Logo

கரையைத் தொடாத அலைகள்

Category: சினிமா
Published Date
Written by sura
Hits: 5952
karaiyai-thodatha-alaigal

பீம்சிங் போட்ட பாதையில் செஞ்சி கிருஷ்ணன் வாழ்ந்தார் !

சுரா

1982ஆம் ஆண்டு. அப்போதுதான் நான் படவுலகிற்குள் நுழைந்து பி.ஆர்.ஓ.வாக பணியாற்ற தொடங்கியிருந்தேன். விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த ‘சாதிக்கொரு நீதி’ என்ற படத்திற்கு முதல் முறையாக நான் பி.ஆர்.ஓ.வாக அமர்த்தப்பட்டேன். ஒரு நாள் காலையில் தி.நகரில் நான் தங்கியிருந்த அறையில் என் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோது, என்னைப் பார்க்க சைக்கிளில் ஒருவர் வந்திருந்தார். வயது சுமார் ஐம்பது இருக்கும். முதிர்ச்சியான தோற்றம். குள்ளமான உருவம். வழுக்கைத் தலை. பேன்ட், சட்டை அணிந்திருந்தார். அவரை இதற்கு முன்பு வேறு எங்கும் பார்த்ததாக எனக்கு நினைவு இல்லை.

‘என்னைப் பார்க்கவா வந்திருக்கீங்க? என்ன விஷயமா வந்திருக்கீங்க?’ என்று அவரைப் பார்த்து நான் கேட்டேன். அதற்கு அவர் ‘அண்ணே... என் பெயர் செஞ்சி கிருஷ்ணன். நான் ஒரு நடிகர். கடந்த 25 வருடங்களா நான் படங்கள்ல சின்னச் சின்ன வேடங்கள்ல நடிச்சிக்கிட்டு வர்றேன். நான் நடிச்ச படங்கள் நூற்றுக் கணக்குல திரைக்கு வந்திருக்கு. ‘பிலிமாலயா’ பத்திரிகையில நீங்க வேலை பார்க்குறதை அதுல வர்ற பேரை வச்சு தெரிஞ்சிக்கிட்டேன். பத்திரிகைக்காரங்கன்னா எனக்கு ரொம்பவும் பிடிக்கும். நானே நேர்ல போயி அவங்கக்கிட்ட நெருக்கமா ஒரு நட்பை உருவாக்கிக்கிடுவேன். இந்த சினிமாவுல யார் மேல வர்றதா இருந்தாலும், அவங்களுக்கு பத்திரிகையோட பலம் ரொம்ப ரொம்ப அவசியம். இத்தனை வருட என்னோட பட உலக அனுபவத்துல நான் உணர்ந்த விஷயம் இது. நீங்க பி.ஆர்.ஓ.வாகவும் இருக்கீங்கன்னு கேள்விப்பட்டேன். ‘கண்ணெதிரே தோன்றினாள்’ன்ற படத்துக்கு அசிஸ்டெண்ட் டைரக்டராகவும் இருப்பதாச் சொன்னாங்க. என்னை மாதிரியான ஒரு நடிகனுக்கு உங்கள மாதிரியான ஒருத்தரோட ஆதரவும், அரவணைப்பும் கட்டாயம் தேவைண்ணே. நீங்க அவசியம் இந்த சின்ன நடிகனுக்கு உதவி செஞ்சே ஆகணும்’ என்றார். முதல் சந்திப்பிலேயே மனம் திறந்து செஞ்சி கிருஷ்ணன் பேசிய முறை எனக்கு மிகவும் பிடித்தது பல பத்திரிகைகளில் பல வருடங்களாகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் சீனியர்கள் பலரின் பெயரையும் அவர் கூறினார். அதிலிருந்து பத்திரிகையாளர்களிடம் நெருங்கிய உறவு வைத்திருக்கும் மனிதர் அவர் என்பதைப் புரிந்து கொண்டேன். பேசி முடித்தவுடன் என்னைக் கீழே இருந்த ‘பாரத்’ ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார். இருவரும் தேநீர் பருகினோம். என்னைக் காசு கொடுக்க அவர் விடவேயில்லை. அவரே தன் கையிலிருந்து தேநீருக்கான காசைக் கொடுத்தார். ‘பத்திரிகைக்காரங்க யாராக இருந்தாலும் நான்தான்ணே டீக்கு காசு கொடுப்பேன். அதுல எனக்கு ஒரு ஆத்ம திருப்தி’ என்றார் செஞ்சி. அடுத்த நிமிடம் ‘அப்ப வர்றன்ணே... ஒண்ணும் அவசரம் இல்ல... மெதுவா எனக்கு ஏதாவது செஞ்சா போதும். ஆனா, செஞ்சி கிருஷ்ணன் என்ற இந்த சின்ன நடிகனை மறந்துடாதீங்க...’ என்று சொல்லியவாறு என்னிடமிருந்து அவர் விடைபெற்றார். அவர் சைக்கிளில் போவதையே பார்த்தவாறு நான் நின்றிருந்தேன்.

