Logo

மனசு ஒரு தினுசு

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 8582
rasikkathane azhagu-manasu-oru-thinusu

ம் உடலின் முக்கியமான அங்கம் இதயம். மனது என்பது இதயம் என்கிற உடல் அங்கத்திற்கு அப்பாற்பட்டு, நம்முள் ஐக்கியமாகிப் போன ஒன்று. நினைவுகளின் சுரங்கம் மனது.

சாதாரணமாக நாம் பேசும் பொழுது மனசு என்று தான் குறிப்பிடுகிறோம். இதயத்தை ஸ்கேன் செய்து பார்த்தால் அதிலுள்ள அனைத்தும் ஃபிலிமில் தெரிந்து விடும். ஆனால் இந்த மனசு இருக்கே? இது என்ன நினைக்கிறது? யாரைப்பற்றி நினைக்கிறது என்பதை எந்த ஸ்கேன் சாதனம் கொண்டும் அறிய முடியாது.

மனம் ஒரு குரங்கு என்பார்கள். அது குரங்கோ இல்லையோ மர்மங்கள் நிறைந்த குகை!

ஒரு பெரியவரைப் பார்க்கிறோம். அவர் மரியாதைக்குரிய தோற்றத்தோடு காணப்பட்டார் எனில் 'வணக்கத்துக்குரிய மனிதராக இருக்கிறாரே' என்று நினைப்போம். அந்த நினைப்பின் பிரதிபலிப்பாய் ஒரு புன்னகையை சிந்துவோம்.

அதே வயதில் கரடு முரடான தேற்றத்தோடு, ஒழுங்கீனமான உடை அணிந்துக் கொண்டு, வாயில் வெற்றிலையைக் குதப்பிக் கொண்டு அநாகரீகமான தோற்றத்தோடு  காணப்பட்டால் அதன் பிரதிபலிப்பான வெறுப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் மனதிற்குள் மறைத்துக் கொள்வோம்.

"என்ன? இவ்வளவு லேட்டா எழுந்திருச்சு வர்ற? உன் பிறந்த வீட்ல இப்பிடித்தான் வளர்த்தாங்களா உன்னை..." என்று மாமியார் கேட்கும் பொழுது மனதிற்குள் வசைமொழி ஓடும்.

'உங்க மகள் காலையில பத்து மணி வரைக்கும் தூங்கிட்டு பல் கூட விளக்காம நேரா காப்பி குடிக்க சமையல்கட்டுக்கு வர்றாளே... நீங்க பொண்னை வளர்க்கிற லட்சணம் தெரியாதாக்கும்' என்று மருமகளின் மனசு பேசும்.

இதை அறியாத மாமியார் மேலும் தன் வசவுகளைத் தொடர்வார்.

"அண்ணி..... காப்பி போட்டுக் குடுங்க" என்று பத்து மணி வரை தூங்கிய நாத்தனார் வந்து கேட்கும் பொழுது மனசு எரியும். ஆனால் கைகள் காப்பி போட இயங்கும்.

'உங்க அம்மா காலங்கார்த்தால என்னை திட்டிட்டாங்க. உனக்கு நான் காப்பி போட்டுத் தரணுமாக்கும்' என்ற மனதின் குரல் வாய்மொழியாக வெளிவராது. அடங்காத கோபத்தையும் அடக்கி வாசிக்க வைப்பது மனம். சின்னதாய் எழும் சினத்தைக் கூட மிகப் பெரிதாய் வெளிப்படுத்த வைப்பதும் அதே மனம் தான்.

சில நேரம் யார் மீதாவது கோபம் வந்தால், "நீ என்ன நினைச்சுக்கிட்டிருக்க உன் மனசில" என்று கேட்பது வழக்கம்.

"அவன் மனசுல, அவன் என்னமோ பெரிய இவன்னு நினைப்பு" என்பதும் சகஜமான பேச்சு.

திருமணத்திற்கு சம்மதிக்காமல் தாமதப்படுத்திக் கொண் டிருக்கும் மகனிடம் அப்பாவோ, அம்மாவோ, "நீ யாரையாவது மனசில நினைச்சுக்கிட்டிருந்தா சொல்லுடா"  என்று கேட்பதுண்டு.

"அவன் மனசுக்குள்ள ஒண்ணு வச்சுக்கிட்டு வெளியில வேற ஒண்ணு பேசுவான். அவனைப் பத்தி எனக்கு நல்லா தெரியும்" என்று பேசுவார்கள்.

