Logo

மேட்ரிட் 1987

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4175
Madrid 1987

என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)

மேட்ரிட் 1987 – MADRID 1987

(ஸ்பானிஷ் மொழி திரைப்படம்)

2011ஆம் ஆண்டில் திரைக்கு வந்த படமிது. கதையை எழுதி இயக்கியவர் David Trueba. அதே வருடத்தில் நடைபெற்ற San Sebastian International Film Festival இல் இப்படம் திரையிடப்பட்டு அனைவரின் பாராட்டையும் பெற்றது.

105 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம் ஸ்பெயின் நாட்டின் தலைநகரமான `மேட்ரிட்'டில் படமாக்கப்பட்டது. மொத்தம் படப்பிடிப்பு நடைபெற்ற நாட்களே பன்னிரெண்டுதான். இப்படத்தின் இயக்குநரான David Trueba ஒரு இளம் பத்திரிகையாளராக 1980 ஆம் ஆண்டில் இருந்தபோது, சந்திக்க நேர்ந்த அனுபவங்களே இப்படம் உருவாகுவதற்குத் தூண்டுதல்களாக இருந்தன.

2011 ஆம் ஆண்டில் நடைபெற்ற Sundane Film Festival லும் இப்படம் திரையிடப்பட்டது. 

படம் ஆரம்பித்து 10 நிமிடங்கள் தவிர, மீதி மொத்த படமும் ஒரு சிறிய குளியலறைக்குள்ளேயே நடைபெறுவதாக இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கிறது. படம் முழுக்க வருபவை இரண்டே கதாபாத்திரங்கள்தாம். நடுத்தர வயதைத் தாண்டிய ஒரு மனிதர், பதின் பருவத்தைச் சேர்ந்த ஒரு அழகிய இளம் பெண்.

இவர்கள் இருவரை மட்டுமே வைத்து ஒரு முழு படத்தையும் சிறிதும் சோர்வு உண்டாகாத அளவிற்கு இயக்கியிருக்கிறார் இயக்குநர் டேவிட் ட்ரூபா.

நான் 'Madrid 1987' படத்தைப் பார்த்தபோது உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு விட்டேன். ஏகப்பட்ட கதாப்பாத்திரங்களை வைத்துக் கொண்டு ஒரு கதையைக் கூறுவதற்கே படாதபாடு பட்டுக்கொண்டிருக்கும் நம் திரைப்பட இயக்குநர்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, David Trueba எங்கோ மலையின் உச்சியில் இருக்கிறார். நம் இயக்குநர்களில் பெரும்பாலோர் பள்ளத்திற்குள் நின்று கொண்டு  செய்வதறியாது விழித்துக் கொண்டிருப்பதுதான் நம் ஞாபகத்தில் வருகிறது.

படத்தைப் பார்க்கும்போது எனக்கு சிறிதுகூட தளர்ச்சியே உண்டாகவில்லை. அந்த அளவிற்கு நூல் பிடித்ததைப் போல கதாபாத்திரங்களும், நேர்த்தியான திரைக்கதையும் அமைக்கப்பட்டிருந்தன. இன்னும் சொல்லப் போனால்- படத்தில் அந்த இரு கதாபாத்திரங்களுக்குமிடையே நடைபெறும் உரையாடல்களை பல மாதங்களுக்கு முன்பு நான் படத்தைப் பார்த்தபோதே, ஆர்வத்துடன் ஒரு நோட்டு புத்தகத்தில் எழுதி வைத்தேன் என்பதிலிருந்தே அதன் சிறப்பை நீங்கள் புரிந்து கொள்ளலாம். 

அந்த அளவிற்கு நான் சிறப்பித்துக் கூறும் ` Madrid 1987' படத்தின் கதைதான் என்ன? 

1987 ஆம் வருடம் Miguel என்பவர். ஒரு நடுத்தர வயதைத் தாண்டிய பத்திரிகையாளர். பல புகழ் பெற்ற பிரபல நாளிதழ்களிலும், பத்திரிகைகளிலும், பத்திகளும், கட்டுரைகளும் எழுதக்கூடியவர் அவர். பல வருடங்களாக அவர் அந்தச் செயலில் ஈடுபட்டிருக்கிறார். மனதில் படக்கூடிய எதையும் சிறிதும் மறைக்காமல், யாருக்கும் பயப்படாமல், பின் விளைவுகளைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் துணிச்சலுடன் எழுதக் கூடிய அவரின் எழுத்துக்களுக்கு மக்கள் மத்தியில் எப்போதுமே வரவேற்பு உண்டு. அவரின் கட்டுரைகளுக்காகவே அவை பிரசுரமாகி வரும் பத்திரிகைகளை மக்கள் விரும்பி வாங்குவார்கள்.

