
Category: சினிமா Published Date Written by சுரா Hits: 5428
வக்கீலுடன் சேர்ந்து நீதிமன்றத்திற்கு வருகிறான் ஹமூன். அங்கு மன நல நிபுணர் ஒருவர் வருகிறார். 'ஹமூனுக்கு மன நிலை பாதிக்கப்பட்டு விட்டது' என்று கூறுகிறாள் மஷித். அதே குற்றச்சாட்டை அவள் மீது அவன் கூறுகிறான். மன நல நிபுணர் மஷித்தின் மனதைச் சோதித்துப் பார்ப்பதற்காக பல கேள்விகளைக் கேட்கிறார். எல்லாவற்றுக்கும் உடனடியாக பதில் கூறுகிறாள் மஷித். 'நான் இந்த மனிதரை விவாகரத்து செய்வதில் மாற்றமே இல்லை. நான் இவருடன் வாழவே முடியாது. இவர் ஒரு முரட்டுத்தனமான மனிதர். உடல் பலம் இருக்கிறது என்பதை பயன்படுத்தி, மென்மையான ஒரு பெண்ணை நசுக்கி அமுக்கப் பார்க்கும் காட்டுத்தனமான குணம் கொண்ட ஒரு மனிதருடன் ஒரு பெண் எப்படி வாழ முடியும்? முடியவே முடியாது....' என்கிறாள் அவள். ஆனால் ஹமூனோ 'நான் இவள் மீது உயிரையே வைத்திருக்கிறேன்' என்கிறான். இருவரில் யார் கூறுவது சரி, யார் பக்கம் நாம் நிற்பது என்று குழம்பிப் போய் நிற்கின்றனர் நீதிமன்றத்தில் இருப்பவர்களும், மன நல மருத்துவரும்.
குடும்ப வாழ்க்கையில் உண்டான பிரச்னைகளால் அமைதியற்ற சூழ்நிலைக்கு ஆளாகிறான் ஹமூன். அதனால் பகல் நேரங்களில் கூட அவன் பல நினைத்துப் பார்க்க முடியாத கனவுகளைக் காண்கிறான். ஒன்றோடொன்று சம்பந்தமில்லாத கனவுகள். அவனுடைய அன்றாடச் செயல்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றன. செய்ய வேண்டியவற்றைச் செய்யாமல் இருக்கிறான். செய்யக் கூடாததைச் செய்கிறான். தினமும் தன் அலுவலகத்திற்கு தாமதமாகவே செல்கிறான். அதனால் அங்கு அவனுக்கு மிகவும் கெட்ட பெயர் உண்டாகிறது. 'நீதிமன்றம், மன நல மருத்துவமனை என்று அலைந்து கொண்டிருக்கிறேன். அதனால்தான் தாமதம்...' என்கிறான். அலுவலக வேலை காரணமாக ஒரு மருத்துவமனைக்குச் செல்லும் அவன், ஏதோ ஒரு உணர்ச்சியால் உந்தப்பட்டு தன் கையிலிருந்து அதிகமான இரத்தத்தை தானே எடுத்து மயக்கமடைந்து, ஆடை முழுவதும் இரத்தம் படிந்திருக்க விழுந்து கிடக்கிறான். அவனுடைய நிலையைப் பார்த்து எல்லோரும் அவனின் மீது பரிதாபப்படுகின்றனர்.
பள்ளிக் கூடத்தில் படிக்கும் தன் மகனைப் பார்ப்பதற்காக ஒரு நாள் அவன் செல்கிறான். தன் மகனுடைய ரிப்பேர் ஆன சிறிய சைக்கிளை அவன் சீர் செய்து கொண்டிருக்க, அப்போது அங்கு வந்த அவனுடைய மனைவி மஷித், சிறுவனை தன் காரில் அழைத்துக் கொண்டு சென்று விடுகிறாள். அதைப் பார்த்து மனம் நொறுங்கிப் போய் விடுகிறான் ஹமூன்.
