Logo

பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 3992
Bashu, the Little Stranger

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

பாஷு, தி லிட்டில் ஸ்ட்ரேஞ்சர் - Bashu, the Little Stranger

(ஈரானிய திரைப்படம்)

1989ஆம் ஆண்டில் திரைக்கு வந்த ஈரானிய திரைப்படம். பாரசீக மொழியில் தயாரிக்கப்பட்ட இப்படத்தில் ஈரானின் வடக்கு பகுதிகளில் பேசப்படும் Gilaki என்ற மொழியும் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

பாரசீக மொழியில் வெளியாகும் 'Picture World' என்ற திரைப்படங்களுக்கான பத்திரிகையால் 'Best Iranian Film of all time' என்ற விருதை இப்படம் 1999 ஆம் ஆண்டில் பெற்றது. ஈரானைச் சேர்ந்த 150 விமர்சகர்களும், தொழில் வல்லுநர்களும் இந்த விருதுக்காக 'Bashu, the Little Stranger' படத்தைத் தேர்ந்தெடுத்திருந்தார்கள்.

Bahram Beizai இப்படத்தின் இயக்குநர். படத்தின் திரைக்கதையையும் அவரே எழுதியிருக்கிறார்.

Bashu என்ற 10 வயது சிறுவனை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

ஈரானின் தெற்கு பகுதியில் இருக்கும் ஊர் Khuzestan. மிகவும் வறட்சி நிறைந்த பாலைவனத்தைப் போன்ற பகுதி அது. படத்தின் ஆரம்ப காட்சியில் அந்த ஊரிலிருக்கும் கட்டிடங்களின் மீது குண்டுகள் போடப்படுகின்றன. ஒவ்வொரு கட்டிடங்களாக இடிந்து விழுகின்றன. ஏராளமான வீடுகள் துண்டு துண்டாக சிதறுகின்றன. வானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஈராக்கிற்குச் சொந்தமான போர் விமானங்கள் அந்தப் பகுதியைச் சிறிது கூட விட்டு வைக்கவில்லை. மனித உயிர்களைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் மேலே இருந்து குண்டு மழையைப் பொழிய வைக்கின்றன. மனிதர்கள் உடலில் நெருப்பு பற்றி, பயந்து ஓடுகிறார்கள் எங்கு பார்த்தாலும் ஒரே புகை மண்டலம்... சாம்பல் நிறத்தில் புகை வெட்ட வெளியை நிரப்பிக் கொண்டிருக்கிறது. போரின் அவலம் பார்க்கும் இடங்களிலெல்லாம் தெரிகிறது.

மனித நடமாட்டமே இல்லாத ஒரு சிறிய பாதையில், குண்டுகள் வெடித்து பரவியிருக்கும் புகை மண்டலத்திற்கு மத்தியில் ஒரு பழைய ட்ரக் மெதுவாக வந்து கொண்டிருக்கிறது. அதை ஒரு இடத்தில் நிறுத்தும் இளைஞனான ஓட்டுநர், கீழே இறங்கி டயர்கள் சரியாக இருக்கின்றனவா என்று கையால் தட்டிப் பார்க்கிறான். அப்போது ஒரு 10 வயது சிறுவன் (அவன்தான் பாஷு) சோளக் கதிர்களுக்கு மத்தியிலிருந்து வருகிறான். அரைக்கால் சட்டையும், சிவப்பு நிற சட்டையும் அணிந்திருக்கும் அவன் பரட்டைத் தலையுடன் இருக்கிறான். முகத்தில் கவலை, பதைபதைப்பு, பயம், பரபரப்பு அனைத்தும் நிறைந்திருக்கின்றன.

கறுத்துப் போய் காணப்படும் அந்தச் சிறுவன் ஓட்டுநருக்குத் தெரியாமல் ட்ரக்கின் பின் பகுதியில் ஏறி, அங்கிருக்கும் பொருட்களுக்கு மத்தியில் தன்னை மறைத்துக் கொள்கிறான். பையன் ஏறியதைப் பார்க்காத ஓட்டுநர், ட்ரக்கைக் கிளப்புகிறான்.

