Logo

மை வீக் வித் மரிலின்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4050
My Week with Marilyn

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

மை வீக் வித் மரிலின் - My Week with Marilyn

(பிரிட்டிஷ் திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பிரிட்டிஷ் திரைப்படம். 'My Week with Marilyn.' 101 நிமிடங்கள். ஓடக் கூடிய இந்தத் திரைப்படத்தை இயக்கியவர் Simon Curtis.

உலக புகழ் பெற்ற திரைப்பட நடிகை மரிலின் மன்றோவை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட அருமையான திரைப்படம் இது. Colin Clark என்பவர் எழுதிய 'The Prince, The Showgirl and Me' என்ற நூலையும் 'My Week with Marilyn' என்ற நூலையும் அடிப்படையாக வைத்து இப்படத்திற்கான திரைக்கதையை மிகச் சிறப்பாக உருவாக்கியவர் Adrian Hodges.

படத்திற்கு மிகப் பெரிய ப்ளஸ் பாயிண்டாக அமைந்தது Ben Smithardஇன் ஒளிப்பதிவு.

மரிலின் மன்றோவாக படத்தில் உயிர்ப்புடன் வாழ்ந்து, நம்மை நூறு சதவிகிதம் ஆச்சரியத்தில் மூழ்கடித்தவர் Michelle Williams.

படம் முற்றிலும் முடிவடைந்தவுடன், முதல் முறையாக Newyork Film Festival இல் திரையிடப்பட்டது. அதற்குப் பிறகு Mill Valley Film Festivalஇல் திரையிடப்பட்டது.

அருமையான நடிப்பிற்காக Michelle Williamsக்கு Golden Globe Award for Best Actress in a Musical or Comedy Motion Picture என்ற பிரிவில் விருது வழங்கப்பட்டது. ஆஸ்கார் விருதுக்காகவும் (Academy Awards), British Academy Film Awardsக்காகவும் சிறந்த நடிகைக்கான விருதுக்காக Michelle Williamsஇன் பெயர் சிபாரிசு செய்யப்பட்டது.

நம் உள்ளங்களில் நீங்காத இடத்தைப் பிடித்து, இன்னும் உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருக்கும் 'My Week with Marilyn' படத்தின் கதை என்ன?

இதோ...

1956ஆம் ஆண்டு. பல்கலைக் கழகத்தில் பட்டப் படிப்பை முடித்து வெளியே வருகிறான் Colin Clark என்ற இளைஞன். அவனுடைய தந்தை, தாய் இருவரும் மரியாதைக்குரிய பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள். திரைப்படத் துறையில் நுழைந்து, பிரகாசிக்க வேண்டும் என்பது அந்த இளைஞனின் தணியாத தாகம். எப்படியும் தன் திறமையால் ஏதாவதொரு வாய்ப்பை உருவாக்கிக் கொள்ள முடியும் என்ற தளராத தன்னம்பிக்கையுடன் இருக்கிறான் அவன்.

அதைத் தொடர்ந்து அவன் லண்டனுக்குப் பயணமாகி வருகிறான். திரைப்பட நடிகர் Laurence Olivierக்குச் சொந்தமான திரைப்பட நிறுவனத்தில் வேலை ஏதாவது கிடைக்குமா என்று முயற்சி செய்து பார்க்கிறான். ஆரம்பத்தில் 'வேலை இல்லை' என்ற பதில் சொல்லப்படுகிறது. எனினும், விடாமல் தினமும் அந்த அலுவலகத்திற்கு அவன் வருகிறான். யாரும் கூறாமலே, அவன் அந்நிறுவனத்தின் தொலைபேசியை எடுத்து உரிமையுடன் பதில் கூறுகிறான். வேறு சில வேலைகளையும் யாரும் கூறாமல், அவனே செய்கிறான். அவனுடைய சுறுசுறுப்பையும், வேலை செய்யும் முறையையும் பார்த்த Olivierஇன் மனைவி, Vivien Leigh உடனடியாக அவனுக்கு வேலை போட்டுத் தரும்படி தன் கணவரிடம் கூறுகிறாள். யூனியன் எதிலும் உறுப்பினராக இல்லாமலிருக்கும் ஒருவனை அவ்வளவு சர்வ சாதாரணமாக வேலையில் வைத்துக் கொள்ள முடியாது. என்ன செய்வது என்று யோசித்த Olivier, தன்னுடைய மூன்றாவது உதவி இயக்குநராக காலினைச் சேர்த்துக் கொள்கிறார். அந்த மூன்றாவது உதவி இயக்குநர், சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும் என்ற தேவையில்லை. இயக்குநர் கூறக் கூடிய எந்த வேலையையும், அவன் செய்யலாம். வேலை தேடிய சில நாட்களிலேயே உதவி இயக்குநர் வேலை கிடைத்தது குறித்து காலினுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி!

