Logo

பீட் தி ட்ரம்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3965
Beat the Drum

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பீட் தி ட்ரம் - Beat the Drum

(தென் ஆஃப்ரிக்கா திரைப்படம்)

2003ஆம் ஆண்டில் திரைக்கு வந்த தென் ஆஃப்ரிக்கா திரைப்படம். 114 நிமிடங்கள் ஓடக் கூடிய இத்திரைப்படத்தைத் தயாரித்தவர் அமெரிக்கரான W.David Mc Brayer. படத்தின் கதையை எழுதியவரும் அவரே. எனினும், படத்தை இயக்கியவர் தென் ஆஃப்ரிக்காவைச் சேர்ந்த David Hickson. ஒளிப்பதிவாளர் : Lance Gewer.

ஆங்கிலம், Zulu ஆகிய மொழிகளில் உரையாடல்கள் கொண்ட இப்படம் 30 திரைப்பட விழாக்களில் விருதுகளை அள்ளிச் சென்றிருக்கிறது. Montreal World Film Festival இல் சிறந்த திரைப்பட விருதைப் பெற்ற இப்படம். Monaco International Film Festivalலும் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றிருக்கிறது.

உலகமெங்கும் மக்களை அதிர்ச்சியடையச் செய்திருக்கும் Aids பற்றிய விழிப்புணர்வை உண்டாக்குவதற்காகவே தான் இப்படத்தைத் தயாரித்ததாக கூறுகிறார் படத்தின் தயாரிப்பாளரான David MC Brayer. 2008 ஜூன் மாத கணக்குப்படி 12 மில்லியன் குழந்தைகள், Aids நோய் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் அனாதைகளாக்கப்பட்டிருக்கின்றனர். ஆஃப்ரிக்காவின் Sub-Saharan பகுதியில் எடுக்கப்பட்ட கணக்கில் 30 மில்லியன் மக்கள் HIV Positiveவால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்திருக்கிறது.

கதாசிரியரும், தயாரிப்பாளருமான David Mc Brayer தென் ஆஃப்ரிக்கா, கென்யா ஆகிய நாடுகளுக்குப் பயணம் சென்றிருக்கிறார். அப்போது தெருக்களில் ஏராளமான குழந்தைகள் அனாதைகளாக பலவித சிரமங்களுக்கு மத்தியில் வாழ்ந்து கொண்டிருப்பதை அவர் கண் கூடாக பார்த்திருக்கிறார். அவர்கள் அனைவரும் AIDS நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களின் பிள்ளைகள். அந்த விஷயத்தால் அவர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆஃப்ரிக்காவில் எய்ட்ஸ் எந்த அளவிற்கு மக்களின் வாழ்க்கையில் அவல நிலையை உண்டாக்கியிருக்கிறது என்பதைச் சிந்தித்த அவர், இந்தப் பின்னணியில் ஒரு கதையை எழுதி படமாக தயாரித்தால் என்ன என்ற தீர்மானத்திற்கு வந்திருக்கிறார், அப்படி உருவான படம்தான்  'பீட் தி டிரம்'.

நான் இந்தப் படத்தை ஆரம்பத்திலிருந்து இறுதி வரை மிகுந்த ஈடுபாட்டுடன் பார்த்தேன். ஆஃப்ரிக்காவின் கிராமப் பகுதிகளையும், அதற்கு நேர் மாறான பரபரப்பான நகர வாழ்க்கையையும் உயிரோட்டத்துடன் படத்தில் பார்க்க முடிந்தது.

படத்தின் மைய பாத்திரம் Musa என்ற சிறுவன். அவனைச் சுற்றித்தான் முழு கதையும் பின்னப்பட்டிருக்கிறது.

'பீட் தி டிரம்' படத்தின் கதையை நான் கூறட்டுமா? இதோ:

தென் ஆஃப்ரிக்காவின் Kwazulu-Natal பகுதியிலிருக்கும் Ukhahlamba Valley. அந்த பள்ளத் தாக்கில் இருக்கும் ஒரு சிறிய கிராமத்தில்தான் கதை ஆரம்பமாகிறது. மண்ணால் சுவர்கள் அமைக்கப்பட்ட சிறு சிறு வீடுகள் இருக்கும் ஒரு சிறிய கிராமம் அது. நோய்களுக்கும், வறுமைக்கும் மத்தியில் போராட்ட வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் படிப்பறிவற்ற ஏழைகள் வாழ்ந்து கொண்டிருக்கும் கிராமம் அது.

