Logo

தடம் பதித்து விடை பெற்ற ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 4278

மறக்க முடியுமா? -  சுரா (Sura)

தடம் பதித்து விடை பெற்ற
‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்

டந்த 60 வருடங்களாக படவுலகில் தன்னுடைய நிகரற்ற பணிகளால் படவுலகைச் சேர்ந்தவர்களின் மனங்களில் நீங்காத இடத்தைப் பிடித்திருந்த திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள் நம்மிடமிருந்து இறுதியாக விடை பெற்றுக் கொண்டார். இனி அவர் நம் நினைவுகளில் மட்டுமே...

இந்த தருணத்தில் நான் சற்று பின்னோக்கி மனதைக் கொண்டு செல்கிறேன்.

1978 ஆம் ஆண்டு. அப்போது நான் எம்.ஏ. ஆங்கிலம் இரண்டாமாண்டு மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தின் அஞ்சல் வழிக் கல்வி மூலம் படித்துக் கொண்டிருந்தேன். அப்போது வெளிவந்த ‘பிலிமாலயா’ மாத இதழில் நான்கு பக்கங்களையும் தாண்டி ஒரு காரசாரமான கட்டுரை எழுதப்பட்டிருந்தது. கட்டுரையை எழுதியவர் எம்.ஜி. வல்லபன். அவர்தான் அப்பத்திரிகையின் ஆசிரியர். ‘திரிசூலம்’ திரைப்படத்தின் வெற்றி விழாவில் பத்திரிகையாளர்கள் மதிக்கப்படவில்லையென்றும், அப்படத்தின் மக்கள் தொடர்பாளரான ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்கு கொடுக்கப்பட வேண்டிய மரியாதை கூட உரிய முறையில் கொடுக்கப்படவில்லையென்றும் அனல் பறக்க அந்த கட்டுரையில் எழுதப்பட்டிருந்தது. அப்போதுதான் முதல் தடவையாக ‘ஃபிலிம் நியூஸ் ஆனந்தன்’ என்ற பெயரை நான் கேள்விப்படுகிறேன்.

அதற்குப் பிறகு 1980 ஆம் ஆண்டில் அதே ‘பிலிமாலயா’ பத்திரிகைக்கு நான் இணை ஆசிரியராக ஆகிறேன். அப்போதும் அதற்கு ஆசிரியராக இருந்தவர் எம்.ஜி. வல்லபன்தான். நான் வேலையில் சேர்ந்தவுடன், வல்லபன் என்னிடம் கூறினார் - ‘சிவாஜி நடித்த ‘திரிசூலம்’ பட விழாவில் அதன் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்கு உரிய மரியாதையை சிவாஜி பிலிம்ஸ் கொடுக்கவில்லை. ஒரு பத்திரிகையாளர் அவமானப்படுத்தப்பட்டிருப்பதால், ஒரு வருட காலத்திற்கு அந்தச் செயலைக் கண்டிக்கும் வகையில் ‘பிலிமாலயா’வில் சிவாஜி சம்பந்தப்பட்ட எந்தச் செய்தியும் வரக் கூடாது, அவருடைய ஒரு சிறிய புகைப்படம் கூட பிரசுரமாகக் கூடாது என்று முடிவு செய்யப்பட்டிருக்கிறது. நான் அதை செயல்படுத்திக் கொண்டிருக்கிறேன். அதே வழியை நீங்களும் பின்பற்ற வேண்டும்’ என்றார். இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் – மலையாளத்தைத் தாய் மொழியாகக் கொண்டவராக இருந்தாலும், எம்.ஜி. ஆரை விட நடிகர் திலகம் சிவாஜி கணேசனைத்தான் வல்லபனுக்கு மிகவும் பிடிக்கும். அவர் சிவாஜி ரசிகர். நானும் சிவாஜியின் தீவிர ரசிகன். இரு சிவாஜி ரசிகர்கள் பணியாற்றும் பத்திரிகையில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனுக்காக ஒரு வருட காலத்திற்கு சிவாஜியை நாங்கள் நிராகரித்தோம். அதனால் சிவாஜிக்கு ஒரு சதவிகிதம் கூட பாதிப்பு உண்டாகப் போவதில்லை என்ற உண்மையும் எங்களுக்கு தெரியும். படத்தில் பணியாற்றும் ஒருவர் மதிக்கப்படவில்லை என்பதற்காக செயல் வடிவில் காட்டப்பட்ட கண்டனம் அது. அவ்வளவுதான்.

