Logo

அர்த் ஸத்ய

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5495
Ardh Satya

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

அர்த் ஸத்ய

(இந்தி திரைப்படம்)

1983ஆம் ஆண்டில் திரைக்கு வந்து, பல விருதுகளைப் பெற்ற படம். திரைக்கு வந்த கால கட்டத்தில் பத்திரிகைகளாலும், விமர்சகர்களாலும் பரவலாக பேசப்பட்ட படம்.

படத்தின் இயக்குநர் : Govind Nihalani.

ஓம்புரி, அம்ரீஷ்புரி, ஸ்மிதா பாட்டீல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.

S.D.Palwalker எழுதிய ‘Surya’ என்ற சிறுகதையை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்திற்கு திரைக்கதை எழுதியவர் பிரபல மராத்தி நாடகாசிரியர் Vijay Tendulkar. உரையாடல்களை எழுதியவர் Vasant Dev.

Ardh Satya என்றால் ஆங்கிலத்தில் ‘பாதி உண்மை’ என்று அர்த்தம்.

இது ஒரு போலீஸ் கதை.

காவல் துறையைச் சேர்ந்த Anant Welankar, நகரத்தின் கல்லூரி ஒன்றில் இலக்கிய விரிவுரையாளராக பணியாற்றும் Jyotsna Gokhaleயை ஒரு நிகழ்ச்சியில் சந்திப்பதுதான் படத்தின் முதல் காட்சி. பம்பாய் (இப்போது மும்பை) காவல் துறையில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றுபவன் ஆனந்த். அவர்கள் இருவரும் தங்களின் துறைகளைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள். அவர்களுக்கென்று பொதுவான சில விஷயங்களில் ஒருமித்த கருத்து இருக்கிறது. அதுவே அவர்களுக்குள் ஒரு நட்பு உண்டாக காரணமாக இருக்கிறது.

ஆனந்த் தன் வேலையில் சில கொள்கைகளைக் கொண்டவனாக இருக்கிறான். அவன் உற்சாகத்துடன் வேலையில் ஈடுபடுகிறான். ஆனால், வேலை மிகவும் கரடுமுரடானதாக இருக்கிறது. காவல் துறையில் பணியாற்றுபவர்களுக்கும், நகரத்தின் சமூக விரோதிகளுக்கும், ஊழல் பண்ணும் அரசியல்வாதிகளுக்குமிடையே ஒரு பலமான தொடர்பு வலை பின்னியிருக்கிறது. ஆனந்த் ஒரு சாதாரண சப்-இன்ஸ்பெக்டராக இருப்பதாலும், நேர்மையானவனாக இருப்பதாலும், சமூக விரோதச் செயல்களில் ஈடுபடும் மனிதர்களுடன் எந்தவித தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பாதவனாகவும் இருப்பதால், தான் வேலை செய்யும் இடத்தில் அவனுக்கு சிறிய அளவிலேயே செல்வாக்கு இருக்கிறது.

அந்த பகுதியைச் சேர்ந்த மூன்று ரவுடிகளை ஆனந்த் கைது செய்கிறான். தங்களின் தலைவனான ராமா ஷெட்டியின் பெயரைச் சொல்லி அவர்கள் மிரட்டுகிறார்கள். ஆனந்த்தை தன் கைக்குள் போட்டு, தன்னுடைய ஆட்களை எப்படியும் வெளியே கொண்டு வந்து விட வேண்டும் என்ற ராமா ஷெட்டியின் ஆசை முழுவதும் தவிடு பொடியாகிறது. ஆனந்தின் மீது ஒரு கண் வைத்துக் கொண்டே இருக்கிறான் ராமா ஷெட்டி.

இதற்கிடையில் அந்த பகுதியில் வாழும் ஒருவன் தன்னுடைய மனைவியை சில ரவுடிகள் தொல்லைப் படுத்துவதாக புகார் செய்கிறான். அந்த குற்றவாளிகளை கண்டுபிடித்து, ஆனந்த் அவர்களை பலமாக அடித்து, உதைக்கிறான். அதைத் தொடர்ந்து அந்த பகுதியின் எம்.எல்.ஏ., ஆனந்த் ‘சஸ்பென்ட்’ செய்யப்பட வேண்டும் என்று கூறுகிறார்.