அதைவிட சந்தோஷம் தந்த விஷயம் என்னவென்றால், அவன் பணி புரியப் போகும் படத்தின் கதாநாயகி யார் தெரியுமா? மரிலின் மன்றோ...! திரை அரங்குகளில் மக்களுக்கு மத்தியில் அமர்ந்து, அணிந்திருக்கும் ஆடைகள் காற்றில் உயர பறக்க தன் உடல் அழகு அத்தனையையும் வெளிப்படுத்தி படம் பார்ப்போரைக் கிறங்கடித்துக் கொண்டிருந்த, தன்னையும் காந்தமென சுண்டி இழுத்த அழகுப் பெட்டகம் மரிலின் மன்றோ நடிக்கும் படத்தில் பணி புரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்றால், அது சாதாரண விஷயமா?

அவன் பணி புரியப் போகும் படத்தின் பெயர் 'The Prince and the Show girl'. ஹாலிவுட்டிலிருந்து அந்தப் படத்தில் நடிப்பதற்கென்றே லண்டனுக்கு வருகிறாள் மரிலின் மன்றோ. அவளுடன் சேர்ந்து வருபவர் அவளுடைய 'இப்போதைய' கணவரான Arthur Miller. அவர் ஒரு புகழ் பெற்ற எழுத்தாளர். இங்க்லாண்டில் படப்பிடிப்பில் இருக்கும் நாட்களில் அவர்கள் இருவரும் தங்குவதற்கு ஒரு அருமையான இடம் வேண்டும். அதை ஏற்பாடு செய்து தரும் பொறுப்பு காலினிடம் ஒப்படைக்கப்படுகிறது. காலின் அதற்கான முயற்சியில் இறங்குகிறான். அதற்குள் அவன் பேசிய கட்டிடம் எது என்பதை லண்டனில் இருக்கும் பத்திரிகைகள் மோபப்பம் பிடித்து, 'மரிலின் மன்றோ தங்கப் போகும் இடம்' என்று புகைப்படத்துடன் முதல் பக்கத்தில் செய்தி வெளியிட்டு விடுகின்றன. ஆனால், அதற்கு முன்பு இன்னொரு பாதுகாப்பான கட்டிடத்தை, மரிலின் மன்றோவும் அவளுடைய கணவரும் தங்குவதற்கு பேசி முடித்து வைத்திருக்கிறான் Colin. அவனுடைய அந்தச் செயல் Olivierவுக்கும் மரிலினின் பி.ஆர்.ஓ. Arthur P.Jacobsக்கும் மிகவும் பிடித்துப் போகிறது.

மரிலின் எப்போது லண்டனுக்கு வரப் போகிறாள் என்ற விஷயம் லண்டனிலிருக்கும் பத்திரிகையாளர்களுக்குத் தெரிந்து விடுகிறது. அவர்கள் Heathrow விமான நிலையத்தில் குழுமி விடுகிறார்கள். மரிலின் தன் கணவர் Arthur Miller, பிஸினஸ் பார்ட்னரான Milton H.Greene, Acting coach ஆன Paula strasberg என்ற பெண் ஆகியோருடன் விமானத்திலிருந்து ஒய்யாரமாக இறங்குகிறாள். ஆரம்பத்தில் செய்தியாளர்களையும், புகைப்படக்காரர்களையும் பார்த்து ஒரு மாதிரி ஆன மரிலின், பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகவும் இயல்பான முறையில் இருக்கிறாள். அவர்கள் கேட்கும் எல்லா கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே பதில் கூறுகிறாள்.

படத்தின் இயக்குநரான Olivier தன் குழுவினருடன் மர்லினுக்காக காத்திருக்கிறார். மரிலின் மிகவும் தாமதமாக வருகிறாள். அதைப் பார்த்து வெறுப்படைகிறார் Olivier. படத்தில் வரும் வசனத்தைத் தப்புத் தப்பாக வாசிக்கிறாள் மரிலின். அதை எந்தவித உணர்ச்சியுமில்லாமல் பேசுகிறாள். வார்த்தைகளை உச்சரிப்பதில் சந்தேகம் வர, அவளுக்கு உதவுகிறாள் Paula என்ற அவளுடைய Acting Coach பெண். தனக்கு அருகில் Paula அமர வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருக்கிறாள் Marilyn. அவளையே மொத்த படப்பிடிப்பு குழுவும் வைத்த கண் எடுக்காது பார்த்துக் கொண்டிருக்கிறது.


