Logo

ஆரூடம்

Category: சினிமா
Published Date
Written by சுரா
Hits: 6628
aaruudam

ல்வேறு குரல்களில் ‘குட்பை’ ‘குட்பை’ என்ற வார்த்தைகள். ரயில்வே ஸ்டேஷனில் நின்று கொண்டிருக்கும் மலையாள குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் புறப்பட்டுக் கொண்டிருக்கும் ட்ரெயினில் அமர்ந்திருக்கும் பயணிகளைப் பார்த்துக் கைகளை ஆட்டியவாறு ‘குட்பை’ ‘பெஸ்ட் ஆஃப் லக்’ என்று கூறிக் கொண்டிருக்கிறார்கள்.

நீங்கிக் கொண்டிருக்கும் ட்ரெயினில் இருந்து பார்க்கும் போது ப்ளாட்ஃபாரத்தில் இருக்கும் மக்கள் கூட்டம் தெரிகிறது. (Subjective Shot)

ஸ்டேஷனை விட்டுக் கிளம்பிப் போய்க் கொண்டிருக்கும் வண்டியிலிருந்து தெரியும் பெரிய நகரம். அந்தக் காட்சிகளின் பின்புலத்தில் படத்தின் ‘டைட்டில்கள்’.

கம்பார்ட்மெண்டில் தன்னுடைய பெட்டியைத் திறந்து காமிக் புத்தகங்களை எடுத்து பிரிக்கிறான் ராஜேஷ். வெளியே காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கும் ஆர்வம் குறைந்தவுடன் புத்தகத்தில் அவனின் ஆர்வம் செல்கிறது.

கம்பார்ட்மெண்டில் வர்மா, இந்திரா ஆகியோரும் இருக்கிறார்கள். இந்திரா தலையைச் சாய்த்தவாறு, ஏதோ தலைவலி இருப்பதைப்போல உட்கார்ந்திருக்கிறாள்.

வர்மா தன்னுடைய மனைவியைப் பார்க்கிறான். அவள் அவனைப் பார்க்கவில்லை. பாதி கண்களை மூடிக் கொண்டு அவள் இருக்கிறாள்.

வர்மா:    படிக்கிறதுக்கு ஒண்ணும் வாங்கல...

இந்திரா கவனிக்காமல் இருக்கிறாள்.

கணவனும், மனைவியும் அமைதியாக அமர்ந்திருக்கிறார்கள். பின்புலத்தில் புகைவண்டியின் சத்தம்.

கம்பார்ட்மெண்டில் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் உண்ணி. ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ளாமல் தங்களின் சொந்த சிந்தனைகளில் மூழ்கிப் போயிருக்கும் வர்மாவும் இந்திராவும்.

பின்புலத்தில் புகைவண்டியின் கூக்குரல்.

தனித்தனி தீவு போல் அமர்ந்திருக்கும் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மேல் ‘டைட்டில்கள்’ முடிகின்றன.

வண்டியின் தொலைதூர காட்சி-

2

ரு கிராமப் பகுதியில் இருக்கும் ஸ்டேஷனை நெருங்கிக் கொண்டிருக்கும் புகைவண்டி.

வண்டியின் முதல் வகுப்பு கம்பார்ட்மெண்ட். வண்டியில் அமர்ந்து வெளியே பார்த்தவாறு இருக்கும் உண்ணியின் பார்வையில் மாறிக் கொண்டிருக்கும் இயற்கைக் காட்சிகள்.

கம்பார்ட்மெண்டில் வர்மா, இந்திரா. இந்திரா படுத்திருக்கிறாள். உண்ணிக்கு நேர் எதிரில் அமர்ந்திருக்கும் வர்மா வெளியே பார்க்கிறான். தொடர்ந்து எதிர்பக்கம் திரும்பிப் படுத்திருக்கும் இந்திராவைக் கவனிக்கிறான்.

உண்ணி:  அப்பா, ஆறு... ஆறு...!

வர்மா:    ம்...

புகை வண்டியின் வேகம் குறைகிறது.

வர்மா எழுந்து விரிப்புகளை மடித்து வைக்கிறான். பிறகு இந்திராவை மெதுவாக அழைக்கிறான்.

“இங்கே பாரு... இந்திரா...”

இந்திரா அப்போது உறங்கிக் கொண்டிருக்கிறாள்.

அவன் அவளைத் தொட்டு அழைக்கிறான்.

“ஸ்டேஷன் வந்திருச்சு...”

உண்ணி:  மம்மீ... ஆறு கடந்திடுச்சு...

இந்திரா எழுந்து அமர்கிறாள். களைப்புடன் தலைமுடியைச் சரி செய்து கால்களில் செருப்புகளை மாட்டிக் கொண்டு எழுந்து புடவையைச் சரி செய்கிறாள்.

இந்திரா:   ராஜேஷ்... ஷூவைப் போட்டுக்கோ. கெட் ரெடி. இங்கே ஒண்ணு ரெண்டு நிமிஷங்கள்தான் வண்டி நிக்கும். (வர்மாவிடம்) லக்கேஜை இறக்குறதுக்கு நேரம் இருக்குமா?

வர்மா:    நேரம் இருக்கும். நான் வாசல் பக்கத்துல எல்லா சாமான்களையும் எடுத்து வைக்கிறேன்.

அவன் லக்கேஜ்களை இருக்கைக்குக் கீழேயிருந்து எடுக்க ஆரம்பிக்கிறான்.

3

கிராமப் பகுதியில் இருக்கும் சிறு ஸ்டேஷனில் வண்டி மெதுவாக வந்து நிற்கிறது. சில பயணிகள் ஏறுகிறார்கள்.

அறுபது வயதை நெருங்கியிருக்கும் கோபாலன் நாயர் ஸ்டேஷனில் காத்து நிற்கிறார். அவருடன் உதவிக்கு வந்த ஆளும் தயாராக நிற்கிறான். எந்த பக்கம் பார்ப்பது என்று தெரியாமல் அவர்கள் தவித்தவாறு நின்றிருக்க, இறங்கிக் கொண்டிருக்கும் வர்மாவைப் பார்த்து மன நிம்மதி அடைந்த கோபாலன் நாயர் உதவியாளரிடம், “இந்தா அங்கே” என்று விரலால் சுட்டிக் காட்டுகிறார். வேகமாக ஓடி கம்பார்ட்மெண்டை நெருங்கி நிற்கிறார்.

உண்ணியைப் பிடித்தவாறு கீழே இறங்கும் வர்மாவின் கையில் வாசலில் நின்றிருக்கும் இந்திரா ஒரு பெட்டியை நீட்டுகிறாள். அதை வாங்கி கீழே வைத்து விட்டு இந்திராவிடம் கோபாலன் நாயர்:

“எறங்குங்க... எறங்குங்க... நான் சாமான்களை எறக்கிக்குறேன்’ (உதவியாளரிடம்) எல்லாத்தையும் எடு... சீக்கிரம்...”

ப்ளாட்ஃபாரத்தில் இறங்கிய இந்திரா:

“மொத்தம் ஒன்பது லக்கேஜ்...”

கோபாலன் நாயர் சாமான்களை இறக்கியவாறு:

“எல்லாத்தையும் எறக்குன பிறகுதான் வண்டி கிளம்பும். (வர்மாவிடம்) நேரம் தாராளமா இருக்கு!”

இந்திரா:   (ஒரு பெட்டியை வைக்கும்போது) மெதுவா... அதுல உடையிற சாமான்கள் இருக்கு. மெதுவா... (லக்கேஜ்களை விரலைக் கொண்டு எண்ணுகிறாள்)

உண்ணியும் வேகமாக எண்ணுகிறான்.

“ஒன் டூ த்ரீ ஃபோர் ஃபைவ் சிக்ஸ் ஸெவன் எய்ட் நைன் டென்... மம்மீ... டென்!”

இந்திரா:   (மெதுவாக) ஷட்டப்!

இரண்டு பெரிய பெட்டிகளை கூலிக்காரனின் தலையில் ஏற்றிவிட்டு கையில் ஒரு குடையையும் சிறிய பெட்டியையும் பிடித்தவாறு கோபாலன் நாயர் இரண்டு சிறு பொருட்களை கையிலெடுக்கிறார். மீதி சாமான்கள் வர்மாவின் கையிலும் இந்திராவின் கையிலும் இருக்கின்றன.

கோபாலன் நாயர்:    ம்... போகலாம்.

ப்ளாட்ஃபாரத்தில் ஆர்வத்துடன் எதையோ பார்க்கும் உண்ணி மெதுவாக நடக்கிறான். கூடைக்குள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் கோழிகளையோ வேறு எதையோ ஆர்வத்துடன் அவன் பார்க்கிறான்.

இந்திரா:   (கையைப் பிடித்து இழுத்தவாறு) நட...

4

ரெயில்வே ஸ்டேஷனுக்கு வெளியே நடந்து போய்க் கொண்டிருக்கும் கூட்டம்.

கோபாலன் நாயர் லக்கேஜைப் பற்றிய கவலைகள் தீர்ந்து அமைதியாகி விட்டதால், குசல விஷயத்தில் இறங்குகிறார்.

கோபாலன் நாயர்:    (இந்திராவிடம்) பெரியவர் இறந்து விசேஷம் நடக்குறப்போ இங்கே பார்த்தது. நேரம் கிடைக்கிறப்போ ஒரு நாளாவது இங்கே வந்துட்டுப் போகலாமே?

வர்மா:    (இந்திராவிடம்) கோபாலன் நாயர் இப்போ நம்மளோட கணக்குப் பிள்ளை மட்டுமில்ல... ஊருக்கு முக்கியமான ஆளும்கூட.

கோபாலன் நாயர்:    (நடந்தவாறு) எல்லாம் அலங்கோலமா கிடக்குது. பாகம் பிரிச்சு வீட்டை எடுத்தப்பவே நான் சொன்னேன். ஏன்... எழுதக்கூட செஞ்சேன். வருஷத்துல பத்து நாளாவது இங்கே வந்து தங்கினா வீடும் நிலமும் நல்லா இருக்கும்னு (வேலையாளிடம்) வேகமா நட...

வர்மா:    பத்து நாளென்ன பத்து நாளு... நிரந்தரமாவே இங்கே தங்கிட வேண்டியதுதான்.

கோபாலன் நாயர்:    வர்றப்போ இப்படித்தான் சொல்வீங்க. நாலு நாள் ஆயிடுச்சுன்னா, ஊருக்குப் போகலாம்னு தோண ஆரம்பிச்சிடும்.

வர்மா:    இனி போறதா இல்ல. கோபாலன் நாயர், நான் வேலையை ராஜினாமா பண்ணிட்டேன்.

கோபாலன் நாயர்:    (வியப்புடன்) அப்படி ஒரு எண்ணம் எப்படி வந்துச்சு?

வர்மா:    கொஞ்ச நாளாவே அப்படி செஞ்சிடலாமான்னு யோசிச்சிக்கிட்டு இருந்தேன். திடீர்னு ஒரு நாள் தைரியமா வேலையை விட்டுட்டேன்.

கோபாலன் நாயர்:    (இந்திராவிடம்) விளையாட்டுக்குச் சொல்றீங்கன்னு நினைக்கிறேன். மூவாயிரமோ நாலாயிரமோ சம்பளம் வருதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். இங்கே –


இந்திரா:   (வெறுப்பை ஒருபக்கம் ஒதுக்கி வைத்துவிட்டு) நீங்க சொல்றது சரிதான். அதுக்காக கஷ்டப்பட்டுத்தான் தீரணும். சாதாரணமா இப்படியொரு காரியத்தைச் செய்ய தைரியம் வராது. (விஷயத்தை மாற்றுவதற்காக) வண்டி எதுவும் இல்லையா?

கோபாலன் நாயர்:    இதோ... பக்கத்துலதான். நடந்தா பத்தடி தூரம் கூட வராது.

இந்திரா:   (வர்மாவிடம்) டாக்ஸி கிடைக்காதா?

வர்மா அதைக் காதில வாங்காதது மாதிரி இருக்கிறான்.

கோபாலன் நாயர்:    டாக்ஸியெல்லாம் இருக்கு. ஊரு முன்னாடி மாதிரி இல்ல. ஆனா, நாம நடக்க வேண்டியதே பத்தடி தூரம்தான்.

கோபாலன் நாயர், வர்மா, உண்ணி ஆகியோர் முன்னால் நடக்க, அவர்களுக்கு முன்னால் கூலியாள் நடக்கிறான்.

இந்திரா எல்லோருக்கும் பின்னால் ஹை ஹீல் செருப்பைப் போட்டுக் கொண்டு நடக்க முடியாமல் நடக்கிறாள். நடக்கும்போது அவளுக்கு வெறுப்பு தோன்றுகிறது.

இந்திரா:   (யாரிடம் என்றில்லாமல்) டென்ஷனே இல்லாத வாழ்க்கைக்கு டாக்ஸி தேவையில்லை. வசதிகள் தேவையில்லை. காட்டு மூலையிலே அமைதியா உட்கார்ந்து தவம் இருக்கலாம்.

வர்மாவும், உண்ணியும், கோபாலன் நாயரும் பார்க்கிறார்கள்.

கோபாலன் நாயர்:    (உண்ணியிடம்) குழந்தைக்கு நடக்க கஷ்டமா இருந்தா, நான் வேணும்னா தோள்ல தூக்கிக்கிறேன் . (குனிந்து) என்ன பேரு?

உண்ணி:  ராஜேஷ் பி.வர்மா

வர்மா:    உண்ணின்னுதான் கூப்பிடுறது.

கோபாலன் நாயர்:    என் தோள்ல உட்கார்ந்து ஆற்றைக் கடந்த விஷயம் ஞாபகத்துல இருக்கா தாசப்பா?

உண்ணி:  ஆறு எங்கே இருக்கு?

கோபாலன் நாயர்:    நான் காட்டுறேன்.

இந்திரா பின்னால் வந்து கொண்டிருக்கிறாள். வர்மா திரும்பிப் பார்க்கிறான்.

இந்திரா:   (வர்மாவிடம்) நடந்துதான் போகணும்னு முன்னாடியே சொல்லியிருக்கணும்ல? நான் செருப்பை எடுத்திட்டு வந்திருப்பேனே!

நடந்து செல்லும் உண்ணி வண்டியின் கூக்குரல் கேட்டு திரும்பி நிற்கிறான்.

தூரத்தில் கிராமத்தை விட்டு புறப்பட்ட வண்டி கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து கண்களை விட்டு மறைகிறது.

5

ழைய பெரிய வீட்டின் படியை அடைந்த வர்மாவும் கோபாலன் நாயரும் நிற்கிறார்கள்- இந்திரா வரட்டுமென்று எதிர்பார்த்து.

இலேசாக வியர்வை அரும்பிய சிவந்த முகத்துடன் மேல் மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு இந்திரா அருகில் வந்ததும்-

கோபாலன் நாயர்:    நான் சொன்னேன்ல. கொஞ்ச தூரம்தான் கஷ்டமொண்ணும் இல்லையே!

இந்திரா:   (சிரமத்தை வெளியே காட்டிக் கொள்ளாமல் ஒரு மூலையில் ஒதுக்கி வைத்துக் கொண்டு) சேச்சே... அதெல்லாம் ஒண்ணுமில்ல... (கோபத்தை மறைத்துக் கொண்டு) இதுவும் ஒரு வகையில சுகமான அனுபவம்தான்...

உள்ளே வாசலில் காத்து நிற்கும் கோபாலன் நாயரின் மனைவியும் வேலைக்காரப் பெண்ணும் கேட்டை நோக்கி வருகிறார்கள்.

கோபாலன் நாயர்:    சாமான்களை எந்தவித கேடும் வராம எடுத்து வைங்க...

(வேலைக்காரியிடம்) நாணியம்மா, சாயாவுக்கு தண்ணி கொதிக்க வை.

கோபாலன் நாயர் கையிலிருந்த பொருட்களை தன்னுடைய மனைவியிடம் தருகிறார். வேலைக்காரி வர்மாவின் கையிலிருந்த பெட்டியை வாங்கிக் கொண்டு மரியாதையுடன் - அதே நேரத்தில் மகிழ்ச்சியான குரலில்:

“இப்பவாவது இங்கே வரணும்னு உங்க எல்லாருக்கும் தோணிச்சே!”

வர்மா புன்னகைக்கிறான்.

கோபாலன் நாயர்:    எல்லா வேலைகளும் சீக்கிரம் ஆகட்டும், தேவகி... (இந்திராவிடம்) இது என்னோட பொஞ்சாதி (மனைவியைக் காட்டி)... எல்லாம் சரியா இருக்கான்னு தேவகி பார்த்துக்குவா.

அளவுக்கும் அதிகமாக சாமான்களைக் கட்டிக் கொண்ட தேவகியம்மா சிரிக்கிறாள்.

அவள் மூன்னறைக்கு நகர்கிறாள். உண்ணியின் பார்வையில் வீடு. முன்னறை.

முன்னறை.

அங்கிருக்கும் பழைய நாற்காலிகளில் ஒன்றில் அமர்ந்து இந்திரா புடவைத் தலைப்பால் தன்னைத் தானே வீசிக் கொள்கிறாள். அவளின் பார்வை பழைய வயரிங்கையும், பல்பையும் நோக்கி போகின்றது.

இந்திரா:   இங்கே ஃபேன் எதுவும் இல்லையா?

கேள்வி வர்மாவிடம்.

கோபாலன் நாயர் சாமான்களை உள்ளே கொண்டு போவதற்கு இடையில்-

“இங்கே அதுக்கு அவசியமே இல்லையே! எந்த மாசமாக இருந்தாலும் இங்கே சூடுன்றதே இருக்காது. சாயங்காலம் வந்துட்டா ஆத்துல இருந்து ஜிலுஜிலுன்னு காத்து வீச ஆரம்பிச்சிடும்...”

இந்திரா:   அதுவும் சரிதான்.

உண்ணி:  ஆறு எங்கே இருக்குப்பா?

கோபாலன் நாயர்:    நான் காண்பிக்கிறேன். பிறகு... உண்ணி, நீ வேற என்னென்ன பார்க்கணும்?

நாயரின் மனைவி தேவகி இந்திராவிடம்:

காப்பியா? சாயாவா? நீங்க என்ன குடிப்பீங்க? குழந்தைக்கு பாலு காய வச்சிருக்கேன்...

இந்திரா:   எது வேணும்னாலும் இருக்கட்டும். ராஜேஷுக்கு எதுவும் வேண்டாம். (எதையோ நினைத்து)... நான் வர்றேன்.

இந்திரா தேவகியம்மாவுடன் சமையலறைக்குள் நுழைகிறாள்.

உண்ணி எழுந்து விசாலமாக இருக்கும் முன்னறையைச் சுற்றிப் பார்த்தவாறு உள்ளே இருக்கும் அறைக்குள் போகிறான்.

மாடியில் இருந்து சில கூடைகள் தொங்கிக் கொண்டிருக்கின்றன.

சுவரில் கொண்டை போட்டிருக்கும் ஒரு வயதான பெரியவரின் பழைய ஆயில் பெயிண்டிங். வேறு சில படங்கள். காதில் கல் வைத்த கடுக்கனும், கழுத்தில் புலி நகம் கோர்த்த மாலையும் அணிந்து மேலே சட்டை இல்லாமல் இருக்கும் பெரியவரின் படத்தையே வைத்த கண் எடுக்காமல் பார்த்தவாறு நின்றிருக்கிறான் உண்ணி.

வர்மா:    (அருகில் வந்து நின்று) இது யார் தெரியுமா உண்ணி?

உண்ணி ‘தெரியாது’ என்று தலையை ஆட்டுகிறான்.

வர்மா:    “உன்னோட தாத்தா”

உண்ணி சந்தேகத்தை தீர்க்கும் குரலில்-

“யுவர் டாட்?”

வர்மா ‘ஆமாம்’ என்பது மாதிரி தலையை ஆட்டுகிறான்.

காதில் பெரிய ஒரு நகையையும் உடலில் ஏகப்பட்ட நகைகளையும் அணிந்து காட்சியளிக்கும் ஒரு பெண்ணின் படத்தைப் பார்த்து வர்மா:

“தேட் ஈஸ் மை மம்மி. உன்னோட பாட்டி.”

வேலைக்காரி வந்து உண்ணிக்கு டம்ளரில் ஹார்லிக்ஸும் வர்மாவிற்கு தேநீரும் தருகிறாள். வர்மா தேநீரை வாங்கிக் குடித்தவாறு!

“நாணியம்மா, உன்னோட பசங்க என்ன பண்றாங்க?”

நாணியம்மா:    அப்புக்குட்டன் கோயம்புத்தூர்ல இருக்கான். அவன் இருக்குறதும் இல்லாததும் ஒண்ணுதான். பத்மாவதியும் அவளோட பசங்களும் இங்கேதான் இருக்காங்க. அவ புருஷன் எப்போ பார்த்தாலும் போதையிலேயே இருக்கான்.

வர்மா:    கடைசில உனக்கு ஒரு மக இருந்தாளே! பேரு சுபத்ரான்னு நினைக்கிறேன்.

நாணியம்மா:    (மகிழ்ச்சியுடன்) பேரைக்கூட நீங்க மறக்கலையே! அவ தோட்டத்துல இருக்கா. ஆனைமலைல இருக்குற தோட்டத்துல அவளோட புருஷனுக்கு வேலை.

இந்திரா அப்போது அங்கு வருகிறாள்.

நாணியம்மா:    பத்மாவது ரெண்டாவது பொண்ணு. அவளுக்கு அஞ்சு நாளைக்கு முன்னாடி அய்யா பொறந்தாரு.

(இந்திராவிடம்) இவர் அவிட்டம். அவ ரேவதி.

உண்ணி உள்ளே போகிறான்.


இந்திரா:   (மனதில் உண்டான வெறுப்பை வெளியே காட்டிக் கொள்ளாமல் சிரிப்பை வேண்டுமென்று வரவழைத்துக் கொண்டு) சமையல் வேலைகளை முடிச்ச பிறகு, நாம பழைய கதைகளை பேசிக்கிட்டு இருக்கலாமே!

அதில் மறைந்திருக்கும் கிண்டலைப் புரிந்து கொள்ளாத நாணியம்மா:

“மசால் அரைச்சாச்சு. காய்கறியும் நறுக்கியாச்சு. பத்தே நிமிஷம்தான்...”

அவள் உள்ளே சென்றதும், தற்காலிகமாக எடுத்து அணிந்த முகமூடியான சிரிப்பை நீக்கிவிட்டு இந்திரா:

“இங்கே பத்தடின்னு சொன்னா ரெண்டு கிலோ மீட்டர்னு அர்த்தம். பத்து நிமிஷம்னா எவ்வளவு நேரமோ?

வர்மா தேநீர் டம்ளரைக் கீழே வைத்துவிட்டு அவளைப் பார்த்து புன்னகைக்கிறான்.

உண்ணி உள்ளேயிருந்து ஓடிவந்தவாறு:

“ஆத்துல முதலை இருக்குமா அப்பா?”

வர்மா, ‘இருக்காது’ என்று தலையை ஆட்டுகிறான்.

இந்திரா:   உள்ளே ஓடி விளையாடாதே... எங்காவது மோதி கீழே விழுந்துறப் போற... கேர்ஃபுல் (வர்மாவிடம்) நாணியம்மா முன்னாடி இருந்தே இங்கே வேலை பார்க்குறாப்லயா?

வர்மா:    ம்... அந்தக் காலத்துல நெறைய வேலைக்காரங்க இருந்தாங்க.

இந்திரா:   அவுங்களோட பசங்களுக்கும் இங்கேதான் வேலையா?

அதைக் காதில் வாங்காதது மாதிரி கையை நீட்டி மகனைப் பிடித்து:

“உண்ணி குளிக்கட்டும். மத்தியானம் இவன் ஒண்ணும் சாப்பிடலியே! சீக்கிரம் இவனுக்குச் சாப்பாடு தரச் சொல்லு”

இந்திரா:   மத்தியானம் யாரு சாப்பிட்டது? ஆர்டர் பண்ணினது ஒண்ணு. கொண்டு வந்தது இன்னொண்ணு. யூஸ்லெஸ் ஃபெல்லோஸ்.

கோபாலன் நாயரின் குரல்:

“தாசப்பா...”

உள்ளேயிருந்து தலையை நீட்டி பார்க்கும் கோபாலன் நாயர்:

“கோவிந்தனை கடைக்கு அனுப்புறேன். தாசப்பா... உங்களுக்கு சிகரெட்டு, தீப்பெட்டி ஏதாவது வேணுமா?

வர்மா:    வேண்டாம்.

கோபாலன் நாயர்:    (இந்திராவிடம்) குழந்தைக்கு?

இந்திரா ‘எதுவுமே வேண்டாம்’ என்று தலையை ஆட்டுகிறாள்.

உண்ணி:  அந்த ஆளு எப்படிப்பா உங்களைக் கூப்பிட்டாரு?

வர்மா:    உன் வயசுல நான் இருக்குறப்போ, இங்கே உள்ள ஆளுங்க என்னை அப்படித்தான் கூப்பிடுவாங்க.

உண்ணிக்கு அது புதுமையான ஒரு விஷயமாக இருக்கிறது.

உண்ணி:  தாசப்பன்... அம்மா மிஸஸ் குழந்தை வர்மா.... மிஸஸ் குழந்தை!

இந்திரா:   (கொஞ்சம் கூட விரும்பாமல்) இனி பேரு மாத்துறது ஒண்ணுதான் பாக்கி. மற்றதெல்லாம் மாத்தியாச்சு. (கட்டளையிடும் குரலில்) கோ... வாஷ் அண்ட் சேஞ்ச் யுவர் ட்ரெஸ்....

உண்ணி சமையலறைப் பக்கம் போகிறான்.

6

மையலறைப் பகுதியில் கையையும் காலையும் முகத்தையும் கழுவிய உண்ணியின் உடம்பைத் துடைக்கிறாள் நாணியம்மா.

நாணியம்மா:    (மெதுவான குரலில்) அப்போ... அப்பா இனிமேல் திரும்பிப் போறதா இல்ல?

உண்ணி:  ம்... ம்...

தேவகியம்மா அப்போது அங்கு வருகிறாள். தேவகி நாணியம்மாவிடம்:

ராஜா மாதிரியான உத்தியோகம்னு பசங்களோட அப்பா சொன்னாரு. முன்னாடி கூட ஐயா இப்படித்தான் ஒவ்வொரு நேரத்துலயும் ஒரு மாதிரி பிடிவாதம் பிடிப்பாரு. குழந்தைக்கு இந்த இடம் ரொம்பவும் பிடிக்கும். பலாப்பழம் மாம்பழம் எல்லாம் இங்கே இருக்கு...

நாணியம்மா:    வேலையை விடுறப்போ ஒரு பெரிய தொகை கிடைக்கும்ல?

இந்திரா கதவிற்கப்பால் வந்து நின்று:

ராஜேஷ், எல்லாம் முடிஞ்சிருச்சா? அவனுக்கு எதுவுமே தெரியாது. உங்களுக்கு என்ன தெரியணுமோ, அதை நான் சொல்றேன் போதுமா?

தேவகியம்மா நாணியம்மாவை அர்த்தம் நிரம்பிய பார்வையுடன் பார்த்தவாறு உள்ளே போகிறாள்.

7

வீட்டின் முற்றம்.

வர்மா வெறுமனே உலாத்திக் கொண்டிருக்கிறான். அவனுடன் கோபாலன் நாயர்.

கோபாலன் நாயர்:    அவங்க எப்படி சம்மதிச்சாங்க?

வர்மா:    ம்... ரிட்டையர் ஆனபிறகு இங்கேதான் எப்படியும் வரணும்? வயசாகிறவரை காத்திருக்காம கொஞ்சம் சீக்கிரம் வந்தாச்சு. அவ்வளவுதான்.

ஆடைகளை மாற்றிய உண்ணியும் இந்திராவும் அங்கு வருகிறார்கள். இந்திரா குளித்துவிட்டு புடவை மாற்றியிருக்கிறாள்.

இந்திரா:   அந்த பாத்ரூம் கதவுக்கு தாழ்ப்பாள் இல்ல...

கோபாலன் நாயர்:    ஆசாரியை நாளைக்கு வரச் சொல்றேன். குளத்துல நெறைய தண்ணி இருக்கு. யாரும் பார்க்காம குளிக்கலாம்.

இந்திரா:   (செயற்கையான சிரிப்பை வரவழைத்துக் கொண்டு) நல்ல காத்து... நல்ல தண்ணி... இது எவ்வளவு பெரிய விஷயம்! பெரிய சம்பளத்தையும், ஏ க்ளாஸ் ஃப்ளாட்டையும் விட்டுட்டு இங்கே வர்றோம்னா சும்மாவா?

வர்மாவைப் பார்க்கிறாள். வர்மாவின் முகத்தில் எந்தவித உணர்ச்சி வேறுபாடுமில்லை.

கோபாலன் நாயர்:    நான் தாசப்பன்கிட்ட சொல்வேன்- என்ன இருந்தாலும் ஒவ்வொரு மாசமும் சம்பளத்தை எண்ணி வாங்குறதுன்றது லட்சுமி கடாட்சமான ஒண்ணுதான்.

இந்திரா:   (கேலியுடன்) லட்சுமி கடாட்சம்... ஆனா, அதுவே ஒருநாள் பிடிக்காமப் போறப்போ, வேலையையே ராஜினாமா பண்றதைத் தவிர வேற வழி? என்ன இருந்தாலும் நமக்கு ஆரோக்கியம்தானே முக்கியம்? பிறகு... (மிகவும் கவனமாக வார்த்தைகளைத் தேடிக் கண்டுபிடித்து - மெதுவாக) காலையில எழுந்து ஆஃபீஸுக்கு வேலைக்குப் போறதுன்றது ஒரு விதத்துல வேஷம் போடுற மாதிரி இல்லியா? அந்த ஆஃபீஸ் வேலை நடிப்பை விட மோசமானது. அதுதான் கஷ்டமே! மனசுல சந்தோஷம் இல்லைன்னா எது இருந்து என்ன பிரயோஜனம்? சொல்லுங்க...

வர்மா அமைதியாக இருக்கிறான்.

கோபாலன் நாயர்:    மனசுல சந்தோஷம். அதுதான் எல்லாத்தையும்விட முக்கியம். (வர்மாவிடம்) இப்பவும் கம்பெனி வெளிநாட்டுக்காரங்க கையிலதானே இருக்கு?

இந்திரா, வர்மா பதில் கூறுவான் என்று எதிர்பார்த்து காத்திருக்கிறாள். வர்மா அமைதியைப் பின்பற்றுகிறான்.

