Logo

நிர்வாண நிஜம்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 8620

nirvana-nijam

சுராவின் முன்னுரை

திரையுலகம் பலருக்கும் கனவுலகம். நுழைய முடியாத வாயில். எட்டிப்பிடிக்க முடியாத கனி. ஆசைப்படும் எல்லோருமே இதற்குள் நுழைந்துவிட முடியாது. நூறு பேர் முயற்சி செய்தால் ஒருவர்தான் இதற்குள் நுழைய முடியும். அவருக்கு மட்டுமே வாய்ப்பு. எஞ்சிய நபர்கள் வெறுமனே படவுலகை ஏக்கத்துடன் அண்ணாந்து பார்த்துக் கொண்டிருக்க வேண்டியதுதான்.

வேறு வழி? அதற்காக தங்களின் ஆசையை அடியோடு அறுத்தெறிந்துவிட்டு அவர்கள் ஓடிவிடுவார்களா என்ன? அதுதான் இல்லை. மீண்டும் என்றாவதொரு நாள் படவுலகிற்குள் நுழைந்துவிட முடியாதா என்று தங்கள் வாழ்க்கையின் மகிழ்ச்சியான நிமிடங்கள் பலவற்றையும் தியாகம் செய்து சென்னைத் தெருக்களில், கோடம்பாக்கம் வீதிகளில் தங்களின் கனவுகளை மனம் முழுக்க தேக்கி வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பார்கள். சிலருக்கு அப்போது படவுலக கோட்டைக் கதவு திறந்து வழிவிடுவதும் உண்டு. கதவு மீண்டும் அடைக்கப்பட்டு வெளியே ஒரு கூட்டமே நின்று கொண்டிருக்கும். அப்போதும் அவர்களின் முயற்சி முற்றுப்புள்ளிக்கு வராது. பயணம் நிற்காது. ஆசை அடங்காது. கனவுகள் கலையாது. அவர்களின் ஆசைக் கனவுகள் மீண்டும் கோடம்பாக்கம் வீதிகளில் நித்தமும்... இதற்காகத்தான் திரையுலகிற்கு கனவுலகம் என்று பெயர் வந்திருக்குமோ?

வாய்ப்பு கிடைக்காதவர்களின் நிலை இதுவென்றால், வாய்ப்பு பெற்றவர்களின் நிலை? இங்கு நுழைந்த எல்லோருமே பீம்சிங்காகவும், ஸ்ரீதராகவும், கே.எஸ்.கோபாலகிருஷ்ணனாகவும், கே.பாலசந்தராகவும், பாரதிராஜாவாகவும், மகேந்திரனாகவும், பாலுமகேந்திராவாகவும், மணிரத்னமாகவும், ஷங்கராகவும், பாலாவாகவும், சேரனாகவும், அமீராகவும், எம்.எஸ்.விஸ்வநாதனாகவும், இளையராஜாவாகவும், ஏ.ஆர்.ரஹ்மானாகவும் வந்துவிட முடிகிறதா என்ன?

சிலர் தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற்று தங்களின் கலைப் பயணத்தைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார்கள். சிலர் சில வெற்றிகளைக் கொடுத்து விட்டு, அதற்குப் பிறகு படவுலகை விட்டு காணாமலே போய்விடுகிறார்கள். வேறு சிலரோ படவுலகிற்குள் நுழைந்து தோல்விகளைத் தந்து துவண்டு போய், உயிரிருந்தும் பிணமென அவல வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

அத்தகைய பல மனிதர்களின் கதைதான் ‘நிர்வாண நிஜம்’ (Nirvana Nijam).

 இந்தத் தொடரில் இடம் பெற்றிருக்கும் எல்லோரும் என் கலைப் பயணத்தில் நான் சந்தித்த மனிதர்கள். எனக்கு நெருக்கமாகப் பழக்கமானவர்கள். பலர் என் நெருங்கிய நண்பர்கள். இந்தத் தொடரில் வரும் பலர் பல வெற்றிகளைத் தந்தவர்கள். சாதனைகள் பல புரிந்தவர்கள். இருப்பினும், பல்வேறு காரணங்களால் படவுலகம் ஒரு நாள் அவர்களில் சிலரின் பழைய சாதனைகளை மறந்து, அவர்களை வெளியே விட்டெறிந்திருக்கிறது. வேறு சிலரோ தோல்விகளைத் தந்து காணாமலே போயிருக்கின்றனர். இன்னும் சிலர் விட்ட கோட்டையைப் பிடிக்கும் முயற்சியில் தளர்ந்து போன கால்களுடனும், சுருக்கங்கள் விழுந்த முகத்துடனும், நரை விழுந்த தலை முடியுடனும் நம்பிக்கை என்ற வாளையும், முயற்சி என்ற கேடயத்தையும் கையில் தாங்கிக் கொண்டு எனக்கு எதிரில் நடந்து வந்து கொண்டிருப்பதை நாளும் பார்க்கிறேன்.

இப்போதைய தலைமுறைக்கும், இனி வரும் தலைமுறைக்கும் இந்த மனிதர்கள் பாடமாக இருக்கட்டும், வேதமாக விளங்கட்டும். நடந்து செல்லும் பாதை இருட்டாக இருக்கிறது என்று சொல்வதல்ல என் எண்ணம். மாறாக, இருண்டு கிடக்கும் பாதையில் இந்த கட்டுரைகள் மூலம், இதில் இடம் பெற்றிருக்கும் மனிதர்களின் வாழ்க்கைகளின் மூலம் ஒரு அகல் விளக்களவு ஒளியாவது அவர்களுக்குக் கிடைக்கட்டும் என்ற நம்பிக்கையுடன் நான் செய்யும் செயல் இது.

நான் நேசிக்கும் கலைத் துறைக்குள் சாதனைகள் பல படைக்கும் திறமை கொண்டவர்கள் பலரும் வரவேண்டும், முத்திரைகள் பல பதிக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. அதற்கு சிறிதளவிலாவது இந்த நூல் பயன்பட்டால், மனப்பூர்வமாக நான் மகிழ்ச்சி அடைவேன்.

இந்த நல்ல நூலை இணைய தளத்தில் வெளியிடும் லேகாபுக்ஸ்.காம் (lekhabooks.com) நிறுவனத்திற்கு என் இதயத்தின் அடித்தளத்திலிருந்து நன்றி.

அன்புடன், 

சுரா (Sura)


இளையராஜா வரவில்லை - இறுதி மூச்சு நின்றுவிட்டது!

சுரா

ண்ணூர் ராஜன் - இவர் ஒரு திரைப்பட இசையமைப்பாளர். மலையாளத்தில் நிறைய திரைப் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். நீண்ட காலமாக மலையாளப் படங்களுக்கு இசையமைத்து வரும் இவரை நான் 1991-ஆம் ஆண்டில் பார்த்தேன்.

மலையாள படங்களுக்கு இசையமைத்தாலும், இவரின் வீடு இருந்தது சென்னை சாலிக்கிராமம் பகுதியில்தான். எனக்கு மலையாள திரைப்படப்பாடல்களின்மீது எனக்கு இருந்த அளவற்ற ஈடுபாட்டின் காரணமாக எங்களுக்கு இடையே நெருங்கிய நட்பு உண்டானது.

ஒரு நாள் என்னை தன்னுடைய அலுவலகத்துக்கு அழைத்தார் கண்ணூர்ராஜன். மூன்று நான்கு இளைஞர்கள் ஒன்று சேர்ந்து தமிழில் ஒரு படத்தைத் தயாரிக்கத் திட்டமிட்டிருப்பதாகவும், அதை தானே இசையமைத்து, இயக்கப் போவதாகவும் அவர் சொன்னார். 'நல்ல விஷயம்தான்' என்று நான் பாராட்டினேன். புதிய கதாநாயகன் ஒருவரை தான் அறிமுகப்படுத்தப் போவதாகவும், கதாநாயகியாக தன்னுடைய மகள் சோஹினியைப் போட இருப்பதாகவும் சொன்னார். இன்னும் பத்து நாட்களில் தொடக்கவிழா நடக்க இருப்பதாகவும், இளையராஜாவை விழாவிற்கு அழைத்திருப்பதாகவும் சொன்னார். பூஜையில் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி வைக்க இளையராஜா சம்மதித்திருப்பதாக கண்ணூர்ராஜன் கூறினார்.

''இளையராஜா ரொம்பவும் பிஸியான இசையமைப்பாளராயிற்றே! அவர் சாதாரணமாக வெளி கம்பெனிகளின் பூஜைக்கு வருவதே இல்லையே! தான் உண்டு, தன் தொழில் உண்டு என்று இருக்கக் கூடிய மனிதராயிற்றே அவர்! எப்படி அவர் உங்கள் படத்தின் பூஜைக்கு வருவதற்கு சம்மதித்தார்?'' என்று நான் கண்ணூர்ராஜனைப் பார்த்துக் கேட்டேன். அதற்கு அவர் ''இளையராஜாவை எனக்கு இன்று நேற்றல்ல, நீண்ட காலமாகவே தெரியும். 'நான் டைரக்ட் பண்றதா இருக்கற படத்தைப் பற்றி ராஜாக்கிட்ட சொன்னேன். “ராஜா, நீங்க பெரிய இசை மேதை. நீங்க வந்து என் படத்தை ஆரம்பிச்சு வைக்கணும்ன்றது என்னோட விருப்பம். ராசியான கைக்குச் சொந்தக்காரர் நீங்க. அந்த ராசி எனக்கும் கொஞ்சம் கிடைக்கட்டும்'னு ராஜாகிட்ட சொன்னேன். கட்டாயம் வர்றேன்னு சந்தோஷமா சொல்லி அனுப்பினார் ராஜா” என்றார் கண்ணூர்ராஜன்.

தொடர்ந்து, தனக்கு அருகில் இருந்த ப்ரீப்கேஸை திறந்து ஒரு புகைப்படத்தை எடுத்து என்னிடம் தந்தார். அதில் வேஷ்டி, ஜிப்பாவுடன் இளையராஜா நின்றிக்க, அவரின் தோள்மீது பந்தாவாக தன் கையை போட்டபடி நின்றிருந்தார் கண்ணூர் ராஜன். பல வருடங்களுக்கு முன்பு எடுத்த படம் அது என்பது படத்தில் இருந்த இளையராஜாவைப் பார்த்தபோதே தெரிந்தது. மலையாள பாடல் பதிவின்போது அந்தப் புகைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. எனக்குத் தெரிந்து இளையராஜாவின் தோள்மீது இவ்வளவு சுதந்திரமாக கையைப் போட்டு படமெடுத்தவர் கண்ணூர் ராஜன் ஒருவர் மட்டுமே இருக்க முடியும். அதைப் பார்த்து நான் மிகவும் ஆச்சரியப்பட்டேன்.

மறுநாள் என்னுடைய அலுவலகத்திற்கு வந்து தன்னுடைய நீல நிற மாருதி காரில் என்னை தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றார் கண்ணூர் ராஜன். தன் மனைவியையும், இரண்டு மகன்களையும், படத்தில் நடிப்பதாக இருந்த மகள் சோஹினியையும் எனக்கு அறிமுகப்படுத்தி வைத்தார். அவரின் மகள் சோஹினியின் சிரிப்பைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம். 'கிழக்கே போகும் ரயில்' படத்தில் அறிமுகமான காலகட்டத்தில் இருந்த ராதிகாவின் சிரிப்பை அந்தப் பெண்ணின் சிரிப்பு எனக்கு ஞாபகப்படுத்தியது. வெள்ளைச் சிரிப்பு என்று சொல்வார்களே, அது அந்தப் பெண்ணின் சிரிப்பாகத்தான் இருக்க முடியும்! தன்னுடைய இரண்டு மகன்களையும் இசைக் கருவிகளை இசைப்பதில் பழக்கிவிட்டிருந்தார் கண்ணூர் ராஜன். மூத்த மகன் கிடார் வாசிப்பதைக் கேட்டேன். அவரின் இளைய மகன் (வயது அவனுக்கு அப்போது பத்து அல்லது பன்னிரண்டுதான் இருக்கும்) பிரமாதமாக தபேலாவும், மிருதங்கமும் இசைப்பதைப் பார்த்தபோது, அந்தப் பையனை அப்படியே செல்லமாக வாரி எடுத்து கொஞ்ச வேண்டும் போல் எனக்கு இருந்தது. கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் நான் கண்ணூர் ராஜனின் வீட்டில் இருந்தேன். நல்ல ஒரு மகிழ்ச்சி நிலவும் குடும்பத்தைச் சந்தித்த மன நிறைவு எனக்கு அப்போது உண்டானது.

இளையராஜாவுடன் தான் நின்றுகொண்டிருக்கும் புகைப் படத்தைப் போட்டு படத்திற்கான பூஜை அழைப்பிதழை அச்சிட்டிருந்தார் கண்ணூர் ராஜன். என்னிடம் சில புகைப்படங்களை அவர் தர... நான் அவற்றைச் சில பத்திரிகைகளில் பிரசுரிக்கச் செய்தேன். இளையராஜாவுக்கும் அவருக்கும் இடையே இருக்கும் நட்பை பத்திரிகைகளில் நான் சொல்லியிருந்தேன். படவுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கும், பத்திரிகை நண்பர்களுக்கும் கண்ணூர் ராஜன் அச்சடித்த பூஜை அழைப்பிதழ் கொடுக்கப்பட்டது.

படத்தின் தொடக்க விழா நாள் வந்தது. அன்றைய தினம் காலையில் வெளிவந்த, 'தினத்தந்தி' நாளிதழில் இளையராஜாவுடன் தான் இருக்கும் புகைப்படத்தைப் போட்டு விளம்பரம் கொடுத்திருந்தார் கண்ணூர் ராஜன். இளையராஜாவை வரவேற்று வாசலில் துணி பேனர் கட்டியிருந்தார்கள். பூஜை தொடங்குவதற்கான நேரம் வந்தது. இளையராஜாவை எதிர்பார்த்து எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்குச் சொந்தமான கோதண்டபாணி ரெக்கார்டிங் தியேட்டரில் ஒரு பெரிய கூட்டமே காத்திருந்தது. நேரம் ஓடிக் கொண்டேயிருந்தது. ஆனால், இளையராஜாவைத்தான் காணவே காணோம்! இளையராஜா பிரசாத் ஸ்டுடியோவில் இருப்பதாக யாரோ சொன்னார்கள். அடுத்த நிமிடம் காரை எடுத்துக் கொண்டு வேகமாக கண்ணூர் ராஜன், பிரசாத் ஸ்டூடியோவை நோக்கிப் போனார். இருபது நிமிடங்கள் ஆகியிருக்கும். அவர் திரும்பி வந்தார்- தொங்கிய முகத்துடன்! இளையராஜா பூஜைக்கு வர முடியாது என்று கூறிவிட்டாராம். கடுப்பாகிப்போன கண்ணூர் ராஜன், பூஜையை ஆரம்பிக்கும்படி சொன்னார். இளையராஜாவை வரவேற்று கட்டியிருந்த துணியை உடனடியாக அவிழ்க்குமாறு கூறினார். இளையராஜா இல்லாமலே பூஜை நடந்தது.

பாடல் பதிவு நடந்தது. ஆனால் படம் அத்துடன் நின்று போனது. படம் மட்டுமா நின்றுபோனது? இந்தச் சம்பவம் நடந்த சில நாட்களில் கண்ணூர் ராஜனின் இதயத்துடிப்பே நின்று போனது.

புகழ் பெற்ற ஒரு கலைஞனின் வாழ்க்கை முடிந்து போனதற்கு என்ன காரணம் என்று தெரிந்தால் நொந்து போவீர்கள். அதுதான் சினிமா!

கண்ணூர் ராஜன் சிறந்த இசையமைப்பாளர். மலையாளத்தில் மறக்க முடியாத பல படங்களுக்கு இசையமைத்தவர். அவற்றில் மோகன்லாலும், ரேவதியும் நடித்து, ப்ரியதர்ஷன் இயக்கிய 'சித்ரம்' மிகப் பெரிய வெற்றிப் படம், வெள்ளிவிழாவையும் தாண்டி ஓடி வரலாறு படைத்த அந்தப் படத்தில் இசையமைத்ததற்காக கண்ணூர் ராஜனுக்கு விருது கிடைத்தது. தனது இசையில் தமிழ் இசையமைப்பாளர் ஒருவரைப் பாட வைக்க நினைத்தார் கண்ணூர்ராஜன். அந்த இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா. ராஜன் தனது விருப்பத்தைத் தெரிவித்ததும் மகிழ்ச்சியோடு ஒப்புக் கொண்ட ராஜா, 'உங்கள் இசையில் நான் பாடுவது என் பாக்யம்' என்று நெகிழ்ந்து சொன்னார்.


கடுமையான பணிகளுக்கு நடுவிலும் கண்ணூர் ராஜன் இசையில் பாடினார் இளையராஜா. அந்த அளவுக்கு கண்ணூர்ராஜன் மீது இளையராஜாவுக்கு மரியாதை! இளையராஜாவை ‘ராஜா’ என்று ஒருமையில் கூப்பிடுகிற அளவுக்கு ராஜனும் நட்பு பாராட்டினார், அந்த உரிமையில்தான், தான் தமிழில் இயக்க முடிவு செய்திருந்த படத்தின் பூஜை தொடர்பான விளம்பரத்தில் இளையராஜாவின் தோள்மீது தான் கைபோட்டபடி நிற்கிற படத்தை கண்ணூர்ராஜன் இடம்பெறச் செய்தார். அதுதான் வில்லங்கமானது! ராஜாவுக்கு அது பிடிக்காமல் போனது. நட்பு என்ற உணர்வோடு ராஜன் செய்த அந்த விளம்பரத்தை இளையராஜாவிடம் சிலர் தவறாக அர்த்தம் கொடுத்து போட்டுக் கொடுத்துவிட்டார்கள், அதனால் ராஜா பூஜைக்கு வர மறுத்துவிட்டார்....

அந்த விஷயம் ராஜனை அதிகம் பாதித்துவிட்டது. இளையராஜா வராமல் போனதை ஒரு மானப்பிரச்சினையாக அவர் கருதினார். இளையராஜாவை வரவேற்று தான் அமைத்திருந்த பேனர்களை அகற்றிவிட்டு படத்திற்கு பூஜை போட்டார்.

அன்றிலிருந்து ராஜன் மனம் நொந்து போய்விட்டார். மலையாளத்தில் மரியாதைக்குரிய இசையமைப்பாளராக வலம் வந்த கண்ணூர் ராஜனுக்கு தமிழ் திரையுலகம் ஆரம்பம் முதலே சோதனையாகத்தான் இருந்தது.

நான் பி.ஆர்.ஓ.வாக இருந்த ஒரு நிறுவனத்தின் தமிழ் திரைப்படத்திற்கு ராஜன்தான் இசையமைப்பாளர். அந்த வகையில் அவரைச் சந்தித்தபோதுதான் எங்களுக்குள் நட்பு மலர்ந்தது. அதுதான் ராஜனுக்குக் கிடைத்த முதல் தமிழ்ப்படம்.

அந்தப் படத்தில் வரும் ஆறு பாடல்களையும் தயாரிப்பாளரான இளைஞரே எழுத, அற்புதமாக இசையமைத்திருந்தார் ராஜன். அதில் வரும் ஒரு பாடலை, அப்போது மலையாளத்தில் பிரபலமாக இருந்த பாடகி அம்பிளி பாடினார். ஆறு பாடல்களும் ஒலிப்பதிவு செய்யப்பட்டன. ஆனால் தயாரிப்பாளர் மேற்கொண்டு பணம் புரட்ட முடியாத காரணத்தால் தன்னுடைய ஊரைத் தேடிப் போய்விட, ராஜன் இசையமைத்த ஆறு பாடல்களும் வெளிவராமல் முடங்கிவிட்டன.

மனதிற்குள் அந்த வருத்தம் இருந்தாலும் தொடர்ந்து முயற்சி செய்துதான் தானே இசையமைத்து ஒரு படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றார். அந்தப் பட பூஜையில் கசப்பான அனுபவத்தைப் பெற்ற ராஜன் தொடர்ந்து போராடினார்,

சோதனை அவரை விடவில்லை. படத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் பணம் கிடைக்கவில்லை. அதனால் தயாரிப்பு தாமதமாகிக் கொண்டே போனது. பின்னர் ஒரு கட்டத்தில் அது நின்றே போனது.

என்னுடைய கடுமையான வேலைகளின் காரணமாக அதற்குப் பிறகு நீண்ட காலம் கண்ணூர்ராஜனை என்னால் சந்திக்க முடியவில்லை. மாதங்கள் பல வேகமாக ஓடி முடிந்தன. அப்படி இருக்கையில் ஒரு நாள் ராஜனிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த ஒரு நண்பரை தற்செயலாகச் சந்தித்தேன்.

அவரைப் பார்த்ததும் எனக்கு ராஜனின் நினைவு வர, அவரிடம் விசாரித்தேன்.

'அடடே, உங்களுக்கு விஷயமே தெரியாதா? அவர் ஹார்ட் அட்டாக்ல இறந்து இரண்டு வருடங்கள் ஆயிடுச்சு, சார்' என்றார் அந்த நண்பர்.

நான் அதிர்ச்சியடைந்து விட்டேன்.

கண்ணூர்ராஜனின் புன்னகை தவழும் முகம் என் கண்களுக்கு முன்னால் தோன்றியது. அவர் எத்தகைய அவமானங்களையும், ஏமாற்றங்களையும் வாழ்க்கையில் சந்தித்திருக்கிறார் என்பதை நினைத்துப் பார்க்கும்போது, எனக்கு திரையுலகின் மீது ஒரு இனம்புரியாத கோபம் உண்டானது.

அவர் குடும்பம் என்ன ஆனது என்பதைப் பற்றி எனக்கு இதுவரை எதுவும் தெரியாது.

கண்ணூர்ராஜன் இன்று உயிருடன் இல்லை. எனினும், அவர் உயிருடன் இருந்தபோது, தன்னுடைய இனிமையான குரலில் ‘நானோ வாச முல்லை’ என்று தான் இசையமைத்த ஒரு பாடலை அவர் எனக்கு பாடி காட்டிய மறக்க முடியாத சம்பவம் என்னுடைய மனத்திரையில் இப்போது வலம் வந்து கொண்டிருக்கிறது.


அழ வைத்த கேயார்

சுரா

திரைப்படக் கல்லூரியில் படித்துவிட்டு வெளியே வந்து, படவுலகிற்குள் புயலென நுழைந்து பல சாதனைகளைப் புரிந்தவர் இவர்.

தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையின் முக்கிய பொறுப்பில் இருந்து படவுலகிற்கு பல நல்ல காரியங்களைச் செய்த போதும், 'மை டியர் குட்டிச்சாத்தான்', 'பூவே பூச்சூடவா' போன்ற படங்களை விநியோகம் செய்தபோதும், கவிதாலயா நிறுவனம் உருவாக்கிய பல படங்களை தொடர்ந்து வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாக்களுக்கு இவர் விநியோகம் செய்து வந்தபோதும், 'பாடும் வானம் பாடி', 'சின்னப் பூவே மெல்லப் பேசு', 'சோலைக்குயில்' ஆகிய படங்களின் முழுமையான ஆக்கத்திற்கு முதுகெலும்பாக இவர் இருந்தபோதும், 'ஈரமான ரோஜாவே' படத்தைத் தயாரித்து முதல் தடவையாக இயக்குநர் அங்கியை அணிந்த போதும் கேயாரை ஆர்வத்துடனும், நல்ல எண்ணத்துடனும் நான் பார்த்து மனதிற்குள் வாழ்த்தியிருக்கிறேன்.

எனினும், கேயாரை நெருங்கிப் பார்த்து, அவரின் நல்ல குணத்தைத் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எனக்கு 1990-ஆம் ஆண்டுவாக்கில் கிடைத்தது. அப்போது, சில திரைப்படங்களையும், சில தொலைக்காட்சித் தொடர்களையும் தயாரித்த அழகன் தமிழ்மணி, சரத்குமாரை வைத்து 'சித்திரைப் பூக்கள்' என்ற படத்தைத் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு ஊட்டியில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. என்.எஸ்.ஸி. என்று அழைக்கப்படும் வட ஆற்காடு, தென் ஆற்காடு, செங்கல்பட்டு ஏரியாவுக்காக ஒரு தொகையை கேயாரிடம் கேட்டிருக்கிறார் தமிழ்மணி. கேயாரும் 'நாளைக்கு ஒப்பந்தப் பத்திரத்தை டைப் பண்ணிக் கொண்டு வா. நான் வீட்டில் இருப்பேன். சரியாக காலை பத்து மணிக்கு வந்துவிட வேண்டும். என் தாயார் உடம்புக்குச் சரியில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார். நாளைக்கு அட்வான்ஸாக ஐம்பதாயிரம் ரூபாய் தருகிறேன். உன்னிடம் பணத்தைக் கொடுத்த பிறகு, நான் மருத்துவமனைக்கு அம்மாவைப் பார்க்கப் போக வேண்டும்' என்று முதல் நாளே தமிழ்மணியிடம் கூறியிருக்கிறார் கேயார்.

இந்த விஷயத்தை மறுநாள் என்னிடம் கூறினார் தமிழ்மணி. ஒப்பந்தப் பத்திரத்தை டைப் பண்ணி எடுத்துக் கொண்டு கேயாரை பார்ப்பதற்காகச் சென்ற தமிழ்மணியுடன் சேர்ந்து நானும் போனேன். தேனாம்பேட்டை எஸ்.ஐ.ஈ.டி. கல்லூரிக்கு எதிரில் இருக்கும் தெருவில் இருந்தது கேயாரின் வீடு. நாங்கள் கேயாரின் வீட்டிற்குள் நுழைந்தபோது, சரியாக காலை பத்து மணி. கேயார் தமிழ்மணிக்காக தன் மடியில் ஒரு ப்ரீஃப்கேஸை வைத்துக் கொண்டு காத்திருந்தார். தமிழ்மணியைப் பார்த்தவுடன் 'உனக்காகத்தான் காத்திருக்கிறேன். இந்தா... 50,000 ரூபாய் இருக்கு. இந்தப் பணம் போனாத்தான் ஊட்டியில் படப்பிடிப்பு நடக்கும்னு சொன்னே. போ... போயி ஆக வேண்டிய வேலைகளைப் பார்' என்று சொன்ன கேயார், ஐந்து 100 ரூபாய் கட்டுகளை எடுத்துத் தந்தார். பணத்தைப் பெற்றுக் கொண்ட தமிழ்மணி, அம்மாவுக்கு எப்படிண்ணே இருக்கு?' என்று கேட்டார். அதற்கு கேயார் 'ஹாஸ்பிட்டலுக்குப் போயி அம்மாவோட பாடியை இனிமேல்தான் வாங்கணும்' என்றார். அப்போதுதான் கேயாரின் தாயார் இறந்துபோன விஷயமே எங்களுக்குத் தெரிய வந்தது.

