Logo

அம்மா... நீ...சுமந்த பிள்ளை...

Category: பொது
Published Date
Written by chitralekha
Hits: 7179
rasikkathane azhagu-amma-nee-sumatha-pillai

ம்மா என்றால் அன்பு. அம்மா என்றால் தெய்வம். அம்மா என்றால் பாசம். அம்மா என்றால் தியாகம். அம்மா எனும் வார்த்தைக்கு இந்த உலகமே மயங்கும். உலகமே மயங்கும் தாய்மையின் உலகம்? மிகவும் சின்ன உலகம். தாயின் இதயத்தில் அவளது பிள்ளைகளும், அவர்களின் நலன் மட்டுமே அடங்கியுள்ள சின்னஞ்சிறு உலகம். ஆனால் அதற்குள் தோணும் அன்பு வெள்ளமோ...  வானத்தைப் போன்று பரந்து விரிந்தது. அம்மாவின் அன்பு, ஆர்ப்பரிக்கும் கடலைப்போல அல்லாமல், அமைதியான நதியைப் போன்றது.

ஒரு குழந்தை பிறக்கும் பொழுது, ஒரு தாயும் உருவாகிறாள். அவளுக்குள் தாய்மையும் பிறக்கிறது. குழந்தையாய் பிறந்து, சிறுமியாய் வளர்ந்து, பருவப் பெண்ணாக மலர்ந்து, ஒருவனுக்கு மனைவியாய் அமைந்து, அதன்பின் தாயாகும் பொழுதுதான் பெண்மை முழுமை அடைகிறது.

கர்ப்பத்தில் குழந்தை உருவான நாள் முதல் மசக்கை, வாந்தி, தலைசுற்றல் என்று அவள்படும் உடல்ரீதியான உபாதைகள்தான் எத்தனை... எத்தனை?

தாய்மை அடைந்துவிட்ட பெருமையையும், பெருமிதத்தையும் அனுபவிக்கிறாள் பெண். திருமணமானபின் நெஞ்சில் கணவனை சுமந்து வாழ்வதை விட, கர்ப்பம் ஆனபின் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பேரின்பமாக பெண் உணர்கிறாள்.

'எனக்கு இது பிடிக்கும்,' 'எனக்கு இது வேணும்' என்று அவளுக்காக ஆசைப்படும் பெண், பிள்ளை பெற்ற பிறகு, 'என் பிள்ளைக்கு இது பிடிக்கும், அது பிடிக்காது' என்ற ஒரே சிந்தனையில் வாழ்கிறாள்.

'தான்', 'தனது' என்ற தன்னலமே தாய்மைக்குக் கிடையாது. 'என் மகள், என் மகன்' என்ற எண்ணம்தான் எப்போதும் அவளது உள்ளத்தில் உலவிக் கொண்டிருக்கும்.

பிள்ளைக்கு உடம்பு சரி இல்லை என்றால் துடித்துப் போகும் அன்பு கொண்டவள் தாய். மருந்து கொடுக்கும் பொழுது அந்த மருந்தை, தான் ருசித்த பிறகே குழந்தைக்குக் கொடுப்பாள். கசப்பு மருந்து என்றால் மேலும் அதிக தேனைக் கலந்து கொடுப்பாள்.

காய்ச்சல் கண்ட பிள்ளையின் அருகிலேயே இருந்து விடிய விடிய நெற்றியில் ஈரத்துணி போட்டுக் கொண்டிருப்பாள். காய்ச்சல் குறைந்துள்ளதா என்று நெற்றியையும், கால்களையும் தொட்டுத் தொட்டுப் பார்த்து தூக்கத்தைத் தொலைத்து கண் விழிப்பாள். பிள்ளை உடல் தேறி குணமாகும் வரை, அவள் உணவு உண்பதில் விருப்பம் இன்றி பட்டினி கிடப்பாள். தெய்வங்களுக்கு வேண்டிக்கொண்டு விரதம் இருப்பாள்.

பிள்ளைகளுக்கு நோய் வந்து விட்டால் 'அந்த நோய் தனக்கு வந்திருக்கக் கூடாதா... என் பிள்ளை இத்தனை கஷ்டப்படுகிறதே' என்று வேதனைப்படுவாள்.

'என் உயிரை எடுத்துக் கொள் தெய்வமே, என் பிள்ளையின் உயிரைக் கொடுத்துவிடு' என்று ஆண்டவனிடம் மன்றாடுவாள் தாய். பிள்ளையின் வாந்தியை சிறிதும் அருவறுப்பின்றி கையில் ஏந்திப் பிடிப்பவள் தாய். மல ஜலத்தை சுத்தம் செய்பவள் தாய். உடல் நிலை சரியாகும் வரை உடன் இருந்து, பிள்ளையை விட்டு அகலாமல் அருகிலிருந்து சேவை செய்பவள் தாய்.