இந்திரா:   இல்ல... இப்போ மூணு அண்ணன் தம்பிகள் கையில கம்பெனி இருக்கு. சேட்டுகள்...

உண்ணி:  பன்ஸி பிரதர்ஸ்....

இந்திரா:   (கோபத்துடன்) யூ ஷட்டப்! (மீண்டும் சாந்தமான குரலில்) அவுங்க கொஞ்சம் சம்பளத்தைக் கூட்டினாங்க. வீட்டுக்கும் ஏகப்பட்ட வசதிகளைச் செஞ்சு தந்தாங்க. ஆனா, சொல்லி என்ன பிரயோஜனம்? படிப்பு இல்ல. (வர்மாவிற்கு நேராக முகத்தைக் காட்டியவாறு) படிப்பே இல்லாதவங்களை பொறுத்துக்கலாம். படிப்பிற்கு எதிரா இருக்குறவங்களை எப்படி பொறுத்துக்க முடியும்னு இவர்தான் அடிக்கடி சொல்வாரு. சரிதானே?

கோபாலன் நாயருக்கு ஒன்றுமே புரியவில்லை.

கோபாலன் நாயர்:    எல்லாம் நல்லதுக்குன்னுதான் நான் நினைக்கிறேன்.

இந்திரா:   இங்கே இருக்குறவங்க ஒவ்வொருத்தரும் கேக்குறப்போ பதில் சொல்றதுக்கு எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கு! அவுங்களுக்கு எப்படிச் சொல்லி புரிய வைக்கிறது? வசதி அதிகமாகுறப்போ மனசுல டென்ஷன் அதிகமாகுது. டென்ஷனால், பால்பிட்டேஷன். நான் அப்படிச் சொன்னா... எனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்குன்னு மத்தவங்க சொல்லுவாங்க. இல்லையா கோபாலன் நாயர்? (சிரிக்கிறாள்)

வர்மா அமைதியாக இருக்கிறான்.

உண்ணி அவரையே பார்க்கிறான்.

வர்மா:    (இந்திராவிடம்) இஃப்!

இந்திரா உள்ளே போக முயலும்போது. பாத்ரூம் கதவு... மறந்துட வேண்டாம்.


8

ரவு.

சமையலறையையொட்டி இருக்கும் சாப்பிடும் அறை.

உண்ணி சாப்பிட்டு முடித்து விட்டான். வெளியே அவனின் கையைக் கழுவிவிட்டு, வேலைக்காரி நாணியம்மா உண்ணியைக் கொண்டு வருகிறாள் - அந்த இடத்திற்கு.

வர்மாவும் இந்திராவும் சாப்பிடுவதை கோபாலன் நாயரும், அவரின் மனைவியும் பார்க்கிறார்கள். கோபாலன் நாயரின் மனைவி சமையலறை வாசலில் நின்றிருக்கிறாள்.

கோபாலன் நாயர்:    எல்லாம் அவசரத்துல தயார் பண்ணினது. சாப்பாடு நல்லா இருக்குதோ என்னமோ!

இந்திரா:   நாங்க ராத்திரி நேரத்துல சாதம் சாப்பிடுறது இல்ல. எப்பவும் சப்பாத்திதான். (கணவனை நினைத்து) பொதுவா அரிசியைக் குறைச்சுக்கங்க.

கோபாலன் நாயர்:    சப்பாத்தி தயாரிக்குறதுல என்ன கஷ்டம் இருக்கு? (வேலைக்காரியிடம்) அரிசி இருக்குல்ல? (மனைவியிடம்) நீ நாளைக்கு நாணியம்மாவுக்கு சொல்லிக் கொடு.

இந்திரா:   இங்கே சப்பாத்தி போட யாருக்கும் தெரியாதுன்னா. நான் போடுறேன்.

உண்ணி தயங்கி நிற்பதைப் பார்த்து-

வர்மா:    உண்ணி, போய்ப் படு. (வேலைக்காரியிடம்) எனக்கு ராத்திரி கொஞ்சம் கஞ்சி இருந்தா போதும். (மனைவியிடம்) உண்ணி நம்ம ரூம்லயே படுக்கட்டும். இதுக்கு முன்னாடி பழக்கமில்லாத இடமில்லையா?

இந்திரா:   வேண்டாம். பிறகு அதுவே பழக்கமாயிடும். (வேலைக்காரியை மனதில் வைத்து) லெட் ஹெர்ஸ்லீப் அவுட்ஸைட் தி ரூம்.

வர்மா மவுனமாக இருக்கிறாள்.

இந்திராவின் பாத்திரத்தில் கோபாலன் நாயர் பரிமாற முயலும் போது-

இந்திரா:   நோ...(எழுந்தபடி) இப்படி ரெண்டு நேரம் சாதத்தை வெட்டி முழுங்கினா- எனக்குக் கூட தொப்பை வந்திடும்.

உண்ணி அங்கேயே நின்றிருப்பதைப் பார்த்து- மகனிடம்:

"கோ டு யுவர் ரூம்" (கோபாலன் நாயரிடம்) எலக்ட்ரீஷியன் வரலியா?

கோபாலன் நாயர்:    (சிரித்தவாறு) நாளைக்கு அந்தப் பெரிய மனுஷனைக் கண்டுபிடிக்கணும்... (மனதிற்குள்) இப்போ அந்தப் பையன் எந்தச் சீமையில இருக்கானோ? (இந்திராவிடம்) நாளைக்கு எப்படியும் அவனைப் பிடிச்சிர்றேன்.

உண்ணி கோபாலன் நாயரையே பார்க்கிறான். வாசலில் உண்ணி நின்றிருப்பதைப் பார்த்து-

இந்திரா:   கோ டூ யுவர் ரூம்.

இந்திரா கை கழுவ வெளியே போகிறாள்.

உண்ணி உள்ளே செல்கிறான்.

9

ண்ணிக்காக தயார் பண்ணிய அறை. அதற்குப் பக்கத்தில் வர்மா, இந்திரா ஆகியோரின் அறை. அங்கே பேசுவதை உண்ணி கேட்கலாம்.

குரல்கள்.

வர்மா:    நடிப்பு ரொம்பவும் நல்லா இருந்துச்சு. ஆஸ்கார் பரிசு கட்டாயம் தரணும்.

இந்திரா:   மனசுல இருக்கறதை அப்படியே சொல்லுறதா இருந்தா உங்களுக்குத்தான் அவமானம். உங்களைச் சுற்றி... இங்கே... ஒரு... என்ன சொல்றது?

வர்மா:    வேஷம்... அதுதானே நீ சொல்ல வர்றது?

உண்ணி அதைக் கேட்டவாறு படுத்திருக்கிறான்.

10

டுக்கையறை.

படுக்கையில் இருந்த விரிப்புகளை மாற்றிவிட்டு, நகரத்தில் இருந்து கொண்டு வந்த விரிப்புகளை விரிக்கிறாள் இந்திரா.

வர்மா நாற்காலியில் அமர்ந்திருக்கிறான்.

வர்மா:    ப்ளீஸ்... நான் கொஞ்சம் அமைதியா சில நாட்கள் இங்கே இருக்கணும். ஏதாவது படிக்கணும். முடிஞ்சா ஏதாவது எழுதணும். அந்தப் பழக்கத்தையெல்லாம் எப்பவோ நிறுத்தியாச்சு. இருந்தாலும்... மனசுல ஒரு விருப்பம்...

இந்திரா:   இந்த விஷயங்களை பாம்பேல இருந்துகூட செய்யலாமே! அங்கே இதையெல்லாம் யாரும் செய்றது இல்லன்னு நினைப்பா?

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   அய்யாயிரம் ரூபாய் வாடகைக்கு அப்படிப்பட்ட ஒரு ஃப்ளாட் யாருக்குமே கிடைக்காதுன்னு எல்லாருமே சொன்னாங்க. வாட் எ ஒண்டர்ஃபுல் வ்யூ!

வர்மா:    அன்ட் வாட் எ மிஸரபில் லைஃப்!

இந்திரா:   வேலையை விடுறதுன்றது அவங்கவங்க விருப்பம். ஆனா, என்னையும் ராஜேஷையும் பாதிக்கிற மாதிரியான முடிவுகளை இனி எடுக்குறப்போ...

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   எர்ணாகுளத்துல இருக்குற இடத்தைப் பாகம் பிரிச்சிருந்தா... ரொம்ப நல்லதா இருந்திருக்கும். நல்ல ஊரு அது. தேவைப்படுற எல்லா வசதிகளும் கிடைக்கக்கூடிய அருமையான சிட்டி! இங்கே... ராஜேஷோட படிப்புக்கு என்ன செய்றது?

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   உடம்புக்கு சவுகரியம் இல்லாமப் போனா இங்கே ஒரு நல்ல டாக்டர் இருக்காங்களா? ஒரு டெலிஃபோன் இருக்கா? ஒரு நல்ல பாத்ரூம் தான் இருக்கா?

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   இந்த ஸைக்காலஜி எனக்குத் தெரியும். என்னை நீங்க பலமா தண்டிக்கிறீங்க. இந்த விஷயம் யாருக்குமே தெரியாது. அவங்கவங்களுக்கு இருக்கிற எக்ஸ்ட்ரா கரிக்குலர் ஆக்டிவிட்டீஸ்களை நிறைவேத்துறதுக்கு நகரத்தைவிட இந்த இடம் வசதியா இருக்கலாம். தொடர்புகள் நிறைய இருக்கும்ல?

பதில் சொல்லி எந்த பிரயோஜனமும் இல்லை என்று நினைக்கும் வர்மா அமைதியாக இருக்கிறான்.

இந்திரா:   உங்களை துதி பாடிக்கிட்டு இருக்குற கொஞ்சம் ஆண்களும் பெண்களும் போதும்ல! ஆஃபீஸ்ல வேஷம் போட்டு வேலை செய்றதும், அங்கே நடிக்கிறதும் இதோட ஒப்பிடுறப்போ ஒரு பெரிய விஷயமா என்ன? இதுதான் மிகப் பெரிய நடிப்பு! ஆஸ்கார் என்ன டபுள் ஆஸ்காரே இதுக்கு கொடுக்கலாம்.

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   செய்ய முடியாத ஒண்ணையும் நான் செய்யச் சொல்லல. டோண்ட் ஒர்ரி. நான் வேணும்னா தாங்கிக்கிறேன். ஆனா, என் பிள்ளையை கஷ்டப்படுத்தாதீங்க...

அவள் உணர்ச்சிவசப்பட்டு நிற்கிறாள்.

உண்ணியின் அறை:

"என் பிள்ளையை கஷ்டப்படுத்தாதீங்க. அது போதும்."

தொடர்ந்து எதையோ இழுத்து அடைக்கும் சத்தம்-

வர்மாவின் குரல்:    ஏர்கண்டிஷன், கார்- இது எதுவுமே இல்லைன்னா மிஸரபில் ஆகத் தோணுற ஒரு வயசு ஒண்ணுமில்லையே உண்ணிக்கு? ஹீவில் அட்ஜஸ்ட்...

இந்திராவின் குரல்: யூ ஆர் மேட்!

வர்மா:    மனநோய் ஆரம்ப கட்டத்துல இருக்குறப்போ மத்தவங்களுக்கு ஏதோ பிரச்சனை இருக்குற மாதிரி தெரியும். இட் இஸ் எ சிம்ட்டம்...

ஏதோ ஒன்று உடையும் சத்தம். உண்ணி நடுங்குகிறான். பிறகு அடுத்த அறையில் ஒரே அமைதி.

உண்ணி எழுந்து வாசலினருகில் செல்கிறான். அப்போது நாணியம்மாவும் அங்கே காதுகளைத் தீட்டிக் கொண்டிருக்கிறாள். பாய் விரிப்பதற்கிடையில்-

நாணியம்மா:    பயப்பட வேண்டாம். பரண்ல எலி, பெருச்சாளி எல்லாம் இருக்கு. ஆள் நடமாட்டம் இருக்குறது தெரிஞ்சா எல்லாம் ஓடிடும்.

நாணியம்மா படுக்கிறாள்.

உண்ணிக்கு உறக்கம் வரவில்லை. அவன் ஜன்னலுக்கு அருகில் போய் நின்று என்னவோ யோசித்தவாறு நின்றிருக்கிறான்.

தூரத்தில் துடி சத்தம் கேட்கிறது.

அவன் வெளியே பார்க்கிறான்.


11

ண்ணி இருண்டு கிடக்கும் வராந்தாவில் நின்றிருக்கிறான். வராந்தாவின் ஒரு மூலையில் வர்மா நின்று கொண்டிருப்பதை உண்ணி பார்க்கிறான்.

தயக்கத்துடன் அவன் மெதுவாக நடந்து வர்மாவுக்கு அருகில் வருகிறான். தனக்கு மிகவும் அருகில் வந்து நிற்கும் உண்ணியைப் பார்த்து வர்மா புன்னகைக்கிறான்.

தூரத்தில் துடி சத்தம் கேட்கிறது. நாடோடிப் பாட்டின் வரிகள் காற்றில் மிதந்து வருகின்றன. உண்ணி அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான்.

வர்மா:    தனியா படுத்துக்க பயமா இருக்கா?

உண்ணி:  ம்... ம்...(காதுகளைத் தீட்டிக் கொண்டு): வாட்ஸ் தேட்?

வர்மா:    புலையர்களோட ஏதாவது விசேஷமா இருக்கும்.

உண்ணி:  புலையர்னா?

வர்மா:    வயல்ல வேலை செய்றவங்க...

உண்ணி:  சின்ன பிள்ளைங்ககூட செண்டை அடிக்கவும், பாடவும் செய்வாங்களா என்ன?

வர்மா:    யெஸ்... அஃப்கோர்ஸ்...

உண்ணி:  (ஒருவகை நடிப்புடன்) பிக் பிக் ட்ரம்ஸ்...

வர்மா:    பெரியது சின்னது எல்லாமே இருக்கு.

உண்ணி:  (சந்தேகத்துடன்) அப்பா, எனக்கு ஒரு சின்ன ட்ரம் வாங்கித் தருவீங்களா?

வர்மா:    பார்க்கலாம்.

வர்மா அவளின் தலையைத் தடவியவாறு:

சரி... போய் படு. நேரம் அதிகமாயிடுச்சு...

உண்ணி திரும்ப நடந்து செல்கிறான். வராந்தாவினூடே நாம் அவனைப் பின் தொடர்ந்து செல்கிறோம். தன்னுடைய அறையை அடைந்ததும், உண்ணி திரும்பிப் பார்க்கிறான்.

அவனின் தந்தை வராந்தாவிற்கு வெளியே இருட்டைப் பார்த்தவாறு, கிராமத்தின் இதயத் துடிப்பாக இருக்கும் துடியோசையைக் கேட்டவாறு நின்று கொண்டிருக்கிறான்.

கடந்த கால சம்பவம் எதையோ நினைத்து நின்று கொண்டிருக்கும் வர்மாவின் முகம்-

12

காலை நேரம்.

வீட்டின் உள்பகுதி.

இரண்டு பெரிய பெட்டிகளைத் திறந்து வைத்துக் கொண்டு அதில் இருக்கும் ஆடைகளை - குறிப்பாக புடவைகளை எடுத்து ஒரு பழைய ஷெல்ஃபில் அடுக்கி வைக்கிறாள் இந்திரா. வாசலில் வந்து நிற்கும் தேவகியம்மாவை அவள் பார்க்காதது மாதிரி, தன் வேலையில் மட்டும் கவனமாக இருக்கிறாள்.

தேவகி:    கரையான் இருக்கும்.

இந்திரா:   கரையான்... எலி... எல்லாத் தொந்தரவுமே இங்கே இருக்கு.

உண்ணி:  (உள்ளே ஓடிவந்து) என் பேட் எந்தப் பெட்டியில இருக்கு?

இந்திரா:   (அதை கவனிக்காமல்) அயர்ன் பண்ணுறதுக்கு ஒரு ப்ளக் இல்லை...

உண்ணி:  என் பேட் எங்கே மம்மி?

இந்திரா:   நான் பார்க்கலை. லாரியில வர்ற லக்கேஜ்ல இருக்கும்.

தேவகி:    ஏதாவது தேவைப்படுமோன்னு தெரிஞ்சிக்கிறதுக்காக நான் இங்கே ஓடி வந்தேன். வீட்ல ரெண்டாவது பொண்ணுக்கு இது பத்தாவது மாசம். அவளை தனியா விட்டுட்டு-

இந்திரா:   ஒண்ணும் தேவையில்ல. நீங்க போகலாம்.

தேவகி:    கணக்குப் பிள்ளையோட பொண்டாட்டி நான். எங்களை அன்னிய ஆளுங்களா நினைக்கக்கூடாது. ஐயா சின்ன வயசுல எங்கே வீட்லதான் எப்பப் பார்த்தாலும் இருப்பாரு. சொல்லப் போனா அவர் என்னோட சொந்த மகன் மாதிரி.

இந்திரா:   (அதைச் சிறிதும் விரும்பாத மாதிரி) சில விஷயங்கள் எனக்கும் தெரியும். அங்கே விளையாடுறதுக்கு ஆம்பளை பசங்க யாரும் இல்லையே! உங்களுக்கு இருக்குறதே பொம்பளை பசங்கதானே!

தேவகி:    (விகற்பமில்லாமல்) எதுக்கு ஆம்பளை பசங்க? மூத்த மக குஞ்ஞிலட்சுமி போதாதா? குளத்தைத் தாண்டுறது, திருவாதிரைக் களி, ஆட்டம், பாட்டம்... சொல்லவே வேண்டாம். ஐயாவும் அவளும் ஒண்ணு சேர்ந்தாங்கன்னா... அவ்வளவுதான்... ஒரே ரகளைதான். எல்லாம் நேத்து நடந்த மாதிரி இருக்கு.

இந்திராவின் முகம் இறுக்கமாகிறது.

உண்ணி:  என்னோட பேட்...

இந்திரா:   (கோபத்துடன்) ராஜேஷ், யூ கெட் அவுட். தேவகியம்மா, நீங்க போகலாம். உங்களுக்கு வேலை இருக்குல்ல?

உண்ணி ஏமாற்றத்துடன், பிறகு என்ன நினைத்தானோ தன்னைத் தானே சமாதானப்படுத்திக் கொண்டு வெளியே செல்கிறான்.

13

ண்ணி முற்றத்தில் நின்றிருக்கிறான். சற்று தூரத்தில் மரத்தின் உச்சியிலிருந்து ஒரு கிளியின் சத்தம் கேட்கிறது. உண்ணி கிளியைப் போலவே குரல் தருகிறான். செடியில் ஒரு பட்டாம்பூச்சி. அதைப் பிடிப்பதற்காக அவன் ஒளிந்து ஒளிந்து போகிறான். ஆனால், அந்த முயற்சியில் அவன் தோல்வியடைகிறான். வேலியையொட்டி நடந்து வீட்டை நோக்கி அவன் போகும்போது, வேலிக்கு அப்பால் அவன் ஒரு குடிசையைப் பார்க்கிறான். அதை அவன் பெரிதாக எடுக்கவில்லை. வேலி மேல் ஒரு மஞ்சள் பூ இருக்கிறது. அதைப் பறிக்க அவன் முயலும்போது, ஒரு பெண் குரல்:

"வேண்டாம்... கொடுத்தூவ பூ... கை அரிக்கும்..."

உண்ணி கையைப் பின்னால் எடுக்கிறான்.

வேலிக்கு அப்பால் முப்பது வயதை நெருங்கியிருக்கும்- அதே நேரத்தில்- இளமை தாண்டவமாடும் ஒரு பெண் சிரித்தவாறு நின்றிருக்கிறாள். அவள் கழுத்தில் ஒரு தங்கச் சங்கிலி இருக்கிறது.

அவளைப் பார்த்து வியந்து நிற்கும் உண்ணி. தூவையின் இலையைப் பறித்தவாறு அந்தப் பெண்-

"இதைப் பார்த்திங்களா? மேலே இது பட்டுச்சுன்னா, உடம்பு அரிக்கும்."

பிறகு அவள் பூவைப் பறித்து அவனிடம் நீட்டுகிறாள்.

உண்ணி முதலில் தயங்கி நிற்கிறான். பிறகு பக்கத்தில் நெருங்கி வருகிறான். அவர்களுக்கிடையே சாய்ந்து கிடக்கும் வேலி.

நீலி: தம்புரான், உங்க பேரு என்ன?

உண்ணி பேசாமல் நிற்கிறான். அவளின் வித்தியாசமான தோற்றம், நகை, புன்னகை- எல்லாவற்றையும் பார்க்கிறான். அவள் பூவை நீட்டுகிறாள். உண்ணி தயங்கிக் கொண்டே, அதை வாங்குகிறான். அதை அவன் மூக்கிற்கு அருகில் வைத்து முகர்ந்து பார்க்கிறான். அப்போது நீலி:    

"இதுக்கு மணம் இருக்காது. நல்ல மணம் இருக்குற பூவா நான் கொண்டு வந்து தர்றேன். ஆமா... உங்க பேரு என்ன?"

உண்ணி:  ராஜேஷ் பி.வர்மா.

நீலி: (இலேசாக சிரித்தவாறு) அய்யோ... அப்படி யாருக்காவது கூப்பிட நாக்கு வருமா? அப்பாவும் அம்மாவும் உங்களை எப்படி கூப்பிடுவாங்க?

உண்ணி:  உண்ணின்னு...

நீலி:       பேரு நல்லாதான் இருக்கு. எங்கே... உங்களை நல்லா நான் ஒரு தடவை பார்த்துக்குறேன்(சாய்ந்து கிடக்கும் வேலியைச் சற்று ஒதுக்கி வழி உண்டாக்கியவாறு)... இப்படியே இந்தப் பக்கம் வாங்க. நீங்க முதல் தடவையா இங்கு வர்றீங்க, உங்களுக்கு கொடுக்க என்கிட்ட எதுவும் இல்ல... இந்த நீலியோட குடிசையில...

உண்ணி வேலியைக் கடந்து வருகிறான்.

நீலி:       வறுத்த முந்திரிப் பருப்பு சாப்பிடுவீங்களா?

உண்ணி எதுவுமே பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறான்.

நீலி:       "பிடிக்குமா?"

நீலி குடிசையின் வெளிப்புறத்தில் கிடந்த ஒரு பழைய ஸ்டூலைக் கீழே போட்டு, அதிலிருந்த தூசியைத் தட்டியவாறு-

"உட்காருங்க... இதுல உட்காருங்க..."


உண்ணிக்கு ஏகப்பட்ட மரியாதை கிடைத்தது மாதிரி மனதிற்குள் சந்தோஷம். பெரியவர்கள் உட்காருவதைப் போல கால் மேல் கால் போட்டவாறு அவன் அமர்ந்திருப்பதை நீலி ரசித்து பார்க்கிறாள்.

அவள் வறுத்த முந்திரிப் பருப்பை கொஞ்சம் எடுத்து அம்மிக்கல்லில் வைத்து சிறு சிறு துண்டுகளாக ஆக்குகிறாள். உண்ணி அவள் செய்வதையே ஆர்வத்துடன் பார்க்கிறான். தோல்களை நீக்கி மூன்று நான்கு முந்திரிப் பருப்புகளை அவன் கையில் தருகிறாள்.

அவன் அதைத் தின்ன ஆரம்பிக்கிறான்.

நீலி மீதி இருந்த முந்திரிப் பருப்பின் தோலை நீக்கிக் கொண்டே-

நிலி:      நல்லா இருக்கா?

உண்ணி:  ம்...

நீலி:       கொஞ்ச நாள் இங்கே தங்கி இருப்பீங்களா? இல்லாட்டி உடனே ஊருக்குப் போயிடுவீங்களா?

உண்ணி:  இனி ஊருக்குப் போறதா இல்ல. அப்பா கம்பெனியை விட்டுட்டாரு...

நீலி:       (வியப்புடன்) ஏன்?

உண்ணி:  ஏன்னு தெரியாது. அதுனால அம்மாவும் அப்பாவும் எப்போ பார்த்தாலும் சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்க.

நீலி:       (ஏதோ யோசித்தவாறு) அப்படியா? கேட்க மனசுக்கு கஷ்டமாத்தான் இருக்கு.

உண்ணி:  காட்டு மூலையில கொண்டு வந்து விட்டுட்டதா அம்மா சொல்றாங்க. ஆமா... இங்கே காடு எங்கே இருக்கு?

நீலி:       (ஏதோ சிந்தித்தவாறு) அப்படி காடுன்னு எதுவும் இல்ல. பெரிய பட்டணத்துல காலம் காலமா இருந்தவங்களுக்கு இந்த இடத்தைப் பார்த்தா... (பேச்சை நிறுத்தி) சில நேரங்கள்ல அப்படித் தோணலாம்.

உண்ணி:  அப்பாவுக்குப் பைத்தியமெல்லாம் கிடையாது. அம்மா சும்மா சொல்றாங்க.

நீலி:       (பதைபதைப்புடன்- ஒன்றுமே புரியாமல்) பைத்தியமா?

உண்ணி:  பைத்தியம் பிடிச்சவங்கதான் பார்க்குற வேலையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சிட்டு வருவாங்கன்னு அம்மா தாமஸ் அங்கிள்கிட்டயும் ஆன்டிக்கிட்டயும் சொன்னாங்க.

நீலி:       (விஷயத்தை மாற்றுவதற்காக) அம்மா சும்மா விளையாட்டுக்காகச் சொல்லியிருப்பாங்க. அப்போ உண்ணி தம்புரான், உங்களை எப்பவும் இங்கே பார்க்கலாம். அப்படித்தானே? முந்திரிப் பருப்பு முழுவதையும் இப்போ தின்ன வேண்டாம். கொஞ்சம் பாக்கெட்ல போட்டுக்கங்க.

35 வயது மதிக்கத்தக்க ஒரு இளைஞன் சிவப்பு வர்ணத்தில் பனியனும் கைலியும் அணிந்தவாறு குடிசையின் பின் பக்கத்திலிருந்து வந்து-"நீலி... உன்னோட கொடுவாளைக் கொஞ்சம் எடுத்துக்கட்டுமா?"

நீலி:       எனக்கு அது தேவைப்படுதே!

இளைஞன்:     இந்தப் பையன் யாரு?

பக்கத்து வீட்டை நோக்கி முகத்தைக் காட்டியவாறு:

"அங்கே..."

இளைஞன்:     மேஸ்திரி பாலக்காட்டுக்கு வரச் சொல்றாரு. வருஷம் முழுக்க வேலை இருக்காம். போயிட்டு வரட்டுமா?

நீலி:       (ஆர்வமே இல்லாமல்) என்கிட்ட ஏன் அதைக் கேட்குறே? தயங்கி நின்றிருந்த அந்த இளைஞன் உண்ணியையே பார்க்கிறான். உண்ணி புன்னகை செய்கிறான். நீலியை விரும்பக் கூடிய ஒரு இளைஞன் அவன்.

இளைஞன்:     (தயங்கியவாறு) சாயங்காலம் பாலக்குளம் சந்தைக்கு போறதா இருக்கேன். ஏதாவது வாங்கிட்டு வரட்டுமா?

நீலி:       எனக்கு எதுவுமே வேண்டாம். இப்போ நீ இடத்தை காலி பண்ணு.

அந்த இளைஞன் வந்த வழியே திரும்பிச் சென்றவுடன், ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்துக் கொண்டிருந்த நீலி திடீரென்று உண்ணியின் ஞாபகம் வந்து, புன்னகை செய்தபடி-

"நான் இந்த வீட்ல தனியா இருக்கேன்ல? அதுனாலதான் ஒவ்வொருத்தனும் இங்கே எனக்கு உதவி செய்றேன்னு வர்ரானுங்க. பார்த்தீங்களா?"

உண்ணி:  ராத்திரியில தனியாவா இருக்கே?

நீலி:       ஆமா...

உண்ணி:  பயமா இல்லியா?

நீலி:       (சிரித்தவாறு) எதுக்கு பயப்படணும்? கடவுளுக்குத்தான் நாம பயப்படணும்! வேற யாருக்கு பயப்படணும்?

உண்ணியின் தாயின் குரல்:

ராஜேஷ்! ராஜேஷ்!

உண்ணி மீதியிருந்த முந்திரிப் பருப்பை பாக்கெட்டிற்குள் போட்டவாறு, எழுந்து நிற்கிறான்.

அப்போது வேலியின் அந்தப் பக்கத்தில் நின்றிருக்கும் வேலைக்காரி நாணியம்மா:

"இங்கேயா இருக்கீங்க? அம்மா உங்களைத் தேடிக்கிட்டு இருக்காங்க."

நீலியிடம் மெதுவாக:

"தொட்டதுக்கெல்லாம் வாய்க்கு வந்தபடி பேசுறாங்க. பேசுறது எல்லாமே இங்கிலீசு தான்..."

உண்ணி வேலியை நோக்கி நடக்கிறான். நீலியும் அவனுடன் சேர்ந்து நடக்கிறாள். நீலியைத் திரும்பிப் பார்த்தவாறு உண்ணி வேலியைக் கடந்து நாணியுடன் சேர்ந்து நடக்கிறான். நீலி வேலிக்கு அருகில் நின்றிருக்கிறாள். வீட்டுக்கு முன்னால் நின்றிருக்கும் இந்திராவை அவள் ஆர்வத்துடன் பார்க்கிறாள்.

14

நாணியுடன் நடந்து வந்து கொண்டிருக்கும் உண்ணியை விட்டு இந்திராவின் பார்வை நீலியை நோக்கி செல்கிறது. அவள் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்கள். நீலி புன்னகை செய்ய, இந்திரா முகத்தைத் திருப்பிக் கொண்டு நடக்கிறாள். பக்கத்தில் வந்த உண்ணியைப் பார்த்து இந்திரா உரத்த குரலில்:

“கோ அண்ட் ஈட் யுவர் ப்ரேக்ஃபாஸ்ட். எவ்வளவு நேரமா உன்னைக் கூப்பிட்டுக்கிட்டு இருக்குறது?

உண்ணி மெதுவாக வீட்டிற்குள் செல்கிறான்.

இந்திரா: அது யாரோட இடம்?

நாணியம்மா:    நம்ம இடம்தான். செத்துப்போன கண்டங்கோரனோட மகள் அங்கே குடியிருக்கா.

இந்திரா:   அந்த ஆளு இங்கே வேலை பார்த்தவனா?

நாணியம்மா:    கண்டங்கோரன மாதிரி ஒரு வேலைக்காரனை இப்போ எங்கே பார்க்குறது? அவன் நட்டு வளர்த்த பலாவும் மாமரமும்தான் இப்போ நாம இங்கே பார்த்துக்கிட்டு இருக்குறது.