அவரின் தனித்துவ எழுத்துக்களுக்காகவே அவருக்கு நிறைய ரசிகர்கள் ஸ்பெயின் முழுவதும் இருக்கிறார்கள். ஆனால், என்னதான் பத்திரிகை உலகில் தன்னுடைய அபார எழுத்தாற்றலால் கொடி கட்டிப் பறந்தாலும், மக்கள் `ஆஹா, ஓஹோ' என்று புகழ்ந்தாலும், மைகேலின் மனதிற்குள் முழுமையான சந்தோஷம் என்பதே இல்லை. புகழ் இருக்கும் அளவிற்கு, பெரிய அளவில் தனக்கு வருமானம் இல்லை என்பதும் ஒரு காரணம்.

அதனால் ஒருவித விரக்தியின் எல்லையில்தான் Miguel வாழ்ந்து கொண்டிருக்கிறார். இந்தச் சூழ்நிலையில் அவரைச் சந்திப்பதற்காக வருகிறாள் ஒரு டீன் - ஏஜ் இளம்பெண். காண்போரைச் சுண்டி இழுக்கக்கூடிய பேரழகு படைத்த அந்த இளம் தேவதையின் பெயர் Angela. பெயருக்கேற்றபடி உண்மையிலேயே அவள் ஒரு `ஏஞ்ஜெல்'தான். ஒரு ரெஸ்ட்டாரெண்டில் Miguel அமர்ந்திருக்க, அங்கு வருகிறாள் ஏஞ்ஜெலா. அதற்கு முன்பு மைகேலுக்கு ஃபோன் பண்ணியிருந்தாள். அவரை தான் சந்திக்க விரும்புவதாக அவள் கூறியிருந்தாள். அவர்தான் அவளை அந்த நேரத்தில், ரெஸ்ட்டாரெண்டிற்கு வரச் சொல்லி கூறியிருந்தார்.

சொற்பொழிவு ஆற்றுவதிலும், பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதுவதிலும் மிகவும் ஆர்வமுடையவள்  ஏஞ்ஜெலா. ஒரு மிகப் பெரிய ஆராய்ச்சிக் கட்டுரை எழுத அவள் விரும்புகிறாள்.  அதற்கு அவள் தேர்ந்தெடுத்த நபர் Miguel. அவரைப் பற்றியே ஒரு பன்முகத் தன்மை கொண்ட கட்டுரையை அவள்  எழுத நினைக்கிறாள். அதற்காகத்தான் அவள் மைகேலைத் தொடர்பு கொண்டாள். அவளின் திறமை என்ன என்பது தெரியாததால், இதற்கு முன்பு அவள் எழுதியிருக்கும் கட்டுரைகளை, தன்னைச் சந்திக்க வரும்போது, கையில் எடுத்துக் கொண்டு வரும்படி அவர் கூறியிருந்தார். அதன்படி அவள் தான் எழுதிய சில கட்டுரைகளின் கையெழுத்துப் பிரதிகளுடன் அங்கு வருகிறாள். 

தனக்கு எதிரில் அவளை அமரச் சொன்னார் Miguel. அவள் தந்த கையெழுத்துப் பிரதிகளை அவர் இப்படியும், அப்படியுமாக புரட்டிப் பார்த்தாலும், அவற்றைப் பார்ப்பதில் அவருக்கு பெரிய அளவில் ஆர்வமோ, ஈடுபாடோ இல்லை என்பதே உண்மை. அவளுடைய எழுத்துக்களில் இருக்கும் குறைகளைச் சுட்டிக் காட்டும் அவர், அவளுக்கு எழுத்தில் இருக்கும் ஆர்வத்தையும், திறமையையும் பாராட்டவும் செய்கிறார். அவளின் எழுத்துக்களைப் பார்ப்பதைவிட, அவரின் கவனம் முழுவதும் அந்த அழகுச் சிலையின் மீதே முற்றிலும் இருக்கிறது. அவரின் கண்கள் அவளை தலையிலிருந்து  பாதம் வரை மேய்ந்து கொண்டிருக்கின்றன. அவளின் உடலழகில் அந்த வயதான மூத்த பத்திரிகையாளர் சொக்கிப் போய் உட்கார்ந்திருக்கிறார்.