'பத்து மாத பந்தம்' என்று தாய்மை பற்றி கூறுவார்கள். பத்து மாத பந்தம் என்பது உடல்கூறு சம்பந்தப்பட்டது. குழந்தையை வயிற்றில் சுமப்பது பத்து மாதங்கள். ஆனால் தன் குழந்தைக்கு அறுபது வயதானாலும் அந்த பந்தத்தை விட்டுவிடாமல் தொடர்பவள் தாய்.

தனக்கென்று எதையுமே யோசிக்காத தாயின் மனது, தன் பிள்ளைகளுக்கென்று எல்லாவற்றையும் யோசிக்கும். 'என் பிள்ளை நன்றாக படிக்க வேண்டும், அந்தப் படிப்பினால் வாழ்க்கையில் உயர வேண்டும்' என்ற சிந்தனை உடையவள் தாய்.

'படி' 'படி' என்று சொல்வது பிள்ளைக்கு பிடிக்காவிட்டாலும் அவர்களது நலன் கருதி, எதிர்கால வளம் கருதி படிப்பைப் பற்றி நயமாகவும், அன்பாகவும் வலியுறுத்துபவள் தாய். 'தன் மீது கோபப்பட்டாலும் பரவாயில்லை, பிள்ளைகள் கஷ்டப்படாமல் வாழ வேண்டும்' என்ற தியாக மனப்பான்மையினால் அவ்விதம் செய்கிறாள்.

பிள்ளை படிக்கும்பொழுது அவளும் சேர்ந்து, கண் விழித்து, தேனீர் போட்டுக் கொடுப்பது, உற்சாகப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறாள். கணவனை தன் நெஞ்சில் சுமக்கும் மனைவி, தாய் என்ற ஸ்தானத்திற்கு வந்த பிறகு தன் பிள்ளையைத்தான் நெஞ்சில் சுமக்கிறாள். பிள்ளைகளுக்குப் பிறகுதான் கணவன் என்ற நிலைமை உருவாகி விடுவதற்குக் காரணம் தாய்மை.

பெண்மை, தாய்மையாகும் பொழுது தாய்மை, தெய்வீகமாகி விடுகின்றது. தாயை தெய்வமாக மதிக்கும் பிள்ளைகள் உருவாகுவதற்குக் காரணம் தாயின் பாசம்... நேசம்... தியாகம்... சேவை ஆகியவை.

பிள்ளைகளின் மனதில் நெருக்கமாய் பதிபவள் தாய்தான். தாய்க்குப்பின்தான் தகப்பன். தோளில் சுமக்கும் தகப்பனைவிட நெஞ்சில் சுமக்கும் தாயின் அன்பைத்தான் பெரிதாக மதிக்கின்றார்கள் பிள்ளைகள்.

தாயின் கையினால் ஊட்டி வளர்க்கப்படும் பொழுது, அந்த ஸ்பரிஸ உணர்வினால் குழந்தையின் ரத்தத்தில் பாசம் கலக்கிறது.

ரத்தத்தை பாலாக்கிக் கொடுத்து வளர்க்கும் தாய், பாலுடன் சேர்த்து அன்பு, பாசம் இவற்றையும் சேர்த்து ஊட்டி வளர்க்கின்றாள்.  படிப்படியாக குழந்தையை வளர்க்கும் பொழுது, தன் உடல் தேய்வதையும் பொருட்படுத்தாமல் பிள்ளையின் வளர்ச்சி கண்டு மகிழ்ச்சி அடைகிறாள்.

ஏழ்மை நிறைந்த சூழ்நிலையில், இருக்கும் சிறிதளவு உணவையும் பிள்ளைக்காக எடுத்து வைத்து, அவன் வந்ததும் அவனது பசி தீர்க்க முற்படுவாள். பாத்திரத்தின் சப்தம் கேட்டால் உணவு கொஞ்சமாக இருப்பதை புரிந்துகொண்டு விடுவானே என்று கரண்டியை ஓசைப்படாமல் போட்டு பரிமாறுவாள்.  பிள்ளை, வயிறு நிறைய உண்பதைப் பார்ப்பதிலேயே அவளது வயிறு நிறையும்.

மனவேதனையிலும், பிரச்சனைகளிலும் சிக்கிக் கொண்ட ஒரு துக்கமான சூழ்நிலையில், அம்மாவின் முகத்தைப் பார்த்தாலே துன்பம் தூள் தூளாகும். அவளது மடியில் நம் முகம் புதைத்தாலோ... அலாதியான ஒரு அமைதி கிடைக்கும். 'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதில்லை, தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வம் இல்லை' என்று அனுபவித்து பாடி இருக்கிறார் கவிஞர்.

வீடு, சொத்துக்கள் இவற்றை விட ஒரு தாயின் பிரார்த்தனை தான் மிக்க மதிப்பு வாய்ந்த சொத்தாகும். பிள்ளைகளுக்காக கடவுளிடம் தாய் வேண்டிக் கொள்ளும்பொழுது அந்த பிரார்த்தனையின் வலிமை மிக அதிகம்.