இந்திரா:   இவளுக்கு புருஷன் இல்லையா?

அம்மியில் எதையோ அரைத்துக் கொண்டிருக்கும் நாணியம்மா:

“இன்னும் அவளுக்குக் கல்யாணம் ஆகல. அவளுக்கு ஏதோ உடம்புக்கு ஆகல. அப்பப்போ தலை சுத்தல் வரும். மயக்கம் வரும். அவங்க அப்பா உயிரோடு இருந்த காலத்திலேயே தெளிவா சொல்லிட்டா எனக்கு கல்யாணமே வேண்டாம்னு.”

இந்திரா:   சுகமில்லையா? சுகமில்லாமத்தான் இந்த ஊர்வசி ஆட்டிக்கிட்டு நடந்து திரியிறாளா...?

நாணியம்மா:    நோயைக் குணப்படுத்துறதுக்கு வசதி இல்லாததால் நோயோடயே அலைஞ்சு திரியிறா...

இந்திரா:   இவ தனியாவா இருக்குறா?

நாணியம்மா:    தனியாத்தான் இருக்கா. நாலு கூடை பின்னி கொடுத்தா, அவளோட செலவுக்குப் போதும். செத்துப்போன தம்புராட்டித்தான் சொல்லுவாங்க. தாழ்ந்த ஜாதிக்காரியா இருந்தா என்ன... என்ன சுத்தம், அழகு, களையோட இருக்கான்னு...

அதைக்கேட்டு இந்திராவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றங்கள்.

“தம்புராட்டிக்கு எதைப் பற்றியும் கவலையில்லை. எதுவா இருந்தாலும் சுத்தமா இருக்கணும். நீங்க அவங்களைப் பார்த்தது இல்லையே! ஆமாம்மா... கல்யாணத்துக்கு முன்னாடியே அவங்க இந்த உலகத்தை விட்டு போயிட்டாங்களே!”

இந்திரா:   நான் அவுங்களைப் பார்த்தது இல்ல. ஆனா, அவுங்களைப் பத்தி மத்தவங்க சொல்லி கேள்விப்பட்டிருக்கேன். நிறையவே சொல்லியிருக்காங்க. அவுங்க ஆஸ்பத்திரியில இருந்தப்போ, உதவிக்கு ஒரு பொண்ணுகூட இருந்தான்னு கேள்விப்பட்டிருக்கேன்...

15

சாப்பிடும் அறையில் இட்லி சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உண்ணி அதைக் கேட்கிறான்.

நாணியம்மா:    அது இந்த நீலிதான். அவளோட தலையெழுத்து இப்படி ஆகிப்போச்சு. பாவம்.

இந்திராவின் குரல்:


“அவ பாவமா இருந்தா, ஒரு பொண்ணு இப்படி யாருமே இல்லாம தனியா இருப்பாளா? அப்போ... வேற ஏதாவது நடக்கும்...”

உண்ணி கவனமாகக் கேட்கிறான். நாணியம்மா அதற்கு பதிலெதுவும் கூறவில்லை. இந்திரா பேசியது நாணியம்மாவுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.

வெளியே இருந்து சாப்பாட்டு அறைக்குள் வரும் இந்திரா முணுமுணுக்கிறாள்:

“தம்புரான்மார்களை விட இங்கே வேலை செய்றவங்களுக்குத்தான் அக்கறை அதிகம். (சாப்பிட்டுக் கொண்டிருக்கும் உண்ணியைப் பார்த்து) இங்கே பார்... கண்ல படுறவங்கள்லாம் கூப்பிட்டாங்கன்னு நீ போனே அவ்வளவுதான்...”

சாப்பாட்டு அறைக்குள் நுழையும் வர்மாவிடம் என்னவோ சொல்ல நினைத்த இந்திரா, பின்னர் எதுவும் கூறாமல் அதை அடக்கிக் கொள்கிறாள்.

உண்ணி:  (தன் தந்தையைப் பார்த்து) அப்பா, என்னோட புதிய பேரு என்ன தெரியுமா? உண்ணி தம்புரான்...

இந்திரா:   பேசாம சாப்பிடுறியா இல்லையா?க்ஷ

வர்மா:    உண்ணி, ஆத்துல குளிக்க வர்றியா?

இந்திரா:   வேண்டாம். அவனுக்கு ஜலதோஷம் பிடிச்சிடும்.

உண்ணி:  குளிக்க வேவ்டாம். நான் ஆத்தைப் பார்க்க போயிட்டு வர்றேன். மம்மீ... நான் போயிட்டு வரட்டுமா?

உண்ணி வேகமாக டம்ளரில் மீதியிருந்த ஹார்லிக்ஸைக் குடித்து முடித்து தன் தந்தையின் பின்னால் நடக்கிறான்.

16

ற்றுப் பகுதி.

ஆற்றை உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான். ஆற்றில் கோவணம் மட்டும் கட்டிக்கொண்டு ஆண்கள் குளித்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு மத்தியில் கோபாலன் நாயரும் இருக்கிறார். தலையை துவட்டிக் கொண்டிருக்கும் கோபாலன் நாயரைப் பார்த்த உண்ணி மெதுவான குரலில் தன் தந்தையிடம் கூறுகிறான்:

“ஷேம்... ஷேம்...”

வர்மா மெதுவான குரலில் சிரிக்கிறான்.

தலையைத் துவட்டிய கோபாலன் நாயர் மேலே நின்றிருக்கும் வர்மாவையும் உண்ணியையும் பார்த்து:

“தண்ணி கொஞ்சமாத்தான் இருக்கு. ஆனா... சேறு இல்ல...”

மேலே ஏறிவந்து துண்டைக் கட்டியவாறு நெற்றியில் திருநீறு பூசிய கோபாலன் நாயர்:

“ஆசாரி, எலெக்ட்ரிக்காரன்... இவங்க ரெண்டு பேரையும் சரி பண்ணிட்டுத்தான் ப்ளாக் ஆபீஸுக்குப் போகணும்.”

உண்ணி:  (அதைக்கேட்டு ) அப்பா, எனக்கு பம்பரம் வேணும்.

கோபாலன் நாயர்:    அம்மா சிரிச்சுக்கிட்டே சொன்னாலும், அதுல ஏதாவது குத்தல் வச்சுக்கிட்டு பேசுறாங்களோன்னு மனசுல சந்தேகம் வந்திடுது.

வர்மா:    அதெல்லாம் ஒண்ணுமில்ல. ஆரம்பத்துல கொஞ்சம் அப்படி இப்படித்தான் இருக்கும்.

சிறுவர்களில் சிலர் உண்ணியின் கவனத்தைக் கவர்வதற்காக தங்களின் கசங்கிப் போன ட்ரவுசர்களை கழற்றி எறிந்துவிட்டு, நிர்வாணமாக ஆற்றுக்குள் குதித்து சேட்டைகள் பண்ணுவதைப் பார்த்து கோபாலன் நாயர்:

“பசங்களா... கொஞ்சம் தள்ளிப்போய் குளிங்க...”

சிறுவர்கள் சிறிது தள்ளிப் போய் குளிக்கிறார்கள்.

கோபாலன் நாயர்:    பாம்பேல இருந்த வேலையை விட்டுட்டு இங்கே வந்ததைப் பத்தி ஆளுங்க ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க. (குரலைச் சற்று தாழ்த்தி, உண்ணியைப் பார்த்தவாறு அருகில் சென்று) வேற ஒரு பிரச்னையும் இல்லையே...!

உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான்.

வர்மா:    ஒண்ணுமில்ல. ஒரு நாளைக்கு எத்தனை பொய்கள்தான் சொல்றது! எவ்வளவு சதி வேலைகளுக்கு துணையா நிக்கிறது! கம்பெனி லாபகரமா நடக்கணும்னா ஒரு மேனேஜர் கட்டாயம் இப்படி நடந்துதான் ஆகணும். (உண்ணியைப் பார்த்தவாறு) பெரிய ஒரு கான்ட்ராக்ட் கிடைக்கணும்னா வர்ற பிச்சைக்கார நாய்களையெல்லாம் ராத்திரி குடிக்க வைக்கணும். அவங்களை சுகமா இருக்க வைக்கணும். வீட்டுக்கு வந்த ஒரே சண்டைவேற.

உண்ணி பார்க்கிறான்.

கோபாலன் நாயர்:    சரி... போனது போகட்டும். இனி நடக்குறது நல்லதா நடக்கட்டும். (நடந்தவாறு) நான் புறப்படட்டா தாசப்பா?

தண்ணீரில் இறங்கும்போது வர்மா:

“சரி... கிளம்புங்க...”

கரைக்கு வந்த வர்மா உண்ணியிடம்:

“வா குளிக்கலாம்...”

உண்ணி சட்டையைக் கழற்றுகிறான். ட்ரவுசரைக் கழற்ற வெட்கப்பட்டு நிற்கிறான். வர்மா அவனின் தயக்கத்தைப் பொருட்படுத்தாமல், அவனின் ட்ரவுசரைக் கழற்றி அவனுடன் நீருக்குள் இறங்குகிறான்.

வர்மா:    நான் உனக்கு நீந்தக் கற்றுத் தர்றேன்.

வர்மா அவனை கைமேல் படுக்க வைக்கிறான். அவன் கால்களால் நீரைத் துலாவுகிறான். தூரத்தில் குளித்துக் கொண்டிருக்கும் சிறுவர்களின் ஆரவாரம்.

உண்ணி சிரிக்கிறான். தொடர்ந்து கால்களை இப்படியும் அப்படியுமாய் ஆட்டுகிறான். நீர் வாய்க்குள் புகுந்து இருமல் வந்தாலும், அதைப் பற்றிக் கொஞ்சமும் கவலைப்படாமல் சிரித்து அதை முழுமையாக மறைக்கிறான். தன்னை மறந்து அவன் நீச்சலில் ஈடுபடுகிறான்.

நீரின் மேற்பரப்பில் நீர் குமிழியும் நுரையும்.

17

குளத்தில் வந்து விழும் கல்லால் உண்டாகும் சிறிய அதிர்வலை. ஓலையால் ஆன ஒரு காற்றாடியுடன் உண்ணி ஒரு பாசி படிந்த குளத்தினருகில் நின்றிருக்கிறான்.

உண்ணி:  மம்மீ... ஒரு தவளை.

சிறிது தூரத்தில் நின்றவாறு இந்திராவும் கோபாலன் நாயரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

கோபாலன் நாயர்:    அதோ தெரியுதே... (தூரத்தில் தெரியும் ஒரு வரப்பைக் காட்டி) அதுவரை நம்மளோட நிலமாத்தான் இருந்துச்சு. இப்பவும் நமக்கொண்ணும் குறைச்சல் இல்ல... - தாராளமா நம்மக்கிட்ட நிலம் இருக்கத்தான் செய்யுது.

இந்திரா:   பாகம் பிரிக்கிறப்போ எர்ணாகுளத்துல இருக்குற வீடு வேணுமா இல்லாட்டி இந்த நிலம் வேணுமான்னு கேட்டாங்களாமே!

கோபாலன் நாயர்:    உண்மைதான். ஆனா, அங்கே இருக்குறது வீடு மட்டும்தான். இந்த நிலத்தை எடுத்துக்கணும்னு தாசப்பன் நினைச்சது உண்மையிலேயே பெரிய விஷயம்தான். சொல்லப் போனா புத்திசாலித்தனமா நடந்துக்கிட்டதாகவே நான் நினைக்கிறேன். இந்த நிலத்துல நாம எது வேணும்னாலும் வைக்கலாம்.

உண்ணி:  (ஓடி வந்து) மம்மீ... ஃபிஷ்... பிக்.ஃபிஷ்...

கோபாலன் நாயர்:    (சிரித்தவாறு) நாம வலை போட்டு பிடிக்கலாம்.

உண்ணி:  வலை எங்கே இருக்கு?

கோபாலன் நாயர்:    கொண்டு வர்றேன்.

உண்ணி:  (கையிலிருக்கும் காற்றாடியைப் பார்த்தவாறு) அய்யோ... இது கெட்டுப் போச்சே!

கீழே விழுந்து கிடந்த ஒரு ஓலையை எடுத்து இன்னொரு காற்றாடி செய்து கொடுத்த கோபாலன் நாயர்:

"கவலையே பட வேண்டாம். மூணு தலைமுறைக்கு தேவையானது நம்மக்கிட்ட இருக்கு. வேலை செய்தவங்களுக்கு கொடுத்தது, மத்தவங்களுக்குக் கொடுத்தது போக மீதி..."

அவர்கள் நடந்து சென்று, நீலியின் குடிசை இருக்கும் இடத்தை அடைந்தபோது நீலியின் குரல்:

"அப்போ உன் வாயில என்ன கொழுக்கட்டையா வச்சிருந்தே! வாயைத் திறந்து சொல்ல வேண்டாமா?"

நீலி முற்றத்தில் இரண்டு ஆண்களிடம் பேசிக் கொண்டிருப்பதை அவர்கள் பார்க்கிறார்கள்.

உண்ணி ஆர்வத்துடன் பார்க்கிறான்.

அந்த ஆண்கள் சிரிக்கிறார்கள்.

நீலியின் குரல்:  "இப்போ ஒரு கால்லதானே நொண்டிக்கிட்டு இருக்கே! ரெண்டு கால்லயும் நொண்டுற மாதிரி ஆயிடும்னு அந்த ஆளுக்கிட்ட சொன்னா போதும்..."


அதைக் கேட்டு உண்ணிக்கு சிரிப்பு வருகிறது.

இந்திராவுடன் சேர்ந்து கோபாலன் நாயர் நடக்கிறார்.

வீட்டின் ஒரு பக்கத்தில் இந்திரா நின்றவாறு:

"அங்கே பார்த்தீங்களா என்ன சத்தமும் ஆர்ப்பாட்டமும்னு! இந்த மாதிரி சத்தமே இருக்கக்கூடாதுன்னுதான் ஆயிரம் கஷ்டங்கள் இருந்தாலும் இந்த இடத்தைத் தேடி ராஜேஷோட அப்பா வர தீர்மானிச்சதே..."

கோபாலன் நாயர் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

இந்திரா:   அவளைப் பார்த்து எல்லோருக்கும் பயமா என்ன? இங்கேதான் அவ இருக்கணும்னு சட்டம் ஏதாவது இருக்கா என்ன?

கோபாலன் நாயர் சிரிக்க முயற்சிக்கிறார்.

இந்திரா:   பகல்லதான் இப்படித்தான்னா ராத்திரியிலயும் ஒரே பிரச்னையா இருக்கு. இவளை முதல்ல விரட்டி விட்டாத்தான் சரியா இருக்கும்.

கோபாலன் நாயர்:    கண்டங்கோரன்... அவனோட அப்பா... மூணு நாலு தலைமுறையாகவே இவங்க இங்கேதான் வேலை செஞ்சிக்கிட்டு வர்றாங்க.

இந்திரா:   வேற எங்கேயாவது போகட்டும்.

கோபாலன் நாயர்:    அந்தக் காலத்துல மாதிரி அவ்வளவு இலேசா இதை செஞ்சிட முடியாது. வேலை வெட்டி இல்லாத பசங்க பலரும் இப்போ அரசியல் கட்சிகள்ல இருக்காங்க. ஏன் அந்த அளவுக்கு போகணும்? சாயங்கால நேரத்துல நமச்சிவாயம் சொல்ல வேண்டிய நேரத்துல இப்போ சின்னப் பிள்ளைங்க கூட சிந்தாபாத்துல்ல சொல்லுது!

உண்ணியின் முகபாவம், கையில் இருந்த காற்றாடியை ஊதி ஓட விட முயற்சிக்கும் உண்ணிக்கு, கோபாலன் நாயர் பேசிய விதம் பிடிக்கிறது.

இந்திரா:   வேற எங்கேயாவது இடம் தரவேண்டியதுதான். சட்டம் அது இதுன்னு பேசுறது சரியா இருக்காது. மரியாதையா போக முடியுமான்னு கேளுங்க. இல்லாட்டி...

கோபாலன் நாயர் அதற்கு பதில் எதுவும் கூறவில்லை.

காற்றாடியை ஓட விட்டவாறு முன்னால் வந்து நிற்கிறான் உண்ணி. கோவிலில் பூஜை செய்யும் நம்பூதிரி தயங்கியவாறு சற்று தூரத்தில் நின்று கொண்டிருப்பதைப் பார்த்து-

கோபாலன் நாயர்:    வாங்க நம்பூதிரி... இவர்தான் நம்ம கோயில்ல பூஜை செய்றவரு...

நம்பூதிரி அருகில் வந்து இலையில் கட்டியிருக்கும் பூவையும் பிரசாதத்தையும் இந்திராவிடம் தருகிறார். இந்திரா அதை வாங்கியதை உண்ணி பார்க்க, நம்பூதிரி அவனிடமும் தருகிறார்.

நம்பூதிரி:  மூணு நேரமும் பூஜை இருக்கு. இதுவரை ஒரு நாள்கூட நின்னது இல்ல. எல்லாம் கடவுளோட அருள். நீங்க ஒருநாள் கோயிலுக்கு வரணும்.

இந்திரா:   (முன்பு பேசிக் கொண்டிருந்த விஷயத்தை மாற்றாமல்)சரி... தேவைப்பட்டால் ஒரு வக்கீலைப் பார்த்து பேசுங்க. (முக பாவத்தை சிரித்தவாறு) கட்டாயம் வர்றேன்... அங்கே நான் ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், வெள்ளிக் கிழமையும் கட்டாயம் கோயிலுக்குப் போவேன்.

நம்பூதிரி அந்த இடத்தை விட்டு நீங்கிய பிறகு, கோபாலன் நாயரும் இந்திராவும் மெதுவான குரலில் ஏதோ பேச முயற்சிக்க, உண்ணி அவர்களைச் சந்தேகத்துடன் பார்க்கிறான். பிறகு என்ன நினைத்தானோ, காற்றாடியைப் பறக்க விட்டவாறு விமானம் கிளம்புகிற ஒலியை வாயால் உண்டாக்கியவாறு அவன் வீட்டிற்குள் ஓடுகிறான்.

18

காமிக் புத்தகத்தில் ஒரு வீர சாகச படம்.

உண்ணியின் அறை.

காமிக் புத்தகங்கள் மூன்று, நான்கு விரிக்கப்பட்டு கிடக்கின்றன. உண்ணி ஒரு புத்தகத்தை எடுத்து பிரித்து பார்க்கிறான். பல தடவை அவன் படித்து ரசித்த புத்தகம் தான் என்றாலும், இப்போதும் அதன் மீது அவன் கொண்ட ஆர்வம் குறைந்தபாடில்லை.

அப்போது வெளியே- தூரத்தில் செண்டை ஒலி கேட்கிறது. அவன் காதுகளைத் தீட்டிக் கொண்டு அதைக் கேட்கிறான்.

தாயின் குரல்:   "ஸ்விட்ச் உடைஞ்சு போயிருக்கு. எப்போ வேணும்னாலும் ஷாக் அடிக்காதா?"

இந்திராவும் எலெக்ட்ரீஷியன் இளைஞனும் வாசலில் நின்றிருக்கிறார்கள்.

இந்திரா:   இதுக்கு ஷேட் கிடையாது. பையன் படுக்குற அறை. ஒரு சின்ன பெட்ரூம் விளக்கு வேணும்.

எலெக்ட்ரீஷியன்: அதை வாங்கணும்னா திருச்சூருக்குத்தான் போகணும்.

அவர்கள் வெளியே போகிறார்கள். உண்ணி புத்தகம் படிப்பதைத் தொடர்கிறான். செண்டை ஒலி மிகவும் அருகில் கேட்கிறது.

19

வாசலில் செண்டை ஒலிக்கேற்ப ஆடுகிறார்கள். உண்ணியும் வர்மாவும் அதையே பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். உண்ணியின் முழு கவனமும் ஆடும் மனிதனின் மீதே இருக்கிறது. ஆடிக் கொண்டிருக்கும் மனிதர் கையால் உண்ணியை நோக்கி சைகை செய்தவாறு ஆடுகிறான்.

வீட்டிற்குள்ளிருந்து குறிப்பு எழுதிய பேப்பருடன் வெளியே வருகிறான் எலெக்ட்ரீஷியன். அவனுடன் இந்திராவும் வருகிறாள். எலெக்ட்ரீஷியன் வெளியே செல்கிறான்.

ஆடிக் கொண்டிருப்பவர்கள் இந்திராவைப் பார்த்ததும் புதிதாக ஆடத் தொடங்குகிறார்கள்.

இந்திரா:   இவுங்களுக்கு என்ன கொடுக்கணும்? ஒரே சத்தம்... தாங்க முடியல (வர்மாவுக்கு நெருக்கமாக வந்து) போதும்னு நிறுத்தச் சொல்லுங்க. காதே செவிடாயிடும் போல இருக்கு.

வர்மா அவள் சொன்னதைக் காதிலேயே போட்டுக் கொள்ளவில்லை. ஆடி முடித்தவுடன், அவன் அவர்கள் கையில் இரண்டு ரூபாய் எடுத்து தருகிறான். 

உண்ணி:  (ஆடும் மனிதர்களைக் காட்டி) இவரோட கண் எங்கே அப்பா? கண்ணு...

அந்த மனிதன் முகமூடியைக் கழற்றி தன்னுடைய முகத்தைக் காட்டுகிறான். உண்ணிக்கு அவனுடைய செயல் மிகவும் பிடிக்கிறது.

வர்மா:    (மனைவியிடம்) ரிச்சுவல் ஆர்ட்ஸ். நம்மோட பாரம்பரிய கலைகளில் ஒண்ணு. என்னோட தீஸிஸில் இது ஒரு சேப்டர். தெரியும்ல?

இந்திரா:   டி.வி.யில பாத்திருக்கேன்னு நினைக்கிறேன்.

உண்ணி:  அப்பா, நானும் வர்றேன்.

இந்திரா:   வேண்டாம். அப்பா வர்றப்போ ஒருவேளை தாமதம் ஆனாலும் ஆகும்.

வர்மா:    (வியப்புடன்) நான் சும்மா நடந்து போயிட்டு வரலாம்னு பார்க்குறேன்.

இந்திரா:   (கிண்டலை சாமர்த்தியாக மூடிய புன்னகையுடன்) நண்பர்களோட, தெரிஞ்ச ஆளுங்களோட வீடுகளுக்குப் போறப்போ ஒருவேளை நேரம் ஆகலாம். அதுனாலதான் சொல்றேன். எப்படி இருந்தாலும் தாமதம் ஆகுமா இல்லியா?

வர்மா:    (அவளை அமைதியாகப் பார்த்தவாறு) ப்ளீஸ்... இங்கேயும் ஆரம்பிச்சிடாதே.

இந்திரா:   (உண்ணியிடம்) உண்ணி... இங்கே வா. அந்த புள்ளி போட்ட சட்டையை எடுத்து போட்டுக்கோ. தலையை நல்லா வாரிக்கோ.

வர்மா வாசலில் நின்றிருக்கிறான். உள்ளே ஓடிய உண்ணி அதே வேகத்தில் கால்களில் செருப்பை அணிந்து, கையில் காற்றாடியுடன் வெளியே வந்து தன் தந்தையுடன் சேர்ந்து நடக்க ஆரம்பிக்கும்போது-

இந்திரா:   ராஜேஷ்... புட் ஆன் யுவர் ஷூஸ்.

அதைக் கேட்காமலே உண்ணி தன் தந்தையுடன் சேர்ந்து நடக்கிறான்.

20

கிராமத்துப் பாதை.

எதிரில் வந்து கொண்டிருக்கும் கால்நடைகளுக்கு வழிவிட்டு வர்மாவும், உண்ணியும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறார்கள். ஒரு மாடு மேய்க்கும் சிறுவன் ஒரு பெரிய எருமை மீது அமர்ந்து சவாரி செய்து கொண்டிருக்கிறான்.


அந்தச் சிறுவன் அவர்களைக் கடந்து செல்லும்போது உண்ணியை ஆச்சரியத்துடன் பார்க்கிறான்.

உண்ணி:  இதெல்லாம் எங்கே போகுது?

வர்மா:    பலரோட வீட்டுக்கும். வயல்ல வேலை முடிஞ்சு ஆத்துல குளிப்பாட்டிட்டு கொண்டு போறாங்க.

உண்ணி:  அப்போ இந்த மாடுங்க சாணத்தை தண்ணியில போடும்ல? அதுலயா நாம குளிக்கிறோம்?

வர்மா:    (சிரித்துக் கொண்டே) ஆறுதான் ஓடிக்கிட்டே இருக்கே! அது அசுத்தம் ஆகியிருக்காது.

அவர்கள் நடக்கிறார்கள். வழியில் இருந்த புதரைப் பார்த்த உண்ணி:

"இந்தப் புதர்ல பாம்பு இருக்காதா?"

வர்மா:    சில வேளைகள்ல இருக்கும்.

அப்போது எதிரில் வந்து கொண்டிருக்கும் ஒரு நடுத்தர வயதைக் கொண்ட மனிதனும், அழகான ஒரு நடுத்தர வயது பெண்ணும் அவர்களையே உற்று பார்க்கிறார்கள். பக்கத்தில் வந்ததும் அவர்கள் நிற்கிறார்கள். வர்மாவும் சிரித்தவாறே நிற்கிறான்.

கிராமத்து மனிதர்களில் அந்த மனிதன் முக்கிய மனிதனாக இருக்க வேண்டும். நெற்றியில் சந்தனக்குறி இருக்கிறது. தலையில் கோவிலில் கொடுக்கப்பட்ட தெச்சிப்பூ இருக்கிறது. பெண்ணின் கையில் தட்டும், தாம்பாளமும் இருக்கின்றன.

கிராமத்து ஆள்: நீங்க வந்திருக்கிறதா கேள்விப்பட்டேன். அப்பாவும் பிள்ளையும் எங்கே போறீங்க?

வர்மா:    சும்மா நடந்து வரலாம்னு கிளம்பினோம்.

பெண்:     (செல்லமாக உண்ணியைப் பார்த்து) இந்த ஒரு குழந்தைதானா?

வர்மா:    ஆமா...

சிரித்தவாறு அந்தப் பெண் கையிலிருந்த பாத்திரத்தைத் திறந்து உண்ணியிடம் நீட்டுகிறாள்:

"எடுத்துக்க பிரசாதம்."

உண்ணி தயங்குகிறான். தன் தந்தையைப் பார்க்கிறான்.

பெண்:     எடுத்துக்க... (வர்மாவிடம்) கோயில்ல தந்த அப்பம்...

வர்மா:    எடுத்துக்கோ உண்ணி...

உண்ணி முதலில் ஒன்றை எடுக்கிறான். பிறகு இன்னொன்றை.

பெண்:     அம்மாவையும் அழைச்சிக்கிட்டு எங்க வீட்டுக்கு வரணும். அங்கே விளையாடுறதுக்கு ஆள் இருக்கு. (வர்மாவிடம்) உங்க மிஸ்ஸஸ்ஸை ஒருநாள் வந்து பார்க்குறேன்.

வர்மா:    வா...

கிராமத்து ஆள்: பாம்பேயிலயும் கல்கத்தாவுலயும் இருந்தவங்களுக்கு இங்கே இருக்குறது ரொம்பவும் கஷ்டமான ஒரு விஷயம். பேசுறதுக்காகவாவது ஆள் வேண்டாமா? வேலைக்கு இனிமேல் போறதா இல்லைன்னு கேள்விப்பட்டேன்.

வர்மா:    கேள்விப்பட்டது சரிதான். பத்து பதினெட்டு வருஷமா வெளியூர்ல இருந்தாச்சே! இது போதும்னு நினைக்கிறேன்.

பெண்:     இங்கே எப்படி உங்களுக்கு நேரம் போகும்?

வர்மா:    நீங்க எல்லாம் இங்க வாழலியா என்ன?

பெண்     :     (சிரித்தவாறு) எங்களைப் போலவா? தம்புரான்... நீங்க வேணும்னா எங்களை மாதிரி இருந்துடலாம். உங்க மிஸ்ஸஸ்ஸுக்கும் மகனுக்கும்... என்ன மகனே?

உண்ணி பதிலெதுவும் கூறாமல் நின்றிருக்கிறான்.

கிராமத்து ஆள்: நீங்க ஒவ்வொரு இடத்துலயும் பெரிய பதவியில இருக்கீங்கன்னு நாலுபேரு சொல்றப்போ எங்களுக்கு எவ்வளவு பெருமையா இருக்கும் தெரியுமா?

பெண்:     கொஞ்ச நாள் கழிச்சு இங்கே இருக்க முடியலைன்னா, போனாலும் போயிடுவீங்க.

உண்ணி ஒரு அப்பத்தைத் தின்னுகிறான். இன்னொரு அப்பத்தை பாக்கெட்டில் இடுகிறான்.

பெண்:     என் பிள்ளைங்களைப் பார்க்கல இல்லே? ஒரு நாள் அங்கே வரணும்.

நடக்கத் தொடங்கிய வர்மா:

"வர்றேன்"

பெண்:     மகனும் வரணும். தெரியுதா? மகன்கூட விளையாடுறதுக்கு அக்காமாருங்க இருக்காங்க. ஊஞ்சல் இருக்கு.

உண்ணி 'வருகிறேன்' என்ற அர்த்தத்தில் தலையை ஆட்டுகிறான்.

சிறிது தூரம் நடந்து சென்ற பிறகு உண்ணி.

"அது யாரு அப்பா?"

வர்மா:    ஒரு- ஒரு... ஆன்ட்டி!

21

ற்றில் வீசப்பட்ட ஒரு வலை இழுக்கப்படுகிறது. வயதான ஹரிஜன் கிழவன் ஒருவன் வலையை வீசி இருக்கிறான். வலை தரைக்கு வருகிறபோது, அதில் இருக்கும் சிறு மீன்கள் துடிக்கின்றன.

ஐந்து அல்லது ஆறு வயது இருக்கும் பாரு வலையில் இருக்கும் மீன்களை எடுத்து கூடையில் போடுகிறாள்.

நடந்து அங்கு வந்து சேரும் வர்மாவையும் உண்ணியையும் பார்த்து கிழவன் சிரிக்கிறான்.

கிழவன்:   வீட்ல அம்மா மீன் சமைப்பாங்களா இல்லையா தெரியாது. இதுல ஒரு பிடி பரல் மீன் இருக்கு.

வர்மா:    வீட்ல சமைக்கிறது இல்ல. ஆனா, தனிப்பட்ட முறையில இவனும் நானும் சாப்பிடுவோம்.