ஆனந்தின் மேலதிகாரி ஹைதர் அலி, ஆனந்திடம் அந்த விஷயத்தின் தீவிரத்தைப் பற்றி விளக்கி கூறுகிறார். தேர்தலின் போதும், ஊர்வலங்களுக்கு ஆட்களைக் கொண்டு வந்து சேர்க்கும் விஷயத்திலும் பயன்படக்கூடிய ஆட்கள் அவர்கள் என்கிறார் அவர். தன் மனச்சாட்சிப்படி தான் ஒரு நேர்மையான மனிதன் என்பதை உணர்ந்திருக்கும் ஆனந்த், விசாரணைக்கு தயாராக இருக்கிறான். அரசியல்வாதிகளின் தலையீட்டால், விசாரணையை தேவையில்லாமல் நீடிக்கச் செய்வார்கள் என்றும், இந்த இடைப்பட்ட காலத்தில் வேலையிலிருந்து ‘சஸ்பென்ட்’ செய்யப்பட்டிருப்பது என்பது ஒரு ‘கருப்பு புள்ளி’ வைக்கக் கூடிய விஷயம் என்றும் ஹைதர் அலி கூறுகிறார்.

ஆனந்த் மிகுந்த குழப்பத்திற்கு ஆளாகிறான். எனினும், ஹைதர் அலி கூற, தேசாய் என்ற நியூ டெல்லியில் உள்ள அரசியல்வாதிகளுடன் தொடர்பு கொண்டிருக்கும் ஒரு மனிதன் மேலே இருக்கும் ஆட்களிடம் கூறி, இந்த விஷயத்தை அமைதியாக முடிக்கும்படி கூறுகிறான். இந்தச் சம்பவத்தால் ஆனந்தின் நேர்மை குணம் காயப்படுகிறது. குற்றவாளிகளுக்கு எதிராக செயல்படும் தன்னுடைய நேர்மை குணத்திற்கு பிறகென்ன மரியாதை இருக்கிறது என்று அவன் மனதிற்குள் குமைகிறான்.

ஆனந்த், தன்னுடைய இளமைக் காலத்தை நினைத்துப் பார்க்கிறான். அவனுடைய தந்தை கிராமத்திலிருந்த காவல் நிலையத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற ஒரு போலீஸ் கான்ஸ்டபிள். அவர் ஒரு முரட்டுத்தனமான மனிதர். சாதாரண விஷயத்திற்குக் கூட தன் மனைவியை அடித்து உதைப்பார். அதை ஆனந்த் வெறுமனே பார்த்துக் கொண்டிருப்பான். அவனால் எதுவுமே செய்ய முடியாது. கல்லூரியில் பட்டம் வாங்கியவுடன், மேற்படிப்பு படிக்க வேண்டும் என்று ஆனந்த் ஆசைப்படுகிறான். ஆனால், அவன் தந்தை அவனை வலிய கொண்டு போய் காவல் துறையில் சேர்த்து விடுகிறார்.

இப்போது ஒரு திருப்புமுனை சம்பவம் நடைபெறுகிறது.

ராமா ஷெட்டியின் ஒரு ஆள் அடித்து உதைக்கப்பட்டு, நெருப்பு வைத்து எரிக்கப்படுகிறான். சாகும் நிலையில் கிடக்கும் அவனை ஆனந்த் மருத்துவமனைக்குக் கொண்டு வந்து சேர்த்து, அவனிடமிருந்து வாக்கு மூலம் வாங்குகிறான். அவன் அதில் தன்னை தாக்கியவர்கள் ராமா ஷெட்டியும், அவனுடைய ஆட்களும் என்று கூறுகிறான். ஆனந்த் புயலென ராமா ஷெட்டி இருக்கும் இடத்திற்குச் சென்று அவனை கைது செய்ய முயல்கிறான். ஷெட்டி சிறிது கூட அதிர்ச்சியடையவில்லை. அவன் உயர் நிலையில் இருக்கும் ஒரு காவல் துறை அதிகாரிக்கு ஃபோன் செய்கிறான். அவர் ஆனந்தை அங்கிருந்து திரும்பி வரும்படி கூறுகிறார்.