அக்கம் பக்கம் பழகுவோரிடமும், நமக்கு அறிமுகமே இல்லாத பெண்மணிகளை பொது இடங்களில் சந்திக்கும் பொழுதும் அவர்களை 'அம்மா' என்று சகஜமாக அழைக்கிறோம். 'அப்பா' என்று எல்லோரையும் அழைக்க முடியாது.  தான் பெற்ற பிள்ளையாக இல்லாவிட்டாலும் கூட, வேறு யார் 'அம்மா' என்று அழைத்தாலும் அந்த அழைப்பில் மகிழ்ச்சி அடைவது தாய்மை. தான் பெறாத பிள்ளைகளின் மீது தான் பெற்ற பிள்ளைபோல அன்பு செலுத்தும் மகத்தான மனம் தாய்க்கு உண்டு.

பிற்காலத்தில் பிள்ளைகள் தன்னை உட்கார வைத்து சோறு போடுவார்கள் என்ற எதிர்ப்பார்ப்பில் பிள்ளைகளை தாய் வளர்ப்பதில்லை. 'என் உயிர் உள்ள வரை என் பிள்ளைகளை நான் பார்த்துக் கொள்வேன், என் கடமைகளை செய்வேன்' என்கிற உணர்வில்தான் வளர்க்கிறாள். அந்த உணர்வு உன்னதமானது. தாய்மை நிரம்பி ததும்பும் அபூர்வமான உணர்வு!

அம்மா என்பது உலகப் பொதுவான வார்த்தை. மா, மாம், மம் என்று அம்மா தொடர்பான வார்த்தைகளாலேயே அம்மாவை அழைக்கின்றார்கள் உலகம் முழுதும்.

காணாமல் போன பிள்ளை, பல ஆண்டுகளுக்குப் பிறகு கிடைத்து விட்டான் என்ற செய்தி வந்து அடையாளம் காட்டச் சொல்லி காவல்துறையினர் அழைப்பார்கள். பல வருடங்களுக்குப் பிறகும் கூட குழந்தையாய் இருந்தபோது தொலைந்து போன மகனை மிகச் சரியாக அடையாளம் காட்டும் சக்தி தாய்க்கு மட்டுமே உண்டு. காணாமல் போன பிள்ளை கிடைக்கும் வரை பிள்ளையையே நினைத்து நினைத்து உள்ளம் உருகும் தாய்க்கு, குழந்தையின் முகம் மறக்குமா?

உத்யோகம் நிமித்தமாக வெளிநாடு சென்றிருக்கும் பிள்ளையைப் பிரிந்திருக்கும் தாய், பிள்ளையை நினைத்து உருகுவாள். மருகுவாள். பிள்ளைக்கு அது பிடிக்குமே, இது பிடிக்குமே... என்று நினைத்து ஏங்குவாள். தான் சாப்பிடும் பொழுது மகன்/மகள் சாப்பிட்டானோ, இல்லையோ என்று கலங்குவாள். பிள்ளையின் எதிர்காலம் சிறப்பானதாக அமையவும், அதிகப் பொருள் ஈட்டவும் அவன் பிரிந்து வெகுதூர சென்றிருக்கும் பிரிவுத் துயரத்தைத் தாங்கிக் கொள்ளும் தியாகச்சுடர் தாய். அவள் நினைத்தால் 'நீ இங்கே இரு. நீ சம்பாதிக்கும் தொகை போதும். என் கூடவே இரு' என்று சொல்லலாம். வற்புறுத்தலாம். ஆனால் பிள்ளையின் எதிர்காலம் செல்வ வளமாக இருக்கும் பொருட்டு அவனது பிரிவைத் தாங்கிக் கொள்ளும் தியாகத்தை செய்பவள் தாய்.

'ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன் மகனை சான்றோன் என கேட்ட தாய்' என்றுதான் வள்ளுவர் எழுதி இருக்கிறாரே தவிர தகப்பன் என்று எழுதவில்லை. தகப்பனுக்கும் தன் மகன் சான்றோன் என புகழப்படும் பொழுது சந்தோஷம்தான். என்றாலும் தாயின் பங்கு இவ்விஷயத்தில் மிக அதிகம். ஒரு ஆண், யாருக்காவது மிக உண்மையாக, உன்னதமான சேவை செய்தால், அந்த ஆணைக் கூட 'தாயுமானவன்' என்றுதான் குறிப்பிட்டு பாராட்டுகிறார்கள். தாய், 'தங்கத்தாய்' 'தெய்வத்தாய்' என்று போற்றப்படுகின்றாள். ஒரு பெண், தாயாகும் பொழுது அவளது மனம் மாறுகிறது. கடுமையான குணம் உள்ள பெண்ணும் தாயான பின் இனிமையான குணம் உள்ளவளாய் மாறுகின்றாள்.  பெரும்பாலும் 'அப்பா' தான் பிள்ளைகளை முரட்டுத்தனமாக அடிப்பார் என்பார்கள். அம்மா... மிகவும் அன்போடும், பாசத்தோடும் அரவணைத்து அறிவுரை கூறுவாள். கெஞ்சுவாள்... கதறுவாள். பிள்ளைகளைத் திருத்துவதற்கு தன் அன்பு எனும் அஸ்திரத்தை அயராமல் பயன்படுத்துவாள். 'பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லு' என்பார்கள்.  கல்லைக் கனியாக மாற்றும் கனிவான பாசம் கொண்டவள் தாய். தாய்மையின் சிறப்பைப் பற்றி விவரிக்க வார்த்தைகள் போதாது. குளிர்காலத்தில் சிறு நெருப்பில் ஒரு மிதமான வெப்பத்தில் நமக்கு ஒரு இதமான சுகம் கிடைக்கும். அது போல தாயின் ஸ்பரிஸத்தில், தாயின் அன்பில் அந்த இதமான சுகம் கிடைக்கின்றது. அளவிடமுடியாத ஆறுதல் கிடைக்கின்றது.