அந்தச் சந்திப்பிற்குப் பிறகு கட்டாயம் மாதம் ஒரு முறையாவது செஞ்சி கிருஷ்ணன் என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார். காலை 7 மணிக்கு நெற்றியில் திருநீர் அணிந்த கோலத்துடன் வந்து நிற்பார். சில நேரங்களில் என்னைத் தூக்கத்தில் இருந்து கூட அவர் எழுப்பியதுண்டு. அவர் எப்போது வந்தாலும் நடப்பது தேநீர் பருகுவதும், பத்து நிமிட நேரம் ஏதாவது பேசிக் கொண்டிருப்பதும்தான். ‘அப்ப நான் வர்றேன்ணே... இன்னைக்கு ஷூட்டிங் எதுவும் இல்ல. அதான் பத்திரிகை நண்பர்களைப் பார்க்கலாம்னு கிளம்பிட்டேன். முதல்ல உங்களைத்தான் பார்க்க வந்தேன். இன்னும் மூணு பேரை பார்க்க திட்டம் போட்டிருக்கேன். பார்த்துட்டு மதியச் சாப்பாட்டுக்கு வீட்டுக்குப் போக சரியா இருக்கும்’ என்று கூறும் செஞ்சி அடுத்த நிமிடமே சிட்டென பறந்து விடுவார்.

ஆரம்பத்தில் சைக்கிளில் வந்த செஞ்சி கிருஷ்ணன் கொஞ்ச நாட்கள் கழித்து டி.வி.எஸ். 50யில் வர ஆரம்பித்தார். அவருக்கு நான் பி.ஆர்.ஓ.வாக வேலை செய்த சில படங்களில் நடிக்க வாய்ப்பு வாங்கிக் கொடுத்தேன். அதற்காக எத்தனையோ முறை எனக்கு நன்றி சொல்லி இருக்கிறார் செஞ்சி. என்னிடம் கூறியதுடன் நிற்காமல், பார்ப்பவர்களிடமெல்லாம் ‘அண்ணன்தான் எனக்கு அந்த சான்ஸை வாங்கிக் கொடுத்தார். வாழ்க்கை முழுவதும் நான் அதை மறக்கவே மாட்டேன்’ என்று மனம் திறந்து செஞ்சி கூறுவார். இதை நானே பலமுறை கேட்டிருக்கிறேன்.

ஆரம்பத்தில் தனியாக என்னைப் பார்க்க வரும் செஞ்சி பின்னர் வேறு யாராவது இரண்டு நடிகர்களை தான் வரும்போது அழைத்துக் கொண்டு வருவார். நான் எந்த முகவரிக்கு மாறியிருந்தாலும், என்னைப் பார்க்காமல் இருக்க மாட்டார். ‘அண்ணே... இவர் திடீர் கன்னையா. அருமையான நடிகர். நிறைய நாடகங்கள்ல நடிச்சிருக்கார். எவ்வளவு பெரிய வசனம் கொடுத்தாலும் ஏ-ஒன்னா பேசி நடிப்பார். எந்தக் கேரக்டரை வேணும்னாலும் நம்பி கொடுக்கலாம். பிரமாதமா பண்ணுவார். இப்போ சில படங்கள்ல நல்ல கேரக்டர்கள் செஞ்சிக்கிட்டு இருக்கார். நீங்களும் உங்க சம்பந்தப்பட்ட படங்கள்ல ஏதாவது நல்ல கதாபாத்திரமா இவருக்கு வாங்கிக் கொடுங்க. இவர் பேரு ஈர்க்குச்சி பாபு. ஆள் ஒல்லியா ஈர்க்குச்சி மாதிரி இருக்குறதுனால இப்படியொரு பேரை வச்சிருக்கார். சொந்தத்துல கடை வச்சிருந்தார். வியாபாரம் சரியா நடக்காம கடையை மூட வேண்டியதாப் போச்சு. என்ன செய்றதுன்னு தெரியாம முழிச்சிக்கிட்டு உட்கார்ந்திருந்தார். ஏற்கெனவே நாடகங்கள்லயும், படங்கள்லயும் நடிச்சிக்கிட்டு இருந்த ஆளுதான். நான்தான் வற்புறுத்தி திரும்பவும் இவரை சினிமா பக்கம் இழுத்துட்டு வந்திருக்கேன். இவருக்கும் நீங்க அவசியம் ஏதாவது செய்யணும்ணே... எனக்குக் கூட மெதுவா செய்யுங்க. இவங்களுக்கு எவ்வளவு சீக்கிரம் சான்ஸ் வாங்கித் தர முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் செஞ்சீங்கன்னா, இவுங்க குடும்பம் நடத்த உதவினது மாதிரி இருக்கும்’ என்பார் செஞ்சி கிருஷ்ணன். உடனே பக்கத்தில் நின்றிருக்கும் திடீர் கன்னையாவும், ஈர்க்குச்சி பாபுவும் மரியாதையுடன் என்னைப் பார்த்து வணங்கி நிற்பார்கள். அவர்கள் இருவரையும் அழைத்துக் கொண்டு எத்தனையோ முறை என்னிடம் வந்திருக்கிறார் செஞ்சி. சொல்லப் போனால்- அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் இல்லாமல் செஞ்சி என்னைப் பார்க்க வந்ததே இல்லை என்பதே உண்மை. சில நேரங்களில் பரஞ்ஜோதி என்ற நடிகரையும் செஞ்சி அழைத்துக் கொண்டு என்னிடம் வந்திருக்கிறார்.