`எழுத்தில் உனக்கு இருக்கும் ஆர்வத்தை நான் பாராட்டுகிறேன். அதே நேரத்தில் இங்கேயே அமர்ந்து எவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்க முடியும்? என் நண்பன் Luisக்குச் சொந்தமான ஒரு ஃப்ளாட் இருக்கிறது. அவன் வார இறுதி என்பதால், வெளியூர் போயிருக்கிறான். திங்கட்கிழமைதான் வருவான். அந்த வீட்டின் சாவியை அவனிடமிருந்து நான் வாங்கி வைத்திருக்கிறேன். அதுவரை நாம் அந்த ஃப்ளாட்டை பயன்படுத்திக் கொள்ளலாம். வா.... நாம் அங்கு போவோம்' என்கிறார் Miguel. ஆரம்பத்தில்  சற்று தயங்கினாலும், தான் வந்த விஷயம் முடிய வேண்டுமே என்பதற்காக அவருடன் அந்த வீட்டிற்குச் செல்ல சம்மதிக்கிறது நம் பேரழகு பெட்டகம்.


அந்த ஃப்ளாட்டிற்குள் இருவரும் நுழைகிறார்கள். எல்லா வசதிகளும் கொண்ட வீடு அது. இருவரும் கைகளில் விஸ்கியை வைத்துக் கொண்டே உரையாடலைத் தொடர்கிறார்கள். லூயிஸ் வரைந்த ஓவியங்கள் பல அங்கு இருக்கின்றன. அந்த ஓவியங்களை மிதித்துக் கொண்டு மைகேல் நடக்கிறார். அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறாள் ஏஞ்ஜெலா. ` லூயிஸே இதை பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டான்.  வாழ்க்கையையும், அனுபவங்களையும் கலந்து பார்க்கக் கூடியவன் அவன்' என்கிறார் Miguel. அத்துடன் நிற்காமல்- `ஓவியர்களைப் பார்த்து நான் மிகவும் பொறாமைப்பட்டிருக்கிறேன். ஏனென்றால், அவர்களுக்கு வார்த்தை என்பதே தேவையில்லை. ஆனால், வார்த்தைகளால் விவரித்துக் கூற முடியாத விஷயங்களைக் கூட, வார்த்தைகளின் மூலம் விளக்கிக் கூறுவதற்கு இலக்கியம் படாதபாடு படுகிறது' என்கிறார் மைகேல்.

அவர்களுக்கிடையே விஸ்கி பருகிக் கொண்டே உரையாடல் நீடிக்கிறது. `நம் இருவருக்குமிடையே நிறைய கண்ணாடிகள் இருக்கின்றன. நான் பார்க்கும் கண்ணாடியை விட, நீ பார்க்கும் கண்ணாடியில் என்ன பார்க்கிறாயோ, அது குறைவான ஆர்வத்தைத் தருவதாகவே இருக்கும்' என்கிறார் மைகேல். அதன்மூலம் தன்னுடைய பல வருட அனுபவத்தை சூசகமாக அவளிடம் அவர் தெரிவிக்கிறார்.

தொடர்ந்து முத்தத்தைப் பற்றி உரையாடல் திரும்புகிறது. `உண்மையாக கூறுவதாக இருந்தால்- முத்தம் விஷயத்தில் நான் ஆர்வத்தை இழந்து விட்டேன். நீ, டீன்-ஏஜ் பருவத்தில் இருக்கும்போது, அது உனக்கு ஒரு மிகப் பெரிய விஷயமாகத் தோன்றும். யாரையாவது முத்தமிடும்போது, நீ மலையின் உச்சியை அடைந்து விட்டதைப் போல உணர்வாய். காலப் போக்கில்-முத்தம் என்பது வழக்கமான ஒரு விஷயமாக தோன்ற ஆரம்பித்து விடும். தாளில் எதையாவது எழுதி, வேலையை முடிப்பதைப்போல... என்று மைகேல் தொடர்ந்து கூறுகிறார்: `நீ ஒரு அறிவாளி என்பதை நான் ஒத்துக் கொள்கிறேன். ஆனால், நான் ஏராளமான அறிவாளிகளை ஏற்கெனவே சந்தித்திருக்கிறேன். எனினும், ஒரு புதிய உடலைப் பார்ப்பது என்பது... உனக்கு எந்தச் சமயத்திலும் சோர்வே உண்டாகாது'- இப்படி கூறிக் கொண்டே அவர் ஏஞ்ஜெலாவின் முகத்தையும், சரீரத்தையும் வெறித்துப் பார்க்கிறார்.

