Logo

மித்ர் மை ஃப்ரண்ட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6044
Mitr, My Friend

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

Mitr My Friend

(இந்திய ஆங்கில திரைப்படம்)


டிகை ரேவதி இயக்கிய ஆங்கில திரைப்படம். ‘Telephoto Entertainments Limited’ சார்பாக படத்தைத் தயாரித்தவர் சுரேஷ் மேனன்.

2002 ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இப்படத்தின் படப்பிடிப்பு இந்தியாவிலும், அமெரிக்காவிலும் நடைபெற்றது. சில காட்சிகள் மட்டுமே இந்தியாவில். 95 சதவிகிதம் படப்பிடிப்பு அமெரிக்காவில்தான்.

படத்தின் கதாநாயகி- ஷோபனா.

இப்படத்தில் பணியாற்றிய முக்கியமான தொழில் நுட்ப கலைஞர்கள் முழுவதும் பெண்களே.

திரைக்கதை – வி.ப்ரியா, சுதா கோங்கரா.

கதை – வி.ப்ரியா

படத்தொகுப்பு – பீனா பால்

ஒளிப்பதிவு – Fowzia Fatima (பி.சி. ஸ்ரீராமின் உதவியாளர்)

இசை- பவதாரிணி இளையராஜா.

தமிழகத்தின் சிதம்பரத்திலுள்ள ஒரு பாரம்பரிய குடும்பத்தைச் சேர்ந்த இளம் பெண்ணை மையமாக வைத்து பின்னப்பட்டதே இப்படத்தின் கதை.

லட்சுமி ஒரு பிராமண இளம் பெண். மரபுகளை கறாராக பின்பற்றும் குடும்பத்தில் பிறந்தவள் அவள். அவளுக்கும் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் சாஃப்ட்வேர் எஞ்ஜீனியராக பணியாற்றும் ப்ரித்விக்கும் திருமணம் நடைபெறுகிறது.

திருமணம் முடிந்ததும், தம்பதிகள் அமெரிக்காவிற்குப் புறப்பட்டு விடுகிறார்கள். அமெரிக்க வாழ்க்கை லட்சுமிக்கு ஒரு புதிய அனுபவமாக இருக்கிறது. கோவில்கள், பூஜைகள், பஜனைகள் என்று இதுவரை வாழ்ந்து கொண்டிருந்த லட்சுமிக்கு அமெரிக்க வாழ்க்கை, கண்களைக் கட்டி காட்டில் விட்டதைப் போல இருக்கிறது.

அவளுடைய வீட்டிற்கு அருகில் இருக்கும் பங்களாக்களில் இருப்பவர்கள் அமெரிக்கர்கள். தெருவில் ஆள் நடமாட்டமே இருக்காது. எல்லோரும் வீடுகளை விட்டு, தொழில் விஷயமாக வெளியே சென்றிருப்பார்கள். அல்லது வீட்டிற்குள் கதவை மூடிக் கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருப்பார்கள். அருகில் உள்ள யாருடனும் அவர்கள் எதுவும் பேசிக் கொள்வதில்லை.

சில நேரங்களில் அமெரிக்க சிறுவர்கள் சற்று தூரத்திலிருக்கும் மைதானத்தில் விளையாடிக் கொண்டிருப்பார்கள். அவர்கள் விளையாடும் சத்தம் மட்டும் கேட்கும்.

ப்ரித்வி வேலைக்குப் போய் விடுவான். மிகப் பெரிய பங்களாவில் லட்சுமி மட்டும் தனியாக உட்கார்ந்திருப்பாள். பேச்சுத் துணைக்குக் கூட யாரும் இருக்க மாட்டார்கள்.

சிதம்பரத்தில் தன் வீட்டில் உள்ளவர்களுடனும், பக்கத்து வீட்டு பெண்களுடனும் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றி பேசி, சிரித்து வாழ்ந்த லட்சுமிக்கு அந்த அமெரிக்க வாழ்க்கை என்னவோ போல இருக்கிறது. இருப்பினும், அந்த வாழ்க்கையை அவள் வாழ்ந்துதானே ஆகவேண்டும்?