அந்தச் சமயத்தில் ஆனந்தன் நிறைய படங்களுக்கு மக்கள் தொடர்பாளராக பணியாற்றிக் கொண்டிருந்தார். அப்போதுதான் அவர் எனக்கு நேரடியாக அறிமுகமானார். பத்திரிகையாளர்களுக்கான காட்சிகளின் போது அவரை நான் பார்ப்பேன். மகன் வயது உள்ள என்னிடம் பாசத்துடன் பழகுவார். தந்தை வயதில் இருக்கும் அவர் என்னை ‘சார்’ என்றும் ‘வாங்க.. போங்க’ என்றும் அழைப்பார். அப்போதே அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது. ‘பிலிமாலயா’வில் பணி புரிந்தபோது பல நேரங்களில் அவரை அவருடைய பீட்டர்ஸ் சாலையிலிருந்த வீட்டில் சந்தித்திருக்கிறேன். எப்போது சென்றாலும், நீண்ட நேரம் அவருடன் உரையாடிக் கொண்டிருப்பேன். படவுலகில் நடைபெற்ற பழைய சம்பவங்கள் பலவற்றையும் பற்றி கேட்டால், ஆர்வத்துடன் அதை அவர் கூறுவார்.

செல்போன் இல்லாத அந்தக் காலத்தில் வெறும் சாதாரண தொலைபேசிதான் இருக்கும். நடிகர், இயக்குநர், பாடலாசிரியர், கதாசிரியர், இசையமைப்பாளர், ஒளிப்பதிவாளர் யாருடைய தொலைபேசி எண்ணாவது எனக்கு தேவைப்பட்டால், உடனடியாக நான் தொடர்பு கொள்வது ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனைத்தான். தொலை பேசியை கையில் எடுத்தவுடன் ‘ஆனந்தன்...’ என்று தன் பெயரைக் கூறுவார். அடுத்து ‘என்ன சார்?’ என்பார். எனக்கு தொலை பேசி எண்கள் தேவைப்படும் நபர்களின் பெயர்களைக் கூறினால், சிறிதும் தயங்காமல் அடுத்த சில நொடிகளிலேயே அனைவரின் தொலை பேசி எண்களையும் எடுத்து கூறி விடுவார். அனைவரின் தொலை பேசி எண்களும் அவரிடம் இருக்கும். எந்தவித பிரதிபலனையும் எதிர்பார்க்காமல், படவுலகைச் சேர்ந்தவர்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் ஆனந்தன் செய்த இந்த மிகப் பெரிய சேவை இருக்கிறதே... அதற்கு நிகரும் உண்டோ?

தொடர்ந்து நான் குங்குமம், வண்ணத்திரை ஆகிய வார இதழ்களில் நான்கு வருடங்கள் எழுதிக் கொண்டிருந்த போது ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனை அடிக்கடி சந்திப்பதற்கான சூழ்நிலை வரும். குறைந்த பட்சம் அவ்வப்போது தொலை பேசியிலாவது தொடர்பு கொள்வேன். எனக்கு தேவைப்படும் தகவல்களை, நான் கேட்ட நிமிடத்திலேயே எனக்கு தந்து உதவிய மிகப் பெரிய மனதிற்குச் சொந்தக்காரர் அவர்.

