதர்கள் அந்தச் சமூகத்தில் எல்லாருக்கும் தெரிஞ்சு பிறக்கிறாங்க. பெத்துக்கிறாங்க. வளர்றாங்க.

நான் எழுந்துபோய் அனாதையா படுத்துக்கிடந்த குழந்தைக்குப் பக்கத்துல போனேன்.

இதோ படுத்துக் கிடக்கிறான்- இந்த பூமியின் ஒரு எதிர்கால பிரஜை. இவனுக்கு என்ன தெரியும்? நானும் மற்ற எல்லாரும் எப்படி உண்டானோமோ அப்படித்தான் இவனும் உண்டாகியிருக்கிறான். தாகத்துடனும் மோகத்துடனும் இவன் வளர்வான். தாடி, மீசை முளைச்சு ஆம்பளையா மாறுவான். துளித் துளியா விந்தை பல மாதிரியும் சிந்துவான். அவற்றில் சில துளிகள் குழந்தையா மாறும். அதுவும் வளரும்.

விந்தைப் பல இடங்கள்லயும் சிந்தி, உடல் வலிமைபோய், தளர்ச்சியடைஞ்சு, முடி நரைச்சு, வயசாகிப் போய் ஒருநாள் இவனும் மரணத்தைத் தழுவுவான். இல்லாட்டி முதுமை வர்றதுக்கு முன்னாடியேகூட சாகலாம். இவன் வளர்றப்போ எப்படிப்பட்ட நம்பிக்கையோட வளருவான்? அம்மா சொல்லித்தர்றது பிஞ்சு மனசுல ஆழமா பதியும். பெரியவனா வளர்றப்போ மற்றவங்க சொல்றதைவிட தன் மனசுல இருக்குற நம்பிக்கைகளையும் எண்ணங்களையும்தான் இவன் பெருசா நினைப்பான். இப்போ இவன் இந்துவோ, கிறிஸ்துவனோ, முஸ்லிமோ, யூதனோ, பார்ஸியோ, புத்தமதத்தைச் சேர்ந்தவனோ, ஜைனனோ, சீக்கியனோ அல்ல...

இவன் மனிதனின் குழந்தை.

நானும் நீங்களும் கூட மனிதனின் குழந்தைகள்தாம். நான் இப்படி ஆயிட்டேன். இந்தக் குழந்தையோட எதிர்காலம் எப்படி இருக்கும்? எனக்கு ஏற்பட்ட அனுபவங்கள் இவனுக்கும் ஏற்படுமோ? இவனும் நோய்கள் பீடிக்கப்பட்ட ஒரு மனிதனாக ஆவானா? நான் நினைச்சுப் பார்த்தேன். இவன் ஒருவேளை பிச்சைக்காரனா ஆகலாம். இல்லாட்டி ஒரு திருடனா ஆகலாம். ஒரு கவிஞனா வரலாம். எதிர்காலத்துல ஒரு ஜனாதிபதியாகூட வரலாம். ஒரு விஞ்ஞானி ஆகலாம். இல்லாட்டி ஒரு புதிய மதத்தின் ஒரு பிரச்சாரகனாக வரலாம். தத்துவவாதி!

ஆகாயத்தில் ஒரு முழக்கம்! ஒரே இரைச்சல் மயம்!

பர்ர்றம்! பூம்! பர்ர்றம்!

"விமானம்!" நூறு சப்தங்கள்: "விமானம்... விமானம்" விமானத்தைப் பார்க்குறப்போ நமக்கு ஞாபகத்துல வர்றது- போர்!

ரெண்டு பச்சை நட்சத்திரங்கள் பக்கத்துல பக்கத்துல வருது. ஒரு சிவப்பு நட்சத்திரம் மெதுவாக நகர்ந்து வருது. பெரிய ஒரு இரைச்சலை எழுப்பியவாறு, தலைக்கு மேலே எல்லாம் பயங்கரமான வேகத்துடன் பாய்ந்தோடுது...

இப்போ ஒரே நிசப்தம். நின்னுபோன பெரிய இயந்திரம் மீண்டும் இயங்க ஆரம்பிக்குது. சப்தங்கள்!

திடீர்னு எனக்குப் பக்கத்துல தனியா- அனாதையா கிடந்த குழந்தை அழ ஆரம்பிச்சது... குழந்தையோட அழுகையைத் தாங்கிக்க மனசில்லாம நான் அதை கையில எடுத்தேன்.


