Logo

36 சவ்ரிங்கீ லேன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 5714
36 chowringee Lane

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

36 சவ்ரிங்கீ லேன்

(இந்திய ஆங்கில திரைப்படம்)

1981ஆம் ஆண்டு திரைக்கு வந்த படம். படத்தின் கதையை எழுதி, இயக்கியவர் அபர்ணா சென். அதுவரை வங்காளப் படங்களில் நடித்துக் கொண்டிருந்த அவர் இந்தப் படத்தின் மூலம்தான் இயக்குநராக அறிமுகமானார்.

படத்தைத் தயாரித்தவர் பிரபல இந்தி நடிகர் சசிகபூர்.

ஆங்கில நடிகை Jennifer Kendal பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க, அவருடன் முக்கிய கதாபாத்திரங்களில் வங்க மொழிப் படங்களில் நடித்திருக்கும் Dhritiman Chatterjeeயும் Debashree Royம் நடித்திருந்தார்கள்.

படத்தின் ஒளிப்பதிவாளர்: அஷோக் மேத்தா (அடடா! என்ன அருமையான ஒளிப்பதிவு! அவரின் லைட்டிங் இருக்கிறதே… அதுவே பல இடங்களில் கதையைக் கூறாமல் கூறியது. படம் திரைக்கு வந்த காலத்தில் சென்னை லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் இந்தப் படத்தை நான் பார்த்தபோதே, அஷோக் மேத்தா என்ற அற்புத ஒளிப்பதிவாளரின் மீது நான் காந்தமென ஈர்க்கப்பட்டு விட்டேன்…)

வயலட் ஸ்டோன்ஹாம் என்ற வயதான ஆங்கில இந்திய ஆசிரியையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படமிது.

இந்தியா விடுதலை பெற்ற பிறகு, அந்த வயதான பெண் தான் மட்டும் தனியே 36, சவ்ரிங்கீ லேன் என்ற முகவரியில் உள்ள தன்னுடைய வீட்டில் அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருக்கிறாள். கல்கத்தாவில் இருக்கும் ஒரு அமைதியான தெரு அது. அவளுடைய சகோதரர் வயதானதால் உண்டான ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் இருக்கிறார். அவளுடைய மருமகள் ரோஸ் மேரிக்கு ஏற்கெனவே திருமணமாகி விட்டது.

வயலட் மட்டும் தனியாக தன் செல்லப் பூனை Sir Tobyயுடன் அந்த மாடியில் இருக்கும் தனிமை நிறைந்த வீட்டில் இருக்கிறாள். வாழ்க்கையில் அவளுக்கு இருக்கும் ஒரே சந்தோஷமே- மாணவர்களுக்கு ஷேக்ஸ்பியரைக் கற்றுக் கொடுப்பதுதான். ஆனால், அவற்றைக் கற்பதில் மாணவர்களுக்கு அப்படியொன்றும் பெரிய ஆர்வம் இல்லை என்பது வேறு விஷயம்.

இதற்கிடையில் ஒரு நாள் வெளியே சென்றிருந்தபோது, தன்னுடைய பழைய மாணவியான நந்திதாவையும், அவளுடைய நண்பனான சமரேஷையும் அவள் சந்திக்கும் சூழ்நிலை உண்டாகிறது. தன்னுடைய முகவரியை அவள் தெரிவிக்க, அவர்கள் அந்த வயதான பெண்ணின் வீட்டிற்கு வருகிறார்கள். விருந்தினர்கள் என்று யாருமே வராமலிருந்த அந்த வீட்டிற்கு, விருந்தாளிகள் என்று இருவர் வந்ததில் அந்த வயதான பெண்ணுக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி! அவர்களுக்கு சந்தோஷத்துடன் அவள் தன் கையால் தேநீர் தயாரித்துத் தருகிறாள்.

சமரேஷ் ஒரு எழுத்தாளன். அவன் தான் எழுதப் போகும் புதிய நாவலை அந்த வீட்டில் வைத்து எழுதப் போவதாக கூறியபோது, வயலட் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. தான் வேலைக்கு வெளியே போயிருக்கும்போது, சமரேஷூம் நந்திதாவும் தன்னுடைய வீட்டை, தங்களின் தனிப்பட்ட சந்தோஷங்களுக்காகவும், உடல் இச்சைகளுக்காகவும் பயன்படுத்த நினைத்திருக்கிறார்கள் என்ற உண்மை பாவம்… அந்த அப்பிராணி பெண்ணுக்குத் தெரியவில்லை.