ட்ரக் செழிப்பே சிறிதும் இல்லாத, பாலைவனத்தைப் போன்று வறண்டு கிடக்கும் மலைப் பகுதியிலும், சமவெளியிலும் பயணித்து போய்க் கொண்டிருக்கிறது. ஒரு இடத்தில் ட்ரக் நிற்கிறது. அதிலிருந்து இறங்கிய ஓட்டுநர் ஓரத்திலிருந்த ஒரு காபி கடையில், காலை உணவாக ரொட்டி வாங்கி சாப்பிடுகிறான்.

அப்போது பின் பக்கத்திலிருந்து எழுந்த சிறுவன் பாஷு, தார்ப்பாயை நீக்கி பார்க்கிறான். ஆள் நடமாட்டமில்லாத ஒரு இடத்தில் ட்ரக் நின்று கொண்டிருப்பதைப் பார்க்கும் அவன் அதிலிருந்து கீழே இறங்குகிறான். அப்போது ஒரு வெடிச் சத்தம் கேட்கிறது. அவ்வளவுதான்- பயந்து, நடுங்கும் சிறுவன் மனம் போன படி ஓடுகிறான். காபி கடைக்காரர் ஓட்டுநரிடம் உரையாடுவதிலிருந்து அந்த வெடிச் சத்தம், சுரங்கம் அமைக்கும் வேலை நடைபெறும் இடத்திலிருந்து வருகிறது என்பதை நாம் தெரிந்து கொள்கிறோம்.

ஈராக் விமானங்களின் குண்டுச் சத்தங்களை மட்டுமே தொடர்ந்து கேட்டு வாழ்ந்த சிறுவன் பாஷு, அதையும் போர் விமானங்கள் போடும் குண்டு முழக்கம் என்று தவறுதலாக நினைத்து ஓடுகிறான். புதர்கள், செடிகள், வயல்கள் என்று சிறுவன் ஓடிக் கொண்டே இருக்கிறான்.

இறுதியில் சோளக் கதிர்கள் வளர்ந்து நிற்கும் ஒரு வயலுக்குள் அவன் மறைந்து நிற்கிறான். வயலில் ஒரு சிறுவனும், சிறுமியும் ஓடிப் பிடித்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சோளக் கதிர்களுக்குள் மறைந்து நின்று கொண்டிருக்கும் சிறுவன் பாஷுவைப் பார்த்து விடுகிறார்கள். அவ்வளவுதான்- பயந்து போய் தங்களுடைய தாயிடம் போய் விஷயத்தைக் கூறுகிறார்கள். சோளக் காட்டிற்கு நடுவில் இருக்கும் வீட்டிலிருந்து வேகமாக வருகிறாள் அந்தச் சிறார்களின் அன்னை Nai.

அவள் தன் பிள்ளைகளுடன் அருகில் வர, சிறுவன் பாஷு பயந்து, வரப்பின் வழியாகவும், சோளக் கதிர்களுக்கு மத்தியிலும், நெற் கதிர்களுக்கு நடுவிலும் வேகமாக ஓடுகிறான். அவனை Nai விரட்டுகிறாள். ஆனால், அவனோ பிடி கொடுக்காமல் ஓடுகிறான்.