ஒரு லட்சம் எறும்புகள் என் கையைக் கடிச்சது. நான் குழந்தையை என்னோட மடியில வச்சு எறும்புகளைத் தட்டிவிட்டுக் கொண்டிருந்தேன்.

"அய்யோ... என் குழந்தை!" குழந்தையோட அழுகை சத்தம் கேட்டு, இதயம் பதைபதைக்க அவன் தாய் ஓடி வந்து என் பக்கத்துல நின்னா. குழந்தையை என் கையில இருந்து பிடுங்கி, என் நெஞ்சில ஓங்கி ஒரு மிதி!

நான் ஒண்ணுமே பேசல. பேசாம ஏற்கெனவே இருந்த இடத்துல போய் உட்கார்ந்தேன். எனக்குத் தலையைச் சுத்துற மாதிரி இருந்தது. அவள் குழந்தைக்குப் பால் கொடுத்தா. அவளோட மார்பகத்துல எறும்பு கடிச்சப்போ அவ நினைச்சிருக்கணும்... குழந்தையை எறும்பு கடிச்சிருக்குன்னு.

"பேசாம படு..." - பலவிதப்பட்ட சப்தங்களுக்கு மத்தியில் ஒரு குரல்.

"கண்ணு ரெண்டும் இல்லாட்டி என்ன? எனக்கு எல்லாம் ஞாபகத்துல இருக்கு!"

"என்ன?"

"கையில காசும் துணைக்கு ஆளும் சாப்பிடுறதுக்கு ஒரு வழியும் இல்லாம எத்தனையோ வருடங்களுக்கு முன்னாடி நான் ஒரு பாதையில இருந்த ஒரு கோவில்ல இருந்தேன். நம்ம நாட்டுக்கு அன்னைக்குத்தான் வெள்ளைக்காரங்கக்கிட்டே இருந்து சுதந்திரம் கிடைச்சது. அப்போ எனக்கு இருபது வயசு. அப்போ நான் நினைச்சேன்..."

"என் தேன்கூட்டை எறும்பு கடிச்சு கொல்லப் பார்த்ததாடா கண்ணு?"

குழந்தை தன் அழுகையை நிறுத்தி, பால் குடிக்க ஆரம்பிச்சது.

தூரத்தில் கண் பார்வை தெரியாத மனிதனின் குரல்.

அப்போ நான் கேட்டேன்: "எதுக்கு நாம வாழணும்?" கேள்வி கேட்டது எனக்கு நானேதான். பதில் இல்லை. இப்போ எனக்கு என்ன வயசு? நினைச்சுப் பாருங்க. நேத்து நீங்க உறங்கறப்போ நான் எழுந்து உட்கார்ந்து கேட்டேன்...

"பிச்சைக்காரா!" குழந்தையுடன் அந்த ஏழைத்தாய் என் அருகில் வந்தா. "நீ செத்துப்போயிட்டேன்னு நான் நினைச்சேன்!"

"அப்படியா?"

"நான் மிதிச்சது உனக்கு வலிச்சதா?"

நான் பதில் பேசல. என் கண்கள்ல இருந்து கண்ணீர் ஆறா வழிஞ்சது.

"எறும்பு கடிச்சப்போதான் நான் குழந்தையைக் கையில தூக்கினேன்."

"அப்படியா? குழந்தையைத் திருடிட்டு போறேன்னு நான் நினைச்சேன்!"

"அவள் முந்தானையை அவிழ்த்து கால் ரூபாயை எடுத்து என் மடியில் வைத்தாள்."

"நீ அங்கேயே படுத்துக்கோ!"

அவள் சற்று தூரத்துல இருந்த ஒரு கல்மேல் படுத்தாள்.

நான் ஒண்ணுமே கேட்கல. ஒண்ணும் சொல்லவும் இல்ல. தாயின் இதயம். குழந்தைமேல் கொண்ட பாசம். சப்தங்கள். நான் சப்தங்களைக் கேட்டுக் கொண்டிருந்தேன். என் கண்களில் இருந்து அப்போதும் நீர் வழிஞ்சிக்கிட்டுத்தான் இருந்துச்சு. இதயம் ஆயிரம் துண்டுகளா உடைஞ்சு போனது மாதிரி நான் உணர்ந்தேன். நான் படுத்தேன். உலகமே... நான் படுத்தேன்.