உண்மையிலேயே பிள்ளைகள் தவறு செய்திருந்தாலும் 'என் பிள்ளை தப்பு பண்ணி இருக்க மாட்டாள்/மாட்டான்' என்று திடமாக நம்புவது தாய் மனம்.

ராஜ்ஜியத்தை ஆளும் மகாராஜா, நாட்டை ஆளும் மந்திரி... யாராக இருந்தாலும் சரி, அவர்களை பெற்றெடுத்து, பேணி வளர்த்தது தாய்தான். தாய் இல்லாமல் யாரும் இல்லை.

தன் மகன் முரடனாகவோ, போக்கிரியாகவோ இருந்தால் கூட அவன் 'பசிக்குதும்மா' என்று ஒரு வார்த்தை சொன்னால் போதும், உடனே அவன் பசியாற உணவை எடுத்துப் போடுவாள் தாய். அவன் ருசித்து, சாப்பிடும் பொழுது, நயமாக அவனுக்கு  புத்திமதிகள் கூறி அவனைத் திருத்த முயற்சிப்பவளும் தாய்தான்.

தாயை மதிப்பவன் தரணியில் தலை நிமிர்ந்து வாழ முடியும். தாய்க்குத் தலை வணங்கினால் நிலை பெற்ற நிம்மதியான வாழ்வு கிடைக்கும்.

மகனுக்கு திருமணம் ஆனபின், அன்றுவரை, தான் வளர்த்த அன்பு மகனை மருமகள் என்ற இன்னொரு பெண்ணிடம் தாரை வார்த்துக் கொடுப்பவள் தாய். மனைவி என்ற ஸ்தானத்தில் மகனுக்கென்று ஒரு துணைவி வந்தபின் அந்த நிலைமாற்றத்தைத் தாங்கிக் கொள்வதற்கு மனதளவில் மிகுந்த பாடுபடுபவள் தாய். தனக்கு மருமகள் என்ற ஸ்தானத்தில் மகனது மனைவியாய் தன் மகனின் வாழ்வில் பங்கெடுப்பவள்தான் அந்தப் பெண் என்ற போதும் அன்று வரை மகனுக்கு அனைத்துமாக இருந்த அந்தத் தாயின் மனதில் ஒரு பய உணர்வு தோன்றும். ஒரு திகில் உணர்வு அவளைத் தாக்கும். அத்தகைய உணர்வுகளில் சிக்கித் தவிக்கும் தாய் உள்ளம் தவியாய் தவிக்கும்.

தன் மகனைத் 'தன்னிடமிருந்து மருமகள் பிரித்து விடுவாளோ' என்ற அச்சத்தில் அவளது தாய்மை பரிதவிக்கும். மாமியாருக்கும், மருமகளுக்கும் 'புரிந்து கொள்ளுதல்' எனும் நேயம் மலரும் வரை, தாயின் இதயத்தை ஒரு துயர வண்டு துளைத்துக் கொண்டிருக்கும்.

இது நாள் வரை தான் பரிமாறி சாப்பிட்ட மகன், தான் எடுத்துக் கொடுத்த உடைகளைப் போட்ட மகன், தலைவலி என்றால், தன் கையால் தைலம் தேய்த்துக்கொண்ட மகன்... இன்று மனைவி எனும் இன்னொரு பெண்ணின் சேவையில் அவனது வாழ்வு மாறி விட்டதே என்ற ஏக்கத்தில் தவிப்பது அவளது தாய்மை உணர்வு. தாய்மை உணர்வின் வெளிப்பாடுகளை மருமகள் புரிந்துக் கொள்ளாத படியால் 'கொடுமை படுத்தும் மாமியார்' எனும் பழிச்சொல்லை ஒரு தாய் ஏற்றுக் கொள்ள நேரிடுகிறது.  அவளது ஆழமான அன்பே, அவளுக்கு அவப்பெயரை ஏற்படுத்திவிடுகின்றது.


புது மருமகள், தன் மாமியாரை புரிந்து கொண்டு செயல்பட்டால் குடும்பத்தில் குழப்பம் நேரிடாது. திருமணமான புதிதில் கொஞ்ச நாளைக்கு 'உங்க மகன்' 'உங்க மகன்' என்றே குறிப்பிட்டு பேச வேண்டும்.

