Logo

இடா

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4379

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

இடா- Ida

(போலேண்ட் நாட்டு திரைப்படம்)

2013ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படம் 82 நிமிடங்கள் ஓடக் கூடியது. இது ஒரு கருப்பு- வெள்ளை படம் என்பது குறிப்பிடத்தக்கது. Pawel Pawlikowski (பாவெல் பாவ்லிகோவ்ஸ்கி) இயக்கிய இப்படத்திற்கு 2014ஆம் வருடத்திற்கான 'European Film Acadamy'யின் சிறந்த திரைப்படத்திற்கான விருது கிடைத்தது. ஆங்கில மொழியில் எடுக்கப்படாத சிறந்த திரைப்படத்திற்கான விருதை 'British Academy of Film and Television Arts (BAFTA)' அமைப்பு இப்படத்திற்கு 2014ஆம் ஆண்டில் அளித்தது. சிறந்த வெளிநாட்டு திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு, 2015ஆம் ஆண்டில் 'Academy Award'ஐ (ஆஸ்கார் விருது) 'Ida' திரைப்படம் பெற்றது.

இவ்வளவு விருதுகளையும் ஒரு Black and white திரைப்படம் அள்ளியிருக்கிறது என்றால், அது ஒரு குறிப்பிடத்தக்க படமாக இருக்கும், மாறுபட்ட கதைக் கருவைக் கொண்ட படமாக இருக்கும் என்பதை யாராலும் புரிந்து கொள்ள முடியும் அல்லவா?

உண்மைதான். 'இடா' ஒரு வித்தியாசமான கதைக் கருவை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான். அப்படத்தின் கதை இதோ...

1962ஆம் வருடம். கத்தோலிக்க கிறிஸ்தவ கான்வென்டில் 'இடா' என்ற அழகான இளம் பெண் இருக்கிறாள். பல வருடங்களாக அவள் அந்த கான்வென்டில்தான் படித்தாள். அவள் ஒரு அனாதை. அவளுடைய தந்தையையும், தாயையும் அவள் பார்த்ததே இல்லை. மிகவும் சிறிய வயதிலேயே அந்த கான்வென்டில் கொண்டு வந்து சேர்க்கப்பட்டவள் அவள். அங்கேயே தங்கி, படித்து இப்போது ஒரு இளம் பெண்ணாக ஆகியிருக்கும் அவள் கத்தோலிக்க கன்யாஸ்திரீயாக உறுதி மொழி எடுத்துக் கொள்ள இருக்கிறாள். போலேண்ட் நாட்டை இரண்டாம் உலகப் போரின்போது ஜெர்மனியர்கள் ஆக்கிரமித்து விடுகிறார்கள். அப்போதுதான் தான் அனாதையாக ஆகியிருக்கிறோம் என்பதை இடா தெரிந்து கொள்கிறாள். கன்யாஸ்திரீயாக உறுதிமொழி எடுப்பதற்கு முன்பு, உலகத்தில் அவளுக்குச் சொந்தமென்று இருக்கக் கூடிய ஒரே ஒரு உயிரான அவளுடைய அத்தை Wanda Gruzஐப் போய் பார்க்கும்படி கான்வென்டில் கூறுகிறார்கள். இந்த இடத்தில் ஒரு விஷயத்தை நான் கூறியாக வேண்டும். கான்வென்டில் அந்த இளம் பெண்ணின் பெயர் 'இடா' அல்ல. அங்கு அவளுடைய பெயர் அன்னா. அந்தப் பெயரில்தான் அவள் அங்கு சேர்க்கப்பட்டிருக்கிறாள். அந்தப் பெயரைக் கொண்டுதான் அங்கு இருப்பவர்கள் அவளை அழைக்கிறார்கள்.

தன் அத்தை வான்டாவைத் தேடி புறப்படுகிறாள் அன்னா. ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் அவளுடைய அத்தை தனியாக வசித்துக் கொண்டிருக்கிறாள். நடுத்தர வயதைத் தாண்டிய அவள் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவள். வக்கீலாக இருந்து, எல்லோரிடமும் நல்ல பெயரைப் பெற்றவள். 'தன்னுடைய அத்தை இப்படித்தான் இருப்பாள்' என்று அன்னா தன் மனதில் கற்பனை பண்ணி வைத்திருந்ததற்கு நேர் மாறாக இருக்கிறாள் வான்டா.