நம் படத்தின் கதாநாயகனான மூஸா அந்த கிராமத்தைச் சேர்ந்தவன்தான். அவன் இறந்துவிட்ட தன் தாயை அடக்கம் செய்த இடத்தில் தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கிறான். 'இப்படியே எவ்வளவு நாட்களுக்குத்தான் உன் அம்மாவின் கல்லறையிலேயே உட்கார்ந்து கொண்டிருப்பாய்? எழுந்து வா' என்று சத்தம் போட்டு அழைக்கிறாள் அவனுடைய பாட்டி. பாட்டியின் வீட்டில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருக்கிறான்.

தனியாக ஒதுக்கப்பட்ட ஒரு அறையில் மூஸாவின் தந்தை நோயாளியாக படுத்திருக்கிறான். அவனுடைய முகத்தைப் பார்ப்பதற்கே விகாரமாக இருக்கிறது. அவன் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறான். மூஸாவின் தாய் இறந்ததும், அதே நோயால்தான். அந்த குடும்பத்தையே அந்த கிராமம் ஒதுக்கி வைத்திருக்கிறது. மூஸாவிடம் பேசுவதைக் கூட அவர்கள் தவிர்க்கின்றனர். முன்னோர்களால் சபிக்கப்பட்ட குடும்பம் அது என்றும், அதனால்தான் அவர்கள் நோயால் பீடிக்கப்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர்கள் கூறுகிறார்கள். எய்ட்ஸ் பற்றிய விழிப்புணர்வு அவர்களுக்கு இல்லாமலிருக்கிறது.

ஆனால், எதைப் பற்றியும் கவலைப்படாமல் மூஸா அறைக்குள் நுழைந்து, தன் தந்தையைப் போய் பார்க்கிறான். அவன் மூஸாவிடம் தான் நல்ல நிலையில் இருக்கும்போது செய்த, ஒரு ட்ரம்மைத் தருகிறான். அதை அவன் தன் கையில் வைத்திருக்க வேண்டும் என்கிறான். மூஸா தன் தந்தை தந்த அந்த 'ட்ரம்'மை தோளில் தொங்கப் போட்டுக் கொள்கிறான்.

அந்த கிராமத்தின் வைத்தியர், முன்னோர்களின் சாபத்தால் பாதிக்கப்பட்டிருக்கும் மூஸாவின் தந்தையை குணப்படுத்த வேண்டுமென்றால், முன்னோர்களுக்கு பலி கொடுக்கப்பட வேண்டும் என்கிறான். மூஸாவின் பாட்டி அதற்குச் சம்மதிக்க, மூஸா உயிருக்குயிராக நேசிக்கும் அந்த வீட்டிலிருக்கும் ஒரே பசு கொல்லப்படுகிறது. அதை வேதனையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறான் மூஸா.

ஆனால், அந்த பசுவைப் பலி கொடுத்தால் மட்டும் மூஸாவின் தந்தை பிழைத்து விடுவானா என்ன? எய்ட்ஸ் அவனை இறக்கச் செய்கிறது. அந்த வீட்டிலேயே ஒரு சிறுமி இருக்கிறாள். அவள் மூஸாவின் மாமாவின் மகள். நீண்ட காலத்திற்கு முன்பு லாரியில் Johannesburg நகரத்திற்குச் சென்ற அந்தச் சிறுமியின் தந்தை அதற்குப் பிறகு கிராமத்திற்குத் திரும்பி வரவே இல்லை.