கிழவன்:   இந்தத் தம்புரானை நான் பார்த்ததே இல்லையே!

குனிந்து உண்ணியை உற்று பார்க்கிறான். பாருவும் உண்ணியைப் பார்க்கிறாள். உண்ணியின் பார்வை முழுவதும் துடித்துக் கொண்டிருக்கும் மீன்கள் மீது இருக்கிறது.

வர்மா:    வயல் வேலைக்கு இப்பவும் போறது உண்டா சாத்தா?

கிழவன்:   இல்ல... போறது இல்ல. சும்மா இருக்குறப்போ வலையை எடுத்துட்டு வந்து நாலு தடவை வீசுவேன். பையன் கூட செத்துப் போயிட்டான்...

வர்மா:    ம்... கோபாலன் நாயர் கடிதத்துல எழுதியிருந்தாரு.

கிழவன்:   அவனோட பொண்ணுதான் இது(பாருவைக் காட்டி) மகனை அழைச்சிக்கிட்ட கடவுள் இந்த கிழவனை இன்னும் கூப்பிடாம இருக்கார்.

உண்ணி அவர்களிடமிருந்து விலகி நிற்கிறான். பாரு மீன்களை எடுத்து கூடையில் போடுவதைப் பார்த்தவாறு, அவன் கூடைக்கருகில் அமர்கிறான். பாருவின் கை வேகமாக வலைக்குள் இருக்கும் மீன்களை எடுத்துக் கொண்டிருப்பதையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான்.

துடித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய மீனை வெளியே எடுத்து உள்ளங்கையில் வைத்தவாறு பாரு நீட்டுகிறாள். சிரித்தவாறு அவன் அதை வாங்குவதற்கு கையை நீட்டினாலும், பிறகு என்ன நினைத்தானோ கையை இழுத்துக் கொள்கிறான். பின்புலத்தில் கிழவன் சாத்தனும் வர்மாவும் பேசிக் கொண்டிருப்பது நம் காதில் விழவில்லை.

பாரு:      வேணும்னா எடுத்துக்கோ.

உண்ணி 'வேண்டாம்' என்று கையால் சைகை செய்தவாறு எழுந்து தன்னுடைய தந்தையின் அருகில் செல்கிறான். அப்போது கிழவன் சொல்கிறான்:

"சொன்னா நீலி கேக்கணும்ல! ஒண்ணுமே செய்ய முடியாம படுத்த படுக்கையா ஆகுறப்போ துணைக்கு யாராவது வேண்டாமா? அவளுக்கு அப்படியொரு நிலைமை வரவேண்டாம்."

வர்மா பேசாமல் இருக்கிறான். நடக்கிறான். அவனுடன் சேர்ந்து உண்ணியும்.

22

ற்றின் இன்னொரு இடத்தில் வர்மா இறங்கி தன் கால்களைக் கழுவுகிறான்.

கரையில் நின்றிருக்கும் உண்ணி தண்ணீரில் சிறிய கற்களைப் போட்டு விளையாடிக் கொண்டிருக்கிறான். அப்போது பாரு அவனுக்குப் பக்கத்தில் வந்து கொண்டிருப்பது அவனுக்குத் தெரிகிறது. அவள் கடல் ஆமணக்கின் இலையையும் தண்டையும் நீக்கி நடுப்பகுதியை ஒடித்து அதை வைத்து ஊதுகிறாள். உண்ணியும் அதைச் செய்து பார்க்கிறான்.

அவன் தன் பாக்கெட்டில் வைத்திருந்த அப்பத்தை எடுத்தவாறு என்னவோ சிந்திக்கிறான்.

"நீ கையைக் கழுவு"

பாரு: ஏன்?

உண்ணி:  மீன் நாத்தம் எடுக்கும்ல?

பாரு:      கழுவிட்டேன்.


அவன் ஒரு துண்டு அப்பத்தை எடுத்து அவள் கையில் தந்துவிட்டு, ஆற்றையே பார்த்தவாறு நின்றிருக்கிறான்.

உண்ணி:  உனக்கு வலை போட்டு மீன் பிடிக்க தெரியுமா?

பாரு: (சிரித்தவாறு)ம்... ம்... நான் தூண்டில் போடுவேன். சில நேரத்துல நெறைய மீன் கிடைக்கும்.

தன் தந்தை ஆற்றையொட்டி நடப்பதை உண்ணி பார்க்கிறான். இங்கே தான் இருப்பது தன் தந்தைக்குத் தெரியும். அதனால் இங்கேயே நின்றிருப்பதுதான் சரி என்று அவன் தீர்மானிக்கிறான்.

உண்ணியின் பார்வையில் தூரத்தில் ஒரு எல்லையில் நின்றிருக்கும் வர்மா.

23

ர்மா ஆற்றையே பார்த்தவாறு நின்றிருக்கிறான். அமைதி தவழும் கிராம சூழ்நிலை அவன் மனதில் கடந்த கால நினைவுகளை உண்டாக்கியிருக்கலாம். அவன் மனதில் வருத்தம் கலந்த இனிய நினைவுகள் அலைமோதுகின்றன.

தூரத்தில் மறுகரையில் இருந்து ஒரு நாடோடி பாடல் ஒலிக்கிறது.

பாரு கட்டம் போட்டு விளையாடுவதை உண்ணி பார்த்தவாறு நின்றிருக்கிறான். உண்ணியும் அவளைப் பின்பற்றி ஒரு காலில் கட்டங்களைத் தாண்டி, நொண்டி விளையாட்டு விளையாடுகிறான்.

கடந்து போகும் பாணர்கள் கூட்டத்தில் இருக்கும் வயதான ஆள்:

"நீண்ட ஆயுள் கிடைக்கட்டும்!"

வர்மாவை அவன் வாழ்த்துகிறான்.

ஹரிஜன இனத்தைச் சேர்ந்த புராதன கலைஞர்கள் கூட்டம் ஒன்று தன் தந்தையைச் சூழ்ந்து நிற்பதை இங்கிருந்தே உண்ணி பார்க்கிறான். தன் தந்தை அவர்களிடமிருந்த உடுக்கையை வாங்கி பார்த்துக் கொண்டிருப்பதைப் பார்த்த உண்ணியின் முகத்தில் இனம் புரியாத ஆர்வம் படர்கிறது.

வர்மா உடுக்கையைக் கையில் வைத்து மெதுவாக தட்டி பார்க்கிறான். ஒரு பாடலை வர்மா பாடி பார்க்கிறான்.

சந்தியா ராகத்தில் அமைந்த அந்தப் பாடலுக்கு ஆற்றின் அழகு மேலும் மெருகு சேர்க்கிறது, பாடலின் முடிவில் தூரத்தில் அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் நீலி. தூரத்தில் நின்று கொண்டிருக்கும் நீலியை வர்மா கவனிக்கவில்லை. ஆனால், உண்ணி பார்க்கிறான்.

24

ரவு நேரம்.

உண்ணியின் படுக்கையறை.

வேலைக்காரி படுக்கையைச் சரியாக விரித்துவிட்டு, வெளியே போனவுடன், உண்ணி சட்டையையும், ட்ரவுசரையும் மாற்றுகிறான். அவனின் தாய் பைஜாமாவை அவனுக்கு அணிவிக்கிறாள்.

இந்திரா:   ஆன்ட்டியோட பேர் என்னன்னு அப்பா சொல்லலியா?

உண்ணி:  ஊஹூம்.

இந்திரா:   அப்பாவுக்கு அப்பம் கொடுத்தாங்களா?

உண்ணி:  ஊஹூம்.

இந்திரா:   அந்த ஆன்ட்டி வயசான ஆன்ட்டியா? இல்லாட்டி வயசு குறைவான ஆன்ட்டியா?

உண்ணி:  (சிந்தித்து) பாபுவோட மம்மி மாதிரி இருந்தாங்க அந்த ஆன்ட்டி. புடவை கட்டியிருக்கல. முண்டு... ஆன்ட்டியோட வீட்டுக்கு என்னை விளையாட வரச் சொன்னாங்க.

இந்திரா அவனுடைய ட்ரவுசரையும், சட்டையையும் மடித்து கட்டிலின் கால்பகுதியில் வைத்துவிட்டு, நிமிர்ந்து நின்றவாறு, என்னவோ சிந்தனையில் ஆழ்கிறாள்.

இந்திரா:   அப்பாக்கிட்ட அதுக்குப் பிறகு ஆன்ட்டி என்ன சொன்னாங்க?

உண்ணி:  (அம்மாவின் இந்தக் குறுக்குக் கேள்விகள் மேல் வெறுப்பு ஏற்பட்டு) என்னவோ சொன்னாங்க. ஆன்ட்டி வீட்டுல ஊஞ்சல் இருக்கு. மம்மி, வர்றீங்களா?

இந்திரா:   (தன்னுடைய பாவத்தை இலேசாக மாற்றிக் கொண்டு, சற்று கடுமையான குரலில்) என்னை யாரும் கூப்பிட மாட்டாங்க. யாரும் கூப்பிடவும் வேண்டாம்.

சொல்லிவிட்டு வெளியே நடக்கிறாள். உண்ணி என்ன செய்வது என்று தெரியாமல் விழிக்கிறான்.

25

காலை நேரம்.

வர்மாவின் புத்தகம் படிக்கும் அறை. பரணில் பயன்படுத்தாமல் கிடந்த பழைய, நிறம் மாறிப்போன புத்தகங்கள் குவிக்கப்பட்டு கிடக்கின்றன. அவற்றை எடுத்து பார்த்தவாறு அவசியம் தேவை என்பதை மட்டும் ஒரு பக்கம் வர்மா எடுத்து வைக்கிறான். அவனின் தந்தை காலத்திலிருந்தே சேகரிக்கப்பட்ட புத்தகங்கள் அவை. புத்தகங்களுடன் ஓலைச் சுவடிகளும் இருக்கின்றன. உண்ணி அருகில் வருகிறான். புத்தகத்தில் ஒன்றை எடுத்துப் பார்த்துவிட்டு அங்கேயே வைக்கும்போது சிரித்தவாறு வர்மா:

"நீ படிக்கிற மாதிரி புத்தகம் ஒண்ணுமில்லடா, உண்ணி"

உண்ணி அறைக்குள்ளேயே ஒரு சுற்றி சுற்றிவிட்டு, வெளியே ஓடுகிறான்.

வெளியே வந்த உண்ணி பெரிய படுக்கையறையின் வாசலில் நின்று பார்க்கும்போது, மேஜைமேல் ஏறிநின்று எலெக்ட்ரீஷியன் சுவரில் வயர்களை மாட்டிக் கொண்டிருக்கிறான். அவனின் தாய் அதை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருக்கிறாள். எலெக்ட்ரீஷியன் தரையில் போட்ட ப்ளாஸ்டிக் வயர், டெஸ்ட்டர், மற்ற பொருட்கள் ஆகியவற்றைப் பார்த்த உண்ணி குனிந்து எதையோ எடுக்க முயல-

இந்திரா:   நோ, டோன்ட் ப்ளே வித் தேட்.

உண்ணி எடுத்த பொருளை அங்கேயே வைக்கிறான். பிறகு வெளியே செல்கிறான்.

வேலிக்கு அருகில் நின்று உண்ணி பார்க்கிறான். நீலி குடிசைக்கு முன்னால் அமர்ந்து பனையோலைகளால் கூடை செய்து கொண்டிருக்கிறாள்.

உண்ணி வீட்டுப் பக்கமிருந்து தன்னை யாராவது பார்க்கிறார்களா என்று பார்க்கிறான். இல்லை- யாரும் பார்க்கவில்லை. அவன் சாய்ந்து கிடக்கும் வேலியை மாற்ற முயலும் போது, ஓசையைக் கேட்டு, நீலி திரும்பிப் பார்க்கிறாள். உண்ணியைப் பார்த்து புன்னகைத்தாவறு-

"அய்யோ... கையில் முள்ளு குத்திடப் போகுது. நான் வேலியைத் திறந்து விடுறேன்..."

அவள் அருகில் வந்து வேலியை மாற்றி அவன் உள்ளே வரும்படி செய்கிறாள்.

உண்ணியும் நீலியும் குடிசையின் வாசலை நோக்கி நடக்கும் போது நீலி:

"இன்னிக்கு ஆத்துல குளிக்க போகலியா?"

உண்ணி:  ஊஹூம்...

நீலி: விளையாடுறதுக்கு யாரும் துணைக்கு இல்லாமப் பொழுதே போக மாட்டேங்குது. இல்லே?

உண்ணி பாதி வரை பின்னப்பட்ட கூடையை எடுத்து பார்க்கிறான்.

நீலி: இந்தக் கூடை வேலை முடிஞ்ச பிறகு உண்ணி தம்புரான், உங்களுக்கு ஒரு கிளிக்கூடு செஞ்சு தர்றேன்...

உண்ணி:  கிளி எங்கே கிடைக்கும்?

நீலி: கிளி வேணுமா? நாம பிடிச்சிட்டாப் போகுது. (சிறிது நேரம் என்னவோ யோசனையில் ஆழ்ந்துவட்டு பாதி உண்ணியிடமும் பாதி தன்னிடமும் என்பது மாதிரி) உட்கார்ந்து கொஞ்சம் வேலை செஞ்சா கூட தலைவலி வந்துருது... முன்னாடி மாதிரி ஓடி நடந்து என்னால வேலை செய்ய முடியல...

உண்ணி:  உடம்புக்கு சரியில்லையா?

நீலி: ம்...

உண்ணி:  டாக்டரை அழைச்சுப் பார்த்தா என்ன?

அவனின் கள்ளங்கபடமில்லாதகேள்வியைக் கேட்டு நீலி மெதுவாக சிரித்துக் கொள்கிறாள்.

நீலி: சரியாப் போச்சு! (விஷயத்தை மாற்றுவதற்காக முகத்தில் பிரகாசத்தை வரவழைத்துக் கொண்டு) உண்ணி தம்புரான், உங்களுக்கு என்ன வேணும்? (சிறிது யோசித்தவாறு) வெள்ளரிக்காய் உங்களுக்குப் பிடிக்குமா?

உண்ணி என்ன பதில் கூறுவதென்று தெரியாமல் விழிக்கிறான்.


26

திருஷ்டி பொம்மை.

நிலத்தில் காய்கறிகள் இருக்கின்றன. நீலி வெள்ளரிக்காய் பிஞ்சு ஒன்றைப் பறித்து உண்ணியின் கையில் தருகிறாள்.

நீலி: சாப்பிடுங்க. நல்லா இருக்கும்.

உண்ணி வெள்ளரிக்காயைத் தின்னும்போது பாருவும் நான்கைந்து சிறுவர்- சிறுமிகளும் அங்கு ஓடி வருகிறார்கள். கடையில் இருந்து வாங்கிக் கொண்டு வந்த ஏதோ சில சாமான்களை நீலியிடம் தருகிறாள் பாரு. மீதியிருந்த காசை நீலியிடம் தருகிறாள். அதை வாங்கி மடியில் நீலி வைக்கிறாள்.

பாரு: (உண்ணியிடம்) நீ விளையாட வர்றியா?

நீலி: (கோபத்துடன் பாருவிடம்) அடியே... தம்புரானை நீ, வா, போ அப்படின்லாம் கூப்பிடக் கூடாது. தெரியுதா?

பாருவின் முக மாற்றம். நீலியின் கோபத்திலிருந்து தப்பும் எண்ணத்துடன் அவள் சிறுவர்- சிறுமிகளுடன் தன்னை இணைத்துக் கொள்கிறாள்.

நீலி சிறுவர்- சிறுமிகளைப் பார்த்து:

"காய்கறிகளைக் கண்டபடி மிதிச்சு நாசமாக்கினா ஒங்க ஒவ்வொருத்தர் காலையும் நான் ஒடிச்சிடுவேன்!"

உண்ணி இலேசான பயத்துடன் நீலியைப் பார்க்கிறான். அவனின் முகத்தில் தெரியும் பயத்தைப் பார்த்து சிரித்தவாறு-

நீலி: (மெதுவான குரலில்) சும்மா சொன்னேன். அப்படின்னாத்தான் அவங்க பயப்படுவாங்க.

உண்ணி:  (திருஷ்டி பொம்மையைக் காட்டி) இது என்ன?

நீலி: கண்ணு படாம இருக்குறதுக்காக இதை வச்சிருக்கு. சில கருங்கண்ணுக்காரங்க பார்த்தாங்கன்னா, பூவெல்லாம் வாடிப் போயிடும்.

உண்ணி:  அந்த கோபாலன் நாயருக்கு கருங்கண்ணு இருக்கா?

அதைக் கேட்டு நீலி சிரிக்கிறாள்.

உண்ணி:  (யாரிடம் என்று இல்லாமல், தனக்குத்தானே) சில நேரங்கள்ல அம்மா பார்க்குறப்போ பயமா இருக்கும். அவுங்களுக்கும் கருங்கண்ணு இருக்குமோ?

நீலி: (அறிவுரை கூறும் குரலில்) அப்படியெல்லாம் பேசக்கூடாது.

சிறுவர்- சிறுமிகள் தூரத்தில் கண்களைப் பொத்திக் கொண்டு விளையாடுகிறார்கள். உண்ணி அவர்கள் விளையாடுவதையே பார்த்துக் கொண்டிருக்கிறான். ஒரு சிறுவனின் கண்ணைப் பொத்துகிறார்கள். மற்றவர்கள் ஒளிந்து கொண்ட பிறகு 'ஒளிஞ்சாச்சு' என்கிறார்கள். அவர்களைக் கண்டு பிடிப்பதற்குள் உண்டாகும் ஆர்ப்பாட்டம்.

உண்ணியின் ஆர்வத்தைப் பார்த்த நீலி:

"விளையாடணுமா?"

உண்ணி:  (சிரித்துக் கொண்டே) ம்...

நீலி: (உரத்த குரலில்) பாரு... இங்கே வா.

பாரு உள்ளே ஓடி வந்தபோது-

நீலி: உண்ணித் தம்புரானையும் அழைச்சிட்டுப் போ. (உண்ணியிடம்) கல்லும் முள்ளும் பார்த்து போகணும், தெரியுதா?(பாருவிடம்) விழாம பார்த்துக்கடி...

உண்ணி பாருவுடன் சேர்ந்து நடந்து போய் மற்ற சிறுவர்- சிறுமிகளுடன் கலக்கிறான்.

உண்ணி மற்ற சிறுவர்- சிறுமிகளுடன் சேர்ந்து விளையாடுவதை நீலி பார்த்தவாறு நின்றிருக்கிறாள்.

27

சிறுவர்- சிறுமிகள் விளையாடுகிறார்கள்.

உண்ணி பாருவின் கண்களைப் பொத்துகிறான்.

பாரு மற்ற சிறுவர்- சிறுமிகளை தேடிப் போகிறாள். தேடி கண்டுபிடிக்கிறாள்.

அடுத்து உண்ணியின் முறை.

அவன் சிறுவர்- சிறுமிகளைத் தேடும்போது, கீழே விழுந்து விடுகிறான். பாரு அவன் எழுந்திருக்க உதவுகிறாள்.

எழுந்து நின்ற உண்ணி ஒன்றுமே நடக்காதது மாதிரி தன் மீது படிந்திருக்கும் மண்ணைத் தட்டி விடுகிறான். அப்போது நீலி அங்கு வருகிறாள்.

நீலி: பரவாயில்லை... காயம் ஒண்ணும் இல்லியே!

அவள் உண்ணியின் உடம்பில் ஒட்டியிருந்த மண்ணைத் தட்டிவிடுகிறாள். முகத்தில் இருந்த மண்ணையும் துடைத்துவிட்டு, தலைமுடியைக் கையால் தள்ளி சரி செய்கிறாள். தூரத்தில் உண்ணியின் தாய் இந்திராவின் குரல்:

"ராஜேஷ்!"

அதைக் கேட்டு உண்ணி பயப்படுகிறான்.

நீலியின் பார்வையில் தூரத்தில் நின்று கொண்டிருக்கும் இந்திரா.

நீலி: நீங்க போங்க...

உண்ணி மெதுவாக தலையைக் குனிந்து நடந்தவாறு தூரத்தில் நின்றிருக்கும் தாயின் அருகில் வருகிறான்.

தூரத்தில் நின்றவாறு நீலியும் இந்திராவும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள். நீலி புன்னகைக்கிறாள். இந்திரா திரும்பி நடக்கிறாள்.

28

சாப்பிடும் அறை. உண்ணி தலையைக் குனிந்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருக்கிறான். வர்மா, இந்திரா இருவரும் அருகில் இருக்கிறார்கள். இந்திரா இன்னும் சாப்பிட ஆரம்பிக்கவில்லை.

இந்திரா:   இங்கே வந்தபிறகு சொன்னா அது மாதிரி கொஞ்சம் கூட நடக்குறது இல்ல. ஸ்லேட்டையும் புத்தகத்தையும் கையிலயே எடுக்கல. கண்ட பிச்சைக்கார நாய்கள் கூட சேர்ந்து விளையாடுற. நான் என்ன சொன்னாலும் கேக்குறது இல்ல.

உண்ணி வேகமாக சாப்பிடுகிறான். வர்மா இந்திரா பேசுவதைக் கேட்டாலும், வாயைத் திறந்து ஒருவார்த்தை கூட பேசாமல் இருக்கிறான். சாப்பிட்டு முடித்து, எழுந்த உண்ணியிடம்-

"அறையை விட்டு வெளியே போனா... வேண்டாம்... தேவையில்லாம அடி வாங்காதே!"

உண்ணி கையைக் கழுவிவிட்டு வெளியே செல்கிறான்.

இந்திரா சாப்பிட ஆரம்பிக்கிறாள். அவளின் மனதிற்குள் என்னவோ பிசைந்து கொண்டிருக்கிறது.

இந்திரா:   புலையர்கள் கூடவும் பறையர்கள் கூடவும் சகவாசம்... உருப்பட்ட மாதிரிதான்.

வர்மா பதில் எதுவும் கூறாமல் இருக்கிறான்.

இந்திரா:   (முகத்தைத் தாழ்த்தியவாறு முணுமுணுக்கும் குரலில்) குடும்பப் பாரம்பரியம் அது தானே? அதைவிட்டு வேற மாதிரி நடந்தாத்தானே ஆச்சரியம்?

வர்மா ஒரு நிமிடம் அவளையே பார்க்கிறான். பிறகு சாப்பிடுவதைத் தொடர்கிறான்.

இந்திரா:   (தைரியமாக வர்மாவின் முகத்தைப் பார்த்து) அந்தக் குடிசையைக் காலி பண்ணினா என்ன?

வர்மா அவளைப் பார்க்காமல் இருக்கிறான்.

இந்திரா:   எனக்கும் சட்டம் என்னன்னு தெரியும். வேற எங்கேயாவது போகட்டும். அப்படின்னாத்தான் இஷ்டப்படியெல்லாம் இருக்க முடியும்.

வர்மாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள். தன்னை வேண்டுமென்றே வேதனைப்படுத்துவதற்காகவே அவள் கூறுகிறாள் என்பதை அவன் நன்கு அறிவான். தான் மிகவும் மனவருத்தம் அடைய வேண்டும் என்பது கூட அவளின் விருப்பமாக இருக்கலாம். அவன் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டவாறு ஒரு இயந்திரத்தைப் போலத் தொடர்கிறான்.

இந்திரா:   (உணவு சாப்பிட்டுக் கொண்டிருக்கும் கையைத் தட்டில் குத்தியவாறு) என்ன, ஒண்ணுமே சொல்ல மாட்டேங்குறீங்க?

வர்மா அதற்கும் பதில் பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   (சற்று குரலை உயர்த்தி) வீட்டுக்கு வந்துட்டா புத்தகம் படிக்கிறது... தியானம்... தேவையான கேள்விகளுக்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியமே இல்லையே!

Cut To:

கை கழுவும் இடம்.

வெளியே வாசலில் நின்றிருக்கும் உண்ணி கேட்கிறான்.

இந்திராவின் குரல்:

"வேண்டாம்னா வேண்டாம்னு வாயைத் திறந்து சொல்லணும். இருபது வேலைக்காரங்க இருந்த இடத்துலதான் நானும் சின்னப் பிள்ளையா இருக்குறப்போ வளர்ந்திருக்கேன். கீழ்ஜாதிக்காரங்களை எப்படி எந்த இடத்துல வைக்கணும்னு எனக்குத் தெரியும்."

சாப்பாட்டு மேஜையை விட்டு நாற்காலியை நகர்த்தும் சத்தம். இந்திராவின் குரல் நெருங்கி வருவதைக் கேட்டு உண்ணி ஓடுகிறான்.

தன்னுடைய அறைக்கு வந்த உண்ணி ஸ்லேட்டையும், பென்சிலையும் கையில் எடுத்து வைத்துக் கொண்டு காதுகளைத் தீட்டி உட்கார்ந்திருக்கிறான்.


அவனுடைய தாய் படுக்கையறையில் நடக்கும் சத்தம் கேட்கிறது. அவள் தனக்குத் தானே கூறிக் கொள்கிறாள்:

"ஆயுள் முழுக்க நாடு கடத்துறதுன்னு கேள்விதான் பட்டிருக்கேன். இப்போ நானே அதை அனுபவிக்கிறேன்!"

அலமாரியை வேகமாக அடைக்கும் சத்தம்.

அவனின் தாயின் உரத்த குரல்:

"இந்த அறையைப் பெருக்க இதுவரை யாருக்கும் நேரம் கிடைக்கலியா, நாணியம்மா?"

உண்ணி வேகமாக நர்சரி பாடல் ஒன்றை படிக்கிறான்- சற்று உரத்த குரலில்,

Humpty Dumpty sat on a wall

Humpty Dumpty had a great hall

All the kings horses and all the kings men

Could not put Humpty together again!

29

ற்றங்கரை.

என்னவோ யோசனையில் ஆழ்ந்தவாறு நின்றிருக்கிறான் வர்மா. மாலை நேர நடை என்று வந்த மனிதன், அது முடிந்து திரும்புவதற்கு முன்னால் என்னவோ சிந்தனை மனதில் தோன்ற, அங்கேயே நின்றுவிடுகிறான்.

அவன் திரும்பிப் போக நினைக்கும்போது, சுற்றிலும் பார்க்கிறான். பிறகு அழைக்கிறான்:

“உண்ணி!”

ஆலமரத்தைச் சுற்றி ஓடி விளையாடிக் கொண்டிருக்கும் உண்ணியையும் பாருவையும் அவன் பார்க்கிறான்.

வர்மா:    உண்ணி, போகலாம்!

உண்ணி விளையாட்டை நிறுத்திவிட்டு வர்மாவின் அருகில் வருகிறான். உண்ணியும் வர்மாவும் நடக்க ஆரம்பிக்கும்போது நேர் எதிரில் வந்து கொண்டிருக்கும் கிழவன் சாத்தன்:

“வயலுக்குப் போகலாம்னு நினைச்சேன். அப்போ பாருதான் சொன்னா நீங்க இங்க இருக்குறதா!”

வர்மா:    என்ன சாத்தா?

சாத்தன்:   நீலியைப் பத்தித்தான். ஆதரவு இல்லாத தனிக்கட்டை. வீடு இல்லாம ஆக்கிட்டா, பாவம் அவ எங்கே போவா தம்புரான்?

வர்மா:    (தயங்கியவாறு) நான்... நான் ஒண்ணும் சொல்லலியே!

சாத்தன்:   அந்த கோபாலன் தம்புரான் என்கிட்ட சொன்னாரு. நான் அவக்கிட்ட இந்த விஷயத்தைச் சொன்னப்போ...

உண்ணி இந்தப் பேச்சை உன்னிப்பாக காது கொடுத்து கேட்பதை வர்மா கவனிக்கிறான். ஒரு நிமிடம் என்னவோ சிந்திக்கிறான்.

வர்மா:    உண்ணி, முன்னாடி நடந்துபோ. நான் பின்னாடி வர்றேன்.

சாத்தன்:   (தூரத்தில் தயங்கி நின்றிருக்கும் பாருவைப் பார்த்து) அடியே, நீ சின்ன தம்புரான் கூடப்போ. ஆடு, மாடு எதிர்ல வந்தா கொஞ்சம் விலகி நிக்கணும். தெரியுதா? பத்திரமா கூட்டிட்டுப் போகணும். (பிறகு வர்மாவிடம்) அவ காலம் முடிஞ்சிருச்சுன்னா அதுக்குப் பிறகு அந்த வீட்டை ஒரேயடியா இல்லாமப் பண்றதோ இல்லாட்டி அந்த இடத்துல ஏதாவது நட்டு வளர்க்கவோ எது வேணும்னாலும் செய்யட்டும். கவலையே இல்ல.

உண்ணி நடக்கும்போது சாத்தனின் வார்த்தைகள் காதில் கேட்கின்றன.

உண்ணிக்கு கொஞ்சம் கூட புரியாத விஷயங்கள் இவை. அவன் முன்னால் நடக்கிறான். பாரு ஓடி அவனுடன் சேர்ந்து கொள்கிறாள்.

30

பாருவும் உண்ணியும் நடக்கிறார்கள். வெள்ளரிக் கொடியை நெருங்கும்போது பாரு:

“வெள்ளரிக்காய் வேணுமா?”

உண்ணி பதில் சொல்ல முயற்சிக்கும்போது, வாழை மரங்களுக்கு மத்தியில் நீலியைப் பார்க்கிறான்.

நீலி: (பாருவிடம்) தாத்தாவை எங்கேடி?

பாரு: வர்றாப்ல. பெரிய தம்புரான் கூட அவரு பேசிக்கிட்டு இருக்காரு. இவனை... (தன்னைத் திருத்திக் கொண்டு) சின்ன தம்புரானை என்னை கூட்டிட்டுப் போகச் சொன்னாரு.

வேலிக்கு அருகில் வருகிறாள் நீலி.

உண்ணி:  (தனக்குத் தானே) கோபாலன் நாயருக்கு நிச்சயம் கருங்கண்ணு இருக்கு!

நீலி: (வியப்புடன்) அப்படியா?

உண்ணி:  கருங்கண்ணு வச்சிருக்காரு நீலி, உன் குடிசை மேல...

நீலி சிரிக்கிறாள். சிரித்து முடிக்கும்போது கம்பீரமான குரலில்-

நீலி: கருங்கண்ணு வச்சிருக்கவங்களை எப்படி அடிச்சு விரட்டுறதுன்னு எனக்குத் தெரியும். உண்ணி தம்புரான், நீங்க நடங்க.

உண்ணியும் பாருவும் வீட்டை நோக்கி நடக்கிறார்கள்.

31

வீட்டின் முன்பக்கம்.

