Logo

ஏ ரிவர் ரன்ஸ் த்ரூ இட்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5437
A River Runs Through It

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

A River Runs Through It

(ஹாலிவுட் திரைப்படம்)

மெரிக்கப் படம் என்றாலே படம் முழுக்க துப்பாக்கிகளால் குண்டு மழை பொழிந்து கொண்டிருப்பார்கள், கார்கள் ஒன்றோடொன்று மோதி வானத்தில் பறந்து கொண்டிருக்கும், ஏராளமான மாடிகளைக் கொண்ட பிரம்மாண்டமான கட்டிடம் நெருப்பு பிடித்து எரிந்து கொண்டிருக்கும் என்றுதான் நம்மில் பெரும்பாலோரின் மனங்களில் தோன்றும். இந்தப் படம் அப்படிப்பட்ட ஒன்றல்ல.

ஏதோ இந்தியத் தன்மை கொண்ட ஒரு படத்தை அல்லது ஒரு தமிழ் திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் உணர்வுதான் நமக்கு இந்தப் படத்தைப் பார்க்கும்போது உண்டாகும். ஒரு கவித்துவத் தன்மை கொண்ட அருமையான குடும்பக் கதை இது.

1992ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படத்தின் இயக்குநர் Robert Redford.

‘A River Runs Through It’ என்ற பெயரில் 1976ஆம் ஆண்டு Norman Maclean எழுதிய நூலை, திரைப்பட வடிவத்திற்குக் கொண்டு வந்தவர் Richard Friedenberg.

Western Montana பகுதியைச் சேர்ந்த Missoula என்ற நகரத்திலும், நகரத்தைச் சுற்றியுள்ள அழகு கொட்டிக் கிடக்கும் அருமையான இடங்களிலும் நடைபெறும் கதையே இது.

ஒரு குடும்பத்தில் பிறக்கும் இரண்டு சகோதரர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்டதே இப்படம்.

அமைச்சராக இருக்கும் ஒரு தந்தை. அவருக்கு இரண்டு மகன்கள். மூத்தவன் நார்மன், இரண்டாவது பையன் பால். 1920களில் அவர்கள் சிறுவர்கள். தந்தையின் நேரடி கண்காணிப்பில் வளரும் மகன்கள் அவர்கள். தன்னுடைய தொழில் நேரம் போக, மீதி நேரங்களில் தன்னுடைய மகன்களின் வளர்ச்சியில் அக்கறை செலுத்துவதுதான் அந்தத் தந்தையின் வேலையே.

காலை நேரங்களில் அந்தச் சிறுவர்கள் இருவரும் பள்ளிக் கூடத்திற்குச் செல்வார்கள். அங்கு அவர்கள் மதம் சம்பந்தப்பட்ட விஷயங்களைப் படிப்பார்கள். மதியத்திற்குப் பின்னால் தங்களின் வீட்டைத் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் Blackfoot River என்ற ஆற்றில் தந்தையுடன் மீன் பிடிக்கச் சென்று விடுவார்கள். தந்தை, இரண்டு மகன்கள் எல்லோரும் தூண்டில் போட்டு மிகவும் ஆர்வத்துடன் மீன்களைப் பிடிப்பார்கள். இன்னும் சொல்லப் போனால் – மீன் பிடிப்பதில் அவர்களுக்கிடையே மிகப் பெரிய போட்டியே நடக்கும். மகன்களின் ஆர்வத்தையும், தங்களின் தந்தையுடன் அவர்கள் போட்டி போடுவதையும், துள்ளிக் குதிப்பதையும், பயமே இல்லாமல் நீருக்குள் குதித்து அவர்கள் நீந்துவதையும் கரையில் அமர்ந்து புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருப்பாள் அவர்களுடைய அன்னை.

பையன்கள் படிப்படியாக வளர்கிறார்கள். மூத்த மகன் நார்மன் கிழக்கு திசையிலிருக்கும் ஒரு கல்லூரியில் கல்வி கற்பதற்காக செல்கிறான். அங்கு ஆறு வருடங்கள் தங்கியிருக்கிறான். வீட்டிற்குக் கூட அந்தக் கால கட்டத்தில் அவன் வந்ததே இல்லை. இதற்கிடையில் பாலுக்கு ஒரு பத்திரிகையாளர் வேலை கிடைக்கிறது. அதில் தனக்கென்று ஒரு பெயரையும் அவன் பெற்று வைத்திருக்கிறான்.

வாலிபனான நார்மன் வீட்டிற்கு வருகிறான். அண்ணனும், தம்பியும் கோடை நாட்களில் மீண்டும் ஆற்றுக்குச் செல்கிறார்கள்… நீந்துகிறார்கள்… நீருக்குள் நின்று தாவிக் குதிக்கிறார்கள்… தந்தையுடன் சேர்ந்து மீன் பிடிக்கிறார்கள். சிறுவர்களாகப் பார்த்த தன் மகன்கள் வளர்ந்து வாலிபப் பருவத்தில் இருப்பதைப் பூரிப்புடன் பார்த்துக் கொண்டே மீன் பிடிக்கிறார் தந்தை. அவர்கள் எல்லோரையும் அன்புடனும், பாசத்துடனும், பெருமையுடனும் பார்த்து தன் மனதிற்குள் உவகை அடைந்து கொண்டிருக்கிறாள் அவர்களின் தாய்.