ஒருநாள் பள்ளிக் கூடத்திற்குச் சென்ற அந்தச் சிறுமி மாலையில் நீண்ட நேரம் ஆகியும், வீட்டிற்குத் திரும்பி வராமல் இருக்கிறாள். என்ன என்று பார்ப்பதற்காக தனியாக இருக்கும் பழைய பள்ளிக் கூடத்திற்குச் சென்றால், அங்கு தயங்கியவாறு வெளியே வருகிறார் ஆசிரியர். வகுப்பறைக்குள் தன் சீருடையைக் கவலையுடன் சரி பண்ணிக் கொண்டிருக்கிறாள் மூஸாவின் மாமாவின் மகளான சிறுமி. அவளை உடல் ரீதியாக ஆசிரியர் பயன்படுத்த முயன்றிருக்கிறார் என்பதை நாம் புரிந்து கொள்கிறோம். மூஸாவும் புரிந்து கொள்கிறான். அடுத்த நிமிடம் அவளை அழைத்துக் கொண்டு அவன் வீட்டிற்கு வருகிறான்.

தன் மாமாவை நகரத்திற்குச் சென்று, எங்கு இருக்கிறான் என்பதைத் தேடிக் கண்டு பிடித்து, அவனிடமிருந்து பணம் வாங்கிக் கொண்டு வந்து, புதிதாக ஒரு பசுவை வாங்கி வளர்க்க வேண்டும் என்ற முடிவுக்கு வருகிறான் மூஸா. புறப்படுவதற்கு தயாரான மூஸாவிடம் அந்தச் சிறுமி தன் கையில் அணிந்திருந்த சிறிய மாலையைக் கழற்றித் தருகிறாள். மூஸா அதை தன் கையில் அணிகிறான். 'நீ அணிந்திருக்கும் இந்த மாலை கீழ் நோக்கி அவிழ்ந்தால், அந்த இடத்தில் உனக்கு ஏதோ அதிர்ஷ்டம் இருக்கிறது என்று அர்த்தம்' என்கிறாள் அவள்.


அந்த மாலையை அணிந்து கொண்டு, தன் தந்தை கொடுத்த ட்ரம்மைத் தோளில் தொங்க போட்டுக் கொண்டு சிறுவனான மூஸா அனைவரிடமும் பிரியா விடை பெற்றுக் கொண்டு புறப்படுகிறான். அந்த கிராமத்தை விட்டு இதுவரை வெளியேறியிராத அந்தச் சிறுவன், துணிச்சலாக அங்கிருந்து கிளம்புகிறான். மலைகள் சூழ்ந்த அந்த கிராமத்தின் மேடுகளையும், பள்ளத் தாக்குகளையும் தாண்டி அவன் நடந்து செல்கிறான். அவனையே கிராமத்து மக்கள் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். வயதுக்கு மீறிய தைரியத்துடன் ஒற்றையடிப் பாதையில் நடந்து செல்லும் அந்தச் சிறுவனின் பாதையில் உயரமான ஒரு ஒட்டகச் சிவிங்கி குறுக்காக ஓடுகிறது.

ஒற்றையடிப்பாதை ஒரு சாலையில் போய் முடிகிறது. அங்கு வாகனம் ஏதாவது வருகிறதா என்று பார்க்கும் அவன், மேலும் சிறிது தூரம் நடக்கிறான். ஒரு இடத்தில் 'ட்ரக்' ஒன்று நின்று கொண்டிருக்கிறது. அதற்கு அருகில் நின்று கொண்டிருந்த நடுத்தர வயதைத் தாண்டிய, வழுக்கைத் தலை கொண்ட ஓட்டுநரிடம் 'நான் ஜோஹன்னெஸ்பர்க் போக வேண்டும். என்னை ஏற்றிக் கொள்ள முடியுமா?' என்று கேட்கிறான். ஆனால், அவரோ அவனை கோபத்துடன் விரட்டியடிக்கிறார். என்ன செய்வதென்று தெரியாமல், கவலையுடன் ஒரு கல்லில் அமர்ந்திருக்கிறான் சிறுவன். ட்ரக் ஓட்டுநர் அங்கு இருக்கும் ஒரு விலை மாதுவை அணைத்தவாறு சற்று தள்ளிச் செல்கிறார். சிறுவன் எட்டிப் பார்க்கிறான். என்ன நடக்கிறது என்பதை அவன் புரிந்து கொள்கிறான். அடுத்த நிமிடம் யாருக்கும் தெரியாமல், அவன் ஓடிச் சென்று 'ட்ரக்'கில் ஏறி, போர்த்தப்பட்டிருக்கும் தார்ப்பாய்க்குள் ஒளிந்து கொள்கிறான்.