'உங்க மகனுக்கு நீங்க சமைச்சாத்தான் பிடிக்குது அத்தை...' 'உங்க மகனுக்கு உங்க கையால போட்ட காபிதான் வேணுமாம் அத்தை' 'எப்பப் பார்த்தாலும் உங்க புகழ்தான் பாடுகிறார் அத்தை' எதுக்கெடுத்தாலும் 'எங்க அம்மா' 'எங்க அம்மா' என்றுதான் அத்தை பேசறார். இவ்விதமெல்லாம் பேசினால் அம்மாவிற்கு, தேவை இல்லாத பயம் நீங்கும். 'மருமகள், தன் மகனைத் தன்னிடமிருந்து பிரிக்க வந்தவள் அல்ல.. இவளும் அவனுக்கு இன்னொரு தாய்' எனும் நம்பிக்கை, அந்தத் தாயின் உள்ளத்தில் உதயமாகும். மெள்ள மெள்ள அந்த நம்பிக்கை அதிகரிக்கும். அதன்பின், தன் மனத்தில் இறுகப் பற்றி கொண்டிருந்த மகனைத் தன் மருமகளிடம் முழு மனதுடன் ஒப்படைக்கும் மனநிலை உருவாகும். அதன்பின் அம்மாவின் உள்ளம் தெளிவு அடையும். அதனால் மாமியார்-மருமகள் உறவில் விரிசல் ஏற்படாமல் இருவருக்கும் விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை மலரும். தொடர்ந்து வளரும்.

கோபத்தால், சுடு சொற்களை வீசும் பிள்ளை மீது கூட வசை பாடாமல் மௌனமாய் அந்தத் துயரத்தைத் தாங்கிக் கொள்பவள் தாய். 'பேசினது என் பிள்ளைதானே' 'என்மீது உரிமை இருப்பதால்தானே பேசுகிறான்' என்று தாங்கிக் கொள்வாள். சகிப்புத்தன்மையின் சிகரத்தைத் தொடுபவள் தாய்.

தாய்ப்பாசம் எனும் நீருற்றி, பிள்ளையை வேரூன்றி வளர்த்து விடுபவள் தாய். விழுதுகள் விட்ட ஆலமரம் போல குடும்பம் தழைத்த பின்னால், அந்த ஆலமரத்திற்கு அன்பு எனும் உரம் போட்டு வளர்த்த அந்த தாயின் தியாகச் செயல்பாடுகளை நினைத்துப் பார்த்து நன்றியுடன் நமஸ்கரிக்க வேண்டும்.

சில பிள்ளைகள் தன் அம்மாவை விட உயர் கல்வி கற்றபின் 'உங்களுக்கு என்னம்மா தெரியும்?' 'உங்களுக்கு, ஒண்ணுமே தெரியாதும்மா' என்று பேசுவார்கள். பிள்ளையை விட அறிவில் சிறந்த தாயாக இருந்தாலும் கூட பிள்ளை சொல்லும் அந்த 'உங்களுக்கு ஒண்ணும் தெரியாதும்மா' என்ற வார்த்தைக்கு எதிர்வாதம் செய்யாமல் மௌனமாய் புன்னகை பூப்பாள் தாய்.

பிள்ளைகளுக்கு அறிவும், திறமையும் தாயின் மரபணுவில் இருந்தும், தகப்பனின் மரபணுவில் இருந்தும்தானே வருகிறது?! இது புரியாமல் பேசும் பிள்ளைகள், மேற்படி பேசுவது நகைப்புக்குரியது.

'அப்பா' என்று அம்மா யாரைக் காட்டுகிறாளோ அவரைத்தான் நாம் அப்பா என்கிறோம். அம்மா சொல்லாமல் நம் அப்பாவை நாம் அறிய முடியுமா? அம்மாவின் சொல்லில்தானே அந்த அசைக்க முடியாத நம்பிக்கை!

பேறு காலத்தின் போது ஏற்படும் பெரும் வலியைக் கூட ஒரு பெரும்பேறாகக் கருதுபவள் பெண்.

அம்மாவிற்கு மகளாகப் பிறந்து வளர்வதைவிட, கணவனுக்கு மனைவியாய் வாழ்வதைவிட ஒரு பிள்ளைக்குத் தாய் ஆகும் நிலையைத்தான் ஒரு பெண் பாக்யமாகக் கருதுகிறாள். தன் பெண்மை முழுமை அடைந்ததாக எண்ணி பூரிக்கின்றாள்.

'அம்மா' எனும் வார்த்தை வெறும் வார்த்தை அல்ல. அது வாழ்க்கையின் வேதம். புனிதம்.

தன் குடும்பச் சோலையில் பூக்கும் புஷ்பங்களாய் தன் பிள்ளைகளை மென்மையாக பாதுகாப்பவள் தாய்.

கையேந்தும் பிச்சைக்காரர்கள் கூட அம்மா, தாயே என்றுதான் பிச்சை எடுக்கிறார்கள். ஐயா, அப்பா என்று பிச்சை எடுப்பதில்லை. தாய்மையின் இளகிய மனம்தான் இதற்குக் காரணம்.