கேயார் சொன்னதைக் கேட்டு தமிழ்மணி கண்கலங்கி விட்டார். 'ஏண்ணே ஹாஸ்பிட்டலுக்குப் போகாம இங்கே இருக்கீங்க?' என்று கேட்ட தமிழ்மணியிடம், 'உன்னை நான் காலையில் பத்து மணிக்கு வரச் சொல்லிட்டேன். நான் பணம் தந்தால்தான் நீ ஊட்டியில் படப்பிடிப்பு நடத்த முடியும். அதற்காகத்தான் நீ வரட்டும்னு நான் பணத்தோட உனக்காக காத்திருந்தேன். என்னால் உன் படத்தின் ஷூட்டிங் பாதிக்கக் கூடாது இல்லையா?' என்றார் கேயார். நன்றியை வெளிப்படுத்த வார்த்தைகள் வராமல் கேயாரின் காலில் விழுந்து வணங்கினார் தமிழ்மணி. அந்தக் கணத்திலேயே என் மனதில் கேயார் என்ற மனிதர் ஆழமாக பதிந்துவிட்டார்.

சில வருடங்களுக்குப் பிறகு கேயார் சொந்தத்தில் பரதன் இயக்கத்தில் 'ஆவாரம்பூ' என்ற படத்தையும், சிவாஜியைக் கதாநாயகனாக வைத்து 'சின்ன மருமகள்' என்ற படத்தையும் தயாரித்துக் கொண்டிருந்தார். அப்போது வேலர்ஸ் ரோட்டில் இருந்த கேயாரின் அலுவலகத்தில் தினமும் அவரை நான் சந்திப்பேன். அவரின் பல வருட பட உலக அனுபவங்களைப் பற்றி நான் கேட்க, அவரும் ஆர்வத்துடன் அதைக் கூறுவார். 'சின்ன மருமகள்' படத்தின் கதாநாயகன் சிவாஜி என்பதாலும், எனக்கு மிகவும் பிடித்த நடிகர் அவர் என்பதாலும், அப்படத்தின் பத்திரிகை விளம்பரங்களில் நடிகர் திலகத்தின் புகைப்படங்களை ஏராளமாக வரச் செய்தேன். அதைப் பார்த்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ஒரு வயதான திரைப்பட விநியோகஸ்தர் கேயாரைப் பார்த்து, 'சிவாஜியின் புகைப்படங்களை இவர் அதிகமாக பத்திரிகைகளில் வரச் செய்கிறார். சிவாஜியின் படத்தைப் பார்த்து, இப்போது யார் படம் பார்க்க வருகிறார்கள்? அதனால் அவருடைய புகைப்படங்களை குறைவாக பத்திரிகைகளில் இடம்பெறச் செய்யும்படி சாரிடம் சொல்லுங்க, கேயார்' என்றார். அவர் சென்ற பிறகு கேயார், என்னைப் பார்த்து 'இந்த ஆள் சொல்கிறார் என்று நீ எதுவும் நினைக்காதே. அடிப்படையில் இவர் ஒரு காங்கிரஸ்காரர். சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான மனிதர். அந்தக் காலத்தில் சிவாஜியின் படங்களை வாங்கி பல கோடிகள் சம்பாதித்தவர். இப்போது அதையெல்லாம் மறந்துவிட்டு நன்றியில்லாமல் பேசுகிறார். இதுதான் படவுலகம். நீ அந்த ஆள் கூறியதை பொருட்படுத்தாதே. சிவாஜிக்கு எல்லா விளம்பரங்களிலும் நல்ல முக்கியத்துவம் கொடு. அவரின் புகைப்படங்கள் ஏராளமாக வருவது மாதிரி பார்த்துக் கொள். இந்த நூற்றாண்டில் சிவாஜியைப் போல ஒரு நடிப்பு மேதையை நம்மால் பார்க்க முடியுமா? சிவாஜியின் புகைப்படம் பத்திரிகைகளில் வருவதைப் பார்த்து, யாரும் படம் பார்க்க ஒருவேளை வராமல் போனால், பரவாயில்லை. அந்த நஷ்டத்தை நான் மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ள தயாராக இருக்கிறேன். அதற்காக அந்த மகத்தான கலைஞனை நாம் களங்கப்படுத்தக் கூடாது. இன்னும் சொல்லப் போனால்- எனக்கு இந்தப் படத்தின் மீது பெரிய நம்பிக்கை இருக்கிறது. சிவாஜியை விட்டால், இந்தக் கதாபாத்திரத்திற்கு வேறு எந்த நடிகரையும் போட முடியாது. ஒவ்வொரு காட்சியிலும் எந்த அளவிற்கு பிரமாதமாக சிவாஜி நடித்திருக்கிறார் தெரியுமா? நான் கூறுகிறேன்- நிச்சயம் இந்த படம் மக்களின் ஆதரவைப் பெற்ற சிறப்பாக ஓடும்' என்றார்.

கேயார் கூறியது மாதிரியே 'சின்ன மருமகள்' திரைக்கு வந்து நன்றாக ஓடியது.

கேயாரை நான் சந்திக்கும் சந்தர்ப்பங்களிலெல்லாம், இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் தவறாது என் மனதில் வலம் வரும். அந்தச் சமயத்தில் கேயாரின் முகத்தையே மதிப்புடன் நான் பார்த்துக் கொண்டிருப்பேன்.


எல்லோரும் சாப்பிட்டார்கள்- சிவாஜி பட்டினி கிடந்தார்!

சுரா

டிகர் திலகத்தின் நேரம் தவறாமையைப் பற்றி நான் சிறு வயதிலிருந்தே  பத்திரிகைகளில் படித்திருக்கிறேன். பலர் சொல்லி கேள்வியும் பட்டிருக்கிறேன். நான் அதை நேரில் காணும் வாய்ப்பு 1991ஆம் ஆண்டு வாக்கில் எனக்குக் கிடைத்தது.

அப்போது சிவாஜி, தமிழக ஜனதாதளக் கட்சியின் தலைவராக இருந்தார். மத்தியில் வி.பி.சிங் பிரதம அமைச்சராக இருந்தார். அந்தச் சமயத்தில் 'முதல் குரல்' என்ற படத்தின் கதாநாயகனாக சிவாஜியை வி.சி.குகநாதன் ஒப்பந்தம் செய்திருந்தார். மாநிலம் முழுக்க பிரபலமான ஒரு பெரிய பத்திரிகையாளராக அதில் வருவார் சிவாஜி.

ஜார்ஜ் பெர்ணான்டஸை மனதில் வைத்து சிவாஜிக்கு அதில் ஒப்பனை செய்யப்பட்டிருந்தது. முதல் நாள் படப்பிடிப்பு ஏ.ஆர்.எஸ். கார்டனில் காலை ஏழு மணிக்கு என்று குகநாதன் சொல்லியிருந்தார். படப்பிடிப்பு தொடங்கும் நாளன்று காலை ஆறரை மணிக்கே ஏ.ஆர்.எஸ். கார்டனுக்கு சிவாஜி வந்துவிட்டார். அவர் வந்தபோது அங்கு வேறு யாருமே வந்திருக்கவில்லை. சிவாஜி வந்து அரை மணி நேரம் கழித்துத்தான் மற்ற எல்லோருமே வந்தார்கள். அங்கு போன எனக்கு இந்தச் செய்தி தெரிந்தபோது, உண்மையிலேயே சிவாஜி மீது நான் கொண்ட மதிப்பு மேலும் பல மடங்கு அதிகமானது.

அன்று போலீஸ் ஸ்டேஷனுக்குள் படப்பிடிப்பு. லாக்அப்பில் அடைக்கப்பட்டிருக்கும் அர்ஜுனை விடுதலை செய்வதற்காக போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிவாஜி கேட்டுக் கொள்வதைப் போல ஒரு காட்சி அன்று படமாக்கப்பட வேண்டும். அதற்கு முந்தைய நாள் தமிழகமெங்கும் 'பந்த்' என்பதால், போலீஸ் ஸ்டேஷன் செட் சரியாகத் தயாராகவில்லை. ஒரு கோணத்தில் சிவாஜியை வைத்து ஷாட் எடுத்தார்கள். அதே நேரத்தில் இன்னொரு பக்கம் சுவருக்கு வண்ணம் பூசும் வேலை படுவேகமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஷாட் முடிந்து மேக்-அப் அறைக்குள் போனார் சிவாஜி. குகநாதனோ படு டென்ஷனாக இருந்தார். வண்ணம் பூசி முடிப்பதற்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும். அது முழுமையாகப் பூசி முடிக்கப்பட்டு, காய்ந்து, படப்பிடிப்பு நடத்த தயார் நிலைக்கு வருவதற்கு இன்னும் ஒரு மணி நேரம் ஆகும். 'அதுவரை சிவாஜியை வெறுமனே ஒப்பனை அறைக்குள் உட்கார வைத்தால் நன்றாகவா இருக்கும்? சிவாஜி ஒருவேளை கோபமாகிவிட்டால் என்ன செய்வது?' என்று கைகளைப் பிசைந்து கொண்டிருந்தார் குகநாதன். பின்னர் என்ன நினைத்தாரோ, சிவாஜியின் ஒப்பனை உதவியாளரான திருக்கோணத்தை அழைத்து, ‘அண்ணன் தப்பா நினைச்சிடப் போறாரு. எப்படியாவது சமாதானம் பண்ணி வைங்க. அதற்குள் நான் இந்த வேலையை முடிச்சிடுறேன்' என்றார் குகநாதன்.

அதற்கு அந்த உதவியாளர், 'அண்ணன்தான் என்னை இங்கே அனுப்பி வைத்தார். நான் எங்கே கோபிச்சுடப் போறேனோன்னு குகநாதன் ஒழுங்கா வேலையைச் செய்யாம இருந்துடப் போறான். நான் சொன்னேன்னு அவன்கிட்ட போயி சொல்லு- ஒண்ணும் அவசரமில்ல; மெதுவா வேலையைச் செஞ்சா போதும். நாம அவன் பட வேலையைப் பார்க்கத்தான் வந்திருக்கோம். நேரம் ஆனால் கூட பரவாயில்லை- அதுவரை நான் பொறுமையா காத்திருக்கேன்' என்று அண்ணன் கூறி அனுப்பினார்’ என்று சொன்னார். அதைக் கேட்டதும் நான் மெய்சிலிர்த்துப் போனேன். ‘சிவாஜி எவ்வளவு பெரிய நடிகர்! எத்தனை இமாலய சாதனை புரிந்த மனிதர்! அந்த மனிதருக்குள் இப்படியொரு எளிமையும், தொழில் பக்தியும்- அதுவும் இந்த வயதில்!’ என்று ஆச்சரியத்தின் எல்லைக்கே நான் சென்றுவிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் படப்பிடிப்பு தொடங்கியது. குகநாதன் எழுதியிருந்த வசனத்தைச் சற்று மாற்றி, கொஞ்சம் வார்த்தைகளைச் சேர்த்து  பேசினார் சிவாஜி. உடனே குகநாதன், 'அண்ணே! நான் எழுதிய வசனம் கொஞ்சம் மாறிடுச்சுண்ணே' என்றார். அதற்கு சிவாஜி 'ஆமா... நான்தான் இன்னும் கொஞ்சம் சிறப்பாக இருக்கும் என்று சிறிது மாற்றினேன். நீங்க பிரியப்பட்டா, இன்னொரு டேக் எடுத்துக்கங்க. நீங்க எழுதின அதே வசனத்தை நான் பேசுறேன்' என்றார். 1969ஆம் ஆண்டு திரைக்கு வந்த சிவாஜி கதாநாயகனாக நடித்த 'எங்க மாமா' என்ற படத்திற்கு தன்னுடைய இளம் வயதில் வசனம் எழுதியவர் குகநாதன். அந்த குகநாதனை ஒரு டைரக்டர் என்று நினைத்து சிவாஜி கொடுத்த மதிப்பைப் பார்த்து, நடிகர் திலகத்தின் மீது எனக்கு அளவுக்கும் அதிகமான மரியாதை உண்டானது.

அநேகமாக 1990-ஆம் ஆண்டாக இருக்குமென்று எண்ணுகிறேன்.  இயக்குனர் திலகம் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் சிவாஜியைக் கதாநாயகனாக வைத்து 'படிக்காத பண்ணையார்' என்ற படத்தைத் தயாரித்து இயக்கிக் கொண்டிருந்தார். அப்படத்தின் படப்பிடிப்பு வாஹினி ஸ்டூடியோவில் அமைக்கப்பட்டிருந்த அரங்கிற்குள் நடைபெற்றுக் கொண்டிருந்தது. நான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பார்ப்பதற்காகப் போனேன் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், நடிகர் திலகம் நடிப்பதைக் கண் குளிர பார்க்க வேண்டும் என்பதும்  முக்கியமானதொரு காரணம். நான் சென்றது மதிய நேரம். எல்லோரும் வெளியே அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தார்கள். சிவாஜியை மட்டும் காணோம். நான் கே.எஸ்.கோபாலகிருஷ்ணனைப் பார்த்து ‘எங்கே சிவாஜி சார்?' என்று கேட்டேன். அதற்கு கே.எஸ்.ஜி. 'அந்தக் கூத்தை ஏன்யா கேக்குற? கதைப்படி சிவாஜி ஒரு பண்ணையாரா வர்றாரு. வயசான கெட்-அப். பெரிய மீசை. அதை பசை போட்டு ஒட்ட வச்சிருக்கு. அந்த மீசையை ஒவ்வொரு தடவையும் எடுத்து ஒட்டுறதுன்னா, அவருக்கு பயங்கரமா வலிக்குதாம். அதனால 'எனக்கு சாப்பாடு எதுவும் வேண்டாம். சாப்பிடணும்னா இந்த மீசையை எடுத்து மறுபடியும் ஒட்டணும். அப்ப உண்டாகுற வலியை என்னால தாங்க முடியல. ஒரேயடியா நான் ராத்திரி வீட்ல போயி சாப்பிட்டுக்குறேன்'னு சொல்லிட்டு ஃப்ளோர்க்குள்ளேயே உட்கார்ந்திருக்கிறார். அவரைத் தவிர, எல்லாரும் சாப்பிட்டுக் கிட்டு இருக்காங்க. இப்படியொரு நடிகரை உலகத்துல பார்க்க முடியுமாய்யா?' என்றார் என்னிடம்.

ஃப்ளோரின் கதவு வழியாக பார்த்தேன். உள்ளே இருட்டுக்குள் ஒரு நாற்காலியைப் போட்டுக் கொண்டு சிவாஜி மட்டும் தனியே அமர்ந்திருந்தார். அந்தக் கலைமேதையைப் பார்த்து கையெடுத்து வணங்க வேண்டும் போல் இருந்தது.

இன்று அந்த கலையுலக மேதை நம்மிடையே இல்லை. எனினும் அந்த பிறவிக் கலைஞனின் இத்தகைய இனிய நினைவுகளை நம்மால் மறக்கத்தான் முடியுமா?


விக்ரமை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் மரணம் – நடுரோட்டில்!

சுரா

1990-ல் சி.செல்வராஜ் என்ற நண்பர் என்னைத் தேடி வந்தார். வங்கியில் பணி புரிவதாகவும், யூனியனில் தான் முக்கிய பொறுப்பில் இருப்பதாகவும் கூறினார். தமிழில் படமொன்றை தயாரிக்க தான் திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார். தமிழகத்திலுள்ள வங்கிகளில் பணிபுரியும் தன்னுடைய நண்பர்கள் பலரும் ஒரு குறிப்பிட்ட தொகையை 'ஷேர்' ஆக போட இருப்பதாகவும், அப்படிச் சேரும் தொகையை வைத்து படத்தைத் தயாரிக்க இருப்பதாகவும் கூறினார்.

'படத்திற்கான கதையை முடிவு செய்து விட்டீர்களா?' என்று கேட்டதற்கு, 'சுவீடன் நாட்டு படம் ஒன்றை அடிப்படையாக வைத்துதான் இந்தப் படத்தை நாங்கள் தயாரிக்கிறோம். படத்தின் பெயர் 'தி மேன் ஹூ கேவ் அப் ஸ்மோக்கிங்'. படத்தின் கதை இதுதான்: கதாநாயகன் பணக்கார வீட்டுப் பெண்ணைக் காதலிப்பான். காதலியின் தாத்தாவுக்கு சிகரெட் பிடிப்பவர்களைப் பிடிக்காது. காரணம்- சிகரெட் பிடித்ததால், உடல் நலம் பாதிக்கப்பட்டவர் அவர். ஆனால், கதாநாயகனோ ஒரு செயின் ஸ்மோக்கர். தன் பேத்தியிடம் சொல்லி கதாநாயகன் சிகரெட் பிடிப்பதை நிறுத்தினால்தான் திருமணம் செய்து கொள்ள என் சம்மதம் கிடைக்கும் என்று கூறுகிறார். கதாநாயகனும் அதற்குச் சம்மதிக்கிறான். எனினும், இதற்கென சில ரகசிய புலனாய்வு அதிகாரிகளை ஏற்பாடு செய்து கதாநாயகன் புகை பிடிக்கிறானா என்பதை இரவும் பகலும் விழித்திருந்து கண்காணிக்கும்படி செய்கிறார் அந்தத் தாத்தா. இதற்கிடையில் கதாநாயகியைக் காதலிக்கும் இன்னொரு நபர் கதாநாயகன் திருந்தி விடக் கூடாது என்பதில் குறியாக இருக்கிறான். கடைசியில் வெற்றி பெறுவது யார்? அந்த மனிதரா? கதாநாயகனா? கதாநாயகன் புகை பிடிப்பதை நிறுத்தி, காதலியைக் கைப்பிடிக்கிறானா இல்லையா? இதுதான் அந்தப் படத்தின் கதை. தமிழில் இந்தப் படத்திற்கு 'என் காதல் கண்மணி' என்று பெயர் வைத்திருக்கிறோம்' என்றார்.

துணிப் பை ஒன்றைத் தோளில் தொங்கப் போட்டுக் கொண்டு வேஷ்டி கட்டிய கோலத்தில் எனக்கு முன்னால் அமர்ந்து, சிரித்துக் கொண்டே கதையைக் கூறினார் செல்வராஜ். ஆனால், கதையைக் கேட்டவுடன் 'இந்தக் கதையில் ஆழமாக ஒரு விஷயமும் இல்லையே! வெறும் சிகரெட் பிடிப்பதை நிறுத்துவதைப் பற்றி படமெடுத்தால் சுவாரசியமாக இருக்குமா? மனதைத் தொடும் விதத்தில் கதை, உணர்ச்சிகரமான காட்சிகள், இதயத்தில் ஆழமாகப் பதிகிற மாதிரியான சம்பவங்கள் எதுவுமே இல்லாவிட்டால் படம் எப்படி ஓடும்? கதையே இல்லாமல் கூத்தடித்திருக்கிறார்கள் என்று எல்லோரும் நினைக்க மாட்டார்களா? எனக்கு இந்தப் படம் வர்த்தக ரீதியாக நன்றாக வரும் என்ற நம்பிக்கை இல்லை' என்றேன் நான். அதற்கு செல்வராஜ், 'இல்லை நண்பரே! நீங்கள் சுவீடன் நாட்டு படத்தைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தால் இந்தக் கேள்வியையே கேட்டிருக்க மாட்டீர்கள். ஒரு ஃபிலிம் சொஸைட்டி இந்தப் படத்தைத் திரையிட்டுக் காட்டியபோது, நாங்கள் விழுந்து விழுந்து சிரித்தோம். நிச்சயம் தமிழில் தயாராகும் இந்தப் படம் அருமையான ஒரு பொழுது போக்குப் படமாக இருக்கும்' என்றார்.

அதற்கு மேல் படத்தைப் பற்றி அவரிடம் நான் பேசவில்லை. சம்பந்தப்பட்ட சுவீடன் நாட்டு படத்தைத் தேடி புனே திரைப்பட ஆவணக் காப்பகத்திற்குச் சென்ற செல்வராஜ், அங்கு படங்களைப் பாதுகாத்து வைக்கும் பிரிவின் பொறுப்பாளராக இருந்த டி.ஜே.ஜாய் என்ற மலையாள இளைஞரைப் பார்த்திருக்கிறார். அவர் ஏதோ ஒரு மலையாளப் படத்தில் பாலுமகேந்திராவிடம் உதவியாளராகப் பணி புரிந்திருக்கிறார். செல்வராஜிடம், அவர் வந்த விஷயத்தைக் கேட்க, செல்வராஜ் கூறி இருக்கிறார். 'எனக்கு அந்தப் படம் மிகவும் பிடித்த படம்' என்று ஜாய் கூற, அவரையே 'என் காதல் கண்மணி' படத்தின் இயக்குனராக அந்த இடத்திலேயே ஒப்பந்தம் செய்து விட்டார் செல்வராஜ். (செல்வராஜ் எந்த அளவிற்கு வெள்ளை மனம் கொண்டவர் என்பது தெரிகிறதா?)

படத்தின் கதாநாயகனாக இப்போதைய ‘சியான்’ விக்ரம், ஒப்பந்தம் செய்யப்பட்டார். தூர்தர்ஷனில் ஒளிபரப்பான ஏதோ ஒரு விளம்பரப் படத்தில் விக்ரமைப் பார்த்த செல்வராஜ், அவரை நேரில் பார்த்து கதாநாயகனாக ஆக்கி விட்டார். கெனி என்ற விக்ரமின் சொந்தப் பெயரை 'வினோத்' என்று செல்வராஜ் மாற்றி வைத்தார். 'என் காதல் கண்மணி'தான் விக்ரமின் முதல் படம். விக்ரமிற்கு ஜோடியாக ஒரு கலாச்சேத்ரா மாணவி ஒப்பந்தம் செய்யப்பட்டார். பெயர் ஞாபகத்தில் இல்லை. வைரமுத்து பாடல்களை எழுத எல்.வைத்தியநாதன் இசையமைத்தார். எம்.எம்.ரெங்கசாமி படத்தின் ஒளிப்பதிவாளர்.

'என் காதல் கண்மணி' பல மாதங்களுக்குப் பின், எத்தனையோ சிரமங்களைக் கடந்து, வளர்ந்து முடிந்தது. சி.செல்வராஜ் ஜோல்னா பையுடன் 'தயாரிப்பாளர் பந்தா' எதுவும் இல்லாமல், ஒரு சாதாரண மனிதராக சிரித்த முகத்துடன் இங்குமங்குமாக ஓடிக் கொண்டிருப்பார்.

படத்தின் முதல் பிரதி தயாரானவுடன், எல்லோருக்கும் படத்தைப் போட்டுக் காட்டினார்கள். நானும் படத்தைப் பார்த்தேன். படத்தை உட்கார்ந்து பார்க்க முடியவில்லை. மிகவும் போராக இருந்தது. நிச்சயம் படம் ஓடாது என்ற முடிவுக்கு அப்போதே நான் வந்துவிட்டேன். பல நண்பர்கள் போட்ட பணத்தில் இப்படியொரு அறுவைப் படத்தை செல்வராஜ் எடுத்து விட்டாரே என்று நான் வருத்தப்பட்டேன். படம் முடிந்து வெளியே வந்த பிறகு, செல்வராஜ் கேட்டதற்கு உண்மையான என் கருத்தைச் சொன்னேன். நான் சொன்னதை அவர் ஒத்துக் கொள்ளவில்லை என்பதை அவருடைய முகபாவனையிலிருந்தே நான் தெரிந்து கொண்டேன். அதற்காக நான் கவலைப்படவில்லை.

'என் காதல் கண்மணி' வியாபாரம் ஆகாமல், பலவித போராட்டங்களுக்குப் பிறகு, பல மாதங்கள் கடந்து ஒரு நாள் திரைக்கு வந்தது. ஆனால், ஒரு வாரமே ஓடியது. மிகப் பெரிய தோல்விப் படமாக அது அமைந்ததுடன், நண்பர் செல்வராஜை அது பல லட்சங்களுக்குக் கடனாளியாகவும் ஆக்கிவிட்டது. எப்போதும் சிரித்த முகத்துடன் இருக்கும் செல்வராஜின் முகத்தில் புன்னகை பறிபோனது. கடனை எண்ணி அவர் மனம் படாதபாடு பட்டது. அதுவரை அவர் பார்த்துக் கொண்டிருந்த வங்கி வேலை அவருக்கு இல்லாமற் போனது.

ஒரு நாள் அவர் பணி, பணம் எதுவுமே இல்லாத மனிதராக ஆனார். ஆர்வத்துடன் படவுலகிற்குள் காலடி எடுத்து வைத்த அந்த நல்ல மனிதருக்குக் கிடைத்த பரிசு இதுதான்! பலவித மனக் குழப்பங்களுடன் ஊரில் இருக்கும் தன் சகோதரியிடம் தொலைபேசியில் 'நான் நாளைக்கு அங்கு வருகிறேன்' என்று வடபழனி 100 அடி சாலையில் இருந்த ஒரு எஸ்.டி.டி. பூத்தில் பேசிவிட்டு வெளியே வந்த சி.செல்வராஜ் சாலையைக் கடக்கவும், ஒரு வாகனம் வேகமாக பாய்ந்து வந்து அவர்மீது மோதவும் சரியாக இருந்தது. விபத்து நடந்த இடத்திலேயே இரத்த வெள்ளத்துக்கு மத்தியில் பிணமாகிவிட்டார் செல்வராஜ். அப்போதும் அவரின் தோளில் எப்போதும் இருக்கும் அந்த ஜோல்னா பை இருந்தது. சிரிப்பை மட்டும்தான் காணோம். அது காணாமல் போய்த்தான் எவ்வளவோ நாட்கள் ஆகிவிட்டனவே!

படமெடுக்க வந்த முற்போக்கு எண்ணங்கள் கொண்ட ஒரு நல்ல மனிதரின் மரணம் இப்படியா நடுச் சாலையில் நடக்க வேண்டும்? இப்போது கூட செல்வராஜ் என்ற அந்த இனிய, புன்னகை தவழும் முகத்துடன் என்னுடன் உரையாடும் நண்பரை நினைக்கும் தருணங்களில், என்னையும் மீறி என் கண்களில் அரும்பும் கண்ணீரை என்னால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதுதான் உண்மை.


சத்யஜித்ரேக்கு மலர் சூட்டிய மகேந்திரன்!

சுரா

யக்குநர் மகேந்திரன்- தமிழ்த் திரைப்பட உலகின் வரலாற்றில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய ஒரு பெயர் இது. 1978ஆம் வருடத்தில் இவர் இயக்கி திரைக்கு வந்த 'முள்ளும் மலரும்' படத்தை இன்னும் எத்தனை வருடங்கள் ஆனாலும் நம்மால் மறக்க முடியுமா? உமாசந்திரன் எழுதிய ஒரு நாவலின் திரை வடிவமே 'முள்ளும் மலரும்'. அண்ணன்- தங்கை பாசத்தை மையமாகக் கொண்ட அந்தக் கதையில் முற்றிலும் மாறுபட்ட அருமையான பாத்திரத்தில் ரஜினிகாந்த் நடித்திருந்தார். ரஜினியின் இயல்பான நடிப்பையும், சரத்பாபுவின் பாத்திரப் படைப்பையும், ஷோபாவின் நிகரில்லாத நடிப்புத் திறமையையும், 'படாபட்' ஜெயலட்சுமியின் இயற்கையான நடிப்பையும், பாலு மகேந்திராவின் அற்புதமான ஒளிப்பதிவையும், இளையராஜாவின் இசையில் அமைந்த 'செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல்', 'நித்தம் நித்தம் நெல்லுச்சோறு' ஆகிய பாடல்களையும், வாழ்க்கையைப் படமாக, கவித்துவம் மேலோங்க இயக்கியிருந்த மகேந்திரனின் முத்திரையையும்- இப்போது நினைத்துப் பார்த்தாலும் உடலெங்கும் சிலிர்ப்பு உண்டாகிறது. தமிழ்த் திரைப்பட உலகத்தின் பொற்காலம் அது.