லட்சுமி தன் கணவன் மீது ஏராளமான அன்பை வைத்திருக்கிறாள். ப்ரித்வியும் தன் மனைவியின் மீது அளவற்ற பாசத்தை வைத்திருக்கிறான். தன் அலுவலகத்தில் தொழிலே கண் என இருக்கும் ப்ரித்வி, வீட்டிற்கு வந்த பிறகும் தொழிலைப் பற்றிய சிந்தனையிலேயேதான் இருப்பான். வீட்டிற்கு வந்தாலும், கம்ப்யூட்டருக்கு முன்னால் அமர்ந்து கொண்டு தொழில் சம்பந்தமாக ஏதாவது செய்து கொண்டிருப்பான். தன் மனைவி லட்சுமியிடம் சிறிது நேரம் பேசுவதற்குக் கூட அவனுக்கு நேரம் இருக்காது. ‘லேப் டாப்’பை தடவிக் கொண்டே, களைத்துப் போய் சில நேரங்களில் தூங்கி விடுவான்.

தன் கணவன் அலுவலகத்தில் இருக்கும் நேரங்களில், வீட்டில் வெறுப்புடன் தனிமை வாழ்க்கையை மேற்கொள்ளும் லட்சுமி, அவன் அலுவலகத்தை விட்டு வீட்டிற்கு வந்ததும், தன்னுடன் ஆசையாக பேச மாட்டானா என்று எதிர்பார்ப்பாள். ஆனா. அவனோ வேலை... வேலை... என்ற சிந்தனையிலேயே இருப்பான். காலப் போக்கில் அமெரிக்க வாழ்க்கையே இப்படித்தான் போலிருக்கிறது என்று அவளும் அந்த வாழ்க்கையை ஏற்றுக் கொண்டாள். சொல்லப் போனால் – அந்த வாழ்க்கையுடன் இணைந்து செல்ல அவள் தன்னை பழக்கப்படுத்திக் கொள்கிறாள்.

அந்த அன்பு தம்பதிகளுக்கு ஒரு வருடத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது. திவ்யா என்று அவளுக்கு அவர்கள் பெயரிடுகின்றனர்.

17 வருடங்கள் கடந்தோடுகின்றன. இளம் பெண்ணாக, புது மணமகளாக அமெரிக்க மண்ணில் கால் வைத்த லட்சுமியின் இப்போதைய தோற்றத்தில்தான் எவ்வளவு மாறுதல்! என்னதான் அமெரிக்க மண்ணில் இத்தனை வருடங்கள் வாழ்ந்திருந்தாலும், இந்தியாவில் தான் பின்பற்றிக் கொண்டிருந்த எந்த பழக்கத்தையும் அவள் சிறிது கூட கை விடவே இல்லை என்பதுதான் ஆச்சரியமான விஷயம். பூஜை, சடங்குகள், வழிபாடு – எதையும். ப்ரித்வி இப்போதும் அதே பழைய நிலையில்தான்... தொழில், வேலை, அலுவலகம், கம்ப்யூட்டர் – இதுதான் அவனுடைய உலகம்.

அவர்களின் மகள் திவ்யா பள்ளிக் கூடத்திற்குச் சென்று கொண்டிருக்கிறாள். சூது, வாது தெரியாத பெண் அவள். பள்ளியில் அவள் படிப்பாள்... விளையாடுவாள். எப்போதாவது பார்ட்டிகளில் கலந்து கொள்வாள். பெரும்பாலும் அதற்கு தன் பெற்றோரிடம் அவள் அனுமதி வாங்குவதில்லை. சுருக்கமாக கூறுவதாக இருந்தால்- இன்றைய அமெரிக்க இளம் தலை முறையின் இரத்தம் அவளுக்குள் ஓடிக் கொண்டிருக்கிறது.

தன் மகள் பார்ட்டிக்குச் செல்வது, சுதந்திர குணத்துடன் உலாவுவது, ஆண் நண்பர்களுடன் சிரித்துப் பேசுவது – இவை எதுவுமே லட்சுமிக்குப் பிடிப்பதில்லை.


அதற்காக அவள் பல நேரங்களில் தன் மகளைக் கண்டித்திருக்கிறாள்... கறாராக பேசியிருக்கிறாள்... அறிவுரைகள் கூறியிருக்கிறாள். ஆனால், அது எதையும் தன் காதிலேயே போட்டுக் கொள்ள மாட்டாள் திவ்யா. ‘நீங்கள் இந்தியாவின் ஒரு பழைய பழக்க வழக்கங்களைக் கொண்ட புராதனமான ஊரிலிருந்து வந்திருக்கலாம். அதற்காக நீங்கள் அப்படி இருக்கலாம். நான் அப்படி இருக்க முடியாது. கட்டுப்பெட்டித் தனமாக என்னை இருக்க வைக்க முயலாதீர்கள். நான் ஒரு சுதந்திரமான பெண். எனக்கு எது பிடிக்கிறதோ, அதைச் செய்வேன். என் காற்றைப் போன்ற குணத்திற்கு தடை போடாதீர்கள். என்னை அணை போட்டு தடுக்க முடியாது. நான் ஒரு சுதந்திரப் பிறவி’ என்கிறாள் திவ்யா துணிச்சலான குரலில் – தன் தாயிடம். தாய்க்கும் மகளுக்குமிடையே தினமும் ஒரு சொற்போர் நடந்து கொண்டே இருக்கும். தன் மகள் எங்காவது சறுக்கி விழுந்து விடக் கூடாதே என்ற பரிதவிப்பு அந்த அன்னைக்கு.