'எங்க அம்மா வைக்கற மாதிரியே காரக்குழம்பு வச்சிருக்கியே... 'எங்க அம்மா வைக்கற சாம்பார் எவ்ளவு டேஸ்ட்டா இருக்கும் தெரியுமா?! ... 'எங்க அம்மா ஊத்தற முறுகல் தோசை மாதிரி யாராலயும் ஊத்த முடியாது...' 'எங்கம்மா எனக்காக அது செஞ்சாங்க'... 'எங்கம்மா என்னை வளர்க்கறதுக்கு எவ்ளவு கஷ்டப்பட்டாங்க தெரியுமா?' இவையெல்லாம் ஒரு ஆண், தன் மனைவியிடம் மிக சகஜமாக, அடிக்கடி பேசும் உரையாடல்கள்.

ஒரு தாயின் அன்பு, குழந்தை வளர்ப்பில் ஈடுபாடு, ஆழ்ந்த அக்கறை, பாசம், முழுமையான கவனிப்பு மகனின் மனதில் ஊடுருவிப் பாய்ந்துள்ளது. ஆகவேதான் மனைவியிடம் தாயின் பிரதாபங்களை மகன், அடிக்கடி வெளிப்படுத்துகிறான்.

ஆனால் அவனது மனைவிக்கு இந்தப் புகழுரைகள், மனதில் புழுக்கத்தைக் கொடுக்கும். பெரும்பாலான பெண்கள் இவ்விதம்தான் மனம் புழுங்குகிறார்கள்.

'எங்கம்மா கூடதான் என்னை கஷ்டப்பட்டு வளர்த்தாங்க'... 'இவரோட அம்மா மட்டும்தான் கஷ்டப்பட்டாங்களா...' இவ்விதம் அவள் யோசிப்பாள். யாருடைய தாய் என்றாலும் தாய் தாய்தான். கப்பலின் நங்கூரம் கடற்கரை மணலில் பதிவது போல பிள்ளையின் மனதில் தாய்ப்பாசம் பதிந்து விடுகிறது.

இருபத்தி நான்கு வயது வரை தன் தாயை தலை துவட்டி விடச் சொல்லி தினமும் தலை துவட்டும் துண்டை எடுத்துக் கொண்டு அம்மாவிடம் வருவான் மகன். திருமணமான பிறகும் இந்தப் பழக்கத்தை அவன் மாற்றிக் கொள்ளாத பட்சத்தில் அவனுடைய புது மனைவி, இதைக் கண்டு மனதிற்குள் புகைவாள்.

தலை துவட்டலால், பிரச்னை தலை தூக்கும். வளரும். தம்பதிகளின் சந்தோஷத்தைத் தாக்கும். 'புரிந்து கொள்ளுதல்' என்ற உணர்வு இல்லாமைதான் பிரச்னை தோன்றுவதற்கு காரணம். திருமணமானால் என்ன? அம்மா எப்போதும் அம்மாதானே? அதே புது மனைவி என்ற பெண்... நாளை ஒரு தாயானபின்? அப்பொழுது உணர்வாள் தன் மாமியாரும் ஒரு தாய்தானே என்று.

அம்மா என்பவள் உறவுகளைக் கோர்க்கும் சங்கிலி போன்றவள். தான் பெற்ற பிள்ளைகள் ஒற்றுமை இல்லாமல் சண்டை போட்டுக் கொண்டிருந்தால், அவர்களை சமரசம் செய்து வைக்க மிகுந்த பாடு படுவாள். கெஞ்சுவாள். பேத்தியோ, பேரனோ உள்ள பாட்டி எனில் பேத்திக்காக/ பேரனுக்காக சிபாரிசு செய்து தன் மகனிடம் பேசுவாள். பாட்டி என்ற நிலையிலும் மகனிடம் பேசும் உரிமை அந்த தாய்க்கு சற்று அதிகம் உண்டு. 'உன் தங்கை நல்லா இருக்கணும்ன்னா நீ விட்டுக் கொடுத்து போ... உன் தங்கைதானே... தம்பிதானே... அண்ணன் தானே... என்று உடன் பிறந்த உறவுகளுக்குள் சமாதானமாகப் பேசுவாள் தாய்.

'நான் உயிரோடு இருக்கும்வரை நீங்கள் யாரும் மனஸ்தாபம் கொள்ளக் கூடாது; பிரிந்து விடக்கூடாது' என்று அன்புக் கட்டளையிட்டு குடும்பத்தின் உறவுகள் சுமுகமாய் இருப்பதற்கு ஒரு பாலமாய் இருப்பவள் தாய்.

'எங்கம்மா சொன்னா சரியாத்தான் இருக்கும்' என்று பிள்ளைகள் நூற்றுக்கு நூறு நம்பும் அளவிற்கு தாயின் செயல்பாடுகள் அவர்களது மனதில் நம்பிக்கை விதையை விதைத்திருக்கும்.


