Logo

இப்படிக்கு, என்றும் இளமையுடன்... முதுமை !

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 5918
rasikkathane azhagu-ippadikku-endrum-ilamaiyudan-mudumai

குழந்தைப் பருவம், சிறுவ-சிறுமியர் பருவம், கன்னிப் பருவம், வாலிபப் பருவம், இளம்பெண் பருவம், பேரிளம் பெண் பருவம், பேரிளம் ஆண் பருவம், வயோதிகப் பருவம், அதன்பின் தள்ளாத பருவம்.

இயற்கை ஏற்படுத்தும் பருவங்கள், மனித வாழ்க்கையில் மாறி மாறி வரும் இனிமைகள்! ஆம்! ஒவ்வொரு பருவமும் இனிமைதான். இளமை மட்டுமே இனிமை என்பதல்ல. முதுமையிலும் அந்த இளமையை நமக்குள் உருவாக்கலாம், உணரலாம். உல்லாஸமாய் வாழலாம்.

வயது அதிகமாக... அதிகமாக... உருவமும், முகத் தோற்றமும் மாறும். அது இயற்கை. ஆனால் மனது? அது என்றும் இளமையுடன் இருக்க நம்மை நாம் தயார் படுத்திக் கொள்ள வேண்டும். முதுமை அடைந்த ஒவ்வொரு ஆணுக்கும், பெண்ணுக்கும் உள்ளுக்குள் இளமை உணர்வு நிச்சயமாய் இருக்கும். ஆனால் அவர்கள் அதை அடக்கி வைக்கிறார்கள்.

 'ஊர் என்ன பேசுமோ', 'உலகம் என்ன சொல்லுமோ' என்று எதற்கெடுத்தாலும் ஒரு தயக்கம். பெண் என்றால் "ஐய்யோ... இந்த வயசுல எனக்கு எதுக்கு இந்தப் புடவை? இதெல்லாம் சின்னப் பெண்கள் கட்டுவது" என்று புறக்கணிப்பார்கள். ஆனால் அவர்களது மனதில் அந்த புடவையை உடுத்திக் கொள்ளும் ஆசை இருக்கும். யாராவது ஏதாவது சொல்லிவிடுவார்களோ என்ற பயம்!

ஏன் இப்படி பயப்பட வேண்டும்? தயங்க வேண்டும்? நாம் துணிமணிகள் உடுத்துவதற்கும், அணிகலன்கள் அணிந்து கொள்வதற்கும் வயது முக்கியம் அல்ல. நமக்கு பொருந்துகிறதா என்பதுதான் முக்கியம். குறிப்பிட்ட வயதில், சில உடைகள் மற்றும் நகைகள் பொருந்தாது என்பது உண்மைதான். ஆனால் பொருந்தக் கூடிய உடைகளை, வயதை மட்டுமே காரணமாக வைத்து ஒதுக்குவது தேவையற்றது.

ஆண்களில் சிலர் 'டி-ஷர்ட்' அணிய வெட்கப்படுவார்கள். 'டி-ஷர்ட்' என்பது இளைஞர்கள் மட்டுமே அணியும் உடை என்பது இவர்களது தவறான கணிப்பு. அது ஒரு சுலபமான உடை. ஓய்வு உணர்வை (Relaxed Mood) அளிப்பது. இஷ்டப்படும் உடையை ஏன் கஷ்டப்பட்டு அணியாமல் இருக்க வேண்டும்?

 'ஆள் பாதி; ஆடை பாதி' என்பார்கள். ஒருவர் அணியும் ஆடை அவருக்கு ஒரு முக்கியத்துவத்தை அளிக்கின்றது. மரியாதையை அளிக்கின்றது. அதாவது பகட்டான பட்டாடையோ, ஆடம்பரமான ஆடையோ அணிந்துதான் மரியாதையை உருவாக்க வேண்டும் என்பதல்ல. எளிமையான உடையானாலும் எடுப்பானதாக, எதிரில் இருப்பவர் முகம் சுளிக்கக் கூடியதாக இல்லாமல் கௌரவமான உடையாக இருத்தல் அவசியம்.

துறவிகள் அணியும் காவி உடை, இயல்பாக மனதில் தெய்வீக எண்ணங்களை எழுப்புகிறது. சில குறிப்பிட்ட உடைகள் நம் மனதில் குறிப்பிட்ட எண்ணங்களைத் தோற்றுவிப்பது உண்மை தான் என்று மகான் ஸ்ரீராமகிருஷ்ணன் கூறியுள்ளார்.

பெண்களில் சிலர் "என் பொண்ணுக்கு கல்யாணம் ஆயிடுச்சு. இனிமேல் எனக்கு எதுக்கு இந்த புடவை/நகை" என்று புறக்கணிப்பார்கள். உங்களுக்குப் பிடித்திருக்கிறதா? போட்டுக் கொள்ளுங்கள். உங்களுக்குப் பொருத்தமானதாக இருக்கிறதா? போட்டுக் கொள்ளுங்கள்.

சுமார் நாற்பது வருடங்களுக்கு முன்பு, ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தில்  மகளுக்கு திருமணமாகி மருமகன் வந்து விட்டால் மாமியார் பின்னல் (ஜடை) போடக் கூடாது எனும் எழுதப்படாத சட்டம் இருந்தது. கொண்டைதான் போட்டுக் கொள்ள வேண்டுமாம். இதற்குக் காரணம், பின்னல் பின்னி இருந்தால், தன் மனைவி எது, மாமியார் எது என்று அடையாளம் தெரியாமல் மாமியாரின் பின்னலைப் பிடித்து இழுத்து விடுவானாம் மருமகன்.

இவ்விஷயம் என்னிடம் ஒரு மூதாட்டி சொன்ன உண்மையான நிகழ்ச்சி. அந்த மூதாட்டி, தன் மகளுக்கு திருமணம் ஆனபின் கொண்டைதான் போட்டிருந்தார். தன் மருமகளுக்கு, மருமகன்வந்த பிறகு மருமகளையும் பின்னல் போடக் கூடாது என்று கட்டளை இட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தார். இத்தனைக்கும் நாற்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பெண்களுக்கு பதினைந்து வயதிலிருந்து பதினெட்டு வயதிற்குள் மணமுடித்து விடும் வழக்கம் இருந்து வந்தது. அப்படி எனும் போது மகளுக்கு திருமணம் செய்து விட்ட அந்த இளம்தாய்க்கு முப்பத்தைந்து வயதுதான் இருக்கும். அந்த வயதிற்குள்ளே பின்னல் போட்டுக் கொள்ளத் தடை விதிக்கப்பட்டிருந்தது.

இளம் தாயாக இளமைத் தோற்றம் குறையாமல் இருப்பதால் விதிக்கப்பட்ட தண்டனையா? அறியாமையா? எதுவும் புரியவில்லை. ஆனால் அந்தக் கால கட்டம் மாறி விட்டதில் ஆறுதலாக இருக்கின்றது. அப்படி ஒரு நிலைமை இருந்த போது அந்த இளம் தாயின் மனதில் எத்தனையோ ஆசைகள் இருந்திருக்கும். பொருத்தமில்லாமல் கொண்டையைப் போட்டுக் கொண்டு தன் ஆசைகளுக்கும், அபிலாஷைகளுக்கும் ஒரு பூட்டு போட்டுக் கொண்டு  வாழ்ந்திருப்பாள். அந்த அளவிற்கு அன்றிருந்த நிலைமை இன்று இல்லை.

பெண்களுக்குப் பதினைந்து வயதில் இருந்து பதினெட்டு வயதிற்குள் திருமணம் செய்து வைப்பது மாறி விட்டது. கல்வி கற்று, ஒரு பட்டப்படிப்பாவது முடித்து ஆபிஸ், உத்யோகம், சுய தொழில் என்று பெண்கள் முன்னேற்றப்பாதையில் நடக்க ஆரம்பித்து விட்டதால் மிகச்சிறு வயது திருமணங்கள் நடப்பது நின்று விட்டது. அம்மா, பெண் இருவரும் வேலைக்குப் போகும் நிலை என்றாகிவிட்டது. நகர்ப்புறங்களில் மட்டுமே இப்படி! இன்னமும் பதினெட்டு பட்டிகளின் கோர்வையாகத் திகழும் கிராமப்புறங்களில் கட்டுப்பாடுகள் ஏகமாய் இருக்கின்றன.