வருடங்கள் சில நகர்கின்றன. பால் எதற்கும் அஞ்சாத, துணிச்சலான, போராட்ட குணம் கொண்ட பத்திரிகையாளனாக இருக்கிறான். நார்மன் கட்டுப்பாடுகள் நிறைந்த, மனதைக் கட்டுப்படுத்தத் தெரிந்த ஆசிரியராக ஆகிறான். அவன் தன்னுடைய ஆவேசத்தையும், கோபத்தையும் தன்னுடைய எழுத்துக்களில் காட்டுகிறான். அவனுக்கொரு காதலி கிடைக்கிறாள். அவளைச் சந்திப்பதிலும், அவளுடன் உரையாடுவதிலும், அவளுடன் தன் மனதில் இருப்பதைப் பகிர்ந்து கொள்வதிலும் அவன் இன்பன் காண்கிறான்.

அண்ணன் நார்மன் ஒரு கோடு போட்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு ஒரு ஒழுங்கான பாதையில் நடைபோட்டுக் கொண்டிருக்க, இளம் வயதிலிருந்தே எதற்கும் பயப்படாத, எதையும் நேருக்கு நேராகச் சந்திக்க எண்ணும் துணிச்சல் மனம் கொண்ட பால், சூதாட்டங்களிலும் மது அருந்துவதிலும் தன் மனதைச் செலுத்துகிறான்.

அதைத் தொடர்ந்து இயல்பாக போய்க் கொண்டிருந்த அந்த அருமையான குடும்ப வாழ்க்கையில் பிரச்னைகள் உண்டாகின்றன. அந்த இனிய குடும்பத்து உறுப்பினர்களின் மனங்களில் சந்தோஷத்திற்குப் பதிலாக, கவலைகள் வந்து ஆக்கிரமிக்கின்றன.

தன்னுடைய மூத்த மகனின் வாழ்க்கை சீறிய முறையில் நன்றாக போய்க் கொண்டிருக்க, இளம் வயதிலிருந்தே அதிகமாக செல்லம் கொடுத்து வளர்த்த இளைய மகனின் வாழ்க்கை திசை மாறி போய்க் கொண்டிருக்கிறதே என்பதை நினைத்து, கண்ணீர் விடுகிறார் அவர்களின் தந்தை. தவறான பாதையில் செல்லும் தன் மகனை திருத்துவதற்காக அவர் எவ்வளவோ முயல்கிறார். சில நேரங்களில் அவராலேயே தன் மகனின் போக்கைச் சரி செய்ய முடியாத அளவிற்கு நிலைமை ஆகி விடுகிறது.

அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? சந்தோஷப் பாதையில் நடைபோட்டுக் கொண்டிருந்த அந்த குடும்பத்திற்கு மீண்டும் சந்தோஷம் கிடைத்ததா? தன் மகன்களையே தன்னுடைய உலகம் என்று நினைத்த அந்த தந்தை மனதில் மகிழ்ச்சி கொள்ளும் அளவிற்கு நிலைமைகள் மாறினவா? திசை தவறி, தவறான பாதைகளில் நடந்து திரிந்த அந்த இளைய மகன் திருந்தி, ஒழுங்கான பாதைக்கு வந்தானா? இயற்கையுடன் ஒன்றிப் போய், குதூகலத்துடன் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்து முடித்த அந்த அன்பு உள்ளங்களுக்கு நிம்மதி உண்டானதா?

இந்த கேள்விகள் அனைத்திற்கும் விடை தருகிறது, ‘A River Runs Through It.’


நார்மனின் கோணத்தில் படத்தின் காட்சிகள் விவரிக்கப்படுகின்றன.

படத்தில் இடம் பெறும் வீடு, அது அமைந்திருக்கும் இடம், கண்ணுக்கெட்டிய தூரம் வரை தென்படும் புல்வெளிகள்… மரங்கள்… செடிகள்… கொடிகள்… மலர்கள், ‘சல சல’வென ஓசை எழுப்பி பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் ஆறு, அது உண்டாக்கும் இரைச்சல், ஆற்றின் அருகில் பலவகை இனிய ஓசைகளை எழுப்பிக் கொண்டிருக்கும் பறவைகள், குருவிகள்…

படம் முழுக்க இவற்றுடன்தான் நாம் பயணம் செய்து கொண்டிருப்போம்.