அடுத்து மகேந்திரன் இயக்கிய படம் 'உதிரிப்பூக்கள்'. புதுமைப்பித்தன் எழுதிய 'சிற்றன்னை' என்ற குறுநாவலின் திரைவடிவமே அது. அப்படியொரு படம் இன்று வரை தமிழில் வந்ததில்லை என்பதே உண்மை. கவிதையென வடிக்கப்பட்டிருந்த அப்படம் 175 நாட்கள் ஓடியது என்பது உண்மையிலேயே ஒவ்வொருவரும் மனதில் பெருமைப்பட வேண்டிய விஷயம்!

ரஜினி நடிக்க, மகேந்திரன் இயக்கிய படம் 'ஜானி'. அடிதடி ஆக்ஷன் கதாநாயகனான ரஜினியை வைத்து இப்படிக் கூட ஒரு கவித்துவமான ஆக்ஷன் படத்தை இயக்க முடியும் என்பதை எல்லோருக்கும் காட்டியவர் மகேந்திரன். இளையராஜாவின் இசையில் அமைந்த 'காற்றில் எந்தன் கீதம்' என்ற பாடல் இப்போது கூட மனதிற்குள் ஒலித்துக் கொண்டிருக்கிறது. அசோக்குமாரின் அருமையான ஒளிப்பதிவுக்குச் சான்று அந்தப் படம்.

மகேந்திரன் இயக்கத்தில் அடுத்து வெளியான படம் 'நண்டு'. சிவசங்கரியின் ஒரு நாவலைப் படமாக இயக்கியிருந்தார். பல காட்சிகள் வட இந்தியாவில் படமாக்கப்பட்டன. வட இந்தியர்கள் வீட்டிற்குள் பேசும்போது, இந்தி மொழியை அப்படியே பயன்படுத்தியிருந்தார் மகேந்திரன். வட இந்திய நகரமொன்றில் பனிப் படலம் விலகாத காலைப் பொழுதில் படத்தின் கதாநாயகன் வீட்டின் மாடியில் நின்றிருப்பான். அந்த அதிகாலை வேளையில் அந்த நகரம் எப்படி இருக்கும் என்பதை 'அள்ளித் தந்த பூமி அன்னை அல்லவா' என்ற பாடல் மூலம் ஒளிப்பதிவாளர் அசோக்குமாரும், இயக்குநர் மகேந்திரனும் சேர்ந்து ஓவியமாகத் தீட்டியிருப்பார்கள்.

மகேந்திரன் இயக்கத்தில் உருவான படம் 'நெஞ்சத்தைக் கிள்ளாதே' சுஹாசினி அதில் கதாநாயகியாக அறிமுகமானார். கதாநாயகன்- மோகன். அதில் 'பருவமே...' என்றொரு பாடல் வரும். அடடா...! அதற்கு இணையான ஒரு பாடலை நம்மால் காட்ட முடியுமா? மகேந்திரனின் கற்பனையை எங்கு கொண்டு போய் சிம்மாசனம் போட்டு உட்கார வைப்பது? மகேந்திரன், இளையராஜா, அசோக்குமார் இந்த மூன்று மேதைகளும் முத்திரை பதித்த அந்தப் படம் 200 நாட்கள் ஓடி சாதனை புரிந்தது.

மகேந்திரன் இயக்கத்தில் அடுத்து திரைக்கு வந்த பூட்டாத பூட்டுக்கள், மெட்டி  இரண்டுமே மிகச் சிறந்த படங்கள்தான். எனினும், வர்த்தக ரீதியாக அவை வெற்றி பெறவில்லை. ரஜினிகாந்த் நடித்து மகேந்திரன் இயக்கிய 'கை கொடுக்கும் கை'யில் கூட மகேந்திரனின் முத்திரை இருக்கவே செய்தது.

சில வருடங்களுக்கு முன்பு, அரவிந்த்சாமி- கவுதமி நடிக்க, மகேந்திரன் இயக்கிய ‘சாசனம்’ கூட நல்ல படமே.

'ஜானி' படப்பிடிப்பின்போது சென்னை கல்லூரி சாலையில் இருந்த ஒரு வீட்டில் இயக்குநர் மகேந்திரனை 1980-ஆம் ஆண்டில் நான் பார்த்திருக்கிறேன். பின்னர் சில வருடங்களுக்குப் பிறகு பி.ஆர்.பந்துலுவின் மகன் ரவிசங்கர் இயக்கிய 'அன்புள்ள மலரே' என்ற படத்திற்கு மகேந்திரன் வசனம் எழுதினார். அப்போது நுங்கம்பாக்கம் கண்பத் ஹோட்டலில் அவருடன் நீண்ட நேரம் நான் உரையாடியிருக்கிறேன். மகேந்திரனுடன் செலவிட்ட அந்த ஒப்பற்ற நிமிடங்களை இப்போது நினைத்துப் பார்த்தாலும் சுகமாகவே இருக்கிறது.

வி.அழகப்பன் இயக்கத்தில் உருவான 'இரண்டில் ஒன்று' என்ற படத்திற்கு வசனம் எழுத வந்த மகேந்திரனுடன், பல சந்தர்ப்பங்களில் பேசி, பல விஷயங்களையும் நான் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்பு ஒரு நாள் நடிகர் நெப்போலியனுடன், இயக்குநர் மகேந்திரனின் வீட்டிற்குச் சென்றிருந்தேன். கால் மணி நேரம் அவருடன் பேச முடிந்தது. மகேந்திரன் பேசியபோது, அவருக்குப் பின்னால் கறுப்பு- வெள்ளை புகைப்படத்தில் சிந்தனை செய்து கொண்டிருந்தார் சத்யஜித்ரே. அந்தப் புகைப் படத்திற்கு புதிதாகப் பறிக்கப்பட்ட ஒரு செம்பருத்திப் பூவைச் சூடியிருந்தார் மகேந்திரன். அவரின் அந்தச் செயல் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

சுரேஷ்மேனன், ரேவதி தயாரித்து சன் டி.வி.யில் ஒளிபரப்பான ஒரு சீரியலை மகேந்திரன் இயக்கினார். அதே நிறுவனம் தயாரித்து தூர்தர்ஷனில் ஒளிபரப்பான 'சியாமளா' என்ற மெகா சீரியலுக்கு கதை- வசனம் எழுதினார் மகேந்திரன். அப்போது பல முறை 'டெலிஃபோட்டோ எண்டர்டெயின்மென்ட்ஸ்' அலுவலகத்தில் அவரைப் பார்த்துப் பேசியிருக்கிறேன். 'நீங்கள் இயக்கிய படங்கள் வெளியான காலம் தமிழ்ப்பட உலகின் பொற்காலம். அந்த மாதிரியான படங்களை இனி எப்போது பார்க்கப் போகிறோம்? உங்களுக்கு நிகர் நீங்கள்தான்' என்று நான் சொன்னதற்கு. 'அப்படியெல்லாம் நான் பெரிதாக எதுவுமே செய்துவிடவில்லை, மிஸ்டர் சுரா. நான் ஏதோ எனக்கு தெரிஞ்சதை செய்திருக்கிறேன். அவ்வளவுதான்' என்று சர்வசாதாரணமாக கூறினார் மகேந்திரன். அவரின் கூற்றுக்குப் பின்னால் மறைந்திருந்த அடக்கத்தையும் எளிமையையும் பார்த்து நான் மெய் சிலிர்த்துப் போனேன்.

நினைத்துப் பார்க்க முடியாத சாதனைகள் பல புரிந்து, தமிழ் பட உலகில் சாகா வரம் பெற்ற பல திரைப்படங்களை இயக்கி, எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் அமைதியாக வாழ்ந்து கொண்டிருக்கும் இயக்குநர் மகேந்திரனை நினைக்கும்போதெல்லாம், அவருடைய வீட்டில் செம்பருத்தி மலருடன் இருக்கும் சத்யஜித்ரேயின் புகைப்படமும் என்னுடைய ஞாபகத்தில் வருகிறது.


ஷகீலாவை அறிமுகப்படுத்திய தயாரிப்பாளர் தூக்கில் தொங்கினார்!

சுரா

ர்.டி.சேகர் - அவர் எனக்கு அறிமுகமானது 1992-ஆம் ஆண்டில். அப்போது சுரேஷ் மேனன் கதாநாயகனாக நடித்து 'புதிய முகம்' என்ற படத்தை இயக்கிக் கொண்டிருந்தார், அந்தப் படத்திற்கு நான் பி.ஆர்.ஓ. சுரேஷ்மேனனின் படத்திற்கு சேகர்தான் பட தொகுப்பாளர்.

ஒல்லியான உருவம்- ஆள் சிறுத்துப் போய் காணப்படுவார். அலட்சியமாக வாரப்பட்டிக்கும் தலைமுடி. அதிகம் பேசமாட்டார். தேவைப்பட்டால்தான் வாயைத் திறப்பார். பெரும்பாலும் சிகரெட் அவருடைய உதட்டில் இருக்கும்- இதுதான் ஆர்.டி.சேகர். பார்த்த கணத்திலேயே அவரை எனக்கு மிகவும் பிடித்துவிட்டது. பாலு மகேந்திரா இயக்கிய 'சந்தியா ராகம்' என்ற அருமையான டெலிஃபிலிமிற்கு சேகர்தான் படத் தொகுப்பாளர். பரதன் இயக்கிய மிகச் சிறந்த படமான 'வைஷாலி'க்கு எடிட்டராகப் பணிபுரிந்தவரும் சேகர்தான். திறமை வாய்ந்த, மாறுபட்ட படங்களை உருவாக்கும் படைப்பாளிகளிடம் அவர் பணி புரிந்ததாலோ என்னவோ, ஆர்.டி.சேகரிடம் ஆரம்பத்திலேயே எனக்கு ஒரு ஒட்டுதல் உண்டாகிவிட்டது.

தனித்திருக்கும் வேளைகளில் பரதன், பாலுமகேந்திரா ஆகியோரின் படைப்புத் திறன் குறித்து நேரம் போவதே தெரியாமல் நானும், சேகரும் பேசிக் கொண்டிருப்போம். அவர்களின் படங்களை அலசிப் பார்த்து பல விஷயங்களை நான் கூறுவேன். சேகரும் பல தகவல்களைக் கூறுவார்.

சில நாட்கள் கழித்து 'சந்தியா ராகம்' டெலிஃபிலிமை தொலைக்காட்சியில் நான் பார்க்க நேர்ந்தது. ஒரு காவியத்தைப் போல பாலுமகேந்திரா உருவாக்கியிருந்த அந்த டெலிஃபிலிமை பிரமாதமாக எடிட் செய்திருந்தார் சேகர். அதைப் பார்த்தபோது சேகரின் திறமை மீது எனக்கு மேலும் மரியாதை உண்டானது.

'புதிய முகம்' படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. ஆர்.டி.சேகரின் எடிட்டிங் திறமையை சுரேஷ்மேனனும், யூனிட்டில் பணிபுரிந்த மற்றவர்களும் மனம் திறந்து பாராட்டினார்கள். ஆங்கிலப் படத்திற்கு நிகராக உருவாக்கப்பட்டிருந்த அந்த மாறுபட்ட படத்தை மிகவும் அருமையாக எடிட் பண்ணியிருந்தார் சேகர் என்பதே உண்மை.

அந்தப் படத்திற்கு வசனம் எழுதியவர் கே.எஸ்.அதியமான். சேகரின் எடிட்டிங் திறமையை எத்தனையோ முறை என்னிடம் பாராட்டிக் கூறியிருக்கிறார் அதியமான். 'சேகர் அருமையான எடிட்டர், அண்ணே. அவன்கிட்ட நல்ல திறமை இருக்கு. இப்போ இருக்குற மிகச் சிறந்த எடிட்டர்கள்ல சேகரும் ஒருவன்' என்று கூறுவார் அதியமான்.

சுரேஷ் மேமன் இயக்கி, அரவிந்த்சாமி- ரேவதி நடித்து வெளியான 'பாச மலர்கள்' படத்திற்கும் ஆர்.டி.சேகர்தான் படத் தொகுப்பாளர். 'ஆவிட் எடிட்டிங்' முறையைப் பயன்படுத்தி தமிழில் எடிட் செய்யப்பட்ட முதல் படம் 'பாசமலர்கள்'தான். ஆர்.டி.சேகர் மைலாப்பூர் 'டெலிடேப்' எடிட்டிங் அறையில் 'ஆவிட் சிஸ்டம்' முன்னால் அமர்ந்து எடிட் செய்ததை இப்போது கூட நான் நினைத்துப் பார்க்கிறேன்.

படங்களுக்கு எடிட்டராகப் பணி புரிந்து கொண்டிருந்த அதே நேரத்தில் மீரான் சாஹிப் தெருவில் தனக்கென்று பட விநியோக நிறுவனம் ஒன்றை வைத்துக் கொண்டு குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் சில படங்களை விநியோகம் செய்வதையும் தொழிலாகக் கொண்டிருந்தார் சேகர். பட வேலைகள் இல்லாத நேரங்களில் சேகர் பொதுவாக அங்குதான் இருப்பார்.

இந்தச் சூழ்நிலையில் ஒரு நாள் சேகர் என்னைத் தேடி வந்தார் ‘ப்ளே கேர்ள்ஸ்’ என்ற பெயரில் படமொன்றை சொந்தத்தில் தான் தயாரித்து இயக்க திட்டமிட்டிருப்பதாக அவர் கூறினார். கவர்ச்சி அம்சங்கள் கொண்ட ஒரு கதை அது. படத்தின் கதாநாயகியாக ‘சில்க்’ ஸ்மிதாவை ஒப்பந்தம் செய்திருப்பதாகக் கூறினார்.

அந்தப் படத்தின் படப்பிடிப்பு ஏவி.எம்.ஸ்டுயோவில் நடைபெற்றது. ஆர்.டி.சேகர், கே.எஸ்.அதியமான், நான் மூவரும் வெளியில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். அப்போது வயதான அம்மா ஒருவர் இரு இளம் பெண்களுடன் அங்கு வந்து நின்றார். அவர்கள்- சில வருடங்களுக்கு முன்பு கேரளத்தையே கலக்கிய ஷகீலாவும், அவரின் தங்கை ஷீத்தலும். ஷகீலா அதற்கு முன்பு எந்தப் படத்திலும் நடித்ததில்லை. அப்போது அவருக்கு வயது 16 இருக்கும். இரண்டு சகோதரிகளுமே படத்தில் நடித்தார்கள். ஷகீலா, 'சில்க் 'ஸ்மிதாவிற்குத் தங்கையாக- படம்  முழுக்க வருகிற முக்கிய பாத்திரத்தில் நடித்தார்.

'ப்ளே கேர்ள்ஸ்' முற்றிலும் முடிவடைந்தது. சேகர் நினைத்த அளவிற்கு படம் வினியோகம் ஆகவில்லை. எனினும், படத்தை எப்படியோ திரைக்குக் கொண்டு வந்துவிட்டார். படம் ரிலீஸாவதற்கு முதல் நாள் நான் சேகரை மீரான் சாஹிப் தெருவில் உள்ள அவரின் அலுவலகத்தில் பார்த்தேன். 'நஷ்டத்துலதான் சார் படத்தை ரிலீஸ் பண்றேன்' என்றார். அதுதான் நான் சேகரை இறுதியாக பார்த்தது.

'ப்ளே கேர்ள்ஸ்' படம் திரைக்கு வந்து பல மாதங்களுக்குப் பிறகு என் காதில் ஒரு செய்தி வந்து விழுந்தது. எடிட்டர் ஆர்.டி.சேகர் தூக்குப் போட்டு இறந்துவிட்டார் என்பதே அது. என்னால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. 'ப்ளே கேர்ள்ஸ்' படத்திற்காக வாங்கியிருந்த கடன்களாலும், பணத்தைத் தந்தவர்கள் உண்டாக்கிய தொந்தரவுகளாலும் மனமுடைந்து போன சேகர் தன் வீட்டின் ஒரு அறையில் தூக்குப் போட்டு தொங்கிவிட்டார் என்று கூறினார்கள்.

மனைவியையும் இரண்டு குழந்தைகளையும் அனாதையாக விட்டுவிட்டு, மரணத்தைத் தானே தேடிக் கொண்ட ஆர்.டி.சேகரின் செயல் மீது எனக்கு உடன்பாடில்லைதான். 'ப்ளே கேர்ள்ஸ்' படத்தைச் சொந்தத்தில் எடுக்காமல், வெறும் எடிட்டராக மட்டுமே இருந்திருந்தால், நிச்சயம் சேகர் இன்றும் உயிருடன் இருந்திருப்பார்.

'சில்க்'ஸ்மிதா இறந்து போனதால் கிடைத்த அனுதாபத்தாலும், மலையாளப் பட உலகில் கொடி கட்டிப் பறந்த ஷகீலா இருப்பதாலும் 'ப்ளே கேர்ள்ஸ்' இப்போது திரையிடப்படும் இடங்களிலெல்லாம் சக்கைப் போடு போட்டுக் கொண்டிருக்கிறது. அந்தப் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்கள் இப்போது நன்றாக சம்பாதித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அந்தப் படத்தைத் தயாரித்த சேகர் 'ப்ளே கேர்ள்ஸ்' படத்தின் போஸ்டர்களில் மட்டுமே இருக்கிறார்.


முன்னணி நடிகராக நினைத்தவர் முன்னணி டப்பிங் கலைஞராக ஆனார்!

சுரா

க்ரவர்த்தி- மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் இவர். அங்கு பி.ஏ. முடித்துவிட்டு, சென்னைக்கு வந்து ஃபிலிம் சேம்பர் அப்போது நடத்திய நடிப்புப் பயிற்சி கல்லூரியில் ஒரு வருடம் படித்தார் (அங்கு படித்தவர்கள்தாம் ரஜினிகாந்த், சிரஞ்சீவி போன்ற பலரும்). வெளியே வந்தவுடன் சக்ரவர்த்திக்கு 'ஒரு கோவில் இரு தீபங்கள்' என்ற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. 'மல்லிகை பதிப்பகம்' சங்கரன் தயாரித்த அந்தப் படத்தின் இயக்குநர் எஸ்.பி.முத்துராமன். பல புதுமுகங்கள் அதில் அறிமுகமானார்கள். அது நடந்தது 1978ஆம் ஆண்டில். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் இன்று வரை திரைக்கு வரவில்லை.

1979ஆம் ஆண்டில் திரைக்கு வந்த பாரதிராஜாவின் 'சிகப்பு ரோஜாக்கள்' படத்தில் இரண்டு காட்சிகளில் நடித்திருந்தார் சக்ரவர்த்தி. தொடர்ந்து ஆர்.செல்வராஜ் இயக்கிய 'பொண்ணு ஊருக்குப் புதுசு' படத்தில் வரும் 'உனக்கெனத்தானே இந்நேரமா நானும் காத்திருந்தேன்' என்ற பாடல் காட்சியில் வந்தார். சாந்தி திரையரங்கிற்கு பின்னாலிருந்த தாயார் சாஹிப் தெருவில் ஒரு பழைமையான கட்டிடத்தின் மாடியில் ஒரு சிறிய அறையில் சக்ரவர்த்தியும், திருமலைராஜன் என்ற நண்பரும் தங்கியிருந்தார்கள். அப்போது படவுலகில் வாய்ப்புகள் பெறுவதற்காகப் போராடிக் கொண்டிருந்தார் சக்ரவர்த்தி. ஒருமுறை நான் சென்னை வந்தபோது, அந்த அறைக்குச் சென்று சக்ரவர்த்தியைப் பார்த்து பேசியிருக்கிறேன்.

சில மாதங்களுக்குப் பிறகு, ‘சாவி’ வார இதழின் உதவி ஆசிரியராக எனக்கு பணி கிடைக்க, நான் சென்னைக்கு வந்தேன். நானும் சக்ரவர்த்தியும் தி.நகர் தெற்கு உஸ்மான் சாலையில் இருந்த ‘மீரான் சாஹிப் சேம்பர்’ என்ற கட்டிடத்தில் ஒரே அறையில் தங்கினோம். எங்களுடன் வேறு மூன்று நண்பர்களும் இருந்தார்கள். அப்போது சக்ரவர்த்தி நடித்த 'சரணம் ஐயப்பா' என்ற படம் திரைக்கு வந்திருந்தது. சில மாதங்களில் 'ஊமை கனவு கண்டால்' என்று அவர் நடித்த படம் திரைக்கு வந்தது. படம் சரியாக ஓடவில்லை. அப்போது நிறைய புதிய பட நிறுவனங்கள் இருத்ததால், சக்ரவர்த்தி மிகவும் பிஸியாகவே இருந்தார். விஜயகாந்தும் சக்ரவர்த்தியும் இணைந்து 'நூலறுந்த பட்டம்' என்றொரு படத்தில் நடித்தார்கள். விஜயகாந்த் கெடுத்து விட்டுப் போன ஒரு இளம் பெண்ணிற்கு சக்ரவர்த்தி வாழ்க்கை தருவது மாதிரி கதை. முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் இன்றுவரை ஏனோ மக்களைச் சந்திக்கவே இல்லை. 'ராக்காலப் பறவைகள்' என்றொரு படத்தில் சக்ரவர்த்தி நடித்தார். அதுவும் இன்று வரை திரைக்கு வரவில்லை. ரஜினிகாந்தின் தம்பியாக 'ஆறிலிருந்து அறுபது வரை' படத்திலும், ஒரு புகைப்பட கலைஞனாக 'தர்மயுத்தம்' படத்திலும் சக்ரவர்த்தி நடித்தார்.

'ரிஷிமூலம்' படத்தில் சிவாஜி- கே.ஆர்.விஜயா ஆகியோரின் மகனாக நடிக்கும் வாய்ப்பு சக்ரவர்த்திக்குக் கிடைத்தது. அந்தப் படத்தில் சக்ரவர்த்தி நன்றாக நடித்திருந்தார். படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியது. அதில் சக்ரவர்த்திக்கு நல்ல பெயர் கிடைத்தது.

கோமல் சுவாமிநாதன் எழுதிய 'செக்கு மாடுகள்' என்ற நாடகம் 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரில் படமானது. அதில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்க, சக்ரவர்த்தி இன்னொரு கதாநாயகனாக நடித்தார். 'முள் இல்லாத ரோஜா' என்றொரு படம் வந்தது. அதில் சக்ரவர்த்தி வாய் பேசாத ஊமை பாத்திரத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருந்தார். 'பிலிமாலயா' பத்திரிகையின் ஆசிரியராக இருந்த எம்.ஜி.வல்லபன் 'தைப்பொங்கல்' என்ற படத்தை இயக்கினார். அந்தப் படத்தின் கதாநாயகன்- சக்ரவர்த்தி.

1983 ஆம் ஆண்டு வாக்கில், 'கொட்டு முரசே' என்ற படத்தில் மகாகவி பாரதியாராக சக்ரவர்த்தி நடித்தார். அந்தப் படத்தைத் தயாரித்தவர் 'முகமது பின் துக்ளக்' படத்தைத் தயாரித்த மகான் என்பவர். அந்தப் படம் முற்றிலும் முடிவடைந்ததும், இந்த நிமிடம் வரை திரைக்கு வரவில்லை.

தொடர்ந்து பல படங்களில் நடித்த சக்ரவர்த்தி முன்னணி நடிகர்களில் ஒருவராக வருவார் என்று நான் எதிர்பார்த்தேன். ஏனோ அப்படியொரு விஷயம் நடக்காமலே போய்விட்டது. அவர் தன் பெற்றோருடன் சென்னையில் ஒரு வீடு வாடகைக்கு எடுத்து தங்கினார். நானும் என் இருப்பிடத்தை மாற்றினேன். இடையில் 'பேர் சொல்லும் பிள்ளை' படத்தைப் பார்த்தேன்' அதில் கமல்ஹாசனின் தம்பியாக நடித்திருந்தார். இதற்கிடையில் நடிகர் சங்கத்தில் அவருக்குத் திருமணம் நடந்தது. நான் அதற்கு சென்றிருந்தேன்.

அதற்குப் பிறகு பல மாதங்கள் ஓடிய பின் பாண்டிபஜாரில் நான் சக்ரவர்த்தியை ஒருநாள் பார்த்தேன். 'என்ன செய்கிறீர்கள்?' என்று கேட்டதற்கு 'படமொன்றை இயக்குவதற்காக முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறேன். நடிகர் பிரபுவைப் பார்த்து பேசியிருக்கிறேன். அருமையான கதை. நானே எழுதியதுதான். பிரபு கால்ஷீட் தருவதாகக் கூறியிருக்கிறார்' என்றார்.

காலம் கடந்தோடியது. சக்ரவர்த்தியின் இயக்குநர் கனவு நிறைவேறவில்லை. பத்து  வருடங்களுக்கு முன்பு நண்பர்கள் சொன்னார்கள்- சக்ரவர்த்தி இப்போது மும்பையில் இருக்கிறார் என்று. அங்கு தயாராகும் விளம்பரப் படங்களுக்கும், செய்திப் படங்களுக்கும் அவர் டப்பிங் குரல் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்று அவர்கள் கூறினார்கள்.

சில வருடங்களுக்கு முன்பு சக்ரவர்த்தி சென்னை வந்திருந்தார். என்னைப் பார்த்தார். ஒரு குறுந்தாடியை வைத்துக் கொண்டு விஞ்ஞானியைப் போல இருந்தார். ஆள் மிகவும் சுறுசுறுப்பாக இருந்தார். தானே எட்டு பாடல்களை எழுதி, இசையமைத்து ஒரு ஆல்பம் தயாரித்திருப்பதாகக் கூறினார். எஸ்.பி.பாலசுப்ரமணியம், சரண் ஆகியோரும் அதில் பாடியிருந்தார்கள். ஒரு ஒலிப்பதிவுக் கூடத்தில் எனக்கு அவர் பாடல்களைப் போட்டுக் காட்டினார். பாடல்கள் சிறப்பாக இருந்தன. சக்ரவர்த்தியின் இன்னொரு திறமையை நான் உணர்ந்தேன். 'நடிக்கும் எண்ணம் இப்போது இல்லையா?' என்று நான் அவரிடம் கேட்டேன். 'அந்த ஆசை இப்போது கொஞ்சம் கூட மனதில் இல்லை, தோழா' என்றார் சக்ரவர்த்தி.