இப்போது - தன் மகனையும், மகளையும் அழைத்து, தன் கையிலிருந்த துணி பொட்டலத்தைத் திறந்து கோதுமை ரொட்டியை எடுத்து அவர்களுக்குச் சாப்பிட தருகிறாள் Nai. பிள்ளைகள் சாப்பிட, அதையே பார்த்துக் கொண்டிருக்கிறாள் அந்த அன்னை. அவள் மட்டுமல்ல- அவர்கள் சாப்பிடுவதை சற்று தூரத்தில் நின்று கொண்டு பாஷுவும் பார்க்கிறான். 'யார் இந்த கறுத்த பையன்? எங்கிருந்து வந்தான் இவன்?' என்ற குழப்பத்துடன் இருக்கும் Nai, அவனை அருகில் வருமாறு அழைக்கிறாள். ஆனால், அவனோ எதுவும் பேசாமல் அதே இடத்தில் நின்று கொண்டிருக்கிறான். அவனிடம் ரொட்டியைக் காட்டி 'வா... இதைச் சாப்பிடு' என்கிறாள் Nai. ஆனால் அவனோ பயத்துடன் இருப்பதால் அருகிலேயே வராமல் அங்கேயே நின்று கொண்டிருக்கிறான்.


என்ன செய்வதென்று தெரியாமல், அங்கிருந்து தன் பிள்ளைகளுடன் கிளம்புகிறாள் Nai., போவதற்கு முன்பு தன் கையிலிருந்த கோதுமை ரொட்டியை அங்கிருக்கும் ஒரு கழியின் உச்சியில் வைத்து விட்டுச் செல்கிறாள்- சிறுவன் பாஷுவிற்காகத்தான். அவர்கள் எல்லோரும் அங்கிருந்து கிளம்பிய பிறகு பாஷு மெதுவாக அருகில் வந்து, அந்த ரொட்டியை வேக வேகமாக சாப்பிடுகிறான். பாவம்- அவனுக்குத்தான் எவ்வளவு பசி இருக்கும்!

இரவு நேரம்- சுற்றிலும் இருட்டு. வீட்டிற்குச் சற்று தள்ளி சிறுவன் பாஷு நின்று கொண்டிருக்கிறான். அவனை அருகில் வரும்படி அழைக்கிறாள் Nai. ஆனால் அவனோ பயத்தில் வர மறுக்கிறான். அவனை அவள் அருகில் போய் அழைக்க, அவன் தப்பித்து ஓடுகிறான். அவளும் விடுவதாக இல்லை. விரட்டுகிறாள். இறுதியில் அகிலிருந்த ஷெட்டிற்குள் நுழைகிறான். அவ்வளவுதான்- கதவை இழுத்து மூடி விடுகிறாள் Nai. சிறுவன் உள்ளே இருந்தவாறு கதவைத் தட்டுகிறான். ஆனால், அவள் அதைத் திறக்கவில்லை.

நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. Nai தன் குழந்தைகளுக்கு சாப்பாடு கொடுத்து விட்டு, வெளியே உணவுடன் வருகிறாள். ஷெட் கதவைத் திறக்கிறாள். சிறுவன் உள்ளேதான் இருக்கிறான். சற்று தூரத்தில் தட்டில் கொண்டு வந்த உணவை வைக்கிறாள். பின்னர் ஒரு குவளையில் நீரும் கொண்டு வந்து வைக்கிறாள்.

அவள் சென்ற சிறிது நேரத்திற்குப் பிறகு, பாஷு ஷெட்டை விட்டு வெளியே வந்து, Nai வைத்து விட்டுச் சென்ற உணவைச் சாப்பிடுகிறான். நீரைப் பருகுகிறான்- வெறித் தனமாக.

அந்தந்த வேளைக்கு சாப்பாடு கொண்டு வந்து வைப்பதும், அதை பாஷு சிறிது நேரத்திற்குப் பிறகு வந்து சாப்பிடுவதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. பாஷுக்கு மட்டுமல்ல- வானத்தில் பறந்து கொண்டிருக்கும் பறவைகளுக்கும் கூட Nai இரை வைக்கிறாள். உயிர்களை நேசிக்கும் அன்பு இதயத்திற்குச் சொந்தக்காரி அவள்.

அவனை எங்கிருந்தோ வந்திருக்கும் கறுப்பு சிறுவன் என்று ஆரம்பத்தில் நினைக்கும் Nai, படிப்படியாக அவன் மீது அன்பு செலுத்த ஆரம்பிக்கிறாள். ஆரம்பத்தில் Naiஐயும், பிள்ளைகளையும் பார்த்து, பயந்த பாஷு இப்போது தன்னை மாற்றிக் கொள்கிறான். சிறிது சிறிதாக அவர்களிடம் அவன் நெருங்கி வருகிறான்.