காலப் போக்கில் அவர்கள் மீது அந்த கிழவி கொண்டிருக்கும் அன்பும், பாசமும் பல மடங்குகள் அதிகரிக்கின்றன. அவர்களை அவள் தன்னுடைய மிக நெருக்கமான நண்பர்கள் என்கிற அளவிற்கு நினைக்க ஆரம்பிக்கிறாள். அவர்களுடன் அவள் இருக்கும் நேரத்தில், அவர்கள் பல விஷயங்களையும் மனம் விட்டு பேசுகிறார்கள். அவர்கள் பாடுவதையும், ஆடுவதையும் வயலட் ரசித்துப் பார்க்கிறாள்… கேட்கிறாள். அந்த இளம் நண்பர்கள் ‘சில்மிஷங்கள்’ செய்யும் போது, ஓரக் கண்களால் அதைப் பார்த்து ரசிக்கிறாள் கிழவி.

இதுவரை எந்தவித சந்தோஷத்தின் அறிகுறியும் இல்லாமல், மயான அமைதி நிலவிக் கொண்டிருந்த அந்த வீட்டில் நந்திதாவும், சமரேஷூம் வந்த பிறகு சிரிப்புச் சத்தம் கேட்கிறது… பாடல் சத்தம் கேட்கிறது… கேலி, கிண்டல், கூச்சல் அனைத்தும் கேட்கின்றன… இதுவரை தான் பார்த்திராத ஒரு அருமையான சூழ்நிலை தன் வீட்டில் நிலவிக் கொண்டிருப்பதை உணர்கிறாள் அந்த வயதான பெண். இதற்கு முன்பு தான் உணர்ந்திராத ஒரு புதிய வசந்தம் அங்கு வந்து சேர்ந்திருப்பதைப் போல அவளுக்குத் தோன்றுகிறது. இன்னும் சொல்லப் போனால்- அவர்கள் வந்த பிறகுதான், அந்த வயதான கிழவியின் முகத்தில் சிரிப்பு என்ற ஒன்றே தென்படுகிறது.

நாட்கள் வேகமாக நகர்கின்றன. நந்திதாவிற்கும் சமரேஷூக்கும் இடையே திருமணம் நடைபெறுகிறது. அவர்கள் தங்களுக்கென ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அதில் குடி போகிறார்கள். ஆரம்பத்தில் வாரத்திற்கு ஒரு முறை வயலட் என்ற அந்த மூதாட்டியின் வீட்டிற்கு வந்து கொண்டிருந்த அவர்கள், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை என்று வர ஆரம்பிக்கிறார்கள். அதுவே மாதத்திற்கொருமுறை என்று ஆகிறது. பின்னர் அதுவும் இல்லை. சில மாதங்களாகவே அவர்கள் அந்த வீட்டுப் பக்கமே வரவில்லை.

மீண்டும் பழைய தனிமைச் சூழல். பேச்சுத் துணைக்குக் கூட யாருமே இல்லாத நிலை. இருண்டு கிடக்கும் அந்த கட்டிடத்திற்குள் நுழைந்து, சிரமப்பட்டு… மரத்தால் ஆன படிகளில் ஏறி, மாடிக்கு வந்து… எந்தவித உற்சாகமும் இல்லாமல் தன் வீட்டின் கதவைத் திறந்து… கவலை நிறைந்த முகத்துடன் அமர்ந்திருக்கிறாள் வயலட் என்ற அந்த அன்பிற்காகவும், பாசத்திற்காகவும் ஏங்கும்… முகத்தில் சுருக்கங்கள் விழுந்த வயதான பெண்…

இடையில் வந்த சந்தோஷம் திடீரென்று இல்லாமற் போனதை அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. தன் விதியை தானே நொந்து கொண்டு, கண்களில் கண்ணீர் மல்க, மேஜை விளக்கையே வெறித்துப் பார்த்துக் கொண்டு இரவு நேரத்தில் அந்த கிழவி மயான அமைதியுடன் அமர்ந்திருக்கிறாள்.

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்குகிறது. நந்திதாவையும் சமரேஷையும் ஒருநாள் சிறிதும் எதிர்பாராமல் வெளியே பார்த்த வயலட், அவர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு தன் வீட்டிற்கு வரும்படி அழைக்கிறாள். அவர்களுக்கு தன் கையால் கேக் தயாரித்துத் தர வேண்டும் என்பது அந்த கிழவியின் ஆசை. ஆனால், அவர்களோ கிறிஸ்துமஸ் நாளன்று கல்கத்தாவிலேயே தாங்கள் இல்லை என்று கூறுகிறார்கள். வேலை விஷயமாக வெளியூரில் இருக்க வேண்டிய நிலை என்று கூறுகிறார்கள். அதை ஏற்றுக் கொள்வதைத் தவிர வேறு வழி இல்லாத நிலைக்கு ஆளாகிறாள் அந்த மூதாட்டி.