இந்திராவுக்கு கிண்டல் கலந்த கோபம். அருகில் கோபாலன் நாயர் நின்றிருக்கிறார்.

இந்திரா:   அவ என்ன பெரிய பத்ரகாளியா பயந்து நடுங்குறதுக்கு? இந்த ஊர்ல இருக்குற முக்கியமான ஆட்கள்ல ஒரு ஆளு நீங்கன்னு இங்க இருக்குறவங்க சொன்னாங்களே!

கோபாலன் நாயர்:    (சிரிக்க முயற்சி செய்து) பயம்னா நீங்க நினைக்கிற மாதிரி பயமில்ல. பஞ்சாயத்து தேர்தல் சீக்கிரமே வர இருக்கு. நம்ம வார்டுல நான் நிக்கணும்னு பலரும் சொல்றாங்க.

உண்ணி அருகில் வருகிறான்.

இந்திரா:   அப்பாவை எங்கே?

உண்ணி:  வந்துக்கிட்டு இருக்கார்.

கோபாலன் நாயர்:    நான்...

அவர் நின்று கொண்டிருப்பதைப் பற்றி கவலையே படாமல் இந்திரா உண்ணியைச் சற்று தள்ளி நிறுத்தி வேண்டுமென்றே ஒரு சிரிப்பை வரவழைத்துக் கொண்டு:

“அப்பா ஆன்ட்டி வீட்டுக்குப் போன உடனே, உன்னை முன்னாடி நடந்து போகச் சொன்னாருல்ல?”

உண்ணி:  இல்ல...

இந்திரா:   பொய் சொல்லக் கூடாது. அப்பம் தந்த ஆன்ட்டியா? இல்லாட்டி கண்ணாடி போட்ட ஒரு ஆன்ட்டியா?

உண்ணி:  மீன் பிடிக்கிற சாத்தன்கிட்ட என்னமோ அப்பா சொல்லிக்கிட்டு இருந்தாரு.

பிறகு உண்ணி கோபாலன் நாயரைப் பார்க்கிறான். கூர்மையாகப் பார்த்துக் கொண்டிருந்த கோபாலன் நாயர் உண்ணியைப் பார்த்து சிரிக்க முயற்சிக்கிறார்.

இந்திரா (தொனியை மாற்றி) கோ டூ யுவர் ரூம். ஏ.பி.சி.டி. ஃபோர் டைம்ஸ், ஒன் டூ ஹன்ட்ரட் ஃபோர் டைம்ஸ் எழுதணும். புத்தகத்தை கையிலயே எடுக்காம அப்பாகூட சும்மா சுத்தித் திரிஞ்சா போதுமா?

உண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் பேந்தப் பேந்த விழிக்கிறான். தன் தாயிடம் அடுத்தடுத்து உண்டாகும் உணர்ச்சி மாற்றங்களைப் புரிந்து கொள்ள முடியாமல் அவன் தவிக்கிறான்.

கோபாலன் நாயரின் குரல்:

“பார்க்குறேன்னு சொல்லாம வேற நான் என்ன சொல்றது?”

பகல் நேரம்.

நீலியின் குடிசை. பின்புலத்தில் வயல். நீலியும் உண்ணியும்.

Half Way

நீலி: வேற உங்களுக்கு என்ன பாட்டு தெரியும்?

உண்ணி:  அதுக்குப் பிறகு நான் ஒண்ணும் படிக்கலியே!

நீலி: பள்ளிக்கூடத்துல படிக்கிற இங்கிலீஷ் பாட்டு மட்டும்தான் தெரியுமா? அம்மா வர்றப்போ பெட்டி பாட்டொண்ணும் கொண்டு வரலியா?

அவள் என்ன சொல்கிறாள் என்பது உண்ணிக்குப் புரியவில்லை.

உண்ணி (சிறிது நேர யோசனைக்குப் பிறகு)

ஓ... ஸ்டீரியோவைச் சொல்றியா? கேசட் வைக்கிற ஸ்டீரியோ.

நீலி: எனக்கு அதோட பேரெல்லாம் தெரியாது. நான் ஒரு முட்டாள்தானே!

உண்ணி அதைக் கேட்டு சிரிக்கிறான்.

உண்ணி:  ஸ்டீரியோவை அப்பா யாருக்கோ கொடுத்துட்டார். சங்கராபரணம் பாட்டுன்னா அப்பாவுக்கு ரொம்பவும் பிடிக்கும். நாஸியா ஹஸன் பாட்டை வைக்க அவர் சம்மதிக்கவே மாட்டார்.

நீலி: எங்கேயுள்ள அஸ்ஸன்?


அதைக்கேட்டு உண்ணி உரத்த குரலில் விழுந்து விழுந்து சிரிக்கிறான். சிரிப்பின் முடிவில் உண்ணி:

“நாஸியா ஹஸனைத் தெரியாதா? நீ நிச்சயமா முட்டாள்தான்!”

நீலியும் சிரிக்கிறாள்.

சிறிது நேர அமைதிக்குப் பிறகு நீலி மெதுவான குரலில் உண்ணிக்காக ஒரு பாட்டைப் பாடுகிறாள்.

அது ஒரு நாடோடிப் பாடல். எந்தவித இசைக்கருவிகளும் இல்லாத எளிமையான பாடல் அது.

பாடலின் முடிவில் நீலிக்கு மிகவும் தளர்ச்சியாக இருக்கிறது. திடீரென்று தலையைச் சுற்றிக் கொண்டு வரவே, அப்படியே உட்கார்ந்து விடுகிறாள் நீலி. அவளின் நிலையைப் பார்த்து பதைபதைத்துப் போகிறான் உண்ணி.

உண்ணி:  தலை வலிக்குதா?

நீலி பேசாமல் இருக்கிறாள். பயந்து, ஒருவித சந்தேகத்துடன் அவன் அவளின் தோளில் கையை வைத்து பார்க்கிறான். கஷ்டப்பட்டு இயல்பாக இருக்க முயலும் நீலி சிரிக்க முயற்சி செய்தவாறு:

“ஒண்ணுமில்ல... எனக்கு அப்பப்போ இந்த மாதிரி வரும். உடம்பு படபடன்னு நடுங்க ஆரம்பிச்சிடும். (விஷயத்தை மாற்றி) பரவாயில்ல... உண்ணி தம்புரான், நீங்க போங்க.”

தயங்கி நிற்கிறான் உண்ணி.

நீலி: நடங்க.

உண்ணி மெதுவாக நடக்கிறான். சிறிது தூரம் சென்ற பிறகு பின்னால் திரும்பிப் பார்க்கிறான். நீலி நெற்றியில் கை வைத்தவாறு அதே இடத்தில் அமர்ந்திருக்கிறாள். அவள் மேல் இனம் புரியாத ஒரு பரிதாப உணர்ச்சி உண்ணியின் மனதில் உண்டாகிறது.

32

நீலியின் குடிசைப் பகுதி.

ஆவேசத்துடன் வாசலில் நின்றிருக்கிறாள் நீலி. அவளின் கையில் வெட்டரிவாள் இருக்கிறது.

நீலி: என்ன விளையாடுறீங்களா? ஆள் யார்ன்னெல்லாம் நான் பார்க்க மாட்டேன். இதுக்கு மேல ஏதாவது வாயைத் திறந்தா நடக்குறதே வேற.

மெலிந்துபோன, என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கும் ஒரு போலீஸ்காரர், கோபாலன் நாயர், அவருக்கு உதவியாக இரண்டு ஆட்கள்.

கோபாலன் நாயர்:    ஒரு புகார் வந்தா, அவங்க வந்து விசாரிக்கத்தானே செய்வாங்க, நீலி?

நீலி: விசாரணை... (போலீஸ்காரரிடம்) கண்ணையும் முரட்டுத்தனத்தையும் வச்சு என்னை பயமுறுத்தலாம்னா கொஞ்சமும் நடக்காது.

கோபாலன் நாயருடன் வந்த ஆள்:

ஸ்டேஷன்ல பல பேரு புகார் செய்திருக்காங்க. இந்த வீட்டுல கள்ளச்சாராயம் விக்கிறதாகவும், ராத்திரி நேரங்கள்ல கண்ட கண்ட ஆளுங்கள்லாம் இங்கே வந்து போறதாவும்...

நீலி: ப்பூ...! இதுக்கு மேல ஏதாவது பேசினா துண்டு துண்டா வெட்டி போட்டுருவேன். இதெல்லாம் யாரோட வேலைன்னு எனக்குத் தெரியும்!

கோபாலன் நாயர்:    (மெதுவான குரலில்) சத்தம் போட்டு பேசாத... தேவையில்லாம கத்தாம இந்த விஷயத்தைப் பேச முடியாதா நீலி?

நீலி: (தன் மீது குற்றம் சொன்ன ஆளைப் பார்த்து) இந்த ஆளு கூடத்தான் எத்தனையோ ராத்திரி உடம்புக்கு முடியலைன்னு மருந்து கேட்டு வந்திருக்கான். அப்போ இவனுக்கு சயரோகம். முக்கிக்கிட்டே இருந்தான். முனகுறதும் துப்புறதுமா இருந்தான். ராத்திரி நேரத்துல எதுக்காக வந்தான்னு பார்க்காம...

போலீஸ்காரன்: பெரிய மனிதர்களுக்கு அது தொந்தரவா இருக்குன்னு தெரியிறப்போ...

நீலி: கண்டதைச் சாப்பிடறவ இல்ல நான். எனக்கு வேலை நிறைய இருக்கு. தேவையில்லாம அதைக் கெடுக்காதீங்க. உடனே எல்லாரும் வெளியே போங்கடா.

33

வீட்டின் முன்னால் நின்றவாறு இந்திரா நடக்கும் நிகழ்ச்சி முழுவதையும் பார்க்கிறாள். மறைந்து நின்றிருக்கும் தன்னுடைய தாயையும், அரிவாளைக் கையில் வைத்துக்கொண்டு ஆக்ரோஷமாக நின்றிருக்கும் நீலியையும் உண்ணி கவனிக்கிறான்.

உண்ணியின் காதில் விழும் நீலியின் குரல்:

“இந்த வீட்டு வாசல்ல யாராவது கால் வச்சா, காலை நான் வெட்டிருவேன். யாரா இருந்தாலும், வெட்டிப் போட்டுட்டுத்தான் மறு வேலையைப் பார்ப்பேன்!”

கோபாலன் நாயரும், அவருடன் சென்றவர்களும் முகத்தைத் தொங்கப் போட்டவாறு திரும்பி வருவதை இந்திரா பார்க்கிறாள். எல்லா ஆர்ப்பாட்டமும் முடிந்து, நீலி பெரிய வீட்டை நோக்கி திரும்பிகிறபோது, இந்திரா வீட்டின் பின்பக்கம் போகிறாள்.

உண்ணி தன் தாய் தன்னைக் கவனிக்கவில்லை என்ற தைரியத்துடன் வேலியை நோக்கி மெதுவாக நடந்து செல்கிறான். உண்ணியைப் பார்த்ததும், நீலியின் முகத்தில் அதுவரை இருந்த கடுமைத்தனம் மறைந்து, சாந்தநிலை வந்து ஒட்டிக் கொள்கிறது. உண்ணி நீலியைப் பார்த்து புன்னகைக்கிறான்.  நீலியும் புன்சிரிப்பைத் தவழ விடுகிறாள். அவள் மிகவும் தளர்ந்து போய் திண்ணையில் முகத்தைக் கவிழ்த்துக் கொண்டு அமர்கிறாள். தனக்கு முதுகுப் பக்கத்தைக் காட்டியவாறு அமர்ந்திருக்கும் உண்ணியின் தோள் குலுங்குவதை வைத்து அவள் அழுது கொண்டிருக்கிறாள் என்பதைப் புரிந்து கொள்கிறான் உண்ணி.

34

றுநாள் காலை.

வெளியே வாசலில் கூடி நின்றிருந்த மக்களின் பேச்சு சத்தத்தையும் கோபாலன் நாயரின் உரத்த ஆணையிடும் குரலையும் கேட்டவாறு உண்ணி கண் திறக்கிறான்.

கோபாலன் நாயரின் குரல்:

"படிக்கு வெளியே நின்னு பேசின நீங்க, இப்போ அதே இடத்துல நின்னுக்கிட்டு என்ன பேசுறீங்கன்றதை ஒரு நிமிஷம் நினைச்சுப் பாருங்க!"

யாரோ ஒருவரின் குரல்:

"அந்தக் காலமெல்லாம் மலையேறிப் போயிடுச்சு நாயரே. முதல்ல உங்க தம்புரானை இங்கே கூப்பிடுங்க."

உண்ணி கண்களைக் கசக்கியவாறு வெளியே வருகிறான்.

வாசலில் பெருக்கிக் கொண்டிருந்த நாணியம்மா அதை முழுமையாக நிறுத்திவிட்டு விளக்குமாறைக் கையில் வைத்தவாறு மற்றவர்கள் பேசுவதைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்.

வெளியே வந்த உண்ணி நாணியம்மாவிடம்:

"யாரு வந்திருக்காங்க, நாணியம்மா?"

நாணியம்மா மீண்டும் சுத்தம் செய்யத் தொடங்குகிறாள்.

"யாரோ?"

உண்ணி படியை நோக்கி நகர்கிறான்.

35

வாசலில் பத்து பன்னிரெண்டு ஆட்கள் நின்றிருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் அரிஜனங்கள் என்பது தெரிகிறது. அவர்கள் வெவ்வேறு வயதைக் கொண்டவர்கள். அந்தக் கூட்டத்தில் கிழவனான சாத்தனும் இருக்கிறான்.

திண்ணையைத் தாண்டி கோபாலன் நாயர் நின்றிருக்கிறார். என்னவோ கலவரம் நடக்கப் போகிறது என்பதை எதிர்பார்த்து பயந்து அவர் அழைத்திருந்த மூன்று நான்கு ஆட்கள் அவருக்குப் பக்கத்தில் நின்றிருக்கிறார்கள்.

வாசலில் வர்மா ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்கிறான். அவனிடம் ஒரு பதட்டம் தெரிகிறது. வேகமாக அங்கு வந்த உண்ணி நடக்கும் காட்சியைப் பார்த்து, தனக்குப் பொருத்தமான ஒரு காட்சியல்ல அது என்று அவனுடைய மனதிற்குப் பட்டதாலோ என்னவோ, மிகவும் அருகில் நெருங்கிப் போகாமல் ஒரு தூணுக்குப் பக்கத்திலேயே அவன் நின்று கொள்கிறான்.

ஆட்கள் ஒரே நேரத்தில் கூறுகிறார்கள்:

"போலீஸைக் கூப்பிட்டு பாவ்லா காட்டினா பயந்து ஓடிடுவோம்ன்ற நினைப்பா?"

"அப்படி வீட்டை விட்டு விரட்டுற பெரியவங்க யாருன்னு நாங்களும் பார்க்க வேண்டாமா?"


"தம்புராக்கன்மார்கள் முன்னாடி எப்படி எப்படியோ இருந்திருக்கலாம். அந்தக் காலத்துல அப்படி இருந்தாங்கன்றதுக்காக...? பழங்கதைகளைப் பேசிக்கிட்டு இப்பவும் படிக்கு வெளியே நாங்க நின்னுக்கிட்டு இருக்க தயாரா இல்ல..."

சாத்தன் மட்டும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறான்.

ஒருவன் அந்தக் கூட்டத்திற்கு தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பவனைப் போல, இரண்டடி முன்னால் வந்து நின்று வர்மாவைச் சுட்டிக்காட்டி:

"நீங்க பெரிய உத்தியோகத்துல இருக்கலாம். பெரிய ஆளாக்கூட இருக்கலாம். அந்த பந்தாவை எல்லாம் அங்கே வச்சுக்கங்க. இங்கே அதுக்கெல்லாம் இடமே கிடையாது!"

கோபாலன் நாயர்:    டேய் சங்கரன் குட்டி...

அந்த மனிதன்: இந்த வேலை எல்லாம் இங்கே வச்சுக்காம, ஒழுங்கா போடா. தம்புரான்னா பெரிய இதுவா...?

தனக்கு நேராக அம்பு பாய்வதைக் கண்டு, தலை குனிந்த வர்மா மெதுவாக திரும்பி வாசல் கதவைப் பார்க்கிறான். வாசல் கதவைத் தாண்டி வெளியே நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களை மனக்கிலேசத்துடன் பார்த்தவாறு நின்றிருக்கும் இந்திராவை வர்மாவின் கண்கள் சந்திக்கின்றன. இந்திரா அடுத்த நிமிடம் முகத்தைத் திருப்பிக் கொண்டு உள்ளே செல்கிறாள்.

கோபாலன் நாயர்:    பத்து சென்ட் நிலம். வீடு கட்டுறதுக்கான பணம். மானம் மரியாதையோட பிழைக்கிறதுக்கான ஏற்பாடுகளை நாங்க செஞ்சி தர்றோம். இதுக்கு மேல என்ன வேணும்? சாத்தா... நீயே சொல்லு.

ஒரு ஆள்: அதை இப்போத்தானே சொல்றீங்க? பயமுறுத்தின பிறகும் ஒண்ணுமே நடக்கலையேன்னு தெரிஞ்ச பிறகு...

சாத்தன்: அவ இதோ பக்கத்துலதானே இருக்கா? அவளுக்கு இந்த விஷயத்துல சம்மதமான்னு இங்கே கூப்பிட்டு கேட்க வேண்டியதுதானே?

இன்னொரு ஆள்:     எல்லார் முன்னாடியும் நீங்க செய்யிறதா இருக்குற விஷயத்தைச் சொல்லணும். பிறகு... எந்தவித காரணத்தைக் கொண்டும் வாக்கு மாறக்கூடாது. நீங்க சர்வ சாதாரணமா வாக்கு மாறக்கூடிய ஆளுங்கதான்.

வர்மாவின் முகத்தில் தெரியும் உணர்ச்சி மாற்றம்.

உண்ணி கூட்டத்தில் நின்றிருக்கும் ஒவ்வொருவர் முகத்தையும் பார்க்கிறான். அப்போது தன்னுடைய தந்தையின் முகத்தையும் பார்க்கிறான்.

சாத்தன்:   (இறுதியாக பேசிய ஆளிடம்) அதிகமா பேசாதே. (வர்மாவைப் பார்த்து) நான் இப்பவே நீலியை இங்கே கூட்டிட்டு வர்றேன்.

சாத்தன் போகிறான். வர்மா தளர்ந்து போய் உட்கார்ந்திருக்கிறான்.

கூட்டத்திலிருந்த இரண்டு மூன்று பேர் தனியாகச் சேர்ந்து தங்களுக்குள் மெதுவான குரலில் என்னவோ பேசிக் கொள்கிறார்கள். கோபாலன் நாயருக்குத் துணையாக இருந்தவர்களும், தங்களுக்குள் என்னவோ பேசிக் கொள்கிறார்கள்.

உண்ணியின் முகத்தில் என்ன நடக்கப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம். அவனின் பார்வையில்- நீலி கூட்டத்தை நோக்கி நடந்து வருகிறாள். சாத்தன் நீலியுடன் வருகிறான். இரண்டு கூட்டத்திலும் சேராமல் நீலி தனியாக நிற்கிறாள். அவளையே எல்லோரும் வைத்த கண் எடுக்காது பார்க்கிறார்கள்.

நீலி: (யாரிடம் என்றில்லாமல்) என்னை ஏன் அழைச்சீங்க?

கூட்டத்தில் இருந்த ஒரு ஆள்:

உன்னை இந்த இடத்தை விட்டு போக வைக்கிறதுன்ற முடிவுல இவங்க இருக்காங்க. போக விருப்பமில்லைன்னா மனசைத் திறந்து சொல்லு. அதுக்குப் பிறகு இவங்க எப்படி உன்னை இங்கேயிருந்து போக வைக்கிறாங்கன்னு பார்ப்போம்.

கோபாலன் நாயர்:    நான் சில விஷயங்களை... நியாயமா படுற சில விஷயங்களை சாத்தன்கிட்ட சொல்லியிருக்கேன்.

கூட்டத்தில் தைரியமான ஒரு ஆள்:

வீடு கட்டணும்னா எவ்வளவு ரூபா தருவீங்க?

மற்றொரு ஆள்: நாலு ஓலையையும் கம்பையும் கொடுத்து விஷயத்தை முடிச்சிடலாம்னு நினைச்சா அவ்வளவுதான்.

நீலி: (அந்த மனிதனிடம்) டேய்... அந்த விஷயத்தை நான் பார்த்துக்கிறேன். (கோபம் கலந்த கிண்டலுடன்) எனக்கு உதவி செய்றதா நினைச்சா இதையெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க?

அந்த மனிதர்கள் திகைத்து நிற்கிறார்கள்.

நீலி: (சாத்தனிடம்) தம்புரான் சொன்னபடி செஞ்சுக்கலாம். இந்த விஷயத்துல பஞ்சாயத்து பேசுறதுக்காக யாரும் இங்கே நிக்க வேண்டாம்.

தலைமை தாங்கிய ஆள்:

குடியிருக்குறதுக்கு இடம், அது போக தனிப்பட்ட முறையில பணம்... இப்படி பல விஷயங்களை உனக்கு அவங்க கொடுக்கணும்.

நீலி: இந்த மாதிரி பேச்செல்லாம் ஒண்ணுமே தெரியாதவங்ககிட்ட போயி பேசுங்க. எனக்கு என்ன வேணும்னு கேக்குறதுக்கு நான் யாருக்கும் உரிமை கொடுக்கல. என் நாக்கை நான் எங்கேயும் அடகு வைக்கல. (சாத்தனிடம்) தம்புரான் என்ன சொல்றாரோ, அதுல எனக்கு முழு சம்மதம்.

அவள் வந்த வழியே கம்பீரமாக திரும்பி நடந்து செல்கிறாள்.

வர்மா எழுந்து உள்ளே போகிறான்.

36

டிக்கும் அறைக்குள் வந்த வர்மா ஒரு நிமிடம் என்னவோ சிந்தித்தவாறு நிற்கிறான். அவனுக்குப் பின்னால் வரும் உண்ணி:

“அப்பா, நீலி எங்கே போறா?”

சிறிது வெறுப்பு கலந்த குரலில் வர்மா:

“நீ அதைத் தெரிஞ்சு என்ன செய்யப் போற?”

உண்ணி வெளியே செல்ல, இந்திராவும், கோபாலன் நாயரும் வாசலில் நின்றிருக்கிறார்கள்.

உண்ணி திரும்பி நடக்கிறான். உண்ணியின் பார்வையில்-

கோபாலன் நாயர்:    பழைய வீட்டுல எல்லா சாமான்களும் பத்திரமா அப்படியே இருக்கு. அதுக்குமேல முன்னூறு ரூபா தர்றதா சொல்லுவோமா?

வர்மா எதுவும் பேசாமல் மவுனமாக நின்றிருக்கிறான்.

இந்திரா:   இந்த விஷயத்துல கஞ்சத்தனம் பார்க்க வேண்டாம். பத்தோ நூறோ அதிகமா ஆனாக்கூடப் பரவாயில்ல. கொடுங்க. வீடு உண்டாக்குற விஷயமாச்சே! (வர்மாவைப் பார்த்து) என்ன, நான் சொல்றது சரிதானே?

வர்மா என்ன செய்ய வேண்டும் என்றே தெரியாமல் தர்ம சங்கடமான நிலையில் இருக்கிறான். மனதில் உண்டாகும் கோபத்தை அடக்கிக் கொண்டு நீண்ட பெருமூச்சு விடுகிறான். மனதை அமைதியாக ஆக்கிக்கொண்டு, ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டி வைக்கிறான். குடிசையின் ஓலைகளும், கம்புகளும் பிரிக்கப்படும் சத்தம் கேட்கிறது.

37

நீலியின் குடிசை பிரிக்கப்படுகிறது. வீட்டிலிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் ஒரு கை வண்டியில் ஏற்றப்படுகின்றன.

நீலி, சாத்தன், இரண்டு மூன்று வேலைக்காரர்கள் நின்றிருக்கிறார்கள்.

சாத்தன்:   (நீலியிடம்) நட... நான் பின்னாடி வர்றேன்.

சட்டி, அலுமினியப் பாத்திரங்கள், மற்ற வீட்டுப் பொருட்கள் ஆகியவை ஏற்றப்பட்ட கை வண்டி மெதுவாக புறப்படுகிறது.

பிரிக்கப்பட்ட வீட்டையும், அதைச் சுற்றியுள்ள இடத்தையும் மீண்டுமொரு முறை பார்த்த நீலி பெரிய வீட்டை நோக்கி தன் கண்களை உயர்த்துகிறாள்.

வேலியைத் தாண்டி நின்று கொண்டிருக்கும் உண்ணியைப் பார்த்து அவள் புன்னகைக்கிறாள்.

வீட்டின் காம்பவுண்ட்டை ஒட்டி இன்னொரு இடத்தில் வர்மா நின்றிருக்கிறான். சற்று தூரத்தில் அவன் நின்றிருந்தாலும், இருவரின் பார்வைகளும் சந்திக்கின்றன.


அவள் அடுத்த நிமிடம் தலையைக் கவிழ்த்தவாறு நடக்கிறாள். கை வண்டியை நெருங்குகிறாள்.

கிராமத்துப் பாதையில் நகரத்தில் இருந்து கொண்டு வரப்படும் வீட்டுப் பொருட்கள் ஏற்றப்பட்ட லாரிக்கு, கைவண்டி இடம் ஒதுக்கித் தருகிறது. நீலியும் ஒரு ஓரத்தில் ஒதுங்கி நிற்கிறாள்.

உண்ணி லாரி சத்தத்தைக் கேட்கிறான்.

லாரி படியின் அருகில் வந்து நின்றபோது, உண்ணி அதற்கு அருகில் வந்து நிற்கிறான். சிரமப்பட்டு உள்ளே வந்து நிற்கும் லாரியின் அருகில் வந்து-

கோபாலன் நாயர்:    அங்கேயே நிக்கட்டும். சாமான்களை ஒவ்வொண்ணா பார்த்து இறக்கணும். எல்லாம் விலைகூடிய சாமான்கள்.

அப்போது இந்திரா அங்கே வருகிறாள்.

லாரியில் இருந்து இந்திரா, கோபாலன் நாயர், வேலைக்காரர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து பொருட்களை இறக்குகிறார்கள். வீட்டின் மேல் நின்றவாறு வர்மா அதைப் பார்க்கிறான்.

கீழே நின்றவாறு உரத்த குரலில் உண்ணி கேட்கிறான்:

“அப்பா... லிஸ்ட் எங்கே இருக்குன்னு அம்மா கேக்குறாங்க...”

வர்மா அதற்கு பதில் எதுவும் கூறாமல் இருக்கிறான். என்னவோ சிந்தனையில் ஆழ்ந்திருக்கும் வர்மாவின் முகம்...

38

ரவு நேரம். வாசலில் உட்கார்ந்து ஏதோ ஒரு புத்தகத்தை எடுத்து வைத்து படித்துக் கொண்டிருக்கிறான் வர்மா. இந்திரா அப்போது அருகில் வந்து நிற்பது தெரிகிறது. எனினும், அதைப் பார்க்காதது மாதிரி தான் படித்துக் கொண்டிருப்பதை அவன் தொடர்கிறான்.

இந்திரா:   ஃப்ரிட்ஜ் வேலை செய்யல. லாரியில கொண்டு வர்றப்போ இங்கயும் அங்கயும் மோதி ஏதாவது ஆகியிருக்கும்னு நினைக்கிறேன். இல்லாட்டி இங்கே ஏதாவது கரன்ட்ல பிரச்னையோ என்னவோ?

வர்மா:    ம்...

இந்திரா:   (இதற்கு மேல் என்ன பேசுவது என்று தெரியாமல் ஒரு நிமிடம் யோசித்து) ஊட்டியில இருக்குற ஸ்கூலுக்கு கடிதம் எழுதினீங்களா?

வர்மா:    (வாசிப்பதை நிறுத்தாமலே) எழுதலாம்...

இந்திரா:   இந்தக் காட்டுக்குள்ள அவன் நடந்து திரிஞ்சான்னா மொத்தத்துல அவனோட படிப்பு ஒண்ணும் இல்லாமப் போயிடும். அதுனாலதான் நான் திரும்பத் திரும்ப அதையே கேக்குறேன்.

வர்மா புத்தகம் படிப்பதை நிறுத்துகிறான். புத்தகத்தை மூடிவிட்டு என்னவோ சிந்தனையில் மூழ்குகிறான். வாசலுக்கு வெளியே உண்ணி வந்து நிற்பதைப் பார்த்து இந்திரா:

“வாட் யூ வாண்ட்? கோ அண்ட் ஸ்லீப்...”

உண்ணி உள்ளே செல்கிறான்.

தன்னுடைய படிப்பு விஷயமாகப் பேசுகிறார்களே என்று உண்ணி அறைக்குள் நின்றவாறு அவர்கள் பேசுவதைக் கேட்கிறான்.

வர்மா:    வேணும்னா இங்க இருக்குற ஸ்கூல்ல சேர்த்திடுவோம்.

இந்திரா:   (அதைக் கொஞ்சமும் விரும்பாமல்) இங்க இருக்குற ஸ்கூல்லயா? என்ன பேச்சு பேசுறீங்க?

வர்மா:    நான் படிச்சது இங்கதான். இங்கிலீஷ்ல எக்ஸ்ட்ரா கோச்சிங் கொடுக்குறதுக்கு ரிட்டயர்ட் ஹெட்மாஸ்டர் சங்கரய்யர் இருக்கார். குட்டிராமன் மாஸ்டரை கூப்பிட்டு சமஸ்கிருதம் சொல்லித் தரச் சொல்லலாம்.

இந்திரா அதைக்கேட்டு பயங்கரமான கோபத்திற்கு ஆளாகிறாள். வர்மாவோ, அமைதியே வடிவமாக உட்கார்ந்திருக்கிறான்.

இந்திரா:   சங்கரய்யர், குட்டிராமன்... டோண்ட் பி ஸில்லி!

வர்மா:    (இலேசாக சிரித்தவாறு) ஐ ஆம் ஸீரியஸ்.

இந்திரா:   பைத்தியக்காரத்தனமா ஏதாவது பேசாதீங்க. யாராவது இதைக் கேட்டாங்கன்னா என்ன நினைப்பாங்க? வேணும்னே எக்ஸென்ட்ரிக் மாதிரி பேசாதீங்க.