அவர் எழுந்து நடக்க, அவரைப் பின்பற்றி நடக்கிறாள் அந்த இளம் பெண். திடீரென்று அவர் படுக்கையறைக்குள் நுழைகிறார். நுழைந்தவுடன், எதைப் பற்றியும் யோசிக்காமல் ஏஞ்ஜெலாவிடம், அவள் அணிந்திருக்கும் ஆடைகளைக் கழற்றி எறிந்து விட்டு, நிர்வாணமாக தனக்கு முன்னால் வரும்படி கூறுகிறார். அதைக் கேட்டு அவள் அதிர்ச்சியடைந்து விடுகிறாள். தான் மிகவும் உயரத்தில் வைத்துப் பார்த்த மனிதர் இந்த அளவிற்கு கீழ்த் தரமான குணம் கொண்டவராக இருக்கிறாரே என்று மனதில் வெறுப்புடன் அவள் நிற்கிறாள். தனக்கு மனதில் எதையும் மறைத்து வைக்கத் தெரியாது என்றும், எதையும் வெளிப்படையாக செயல்படுத்தும் குணம் கொண்டவன் தான் என்றும் மைகேல் கூறுகிறார்.

அவள் அங்கிருந்து புறப்பட ஆரம்பிக்கிறாள். அதைப் பார்த்து மைகேல், அவளைத் தடுத்து நிறுத்துகிறார். தன்னுடைய தைரிய குணத்தை நிச்சயம் ஒருநாள் அவள் புரிந்து கொள்ளப் போவது உறுதி என்கிறார் அவர்.

மைகேல் ஒரு சிகரெட்டை உதட்டில் வைத்து புகைத்துக் கொண்டிருக்கிறார். வெளியே ஏதோ கிறீச்சிடும் சத்தம் கேட்கிறது. என்னவென்று பார்த்தால்- கதவைத் திறந்து கொண்டு ஏஞ்ஜெலா உள்ளே வருகிறாள். மேற்சட்டை மட்டும் அணிந்திருக்கிறாள். சரீரத்தில் வேறு ஆடை எதுவுமில்லை. அதைப் பார்த்து இன்ப அதிர்ச்சியும், ஆச்சரியமும் அடைகிறார் Miguel. வாயைத் திறந்து வார்த்தைகள் எதுவும் பேசாமல், அவளுடைய நிர்வாண உடலின் மீது வர்ணத்தைப் பூசுகிறார். அந்த வர்ணத்தைக் கழுவுவதற்காக ஏஞ்ஜெலா அந்த அறைக்குள் இருக்கும் குளியலறைக்குள் நுழைகிறாள்.

அவள் குளியலைறைக்குள் இருக்க, அதற்குள் மைகேலும் நுழைகிறார். அதைப் பார்த்து என்ன சொல்லுவது என்றே தெரியாமல் குழப்பமான மனநிலையில் இருக்கிறாள் ஏஞ்ஜெலா. மைகேலோ தாழ்ப்பாளைப் போடுகிறார். அங்கிருந்து தப்பிக்கலாம் என்று எண்ணும் ஏஞ்ஜெலா, தாழ்ப்பாளை நீக்க முயல, அது செயல்படாமல் இருக்கிறது. சூழ்நிலையின் இறுக்கத்தைப் புரிந்து கொண்டு, மைகேலும் தாழ்ப்பாளைத் திறப்பதற்காக முயற்சிக்கிறார். ஆனால், கதவு திறக்கவில்லை. ஏதோ காரணத்தால், தாழ்ப்பாள் திறக்க முடியாத அளவிற்கு மாட்டிக் கொள்கிறது. உள்ளேயிருந்து அதைத் திறக்க முடியாது. வெளியிலிருந்து திறந்தால்தான் வழியுண்டு. ஆனால், வெளியில் யாரும் இல்லையே! 