"பெண்களோட மனசு ரொம்ப ஆழமானது. அதை யாராலையும் புரிஞ்சுக்க முடியாது" என்பார்கள். பெண்களென்ன..... ஆண்களென்ன.... யாருடைய மனதையும் யாராலும் புரிந்து கொள்ளவே முடியாது.

"என்னோட மனசுல நான் ஒண்ணு நினைச்சிருக்கேன். அதை நீ என்னன்னு கண்டுபிடி பார்க்கலாம்" இது ஒரு வேடிக்கை விளையாட்டு.

"அவள் மனம் போனபடி பேசித்தீர்த்துட்டாள்ப்பா."

"அவனுக்கென்ன, அவன் மனம் போன போக்குல போவான்."

"அவ தன்னோட மனசுல ஒண்ணை நினைசுட்டாள்ன்னா...... அதை செஞ்சுட்டுதான் மறு வேலை பார்ப்பா....."

"மனசுல பெரிய மகாராணின்னு நினைப்பு...."

"மனசுல பெரிய மந்திரின்னு நினைப்பு"

"மனசே சரி இல்லை...."

"மனசு கஷ்டமா இருக்கு."

"தீடீர்னு என்னவோ தெரியலை.... மனசு மாறிட்டான்."

"அவன் மனசுல அவனுக்கு பெரிய பிஸ்தான்னு நினைப்பு."

"என் மனம் திறந்து சொல்றேன்."

" உன் மனசும் என் மனசும் ஒரே மாதிரியா நினைக்குது பார்த்தியா? "

"யார் மனசுல யாரோ? யாருக்கு தெரியும்?"

"உன் மனசுல எது சரின்னு படுதோ அதைச் செய்."

"மனசார சொல்றேன், மனசார வாழ்த்தறேன்."

"மனசெல்லாம் மத்தாப்பூ."

"மனசெல்லாம் மந்த்ரா."

"இங்கிருந்து கிளம்பறதுக்கே எனக்கு மனசு இல்ல."

"என் மனசு படாதபாடு பட்டுடுச்சு."

"என் மனசுல நான் அவனை கரம் வச்சுக்கிட்டே இருக்கேன்."

"நான் ராமனைப் போன்றவன். மனசால கூட என் மனைவியைத் தவிர வேறு ஒருத்தியை தொட்டதில்லை / தொடமாட்டேன்" (ஆண்களில் யாருமே ராமன் இல்லை என்பது ஊரும், உலகமும் அறிந்த விஷயம். ஆனால் மேற்கூறிய வசனம் பேசுவது என்றென்றும் உள்ள வழக்கம்.)

"மனசை அப்பிடியே அள்ளுதுப்பா."

" என் மனசு ஏங்குற ஏக்கம் உனக்கென்ன தெரியும்?"

"என்ன? மனசுக்குள்ளயே என்னைத் திட்டிக்கிட்டிருக்கியா?"

"உங்க மனசுக்குப் பிடிக்காததை நான் என்னிக்காவது செஞ்சிருக்கேனா?"

"என் மனசுல உன்னைப்பத்தி ரொம்ப உயர்வா நினைச்சுகிட்டிருந்தேன்."

"என் மனசுல உனக்காக ஒரு கோயில் கட்டியிருக்கேன்."

"உன் மனசுல கொஞ்சமாவது ஈவு... இரக்கம் இருக்கா? "

"என் மனசுல அவர் இல்லை... "

"என் மனசுல அவள் இல்லை..."

"என் மனசுல அவளைத் தவிர வேற யாருக்கும் இடமில்லை"

"என் மனசுல அவருக்கு மட்டும் தான் இடம்"

"வேறு யாரையும் என் மனசால கூட நினைச்சுப் பார்க்க முடியாது"

''என் மனசு உடைஞ்சுபோச்சு."

"கல்யாணமே வேண்டாம்னு  சொல்லிக்கிட்டிருந்த என் மகன் அந்தப் பெண்ணைப் பார்த்ததும் மனசு மாறி, கல்யாணத்துக்கு சம்மதிச்சுட்டான்."

ஆகா... அடடா... ஐயகோ!... தினுசு தினுசாக இந்த மனசு விளையாடும் வார்த்தை விளையாட்டு இருக்கிறதே?! வாழ்க்கை முழுசும் தொடரும் விளையாட்டுத்தான்.