‘நடிப்பு இல்லாமல் வேறு ஏதாவது தொழில் உங்க கைவசம் இருக்கா?’ என்று ஒரு நாள் நான் செஞ்சி கிருஷ்ணனைப் பார்த்து கேட்டேன். அதற்கு அவர் ‘சினிமாவை மட்டும் நம்பி எப்படிண்ணே வாழ முடியும்? நான் அடிப்படையில் ஒரு டெயிலர்ணே. அதனால அமைந்தக் கரையில முரளி கிருஷ்ணா தியேட்டருக்கு எதிரில் சொந்தத்துல ‘சாந்தி டெயிலர்ஸ்’ன்ற பேர்ல ஒரு தையல் கடை வச்சிருக்கேன். சம்பளத்துக்கு ரெண்டு ஆளுங்களைப் போட்டிருக்கேன். நான் படப்பிடிப்பிற்குப் போகும் நேரத்துல அவங்க கடையைப் பார்த்துக்குவாங்க’ என்றார். சொன்னதுடன் நிற்காமல், ஒரு நாள் என்னைத் தன்னுடைய கடைக்கு வரும்படி கூறினார்.

அவர் வரச் சொன்னார் என்பதற்காக ஒருநாள் நான் அவரின் தையல் கடையைத் தேடிச் சென்றேன். நான் அங்கு போனபோது, வேலை செய்யும் ஆட்கள் மட்டும்தான் இருந்தார்கள். சிறிய கடைதான். பெண்களுக்கான துணிகளைத் தைக்கும் கடை என்பதைப் பார்த்தபோதே புரிந்து கொண்டேன். அங்கு வேலை செய்து கொண்டிருந்த நபர் என்னை சிறிது தூரம் அழைத்துக் கொண்டு போனார். இரண்டு நிமிடங்கள் நடந்து செல்லும் தூரத்தில் செஞ்சி கிருஷ்ணனின் வீடு இருந்தது. இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடம். கிட்டத்தட்ட பத்து வீடுகளைக் கட்டி செஞ்சி வாடகைக்கு விட்டிருந்தார். எல்லாமே சின்னச் சின்ன வீடுகள். ஒவ்வொரு மாதமும் நிரந்தரமாக ஒரு நல்ல தொகை வருவது மாதிரியான ஏற்பாடு. நல்ல விஷயம்தான் என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டேன். நான் வீடு தேடி வந்தது குறித்து செஞ்சிக்கு ஏகப்பட்ட மகிழ்ச்சி. தன்னுடைய மனைவிக்கு என்னை அவர் அறிமுகப்படுத்தி வைத்தார். ‘இவர் நடிக்கிற படங்களை எல்லாம் நீங்க பாக்குறீங்களா?’ என்று கேட்டேன் நான். அதற்கு அந்த அம்மா ‘நானும் எத்தனையோ வருடங்களா பார்த்துக்கிட்டுத்தான் இருக்கேன். இவர் எங்கேங்க பெரிய வேஷத்துல வர்றாரு? சின்னச் சின்ன வேஷங்கள்லயே வர்றாரு. நானும் ஏதாவது ஒரு படத்துலயாவது பெரிய வேஷத்துல வரமாட்டாரான்னு பார்க்குறேன். ஆனா, அப்படி ஒரு படம் வரவே மாட்டேங்குது. அப்பத்தான் பார்ப்போம் – அதுக்குள்ள காணாமப் போயிடுவாரு. நூற்றுக் கணக்குல படத்துல நடிச்சிருக்காரு. இருந்தும், என்னங்க பிரயோஜனம்? பக்கத்து வீட்டுக்காரங்கக்கிட்டகூட என் புருஷன் இப்படியொரு பெரிய வேஷத்துல வந்திருக்காருன்னு பெருமையா சொல்லிக்க முடியல. இப்பத்தான் ஒண்ணு ரெண்டு படங்கள்ல ஏதோ கொஞ்சம் பரவாயில்லாத வேஷங்கள்ல வர்றாரு. உங்களைப் பற்றி நிறைய சொல்லி இருக்காரு. நீங்க மனசு வச்சு இவருக்கு ஏதாவது வாங்கித் தரணும்.’ என்றார். ‘கட்டாயமா வாங்கித் தருவேன். இவரே டைரக்டர்களைப் பார்த்து சின்னதா ஏதாவது கொடுத்தா போதும்னுதானே சொல்றாரு? அவங்களைப் பார்த்து பெருசா கேரக்டர் கொடுங்கன்னு இவரே உரிமையுடன் கேட்க வேண்டியதுதானே!’ என்றேன் நான். அதற்கு செஞ்சி ‘பெருசா எதுவும் வேண்டாம்ணே. சின்னச் சின்னதா கடைசில சாகுற வரைக்கும் ஏதாவது கெடைச்சிக்கிட்டுருந்தாலே போதும்ணே’ என்றார்.