'உன் பெயர் என்ன?' என்று கேட்கிறாள்- தான் பேசும் Gilaki மொழியில் Nai. பாஷுக்கு அவள் என்ன கேட்கிறாள் என்பது தெரியவில்லை. அப்போது 'என் பெயர் Nai' என்று இருமுறை கூறுகிறாள். அதைத் தொடர்ந்து அவன் தன் பெயர் 'Bashu' என்று கூறுகிறான். அவன் பேசும் Arabic மொழி அவளுக்குப் புரியவில்லை. அவள் பேசும் 'Gilaki' மொழி அவனுக்குப் புரியவில்லை.

அப்போது வானத்தில் பறந்து கொண்டிருக்கும் ஜெட் விமானத்தின் சத்தத்தைக் கேட்டு பதறி ஓடுகிறான் பாஷு. தன்னுடைய ஊரில் ஈராக் போர் விமானங்கள் வீசிய குண்டுகளின் சத்தம், அவனிடம் உண்டாக்கியிருக்கும் விளைவு அது. எந்த பலத்த சத்தத்தைக் கேட்டாலும், அவனுக்கு குண்டு போடும் சத்தமாகவே கேட்கிறது. பாவம்... அந்தச் சிறுவன்!

அவனை விரட்டிப் பிடிக்கும் Nai, அவன் ஓடியதற்கான காரணத்தைக் கேட்கிறாள். அவன் கூறும் வார்த்தைகளிலிருந்தும், காட்டும் சைகைகளிலிருந்தம் அவன் போரின் கொடுமைகளால் பாதிக்கப்பட்டவன் என்பதையும், அவனுடைய தாய், தந்தை இருவருமே குண்டுகளின் பாதிப்பால் இறந்து விட்டார்கள் என்பதையும், அவர்களுடைய வீடு குண்டு விழுந்து நெருப்புக்கு இரையாகி விட்டது என்பதையும், அவனுக்கென்று உலகத்தில் யாருமே இல்லை என்பதையும், அனாதையான அவன் ட்ரக்கில் ஏறி ஊரிலிருந்து இங்கு வந்து சேர்ந்திருக்கிறான் என்பதையும் அவள் தெரிந்து கொள்கிறாள்.

அவ்வளவுதான்- அவன் மீது அவளுக்கு அளவற்ற பாசம் உண்டாகிறது. தன் பிள்ளைகளுடன், இன்னொரு பிள்ளையாக அவனை வைத்துக் கொள்ள அவள் தீர்மானிக்கிறாள்.

தன் பிள்ளைகளுடன் அவள் கடைத் தெருவிற்குச் செல்கிறாள். அப்போது அவர்களுக்குப் பின்னால், பாஷுவும் ஓடி வருகிறான். கடையில் வீட்டிற்குத் தேவையான பல பொருட்களையும் வாங்கும் Nai, இரண்டு சோப்புகளை வாங்குகிறாள். அவற்றில் ஒரு சோப் பாஷுவிற்கு. கடைக்காரன் 'பையன் என்ன இந்த அளவிற்கு கறுப்பாக இருக்கிறானே!' என்று சொல்ல, 'சோப் போட்டால் சரியாகி விடுவான்' என்று கூறுகிறாள் Nai.