மற்ற உறவுகளின் பாசத்தைவிட தாய்ப்பாசம்தான் மிக உயர்ந்தது. உடல் ஊனமுற்ற குழந்தை என்றாலும், மூளை வளர்ச்சியற்ற குழந்தை என்றாலும் வெறுத்து ஒதுக்காமல் பாடுபட்டு வளர்ப்பாள் தாய். தன் வாழ்வையே அந்த ஊனமுற்ற குழந்தைக்காக அர்ப்பணிப்பாள். தன் சகல சுகங்களையும் தியாகம் செய்து குழந்தையை தூக்கிக் கொண்டு மருத்துவமனைக்கு அலையாய் அலைவாள். ஒரு தாயின் மனதிற்கு மட்டுமே அத்தகைய பாசமும், பலமும் உண்டு.

ஊனமான குழந்தை பிறந்து விட்டதே என்று வேதனைப்பட்டாலும் 'எப்படியானாலும் இவன் என் மகன்... இவள் என் மகள்' என்று தியாகம் மிகுந்த பாசம் கொண்டவள் தாய்.  'என் குழந்தைக்கு நான்தான் பாதுகாப்பு... என் பிள்ளைக்கு எல்லாம் நானே...' என்று ஒரு அபரிதமான அன்பு கொண்டு ஊனமுற்ற குழந்தைக்கு சேவை செய்துவரும் தாய்மார்கள், அற்புதமான அன்னையர்! தன்னிச்சையாக செயல்பட முடியாத அந்தக் குழந்தைக்கு முப்பது வயதானாலும் சரி நாற்பது வயது ஆனாலும் சரி மலம், சிறுநீர் அள்ளிப்போட்டு முகம் சுளிக்காமல் சேவை செய்யும் தாய்கள் தேவதைகள். அடி வயிறு நொந்து பெற்ற பாசம்தான் என்னமாய் அவர்களை தியாகம் செய்ய வைக்கிறது?! தாய்மை எனும் புனிதமான உணர்வுக்குள் சிறைப்படுத்துகிறது.

'என் பிள்ளை... என் ரத்தம்... என்னில் தோன்றியவன்/ தோன்றியவள்...' என்ற எண்ணம் தாயின் மனதில் வியாபித் துள்ளது.

கணவனை இழந்த பெண்ணும், கணவனை பிரிந்த பெண்ணும் ஒரு தாயாக இருக்கக் கூடிய பட்சத்தில் அவளைச் சுற்றியுள்ள துன்பங்களையெல்லாம் சகித்துக் கொண்டு 'நான் என் பிள்ளைக்காக வாழ்வேன். கஷ்டப்பட்டாலும் என் பிள்ளையை வளர்ப்பேன்' என்கிற வைராக்கியத்தை தன்னுள் உருவாக்கிக் கொண்டு பிள்ளைக்காக மட்டுமே உயிர் வாழ்கிறாள்.

கணவன், கெட்டவனாக இருந்தாலும் அவனால் பெற்றுக் கொண்ட பிள்ளை மீது பாசம் வைத்து வளர்ப்பவள் தாய். அயோக்கிய குணம் கொண்ட கணவன், மனைவியை கைவிடுவது என்பது தற்போது சகஜமாக நிகழும் ஒரு விஷயம். அப்படிப்பட்ட அயோக்கியனுக்குப் பிறந்த தன் பிள்ளையை ஒழுக்க சீலனாக வளர்க்கப் பாடுபடுபவள் தாய். 'கணவன் மோசமானவன்... எனவே அவன் மூலம் பிறந்த பிள்ளையும் எனக்கு தேவை இல்லை' என்று பிள்ளையை விட்டுவிட்டு தாய் விலகுவாள் எனில், அந்த பிள்ளைகள், சமூக விரோதிகளாக உருமாறுவதற்கு வாய்ப்புகள் ஏற்பட்டு விடுகின்றன.

'இவனது அப்பாவைப் போலல்லாமல் இவனை நல்லவனாக வளர்த்து ஆளாக்குவேன்' என்று சபதம் எடுத்த தாய்மார்கள் வளர்த்த பிள்ளைகள், சமூகத்தில் உயர்ந்த மனிதன் எனும் பெயரை எடுப்பதற்குக் காரணம், தாயின் அகலாத அன்பும், அவளது அயராத உழைப்பும்தான்.

சரித்திரத்தில் இடம் பெற்ற பலரும், தங்கள் தாயையும், தாய்மையையும் போற்றி வணங்கியவர்கள். தாயின் ஆசிகள் பெற்று செய்யும் எல்லா செயல்களும் வெற்றியை அளிக்கும்.