அவற்றைக் கடைப்பிடிப்பதும் இன்றளவில்  நடைபெறுகின்றன. பிறர் விதிக்கும் கட்டுப்பாடுகள் போக, நமக்கு நாமே 'வயசு ஏறிப்போச்சு. இதை உடுத்தக் கூடாது. இந்த நகை போடக் கூடாது' என்று சுயமாக விதித்துக் கொள்ளும் வரையறைகள் தேவையற்றது.  நம்மை நாமே கண்ணாடியில் பார்க்கும் பொழுது ஒரு உற்சாகம் பிறக்கும் விதமாக நமது உடையலங்காரம் இருக்க வேண்டும். இதற்கு வயதை ஒரு வரம்பாக கருத்தில் கொள்ளத் தேவை இல்லை.

எனது மிக நெருங்கிய நட்புக்குரியவர் ஒரு பிரபல பெண் மருத்துவர். ' Looking good is feeling good' எனும் மந்திரத்தை எனக்கு உபதேசித்தவர் இவர். மிடுக்காக உடுத்திக் கொண்டால் அன்றைய அலுவல்கள் செய்வதற்குரிய ஆவலும், ஊக்கமும் பெருகும் என்று அவர் கூறுவார். அவர் கூறிய ஆலோசனை முற்றிலும் உண்மை.

நாம் உடுத்திக் கொள்ளும் உடையினால் நமக்கு ஒரு தன்னம்பிக்கை உண்டாகிறது. ஏனோதானோ என்று எதையோ அணிந்து கொண்டோம், போனோம்... வந்தோம் என்றில்லாமல் சற்று கவனம் எடுத்து நம்மை சீர்ப்படுத்திக் கொண்டால் வாழ்க்கையில் சலிப்பு என்பதே இல்லாமல், களிப்பு என்ற உணர்வு நம்மை மேம்படுத்தும்.


முதுமை என்பது காலத்தின் கட்டாயம் நமக்கு எற்படுத்தும் இராசயன மாற்றம். இதை பெரிதாக எண்ணக் கூடாது. பெற்றெடுத்த பிள்ளைகளுடன் சகஜமாக உரையாடுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். அவர்களுக்கு ஈடாக உலக நடப்புகளைத் தெரிந்து கொண்டு அளவளாவுங்கள். ஏன் முதுமை எனும் திரை கொண்டு நம் இளமை உணர்வுகளுக்கு முகமூடி போட வேண்டும்?!

இளைய தலைமுறையினரிடம் கலந்துரையாடுவதற்கும், விவாதம் செய்வதற்கும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன. அவர்களுக்கு சரிசமமாக நாம் பேசும் பொழுதும், பழகும் பொழுதும் நம் வயதை மறந்து போக முடியும். மனதை லேஸாக பறக்க வைக்க முடியும்.

நமது பிள்ளைகள் மட்டுமல்லாமல் அவர்களது பிள்ளைகளான பேரன், பேத்திகளுடன், தலைமுறை இடைவெளியின்றி பேசுவதற்கு நம்மை நாம் தயார் செய்து கொள்ள வேண்டும். உள்நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள பற்பல வினோதங்களையும், அறிவு பூர்வமான விஷயங்களையும் அறிந்து வைத்துக் கொண்டால் 'இவங்க  வயசானவங்க, இவங்களுக்கு என்ன தெரியும்?' என்று அவர்கள் நம்மை ஒதுக்க மாட்டார்கள்.

'எங்க பாட்டிக்கு / தாத்தாவுக்கு இன்றைய நடப்பு (Up to date)  விஷயங்கள் அத்தனையும் அத்துபடி. ஃப்ரெண்ட்சுக்கு சமமாக அவர்களுடன் பேசிக் கொண்டிருக்கலாம் தெரியுமா?' என்று பேரக் குழந்தைகள் பெருமையாக பேசிக் கொள்ளும்படி நம் அறிவை விருத்தி செய்து கொள்ள வேண்டும்.

இன்டர்நெட் மூலமாகவும், புத்தகங்கள் மூலமாகவும் உள்நாடு, மற்றும் உலக நாடுகள் அனைத்திலும் நிகழும் அன்றாட நிலவரங்களையும், புதுமைகளையும் அறிந்து வைத்துக் கொள்வது அவசியம்.

'எங்க அப்பாவுக்கு ஒண்ணுமே தெரியாது, எங்க தாத்தாவுக்கு ஒண்ணுமே தெரியாது' என்று இளம் தலைமுறையினரால் நீங்கள் ஒதுக்கி வைக்கப்படும் பொழுது உங்களுக்கு முதுமை உணர்வு தோன்றிவிடுகிறது. அறிவை மேம்படுத்திக் கொண்டால் உடலில் ஏற்பட்டுள்ள முதுமை, மனதில் எட்டிக்கூடப் பார்க்காது. மாறாக, இளமை ஊஞ்சலாடும்.

வயதானவர்களுக்கு ஒரு வரப்பிரசாதம் தொலைக்காட்சி சேனல்கள் (Channels)  என்பதை ஒப்புக் கொள்ள முடியாது. செய்திகள் பார்க்கலாம். கேட்கலாம். இரவில் தூக்கம் வரவில்லை என்றால் பழைய பாடல்கள், பிடித்த திரைப்படங்களை தூக்கம் வரும் வரை பார்க்கலாம். ஆனால் 'எனக்கு வயசாயிடுச்சு. இனிமேல் எனக்கு தொலைக்காட்சி சீரியல்கள்தான் கதி' என்று சதா சர்வமும் சீரியல்களைப் பார்ப்பதால் மனம்தான் சீர் கெட்டுப் போகின்றது.

சீரியல்களில் வரும் பழிவாங்கும் கதாபாத்திரங்கள், அழுது வடியும் கதாபாத்திரங்கள், மாமியார் கொடுமை, புருஷன் கொடுமை என்று அவற்றைப் பார்ப்பதால் மனநலம் குன்றி விடுகின்றது. அதனால் உடல் ஆரோக்கியமும் பாதிக்கப் படுகின்றது. இதற்கு சான்றாக எனது உறவினருக்கு நிகழ்ந்த சம்பவம் ஒன்று உண்டு. அந்த உறவினர் ஒரு பெண். மகள், மகனுக்கு திருமணமான பின்னர் 'எனக்கு வயசாயிடுச்சு. நான் வெளில எங்கேயும் வர மாட்டேன்' என்று வீட்டிற்குள் முடங்கினார்.

கல்யாணங்களுக்கு, திருவிழாக்களுக்கு இப்படி எங்கே வரச்சொல்லி அழைத்தாலும் 'நான் எதுக்குப்பா அங்கேயெல்லாம்..... என்னோட கடமை முடிஞ்சுருச்சு. நீங்க போயிட்டு வாங்க' என்று சொல்லி, வீட்டிலேயே அடைந்து கிடந்தார். இவருக்குப் பொழுதுபோக்காக இருந்தது, காலை நேரம் ஒளிபரப்பாகும் சீரியல்கள்! மதிய உணவு நேரம் வரை அதிலேயே லயித்து விடுவார்.

 மதிய உணவிற்குப்பின் மாலைநேரம் துவங்கும் சீரியல்களை இரவு வரை ஒன்று விடாமல் பார்ப்பார். நாளடைவில் சீரியலின் கதாபாத்திரங்களோடு அவரது மனம் ஐக்கியமாகிப் போனது. வீட்டில் யார் இருந்தாலும், இல்லாவிட்டாலும் சீரியல் பார்ப்பதையே தன் வயோதிக காலத்தின் வாழ்நிலையாக மாற்றிக் கொண்டார். உறவினர்கள் வந்தால்கூட அவர்களுடன் உரையாட விருப்பம் இன்றி சீரியல்களைப் பார்த்தார்.

இவரது இந்தநடவடிக்கை, வீடு தேடி வரும் உறவினர்களை மீண்டும் வரவிடாமல் தடுத்தது. இதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் தன் வாழ்க்கையே தொலைக்காட்சி என்பது போல மாறி விட்டார். இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் இவருக்கு தொலைக்காட்சியில் திரைப்படங்கள் பார்ப்பதை விட சீரியல்களைப் பார்ப்பதில்தான் அதிக நாட்டம் இருந்தது. உணவு சாப்பிடும் நேரம் கூட தட்டில் சாப்பாடு, டிபன் வகைகளை எடுத்துக் கொண்டு, தொலைக்காட்சி முன்பு உட்கார்ந்தபடியே சாப்பிடுவார்.

இவருக்கு லேசாக ரத்த அழுத்தம் (B.P.) இருந்தது. அதற்குரிய மாத்திரைகளை சாப்பிட்டுக் கொண்டிருந்தார். திடீரென்று  ரத்த அழுத்தம் அதிகமாகியது. கைகள் நடுங்க ஆரம்பித்தன. பயந்து போன அவரது மகன், அம்மாவின்  உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை என்னென்ன பரிசோதனை செய்ய வேண்டுமோ, எத்தனை மருத்துவர்களிடம் காட்ட வேண்டுமோ, காட்டினார். ஸ்கேன் எடுக்கும் ஏற்பாடுகளை மருத்துவர்கள் கூறியபடி செய்தார். எதிலும் எந்த பிரச்சனையும் இல்லை. மாத்திரைகளின் அளவைக் கூட்டிக் கொடுத்த பின்னும் ரத்த அழுத்தம் நார்மலுக்கு வரவில்லை. கைநடுக்கமும், அதிகமாகியது.