தன் பிள்ளைகளை தன்னுடைய வீட்டிற்கு அருகில் 'சளசள'த்து ஓடிக் கொண்டிருக்கும் வாய்க்காலில் குளிப்பாட்டுகிறாள் Nai, பாஷுவையும் குளிப்பாட்டுவதற்கு முயற்சிக்கிறாள். ஆனால், அவனோ வாய்க்காலில் இறங்க மறுக்கிறான். ஆனால், Nai விடுவதாக இல்லை. அவனை வலிய இழுத்துச் சென்று, வாய்க்காலில் இறக்கி, குளிக்க வைக்கிறாள். அவனுக்கு அவளே சோப் போட்டு விடுகிறாள். அப்போதும் அவன் வெள்ளை நிறத்திற்கு மாறுவதாக இல்லை. கறுப்பாகத்தான் இருக்கிறான். குண்டுகள் விழுந்து எழுந்த புகைப் படலம்தான் அவன் மீது ஒட்டிக் கொண்டிருக்கிறது என்று இதுவரை அவள் நினைத்திருந்தாள். ஆனால், அவனுடைய நிறமே அதுதான் என்பதைப் பார்த்ததும், அவளுக்கு ஏமாற்றமாகிறது.

பாஷுக்கு வீட்டிலிருந்த ஒரு சட்டையைக் கொடுத்து, அதை அணியும்படி அவனிடம் கூறுகிறாள் Nai. தன் அளவை விட சற்று பெரிதாக இருக்கும் அந்தச் சட்டையை அணிந்து கொண்டு, சிரித்துக் கொண்டே ஓடுகிறான் பாஷு.


Naiயின் மகனும், மகளும் பாஷுவிடம் மிகவும் நெருக்கமாகி விடுகிறார்கள். ஆனால், பக்கத்து வீடுகளிலிருக்கும் சிறுவர்கள் பாஷுவைப் பார்த்து கேலி செய்கிறார்கள். அவனுடைய நிறத்தைப் பார்த்து... தோற்றத்தைப் பார்த்து ஏளனம் செய்கிறார்கள். அதற்குப் பதிலாக பாஷு அரேபிய மொழியில் என்னவோ கூறுகிறான். அது அவர்களுக்குப் புரியவில்லை.

அந்த ஊரிலிருக்கும் Naiயின் உறவினர்கள், அவளுடைய வீட்டில் வெளியூரைச் சேர்ந்த ஒரு சிறுவன் இருக்கிறான் என்பதைக் கேள்விப்பட்டு, அங்கு வருகிறார்கள். அவர்களுக்கு தேநீர் போட்டு தருகிறாள் Nai. அவர்கள் கறுப்பு நிறத்தைக் கொண்ட பாஷுவைப் பார்க்கிறார்கள். 'யார் என்றே தெரியாத இந்த பையனை வீட்டில் வைத்திருப்பது தப்பு. இவனை வெளியேற்று' என்கிறார்கள். அவர்கள் கூறுவதை ஒரு ஓரத்தில் கவலையுடன் கேட்டவாறு நின்று கொண்டிருக்கிறான் பாஷு. ஆனால், அந்த உறவினர்கள் கூறியதைப் பொருட்படுத்தாமல் 'அவன் இங்குதான் இருப்பான். வெளியேற்ற முடியாது' என்று கூறி, அவர்கள் எல்லோரையும் வெளியே அனுப்பி, கேட்டை அடைக்கிறாள் Nai. அதைப் பார்த்துக் கொண்டே இருக்கிறான் பாஷு.

பக்கத்து வீடுகளிலொன்றில் இருக்கும் பெரியவர் ஒருவர்தான் Nai கூறுவதை, கடிதமாக அவளுடைய கணவனுக்கு எப்போதும் எழுதுவார். அவளுடைய கணவன் ஒரு போர் வீரனாக இருந்தவன். தனக்கு ஒரு வேலை தேடி பல மாதங்களுக்கு முன்பு நகரத்திற்குச் சென்றவன். இன்னும் திரும்பி வரவில்லை. 'நம் வீட்டில் இப்போது புதிதாக ஒரு விருந்தாளி வந்திருக்கிறான். அவன் பெயர் பாஷு. நம் பிள்ளைகளுடன் அவனையும் ஒரு பிள்ளையாக வைத்துக் கொள்ள நான் விரும்புகிறேன் அதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும்' என்று தன் கணவனுக்கு எழுதும் கடிதத்தில் அவள் குறிப்பிடுகிறாள். அந்தக் கடிதத்திலேயே 'அறுவடைக்கு முன்பே நீங்கள் வீட்டிற்கு வந்தால், நன்றாக இருக்கும்' என்றும் கேட்டுக் கொள்கிறாள்.