மும்பைக்குப் போன பிறகு ஒரு நாள் தொலைபேசியில் என்னுடன் பேசினார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் இறந்ததை நினைவு கூர்ந்து, ஒரு அஞ்சலி நிகழ்ச்சியை மும்பையில் தான் நடத்தியதாகவும், அதில் மும்பையிலிருந்த நடிகை ராதா கலந்து கொண்டார் என்றும் சொன்னார் சக்ரவர்த்தி.

மும்பையில் படப்பிடிப்பு நடத்திய ரேடான் நிறுவனம் தங்களின் 'காவேரி' என்ற பெயரில் சன் டி.வி.யில் ஒளிபரப்பான தொலைக்காட்சித் தொடரில் சக்ரவர்த்தியை வில்லன் வேடத்தில் நடிக்கச் செய்திருந்தனர். அந்தத் தொடரில் சக்ரவர்த்தி நன்றாக நடித்திருந்ததாகச் சொன்னார்கள்.

மும்பையிலிருந்து என்னுடன் அவ்வப்போது தொலைபேசியில் தொடர்பு கொண்டு பல விஷயங்களையும் பற்றி உரையாடுவார் சக்ரவர்த்தி. மும்பையில் சான்டாக்ரூஸ் பகுதியில் தனக்கு சொந்தமான வீட்டில் தன் மனைவியுடனும் தந்தையுடனும் இரண்டு மகன்களுடனும் வாழ்ந்து கொண்டிருக்கும் அவர், இப்போது விளம்பரப் படங்களுக்கு தமிழ் குரல் கொடுப்பதில் மிகவும் பிஸியாக இருக்கிறார்.

கடந்த 15 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான விளம்பரப் படங்களுக்கு தமிழில் குரல் தந்ததன் மூலம் சக்ரவர்த்தி, மும்பை விளம்பர உலகின் ஒரு முன்னணி இடத்தை வகித்துக்கொண்டிருக்கிறார். ஒரு நடிகராக அவரால் ஒளி வீச முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஒரு நண்பன் என்ற முறையில் எனக்கு பல வருடங்களாக இருந்தது. ஆனால், இப்போது ஒரு முன்னணி டப்பிங் கலைஞராக அவர் இருப்பதைப் பார்த்து நான் மிகவும் சந்தோஷப்படுகிறேன்.

‘நாம் தேடியது கிடைக்காமற் போனால், நமக்கு எது கிடைத்திருக்கிறதோ அதில் நம் சந்தோஷத்தை நாம் தேடிக்கொள்ள வேண்டும்’ என்று பொதுவாக கூறுவார்கள். இந்த வார்த்தைகளுக்கு ஏற்ற வண்ணம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, அதில் வெற்றி பெற்றிருக்கும் என் இனிய நண்பர் சக்ரவர்த்தியை நினைத்து உண்மையிலேயே நான் மிகவும் பெருமைப்படுகிறேன்.


விஜயகாந்தும், எஸ்.ஏ.சந்திரசேகரும் உயர்ந்த சிம்மாசனத்தில்!
அவர்களை உருவாக்கியவர் மண்ணுக்குக் கீழே!

சுரா

டலூர் சிதம்பரம்- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் தயாரிப்பாளர் இவர். 'சட்டம் ஒரு இருட்டறை' திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்தபோது, அவர் எனக்கு அறிமுகம் ஆனார். திருச்சிக்கு அருகிலிருந்த ஒரு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட சிதம்பரம், வடலூர் சேஷசாயி தொழிற்சாலையில் பணியாற்றிக் கொண்டிருந்த சுமார் மூவாயிரம் தொழிலாளர்களின் சங்கத்திற்குத் தலைவராக இருந்தார்.

தொழிற்சங்கத் தலைவராக இருந்த வடலூர் சிதம்பரம், 1980-ஆம் ஆண்டு ஒரு நாள் சென்னை அண்ணாசாலையில் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். ‘நான் குடித்துக் கொண்டே இருப்பேன்’ என்ற திரைப்படத்திற்காக ஒரு விளம்பர பேனர் சர்ச் பார்க் பள்ளிக்கூடத்திற்கு முன்னால் வைக்கப்பட்டிருக்க, அதை சிதம்பரம் பார்த்திருக்கிறார். அதில் ‘எழுதி, இயக்கி, தயாரித்தவர் கடலூர் புருஷோத்தமன்’ என்று எழுதப்பட்டிருந்திருக்கிறது. அதை பார்த்ததும், அதற்கு பதிலாக ‘வடலூர் சிதம்பரம்’ என்ற பெயர் இருந்தால் எப்படியிருக்கும் என்று சிதம்பரம் மனதில் கற்பனை பண்ணிப் பார்த்திருக்கிறார்.

அவ்வளவுதான்.... அடுத்த நாளே தான் திரைப்படம் தயாரித்தே ஆகவேண்டும் என்ற முடிவுக்கு சிதம்பரம் வந்துவிட்டார். சில நாட்கள் கழித்து, சென்னைக்கு வந்த சிதம்பரத்திற்கு ஒரு நண்பர் மூலம் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் அறிமுகமாகியிருக்கிறார். அதற்கு முன்பு 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' என்ற பெயரில் ஒரு படு தோல்விப் படத்தை இயக்கிய சந்திரசேகர், கைவசம் படமெதுவும் இல்லாமல் வெறுமனே வீட்டில் இருந்திருக்கிறார். திரையுலகம் சம்பந்தப்பட்ட எந்த விஷயங்களையும் தெரிந்திராத சிதம்பரம், நண்பர் சொன்னார் என்பதற்காக அடுத்தகணமே தான் தயாரிக்க இருந்த படத்திற்கு எஸ்.ஏ.சந்திரசேகரை இயக்குநராக ஒப்பந்தம் செய்துவிட்டார். அப்படி உருவான படம்தான் 'சட்டம் ஒரு இருட்டறை.'

சட்டத்தில் இருக்கும் ஓட்டைகளை பயன்படுத்தி, பல குற்றச் செயல்களையும் செய்யும் கதாநாயகன், எப்படி அவற்றிலிருந்து தப்பிக்கிறான் என்பது படத்தின் கதை. ஏற்கனவே திரைக்கு வந்த சில படங்களில் கதாநாயகனாக நடித்திருந்த விஜயகாந்த், அப்படத்தின் கதாநாயகனாக ஒப்பந்தம் செய்யப்பட்டார். படம் மூவாயிரம் அடி படமாக்கப்பட்டுவிட்ட நிலையில், சில விநியோகஸ்தர்களும், மீடியேட்டர்கள் சிலரும் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் ஒரு பயத்தை உண்டாக்கியிருக்கிறார்கள். 'விஜயகாந்த் நடித்து திரைக்கு வந்த எந்தப் படமும் இதுவரை ஓடியதில்லை. அவரை வைத்து படமெடுத்தால் படம் எப்படி ஓடும்?' என்று அவர்கள் கூற, குழம்பிப் போய்விட்டார் எஸ்.ஏ.சந்திரசேகர். அடுத்த நிமிடமே தயாரிப்பாளர் சிதம்பரத்தை அழைத்த சந்திரசேகர், 'சார்... நான் சொல்றேன்னு தப்பா நினைக்காதீங்க. படம் 3000 அடிதான் படமாகி இருக்கு. எல்லாரும் விஜயகாந்தைப் போட்டால் படம் ஓடாதுன்னு சொல்றாங்க. நான் டைரக்ட் பண்ணின 'அவள் ஒரு பச்சைக் குழந்தை' படமே படுதோல்விப் படமா அமைஞ்சிருச்சு. இதுவும் ஓடாம போச்சுன்னா, என் வாழ்க்கையே பாழாயிடும். இது வரை செலவான பணத்தைப் பற்றி கவலைப்படாதீங்க. விஜயகாந்தைப் படத்திலிருந்து தூக்கிடுவோம். இப்போ 'ஒரு தலை ராகம்'னு ஒரு படம் பிரமாதமா ஓடிக்கிட்டு இருக்கு. அதுல ரவீந்தர்னு ஒரு நடிகர் ஏ ஒன்னா நடிச்சிருக்கார்- அவரை நாம கதாநாயகனாக போட்டு படமெடுப்போம். எதிர்காலத்துல அவர் ரஜினிகாந்த் மாதிரி வருவார்னு என் மனசுல படுது' என்று கூறியிருக்கிறார். அதற்கு சிதம்பரம் ஒத்துக்கொள்ளவில்லை. 'விஜயகாந்த்தைப் பற்றி மற்றவர்கள் ஆயிரம் சொல்லட்டும் சார். அடிப்படையில் அவர் ஒரு தமிழர். நல்லா டான்ஸ் ஆடுறார். சண்டைக் காட்சிகள்ல பிரமாதமா நடிக்கிறார். இன்னும் சொல்லப் போனால், நம்ம படத்துல அருமையான கதை இருக்கு. தமிழ்ல இதுக்கு முன்னாடி வராத கதை. இந்தக் கதைக்காவே படம் மிகவும் சிறப்பாக ஓடும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு. விநியோகஸ்தர்கள், இந்தப் படத்தை அவங்க விருப்பப்பட்டால் வாங்கட்டும். வாங்காத ஏரியாக்களுக்கு நானே சொந்தமா படத்தை ரிலீஸ் பண்றேன்' என்று திடமான குரலில் கூறியிருக்கிறார் சிதம்பரம். இந்த விஷயத்தை விஜயகாந்த்தின் அப்போதைய அலுவலகமாக தி.நகர் ராஜாபாதர் தெருவில் இருந்த ரோகிணி ஹோட்டல் அறையின் வாசலில் அமர்ந்து விஜயகாந்த், இப்ராகிம் இராவுத்தர், வடலூர் சிதம்பரம் ஆகியோர் பேசிக் கொண்டிருந்தபோது நான் அருகில் அமர்ந்திருந்து கேட்டேன்.

'சட்டம் ஒரு இருட்டறை' தயாரிப்பில் இருந்தபோது, ஆங்கிலம் தெரியாத சிதம்பரத்தை தந்திரமாக ஏமாற்றி, அந்தக் கதை வேற்று மொழிகளில் படமாகும்போது, அந்த உரிமை முழுக்க முழுக்க தனக்கு மட்டுமே என்றும், படத் தயாரிப்பாளர் சிதம்பரத்திற்கு அதில் சிறிதளவு கூட பங்கு கிடையாது என்றும் ஒரு ஒப்பந்தத்தைப் போட்டு, சிதம்பரத்தின் கையெழுத்தை எஸ்.ஏ.சந்திரசேகர் வாங்கியிருக்கிறார். ஒப்பந்தத்தின் மதிப்பு தெரியாமல் சிதம்பரமும் கையெழுத்துப் போட்டுக் கொடுத்திருக்கிறார். படம் திரைக்கு வந்து 100 நாட்கள் ஓடியதைத் தொடர்ந்து இந்தி, கன்னடம், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் உரிமையை வாங்கி, படங்களைத் தயாரிக்க தொடங்கிவிட்டார்கள். கன்னட, தெலுங்கு படங்களை எஸ்.ஏ.சந்திரசேகரே இயக்கியிருக்கிறார். ‘சட்டம் ஒரு இருட்டறை’ கதையை வேற்று மொழிகளுக்கு விற்றதன் மூலம் பல லட்சம் ரூபாய்களைச் சம்பாதித்திருக்கிறார் சந்திரசேகர். அப்போதுதான் நயவஞ்சகமாக எஸ்.ஏ.சந்திரசேகர் தன்னை ஏமாற்றிய விஷயத்தையே வடலூர் சிதம்பரம் புரிந்து கொண்டிருக்கிறார். தன்னுடைய படத்தை யார் யாரோ வேற்று மொழிகளில் எடுத்துக் கொண்டிருக்க, அதற்காக ஒரு பைசா கூட கிடைக்காமல் தான் எஸ்.ஏ.சந்திரசேகரின் குள்ளநரித்தனத்தால் ஏமாற்றப்பட்டு விட்டதை மனம் நொந்து பல முறை என்னிடம் கூறி கண்ணீர் விட்டிருக்கிறார் சிதம்பரம்.

‘சட்டம் ஒரு இருட்டறை’ படத்தைத் தொடர்ந்து, கோமல்சுவாமிநாதன் 'செக்கு மாடுகள்' என்ற பெயரில் எழுதிய நாடகத்தை 'சாதிக்கொரு நீதி' என்ற பெயரில் வடலூர் சிதம்பரம் திரைப்படமாக தயாரித்தார். 'சட்டம் ஒரு இருட்டறை' படத்தின் மூலம் தனக்கு வாழ்வு தந்த தயாரிப்பாளர் என்பதை மனதில் வைத்து, பணமே வாங்காமல் அந்தப் படத்தில் விஜயகாந்த் நடித்தார்.

தொடர்ந்து விஜயசாந்தியைக் கதாநாயகியாக வைத்து கே.விஜயன் இயக்கத்தில் 'நீறு பூத்த நெருப்பு' என்ற பெயரில் ஒரு படத்தை வடலூர் சிதம்பரம் தயாரித்தார். படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதில் சிதம்பரம் பல லட்சங்களை இழந்தார்.

அடுத்து மன்சூரலிகானைக் கதாநாயகனாகப் போட்டு 'ஜனா' என்ற படத்தை சிதம்பரம் தயாரித்தார். எட்டாயிரம் அடி படமாக்கப்பட்டுவிட்ட அந்தப் படம் பல பிரச்சினைகளால், அப்படியே நின்றுவிட்டது.

அதற்குப் பிறகு வடலூர் சிதம்பரம் படமெதுவும் எடுக்கவில்லை. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு அவருடைய 13 வயது மகள் எதிர்பாராத மரணத்தைத் தழுவ, மனக்கவலையில் மூழ்கிய சிதம்பரம் தன் மனைவி, மகனுடன் வளசரவாக்கத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து அதில் அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தார்.

அந்தச் சமயத்தில் ஒரு நாள் அவரை நான் தி.நகரில் பார்த்தேன். நரைத்துப்போன தாடியுடன் காட்சியளித்த சிதம்பரத்தைப் பார்த்தபோது, எனக்கு உண்டான கவலைக்கு அளவே இல்லை. இதற்கிடையில், சிதம்பரம் தொழிற்சங்கத்தின் தலைவராக இருந்த சேஷசாயி தொழிற்சாலை அதன் உரிமையாளர்களால் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டது. அங்கு பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலை இல்லாமல் வறுமையில் வாட ஆரம்பித்தார்கள். பலரின் குடும்பம் நடுத்தெருவிற்கு வந்தது. பலர் தற்கொலை செய்துக் கொண்டு மரணத்தைத் தழுவினர்.

இந்தச் சூழ்நிலையில் அந்த தொழிலாளர்களின் குடும்பத்திற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்த வடலூர் சிதம்பரம், அதற்காக ஒரு திரைப்படத்தை தயாரித்து அதன் மூலம் கிடைக்கும் பணத்தைக் கொண்டு, அந்தக் குடும்பங்களுக்கு உதவ வேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார். அதைத் தொடர்ந்து கடந்த கால சம்பவங்கள் அனைத்தையும் மறந்துவிட்டு, எஸ்.ஏ.சந்திரசேகரிடம் அவருடைய மகன் விஜய்யின் கால்ஷீட் கேட்டு சிதம்பரம் சென்றிருக்கிறார். ‘விஜய் படங்களில் நடிப்பதற்கு கால்ஷீட் தருவதற்கும், எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னால் இந்த விஷயத்தில் எதுவும் செய்ய முடியாது’ என்று கூறியிருக்கிறார் சந்திரசேகர். அந்த காலகட்டத்திலேயே அதே விஷயத்திற்காக விஜயகாந்தையும் சிதம்பரம் போய் பார்த்திருக்கிறார். அவரும் கையை விரித்துவிட்டார். தி.நகரில் நான் சிதம்பரத்தைச் சந்தித்தபோது, அவர் கூறி நான் தெரிந்து கொண்ட தகவல்களே இவை.

அதற்குப் பிறகு வருடங்கள் பல கடந்தோடிவிட்டன. எதிர்பாராத வகையில் வடலூரைச் சேர்ந்த ஒருவரை ஒரு வருடத்திற்கு முன்பு சென்னையில் சந்தித்தேன். அவரிடம் வடலூர் சிதம்பரத்தைப் பற்றி கேட்டதற்கு, அவர் கூறிய பதில் என்னை அதிர்ச்சியடைய வைத்துவிட்டது. திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு சில மாதங்களுக்கு முன்பே சிதம்பரம் மரணத்தைத் தழுவி விட்டார் என்பதையும், அவருடைய உடல் அடக்கம் சொந்த கிராமத்தில் நடந்தது என்பதையும் அவர் கூறி நான் தெரிந்து கொண்டேன். அந்தச் செய்தியை கேள்விப்பட்டதும், சில நிமிடங்களுக்கு என்னால் எதுவுமே பேச முடியவில்லை.

வடலூர் சிதம்பரத்தால் வளர்ந்த எஸ்.ஏ.சந்திரசேகரும், விஜயகாந்தும் இன்று உயர்ந்த நிலையில் இருக்கிறார்கள். தங்களின் வளர்ச்சிக்கு மூல காரணமாக இருந்த அந்த மனிதரைச் சற்று கைகொடுத்து வாழ்க்கையில்

தூக்கிவிட்டிருக்கலாம் என்று அவர்கள் இருவரும் நினைத்திருந்தால், சிதம்பரமும் இன்று நல்ல நிலையில் இருந்திருப்பார். ஆனால், இப்படிப்பட்ட விஷயங்களையெல்லாம் படவுலகில் இருப்பவர்களிடம் எதிர்பார்க்கக்கூடாதோ?


வித்யாசாகரை அறிமுகப்படுத்திய இயக்குநர் தெருக்களில் அலைந்தார்!

சுரா

முருகானந்தம்- ராம்கி, ரம்யாகிருஷ்ணன் இணைந்து நடித்த 'புதிய சரித்திரம்' என்ற படத்தின் இயக்குனர் இவர். அந்தப் படத்தின் அலுவலகம் சாலிகிராமம் கலைஞர் கருணாநிதி சாலையில் இருந்தது. என்னை அந்தப் படத்திற்கு மக்கள் தொடர்பாளராகப் பணியாற்ற வேண்டும் என்று முருகானந்தம் அழைத்திருந்தார். இது நடந்தது அனேகமாக 1991 ஆம் ஆண்டுவாக்கில் நான் அப்போதுதான் முருகானந்தத்தை நேரில் பார்க்கிறேன்.

குள்ளமான தோற்றம்- பருமனான உடம்பு- வயது அப்போது சுமார் நாற்பது இருக்கும்- இலேசாக நரை விழுந்த முடி- நிர்மலமான சிரிப்பு- இதுதான் முருகானந்தம். அடையாறு திரைப்படக் கல்லூரியில் இயக்குனர் பயிற்சி பெற்றவர் அவர்.

காரைக்குடி பக்கம் ஏதோ ஒரு ஊரைச் சேர்ந்த முருகானந்தத்திற்கு திருமணம் ஆகிவிட்டிருந்தது. மனைவி, குழந்தைகள் எல்லோரையும் ஊரில் விட்டுவிட்டு, படவுலகில் ஏதாவது சாதனை படைக்க வேண்டும் என்று சென்னையைத் தேடி வந்த அவருக்கு பலவித போராட்டங்களுக்குப் பிறகு அந்தப் பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ராபர்ட்- ராஜசேகர் இரட்டையர்களில் ஒருவரான ராபர்ட் அந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவர். ராபர்ட்டும் முருகானந்தமும் நெருங்கிய நண்பர்கள். இருவரும் ஒன்றாக திரைப்படக் கல்லூரியில் படித்தவர்கள்.

படத்திற்காகப் போடப்பட்ட அலுவலகத்திலேயே முருகானந்தம் தங்கிக் கொண்டிருந்தார். படப்பிடிப்பிற்குத் தேவைப்படும் பணத்திற்காக ராபர்ட் இங்கும் அங்கும் கையில் ப்ரீஃப்கேஸை வைத்துக் கொண்டு அலைந்து கொண்டிருப்பார். அலுவலகத்தின் ஒரு அறையில் நாற்காலியைப் போட்டு அமர்ந்து கொண்டு குமுதத்தையோ, ஆனந்த விகடனையோ படித்துக் கொண்டிருப்பார் முருகானந்தம். இப்போது படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் எழில் அப்படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். எந்தவித டென்ஷனும் இல்லாமல் நிதானமாக எந்தக் காரியத்தையும் செய்து கொண்டிருக்கும் முருகானந்தத்தை நான் வியப்புடன் பார்த்து ரசிப்பேன். வானமே தலை மேல் வந்து விழுந்தால் கூட, முருகானந்தம் கொஞ்சம் கூட அதிர்ச்சி அடையமாட்டார். அதுதான் அவரின் இயற்கை குணம்.

ராம்கி சம்பந்தப்பட்ட சண்டைக் காட்சி ஒன்றை தி.நகர் வடக்கு போக் சாலையில் புதிதாகக் கட்டிக் கொண்டிருந்த ஒரு காம்ப்ளெக்ஸில் படமாக்கினார்கள். உள்ளே படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்க, வெளியே ஜாலியாக நின்று புகை பிடித்துக் கொண்டிருந்தார் முருகானந்தம். ''என்னங்க... ஷூட்டிங் உள்ளே நடந்துக்கிட்டு இருக்கு. படத்தோட டைரக்டரான நீங்க இங்கே நின்னுக்கிட்டு இருக்கீங்க!'' என்று நான் கேட்க, அவர் ''எனக்கு அங்கே என்ன வேலை? எல்லாத்தையும் ராபர்ட்டே பார்த்துக்குறான். என் ஃபிரண்ட்தானே அவன்! அவனே எல்லாத்தையும் செய்யட்டும்னு விட்டுட்டேன்!'' என்றார்- எந்தவித பதட்டமும் இல்லாமல் நிதானமான குரலில்.

''மனைவியையும், குழந்தைகளையும் ஊர்ல விட்டுட்டு, நீங்க மட்டும் ஏன் இங்கே இருக்கீங்க? அவர்களையும் இங்கே அழைச்சிட்டு வந்துரலாமே! ஹோட்டல்ல சாப்பிட்டுக்கிட்டு இருக்குறதைவிட, வீட்ல சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா இருக்கலாமே!'' என்றேன். அதற்கு முருகானந்தம், ''நானும் அதை யோசிக்காம இல்ல சார்... ஆனா, இப்ப சிரமப்பட்டு இந்தப் படத்தை எடுத்துக்கிட்டு இருக்கோம். இப்பவே படம் ஆரம்பிச்சு ஒரு வருடத்துக்கு மேல ஆகுது. ராபர்ட்தான் வெளியே இருந்து ஃபைனான்ஸ் வாங்கி படத்துல போட்டிருக்கான். இப்ப குடும்பத்தை இங்கே கொண்டுவர்றதா இருந்தா வீடு பார்க்கணும். வீட்டுக்கு அட்வான்ஸ், வாடகைன்னு ஏகப்பட்ட பிரச்சினை. குழந்தைகளைப் படிக்க வைக்கணும். அவங்களுக்கு ஃபீஸ், துணிமணின்னு ஏகப்பட்ட பணம் தேவைப்படும். இந்தப் படம் முடியிற வரை இந்த விஷயங்களை நம்மால கவனிக்க முடியாது. இந்தப் படத்தை ரிலீஸ் பண்ணிட்டு, அதுக்குப் பிறகுதான் மனைவி, குழந்தைகளை மெட்ராஸுக்கு கொண்டு வரணும்னு நினைக்கிறேன்'' என்றார்.

'புதிய சரித்திரம்' படம் முடிவடைந்து பலவித சிரமங்களுக்குப் பிறகு திரைக்கு வந்தது. 'டைரக்ஷன்' என்று முருகானந்தத்தின் பெயரும், 'டைரக்ஷன் மேற்பார்வை' என்று ராபர்ட்டின் பெயரும் படத்தின் டைட்டில் கார்டில் வந்தது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், இப்போது மிகவும் பிஸியான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கும் வித்யாசாகர் அந்தப் படத்தில்தான் முதல் முறையாக இசையமைப்பாளராக அறிமுகமானார். படம் சுமாராகத்தான் ஓடியது. ராபர்ட் வெளியே படத்திற்காக நிறைய பணம் வாங்கியிருந்தார் (யூகி சேதுவின் தந்தை ஜி.கோபாலகிருஷ்ணன் மூலமாக). படம் திரைக்கு வந்ததே தன்னைப் பொறுத்தவரை ஒரு சாதனைதான் என்று நிம்மதியானார் முருகானந்தம். ஆனால், ராபர்ட்டோ பல லட்சங்களுக்குக் கடனாளியாகி மனநிம்மதியில்லாமல் அலைந்து கொண்டிருந்தார்.

முருகானந்தம் அடுத்த படத்தைத் தயாரிக்க ஆள் கிடைக்காதா என்று சல்லடை போட்டு தமிழகமெங்கும் அலைந்து கொண்டிருந்தார். அவ்வப்போது ஏதாவதொரு சாலையில் முருகானந்தத்தை நான் பார்ப்பேன். எதிரே கையில் ஒரு டைரியை வைத்துக் கொண்டு நடந்து வந்து கொண்டிருப்பார். 'புதிய சரித்திரம்' திரைக்கு வந்தவுடன், அந்தப் படத்திற்காகப் போடப்பட்டிருந்த அலுவலகம் காலி செய்யப்பட்டுவிட்டதால், முருகானந்தம் வேறு எங்கோ அறை எடுத்தோ, அல்லது சொந்தக்காரர்கள் வீட்டிலோ தங்கியிருந்தார். எங்கு வைத்துப் பார்த்தாலும், 'ஒரு பார்ட்டிக்கிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். அனேகமாக சீக்கிரம் ஒரு முடிவுக்கு வந்திடும். எல்லாம் ஃபைனல் ஆயிடுச்சுன்னா, வேலைகளை ஆரம்பிச்சிட வேண்டியதுதான். கூடிய சீக்கிரம் உங்களை நான் தொடர்பு கொள்கிறேன்'' என்பார்.

'புதிய சரித்திரம்' திரைக்கு வந்து பல மாதங்களுக்குப் பிறகு, திடீரென்று ஒரு நாள் எனக்கு முருகானந்தத்திடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. 'சாலிகிராமத்துல ஆபீஸ் போட்டாச்சு. சரத்குமாரை வச்சு படம் பண்றதா இருக்கு. இது விஷயமா நான் அவரைப் பார்த்து பேசுறதுக்கு ஏற்பாடுகள் பண்ணிக்கிட்டு இருக்கேன். நீங்க நாளைக்கு அலுவலகத்துக்கு வாங்க. மீதி விஷயங்களை அங்கே பேசிக்கலாம்'' என்றார் முருகானந்தம்.

