Logo

செம்மீன்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 4357
chemmeen

என்னை கவர்ந்த திரைப்படங்கள்சுரா (Sura)

செம்மீன்

(மலையாள திரைப்படம்)

செம்மீன் – மலையாள திரையுலகிற்கு மிகப் பெரிய மரியாதையையும், மதிப்பையும் உண்டாக்கித் தந்த காவியம். 1965ஆம் ஆண்டில் திரைக்கு வந்த இந்தப் படம் மத்திய அரசாங்கத்தின் சிறந்த படத்திற்கான பரிசைப் பெற்றது. இந்திய குடியரசுத் தலைவரின் தங்கப் பதக்கத்தைப் பெற்ற முதல் தென்னிந்தியப் படமே ‘செம்மீன்’தான்.

புகழ் பெற்ற மலையாள எழுத்தாளர் தகழி சிவசங்கரப் பிள்ளை மூன்று வாரங்களுக்குள் எழுதிய நாவல் இது. இப்புதினம் உலகமெங்கும் 30 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

ராமு காரியாட் இயக்கிய இந்தப் படத்தின் திரைக்கதையை எஸ்.எல்.புரம் சதானந்தன் எழுதினார்.

படத்தின் கதாநாயகர்களாக மது, சத்யன் இருவரும் நடிக்க, கதாநாயகியாக ஷீலா நடித்தார்.

சலீல் சவுதரி இசையமைக்க, மார்க்கஸ் பார்ட்லே ஒளிப்பதிவாளராக பணியாற்றினார்.

பாடல்கள்: வயலார் ராமவர்மா

படத்தொகுப்பு: ரிஷிக்கேஷ், முகர்ஜி- கெ.டி.ஜார்ஜ்

தயாரிப்பு: பாபு இஸ்மாயில் சேட்டு (எ) கண்மணி பாபு

கேரளக் கடற்கரையில் வாழும் மீனவர்களின் வாழ்க்கைகளை திரையில் காட்டிய படம்.

‘ஒரு மீனவன் மீன் பிடிக்கச் செல்லும்போது, கடலின் சீற்றம் உண்டாகி அவன் பயங்கரமான சுழலில் சிக்கினால், அவனுடைய மனைவி அவனுக்கு துரோகம் இழைத்திருக்கிறாள் என்று அர்த்தம். அதன் விளைவாக கடல் அன்னை அவனை விழுங்கி விடுவாள்’- மீனவர்களின் இந்த நம்பிக்கையே இந்த கதைக்கு அடிப்படை.

பேராசை பிடித்த ஒரு இந்து மத மீனவனான செம்பன்குஞ்சுவின் மகள் கருத்தம்மா. காண்போரைச் சுண்டி இழுக்கக் கூடிய பேரழகு படைத்தவள் அவள். முஸ்லீம் வியாபாரி ஒருவரின் இளம் மகன் பரீக்குட்டி. கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவரையொருவர் காதலிக்கிறார்கள். செம்பன்குஞ்சுவின் ஒரே ஆசையே சொந்தத்தில் மீன் பிடிக்கும் வலையும், படகும் இருக்க வேண்டும் என்பதுதான். அந்த ஆசை நிறைவேறுவதற்கு, பரீக்குட்டி அவனுக்கு பண உதவி செய்கிறான். அதே நேரத்தில்- பிடிக்கும் மீன்களை தனக்குத்தான் அவன் விற்பனை செய்ய வேண்டும் என்கிறான் பரீக்குட்டி. அதற்கு செம்பன் குஞ்சும் ஒத்துக் கொள்கிறான்.

கருத்தம்மாவின் தாய் சக்கிக்கு தன் மகள் கருத்தம்மாவிற்கும், பரீக்குட்டிக்குமிடையே இருக்கும் ஆழமான காதலைப் பற்றி தெரிய வருகிறது. தாங்கள் எந்த அளவிற்கு சமூகக் கட்டுப்பாடுகளுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதைக் கூறும் சக்கி, பரீக்குட்டியிடம் கொண்டிருக்கும் உறவிலிருந்து விலகி இருக்கும்படி தன் மகளை எச்சரிக்கிறாள்.

மீனவர்கள் மிகுந்த சமூகக் கட்டுப்பாடுகளுடன் தங்களின் வாழ்க்கைகளை அமைத்துக் கொள்ள வேண்டுமென்றும், வேற்று மதத்தைச் சேர்ந்த யாரையாவது திருமணம் செய்தால், கடலின் பயங்கரமான கோபத்திற்கு முழு சமூகமும் ஆளாகும் என்றும் அவள் கூறுகிறாள்.

கருத்தம்மா பரீக்குட்டியின் மீது கொண்டிருந்த தன் காதலை தியாகம் செய்து விட்டு, பழனி என்ற அனாதை மீனவனைத் திருமணம் செய்து கொள்கிறாள். மீன் பிடிக்கச் சென்றிருந்தபோது, ஒரு நாள் அவனைப் பார்த்தான் செம்பன்குஞ்சு. அதன் தொடர்ச்சியே அந்தத் திருமணம். திருமணம் நடந்தவுடன், கருத்தம்மா தன் கணவனுடன் அவனுடைய கிராமத்திற்குப் புறப்படுகிறாள். அந்த நேரத்தில் அவளுடைய தாய் சக்கி உடல் நலமில்லாமல் படுத்திருக்கிறாள். அதனால் இன்னும் சில நாட்கள் அவளை அங்கு இருக்கும்படி கூறுகிறான் செம்பன்குஞ்சு. ஆனால், கருத்தம்மா கிளம்பி விடுகிறாள்.