அவ்வப்போது தன் கண்களுக்கு முன்னால், தன்னுடைய தாய் கறுப்பு பர்தா அணிந்து நிற்பதைப் போல உணர்கிறான் பாஷு. சுரங்கப் பாதை அமைக்கும் பணியில் ஈடுபட்டிருப்பவர்கள், குண்டு போட அந்தச் சத்தத்தைக் கேட்டு நடுங்குகிறான் பாஷு. அதைத் தொடர்ந்து, அவன் காய்ச்சல் வந்தவனைப் போல பிதற்றுகிறான், வெட வெடக்கிறான். Nai அவனை அருகிலேயே இருந்து பார்த்துக் கொள்கிறாள்.

Naiக்கு மிகவும் உதவியாக இருக்கிறான் பாஷு. வாய்க்காலிலிருந்து வாளியில் நீர் எடுத்துக் கொண்டு வந்து அவளிடம் தருகிறான். எவ்ளவு பெரிய சுமையையும் தூக்குகிறான். சோளக் காட்டில், கதிர்களைத் தேடி வரும் பறவைகளை விரட்டுகிறான். Naiயைப் போலவே, வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்த்து அவற்றின் குரலில் கத்தி, இரைக்காக அழைக்கிறான். அதனால்தான் தன் கணவனுக்கு எழுதிய கடிதத்தில் 'நம் வீட்டிலிருக்கும் பாஷு தான் உழைப்பதைவிட, மிகவும் குறைவாகவே சாப்பிடுகிறான்' என்று எழுதினாள் Nai.

நகரத்திலிருக்கும் சந்தைக்கு தங்களின் பொருட்களுடன் செல்கிறாள் Nai. செல்லும்போது தன் பிள்ளைகளுடன், பாஷுவையும் அவள் அழைத்துச் செல்கிறாள். ஆடு, கோழி, கோழி முட்டைகள் என்று ஒவ்வொன்றையும் அவர்கள் கூவிக் கூவி விற்கிறார்கள். வியாபாரத்தில் Naiக்கு மிகவும் உதவியாக இருக்கிறான் பாஷு. கோழியை வாங்கும் ஒருவர் குறைவாக பணத்தைத் தந்துவிட, கூர்ந்து கவனித்த பாஷு, அதை Naiயிடம் கூறுகிறான். அதைத் தொடர்ந்து, கோழி வாங்க வந்த மனிதன் சரியான பணத்தைத் தருகிறான். Naiயுடன் இருக்கும் கறுப்பு நிற சிறுவனையே எல்லோரும் பார்க்கின்றனர்.

சற்று தள்ளி இருந்த கடையில் தொங்கிக் கொண்டிருந்த வயலட் நிற சட்டையை பாஷு தொட்டுப் பார்க்கிறான். அந்த காட்சியை Naiயும் பார்க்கிறாள். அவனிடம் ஒரு பண நோட்டைக் கொடுத்து, 'உனக்குப் பிடித்தமானது எதையாவது வாங்கிக் கொள்' என்று கூறுகிறாள் Nai. பாஷு பணத்துடன் அங்கிருந்து நகர்கிறான்.

பாஷு தொட்டுப் பார்த்த வயலட் நிற சட்டையை அவனுக்காக வாங்குகிறாள் Nai. நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. பாஷு திரும்பி வரவேயில்லை. அவன் எங்கு போனான்? கடைகள் அனைத்தும் காலி செய்யப்பட்டன. ஆள் அரவமே இல்லை. அந்த பிந்தைய இரவு வேளையில் அந்த காலியான சந்தையில் Naiயும், அவளுடைய பிள்ளைகளும் மட்டும்...

