Logo

குகநாதனுக்காக காத்திருந்தார் சிவாஜி

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 2725

மறக்க முடியுமா?சுரா (Sura)

குகநாதனுக்காக காத்திருந்தார் சிவாஜி

நான் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் தீவிர ரசிகன்.

அவர் நடித்த பாச மலர், பாகப்பிரிவினை, பாவமன்னிப்பு, படித்தால் மட்டும் போதுமா?, பச்சை விளக்கு, பார்  மகளே பார், பாலும் பழமும், ஆலயமணி, ஆண்டவன் கட்டளை, தங்கப்பதக்கம், வியட்நாம் வீடு, கவுரவம், சரஸ்வதி சபதம், கர்ணன், தில்லானா மோகனாம்பாள், முதல் மரியாதை, புதிய பறவை, வசந்த மாளிகை, தெய்வமகன், அவன்தான் மனிதன், பாபு, தேவர் மகன் என்று மனதில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் படங்களை கூறிக் கொண்டே போகலாம். இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

காலப்போக்கில் நான் படவுலகிற்கு வந்து விட்டேன். 200 திரைப்படங்களுக்கு இதுவரை மக்கள் தொடர்பாளராக நான் பணியாற்றியிருக்கிறேன். அவற்றில் நடிகர் திலகம் நடித்த படங்கள் இரண்டு. 1)வி. சி. குகநாதன் இயக்கிய'முதல் குரல்' 2)கேயார் தயாரித்த 'சின்ன மருமகள்'. இரண்டு படங்களின் படப்பிடிப்பின்போதும்,  மிகவும் அருகில் நின்று சிவாஜி நடிப்பதை கூர்ந்து பார்க்கக் கூடிய அருமையான வாய்ப்பு எனக்கு கிடைத்தது. இந்த இடத்தில் ஒரு சம்பவத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன்.

'முதல் குரல்' படத்தின் படப்பிடிப்பு. இடம்:வளசரவாக்கம் ஏ. ஆர். எஸ். கார்டன். அன்றுதான் படப்பிடிப்பு ஆரம்பம். சிவாஜி அப்போது மத்தியில் ஆண்டு கொண்டிருந்த ஜனதாதள கட்சியின் தமிழக தலைவராக வேறு இருந்தார். காலை 7 மணிக்கு படப்பிடிப்பு என்று குகநாதன் முதல்நாளே கூறி விட்டார். சிவாஜி சரியாக 7 மணிக்கு வந்து விட்டார். அவர் வந்தபோது அங்கு யாருமே இல்லை. அதற்குப் பிறகுதான் எல்லோரும் வந்தார்கள். படப்பிடிப்பு ஆரம்பமானது.

சிவாஜி நடிக்க, குகநாதன் இயக்கினார். அது ஒரு போலீஸ் ஸ்டேஷன் செட். சிவாஜிக்கு பத்திரிகையாளர் வேடம். அதற்கு முந்தைய நாள் படத்துறை வேலை நிறுத்தம் நடைபெற்றதால், செட் முழுமையடையாமல் இருந்தது.  ஒரு பக்கம் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போதே. இன்னொரு பக்கம் சுவற்றிற்கு வர்ணம் அடித்துக் கொண்டிருந்தார்கள். சிவாஜி எங்கே திட்டி விடப் போகிறாரோ என்று குகநாதனுக்கு நடுக்கம். அப்போது நடிகர் திலகத்தின் உதவியாளர் சிவாஜியின் ஒப்பனை அறையிலிருந்து வந்து சொன்னார்: 'அண்ணன்தான் அனுப்பி விட்டார்.

நான் எங்கே கோபிச்சிடப் போறேன்னு அவசர அவசரமா ஏதாவது பண்ணிடப் போறாங்க. நான் சொன்னேன்னு குகநாதன் கிட்டே போய் சொல்லு. நிதானமா வேலைகளை செய்யச் சொல்லு. நான் இந்தப் படத்துக்கு வேலை  செய்யத்தான் வந்திருக்கேன். எவ்வளவு நேரமானாலும் நான் வெய்ட் பண்றேன்னு குகநாதன் கிட்டே சொல்லு'. அந்த உதவியாளர் இப்படி கூறியதும், குகநாதனின் கண்களில் கண்ணீர் வந்து விட்டது. அருகில் நின்றிருந்த என் கண்களிலும்தான். 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.