மறுநாள் அந்த அலுவலகத்திற்குப் போனேன். அலுவலகம் பெரிதாக, புதியதாக, பந்தாவாக இருந்தது. முருகானந்தத்தின் பேச்சிலிருந்து அவர் பல மாதங்களாகக் கஷ்டப்பட்டு அந்த படத் தயாரிப்பாளர்களைப் பிடித்திருக்கிறார் என்பது தெரிந்தது. இவர் படத்தை இயக்க திட்டமிட்டிருந்த நேரத்தில் சரத்குமார் மிகவும் பிஸியாக இருந்தார். அவர் கைவசம் ஏகப்பட்ட படங்கள் இருந்தன. இருந்தாலும், தயாரிப்பாளர்கள் சரத்குமார்தான் வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருந்தார்கள். கதை என்ன என்று கேட்டேன். முருகானந்தம் சொன்னார். கதை நன்றாகவே இருந்தது. சரத்குமாருக்கு முற்றிலும் மாறுபட்ட பாத்திரம். ''சரத்தை எப்படியும் கஷ்டப்பட்டு பிடிங்க. கதை நல்லா இருக்கு. அவரோட கேரக்டரும் மிகவும் வித்தியாசமா இருக்கு. ஆனா, விஷயம் என்னன்னா... இந்த வருட கடைசி வரை அவர் நிறைய படங்களை நடிக்க ஒத்துக் கொண்டுள்ளார். உங்களுக்கு எப்படி அவரோட டேட்ஸ் கிடைக்கும் என்பதுதான் தெரியல. இருந்தாலும் முயற்சி பண்ணிப் பாருங்க'' என்றேன் நான். அங்கேதான் அவருக்கு சோதனை காத்திருந்தது.


பத்து  நாட்கள் கழித்து ஒரு நாள் அந்தப் படத்தின் அலுவலகத்தில் நல்ல நாள் என்று ‘ஆபீஸ் பூஜை’ போட்டார்கள். தயாரிப்பாளர்கள் அனைவரும் பூஜையில் கலந்து கொண்டார்கள். தயாரிப்பாளர்களில் ஒருவரே இசையமைப்பாளர். அவர் தனியார் தொழிற்சாலையில் உயர் அதிகாரியாக இருப்பவர். அவரை எனக்கு முருகானந்தம் அறிமுகப்படுத்தி வைத்தார். அவர் வேலை பார்க்கும் கம்பெனியில் இருக்கும் மனமகிழ்மன்றம் நடத்தும் விழாக்களில் அவர்தான் இசையமைப்பாராம். இந்த ஒரு விஷயம் போதாதா என்று அவரையே படத்தின் இசையமைப்பாளராக்கி விட்டார் முருகானந்தம். ஆயிரம் பொய் சொல்லி ஒரு திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்பார்கள். ஒரு படத்தை இயக்க வேண்டும் என்றால், பல மனிதர்களையும் அனுசரித்துப் போய்த்தான் ஆக வேண்டும். தயாரிப்பாளரே கதை எழுதுவார், அவரே இசையமைப்பார், ஏன்- ஒளிப்பதிவு கூட செய்வார். எல்லாவற்றுக்கும் ஒரு இயக்குனர் தன் தலையை ஆட்டி ஒத்துக் கொள்ள வேண்டும். முருகானந்தம் அதைத்தான் செய்திருந்தார். நாய் வேடம் போட்டால் குரைத்துத்தானே ஆக வேண்டும்! பூஜையில் கலந்து கொண்டபோதே ஒருவருக்கொருவர் ஒட்டுதலே இல்லாமல் தனித்தனி தீவுகளாக இருந்தார்கள். நான் அதைப் பார்த்தபோதே, இந்தப் படம் வளர்வதற்கு வாய்ப்பு இருக்குமா என்று சந்தேகப்பட்டேன். முருகானந்தம் ஏதோ ஆர்வக் கோளாறில் காரியங்களைச் செய்து கொண்டிருக்கிறார், இந்தப் படம் படப்பிடிப்பு அளவிற்குப் போவதற்கு வாய்ப்பில்லை என்றே நான் நினைத்தேன்.

நான் எண்ணியது மாதிரிதான் நடந்தது. அந்தப் படம் எடுக்கப்படவில்லை. சில மாதங்களில் அதற்கென எடுக்கப்பட்டிருந்த அலுவலகம் காலி செய்யப்பட்டது. மீண்டும் டைரியுடன் சாலைகளில் தென்பட ஆரம்பித்தார் முருகானந்தம். படத்திற்காக முயற்சி பண்ணுகிறேன் என்று அதிகமாக அலைந்ததாலோ என்னவோ, அவரின் முகம் கறுத்துப் போய்விட்டது. அவரின் மனக் கவலை முகத்தில் தெரிந்தது. வெயிலில் அலைந்ததால், அவரின் ஆடைகள் பல நேரங்களில் மிகவும் அழுக்கடைந்து காணப்படும். இவை எல்லாவற்றையும் மீறி- என்னை எங்கு பார்த்தாலும், 'எப்படி சார் இருக்கீங்க?' என்று பளீர் சிரிப்புடன் நலம் விசாரிப்பார் முருகானந்தம். இவ்வளவு போராட்டங்களையும், முயற்சிகளையும், கவலைகளையும், ஏமாற்றங்களையும் மனதிற்குள் வைத்துக் கொண்டு எப்படி இந்த மனிதரால் இப்படி நிர்மலமாகச் சிரிக்க முடிகிறது என்று நான் ஆச்சரியப்படுவேன்.

பல மாதங்களுக்குப் பிறகு ஒரு நாள் அவரை மேற்கு மாம்பலம் ஆர்ய கவுடா சாலையில் பார்த்தேன். ''சென்னைத் தொலைக்காட்சிக்காக ஒரு டி.வி. சீரியல் பண்ண முயற்சி செஞ்சிக்கிட்டு இருக்கேன். படத்தைத் தயாரிக்க, சரியான தயாரிப்பாளர்கள் கிடைக்கல. படச் செலவு ரொம்பவும் அதிகமாயிச்சு. 'புதிய சரித்திரம்' படம் பண்ணின காலத்துக்கும், இப்போ இருக்குறதுக்கும் ரொம்பவும் வித்தியாசம் இருக்கு. அதனால இப்போதைக்கு டி.வி. சீரியல் ஒண்ணை டைரக்ட் பண்ணுவோம்,  நேரம் வர்றப்போ படத்தை இயக்குவோம்ன்ற முடிவுக்கு நான் வந்துட்டேன். தூர்தர்ஷன்ல இது விஷயமா பேசிக்கிட்டு இருக்கேன். ஒரு கதை ஏற்கனவே வேறொரு ஆளுக்கு ஓகே ஆகியிருக்குது. அவங்க இதைப் பண்ண விரும்பல. நல்ல ஒரு விலைக்கு விற்பதற்குத் தயாரா இருக்காங்க. அதுக்குத்தான் ஒரு பார்ட்டியைத் தேடி அலைஞ்சிக்கிட்டு இருக்கேன். ஆள் கிடைச்சாச்சின்னா, டி.வி. சீரியல் வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்'' என்றார் முருகானந்தம்.

இந்தச் சந்திப்பு நடைபெற்று இரண்டு மாதங்களுக்குப் பிறகு, என் அலுவலகத்திற்கு வந்து என்னை அவர் சந்தித்தார். தொலைக்காட்சித் தொடர்களில் நடிக்கும் நடிகர்- நடிகைகள் வாங்கும் சம்பளம், தயாரிப்புச் செலவு, டெக்னீஷியன்களின் சம்பளம், விளம்பர நிறுவனங்களின் விவரங்கள் போன்றவற்றை என்னிடம் அவர் தெரிந்து கொண்டு போனார். அதுதான் நான் முருகானந்தத்தைப் பார்த்த கடைசி முறை. அதற்குப் பிறகு முருகானந்தம் என் கண்களில் எங்கும் படவே இல்லை.

ஒரு நீண்ட இடைவெளிக்குப் பிறகு, எதேச்சையாக நான் ஒரு நண்பரிடம் பேசிக் கொண்டிருந்தபோது அவர் சொன்னார்- முருகானந்தம் மரணத்தைத் தழுவிவிட்டார் என்று! என்னால் அந்தச் செய்தியை நம்பவே முடியவில்லை. 'நிச்சயமா இருக்காது. வதந்தியா இருக்கும்' என்றேன் நான். 'இல்லை சார்... அவர் இறந்தது உண்மைதான்' என்றார் அவர் உறுதியான குரலில்.

இது நடந்து சில மாதங்களுக்குப் பிறகு, இயக்குநர் ராபர்ட்டை நான் காமராஜர் அரங்கத்தில் ஒரு நிகழ்ச்சியின்போது சந்தித்தேன். அவரிடம் முருகானந்தத்தைப் பற்றி நான் கேள்விப்பட்ட விஷயத்தைச் சொன்னேன். அவர் ‘நீங்கள் கேள்விப்பட்ட தகவல் உண்மைதான்' என்றார். வருடக்கணக்கில் வெயிலிலும் மழையிலும் தயாரிப்பாளர்களைத் தேடி அலைந்ததில் முருகானந்தத்தின் உடல் நலம் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பிறகு, பல நண்பர்களும் சொல்லி எப்படியோ முருகானந்தம் தன் மனைவி, குழந்தைகளை சென்னைக்கு வரவழைத்திருக்கிறார். அவர்களுக்கு ஒரு வீட்டைப் பார்த்து வைத்து, குடும்ப வாழ்க்கையை சென்னையில் தொடர்ந்திருக்கிறார். விதி அவரை மகிழ்ச்சி நிறைந்த குடும்ப வாழ்க்கையை வாழ விடவில்லை. 'ஹார்ட் அட்டாக்' வடிவத்தில் வந்து அவரை இந்த உலகத்திலிருந்தே எடுத்துக் கொண்டு போய்விட்டது.

படத்தை இயக்க வேண்டும் என்ற வெறியுடன், கஜினி முகமதுவைப்போல சிறிதும் முயற்சி தளராமல் கடுமையான வெயிலிலும், அடாத மழையிலும், கொடுமையான குளிரிலும் சென்னை நகரத்தின் சாலைகளில் டைரியைக் கையில் வைத்துக் கொண்டு நம்பிக்கையுடன் அலைந்து கொண்டிருந்த முருகானந்ததத்தின் அந்த வெள்ளைச் சிரிப்பையும், கள்ளம் கபடமில்லாத குழந்தைத்தனம் குடி கொண்டிருக்கும் முகத்தையும் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும், என்னால் மறக்கத்தான் முடியுமா?


பிரபுவை கோழிப்பண்ணை அதிபராக்கிய இலக்கியவாதி!

சுரா

ங்கைகொண்டான்- இலக்கியவாதிகள் மத்தியில் பிரபலமான பெயர் இது. 'வானம்பாடி' கவிஞர்கள் கூட்டத்தில் அவரும் ஒருவர். அவர் எனக்கு அறிமுகமானது 1981ஆம் ஆண்டில். அப்போது அவர் 'கல்லுக்குள் ஈரம்' ராமநாதனைக் கதாநாயகனாகப் போட்டு 'கண்ணீரில் எழுதாதே' என்ற பெயரில் படமொன்றை இயக்கிக் கொண்டிருந்தார். அந்தப் படத்தின் கதாநாயகியாக அப்போது பிஸியாக இருந்த வனிதா நடிகை நடித்தார். 'கண்ணீரில் எழுதாதே' திரைக்கு வந்து, மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

வருடங்கள் கடந்தோடின. 1984ஆம் ஆண்டாக இருக்குமென்ற நினைக்கிறேன். கங்கைகொண்டானும், நானும் மீண்டும் சந்தித்தோம். 'பிரியமுடன் பிரபு' என்ற பெயரில் பிரபுவைக் கதாநாயகனாகப் போட்டு ஒரு படத்தை இயக்க இருப்பதாகச் சொன்னார். 'கோழி கூவுது' படம் திரைக்கு வந்து மிகப் பெரிய வெற்றிப் படமாக அமைந்ததன் காரணமாக- பிரபு நிறைய படங்களில் நடித்துக்கொண்டிருந்தார். பிரபுவின் கால்ஷீட் கங்கைகொண்டானுக்கு எப்படி கிடைத்தது என்று உண்மையிலேயே நான் ஆச்சரியப்பட்டேன். பிரபலமான பல இயக்குநர்களும் பிரபுவின் கால்ஷீட்டுக்காகக் காத்துக் கொண்டிருந்த சூழ்நிலையில், பிரபுவை எப்படி கங்கைகொண்டான் மயக்கி கால்ஷீட் வாங்கினார் என்று நான் உண்மையிலேயே ஆச்சரியப்பட்டிருக்கிறேன்.

நான் அவரின் அலுவலகத்திற்குப் போகும் நேரங்களில், அவரின் நண்பரும் அசோசியேட் டைரக்டருமான ராஜேந்திரகுமார், கவிஞர் புவியரசு (இவர்தான் 'பிரியமுடன் பிரபு' படத்திற்கு வசனகர்த்தா) ஆகியோரும் கங்கைகொண்டானுடன் இருப்பார்கள். நாங்கள் அனைவரும் அமர்ந்து இலக்கிய விஷயங்கள் பலவற்றையும் பற்றி நேரம் போவதே தெரியாமல் பேசிக் கொண்டிருப்போம். நான் அப்போது நிறைய மலையாள இலக்கியங்களைத் தமிழில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தேன். அதை மனம் திறந்து பாராட்டுவார் கங்கை கொண்டான்.

'பிரியமுடன் பிரபு' படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடைபெற்றது. அப்படத்தின் தயாரிப்பாளர்கள் நாமக்கல்லில் கோழிப் பண்ணை வைத்திருப்பவர்கள் என்பதால், படத்தின் கதாநாயகன் கோழிப் பண்ணையின் உரிமையாளர் என்றும், 24 மணி நேரமும் கோழிகளுடனே பொழுதைக் கழிப்பவர் என்றும் கதை பண்ணி வைத்திருந்தார் கங்கைகொண்டான். இது போதாதென்று- கங்கை அமரன் இசையமைத்த அந்தப் படத்தில் 'கூவுது காலை நேரம் கோழி' என்று கோழியைப் பற்றி ஒரு பாடல் காட்சி வேறு இருந்தது.

முழுப் படமும் முடிந்தது. பார்த்தவர்களுடன் சேர்ந்து நானும் பார்த்தேன். படத்தில் கதையே இல்லை. ஒன்றுமே இல்லாத ஒரு விஷயத்தை வைத்து கொண்டு, இரண்டே கால் மணி நேரம் ஒப்பேற்றி வைத்திருந்தார் கங்கைகொண்டான். படத்தைப் பார்த்தபோது எனக்கு கங்கைகொண்டான் மீது கோபம் உண்டானது. 'பிரபுவின் கால்ஷீட் கிடைத்தது எவ்வளவு பெரிய விஷயம்! அதை கங்கை கொண்டான் கொஞ்சம் கூட சீரியஸே இல்லாமல், இப்படி வீணாக்கி விட்டாரே!' என்று வருத்தப்பட்டேன். பிரபு கதாநாயகனாக நடிக்கும் படம் என்பதால் அந்தப் படத்தின் அனைத்து ஏரியாக்களும், தயாரிப்பில் இருந்தபோதே விற்பனை ஆகிவிட்டது. படத்தை வாங்கிய விநியோகஸ்தர்கள் பல லட்சங்களை இழக்கப்  போவது உறுதி என்பது படத்தைப் பார்த்தபோதே எனக்கு தெரிந்துவிட்டது. படம் திரைக்கு வந்த பிறகு, உண்மையிலேயே அதுதான் நடந்தது. படம் இரண்டு வாரம் கூட ஓடவில்லை.

ஒரு வருடம் கடந்தோடியது. கங்கைகொண்டானிடமிருந்து அழைப்பு வந்தது. கன்னடப் படமொன்றைத் தமிழில் இயக்கத் திட்டமிட்டிருப்பதாகச் சொன்னார். அந்தப் படத்தில் கார்த்திக்கைக் கதாநாயகனாகப் போட எண்ணியிருப்பதாக அவர் கூறினார். அப்போது கார்த்திக் ஏகப்பட்ட படங்களில் நடித்துக் கொண்டிருந்தார். கார்த்திக் பார்ப்பதற்காக, ஒரு நாள் இரவு 10 மணிக்கு அவரின் வீட்டிற்கு அருகிலேயே இருந்த ‘காதம்பரி’ ப்ரிவ்யூ தியோட்டரில் அந்த கன்னடப் படம் திரையிட்டுக் காட்டப்பட்டது. நாங்கள் பலரும் படத்தைப் பார்த்தோம். எங்கள் யாருக்கும் படம் பிடிக்கவில்லை. படம் உட்கார்ந்து பார்க்க முடியாத அளவிற்கு ‘போராக’ இருந்தது. கார்த்திக் நிச்சயமாக படத்தை ஒத்துக் கொள்ள மாட்டார் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால், கங்கைகொண்டானின் நல்ல நேரமோ என்னவோ தெரியவில்லை- கார்த்திக் அந்தப் படம் தனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறிவிட்டார்.

கார்த்திக் நடித்த அந்தப் படத்தை 'நேருக்கு நேர்' என்ற பெயரில் கங்கை கொண்டான் இயக்கினார். ஐந்து நாட்கள் படப்பிடிப்பு நடைபெற்றது. அதற்குப் பிறகு படம் வளராமல் நின்று விட்டது.

அதற்குப் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து, கங்கை கொண்டான் புதிய படமொன்றை இயக்கும் வேலையில் இறங்கினார். படத்தின் பெயர் 'அடிமை விலங்கு'. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சரோஜா தேவி அந்தப் படத்தில் முக்கிய பார்த்திரத்தில் நடித்தார். நாமக்கல்லில் நடைபெற்ற அந்தப் படத்தின் படப்பிடிப்பிற்கு நானும் சென்றிருந்தேன். 'அன்பே வா' பாணியில் தலையில் கர்ச்சீப் கட்டியவாறு சரோஜாதேவி வர, அவரைப் பார்க்க மக்கள் கூட்டம் திரள, சரோஜாதேவி அதைப் பார்த்து மனம் நெகிழ... உண்மையிலேயே அது ஒரு புதிய அனுபவம்தான்!

இருபத்தைந்து நாட்கள் 'அடிமை விலங்கு' படப்பிடிப்பு நாமக்கல்லில் நடைபெற்றது. அதற்குப் பிறகு பொருளாதாரப் பிரச்சினைகளால் அந்தப் படம் மாதங்கள் பல கடந்தும் வளரவே இல்லை. கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டருக்கு எதிரில் ஒரு தெருவில் இருந்த கங்கைகொண்டானின் அலுவலகத்தில் ஒரு நாள் நான் அவரைப் பார்த்தேன். ஏழெட்டு இளைஞர்கள் சூழ அவர் அமர்ந்திருந்தார். 'ஃபைனான்ஸ் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறேன். தயாரானவுடன் படத்தின் வேலைகளை ஆரம்பிக்க வேண்டியதுதான்' என்றார் கங்கைகொண்டான். நான் சொந்த விஷயமாக வெளியூர் சென்றுவிட்டு, ஐந்து நாட்களில் திரும்பி வந்தேன்.

சென்னை மண்ணில் கால் வைத்ததும், எனக்குக் கிடைத்த அதிர்ச்சியான செய்தி- கங்கைகொண்டான் மாரடைப்பில் இறந்துவிட்டார் என்பதுதான்! ஐந்து நாட்களுக்கு முன்னால் சிரித்த முகத்துடன் என்னிடம் பேசிக் கொண்டிருந்த கங்கை கொண்டான் இறந்துவிட்டாரா? என்னால் நம்பவே முடியவில்லை.

படவுலகிற்குள் நுழைந்து தன்னுடைய முத்திரை என்று எதையும் பதிக்காமலே இந்த உலகைவிட்டு நீங்கிவிட்ட இலக்கியவாதியும் கவிஞரும், ஓவியருமான கங்கைகொண்டானை இப்போது நினைத்தாலும், என் மனதில் அளவற்ற வருத்தம் உண்டாகும்.


பாரதிராஜாவை ஏமாற்றிய இயக்குநர்!­

சுரா

சரதன்- 1980ஆம் ஆண்டில் இவர் எனக்கு அறிமுகமானார். குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் 'மாஸ்டர் தசரதன்' என்ற பெயரில் நடித்தவர் அவர். 'களத்தூர் கண்ணம்மா' படத்தில் கமல்ஹாசன் குழந்தை நட்சத்திர```மாக அறிமுகமாக, அதே படத்தில் இன்னொரு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர்தான் இந்த தசரதன். கே.பாலசந்தர் இயக்கிய 'மேஜர் சந்திரகாந்த்' படத்தில் தையல் கடைக்காரராக வரும் நாகேஷுக்கு உதவியாளராக காஜா தைக்கும் பையனாக வருவார் தசரதன். அதில் வரும் 'கல்யாண சாப்பாடு போடவா', 'ஒரு நாள் யாரோ' என்ற இரண்டு பாடல் காட்சிகளிலும் நாகேஷுடன் சேர்ந்து மிகவும் இயற்கையாக ஆடி நடித்திருப்பார் அவர். அதை நான் பலமுறை மனதிற்குள் நினைத்துப் பார்த்து ரசித்திருக்கிறேன்.

எனக்கு தசரதன் அறிமுகமான காலகட்டத்தில், அவர் இயக்குநர் அங்கியை அணிந்திருந்தார். 'சரணம் ஐயப்பா' என்ற பெயரில் பக்திப் படம் ஒன்றை அவர் சொந்தத்தில் தயாரித்து இயக்கியிருந்தார். ரஜினி, கமல், பாடகர் ஜேசுதாஸ் என்று பலரும் அதில் நடித்திருந்தார்கள். தன் பல வருட பட உலக அனுபவத்தைக் கூறி அவர்களை எப்படியோ தன் படத்தில் அவர் இடம் பெறச் செய்திருந்தார். எப்போது பார்த்தாலும் காவி வேஷ்டி, காவிச் சட்டையுடன் காலில் செருப்பு கூட இல்லாமல் இருப்பார் தசரதன். தி.நகர் கிருஷ்ணவேணி தியேட்டரில் 'சரணம் ஐயப்பா' ஓடிக் கொண்டிருந்தது. அவரே படத்தை விநியோகமும் செய்திருந்தார்.  அந்தத் தியேட்டருக்கு ஆட்டோவில் படத்தின் பிரிண்டுகளைக் கொண்டு வருவது, ஓடிய பிரிண்டை இன்னொரு தியேட்டருக்கு எடுத்துக் கொண்டு போவது- எல்லாமே தசரதன்தான். இந்த 'ஒன் மேன் ஷோ'வை நான் ஆச்சரியத்துடன் பார்த்து ரசிப்பேன். இன்று பிஸியான கேமராமேனாக இருக்கும் கிச்சாஸ் ஒளிப்பதிவாளராக அந்தப் படத்தில்தான் அறிமுகமானார். படம் நன்றாக ஓடியது.

அதற்கடுத்து 'கடவுளை நம்புங்கள்' என்ற பெயரில் ஒரு படத்தை ஆரம்பித்தார் தசரதன். அவர்தான் படத்தின் இயக்குனரும். ராதாரவி எனக்கு அப்போதுதான் அறிமுகமானார். அவர் அப்போதுதான் வளர்ந்து கொண்டிருக்கிறார். ராதாரவி, மனோரமாவின் மகன் பூபதி, சக்ரவர்த்தி- இவர்கள்தான் அந்தப் படத்தின் கதாநாயகர்கள். நிகழ் காலத்தை மட்டுமே நினைத்து வாழும் பூபதி, கடந்த காலத்தையே பேசிக் கொண்டிருக்கும் மனோரமா, எதிர்காலத்தை மட்டுமே மனதில் நினைத்து நடைபோடும் சக்ரவர்த்தி, எல்லா காலங்களையும் சமமாக எடைபோட்டு, அலசிப் பார்த்து வாழும் ராதாரவி- இவர்களில் யார் வாழ்க்கையில் வெற்றி பெறுகிறார்கள் என்பதுதான் அப்படத்தின் கதை. தசரதன் அந்தக் கதையை என்னிடம் சொன்னபோது, அது எனக்கு மிகவும் பிடித்திருந்தது. படத்தின் கடைசி நாள் படப்பிடிப்பன்று பாரதிராஜாவை தசரதன் வரச் செய்திருந்தார். படப்பிடிப்பு நடந்த இடம் நடிகர் சங்க ஆடிட்டோரியம். படத்தின் கதைப்படி நாடக நடிகராக வரும் சக்ரவர்த்தி பல மொழிகளிலும் பேசி நடிக்க, அவரை பாரதிராஜா பாராட்டிப் பேசி, தான் அடுத்து இயக்க இருக்கும் படத்தில் அவருக்கு வாய்ப்பு தருவதாக மேடையில் பேசுவார். அங்கு வரும்வரை பாரதிராஜாவுக்கு இந்த விஷயமே தெரியாதாம். கடைசி நாள் படப்பிடிப்பை விழா மாதிரி கொண்டாடுகிறார்கள், அதற்குத்தான் தன்னை தசரதன் அழைத்திருக்கிறார் என்றுதான் பாரதிராஜா நினைத்து வந்தாராம். அங்கு வந்த பிறகுதான் அவருக்கே தெரியுமாம்- தன்னை படத்திற்காக பேசி நடிக்க வைத்து ஷூட் பண்ணப் போகிறார்கள் என்பதே. பாரதிராஜா 'யோவ் தசரதா... இரு உன்னை உதைக்கிறேன்' என்று விரலால் சிரித்தவாறே காட்டியதை இப்போது நான் நினைத்துப் பார்க்கிறேன். முற்றிலும் முடிவடைந்துவிட்ட அந்தப் படம் வியாபாரம் ஆகாததால், திரைக்கு வராமலே நின்று விட்டது.