சில சமயம் மனசு நினைப்பதை உதடுகள் பேசாது. உதடுகள் எதையோ பேசிக் கொண்டிருக்க, மனம் அவற்றிற்கு சம்பந்தமில்லாமல் அதன் போக்கில் எதையோ நினைத்துக்  கொண்டிருக்கும். சில நேரங்களில் நாம் பேசிக் கொண்டிருக்கும் நபர், நாம் பேசுவதைக் கேட்பது போன்ற பாவனையில் இருப்பார். ஆனால் அவரது மனம் வேறு எதையோ சிந்தித்துக் கொண்டிருக்கும். மனசு ஒரு தினுசு. ஒரு சமயம் நல்லதை நினைக்கும். பிறிதொரு சமயம் நல்லன அல்லாததை நினைக்கும்.

எழுத்தாளர்கள், கவிஞர்கள், திரைப்பட இயக்குனர்கள் போன்ற கற்பனை வளம் மிக்கவர்களின் மனதில் அவர்களது கதைக்கேற்ற சம்பவங்கள், காட்சிகள், வசனங்கள் இவை பற்றிய எண்ணங்கள் ஓடிக்கொண்டே இருக்கும். மனதில் தோன்றியவற்றை உடனே எழுத்து வடிவில் உருவாக்கிக் கொள்ள முனைவார்கள்.


'என்னோட கதாபத்திரம் இப்படித்தான் இருக்க வேண்டும். என் கற்பனையில் நான் வடித்து உருவகப்படுத்தியுள்ள கதாபாத் திரத்தின் உருவம் இப்படித்தான் இருக்க வேண்டும், கண்கள் இப்படி இருக்க வேண்டும், உயரம் இவ்வளவு இருக்க வேண்டும்' என்று திரைப்பட இயக்குனர்கள் அவர்களது  மனதில் கற்பனை செய்து வைத்துள்ள உருவத்திற்குரிய கதாநாயகியையோ, கதாநாயகனையோ தேடி அலைவார்கள். 'என் மனசுல நான் நினைச்ச மாதிரி கதாநாயகி கிடைச்சுட்டா' என்று கூறி மகிழ்ச்சி அடைவார்கள்.

எழுத்தாளர்கள் கதை எழுதும் பொழுது அவர்கள் உருவாக்கிய கதாபாத்திரங்களை எங்கே.... எப்படி.... சந்திக்க வைப்பது என்று மனதிற்குள் யோசித்து, அதன் பின்னரே எழுதுவார்கள். கதையை நகர்த்துவதற்குத் தேவையான சம்பவங்களைப் பற்றிய சிந்தனையிலும் கதாபாத்திரங்கள் பேச வேண்டிய வசனங்கள் பற்றிய சிந்தனையிலும் அவர்களது மனம் மூழ்கி இருக்கும்.

இதயத்திற்கு வடிவம் உண்டு. மனதிற்கு வடிவம் கிடையாது. உருவமில்லாதது மனது. உருவம் இல்லாத இந்த மனது, உயிரோடும், உருவத்தோடும் உலவிக் கொண்டிருக்கும் மனிதர்களை என்னமாய் படுத்துகிறது! சந்தோஷம், மிதமிஞ்சிய சந்தோஷம், குதூகலம், கொண்டாட்டம், குஷி, பயம் போன்ற வெவ்வேறு அளவுகளிலான மகிழ்ச்சியையும் சோகம், துக்கம், துயரம் போன்ற வெவ்வேறு அளவுகளிலான துன்பத்தையும்  உணர வைப்பது இந்த மனதுதான்.

நம் மீது அன்பு செலுத்துபவரின் அன்பின் அளவை கண்களால் பார்த்து அறிய முடியாது. மனதால் உணர்ந்து அறிய முடியும். மனம் என்பது சிந்தனைகளின் சிறை. இதற்கு நாம் முயன்றால்தான் விடுதலை கொடுக்க முடியும். அமைதியானது மனம். ஆனால் நமக்கு நடைபெறும் நிகழ்வுகளைப் பொறுத்து சில நேரங்களில் இது புயலாகும்.