கிறிஸ்துமஸ் வருகிறது. ஊரே கொண்டாட்டத்தில் இருக்கிறது. எங்கு பார்த்தாலும் வர்ண விளக்குகள்… வரிசை வரிசையாக மின் விளக்குகள் கண் சிமிட்டி ஜாலம் செய்து கொண்டிருக்கின்றன. தேவாலயங்களின் மணிச் சத்தங்கள் காற்றைக் கிழித்துக் கொண்டு ஒலிக்கின்றன. மக்களின் பிரார்த்தனை பாடல்கள் எங்கு பார்த்தாலும் கேட்கின்றன.

மொத்தத்தில்-

கல்கத்தா நகரமே கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தில் மிதந்து கொண்டிருக்கிறது. ஒரே ஒரு உயிரின் மனதில் மட்டும் சிறிது கூட சந்தோஷம் இல்லை. தன்னுடைய சந்தோஷத்தைப் பகிர்ந்து கொள்வதற்குக் கூட இன்னொரு உயிர் இல்லாமல் ஏங்கிக் கொண்டிருக்கிறது அந்த வயதான பெண்ணின் இதயம்!

சரி… நந்திதாவும் சமரேஷும் ஊரில்தான் இல்லை… அவர்களுடைய வீட்டிலாவது தான் தயாரித்த கேக்கை வெளியே இருக்கும் பெட்டியில் வைத்து விட்டுப் போவோம் என்ற எண்ணத்துடன், கிழவி மெதுவாக அவர்களுடைய வீட்டை நோக்கி நடந்து வருகிறாள். அருகில் வர… வர…… நந்திதாவின் வீட்டின் முன்னால் ஆடம்பரமான அலங்காரங்கள்… மின் விளக்குகள்… பல வர்ண பல்புகள் அணைந்து அணைந்து எரிந்து கொண்டிருக்கின்றன. வண்ண தாள்களில் நட்சத்திரங்கள் செய்யப்பட்டு, வீட்டிற்கு வெளியேயும், மாடியிலும் பிரகாசித்தவாறு தொங்கிக் கொண்டிருக்கின்றன. கிழவிக்கு ஒரே ஆச்சரியம்! மெதுவாக நடந்து, வீட்டிற்கு அருகில் வருகிறாள். அந்த இரவு நேரத்தில்… படு அமர்க்களமாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது அந்த வீடு.

உள்ளே பாடல் சத்தம்… அத்துடன் மனிதர்களின் சிரிப்புச் சத்தம்… கொண்டாட்டங்கள்… செவியில் மோதும் இசைக் கருவிகளின் ஆரவாரம்!

மெதுவாக அருகில் வந்து, கண்ணாடி சாளரத்தில் படிந்திருக்கும் மூடு பனியை விரல்களால் தடவி நீக்கிவிட்டு உள்ளே பார்க்கிறாள் வயலட். வீட்டிற்குள் ஒரு மிகப் பெரிய பார்ட்டி நடந்து கொண்டிருக்கிறது. நந்திதாவும் சமரேஷும் மிகுந்த சந்தோஷக் கடலில் மிதந்து கொண்டிருக்க, அவர்கள் அந்த கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கு அழைத்திருந்த ஆண்களும், பெண்களும் பாடுகிறார்கள்… ஆடுகிறார்கள்… வாழ்த்து கூறுகிறார்கள்.

ஊரில் இருந்து கொண்டே, தாங்கள் இல்லை என்று தன்னிடம் அந்த இளம் ஜோடி பொய் கூறியிருக்கிறார்கள் என்பதை அந்த கிழவியால் ஜீரணித்துக் கொள்ளவே முடியவில்லை. தங்குவதற்கு வீடு இல்லாத சூழ்நிலையில் தன் வீட்டை அவர்கள் தங்களின் சொந்த நலனுக்காக பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதையும், தங்களுக்கென்று ஒரு வீடு கிடைத்தவுடன் ‘இனிமேல் கிழவியின் நட்பு நமக்கு தேவையில்லை’ என்று நினைத்து, தன்னை ஒரேயடியாக தூக்கியெறிந்து விட்டார்கள் என்பதையும் நினைத்து கிழவி தனக்குள் அழுகிறாள்.