அந்த கால கட்டத்தில் மைசூருக்கு அருகில் உள்ள பலமுறிஷேத்ரா என்ற இடத்தில் நடைபெற்ற சிவகுமார், லட்சுமி நடிக்க, எம். பாஸ்கர் இயக்கிய ‘தண்டிக்கப்பட்ட நியாயங்கள்’ படத்தின் வெளிப்புறப் படப் பிடிப்பைப் பார்த்து எழுதுவதற்காக சென்னையிலிருந்து சில பத்திரிகையாளர்களையும் அழைத்திருந்தனர். அவ்வாறு அழைத்தவர் அப்படத்தின் மக்கள் தொடர்பாளரான ‘நவசக்தி’ எம்.என். ராகவன். ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன், ‘சினிமா எக்ஸ்பிரஸ்’ ராமமூர்த்தி, ‘பொம்மை’ வீரபத்ரன், ‘பேசும்படம்’ மதுரை தங்கம், ‘மக்கள் குரல்’ ராம்ஜி என்று பலரும் இருந்த அந்த குழுவில் ‘வண்ணத் திரை’ சார்பாக நானும் இடம் பெற்றிருந்தேன். அந்தக் குழுவிலேயே நான்தான் வயதில் இளையவன்.

பெங்களூரில் போய் இறங்கிய நாங்கள், நகரத்தின் சாலைகளில் சிறிது தூரம் நடந்து சுற்றினோம். ஒவ்வொருவரும் தேநீர் கடை, உணவு விடுதி என்று அலைந்து கொண்டிருக்க, ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் பெங்களூர் சாலைகளின் நடை பாதைகளில் விற்றுக் கொண்டிருந்த கன்னட திரைப்படங்களின் பாடல் புத்தகங்களையும், கன்னட நடிகர்களின் புகைப்படங்களையும், கன்னட திரைப்பட பத்திரிகைகளையும் தேடி சேகரித்துக் கொண்டிருந்தார். அவரின் அந்தச் செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. கலைத்துறையின் மீது அவருக்கு இருந்த அளவற்ற ஆர்வத்தைப் பார்த்து நான் ஆச்சரியப்பட்டேன். அந்தத் தருணத்தில் அவர் மீது எனக்கு உயர்ந்த மரியாதை உண்டானது.


‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் கலையுலகப் பயணத்தில் குறிப்பிடத்தக்க பல விஷயங்கள் இருக்கின்றன. நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 150 வது படமான ‘சவாலே சமாளி’ திரைக்கு வந்தபோது, அவர் நடித்த படங்களின் புகைப்படங்ளை வைத்து ஒரு மிகச் சிறந்த மலரைப் பெறுப்பேற்று வெளிக் கொணர்ந்திருப்பார் ஆனந்தன். உண்மையிலேயே அது ஒரு தகவல் பெட்டகம்தான். அதற்காக நான் ஆனந்தனை நேரில் பல முறை பாராட்டியிருக்கிறேன். அந்த மலரின் ஒரு பிரதி கூட அதைக் கொண்டு வந்த அவரிடம் பின்னர் இல்லை என்பது வேறு விஷயம். நடிகை கே.ஆர். விஜயாவின் 100 வது படமான ‘நத்தையில் முத்து’ வந்தபோது, அவருக்கு புகைப்படங்கள் அடங்கிய ஒரு அருமையான மலரைக் கொண்டு வந்தவர் ஆனந்தன். சிவகுமாரின் 100 வது படமான ‘ரோசாப்பூ ரவிக்கைக்காரி’ வந்த சமயத்தில், அவருக்கும் ஒரு மிகச் சிறந்த மலரை ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் கொண்டு வந்திருந்தார். அதேபோல கமல்ஹாசனின் 100 வது படமான ‘ராஜ பார்வை’ வந்தபோதும் கமலுக்காக ஒரு நிகரற்ற மலரை கொண்டு வந்து சிறப்பு செய்திருக்கிறார் ஆனந்தன். நடிகர் திலகம் சிவாஜி, ‘செவாலியே’ விருது பெற்ற போது ஆனந்தன் ஒரு அருமையான மலரைப் பெறுப்பேற்று கொண்டு வந்தார்.

