Logo

உன்னதமான உறவுகள்

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 10510
rasikkathane azhagu-unnathamana-uravugal

னிதராய் பிறப்பது மிக அருமையான வரம் என்று கூறப்படுவதுண்டு. மனிதனால் மட்டுமே தன் மனதில்  நினைப்பதை வாய்விட்டு சொல்ல முடியும். வாய்விட்டு சிரிக்க முடியும். ஆனாலும் சிரிப்பு என்பதையே மறந்து விட்ட மனிதர்களும் உண்டு என்பது வேறு விஷயம்.

நாம் ஒரு பெற்றோருக்கு மகனாக / மகளாக பிறக்கிறோம். உறவு என்பது நம்மைப் பெற்றவர் களிடமிருந்து ஆரம்பமாகின்றது. தாயின் கருப்பையில் உருவாகும் உறவு, பிறந்த பின் தந்தையின் தோள்களில் தொற்றிக் கொள்ளும் உறவு ஆகின்றது. அம்மாவின் அடுத்த குழந்தைப் பேற்றில் நமக்கு தம்பி அல்லது தங்கை எனும் புதிய உறவு கிடைக்கின்றது. அம்மாவுடன் பிறந்த சகோதரன் தாய்மாமன் ஆகிறான். உடன் பிறந்த சகோதரி சித்தி அல்லது பெரியம்மா ஆகின்றாள். அப்பாவுடன் பிறந்தவர்கள் சித்தப்பா, பெரியப்பா, அத்தை எனும் உறவுகளாக உதயமாகின்றனர்.

அம்மா, அப்பாவின் பெற்றோர், நமக்கு பாட்டி, தாத்தா எனும் உறவுகளாய் நம்முடன் உறவாடுகின்றனர். அவர்களின் உடன் பிறந்தோரின் குடும்ப அங்கத்தினர்கள்... என்று உறவு வட்டம் விரிந்து கொண்டுள்ளது. நமது உறவினர்களை 'இவங்க எங்க சொந்தக்காரங்க' என்று மிக்க அன்போடு நம் நண்பர்களிடம் அறிமுகப்படுத்துகிறோம். சொந்தம்! அது ஏற்படுத்தும் பந்தம் புனிதமானது. அந்த பந்தத்திற்கு பங்கம் ஏற்பட்டு விடாமல் பாதுகாத்துக் கொள்ளும் வரை உறவுகள் உன்னதமானவையாக, உள்ளத்திற்கு உவகை அளிக்கும்.

உறவினரிடையே ஏன் மன வேறுபாடுகள் ஏற்படுகின்றன? பணம், குணம், அந்தஸ்து, ஆஸ்தி, ஆணவம்,ஆளுமை, பொறாமை இவைதான் பெரும்பாலான காரணமாக இருக்கின்றன. இவற்றுள் பொறாமை எனும் பொல்லாத இயல்பால் ஒட்டி       உறவாடிய உறவுகள் வெட்டி எறியப்படுகின்றன. உறவு, பிரிவு ஆகிவிடுகின்றது. பின்னர், இந்த பிரிவு தொடர்கிறது.இந்த சூழ்நிலையில் 'ஊர் இரண்டு பட்டால்கூத்தாடிக்கு கொண் டாட்டம்' என்ற கூற்றிற்கு ஏற்ப, இரண்டு குடும்பத்தினருக்கும் நடுவே உள்ள மற்ற உறவினர்கள் இந்தப்பக்கம் வந்து 'அவர்கள் உன்னைப்பற்றி இவ்விதம் சொன்னார்கள்; அவ்விதம் சொன்னார்கள்' என்றும் அந்தப் பக்கம் சென்று 'உன்னைப்பற்றி இவ்விதம் சொன்னார்கள்' என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொடுப்பார்கள்.

எனவே உறவில் ஏற்பட்ட விரிசல், இடி விழுந்த சுவர் போல் மேலும் விண்டு போகும். இடிந்து போகும். மற்றவர்கள் புறம் கூறுவதைப் பற்றி பொருட்படுத்தாமல் இருந்தால் குற்றங்கள் மறக்கும். சுற்றங்கள் சூழ்ந்திருக்கும். பொறாமை உணர்வு ஏற்பட்டால் பொங்கி வரும் பாசம் மங்கி விடும். நமக்கென்று 'கடவுள் எதைக் கொடுத்திருக்கிறானோ அதுதான் நமது' என்ற நல்லெண்ணம் இருக்கும் மனதில் பொறாமை தோன்றாது.

உடன் பிறந்த அண்ணன் மீது தம்பியும் உடன் பிறந்த தங்கை மீது அக்காவும் ஒருவர் மீது ஒருவர் பொறாமைப்பட்டால் மனதிற்குள் பகை உருவாகின்றது. புகைச்சல் தோன்றுகின்றது. பகையும், புகைச்சலும் சேர்ந்து ரத்த பாசத்தை ரணப்படுத்தி விடுகின்றது. ஒரு குடும்பத்தில் இரண்டு மகள்கள் இருக்கும் பட்சத்தில் அக்காவிற்கு சுமாரான இடத்தில் மணமுடித்திருப்பார்கள். தங்கைக்கு வசதி படைத்த பணக்கார வீட்டில் மணமுடித்திருப்பார்கள். இது வேண்டுமென்றே நிகழ்வது அல்ல.