ட்ரக் புறப்படுகிறது. வளைந்து வளைந்து அது போய்க் கொண்டிருக்கிறது. காற்று பலமாக வீசுகிறது. காற்றில் தார்ப்பாய் அசைகிறது. அப்போது யாரோ பின்னால் மறைந்து அமர்ந்திருக்கிறார்கள் என்பதை முன்னாலிருக்கும் கண்ணாடி வழியாக பார்த்து விடுகிறார் ஓட்டுநர் Nobe. ட்ரக்கை நிறுத்தி விட்டு பின்னால் வந்து பார்க்கிறார். உள்ளே அமர்ந்திருக்கும் மூஸாவை கோபத்துடன் அந்த வெட்ட வெளியில் இறக்கி விட்டு, ட்ரக்கைக் கிளப்புகிறார். அப்போதுதான் மூஸாவிற்கே தெரிகிறது - தன் தந்தை தந்த ட்ரம்மை ட்ரக்கிலேயே விட்டு விட்டோம் என்பதே. அவன் ட்ரக்கைப் பின் தொடர்ந்து நீண்ட தூரம் ஓடுகிறான். அதை கண்ணாடியில் பார்த்த Nobe வண்டியை நிறுத்துகிறார்.

'என்ன விஷயம்?' என்று கேட்கிறார். விஷயத்தைக் கூறிய மூஸா, ட்ரக்கில் இருந்த டிரம்மை எடுத்து தோளில் தொங்க விடுகிறான். 'நீ எங்கு போக வேண்டும்?' என்று ஓட்டுநர் கேட்க, தான் செல்லும் நோக்கத்தை மூஸா கூறுகிறான். ஏதோ யோசித்த Nobe, அவனை ட்ரக்கில் ஏறச் சொல்கிறார். சிறுவன் சந்தோஷத்துடன் முன்னால் போய் அமர, ட்ரக் புறப்படுகிறது.

'Johennesberg இல் உன்னைப் பிடித்து இழுக்கக் கூடிய பல அனுபவங்கள் இருக்கும். நீ மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்' என்கிறார் Nobe. அந்தப் பயணத்தில் அவர்கள் இருவருக்குமிடையே ஒரு நெருக்கம் உண்டாகிறது. இரண்டு பெண் பிள்ளைகளைக் கொண்டிருக்கும் Nobe, தான் பெற்ற ஆண் பிள்ளையைப் போல பாசத்துடன் பையனைப் பார்க்கிறார்.

ஜோஹன்னெஸ்பெர்க்கிற்குள் ட்ரக் நுழைகிறது. இதுவரை நாம் பார்த்த ஆஃப்ரிக்காவின் கிராமப் பகுதிக்கு நேர் எதிரான, நகரத்திற்கே உரிய பரபரப்பு... ஆரவாரம். ட்ரக் நிறுத்தப்பட வேண்டிய ஷெட்டிற்கு அதை Nobe கொண்டு செல்கிறார். அங்கு கிராமத்து கறுப்பு இன சிறுவனைப் பார்த்த, ட்ரக் நிறுவனத்தின் உரிமையாளரான Botha என்ற வெள்ளைக்காரர் அவனை 'இங்கிருந்து ஓடு' என்று விரட்டியடிக்கிறார். அவனையே கவலையுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் Nobe.

தோளில் ட்ரம்மைத் தொங்க போட்டுக் கொண்டு, நகரத்தின் வீதியில் அலைகிறான் மூஸா. பசிக்கிறது. கையில் காசு இல்லை. என்ன செய்வது என்று தெரியாமல் தவிக்கிறான். சற்று தூரத்தில் என்னவோ கொடுத்துக் கொண்டிருக்க, அதை ஓடிச் சென்று எல்லோரும் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். மூஸாவும் ஓடிச் சென்று வாங்குகிறான். வெள்ளைக்காரப் பெண்ணொருத்தி ரொட்டியை இலவசமாக தர, தெருவில் சுற்றிக் கொண்டிருக்கும் அனாதைச் சிறுவர்களும், சிறுமிகளும் அதை வாங்கி சாப்பிடுகின்றனர்.

