
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
அரிகெ
(மலையாள திரைப்படம்)
சமீப காலத்தில் என்னை மிகவும் கவர்ந்த மலையாளப் படங்களில் குறிப்பிடத்தக்க படம் இது. பொதுவாகவே – இயக்குநர் ஷ்யாம ப்ரசாத்தின் படங்கள் என்றாலே எனக்கு மிகவும் பிடிக்கும். மிகவும் மாறுபட்ட ஒரு கதையை எடுத்துக் கொண்டு, அதை கவித்துவ உணர்வுடன் படமாக்கும் அவரின் உத்தியை நான் மிகவும் விரும்புவேன்.
அதே பாணியில் உருவாக்கப்பட்டிருக்கும் ஒரு படம்தான் இதுவும். குறைந்த கதாபாத்திரங்களை வைத்துக் கொண்டு நேர்த்தியாக ஒரு கதையை ஷ்யாம ப்ரசாத் கூறியிருக்கிறார்.
சுனில் கங்கோபாத்யாய் எழுதிய ஒரு வங்காள சிறுகதையே இந்தப் படத்திற்கு அடிப்படை.
சாந்தனு மொழியியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் ஒரு இளைஞன். அவனுடைய சினேகிதி கல்பனா. இருவரும் வெளியே எங்கேயாவது சந்தித்தால், கல்பனா வாயே வலிக்கும் அளவிற்கு அவனுடன் சிரித்துச் சிரித்து பேசுவாள். கல்பனா அருகில் இருக்கும்போது, தன்னையே மறந்து விட்டு, அவள் பேசுவதையே ரசித்து கேட்டுக் கொண்டிருப்பான் சாந்தனு.
கல்பனாவின் தோழி அனுராதா. மிகவும் அமைதியான குணம் கொண்டவள் அவள். சொல்லப் போனால் – கல்பனாவிற்கு நேர் மாறான குணத்தைக் கொண்டவள். வாய் திறந்து பேசவே மாட்டாள். அப்படியே பேசினாலும், சில வார்த்தைகளை மட்டுமே கூறுவாள். வாழ்க்கையில் பல கசப்பான சம்பவங்களைச் சந்தித்தவள் அவள். அவளுடைய சொந்தக்கார இளைஞன் ஒருவன் வளைகுடாவில் இருக்கிறான். ஒருமுறை கேரளத்திற்கு வந்த அவன், அனுராதாவின் மீது காதல் மழையைப் பொழிகிறான். அவளுடன் தான் வாழ வேண்டும் என்று தீர்மானித்திருப்பதாக கூறுகிறான். நல்ல வசதி படைத்த அவனின் ஆசை வார்த்தைகளில் அவள் மயங்கி, தன்னையே ஒப்படைத்து விடுகிறாள். ஆனால், அவளை ஏமாற்றிவிட்டு போனவன்தான்… அதற்குப் பிறகு அவன் திரும்பி வரவே இல்லை. அந்த அதிர்ச்சியிலிருந்து அவளால் மீளவே முடியவில்லை.
நடைப்பிணத்தைப் போல தன்னுடைய வாழ்க்கையை அவள் ஓட்டிக் கொண்டிருக்கிறாள். தன்னுடைய வாழ்க்கைதான் இப்படி ஆகிவிட்டது, தன் தோழி கல்பனாவின் வாழ்க்கையாவது சந்தோஷமாக அமையட்டும் என்று அவள் நினைக்கிறாள். அதற்காகவே சாந்தனுவைச் சந்திக்கச் செய்வதற்கென்றே அவள் கல்பனாவை பல நேரங்களில் அழைத்துச் செல்வாள். சாந்தனுவும் கல்பனாவும் உரையாடிக் கொண்டிருக்க, சற்று தூரத்தில் அமைதியாக நின்று கொண்டு கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நின்றிருப்பாள் அனுராதா.
தங்கள் மகள் கல்பனா, நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த சாந்தனுவைத் திருமணம் செய்து கொள்வதை பிராமணர்களான அவளுடைய பெற்றோர் சிறிதும் விரும்பவில்லை. இதற்கிடையில் கல்பனாவின் அத்தையின் குள்ளநரித்தனத்தின் மூலம் சஞ்சய் என்ற பணக்கார இளைஞன், அவளுடைய வீட்டிற்கு வருகிறான். அவளை அவன் திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறான். ஆரம்பத்தில் அதற்கு மறுப்பு தெரிவித்த கல்பனா, காலப் போக்கில் அவனுடைய பண வசதியைப் பார்த்து மயங்கி, அவனைத் திருமணம் செய்து கொள்ள சம்மதித்து விடுகிறாள்.
இதைச் சிறிதும் எதிர்பார்த்திராத சாந்தனு மிகுந்த அதிர்ச்சிக்கு ஆளாகிறான். அவனின் நிலைமையைப் பார்த்து பரிதாபப்படும் அனுராதா, அவனுக்கு ஆறுதல் கூறுவதற்காக வருகிறாள். ஒரு இளைஞனால் பாதிக்கப்பட்ட அவளை, ஒரு இளம் பெண்ணால் பாதிக்கப்பட்ட அவன் அமைதியாக பார்க்கிறான்.
அனுராதா – எதுவும் பேசாமல், நடந்து செல்கிறாள். அவள் செல்வதையே பார்த்துக் கொண்டு சாந்தனு நின்று கொண்டிருக்கிறான். தூரத்தில் சென்ற அனுராதா, பின்னால் திரும்பி சாந்தனுவைப் பார்க்கிறாள். அப்போதும் அவனுடைய கண்கள் அவளையே பார்த்துக் கொண்டிருக்கின்றன.
சாந்தனுவாக திலீப்…
கல்பனாவாக சம்வ்ருதா சுனில்…
அனுராதாவாக மம்தா மோகன்தாஸ்…
சஞ்சய்யாக அஜ்மல்…
அனுராதாவின் உறவுப் பையனாக வீனீத்…
திலீப் மிகவும் அமைதியாக படம் முழுக்க வருகிறார். வழக்கம்போல- சம்வ்ருதா வாயாடிப் பெண்ணாக…
எனினும், அனுராதா கதாபாத்திரத்திற்கென்றே பிறவி எடுத்தவரைப் போல - மம்தா மோகன்தாஸ். என்ன அருமையான, ஆழமான, அமைதியான நடிப்பு! மம்தாவைத் தவிர, அந்த கதாபாத்திரத்திற்கு வேறு யாருமே இந்த அளவிற்கு உயிர் தந்திருக்க முடியாது. படம் முடிந்த பிறகும், மம்தாவின் அழகு முகம் நம் மனதில் நின்று கொண்டே இருக்கும்.
அழகப்பன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்தின் திரைக்கதையை இயக்குநர் ஷ்யாம ப்ரசாத்தே எழுதியிருக்கிறார். சீரான திரைக்கதை!
இந்தப் படத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் – உரையாடல்கள் ‘லைவ்’ ஆக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
படப்பிடிப்பு முற்றிலும் கோழிக்கோட்டில் நடைபெற்றிருக்கிறது.
2012 மே, மாதத்தில் ‘அரிகெ’ திரைக்கு வந்தது.