அதனால் அவள் மீது மிகுந்த கோபம் கொள்கிறான் செம்பன்குஞ்சு. மீன் பிடிக்க பயன்படும் வலையையும் ஒரு படகையும் சொந்தத்தில் வாங்கிய அவன், புதிதாக இன்னொன்றையும் வாங்குகிறான். அவனுடைய பேராசை இன்னும் அதிகமாகிறது. காலப் போக்கில் அவன் சிறிதும் இதயமற்றவனாக ஆகிறான். கூறிய வாக்குறுதியின்படி, பரீக்குட்டிக்கு தான் பிடித்த மீன்களை அவன் தரவில்லை. வேறு ஆட்களுக்கு விற்கிறான். அதன் மூலம் பரீக்குட்டியைக் கடனாளியாக அவன் ஆக்குகிறான். இதற்கிடையில் அவனுடைய மனைவி சக்கி இறந்து விடுகிறாள்.

சில நாட்களில் செம்பன்குஞ்சு பாப்பிக்குஞ்சு என்ற விதவையை இரண்டாவது மனைவியாக திருமணம் செய்து கொள்கிறான். அவன் வாங்கிய முதல் படகின் சொந்தக்காரனின் மனைவியே அவள். அது பிடிக்காமல், செம்மன்குஞ்சுவின் இளைய பஞ்சமி லதா, தன் அக்கா கருத்தம்மாவைத் தேடி செல்கிறாள்.

கருத்தம்மா ஒரு நல்ல மனைவியாகவும், நல்ல தாயாகவும் வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கிறாள். அதே நேரத்தில் – அவள் பரீக்குட்டியின் மீது முன்பு வைத்திருந்த காதல் விஷயம் அந்த கிராமம் முழுவதும் பரவுகிறது. அதனால் பழனியின் நண்பர்கள், தாங்கள் மீன் பிடிக்கச் செல்லும்போது அவனைத் தவிர்த்து விட்டு, அவர்கள் மட்டும் செல்கிறார்கள்.

காலத்தின் கோலம் என்றுதான் கூற வேண்டும்- சிறிதும் எதிர்பாராமல் ஒரு இரவு நேரத்தில் கருத்தம்மாவும், பரீக்குட்டியும் மீண்டும் சந்திக்கிறார்கள். அவர்களுடைய பழைய காதல் மீண்டும் துளிர்க்கிறது. அவர்கள் ஒருவரோடொருவர் இணைகின்றனர்.

இரவு நேரத்தில்- யாருமே அருகில் இல்லாமல், கடலில் பயணித்துக் கொண்டிருக்கும் படகில் பழனி மட்டும் தனியே இருக்கிறான். ஒரு பெரிய சுறா மீன் அவனுக்கு முன்னால்… அப்போது திடீரென எழுந்த சுழலில் அவன் சிக்குகிறான். கடல் அவனை விழுங்குகிறது.

மறுநாள் காலையில்… கருத்தம்மாவும் பரீக்குட்டியும் ஒருவர் கையை ஒருவர் கோர்த்த நிலையில், கடல் நீருக்கு அருகில் இறந்து கிடக்கிறார்கள். தூரத்தில்- இறந்போன ஒரு சுறா மீன் கிடக்கிறது.

பரீக்குட்டியாக-மது

பழனியாக- சத்யன்

கருத்தம்மாவாக- ஷீலா

செம்பன்குஞ்சுவாக-கொட்டாரக்கர ஸ்ரீதரன் நாயர்

சக்கியாக- அடூர் பவானி

பாப்பிக்குஞ்சுவாக- சி.ஆர்.ராஜகுமாரி

பஞ்சமியாக- லதா

‘செம்மீன்’ படப்பிடிப்பு திரிசூரிலிருந்து 25 கி.மீ. தூரத்திலிருக்கும் நட்டிகா கடற்கரையில் நடைபெற்றது.

சிக்காகோ திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு தகுதி சான்றிதழ் பெற்ற ‘செம்மீன்’Cannes Film Festival இல் திரையிடப்பட்டு, சிறந்த ஒளிப்பதிவாளருக்கான விருதை Marcus Bartleyக்குப் பெற்றுத் தந்தது.

வருடங்கள் எவ்வளவோ கடந்தோடிய பிறகும், எல்லோரின் மனங்களிலும் ‘செம்மீன்’ உயிர்ப்புடன் வாழ்ந்து கொண்டிருப்பதற்குக் காரணமாக இருப்பவை- அதன் ஆழமான கதை… இளமையான காதல் காட்சிகள்… மீனவர்களின் யதார்த்தம் நிறைந்த வாழ்க்கைச் சித்தரிப்பு… அழகான படமாக்கப்பட்ட இடங்கள்… இனிமையான பாடல்கள்… மற்றும் இசை… நடிப்புக் கலைஞர்களின் பாத்திரங்களைப் புரிந்து கொண்டு உயிர் தந்த நடிப்புத் திறமை… அருமையான இயக்கம்.

‘செம்மீன்’ திரைப்படத்தை நினைக்கும்போதெல்லாம் தகழியும், வயலார் ராமவர்மாவும், ராமு காரியாட்டும், கே.ஜே.ஜேஸுதாஸும், பி.லீலாவும், மன்னாடேயும் நம் ஞாபகத்தில் வந்து கொண்டே இருப்பார்கள்.

அவர்களுடன்-

மதுவும்…

சத்யனும்…

ஷீலாவும்…

அந்த

அழகான

கடலும்…

கடற்கரையும்…

படகுகளும்…

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.