தெருக்களெங்கும் பரட்டைத் தலையுடன் சிறுவர்கள், சிறுமிகள், ஆண்கள், பெண்கள். எல்லோரும் ஏழைகள்... அனாதைகள்... அங்கு மூஸாவிற்கு ஒரு சிறுமி பழக்கமாகிறாள். அவளுடைய பெயர் 'T'. அவளும் அனாதைதான். அவளுடைய தாய் எய்ட்ஸ் நோய் பாதித்து, இறந்து விட்டாள். அவள் பிக்-பாக்கெட் அடித்தும், திருடியும் பிழைத்துக் கொண்டிருப்பவள். மூஸாவிற்கும் அதை அவள் கற்றுத் தருகிறாள். ஆனால், மூஸா அதை விரும்பாமல், மறுத்து விடுகிறான். தெருவெங்கும் ஒருவரையொருவர் விரட்டுகிறார்கள்... அடிக்கிறார்கள்... உதைக்கிறார்கள்... திருடிக் கொண்டு ஓடுகிறார்கள். கட்டுப்பாடற்ற வன்முறை எல்லா இடங்களிலும்.

சற்று தூரத்தில் நீர் கொண்ட ஒரு வாளியுடன் நிற்கும் ஒருவன், சிக்னலில் இருக்கும் கார்களின் கண்ணாடியைச் சுத்தம் செய்ய, அவனுக்கு கூலி கிடைக்கிறது. அதைப் பார்த்த சிறுவன் மூஸா, குப்பைத் தொட்டியில் இருந்து ஒரு பழைய தகர வாளியை எடுக்கிறான். இதுவரை குப்பைத் தொட்டியில் பொறுக்கி சாப்பிட்ட அவனுக்கு, அதன் மூலமே ஒரு பிழைக்கும் வழியும் கிடைக்கிறது.

சின்லில் நிற்கும் கார்களின் கண்ணாடியை அவன் சுத்தம் செய்வதில் இறங்குகிறான். அவனுக்கு கூலியாக சில்லறைகள் கிடைக்கின்றன. உண்மையிலேயே- அவன் உழைப்பாளியாக மாறுகிறான். சிறிது சிறிதாக சேரும் சில்லறைகளை அவன் பாக்கெட்டில் சேர்த்து வைக்கிறான். அதில் ஒரு பகுதியை ஒரு வன்முறை கும்பல் பறித்துச் சென்று விடுகிறது என்பது இன்னொரு பக்கம்.

அவனை சாலை சாலையாக தேடிக் கொண்டு வந்த ட்ரக் ஓட்டுநர் Nobe, அவனைப் பார்த்து விடுகிறார். அன்புடன் அழைக்கிறார். தன் மாமாவை எங்கு தேடியும் கிடைக்கவில்லை என்று வருத்தத்துடன் கூறுகிறான் சிறுவன். 'உன் ஊர்ப் பக்கம்தான் செல்கிறேன். வருகிறாயா?' என்று அவர் கேட்க, சிறுவன் ட்ரக்கில் ஏறிக் கொள்கிறான். நகரத்தைத் தாண்டி, வெட்ட வெளியில்... கிராமப் பகுதிகளில் ட்ரக் விரைகிறது.

வழியில் ட்ரக் ஓட்டுநர்களைக் கவர்வதற்காக விலை மாதுக்கள். ஆனால், இந்த முறை Nobe சபலமடையவில்லை. 'நீ வந்தது நல்லதாகி விட்டது!' என்கிறார் அவர் மூஸாவிடம்.


ட்ரக்கிலிருந்த பழங்களையும் பிற பொருட்களையும் ஒவ்வொரு கடைகளின் முன்னாலும் நிறுத்தி, Nobe இறக்குகிறார். அவருக்கு மிகவும் உதவியாக இருக்கிறான் சிறுவன் மூஸா. இறுதியாக ஒரு கடையில் பொருட்களை இறக்கி விட்டு, திரும்பிச் செல்லும் பயணத்தை ஆரம்பிக்கிறார்கள். ஒரு இடத்தில் மூஸாவின் கிராமத்திற்குச் செல்லும் சாலை பிரிய, அவர்கள் இருவரும் அங்கு செல்கிறார்கள்.