படப்பிடிப்பு தளத்தில் காலின், Lucy என்ற இளம் பெண்ணைப் பார்க்கிறான். அவள் ஒரு Wardrobe உதவியாளர். அவளை அவனுக்குப் பிடிக்கிறது. அவனை அவளுக்கும்.

ஒவ்வொரு நாளும் மரிலின் படப்பிடிப்பு தளத்திற்குத் தாமதமாகவே வருகிறாள். பெரும்பாலும் வசனங்களை மறந்து விட்டு பேசுகிறாள். சாதாரண வசனத்தைக் கூட திரும்பத் திரும்ப எடுக்க வேண்டிய சூழ்நிலை சில நேரங்களில் உண்டாகிறது. அதைப் பார்த்து மனதிற்குள் மிகுந்த கோபமடைகிறார் இயக்குநர் ஒலிவியர். ஆனால், உடன் நடிக்கும் பழம் பெரும் நடிகையான Sybil Thorndike, அவளின் நடிப்பை 'ஆஹா - ஓஹோ' என்று புகழ்கிறாள்.

மரிலின், படத்தில் வரும் தன் கதாபாத்திரத்தைப் பற்றி புரிந்து கொள்வதில் தடுமாற்றம் நிறைந்தவளாக இருக்கிறாள். அவளுடைய நடிப்பில் பூரண திருப்தியடையாத ஒலிவியர், அவளைச் சற்று அவமரியாதை செய்து விடுகிறார். அதனால் கடுப்பான மரிலின், படப்பிடிப்பு தளத்தை விட்டு வெளியேறி விடுகிறாள். காலின், இயக்குநர் ஒலிவியரிடம், மரிலினிடம் சற்று மென்மையாக நடந்து கொள்ள வேண்டுமென்றும், அப்படியென்றால்தான் காரியம் நடக்குமென்றும் கெஞ்சி கேட்டுக் கொள்கிறான்.

இரவு நேரம். Colin, மரிலின் தங்கியிருக்கும் Park side Houseக்கு, அவளைப் பார்ப்பதற்காகச் செல்கிறான். அறைக்குள் ஒரு காரசாரமான வாக்குவாதம் நடைபெற்றுக் கொண்டிருப்பது அவனுடைய காதில் விழுகிறது. உள்ளே போய் பார்த்தால் - மேலாடைகள் நழுவிய நிலையில், மரிலின் தரையில் ஒரு ஓரத்தில் அமர்ந்து அழுது கொண்டிருக்கிறாள். அவளின் கையில் ஒரு நோட்டு புத்தகம் இருக்கிறது. அதில் அவளுடைய கணவரும், எழுத்தாளருமான Arthur Miller அவளைக் கிண்டல் செய்வதைப் போல, ஒரு கதாபாத்திரத்தை உருவாக்கி ஒரு புதிய நாடகத்தை எழுதி வைத்திருக்கிறார். அதை வாசித்த Marilyn நிலை குலைந்து, கவலையின் உச்சிக்குச் சென்று விடுகிறாள். அதைத் தொடர்ந்து அவர்களுக்கிடையே பலமான சண்டையும், வாக்குவாதமும் உண்டாகின்றன. கடுப்பான Arther Miller, மரிலினிடம் கோபித்துக் கொண்டு, அமெரிக்காவிற்குப் புறப்பட்டு விடுகிறார்.