நாளிதழ்களிலும், வார – மாத இதழ்களிலும் ஒவ்வொரு வருடமும் முடியும் வேளையில், ‘இந்த வருட படவுலக கண்ணோட்டம்’ என்று ஒரு பகுதி வருமே! அந்தப் பகுதி ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் சுயநலமற்ற சேவை எண்ணத்தின் விளைவால் வருவது. ஒவ்வொரு வருடமும் தமிழில் எவ்வளவு திரைப் படங்கள் திரைக்கு வருகின்றன, அவற்றில் நேரடி படங்கள் எத்தனை, மொழி மாற்ற படங்கள் எத்தனை, எந்தெந்த நடிகர் – நடிகைகள் எத்தனைப் படங்களில் நடித்திருக்கிறார்கள், ஒவ்வொரு தொழில் நுட்பக் கலைஞர்களும் பணியாற்றிய படங்கள் எத்தனை, வெள்ளி விழா ஓடிய படங்கள் எவ்வளவு, 100 நாட்கள் ஓடிய படங்கள் எத்தனை, 50 நாட்கள் ஓடிய படங்கள் எவ்வளவு, மூன்று காட்சிகள் ஓடிய படங்கள் எவ்வளவு, பகல் காட்சி மட்டும் ஓடிய படங்கள் எவ்வளவு, எத்தெந்த இசையமைப்பாளர் எத்தனைப் படங்களில் பணியாற்றியிருக்கிறார்கள், அதிகமான பாடல்களை எழுதிய பாடலாசிரியர் யார், புதுமுகங்களாக எவ்வளவு பேர் படவுலகில் அறிமுகமாகியிருக்கிறார்கள், தணிக்கைச் சான்றிதழ் பெற்று இன்னும் திரைக்கு வராமல் எத்தனைப் படங்கள் இருக்கின்றன என்பது போன்ற அரிய தகவல்களை ஒவ்வொரு வருடமும் முறைப்படி சிரமப்பட்டு சேகரித்து, அவற்றை தட்டச்சு செய்து, எல்லா பத்திரிகைகளுக்கும் கிடைக்கும்படி செய்வது அவர்தான். இந்த நினைத்துப் பார்க்க முடியாத ஒப்பற்ற செயலை தன் வாழ்நாள் முழுக்க ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்திருக்கிறார் என்றால், அது எவ்வளவு பெரிய விஷயம்! அவரின் இந்த மகத்தான செயலை நான் எத்தனையோ தடவைகள் அவரை நேரில் பார்க்கும்போது மனம் திறந்து பாராட்டியிருக்கிறேன். ‘உங்களின் இந்த தன்னலமற்ற செயலைப் பார்த்து நான் உண்மையிலேயே ஆச்சரியப்படுகிறேன். அதற்காக உங்களை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம்’ என்று கூறும்போது, அவர் கள்ளங்கபடமற்ற தன் சிரிப்பை வெளிப்படுத்துவார். அவ்வளவுதான்.

பத்திரிகையாளர்களுக்காக திரைப்படங்கள் திரையிடப்பட்டு காட்டப்படும்போது, அந்தப் படத்தின் மக்கள் தொடர்பாளர் அவரை அழைத்திருக்கிறாரோ இல்லையோ, சிறிய படமோ பெரிய நட்சத்திரங்கள் நடிக்கும் படமோ எதைப் பற்றியும் கவலைப் படாமல் திரையரங்கிற்கு வந்து விடுவார் ஆனந்தன். தான் அச்சிட்டு வைத்திருக்கும் ஒரு படிவத்தில் அந்த திரையிடப்பட இருக்கும் படத்தைப் பற்றிய அனைத்துத் தகவல்களையும் அவரே கேட்டு நிரப்பிக் கொள்வார். இப்படியொரு அர்ப்பணிப்பு! நான் மக்கள் தொடர்பாளராக பணியாற்றிய பல படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களை அவரே நேரில் வந்து என்னிடம் வாங்கிச் சென்றிருக்கிறார். பல தடவைகள் நான் நேரில் அவருடைய வீட்டிற்குச் சென்று தகவல்களைத் தந்திருக்கிறேன். சில படங்களைப் பற்றிய தகவல்களை அவர் பல முறை கேட்டும், பல வேலைகளின் காரணமாக நான் அவருக்கு அனுப்பி வைப்பதாகவோ, நேரில் கொண்டு வந்து தருவதாகவோ கூறி, அவற்றைச் செயல் வடிவில் காட்டாமல் கூட இருந்திருக்கிறேன். எனினும், நேரில் பார்க்கும்போது ‘சார்... அந்தப் படத்தைப் பற்றிய தகவல் வேணும்’ என்பார். ‘நானே கொண்டு வந்து தருகிறேன், சார்’ என்பேன் அப்போது. அப்படி சில படங்களைப் பற்றிய தகவல்களை இன்று வரை அவரிடம் கொடுக்காமலே கூட இருந்திருக்கிறேன். அதற்காக இப்போது வருத்தம் கூட படுகிறேன். ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனின் சுயநலமற்ற அர்ப்பணிப்பிற்கு முன்னால் நான் இப்படி நடந்து கொண்டிருக்கக் கூடாதுதான்.