ஒரு மகளை சுமாரான இடத்திலும், இன்னொரு மகளை வசதியான இடத்திலும் கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே பெற்றோர் நினைப்பதில்லை. திருமணம் என்பது கடவுளை நம்புபவர்களுக்கு இறைவன் திருவருளால் ஏற்பட்ட பந்தம். கடவுளை நம்பாதவர்களுக்கு விதி ஏற்படுத்திய விளைவு! சகோதரிகளுக்குள் பொறாமை ஏற்பட்டு விட்டால் உடன்பிறந்த பாசம் பறந்தோடி விடும். நேசம் உள்ளுக்குள் நெருடலாக மாறி விடும்.

பொதுவாக கல்வியில் சிறப்பான மதிப்பெண்கள் வாங்கும்

 மகன் அல்லது மகளை பெற்றோர் பாராட்டிப் பேசுவது இயல்பு. இந்த இயல்பை புரிந்துக் கொள்ளாமல் அண்ணன் மீது தம்பியோ தம்பி மீது அண்ணனோ பெறாமைப்பட்டால், சிறு வயதில் தொடங்கிய காழ்ப்பு உணர்ச்சி அவர்கள் வளரும் பொழுதும் தொடரும்.

'நான் சுயமா சம்பாதிச்ச சொத்துக்கள்ல ஏதாவது ஒரு நிலம் அல்லது வீட்டை எனது, கடைக்குட்டி மகனுக்கு கூடுதலா எழுதி வைப்பேன்' என்று அப்பா எழுதி வைத்து விடுவார். மற்ற மகன்கள் பொறாமை குணம் இல்லாதவர்களாக 'நம் தம்பிக்குத்தானே' என்று நல்ல விதமாக நினைத்துக் கொண்டால் உடன்பிறந்த உறவுகளுக்குள் சண்டை வராது. சச்சரவு வராது. ஆனால் 'அவனுக்கு மட்டும் எதற்காக அதிக சொத்து' என்று பொறாமைப்படும் பட்சத்தில் உறவுகள் முறிந்து போகக் கூடிய சூழ்நிலைகள் உருவாகின்றன. இதனால் அவர்களைப் பெற்ற தாயின் பாடுதான் திண்டாட்டம். தகப்பனுக்கும், மகன்களுக்கும் நடுவில் அவள்தான் பாசத்தோடு போராடுவாள். கண்ணீரில் நீராடுவாள்.

சில குடும்பங்களில் 'ஒன் மேன் ஷேர' நடக்கும். இது அழகான குடும்பத்தை அவலமாக்கும் ஆபத்து நிறைந்தது. அதாவது, குடும்ப அங்கத்தினர்களில் ஒரு பெண்ணோ அல்லது ஆணோ... அது மகனாகவும் இருக்கலாம். மகளாகவும் இருக்கலாம். ஏன்? மருமகளாகவோ மருமகனாகவோ கூட இருக்கலாம். இவர்களில் ஒருவர் மீது மொத்தக் குடும்பமும் அன்பு, மரியாதை வைத்திருக்கும் சூழ்நிலையில் அந்த நபர் அந்த அன்பை தவறாக பிரயோகிக்கும் பொழுது 'ஒன் மேன் ஷேர' என்ற நிலைமை உருவாகிறது. சில விஷயங்களில் அந்த நபர் அல்லது அந்தப் பெண்மணி கூறும் நல்ல விஷயங்களை குடும்பத்தினர் அட்சரம் பிசகாமல் பின்பற்றுவதுண்டு. ஆகவே, 'தான் கூறும் அனைத்தையும் இவர்கள் கேட்பார்கள்' என்ற மனப்பான்மை தோன்றி விடுகிறது.

தனக்கு யார் மீது காழ்ப்பு உணர்ச்சி ஏற்பட்டாலும் மேற்கூறிய இந்த தவறான போதனை வேலையை செய்து பாதிப்பு ஏற்படுத்தி அதன் மூலம் குளிர் காய்வார். எனவே, தவறான இந்த நடவடிக்கை குடும்பத்தின் ஒற்றுமையை நாளடைவில் குறைத்து விடும்; உறவுகளை பிரித்து விடும்; தேவையின்றி பிறரது மனதை புண்படுத்துகிறோம் என்பதை உணர்ந்து  கொள்ள வேண்டும். குடும்பத்திற்கு பெரிய அளவில் நன்மைகள் செய்ய இயலாவிட்டாலும் இது போன்ற தீமைகள் செய்யாமல் இருப்பது மிக நல்லது.


எனக்குத் தெரிந்த ஒரு குடும்பத்தில் கணவன் - மனைவி இருவரும் அன்புடன் வாழ்க்கை நடத்தி வந்தனர். கணவனுக்கு ஒரு மூத்த சகோதரி. அவள் வெளியூரிலிருந்து அவ்வப்போது தன் தம்பி வீட்டிற்கு வருவார். தம்பி மீது பாசம் என்றால் பாசம் அப்படியொரு இமாலயப்பாசம். தம்பிக்கும் அக்கா என்றால் உயிர். அக்கா, தன் இருப்பிடம் தேடி வந்து விட்டால் சந்தோஷத்தில், தலைகால் புரியாமல் நடந்து கொள்வார். தம்பியின் இந்தப் பாசத்தை நல்லவிதமாக பாதுகாத்துக் கொள்ளத் தெரியவில்லை அந்த அக்காவிற்கு. 