வர்மா:    (எழுந்துகொண்டே சாந்தமான குரலில் – அதே நேரத்தில் சற்று கடுமையாக) கான்வென்ட் இங்கிலீஷ்ல நாலு வார்த்தைகள் பேசிட்டா விஞ்ஞானத்தைக் கரைச்சு குடிச்சிட்டதா அர்த்தமா? உண்ணி எழுத படிக்குற புத்தகத்தைப் பார்த்திருக்கியா? A for Apple புத்தகம். I for Igloo (இக்லு)ன்னு இருக்கும். Iglooன்னா அர்த்தம் என்னன்னு தெரியுமா? சொல்லு...

இந்திரா பேசாமல் இருக்கிறாள்.

வர்மா:    தெரியாதா? பனிப்பிரதேசத்துல எக்ஸிமோ இனத்தைச் சேர்ந்தவங்க பனியில் உண்டாக்குற வீட்டுக்குப் பேருதான் Igloo. ஒரு அருமையான சொல்லை வெள்ளைக்காரனோட அழகான இங்கிலீஷ்ல நம்மால சொல்ல முடியல. சுத்தமான மலையாளத்திலயும் சொல்ல முடியல. ஸாரி. மலையாளமில்ல... மலையாளம்... வேர்களை இழந்த ஒரு இனம். (சிறிது நிறுத்தி) நாம எல்லாரும்தான். என்னையும் சேர்த்துத்தான் சொல்றேன்.

இந்திரா:   (கோபத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு, இலேசான கிண்டலுடன்) கல்லூரியில படிக்கிறப்போ இருந்த புரட்சி சிந்தனை அப்பப்போ உங்களுக்கு வந்திடும் போலிருக்கு.

வர்மா:    ஐ அட்மிட் ஐ ஆம் எ ஃபேல்யர். எப்பவோ தோற்றுப்போன புரட்சிக்காரன்.

பிடிவாதமும், கடுமையும் கலந்த குரலில் இந்திரா:

“அப்படிச் சொல்ல முடியாது. சில நேரங்கள்ல வெற்றியும் உங்களுக்குக் கிடைக்குதே! மூவாயிரம் ரூபாயும் வேற எத்தனையோ சலுகைகளும் கிடைக்கிற வேலையை வேண்டாம்னு தூக்கி எறிஞ்சதன் மூலம் உங்க அலுவலகத்துல நீங்க ஒரு புரட்சிக்காரன்ற மாதிரி ஒரு எண்ணத்தை மத்தவங்கக்கிட்ட உருவாக்கலியா? க்ரேட்! ரியலி க்ரேட்! பத்திரிகைகள்ல அது எவ்வளவு பெரிய செய்தியா வந்துச்சு!”

சொல்லியவாறு உள்ளே போகிறாள்.

படுக்கையறைக்குள் தாய் இந்திரா கால் பதிப்பது கேட்கிறது. உண்ணி படுத்தவாறு அதைக் கேட்டுக் கொண்டிருக்கிறான். உண்ணியின் முகம் வாடியிருக்கிறது.

39

ண்ணாடியில் உண்ணியின் உருவம். கிராமத்தில் பார்பர் ஷாப்பில் உண்ணி முடி வெட்டிக் கொண்டிருக்கிறான்.

உடன் வந்த கோபாலன் நாயர் அங்கிருக்கும் நாற்காலியில் அமர்ந்து பத்திரிகை படித்துக் கொண்டிருக்கிறார். பெஞ்சில் சவரம் செய்த ஒரு ஆள் உட்கார்ந்திருக்கிறான்.

கிராமத்து ஆள்: இந்த வருஷம் மகர மாசம் கோவில்ல திருவிழான்னு சொன்னாங்க.

கோபாலன் நாயர்:    ஊர்ல இருக்குற ஆளுங்க பையில இருந்து காசை வெளியே எடுத்தாங்கன்னா எப்பவுமே திருவிழாதான்... கொண்டாட்டம்தான். (பார்பரிடம்) கிருஷ்ணா... ஒட்ட வெட்டிரு. முடியைச் சரியா வெட்டலைன்னா நான் ஒழுங்கா கவனிக்கலைன்னு என் மேல குத்தம் சொல்லிடுவாங்க. அதுனால பார்த்து வெட்டு.

உண்ணி:  இதுக்கு மேல குறைக்க வேண்டாம்.

கோபாலன் நாயர்:    அம்மா சொன்னது ஞாபகத்துல இல்லியா?

உண்ணியின் தலை முடி வெட்டும் வேலை முடிகிறது. அவன் தன் மேல் போர்த்தியிருந்த துணியை நீக்கி எழும்போது-

கோபாலன் நாயர்:    நான் கொஞ்சம் சவரம் பண்ணிக்கிறேன். தலைமுடியை வெட்டினாக்கூட சரிதான். தலையில வேர்த்தா, மூக்கடைப்பு வந்திடுது.

பார்பரின் நாற்காலியில் ஏறி உட்காரும்போது கோபாலன் நாயர்:

“கொஞ்ச நேரம் வெளியே நடந்துக்கிட்டு இரு. எங்கேயாவது தூரத்துல போயிடாதே. போஸ்ட்டாபீஸ் வரை போனா போதும்.”

உண்ணி வெளியே செல்ல ஆரம்பிக்கும்போது, பின்னால் கோபாலன் நாயரின் குரல்:

“குழந்தையே பிறக்கலைன்னு பல தடவை கடவுள்கிட்ட வேண்டிக்கிட்ட பிறகு பிறந்த மகன். சுட்டித்தனம் கொஞ்சம் அதிகம்...”

உண்ணி ஓடுகிறான்.


40

ரிசாகக் கிடக்கும் நிலத்தில் ஓடி வந்து நிற்கிறான் உண்ணி. நீலியின் புதிய குடிசைக்கு மேலே அமர்ந்து இரண்டு அரிஜனங்கள் ஓலைகளைக் கட்டிக் கொண்டிருக்கிறார்கள். கீழே சாத்தன் நின்றிருக்கிறான். நீலியை எங்கேயும் காணவில்லையே என்ற எண்ணத்துடன் உண்ணி நின்று கொண்டிருக்கிறான். அப்போது நீலியின் குரல்:

“வீடு கட்டுறத பார்க்குறதுக்காக வந்தீங்களா உண்ணி தம்புரான்?”

உண்ணி குரல் வந்த திசையைப் பார்க்கிறான். பின்னால் நீலி நின்றிருக்கிறாள். அவளின் இடுப்பில் நீர் நிரப்பிய மண்குடம் இருக்கிறது.

நீலி: குடிக்குற தண்ணிக்காக கொஞ்ச தூரம் நடந்து போய்வர வேண்டியதிருக்கு. ஒரு பெண் எவ்வளவு கஷ்டப்பட வேண்டியதிருக்கு பார்த்தீங்களா? என் கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது. ஆமா... தனியாவா வந்தீங்க?

உண்ணி:  முடி வெட்டுறதுக்காக வந்தேன்.

நீலி: (தலையைப் பார்த்தவாறு) இப்படியா ஒட்ட வெட்டுறது?

(ஏதோ பழைய ஞாபகம் வந்து) இனி இப்படி வெட்ட கூடாது. தோள் வரை முடி இருக்கணும். கழுத்துல புலிநகம் அணிஞ்சிருக்கணும்... அப்படின்னாதான் பார்க்க நல்லா இருக்கும்.

அதைக் கேட்டு உண்ணி சிரிக்கிறான்.

உண்ணி:  புலி நகம் எங்கே கிடைக்கும்?

நீலி: அப்பாக்கிட்ட கேளுங்க. ஒருவேளை வீட்டுலயே இருக்கும்.

எதிர்திசையில் இருந்து வீட்டு வாசலை அடையும் பாருவிடம் தன் இடுப்பில் இருந்த குடத்தை எடுத்து நீலி தருகிறாள்.

நீலி: என்னால முடியலடி... இதை நீ வை!

பாரு குடத்தை வாங்கி தலையில் வைத்தவாறு போகிறாள்.

உண்ணி:  லாரி வந்திருச்சு. என் சைக்கிள், ட்ரெயின் எதுவும் வந்து சேரல.

நீலி: புதுசா வாங்கிதரச் சொல்ல வேண்டியதுதானே?

உண்ணி:  கிளிக்கூடு...

நீலி: (சிரித்தவாறு) அதை நான் மறக்கல. வீட்டு வேலை முடியட்டும். கிளியைக்கூட நான் பார்த்து வச்சிருக்கேன்.

உண்ணி:  (ஆர்வத்துடன்) எங்கே? எங்கே?

நீலி: அது இருக்கு. போதுமா? (தூரத்தில் வந்து கொண்டிருக்கும் கோபாலன் நாயரைப் பார்த்து) அந்த ஆளு வர்றாரு. நீங்க புறப்படுங்க.

உண்ணி பார்க்கிறான். கோபாலன் நாயர் வந்து கொண்டிருக்கிறார்.

இனி ஓடி பிரயோஜனமில்லை என்று நினைத்த உண்ணி அங்கேயே நின்றிருக்கிறான்.

கோபாலன் நாயர்:    நல்ல வேலை செஞ்சே நீ! அங்கே உன்னைக் காணோம்னதும் என் வயிறே கலங்கிடுச்சு!

வீடு வேய்ந்து கொண்டிருப்பதைப் பார்த்த கோபாலன் நாயர்:

“சுவரு கல்லுலயா மண்ணுலயா நீலி?”

அவர் கேட்டது காதில் விழாத மாதிரி இருக்கிறாள் நீலி. அப்போது கோபாலன் நாயர்:

“நீலி!”

நீலி திரும்பிப் பார்க்கிறாள்.

கோபாலன் நாயர்:    என்னை நீ தப்பா நினைக்கக்கூடாது. அவங்க என்ன சொல்றாங்களோ, நான் அதைக் கேட்டாகணும். நாய் வேஷம் போட்டா குரைச்சுத்தான் ஆகணும். என்ன இருந்தாலும் இப்போ அவங்களோட கணக்குப் பிள்ளை நான் தானே? பிரயோஜனம் இருக்கா இல்லையான்றது வேற விஷயம்.

அவள் வெறுப்புடன் அவரைத் திரும்பிப் பார்த்துவிட்டு நடக்கிறாள்.

உண்ணி கோபாலன் நாயருடன் சேர்ந்து நடக்கிறான்.

கோபாலன் நாயர்:    (மெதுவான குரலில் தனக்கு மட்டும் கேட்கிற மாதிரி) இந்த விஷயம் அம்மாவுக்குத் தெரிஞ்சா அவ்வளவுதான்.

உண்ணி:  (விஷயத்தை முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாமல்) என்ன?

கோபாலன் நாயர்:    எதுக்கு இவகிட்ட போய் பேசினீங்கன்னு கேட்டா...?

உண்ணி:  (யோசனையுடன்) பேசினது தப்பா?

கோபாலன் நாயர்:    தப்புன்னா... என்ன இருந்தாலும் ஒடிச்சு கொல்லுற ஜாதியைச் சேர்ந்தவதானே?

உண்ணி:  (பதைபதைத்து) நீலி ஆளுங்களைக் கொல்வாளா?

கோபாலன் நாயர்:    நீலின்னா... நீலியோட அப்பாவோட அப்பா...

ஒரே நிசப்தம். இருவரும் நடக்கிறார்கள். என்னவோ சிந்தித்தவாறு உண்ணி சில நிமிடங்களுக்குப் பிறகு-

“அவுங்க எப்படி கொல்வாங்க?”

கோபாலன் நாயர்:    (ஏன்தான் இதைச் சொன்னோமோ என்ற எண்ணத்துடன்) ராத்திரி மறைஞ்சிருந்து காளையாகவும், எருமையாகவும், நாயாகவும், பூனையாகவும் வந்து கழுத்தை ஒடிச்சு கொல்றது...

அதைக் கேட்டு உண்ணியின் முகத்தில் பயத்தின் ரேகைகள் படர்கின்றன.

41

ரவு நேரம்:

ஜன்னலருகில் உட்கார்ந்திருக்கும் கருப்பு நிற பூனையின் முகம்.

பயத்தால் வெளிறிப்போன முகத்துடன் அமர்ந்திருக்கும் உண்ணி.

அவன் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, சாப்பாட்டு அறையில் பயத்துடன் அமர்ந்திருக்கிறான். அருகில் வர்மா இருக்கிறான்.

உணவு அயிட்டங்களைப் பரிமாறிக் கொண்டிருக்கும் நாணியம்மா, ‘போ பூனை’ என்று கையை ஆட்டி கூறியவுடன் பூனை வெளியே ஓடி மறைகிறது.

வர்மா:    (உண்ணி பயத்துடன் உட்கார்ந்திருப்பதைப் பார்த்து) சாப்பிடு. என்ன கண்ணைத் திறந்து வச்சுக்கிட்டு தூங்குறியா?

உண்ணி:  (தட்டில் உணவு இருப்பதைப் பார்த்து) பூனை...

வர்மா:    பூனை அது பாட்டுக்கு இருக்கு. உனக்கு என்ன?

உண்ணி:  பூனை... கொலை செய்றவங்க பூனையா வருவாங்களாமே?

வர்மா:    (அவன் ஏதோ கதையைக் கேட்டிருக்கிறான் என்பதை உணர்ந்து) உன்கிட்ட யார் அந்தக் கதையைச் சொன்னது?

உண்ணி:  கொலை செய்றவங்க வண்டா பறப்பாங்களா?

வர்மா:    பேசாம ஒழுங்கா சாப்பிடு.

உண்ணி மீண்டும் சாப்பிடத் தொடங்குகிறான்.

“ரொம்பவும் கோபம் உள்ளவங்களைப் பார்த்துத்தான் அவங்க வருவாங்க. இல்லையாப்பா?”

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,

வர்மா:    உண்ணி, யார் உங்கிட்ட அந்தக் கதையைச் சொன்னது?

இந்திராவின் தட்டை வைத்தவாறு மேஜைக்கு அருகில் நாணியம்மா.

உண்ணி:  நீலியும் அவளோட வீட்டு ஆளுங்களும் இந்த மாதிரி கொலை செய்ய வருவாங்கன்னு கோபாலன் நாயர் சொன்னாரு.

வர்மா அதைக் கேட்டு சிரிக்கிறான்.

வர்மா:    அவரு சும்மா விளையாட்டுக்காகச் சொல்லியிருப்பாரு. நீ பேசாம சாப்பிடு.

நாணியம்மா:    இப்படித்தான் அவரு சின்னப் பிள்ளைக்கிட்ட கதை சொல்லுறதா?

அங்கே வரும் இந்திரா அவர்கள் பேசுவதைக் கேட்கிறாள். அவளின் இடத்தில் அமர்கிறாள். சப்பாத்தியைத் தட்டில் வைக்கும் நாணியம்மாவிடம்:

“நான் எடுத்துக்குறேன். சமையலறையில் நீங்க இருந்தா போதும். தேவைப்பட்டா நான் கூப்பிடுறேன்.”

நாணியம்மா சமையலறையை நோக்கி செல்கிறாள்.

வெளியே எங்கோயிருந்து நாய் ஒன்று ஊளையிடுகிறது. அதைக் கேட்டு உண்ணியின் முகத்தில் பயத்தின் ரேகைகள்.

42

ரு எருமை பயங்கர ஆவேசத்துடன் ஓடி வருகிறது. உண்ணி அதற்கு முன்னால் ஓடுகிறான். எருமை விரட்டுகிறது. தப்பித்து விட்டோம் என்ற நிம்மதியுடன் அவன் நின்று கொண்டு மேல் மூச்சு கீழ்மூச்சு விடும்போது, ஒரு வெறி பிடித்த நாய் ஓடி வருகிறது.

உண்ணி ஓடுகிறான். அவனுக்குப் பின்னால் பல நாய்களின் குரல்கள்.

ஓடி ஓடி களைத்துப் போய் அவன் கீழே விழும்போது, சிவந்த நாக்கை நீட்டியவாறு நாய் அவனை நோக்கி வருகிறது. அது அடுத்த நிமிடம் புன்னகைத்தவாறு நின்றிருக்கும் நீலியாக மாறுகிறது.


நீலி திடீரென்று பயங்கரமான கோபத்துடன் பிரகாசித்துக் கொண்டிருக்கும் ஒரு பெரிய வாளை எடுக்கிறாள். அதைப் பார்த்து அலறியவாறு எழுகிறான் உண்ணி.

கட்டிலில் இருந்து எழுந்து உட்கார்ந்திருக்கும் உண்ணிக்குப் பக்கத்தில் நாணியம்மா. உண்ணியை நாணியம்மா தடவியவாறு

“கனவு கண்டு பயந்துட்டிங்களா? அந்த நாயரு இப்படி கண்டதையெல்லாம் சொல்லி பிள்ளையை பயமுறுத்துறதா?

உண்ணி படுக்கிறான். வாசலுக்கு வெளியே மங்கலான வெளிச்சத்தில் வர்மா நின்றிருக்கிறான்.

வர்மா:    என்ன? என்ன உண்ணி?

நாணியம்மா:    கனவு கண்டிருக்காப்ல...

மீண்டும் உண்ணி உறங்கிவிட்டான் என்று எண்ணிய நாணியம்மா வெளியே போய் பாயில் படுக்கிறாள்.

வர்மா திரும்பிப் போகிறான்.

மங்கலான இருட்டில் உண்ணி கண்களைத் திறந்தவாறு படுத்திருக்கிறான்.

அந்த முகத்திலிருந்து மேளத்தின் ஒலி மெதுவாக ஆரம்பிக்கிறது.

43

மேளச் சத்தம். கோவில் குடைகளை எடுத்துக் கொண்டு வருகிறார்கள்.

உண்ணியும் இந்திராவும் கோபாலன் நாயரின் மனைவியும் கிராமத்தின் கோவிலுக்கு அருகில் நின்றிருக்கிறார்கள். உண்ணியின் நெற்றியில் திருநீறு இருக்கிறது. மக்கள் கூடி நிற்கிறார்கள். கோவிலில் அன்று திருவிழா.

திருவிழா படு அமர்க்களமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

கோபாலன் நாயர் அருகில் வந்து:

“இனி எங்க வீட்டுக்குப் போயி சாப்பிட்டுட்டு, தீபாராதனை நடக்குற நேரத்துக்குத் திரும்பி வருவோம்.”

இந்திரா:   வேண்டாம். இப்பவே கிளம்பவேண்டியதுதான்.

தேவகி:    அய்யய்யோ... நீங்க வருவீங்கன்னு வீட்டுல நிறைய ஏற்பாடுகள் பண்ணி வச்சிருக்கு.

கோபாலன் நாயர்:    என் மகளுக்கு குழந்தை பிறந்து இருபத்தெட்டு நாளாச்சு. வெளியே இருந்த யாரையம் வீட்டுக்கு கூப்பிடல. நீங்க வீட்டுக்கு வர்றீங்கன்றதுனால, நாணியம்மாக்கிட்ட அங்கே சமையல் எதுவும் பண்ண வேண்டாம்னு சொல்லியாச்சு. தாசப்பன்கூட உங்களைக் கட்டாயம் எங்க வீட்டுக்கு அழைச்சிட்டுப் போகச் சொன்னாரு.

இந்திரா என்னவோ யோசிக்கிறாள்.

தேவகியம்மா:   நீங்க வர்ற அளவுக்கு உள்ள இடம் இல்லைன்னாலும் பிள்ளைங்க நீங்க வந்தா ரொம்பவும் சந்தோஷப்படுவாங்க!

கோபாலன் நாயர்:    இதுல யோசிக்கிறதுக்கு என்ன இருக்கு? (மனைவியிடம்) நீ முன்னாடி நட.

இந்திராவும் உண்ணியும் கோபாலன் நாயரும் பின்னால் நடக்கிறார்கள். முன்னால் தேவகியம்மா நடந்து போகிறாள். அப்போது கோபாலன் நாயர்:

“ஒவ்வொரு மகர மாசத்திலும் இந்தத் திருவிழா நடக்கும். பெரிய தம்புரான் உயிரோட இருந்த காலத்துல கூட திருவிழா விமரிசையா நடக்கும். கோவிலுக்கு வந்துட்டா, சாப்பாடும் காப்பியும் நம்ம வீட்ல இருந்துதான் வரும். பெரிய தம்புரான் ஒரு வார்த்தை சொன்னா, அதைச் செய்ய நாங்க தயாரா இருப்போம்!”

உண்ணியின் பார்வை ஆலமரத்தின் கிளையில் பறந்து கொண்டிருக்கும் கோவில் கொடி மீது இருக்கிறது.

44

கோபாலன் நாயரின் வீடு. உட்பகுதி. பெண்கள் கூடியிருக்கிறார்கள். வீடு நன்றாகவே இருக்கிறது.

உள்ளே குழந்தையின் அழுகைச் சத்தம் கேட்கிறது. மூத்த மகள் கருப்பாக... அப்படியொன்றும் அழகில்லை- அவள் நீட்டிய தட்டில் இருந்து வெற்றிலையை எடுத்துப் போடுகிறாள் இந்திரா. தேவகியம்மா, வேறு இரண்டு பெண்கள்.

இந்திரா:   (பெண்ணிடம்) குஞ்ஞிலட்சுமி, கோயிலுக்கு வரலியா? நீ தம்புரானோட ஃப்ரெண்ட் ஆச்சே!

குஞ்ஞிலட்சுமி:  ஒவ்வொரு வருஷமும் அங்கே என்ன நடக்கும்னு எனக்குத் தெரியும். அதுனால பேசாம இருந்துட்டேன். வினோதினி வந்திருந்தாளே!

ஒரு புதிய பெயரைக் கேட்ட எண்ணத்தில் இந்திரா.

குஞ்ஞிலட்சுமி:  இந்தி டீச்சரா இருக்கா வினோதினி. படிக்குற காலத்துல நல்லா கதை பிரசங்கம் பண்ணுவா. தம்புரான்தான் எல்லாத்தையும் எழுதித் தருவாரு.

இந்திரா:   (சலித்தவாறு) படிக்குற காலத்துல அவரோட ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பெண்கள்தான் போல இருக்கே!

குஞ்ஞிலட்சுமி:  தம்புரான் இங்கே இருந்தப்போ திருவாதிரைக்கு பெண் பிள்ளைகளை மட்டும் வச்சு நாடகம் நடத்துவாரு. (நாணத்துடன்) நான்கூட அதுல நடிச்சிருக்கேன்.

ஒரு பெண்:     அம்மிணியோட புருஷனோட வேலை சம்பந்தமா சொல்லணும்னு நினைச்சேன். பார்த்துக்கிட்டு இருந்த வேலை போயிட்டதால...

இந்திரா:   ராஜேஷ்... குழந்தையை தூரத்துல எங்கேயும் கொண்டு போக வேண்டாம்னு சொல்லுங்க.,

தேவகியம்மா:   (உரத்த குரலில்) மாளுகுட்டி!

இந்திரா:   (ரசிப்பதைப்போல்) காலேஜுக்குப் போன பிறகு நாடகங்கள் இல்லியா?

தேவகியம்மா வாசலை நோக்கி நடந்து வெளியே தலையை நீட்டியவாறு:

“மாளு குட்டி!”

45

வெளியே வைக்கோல் புதருக்கு அருகில் நின்றிருக்கும் உண்ணியும், மாளுகுட்டியும்.

மாளுகுட்டி:     (உரத்த குரலில்) நான் பார்த்துக்குறேன்மா.

உண்ணியும் மாளுகுட்டியும்.

உண்ணி:  இது என்ன?

மாளுகுட்டி:     வைக்கோல். ஆடு, மாடு, கன்னுக்குட்டி எல்லாம் இதைத்தான் தின்னும்.

அவர்கள் வைக்கோல் புதர்களுக்கு நடுவில் நின்றிருக்கிறார்கள். அந்தப் பக்கத்தில் இருக்கும் வயலில் இருந்து வரும் ஒரு இளைஞன் மாளு குட்டியின் அருகில் வந்து நிற்கிறான்.

அவன்:    காலையில் உன்னை கோயில்ல பார்க்கலியே!

மாளுகுட்டி:     இன்னைக்கு இருபத்தெட்டாம் நாளாச்சே! பிறகு... வீட்டுக்கு (உண்ணியைக் காட்டி) இவங்கள்லாம் வந்திருக்காங்க.

இளைஞன்:     சாயங்காலம் எல்லாரும் கோயிலுக்கு வர்றப்போ...

பிறகு அவன் தன் குரலைத் தாழ்த்திக்கொண்டு, என்னவோ சொல்கிறான்.

உண்ணிக்கு ஒன்றுமே புரியவில்லை. மாளுவும் அந்த இளைஞனும் மெதுவான குரலில் என்னவோ பேசுவதைப் பார்த்து, வெறுத்துப்போன உண்ணி நடக்கிறான்.

இடத்தைவிட்டு நகர்ந்த உண்ணியைப் பார்த்து, நிம்மதியடைந்த மாளுகுட்டி:

“அங்கே விளையாடு. தூரத்துல எங்கேயும் போக வேண்டாம். (பிறகு மெதுவான குரலில்) அய்யோ... அதெல்லாம் வேண்டாம்...”

உண்ணி நடக்கிறான்.

46

கோவிலின் அருகில் இருந்த நிலத்தில் அரிஜன குழந்தைகள் விளையாடிக் கொண்டிருப்பதைப் பார்த்தவாறு உண்ணி நின்றிருக்கிறான்.

சிலர் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். சில பெண்களும் குழந்தைகளும் அவற்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பார்த்து நின்றிருப்போர் கூட்டத்தில் நல்ல ஆடையொன்றை அணிந்து பாரு நின்றிருக்கிறாள். நீலியும்தான்.

பாரு அவனை அழைக்கிறாள். அதைப் பார்த்து நீலி அவனை நோக்கி வருகிறாள்.

நீலி தன்னை நோக்கி வருவதைப் பார்த்து உண்ணி திரும்பி நடக்கிறான்.

உண்ணியை நெருங்குகிறாள் நீலி. வேகமாக நடந்ததால் மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க-

நீலி: உண்ணி தம்புரான், உங்களுக்கு என்மேல கோபமா?

உண்ணி பேசாமல் இருக்கிறான். அவன் மனதில் பலவித சந்தேகங்கள் அலைமோதுகின்றன.

நீலி: என்ன... பேசாம இருக்கீங்க?

உண்ணி:  (முதலில் சந்தேகப்பட்டாலும் பின்னர் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு) ராத்திரியில ஆடுகளையும், குழந்தைகளையும் ஒடிச்சு நீ கொல்லுவேல்ல?

அவன் முகத்தில் பயம் தெரிகிறது. அதைப் பார்த்து நீலிக்கு விஷயம் புரிகிறது. அவள் மெதுவாக சிரித்தவாறு:

"என்னால ஒரு ஆளைக்கூட கொல்ல முடியாது. ஆனா... யார் இப்படியெல்லாம் உங்களுக்குச் சொன்னது?"

உண்ணி பேசாமல் இருக்கிறான்.


நீலி: (வருத்தம் கலந்த குரலில்) ஒரு கோழியை யாராவது கொன்னாங்கன்னா அதைப் பார்த்து நிக்கிறதுக்குக்கூட என் மனசுல தெம்பு கிடையாது. எனக்கு தலை சுத்துற மாதிரி இருக்கும்... (யாரிடம் என்றில்லாமல்) யார்தான் இப்படியெல்லாம் சொல்லித் திரியிறாங்களோ தெரியல... அட கடவுளே!

நீலி வருத்தப்பட்டு பேசுவதைப் பார்த்து உண்ணியின் மனதில் உண்டாகும் மாற்றம்.

உண்ணி நீலியைப் பார்த்து புன்னகைக்கிறான்.

நீலி: என்னைப் பார்த்து பயமா?

உண்ணி புன்னகைத்தவாறு 'இல்லை' என்று தலையை ஆட்டுகிறான்.

நீலி உண்ணியின் கையைப் பிடித்துக் கொண்டு நடக்கிறான்.

ஆண்களும் பெண்களும் சேர்ந்து முடியை விரித்துப் போட்டு ஆடுகிறார்கள். அந்த இடமே பாட்டும், கொட்டும், நடனமுமாக இருக்கிறது. நீலியுடன் சேர்ந்து உண்ணியும் அதைப் பார்த்து ரசிக்கிறான்.

அந்த ஆட்டத்தின் முடிவில் உண்ணியின் தோள் மீது ஒருகை வந்து விழுகிறது. அந்தக் கைக்கு சொந்தக்காரர் கோபாலன் நாயர். உண்ணி கையைத் தட்டிவிட்டு பின்னால் திரும்பிப் பார்க்கும்போது, பின்னால் கோபாலன் நாயர் நின்றிருக்கிறார். சிறிது தூரத்தில் கோபத்துடன் நின்றிருக்கிறாள் இந்திரா.

47

சாப்பாட்டு மேஜை முன் இந்திரா அமர்ந்திருக்கிறாள். மேஜையில் சப்பாத்தியும், மற்ற உணவு அயிட்டங்களும் இருக்கின்றன. வர்மாவிற்காக வைத்த தட்டை எடுத்து வைக்கும்போது வர்மா வந்து அமர்கிறான். இரண்டு பேருக்கு மட்டுமே தட்டுகள் இருக்கின்றன. வர்மாவின் தட்டில் பரிமாறும்போது-

வர்மா:    உண்ணியை எங்கே?

இந்திரா:   அவனுக்கு சாப்பாடு வேண்டாமாம். இனி வேணும்னு வந்தாக்கூட தரக்கூடாதுன்னு நாணியம்மாக்கிட்டே நான் சொல்லி இருக்கேன். ஒருநாள் அவன் பட்டினி கிடக்கட்டும்.

வர்மா:    பட்டினி போடுறதுதான் தண்டனையா?

இந்திரா:   (கோபத்துடன்) அப்படின்னா விஞ்ஞான ரீதியா தண்டிக்கத் தெரிஞ்சவங்க தண்டிக்கலாம். எவ்வளவு சொன்னாலும் அவன் கேக்குறதா இல்ல. அடி, உதை கொடுத்தாலும் பிரயோஜனமில்ல. பிள்ளைங்கன்னா இப்படியா இருப்பாங்க? பட்டினி கிடந்தாத்தான் புத்தி வரும்.

வர்மா:    (அமைதியான குரலில்) தேவையில்லாம விளையாடாதே. அவனைச் சாப்பிட கூப்பிடு.

இந்திரா:   நோ!

வர்மா:    (சமையலறைப் பக்கம் திரும்பி) நாணியம்மா... உண்ணி படுத்திருந்தா...

இந்திரா:   (இடையில் புகுந்து) நோ... யூ டோண்ட் இன்ட்ர்ஃபியர்!வர்மா சாப்பிடுவதை நிறுத்துகிறான். பிறகு ஒரு நீண்ட பெருமூச்சு விட்டவாறு சாப்பாட்டைத் தொடர்கிறான்.