கையில் உரிய ஆதாரங்கள் அனைத்தும் இருந்தும், நடவடிக்கை எடுக்க முடியாமல் அவன் அங்கிருந்து கிளம்ப வேண்டி நிலை… வேறு வழி இல்லாததால், மனதில் வருத்தத்துடன் அங்கிருந்து அவன் புறப்படுகிறான். ஆனால், அவனுடைய மனம் மிகுந்த காயத்துடன் இருக்கிறது. தான் அவமதிக்கப்பட்டு விட்டோம் என்ற உணர்வு அவனுக்குள் நுழைந்து, அவனை ஆட்டிப் படைக்கிறது.


நடைபெற்ற சம்பவங்களால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகும் ஆனந்த், குடிக்க ஆரம்பிக்கிறான். அதனால் ஜோத்ஸ்னாவுடன் அவன் கொண்டிருந்த நட்பு பாதிக்கப்படுகிறது. அந்த நேரத்தில் நகராட்சித் தேர்தல் வர, தேர்தலில் நிற்கும் ராமா ஷெட்டியின் பிரச்சார ஊர்வலகத்திற்கு தான் பாதுகாவலனாக போய் நிற்க வேண்டிய துர்ப்பாக்கிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகிறது.

இதற்கிடையில் அவன் மிகுந்த கோபத்திற்கும், எரிச்சலுக்கும் ஆளாகும் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. ஆனந்த் மும்பையின் வெளிப் பகுதியில் ஒரு கொள்ளைக்காரனை, படையுடன் சென்று பிடிக்கிறான். அவன் அந்தச் செயலைச் செய்ய, அந்த புகழ் வேறொரு காவல் துறை அதிகாரிக்குக் கிடைக்கிறது. அதன் விளைவாக அவன் தொடர்ந்து குடியில் மூழ்குகிறான். ஜோத்ஸ்னா எவ்வளவோ தடுத்துப் பார்க்கிறாள். ஆனால், அவன் கேட்பதாக இல்லை. அவன் எல்லா செயல்களையும் நேர்மையான வழிகளில் செய்ய வேண்டும் என்றுதான் நினைக்கிறான். ஆனால், காவல் துறையில் வேரூன்றியிருக்கும் ஊழல் அவற்றையெல்லாம் தகர்த்தெறிந்து விடுகிறது.

அளவுக்கும் அதிகமாக மது அருந்தியிருந்த சூழ்நிலையில், ஒரு கைதி ஆனந்தால் பலமாக அடிக்கப்பட்டு இறந்து விடுகிறான். இப்போது ஆனந்த் கைது செய்யப்படப்போவது மட்டுமல்ல… சிறைக்குள் அனுப்பப்படப் போவது மட்டுமல்ல… தன்னுடைய வேலையையே முழுமையாக இழக்க வேண்டிய சூழ்நிலை அவனுக்கு உண்டாகியிருக்கிறது.

அதைத் தொடர்ந்து தனக்கு அரசியல் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காக அவன் ராமா ஷெட்டியின் முன்னால் போய் நிற்கிறான். ராமா ஷெட்டியின் கருணையை நம்பியிருக்கும் ஆனந்த், அவனுடைய ஒவ்வொரு கட்டளைக்கும் அடிபணிந்தே ஆக வேண்டும். தனக்கு இப்படியொரு சூழ்நிலையா என்று நினைக்கும் ஆனந்த், காலப் போக்கில் மிகுந்த கோபத்திற்கும், வெறிக்கும் ஆளாகி ராமா ஷெட்டியைத் தன் கையாலேயே கொன்று விட்டு, காவல் துறையின் முன் போய் சரணடைகிறான்.