லட்சுமி தன் மகளின் ஒவ்வொரு நடவடிக்கையையும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறாள். பல நேரங்களில் தன் மகள் திவ்யாவைப் பற்றி தன் கணவன் ப்ரித்வியிடம் குறை கூறுவாள் லட்சுமி. ஆனால், அதை பெரிதாகவே எடுத்துக் கொள்ள மாட்டான் அவன். ‘இங்கே பார்... லட்சுமி. நீ சிதம்பரத்தில் பிறந்து வளர்ந்தவள். திவ்யா அப்படியில்லை. அவள் அமெரிக்காவில் பிறந்து, அமெரிக்காவில் வளர்ந்து கொண்டிருப்பவள். அவள் ஒன்றும் எதுவுமே தெரியாத சிறிய பெண் அல்ல. எது நல்லது, எது கெட்டது, எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என்று அமெரிக்காவில் பிறந்த ஒரு படித்த பெண்ணுக்குத் தெரியாதா? நீ தேவையில்லாமல் உன் தலையைப் புண்ணாக்கிக் கொண்டிருக்கிறாய்’ என்று அவன் லட்சுமிக்கு அறிவுரை கூறுகிறான்.

லட்சுமி, திவ்யாவை கோபத்துடன் திட்ட, அப்பா ப்ரித்வியோ மகளை தட்டிக் கொடுத்து செல்லமாக கொஞ்சுகிறான். தன் மகள் ஒரு புதுமைப் பெண் என்ற எண்ணம் அவனுக்கு.

ஒரு நாள் மாலை நேரத்தில் தன் வீட்டிற்கு வெளியே தன்னுடைய ‘பாய் ஃப்ரண்ட்’ ரோபியை திவ்யா முத்தமிட, அதை லட்சுமி பார்த்து விடுகிறாள். அவ்வளவுதான்... ஆவேசத்தின் உச்சிக்கே அவள் சென்று விடுகிறாள். பாரம்பரிய பழக்கங்களைப் பின்பற்றி வாழ்ந்த அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அவள் அங்கிருந்து ரோபியை விரட்டியடிக்கிறாள். அதன் மூலம் திவ்யா தன் அன்னையின் மீது மிகுந்த கோபம் கொள்கிறாள்.

அதைத் தொடர்ந்து லட்சுமி, திவ்யாவை கை நீட்டி அடித்து விடுகிறாள். அதை பொறுத்துக் கொள்ள முடியாத திவ்யா, வீட்டை விட்டு வெளியேறி, தன் தோழிகளுடன் போய் தங்கிக் கொள்கிறாள். தன் மனைவி திவ்யாவை கன்னத்தில் அடித்து விட்டாள் என்ற விஷயம் ப்ரித்விக்குப் பிடிக்கவில்லை. அதை அவள் செய்திருக்கக் கூடாது என்று நினைக்கும் அவன், லட்சுமியின் மீது கோபம் கொள்கிறான்.

நாட்கள் நகர்கின்றன. தன்னைப் பற்றி சிறிதும் நினைக்காமல், தொழிலைப் பற்றி மட்டுமே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் கணவன்... தான் யாருடைய நலனுக்காக அறிவுரை கூறுகிறோம் என்பதே தெரியாமல் தன்னிடம் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்ட திவ்யா... இந்த இருவரால் உண்டான ஒரு கையற்ற நிலை, தனிமைச் சூழல், மன வருத்தம், விரக்தி... அவற்றைப் போக்குவதற்காக ஒரு internet chat roomஐ நாடுகிறாள் லட்சுமி. அங்கு அவளுக்கு ‘mitr’டன் தொடர்பு உண்டாகிறது. கம்ப்யூட்டரில் mitrடன் அவள் உரையாடுகிறாள். (சமஸ்கிருதத்தில் ‘mitr’ என்றால் நண்பன் என்று அர்த்தம்.)