அதே நேரத்தில் சில தயாரிப்பாளர்களை நானே அவரை நேரில் போய் பார்க்கும்படி அனுப்பியும் வைத்திருக்கிறேன். அவர்கள் தாங்கள் தயாரித்த படங்களைப் பற்றிய தகவல்களை அவருடைய வீட்டிற்கே சென்று கூறிய தருணங்களில், அதற்காக அவர் மிகவும் சந்தோஷமும் பட்டிருக்கிறார். ஒரு இளைஞர் உதவி ஒளிப்பதிவாளராக சேர வேண்டும் என்ற ஆவலுடன் வெளியூரிலிருந்து வந்து அவரைப் பார்க்க, அவர் அந்த இளைஞரிடம் ‘சுரா என்று ஒருவர் இருக்கிறார். அவரைப் போய் பாருங்கள். கட்டாயம் எங்காவது சேர்த்து விடுவார்’ என்று கூறி, என்னிடம் அனுப்பி வைக்க, நான் அந்த இளைஞரை ஒளிப்பதிவாளர் பி. கண்ணனிடம் சேர்த்து விட்டேன் என்பது உண்மையிலேயே நடைபெற்ற ஒரு சம்பவம்.

தன் வாழ்நாளில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்த மிகவும் உயர்ந்த ஒரு செயல் – இதுவரை வெளிவந்த தமிழ் திரைப்படங்களை அவை திரைக்கு வந்த வருடங்களுடன் ஒரு பெரிய நூலாக பதிப்பித்தது. படவுலகைச் சேர்ந்த ஒவ்வொருவரின் கையிலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷமது.
கடந்த 60 வருடங்களுக்கும் மேலாக அவர் சிரமப்பட்டு சேர்த்து வைத்திருந்த புகைப்படங்களையும், திரைப் படங்கள் சம்பந்தப்பட்ட தகவல்களையும், சுவரொட்டிகளையும், பாட்டு புத்தகங்களையும், விளம்பரங்களையும் ஒரு பெரிய தொகை தந்து, சில வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதா தலைமையில் இருந்த தமிழக அரசு வாங்கியது. அதை திரைப்பட நகரத்தில் பாதுகாத்து வைத்து, ஒரு கண்காட்சி சாலை அமைக்கப் போவதாக திட்டம் வகுத்தது. ஆனால், உண்மையில் நடந்தது என்ன? அவை முறைப்படி பாதுகாத்து வைக்கப்படாமல், சீரழிந்து சின்னா பின்னமாகி, காணாமலே போய் விட்டன. அதை பல முறை நேரில் பார்க்கும்போது மிகவும் கவலையுடன் என்னிடம் கூறியிருக்கிறார் ஆனந்தன்.