தன் கணவர் கிளம்பிச் சென்றவுடன், மன ரீதியாக கவலையில் மூழ்கிய மரிலின் படப்பிடிப்பு தளத்திற்கே வராமல், தன்னுடைய அறைக்குள்ளேயே முடங்கிக் கிடக்கிறாள். அப்போது காலினுக்கு ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. வீட்டிற்குச் செல்லும்போது, தன்னுடைய அறைக்கு வரும்படி கூறுகிறாள் Marilyn. Colin செல்லும்போது, அலங்கோலமான தோற்றத்தில் படுத்திருக்கிறாள் மரிலின். அவளுடைய ஆடைகளைச் சரி செய்து விடுகிறான் Colin. மரிலினே தன் கையால், காலினுக்கு ஒயின் ஊற்றித் தருகிறாள். மரிலினுடன் சேர்ந்து அமர்ந்து, ஒயின் பருகுகிறான் Colin. Marilyn Manroeவின் படங்களை திரையரங்கில் அமர்ந்து, அண்ணாந்து பார்த்து ரசித்த தனக்கு, அவள் wine ஊற்றித் தர, பருகக் கூடிய வாய்ப்பா என்பதை நினைத்து அவன் ஆச்சரியக் கடலில் மூழ்கிப் போய் அமர்ந்திருக்கிறான். Marilyn அவனை முத்தமிடுகிறாள். அவன் மீது அன்பைப் பொழிகிறாள். தான் காண்பது கனவா அல்லது நனவா என்பதை நம்ப முடியாமல், அவளையே பார்த்துக் கொண்டு அமர்ந்திருக்கிறான் காலின்.

மறுநாள் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அருமையாக நடனமாடுகிறாள் Marilyn. Colin முந்தைய இரவில் அவளுடைய அறைக்குப் போய் பேசியதும், அதனால் அவளுடைய மனம் மென்மையானதும்தான் காரணம் என்பதை இயக்குநர் Laurence Olivier புரிந்து கொள்கிறார். ஒவ்வொரு வசனத்திற்கும் Acting Coach பெண்ணிடம் மரிலின் கருத்து கேட்பதைப் பார்த்து, 'ஒரு படத்திற்கு இரண்டு இயக்குநர்கள் இருக்க முடியாது' என்று கோபத்துடன் கூறிக் கொண்டிருந்த Olivier, காலினிடம் 'மரிலினின் அருகிலேயே இருந்து அவளைச் சரி செய். அப்படியானால்தான் நமக்கு காரியம் நடக்கும்' என்று கூறுகிறார். 'சூழ்நிலைகேற்றபடி மாறக் கூடியவள், எந்த நிமிடம் எப்படி இருப்பாள் என்பதைக் கூற முடியாது, எப்போது அழுவாள்... எப்போது சிரிப்பாள் என்பதைக் கூட தீர்மானிக்க முடியாது' என்ற விஷயங்களையெல்லாம் Marilynஇன் நடவடிக்கைகளின் மூலம் தெரிந்து கொண்ட Colin எப்படி வேண்டுமென்றாலும் வளையக் கூடிய நாணலாக மாறுகிறான்.

Marilyn உடன் மிகவும் நெருக்கமாக காலின் பழகுவதையும், அவன் மீது ஒரு தனிப்பட்ட ஈடுபாட்டுடன் மரிலின் இருப்பதையும் கவனிக்கிறான் மரிலினின் வியாபார பார்ட்னரான மில்டன். 'ஆரம்பத்தில் ஏழு வருடங்கள் அவளுடன் நெருக்கமாக இருந்தவன் நான். கவனமாக இரு. இல்லாவிட்டால், என் நிலைமைதான் உனக்கும்' என்கிறான் காலினிடம் அவன்.

Wardrobe Assistantஆன Lucy, காலினுடன் செலவழிப்பதற்கு இரண்டு வார இறுதியிலும் தன்னை தயார் பண்ணி வைத்திருந்தாள். ஆனால், Marilynஐ கவனிப்பதற்கே நேரம் சரியாக இருந்ததால், அவனால் Lucyயிடம் நேரத்தைப் பங்கிட முடியவில்லை.

காலினும் Marilynஉம் ஒரு முழு நாளையும் வெளியே செலவிட முடிவெடுக்கின்றனர். காரில் அவளை அவன் கடை வீதிக்கு அழைத்துச் செல்கிறான். Marilyn Manroe வந்திருக்கிறாள் என்றதும், சாலையில் கூட்டம் கூடி விடுகிறது. எல்லோரும் வந்து அவளிடம் ஆட்டோக்ராஃபில் கையெழுத்து போட்டுத் தரும்படி கேட்கின்றனர். கூட்டத்தைச் சமாளிக்க முடியாமல், அவர்கள் அங்கிருந்து கிளம்புகின்றனர்.