பாஷு இல்லாமல், தன் இரு பிள்ளைகளுடன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பி வருகிறாள் Nai. பையன் ஓடி விட்டான் என்பதைக் கேள்விப்பட்டு, மீண்டும் Naiயின் சொந்தக்காரர்கள் சந்தோஷத்துடன் அவளுடைய வீட்டிற்கு வருகிறார்கள். Nai அவர்களுக்கு தேநீர் தயாரித்துத் தருகிறாள். 'நாங்கள் அப்போதே சொன்னோம். நீதான் கேட்கவில்லை. அந்தப் பையன் ஓடியது ஒருவிதத்தில் நல்லது. இனி நீ நிம்மதியாக இருக்கலாம்' என்கிறார்கள் அவர்கள். ஆனால், பாஷுவைப் பற்றிய நினைவில் மிகவும் கவலையுடன் இருக்கிறாள் Nai.

அப்போது தூரத்தில் ஏதோ சத்தம் கேட்கிறது. பார்த்தால்... கையில் ஒரு குச்சியுடன் பாஷு வந்து கொண்டிருக்கிறான். அவ்வளவுதான்- Naiயின் உறவினர்கள் அமைதியாக அங்கிருந்து வெளியேறுகிறார்கள். நடந்து வந்து கொண்டிருந்த பாஷு, கால் தவறி வாய்க்காலுக்குள் விழுந்து விடுகிறான். நீச்சல் தெரியாததால், ஓடும் நீரில் அவன் உயிருக்குப் போராடுகிறான். வீட்டிற்குள் ஓடிச் செல்லும் Nai, ஒரு பெரிய வலையுடன் திரும்பி வருகிறாள். அதைப் போட்டு, மீனைப் பிடிப்பதைப் போல, பாஷுவை வலைக்குள் பிடித்து கரைக்குக் கொண்டு வருகிறாள்.


Nai உடல் நலம் பாதிக்கப்பட்டு, முனகிக் கொண்டிருக்க, வெளியே கிடக்கும் தகர டப்பாவை அடித்து, கடவுளிடம் அவளைக் காப்பாற்றும்படி அவன் வேண்டிக் கொள்கிறான். ஊரிலிருக்கும் ஆட்களிடம், அதைக் கூறுவதற்காக அவன் ஓடி வர, அவனைப் பார்த்து எல்லோரும் தங்களின் வீட்டு கதவுகளையும், சாளரங்களையும் மூடிக் கொள்கின்றனர். அந்த கிராமத்தைச் சேர்ந்த வைத்தியரை, வீட்டிற்கு அழைத்துக் கொண்டு வருகிறான் பாஷு. அவன் Naiக்கு அருகிலேயே இருந்து, அவள் குணமாகும் வரை பார்த்துக் கொள்கிறான்.

'நல்ல அறுவடை இருக்க வேண்டும்' என்று பாடியவாறு கிராமத்துச் சிறுவர்கள் ஆடுகிறார்கள். அவர்களுடன் சேர்ந்து Naiயின் பிள்ளைகளும், பாஷுவும். அப்போது பாஷுவை கிராமத்துச் சிறுவர்கள் அடித்து விடுகிறார்கள். அதைப் பார்த்து Nai வேகமாக ஓடி வந்து அந்தச் சிறுவர்களை அடித்து விரட்டுகிறாள். சிறிது நேரத்தில் - அந்தச் சிறுவர்களின் பெற்றோர்கள் அங்கு வந்து 'நீ எப்படி எங்களின் பிள்ளைகளை அடிக்கலாம்?' என்று கேட்கின்றனர்.

அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் பாஷுவும் அந்தச் சிறுவர்களும் சற்று தூரத்தில் ஒன்றாகச் சேர்ந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வைத்திருந்த ஒரு புத்தகத்தை எடுத்து 'ஈரான் நமது நாடு, நாம் அனைவரும் ஈரானின் குழந்தைகள்'  என்று வாசிக்கிறான் பாஷு. அப்போதுதான் அவனுக்கு படிக்கவும் தெரியும் என்பதே எல்லோருக்கும் தெரிகிறது.