ஒவ்வொரு வருடமும் எது நடக்கிறதோ இல்லையோ- ஐயப்பன் கோவிலுக்கு மாலை போடுகிற மாதம் வந்துவிட்டால், தசரதன் ஐயப்பனைப் பற்றி படம் எடுக்க ஆரம்பித்துவிடுவார். படவுலக நண்பர்கள் கூட கிண்டலாக சில நேரங்களில் கூறுவார்கள்- 'என்ன சார்... சபரிமலை ஐயப்பனுக்கு எல்லாரும் மாலை போட ஆரம்பிச்சிட்டாங்க.  தசரதனோட புதுப்பட அறிவிப்பை இன்னும் காணோமே' என்று! அப்படி தசரதன் ஆரம்பித்த படம்தான் 'அருள் தரும் ஐயப்பன்'. ரகுவரன், சரண்ராஜ் இருவரும் அந்தப் படத்தில் நடித்தார்கள். அந்தச் சமயத்தில் அவர்கள் இருவருமே மிகவும் பிஸியான நடிகர்களாக இருந்தார்கள். ஐயப்பனின் பெயரைக் கூறி, ‘ஐயப்ப சாமியை பற்றி படம் எடுக்கறேன். நடிக்க முடியாதுன்னு சொல்லிடாதீங்க. கட்டாயம் நீங்க நடிக்கணும்’ என்று அவர்களை பயமுறுத்தியே அவர் கால்ஷீட் வாங்கியிருப்பார்! தசரதன் எப்போது படத்தை ஆரம்பிப்பார் என்றும் தெரியாது, எப்போது படத்தை முடிப்பார் என்பதும் தெரியாது. அவ்வளவு விரைவாக படத்தை அவர் முடித்து விடுவார். அதுவும் மிக மிக குறைந்த பட்ஜெட்டில்... சொல்லப்போனால்- தசரதன் அளவுக்கு படு சிக்கனமாக யாருமே படம் எடுக்க முடியாது. படத்திற்கென அலுவலகம் இருக்காது. தேனாம்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் நின்றுகொண்டுதான் படம் சம்பந்தப்பட்ட எல்லா முடிவுகளும் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும். தன் கஷ்ட நிலைமைகளைக் கூறி, நடிகர், நடிகைகளிடம் காலில் விழாத குறையாகக் கெஞ்சி, அவர்களுக்கு ஒரு சாதாரண தொகையைத் தந்து... இல்லாவிட்டால் சம்பளமே கூட தராமல் அவர்களின் கால்ஷீட்டை வாங்கி... தசரதனைத் தவிர, வேறு யாராலும் இப்படி வெற்றிகரமாக காரியத்தை நிறைவேற்றவே முடியாது. படத்தில் வேலை பார்ப்பவர்களுக்குக் கூட செலவுக்கு ஏதோ தருவார். அவ்வளவுதான்... இருந்தாலும், தசரதன் மீது கொண்ட அன்பால், அவருக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் யாருமே காசை ஒரு பொருட்டாக நினைக்காமல் வேலை செய்வார்கள். தசரதனுக்கு அப்படி ஒரு ராசி! 'அருள் தரும் ஐயப்பன்' திரைக்கு வந்தது. சில மாதங்கள் கழித்து அவர் கார்த்திக், பார்த்திபன் நடிக்க 'எங்கள் சாமி ஐயப்பன்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கி திரைக்குக் கொண்டு வந்தார்.

அதற்கடுத்து தசரதன் 'எல்லாம் ஐயப்பன்' என்ற பெயரில் ஒரு படத்தை இயக்கினார். 'முருகா ஓடி வா' என்ற பெயரில் தேனாம்பேட்டை காய்கறி மார்கெட்டிற்கு அருகில் ‘க்ளினிக்’ வைத்திருந்த ஒரு டாக்டர் படத்தைத் தயாரிக்க, அந்தப் படத்தை தசரதன் இயக்கினார். அந்த இரு படங்களும் முற்றிலும் முடிவடைந்தும், வியாபாரம் ஆகாததால் இன்றுவரை திரைக்கு வராமலே போயின. அந்த இரண்டு படங்களுக்கும் பணம் முதலீடு செய்த ஃபைனான்ஸியர்கள் மற்றும் தயாரிப்பாளர்களின் நிலைமையை நான் இப்போது கவலையுடன் நினைத்துப் பார்க்கிறேன். அவர்கள் எத்தனை லட்சங்களை அந்தப் படங்களில் இழந்திருப்பார்கள்! அவர்களுடைய தொழில் எந்த அளவிற்கு பாதிக்கப்பட்டிருக்கும்!

வருடத்தின் 365 நாட்களில் 250  நாட்கள் தசரதன் மாலையுடனும், காவி ஆடைகளுடனும்தான் இருப்பார். அப்போது அவர் சிறு பையனைக் கூட 'சார்’ என்றோ, ‘வாங்க போங்க' என்றோதான் அழைப்பார்; தசரதன் காட்டும் மரியாதையைப் பார்த்து நமக்கு அவர் மீது உயர்ந்த அபிப்ராயம் தோன்றும். மாலை போடாமல் இருக்கும் நாட்களில் இதற்கு நேர்மாறாக நடப்பார் தசரதன். எப்போதும் மதுவின் ஆட்சியிலேயே இருப்பார். பகலில் கூட மது அருந்தி விட்டு அவர் பண்ணும் அட்டகாசங்களைத் தாங்க முடியாது. 'சார்' என்று யாரை முன்னர் அழைத்தாரோ, அதே நபரை மது உள்ளே சென்றுவிட்டால், பெயரைக் கூறி அழைக்க ஆரம்பித்து விடுவார் தசரதன். 'வாங்க' என்று அழைத்தவர்களை 'வாடா' என்று அழைப்பார். அதைப் பார்த்து நமக்கு அவர் மீது தாங்க முடியாத எரிச்சல் உண்டாகும். இப்படியொரு விசித்திரமான குணத்தைக் கொண்ட வினோத மனிதர் தசரதன்!

என்மீது தசரதனுக்கு எப்போதுமே அளவற்ற அன்பு உண்டு. நான் மொழிபெயர்க்க இலக்கிய நூல்களை வாசித்துவிட்டு, மனம் திறந்து பாராட்டுவார். நான் அவருடைய வீட்டில் பலமுறைகள் உணவருந்தியிருக்கிறேன். ஒரு முறை தேனாம்பேட்டையில் ஒரு குறுகிய தெருவின் மாடியில் இருந்த அவருடைய வீட்டில் சுமார் இரண்டு மணி நேரம் நான் தசரதனுடன் அமர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் உரையாடிக் கொண்டிருந்தேன். இரவு கிட்டத்தட்ட பத்து மணி ஆகிவிட்டதால், நான் கிளம்பினேன். அப்போது தசரதன் முழு போதையில் இருந்தார். என் கையைப் பிடித்துக் கொண்டு ‘நீ புறப்பட்டுப் போகக் கூடாது. இதையும் மீறி போய்விட்டால், நான் வீட்டின் மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து விடுவேன்’ என்று கூறினார். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. தசரதனின் அந்த நடவடிக்கைகளை எந்தவிதமான பதற்றமும் இல்லாமல், அவருடைய மனைவியும், மகளும், அண்ணனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.  தசரதனின் அண்ணன் என்னிடம் ‘நீங்க கிளம்பிப் போங்க சார். போதையில் இவன் இப்படித்தான் சொல்லுவான். எதுவுமே நடக்காது. கவலைப்படாம போங்க’ என்றார். நான் ஒருவித கவலையுடனே அங்கிருந்து கிளம்பினேன். மறுநாள் ஒரு இடத்தில் தசரதனைச் சந்தித்தேன். முதல் நாள் இரவு நடைபெற்ற எந்த விஷயமும் ஞாபகத்தில் இல்லாததைப் போல அவர் என்னிடம் பேசினார்.

ஒரு நீண்ட இடைவேளிக்குப் பிறகு, தசரதனுக்கு பாலுமகேந்திரா இயக்கிய ‘ராமன் அப்துல்லா’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பு கிடைத்திருப்பதை என்னிடம் பெருமையாக கூறி மகிழ்ந்தார் தசரதன். இப்போது தசரதன் யாருக்காவது ஞாபகத்தில் வருகிறார் என்றால், அது அந்தப் பாடல் காட்சியின் மூலமாகத்தான் இருக்கும்.

சில வருடங்களுக்கு முன்பு தசரதன் திடீரென்று ஒரு நாள் ஹார்ட் அட்டாக்கில் இறந்து விட்டார். அவரின் மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் அனாதை ஆனார்கள். நடிகர் சங்கத்தில் அவரின் இறந்த உடல், பார்வைக்காக வைக்கப்பட்டது. தசரதனின் சம்பாத்தியம் என்றோ, சேமிப்பு என்றோ ஒரு பைசா கூட இல்லை. நடிகர் சங்கம்தான் அவரின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளைச் செய்தது.

ஒவ்வொரு வருடமும் தவறாமல் சபரிமலை ஐயப்பன் சீசன் வரத்தான் செய்கிறது. ஆனால், ஐயப்பனைப் பற்றி தவறாமல் படமெடுக்கும் தசரதன்தான் இல்லாமற்போனார்.


எம்.ஜி.ஆர். ஆட்டோ வாங்கிக் கொடுத்தார்! இயக்குநர் ஓட்டினார்!

சுரா

கார்வண்ணன்- எனக்கு இவர் அறிமுகமானது 1983ஆம் ஆண்டில். பிரபு கதாநாயகனாக நடித்த 'பிரியமுடன் பிரபு' என்ற படத்தில் அவர் உதவி இயக்குநராக படவுலகிற்குள் நுழைந்திருந்தார். அந்தப் படத்தின் இயக்குநர் கங்கைகொண்டான்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு மேற்கு மாம்பலத்தில் உள்ள ஒரு தேநீர் கடையில் கார்வண்ணனும், நானும் ஒரு நாள் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தோம். கார்வண்ணன் தான் இயக்கும் 'பாலம்' என்ற படத்தின் கதையை என்னிடம் கூறினார். கதையைக் கேட்டு நான் ஆச்சரியத்தின் விளிம்பிற்கே சென்றுவிட்டேன். இரண்டு மணி நேரம் ஒரு பாலத்திலேயே நடக்கக் கூடிய கதையா? கார்வண்ணனை நான் மனம் திறந்து பாராட்டினேன். 'தமிழ்ப்பட உலகில் இது ஒரு மாறுபட்ட முயற்சி. நிச்சயம் படம் வெற்றி பெறும். உங்களுக்கு அருமையான ஒரு பெயரை இந்தப் படம் பெற்றுத் தரும்' என்றேன் நான். கார்வண்ணன் அதை அமைதியாக ஏற்றுக் கொண்டார்.

அடக்கமே உருவமாக இருக்கும் கார்வண்ணனைப் பார்த்து நான் பல நேரங்களில் ஆச்சரியப்பட்டிருக்கிறேன்- எவ்வளவோ உயர்ந்த விஷயங்களைத் தெரிந்து வைத்திருக்கும் அவரால் எப்படி இந்த அளவிற்கு அமைதியான மனிதராக இருக்க முடிகிறது என்று நான் வியந்திருக்கிறேன்.

'பாலம்' படம் திரைக்கு வந்தது. தமிழ்ப் படவுலகில் ஒரு வித்தியாசமான முயற்சி என்று பத்திரிகைகளும், மக்களும் பாராட்டினார்கள். கார்வண்ணனைப் பற்றி வரிந்து கட்டிக் கொண்டு பத்திரிகைகள் எழுதின. 'யார் இந்த கார்வண்ணன்?' என்று கேள்வி கேட்டன. முதல்  படத்திலேயே மிகச் சிறந்த ஒரு பெயரைப் பெற்றார் கார்வண்ணன். தான் இயக்கிய ‘பாலம்’ படத்தில் ராகேஷ் என்ற புதுமுக நடிகர் ஒருவரை அறிமுகம் செய்திருந்தார் கார்வண்ணன். படத்தின் 14வது ரீலில் ஒரு ரகசியத்தை காவல்துறைக்கு தெரிவிக்கும் கதாபாத்திரத்தில் அந்த நடிகர் வருவார். அவர் வேறு யாருமல்ல- பின்னர் எத்தனையோ படங்களை தன்னுடைய 'ரோஜா கம்பென்ஸ்' பட நிறுவனத்தின் மூலம் தயாரித்த காஜாமைதீன்தான்.

மேற்கு மாம்பலத்தில் இருக்கும் கார்வண்ணனின் வீட்டிற்கு எப்போது போனாலும், பழைய ஆட்டோ ஒன்று நிரந்தரமாக வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருக்கும். அது பற்றி கேட்டதற்கு கார்வண்ணன் ‘அது எம்.ஜி.ஆர். வாங்கிக் கொடுத்த ஆட்டோ' என்றார். நந்தனம் கலைக் கல்லூரியில் எம்.ஏ. முடித்துவிட்டு வேலை எதுவுமே கிடைக்காமல் ஒரு நாள் டிரைவ்- இன் உட்லண்ட்ஸ் ஹோட்டலுக்கு முன்னால் இருக்கும் கத்தீடரல் சாலையில் கார்வண்ணன் நடந்து சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது தமிழக முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். கார்வண்ணனைப் பார்த்தவுடன், தன்னுடைய வாகனத்தை நிறுத்தும்படி கூறியிருக்கிறார். (இந்தச் சம்பவம் நடைபெறுவதற்கு சில மாதங்களுக்கு முன்பு நந்தனம் கலைக் கல்லூரியில் ஒரு விழா நடைபெற்றிருக்கிறது. அந்த விழாவிற்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கியிருக்கிறார். அங்கு எம்.ஏ. படித்துக் கொண்டிருந்த கார்வண்ணன், எம்.ஜி.ஆரின் கையில் பரிசு பெற்றிருக்கிறார். அப்போது தான் பார்த்த மாணவரான கார்வண்ணனின் முகத்தை பசுமையாக தன் ஞாபகத்தில் வைத்திருந்திருக்கிறார் எம்.ஜி.ஆர்.) தன்னுடைய உதவியாளரிடம் ‘அதோ... அங்கே சாலையில் ஓரத்தில் நடந்து செல்லும் அந்த இளைஞனை நான் அழைத்ததாக கூறி, இங்கே அழைத்து வா’ என்றிருக்கிறார். கார்வண்ணன் என்ன என்று புரியாமல் பதைபதைப்புடன் எம்.ஜி.ஆரை நோக்கி ஓடிவந்திருக்கிறார். எம்.ஜி.ஆர். தன்னுடைய காரின் பின் இருக்கையில் கார்வண்ணனை அமரும்படி கூறியிருக்கிறார். கார் கிளம்ப, போய்க் கொண்டிருக்கும்போதே எம்.ஜி.ஆர். கார்வண்ணனிடம் ‘நீ இப்ப என்ன வேலை செய்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் ‘நான் இப்போது எந்த வேலையும் செய்யவில்லை. வேலை தேடி அலைந்துக் கொண்டிருக்கிறேன்’ என்று கூறியிருக்கிறார். அதற்கு எம்.ஜி.ஆர். ‘சாப்பாட்டிற்கு என்ன செய்கிறாய்?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் ‘என் தந்தை வேலை செய்து எனக்கு சாப்பாடு போடுகிறார்’ என்று கூறியிருக்கிறார். அப்போது எம்.ஜி.ஆர். சிரித்துக் கொண்டே, தன் விரலை வாய்க்கு அருகில் வைத்துக்கொண்டு ‘இதைச் சொல்வதற்கு வெட்கமாக இல்லையா?’ என்று கேட்டிருக்கிறார். கார்வண்ணன் பதில் எதுவுமே கூறாமல் அமைதியாக உட்கார்ந்திருக்கிறார். இதற்குள் கார் கடற்கரை சாலையை அடைந்துவிட்டது. கார்வண்ணனின் முகவரியை தன் உதவியாளர்களிடம் தரும்படி எம்.ஜி.ஆர். கூறியிருக்கிறார். கார்வண்ணன் முகவரியை கொடுத்ததும், அவரை அங்கேயே இறங்கக் கூறிவிட்டார் எம்.ஜி.ஆர்.

இந்த சம்பவம் நடந்து சில நாட்களுக்கு பிறகு, கார்வண்ணனின் இல்லத்தைத் தேடி ஒரு ஆட்டோ வந்திருக்கிறது. அவருக்காக எம்.ஜி.ஆர். அந்த ஆட்டோவை ஏற்பாடு செய்திருப்பதாக அப்போது அமைச்சராக இருந்த முத்துச்சாமி கூறியிருக்கிறார். கல்லூரியில் நடைபெற்ற ஒரு விழாவில் சில நிமிடங்கள் மட்டுமே பார்த்த யாரோ ஒரு மாணவனின் முகத்தை ஞாபகத்தில் வைத்திருந்து, அவனுடைய சிரமங்களைத் தெரிந்து, அவன் இதை வைத்தாவது ஒரு வருமானத்தை தேடிக் கொள்ளட்டும் என்ற நல்லெண்ணத்துடன் ஒரு ஆட்டோவை தமிழக முதல்வரான எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்து கொடுத்திருக்கிறார் என்பது எவ்வளவு பெரிய விஷயம்! சாதரணமாக யாரும் நினைத்துப் பார்க்கக்கூடிய ஒன்றா இது?

அந்த ஆட்டோவை சொந்தத்தில் ஓட்டிக் கொண்டு தன் வாழ்க்கையை நடத்தியிருக்கிறார் கார்வண்ணன். எம்.ஜி.ஆரின் உருவம் கண்ணாடியில் வரையப்பட்ட கோலத்துடன் இருக்கும் அந்த ஆட்டோவை நான் பலமுறை மரியாதையுடன் பார்த்திருக்கிறேன்.

'பாலம்' படத்தைத் தொடர்ந்து கார்வண்ணன் இயக்கிய படம் 'புதிய காற்று'. முரளி கதாநாயகனாக நடித்த அந்தப் படத்தின் மூலம் காஜாமைதீனைத் தயாரிப்பாளர் அந்தஸ்துக்கு உயர்த்தினார் கார்வண்ணன். 'புதிய காற்று' கதையை கார்வண்ணன் சொன்னார். லஞ்சம் வாங்குவதை வெறுக்கக் கூடிய கதாநாயகன். சுதந்திரப் போராட்ட தியாகியின் மகன் அவன். யார் யார் லஞ்சம் வாங்குவதாகத் தெரிகிறதோ, அவர்களை அவன் தீர்த்துக் கட்டுகிறான். இதன் விளைவாக யாருமே லஞ்சம் வாங்க பயப்படுகிறார்கள். ஏன் லஞ்சம் வாங்க வேண்டும், வீணாக கதாநாயகனால் கொல்லப்பட வேண்டும் என்று நடுங்கி லஞ்சம் வாங்குவதையே அவர்கள் நிறுத்தி விடுகிறார்கள். இப்படிப்பட்ட ஒரு புதிய காற்றை எப்படி அவன் நாட்டில் வீசும்படி செய்கிறான் என்பதுதான் 'புதிய காற்று' படத்தின் கதை. படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. அதில் முதலமைச்சராக நடித்த ஞானவேல் பின்னர் முன்னணி படத் தயாரிப்பாளராக மாறினார். கார்வண்ணனின் அந்த ‘புதிய காற்று’ படத்தைத்தான் பின்னர் இயக்குநர் ஷங்கர், கமல்ஹாசனைக் கதாநாயகனாகப் போட்டு 'இந்தியன்' படமாக 'உல்டா' பண்ணி எடுத்தார் என்பது வேறு விஷயம்.

அடுத்து கார்வண்ணன் இயக்கிய படம் 'மூன்றாம்படி' காமராஜரைப் போல் மக்களுக்கு நல்லதை மட்டுமே செய்ய வேண்டும் என்று நினைக்கும் ஒரு முதலமைச்சர்.... அதனால் பணம் எதுவும் சம்பாதிக்க முடியாத ஒரு அமைச்சர் அந்தப் பெரியவரைக் கொன்றுவிட்டு, தான் முதலமைச்சராக வேண்டும் என்று நினைத்து ஒரு நாள் வெடிகுண்டு விபத்தின் மூலம் முதலமைச்சரைக் கொன்றும் விடுகிறார். சி.பி.ஐ. எப்படி குற்றவாளியைக் கண்டு பிடிக்கிறது என்பதுதான் கதை. நல்ல கதையாக இருந்தாலும், என்ன காரணமோ தெரியவில்லை- அந்தப் படம் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது.

கார்வண்ணன் இயக்கிய நான்காவது படம் 'தொண்டன்'. முரளி கதாநாயகனாக நடித்த படம் அது. குழந்தைத் தொழிலாளர்கள் பிரச்சினையை மையமாகக் கொண்ட கதை. குழந்தைத் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தக் கூடாது என்பது அரசாங்கத்தின் சட்டம். சம்பளம் குறைவாக தந்து குழந்தைகளிடம் வேலை வாங்கும் தொழிலதிபர்களுக்கு எதிராக ஒரு சமூக சேவகர் போராடுகிறார். அதனால் கடுப்பாகி விடுகின்றனர் தொழிலதிபர்கள்.  அந்த சமூக சேவகரைத் தீர்த்துக் கட்ட திட்டமிடுகின்றனர். அவர்களின் முயற்சி பெற்றி பெற்றதா இல்லையா? என்பதுதான் 'தொண்டன்' படத்தின் கதை. சமூக சேவகராக நடித்தவர் பா.ம.க. தலைவர் டாக்டர் ராமதாஸ். கலைஞர், திருநாவுக்கரசு, வாழப்பாடி ராமமூர்த்தி, ராம் விலாஸ் பஸ்வான் ஆகியோர் கூட படத்தில் வருவார்கள். படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.

அதற்கு பிறகு கிட்டத்தட்ட ஆறு வருடங்கள் கடந்தோடி விட்டன. கார்வண்ணன் எந்தப் படத்தையும் இயக்கவில்லை. வித்தியாசமான ரசனை கொண்ட அந்த இளைஞர் ஏன் இப்படி அமைதியாக ஒதுங்கி இருக்கிறார் என்று நான் மனதில் கவலைப்பட்டேன்.

பல வருடங்களுக்குப் பிறகு ஒரு நாள் கார்வண்ணன் என்னைக் கூப்பிட்டு அனுப்பியிருந்தார். நான் போய் அவரைப் பார்த்தேன். புதிதாக படமொன்றை இயக்கப் போவதாகக் கூறினார். அதைக் கேட்டு மிகவும் சந்தோஷப்பட்டேன். புதிதாக இயக்க இருக்கும் படத்தின் பெயர் 'ரிமோட்' என்றார். படத்தின் கதையைச் சொன்னார். ஏ-ஒன் ஆக இருந்தது. மாறுபட்ட பாணியில் அமைந்த கதை. நல்ல விஷயத்திற்காக போராடும் முற்போக்கு சிந்தனை கொண்ட சில இளைஞர்களும், இளம் பெண்களும் தங்களுடைய கோரிக்கைகள் அரசாங்கத்திடமிருந்து நிறைவேற வேண்டும் என்பதற்காக, குற்றாலத்தைச் சுற்றிப் பார்ப்பதற்காக பேருந்தில் பயணித்த பயணிகள் அனைவரையும் கடத்திக் கொண்டு போய் ஒரு பாழடைந்த கட்டிடத்தில் அவர்கள் இருக்கும்படி செய்கிறார்கள். தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால், அந்தப் பயணிகளை விடுவிப்பதாக அரசாங்கத்திடம் கூறுகிறார்கள். அந்த இடத்திற்கு காவல்துறை, ஊடகம் அனைத்தும் வந்து குழுமி விடுகிறது. அதற்குப் பிறகு என்ன நடக்கிறது? இதுதான் ‘ரிமோட்’ படத்தின் கதை. அந்தப் படத்தில் நடிப்பதற்காக நடிகர் நெப்போலியனிடம் நான் போய் பேசினேன். நெப்போலியன் ஒப்புக் கொண்டு நடித்தார். தொடர்ந்து மழை பெய்த நாட்களின்போது, அந்தப் படம் திரைக்கு வந்து மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது.

பல வருட இடைவெளிக்குப் பிறகு கார்வண்ணன் தானே கதாநாயகனாக நடித்து ‘பாய்ச்சல்’ என்ற ஒரு படத்தை இயக்கி, திரைக்கு கொண்டுவர தயார் நிலையில் இருக்கிறார். யாருமே தொடுவதற்கு அஞ்சக்கூடிய ஒரு கதைக் கருவை அவர் அந்தப் படத்தில் கையாண்டிருக்கிறார். அதை கையாள்வதற்கு மிகப் பெரிய துணிச்சல் வேண்டும்!

தான் இயக்கிய படம் வெற்றி பெருகிறதோ இல்லையோ, தொடர்ந்து மாறுபட்ட கதைகளை மட்டுமே கையாண்டு, தன் திறமையை மட்டுமே நம்பி படங்களை இயக்கிக் கொண்டிருக்கும் கார்வண்ணனை எனக்கு மிகவும் பிடிக்கிறது. அதே நேரத்தில்- அவருக்குக் கிடைக்க வேண்டிய புகழ், உரிய அளவிற்கு படவுலகில் கிடைக்கவில்லை என்ற வருத்தமும் எனக்கு இருக்கிறது.


சரத்குமார் அறிமுகப்படுத்திய இயக்குனர் இப்படியா இறக்க வேண்டும்?

சுரா

லைவாணன் கண்ணதாசன்- கவியரசு கண்ணதாசனின் மகன் இவர். 1980-ஆம் ஆண்டில் திரைக்கு வந்த 'அன்புள்ள அத்தான்' என்ற படத்தில் கலைவாணன் கதாநாயகனாக நடித்தார். அதில் அவருக்கு ஜோடியாக நடித்தவர் ஷோபா. அந்தப் படத்தை இயக்கியவர் கண்ணதாசனின் இன்னொரு மகனான கண்மணி சுப்பு. படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை. அந்தப் படம் திரைக்கு வந்தபோது கவிஞர் உயிருடன் இருந்தார். ‘அன்புள்ள அத்தான்’ வர்த்தக ரீதியாக வெற்றி பெற்றிருந்தால், கலைவாணன் ஒரு நடிகராக படவுலகில் பவனி வந்திருப்பார். படம் ஓடாததால், அவர் ஜி.என்.ரங்கராஜனிடம் உதவி இயக்குனராகப் போய் சேர்ந்துவிட்டார்.

ஜி.என்.ரங்கராஜனிடம் பல படங்களில் அவர் இணை இயக்குநராகப் பணியாற்றினார். அந்தக் கால கட்டத்தில் கவிஞர் மரணத்தைத் தழுவிவிட்டார். பிரபு கதாநாயகனாக நடித்த 'முத்து எங்கள் சொத்து' என்ற படத்தை ஜி.என்.ரங்கராஜன் இயக்க, அதில் அசோசியேட் டைரக்டராகப் பணியாற்றினார் கலைவாணன். அந்தப் படத்தில் ஒரு சிறிய பாத்திரத்தில் நடிக்க வந்திருந்தார் சரத்குமார். அதற்கு முன்பும் கூட சரத்குமார் சிறிய பாத்திரங்களில் பல படங்களில் நடித்திருக்கிறார். 'இப்படியே எவ்வளவு நாட்களுக்குத்தான் சின்னச் சின்ன பாத்திரங்களில் நடித்துக் கொண்டிருப்பது? நாமே சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தால்தான் சரியாக இருக்கும்’ என்ற முடிவுக்கு அப்போது சரத்குமார் வந்திருந்தார். அங்கு கலைவாணனும் சரத்குமாரும் நெருங்கிய நண்பர்கள் ஆனார்கள்.

பல படங்களில் அசோசியேட் இயக்குனராகப் பணியாற்றிய கலைவாணன், தனித்து ஒரு படத்தை இயக்குவதற்காக தயாரிப்பாளரைத் தேடி அலைந்து கொண்டிருந்த நேரமது. 'எனக்குச் சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கும் எண்ணம் இருக்கிறது. அதற்கான ஏற்பாடுகளில்தான் தற்போது நான் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறேன். நான் தயாரிக்கும் படத்திற்கு நீங்கள்தான் டைரக்டர்' என்று சரத்குமார் கலைவாணனிடம் கூறினார்.