‘சரி... அது இருக்கட்டும். சினிமாவுல நடிச்சுக்கிட்டே தையல் கடையையும் நடந்தணும்ன்ற எண்ணம் எப்படி உங்களுக்கு வந்துச்சு?’ என்று நான் கேட்டேன் செஞ்சி கிருஷ்ணனிடம். அதற்கு அவர் ‘பீம்சிங் டைரக்ட் பண்ணின ‘பதிபக்தி’தான் நான் நடிச்ச முதல் படம். சிவாஜி கதாநாயகனாக நடிச்ச படம். 1960ஆம் வருடம் அது திரைக்கு வந்துச்சுன்னு நினைக்கிறேன். அந்தப் படத்தைத் தொடர்ந்து பீம்சிங் டைரக்ட் பண்ண எல்லாப் படங்கள்லயும் நான் இருப்பேன். அப்போ ஒரு நாள் பீம்சிங் என்கிட்ட சொன்னாரு’ சினிமாவை முழுக்க முழுக்க நம்பி இராதே. இது காலம் முழுவதும் ஒரு ஆளை வாழ வைக்கும்னு சொல்ல முடியாது. சில நேரங்கள்ல வாய்ப்பு இருக்கும். சில நேரங்கள்ல வாய்ப்பே கிடைக்காமல் போனாலும் போகும். அந்த மாதிரி நேரங்கள்ல நமக்குன்னு மாற்று ஏற்பாடு ஏதாவது இல்லாம இருந்துச்சுன்னா, என்ன பண்றதுன்னு தெரியாம கலங்கிப் போய் நின்னுடுவோம். அதுனால படங்கள்ல நடிக்க வாய்ப்பு கிடைக்குதோ இல்லியோ, உனக்குன்னு சொந்தத்துல ஒரு தொழில் வச்சுக்கோ. அது பாட்டுக்கு ஒரு ஓரத்துல நடந்துக்கிட்டு இருக்கட்டும். எப்பவுமே நமக்கு படங்கள்ல வாய்ப்பு கிடைச்சிக்கிட்டே இருக்கும்னு சொல்ல முடியாது. ஒரு வேளை வாய்ப்பே இல்லாம ஒரு நாள் ஆயிடுதுன்னு வச்சுக்கோ, அப்ப நம்ம கையில ஒரு தொழில் இருந்தா, நாம எதைப் பற்றியும் கவலைப் படணும்னு அவசியமே இல்ல. எந்தவித பிரச்னையும் இல்லாம குடும்பம் நடந்துக்கிட்டு இருக்கும். நான் சொன்னதை மனசுல வச்சுக்கிட்டு வாழ்க்கையில ரொம்பவும் கவனமா நடந்துக்கோ’ன்னு. அவர் அப்போ சொன்னதை நான் வேத வாக்கா எடுத்துக்கிட்டேன். யோசிச்சுப் பார்த்தப்போ நூற்றுக்கு நூறு அவர் சொல்றது சரின்னு பட்டது. அப்பத்தான் இந்த தையல் கடையை வைக்க ஆரம்பிச்சேன். நமக்கு படத்துல நடிக்கிறதுல ஒரு நாளு பணம் வரலாம். ஒரு நாளு வராமப் போகலாம். இந்தக் கடை இருக்குறதுனால எதைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்ல. சொல்லப் போனா- வீட்டுச் செலவுக்கு தினமும் இந்தத் தையல் கடையில இருந்துதான் காசு வருது. பல வருடங்களுக்கு முன்னாடியே பீம்சிங் எவ்வளவு புத்திசாலித்தனமான ஒரு ஐடியாவை எனக்கு சொல்லித் தந்திருக்காருன்றதை இப்போ யோசிச்சுப் பார்க்குறேன்’ என்று சொன்னார். பீம்சிங் மீது அவர் கொண்டிருந்த பக்தியை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

