Logo

60 வயதினிலே....

Category: பொது
Published Date
Written by சுரா
Hits: 2724

அழியாத கோலங்கள்சுரா (Sura)

60 வயதினிலே....

வம்பர்-7.அதுதான் நடிகர் கமல் ஹாஸனின் 60 ஆவது பிறந்த நாள்.அதையொட்டி கேரளத்தின் பிரபல நாளிதழான 'மாத்ரு பூமி' நவம்பர்-2ஆம் தேதி கமல் ஹாஸனின் நேர் காணல் ஒன்றைப் பிரசுரித்தது.கேரள மாநிலத்தின்  தொடுபுழாவிற்கு 'பாபநாசம்' படப்பிடிப்பிற்காக வந்திருந்த கமலை 'மாத்ரு பூமி'க்காக பானு ப்ரகாஷ் நேர் காணல் கண்டார்.ஒரு முழு பக்க பேட்டியாக அது வந்திருந்தது.

'அறுபது வயதினிலே' என்ற தலைப்பில் பிரசுரமான அந்த நேர் காணலில் என்னைக் கவர்ந்த சில கேள்விகளும்,பதில்களும்:

கேள்வி:புரட்சி என்பது சொந்த வாழ்க்கையிலிருந்து ஆரம்பிக்க வேண்டும் என்பதுதான் உங்களுடைய வாழ்க்கை கூறும் பாடம்.இந்த அளவிற்கு துணிச்சலாக ஒரு மனிதனால் இருக்க முடியுமா?

கமலின் பதில்:இருக்க வேண்டும்.இருக்காமல் இருக்க முடியாது.தமிழ் நாட்டின் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்து வளர்ந்த எனக்கு முன்னால் தடைகள் நிறைய இருந்தன.பத்தாவது வயதில் பூணூல்  அணிவிப்பதற்காக திருப்பதிக்கு என்னை அழைத்துக் கொண்டு செல்லும்போது நான் என்னுடைய அண்ணன் சந்திரஹாஸனிடம் கூறினேன்'எனக்கு பூணூல் அணிவிக்க வேண்டாம்' என்று.'மூத்த அண்ணன் சாருஹாஸனிடம் கேட்கிறேன்'என்று சந்திரஹாஸன் கூறினார்.'அவனுக்கு பூணூல் வேண்டாம் என்றால் வேண்டாம்'என்பதுதான் சாருஹாஸனின் பதிலாக வந்தது.அப்போது என் அப்பாவும் கூறினார்-'அப்படியே இருக்கட்டும்' என்று.சுருக்கமாக கூறுவதாக இருந்தால் தாங்கள் எப்படி வாழ்ந்தார்களோ,அப்படித்தான் வாழ வேண்டும் என்று அவர்கள் யாரும் என்னிடம் கூறவில்லை.என்னுடைய சொந்த விருப்பப்படிதான் நான் வாழ்ந்திருக்கிறேன்...வாழ்ந்து கொண்டிருக்கிறேன்.

 கேள்வி:மரணத்திற்குப் பிறகு உடலை மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு கற்பதற்காக கொடுப்பதாக முன்பு கூறியிருந்தீர்கள்...

கமலின் பதில்:நான் கூறியது எதையும் நான் இதுவரை மாற்றி கூறியதில்லை.அறுபது வருடங்கள் நான் வாழ்ந்திருக்கிறேனே!அதை மிகப் பெரிய விஷயமாகவே நான் நினைக்கிறேன்.இந்த நிமிடமே நான் மரணமடைந்தாலும் எனக்கு வருத்தமில்லை.காரணம்-நான் என்ன விரும்பினேனோ,அதன் சில படிகளையாவது என்னால் ஏறுவதற்கு முடிந்திருக்கிறது.நாம் ஏறுவதற்கு நூற்றியொரு படிகள் இருக்கின்றன என்று வைத்துக் கொள்ளுங்கள்.அவை முழுவதையும் ஏறிவிட்டால்,அதற்குப் பிறகு எங்கு ஏறுவது?திரும்பி அமைதியாக கீழ் நோக்கி இறங்குவதொன்றே வழி.நான் படிகளில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.ஆனால்.இடையில் விழ நேர்ந்தால்.அதற்காக நான் கவலைப்பட மாட்டேன்.பிறகு...எஞ்சி இருப்பது சரீரம் மட்டுமே.அது பத்து பேருக்கு பயன்படுகிறது என்றால்,அது குறித்து சந்தோஷமே.

கேள்வி:அறுபதாவது பிறந்த நாளில் கால் வைக்கும்போது,மனதில் என்ன தோன்றுகிறது?

கமலின் பதில்:இறுதி மூச்சு வரை நான் சினிமாவுடன் சேர்ந்திருப்பேன்.அறுபது வருட வாழ்க்கையில் ஆசைப்பட்டதில் பாதியைக் கூட என்னால் செய்ய இயலவில்லை.எவ்வளவோ கனவுகள் இன்னும் மீதமிருக்கின்றன.நீங்கள் இவ்வளவு காலமும் என்னிடம் வைத்திருந்த அன்பு தொடர்ந்து இருந்து கொண்டிருக்க வேண்டும் என்பது மட்டுமே என்னுடைய வேண்டுகோள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.