தம்பியின் மனைவி நல்ல நிறமாகவும், அழகாகவும் இருப்பதைப் பார்த்துப் பொறாமைப்பட்ட அக்கா, தம்பியின் மனைவியைப் பற்றி கொஞ்சம் கொஞ்சமாக தன் தம்பியிடம் கோள் மூட்ட ஆரம்பித்தார். அக்கா மீதுள்ள அந்தப் பாசம், தம்பியின் கண்களை மறைத்தது. எனவே மனம் மாறினார். தடுமாறினார். தடம் புரண்டார். அக்காவின் பேச்சை அப்படியே கேட்டுக் கொண்டார். மனைவி மீது மனக்கசப்பு கொண்டார். தேவை இல்லாமல் மனைவியிடம் எரிச்சல் பட்டார். அதைப் பார்த்து உள்ளுக்குள் ஏற்பட்ட சந்தோஷத்தை வெளியில் காட்டிக் கொள்ளாமல் தன் சுயரூபம் வெளிப்பட்டு விடாமல் கவனமாக நடந்து கொண்டார் அந்த அக்கா.

அவளது இடையூறு காரணமாக தம்பதிகளுக்கு இடையே இடையறாத சச்சரவு ஏற்பட்டது. தனிமை கிடைக்கும் சந்தர்ப்பங்களில் கணவரிடம் கெஞ்சினாள் மனைவி. "மத்தவங்க முன்னாடி என்னை அவமானப் படுத்தாதீங்க" என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். "என் அக்கா உனக்கு மத்தவங்க என்றாகிவிட்டதா?" என்று மேலும் கடுமையாக பேசினார் கணவர். தன் முயற்சியில் தோல்வி கண்ட அந்தப் பெண்மணி மனதளவில் அயர்ச்சி அடைந்தாள். 'ஊரிலிருந்து வந்திருக்கும் நாத்தனார் எப்போது கிளம்புவார்' என்று எதிர் பார்க்கும் அளவு நொந்து போனாள்.

அந்த அக்காவோ, மெள்ள மெள்ள தம்பியின் மகள்கள் பற்றியும் மூட்டிக் கொடுக்க ஆரம்பித்தார். கல்லூரியில் படிக்கும் மகள்கள் பற்றி, யோசித்து யோசித்து குற்றம் கூறி பற்றவைத்தார். 'ஐ பாட்' (I Pod) எனும் கருவியில் பாட்டு கேட்டால் தப்பு, இரவில் கம்ப்யூட்டர் பார்த்தால் தப்பு, விடுமுறை நாட்களில் பகல் நேரம் 'ராசாத்தி' எனும் இரவு உடை அணிந்தால் தப்பு, உரக்க சிரித்தால் தப்பு என்று தப்பாமல் அனைத்தையும் தம்பியிடம் குறை கூறி அந்தப் பெண்கள் மீதும் கோபப்பட வைத்தார் தம்பியை.

அக்காவிற்கும் இரண்டு மகள்கள், ஒரு மகன். அதிர்ஷ்டவசமாக மூவருமே திருமணமாகி வெளி நாட்டில் குடியேறி இருந்தனர். இதை அவர்கள் சார்பாக 'அதிர்ஷ்டம்' என்பதா, தம்பியின் குடும்பம் சார்பாக 'துரதிர்ஷ்டம்' என்பதா என்று புரியவில்லை. ஒன்று மட்டும் புரிந்தது. மெனக்கெட்டு ஊரில் இருந்து தம்பி வீட்டிற்கு வந்து தன் மீது அளவற்ற பாசம் கொண்ட தம்பியின் குடும்பத்தில் கலகமூட்டுவதை பொழுது போக்காக அமைத்துக் கொண்டாள்அந்த அக்கா. அவரது கணவர் இவரைத் தேடுவதும் இல்லை. 'வெளியூர் சென்று இத்தனை காலம் தங்கிவிட்டாளே! என்று கவலைப்படுவதும் இல்லை. எனவே அக்காவின் கொடுங்கோல் ஆட்சி, தம்பியின் குடும்பத்தின் நிம்மதியை அழித்தது. குடும்பத்தினரின் மனங்களை அலைக் கழித்தது. இது பற்றியெல்லாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் இயலாத அளவு அக்கா தம்பியின் கண்மூடித்தனமான பாசம் தன் வேலையைக் காட்டியது.

தம்பி, அலுவலகத்திலிருந்து வந்ததும் அவருக்கு அவரது மனைவியை பணிவிடை செய்ய விடமாட்டார். தானே காப்பி போட்டுக் கொடுப்பார். சமையல் செய்வதில் திறமைசாலியான அவருக்கு, நாக்குக்கு அடிமையான தம்பியின் உணவு ரஸனை பெருமளவில் உதவி செய்தது. எனவே 'இன்னிக்குஉனக்கு என்ன தம்பி வச்சுக் கொடுக்கட்டும்?' என்று கேட்டு கேட்டு சமைத்துப் போடுவார். அக்கா கேட்கும் மளிகைப் பொருட்கள், காய்கறிகள், அசைவவகைகள் வாங்கிப்போடுவதற்குள் தம்பியின் மனைவிக்கு விழி பிதுங்கும். காரணம், விலைவாசி ஏற்றம். பட்ஜெட்டிற்குள் கட்டுப்பாடாக குடும்பம் நடத்தி வந்த அந்தப் பெண், கட்டுக்கடங்காத செலவு குறித்து கலங்குவாள். கணவரிடம் முறையிடவும் பயம். வேறு வழியின்றிபொருளாதாரப் பிரச்சனை பற்றி பேசினால் 'அக்கா கேட்பதை வாங்கிப் போடு. பணம் போதலைன்னா என்னைக் கேள்' என்று கூறிவிடுவார் கணவர். 