அதற்குப் பிறகும் கூட செஞ்சி வழக்கம்போல வந்து என்னைப் பார்த்துக் கொண்டுதான் இருந்தார். ஒருநாள் எதேச்சையாக ‘தினத்தந்தி’ நாளிதழைப் புரட்டினேன். அதில் இடம் பெற்றிருந்த ஒரு செய்தி என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ஹார்ட் அட்டாக்கில் வெளியூருக்குப் படப்பிடிப்பிற்காகச் சென்றிருந்த செஞ்சி கிருஷ்ணன் அங்கேயே மரணத்தைத் தழுவிய செய்தியே அது.

செஞ்சி கிருஷ்ணன் மரணமடைந்து எத்தனையோ வருடங்கள் கடந்தோடி விட்டன. இருப்பினும், என் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத ஒரு மனிதராகி விட்டார் அவர் என்பதே உண்மை.


குலுங்கி குலுங்கி சிரிக்க வைத்தவர், இறுதியில் நம்மை அழ வைத்தார் !

சுரா

தி.நகர் பஸ் நிலையத்திற்கு அருகில் சுதாரா ஹோட்டலை ஒட்டி இருக்கும் மகாலட்சுமி தெரு. அங்குள்ள ஒரு வீட்டின் கார் ஷெட். தகரத்தால் ஆனது. அங்கு இருந்தவை ஒரு பெஞ்ச்... பழைய ஒரு சூட்கேஸ்.... சில துணிமணிகள்... அவ்வளவுதான். அங்குதான் நான் 25 வருடங்களுக்கு முன்பு கதாசிரியர் உசிலை சோமநாதனைப் பார்த்தேன்.

அவருக்கு அப்போது வயது அறுபது இருக்கும். குள்ளமான உருவம். முதுமை தெரியும் உடம்பு. வழுக்கைத் தலை. அவற்றில் ஆங்காங்கே கொஞ்சம் முடிகள். சின்ன தலை. மீசை இல்லாத முகம். கண்களில் கண்ணாடி. மேற்சட்டை அணியாமல் பழைய ஒரு கைலியைக் கட்டிய கோலத்தில் என்னை வரவேற்றார் உசிலை. ‘வாங்க சுரா... உங்களுக்காகத்தான் நான் காத்திருக்கேன்’ என்றார். ‘உங்களைப் பற்றி நான் நிறைய கேள்விப்பட்டிருக்கேன். ஆனா, பார்த்தது இல்ல... சினிமாவுல சீனியரா இருக்குறவங்க பலரும் உங்களைப் பற்றி என்கிட்ட ஏராளமா சொல்லி இருக்காங்க. இராம.நாராயணன் டைரக்ட் செஞ்ச ‘மன்மத ராஜாக்கள்’ படத்தைப் பார்த்தேன். படம் கலகலப்பா போச்சு. அப்போ என் பக்கத்துல உட்கார்ந்திருந்த சினிமா நண்பர் ஒருவர் சொன்னாரு ‘இந்தப் படம் பல வருஷங்களுக்கு முன்னாடி வந்த ‘சாது மிரண்டால்’ படத்தோட கார்பன் காப்பி. காட்சிக்குக் காட்சி இராம.நாராயணன் அப்படியே திருடியிருக்கார். அது உசிலை சோமநாதன் எழுதின கதை’ன்னார். அப்பவே உங்க மேல எனக்கு பெரிய மரியாதை உண்டாயிடுச்சு. கருப்பு – வெள்ளை படங்கள் எடுக்கப்படுற காலத்துல இப்படியொரு கற்பனையா என்று ஆச்சரியப்பட்டேன். நானே உங்களைப் பார்க்கணும்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். இப்போ இயற்கையே அப்படியொரு வாய்ப்பை உண்டாக்கிக் கொடுத்திருக்கு’ என்றேன் நான் உசிலை சோமநாதனைப் பார்த்து.