அவர்களது குடும்ப டாக்டர், அவரது அன்றாட வாழ்க்கை முறை பற்றி விபரமாகக் கேட்டார். டாக்டரின் கேள்விகளின் முடிவில் என் உறவினர் கூறிய பதில், அவரது ரத்த அழுத்தம் உயர்ந்தற்கும், கை நடுக்கத்திற்கும் உரிய காரணத்தை அறிவித்தது.  எனவே 'தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்துங்கள். அதன்பின் மற்றதைப் பார்ப்போம்' என்று டாக்டர் கூறினார். அந்த அம்மாவின் மகனிடமும் இதைப்பற்றி பேசினார்.

"உங்க அம்மாவிற்கு ஏற்படும் கை நடுக்கம், மனநிலை பாதிப்பினால் ஏற்படும் விளைவு என்று நான் நினைக்கிறேன். அதை நடைமுறை பரிசோதனையில் பார்த்த பிறகே என்னால் எதுவும் கூற முடியும். உங்கள் அம்மாவை தொலைக்காட்சி பார்ப்பதை நிறுத்தச் செய்யுங்கள். சீரியல்கள் பார்ப்பதாலும், அந்தக் கதாபாத்திரங் களுடன் தன்னை ஐக்கியப் படுத்திக் கொள்வதாலும் ஏற்படும் மனநல பாதிப்புக்கு ஆளாகி இருப்பதாக அனுமானிக் கிறேன். தொடரில் வரும் கதாபாத்திரங்கள் படும் தொல்லைகள், சோகங்கள், கொடுமைகள், பழிவாங்கும் படலங்கள், மரணம் சம்பவிக்கும் காட்சிகளில் காட்டப்படும் அழுகுரல், தீ வைத்து எரிப்பது போன்ற காட்சிகள் போன்றவற்றை அனுதினமும், சதாசர்வமும் பார்த்துக் கொண்டே இருப்பதால் ரத்த அழுத்தம் அதிகமாகிறது.

மனநிலை பாதிப்பினால் கை நடுக்கமும் உண்டாகிறது. அவருடைய வாழ்க்கையில் இல்லாத பிரச்சனைகளையெல்லாம், தொலைகாட்சி தொடர்களில் பார்த்து, மனதளவில் பெரிதும் பாதித்திருக்கலாம். மற்றபடி அவருக்கு ஆரோக்கிய ரீதியாக பெரிய பிரச்சனைகள் ஏதும் இல்லை" என்று விளக்கிக் கூறிய அவர், மேலும் தொடர்ந்தார்.


"உங்க அம்மாவை வெளியில் அழைத்துச் செல்லுங்கள். இயற்கை காற்று அவங்க மீது படணும். அந்த சீரியல் வாழ்க்கை வட்டத்தை விட்டு அவங்க வெளியே வரணும். இப்படி அவங்க, தன்னோட வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டால் அவங்களோட உடல்நலக் குறைவு  மாறி நல்ல ஆரோக்கியம் கிடைக்கும். இது ஒரு பரிசோதனைதான். எனது முடிவு அல்ல". என்று மருத்துவர் கூறியதை கவனமாகக் கேட்டுக் கொண்ட மகன், மருத்துவரையே தன் அம்மாவிடம் இது பற்றி பேசும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டான்.

டாக்டரும் அந்த அம்மாவிடம் 'கௌன்ஸலிங்' செய்வது போல ஆறுதலாய், அன்பாய் பேசி விளக்கினார். ஆரம்பத்தில் தயக்கமாய் மறுத்த அந்த அம்மா, டாக்டரின் பொறுமையான விளக்கத் தினாலும், அறிவுரைகளாலும் சற்று மனம் இசைந்தார். அதன்படி வீட்டிற்குப் போனதும் தொலைக்காட்சி பெட்டியைத் தேடாமல் பேரன், பேத்திகளைத் தேடினார். கொஞ்சினார். இரவு உணவை குடும்பத்துடன் சேர்ந்து சாப்பிட்டார். குறிப்பிட்ட தொடர்களின் குறிப்பிட்ட நேரம் வரும் பொழுது சலனப்படும் தன் மனதை கட்டுப்படுத்தினார்.

உடல் நலம் குன்றியதற்குடாக்டர்கூறியதுபோலதொடர்கள் பார்த்து, அதிலேயே மனம் லயிப்பது ஒரு காரணமோ என்ற பயத்தில் தொடர்கள் பார்ப்பதைத் தவிர்த்தார்.  வீட்டு வேலைகளில்  ஈடுபட்டார். மருமகளுக்கு உதவி செய்தார். வெளிக்காற்று படும்படியாக மகனுடன் நடைப்பயிற்சி செய்தார். மருமகளுடன் கோவிலுக்குச் சென்றார். உறவினர்களின் இல்லங்களுக்குச் சென்றார். பத்திரிக்கைகள் படித்தார். பேரன், பேத்திகளுக்கு விதம் விதமாய்பலகாரங்கள் செய்துக் கொடுத்தார்.

 'அந்த சீரியலில் அந்த கேரக்டருக்கு என்ன ஆச்சோ, அந்த மாமியார், தன் மருமகளை என்ன செய்தாளோ' என்று அலைபாய்ந்துக் கொண்டிருந்த அவரது மனம் ஒரு நிலையை அடைந்தது. நாளடைவில் குடும்பத்தின், வெளி உலகின் சந்தோஷங்களை இத்தனை காலம் மறந்து, தொலைக்காட்சி தொடர்களில் கவனத்தை செலுத்தி, உடல்நலம் குன்றிய நிலை ஏற்பட்டு விட்டதே' என்று உணர்ந்தார். வருந்தினார்.

தன் அன்றாட வாழ்க்கை முறைகளை குடும்பத்தினருடன் ஐக்கியப்படுத்திக் கொண்டார். சிறுக சிறுக அவருக்குள் சீரியல்களின் ஆதிக்கம் மறைந்தது. ஆரோக்கியம் அவர் பக்கம் திரும்ப ஆரம்பித்தது. ரத்த அழுத்தம் நார்மலுக்கு வந்தது. கை நடுக்கம் காணாமலே போனது.

இந்த நல்ல முன்னேற்றங்கள் அவரை தொலைக்காட்சி தொடர்களை மறக்க வைத்தது. மாத்திரைகளின் அளவையும் குறைக்கும் அளவு முன்னேற்றம் அடைந்தார். தனக்கு ஏற்பட்ட ஆரோக்கியக் குறைவு, மனநிலை பாதிப்பினால் ஏற்பட்ட விளைவு என்பதை உணர்ந்து கொண்டார். அவரது குடும்ப டாக்டருக்கு நன்றி கூறி மகிழ்ந்தார். தன் மீது அக்கறை கொண்டு தன்னை டாக்டரிடம் அழைத்துச் சென்று, தேவையானதை செய்த தன் மகனின் பாசத்தை நினைத்துப் பெருமிதப்பட்டார்.

தொடர்கள் பார்ப்பது தவறு இல்லை. ஆனால் அந்தத் தொடர்களின் வரும் சம்பவங்களிலும், அந்த சம்பவங்களில் வரும் உணர்ச்சி பூர்வமான காட்சிகளிலும் முழுக்க முழுக்க தங்கள் மனதை ஈடுபடுத்தி, நிமிடம் தவறாமல் அதே சிந்தனையில் உழல்வதுதான்தவறு. 'இது கதை. கற்பனை. தொலைக்காட்சி களில் வரும் பிம்பங்கள் மட்டுமே; உண்மைகள் அல்ல' என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.

தொடர்களை பார்த்த பிறகு அதை அந்த நிமிடத்தோடு மறந்துவிட்டு நமது இயல்பான வாழ்வுடன் ஒன்றி விட வேண்டும். இதை விடுத்து தொடரில் வரும் கதாபாத்திரங்களை நமது உறவினர்கள் போல நினைத்து அதைப் பற்றி கவலைப்பட்டு நம் உடல் நலனைக் கெடுத்துக் கொள்ளக் கூடாது.