தம்பியும், அவரது மனைவியும் மனதளவில் ஒற்றுமையாக இல்லை, அதற்கு காரணம் தான்தான் என்று அறிந்தும், அறியாதது போல் தன் அடாவடியான நடவடிக்கைகளை அன்றாடம் நடத்திக் கொண்டிருந்தாள் அந்த அக்கா. ஒரு வழியாக அவர் ஊருக்குக் கிளம்பிப் போகும் அன்று தம்பியின் மனைவியும், மகள்களும் 'யப்பாடா' என்று நிம்மதிப் பெருமூச்சு விடுவர்.

அக்கா இருக்கும் வரை கணவன் - மனைவிக்குள் ஏற்படும், அந்த அக்கா ஏற்படுத்திய மனஸ்தாபங்கள், அவர் ஊருக்குப் போன பிறகும் சில நாட்கள் தொடரும். அந்த கோபதாபங்கள் தீர்ந்து பழையபடி கணவன், நல்லபடியாக மாறிக் கொண்டிருக்கும் பொழுது 'திடுதிப்' என்று மீண்டும் வந்து நிற்பாள் அக்கா. பிறகென்ன?! வேதாளம் முருங்கை மரம் ஏறிய கதைதான். ஏதோ தன்னால் முடிந்த கைங்கர்யம் என்று அக்காக்காரியின் அட்டூழியங்கள் தொடர்ந்தன. அன்பான தம்பதிகளின் அந்நியோன்யத்தை அழித்தன. தம்பியின் மகள்களது மனதில் அப்பாவின் மேல் ஒரு மனக்கசப்பும், வெறுப்பும் சேர்ந்து மெல்ல ஒரு இரும்புத்திரை உருவாகியது.

குடும்பத்தின் அமைதி பறி போனது. உடன் பிறந்தோர் மீது பாசம் கொள்ளலாம். ஆனால் அந்த பாசம் கண்மூடித்தனமாக இருக்கக்கூடாது. நல்லது எது கெட்டது எது என்று ஆராய்ந்துப் பார்க்கும் தன்மையை மறக்கும் விதமாக இருக்கக்கூடாது. மனைவி என்பவளும் தன் அன்பை மதித்து வந்தவள் என்பதை மறந்து விடக்கூடாது. தன் பிள்ளைகளின் சந்தோஷமும் முக்கியம் என்பதை உணர்ந்திருக்க வேண்டும். அந்த மனப்பான்மை இல்லாதபடியால் அந்தக் குடும்பத்தின் நிம்மதியும், அமைதியும் குலைந்து போனதை கண்கூடாக கண்டவள் நான்.

சில குடும்பங்களில் இதே விஷயம் தலை கீழாக நடப்பதுண்டு. அதாவது தன் கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட மனைவி அவனது உடன் பிறப்புகளை அண்ட விடாமல் செய்வதுண்டு. தான், தன் கணவன், தன் குழந்தைகள் மட்டுமே குடும்பம் என்று நினைப்பாள், மதிப்புக்கொடுப்பாள். அன்பு செலுத்துவாள். கணவனது அம்மா, அப்பா, தங்கை, தம்பி அக்கா, யாரையுமே தன் கணவனிடம் பேசக்கூட  இயாலதபடிக்கு ஒரு வியூகம் அமைத்து விடுவாள் அந்த மனைவி.


ஆனால் தன் அம்மா, அப்பா, உடன்பிறப்புகள் அனைவரையும் வருந்தி, வருந்தி அழைப்பாள்.  கணவன் மூலமாக அவர்களுக்கு உதவியும் செய்வாள். 'தன்னைப் பெற்றவர்கள் போலத்தானே தன் கணவனின் பெற்றோரும் அவனது உடன் பிறப்புகளும்' என்று நியாயமாக நினைக்க மாட்டாள். இதுபோல் கணவன் மட்டும் வேண்டும், அவனது பெற்றோர் வேண்டியதில்லை என்று வேற்றுமை பாராட்டும் எண்ணம் கொண்ட பெண்கள் எத்தனையோ பேர் உள்ளனர்.

அவனது அம்மா-அப்பா இல்லாமல் இவளுக்கு அந்தக் கணவன் எப்படி கிடைப்பான்? கருவாக்கிய தாயையும், உருவாக்கிய தகப்பனையும் மறந்து விட்டு தன்னையும் தன் குழந்தைகளையும் மட்டுமே அவன் நேசிக்க வேண்டும் என்று அவனுக்கு பாசவலை விரிப்பாள். அந்தப் பாசத்திற்குள் புதைந்திருக்கும் பசப்பல்கள்... பாவம் அவளது கணவனுக்கு புரியாது. மனைவி விரித்த மாயவலைக்குள் சிக்குண்ட கணவனுக்கு வேறு உலகமே தெரியாது. தெரிந்து கொள்ள இயலாத அளவுக்கு அவளது தீய நடவடிக்கைகள் தெளிவாக இருக்கும். அவனது பெற்றோர், 'தங்களின் மகன் சந்தோஷாமாக குடும்பம் நடத்துகிறான், அது போதும்' என்ற பெருந்தன்மையான எண்ணத்தில் இருந்து விடுவார்கள். தியாகத்தீயில் அவர்கள் எரிய, துரோகத்தீயை தூர இருந்தே மறைமுகமாக மூட்டிவிடுவாள் இவள்.