சொன்னதோடு நிற்காமல், அதைச் செயல் வடிவத்திலும் காட்டினார் சரத்குமார். தன் மகள் வரலட்சுமியின் பெயரில் 'வரலட்சுமி கிரியேஷன்ஸ்' என்று ஆரம்பிக்கப்பட்ட, சரத்குமாருக்குச் சொந்தமான பட நிறுவனத்தின் முதல் படம் 'கண் சிமிட்டும் நேரம்'. கார்த்திக்- அம்பிகா இணைந்து அந்தப் படத்தில் நடித்தார்கள். அம்பிகாவைக் கொலை செய்ய முயலும் இளைஞனாக கார்த்திக் நடிக்க, அதைத் தடுப்பதற்காக படம் முழுக்கப் போராடும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாத்திரத்தில் சரத்குமார் நடித்தார். சரத்குமார், கலைவாணன் இருவருமே எனக்கு அப்போதுதான் அறிமுகமானார்கள். இது நடந்தது 1988-ஆம் ஆண்டில்.

நல்ல உயரம், அகலமான நெற்றி, ஆஜானுபாகுவான தோற்றம், கவிஞரின் முகச் சாயல், கட்டைக் குரல், சிரித்த முகம், ஜாலியான பேச்சு- இதுதான் கலைவாணன். முதல் தடவை பார்த்தபோதே எனக்கு அவரை மிகவும் பிடித்து விட்டது. முதல் மூன்று நாட்கள் படப்பிடிப்பு நடந்த அந்தப் படம் பணப் பிரச்சினையால் அதற்கு மேல் வளராமல் கிட்டத்தட்ட ஏழு மாதங்கள் அப்படியே நின்று விட்டது. படப்பிடிப்பு அதற்கு மேல் நடக்காமல் நின்று போனது குறித்து கலைவாணன் மிகவும் வருத்தப்படுவார். கவலையை மறந்து என்னிடம் சிரித்த முகத்துடன் அவர் பேசினாலும், மனதிற்குள் அவரிடம் இருந்த கவலையை என்னால் உணர முடிந்தது. ஒரு நாள் ஒரு மூட்டை நிறைய தேங்காய்களைக் கொண்டு வந்து அலுவலகத்திற்கு அருகில் இருந்த கோவிலில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் அவரே எறிந்து உடைத்துக் கொண்டிருந்தார். சுமார் நூறு தேங்காய்கள் இருக்கும். 'என்ன இவ்வளவு தேங்காய்களை உடைச்சுக்கிட்டு இருக்கிறீங்க? ஏதாவது வேண்டுதலா?' என்று நான் கேட்டதற்கு, 'படத்தின் வேலைகள் அப்படியே நின்று விட்டன. அது மீண்டும் ஆரம்பிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தேங்காய்களை உடைக்கிறேன்' என்றார் கலைவாணன். 

கோவிலில் தேங்காய் உடைத்ததாலோ என்னவோ, 'கண் சிமிட்டும் நேரம்' மீண்டும் வளர ஆரம்பித்தது. கார்த்திக்கின் கால்ஷீட் குளறுபடிகளையெல்லாம் மீறி அந்தப் படம் ஒரு நாள் முடிந்தது. கிட்டத்தட்ட ஒன்றேகால் ஆண்டுகள் அந்தப் படம் தயாரிப்பில் இருந்தது. படம் திரைக்கு வந்து நன்றாக ஓடியது. படத்தில் கலைவாணனுக்கு நல்ல பெயர் கிடைத்தது.

தொடர்ந்து சரத்குமாரின் அடுத்த சொந்தப் படமான 'மிஸ்டர் கார்த்திக்'கையும் (நேபாளத்தில் படப்பிடிப்பு), 'திருப்புமுனை' என்ற படத்தையும் கலைவாணன் இயக்கினார். இரண்டுமே படு தோல்விப் படங்களாக அமைந்துவிட்டன. முதல் படத்தில் இருந்த அக்கறையும், தொழில் பக்தியும், ஈடுபாடும் இல்லாமல் போய் ஒட்டுமொத்தமாக ஒரு மெத்தனப் போக்கு வந்து ஒட்டிக் கொண்டதாலேயே கலைவாணன் தோல்வியைத் தழுவியிருக்கிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன். அதை கலைவாணனிடம் பலமுறை நான் கூறவும் செய்திருக்கிறேன்.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு 'வா அருகில் வா' என்ற படத்தை கலைவாணன் இயக்கினார். ஒரு ஆங்கிலப் படத்தின் கதையை அடியொற்றி உருவாக்கப்பட்ட படம். ஒரு பொம்மை எப்படி நயவஞ்சகர்களைப் பழி வாங்குகிறது என்பதை ஆர்வத்தைத் தூண்டும் வண்ணம் கலைவாணன் இயக்கி இருந்தார்.

'வா அருகில் வா' திரைக்கு வந்து நன்றாக ஓடியது. தொடர்ந்து அதே நிறுவனம் 'ரேகா எல்.கே.ஜி.' என்ற பெயரில் கலைவாணன் இயக்கத்தில் ஒரு படத்தை ஆரம்பித்தது. பேபி ஷாம்லி நடித்த அந்தப் படத்தின் படப்பிடிப்பு இரண்டு நாட்கள் நடைபெற்றது. அதே நேரத்தில் தன் சொந்தப் பட நிறுவனம் ஒன்றை ஆரம்பித்து 'வெள்ளையம்மா' என்ற பெயரில் ஒரு படத்திற்கு பூஜை போட்டார் கலைவாணன். ரேகா எல்.கே.ஜி., வெள்ளையம்மா- இரண்டு படங்களுமே அதற்குமேல் வளராமலே நின்று விட்டன.

மாதங்கள் கடந்தோடின. கலைவாணன் இயக்கிய படங்களின் வேலைகள் நடக்காததால், அலுவலகங்கள் காலி செய்யப்பட்டன. அதற்குப் பிறகு நான் கலைவாணனைப் பார்க்கக்கூடிய சூழ்நிலை உண்டாகவில்லை. அவருக்குத் தெரிந்த நண்பர்களிடம் அவ்வப்போது அவரைப் பற்றி விசாரிப்பேன். 'முயற்சி பண்ணிக் கொண்டிருக்கிறார்' என்று அவர்கள் கூறுவார்கள்.

இந்த நிலையில் ஒரு நாள் எனக்கு அந்த அதிர்ச்சி தரும் செய்தி வந்தது. கலைவாணன் 'ஹார்ட் அட்டாக்'கில் இறந்துவிட்டார் என்பதுதான் அது. நாற்பது வயது கூட ஆகாத நிலையில் ஒரு மனிதன் இறப்பது என்றால்...? பிணமாகப் படுத்திருந்த கலைவாணனை நான் சென்று பார்த்தேன். கலைவாணன் இறந்ததை என்னால் நம்பவே முடியவில்லை. இறுதி ஊர்வலத்தில் சென்று, அவர் நெருப்பில் எரிவது வரை பார்த்துவிட்டு நான் திரும்பி வந்தேன்.

தன் குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி கலைவாணன் ஒரு பெண்ணைக் காதல் திருமணம் செய்திருந்தார். அந்தக் குடும்ப வாழ்க்கையில் கலைவாணனுக்கு பெரிய அளவில் மகிழ்ச்சி உண்டாகவில்லை. தினமும் சண்டை, சச்சரவு, கருத்து வேறுபாடு, மோதல்கள்...

எங்களிடம் சிரித்துப் பேசினாலும், தினமும் தன் மனதிற்குள் கலைவாணன் அழுது கொண்டே இருந்திருக்கிறார். இது எதுவுமே எங்களுக்குத் தெரியாது. கசப்பான மண வாழ்க்கையும், படவுலகில் சந்தித்த ஏமாற்றங்களும் புகழின் உச்சிக்குப் போயிருக்க வேண்டிய ஒரு அருமையான கலைஞனின், நல்ல மனம் கொண்ட ஒரு இனிய நண்பரின் வாழ்க்கையைக் குறைந்த வயதில் பறித்துச் சென்றுவிட்டன என்பதை நினைக்கும்போது இப்போதும் கூட என் மனதில் இனம் புரியாத ஒரு வேதனை உண்டாகிறது.


விஜயகாந்த் படத்தை வாங்கி, விண்ணுலகிற்கே சென்றுவிட்ட வினியோகஸ்தர்!

சுரா

ங்கராஜ் - இவர் ஒரு திரைப்பட வினியோகஸ்தர். 1994ஆம் ஆண்டு வாக்கில் எனக்கு அவர் அறிமுகமானார். சென்னை மகாலிங்கபுரம் மெயின் ரோட்டில் நாற்காலி, மேஜை, பீரோ, கட்டில் போன்ற பொருட்கள் விற்பனை செய்யும் ஒரு ஷோ ரூமைச் சொந்தத்தில் அவர் வைத்திருந்தார். சொந்த ஊர் மதுரை. அங்கு அவருக்கு கடைகள், லாட்ஜ், ஃபைனான்ஸ் கம்பெனி ஆகியவை இருந்தன.

திடீரென்று அவருக்கு ஒரு ஆசை- படவுலகில் காலடி எடுத்து வைத்து வினியோகஸ்தராக வடிவமெடுத்தால் என்ன என்று. அதற்கு முன்பு படவுலகத்தைப் பற்றிய எந்த அறிவும் அவருக்குக் கிடையாது. இருந்தாலும் சினிமா ஆசை அவர் மனதில் கொழுந்துவிட்டு எரிய ஆரம்பித்தது. விளைவு- படத்தை வினியோகம் செய்ய உதவும் மீடியேட்டர் ஒருவர் அவருக்கு அறிமுகமாக, தினமும் ஒவ்வொரு படம் என்று ரங்கராஜ் சுமார் ஐம்பது படங்களை இடைவிடாமல் பார்த்தார். எதுவுமே ரங்கராஜுக்குப் பிடிக்கவில்லை. கடைசியில் விக்னேஷ் கதாநாயகனாக நடித்த 'மனதிலே ஒரு பாட்டு' என்ற படத்தைப் பார்த்தார். அந்தப் படத்தை அதற்கு முன்பு பல முறை பல வினியோகஸ்தர்களுக்கும் அதைத் தயாரித்தவர்கள் போட்டுக் காட்டியும், யாரும் வாங்க முன் வரவில்லை. ஆனால், ரங்கராஜுக்கு எப்படியோ அந்தப் படம் மிகவும் பிடித்து விட்டது. அந்த படத்தின் தயாரிப்பாளருக்கு ரங்கராஜ் வடிவில் அதிர்ஷ்டம் அடித்தது!

இரண்டு ஏரியாக்களை நல்ல விலை கொடுத்து வாங்கினார் ரங்கராஜ். வினியோகம் பண்ண வேண்டும் என்று அவர் வாங்கிய முதல் படமே அதுதான். படம் திரைக்கு வந்தது. போட்ட பணத்தில் ரங்கராஜுக்கு ஒரு பைசா கூட திரும்ப கிடைக்கவில்லை. படம் அந்த அளவிற்கு படு தோல்வி. இதுதான் அவரின் முதல் படவுலக அனுபவம்!

எனினும் அவர் சளைக்கவில்லை. நெப்போலியன்- குஷ்பு நடித்த 'என் பொண்டாட்டி நல்லவ' என்ற படத்தை சென்னை நகரத்திற்கு வாங்கினார். செந்தில்நாதன் இயக்கிய அந்தப் படத்தில் போட்ட பணத்தில் பாதிப் பணம் கைக்கு வந்தது. பவித்ரன் இயக்கிய 'கல்லூரி வாசல்' படத்தை வாங்கினார். அதிலும் பயங்கர அடி.

இதற்கிடையில் சென்னையில் தான் வைத்திருந்த ஷோரூமை முழுமையாகக் காலி செய்து விட்டு, அவர் மதுரையிலேயே குடியேறிவிட்டார். வி.சி.குகநாதன் இயக்கி அஜீத் கதாநாயகனாக நடித்த 'மைனர் மாப்பிள்ளை' என்ற படத்தை மதுரை ஏரியாவுக்கு அவர் வாங்கினார். 'காதல் கோட்டை' திரைக்கு வந்து சிறப்பாக ஓடிக் கொண்டிருந்த நேரம் அது. எங்கு பார்த்தாலும் அஜீத்தைப் பற்றி எல்லோரும் பேசிக் கொண்டிருந்தனர். அந்த அலையாலோ என்னவோ சுமாரான படமான 'மைனர் மாப்பிள்ளை' வர்த்தக ரீதியாக நன்றாக ஓடி ரங்கராஜுக்கு கணிசமான லாபத்தைச் சம்பாதித்துத் தந்தது. ரங்கராஜ் திரைப்பட வினியோகஸ்தர் அங்கியை அணிந்த பிறகு, அவர் முதலீடு செய்த பணத்திற்கு மேல் லாபம் என்று பார்த்தது முதல் முறையாக அந்தப் படத்தில்தான். தொடர்ந்து குகநாதனிடம் சிறு தொகை ஒன்றைக் கொடுத்து 'கனவுக் கன்னி' என்ற தெலுங்கு டப்பிங் படத்தை ரங்கராஜ் வாங்கினார். ‘வெங்கடேஷ்- ஷில்பா ஷெட்டி இணைந்து நடித்த அந்தப் படம்தான் நான் வாங்கிய படங்களிலேயே நல்ல வசூலைப் பெற்றுத் தந்த படம்’ என்று ஒரு நாள் என்னைப் பார்க்கும்போது ரங்கராஜ் கூறினார்.

அவரின் முழு கவனமும் திரைப்பட வினியோகத்தை நோக்கியே திரும்பிவிட்டது. கே.டி.குஞ்சுமோனின் 'ஜென்டில்மேன்' மதுரை- இராமநாதபுரம் மாவட்டங்களில் 25 தியேட்டர்களில் ஓடி முடிந்த நிலையில், குஞ்சுமோனுக்கும், வினியோகஸ்தர்கள் சங்கத்திற்கும் உண்டான சில பிரச்னைகளால் அதற்குப் பிறகு வேறு எந்தத் திரையரங்குகளிலும் அந்தப் படத்தை ரிலீஸ் பண்ண முடியவில்லை. மதுரை திரைப்பட வினியோகஸ்தர்கள் சங்கம் குஞ்சுமோனுக்கு சில லட்சங்களை அபராதமாகப் போட்டது. குஞ்சுமோன் தலை வணங்கத் தயாராக இல்லை. அபராதம் கட்டவும் முடியாது என்று கம்பீரமாகக் கூறிவிட்டார். அந்த அபராதத் தொகையை ரங்கராஜ் கட்டி, மதுரை- இராமநாதபுரம் ஏரியாவுக்கு படத்தின் வினியோக உரிமையை வாங்கியதோடு, மதுரையில் இருக்கும் தன்னுடைய வினியோக நிறுவனத்தின் அலுவலகத்திற்கு கே.டி.குஞ்சுமோனை சிறப்பு விருந்தினராக வரவழைத்து, ஏகப்பட்ட மரியாதைகள் செய்து ஒரு பெரிய விழாவே நடத்தினார். நானும் அந்த விழாவிற்குச் சென்றிருந்தேன். 'நமக்குத் தலை வணங்காத குஞ்சுமோனுக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்று ஆரத்தி எடுக்கும் இந்த நபர் யார்?' என்று மதுரையைச் சேர்ந்த பட வினியோகஸ்தர்கள் ரங்கராஜை வியப்பு மேலோங்க பார்த்தார்கள். கரும்பை முழுமையாக சுவைத்துவிட்ட பிறகு, சக்கையில் என்ன இருக்கும்? பெரிய ஊர்களில் முழுமையாக ஓடி முடிந்துவிட்ட அந்தப் படம் சிறிய ஊர்களில் ஓடி ரங்கராஜுக்கு என்ன பெரிதாகச் சம்பாதித்துத் தந்துவிடப் போகிறது? அந்தப் படத்திலும் ரங்கராஜுக்குப் போட்ட அசல் கூட வரவில்லை.

அதற்குப் பிறகு நண்பர்கள் சிலருடன் சேர்ந்து நான்கைந்து படங்களை அவர் வாங்கினார். சில ஓடின. சில மண்ணைக் கவ்வின. எப்போதாவது சென்னைக்கு வரும்போது என்னை அவர் சந்திப்பார். பார்த்திபன் கதாநாயகனாக நடித்து, பி.வாசு இயக்கி, வேலூர் அப்சரா தியேட்டர் அதிபர் பாலாஜி தயாரித்த 'வாய்மையே வெல்லும்' படத்தில் தனக்கு பல லட்சங்கள் நஷ்டம் என்று மிகவும் கவலையுடன் ஒரு நாள் என்னிடம் சொன்னார் ரங்கராஜ்.

இவ்வளவு இழப்புகளுக்குப் பிறகும், அவரிடம் எந்தவித சோர்வையோ, தளர்ச்சியையோ நான் பார்க்கவில்லை. பல லட்சங்கள் நஷ்டமடைந்திருந்தாலும், எப்போதும் மிகுந்த தைரியத்துடன் அவர் பேசுவார். பின்னர் ஒரு முறை  சென்னைக்கு வந்து என்னைப் பார்த்தபோது, முற்றிலுமாக அவர் ஒடிந்து போயிருந்தார். சரியாக நடக்கக் கூட அவரால் முடியவில்லை. காரணம்- விஜயகாந்த் கதாநாயகனாக நடித்த 'உளவுத் துறை' கொடுத்த மரண அடி! மிகப் பெரிய தொகை கொடுத்து மதுரை ஏரியாவுக்கு வினியோக உரிமை பெற்ற அவருக்கு அந்தப் படத்தின் மூலம் அந்தக் காலத்தில் சுமார் 60 லட்சம் நஷ்டம்! ஒரு மனிதரால் தாங்கிக் கொள்ளக் கூடிய தொகையா அது? 'இவ்வளவு பெரிய தொகை கொடுத்து உங்களை யார் அந்தப் படத்தை வாங்கச் சொன்னது?' என்று நான் அவரை உரிமையுடன் கோபித்தேன். அந்தப் படம் உண்டாக்கிய கடனால் மன நிம்மதி இல்லாத மனிதராக ஆனார் ரங்கராஜ். பலருக்கும் பதில் கூறுவதற்கு அஞ்சி அவர் ஓடி ஒளிந்து கொண்டிருந்தார். மதுரையில் பல லட்சங்கள் கடன்! அவர் நடத்திக் கொண்டிருந்த அத்தனை பிசினஸ்களையும் இழுத்து மூட வேண்டிய நிலை...

ஒரு நாள் ஒரு நண்பரின் மூலம் துயரம் நிறைந்த அந்தச் செய்தியை... மிகவும் தாமதமாக நான் தெரிய நேர்ந்தது.  மதுரையில் இருந்த ரங்கராஜ் தானே மரணத்தைத் தேடிக் கொண்டார் என்பதே அது. படத்துறையில் காலடி எடுத்து வைக்காமல் இருந்திருந்தால், ரங்கராஜ் என்ற அந்த அருமையான மனிதர் இன்று கூட உயிருடன் இருந்திருப்பார்! ஒரு மனிதரின் சினிமா ஆசை, அவரை மண்ணுக்குக் கீழே கொண்டு சென்றுவிட்டது. நான் ஒரு இனிய நண்பரை இழந்துவிட்டேன். கலையுலகக் கனவில் கரைந்து போன நிழலாகிவிட்டார் ரங்கராஜ்!


சம்பாதித்த பணத்தை எங்கோ விட்ட கண்ணதாசனும், எம்.எஸ்.விஸ்வநாதனும், மலேஷியா வாசுதேவனும்!

சுரா

சொந்தத்தில் படத்தைத் தயாரிப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அது ஒரு சர்க்கஸ் கம்பெனியை நடத்துவதைப் போல மிகவும் தலைவலி பிடித்த வேலை. படத் தயாரிப்பில் வெற்றி பெற்றவர்கள் இருபத்தைந்து சதவிகிதம் என்றால், தோல்வியைத் தழுவியவர்கள் எழுபத்தைந்து சதவிகிதம் பேர். என்னதான் கவனமாக இருந்தாலும், ஒரு படத் தயாரிப்பாளர் எப்போது கால் சறுக்கி கீழே விழுவார் என்பதை யாராலும் கணிக்க முடியாது.

பல வெற்றிப் படங்களை எடுத்த தயாரிப்பாளர்கள்கூட பின்னர் படவுலகில் இல்லாமலே போயிருக்கிறார்கள். அவர்கள் எப்படி காணாமல் போனார்கள் என்று நம்மாலேயே கண்டு பிடிக்க முடியாது. எந்த அளவிற்கு வெற்றி பெற்று பணத்தைச் சம்பாதித்தார்களோ, அதே வேகத்தில் சம்பாதித்த முழுப் பணத்தையும் விட்டுவிட்டு, ஒன்றுமே இல்லாமல் ஊர் போய்ச் சேர்ந்த மனிதர்களும் நிறைய இருக்கிறார்கள்.

தயாரிப்பாளர்களின் நிலைதான் இப்படி என்றால், சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கிறோம் என்று இறங்கிய பல நடிகர்- நடிகைகள் எவ்வளவு கோடிகளை இழந்திருக்கிறார்கள் தெரியுமா? உதாரணத்திற்கு சிலரைப் பற்றி மட்டும் இங்கு பார்ப்போம்.

கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் படவுலகில் தொடர்ந்து நடித்து தனக்கென நடிப்பில் ஒரு அருமையான பெயரைச் சம்பாதித்து வைத்திருந்தவர் சாவித்திரி. 'நடிகையர் திலகம்' என்ற பெயருக்குப் பொருத்தமான நடிகையாக அவர் இருந்தார். அவர் படங்களில் நடித்துக் கொண்டு மட்டும் இருந்திருக்கலாம். அப்படி இல்லாமல் படத்தைச் சொந்தத்தில் தயாரிக்கப் போகிறேன், இயக்கப் போகிறேன் என்று களத்தில் இறங்கினார். சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு 'பிராப்தம்' என்ற படத்தைத் தயாரித்து, சாவித்திரியே இயக்கவும் செய்தார். அது முற்பிறவியைப் பற்றிய கதை. நல்ல கதைதான். ஆனால், முற்பிறவி என்ற விஷயம் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதன் விளைவாக படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. இருப்பினும், அந்தப் படத்தில் இடம் பெற்ற 'நேத்து பறிச்ச ரோஜா', 'சொந்தம் எப்போதும் தொடர் கதைதான்', 'சந்தனத்தில் நல்ல வாசமெடுத்து', ‘இது மார்கழி மாதம் முன்பனிக் காலம்’ போன்ற பாடல்களை எந்தக் காலத்திலும் நம்மால் மறக்கவே முடியாது. 'பிராப்தம்' தோல்வி அடைந்ததால், சாவித்திரியின் வாழ்க்கையே திசை மாறியது. அவர் பல லட்சம் ரூபாய்களுக்கு கடனாளியாக ஆனார். கவலையை மறப்பதற்கு மதுவின் துணையை அவர் நாடினார். அவரின் வாழ்க்கை தாறுமாறானது. ஒரு நாள் சாவித்திரி இந்த உலகத்தை விட்டே போய்விட்டார். சொந்தமாக படம் எடுத்ததன் விளைவு இது.

எஸ்.வி.சஹஸ்ரநாமம் 'நாலு வேலி நிலம்' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். 'படம் பிரமாதமாக வந்திருக்கு. யாருக்கும் விற்காதீங்க. சொந்தத்தில் நீங்களே படத்தை ரிலீஸ் பண்ணுங்க' என்று எல்லோரும் கூறியிருக்கிறார்கள். சஹஸ்ரநாமம், மற்றவர்கள் கூறியதை நம்பி, படத்தை தானே வெளியிட்டார். படம் படு தோல்வி... கடைசியில் தனக்குச் சொந்தமாக ராயப்பேட்டையில் இருந்த இரண்டு வீடுகளை விற்பனை செய்து, படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கு சம்பளப் பாக்கியை அவர் தந்திருக்கிறார். கஷ்டப்பட்டு நடித்து சம்பாதித்த பணத்தில் கட்டிய வீடு, சொந்தத்தில் படத்தைத் தயாரித்ததில் காணாமல் போனது.

பி.எஸ்.வீரப்பா சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு ஆலயமணி, ஆண்டவன் கட்டளை ஆகிய படங்களைத் தயாரித்தார். இரண்டுமே மிகப் பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. எம்.ஜி.ஆரை வைத்து 'ஆனந்த ஜோதி' என்ற படத்தைத் தயாரித்தார். நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்தை வைத்து சாட்சி, வெற்றி, சபாஷ் ஆகிய படங்களைத் தயாரித்தார். அந்தப் படங்களில் கூட கணிசமாக அவருக்கு லாபம் கிடைத்தது. கார்த்திக்கை வைத்து 'நட்பு' என்ற படம் எடுத்தார். அமீர்ஜான் இயக்கிய அந்தப் படத்தில்கூட லாபமே. ஆனால பின்னர் அவர் தயாரித்த ஓடங்கள், துளசி என்ற இரண்டு படங்களும் மிகப் பெரிய தோல்விகளைச் சந்தித்தன. கடைசியில் கையில் இருந்த பணத்தையெல்லாம் இழந்து, பட்டினப்பாக்கத்தில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்து, தன்னுடைய இறுதி மூச்சை அவர் விட்டார். மரணமடையும் போது அவரின் கையில் சம்பாத்தியம் என்று எதுவுமே இல்லை.

வி.கே.ராமசாமி வடிவுக்கு வளைகாப்பு, செல்வம், ருத்ரதாண்டவம் என்று பல படங்களைச் சொந்தத்தில் தயாரித்தார். அந்தப் படங்களால் அவருக்கு லாபமே. தன் மகன் வி.கே.ஆர்.ரகுவை கதாநாயகனாகப் போட்டு 'ஜோடிப் புறா' என்ற பெயரில் ஒரு படத்தை அவர் தயாரித்தார். அதில் பயங்கர அடி. அதற்குப் பிறகு பல வருடங்களுக்குப் பிறகு கார்த்திக்கைக் கதாநாயகனாகப் போட்டு 'சுந்தரபாண்டியன்' என்றொரு படத்தைத் தயாரித்தார். இன்று வரை அந்தப் படம் திரைக்கு வரவேயில்லை. இந்த இடத்தில் ஒரு தமாஷான, பரிதாபமான தகவலைக் கூறவேண்டியதிருக்கிறது. ரஜினிகாந்த் ‘அருணாச்சலம்’ படத்தின் மூலம் வி.கே.ராமசாமிக்கு இருபத்தைந்து லட்சம் ரூபாய் அளித்தார். அந்தப் பணத்தை பத்திரப்படுத்தி வைக்காமல், வி.கே.ராமசாமி தன் மகன் இயக்கிய ‘சுந்தரபாண்டியன்’ படத்தை திரைக்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காக முழு பணத்தையும் அதற்காக செலவிட்டார். அதாவது, மூழ்கிக் கொண்டிருந்த கப்பலில் முதலீடு செய்தார்.  போட்ட பணம் முழுவதும் இருந்த இடம் தெரியாமல் கரைந்து போனது. வி.கே.ராமசாமியை நினைத்து நம்மால் பரிதாபப்பட முடியாமல் எப்படி இருக்க முடியும்?