அவளுடைய கால்களுக்கு சக்தியே இல்லாமல் ஆகிறது. நடக்க முடியாமல் நடந்து மெதுவாக நகரத்தின் ஒரு அமைதியான பகுதிக்கு வருகிறாள். இப்போது இரவு அடங்கி விட்டது. தூரத்தில் ஏதோ சில இசைச் சத்தங்கள் கேட்கின்றன. அதைத் தவிர்த்துப் பார்த்தால், ஓரளவிற்கு அமைதியான சூழ்நிலை…

மெல்ல நடந்து வந்த கிழவி ஒரு இடத்தில் அமர்கிறாள். அவளைப் பார்த்ததும் ஒரு நாய் வேகமாக ஓடி வருகிறது. அவள் தன் கையிலிருந்த கேக்கை அதற்குப் போடுகிறாள். அதைச் சுவைத்த நாய், அவளை நாக்கால் நக்கிக் கொண்டே, தன்னுடைய வாலை பாசத்துடன் ஆட்டுகிறது.

அந்த நாயை அன்புடன் தடவிக் கொடுக்கும் வயலட் என்ற அந்த கிழவி, நாயைப் பார்த்து முணுமுணுக்கிறாள்: ‘பொய்யான அந்த மனிதர்களை விட, நீ எவ்வளவோ மேல்…!’

இரவின் தனிமையில் அந்த நள்ளிரவு நேரத்தில், அமைதியான கல்கத்தாவின் ஒரு சாலையில் நாயின் அருகில் அமர்ந்து, கிழவி அதை வாஞ்சையுடன் தடவிக் கொண்டிருக்க… படம் முடிவடைகிறது.

சென்னை லிட்டில் ஆனந்த் திரை அரங்கத்தில் ’36 Chowringhee Lane’ 100 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது. நான் அதே திரை அரங்கத்தில் மூன்று முறைகள் இந்த படத்தைப் பார்த்திருக்கிறேன். ஒவ்வொரு முறை பார்க்கும்போதும், கண்ணீர் மல்க தியேட்டரை விட்டு வெளியே வந்திருக்கிறேன்.

வயலட் ஸ்டோன்ஹாம் என்ற வயதான ஆங்கில இந்தியப் பெண்ணாக வாழ்ந்தவர் – Jennifer Kendal.

நந்திதாவாக- Debashree Roy

சமரேஷாக- Dhritiman Chatterjee

இந்தப் படத்திற்கு இசையமைத்திருப்பவர் – வன்ராஜ் பாட்டியா. படத் தொகுப்பு- பானுதாஸ் திவாகர். கலை- பன்ஸி சந்திரகுப்தா.

அபர்ணா சென் தான் எழுதிய இந்த திரைக்கதையை சத்யஜித் ராயிடம் காட்ட, அவர்தான் சசி கபூரை தயாரிப்பாளராக கை காட்டியிருக்கிறார். கதைச் சுருக்கத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க, உடனடியாக அபர்ணா சென்னை மும்பைக்கு வரும்படி கூறிவிட்டார் சசி கபூர். அப்போதே படத்தின் வேலைகள் ஆரம்பமாகி விட்டன.

படத்தின் தொழில் நுட்பம் சம்பந்தமான இறுதி வேலைகள் நடைபெறும்போது, கலை இயக்குநர் சந்திரகுப்தா மாரடைப்பில் மரணமடைந்து விட்டார். அதைத் தொடர்ந்து இப்படம் அவருக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டது.

ஆங்கிலத்துடன், வங்க மொழி உரையாடல்களும் படத்தில் இருக்கின்றன. Debashree Royக்கு, அபர்ணா சென்னே குரல் கொடுத்தார்.

அபர்ணா சென்னுக்கு குடியரசுத் தலைவரின் ‘சிறந்த இயக்குநர்’ விருது கிடைத்தது. சிறந்த ஆங்கிலப் படத்திற்கான தேசிய விருதும் இப்படத்திற்கு கிடைத்தது. சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருதை அஷோக்மேத்தா பெற்றார். மனிலா சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, இப்படம் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது.

எத்தனை வருடங்கள் கடந்தோடினாலும், சில திரைப்படங்கள் மட்டுமே நம் மனங்களில் நீங்காமல் வாழ்ந்து கொண்டிருக்கும். அத்தகைய ஒரு தகுதியைப் பெற்ற படம் ’36 Chowringhee Lane’.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.