தன் பாட்டிக்கு Nobeஐ, மூஸா அறிமுகப்படுத்தி வைக்கிறான். தன் பாகெட்டிற்குள்ளிருந்து ஏராளமான சில்லறைகளை தன் பாட்டிக்கு முன்னால் கொட்டுகிறான் மூஸா. அதை ஆச்சரியத்துடன் பார்க்கிறாள் பாட்டி. அந்தச் சில்லறைகளுடன் Nobe தன்னுடைய சில பண நோட்டுகளையும் சேர்த்து பாட்டியிடம் தருகிறார். அதை வைத்து ஒரு புதிய பசுவை வாங்கிக் கொள்ளும்படி அவர் கூறுகிறார். 'நகரத்தில் எவ்வளவு தேடியும் மாமாவைப் பார்க்க முடியவில்லை' என்று கூறுகிறான் மூஸா. அதைக் கேட்டு, அங்கிருக்கும் சிறுமியும், பாட்டியும் கவலையடைகிறார்கள்.

அவர்களிடம் விடை பெற்றுக் கொண்டு மூஸாவும், Nobeம் வெளியேறுகிறார்கள். மீண்டும் நகரத்தை நோக்கி ட்ரக்கில் பயணம்.

ட்ரக் ஜோகன்னெஸ்பெர்க்கிற்கு வருகிறது. தன் வீட்டின் முன்னால் ட்ரக்கை Nobe நிறுத்துகிறார். அவரை வீட்டிற்குள் விட மறுத்து விடுகிறாள் அவருடைய மனைவி. 'ட்ரக் ஓட்டுநர் என்பதால், எய்ட்ஸ் இருக்கும்' என்ற பயம் அவளுக்கு. 'இந்தச் சிறுவனையாவது இன்றிரவு இங்கு தங்க அனுமதி' என்று கெஞ்சுகிறார். அதற்கும் அவள் மறுத்து விடுகிறாள்.

Nobeம் மூஸாவும் அங்கிருக்கும் தேவாலயத்தின் பாதிரியாரைச் சந்திக்கிறார்கள். எங்கு பார்த்தாலும் எய்ட்ஸ் பரவி இருப்பதையும், HIV Positive கிருமிகள் காணப்படுவதையும், அதை வெளியே கூறுவதற்கு மக்கள் தயங்குவதையும், எய்ட்ஸ் பற்றி பேசுவதையே அவமானமாக நினைப்பதையும் Nobe பாதிரியாரிடம் கூறுகிறார். மூஸா அருகில் அமர்ந்து அதை கேட்டுக் கொண்டிருக்கிறான். 'தேவாலயத்தின் மூலம் இதை மக்களிடம் கூற வேண்டும்' என்று Nobe கூற, ஆரம்பத்தில் மறுக்கும் பாதிரியார், பின்னர் ஒத்துக் கொள்கிறார்.

Nobeம், மூஸாவும் ஆளுக்கு ஒரு ட்ரம்-ஐ வைத்து அடித்து, அதன் மூலம் மக்களை தேவாலயத்தில் குழுமச் செய்கிறார்கள். பாதிரியார் எய்ட்ஸ் பற்றி பேச ஆரம்பித்ததும், எல்லோரும் எழுந்து செல்ல பார்க்கின்றனர். அவர்களை மூஸாவும், பாதிரியாரும் உட்கார வைக்கின்றனர். தேவாலயத்தின் மூலம் HIV Positive சோதனை செய்ய தயாராக இருக்கின்றனர். அதற்கு யாரும் தயாராக இல்லாமல் இருக்க, முதல் ஆளாக Nobe போய் நிற்கிறார். தொடர்ந்து ஒவ்வொருவராக தங்களை சோதித்துப் பார்ப்பதற்கு தயார் பண்ணிக் கொண்டு போய் நிற்கின்றனர். அந்த முயற்சி வெற்றி பெறுகிறது.

இதற்கிடையில் Nobeஇன் ட்ரக்கின் உரிமையாளர் Bothaவின் மகன் Stefan, எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, நிலைமை மோசமாகி, உயிரைத் துறக்கிறார். அதைப் பார்த்து அதிர்ச்சியும், கவலையும் அடைகிறார் Botha.