தலைக்குள் ஒரே சத்தம். என்னால தாங்க முடியல. நான் கண்களைத் திறந்து பார்த்தப்போ, நல்ல வெயில் காய்ஞ்சுக்கிட்டு இருந்துச்சு. எங்கும் ஒரே அமைதி நிலவிக்கிட்டு இருந்துச்சு. யாரையும் காணோம். அந்த இடிஞ்சு சிதிலமாகிப் போயிருக்கும் புராதனமான தேவாலயம். வேற எதுவுமே அங்கே இல்ல. என் பக்கத்துல அந்த கால் ரூபா இருந்துச்சு. நான் எழுந்து நின்னேன். மைதானம் வெறுமனே கிடந்துச்சு. எத்தனையோ அடுப்புகள். எரிஞ்சு முடிஞ்சு அணைஞ்சு போயிருந்துச்சு. நகரத்தின் பேரிரைச்சலும் ஆரவாரமும் மட்டும் காதுகளில் விழுந்துக்கிட்டு இருந்துச்சு. எனக்கு நல்ல பசி, தாகம், களைப்பு, வேதனை! நான் அந்தக் கால் ரூபா நாணயத்தைக் கையில் எடுத்தேன். வெயில்னால இருக்கணும்... காசு நல்ல சூடா இருந்துச்சு. நான் ஆரவாரமான நகரத்தை நோக்கி நடந்தேன்... சூடான கால் ரூபா நாணயம்!

11

"ராத்திரி நேரம் ஆனப்போ, நான் கடற்கரைக்கு வந்தேன். அப்போ நல்ல நிலவு நேரம்.

மக்கள் நிறைய இருந்த தெருவீதிகள் வழியாக வெறுமனே நடந்து திரிஞ்சேன். நட்சத்திரங்களைவிட பிரகாசமான மின் விளக்குகள். ஆகாயத்தைப்போல பரந்து கிடக்கும் நகரம். பல லட்சம் மனிதர்கள். வாகனங்கள். இருந்தாலும், நான் ஒரு தனி மனிதனே. ஒரு நல்ல மணம் வீசிக்கொண்டிருந்த தெருவை நான் கடந்து சென்றேன். எதிரே இருந்த வீடுகளில் நல்ல ஆடைகளணிந்து நின்றிருக்கும் பெண்கள். நன்றாகத் தலைவாரி பவுடர் இட்டு பூக்களைக் கூந்தல்ல சூடி அவர்கள் நின்னுக்கிட்டு இருந்தாங்க. பவுடர் பூசியிருந்ததால் முகம் நல்ல வெண்மையா இருந்துச்சு. சாயம் பூசிய சிவப்பான உதடுகள். மை இட்டு கறுப்பாக்கிய கண்கள்.

நிர்வாண உடம்பை வெளியே தெரிய வைக்கிற மெல்லிய ஆடைகளை அணிந்த நவநாகரீகப் பெண்கள். முல்லை, கனகாம்பரம், பிச்சி, ரோஜாப் பூக்களும் வாசனைத் திரவியங்களும் ஆட்சி செய்துகொண்டிருக்கும் சூழல்... சாலையில் நடந்து போவோரை அழைக்கும் கைகள், இடை, தொடைகள், மார்பகங்கள், உதடுகள். பிரபஞ்சங்களே!

அந்தத் தெருவில்தான் என்ன ஆரவாரம்! சிரிப்பு, பாட்டு, கேலிகள். பணம் கொடுத்து விருப்பமான பெண்களை நாம் தேர்ந்தெடுக்கலாம். பெண்களை விற்பனை செய்கிற சந்தை அது. காம வேட்கையைத் தணிக்கிற ஹோட்டல்கள் அவை.

அங்கே எல்லா வகை மனிதர்களும் வருவதுண்டு. சிலர் எந்தவித கூச்சமும் இல்லாமல்... வேறு சிலர் எங்கே யாராவது பார்த்துவிடப் போகிறார்களோ என்று பயந்து, ஒளிந்து... நான் என் நடையைத் தொடர்ந்தேன். மனதில் தாங்க முடியாத அளவுக்கு தனிமையுணர்வு. இப்படித்தான் நான் கடற்கரைக்கு வந்து சேர்ந்தேன்.

