Logo

பெண்களை வாழ வைப்பவன் நான்!

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 4502

மறக்க முடியுமா? - சுரா (Sura)

பெண்களை வாழ வைப்பவன் நான்!

-இயக்குநர் ஆர்.சி.சக்தி

1978ஆம் ஆண்டு. நான் மதுரையில் கமல், ஶ்ரீதேவி நடித்த 'மனிதரில் இத்தனை நிறங்களா?' என்ற திரைப்படத்தைப் பார்த்தேன். சினிமாத்தனங்கள் எதுவுமே இல்லாமல், மிகவும் இயல்பாக எடுக்கப்பட்டிருந்த கதை.

படத்தில் இடம் பெற்ற அனைத்து கதாபாத்திரங்களும் எந்தவித ஜோடனையும் இல்லாமல், யதார்த்தமாக இருந்தனர் அப்படத்தின் இயக்குநர் ஆர்.சி.சக்தி. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே 'யார் இந்த ஆர்.சி.சக்தி?' என்று என் மனம் கேள்வி கேட்டு, பாராட்டிக் கொண்டே இருந்தது. அதற்கு முன்பே கமல்ஹாசனை வைத்து 'உணர்ச்சிகள்' என்ற படத்தை அவர் இயக்கியிருக்கிறார் என்பதை பின்னர் நான் தெரிந்து கொண்டேன்.

ரஜினிகாந்த் சற்று உடல் ரீதியான பாதிப்பிற்கு உள்ளாகி, படவுலகமே பரபரப்பாக பேசிக் கொண்டிருந்த நேரத்தில் திரைக்கு வந்த படம் 'தர்மயுத்தம்.' ஒப்பந்தம் செய்யப்பட்ட பல படங்களிலிருந்து ரஜினியைத் தூக்கிக் கொண்டிருந்த நேரத்தில், அவருக்குக் கை கொடுத்த படங்கள் ஆர்.சி.சக்தி இயக்கிய 'தர்மயுத்த'மும், எஸ்.பி.முத்துராமன் இயக்கிய 'ஆறிலிருந்து அறுபது வரை'யும். அப்படங்களின் வெற்றிதான் ரஜினியை மீண்டும் சிம்மாசனத்தில் உட்கார வைத்தது. 'தர்ம யுத்தம்' படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா, 'பின்னணி இசை அமைப்பதற்கு முன்பே வெளியீட்டு தேதியை அறிவித்து விளம்பரம் செய்து விட்டார் தயாரிப்பாளர். அவசர அவசரமாக படத்தொகுப்பு செய்து, பின்னணி இசைக்கு படத்தை அனுப்ப வேண்டிய நெருக்கடி நிலை. என்ன செய்கிறோம் என்று புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு எடிட்டிங்கின்போது எதையெதையோ வெட்டினோம், எதையெதையோ ஒட்டினோம். நாங்கள் செய்வது சரிதானா என்பதை உணரும் நிலையில் கூட நாங்கள் இல்லை. ஆனால் 'தர்மயுத்தம்' வெற்றி பெற்று விட்டது' என்று ஒரு முறை ஆர்.சி.சக்தி என்னிடம் கூறினார்.

1983ல் ஆர்.சி.சக்தி இயக்கிய படம் 'உண்மைகள். 'யாரும் தொடுவதற்கே அஞ்சக் கூடிய கதை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் தந்து எடுக்கப்பட்டது. படம் முழுக்க வாழ்ந்திருந்தார் சக்தி. அவரின் மிகவும் கூர்மையாக எழுதப்பட்டிருந்த உரையாடல்கள் இப்போது கூட என் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. படத்தைப் பார்த்துக் கொண்டிருந்தபோதே, அவரின் அருமையான வசனங்களுக்காக என் மனதிற்குள் நான் கைத்தட்டினேன். சமூகத்தின் போலித்தனங்களையும், அவலங்களையும் மிகவும் கடுமையாக சாடியிருந்தார் சக்தி. அதில் மளிகைக்கடைக்கார 'அண்ணாச்சி'யாகவே வாழ்ந்திருந்த ராக்கெட் ராமநாதன் என்ற நடிகரை யாருமே மறக்க முடியாது.