கபாலீஸ்வரர் கோயிலில் ஒரு பெண்மணி, 'கோலங்கள்' தொடரின் 'அபி' என்ற (கதாபாத்திரம்) பெண்ணின் பெயருக்கு அர்ச்சனை செய்த காட்சி நான் என் கண்களால் நேரில் கண்ட காட்சி. உடன் இருந்த அவரது தோழி, "உன் வீட்ல 'அபி'ன்னு யாருமே இல்லையே, பின் எதுக்காக அந்தப் பெயரில் அர்ச்சனை செய்கிறாய்?" என்று கேட்க, அர்ச்சனை செய்த அந்தப் பெண்மணியின் பதில் கேட்டு, அதிர்ச்சி அடைந்தேன்.

"கோலங்கள் 'அபி'க்குத்தான் அர்ச்சனை செய்தேன். பாவம். அவ வாழ்க்கையில எவ்வளவு கஷ்டப்படறா தெரியுமா? அவளோட கஷ்டமெல்லாம் தீர்ந்து அவ நல்லா இருக்கணும்னுதான் அவ பேருக்கு அர்ச்சனை பண்ணினேன்" என்று அவர் கூறியதும் ஆடிப் போய் விட்டேன். இந்த அளவுக்குத் தொடருடன் ஐக்கியமா? என்று ஆச்சர்யம் பாதி அச்சம் பாதி என்னை ஆட்டி வைத்தது.

முதுமையை ஒரு சாக்காக வைத்துக் கொண்டு சும்மா உட்கார்ந்திருப்பது, எந்த நிகழ்ச்சியிலும், குடும்ப நடவடிக்கை களிலும் கலந்து கொள்ளாமலே இருப்பது போன்ற செயல்களை அறவே தவிர்க்க வேண்டும். ' Live every moment' என்று அறிஞர்கள் கூறியுள்ளனர். ஒவ்வொரு வினாடி நேரமும், நிமிட நேரமும் வாழ்க்கையின் அனைத்தையும் அனுபவித்து வாழ வேண்டும்.

வயது முதிர்ந்து விட்டால் இளமை உணர்வுகள் உதிர்ந்து விடுவதில்லை. அலுவலகத்தில் இளைப்பாறும் (Retirement) காலகட்டம் வந்தபின் வீட்டில் சும்மா  உட்கார்ந்திருப்பது தாழ்வு மனப்பான்மையை உண்டாக்கும். தாழ்வு மனப்பான்மை வந்துவிட்டால் அதிலிருந்து மீள்வது மிக்க சிரமம். நாமும் கஷ்டப்பட்டு, பிறரையும் கஷ்டப்படுத்துவது தாழ்வு மனப்பான்மை.

பணியிலிருந்து இளைப்பாறிய ஆண்கள் / பெண்கள் (Retired Persons) வீட்டில் சும்மா உட்கார்ந்திருப்பது மிகவும் கொடுமையானது. இக்கொடுமையை இனிமையாக மாற்றிக் கொள்வது நம்மிடம், நம் மனதில்தான் உள்ளது. நிம்மதியையும், இனிமையையும் எங்கே எங்கே என்று தேட வேண்டியதில்லை. நமக்கு  நாமே நம் வாழ்நாள் திட்டத்தை வகுத்துக் கொள்ள வேண்டும். உத்தியோகத்தில் இருந்து விடுபட்டு விட்டால் அனைத்து நடவடிக்கைகளிலும் இருந்து விடுபட்டுவிட வேண்டும் என்பதல்ல. நம்மால் முடிந்ததை செய்ய வேண்டும்.

இளம் வயதிலிருந்தே அந்தந்த வயதுக்குரிய உணவுப்பழக்க முறைகளையும், முறையான உடல்பயிற்சியையும் மேற்கொள்ள வேண்டும். ஆரோக்கியம்தான் அனைத்திற்கும் அடிப்படை ஆதாரம். நாற்பது வயதைக் கடந்தவர்கள் வருடத்திற்கு ஒரு முறை உடல் ஆரோக்கிய பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். டாக்டரின் அறிவுரைப்படி அவர் பரிந்துரைக்கும் உடல் நலக் குறிப்புகளை தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும். சத்துணவு நிபுணர்களிடம் கலந்தாலோசித்து, அவர்கள் பரிந்துரைக்கும் உணவு முறையை பின்பற்ற வேண்டும். ஏனோதானோ  வென்ற அலட்சியமான உணவு முறையினால் உடல் நலம் பாதிக்கப்படும். உடல்  நலம் நன்றாக இருந்தால் முதுமையின் தளர்ச்சி இன்றி, மலர்ச்சியுடன் வாழலாம்.


நமக்குத் தெரிந்த தனியார் நிறுவனங்களில் அவர்களது நிர்வாகத்திற்கு உதவிடும் விதமாக பணிகளை செய்யலாம். வீட்டின் அருகே உள்ள பிள்ளைகளுக்கு ட்யூஷன் எடுக்கலாம். ஸ்லோகங்கள் கற்றுக் கொடுக்கலாம். பிற மாநில மொழிகள் தெரிந்தவர்களாக இருந்தால் அதைக் கற்றுக் கொடுக்கலாம். கோயில்களில் விழாக்கள் நடைபெறும் பொழுது  'வாலன்டியர்' ஆக அங்கே சென்று தேவைப்படும் உதவிகள் செய்யலாம். சும்மா இருந்தால் தேவையற்ற சிந்தனைகள் சிதறும். ஏதாவது உபயோகமான வேலைகள் செய்து கொண்டு  அவற்றில் ஈடுபடுத்திக் கொண்டால் எந்த வயதிலும் வாழ்வு சுகமானதாக இருக்கும்.

வீட்டில் சும்மா இருப்பவர்கள் எது பேசினாலும் தவறாகத் தெரியும். 'ரிட்டயர்ட் ஆபிஸர், வெட்டி ஆபிஸர்' என்ற பட்டங்கள் சூட்டப்படும். 'தொண தொண'ன்னு  எப்பப்பார்த்தாலும் பேசிக் கிட்டு இருக்குது. 'மொக்கை' தாங்க முடியல. அறுக்கிறார்' என்று ஆண்களை மட்டுமா? பெண்களையும் பேசுவார்கள்.

'நாம் சம்பாதிக்கும் போது இருந்த மதிப்பு, மரியாதை இப்போது இல்லையோ?... நம்மை இளக்காரமாக  நினைக்கிறார்களோ' என்ற  தவறான எண்ணம் ஏற்பட்டு மனம் புண்படுவது மட்டுமல்ல, உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை ஏகமாய் உருவாகிவிடும்.

 'எனக்கு வயசாயிடுச்சு. அதனால வீட்ல உள்ளவங்க என்னை மதிக்க மாட்டேங்கறாங்களோ? வயசான காலத்துல இப்பிடித்தான் அல்லாட வேண்டுமோ?' என்று சில பெரியவர்கள் தங்களுக்குள் உண்டாகும் இந்த தவறான கருத்தினால் குடும்பத்தினருடன் பழகுவதில் முரண்பாடு கொள்வார்கள். குடும்பத்தினர் சாதாரணமாக எது பேசினாலும் அவற்றைத் தவறான கோணத்திலேயே சிந்திப்பார்கள். இந்த சிந்தனையினால் எந்த நன்மையும் விளையப் போவதில்லை. 

ஏன்  எப்பொழுதும் தன்னிரக்கத்தால் (Self sympathy) தங்களைத் தாங்களே வருத்திக் கொள்ள வேண்டும்? வயோதிகத்தில் வாடிப்போகும் பெரியவர்களே,  உங்கள் நிழலில் ஒதுங்கி குளுமை அடைந்த நபர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். நீங்கள் பார்த்து படிக்க வைத்து முன்னேறியவர்கள் எத்தனையோ பேர் இருப்பார்கள். உங்களது அயராத உழைப்பினால் உயர்ந்த இடத்திற்கு வந்த நிறுவனங்கள் இருக்கும். உங்கள் அனுபவத்தால் கூறிய ஆலோசனைகளால் சாதனை  புரிந்தவர்கள் இருப்பார்கள். மற்றவர்களைத் தவிர, உங்கள் குடும்பத்தில் நீங்கள் மிகமிக அன்பும், அக்கறையும் கொண்டு வளர்த்து விட்ட உங்கள் பிள்ளைகள் அயல்நாட்டிலும், உள்நாட்டிலும் வெற்றிக் கொடி பிடித்தவர்களாக இருப்பார்கள்.

நீங்கள் பார்த்து கணக்கு சொல்லிக் கொடுத்த பக்கத்து வீட்டுப் பையன் ஆடிட்டராக உருவாகி இருப்பான். நீங்கள் பார்த்து ஊர் மெச்சும் விதமாக உங்கள் இல்லத்து திருமணங்களை திறம்பட நடத்தி இருப்பீர்கள். பேரன், பேத்திகளுக்கு ஆதரவு கொடுத்து, அவர்களது திறமை இருக்கும் துறையில் அவர்களை ஊக்குவித்து, அந்தத் திறமை வளர்வதற்குரிய ஏற்பாடுகளை செய்துக் கொடுத்து அவர்களின் ஆற்றலை வெளிப்படுத்தும் வழிமுறைகளுக்கு ஒரு ஏணியாக இருந்திருப்பீர்கள்.