'ஒருவரை வெளிப்புறம் பார்க்கும் பொழுது, அவர் தெளிவானவராக, சராசரி மனிதராக/மனுஷியாக தெரியும். ஆனால் அவரது மனதிற்குள்?! ஏகப்பட்ட ஆசைகள், வெறுப்புகள், அன்பு, வஞ்சம், பொறாமை, குழப்பம், சூது, வாது, பழிவாங்கும் கெட்ட எண்ணம், வாழ்த்தும் நல்ல எண்ணம், தன்னம்பிக்கை, இயலாமை, அடக்கம், கர்வம், குற்றமனப்பான்மை, போன்ற பல்வேறு எண்ணங்கள் அடைக்கலமாகி இருக்கும்! மனம் என்பது மூளையின் தூண்டுதலால் இயங்குவது; மனநலம் என்பது மனிதர்க்கு மிக முக்கியமான ஒன்றாகும். உடல் பலம் இல்லாதவன் கூட சராசரி வாழ்வு வாழலாம். ஆனால் மனநலம் குன்றியவர்களால் இயல்பான வாழ்க்கை வாழ முடியாது. நினைவாற்றலுக்கு மனபலம் மிக முக்கியம்.

இதைத்தவிர 'ஆழ்மனம்' என்ற ஒன்றை மனம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் மனநல ஆலோசகர் அடிக்கடி குறிப்பிடுவார்கள்.

ஒரு மாணவி, தலைமை ஆசிரியரை சந்திக்கும் பொழுது அவளது மனதிற்குள் பயம் என்ற உணர்வு எழுகிறது. அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு தன் மேலதிகாரியை சந்திக்கும் பொழுது மனதிற்குள் பயம் உண்டாகிறது.

'கத்தி முனையில் ரத்தம்' போன்ற பயங்கரக் காட்சிகள் உள்ள திரைப்படத்தைப் பார்க்கும் பொழுது பயம். மர்ம நாவல்களைப் படிக்கும் பொழுது ஏற்படும் பயம்! இத்தகைய பய உணர்வைத் தூண்டிவிடும் தன்மையைக் கொண்டது மனம்.

அழகான பெண்ணை ஒரு ஆடவன் பார்க்கும் பொழுது அவளை மீண்டும் மீண்டும் பார்த்து ரகஸியமாய் ரஸிக்கத் தூண்டுவது மனம். அவன் ரஸிப்பது, அவனுடைய மனதிற்கு மட்டுமே தெரியும் விஷயம்.

'நெஞ்சுக்குள்ளே இன்னாருன்னு சொன்னால் தெரியுமா - அது

 கொஞ்சி கொஞ்சி பேசறது கண்ணில் தெரியுமா?'

காதலுக்குட்பட்டவர்கள் பாடும் இந்த பாடல் வரிகள்தான் எத்தனை அழகாக மனம் சம்பந்தப்பட்ட காதலை சொல்லாமல் சொல்கிறது?!

காதல் வயப்பட்ட பெண், "ஆடாத மனமும் ஆடுதே... ஆனந்த கீதம் பாடுதே... வாடாத காதல் இன்பமெல்லாம் வா... வா... நாம் காணலாம்..." என்று தன் மனம் அனுபவிக்கும் ஆனந்தத்தை வார்த்தைகளால் வரித்து பாடி மகிழ்கிறாள். இதுவும் கவிஞரின் திரைப்படப்பாடல்தான்.

நிலவு, கண்கள் போன்ற வார்த்தைகளை கவிஞர்கள் தங்கள் பாடல்களில் நிறைய பயன்படுத்துவதுண்டு. அவற்றின் வரிசையில் மனம், இதயம், நெஞ்சம் ஆகிய வார்த்தைகளும் அணிவகுத்து நிற்கின்றன.

'உன் மனசில நான் மட்டுமே இருக்கணும். என் மனசில நீ மட்டும்தான் இருக்க' என்று காதலன், காதலியிடம் அள்ளித் தெளிக்கும் அண்டப்புளுகான வசனம். இதே வசனத்தை அவன் எத்தனையோ பெண்களிடம் கூறி இருப்பான். கூறுவான். அனைத்து காதலர்களும் இவ்விதம் அல்ல. ஆண்களில் அநேகர் இப்படித்தான்.

கோவிலில், தெய்வ சந்நிதியில் கண்களை மூடி சாமியை வணங்கிக் கொண்டு இருக்கும் பொழுது கூட, 'இன்னிக்கு அவள் இன்னும் வரலியே... தினமும் இந்த நேரத்துக்கு கரெக்ட்டா வந்துருவாளே...' என்று தினமும் கோவிலுக்கு வரும் பெண்களில் ஒருத்தியை 'கரெக்ட்' பண்ணுவதற்காக அவனது மனம் மேற்படி நினைக்கும். அந்த ஆசாமி, சாமி கும்பிடவா வருகிறான்?! அழகான பெண்களின் மனதை அபகரிக்க அல்லவா வருகிறான்?