"வெண்மையான- பரந்து கிடக்கும் பொடி மணலில் நிறைய பெண்களும் ஆண்களும். கடற்கரையை ஒட்டி இருந்த சாலையில் அவர்களின் வாகனங்கள். அவர்கள் காற்று வாங்குறதுக்காக அங்கே வந்திருக்காங்க. பலவகை மனிதர்களும் அங்கே இருந்தாங்க. வங்கி மேனேஜர்கள், வக்கீல்கள், பத்திரிகையில் பணிபுரிபவர்கள், அரசியல்வாதிகள், இலக்கியவாதிகள், ஓட்டல் உரிமையாளர்கள், சினிமா நடிகைகள்- இப்படிப் பல துறையைச் சேர்ந்தவர்களும் அங்கே இருந்தாங்க. அவர்களின் பேச்சிலிருந்துதான் அவர்களை இன்னார் என்று நான் அடையாளம் கண்டு பிடிச்சேன். அவர்கள் வாதம், எதிர்வாதம் செய்தும் நகைச்சுவையாக ஏதாவது பேசியும் பொழுது போக்கிக் கொண்டிருந்தாங்க. கொஞ்ச நேரம் போனா, அவங்க எல்லாரும் அவரவர்களின் வாகனங்களில் தங்களோட வீடுகளைத் தேடிப் போயிடுவாங்க. ஆனால் நான்...? அவர்களைக் கடந்து நான் கடலையொட்டி நடந்தேன். ஒரே நிசப்தம். நான் அப்படி நடந்து போனப்போ கடற்கரையில் சில படகுகள். மீன் பிடிப்பவர்களுக்குச் சொந்தமானவையாக இருக்கலாம். ஆங்காங்கே உடைந்து போயிருந்தன. நான் ஒரு படகுல ஏறி அமர்ந்தேன். எனக்கு முன்னால் பாற்கடல்.


சூடான காற்று மேலே கிளம்பியதுபோல இருந்துச்சு. ஒரு அசைவும் இல்லை. எனக்கு மிகவும் களைப்பா இருந்துச்சு. பேசாம மணல்ல போய் படுத்தேன். அப்போ என் விதியைப்பற்றி நானே நினைச்சுப் பார்த்தேன். என்மேல் அன்பு செலுத்தவோ என்னை வெறுப்பதற்கோ இந்த உலகத்துல ஒரு உயிர்கூட இல்ல. பூமியில் எத்தனைக் கோடி, எத்தனை வகை மனிதர்கள் இருக்காங்க! மற்றவர்களுக்கும் எனக்கும் என்ன வித்தியாசம்? எனக்கும் அவங்களுக்கும் என்ன சம்பந்தம்? எனக்கு அவங்க யாருமே இல்ல. இல்லாட்டி நீங்க சொன்ன மாதிரி... எல்லாருமே என் சொந்தக்காரங்க. இந்தச் சிந்தனை எனக்குக் கொஞ்சம்கூட தைரியத்தைத் தரல. கவிதைகள்லயோ, கதைகள்லயோ, பிரபஞ்சங்கள்லயோ எவ்வளவோ சொல்லலாம். உண்மையான வாழ்க்கையில பார்த்தால், ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு அனாதைதான்! யார் இறந்தால் என்ன? யார் வாழ்ந்தால் என்ன? மனிதர்கள் எல்லாரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவங்களா இருக்கலாம். இது உண்மையாக இருந்தால், புழுக்கள், பூச்சிகள், பறவைகள், நீர்வாழ் பிராணிகள், மிருகங்கள், புல், மரம்- எல்லாமே மனித சமுதாயத்தோட தொடர்பு கொண்டவையாக இருக்கலாம். நான்தான் சொன்னேனே, என்னோட சிந்தனைகளுக்கோ வாழ்க்கை வரலாறுக்கோ தெளிவான ஒரு விதிமுறை கிடையாது.

நான் ஒரு தனிமனிதன். வேற ஒண்ணும் இல்ல. மனித சமுதாயம்ன்ற பெரிய இயந்திரத்தோட ஒருசிறு ஆணிகூட இல்ல நான். யாராவது என்னை என்னவாகவாவது ஆக்கமுடியுமா? ஒரு உண்மையைச் சொல்றேன். யாரும் இதுவரை என்னிடம் கருணையோடு நடந்தது இல்ல. அப்படி நடந்திருந்தால்...

என்னோட வளர்ப்புத் தந்தை உயிரோட இருந்த காலத்தில் நான் அவர்மேல் வேண்டிய அளவுக்கு அன்பு செலுத்தினேனா என்பது யோசிக்க வேண்டிய விஷயம். செத்துப்போன அவரைப் பற்றிய நினைவுகளை நான் விரும்புகிறேன். மொத்தத்துல- என் இதயம் முழுக்க ஒரே கவலைகள். தற்கொலை செய்துக்கலாமான்னு நான் பார்த்தேன். ரெயில்வே தண்டவாளங்களைப் பற்றி நினைச்சேன். நான் வாய்விட்டு அழுதேன். கொஞ்ச நேரத்துல தூங்கியும் போனேன்.