வழக்கம்போல மூஸா நீர் இருக்கும் வாளியுடன் கார்களின் கண்ணாடியைச் சுத்தம் செய்கிறான். தெருத் தெருவாகத் தேடியும் அவனுடைய தோழியான 'T'ஐக் காணவில்லை. எங்கு போயிருப்பாள்? யாராவது சீரழித்திருப்பார்களோ? அவளைத் தேடி மூஸா செல்ல, வழியில் அவள் கையில் அணிந்திருந்த பாசிகளால் ஆன ப்ரேஸ்லெட் அவிழ்ந்து கிடக்கிறது. அதை கையில் எடுக்கிறான் மூஸா.

கால் போன போக்கில் மூஸா நடக்கிறான். மரங்கள் சூழ்ந்த ஒரு இடத்தில் சிறுவர்களும், சிறுமிகளும் ஊஞ்சலில் சந்தோஷமாக ஆடிக் கொண்டிருக்கிறார்கள். அதை ஆர்வத்துடன் பார்க்கிறான் மூஸா. அப்போது கிராமத்திலிருந்த சிறுமி தந்து, அவன் தன்னுடைய கையில் கட்டியிருந்த மாலை கீழ் நோக்கி அவிழ்கிறது.

சிக்னலில் கார்களைச் சுத்தம் செய்து கொண்டிருக்கிறான் மூஸா. Bothaவின் கார் வந்து நிற்கிறது. ஆரம்பத்தில் தன்னுடைய நிறுவனத்திலிருந்து மூஸாவை விரட்டிய, முன்பு அவன் காரைச் சுத்தம் செய்ய வர, வேண்டாம் என்று மறுத்து வேகமாக தன் காரை ஓட்டிக் கொண்டு சென்ற அந்த வெள்ளைக்காரர், இப்போது மூஸா காரைச் சுத்தம் செய்ய, அதை அனுமதித்ததுடன் அதற்கான கூலியாக நல்ல ஒரு தொகையையும் தருகிறார். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டு தன் மகன் இறந்த பிறகு, அவரிடம் உண்டான மாற்றம் இது.

Bothaவைப் பார்த்த Nobe, 'இந்தச் சிறுவன் மூஸா மிகவும் நல்லவன். நேர்மையானவன். கிராமத்திலிருந்து வந்தவன். உழைத்து பிழைக்க வேண்டுமென்று நினைப்பவன். இவனை நீங்கள் படிக்க வைக்க வேண்டும்' என்று வேண்டுகிறார். அதற்கு Botha சம்மதிக்கிறார். அப்போது முன்பு நகரத்திற்கு வந்த மூஸாவின் மாமா, ஏதோ துப்பாக்கிச் சூட்டில் இறந்து விட்ட தகவலையும் Botha கூறுகிறார்.

மரங்கள் அடர்ந்த இடம். முன்பு மூஸா பார்த்த அதே இடம்தான். அது ஒரு பள்ளிக் கூடம். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட பெற்றோர்களால் அனாதைகளாக்கப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் படிக்கக் கூடிய பள்ளி அது. அங்கு மாணவனாக மூஸா சேர்க்கப்படுகிறான். அப்போது ஒரு சந்தோஷ சம்பவம்... அவன் தேடிய அவனுடைய தோழி 'T'யும் அங்குதான் இருக்கிறாள். பிறகென்ன சந்தோஷத்திற்கு? வழியில் கண்டெடுத்த ப்ரேஸ்லெட்டை மூஸா தர, 'T' அதை தன் கையில் சந்தோஷத்துடன் அணிகிறாள். அவர்களையே மகிழ்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்கிறார் Nobe.

2006ஆம் ஆண்டு நவம்பர், டிசம்பர் மாதங்களில் 'உலக எய்ட்ஸ் தின'த்தையொட்டி 34 விமான நிறுவனங்களின் 40,000 விமானங்களில் 'Beat the Drum' திரைப்படம் திரையிடப்பட்டது.

படத்தில் கதாபாத்திரங்களாகவே அனைவரும் வாழ்ந்திருந்தார்கள் என்பதே உண்மை.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.