தான் படித்த கல்விக் கூடத்திற்கு Marilynஐ காலின் அழைத்துச் செல்கிறான். அங்கு இப்போது படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களும், ஆசிரியர்களும் மரிலினைப் பார்த்ததும் ஆனந்தத்தில் மூழ்குகின்றனர். அவளை வண்டென மொய்க்கின்றனர். Winsor Castleஇல் இருக்கும் பழமையான நூல் நிலையத்திற்கு காலின், மரிலினை அழைத்துச் செல்கிறான். அதைச் சுற்றிப் பார்த்த மரிலின் ஆச்சரியத்தின் உச்சிக்கே செல்கிறாள்.

தேம்ஸ் நதியின் அருகில் வருகிறார்கள். தான் அணிந்திருந்த ஆடைகள் அனைத்தையும் கழற்றி வீசி எறிந்து விட்டு, நதியை நோக்கி குழந்தையைப் போல நிர்வாணமாக ஓடுகிறாள் Marilyn. நதிக்குள் இறங்கிய அவள், காலினையும் அழைக்கிறாள். காலினும் ஆடைகளைக் கழற்றிப் போட்டு விட்டு, நதிக்குள் இறங்குகிறான். இப்படியெல்லாம் தன் வாழ்க்கையில் அதிர்ஷ்டக் காற்று வீசும் என்பதை Colin, எப்போதாவது நினைத்துப் பார்த்திருப்பானா? மரிலின், காலினை இறுக அணைத்து, உதட்டில் முத்தமிடுகிறாள். காலினுக்கு சொர்க்கத்தையே பார்த்து விட்டதைப் போல இருக்காதா?


ஒரு இரவு வேளை. Colinஐ Parksideஇல் உடனே வரும்படி அழைக்கிறார்கள். தூக்க மாத்திரைகளை அதிகமாக உட்கொண்டு, எழுந்திருக்காமல் அறைக்குள் படுத்திருக்கிறாள் மரிலின் என்ற தகவல் கிடைக்கிறது. புயலென அங்கு செல்கிறான் காலின். கதவைத் தட்டிப் பார்க்கிறான். கதவு திறக்கப்படவில்லை. சிறிது நேர யோசனைக்குப் பிறகு, ஒரு உயரமான ஏணியைக் கொண்டு வரச் சொல்லி, அதில் ஏறி, சாளரத்தின் வழியாக மரிலினின் அறைக்குள் அவன் நுழைகிறான். ஆடைகள் நழுவிக் கிடக்க, பாதி மயக்கத்தில் கிடக்கிறாள் மரிலின். 'நீ எப்படி இங்கே வந்தாய்?' என்று அவள் கேட்க, 'நான் ஏணியில் ஏறி, சாளரத்தின் வழியாக வந்தேன்' என்கிறான் காலின். அவனை இறுக அணைத்து முத்தமிடுகிறாள் மரிலின். 'உனக்காக வீட்டில் உன் மனைவி காத்திருப்பாளே?' என்று அவள் கேட்க, 'எனக்கு இன்னும் திருமணமாகவில்லை' என்று கூறுகிறான் காலின். அப்போது 'எனக்கு மூன்று முறை திருமணம் நடந்திருக்கிறது' என்று கூறுகிறாள் Marilyn. தொடர்ந்து 'உனக்கு அப்பா, அம்மா இருக்கிறார்களா?' என்று அவள் கேட்க, 'ஆமாம்... இருக்கிறார்கள்' என்று காலின் கூறுகிறான். அப்போது Marilyn 'நான் சிறுமியாக இருக்கும்போதே என் தாய் அனாதைகள் இல்லத்தில் சேர்க்கப்பட்டு விட்டாள். என் தந்தை யாரென்றே எனக்கு தெரியாது. நான் பல பெண்களும் வளர்க்க, வளர்ந்திருக்கிறேன்' என்று கூறுகிறாள் - சோகமான குரலில். அந்தச் சமயத்தில் Marilynஐப் பார்க்கும்போது, அவள் மீது நமக்கு பரிதாபமும், இரக்கமும் உண்டாகின்றன. அன்று இரவு காலினை தனக்கு அருகிலேயே படுத்துக் கொள்ளும்படி கூறுகிறாள் Marilyn. 'நீங்கள் படவுலகை இனி விட்டு விடுங்கள்' என்கிறான் Colin. அதற்கு 'ஏன்? நீ என்னை திருமணம் செய்து கொள்ளப் போகிறாயா?' என்று மரிலின் கேட்க, 'ஆமாம்...' என்கிறான் Colin- தன்னை மறந்து. 'இல்லை... நான் படவுலகை விடுவதாக இல்லை' என்கிறாள் மரிலின்.