இது ஏதும் அறியாத அப்பாவி கணவனோ அப்பழுக்கில்லாத அருமை கணவனாக அவளுக்கு அன்பை அள்ளித் தெளிப்பான். தப்பித்தவறி கணவனின் உறவினர்கள் இவர்களது வீட்டிற்கு வந்து விட்டால் வேண்டா வெறுப்பாக, கடனே என்று எதையோ சமைத்துப்  போடுவாள் அந்த மனைவி, ஆனால் அவளது அம்மா வீட்டு உறவினர் வந்தால்? ஆகா...! மாயாபஜாரில் வருவது போல விருந்து அமர்க்களப்படும். ஏன் இந்த பாரபட்சம்? இது தவறு. அநியாயமான செயல்.

கணவனின் அந்நியோன்யத்தை இது போன்ற அநியாயமான செயல்களுக்கு பயன்படுத்துவது அசிங்கம் இல்லையா? மாயாபஜாரில் வருவது போல் விருந்து போடாவிட்டாலும் மனசார, 'வாங்க' என்று வரவேற்று அன்பாக நாலு வார்த்தை கூடவா பேச முடியாது?

ஆவதும் பெண்ணாலே; அழிவதும் பெண்ணாலே என்று ஏன் கூறினார்கள்? நன்மைகள் ஆவதும் பெண்ணாலே, தீமைகள் அழிவதும் பெண்ணாலே என்ற அர்த்தத்தில் கூறினார்கள். ஆனால் மேற்கூறிய பெண்களைப் போன்றவர்களைப் பார்த்துதான் 'அழிவதும் பெண்ணாலே' என்று கூறி இருப்பார்களோ என்று தோன்றுகிறது. குத்து விளக்காய் இருக்க வேண்டிய பெண்கள், கணவனின் குடும்பத்தினரின் மனதைக் குத்தும் விதமாக வாழக்கூடாது. அன்பை செலுத்தினால் நமக்கும் அந்த அன்பு கிடைக்கும். வம்பு செய்தால் நமக்கும் அந்த வம்புதான் வளரும். விதைப்பதுதான் விளையும்.

சில குடும்பங்களில் உயிருக்குயிராக நேசித்துப் பழகிய உடன் பிறப்புகள், திருமணமான பின்னர், உடன் பிறந்தோருடன் பேசுவதைக்கூட வெகுவாகக் குறைத்துக் கொள்வதை பார்த்திருக்கிறேன், கேள்விப் பட்டிருக்கிறேன். ஏன்? எது தடுக்கிறது?

மஞ்சத்திற்கு மனைவி வந்ததும் நெஞ்சத்தில் தாங்கிய உடன் பிறப்புகளுடன் பேசுவதும், பழகுவதும் குறைய வேண்டுமா? அறவே நின்று போக வேண்டுமா? அவனுக்கு மனைவி வந்தபின் உடன் பிறந்த அண்ணணே அந்நியமாகிப் போவது ஏன்? அல்லது மனைவி என்ன வானத்தில் இருந்து வந்து குதித்தாளா? உலக அழகி ஐஸ்வர்யாராயே  ஆனாலும் குடும்ப நேயங்கள், மனித நேயங்கள் மாயமாக மறைந்து போவது ஏற்றுக்கொள்ள இயலாத ஒன்று.

மனதில் மனித நேயங்களை மலர வைத்துக்கொண்டால் மலர்ந்து மணம் வீசும் உறவுகள் உலர்ந்து போகாது.

உறவுகளை நம் உயிர் உள்ள வரை உயிர்ப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். தப்பித்தவறி தகுந்த காரணத்தோடு பிரிவுகள் நேரிட்டாலும் அதை நீடிக்க விடாமல் மனம்  விட்டுப் பேசலாம். தயங்காமல்  மன்னிப்பு கேட்கலாம். மறப்பதற்கு முயற்சி செய்யலாம். மறந்து விடலாம். ஒரு தாய் வயிற்றில் பிறந்த ரத்தங்களை தம் உயிர் உள்ளவரை சுத்தமான, பரிசுத்தமான பாசத்தால் பாதுகாத்துக் கொள்ளலாம்.

 'இனி நான் அவனோட மூஞ்சியில முழிக்கமாட்டேன். அவன் கூட மனுஷன் பேசுவானா?' 'தலைக்கு தண்ணி தெளிச்சுட்டேன்', 'தலை முழுகிட்டேன்'. 'அவன் என்னோட வீட்டில காலடி வச்சா அவனோட காலை வெட்டிடுவேன்'. 'நான் செத்தா கூட அவன் என்னோட சாவுக்கு வரக்கூடாது'.

எத்தனை எத்தனை அவச்சொற்கள்? ரத்த சம்பந்தம் உள்ளவர்களே கூட 'உனக்கும் எனக்கும் இனி எந்த சம்பந்தம் இல்லை' என்று அறம் விழுந்தாற் போல அவலமான பேச்சுக்களை அள்ளி வீசுவார்கள். மனங்களை கிள்ளி எறிவார்கள். குடும்ப நேயத்தை வேரோடு பிடுங்கி எறிவார்கள். இதெல்லாம் ஏன் நடக்கிறது? புரிந்து கொள்ளாமைதான் முதன்மையான காரணம். குடும்பத்தினர் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். கணவன் - மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். உடன் பிறப்புகள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும். மதினி, நாத்தனார், மாமியார், கொழுந்தன், மச்சினன் போன்ற அனைத்து உறவுகளும் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ள வேண்டும்.