அவள் இடைவிடாமல் புகை பிடிக்கக் கூடியவாக இருக்கிறாள். தொடர்ந்து மது அருந்திக் கொண்டே இருக்கிறாள். செக்ஸ் விஷயத்திலும் மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் கொண்டவளாக இருக்கிறாள். மிகச் சிறந்த கம்யூனிச கொள்கைகளால் ஈர்க்கப்பட்டவளாகவும், சாதுரியமான வாதத் திறமையால் புகழ் பெற்ற வழக்கறிஞராகவும் இருந்த அவள் இந்த அளவிற்கு மாறி விட்டிருக்கிறாள் என்பதற்குக் காரணங்கள் போலேண்ட்டில் உண்டான அரசியல் மாற்றங்களும், தன்னுடைய சொந்த வாழ்க்கையில் அவளுக்கு உண்டான இழப்புகளும், ஏமாற்றங்களும்தான். சிறு வயதில் பார்த்த ஒரு சிறுமி, இளம் பெண் அன்னாவாக வளர்ந்து தனக்கு முன்னால் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும்போது, வான்டாவிற்கு சந்தோஷமும் ஆச்சரியமும் உண்டாகின்றன. அன்னாவையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறாள் வான்டா. அவளுடன் உரையாடும்போதே சிகரெட்டை விடாமல் பிடித்துக் கொண்டும், மது அருந்திக் கொண்டும்தான் அவள் இருக்கிறாள். செக்ஸ் சம்பந்தப்பட்ட விஷயங்களை சர்வ சாதாரணமாக அன்னாவிடம் அவள் பேசுகிறாள். 'புகை, மது, செக்ஸ்... இவை மூன்றும் எவ்வளவு பெரிய விஷயங்கள்! மனித வாழ்க்கையை மிகவும் சந்தோஷங்கள் நிறைந்ததாக வைத்திருப்பவையே இவைதாம்' என்று கூறும் வான்டா 'உனக்கு இந்த அனுபவங்கள் எதுவுமே இல்லை. அனுபவித்துப் பார்த்தால்தான், இவற்றில் இருக்கும் ஆனந்த அம்சங்கள் என்ன என்பதையே நம்மால் புரிந்து கொள்ள முடியும்' என்றும் கூறுகிறாள்.

வான்டா கூறித்தான் அன்னாவிற்கே தெரிய வருகிறது- தன்னுடைய உண்மையான பெயர் அன்னா அல்ல என்பதும், இடா லெபென்ஸ்டெய்ன் (Ida Lebenstein) என்பதும். இடாவின் பெற்றோர்கள் யூதர்கள் என்பதும் அப்போது தெரிய வருகிறது.

1939லிருந்து 1945ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இரண்டாவது உலகப் போரின்போது போலேண்ட்டை ஜெர்மனி ஆக்கிரமித்துக் கொள்கிறது. அப்போது யூதர்களான இடாவின் தாயும், தந்தையும் கொல்லப்பட்டு விடுகிறார்கள். அதிர்ஷ்டம் என்றுதான் கூற வேண்டும்- மிகவும் சிறிய வயதில் இருந்ததால், இடாவை உயிருடன் விட்டு விடுகிறார்கள். அதற்குப் பிறகுதான் இடா கான்வென்டில் சேர்க்கப்பட்டதும், அன்னா என்று பெயர் வைக்கப்பட்டதும், படித்ததும், வளர்ந்ததும்...