அவ்வளவுதான் - அந்தச் சிறிய குளியலறைக்குள் அவர்கள் இருவரும் சிக்கிக் கொள்கிறார்கள். மைகேல் இடுப்பில் ஒரு டவலைச் சுற்றியிருக்கிறார். வேறு ஆடை எதுவும் அவருடைய உடலில் இல்லை. அவளோ நிர்வாண கோலத்தில் நின்று கொண்டிருக்கிறாள். அவளுடைய தர்ம சங்கடமான நிலையைப் பார்த்து, தன் இடுப்பில் சுற்றியிருந்த டவலை அவிழ்த்து, அவளிடம் தருகிறார் மைகேல். ஏஞ்ஜெலா அதை தன் உடலில் சுற்றிக் கொள்கிறாள். 

முன்பு வெளியில் பேசிக் கொண்டிருப்பதைப் போலவே அந்த குளியலறைக்குள் இருந்து கொண்டு, அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருக்கின்றனர். அவள் அமர்ந்திருக்கும்போது, அவர் நிற்கிறார். அவர் அமரும் போது, அவள் நிற்கிறாள். அவ்வப்போது ஏஞ்ஜெலா டவலால் தன் உடலின் பாகங்களை மறைக்க முயற்சிக்கிறாள். பலவிதப்பட்ட விஷயங்களைப் பற்றியும் அவர்கள் உரையாடுகின்றனர்.

வரலாறு, இலக்கியம், ஆன்மீகம், மக்களின் வாழ்க்கை, அரசியல் - ஒன்றைக் கூட அவர்கள் விடவில்லை. பேசுகிறார்கள்... பேசுகிறார்கள்... பேசிக் கொண்டே இருக்கிறார்கள். ஏஞ்ஜெலா ஆர்வத்துடன் ஒவ்வொன்றையும் பற்றி கேட்கக் கேட்க, தன்னுடைய அபார அனுபவத்தால் அவள் கேட்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் மிகவும் ஆழமாகவும், விளக்கமாகவும் பதில் கூறுகிறார் மைகேல். சில விஷயங்கள் வித்தியாசமான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட்டதாக இருந்தாலும், தன் பார்வையில் அந்த விஷயத்தை தான் அப்படித்தான் பார்ப்பதாக உறுதியான குரலில் கூறுகிறார் மைகேல். அவரின் பேச்சுக்களை மிகவும் ஆர்வத்துடன், கூர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறாள் ஏஞ்ஜெலா.

பேச்சுக்கு மத்தியில், 'இரண்டு நபர்கள் சேர்ந்து இருக்க வேண்டும் என்று மனதிற்குள் ஆசைப்படலாம். ஆனால், அப்படி ஆசைப்படுவதற்கும், சந்தர்ப்ப சூழ்நிலையின் காரணமாக வலிய இரண்டு பேர் ஒரே இடத்தில் சேர்ந்து இருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது' என்கிறார் மைகேல். 


தனக்கு பெண்ணின் உடல் மீது ஒரு ஈர்ப்பு இருப்பதைப் போலவே, விஸ்கி, சிகரெட்டின் மீதும் அளவற்ற ஈடுபாடு இருக்கிறது என்கிறார் மைகேல். அவர் கூறுகிறார் : `சில இளைஞர்கள் சாகும் வரை குடித்துக் கொண்டே இருக்கிறார்கள், அப்படிப்பட்டவன் பிரிட்டிஷ்காரன் குடிப்பதைப் போன்றவன். சரீரத்தைத் தளர்வடையச் செய்வதற்காக மது அருந்துபவன் ஸ்பெயின் நாட்டுக்காரன். தங்களைத் தாங்களே அழித்துக் கொள்வதற்காக பிரிட்டிஷ்காரன் மது அருந்துகிறான். அவர்களுக்கு அது ஒரு தொழிலைப் போல. ஒரு பொழுதுபோக்கினைப் போல அல்ல....' அவர் தொடர்ந்து கூறுகிறார் : `நீ சிலர் மீது உயர்ந்த  மதிப்பும், மரியாதையும் வைத்திருப்பாய், அவர்களை நீ சந்திக்கிறாய் அல்லவா? அவர்களை அதற்குப் பிறகு வாழ்க்கைக்குள் நுழையவே விடக் கூடாது என்பதற்கான முதல் அடிதான் அந்தச் சந்திப்பு. நீ உடல்களையும், இறந்த மனிதர்களையும் மட்டுமே வழிபட முடியும். உள்ளே இருப்பவை அழுக்கடைந்தவை, அழுகிப் போனவை, அசிங்கமானவை. அதற்குள் போகாமல் இருப்பதே நல்லது.'