பொறாமை என்னும் தீயகுணத்தை அறவே நீக்கிக் கொள்ள வேண்டும். நம் குடும்பத்தைச் சேர்ந்தவரே என்றாலும் நம் உறவுகளுக்குள் பிரிவும், மனஸ்தாபமும் ஏற்படுவது போல தவறாக பேச முன் வரும் பொழுது அதை செவி மடுத்துக் கேட்டுக் கொள்ளாமல் இருந்து விட வேண்டும். அல்லது தீவிரமாக யோசித்துப் பார்க்க வேண்டும். கோள் மூட்டுவது கூடாது. தேள் கொட்டுவது போல சம்பந்தப்பட்ட உறவினரிடம் போய் வார்த்தைகளைக் கொட்டக் கூடாது. நம் வாயிலிருந்து பேசிய சுடு சொற்களை மறுபடியும் திரும்ப வாங்கிக் கொள்ளும் வாய்ப்பே இல்லை. எனவே பேசுவதற்கு முன் நன்றாக சிந்தித்துப் பேச வேண்டும். அதனால்தான் வள்ளுவர், 'நா காக்க' என்றும் 'தீயினால்சுட்ட வடு ஆறும்.நாவினால் சுட்ட வடுஆறாது' என்றும்  கூறியுள்ளார்.

கடுஞ்சொற்களை மனம் போனபடி கொட்டியபின், பிரிவை நினைத்து வருந்துவதில் என்ன பயன்? இதயத்தில் இருக்கும் அன்பை வாய்வழியாக வெளியேற்ற வேண்டும். அன்பை வெளிப்படுத்துவதில் என்ன EGO? 'இந்த உலகத்து அன்பை எல்லாம் அவள் மீது / அவன் மீது நான் வச்சிருக்கேன்' என்று உள்ளத்துக்குள் ஒளித்துக் கொண்டு உதடுகளில் எந்த வார்த்தையும் வெளிவரவில்லை எனில் அந்த மகத்தான அன்பை எவ்விதம் அறிந்து கொள்ள முடியும்? புரிந்து கொள்ள முடியும்? பகிர்ந்து கொள்ள முடியும்? அன்பே சிவம். அன்பே தெய்வம். அன்பே அனைத்தும் என்பது ஆன்றோர் வாக்கு. எனவே நம் உள்ளத்தை அன்பு மயமாக்கி, ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, விட்டுக் கொடுத்து வாழ வேண்டும்.


குடும்பம் ஒரு கோயில். உறவுகள் அங்கே வீற்றிருக்கும் தெய்வங்கள். தெய்வங்களை நிந்திக்கிறோமா? அது போல உறவுகளை தெய்வீக உணர்வுகளாக மதித்தால் பிரிவுகள் நேரிடாது. ஒற்றுமை ஒங்கும். வேற்றுமை வேரறுத்துப் போகும். ஒட்டிப்பிறந்த சகோதர உறவுகள் திடீரென வெட்டிக்கொண்டு பிரிந்து விட நேரிடாது. சிறு வயதில் ஓரே தட்டில் சாப்பிட்டு, எச்சில் என்று எட்டிப் போகாமல், விளையாட்டாய் தட்டிப் பறித்து சாப்பிட்டு மகிழ்வோமே மிட்டாய்களை! அந்த மிட்டாய் போன்ற இனிமையை இழக்கத்துணியும் உணர்வுகளை, ஏன் நாம் வளர்ந்த பிறகு,   வளர்த்துக் கொள்கிறோம்? இளம் பிராயத்தில் தங்கையை அல்லது தம்பிளை யாராவது திட்டினாலோ அடித்து விட்டாலோ அண்ணனுக்கு எப்படிக் கோபம் பொத்துக் கொண்டு வருகிறது? அடித்த நபரை அடித்து மொத்துவது எதனால்? உடன் பிறப்பு மீதுள்ள பாசத்தால். ஆனால் அதே உடன் பிறப்புகள், வளர்ந்து பெரியவர்களான பிறகு? தாங்களே தன் உடன் பிறப்பை திட்டுவதும், அடிப்பதுமாக உருமாறுவதும், உள்ளம் மாறுவதும் நிகழ்கிறது. ஏன் இந்த மாற்றம்? இதை எப்படி சரி பண்ணுவது?  புதிதாய் பிறந்த குழந்தையைப் பார்ப்பது போல் தினமும் தன் உடன் பிறப்புகளை, மற்ற உறவுகளைப் பார்க்கப் பழகிவிட்டால், உணரப்பழகிவிட்டால் அந்த சிறுவயது பாசம் மாறாமல் இருக்கும். வேஷம் இல்லாத நேசம், துவேஷம் இல்லாத பாசத்தை வளர்க்கும்.

அம்மா - மகன் உறவுக்குள் மருமகள் எனும் புதிய உறவு ஒரு பூ மலர்வது போல மென்மையாக இருக்க வேண்டுமே தவிர தீப்போறி பறப்பது போல வன்மையாக இருக்கக்கூடாது.