இப்படி எத்தனையோ வளமான நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் மூல காரணமாக இருந்திருப்பீர்கள். இதையெல்லாம் ஏன் மறந்து விடுகிறீர்கள்? பல பேரை வாழ வைத்ததை நினைத்து இன்புறாமல்... வயோதிகத்தை  மட்டுமே மனதில் கொண்டு வீணாக  ஏன் வருந்துகிறீர்கள்?  முதுமைப் பருவத்தை அடையும் முன் எத்தனையோ புதுமைகளையும்,  புரட்சிகளையும் செய்துள்ளீர்கள் என்பதை நெஞ்சத்தில் நிலை நிறுத்துங்கள்.

'என்னால் இயன்ற நன்மைகளை செய்துள்ளேன். என்னாலான சாதனைகளை புரிந்துள்ளேன். வாழ்க்கையில் நான் வெற்றி பெற்றுள்ளேன்' என்ற எண்ணங்களை மனதில் உலவ விடுங்கள். சுய தம்பட்டம் அடிப்பதுதான் தவறு. சுயமாக நாம் செய்த நல்ல காரியங்களைப் பற்றி நினைத்து பெருமிதம் அடைவதில் எந்த தவறும் இல்லை. முதுமை அடைந்து  விட்டதால் 'என்னால் எந்தப் பயனும் இல்லை' என்ற தாழ்வு உணர்ச்சிக்கு ஆளாகாதிர்கள். இந்த முதுமைப் பருவமே உங்கள் இளமை பருவத்தின் காலச் சுவடுகளைப் பதிக்கும் கௌரவப்பட்டம்.

முகத்திலும், உடலிலும் இயற்கை உண்டாக்கிய சுருக்கங்கள் ஒவ்வொன்றும் வாழ்வின் ஒவ்வொரு அனுபவங்கள்! அனுபவங்கள் இல்லாமல் அறிவுரை கூறும் தகுதி கிடையாது. தகுதியை அளிப்பது அனுபவங்கள் மட்டுமே.

 பிறந்த உடனேயே  அனுபவங்கள் கிடைத்து விடுமா? பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, ஒவ்வொரு பருவத்தையும் அடைந்து அனுபவித்துப் பார்த்தால்தான், வாழ்க்கை என்றால் என்ன? அந்த வாழ்க்கையில் மனிதர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறைகள் என்ன என்பது படிப்படியாக புரியும். வாழ்க்கை எனும் ஏணியில் ஒவ்வொரு படிக்கட்டிலும் ஏறிப் போவதற்கு கால அவகாசம் வேண்டும் அல்லவா? அந்தக் கால அவகாசம்தான் வயது.

எனவே வயது  கூடிவிட்டது, முதுமை எட்டிவிட்டது என்று சங்கடப்படாமல், 'அனுபவங்கள் கிடைத்துள்ளன.  அந்த அனுபவங்களால் அநேகம் பேருக்கு நன்மைகள் செய்துள்ளோம்' என்று சந்தோஷப்படுங்கள். சங்கடப்பட்டால், சங்கீதத்தில் ஸ்ருதி இறங்குவதைப் போல் சடுதியில் வாழ்க்கை இறங்கிவிடும். சந்தோஷப்பட்டால் சங்கீத ராகம், தேன் சிந்தும்.

உங்களால் நன்மை அடைந்தவர்களைப் பற்றி நினைத்துப் பார்த்து மகிழ்வது போல, நீங்கள் தீங்கிழைத்து அதனால் பாதிக்கப்பட்டவர்களைப் பற்றியும் நினையுங்கள். குறிப்பிட்ட காலத்தில் செய்யத் தவறிய வருந்துதலை இந்தக் கால கட்டத்திலாவது நினையுங்கள். வருந்துவது மட்டுமல்லாமல் உங்களால் பாதிப்பு அடைந்தவர்களைத் தேடிச் சென்று சந்தியுங்கள். உங்கள் வருத்தத்தை தெரிவியுங்கள். நீங்கள் செய்த தீங்கிற்கு ஒரு பரிகாரமாக அவரது தேவை என்னவென்று கேட்டு உதவி செய்யுங்கள்.

இதனால் இதயச்சிறையில் அடைபட்டுக் கிடக்கும் சுமையிலிருந்து சுகமான விடுதலை கிடைக்கும். மனம் மிகவும் லேஸாகி தன்னிச்சையாய் வானத்தில் பறக்கும் பறவை போல பறக்கும். வாலிபத்தில் இழைத்து விட்ட தீங்கினை வயோதி கத்திலாவது உணர்ந்து, வருந்துவது மிக நன்மைக்குரிய விஷயமாகும்.

 இதுநாள் வரை, அலுவல்கள், வீட்டு வேலைகள், வீட்டு விசேஷங்களுக்குரிய பணிகள், வியாபார சம்பந்தமான பயணம் போன்றவற்றில் ஈடுபட்டு உழைத்துக் கொண்டிருந்த நீங்கள் அவற்றிலிருந்து விடுபட்ட இந்த நிலையில் பழைய நண்பர்களை/தோழிகளை தேடிக் கண்டுபிடிக்கலாம். உடன் வேலை பார்த்து, ஊர் மாற்றம் (Transfer) கிடைத்து, பிரிந்து போனவர்கள் பற்றிய தகவல் அறிந்து அவர்களைப் போய் சந்திக்கலாம். எத்தனையோ உறவினர்கள் நம்மை அன்புடன்  அவர்களது இல்லத்திற்கு அழைத்தும் நம் இடைவிடாத பணிகள் காரணமாக போகமுடியாமல் ஆகி இருக்கலாம். அவர்களது இல்லத்திற்கு பரிசுப்பொருட்கள் வாங்கிக் கொண்டு அவர்களுடன் நிறைய பேசிவிட்டு வரலாம். 'இப்பொழுதாவது வந்தீர்களே' என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று உபசரிக்கும் பொழுது உங்கள் உள்ளம் நெகிழ்ச்சி அடையும்.


'துள்ளுவதோ இளமை; தேடுவதோ தனிமை' என்று பாடாவிட்டாலும் 'மனதை அள்ளுவதோ இளமை நினைவு, இன்று அது தருவதோ இனிமை' என்று பாட முடியும். உணர முடியும். 'நான், எனது, நான் இப்படித்தான்' என்று ஒதுங்கக்கூடாது. தனிமைப்படுத்திக் கொள்ளக் கூடாது. ஓர் ஓரமாய் உட்கார்ந்து  ஓராளாய் ஒதுங்கி இருந்து, முதுமை உணர்வை மிகைப்படுத்திக் கொள்வதை விட பலருடன் கூடி இருந்து, மனம் விட்டுப் பேசி மகிழ்ந்து கலகலப்பான சூழ்நிலையில் ஆழ்ந்திடும் போது வயது எங்கே ஞாபகம் வரும்? முதுமை எங்கே முகம் காட்டும்?! இளமை உணர்வு அல்லவா இருகரம் நீட்டும்?!

வயது கூடிவிட்டால் உடல் ஓய்ந்து விட்டது என்பது நமக்கு நாமே உருவாக்கிக் கொள்ளும் தவறான கருத்தாகும். சரீர உழைப்பு என்பது எப்போதும் இருக்க வேண்டும். இளமைக்காலம் போல் ஓடியாடி உழைக்கும் உழைப்பபைக் குறிப்பிடவில்லை. நம்மால் இயலக்கூடியது எதையாவது செய்து கொண்டே இருக்க வேண்டும்.

ஒரு நாள் இரவு முடிந்து மறுநாள் காலையில் பொழுது விடிந்துவிட்டால், அந்த விடிவைத் தரும் இயற்கைக்கு, முன்தினம் பற்றிய நினைவும் இல்லை. கவலையும் இல்லை. அந்த இயற்கை போல நாமும் முந்தின நாள் நடைபெற்ற தேவையில்லாத விஷயங்களைப் பற்றி சிந்தித்துக் கொண்டிருக்காமல் அன்றைய புதிய நாளின் நிகழ்ச்சிகளை மகிழ்ச்சியுடன் எதிர்கொள்ள நம்மை தயார் செய்துக் கொள்ள வேண்டும்.

