Logo

பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 3047

மறக்க முடியுமா? - சுரா (Sura)

பாலுமகேந்திராவின் விழாவிற்கு காரணம் நான்!

ன்று பாலுமகேந்திராவின் நினைவு நாள். நான் மிகவும் உயர்வாக நினைத்து மதிக்கும் அவரைப் பற்றி என் மனம் பின்னோக்கி பயணிக்கிறது. மூன்று விஷயங்கள் என் ஞாபகத்தில் வருகின்றன.

1)மகேந்திரன் இயக்கிய 'முள்ளும் மலரும்' படத்திற்கு ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா. மதுரையில் அப்படத்தைப் பார்த்த தருணத்திலேயே அவர் என் உள்ளத்தில் தனியான ஒரு இடத்தைப் பிடித்து விட்டார். இப்படியொரு வித்தியாசமான ஒளிப்பதிவா என்று வியந்தேன்.

சென்னைக்கு வந்த பிறகு தேவி காம்ப்ளெக்ஸில் பாலுமகேந்திரா ஒளிப்பதிவு செய்து, இயக்கிய 'அழியாத கோலங்கள்' படத்தைப் பார்த்தேன். எனக்கு மிகவும் பிடித்த படமது. பாலுமகேந்திராவைப் போன்ற இலக்கிய ரசனை கொண்ட ஒரு உன்னத கலைஞனால் மட்டுமே அப்படியொரு படத்தை இயக்க முடியும்.

பாலுமகேந்திரா இயக்கிய 'மூடுபனி' படத்தின் ஒவ்வொரு காட்சியும் என் மனதில் இப்போதும் ஓடிக் கொண்டேயிருக்கிறது.

மலையாளத்தில் அவர் இயக்கிய யாத்ர, ஓளங்ஙள் இரு படங்களையும் இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும், மறக்கத்தான் முடியுமா?

வீடு, சந்தியா ராகம் ஆகிய படங்களையும்தான்... அவர் இயக்கிய கவித்துவத் தன்மை நிறைந்த 'மூன்றாம் பிறை' மக்களின் உள்ளங்களில் காலத்தைக் கடந்து வாழுமே!

தெலுங்கில் அவர் இயக்கி, பானுசந்தர், அர்ச்சனா நடித்த 'நிரீக்ஷனா' உண்மையிலேயே ஒரு உயர்ந்த கவிதை!

இந்த அளவிற்கு நான் ரசித்த பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குநராக சேர வேண்டுமென்று 80களில் ஆசைப்பட்டேன். என் நண்பர்களும் விரும்பினார்கள். பத்திரிகை, இலக்கிய மொழிபெயர்ப்பு. திரைப்பட பி.ஆர்.ஓ. வேலைகளுக்கு மத்தியில் நான் அதற்கான முயற்சியைச் செய்யவேயில்லை. விளைவு- நான் மனதில் ஆசைப்பட்டது இறுதி வரை நடக்கவே இல்லை. அதற்காக முயற்சித்திருந்தால்தானே!

2)சில வருடங்களுக்கு முன்பு தசரதபுரத்திலிருக்கும் பாலுமகேந்திராவின் ஸ்டுடியோவில் 'இதயம் நல்லெண்ணெய்' விளம்பரப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. அதை இயக்கிய லேகா ரத்னகுமார், அலுவலகத்தில் அமர்ந்திருந்த பாலுமகேந்திராவிடம் என்னை அறிமுகப்படுத்தினார். 'சார். இவர் சுரா. 200 திரைப்படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றியிருக்கிறார்' என்று அவர் கூறியவுடன், பாலுமகேந்திரா கூறினார்...'சுரா.He is a very good translator. நிறைய இலக்கியங்களை மொழி பெயர்த்திருக்கிறார். நான் அவருடைய பல நூல்களையும் படித்திருக்கிறேன். என் அலுவலகத்திலேயே அவர் மொழி பெயர்த்த பல நூல்கள் இருக்கின்றன' என்று. பாலுமகேந்திராவின் அந்த வார்த்தைகளைக் கேட்டு உண்மையிலேயே மிகவும் சந்தோஷப்பட்டேன்.

3) மூன்று வருடங்களுக்கு முன்பு சிவசங்கர் என்ற நண்பர் என்னை அணுகினார். மேடை நிகழ்ச்சிகள் நடத்துபவர் அவர். 'பாலுமகேந்திரா ஹிட்ஸ்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடத்தும்படி அவரிடம் கூறினேன். கிட்டத்தட்ட பாலுமகேந்திராவிற்கு பாராட்டு விழா மாதிரிதான்.  அவரின் படங்களில் இடம் பெற்ற பாடல்களை பாடகர்கள் மேடையில் பாடுவார்கள். இடையில் பாலுமகேந்திராவைப் பற்றி நடிகர்கள், நடிகைகள். தொழில் நுட்ப கலைஞர்கள் பாராட்டி பேசுவார்கள். ஆரம்பத்தில் அதற்கு பாலுமகேந்திரா ஒத்துக் கொள்ளவில்லை. பின்னர் ஒத்துக் கொண்டார். காமராஜர் அரங்கத்தில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியின் இறுதி வரை பாலுமகேந்திரா இருந்தார். இறுதியில் மிகவும் உணர்ச்சிவசப்பட்டு பேசினார். அந்நிகழ்ச்சியை நடத்திய சிவசங்கருக்கு நன்றி கூறினார். பாலுமகேந்திராவிற்கு அப்படியொரு பாராட்டு விழா  எடுக்கச் சொன்னதே நான்தான் என்பதை நினைத்து இப்போது உண்மையிலேயே பெருமைப்படுகிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.