ஒரே அமைதி. பயங்கரமான குளிர். நான் கண்களைத் திறந்தேன். இருட்டு. அடர்த்தியான இருட்டு இல்ல. லேசான வெளிச்சமும் இருந்துச்சு. எத்தனையோ கோடி வருடங்களுக்கு முன்பு... மனிதர்களும் மற்ற உயிரினங்களும் தோன்றதுக்கு முன்னாடி... அதை நான் இப்போ நினைச்சுப் பார்த்தேன். நட்சத்திரங்கள் மங்கலா வானத்துல இருந்துச்சு. நான் இப்போ எங்கே இருக்கேன்? இப்பத்தான் நான் சுய உணர்வு நிலைக்கே வந்தேன். பொழுது புலர இன்னும் எவ்வளவு நேரம் இருக்கும்? ஒண்ணுமே எனக்கு சரியா தெரியல. என்னோட ஆடைகள் முழுவதும் நல்லா நனைந்து விட்டிருந்தன. நான் மணல்ல இறங்கி நடந்தேன். பாதங்கள் குளிர்ல விரைச்சுப் போன மாதிரி இருந்துச்சு. மணல் முழுக்க நனைஞ்சு போயிருந்துச்சு. காலால மேல இருந்த மணலைத் தட்டிவிட்டேன். சுடுமணல் உள்ளே இருக்க, அதன்மேல் நான் உட்கார்ந்தேன்.

கடல் பயங்கர இருட்டா இருந்தது.

மனதை நடுங்க வைக்கிற அளவுக்கு ஒரு தனிமையுணர்வு. அது என்னோட ஒவ்வொரு அணுவுக்குள்ளும் நுழைஞ்சு, இதயத்தின் அடித்தளம் வரை நுழைஞ்சது. அப்போ நான் நினைச்சுப் பார்த்தேன். புராதன- புராதனமான முதற்பொருள். உலகத்தில் ஆதரவுன்னு யாரும் இல்லாதவர்களோட கடைசி சரணாலயம்- கடவுள்!

கடவுளைப் பற்றிய சிந்தனையில் நான் மூழ்கிப் போனேன். என்ன காரணத்தாலோ என் கண்கள்ல இருந்து கண்ணீர் தாரை தாரையா வழிஞ்சது. இந்த உலகத்தில் உள்ள எல்லா ஆண்கள், பெண்களைப் பற்றியும் நான் நினைச்சுப் பார்த்தேன்னு சொன்னா அது சரியான விஷயமா இருக்காது. கண்ணால் பார்க்காதவங்களையும், காதால் கேட்காதவங்களைப் பற்றியும் நான் எப்படி நினைச்சுப் பார்க்க முடியும்? என் இதயம் இந்த மகா பிரபஞ்சத்தையே அடக்குற அளவுக்கு அப்படியொண்ணும் பெரிதில்லையே?

நான் ஒண்ணுமே சிந்திக்காம சும்மா இருந்தேன்னு சொல்றதுதான் சரி. அப்படி இருக்குறப்போ ஒரு மாற்றம் தெரிஞ்சது. காரணம்- வேற ஒண்ணும் இல்ல. வானத்துல ஒரு நிற வேறுபாடு தெரிஞ்சது. பொழுது புலரப்போகுது. ஒரு புதிய நாள் பிறக்கப்போகுது. எத்தனையோ கோடி... கோடி... கோடி... புதிய நாட்கள் ஏற்கெனவே கடந்து போயிருக்கு. இப்போ இன்னுமொரு புதிய நாள்... உலகத்தில் தெளிவற்ற சப்தங்கள்!

நான் நினைச்சுப் பார்த்தேன்- இந்த நாள் எப்படி இருக்கும்? ஆனால், எவ்வளவு நேரம் சிந்திச்சாலும், என் மனசுல ஒரு முடிவுக்கும் வர முடியல.

சப்தங்கள்! மில்களின் சங்கொலி! கப்பல்களில் இருந்து வரும் அழைப்பு ஒலிகள்! வேலைக்காரர்களை அழைக்கிறார்கள்- பூமியில் இருக்கும் வேலைக்காரர்களை!