தந்தை தன் மகன்களுக்கு மீன் பிடிக்கக் கற்றுத் தருவது, அவர்களுடன் நீந்தி மகிழ்வது, வீட்டில் பாடம் சொல்லித் தருவது… என்று வரும் காட்சிகளைப் பார்க்கும்போது, இப்படியொரு தந்தை நமக்கு கிடைக்க மாட்டாரா என்று நம் மனம் ஏங்கும். தன் செல்ல மகன்களின் வளர்ச்சியில்தான் அந்த அன்பு தந்தைக்கு எவ்வளவு பெரிய அக்கறை!

சிறுவர்களாக இருந்த தன் மகன்கள் கட்டிளங் காளைகளாக திரும்பி வந்து ஆற்று நீரில் நீந்துவதையும், ஆர்வத்துடன் மீன் பிடிப்பதையும் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த தந்தையின் கண்களிலும், முகத்தின் பிரகாசத்திலும் நம்முடைய ஒவ்வொரு தந்தையையும் நாம் பார்ப்போம்.

என்னதான் அறிவுரை கூறி வளர்த்தாலும், பிறக்கும் மகன்கள் எல்லோருமே ஒரே பாதையில் நடந்து போய் விடுவார்களா என்ன? மூத்த மகன் ‘இப்படித்தான் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும்’ என்று மனதிற்குள் திட்டம் போட்டு, அதற்கேற்றபடி தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு அதில் நடைபோட, இளைய மகன் மட்டும் தாறுமாறான பாதைகளில் நடந்து, வாழ்க்கையின் சந்தோஷத்தைக் கெடுத்துக் கொண்டதற்கு யாரைக் குற்றம் சுமத்துவது?

இந்த படத்தைப் பார்க்கும்போது, ஒரு திரைப்படத்தைப் பார்க்கிறோம் என்னும் உணர்வே நமக்கு உண்டாகாது. மாறாக, ஏதோ நம் குடும்பத்தின் கதையையே நாம் இதில் பார்க்கிறோமோ என்னும் எண்ணம்தான் நமக்கு உண்டாகும்.

Norman ஆக Craig sheffer நடிக்க, இளையமகன் Paul ஆக Brad Pitt வாழ்ந்திருக்கிறார். என்ன அழகு! என்ன உடலமைப்பு! என்ன துள்ளல்! என்ன இளமையின் துடிப்பு! ‘சின்ன மகன்’ பால் கதாபாத்திரத்திற்கு Brad Pitt  உயிர் தந்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

தந்தையாக நடித்திருப்பவர் Tom Skerritt.  பாசமான தந்தை என்றால் இப்படித்தான் இருப்பார் என்று தன்னுடைய இயல்பான நடிப்பின் மூலம் நம் இதய சிம்மாசனங்களில் நாற்காலி போட்டு அமர்ந்திருப்பதிலிருந்தே இவரின் திறமையை நாம் புரிந்து கொள்ளலாம்.

1993ஆம் வருடத்திற்கான சிறந்த ஒளிப்பதிவிற்கான Academy விருது (ஒளிப்பதிவாளர் :  Philippe Rousselot)  இப்படத்திற்கு கிடைத்தது.

‘A River Runs Through it’ வர்த்தக ரீதியாக மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. திரையிடப்பட்ட எல்லா இடங்களிலும் எல்லா வயதுகளைக் கொண்டவர்களும் இந்தப் படத்தைப் பார்த்தார்கள். ‘உணர்ச்சிகரமான காட்சிகளைக் கொண்ட மிகச் சிறந்த ஒரு குடும்பக் கதை’ என்று அனைத்துத் தரப்பு மக்களும் கூறினார்கள்.

பத்திரிகைகள் இந்தப் படத்திற்கு மிகச் சிறந்த விமர்சனங்கள் எழுதின.

Brad Pitt இன் கலைப் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க படமாக இப்படம் அமைந்தது.

படத்தில் வரும் மற்ற நடிகர்களை விட, Brad Pitt ஒரு தனி இடத்தை நம் உள்ளங்களில் இந்தப் படத்தின் மூலம் பிடித்தார் என்பதிலிருந்தே எந்த அளவிற்கு அவர் சிறப்பாக நடித்து, முத்திரை பதித்திருப்பார் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

நான் இந்த படத்தைப் பார்த்து எவ்வளவோ வருடங்கள் ஆகி விட்டன. எனினும், இப்போது கூட அந்த வீடும், அதில் வசிக்கும் கதாபாத்திரங்களும், இயற்கை அழகு தவழும் இடங்களும், நிற்காமல் ஓடிக் கொண்டிருக்கும் நதியும், அதில் தங்களின் தந்தையுடன் சேர்ந்து மீன் பிடிக்கும் மகன்களும் என் மனத் திரையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டே இருக்கிறார்கள்.

‘A River Runs Through it’ படத்தைப் பார்த்த பிறகு, நான் Brad Pitt இன் ரசிகனாகவே ஆகி விட்டேன் என்பதே உண்மை.

நல்ல கதையம்சம் கொண்ட கவித்துவமான படத்தைப் பார்க்க ஆசைப்படும் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு படம் இது.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.