ஜோத்ஸ்னா அவனுக்கு ஆறுதலாக இருக்கிறாள். அவனை வேறு ஏதாவது வேலையில் போய் சேரும்படி கூறுகிறாள் (காவல் துறையின் மிருகத்தனமான செயல்களைப் பற்றி சமீப காலமாக வந்து கொண்டிருந்த பல செய்திகளைப் பார்த்து, தான் கட்டாயம் ஒரு காவல் துறை அதிகாரியைத் திருமணம் செய்யக் கூடாது என்ற தீர்மானத்திற்கு அவள் வருகிறாள்).

சப்-இன்ஸ்பெக்டர் ஆனந்தாக- ஓம்புரி (என்ன அருமையான நடிப்பு! அவரின் தோற்றமும், முகமும் கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்துகிறது. சுற்றிலும் அநீதிச் செயல்கள் நடந்து கொண்டிருக்க, அதை எதுவுமே செய்ய முடியாமல் கையற்ற நிலையில் இருக்கும் தன்னைப் பார்த்து அவர் கவலைப்படும் போதும், சமூக விரோதிகளை ஆவேசத்துடன் அடித்து உதைக்கும்போதும், அரசியல்வாதிகள் மற்றும் ஊழலில் திளைக்கும் காவல்துறை அதிகாரிகளின் தலையீடுகளால் தன் கடமையைச் சரியாக செய்ய முடியாத நிலையில் இருக்கும்போதும், அவற்றையெல்லாம் நினைத்து மனதில் குமுறும்போதும் ஓம்புரி நடிப்பின் உச்சத்தையே தொட்டிருக்கிறார்.)

அவருக்கு ஆறுதலாக இருக்கும் தோழி ஜோத்ஸ்னாவாக- ஸ்மீதா பாட்டீல், (அமைதியான, ஆழமான நடிப்பு!)

ஆனந்தின் முரட்டுத்தனமான தந்தையாக – அம்ரிஷ்புரி. (இதற்கென்றே பிறந்தவராயிற்றே!)

ராமா ஷெட்டியாக- சதாஷிவ் அம்ராபுர்கர் (என்ன இயல்பான, மிடுக்கான நடிப்பு!)

இந்த படத்தில் என் மனதைத் தொட்ட ஒரு காட்சி:

தனக்கு உண்டான பிரச்னைகளை நினைத்து, மனம் உடைந்த ஆனந்த் வாய் விட்டு அழுகிறான். ஜோத்ஸ்னா அவனுக்கு ஆறுதல் கூற நினைத்து, தன் கையை நீட்டுகிறாள். பின் என்ன நினைத்தாளோ, அவனைத் தொடாமலே தன் கையை அவள் பின்னால் இழுத்துக் கொள்கிறாள். ‘சக்ரவ்யூகத்தில் அவன் மாட்டிக் கொண்டிருக்கிறான். தனக்குத் தானே பலத்தைப் பெற்றுக் கொண்டு அவன் அதிலிருந்து மீண்டு வரட்டும்’ என்று அவள் தன் மனதில் நினைத்திருக்கலாம்.

1983ஆம் ஆண்டில் ‘அர்த் ஸத்ய’ ஃபிலிம்ஃபேர் விருதுகளை அள்ளி குவித்தது.

அதற்கு கிடைத்த ஃபிலிம்ஃபேர் விருதுகள்:

(1) சிறந்த படம் (2) சிறந்த இயக்குநர், சிறந்த துணை நடிகர் (சதாஷிவ் அம்ராபுர்கர்), சிறந்த திரைக்கதை (விஜய் டெண்டுல்கர்), சிறந்த கதை (எஸ்.டி.பன்வாக்கர்).

அந்த ஆண்டின் மத்திய அரசாங்கத்திக் சிறந்த நடிகர் விருது ‘அர்த் ஸத்ய’ படத்தில் நடித்தற்காக ஓம்புரிக்குக் கிடைத்தது.

படத்தின் இயக்குநரான Govind Nihalani தான் படத்தின் ஒளிப்பதிவாளரும்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.