இப்போது அவர்களுக்கு வேறொரு கவலை வந்து சேர்கிறது. Miguelக்கு மனைவி இருக்கிறாள். வீட்டில் இருக்கும் அவள் அவரை எதிர்பார்த்துக் கொண்டு இருப்பாள். ஏஞ்ஜெலாவிற்கு பெற்றோர்கள் இருக்கிறார்கள். அவர்கள் தங்கள் மகள் இன்னும் வரவில்லையே என்ற கவலையுடன் இருப்பார்கள். ஒரு புகழ் பெற்ற பாசிச வீரரின் மகள்தான் ஏஞ்ஜெலா என்ற தகவல் அப்போதுதான் மைகேலுக்குத் தெரிய வருகிறது. அவளுடைய தந்தையை அவர் பார்த்திருக்கிறார். இன்னும் சொல்லப் போனால்- அவளுடைய அக்காவைக் கூட அவருக்குத் தெரியும். `அவளின் தங்கையா நீ?' உன் அக்காவை எனக்கு மிகவும் பிடிக்கும். வேறொரு வகையில் கூறுவதாக இருந்தால்- பல வருடங்களுக்கு முன்பு நான் அவளை மனதிற்குள் விரும்பினேன். அவளை எப்படியும் அடைய வேண்டும் என்று நினைத்தேன். சிறிது முயற்சித்திருந்தால், உன் அக்காவுக்கும் எனக்குமிடையே உடலுறவு கூட உண்டாகி இருக்கும். ஆனால், என்ன காரணத்தாலோ அப்போது அது நடக்கவில்லை. அதற்குப் பிறகு அவளை நான் பார்க்கவே இல்லை' என்கிறார் மைகேல். அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறாள்  ஏஞ்ஜெலா. 

இப்போது திரும்பவும் அவர்கள் குளியலறையின் தாழ்ப்பாளைத் திறக்க முயற்சிக்கிறார்கள். ஆனால், திறக்க முடியவில்லை. மேலே இருந்த வென்டிலேட்டரின் வழியாக மைகேல் கத்துகிறார். `தாழ்ப்பாள் சிக்கிக் கொண்டது, யாராவது உதவிக்கு வர முடியுமா?' என்று கேட்கிறார். ஆனால், யாருமில்லை. வாரக் கடைசி என்பதால், எல்லோரும் அங்கிருந்து வேறு இடங்களுக்குச் சுற்றுலா சென்றிருக்கின்றனர். அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு உயிர் கூட இல்லை.

மீண்டும் குளியலறைக்குள் அந்த நடுத்தர வயதைத் தாண்டிய மனிதரும், அந்த அழகு தேவதையும்... நேரம் ஓடிக் கொண்டிருக்கிறது. ஏஞ்ஜெலாவின் சரீரத்தையே கண்களை எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கிறார் மைகேல். தன் உடலின் மீது அவருக்கு அடக்க முடியாத ஒரு ஆர்வம் இருக்கிறது என்பதை ஆரம்பத்திலிருந்து ஏஞ்ஜெலா கவனித்துக் கொண்டுதான் இருக்கிறாள். தன்னைவிட வயதில் மிகவும் குறைந்த நிலையில் இருக்கும் ஒரு இளம் பெண்ணை இப்படி காம வெறியுடன் பார்க்கிறோமே என்பதைப் பற்றியெல்லாம் Miguel சிறிதும் கவலைப்படவில்லை.