மறுநாள் இரவு தன் உடலில் வலி அதிகமாக இருப்பதாக கூறுகிறாள் மரிலின். தான் கர்ப்பமாக இருப்பதாக சந்தேகப்படுவதாக அவள் கூறுகிறாள். அவளைப் பரிசோதித்து விட்டு வெளியேறும் டாக்டரிடம் 'அவங்க கர்ப்பமாக இருக்காங்களா?' என்று காலின் கேட்க, 'அது அவங்களோட தனிப்பட்ட விஷயம். உன்னிடம் சொல்ல வேண்டிய அவசியமில்லை' என்கிறார் டாக்டர். மரிலின் காலினிடம் 'எல்லாவற்றையும் இனி நாம் மறந்துவிட வேண்டும்' என்கிறாள். அதற்கு அவன் 'நான் எதையும் மறக்க மாட்டேன்' என்கிறான்.

மறுநாள் Marilyn உற்சாகமாக படப்பிடிப்புத் தளத்திற்கு வருகிறாள். மிகவும் அருமையாக நடிக்கிறாள். அவளுடைய நடிப்பையும், நடனத்தையும் சிலிர்த்துப் போய் பார்த்துக் கொண்டிருக்கிறார் இயக்குநர் Laurence Olivier. படப்பிடிப்பு அத்துடன் முடிவடைகிறது. இயக்குநரிடம் விடை பெற்றுக் கொண்டு, Marilyn தளத்திலிருந்து வெளியேறுகிறாள். Colin ஒரு ஓரத்தில் நின்று கொண்டிருக்கிறான்.

'நான் தொடர்ந்து படங்களை இயக்கலாம் என்று திட்டமிட்டிருந்தேன். என் ஆசைகள் அனைத்தையும் கொன்று விட்டாள் Marilyn. இனி நான் திரும்பவும் நாடக உலகிற்கே போவதென தீர்மானித்து விட்டேன்'­ என்கிறார் காலினிடம் Olivier.

Wardrobe Assistant ஆன Lucy காலினிடம் 'என்ன, Marliyn உன் இதயத்தை நொறுக்கி விட்டாளா?'  என்று கேட்க, 'ஆமாம்...' என்கிறான் காலின். அதற்கு அவள் 'உனக்கு அது தேவைதான்...' என்கிறாள்- புன்னகைத்துக் கொண்டே.

ஒரு லோக்கல் barஇல் கவலையுடன் மது அருந்திக் கொண்டிருக்கிறான் காலின். அங்கிருப்பவர்கள் அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் மரிலின் அங்கு வருகிறாள். 'காலின், நீ எனக்குச் செய்த உதவிகளை நான் மறக்க மாட்டேன். உன்னிடம் விடை பெற்றுக் கொள்வதற்காக நான் இங்கு வந்தேன்' என்கிறாள். அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்க்கிறான் காலின்.

காலை வேளை. ஒரு முத்தத்தைப் பரிசாக தந்துவிட்டு, காருக்குள் ஏறுகிறாள் மரிலின். கார் நீங்குகிறது. ஓடிக் கொண்டிருக்கும் காரையே பார்த்துக் கொண்டு நின்றிருக்கிறான் காலின்.

சிறிய திரையரங்கம். படமாக்கப்பட்ட காட்சிகள் திரையில் ஓடிக் கொண்டிருக்கின்றன. திரையில் Marilyn Manroe ஆடுகிறாள்... பாடுகிறாள்... நடிக்கிறாள்... குதிக்கிறாள்... சிரிக்கிறாள்.

இயக்குநர் Laurence Olivier எழுந்து செல்ல, அந்த கனவு தேவதையின் அசைவுகள் ஒவ்வொன்றையும் கண்களை அகல திறந்து வைத்து பார்த்தவாறு அமர்ந்திருக்கிறான் Colin Clark.

Marlin Monroeவாக படம் முழுக்க நடிப்பில் முத்திரை பதித்திருப்பவர் - Michelle Williams.

Colin Clark ஆக Eddie Redmayne (அடடா! என்ன நடிப்பு!)

Laurence Olivier ஆக Kenneth Branagh.

Lucy ஆக Emma Watson

1956 ஆம் ஆண்டில் மரிலின் மன்றோ 'The Prince and the Show girl' படத்திற்காக நடித்த அதே Pinewood studiosவில்தான் இந்தப் படத்தின் படப்பிடிப்பும் நடைபெற்றது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.