அவரிடம் எனக்கு பிடித்த ஒரு விஷயம் – உட்கார்ந்து பார்க்கவே முடியாத ‘அறுவை’ படத்தைக் கூட அவர் முழுமையாக அமர்ந்து பார்ப்பார். படத்தில் எவ்வளவோ குறைகள் இருந்தாலும், அவற்றைப் பெரிதாக பேசாமல், அவற்றில் இருக்கும் நிறைகளை மட்டுமே குறிப்பிட்டுப் பேசுவார். அந்த படத்தின் இயக்குநரைப் பார்த்து ‘அந்த காட்சியை நன்றாக பண்ணியிருந்தீங்க, சார்... இந்த பாடலை நன்றாக படமாக்கியிருந்தீர்கள், சார்’ என்பார் – அவர்களை உற்சாகப் படுத்தும் விதத்தில். பெரும்பாலும் அவர் யாரையும் மனம் நோக பேச மாட்டார். எவ்வளவு வயது குறைவாக இருந்தவராக இருந்தாலும், ‘சார்’ போட்டுதான் அழைப்பார். மிகவும் நெருக்கமானவர்களை மட்டுமே அவர் உரிமையாக ‘நீ.. வா.. போ...’ என்று அழைப்பார். பெரும்பாலும் அவர் அழைப்பது ‘வாங்க... போங்க’ என்றுதான். எவ்வளவு பெரிய பண்பு அது!

மூன்று வருடங்களுக்கு முன்பு நானும், பிரபல விளம்பரப் பட இயக்குநருமான திரு. லேகா ரத்னகுமார் அவர்களும் நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்ற படவுலக கண்காட்சியில் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தனைப் பார்த்து நீண்ட நேரம் உரையாடிக் கொண்டிருந்தோம். ‘படவுலகைச் சேர்ந்தவர்களின் முகவரிகளையும், தொலைபேசி எண்களையும் நான் சிரமப்பட்டு சேர்த்து வைக்கிறேன். அவை தேவைப்படுவோருக்கு கொடுத்து உதவுகிறேன். பலரும் தங்களுடைய முகவரி மாறினாலோ, தொலை பேசி எண் மாறினாலோ எனக்கு தெரியப்படுத்துவது கூட இல்லை’ என்றார் ஆனந்தன் அப்போது வருத்தத்துடன். நியாயமான வருத்தம்தான்! இங்கு இடம் பெற்றிருக்கும் இந்த புகைப்படம் அப்போது எடுக்கப்பட்டதுதான்.

இன்று என்னைப் போன்ற பலர் படவுலகில் ‘மக்கள் தொடர்பாளர்கள்’ என்ற பிரிவில் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்றால், அதற்கு ஆரம்பகர்த்தாவாக செயல்பட்டவர் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன்தான். அவர்தான் இப்படியொரு இலாகா படவுலகில் வருவதற்கே மூல காரணமாக இருந்தவர். அதற்காக மக்கள் தொடர்பாளர்கள் அவருக்கு காலமெல்லாம் கடமைப்பட்டிருக்கிறார்கள்.

தன் வாழ்க்கை முழுவதும் ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் செய்த இந்த நிகரற்ற பணியை இனி யார் செய்யப் போகிறார்கள் என்பது தெரியவில்லை. எனினும், யாராவது செய்துதான் ஆக வேண்டும். அவரின் இந்த மகத்தான சேவையை, யாராவது தவறாது தொடர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனந்தனும் அதைத்தான் விரும்புவார்.

இந்த மண்ணில் பிறக்கும் ஒரு மனிதன் தன் வாழ்க்கையை பயனுள்ளதாகவும், பிறருக்கு பயன்படும் வண்ணமும், சேவை எண்ணத்துடனும், பலரும் சந்தோஷப்படும் வகையிலும் வாழ்ந்து, அழியாத தடத்தை ஆழமாக பதித்து விட்டுச் செல்ல வேண்டும். அதுதான் பிறவிப் பயன் என்பது. அந்த தடத்தை மிகவும் ஆழமாகவே இந்த மண்ணில் பதித்து விட்டுச் செல்கிறார் திரு. ‘ஃபிலிம் நியூஸ்’ ஆனந்தன் அவர்கள். அதை இந்த படவுலகம் என்றென்றும் ஞாபகத்தில் வைத்திருக்கும். படவுலகம் இருக்கும் காலம் வரை ஆனந்தன் அவர்களின் பெயரும் நிலை பெற்று நின்றிருக்கும் என்பது நிச்சயம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.