 50 வருடங்களாக எம்.ஜி.ஆர்., சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், எஸ்.எஸ்.ராஜேந்திரன், முத்துராமன், சிவகுமார், ஏவி.எம்.ராஜன், ஜெய்சங்கர், ரவிச்சந்திரன், ரஜினிகாந்த், கமல்ஹாசன் என்று தொடங்கி பின்னர் வந்த எத்தனையோ கதாநாயகர்கள் நடித்த படங்களிலெல்லாம் இணைந்து நடித்து முத்திரை பதித்த வி.கே.ராமசாமி சொந்தத்தில் படங்களைத் தயாரித்து, பெரிய அளவில் பணத்தை இழந்ததன் காரணமாக தி.நகரில் இருந்த தன்னுடைய சொந்த வீட்டை விற்றுவிட்டு, அதே தெருவில் இருந்த ஒரு ஃப்ளாட்டில் வாடகைக்கு குடியிருந்தார். அவரை அந்த வீட்டில் நான் ஒருமுறை சந்தித்து பேசியிருக்கிறேன். அவருடைய சொந்த வீட்டிலும் அதற்கு முன்பு நான் சென்று பார்த்திருக்கிறேன். அவருடைய இரண்டு நிலைகளையும் நினைத்துப் பார்த்த போது மனதிற்கு மிகவும் சங்கடமாக இருந்தது.

எத்தனையோ வருடங்களாக படவுலகில் இருந்தும், இறுதி காலத்தில் சேமிப்பு என்று எதுவும் இல்லாமலே, வி.கே.ஆர். இவ்வுலகை விட்டு நீங்கினார்.

ஜே.பி.சந்திரபாபு எம்.ஜி.ஆரைக் கதாநாயகனாகவும், சாவித்திரியைக் கதாநாயகியாகவும் போட்டு 'மாடி வீட்டு ஏழை' என்ற பெயரில் படமொன்றைத் தயாரித்தார். படத்தை இயக்கியவரும் அவரே. இரண்டு நாட்கள்தான் படப்பிடிப்பே நடந்தது. எம்.ஜி.ஆர். மொத்தமே ஒன்றரை நாட்கள்தான் அந்தப் படத்தில் நடித்தார். அதற்குப் பிறகு என்ன காரணத்தாலோ, அவர் படப்பிடிப்பிற்கே வரவில்லை.


அதன் விளைவாக மிகப் பெரிய கடனாளியாக ஆன சந்திரபாபு ஆசை ஆசையாக கட்டிய பிரம்மாண்டமான பங்களா ஏலம் விடப்பட்டது. கார், வீடு, பணம், நகைகள், சொத்து- எல்லாவற்றையும் சந்திரபாபு இழந்தார். தன் அண்ணன்படும் கஷ்டத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் அவரின் தங்கை தற்கொலை செய்து கொண்டார். சந்திரபாபுவின் திருமண வாழ்க்கை முதலிரவு நாளன்றே முற்றுப்புள்ளி ஆனது. வாழ்க்கையே சோகமாகிப் போன சந்திரபாபு என்ற சாதனை புரிந்த நடிகர், கடைசியில் எதுமே இல்லாமல் ஒரு நாள் தன் உயிரை விட்டார்.

ராதாரவி 'தை மாசம் பூவாசம்' என்றொரு படத்தைத் தயாரித்தார். இது தவிர, வேறு இரண்டு படங்களையும் தயாரித்தார். ஒரு படம் கூட உருப்படியாக ஓடவில்லை. சொந்தத்தில் படங்களை எடுத்ததால் பல லட்சங்கள் கடனாளியாக அவர் ஆனார். வங்கியில் வாங்கியிருந்த கடனுக்கு அவரின் தந்தை எம்.ஆர்.ராதா பல்வேறு திறமைகளையும் வெளிப்படுத்தி சம்பாதித்து தேனாம்பேட்டையில் கட்டிய வீடு சில வருடங்களுக்கு முன்னால் ஏலத்தில் போக இருந்தது. பின்னர் அந்த வீடு ஏலத்தில் போகாத அளவில், ராதாரவி பார்த்துக் கொண்டார்.

மலேஷியா வாசுதேவன் படங்களுக்குப் பாடல்கள் பாடி சிறிது சிறிதாக தான் சம்பாதித்த பணத்தில் 'நீ சிரித்தால் தீபாவளி' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அவரே படத்தை இயக்கினார். தான் படமொன்றைத் தயாரித்து, இயக்கப் போவதாக அவர் என்னிடம் ஒருமுறை கூறியபோது, ‘பட உலகத்தின் சூழ்நிலை மிகவும் மோசமாக இருக்கிறது. கவனமாக நடந்து கொள்ளுங்கள்’ என்று நான் கூறினேன். அவர் இயக்கிய அந்தப் படம் மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்தது. அதன் விளைவாக தன்னுடைய சொந்த வீட்டை விற்க வேண்டிய சூழ்நிலை மலேஷியா வாசுதேவனுக்கு உண்டானது. வாடகை வீட்டில் குடியிருந்த அவரை பலமுறை நான் சந்தித்திருக்கிறேன். சொந்தப் படம் எடுப்பதற்கு முன்னால் மகிழ்ச்சி நிறைந்த முகத்துடன் காணப்பட்ட வாசு, மிகுந்த கவலை நிறைந்த முகத்துடனும், எதையோ பறி கொடுத்ததைப் போன்ற முக பாவனையுடனும் எப்போதும் காணப்படுவார். அதைப் பார்க்கும்போது எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கும்.

கடைசி காலங்களில் சாலிகிராமத்திலிருந்த தன்னுடைய வீட்டில் இருபத்து நான்கு மணி நேரமும் காவி உடை அணிந்து, சாய்பாபாவை வழிபட்டுக் கொண்டிருந்த மலேஷியா வாசுதேவனை நான் பலமுறை சந்தித்துப் பேசியிருக்கிறேன். தன் மகன் யுகேந்திரனை ஒரு முன்னணி நடிகராக கொண்டு வர வேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. ஆனால், அவருடைய அந்த ஆசை இதுவரை நிறைவேறவில்லை. சிவாஜி, ரஜினி, கமல் என்று பலருக்கும் பின்னணி குரல் கொடுத்து பாடல்களைப் பாடிய மலேஷியா வாசுதேவன், பல வருடங்கள் படவுலகத்தில் பிஸியான மனிதராக இருந்தும், இறுதி காலத்தில் அவருடைய சம்பாத்தியம் என்று பெரிய அளவில் எதுவும் இல்லை. சொந்தத்தில் படத்தைத் தயாரிக்காமல் இருந்திருந்தால், மலேஷியா வாசுதேவன் என்ற அந்த நல்ல மனிதர் இறுதி வரை சந்தோஷமாகவே இருந்திருப்பார்.  மனக் கவலைகளுடனும், உடல் நலம் பாதிக்கப்பட்டும் அவர் மரணத்தைத் தழுவியபோது அவருக்காக நான் மிகவும் வருத்தப்பட்டேன்.

சொந்தத்தில் படத்தைத் தயாரிக்கும் ஆசை மெல்லிசை மன்னரையும் விட்டு வைக்கவில்லை. எம்.எஸ்.விஸ்வநாதன் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தை அவரின் மகன்கள் சொந்தப் படங்கள் எடுக்கிறேன் என்று அழித்தார்கள். எம்.எஸ்.வி. உழைத்து சம்பாதித்த பணம் கண் மூடி கண் திறப்பதற்குள் காணாமல் போனது. எங்க ஊர் ராஜா, ராமன் எத்தனை ராமனடி, பட்டிக்காடா பட்டணமா போன்ற பல படங்களுக்கு கதை- வசனம் எழுதியிருக்கும் பாலமுருகன் மாணிக்கத் தொட்டில், காம சாஸ்திரம் ஆகிய படங்களைச் சொந்தத்தில் தயாரித்தார். அந்தப் படங்கள் உண்டாக்கிய நஷ்டம் அவரின் வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சரிவை உண்டாக்கியது!

இசையமைப்பாளர் எஸ்.ஏ.ராஜ்குமார் 'முதல் பாடல்' என்ற பெயரில் சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தார். அது உண்டாக்கிய நஷ்டத்திலிருந்து மீண்டு வருவதற்குள் அவருக்குப் போதும் போதும் என்றாகி விட்டது. 'திரிசூலம்' படத்தை இயக்கிய கே.விஜயன் விஜயகாந்தை வைத்து 'தூரத்து இடி முழக்கம்' என்ற படத்தைத் தயாரித்தார். அதை ரிலீஸ் பண்ணுவதற்குள் அவர் பட்ட பாடு அவருக்குத்தான் தெரியும். அந்தப் படத்தால் உண்டான கடனுக்கு பல வருடங்கள் கஷ்டப்பட்டு உழைத்து வட்டி கட்டிக் கொண்டிருந்தார் விஜயன். நடிகர் மோகன் சொந்தத்தில் ஒரு படத்தைத் தயாரித்தார். அதில் மிகப் பெரிய தொகை அவருக்கு நஷ்டம். சன் டி.வி.யில் தொடர்கள் தயாரித்து படத்தால் உண்டான பள்ளத்தை அவர் சரி செய்தார்.

நடிகர் தேங்காய் சீனிவாசன் சிவாஜியைக் கதாநாயகனாகப் போட்டு 'கிருஷ்ணன் வந்தான்' என்ற படத்தைத் தயாரித்தார். அதில் அவருக்கு மிகப் பெரிய நஷ்டம். படத்தில் வேலை பார்த்தவர்களுக்கே முழுமையாக அவரால் பணம் தர முடியவில்லை. கவியரசு கண்ணதாசன் பல படங்களைச் சொந்தத்தில் தயாரித்திருக்கிறார். சில படங்கள் ஓடியிருக்கின்றன. பல படங்கள் ஓடாமல் தோல்வியைத் தழுவி இருக்கின்றன. சில படங்கள் பாதியிலேயே நின்று விட்டிருக்கின்றன. பாடல்கள் எழுதி சம்பாதித்த பணத்தை, இப்படித்தான் இழந்தார் கவிஞர். சரத்குமார் 'கண் சிமிட்டும் நேரம்', 'மிஸ்டர் கார்த்திக்', 'ரகசிய போலீஸ்' ஆகிய படங்களைத் தயாரித்தார். முதல் படத்தில் லாபமும் இல்லை, நஷ்டமும் இல்லை. அடுத்த இரண்டு படங்களிலும் அவருக்கு சில கோடிகள் நஷ்டம்!

பாடலாசிரியர் குருவிக்கரம்பை சண்முகம் பாண்டியராஜனை வைத்து 'மாப்பிள்ளை மனசு பூப்போல' என்றொரு படத்தைத் தயாரித்தார். அதை முழுமையாக முடித்து விற்பனை செய்வதற்கு அவர் பட்ட பாடு இருக்கிறதே! அதை வார்த்தைகளால் கூற முடியாது. கவிஞர் மு.மேத்தா 'தென்றல் வரும் தெரு' என்ற பெயரில் ஒரு படத்தைத் தயாரித்தார். அதை அவரால் விநியோகம் செய்யவே முடியவில்லை. பலவித சிரமங்களையும் தாண்டி வெளியிட்ட போது, படம் ஒரு வாரம்தான் ஓடியது. மு.மேத்தாவிற்கு அந்தப் படத்தைச் சொந்தத்தில் தயாரித்தது ஒரு கசப்பான அனுபவத்தைத் தந்தது.

நடிகை மனோரமா கே.எஸ்.அதியமானை இயக்குநராகப் போட்டு 'தூரத்துச் சொந்தம்' என்ற பெயரில் ஒரு படத்தை எடுத்தார். பல வருடங்கள் அவர் உழைத்துச் சம்பாதித்த பணத்தில் ஒரு மிகப் பெரிய தொகையை அதில் இழந்தார். 'சில்க்' ஸ்மிதா உடலைக் காட்டி சம்பாதித்த பல லட்சங்களையும் சொந்தத்தில் படமெடுக்கிறேன் என்ற முழுமையாக இழந்ததுதான் மிச்சம்! கடைசியில் அவர் மரணத்தைத் தழுவும் போது, அவர் கையில் எதுவுமே இல்லை.

படவுலகை 'கனவுலகம்' என்று தெரியாமலா சொன்னார்கள்? சொந்தத்தில் படமெடுக்க வந்து பல லட்சங்களை இழந்த எத்தனை நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்களை நாம் பார்த்திருக்கிறோம்! கஷ்டப்பட்டு அவர்கள் சம்பாதித்த பணம் இப்படி காணாமல் போவதைப் பார்ப்பது என்பது உண்மையிலேயே தாங்கிக் கொள்ள முடியாத ஒன்றுதான். அதற்காக யாருமே தயாரிப்பாளராக மாறக் கூடாதா என்று சிலர் கேட்கலாம். தாராளமாக மாறலாம். ஆனால், அப்படி தயாரிப்பாளர்களாக மாறுபவர்களில் வெற்றி பெறுபவர்கள் சிலரே. தோல்வியடைந்தவர்கள்தான் அதிகம். அதற்குக் காரணம்-

'நல்ல ஒரு கலைஞன் எந்தக் காலத்திலும் வெற்றிகரமான ஒரு வியாபாரியாக ஆகவே முடியாது என்பதுதான்’- இந்த உண்மை இங்கு எவ்வளவு பேருக்குப் புரியும்!


ரஜினியை வைத்து படமெடுத்த தயாரிப்பாளரின் கையில் இப்போது எதுவும் இல்லை!

சுரா

ழகன் தமிழ்மணி - திரைப்படம் மற்றும் மெகா தொலைக்காட்சித் தொடர்களின் முன்னணி தயாரிப்பாளர் இவர். அவரை எனக்கு 1979ஆம் ஆண்டிலிருந்தே தெரியும். நானும் அவரும் மிகவும் நெருங்கிய நண்பர்கள்.

ஆரம்ப காலத்தில் பத்திரிகைகளில் ரிப்போர்ட்டராகப் பணியாற்றிய தமிழ்மணி நான் பார்க்கும்போது தி.நகர் மன்னா ரெட்டி தெருவில் ஒரு அலுவலகத்தை வைத்துக் கொண்டு, 'நயனதாரா' என்ற பெயரில் மாத நாவல் ஒன்றை நடத்திக் கொண்டிருந்தார். ஜெயகாந்தன், சு.சமுத்திரம், சவீதா, ராஜேந்திரகுமார் என்று பலரும் அதில் நாவல்கள் எழுதினார்கள். நான் அதில் திரைப்பட விமர்சனங்களை எழுதிக் கொண்டிருந்தேன்.

ஒரு ஸ்கூட்டரில் தமிழ்மணியும் நானும் தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திற்குச் சென்று கதாசிரியர் தூயவனுடன் பேசிக் கொண்டிருந்தது இப்போதும் ஞாபகத்தில் இருக்கிறது. எம்.ஜி.ஆர். நடித்த தாய்க்குப் பின் தாரம், தாயைக் காத்த தனயன், விவசாயி, தொழிலாளி, நல்ல நேரம் போன்ற பல படங்களைத் தயாரித்த தேவர் பிலிம்ஸ் அலுவலகத்திற்குள் நானா என்பதை நினைத்துப் பார்த்தபோது உடம்பெங்கும் சிலிர்த்தது.

ஒரு வருடம் நடந்த 'நயனதாரா' திடீரென்று நின்றுவிட, தமிழ்மணி 'சரணாலயம்' என்ற படத்திற்கு தயாரிப்பு நிர்வாகியாகப் பணியாற்றினார். நடிகர் கார்த்திக்கின் தந்தை முத்துராமன் தமிழ்மணிக்கு மிகவும் நெருக்கமானவர். கார்த்திக் சிறுவனாக இருந்த காலத்திலிருந்தே, அவரை தமிழ்மணிக்கு நன்கு தெரியும். அதை வைத்து அகில இந்திய கார்த்திக் ரசிகர் மன்றத் தலைவராகச் சில வருடங்கள் தமிழ்மணி இருந்தார். நடிகை ஜீவிதாவிற்கு கால்ஷீட் பார்த்தார்.

திடீரென்று ஒரு நாள் படத் தயாரிப்பாளராகவும் தமிழ்மணி வடிவமெடுத்தார். அவர் தயாரித்த முதல் படம் 'அன்புள்ள ரஜினிகாந்த்.' தூயவனும் தமிழ்மணியும் சேர்ந்து அந்தப் படத்தைத் தயாரித்தார்கள். இன்று கதாநாயகியாக இருக்கும் மீனா குழந்தை நட்சத்திரமாக நடிப்பில் முத்திரை பதித்த படம். ரஜினிகாந்த் முக்கிய பாத்திரத்தில்- நடிகர் ரஜினிகாந்தாகவே படம் முழுக்க வருவார். கே.நட்ராஜ் படத்தை இயக்கினார். தமிழ்மணி தயாரிப்பாளராக வாழ்க்கையில் உயர்வு பெற்றிருப்பதைப் பார்த்து மனப்பூர்வமாக நான் சந்தோஷப்பட்டேன்.

அந்தப் படத்திற்குப் பிறகு தமிழ்மணி தான் மட்டும் தனியாக படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார். அப்படித் தயாரான படம்தான் 'தர்மபத்தினி'. கார்த்திக்- ஜீவிதா இணைந்து நடித்த அந்தப் படத்தை அமீர்ஜான் இயக்கினார். எல்லோரும் ஆச்சரியப்படும் வகையில் அந்தப் படத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் நடந்தது. அது- 'நான் தேடும் செவ்வந்திப் பூவிது' என்ற தான் பாடி, இசையமைத்த பாடலுக்கு இளையராஜாவே வாயசைத்து நடித்ததுதான். அதற்குப் பிறகு அப்படிப்பட்ட ஒரு வாய்ப்பை இளையராஜா வேறு யாருக்குமே இன்றுவரை தந்ததில்லை.

கார்த்திக்கை கதாநாயகனாக வைத்து தமிழ்மணி அடுத்து தயாரித்த படம் 'சோலைக்குயில்'. இப்போது கார்த்திக்கின் மனைவியாக இருக்கும் ராகினிதான் அந்தப் படத்தின் கதாநாயகி.

தமிழ்மணி தயாரித்த அடுத்த படம் 'சித்திரைப் பூக்கள்'. வினோதினியை அதில் கதாநாயகியாக தமிழ்மணி அறிமுகப்படுத்தினார். பல வருடங்களுக்கு முன்பு கவியரசு கண்ணதாசனின் கீழ் தான் பத்திரிகையில் பணியாற்றிய விஷயத்தை ஞாபகத்தில் வைத்து, கவிஞரின் மகன் கண்மணி சுப்புவை அப்படத்தின் இயக்குநராக அமர்த்தினார். இளம் காதலர்களை வாழ்க்கையில் சேர்த்து வைக்கப் போராடும் முன்னாள் ராணுவ அதிகாரி பாத்திரத்தில் சரத்குமார் நடித்திருந்தார். அதில் இடம் பெற்ற 'மந்திரப்புன்னகை சிந்திடும் செல்வங்களே' என்ற கண்மணி சுப்பு எழுதிய பாடலை மறக்கத்தான் முடியுமா?

'அன்புள்ள ரஜினிகாந்த்' படத்தில் மட்டுமே தமிழ்மணி ஏதோ கொஞ்சம் சம்பாதித்தார். மீதி எந்தப் படத்திலும் அவருக்கு லாபம் என்று எதுவுமே கிடைக்கவில்லை. 'சித்திரைப் பூக்கள்' படத்தின் பிரிண்டுகளை விநியோகஸ்தர்களுக்குக் கொடுத்துவிட்டு, ஜெமினி லேப்பில் கையில் ஒரு பைசா கூட இல்லாமல் இரவு பத்து மணிக்கு நின்றிருந்த தமிழ்மணி இப்போதும் பசுமையாக என் ஞாபகத்தில் நிற்கிறார்.

'சித்திரைப் பூக்கள்' படத்திற்குப் பிறகு தமிழ்மணி படத்துறையில் இல்லை. சில வருட இடைவெளிக்குப் பிறகு அவரை டி.வி. உலகம் இரு கரம் நீட்டி வரவேற்றது. 'மங்கை' என்ற மெகா தொடரை அவர் தயாரித்தார். சன் டி.வி.யில் தொடர்ந்து 400 நாட்கள் அத்தொடர் ஒளிபரப்பானது. மிகப் பெரிய அளவில் பேசப்பட்ட தொடர் அது. பெண்கள் தங்கள் வேலையைக் கூட ஒதுக்கி வைத்து விட்டு அத்தொடரைப் பார்த்தனர்.

அதற்குப் பிறகு 'அம்மா' என்ற தொடரை தமிழ்மணி தயாரித்தார். அது சன் டி.வி.யில் 390 நாட்கள் தொடர்ந்து ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு 'அம்பிகை' என்ற மெகா தொடரையும், ‘அவளும் பெண்தானே’ என்ற மெகா தொடரையும் தமிழ்மணி சன் டி.வி.க்காக தயாரித்தார். மங்கை, அம்மா, அம்பிகை, அவளும் பெண்தானே ஆகிய தொடர்கள் தெலுங்கில் மொழி மாற்றம் செய்யப்பட்டு ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பாயின. இது தவிர நேரடியாக தெலுங்கில் 'அத்தம்மா' என்ற மெகா தொடரை தமிழ் மணி தயாரிக்க, 400 நாட்கள் அது ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பானது. அதற்குப் பிறகு தெலுங்கில் 'அம்மாக்கோசம்' என்ற பெயரில் ஒரு மெகா தொடரை தமிழ்மணி தயாரிக்க, அது ஜெமினி டி.வி.யில் ஒளிபரப்பானது.

சினிமா துறையில் தமிழ்மணி சம்பாதிக்கவில்லை. ஆனால், சின்னத்திரை தமிழ்மணிக்கு பணத்தையும், புகழையும் நிறையவே அள்ளித் தந்தது. படங்கள் தயாரித்ததன் மூலம் உண்டான கடன்கள் அனைத்தையும் டி.வி. தொடர்கள் தயாரித்து தமிழ்மணி அடைத்தார். டி.வி. தொடர் தயாரிப்பாளர் என்ற முறையில் மிகவும் பிஸியாக இருந்த தமிழ்மணி அப்படியே இருந்திருக்கக் கூடாதா? பத்து வருட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் படத்துறையில் காலடி எடுத்து வைத்தார். ‘காலமெல்லாம் காதல் வாழ்க’ படத்தை இயக்கிய ஆர்.பாலுவை இயக்குநராகப் போட்டு ‘அன்பே உன் வசம்’ என்ற பெயரில் ஒரு படத்தை தமிழ்மணி தயாரிக்க ஆரம்பித்தார். புது கதாநாயகன் ஒருவர் அறிமுகமான அப்படத்தின் கதாநாயகியாக ‘சொல்ல மறந்த கதை’ ரதி நடித்தார். தினா இசையமைத்தார். அப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு மொரீஷியஸ், ஊட்டி ஆகிய இடங்களில் நடைபெற்றது. தமிழ்மணி நன்கு செலவு செய்து அப்படத்தைத் தயாரித்தார். அப்படம் தயாரிப்பில் இருந்தபோது, படத்தின் கதை என்ன என்று எத்தனையோ முறை தமிழ்மணி இயக்குநர் பாலுவிடம் கேட்பார். தமிழ்மணி அவ்வாறு கேட்கும் ஒவ்வொரு தருணத்திலும், ‘அண்ணே, இதை கதையாக கூறுவது என்பது முடியாத விஷயம். இது ஒரு ஃபீலிங்... உணர மட்டுமே முடியும்’ என்பார் பாலு. படம் முடிவடையும் நிலையை எட்டியபோது, ஒருநாள் தமிழ்மணி என்னிடம் ‘சுரா, பாலுவிடம் நான் படத்தின் கதை என்னவென்று கேட்கும்போதெல்லாம் அவன் கதையை கூற மாட்டேன் என்கிறான். இது ஒரு ஃபீலிங்... உணர மட்டுமே முடியும் என்று கூறுகிறான். நீயாவது அவனிடம் கதை என்ன என்று கேட்டு, என்னிடம் சொல்லு’ என்று கூறினார். படம் முடிவடையும் நிலையில், அப்படத்தைத் தயாரிக்கும் தயாரிப்பாளர் தன் படத்தின் கதை என்ன என்று கூட தெரியாத நிலையில் இருந்த அவலத்தை எங்கு போய் கூறுவது?

நான் இயக்குநர் பாலுவிடம் கதை என்ன என்று கேட்டதற்கு, தமிழ்மணியிடம் கூறிய அதே பதிலைத்தான் என்னிடமும் கூறினார். நான் அதை தமிழ்மணியிடம் கூறினேன்.

‘அன்பே உன் வசம்’ படம் முடிவடைந்து, ஒரு ஏரியா கூட வியாபாரம் ஆகவில்லை. தமிழ்மணியே தன் சொந்தப் பொறுப்பில் தமிழகமெங்கும் அப்படத்தை வெளியிட்டார். படம் ஒரே ஒரு வாரம்தான் ஓடியது. அந்தப் படத்தைத் தயாரித்ததன் மூலம் தமிழ்மணிக்கு மிகப் பெரிய அடி கிடைத்தது. சுமார் ஒன்றரை கோடி ரூபாய் அவருக்கு நஷ்டமானது. பல லட்ச ரூபாய்களுக்கு அவர் கடனாளியாக ஆனார். படங்களைத் தயாரித்து பல லட்சங்களை இழந்து, அதை சின்னத்திரையில் தொடர்களைத் தயாரித்ததன் மூலம் சம்பாதித்து, மீண்டும் படத் தயாரிப்பில் இறங்கி, சம்பாதித்த பணம் முழுவதையும் இழந்ததோடு மட்டுமில்லாமல் கடனாளியாகவும் ஆன தமிழ்மணியின் தலை விதியை நினைத்து நம்மால் வருத்தப்படாமல் எப்படி இருக்க முடியும்? பட்ட கடன்களை அடைப்பதற்காக, தான் சென்னையில் வீடு கட்டுவதற்காக வாங்கி வைத்த நிலத்தை விற்க வேண்டிய சூழ்நிலை தமிழ்மணிக்கு உண்டானது.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு தமிழ்மணி, ‘மீன் கொத்தி’ என்ற பெயரில் ஒரு படத்தை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. அந்தப் படத்தின் கதாநாயகனாக தமிழ்மணியின் மகன் அஜய் கிருஷ்ணா நடித்திருக்கிறார்.

பெரிய திரையில் இழந்ததை சின்னத் திரையில் சம்பாதித்து, மீண்டும் அதை பெரிய திரையில் இழந்து, தொடர்ந்து செயல்பட்டு கொண்டிருக்கும் தமிழ்மணியின் தொடர் முயற்சி எனக்கு மிகவும் பிடிக்கிறது. இந்த முறையாவது அவர் இழந்த பணத்தைச் சம்பாதித்து நல்ல நிலைக்கு திரும்பவும் வர வேண்டும் என்று ஒரு நெருங்கிய நண்பன் என்ற முறையில் நான் விரும்புகிறேன். 

* * *

 

 

 

 

 

தொடரும்...

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.