
என்னை கவர்ந்த திரைப்படங்கள் - சுரா (Sura)
டானி
(மலையாள திரைப்படம்)
என் இதயத்தின் அடித் தளத்தில் உயிர்ப்புடன் பல வருடங்களாக வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு அருமையான திரைப் படம். படத்தின் கதாநாயகன் - மம்மூட்டி. பல மிகச் சிறந்த கலைத் தன்மை கொண்ட படங்களை இயக்கி, விருது பெற்றிருக்கும் டி.வி. சந்திரன் இயக்கிய காவியம் என்றே நான் இதை கூறுவேன்.
2001 ஆம் ஆண்டில் இப்படம் திரைக்கு வந்தது.
‘டானி’ என்று அழைக்கப்படும் டானியல் தாம்ஸன் என்ற மனிதனின் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது.
டானியல் தாம்ஸன் ஒரு ‘ சேக்ஸஃபோன்’ இசைக் கருவியை இசைக்கக் கூடிய இசைக் கலைஞன். இந்தியாவிலும், உலகத்திலும் நடைபெறும் பல முக்கியமான சம்பவங்களுக்கு அவன் சாட்சியாக இருக்கிறான். அந்த மனிதனின் 73 வயது வரை கதை செல்கிறது. கதையின் போக்கிலேயே வரலாற்றுச் சம்பவங்களின் முக்கியத்துவமும் கோடிட்டுக் காட்டப்படுகின்றன.
தண்டியில் உப்பு சத்தியாகிரகம் நடைபெற்ற நாளன்றுதான் டானி பிறக்கிறான். கேரளத்தின் முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் பதவியை இழக்கும் நாளன்று, அவனுடைய மனைவி அவனை விட்டு விலகிச் செல்கிறாள். டானியின் காதல், ஏமாற்றங்கள், வெற்றிகள் - ஒவ்வொன்றும் வரலாற்றின் பல குறிப்பிடத்தக்க நிகழ்ச்சிகள் நடைபெறும் சமயத்தில் நடைபெறுகின்றன.
டானி தன் வாழ்வில் பல அவதாரங்களை எடுக்கிறான். அவன் தேவாலயத்தில் பாட்டு பாடுபவனாக இருக்கிறான். பிறகு ‘சேக்ஸஃபோன்’ இசைப்பவனாக இருக்கிறான்.
இதற்கிடையில் திடீரென்று அவனுடைய வாழ்வில் ஒரு சம்பவம் நடைபெறுகிறது. மிகப் பெரிய பணக்காரரான சவேரோ என்பவரின் மகள் மார்கரெட்டை திருமணம் செய்து கொள்ள வேண்டிய கட்டாயம் அவனுக்கு உண்டாகிறது. மார்கரெட் ஒரு இளைஞனுடன் முன்பு நெருக்கமாக பழகியிருக்கிறாள். அவளுடைய காதலன் சிறிதும் எதிர்பாராமல் மரணமடைந்து விட்டான். ஆனால், அவனுடன் கொண்டிருந்த காதல் வாழ்க்கையில் அவள் கர்ப்பமாகி விடுகிறாள். கர்ப்பத்தைக் கலைக்க முடியாத நிலை. தன் குடும்பத்தின் கவுரவத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சாதாரண மனிதனான டானியின் கையில் மார்கரெட்டை அவளுடைய தந்தை ஒப்படைக்கிறார். நல்ல மனம் கொண்ட டானி வேறு வழியில்லாமல் அதற்கு சம்மதிக்கிறான்.
ஆனால், ஊரின் பார்வைக்குத்தான் டானியும் மார்கரெட்டும் கணவன்-மனைவி. வீட்டிற்குள் அவர்களுக்குள் எந்த உறவும் இல்லை. ஒரு தீவைப் போலவே டானி வீட்டிற்குள் இருக்கிறான். உணவு தேவைப்படும்போது சாப்பிட்டுக் கொள்ளலாம். நீர் தேவைப்படும்போது பருகிக் கொள்ளலாம். ஒரு கணவன் என்ற முறையில் அவனுக்கு கிடைப்பது அவ்வளவுதான். அதற்கு மேல் எதுவுமே இல்லை. ஒரு சதவிகித அளவில் கூட டானியை மார்கரெட் மதிப்பதே இல்லை. ஏதோ கணவன் என்ற பெயரில் ஒரு பொம்மை வீட்டில் இருக்கிறது என்பதே அவளுடைய நினைப்பு. எப்போதும் நவநாகரீகமான தோற்றத்துடன் இருக்கும் அவள், வெளியே நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குச் செல்லும்போது கணவன் என்ற மரியாதைக்காக கோட், சூட்டுடன் அவளுக்கு அருகில் நின்று போஸ் கொடுப்பான் டானி.