இது புரியாத பேதைப் பெண்கள், நல்ல காதலனை / கணவனை கொடு தெய்வமே என்று  தாங்கள் 'மன'தார வேண்டிக் கொண்ட பிரார்த்தனையை கோவிலில் உள்ள தெய்வம் செவி சாய்த்து கேட்டு, அந்த வாலிபனை தனக்கு காட்டியதாக மனதிற்குள் கற்பனை செய்து கொள்வார்கள். தாங்கள்  வேண்டிக் கொண்ட பிரார்த்தனை நிறைவேறி விட்டதாக நம்பி அவர்களது மனது துள்ளாட்டம் போடும்.

இது போன்ற பல கற்பனைகளையும், எதிர்பார்ப்புகளையும் தோற்றுவிப்பது நம் மனசு. நமக்கு நடக்கும் நல்லதுக்கும் சரி, கெட்டதுக்கும் சரி, அவற்றின் வெளிப்பாடுகளை உணர வைப்பது மனம். நல்ல விஷயத்திற்கு ஆனந்தத் தாண்டவம் ஆடும் அந்த மனம், கெட்ட விஷயத்திற்கு கோர தாண்டவம் ஆடும்.

சந்தோஷமான சூழ்நிலைகளில் 'என் மனசு குதியாட்டம் போட்டுச்சு' என்று சொல்லி குதூகலிக்கிறோம். இயக்குநர் சிகரம் திரு. கே. பாலசந்தர் அவர்களின் சில படங்களில் மனம் மற்றும் மனசாட்சி பேசும் காட்சிகள் இடம் பெற்றிருக்கும். அவற்றைப் பார்ப்பதற்கு  மிக ஆர்வமாக இருக்கும். இக்காட்சியை 'மைன்ட்வாய்ஸ்' (Mind Voice) என்பார்கள்.

உதடுகள் வேறு பேசினாலும் உள் மனசு அதற்கு மாறாக எதையோ பேசிக் கொண்டிருக்கும். இந்த அனுபவம் இல்லாத மனிதர்களே இருக்க முடியாது. ஏதாவது ஒரு சூழ்நிலையில் நம் மனதில் நினைப்பதை வாய் விட்டு சொல்ல முடியாமல் தவிப்போம்.

'என் மனசு சுத்தமா இருக்கு. மழை பெஞ்சு நனைச்ச பூமி மாதிரி அமைதியா இருக்கு.' இப்படியெல்லாம் பேசுவது நம் வழக்கம்.


'நான் மனசு வச்சா அதை சாதிப்பேன், இதை சாதிப்பேன்' என்று பேசுவோம்.

'மனம்  ஒரு குரங்கு -மனித

மனம் ஒரு குரங்கு அதை

தாவ விட்டால், தப்பி ஓடவிட்டால் நம்

பாதையை மாற்றிவிடும், அது பாவத்தில் ஏற்றிவிடும்'

தத்துவார்த்தமான இந்த பாடல் வரிகள் எத்தனை எளிமையாக மனதின் இயல்பை வெளிப்படுத்துகிறது?!

'மனிதன் நினைத்து விட்டான் வாழ்வு நிலைக்கும் என்று....

மனது நினைக்கிறது பாவம் மனிதன் என்று....'

கவியரசு பாடியது, பாடல் வரிகள் மட்டுமல்ல... வாழ்க்கையின் தேடல்கள் வெளிப்படுத்தும் தத்துவங்கள்! அனுபவங்கள் ஏற்படுத்தும் பக்குவங்கள்.

இரு மனம் ஒன்றுபட்டால் திருமணம்! இரண்டு மனங்கள் ஒன்று பட்டு இணைவதால் நிகழும் திருமண வாழ்க்கையில் சந்தோஷம் எனும் நறுமணம் வீசும். ஒன்று படாத உள்ளங்கள், ஒரே இல்லத்தில் சேர்ந்து வாழ்ந்தாலும் அந்த இல்லத்தில் இன்பம் என்பதே இல்லாமல் போகும். அந்த இல்லறம், நல்லறமாக இருக்காது.