அப்போது அவர் ஒரு புராணப் படத்தை இயக்கும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அந்தப் படத்தின் பெயர் எனக்கு இப்போது ஞாபகத்தில் இல்லை. பாக்யராஜை வைத்து ‘பாமா ருக்மணி’ என்ற படத்தைத் தயாரித்த சுந்தர்ராஜன் என்பவர்தான் அப்படத்தின் தயாரிப்பாளர். குன்னக்குடி வைத்தியநாதனை இசையமைப்பாளராக ஒப்பந்தம் செய்திருந்தார்கள். அந்தப் படத்திற்கு பி.ஆர்.ஓ.வாக வேலை செய்ய வேண்டும் என்பதற்காகத்தான் என்னை உசிலை சோமநாதன் வரச் செய்திருந்தார். அதற்கு முன்பு அவரை நான் பார்த்ததில்லை. என்னையும் அவர் பார்த்ததில்லை. யாரோ என் பெயரை அவரிடம் கூறியிருக்கிறார்கள். அதை வைத்து என்னைத் தன்னுடைய படத்திற்கு மக்கள் தொடர்பாளராகப் போடலாம் என்ற முடிவுக்கு அவர் வந்திருக்கிறார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த உசிலை சோமநாதன் எத்தனையோ வருடங்களுக்கு முன்பே படவுலகைத் தேடி வந்து விட்டார். பல்வகை துறைகளிலும் கால் வைத்த மனிதர் என்பது அவரின் பேச்சிலேயே தெரிந்தது.

‘நான் ஆரம்ப காலத்துல இருந்தே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தவன்க. ஊர் ஊரா போயி நாடகங்கள் போட்டிருக்கோம். கட்சிக்காக தமிழ்நாடு முழுவதும் போயி பிரச்சாரம் பண்ணியிருக்கோம். நான் எழுதின நாடகங்களுக்கு பாவலர் வரதராஜன் இசையமைச்சிருக்காரு. அப்பவே இளையராஜா, ஆர்.டி. பாஸ்கர், கங்கை அமரன் எல்லாரையும் எனக்கு நல்லாவே தெரியும். அவுங்களும் என் மேல ரொம்பவும் பிரியமா இருப்பாங்க. எல்லாரும் ஒரே ஏரியாக்காரங்கதானே? கம்யூனிஸ்ட் கட்சியோட கொள்கைகளைப் பரப்புவதுக்காக கல்கத்தா வரை போயிருக்கேங்க. எனக்குத் தெரியாத தோழர்களே கம்யூனிஸ்ட் கட்சியில இல்லைன்னு வச்சுக்கங்களேன். தோப்பில் பாஸி எனக்கு நல்லா தெரிஞ்சவரு. சினிமா உலகத்துல பல உருப்படியான காரியங்களைச் செய்யலாம்னுதான் உசிலம்பட்டியை விட்டு சென்னைக்கே புறப்பட்டு வந்தேன். பி.எஸ். வீரப்பா சொந்தத்துல தயாரிச்ச பல படங்களுக்கு நான் கதை – வசனம் எழுதினேன் – சோப்பு சீப்பு கண்ணாடி, பொண்ணு மாப்ளே ஆகிய படங்கள் ரொம்ப நல்ல ஓடுச்சி. ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்துக்குக் கதை வசனம் எழுதினேன். 1967ஆம் வருஷம் படம் ரிலீஸாச்சு. படம் பிரமாதமா ஓடுச்சு. இப்படிக் கூட ஒரு நகைச்சுவைப் படம் எடுக்கலாம்னு படவுலகத்திற்கு நான் காட்டினேன். இன்னைக்கு வரைக்கும் அந்த மாதிரி ஒரு காமெடி படம் வந்திருக்குமான்னு சந்தேகம்தான். என்னென்னமோ பண்ணணும்னு நான் நினைச்சேங்க. ஆனா, ஓரளவுக்குத்தான் இங்க மனசுல நினைச்சதைச் செய்ய முடிஞ்சது. இதுவரை செய்ததுல எனக்கு திருப்தி இல்ல. எல்லாருக்கும் தெரியிற மாதிரி பேரு வாங்கியாச்சு. ஆனா, பணம் சம்பாதிக்கல. இந்த உலகத்துல பணம் சம்பாதிச்சாத்தாங்க எல்லாரும் மதிக்கிறாங்க. வெறும் திறமைக்கு இங்க என்னங்க மரியாதை இருக்கு? பணம் இருந்தால், அவன் வேற எந்தத் தகுதியுமே இல்லாதவனா இருந்தாக் கூட இந்த உலகம் கை கட்டி நிக்குது. அதுனால பணத்தை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சம்பாதிக்கணும்ன்ற முடிவுக்கு நான் வந்திருக்கேன். வீட்ல இருக்குறவங்கள பிரிஞ்சு வந்து எத்தனையோ வருஷங்களாச்சு. மனைவி, குழந்தைங்க யாருக்கும் முறைப்படி என்னோட கடமைகளைச் செய்யல. பணம் சம்பாதிக்கணும்ன்றதுக்காகத்தான் இந்தப் படத்தையே நான் டைரக்ட் பண்றேன். தொடர்ந்து அடுத்தடுத்து படங்களைப் பண்ணுவேன். பணம் சம்பாதிப்பேன். நீங்க பக்கத்துலேயே இருந்து பார்க்கத்தானே போறீங்க- நான் சொன்னது மாதிரி நடக்குதா இல்லையான்னு’ என்றார் உசிலை சோமநாதன் தன்னுடைய மனதில் இருக்கும் எண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில். எப்போதும் அவர் சிரித்த முகத்துடன் பேசுவார். அனேகமாக செயற்கை பல் செட் கட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். பற்கள் பேசும்போது வரிசையாக தெரியும்.