ஒரு குழந்தையை வளர்ப்பது என்பது லேஸான விஷயம் அல்ல. அது ஒரு தவம். ஒரு யாகம். ஒரு வேள்வி. அப்படிப்பட்ட ஒரு தாய்மையையும், தாங்கி வளர்த்த தகப்பனையும் மகனிடமிருந்து பிரிப்பது பாவச் செயல் அல்லவா? அந்த பாவச் செயலின் பிரதிபலிப்பு நாளை அந்த மருமகளுக்கும் ஏற்படும் அல்லவா?

அவளுடைய மகனுக்கு வாய்க்கும் மனைவி அவளைப் போலவே பிரிவை உண்டாக்கும் மனோபாவம் உள்ளவளாக இருந்தால்? சுவரில் அடித்த பந்தின் நிலைமைதான். அந்த சூழ்நிலையில், தான் செய்த தீங்குகளை உணர்ந்து வருத்தப்பட்டு என்ன பயன்? பல வருடங்கள் தாய், மகனை பிரித்தாகி விட்டது. உருண்டோடிய அந்த வருடங்கள் மீண்டும் திரும்பக் கிடைக்குமா? நாம் மனம் திருந்துவோம் என்று ஒரு போதும் காலம் காத்திருக்காது. நம் உயிர் பறிக்கும் காலனும் காத்திருக்கமாட்டான். எனவே குடும்பம் எனும் மரத்தின் ஆணி வேராகத் திகழும் அன்பு எனும் பசுமையான இலைகளைக் கிள்ளி எறியக் கூடாது. பூஞ்சோலையாக மாற்ற மனம் இல்லாவிட்டாலும் அன்பு எனும் தண்ணீர் இல்லாத பாலைவனமாக மாற்றாமலாவது நடந்து கொள்ளலாமே?.

 'என் மருமகளை நான் பெற்ற மகள் போல பார்த்துக் கோள்கிறேன்.'

 'நான் என் மாமியாரை என்னைப் பெற்ற தாய் போல பார்த்துக் கொள்கிறேன்.'

சில மருமகள்களும், சில மாமியார்களும் கூறும் வசனம் இது. எந்த ஒரு மருமகளும் மாமியாரை தன் அம்மாவைப் போல நேசிக்கவும் மாட்டாள். பார்த்துக் கொள்ளவும் மாட்டாள். அது போல எந்த ஒரு மாமியாரும், மருமகள் மீது தன் மகள் போல பாசம் செலுத்தவும் மாட்டாள். கவனித்துக் கொள்ளவும் மாட்டாள். இதை ஒரு குற்றமாகவோ, குறையாகவோ நான் குறிப்பிடவில்லை. இயல்பு! மனித இயல்பு. நம் அம்மாவைத்தான் அம்மாவாக நினைப்போம். சும்மா எல்லாரையும் நம்மைப் பெற்ற அம்மாவாக நினைத்து, அதைப்போன்ற அன்பை செலுத்த முடியாது. இயல்பான ஒரு உணர்வை மாற்றி ஏற்றுக் கெள்வது மிகக் கடினம். யாரோ லட்சத்தில் ஒருவர்... கோடியில் ஒருவர் வேண்டுமானால் விதிவிலக்காக, மருமகளை தன் மகள்போல பாவித்து, பாசம் செலுத்தலாம், அது போல மருமகளும். இது ஆபூர்வமானது.

'மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்' இந்த பழமொழி, நம் முன்னோர்களின் பழக்க வழக்கங்களில் இருந்து வந்த மொழி! தன் மகளுக்கு உடல் நலக்குறைவு என்றால் துடித்துப் போய் அவள் அருகிலேயே இருந்து கவனித்துத் கொள்ளும் மாமியார், தன் மருமகள் ஏதாவது நோய்வாய்ப்பட்டால், "இதென்ன சாதாரண @ஜுரம்தான், ரெண்டு மாத்திரை போடு, சரியாகிவிடும்" என்பாள்.

சமையலறை 'ட்யூட்டி' தடைபட்டுப் போகும் எரிச்சலில் வெளிவரும் வார்த்தைகள் இவை. சில நேரங்களில் சில மாமியார்கள்!.... மகளுக்கு ஒன்று என்றால் 'ஐய்யோ.. என் மகள் புகுந்த வீட்ல மாடா உழைச்சு ஒடா தேய்ஞ்சு போறாளே' என்று அங்கலாய்ப்பார்கள். ஆனால் மருமகள் கர்ப்பமாகி இருக்கும் நேரத்தில் 'ரொம்ப கஷ்டமா இருக்கு' என்று கூறினால் 'மசக்கைன்னா இப்பிடித்தான் இருக்கும்'. "நானெல்லாம் இதைவிட எவ்வளவு கஷ்டப்பட்டேன் தெரியுமா? இதெல்லாம் ரொம்ப சாதாரணம், போ... போய் வேலையைப் பாரு"@என்று கூறுவார். 'என் மருமகளை கண்ணுக்குள்ள வச்சு காப்பாத்தறேனாக்கும்' என்று வசனம் பேசும் மாமியார், மருமகளை சிறிது நேரம் கண் அசந்து தூங்கக் கூட விட மாட்டார் என்பது யாருக்குத் தெரியும்?