ஒரே நிசப்தம்.

பெயருக்கு ஏதோ சாப்பிட்டோம் என்ற உணர்வுடன் வர்மா எழுந்து கையைக் கழுவுகிறான்.

48

டிகாரம் அடிக்கும் சத்தம். படித்துக் கொண்டிருக்கும் வர்மா நேரத்தைப் பார்க்கிறான். மணி பதினொன்றாகிறது. அவன் புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்து நிற்கிறான். பிறகு என்னவோ யோசனையுடன் வெளியே வருகிறான்.

சமையலறை இருட்டில் மூடிக் கிடக்கிறது.

ஒரு ஸ்விட்சைப் போட, இலேசான வெளிச்சம் பரவுகிறது- சமையலறைக்குள். வர்மாதான் ஸ்விட்சைப் போடுகிறான். அவன் சமையலறைக்குள் மூடி வைக்கப்பட்டிருக்கும் பாத்திரங்களைத் திறந்து பார்க்கிறான். பிறகு ஒரு தட்டை எடுக்கிறான். உணவை அதில் பரிமாறுகிறான். பரிமாறப்பட்ட தட்டுடன் வெளியே வருகிறான்.

உறங்கிக் கொண்டிருக்கும் உண்ணி கண்களைத் திறக்கிறான்.

"உண்ணி!"

வர்மா தட்டுடன் மங்கலான வெளிச்சத்தில் கட்டிலுக்குப் பக்கத்தில் நின்றிருப்பதைப் பார்த்த உண்ணி எழுந்து உட்காருகிறான்.

வர்மா:    பசிக்குதுல்ல?

உண்ணி:  ம்...

அவனிடம் வர்மா தட்டை நீட்டுகிறான்.

வர்மா:    சாப்பிடு...

உண்ணி:  நீலி கழுத்தை ஒடிச்சி கொல்ல மாட்டாள்ல அப்பா?

வர்மா:    முதல்ல நீ சாப்பிட்டுட்டு தூங்கு...

உண்ணி தன் தந்தை நீட்டும் தட்டை வாங்குகிறான்.

அவன் சாப்பிடத் தொடங்கும்போது, வர்மா அறையை விட்டு வெளியேறுகிறான்.

உண்ணியின் அறையை விட்டு வெளியே வந்த வர்மா குறட்டைவிட்டு தூங்கிக் கொண்டிருக்கும் வேலைக்காரியைக் கடந்து வாசலுக்கு வருகிறபோது, படுக்கையறை வாசலில் இந்திரா நின்றிருக்கிறாள். அவள் ஏதாவது சொல்வாள் என்று எண்ணத்துடன் வர்மா நிற்கிறான்.

அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்கிறார்கள்.

வர்மா:    உண்ணிக்கு நான் சாப்பாடு கொடுத்தேன்.

பெரிய ஒரு பூகம்பம் வெடிக்கப் போகிறது என்று எதிர்பார்க்கிறான் வர்மா.

இந்திரா:   தூங்குறதுக்கு முன்னாடியே அவனுக்கு சாப்பாடு கொடுக்கணும்னு நினைச்சேன். ஆனா, என்னை மறந்து தூங்கிட்டேன்...

எதுவுமே பேசாமல் அமைதியாக இருவரும் நின்றிருக்கின்றனர்.

இந்திரா:   தூங்கலியா?

வர்மா:    தூக்கம் வரல. இன்னும் கொஞ்ச நேரம் படிச்சிட்டு இருக்கேன்.

அவன் படிக்கும் அறைக்கு நேராக நடந்தபோது, இந்திரா என்னவோ சிந்தித்தவாறு நிற்கிறாள்.

சிந்தித்துக் கொண்டிருக்கும் இந்திராவின் முகம்.

49

கல் நேரம்.

கேட்டுக்கு அருகில் ஒரு வேலைக்காரன்.

(அந்த ஆள் கோபாலன் நாயரின் உதவியாளர். ஸ்டேஷனில் இருந்து பெட்டியை எடுத்துக் கொண்டு வந்த ஆள்.)

செடிகளை நடும் வேலையில் அவன் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறான். அவன் வேலை செய்வதையே பார்த்தவாறு நின்றிருந்த உண்ணி வெளியே செல்ல முயலும்போது-

வேலையாள்    :     வெளியே போகக்கூடாது. வெளியே போனா கூப்பிடணும்னு தம்புராட்டி சொல்லியிருக்காங்க. கூப்பிடட்டா?

அதைக்கேட்டு உண்ணிக்கு எரிச்சல் உண்டாகிறது. இருந்தாலும் கஷ்டப்பட்டு அதை அடக்கிக்கொண்டு, திரும்பவும் வீட்டை நோக்கி நடக்கிறான்.

சமையலறைப் பக்கம் போய் நிற்கிறான் உண்ணி. நாணியம்மா சமையலறையில் உரலில் எதையோ போட்டு இடித்துக் கொண்டிருக்கிறாள். அவள் தன்னை கவனிக்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு பின்னால் இருக்கும் சிறிய படியை நோக்கி உண்ணி நடக்கிறான்.

படியை அடைந்தபோது, நாணியம்மாவின் குரல்:

"எங்கே போறீங்க?"

உண்ணி நிற்கிறான்.

நாணியம்மா:    வெளியே போகாம பார்க்கணும்னு என்கிட்ட அம்மா சொல்லியிருக்காங்க. தேவையில்லாம நான் திட்டு வாங்கணுமா? பேசாம உள்ளே போயி விளையாடுங்க.

உண்ணி சமையலறையை நோக்கி விரக்தியுடன் நடந்து வருகிறான்.

உண்ணி சமையலறை வாசலில் நிற்கிறான். ஒரு கல்லை எடுத்து தூரத்தில் இருக்கும் படியை நோக்கி எறிகிறான்.

அப்போது படியைக் கடந்து பாரு வருகிறாள். பாருவின் ஒரு கையில் முருங்கை இலை இருக்கிறது. இன்னொரு கையில் ஆயுர்வேத மருந்து அடங்கிய குப்பியொன்று இருக்கிறது. முருங்கை இலையைத் திண்ணையில் வைத்தவுடன் நாணியம்மாவுக்கு மகிழ்ச்சி உண்டாகிறது.

நாணியம்மா:    பெரிய உதவியாப் போச்சுடா, கண்ணு. ரெண்டு நேரமும் பூசணிக்காயையும் வெள்ளரிக்காயையும் வச்சு வச்சு எனக்கே என்னவோ மாதிரி ஆயிடுச்சு. சாத்தனுக்குத் தெரியும். முருங்கை இலைன்னா தம்புரானுக்கு ரொம்பவும் பிடிக்கும்னு.

முருங்கை இலையைக் கையில் எடுத்தவாறு பாருவிடம்:

"இதென்னடி குப்பியில?"

பாரு: மருந்து...

நாணியம்மா:    யாருக்கு?

பாரு: நீலி அக்காவுக்கு காய்ச்சல்... வாந்தி வேற எடுக்குறாங்க. மூச்சுவிடவே கஷ்டப்படுறாங்க.


முருங்கை இலையை எடுத்துக் கொண்டு உள்ளே போகும்போது நாணியம்மா:

"கொஞ்சம் நில்லுடா கண்ணு. சாதம் வேகட்டும். உனக்க கொஞ்சம் கஞ்சி தர்றேன்."

நீலிக்கு உடம்பு சரியில்லை என்ற விஷயத்தை அறிந்து கொண்ட உண்ணி பாருவின் அருகில் வருகிறான்.

உண்ணி:  காய்ச்சல் இருக்குல்ல... டாக்டரைக் கூப்பிட வேண்டியதுதானே?

பாரு: வைத்தியர் வருவாரு. நிறைய ரூபா கொடுத்தாத்தான் டாக்டர் வருவாரு.

கையிலிருந்த மருந்து குப்பியைத் திண்ணையில் வைத்துவிட்டு, பாரு கழுத்தில் கிடக்கும் புதிய சிப்பியால் ஆன மாலையைக் காட்டுகிறாள்.

"வேலப் பறம்புல இருந்து நீலி அக்கா வாங்கிட்டு வந்து தந்தாங்க. பிறகு... இழுத்தா நீளமா வர்ற முட்டாயி வாங்கிட்டு வந்து தந்தாங்க!"

அவள் ஒரு இலையை இடது கையைச் சுருட்டி, அதன் மேல் வைத்து அடித்து ஓசை உண்டாக்குகிறாள். உண்ணியும் அவள் செய்தது மாதிரி செய்ய முயற்சிக்கிறான். ஆனால், அவனால் முடியவில்லை.

பாரு: அப்படி இல்ல... இப்படி...

சொல்லிய அவள் இலையை உண்ணியின் சுருட்டப்பட்ட கையின் மீது வைத்து அடிக்கிறாள். அப்போது இந்திராவின் குரல்:

"ராஜேஷ்!"

உண்ணி என்ன செய்வதென்று தெரியாமல் நிற்கிறான். பாருவின் மனதில் பயம் உண்டாகிறது.

இந்திரா:   நீ ஏன்டி இங்கே வந்திருக்கே?

இந்திரா அருகில் நிற்பதைப் பார்த்து, பாரு பயப்படுகிறாள்.

இந்திரா:   கொஞ்ச நேரம் ஆச்சுன்னா, வீட்டுக்குள்ளேயே நீ வந்திடுவே போலிருக்கே! ஒழுங்கா இங்கேயிருந்து ஓடிடு.

பாரு பயந்து போய் வெளியே ஓடுகிறாள்.

சமையலறையில் இருந்து பாத்திரத்தில் கஞ்சியுடன் வரும் நாணியம்மா ஓடிக் கொண்டிருக்கும் பாருவைத்தான் பார்க்கிறாள்.

இந்திரா:   என்ன இது?

நாணியம்மா:    கொஞ்சம் கஞ்சித் தண்ணியை எடுத்துட்டு வந்தேன். அழுக்குத் துணியை கஞ்சிலயும் நீலத்துலயும் முக்காலம்னு. உள்ளே நீலம் இருக்கா?

இந்திரா எதுவும் பேசாமல் உள்ளே போகிறாள். உண்ணி ரசித்தவாறு நாணியம்மாவைப் பார்க்கிறான். நாணியம்மாவின் முகத்தில் ஒரு திருட்டுத்தனமான சிரிப்பு.

அப்போது உண்ணியின் கவனம் மருந்துக் குப்பி மீது செல்கிறது. என்னவோ சிந்தித்தவாறு அவன் மருந்து குப்பியை எடுக்கிறான்.

50

மாலை நேரம்.

உண்ணி கார்ட்டூன் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறான்.

தேவகியம்மா, இந்திரா- இருவரின் குரல்களும் பக்கத்தில் கேட்கின்றன.

தேவகி: சீக்கிரம் திரும்பிடலாம். போயி உடனே வர வேண்டியதுதான். போற வழியில கோயில்ல நுழைஞ்சிட்டுப் போவோம்.

வாசலில் தேவகியம்மாவும், இந்திராவும் நின்றிருக்கிறார்கள். உண்ணி அவர்கள் நின்றிருப்பதைத் தெரிந்து கொண்டாலும், தெரிந்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை.

தேவகியம்மா: நல்லா படிக்கிறாப்லதானே?

உண்ணி பார்க்கிறான்.

தேவகி:    இவங்க அப்பாகூட அந்தக் காலத்துல இப்படித்தான். எப்போ பார்த்தாலும் படிக்கிறதும் எழுதுறதும்தான்...

இந்திரா:   பீ ஹியர். டோண்ட் கோ எனிவேர்.

உண்ணி:  யெஸ், மம்மி.

அவர்கள் வெளியே போகும் ஓசை அவன் காதில் விழுகிறது.

51

மேல்மூச்சு கீழ் மூச்சு விட்டவாறு ஓடிவந்து நீலியின் குடிசை முன்னால் வந்து நிற்கிறான் உண்ணி. அவன் கையில் மருந்து குப்பி இருக்கிறது.

குடிசைக்கு முன்னால் யாரையும் காணவில்லை.

நீலியின் குரல்: 

"யார் அது?"

மூச்சிறைக்க உண்ணி:

"நான்... நான்தான்..."

நீலி வெளியே வருகிறாள். உண்ணியைக் கண்டு அவள் மனதில் ஒரு இனம் புரியாத பரபரப்பு.

நீலி: (அன்பு கலந்த குரலில்) ஏன் இங்கே வந்தீங்க உண்ணி தம்புரான்?

உண்ணி:  மருந்து...(மருந்து குப்பியை நீட்டி) மருந்தை பாரு அங்கே மறந்து வச்சிட்டு வந்துட்டா.

நீலி: (அதை வாங்கியவாறு) இதுக்காகவா ஓடி வந்தீங்க? (யாரிடம் என்றில்லாமல்) மருந்து சாப்பிட்டாலும் சாப்பிடலைன்னாலும் எல்லாம் ஒண்ணுதான்.

உண்ணி:  காய்ச்சல் இருக்கா?

நீலி: (இலேசாக சிரித்தவாறு) இப்போ பரவாயில்ல. நீங்க இங்க வந்தது அம்மாவுக்குத் தெரிஞ்சதுன்னா, அடியும் உதையும் கிடைக்கும்ல...?

உண்ணி:  அம்மா எங்கேயோ போயிருக்காங்க.

நீலி: சரி... நீங்க கிளம்புங்க. (சிறிது நேர யோசனைக்குப் பிறகு) நான் படி வரை கூட வர்றேன். ஆடும் மாடும் திரும்பி வர்ற நேரம்.

நீலி உண்ணியின் கையைப் பிடித்தவாறு வெளியே இறங்குகிறாள்.

பின்பக்கம் வந்த நீலி நிற்கிறாள். அவளுடன் உண்ணியும்.

அவள் ஏற்கெனவே இருந்த வீடு இருந்த இடத்தில் இரண்டு மூன்று தென்னங்கன்றுகள் நடப்பட்டிருக்கின்றன. ஆமணக்கு செடிகள் வளர்ந்திருக்க, அதற்கு அருகில் கட்டாந்தரை தெரிகிறது. ஆங்காங்கே இரண்டு மூன்று கற்கள் கிடக்கின்றன. மறைந்துபோன சென்ற தலைமுறையைச் சேர்ந்தவர்களின் நினைவிடங்கள்.

நீலி நடக்கிறாள். அவளுடன் உண்ணியும் நடக்கிறான். சிறிய படியை அடைந்தவுடன், நீலி:

"நீங்க போங்க..."

அவன் படியைத் தாண்டி நடக்கிற போது, நீலி தான் இருந்த பழைய நிலத்தைப் பார்க்கிறாள்.

ஏதோ பழைய ஞாபகங்கள் அலைமோத அவள் அங்கே நின்றிருக்க, அவளின் கண்கள் அருகில் இருக்கும் பெரிய வீட்டை நோக்கி திரும்புகின்றன.

பெரிய வீட்டின் வாசலில் அவளையே பார்த்தவாறு நின்றிருந்த இந்திரா முகத்தைத் திருப்பிக் கொள்கிறாள்.

52

வீட்டின் உட்பகுதி.

சமையலறை வழியாக வரும் உண்ணியைப் பார்த்தவாறு நின்றிருக்கிறாள் இந்திரா.

உண்ணி அருகில் வந்தவுடன்:

இந்திரா:   நீ எங்கே போயிருந்தே?

உண்ணி:  எங்கேயும் போகல. பின்னாடி முற்றத்துலதான் இருந்தேன்.

இந்திரா:   ஐ ஆஸ்க் டூ யூ. வேர் டிட் யூ கோ?

உண்ணி எங்கேயும் போகவில்லை என்பது மாதிரி தலையை ஆட்டுகிறான்.

இந்திரா:   பொய் சொல்ல ஆரம்பிச்சிட்டே, இல்லே? செய்யக் கூடாது செய்யக்கூடாதுன்னு நான் எதைச் சொல்றேன்னோ, நீ அதைத் தொடர்ந்து செஞ்சிக்கிட்டு இருக்கே!

அடிக்க வருவதைப் போல் தன்னிடம் நெருங்கி வரும் இந்திராவைப் பார்த்து உண்ணி பயப்படுகிறான். அப்போது வர்மா வருகிறான்.

வர்மா:    என்ன இங்கே?

இந்திரா:   (அவன் பக்கம் திரும்பி) இங்கே இருந்தா இவன் உருப்படாமப் போயிடுவான்னு பல முறை சொல்லிட்டேன். இஃப் நாட் ஆல்ரெடி ஸ்பாயில்ட்.

வர்மா:    நீ என்னடா பண்ணினே உண்ணி?

உண்ணி பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   கொஞ்சம் கண்ணை மூடினா, குடிசைப் பக்கம் இவன் ஓடிர்றான். நான் சின்னப் பிள்ளையா இருக்குறப்போ பாட்டி சொன்னது ஞாபகத்துல இருக்கு வித்து குணம் பத்து குணம்னு. உங்க பரம்பரையில என்னென்ன கெட்ட குணங்கள் இருக்கோ அது எல்லாமே மகன்கிட்ட நல்லாவே இருக்கு. ரொம்பவும் நீங்க சந்தோஷப்படலாம்.

அவள் கோபத்துடன் உள்ளே போகிறாள்.


தந்தையும், மகனும் மட்டும் நின்றிருக்கிறார்கள். உண்ணியைத் திட்டுவதா, அவன் மீது பாசத்தைக் காட்டுவதா என்று தெரியாமல் தர்மசங்கடமான நிலையில் நின்றிருக்கிறான் வர்மா. பிறகு அமைதியை வரவழைத்துக் கொண்டு வர்மா:

"என்னடா செஞ்சே?"

உண்ணி:  மம்மி திட்டினப்போ பாரு மருந்தை எடுக்காம ஓடிட்டா. நான்...

வர்மா:    ம்...

உண்ணி:  நீலிக்கிட்ட மருந்தைக் கொண்டு போய் கொடுத்தேன்.

உண்மையைச் சொன்ன தன்னுடைய மகனையே வைத்த கண் எடுக்காது பார்க்கிறான் வர்மா.

வர்மாவின் முகத்தில் இனம் புரியாத ஒரு பரவசம்.

53

ரவு.

வர்மாவின் படுக்கையறை.

இரட்டைக் கட்டிலில் இந்திரா கண்களை மூடி படுத்திருக்கிறாள். அவள் உறங்குவதைப் போல தோன்றுகிறது.

வர்மா படிப்பதை நிறுத்திவிட்டு விளக்கை அணைத்துவிட்டு எந்தவித ஓசையும் உண்டாக்காமல் இன்னொரு பக்கம் கட்டிலில் படுக்க தொடங்கும்போது, இந்திரா கண்களைத் திறக்கிறாள். பின்னர் எழுந்து உட்காருகிறாள். வர்மாவும் படுத்த இடத்தை விட்டு எழுந்து உட்காருகிறான்.

இந்திரா:   எப்போ நாம போறோம்?

வர்மா:    ஃப்ளாட்டைத்தான் வித்துட்டோமே! எங்கே போறது?

இந்திரா:   நான் கேட்டது லவ்டேல் ஸ்கூல் விஷயத்தை. வேலை எதுவும் இல்லாம பெங்களூர்ல போய் இருக்கணும்னு சொல்ற அளவுக்கு நான் ஒண்ணும் ஸ்டுப்பிட் இல்ல.

வர்மா:    போகலாம். ஊட்டிக்கோ குன்னூருக்கோ எங்கே வேணும்னாலும் போகலாம்.

இந்திரா:   இதுக்கு மேல இந்த விஷயத்தை இழுத்துக்கிட்டு இருக்குறது அவ்வளவு நல்லதா இருக்காது.

வர்மா:    சரி...

இந்திரா:   எப்போ?

வர்மா பேசாமல் இருக்கிறான்.

இந்திரா:   இது உங்களுக்கு சர்வ சாதாரணமான ஒரு விஷயம்.

உண்ணியின் அறையில் உண்ணி. தாயும் தந்தையும் பேசிக் கொண்டிருப்பதை அவன் கேட்கிறான்.

தாயின் குரல்:

"இங்கே இருக்குற ஆண்கள் அத்தனைப் பேரும் தான்தோன்றித்தனமாகத்தான் வளரணும்னு ஏதாவது சட்டம் இருக்குதா என்ன?"

ஒரே அமைதி.

மீண்டும் இந்திராவின் குரல்.

"என்ன பதில் சொல்லாம இருக்கீங்க?"

தன் தந்தை என்ன பதில் சொல்லப் போகிறான் என்பதை ஒருவித பயத்துடன் எதிர்பார்த்து இருக்கிறான் உண்ணி.

ஒரே அமைதி.

உண்ணி மெதுவாக கட்டிலை விட்டு இறங்கி வெளியே செல்கிறான்

வெளியே வராந்தாவில் வேலைக்காரி நாணியம்மா உள்ளே நடக்கும் உரையாடலைக் கேட்டவாறு அமர்ந்திருக்கிறாள். அவள் எப்போதும் விடும் குறட்டையை விடவில்லை.

நாணியம்மா பரிதாபம் மேலோங்க உண்ணியைப் பார்க்கிறாள். உண்ணி அவளைப் பார்க்கிறான்.

உண்ணி நாணியம்மாவைக் கடந்து போகிறான்.

உண்ணியின் பார்வையில் - தூரத்தில் வராந்தாவில் இருந்தவாறு வெளியே இருட்டைப் பார்த்துக் கொண்டிருக்கும் வர்மா.

அவன் மெதுவாக நடந்து சென்று வர்மாவின் அருகில் வருகிறான்.

வர்மா உண்ணியைப் பார்க்கிறான்.

உண்ணி தலை குனிகிறான்.

வர்மா:    நீ போய் படு...

உண்ணி தயக்கத்துடன் நின்று கொண்டிருக்கிறான்.

வர்மா:    போய் படு. குட் நைட்.

உண்ணி:  (தாழ்ந்த குரலில்) குட்நைட்.

உண்ணி திரும்பி நடக்கிறான், வெளியே- இருட்டில் மூழ்கிக் கடக்கும் கிராமம். அதைப் பார்த்தவாறு நின்றிருக்கிறான் வர்மா.

54

ருள் தரும் அன்னை மேரியின் சிலை.

குன்னூரிலோ ஊட்டியிலோ இருக்கம் ஒரு புகழ் பெற்ற போர்டிங் ஸ்கூலின் அலுவலகம் அது.

ப்ரின்ஸிபால்:   மே ரெண்டாம் தேதி கொண்டு வந்து சேர்த்துடுங்க.

எதிரில் வர்மா, இந்திரா, உண்ணி மூவரும் அமர்ந்திருக்கிறார்கள். குளிர்ச்சியான சூழ்நிலைக்கு ஏற்றபடி அவர்கள் ஆடைகள் அணிந்திருக்கிறார்கள். பேப்பர்களை வர்மாவின் முன்னால் நீக்கி வைத்த ப்ரின்ஸிபால் இந்திராவிடம்:

"டோண்ட் ஒர்ரி... வீ வில் டேக் கேர்."

ப்ரின்ஸிபால் இருந்த இடத்தைவிட்டு எழுந்திருக்கிறார்.

வர்மாவிற்கு கை கொடுக்கிறார். இந்திரா தொழுகிறாள்.

இந்திரா:   தாங்க்யூ.

அட்மிஷன் ஃபாரத்தையும், மற்ற பேப்பர்களையும் இந்திரா கையில் எடுக்கிறாள்.

ப்ரின்ஸிபால் உண்ணியின் முதுகை இலேசாகத் தட்டிக் கொடுத்தவாறு:

"விளையாடுறதுக்கு உனக்கு இங்கே நிறைய நண்பர்கள் இருக்காங்க!"

இந்திரா உண்ணியின் கையைப் பிடித்தவாறு மகிழ்ச்சியுடன் வெளியேறுகிறாள். அவளைத் தொடர்ந்து வர்மாவும்.

55

காலை நேரம்.

கிராமத்தின் வயல்களில் இருந்து பனிப்படலம் உயர்ந்து மேலே வருகிறது. வீட்டின் முன்பக்கம். தையல்காரன் உண்ணியின் சீருடைக்கான அளவுகளை எடுத்துக் கொண்டிருக்கிறான்.

இந்திராவும் கோபாலன் நாயரும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

கோபாலன்நாயர்: (இந்திராவிடம்) முதல்ல ஒரு செட் துணி கொண்டு வரட்டும். (மெதுவான குரலில்) இருக்குற ஆள்கள்ல இவன் நல்லா தைக்கக் கூடியவன்.

இந்திரா:   அப்படியா?

அப்போது சாத்தன் வாசலில் வந்து நிற்கிறான்.

கோபாலன் நாயர்:    என்ன சாத்தா?

தையல்காரன் போகிறான்.

சாத்தன் அருகில் வந்து தயக்கத்துடன்:

"தம்புரான் இருக்காரா?"

கோபாலன் நாயர்:    உள்ளே ஏதோ படிச்சிக்கிட்டு இருக்காருன்னு நினைக்கிறேன்.

இந்திரா:   என்ன விஷயம்?

சாத்தன் சொல்லத் தயங்குகிறான். பிறகு ஏதாவது சொல்லாமல் இரந்தால் தப்பாயிற்றே என்ற எண்ணத்துடன்.

"தேனாளூர்ல பெரிய ஒரு டாக்டர் இருக்காராம். அவரைக் கூட்டிட்டு வந்தா நிச்சயம் குணமாகும்னு எல்லாரும் சொல்றாங்க. நீலி தலையை அசைக்க முடியாம படுத்த படுக்கையா கெடக்கா!"

இந்திரா:   (கடுமையான குரலில்- அதே சமயம் மெதுவாக) இந்த விஷயத்துக்கும் தம்புரானுக்கும் என்ன சம்பந்தம்?

சாத்தன்:   அவ ஒண்ணுமே செய்ய வேண்டாம்னுதான் சொல்றா. (மடியில் இருந்து ஒரு பொட்டலத்தை எடுத்து அவிழ்த்து ஒரு மெல்லிய தங்கச் சங்கிலியை திண்ணையில் வைத்தவாறு) இதை இங்கே வச்சிக்கிட்டு ஒரு ஐம்பது ரூபா தந்தா... மகளோட கழுத்துல கிடந்தது இது.  இதை வச்சு டாக்டருக்குக் கொடுத்தோமேன்னு ஒரு மன திருப்தியாவது இருக்கும்.

அப்போது வர்மா வெளியே நடக்கும் உரையாடலைக் கேட்டு வருகிறான்.

இந்திரா:   (கோபாலன் நாயரிடம்) இதுக்கு முன்னாடி பொருட்களை அடமானமா வாங்கிப் பணம் தர்ற பழக்கம் இங்கே இருந்துச்சா என்ன? (சாத்தனிடம்) இங்கே இதை வைக்க வேண்டாம். வேற எங்கேயாவது கொண்டு போய் வச்சுக்கோ. ஒரு தடவை கொடுக்க ஆரம்பிச்சா பிறகு வரிசையா ஆளுங்க வந்து நின்னுடுவாங்க.

உண்ணியின் முகத்தில் தெரியும் உணர்ச்சிகள். சாத்தன் திண்ணையில் வைத்த பொட்டலத்தை எடுத்துக் கொண்டு ஒன்றுமே பேசாமல் திரும்பி நடக்கிறான்.

இந்திரா உள்ளே போகிறாள். கோபாலன் நாயர் என்னவோ சொல்ல வாயெடுத்து, ஒன்றுமே கூறாமல் கிளம்புகிறார். உண்ணி ஒரு பிஞ்சு மாங்காயைத் தின்றவாறு தன் தந்தையைப் பார்த்தவாறு நின்றிருக்கிறான்.

வர்மா செருப்புகளை எடுத்து காலில் அணிந்தவாறு புறப்பட, உண்ணி:

"நானும் வர்றேன்பா"

வர்மா:    வேண்டாம். நான் ஒரு நடை நடந்துட்டு சீக்கிரம் வந்திடுவேன்.


அப்போது கதவுக்கு அப்பால் வந்து நின்ற இந்திரா:

"காலையிலேயே நடக்க ஆரம்பிச்சாச்சா?"

வர்மா நிற்கிறான். பதில் சொல்ல வேண்டுமா வேண்டாமா என்று யோசிக்கிறான்.

இந்திரா: பணயமாகப் பொருளை வாங்க முடியாதுன்னுதான் நான் சொன்னேன். பணம் கொடுத்து உதவுறதா இருந்தா, கோபாலன் நாயர்கிட்ட கொடுத்துவிட்டா போதும்.

வர்மா அவளுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு நின்றிருக்கிறான்.

பிறகு எதுவுமே பேசாமல் வேகமாக நடக்கிறான்.

இந்திராவின் முகத்தில் தோன்றும் உணர்ச்சி மாற்றம்.

56

ண்ணியின் கையில் ப்ரஷ். புத்தகத்தில் இருக்கும் ஒரு படத்திற்கு சாயம் தேய்க்கிறான். பிற்பகல் நேரம். வீட்டின் உட்பகுதி. படுக்கையறை. நகரத்திலுள்ள தன் சினேகிதிகளுக்கு இந்திரா கடிதங்கள் எழுதிக் கொண்டிருக்கிறாள். மூன்றாவது கடிதத்திலும் முகவரி எழுதி முடித்த அவள் ஒரு வேலை முடிந்ததாக நினைத்து கட்டிலில் ஏறி படுக்கிறாள். உண்ணி தரையில் அமர்ந்து புத்தகத்தில் இருந்த படத்திற்கு சாயம் தேய்த்துக் கொண்டிருக்கிறான்.

உண்ணி:  நான் தபால் பெட்டியில போட்டுடறேன் மம்மி. எனக்குத் தெரியும் தபால் ஆபீஸ்...

இந்திரா:   வேண்டாம். இங்கேயே இருக்கட்டும்.

இந்திரா பகல் தூக்கத்தில் ஆழ்ந்து விட்டதைத் தொடர்ந்து படங்களுக்குச் சாயம் போடும் வேலையை நிறுத்திய உண்ணி ஓசையெழுப்பாமல் வெளியே நகர்கிறான்.

உண்ணி சமையலறைக்கு வருகிறான். நாணியம்மா சாப்பாட்டு அறையில் தன்னை மறந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள். அவளைப் பார்த்தவாறே, உண்ணை வெளியே ஓடுகிறான்.

பகல்:

நீலியின் குடிசை.