ஆர்.சி.சக்தி எனக்கு நேரடியாக அறிமுகமானது 'சிறை' படம் தயாரிப்பில் இருந்தபோதுதான். அனுராதா ரமணனின் கதை. ராஜேஷ், லட்சுமி நடித்தார்கள். வாகினி ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்கும். நான் பல நாட்கள் அங்கு சென்று, ஆர்.சி.சக்தியைச் சந்தித்து பேசியிருக்கிறேன். காக்கி பேண்ட், காக்கி சட்டை அணிந்து ஒரு தொழிலாளியாகவே தன்னை நினைத்துக் கொண்டு, படத்தை இயக்கும் சக்தியை எனக்கு மிகவும் பிடிக்கும். என்னை அவருக்கும்... நான் பாசத்துடன் அவரை 'அண்ணன்' என்று அழைப்பேன்.

மிகவும் ஈடுபாட்டுணர்வுடன் படத்தை இயக்குவார் சக்தி. லட்சுமி கண்ணீர் விட்டு கதறி அழுத காட்சியொன்று படமாக்கப்பட்டபோது, தன்னை மறந்து தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தார் ஆர்.சி.சக்தி. அதுதான் அந்த உயர்ந்த கலைஞனின் தனித்துவ குணம்!

விஜயகாந்த், சத்யராஜ் இணைந்து நடத்த 'சந்தோஷக் கனவுகள்' படம் தயாரிப்பில் இருந்தபோது, அப்படத்தின் தயாரிப்பாளர் எஸ்.என்.எஸ்.திருமால், சக்தி கேட்ட குறைந்தபட்ச தேவைகளைக் கூட செய்து கொடுக்கவில்லை. 'அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பிலிருந்து விலகிக் கொள்ளலாமா என்று கூட பல நேரங்களில் நினைத்திருக்கிறேன். தனியாக அறையில் அமர்ந்து என் விதியை நினைத்து, நான் பல நாட்கள் கண்ணீர் விட்டு அழுதிருக்கிறேன்' என்று சொன்ன சக்தியை இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.


1986ல் ரகுவரன்- அமலாவை வைத்து 'கூட்டுப் புழுக்கள்' என்றொரு அருமையான படத்தை இயக்கினார் ஆர்.சி.சக்தி. நாவலாக வந்து புகழ் பெற்ற கதை. இன்றும் பலரின் மனதிலும் அப்படம் வாழ்ந்து கொண்டிருக்கிறது. ரகுவரனின் மென்மையான நடிப்புத் திறமையை வெளிக் காட்டிய படம். அந்தப் படத்தில் நடிக்கும்போது, அதைப் பற்றி  ரகுவரன் எவ்வளவோ நாட்கள் என்னிடம் சக்தியின் படமாக்கும் விதத்தைப் பற்றி பெருமையாக கூறியிருக்கிறார். 'நான் வேதனையை மனதிற்குள் வைத்து நடித்துக் கொண்டிருப்பேன். காட்சி படமாக்கப்பட்ட பிறகு பார்த்தால்- ஒரு ஓரத்தில் ஆர்.சி.சக்தி உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார்' என்று ரகுவரன் கூறிய வார்த்தைகள் இப்போதும் என் காதுகளில் ஒலிக்கின்றன.

பட்டுக்கோட்டை பிரபாகர் எழுதிய ஒரு க்ரைம் கதையை ஒரு முறை அவரிடம் நான் கூறினேன். 'இதை நீங்கள் இயக்குகிறீர்களா. அண்ணே?' என்று நான் கேட்டேன். 'பல பெண்கள் கொலை செய்யப்படும் கதை இது. நான் விளையாட்டாகக் பெண்களை வாழ வைப்பதற்காக படம் எடுப்பவன். என்னைப் போய் இதைச் செய்யச் சொல்கிறீர்களே!' என்றார் ஆர்.சி. சக்தி என்னைப் பார்த்து - சிரித்துக் கொண்டே.