ஜெர்மனி, போலேண்டைப் பிடித்தது வான்டாவிற்குச் சிறிதும் பிடிக்கவில்லை. அதை அவள் எதிர்க்கிறாள். ஆனால், அவள் எதிர்த்து, என்ன மாறுதல் உண்டாகி விடப் போகிறது? அதனால் விரக்தி உணர்வுடனும், சலிப்புடனும் தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள் வான்டா. பல இடங்களுக்கும் இடாவை, வான்டா அழைத்துச் செல்கிறாள். 'உலகத்தில் இருக்கக் கூடிய எதையும் தவறானவை என்றோ, பாவச் செயல்கள் என்றோ நினைக்கக் கூடாது. உனக்குக் கூட நான் ஒரு அறிவுரை கூற விரும்புகிறேன். கன்யாஸ்திரீயாக உறுதிமொழி எடுத்துக் கொள்வதற்கு முன்பு, பலராலும் மோசமானவை, தப்பானவை, செய்யக் கூடாத பாவ காரியங்கள் என்று நினைக்கக் கூடிய விஷயங்களை நீயும் தெரிந்து கொள்.  எதையுமே தெரிந்து கொள்ளாமல் இருப்பது என்பது நல்ல விஷயமா என்ன? நான் எப்படி இவற்றையெல்லாம் கற்று, நிறைய அனுபவங்களுடன் இருக்கிறேனோ, அத்தகைய அனுபவத்தை நீயும் பெற வேண்டும்' என்கிறாள் இடாவிடம் வான்டா. ஆனால், இடா அதை வெறுமனே காதில் மட்டும் வாங்கிக் கொள்கிறாள். அவ்வளவுதான்.

வான்டா, இடாவிற்கு லிஸ் (Lis) என்ற இளைஞனை ஒரு ரெஸ்ட்டாரெண்டில் அறிமுகப்படுத்தி வைக்கிறாள். அழகான தோற்றத்தைக் கொண்ட அவன் ஒரு இசைக் கலைஞன். பாடகன். சேக்ஸஃபோன் என்ற இசைக் கருவியை இசைப்பவன். அவனுடைய இசை நிகழ்ச்சிக்கு வான்டா, இடாவை அழைத்துச் செல்கிறாள். அவனுடன் நெருங்கிப் பழகும்படி இடாவிடம் கூறுகிறாள் வான்டா. ஆனால், அதை இடா ஏற்றுக் கொள்ளாமல் வெறுமனே நின்று கொண்டிருக்கிறாள்.

'இரண்டாவது உலக போரின்போது கொல்லப்பட்ட என் பெற்றோரின் உடல்கள் இப்போது எங்கு இருக்கின்றன?' என்று இடா கேட்பதைத் தொடர்ந்து, காரில் அவளை ஒரு கிராமத்திற்கு வான்டா அழைத்துச் செல்கிறாள். நகரத்திற்கு வெளியே மிகவும் அமைதியாக இருக்கிறது அந்த ஊர். அங்குதான் இடாவின் வீடு இருக்கிறது. இடாவின் தாயும் தந்தையும் உயிருடன் இருந்தபோது, அந்த வீட்டில்தான் இருந்தார்கள். இடா பிறந்தது கூட அந்த வீட்டில்தான். அதை இப்போது ஃபெலிக்ஸ் ஸ்கிபா (Feliks Skiba) என்ற மனிதனின் குடும்பம் ஆக்கிரமித்து, வாழ்ந்து கொண்டிருக்கிறது. இரண்டாவது உலகப் போரின்போது இடாவின் பெற்றோரை, ஃபெலிக்ஸ் குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு, அங்கிருந்து வான்டா கிளம்பிச் சென்று விடுகிறாள். ஜெர்மனிய அதிகாரிகளின் கண்களில் பட்டு விடாதபடி, யூதர்களான அந்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் பத்திரமாக, மறைத்து வைத்திருக்கிறான் ஃபெலிக்ஸ். அவர்களுக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள விரும்பினால், எதையும் மறைக்காமல் தான் கூறுவதற்கு தயாராக இருப்பதாகவும், அதைக் கேட்ட பிறகு தன்னுடைய குடும்பத்தை இப்போது இருக்கும் வீட்டை விட்டு விரட்டியடித்து விடக் கூடாது என்றும் கேட்டுக் கொள்கிறான். அதற்கு வான்டாவும், இடாவும் ஒத்துக் கொள்கிறார்கள்.