நீலி பாயில் படுத்திருக்கிறாள். மிகவும் தளர்ந்துபோய் அவள் காணப்படுகிறாள். உண்ணி தயங்கித் தயங்கி அங்கு வருகிறான். கண்களை மூடியவாறு படுத்திருந்த நீலியைப் பார்த்த உண்ணிக்கு மனம் என்னவோபோல் இருக்கிறது. நீலி மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். உண்ணியைக் கண்டுபிடிக்க அவளுக்கு இரண்டு மூன்று நிமிடங்கள் ஆகின்றன. பிறகு சிரித்தவாறு மெதுவாக எழுந்திருக்கிறாள்.

உண்ணி:  காய்ச்சல் இருக்கா?

நீலி:       (என்ன பதில் சொல்வது என்று தயங்கியவாறு) ம்... இப்போ பரவாயில்ல. (சிறு அமைதிக்குப் பிறகு) எல்லாரும் எங்கே போயிருந்தீங்க?

உண்ணி:  (விருப்பமில்லாத குரலில்) ஒண்ணாம் தேதி என்னை ஊட்டியில ஸ்கூல்ல சேர்க்குறாங்க.

நீலி: போயி நல்லா படிக்கணும். படிச்சு பெரிய ஆளாக வேண்டாமா?

உண்ணி:  டாக்டர் ஊசி போட்டாரா?

நீலி: (தயக்கத்துடன்) ம்...

உண்ணி:  (சம வயதுக்கார ஒருவரை ஆறுதல் படுத்துவது மாதிரி) ஊசி போட்டா காய்ச்சல் சீக்கிரம் இல்லாமப் போயிடும். வலிச்சா கூட பரவாயில்ல.

நீலி: (அவன் சொன்னதை ரசித்தவாறு) ஓ... எல்லாமே நல்லா தெரியுதே உண்ணி தம்புரானுக்கு!

அப்போது நீலிக்கு கஞ்சி கொண்டு வருகிறாள் பாரு.

பாரு: இந்தா கஞ்சி.

நீலி: அங்கேயே வை. நான் பிறகு சாப்பிட்டுக்குறேன்.

பாரு தான் கொண்டு வந்த பாத்திரத்தை நீலிக்கு அருகில் வைக்கிறாள்.

பாரு: (உண்ணியிடம்) ஒரு பெரிய பருந்து கோழிக் குஞ்சைக் கொத்தி தின்னுது...

உண்ணி:  (வேகமாக) எங்கே? எங்கே?

அவர்கள் வாசலை நோக்கி ஓடுகிறார்கள்.

நீலியின் பார்வையில் - உண்ணியும் பாருவும் தூரத்தில் உயரத்தில் சுட்டிக் காட்டியவாறு என்னவோ ஒருவருக்கொருவர் பேசிக் கொள்கிறார்கள். உண்ணி பருந்தை விரட்டுவதற்காக இருக்க வேண்டும், கைகளைத் தட்டுகிறான். பிறகு சத்தமிடுகிறான்.

பிறகு அவர்கள் திடீரென்று விளையாட்டில் இறங்குகிறார்கள். பாரு ஓட்டமாக ஓட, அவன் அவளை விரட்டுகிறான். சடுகுடு போல ஒரு விளையாட்டு.

உண்ணியும் பாருவும் சடுகுடு விளையாடுகிறார்கள். உண்ணியைத் தொட்டு திரும்ப முயன்ற பாருவை உண்ணி இறுக்கமாகப் பிடித்துக் கொள்கிறான். இருவரும் கீழே விழுகிறார்கள். சிரித்தவாறு அவர்கள் கட்டிப் பிடித்துக் கொண்டு உருளுகிறார்கள்.

நீலியின் குரல்:

"அடியே பாரு"

பாரு எழுந்திருக்கிறாள். உண்ணியும்.

அவர்களின் பார்வையில்- நீலி அழைக்கிறாள்:

"உண்ணித் தம்புரான், இங்கே வாங்க"

உண்ணி முன்னாலும், பாரு அவனுக்குப் பின்னாலும் நீலியை நோக்கி வருகிறார்கள்.

57

நீலியின் முன்னால் நின்று கொண்டிருக்கிறார்கள். உண்ணியும் பாருவும். அவர்களிடம் ஒரு பதைபதைப்பு இருக்கிறது. கோபத்துடன் நீலி அழைப்பது மாதிரி இருந்ததே காரணம். நீலி அவர்களையே உற்று பார்க்கிறாள்.

நீலி: (உண்ணியைப் பார்த்து சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்தவாறு) உண்ணி தம்புரான், நீங்க ஸ்கூலுக்குப் போயிட்டா அதுக்குப் பிறகு இங்கே வரமாட்டீங்கள்ல?

உண்ணி:  வருவேன். ஸ்கூல்ல லீவ் விடுறப்போ இங்கே வருவேன்.

நீலி: (கடுமையான குரலில்) எதுக்கு வரணும்?

உண்ணி:  (பதறியவாறு) எல்லாரையும்... எல்லாரையும் பார்க்குறதுக்கு.

நீலி: எல்லாரையும்னா?

உண்ணி:  (தயங்கியவாறு) உன்னை... பிறகு பாருவை...

நீலி: இந்தப் பொண்ணை உங்களுக்குப் பிடிச்சிருக்கா?

உண்ணி:  (வெட்கத்துடன்) ம்...

நீலி: (தன்னுடைய பேசும் முறையை மாற்றி) இனிமே இந்தப் பக்கம் விளையாட வரக் கூடாது. இந்தப் பொண்ணு கூட விளையாடக் கூடாது. இவளைப் பார்க்கக்கூடாது.

நீலியின் மனதிற்குள் என்னவோ போராட்டங்கள் நடக்கின்றன. உண்ணி என்னவோபோல் ஆகிறான். பாருவும்தான். இதுவரை அடக்கி வைத்த துக்கங்களும், யாருடனோ கொண்ட கோபமும் நீலியின் மனதில் புயல் வீச வைக்கின்றன.

நீலி: (மேல்மூச்சு கீழ்மூச்சு விட்டவாறு- யாரிடம் என்றில்லாமல் உண்ணியைப் பார்க்காமலே) சின்னப் பிள்ளையா இருக்கறப்போ உங்களை மாதிரி தம்புரான்மாருங்க விருப்பப்படுவீங்க. (துக்கம் கலந்த குரலில்) தொட்டும் தடவியும் விளையாடுவீங்க. உலகம்னா என்னன்னு தெரியாத அப்பாவிப் பொண்ணுங்க கனவுல மிதந்து திரிவாங்க.(தன் பேச்சை நிறுத்துகிறாள். நீண்ட பெருமூச்சு விடுகிறாள். கடுமையான குரலில் தொடர்கிறாள்) பெரிய ஆளுங்களா ஆன உடனே உங்களுக்கு சுய உணர்வு வந்திடும்- நீங்க தம்புரான்மார்கள்னும் நாங்க புலையப் பெண்கள்னும்.

உண்ணிக்கு நேராகப் பார்த்தவாறு கடுமையான குரலில்:

"இவ கூட சேர்ந்து இருக்குறதை இனியொரு முறை நான் பார்த்தா..."

மனதில் எழுந்த ஆவேசம் அடங்கியதைப் போல, சன்னமான குரலில்:

"நான்... நான் ஒண்ணும் சொல்றதுக்கு இல்ல..."

அவள் மெதுவாக அவர்களை முகத்தை உயர்த்தி பார்க்கிறாள். பாருவிடம்:

"இங்கேயிருந்து போடி..."

பாரு அந்த இடத்தைவிட்டு நகர்கிறாள். மனதில் ஒரு வித பதைபதைப்புடன் உண்ணி நின்று கொண்டிருக்கிறான். கலக்கமும் அச்சமும் மேலோங்க ஒரு மாதிரி ஆகிப்போய் நின்று கொண்டிருக்கும் உண்ணியைப் பார்க்கும்போது கோபம் உண்டானாலும், அதை அடக்கிக் கொண்டு சாந்தமான சூழ்நிலையைக் கொண்டுவர நீலி முயற்சிக்கிறாள். சிறிது நேரத்திற்கு ஒரே நிசப்தம்.

நீலி: போங்க சின்ன தம்புரான்.


புன்னகைக்க முயற்சித்து, அவனின் ஒரு கையைப் பிடித்தவாறு:

"காய்ச்சல்னால என் தலைக்கு என்னமோ மாதிரி இருக்கு. நல்லது நடக்கட்டும்ன்ற எண்ணத்துலதான் நான் எல்லாத்தையும் சொன்னேன்.(அவனின் கையைவிட்டு, கண்களை மூடிக்கொண்டு) போங்க உண்ணி தம்புரான், சீக்கிரமா இங்கேயிருந்து போங்க..."

உண்ணி அவளை ஆச்சரியத்துடனும், அச்சத்துடனும் பார்த்தவாறு வெளியே செல்கிறான். ஒரு கனவில் நடப்பதைப் போல அவன் நடக்கிறான்.

58

வீடு.

மாலை நேரம்.

முன்பக்கத்தில் ஒரு சண்டை நடந்து முடிந்திருப்பதைப் போல கனமான அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது. வர்மாவும் இந்திராவும் அமர்ந்திருக்கிறார்கள்.

நீலியின் வீட்டை விட்டு புறப்பட்ட உண்ணி அதே பதைபதைப்பு கொண்ட மனதுடன் மெதுவாக நடந்து வந்து வெளி வாசலைக் கடந்து வருகிறான். பாருவுடன் கட்டிப் பிடித்து உருண்டபோது உடம்பில் ஒட்டிய மண் அப்படியே இருக்கிறது. நடந்ததில் அவன் வியர்வையில் நனைந்திருக்கிறான்.

வாசலில் நுழைந்த பிறகுதான் அவனுக்கு சுயசிந்தனையே உண்டாகிறது. தந்தையையும் தாயையும் பார்க்கிறான். அவர்களைப் பார்த்து அவன் நிற்கிறான்.

இந்திரா உண்ணியை கோபத்துடன் பார்த்தவாறு, தலையைக் குனிந்து கொண்டு அமர்ந்திருக்கிறாள்.

உண்ணி தன் தந்தையைப் பார்த்தவாறு உள்ளே போக முயற்சிக்கும்போது-

வர்மா:    உண்ணி, நில்லுடா...

உண்ணி தன் தந்தையின் குரலைக் கேட்டு நிற்கிறான்.

வர்மா:    நீ எங்கே போயிருந்தே?

உண்ணி சொல்ல தயங்குகிறான்.

வர்மா:    நான் கேக்குறேன்ல? எங்கே போயிருந்தே?

உண்ணி:  (எச்சிலை விழுங்கியவாறு) நீலிக்கு உடம்பு சரியில்லை... நான்...

வர்மா திடீரென்று எழுந்து உண்ணியை அடிக்கிறான்:

"நீலிக்கு உடம்புக்கு சரியில்லைன்னா, அதை விசாரிக்கிறதுக்கு நீ யாருடா?"

தொடர்ந்து பைத்தியம் பிடித்தவனைப் போல உண்ணியை இப்படியும் அப்படியுமாய் அடிக்கிறான் வர்மா.

தன் கணவன் உண்ணியை ஆரம்பத்தில் அடிக்கும்போது கண்டு கொள்ளாமல் அமர்ந்திருந்த இந்திரா, எல்லையை மீறி அவனுடைய கோபம் போவதைப் பார்த்ததும் இடையில் புகுந்து, உண்ணியைக் கைகளால் தள்ளி நிறுத்தி:

"விடுங்க... விடுங்க... விடுங்க அவனை!"

உண்ணியிடம் வர்மா: (மூச்சுவிட்டவாறு) நான் உனக்கு பாடம் சொல்லித் தர்றேன். உன்னை தொலைச்சி கட்டுறேன்.

இந்திரா வர்மாவின் கோபத்திலிருந்து உண்ணியைக் காப்பாற்றி உள்ளே கொண்டு போகிறாள்.

உண்ணியின் தேம்பல் சத்தம் வர்மாவின் முகத்தில்.

59

ரவு நேரம்.

உண்ணியின் அறை. வர்மா கொடுத்த அடிகள் உண்டாக்கிய வேதனையை விட கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவன் காட்டிய கோபம் தான் உண்ணியை மிகவும் கவலைப்படச் செய்கிறது. கட்டிலில் கவிழ்ந்து படுத்தவாறு தேம்பித் தேம்பி அழுது கொண்டிருக்கிறான் அவன்.

அப்போது இந்திரா அங்கு வருகிறாள். கட்டிலில் அவனுக்கு அருகில் அமர்ந்து அவனை மெதுவாக அவள் தடவுகிறாள்.

இந்திரா:   கால்களையும் முகத்தையும் முதல்ல கழுவிட்டு வா. ஏதாவது சாப்பிட வேண்டாமா? பசிக்கலியா?

உண்ணி எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறான்.

இந்திரா:   பரவாயில்ல... (தனக்குத்தானே சொல்லிக் கொள்வதைப் போல)... உனக்கு அடி விழுந்ததுக்கு நான் கூட காரணமா இருக்கலாம்.

உண்ணியை எப்படி சமாதானப்படுத்துவது என்றே இந்திராவுக்குத் தெரியவில்லை. மீண்டும் அவனின் தலையையும் உடம்பையும் அவள் தடவுகிறாள். உண்ணியின் தேம்பல் சத்தம் நிற்கிறது. அவன் மிகவும் களைத்துப் போய் அமைதியாக உறங்குகிறான்.

சாப்பாட்டு அறையில் மூன்று பேருக்கும் தட்டுகளும், மூடி வைக்கப்பட்ட பாத்திரங்களும் சாப்பாட்டு அயிட்டங்களும் இருக்கின்றன.

நாணியம்மா அவர்களுக்காகக் காத்திருக்க, வர்மா வருகிறான்.

நாணியம்மா சமையலறைக்குள் செல்கிறாள்.

வர்மா தன்னுடைய இடத்தில் வந்து அமர்கிறான். சிறிது நேரம் இந்திராவும் உண்ணியும் வருவார்கள் என்று காத்திருக்கிறான். தன்னுடைய தட்டை எடுத்து வைத்து தானே பரிமாறி சாப்பிட நினைக்கிறான். பிறகு என்ன நினைத்தானோ வேண்டாமென்று எண்ணி எழுந்து வெளியே போகிறான். அவன் மனம் நிலை இல்லாமல் தவிக்கிறது.

உண்ணியின் அறைக்கு வெளியே வர்மா நின்றிருக்கிறான். உண்ணி உறங்கிக் கொண்டிருக்கிறான். அவனுக்கு அருகில் உண்ணியின் உடம்பின் மீது கையை வைத்து படுத்திருக்கும் இந்திரா தலையை உயர்த்தி பார்க்கிறாள். ஒரு நிமிடம் அவர்களின் கண்கள் சந்திக்கின்றன.

வர்மா நடக்கிறான்.

வர்மா பால்கனியில் புத்தகங்கள் சிதறிக் கிடக்கும் டீப்பாயின் அருகில் அமர்கிறான்.

வெளியே எங்கோ தூரத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும் வர்மாவை நோக்கி வருகிறாள் இந்திரா.

சிறிது நேரம் ஒரே நிசப்தம்.

இந்திரா:   சாப்பிடலையா?

வர்மா:    ம்... வேண்டாம்.

இந்திரா:   ம்...

வர்மா பேசாமல் இருக்கிறான். அமைதி அவர்கள் இருவருக்குமிடையே ஒரு சுவரைப் போல எழுந்து நிற்கிறது.

இந்திரா லேசாக தேம்ப ஆரம்பிக்கிறாள்.

வர்மா:    (அதைக் கேட்டு)ம்... உனக்கு என்ன ஆச்சு?

ஒரு நிமிடத்திற்குப் பிறகு வந்த அழுகையைக் கட்டுப்படுத்திக் கொண்டு-

இந்திரா:   என்ன ஆச்சு? அதுதான் எனக்கே தெரியல...

வர்மா பேசாமல் இருக்கிறான்.

வர்மா:    என்கிட்ட எந்த மாற்றமும் இல்ல. எப்பவும் நானாக இருக்கவே முயற்சிக்கிறேன். சில நேரங்கள்ல தோற்றும் போகிறேன்.

இந்திரா:   நான் உங்களை விட்டு ஒழிஞ்சா போதும்னு நினைச்சுத்தான் நீங்க பார்த்துக்கிட்டு இருந்த வேலையையே வேண்டாம்னு சொல்லிட்டு இங்க ஓடி வந்ததே. சொல்லுங்க... நான் எங்கே போறது?

வர்மா:    (சிரிக்க முயற்சித்து தோல்வியடைந்து) யாரும் எங்கேயும் ஓடி ஒளிஞ்சிக்க முடியாது. உண்மையாகவே தப்பிச்சுப் போறதுன்னா, மனிதன் ஓடி ஓடி தன்னோட தாயின் கர்ப்பப் பைக்குள்ளதான் போயி ஒளிஞ்சிக்கணும். ஆனா, அதுதான் யாராலயும் முடியாதே!

இந்திரா:   எது எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்... இன்னொருத்தியைப் பற்றி நான் கேள்விப்படுறப்போ எனக்கு என்ன தோணும்?

வர்மா இந்திராவின் மனதிற்குள் என்ன ஒளிந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொண்டு அருகில் வருகிறான்.

வர்மா:    சின்ன வயசுல ஒரு காதல் கதையாவது இல்லாத ஒரு ஆணோ பெண்ணோ இந்த உலகத்துல இருக்காங்களா? உண்மையைச் சொல்றதுக்கு தைரியமா இருக்குறவங்க மனம் திறந்து இல்லைன்னு சொல்லட்டும்.

இந்திரா:   நான் அதைப் பற்றி ஒண்ணும் சொல்லலியே! பெங்களூர்ல இருக்குறப்போ உங்களைப் பற்றி நான் கேள்விப்பட்டது என்ன? இங்கே வந்தப்புறம் நான் கேள்விப்படுறது என்ன?

வர்மா:    நான் ஒண்ணும் யோக்கியன் இல்ல. உலகத்துக்கே சவால் விடுற மாதிரி ஒரு புரட்சிகரமான திருமணத்தைச் செய்றதுக்கு திட்டம் போட்டவன் நான்.

இந்திராவின் முக பாவனை.

வர்மா:    அதையெல்லாம் எப்பவோ மறந்துட்டேன். இப்போ சில வருஷங்களாகவே தேவையில்லாம எந்தப் பிரச்னையும் என்மேல வந்து ஒட்டிக்காம நான் பார்த்துக்குறேன். இதுதான் உண்மை.

இந்திரா அமைதியாக இருக்கிறாள்.


வர்மா:    எல்லாத்தையும் சொல்றதுனால இன்னொரு உண்மையையும் சொல்றேன். ஆச்சரியப்படக்கூடாது.

இந்திரா:   ஆச்சரியப்படல. நடுங்கல. சொல்லுங்க.

வர்மா:    கன்னா பின்னான்னு கட்டுப்பாடு இல்லாம போய்க்கிட்டு இருந்த வாழ்க்கையை ஒரு ஒழுங்குக்கு கொண்டு வர ஒருநாள் நான் நினைச்சேன். கல்யாணம் செஞ்சிக்கிறேன்னு அப்பாக்கிட்ட நான் சொன்னேன். வீ காட் மேரிட். பிறகு(யோசனை செய்து) மனதிற்குள்... உண்டான காதல்... (பிறகு நிறுத்துகிறார்) சரிதான்... அந்தக் காதல்ன்றது என் மனசுல பூத்தது ஒரேமுறைதான்...

இந்திரா அதிர்ந்து போய் நிற்கிறாள். கிண்டலான குரலில்:

"ஒருமுறை தான் காதல்ன்ற ஒண்ணு பூத்ததா?"

வர்மா:    (சிரிக்க முயற்சி செய்து- பழைய ஞாபகம் ஒன்றை இறக்கி வைப்பதைப் போல) அவளுடைய சிரிப்பு. வார்த்தைகளில் இருக்கும் கிராம மணம் கொண்ட சங்கீதம், நூறு பேர் இருக்குற கூட்டத்துல இருந்தாலும் தனியா தெரியிற அவளோட அழகு...

விருப்பப்படி வர்மா வர்ணித்துக் கொண்டு போக இந்திராவின் முகத்தில் கோபமும் பொறுமையின்மையும் அதிகரிக்கிறது. அவளையே பார்த்தவாறு-

வர்மா:    தாமதமா வந்த காதல். அவளை நான் இழந்துடக் கூடாதுன்ற எண்ணம் என் மனசுல எப்பவும் உண்டு. உனக்கு அவளை நல்லாவே தெரியும்.

இந்திரா:   யார் அவ? ப்ளடி பி...

இந்திரா கோபத்தில் திட்ட ஆரம்பிக்க, அதைத் தடுத்து-

வர்மா:    ம்... திட்டாதே. நீயே இப்போ அவளைப் பார்த்தேன்னு வச்சுக்கோ, உன்னாலயே அடையாளம் கண்டுபிடிக்க முடியாது. அவ அந்த அளவுக்கு மாறிப் போயிட்டா. அவளோட தோற்றம் மாறிடுச்சு... வாழ்க்கையைப் பார்க்குற விதம் மாறிடுச்சு... அவளை உனக்குத் தெரியாதா? பதினாலு வருஷத்துக்கு முன்னாடி என் மணப்பெண்ணா என்னோட பெரிய அக்கா வீட்டுக்கு விருந்துக்கு வந்த நீதான் அவ. அந்த இந்திரா!

இந்திரா அதைக் கேட்டு நிலைகுலைந்து போகிறாள். தாங்க முடியாமல் வர்மாவின் உடல் மேல் சாய்ந்து தலையை அவன் மீது வைக்கிறாள். தேம்பித் தேம்பி அழுகிறாள்.

வர்மா அவளைத் தேற்றும் விதத்தில் முதுகில் தட்டி-

வர்மா:    இட் ஈஸ் ஆல் ரைட். டேக் இட் ஈஸி. காதல் தவிர வேற சில உணர்வுகளும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையில் உண்டு. அபிமானம், மரியாதை, நட்பு, வெறும் பழக்கம்... அதை நீ மறந்துடக்கூடாது, கண்ணு.

இந்திரா முணுமுணுக்கிறாள்:

"ஐ ஆம் ஸாரி. ஐ ஆம் ஸாரி."

இந்திரா வர்மாவின் தலையைக் கோதுகிறாள். அவன் அவளின் தலையைத் தடவி தேற்றுகிறான்.

60

ரவு. நேரம் அதிகமாகி இருக்கிறது.

உறங்கிக் கொண்டிருந்த உண்ணி ஏதோ அரவம் கேட்டு கண்களைத் திறக்கிறான். அப்போது தன் கட்டிலின் அருகில் வந்து நிற்கும் தன் தந்தையை அவன் பார்க்கிறான். தூக்கக் கலக்கத்துடன் அவன் எழ முயல, வர்மா கட்டிலில் உட்காருகிறான்.

வர்மா:    தூங்கு... தூங்கு...

பகலில் நடந்த சம்பவங்களின் நினைவுகள் அப்போதும் உண்ணியின் மனதில் வலம் வந்து கொண்டே இருக்கின்றன.

உண்ணி:  நான் இனிமேல் அப்படி நடக்க மாட்டேன் அப்பா... நீலியோட வீட்டுக்குப் போகமாட்டேன்.

அவனை அன்புடன் தடவியவாறு-

வர்மா:    தூங்கு...

உண்ணி:  தாழ்ந்த ஜாதிக்காரங்களோட நாம பேசக்கூடாது. இல்லையா அப்பா?

வர்மா:    அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல. அந்தக் காலத்துல யாரோ சில முட்டாள்தனங்களைச் சொல்லி இருக்காங்க.

உண்ணி:  (சந்தேகம் நீங்காமல்) நாம எப்படி தம்புரான்மாரா ஆனோம்?

வர்மா:    (இலேசாக சிரித்தபடி) அந்தக் காலத்துல கடவுளுக்கு சில பைத்தியக்காரத்தனமான... கடவுளுக்கோ வேற சிலருக்கோ...

உண்ணி பிறகும் சிந்திப்பதைப் பார்த்து:

வர்மா:    உறங்கு... நேரம் அதிகமாயிருச்சுல்ல?

உண்ணி கண்களை மூடுகிறான். அவனுக்கு இப்போதுதான் நிம்மதியாக இருக்கிறது. அவனின் முகத்தில் இலேசாக புன்னகை மலர்ந்திருக்கிறது.

அந்த முகத்தில் ஒரு உதயத்தின் பிரதிபலிப்பு.

61

திகாலை நேரம்.

தூக்கக் கலக்கத்துடன் கண்களைத் துடைத்தவாறு வீட்டின் முன் வந்து நிற்கும் உண்ணியின் கண்களில் அங்கு கவலை தோய்ந்த முகத்துடன் நின்றிருக்கும் சாத்தன் படுகிறான்.

வாசலில் கோபாலன் நாயர், இந்திரா, வர்மா.

யாரும் எதுவும் பேசாமல் அமைதியாக நின்றிருக்கிறார்கள். அவன் எல்லோரையும் பார்க்கிறான். ஒரு வித பரபரப்புடன் வராந்தாவில் நடக்கிறான்.

கொஞ்சம் தாண்டி நாணியம்மாவும் அமைதியாக நின்றிருக்கிறாள்.

உண்ணி:  (அருகில் சென்று) என்ன நாணியம்மா?

நாணியம்மா:    அவ இறந்துட்டா... பாவம்... நீலி...

உண்ணியால் நம்பவே முடியவில்லை.

அவனுக்கு அது அதிர்ச்சியாக இருக்கிறது.

62

மீண்டும் வாசல் பகுதி.

உண்ணி மீண்டும் வாசல் பகுதிக்கு வந்து தன் தந்தையின் அருகில் நிற்கிறான்.

சாத்தன்:   அவளோட அப்பா, அப்பாவோட அப்பா எல்லாரையும் இங்க உள்ள நிலத்துலதான் புதைச்சிருக்கு. அதே மாதிரி இவளையும் புதைக்க (சந்தேகத்துடன்)... நீங்க சம்மதிப்பீங்களா?

கோபாலன் நாயர்:    (இந்திராவிடம்) என்ன செய்யலாம்?

இந்திரா பேசாமல் இருக்கிறாள்.

எல்லோரும் அமைதியாக இருக்கின்றனர்.

இந்திரா:   எங்கே புதைச்சாலும் அதைப் பற்றி எனக்கு பிரச்னையில்லை.

அதுவரை அமைதியாக இருந்த வர்மா:

"சாத்தா... வேற நிலம் எதுலயாவது கொண்டு போய் புதை. இங்கே வேண்டாம்."

சொல்லிவிட்டு வர்மா உள்ளே போகிறான். உண்ணி தன் தாயின் அருகில் வந்து நிற்கிறான். சாத்தன் கிளம்புவதைப் பார்த்து-

இந்திரா:   சாத்தா... கொஞ்சம் நில்லு.

பிறகு கோபாலன் நாயரிடம் மெதுவான குரலில்:

"செத்துப் போனா இவங்களுக்கு நாம ஏதாவது தர வேண்டியதிருக்குமே!"

கோபாலன் நாயர்:    ரெண்டு கோடி முண்டு... ஒரு மரக்கால் நெல்லு... இதெல்லாம் ஒரு பழைய கணக்கு.

இந்திரா:   என்ன வேணுமோ கொடுத்துட வேண்டியதுதான். இந்த விஷயத்துல நாம கஞ்சத்தனம் பார்க்க வேண்டாம்.

கோபாலன் நாயர் ஒரு நீண்ட பெருமூச்சு விடுகிறார். ஒரு இலேசான சிரிப்புடன், பழைய ஏதோ ஒரு சம்பவத்தை நினைத்துப் பார்த்து-

கோபாலன் நாயர்:    சின்னப் பிள்ளையா இருக்குறப்போ அவளைப் பார்க்கணுமே! புலையப் பொண்ணுன்னு யாருமே சொல்ல முடியாது. கிரக நிலை அவளுக்கு எங்கேயோ தவறிடுச்சு. இல்லாட்டி அவ இப்போ இருக்க வேண்டிய இடம்...

அவர் தன்னை மிகவும் கட்டுப்படுத்திக் கொள்கிறார். இந்திரா தலை குனிந்து நின்றிருக்கிறாள்.

கோபாலன்நாயர்:     கொடுக்க வேண்டியதை நான் கொடுத்துர்றேன். தாசப்பனை தேவையில்லாம கஷ்டப்படுத்த வேண்டாம். அவர் வெளியே காட்டிக்கலைன்னாலும், மனசுக்குள்ள நிச்சயமா...

சொல்ல வந்ததைச் சொல்லாமல் நிறுத்துகிறார்.

கோபாலன் நாயர் வெளியே செல்வதைப் பார்த்த உண்ணி:

"யாரு இறந்துட்டதும்மா?"

இந்திரா பதில் பேசாமல் இருக்கிறாள்.


63

னியாக இருக்கும் நீலியின் வீட்டின் முன்னால் உண்ணி நின்றிருக்கிறான். எந்தவிதமான சத்தமும் அங்கு இல்லை.

பிறகு மெதுவாக நடந்து சென்று சற்று தள்ளியிருந்த புறம்போக்கு நிலத்தில் புதிதாக பிணத்தைப் புதைத்த இடத்தில் நிற்கிறான்.

உடைந்த மண் சட்டிகள், பிணத்தைப் புதைத்த பிறகு வைத்த வாழைக்கன்று.

சிந்தனை வயப்பட்டு உண்ணி நின்றிருக்க, பின்னால் ஒரு தேம்பல் சத்தம். உண்ணி திரும்பிப் பார்த்தால், சற்று தூரத்தில் வர்மா நின்றிருக்கிறான். அவன் பயந்து போய் வர்மாவின் அருகில் வருகிறான். உண்ணிக்கு புரிகிறது. தன் தந்தையின் பார்வை தன் மீது அல்ல- எங்கோ தொலை தூரத்தில் என்பதை அவன் புரிந்து கொள்கிறான். அவனுடைய தந்தையின் கண்கள் கலங்கி இருக்கின்றன.

அருகில் வந்த உண்ணியைச் சேர்த்து பிடித்துக் கொண்ட வர்மா திரும்பி நடக்கும்போது-

சற்று தூரத்தில் இந்திரா.

இந்திரா தலையைக் குனிந்து கொள்கிறாள்.

தந்தையும், மகனும் நடந்து செல்கிறார்கள். அவர்களுக்குப் பின்னால் இந்திரா.

குடும்பம். நடுவில் உண்ணியும் அவனின் இரு பக்கங்களிலும் தந்தையும் தாயும் நடக்க அந்த மூன்று பேரும் நம்மிடமிருந்து விலகி விலகி போய்க் கொண்டிருக்கிறார்கள்.

Page Divider

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.