சந்தோஷமாக இருக்கும் பொழுது அதன் பிரதிபலிப்பு மனதிற்குள் ஊஞ்சலாடும்.  சந்தோஷம் இல்லாத நிலையில் அதன் விளைவாய் மனம் போராடும். 'மனசுல இருக்கிறதை மறைக்காம சொல்லு' என்று நாம் சில சமயம் கேட்பதுண்டு. மனது ஒரு ரகஸ்ய சுரங்கம். 'நாம் வெளிப்படுத்தக் கூடாது' என்று தீர்மானித்திருக்கும் விஷயங்களை மிக சாமார்த்தியமாக மறைத்து வைத்துக் கொள்ளும் பாதுகாப்புப் பெட்டகம் மனசு.

'திடீர்னு மனசு மாறிட்டான்ப்பா' என்கிறோம். வினாடி நேரத்திற்குள் நம் அறிவு கேட்கும் வினாக்களுக்கு விடை அளிப்பது மனது. 'இப்ப இது வேண்டாம்... சரிதான் ஒப்புக்கொள்' என்று மாற்றி மாற்றி பேச வைக்கும் பேராற்றல் உண்டு மனதிற்கு.

பெண் பார்க்கும் படலத்தில் பெண்ணின் முகத்தைப் பார்க்கும் ஆண், அவளது புறத்தோற்றத்தை மட்டுமே பார்க்க முடியும்.  பெண்ணின் மனதிற்குள் என்ன இருக்கிறது என்பதை அவனால் அறிந்து கொள்ள முடியாது.  பார்த்த அந்தப் பெண்ணையே மணம் முடித்தபின் அவளிடம் கேட்பான், 'என்னை முதல் முதல்ல பார்த்தப்ப என்ன நினைச்சே?' என்று. சற்று அபத்தமான கேள்வி என்றாலும் கொஞ்சம் ஆபத்தான கேள்வியும் கூட. இந்தக் கேள்விக்கு அவள் என்ன பதில் சொல்ல முடியும்?

அவனை முதன் முதல் பார்த்த பொழுது உண்மையிலேயே அவனைப்பற்றி நல்ல விதமாக நினைத்திருந்தால் பிரச்சனை இல்லை. வேறு ஏதாவது  நினைத்திருந்தால்? அதாவது 'என்னடா, இவன் கறுப்பா இருக்கானே', 'அம்மாவை ஒட்டிக்கிட்டே இருக்கானே 'அம்மாக்கோண்டு'வாக இருப்பானோ' என்றெல்லாம் நினைத்திருந்தால்? அந்த உண்மைகளை மனம் திறந்து மறைக்காமல் அவனிடம் சொல்லமுடியுமா? நம்முடன் கண்ணா மூச்சி விளையாட்டு விளையாடும் இந்த மனசு ஒரு தினுசு.

'மனசாட்சிக்கு விரோதமா எதையும் சொல்லாதே; செய்யாதே...' என்கிறோம். அதென்ன மனசாட்சி? மனதுதான் மனசாட்சி. ஆனால், அது  எதற்குமே சாட்சியாக வெளிவராது. சும்மா பேச்சு வழக்கில் பழக்கப்பட்டு விட்டோம் அப்படி சொல்வதற்கு.

'நிறைஞ்ச மனசோட சொல்றேன்... நீ நல்லா இருப்ப...' மனதிற்குள் என்ன நிறைந்திருக்கிறது? உணர்வுகள்! பிறரை மிக உண்மையான நல்ல எண்ணத்தோடு வாழ்த்துவதை அவ்விதம் கூறுகிறோம். நல்ல எண்ணங்கள் நிறைந்த மனது என்றென்றும் அமைதியுடனும், ஆனந்தத்துடனும் இருக்கும். இப்படிப்பட்ட மனதிற்குள் தேவையற்ற விஷயங்கள் இல்லை. விஷமமான நினைவுகள் இல்லை. விஷம் போன்ற தீய எண்ணங்கள் இல்லை. இப்படிப்பட்ட மனது இருந்தால் மற்றவர்களையும் நலமாக வாழ வைத்து நாமும் நலமாக வாழ்வோம்.

'நினைப்பதெல்லாம் நடந்து விட்டால் தெய்வம் ஏதுமில்லை'.... மனது நினைப்பது எல்லாமே நடந்து விடுவதில்லை. அதற்கு மேல் தெய்வம் என்ற ஒன்று இருப்பதை மிக அழகாக தன் வார்த்தைகளில் கவித்துவமாக பாடி விட்டார் கவிஞர்.

'நடந்ததையே நினைத்திருந்தால் அமைதி என்றும் இல்லை....'