எங்களின் முதல் சந்திப்பிற்கு ஒரு வாரம் கழித்து சம்பந்தப்பட்ட படத்தின் பூஜை நடைபெற்றது. தொடர்ந்து படப்பிடிப்பும். அருணாசலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பு நடக்க எஸ்.எஸ். சந்திரனும் கோவை சரளாவும் முதல் நாள் நடித்தார்கள். காமெடி காட்சி. படப்பிடிப்பு பார்த்துக் கொண்டிருக்கும்போதே உசிலை சோமநாதனின் வசனத்தைக் கேட்டு நமக்கு சிரிப்பு வந்தது. அந்தக் காலத்தில் ‘மெட்ராஸ் டூ பாண்டிச்சேரி’ படத்தில் எந்த அளவிற்கு உசிலை சோமநாதன் முத்திரை பதித்திருப்பார் என்பதைப் பார்த்தபோதே என்னால் உணர்ந்து கொள்ள முடிந்தது.

ஒரு வார காலம் அந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றது. தினமும் நான் படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குச் செல்வேன். எப்போது பார்த்தாலும் ஏதாவது சாப்பிடச் சொல்லி வற்புறுத்தி தன்னுடைய அன்புப் பிடியில் நம்மைத் திக்குமுக்காட வைப்பார் உசிலை.


அந்தப் படத்திற்கு என்று அலுவலகம் எதுவும் போடவில்லை. தி.நகர் சுதாரா ஹோட்டலில் ஒரு அறை அதற்கென்று போடப்பட்டிருந்தது. அங்கேயே உசிலை சோமநாதன் இரவில் தங்கிக் கொள்வார். ஒரு வாரம் நடைபெற்ற படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட ஸ்டில்களை ஒரு ஆல்பமாக ஒட்டி அங்கு வைத்திருந்தனர். மீதி படப்பிடிப்பு நடத்துவதற்கான பணத்திற்காக தயாரிப்பாளர் சுந்தர்ராஜன் பல இடங்களிலும் அலைந்து கொண்டிருந்தார். உசிலை சோமநாதனும் அதற்கான முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். நேரம் கிடைக்கும்போது உசிலை சோமநாதனைப் பார்த்து விட்டு வரலாமே என்று நான் சுதாரா ஹோட்டலைத் தேடி போவேன்.

எவ்வளவு பிரச்னைகள் இருந்தாலும், எல்லாவற்றையும் கட்டி ஒரு மூலையில் போட்டு விட்டு கலகலவென்று என்னுடன் உசிலை சோமநாதன் பேசிக் கொண்டிருப்பார். கம்யூனிஸ்ட் கட்சியில் தான் செயல்பட்டதை என்னிடம் அவர் விளக்கி கூறுவார். தொடர்ந்து அவர் பல விஷயங்களைப் பற்றியும் பேசிக் கொண்டிருப்பார்.

வாரம் ஒரு முறையாவது கட்டாயம் நான் உசிலை சோமநாதனைப் போய்ப் பார்ப்பேன். அவரிடம் பேசிக் கொண்டிருப்பதில் எனக்கென்னவோ ஒரு திருப்தி. இப்படி பல முறை அங்கு நான் போயிருக்கிறேன். எப்போது போனாலும் சிற்றுண்டியோ சாப்பாடோ வாங்கிக் கொடுக்காமல் அவர் என்னை விட மாட்டார்.