என்னை அழைக்க யார் இருக்கிறார்கள்? ஒரு இயந்திரமும் இல்ல. ஒரு மனிதனும் இல்ல. வாழ்க்கையில் இன்னொரு புதிய நாள் புலரப்போகுது. வானத்தின் எல்லையில் ஒரு நிற மாற்றம் நடந்துக்கிட்டு இருக்கு! அடர்த்தியான நீல வண்ணத்தில் பரந்து கிடக்கும் கடலில் இருந்து "தக தக"வென ஜொலித்தவாறு மேலே வருகிறான் சூரியன்.

ஒரு நிமிடம் ரத்த நிறத்தில் இருந்த கடல் சிறிதுநேரத்தில் உருகிய தங்க வண்ணத்தில் பிரகாசித்தது. அடுத்த சில நிமிடங்களில் கண்ணாடிபோல அது டாலடித்தது.

நான் எழுந்தேன்.

என்னுடைய நிழல் நகரத்தையும் தாண்டி நீண்டுபோய்க் கொண்டிருந்தது. கண்ணுக்குத் தெரியாததன்... முடிவற்ற... புள்ளியை நோக்கி... போ... போ...

12

"பிறகு?''

"ரயில்கள் முழங்குகின்றன. அதைப் பற்றித்தான் இப்போ நான் சொல்லப்போறேன். உங்களுக்கு உறக்கம் வருதா?''

"இல்ல... நான் நீங்க சொல்றதைக் கேட்டுக் கொண்டிருக்கிறேனே!''

"இனி அதிகம் சொல்றதுக்கு ஒண்ணுமில்ல. கடைசிக்கு வந்துட்டோம். இதுவரை நான் சொன்ன விஷயங்களைப் பற்றி உங்க கருத்து என்ன?''

"கருத்து...? நீங்க சொன்னது ஒவ்வொண்ணையும் நான் குறிச்சு வச்சிருக்கேன். இனி அவை ஒவ்வொண்ணையும் தாள்ல மெருகேற்றி எழுதணும். அது இங்கேயிருந்து புறப்பட்ட பிறகுதான் முடியும்!''

"எங்கே போகப் போறீங்க?''

"எங்கேயாவது தனியாகப் போய் அமைதியா உட்கார்ந்து எழுதணும். நான் திரும்பி வர்றதுவரை நீங்க இங்கேயே இருக்கலாம். உணவுக்கு நான் ஏற்பாடு பண்ணுறேன். எனக்கு ஒரு டாக்டர் நண்பர் இருக்கிறார். அவருக்கு நான் ஒரு கடிதம் தர்றேன். அவர் மருந்து தருவார். திரும்பி வந்தபிறகு உங்களோட கதையை நான் படிச்சுக் காட்டுறேன். மீதியைச் சொல்லுங்க...''

"தற்கொலையைப் பற்றி நீங்க என்ன நினைக்கிறீங்க?''

"அது நல்லதா கெட்டதான்னு கேக்குறீங்களா?''

"ஆமா...''


"எனக்கு இதுவரை தற்கொலை செய்யணும்னு தோணியதே இல்ல. வாழ்க்கை, அதன் கடைசி எல்லையில் தோல்வியடைஞ்சிடுதுன்னு வச்சுக்கோங்க. பிறப்புன்னு ஒண்ணு இருந்தால், மரணம்னு ஒண்ணு கட்டாயம் இருக்கும்ன்ற உண்மையை மனசுல வச்சுக் கிட்டுத்தான் நான் இதைச் சொல்றேன். அதாவது- மரணமடையிறது வரை நாம வாழவேண்டும். நல்ல தைரியசாலியா வாழணும். சுய நினைவு கொண்ட ஒரு மனிதனாக வாழணும். இந்த பூமியில்... மகாபிரபஞ்சங்களில் இருக்கும் ஒரு மனிதன் நான்... இந்த நிலையைத்தான் நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்!''

"வாழ்ந்து என்ன செய்யப் போறீங்க?''

"எதுவும் செய்யலாமே! இந்த உலகம் முழுமையா உங்க முன்னாடிதான் இருக்கு! எது வேணும்னாலும் நாம செய்ய வேண்டியதுதான். ஒரு தீர்மானத்திற்கு நீங்க வரணும். அதுதான் முக்கியம். நீங்க இந்த நாட்டோட ஜனாதிபதியா ஆகணும்னு நினைக்கிறீங்கன்னு வச்சுக்கோங்க. நினைச்சா மட்டும் போதாது. அதற்காக கடுமையா முயற்சிக்கணும். வெற்றி பெறுவோமா தோல்வியைத் தழுவுவோமா என்றெல்லாம் பார்க்கக்கூடாது. முயற்சி செய்தால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்!