எழுத்தாளர் சவீதா எழுதிய 'இவளா என் மனைவி?' என்ற அருமையான நாவலை விஜயகாந்த், ராஜேஷ் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க, ஆர்.சி.சக்தி இயக்குவதாக இருந்தது. அதற்கு இயக்குநராக சக்தியை ஒப்பந்தம் செய்யும்படி தயாரிப்பாளரிடம் கூறியதே நான்தான். அதற்காக பாடல்கள் கூட பதிவு செய்யப்பட்டன. ஆனால், சில காரணங்களால் படப்பிடிப்பு தொடரவில்லை. எனினும், அதே கதையை ஆர்.சி.சக்தி தொலைக்காட்சித் தொடராக இயக்கி, அவருக்கு நல்ல பெயர் கிடைத்தது.

1970ல் 'அன்னை வேளாங்கண்ணி' படத்தில் உதவி இயக்குநர்களாக தங்கப்பன் மாஸ்டரிடம் பணி புரிந்தபோது, கடல் அலையால் இழுத்துச் செல்லப்பட்ட கமல்ஹாசனை, கடலுக்குள் குதித்து தன் முதுகில் ஏற்றிக் கொண்டு வந்து, காப்பாற்றியதை நெகிழ்ச்சியுடன் ஒரு முறை கூறினார் சக்தி.

'சிறை' திரைக்கு வந்த முதல் நாளன்று ஆனந்த் திரையரங்கிற்கு நான் படத்தைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். கூட்டம் மிகவும் குறைவாக இருந்தது. கால் பகுதி கூட ஆட்கள் இல்லை. நான் மிகவும் வருத்தப்பட்டேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு, ஆர்.சி.சக்திக்கு ஒரு கடிதம் எழுதினேன். 'அண்ணே... படம் மிகவும் சிறப்பாக இருந்தது. உங்களின் உரையாடல்கள் அருமை! துணிச்சலான முயற்சி. குறிப்பாக- படத்தின் உச்சக்கட்ட காட்சி. தாலியை லட்சுமி கழற்றி, கழிவறைக்குள் போடும் காட்சியில் உங்களுக்கு பலமான கைத்தட்டல்.... எனினும், பெரிய அளவில் கூட்டம் இல்லை. அதுதான் எனக்கு கவலை. ஆனால், எனக்கு மக்கள் மீது நம்பிக்கை இருக்கிறது. இந்தப் படம் ஓடும். ஓடினால், உலகத்திலேயே மிகவும் சந்தோஷப்படக் கூடிய முதல் மனிதன் நானாகத்தான் இருப்பேன்' என்று நான் அதில் எழுதியிருந்தேன். அதே திரையரங்கில் 'சிறை' மக்கள் கூட்டத்துடன் 100 நாட்கள் ஓடியது, பின்னர் நடந்த வரலாறு.

ஒரு முறை ஜாலியாக பேசிக் கொண்டிருந்தபோது ஆர்.சி.சக்தி கூறினார்: 'பல படங்களின் பாடல் காட்சிகளை நான் பார்க்கிறேன். காதல் காட்சிகளில் கதாநாயகிகளும், நடனப் பெண்களும் வீட்டின் கூரையின் மீதும், மரங்களின் கிளைகளிலும் ஏறி நின்று கொண்டு நடனம் ஆடுகிறார்கள். எனக்கு பயமே இதுதான்... அவர்களை அவ்வளவு உயரத்தில் எப்படி ஏற்றி விடுகிறார்கள்? நடனமாடும்போது, அவர்கள் கீழே விழுந்தால், என்ன ஆவது?' அதுதான் ஆர்.சி.சக்தி!

என் அருமை அண்ணன் ஆர்.சி.சக்தி இந்த மண்ணை விட்டு நீங்கி விட்டார். எனினும், அவர் உருவாக்கிய நல்ல திரைப்படங்களும், ஊசி குத்துவதைப் போன்ற அவரின் கூர்மையான உரையாடல்களும் காலத்தைக் கடந்து வாழ்ந்து கொண்டிருக்கும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.