இப்படி ஒரு நாள் போனபோது மிகவும் அமைதியாக உசிலை சோமநாதன் உட்கார்ந்திருந்தார். என்னைப் பார்த்ததும் அவர் ‘நகரம் ரொம்பவும் கெட்டுப் போச்சுங்க. இங்கே எல்லாமே பாருங்க... சுயநலத்தை அடிப்படையா வச்சுத்தாங்க இருக்கு. கிராமங்கள்லதாங்க உண்மையான அன்பு, பாசம், மனிதாபிமானம் எல்லாம் இருக்கு. நகரத்துல சொல்லப் போனா சுத்தமான காற்று கூட இல்ல. எல்லாமே கெட்டுப் போச்சு. தண்ணி, காற்று இதுல எதுவாவது சுத்தமா இருக்கான்னு பாருங்க. நல்ல காற்று, சுத்தமான தண்ணீர், உண்மையான அன்பு எல்லாமே கிராமத்துலதாங்க இருக்கு. நானெல்லாம் கிராமத்தை விட்டு வந்து ரொம்ப வருஷங்களாச்சு. எவ்வளவு சீக்கிரம் நகரத்துல பணத்தைச் சம்பாதிக்கணுமோ, அவ்வளவு சீக்கிரம் பணத்தைச் சம்பாதிச்சிட்டு, ஊர்ல போயி செட்டிலாயிடணுங்க. கடைசி காலத்துல நம்ம உயிரு சொந்த ஊர்லதாங்க போகணும். இந்த போலி மனிதர்கள்கிட்ட இருந்து விலகி எவ்வளவு விரைவா உண்மை ஜனங்கள்கிட்ட போய்ச் சேரணுமோ, அவ்வளவு சீக்கிரமா போய்ச் சேரணுங்க...’ என்றார் கட்டிலில் அமர்ந்தவாறு. அவர் கூற்றில் உண்மை இருப்பதாகவே எனக்கும் பட்டது. ‘நீங்க சொல்றது சரிதான். உண்மையான மனிதாபிமானத்தையும், அன்பையும், பாசத்தையும் நகரத்து மக்கள்கிட்ட பார்க்க முடியவில்லைதான். ஒரு வகையில இதை நினைச்சுப் பாக்குறப்போ மனசுக்கு சங்கடமாத்தான் இருக்கு. ஏன் இந்த நகரத்து மனிதர்கள் இப்படி இருக்காங்களோ தெரியல...’ என்றேன் நான்.

உசிலை சோமநாதனின் படம் அதற்குப் பிறகு வளர்வதாகத் தெரியவில்லை. எப்போது போனாலும் வெறுமனே உசிலையுடன் பேசிக் கொண்டிருப்பேன். ‘சீக்கிரம் ஃபைனான்ஸ் ரெடியாயிடும். நான்கைந்து இடங்கள்ல பேசியிருக்கு. பணம்  கைக்கு வந்தவுடன், படத்தை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். இன்னொரு பிரமாதமான கதை என்கிட்ட இருக்கு. இந்தப் படம் முடிவடைஞ்சவுடனே, அதை ஒரே ஷெட்யூல்ல முடிச்சிடணும்னு நினைச்சிருக்கேங்க’ என்பார் உசிலை சோமநாதன். அவரின் மன ஆர்வத்தை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், எதிர்பார்த்த இடங்களில் இருந்து பணம் கிடைத்தால்தானே, படம் வளர முடியும்?

அதற்குப் பிறகு நான் சில பட வேலைகளில் மிகவும் பிஸியாகி விட்டதால் தி.நகர் பக்கமே என்னால போக முடியவில்லை. ஐந்து மாதங்கள் படு வேகமாகக் கடந்தோடி விட்டன. ஒரு நாள் என்னைப் பார்க்க நடிகர் ஒருவர் வந்தார். அவர் உசிலை சோமநாதனுக்கும் நன்கு தெரிந்தவர். அவரைப் பார்த்து ‘உசிலை சோமநாதன் எப்படி இருக்கார்? அவரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு’ என்றேன் நான். அதற்கு அவர் ‘உங்களுக்கு விஷயமே தெரியாதா? அவர் இறந்து மூணு மாசமாச்சு. ஹார்ட் அட்டாக்’ என்றார். நான் ஒரு நிமிடம் ஆடிப் போனேன். நான் உயிருக்குயிராக நேசித்த – பெரிதும் மதித்த உசிலை சோமநாதன் இறந்து விட்டாரா? என்னால் நம்பவே முடியவில்லை.

மனைவி, குழந்தைகளை உசிலம்பட்டியில் பல வருடங்களுக்கு முன்பே விட்டுவிட்டு கலைத் துறையைத் தேடி சென்னைக்கு வந்து, இங்கும் பெரிதாக ஒன்றும் சாதிக்காமல் திடீரென்று ஒருநாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து போன உசிலை சோமநாதனை நினைத்துப் பார்த்தபோது, மனதிற்கு மிகவும் வேதனையாக இருந்தது. அவர் அடிக்கடி ‘நகரம் ரொம்பவும் கெட்டுப் போச்சுங்க. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரம் சொந்த ஊருக்குப் போயி செட்டிலாகணுங்க’ என்று கூறுவார். அவரின் விருப்பப்படியே சீக்கிரமாகவே கிராமத்தைத் தேடி அவர் போய் சேர்ந்தார்- உயிரற்ற உடலுடன்.

 

 

தொடரும்...

Page Divider

 

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.