இதற்கிடையில் Naiயின் கணவனிடமிருந்து ஒரு கடிதம் வருகிறது. அதில் 'வீட்டிற்கு வந்திருக்கும் சிறுவனை வீட்டில் வைத்திருக்காதே. அனுப்பி விடு' என்று அவன் எழுதியிருக்கிறான். அதைப் படித்து கவலைப்பட்ட Nai, அந்த கடிதத்தை ஒரு மறைவிடத்தில் வைக்கிறாள். அதைப் பார்த்து விட்ட பாஷு, அதை எடுத்து படித்து விடுகிறான். அதைத் தொடர்ந்து அவன் வீட்டை விட்டு வெளியேறி ஓடுகிறான். மழை பெய்கிறது. மின்னல் வெட்டுகிறது. சூறாவளி காற்று வீசுகிறது. இடி இடிக்கிறது. அவற்றைப் பொருட்படுத்தாமல், பாஷுவைப் பிடித்துக் கொண்டு வருகிறாள் Nai.

அத்துடன் நிற்காமல் 'பாஷு நம் வீட்டில்தான் இருப்பான். அவனை வெளியேற்ற முடியாது' என்று அவனை வைத்தே தன் கணவனுக்கு ஒரு கடிதத்தையும் எழுத வைக்கிறாள் Nai.

பாஷு சோளக் காட்டில் நின்று கொண்டிருக்கிறான். அப்போது அங்கு வரும் ஒரு மனிதன் பருகுவதற்கு நீர் கேட்கிறான். பாஷு தருகிறான். 'பறவைகளையும், மிருகங்களையும் விரட்டுவதற்கான இந்த பொம்மையைச் செய்தது யார்?' என்று அவன் கேட்க, 'நான்தான்' என்கிறான் பாஷு. 'நல்ல பையன்' என்று பாராட்டுகிறான் அந்த மனிதன்.

பாஷு வீட்டிற்கு வருகிறான். Naiயுடன் ஒரு மனிதன் கோபமாக பேசிக் கொண்டிருப்பதை பாஷு பார்க்கிறான். சிறிது நேரத்திற்கு முன்பு அவனைப் பாராட்டிய அதே மனிதன்தான். அவன்தான் Naiயின் கணவன். 'சிறுவனை வெளியேற்ற வேண்டும்' என்கிறான் அவன். 'முடியாது' என்கிறாள் Nai. பாஷு அருகில் சென்று, கை குலுக்குவதற்காக அந்த மனிதனின் கையைக் கேட்கிறான். அப்போதுதான் பாஷுவிற்கே தெரிகிறது- அவனுக்கு ஒரு கையே இல்லை. அடுத்த நிமிடம் - பாஷு பாசத்துடன் அவன் மீது சாய, அந்த மனிதன் உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நிற்கிறான்.

சோளக் காட்டைத் தேடி பறவைகள் பறந்து வருகின்றன. கூச்சலிட்டுக் கொண்டும், தகர டப்பாக்களைத் தட்டிக் கொண்டும் Nai, அவளுடைய கணவன், அவர்களின் பிள்ளைகள் பாஷு எல்லோரும், அவற்றை விரட்டுவதற்காக வேகமாக ஓடுகிறார்கள். பாஷு அந்த குடும்பத்தில் ஒருவனாக- நிரந்தரமாக ஆகிவிட்டான் என்பதை நாம் உணர்ந்து கொள்கிறோம்.

அத்துடன் படம் முடிவடைகிறது.

Naiயாக Susan Taslimi

Bashuவாக Adnan Afravian

பாத்திரங்களாகவே வாழ்ந்திருக்கிறார்கள்.

மிகச் சிறந்த ஒரு திரைப்படத்தை இயக்கிய Bahram Beizaiக்கு -ஒரு பூச்செண்டு!

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.