நான்தான் சொன்னேனே- என்னோட வாழ்க்கையில் ஒரு தத்துவத்திற்கும் இடமில்லை. நான் என்ன தீர்மானத்திற்கு வருவது! நான் என்ற வீடு தகர்ந்து போயாச்சு. அம்மா இல்ல. அப்பா இல்ல. யாருமே இல்ல... இந்த உலகத்துல நான் மட்டும் தனி. நான்தான் சொன்னேனே, என்மீது அன்பு செலுத்தவோ வெறுக்கவோ ஒரு உயிர்கூட இல்ல. அதனாலதான் நான் உங்கக்கிட்ட தற்கொலையைப் பற்றிக் கேட்டேன்.''

"நீங்க இதுவரை சுகம்னா, மகிழ்ச்சின்னா என்னன்னு உணர்ந்திருக்கீங்களா?''

"ஒரு கனவைப்போல.''

"அப்படின்னா?''

"பசிக்கிறப்போ சாப்பிடுவேன். தாகம் எடுக்குறப்போ தண்ணீர் குடிப்பேன். குளிர்னு உணர்றப்போ நெருப்பு முன்னாடி போய் உட்காருவேன். தூக்கம் வர்றப்போ தூங்குவேன்- இதெல்லாம் சுகமான அனுபவங்கள்தானே!''

"பிறகு?''

"சந்திரோதயம், சூரிய உதயம், அழகான மலர்கள், அழகான பெண்கள், இசை- இவை எல்லாம் என் மனதில் மகிழ்ச்சியை உண்டாக்கியிருக்கு!''

"பிறகு?''

"மது, போதை மருந்துகள்- இவற்றிலும் நான் ஆனந்தத்தை அனுபவித்திருக்கிறேன்!''

"பிறகு?''

"அரிப்பு வந்து சொறியிறதுல சுகம் தெரிஞ்சிருக்கு. மூத்திரம் இருக்கணும்னு தோணி, மூத்திரம் பெய்யுறப்போ ஒருவித சுகத்தை உணர்ந்திருக்கேன். இப்படிப் பார்க்கப்போனா, வாழ்க்கையில் நிறைய சுகமான அனுபவங்கள் இருக்கத்தான் செய்யுது!''

"நீங்க ஏதாவது சொந்தமாகச் செய்து, அதனால் உங்களுக்கு சந்தோஷம் கிடைச்சிருக்கா? விவசாயம் செய்வது... ஒரு செடியை நட்டு வச்சு, நாளடைவில் அது மலர்களோடும் காய்களோடும் பூத்துக் குலுங்கி நிற்பதைப் பார்ப்பது... ஏதாவது ஒரு புதிய பொருளை நாமே படைப்பது... தாகத்தால் களைச்சுப்போய் வந்து நிற்கிற நாய்க்கு தண்ணீர் தருவது... பசியால் வாடி நிற்கிற மனிதனுக்கு உணவு தருவது... இப்படி...''

"உங்களுக்குத் தெரியும்ல- நான் சொந்தமா ஒரு காரியம் பண்ணினேன்னா- அது மனிதர்களை வெடி வச்சுக் கொன்னது மட்டும்தான். மனிதர்களின் ரத்தத்தைக் குடிச்சிருக்கேன். பிறகு... ஒரு முறை தற்கொலை செய்ய முயன்றிருக்கேன்!''

"பிறகு?''

"அதையும் சொல்லிர்றேன். நான் இந்த ராத்திரியே புறம்படலாம்னு இருக்கேன்!''

"எங்கே?''

"இது நான் பிறந்த ஊராச்சே! என்னைப் பெற்ற அம்மாவையும், அப்பாவையும் தேடிக் கண்டுபிடிக்க முயற்சிக்கலாம். ஒவ்வொரு வீடா நான் ஏறி இறங்கப் போறேன். ஒவ்வொரு பெண்ணைப் பார்த்தும் நான் கேட்பேன்: "நீங்க என் அம்மாவா? நீங்கதான் என்னைப் பெற்று பழைய துணியில் சுத்தி நான்கு ரோடுகள் சந்திக்கிற இடத்துல இருட்டுல போட்டுட்டுப் போனதா?" நான் செத்துப் போனாலும் ஒரு பயங்கர பிசாசு வடிவத்தில் இரவு நேரங்கள்ல ஒவ்வொரு வீடா ஏறி உற்றுப்பார்த்து கதவைத் தட்டிக் கூப்பிடுவேன்...''