இந்த மனதிற்குள் எத்தனை பாரங்களை சுமக்க முடியும்? சுமக்க வேண்டிய அவசியம்தான் என்ன? நடந்து முடிந்தன வற்றையும், கடந்து போனவை பற்றியும் மனதிற்குள்ளேயே வைத்து, புதைத்து, அதையே நினைத்து நம்மை நாமே வதைத்துக் கொண்டிருப்பதால் என்ன நன்மை கிடைக்கும்? என்ன அமைதி கிடைக்கும்?

'நினைக்கத் தெரிந்த மனமே உனக்கு மறக்கத் தெரியதா?...

மறக்கத் தெரிந்த மனமே உனக்கு நினைக்கத் தெரியதா?....'

நினைப்பதும், மறப்பதும், மனம்வசம் இல்லை. நம்வசம்தான் உள்ளது. 'மறந்துவிடு' என்று கட்டளை இட்டு, நம் கட்டுப்பாட்டிற்குள் மனதை  கொண்டு வர வேண்டும். தீயன மறந்து, நல்லன நினைத்து வாழ நம்மை பழக்கிக் கொள்ள வேண்டும். நடந்த சம்பவங்கள் நமக்கு துன்பத்தைக் கொடுக்கக் கூடியதாயின் சதா சர்வமும் அதையே மனமெனும் மேடையில் அரங்கேற்றிய வண்ணம் இருக்கக் கூடாது. அதே சமயம் நமக்கு மகிழ்ச்சியைக் கொடுத்த சம்பவங்கள் நிகழ்ந்திருப்பின், அவற்றை அவ்வப்போது நினைத்துப் பார்த்து ஒரு புத்துணர்வை நமக்குள் உருவாக்கிக் கொள்ளலாம்.

தகுதியில்லாத ஒருவனை மகள் காதலிக்கும் சேதி அறிந்து, 'உன் மனசுல இருந்து அவனைத் தூக்கி எறிந்துவிடு' என்று, அப்பா மிரட்டுவது வழக்கம். தன் மகளுக்குப் பொருத்தம் இல்லாத ஒருவன் என்பதில் தகப்பனுக்கு கவலையும், கோபமும் ஏற்பட்டிருக்கும். மகள் தன் பேச்சைக் கேட்கவில்லையெனில், கெஞ்சிக் கொண்டிருந்த அவர் மிஞ்சுவார். கோபம் தலைக்கேற 'அவனை மறந்துடு' என்பார்.

அவளோ 'அவரை மறந்து வாழ முடியாது. அவரை சுமந்து வாழ்ந்த இந்த மனசுல வேற ஒருத்தருக்கு இடம் தர முடியாது' என்று பிடிவாதம் பிடிப்பாள்.

அதுவரை அன்பு செய்த தகப்பன் அந்த நிமிடத்தில் இருந்து வம்பு வளர்க்கும் வில்லனாகி விடுவார் அவளுக்கு. இது காலம் காலமாய் தொன்று தொட்டு தொடர்ந்து நிகழ்ந்து வரும் பிரச்சனை. இதற்கு முடிவு? 'நானா?... அவனா?' என்ற அப்பாவின் கேள்விக்கு 'அவன்தான்' என்று தன் மனதில் எடுத்த முடிவை வாய்மொழி வழியாக மகள் கூறுவதுதான் முடிவு. அந்தப் பிரச்சனை இவ்விதம் முடியும் பொழுது 'தன் வாழ்வு துவங்குகிறது' என்று அவளது மனம் தப்புக்கணக்கு போடும். உண்மையிலேயே அவளுக்கு துவங்குவது, வாழ்க்கை பிரச்சனைகளாகும்.

இதுநாள் வரை கவலை என்பதே அறியாமல் துள்ளி விளையாடும் மனதுடன் வானில் பறந்து திரியும் பறவை போல வாழ்ந்தவள், அவளது மனது எடுத்த முடிவிற்குப்பின், சிறகுகள் ஒடிந்து, சிறைப்பறவையைரய் சிக்கிக் கொள்ளப் போகிறோம் என்பதை அறியாமல் சிறுபிள்ளைத்தனமாய் சந்தோஷத்துடன் சிரித்திருப்பாள். 'காதல் தவறு இல்லை' என்று சிந்தித்திருப்பாள். அவள் மனதில் வரித்தவனின் தோலுரித்துக் காண்பித்த தகப்பனே எதிரியாகத் தோன்றும் அவளது மனதிற்குள்!