தொடர்ந்து விவாகரத்து வழக்கு நடக்கிறது. 'எந்தக் காரணத்தைக் கொண்டும் நான் விவாகரத்து தரவே மாட்டேன்' என்பதை ஒவ்வொரு தடவையும் திரும்பத் திரும்ப கூறுகிறான் ஹமூன்.
ஒருநாள் அவனைத் தேடி வரும் மஷித்தின் தாய் 'உனக்குத் தேவை பணம்தானே!ஸ எவ்வளவு வேண்டும்? சொல்லு... நான் காசோலையில் கையெழுத்துப் போட்டு தருகிறேன். நீ என் மகளை விவாகரத்து செய்து விடு' என்று கூறுகிறாள். 'உங்கள் பணம் எனக்கு தேவையே இல்லை. நான் பணத்திற்காகவா உங்களின் மகளைத் திருமணம் செய்தேன்? நான் அவளின் மீது இப்போதும் அன்பு வைத்திருக்கிறேன். அதனால் விவாகரத்து தர முடியாது' என்று ஊறுதியான குரலில் கூறுகிறான் ஹமூன்.
பின்னர் ஒருநாள் தன் வயதான பாட்டியைச் சந்தித்து, தன் தாத்தாவிற்குச் சொந்தமான நீளமான துப்பாக்கியை எடுத்துக் கொண்டு வருகிறான். காவலாளியை ஏமாற்றி விட்டு, இரவு வேளையில் மாடியிலிருக்கும் வீட்டிற்கு முன்னால் ஹமூன் மறைந்திருக்கிறான். அப்போது அங்கு வரும் மஷித்தைச் சுட முயற்சிக்கிறான். குறி தவறி விடுகிறது. மஷித் தப்பித்து விடுகிறாள். துப்பாக்கியுடன் அமர்ந்திருக்கும் அவனை மஷித் பார்த்து விடுகிறாள். அவள் சத்தம் போட, காவலாளி விரட்டுகிறான். ஹமூன் பயந்து ஓடுகிறான். போகும் வழியில், ஒரு பள்ளத்தில் துப்பாக்கியை வீசி விட்டு அவன் ஓட, அதை காவலாளி கையில் எடுக்கிறான்.
தான் நினைத்தது எதுவும் நடக்காமல் போய் விட்டதே என்ற விரக்தி நிறைந்த எண்ணத்திற்கு ஆளான ஹமூன். தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் கடலுக்குள் இறங்குகிறான். அப்போது அவனுக்கு ஒரு கனவு- கனவில் அவனைச் சுற்றி அவன் எப்போதும் மனதில் உயர்வாக நினைத்து வழிபடும் அவனுடைய குருநாதரான அலி, அவனுடைய நண்பர்கள், அவனுக்கு நன்கு தெரிந்தவர்கள், அவனுடைய தாய், மனைவி மஷித் அனைவரும் நின்று அவனைத் தேற்றிக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய பிரச்னைகள் அனைத்தும் தீர்க்கப்பட்டு விட்டன என்று அவன் கனவு காண்கிறான். கனவு முடியும்போது, அவன் ஒரு படகில் அமர்ந்திருக்கிறான். அவனை உயரத்திலிருந்து வலை போட்டு, காப்பாற்றியவர் அவன் எப்போதும் பெரிதாக நினைக்கும் அவனுடைய குருநாதர் அலி.
வாழ்க்கையில் எது நடந்தாலும்- அதை விரும்புகிறோமோ, இல்லையோ- எல்லாவற்றையும் நாம் சந்தித்துத்தான் ஆக வேண்டும். அவற்றுடன் போராடித்தான் ஆக வேண்டும்... இதுதான் 'Hamoun' படம் கூறும் செய்தி.
படகில் ஹமூன் ஈர ஆடைகளுடன் நடுங்கிக் கொண்டே அமர்ந்திருக்க, படம் முடிவடைகிறது. கனமான விஷயத்தை மிகவும் அருமையாக கையாண்ட இயக்குநரை நாம் கட்டாயம் பாராட்ட வேண்டும்.