`என்னுடன் உடலுறவு கொள்ள வேண்டும் என்ற ஆசை இப்போதும் உங்களுக்கு இருக்கிறதா?' என்று கேட்கிறாள் ஏஞ்ஜெலா. `ஆமாம்....' என்கிறார் மைகேல். பிறகென்ன? விளக்கை அணைக்கும் ஏஞ்ஜெலா தன் உடலில் சுற்றியிருந்த டவலை நீக்குகிறாள். இருவருக்குமிடையே உடலுறவு நடக்கிறது... அந்தச் சிறிய குளியலறைக்குள்ளேயே. அதற்காக மனதிற்குள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை என்றும், தவறு செய்து விட்டோமே என்ற குற்ற உணர்வு தேவையில்லை என்றும் கூறுகிறார் அவர். தனக்கு அப்படிப்பட்ட குற்ற உணர்வு எந்தக் காலத்திலும் இருந்ததில்லை என்கிறார் அவர். அதைக் கேட்டு அவளுக்கு அவர் மீது கோபமும், எரிச்சலும் உண்டாகின்றன. அவருக்கு ஆணவம் அதிகமாக இருக்கிறது என்றும், அதைத் தன் கட்டுரையில் தான் எழுதப் போவதாகவும் அவள் கூறுகிறாள். 

கோபத்தில் இருக்கும் ஏஞ்ஜெலாவின் குணத்தை மாற்றி, சாந்தமாக்குவதற்காக மைகேல் ஒரு கதை கூறுகிறார். அந்த கதையை ஒரு திரைப்படமாக கற்பனை பண்ணி அவர் கூறுகிறார். அந்தத் திரைப்படத்தை திரையரங்கில் தாங்கள் பார்ப்பதைப்போல அவர் கூறுகிறார். அதில் வரும் சிறுவன் தான் படுக்கும் படுக்கையை விட்டு எந்தச் சூழ்நிலையிலும் எழுந்து வர முடியாது என்கிறான். தன்னிடம் எந்த தவறும் இல்லை என்கிறான் பையன். திடீரென்று சிறுவன் மறைந்து விடுகிறான். தங்களுடைய மகன் படுக்கையை விட்டு காணாமல் போய் விட்டான் என்பதற்காக சந்தோஷப்படுவதா அல்லது அவன் ஓடி விட்டான் என்பதற்காக கவலைப்படுவதா என்ற குழப்ப நிலையில் இருக்கின்றனர் அவனுடைய பெற்றோர்கள். இந்தக் கதையின் மூலம் மைகேல் என்ன கூற விரும்புகிறார் என்பது புரிகிறதா?

மைகேல் கதையைக் கூறி முடிப்பதற்கும், அவரின் நண்பன் லூயிஸ் அங்கு வெளியே வந்து நிற்பதற்கும் சரியாக இருக்கிறது. அந்த இருவரும் சற்று முன்பு சத்தம் போட்டு அழைத்தார்களே... அந்தக் கூக்குரலைக் கேட்ட ஒருவர் கொடுத்த தகவலைத் தொடர்ந்து, அவசர அவசரமாக கிளம்பி அங்கு வந்திருக்கிறான் லூயிஸ். 

வெளியிலிருந்து குளியலறையின் தாழ்ப்பாளை லூயிஸ் திறக்க, நிர்வாணமாக வெளியே வருகிறார்கள் இருவரும். மிகவும் வேகமாக தன் ஆடைகளை எடுத்து அணிந்து கொண்டு அங்கிருந்து கிளம்புகிறாள் ஏஞ்ஜெலா. செல்லும்போது தன்னுடைய கண்ணாடியை அங்கேயே அவள் மறந்து, வைத்து விட்டுச் சென்று விடுகிறாள். லூயிஸ் மைகேலிடம், திரும்பவும் அவர் ஏஞ்ஜெலாவைப் பார்ப்பாரா என்று கேட்டதற்கு, Miguel கூறுகிறார் : `இந்தக் கண்ணாடி இங்கேயே இருக்கட்டும், அவள் திரும்பவும் வருவதாக இருந்தால், இந்த வீட்டிற்குத்தான் வருவாள்.' அவருடைய வார்த்தைகளில்தான் என்ன ஆழமான அர்த்தம்!

ஏஞ்ஜெலா தன் பெற்றோரைத் தேடி வேக வேகமாக நடந்து செல்ல, படம் முடிவடைகிறது.

இரண்டு கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு, ஒரு சிறிய குளியலறைக்குள் முழு படத்தையும் படமாக்கிய இயக்குநர் David Truebaவை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். Miguel ஆக நடித்த Jose Sacristan ஐயும், ஏஞ்ஜெலாவாக வாழ்ந்த Maria Valverde யையும்தான்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.