யூதர்களாக இருக்கும் அந்த குடும்பத்தை ஒவ்வொரு நாளும் ஜெர்மனியர்களின் கண்களில் படாமல், பத்திரமாக பாதுகாப்பது சாதாரண விஷயமல்ல என்பதை உணரும் ஃபெலிக்ஸ், இடாவின் தந்தையையும், தாயையும் ஒரு அடர்ந்த காட்டுக்குள் அழைத்துக் கொண்டு சென்று, தானே கொன்றதாக கூறுகிறான். அந்தச் சமயத்தில் இடா மிகவும் சிறிய பெண்ணாக இருந்ததாலும், அவளை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்ற முடியும் என்பதாலும், அவளை ஒரு கான்வென்ட்டில் கொண்டு போய் சேர்த்து விட்டதாகவும் அவன் கூறுகிறான். அதே நேரத்தில் அவர்களுடன் இருந்த வான்டாவின் சிறிய வயது மகன் கருப்பு நிறத்தில் இருந்ததாலும், அவனை என்ன செய்வது என்று தெரியாமல் தவித்ததாகவும், இறுதியில் இடாவின் பெற்றோருடன் சேர்த்து, அவனையும் கொன்று விட்டதாக கூறுகிறான் ஃபெலிக்ஸ். யூதர்களுக்கு அடைக்கலம் கொடுப்பது தெரிந்து விட்டால், ஜெர்மனிய அதிகாரிகள் தன்னுடைய குடும்பத்தை நிச்சயம் ஒரு வழி பண்ணி விடுவார்கள் என்று மனதில் அச்சத்திற்கு ஆளாகும் ஃபெலிக்ஸ், தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்றிக் கொள்வதற்கு இதைத் தவிர வேறு முடிவு எடுக்க முடியவில்லை என்பது ஒரு உண்மையாக இருந்தாலும், இடாவின் குடும்பத்திற்குச் சொந்தமான அந்த வீட்டை தனக்குச் சொந்தமானதாக ஆக்கிக் கொள்ள வேண்டும் என்று அவன் ஆசைப்படுவதும் கூட ஒரு காரணம்தான். அதனால்தான், இப்போது கூட இடாவிடமும் வான்டாவிடமும் அந்த வீட்டை விட்டு தன்னை வெளியேற்றக் கூடாது என்ற நிபந்தனையை அவன் வைக்கிறான்.

ஏதோ ஜெர்மனியர்கள்தான் அவர்களை யூதர்கள் என்பதற்காக கொன்றிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டிருந்த இடாவிற்கும், வான்டாவிற்கும் ஃபெலிக்ஸ் கூறிய தகவல்கள் அதிர்ச்சி அளிக்கக் கூடியனவாக இருக்கின்றன. எனினும், அவனை அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அப்படிப்பட்ட இக்கட்டான சூழ்நிலையில் அவன் வேறு என்னதான் செய்ய முடியும் என்று அவர்களும் நினைப்பதே காரணம்.

இடாவின் பெற்றோரைப் புதைத்த இடத்திற்கு அந்த இரு பெண்களையும் ஃபெலிக்ஸ் அழைத்துச் செல்கிறான். ஒரு காட்டுப் பகுதியில் அந்த புதைக்கப்பட்ட இடம் இருக்கிறது. தான் புதைத்த இடத்தை ஃபெலிக்ஸ் தோண்டுகிறான். மண்ணின் ஆழத்தில் எலும்புத் துண்டுகள் கிடக்கின்றன. அவற்றை இடாவும், வான்டாவும் எடுத்து, Lublin (லப்லின்) என்ற இடத்தில் இருக்கும் யூதர்களின் இடுகாட்டிற்குக் கொண்டு சென்று புதைக்கிறார்கள். தன்னுடைய தாய், தந்தையின் எலும்புகளை தன் கையால் மண்ணுக்குள் புதைத்த திருப்தி இடாவிற்கு.