‘Time is the best medicine’ என்று கூறப்படுவதுண்டு. காலம் செல்லச் செல்ல மனிதர்களின் மனதிலுள்ள காயம் ஆறுகிறது. துன்பத்தின் சுமை குறைகின்றது. அன்றைய பூதாகரமான பிரச்னையை இன்று நினைத்துப் பார்த்தால் வெகு சாதாரணமான ஒன்றாக தோன்றுகிறது. இது முதுமையின் மூலம் கிடைக்கும் நன்மை. அதாவது, காலம் என்பது நம் வயதை மட்டும் மாற்றுவது அல்ல. நம் மனதையும்தான் அது ஒரு மந்திரம் போல் மாற்றுகிறது. ஆதலால் காலம்  தன் காலடியை நம் மீது பதித்தால் நமக்கு நன்மைதானே தவிர எந்தவித தீமையும் அல்ல.

வயது ஏறுவதால் உலகம் பழமையாகவே இருக்கிறதா? அது புதிது புதிதாக பலவற்றைப் படைத்துக் கொண்டிருக்கிறது. எத்தனையோ மாற்றங்கள்! முன்னேற்றங்கள்! எத்தனையோ இறக்கங்கள், உயர்வுகள்! சரிவுகள்! அனைத்தையும் பார்க்கிறோம். அனுபவங்கள் பெறுகிறோம். நாம் சந்தோஷமாக வாழ்ந்தாலும் வயது கூடுவது நிற்கப் போவதில்லை. சோகமான வாழ்க்கை வாழ்ந்தாலும் வயது கூடுவது நிற்கப் போவதில்லை.

இளமைத் துடிப்பில் அதன் எக்காளத்தில் 'எனக்கு மிஞ்சியவன் யாருமில்லை'. 'நான்தான் பெரியவன்; நான்தான் சாதித்தவன்' என்ற சுயபிரதாப எண்ணங்கள் (Self superior thought) தோன்றுகின்றன. இதனால் அகங்காரமும் உருவாகிறது. இளமைச் செருக்கில் அகங்காரம் கொண்ட மனிதன், காலத்தின் போக்காலும், வயதின் காரணமாகவும் அடக்கமான மனிதனாய் உருமாறுகின்றான். இதற்காகத்தான் சான்றோர்கள் இளமை நிலையற்றது என்ற அறிவுரையை வலியுறுத்தி வருகின்றனர்.

'ஆடிய ஆட்டமென்ன?! தேடிய செல்வமென்ன?!

கூடு விட்டு ஆவி போனால் கூடவே வருவதென்ன?'

என்று பாடினார் கவியரசு கண்ணதாசன்.

எனவே இளமையோ, முதுமையோ எந்தப் பருவத்திலும், எந்தக் காலத்திலும் நாம் நல்லன மட்டுமே செய்ய வேண்டும்.

பெரிய பதவியில் இருந்து இளைப்பாறியவர்கள் சிலர் (Retired Persons) வயது கூடி விட்ட போதும் தங்கள் உயர் பதவி அளித்த ஆணவம், அகங்காரம், அலட்சியம் இவற்றை விடுவதில்லை. பதவியை விட்டு இவர்கள் விலகிய பின்னரும் கூட, அந்த பதவி கொடுத்த பதவிசை எக்காரணம் கொண்டும் விட்டுவிட மாட்டார்கள். 'நான் அதிகாரி, எல்லாம் என் கைக்குள்'  என்ற மமதை, வயது முதிர்ந்த பின்பும் மனதைவிட்டு அகலாது.

ஒரு பிரயாணத்தில் Retired Officer ஒருவரை சந்திக்க நேரிட்டது. அவர், தனக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருக்கும் பயணிக்கு போதுமான இடம் தராமல் பந்தாவாக தலையணை மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தார். உடன் பயணித்த வேறொரு பயணி, வேண்டுகோள் விடுத்தும் அந்த ஓய்வு பெற்ற அதிகாரி, சிறிதும் நகராமல் அப்படியே தலையணை மீது ஒரு தோரணையாக உட்கார்ந்திருந்தார். அவ்வளவு ஏன்? அந்த அதிகாரி, தன் மனைவியைக் கூட பொது இடத்தில் மரியாதையாக நடத்தவில்லை. ஒரு அடிமை போல அவரது மனைவியை நடத்தினார்.

இந்த முதுமையிலேயே இப்படி என்றால் அந்த அதிகாரி தன் இளமையில் எப்படி இருந்திருப்பார்? அவரது மனைவி எத்தனை பாடுபட்டிருப்பாள் அந்த மனிதரிடம்?... வயது... முதுமை... இரண்டும் நம்மை பதப்படுத்தும், பக்குவப்படுத்தும், என்பார்கள். ஆனால் அவரை எதுவும் மாற்றவில்லை.  சில நேரங்களில் சில மனிதர்கள்!

பெண்களைப் பொறுத்தவரை மாதவிலக்கு (Menopause) நின்றுவிடுவது முதுமையின் அடையாளமாகக் கருதப்படுகிறது. இது தவறு. அவரவர் உடல் ஆரோக்கியத்தின் தன்மைக்கு ஏற்ப இயற்கை நியதியின் விளைவுதான் மாதவிலக்கு நின்று விடுதல்.

பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு மனரீதியாக ஏற்படும் பாதிப்புகள் நிறைய. ஹார்மோன் மாற்றங்களின் விளைவால் ஏற்படும் பாதிப்புகள் பெண்களைப் படுத்தும் பாடு மிகக் கொடுமையானது. சிலருக்கு உதிரப்போக்கு மிக அதிகமாக இருப்பதால் அவதிப்படுவார்கள். சிலருக்கு மாதவிலக்கு நின்ற பிறகும் அது தொடர்பான உடல்வலி, குறுக்கு வலி, களைப்பு, டென்ஷன் இவை கட்டுக்கு அடங்காமல் இருக்கும்.

குடும்பத்தினர்கள் சற்று கோபமாக பேசினாலோ, பிடிக்காத விஷயத்தை செய்தாலோ எரிச்சல் வரும். இதை வெளிப்படுத்தும் பொழுது குடும்பப் பிரச்சனை பூதாகரமாகிறது. இதற்குக் காரணம், பெண்களின் இந்த பிரச்சனை பற்றி யாரும் தெரிந்து கொள்வது இல்லை. உடல் ரீதியாக ஏற்பட்டுள்ள மாற்றங்களினால்தான் எரிச்சல் படுகிறார்கள் என்று புரிந்து கொள்ளாமல் பிரச்சனை மேலும் பெரிதாகிறது. மாதவிலக்கு நின்று விட்ட பெண்மணிகளும் தங்கள் பாதிப்புகள் பற்றி யாரிடமும் வெளிப்படையாகப் பேசுவது இல்லை.

பொதுவாக சொல்லப்போனால் பெண்களின் இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் உடல் வேதனைகள், உளரீதியான மாற்றங்கள் இவை பற்றிய அறிவோ, விழிப்புணர்வோ நம்மிடையே இல்லை. ஐம்பது வயது வரை தன் குடும்பத்திற்காக வீட்டிலும், ஆபிஸிலும் உழைத்துக் கொண்டிருக்கும் அவள், இந்த (Menopause) காலகட்டத்தில் தன் மீது குடும்பத்தினர் மிகுந்த அன்பு செலுத்த வேண்டும், அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று  எதிர்பார்ப்பாள். தன் கணவனின் அருகாமையை மிகவும் நாடுவாள், கணவன் தன்னிடம் ஆறுதலாக பேச வேண்டும் என்று நினைப்பாள்.


கணவனுடன் தனித்திருக்க வேண்டும், என்று மனரீதியாகவும், தாம்பத்திய சுகம் பெற வேண்டும் என்று உடல் ரீதியாகவும் பெரிதும் விரும்புவாள். ஆனால் அதை வெளிப்படுத்தும் விதம் அறியாது வெட்கப்படுவாள். மாதவிலக்கு நின்றுவிட்டால் பெண் என்பவள் தாம்பத்திய வாழ்க்கைக்குத் தகுதி இல்லாதவள் என்ற தவறான மனப்பான்மை இருப்பதால் மிகவும் கஷ்டப்படுகிறாள் பெண். வெகு அபூர்வமாக இந்தக் காலகட்டத்தில் அவளையும், அவளது பிரச்சனைகளையும், புரிந்து கொண்ட கணவன், அவளுடன் அன்பாக பேசிக் கொண்டிருப்பதைப் பார்த்துவிட்டு 'இந்த வயசுல என்ன கொஞ்சல் வேண்டி இருக்கு? பொண்டாட்டியை தாங்கிக்கிட்டு இருக்கான்  பாரு' என்று விகற்பமாக பேசி, குத்திக்காட்டும் நபர்கள்தான் இங்கே அதிகம்.