மாமியார் தன் மருமகளை மகளாக நினைக்க வேண்டாம். மனுஷியாக நினைத்தாலே போதும். அதுபோல மருமகள் தன் மாமியாரை அம்மா போல நினைக்க வேண்டாம். குடும்பத்தலைவி என்று மதித்தால் போதும். இதற்கு அப்பாற்பட்டு எத்தனையோ குடும்ப நேயங்கள் இருக்கின்றன. ஒருவர் மனதை ஒருவர் காயப்படுத்தாமலிருக்க இந்தக் குடும்ப நேயங்களைப் பின் பற்றினாலே போதும். கருத்து வேறுபாடுகளும் ஏற்படாது. மன வேறுபாடுகளும் ஏற்படாது. உறவுகளுக்குள் பிரிவினை ஏற்படாது.

உறவினர்களுக்குள் பிரிவு ஏற்பட்டிருந்தாலும் அவரவர் வீட்டில் திருமணம், புதுமனை புகுவிழா, வளைகாப்பு, குழந்தைகளின் பிறப்பு, பிறந்தநாள் போன்ற சுப வைபவங்களில் அவர்களின் பிரிவிற்கு காரணமான குற்றங்களை மறந்து, மன்னித்து அழைப்பதன் மூலம் அந்த பிரிவு, மீண்டும் உறவுப் பூக்களாக மலரும். இது உறவினர்களுக்குள் அவ்வப்போது நிகழும் தற்காலப் பிரிவுகள், சந்திப்புகள்! அவற்றைத் தொடரும் குடும்ப ஒற்றுமை!


ஆனால் சில பிடிவாதக்கார உறவினர்கள் இருக்கிறார்களே... அவர்கள் செய்வது? உறவு நேயம் மட்டுமல்ல மனிதநேயமே அற்ற அடாத செயல். தம்பி, தன் மகளின் திருமணத்திற்கு அக்காவை அழைக்காமல் விட்டுவிடுவான். மகன், தன்னைப் பெற்ற தாயையே தன் மகளின் திருமணத்திற்கு அழைக்காமல் உதாசீனப்படுத்தும் கொடுமையும் நடக்கிறது. எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டுதான் இருப்பார். பெற்ற தாயின் கண்ணீர் மேடையில், மகளின் மணமேடை அமைக்கும் அவனை சும்மா விடுமா தெய்வம்?

முன்புதான்  'அரசு அன்று கொல்லும், தெய்வம் நின்று கொல்லும்'. ஆனால் இப்போது அவரவர் வினைப்பயனை அன்றன்றே அனுபவிக்க வேண்டும் என்று தெய்வமே துரித கால நடவடிக்கை எடுத்து விடும். பெற்ற தாயின் வயிறு எரிய அந்த அம்மா எனும் உறவை அறுத்து எறிபவனுக்கு ஆண்டவனின் தண்டனை வெகு விரைவில் ஆரம்பமாகும். மனிதர்கள், உறவுகளை மதிக்காமல் காலில் போட்டு மிதிப்பதைப் காணப் பொறுக்காமல், மன்னிக்கும் தெய்வம் கூட தற்போது உடனுக்குடன் தண்டனையை வழங்கிவிடத் தயராகிவிடுகிறது.

வருடக்கணக்காக அம்மாவுடன் பேசாத மகன், வருடக் கணக்காக உடன் பிறந்த சகோதரியுடன் பேசாத சகோதரன்! சொத்திற்காக தகப்பனுடன் பேச்சு வார்த்தையை நிறுத்திக் கொண்ட புதல்வர்கள்! இப்படி பலர் உள்ளனர்.

ஒரு விழா, ஒரு விருந்து என்றால் கூடிப்பேசும் உறவினர்கள் ஒருவரை ஒருவர் கேலி செய்து, கிண்டல் பண்ணி மகிழ்வது வழக்கம்தான். இதில் ஈகோ உள்ளவர் இந்தக் கேலிப்பேச்சை விளையாட்டாக எடுத்துக் கொள்ளாமல் கோபித்துக் கொண்டு வெளிநடப்பு செய்வதும் உண்டு. சாதாரண கேலிப்பேச்சால் உறவை அறுத்துக் கொண்டு போன அவர்களது குடும்பத்தைப் பார்த்து பின்னாளில் ஊரே கேலி பேசும் அவலம் நடக்கும்.

ஆறு அறிவு இல்லாத நாயும், பூனையும் கூட இனம் பிரித்துப் பார்க்காமல் தோழமையோடு பழகுவதைப் பற்றி படித்திருக்கிறோம், நேரில் பார்த்திருக்கிறோம். ஆனால் ஆறு அறிவு நிறைந்திருக்கும் மனிதர்கள் தன் ரத்தம், தன் உறவுகளையே ஒதுக்கி வைத்து வைராக்கியமாக பிரிந்து இருக்கும் கொடுமையை என்ன வென்பது?

பிறப்பது ஒரு முறை. பிறந்த பிறவியின் பயனைப் புரிந்து கொண்டு அன்பு, பரிவு, பரிமாற்றங்கள், பாசம், நேசம், உதவி செய்யும் மனப்பான்மை, பொறாமை இல்லாத சுத்தமான இதயம், 'இவர்கள் என் குடும்பத்தினர், என் ரத்தம், என் உறவு' என்ற அன்புமயமான உணர்வுகளில் திளைத்து வாழ்வோமேயாகில் ஆல் போல் தழைத்து வாழும் நம் குடும்பமும், உறவுகளும்.

 

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.