தன்னுடைய எண்ணங்களையும், மனதில் இருக்கும் சிந்தனைகளையும் அவள் Mitrடன் மனம் திறந்து கூறுகிறாள். அதன் மூலம் அவளுக்கு ஆறுதல் கிடைக்கிறது. யாரோ ஒருவரின் தோளில் சாய்ந்த நிம்மதி கிடைக்கிறது.

லட்சுமி முழுக்க முழுக்க தன் குடும்பத்தைப் பற்றியே எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்றும், அதில் தன்னை முழுமையாக மூழ்கடித்துக் கொண்டாள் என்றும் ‘mitr’ குறிப்பிட்டவுடன், அதைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கிறாள் லட்சுமி. அதைத் தொடர்ந்து தனக்கு எந்த மாதிரியான விஷயங்களிலெல்லாம் ஆர்வம் இருக்கிறது என்பதை ஆராய்ந்து பார்க்கிறாள். சின்னச் சின்ன மர வேலைப்பாடுகள், நடனம், சிகை அலங்காரம் போன்றவற்றில் தனக்கு இருக்கும் ஈடுபாட்டை அவள் உணர்கிறாள். பக்கத்து வீட்டில் இருக்கும் Steve  (ஒரு கம்ப்யூட்டர் செக்யூரிட்டி கன்ஸல்ட்டன்ட்), அவனுடைய இளம் வயது தம்பி – இருவரும் புதிதாக அவளுக்கு நண்பர்கள் ஆகிறார்கள்.

வெறுமனே ஊமையாக வீட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த லட்சுமி, தன் புதிய இளம் நண்பர்களுடன் பல விஷயங்களைப் பற்றியும் பேசுகிறாள்... சிரிக்கிறாள்... அவர்களுடன் சேர்ந்து கடைகளுக்குச் செல்கிறாள். தன் மனைவியின் இப்போதைய போக்கைப் பார்த்து ஆச்சரியப்படுகிறான் ப்ரித்வி. மனதிற்குள் தன் மனைவியிடம் உண்டாகியிருக்கும் மாறுதல்களையும், வளர்ச்சியையும் பார்த்து சந்தோஷப்பட்டாலும், அவள் தன்னை விட்டு சற்று விலகி விட்டதைப் போல ப்ரித்வி உணர்கிறான்.


ஒரு நாள் லட்சுமி, தன் நண்பனும் அமெரிக்க இளைஞனுமான Steveவுடன் வாய் விட்டு சிரித்துப் பேசிக் கொண்டிருப்பதைக் கேட்கிறான் ப்ரித்வி. அதைத் தொடர்ந்து அவன் சில நாட்கள் வெளியூர் போய் விட்டு வருவதாக கூறி செல்கிறான்.

இதற்கிடையில் ஒரு திருப்பம் உண்டாக்கும் சம்பவம் நடைபெறுகிறது. வீட்டில் லட்சுமி மட்டும் தனியே இருக்கிறாள். அப்போது மருத்துவமனையிலிருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வருகிறது. திவ்யா ரோபியுடன் கொண்டிருந்த நட்பில் சில எதிர்பாராத பிரச்னைகள் உண்டாக... அதனால் சில விபரீத முடிவுகளை திவ்யா எடுக்க... அவள் இப்போது மருத்துவமனையில் இருக்கிறாள். பதைபதைப்புடன் தன் மகளைப் போய் பார்க்கிறாள் லட்சுமி. தான் தூக்கியெறிந்து பேசியதற்காக தன் தாயிடம் மன்னிப்பு கேட்கிறாள் திவ்யா. தன் தாய் தனக்கு முன்பு அறிவுரை கூறியது தன்னுடைய நல்லதற்குத்தான் என்பதை இப்போது உணர்கிறாள் திவ்யா. தன் தாயிடம் கோபம் கொண்டதற்காக அவள் வருந்துகிறாள். தன் அன்னையின் மடியில் தலையை வைத்து கண் கலங்குகிறாள். தன் தாயுடன் சேர்ந்து அவள் வீட்டிற்கு வருகிறாள். அன்புடனும், பாசத்துடனும் தன்னையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் தன் செல்ல மகளிடம், தன் பழைய வாழ்க்கை முறைகளையும், அமெரிக்க வாழ்க்கை அறிமுகமான புதிதில் தான் பட்ட சிரமங்களையும் லட்சுமி கூற, அதை ஆர்வத்துடன் கேட்கிறாள் திவ்யா.