அமெரிக்காவில் உள்ள இந்திய தமிழ் பெண்மணி எனக்கு பரிச்சயமான லேடி டாக்டர். அவரது பெயர் திருமதி. லதா வெங்கடேஷ்.  "பெண்களுக்கு மாதவிலக்கு நின்ற பிறகு தாம்பத்ய சுகம் நாடும் உணர்வு மிக அதிகம். இது பற்றிய அறியாமை இருப்பதால் பல பிரச்சனைகள் உருவாகின்றன" என்று இவர் கூறினார். இதற்காக இவர் தனது சொந்தப் பணத்தில் குறும்படம் ஒன்று தயாரித்துள்ளார். மற்ற நோய்களுக்கு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுப்பது போல இது குறித்த அறியாமை நீங்குவதற்கும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று அவர் கூறினார். மாதவிலக்கு நின்றுவிட்ட பிரச்சனைகளால் ஏற்படும் மன வேறுபாடுகளால் பாதிக்கப்பட்டு, கணவனாலும் பிள்ளைகளாலும் அலட்சியப்படுத்தப்படும் பெண்மணிகளுக்காக தன்னால் இயன்றதை செய்ய வேண்டும் என்று பொதுநல அக்கறையாக அவர் பேசியது கேட்டு அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை ஏற்பட்டது.

 பொதுவாகவே பெண்கள் ஒரு ஜூரம், தலைவலி, ஜலதோஷம் காரணமாக என்றோ ஒரு நாள் மிக அரிதாக படுத்துக் கொண்டால் கூட வீட்டில் உள்ளவர்கள் 'ஏன் படுத்தே இருக்க? எழுந்திருச்சு வேலையைப் பார்' என்பார்கள். சலித்துக் கொள்வார்கள். மாத விலக்கு நின்று விட்ட பெண் என்றால் கேட்க வேண்டுமா? அவளது தளர்ச்சியையும், அயர்ச்சியையும் பார்த்து அனுதாபப்பட்டு ஆவன செய்யாமல் 'இவள் இனி அவ்வளவுதான். எதற்குமே லாயக் இல்லாதவளாயிட்டா' என்று முடிவு கட்டி அந்தப் பெண்ணின் மனநிம்மதியை முறியடிப்பார்கள்.

பெண்களும் இது குறித்த ஆலோசனைகளை தகுந்த டாக்டரிடம் கேட்டு அறிந்து கொள்ளவேண்டும். முன்னெச்சரிக்கையாக இருந்து கொள்வதற்கு டாக்டர்கள் கூறும் ஆலோசனைகளைப் பின்பற்ற வேண்டும். விழிப்புணர்வுடன் அதற்குரிய வழிமுறை களைத் தெரிந்து கொள்ள வேண்டும். இதையெல்லாம் செய்து கொள்ளாமல் 'இந்த நிலையில் என்னை யாரும் கவனிப்பது இல்லை, நான் படும் பாடு யாருக்குத் தெரியும்' என்று சலித்துக் கொள்வதால் பலன் இல்லை.

 இன்னொரு விஷயம்.... மனம் விட்டு வெளிப்படையாக தன் பிரச்சனைகளைக் கூற வேண்டும். இருபது வருடத்திற்கு மேலாக கூடி வாழ்ந்த கணவனிடம் இது பற்றி  பேசுவதற்கு ஏன் வெட்கப்பட வேண்டும்? ஆறு மாதத்திற்கு ஒரு முறை வெளியூர் சென்று ஒரு வாரம் தங்கி விட்டு வரலாம். குடும்பக் கூட்டை விட்டு சற்று வெளியே சென்று இளைப்பாறி, கணவருடன் பழங்கதைகள் பேசி மகிழலாம். தினமும் வெளியே போக முடியாவிட்டால் வாரம் ஒரு முறை பீச், சினிமா என்று போய் வரலாம்.

உணவு முறைகளை சீரமைத்துக் கொள்வதும் அவசியம். நிறைய பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. நெல்லிக்காய் சாறு, எலுமிச்சை சாறு இவற்றுடன் தேன் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வரலாம்.  தினமும் காலையில், வெறும் வயிற்றில் மூன்று தேக்கரண்டி எள் சாப்பிட்டு வரலாம். எலும்பு தேய்மானத்தை தடுக்கும் விதமாக கால்ஷியம் நிறைந்த உணவுகளான பால், தயிர் இவற்றை தினமும் சேர்த்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் மிக முக்கியமாக, தினமும் நடைப்பயிற்சியை மேற்கொள்ள வேண்டும். உடல் பயிற்சியும் அவசியம்.

உடல்ரீதியான பிரச்சனைகளுக்கு டாக்டரின் ஆலோசனையைக் கேட்டு அதன்படி நடந்து கொள்வது மிகமிக முக்கியம். மனம் சார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு  குடும்பத்தினரிடம் வெளிப்படையாக தங்களது எண்ணங்களைப் பற்றி பேச வேண்டும். கர்ப்பிணி பெண்களுக்கு ஆலோசனை, இளம் தாய்களுக்கு ஆலோசனை, குழந்தை வளர்ப்பிற்கு ஆலோசனை என்று அங்கங்கே மையங்கள் இருப்பது போல பெண்களின் இந்த மாதவிலக்கு நின்று போகும் சமயம், நின்று விட்ட பிறகு உள்ள சமயம் (Post Menopausal Syndrome)  இவை குறித்தும் ஆலோசனைகள் வழங்கப்பட வேண்டும். அரசு கவனிக்கும் என்று நம்புகிறேன்.

கை, கால்கள், ஆரோக்கிய ரீதியாக திடமாக இருக்கும் வரை இயன்ற வேலைகளை, நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். ஒரு மிஷின் சதா சர்வமும் இடைவிடாமல் ஓடிக்கொண்டே இருந்தால் மிக விரைவில் தேய்ந்து விடும். அதே சமயம் அந்த மிஷின் ஓடாமலே இருந்தால் துரு பிடித்துப் போகும். அது போலத்தான் மனிதர்களும். இயன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தால் உடல்நலம் நன்றாக இருக்கும். உடல்நிலை அறிந்து அதற்கேற்ற பணிகளை மட்டுமே செய்வதும் கூடாது. சக்திக்கு மீறிய வேலைகளை இழுத்துப் போட்டு செய்வது கூடாது.

என் தாயின் எழுபத்தி ஏழாவது வயதிலும் தன் துணிகளை தானே துவைப்பது, சமைப்பது போன்ற வேலைகளை அவர்களே செய்து வருகிறார்கள். கைத்தையல் முறையினால் அழகிய எம்பிராய்டரி வேலைகள் செய்து வருகிறார்கள்.  தன் ஆரோக்கியத்தை பாதுகாத்துக்கொண்டு, முடிந்த வேலைகள் செய்து கொண்டு, மனச்சோர்வு (Stress & Depression) இல்லாமல் இருக்கிறார்கள். பிறருக்கு உதவியாய் இருக்கிறார்கள். ஆகவே அவர்களது மனநிலையும் மகிழ்ச்சியாக இருக்கிறது. உடல் நலமும் நன்றாக இருக்கிறது.

எனது தாய்மாமாவின் வயது எழுபத்தி நான்கு. இன்னமும் அவரே எங்கு சென்றாலும் காரை ஓட்டிச் செல்வார். சென்னை நகரின் எப்படிப்பட்ட போக்குவரத்து நெரிசலிலும் கொஞ்சம் கூட டென்ஷன் ஆகாமல் பொறுமையாகவும், திறமையாகவும் காரை ஓட்டுவதில் வல்லவர். சென்னையில் மட்டுமல்ல, அமெரிக்காவில் இருக்கும் தன் மகளது இல்லத்திற்கு போய் ஆறு மாதங்கள் தங்கும் பொழுது தன் பேத்தியைக் காரில் கொண்டு போய் பள்ளியில் விடுவது உட்பட, மகளின் குடும்பத்திற்கு ஏகமாய் சேவைகள் செய்து வருகிறார்.

 இன்னொரு உறவினர், பணிக்கால ஓய்வு பெற்ற பிறகு, தனியார் நடத்தும் மருத்துவமனையின் நிர்வாகத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது திறமையான நிர்வாகம், அம்மருத்துவ மனையின் உரிமையாளருக்கு பெருமளவு உதவியாக இருக்கிறது என்பதை சொல்லத் தேவை இல்லை.


மெல்லிசை மன்னர் திரு. M.S.விஸ்வநாதன் அவர்கள் எண்பத்தி மூன்று வயதிலும் இன்னமும் இன்முகத்துடன் இயங்கி வருகிறார். இவரால் சும்மா இருப்பது என்பதே இயலாத விஷயம். இன்றளவும் வெளிநாடு, உள்ளூர், வெளியூர் கச்சேரிகள், படத்திற்கு இசை யமைப்பு பணிகள், விழாக்களில் தலைமை தாங்குவது, படங்களில் நடிப்பது போன்ற பல செயல்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்து வரும் உதாரண மனிதர்! உயர்ந்த மனிதர் அவர்.