இருவரும் மீண்டும் காரில் பயணத்தைத் தொடர்கிறார்கள். காரில் வரும்போது என்னதான் பேசிக் கொண்டு வந்தாலும், அவர்களுக்கிடையே ஒரு ஆழமான அமைதி நிலவுகிறது. மீண்டும் இருவரும் பிரிகிறார்கள். தங்களுடைய அன்றாடச் செயல்களை இருவரும் தொடர வேண்டுமே! வான்டா தன்னுடைய வீட்டிற்கு வந்து தன் வழக்கமான செயல்களைத் தொடர்கிறாள். சிகரெட் புகைக்கிறாள்... மது அருந்துகிறாள்.... ஆணுடன் உடலுறவு கொள்கிறாள்....

தான் புறப்பட்டு வந்த... தான் இளம் வயதிலிருந்து வளர்ந்த கான்வென்டிற்கு மீண்டும் வருகிறாள் இடா. தன் அத்தை வான்டாவைப் பார்த்தது, அவளுடைய நடவடிக்கைகள், அவள் தன்னிடம் கூறிய வார்த்தைகள், வாழ்க்கை வாழ்வதற்கே என்ற கொள்கையுடன் வாழும் அந்த பெண்ணின் தனித்துவ குணம், தாங்கள் இருவரும் தன்னுடைய கிராமத்திற்குச் சென்று, தன் பெற்றோரின் மரணம் பற்றிய உண்மையான தகவல்களைத் தெரிந்து கொண்டது, இசைக் கலைஞனான லிஸ்ஸைப் பார்த்தது... ஒவ்வொன்றையும் கான்வென்டில் இருக்கும்போது மனதில் அசை போட்டுப் பார்க்கிறாள் இடா. அந்த விஷயங்கள் ஒரு மாறுபட்ட அனுபவங்களாக அவளுக்குத் தோன்றுகின்றன. கான்வென்டின் சுவருக்கு அப்பால் இருக்கும் எதைப் பற்றியும் தெரிந்து கொள்ளாமல் இதுவரை இருந்த இடாவிற்கு, தான் பார்த்தது, கேட்டது ஒவ்வொன்றும் புதுமையாக தோன்றுகின்றன. தன்னுடைய கான்வென்ட் வாழ்க்கை சந்தோஷமற்ற ஒன்று என்ற எண்ணம் அப்போது அவளுக்கு உண்டாகிறது.

இதற்கிடையில் மதுவின் போதையில் ஆழ்ந்து கிடந்த வான்டா, ஏதோ ஒரு விபரீத உணர்ச்சியால் உந்தப்பட்டு தன் வீட்டு ஜன்னலின் வழியாக கீழே குதித்து, இறந்து விடுகிறாள்.

கன்யாஸ்திரீயாக மாறுவதற்கான உறுதிமொழியை எடுத்துக் கொள்வதற்காக கான்வென்டில் படித்த இளம் பெண்கள் வரிசையில் நின்றிருக்கிறார்கள். அந்த வரிசையில் இடாவும் நின்றிருக்கிறாள். ஒவ்வொருவராக முன்னோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள். இன்னும் சிறிது நேரத்தில் இடா உறுதி மொழி எடுக்க வேண்டும். அப்போது மனதில் என்ன நினைத்தாளோ, உறுதி மொழி எடுக்காமல் அங்கிருந்து வெளியேறுகிறாள் இடா.

வான்டாவின் இறுதி சடங்கு நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாள் இடா. அவளுடைய மனம் முழுக்க வான்டா ஆக்கிரமித்திருக்கிறாள். அவள் சிகரெட் புகைப்பது, மது அருந்துவது, செக்ஸ் பற்றி  முழுமையான ஈடுபாட்டுடன் உரையாடுவது... இப்படி ஒவ்வொன்றையும் தன் மனதில் நினைத்துப் பார்க்கிறாள் இடா. வந்திருந்த இடத்தில் அவள் இசைக் கலைஞன் Lisஐப் பார்க்கிறாள்.

வான்டாவின் அடுக்கு மாடி வீடு. இடா தன்னை மாற்றிக் கொள்ள விரும்புகிறாள். வான்டாவின் இரவு நேர உடையை எடுத்து அணிகிறாள். தான் அணிந்திருந்த கன்யாஸ்திரீகளுக்கான ஆடைகளைக் கழற்றி, தொங்க விடுகிறாள். தன் அத்தை வான்டா செய்ததைப் போல சிகரெட் புகைக்க முயற்சிக்கிறாள்... மது அருந்துகிறாள். தொடர்ந்து லிஸ்ஸைப் பார்க்க கிளம்புகிறாள். அவன் இசை நிகழ்ச்சி நடத்திக் கொண்டிருக்கிறான். எப்படி நடனம் ஆட வேண்டும் என்று அவளுக்கு அவன் கற்றுத் தருகிறான்.