வருடங்கள் கடந்தோடுகின்றன. எல்லோரின் வயதுகளும் படிப்படியாக ஏறிக் கொண்டிருக்கின்றன. நடுத்தர வயதுகளை அனைவரும் தாண்டி விட்டார்கள். இப்போது யாரும் டானியை மதிப்பதே இல்லை. ஆரம்ப காலத்தில் இருந்த சிறிதளவு கவனிப்புகள் கூட இப்போது அவன் மீது யாருக்கும் இல்லை. மார்கரெட் அவனை புழுவை விட கேவலமாக நினைக்கிறாள். காலப் போக்கில் அந்த குடும்பத்திலிருந்து அவன் விட்டெறியப் படுகிறான்.
அன்பு, பாசம், பரிவு, அக்கறை என்று எதுவுமே இதுவரை வாழ்க்கையில் கிடைக்காத டானி மனம் ஒடிந்து போகிறான். முதுமை காரணமாக உடலும் தளர்ந்து போய் விட்டது. மனதில் விரக்தி உண்டாகி, உடலும் செயல்பட முடியாத நிலைக்கு ஆளாகி... டானி மருத்துவ மனையில் அனுமதிக்கப்படுகிறான்.
அங்கு அவனுக்கு அறிமுகமாகிறாள் பார்கவி அம்மா. அவள் ஒரு ஒய்வு பெற்ற பேராசிரியை. தன் மகள் மரணத்தைத் தழுவ, யாருமே இல்லாமல் ஒரு மலைப் பிரதேசத்தில் வெறுமையான வாழ்க்கையை அவள் வாழ்ந்து கொண்டிருக்கிறாள். டானிக்கும் அவளுக்கும் இனம் புரியாத, அன்பு கலந்த ஒரு புதிய உறவு உண்டாகிறது. டானி என்ற அந்த நல்ல மனிதனின் மீது பார்கவி அம்மாவிற்கு அன்பு பிறக்கிறது. அவனுடைய முழு வாழ்க்கை கதையையும் அவள் கேட்டு, அவனுக்காக பரிதாபப் படுகிறாள்... கண்ணீர் சிந்துகிறாள். ‘அன்பு செலுத்த யாருமே இல்லை என்று ஏன் நினைக்கிறீர்கள்? நான் இருக்கிறேன்...’ என்கிறாள் அவள். வாழ்க்கையில் அப்படிப்பட்ட யாரையும் இது வரை சந்தித்தே இராத டானி, அவளை நன்றியுடன் பார்க்கிறான்.
ஆதரவற்ற டானியை தன்னுடன், தன்னுடைய சொந்த ஊருக்கு அழைத்துச் செல்வது என்று பா£க்கவி அம்மா தீர்மானிக்கிறாள். ஒருநாள் மருத்துவமனையிலிருந்து அவர்கள் இருவரும் ஊருக்கு கிளம்புகிறார்கள். போகும் வழியில் முதுமையை அடைந்து விட்ட டானி இறந்து விடுகிறான். எனினும், தன் இல்லத்தைச் சுற்றியிருக்கும் தன்னுடைய நிலத்தில்கிறிஸ்தவ முறைப்படி டானியை அடக்கம் செய்கிறாள் - இந்து மதத்தைச் சேர்ந்த பார்கவி அம்மா. அப்போது பல பிரச்னைகள் உண்டாகின்றன. எல்லாவற்றையும் பார்கவி அம்மா தைரியமாக எதிர் கொள்கிறாள்.
எங்கோ பிறந்து, எங்கோ வளர்ந்து, எங்கோ கணவன் வேடம் தரித்து, எங்கோ வந்து மண்ணிற்குள் அடக்கமாகிறான் டானி என்ற டானியல் தாம்ஸன்.
அவனைப் போன்ற எத்தனையோ மனிதர்கள் நம்மிடையே இருக்கத்தானே செய்கிறார்கள்?
டானி என்ற டானியல் தாம்ஸனாக மம்மூட்டி... (இந்த கதாபாத்திரத்திற்கு இவரைத் தவிர வேறு யாரால் இப்படி உயிர் தர முடியும்? இந்த மாதிரியான ஒரு கதாபாத்திரத்தை ஏற்று நடிப்பதற்கு மம்மூட்டியைத் தவிர வேறு எந்த நடிகர் ஒத்துக் கொள்வார்?
மார்கரெட்டாக - வாணி விஸ்வநாத், பார்கவி அம்மாவாக - மல்லிகா சாராபாய்
‘டானி’ இந்திய அரசாங்கத்தின் சிறந்த மலையாளப் படமாக தேர்ந்தெடுக்கப்பட்டது. சிறந்த இயக்குநருக்கான மாநில அரசாங்கத்தின் விருதை இப்படத்திற்காகப் பெற்றார் டி.வி சந்திரன்.