புராண காலத்தைச் சேர்ந்த மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் துறவறம் மேற்கொள்வதற்தென்று முடிவு செய்திருந்த நிலையில் அவரது தாயார், 'மகனை பிரிய நேரிடுமே' என்று அதற்கு சம்மதிக்க வில்லை. தாயின் முழுமையான சம்மதம் கிடைக்க வேண்டும் என்று காத்திருந்த ஆதிசங்கரர், ஒரு நாள் ஆற்றில் குளிக்கும்பொழுது முதலையின் பிடியில் சிக்கிக் கொண்டார். இதைக் கண்ட அவரது தாய் அழுதார். கதறினார். அப்போது மகன் ஆதிசங்கரர் ஒரு நிபந்தனை விதித்தார்.

தான் துறவறம் மேற்கொள்ள அம்மா சம்மதித்தால் முதலையின் பிடியில் இருந்து தப்பி வருவதாகக் கூறினார். இதைக் கேட்ட தாய், 'தன் மகன் துறவறம் மேற்கொண்டாலும் பரவாயில்லை... உயிரோடு இருந்தால் போதும்' என்ற தியாக உணர்வோடு ஆதிசங்கரர் துறவறம் கொள்வதற்கு சம்மதம் அளித்தார். மகனைப் பிரிந்தாலும் பரவாயில்லை, அவன் உயிரோடு வாழ்ந்தால் போதும் என்று நினைக்க வைத்தது தாய்மை. தாய்மைக்கு உள்ள உயர்ந்த எடுத்துக்காட்டுகளுள் ஒன்று ஆதிசங்கரரை பெற்றெடுத்த தாயின் தூய்மையான தாய்மை.

மராட்டிய வீரர் சிவாஜி, தன் தாயைப் போற்றி வணங்கியவர். மதித்தவர்.

நம் தமிழ் திரைப்படத்தின் முன்னணி கதாநாயகராகத் திகழ்ந்த அமரர் எம்.ஜி.ஆர் அவர்கள், தன் தாய் அன்னை சத்யா அவர்களை தெய்வமாக மதித்தவர். அன்னையின் ஆசிகள் இருந்தால் அகில உலகையும் தங்கள் திறமையால் வசப்படுத்தலாம் என்பதை தன் வாழ்வில் நிரூபித்தவர் எம்.ஜி.ஆர். அவர்கள்!

'வெற்றி மீது வெற்றி வந்து என்னைச் சேரும். அதை வாங்கித் தந்த பெருமை எல்லாம் உன்னைச் சேரும்' என்று தாய்மை பற்றி கவிஞர் பாடினார்.

கட்டிலில் இணைந்து, தொப்புள் கொடியில் பிணைந்து, பூமியில் பிறந்து, தொட்டிலில் வளர்ந்து உருவாகும் ஒரு மகன் அல்லது மகளின் படிப்படியான வளர்ச்சியில் பெரும்பான்மையான பங்கு வகிப்பவள் தாய்.

தெய்வங்களிடம் சரண் அடையும் பொழுது நம் மனது எந்த அளவிற்கு இறகுபோல் லேஸாகிறதோ... அதுபோல தாயிடம் நம் கஷ்டங்களைக் கூறும்பொழுது, நஞ்சு போன்ற துன்பம் கூட பஞ்சுபோல பறக்கும். இதைத்தான் கவிஞர், 'தாயின் மடியில் தலை வைத்திருந்தால் துயரம் தெரிவதியில்லை... தாயின் வடிவில் தெய்வத்தைக் கண்டால் வேறொரு தெய்வம் இல்லை' என்று பாடினார். தாய்மையை மிக ஆழமாகவும், அழகாகவும் வார்த்தைகளில் வடித்துள்ளார்!

அம்மாவைப் பற்றிய பாடல்கள் அத்தனையும் ஆத்மார்த்த மானவை.

விலை கொடுத்து வாங்க முடியாதது தாய்மை. விலை மதிப்பிட முடியாததும் தாய்மை. தாய்மை ஒரு தவம். தாய்மையின் அன்பை அனுபவிப்பது ஒரு வரம்.

நாம் எத்தனை தவறுகள் செய்தாலும், தாய்க்கே தீங்குகள் புரிந்தாலும், அவற்றை மன்னித்து, மறந்து நமக்கு மேன்மேலும் நன்மைகளை செய்பவள் தாய்.

அன்பில் விளைந்த அமுதம் தாய். நம்மில் மலர்ந்த தெய்வம் தாய். உயிரில் கலந்த உறவு தாய். நெஞ்சில் சுடர்விடும் தீபம் தாய். நாம் அடி எடுத்து வைக்கும் பாதைகளெல்லாம் நம்மோடு தொடர்ந்து நம்மை நல்வழிப்படுத்துபவள் தாய். நம் வாழ்வெனும் சோலையில், வீசும் தென்றல் தாய். ஆறுதல் அளித்திடும் அருள்மொழி மொழிபவள் தாய். கலங்கிடும் வேளையில் நம்மை காப்பவள் தாய். தாய் இல்லாத வாழ்வு வெறுமையாகும். தாயின் அன்பில்தான் வாழ்வு முழுமை அடையும். அம்மா தன் வயிற்றில் சுமந்த பிள்ளையான நாம் அனைவரும், நம் அம்மாவை இதயத்தில் சுமந்து ஆராதிக்க வேண்டும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.