"கொஞ்சம் நிறுத்துங்க. இதெல்லாம் நான் போய் உங்க கதையை முழுசா எழுதிட்டு வந்து உங்களுக்குப் படிச்சுக்காட்டின பிறகு, வசதிப்படி செய்யலாம். உங்களுடைய தற்கொலை முயற்சியைப் பற்றி இப்போ சொல்லுங்க. அது எப்படி தோல்வியில முடிஞ்சது?''

"நான் தற்கொலை பண்ண தீர்மானிச்சேன். ரெயில் தண்டவாளத்தில் தலையை வச்சு புகைவண்டியோட சக்கரம் அது மேல ஏறி மரணமடையணும்னு நான் திட்டம் போட்டிருந்தேன். வண்டி வேகமா பாய்ஞ்சு வரும். சக்கரங்கள் கழுத்துமேல் ஏறி அதைச் சின்னாபின்னமாக்கிக் கடந்துபோகும். தலை தனி, உடல் தனி என்றாகும். எல்லாம் முடியும். வேதனைகளும் கஷ்டங்களும் முடிவுக்கு வரும். திறந்திருக்கிற பார்க்க முடியாத கண்கள்!

"நிலவு காய்ந்து கொண்டிருக்கும் ஒரு அமைதியான இரவு. நகரத்தின் எல்லையில் இருக்கிற ரெயில் தண்டவாளம். அதில் எப்போதும் ஒரு இரைச்சல் கேட்டுக்கொண்டே இருக்கும். கவனித்திருக்கிறீர்களா? ஒவ்வொரு அரை மணி நேரத்திலும் வண்டி வந்துகொண்டே இருக்கும். நான் ஒரு மரத்துக்குக் கீழே போய் உட்கார்ந்தேன். ஒரு வண்டி பயங்கர சத்தத்துடன் பாய்ஞ்சு போனது. நான் கம்பி வேலியைத் தாண்டிப் போனேன். நிறைய தண்டவாளங்கள் இருந்தன. ஒரு தண்டவாளத்தில் தலையை வச்சுப்படுத்தேன். கடைசியாக நான் படுப்பது... கழுத்தில் பயங்கர குளிர். நான் அசையாமல் அப்படியே படுத்திருந்தேன். நாளை நான் ஒரு அனாதைப் பிணம்! அப்படிச் சொல்வதுதான் உண்மையில் பொருத்தமானது. வண்டி வரும் நேரமாயிடுச்சு! ஒரு இரைச்சல் கேட்டது.

"பர்ர்றம்... பர்ர்ற்ம்...!"

விமானம்தான்... அதோடு சேர்ந்து வண்டியும் வந்தது. எரிச்சலும், குளிரும் என் உடலெங்கும் பரவியதை உணர்ந்தேன். ரயிலின் ஓசை! என்னிடம் ஒரு பதைபதைப்பு. இதை நீங்க ரெயில்வே தண்டவாளத்தில் தலையை வச்சு படுத்தால் மட்டுமே உணரமுடியும். ரெண்டு மூணு முறை எழுந்து ஓடிடலாமான்னு நினைச்சேன். நான் அசையவே இல்ல. செவிப்பறைகள் வெடிச்சிடும்போல இருந்துச்சு. ஆகாயமும் பூமியும் நடுங்குற அளவுக்கு "ஊ ஊ ஊ"ன்னு புகை வண்டி எழுப்புற ஓசை! பிரபஞ்சம் முழுவதும் அந்த ஓசை கேட்கும். வண்டி வேகமாக பாய்ஞ்சு வந்துக்கிட்டு இருக்கு. பயங்கர வேகத்துல வந்துக்கிட்டு இருக்கு. நான் கண்களை மூடிக்கிட்டேன். என் மூச்சே நின்னுடுச்சு. உடம்பெல்லாம் வியர்வை வழிஞ்சிக்கிட்டு இருக்கு. தலைக்கு உள்ளே ஒரே குடைச்சல். தெய்வமே! கழுத்து நசுங்கி சின்னா பின்னமாகப் போகிற கடைசி நிமிடத்தை எதிர்பார்த்துக்கிட்டு நான் தண்டவாளத்துல கிடக்குறேன். வண்டி பயங்கர சத்தத்துடன் சீறிக்கிட்டே என்னைக் கடந்து போயிடுச்சு எனக்குப் பக்கத்துல இருந்த வேற ரெண்டு தண்டவாளங்கள் வழியே...''

"பிறகு? சரிதான்...''

மங்களம்.

சுபம்..

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.