நம்மைச் சுற்றியுள்ள பல பெரியவர்களிடமிருந்து நிறைய வாழ்க்கைப் பாடங்கள் கிடைக்கின்றன. அந்தப் படிப்பினைகளைப் பின்பற்றி வந்தால் முதுமையிலும் இளமை உணர்வு துள்ளி விளையாடும். வயது ஏற ஏறத்தான் அனுபவங்கள் அதிகமாக கிடைக்கின்றன.  அவைகள் நம்மைப் பக்குவப் படுத்துகின்றன. அந்த அனுபவங்கள் நமக்குத் தந்த அறிவுரைகளால்தான் நம் குடும்ப அங்கத்தினர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஆகி யோருக்கு நல்ல அறிவுரைகளை வழங்கும் வாய்ப்பும், தகுதியும், முதுமையில் கிடைக்கின்றது.

'பெருசு...  அறிவுரை சொல்லி அறுக்க ஆரம்பிச்சுடுச்சு' இளைய தலைமுறை இவ்விதம் கூறும் பொழுது சங்கடப்படக்கூடாது. சந்தோஷப்பட வேண்டும். 'பெருசு' என்பது பெருமைக்குரிய சொல் என்று எடுத்துக் கொள்ள வேண்டும். அறிவுரை கூறும் பொழுது 'அறுவை' என்றவர்கள் 'பெருசு' கூறியதை 'அருமை' என்று உணரும் சந்தர்ப்பங்கள் விரைவில் உருவாகும். அப்போது அவர்கள் பெரியவர்களின் அறிவுரையை நினைத்துப் பார்ப்பது மட்டுமல்ல. கடைப்பிடித்து, அதன் பலனை உணர்ந்தபின் மானசீகமாக அவர்களுக்கு நன்றி கூறுவார்கள்.

அதே சமயம், சதாசர்வமும் 'நைன்ட்டீன் ட்டுவன்ட்டி ஸிக்ஸ்ல (1926) எங்க தாத்தா, எங்க அப்பா..... ' இப்படி ஆரம்பித்து மொக்கை போடவும் கூடாது. ஒரே விஷயத்தை பலரிடமும் திரும்ப திரும்ப கூறுவதால் எந்தப் பயனும் இல்லை. 'அந்தக் காலத்துல நாங்கள்ல்லாம்.......' என்று ஆரம்பித்து ரம்பம் போடக்கூடாது. நம் முன்னோர்கள் காலத்தில் அவர்கள் வாழ்ந்த விதமாகவா நாம் வாழ்கிறோம்? நடை, உடை, பாவனை, பழக்க, வழக்கங்கள் எல்லாமே மாறிவிடவில்லையா? நாம் மாறவில்லையா? எனவே பழங்கால கதை பேசி இளைஞர்களை மட்டம் தட்டக்கூடாது. நீங்களும் இளைஞர்தான்/இளம் பெண்கள்தான் என்று உணரும் விதமாக உங்களை மாற்றிக் கொள்ளுங்கள். தற்கால அறிவை விருத்தி செய்து கொள்ளுங்கள். இவ்விதம் செய்து கொண்டால் இளசுகள் மத்தியில் பெரிசுகள்தான் வெற்றி பெறுவார்கள்.

காற்று அடிக்கும் திசையை நோக்கி ஓடிச்செல்லும் ஆற்றுத் தண்ணிர் போல காலத்தின் போக்கிற்கு ஏற்றவாறு நம் கருத்துக்களை மாற்றிக் கொள்ளலாம். புதுமையை ஏற்றுக் கொள்ளலாம். வீம்பு, பிடிவாதம் இவற்றை விட்டுவிட்டு இறங்கி வரலாம். இளைய தலைமுறையினரிடம் காணப்படும் பேரறிவைப் பற்றி புரிந்து கொள்ளலாம்.

வயது ஒரு வரம்பு அல்ல. முதுமையை ஒரு வரமாகக் கருத வேண்டும். மனதில் இளமை உணர்வுகளை உருவாக்கிக்கொண்டு அவற்றின் மூலம் முதுமையை வெல்லலாம். ஆரோக்கியத்தை அக்கறையோடு கவனித்துக் கொண்டால் ஆயுள் முழுவதும் மனதில் இளமை உணர்வுகள் ஊஞ்சலாடும். ஆரோக்கியத்தைக் கடைப்பிடிக்க, கட்டுப்பாடான உணவுகள் தேவை. இனிப்பு வகைகள், எண்ணெய் பலகாரங்கள், மஸாலா சேர்த்து சமைத்த உணவு வகைககள் இவற்றைக் கூடிய வரை தவிர்த்து, சரிவிகித உணவு முறையை பின்பற்ற வேண்டியது அவசியம்.

தள்ளாத வயது என்றாலும் எதையுமே தள்ளாத விதத்தில் நாவிற்குக் கட்டுப்பாடு விதிக்காமல் கண்ணால் கண்டதை எல்லாம் அள்ளி உண்டால், முதுமை, மேலும் முதுமை அடையுமே தவிர, இளமை உணர்வுடன் முதுமையைக் கொண்டாட முடியாது. திண்டாட வேண்டியதிருக்கும்.

இனிப்பின் மீது ஆசையா? குட்டி ஜிலேபியில் ஒன்றே ஒன்று சாப்பிடலாம், லட்டு என்றால் பாதி சாப்பிடலாம். மிதமான அளவில் நாம் விரும்பும் அனைத்தையும் சாப்பிட்டுக் கொள்ளலாம். சர்க்கரை, ரத்த அழுத்தம் மேலும் பல பிரச்சனைகள் உள்ளவர்கள் டாக்டரின் ஆலோசனை கேட்டு, அவர் கூறிய உணவு வகைகளை மட்டும் சாப்பிட்டு வர வேண்டும்.

பெரும்பாலோர், குறைந்த பட்சம் நாற்பது வயது வரை தங்கள் விரும்பிய உணவு வகைகளை வெளுத்து வாங்கி இருப்பார்கள். 'நாற்பது வயது வரை நாக்குக்கு அடிமையாகி நா ருசிக்க உண்டு அனுபவித்து விட்டோம், இனி கட்டுப்பாடோடு இருப்போம்' என்ற உறுதியை மனதில் மேற்கொண்டால் உடல் நலம் நம்மை விட்டு பிரியாது.

உடல் நலம்தான் முதுமையின் சுகமான வாழ்விற்கு அடிப்படை. உடல் பயிற்சியை தவறாமல் செய்து வந்தால் ரத்த ஓட்டம் சீராகும். எனவே சுறுசுறுப்பாக இயங்கலாம். நம்மால் இயன்ற வரை நமது உடல் நலத்தைப் பேணிக் காத்துக் கொண்டால் நம் குடும்பத்தினர்க்கு சிரமம் கொடுக்காமல் சிறப்பான, சீரிய வாழ்வை வாழலாம்.

நமது பாதுகாப்பு கவசங்களை மீறி ஏற்படும் உடல் நலக்குறைவுகளுக்கு நாம் பொறுப்பு அல்ல. அதுவரை நம் உடல்நலன் மீது கவனம் கொள்ளலாமே.

'ஐம்பதிலும் ஆசை வரும்' என்று  கவிஞர் கண்ணதாசன் பாடினார். அறுபதிலும், இருபதின் இளமை உணர்வுகளை உருவாக்கிக்கொள்ள ஏராளமான வழிகள் இருக்கின்றன. உணர்வுகள் என்பதற்கும், உணர்ச்சிகள் என்பதற்கும் வேறு பாடுகள் உள்ளன. உணர்வுகள் என்பது மனம் சார்ந்தது, உணர்ச்சிகள் என்பது உடல் சார்ந்தது.

மனம் சார்ந்த உணர்வுகளில் ஐக்கியமாகி, முதுமையிலும் சங்கடங்கள் இல்லாமல், சந்தோஷமாக வாழலாம். 'வயசானவரா?' என்று யாராவது குறிப்பிட்டால் அதிர்ச்சி அடையாதீர்கள். பெருமிதமாக நீங்கள் கேளுங்கள் ‘Yes, may I help you? ' என்று.

கட்டுப்பாட்டுடன் கூடிய உடல் நலம், கம்பீரமான நடையைத் தரும். மிடுக்கான தோற்றத்தைத் தரும். வயது பற்றிய எண்ணமே இன்றி, மனம் முழுக்க இளமை உணர்வுகள் எனும் வண்ணத்துப் பூச்சிகள் சிறகடித்துப்பறக்க   என்றும் இளமையுடன், முதுமையை வரவேற்போம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.