தன்னுடைய ‘mitr’ டன் லட்சுமி நடத்தும் உரையாடலும், கருத்து பரிமாற்றமும் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. ‘mitr’ வைப் பற்றி தன் மகள் திவ்யாவிடம் லட்சுமி கூறுகிறாள். யார் என்றே தெரியாத அந்த ‘mitr’வை நேரில் சந்தித்தால் என்ன என்ற எண்ணத்தைத் தூண்டுகிறாள் திவ்யா. அதைத் தொடர்ந்து லட்சுமி ‘mitr’ வை நேரில் வரும்படி கூறுகிறாள். இடம் நிச்சயிக்கப்படுகிறது. நேரமும்... ‘San Francisco’ வில் இருக்கும் Fisherman’s Wharf என்ற இடத்திற்கு ‘mitr’ வை வருமாறு கூறுகிறாள் லட்சுமி.

அந்த குறிப்பிட்ட இடத்தில் லட்சுமியும், திவ்யாவும் உரிய நேரத்தில் காத்திருக்கிறார்கள் - ‘mitr’வை எதிர்பார்த்து. அவர்கள் எதிர்பார்த்த ‘mitr’ யார் என்பது தெரிந்ததும், அவர்களுக்கு இன்ப அதிர்ச்சி... வேறு யார்? ப்ரித்விதான்...

கணவன், மனைவி, மகள் மூவரும் அங்கு சந்திக்கிறார்கள். மூவரும் மனம் விட்டுப் பேசுகிறார்கள். ஒருவரையொருவர் புரிந்து கொள்கிறார்கள். ஒருவர் மீது ஒருவர் அளவற்ற அன்பு வைத்திருக்கும் அவர்கள் பிறரின் உணர்வை மதிக்காததாலும், எப்போதும் தொழில், வேலை என்ற தன்னல சிந்தனையுடனே இருந்ததாலும், எந்த அளவிற்கு சரியான புரிதல் இல்லாமல் இருந்திருக்கிறோம் என்பதை உணர்கிறார்கள்.

மூவரும் ஏதோவொரு வகையில் சிறு சிறு காயங்களைப் பட்டிருக்கிறார்கள்... சின்னச் சின்ன பாதிப்புகளைச் சந்தித்திருக்கிறார்கள். எல்லாவற்றையும் மீறி அவர்களுக்கிடையே ஆழமான அன்பு இருக்கிறது... அளவற்ற பாசம் இருக்கிறது. அதை இப்போது அவர்கள் உணர்ந்து கொண்டார்கள். மற்றவர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து, நாமும் சந்தோஷத்துடன் இருப்பது எப்படி என்பதை அவர்கள் தெரிந்து கொண்டார்கள்.

அந்த புரிதலுடன்... அந்த சந்தோஷ எண்ணத்துடன்... அந்த கணவனும், மனைவியும், மகளும் ஒருவரையொருவர் இறுக தழுவிக் கொண்டு உற்சாகமாக நடை போட, படம் முடிவடைகிறது.

லட்சுமியாக – ஷோபனா (என்ன இயல்பான நடிப்பு!)

ப்ரித்வியாக – Nasser Abdullah (வட இந்தி நடிகர். பல விளம்பரப் படங்களில் நடித்திருப்பவர்.)

மகள் திவ்யாவாக – Preeti Vissa (அமெரிக்காவில் வாழும் தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட பெண். இதற்கு முன்பு நடித்ததில்லை. இதுதான் முதல் படம். ஆனால், யாரிடம் சொன்னாலும், நம்ப மாட்டார்கள். அந்த அளவிற்கு அருமையான நடிப்பு!)

தான் இயக்கும் முதல் படம் என்பது தெரியாத அளவிற்கு, மிகவும் நன்றாக படத்தை இயக்கிய ரேவதிக்கு – ஒரு பூங்கொத்து!

‘Mitr My Friend’ ஆங்கிலப் படமாக இருந்தாலும், தமிழ் கதாபாத்திரங்கள் என்பதால், தமிழிலும் உரையாடல்கள் இருக்கின்றன.

சிறந்த ஆங்கிலப் படம் என்பதற்கான மத்திய அரசாங்கத்தின் விருதை இப்படம் பெற்றது. அதே நிகழ்ச்சியில் சிறந்த நடிகைக்கான விருதை ஷோபனாவும் சிறந்த படத் தொகுப்பாளருக்கான விருதை Beena Paulம் பெற்றார்கள்.

பின் குறிப்பு: இந்த படத்தின் முதல் காப்பியைப் பார்த்து விட்டு, படத்தை இயக்கிய ரேவதியை நான் பாராட்டியதையும், அதைக் கேட்டு அவர் மிகவும் சந்தோஷப்பட்டதையும் இப்போது நினைத்துப் பார்க்கிறேன்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.