'அவன் நல்லவன் இல்லை' என்று அப்பா எடுத்துக் கூறினாலும் அவளது மனம் அதை ஏற்காமல் அவரையே எடுத்தெறிந்து பேசுவாள். 'நான் இப்படித்தான். எனக்கு அவன்தான்' என்று அவளது மனம் எடுத்த தீர்மானமான முடிவை அறியும் தகப்பனின் மனசு அழும். அவளைத் தற்காலிகமாக சிரிக்க வைத்த காதல், அவளது அப்பாவை நிரந்தரமாக அழவைக்கும். எல்லாமே மனதின் வேடிக்கை விளையாட்டு. அவளது மனம் எடுத்த தீர்மானமான முடிவின் தீர்ப்பு!

'கொஞ்சம் பெரிய மனசு பண்ணி இதை செஞ்சுடுப்பா?' என்று நமக்கு ஏதாவது காரியம் ஆக வேண்டி இருந்தால்  இப்படி கேட்போம்.  அதென்ன கொஞ்சம்... அதென்ன பெரிய மனசு?!  'மனசு வச்சா நடக்கும்' என்கிற நடைமுறை உண்மையை அடிப்படையாக வைத்து  பேச்சு வழக்கில் இவ்விதம் கேட்கிறோம்.

இரும்பை அருகில் வைத்தால் இழுத்துக் கொள்ளும் தன்மை உடையது காந்தம். அது போல நல்லதையும், கெட்டதையும் காந்தம் போல தன்னுள் இழுத்துக் கொள்வது மனம். புத்திசாலித்தனமாக சிந்தித்து நன்மைகளை மட்டுமே நம் மனதிற்குள் ஈர்த்துக் கொள்ளப் பழகிக் கொள்ள வேண்டும்.

மனப் பொருத்தம் இருந்தால் மணப் பொருத்தமும் கூடி வரும் என்று சொல்வார்கள். திருமண வாழ்க்கையில் இரு மனம் இணைந்தாலும் தம்பதிகளுக்குள் மன வேறுபாடுகள் இருக்கும். இந்த சூழ்நிலையில் அவர்களில் ஒருவர் விட்டுக் கொடுத்து, தங்கள் மனதில் நினைப்பதை சொல்வதற்குக் கூட யோசித்து தியாகம் செய்வார்கள்.

தன் ஆசையையும், தன் எண்ணத்தையும் மனதிற்குள்ளேயே பூட்டி வைத்து தியாக மனப்பான்மையால், தங்கள் வாழ்க்கையை ஜெயிக்க வைப்பவர்கள் பெண்களிலும் உண்டு. ஆண்களிலும் உண்டு. நான் என் மனதில் நினைப்பதைத்தான் செய்ய வேண்டும், செய்தே தீர வேண்டும் என்று இருவருமே வீம்பு பிடித்தால்...? குடும்ப வாழ்க்கையின் சந்தோஷம் தொலைந்து போய்விடும். சஞ்சலம் மட்டுமே எஞ்சி நிற்கும்.

மனதை அடக்கி ஆள்வது நம்மிடம்தான் இருக்கின்றது. தங்கள் மனதில் நினைப்பதை சாதிப்பதற்காக, மற்றவர்களை அடக்குவதை விட நமக்குள், நமது கட்டுப்பாட்டில் இருக்கும் மனதை அடக்கலாமே. 'அவனுக்கு / அவளுக்கு இளகிய மனசு' 'இரக்கமான மனசு' 'பூப்போல மனசு' 'தாராள மனசு' இவ்விதமெல்லாம் மனசு பற்றி குறிப்பிட்டு பேசுகிறோம்.

பழிவாங்கும் உணர்வை மனதின் ஒரத்தில் புதைத்து வைத்து அதை செயல்படுத்துவதற்குரிய நேரத்தையும், திட்டத்தையும் யோசித்துக் கொண்டிருப்பதை விட மன்னிப்பதும், மறப்பதும் சாலச்சிறந்தது.

மமதை இல்லாத மனதை உடையவர்கள் மனிதரில் மாணிக்கங்கள். ஒரு தினுசான மனசை அதன் போக்கில் போக விடாமல் நம் போக்கில் அதை வர வைத்து நீரோடை போன்ற தெளிவான வாழ்க்கை வாழலாம். தெய்வீக மணம் வீசும் அமைதியை அனுபவித்து வாழலாம்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.