அந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, அறைக்குள் இளைஞன் Lisஇன் அணைப்பில் சிக்குண்டு, படுக்கையில் படுத்திருக்கிறாள் இடா.  இருவரும் ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு படுத்திருக்கிறார்கள். இதற்கு முன்பு இப்படிப்பட்ட ஒரு அனுபவமே இடாவிற்கு வாழ்க்கையில் கிடைத்ததில்லை. 'இப்படியெல்லாம் வாழ்க்கையில் இருக்கிறதா?' என்று ஆச்சரியத்துடன் நினைக்கிறாள் இடா. அனைத்தும் முடிகிறது... 'வேறு நகரங்களுக்கு இசை நிகழ்ச்சி நடத்த எங்கள் குழு செல்கிறது. நீயும் எங்களுடன் வருகிறாயா?' என்று கேட்கும் Lis 'நாம் இருவரும் திருமணம் செய்து கொள்வோம். இன்பமாக வாழுவோம். பிள்ளைகளைப் பெற்றெடுப்போம்... வாழ்க்கையைத் தொடர்வோம்' என்கிறான்.

அப்போது இடா 'அதற்குப் பிறகு?' என்று கேட்க, 'அதற்குப் பிறகு என்ன? ஒன்றுமே இல்லை... கடைசி வரை வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான்' என்கிறான் லிஸ்.

பொழுது புலரும் வேளை. லிஸ் கண்களை மூடி ஆழமான தூக்கத்தில் இருக்கிறான். அவன் கூறிய ஒவ்வொன்றையும் தன் மனதில் மீண்டும் நினைத்துப் பார்க்கிறாள் இடா. 'பிறகு ஒன்றுமே இல்லை... கடைசி வரை வாழ்க்கையை நகர்த்த வேண்டியதுதான்' என்று அவன் கூறிய வார்த்தைகள் அவளைச் சிந்திக்க வைக்கின்றன. 'அதற்குப் பிறகு எதுவுமே இல்லை என்றால், பிறகு என்ன திருமண வாழ்க்கை?' என்று அவள் நினைக்கிறாள். 'திருமணம் செய்வது... பிள்ளைகள் பெறுவது... இதுதான் வாழ்க்கையின் நோக்கமா? அதற்குப் பிறகு ஒன்றும் இல்லையா? பிறகு எதற்கு அந்த வாழ்க்கை? என்று அவளுடைய மனம் சிந்திக்கிறது.

படுக்கையை விட்டு எழுகிறாள். ஒரு நிமிடம் யோசிக்கிறாள். தான் அணிந்திருந்த கவுனைக் கழற்றி விட்டு, கொக்கியில் மாட்டியிருந்த கன்யாஸ்திரீகளுக்கான ஆடையை எடுத்து அணிகிறாள். இது எதுவுமே தெரியாமல், உறக்கத்தில் இருக்கிறான் லிஸ்.

புலர் காலைப் பொழுது. அமைதியான சாலை. கன்யாஸ்திரீக்கான ஆடைகளுடன் தான் வளர்ந்த கான்வென்ட்டை நோக்கி நடந்து போய்க் கொண்டிருக்கிறாள் இடா.

அத்துடன் படம் முடிவடைகிறது.

இடாவாக நடித்த Agata Trzebuchowska, வான்டாவாக நடித்த Agata Kulesza -இருவரும் கதாபாத்திரங்களாகவே வாழ்ந்திருந்தார்கள் என்பதைச் சொல்லவும் வேண்டுமா?

இறுதி காட்சியில் எதிர்பார்த்திராத ஒரு திருப்பத்தைத் தந்த இயக்குநர் பாவெல் பாவ்லிகோவ்ஸ்கியைப் பாராட்டி கை குலுக்குகிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.